• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

      இய ஆண்டின் பொதுக் காலம் 15 ஆம் ஞாயிறு  ழா

    திருப்பலி முன்னுரை


 
    நாளாந்த வாசகம்   வருடாந்த
வாசக
வழிகாட்டி
ஞாயிறு
முன்னுரை
MP3
அயலாரை அன்பு செய்ய வந்திருக்கும் அன்புறவுகளே!
B தவக்காலம்1 நமது பக்கத்து வீட்டில் எழ முடியாமல் குற்றுயிராய் விழுந்து கிடப்போரை திரும்பிப் பார்க்க அழைக்கும் திருப்பலி இது!

குற்றுயிராய் கிடப்பவரை தொட்டால், நமது கதி என்ன ஆகும் என சிந்திப்பவன் தன்னலவாதி. குற்றுயிராய் கிடப்பவனைத் தொடாவிட்டால், அவனது கதி என்ன ஆகும் என சிந்திப்பவன் பொது நலவாதி! அயலாரை நம்மைப் போல் அன்பு செய்ய வேண்டும் என்ற கட்டளையை அறிய, விண்ணில் பறக்கவோ கடலை தாண்டவோ தேவையில்லை. அவை நம் இதயத்தில் ஏற்கெனவே கடவுளால் எழுதப்பட்டுவிட்டது.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது ஆலய வழிபாட்டிற்கு அவசரமாக வருமுன், வழியில் குற்றுயிராய் கிடந்த நம் அயலாரை அவசியமாக நேசிக்க மறந்த பொழுதுகளை.ஆம்.

ஆலயம் நுழைந்து அடுத்தவர்களின் அழுகைக் குரலை கேட்காத பொழுதுகளை விட, ஆலயம் வர இயலாது அயலாருக்கு உதவி செய்தபொழுதுகள் கடவுளுக்கு பிரியமான பொழுதுகள். 'என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்தவை எல்லாம் எனக்கே செய்தீர்கள்' ஏழை எளியவர்களிடத்திலும் துன்புறுவோர்களிடத்திலும் கடவுள் இருக்கின்றார். மனிதனை மதிப்பது கடவுளை மதிப்பதாகும்.
மனிதனை மதிக்கச் சொல்லி அழைக்கும் திருப்பலியில், மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை மனமதை செம்மையாக்கு இறைவா என மனதுருகி மன்றாடுவோம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இறைவேண்டல்  
1. அடுத்தவரைப்பற்றி அக்கறை கொண்டு வாழ எமை அழைக்கும் இறைவா!
மனிதநேய செயல்பாடுகளை வளர்க்கும் வகையில் திருச்சபையின் பணியாளர்கள் செயல்பட அருள் தர வேண்டுமென்று மரியன்னை வழியாக இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. அயலாரை அன்பு செய்ய எமை அழைக்கும் இறைவா!

உதவிக் கரம் தேவைப்படுவோர் எல்லாம் நமது அயலான் என உணர்ந்து மதம், இனம், மொழி வேறுபாடு மறந்து மக்கள் பணி செய்ய நாட்டுத் தலைவர்களுக்கு அருள் தர வேண்டுமென்று மரியன்னை வழியாக இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

3. 'மனிதனை நினைப்பவன் கடவுளை நினைக்கிறான்' என மொழிந்த இறைவா!
ஏழையின் உடலிலும், இரத்தத்திலும் இருக்கும் கிறிஸ்துவை மதிக்காதவன், நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் மதிக்க முடியாது என்ற சிந்தனையை, இறைமக்கள் இதயத்தில் எழுதும் பணியை இறைவழிபாடாக ஆற்ற அருள் தர வேண்டுமென்று மரியன்னை வழியாக இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. அயலாருக்கு உதவி செய்பவர்களை நேசிக்கும் இறைவா!
துன்புறும் மனிதர்களை நேசிக்கும் போதெல்லாம் உம்மை நேசிக்கிறோம் என்ற உணர்வுடன், வாழ்க்கையில் நொந்து போய் குற்றுயிராய் கிடக்கின்ற எங்கள் அயலாரை நேசிக்க அருள் தர வேண்டுமென்று மரியன்னை வழியாக, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. விழுந்து கிடப்பவர்களுக்கு கருணை காட்டும் இறைவா!
எழ முடியாத வேதனை எமை அழுத்துகிறது என கண்ணீரோடு உமைத் தேடி வந்துள்ள மக்கள் சுமை அகற்றி சுகம் தர வேண்டுமென்று மரியன்னை வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 
மறையுரை சிந்தனை
நல்ல தச்சன்

பார்த்ததுமே தெரிந்துவிடும் அது ஒரு தச்சனின் வீடென்று. அந்தப் பகுதியிலேயே அதிக வேலைப்பாடுகள் கொண்ட வீடாக அது இருந்தது. களிமண்ணும் கல்லும் கலந்து செய்த கூரையையும், சுவர்களையும் நன்கு செதுக்கி செம்மையாக்கப்பட்ட மரங்கள் தாங்கி நிற்கின்றன. அறைகளில் போதுமான அளவுக்கு மரக்கலன்கள் இருந்தன. வெளியே செதுக்கப்பட்டதும், செதுக்கப்படாததுமாக பல மரத்தூண்டுகளும், தடிகளும் கிடந்தன.

தச்சன் எருசலேம் நகரத்தில் தனது தூரத்து சொந்தக்காரர் வீட்டின் மாடியில் பெரிய விருந்து மேசை ஒன்றை செய்யச் சென்றிருந்தார். அன்று அவர் ஊர் திரும்பும் நாள். மாலை வேளை. தச்சனின் மனைவி ரொட்டி சுடுவதற்காக மாவைத் தயார் செய்து கொண்டிருந்தார்.

தச்சனின் மகனுக்கு பத்து வயதிருக்கும். அவன் விளையாட பல பொம்மைகளை தச்சன் தானே செய்து கொடுத்திருந்தார். அவனது அறையில் சில மரப் பொம்மைகள் இருந்தன. ஆதாம் ஏவாள் கதை முதல் சில விவிலியக் கதை மாந்தர்களின் உருவ பொம்மைகள் அங்கே இடம் பெற்றன. அவ்வப்போது தச்சனும் அவரது மகனும் சேர்ந்து கதைகளை சொல்லிக் கொண்டு விளையாடுவது உண்டு.

வெளியே கழுதையின் காலடிச் சத்தம் கேட்டது. தச்சனின் மகன் வெளியே வாசலுக்கு வந்தான். தச்சன் தன் கழுதையின் மீது இன்னொருவரை தாங்கி நிற்பதைக் கண்டான். தச்சன் அந்த மனிதரை கழுதையிலிருந்து கீழே இறக்கி வீட்டினுள் வெளி அறையில் கட்டிலில் கிடத்தினார். சப்தம் கேட்டு தச்சனின் மனைவி உள்ளிருந்து ஓடி வந்தார். கட்டிலில் கிடந்த மனிதரைக் கண்டதும் எல்லாவற்றையும் புரிந்து கொண்டார்.

அவன் கோலத்தைக் கண்டதும் திருடர்கள் தாக்கி இருப்பார்கள் என்று புரிந்து கொண்டார். அவன் காயத்தைக் கழுவ தண்ணீரும், துணியையும் எடுத்து வந்தார். தச்சனின் மகன் காயத்துக்கிட எண்ணெய் எடுத்து வந்தான். தச்சனின் மனைவி அவனுக்கு கஞ்சி செய்தார். தச்சன் அதை அவனுக்கு ஊட்டினார். 'இவருக்கு என்ன ஆச்சு அப்பா?' என்றான் தச்சன் மகன். 'எரிக்கோ வரும் வழியில் திருடர்கள் இவரைத் தாக்கி குற்றுயிராக விட்டுவிட்டனர்' என்றார் தச்சன்.

'இவருக்கு அடிபட்டு ரொம்ப நேரமாகியிருக்குமே! யாருமே பார்க்கலியா?' எனக்கு முன்னால நிறைய பேர் போனாங்க, ஆனா யாருமே இவரை கண்டுக்கிடலை. இவர் இறந்து விட்டார்னு நினைச்சிட்டாங்களோ என்னவோ?' என்றார் தச்சன். இரண்டு நாட்களில் அந்த அந்நியன் உடல் தேறியிருந்தான். அதற்குள் சுற்று வட்டாரத்தில் செய்தி பரவியிருந்தது. வழியில் அடிபட்டுக் கிடந்த ஓர் அந்நியனை தச்சன் வீட்டில் வைத்து மருத்துவம் செய்கிறான். அவன் ஒரு சமாரியன் என்றும் பேச்சு பரவியிருந்தது.

அன்று மாலை ஒருசிறு கூட்டம் தச்சனின் வீட்டிற்கு வந்தது. எல்லோருமே தச்சனின் அண்டை வீட்டார்கள். தச்சனும் அவர் மனைவியும் மகனும் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தார்கள். 'வாருங்கள் உட்காருங்கள்' என வரவேற்றார். தச்சன்  அவர்கள் யாரும் உட்காரவில்லை. சிலர் முகத்தை கடுகடுப்பாக வைத்திருந்தார்கள், சிலர் சலிப்பாக எரிச்சலுடன் காணப்பட்டார்கள். அங்கிருந்தவர்களில் ஒருவர் மட்டும் என்ன 'யோசேப்பு, உன் வீட்டில் இருப்பவர் சமாரியனாமே? நீ அவனை எப்படி இங்கே கொண்டு வரலாம்? அவனுக்கு பணிவிடை வேறு செய்கிறாயாமே?' என்று கேட்டார்.
தச்சன் சாந்தமாக அவரை நோக்கினார். பின்பு"என் வீட்டிலிருப்பவர் யார் என்பதில் உங்களுக்கு என்ன அக்கறை" என்றார். ஏனென்றால் 'நாங்கள் உனது அண்டை வீட்டுக்காரர்கள். உமது நண்பர்கள், உறவினர்கள்' என்றார் அந்த மனிதர் சற்று கோபமாக. மீண்டும் சாந்தமாக அவரையும் அங்கிருந்தவர்களையும் பார்த்துவிட்டு ஒரு மெல்லிய புன்னகையுடன் 'அவனும் தான்' என்றார் தச்சன்.


அவர்கள் எல்லோரும் ஒரு கணம் அமைதியாக நின்றனர். தச்சனின் கனிவான வார்த்தைகளை அவர்கள் மனதில் உள்வாங்கிக் கொண்டது போல இருந்தது. தச்சனின் மகன் கூட்டத்தில் நின்ற தன் நண்பன் கையைப் பிடித்துத் தன் வீட்டிற்குள் இழுத்துச் சென்றான். அவர்களை யாருமே தடுக்கவில்லை. பின்பு அந்த பெரியவர் முன் செல்ல எல்லோருமே தச்சனின் வீட்டிற்குள் சென்று அந்த சமாரியனைப் பார்த்து நலம் விசாரித்தனர்.

ஆதிக்கம் பேசி அடுத்தவர்களின் அழுகைக் குரலைக் கேட்காதவர்களைவிட, நாத்திகம் பேசி அயலாருக்கு உதவி செய்பவர்கள் கடவுளுக்கு நெருக்கமாய் உள்ளனர்.

இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு: கடவுளை மற மனிதனை நினை.

வங்கக் கவிஞர் தாகூர் கூறுகின்றார்.
"மந்திரம் ஒதுவதையும் பாடல் பாடுவதையும் செபமாலை உருட்டுவதையும் நிறுத்து! கோவிலின் தனிமையான இருளடைந்த மூலையிலே கதவுகளை அடைத்துக் கொண்டு யாரையப்பா வணங்குகிறாய்? கண்களைத் திறந்து பார். கடவுள் உன் முன்னிலையில் இல்லை. கடினமான தரையை உழுகின்ற உழவனிடத்தில் அவர் இருக்கின்றார். சாலை அமைக்கச் சாலைக் கல் உடைத்துக் கொண்டிருப்பவனிடத்தில் அவர் இருக்கின்றார். அவர்களுடன் அவர் மழையில் நனைகின்றார், வெயிலில் காய்கின்றார்."

"நான் பசியாய் இருந்தேன்: தாகமாய் இருந்தேன்: அந்நியனாய் இருந்தேன்: நோயுற்றிருந்தேன்: சிறையிலிருந்தேன்: என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" ஏழை எளியவர்களிடத்திலும், துன்புறுபவர்களிடத்திலும் கடவுள் இருக்கின்றார். மனிதனை மதிப்பது கடவுளை மதிப்பதாகும்.

நமது வழிபாடுகள் அனைத்தும் மனிதத்தை வளர்க்க துணைபுரிவனவே!

மனிதம் மதிப்பிழந்து இரத்தக் கறை பூசிவரும் இந்த நாளில் வழிபாட்டை விட உயிருக்குப் போராடும் நமது அயலாருக்கு தேவையான உதவியை செய்து ஆண்டவனின் அருளைப் பெற்றுக் கொள்வோம்.

சாதி மத பேதமின்றி அயலாரை நேசிக்க முன்வருவோம். அப்போது இறையருள் நம்மோடு இருக்கும்.
 
மறையுரை சிந்தனை - அருட்சகோதரி: மெரினா ம.ஊ.ச.

ஆதலால் உதவி செய்வீர்....


உதவி இன்று பலவகைகளில் பல மனிதர்களால் செய்யப்படுகின்றது.   சிலர் உதவிகளை மறைமுகமாக செய்து வருகின்றனர். மற்றும் சிலர் நேரடியாக சென்று உதவுகின்றனர். மற்றும் பலரது உதவும் நிலையோ, உணர்வினை வெளிப்படுத்துவதோடு (ஐயோ பாவம்) மட்டுமே நின்று விடுகின்றது. சிலரோ குறுஞ்செய்தி பகிர்தலோடு தங்களது உதவும் மனப்பான்மையை நிறுத்தி விடுகின்றனர். இப்படி இருக்க நமது உதவி செய்யும் மனப்பான்மை எந்த நிலையில் உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்கவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட திருச்சட்ட அறிஞருக்கு , முழு மனம், உள்ளம், ஆன்மாவோடு கடவுளை அன்பு செய். உன்னை அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய் என்கின்றார். நமது அயலான் யார் என்பதற்கு நல்ல சமாரியன் உவமையினை எடுத்துக் கூறுகிறார். இவ்வுவமையில் கதாபாத்திரங்களாக, வழிப்போக்கன், கள்வன், குரு, லேவியன், நல்ல சமாரியன், சாவடிப் பொறுப்பாளன் என ஆறு பேர் இடம்பெருகின்றனர். நமக்குள்ளும் இந்த ஆறுவகை மனிதர்களும் அவர்களின் குணங்களும் நிறைந்து இருக்கின்றன. அவர்களின் குணங்களும் செயல்களும் நாம் எப்படி இருக்க வேண்டும் / இருக்கக் கூடாது என்பதனை நமக்கு வெளிப்படுத்துகின்றன. 

வழிபோக்கன்: 
        தன்னந்தனியனாக பயணத்தைத் தொடங்குகிறான். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக் கூட இயலாதவனாக இருக்கின்றான். 
நாமும் பல நேரங்களில் பிறர் உதவி இல்லாது தனியே செயல்பட நினைக்கின்றோம். விளைவு ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றோம். தனித்து செயல்பட நினைப்பது தவறல்ல. ஆனால் அதில் விவேகமும் வேகமும் கட்டாயம் தேவை. இல்லையெனில் இப்படி தான் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும்.  இரண்டாவதாக தன்னை பாதுகாத்துக் கொள்பவனாலே, பிறரையும் காத்துக் கொள்ள முடியும். இயேசு கூட உன்னை அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய் என்கின்றார்.  நம்மை நாம் அன்பு செய்தால் மட்டுமே பிறரையும் அன்பு செய்ய முடியும். தன்னை பாதுகாத்துக் கொள்கின்ற வலிமை உடையவர்களாய் நாம் மாறும் போது தான் பிறரையும் காக்கும் வலிமை பெறுவோம். 

கள்வர்கள்: 
    இவர்கள் தங்களது சுயநலத்திற்காக பிறரை தாக்கும் குணம் படைத்தவர்கள். தாங்கள் மட்டும் நலமோடு வாழ்ந்தால் போதும் என்று எண்ணுபவர்கள். நாமும் பல நேரங்களில் இப்படி சுயநலத்தோடு செயல்பட்டிருப்போம். இப்படி இருந்தால் நாமும் யாருக்கும் அயலாராக ஆக முடியாது. பிறரும் நமக்கு அயலானாக அமைய முடியாது. நிலைவாழ்வின் நிழலைக் கூட நம்மால் நெருங்க முடியாது. 

குரு, லேவியன்:
     தங்களது கடமைகளில் கருத்தோடு இருக்க நினைத்து பிறரைக் குறித்து கவலைப் படாதவர்கள். கண்ணெதிரே தீமை நடந்தும் அதைக் காணாது செல்பவர்கள். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், உணர்விருந்தும் உயிரற்ற உடலாய் வாழ்பவர்கள். நாமும் நமது அருகில் இருப்பவர்களின் துன்ப நேரத்தில் அதைக் கண்டு கொள்ளாது இவர்கள் போல செயல்பட்ட நேரங்கள் பல. மனிதனாக வாழ்வது பெரிதல்ல, மனிதாபிமானத்துடன் வாழ்வது தான் பெரிது என்பதை உணர்ந்து வாழ்வோம் . 

சாவடி பொறுப்பாளன்;
             தன்னை நோக்கி வந்த அந்நியர்களுக்கு தங்க இடம் அளிக்கின்றார். வாடகை இவ்வளவு பணம் கொடு என்று கேட்கவில்லை. கொடுத்ததை வாங்கிக் கொள்கின்றார். நல்ல சமாரியனின் கைமாறில் இவரும் பங்கேற்கின்றார். பிறரன்போடு காயம்பட்டவருக்கு உதவிகள் செய்து அவரைக் கவனித்துக் கொள்கின்றார். இவனை ஏன் இங்கு அழைத்து வந்தாய்? உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? என்று நல்ல சமாரியனிடமும் கேட்கவில்லை. அடிபட்டவனிடம் நீ ஏன் இப்படி தனியாக வந்தாய்? பலசாலின்னு நினைப்பா? இல்லை உனக்கு தான் எல்லாம் தெரியும் என்று எண்ணமா? என்று கேள்விக் கணைகளால் அவன் மனதைக் காயப்படுத்தவும் இல்லை. நம்மில் பலர், பிறருக்கு உதவி செய்பவரையும் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பர். உதவி பெற நினைப்பவரையும் கேள்வி கேட்டு துன்புறுத்துவர். 

உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? மத்தவங்கள மாதிரி நீயும் பாத்துட்டு பார்க்காத மாதிரி போக வேண்டியதுதான. என்று உதவி செய்பவரையும், உங்களுக்கு எல்லாம் கை கால் நல்லா தான இருக்கு உழைச்சு சாப்பிட வேண்டியது தான என்று உதவி கேட்பவரையும்  பார்த்து அறிவுரை கூற  ஆரம்பிப்பர். 

(ஒருவர் நம்மிடம் உதவி செய்யுங்கள்  என்று கேட்கும் முன் இவரிடம் உதவி கேட்கலாமா? என்று பலமுறை யோசித்திருப்பார். நம்மால் அவருக்கு உதவ முடியும் என்று நம்பிய பிறகு தான் நம்மிடம் உதவி கேட்க முன்வருவர். நம்மால் முடிந்தால் செய்யப் பழகுவோம். இல்லாவிட்டால் வேறு வார்த்தைகள் எதுவும் கூறி அவர்கள் மனதை புண்படுத்தாது இல்லை என சொல்லப் பழகுவோம். ) 
சாவடிக்காப்பாளன் போல நல்லது நினைப்போம், நல்லது செய்வோம் இல்லையெனில் நல்லது செய்பவருக்கு உதவிகள் செய்தாவது  வாழ்வோம்.

நல்ல சமாரியன்;
       நமது கதையின் கதாநாயகன் இவர் தான். உதவி எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கு உள்ளமும் உடலும் இணைந்து செல்ல வேண்டும். பண்பும் பரிவும் பொங்கி எழும்ப வேண்டும். விழிப்புணர்வு நிலை வீரியமடைய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தம் வார்த்தை வாழ்வளிக்க வேண்டும். உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருள் எழுந்ததும் உடலும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றது. அவரை தன் தோள் மேல் தூக்கி தனது வாகனத்தில் ஏற்றி சாவடி நோக்கி செல்கின்றார். ஆடையின்றியும் குற்றுயிராயும் கிடந்த அவர் மேல் பரிவும் பண்பும் கொள்கின்றார். அவர் காயங்களுக்கு தன்னிடம் இருந்தபொருளைக் கொண்டு முதலுதவி செய்கின்றார். இவரது காயங்களுக்கு என்னிடம் மருந்து ஒன்றும் இல்லையே. இவரை மருத்துவமனையில் சேர்க்க பணம் இல்லையே என்று காரணம் சாக்கு போக்கு சொல்லி விலகவில்லை மாறாக இருப்பதைக் கொண்டு உதவி செய்கின்றார். நாம் பல நேரங்களில் உதவி நிலையில் இருப்போரைப் பார்த்து விட்டு நம்மால் இவர்களுக்கு உதவ முடியாது என்று கூறி விலகி விடுகின்றோம். உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதை செய்யாது போன தருணங்கள் பல.  அடிபட்டவரின் குமுறலும் அழுகையும் இவரது கவனத்தை ஈர்த்திருக்கின்றது. அருகில் சென்று கைகளைல் எடுத்து மடி மேல் வைக்கின்றார்.  தனது ஆறுதலான வார்த்தைகளால் வாழ்வளிக்கின்றார்.  

உதவி செய்ய அறிவு தேவையில்லை, நல்ல இதயம் இருந்தால் போதும் அது நம்மிடம் அதிகமாகவே உள்ளது ஆனால் அதை உணர்ந்து அதன்படி நடக்கும் விழிப்புணர்வு நிலையும்  தெளிவான மனனிலையும் தான்  அதிகம் தேவை. நல்ல சமாரியன்  போல நாமும் மாற உதவிக்கரம் நீட்டுவோம்.  மனிதாபிமானத்துடனும், பண்புள்ளத்தோடும் பரிவு மனப்பான்பையோடும் நாம் வாழ்வோம்.  நம்மை சுற்றி துன்புறுபவர்களின் அழுகையையும் குறலையும் கேட்க பழகுவோம் . அவர்கள் அருகில் இருந்து ஆறுதல் சொல்வோம் கைகளால் உதவியும் செய்ய முன்வருவோம்.  
 நமக்கு இரண்டு கைகளை ஆண்டவர் கொடுத்துள்ளார் ஒன்று நமக்கு நாமே உதவிக்கொள்ள, மற்றொன்று பிறருக்கு உதவ. நமது உள்ளமும் பிறருக்காக இரங்கட்டும் . நமது கைகளும் பிறருக்கு உதவட்டும். நமது விழிப்பு நிலை உயர்வு நிலை அடையட்டும்..   

ஆதலால் உதவி செய்வீர்.... ஆண்டவனின் ஆசீர் பெறுவீர். அருகில் இருப்பவர் அனைவருக்கு அயலாராய் ஆவீர்... இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.   

 அமைதியின் கருவி ஜெபமாலையை  ஆன்மீக ஆயுதம் ஜெபமாலையை
இயேசு என்னும் மந்திரத்தை சொல்லிச் சொல்லி வாழ்வுறவே செய்தாயே செய்தாயே வாழ்வுறவே செய்தாயே!