நமது மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிகாட்டும் அன்பில் நிலைத்திருக்கச்
சொல்லி அன்புடன் வரவேற்கிறது இந்த ஞாயிறு திருப்பலி. அன்பு செய்ய
வேண்டும் என்பதே வாழ்வின் முக்கிய நோக்கம். வசதிகள், வாய்ப்புகள்,
செல்வங்கள், பணம், பதவி என எது கூடினாலும் பாதுகாப்பு உணர்வு
குறைவாகவே இருக்கும். அன்பு கூடும்போது மட்டுமே பாதுகாப்பு உணர்வு
கூடுதலாக இருக்கும்.
அழகுக்காக, புகழுக்காக, பதவிக்காக, பணிக்காக அன்பு விலைபேசப்பட்டு
பவனி வரும் இந்தக் காலத்தில் "என் அன்பில் நிலைத்திருங்கள. தந்தை
என்னை அன்பு செய்வது போல நானும் உங்களை அன்பு செய்கிறேன். நீங்களும்
உங்கள் அயலாரை அன்பு செய்யுங்கள்" என்ற கட்டளையை நம் இதயத்துக்குள்
பவனி வரச் செய்கிறார் நம் பெருமான் இயேசு.
அன்பு ஆட்சி செய்யுமிடத்தில் வம்பு ராஜினாமா செய்துவிடும்.
அன்பு விளையாடுமிடத்தில் அமைதி ஒத்துழைப்பு இயக்கம் நடத்தும்.
அன்பு நிலைக்குமிடத்தில் நல்லவை அனைத்தும் நிலைக்கும்.
என்னை அன்பு செய்ய யாருமில்லை என வருந்துவோரை அன்பு செய்ய ஆண்டவர்
இயேசு தேடிக் கொண்டிருக்கிறார். நான் யாருக்கும் தேவையில்லை என
நினைத்துக் கொண்டிருக்கும் நம்மை யாரோ ஒருவருக்கு, கட்டாயம் நீ
தேவை எனச் சொல்ல இங்கே வந்திருக்கிறார். உண்மையான அன்பு நிபந்தனையின்றி
ஏற்றுக் கொள்ளும். நாம் எப்படி இருந்தாலும் கவலைப்படாது, நம்மை அன்பு
செய்ய ஆசைப்படும் இயேசு" என் அன்பில் நிலைத்திருங்கள்" என்கிறார்.
நாமும் பிறரை இயேசுவைப் போல அச்சு பிசகாமல் அன்பு செய்ய, இந்த
திருப்பலியில் அன்பை நம் இதயத்துக்குள் பரிமாற்றம் செய்கிறார்.
இயேசுவின் அன்பினால் மாற்றம் பெற்று புதியதோர் அன்பு நிறைந்த உலகு
உருவாக்க, எனை உருமாற்றும் என இயேசுவிடம் நம்மைக் கொடுப்போம்.
1.அன்பாய் இருக்கும் கடவுளே!
நிறை அன்பின் பாதையில் இறைமக்களை அழைத்துச் செல்லும்
கருவிகளாக திருச்சபைத் தலைவர்கள் பணிபுரிவதற்கு அன்பைப்
பொழிய, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பை விதைக்கும் கடவுளே!
நிபந்தனையின்றி அன்பு செய்யப்பட ஆசைப்படும் மனித குலத்தில்
அன்பை விதைக்கும் பணியாளர்களாக நாட்டுத் தலைவர்கள் பணிபுரிவதற்கு
அன்பைப் பொழிய, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பை எமக்காய் அர்ப்பணித்த கடவுளே!
உமது அன்பினால் தமது வாழ்வை உமக்காய் அர்ப்பணித்து எமக்காய்
உழைக்கும் ஆன்மீகப் பணியாளர்களின் அர்ப்பண வாழ்வால்,
அன்பு ஒளி எங்கள் மத்தியில் ஒளிர்ந்திட அன்பைப் பொழிய,
ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பால் எம்மை அர்ச்சிக்கும் கடவுளே!
இல்லங்களில் அன்பு பொங்கி நல்வாழ்வு மலர கணவன், மனைவி,
பிள்ளைகள், உறவினர், உடன்பிறந்தோர், நண்பர்கள் என எல்லாரின்
இதயங்களையும் அன்பால் அர்ச்சிக்க, அன்பரே உம்மை மன்றாடுகிறோம்.
5. உம் அன்பில் நிலைத்திருக்க எமை அழைக்கும் அன்பரே!
ஒருவரை ஒருவர் அன்பினால் பொறுத்துக் கொண்டு, அச்சத்தை
அகற்றி, உள்மனக் காயங்களை ஆற்றி அழியாத அன்பில் என்றும்
நிலைத்து வாழ, அன்பரே உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
ஏழை விவசாயி ஒருவர் அன்றாடப் பணிகளை நன்றாகச் செய்தார். ஓரிரவு நன்றாகத்
தூங்கிக் கொண்டிருந்தபோது, தேவதை ஒருவர் வீட்டின் கதவைத் தட்டினார்.
விவசாயி கண் விழித்து கதவைத் திறந்தார். அப்போது தேவதை "இத்தனை
நாள் உங்களோடு இருந்து உங்களுக்குத் தேவையான எல்லா நன்மைகளையும்,
உதவிகளையும் நான்தான் செய்து வந்தேன். நாளை முதல் உங்களிடமிருந்து
வேறு இடம் செல்ல விரும்புகிறேன். உங்களுக்குத் தேவையான ஒரே ஒரு வரம்
கேளுங்கள். யோசித்து நல்ல ஒரு முடிவு சொல்லுங்கள் நான் நாளை வருகிறேன்"
என்று சொல்லி விட்டுச் சென்றது.
விவசாயி குடும்பத்தோடு அமர்ந்து என்ன கேட்கலாம் என ஆலோசனை
செய்தான். அப்போது அவனது மனைவி" நாம் இப்போது இருப்பதுபோல நான்கு
மடங்கு சொத்து வேண்டும்" எனக் கேளுங்கள் என்று சொன்னாள். விவசாயி
மகனோ"அப்பா நான் தினமும் அணிந்து கொள்ள நிறைய ஆடைகள் வேண்டும் எனக்
கேளுங்கள்;" என்று சொன்னான். ஆனால் அவனுடைய அம்மாவோ" நாம் இப்போது
அன்பாக இருப்பது போல கடைசிக் காலம் வரை அன்பாக இருக்க வேண்டும் எனக்
கேள்" என்று சொன்னாள்.
அடுத்த நாள் தேவதை வந்தது. அப்போது விவசாயி தன் அம்மா சொன்னது போல
நாங்கள் இப்போது அன்பாக இருப்பது போல கடைசிக் காலம் வரை அன்பாக இருக்க
வேண்டும் என கேட்க முடிவு செய்தோம் என்பதை தெரிவித்தான். அப்போது
தேவதை அதைக் கேட்டுவிட்டு "நானும் இனி உங்களை விட்டு பிரியப் போவதில்லை,
உங்களோடு நிரந்தரமாகத் தங்கிவிட முடிவு செய்து விட்டேன் என்றது."
அன்பின் தீபம் சுடர்விட ஆரம்பித்தால் குடும்பங்களில் அமைதி ஒளி
வீசும்.
அன்பு வாழும் இடம் நிபந்தனையின்றி நேசிக்கும் இதயங்களே!
மனிதன் பிறரை நிபந்தனையின்றி அன்பு செய்ய வேண்டும்.
அன்பிற்கு கைம்மாறு அன்பு மட்டும்தான்.
அன்பு அனைத்தையும் தாங்கிக் கொள்ளும்.
அன்புக்கு ஒருபோதும் அழிவில்லை.
அன்பு திரளான பாவங்களை அழித்து விடும்.
அன்பு இருக்கும் இடத்தில் நல்லவை அனைத்தும் குடியிருக்கும்.
அன்பு தீயவை அனைத்தையும் இடப்பெயர்ச்சி செய்துவிடும்.
உலகில் ஊமையரும், செவிடரும் புரிந்து கொள்ளும் மொழி அன்பு.
நமது குடும்பத்தில், நமது இதயத்தில், நமது நகரத்தில், நாம்
வாழும் இடத்தில் அன்பை நிரந்தரமாக குடியிருக்கச் செய்ய, இடப்பெயர்ச்சி
செய்ய வேண்டிய தகாதவை எவை என பட்டியலிடுவோம்.
அன்பினால் அவனி தழைக்க ஆவண செய்ய முன்வருவோம்.
தென் அமெரிக்காவில் சிலி என்ற நகரில் அருள் தந்தை பெர்நார்து
ஸ்மித் அடிகளார் சாலையில் நடந்து கொண்டிருந்தார். ஒரு வாலிபன் அவருக்குப்
பின்னால் ஓடிவந்து, "நீர் ஒரு குருவா"? என்று கேட்டான். அதற்கு அவர்,
"ஆம், நான் ஒரு குரு தான்" என்றார். உடனே அவன். "தயவு செய்து எனக்கு
ஒர் உதவி செய்வீர்களா?" "என்னுடைய ஜெசிக்காக வேண்டிக் கொள்வீர்களா?
என்று கேட்டான். அதற்கு குரு, "ஜெசியா? யார் அது? அவள் உனக்கு என்ன
வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபன், "ஜெசி என் காதலி"
என்று கூறினான். மீண்டும் குரு வாலிபனைப் பார்த்து, "ஆமாம்,
ஜெசிக்கு என்ன ஆகி விட்டது? அவளுக்குச் சுகமில்லையா?" என்று
கேட்டார். அதற்கு அந்த வாலிபன், "அப்படி இல்லை. நான் அவளை அதிகம்
அன்பு செய்கிறேன். ஆனால் அவள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அவளும்
என்னை அதிகம் அதிகமாய் அன்பு செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றான்.
மாலையில் ஜெபிக்கும் போது குருவானவருக்கு ஜெஸியின் நினைவு வந்தது.
கூடவே இயேசுவும் இப்படித்தான் நம் அன்பிற்காக நம் பின்னால் ஓடி வந்து
கொண்டிருப்பார் என்ற எண்ணமும் வந்தது.
"என் அன்பில் நிலைத்திருங்கள்" என்று சொல்லி நம்மைப் பின் தொடரும்
இயேசுவை இனம் கண்டு அன்பு செய்ய முன் வருவோம்.
இறை அன்பைக் காணும் நபரில், காணும் இடங்களில் கொண்டாடி மகிழ்வோம்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
கிடைத்த அன்பா? நிலைத்த அன்பா?
I. திருத்தூதர் பணி 10; 25-48
II. 1 யோவான் 4: 7- 10
III. யோவான் 15: 9-17
இறை இயேசுவில் மிகவும் அன்புக்குரிய உள்ளங்களே உயிர்ப்புக் காலத்தின்
ஆறாம் ஞாயிற்றுக் கிழமையில் இருக்கும் நம்மை இன்றைய வாசகங்கள் வழி
இறைவன் நிலைத்த அன்பு கொண்டவர்களாய் வாழ அழைக்கின்றார். அன்பு என்பது
எல்லோரும் அறிந்த ஒன்று, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அன்பினால்
ஆட்கொள்ளப்படுகின்றார்கள். சிலர் அன்பின்றி பாதிக்கப்படுகின்றார்கள்.
அன்பு எல்லா நிலையில் இருப்பவருக்கும் ஆறுதல் தரும் அற்புத மருந்து.
அன்பு ஒரு மிகச்சிறந்த பரிசு. கொடுப்பவர் பெறுபவர் இருவருமே பலனடையக்
கூடிய சக்தி வாய்ந்தது. நாமும் பலரால் அன்பு செய்யப்படுகின்றோம் .
பலரையும் நாம் அன்பு செய்திருப்போம். ஆனால் நாம் காட்டும் அன்பு
கிடைத்த அன்பா? நிலைத்த அன்பா என்று சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள்
நமக்கு அழைப்புவிடுக்கின்றன. அன்பு கிடைத்ததா? என்பதில் எந்த பிரச்சனையும்
இல்லை, ஆனால் அது நிலைத்ததா? என்பதில் தான் பிரச்சனையே. நாம்
காட்டும் அன்பும், நம்மிடம் காட்டப்படும் அன்பும் நிலைத்து இருந்தால்
மட்டுமே அது உண்மையான அன்பாக இருக்க முடியும்.
கிடைத்த அன்பு:
கிடைத்த அன்பு என்பது நிலையற்றது. ஒரு இடத்தில் நாம் இருக்கும்
போது கிடைக்கும் அதுவே வேறு இடம் மாறினால் அது மாயமாய் மறைந்து
விடும். வானில் கடந்து செல்லும் மேகங்கள் போன்றது அவ்வன்பு. சுயநலமான
அன்பு அது. தன்னையும் தன்னுடைய நலனையும் மட்டுமே கருத்தில் கொண்டு
செயல்படும். அங்கு நிலவும் மகிழ்ச்சி என்பது நிலையற்றது. குறுகிய
கால மகிழ்ச்சி அது. அது ஒரு போதும் நிறைவு பெறாது. தன்னுடன் இருப்பவர்களை
பணியாளர்களினும் கீழாய் நடத்தக் கூடியது. முதல் வாசகத்தில் கடவுள்
ஆள் பார்த்து செயல்படுவதில்லை என்பது பேதுருவிற்கு கொர்னேலியுவின்
செயல்பாடு பார்த்து விளங்கியது. இதற்கு நேர்மாறாக ஆள் பார்த்து, ஆடை
பார்த்து, இனம் மொழி பார்த்து செயல்படுவது கிடைத்த அன்பு.
எல்லோருக்கும் நிலைத்த அன்பு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.
கிடைத்த அன்பை நிலைத்த அன்பாக மாற்றும் தன்மையைப் பெற முயல்வோம்.
சிலருக்கு அன்பு காட்டத் தெரிவதில்லை. சிலருக்கு அன்பு காட்டுவது
புரியவில்லை. சிலர் அன்பு காட்ட முயல்வதே இல்லை.
நிலைத்த அன்பு:
நிலைத்த அன்பு என்றால் அது இறைவனின் அன்பு தான். அவருடைய அன்புக்கு
நாம் எல்லாம் அடிமைகள் என்று சொல்லலாம். அவரிடமிருந்தே அன்பு என்றால்
என்னவென்று கற்றுக் கொள்கிறோம். இரண்டாம் வாசகத்தில் கூறப்படுவது
போல கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல மாறாக அவர் நம்மீது
அன்பு கொண்டு தம் மகனை நமக்காக அனுப்பினார் என்பதில் தான் அன்பின்
தன்மை விளங்குகிறது. ஆக அவர் நம்மீது கொண்டுள்ள அன்பின் தன்மை அளவற்றது.
அது ஒரு போதும் மாறுவதில்லை. நிலைத்த அன்பில் உண்மையான நிறைவான மகிழ்ச்சி
இருக்கும். பணியாளர்களாக அல்ல நம்மை நண்பர்களாக பார்க்கும் தன்மை
உடையது. ஆள் பார்த்து செயல்படாது. நாம் தேர்ந்ததால் அல்ல அவர் நம்மை
தேர்ந்ததால் அவ்வன்பிற்கு நாம் உரியவர்களானோம். அவர் நம்மீது அன்பு
கூர்ந்து அவ்வன்பை பிறரிடம் காட்டச்சொல்லி அதை விரிவுபடுத்துகிறார்.
அவரின் அன்பு நமக்குள்ளே முடங்கிப் போகின்ற அன்பாக இல்லாமல் பிறரிடம்
பரவி நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அன்பாக மாற வேண்டும்.
ஆக நாம் கடவுள் மீது கொண்ட அன்பு, அவர் நம்மீது காட்டும் அன்பு
இரண்டும் நீடித்து நிலைதிருக்கக் கூடிய அன்பாக இருக்க வேண்டும்.
அது நம்மைச்சுற்றி மட்டும் இல்லாது நம்மைத் தாண்டி பிறரையும்
சென்றடைய வேண்டும். பிறரைச்சென்றடையும் போது அது சுயநலமில்லாத தூய
அன்பாக இருக்க வேண்டும்.
சீடர் ஒருவர் தன்னுடைய குருவிடம் சுயநலமற்ற அன்பு சுயநலமுள்ள அன்பு
இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார். குரு அவருக்கு
சிறந்த எடுத்துக்காட்டுடன் விளக்க முயன்றார். அப்போது
ஏரிக்கரையோரம் ஒருவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். குரு
அவனிடம் மீன்கள் என்றால் உனக்கு மிகவும் பிடிக்குமோ என்று
கேட்டார். அவன் அதற்கு பதி மொழியாக , ஆமாம் மீன்கள் என்றால் எனக்கு
உயிர். இவற்றைப் பிடித்துக் கொண்டு போய் என் மனைவியிடம்
கொடுப்பேன். அவள் எனக்கு மிக ருசியாக இதை சமைத்து தருவாள் . அதை
நான் ஒரு பிடி பிடித்து விடுவேன். என்றான். சற்று நேரம் கழித்து
மறுபுறம் இன்னொரு மனிதர் அந்த ஏரிக்கரையை நோக்கி வந்தார். அவர்
கையில் பை நிறைய பொரி இருந்தது. அவர் அப்பொரியினை மீன்களை நோக்கி
வீச அவைகள் நூற்றுக்கும் மேலாக அவரை நோக்கி வந்து பொரியினை
உண்ணத்தொடங்கின. குரு அம்மனிதரை நோக்கி மீன்கள் என்றால் உனக்கு
அவ்வளவு பிடிக்குமா? என்றார். அவரோ மறுமொழியாக, மீன்கள் என்றால்
எனக்கு உயிர். அவைகளுக்கு உணவளித்து மகிழ்வதில் எனக்கு பேரானந்தம்
என்று சொல்லி பொரியினை போடத் தொடங்கினார்.
குரு சீடனைப் பார்த்து, இப்போது புரிந்ததா? சுயநலமற்ற அன்பிற்கும்
சுயநலமுள்ள அன்பிற்கும் உள்ள வித்தியாசம்? இருவருக்குமே மீன்
என்றால் உயிர் என்பது அவர்கள் சொன்ன பதிலிலேயே அறியலாம். ஒருவர்
தன்னுடைய ஆசைக்காக மீனை பிடிக்கிறான். மற்றொரு மனிதன் தன்னுடைய
ஆசைக்காக மீனை வளர்க்கிறான். இரண்டாவது மனிதனின் செயல்
தன்னலமற்றது. அம்மீன்களினால் அவனுக்கு எந்தவிதமான பயனும்
கிடைக்காவிட்டாலும் அவற்றின் மேல் அன்பு கொண்டு அவற்றைப்
பராமரிக்கின்றான்.
கடவுள் நம்மிது காட்டும் அன்பும் இத்தகையதே. சுயநலமற்றது. நிறைவான
மகிழ்ச்சி தரக்கூடியது. ஆள் பார்த்து செயல்படாதது. நம்மை
நண்பர்களாகப் பார்க்கக் கூடியது. இத்தகைய இறைவனின் நிலைத்த அன்பை
நாமும் பெற்று பிறரும் பெற வழிவகை செய்வோம். கிடைக்கின்ற அன்பில்
எல்லாம் முழுமை காண எண்ணாது, நீடித்த நிலைத்த அன்பாம் இறை அன்பில்
முழுமை பெறுவோம். உயிர்த்த இயேசுவின் அருள் நம்மோடும் நம்
குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து நம்மை வழிநடதுவதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
நாம் பணியாளர்களா....? நண்பர்களா...?
" இனி நான் உங்களை பணியாளர் என்று சொல்லமாட்டேன், என் நண்பர்கள்
என்றேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத்
தெரியாது" என்கிறார் நம் அன்பர் இயேசு. இறையேசுவில் பிரியமானவர்களே
! , பாஸ்கா காலத்தில் இருக்கின்ற நாம், இயேசுவின்
நெருங்கிய உறவுக்காரர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். இயேசு
நம்மைப் பார்த்து "நீங்கள் என் நண்பர்கள், என் சொந்தங்கள்
, என் உறவுகள் என வாஞ்சையோடு அழைக்கின்றார். நட்பு என்பது
ஒரு புனிதமான உறவு. நல்ல நண்பர்கள் நமக்கு கிடைத்தால், அது
இறைவன் கொடுத்த வரம் என நினைக்கிறோம். அது முற்றிலும் உண்மை.
ஆனால் இங்கே இறைமகனே, நம்மை நண்பராக ஏற்றுக் கொள்கிறார்.
அதை நினைத்து மகிழ்ச்சியடைவோம்.
இந்த உலகத்தில் எத்தனையோ உறவு முறைகள் இருக்கின்றன. தாய்,
தந்தை உறவு, கணவன்
- மனைவி, சகோதரன்
- சகோதரி, அக்கா
- தங்கை,
அண்ணன் - தம்பி, சொந்த பந்த உறவுகள் என எத்தனை உறவுமுறைகள்
இருந்தாலும், "நண்பன்" என்ற உறவுக்கே முக்கியத்துவம்
கொடுக்கிறார் இயேசு. ஏனெனில் நண்பர்கள் துன்பத்தில்
துணைநிற்கிறார்கள், மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குறார்கள்.
அதனால் தான் நட்பை முதன்மைப்படுத்துகின்றார் இயேசு. நாம்
இயேசுவின் பணியாளர்கள் என்றெண்ணி , அவருடைய பணியை செய்து
வருகிறோம். ஆனால் இயேசு நம்மை பணியாளராக பார்க்க வில்லை.
மாறாக நண்பர்களாக, தோழர்களாகப் பார்க்கின்றார்.
நண்பர்கள் உறவு நிலை :
நண்பர்கள் உறவு நிலை வேறு, பணியாளர்கள் உறவு நிலை வேறு. ஒரு
எஜமான் வீட்டில் பணிபுரியும் வேலையாளுக்கு, அவ்வீட்டின் வாசல்
வரை தான் செல்ல உரிமை உண்டு. அதே நேரத்தில் அந்த எஜமானின்
நண்பன் என்றால், அவர் செல்லும் இடமெல்லாம் நண்பனும் செல்ல
உரிமை உண்டு. இந்த பரிபூரண உரிமையைத் தான், நண்பன் என்றமுறையில்
இயேசு நமக்கு கொடுக்கிறார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற
வரிசையில் , நண்பர்களை இணைப்பதில் தவறு ஏதும் இல்லை.
என்கிறார் வள்ளுவர். முகம் பார்த்து நட்பு கொள்ளாது, அகம்
பார்த்து பழகும் நட்பே ஆயுள் வரை நீடிக்கும் என்கிறார். இயேசு
காலம் தொடங்கி, இன்றைய நவீன ஊடக காலம் வரை, நண்பர்கள் உறவு
முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒருவரின்
வாழ்நாளில் நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றால், அதுவே மிகப்
பெரிய பாக்கியம். இயேசுவும் தாம் வாழ்ந்த காலத்தில் நிறைய
நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தார். இயேசு பன்னிரு சீடர்களை
தேர்ந்தெடுத்து அவர்களை தம் நண்பர்களாக்கிக் கொண்டார். தம்
சீடர்களுடன் பெத்தானியா செல்லும் போதெல்லாம் மார்த்தா, மரியா
வீட்டிற்குச் சென்று, அவர்களுடனான நட்புறவை ஆழப்படுத்திக்
கொண்டார். பாவிகளையும், நோயாளிகளையும் குணப்படுத்தி அவர்களையும்
தம் நண்பகளாக்கிக் கொண்டார். இவ்வாறு இயேசு வாழ்ந்த காலத்தில்
எல்லாருடனும் நட்புறவு கொண்டு, எல்லாரையும் தம் நண்பராக்கிக்
கொண்டதால், இன்று நம்மையும் பார்த்து, நீங்களும் என் நண்பர்களே
என்று அழைப்புவிடுக்கிறார்.
கவியரசு கண்ணதாசன் இன்றைய காலத்து நண்பர்களின் மனநிலை பற்றி,
மூன்று நிலைகளில் சொல்லியிருக்கிறார். அதாவது பனைமரம்,
தென்னைமரம், வாழைமரம்.
பனைமரம் :
தானாக முளைத்து , தனக்கு கிடைத்த நீரை குடித்து, நன்றாக
வளர்ச்சி பெற்று, தன் உடம்பையும், ஓலையையும் மற்றும்
நுங்கையும் உலகிற்குத் தருகிறது. நம்மிடம் எந்த உதவியும்
கேட்காமல் , எதிர்பார்ப்பு இல்லாமல் உதவுபவர் பனைமரம் போன்றவர்.
தென்னைமரம் :
தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன்
தருகிறது. அதுபோல நம்மிடம் உதவி பெற்று நண்பராக இருப்பர்
தென்னைமரத்துக்கு இணையானவர்.
வாழைமரம் :
தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன் தரும். அதுபோல தினமும்
நம்மிடம் உதவி பெற்று வாழ்பவர், உதவி கிடைத்தால் நட்பு,
கிடைக்காவிட்டால் பிரிவு என்ற மனநிலையில் நட்பு கொள்பவர், வாழைமரத்துக்கு இணையானவர்.
இந்த மூவரில் பனைமரம் போன்ற நட்பே சிறந்தது என்கிறார் கண்ணதாசன்.
இதைப்போன்று தான் இயேசுவும் நம்மிடம் எததையும் எதிர்பார்க்காமல்,
எல்லா நேரத்திலும் உதவும் நல்ல நண்பராக திகழ்கின்றார்.
"தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும்
இல்லை" என்று சொன்னவர், நண்பர்களாகிய நமக்காக தம் உயிரையும்
கொடுத்தார். இதை விட உண்மை நட்புக்கு வேறு அடையாளம் சொல்லவே
முடியாது. அன்பின்உச்ச கட்டமாம் தன் உயிரை கொடுத்த இயேசு,
நம் ஒவ்வொருவரையும் அவருடைய நண்பர்களாக வாழ அழைக்கின்றார்.
பணியாளர் உறவு நிலை:
பணியாள் அல்லது வேலையாள் என்பவர்கள், தன் குடுமப சூழ்நிலை
காரணமாக, ஓர் தலைவரின் கீழ் அல்லது ஒரு எஜமான் வீட்டில் அடிமைகளாக
வேலை செய்பவர்கள். அவர்கள் எப்போதும் தன் எஜமானுக்கு கீழ்
தான் இருக்க வேண்டும். அவர் விருப்பப்படி தான் எல்லாவற்றையும்
செய்ய வேண்டும். தலைவரின் விருப்பமில்லாமல் எந்தவொரு செயலையும்
செய்தால், அவரின் வெறுப்புக்கு ஆளாவார் வேலையாள். சில நேரம்
ஒரு வேலையாள் தனக்கு பிடிக்க வில்லையென்றாலோ, அல்லது சரியாக
வேலை செய்யவில்லை என்றாலோ, உடனே தன் வீட்டு வேலையிலிருந்து
நீக்கிவிடும் உரிமை எஜமானுக்கு உண்டு.
இத்தகைய பழக்கம் இன்று மட்டுமல்ல, இயேசு வாழ்ந்த
காலத்திலிருந்தே தொடர்கிறது. யூதத் தலைவர்கள்,
பரிசேயர்கள், மறைநூள் அறிஞர்கள் இவர்கள் எல்லாருமே,
தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள்,மற்றவர்கள் தங்களுகு கீழ்
இருக்கும் அடிமைகள், என்ற எண்ணத்தில் தான் மக்களைப்
பார்த்தனர். பணியாளர்கள் எப்போதும் தன் எஜமானின் கையை
எதிர்பார்த்தே வாழவேண்டிய சூழ்நிலை. எஜமானுக்கும்,
பணியாளருக்கும் உள்ள உறவு என்பது, உரிமையில்லாத, அன்பு
கலக்காத, அடிமையின் உறவாகவே இருக்கிறது. அது இன்றும்
தொடர்கிறது. இந்த நிலையை அறிந்து தான் இயேசு, நமது அடிமை
நிலையை அகற்றி, நமக்கு எல்லா உரிமையும் கொடுத்து,
நண்பர்களாக நம்மை ஏற்றுக்கொள்ளகிறார்.
அன்பு உள்ளங்களே! நாம் இயேசுவின் நண்பர்கள் என்றால், அவர்
கற்றுக்கொடுத்ததை நாம் பின்பற்ற வேண்டும். இதைத்தான் அவர்
நம்மிடம் எதிர்பார்க்கிறார். அவர் கற்றுத் தந்தது என்ன?
"நான் உங்களை அன்பு செய்வது போல நீங்களும் மற்றவர்களை
அன்பு செய்யுங்கள்" என்பது தான். நாமும் மற்றவர்களை அன்பு
செய்து, நிறைகுறைகளோடு ஏற்று வாழ்வோம். நமக்கு பலர்
தெரிந்தவர்களாக, நம்மோடு நன்கு பழகுபவர்களாக இருந்தாலும்,
ஒரு சிலரை மட்டும் தான் நண்பர்கள் வரிசையில்
வைத்திருக்கிறோம். ஏனெனில் அவர்களை நமக்குப்
பிடிப்பதாலும், மற்றவர்களிடம் கிடைக்காத ஏதோ ஒன்று
அவர்களிடம் கிடைப்பதாலும், அவர்களிடம் அன்பு, பாசம்,
நெருக்கம் காட்டுகிறோம். இருப்பினும் மனிதர்களின் அன்பு,
பாசத்தை விட, ஆழம்,அகலம், நீளம் கொண்ட, எல்லையில்லா
அன்பு, நிலையான அன்பு இயேசுவின் அன்பு மட்டுமே. இதனை பல
நேரங்களில் நம் வாழ்க்கை அனுபவத்தில் உணர்ந்திருப்போம்..
நம்முடைய உண்மையான, அன்பான, பாசமான, நிலையான நண்பன்,
எத்தகைய சூழ்நிலையிலும் மாறாத , நம்மை கைவிடாத நண்பன்,
நம்மை விட்டு விலகாத நண்பன், நிலையான நண்பன் இயேசு மட்டும்
தான். இனி நாம் பணியாளர்கள் அல்ல, இயேசுவின் நண்பர்கள்.
எனவே அவரது தோழமை உணர்வில்
வாழ்வோம்.... வளர்வோம்..... ஆண்டவர்
இயேசு நம்மோடும் நம் சுற்றத்தாரோடும் இருந்து, நம்மை
நிறைவாக ஆசிர்வதிப்பாராக ஆமென்.
சகோ. செல்வராணி OSM
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
உறவின் சமநிலை
திருத்தூதர் பணிகள் 10:25-26,34-35,44-48
1 யோவான் 4:7-10
யோவான் 15:9-17
"யூவல் நோவா ஹராரி" என்ற இஸ்ரயேல் நாட்டு எழுத்தாளர் எழுதி
வெளிவந்த (2014) நூல் 'சேபியன்ஸ். மனுக்குலத்தின் ஒரு சிறு வரலாறு'.
இந்த நூலின் ஓரிடத்தில் மனித வாழ்வில் நாம் ஏற்றுக்கொள்ளும்
இரண்டு பொய்களைக் குறிப்பிடுகின்றார். முதல் பொய்: 'எல்லா மனிதர்களும்
சமம்.' இந்தப் பொய்யை நமக்கு அறிவுறுத்துவது உலக நாடுகளின் பிரகடனம்.
கொஞ்சம் கண்களைத் திறந்து பாருங்கள். எல்லா மனிதர்களும் சமமா?
ஆண் வேறு, பெண் வேறு, மூன்றாம் பாலினம் வேறு. குழந்தை வேறு.
முதியவர் வேறு. இளைஞன் வேறு. இளம்பெண் வேறு. மனித உயரத்தில்
வேற்றுமை. தோலின் நிறத்தில் வேற்றுமை. மொழியில் வேற்றுமை. மதத்தில்
வேற்றுமை. பொருளாதாரத்தில் வேற்றுமை. இப்படி நாம் அடுக்கிக்கொண்டே
போகலாம். இப்படி வேற்றுமை நிறைந்த உலகில் 'எல்லா மனிதர்களும்
சமம்' என்று சொல்வது முதல் பொய். இரண்டாவது பொய்: 'மனிதர்களில்
பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு இருக்கிறது.' இந்தப் பொய்யை நமக்கு
அறிவுறுத்துவது நம் மண்ணில் ஆரியர்கள் கொண்டுவந்து நம்மேல்
திணித்த மனுசாஸ்திரம். இந்த நூலின் படி பிரம்மாவின் தலை, வயிறு,
தொடை, கால் ஆகிய நான்கு இடங்களிலிருந்து மனிதர்கள் பிறப்பெடுக்கின்றனர்.
இந்த நால்வருக்குள்ளும் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு இருக்கிறது.
நிற்க.
சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்தில் நம்மால் எப்படி ஏறி
பயணம் செய்ய முடிகிறது? அந்தப் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்,
நடத்துநர், நம் சீட்டில் நமக்கு அருகில் நம் சட்டைப்பையில் உள்ளது
என்ன என்று தெரியும் அளவிற்கு, நம் ஃபோனில் அடுத்தவர் பேசுவதைக்
கேட்கும் அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும் நபர் இவர்களை
எல்லாம் நமக்குத் தெரியாது. இருந்தாலும் எப்படி நம்மால் அவர்கள்
அருகில் அமர்ந்து, ஏன் தூங்கி, பயணம் செய்ய முடிகிறது?
பயணத்தின்போது ஒரு ஓட்டலுக்குச் செல்கிறோம். ஏற்கனவே நிறையப்பேர்
சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாமும் ஒரு நாற்காலியில் அமர்ந்து
உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். சாப்பிட்டுவிட்டு பில் கட்டிவிட்டு
வெளியே வந்துவிடுகிறோம். எவரோ சமைத்த உணவை, எவரோ வைத்து நடத்தும்
உணவகத்தில், முன்பின் தெரியாத ஒருவர்முன் அமர்ந்து நாம் எப்படி
சாப்பிடுகிறோம்?
20 வருடங்களாக யார், எவர் என்று தெரியாத ஒருவர் 20 வயதில் அப்படி
தெரியாத ஒருவரை அருட்சாதனம்
செய்து 80 வயது வரை 60 ஆண்டுகள் எப்படி
இணைந்து வாழ முடிகிறது?
மனிதர்கள் பிரிந்து கிடந்தாலும் அவர்களை இணைக்கின்ற பிணைப்பு
எது?
பிணைப்பு ஏற்படுவதுற்கு சமதளம் அவசியம். ஒரு மரத்துண்டை மற்றொரு
மரத்துண்டோடு இணைக்க வேண்டும் என்றால் அவை இரண்டும் சம தளத்தில்
இருக்க வேண்டும். ஒன்றோடொன்று பொருந்தும் தன்மை கொண்டிருக்க
வேண்டும். பென்சிலும் மரத்துண்டுதான். விறகுக்கட்டையும் மரத்துண்டுதான்.
இரண்டையும் ஒன்றோடொன்று ஃபெவிகால் போட்டு இணைத்துவிட முடியுமா?
ஒருவேளை இணைத்தாலும் அந்த இணைப்பு நீண்டதாக இருக்குமா?
கணித, இயற்பியல், வேதியியல் பாடங்களில் சமன்பாடு என்ற ஒன்று உண்டு.
அதாவது அம்புக் குறிக்கு இருபக்கமும் இருக்கின்ற கூறுகள் சமமாக
இருக்க வேண்டும். சில நேரங்களில் இந்தச் சமன் வெளிப்படையாக இருக்கும்.
சில நேரங்களில் மறைந்து கிடக்கும்.
மனித உறவுகளில் சில நேரங்களில் வெளிப்படையாக, சில நேரங்களில்
மறைந்து கிடக்கும் சமன்பாடு அல்லது சமநிலை பற்றிப் பேசிகின்றன
இன்றைய இறைவாக்கு வழிபாட்டு வாசகங்கள்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 10:25-26,34-35,44-48)
விருத்தசேதனம் செய்த கிறிஸ்தவர்களுக்கு
- அதாவது யூதராய் இருந்து
கிறிஸ்தவர்களாக மாறிய (பேதுரு உள்பட)
- ஒரு கேள்வி எழுகின்றது:
'விருத்தசேதனம் செய்யாத கிறிஸ்தவர்கள்
- அதாவது, பிற இனத்தவராய்
இருந்து கிறிஸ்தவர்களாய் மாறியவர்களோடு நாம் எப்படி உறவாடுவது?
அவர்களைவிட நாம் மேலானவர்கள் இல்லையா?
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 யோவா 4:7-10) யோவானின்
திருச்சபையில் ஒரு கேள்வி எழுகிறது: இயேசு அன்புக்கட்டளை
கொடுத்துச் சென்றாரே. இந்த அன்புக்கட்டளையை நாம் எப்படி வாழ்வது?
கடவுள் நம்மைவிட பெரியவர். அவரை நம்மால் அன்பு செய்ய முடியுமா?
கடவுள் நம்மைவிட பெரியவர் இல்லையா?
இன்றைய மூன்றாம் வாசகத்தில் (காண். யோவா 15:9-17) தன் சீடர்களின்
பாதங்களைக் கழுவி அவர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு
தனக்கும் தன் சீடர்களுக்கும் உள்ள உறவு தலைவர்-பணியாளர் உறவு
அல்ல என்று சொல்வதோடு, இருவருக்குமான உறவு நண்பர்கள் உறவு என்கிறார்.
'சீடர் குருவைவிட மேலானவர் அல்ல' (லூக் 6:40) என்று சொல்லும்
இயேசுவால் எப்படி சீடர்களைத் தனக்கு இணையாக அழைக்க முடிந்தது?
ஆக,
பிற இனத்து கிறிஸ்தவர்களும் யூதர்களும் சமமா?
- இது முதல்
கேள்வி.
கடவுளும் மனிதர்களும் சமமா?
- இது இரண்டாம் கேள்வி.
இயேசுவும் சீடர்களும் சமமா?
- இது மூன்றாம் கேள்வி.
இந்த மூன்று கேள்விகளுக்கும் இன்றைய வாசகங்களே விடைகளையும் தருகின்றன.
இந்த விடைகள் 'அழைத்தல்' மற்றும் 'மறுமொழி' என்ற இரண்டு நிலைகளில்
உள்ளன.
1. பிறஇனத்து கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் இணைக்கும் 'அழைத்தல்'
தூய ஆவி. இந்த அழைத்தலுக்கு பேதுருவும், மற்ற யூத கிறிஸ்தவர்களும்
அளிக்க வேண்டிய 'மறுமொழி' எல்லாரையும் ஏற்றக்கொள்வது. இதை நாம்
பேதுருவின் வார்த்தைகளில் பார்க்கிறோம். கொர்னேலியு என்ற புறவினத்து
அன்பருக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும் பேதுருவின் காலடிகளில்
விழுந்து பணியும் கொர்னேலியுவைத் தூக்கிவிடும் பேதுரு, 'எழுந்திடும்,
நானும் ஒரு மனிதன்தான்' என்கிறார். தொடர்ந்து பேதுரு
பேசிக்கொண்டிருந்தபோதே தூய ஆவி புறஇனத்தார் மேல் இறங்கி வருகின்றது.
இதைக் கண்ட பேதுரு அவர்களுக்கு திருமுழுக்கும் கொடுக்கின்றார்.
இவ்வாறாக, தூய ஆவியார் சமநிலைக்கு 'அழைக்கின்றார்.' அந்த அழைத்தலுக்கு
'மறுமொழியாக' யூதகிறிஸ்தவர்கள் பிறஇனத்து கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
2. 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக' என்று தன்
திருச்சபைக்கு அறிவுறுத்துகின்ற திருத்தூதர் யோவான், 'நாம்
கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல. மாறாக, அவர்
நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக
அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது'
என்கிறார். ஆக, கடவுளையும் மனிதர்களையும் இணைக்கும் அழைத்தல்
'அன்பு.' இந்த அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. இந்த
அழைத்தலுக்கு மனிதர்கள் தரவேண்டிய மறுமொழி 'பிறரன்பு.'
3. தன் சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு, 'உங்களை
நான் நண்பர்கள் என்றேன்' என்கிறார். இது 'அழைத்தல்.'
தொடர்ந்து, 'நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால்
நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்' என்கிறார். ஆக, அவரின்
அழைத்தலுக்கு ஏற்ற மறுமொழியை சீடர்கள் தந்தால்தான் நண்பர்கள்
நிலையில் அவர்களால் தொடர்ந்து நிற்க முடியும்.
இயேசு நண்பர்களைப் பற்றி இங்கே பேசுகிறார்கள் என்றவுடன் இது
வேற டாபிக் என நினைத்துவிட வேண்டாம். அன்பில் நிலவும் இரண்டு
நிலைகளைத்தான் இங்கே சொல்கின்றார்: (அ) பணியாளர் நிலை, (ஆ)
நண்பர் நிலை.
அ. பணியாளர் நிலை. இந்த நிலையில் ஒருவர் மேலிருப்பார். மற்றவர்
கீழிருப்பார். மேலிருப்பவர் கொடுத்துக் கொண்டிருப்பார்.
கீழிருப்பவர் பெற்றுக்கொண்டிருப்பார். கீழிருப்பவர் தான்
நினைப்பது போல இல்லையென்றால் மேலிருப்பவர் அவர் மேல்
கோபப்படுவார். அவரைத் தனக்கு வேண்டாம் என சொல்லி விடுவார்.
கீழிருப்பவர் தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது. எப்போதும்,
'மேலிருப்பவருக்கு இது பிடிக்குமா!' என்று நினைத்துக்
கொண்டேதான் செய்ய வேண்டும். மேலிருப்பவரின் மனம் குளிருமாறே
இவர் நடந்து கொள்ள வேண்டும். 'நீ எனக்கு மட்டும்தான்!' என்று
மேலிருப்பவர் கீழிருப்பவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.
'தலைவர் செய்வது இன்னதென்று பணியாளருக்குத் தெரியாது!'
என்கிறார் இயேசு. இந்த உறவில் அப்படித்தான் மேலிருப்பவர் எந்த
மூடில் இருப்பார். எப்படி ஃபோன் எடுப்பார். என்ன நேரத்தில்
கடிந்து கொள்வார் என்று எதுவும் கீழிருப்பவருக்குத் தெரியாது.
ஆ. நண்பர் நிலை. இந்த நிலையில் இரண்டு பேரும் ஒரே தளத்தில்
இருப்பார். இருவரும் கொடுத்துக்கொள்வர். வாங்கிக்கொள்வர்.
என்னுடையது என் உரிமை, அவருடையது அவர் உரிமை என்று ஒருவர்
மற்றவர் மேல் மதிப்பும், சுதந்திரமும் இருக்கும். 'உனக்குப்
பிடிக்கவில்லை என்பதற்காக எனக்குப் பிடித்த ஒன்றை செய்யாமல்
இருக்க என்னால் முடியாது!' என்று சொல்லும் உரிமை இந்த நிலையில்
உண்டு. 'நான் உனக்கு தான். நீ எனக்கு தான். ஆனால், நான் உனக்கு
மட்டும் அல்ல. நீ எனக்கு மட்டும் அல்ல' என்று அடுத்தவருக்கும்
இடம் கொடுத்த அரவணைத்துக்கொள்வது இந்த நிலை. நண்பர்கள்
நிலையில் ஒளிவு மறைவு இருக்காது.
இவ்வாறாக, 'தூய ஆவி,' 'அன்பு,' 'நண்பர் நிலை' என்ற மூன்று
இடங்களிலுமே அழைத்தல் என்பது மேலிருந்து கீழ்நோக்கியதாக
இருக்கிறது. இந்த மூன்றும் மேலிருந்து கீழ்நோக்கி வரும்போது
நாம் தரவேண்டிய மறுமொழியும்
- 'ஏற்றுக்கொள்ளுதல்,' 'பிறரன்பு,'
'கனிதருதல்' - இருந்தால்தான் உறவின் சமநிலை கிடைக்கிறது.
உறவின் சமநிலை அடைதலை நாம் எப்படி அறிந்துகொள்வது?
கனிதருதலில்.
கனி என்றால் என்ன? மரத்தின் உச்சகட்ட வளர்ச்சி தான் கனி. இலை
-
பூ - காய் என தொடரும் மரத்தின் பயணம் கனியில்
முற்றுப்பெற்றுவிடுகிறது. கனிதான் மரத்தின் நோக்கம். ஆக,
உறவில் கனி என்று சொல்லும்போது, உறவில் வளர்தல் அவசியம்
-
நீங்களும், நானும் அவரில்.
இறுதியாக,
'மனிதர்கள் அனைவரும் சமம்' என்ற பொய்யை நாம் நம்பினாலும்,
'மனிதர்கள் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கொண்டவர்கள்' என்ற பொய்யை
நம்பினாலும், ஒருவர் மற்றவரோடு நாம் கொண்டிருக்கும் சமநிலையே
நம்மை வளரச் செய்கிறது.
நம்மில் குடிகொண்டிருக்கும் ஆவியும், அடுத்தவரில்
குடியிருக்கும் ஆவியும் கடவுளின் ஆவியே எனில், அங்கே அன்பு
சாத்தியமே. இந்த அன்பினால்தான் இயேசுவும் நம்மைத்
தேர்ந்துகொண்டு நம்மேல் உரிமை கொண்டாடுகின்றார்.
ஒருவர் மற்றவர்மேல் உரிமைகொள்ளும் சமநிலையே நம் அழைத்தலும்
மறுமொழியாகட்டும் - இன்றும், என்றும். இந்த மறுமொழியே நாம்
பேருந்தில் பயணம் செய்யவும், ஓட்டலில் உணவருந்தவும், அருள்பணி,
திருமண உறவுகளில் நிலைக்கவும் தூண்டுகிறது.
வாக்குறுதிகள் நம் வாழ்வில் மிகவும் இன்றியமையாதவை.
'நாளை காலையில் நான் 6 மணிக்குத் துயில் எழுவேன்' என்று
எனக்கு நானே சொல்லும் சிறிய வாக்குறுதி தொடங்கி,
'இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் நான்
உனக்கு பிரமாணிக்கமாயிருந்து' அல்லது 'என் தல ஆயருக்கு
நான் என் கீழ்ப்படிதலையும் வணக்கத்தையும் வாக்களிக்கிறேன்'
என்று அருட்சாதனம்
மற்றும் அருள்பணி நிலையில் ஒருவர்
மற்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதி வரை, நாம்
வாக்குறுதிகள் கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். இன்னொரு
பக்கம், தேர்தல் வாக்குறுதிகள், விளம்பரங்களின்
வாக்குறுதிகள், நிறுவனங்களின் வாக்குறுதிகள் என நம்மை
வாக்குறுதிகள் சூழ்ந்துகொண்டே இருக்கின்றன. நம்
விவிலியத்திலும் இறைவன் மனுக்குலத்திற்குக் கொடுத்த நிறைய
வாக்குறுதிகள் பரவிக் கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக,
இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து
விடுவித்து வழிநடத்திய ஆண்டவராகிய கடவுள், அவர்கள்
செங்கடலைக் கண்டு மலைத்து நின்றபோது, 'நீங்கள்
சும்மாயிருங்கள். ஆண்டவராகிய கடவுள்தாமே உங்களுக்காகப்
போரிடுவார்!' என்ற வாக்குறுதி தருகின்றார். அந்த
வாக்குறுதியை நிறைவேற்றவும் செய்கின்றார்.
வாக்குறுதிகள் நமக்கு மூன்று நிலைகளில் முக்கியத்துவம்
பெறுகின்றன:
(அ) வாக்குறுதிகள் வழியாகவே நாம் நம்பிக்கையில்
வளர்கிறோம். எடுத்துக்காட்டாக, 'இன்பத்திலும்
துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும்' என்று ஒரு மனைவி
தன் கணவருக்கு வாக்குறுதி கொடுப்பதால், கணவனுக்கு அந்த
மனைவிமேல் நம்பிக்கை வருகிறது. தன்னிடம் உள்ள அனைத்தையும்
அவர் மனைவியோடு பகிர்ந்துகொள்ள முன்வருகிறார்.
(ஆ) வாக்குறுதிகள் நமக்கு எதிர்நோக்கைத் தருகின்றன. 'ஆறு
நாள்களில் சிகப்பழகு!' அல்லது 'மின்னலைப் போன்ற வெண்மை'
என்ற வாக்குறுதிகளை நிறுவனங்கங்கள் தர, அந்நிறுவனங்களின்
அழகுசாதன மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை நான் வாங்கிப்
பயன்படுத்துகின்றேன். என் முகம் சிவக்கும் என்பதும், என்
ஆடை வெண்மையாகும் என்பதும் என்னுடைய எதிர்நோக்காக
இருக்கிறது.
(இ) வாக்குறுதிகள் வழியாகவே நாம் ஒருவர் மற்றவரை அன்பு
செய்கின்றோம். எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி தன்னுடைய
வாடிக்கையாளர்களுக்குத் தன் சேவையை வாக்களிக்கிறது. அந்த
நிலையில் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஒரு
பரஸ்பர உறவு தொடங்குகின்றது. வியாபாரம் மட்டுமே இதன்
இலக்காக இருந்ததாலும் உறவு நிலை வளர்வதற்கும் இது இடம்
தருகிறது.
கடந்த வாரம் தன்னைத் திராட்சைக் கொடியாகவும், தன் சீடர்களை
அதன் கிளைகளாகவும் உருவகம் செய்த இயேசு இன்று அன்புக்
கட்டளை பற்றிப் பேசுகின்றார். இன்றைய நற்செய்தியை
இயேசுவின் மூன்று வாக்குறுதிகள் என நாம்
எடுத்துக்கொள்ளலாம்:
(அ) நான் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன் (15:9)
(ஆ) நான் உங்களை நண்பர்கள் என அழைக்கிறேன் (15:15)
(இ) நான் உங்களைத் தேர்ந்து கொண்டேன் (15:16).
இந்த மூன்றும் இயேசுவின் முன்னெடுப்புகளாக உள்ளன. மேலும்
இவை மேலிருந்து கீழ்நோக்கியதாக உள்ளன.
(அ) நான் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன்: அன்பு.
'தந்தை தன்னை அன்பு செய்கிறார் எனவும், தந்தை தன்னை அன்பு
செய்வது போல தன் சீடர்களை தான் அன்பு செய்வதாகவும்'
சொல்கிறார் இயேசு. அத்தோடு நிறுத்தவில்லை அவர். 'நீங்கள்
ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ளவேண்டும்!' என அதைக்
கட்டளையாகவும் ஆக்கிவிடுகின்றார். ஆக, மேலிருந்து வருகின்ற
அன்பை நாம் நமக்குக் கீழ்நோக்கி செலுத்த வேண்டும். அன்பில்
இந்த பரிமாணம் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த
ரெசிப்ரோசிட்டி தவறும்போது அன்பு மறைகின்றது. தொடர்ந்து
சொல்கிறார்: 'என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள்
மகிழ்ச்சி நிலைத்திருக்கவும் இவற்றை உங்களிடம் சொன்னேன்!'
(15:11). எவற்றை? 'அன்பு செய்வதை!' ஆக, அன்பை நாம் எப்படி
அளவிடுவது? அன்பு தரும் மகிழ்ச்சியை வைத்தே.
(ஆ) நான் உங்களை நண்பர்கள் என அழைக்கிறேன்: நட்பு.
'தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட' என்கிறார்
இயேசு. அன்பில் நிலவும் இரண்டு நிலைகளைத்தான் இங்கே
சொல்கின்றார்: (1) பணியாளர் நிலை, (2) நண்பர் நிலை.
பணியாளர் நிலையில் நிலையில் ஒருவர் மேலிருப்பார். மற்றவர்
கீழிருப்பார். மேலிருப்பவர் கொடுத்துக் கொண்டிருப்பார்.
கீழிருப்பவர் பெற்றுக்கொண்டிருப்பார். ஆனால் நண்பர்
நிலையில் இரண்டு பேரும் ஒரே தளத்தில் இருப்பார். இருவரும்
கொடுத்துக்கொள்வர். வாங்கிக்கொள்வர்.
(இ) நான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்: உரிமை.
இயேசுவின் வார்த்தைகள் அன்பில் துலங்கும் உரிமையைச்
சுட்டிக்காட்டுகின்றன. இந்த உரிமை எங்கிருந்து வருகிறது?
நாம் மற்றவரையும், மற்றவர் நம்மையும்
தேர்ந்துகொள்வதில்தான். தேர்ந்து கொள்வது என்பது
உரிமையாக்கிக்கொள்வது. பணியாளருக்குரிய அடிமைத்தனத்தோடு
அல்ல. மாறாக, நண்பருக்குரிய கட்டின்மையோடு. அன்பில் நாம்
மற்றவர்களை உரிமையாக்கிக்கொள்கின்றோம். மற்றவர்களுக்கும்
உரிமையாகின்றோம். இந்த உரிமையின் நோக்கம் என்ன? கனி
தருவது! கனி என்றால் என்ன? மரத்தின் உச்சகட்ட வளர்ச்சி
தான் கனி. இலை - பூ - காய் என தொடரும் மரத்தின் பயணம்
கனியில் முற்றுப்பெற்றுவிடுகிறது. கனிதான் மரத்தின்
நோக்கம். ஆக, அன்பில் கனி என்று சொல்லும்போது, அன்பில்
வளர்ச்சி வேண்டும் என்பதையே இயேசுவின் வார்த்தை
சொல்கின்றது.
நம் வாழ்வில் பல நேரங்களில் நம்மை அறியாமல் தளர்ந்து
போகின்றோம். நம் இருத்தலால் யாருக்கும் பயன் இல்லை என்று
புலம்புகிறோம். செய்வதற்கு ஒன்றும் இல்லை எனக்
கலங்குகிறோம். பேசுவதற்கு யாரும் இல்லை என வருந்துகிறோம்.
பிறர் நம்மைக் கண்டுகொள்ளவில்லை என்றும், பிறர் நம்மைத்
தாழ்வாக நடத்துகின்றனர் என்றும் கூட அழுகின்றோம். இந்த
இடத்தில் இயேசுவின் முதல் வாக்குறுதி நமக்கு இன்னும்
முக்கியம் ஆகிறது. அவர் நம்மை அன்பு செய்கிறார். இந்த
உறுதிப்பாடு நம் வாழ்வில் பல உச்சங்களை நாம் தொட உதவும்.
இயேசுவுக்கு அவருடைய வாழ்வில் இக்கட்டான சூழல்கள் மற்றும்
எதிர்ப்புகள் வந்தபோது அவருக்கு உறுதுணையாக இருந்தது அன்பு
உணர்வே. திருமுழுக்கின்போது, 'நீரே என் அன்பார்ந்த மகன்'
(காண். லூக் 3:22) என்று ஒலிக்கக் கேட்ட தந்தையின் குரல்
அவருடைய உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருந்ததால்,
மற்றவர்கள் அவரை அன்பு செய்யாத சூழலிலும் தந்தையின் அன்பை
அவர் உணர்ந்துகொண்டே இருந்தார். இதையொட்டியே புனித
பவுலும், 'சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ,
வருவனவோ எதையும் நம்மைக் கடவுளின் அன்பிலிருந்து பிரிக்க
முடியாது' (காண். உரோ 8:37-38) என்கிறார்.
ஆண்டவர் நம்மேல் காட்டும் அன்பு நண்பர் நிலையில்
இருக்கின்றது. ஆனால், பல நேரங்களில் நாம்தான் பணியாளர்
நிலையிலேயே இருக்க விருப்பம் கொள்கிறோம். எனக்குத் தெரிந்த
இல்லம் ஒன்றில், தன் வீட்டு வேலைக்காரர் ஒருவரின் மகனை
வீட்டு உரிமையாளர் தன் மகனாகத் தத்தெடுத்துக்கொண்டார்.
ஆனால், இறுதி வரை அந்த மகன் அவருடைய வேலைக்காரனாக
இருந்தானே தவிர, மகனாக இருக்க அவனால் இயலவில்லை. இளைய மகன்
எடுத்துக்காட்டிலும் (காண். லூக் 15:11-32) நாம்
இப்படிப்பட்ட ஒரு நிலையைத்தான் பார்க்கிறோம். இளைய மகன்
தன் தந்தையின் வேலைக்காரனாக இருக்க விரும்பினான். மூத்த
மகன் இறுதி வரை தன் தந்தையின் இல்லத்தில் வேலைக்காரனாகவே
இருந்தான். இருவருமே தங்களுடைய மகனுக்குரிய உரிமையையும்
பேற்றையும் மறந்துவிட்டனர். இயேசு இன்று நம்மை நண்பர்கள்
என அழைக்கின்றார். நம் நிலையை உயர்த்துகின்றார். அப்படி
என்றால், நம் எண்ணத்தில் உயர்வு வேண்டும். பணியாளர் அல்லது
வேலைக்கார மனநிலையை விடுத்து, நட்பு நிலையைப் பற்றிக்கொள்ள
வேண்டும்.
மூன்றாவதாக, தேர்ந்துகொள்தல். பலவற்றிலிருந்து சிறப்பான
ஒன்றாக இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டுள்ளார். நாம் ஒன்றைத்
தேர்ந்துகொள்ளும் முன் நிறைய யோசிக்கிறோம், ஆய்வு
செய்கிறோம், கேள்வி கேட்கிறோம். இறைவன் அந்த அளவுக்கு நம்
ஒவ்வொருவர்மேலும் அக்கறை எடுத்துள்ளார். இதன் நோக்கம்
என்ன? கனி தருதல், நற்செயல்கள் செய்தல். இன்றைய முதல்
வாசகத்தில், தேர்ந்துகொள்ளப்பட்ட பேதுரு புறவினத்தாருக்கு
நற்செய்தி அறிவிக்கும் நோக்குடன் கொர்னேலியு
இல்லத்திற்குச் செல்கின்றார். திருத்தூதுப் பணியில் அவர்
கனி தருகின்றார். கொர்னேலியுவின் இல்லத்தில் குடியிருந்த
புறவினத்தார்மேல் ஆண்டவராகிய கடவுள் தன் தூய ஆவியாரை
அனுப்பி அவர்களைத் தேர்ந்துகொள்கின்றார். இரண்டாம்
வாசகத்தில், 'கடவுள் நம்மீது முதலில் அன்பு கொண்டார்'
என்று சொல்வதன் வழியாக, மனுக்குலம் பெற்றுள்ள தேர்ந்த
நிலையை முன்வைக்கின்றார் யோவான்.
இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடலில் (காண். திபா 98),
'இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்
உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்' என ஆண்டவரின்
வாக்குப் பிறழாமை குறித்துப் பாடுகின்றார் ஆசிரியர்.
வாக்குறுதகளில் பிறழாத நம் இறைவனின் வாக்குறுதிகளைப்
பெற்றுள்ள நாம், எனக்கு நானே அல்லது நான் பிறருக்கு
வழங்கும் வாக்குறுதிகளில் உறுதியாய் இருந்தால் எத்துணை
நலம்!
அமெரிக்காவில் சாம், ஜாண்சன் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தார்கள்.
ஒருநாள் இவர்கள் இருவரும் பாஸ்டன் நகருக்குச்
சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் இருவரும் ஒரு பெரிய விபத்தில்
சிக்க, சாம் பலத்த காயமடைந்தான்; ஜாண்சனோ பார்வையை இழந்தான்.
பின்னர் இருவரும் ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுச்
சிகிச்சைக்காகத் தனித்தனிப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டார்கள்.
சிகிச்சையின்பொழுது சாமிற்கு ஏற்கெனவே இரத்தப் புற்றுநோய்
இருந்ததால், அவன் பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்
கை விரித்தார். இன்னொரு பக்கம் ஜாண்சன் பார்வையின்றியே வாழவேண்டும்
என்று மருத்துவர் அவனிடம் கூறினார்.
நாள்கள் நகர்ந்தன. தான் பிழைப்பது மிகவும் கடினம் என்பதை
உணர்ந்த சாம், தனக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவரை
அழைத்து, "நான் இறந்த பிறகு என்னுடைய கண்களை என் நண்பன்
ஜாண்சனுக்குப் பொருத்தி விடுவிடுங்கள்" என்றான். மருத்துவரும்
அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டார்; ஆனால் ஜாண்சன், 'தன்
நண்பன்தான் விரைவில் சாகப் போகிறானே...! அவனை எதற்குப்
பார்க்கவேண்டும்?' என்று அப்படியே இருந்துவிட்டான். சில
நாள்களில் சாம் இறந்தான். அவன் இறந்ததும், அவனுடைய கண்கள்
ஜாண்சனுக்குப் பொருத்தப்பட, ஜாண்சன் மீண்டுமாகப் பார்வை
பெற்றான். அந்நேரத்தில் அவனுக்கு சாம் இறந்த செய்தியானது
சொல்லப்பட்டது. உடனே அவன் சாமின் அடக்கச் சடங்கில் கலந்துகொள்ள
அவனுடைய வீட்டிற்குச் சென்றான். அங்கு ஜான்சனிடம் ஒரு கடிதம்
கொடுக்கப்பட்டது. அது சாம் இறப்பதற்கு முன்பாகத் தன் கைப்பட
எழுதியது. அதில், "என் விழிகளை என் இறப்பிற்குப் பிறகு உனக்குத்
தர உள்ளேன். அதற்கான ஒப்புதல்தான் இந்தக் கடிதம்" என்ற வரிகள்
எழுதப்பட்டிருந்தன. அதை வாசித்ததும், ஜாண்சன் இப்படியொரு
நண்பனை, அவன் இறப்பதற்கு முன்பாகப் பார்ப்பதற்குத் தவிர்த்துவிட்டேனோ'
என்று மனம் வருந்தி அழுதான்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சாம் தன் கண்களையே தன் நண்பன்
ஜாண்சனுக்குக் கொடுத்து, நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்.
நற்செய்தியில் இயேசு, "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச்
சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்று சொன்னதோடு அல்லாமல்,
நமக்காகத் தம் உயிரையும் தந்து, உண்மையான நட்பிற்கு இலக்கணமாகத்
திகழ்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
நல்ல நண்பர்கள் அடுத்தவரை உயர்வாக எண்ணுவார்கள்!
இயேசு கிறிஸ்து தன் சீடர்களோடு சேர்ந்து இறுதி இராவுணவை உண்கின்றபொழுது,
அவர்களோடு பேசுகின்ற வார்த்தைகளின் ஒரு பகுதிதான் இன்றைய
நற்செய்தி வாசகமாகும். இதில் இயேசு தன் சீடர்களிடம்,
".....உங்களை நான் நண்பர்கள் என்றேன்" என்கிறார்.
பொதுவாக யூத இரபிகள் தங்களுடைய சீடர்களை அடிமைகள் அல்லது
பணியாளர்கள் என்று கருதி, அவர்களை அவ்வாறு நடத்துவார்கள்.
இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறாக, தன் சீடர்களை நண்பர்கள்
என்கிறார். இயேசு இவ்வாறு சொன்னது மட்டுமல்லாமல், தன் தந்தையிடமிருந்து
கேட்டவை அனைத்தையும் அவர்களுக்கு அறிவிக்கின்றார். பழைய ஏற்பாட்டில்,
ஆபிரகாம் கடவுளின் நண்பர் என அழைக்கப்பட்டார் (2 குறி 20:
7; யாக் 2: 23) அவர் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து
நடந்ததாலேயே அவருக்குக் இத்தகைய பேறு அளிக்கப்பட்டது. நற்செய்தியில்
இயேசு, "நான் கட்டளையிடுவதை எல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள்
என் நண்பர்களாய் இருப்பீர்கள்" என்கிறார். அப்படியெனில்,
இயேசு கட்டளையிட்டதை நாம் செய்தால், அவரது நண்பர்களாக நாம்
இருப்போம் என்பது உறுதி.
நட்பிற்கு அழகே யாரையும் தாழ்வாகக் கருதாததுதான். ஆண்டவர்
இயேசு தன்னுடைய சீடர்களிலும் சரி, மக்களிலும் சரி யாரையும்
தாழ்வாக கருதவில்லை. மாறாக எல்லாரையும் தனது அன்பிற்குரியவர்களாகவே
கருதினார். இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியார் பிற இனத்தைச்
சார்ந்த கொர்னேலியுவின்மீது இறங்கி வருகின்றார். இது கடவுள்
யாரையும் தாழ்வாகக் கருவதுவதில்லை. மாறாக, தமது அன்பிற்குரியவராக,
உயர்வாகக் கருதுகின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.
ஆகவே, இயேசுவின் நண்பர்களாக இருக்கும் நாம் யாரையும்
தாழ்வாகக் கருதாமல், உயர்வாகக் கருத முயற்சி செய்வோம்.
நல்ல நண்பர்கள் அடுத்தவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென
விரும்புவார்கள்.
ஆண்டவர் இயேசு தன் சீடர்களைப் பணியாளர்களாகக் கருதாமல், நண்பர்களாகக்
கருதி, அவர்களை உயர்வாக நடத்தினார் என்று பார்த்தோம். இயேசு
தம் சீடர்களை உயர்வாக நடத்தியது மட்டுமல்லாமல், அவர்கள் மகிழ்வோடு
இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அன்புக் கட்டளை
கொடுக்கின்றார். "என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள்
மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை நான் உங்களிடம் சொன்னேன்"
என்ற இயேசுவின் வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றான.
இன்றைக்கு எத்தனை பேர் தங்களுடைய நண்பர்கள் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும்
இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள் என்று தெரியவில்லை!
ஆனால், இயேசு தம் நண்பர்கள் அதாவது, சீடர்கள் மகிழ்ச்சியாக
இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார். அதற்காக அவர்களுக்கு
அன்புக் கட்டளையைக் கொடுக்கின்றார். எமர்சன் என்ற அறிஞர்
இவ்வாறு கூறுவார்: "நாமே நண்பராக இருப்பதுதான் நண்பரைச் சம்பாதிக்க
ஒரே வழி." இயேசு நல்ல நண்பராக இருந்தார்; மட்டுமல்லாது தன்
நண்பர்கள் மகிழ்ந்திருந்த அன்புக் கட்டளை கொடுத்தார்.
நாமும் இயேசுவைப் போன்று நல்ல நண்பர்களாக இருப்போம்.
நல்ல நண்பர்கள் அடுத்தவருக்காக உயிரையும்
தருவார்கள்.
ஒருமுறை சீன ஞானியான மாவோபி என்பவர் மாதுளம்பழத்தைக் கத்தியால்
வெட்டிக்கொண்டிருக்க, அவரருகே வந்த ஒருவர், "இந்த மாதுளம்பழத்தின்
விதைகளைப் போல எது மிகுதியாக இருக்கவேண்டும்?" என்று கேட்டதற்கு
அவர், "நம்பிக்கையான நண்பர்கள்"என்று பதிலளித்தார். ஆம்,
நமக்கு நம்பிக்கையான நண்பர்கள் மிகுதியாக இருக்கவேண்டும்.
ஏனெனில், அவர்களே நம்முடைய வாழ்க்கையை முழுமையானதாக
மாற்றுவார்கள்.
ஆண்டவர் இயேசு நல்ல, நம்பிக்கையான நண்பராக விளங்கினார். எப்படியெனில்,
"தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்து அன்பு
யாரிடமும் இல்லை" என்று சொன்னது மட்டுமல்லாமல், அதைச்
செய்தும் காட்டினார். இவ்வுலகில் நேர்மையாளர் ஒருவருக்காக
யாரேனும் தம் உயிரைக் கொடுக்கலாம்; ஆனால், நாம் பாவிகளாக
இருந்தபொழுது கிறிஸ்து அவருடைய நண்பர்களாகிய நமக்காகத்
தம் உயிரையும் கொடுத்தார். (உரோ 5: 7-8). இவ்வாறு இயேசு உண்மையான
அன்பிற்கும் நட்பிற்கும் இலக்கணமாகத் திகழ்கின்றார்.
நண்பர்களுக்கு உயிரைக் கொடுக்கும் அளவுக்கு ஒருவர் கிடைப்பது
அரிது. இயேசு நமக்காகத் தம் உயிரைக் கொடுத்து நல்ல நண்பராகத்
திகழ்வதால், அவரது நண்பர்களாக நாம் இருக்க, இன்றைய முதல்
வாசகத்தில் யோவான் சொல்வது போல், ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்துவோம். அதன்மூலம் அவரது உண்மையான நண்பர்களாவோம்.
சிந்தனை
'நண்பனோடு இருளில் செல்வது, தனியாக வெளிச்சத்தில் செல்வதைக்
காட்டிலும் மேன்மையானது' என்பார் ஹெலன் கெல்லர். எனவே, நமக்கு
நல்ல நண்பராக இருக்கும் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து,
அவரது உண்மையான நண்பர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
இயேசு என்ற அந்த அன்பின் வடிவம் நம்மைப்
பாவம் என்ற தீயில் இருந்து காப்பாற்ற நமக்காகப் பரிகாரம்
புரிந்தது. பழைய ஏற்பாட்டிலே 'இருக்கின்றவராக இருக்கிறவர்
நானே" (வி.ப. 3:14) என்று மோசேயுக்கு ஆண்டவர் தம்மை
வெளிப்படுத்தினார். ஆனால் புதிய ஏற்பாட்டில் அந்த உன்னத
தேவன் அன்பே (1 யோவா. 4:8) என்று வெளிப்படுத்தப்படுகிறார்.
கடவுள் தன் ஏக மகனை அனுப்பும் அளவுக்கு உலகத்தின் மீது
அன்பு கொண்டார். எனவே இந்தத் தந்தையின் அன்பின் அவதாரம்தான்
ஆண்டவர் இயேசு.
அந்த ஆண்டவர் இயேசு தன் சீடர்களை நோக்கி இரு உண்மைகளை
வெளிப்படுத்துகிறார்.
இனி உங்களை நான் ஊழியர் என்று சொல்லேன். உங்களை நண்பர்கள்
என்கிறேன். ஏனெனில் தந்தை எனக்கு வெளிப்படுத்தியதெல்லாம்
உங்களுக்கு அறிவித்தேன். எனவே நீங்கள் என் நண்பர்களாய்
இருந்தால் நான் வெளிப்படுத்தினதை (உண்மை) எல்லாம் மக்களுக்கு
அறிவியுங்கள் (யோவா. 15:15).
தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும்
இல்லை. நான் கட்டளை இட்டதை நீங்கள் செய்தால் நீங்கள்
என் நண்பர்கள் (யோவா. 15:13) என்றார் இயேசு.
ஏன் இந்த வார்த்தைகளை இவ்வளவு அழுத்தமாக நம்மிடம்
வைக்கிறார் என்றால் தான் போதித்ததைச் செய்து காட்டியவர்.
நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன். நான்
அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு
செய்யுங்கள் என்றார். ஏனெனில் நமக்காகத் தன் உயிரையே
கொடுத்தார் (யோவா. 13:34).
முடிவுரை
உளவியல் கருத்தரங்கு 30 இளம் ஆண், பெண்களுக்கு 3 நாட்கள்
நடத்தினேன். 2-வது நாள் உங்களுக்கு ஆழ்ந்த, உங்கள் இரகசியங்களை
ஒழிவு மறைவு இன்றி வெளிப்படுத்தும் நண்பர், நீங்கள் அதிகமாக
நேசிக்கும் நண்பர் யார் என்று எழுதுங்கள் என்றேன்.
பலரும் பலரது நண்பர்களைக் குறிப்பிட்டு எழுதினார்கள்.
இன்று இதே பரீட்சையை வைத்தால் நீங்கள் என்ன எழுதுவீர்கள்?
ஒருவர் கூட நான் எதிர்பார்த்த, நண்பரைக் குறிப்பிடவில்லை.
அது யார் தெரியுமா?
அதுதான் நமக்கு நாமே முதல் நண்பர்.
உன் மீது நீ அன்புகூர்வதுபோல உன் அயலான் மீதும் அன்பு
கூர்வாயாக (லூக். 10:27)
இன்றைய அருள்வாக்கின் மையக் கருத்து சகோதர அன்பு. நீங்கள்
ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை
(யோவா 15:12) என்கின்றார் இயேசு.
பத்திரிகை ஒன்றில் வெளிவந்த நெஞ்சைத் தொடும் ஓர் உண்மைச்
சம்பவம். அது ஓர் இரயில் பயணம். அந்த இரயில் நாகப்பட்டினத்திலிருந்து
சென்னைக்குப் புறப்பட்டது. அந்த இரயிலில் பயணம் செய்தவர்களுள்
வயதான இரண்டு தம்பதியரும் இருந்தனர்.
உறங்கும் நேரம் பிறந்தது. வயதான அந்தப் பெண் உறங்கச் செல்வதற்கு
முன்னால் கணவரது கையை ஒரு நாடாவால் கட்டி மறுமுனையை தனது
கையில் கட்டிக்கொண்டார். அப்படி அவர் செய்ததற்குக் காரணம்
என்ன?
அவரது கணவர் ஒரு மன நோயாளி. அவர் மத்திய அரசுத் துறையில்
அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆனால் எப்படியோ அவரது
மனநிலை பாதிக்கப்பட்டு, அவர் ஒரு குழந்தையைப் போல் ஆனார்.
பாவம்! அவரது மனைவியைக் கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள
முடியவில்லை. அந்த மனைவிக்கு கணவரின் வாழ்விலே புதுமை நடக்கும்
என்ற நம்பிக்கை!
நிகழ்ச்சியிலே வருகின்ற அந்தப் பெண் வாழ்ந்த வாழ்வுக்குப்
பெயர்தான் அன்பு வாழ்வு! உறக்கத்தில்கூட நான் உங்களுக்கு
உதவி செய்யக் காத்திருக்கின்றேன் என்று அவரது கணவருக்கு
அவருடைய கையைக் கட்டியிருந்த நாடா வழியாக எடுத்துச்சொன்ன
அந்த மனைவி ஓர் அன்பு மனைவி
அன்பிலே மூன்று வகையான அன்பு உண்டு :
1. நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது.
2. நம்மை அன்பு செய்யாதவரையும் அன்பு செய்வது.
3. நமது பகைவர்களையும் அன்பு செய்வது.
நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது எல்லாரும்
செய்யக்கூடிய ஒன்று. தம்மை அன்பு செய்யாதவரையும் அன்பு
செய்பவர்கள் புனிதர்கள். நமது பகைவர்களையும் அன்பு செய்வது
இயேசுவின் அன்பு; அது நம்மை இயேசுவுக்குள் வாழவைக்கும் (இரண்டாம்
வாசகம்). ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளைப் போல் (முதல்
வாசகம்) வாழ முற்படுவதே கடவுளின் குழந்தைகளுக்கு அழகு.
மேலும் அறிவோம்:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு (குறள் : 992).
பொருள் :
அன்புடையவராக வாழ்தலும் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவராகத்
திகழ்தலும் பண்புடைமை என்று சான்றோர் போற்றும்
நெறிமுறைக்கு உரிய இரண்டு நல்ல வழிகள் ஆகும்!
கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பலர் விண்ணகம் சென்றனர், அங்கு
அவர்கள் இந்துக்களையோ முகமதியர்களையோ அல்லது வேறு கிறிஸ்துவச்
சபையினரையோ காணவில்லை, அதனால் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி
அடைந்தனர். ஆனால் விண்ணகத்தின் நடுவே ஒரு பெரிய
குறுக்குச்சுவர் இருப்பதைக்கண்டு, அவர்கள் பேதுருவிடம், "இக்குறுக்குச்சுவரின்
மறுபக்கம் வேறுயாராவது இருக்கிறார்களா?" என்று கேட்டனர்,
அதற்குப் பேதுரு, "ஆம், நீங்கள் யாரெல்லாம் விண்ணகத்திற்கு
வரமாட்டார்கள் என்று நினைத்தீர்களோ அவர்களை யெல்லாம் இக்குறுக்குச்
சுவரின் மறுபக்கம் உங்கள் கண்ணில் படாமல்
வைத்திருக்கிறோம்" என்றார். ஒரு குறிப்பிட்ட மதத்தினர்
தான் விண்ணம் செல்வார்கள் என்னும் தவறான கருத்தைக் கொண்டவர்கள்
சிந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட கதை இது!
மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி உடமை அல்ல;
அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடமை என்பது. இன்றைய
முதல் வாசகத்தில் தெளிவாக உணர்த்தப்படுகிறது. கொர்னேலியு
என்பவர் யூத இனத்தைச் சேராத பிற இனத்தவர், ஆனால் கடவுளுக்கு
அஞ்சி வாழ்ந்தவர். கடவுளுடைய ஆணையின் படி பேதுரு அவர்
வீட்டிற்குச் சென்று மீட்பின் நற்செய்தியை அறிவித்துக்
கொண்டிருந்தபோதே தூய ஆவியார் கொர்னேலியு மீதும் அவர்
வீட்டிலிருந்த அனைவர் மீதும் இறங்கிவர, அவர்கள் அனைவரும்
அயல்மொழிபேசி ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தனர்.
திருமுழுக்குப் பெறுவதற்கு முன்னரே உறுதிப்பூசுதல் பெற்று
விட்டனர்! இந்நிகழ்வு மூலம் பேதுரு அறிந்து, அறிவித்த உண்மை
: "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும்
அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு
ஏற்புடையவர்" (திப 10:34).
மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறுபெயர் கிடையாது (திப
4:12) என்று ஆணித்தரமாக எடுத்துரைத்த பேதுரு, நல்மனம்
கொண்ட அனைவரும் மீட்படைய இறைவன் வழிவகுத்துள்ளார் என்பதையும்
அறிவித்துள்ளார். விண்ணகப் பேரின்பத்திற்கு எல்லா இனத்தவரும்
அழைக்கப்பட்டுள்ளனர். விண்ணகத்தில் "யாராலும் எண்ணிக்கையிட
முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன், அவர்கள் எல்லா
நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்"
எனக் குறிப்பிட்டுள்ளார் திருத்தூதர் யோவான் (திவெ 7:9).
ஆவியானவர் தாம் விரும்பியபடி செயல்படுகிறார். அதாவது அவருடைய
செயல்பாட்டை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது (யோவா
3:8), மேலும், "கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த
முடியாது" (2தீமோ 2:9), "இறைவன் மீட்பைத் திருமுழுக்கு என்னும்
அருள் சாதனத்துடன் கட்டுண்டிருக்கச் செய்துள்ளார், ஆனால்
அவரோடு தமது அருள்சாதனங்களால் கட்டுண்டவர் அல்லர்" என்று 'கத்தோலிக்கத்
திருச்சபையின் மறைக்கல்லி' (எண் 257) குறிப்பிட்டுள்ளது
நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஆம், கடவுளின் கரங்களை எவரும்
கட்டுப்படுத்த முடியாது.
தங்களுடைய குற்றமின்றி கிறிஸ்துவையும் திருச்சபையையும் அறியாதவர்கள்,
நேரிய உள்ளத்துடன் மனச்சான்றின் குரலைக்கேட்டு. கடவுளுடைய
திருவுளத்தை நிறைவேற்றினால், அவர்களும் இறையருளால்
மீட்புப் பெறமுடியும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டாம்
வத்திக்கான் வங்கம் (திருச்சபை, எண் 18) எங்கெல்லாம் உண்மையும்
நன்மையும் காணப்படுகிறதோ அவை அனைத்துமே உண்மைக்கும் நன்மைக்கும்
காற்றாகிய கடவுளிடமிருந்தே வருகிறது என்பதை ஏற்று, பிறசமயத்தாரோடு
நல்லுறவை வளர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.
ஒருமுறை ஒரு சிறுவனிடம், "இந்துக்கள் விண்ணகம் செல்வார்களா?"
என்று நான் கேட்டதற்கு, அச்சிறுவன், "நிச்சயமாகச் செல்வார்கள்.
ஏனென்றால், நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தும் கெட்டவர்களாக
இருக்கின்றோம், ஆனால் இந்துக்கள் கிறிஸ்துவை அறியாதிருந்தும்
நல்லவர்களாக இருக்கிறார்கள்" என்றான். அவன் சொன்னது எனக்கு
வியப்பாக இருந்தது.
இந்துக்கள் மீட்படையலாம்; கிறிஸ்துவர்கள் மீட்படையாது போகலாம்,
புனித அகுஸ்தீனாரின் கூற்றை மேற்கோள்காட்டி இரண்டாம் வத்திக்கான்
சங்கம் பின்வருமாறு கூறுகிறது, "திருச்சபையில் இணைந்திருந்தும்,
அன்பில் நிலைத்திராது, 'உள்ளத்தாலன்றி', 'உடலால் மட்டும்
அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்படைவதில்லை (திருச்சபை,
எண் 14).
எனவே நாம் திருமுழுக்குப் பெற்றிருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக
மட்டும் மீட்படைய முடியாது. திருச்சபையில் இருந்தால் மட்டும்
போதாது, அன்பில் நிலைத்திருக்க வேண்டும். சென்ற
ஞாயிற்றுக்கிழமை நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் தொடர்ச்சியான
இன்றைய நற்செய்தியில் தம் ஆண்டவர் அன்பை வலியுறுத்துகின்றார்,
"என் அன்பில் நிலைத்திருங்கள்... நான் உங்களிடம் அன்பு
கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு
கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" (யோவா 15:10,12)
இன்றைய இரண்டாவது வாசகத்திலும் திருத்தூதர் யோவான் பிறரன்பை
முன்னிலைப்படுத்துகிறார். அன்பு செய்யாதவர்கள் கடவுளை அறியமுடியாது.
ஏனெனில் அன்பே கடவுள் (1 யோவா 4:7-8). 7).
தெரு நடுவில் கீழே விழுந்து கிடந்த ஊனமுற்ற ஒருவரை மற்றொருவர்
தூக்கிவிட்டு, அவருக்குப் பணமும் கொடுத்து உதவினார். ஊனமுற்றவர்
தன் கண்களில் கண்ணீர் மல்க அவரிடம், "நீங்கள் இயேசு ஆண்டவரா?"
என்று கேட்டார். அதற்கு அவர், "நான் இயேசு ஆண்டவர் அல்ல;
ஆனால் அவரைப் பின்பற்றும் சீடர்களில் ஒருவர் நான்" என்றாம்.
இவ்வாறு தான் நாம் இக்காலத்தில் இயேசுவின் அன்பு நற்செய்தியின்
சாட்சிகளாகத் திகழ வேண்டும்.
கடவுள் நமது அன்பிற்காகக் காத்திராமல், அவரே முதன் முதல்
நம்மை அன்பு செய்து, நமது பாவங்களுக்குக் கழுவாயாகத் தமது
மகனை அனுப்பினார், அவ்வாறே நாமும் பிறருடைய அன்பிற்காகக்
காத்திராமல், பிறரை அன்பு செய்ய முன்வருவோம். ஏனெனில்
கிறிஸ்துவின் பேரன்பு நம்மை ஆட்கொண்டு, நம்மை உந்தித் தள்ளுகிறது
(2 கொரி 5:14).
கருச்சிதைவுக்கு எதிராக எழுதிய மனித உயிரின் மாண்பு பற்றிய
ஆங்கில நூல் "The silent Scream" அதாவது "ஒரு மௌன அலறல்"
கவிதை நயம், கற்பனை வளம் நிறைந்த, ஆனால் நெஞ்சத்தை முள்ளாக
உறுத்தும், நெருப்பாகப் பொசுக்கும் ஒரு மெளன அலறல். அதில்
இப்படி ஒரு சில வரிகள்.
"உலகில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனித உயிரும் சிறப்பான ஒரு
செய்தியைச் சொல்ல, சிறப்பான ஒரு பாடலை இசைக்க சிறப்பான ஓர்
அன்பைப் பகிர வருகிறது. அதற்குத் தாயின் கருவறையே கல்லறையாகிற
போது, அல்லது தவிர்க்க இயலாத சூழல் காரணமாகப் பிறந்ததும்
குப்பைத் தொட்டியோ முட்புதரோ அதற்குப் புகலிடமாகிற போது மனிதன்
சொல்கிறான்: "கடவுளே, உனது சிறப்பான அந்தச் செய்தி எனக்கு
வேண்டாம், சிறப்பான அந்தப் பாடல் வேண்டாம், சிறப்பான உமது
அன்பு வேண்டாம்" என்று,
"கொலை செய்யாதே" என்கிறது ஐந்தாம் கட்டளை. ஏன்? உயிர் இறைவனுக்கு
உரியது. அதை எடுக்க எவருக்கும் உரிமையில்லை என்பதால் மட்டுமா?
அன்பு வேண்டாம் என்ற உறவின் முறிவால் இல்லையா?
திருமுழுக்கு மட்டும் போதாது இறைவனுக்கு உகந்தவர்களாக அன்பில்
நிலைப்பது இன்றியமையாதது. அதுவும் "என் அன்பில்
நிலைத்திருங்கள் என்கிறார் இயேசு.
"எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது இறைவனிடம்
வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்" (1
தெச.5:16) இது நமக்காகக் கிறிஸ்து வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய
திருவுளம் என்கிறார் திருத்தூதர் பவுல். "உள்ள மகிழ்ச்சியே
மனிதரை வாழ வைக்கிறது. அகமகிழ்வே மானிடரின் வாழ்நாளை வளரச்
செய்கிறது" (சீராக்.30:22) மகிழ்ச்சியின் தேவையை வலியுறுத்தும்
வசனம் இது!
அன்பு ஒன்றே மகிழ்வைத் தரும். மனநிறைவைத் தரும். "என் மகிழ்ச்சி
உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை
உங்களிடம் சொன்னேன்" (யோவான் 15:11) என்கிறார் இயேசு. மகிழ்ச்சியாக
இருக்க வேண்டுமாயின் அவர் சொல்வது: "நான் என் தந்தையின் கட்டளைகளைக்
கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்து இருப்பதுபோல நீங்களும்
என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில்
நிலைத்திருப்பீர்கள்" (யோவான் 15:10).
இயேசு குறிப்பிடும் கட்டளை என்ன? "நான் உங்களிடம் அன்பு
செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்துங்கள்" (யோவான் 13:34) இயேசு தன் இரத்தத்தால்
முத்திரை யிட்டுத்தந்த புதிய கட்டளை. புதிய உடன்படிக்கை இவ்வன்பின்
தனித்தன்மை .
''தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு
யாரிடமும் இல்லை (யோவான் 15:13) அன்பின் ஆழத்தை உணர்த்த இயேசு
நட்பை எடுத்துக்காட்டாகக் கையாளுகிறார். ''உடுக்கை இழந்தவன்
கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு இது நட்புக்கு வள்ளுவர்
தரும் இலக்கணம். ஆனால் இயேசு அதற்கும் மேலே சென்று "நண்பர்களுக்காக
உயிர் கொடுத்தல்" என்பதை முன்வைக்கிறார்.
இயேசு சொன்னது போலவே நமக்காக உயிரைக் கொடுத்தார். நாம்
அவரது நண்பர்கள் என்பதற்காகவா? பாவிகள், பகைவர்கள் என்பதால்
அன்றோ ! ''நாம் பாவிகளாய் இருந்த போதே கிறிஸ்து நமக்காகத்
தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள
தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' (உரோமை 5:8). பகைவர்களையும்
நண்பர்களாகக் கருதியன்றோ உயிரைக் கொடுத்தார்!. அந்த அன்புக்கு
கைமாறாக நாமும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை.
மாறாக "நான் கட்டளையிடுவது எல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள்
என் நண்பர்களாக இருப்பீர்கள்" (யோவான் 15:14) என்றார்.
பலனை எதிர்பாராமல் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதுதான்
அவருடைய கட்டளை. நீ என்னை அன்பு செய்தால் நான் உன்னை அன்பு
செய்வேன் என்று சொல்பவன் மனிதன். நீ என்னை அன்பு
செய்யாவிட்டாலும் உன்னைத் தேடிவந்து அன்பு செய்வேன் என்பவர்
இறைவன். (2 கொரி.5:14,15).
பத்துக் கட்டளைகளின் சாரமாக இரண்டு கட்டளைகள் நமக்குத் தரப்பட்டுள்ளன.
இரண்டு கட்டளைகளுக்குமே அடிப்படை அன்புதான். அன்பை
விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்.
"நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என்
நண்பர்களாய் இருப்பீர்கள்''. (யோவான் 15:14)
இன்றைய மனிதனின் மன நிலை? பிறர் ஆணையிடப் பணிவதா? இதைச்
செய் அதைச் செய்யாதே என்று பிறர் கட்டளை தந்து என்
வாழ்க்கையை வழிப்படுத்துவதா? விடுதலை, சுதந்திரம், மக்களாட்சி
என்ற உணர்வில் வளரும் தலைமுறையில்லவா இது!
கட்டளைகள் எல்லாம் வாழ்வின் வளத்தையும் நலத்தையும் நோக்கமாகக்
கொண்டவை. வாழ்க்கையைத் தடையோட்டமாக்கி குறுக்கே தடைகளை
வைத்து அவற்றில் மனிதன் தடுக்கித் தட்டுத் தடுமாறி விழுவதைப்
பார்த்து மகிழ்பவர் அல்ல நம் கடவுள்.
இறைக் கட்டளைகளை எல்லாரும் கடைப்பிடித்தால் ஊர் எப்படி இருக்கும்!
உலகம் எப்படி இருக்கும்! கற்பனை செய்து பாருங்கள். உங்கள்
ஊரில் ஒருவர்கூடப் பொய் பேசுவதில்லை, பொறாமைப் படுவதில்லை,
திருடுவதில்லை, பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. பிறர்
வளர்ச்சி கண்டு வயிறு எரிவதில்லை. எல்லாரும் எல்லாரையும்
தன்னலமின்றி அன்பு செய்கிறார்கள்... இப்படிக் கூட ஓர் ஊர்
இருக்குமா என்று நினைக்காதீர்கள். சும்மா கற்பனை செய்து
பாருங்கள். அந்த ஊர் எப்படி இருக்கும்? அங்கே காவல் நிலையம்
இருக்குமா? சிறைச்சாலை இருக்குமா? மருத்துவமனை இருக்குமா?
அவைகள் எல்லாம் கடவுள் படைத்த அற்புத உலகில் மனிதனால் படிந்த
கறைகளின் அடையாளங்கள்!
"கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை " (தி.ப.10:34).
பொதுமைப் பண்பு வாய்ந்த அன்பை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு
சமுதாயமாக விளங்குவதே, விளங்க வேண்டியதே திருச்சபை.
"அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்
அவர்களே கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து
கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார்". (1
யோவான் 4:7,8).
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
இதைவிட மேலான அன்பு இல்லை
ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், ஒரு கிராமத்தில், அழகான சிற்றாலயம்
ஒன்று அமைந்திருந்தது. அவ்வாலயம், ஏன் அவ்விடத்தில் கட்டப்பட்டது
என்பதைக் கூறும் கதை, ஆலயத்தைவிட அழகானது.
அந்த கிராமத்தில் இரு சகோதரர்கள் வாழ்ந்தனர். அவ்விரு சகோதரர்களும்
தங்கள் பாரம்பரிய நிலத்தில் ஒன்றாக உழைத்து வந்தனர். நிலத்தில்
விளைந்த தானியங்களை இருவரும் சமமாகப் பகிர்ந்துகொண்டனர்.
அவர்களில் ஒருவருக்கு அருட்சாதனம்
ஆகி குடும்பத்தோடு
வாழ்ந்தார். மற்றொருவர், பிரம்மச்சாரி.
பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர், ஒருநாள் தனக்குள், "நான் தனி
ஆள். என் அண்ணனுக்கோ குடும்பம் உள்ளது. எனவே, தானியங்களைச்
சமமாகப் பகிர்வது நியாயமல்ல" என்று சிந்தித்தார். இரவானதும்,
அவர், தன்னிடமிருந்த தானிய மூட்டைகளில் ஒன்றை எடுத்து, அதை
அண்ணன் வைத்திருந்த தானிய மூட்டைகளோடு வைத்துவிட்டுத்
திரும்பினார்.
அண்ணனும், அதேவண்ணம் சிந்தித்தார். "எனக்காவது ஆதரவு காட்ட
குடும்பம் உள்ளது. தம்பிக்கு யாருமே இல்லை. எனவே, தானியங்களைச்
சமமாகப் பகிர்வது நியாயமல்ல" என்று எண்ணிய அண்ணன், இரவோடிரவாக,
ஒரு மூட்டையை எடுத்து, தம்பி வைத்திருந்த மூட்டைகளோடு
வைத்துவிட்டுத் திரும்பினார்.
மாதங்கள் உருண்டோடின. அண்ணன், தம்பி இருவருக்கும், எப்படி
தங்கள் தானிய மூட்டைகள் குறையாமல் உள்ளன என்பது, புதிராகவே
இருந்தது. ஒருநாள் இரவு, இரண்டுபேரும், மூட்டைகளைச் சுமந்த
வண்ணம், ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தது. உண்மையை உணர்ந்த
இருவரும், ஆனந்த கண்ணீரோடு, தழுவிக்கொண்டனர்.
அப்போது, திடீரென, வானிலிருந்து குரல் ஒன்று கேட்டது: "இதோ,
இங்கு என் ஆலயத்தை எழுப்புவேன். மக்கள் உள்ளார்ந்த அன்புடன்,
எங்கு சந்திக்கின்றனரோ, அங்கு, என் பிரசன்னம் என்றும் தங்கும்"
என்று ஒலித்த குரல், அவ்விடத்தில் கோவில் கட்டப்படுவதற்குக்
காரணமாக அமைந்தது என்ற பாரம்பரியக் கதை, அக்கிராமத்தில்
சொல்லப்படுகிறது.
தன்னை மையப்படுத்தாமல், அடுத்தவரை மையப்படுத்தி எழும்
உன்னத உணர்வே, உண்மையான அன்பு. அந்த அன்பை பறைசாற்றும்
இதயங்களெல்லாம், ஆண்டவன் விரும்பி வாழும் ஆலயங்கள்தாமே!
ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு ஒன்றே, இயேசுவின்
சீடர்களுக்கு அடையாளமாக அமையவேண்டும் என்ற முக்கியப்
பாடத்தை, இன்றைய இரண்டாம் வாசகமும், நற்செய்தியும்
வலியுறுத்திக் கூறுகின்றன. யோவான் எழுதிய முதல்
திருமுகத்தின் 4ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
இரண்டாம் வாசகத்தில், கடவுளின் அரியதோர் இலக்கணம்
கூறப்பட்டுள்ளது. அதுதான், "கடவுள் அன்பாய் இருக்கிறார்"
(1 யோவான் 4:8) என்ற சொற்கள். "God is Love" அதாவது,
"கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்ற மூன்று சொற்கள்,
கிறிஸ்தவ மறையின் இதயத்துடிப்பாக அமைந்துள்ளன. இன்னும்
சொல்லப்போனால், இந்த உண்மை ஒன்றே, அனைத்து உண்மையான
மதங்களின் உயிர்த்துடிப்பு.
இந்த இலக்கணத்தை பொன்னெழுத்துக்களால் எழுதி, அவற்றில்
வைரக்கற்களைப் பதித்து, ஓர் உருவமாக்கி, அதற்கு ஒரு கோவில்
எழுப்பி, நாம் வழிபட முடியும். அவ்வாறு செய்தால், "கடவுள்
அன்பாய் இருக்கிறார்" என்ற இலக்கணத்தின் உண்மைப் பொருளை
நாம் கொன்றுவிடுவோம். "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்று
கூறும் யோவான், அந்த அன்பு, வானத்தில் இருந்தபடியே, நம்
வழிபாட்டை எதிர்பார்க்கவில்லை, மாறாக, அந்த அன்பை
செயல்வடிவில் வெளிப்படுத்த, தன் மகனை இவ்வுலகிற்கு இறைவன்
அனுப்பினார் என்று தெளிவுபடுத்துகிறார். இத்தகைய அன்பை
உணர்ந்தவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை, யோவானின்
திருமுகம் இவ்வாறு கூறியுள்ளது: அன்பார்ந்தவர்களே, கடவுள்
இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர்
மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். (1
யோவான் 4:11)
"கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் கடவுள்
மீது அன்புகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று யோவான்
கூறியிருந்தால், அது, பொருளுள்ள வாக்கியமாகத்
தெரிந்திருக்கும். ஆனால், யோவான் கூறியுள்ள சொற்கள்
புதிராக உள்ளன. கடவுள் நம்மீது கொள்ளும் அன்புக்கு நாம்
அளிக்கக்கூடிய பதிலிறுப்பு, நாம் மற்றவர்கள் மீது கொள்ளும்
அன்பு என்று யோவான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தக்
கண்ணோட்டத்தில் அவர் சிந்திப்பதற்குக் காரணம், இயேசு, இதே
எண்ணங்களை இறுதி இரவுணவின்போது சீடர்களுக்குக்
கூறியிருந்தார். அந்தப் பகுதி, இன்று, நற்செய்தியாக நம்மை
அடைந்துள்ளது.
இந்த இறுதி இரவுணவின்போது, இயேசு, தன் சீடர்களின்
காலடிகளைக் கழுவியபின்னர், புதிய கட்டளையொன்றை அவர்களுக்கு
வழங்கினார்: "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்
என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர்
மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர்
மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என்
சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார்.
(யோவான் 13:34-35)
இயேசு வழங்கிய இந்தப் புதியக் கட்டளை, நாம் வழக்கமாகச்
சிந்திக்கும் பாணியிலிருந்து வேறுபடுவதை உணர்கிறோம். "நான்
உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் என்னிடம் அன்பு
செலுத்துங்கள்" என்று இயேசு கூறியிருந்தால், அதை நாம்
எளிதில் புரிந்துகொள்வோம். ஆனால், கிறிஸ்தவ அன்பின்
நோக்கம் என்ன என்பதை இயேசு தெளிவாக்குகிறார். "நான்
உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர்
மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்பதை, தன் புதிய
கட்டளையாகத் தருகிறார்.
இன்றைய நற்செய்தியில், அந்தக் கட்டளையை இன்னும் சிறிது
விளக்கிக் கூறுகிறார். இயேசு கூறும் சொற்களைக்
கேட்கும்போது, அவை, புரட்சிகரமான அன்பைப் பற்றி கூறுகின்றன
என்பதைப் புரிந்துகொள்கிறோம். "என் தந்தை என் மீது அன்பு
கொண்டுள்ளது போல, நானும் என் தந்தை மீது
அன்புகொண்டுள்ளேன்" என்றும், "நான் உங்களிடம் அன்பு
கொண்டிருப்பதுபோல நீங்களும் என் மீது அன்பு கொண்டிருக்க
வேண்டும்" என்றும் இயேசு சொல்லியிருந்தால், அவற்றை யாரும்
எளிதில் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடியும்.
ஆனால், இங்கு இயேசு, என் தந்தை என் மீது அன்பு
கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்
(யோ. 15:9) என்று கூறியபின், மீண்டும் ஒருமுறை தான்
வழங்கிய புதிய கட்டளையை சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார்.
"நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர்
மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை"
(யோ. 15:12) என்று கூறுகிறார். அன்பு என்றால், 'உனக்கு
நான், எனக்கு நீ' அல்லது, நமக்கு நாம் என்று
உருவாகக்கூடிய குறுகிய வட்டங்களை உடைத்து, அன்பிற்கு
விடுதலை தரும்வண்ணம் இயேசு பேசுகிறார்.
நாம் ஒருவர் மீது அன்பு கொண்டால், அவர் பதிலுக்கு, நம்மீது
அன்பு கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை. ஆனால்,
இயேசு, தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்த அன்பு, பிரதிபலனை
எதிர்பார்த்து காட்டப்படும் அன்பு அல்ல என்பது, தெளிவாகப்
புரிகிறது. இந்த அன்பு, நீ-நான்-நாம் என்ற குறுகிய
வட்டத்தை விட்டு வெளியேறி, அடுத்தவர், அதற்கடுத்தவர்
என்று, மேலும், மேலும் பரந்து, விரிந்து செல்லவேண்டும்
என்பதே இயேசுவின் விருப்பம்.
அன்பின் விரிவைப்பற்றி கூறிய இயேசு, அடுத்த வரியில்,
அன்பின் ஆழத்தையும் தெளிவுபடுத்துகிறார்: "தம்
நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு
யாரிடமும் இல்லை" (யோ. 15:13) உச்சக்கட்ட சவாலாக ஒலிக்கும்
இச்சொற்கள், கோடான கோடி உன்னத மனிதர்கள், அன்பின்
சிகரங்களை அடைவதற்கு ஓர் உந்து சக்தியாக அமைந்து
வருகின்றன.
அந்த உன்னத மனிதர்களில் ஒருவர், புனித டேமியன் தெ வூஸ்டர்
(Damien de Veuster). 1850ம் ஆண்டு, ஹவாய் தீவுகளில்
வாழ்ந்தவர்கள் நடுவே தொழுநோய் இருப்பதாகக்
கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் ஒரு கூண்டில்
அடைக்கப்பட்டு, அருகில் இருந்த மொலக்காய் தீவுக்கு
அனுப்பப்பட்டனர். அந்தத் தீவுக்கு அனுப்பப்படுவது, ஏறத்தாழ
மரணதண்டனை தீர்ப்புக்குச் சமம். ஏனெனில், அந்தத் தீவில்,
மருத்துவர், மருந்துகள், குடியிருப்பு என்று எதுவும்
கிடையாது. அங்கு செல்லும் அனைவரும், பகலில் சுட்டெரிக்கும்
வெயிலிலும், இரவில் கடும் குளிரிலும் துன்புற்று, விரைவில்
சாகவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு அனுப்பப்பட்டனர்.
அத்தீவில், ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கு, இளம்
அருள்பணியாளர், டேமியன் தெ வூஸ்டர் அவர்கள், ஆயரால்
அனுப்பப்பட்டார். அந்த இளையவர், தச்சுவேலையில் திறமை
பெற்றவர் என்பதால், மொலக்காய் தீவில் ஒரு சிற்றாலயம்
நிறுவுவதற்கென அங்கு அனுப்பப்பட்டார். அந்தச் சிற்றாலயம்,
ஏற்கனவே கட்டைகளால் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் எடுத்துச்
செல்லப்பட்டது. அந்த ஆலயத்தை குறிப்பிட்ட ஓரிடத்தில்
பொருத்திவிட்டு திரும்பி வந்துவிட வேண்டும் என்று
அருள்பணியாளர் டேமியனிடம் ஆயர் கூறியிருந்தார். தீவில்
உள்ள தொழுநோயாளர் யாருடனும், எவ்வகையிலும் அவர் தொடர்பு
வைத்துக்கொள்ளக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையுடன் ஆயர்
அவரை அங்கு அனுப்பினார்.
தன் 33வது வயதில் மொலக்காய் தீவை அடைந்த இளம்
அருள்பணியாளர் டேமியன் அவர்கள், கோவிலை
வடிவமைத்துக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த மக்களின்
நிலையைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
மரக்கட்டைகளைக் கொண்டு இந்த ஆலயத்தை உருவாக்குவதைவிட,
அங்குள்ள மனிதர்களைக் கொண்டு, இறைவனுக்கு உயிருள்ள ஆலயத்தை
உருவாக்குவது முக்கியம் என்று அவர் எண்ணினார். ஆயரின்
அனுமதியுடன், அருள்பணி டேமியன் அங்கு தங்கினார். விரைவில்,
அவர், அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். அவர்களுக்கு
இல்லங்கள் அமைத்துத் தருவதில் தீவிரமாக ஈடுபட்டார்.
ஒரு சில நாட்கள், அல்லது, மாதங்கள் தங்கலாம் என்ற
எண்ணத்தில் ஆரம்பமான அவர் பணி, 16 ஆண்டுகள் தொடர்ந்தது. 11
ஆண்டுகள் சென்றபின், ஒருநாள், அவர் குளிக்கச் சென்ற
வேளையில், தன் கால்களைக் கொதிக்கும் நீரில் தவறுதலாக
வைத்தார். அவரது கால்களில் கொப்பளங்கள் உருவாயின; ஆனால்,
அவர் அந்த வலியை உணரவில்லை. அன்று, அவர், தானும்
தொழுநோயால் பாதிக்கப்பட்டதை உணர்ந்தார். வழக்கமாக அவர்
திருப்பலியில் மறையுரை வழங்கும்போது, 'தொழுநோயுற்றோர்'
என்று பொதுவாகக் குறிப்பிட்டுப் பேசுவார். தனக்கும்
தொழுநோய் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அடுத்த நாள், அவர்
கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபோது, "தொழுநோயாளிகளாகிய
நாம்" என்று, அவர்களோடு தன்னை முழுமையாக
அடையாளப்படுத்திக்கொண்டார்.
ஐந்து ஆண்டுகள் ஒரு தொழுநோயாளியாக அவர்கள் நடுவே வாழ்ந்த
அருள்பணி டேமியன் தெ வூஸ்டர் அவர்கள், 1889ம் ஆண்டு,
ஏப்ரல் 15ம் தேதி தன் 49வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
ஒவ்வோர் ஆண்டும், புனித டேமியன் திருவிழா (மே 10ம் தேதி),
சிறப்பிக்கப்படும் வேளையில், அன்பின் ஆழத்தைக் குறித்து
இயேசு கூறிய சொற்கள், மீண்டும் ஒருமுறை உலகில்
எதிரொலிக்கும்: தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட
சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. (யோவான் 15:13)
சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஒரு கண்காட்சித்
திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில் பல பள்ளிக் குழந்தைகள்
அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த ஓர்
இளைஞர், அக்குழந்தைகள் அனைவரையும் காப்பாற்றினார். எரியும்
நெருப்புக்குள் பலமுறை சென்று, குழந்தைகளைக்
காப்பாற்றியவர், இறுதியில், அந்தப் புகை மண்டலத்தில்
மூச்சு முட்டி, மயங்கி விழுந்து, தீயில் கருகி இறந்தார்.
அந்த இளைஞருக்கும், அவரால் காப்பாற்றப்பட்டவர்களுக்கும்
எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள் தன் பெயர்
நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில்,
அவர் அந்தத் தியாகச்செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை,
அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே ஓர்
உந்துதலால், அவர் இந்த உன்னதச் செயலைச் செய்தார்.
தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு
யாரிடமும் இல்லை என்று இயேசு சொன்னதன் முழுப் பொருளை
உலகிற்கு உணர்த்தியுள்ளார், அந்த இளைஞர். அதாவது, அறிமுகம்
ஏதுமற்ற பள்ளிக்குழந்தைகளும் தன் உறவே என்ற உண்மையை
உணர்த்த, அவர்களுக்காக தன் உயிரை அந்த இளைஞர் இழந்தார்.
அந்த இளைஞரைப் போன்று, பல தியாக உள்ளங்கள், அறிமுகமே
இல்லாதவர்களைக் காத்த முயற்சியில் தங்கள் உயிரை
இழந்துள்ளனர்.
அன்பும், சுயநலமும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று
கூறுமளவு, தவறான பாடங்கள் இவ்வுலகில் பெருகிவரும்
வேளையில், உலகினர் அனைவரும் நம் உறவுகளே என்ற உண்மை
அன்பின் இலக்கணத்தை நமக்குத் தெளிவாக உணர்த்தும் உன்னத
உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
மறையுரைச் சிந்தனை திருத்தொண்டர் குழந்தை இயேசு
பாபு
இறைஉறவில்
நிலைத்திருப்போமா?
வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தன் தந்தையிடம்,
மகளானவள் பாசத்தோடு வந்து அமர்ந்து தனக்குப் பிடித்தமான ஒரு
பொருளை வாங்கித்தருமாறு கேட்டாள். உடனே தந்தை தன் மகளை பாசத்தோடு
அணைத்து "நான் சொல்வது போல நீ செய்தால் தான் வாங்கித் தருவேன்
"என்றார். உடனே "சொல்லுங்கப்பா" என்று ஆர்வத்தோடு கேட்ட
மகளிடம் "அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு நல்ல பிள்ளையாக இருக்கணும்.
நல்லா படிச்சு முதல் மதிப்பெண் வாங்கணும். எப்பவும் அப்பாவோட
செல்ல பிள்ளையா இருக்கணும். அப்படி இருந்தால் உனக்குபிடித்ததை
நான் செய்வேன் " என்றாராம். வேகமாக சிரித்த முகத்துடன் தலையாட்டினாள்
மகள்.
ஆம். அன்புக்குரியவர்களே நாம் எல்லோருமே நமது தாய் தந்தையரிடமிருந்து
இவ்வகை அனுபவங்களைப் பெற்றிருப்போம். நம்மை நல்வழிப்படுத்தவும்
நாம் வாழ்வில் முன்னேறவும் அவர்கள் தங்கள் அன்புக் கட்டளைகளாலும்
அறிவுரைகளாலும் இன்றுவரை நம்மை வழிநடத்திக்
கொண்டிருக்கிறார்கள். இது நாம் மறுக்க முடியாத ஒரு உண்மை.
இத்தகைய ஒரு தந்தைக்குரிய மனநிலையில் தான் இயேசுவும் " என்
கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்"
எனக் கூறுகிறார்.
அன்றைய இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர் மோசே வழியாக அளித்த கட்டளையைக்
கடைபிடிப்பதில் கருத்தாய் இருந்தனர். ஏனேனில் அக்கட்டளைகளை
அவர்கள் இறைவனோடு கொண்டுள்ள உறவில் நிலைத்திருக்க உதவக்கூடிய
வழிமுறையாய்க் கருதினர்.
புதிய இஸ்ரயேலராகிய நாமும் இறைவனோடு உள்ள உறவில்
நிலைத்திருக்க இயேசு அழைக்கிறார். இயேசு அதற்கான
வழிமுறையையும் நமக்கு வகுத்துத் தருகிறார். அன்பு வாழ்வே
அவ்வழிமுறை.
இன்றைய இரண்டாம் வாசகத்திலும் அன்பைப் பற்றி தூய யோவான் எடுத்துரைக்கிறார்.
அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செய்வோரும் கடவுளிடமிருந்தே
வருகின்றனர். அவ்வாறெனில் நாம் கடவுளோடு அன்புறவில்
நிலைத்திருந்தால் மட்டுமே சக மனிதருக்கும் அன்பு செலுத்த
முடியும். சக மனிதருக்கு அன்பு செலுத்த வேண்டுமென்பது தான்
இயேசு நமக்குத் தரும் கட்டளை. இக்கட்டளையை நிறைவேற்றி நாம்
அன்புறவில் வாழும் போது நமது வாழ்வு கனிகொடுப்பதாகவும், மகிழ்ச்சி
நிறைந்ததாகவும், அமைதி நிறைந்ததாகவும் இருக்கும். நாமும்
கடவுளோடு உள்ள உறவில் ஆழப்பட முடியும். எனவே இறையுறவில்
நிலைத்திருக்க அன்பு வாழ்வு வாழ்வோம். அதற்கான இறையருள்
வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா நாங்கள் உமதன்புக் கட்டளையைக் கடைபிடித்து உம்மோடும்
பிறரோடும் உறவில் வளர்ந்து அதில் நிலைத்திருக்க வரம்
தாரும். ஆமென்.
திருஅவையிலே யாரெல்லாம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்கிறார்களோ
அவர்கள் அனைவரும் மூவேளை செபவுரை ஆற்றுவதும், மக்களுக்காய்
செபிப்பதும் வழக்கம். நம்முடைய இன்னாள் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் ஐந்து மாதங்களுக்கு முன் அதாவது, ஜனவரி
25 ஆம் தேதி இந்த மூவேளை செபவுரையை நிகழ்த்தினார். அதில்
சிறப்பாக ஒருவரின் ஆன்மா இளைப்பாற்றிக்காக செபிக்க அழைப்பு
கொடுத்தார். திருத்தந்தை பிரான்சிஸ் பொறுப்பேற்ற நாள் தொடங்கி
அவரின் அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது. புலம் பெயர்ந்தோர்,
அகதிகள், வீடற்றோர், சிறைக்கைதிகள் ஆகியோர் மீது அவர்
காட்டும் அன்பும், கரிசணையும் மிகப் பெரியது. ஆனால் இவ்வளவு
கருணையோடு பார்க்க விரும்பிய அவரை கலங்க வைத்தது நைஜீரிய
நாட்டு வீடற்ற 46 வயது மிக்க எட்வின் என்பவரின் இறப்பு.
புனித பேதுரு சதுக்கத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் வீடற்று,
கடும் குளிரில் நடுங்கி இறந்த எட்வின் என்பவருக்காகத் தான்
திருத்தந்தை சிறப்பாக செபிக்க சொன்னார். புறந்தள்ளப்பட்டவராக,
அனாதையாக, அரவணைப்பின்றி, அன்பு செய்ய ஆளின்றி இறந்த அவரின்
ஆன்மாவுக்கு இறைவன் நித்திய இளைப்பாற்றியைக் கொடுக்க
வேண்டுமாய் செபிப்போம் என்று அழைப்பு கொடுத்தார் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள். இந்த செய்தியை வத்திகான் செய்தி
குறிப்பிலிருந்து வாசித்த பின்பு எனக்குள் எழுந்தது ஒரே ஒரு
கேள்விதான்: உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மிடத்தில்
சொன்னதை நாம் செய்கிறோமா?
இறைஇயேசுவில் இனியவர்களே,
மனித வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களும் யாருவது ஒருவர்
சொல்கின்ற சொற்களால், செய்கின்ற செயல்களால், எண்ணுகின்ற எண்ணங்களால்
நிரம்பி வழிகின்றன. நாம் ஒரு காரியத்தை செய்கிறோம் என்றால்,
அது நம்மால் யோசித்து செய்யப்படுவதைவிட மற்றவர்களால்
சொல்லிச் செய்யப்படும் செயலாகவே பல நேரங்களில் நாம்
பார்க்கின்றோம். மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு,
அதற்கேற்ப வாழ கற்றுக்கொண்ட நாம் ஏன் இறைவனின் வார்த்தைகளுக்கேற்ப
நம் வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை என்று சிந்திக்க அழைப்பு
கொடுக்கின்றது பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு. இன்றைய இறைவாக்கு
வழிபாடு நம்மிடத்தில் எழுப்புகின்ற ஒரே ஒரு கேள்வி இதுதான்:
நீங்களும், நானும் இறைவன் சொன்னதை செய்கிறோமா? இல்லையா?
நமக்காய் தன்னுடைய இன்னுயிரை கல்வாரி மலையிலே கையளித்த இயேசு
கிறிஸ்து தன் உயிர்ப்பின் பின்பாக பல இடங்களில் தன் உயிர்ப்பின்
மாட்சியை அனுபவமாக தன் திருத்தூதர்களுக்கு கொடுக்கிறார்.
"இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு
அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்" (யோவான் 20:21),
"பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள் நீட்டி என்
விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைக்கொள்" என்றார்"
(யோவான் 20: 27) இவ்வாறாக, இயேசு தன் சீடர்களுக்கு பல்வேறு
உயிர்ப்பின் காட்சிகள் வழியாக தன்னை வெளிப்படுத்தி, வதந்திகளுக்கு
மத்தியில் உயிர்த்த ஆண்டவராய் நான் இருக்கிறேன் என்ற புரிதலை
வழங்கி பல்வேறு விதமான சிந்தனைகளை தன் சீடர்கள் மூலமாக நமக்கு
வழங்கியுள்ளார். அத்தகைய போதனையின் ஒரு பகுதியாக இன்றைய நற்செய்தி
பகுதி அமைந்துள்ளது. யோவான் நற்செய்தி 15ஆம் அதிகாரம் முழுவதையுமே
நாம் செய்ய வேண்டிய கடமையைச் சுட்டிக்காட்டும் பகுதி என்று
கூறினால் அது மிகையாகாது. இயேசு தன் உயிர்ப்பிற்கு பின்பாக
சீடர்களைப் பல வகைகளில் தேற்றிய பின் ஆற்றிய அன்புரைகளை
அவர்கள் கடைபிடிக்கவும், அவர்கள் வழியாக பெற்றுக்கொண்ட
நாமும் கடைபிடித்து வாழ வேண்டுமென்பதே இறைமகன் இயேசு
கிறிஸ்து இன்றைய நாளில் நமக்கென வழங்குகின்ற இறைச்செய்தியாக
இருக்கின்றது.
முதல் வாசகத்திலே, திருத்தூதர் பணிகள் நூலிலே கொர்னேலியு
என்னும் மனிதர் பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில்
விழுந்து வணங்குகிறார். அப்போது பேதுரு 'எழுந்திடும்,
நானும் ஒரு மனிதன்தான்' என்று சொல்கிறார். இது வெறும் சாதாரண
வாக்கியம் கிடையாது. இதில் ஆழ பொருள் பொதிந்து உள்ளது.
"இயேசு சீமோனை நோக்கி: அஞ்சாதே, இது முதல் நீ மனிதரைப்
பிடிப்பவன் ஆவாய்" (லூக் 5:10) என்று இயேசு சொன்ன
வார்த்தைக்கு வாழ்வு கொடுப்பதாய் அமைந்துள்ளது. சற்று ஆழமாக
யோசித்து பாருங்கள். யார் ஒருவரை நாம் ஆழமாக நம்புவோம்.
யார் ஒருவர் சொல்வதைக் கேட்போம்? யார் பேசுவதை செயல்பாட்டில்
காட்ட விழைவோம்? யார் ஒருவர், சொன்னதை செய்கிறாரோ அவரையே
நாம் மதிப்போம். அவருக்குத்தான் மரியாதை கொடுப்போம். அவரைப்
பற்றித்தான் மற்றவாpடத்தில் உயா;வாக பேசுவோம். இது
வாழ்வின் எதார்த்தம். இதுதான் பேதுருவின் வாழ்விலும் நடக்கிறது.
கடவுள் ஆள்பார்த்து செயல்படுபவர் கிடையாது. எல்லா மக்களினத்தையும்
ஒன்று சோ;ப்பவர் கடவுள் என நம்புங்கள் என்று நம்பிக்கையைப்
பறைசாற்றும் பேதுரு, தூய ஆவியின் துணையால் அனைவரும் பரவசப்பேச்சு
பேசுவதையும், கடவுளைப் போற்றி பெருமைப்படுத்துவதையும்
குறித்து மகிழ்கிறார். காரணம் ஒன்றே ஒன்றுதான்: அவர்கள்
கடவுள் சொன்னதை அப்படியே செய்தார்கள். எனவே அவர்கள் கடவுளின்
ஆவிக்குரிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். திருமுழுக்கு
பெறுகிறார்கள். இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ்கிறார்கள். ஆண்டவர்
சொன்னதை நிறைவேற்றும் புனித பேதுருவையும் அவர்கள் தங்களோடு
தங்குமாறு பணிக்கிறார்கள்.
இரண்டாம் வாசகத்திலும் மற்றுமொரு கடவுளின் செயல்பாடு கட்டளையாக
நமக்கு கொடுக்கப்படுகின்றது. அதுதான் 'அன்பு செய்தல்'. கடவுளிடமிருந்து
பிறந்தவர்கள் நிச்சயம் அன்புச் செய்வார்கள். அவர்கள் கடவுளை
அறிந்துள்ளார்கள். நம் பாவங்களுக்காய் கழுவாயாக தந்தையாம்
இறைவன் தன் மகனையே நமக்காய் அனுப்பியுள்ளார் என்பதையும்
புரிந்து கொள்கிறார்கள். அப்படியென்றால், உயிர்த்த ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்து நம்மில் எதிர்பார்ப்பது நாம் அனைவரும் மற்றவாpடம்
எவ்வித நிபந்தனையும் இன்றி அன்புச் செய்ய வேண்டுமென்பதுதான்.
இது இன்றைய உலகில் நடைபெறுகிறதா? அன்புக் கட்டளை கொடுத்து,
அன்பு செய்யுங்கள் என்று சொன்ன இறைவனின் கட்டளையை நாம்
முழுவதுமாக கடைப்பிடிக்கிறோமா? சிந்திக்க வேண்டும். இன்று
நாம் வாழும் சமூகத்தில் காணப்படும் அன்பை ஐந்து வகைகளில்
பிரித்து பார்க்க விரும்புகின்றேன்:
1. முகதுதிக்கான அன்பு
2. காரியத்திற்கான அன்பு
3. காயப்படுத்தும் அன்பு
4. புகழைச் சம்பாதிக்க உதவும் அன்பு
5. கைகழுவும் அன்பு
ஆனால் இவையெல்லாம் ஆண்டவர் குறித்து காட்டிய அன்பு
கிடையாது. இதைத்தான் இணைச்சட்டப் புத்தகம் 6:5இல் "உன்
முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடு, உன் முழு ஆற்றலோடும்
உன் கடவுளாகிய ஆண்டவாpடம் அன்புகூர்வாயாக!" என்று
பார்க்கின்றோம். இத்தகைய முழுமையான அன்பைத்தான் கடவுளும்
நமக்கு கட்டளையாகக் கொடுத்தார். ஆனால் அதிலிருந்து தவறி
நிற்கின்றோம். ஆண்டவர் சொன்னதை செய்யாமல் வாழ்கிறோம் என்ற
சிந்தனை தெளிவாக வழங்குகிறது யோவான் முதல் திருமுகம். இறைஇயேசுவில்
பிரியமானவர்களே, இன்றைய நற்செய்தி இன்னும் சற்று ஆழ்ந்து
நம்மை யோசித்து பார்க்க வழியமைத்து கொடுக்கின்றது. ஆண்டவர்
சொன்னதை செய்யாத மக்களாக நாம் வாழ்கிறோம் என்பதை சோதித்து
பார்க்கவும், நம் வாழ்வை மாற்றியமைத்து புதுப்பித்துக்
கொள்ளவும் பாதை காட்டுகிறார் நற்செய்தியாளர் யோவான்.
யோவான் நற்செய்தி 15ஆம் அதிகாரம் 9 முதல் 17 வரை உள்ள இறைவார்த்தைகள்
பின்வரும் இயேசுவின் கட்டளைகளை உள்ளடக்கிய பகுதியாக இருக்கின்றது:
1. அன்பு செய்தல், 2. இணைந்திருத்தல், 3. பணியாளராய் வாழ்தல்,
4. நண்பருக்குரிய நிலை பெறுதல், 5. மகிழ்ச்சியாய் வாழ்தல்,
6. அறிவித்ததை அனுபவித்து ஏற்றுக்கொள்ளுதல், 7. கனிதருதல்,
8. தரும் கனியில் நிலைத்திருத்தல், 9. கேட்பதைப்
பெற்றுக்கொள்ளுதல், 10. செவிசாய்த்தல். இவையனைத்துமே ஆண்டவர்
நமக்கென சொன்ன காரியங்கள், செயல்பாடுகள். இவற்றை யார் ஒருவர்
தன் வாழ்வில் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் ஆண்டவரின் சொந்தமாய்
வாழ்கிறார்கள் என்பது இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கு உன்னதமான
செய்தி. இதை செய்தவர்களும், செய்யாதவர்களும் விவிலியத்தில்
காணப்படுகின்றனர். செய்தவர்கள் இறைவனின் சொந்தங்களாகவும்,
செய்யாதவர்கள் இறைவனை விட்டு அகன்று வாழும் மக்களாயும் இருக்கின்றனர்.
படைத்தவனின் பந்தமாய் வாழ பயிற்றுவிக்கப்பட்ட நம் முதல்
பெற்றோர் ஆதாமும், ஏவாளும் தொடக்கநூலிலே சொன்னதை செய்யாமல்,
சாத்தானுக்கு அடிபணிந்ததால் அவர்கள் இறைவனின் சொந்தம் என்ற
நிலையிலிருந்து தவறிப்போனார்கள். இதைத்தான் தொ.நூ 3:10,
11இல் இவ்வாறாக வாசிக்கின்றோம்: "உம் குரல் ஒலியை நான்
தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில்,
நான் ஆடையின்றி இருந்தேன். எனவே நான் ஒளிந்து கொண்டேன், என்றான்
மனிதன். நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது
யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து
நீ உண்டாயோ? என்று கேட்டார்". இது நம் முதல் பெற்றோர் கடவுள்
சொன்னதை செய்யாமல் இருந்த நிலை. நம் மீட்புக்காய் தன் இன்னுயிரை
அளித்த இயேசுவும், இவ்வுலகிற்கு தாயாகும் பேற்றினை பெற்ற
அன்னை மரியாவும், கடவுள் கனவில் சொன்னதை நம்பி பயணித்த
புனித ளோசேப்பும் கடவுள் சொன்னதை அப்படியே கேட்டார்கள்.
யோவான் 4: 34 - இயேசு அவர்களிடம், என்னை அனுப்பியவரின்
திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையைச்
செய்து முடிப்பதுமே என் உணவு
லூக்கா 1: 38 - நான் ஆண்டவரின் அடிமை; எம் சொற்படியே எனக்கு
நிகழட்டும்
மத்தேயு 1:24 - யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
மேற்சொன்ன இம்மூன்று இறைவார்த்தைகளுமே ஆண்டவர் சொன்ன
வார்த்தைகள். அதை அம்மூவருமே எவ்வித மறுப்புமின்றி கடைப்பிடித்தனர்.
ஆண்டவரின் சொந்தமாய் மாறினர். நாமும் இன்றைய நாளிலே ஆண்டவர்
சொன்ன எல்லாவற்றையும் கருத்தாய் கடைப்பிடித்து கடவுளின்
கரம் பிடித்து நடக்கவும், இறைவனின் சொந்தமாய் மாறவும் தொடர்ந்து
செபிப்போம். இறையாசீர் பெறுவோம்!
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ