ஆண்டின் பொதுக்காலம்
16 ஆம் ஞாயிறு திருப்பலி
முன்னுரை - 3ம் ஆண்டு
நமது செபமும், நாம் செய்கின்ற செயலும் போட்டியிட்டு நம்மை இந்த
திருப்பலிக்கு வரவேற்கின்றன. செபத்தையும் செயலையும் நமது வாழ்வின்
நோக்கமாக்க விரும்புகிறது இன்றைய திருப்பலி. நிலவின்; ஒளியை மேகங்கள்
மறைப்பதுபோல அன்றாட அலுவல்கள் நமது நோக்கத்தை, வாழ்வின் குறிக்கோளை
மறைக்க நேரிடும். ஆகவே செயலுக்கு முன் சிந்தனையும், பணிவிடைக்கு
முன் செபவாழ்வும் அவசியம் என வலியுறுத்துகிறது இத்திருப்பலி.
நாம் செய்யும் செபம் நமது செயலை செம்மையாக்கும். நமது செம்மையான செயல்
செபமாகும். நாம் செய்யும் செபம் நமது வாழ்க்கையை வளமையாக்கும். நமது
வளமிகு நல்வாழ்வே நல்செபமாகும். நாம் செய்யும் செபம் நமது துன்பத்தை
இன்பமாக்கும். நமது இன்பமிகு வாழ்வே நல்செபமாகும். நாம் செய்யும்
செபம் நமது பகைமையை பாசமாக்கும். நமது பாசமிகு வாழ்வே நல்செபமாகும்.
நாம் செய்யும் செபம் நமது உழைப்பை உன்னதமாக்கும். நமது உன்னதமான
வாழ்க்கையே நல்செபமாகும்.
மரியா செபவாழ்வுக்கும், மார்த்தா செயல் வாழ்வுக்கும் மாதிரியாகத்
திகழ்கின்றார்கள். இருவரின் மாதிரிகையையும் நம்முன் மாதிரிகையாகக்
கொண்டு வாழ திருப்பலியோ அருள் பொழிகிறது. பொழியும் அருளில் மூழ்கி
அருளுக்கு மேல் அருளைப் பெற செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. மரியாவின் செபவாழ்வையும் மார்த்தாவின் செயல்
வாழ்வையும் நேசிக்க அழைக்கும் இறைவா!
தாயாம் திருச்சபையை வழிநடத்தும் திருப்பீடப் பணியாளர்கள்
திட்டமிடும் ஆன்மீக செயல்பாடுகளால் இறைமக்கள், செபத்தையும்
நற்பணியையும் மையமாகக் கொண்டு வளமுடன் வாழ அருள்புரிய
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நற்பணி செய்வோரை நேசிக்கும் இறைவா!
நாடுகளின் தவைர்கள் மக்கள் விரும்பும் நற்பணிசெய்வதே
தெய்வீக அருள் பெறும் வழி என உணர்ந்து பணிசெய்ய அருள்புரிய
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆன்மீக வழிகாட்டிகளுக்கு அருள் தரும் இறைவா!
எங்கள் ஆன்மாவை வளப்படுத்த எமது அருட்தந்தை ஆற்றும்
பணியால் மிகுதியான நன்மைகள் எங்கள் பங்கில் விளைய
அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. சென்ற இடமெல்லாம் நன்மை செய்த இறைவா!
நாங்கள் செய்கின்ற எந்தச் செயலும் திறம்பட அமைய செபம்
வேண்டுமென உணர்ந்து செயல்படவும், நாங்கள் செய்யும்
நற்செயல்களே செபம் என உணர்ந்து நற்செயல்களைச்
செய்யவும் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
5. பகல் முழுவதும் பணியிலும் இரவு முழுவதும்
செபத்திலும் ஈடுபட்ட இறைவா! ஆன்மீகத்தை வழுவாக்கினால்
மட்டுமே செய்யும் பணி சிறக்கும் என அறிவுறுத்தும்
இறைவா!
நாங்களும் திருச்சபையின் கட்டளைகளை சிறப்புற
கடைபிடித்து ஆன்மீகத்தை வழுவாக்கி, செய்யும் பணியை
செபமாக்க அருள் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
ஒரு வீட்டில் வீட்டுச் சொந்தக்காரர் ஓரு பகுதியிலும்
மற்றொரு பகுதியில் வாடகைக்கார பாட்டி ஒருவரும் வசித்தனர்.
வாடகைக்கு குடியிருந்த பாட்டி இவ்வுலக செல்வங்கள் ஓன்றுமில்லாத
பரம ஏழை. ஆனால் ஞான காரியத்தில் செல்வம் கொழிக்கும்
சீமாட்டியாத் திகழ்ந்தாள். இப்பாட்டி நீண்ட நேரம்
செபிப்பாள். வீட்டின் மறுபகுதியில் வாழ்ந்த வீட்டுச்
சொந்தக்காரனுக்கு விசுவாசமே கிடையாது. செபிப்பதே
கிடையாது. எந்த ஒரு மதத்தை கடைபிடிப்பதும் கிடையாது.
மாறாக அப்பாட்டி செபிப்பதைக் கண்டு எள்ளி நகையாடுவது
உண்டு.
ஒருநாள் அப்பாட்டி, "ஆண்டவரே பசி வயிற்றைக் கிள்ளுகிறது.
பசியாற என் வீட்டில் ஒரு பருக்கைச் சோறுகூட இல்லை" என
சத்தமாக உரக்கக் கூவி செபித்தாள். இச்செபத்தை கேட்ட
செல்வந்தன் "அன்று இந்த கிழவிக்குத் தண்ணீர் காட்டப்
போகிறேன். நான் ஒரு தந்திரம் செய்யப்போகிறேன். என்று
கூறிக் கொண்டு பாட்டி வீட்டு வாசற்படியில் ஒரு
ரொட்டித் துண்டை கொண்டு போய் வைத்துவிட்டுக் கதவை தட்டிவிட்டு
ஓடிவந்து தன் வீட்டிற்குள் புகுந்து கொண்டான். பின்னர்,
கதவில் காதை வைத்து அந்தக் கிழவி என்ன சொல்லப்
போகிறாள் என்று ஒட்டு கேட்டான். அந்தக் கிழவி ஆனந்தக்
களிப்போடு "நன்றி ஆண்டவரே! நன்றி! நீர் என்றுமே என்னைக்
கைவிடமாட்டீர் என்றும் என் செபத்தைக் கேட்டருள்வீர் என்பது
எனக்கு நன்றாக தெரியும்." என்றாள். இதைக் கேட்டுக்
கொண்டிருந்த செல்வந்தன் திரும்பவும் ஓடிவந்து
பாட்டியைப் பார்த்து "ஆமாம், இந்த ரொட்டியை உனக்குக்
கொடுத்தது யார் தெரியுமா? கடவுள் கொடுத்தார் என்று நீ
நினைத்துக் கொண்டிருக்கிறாய். கடவுளாவது கொடுப்பதாவது!
நான் தான் இந்த ரொட்டியை இங்கே கொண்டு வந்து வைத்து
விட்டுப் போனேன்;." என்று ஏளனச் சிரிப்பு சிரித்துக்
கொண்டு சொன்னான். பாட்டியும் அவனது ஏளனச் சிரிப்புக்
கண்டு எள்ளளவும் சளைக்காமல் மனம் ஒடிந்து போகாமல்
மீண்டும் அதே உற்சாகத்துடன் "கிறிஸ்துவுக்கே புகழ்!
கிறிஸ்துவுக்கே நன்றி! கடவுள் என்றுமே என்னுடைய கண்ணீரைத்
துடைக்கின்றார். என்னுடைய அனுதின உணவைக் கொடுத்து வருகிறார்.
என்னுடைய மன்றாட்டுகளுக்குச் செவி சாயக்;கிறார். எனக்கு
உதவி செய்ய பசாசுகளைப் பயன்படுத்தக் கூடத் தயங்குவதில்லை.
அவர்களை பயன்படுத்தியாவது என் மன்றாட்டை
நிறைவேற்றுகின்றார்." என்றாள். கடவுள் நம்பிக்கை அற்றவனுக்கு
இவ்வார்த்தைகள் பேய் அறைந்தது போன்று இருந்தது.
உடலை வளர்க்க உணவு தேவை: ஆன்மாவை வளர்க்க செபம்
தேவை.
தூய உள்ளத்தோடு ஒப்புக்கொடுக்கும் செபம் இறைவனுக்கு
ஏற்புடையதாக இருக்கும்.
எவ்வளவுக்கு எவ்வளவு உருக்கமாக நாம் செபிக்கிறோமோ அவ்வளவுக்கு
அவ்வளவு நமது பணியை நாம் திறம்பட செய்து முடிக்க
முடியும்.
எவ்வளவு ஆழமாக நம்பிக்கையுடன் செபிக்கிறோமோ அந்த அளவு
நம்பிக்கையுடன் பணிகள் வெற்றி பெறும்.
நமது பணி நமது செபத்தை பாதிக்குமானால் நமது பணியை ஆற்றும்
போது நமக்கு நிம்மதி இருக்காது.
கடவுளை வலுக்கட்டாயப்படுத்துவது அல்ல செபம்.
பிள்ளைக்குரிய அன்போடு இயல்பாக தன்னை இறையன்பிற்கு அர்பணிப்பதே
செபம்.
பக்தி உள்ள உதடுகள் செபிக்கும் போதும், பிரமாணிக்கமுள்ள
இதயங்கள் தூண்டும் போதும், புனித வாழ்க்கையில் அது எதிரொலிக்கும்
போதும், நமது பணியும் செபமும் அழகாக காட்சி அளிக்கும்.
நமது பணியை செபமாக்குவோம். நமது செபத்தை நற்பணியாக்குவோம்.
நற்செய்தி அறிவிப்புப் பணி புரிவோர்க்கு செபம்
முக்கியத்துவம் வாய்ந்தது.
66 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ ஆறாயிரம் குருத்துவ மாணவர்கள்,
நவ துறவியர் மற்றும் உருவாக்கும் பயிற்சிகளை வழங்குவோருக்கு,
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி
நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், ஆறுதல்
வழிகிட்டும் மகிழ்வு, இயேசுவின் சிலுவை, செபம், ஆகிய
மூன்று தலைப்புகளில் தன் கருத்தை முன் வைத்தார். செபத்தின்
வல்லமையால் எத்தகைய பணியையும் நன்றாகச் செய்ய இயலும்
என்ற கருத்தை வலியுறுத்தினார்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
ஆனால் தேவையானது ஒன்றே!
ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன், என் குருத்துவப் பயிற்சியின்
ஆன்மிக ஆண்டில், தியானம் கற்பிக்க வந்த அருள்பணியாளரிடம், 'கண்களை
மூடிக்கொண்டே அமர்ந்திருப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் என்ன
மாற்றம் நடக்கும்? உலகில் அநீதி மறையுமா? புதிய கண்டுபிடிப்புக்கள்
நடக்குமா? நாம் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியுமா? பலருக்குப்
பணி செய்ய முடியுமா? புதியவற்றைக் கற்க முடியுமா? சும்மா யார்
வேண்டுமானாலும் கண்களை மூடிக்கொண்டு உட்கார முடியும். இல்லையா?' என்று
நான் விவாதித்தது என் நினைவில் இருக்கிறது. பத்தொன்பது ஆண்டுகள்
கடந்துவிட்டன. அருள்பணி வாழ்வில் பதிமூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.
நான் விழித்திருந்தது, பரபரப்பாக வேலை செய்தது, புதிதாகக் கற்றது
போன்றவற்றால் உலகில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதை இன்று நான்
கற்றுக்கொண்டேன். உலகம் தன் போக்கில் இயங்குகிறது. என் வேகத்தால்
என்னில் மாற்றம் ஏற்பட்டதைவிட என் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றே
நான் உணர்கிறேன்.
நிறைய வேகம். நிறைய செயல்பாடுகள். எந்நேரமும் எதையே
செய்துகொண்டிருக்க வேண்டும் என்று உலகம் சொல்கிறது. நேர மேலாண்மை,
உறவு மேலாண்மை, இட மேலாண்மை என்று தன்னுதவி புத்தகங்கள் குவிகின்றன.
யூடியூபில் காணொளிகள் நிறைகின்றன. 'உங்கள் நேரத்தை சேமிப்பது எப்படி?'
'உங்கள் பணத்தைச் சேமிப்பது எப்படி?' 'நிறைய நண்பர்களைச் சம்பாதிப்பது
எப்படி?' 'குறைவான நேரத்தில் மிகுதியான செயல்களைச் செய்வது எப்படி?'
என்று நிறைய 'எப்படி' இருக்கின்றது. நான் வேகமாகச் செல்ல
விரும்பவில்லையென்றாலும் நான் எடுத்திருக்கின்ற பொறுப்புக்கள்
என்னை வேகமாக இயக்கிக்கொண்டே இருக்கின்றன. கொஞ்ச நேரம் கோவிலில்
அமர்ந்தாலும் என் வேலைகளில்தான் என் எண்ணம் இலயிக்கின்றது. என்
வேலைகளுக்காக நான் தியாகம் செய்யும் நேரம் என் செப நேரமாகவே
இருக்கின்றது.
ஏன் இந்த வேகம்? ஏன் இவ்வளவு செயல்பாடுகள்? எனக்கு ஏன் நிறையப்
பேரைத் தெரிய வேண்டும்? நான் ஏன் எல்லாரிடமும் நட்போடு இருக்க
வேண்டும்? நான் ஏன் எல்லாக் குறுஞ்செய்திகளுக்கும் பதில் அனுப்ப
வேண்டும்? நான் ஏன் எல்லா ஃபோட்டோக்களையும் விரும்ப வேண்டும்? நான்
ஏன் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக்கொள்ள வேண்டும்? நான் ஏன் ஆன்லைன்
பேங்கிங் செய்ய வேண்டும்?
ஒன்றுமே செய்யாமல் ஓய்ந்திருத்தல் தகாதா?
இலக்குகளே இல்லாமல் வாழ்வது கூடாதா?
வாழ்வே இலக்கு என்று இருக்கும் போது வாழ்வதற்கு ஏன் இலக்குகள்?
என்னுடைய இன்றையே நான் முழுமையாக வாழாதபோது எதற்காக நாளைக்கான
சேமிப்புகள்? என் நண்பர்கள் நாளை என்னோடு இருப்பார்கள் என்பதற்காக
நான் அவர்களோடு இன்று பழகுகிறேனா? ஏன் எல்லாவற்றையும் நான்
நாளைக்காகச் செய்ய வேண்டும்?
ஒரு பக்கம் செய்ய வேண்டிய வேலை. இன்னொரு பக்கம் எடுக்க வேண்டிய
ஓய்வு. இப்படிப்பட்ட குழப்பமான தருணத்தில் ஆண்டவரின் வார்த்தை
இன்று நமக்கு ஆறுதலாக வருகிறது: 'ஆனால் தேவையானது ஒன்றே' என்கிறார்
ஆண்டவர்.
'தேவதாரு மரங்களருகே ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றினார்' என்று
தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 18:1-10). 'டைட்டன்
ஷோரூம்,' 'கீர்த்தி டென்டல் கிளினிக்,' 'வோடஃபோன் ஷோரூம்,' 'சித்தி
விநாயகர் கோவில்' என்று லேன்ட்மார்க்குகள் தோன்றாத அந்த நாள்களில்
மரங்களை வைத்தேதான் இடங்கள் அடையாளம் சொல்லப்பட்டன. ஆண்டவர்
ஆபிரகாமுக்குத் தோன்றிய இடம் அப்படிப்பட்ட ஒரு லேன்ட்மார்க் தான்.
தன் கூடாரத்தின் வாயிலில் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் தன் கண்களை
ஏறெடுத்துப் பார்க்க 'மூன்று மனிதர்கள் நிற்கின்றார்கள்.' இந்த
'மூன்று மனிதர்கள்'தாம் 'மூவொரு இறைவனின்' முதல் அடையாளம் என்கிறது
நம் கத்தோலிக்க இறையியல். 'ஆபிரகாமின் காத்திருத்தல்' பற்றி
வாசிக்கின்ற வாசகருக்கு இரண்டு விடயங்கள் புரிகின்றன: (அ) ஆபிரகாம்
வாழ்வில் ஏதோ முக்கிமான நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது. (ஆ)
ஆபிரகாமின் காத்திருத்தல் அவரின் விருந்தோம்பல் பண்புக்குச்
சான்றாக அமைகிறது.
முதலில் ஆபிரகாமின் காத்திருத்தலைப் புரிந்து கொள்வோம். தொடக்க கால
சமூகத்தில், குறிப்பாக பாலைநிலங்கள் மிகுந்திருந்த மத்திய கிழக்கு
பகுதியில் 'விருந்தோம்பல்' முதன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டது.
'நீ இன்று ஒருவருக்குக் கொடுக்கும் தண்ணீரை நாளை உனக்கு
வேறொருவருக்குக் கொடுப்பார்' என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
ஆகையால் வழிப்போக்கர்கள் யார் வந்தாலும், அவர்களுக்கு
விருந்தோம்பல் செய்வது மத்திய கிழக்கு நாட்டு மரபு. விருந்தோம்பல்
மிக மேன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டதால்தான், லோத்து தன்
இல்லத்தில் வந்திருக்கும் விருந்தினர்களைக் காப்பாற்றுவதற்காக தன்
இரு மகள்களை பாலியல் பிறழ்வுக்கு உட்படுத்தத் தயாராக இருக்கின்றார்
(காண். தொநூ 19). ஆக, ஆபிரகாமின் காத்திருத்தலும், அந்நியர்களைக்
கண்டவுடன் அவர்களை ஓடிச் சென்று வரவேற்றலும், உணவு தந்து
உபசரிப்பதும் அவரின் விருந்தோம்பலைக் காட்டுகின்றது. தன் வேலையை
அவர் சாராவுடன் பகிர்ந்து செய்கின்றார். இவ்வாறாக, விருந்தோம்பலில்
பெண்களும் சம உரிமை பெறுகின்றனர்.
இரண்டாவதாக, ஆபிரகாமின் வாழ்வில் நடக்கப் போகும் முக்கியமான
நிகழ்வு. ஆபிரகாமின் விருந்தோம்பலில் நிறைவு பெற்ற மூன்று
மனிதர்கள் ஆபிரகாமிடம், 'நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக
மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு
மகன் பிறந்திருப்பான்' (18:10) என அவருக்கு ஒரு மகனை
வாக்களிக்கின்றனர். இந்த வாக்குறுதியைக் சாராவும் கேட்கின்றார்.
கேட்ட சாரா டக்கென சிரித்து விடுகின்றார். அவர்களுக்கு
வாக்களிக்கப்பட்ட மகன் 'ஈசாக்கின்' பெயரின் பொருளும் அதுவே - 'அவன்
என் சிரிப்பு' அல்லது 'அவன் என் மகிழ்ச்சி.' இவர்களின் இந்த
வாக்குறுதி ஆபிரகாம் வாழ்வில் மிக முக்கியமானது. ஏனெனில்,
ஆபிரகாம்-சாரா தம்பதியினிரின் முதிர்வயதைக் கணக்கில் கொண்டு, இந்த
வாக்குறுதி நிறைவேறுமா, இல்லையா என்ற சந்தேகம் வாசகர்களின் மனதில்
எழுகின்றது. மேலும், தொநூ 12ல், 'உன் இனத்தைப் பலுகிப் பெருகச்
செய்வேன்' என்று ஆண்டவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி
நிறைவேறப்போகிறது என்ற நம்பிக்கை எழுகின்றது.
தன்னுடைய முதிர்வயதில், தன்னுடைய விருந்தோம்பலில் கருத்தாயிருந்து,
தன்னுடைய குழந்தையின்மை பற்றி வருந்திக்கொண்டிருந்த ஆபிரகாம் அந்த
மூவரின் பாதங்களில் அமர்ந்ததால் சிரிக்கும் செய்தியைப்
பெறுகின்றார். 'தேவையான ஒன்றை' பெற்றுக்கொள்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கொலோ 1:24-28), கிறிஸ்துவின்
துன்பம் மற்றும் மாட்சி பற்றிய இறையியலை கொலோசை நகரத் திருஅவைக்கு
எழுதும் பவுல், தான் இந்த நேரத்தில் பட்டுக் கொண்டிருக்கும்
துன்பமும், திருஅவையினர் பட்டுக்கொண்டிருக்கும் துன்பமும்
கிறிஸ்துவில் அவர்கள் இணைந்திருப்பதற்கான அடையாளம் என்பதைச்
சுட்டிக்காட்டி, துன்பத்தைப்போல மாட்சியும் பின்தொடரும் என
வாக்குறுதி தருகின்றார். வெளியே தங்களுடைய ஆறுதலைத்
தேடிக்கொண்டிருந்த கொலோசை நகர மக்களிடம், 'உங்களுக்குள் இருக்கும்
கிறிஸ்து' என்று பவுல் அவர்களைத் தங்களுக்கு உள்ளே கடந்து செல்லத்
தூண்டுகின்றார். வெளியில் இருப்பவை தேவையற்றவை என உணர்கின்ற பவுல்,
உள்ளிருக்கும் அந்தத் தேவையானது நோக்கி அவர்களை அனுப்புகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 10:38-42), கடந்த வாரம் நாம்
வாசித்த 'திருச்சட்ட அறிஞரின் கேள்வி மற்றும் நல்ல சமாரியன்
எடுத்துக்காட்டின்' (லூக் 10:25-37) தொடர்ச்சியாக இருக்கிறது.
'உன்னை அன்பு செய்வது போல உனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு
செய்வாயாக!' என்ற பிறரன்புக் கட்டளையின் விளக்கமாக 'நல்ல சமாரியன்
எடுத்துக்காட்டு' இருக்கிறது என்றால், 'உன் முழு இதயத்தோடும், முழு
உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் ஆண்டவரை அன்பு
செய்வாயாக என்ற இறையன்புக் கட்டளையின் விளக்கமாக இருக்கிறது
'மார்த்தா-மரியா எடுத்துக்காட்டு.' 'ஒருவர் பயணம் செய்து
கொண்டிருந்தார்' (10:30) என்று 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு'
தொடங்குவதுபோல, 'பெண் ஒருவர் இயேசுவை தன் இல்லத்தில் வரவேற்றார்'
(10:38) என்று தொடங்குகிறது. பெண்ணின் வரவேற்பை ஏற்று அவரின்
இல்லத்திற்குள் நுழைந்த இயேசுவின் செயல், இயேசு தனது
சீடர்களுக்குக் கொடுத்த மறைத்தூது அறிவுரையை அவரே வாழ்ந்து
காட்டுவதாக இருக்கின்றது: 'உங்களை வரவேற்பவர்களின் வீட்டுக்குச்
செல்லுங்கள். உங்கள் முன் வைப்பவற்றை உண்டு, நலமற்றவர்களுக்கு நலம்
தந்து, இறையரசு வந்துவிட்டது என அறிவியுங்கள்!' (லூக் 10:8).
நற்சீடரின் பண்பு 'பார்ப்பது' என்று 'நல்ல சமாரியனும்,' நற்சீடரின்
இன்னொரு பண்பு 'பாதத்தில் அமர்ந்து கேட்பது' என்று 'மரியாவும்'
சீடத்துவ பாடம் கற்றுத்தருகின்றனர். ஆணாதிக்கமும், தூய்மை-தீட்டு
வித்தியாசம் காணுதலும் மேலோங்கி நின்ற யூத மரபுக்குமுன், ஒரு
பெண்ணையும், ஒரு சமாரியனையும் சீடத்துவத்தின் முன்மாதிரிகள் என்று
நிறுத்துவது இயேசுவின் மரபுமீறலுக்குச் சான்று.
மார்த்தா இயேசுவை தன் இல்லத்திற்கு வரவேற்று விருந்தோம்பல்
செய்கின்றார். மார்த்தாவைப் பற்றி தொடர்ந்து எதையும் பதிவு
செய்யாமல், அவரின் சகோதரி மரியாவை வாசகருக்கு அறிமுகம்
செய்கின்றார் லூக்கா. இயேசுவின் பாதங்கள் அருகே அமர்ந்து அவரின்
வார்த்தைக்குச் செவிமடுப்பவராக அறிமுகம் செய்யப்டுகின்றார் மரியா.
'பாதத்தில் அமர்வதும்,' 'வார்த்தைகளைக் கேட்டலும்' சீடத்துவத்தின்
இரண்டு முக்கிய பண்புகளாகக் கருதப்பட்டன (காண். திப 22:3, லூக்
5:1, 8:11, 21).
யூதர்கள் நடுவில் துலங்கிய ரபிக்களின் பின்புலத்தில் இந்த
நிகழ்வைப் பார்ப்போம். யூதர்களின் மிஷ்னா, 'உங்கள் இல்லம்
ஞானியரின் சந்திப்பு இல்லமாக இருப்பதாக. ஞானியர் உங்கள்
இல்லத்திற்கு வந்தால் அவர்களின் காலடிகளில் அமர்ந்து அவர்களின்
வார்த்தைகளால் உங்கள் தாகம் தீர்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் அதிகம்
பேசவேண்டாம்' என்று கூறுகின்றது. ரபிக்கள் இல்லங்களுக்குள்
நுழைவதுபோல இயேசுவும் நுழைகின்றார். ஆனால், மரியா இயேசுவின்
காலடிகளில் அமர்வது ஒரு மரபு மீறல். ஏனெனில் ரபிக்களின் வருகையின்
போது அவர் அருகில் அமர்ந்து போதனையைக் கேட்க தகுதி பெற்றவர்கள்
விருத்தசேதனம் செய்யப்பட்ட யூத ஆண்கள் மட்டுமே. யூத
சிந்தனையின்படி, இங்கே சரியாகச் செயல்பட்டவர் மார்த்தா தான்.
ரபியின் வருகையின் போது அவரை உபசரிப்பதில் காட்ட வேண்டிய
அக்கறையையும், பரபரப்பையும் சரியாகக் கொண்டிருக்கின்றார் மார்த்தா.
ஆனால் இயேசு, மரியாவின் செயலை மேன்மையானதாகக் காட்டி, மார்த்தாவின்
பரபரப்பையும், கவலைகளையும் சுட்;டிக்காட்டி மீண்டும் ஒரு
புரட்டிப்போடுதலைச் செய்கின்றார்.
முள்செடிகளின் நடுவே விழுந்த விதைக்கு உதாரணமாக இருக்கின்றார்
மார்த்தா. ஏனெனில் கனி கொடுக்க விடாமல் அவரின் 'கவலையும், வாழ்வின்
கவர்ச்சிகளும்' தடுக்கின்றன (காண். லூக் 8:14). தன் சமூகம்
தனக்குக் கொடுத்த வேலையை சிரமேற்கொண்டு செய்பவராக மார்த்தா
இருந்தாலும், 'மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' (காண்.
4:4) என்று உணர்ந்த அவரின் சகோதரி மரியா, 'எல்லாவற்றையும்
துறந்தவராய் இயேசுவை மட்டும் பின்பற்றத் துணிகின்றார்' (காண்.
5:11, 28). திருத்தூதர் பணிகள் நூலிலும், 'எந்தப் பணி
முக்கியமானது? உணவு பரிமாறுவதா? அல்லது இறைவார்த்தையை அறிவிப்பதா?'
என்ற கேள்வி எழும்போது, 'இறைவார்த்தை அறிவிப்பை' தேர்ந்து கொள்ளும்
திருத்தூதர்கள், 'உணவு பரிமாறுவதற்காக' திருத்தொண்டர்களை
ஏற்படுத்துகின்றனர் (காண். 6:1-6).
'மார்த்தா, மார்த்தா' என இருமுறை அழைத்து அவரைக் கடிந்து கொள்ளும்
இயேசு, 'இறையன்பும், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தலும்'
எல்லாவற்றையும் விட மேன்மையானது என்று உணர்த்துகின்றார்.
('செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்' குறள்
412 - என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வதும் இதற்கு ஒத்து
இருக்கின்றது).மரியாள் 'தேர்ந்துகொள்ளப்பட்டவரையே' (9:35) தேர்ந்து
கொள்கின்றார். அதுவே அவர் தேர்ந்து கொள்ளும் நல்ல பங்கு. அது
அவரிடமிருந்து எடுக்கப்படாது.
இன்று நான் 'தேவையானது அந்த ஒன்றை தேர்ந்துகொள்வது' எப்படி?
1. தேவையானது எது என்பதை முதலில் நான் அறிய வேண்டும்
'இறைவன் ஒருவரே தேவையானவர். மற்றவர் அல்லது மற்றவை தேவையற்றவர்கள்
அல்லது தேவையற்றவை' என்று எளிதாகச் சொல்லிவிட முடியுமா? தேவையான
அந்த இறைவன் இன்று மற்றவர்கள் வழியாகத் தானே வருகின்றார்.
மருத்துவமனையில் நோயுற்றிருக்கும் நம் நண்பர் அல்லது உறவினர்
அருகில் இருப்பது தேவையற்றதா? சாலையில் அடிபட்டுக் கிடக்கும்
ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுவது தேவையற்றதா? அழுதுகொண்டிருக்கும்
என் நண்பரின் அழுகையைத் துடைப்பது தேவையற்றதா? ஆலயத்தில்
அமர்ந்துகொண்டிருப்பது மட்டுமே தேவையானதா? சில நேரங்களில் நம்முடைய
பொறுப்பைப் தட்டிக்கழித்துவிட்டு ஆலயத்தில் அமர்வதே பாவமாகி
விடும். என்னைப் பொருத்தவரையில் 'என் மூளை சொல்வதை நான்
கேட்கும்போதெல்லாம் தேவையற்றதை நான் நாடுகிறேன். என் மனம் சொல்வதை
நான் கேட்கும்போதெல்லாம் தேவையானது ஒன்றை நான் நாடுகிறேன்.'
'அவனைப் பார். நிறையப் படிக்கிறான். நீயும் படி!' - இது மூளையின்
சொல். 'அவளைப் பார். உன்னைவிட அழகாக இருக்கிறாள். அதை வாங்கு!'
'அவன் உன்னைவிடப் பணக்காரன். நீ பணம் சம்பாதி!' 'அவன் வெற்றியாளன்.
நீயும் கடினமாக உழை!' இப்படி மூளை சொல்வது எல்லாமே நம்மைப்
பரபரப்பாக்கிவிடும். ஒருவர் மற்றவரோடு நம்மை ஒப்பீடு செய்யத்
தூண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி புகார் அளிக்கத் தூண்டும்.
ஆனால், மனம் சொல்வதைக் கேட்பவர் மௌனமாகிறார். அல்லது மௌனமாக
இருக்கும் ஒருவரே மனம் சொல்வதைக் கேட்க முடியும். ஆக, என் மூளையின்
ஓசைகளைக் குறைத்து மனத்தின் மௌனம் நோக்கி நான் செல்ல வேண்டும்.
2. அமர வேண்டும்
அமர்தல் என்பது கீழை மரபில் செவிமடுத்தலின், பணிவிடையின்,
ஏற்றுக்கொள்தலின் அடையாளம். மார்த்தா நின்று கொண்டிருப்பதால்
அமர்ந்திருக்கும் இயேசுவுக்கு மேல் இருக்கிறாள். மரியாள்
அமர்ந்திருப்பதால் இயேசுவுக்கு கீழ் இருக்கிறாள்.
நின்றுகொண்டிருப்பது நல்லதுதான். ஆனால் அது மேட்டிமை உணர்வையும்
பரபரப்பையும் உண்டாக்கிவிடும். 'தலைவன் நானே இங்கு
அமர்ந்திருக்கிறேன். ஊழியக்காரி நீ ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்?'
என்று மார்த்தாவை மனதிற்குள் கேட்டிருப்பார் இயேசு. ஆக, வாழ்வில்
எதற்கும் நாம் தலைவர்கள் அல்லர். தலைவர் இறைவனே
அமர்ந்திருக்கிறார். ஊழியன் நான் ஏன் பரபரப்பாக நின்றுகொண்டிருக்க
வேண்டும்?
3. கேட்க வேண்டும்
அடுத்தவர் சொல்வதை நான் கேட்க வேண்டும் என்றால், இறைவனின்
வார்த்தையை நான் கேட்க வேண்டும் என்றால் என் மனம் அமைதியாக
வேண்டும். ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எட்டு
ப்ரொஜெக்டர்களையும் ஒவ்வொன்றாக நான் அணைக்க வேண்டும். அப்போதுதான்
குரல் கேட்கும், படம் தெரியும். இன்று நான் நிறையப் பாடல்கள்
கேட்கிறேன், காணொளிகள் காண்கிறேன், உரையாடல்கள் செய்கிறேன். ஆனால்,
எல்லாம் முடிந்தவுடன் வெறுமையே மிஞ்சுகிறது. அப்படி என்றால் என்
மனம் இன்னும் எதையோ கேட்க விரும்புகிறது. அதுதான் அவரின் குரல்.
இறுதியாக,
இன்று நான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தையும்
பட்டியலிடுகிறேன். 'ஏன் பரபரப்பாகிப் பதறுகிறாய்?' என்று அவரின்
குரல் என்னில் கேட்கிறது. ஒன்றும் செய்யாமல் அவரின் பாதங்களில்
அமர்வதே அவர் எனக்கு விடுக்கும் அழைப்பாக இருக்கிறது.
நான் கொஞ்ச நேரம் அமர்ந்து பார்க்கிறேன். என் மௌனம் என்னைக்
கொல்கிறது. எனவே, மெதுவாக என் இயர்ஃபோனை எடுத்து நான் காதுகளில்
மாட்டுகிறேன். யாரோ எதையோ சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.
விருந்தோம்பலும், இறைவார்த்தையைக்
கேட்டலும், துன்புறுதலும்
யாராவது என் கதையைக் கேளுங்களேன்:
பிரபல இரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ் எழுதிய புகழ்பெற்ற ஒரு சிறுகதை,
"புத்திர சோகம்". இச்சிறுகதை "ஐயனோவ்" என்றொரு குதிரை வண்டிக்காரரைப்
பற்றியது.
இந்த ஐயனோவ் ஒவ்வொரு நாளும் குதிரை வண்டியை ஓட்டி, அதிலிருந்து
கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார். இவருக்கு
ஒரு மகன் இருந்தான். ஒருநாள் அவன் கடுஞ் காய்ச்சலால் துன்புற்று,
இறந்து போனான். இந்தத் துயரத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள
நினைத்தார் ஐயனோவ். அதனால் இவர் தன்னுடைய குதிரை வண்டியில் சவாரி
செய்ய வந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார்.
முதலில் இவருடைய குதிரைவண்டியில் வியாபாரி ஒருவர் சவாரி செய்ய வந்தார்.
அவரிடம் இவர் தன்னுடைய மகன் இறந்த துக்கத்தைப் பற்றிச் சொல்லத்
தொடங்கியபோது, அவர், "உன்னுடைய கதையைக் கேட்க நான் தயாராக இல்லை.
வண்டியை நேராக ஓட்டு" என்று சற்றுக் கடுமையான வார்த்தைகளைப்
பயன்படுத்தியதால், இவர் அமைதியானார். வியாபாரியை அடுத்து, இராணுவ
வீரர் ஒருவர் குதிரை வண்டியில் சவாரி செய்ய வந்தார். அவரிடமும்
இவர் தன்னுடைய மகன் இறந்த துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள முயன்றபோது,
அவர், "இந்த நகரில் நாட்டியம் எங்கு நடைபெறுகின்றது என்பதை மட்டும்
சொல். உன் கதை எனக்கு வேண்டாம்" என்றார்.
இப்படி ஐயனோவ் தன்னுடைய மகன் இறந்த துக்கத்தைக் குதிரையில்
வண்டியில் சவாரி செய்ய வந்த ஒவ்வொருவரிடமும் சொல்ல முயன்றபோது,
அவர்கள் யாருமே இவரது துயரத்தைக் கேட்கத் தயாரில்லை. அந்த நாளின்
முடிவில் ஐயனோவ் சவாரியை முடித்துக்கொண்டு, குதிரையைக் குதிரை
இலாயத்தில் கட்டும்போது அதைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, "யாருமே
என்னுடைய துயரத்தைக் கேட்கத் தயாரில்லையே" என்று கண்ணீர் விட்டு
அழும்போது, குதிரை அசைபோட்டுக் கொண்டும், தலையை ஆட்டிக்கொண்டும்
ஐயனோக் சொன்னதைக் கேட்டுக் கண்ணீர் விட்டது.
மனிதர்கள் பிறருடைய துயரத்தைக் கேட்கத் தயாராக இல்லாதபோது, குதிரை
தயாராக இருந்தது என்று முடியும் இந்தச் சிறுகதை, பிறர் தங்களுடைய
துயரத்தை நம்மிடம் பகிரும்போது, அதற்கு நாம் செவிகொடுக்க வேண்டும்
என்ற சிந்தனையைத் தருகின்றது. பொதுக் காலத்தின் பதினாறாம் ஞாயிறான
இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இறைவனுக்குச்
செவிசாய்ப்பது எத்துணை முக்கியானது என்ற சிந்தனைத் தருகின்றது. அது
குறித்து என்று சிந்திப்போம்.
ஆபிரகாம், மார்த்தாவின் விருந்தோம்பல்:
சொமொட்டோ, சுவிக்கி மூலம் உணவை வருவித்து, உண்ணும் காலகட்டம் இது.
இக்காலக்கட்டத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நல்லமுறையில்
உபசரிப்பது என்பது அரிதாகிவிட்டது. நமது இந்திய மரபில் வீட்டிற்கு
வரும் விருந்தினரைக் கடவுளுக்கு இணையாகப் பார்த்து, அவர்களுக்கு
விருந்து உபசரிக்க வேண்டும் என்றொரு நிலை இருந்தது. இன்று அது
சாத்தியம்தானா? என்பது கேள்விக்குறியே! இத்தகைய பின்னணியில் இன்றைய
இறைவார்த்தையில் இடம்பெறும் இருவர் ஆபிரகாமும் மார்த்தாவும் -
விருந்தோம்பலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக
விளங்குகின்றார்கள்.
முதலில் ஆபிரகாமைக் குறித்துப் பார்ப்போம். தனது கூடார வாசலில்
அமர்ந்திருக்கும் ஆபிரகாம், கண்களை உயர்த்திப் பார்த்தபோது மூன்று
மனிதர் அருகில் நிற்கக் காண்கின்றார். முதலில் அவர்களை மனிதர் என
நினைத்த ஆபிரகாம், பின்னர் அவர்களைக் கடவுள் என உணர்ந்து, "என்
தலைவரே! என்று சொல்லி, அவர்களுக்குச் சிறப்பானதொரு விருந்து
படைக்கின்றார். இதனால் அவர்கள் பெரிதும் மகிழ்ந்து, அவருடைய மனைவி
சாராவிற்குக் குழந்தைப் பேற்றினைத் தருகிறார்கள். நற்செய்தியில்
மார்த்தா தன்னுடைய வீட்டிற்கு வரும் இயேசுவை நல்லமுறையில் விருந்து
உபசரிக்கின்றார். இவ்வாறு வீட்டிற்கு வரும் விருந்தினரைச் சரியாக
உபசரிக்காத மனிதர்கள் நடுவில் ஆபிரகாமும் மார்த்தாவும்
விருந்தோம்பலுக்குச் சிறந்து விளங்குவது நமது கவனத்திற்குக்
குரியது.
குறிப்பறிந்து செயல்பட்ட மரியா:
வீட்டிற்கு வரும் விருந்தினரை நல்ல முறையில் உபசரிப்பது தலைசிறந்த
ஒரு செயல். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதைவிடவும்
சிறப்பான ஒரு செயல், வீட்டிற்கு வரும் விருந்தினர் பேசுவதற்குச்
செவிமடுப்பது. ஏனெனில், நமது வீட்டிற்கு வரும் விருந்தினர் வெறுமென
உணவு சாப்பிட்டுவிட்டுப் போவதற்கு மட்டும் வருவதில்லை. மாறாக,
அவர்கள் தங்கள் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும்
வருகின்றார்கள். அப்படியிருக்கையில், நாம் அவர்கள் பேசுவதற்குச்
செவிகொடுப்பது மிகவும் அவசியமானது.
எருசலேம் நோக்கிப் போகும் வழியில்தான் இயேசு, மார்த்தா மரியாவின்
வீட்டிற்குச் செல்கின்றார். எருசலேமில் இயேசு மூப்பர்கள் கையில்
ஒப்புவிக்கப்பட்டுப் பலவாறாகத் துன்பப்பட இருந்ததால், அவர்
தாங்கமுடியாத துயரத்தில் இருந்திருக்கலாம்! அத்தகைய வேளையில்,
அவருக்குத் தேவைப்பட்டது நல்லதொரு விருந்து என்பதை விடவும், செவி
கொடுப்பதற்கு யாராவது ஒருவர்தான். இதைக் குறிப்பால் உணரும் மரியா
இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்கின்றார்.
குறிப்பால் அறியும் பண்பு இயேசுவின் தாய் மரியாவிற்கு மிகுதியாகவே
இருந்தது. அதனால் அவர் "உதவி" என்று கேளாமலே தனது உறவினரான
எலிசபெத்துக்கு உதவச் செல்கின்றார்; கானாவில் நடைபெற்ற
திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்த நிலையில், திருமண வீட்டார்
கேளாமலே அவர்களுக்கு உதவச் செல்கிறார். இத்தகைய குறிப்பால் அறியும்
பண்பு மார்த்தாவின் சகோதரி மரியாவிற்கும் இருந்திருக்க வேண்டும்.
அதனால்தான் அவர் இயேசுவின் நிலையை அறிந்து, அவரது காலடியில் போய்
அமர்ந்துகொண்டு, அவர் சொல்வதைக் கேட்கின்றார். இங்கே, இறைவனின்
இயேசுவின் குரலுக்குச் செவிசாய்ப்பது எத்துணை முக்கியமாது
என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இணைச்சட்ட நூல், "உன் கடவுளாகிய
ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல்
வந்து உன்னில் நிலைக்கும்" (இச 28:2) என்கிறது. அந்த அடிப்படையில்
மரியா இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொன்னதைக் கேட்டதால்,
அவர் நல்ல பங்கைத் தேர்ந்துகொள்கின்றார்.
கிறிஸ்துவோடு துன்புறுவோம்:
விருந்தோம்பலை விடவும் ஆண்டவருக்குச் செவிசாய்ப்பது உயர்ந்தது
என்று பார்த்தோம். இப்போது "ஆண்டவருக்குச் செவிசாய்த்தால் மட்டும்
போதுமா? வேறு எதுவும் செய்யத் தேவையில்லையா?" என்ற கேள்வி நமக்கு
எழலாம். இதற்கான பதிலை இன்றைய இரண்டாம் வாசகம் தருகின்றது.
ஆண்டவருக்குச் செவிசாய்க்கும் ஒருவர், அவர் அளிக்கும் ஆசிகளைப்
பெறுவார். அதே வேளையில், அவர் ஆண்டவரோடு துன்புறவும் தயாராவார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், "கிறிஸ்து தம் உடலாகிய
திருஅவைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் பட வேண்டிய வேதனையை என்
உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன்" என்கிறார். பவுல் இயேசுவுக்குச்
செவி கொடுத்தார். அதனால் அவர் இயேசுவைப் போன்று திருஅவைக்காகவும்,
அவரது மக்களுக்காகவும் துன்புற்றார்; அதுவும் மகிழ்வோடு
துன்புற்றார். இவ்வாறு அவர் கிறிஸ்துவுகாகவே வாழ்ந்தார் (கலா 2:
20).
ஒவ்வொருவரும் இயேசுவிற்குச் செவிசாய்த்து, அவரைப் போன்று
திருஅவைக்காக அவரது மக்களாக மகிழ்வோடு துன்புறும்போது,
இரண்டாம் வாசகத்தில் பவுல் சொல்வது போன்று, மாட்சி பெறுவோம். எனவே,
நாம் இயேசுவிற்குச் செவிசாய்த்து, அவரது மக்களுக்காகத் துன்புற்று,
இறுதியில் அவர் அளிக்கும் மாட்சியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
"தனக்காக வாழ்வது இறகைவிட இலேசானது; பிறருக்காக வாழ்வது மலையை
விடப் பளுவானது; அந்தப் பளுவைச் சுமக்கத் தயாரானவனே சவாலான
வாழ்க்கையை வாழ்கிறான்" என்பார் மாவோ. நாம் இயேசுவின் குரல்
கேட்டு, அவரைப் போன்று பிறருக்காக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
ஒருநாள் ஒரு துறவியைப் பார்த்து இளைஞன் ஒருவன், நான் என் தந்தையை
அதிகம் அன்பு செய்ய வேண்டுமா? அல்லது என் தாயை அதிகம் அன்பு செய்ய
வேண்டுமா? என்று கேட்டான். அதற்கு அந்தத் துறவி அந்த இளைஞனை
நோக்கி: உன் இரண்டு கண்களில் எந்தக் கண் உனக்குச் சிறந்த கண்? என்று
கேட்டார். இரண்டும்தான் என்றான் அந்த இளைஞன். உன் தாயும், தந்தையும்
உன் இரு கண்கள் போன்றவை என்றார் அந்தத் துறவி.
இன்று இறைவனைப் பார்த்து நற்செயல் சிறந்ததா? அல்லது செபம் சிறந்ததா?
என்று கேட்டால் இன்றைய முதல் வாசகத்தைச் சுட்டிக்காட்டிச் செயல்தான்
சிறந்தது என்பார். நற்செய்தியைச் சுட்டிக்காட்டி செபம்தான் சிறந்தது
என்பார்.
இன்றைய முதல் வாசகம் தொடக்க நூல் (18:1-10) நாம் வாசிக்கக்
கேட்டோமே! நல்ல வெயில் நேரத்தில் ஆபிரகாமின் கூடாரத்தின் பக்கத்தில்
மூன்று மனிதர்கள். அவர்களைச் சந்திக்க ஆபிரகாம் ஓடினார். மூன்று
பேரையும் தாழ்ந்து வணங்கி விருந்துண்ண அழைக்கிறார். நன்றாக உபசரிக்கப்பட்டுத்
திரும்பும் அந்த மனிதர்கள் மூலம் ஆண்டவர் குரல் ஒலிக்கிறது. நான்
இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் வருவேன். அப்பொழுது இதுவரை
பிள்ளை பெற இயலாத உன் மனைவி சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்றார்.
அதன்படி முதிர்ந்த வயதில் கடவுள் வாக்களித்தபடி சாராள் ஒரு மகனைப்
பெற்றெடுத்தாள் (தொநூ.21:2)
நாம் நமது வாழ்வில் பல்வேறு விழாக்களில் பங்கெடுக்கிறோம். திருவிழா,
திருமண விழா, புதுமனைப் புகுவிழா என்றெல்லாம் பல்வேறு விழாக்கள்
வாழ்வில் நம்மை ஒன்று சேர்க்கின்றன. எல்லா விழாக்களிலும் முக்கியத்துவம்
பெறுவது விருந்து. விருந்து இல்லாமல் விழாக்கள் இல்லை. அப்படித்தான்
பல்வேறு கட்டங்களில் விருந்து இடம் பெறுவதாக பைபிளில்
பார்க்கிறோம். ஆபிரகாம் 3 மனிதருக்கு விருந்து அளிக்கிறார். இயேசு
கானாவூர் விருந்தில் பங்கெடுத்தார். சக்கேயு, சிமியோன், மத்தேயு,
மார்த்தா, மேரி இல்லங்களில் இயேசு விருந்துண்கிறார்.
2. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது முதுமொழி. விருந்தோம்பல்
என்பது நம் கலாச்சாரத்தின் சிறந்த பண்பு. நாம் பரிவுடனும், பாசத்துடனும்
முகமலர்ச்சியுடனும் அதோடு தாராள, தியாக உணர்வோடும் விருந்தோம்பல்
செய்யும் போது இயேசு கிறிஸ்து அவர்களில் வருகிறார். எனவேதான் அமெரிக்கா
முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஏறக்குறைய 20 ஆண்டுகளில் ஒருநாளாவது
எங்கள் இல்லத்தில் விருந்தினர் இல்லாமல் இல்லை என்று சொன்னார். பகிர்ந்து
உண்பதுதான் விருந்தோம்பல். அதைத்தான் இயேசு இன்றும் பலிபீடத்தில்
செய்யப் போகின்றார். அன்புடன் உபசரிப்பவரை, மகிழ்வுடன் விருந்து அளிப்பவரை
ஆண்டவர் அருளால், ஆவியால் நிரப்புகிறார் என்பதை இன்றைய முதல் வாசகம்
தெளிவாக எடுத்துரைக்கிறது (தொ.நூ. 18:1-10).
அதேபோல் மார்த்தாள், களைப்போடு தன் வீடு வந்திருக்கும் இயேசுவுக்கு
நல்லதொரு விருந்து படைக்க பரபரப்பாக அடுப்பறையில் வேலை செய்வதை இன்றைய
மூன்றாம் வாசகத்தில் பார்க்கிறோம். இது அவளது விருந்தோம்பல் செயல்பாடு
எனக் கூறலாம்.
ஆனால் மார்த்தாவின் தங்கை மரியா அடுப்பறை சென்று தன் சகோதரிக்கு
உதவி செய்யாது இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக்
கேட்டுக் கொண்டிருக்கிறாள். மார்த்தாள் வந்து, என் சகோதரி என்னைத்
தனியே விட்டு விட்டாளே எனக்கு உதவி செய்ய அனுப்பும் என்று கேட்டபோது
மார்த்தா நீ பல காரியங்கள் பற்றிக் கவலைப்பட்டுக்
கொண்டிருக்கிறாய். ஆனால் தேவை யானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத்
தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுபடாது என்றார்
(லூக்.10:41-42)
இங்கே மார்த்தா, மரியாவைப் பார்க்கிறீர்கள். இருவரும்
செவ்விருந்தோம்பி வரும் விருந்து பார்த்திருப்பவர்கள். மார்த்தா செயலில்
ஈடுபட, மரியா செபத்தில் ஈடுபடுகிறாள். செபத்தில் நான்கு வகை உண்டு.
(1) புகழ்ச்சிச் செபம், (2) நன்றி செபம் 5:17). (3) கேட்டல் (மன்றாட்டு)
செபம் (4) ஆராதித்தல் செபம். மரியாள் ஆராதித்தல் செபத்தில் ஈடுபடுகிறாள்.
அன்பார்ந்தவர்களே! (1) செயலும் செபமும் ஆன்மீக வாழ்வின் இரு இறக்கைகள்
(2) நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது (3) படகோட்டியின் இரு
துடுப்புக்கள் என்றும் கூறலாம்.
உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது (2 தெச. 3:10). நீங்கள்
உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என்று ஆண்டவர் இயேசு பெயரால்
கட்டளை இடுகிறேன் என்கிறார் புனித பவுல் அடிகளார் (2 தெச. 3:12).
செயலற்ற நம்பிக்கை (விசுவாசம்) செத்ததே என்கிறார் புனித யாக்கோபு
(யாக். 2:26).
அதேநேரத்தில் ஆண்டவர் இயேசு இறைவார்த்தையைக் கேட்டு அதைக்
கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் (லூக். 11:28).
இவர்கள் கற்பாறையின் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு
ஒப்பாவார் (மத். 7:24) என்றும் கூறுகிறார். சோதனைக்கு உட்படாதபடி
விழித்திருந்து செபியுங்கள் (மத். 26:41). இடைவிடாது செபியுங்கள்
(1 தெச.5:17)
ஆக, இயேசுவைப் பொறுத்தவரையில் செபத்திற்கே முதலிடம். அவர்
வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்கு கடவுளிடம் வேண்டுதல்
செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார் (லூக். 6:12).
இத்தகையச் செப வாழ்வில் ஈடுபட்ட புனித பவுல் அடிகளார் இன்று
வாசித்த இரண்டாம் வாசகத்தில் கூறப்பட்டதுபோல உங்கள் பொருட்டுத்
துன்புறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் (கொலோ. 1:24). இது
அவரது ஆழ்ந்த செபத்தில் எழுகின்ற அற்புத அருள்வாக்கு.
அன்னை தெரெசாவைப் பார்த்து இத்தனை ஆயிரம் பேரையும் வைத்துக்
கண்காணிக்க உங்களுக்கு எங்கிருந்து ஆற்றல் கிடைத்தது என்று
கேட்டவர்களுக்கு, நடுநாயகனாம் நற்கருணை நாதரோடு கொண்ட உறவு. அதனால்
தினசரி ஒவ்வொரு சகோதரியும் நற்கருணை ஆண்டவரிடம் ஒரு மணி நேரம்
செபத்தில் செலவழிக்கின்றார்கள் என்றார். நம் தேசப்பிதா காந்திமகான்
ஒவ்வொரு வெள்ளியும் மௌன விரதத்தில் கடவுளோடு ஒன்றித்து இருந்தார்
என்பது வரலாறு. நம் இதயத்தில் செபவிளக்கு எரியும்போது நம்மைச்
சுற்றி உள்ளவர்கள் ஆனந்தம் அடைவார்கள்.
செயல் சிறந்ததா?
மன்றாட்டு சிறந்ததா?
துறவி ஒருவரைப் பார்த்து ஓர் இளைஞன், நான் என் தந்தையை
அதிகம் அன்பு செய்யவேண்டுமா? என் தாயை அதிகம் அன்பு
செய்யவேண்டுமா? என்று கேட்டான். அதற்கு அந்தத் துறவி
இளைஞனைப் பார்த்து, உன் இரண்டு கண்களில் எந்தக் கண் சிறந்த
கண்? என்றார். இரண்டும்தான் என்றான் இளைஞன். உன்
தாயும் தந்தையும் உன் இரு கண்கள் போன்றவர்கள் என்றார்
துறவி.
இன்று இறைவனைப் பார்த்து, செயல் சிறந்ததா? மன்றாட்டு
சிறந்ததா? என்று கேட்டால், இறைவன் இன்றைய முதல் வாசகத்தைச்
சுட்டிக்காட்டி செயல்தான் சிறந்தது என்பார்; நற்செய்தியைச்
சுட்டிக்காட்டி மன்றாட்டுதான் சிறந்தது என்பார்.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிப்பதென்ன? ஆபிரகாமின்
கூடாரத்தின் பக்கத்திலே மூன்று மனிதர்கள்! நல்ல
வெயில்! அவர்களைச் சந்திக்க ஆபிரகாம் ஓடினார். மூன்று
மனிதர்களையும் தாழ்ந்து பணிந்து விருந்துண்ண அழைக்கின்றார்.
விருந்து நடக்கின்றது. விருந்துக்குப் பிறகு சற்றும்
எதிர்பாராத ஒன்று நடக்கின்றது! மூவரின் குரல், இல்லை,
இல்லை, ஆண்டவரின் குரல் ஒலித்தது. ஆண்டவர் ஆபிரகாமைப்
பார்த்து. நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும்
உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு
மகன் பிறந்திருப்பான் என்றார்! கடவுள் வாக்களித்தபடி,
குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி ஆபிரகாமுக்கு
அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்
(தொநூ 21:2).
ஆபிரகாம் அந்த மூன்று மனிதருக்கும் அன்பு காட்டாமலிருந்திருந்தால்
அவருக்கு ஆண்டவரிடமிருந்து சிறப்பு ஆசி
கிடைத்திருக்காது; ஈசாக்கு பிறந்திருக்கமாட்டான். உயிர்
இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே
(யாக் 2:26) என்கின்றார் திருத்தூதர் புனித யாக்கோபு.
நற்செய்தியிலே மரியாவையும். மார்த்தாவையும் சந்திக்கின்றோம்.
இருவரும் செல்விருந்தோம்பி வரவிருந்து பார்த்திருப்பவர்கள்!
இயேசு விருந்தினராக வீட்டுக்குள் புகுந்ததும் இருவருக்கும்
எல்லையில்லா பெருமகிழ்ச்சி. மார்த்தா செயலில் ஈடுபட,
மரியா மன்றாட்டில் ஈடுபட்டாள்! மன்றாட்டிலே ஐந்து வகையான
மன்றாட்டுகள் உள்ளன! 1. புகழ்ச்சி மன்றாட்டு, 2. நன்றி
மன்றாட்டு, 3.கேட்டல் மன்றாட்டு, 4. ஆராதித்தல் மன்றாட்டு,
5. பரிந்துரை மன்றாட்டு. மரியா ஆராதித்தல் மன்றாட்டிலே
ஈடுபட்டாள்.
மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக்
கேட்டாள்! இயேசு சொன்னதை இரசித்து இரசித்துக் கேட்டாள்
; கேட்டுக்கேட்டு இரசித்தாள். இயேசு சொன்ன ஒவ்வொரு
வார்த்தையையும் அவள் ஆராதித்தாள்! மார்த்தா பரபரப்பாகி
பணிவிடை புரிந்தாலும், மரியா நல்ல பங்கைத்
தேர்ந்தெடுத்தாகக் கூறுகின்றார் இயேசு. முதல் பரிசு மரியாவிற்குச்
செல்கின்றது.
ஆக, செயல் சிறந்ததா? மன்றாட்டு சிறந்ததா? என்று இறைவனைக்
கேட்டால், இரண்டுமே சிறந்தவைதான் என்பார் இறைவன்.
செயலும், மன்றாட்டும் ஆன்மிக வாழ்வின் இரு இறக்கைகள்.
இரண்டும் சிறந்து விளங்கும் போது நமது வாழ்க்கைப் பறவை
இறைவனை நோக்கி உயர, உயரப் பறக்கும்.
புனித பவுலடிகளார் இரண்டாம் வாசகத்தில்
சுட்டிக்காட்டும் முதிர்ச்சி நிலையை அடைய நமக்கு உறுதுணையாக
இருப்பவை செயலும்,மன்றாட்டும்!
செயலில்லாத மன்றாட்டும், மன்றாட்டில்லாத செயலும் நம்மில்
குடிகொண்டிருப்பின், அவற்றை இன்றைய இறைவாக்கின் அறிவுரைக்கு
ஏற்ப சரிசெய்துகொள்வது நமது கடமையாகும். மேலும் அறிவோம்
:
சூழ்ச்சி முடிவு துணி(வு)எய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது (குறள் : 671).
பொருள் : ஒரு செயலை நிறைவேற்ற முடிவு செய்யும்போது அச்செயலால்
தோன்றும் விளைவுகளையும் தெளிவாக ஆராய வேண்டும்; திட்டமிட்ட
பிறகு காலம் தாழ்த்துவது பெருந்தீமையாகும்!
ஒரு திருமண விருந்தில் ஒருவர் நான்கு பந்தியிலும்
தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பந்தி பரிமாறியவர்
அவரிடம், "என்னப்பா! நான்கு பந்தியிலும் தொடர்ந்து
சாப்பிடுகிறாய்; எனக்கு ஞாபக சக்தி இல்லையா?" என்று
கேட்டார். அதற்கு அவர், "நான் என்ன செய்வது? உங்களுக்கு ஞாபக
சக்தி அதிகம்: எனக்கு ஜீரண சக்தி அதிகம்" என்றார்.
பொதுவாக நமக்கு ஞாபக சக்தியைவிட ஜீரண சக்திதான் அதிகமாக இருக்கின்றது.
மூளைக்கு வேலை கொடுப்பதைவிட வயிற்றுக்கு அதிகமாக வேலை
கொடுக்கின்றோம். நாம் உணவு வகைகளைச் சுவைத்துச்
சாப்பிடுகிறோம். ஆனால் கடவுளுடைய வார்த்தையைச் சுவைப்பதில்
அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வாய்வழியாக உட்கொள்ளும் உணவைவிடச்
செவிவழியாக உட்கொள்ளும் உணவு மேலானது. உண்மையில், செவிக்கு
உணவு இல்லாதபோதுதான் வயிற்றுக்குச் சிறிதளவு உணவு கொடுக்க
வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (குறள் 412)
இன்றைய நற்செய்தியில் வருகின்ற அக்காள் மார்த்தா வயிற்று
உணவைச் சமைப்பதில் சிரமம் எடுத்துக் கொள்கின்றார். ஆனால்
அவரின் தங்கை மரியாவோ செவி உணவுக்கு முன்னுரிமை கொடுத்து,
இயேசுவின் வார்த்தையைக் கேட்டுச் சுவைத்து மகிழ்கின்றார்.
தனக்கு வேலையில் உதவி செய்யும்படி மரியாவைப் பணிக்க
வேண்டுமென்று இயேசுவிடம் மார்த்தா கேட்கிறார். இயேசுவோ மரியாவிடம்,
"மார்த்தா நீ எனக்குக் கொடுக்கும் உணவைச் சுவைப்பதைவிட
நான் உனக்குக் கொடுக்கும் உணவைச் சுவைப்பதுதான் மேலானது.
உன் தங்கை புத்திசாலி, அவளுக்குத் தெரிந்தது உனக்குத் தெரியவில்லையே"
என்று கூறுகிறார்.
இன்றைய உலகில் மனிதர், தொகை தொகையாகச் செலவழித்து வகைவகையாக
உணவை உட்கொள்வதில் அதிகம் நாட்டம் கொண் டுள்ளனர். ஆனால், "ஆண்டவர்
எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" (திப 34:8)
என்பதையும், "உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!
என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை" (திபா 119:103) என்பதையும்
அடியோடு மறந்து விட்டனர். "மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல.
மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (இச
&:3) என்பதைக் கருத்திற் கொண்டு, மரியாவைப் பின்பற்றி,
கடவுளின் வார்த்தையைச் சுவைத்து உயிர் வாழ்வோம்.
இயேசுவின் காலத்தில் பெண்கள் ஒரு குருவின் சீடராக
முடியாது. எந்தவொரு 'ரபியும்' (போதகர்) ஒரு பெண்ணுக்கு
மறைநூல் சுற்றுக் கொடுக்கமாட்டார். ஏனெனில், பெண்கள்
மறைநூலைப் பயில அருகதையற்றவர்கள். ஆனால் இயேசு இம்மரபை
முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டார். மரியா இயேசுவின்
காலடியில் அமர்த்து அவர் சொல்வதைக் கேட்டுக்
கொண்டிருந்தார். இங்கு இயேசு குருவாகவும் மரியா
சீடத்தியாகவும் திகழ்கின்றனர். இயேசுவுக்குப் பெண்
சீடர்கள் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார் நற்செய்தியாளர்
லூக்கா (லூக் 8:1-3).
பெண்கள் தங்களுக்குத் திருச்சபை திருப்பட்டங்களை வழங்க
மறுக்கின்றது என்று ஆதங்கப்படத் தேவையில்லை.
திருப்பட்டங்கள் பெறுவது முக்கியமில்லை; இயேசுவின்
சீடராவதே முக்கியம். பெண்கள் இயேசுவின் சீடர்களாக
முடியும். திருப்பட்டங்கள் பெறாமலே பெண்கள் திருச்சபையில்
ஏராளமான பணிகளைத் தாராளமாக ஆற்ற முடியும்; ஆற்றவும்
வேண்டும்.
ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், "காக்கா சுத்தினா
விருந்தாளிகள் வருவார்களா?" என்று கேட்டாள். அதற்கு அப்பா
அவனிடம், "ஆமா, காக்கா கத்தினால் விருந்தாளிகள்
வருவார்கள்; உன் அம்மா கத்தினால் விருந்தாளிகள்
போய்விடுவார்கள்" என்றார். விருந்தினரை உபசரிப்பது
பெண்களின் தனிப்பண்பு. மார்த்தாவிடம் இருந்த விருந்தோம்பல்
என்ற பண்பை நாமும் பின்பற்ற வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் மனிதர் உருவில் வந்த ஆண்டவருக்கு
ஆபிரகாமும் சாராவும் விருந்தளிக்கின்றனர். அதற்குக்
கைமாறாக, மலடியாக இருந்த சாராவுக்குக் குழந்தைப்பேறு
கிடைக்கிறது (தொ நூ 18:1-10). இல்லறத்தாரின் தலையாய கடமை
விருந்தோம்பல் ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.
இருந்துஓம்பி இல்வாழ்வது எவ்வாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு(குறள் 81)
"வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து
கொள்ளுங்கள் விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்" (உரோ
12:13) என்று அறிவுறுத்துகிறார் திருத்தூதர் பவுல்.
ஒரு கணவர் தன் மனைவியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:
"என் மனைவியும் பத்தினி, அவர் வைக்கிற குழம்பும் பத்தி
மனைவி பத்தினி, ஏனென்றால் என்னைத் தவிர வேறு எவரும் அவளைத்
தொட முடியாது. அவள் வைக்கும் குழம்பும் பத்தினி, ஏனெனில்
என்னைத் தவிர வேறு எவரும் அதைச் சாப்பிட முடியாது."
மனைவியர் நாக்குக்கு ருசியாகச் சமைத்துப் போடவேண்டும்
என்று கணவர்களும் குழந்தைகளும் எதிர்பார்க்கின்றனர்.
பெண்கள் சமையல் கலையைக் கற்றுக்கொண்டால், குடும்ப வாழ்வு
சுவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
முடிவாக, மரியா செபவாழ்வுக்கும், மார்த்தா செயல்
வாழ்வுக்கும் சிறந்த எடுதுக்காட்டாகத் திகழ்கின்றனர்.
வாழ்விலே செபம், செயல் ஆகிய இரண்டுமே முக்கியமானது.
செபமில்லாத செயல் வேரில்லாத மரம்: செயவில்லாத செபம்
கனிதராத மரம். இயேசுவின் வாழ்வில் இரண்டு மையப்புள்ளிகள்:
ஒன்று மலை, மற்றொன்று மக்கள். மலையில் இரவெல்லாம்
செபத்தில் மூழ்கித் திளைத்தார்; பகலெல்லாம் மக்களுக்கு
நன்மை செய்தார். இயேசுவைப் பின்பற்றிச் செபத்தையும்
செயலையும் நமது வாழ்வின் இரு கண்களாகக் கொள்வோம்: நம்
வாழ்வு சுவைபெறும்.
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் (திப
34:8).
"இவ்வில்லத்தின் கண்காணாத தலைவர் கிறிஸ்துவே.
அவர் மனம் அறியாத உணர்வுகளோ
அவர் செவி கேளாத உரையாடல்களோ
அவர் கண் காணாத நிகழ்வுகளோ, செயல்களோ
இங்கு - இந்த இல்லத்தில் இடம் பெறுவதில்லை."
ஓர் இல்லத்து வரவேற்பறையில் பொறித்திருந்த வார்த்தைகள். அப்படி
ஒரு குடும்பத்துக்குள் புகுந்த இயேசு, மரியா மார்த்தா என்ற
பெண்களின் உள்ளங்களை எப்படி ஊடுருவுகிறார்! பணி வாழ்வா செப
வாழ்வா என்ற பட்டிமன்றம் அல்ல இந்த நிகழ்ச்சி.
"போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய
வேண்டும்?" (லூக். 10:25) என்ற திருச்சட்ட அறிஞரின்
கேள்விக்கு இயேசு தந்த பதில்: 1. நல்ல சமாரியராக நட. (இது
சென்ற வார வழிபாடு). 2. அப்படிச் செயல்பட உன் வாழ்வை இயேசுவில்
வேரூன்ற விடு. (இது இந்த வார வழிபாடு). இறையன்பு வேரும்
விழுதும் போல. பிறரன்பு காயும் கனியும்போல.
துறவற சகோதரி ஒருவரின் அடக்கச் சடங்கில் இரங்கல் உரை ஆற்றியவர்
சொன்னார்: "இவர் மார்த்தாவைப் போல் உழைத்தார். மரியாவைப்
போல் செபித்தார். அந்த சகோதரி செய்தது எளிய சமையல்
வேலைதான். ஆனால் அதனைத் தன் செபத்தால் அர்ச்சித்திருக்கிறார்.
செபத்தோடு இணையாத பணி நீரில்லா மேகம். கனி தரா மரம். செயல்
இல்லாத செபம் வேரில்லா மரம். "உயிர் இல்லாத உடல்போல செயல்கள்
இல்லாத நம்பிக்கையும் செத்ததே" (யாக். 2:26).
இயேசு கூட இரவெல்லாம் செபித்தார். பகலெல்லாம் போதித்தார்
என்பதுதான் லூக்கா நற்செய்தியில் இழையோடும் உண்மை. விவிலிய
நிகழ்ச்சி எதனுக்கும் அதை எழுதியவரின் பாணி, அந்த நிகழ்ச்சியின்
பின்னணி இவைகள் மெருகூட்டும் புதுப்பொருளூட்டும். நற்செய்தியாளர்
லூக்காவின் பாணி, உணர்வுகளால் வேறுபட்ட இரு உள்ளங்களை நம்முன்
நிறுத்தி நம்மை சிந்திக்க வைப்பது.
செபமா? ... பரிசேயன் X ஆயக்காரன்
நீதியா? ... ஏழை லாசர் X
பணக்காரன்
பாவமா?... ஊதாரி இளைய மகன் X மூத்த மகன்
சிலுவையா? ... நல்ல கள்ளன் X கெட்ட கள்ளன் அது போல
மார்த்தா X மரியா.
ஆபிரகாம் வந்தாரை வரவேற்று விருந்தோம்பல் செய்வதிலே இறைவனைக்
காண முற்பட்டார். ஆனால் இறைவனோ ஆபிரகாமோடு உரையாடி
வாக்குறுதி அளிப்பதிலே தன்னை வெளிப்படுத்தினார்.
(தொ.நூ.18:1-10). ஆபிரகாமின் விருந்தோம்பல் இறைவனுக்கு உகந்ததாக
இருந்தது, குழந்தைவரம் கொடுத்தது. மார்த்தாவுடையதோ அந்த
அளவுக்கு இல்லையே! அதற்கான காரணம் என்ன?
"தேவையானது ஒன்றே" (லூக். 10:42) என்ற இயேசுவின் அந்த இரண்டு
வார்த்தைகள்தாம். தேவையானது ... யாருக்கு? மரியாவுக்கா, இயேசுவுக்கா?
இயேசுவுக்கும் தேவையானது ஒன்றே!
இயேசு மேற்கொண்டிருப்பது எருசலேம் நோக்கிய பயணம். அங்கே
அவருக்காகக் காத்திருப்பது சிலுவைச் சாவு என்பதுவும்
தெரியும். அவர் முழுமையாகக் கடவுள் மட்டுமல்ல முழுமையாக மனிதன்
கூட. எனவே கொடிய சாவு பற்றிய அச்சத்துக்கும் நடுக்கத்துக்கும்
ஆளானார்-வியர்வையெல்லாம் இரத்தத்துளியாக வெளியேறும் அளவுக்கு
- "என் தந்தையே, முடிந்தால் இந்தத் துன்பக்கிண்ணம் என்னை
விட்டு அகலட்டும்" (மத். 26:39) என்று சிலுவையைத் தவிர்க்க
விரும்பும் அளவுக்கு.
யூதர்களின் வஞ்சகச் சூழ்ச்சிக்கும் வன்கொலை வெறிக்கும் தப்பித்
தலை மறைவாக இருக்கும் நிலை வேறு, ஊருக்கு உழைத்தும் உண்மையை
உரைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ள, தனிப்படுத்தப்பட்டுள்ள
சோக நிலையில் அவருக்குத் தேவை:
- உணவுப் பகிர்வு அல்ல. அதைத்தான் மார்த்தா செய்கிறாள்.
உணர்வுப் பகிர்வு. அதை மரியா செய்கிறாள். "மரியா ஆண்டவருடைய
காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்
கொண்டிருந்தாள்" (லூக். 10:39). இயேசுவுக்கு அதுவே இப்போதையத்
தேவை.
"கடந்த 5 ஆண்டுகளாக என் கணவன் என்னோடு பேசுவதில்லை" என்று
குற்றம் சுமத்தி வழக்குத் தொடர்ந்தாள் மனைவி மணமுறிவு
கோரி. ஏன் பேசுவதில்லை என்று நீதியரசர் கேட்கக் கணவன்
சொன்னான்: "அவள் என்னைப் பேச விட்டால்தானே! எனக்கு
வாய்ப்பே கொடுக்காமல் எப்போதும் அவளே தொணதொணன்னு
பேசிக்கொண்டே இருக்கிறாள்". செபத்தில் நாம் கடவுளைப் பேச
விடுகிறோமா?
நாம் கடவுளுக்காக என்ன செய்கிறோம் என்பது அல்ல. கடவுள் என்ன
விரும்புகிறார் என்பதை அறிந்து செயல்படுவதே தேவையானது.
திருவிழாப் பரபரப்பு எல்லாம் மார்த்தா செயலை ஒத்ததே!
சிக்காகோ நகரில் புகழ்பெற்ற பள்ளிக்கூடத்தில் பெற்றோர் மாணவர்
கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் ஒரு தந்தை பள்ளி முதல்வரின்
கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார். "என் பையன் இப்போது என்னோடு
வாழவில்லை. இருந்தாலும் அவனை நான் அன்பு செய்கிறேன். அவன்
எப்படி இருக்கிறான்?" என்று கேட்டார். பின் தன் கதையைச்
சொன்னார். "நான் ஒரு காண்டிராக்டர். என் குடும்பத்திற்காக
உழைத்தேன். மனைவி பிள்ளையின் வாழ்க்கை வசதிக்காகவே பணம் சம்பாதித்தேன்.
அதனால் நான் வீட்டில் தங்கியதே சில நேரங்கள்தான். என் அன்பும்
பாசமும் கிடைக்காத அவர்கள் என்னை விட்டுப் பிரிந்து சென்று
விட்டா இப்பொழுதுதான் என் தவறை உணருகிறேன்"
பணத்தால் வாங்கக் கூடிய பொருள்களை மட்டும் நினைத்துப்
பார்க்கிறோம். ஆனால் பணத்தால் வாங்க முடியாத அன்பு, பாசம்,
உறவை மறந்து விடுகிறோம். எந்தப் பணியையும் நல்ல எண்ணத்தோடு
தொடங்கினாலும் காலம் செல்லச் செல்ல நம் நோக்கங்கள் திசை
மாறி விடுகின்றன.
வேலை வேலை என்று வாழ்வதுதான் செபத்தைவிடப் பணியே சிறந்தது
என்னும் தப்பறை. இதை Heresy of action என்பார்கள்.
ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு சிற்றூர்.
ஒருவர் சென்றார். பள்ளிக்கூடம், மருத்துவமனை, தொழிற்சாலை
குரு என மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல ஆண்டுகள் தன்னையே
கரைத்தார். விடுமுறைக்காகத் தன் சொந்த நாட்டுக்குச்
சென்றுவிட்டு ஓர் ஆண்டு கழித்துத் திரும்பியபோது அவருக்கு
ஒரே திகைப்பு! அந்த ஊர் மக்கள் அனைவரும் ஏதோவொரு பெந்தகோஸ்தே
சபையில் சேர்ந்திருந்தனர். குருவானவர் கலங்கி நின்றதைக் கண்ட
ஒரு நண்பர் ''குருவே, பல ஆண்டுகளாக எங்களுக்கு கல்வி, மருத்துவ
வசதி, வேலை வாய்ப்பு என சேவைகளைச் செய்தீர். ஆனால் நாங்கள்
இப்பொழுதுதான் கிறிஸ்துவை அறிந்து கொண்டோம்" என்றாராம்.
நமது கல்விப் பணிகள், சமூக சேவைகள் ஆகியன வெறும் சமூக
மேம்பாட்டுக்கான மேடைகள் மட்டுமல்ல. அவை இயேசுவை, இறையனுபவத்தைப்
பிறருக்கு வெளிப்படையாகத் தரவேண்டிய பணித்தளங்கள். அதே
வேளையில் இறையனுபவம் மட்டும் போதும் என்று பிறர் நலப்பணியில்
ஈடுபடாமல் இருப்பது குறைபாடுள்ள வளர்க்கும். பாடம் இதுவே.
ஆன்மீகத்தை வெளிப்படுத்தும். அன்பு கலந்த விருந்தோம்பல்
உறவை மரியா, மார்த்தா வழியாக இயேசு நமக்குக் கற்றுத்தரும்
பணிகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி பணிகளின் ஆண்டவரைப்
பின்னுக்குத் தள்ளுவது அணுகுமுறை, "செபித்திடு, உழைத்திடு"
(Ora et labora) இதுதான் புனித ஆசீர்வாதப்பர் தான் நிறுவிய
துறவு சபைக்கு உருவாக்கிய ஆண்டவரின் தவறான ஆன்மீகம்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
இரு நாட்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து
இங்கு உரோம் வந்திருந்த ஒரு குருவைச் சந்தித்தேன். நான் தமிழ்
நாட்டிலிருந்து வந்தவன் என்பதை அவரிடம் சொன்னபோது, அவர் முகத்தில்
பளீரென ஒரு புன்னகை. அவர் சென்ற ஆண்டு இந்தியாவுக்கு, தமிழ்
நாட்டுக்குச் சென்று வந்ததாகவும், அங்கு சென்ற இடத்திலெல்லாம்
மக்களும், இயேசு சபையாரும் அவரை வரவேற்ற விதம் அவரால் மறக்க
முடியாத அனுபவம் என்றும் சொன்னார்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் - என்று நம் விருந்தோம்பல் பண்பைப்
பற்றி அடிக்கடி நாம் தலையை நிமிர்த்தி, நெஞ்சுயர்த்தி
பெருமைப்படுகிறோம். பொதுவாகவே, இந்தியாவுக்கு, சிறப்பாக,
தமிழகத்திற்கு வருகை தரும் பலருக்கும் மனதில் ஆழமாய்ப் பதியும்
ஓர் அனுபவம், நாம் அவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கு.
அதுவும் ஐரோப்பியர், அமெரிக்கர் இவர்களுக்கு இது
முற்றிலும் புதிதான ஏன்?... புதிரான அனுபவமாக இருக்கும்.
அக்கரைக்கும், இக்கரைக்கும் அப்படி ஒரு வித்தியாசம்.
இந்த ஞாயிறன்று, தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ள சம்பவமும்,
நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள சம்பவமும் விருந்தோம்பலைப்
பற்றி சிந்திக்க நமக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
(தொடக்க நூல் 18: 1-10); (லூக்கா 10: 38-42) தொடக்க நூலில்
சொல்லப்பட்டுள்ள சம்பவத்தைப் பற்றி மட்டும் இன்று
சிந்திப்போம்.
கோடை வெயில் சுட்டெரித்துச் சென்றிருக்கலாம். அல்லது இன்னும்
சுட்டெரித்துக் கொண்டிருக்கலாம். இந்த நேரத்தில் இன்றைய முதல்
வாசகம் வந்திருப்பது பொருத்தமாய்த் தெரிகிறது. "பகலில்
வெப்பம் மிகுந்த நேரத்தில்"... என்று இந்த வாசகத்தின் முதல்
வரிகள் சொல்கின்றன. வெப்பம் மிகுதியாகும் போது, மனமும்,
உடலும் சோர்ந்துவிடும். ஒருவேளை, ஆபிரகாம், அப்படி ஒரு
சோர்வுடன் தன் கூடார வாயிலில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில்
மூன்று பேர், அவர் முன் நின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாத
மூவர். வழி தவறி வந்திருக்கலாம், வழி கேட்க வந்திருக்கலாம்.
இப்படி நேரம் காலம் தெரியாமல் வருபவர்களிடம் முகம்
கொடுத்துப் பேசுவதே அபூர்வம். "யார் நீங்க? உங்களுக்கு என்ன
வேணும்?" என்று சீக்கிரம் அவர்களை அனுப்பி வைப்பதுதான் வழக்கம்.
அதற்குப் பதில், ஆபிரகாம் செய்தது வியப்பான செயல். அங்கு
நடந்ததைத் தொடக்க நூலிலிருந்து கேட்போம்:
தொடக்க நூல் 18 : 1-5
பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார
வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப்
பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார்.
அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார
வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து
வணங்கி, அவர்களை நோக்கி, "என் தலைவரே... நீர் உம் அடியானை
விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர்
கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில்
இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள்
புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள்..." என்றார்.
ஆபிரகாம் காலத்துக் கதை இது. நம் காலத்து கதை வேறு. தமிழ்த்
திரையுலகில் நகைச்சுவையில் மிகப் புகழ்பெற்ற ஒருவர் நடித்த
ஒரு காட்சி இது. அவர் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வருவார்.
அவரது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி, யாரோ ஒருவர் அவரது
பால்ய நண்பர் என்று தன்னையே அறிமுகம் செய்துகொண்டு, அவரை
அழைத்துச் சென்று, ஒரு அறையில் தங்க வைத்து, அவர் வேண்டாம்
வேண்டாம் என்று மறுத்தாலும், வலுக்கட்டாயமாக, மது, உணவு என்று
கொடுத்து அவரைத் தூங்க வைப்பார். மறுநாள் காலையில் அவர் கண்
விழிக்கும் போது, நடுத்தெருவில் படுத்திருப்பார். அவரது உடைமைகள்,
அவர் படுத்திருந்த கட்டில்... ஏன் அந்த அறை கூட காணாமல்
போயிருக்கும். இப்படி அந்தக் காட்சி அமைந்திருந்தது. முன்
பின் தெரியாதவர்களை நம்பினால் இப்படித்தான் நடுத்தெருவில்
நிற்க வேண்டி வரும் என்பது இன்று சொல்லப்படும் கதை.
ஆபிரகாம் வாழ்ந்த காலத்தையும், நாம் வாழும் இந்தக் காலத்தையும்
ஒப்பிடுவது தவறு என்பது எனக்குத் தெரிகிறது. ஆனாலும், அன்று,
அங்கு நடந்தது இன்றைய நம் சூழலுக்குத் தேவைப்படும் ஒரு சில
பாடங்களையாவது சொல்லித் தரும் என்பதை நாம் மறக்கக் கூடாது.
மறுக்கக் கூடாது. முதலில்... முன்பின் தெரியாதவர்களை
வீட்டுக்குள் வரவழைத்து, விருந்து கொடுப்பதைப் பற்றிச்
சிந்திக்கலாம்.
முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதே பெரும்
ஆபத்து. அதற்கு மேல் அவர்களுக்கு விருந்தா? பெரு நகரங்களில்
வாழ்பவர்களுக்கு வீட்டின் அழைப்பு மணி அடித்தாலே, முதலில்
மனதில் ஐயமும், பயமும் கலந்த எண்ணங்களே அதிகம் எழும்.
கதவைத் திறப்பதற்கு முன், ஒரு துளைவழியே வெளியில்
இருப்பவரைப் பார்ப்போம். கொஞ்சம் அறிமுகமானவர் போல்,
அல்லது, பார்க்கக் கொஞ்சம் அப்பாவி போல் தெரிந்தால்,
சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவை, அந்த சங்கிலி
அனுமதிக்கும் அளவுக்குத் திறப்போம். வெளியில் இருப்பவர்
வீட்டுக்குள் வரலாமா வேண்டாமா என்ற தீர்மானத்தை அந்தச்
சிறு இடைவெளியில் எடுப்போம். இப்படி ஒருவரை வீட்டுக்குள்
அனுமதிப்பதற்கே இத்தனை தயக்கம் இருக்கும் நம்
சூழ்நிலையில், விருந்தோம்பல் என்பது கற்பனையாய், கனவாய்
மாறி வருவது உண்மையிலேயே பெரும் இழப்புதான்.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு விருந்து படைத்த
ஆபிரகாம் கதைக்கு மீண்டும் வருவோம். வழியோடு சென்றவர்களை,
வலியச் சென்று அழைத்து வந்து விருந்து படைக்கிறார்
ஆபிரகாம். அதுவும், வீட்டில் எதுவும் தயாராக இல்லாமல்
இருக்கும் போது இப்படிப்பட்ட ஒரு விருந்து. விருந்தினர்கள்
வீட்டுக்கு வந்த பிறகுதான் ஏற்பாடுகளே நடக்கின்றன. ஓர்
எளிய, நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஒரு காட்சி நம் கண்
முன் விரிகிறது.
தனக்கோ, தன் குடும்பத்திற்கோ நல்ல உணவு இல்லாதபோதும்,
விருந்தினர் என்று வரும்போது, பிரமாதமாக விருந்து
கொடுப்பவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். தாங்கள் வசதி
படைத்தவர்கள் என்பதைப் பறைசாற்றச் செய்யப்படும் முயற்சி
அல்ல இது. தங்கள் அன்பை, பாசத்தை அடிக்கோடிட்டுக்
காட்டுவதே இந்த முயற்சி. நம் வீடுகளில் அடிக்கடி இப்படி
நடந்திருக்க வாய்ப்புண்டு. எந்த வித முன்னறிவிப்பும்
இல்லாமல் வந்து விடும் விருந்தினருக்குத் தன் வீட்டில்
ஒன்றுமில்லாத நிலையிலும், தன் மகனை அடுத்த வீட்டுக்கு
அனுப்பி, அல்லது வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் கடனைச்
சொல்லி ஒரு பழ ரசமோ, காப்பியோ வாங்கி வந்து கொடுக்கும்
எத்தனை பேரை நாம் பார்த்திருக்கிறோம். அல்லது, எத்தனை முறை
இப்படி நாம் நடந்து கொண்டிருக்கிறோம்?
நான் குருவான பிறகு, எத்தனையோ இல்லங்களுக்கு
அழைக்கப்பட்டிருக்கிறேன். நடுத்தர வசதி படைத்தவர்கள்,
அல்லது ஏழ்மையானவர்கள் வீடுகளில் சாப்பிடும் போது, அந்த
உணவுக்குப் பின்னணியில் இருக்கும் அவர்களது தியாகத்தை
நினைத்து கண் கலங்கியது உண்டு. விருந்தோம்பலுக்கு இலக்கணம்
இந்தக் குடும்பங்கள். என்னிடம் இருந்து ஒன்றும்
எதிர்பார்க்காமல், நான் ஒரு குரு என்ற அந்த தகுதிக்காக
வழங்கப்படும் மரியாதை அது.
இப்படி அன்பின் அடிப்படையில், அன்பைப் பறைசாற்றும்
விருந்துகளைப் பற்றிப் பேசும் போது, தன்னிடம் உள்ள
செல்வத்தைப் பறை சாற்ற, அதை ஏறக்குறைய ஓர் உலக அதிசயமாக
மாற்றும் முயற்சியில் ஈடுபடும் பல செல்வந்தர்களின்
விருந்துகளையும் இங்கு சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.
உலகத்திலேயே இதுவரை நடந்த திருமணங்களில் மிக அதிகச்
செலவுடன் நடத்தப்பட்ட திருமணங்கள் என்ற பட்டியலை
இணையதளத்தில் தேடித் பாருங்கள். வேதனையான ஒரு ஆச்சரியம்
அங்கு உங்களுக்குக் காத்திருக்கும்.
2004ம் ஆண்டு உலகின் மிகப் பெரும்... மிக, மிக, மிகப்
பெரும் செல்வந்தர்களில் ஒருவர் தன் மகளுக்கு நடத்திய
திருமண விருந்து உலகச் சாதனை என்று பேசக்கூடிய அளவுக்கு
செலவு செய்யப்பட்ட ஒரு விருந்து. அந்த விருந்துக்கு ஆன
செலவு 60 முதல் 70 மில்லியன் டாலர், அதாவது ஏறத்தாழ 270
முதல் 300 கோடி ரூபாய். 1000 விருந்தினருக்கு ஆன அந்தச்
செலவில் 30 கோடி ஏழை இந்தியர்கள் ஒரு நாள் முழவதும் வயிறார
சாப்பிட்டிருக்கலாம். அந்த விருந்தில் வீணாக்கப்பட்ட உணவை
மட்டும் கொண்டு கட்டாயம் 10 கோடி ஏழைகள் வயிற்றைக்
கழுவியிருக்கலாம். ஏன் இந்த விருந்தையும் இந்தியாவையும்
முடிச்சு போடுகிறேன் என்று குழப்பமா? இந்த விருந்தைக்
கொடுத்த செல்வந்தர் ஓர் இந்தியர். இதற்கு மேல் சொல்ல
வேண்டுமா?
பொறாமையில் பொருமுகிறேன். உண்மைதான். ஆனால், இப்படியும்
விருந்துகள் இந்தியர்களால் நடத்தப்படுவது வேதனை
என்பதையாவதுச் சொல்லித்தானே ஆகவேண்டும்.
விருந்தோம்பல் என்ற வார்த்தையைக் கேட்டதும், கட்டாயம்
திருவள்ளுவரும், திருக்குறளும் நினைவுக்கு வந்திருக்கும்.
பத்துக் குறள்களில் திருவள்ளுவர் விருந்தோம்பலின் மிக
உயர்ந்த பண்புகளைத் தெளிவாகக் கூறுகிறார். ஆபிரகாம் கதை
எப்படி நடைமுறைக்கு ஒவ்வாத, கற்பனையாய், கனவாய்த்
தெரிகிறதோ, அதேபோல், திருவள்ளுவரின் கூற்றுகளும் எட்ட
முடியாத உயரத்தில் உள்ள உபதேசங்களாய்த் தெரியலாம். எட்ட
முடியாத தூரத்தில் இருப்பதால் இவைகளை புளிப்பு என்று
ஒதுக்காமல், வாழ்வில் ஓரளவாகிலும் கடைபிடித்தால்,... இந்த
உலகம் விண்ணகமாவது உறுதி.
வள்ளுவர் கூறிய அந்த மேலான எண்ணங்களில் மூன்றை மட்டும் நம்
சிந்தனைகளின் நிறைவாய், இன்று, இங்கு நினைவுக்குக் கொண்டு
வருவோம்.
உலகத்தில் வாழ்வதன் முக்கிய நோக்கமே, விருந்தோம்பல்
என்கிறார் வள்ளுவர்:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
சாவைத் தடுக்கும் மருந்தான அமிர்தமே நமக்குக்
கிடைத்தாலும், அவைகளையும் விருந்தினரோடு பகிர்வதே அழகு
என்கிறார் வள்ளுவர்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும்
வேண்டற்பாற் றன்று.
நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த
விருந்தினரை எதிர்கொண்டு வாழ்பவர் விண்ணவர் மத்தியில்
விருந்தினர் ஆவார்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு.
வானவரின் மத்தியில் விருந்தினர் ஆவது போல், வானவர் என்று
தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்த ஆபிரகாமைக்
குறித்து விவிலியத்தின் மற்றொரு பகுதியில் காணப்படும்
வரிகள் இவை.
எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13: 1-2
சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று
விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர்
தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.
வந்தாரை வாழ வைக்கும் நம் தமிழ் பண்பை, நம் இந்தியப்
பண்பின் ஆணி வேர்களில் ஒன்றான விருந்தோம்பலை மீண்டும்
உயிர் பெறச் செய்வோம். அறியாமலேயே நாம் விருந்து படைப்போர்
மத்தியில் வான தூதர்களும் இருக்கலாம். வான தூதர்கள் நம்
இல்லங்களுக்கு வந்து நம்மை வாழ்த்திடும் வாய்ப்பு
பெறுவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ