ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)

இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா
 திருப்பலி முன்னுரை -
1ம் ஆண்டு


புதிய ஆசி பெற வந்திருக்கும் அன்புக்கு உரியவர்களே!

புதிய ஒளி ஏற்றி, நன்மை பொழிந்து, நிறைவான வாழ்க்கை வாழ புதிய ஆசீர்வாதம், புதிய தீர்மானம், புதிய செயல், புதிய முயற்சி, புதிய உற்சாகம், புதிய எண்ணம், புதிய நேசம், புதிய உறவு, புதிய சிந்தனை, புதிய சாதனை, புதிய வெற்றி, புதிய புகழ், புதிய மகிழ்ச்சி என அடுக்கடுக்கான புதிய நலன்களால் ஆண்டு முழுவதையும் மாற்றி அற்புதங்களாலும், அதிசயங்களாலும் நிரப்பிட இந்தப் புத்தாண்டு நம்மை இந்த திருப்பலிக்கு அழைக்கின்றது.

மனசுக்குள் உள்ள தேவையற்ற பழைய கசப்பான நினைவுகளுக்கு, தேவையற்ற வருத்தமான, அச்சமூட்டும் பிரச்சனையான சிந்தனைகளுக்கு எண்ணங்களுக்கு உணர்வுகளுக்கு விடைகொடுப்போம்.

புதிய தன்னம்பிக்கை நிறைந்த எண்ணங்களுக்கு இடம் கொடுப்போம். தன்னம்பிக்கை தான் வெற்றியின் அடிப்படை ரகசியம். எதுவாக நினைக்கிறோமோ அந்த எண்ணத்தால் நம் மனசு முழுவதையும் நிரப்பிக்கொள்வோம்.

வாழ்க்கை என்பது நேசிப்பதற்கும், வாசிப்பதற்கும், யோசிப்பதற்க்கும், பகிர்வதற்க்கும் நமக்கு கிடைத்த வாய்ப்பு, அதை பயன்படுத்துவோம்.

வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம், அதை நழுவவிடாதிருப்போம். வாழ்க்கை என்பது ஒரு இலட்சியம், அதை அடைவதில் முழு மூச்சுடன் செயல்படுவோம். வாழ்க்கை என்பது ஒரு கடமை, அந்தக் கடமையை மிகச் சரியாகச் செய்வோம். வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சி, அதை அனுபவிப்போம். இந்த புதுவருட நாட்களில் எல்லா நாளும் அன்னை நம்மை புது வழியில் வழி நடத்துவார்.

இறைவனின் தாய் நமது தாய். நமது வாழ்வை வளப்படுத்தும் காரணி அன்னை மரியாள்.
எனவே இந்த புத்தாண்டில் நமது ஆசைகள், கனவுகள், தீர்மனங்கள், தேவைகள் எவை என பட்டியலிட்டு, அவைகளை அடைவதற்குரிய ஆற்றல் தரும் அன்னை மரியாளிடம் ஒப்புக் கொடுப்போம். நம் தேவையை நிறைவேற்றும் அருளை அன்னை மரியாளும,; அவர் மகன் இயேசுவும், இந்த திருப்பலி வழியாக நம்மில் பொழிகின்றார்கள். புத்துணர்ச்சியுடன் பங்கேற்று பலன் பல பெறுவோம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. புதிய ஆசீர் தரும் தேவனே! திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுமக்கள் அனைவரும், புத்தாண்டிலே உமது ஆசீரை இன்னும் அதிகமாய் பெற்று, தங்கள் பணியை வளமாக செய்ய அருள் பொழிய வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.

2. படைப்புகளை புதுப்பிக்கும் தேவனே!
நாட்டு மக்களுக்கு நலன் தரும் புத்தாண்டு பிறக்கின்ற இந்த வேளையிலே, நாட்டு தலைவர்கள் அனைவரும் மக்களின் நலனுக்காக புத்துணர்ச்சியூட்டும் புதிய முயற்சிகளை எடுத்து, நேர்மையோடு உழைக்க அருள் பொழிய வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.

3. புத்தம் புதிய சிந்தனை தரும் தேவனே!
புத்தம் புதிய வழிகளில் சலிப்பின்றி உம்மோடு உறவாட, எமக்காய் வழிகாட்டும் எமது பங்கு குருவின் புதிய சிந்தனையால், எங்கள் இறைமக்கள் நிறைவாய் வாழ அருள் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. புதிய குடும்பங்களை உருவாக்கும் தேவனே!
எங்கள் குடும்பங்களில் நிலவுகின்ற குழப்பங்கள், சந்தேகங்கள், பிரச்சனைகள் தீரவும், புதிய உற்சாகம், புதிய நன்மைகள் பொழிந்து உமதன்பின் பராமரிப்பில் எங்கள் குடும்பங்களை உருவாக்கவும் இறையருள் பொழிய வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.

5. புதிய கலைகளால் உலகிற்கு மெருகூட்டும் தேவனே!
இயற்கையான கலைகளை உருவாக்கி அவைகள் வழியாக பிளவுகள், சண்டைகள், நோய், பசி, கொடுமை, அவமானம் இவைகள் அகன்று, மக்கள் மத்தியில் மனித மாண்பும், அன்பும் வளர்ந்து புதிய உலகு உருவாக அருள் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. மனம் விரும்புவதைத் தரும் தேவனே!
பழைய காயங்கள் மறந்து புதிய வாழ்க்கை வாழ விரும்பி மனதை தயாரித்துக் கொண்டிருக்கும், எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். நல்ல தீர்மானங்கள் எடுத்து, அவைகள் வழியாக உம்மை அனுபவித்து மகிழும் அருள் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

7. புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் தேவனே!
இளையோருக்கு வேலை வாய்ப்பும், நோயுற்றோருக்கு நற்சுகமும், முகவரி இழந்து அன்பை தேடிக் கொண்டிருப்பவர்க்கு அன்பும், புதிய கண்டுபிடிப்பாளர்களின் பயன்தரும் கண்டுபிடிப்புகளால், மனிதம் கூடுதலாக நேசிக்கப்படவும் அருள் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

திருப்பலி முன்னுரை  GnaOli
அருட்பணி. ராபர்ட் உதவிப் பங்குத்தந்தை
புனித.விண்ணரசி அன்ன மேற்கு மரியநாதபுரம்,திண்டுக்கல்
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா புத்தாண்டுப் பெருவிழா ஜனவரி 1-2023

முதல் வாசகம் - எண்ணிக்கை 6:22-27
+இரண்டாம் வாசகம் கலாத்தியர் 4:4-7
நற்செய்தி வாசகம் - லூக்கா 2:16-21

தாயாவோம்
ஒரு முறை பேருந்திலே நான் கண்ட காட்சி. பேருந்து நகர்ந்து செல்ல பயணிகளின் கூட்டமும் அதிகமாகிறது. அந்த பேருந்தில் தாய் ஒருவர் தன்னுடைய கைக்குழந்தையோடு ஏறுகிறாள். இதைப்பார்த்த சக பயணி அந்த தாயின் சிரமத்தைப் போக்க தாயின் கையிலிருந்த அந்த குழந்தையை வாங்கி அவரது மடியில் வைத்துக்கொள்கின்றார். பேருந்து நகர நகர பயணிகளின் கூட்டத்தால் தாயுக்கும் குழந்தைக்கும் உள்ள இடைவெளியானது மறைந்து போகின்றது. தாயானவளை காணவில்லையே என நினைத்த குழந்தை ஓ என அழுதது. தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட தாயானவள் கூட்டத்;தை ஒதுக்கி தன் முகத்தைக்காட்ட குழந்தை தாயை அடையாளம் கண்டு அழுகுரல் நின்று போகின்றது. ஒரு சாதாரண தாயானவள் தன் குழந்தையை அறிந்திருக்கிறாள் எனில் கடவுளின் தாயானவள் நம்மை எப்படி அறிந்து வைத்திருப்பாள்? அப்படிப்பட்ட கடவுளின் தாயைத்தான் இன்று திரு அவை நினைவு கூறுகிறது.

உலக வரலாற்றில் எத்தனையோ தாய்மார்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருந்தாலும் ஒரு பெண் மட்டும்தான் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகின்றாள். அவள்தான் முப்பொழுதும் கன்னியாக எப்பொழுதும் அன்னையாக விளங்குகின்ற கன்னிமரியாள். இவருக்கு மட்டும் ஏன் இப்பேர்பட்ட சிறப்பு? இறைவனுக்கு தனது வாழ்வில் முதலிடம் கொடுத்து அவரிடம் மட்டுமே இன்பத்தைத் தேடிவாழ்ந்த பெண்ணொருத்தித் தேவைப்பட்டாள். அந்தத் தேவையை நிறைவு செய்து அருள் நிறைந்தவளாக வாழ்ந்து இறைவனின் இதயத்தைத் தொட்டவள்தான் கன்னி மரியாள்.

மீட்பின் சரித்திரத்திலே தன்னைப் பற்றிக்கொண்டு தன்னிடமிருந்து அனைத்து வரங்களையும் பெற்றுக்கொள்ள இருகரம் விரித்து தனது மக்களை இறைவன் அழைத்த வண்ணமாயிருந்தார். ஆனால் கன்னிமரியாள் மட்டும் கடவுளை கண்டடைந்தார். அதுவும் தன்னுடைய வாழ்வால் தனது கற்பால் தனது ஏழ்மையால் தனது கீழ்படிதலால் இறைவனை அடைந்தார். அதற்காக கடவுள் அவருக்கு அளித்த பரிசு இறைத்தாய்மை. அப்படிப்பட்ட அந்த தாய் தான் பெற்றெடுத்த திருமகனுக்கு இயேசு எனும் பெயரிட்டார். இயேசு என்றால் கடவுளின் மீட்பு என்று பொருள்படும். கடவுளின் மீட்பு என்பது கடவுள் கன்னிமரியிடமிருந்து பிறந்தார் என்பதை பெயர் சூட்டு விழா சுட்டிக்காட்டி அவ்விழா கன்னிமரி கடவுளின் தாய் இறைவனின் அன்னை என்பதை ஊரறிய உலகறியச் செய்கிறது.

அந்தக் கடவுளின் தாயைப்போல நாமும் கடவுள் விரும்புகின்ற தாயாக தந்தையாக வாழ வேண்டுமெனில் வாக்கு வடிவிலே நம்மோடு உறையக்கூடிய இறைமகனை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அந்த வாக்கை இறைவார்த்தையை விவிலியத்தை நாம் நம்முடைய வாழ்வில் அடையாளம் காணும் போது நாமும் கூட ஒரு வகையிலே கடவுளை இந்த உலகிற்குப் பெற்றெடுத்துக் கொடுக்கும் தாய்மை நிலையை அடைந்தவர்களாவோம். - ஆமென்
 
திருப்பலி முன்னுரை - திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா 01 01 2023



சந்தோஷம் தந்திடவே
புத்தாண்டு வந்ததிங்கே!
மனதோடு மகிழ்ந்திடவே
சங்கீதம் தந்ததிங்கே!
புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி இந்த இனிய ஆண்டின் முதல் திருப்பலிக்கு அன்போடும் மகிழ்வோடும் வரவேற்கின்றோம்.

கடந்த ஆண்டினை கரம்பிடித்து கடக்கச் செய்த இறைவனுக்கு நன்றி செலுத்தவும், புதிய ஆண்டுக்கான ஆசீரையும், அரவணைப்பையும் இறைவன் கரத்திலிருந்து பெற்றுக்கொள்ளவும் இன்று அழைக்கப்படுகின்றோம்.

முடியும் இந்த இரவு நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்.
மலரும் புதிய பொழுது மகிழ்ச்சியின் தொடக்கமாக இருக்கட்டும்.
மங்கல கீதத்தினை மனது ஒலிக்கட்டும்.
மனுமகனின் வரவால் மனது ஒளிரட்டும்.

கடந்த ஆண்டிலே பிறரையும், அதனால் இறைவனையும் கஷ்டப்படுத்திய காரியங்களுக்காக வருந்துவோம்.
மனக்குறையை நம்முள் அகற்றுவோம்.
மனக்குறையை இறைவன் அகற்றுவார்.
அன்னை மரியாவைப் போல தாழ்ச்சியை நம்முள் தரித்துக்கொள்வோம்.
இறைமகனே இவ்வுலகில் மானிடனாய் பவனி வந்த எளிமையை அணிந்து கொள்வோம்.

புத்தாண்டுக்காக நம் மனைகளை தூய்மைப்படுத்துவதிலும் நம் மனங்களை தூய்மைப்படுத்துவோம். உயிருள்ள ஆலயங்களாகி உள்ளத்தில் இறைவனை வரவேற்போம்.

ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக என்று இன்றைய ஆசீர்வாத வார்த்தைகளை தருகின்றது முதல் வாசகம்.
இறைவன் ஆசீர்வதிக்கவே ஆவலாய் இருக்கிறார்.
அதை அள்ளி பருக முனைப்பாய் இருப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு என பெயரிடப்பட்டதை நமக்கு வெளிப்படுத்துகின்றது. பாலகனின் மகிமையை வெளிப்படுத்த வேண்டிய இயேசுவின் நாமம் இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது புரட்சியின் நாமம், இது மகிமையின் நாமம், இது மீட்பின் நாமம் என்பதை உணர்ந்து கொண்டு உள்ளத்தால் மாட்சிப்படுத்துவோம். புத்தாண்டில் வரம் கேட்போம்.

கடந்த ஆண்டின் காயங்கள்
புத்தாண்டின் அனுபவங்களாய் மாறட்டும்.
எம் நாட்டின் ஏழ்மை காற்றோடு பறக்கட்டும்.
பாரதம் முழுவதும் பசுமை பிறக்கட்டும்.
மதங்கள் பிடித்த மனங்கள் மறையட்டும்.
சாதி வெறியற்ற சகாப்தம் தொடரட்டும்.
யாவரையும் சமமாய் போற்றும் சரித்திர
ஆண்டாய் புத்தாண்டு பிறக்கட்டும்.

மனதில் மகிழ்வோடு நெஞ்சின் நிறைவோடு மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி திருப்பலியில் பங்கேற்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. மீண்டும் ஒரு புத்தாண்டைத் தந்து ஆசீர்வதித்தவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்த நீர் தேர்ந்தெடுத்த திரு அவைத்தலைவர், பணியாளர்கள் அன்பின் நிறைவால் மக்களை வழிநடத்தவும், சமூக சீர்கேடுகளை சாடும் துணிச்சலைத் தரவும், இறையாசீரை மக்களுக்கு பெற்றுத் தரும் வழியாய் அமைந்து புத்தாண்டு சிறப்பாய் அமைய இறை ஆசீர் வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. கடந்ததை நினைத்துக் கலங்காதே என்றவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள் நாட்டை மதத்தால் கூறு போடாமல், நல்வாழ்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்தவும், மக்களை வருத்தும் சட்டங்களையும், வரிச் சுமைகளையும் திரும்பப் பெற்று, புத்தாண்டில் மக்களின் மகிழ்வுக்கான செயல்களை இயற்கையோடு இணைந்து செயல்படுத்த, நல்லறிவு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உம் திருமுக ஒளியை எம்மீது வீசச் செய்பவரே எம் இறைவா!
எம் வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க துணிவையும், உம் துணையையும் எமக்குத் தந்து, எங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக வாழ்வை மேற்கொள்ளவும், பிறருக்கு எங்கள் உதவியையும், நேரங்களையும் பகிர்ந்து கொள்ளவும் தேவையான மனநிலையை நாங்கள் பெற்றுக் கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. விண்ணக கருவூலத்தை திறந்து ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!
எம் பகுதியில் வேளாண்மை சிறக்க தேவையான பருவகால சூழ்நிலையைத் தந்து விளைச்சல் அதிகப்படவும், குடும்ப பொருளாதார நிலை உயரவும், புத்தாண்டில் குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும், படிக்கும் மாணவர்கள் சிறந்த ஞானத்தோடு பயிலவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரத்திற்காக ஏங்கிக் காத்திருப்போர் இந்த ஆண்டில் உறுதியாய் பெற்றுக்கொள்ள வரம் வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.


 
திருப்பலி முன்னுரை - அருட்சகோதரி ஷீலா குளுவு, மேலமெஞ்ஞானபுரம்.

இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா



கடவுள் மனித இனத்துக்கெனத் திறந்து வைத்திருக்கும்
மாளிகைதான் புதிய ஆண்டு - அது
காலப்போக்கின் ஒரு புதிய திருப்பம்
மனித வாழ்க்கை ஏட்டின் ஒரு புதிய பக்கம்
உலக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயம்.
புதிதாகப் பிறக்கும் புத்தாண்டுகள்
ஒவ்வொன்றும் பழையனவாகி
மற்றொரு புத்தாண்டு பிறந்து கொண்டே இருக்கிறது.
இறைத்தந்தை நமக்களித்துள்ள புத்தாண்டு 2023- ஐ
மகிழ்வுடன் கரம் குவித்து வரவேற்போம்.

இன்று முப்பெரும் விழாவைக் கொண்டாடுகிறோம். இறைவனின் அன்னையாகிய தூய கன்னிமரியாள் பெருவிழா. மனுவுரு எடுத்த பாலனுக்கு இயேசு எனப் பெயர் சூட்டிய விழா மற்றும் புத்தாண்டு விழா.

கடந்த ஆண்டிலே கடவுளிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளையும், புதிய ஆண்டிலே வரவிருக்கின்ற நலன்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்திட சரியான தருணம் இந்த புத்தாண்டு பிறக்கின்ற நேரமே!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற
எண்ணத்தைத் திண்ணமற இசைத்துக் கொண்டு
இருந்து இன்புற்று வாழ்வீர்! என்றார் பாரதி.
வாழ்வாங்கு வாழ வாழ்த்துவது நமது பண்பாடு.

பெற்றோரின் ஆசி, வளத்தோடு வாழ்நாள்களைக் கூட்டும் ஆற்றல் கொண்டது. ஆசானின் ஆசி, அறிவுச் செல்வர்களாக உருவாக்கக்கூடியது.
பெரியோர்களின் ஆசி அருள்செல்வத்தோடு பொருள் செல்வங்களையும் அள்ளித்தரும். இன்று சிறப்பாகக் கடவுளின் ஆசி நம்மை நிறைத்து நிற்கிறது.

 ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக.
 ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள் மேல் ஒளிரச் செய்வாராக!
 உங்கள் மீது அருளைப் பொழிவாராக.
இப்புத்தாண்டு முழுவதும் கடவுள் நம்மைக் காப்பாராக என்ற வாழ்த்தொலியோடும்,

உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான திட்டங்களே அன்றி கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல என்று நம்பிக்கை தருகிறார் எரேமியா இறைவாக்கினர். (எரே 29:11)
ஆண்டின் தொடக்க நாளாகிய இன்று தாய்த்திருச்சபை தூய மரியாவைக் கடவுளின் தாயாகப் போற்றிச் சிறப்பிக்கிறது. கன்னிமரியாளின் அன்பும் பாசமும் பராமரிப்பும் பாதுகாப்பும் நம்மோடு இருந்து நம்மை ஆண்டு முழுவதும் காக்க வேண்டுமென்று அன்னை மரியாள் வழியாகக் கடவுளிடம் ஒப்படைப்போம்.

இயேசுவின் நாமம் சிந்தைக்கு இனிய நாமம். செவிகளுக்கு இனிமையானது. இயேசுவின் பெயருக்கு விண்ணவர் மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். நாம் மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை என்ற சிந்தனையை மனதில் கொண்டு இயேசுவின் வழியில் பயணிக்க முயற்சியெடுப்போம்.

பார்க்கும் முகமெல்லாம் பழகும் மனிதரெல்லாம்
புதிதாய் பிறந்தவர்கள் என்ற புரிதலில்
பகைமை துறப்போம். வெறுப்பை மறப்போம்.
எல்லோரும் புதிதாய் பிறப்பதால்
அனைவரும் சகோதரர்களே என்ற உணர்வோடு
உறவுப் பயணத்தை உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் தொடங்குவோம்.
புலரும் இந்தப் புத்தாண்டில் நன்மைகள் நிரம்பட்டும்
நம் நம்பிக்கைகள் நிமிரட்டும். புண்ணியம் பொங்கட்டும்.
புது நன்மைகள் பெருகட்டும.; உண்மைகள் ஒளிரட்டும்;
சமூக உறவுகள் உயரட்டும். மன்னிப்பு மலரட்டும்.
மனித மனங்கள் விரியட்டும்.
வளமைகள் சேரட்டும் நம் வாழ்வு செழிக்கட்டும்!
என்ற உணர்வோடு இத்திருப்பலியில் பங்கேற்போம். இறையாசீர் நிறைவாய் பெறுவோம்.



இறைமக்களின் மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. விடிவெள்ளியாம் எம் இறைவா!
எம் திருஅவைக்காக மன்றாடுகிறோம். திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியர் அனைவரையும் சிறப்பாக ஆசீர்வதியும். இந்த புதிய ஆண்டில் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உம்மை மையப்படுத்தியதாக அமைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அருளின் ஊற்றே எம் இறைவா!
இந்த நன்னாளில் எமது நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். ஆயன் தம் மந்தைகளை வழிநடத்துவது போல் இவர்களும் பிறர் நலத்திற்காக உழைத்திடவும், மக்கள் நலனையே மையமாகக் கொண்டு ஆளுகின்ற மனப்பக்குவத்தை அவர்களுக்கு தந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா!
எம் பங்கு திருஅவையை ஆசிர்வதியும். இப்புதிய ஆண்டில் இறையன்பிலும் பிறரன்பிலும் எங்கள் குடும்பங்கள் சிறந்திடவும், வறுமை நீங்கி செழுமை பிறந்திடவும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிவு பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா!
எம் பங்கில் உள்ள சிறுவர், சிறுமியர்கள் இறைஞானத்தில் வளரவும், கல்வி கேள்வி செல்வங்களில் சிறந்திடவும், எம் இளைஞர்கள் நவீன ஊடக உலகிலே தங்களை அழித்து விடாமல், உண்மையான வாழ்வின் நெறிகளை கண்டுணரவும், அதன்படி தங்கள் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி: அருட்சகோதரி ஷீலா குளுவு, மேலமெஞ்ஞானபுரம்.


 
திருப்பலி முன்னுரை
ஆசிரியை. திருமதி. லூயிஸ் ரெக்ஸ்லின், பாவூர்சத்திரம்.

இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா

புலர்ந்துள்ள இனிய புத்தாண்டின் முதல் நாளிலே நம் திருச்சபையானது அன்னை மரியா இறைவனின் தாய் என்ற திருவிழாவைக் கொண்டாடி மகிழ நம்மை அழைக்கின்றது.

மேகத்தைச் சிறப்பித்துப் புகழ்வது அது கொடுக்கும் மழைக்காக் மரத்தைப் புகழ்வது அது கொடுக்கும் கனிகளுக்காக் பசுவைப் புகழ்வது அது கொடுக்கும் பாலுக்காக் அன்னை மரியாவை சிறப்பித்துப் புகழ்வது அவர் பெற்றெடுத்த உலக மீட்பர் இயேசுவுக்காக.

தந்தையாம் கடவுளின் திருவுளத்தில் தூய ஆவியாரின் உடனிருப்பில் மானிட உடல் ஏற்று வாக்களிக்கப்பட்ட வார்த்தையான மெசியாவுக்கு தாயாகும் பேற்றினை பெற்றுள்ளதால் படைப்பு உயிர்களில் சிறந்தவராக போற்றப்படுகிறார்.

இன்றைய முதல் வாசகத்திலே ஆசிகள் வழங்கப் பெறுவதையும், வழங்கும் முறையைப் பற்றியும் விடுதலைத் தலைவர் மோசே வழியாக ஆரோன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எடுத்துரைக்கின்றது எண்ணிக்கை திருநூல். இப்புத்தாண்டில் ஆண்டவர் தம் திருமுகத்தை நம்மீது திருப்பி நம்மை பாதுகாப்பார் என்ற நம்பிக்கைச் செய்தியைப் பெற்று இறை பராமரிப்பில் வாழ்வோம்.

இரண்டாம் வாசகத்திலே நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையில் எந்தவிதமான அடிமைத்தனங்களுக்கும் உள்ளாகாதவாறு வாழ வேண்டியது நமது கடமை என்பதை புனித பவுலடியார் கலாத்தியருக்கு எழுதிய மடலில் உணர்த்துகின்றார்.

இன்றைய நற்செய்தியிலே மீட்பராக பிறந்த இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை வாசிக்கின்றோம். இப்பெருவிழா நாளில் நமக்குப் பெயரிடப்பட்ட திருமுழுக்கு நாளை நினைவு கூர்வோம். அந்த அருள்பொழிவில் நமக்கு வழங்கப்பட்ட உரிமைகளாகிய கடவுளின் திருச்சபையின் பிள்ளை என்பதில் பெருமகிழ்வு கொள்வோம். இப்புத்தாண்டில் இறைவனது ஆசிகளால் நிரப்பப்பட இப்பலியிலே இறையருளை வேண்டுவோம்.

மன்றாட்டுகள்:

1. ஆசி வழங்குகின்றவரே இறைவா!
எங்களது அன்றாட வாழ்வில் நீரே மையமாக இருந்து எங்களுக்குத் தேவையான பாதுகாப்பு, அருள், அமைதி இவற்றை அளித்து எங்களது வாழ்வை வளப்படுத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. புதுவாழ்வைத் தருகின்றவரே இறைவா!
புதிதாகப் பிறந்துள்ள இப்புத்தாண்டிலே நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்ற தேவைகள் அனைத்தும் நிறைவேறவும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் உடனிருந்து எங்களைப் பாதுகாத்து பராமரித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்னை மரியாளை எமக்குத் தாயாகத் தந்தவரே இறைவா!
அன்னைமரி இறைவனின் தாய் என்று கொண்டாடி மகிழ்கின்ற இந்நாளிலே அன்னையின் பாதுகாப்பிலும், பரிந்துரையிலும் இறையருளைப் பெற்றிடவும், உலக தாய்மார்கள் அனைவரும் மதிக்கப்படவும் தங்களது நிலையினை புனித நிலையாக கருதி வாழ்வதற்குத் தேவையான உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. காலங்களைக் கடந்தவரே இறைவா!
நீர் எங்களுக்கு மூலதனமாக அளித்துள்ள காலங்களை வீணாக்காமல அவற்றை பயன் தருகின்ற வகையில் செலவிட்டு, இறைவார்த்தையில் புதைந்துள்ள ஞான செல்வத்தைக் கண்டு உணர்ந்து எங்கள் வாழ்வை அமைத்திட ஞானத்தைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. விடுதலையும் வாழ்வையும் கொடுப்பவரே இறைவா!
விளை நிலங்கள் நல்ல பலனைக் கொடுத்து விவசாயிகள் வாழ்வில் ஏற்ற பெறவும், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பும் நலமும் வளமுமான நிறைவான வாழ்வு கிடைத்திடவும், உலக நாடுகள் அனைத்தும் சமாதானத்தில் மகிழ்ந்திருக்கவும், நீதிக்காகவும், விடுதலைக்காகவும் உரிமை வாழ்விற்காகவும் எதிர்நோக்கியிருப்போர் அனைவரின் மனங்களிலும் நிறைவு பெற உமது அருளை அளித்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி: ஆசிரியை. திருமதி. லூயிஸ் ரெக்ஸ்லின், பாவூர்சத்திரம்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை

இறைவனின் தாய் மரியா

பிரிந்த சபையைச் சார்ந்த ஒரு சகோதரி ஒரு கத்தோலிக்கப் பெண்ணிடம் இயேசுவைத் தான் நாம் போற்ற வேண்டும். மரியாவைப் போற்றக் கூடாது. பிள்ளைகளுக்குத்தான் மதிப்பு. தாய்க்கு அல்ல. குஞ்சுக்குத்தான் மதிப்பு. கூட்டுக்கு அல்ல என்று அடிக்கடி கூறிக் கொண்டே வந்தாள். ஒருநாள் கத்தோலிக்கப் பெண் அந்தப் பிரிந்த சபைச் சகோதரி வீட்டிற்குச் சென்று அந்த வீட்டுப் பையனிடம் மட்டும் வணக்கம் செலுத்திவிட்டு அந்த அம்மாவைக் கண்டுகொள்ளாமல் புறப்பட்டாள். இதைக் கண்டு அந்த சகோதரி ஆத்திரமடைந்து என்னங்க! இன்று வித்தியாசமா நடக்கிறீங்க! என் பிள்ளைக்கு மட்டும் வணக்கம் செலுத்திப் பேசிவிட்டு என்னை ஓரங்கட்டிப் போறீங்களே! இது முறையா? என் பிள்ளைதான் என்னை மதிக்குமா? என்றாள். அதற்குக் கத்தோலிக்கப் பெண், நீங்கதான் பிள்ளைக்குத் தான் மதிப்பு. தாய்க்கு அல்ல. குஞ்சுக்குத் தான் மதிப்பு, கூட்டுக்கு அல்ல என்று சொன்னீங்களே என்றாள். பிரிவினை சபைச் சகோதரி என்ன பேசுவது என்று தெரியாது மவுனம் ஆனாள்.

தாயுமானவர் சொல்லுகிறார்: நீயில்லாமல் நானில்லை. தாயில்லாமல் சூல் (கரு) இல்லை, தாய் இல்லாமல் சேய் இல்லை என்று. மேகத்தைப் புகழ்வது அது தரும் மழைக்காகத்தானே! பூந்தோட்டத்தைப் புகழ்வது அது தரும் பூக்களுக்காகத்தானே. பசுவைப் புகழ்வது அது தரும் பாலுக்காகத்தானே. அதேபோல் தாயைப் புகழ்வது அது ஈன்றெடுத்த குழந்தைக்காக. அதேபோல் மரியாளின் பெருமை அவள் இயேசுவை ஈன்றெடுத்த தனிப்பேறு. ஆண் இல்லாமல் கடவுள் இவ்வுலகில் மனிதராக முடிந்தது. ஆனால் ஒரு பெண் இல்லாமல் இயேசு இவ்வுலகில் பிறக்க முடியவில்லை. மரியாவின் சம்மதம் இயேசுவுக்குத் தேவைப்பட்டது. எனவே மீட்பரின் தாயாக, இயேசுவின் தாயாக, இறைவனின் தாயாக விளங்குகின்றாள் மரியா.

விவிலியத்தைப் புரட்டினால் தெளிவான சான்றுகள் காண முடியும்.

எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (லூக். 1:43) என்று கேட்கவில்லையா?

காலம் நிறைவேறியபோது. கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார் (கலா. 4:4-5) என்று வாசிக்கின்றோம்.

தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அது கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாகவும் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார் (யோவா.1:1,14). அந்த இயேசுவே மரியாவின் மகன் என்றும் சொல்லப்பட்டுள்ளது (மாற்.6:3).

இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர் (லூக். 1:31) என்றும் தெளிவாக வானதூதர் கபிரியேல் கூறுகிறார்.

மரியா உண்மையிலே இறைவனின் தாய் என்று கி.பி. 431- ஆம் ஆண்டிலே எபேசில் கூடிய திருச்சங்கம் தெளிவு படுத்தியுள்ளது. அதில் கிறிஸ்துவின் இறைத்தன்மைக்குத் தாய் அல்ல. மாறாக உண்மையான கடவுளாக இருந்தவரை மனிதராக ஈன்றெடுத்தவள் என்று பொருள்படும் என்றும் தெளிவு படுத்துகிறது எபேசு சங்கம்.

மரியாள் உண்மையிலே இறைவனும் மீட்பருமான இயேசுவின் தாய் என ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறாள் என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபைக் கொள்கைத் திரட்டு நமக்கு உறுதி செய்கிறது.

பள்ளி மாணவன் ஒருவன் பள்ளிக்குச் செல்ல மறுத்தான். ஏன் என்று கேட்டால் கணித ஆசிரியர் முட்டாள் தனமாகக் கணக்கு சொல்லித் தருகிறார். நேற்று, மூன்றும் மூன்றும் ஆறு என்றார். இன்று நான்கும் இரண்டும் ஆறு என்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்வது. இது தப்புக் கணக்கு என்றான் பையன். இதேபோலத்தான் நம் பிரிந்த சகோதரர்கள் போடும் தப்புத் தாளம்.

கடவுளுடைய ஞானமும், அறிவும் எத்துணை ஆழமானது. அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை. அவருடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை (உரோ. 11:33) என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மரியாவை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம். ஒன்று ஊன் இயல்பில், மற்றொன்று ஆவியில். மரியாவை ஊன் இயல்பில் புரிந்து கொண்ட பெண் ஒருத்தி இயேசுவைப் பார்த்து உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவள்" என்றாள். ஆனால் இயேசுவோ, "தந்தையின் வார்த்தையைக் கடைபிடிப்பவர் இன்னும் அதிகமாகப் பேறுபெற்றவர்" (லூக். 11:27-28) என்றார்.

மரியா பேறுபெற்றவள். காரணம் இயேசுவைக் கருத்தாங்கினாள், ஈன்றெடுத்தாள். பாலூட்டினாள் என்று மட்டுமல்ல. மாறாக மரியா இயேசுவின் வார்த்தைக்குச் செவிமடுத்தார். அதை உள்ளத்தில் இறுத்தித் (லூக். 2:19) திறந்த உள்ளத்தோடு ஏற்றாள். தன் வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தார். எனவே மரியாவின் உண்மையான தாய்மைப் பேறு என்பது அவள் ஊன் இயல்பைக் கடந்து ஆவியில் செயல்பட்டார் என்பதுதான்.

எனவே இயேசுவின் குடும்பம் மிகப் பெரிய குடும்பம், ஊனியல்பின் குடும்பம் அல்ல. ஆவியின் குடும்பம், விசுவசிக்கும் குடும்பம். எனவேதான் என் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே எனக்குச் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார் (மத்.12:50) என்று தாயை இரத்த உறவைவிட விசுவாச உறவில் உயர்த்துகிறார். நமது வாழ்வில் இறைவனின் விருப்பத்தை நாம் நிறைவேற்றும்போது நாமும் இறைவனின் தாயாகலாம் - தாயாகிறோம். இயேசுவின் சிறப்புக் குடும்பத்தில் நுழைகிறோம். இறைவனின் வார்த்தையை விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்வதின் மூலம் திருச்சபையும் ஓர் அன்னையாகச் செயல்படுகிறது. திருமுழுக்கு வழியாகப் புதிய பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திருச்சபை ஓர் அன்னையாகிறது என்றால் பிறரில் நாம் கிறிஸ்துவை உருவாக்குதலின் வழியாக நாமும் அன்னையாக, தாயாக ஆகலாம் அன்றோ!

நிகழ்ச்சி
நிறைமாத கர்ப்பிணி ஒருவரை, இரு பெண்கள் என்னிடம் கொண்டு வந்து சாமி! இவளுக்கு இடுப்பு வலி வர வேண்டும் எனச் செபியுங்கள் என்றனர். குழந்தை பிறக்க வேண்டுமானால் பேறுகால வேதனை அனுபவிக்க வேண்டும். இடுப்பு வலி வரவேண்டும். இதேபோலத்தான் இயேசுவை ஈன்றெடுக்க நாமும் பேறுகால வேதனை அடைய வேண்டும். எனவேதான் தூய பவுல் அடிகளார், "பிள்ளைகளே! உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை உங்களுக்காக நான் மீண்டும் பேறுகால வேதனை அடைகிறேன்" (கலா. 4:19) என்றார்.

திருமணமான பெண் ஒருவர் மூன்று வழிகளில் தாய்மைப் பேறு அடையாது போகலாம். ஒன்று, பிள்ளை பெற இயலாதவளாக இருக்கலாம். இரண்டாவது, அவள் பிள்ளை பெறாதபடி கருத்தடை கருவிகளை முன்னமே பயன்படுத்தலாம். மூன்றாவது, தன் வயிற்றில் வளரும் குழந்தையைக் கருச்சிதைவு செய்யலாம்.

நம் கிறிஸ்தவ வாழ்விலும் மூன்று விபத்துக்கள் நிகழ இடமுண்டு, ஒரு சிலர் கிறிஸ்துவைக் கருத்தரிக்க இயலாத நிலையில் உள்ளனர். இவர்கள் விசுவாச மலடுகள், பாதை ஓரத்தில் விதைக்கப்பட்டவர்கள் (மத். 13:19).

வேறுசிலர் திருமுழுக்கால் தாங்கள் பெற்ற விசுவாசம் முளைக்காமல் விசுவாசக் கருத்தடை செய்பவர்கள். இவர்கள் பாறை மீது விதைக்கப்பட்ட விதையைப் போல் ஆவார்கள் (மத். 13:21).

மற்றும் சிலர் கிறிஸ்துவைச் சிறிது காலம் வளர விட்டு பின்பு கருச்சிதைவு செய்பவர்கள். இறைவார்த்தையை உலகப் பற்றுக்களால் நெருக்கிவிடும் முட்புதர்கள் இவர்கள் (மத். 13:22).

விசுவாச வாழ்வில் நாம் எந்த ரகத்தைச் சார்ந்தவர்கள்? விசுவாச மலடுகளா? அல்லது விசுவாசக் கருத்தடைச் செய்பவர்களா? உலகிற்கு கிறிஸ்துவை ஈன்றெடுத்துக் கொடுப்பதே நமது அழைப்பின் தலையாயக் கடமை. நாமும் அவரோடு இணைந்திருந்தால் மிகுந்த கனி தருவோம் (யோவா. 15:5) என்கிறார் இயேசு. எனவே அழைப்பை உணர்ந்து மரியாவைப் போல நாமும் தாய்மை நிலையில் செயல்படப் புறப்படுவோம். அது நம் தாய் மரியாவுக்குப் பெருமை சேர்க்கும்.

தூங்குபவனை எழுப்பலாம். தூங்குபவன் போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியுமா?
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

கடவுள் தேடிய பெண் : மரியா

துறவி ஒருவருக்குக் கடவுளோடு பேசும் வரம் இருக்கின்றது என்று சொல்லி பலர் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர்.

ஓர் இளைஞனுக்குத் துறவி கடவுளோடு பேசுவது உண்மையா என்பதை அறிந்து கொள்ள ஆசை! அந்த இளைஞன் துறவியைத் தேடி காட்டுக்குச் சென்றான்.

துறவியிடம், உங்களுக்குக் கடவுளோடு பேசும் வரம் இருப்பதாக எல்லாரும் சொல்கின்றார்கள். அது உண்மையா? என்றான்.

ஆம். கடவுளோடு பேசுகின்றேன். கடவுள் என்னோடு பேசுகின்றார் என்றார் துறவி.

அப்படியானால், நீங்கள் அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது. நான் செய்த பாவங்கள் என்னென்ன என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றான் இளைஞன்.

துறவி, சரி என்றார்.

மறுநாள் இளைஞன் துறவியிடம் சென்று, என்ன! கடவுளைச் சந்தித்தீர்களா? அவர் என்ன சொன்னார்? என்றான்.

அதற்கு அந்த முனிவர், சந்தித்தேன் மகனே! உன் பாவங்களைப் பற்றியும் கேட்டேன். அதற்குக் கடவுள். அந்த இளைஞனுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்துவிட்டேன்.

இப்போது அவனுடைய பாவங்கள் எதுவும் என் ஞாபகத்திலில்லை என்று சொல்லிவிட்டார் என்றார்.

அதைக் கேட்டு அந்த இளைஞன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

ஆம். நமது கடவுள் நமது பாவங்களை மன்னித்து, அவற்றை மறந்துவிடும் கடவுள்.

இப்படிப்பட்ட கடவுள் தமது நிபந்தனையற்ற ஆழமான அன்பை உலக மக்களுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானார்.

தமது திருவுளத்தை நிறைவேற்றிக் கொள்ள. மனிதனாகப் பிறந்து, மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள் பாவங்களை மன்னித்து, மறந்து அவர்களை வளமுடன் வாழவைக்க, மக்களினத்தைக் காப்பாற்ற, அனைவர் மீதும் அருள்பொழிய, தம் திருமுகத்தை உலகின் பக்கம் திருப்ப (முதல் வாசகம்) தாயொருவர் தேவைப்பட்டார். அவரைக் கடவுள் தேடினார். தேடிய பெண் (இரண்டாம் வாசகம்] கிடைத்தார். அவர்தான் மரியா!
மேலும் அறிவோம் :

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.
 
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

புத்தாண்டு புலர்ந்துவிட்டது; மற்றும் ஓர் ஆண்டு மலர்ந்துவிட்டது. இப்புத்தாண்டை இயேசுவின் இனிய நாமத்தில் தொடங்குவோம்; இறைவனின் தாய் புனிதமிகு கன்னிமரியின் பாசமிகு பாத கமலத்தில் வைப்போம்.

இன்று இயேசு பிறந்த எட்டாம் நாள். அவருக்கு இயேசு என்ற பெயரைச் சூட்டிய நாள். இயேசுவின் நாமம் சிந்தைக்கு இனிய நாமம்; செவிகளுக்கு இனிய நாமம்: பைந்தமிழ் பாவுக்கும் நாவுக்கும் இனிய நாமம். இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2:10). நாம் மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை (திப 4:12), புனித பேதுரு கால் ஊளமுற்ற ஒருவரை இயேசுவின் பெயரால் எழுந்து நடக்கச் செய்தார் (திப 3:6). பழைய ஏற்பாட்டில் சிறுவன் தாவீது கோலியாத் என்ற அரக்களைக் கடவுளின் பெயரால் கொன்றான். (1 சாமு 17:43-45).

நமது வாழ்வில் கோலியாத் போன்ற பல தீய சக்திகள் நம்மை முடக்கி விடுகின்றன.. நாம் செய்வது என்னவென்று கலங்கித் திகைக்கிறோம். ஆனால் இயேசுவின் பெயரைச் சொல்லி அவற்றை எதிர்த்து வெற்றி அடைவோம். இயேசுவின் பெயரால் நாம் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் நமக்குக் கொடுப்பார் (யோவா 15:16), கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்ச வேண்டும். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்" (திபா 27:1).

இன்று புளிதமிகு நன்னி மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். மரியன்னையின் தனிச்சிறப்பு அவர் இறைவனின்தாய் என்பதாகும். நாம் மேகத்தைப் புகழ்வது அது கொடுக்கும் மழைக்காக; மரத்தைப் புகழ்வது அது கொடுக்கும் கனிக்காக: பசுவைப் புகழ்வது அது கொடுக்கும் பாலுக்காக; தாயைப் புகழ்வது அவர் ஈன்றெடுத்த சேயுக்காக. அவ்வாறே நாம் மரியன்னையைப் புகழ்வது அவர் ஈன்றெடுத்த உலக மீட்பருக்காக. கிறிஸ்து கடவுள் என்றால், மரியா கடவுளின் தாய் என்பதில் ஐயமில்லை. இன்றைய திருப்பலியின் வருகைப்பாடல் மரியாவை இறைவனின் தாய் என்று புகழாரம் சூட்டுகிறது. "வாழ்க புனித அன்னையே! விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆளும் அரசரை ஈன்றவர் நிரே." இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்து பவுல், "காலம் நிறைவேறியபோது கடவுள் தம் மகனைப் பெண்ணிடமிருந்து பிறக்கச் செய்தார் " (கலா 4:4) என்கிறார்.

மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவர் தூய ஆவியால் நிரப்பப்பட்டு உரத்த குரலில் மரியாவைப் பார்த்து, "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர தான் யார்?" (லூக் 1:43) என்று கேட்கிறார். மரியா ஆண்டவரின் தாய். ஆண்டவர் என்ற சிறப்புப் பெயர் இறைவனுக்கு மட்டுமே உரியது. மரியா ஆண்டவரின் தாய் என்றால், அவர்
இறைவனின் தாய் என்பது வெள்ளிடை மலை.

ஒரு பேரன் தன் தாத்தாவைச் சுட்டிக்காட்டி. "நான் என் தாத்தாமேல் உயிரை வைச்சிருக்கிறேன். ஏனெனில் என் தாத்தா என்மேல் உயிலையே எழுதி வைச்சிருக்கிறாரு என்றான். இயேசு கிறிஸ்து அவர் சாகுமுன் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் என்ன? "இவரே உம் தாய் (யோவா 19:27). புனித யோவான் வாயிலாக மரியாவை நமது தாயாக அளித்தார். கிறிஸ்துவின் இந்த இறுதி விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதில்லை. மரியன்னையை நமது தாயாக ஏற்றுக்கொண்டு, அவருடைய பாதத்தில் இப்புத்தாண்டை வைப்போம். "உருவிலான் உருவாகி, உலகிலொரு மகனுதிப்பக் கருவில்லாக் சுருததாங்கிய கன்னிமரி நம்மைக் கைபிடித்து வழிநடத்துவார்."

மரியா உண்மையிலேயே "இறைவனின் தாய்" என்று கி.பி. 431- ஆம் ஆண்டு எபேசில் கூடிய பொதுச் சங்கம் அறிக்கையிட்டது. "இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள். எனவே பேறுபெற்ற கன்னி உண்மையிலேயே இறைவனின்தாய்."

மரியா மீட்பரின் தாய். யாரெல்லாம் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுகின்றார்களோ அவர்களும் மீட்பரின் தாயாக முடியும் (மத் 12:48.50). மரியா மீட்பரை இவ்வுலகிற்கு அளித்தார். நாமும் நமது சாட்சிய வாழ்வினால் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அளிக்க முடியும்.

புத்தாண்டு இனிய நல்வாழ்த்துக்கள்!
இயேசுவுக்குப் புகழ்! மரியே வளழ்க!
 
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
புத்தாண்டில் புதிய திருப்பம்

புலர்ந்துள்ளது புத்தாண்டு!
அது காலப்போக்கின் ஒரு புதிய திருப்பம்
-மனித வாழ்க்கை ஏட்டின் ஒரு புதிய பக்கம்
-உலக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயம்.

புத்தாண்டு என்பது என்ன?
மனிதனைத் தவிர காலத்தைக் கடந்த கடவுளுக்கோ, கடவுளின் மற்ற படைப்புகளுக்கோ - உயிரற்ற சடப்பொருளாகட்டும், உயிருள்ள ஆனால் உணர்வற்ற பயிரினமாகட்டும், உணர்வுள்ள ஆனால் அறிவற்ற மிருக இனமாகட்டும், அல்லது அறிவே நிறைவான இறைவனாகட்டும் அனைத்துக்கும் - புத்தாண்டு என்பது பொருளற்றது!

புத்தாண்டு என்பது ஓர் எல்லைக்குட்பட்ட காலத்தின் தொடக்கம் தானே! அது உண்மை என்றால், காலமற்ற, காலத்தைக் கடந்த கடவுளுக்கு ஒரு காலத்தின் தொடக்கமா? நினைத்துப் பார்க்க முடியவில்லை.

நாள், வாரம், மாதம், வருடம் என்று வரையறுக்கப்பட்ட கால எல்லைகளுக்கு மதிப்பேது?

பூமி தன்னையே சுற்றுவதைக் கண்டு, தன்னைச் சுற்றிக் கொண்டே சூரியனைச் சுற்றுவதைக் கண்டு நாள் என்றும் வாரம் என்றும், மாதம் என்றும், ஆண்டு என்றும் வகுத்தும் கணித்தும் அதற்கு ஒரு தொடக்கத்தைக் கற்பித்தவனே மனிதன் தானே!

இம்மை, அதன் தொடர்ச்சியான மறுமை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நித்தியம் ஒன்றே உண்மை! அந்த நித்தியத்தை நம் வசதிக்காக அநித்தியமாக்கிக் கொள்கிறோம் நாம்.

எப்போது பூமி சுற்றத் தொடங்கியது? யாருக்குத் தெரியும்?

தமிழனுக்கு என ஒன்று, தெலுங்கனுக்கு என ஒன்று, ஆங்கிலேயனுக்கு என ஒன்று... இப்படி எத்தனை எத்தனை புத்தாண்டுகள்! அத்தனையும் மனிதக் கற்பனைகள்!

நமக்கென வகுத்துக் கொண்ட புத்தாண்டுக்கு நாம்தாம் பொருள் தரவேண்டும்.

குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தின் தொடக்கமாகப் புத்தாண்டு இருப்பதுபோல, நமது வாழ்க்கையிலும் ஒரு புதிய தொடக்கத்தைக் காண விழையும் போதுதான், ஒரு புதிய திருப்பத்தைப் பார்க்க நினைக்கும் போதுதான் புத்தாண்டு பொருள் பெறும்; பொலிவு பெறும்!

தவறுகள் கூட வாழ்வுக்கு வலுவூட்டும். கூட்டித் தள்ளும் குப்பைகள் வயலுக்கு உரமாவது போல கடந்த ஆண்டு நாம் செய்த தவறுகளை உரமாக்கிப் புதிய ஆண்டில் நம் வாழ்க்கையைப் பசுமையாக்கிக் கொள்வோம்.

கடவுள் மனித இனத்துக்கெனத் திறந்து வைத்திருக்கும் மாளிகைதான் புதிய ஆண்டு.

தந்தை ஒருவர் தன் இருமக்களையும் அழைத்துத் தன் சொத்தை ஒப்படைக்கப் பொறுப்பான தகுதியுள்ள வாரிசு யார் என்பதை அறிய ஒரு சோதனைக்கு உட்படுத்தினார். குறிப்பிட்ட பணத்தை இருவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்து இரு அறைகளை ஒதுக்கி தனித்தனியாக அந்த அறைகளைப் பொருட்களால் நிரப்புங்கள் என்றார். மூத்தவன் வண்டி வண்டியாக வைக்கோலை வாங்கிச் சிறிதுகூட இடம் இல்லாமல் அறை முழுவதையும் நிரப்பினான். இளையவனோ ஒரு மெழுகுதிரி ஒரு தீப்பெட்டி, ஒரு ஊதுபத்தி வாங்கித் திரியை ஏற்றி வைத்தான். ஊதுவத்தியைப் புகைய விட்டான். மீதிப்பணத்தை ஏழை எளியவருக்கு அள்ளிக் கொடுத்தான். தந்தை மூத்த மகனுக்குரிய அறைக்குள் நுழைய முயன்றார். நுழைய முடியாதபடி அறைமுழுவதும் இறுகஇறுக வைக்கோல் மலை. இளையவன் அறைக்குள் நுழைந்தார். பார்க்கும் இடம் எல்லாம் ஒளி வெள்ளம், மூக்கைத் துளைக்கும் நறுமணம்.

இரண்டு பேர்களுமே அறைகளை நிறைத்திருந்தார்கள். ஆனால் என்ன வேறுபாடு? ஒருவன் குப்பை கூளம் போல வைக்கோலால் நிறைத்திருந்தான். மற்றவனோ ஒளியாலும் நறுமணப் புகையாலும் நிறைத்திருந்தான். வைக்கோல் நிறைந்த அறைக்குள் அவனாலும் நுழைய முடியவில்லை. அவன் தந்தையாலும் நுழைய முடிய வில்லை. மற்ற அறைக்குள்ளோ நுழைந்த அனைவராலும் ஒளியையும் மணத்தையும் அனுபவிக்க முடிந்தது.

நாமும் இப்படி வீணானவற்றால் நம் மனத்தையும் வாழ்வையும் நிறைக்காது இளையவனைப் போல இறைவார்த்தை என்ற ஒளியை ஏற்றி நற்செயல்களால் வாழ்வை நறுமணம் கமழச் செய்தால் வாழ்க்கை எப்படிப் பொலிவுறும்! புத்தாண்டு எப்படிப் பொருள் பெறும்!

ஞானியாக மக்கள் கருதிப் போற்றிய அந்தப் பெரியவரிடம் இளைஞன் ஒருவன் வந்தான். அவரைச் சோதிக்க எண்ணி உள்ளங்கைக்குள் ஒரு சிட்டுக் குருவியை மறைத்துக் கொண்டு கேட்டான்: சிட்டுக்குருவி உயிரோடு இருக்கிறதா? இல்லை இறந்து விட்டதா?" இறந்து விட்டது என்று சொன்னால் குருவியைப் பறக்க விட்டு உயிரோடு இருக்கிறது எனச் சொல்லலாம். உயிருள்ளது என்று சொன்னால் மெதுவாக நசுக்கிக் கொன்றுவிட்டு இறந்து விட்டது என்கலாம் என்பதுதான் இளைஞனின் திட்டம். ஞானி சொன்ன பதில்: அது உன் கையில் இருக்கிறது" புத்தாண்டு எப்படி இருக்கும்? அது உன்னைப் பொருத்தது.

"இறைவன்தாமே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உனைக் கைவிடுவதும் இல்லை. நீ பயப்படவும் கலங்கவும் வேண்டியதில்லை" (இ.ச.38:8) என்ற நம்பிக்கை உணர்வில், அதோ அங்கே ஒரு தேவை! உன்னால் அதனைத் தீர்த்து வைக்க முடியும். இதோ இங்கே ஒரு புண்! உன்னால் இதனை ஆற்றிவிட முடியும்" என்ற இலட்சிய ஈடுபாட்டில் புதிய வாழ்க்கைப் பாதை பிறக்கட்டும். புதிய ஆண்டின் ஒவ்வொருநாளும் கடந்து செல்லட்டும்.

புலர்ந்துள்ள புதிய ஆண்டில் மளங்களில் மகிழ்ச்சி மலரட்டும், இல்லங்களில் நல்உறவு வளரட்டும். வாழ்க்கையில் வளமை பெருகட்டும்!
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
 
 
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
 
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
 
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

 
 
 

  
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே