ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

       பொதுக்காலம் 27ஆம் வாரம் - ஞாயிறு

    திருப்பலி முன்னுரை

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
வளமிகு குடும்பத்திற்கு வரம் வேண்டி வந்திருக்கின்ற அன்பு உறவுகளே!
B தவக்காலம்1
ஆண்டின் பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு திருமணம் என்ற திருவருட்சாதனத்தின் மாண்பை சிறப்பிக்க விரும்புகிறது. இந்த சிறப்பு திருப்பலி வைபவத்திற்கு, நமது குடும்ப உறவினர்களே நம்மை இன்று அன்போடு அழைக்கிறார்கள். கணவர் மனைவியையும், மனைவி கணவரையும், பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும் உறவோடு வாருங்கள் என வரவேற்கிறார்கள்.

கடவுள் மனித குலத்துக்கு அளித்த மாபெரும் " பொக்கிஷம்" திருமணம் ... இந்த திருமணம் என்ற பொக்கிஷம், திருச்சபையின் திருவருட்சாதனத்தால் ஆணையும் பெண்ணையும் இணைத்து வைக்கிறது. இன்றைய நற்செய்தி இந்த பொக்கிஷத்தைப் போற்றிப் பாதுகாக்கும் திருவருட்சாசன வார்த்தைகளை நம் இதயத்தில் பொறித்து வைக்கிறது.

உலக உறவுகளில் உயர்ந்த உறவு திருமண உறவு. திருமணம் என்ற திருவருட்சாதனத்தால் அமைக்கப்பட்ட குடும்ப உறவில் புனிதம் கமழவேண்டும். அம்மா, அப்பா, மகன், மகள் என்ற உறவு அமைப்புகள் அன்பு, பண்பு, பாசம், ஒழுக்கம் என்ற அறநெறி வட்டத்துக்குள் புதிய புதிய வளையங்களால் இணைக்கப்பட்டு முடிவின்றி தொடரும் உறவு அமைப்பாகும். இந்த உறவு வளையங்களின் இணைப்பாளர் கிறிஸ்துவே! எனவே கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள உறவை பிரதிபலிப்பதாக இந்த குடும்ப உறவு வளையம் அமைய வேண்டும்.

குடும்ப உறவு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உறவு. இதில் பிளவின்றி இணைந்து வாழவேண்டியது கணவன் மனைவி கடமை. கடவுள் இணைத்தது மனிதன் பிரிப்பதற்கு அல்ல. நெருங்கிய உறவோடு இணைந்து வாழ்வதற்கே!

கணவர் மனைவியையும், மனைவி கணவரையும் கண்ணின் இமையென, நகத்தின் சதையென ஒருவரை ஒருவர் மதித்துப் போற்றி குடும்ப உறவை பாதுகாக்க வேண்டும்.

பிரிந்து வாழும் தம்பதியரை சேர்த்து வைத்திட, சந்தேகங்களை தீர்த்து வைத்திட, மணவாழ்வின் சந்தோஷங்களை இன்னும் மிகுதியாக்கிட கடவுளின் அருள், தீர்த்தமாய் திருப்பலியில் தெளிக்கப்படுகிறது. அருளில் நனைந்து, பலியில் இணைந்து, நமது குடும்பம் என்ற குட்டித் திருச்சபையை கட்டிக்காத்திட வரம் கேட்டு செபிப்போம்.

 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. வாழ்நாளெல்லாம் எங்களுக்கு ஆசி வழங்கும் ஆண்டவரே!
எமக்கு உமது ஆசியை இவ்வுலகில் வழங்க நீர் தேர்ந்தெடுத்த திருச்சபைக்காகவும் திருத்தந்தைக்காகவும் செபிக்கிறோம். திருத்தந்தை 16ஆம் ஆசீர்வாதப்பர் உடல் உள்ள சுகத்துடன் பணியாற்றவும், அவரோடு இணைந்து பணியாற்றும் திருப்பணியாளர்கள் பணி சிறக்கவும் அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருடைய நலனுக்காக உழைப்போரை உருவாக்கும் இறைவா!
எல்லா மக்களும் எல்லா நலனும் பெற்று வாழச் செய்யும் தலைவர்களை உருவாக்கி, எங்கள்நாட்டிற்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இறையாட்சி பணி செய்வோரைத் அறிமுகப்படுத்திய தெய்வமே எம் இறைவா!
உம்மைப் பற்றிய செய்தியை விளம்பரப்படுத்தும் எமது ஆன்மீகத் தந்தை, இறையாட்சிக்கு உழைக்க நீடிய ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், குறைவற்ற அருளையும் தந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று என அவனுக்குத் தகுந்த துணையைப் படைத்த இறைவா!
திருமணம் என்ற திருவருட்சாதனத்தால் இணைந்து வாழும் தம்பதியரிடையே எழும் கருத்து வேறுபாடுகளை அகற்றி, இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து வாழவேண்டுமென்று தாங்கள் அளித்த வாக்குறுதியின் மேன்மையை உணர்ந்து வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என உரைத்த இறைவா!
மணவிலக்கு இறைவனின் திட்டத்திற்கு, சட்டத்திற்கு முரணானது என்பதை உணர்ந்து, கணவன் மனைவியர் திருமணத்தின் உயரிய பண்புகளை அணிந்து, குடுமபத்தை சீரும் சிறப்பும் நிறைந்த பாதையில் நடத்தி, பிள்ளைச் செல்வங்களை ஒலிவக் கன்றென வளர்த்தெடுக்க அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. திருமணங்களை தேசத்தை செழிக்கச் செய்யும் ஆயுதமாக மாற்றும் தெய்வமே!
வரன் தடையால் வருந்துவோருக்கு நல்ல மணவாழ்வை கூடி வரச்செய்யவும், தங்களுக்குள் பொருத்தமில்லை என பிரிந்து வாழும் தம்பதியரை இணைத்து வைக்கவும், கணவன் மனைவியை நேசிக்கவும், மனைவி கணவரை நேசிக்கவும், அன்பு நிறைந்த தம்பதியரின் மணவாழ்வில் இன்னும் அதிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், இதனால் தேசத்தை செழிக்கச் செய்யவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 
மறையுரை சிந்தனைகள்
  
குடும்பம் ஒரு கருவூலம்
ஜார்ஜ் எழுபது வயது நிரம்பிய பெரிய மனிதர். வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர். உலகிலுள்ள பல்வேறு பெருங்கடல்களில் கப்பல் ஓட்டித் தனது வாழ்வின் பெரும்பாலான பகுதியைக் கழித்தவர். இவருடைய தம்பி மகன் பில் என்பவர். இவர் தனது மனைவியுடனும் ஐந்து மக்களுடனும் வாழ்ந்து வந்தார். பில் பெரியப்பா ஜார்ஜூவைத் தன்னுடனேயே வந்து தங்கும்படி அன்போடு அழைத்தார். ஜார்ஜூம் பில்லுடைய அழைப்பை ஏற்று அவருடன் வந்து வாழ ஆரம்பித்தார். இந்த ஏற்பாடானது இருவருக்குமே பிரியமான ஒன்றாக இருந்தது. காரணம் ஜார்ஜூக்கு குடியிருக்க இல்லிடம் ஒன்று கிடைத்தது. பில்லினுடைய குடும்பத்தினருக்கு ஜார்ஜ் உலகம் முழுதும் கடற்பயணம் செய்த தமது அனுபவத்தைக் கதைகதையாகச் சொன்னதைக் கேட்டபோது தாங்களே கனவுலகில் உலகைச் சுற்றி வந்ததைப் போன்ற ஒரு மனநிறைவு ஏற்பட்டது.

சிற்சில சமயங்களிலே தனது இல்லற வாழ்க்கையானது பில்லுக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. தனது காலுக்குக் கட்டுப்போடாதபடி சுதந்திரச்சிட்டுப் பறவையாக உலகங்சுற்றினால் எவ்வளவு நலமாயிருக்கும் என எண்ணி பில் ஏங்கினான். அத்தோடு தன் எண்ணத்தை வெளியிடவும் செய்தான்.

ஒரு நாள் மாலை பில்லினுடைய பெரியப்பா தூர தேசமொன்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது புதையல் பூமியைப் பற்றிய வரைபடம் ஒன்றைப்பற்றிக் குறிப்பிட்டார். இச் செய்தியானது பில்லினுடைய மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஜார்ஜ் பெரியப்பா காலமானார். ஜார்ஜின் உடைமைகளை பில் தேடிப்பார்த்தார். அதில் பில்லுனுடைய முகவரி எழுதப்பெற்ற கவர் ஒன்றைக் கண்டான். அந்தக் கவருக்குள் வரைபடம் ஒன்று இருந்தது. நடுநடுங்கும் கைகளுடனும் பதைபதைக்கும் உள்ளத்துடனும் வரைபடத்தை திறந்து புதையல் பூமி எங்கே அமைந்திருக்கிறது என்று தேட ஆரம்பித்தான். இறுதியாக திட்டவட்டமாக எந்த இடம் என்பதைக் கண்டுபிடித்தான். பில்லுடைய வீடு இருந்த இடம்தான் புதையல் புதைக்கப்பட்டிருந்த இடம் என்பதை பில் புரிந்து கொண்டான். ஜார்ஜ் பெரியப்பா பில்லிற்கு "உண்மையாகவே குடும்பம் ஒரு புதையல"; என்பதை உணர்ந்து கொள்ளும்படிச் செய்ததன் வழியாக ஜார்ஜ் பில்லுக்கு ஒரு சொத்தை விட்டுச் சென்றிருந்தார்.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு கருவூலம் ஆகும். இல்லம் என்பது புனிதமானது. குடும்பத்தின் புனிதத்தைக் காப்பாற்ற நமக்கு இயற்கைக்கு மேற்பட்ட அருட்கொடைகள் தேவை. அவைகளைப் பெற்றுக்கொள்ள திருக்குடும்பத்தின் உறுப்பினர்களான இயேசு, மரியாள், சூசை ஆகியோரின் வழியாக இறைவனிடம் ஒவ்வொரு நாளும் மன்றாடுவோம்.

இந்த பொக்கிஷத்துக்குள் வாழ்நாள் முழுவதும் ஒரு ஆண் ஒரு பெண்ணுக்குத் துணையாக வாழ திருச்சபை சமூகம் ஏற்படுத்திய உடன்படிக்கையால் ஆன ஒப்பந்த பிணைப்பே குடும்ப உறவாக உள்ளது. உறவோடு வாழும் குடும்பம் தெய்வம் தங்கி வாழும் ஆலயம். அந்தக் குடும்பம் தெய்வத்தின் உடனிருப்பை உணரும், தெய்வத்தின் ஆசியை அனுபவிக்கும். அவர்கள் உணவு உண்ணுமிடத்தில் ஒலிவக்கன்றுகள் போல அவர்களுடைய பிள்ளைகள் இருப்பர். என விவிலிய வார்த்தையும் திருமண உறவுக்கு ஆசி கூறி சிறப்பிக்கிறது.

கணவன் அகல் விளக்காகவும் மனைவி அதிலுள்ள எண்ணெய்யாகவும் குழந்தைகள் திரியாகவும் இருந்தால் அகல் விளக்கின் ஒளியைப் போலக் குடும்பமும் பிரகாசிக்கும்.

வீடு தரைமேல் நிற்பதில்லை. ஒரு பெண்ணின் மேல் நிற்கிறது.


பிரான்ஸ் நல்ல தாய்மார்களைப் பெற்றிருந்தால் பிரான்ஸிற்கு நல்ல பிள்ளைகள் கிடைப்பார்கள்-நெப்போலியன்

பிடுங்கிப் பிடுங்கி நட்ட மரமும் பெயர்த்து சென்ற குடும்பமும் தழைத்து வருவதை நான் கண்டதில்லை. ரிச்சர்டு சாண்டேர்ஸ்


இன்பமான குடும்பம் முன்கூட்டியே காணும் விண்ணகமாகும். பௌரிங்.

சமூகம் போற்ற வாழும் பெற்றோரின் குழந்தைகள், தங்கள் எதிர்கால வாழ்க்கையை அற்புதமான அடித்தளத்தின் மீது கட்டி எழுப்பி சமூக செழிப்பின் காரணியாக இருப்பார்கள்.

அவன் ஓர் ஏழை. அருகிலே உள்ள காட்டிற்கு விறகு வெட்டச் சென்றான். விறகு வெட்டும்போது கோடாரி காட்டிற்குள் தவறி விழுந்து விட்டது. அதைத் தேடி களைத்துப் போனான். தவித்தும் போனான். காரணம் அந்தக் கோடாரிதான் அவனுக்கு உலகம். கவலையோடு தேடிக் கொண்டிருந்த அவனை தேவதை ஒன்று கவனித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு உதவவும் முன் வந்தது. அருகில் சென்று அவனை அன்போடு விசாரித்தது. தொடர்ந்து கோடாரியை தேடிக் கண்டுபிடித்து தர முன் வந்தது. முதலில் ஒரு வைரக் கோடாரியை எடுத்துக் காட்டியது. அவன் "இல்லை" என்று தலையசைத்தான். மீண்டும் ஒரு தங்கக் கோடாரியை எடுத்துக் காட்டியது அப்போதும் அவன் "இல்லை" என்று தலையசைத்தான். மீண்டுமாக ஒரு இரும்புக் கோடாரியை எடுத்துக் காட்டியது. அவனும் "ஆமாம்" என்று தலையசைத்து வாங்கிக் கொண்டான். அப்போது அந்த தேவதை மூன்று கோடாரிகளையும்; கொடுத்து " நீயே வைத்துக் கொள்" என்றது. மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.

ஒரு நாள் வீட்டுச் சண்டையில் அவன் மனைவி கோபித்து கொண்டு எங்கோ சென்று விட்டாள். அப்போது அவளை எங்கு தேடியும் காணாமல் காட்டிற்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். அப்போது அந்த தேவதை வந்தது. அவன் மிகுந்த ஆhவத்தோடு தன் மனைவியைத் தேடித் தருமாறு கெஞ்சினான். அப்போது தேவதை அவனை சோதிக்க விரும்பியது. இந்;த உலகிலேயே அழகான பெண்ணைக் காட்டி "இது தான் உன் மனைவியா?" என்று கேட்டது. "ஆம் இதுதான் என் மனைவி" என்றான். தேவதை அதிர்ச்சியோடு "ஏன் பொய் சொல்கிறாய்?" என்று கேட்டது. அப்பொழுது அவன் சொன்னான், "நீங்கள் இன்னொரு பெண்ணைக் காட்டுவீர்கள். பிறகு, என் மனைவியைக் காட்டுவீர்கள். மூன்று கோடாரியையும் நீயே வைத்துக் கொள் என்று சொன்னது போல, இறுதியில் மூன்று பேரையும் வைத்துக் கொள்ள சொல்வீர்கள். ஒரு மனைவியே எனக்கு தலைவலியாக இருக்கிறாள். மூன்று பேரை என்னால் சமாளிக்க முடியாது" என்று பதில் சொன்னான்.

ஒரு நிறுவனத்தில் புதிதாக வந்த மேலாளர் எல்லா ஊழியர்களையும் அழைத்து " இன்று முதல், விபத்துக்காகவும் சாவுக்காகவும் அன்றி, வேறு எக்காரணத்திற்காகவும் யாரும் எந்த விடுமுறையும் எடுக்கக் கூடாது." என்றாராம். உடனே ஒரு ஊழியர் திருமணத்திற்குக் கூடவா விடுமுறை எடுக்கக் கூடாது? என்றாராம். உடனே மேலாளர் திருமணம் என்பதை வாழ்க்கையில் நடக்கும் பெரிய விபத்துதானே! என்றாராம்.

இன்றைய திருமணங்கள் பல அப்படித்தானே இருக்கிறது.

"நிலம் வாங்குவதற்கு என்றால் வேகமாக நட. ஒரு திருமணம் செய்வதற்கு என்றால் மெதுவாக நட" -யூதப் பழமொழி

"போருக்குப் போகும் போது ஒருமுறை செபி, கடலுக்குப் போகும் போது இரு முறை செபி. திருமணம் செய்யப் போகும் போது மும்முறை செபி" - ஜெர்மன் பழமொழி.

குடும்பம் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டும். கற்பென்னும் கலங்காத நிலை ஒரு பெண்ணுக்கு அமைந்திருக்குமானால் அப்பெண்ணைவிட பெருமை உடையவை வேறு எதுவுமில்லை .-யாரோ.

பெண்மையின் இன்னலை ஆற்றும் அருமருந்து அன்புக் கணவன். -யாரோ

நாணத்தை சுமந்து நிற்கும் போது பெண் அழகு பெறுகிறாள். அறத்தை சுமந்து நிற்கும் போது ஆண் அழகு பெறுகிறான். யாரோ.

ஆண் பெண் இருவரும் ஒருமனப்பட்டு வாழும் கல்விக்கூடம் திருமணவாழ்க்கை. இதைவிட சிறந்த கல்வி உலகில் இல்லை. -ஷா

பசி, காமம், அன்பு, அகம்பாவம் என்ற நான்கு தூண்களில் குடும்பம் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் ஒரு தூண் ஆடினாலும் குடும்பம் கலைய ஆரம்பிக்கும். -க.சந்தானம்

குடும்ப வாழ்க்கையை செம்மைப் படுத்துவது அன்பு.

திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக் கொள். திருமணம் ஆனவுடன் ஒன்றை மூடிக்கொள். அமெரிக்கா பழமொழி

பெண், ஆணைப் படைத்து வளர்ப்பவள். ஆணை ஆட்கொண்டு வாழ்விப்பவள் உலக விவகாரங்களில் முழுப்பங்கும் ஏற்று பெண்கள் உழைக்காவிட்டால் உலகம் ஒரு நாளும் நல்ல நிலைமையை அடைய முடியாது. - பெர்னாட்ஷா

குழந்தைகளை உண்மையாக உருவாக்கும் சிற்பி தாய் தான். எனவே தாய்மார்கள் தங்கள் உரிமைகளை மிகக் கவனமாக பயன்படுத்தினால் பிறரால் மதிக்கப்படும் குழந்தைகள் உருவாகும். -கிரேக்கம்.

பெண்களுள் சிறந்தவர் யார்? எவருடைய பெயர் ஆண்கள் மத்தியில் அதிகமாக நல்ல விதமாகக் கூட அடிபடுவது இல்லையோ அவரே பெண்களுள் சிறந்தவர். -பெரிக்லீஸ்

மூவொரு இறைவனின் அன்பு உறவு பூமியில் நமது குடும்ப உறவு. ஆணும் பெண்ணுமாய் இணைந்து பூமியில் அன்பு இறைவனை பிரதிபலிக்கச் செய்வோம்.

இல்லறத்தை நல்லறத்தால் வளர்த்தெடுப்போம்.
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

இருவர் அல்ல ஒருவராக ஒன்றிணைக்கப்பட.....
 
இன்றைய இறைவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நம்மை இறை குடும்ப உறவோடு ஒன்றித்து வாழ அழைக்கின்றன. முதல் வாசகம், படைப்பின் தொடக்கத்தில் இருவர் ஒருவராக இணைந்து ஒன்றித்தது பற்றியும் , இரண்டாம் வாசகம் இயேசுவோடு நாம் மாட்சியில் பங்குகொள்ள ஒன்றிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும், நற்செய்திவாசகமோ கணவன் மனைவி திருமண உறவில் ஒன்றித்து வாழ்வது பற்றியும் எடுத்துரைக்கின்றன. தமிழ் சங்க இலக்கியங்களில் கணவன் மனைவி உறவு, ஆண் பெண் திருமண உறவு எப்படி இருந்ததை பாடல்கள் மூலம் அழகாக சொல்லி இருப்பர்.
 
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்,
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே". என்பது பாடல் வரிகள் நீ யார் ,நான் யார் என்று தெரியாது . உனது தாய் தந்தையர்கள், எனது தாய் தந்தையர்கள் யார் என்று அறீயோம். ஆயினும் நமது நெஞ்சம் செம்மண்ணில் கலந்த நீர் போல இரண்டறக் கலந்து விட்டது என்று தலைவன் தலைவியை நோக்கி பாடுவதாக பாடலின் பொருள். திருமணத்தன்றும் அதன்பின் சிலகாலமும் இப்படி தான் நமது திருமணத் தம்பதியர்கள் இருக்கின்றனர். ஆனால் அதன் பின் செம்மண், நீர் கலக்க முடியாத படி இறுகியும் , நீரானது திரவ நிலை மாறி திட நிலைக்கு தன்னை மாற்றியும் காட்சியளிக்கின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உன்னோடு இருப்பேன் என்று அனைவர் முன்னிலையிலும் அறிக்கையிட்ட மனிதர்கள் தான், தங்களது துணைவன் துணைவியை தமது சுயநலத்திற்காக விட்டுச்செல்கின்றார்கள். இப்போதெல்லாம் விவாகரத்து ஒரு நிமிடத்திற்கு பத்து உலகளவில் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பிரச்சனை இன்று நேற்று மட்டுமல்ல . இயேசுவின் காலத்திலும் ஏன் மோசே காலத்திலும் இருந்தது என்பதற்கு நம்முடைய இன்றைய வாசகங்கள் சான்று. ஏன் ? எதனால்? இந்நிலையில் எவ்வாறு ஒன்றித்து வாழமுடியும் ?

கணவன் மனைவி உறவு மேம்பட நம் ஒவ்வொருவரின் குடும்பமும் திருக்குடும்பமாக வாழ என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி சிந்தித்து தியானிக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர், ஏனெனில் பல்கலைக்கழகத்தில் தான் சிறப்பாக கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் முடியும் . நமது குடும்பங்களில் நாம் ஒருவர் மற்றவரிடம்(கணவன்,மனைவி) இருந்து நல்லவற்றை, சிறப்பானவற்றைக் கற்றுக்கொள்ளவும், (பிள்ளைகளுக்கு) கற்றுக்கொடுக்கவும் முடியும். அதனால் தான் குடும்பத்தைப் பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடுகின்றார்கள். நமது குடும்ப உறவு மேம்பட, நாம் ஒன்றிப்புடன் வாழ நம்மில் தளிர்க்க வேண்டியவையும் தவிர்க்க வேண்டியவையும் இரண்டு.

தளிர்க்க வேண்டியவை அன்பும் அளவளாவுதலும். தவிர்க்க வேண்டியவை அகங்காரமும் அலட்சியமும். நம்மில் தவிர்க்க வேண்டியவற்றை நாம் தவிர்த்தால் தளிர்க்க வேண்டியவை தானாய்த் தளிர்க்கும்.

அகங்காரம்: அகந்தை, தான் என்னும் முனைப்பு, ஈகோ என்று இதனை எத்தனை பெயர்களில் வேண்டுமானாலும் சொல்லலாம். அகம் தன்னை கொல்லும் அந்த 'ஐ' யை அடியோடு விட்டொழிக்க முயல்வோம். குடும்பத்தில் நான் தான் பெரியவன், அறிவாளி, புத்திசாலி என்று ஒரு கணவனோ மனைவியோ எண்ண ஆரம்பித்தால் குடும்பம் சிதைந்து சின்னா பின்னமாகி விடும். அங்கு வளர்ச்சி இருக்காது தளர்ச்சி தான் இருக்கும். "நான் தான் எல்லாம் " என்னும் அகந்தையை சுமந்து கொண்டு வாழ்ந்தால் , வாழ்வில் காணக்கிடக்கும் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களை நாம் காண முடியாது போய் விடும். காகம் ஒன்று தனக்கு கிடைத்த ஒரு மாமிசத்துண்டை வாயில் கவ்வியபடி வானில் பறக்கத் தொடங்கியது. இதனைக் கண்ட பிற காகங்கள் அதனிடம் இருந்து அதை பறிக்க எண்ணி அதைப் பின்தொடர்ந்தன. கூடவே கழுகுகள் இரண்டும் அதை துரத்தின. வாயில் வைத்திருக்கும் உணவா? வாழ்வா என்று எண்ணி காகம் வேகமாக பறக்க ஆரம்பித்தது. உயரத்தில் பறந்த காக்கையை பிற காக்கைகளும் கழுகுகளும் துரத்திய படியே சென்றன. ஒரு நிலையில் காகம் தன் வாயில் வைத்திருந்த மாமிசத்துண்டை கீழே போட்டது. பிற காகங்களும் கழுகுகளும் மாமிசத்தைப் பிடிக்க தொடர்ந்து சென்றன. இப்போது தான் காக்கைக்கு மூச்சு வந்தது. மாமிசம் தான் நிம்மதி என்று எண்ணி அதை பிடித்துக் கொண்டிருந்த போது இல்லாத மகிழ்வு, காக்கைக்கு இப்போது வந்தது. தன் கண்முன் இருந்த அழகான வானத்தை அப்போது தான் ரசிக்க தொடங்கியது. நாமும் நமது குடும்பங்களில் பல நேரங்களில் இப்படி தான், தேவை இல்லாத ஏதாவது ஒன்றை பிடித்துக் கொண்டு நமக்கு எதிரே உள்ள மகிழ்வான தருணங்களை மறந்து விடுகிறோம். எப்போது நமது தான் என்னும் அகந்தையை கீழே வீச ஆரம்பிக்கின்றோமோ அப்போது நம் கண்முன் இருக்கும் அழகிய வாழ்வினை நாம் அணுஅணுவாக ரசித்து வாழ்வோம்.

2. அலட்சியம்: குடும்பங்களில் கணவன் மனைவியையோ இல்லை மனைவி கணவனையோ அலட்சியம் செய்வது மிக சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. என்னை விட நீ உயர்ந்தவர்/ள் அல்ல . உனக்கு ஒன்றும் தெரியாது. என்று சொல்லிலும் செயலிலும் பலமுறை நாம் அதை செயல்பாட்டில் காட்டுகின்றோம். ஆணோ பெண்ணோ அவரவர் செயலில் அவரவ்ர் சிறப்பு. ஒருவர் மற்றவரை செய்யும் அலட்சியம், இறுதியில் மோசமான விளைவுகளுக்கு காரணமாகின்றது. ஒருவர் மற்றவரிடம் இருக்கும் நன்மைகளை பாராட்டி மகிழ்வோம். சிறு பாராட்டு தான் என்றாலும் அதன் நல்ல பலனை உடனடியாக காண முடியும். அலட்சியத்தின் மிக முக்கியமான செயல் ஒருவர் பேசும் போது அவர் சொல்லுக்கு செவிமடுக்காதது. எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே வைத்து விட்டு அவர்களது சொல்லுக்கு மதிப்பளியுங்கள். நாம் சொல்வதை இவர் கேட்கிறார் என்னும் போதே உங்கள் மீதான அன்பும் மதிப்பும் உயர ஆரம்பிக்கும். நாம் இப்போதெல்லாம் இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றல் பெற்றவர்களாகிக் கொண்டிருக்கிறோம். விளைவு இரண்டு வேலைகளையும் ஒழுங்காக முடிக்க முடியாது அல்லாடுகிறோம். அலட்சியத்தை அகற்றி அன்பை நம் குடும்பங்களில் புகுத்துவோம். குடும்ப செபம் இதற்கு மிக முக்கிய பங்காற்றும். கூடி செபிக்கும் குடும்ப நிலை மாறி இப்போது கணினியில் குழு உரையாடல்களில் நேரம் செலவழிக்கும் குடும்பங்களாக மாறி இருக்கின்றோம். அந்நிலையை மாற்றி குடும்ப செபம் செபித்து பழகுவோம்.ஒருவரோடு ஒருவர் அன்போடு (உரையாடுவோம்) அளவளாவுவோம்

இறுதியாக, தவிர்க்க வேண்டியவைகளான அகங்காரத்தையும் அலட்சியத்தையும் தவிர்த்து அன்பையும் அளவளாவுதல் என்னும் உரையாடல் (பேசிப் பழகுதல்) பண்பையும் நம்மில் தளிர்க்க வைக்க இறையருள் நாடுவோம். இருவராக இணைந்த தம்பதியினரை ஒருவராக ஒன்றிணைப்பது/மாற்றுவது அன்பின் வலிமை என்றால், பல நபர்களால் ஆன குடும்பத்தை ஒரு அன்பின் கூடாக ஒன்றிணைப்பது/மாற்றுவது குடும்ப செபத்தின் வலிமை. நாம் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே, உருவாக்கப்பட்டவர்கள். இருவர் ஒன்றிணைந்தால் அது திருமணம், பலர் ஒன்றிணைந்தால் அது குடும்பம் எனவே ஒன்றிணைக்கப்பட அருள் வேண்டுவோம். குடும்பமாக குழுமமாக, ஒன்றிணைக்கப்பட அருள் வேண்டுவோம். செம்புலப்பெயல் நீர் போல இறைவனின் அன்பில் இரண்டறக் கலந்து இறையருள் பெறுவோம். இறைவனின் ஆசீரும் அருளும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருந்து நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பதாக ஆமென்.


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 மதிப்பிற்குரிய மறுபாதி
தெ சிம்போசியம்' (The Symposium) என்ற தனது உரையாடலில், அரிஸ்டோஃபேனஸ் என்ற கதைமாந்தர் வழியாக, பிளேட்டோ 'உயிர்த்துணை' (soulmate) பற்றிய ஒரு கதையைப் பதிவுசெய்கின்றார். தொடக்கத்தில் மனிதர்களுக்கு நான்கு கைகள், நான்கு கால்கள், இருபக்கம் பார்க்கின்ற ஒரே தலை, மற்றும் ஆண், பெண், ஆண்-பெண் என்ற மூன்று பாலினம் இருந்ததாம். 'ஆண்,' சூரியனிடமிருந்தும், 'பெண்,' பூமியிடமிருந்தும், 'ஆண்-பெண்' நிலவிலிருந்தும் வந்தவர்களாம். மனிதர்கள் நிறைய ஆற்றலைக் கொண்டிருந்ததால் கடவுளர்கள் அவர்களைத் தங்களின் எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கினர். இவர்களை அழிக்க விரும்பிய கடவுளர்களுக்கு 'சேயுசு' ஒரு அறிவுரை கூறுகின்றார்: 'மனிதர்களை அழிக்க வேண்டாம். அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டாக வெட்டி விடுவோம். தங்களின் மறுபாதியைத் தேடிக்கொண்டிருப்பதிலேயே அவர்கள் வாழ்க்கை கழிந்துவிடும். அவர்கள் அதிலேயே தங்கள் ஆற்றலை இழந்துவிடுவார்கள். நமக்கு எதிராக கிளர்ச்சி செய்ய மாட்டார்கள்.' கடவுளர்களுக்கு இந்த சேயுசின் இந்த அறிவுரை பிடித்திருக்க, மனிதர்களை இரண்டாக வெட்டிவிடுகின்றனர். அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொருவரும் தன் உயிர்த்துணையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நிற்க.
மனிதர்கள் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டே இருக்கும் மறுபாதியே உயிர்த்துணை. இந்த உயிர்த்துணையின் மதிப்பையும், அதன் இன்றியமையாத நிலையையும் நமக்கு முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. ஒவ்வொருவரையும் அவரவர் மறுபாதியை மதிப்பிற்குரியதாக நடத்த உதவுவது நிரப்புதன்மை.

உயிர்த்துணை (soulmate), மறுபாதி (the other half), நிரப்புதன்மை (complementarity) என்ற மூன்று சொல்லாடல்களை முதலில் வரையறை செய்துகொள்வோம்.

1. உயிர்த்துணை
நம் தமிழ்மொழியில், திருமணத்தால் இணைக்கப்பெற்ற மனைவியை கணவரும், கணவரை மனைவியும், 'வாழ்க்கைத்துணை' என அழைக்கிறோம். 'உயிர்' மற்றும் 'வாழ்க்கை' என்னும் இரண்டு சொற்களுமே ஓரளவு மாற்றி பயன்படுத்தப்படக்கூடியவையே. 'துணை' ('help' or 'helper') எப்போது நமக்குத் தேவைப்படுகிறது? நம்மால் ஒன்றை நாமே செய்ய முடியாதபோது, அல்லது பயணம் செய்ய முடியாதபோது துணைக்கு ஒருவரை அழைக்கிறோம். ஆக, வாழ்வில் சேர்ந்து சுமக்கவும், சோர்ந்து விழாமல் பயணம் செய்யவும் உடன் வருபவர் வாழ்க்கைத் துணை. இவரை நாம், 'நுகத்தடித்துணை' என்றும் அழைக்கலாம். அதாவது, ஒரு கலப்பையை அல்லது வண்டிய இழுக்க இரண்டு மாடுகள் நுகத்தில் பூட்டப்பட வேண்டும். நுகத்தில் பூட்டப்படும் இரண்டு மாடுகளுமே ஒரே அளவு, வலிமை, நகர்வு கொண்டிருக்க வேண்டும். ஆக, வாழ்க்கை என்ற வண்டியை இழுக்க, நுகத்தோடு இணையும் துணையே உயிர்த்துணை.

2. மறுபாதி
'பகுதி' என்பதுதான் 'பாதி' என மருவி வந்திருக்கிறது என்கிறது தமிழ் இலக்கணம். 'மறுபாதி' அல்லது 'மறு பகுதி' என்று சொல்லும்போது, அதில் 'ஒருபாதி' அல்லது 'ஒரு பகுதி' மறைந்திருக்கிறது. 'ஒரு பகுதியின்' மீதியே 'மறு பகுதி.' ஆக, கணவர் 'ஒருபாதி' என்றால், மனைவி 'மறுபாதி.'

3. நிரப்புதன்மை
பகல்-இரவு, ஒளி-இருள் என்ற இருதுருவங்களை எடுத்துக்கொள்வோம். இத்துருவங்கள் ஒன்றோடொன்று எதிர்த்து நிற்பவை அல்ல. மாறாக, ஒன்றோடொன்று பொருந்தக்கூடியவை. அல்லது ஒன்றையொன்று நிரப்பக்கூடியவை. பகல் இரவையும், ஒளி இருளையும் நிரப்புவதுபோல, ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் நிரப்புகின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு, மேற்காணும் மூன்று சொல்லாடல்களைக்கொண்ட ஒரு முக்கோணமாக நகர்கிறது.

முதல் வாசகத்திலிருந்து (காண். தொநூ 2:18-24) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.
இன்றைய முதல் வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
1. ஆதாமை வாட்டும் தனிமை
2. இந்த தனிமைக்கு இறைவனே தன் படைப்புப் பொருளில் ஆள் தேடுகின்றார்
3. தனிமை போக்க பெண்ணைப் படைக்கின்றார்
4. ஆண்-பெண் இணைந்திருத்தலின் நோக்கம் கற்பிக்கப்படுகின்றது
கடவுள் தான் படைத்த அனைத்தையும் பெயரிடுமாறு ஆதாமிடம் கொண்டு வருகின்றார். பெயரிடுதல் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, பெயரிடுதல் ஒருவர் மற்றவர்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தைக் குறிக்கின்றது. இரண்டு, பெயரிடுதல் ஒருவர் மற்றவருக்கு மேல் உள்ள உரிமையை அல்லது உறவைக் குறிக்கின்றது. இதில் என்ன விந்தை என்றால், எல்லாவற்றிற்கும் பெயரிடும் ஆதாமால் தான் உறவுகொள்ள தனக்கேற்ற துணை எதுவும் இல்லை என்பதுதான். ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கம் வரச்செய்த இறைவன் அவனது உடலிலுள்ள விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணாகப் படைக்கின்றார். பெண்ணைக் கண்டவுடன், 'இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். 'ஈஷ்'இடமிருந்து எடுக்கப்பட்டதால் 'ஈஷா' என்றழைக்கப்படுவாள் என்று பெண்ணுக்கு பெயர் கொடுக்கின்றான் ஆதாம். இறுதியாக, ஆண்-பெண் இணைந்திருப்பதின் நோக்கம் என்ன என்பது கற்பிக்கப்படுகின்றது.

தனிமை என்பது 'துணையின்மை' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தனிமை என்பது ஒரு உணர்வு. தனித்திருப்பது என்பது ஒரு எதார்த்தம். உதாரணத்திற்கு, நான் வேலையினிமித்தம் சென்னை செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். மதுரையில் என் வீட்டோடு தங்கியிருக்கும் நான் சென்னைக்குச் சென்று ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குகிறேன். ஆக, சென்னையில் நான் தனித்திருக்கிறேன். ஆனால், நான் தனிமையாய் உணரத் தேவையில்லை. என் வீட்டில் இருப்பவர்களோடு ஃபோனில் பேசலாம். டிவி பார்க்கலாம். தூங்கலாம். புத்தகம் வாசிக்கலாம். புதிய மனிதர்களோடு அறிமுகம் செய்து கொள்ளலாம். தனிமையில்லாமலும் தனித்திருக்கலாம். தனித்திருக்காமலும் தனிமை இருக்கலாம். சில நேரங்களில் என் வீட்டில் எல்லாரும் சூழ்ந்திருந்தாலும் தனிமை என்ற உணர்வு என்னை வாட்டி எடுக்கலாம். இதுவரை தான் படைத்த அனைத்தும் 'நன்று', 'நன்று' என்ற கடவுள், முதன் முறையாக 'மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று!' என்று வருத்தப்படுகின்றார். ஆக, தனிமை என்ற உணர்விற்கு மருந்தாக முன்வைக்கப்படுபவர் பெண்.

அடுத்ததாக, 'தனக்கு தகுந்த துணையை மனிதன் காணவில்லை' என்கிறது பாடம். ஆக, ஆதாம் இதுவரை பெயரிட்ட மரங்கள், விலங்குகள் அனைத்தும் அவனுக்கு கீழே இருப்பவை. அவனுக்கு நிகராக இருக்கும் 'துணை' அங்கு இல்லை. இந்தத் துணையை ஆணின் விலா எலும்பிலிருந்து உருவாக்குகிறார் கடவுள். மேலும், எடுத்த இடத்தை சதையால் அடைக்கிறார். என்ன ஒரு விந்தை? 'எலும்பு சதையால் அடைக்கப்படுகிறது. எலும்பு ஒரு சதையாக உருப்பெறுகிறது.' அதாவது, 'கடினம்' என்னும் இயல்பு, 'மென்மை' என்ற இயல்பாக மாறுகிறது. மேலும், 'கடினம்' என்ற இயல்பை, 'மென்மை' என்ற இயல்பு நிரப்புகிறது. ஆணின் தலையிலிருந்து பெண் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணை ஆட்சி செலுத்த முடியாது. ஆணின் காலிலிருந்து அவள் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணுக்கு அடங்கி இருக்க முடியாது. மாறாக, அவள் விலா எலும்பிலிருந்து, இதயத்திற்கு அருகில் இருந்து எடுக்கப்படுகிறாள். ஆகவே, அவள் ஆணுக்குச் சமமாக இருக்கிறாள். ஆண் அவளை இதயத்திற்கு அருகில் வைக்க வேண்டும். பெண் அந்த இதயத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இறுதியாக, திருமணத்தின் நோக்கம். 'கணவன் தன் தாய் தந்தையை விட்டு' (தொநூ 2:24) என்ற இந்த வசனம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இங்கே ஆதாம்-ஏவாள்தான் முதற்பெற்றோர். இவர்களுக்குத் தாய் தந்தையர் யாருமில்லை. திருமணத்தில் ஆண் தன் பெற்றோரை விட்டு பெண்ணோடு சேரும் பழக்கம் நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. நம் கலாச்சாரத்தில் பெண்தான் தாய் தந்தையைவிட்டு தன் கணவனோடு கூடி வருகின்றார். திருமண உறவில் நிகழும் பெரிய மாற்றம் என்னவென்றால் ஆணும், பெண்ணும் புதிதாய்ப் பிறக்கின்றனர். இனி பழைய உறவுகளை அவர்கள் பிடித்துக் கொண்டிருத்தல் கூடாது. ஆக, ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தங்களையே அவர்கள் முழுவதுமாக ஒருவர் மற்றவருக்குக் கையளித்தல் வேண்டும்.

முதல் வாசகத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது, 'ஆணுக்கு' ஏற்ற உயிர்த்துணையாக 'பெண்' இருக்கிறாள். ஒரே உடலிலிருந்து எடுக்கப்பட்டதால், 'ஆண்' என்ற ஒருபாதியின் மறுபாதியாக இருக்கிறார் 'பெண்.' மேலும், இங்கே ஒருவர் மற்றவரின் தனிமையை நிரப்புவதால், ஆண்மையும், பெண்மையும் நிரப்புதன்மை கொண்டிருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 2:9-11) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு இத்திருமடலிலிருந்துதான் வாசகங்கள் தொடரும். 'வானதூதர்கள்,' 'மனிதர்கள்' என்ற இரண்டு பரந்த வகையினத்தைப் பற்றிப் பேசுகின்ற திருமடலின் ஆசிரியர், 'வானதூதர்களுக்கு மேலாக' இருந்த இயேசு, தான் மனித உரு ஏற்றபோது, அந்த நிலையிலிருந்து 'தாழ்ந்தவராக' இருக்கிறார் என்று முன்வைக்கின்றார். இவரின் இந்த இறங்கிவருதலே, அவர் மனிதர்களை, 'சகோதரர், சகோதரிகள்' என்று அவர் அழைக்கக் காரணமாக இருக்கிறது. அதாவது, 'இயேசு இவர்களைச் சகோதரர், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை' என பதிவு செய்கிறார் ஆசிரியர். 'கடவுளாக' இருந்த இயேசு, 'மனித' உரு ஏற்றதால், மனிதர்களை அவர் தம் 'உயிர்த்துணையாக' ஏற்றுக்கொள்கின்றார். மனிதராக அவர் மாறியது எதற்காக? மனிதர்களைத் தூய்மையாக்கவதற்காக. அதாவது, மனிதத்தின் மறுபாதியான தூய்மையை அவர்கள் கண்டுகொள்வதற்காக. இறுதியாக, இயேசுவின் மனித உரு ஏற்ற நிலை அவரை - கடவுளை - மனிதர்களோடு நிரப்புகிறது. இவ்வாறாக, கடவுளும் மனிதர்களும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்பவர்களாக அல்லாமல், நிரப்புபவர்களாக மாறுகின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை (காண். மாற் 10:2-16) இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்:
1. மணவிலக்கு பற்றிய இயேசுவின் போதனை (10:2-12)
2. இயேசு சிறுபிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் (10:13-16)

1. மணவிலக்கு அல்லது மணமுறிவு
இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மணமுறிவு பற்றி கட்டளை அல்லது விதிமுறை ஆணைக் காப்பாற்றும் முகமாகவும், பெண்ணை இழிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது. இயேசு அந்த விதிமுறை கொண்டிருந்த அவலத்தை தோலுரிக்கின்றார். மணவிலக்கு என்பது பற்றிய இயேசுவின் போதனை படைப்புத் திட்டத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. படைப்புத் திட்டத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிய இடம் இருக்கிறது என்றும், இதில் தடுமாற்றம் நிகழும்போது மனிதர்கள் கடவுளின் படைப்புத் திட்டத்தோடே விளையாடுகிறார்கள் என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றார் இயேசு. மேலும், மணமுறிவு விபச்சாரத்திற்கு வழிவகுக்கிறது என்பதும் இயேசுவின் போதனை. விபச்சாரத்தில் பெண் விலை பேசப்படுகின்றார். விபச்சாரத்தில் பெண் வெறும் மோகப்பொருளாகப் பயன்படுத்துகின்றார். அன்பு செய்யப்படுவதற்காக படைக்கப்பட்ட ஒன்றை பொருள் போல பயன்படுத்தத் துவங்குவது படைத்தவரையே இழிவு செய்வதாகும்.

ஆண் மற்றும் பெண் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் உயிர்த்துணையாக இருப்பதற்குத்தானே தவிர, ஒருவர் மற்றவரின் 'உடல்துணையாக' இருப்பதற்கு அல்ல. வெறும் உடல்துணையாக தன் மறுபாதியை கருதும்போதுதான், மணமுறிவு, விபச்சாரம், திருமணத்திற்குப் புறம்பே உறவு போன்றவை தோன்றுகின்றன. மேலும், இப்படிப்பட்ட பிறழ்வுகளில் மனிதர்கள் தங்களுக்கான மறுபாதியை பல மறுபாதிகளில் தேடி அங்கலாய்க்கின்றனர். இறுதியில், ஒருவருக்கொருவர் உள்ள நிரப்புதன்மை மறைந்து, எதிர்தன்மை வளர ஆரம்பிக்கிறது.

2. குழந்தைகள் ஆசீர் பெறுதல்
இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வையும் மாற்கு நற்செய்தியாளர் தொடர்ந்து பதிவு செய்வது, திருமணத்தின் நிறைவு குழந்தைப்பேறு என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
'குழந்தைகள்' திருமண உறவின் நீட்சிகள். 'பெற்றோர்' என்பவர்களின் 'வாழ்க்கைத்துணை' 'குழந்தைகள்.' 'பெற்றோர் நிலையின்' மறுபாதிதான் 'பிள்ளைநிலை'. மேலும், பெற்றோர் பிள்ளைகளை, பிள்ளைகள் பெற்றோரை நிரப்புகின்றனர்.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும், ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், இரண்டாம் வாசகம், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், நற்செய்தி வாசகம், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இன்றைய நம் வாழ்க்கைச் சூழலில், இம் மறுபாதி நிலையும், நிரப்புதன்மையும் முன்வைக்கும் சவால்கள் எவை?
ஒரே பாலின திருமணம், திருமணம் தவிர்த்த குழந்தைப்பேறு, தனக்குத்தானே திருமணம், தனிப்பெற்றோர், இணைந்து வாழ்தல், ஒப்பந்த திருமணம் என இன்று திருமணம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மேலும், திருமணத்திற்கு புறம்பான உறவு 'பிரமாணிக்கமின்மையாக' பார்க்கப்பட்ட நிலை மாறி, 'விருப்பநிலை' என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. காலப்போக்கில், அறிவியில் மற்றும் விஞ்ஞான மாற்றத்தால் ஒருவேளை மனிதர்கள் இறவாநிலையை அடைந்தார்கள் என்றால் - அதாவது, இயற்கை மரணத்தை தள்ளிப்போடுவது - முதலில் உடையும் நிறுவனம் திருமணமாகத்தான் இருக்கும். ஏனெனில், 200 அல்லது 300 ஆண்டுகள் வரை வாழும் மனிதர் ஒரே வாழ்க்கைத் துணையோடு வாழும் நிலை எப்படி இருக்கும்? மேலும், இன்று ஆண்-பெண், கணவன்-மனைவி உறவு நிலையில் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருவதும் கண்கூடு.

நாம் இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் பேசும் 'உயிர்த்துணை,' 'மறுபாதி,' 'நிரப்புதன்மை' ஆகியவை சாத்தியமா?

முதலில், இந்த மூன்று சொற்களுக்கும் மையமாக இருக்க வேண்டிய வார்த்தை மதிப்பு. அது என்ன மதிப்பு?
ஆண்-பெண் திருமண உறவில், நீதி மற்றும் அன்பைவிட முக்கியமானதாக இருக்க வேண்டிய ஒரு பண்பு என்னவென்றால் மதிப்பு. அதாவது, ஒருவர் மற்றவரை மதித்தல். மதித்தால்தான் நீதிக்கும் அன்புக்கும் அடித்தளமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் சாலையில் நடந்து செல்கிறேன். வழியில் ஒருவர் கேட்பாரின்றி படுத்திருக்கிறார். அவரை நான் மதித்தால்தான் அவருக்கு அருகில் சென்று அவரை நான் அன்பு செய்யவும், அவருக்கான நீதியை நான் பெறவும் முடியும். 'அவர் யாரே' என நான் வெறும் பிளாஸ்டிக் பேப்பர் போல அவரை நினைத்துக்கொண்டு கடந்து சென்றால், அவரை நான் மதிப்பதில்லைதானே.

ஆக, 'மதிப்பு' இருக்கும் இடத்தில் பிரமாணிக்கமின்மை மறையும். 'மதிப்பு' இருக்கும் இடத்தில் புரிதல் இருக்கும். இன்று, திருமண உறவோ, அல்லது துறவற உறவோ, அல்லது நட்பு உறவோ, அங்கே நம்மோடு உறவில் இருப்பவர் நம் மறுபாதியாக, நம் உயிர்த்துணையாக, நம்மை நிரப்புபவராக இருக்கிறார். அவருக்கு நான் கொடுக்க வேண்டியதெல்லாம் மதிப்பு மட்டுமே. அவர் 'என் மதிப்பிற்குரிய மறுபாதி' என்ற நிலை வந்தால் பாதி பிரச்சினை முடிந்துவிடும்.

இரண்டாவதாக, கண்ணுக்குப் புலப்படாத இறைத்தன்மை. நம் சக பாதியை, சக உயிர்த்துணையை நாம் வெறும் புறக்கண்களால் பார்த்தால் அவருடைய மனிதத்தன்மையும், குறைவும்தான் நம் கண்களில் படும். மாறாக, மற்றவரில் இருக்கும் இறைத்தன்மையை, அல்லது இறைவனின் கண் கொண்டு மற்றவரைப் பார்க்கும்போது, நாமும் ஆதாம்போல, 'இதோ, இவர் என் எலும்பின் எலும்பு, சதையின் சதை' என்று நாமும் சொல்ல முடியும்.

மூன்றாவதாக, ஒருவர் மற்றவரின் கைப்பாவை என்ற நிலை மாற வேண்டும். எப்படி?
கண்ணாடிப் பொருள்களை நாம் இடமாற்றம் செய்யும்போது, அவற்றை நாம் பொதியம் செய்து, அதன் மேல், 'உடையும் பொருள் - கவனம்' என எழுதுகிறோம். ஆனால், இப்படி எழுதப்படாத ஒட்டி ஒன்றை ஒவ்வொரு மனிதரும் தன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கிறார். மனிதர்கள் தங்களுக்குள்ளே உணர்ந்த முதல் எதிர்மறை உணர்வு 'தனிமை.' இந்தத் தனிமையே மனிதரின் 'வடுப்படும்நிலை' ('vulnerability') அல்லது 'நொறுங்குநிலை' (fragility) இந்த நொறுங்குநிலையில் இருக்கும் ஒரு ஆண், இதே நொறுங்குநிலையில் இருக்கும் பெண்ணின் துணையை நாடுகிறான். படைப்பின் தொடக்கத்தில் அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள், 'மனித தனிமையை மட்டும் நல்லதன்று' (முதல் வாசகம்) என அறிகிறார். இத்தனிமையைப் போக்க தக்க துணை ஒன்றை படைக்கின்றார். பெண் ஆணிடமிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பில் உருவாக்கப்பட்டவள் என்று உருவகப்படுத்துவதன் வழியாக, உடைத்து எடுக்கப்பட்ட விலாவிலிருந்து எடுக்கப்பட்ட பெண் தானும் உடைந்திருப்பதால், உடைந்திருக்கும் ஆணை உறுதிப்படுத்துவது தொடர் போராட்டமாகவே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. 'இதோ, இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள்' என ஆண் அவனை அரவணைத்துக்கொண்டாலும், 'இருவரும் ஒரே உடலாய் இருந்தாலும்,' 'எப்போது நாம் பிரிந்துவிடுவோமோ?' என்ற பயம் இருவரிடமும் இருந்துகொண்டே இருக்கும். மோசேயின் சட்டம் 'மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம்' (நற்செய்தி வாசகம்) என்று ஆணுக்கு அதிகாரம் கொடுத்திருந்ததால், பெண் ஆணின் இரக்கத்திலேயே இருக்க வேண்டிய பொம்மை ஆனாள். பாவை (பெண்) ஆணின் கைப்பாவை ஆனாள். தன் மனைவியை விலக்கிவிடும் ஆண் மீண்டும் தனிமை ஆகிறான். அந்தத் தனிமை என்னும் உடைந்த நிலைக்கு முட்டுக்கொடுக்க வேறொரு பெண்ணை நாடுகிறான். அங்கே வேறொரு பெண்ணும் பொருளாக பயன்படுத்தப்படுகிறாள். ஆண்-பெண் உறவு தனிமை போக்கும் இனிமையாக மாறுவது எப்படி? இருவர் உறவில் இருக்கும் பயன்பாட்டுநிலை மறைந்து அன்பு உருவாவது எப்படி? இரண்டு வழிகள்: (அ) ஒருவர் மற்றவரின் 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்வது. இறைமகன் இயேசுவே மனித 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்ள மனிதராக வருகின்றார். மனிதர்களை தன் 'சகோதர, சகோதரிகள் என அழைக்க அவர் வெட்கப்படவில்லை' (இரண்டாம் வாசகம்). (ஆ) கணவன் மனைவியை, மனைவி கணவனை தன் குழந்தைபோல ஏற்றுக்கொள்வது. குழந்தைகளின் நொறுங்குநிலையை நாம் எப்படி மதிக்கிறோமோ, அப்படி ஒருவர் மற்றவரின் நொறுங்குநிலையை மதிப்பது. இம்மேலான புரிதலில் இருப்பவர்களுக்கு ஆண்டவர் வாழ்நாளெல்லாம் ஆசி வழங்குவார் (திபா 128).

இறுதியாக, பாதியாக இருக்கும் நம்மை வாட்டுவது தனிமையும், சோர்வும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் மறுபாதிகள். இவர்களை மதிப்புற்குரியவர்கள் என நாம் எண்ணி செயலாற்றும்போதும், நாம் ஒருவர் மற்றவரை நிரப்ப முடியும். 'என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ தெரியும் நட்சத்திரத்தை நகர்த்துகிறேன்' என்ற நிலையில் நான் மற்றவரோடு இணைந்திருக்கிறேன். இந்த இணைந்திருத்தலில் மதிப்பு இருந்தால் அங்கே நிரப்புதன்மை நிரம்பி வழியும்.
 
 உயிர் முதல் ஒன்றே!

'தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை' என்னும் இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியை நம் சிந்தனையின் தொடக்கமாக எடுத்துக்கொள்வோம். இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு வானுலகிலிருந்து வந்தவர் என்றாலும், வானதூதர்களை விட மேலான மகன் என்றாலும், அவர் மனுக்குலத்தோடு தன்னையே ஒன்றிணைத்து, அவர்களைச் சகோதரர், சகோதரிகள் என அழைக்கின்றார் என முன்வைக்கின்றார். தூய்மையாக்குகிற இயேசுவும், தூய்மையாக்கப்படும் நாமும் ஒரே உயிர்முதலைக் கொண்டிருக்கின்றோம். அந்த ஒரே உயிர்முதல் கடவுள்தாம் என்று இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்கள் குறிப்பிடுகின்றன. நம் உயிர்முதல் ஒன்றே என்ற முதிர்ச்சியும் அறிவும் நமக்கு வந்துவிட்டால், நம் உறவு வாழ்வு குடும்பம், பங்கு, சமூகம், திருச்சபை ஒற்றுமையும், அமைதியும், சமத்துவமும் கொண்டதாக அமையும்.

இன்றைய முதல் வாசகம் (தொநூ 2:18-24), இரண்டாம் படைப்புக் கதையாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தொடக்கநூலில் இரண்டு படைப்புக் கதையாடல்கள் இருக்கின்றன. முதல் கதையாடலின்படி மனிதர்களைக் கடவுள் ஆணும் பெண்ணுமாகப் படைக்கின்றார். இரண்டாம் கதையாடல்படி, முதலில் ஆணையும் இரண்டாவதாக பெண்ணையும் படைக்கின்றார். முதல் கதையாடல்படி, ஆணும் பெண்ணும் கடவுளிடமிருந்து வந்த சொல்லால், கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்படுகின்றனர். இரண்டாம் கதையாடல்படி, ஆணைக் களிமண்ணிலிருந்தும், பெண்ணை ஆணின் விலா எலும்பிலிருந்தும் உருவாக்குகின்றார். மென்மையான களிமண் வன்மையான ஆணாகவும், வன்மையான விலா எலும்பு மென்மையான பெண்ணாகவும் மாறுகின்றது. ஆணில் இருக்கும் பெண்மையையும், பெண்மையில் இருக்கும் ஆண்மையையும் இதைவிட வேறு எதுவும் அழகாகச் சொல்லிவிட முடியாது.

முதல் படைப்புக் கதையாடலில், 'அனைத்தையும் நல்லதெனக் காண்கின்ற கடவுள்,' இரண்டாம் கதையாடலில் 'மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று' என்று சொல்லி, மனிதனின் தனிமையை நல்லதல்ல எனக் காண்கின்றார். இங்கே 'தனிமை' என்பது ஓர் உணர்வு அல்ல. மாறாக, இருத்தல். எடுத்துக்காட்டாக, 'ஃபோன் தனியாக, சார்ஜர் தனியாக என்று நான் இரண்டையும் இரு பைகளில் வைத்தேன்' என்னும் வாக்கியத்தில், 'தனியாக' என்பது 'தனிமை' என்ற உணர்வைக் குறிப்பதில்லை. மாறாக, ஒற்றையாய் இருக்கின்ற என்ற இருத்தல் பொருளில்தான் உள்ளது. அதுபோலத்தான் ஆதாம் 'தனியாக' (அதாவது, பிரிக்கப்பட்டவராக, ஒற்றையாக) இருக்கிறார். ஏனெனில், 'பத்' என்ற எபிரேய வார்த்தை அப்படித்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, 'துணை' என்பதற்கு 'ஏசேர்' (உதவியாளர்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'துணை' என்பதும், 'இணை' என்பதும் சரியான பொருள் அன்று. ஏனெனில், எனக்கு அலுவலகத்தில் உதவி செய்யும் ஒருவரை நான் என் துணைவர் என்றும், என் இணையர் என்றும் சொல்வதில்லை. 'தனக்குத் தகுந்த துணையை மனிதன் காணவில்லை' என்ற வாக்கியத்திலும் 'உதவியாளர்' என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை வைத்து நாம் மேல்-கீழ் என்று, ஆண்-பெண்ணை உருவகிக்கத் தேவையில்லை.

மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்கின்றார் ஆண்டவர். 'அவன் உறங்கினான்' என்ற பொருளைத் தரக்கூடி சொல் 'யஷான்' என்பது. 'யஷான்' என்ற வினைச்சொல்லுக்கு இறந்து போதல் என்ற பொருளும், உயிரை உருவாக்கக் கூடிய நீண்ட தூக்கம் என்ற பொருளும் உண்டு (எம் செபக்குழுவின் 'யெஸ்னி' (YESNI Prays) என்ற பெயரும், இந்த வினைச்சொல்லையே வேர்ச்சொல்லாகக் கொண்டுள்ளது). உறங்கும்போது மனிதனுடைய விலா எலும்பு ஒன்றை எடுத்துக் கடவுள் அதைப் பெண்ணாக மாற்றுகின்றார். கடவுள் விலா எலும்பை எடுத்து அதைப் பெண்ணாக மாற்றியது வாசகராகிய நமக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியுமன்றி, உறங்கிக்கொண்டிருக்கும் ஆணுக்கும், புதிதாக உருவாக்கப்பட்ட பெண்ணுக்கும் தெரியாது. ஆழ்ந்த உறக்கம் தெளிந்து எழுகின்ற ஆதாம், தன் கண்முன்பாக தன்னைப் போலவே ஒன்று இருந்ததால், 'பெண்' என்று அழைக்கிறார். ஆனால், 'ஆணிலிருந்து எடுக்கப்பட்டவள்' என்ற சொல், தன் எலும்பையும் சதையையும் பெற்றிருந்ததால்தான் என்பதை ஆதாம் எப்படி உணர்ந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. தொடர்ந்து, 'மனிதன் தன் தாய் தந்தையை விட்டு ... இருவரும் ஒரே உடலாக இருப்பர்' என்று எழுதுகிறார் ஆசிரியர். திருமணம் என்ற ஒன்ற தொடங்கப்பட்ட காலத்தில் இவ்வாக்கியம் இங்கே நுழைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், இங்கே ஆதாம் தாய்-தந்தை அற்றவராகத்தான் இருக்கிறார்.

இந்த நிகழ்வில் மூன்று விடயங்கள் அடங்கியுள்ளன: (அ) ஆணின் தொடக்கமும் பெண்ணின் தொடக்கமும் களிமண் மற்றும் விலா எலும்பு என இருந்தாலும், இருவருக்கும் உயிர்தருபவர் கடவுளே. ஆக, அவரே இருவரின் உயிர்முதல். (ஆ) ஆணும் பெண்ணும் ஒரே சதை மற்றும் ஒரே உடல் கொண்டிருப்பதால் ஒருவர் மற்றவரை நிரப்பி, ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடியும். (இ) பெண் உருவாக்கப்படுமுன் ஆணுக்குத் துணையாக இருந்தவர் கடவுள். பெண் உருவாக்கப்பட்ட பின்னர் ஆண் உறங்கிக்கொண்டிருந்தபோது பெண்ணுக்குத் துணையாக இருந்தவர் கடவுள். ஆக, நம் முதல் இணைவர் அல்லது துணைவர் அல்லது தனிமை போக்கி கடவுள்தான். ஆகையால்தான், நாம் திருமணம் அல்லது காதல் அல்லது நட்பு உறவில் ஒருவர் மற்றவரோடு மிக நெருக்கமாக இருந்தாலும், மற்றவரால் நிரப்ப முடியாத தனிமை அங்கே ஒளிந்துகொண்டே இருக்கிறது. அத்தனிமையைப் போக்க நம் உயிர்முதலாகிய இறைவனால்தான் முடியும்.

ஆக, ஆண் மற்றும் பெண்ணின் உயிர்முதல் இறைவன் என மொழிகிறது முதல் வாசகம்.

இரண்டாம் வாசகம் (எபி 2:9-11) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கின்ற ஆசிரியர், முதலில் இயேசுவின் தொடக்கம் பற்றி எழுதுகின்றார். இயேசு, மகன் என்ற முறையில் வானதூதர்களை விட உயர்ந்தவராகவும், மனிதர் என்ற முறையில் வானதூதர்களைவிடச் சற்றே தாழ்ந்தவராகவும் இருக்கின்றார். இந்தத் தாழ்நிலையும், தாழ்நிலையின் விளைவால் வந்த இறப்பும் 'கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும்' நடந்தது என்கிறார் ஆசிரியர். மேலும், அனைத்தையும் தமக்கெனப் படைத்த கடவுள் குறைவுற்ற அனைத்தையும் தன் மகனுடைய துன்பங்கள் வழியாக நிறைவுசெய்கின்றார். மனிதர்கள் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்னும் பொதுநிலையில் இயேசு அனைவரையும், 'சகோதரர் சகோதரிகள்' என அழைக்கின்றார்.

ஆக, மனிதர் என்ற அடிப்படையில் இயேசுவின் உயிர்முதலும் நம் உயிர்முதலும் இறைவனாக இருக்கின்றார். இயேசுவின் தாழ்நிலையும் அவருடைய மாட்சியும் சந்திக்கும் ஒரே புள்ளி உயிர்முதலே.

நற்செய்தி வாசகத்தை (காண். மாற் 10:2-16) இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்: (அ) மணவிலக்கு பற்றிய இயேசுவின் போதனை (10:2-12), (ஆ) இயேசு சிறுபிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் (10:13-16). இயேசுவின் காலத்தில் வழக்கத்திலிருந்து மணமுறிவு பற்றிய போதனை அல்லது விதிமுறை ஆண்களைக் காப்பாற்றுவதாகவும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் இருந்தது. ஆனால், இயேசுவின் போதனை முதல் மற்றும் இரண்டாம் படைப்புக் கதையாடல்களின் பின்புலத்தில் அமைகிறது. இயேசு இரண்டு படைப்புக் கதையாடல்களையும் ஒன்றாக்குகின்றார். மேலும், மனிதர்கள் இணைதல் என்பது படைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், மனிதர்கள் பிரியும்போது அது படைப்புத் திட்டத்தில் குறையை ஏற்படுத்துகிறது என்றும், படைத்தவரின் நோக்கத்திற்கு எதிராகச் செல்கிறது என்றும் எச்சரிக்கின்றார். மேலும், மணமுறிவு விபசாரத்திற்கு வழிவகுக்கிறது என்பதும் இயேசுவின் போதனை. விபசாரத்திலும் இருவர் ஒரே உடலாக மாறுகின்றனர். ஆனால், அங்கே கணவர் தன் மனைவியின் இடத்தில் இன்னொரு உடலைத் தழுவிக்கொள்கின்றார். மேலும் அந்த உறவு தற்காலிகமானது. அந்த உறவு வெறும் உடல் சார்ந்தது. அங்கே இருவரும் தங்களின் உயிர்முதல் இறைவனே என்று அறிந்துகொள்வதில்லை. உடலில் தொடங்கும் உறவு, உடலிலேயே தொடர்ந்து, உடலிலேயே முடிந்துவிடுகிறது. தொடர்ந்து, இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வையும் மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இதனால், திருமணத்தின் நிறைவு குழந்தைப்பேறு என்பது தெளிவாகிறது. ஏனெனில், 'குழந்தைப் பேறு' என்பது விபசாரத்தின் நோக்கம் அல்ல. அது திருமண உறவின் நோக்கம் மட்டுமே. மேலும், ஆணும் பெண்ணும் இணையும் திருமண உறவில், அவர்கள் தாங்கள் பெற்றிருக்கின்ற உயிர்முதலாகிய இறைவனைத் தங்கள் உறவின் கனியாகப் பிறக்கும் குழந்தைக்கு வழங்குகின்றனர்.

ஆக, ஆணும் பெண்ணும் திருமண உறவில் இறைவனால் இணைத்துவைக்கப்படுகின்றனர். இவர்கள் இருவரில் விளங்குவதே ஒரே உடலே. ஏனெனில், இவர்களின் உயிர்முதல் ஒன்றே.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?

(அ) உயிர்முதல் இறைவனே

நம் உயிர்முதல் ஒன்றாகவும், அந்த ஒன்று இறைவனாகவும் இருப்பதால் நாம், ஆண்-பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்று எந்த வேறுபாடும் பார்க்கத் தேவையில்லை. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிறது உலகப் பொதுமறை. எல்லா உயிர்களும் பிறப்பில் ஒன்றே. ஏனெனில், அனைத்து உயிர்களும் ஒரே உயிர்முதலாகிய இறைவனிடமிருந்தே தோன்றுகின்றன. வேற்றுமை அல்லது பாகுபாடு பாராட்டும் எண்ணம் நம் உள்ளத்தில்தான் தோன்றுகிறது. எனக்கு வெளியே இருக்கும் என் மனைவி அல்லது ஒரு பெண் என்னைவிடத் தாழ்ந்தவர் என நினைப்பதும், நான் பிறந்த சாதி எனக்கு அடுத்திருப்பவரின் சாதியை விட உயர்ந்தது என்று நினைப்பதும் நம் மனத்தில் தோன்றுகிற எண்ணங்களே தவிர, அப்படி ஒரு வேறுபாடு வெளியில் காணக்கூடிய விதத்தில் ஒருபோதும் இல்லை. அனைவருடைய உயிர்முதலும் ஒன்றே என்ற அத்வைத மனநிலை நம் அனைவருக்கும் பொதுவான பண்பைப் பார்ப்பதற்கு நம் கண்களைத் திறக்கும். மேலும், நம் உயிர்முதல் இறைவனே என்று உணரும் வேளையில் நாம் நம் அனைத்துப் பிணைப்புகளிலிருந்தும் விடுதலை பெற முடியும். நம் எண்ணங்கள் சுதந்திரமாக வெளிப்படும். நம் மனதில் பதைபதைப்பு குறையும். ஆழ்ந்த அமைதி குடிகொள்ளும்.

(ஆ) தாழ்ந்து போதல்

இயேசு தான் கடவுளாக இருந்தாலும், மனிதர் என்ற நிலைக்குத் தன்னையே தாழ்த்துகிறார். ஏனெனில், தாழ்ந்த அந்த நிலையில்தான் மனிதர்களோடு அவர் தன்னை இணைத்துக்கொள்ள முடியும். மனித மீட்பு பெரிய நோக்கமாக இருந்ததால், அவர் மனிதர்களுக்காகத் தாழ்ந்து போகின்றார். ஆக, நானும் அடுத்தவரும் சமம் என்ற நிலை முதலில் வந்தவுடன், அடுத்தவருக்காக நான் தாழ்ந்துபோகத் தயாராக இருக்க வேண்டும். அந்த நிலையில் நான் செயல்படக் காரணம், உயிர்முதல் ஒன்றே என்பதை நான் மதிப்பதுதான். ஒரே சாலையில் இரு வாகனங்கள் எதிரெதிரே வருகின்றன என வைத்துக்கொள்வோம். இரு வாகனங்களும் சமமானவைதாம். இருவருக்கும் சாலையில் சமமான உரிமை உண்டுதான். ஆனால், தங்கள் சமநிலையை மட்டுமே அவர்கள் உறுதி செய்ய முனைந்தால் இருவரும் அதே இடத்தில்தான் இருப்பர். அல்லது இருவரும் ஒருவர் மற்றவருடைய வாகனங்களைக் காயப்படுத்திக்கொள்வர். மாறாக, ஒருவர் மற்றவருக்காகக் தாழ்ந்து போனால், தன் வாகனத்தைச் சற்றே இறக்கினால் இருவரும் இனிமையாகக் கடந்துபோக முடியும். இயேசுவின் தாழ்ச்சி மனிதர்களாகிய நம்மையும் கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது.

(இ) உறவைக் கொண்டாடுவோம்


ஒரே பாலினத் திருமணம் , திருமணம் தவிர்த்த குழந்தைப்பேறு, தனக்குத்தானே திருமணம், தனிப்பெற்றோர், இணைந்து வாழ்தல், ஒப்பந்த திருமணம் என இன்று திருமணம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மேலும், திருமணத்திற்கு புறம்பான உறவு 'பிரமாணிக்கமின்மையாக' பார்க்கப்பட்ட நிலை மாறி, 'விருப்பநிலை' என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. மேலும், குழந்தைகள் இன்று தேவையற்ற ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். ஒரே உடலாக மட்டும் வாழ்ந்துவிடவும், அல்லது இரு உயிர்களாக மட்டும் வாழ்ந்துவிடவும் நாம் நினைக்கின்றோம். நாம் இவற்றில் எதை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் ஒன்று மட்டும் உண்மை. நம் அனைவருடைய வேர்களும் நம் குடும்பங்களில்தான் பதிந்திருக்கின்றன. குடும்பத்தின் வழியாகவே நாம் இறைவனின் உயிரிலும் பங்கேற்கின்றோம். குடும்ப உறவுகளைத் தொடர்ந்து வருகின்ற திருமண உறவும் கொண்டாடப்பட வேண்டும். இன்று ஊடகங்களில் வரும் செய்திகளும், நிகழ்ச்சிகளும், மெகாத் தொடர்களும், 'மனிதர்கள் இணைந்து வாழ்தல் சாத்தியமில்லை' என்ற பொய்யை உரக்கச் சொல்கின்றன. பிறழ்வுபட்ட குடும்பங்களை மட்டும் முன்வைத்து நம்மைப் பயமுறுத்துகின்றன. தாழ்ச்சியிலும், விட்டுக்கொடுத்தலிலும், உடனிருப்பிலும் சிறந்து விளங்கும் குடும்பங்கள் பற்றி அவை பேசுவதில்லை. ஆக, நம் குடும்ப உறவை நாம் நினைத்தாலன்றி கணவனும் மனைவியும் நினைத்தாலன்றி வேறு எவரும் உடைத்துவிட முடியாது. இந்தப் புரிதல் வந்துவிட்டால் மணமுறிவு குறைந்துவிடும். அதே வேளையில், மணமுறிவு பெற்ற இணையர்களையும் எண்ணிப் பார்ப்போம். அவர்களை நாம் தீர்ப்பிட வேண்டாம். தங்கள் இணையர்களைத் தங்களால் ஏதோ ஒரு வகையில் அவர்களால் நிறைவுசெய்ய முடியவில்லை. அவ்வளவுதான்! அதே வேளையில் அவர்களுடைய இயலாமை மற்றும் கையறுநிலையை மற்றவர் தன் தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்தலும் தவறு என்பதை நாம் அறிய வேண்டும். நம் உயிர்முதல் ஒன்று என்றும், அந்த ஒன்று இறைவன் என்றும் உணர்ந்தால் நாம் உடல்சார் இன்பத்திலிருந்து விடுதலை பெற முடியும்.

இன்றைய திருப்பாடல் ஆசிரியர் (திபா 128), ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் பெறும் ஆசிகளாக, 'இல்லத்தில் கனிதரும் மனைவி,' 'ஒலிவக் கன்றுகளாகப் பிள்ளைகள்,' 'உழைப்பின் பயன்,' 'நற்பேறு,' 'நலம்' என்னும் ஐந்து ஆசிகளை முன்வைக்கின்றார்.

'ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவராக!' என்று நாமும் ஒருவர் மற்றவரை வாழ்த்துவோம். ஏனெனில், நம் அனைவருடைய உயிர்முதலும் ஒன்றே!
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
பொதுக்காலம் 27ஆம் வாரம் - 06 அக்டோபர் 2024


" இருவரும் ஒரே உடலாய் இருப்பர்"
" என் கணவருடைய போக்கு எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை; அவருடைய நடவடிக்கைகள் நாளுக்கு நாள் எல்லைமீறிப் போகின்றன. அதனால் நான் அவரை எந்தளவுக்குக் காயப்படுத்த முடியுமோ, அந்தளவுக்குக் காயப்படுத்திவிட்டு, அவரை விவாகரத்து செய்ய வேண்டும்" என்று, அமெரிக்காவில் இருந்த ஒரு பிரபல மனநல மருத்துரிடம் (ஜார்ஜ் டபிள்யூ. கிரேன்) முறையிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

" அம்மா! நீங்கள் சொல்வதுபோல் செய்துவிடலாம். அதற்கு முன்பாக, நான் சொல்வதுபோல் நீங்கள் செய்யுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் கணவரை எந்தளவுக்குக் காயப்படுத்த முடியுமோ, அந்தளவுக்குக் காயப்படுத்தலாம்" என்று சொல்லிவிட்டு, அந்த மனநல மருத்துவர் தொடர்ந்து பேசினார்: " நீங்கள் உங்கள் கணவரை முழுமையாக அன்பு செய்வதுபோல், அன்பு செய்யுங்கள். எப்பொழுது அவர் உங்களை முழுமையாக அன்பு செய்வது போல் உங்களுக்குத் தெரிகிறதோ, அப்பொழுது நீங்கள் அவரை விவாகரித்து செய்துவிடுங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் அவரை மிகவும் நன்றாகக் காயப்படுத்தலாம்."

மனநல மருத்துவர் இவ்வாறு சொன்னதற்குச் சரி என்று ஒப்புக்கொண்டு, தன் வீட்டிற்குத் திரும்பிப் போனார் அந்த பெண்மணி. போனவர் ஒருசில மாதங்கள் கழித்து மனநல மருத்துவரிடம் திரும்பி வந்தார். அவருடைய முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிவதைப் பார்த்த மனநல மருத்துவர், " நீங்கள் விரும்பியது போல், உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டீர்களா?" என்று ஆர்வமாய்க் கேட்டார். " இல்லை" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்த அந்தப் பெண்மணி, " நான் என் கணவரை முழுமையாக அன்பு செய்வதுபோல் அன்பு செய்கையில், அவர் என்னை முழுமையாக அன்புசெய்யத் தொடங்கிவிட்டார். அதனால் நான் அவரை உண்மையாக அன்பு செய்வதால், விவாகரித்து என்ற பேச்சக்கே இடமில்லாமல் போய்விட்டது" என்றார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த மனநல மருத்துவர், " கணவன் மனைவிடம் உண்மையான அன்பு குடிகொண்டிருக்கும்போது, நீங்கள் சொல்வது விவகாரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று சொல்லி முடிந்தார்.

ஆம், திருமண வாழ்வில் கணவனும் மனைவியும் ஓருடலாய் வாழ்ந்து, ஒருவர் மற்றவரிடம் உண்மையான அன்புகாட்டினால் விவகாரத்து அல்லது மணமுறிவு என்ற பேச்சுக்கு இடமில்லை. இதையே இந்த நிகழ்வும், பொதுக்காலத்தின் இருபத்து ஏழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?
இந்த கேள்வியோடுதான் இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது. இயேசு இக்கேள்விக்கு என்ன பதிலளித்தார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்பதற்கு முன், இக்கேள்வியை யார் கேட்டார், எந்த இடத்தில் வைத்து இக்கேள்வி கேட்கப்பட்டது? என்பன பற்றித் தெரிந்துகொள்வது நல்லது. இயேசு கலிலேயாவைவிட்டு, யூதேயாப் பகுதிகளுக்கு வருகின்றார் (மத் 19: 1). இந்தப் பகுதியைப் ஆண்டுவந்தவன் வேறு யாருமல்ல, தன் சகோதரன் பிலிப்பின் மனைவியோடு வாழ்ந்து வந்த ஏரோது அந்திப்பா என்பவன்தான். இவன், " நீர் உன் சகோதரனின் மனைவியை வைத்திருப்பது முறையல்ல" (மத் 14: 4) என்று சொன்ன திருமுழுக்கு யோவானைக் கொன்றுபோட்டவன். ஆகவே, முறையின்றி வாழும் ஏரோது அந்திப்பாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் மணவிலக்கு பற்றிய கேள்வியை இயேசுவிடம் கேட்டால், அவர் ஏதாவது சொன்னார். அதைக் கொண்டே, அவரைத் தீர்த்துக் கட்டிவிடலாம் என்ற எண்ணத்தோடு பரிசேயர்கள் இயேசுவிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள்.

இதில் இன்னொரு செய்தியை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். முதல் நூற்றாண்டில் யூதர்கள் நடுவில் மணவிலக்கு குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. மணவிலக்கு செய்ய எந்தவொரு காரணமும் தேவையில்லை என்று ஒருபிரிவினரும், தகுந்த காரணமின்றி மணவிலக்கு செய்யக்கூடாது என்று இன்னொரு பிரிவினரும் சொல்லி வந்தனர். இந்நிலையில் இயேசு இரண்டு கருத்துகளில் எந்தக் கருத்தைத் சொன்னாலும், அவரைச் சிக்கலில் மாட்டிவிடலாம் என்ற தந்திரத்தோடு பரிசேயர்கள் இயேசுவிடம் இக்கேள்வி கேட்கின்றபோது, அவர் அவர்களிடம், " மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்று கேள்வியை அவர்களிடம் கேட்கின்றார்.

தன்னிடம் கேள்வி கேட்பவரிடம் திருப்பிக் கேள்விகேட்டுப் பதிலளிப்பது இயேசுவின் பாணி. கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது தொடர்பாகப் பரிசேயர்கள் கேள்வி கேட்டதும், இயேசு பதிலுக்கு ஒரு கேள்வியை கேட்க, அப்பொழுது பரிசேயர்களிடமிருந்து வரும் பதில்தான், " மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்" (இச 24: 1-4) என்பதாகும். இங்கே, எந்தவொரு காரணமின்றிக் கடின உள்ளத்தோடு யூதர்கள் தம் மனைவியை விலக்கிவிட்டதாலேயே, மணவிலக்குச் சான்றிதழ் எழுதி, அவரை விலக்கிவிடலாம் என்று மோசே கூறியிருப்பார். இது, தகுந்த காரணம் இல்லாமல் ஒருவர் தன் மனைவியை விலக்கிவிட முடியாது என்பதால், பெண்களுக்கு ஒருவகையில் பாதுகாப்பு அளித்தது. இதைப் பரிசேயர்கள் தங்கள் வசதிக்கேற்றாற்போல் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் இயேசு மோசேயின் சட்டம் அல்லது கட்டளையைவிட மேலான ஒரு கட்டளையைத் தருகின்றார். அது என்ன என்று பார்ப்போம்.

கணவனும் மனைவியும் ஒன்றித்து, ஒரே உடலாக வாழ விருப்பும் கடவுள்
ஒவ்வொன்றையும் படைத்த பின் நல்லதெனக் கண்ட ஆண்டவர் (தொநூ 1: 31), மனிதனைப் படைத்துவிட்டு, அவன் தனிமையாக இருப்பது நல்லதன்று என்று காண்கின்றார். ஆகவே, அவர் அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்று ஏவாவை உருவாக்குகின்றார். ஏவாவை மனிதன் காணுகின்றபோதுதான், " இவளே என் எலும்பின் எலும்பும் சதையும் சதையும் ஆளவள்" என்கிறான். மேலும் அவன் தன் மனைவியுடன் ஒன்றித்து, ஒரே உடலாய் இருக்கின்றான்.

இந்த உண்மையை பரிசேயர்களிடம் எடுத்துக்கூறும் இயேசு, மோசே உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டு மணவிலக்குச் சான்றிதழ் எழுதி, ஒருவரை விலக்கிவிடலாம் என்று சொல்யிருக்கலாம். ஆனால், கடவுள், கணவனும் மனைவியும் ஒன்றித்து, ஒரே உடலாய் வாழவேண்டும் என்றுதான் விரும்புகின்றார் என்று, மணமுறிவு என்பது இறைவனின் விருப்பதற்கு எதிரானது என்று சொல்லாமல் சொர்கின்றார். இதன்மூலம் இயேசு, கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? என்று பரிசேயர்கள் கேட்ட கேள்விக்குச் சரியான பதிலளிதத்தோடு மட்டுமல்லாமல், இக்கேள்வி மூலம் இயேசுவைச் சூழ்ச்சியால் வீழ்த்தவேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தையும் முறியடிக்கின்றார்.

ஒருவர் மற்றவருடைய நலனுக்காகத் துன்பங்களை ஏற்கவேண்டும்
கணவனும் மனைவியும் ஒரே உடலாய், ஒன்றித்து வாழவேண்டும் என்று இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் கூறுகின்ற அதே வேளையில், இன்றைய இரண்டாம் வாசகம், ஒருவர் மற்றவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டால், கணவன் மனைவியினுடைய வாழ்க்கை மட்டுமல்ல, எல்லாருடைய வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்கிறது.

" அனைவருடைய நலனுக்காகவும் கிறிஸ்து சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுகின்றார். நாம் அனைவரும் நலமாக இருக்க இயேசு சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார் என்ற பின்னணியில் கணவனும் மனையியும் உள்ளார்ந்த அன்பினால் ஒருவர் மற்றவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டால் அவர்களது இல்லறம் நல்லறமாகும். அப்போது இந்த அகிலமே செழிக்கும் என்பது உறுதி. ஆகையால், நமது (இல்லற) வாழ்வு சிறக்க, அன்பினால் உந்தப்பட்டு, ஒருவர் மற்றவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்வோம்.

சிந்தனை:
'ஒரு குடும்பம் கிறிஸ்துவை மையப்படுத்தி வாழ்ந்தது எனில், கிறிஸ்து அந்தக் குடும்பத்தை ஒன்றிணைத்து, அவர்களது வாழ்வை ஒளிமயமானதாய் மாற்றுவார்' என்பார் திருந்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் கிறிஸ்துவை மையப்படுத்தி வாழ்ந்து, நமது குடும்பங்களை ஒளிமயமானதாய் மாற்றி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
 "திருமணம் அன்பின்‌ பிணைப்பு"

நிகழ்ச்சி
ஒரு மனிதன்‌, ஞானி ஒருவரைத்‌ தன்‌ வீட்டுக்கு அழைத்து, ஐயா! திருமணம் ‌ முடித்து 10 வருசம்‌ ஆகுது. குடும்பத்தில்‌ நிம்மதியே இல்லை. ஒரே சண்டை சச்சரவாகத்தான்‌ இருக்கு. நிம்மதியா வாழ வழி சொல்லுங்கள்‌ என்று முறையிட்டார்‌. ஞானி பதில்‌ சொல்லவில்லை. சிறிது நேரம்‌ அமைதி காத்தபின்‌, தன்‌ மனைவியை அழைத்து கொஞ்சம்‌ இருட்டாக இருக்கிறது. விளக்கை ஏற்றி வை என்றார்‌. வெளிச்சமாக இருந்தாலும்‌ அவளும்‌ அப்படியே செய்தாள்‌. திரும்பவும்‌ மனைவியை அழைத்து, காப்பி கொண்டு வரச்‌ சொன்னார்‌. இருவருக்கும்‌ காப்பி வந்தது. காப்பியில்‌ சக்கரையே இல்லை. ஒரே கசப்பு.

ஞானி, மனைவியைப்‌ பார்த்து, எனக்கு சக்கரை சரியாக இருக்கிறது. இவருக்குத்‌ தேவைப்படலாம்‌. கொஞ்சம்‌. சர்க்கரை கொண்டு வா என்றார்‌. வந்தவனுக்கு எல்லாம்‌ ஆச்சரியமாக இருந்தது. ' அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தான்‌ வந்த காரியத்தை திரும்பவும்‌ நினைவுப்படுத்தினான்‌.

ஞானி சொன்னார்‌: தம்பி! என்‌ பதிலைத்தான்‌ கேட்டீர்களே!

எந்தக்‌ குடும்பத்தில்‌ கணவனும்‌, மனைவியும்‌ மூன்றாம்‌ மனிதர்முன்‌ ஒருவர்‌ தவறை ஒருவர்‌ சுட்டிக்காட்டுவதில்லையோ, அந்தக்‌ குடும்பத்தில்தான்‌ நிம்மதி, அமைதி இருக்கும்‌ என்றார்‌.

இன்றைய வார்த்தை வழிபாட்டிலே முதல்‌ வாசகமும்‌, மூன்றாம்‌ வாசகமும்‌, திருமணம்‌, குடும்ப வாழ்வு இறைவனின்‌ திட்டத்தில்‌ முக்கியமானது. இந்த உலகில்‌ மகிழ்ச்சியான வாழ்விற்கு குடும்ப வாழ்வே அடிப்படை என்பதைச்‌ சித்தரிக்கிறது. . கணவனும்‌, மனைவியும்‌ ஒரே உடலாக இருக்கிறார்கள்‌. அவர்களிடையே சமத்துவம்‌ நிலவ வேண்டும்‌. அந்தச்‌ சமத்துவம்‌ அவர்கள்‌ இறைவனின்‌ அன்பின்‌ சின்னங்கள்‌ என்று ஒருவருக்கொருவர்‌ எடுத்துச்‌ சொல்வதாக இருக்க வேண்டும்‌ என்று கூறுகிறது. கடவுள்‌ இணைத்ததை மனிதன்‌ பிரிக்காதிருக்கட்டும்‌ என்ற இறை வார்த்தையை கணவனும்‌, மனைவியும்‌ பின்பற்ற சில பண்புகளை விதிமுறைகளை, அணிகலன்களாகக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. குறை நம்ரிக்கை: இறைவனில்‌ நம்பிக்கை கொண்டு வாழுங்கள்‌. உலகத்தை, உலக மனிதர்களை நம்பி ஏமாந்து போகாதீர்கள்‌. ஏனெனில்‌ மனிதன்‌ இன்று இருந்து நாளை மறையும்‌ புல்லைப்‌ போன்றவன்‌.

என்னை நம்புவோர்‌ என்றுமே வாழ்வர்‌. நிலை வாழ்வைக்‌ கொண்டுள்ளனர்‌ (யோவா. 6:47).

என்‌ வார்த்தையைக்‌ கடைப்பிடிப்போர்‌ என்றுமே வாழ்வர்‌, சாகமாட்டார்கள்‌ (யோவா. 8:51) என்று இயேசு சொன்னார்‌. கூறை வேண்ருதல்‌: ஆண்டவர்‌ இயேசுவின்‌ பிரசன்னம்‌ இல்லாத குடும்பங்களில்‌, அன்பு, அமைதி இருக்காது. மாறாக வைராக்கியம்‌, ஆணவம்‌, கோபம்‌, வெறுப்புதான்‌ தலை தூக்கி நிற்கும்‌. செபமற்ற வீடு செத்த வீடு. குடும்ப செபம்‌ இல்லாத குடும்பம்‌ கூரை இல்லாத வீடு என்று கூறுவார்கள்‌.

எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்‌ என்‌ நாமத்தில்‌ கூடியிருப்பார்களோ, அங்கே நான்‌ இருப்பேன்‌ (மத்‌. 18:20) என்கிறார்‌ ஆண்டவர்‌.

சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள்‌ (மத்‌. 26:41) என்கிறார்‌ ஆண்டவர்‌.

கூறை அணுபவம்‌: இறை நம்பிக்கையும்‌, இறை வேண்டுதலும்‌ ஒரு குடும்பத்தில்‌ இருந்தால்‌ இறை அனுபவம்‌ கிடைக்கும்‌. இறைவன்‌ நம்மோடு என்ற உணர்வு ஏற்படும்‌. இறைவன்‌ எத்துணை நல்லவர்‌ என்று சுவைத்துப்‌ பாருங்கள்‌ (திபா. 34:8) என்கிறார்‌ திருப்பாடல்‌ ஆசிரியர்‌. அன்யு உறவு: குடும்பம்‌ அன்பு உறவு இன்றி அமையாது. இது களங்கமற்ற, பிரமாணிக்கமான அன்பாக இருத்தல்‌ தேவை. உலகிலே உள்ள அனைவரும்‌ நிறைகளும்‌, குறைகளும்‌ உடையவர்கள்‌. நிறைகளைப்‌ பாராட்டி குறைகளைச்‌ சுட்டிக்‌ காட்டுவது அன்பின்‌ அடிப்படையிலே அமைய வேண்டும்‌.

நான்‌ உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும்‌ ஒருவர்‌ மற்றவரை அன்பு செய்யுங்கள்‌ (யோவா. 13:34) என்று கூறிய இயேசுவின்‌ மனநிலை கணவன்‌, மனைவியிடையே தேவை.

தியாகம்‌: தியாகம்‌ இல்லாத வாழ்வு உப்பு இல்லாத உணவுக்குச்‌ சமம்‌. மெழுகுதிரி கரைந்தால்தான்‌ வெளிச்சம்‌ தருகிறது. சந்தனக்கட்டை மாவாக்கப்படும்போதுதான்‌ மணம்‌ பரவுகிறது. அன்பார்ந்தவர்களே ஒன்றை இழந்தால்தான்‌ மற்றொன்றைப்‌ பெற முடியும்‌ என்பது தத்துவம்‌. எனவே சுயநலம்‌, ஆணவம்‌, அதிகாரம்‌, அகங்காரம்‌, தற்பெருமை, பழிவாங்கும்‌ எண்ணங்களை இழந்தால்தான்‌ வாழ்வு பெற முடியும்‌.

கோதுமை மணியானது மண்ணிலே விழுந்து மடிந்தால்‌ ஒழிய, அது அப்படியே இருக்கும்‌. மடிந்தால்தான்‌ பலன்‌ தரும்‌ (யோவா. 12:24)

பரிசுத்தராக கரங்கள்‌: வெற்றிகரமான, மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வு இறைவனுக்கு முன்பாக நாம்‌ தூயவராக வாழும்போதுதான்‌ நிறைவு பெறும்‌. திருமணம்‌ என்பது ஓர்‌ அழைப்பு - இறைவனின்‌ அழைப்பு. இது ஒருவருக்கொருவர்‌ அன்பை செலுத்திப்‌ பிரமாணிக்கமாய்‌ வாழும்‌ பரிசுத்த தனத்தில்தான்‌ அமையும்‌.

உங்களை அழைத்தவர்‌ தூயவராக இருப்பதுபோல, நீங்களும்‌ உங்கள்‌ நடத்தையில்‌ தூயவராக இருங்கள்‌ (1 பேதுரு 1:15) என்கிறார்‌.

உள்ளத்தால்‌ செவிமரத்தல்‌: கடவுள்‌ மனிதனிடத்திலிருந்து பெண்ணை உருவாக்கி, இருவரும்‌ ஒரே உடலாக இருங்கள்‌ (தொ.நூ. 2:24) என்றார்‌. இருவருக்கும்‌ ஏற்றத்‌ தாழ்வு இல்லை. யார்‌ பெரியவர்‌? கடவுள்தான்‌ பெரியவர்‌. இருவரும்‌ சமம்‌. ஒருவர்‌ ஒருவரை நிறைவு செய்பவர்கள்‌. எனவே நண்பர்களைப்போல மனம்‌ விட்டுப்‌ பேசி, கலந்துரையாடி, நாம்‌ என்ற உணர்வுடன்‌, செவிமடுத்தல்‌ மிகத்‌ தேவை. '

தனித்தன்மையை மதித்தல்‌: வாழ்வில்‌ ஒப்பிட்டுப்‌ பார்க்காதீர்கள்‌. ஒப்பிட ஆரம்பித்தால்‌ புற்றுநோய்க்கு ஆளாகி விடுவீர்கள்‌. ஒப்பிட்டு நான்‌ உயர்ந்தவன்‌ என்று நினைத்தால்‌, ஆணவம்‌, பொறாமை குடிகொள்ளும்‌. அல்லது தாழ்ந்தவன்‌ என்றால்‌ நிறைவற்ற தன்மை, தாழ்வு மனம்‌ உண்டாகிவிடும்‌. கடவுள்‌ படைத்த ஒவ்வொருவரும்‌ தனித்தன்மை வாய்ந்தவர்‌ என்பதை மதிப்போம்‌.

முடிவுரை
வாழ்க்கை என்பது வாழ்ந்தாக வேண்டும்‌ என்பது நியதி. , தேனை எடுத்தால்‌ தேனீ கொட்டும்‌ என்பது சுமை. அதேபோல தேனீ கொட்டினாலும்‌ தேனை எடுப்பேன்‌ என்ற சவாலைப்போல, சுமைகள்‌ நிறைந்த இந்த இல்லற வாழ்வை வாழ்ந்து காட்டுவேன்‌ என்பதுதான்‌ இல்லறத்தின்‌ நற்பண்பாகும்‌.

பெண்ணை திருமணத்தில்‌ விலை பேசுவது பெரிய பாவம்‌. இந்த இழிநிலை நம்மில்‌, நம்‌ சமூகத்தில்‌ மறைய வேண்டும்‌. .. அன்புள்ள கணவன்‌, பாசமுள்ள மனைவி, கீழ்ப்படிந்து நடக்கும்‌ பிள்ளைகள்‌ என்ற நிலையில்‌ நம்‌ குடும்பங்கள்‌ அமைந்தால்‌ அது வானகத்தில்‌ தெய்வ நிலைக்குச்‌ சமம்‌ (கொலோ.3:18-21).
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
அன்னை மரியாவும்‌, யோசேப்பும்‌ கூறுவது என்ன?

இன்றைய நற்செய்தியில்‌ இயேசு தொடக்க நூல்‌ 1:26-யும்‌, ;24-யும்‌ மேற்கோள்காட்டி, பரிசேயரைப்‌ பார்த்து, இருவரும்‌ (கணவனும்‌, மனைவியும்‌] ஒரே உடலாய்‌ இருப்பர்‌. இனி அவர்கள்‌. இருவர்‌ அல்லர்‌ ஒரே உடல்‌ என்கின்றார்‌. கடவுளுடைய விருப்பத்திற்கு எதிராக இந்த 21-ஆம்‌ நூற்றாண்டிலே எத்தனையோ குடூம்பங்களிலே. கணவனும்‌, மனைவியும்‌ பிரிந்து வாழ ஆசைப்படுவதை நாம்‌. காண்கின்றோம்‌. இதோ இறுதிவரை பிரியாது வாழ கணவனும்‌, மனவியும்‌ என்ன செய்ய வேண்டும்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்ட திருக்குடும்பத்தின்‌ தலைவியும்‌, தலைவரும்‌ நம்முன்னே வந்து, ற்கின்றார்கள்‌. நமது அன்னை கன்னி மரியா கூறுவது என்ன? மனைவியரே, உங்கள்‌ கணவர்களிடமிருந்து எதையுமே எதிர்பார்க்காதீர்கள்‌ என்கின்றார்‌. மரியா ஏழுமுறை பேசியதாக நற்செய்தி கூறுகின்றது.

1. "இது எப்பழி நிகழும்‌ ? நான்‌ கன்னி ஆயிற்றே" (லூக்‌ 1:34).
2. "நான்‌ ஆண்டவரின்‌ அடிமை : உம்‌ சொற்படியே எனக்கு நிகழட்டும்‌" (லூக்‌ 1:38).
3. "மரியாவின்‌ வாழ்த்தை எலிசபத்து கேட்டபோது ..." (லூக்‌ 1:39-45).
4. "ஆண்டவரை எனது உள்ளம்‌ ... " (லூக்‌ 1:46 - 55).
5. "மகனே, ஏன்‌ இப்படிச்‌ செய்தாய்‌? " (லூக்‌ 2:48).
6. "திராட்சை இரசம்‌ தீர்ந்துவிட்டது" (யோவா 2:3).
7. "அவர்‌ உங்களுக்குச்‌ சால்வதெல்லாம்‌ செய்யுங்கள்‌ " (யோவா 2:5).

மரியா ஏழுமுறை பேசினார்‌. ஆனால்‌ ஒருமுறைகூட தனக்கென்று எதையுமே கடவுளிடமிருந்தோ, யோசேப்பிடமிருந்தோ, இயேசுவிடமிருந்தோ கேட்கவில்லை. எதையும எதிர்பார்க்காமல்‌ மரியா, தம்‌ குடும்பத்தின்‌ மீது மாரி போல்‌ அன்பு மழையைப்‌ பொழிந்தார்‌. எதிர்பார்த்தால்தானே ஏமாற! மரியா ஏமாறவேயில்லை! எங்கே ஏமாற்றமில்லையோ அங்கு சண்டை சச்சரவு இருக்காது; பிரிவினை இருக்காது. மரியாவைப்‌ போன்று யோசேப்பும்‌ கடவுளிடமிருந்தோ, மரியாவிடமிருந்தோ, இயேசுவிடமிருந்தோ எதையுமே கேட்கவில்லை! யோசேப்பு பேசியதாக நாம்‌ நற்செய்தியில்‌ படிப்பதில்லை. ஏழு வியாகுலங்களை அனுபவித்தவர்‌ யோசேப்பு:

1. மரியா தாயாகும்‌ நிலையிலிருந்தபோது ... (மத்‌ 1:18-21).
2. இயேசு பிறக்க இடம்‌ கிடைக்காதபோது ... (லூக்‌ 2:7).
3. மரியாவின்‌ உள்ளத்தை ஒரு வாள்‌ ஊடுருவிப்‌ பாயும்‌ என்று சிமியோன்‌ சொன்னபோது ... (லூக்‌ 2:35).
4. ஏரோது குழந்தையைக்‌ கொல்லத்‌ தேடியபோது ... (மத்‌ 2:13).
5. எகிப்துக்குப்‌ பயணம்‌ செய்தபோது ... [(மத்‌ 2:14).
6. யூதேயாவை எரோதின்‌ மகன்‌ அர்க்‌கலா அரசாளுகின்றான்‌ என்பதை அறிந்தபோது ... (மத்‌ 2:22).
7 சிறுவன்‌ இயயசு காணாமல்‌ போனபோது ... (லூக்‌ 2:41-49).

யோசேப்பின்‌ வாழ்க்கையில்‌ எத்தனையோ குழப்பங்கள்‌, ஏமாற்றங்கள்‌, துன்பங்கள்‌, துயரங்கள்‌, ஆபத்துக்கள்‌, விபத்துக்கள்‌, சோதனைகள்‌, வேதனைகள்‌! ஆனால்‌ ஒருமுறைகூட அவர்‌ யார்‌ மீதும்‌ குறை கூறியது கிடையாது; யாரிடமும்‌ அவருக்கென்று எதையும்‌ கேட்டது கிடையாது. யோசேப்பு ஒருபோதும்‌ ஏமாற்றமடைந்ததில்லை! எதிர்பார்த்தால்தானே ஏமாற! எங்கே ஏமாற்றமில்லையோ அங்கே சண்டை சச்சரவு இருக்காது, பிரிவினை இருக்காது.

இயேசு இன்றையக்‌ குடும்பங்களுக்குத்‌ தரும்‌ அறிவுரை இதோ: என்‌ தாய்‌ மரியாவைப்‌ பால வாழுங்கள்‌! என்னை கண்மணிபால காத்த யோசேப்பைப்‌ போல வாழுங்கள்‌! அனைவருடைய நலனுக்காகவும்‌ உயிர்விட்ட (இரண்டாம்‌ வாசகம்‌) என்னைப்‌ போல வாழுங்கள்‌! அப்போது பிரிவு என்ற எண்ணமே உங்கள்‌ மனத்தில்‌ எழாது! உங்கள்‌ குடும்பத்திலுள்ள எல்லாரும்‌, குறிப்பாக கணவனும்‌, மனைவியும்‌ மலரும்‌ - மணமும்‌ போல, தேனும்‌ சுவையும்‌ போல, வானும்‌ நிலவும்‌ போல, கடலும்‌ அலையும்போல இணைந்து வாழ்வீர்கள்‌! ' மேலும்‌ அறிவோம்‌ :

அன்பும்‌ அறனும்‌ உடைத்தாயின்‌ இல்லாழ்க்கை
பண்டும்‌ பயனும்‌ அது (குறள்‌ : 45)

பொருள்‌ : ஒருவர்‌ குடும்ப வாழ்வு அன்பின்‌ இயல்பையும்‌ அறச்‌செயலையும்‌ கொண்டிருக்குமானால்‌ அவை முறையே பண்பாகவும்‌ பயனாகவும்‌ திகழும்‌. கணவனும்‌ மனைவியும்‌ கருத்து ஒருமித்து வாழ்ந்தால்‌ அன்பே பண்பாகவும்‌ அறமே பயனாகவும்‌ விளங்கும்‌.

 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 

"கடவுள் தரும் சோதனைக்கும் மனைவி தரும் சோதனைக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று ஒருவரிடம் கேட்டதற்கு அவர், "மனைவியே கடவுள் தந்த சோதனை தானோ!" என்றார், திருமண வாழ்வு ஒரு சிலருக்குச் சோதனையாகவும் வேறு சிலருக்கு வேதனையாகவும் உள்ளது. இச்சோதனையையும் வேதனையையும் சாதனையாக மாற்றுவதில்தான் திருமண வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது. திருமணத்தின் மாண்பையும் அதன் முறிவுபடாத தன்மையையும் இன்றைய அருள்வாக்கு வழிபாடு எடுத்துரைக்கிறது.

திருமணம் மனிதத் தன்மையை மட்டுமல்ல, தெய்வீகத் தன்மையையும் உடையது. அது படைப்பின் தொடக்கத்திலிருந்தே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதமான அமைப்பு, கடவுள் தாம் படைத்த அனைத்தும் நன்றாக இருந்ததைக் கண்டார். ஆனால் மனிதன் தனிமையாக இருப்பது நன்றன்று (தொநூ 2:18) என்பதைக்கண்ட அவர், ஆணுக்குச் சரிநிகராகப் பெண்ணைப் படைத்தார். மனித இனம் ஆணினமோ பெண்ணினமோ அல்ல; மாறாக ஆணினமும் பெண்ணினமும் இணைந்த கலப்பினமே மனித இனமாகும், ஆறும். பெண்ணும் ஒன்றாக இணைந்தே கடவுளின் சாயலைப் பிரதிபலிக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தும் தழுவியும் செயல்படுவதே கடவுளின் திட்டமாகும்.

"நட்பு நட்புதான், காதல் காதல்தான்; காதல் மாறலாம், நட்பு மாறுமா?" என்ற திரைப்படப் பாடலுக்கிணங்க, தம்பதியர்கள் என்றென்றும் நண்பர்களாகத் திகழ வேண்டும். ஒவ்வொருவரும் தம் இதயக் கிடக்கையில் உள்ள ஆழமான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் காதலர்களாக மாறுவதைவிட, காதலர்கள் நண்பர்களாக மாறுவதே முக்கியம், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமானது, பிரிக்க இயலாதது. அதன் தன் காதலனிடம், "எனக்காக இருப்பீர்களா?" என்று கேட்டதற்கு அவள், "நம் காதல் இறவாக்காதல்" என்றான், உண்மையான அன்பு நிரந்தரமானது, சாகாத் தன்மையுடையது கிறிஸ்து தம்மவரை இறுதிவரை அன்பு செய்தார் (யோவா 1:3; 1 ); தம்மவருடன் உலகம் முடியும் வரை எந்நாளும் உடனிருக்கிறார் (மத் 24:30).

மணமுறிவு கடவுளின் திட்டத்திற்கு முரணானது. மணமுறிவை வெறுப்பதாகக் கடவுள் பழைய உடன் படிக்கையில் குறிப்பிடுகிறார் {மலா 2:15-16) மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிட மோசே அனுமதி வழங்கியது மக்களின் கடின உள்ளத்தின் பொருட்டேயாகும். மணமுறிவினால் தடம்புரண்ட திருமண வாழ்வைக் கிறிஸ்து மீண்டும் அதன் தொடக்க நிலைக்குக் கொண்டுவந்து, "கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" (மாற் 10:9) என்று கண்டிப்பான கட்டளையைக கொடுத்தார்.

கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இது படைப்பின் மறைபொருள், ஆண் கிறிஸ்துவாகவும் பெண் திருச்சபையாகவும் மாறுகின்றனர், இது மீட்பின் மறைபொருள், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உடன்படிக்கை கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள உடன்படிக்கையில் ஊன்றி, அதற்குச் சாட்சியம் பகர்கிறது (எபே 5:25-32). இவ்வாறு படைப்பிலும் மீட்பிலும் திருமண அன்பு கடவுளின் நிலையான அன்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ளது. மணமுறிவை நாடும் தம்பதியர் கடவுளின் உடன்படிக்கையை முறித்து கடவுளுக்கே துரோகம் செய்கின்றனர், திருமண அன்பு கணவன் - மனைவி என்ற குறுகிய வட்டத்தில் முடிவடையாது. அதன் மூன்றாம் பரிமாணமாகிய குழந்தைச் செல்வத்தில் முழுமையடைகிறது. குழந்தையானது மணமக்களின் கூட்டொருமை; அவர்களுடைய அன்பின் நிலையான நினைவுச் சின்னம். நல்ல மனைவியும் நல்ல மக்களும் ஆண்டவர் தமக்கு அஞ்சி நடப்போருக்கு அருளும் பேறு என்று இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 128:3). திருமணத்தின் முறிவுபடாத தன்மையைப் பறைசாற்றிய உடனே, கிறிஸ்து குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கு ஆசி வழங்குவது குறிப்பிடத்தக்கது (மாற் 10:13-18).

ஒரு கணவர் தம் மனைவியை என்னிடம் காட்டி, "சாமி! இவளுடன் 43 வருஷமா நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார். அதற்கு அவருடைய மனைவி, "சாமி, நரகத்தில் இருந்து கொண்டே 6 பிள்ளைகளைப் பெத்த இவரு. மோட்சத்தில் இருந்தாருனா எத்தனை பிள்ளைகளைப் பெற்றிருப்பாரோ?" என்றார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டாலும் நரகத்தில் வாழப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது, அன்பு உள்ள இல்லறம் சொர்க்கம்; அன்பு இல்லாத இல்லறம் நரகம்.

அன்பிலே இருவகை உண்டு. ஒன்று ஆள விரும்புகின்ற அன்பு, மற்றொன்று ஆட்பட விரும்புகிற அன்பு, ஆள விரும்புகிற அன்பு தன்னலமிக்க அன்பு, பிறரைப் பயன்படுத்தும் அன்பு, ஆட்பட விரும்புகிற அன்பு தியாகமிக்க அன்பு, பிறருக்குப் பயன்படுகின்ற அன்பு. கிறிஸ்துவின் அன்பு ஆளவிரும்புகிற அன்பு அல்ல, ஆட்பட விரும்புகின்ற அன்பு, "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொன்பாடு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற் 10:45), தம்பதியர்களிடையே கிறிஸ்துவின் தியாகமிக்க அன்பு இருந்தால், நீதிமானின் பொறுமையையும் கடவுள் பக்தியையும் கடவுள் பயமற்றவர்கள் இழித்துரைக்கின்றனர், நீதிமானுக்கு எதிர் காலம் இல்லை என்று ஏளனம் செய்கின்றனர். ஆனால் சுடவுள் நீதிமான்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார். "செருக்குற்றோர் எனக்கு எதிராக எழுத்து என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர், கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கிறார்" (திபா 54:3-4), தீமைக்குத் தீமை செய்பவர்களுக்கு கிடைப்பது ஒரு நாள் இன்பம், தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களுக்குக் கிடைப்பதோ நிரந்தர இன்பம்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்றும் துரைசாம் புகழ் (குறள் 15)

 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
சதையின் சதையாய...

திருஅவை என்ற கிறிஸ்துவின்‌ மறை உடலில்‌ இன்னும்‌ ஆறாத சில சரித்திரக்காயங்கள்‌ உண்டு. ஒன்று திருமண முறிவால்‌ நிகழ்ந்தது.

ஒரு திருமணம் ‌ முறிந்ததால்‌ திருஅவையோடு ஒரு நாடு கொண்டிருந்த உறவே முறிந்த நிகழ்ச்சி இன்னும்‌ அழிந்துவிடாத ஒரு வரலாற்றுவடு.

இங்கிலாந்து மன்னன்‌ 8ம்‌ ஹென்றி, முறைப்படி மணமுடித்த மனைவி கத்தரின்‌ இருக்க, அவளை விலக்கிவிட்டு அன்னா என்ற பெண்ணை மணக்கத்‌ திருத்தந்தை 7ஆம்‌ கிளமென்டிடம்‌ அனுமதி கேட்டான்‌. "இறைவன்‌ இணைத்ததை மனிதன்‌ பிரிக்காதிருக்கட்டும்‌" என்று மறுத்துரைத்தார்‌ திருத்தந்தை. அந்த மறுப்புக்கு மண்டியிட மறுத்தான்‌ மன்னன்‌. 17 ஆண்டுகள்‌ கூடி வாழ்ந்த மனைவியை விலக்கிவிட்டு தன்‌ மனம்‌ விரும்பிய மாதை மணமுடித்துக்‌ கொண்டான்‌. அந்த மணமுறிவோடு, திருஅவையோடும்‌ தனது உறவை முறித்துக்‌ கொண்டான்‌. நாட்டுக்கு மட்டுமல்ல, இங்கிலாந்துத்‌ திருஅவைக்கும்‌ நானே தலைவன்‌ என்று அறிவித்தான்‌. எதிர்த்தவர்களையெல்லாம்‌ கொன்று குவித்தான்‌. 20 ஆயர்கள்‌, 600 குருக்கள்‌ உட்பட 72000 பேர்‌ உயிர்‌ இழந்தனர்‌. இவ்வாறு பிறந்தது ஆங்கிலிக்கன்‌ சபை. அதோடு நின்றுவிடவில்லை அவன்‌. ஆசையோடு மணமுடித்த அன்னாவையும்‌ கொன்றுவிட்டு ஆறு தடவைகள்‌ மறுமணம்‌ செய்து கொண்டானாம்‌. ஒரு திருமணத்தின்‌ முறிவுபடாத தன்மையை எண்பிக்க இத்தனை இரத்தச்‌ சான்றுகள்‌!

ஏதேன்‌ தோட்டத்தில்‌ ஒலித்த முதல்‌ காதல்‌ கீதம்‌, மனிதன்‌ பேசிய முதல்‌ வார்த்தை: "இவளே என்‌ எலும்பின்‌ எலும்பு, இவளே என்‌ சதையின்‌ சதை": (தொ.நூ. 2:23). இதற்கு இயேசு எழுதிய விளக்கவுரை: "இனி அவர்கள்‌ இருவர்‌ அல்ல. ஒரே உடல்‌. எனவே கடவுள்‌ இணைத்ததை மனிதர்‌ பிரிக்காதிருக்கட்டும்‌'" (மார்க்‌. 10:8-9). இந்தத்‌ திருவசனத்தில்‌ "எனவே" என்ற சொல்தான்‌ ஆண்‌-பெண்‌ இணைப்புக்கே அர்த்தமூட்டுவது. கடவுளின்‌ சட்டம்‌ என்பதால்‌ அல்ல திருமண அன்பின்‌ இயல்பு காரணமாக திருமண உடன்படிக்கையில்‌ மணமுறிவுக்குச்‌ சிறிதும்‌ ஆடமில்லை.

"திருமணத்தின்போது "ஈருடலும்‌ ஒருயிரும்‌ போல்‌ வாழ்க" என்று பெரியோர்‌ வாழ்த்துவதில்‌ ஒரு பெரிய தத்துவமே அடங்கியிருக்கிறது. அப்பாவி மணமக்கள்‌ அதை வாழ்த்து என்று எண்ணிப்‌ பூரித்துப்போகிறார்கள்‌. அது வாழ்த்து அல்ல, எச்சரிக்கையாக்கும்‌. ஈருடலுக்கு ஓர்‌ உயிர்‌ என்றால்‌ ஒர்‌ உடலுக்கு அரை உயிர்தானே! இதுவரை உங்களுக்கு முழு உயிர்‌ இருந்தது. எந்த நேரம்‌ இல்லறத்திற்குள்‌ நுழைந்தீர்களோ, அந்த நேரமே பாதி உயிர்‌ போய்விட்டது. எஞ்சிய பாதி உயிரும்‌ எப்படியெல்லாம்‌ போகப்போகிறதோ! இதுதான்‌ வாழ்த்துக்கான விளக்கம்‌" என்றார்‌ மணமக்களை வாழ்த்திய பெரியவர்‌ ஒருவர்‌.

எங்கே இப்படி நகைச்சுவையாக்கி விடுவார்களோ என்று நினைத்த இயேசு "ஓர்‌ உடலும்‌ ஒர்‌ உயிரும்‌ போல்‌ வாழ்க" என்று வாழ்த்தும்‌ வகையில்‌ "நீங்கள்‌ ஓர்‌ உடல்‌" என்கிறார்‌. உயிரால்‌ மட்டுமல்ல, உணர்வானாலும்‌ உடலாலும்‌ மணமக்கள்‌ ஒருவரே!

அன்பு என்பது தன்னிலேயே காலத்தைக்‌ கடந்தது. "அன்பே, உன்னை இத்தனை ஆண்டுகள்‌ இத்தனை மாதங்கள்‌, இத்தனை நாள்கள்‌ - உன்னை அன்பு செய்வேன்‌, பிறகு அம்போ என்று விட்டுவிடுவேன்‌" என்று சொன்னால்‌ எவள்‌ கழுத்தை நீட்டுவாள்‌? சிரிப்பாய்‌ சிரிக்கும்‌ இந்தப்‌ பைத்தியக்காரத்‌ தனத்தைத்தான்‌ நீதிமன்றங்கள்‌ நாள்தோறும்‌ மணமுறிவு என்ற பெயரில்‌ நிலைநாட்டிக்‌ கொண்டிருக்கின்றன.

"மணக்குமுன்‌ இருவராய்‌ இருந்த ஆணும்‌ பெண்ணும்‌ மணந்த பின்‌ ஒருவராகி விடுகிறார்கள்‌. ஆனால்‌ எந்த ஒருவராவது என்று அவர்கள்‌ தீர்மாணிக்கமுயலும்‌ போதுதான்‌ தொல்லை தொடங்குகிறது" என்கிறார்‌ ஒருவர்‌ கிண்டலாக. தன்னைப்‌ போலத்‌ தனக்கேற்ற ஒருவராக இருக்க வேண்டும்‌ என்று இருவரும்‌ - தனித்தனியே எண்ணும்போதுதான்‌ சிக்கல்‌.

இருபாலரின்‌ சமத்துவத்தை வலியுறுத்தி பழைய ஏற்பாட்டின்‌ உறவை முறிக்கும்‌ சட்டத்தை (இ.ச. 24:1-4) இயேசு நிராகரித்தார்‌. "உங்கள்‌ கடின உள்ளத்தின்‌ பொருட்டே..." (மத்‌. 19:8) என்று சொல்லிச்‌ சமுதாய அவலத்தைச்‌ சாடினார்‌. ஆழமான, புரட்சியான பதில்‌! மோசே ஒரு விதிவிலக்கை அனுமதித்தார்‌ என்பது உண்மைதான்‌. ஆனால்‌ அது கடவுளின்‌ எண்ணமோ விருப்பமோ அல்ல என்பதுதான்‌ இயேசுவின்‌ திடமான கருத்து.

ஒரே இறைக்கொள்கைக்கு (Monotheism) எடுத்துக்காட்டாகவே திருமணத்தை ஒருமை அடையாளமாக (Monogamy) தமதிருத்துவம்‌ என்னும்‌ தெய்வீக ஒருமைப்பாட்டின்‌ , அடையாளமாகவே கணவன்‌ மனைவி ஒருவனுக்கு ஒருத்தியாக ஒரே உள்ளம்‌ ஒரே உடலாக இருக்க விரும்பினார்‌. ஆனால்‌ அங்குதான்‌ எத்தனை பிளவுகள்‌!

இப்படிப்‌ பிணக்குக்கும்‌ பிரிவுக்கும்‌ காரணம்‌? பரத்தமை மட்டுமா? அன்புக்குத்‌ தரும்‌ முக்கியத்துவத்தைப்‌ புரிந்து கொள்ளுதலுக்குத்‌ தருவதில்லை. தூய்மைக்குத்‌ தரும்‌ முக்கியத்துவத்தை வாய்மைக்குத்‌ தருவதில்லை.

மணமுறிவு இரண்டு வகை... 1. அம்பலத்தில்‌ நடப்பது: வெளிப்படையாக, உலகறிய விலகி வாழ்பவர்கள்‌. 2. அறைக்குள்‌ நடப்பது: அந்தரங்க சோகங்கள்‌ ஆயிரம்‌. எனினும்‌ மதத்துக்காக, கெளரவத்துக்காக, குழந்தைகளுக்காக ஒன்றாக வாழ்வது போல்‌ காட்டிக்‌ கொள்பவர்கள்‌. பகல்‌ எல்லாம்‌ பாம்பும்‌ கீரியும்‌ போல. ஆனால்‌ ராத்திரி நேரத்துப்பூஜைகள்‌ ஒழுங்காக நடக்கும்‌. குழந்தைகள்‌ இடைவெளியின்றிப்‌ பிறக்கும்‌. உண்மையான அன்பு இல்லாமல்‌ பிறக்கும்‌ ஒவ்வொரு குழந்தையும்‌ விபச்சாரத்தில்‌ பிறக்கும்‌ குழந்தையே! வார்த்தைகள்‌ கடுமையானவைகள்‌, ஆனால்‌ உண்மையானவைகள்‌.

எதிர்பார்ப்புக்கு ஏற்ப எல்லாம்‌ நடப்பதிலா அன்பு நிறைவு பெறுகிறது? சேவையிலும்‌ தியாகத்திலுமன்றோ!

ஆனந்துக்குக்‌ திருமணமாகி. 13 ஆண்டுகள்‌. தலைப்பிரசவத்தில்‌ ஏற்பட்ட ஒரு கோளாறினால்‌ இடுப்புக்குக்‌ கீழ்‌ செயலற்றுப்‌ போன மனைவி படுத்த படுக்கையில்‌. சமைப்பது, துவைப்பது உட்பட அனைத்தையும்‌. ஆனந்துதான்‌ செய்ய வேண்டும்‌. இப்படி 12 ஆண்டுகள்‌. இதை அறிந்த பங்குக்குரு பரிவோடு சொன்னார்‌: "ஆனந்த்‌, நான்‌ உனக்காக செபம்‌ செய்கிறேன்‌. ஒன்றில்‌ உன்‌ மனைவிக்கு விரைவில்‌ நல்ல சுகம்‌ கொடுக்கட்டும்‌ அல்லது அவளை இறைவன்‌ தன்னிடம்‌ அழைத்துக்‌ கொள்ளட்டும்‌" அதிர்ச்சி அடைந்த ஆனந்த்‌ சொன்னான்‌: "சாமி, அவள்‌ செத்துவிட்டால்‌ என்னால்‌ உயிர்வாழ முடியாது. இப்படியே அவள்‌ எத்தனை ஆண்டுகள்‌ இருந்தாலும்‌ அவளோடு வாழ்வதே பெறும்‌ பேறு" எதையும்‌ எதிர்பார்க்காத நிபந்தனையற்ற அன்பு! உடல்‌ அழகிலும்‌ கவர்ச்சியிலும்‌ மட்டுமே நம்பிக்கை வைக்காத அன்பு!

திருமணத்தின்‌ அடித்தள மூலக்கூறுகள்‌ இரண்டு: 1. ஒருமைப்‌ பண்பு (unity) 2. முறிவுடாப்‌ பண்பு (indissoluvility).

கிறிஸ்தவரல்லாதவர்களின்‌ "திருமணங்களும்‌ இவ்விருபண்புகளைக்‌ கொண்டிருந்தாலும்‌ திருவருள்சாதனத்தால்‌ அர்ச்சிக்கப்பட்ட திருமணங்களுக்கு இது ஆணி வேராகும்‌.

சீராக்கின்‌ ஞானம்‌ சொல்கிறது (25:1): "என்‌ மனதுக்குப்‌ பிடித்தவை மூன்று. அவை ஆண்டவர்‌ முன்னும்‌ மனிதர்‌ முன்னும்‌ அழகுள்ளவை. அவை:

1. உடன்பிறப்புக்களிடையே காணப்படும்‌ ஒற்றுமை.
2. அடுத்திருப்பாரோடு ஏற்படும்‌ நட்பு.
3. தங்களுக்குள்‌ ஒன்றி வாழும்‌ கணவன்‌ மனைவியர்‌."

குடும்ப வாழ்வில்‌ சமத்துவம்‌ தேடுவது அபத்தம்‌. சமத்துவத்‌ தேடலில்‌ உரிமைகளும்‌ கடமைகளும்தாம்‌ கண்ணுக்குத்‌ தெரியும்‌. ஆனால்‌ தியாக மனப்பான்மையும்‌, விட்டுக்‌ கொடுத்து ஏற்று அன்பு செய்வதும்‌ திருமண உறவின்‌ ஆழத்திற்கு அவசியம்‌. தவறுகளை மன்னிக்க மட்டுமல்ல, பகிர்ந்து கொள்ளும்‌ மனம்‌ வேண்டும்‌.
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
இறைவன் இணைத்ததை...

திருஅவை என்றால், இறைமக்கள் என்பதும், திருஅவையி்ன் அடித்தளம் குடும்பங்கள் என்பதும், அண்மைய ஆண்டுகளில் சக்திவாய்ந்த முறையில் உணரப்படும் உண்மை.

அருள்பணியாளனான எனக்கு, திருமணம், குடும்பம் இவற்றைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது என்று, எனக்குள், அவ்வப்போது கேள்வி எழுவதுண்டு. நானும் ஒரு குடும்பத்தில் பிறந்தவன் என்பதும், என் உடன்பிறந்தோர் குடும்ப வாழ்வை மேற்கொண்டுள்ளனர் என்பதும், எனக்கு இந்தத் தகுதியைத் தந்துள்ளதாக, நான் எனக்கே சமாதானம் சொல்லிக்கொள்வேன். அந்தத் தகுதியின் அடிப்படையில், திருமணம், குடும்பம் இவற்றைப்பற்றி என் எண்ணங்களை உங்கள் முன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

திருமணத்திற்கு நாள் குறிக்க, ஓர் இளைஞன், பங்குத்தந்தையைத் தேடிச் சென்றார். பொதுவாக, கிறிஸ்தவத் திருமணங்களுக்கு முன்னால், மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் கிறிஸ்தவ மறைகல்வி எவ்வளவு தெரிந்திருக்கிறதென பங்குத்தந்தை சோதிப்பார். எனவே, திருமணத் தேதியைக் குறிக்க வந்த இளைஞனிடம், பங்குத்தந்தை, " இயேசு, திருமணத்தைப்பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா?" என்று கேட்டார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த அவ்விளைஞன், "ம்.. சொல்லியிருக்கார் சாமி" என்று கூறவே, பங்குத்தந்தை, "என்ன சொல்லியிருக்கிறார்?" என்று அடுத்தக் கேள்வியைத் தொடுத்தார். அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலோடு பங்குத் தந்தை காத்திருந்தார். இளைஞன், சிறிதும் தயக்கமின்றி, " தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறார்" என்று பெருமையுடன் சொல்லி முடித்தார். பங்குத்தந்தை அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்.

வேடிக்கைத் துணுக்குகள் சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பதற்கும் உதவும் என்பதை நாம் மறுக்க இயலாது. குடும்ப வாழ்வின் அடிப்படையான திருமணத்தை அறிந்து செய்கிறோமா? அறியாமல் செய்கிறோமா? எவற்றையெல்லாம் அறிந்து செய்கிறோம்? எவற்றையெல்லாம் அறியாமல் செய்கிறோம்? இவை, நல்ல கேள்விகள்...

குலம், கோத்திரம், நாள், நட்சத்திரம் இவையனைத்தும் பொருந்தி வருகின்றனவா என்று ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்கிறோம். அடுத்ததாக, படிப்பு, தொழில், சம்பளம், சொத்துக்கள் என்று ஒரு நீண்ட கணக்கு. எவ்வளவு தருவது, எவ்வளவு பெறுவது என்று ஒரு வியாபார ஒப்பந்தம் செய்கிறோம்.

இந்த ஆராய்ச்சிகளுக்கு நாம் செலவிடும் நேரம், ஏற்றுக்கொள்ளக்கூடியது தானா? இத்தனைப் பொருத்தங்களும் பார்த்து நடத்திவைக்கப்படும் திருமணங்கள் வெற்றிகரமாக அமைகின்றனவா? அப்படி அமையாவிட்டால், ஒருவர் ஒருவரைச் சுட்டிக்காட்டும் படலம் ஆரம்பமாகும். திருமண வாழ்வுக்கு முன்னேற்பாடாக எதை நாம் அறிய வேண்டும்?

பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. "கட்டடத்துக்கு மனைப் பொருத்தம் அவசியம். காதலுக்கு மனப் பொருத்தம் அவசியம்." மனப் பொருத்தம் நம்மில் எத்தனைப் பேர் பார்க்கிறோம்? இனம், குலம், மதம், பணம் என்று எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கும் நாம், குணம், மனம் இவற்றின் பொருத்தம் பார்ப்பது, மிகவும் அரிது. மனம், குணம் இவை பொருந்தவில்லை என்றால், போகப் போகச் சரியாகிவிடும் என்று, நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். மனம், குணம் இவற்றில் என்னதான் பொருத்தம் பார்த்தாலும், நாளுக்கு நாள் மாறக்கூடிய இவற்றிற்கு என்ன உத்தரவாதம்? மனம், குணம் இவற்றைப் புரிந்துகொண்டு, பல ஆண்டுகள் பழகியபின் மேற்கொள்ளப்படும் காதல் திருமணங்களில் கூட, இந்த உத்தரவாதம் இல்லையே.

உத்தரவாதத்தைப் பற்றி பேசும்போது, மற்றோர் எண்ணம் எழுகிறது. பொருட்களை வாங்கும்போது உத்தரவாதம் பார்த்து வாங்குகிறோம். தேர்ந்தெடுத்தப் பொருள் சரியில்லை என்றால், திருப்பிக் கொடுத்துவிட்டு, வேறு ஒன்று வாங்கி வருகிறோம். திருமண உறவில், வாழ்வில் இப்படி மாற்றமுடியுமா? இந்தக் கேள்விதான் இன்றைய நற்செய்திக்குப் பின்னணி.

பரிசேயர் கேட்கும் கேள்வி இது: "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" மனைவி ஏதோ ஒரு பொருள் போலவும், அந்தப் பொருளை ஆண்மகன் திருப்பிக் கொடுப்பது போலவும், இந்தக் கேள்வியின் தொனி அமைந்துள்ளது!

இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ள, இஸ்ரயேல் சமுதாயத்தில், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிலவிய உறவைப் புரிந்துகொள்ளவேண்டும். யூதப் பாரம்பரியத்தில் திருமணம் ஓர் உயர்ந்த அர்ச்சிப்பு என்ற எண்ணம் இருந்தது. இதைக் குறித்து அறிவுரைகள் வழங்கிய மதத் தலைவர்கள், "திருமண முறிவு நிகழும்போது, கோவில் பீடமே கண்ணீர் வடிக்கும்" என்ற பாணியில் பேசினர். ஆனால், அந்த உன்னத இலட்சியம், நடைமுறைக்கு வந்தபோது, உருக்குலைந்து போனது.

திருமண ஒப்பந்தத்தின் விளைவாக, மனைவி, கணவனின் உடைமைப் பொருளாகக் கருதப்பட்டார். பெண்ணின் உரிமையும், சுதந்திரமும் பறிபோயின. மோசே தன் சட்டத்தின் வழியே இந்த அநீதியை ஓரளவு குறைக்க முயன்றார். மனைவியை விலக்கும்போது, அந்தப் பெண் மீண்டும் தன் உரிமைகளைப் பெறுவதற்கும், மறுமணம் செய்வதற்கும் ஏற்றவாறு, 'மணவிலக்குச் சான்றிதழ்' வழங்கச் சொன்னார். இதையே நாம் இணைச்சட்ட நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்:
இணைச்சட்டம் 24 1,2

ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள்.

அருவருக்கத்தக்க செயல்' என்று மோசே குறிப்பிட்டதை, பல வழிகளில் பொருள் கொண்டனர், மதத் தலைவர்கள். ஒரு பகுதியினர், இதற்கு, விபச்சாரம்' என்று பொருள் கொண்டனர். மற்றொரு பகுதியினரோ, பெண்ணின் தோற்றம், அவர் சமைக்கும் பாங்கு போன்றவை சரியில்லை என்றாலும், அவரை விலக்கிவிடலாம் என்று அறிவுரை கூறினர்.

இன்றைய உலகிலும் மணமுறிவு என்பது மிக, மிக சிறு காரணங்களால் உருவாவதை அவ்வப்போது செய்திகளாகக் கேட்டு வருகிறோம். மணமுறிவுக்காக நீதி மன்றத்தில் விண்ணப்பித்திருந்த தம்பதியரிடையே, இந்தியாவின் முன்னணி நாளிதழ் ஒன்று ஆய்வு நடத்தியது. மணமுறிவுக்கு அவர்கள் தந்த காரணங்கள் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தன.

"நான் செல்லும் விருந்துகளுக்கு என் மனைவி வருவதில்லை" என்று ஆணும், "நான் பொருள்கள் வாங்கச் செல்லும்போது, என் கணவன் உடன் வருவதில்லை" என்று பெண்ணும் சொல்லும் காரணம் துவங்கி, குறட்டை விடுதல், சாப்பாட்டுப் பழக்கங்கள் போன்ற விளையாட்டான காரணங்களும், ஒரு சில விபரீதமான காரணங்களும் இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளன.

வளர்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டில், மனைவி மணமுறிவுக்கு அளித்த காரணம், நம்பமுடியாத அளவு 'சில்லறைத் தனமாக' இருந்தது: "கணவன் எப்போதும் பற்பசையை எடுக்கும்போது, பற்பசை குழாயின் நடுவிலேயே அழுத்தி எடுக்கிறார்" என்ற காரணத்தைச் சொல்லி மணமுறிவுக்கு விண்ணப்பித்திருந்தார்.

இதற்கு நேர் மாறாக, அன்றைய கால திருமணங்கள் அமைந்திருந்ததைப் பற்றி கதைகள் சொல்லப்பட்டுள்ளன. கார்களை உருவாக்கும் Ford நிறுவனத்தின் உரிமையாளர், ஹென்றி ஃஃபோர்ட் அவர்கள், தன் திருமண வாழ்வில் 50வது ஆண்டை நிறைவு செய்தவேளையில், அவரிடம், "உங்கள் திருமண வாழ்வின் வெற்றிக்குக் காரணம் என்ன?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் தந்ததாகச் சொல்லப்படும் பதில் இது: என் திருமண வாழ்வும், என் கார் நிறுவனமும் வெற்றி அடைந்ததற்கு ஒரே காரணம்தான் உள்ளது. நான் அடிக்கடி காரை மாற்றுவது கிடையாது. உள்ள காரை இன்னும் திறம்படச் செயலாற்றும் வழிகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சி வைத்தியம் தந்து ஆழமான உண்மைகளை சொல்லித் தருவது, இயேசுவுக்குக் கைவந்த கலை என்பதை நாம் அறிவோம். திருமணத்தின் புனிதத்தை உணராமல், பெண்ணை ஒரு பொருளெனக் கருதிய பரிசேயர்களுக்கு இயேசு ஓர் அதிர்ச்சி வைத்தியம் தந்திருப்பார் என்பது என் கணிப்பு. அந்த வைத்தியத்திற்கு அவர் பயன்படுத்திய வார்த்தைகள் இவ்வாறு இருந்திருக்கலாம்: "கணவன் மனைவியை விலக்கி விடுவது முறையா என்று கேட்கிறீர்கள். சரி! மனைவி கணவனை விலக்கி விடுவது முறையா என்று நான் கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்?" இப்படி இயேசு கேட்டிருந்தால், அவர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள்.

ஆண் பெண் உறவை இயேசு வித்தியாசமாகச் சிந்தித்திருப்பார் என்பதை, மற்றொரு நிகழ்வின் வழியாகவும் நாம் எண்ணிப் பார்க்கலாம். யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இந்த சம்பவத்தில், (யோவான் 8: 1-11) விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, இயேசுவுக்கு முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர், பரிசேயரும், மதத் தலைவர்களும். அவர்கள் சொல்லும் வார்த்தைகள்: "இப்பெண், விபச்சாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டவள். இவளைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்கிறீர்?" என்பன. அவர்களுக்கும் இயேசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்க வேண்டும். "விபச்சாரத்தில் கையும், களவுமாகப் பிடிபட்டவள் என்று சொல்கிறீர்கள், அந்த ஆண் எங்கே?" என்று கேட்டு, அவர்களைச் சங்கடத்தில் வாயடைக்கச் செய்திருக்கலாம். மாறாக, இயேசு குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர் பாவங்களைத்தான் அவர் எழுதிக் கொண்டிருந்தார் என்று ஒரு சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது மௌனத்தைக் கலைக்க அவர்கள் மீண்டும் மீண்டும் முயன்றதால், "உங்களில் பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும்." என்றார். சரியான நெத்தியடி அது!

இன்றைய நற்செய்தியிலும் சீடர்களுடைய கேள்வியில் இருந்த தவறான மதிப்பீடுகள், முரண்பாடுகள் இவற்றை நேரடியாகச் சொல்லாமல், "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம்" என்று ஆணித்தரமாய் சொல்கிறார், இயேசு.

இந்த உண்மையை மட்டும் இந்த உலகம் உணர்ந்தால்...
இந்த உண்மையின் ஆழத்தை மட்டும் இந்த உலகம் மீண்டும் மீண்டும் அசை போட்டால்...
இந்த உண்மையின் ஆழத்தை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடிந்தால்...
அப்படி புரிந்து கொள்வதன் மூலம், இவ்வுண்மையை மனதார ஏற்றுக் கொள்ள முயன்றால்...
ஆண்-பெண் உறவுகள் எவ்வளவோ நலமுடன், சக்தியுடன் வளரும். திருமண வாழ்வின் பிரச்சனைகள் தீரும்.
ஆணா, பெண்ணா, நீயா, நானா,,, யார் பெரியவர் என்ற கேள்வியை எழுப்பாமல், இருவரும் இணை என்று உணரும் போது, வாழ்க்கைப் பிரச்சனைகள், சிறப்பாக, திருமண வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வழியுண்டு.

யார் பெரியவர் என்று போன வார நற்செய்தியில் கேள்வி எழுப்பிய சீடர்கள் மத்தியில் இயேசு ஒரு குழந்தையை வைத்தார். இந்த வார நற்செய்தியிலும், இயேசு "குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள். இறையாட்சி அவர்களதே" என்கிறார்.

இந்த மூன்று வாரங்களாய் குழந்தைகளிடமிருந்து பாடங்கள் கற்று கொள்ள இயேசு தொடர்ந்து கூறி வருகிறார். வாழ்க்கையின் பிரச்சனைகளைச் சமாளிக்க, வளர்ந்துவிட்ட நமக்கு தெயர்யவில்லை என்றால், குழந்தைகளிடம் பாடங்கள் கற்றுக்கொள்ளலாமே!
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
மறையுரை புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
பொதுக்காலம்‌ 27-ஆம்‌ ஞாயிறு
முதல்‌ வாசகப்‌ பின்னணி (தொ.நூ. 2:18-24)

இன்றைய முதல்‌ வாசகமானது தொடக்கநூல்‌ 2-ஆம்‌ அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. முதல்‌ அதிகாரத்தில்‌ உலகப்படைப்பானது " குருத்துவப்‌ பாரம்பரிய முறைப்படி" சொல்லப்பட்டாலும்‌, மீண்டும்‌ இரண்டாம்‌ அதிகாரத்தில்‌ உலகப்‌ படைப்பினைப்‌ பற்றியும்‌, மனிதனுக்கு இறைவன்‌ வகுத்த திட்டத்தைப்‌ பற்றியும்‌, " யாவே பாரம்பரிய முறைப்படி" கூறுகின்றது. இறைவன்‌ ஆதாமுக்கு ஆழ்ந்த தாக்கம்‌ வரச்செய்து. அவனது விலா எலும்பிலிருந்து தக்க துணைவியை (ஏவாலை) உண்டாக்குகின்றார்‌. சில விவிலிய அறிஞர்களின்‌ கருத்துப்படி, " ஆண்‌, பெண்‌ இருவரும்‌ இறைவன்‌ முன்‌ சமமானவர்கள்‌" என்பதை உணர்த்‌துவதற்காக ஆதாமின்‌ விலா எலும்பிலிருந்து, ஏவாளை இறைவன்‌ உண்டாக்கின்றனர்‌ என்று கருதுகிறார்கள்‌. " என்‌ எலும்பின்‌ எலும்பும்‌," என்று ஆதாம்‌ ஏவாளைச்‌ சுட்டிக்காட்டிக்‌ கூறுவது, திருமணத்தின்‌ முறிவுபடாத்‌ தன்மையையும்‌, ஒருமைத்தன்மையினையும்‌ குறிக்‌கின்றது. மனித வாழ்வில்‌ திருமணம்‌ என்றால்‌ என்ன, என்பது. பற்றியும்‌, மனிதர்களுக்கான இறைவனின்‌ திட்டம்‌ என்பது பற்றியும்‌. இன்றைய முதல்‌ வாசகம்‌ தெளிவாகச்‌ சுட்டிக்காட்டுகின்றது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (எபி. 2:9-11)

இன்றைய இரண்டாம்‌ வாசகம்‌ எபிரேயருக்கு எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தினை எழுதிய ஆசிரியர்‌ யார்‌ என்பது பற்றி இன்றுவரை உறுதியாகத்‌ தெரியவில்லை. எனினும்‌, கடிதம்‌ முழுவதும்‌ மிகச்சிறந்த இறையியல்‌ கருத்துக்களை இதன்‌ ஆசிரியர்‌ எழுதியிருக்கிறார்‌, என்பது எல்லோராலும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்டிருக்கின் உண்மை, இன்றைய வாசகம்‌, இயேசுகிறிஸ்து என்பவர்‌ யார்‌, எதற்காகத்‌. துன்புற்றார்‌, எப்படி மனிதர்களாகிய நமக்கு மீட்புக்‌ கிடைத்தது என்ற கேள்விகளுக்கான விடைகளை தெளிவாகக்‌ கூறுகின்றது. " கிறிஸ்து" என்ற இறைமகன்‌ மானிடர்மேல்‌ இறைவன்‌ கொண்டுள்ள அன்பை வெளிக்காட்ட, மீட்பைத்தர தன்னையே பலியாக்கினார்‌. இறைத்திட்டத்திற்கு தன்னையே கையளித்தார்‌ என்று கூறுகின்றது.
நற்செய்தி வாசகப்‌ பின்னணி மாற்கு 10:2-16)

இயேசுவின்‌ காலத்தில்‌, " மாய்‌" மற்றும்‌ *ஹில்லேல்‌' என்ற. பிரிவினர்‌ மணவிலக்கினை ஆதரித்துப்‌ பேசி வந்தனர்‌. " மாய்‌. பிரிவிணின்‌ கருத்துப்படி, ஒருவர்‌ தன்‌ மனைவி விபச்சாரம்‌ செய்தால்‌, அதற்காகத்‌ தன்‌ மனைவியை மணவிலக்குச்‌ செய்து விடலாம்‌. ஹில்லேல்‌ பிரிவினரின்‌ கருத்துப்படி, ஒருவர்‌ தன்‌ மனைவியைப்‌ பிடிக்காத எந்தவொரு காரணத்திற்காகவும்‌ (மனைவி சாப்பிடுவதற்‌காக தண்ணீர்‌ தரவில்லை போன்ற காரணங்கள்‌) மணவிலக்குச்‌ செய்துவிடலாம்‌. இந்தப்‌ பிண்ணணியில்‌, பரிசேயர்கள்‌ இயேசுவைப்‌ பார்த்து மோயிசன்‌ கூட மணவிலக்கினை அனுமதித்திருக்கின்றார்‌,. என்று கேள்வி கேட்கின்றனர்‌. ஆனால்‌ மணவிலக்கு என்பது இறைவனின்‌ திட்டத்தில்‌ இல்லை. அது இறைவனின்‌ திட்டத்திற்கு. எதிரானது என்று இயேசு தெளிவாகக்‌ கூறுகின்றார்‌. அதுமட்டுமல்லாமல்‌, குழந்தைகளைச்‌ சுட்டிக்காட்ட, விண்ணரசை அடைய குழந்தைகளைப்போல இருக்க கற்றுக்‌ கொள்ளும்படி கூறுகின்றார்‌.

மறையுரை

இன்றைய நற்செய்தி வாசகமானது, இறையாட்சியைச்‌ சிறுபிள்ளைகளைப்போல ஏற்றுக்கொள்ளவும்‌, அதனை உரிமையாக்கி கொள்ளவும்‌ நமக்கு அழைப்பு விடுகின்றது. நான்‌ குருமடத்தில்‌ படித்துக்கொண்டிருந்தபோது எனது கோடை விடுமுறைக்‌ காலத்தில்‌ சிறுவர்‌, சிறுமிகளுக்கு மறைக்கல்விப்‌ பாடம்‌ நடத்திக்‌ கொண்டிருந்‌தேன்‌. அப்போது, ஒருநாள்‌ அவர்களைப்‌ பார்த்து, மோட்சத்திற்கும்‌ போக வேண்டும்‌ என்றால்‌ என்ன செய்யவேண்டும்‌ என்று கேட்க, அவர்கள்‌ பிரதர்‌! பொய்‌ சொல்லக்‌ கூடாது, திருடக்‌ கூடாது, அப்பா அம்மா பேச்சைக்‌ கேட்டு நடக்க வேண்டும்‌, தவறாமல்‌ கோவிலுக்கு வரவேண்டும்‌ என்று அடுக்கிக்‌ கொண்டே சென்றார்கள்‌. உண்மைதான்‌, நாம்‌ மோட்சத்திற்கு போகவேண்டும்‌ என்றால்‌, அக்குழந்தைகள்‌ சொன்னதைப்போன்று நாம்‌ செய்யவேண்டும்‌. ஆனால்‌ அதையும்‌ விட முக்கியமாக இன்றைய நற்செய்தியில்‌ இயேசு கூறுகின்றார்‌, " இறையாட்சியை சிறு குழந்தைகளைப்‌ போல ஏற்றுக்‌ கொள்ளாதோர்‌ அதற்கு உட்பட மாட்டார்கள்‌" என்று.

நமது இளைஞர்களும்‌, இளம்பெண்களும்‌ கேட்கலாம்‌, " அப்படீன்னா எங்களாலே மோட்சத்திற்கும்‌ போக முடியாதா?' என்று. அவர்களோடு சேர்ந்து நமது பெற்றோர்களும்‌, பெரியவர்களும்‌ கேட்கலாம்‌, " மோட்சத்திற்கு குழந்தைகளைப்‌ போல்‌ இருக்கறவங்க?" குழந்தைகளை சற்று உற்றுநோக்கினால்‌,

கள்ளம்‌ கபடமற்ற தூய்மையான உள்ளத்தினைக்‌ கற்றுக்‌ கொள்ளலும்‌. தாழ்ச்சியான பண்பினைக்‌ கற்றுக்‌ கொள்ளலாம்‌.
1. வெளிப்படையாக, திறந்த மனதுடன்‌ வாழ்க்கையை அணுகக்‌ கற்றுக்‌ கொள்ளலாம்‌.
2. பிறரை மன்னித்து வாழக்‌ கற்றுக்‌ கொள்ளலாம்‌.
3. நம்பிக்கையோடு, விசுவாசத்தோடு வாழக்‌ கற்றுக்‌ கொள்ளலாம்‌.

ஆனால்‌ இதனையெல்லாம்‌ உணராமல்‌, குழந்தைகளைத்‌ தன்னிடம்‌ வரவிடாமல்‌ தடுக்கின்ற சீடர்களை கண்டு இயேசு கடிந்து கொள்கிறார்‌. குழந்தைகளிடமிருந்து நல்ல ஒரு பண்பினைக்‌ கற்றுக்கொள்ள வாய்ப்புக்கிடைத்தும்‌, அதனை நழுவவிடுகின்ற அவர்கள்மீது சினம்‌ கொள்கின்றார்‌. ஒருவேளை சீடர்கள்‌, இயேசு இப்போதுதான்‌ ஊரெங்கும்‌ போதித்துவிட்டு வந்திருக்கிறார்‌. புதுமைகளைச்‌ செய்து களைப்பாக அமர்ந்துருக்கிறார்‌. அதிலும்‌, குறிப்பாக, சற்றுமுன்‌ பரிசேயர்களிடம்‌ வாதாடிவிட்டு ஓய்வாக அமர்ந்திருக்கிறார்‌. இந்த நிலையில்‌ குழந்தைகளை அவரிடம்‌ ஆசிர்வாதம்‌ பெற அனுப்புவது, அவருக்கு மேலும்‌ அயர்வை உண்டாக்கும்‌ என்று நினைத்திருக்கலாம்‌.

ஆனால்‌ இயேசுவின்‌ எண்ணம்‌ வேறாக. இருந்தது. தான்‌ களைப்பாக இருந்தாலும்‌ பரவாயில்லை. தன்னைக்‌ கண்டு ஆசிர்‌வாதம்‌ வாங்க வந்த குழந்தைகளை ஏமாற்றமடைய விடக்கூடாது. என்று விரும்பீனார்‌. அதுமட்டுமல்ல அக்குழந்தைகளைச்‌ சுட்டிக்காட்டி, இக்குழந்தைகளைப்‌ பார்த்து கற்றுக்‌ கொள்ளுங்கள்‌. விண்ணரசு உங்கள்‌ உரிமையாகும்‌, என்ற உண்மையை உணர்த்தினார்‌.

கள்ளம்‌, கபடமற்று தூய உள்ளம்‌ கொண்டவர்கள்‌ குழந்தைகள்‌, ஆனால்‌, " கடவுள்‌ இணைத்ததை மனிதர்‌ பிரிக்காதிருக்கட்டும்‌' என்ற திருமண வாழ்வு பற்றிய திட்டத்தினை நன்றாக உணர்ந்‌திருந்தும்‌, ஒருவர்‌ தன்‌ மனைவியைப்‌ பிடிக்காவிட்டால்‌ விவாகத்தின்‌ மூலம்‌ விலக்கிவிடலாம்‌. என்ற சமூகத்தின்‌ வழக்கத்தை முன்னித்தி, மோயிசன்‌ கூட மணமுறிவை அனமதித்திருக்கிறாரே, இது சரியா என்று கபட உள்ளத்தோடு இயேசுவைக்‌ கேள்விகேட்டவர்கள்‌ பரிசேயர்கள்‌. அவர்களுக்கு கள்ளம்‌ கபடமில்லா குழந்தைதளைச்‌ சுட்டிக்காட்டி, இக்குழந்தைகளைப்‌ போல நீங்கள்‌ மாறாவிடில்‌ விண்ணரசை அடைய முடியாது" என்று எச்சரித்த இயேசு, இன்று. நம்மையும்‌ குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார்‌. மட்டும்‌ தான்‌ போக முடியும்னா, கல்யாணம்‌ பண்ணி, குழந்தை பெற்று, அவர்களைக்‌ காப்பாத்திட்டு வருகின்ற எங்களால்‌ போக முடியாதா, அப்படீன்னா, ஏன்‌ .'.பாதர்‌! எங்களை கோவிலுக்கு வரச்சொல்றீங்க, ஒப்புரவு அருட்சாதனத்தைப்‌ பெற்று, நற்கருணை வாங்கச்‌ சொல்றீங்க என்று கேட்கலாம்‌. ஆனால்‌, இன்றைய நற்செய்தியின்‌ வழியாக இக்கேள்விகளுக்கு இயேசு கூறுகின்ற. பதில்‌ " சிறு குழந்தைகள்‌ மட்டுமல்ல, இளைஞர்‌, இளம்‌ பெண்கள்‌. சிறுகுழந்தைகளைப்‌ போன்ற மனநிலை கொண்ட அனைவருமே. இறைவனின்‌ அரசை மோட்சத்தை அடையலாம்‌ என்பதுதான்‌.

இயேசு இன்றைய நற்செய்தியில்‌ வழங்குகின்ற வாக்குறுதியில்‌, நாம்‌ கவனிக்க வேண்டிய முக்கியமான சொற்றொடர்‌, " குழந்தைகளைப்‌ போல நாம்‌ கேட்கலாம்‌, அது. என்ன குழந்தைகளைப்‌ போன்ற மனநிலை. குழந்தைப்‌ பருவத்தைத்‌ தாண்டி, எத்தனையோ வாழ்க்கை அனுபவங்களைப்‌ பெற்றிருக்கின்ற. நான்‌, குழந்தைகளிடம்‌ இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? அதிலும்‌ இறைவனின்‌ விண்ணக அரசை அடைவதற்கு குழந்தையை போன்ற மனநிலையைப்‌ பெற வலியுறுத்துகிறாரே என்று.

ஒருமுறை உலகப்‌ போர்களைபற்றி வரலாற்றுப்‌ பாட ஆசிர்யர்‌ பாடம்‌ நடத்திக்‌ கொண்டிருந்தார்‌. அப்போது பாடத்தைக்‌ கவனிக்‌காமல்‌ ஏதோ ஒரு சிந்தனையில்‌ இருந்த மாணவனைப்‌ பார்த்து எழுந்து நிற்கும்படி ஆசிரியர்‌ கற, அதற்கு அந்த மாணவன்‌, " சார்‌! உலகத்தில்‌ நடந்த போர்களைப்‌ பற்றி நீங்க பாடம்‌ நடத்தறீங்க. ஆனா கடந்த 6 மாசமா எங்க வீட்டில தினமும்‌ என்‌ அப்பாவுக்கும்‌, அம்மாவுக்கும்‌ சண்டை நடக்குது. அந்தச்‌ சண்டையால நான்‌ அனுபவிக்கின்ற கொடுமை எனக்குத்தான்‌ சார்‌ தெரியும்‌" என்று பதில்‌ கூறினன்‌.

குழந்தைகளின்‌ வாழ்வையும்‌, வார்த்தைகளையும்‌ சிறிது உற்று நோக்கினால்‌ பெரியவர்களாகிய நாம்‌, நமது அன்றாட வாழ்விற்குத்‌ தேவையான எத்தனையோ படிப்பினைகளை கற்றுக்‌ கொள்ளலாம்‌; உலகம்‌ போற்றும்‌ உத்தமர்களாக வாழலாம்‌, இறைவனின்‌ விண்ணக அரசையும்‌ அடையலாம்‌ என்பதுதான்‌. இன்றைய நற்செய்தியின்‌ வழியாக, இயேசு நம்‌ முன்‌ வைக்கின்ற உண்மை.

தற்பெருமை இன்றி தாழ்ச்சி என்ற பண்பினைப்‌ பெற்றவர்கள்‌ குழந்தைகள்‌. இதனை உணராமல்‌ குழந்தைகளை ஒரு பொருட்டேனும்‌ கூட மதிக்காமல்‌, " விண்ணரசில்‌ யார்‌ பெரியவர்‌? என்ற கேள்வியைக்‌ கேட்டவர்கள்‌ சீடர்கள்‌ அவர்களின்‌ ஆணவத்திற்கு பதில்‌ கூறும்‌ வண்ணம்‌ " சிறு பிள்ளைகளைப்‌ போல தம்மைத்‌ தாழ்த்திக்‌ கொள்பவரே விண்ணரசில்‌ மிகப்‌ பெரியவர்‌" (மத்தேயு 18:4) என்று கூறுகின்றார்‌ இயேசு.

" தாழ்ச்சியே மற்ற எல்லாப்‌ புண்ணியங்களுக்கும்‌ அடிப்படை" இதனை உணர்ந்ததால்தான்‌, எத்தனையோ புனிதர்கள்‌ தாழ்ச்சி என்ற பண்பிணைப்‌ பெற தங்களையே வருத்திக்‌ கொண்டார்கள்‌. இன்று இறைமக்களாகிய நமமையும்‌ தாழ்ச்சி என்ற புண்ணியத்‌தினைக்‌ கற்றுக்‌ கொள்ள, அதுவும்‌ குழந்தைகளைப்‌ பார்த்துக்‌ கற்றுக்கொள்ள இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார்‌.

திறந்த மனநிலையுடன்‌, எதையும்‌ வெளிப்படையாக, பணிவோடு ஏற்றுக்‌ கொள்பவர்கள்‌ குழந்தைகள்‌. எனவேதான்‌, நற்செய்தியாளர்‌ லூக்கா கூட தனது நறசெய்தியிலே, " ஆண்டவரே! உம்மைப்‌ போற்றுகிறேன்‌. ஏனெனில்‌ ஞானிகளுக்கும்‌, அறிஞர்களுக்கும்‌ இவற்றை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்‌" (லூக்கா 10-21) என்று புகழ்கின்றார்‌. நாமும்‌ குழந்தைகளின்‌ மனநிலையைப்‌ பெற்றவர்களாக இறைவன்‌ நம்‌ வாழ்வில்‌ வெளிபடுத்துகின்ற காரியங்களை, திட்டங்களைப்‌ பணிவோடு ஏற்றக்‌ கொள்ள, இன்றைய நற்செய்தியின்‌ வழியாக இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார்‌.

" குழந்தையும்‌ தெய்வமும்‌ மனத்தால்‌ ஒன்று குற்றங்களை மறந்து விடும்‌ குணத்தால்‌ ஒன்று' என்று தமிழ்த்திரைப்‌ படத்தில்‌ ஒரு பாடல்‌ உண்டு. இந்தப்பாடல்‌, குழந்தைகள்‌ பிறரின்‌ குற்றங்களை மன்னித்து ஏற்றுக்‌ கொள்கிறார்கள்‌, என்பதைப்பற்றி நமக்குக்‌ கூறுகிறது. பாடலைக்‌ கேட்கின்ற நாம்‌, கேட்டவுடன்‌ மறந்துவிட்டும்‌ போய்விட வேண்டாம்‌. குழந்தைகளைப்‌ பார்த்து மன்னிக்கக்‌ கற்றுக்‌ கொள்ளுங்கள்‌ விண்ணரசு உங்களின்‌ உரிமையாகும்‌ என்று, இன்றைய நற்செய்தியின்‌ வழியாக இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார்‌.

நமது அன்றாட வாழ்க்கைக்கு வருவோம்‌. குழந்தைகளைப்‌ பார்த்து எத்தனையோ நல்ல காரியங்களைக்‌ கற்றுக்கொள்கின்ற நாம்‌ எந்த அளவிற்கு குழந்தைகளின்‌ நலனில்‌ அக்கறை காட்கின்றோம்‌, என்பது மிகப்‌ பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஆங்கிலத்திலே, " Human beings should have an attitude of gratiude' என்று சொல்வார்கள்‌. அதாவது, " மனிதர்கள்‌ நன்றியுணர்வு உடையவர்களாக இருக்கவேண்டும்‌' என்பது இதற்கும்‌ பொருள்‌. ஆனால்‌ உலகில்‌ நடப்பது என்ன?

1991-ஆம்‌ ஆண்டு எடுக்கப்பட்ட உலக குழந்தைகள்‌ நிறுவனத்தின்‌ கணக்கெடுப்புப்படி,
1. 40,000 குழந்தைகள்‌ தினம்‌ தோறும்‌ பசியால்‌ மடிகிறார்கள்‌.
2. 25,000 குழந்தைகள்‌ 3-ஆம்‌ உலக நாடுகளில்‌ மட்டும்‌ நோயால்‌ மடிகிறார்கள்‌.,

இந்தியாவின்‌ மொத்த வருமானத்தில்‌ 20 சதவீதம்‌ குழந்தைத்‌ தொழிலாளர்கள்‌ உழைப்பினால்‌ வருவது. ஒவ்வொரு நாளும்‌ இந்தியாவில்‌ மட்டும்‌ 20,000 குழந்தைகள்‌ பாலியல்‌ தொழிலுக்காக கடத்தப்படுகின்றார்கள்‌. எனவே குழந்தைகளின்‌ இந்நிலைக்காக நம்மால்‌ என்ன செய்ய முடியும்‌ என்று கேட்பதற்கு பதிலாக, குழந்தைகளின்‌ நலனிற்காகச்‌ செய்யப்படுகின்ற திட்டங்களில்‌ பங்குபெறுவோம்‌. நமது வீடுகளில்‌, வேலை செய்கிற இடங்களில்‌ குழந்தைத்‌ தொழிலாளர்‌ முறையை ஒழிப்போம்‌. குழந்தைகள்‌ கல்விபெறும்படியாக, நல்ல உணவு பெறும்‌ படியாக உதவிகள்‌ செய்வோம்‌ " வாடிய பயிரைக்‌ கண்ட போதெல்லாம்‌ வாடினேன்‌" என்று அருட்பிரகாச வள்ளலாளர்‌ கூறுவார்‌. நாமும்‌ குழந்தைகளைக்‌ கண்ட போதெல்லாம்‌, " அவர்கள்மேல்‌ பரிவு கொண்டேன்‌" என்று கூறுவோம்‌.

குழந்தைகளை வளர விடுவோம்‌ முன்னேற்றுவோம்‌. வருங்காலத்‌ தலைமுறையினரும்‌, இக்காலத்‌ தலைமுறையினாகிய நாமும்‌, விண்ணரசை அடைவதற்காக அவர்களைப்‌ பார்த்துக்‌ கற்றுக்‌ கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில்‌, இன்றைய நற்செய்தியில்‌ இயேசுவே கூறுகின்றார்‌. " இறையாட்சியை சிறுபிள்ளையைப்‌ போல ஏற்றுக்‌ கொள்ளாதோர்‌ அதற்கு உட்பட மாட்டார்‌." என்று கூறினார்‌.
பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1 " இயேசுவினால்‌ மனிதருக்கு மீட்பு என்ற 2-ஆம்‌ வாசக அடிப்படையில்‌.
2 " கடவுள்‌ இணைத்ததை மனிதர்‌ பிரிக்காதிருக்கட்டும்‌' என்ற கருத்தில்‌.
3 குழந்தைகளிடம்‌ காணப்படுகின்ற கீழ்ப்படிதல்‌, கபடற்ற உள்ளம்‌, தாழ்ச்சி என்ற ஏதாவது ஒரு பண்பின்‌ அடிப்படையில்‌.
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம்‌ - இருபத்‌தேழாம்‌ ஞாயிறு
முதல் வாசகம் 2:18-24

மனித படைப்புப்‌ பற்றி. தொடக்க நூல்‌ கூறும்‌ செய்தி இரண்டு பாரம்பரியங்களின்‌ தொகுப்பு (1. Priestly Source அதி. 1:26 - 31; 2. Yahwistic Source அதி. 2 : 4 - 25). இருவேறு காலங்களில்‌, வேறுபட்ட குழுவினரால்‌ எழுதப்பட்டு, பின்னர்‌ தொடக்க நூல்‌ முழு உரு எடுத்தபோது இவ்‌இரண்டு பாரம்பரியங்களும்‌ இணைத்து வைக்கப்பட்டன என்பது ஆராய்ச்சியாளர்‌ துணிபு. இந்த இரண்டாம்‌ பாரம்பரியத்தில்‌ (J) மனிதபடைப்பு முதலிடம்‌ பெறுவது காணத்தக்கது.

மனிதன்‌ ஒரு சமூகப்‌ பிராணி

ஆணும்‌ பெண்ணுமாக மனிதனைப்‌ படைத்தார்‌ கடவுள்‌ (தொநூ. 1 : 27). ஆணும்‌ பெண்ணும்‌ இணைந்தே கடவுளின்‌ சாயலாகின்றனர்‌. எனவே ஆணைத்‌ தவிர்த்த பெண்ணோ, பெண்ணைத்‌ தவிர்த்த ஆணோ இறைவனுடைய படைப்புத்‌ திட்டத்தின்‌ குறிக்கோளாக முடியாது. ஆதாமுடைய விலா எலும்பை எடுத்து அதைப்‌ பெண்ணாகச்‌ சமைத்தார்‌ (2: 21- 22) இறைவன்‌ என்பதிலும்‌ இவ்வுண்மையே வெளிப்படுகிறது. எனவே ஆணும்‌ பெண்ணும்‌ சேர்ந்து சமூகத்தை உருவாக்க வேண்டும்‌. " மனுசனிடமிருந்து " (காண்‌ : எபிரேயத்தில்‌ " ich‌" எடுக்கப்பட்டதால்‌ " மனுசி" (காண்‌ : எபிரேயத்தில்‌ " isha" ) என்று கூறுவதிலும்‌ இவ்‌ ஒற்றுமையே புலப்படுகிறது.

எனவே " ஆணும்‌ பெண்ணும்‌ சரி நிகர்‌ சமானமாக" வாழ வேண்டும்‌ (2 : 18). பேதைப்‌ பெண்‌, அடிமைப்பெண்‌, " பெண்புத்தி பின்புத்தி" , " பெண்ணைக்‌ கண்டால்‌ பேயும்‌ இரங்கும்‌" என்பதெல்லாம்‌ பெண்ணை இழிவுபடுத்துவதற்காக ஆண்கள்‌ தீட்டிய திட்டம்‌. இது இறைத்திட்டத்திற்கு மாறானது என்பதை உணர்ந்து பெண்ணினத்திற்குப்‌ பெருமை சேர்ப்போம்‌. சமூகத்திலும்‌ அரசியலிலும்‌, சமய வழிபாடுகளிலும்‌ பெண்களுக்கு உரிய இடத்தைத்‌ தர முயல்வோம்‌. " பெண்ணிற்‌ பெருந்தக்க யாவுள?"

கணவன்‌ - மனைவி ஒரு மனப்பட்ட வாழ்வு

" மலரும்‌ மணமுமாக" , " நகமும்‌ சதையுமாக" ஆணும்‌ பெண்ணும்‌ ஒன்றுபட்டு வாழ்வதே திருமண வாழ்வு. ஈருடல்‌ ஒருயிராகக்‌ கணவன்‌ மனைவியர்‌ வாழ வேண்டுமென்பதே இறைவனின்‌ திருவுளம்‌. இவள்‌ என்‌ எலும்புகளின்‌ எலும்பும்‌ தசையின்‌ தசையுமாய்‌ இருக்கிறாள்‌' (2 : 23) என்ற முதல்‌ மனிதனின்‌ சொற்களும்‌ இக்கருத்தையே உறுதிப்படுத்துதல்‌ காண்க. எனவே எதுவும்‌ எவரும்‌ இவ்‌ ஒற்றுமையில்‌ தலையிட உரிமையில்லை. இவ்வுண்மையைக்‌ கிறிஸ்துவ சமுதாயம்‌ அறிந்து கடைப்பிடிக்க வேண்டும்‌. மாமியார்‌ மருமகள்‌ சண்டைகளும்‌, பெண்களைச்‌ சந்தைப்‌ பொருட்களாக விலைபேசும்‌ இழிசெயலும்‌. " ஸ்டவ்‌ கொலைகளும்‌, இவையன்ன பிறவும்‌ மனித குலத்துக்கே இழிவு சேர்ப்பனவாகும்‌. " கடவுள்‌ இணைத்ததை மனிதர்‌ (சாதி, குலம்‌, பொன்‌, வெள்ளி, நகைகள்‌, பண்டங்கள்‌ முதலியன) பிரிக்காதிருக்கட்டும்‌ (மத்‌. 19 : 3 - 6) என்ற இயேசுவின்‌ சொற்களை மனத்திலிறுத்தி, திருமண வாழ்வு ஒருமனப்பட்ட வாழ்வாய்‌ அமைய உறுதியெடுப்போம்‌. பட்டணத்திலே, பங்கிலே, குடும்பத்திலே திருமணவாழ்வு சீர்குலைவதைத்‌ தடுக்க முயற்சிகள்‌ எடுப்போம்‌. திருமணவாழ்விலேயே அன்பு, பண்பு, ஒருவரை யொருவர்‌ புரிந்து விட்டுக்கொடுக்கும்‌ மனப்பான்மை, மன்னிப்பு முதலியன வளர, எல்லாத்‌ திருமணங்களிலும்‌ முக்கிய பங்கெடுத்து, மூன்றாம்‌ நபராக இருந்து நடத்திவைக்கும்‌ இறைவனிடம்‌ வேண்டுவோம்‌.

படைப்பின்பால்‌ மனிதக்‌ கடமைகள்‌

படைக்கப்பட்ட எல்லாவற்றிற்கும்‌ ஆதாம்‌ பெயர்‌ கொடுத்தார்‌ என்பதன்‌ மூலம்‌ படைப்பின்பால்‌ மனிதனுக்குரிய கடமைகள்‌ புலப்படுகின்றன. பிள்ளைக்குப்‌ பெயரிடுவதில்‌ பெற்றோரின்‌ உரிமை வெளிப்படுகிறது. ஆயினும்‌ கடமையில்லாத உரிமைகள்‌ இருக்க முடியாது. எனவே படைப்புகளுக்குப்‌ பெயர்‌ கொடுத்த ஆதாம்‌ அவற்றின்பால்‌ தன்‌ கடமையையும்‌ நிறைவேற்ற வேண்டும்‌. " மானிடரை நம்‌ உருவிலும்‌, நம்‌ சாயலிலும்‌ உண்டாக்குவோம்‌. அவர்கள்‌ கடல்‌ மீன்களையும்‌, வானத்துப்‌ பறவைகளையும்‌, கால்நடைகளையும்‌, மண்ணுலகு முழுவதையும்‌, நிலத்தில்‌ ஊர்வன யாவற்றையும்‌ ஆளட்டும்‌" (1: 26) என்பதிலும்‌ " பலுகிப்‌ பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்‌; அதை உங்கள்‌ ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்‌; கடல்‌ மீன்கள்‌, வானத்துப்‌ பறவைகள்‌, நிலத்தில்‌ ஊர்ந்து உயிர்‌ வாழ்வன அனைத்தையும்‌ ஆளுங்கள்‌" (1: 28) என்பதிலும்‌ படைப்புக்களை நாசவேலைக்குப்‌ பயன்படுத்தாது, மனிதகுலத்திற்கு உதவும்‌ வகையில்‌ அவற்றைப்‌ பாதுகாக்க வேண்டும்‌ என்பதும்‌ இறைவனின்‌ திட்டம்‌ என்பது புலனாகிறது. எனவே இயற்கை வளத்தைப்‌ பாதுகாக்க முயற்சி எடுப்போம்‌.
மனிதன்‌ தனிமையாயிருப்பது நன்றன்று. இருவரும்‌ ஒரே உடலாய்‌ இருப்பார்கள்‌.

இரண்டாம் வாசகம்: எபி 2:9-11

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம்‌ இயேசுவின்‌ தலையைக்‌ குருத்துவத்தைக்‌ கருப்பொருளாகக்‌ கொண்டது. இயேசு மக்கள்பால்‌ கொண்டிருந்த இரக்கமும்‌. இறைத்‌ தந்தைபால்‌ கொண்டிருந்த நம்பிக்கையும்‌ தலைமைக்‌ குருவான அவரின்‌ தனிக்குணங்கள்‌ (காண்‌ : எபி 2: 17). இன்றைய வாசகம்‌ இயேசுவின்‌ இரக்கக்‌ குணம்‌ பற்றிக்‌ கூறுகிறது.

இயேசுவின்‌ தாழ்மை

தம்முடைய மனித உருவிலே இயேசு வானதூதர்களுக்குத்‌ தாழ்ந்த நிலையிலே உள்ளார்‌ (2 : 7). மனித இயல்பு, அவ்‌இயல்போடு சேர்ந்த நோய்‌ நோக்காடு. பலமற்ற தன்மை. சாவு முதலிய அனைத்தையும்‌ இயேசு ஏற்றுக்கொள்கிறார்‌ (2 : 14 - 16), மக்களைத்‌ தன்‌ " சகோதார்கள்‌ என்று ஏற்றுக்கொள்ளும்‌ அளவுக்கு (2 : 11 - 14), "தம்மையே வெறுமையாக்கி அடிமையின்‌ வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்‌ ' (பிலி. 2: 7). என்னே இயேசு நம்மீது கொண்ட அன்பு? அன்பிற்கு அடைக்கும்‌ தாழ்‌ கிடையாது. இத்தகைய இயேசுவின்‌ அன்புக்கு நம்‌ பதில்‌ என்ன? " அன்புடையார்‌ என்பும்‌ உரியர்‌ பிறர்க்கு என்பது நமது வாழ்வைப்‌ பொறுத்தமட்டில்‌ இயேசுவின்பால்‌ என்ன வழிகளில்‌ செயல்படுகிறது?

தாழ்மையில்‌ உயர்வு


"கோதுமை மணி மண்ணில்‌ விழுந்து மடியாவிட்டால்‌ அது அப்படியே இருக்கும்‌. அது மடிந்தால்தான்‌ மிகுந்த விளைச்சலை அளிக்கும்‌ என உறுதியாக உங்களுக்குச்‌ சொல்கிறேன்‌ (பயோ. 12 : 24) என்ற இயேசுவின்‌ சொற்கள்‌ அவர்‌ வாழ்க்கையிலேயே பொருள்‌ பெறுகின்றன. எனவே கான்‌ பவுல்‌. இயேசு "மனித உருவில்‌ தோன்றி. சாவை ஏற்கும்‌ அளவுக்கு. அதுவம்‌ சிலுவைச்‌ சாவையே ஏற்கும்‌ அளவுக்குக்‌ கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்‌. எனவே கடவுளும்‌ அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும்‌ மேலான பெயரை அவருக்கு அருளினார்‌ (பிலி. 2: 8 - 9} என்பார்‌. "கடவுள்‌ எல்லாவற்றையும்‌ தமக்கென்று தாமே உண்டாக்கினார்‌. அவர்‌. மக்கள்‌ பலரை மாட்சியில்‌ பங்குகொள்ள அழைத்துச்‌ செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத்‌ தொடங்கி வழி நடத்துபவரைத்‌ துன்பங்கள்‌ மூலம்‌ நிறைவுள்ளவராக்கினார்‌ (எபி. 2 : 10). நமக்கும்‌ அதே வழியைத்‌ தான்‌ இறைத்‌ தந்தையும்‌ இயேசுவும்‌ காண்பிக்கின்றனர்‌. துக்கம்‌. துயரம்‌, வருத்தம்‌. துன்பம்‌ முதலியன நம்மை இயேசுவோடு இணைக்கின்றன; நம்மை மறு இயேசுவாக மாற்றுகின்றன என்பதை உணர்ந்து துன்பச்‌ சுழல்களில்‌ துவண்டு விடாது சிலுவைப்‌ பாதையிலே நடப்போம்‌.

எல்லாம்‌ நமக்காக

கடவுள்‌ நம்மைத்‌ தம்முடைய மகிமையிலே பங்கு கொள்ள அமைக்கிறார்‌ (2 : 10). அவருடைய மகிமையில்‌ பங்குபெறுவது என்பது இறைவன்‌ நமக்களிக்க விரும்பும்‌ மீட்பைப்‌ பெறுவதாகும்‌. மகிமை வழி மீட்புக்கு அழைத்துச்‌ செல்லும்‌ இறைவனுக்கு நன்றி கூறுவோம்‌. கடவுள்‌ பரிசுத்தர்‌. புனிதர்‌. தம்‌ புதல்வர்களிடம்‌ அவர்‌ விரும்புவது அப்பரிசுத்தமே. எனவே பரிசுத்தராகிய கிறிஸ்துவை அனுப்பி நம்மைப்‌ பரிசுத்த வாழ்வுக்கு அமைக்கும்‌ இறைவனுக்குப்‌ புகழ்மாலை சாத்துவோம்‌. இயேசு, இறைவனின்‌ மகன்‌; நாமும்‌ அவரிலே இறைவனின்‌ மக்களாவோம்‌. எனவே இயேசுவோடு சகோதரத்தன்மை நமக்களித்த இறைவனை ஏத்துவோம்‌. ஆம்‌, நாம்‌ மீட்புப்‌ பெற்றவர்கள்‌, மகிமையை அடைந்தவர்கள்‌, பரிசுத்தர்கள்‌, இயேசுவின்‌ சகோதர சகோதரிகள்‌. என்னே நமது உயர்வு? என்னே நமது பெருமையும்‌ பேறும்‌ புகழும்‌? "நன்றி நன்றி இயேசுவே, தந்தையே, என்றும்‌ நன்றி, நன்றி உமக்கே" என்று நன்றிப்‌ பண்‌ பாடுவோம்‌.

இயேசு பாடுபட்டது மனிதகுலம்‌ அனைத்திற்காக

எனவே, சூழவுள்ள மனிதர்களுடைய நல்வாழ்விலே. அவர்களது மீட்பிலே நமது பங்கு என்ன? இவ்வுலகிலே மனிதர்களிடையே நீதி நியாயம்‌ நிலவ நாம்‌ என்ன முயற்சிகள்‌ எடுக்கிறோம்‌? மறுவுலக வாழ்வுக்கு இவ்வுலக வாழ்வே முதற்படியென்றால்‌ இவ்வுலகிலே அன்பு, நீதி, நேர்மை, நியாயம்‌ தழைத்திட நாம்‌ அயராது உழைக்க வேண்டும்‌, பாடுபட வேண்டும்‌. " தனியொருவனுக்கு உணவில்லையெனில்‌ செகத்தினை அழித்திடுவோம்‌" என்ற பாரதியாரின்‌ பாடல்‌ நம்மில்‌ சில பாதிப்புகளை ஏற்படுத்துமா?
இறைவன்‌ நம்மைச்‌ சகோதரர்கள்‌ என அழைக்க வெட்கப்படவில்லை.
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

இறைத்துணையோடு, இணை பிரியாது வாழ்வோம்!


2012ஆம் ஆண்டு நவம்பர் 06ஆம் தேதி தினகரன் நாளிதழில் ஒரு சோகமான நிகழ்வு ஒன்றை வாசித்தேன். 102 வயதான திரு. மகேசன் என்பவரும், 94 வயதான திருமதி. சுசீலா அவர்களும் இணை பிரியா தம்பதியராக தங்கள் திருமண வாழ்வைச் சீரும் சிறப்புமாக நடத்தி வந்தனர். அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற அருமையான ஒரு தம்பதியர். ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களையும் நல்ல முறையில் படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தனர். நாட்கள் உருண்டோடின. மகேசனின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. திடீரென ஒரு நாள் உறங்க சென்றவர், நிரந்தரமான உறக்கத்திற்கு சென்று விட்டார். அதாவது இறந்து விட்டார். இந்த இழப்பு அவரின் குடும்பத்தாருக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தது. கணவனின் பிரிவைத் தாங்க முடியாத உள்ளமாய் இருந்த மனைவி சுசீலா அடுத்த அரைமணி நேரத்தில் கணவனின் காலடியைப் பிடித்துகொண்டே தன் உயிரையும் இழந்தார். கணவன் மற்றும் மனைவியாய் வாழ்ந்த அவர்களின் மரணம் அக்கிராமம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. அப்போது அவர்களின் நான்கு வயது பேரன் ஒருவன், சடலமாய் இருந்த தன் பாட்டி தாத்தாவுக்கு அருகில் சென்று, 'எனக்கு அப்பவே தெரியும். தாத்தா செத்துட்டா பாட்டியும் செத்திடுவாங்கன்னு' என்று சொன்னான். உடனே அவனின் தாய் வாயில் ஒரு அடியிட்டு அச்சிறுவனைக் கண்டித்தார். ஆனால் அவனின் பேச்சில் உண்மை இருந்தது. ஏனென்றால், சற்று நேரம்கூட பிரிய மனமில்லா தாத்தாவும் பாட்டியும் எப்படி சாவில் பிரிந்து நிற்பர் என்பது அவனின் கூற்று. ஏனெனில் பாட்டி ஒருநாள் உறவினர் வீட்டில் விசேஷம் என்று சென்றுவிட்டார். அன்றைய நாள் தாத்தா குட்டிப்போட்ட பூனை மாதிரி இங்கிட்டும் அங்கிட்டும் அலைந்துகொண்டிருந்தார். அப்போதே புரிந்துகொண்டேன். தாத்தா இல்லாம பாட்டிலாயும், பாட்டி இல்லாம தாத்தாவாலையும் வாழ முடியாது. இறுதிவரை இணைபிரியா தம்பதியராய் தியாக உள்ளத்தோடு வாழ்ந்தனர். இது அக்கிராமத்திற்கே ஒரு முன்மாதிரியான வாழ்வைக் கொண்டு வந்தது.

இறைஇயேசுவில் பிரியமான சகோதார, சகோதரிகளே!
இறைவன் மனிதனைப் படைத்தது எதற்காக என்ற கேள்வியைக் கேட்டால், அதற்கான பதில்: 'மகிழ்ந்திருப்பதற்கு' என்று வரும். கடவுளின் முதன்னையான நோக்கமே தான் படைத்த அனைத்து உயிர்களும் மகிழ்ச்;சியாக வாழ வேண்டுமென்பதுதான். ஆகவேதான் கடவுள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து படைத்தார். அதிலே உயர்ந்த படைப்பாக மனிதனை தன் உருவிலும், சாயலிலும் (தொ.நூ 1:26) படைத்தார் என்று பார்க்கின்றோம். இன்றைய இறைவாக்குகள் அனைத்துமே இரண்டு விதமான சிந்தனைகளைத் தாங்கி நிற்கின்றன: 1. இணை பிரியா திருமண வாழ்வு, 2. குழந்தைப்பேறு. இன்றைய உலகம் சந்திக்கின்ற மிகப்பெரிய பிரச்சனைகள் இவையிரண்டும். திருமண வாழ்வு சரிவர அமையாததால் கோவில் வாசலில் நீதியின் கடவுளாகிய இறைவன் முன் சேர்ந்த ஜோடிகள் கோர்ட் வாசலில் நீதிரசர்கள் முன்னிலையில் பிரிந்து போகிறார்கள்;. இது ஒரு புறம் இருக்க, அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகளை வளர்க்க முடியா சூழலும், வேண்டாமென்று ஒதுக்கும் சூழலும் இன்று அதிகமாகவே நடந்தேறுகின்றன. இத்தகைய கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்ள அன்போடு அழைக்கின்றது ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு கொண்டாட்டம்.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் உலகத்தையும், பொருள்களையும், மனிதனையும் படைக்கும் நிகழ்வைக் குறித்த பார்வைகள் வழங்கப்பட்டுள்ளன. உலகைப் படைத்த கடவுள் படைப்பின் சிகரமான மனிதனைப் படைக்கிறார். அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைக்கிறார். முதலில் ஆதாமைப் படைத்துவிட்டு பின்பு ஏவாளை கடவுள் படைக்கிறார். இங்கே ஆழமான சிந்தனை ஒன்றைக் கவனிக்க வேண்டும். கடவுள் ஆதாமின் விருப்பத்திற்கேற்ப ஏவாளையே, ஏவாளின் விருப்பத்திற்கேற்ப ஆதாமையே படைக்கவில்லை. அவ்விருவரையும் கடவுள் தன் விருப்பத்திற்கேற்ப படைக்கிறார். அந்த படைப்பினை முழுவதுமாக அன்புச்செய்கிறார். எனவேதான் இருவரும் இனி இருவர் அல்ல; ஒரே உடல் என்று வாயார கூறி மகிழ்கிறார். திருமணம் என்பது ஆண்டவரால் உருவாக்கப்பட்ட ஒரு அருமையான வாழ்வியல் சிந்தனை. எங்கோ பிறந்த ஆணும், எங்கோ பிறந்த பெண்ணும் ஒன்றாய் வாழ்கிறார்கள் என்றால், இது நம்முடைய செயல் அல்ல. ஆண்டவரின் செயல். எனவேதான் பல நேரங்களில் அது நம் கண்களுக்கு வியப்பாகவே உள்ளது. அன்பர்களே, முதல் வாசகத்தின் பின்னணியில் ஒரே ஒரு சிந்தனையை மட்டும் உங்களுடன் நான் பகிர விரும்புகின்றேன். அது எதுவெனில், இறைவன் இணைத்த உறவு வாழ்வை இறைவன் இறுதிவரை ஆசீர்வதிக்கிறார் என்பதுதான் உண்மை. துணையை உருவாக்கிய கடவுள் அதை இறுதிவரை வைத்திருக்கிற ஆசீர் வழங்கி, அவர் விருப்பப்படி இருக்கிற கடவுள் விரும்புகின்றார். ஆனால் அவரின் படைப்பான நாமே அவரின் இயல்பிற்கேற்றாற் போல் வாழவில்லையென்பதுதான் எதார்த்தமான உண்மை

இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாக உரைக்கின்றது. நாம் இறைவனுக்கேற்ற அல்லது அவர் விரும்புகின்ற மனிதர்களாக பல நேரங்களில் வாழ்வதில்லை. அதில் ஒரு உதாரணம் திருமண வாழ்வு. கணவனும் மனைவியும் இணை பிரியாமல் இணைந்து இறுதிவரை வாழ வேண்டுமென்பதே இறைவிருப்பம். அதற்கு இறைவன் துணையும் நிற்கிறார். ஆனால் மாபெரும் உடன்படிக்கையான இத்திருமணத்தின் பயனை உணராமல் பல தரப்பட்ட சிந்தனைகளோடு வாழ்ந்த மனிதர்கள் மோசேயிடம் மணவிலக்குச் சான்றிதழ் எழுதிக்கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம் என்று நினைத்தனர். இது அவர்களின் கடின உள்ளத்தின் விளைவாக மோசே கொடுத்த சட்டம் என்பதை இயேசு புரியவைத்து, நீடித்த நிலையான உறவாக திருமணம் அமைய வேண்டுமென்ற படிப்பினையை இறைமகன் இயேசு கொடுக்கிறார். இதனை ஆழமாய் வலியுறுத்தி நிற்கிறது இன்றைய இரண்டாம் வாசகம். தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே என்பது இறைவனைக் குறிக்கிறது. ஆதியும் அந்தமுமாக, தொடக்கமும் முடிவுமாக, ஆரம்பமும் இறுதியுமாக இருப்பவர் கடவுளே. அவரே உயிரனைத்திற்கும் ஊற்று. அவரிடமிருந்தே நாம் யாவற்றையும் பெறுகின்றோம். இத்தகு சிந்தனை மேலெழும்போதுதான் இயல்பான வாழ்க்கை முறைக்குள் நாம் செல்ல முடியும்.

இதனை மிக ஆழமாய் அடிக்கோடிட்டு காட்டுகிறது இன்று நாம் வாசிக்க கேட்கும் இறைவாக்குப் பகுதி. மனிதன் தன் வாழ்வை எட்டாகப் பிரித்து பார்க்கிறான். குழந்தைப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் அடையும் வரை ஒருவனின் வாழ்வு மிகச் சரியாகப் பிரிக்கப்படுகிறது. அதே போல் திருமணம் என்னும் புனித வாழ்வை மூன்று வகைகளில் பிரிக்கலாம்:

திருமண வாழ்வு
குழந்தைப்பேறு
திருமணத்திற்கு புறம்பான வாழ்வு

திருமண வாழ்வு:
இறைவனின் சந்ததியில் ஆணும், பெண்ணும் வலக்கரத்தைச் சேர்த்து பிடித்து, இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருந்து, என் வாழ்நாள் எல்லாம் உம்மை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன் என்று வாயார வாக்குறுதி கொடுத்து, மனதார உறுதியெடுத்து கொண்ட தம்பதிகள் இறுதிவரை நிலைத்து நிற்கும் உறவு வாழ்வைத்தான் திருமணம் என்று சொல்கின்றோம். ஆனால் இன்று உடன்படிக்கையாய் எண்ணவேண்டிய திருமணம் ஆங்காங்கே உடைப்பட்டு நிற்பது தவறு என்பதை உரக்கச் சொல்கிறது இயேசுவின் வார்த்தைகள்.

குழந்தைப்பேறு:
திருப்பாடல் ஆசிரியர் தன் பாடலில் மக்கட்பேறு என்பது இறைவன் கொடுக்கும் பரிசில் என்று வர்ணிக்கின்றார். இறைவனின் கொடையாக குழந்தைப்பேறு இருக்கின்றது. இதை இறைவனின் மாபெரும் கொடையாகவே நம்மில் நிறையபேர் பார்த்து இறைவனுக்கு நன்றிச் சொல்கின்றோம். சிறுபிள்ளை இயேசு தொட வேண்டுமென்று நினைத்து ஒரு சிலர் அவர்களை இயேசுவிடம் கொண்டு வந்தனர். இது ஆசீர்வாதத்தைப் பெறுவதன் அடையாளம். ஆபிரகாமும் சாராவும் குழந்தைப்பேறு அற்ற தம்பதியராய் இருக்கையில் கடவுள் அவர்களை ஆசீர்வதித்து குழந்தைப்பேற்றைக் கொடுத்தார்;. எதற்காக? இரண்டு காரணங்கள் இருக்கின்றன: 1. இறைவனின் ஆசீர் நாம் நினைப்பதைவிட மேலானது என்பதை அறிந்தி;ட உதவியது. 2. கடவுள் நினைத்தால் நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகமாய் கொடுக்க வல்லவர் என அறிந்திட அழைக்கிறது. ஆக கடவுள் நமக்கென எதையும் செய்தாலும் அதில் ஓர் ஆழப்புரிதலை இயேசு இன்றைக்கு கொடுக்க விரும்புகின்றார்.

திருமணத்திற்கு புறம்பான வாழ்வு:
இதை மாற்கு நற்செய்தியாளர் விபச்சாரம் செய்பவருக்கு ஒப்பாக கூறுகிறார். விவிலியப் பார்வையில் விபச்சாரம் என்ன என்பதைத் தெளிவாக விவிலியத்தின் பல நூல்கள் எண்பித்துக்காட்டுகின்றன. எனவே இவற்றின் பொருள் அந்தெந்த தளத்திற்கு ஏற்ப எடுத்தாளப்படுகிறது. ஆகமொத்தத்தில், திருமணத்திற்கு புறம்பான அனைத்து செயல்பாடுகளுமே திருமணத்தின் மதிப்பினை சீர்குலைக்கும் செயல்களே என்பதை அறுதிட்டு கூறுகிறார் எம் பெருமான் இயேசு. இறைஇயேசுவில் இனியவர்களே, திருமணம் என்னும் அருளடையாளத்தின் வழியாக இணையும் மணமக்கள் அனைவருமே இறுதிவரை எவ்வித பிரிவுமின்றி வாழ்ந்திட வேண்டுமென்று பின்வரும் மூன்று காரியங்களைக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

அடுத்தவர்களுக்காக அல்ல உங்களுக்காக
சந்தேகப்படுபவர்களாக அல்ல சங்கமிப்பவர்களாக
எதிரியாக நிற்பவர்களாக அல்ல ஏற்றுக்கொள்பவர்களாக
அடுத்தவர்களுக்காக அல்ல உங்களுக்காக:

திருமண வாழ்வில் இணையும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களின் வாழ்வு அவருக்கானது, அவளுக்கானது என நினைத்து உங்களுக்காக வாழ தொடங்கினால், உங்களுக்குள் எந்த மனக்கசப்பு வராது. எந்த மனிதரும் உங்களுக்குள் நஞ்சை விதைக்க முடியாது.

சந்தேகப்படுபவர்களாக அல்ல சங்கமிப்பவர்களாக:

திருமண வாழ்வில் இணையும் அன்பர்கள் சந்தேகம் என்னும் பேயுடன் உறவு வைத்துக்கொள்ளகூடாது. அப்படி வைத்துகொண்டீர் என்றால் அதனால் ஏற்படும் பிளவுகளையும், பிரிவுகளையும் நீங்கள்தான் தாங்க வேண்டும். காரணம் சந்தேகம் நெருக்கத்தைக் குறைத்து, இடைவெளியை உருவாக்கும், பாலத்தைப் பெரியதாக்கிப் பலத்தை உடைக்கும். இனி இருவர் அல்ல ஒரே உடல் என்ற இறைக்கூற்று இயல்பில் மாறி, இலவாகமாக பிரியும் நிலை உண்டாகும். இதைத் தவிர்க்கவும், முழு மனதோடு ஒருவர் மற்றவரில் சங்கமிக்கும் ஆற்றல் ஆண்டவரிடமிருந்து பெறுவோம்

எதிரியாக நிற்பவர்களாக அல்ல ஏற்றுக்கொள்பவர்களாக:

திருமண வாழ்வில் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் போதும், அதுவும் எதிர்மறையாக இருந்தால் அவ்வளவுதான், எதிரியாக தன் கணவனை மனைவியும், தன் மனைவியைக் கணவனும் பார்ப்பதால், முடிவு எய்யாத உள்நாட்டுப் போராக வெடித்து சிதறுகிறது நம் குடும்ப வாழ்க்கை. எதிர் எதிராக நின்று வாழ வைப்பவரே கடவுள், அத்தகைய வாழ்வு நம்மில் பல வேண்டுமென்று ஆசீர்வதிப்பவரே கடவுள், அவருக்கு முன்பாகவே உறுதியெடுத்து கொண்டு உடையும் மனங்கள் இறைவனுக்குகந்த வாழ்வு வாழவில்லை என்று அர்த்தம். இதைச் சரி செய்தால் எல்லாம் நலமே ஆகவே நம்முடைய வாழ்வில் திருமணம் செய்வோர், திருமணத்திற்கு தயார் நிலையில் உள்ளோர் ஆகிய யாவருமே இயேசுவின் அடிச்சுவட்டைப பின்பற்றி அவர்வழி வாழ்க்கையில் நிச்சயம் நாம் நலம் பெற்று வாழ்வோம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. தொடர்ந்து சிந்திப்போம். இறைவனின் ஆசீர் வேண்டுவோம், இனிதாய் இறுதிவரை இனிய பந்தமாய் இறைத்துணையுடன் வாழ்ந்திட இருகரம் கூப்பி இறைவனிடம் செபிப்போம்! இறுதிவரை இணைபிரியாமல் வாழ்வோம்!!
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ