அன்பும் மதிப்பும் கூட்டணி நடத்தி இந்த திருப்பலிக்கு நம்மை வரவேற்கின்றது..
ஆண்டவருக்குக் காட்டப்படும் அன்பும் மதிப்பும், அவர்தம் படைப்புகளுக்கும்
காட்டப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது இன்றைய நற்செய்தி.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதை தவிர்க்கும் மனதில், அன்பும்
மதிப்பும் கூடுதலாகிறது. நல்லது எந்த திசையில் வந்தாலும், அதை வரவேற்கும்
மனதில் அன்பும் மதிப்பும் கூடுதலாகிறது
இன்று பணம், பதவி, இனம், மொழி, அதிகாரம் மதிக்கப்படும் பட்டியலில்
முதலிடம் பெறுகின்றன. வறியோர், நோயாளி, கைம்பெண், முதியோர், மழலையர்,
அகதிகள் இப்பட்டியலில் மதிப்பெண்கள் குறைகின்றனர்.
சமுதாயத்தின் ஒரு பகுதி சாதித் தீயில் கருகி சாம்பல் மேடாகக் கிடக்கிறது.
இன்னொரு பகுதி ஆதிக்க வர்க்கத்தால் பாதிக்கப்பட்டு மதிப்பிழந்து கிடக்கிறது.
அன்பும் மதிப்பும் இல்லாததாலே இத்தகைய அவலநிலை.
நம்மோடு வாழ்பவர் இறை சாயல் உடையவர், இறைவன் கண்ணில் மட்டுமல்ல நம்
கண்ணிலும் விலையேறப்பட்டவரே! என உணர்வோம்
இறைவனை அன்பு செய்ய நினைக்கும் போதெல்லாம் நம் அயலாரையும் அன்பு
செய்ய நினைப்போம்.
நமக்கு முன் நிற்கும் அயலாரை மதிப்புக்கு உரியவராக பார்ப்போம்.
உள்ளதை சொல்லும் போதெல்லாம் நல்லதை செய்கிறோம்.
தன்னலமின்றி அயலாரை அன்பு செய்வோம்.
மதிப்பிழந்த சமுதாயத்தை உயர்த்த முனைவோம்
அஞ்சுதல் இன்றி உண்மையை முழங்குவோம்.
நெஞ்சினை நிமிர்த்தி நீதிக்காக போராடுவோம்.
இதைத் தான் ஆண்டவர் இயேசு அன்று நற்செய்தியாக முழங்கினார்.
இந்த நற்செய்தியை இன்று நாம் முழங்க நமக்கான ஆயுதம் தான் அன்பும்,
மதிப்பும். அதை நமக்கு வழங்கி, நம்மை வழிநடத்த அருள் தரும்
திருப்பியில் பங்கேற்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. தாயின் வயிற்றில் எமைத் தேர்ந்தெடுத்த தெய்வமே எம்
இறைவா!
மக்களினங்களுக்கு இறைவாக்கினராக நீர் திருப்பொழிவு
செய்துள்ள திருப்பீடப் பணியாளர்களுக்காக மன்றாடுகிறோம்.
அன்பும் மதிப்பும் கொண்டு இறைமக்கள் சமுதாயத்தை கட்டி
எழுப்பிடத் துணைபுரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நாட்டின் மக்களுக்கு அரணாக, வெங்கலத் தூணாக இருக்கின்ற
தெய்வமே எம் இறைவா!
நாடுகளின் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். மக்களின் அன்புக்கும்
மதிப்புக்கும் பாத்திரமாகும் வண்ணம் நாட்டில் நல்ல ஆட்சி
மலரச் செய்ய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. மேலான அருட்கொடையை ஆர்வமாய் பொழியும் அன்பு தெய்வமே
எம் இறைவா!
எங்கள் ஆன்மீகத் தந்தையருக்காக மன்றாடுகிறோம். அன்பே
கிறிஸ்தவ வேதம் என்பதை அடிப்படையாகக் கொண்டு மறை நூலை
அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவர்கள் மீது எப்போதும்
மதிப்பு மிக்க பரிசுத்த ஒளி படர்ந்திருக்கச் செய்ய
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பு இல்லையேல் பயன் இல்லை என இன்று எங்களோடு
பேசிக் கொண்டிருக்கும் தெய்வமே எம் இறைவா!
இங்கே கூடியிருப்போருக்காக மன்றாடுகிறோம்
உண்மையைத் தான் சொன்னேன் ஆனால் எனக்கு நிகழ்ந்ததோ அவமதிப்பு
என வாடுவோரையும், எனக்கு ஏற்பட்ட இழப்புகளில் இருந்து
என்னை விடுவிப்பவர் எவரும் இல்லை என வருந்துவோரையும்,
நல்லது விளைந்து எனது அன்பும் மதிப்பும் கூடுதலாக
வேண்டும் என விரும்புவோரையும் ஆசிர்வதிக்க
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
ஒரு நீரோடை, ஏரியிடம், "ஏரியாரே! தயவு செய்து என்னை ஏற்றுக்
கொள்ளுங்கள்" என்று வேண்டியது. யாரையுமே மதிக்காத ஏரி அதை அலட்சியமாகப்
பார்த்தது"
"போ,போ உன்னைப் போல சிறிய நீரோடை எனக்குத் தேவையில்லை" என்று
கூறியது, ஆணவம் கொண்ட அந்த ஏரி. வேறு வழி தெரியாமல் ஓடியது அந்த
நீரோடை. சற்று நேரத்தில் கடலை நெருங்கி விட்டது.
நீரோடைக் கடலைப் பார்த்து "கடல் மாமா என்னைத் தயவு கூர்ந்து ஏற்றுக்
கொள்ளுங்கள்" என்று மிகவும் மரியாதையுடன் பரிதாபமாகக் கேட்டது.
உடனே எல்லோரையும் மதிப்புடன்; ஏற்றுக் கொள்ளும் கடல் பெருந் தன்மையுடன்
கரங்களை நீட்டியது. மேலும் அது "சீக்கிரம் வந்து விடு, இங்கே
உனக்காக சகோதர சகோதரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று
அன்புடன் கூறியது.
கோடைக் காலம் வந்தது. ஆணவம் கொண்ட ஏரி வற்றிப் போனது. ஆனால்,
அலைகளுடன் ஆரவரித்துக் கொண்டிருந்தது கடல்.
ஏரியைப் போல எவரையும் ஏற்காது ஆணவம் கொண்டு அலட்சியமாய்
திரிந்தால், வாழும் நாளில் வறட்சியாய் திரியவேண்டி நிலை
பெறுவோம்.
அன்பும், மதிப்பும் கொண்டு எவரையும் ஏற்றுக்கொண்டால் வற்றாத
நீருற்றாய் வளமாய் வாழுவோம்!
ஒரு முறை பெரிய பூஜ்யத்தின் மீது சின்ன பூஜ்யம் மோதிவிட்டது
உடனே பெரிய பூஜ்யம், "முட்டாளே! உனக்கு வெட்கமாக இல்லை. உன்னை
விட நான் உருவத்தில் எவ்வளவு பெரியவன் என்பது உனக்குத்
தெரியாதா?" என்று கடிந்து கொண்டது.
அதற்கு சிறிய பூஜ்யம் இவ்வாறு பதில் கூறியது. "நண்பரே! இதில்
வெட்கப்பட என்ன இருக்கிறது? நீங்கள் மிகவும் பெரியதாக இருந்தால்
என்ன? நான் சிறியதாக இருந்தால் என்ன? இருவரின் மதிப்பு மட்டும்
சமம் தான் பூஜ்யம்."
ஏழையாக இருந்தால் என்ன, பணக்காரராக இருந்தால் என்ன?
கறுப்பராக இருந்தால் என்ன, வெள்ளையராக இருந்தால் என்ன?
பதவியில் இருந்தால் என்ன, பதவியில் இல்லாமல் இருந்தால் என்ன?
பட்டம் பெற்றால் என்ன, பட்டம் பெறாவிட்டால் என்ன?
அனைவரும் கடவுள் படைத்த மதிப்புக்குரிய மனிதர் தானே!
இயேசு ஏழைகளுக்கு நற்செய்தி சொல்லவும், சிறைபட்டோருக்கு விடுதலை
தரவும், பார்வையற்றோருக்கு பார்வை தரவும் ஒடுக்கப்டோருக்கு, உரிமை
வாழ்வு வழங்கவும். தன் பணியை வாழும் நாளில் அர்ப்பணித்து
வாழ்ந்தார். அன்பும் மதிப்பும் இழந்த மக்களைத் தேடிச் சென்று
பணிசெய்தார்.
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
எதிராளியாய்
நான் பள்ளிப்பருவத்தில் 11ஆம் வகுப்பில் ஆங்கில வகுப்பில்
கற்ற பல பாடங்களில் ஒன்று ஜெஸி ஓவன்ஸ் பற்றியது. ஒரு அடிமையின்
பேரனான இவர் 1936ஆம் ஆண்டு நாசி ஜெர்மனி நகர் பெர்லினில்
நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்கள்
வென்றவர். இவர் தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இப்படிப்
பதிவு செய்கிறார்: '1928ஆம் ஆண்டு ஒஹையோவில் நான் அன்றாடம்
உடற்பயிற்சி செய்யச் செல்வேன். தொடக்கத்தில் எனக்கு மிகவும்
சோம்பலாக இருந்தது. சோம்பலைக் காரணம் காட்டி நான் சில நாள்கள்
பயிற்சியைத் தள்ளிப் போட்டேன். பின் தட்ப வெப்பநிலையைக் காரணம்
காட்டினேன். பின் என் உடல் வலியைக் காரணம் காட்டினேன். ஆனால்,
பறிற்சிக்கு என்னைத் தினமும் அழைத்த என் கோச் எனக்கு ஒரு
எதிராளியாகத் தோன்றினார். அவரை இதற்காகவே வெறுத்த நான் ஒரு
கட்டத்தில் அவர் சொல்வதுபோல செய்ய ஆரம்பித்தேன். ஒலிம்பிக்
போட்டிகள் அறிவிக்கப்பட்டன. என் உடற்பயிற்சி மேல் நான் நம்பிக்கை
கொண்டிருநதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நாசிச 'ஆரிய மேட்டிமை'
மேலாண்மை என் மனத்தில் பயத்தை உண்டாக்கியது. அந்த நாள்களில்
என் உடல்நலமும் குன்றியது. ஆனால், 'என்னை மற்றவர்கள் ஒதுக்கி
வைக்கும்' மனப்பான்மைக்கு நான் என்றும் எதிரானவன் என்று பதிவு
செய்ய ஓடினேன்.'
இன்று அவருடைய சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும், அவர் அன்று
தனக்கெனப் பதித்த முத்திரை அவருக்கானதே.
மனித வாழ்வின் தனி மனித வெற்றியும், குழும வெற்றியும் அடையும்
வழி எதிராளியாக மாறுவதே. எதிராளியாக மாறுவது என்பது எதிர்த்து
நிற்பது அல்லது எதிர்நீச்சல் போடுவது. எதிராளி என்பவர் பகையாளி
அல்ல. பகையாளி என்பது ஒரு முடிந்த நிலை. ஆனால், எதிராளி என்பது
ஒரு தொடர்நிலை.
'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்ற என் காலை எண்ணத்திற்கு
எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சுறுசுறுப்பாக வேலைகள்
செய்ய முடிகிறது. 'கொஞ்சம் இனிப்பு சாப்பிடு. அப்புறம்
மாத்திரை போட்டுக் கொள்ளலாம்' என்ற என் எண்ணத்திற்கு எதிராளியாக
நிற்கும்போதுதான், நான் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க
முடிகிறது. ஆங்கிலேயேர்க்கு எதிராளியாய் நம் முன்னோர்கள்
நின்றதால்தான் இன்று நாம் விடுதலைக் காற்றை சுவாசிக்க
முடிகிறது. இப்படியாக கறுப்பின மக்கள் எழுச்சி, அடக்குமுறைகளுக்கு
எதிரான எழுச்சி என சமூக நிகழ்வுகளிலும், இராஜாராம் மோகன்ராய்,
மார்ட்டின் லூத்தர் போன்றவர்கள் எடுத்த நிலைப்பாடுகளிலும்,
'எதிராளியாய்' இருப்பதன் அவசியம் புரிகிறது. குடும்பத்தில்
நடக்கும் இழப்புக்களையும் தாண்டிக் குடும்பத்தை எழுப்பும்
அப்பாக்கள், அம்மாக்கள், வறுமையிலும், இயலாமையிலும்
சாதிக்கும் குழந்தைகள் என எல்லாருமே 'எதிராளியாய்' இருப்பதால்தான்
சாதிக்க இயல்பவர்கள் ஆகிறார்கள்.
மொத்தமாகச் சொன்னால், 'ஓடுகின்ற தண்ணீரின் ஓட்டத்திற்குத்
தன்னையே கையளிக்கின்ற படகு கரை ஒதுங்குகிறது. ஓட்டத்திற்கு
எதிராளியாய் நிற்கிற படகு மறுகரை சேர்கிறது.'
இன்றைய இறைவாக்கு வழிபாடு, 'எரேமியா,' 'பவுல்,' 'இயேசு' என்ற
மூன்று எதிராளிகளின் நிலைப்பாட்டைப் பதிவு செய்து, நம்மையும்
எதிராளிகளாய் வாழ அழைக்கிறது. எப்படி?
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 1:4-5, 17-19) யாவே
இறைவன் எரேமியாவை அழைக்கின்றார். எருசலேமின் அழிவையும்,
பாபிலோனியாவுக்கு மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் நேருக்கு
நேர் பார்த்த இறைவாக்கினரும் எரேமியாவே. ஆக. இவருடைய
வாழ்வு ஒரு முள்படுக்கையாகவே இருந்தது. 'நீ பிறக்குமுன்பே
உன்னைத் திருநிலைப்படுத்தினேன்' என்னும் வாக்கியத்தில்
எரேமியாவின் தேர்ந்துகொள்ளப்பட்ட நிலையையும், ஒரு
குறிப்பிட்ட பணிக்கென 'ஒதுக்கிவைக்கப்பட்ட' நிலையையும்
பார்க்கின்றோம். 'திருநிலைப்படுத்துதல்' என்பது
பொறுப்புமிக்க வார்த்தை. ஏனெனில், திருநிலைப்படுத்தப்படும்
பொருளும், நபரும் சிறப்பான பணி ஒன்றிற்காக
ஒதுக்கிவைக்கப்படுகிறார். அவர் அச்சிறப்பான பணியிலிருந்து
கொஞ்சம் விலகிவிடவோ, அதே நேரம் தானே மற்ற பணிகளைத் தேடிச்
செல்லவோ கூடாது. எரேமியாவின் அழைப்பு இறைவாக்குரைக்கவும்,
அதிலும் யூதாவின் தலைவர்களுக்கும், அரசர்களுக்கும்,
குருக்களுக்கும் இறைவாக்குரைக்கவுமாக இருக்கிறது. சாதாரண
நபர்களுக்கு ஒன்றைச் சொல்லி நம்பவைத்துவிடலாம். ஆனால்,
மேற்கண்ட மூவருக்கும் சொல்வது மிகப்பெரிய சவால். அதுவும்
நல்ல செய்தி என்றால் பரவாயில்லை. அவர்களின்
பிரமாணிக்கமின்மையையும், உடன்படிக்கைக்கு எதிராக அவர்கள்
செய்த தவறுகளையும், அவர்களின் சிலைவழிபாட்டையும்
சுட்டிக்காட்டுவது எரேமியாவுக்குப் பெரிய சவாலாக இருந்தது.
மேலும், அவர்கள் ஆட்சி செய்த 'எருசலேமின் அழிவையும்' அவரே
முன்னுரைக்கவும் வேண்டியிருந்தது. இவரின் இந்த இறைவாக்கு
அவரைப் பொதுவான எதிரியாக்கிவிடுகிறது. அவர் ஏளனத்திற்கும்,
கேலிப் பேச்சிற்கும், வன்முறைக்கும், சிறைத்தண்டனைக்கும்
ஆளாகின்றார். ஆனாலும், தன் இறைவாக்குப் பணியில் அவர்
பின்வாங்கவே இல்லை. ஒரு கட்டத்தில், 'ஆண்டவரே! நீர் என்னை
ஏமாற்றிவிட்டீர், நான் ஏமாந்து போனேன்' (20:7) என்று
விரக்தி அடைந்தாலும், 'சுற்றிலும் ஒரே திகில்! அவன் மேல்
பழிசுமத்துவோம்' (20:10) என்று மக்களின் கிளர்ச்சி
பயத்தைத் தந்தாலும், 'உம் சொற்களை என்னால் அடக்கி வைக்க
முடியாது' (20:9) என்றும் 'ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப்
போல என்னோடு இருக்கிறார்' (20:11) என்று நம்பிக்கை
கொள்ளவும் செய்கிறார் எரேமியா. இவ்வாறாக, தவறான சமய
எண்ணங்களிலும், தங்களின் மேட்டிமைப் போக்கிலும் மூழ்கி
இருந்த தலைவர்களுக்கும், மக்களுக்கும் 'எதிராளியாய்'
நிற்கிறார் எரேமியா. இவரின் இந்தத் துணிவிற்குக் காரணம்,
'உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' (1:19) என்ற
ஆண்டவரின் வாக்குறுதியே.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:31-13:13)
பவுல் 'பல்வேறு கொடைகள்' பற்றிய தன் போதனையை நிறைவு
செய்கிறார். கொரிந்து நகர திருஅவை உறுப்பினர்கள் தாங்கள்
பெற்றிருந்த அருள்கொடைகள் பற்றியும், செயல்பாடுகள்
பற்றியும், தொண்டுகள் பற்றியும் அதிகம் பெருமை
பாராட்டிக்கொண்டும், தாங்கள் பெற்றிருந்த ஞானம் நிறைந்த
சொல்வளம், அறிவு சார்ந்து சொல்வளம், நம்பிக்கை,
பிணிதீர்க்கும் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல்,
இறைவாக்குரைக்கும் ஆற்றல், பரவசப் பேச்சு, அதை விளக்கும்
ஆற்றல் போன்ற கொடைகளை முன்னிறுத்தி, ஒருவர் மற்றவரை
ஒப்பீடு செய்துகொண்டு, பொறாமைப்பட்டு, தங்களுக்குள் கட்சி
மனப்பான்மை கொண்டு பிளவுபட்டிருந்தனர். கடந்த வார
வாசகத்தில் 'ஒரே உடல் பல உறுப்புகள்' என்று அவர்களை
அறியாமையிலிருந்து அறிவுக்கு அழைத்த பவுல், இன்னும் ஒரு
படி போய், 'எல்லாவற்றையும் விட சிறந்த நெறி ஒன்றை நான்
உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்' (12:31) என்று சொல்லி
அன்பை முன்வைக்கிறார். அவர்கள் தாங்கள் பெருமை கொண்டிருந்த
- பரவசப் பேச்சு, இறைவாக்குரைக்கும் ஆற்றல், மறைபொருள்கள்
விளக்கும் ஆற்றல், மலைகளை இடம் பெயரச் செய்யும் நம்பிக்கை,
தன்னையே எரிக்கும் அளவிற்கு தற்கையளிப்பு - அனைத்தும்
அன்பை ஊற்றாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அவற்றால் ஒரு
பயனும் இல்லை என்கிறார். ஏனெனில், அன்பு இல்லாத இடத்தில்
இவை யாவும் தனி மனித பெருமைக்காகவும், புகழுக்காகவும், பண
ஈட்டிற்காகவும் மட்டுமே பயன்படும்.
கிரேக்க மொழியில் அன்பு என்பதற்கு நான்கு வார்த்தைகள்
உள்ளன: (அ) அகாபே (மேன்மையான அன்பு), (ஆ) ஈரோஸ் (உடல்
சார்ந்த அன்பு, காமம்), (இ) ஃபிலியா (நட்பு அல்லது
நலம்விரும்புதல்), (ஈ) ஸ்டோர்கே (பெற்றோர்-பிள்ளை பாசம்).
பவுல் பயன்படுத்தும் வார்த்தை, 'அகாபே.' மூன்று நிலைகளில்
அன்பு முக்கியத்துவம் பெறுகின்றது: (அ) மேன்மையான
அருட்கொடையை விட அன்பு சிறந்தது. (ஆ) முதன்மையான
திறன்களைவிடச் சிறந்தது.(இ) கதாநாயக வெற்றிச்
செயல்களைவிடச் சிறந்தது. தொடர்ந்து அன்பு இப்படி
இருக்கும், அப்படி இருக்காது என நேர்முக மற்றும் எதிர்மறை
வார்த்தைகளில் பட்டியலிடுகின்றார் பவுல். மேலும், அன்பின்
குணத்தை பெரிதுபடுத்தியும் காட்டுகின்றார்:
'எல்லாவற்றையும்' பொறுத்துக்கொள்ளும். 'எல்லாவற்றையும்'
நம்பும். 'எல்லாவற்றையும்' எதிர்நோக்கி இருக்கும்.
'எல்லாவற்றிலும்' மனஉறுதியாய் இருக்கும். மேலும், இந்த
அன்பு அழியாதது என்கிறார் பவுல். ஏனெனில், இவ்வன்பு
கடவுளில் ஊற்றெடுக்கிறது. கடவுள் அழிவில்லாதவர். எது
எப்படியோ அன்பு இருந்தால் சரி! எல் கிரேக்கோ என்பவர்
'நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு' என்ற மூன்று
மதிப்பீடுகளையும், மூன்று பெண்களாக உருவகித்து (மோதெனா
ட்ரிப்டிக்) ஒரு படம் வரைந்துள்ளார். இதில் அன்பு என்ற
பெண்ணின் காலைப் பிடித்துக்கொண்டு நிறைய குழந்தைகள்
இருக்கும். ஆம், அன்பின் குழந்தைகள் கணக்கிலடங்காதவை!
அன்பு என்றும் மேலனாது.
பவுல் இப்படி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதிய அன்பின்
பாடல் கேட்பதற்கு நமக்கு இனிமையாக இருக்கிறது. ஆனால்,
பவுலின் திருச்சபைக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக
இருந்திருக்கும். ஏனெனில், அவர்கள் கொண்டிருந்த அனைத்துப்
பிரச்சினைகளையும் - பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு,
இழிவான ஊதியம், தன்னலம், எரிச்சல், தீவினை, பொய் -
சுட்டிக்காட்டு, இச்செயல்கள் அன்பிற்கு இல்லை என்று
சொல்வதன் வழியாக, 'உங்களிடத்தில் அன்பு இல்லை' என
மறைமுகமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் பவுல்.
பவுலின் இந்த மடலுக்காக கொரிந்து நகர மக்கள் அவரை
நிராகரித்தார்கள் என்பதை நாம் அவரின் இரண்டாம் மடலில்
வாசிக்கிறோம். இவ்வாறாக, பவுல், அன்பு பற்றிய போதனையால்,
அன்பை மற்ற எல்லாவற்றையும் விட உயர்த்தியதால், கொரிந்து
நகரத் திருச்சபையின் 'எதிராளியாக' மாறுகின்றார். பவுலின்
துணிவிற்குக் காரணம், இவர் கடவுளின் உடனிருப்பை அனுபவித்த
விதமே. ஆகையால்தான், 'இப்போது நான் அறைகுறையாய் அறிகிறேன்.
அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய்
அறிவேன்' (13:12) என உறுதியாகக் கூறுகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 4:21-30), இயேசுவின்
நாசரேத்துப் போதனை அதைக் கேட்டவர்களின் நடுவில்
ஏற்படுத்திய எதிர்வினையைப் பதிவு செய்கிறது. எசாயா
இறைவாக்கினரின் பகுதியை வாசித்தவர், 'இது ஆண்டவரின்
அருள்வாக்கு!' என்று இயேசு சொல்லியிருந்தால், எல்லாரும்,
'ஆகா, ஓகோ, நல்லா வாசிக்கிற தம்பி!' என்று உச்சி முகர்ந்து
கொண்டாடியிருப்பார்கள். ஆனால், இயேசு அப்படிச்
சொல்லவில்லையே. 'நீங்கள் கேட்ட இறைவாக்கு இன்று நீங்கள்
கேட்டதில் நிறைவேறியது!' என்கிறார். 'என்னது மெசியா பற்றிய
எசாயா இறைவாக்கு நிறைவேறுகிறதா?' 'யார்ட்ட?' 'இவர்ட்டயா?'
'தம்பி, ஆர் யு ஓகே?' 'என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான்
பேசுறீங்களா?' 'இவர் யோசேப்போட பையன்தான!' என ஆளாளுக்கு
பேச ஆரம்பிக்கின்றனர். 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'
(லூக்கா 1:22) என்ற அவர்களின் வார்த்தைகள் இயேசு தூய
ஆவியின் ஆற்றலால் பிறந்தார் என்பதைக் குத்திக் காட்டி,
அவரின் பிறப்பைக் கேலி செய்வதாகக் கூட இருந்திருக்கலாம்.
சில நொடிகளில் எல்லாம் மாறிப்போனது. இயேசுவின் போதனையும்,
பணியும் புறவினத்தாரையும் உள்ளடக்கும் என்பதை அவர்களால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எலியா மற்றும் எலிசா போல
தன்னுடைய இறைவாக்குப் பணியும் எல்லாருக்கும் உரியது
என்பதில் தெளிவாக இருக்கிறார் இயேசு. அவர் தங்களின்
எதிர்பார்ப்பிற்கு முரணாக இருந்ததால் அவரைப்
புறக்கணிக்கின்றனர் மக்கள். அவரைப் பாராட்டிய சில
நொடிகளில் அவர்மேல் சீற்றம் (கோபத்தின் கொடூர வடிவம்)
கொண்டு அவரை ஊருக்கு வெளியே துரத்தி மலை உச்சியிலிருந்து
கீழே தள்ளிக் கொன்றுவிட முனைகின்றனர். ஆக,
இயேசு தன் போதனையின் வழியாக தன் சொந்த ஊர் மக்களுக்கு
'எதிராளியாக' மாறினார். தன் இலக்கோடு சமரசம் செய்துகொள்ளாத
இயேசு தன்னலம் மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட அந்த
மக்களிடமிருந்து விலகித் தன் வழியே செல்கின்றார்.
இவ்வாறாக, எரேமியா தன் இனத்து அரசர்களுக்கும்,
மக்களுக்கும் தன் இறைவாக்குப் பணியால் எதிராளியாகவும்,
பவுல் தன் கொரிந்து நகர திருஅவைக்குத் தன் 'அன்பு' பற்றிய
போதனையால் எதிராளியாகவும், இயேசு அனைவரையும் உள்ளடக்கிய
இறைவார்த்தைப் பணியால் தன் சொந்த ஊர் மக்களுக்கு
எதிராளியாகவும் மாறுகின்றனர். ஆனால், இவர்களை
எதிர்த்தவர்கள் நடுவில் இவர்கள் பின்வாங்கவில்லை. இன்றைய
பதிலுரைப் பாடல் (திபா 71) சொல்வதுபோல, 'என் தலைவரே, நீரே
என் நம்பிக்கை. இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு
செயல்களை அறிவிப்பேன்' என்று துணிந்து முன்செல்கின்றனர்.
இன்று நம் தனிப்பட்ட வாழ்விலும், சமூக, மற்றும் அரசியல்
வாழ்விலும் எதிராளியாக இருக்க இன்று நாம்
அழைக்கப்படுகிறோம். எதிராளியாக மாறுவதற்கு மூன்று குணங்கள்
அவசியம் என்பதையும் இன்றைய வாசகங்கள்
குறித்துக்காட்டுகின்றன:
(அ) 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை. தான் சிறுவன்
என்ற நிலையில் இருந்தாலும் எரேமியாவும், தான்
அறிமுகமில்லாதவன் என்ற நிலையில் இருந்தாலும் பவுல், தான்
சொந்த ஊர்க்காரன் என்றாலும் இயேசுவும், தங்களால் முடியும்
எனத் தங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். ஆக,
என்னிடம் உள்ள தேவையற்ற ஒரு பழக்கத்திற்கோ அல்லது
குணத்திற்கோ நான் எதிராளியாக மாற வேண்டும் என்றால்,
'என்னால் முடியும்' என்ற மனவுறுதியும் அதற்கான
தன்னம்பிக்கையும் அவசியம்.
(ஆ) 'என் கடவுள் என்னோடு' - தன்னம்பிக்கை நம்மை விடப்
பெரிய ஒன்றோடு கட்ட வேண்டும். அது விதியாகவோ, கடவுளாகவோ,
கொள்கையாகவோ இருக்கலாம். மனிதர்கள்மேலும், இடங்களின்
மேலும் கட்டவே கூடாது. ஏனெனில் அவர்களும், அவைகளும்
மாறக்கூடியவை. ஆனால், மாறாத ஒன்றில் கட்டிக்கொள்ள வேண்டும்
நம் நம்பிக்கையை. எரேமியா தன் ஆண்டவரின் மேல், பவுல்
இயேசுவின் மேல், இயேசு தன் தந்தையின் மேல் நம்பிக்கையைக்
கட்டியிருந்தனர்.
(இ) 'இலக்குத் தெளிவு' - நான் எதற்காக இங்கே இருக்கிறேன்?
நான் எதை நோக்கிச் செல்கின்றேன்? என்ற கேள்விகள்தாம்
இலக்கைத் தெளிவுபடுத்துகின்றன. எரேமியா, பவுல், இயேசு
மூவரும் தங்கள் இலக்கை முன்வைத்து நடந்தனர்.
எதிர்ப்புகளைக் கண்டு அவர்கள் இலக்குகளோடு சமரசம்
செய்துகொள்ளவில்லை. திரும்பச் செல்லவில்லை. எரேமியா தன்
கோவில் திரும்பவில்லை. பவுல் தன் தர்சு நகரம்
திரும்பவில்லை. இயேசுவும் நாசரேத்தூர் திரும்பவில்லை.
வாழ்வில் 'எதிராளி' நிலை என்பது நம் மாற்றத்திற்கான
வளர்ச்சிநிலை. மருத்துவர் நோயாளிக்கு எதிராளியாய்
நின்றால்தான் நோயைக் குணமாக்க முடியும். எடுக்கின்ற
மாத்திரை நோய்க் கிருமிக்கு எதிராளியாக இருந்தால்தான் நோய்
குணமாகும். நம்மில் போரடிக்கொண்டிருக்கும் ஒன்றிற்கு ஒன்று
முரணான இயல்புகள் எதிராளியாக இருந்தால்தான் நாம் வளர
முடியும்.
'பாம்பு பாம்பாக இல்லை என்றால் சிறுவர்கள் விறகோடு
சேர்த்துக் கட்டிவிடுவார்கள்' என்பது ஆப்பிரிக்க பழமொழி.
எதிராளியாக இல்லாதவரின் நிலையும் அப்படியே!
வியட்நாம் மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை முதன்முதலில்
கொண்டு சென்றவர் மறைப்பணியாளரான அடோனிரம் ஜுட்சன் (Adoniram
Judson 1788-1850). அமெரிக்காவைச் சார்ந்த இவர் தனது இருபத்து
ஐந்தாவது வயதிலேயே வியட்நாமிற்கு நற்செய்தி அறிவிக்கச்
சென்று, ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் அங்கு மிகச்சிறப்பான
முறையில் நற்செய்தியை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர்
இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்தவர்.
இவர் வியட்நாமிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்ற புதிதில்
பலவிதமான துன்பங்களைச் சந்தித்தார். ஒருபக்கம் பட்டினி, தனிமை
போன்ற துன்பங்கள் என்றால், இன்னொரு பக்கம் ஆட்சியாளர்களிடமிருந்து
துன்பங்கள். ஒருமுறை இவர் இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்ததற்காக
கைதுசெய்து செய்யப்பட்டு அவா சிறைச்சாலையில் (Ava Prison)
பதினேழு மாதங்கள் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார்.
இதனால் இவருக்கு உடல் முழுவதும் காயங்களும் தழும்புகள் ஏற்பட்டன.
இவர் தண்டனைக் காலம் முடிந்தபின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அப்போது இவர் தன்னைச் சிறையிலிருந்து விடுவித்த அதிகாரியிடம்,
"இந்நாட்டின் ஒரு பகுதியில் நான் நற்செய்தி அறிவித்து
விட்டேன். இதன் இன்னொரு பகுதியில் நற்செய்தி அறிவிக்கலாமா?"
என்றார். இதற்கு அந்த அதிகாரி, "இயேசுவைப் பற்றி நற்செய்தியை
அறிவித்ததற்காகத்தானே இத்தனை காலமும் நீ சிறைத் தண்டனையை
அனுபவித்தாய். இப்போது மீண்டுமாக இயேசுவைப் பற்றிய நற்செய்தியை
அறிவிக்கப் போவதாகச் சொல்கிறாயே! உனக்கென்ன பைத்தியம்
பிடித்துவிட்டதா? மேலும் நீ நினைப்பதுபோல் அங்குள்ள மக்கள்
நற்செய்தியைக் கேட்டதும், அதை நம்பி ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு
அவ்வளவு மூடர்கள் இல்லை. அதே நேரத்தில் உன்னுடைய உடலில் இருக்கும்
தழும்புகளைக் கண்டு, அவர்கள் நிச்சயம் கடவுளை ஏற்றுக்கொள்வதற்கு
வாய்ப்பு இருக்கின்றது" என்றார்.
இதன்பிறகு அடோனிரம் ஜூட்சன் வியட்நாமின் இன்னொரு பகுதிக்குச்
சென்று, ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு
அறிவித்து, ஆயிரக் கணக்கான மக்கள் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை
கொள்ளச் செய்தார்.
ஆம், இறைவார்த்தையை அறிவிக்கும்போது எத்தனையோ துன்பங்கள்
வந்தபோதும், அவற்றையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு,
மிகுந்த வல்லமையோடு இறைவார்த்தையை அறிவித்து, ஆயிரக்கணக்கான
மக்கள் ஆண்டவரிடம் கொண்டு வந்தவர் என்ற வகையில் அடோனிரம்
ஜூட்சன் நம் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரி. பொதுக்காலத்தின்
நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை,
"கலக்கமுறாமல் கடவுளின் வார்த்தையை அறிவி" என்ற சிந்தனையைத்
தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
கலக்கமுறத் தேவையில்லை:
கடவுளின் விருப்பமெல்லாம், எல்லா மனிதரும் மீட்புப் பெற
வேண்டும்; உண்மையை அறிந்துணர வேண்டும் என்பதே ஆகும் (1திமொ
2:4) இதற்காகவே அவர் இறைவாக்கினர்களை மக்கள் நடுவில் அனுப்புகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாவின் அழைப்பைக்
குறித்து வாசிக்கின்றோம். இவர் கி.மு ஏழாம் நூற்றாண்டின்
முற்பகுதியிலும், கி.மு.ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்
வாழ்ந்தவர். யூதா நாட்டினர் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடியாமல்,
தங்கள் விருப்பம் போன்று வாழ்ந்ததால், அவர்கள்மீது
பாபிலோனியர்களின் படையெடுத்து நிகழப்போகிறது என்று எச்சரிப்பதற்காக
ஆண்டவரால் இவர் தேர்ந்துகொள்ளப்பட்டார். மக்களிடம் தன்னுடைய
வார்த்தையை அறிவிப்பதற்காக ஆண்டவர் எரேமியாவைத்
தேர்ந்தெடுக்கும்போது, எரேமியா, "சிறுபிள்ளைதானே!" என்று
கலங்குகின்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், "அவர்கள் முன்
கலக்கமுறாதே!" என்று சொல்லிவிட்டு, "உன்னை விடுவிக்க நான்
உன்னோடு இருக்கின்றேன்" என்று அவருக்கு நம்பிக்கையூட்டுகின்றார்.
இதன்பிறகு எரேமியா ஆண்டவருடைய வார்த்தையை மக்களிடம் அறிவித்தபோது
அவருக்குப் பலவிதமான துன்பங்கள் வந்தாலும், ஆண்டவர் அவரை
உடனிருந்து பாதுகாத்தார் (எரே 11:18-23, 20:1ff, 38:7-13).
ஆதலால், எல்லா மனிதரும் உண்மையை அறிந்துணரவும் மீட்புப் பெறவும்
கடவுள் விரும்புவதால், அவருடைய பாதுகாப்பை உணர்ந்து, அவரது
வார்த்தையை எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் எல்லாருக்கும்
அறிவிப்பது இன்றியமையாதது.
இறைவாக்குப் பணி எல்லாரையும் சென்றடைய வேண்டும்:
கடவுள், யூதர்கள் மட்டுமல்ல, எல்லா மக்களும் மீட்புப் பெற
விரும்புகின்றார். அதனால் கடவுளின் வார்த்தை அவர்களுக்கும்
அறிவிக்கப்படவேண்டும். அதற்குக் கடவுளின் அடியார்கள் அவர்கள்
நடுவிலும் பணிசெய்ய வேண்டும். இச்செய்தியை இன்றைய நற்செய்தி
வாசகம் நமக்குக் உணர்த்துகின்றது.
இயேசு நாசரேத்தில் இருந்த தொழுகைக்கூடத்திற்கு வந்து, இறைவாக்கினர்
எசாயாவின் சுருளேட்டை வாசித்த பின் இரண்டு நிகழ்வுகளைக்
குறிப்பிடுகின்றார். ஒன்று, இஸ்ரயேலில் மூன்றரை ஆண்டுகள்
வானம் பொய்த்தபோது இறைவாக்கினர் எலியா சாரிபாத்தில் இருந்த
கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டது (1 அர 17: -24). இரண்டு, இறைவாக்கினர்
எலிசா சிரியாவை சார்ந்த, தொழுநோயால் பாதிக்கப்பட்ட நாமானை
நலமாக்கியது (2 அர 5). இயேசு குறிப்பிடும் இவ்விரு நிகழ்வுகளிலும்
வருகின்ற இறைவாக்கினர்கள் எலியாவும் எலிசாவும் பிற இனத்தார்
நடுவில் பணிசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயேசு இந்த
இரண்டு நிகழ்வுகளையும் தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களிடம்
குறிப்பிடுவதன் மூலம், தானும் பிற இனத்தாருக்குப் பணி
செய்வேன் என்று சொல்லாமல் சொல்கின்றார். இதனால் தொழுகைக்
கூடத்தில் இருந்தவர்கள் அவரைக் கொல்லத் துணிகின்றார்கள்.
மெசியா என்பவர் யூதர்கள் நடுவில் பணிசெய்வார் என்றிருந்த
யூதர்களிடம், அவர் பிற இனத்தார் நடுவிலும் பணிசெய்வார் என்று
சொன்னதன் மூலம், இயேசு கடவுளுடைய பணியைச் செய்கின்றவர்கள்
எத்தகைய எதிர்ப்புகள் வந்தாதாலும் எல்லாருக்கும் பணி செய்ய
வேண்டும் என்ற உண்மையை உணர்த்துகின்றார்.
அன்போடு இறைவாக்குப் பணி
கடவுளின் வார்த்தையை அறிவிப்பவர் கலக்கமுறாமலும் எல்லாருக்கும்
அறிவிப்பது முக்கியமானதாக இருந்தாலும், அவருக்கு இன்னொன்றும்
தேவைப்படுகின்றது. அதுதான் அன்பு.
கொரிந்து நகரில் இருந்தவர்கள் தங்களிடம் இறைவாக்கு உரைக்கும்
ஆற்றல் இருக்கின்றது; பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றல் இருக்கின்றது
என்று மற்றவர்களை இழிவாக நடத்தினார்கள். இந்நிலையில்தான்
பவுல் அவர்களிடம் அன்பு இல்லை என்றால் எல்லாமும் ஒன்றுமில்லை
என்கிறார். ஆம், இறைவாக்கு உரைப்பவராக இருந்தாலும் சரி, அதைக்
கேட்கும் மக்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய உள்ளத்தில்
அன்பு இருக்க வேண்டும். ஏனெனில் அன்புதான் தலைசிறந்தது. அன்புதான்
தீவினையில் மகிழுறாமல் உண்மையில் மகிழும்.
எனவே, நாம் கடவுளின் துணையை நம்பி, அவருடைய வார்த்தையை எல்லாருக்கும்
அறிவிப்போம். அதுவும் அன்போடு அறிவிப்போம். அதன்மூலம் இயேசுவுக்குச்
சான்று பகர்வோம்.
சிந்தனைக்கு:
"ஒரே வாழ்க்கைதான். அதுவும் மிகவும் வேகமாகக் கடந்துபோயிடும்;
ஆனால், கிறிஸ்துவுக்காக நாம் புரியும் பணி என்றென்றைக்கும்
நிலைத்திருக்கும்" என்பார் மறைப்பணியாளரான சி.டி.ஸ்டட்.
ஆதலால், நாம் கடவுளின் வார்த்தையைக் கலக்கமுறாமல், அன்போடு,
எல்லாருக்கும் அறிவிக்கபோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
மறையுரைச் சிந்தனை: அருள்பணி
மரிய அந்தோணி பாளையங்கோட்டை
இயேசு எல்லாருக்குமான இறைவன்
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளை மறைமாவட்டம். நிகழ்வு
கிராசியன் வாஸ் எழுதிய Little things about Great People
என்ற நூலில் இடம்பெறும் ஒரு நிகழ்வு. ஒருநாள் சுவாமி
விவேகானந்தர் ஒரு கிராமத்துச் சாலை வழியாகச்
சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பசியெடுத்தது.
யாராவது உணவு தருவார்களா? என்று அவர் கண்களை ஏறெடுத்துப்
பார்த்தபோது, பெரியவர் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு முன்பாக
இருந்த திண்ணையில் உணவு உண்டுகொண்டிருந்தார். அவரிடத்தில்
சென்று உணவு கேட்போம் என்று விவேகானந்தர் அவரருகே
சென்றார்.
ஐயா! எனக்கு மிகவும் பசிக்கிறது... சாப்பிடுவதற்கு கொஞ்சம்
உணவு தந்தால், நான் என்னுடைய பசியாற்றிக் கொள்வேன் என்றார்
விவேகானந்தர். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த அந்த பெரியவர்,
உங்களுக்கு உணவுக்கு தருவதில் எனக்கொன்றும் ஆட்சோபனை இல்லை...
ஆனால் நான் ஒரு துப்புரவுப் பணியாளன்; தீண்டத்தகாதவன். அப்படியிருக்கும்போது,
நான் கொடுக்கிற உணவை நீங்கள் உண்பீர்களா? என்றுதான் நான்
யோசிக்கிறேன் என்றார்.
பெரியவர் இவ்வாறு சொன்னதுதான் தாம்தான், ஒரு தீண்டத்தகாதவரிடமிருந்து
உணவை வாங்கி உண்பதா? என்று விவேகானந்தர் வேகமாக நடக்கத்
தொடங்கினார். சிறிதுதூரம் சென்றிருப்பார். அப்போது அவருடைய
குருநாதர் சொன்ன எல்லாரிடத்திலும் கடவுள் இருக்கிறார்,
அதனால் யாரும் யாருக்கும் கீழானவர்கள் அல்ல என்ற வார்த்தைகள்
அவருக்கு நினைவுக்கு வந்தன. உடனே விவேகானந்தர் தன்னுடைய
தவற்றை உணர்ந்து, அந்த பெரியவரை நோக்கி ஓடினார்.
ஐயா! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்... என்னை உயர்வாகவும்
உங்களைத் தீண்டத்தகாதவராகவும் நினைத்து, நீங்கள் கொடுத்த
உணவை சாப்பிடாமல் உதாசீனப்படுத்திவிட்டேன்... இப்போது என்னுள்
இருக்கின்ற அதே இறைவன்தான் உங்களுக்குள்ளும் இருக்கிறார்
என்ற உண்மையை உணர்ந்துகொண்டேன் என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து
உணவை வாங்கி உண்ணத் தொடங்கினார்.
எல்லாரும் இறைவனின் மக்கள்; மக்கள் எல்லாருக்குள்ளும் இறைவன்
இருக்கின்றார். அப்படி இருக்கும்போது பிறப்பின் அடிப்படையில்
வேறுபாடு பார்ப்பது நல்லதல்ல என்ற உண்மையை எடுத்துச்
சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு,
இன்றைய நாளில், நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், இயேசு
யூதருக்கு மட்டுமல்ல, அவர் எல்லாருக்குமான இறைவன் என்றொரு
செய்தியைத் தருகின்றது.
1. இயேசுவின் அமுதமொழியைக் கேட்டு வியப்புற்ற மக்கள்
இயேசு, தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, அங்குள்ள
தொழுகைக்கூடத்தில், இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டை எடுத்து
வாசிக்கத் தொடங்குகிறார். மக்களோ அவருடைய வாயிலிருந்து வந்த
அமுத மொழிகளைக் கேட்டு வியக்கின்றார்.
இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக
முக்கியமானது, இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல்
அறிஞர்கள் போலன்றி அதிகாரத்தோடு போதித்தார் என்பதாகும்.
பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும், திருச்சட்டம்
இப்படிச் சொல்கிறது என்று போதித்து வந்தார்கள். இயேசுவோ
அப்படியில்லாமல், நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று
அதிகாரத்தோடு போதித்தார். ஒருவர் அதிகாரத்தோடு போதிப்பது
ஒன்றும் அவ்வளவு எளிதான ஒரு காரியமில்லை. உள்ளத்தில்
உண்மையும் செயலில் நேர்மையும் இருக்கின்ற ஒருவரால் மட்டுமே
அப்படிப் போதிக்க முடியும். இயேசுவிடம் உண்மையும்
நேர்மையும் குடிகொண்டிருந்தன. அதனால்தான் அவரால்
அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது.
2. இயேசுவைப் புறக்கணித்த மக்கள்
இயேசு, எசாயாவின் சுருளேட்டை வாசித்தபோதும் அதற்கு
விளக்கம் தந்த தும் வியப்புற்ற மக்கள், அவர்
இறைவாக்கினர்கள் எலியாவைப் போன்று, எலிசாவைப் போன்று
புறவினத்து மக்களுக்குப் பணிசெய்யப் போகிறேன் என்று
சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த மக்கள் அவர்மீது
சிற்றம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.
இஸ்ரயேலில் மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்து, கடுமையான
பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில், கைம்பெண்கள் பலர் இருந்தார்கள்.
ஆனால் இறைவாக்கினர் எலியா சீதோனைச் சார்ந்த சாரிபாத்துக்
கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டார். (1அர 17:8-16)
இறைவாக்கினர் எலிசாவோ இஸ்ரயேல் குடிகளில் தொழுநோயாளர்கள்
பலர் இருந்தபோதும், புறவினத்தாராகிய சிரியாவைச் சார்ந்த
நாமானின் தொழுநோயையே நீக்கினார் (2 அர 5: 1-15). இப்படி
இரண்டு இறைவாக்கினர்களும் இனம் கடந்து, குறுகிய எல்லைகளைக்
கடந்து, எல்லா மக்களுக்கும் பணிசெய்ததைப் போன்று, தானும்
பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதால், மக்கள் அவர்மீது
சீற்றம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.
புறவினத்தாரை நாயினும் கீழென நினைத்த யூதர்கள் மத்தியில்,
அவர்களைப் பற்றிப் பேசினாலோ அல்லது அவர்களது மத்தியில்தான்
தான் பணிசெய்யப் போகிறேன் என்று சொல்வதனாலோ, தனக்கு
மிகப்பெரிய பிரச்சினை வரும் என்று இயேசுவுக்கு நன்றாகவே
தெரிந்திருக்கும். இருந்தாலும் இயேசு தன் இலக்கு என்ன,
இலக்கு மக்கள் யார், யார் என்பதைத் தெளிவாக எடுத்துச்
சொல்லி, தான் யூதர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமான
இறைவன் என்பதை எடுத்துச் சொல்கிறார்.
இயேசு யூதர்கள் மட்டுமல்ல, எல்லாருக்குமான இறைவன் என்பதை,
அவர் இறப்பின்போது, எருசலேம் திருக்கோவிலின் திரைச் சீலை
இரண்டாகக் கிழிந்தததும் விண்ணேற்றம் அடையும்போது தன்
சீடர்களிடம் சொன்ன, நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும்
சீடராக்குங்கள் (மத் 28:19) என்ற வார்த்தைகளும் நமக்கு
மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.
3. இயேசுவைக் கொலை செய்யவும் துணிந்த மக்கள்
இயேசு, தான் யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுடைய
மீட்புக்காகவும் வந்திருக்கிறேன் என்று சொன்னதும்,
தொழுகைக்கூடத்தில் இருந்த யூதர்கள், அவரை ஊருக்கு வெளியே
துரத்தி, அவ்வூரில் இருந்த மலை உச்சியிலிருந்து கீழே
தள்ளிவிட முயல்கிறார்கள். இயேசுவின் அமுதமொழியைக் கேட்டு
வியந்த மக்களா, சிறிதுநேரத்தில் அவரை மலை உச்சிலிருந்து
கீழே தள்ளிவிடப் பார்க்கிறார்கள்! என நினைக்கும்போது
நமக்கு வியப்பாக இருக்கிறது... அந்தளவுக்கு அவர்கள்
இனவெறியில் ஊறிப்போனவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை
நினைத்துப் பார்க்கின்றபோதுதான் வேதனையாக இருக்கின்றது.
பலநேரங்களில் நாமும்கூட யூதர்களைப் போன்று கடவுள் எங்கள்
இனத்திற்கு அல்லது குலத்திற்குத்தான் சொந்தம் என்று உரிமை
கொண்டாடுவது நம்முடைய குறுகிய மனப்பான்மையைக் காட்டுவதாக
இருக்கின்றது. ஆகவே, கடவுளை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்
கொள்ளாமல், அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற பரந்த
பார்வையோடு பார்ப்பது நல்லது.
சிந்தனை
எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவர்; அவர்
எல்லாருக்குள்ளும் இருப்பவர் என்பார் தூய பவுல் (எபே
4:6). ஆம், எல்லாருக்கும் தந்தை ஒருவராக இருக்கின்ற
போது... அவர் எல்லாருக்குள்ளும் இருக்கும்போது இங்கே
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டிற்கு வழியே இல்லை.
ஆகவே, இயேசுவை எல்லாருக்குமான இறைவன் என்பதையும் உணர்ந்து,
நாம் அனைவரும் அவருடைய சகோதர, சகோதரிகள் என்பதை உணர்ந்து
வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
இன்றைய திருவழிபாட்டின் மையப்பொருளாக இன்றைய இரண்டாம் வாசகம்
அமைகிறது (1 கொரி. 13). அன்பு இல்லாமல் வேறு திறமைகள் இருந்தால்
அதனால் பயன் ஒன்றுமில்லை என்றும், அன்பின் பண்புகள் எப்படிப்பட்டவை
என்றும் எடுத்துக்காட்டுகிறார் பவுலடியார்.
ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது
அவரைத் திட்டியவர்களில் அவரது கட்சியைச் சார்ந்த ஸ்டாண்டன்
என்பவரைப் போல, வேறு யாரும் இருக்க முடியாது. ஆப்ரகாம்
லிங்கனை தந்திரகாரக் கோமாளி என்றும், ஆப்பிரிக்கா கொரில்லா
போன்ற வார்த்தைகளாலும் வசை பாடினார் ஸ்டாண்டன். இதற்காக
லிங்கன் இவரை ஒதுக்கவில்லை. மாறாக உயர்ந்த பதவியைத்தான்
கொடுத்தார். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் லிங்கன்
சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரது உடல் ஒரு அறையில் கிடத்தப்பட்டு
கிடந்தது. அப்போது ஸ்டாண்டன் கண்ணீரோடு இதோ உலகம் இதுவரைக்
காணாத மாபெரும் தலைவர் இங்கே கிடத்தப்பட்டு இருக்கிறார் என்றார்.
புனித பவுல், அன்பின் பரிமாணங்கள் பற்றிக் கூறும்போது, அன்பு
பொறுமையுள்ளது அன்பு அழுக்காறு கொள்ளாது, பெருமை பேசாது,
இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது, தன்னலத்தை தேடாது
சீற்றத்திற்கு இடந்தராது, வன்மம் வைக்காது; அநீதியைக் கண்டு
மகிழ்வுறாது, உண்மையைக் கண்டு உளம் மகிழும், அனைத்தையும்
தாங்கிக் கொள்ளும் (1 கொரி. 13:4-7) என்று கூறுகிறார். இந்த
அன்பின் பரிமாணங்கள் அனைத்தும் ஆப்ரகாம் லிங்கனிடம் இருந்தது
என்றால் மிகையாகாது.
அன்பைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை . ஒருவருக்கு பல
மொழி பேசும் திறமை இருக்கலாம். இறைவனுடைய திட்டத்தை முன்னறிவிக்கும்
வரம் இருக்கலாம். ஆழ்ந்த விசுவாசம்
இருக்கலாம். ஆனால் இவையனைத்தும் அன்பின் அடிப்படையிலே அமையாவிட்டால்,
போட்டி, தற்புகழ்ச்சி, பெருமை இவற்றிற்கு இட்டுச் செல்லும்
(1 கொரி. 13:1-3).
இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் இறைவாக்கினர் பணி எவ்வளவு
துன்பங்கள் நிறைந்தது என்றும், ஓர் உண்மையான இறைவாக்கினருக்கு
அளவற்ற பிறரன்பு தேவைப்படுகின்றது என்பதையும் உணர்த்துகின்றது.
இறைவனின் அன்பை எடுத்துரைக்கின்றபோது அளவற்ற பொறுமை, சகிப்புத்
தன்மை, மன்னிப்பு போன்ற அன்பின் பரிமாணங்கள் நம்மில் இடம்
பெற வேண்டும் என்பதையே இவை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
அன்பை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு இயேசு சிறந்த
எடுத்துக்காட்டாக விளங்குகிறார். எனவே, நான் உங்களிடம் அன்புகூர்ந்தது
போல. நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகூர வேண்டுமென்பதே
எனது கட்டளை (யோவா. 13:34) என்று உறுதியாக அவரால் கூற
முடிந்தது.
இயேசு எல்லாரையும் அன்பு செய்து, பாவிகளைத் தேடிச்
செல்லும் நல்ல ஆயனாக திகழ்கிறார். பாவிகளை மன்னிக்க தந்தையிடம்
மன்றாடுகிறார். யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுத்தபோதும்,
அவனின் தவறுகளைச் சுட்டிக்காட்டினாரே தவிர, எதிரியாகப்
பாவிக்கவில்லை . தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட
மேலான அன்பு இல்லை (யோவா. 15:13) என்று கூறிய இயேசு அதைத்
தன் வாழ்வாக நிகழ்த்தினார். நம் பாவங்களுக்காக உயிரையே
கொடுத்தார். இயேசுவின் அன்பு மன்னிக்கும் அன்பு. தியாகத்தின்
அன்பு. நிபந்தனையற்ற நிலையான அன்பு. ஆம்! அன்பர் இயேசுவின்
அன்பைக் கடைப்பிடித்து அவரின் சாட்சிகளாகத் திகழ்வோம்.
ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
ஒரு சந்தேகம்! ஒரு சிலர் வாழ்க்கையிலே புதுமை நடக்கின்றது.
ஒரு சிலர் வாழ்க்கையிலே புதுமை நடப்பதில்லை! இது ஏன்? இந்தக்
கேள்விக்கு இன்றைய நற்செய்தியில் இயேசு பதில்
கூறுகின்றார்.
ஒரு சிலர் ஆழமாக நம்புகின்றார்கள்! ஆகவே அவர்கள்
வாழ்க்கையில் புதுமை நடக்கின்றது (நற்செய்தி).
நம்பிக்கை என்றால் என்ன? இதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் அருமையான
உதாரணம்.
ஜப்பான் நாடு. அங்கே ஒரு பெரிய இலட்சாதிபதி. அவரிடம் ஒரு
தொழிற்சாலை! அந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான ஓர் இராட்ச்ச
இயந்திரத்தை அமெரிக்காவிலிருந்து வரவழைத்திருந்தார். அந்த
இயந்திரத்தில் திடீரென்று கோளாறு.
இயந்திரம் வேலை செய்யவில்லை. உடனே அந்த ஜப்பான் நாட்டு இலட்சாதிபதி
அமெரிக்காவிற்குச் செய்தி அனுப்பினார். தகவலைப் பெற்ற உடனே
இயந்திரத்தை விற்ற கம்பெனி ரிப்பேர் செய்ய ஆள் அனுப்பிவைத்தது.
அனுப்பப்பட்ட ஆள் சில மணி நேரங்களில் ஜப்பானை அடைந்தார்.
அவர் ஓர் இளைஞர். வயது இருபதுதான் இருக்கும்; அவர் கையில்
ஒரு பெட்டி இருந்தது.
ஜப்பான் நாட்டு இலட்சாதிபதி அந்த இளைஞரைப் பார்த்ததும் அதிர்ச்சி
அடைந்தார். கைதேர்ந்த என்ஜீனியர் ஒருவரை அனுப்பாமல் சின்னப்பையன்
ஒருவரை அனுப்பி வைத்திருக்கின்றார்களே என்று எண்ணி, அமெரிக்காவிலிருந்த,
இயந்திரத்தை விற்ற கம்பெனியோடு தொடர்பு கொண்டு பேசினார்.
தொலைபேசியில் பதில் வந்தது. கம்பெனிக்காரர்கள் ஜப்பான்
நாட்டு இலட்சாதிபதியிடம், அங்கே வந்திருப்பவர் பார்ப்பதற்கு
சிறியவராக, இளைஞராக இருக்கலாம். ஆனால் அவரைவிட உங்கள் இயந்திரத்தைச்
சரிபார்க்க வேறு ஒரு சிறந்த ஆள் இந்த அமெரிக்காவில்
கிடையாது என்றனர்.
ஜப்பான் நாட்டுக்காரர், ஏன் இப்படிச் சொல்லுகின்றீர்கள்?
என்றார். அந்தக் கேள்விக்கு பதில் வந்தது. இதுதான் பதில்:
அங்கு வந்திருப்பவர்தான் அந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்.
அவரால் எப்படிப்பட்ட குறைகளையும் கண்டுபிடித்து
தீர்த்துவைக்கமுடியும், நம்புங்கள்.
வந்த செய்தியை ஜப்பான் நாட்டுக்காரர் நம்பினார். ஓரிரு
நிமிடங்களில் இயந்திரம் ஓடத்துவங்கியது.
நாம் ஒவ்வொருவரும் ஜப்பான் நாட்டுக்கார இலட்சாதிபதி போன்றவர்கள்.
அதைப் பழுது பார்க்க வந்த அந்த இளைஞரைப் போன்றவர் கடவுள்.
நம்மை உருவாக்கிய கடவுளால் (முதல் வாசகம்) நமக்குள் ஏற்படும்
எந்தக் கோளாறையும் சரிசெய்ய முடியும் என்று சொல்லி அவரிடம்
நம்மையே நாம் அர்ப்பணிப்பதற்குப் பெயர்தான் நம்பிக்கை.
நாம் வணக்கம் செலுத்தும் மரியாவைப் போன்று, என்னைப் படைத்த
கடவுளால் ஆகாதது எதுவுமில்லை என்று நம்பி, இதோ ஆண்டவருடைய
அடிமை; உமது வார்த்தையின்படியே ஆகட்டும் என்று சொல்வதற்குப்
பெயர்தான் நம்பிக்கை.
எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உடல் நலம் இருக்கும்.
எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உள்ள அமைதி இருக்கும்.
கிறிஸ்து பிறப்புக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்ரயேல்
நாட்டிலே எலியா என்னும் இறைவாக்கினர் காலத்திலே ஊரெல்லாம்,
நாடெல்லாம் பஞ்சம் (1 அர 17:8-16).
அப்பொழுது சாரிபாத்து என்னும் நகரிலிருந்த ஒரு
கைம்பெண்ணின் வீட்டில் மட்டும் பஞ்சமில்லை ; எடுக்க எடுக்க
எண்ணெயும் குறையவில்லை; அள்ள அள்ள மாவும் மறையவில்லை. காரணம்
அந்தக் கைம்பெண் நம்பினார். இஸ்ரயேல் நாட்டிலே எத்தனையோ
தொழுநோயாளிகள் இருந்தார்கள் (2 அர 5:1-14). ஆனால் நாமான்
என்பவர் மட்டும்தான் குணமானார். காரணம் அந்த நாமான் மட்டும்தான்
நம்பினார்.
எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே புதுமை நடக்கும்.
பழைய ஏற்பாட்டில், செங்கடல் இரண்டாகப் பிரிந்தது
நம்பிக்கையினால்!
வானத்திலிருந்து மன்னா பொழிந்தது நம்பிக்கையினால்! கற்பாறை
இரண்டாகப் பிளந்து தண்ணீர் வந்தது நம்பிக்கையினால்!
புதிய ஏற்பாட்டில்,
நோயாளிகள் உடல் நலம் பெற்றது நம்பிக்கையினால்!
பாவிகள் பாவமன்னிப்பு பெற்றது நம்பிக்கையினால் இறந்தவர்கள்
உயிர்பெற்று எழுந்தது நம்பிக்கையினால்!
இன்று நம்மைச் சுற்றி எத்தனையோ துன்பங்களும் துயரங்களும்.
இதோ ஒரு புதுக்கவிதை!
தாயின் பாசத்தைப் பற்றி
மகன் மேடையிலே அருமையாக
சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தான். அதை டி.வி.யில்
கேட்டுக்கொண்டிருந்தார் தாய்.
எங்கிருந்து? முதியோர் இல்லத்திலிருந்து!
இதோ இன்னொரு புதுக்கவிதை!
வடக்கே கங்கை!
தெற்கே காவிரி!
இரண்டு நதிகளுக்குமிடையே ஒரு தொட்டி!
குப்பைத் தொட்டி!
அதற்குள்ளே தாகத்தால் ஒரு குழந்தை
அழுதுகொண்டிருந்தது!
ஒரு பக்கம் பாசத்திற்காக ஏங்கும் பெற்றோர்கள் !
மறு பக்கம் பாதுகாப்பிற்காக ஏங்கும் குழந்தைகள்!
இன்று ஆபத்து நேரத்திலே உதவி செய்பவர்களை விரல்விட்டு
எண்ணிவிடலாம்.
அன்றொரு நாள் தனது தம்பி ஆபேலைக் கொன்றவனைப் பார்த்து, உன்
தம்பி ஆபேல் எங்கே? என்று கேட்டார் கடவுள் (தொநூ 4:9).
காயினோ ஒரு கேள்விக்கு, மற்றொரு கேள்வியால் பதில்
சொன்னான். என் தம்பிக்கு நானென்ன காவலாளியா? என்றான்.
அந்தக் கேள்வி இன்று மூலைமுடுக்கெல்லாம் எதிரொலிக்கின்றது.
இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் :
இறைவா!
இன்று எனக்குப்
பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம்.
மண்ணும் வேண்டாம், மணியும் வேண்டாம்.
பட்டமும் வேண்டாம், பரிசும் வேண்டாம்.
அழகும் வேண்டாம், அந்தஸ்தும் வேண்டாம்.
நீர் விரும்பும், நம்பிக்கையை எனக்குத் தாரும்.
காரணம், நம்பிக்கை
கடலை விட ஆழமானது,
இமயத்தை விட உயரமானது,
நைலை விட நீளமானது.
தாஜை விட அழகானது.
நம்பிக்கையால்
முள்ளை மலராக்க முடியும்,
தேளை தேனாக்க முடியும்,
கல்லை கனியாக்க முடியும்.
முடியும், முடியும், முடியும், நம்பிக்கையால் எல்லாம்
முடியும்.
மேலும் அறிவோம்:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் : 788)
பொருள் : இடுப்பில் உடுத்தியுள்ள ஆடையைப் பறிகொடுப்பவனின்
கை விரைந்து சென்று ஆடையைச் சரி செய்யப் பெரிதும் உதவும் ;
அதுபோன்று, நண்பனுக்குத் துன்பம் வரும் போது
துடித்தெழுந்து சென்று அத்துன்பத்தைப் போக்குவது உயரிய
நட்பாகும்!
ஒரு கிராமத்துக்கு அருகாமையில் ஒரு மாபெரும் கூடாரத்தில்
'சர்க்கஸ்' நடந்து கொண்டிருந்தது. அக்கூடாரம் திடீரென்று
தீப்பிடித்துக் கொண்டது. 'சர்க்கஸில்' கோமாளியாக நடித்த
குள்ளன் ஒருவன் கிராமத்துக்கு ஓடிப்போய் மக்களிடம், "சர்க்கஸ்
கூடாரம் தீப்பிடித்து எரிகிறது. தீயை அணைக்க உதவுங்கள்" என்று
கேட்டான். ஆனால் ஊர் மக்கள் அவனை நம்ப மறுத்தனர். ஏனெனில்
அவன் ஒரு கோமாளி, ஒரு குள்ளன். அதன் விளைவு என்ன? சர்க்கஸ்
கூடாரம் மட்டுமல்ல, ஊர் முழுவதும் தீயினால் நாசமடைந்தது.
ஒருவருடைய உருவத்தைக் கண்டு அவரைக் குறைவாக எடைபோடக்
கூடாது. ஏனெனில் ஒரு மாபெரும் தேருக்கு ஒரு சிறிய அச்சாணி
போன்று அவர் சமுதாயத் தேர் இயங்குவதற்கு அவசியமானவராக இருக்கலாம்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சு ஆணி அன்னார் உடைத்து (குறள் 667)
நாசரேத்து ஊர் மக்கள் கிறிஸ்துவின் போதனையைக் கேட்டு வியப்படைந்தாலும்
அவரை நம்ப மறுத்தனர். ஏனெனில் அவர் தச்சரான யோசேப்பின் மகன்;
அவர் எந்தப் பள்ளியிலும் பயிலாதவர், பட்டம் பெறாதவர். அவரது
எளிய பின்னணியை வைத்து அவரை மட்டமாக எடை போட்டனர். அவரை மனித
முறையில் பார்த்தனர். முகக்கண் கொண்டு பார்த்தனர்; அகக்கண்
கொண்டு பார்க்கவில்லை. திருத்தூதர் பவுல் கூறுகிறார்:
"இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி (ஊனக் கண்
கொண்டு) மதிப்பிடுவதில்லை. முன்பு நாங்கள் கிறிஸ்துவையும்
மனித முறைப்படி தான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு
செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்
போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார் , பழையன
கழிந்து புதியன புகுந்தன் அன்றோ " (2 கொரி 5:16-17).
திருப்பணியாளர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? மனித
முறையிலா? அல்லது விசுவாசத்தின் அடிப்படையிலா? ஓர் இளைஞனிடம்,
"நீ ஏன் பூசைக்குப் போவதில்லை?" என்று கேட்டதற்கு அவன்
கூறியது: "அவன் பூசைக்கு எவன் போவான்?" அந்த இளைஞன் தனது
பங்குப் பணியாளரை மனித முறையில் மதிப்பிட்டான். அவரைக்
கிறிஸ்துவின் பதில்- ஆளாகப் பார்க்கவில்லை , திருப்பணியாளர்களைக்
கிறிஸ்துவின் பதில் - ஆளாகப் பார்த்த புனித அகுஸ்தினார்
பின்வருமாறு கூறியுள்ளார்: "பேதுரு திருமுழுக்கு அளிக்கட்டும்,
கிறிஸ்துதான் திருமுழுக்கு அளிக்கிறார். யூதாசு
திருமுழுக்கு அளிக்கட்டும், கிறிஸ்து தான் திருமுழுக்கு அளிக்கிறார்",
எவ்வாறு கடவுள் கிறிஸ்துவில் செயல்பட்டாரோ அவ்வாறே
கிறிஸ்து திருப்பணியாளர்களிடம் செயல்படுகிறார். திருப்பணியாளர்கள்
கடவுளின் இணையற்றச் செல்வத்தைக் கொண்டுள்ள மண்பாண்டங்கள்.
அவர்கள் தகுதி அவர்களிடமிருந்து வரவில்லை . அது கடவுளிடமிருந்தே
வருகிறது (2 கொரி 4:7). கடவுள் தகுதியுள்ளவர்களை அழைப்பதில்லை
; மாறாகத் தாம் அழைத்தவர்களைத் தமது திருப்பணிக்குத் தகுதியுள்ளவர்களாக
மாற்றுகிறார். நாம் கருவியைப் பார்க்காமல் கருவியைப் பயன்படுத்தும்
கடவுளைப் பார்க்கவேண்டும். நற்கருணை அருள் அடையாளம் விசுவாசத்தின்
மறைபொருள் என்றால், குருத்துவமும் விசுவாசத்தின் மறைபொருள்
என்பதில் ஐயமில்லை.
பொதுப்பணியில், குறிப்பாக நற்செய்தி அறிவிப்புப் பணியில்
ஈடுபட்டுள்ளோர் கட்டாயம் எதிர்ப்புகளைச் சந்திக்க
நேரிடும். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் மன உறுதியைக்
கொண்டிருக்கவேண்டும். நாசரேத்து ஊர் மக்கள் கிறிஸ்துவை ஊருக்கு
வெளியே துரத்தி, மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயற்சித்தனர்.
ஆனால் அவர் அச்சமின்றி அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து
போய்விட்டார் (லூக் 4:28-30). இன்றைய முதல் வாசகத்தில் கடவுள்
இறைவாக்கினர் எரேமியாவுக்கு அளிக்கும் வாக்குறுதி நமக்குத்
தெம்பு, ஊட்ட வேண்டும்: "அவர்கள் உனக்கு எதிராகப்
போராடுவார்கள், எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால்
இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்
(எரே 1:19),
கடவுளுக்காக உண்மையாகவே உழைப்பவர்களைக் கடவுள் ஒருபோதும்
கைவிட மாட்டார். "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு
எதிராக இருப்பவர் யார்" (உரோ 8:31), எனவே, "போற்றுவார்
போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், எவர்
வரினும் நில்லேன், அஞ்சேன்" என்ற மனத் துணிச்சலுடன் நம்மிடம்
ஒப்படைக்கப்பட்ட பணியை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவேண்டும்.
வாழ்க்கையில் எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் நாம் நம் கண்முன்
நிறுத்த வேண்டியது: "இதுவும் கடந்து போகும்". பிரச்சனைகள்
நிரந்தரமானவை அல்ல. 10-ஆம் வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடம்:
"ஒவ்வொரு மாணவனும் குறைந்தது இரண்டு மொழிகள் கற்றிருக்க
வேண்டும்" என்றார். அதற்கு ஒரு மாணவன், "சார். எனக்கு இரண்டு
மொழிகள் தெரியும், ஒன்று கனிமொழி, மற்றொன்று தேன்மொழி" என்றான்.
ஆனால், இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் அடிகளார்,
"எல்லார்க்கும் ஒரே ஒரு மொழி மட்டும் கட்டாயம் தெரிய
வேண்டும்; அதுதான் அன்பு மொழி" என்கிறார். கடப்பாறைக்குக்
கூட மசியாத பாறை அப்பாறையின் மேல் வளரும் பசுமரத்து
வேருக்குப் பிளந்து விடும். "பாறைக்கு (கடற்பாறைக்கு)
நெக்குவிடாப் பாறை பசுமரத்து வேருக்கு நெக்குவிடும்". அவ்வாறே,
அதிகாரத்தால்
சாதிக்க முடியாததை அன்பினால் சாதிக்க முடியும், "அன்பு அனைத்தையும்
பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி
இருக்கும் அனைத்திலும் உறுதியாய் இருக்கும்" (1 கொரி
13:7). "அன்பு அனைத்தையும் மேற்கொள்ளும்: எனவே நாம் அன்புக்கு
அடிபணிவோமாக" என்கிறார் இத்தாலியக் கவிஞர் தாந்தே. அகிலத்தில்
சக்தி வாய்ந்த ஆயுதம் அணுகுண்டல்ல, மாறாக அன்பேயாகும்!
கிறிஸ்து மண்ணுலகில் அன்புத் தீயை மூட்ட வந்தார். அது எப்போதும்
பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்
(லூக் 12:49).
திறந்த மனத்தோடு செவி சாய்க்கும் மக்கள் இல்லையென்றால் திறமையோடு
ஆற்றும் மறையுரைகள் கூட வீணானவைதான்!
இன்றைக்கு என்று அல்ல. என்றைக்குமே இறைவாக்குப் பணிக்கு இடையூறாக,
சவாலாக இருப்பது ஏற்றுக் கொள்ளப்படாமை, பொருள் படுத்தப்படாமை,
புரிந்து கொள்ளப்படாமை .... ஒரு வார்த்தையில் புறக்கணிப்பு.
"இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை
" (லூக். 4:24).
தமிழறிஞர் அறவாணன் எழுதிய "தமிழர்தம் மறுபக்கம்" என்ற
நூலில் தமிழரின் நோயாக ஒன்றினைக் குறிப்பிடுகிறார். " நம்மவர்களை
நாமே மதிப்பதில்லை. நம்மைச் சார்ந்தவர்களின் திறமைகள்
பெரிதாக நமக்குத் தெரிவதில்லை. நம்மோடு இருப்பவர்களின் திறமையை
நாம் பாராட்டுவதில்லை. விருந்தோம்பல் என்ற பெயரில் அன்னியர்களை
ஆதரிப்போம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு ' என்று சொல்வது
கூட ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. அடிமை
உணர்வின் செயல்பாடு"
இயேசு தம் நற்செய்திப் பணியைத் தம் சொந்த ஊரில் தான் தொடங்கினார்.
முற்றத்து முல்லைக்கு மணமில்லை, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு
வாசம் மிகுதி' என்ற நிலை அவரை எதிர்த்தது.
''நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ?" (யோ.
1:46) என்று நத்தனியேல் பிலிப்புவிடம் கேட்டார். நம்மில்
ஒருவன் அதுவும் தச்சனின் மகன் மெசியாவாக இருக்க முடியுமா
என்று நாசரேத் வாழ் மக்கள் கேட்கிறார்கள். சென்ற
இடமெல்லாம் நன்மையே செய்து கொண்டு சென்றாலும் இயேசு
எப்படியெல்லாம் தன் சொந்த இனத்தாராலேயே பல
காரணங்களுக்காகப் புறக்கணிக்கப்பட்டார்!
"பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும்,
கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும்
அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்'' (எரே.
1:10) என்று இறைவாக்குப்பணி செய்ய எரேமியாவை ஆண்டவர்
அழைத்தார். மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையே! மாறாக
எத்தனை இன்னல்களுக்கு அவரை ஆளாக்கினர்.
ஒரு மரவெட்டியின் மகன் அமெரிக்க குடியரசுத் தலைவராக
முடியும் என்பது ஆபிரகாம் லிங்கனின் வாழ்வு எழுதிய வரலாறு.
ஒரு படகோட்டியின் மகன் ஒரு மாபெரும் அறிவியல் மேதை ஆனதும்
அவரே 130 கோடி மக்களை உள்ளடக்கிய இந்தியக் குடியரசின்
தலைவராக முடியும் என்பதும் அப்துல் கலாமின் வாழ்வு தீட்டிய
வரலாறு.
இன்றைய நற்செய்தியோ ஒரு தச்சனின் மகன் ஞானத்துடன்
இறைவாக்கு உரைப்பதை நாசரேத்து மக்களால் முழுமையாக ஏற்க
இயலவில்லை. இயேசு தனக்குள் மறைத்துக் கொண்டு
வெளிப்படுத்திய தெய்வீகத்தை மக்களால் கண்டுணர இயலவில்லை.
கடந்திருக்கும் கடவுளைக் காணத் துடிக்கிறான் மனிதன்.
இடைவெளி குறைந்து உறவாடும் இறைவனைக் காணத் தவறிவிடுகிறான்.
சொந்த நாட்டில் மதிக்கப்படாத திறமைகள் அயல்நாடுகளில்
அற்புதங்கள் புரிவது இன்றையக் காட்சி அன்றோ!
ஏழைத் தச்சனுக்கு எங்கிருந்து ஞானம் வந்தது? இயேசுவின்
வாயினின்று வெளிவந்த இறை வார்த்தையின் வளமை கண்டு சொந்த
ஊர் மக்கள் விடுத்த விமர்சனம் இது! உருவத்தை வைத்தா ஒருவரை
எடைபோடுவது? ஒரு சமுதாயத் தேர் இயங்க அச்சாணி போன்று
அவசியமானவராக இருக்கலாம் என்கிறது குறள் 667.
நம் மத்தியில் கிறிஸ்துவின் செயல்பாடுகளை அறியத் தடையாக
இருப்பவை என்ன? அறிவா , ஆணவமா, குறை கூறும் மனப்போக்கா,
எதிர்மறை உணர்வுகளா?
மனிதனை மதிப்பதும், மதிப்பதாக நினைப்பதும் அவனது தகுதி
வருவாய், பதவியைப் பொறுத்து அமைந்துவிட்டது. இந்த மனிதன்
கடவுளுக்கென ஒரு கணக்கு வைத்திருக்கிறான். கடவுள் தன்னுடைய
எண்ணத்துக்கு எதிர்பார்ப்புக்கு உட்பட்டு வர வேண்டும்
என்று நினைக்கிறான். மனிதனோடு மனிதனாக இருக்க நினைத்து
உறவாட வந்த இறைமகனின் குடும்பப் பின்னணியை வைத்து எள்ளி
நகையாடுகிறான்.
புறக்கணிப்புக்கு இயேசுவின் புரட்சிச் சிந்தனையும் கூடக்
காரணம். இஸ்ரயேல் இனம்தான் இறைவனுக்கு நெருக்கமான இனம்
என்று இறுமாந்து இருந்தவர்களுக்கு இயேசுவின் போதனை ஓர்
அதிரடி. இறைவன் எல்லாருக்கும் உரியவர் என்று மட்டும்
சொல்லியிருந்தால் இவ்வளவு அதிர்ந்து போயிருக்க
மாட்டார்கள். மாறாக இதயத்தைக் கடினப்படுத்திக்
கொண்டிருக்கும் இஸ்ரயேல் மக்களை விட்டுவிட்டு இறைவன்
எங்கேயோ சென்றுவிட்டார் என்று இயேசு சுட்டிக்காட்டியது
அவர்கள் நெஞ்சில் வேலைப் பாய்ச்சியது.
யூதர்களிடம் ஒரு தப்பான எண்ணம் இருந்தது. நரகத்தில் உள்ள
நெருப்பு அணையாது எரிய, எரிபொருளாகவே புற இனத்தாரைக்
கடவுள் படைத்து வைத்திருக்கிறார். அவர்கள் எல்லாரும்
நரகத்துக்கே போவார்கள். தாங்கள் மட்டுமே விண்ணுலகுக்குச்
சொந்தக்காரர்கள் என்பது அவர்கள் கருத்து. ஆனால் அந்த
எண்ணத்தில் மண் விழச் செய்தார் இயேசு. யூதர்களின்
நம்பிக்கையின்மையைச் சாடிய அதே நேரத்தில் புற இனத்தாரின்
இறை நம்பிக்கையைப் புகழ்ந்தார். புற இனத்தாராக இருப்பினும்
எப்படி கடவுளின் அன்பு ஆதரவைப் பெற்றார்கள் என்பதை
சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணையும், சீரியாவைச் சார்ந்த
நாமானையும் மேற்கோள் காட்டி விளக்கினார். இது யூதர்களைக்
கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
இன்றைய நமது இறைநம்பிக்கையும் எதிர்பார்க்கும் அளவுக்கு
இருக்கிறதா என்ன? சமய நல்லிணக்கத்திற்காக, தீண்டாமை
ஒழிப்புக்காக, தாழ்த்தப்பட்டோரின் உயர்வுக்காகத்தானே
போராடினார் அண்ணல் காந்தி. இறையாட்சியின் விழுமியங்கள்
தானே இவையெல்லாம்! ஆனால் நேர்ந்தது என்ன? தன்னவர்களாலேயே
கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் ஒரு நற்செய்திப் பணியாளன் எத்தகைய
மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு முதல்
வாசகத்தில் கடவுளே பதில் தருகிறார்.
1. தன் மதிப்பின் அடிப்படையில் தன்னம்பிக்கை. கருத்தரங்கம்
ஒன்றில் தன்னம்பிக்கையை வளர்த்து வாழ்க்கையில் முன்னேறுவது
எப்படி?' என்பது மையக் கருத்து. பேச்சாளர் தன் சட்டைப்
பையிலிருந்து புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டை
எடுத்தார். "இந்த நோட்டு யாருக்கு வேண்டும்?" என்று
கேட்டார். அரங்கிலிருந்த அனைவரும் கையை உயர்த்தினர். அந்த
ரூபாய் நோட்டை கையில் வைத்து கசக்கினார். பிறகு "இப்போது
சொல்லுங்கள் இது வேண்டுமா?" அப்போதும் எல்லோரும் கைகளை
உயர்த்தினர். பேச்சாளர் தொடர்ந்தார்: "நண்பர்களே இந்த
நோட்டைப் போலத்தான் நாமும். வாழ்க்கை பல நேரங்களில்
சங்கடங்களால் அடிபட்டு, பிரச்சனைகளால் உடைபட்டுப் போனாலும்
அவரவர்க்குரிய மதிப்பு குறையாது. உண்மைத் தகுதி மாறாது".
"தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்குமுன்பே
அறிந்திருந்தேன். நீ பிறக்குமுன்பே உன்னைத்
திருநிலைப்படுத்தினேன். மக்களினங்களுக்கு இறைவாக்கினராக
உன்னை ஏற்படுத்தினேன் " (எரே. 1:5). பேரரசின் மகுடத்தில்
இருந்தால் என்ன, பிச்சைக்காரனின் கைகளில் இருந்தால் என்ன,
வைரம் வைரம்தான். விலை மதிப்பற்றதுதான்!
2. தன்னோடு (வாழ்விலும் பணியிலும்) கடவுள் இருக்கிறார்
என்ற மன உறுதி . " அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள்.
எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில்
உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்" (எரே. 1:19).
எனது கன்னிமை இறைவனுக்கே' என்ற மன உறுதியோடு வாழ்ந்த புனித
ஆக்னெஸ், தன்னை மிரட்டியவர்களைப் பார்த்து சொன்னார்: "உனது
வாளை எனது இரத்தத்தால் சிவப்பாக்கிக் கொள்வாய். ஆனால்
கிறிஸ்துவுக்கு அருப்பணமான எனது உடலை மாசு படுத்த இயலாது'
திருத்தூதர் பவுலின் கூற்றும் சிந்தனைக்குறியது. "நாங்கள்
எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து
போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை.
துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை.
வீழ்த்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை. இயேசுவின் வாழ்வே
எங்கள் உடலிலே வெளிப்படுமாறு நாங்கள் எங்கு சென்றாலும்
அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து
செல்கிறோம்" (2 கொரி.4:8-10).