ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பாஸ்காக் காலம் 5 ஆம் ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
புதியதோர் கட்டளையை கடைபிடிக்க வந்திருக்கும் பிரியங்களே!

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு அனைத்தையும் புதிதாக்கும் வல்லமையின் வழியாக நம்மை இன்று இந்த திருப்பலிக்கு வரவேற்கிறது!

அன்பின்றி வறண்டு கிடக்கும் உலகில் அன்பின் ஊற்றாய் பவனி வரவும், நாம் காணும் அனைத்தையும் புதியதாக்கவும் புதிய கட்டளை ஒன்று நமக்குத் தரப்படுகிறது. அதுதான் அன்பு.

அன்பு கிடைக்குமிடத்தில் அன்பைச் செய்வது சாதாரண அன்பு. அன்பு கிடைக்காத இடத்தில் அன்பைச் செய்வது தெய்வீகமான அன்பு. நம்மை வெறுப்பவர்களை அன்பு செய்வது புனிதமான அன்பு. இது நிபந்தனையற்ற அன்பு. இந்த நிபந்தனையற்ற அன்பை நாம் சந்திக்கும் இடங்களில் எல்லாம் பொழியத் தொடங்கினால் அவனி முழுவதும் அன்பு தான் கொட்டிக் கிடக்கும்.

நிபந்தனையற்ற அன்பு நிலவும் இடங்கள், பூமியின் சொர்க்கம் என்பதில் ஐயமில்லை. அப்படியான சூழலுக்காக நம் மனதையும் செயலையும் பக்குவப்படுத்தினால் விண்ணகம் மண்ணகத்தில் வந்தமரும். அனைத்தும் புதிதாகும்.

எதையும் பதிலுக்குத் தர முடியாத மனிதர்களை அன்பு செய்யும் போது அந்த அன்பு வலிமை பெறுகிறது. ஓவ்வொருவரையும் அவரவர் இயல்புடன் அணுகுவது இயல்பான அன்புக்கு இன்னும் கூடுதலான வலிமை கிடைக்கிறது.

இந்த நிபந்தனையற்ற அன்பை நாம் சந்திக்கும் இடங்களில் எல்லாம் பொழியத் தொடங்கினால் அவனி முழுவதும் அன்பு தான் கொட்டிக் கிடக்கும். அப்போது நமது துன்பங்கள் நீங்கி இன்பங்கள் அனைத்தும் பெருகும், முகத்தில் வடியும் கண்ணீர் அனைத்தும் துடைக்கப்படும். நோய் அனைத்தும் நீங்கி நலம் பெறுவோம். வலுக்குறைவானது அனைத்தும் வலுப்பெறும். புதிய விண்ணகமும், புதிய மண்ணகமும் அமையும். நாம் காணும் அனைத்தும் புதிதாகும். கடவுளின் உறைவிடம் நம்நடுவே அமையும்.

"நான் அன்பு செய்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் என அன்புக்கு இலக்கணம் வகுத்தவர் விதியை சொல்லித் தரும் திருப்பலி இது. அப்படியான அன்பைச் செய்ய இயேசு தந்த அன்பின் விதியை வீதியெங்கும் விதைக்க அருள் கேட்டு செபிப்போம்.
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 
1. அனைத்தையும் புதியதாக்கும் வல்லமை படைத்த ஆண்டவரே!
கடவுளின் பணிக்கென்று தங்களை அர்ப்பணித்த திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் இறைமக்களிடையே நம்பிக்கையை வளர்த்தெடுத்து நீர் உறையும் புதிய விண்ணகத்தையும் மண்ணகத்தையும் உருவாக்கிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அரியணையில் வீற்றிருந்து எங்களை பாதுகாக்கும் ஆண்டவரே!
எல்லா நாட்டையும், எல்லா குலத்தையும், எல்லா மக்களினத்தையும் ஆளும் நாடுகளின் தலைவர்கள் உண்மையான மகிழ்ச்சி நிறைந்த பாதையில் மக்களை வழி நடத்தி புதியன படைக்க அருள்தர இறiவா உம்மை மன்றாடுகிறோம்.

3. புதியதோர் கட்டளையை எமக்குக் கொடுத்த இயேசுவே!
அனைத்தையும் புதியவனவாக மாற்ற நீர் தந்த வாகுகுறுதியை கடைபிடித்து வாழும் எம் பங்குத் தந்தை வாழ்வுக்கான வளர்ச்சியின் பாதையில் இறைமக்களை வழி நடத்த அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.கண்ணீர் அனைத்தையும் துடைத்து எமை வாழச் செய்யும் இறைவா!
எங்களிடையே நிலவும் சாவு, நோய், துன்பம், பசி, பணப்பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, தகாத பழக்கம், வரன் தடை, வேலைவாய்ப்பின்மை இவற்றால் நாங்கள் வடிக்கும் கண்ணீர் அனைத்தையும் துடைத்து புதியனவாக்கி நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை இவற்றால் எங்களை வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புசெலுத்துங்கள் என மொழிந்த இயேசுவே!
அன்பு இன்றி வறண்ட உலகில் வாழ்வதால் தான் பல்வேறு துயர் மிகு பிரச்சனைகளை அனுபவிக்கிறோம். என்பதை உணர்ந்து அன்பின் ஊற்றாக எங்கள் இதயங்களை மாற்றி புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் அமைக்க அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 
மறையுரை சிந்தனைகள்
 
ரோஸ் பிறக்கும்போதே பெரும் குறைபாடுடன் பிறந்தாள். அவளுடைய கால்கள் இரண்டும் செயலிழந்து போன நிலையில் இருந்தன. அவளுக்கு இரண்டு வயதானபோது மருத்துவர்களின் ஆலோசனைப்படி இரண்டு கால்களையம் வெட்டியெடுத்தார்கள். அதன்பின் இடுப்பு வரை மட்டுமே உள்ள அரை மனுஷியானாள் ரோஸ். பட்ட காலிலே படும் என்பது போல பட்டுப் போன காலுடன் பிறந்தவளுடைய சகோதரன் மனநலம் பாதிக்கப்பட்டவன். தந்தை அல்சீமர் நோயாளி! வாழ்க்கை தனக்கு முன்னால் வெறுமையின் சாலையாய் நீண்டிருப்பதைக் கண்டார். ரோஸ் எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லையே எனும் அழுத்தம் மனதை அழ வைத்தது.

1997-ம் ஆண்டு ரோஸ் ஆட்டோமொபைல் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த டேவ் இளைஞனைச் சந்தித்தாள். எல்லோரும் அவளை பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருந்த போது டேவ் அவளை சாதாரணமான ஒரு பெண்ணாகப் பார்த்தான். அவளிடம் பரிதாபமாய் பேசாமல் நகைச்சுவையாய்ப் பேசினான். அவளுடைய மனம் மயங்கியது! ஆனால் கால்கள் இல்லாத பெண்ணைத் அருட்சாதனம் செய்;வானா எனும் கேள்வி அவளுடைய நாட்களை பதட்டத்துடன் நகர்த்தியது. ஆனால் டேவ் அவள்மீது நிபந்தனைகள் ஏதுமற்ற அன்பை வைத்திருந்தான். எதiயும் எதிர்பார்க்காத அன்பு அது 1999-ம் ஆண்டு டேவ் ரோசியை அருட்சாதனம் செய்தார். ரோசியின் மனம் நெகிழ்ந்தது. ரோசிக்கு ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரன் உண்டு என்பதும் அவருடைய தந்தை நோயாளி என்பதும் டேவின் அன்பைக் குறைக்கவில்லை.

கால்கள் இல்லாத ஒரு பெண் குழந்தை பெறமுடியுமா எனும் மருத்துவ சிக்கல்களையும் மீறி இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் ரோஸ். அவருடைய கணவர் இன்றும் அமெரிக்காவில் கடைகளுக்கு ஷாப்பிங் செல்லும்போது தவறாமல் அவரை அழைத்துச் செல்கிறார். மனைவியை முதுகில் சுமந்து சுற்றி வருகிறார். பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடுகிறார். பூங்காவின் மரங்கள் கூட அந்த அன்பின் செயல்களில் புன்னகை பூக்கின்றன! நிபந்தனைகளற்ற அன்பு மிகவும் கடினமானது. அது எந்தவிதமான எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் முளைக்கும் அப்படிப்பட்ட அன்பு நிலவுகின்ற குடும்ப வாழ்க்கை மிகவும் அற்புதமானது.

அத்தகைய அன்பு மிகவும் அபூர்வமாகிவிட்டது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் பெரும்பாலனவர்களின் அன்பு நிர்ணயிக்கப்படுகிறது. பணம் கிடைத்தால் பாசம். பணம் இல்லாத இடத்தில் அன்பாவது நட்பாவது என்பதே நம்முடைய சிந்தனையாக இருக்கிறது.

எதிர்காலத்தில் தங்களுக்குச் சாப்பாடு போட வேண்டும் எனும் எதிர்ப்பார்புடன் குழந்தையைப் பெற்று வளர்ப்பது கூட ஒருவகையில் எதிர்ப்பார்புடைய அன்பே! எந்த குழந்தையாய் இருந்தாலும் சரி எப்படி இருந்தாலும் சரி அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்களே நிபந்தனையற்ற அன்பின் உதாரணங்கள்.

என்னதான் தப்புகள் செய்தாலும் மனுக்குலத்தின் மீது அன்பு செலுத்தும் நிபந்தனையற்ற அன்பின் நிரந்தர உதாரணம் நம் இயேசு! நீ இதைச் செய்தால் உன்னை அன்பு செய்வேன். எனும் அன்பும் நட்பும் உண்மையில் எதிர்பாப்புகளின் பாதையில்தான் இன்று நடைபோடுகின்றன. அதனால் தான் கண்ணீர் நம் முகங்களில் வடிகிறது.

கேரளாவில் சமீபத்தில் ஒரு நிகழ்வு மகன் வெனிநாட்டில் இருக்கிறான். அன்னை கேரளாவில் இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு வருவதாக சொல்கிறான் மகன். அன்னையின் உள்ளம் குதிக்கிறது. ஊருக்கு வந்த மகன் அன்னையையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாய்க் கூற அவளுடைய ஆனந்தம் இரண்டு மடங்காகிவிட்டது. மகன் வந்தான் உச்சாணிக் கொம்பில் இருந்தாள் அன்னை. அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏறபாடுகளும் நடந்துகொண்டிருந்தன. அன்னை எதையும் பாக்கி வைக்காமல் எல்லா சொத்துக்களையும் விற்று மகனிடம் கொடுத்தாள். அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. அம்மாவையும் அழைத்துக் கொண்டு விமானம் நிலையம் சென்றான் மகன். அங்கே ஓர் இருக்கையில் அம்மாவை அமர வைத்துவிட்டு எங்கோ சென்றான். பின் அவன் திரும்பி வரவே இல்லை. விசாரித்தபோது தான் தெரிந்தது அம்மாவின் சொத்துக்களை பிடுங்க மகன் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம். தாயை அங்கே விட்டுவிட்டு விமானம் ஏறி அவன் சென்றது பல மணி நேரங்களுக்குப் பின்புதான் தெரியவந்தது. அமெர்க்கா செல்ல பாஸ்போர்ட் வேண்டும் என்பது கூட அறியாத ஓர் அப்பாவி அம்மாவை விமான நிலையத்தில் குப்பைப்போல வீசிவிட்டு சென்ற மகன் பாலைவன மனதுக்காரன். வறண்டு போன நெஞ்சக்காரன்.

நிபந்தனையற்ற அன்பு நிலவும் இடங்கள் பூமியின் சொர்க்கம் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலுக்காக நம் மனதை தயார் படுத்தினால் விண்ணகம் மண்ணகத்தில் வந்து அமரும்.

நமது குடும்பத்தில், சமூகத்தில் உள்ளவர்களுக்கு என்னால் செய்ய முடிந்த அதிகபட்ச அன்பான செயல் என்ன? என்பதை நினைத்துப் பார்ப்போம். அதன்பலனைத் தேடாமல் அன்பைச் செய்ய நினைத்தால் அங்கே நம் அன்பு புனிதமடையும்.

"உள்ளங்கையில் இருக்கும் தண்ணீர் போன்றது அன்பு. விரிந்த நிலையில் நம் கை இருக்கும் வரை தண்ணீர் கையிலேயே தங்கும் அதைப்பொத்திக் கொள்ள ஆசைப்பட்டால் விரல்களுக்கிடையே வழிந்து வெளியேறும்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

நிபந்தனையற்ற அன்பை வழங்க மிக முக்கியமான தேவை ஈகோவை விரட்டுதல். ஈகோ நிலவும் இடத்தில் அன்பின் காற்று மூச்சுத் திணறும். ஈகோவை விரட்டினால் இதமான அன்பு எதிர்பார்ப்பின்றி உலவும்.

பெருமளவு மக்கள் பட்டினி கிடப்பது உணவுப் பற்றாக் குறையால் அல்ல மனித மனங்களில் அன்பும் அக்கறையும் பற்றாக் குறையால் தான்

எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்லஎன்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு.

மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை, சில அன்பான இதயங்கள் பேச்சு நின்றால் கூட மரணம்தான்.

அன்பை மட்டும் உலகிற்கு கொடு அது உலகையே உனக்கு பரிசாகக் கொடுக்கும்.

அன்புக்கு மட்டும் இறுதி நாள் என்று ஏதாவது இருந்தால் அந்நாளே உலகத்தின் கடைசி நாள்.

அன்புக்காக நாம் விடும் கண்ணீரும், நம் அன்புக்காக பிறர் விடும் கண்ணீரும் புனிதமெனும் பட்டியலில் இணையும் கண்ணீராகும்.

காயங்களுக்கு மருந்து அன்பு எனில். உலகம் முழுவதும் அதைத.தான் தேடுகிறார்கள் எனில், நாம் ஒருவருக்கு அதைக் கொடுக்கிறோம் எனில் நாம் தான் கடவுள்

அன்பு கிடைக்குமிடத்தில் அன்பு செய்வது சாதாரண அன்பு.

அன்பு கிடைக்காத இடத்திலும் அன்பு செய்வது புனிதமான அன்பு.

வெறுப்பை தருபவர்களைக் கூட அன்பு செய்வது தெய்வீகமான அன்பு.

தெய்வீகமான அன்பை காணுமிடமெல்லாம் செய்து சண்டை சச்சரவுகளை விரட்டுவோம். தீவிரவாதத்தை தடுப்போம். உறவுகளை உருவாக்குவோம். தெய்வத்தை நம் நடுவே உறையச்செய்வோம்.

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.


மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm


பாஸ்கா காலம் 5ஆம் வாரம்.

உண்மையான அன்பு

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.

ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.

அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.

அவன் மன்னனிடம், "அரசே..உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்" என்றான்.

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், "அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?" என்று கேட்டார். மன்னனோ, "அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான்.

அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை ?கூட அவனது அன்புக்கு ஈடாகாது" என்று கூறினான்.

நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

பாஸ்கா காலத்தின் ஐந்தாவது வாரத்தில் இருக்கும் நமக்கு, உண்மை அன்பு எது? உண்மை அன்புக்கு எப்படி பதில் அன்பு காட்ட வேண்டும் ? என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது.

உலகில் உண்டான ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான கருணை மொழிதான் அன்பு. ஒருவரிடம் சொல்லி புரிய வைப்பதில் வருவதில்லை அன்பு . மாறாக மனத்தால் உணர்ந்து ,அதை அடுத்தவர்களுக்கு அரிய வைப்பதில்தான் அடங்கியிருக்கிறது உண்மையான அன்பு. இதைத்தான் நம் பெருமான் இயேசு செய்தார். நான் உங்களை அன்பு செய்கிறேன் என்று வாயார மட்டும் சொல்லிவிடவில்லை. தன் வாழ்க்கையால் வாழ்ந்து காட்டி, தன் இன்னுயிரையும் நமக்காக தந்து, உண்மை அன்பை இவ்வுலகிற்கு எடுத்துரைத்தார் நம்பெருமான் இயேசு.

உலகில் நிலையானது பணமோ பொருளோ அல்ல ,நம்பிக்கை நிறைந்த அன்பு மட்டுமே. அதனால் அன்பை மட்டும் பகிர்ந்து கொண்டே இரு.... ஏனென்றால் அன்பின் ஊற்று மட்டுமே என்றுமே வற்றாத ஜீவநதியாக இருக்கிறது இவ்வுலகில். 'ஆண்டவனை அன்புசெய் அயலானை நேசி'.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"

இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருமே தான் மற்றவர்காள் அன்பு செய்யப் பட வேண்டும்.. அதிலும் குறிப்பாக தன்னை உண்மையாக நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அன்பு ஒன்றே இந்த உலகத்தில் நிலைத்து நிற்கக் கூடியது. அந்த அன்பினாலேயே நாம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் மட்டுமல்ல ஒவ்வொரு உயிரும் அன்பினாலே வாழ்ந்துகொண்டிருக்கிறது. அன்புக்காக ஏங்கும் உயிர்கள் ஆயிரமாயிரம். மற்றவர்கள் நம்மை உண்மையாக நேசிக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நம்மை நேசிப்பவர்களை நாம் உண்மையாக நேசிக்கின்றோமா? என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும். நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்ப அல்ல. பலனை எதிர்பார்த்து அன்பு செய்வது உண்மையான அன்பு அல்ல அது வியாபாரம்.
என்னை போலவே இரு என்னைப் போலவே நினை எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் அன்பு அல்ல சுயநலம். நாம் எதிர்பார்த்து அன்பு செய்தோம் என்றால் அந்த அன்பு தொலைந்து போகிறது என்பதுதான் உண்மை. உன்னுடைய உண்மையான அன்பை மற்றவர் ஏற்க வில்லையென்றால், கலங்காதே ....அதை விட்டு விலகவும் உனக்கு துணிச்சல் இருக்க வேண்டும். ஆண்டவர் இயேசு உன்னை முழுமையாக அன்பு செய்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால் அதுவே உன்னை வழிநடத்தும்.

உண்மையான அன்பு மற்றவர்களிடத்தில் எதையும் எதிர்பார்ப்பதில்லை , உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் உண்மைகள் மறைக்கப்படுவதில்லை , உண்மையான அன்பு அடுத்தவர் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு அடுத்தவரை பரிசோதித்து பார்ப்பதில்லை. உண்மையான அன்பு ஆதிக்கம் செலுத்தாது, எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான அன்பு மற்றவர் மாறவும், விலகவும் கூட அனுமதி கொடுக்கிறது. சுயநலமில்லாத அன்புக்கு சொர்க்கமும் கதவு திறந்துவிடும்.

இயேசுவும் நம்மை உண்மையாக நேசிக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் உண்மை அன்பு என்றால் என்ன? என்பதை தம் வாழ்க்கையால் நமக்கு எடுத்துரைத்தார். அவரைப் போல நாம் ஒவ்வொருவரும் உண்மையான அன்பு காட்டி, ஒருவரை ஒருவர் நேசித்து ஆண்டவர் இயேசுவின் அன்பு வழியில் நமது பயணம் தொடர ஆசிப்போம். ஆண்டவர் இயேசுவின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துவதாக ஆமென்.

 
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 

பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 14:21ஆ-27
திருவெளிப்பாடு 21:1-5
யோவான் 13:31-33அ,34-35


நிறைவேற்றுதல்!

'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). ஆங்கிலத்தில், 'கேட்ச் 22 கட்டம்' என்ற ஒரு சொலவடை உண்டு. அதன் பொருளை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த அருள்பணியாளர் ஒருவரின் முதல் நன்றித் திருப்பலியில் ஒரு மறையுரை கேட்டேன். மறையுரை வைத்த அருள்பணியாளர் புதிய அருள்பணியாளருக்கு அறிவுரை சொல்வது போல தன் மறையுரையைக் கட்டமைத்திருந்தார்: 'அன்பிற்கினிய அருள்பணியாளரே, வாழ்த்துக்கள். புதிய ஆடை, புதிய திருவுடை, புதிய திருப்பலிப் பாத்திரம், புதிய புத்தகம், புதிய கைக்கடிகாரம், புதிய காலணிகள் என்று ஜொலிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நீங்க இன்று எங்க போனாலும் உங்களுக்கு பொன்னாடை போர்த்துவாங்க! உங்க உள்ளங் கைகளை முத்தமிடுவார்கள். உங்களைக் கட்டித் தழுவுவார்கள். உங்கள் கைகளை அன்பளிப்புக்களால் நிரப்புவார்கள். உங்களை முதல் இருக்கையில் அமர வைப்பார்கள். 'உங்களுக்கு என்ன வேண்டும்' என்று கேட்டு பரிமாறுவர். இது வெறும் 21 நாள்களுக்குத்தான். 22ஆம் நாள் வரும். நீங்க பழசு ஆயிடுவீங்க. அன்றுதான் உங்க அருள்பணி வாழ்க்கை தொடங்கும். 'இதுதான் வாழ்க்கையா' என்று புலம்ப ஆரம்பிப்பீங்க. 25 வருடங்களுக்கு உங்க பக்கத்துல யாரும் வர மாட்டாங்க. இதே கூட்டம் உங்களுடைய வெள்ளி விழாவுக்கு வரும். 'உங்கள ஆஹா ஓஹோ என்று சொல்வாங்க!' கூட்டம் மறுபடி காணாமல் போகும். காலம் அனுமதித்தால் பொன்விழா கொண்டாடுவீர்கள். நீங்க இன்று எப்படி உங்க பணியைத் தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல. மாறாக, அந்த 22ஆம் நாளில் நீங்க என்ன முடிவெடுத்து எப்படி உங்க பயணத்தை முடிக்கப் போறீங்களோ அதுதான் முக்கியம்.'

நிற்க.
அருள்பணி நிலையில் மட்டுமல்ல. திருமண வாழ்விலும் 'கேட்ச் 22 கட்டம்' உண்டு. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு உள்ள ஈர்ப்பு குறையும் நாள் 22ஆம் நாள். அந்த 22ஆம் நாளை வெல்கிறவரே வெற்றியாளர். அதையும் தாண்டி இறுதிவரை 'திராட்சை இரசத்தை வைத்திருப்பவரே' மாபெரும் வெற்றியாளர்.

அருள்பணி, அருட்சாதனம் என்று பெரிய அளவில் வாழ்க்கை நிலையைத் தொடங்கினாலும், தொழில், பயணம், படிப்பு என சிறிய அளவில் என்றாலும் தொடங்கும் பலவற்றை நாம் நிறைவுசெய்வதில்லை. ஒன்றை நாம் நிறைவு செய்வதில்தான் அதன் பயன்பாடு தெரிகிறது.

சிலவற்றின் நிறைவு வேகமாகத் தெரிந்துவிடும். சிலவற்றின் நிறைவு தெரிய காலமாகும். தாயின் கருவறையில் உருவாகும் குழந்தை நிறைவு பெற ஏறக்குறை 9 முதல் 10 மாதங்கள் ஆகின்றன. நம் வீட்டில் திடீரென ஒரு பைப் உடைந்துவிடுகிறது. உடனடியாக ப்ளம்பரை அழைக்கிறோம். அவர் வந்த சில நிமிடங்களில் உடைப்பு சரியாகிவிடுகிறது. தண்ணீர் தடையின்றி வருகிறது. அவரின் பணி ஒரு நாளின் இறுதியில் கண்டுவிடுகிறோம். காய்ச்சல் அடிக்கிறது. மருத்துவரிடம் போகிறோம். ஊசி போட்டு மாத்திரை கொடுக்கிறார். காய்ச்சல் நீங்குகிறது. நம் உடல்நலம் நிறைவு பெறுகிறது. ஆக, ஒரு நாளில் மருத்துவரின் வேலை நிறைவுபெறுகிறது. ஆசிரியரின் வேலையின் நிறைவு பத்து மாதங்கள் கழித்து மாணவர்கள் எழுதும் தேர்வில் கிடைக்கிறது.

நிறைவுபெறும் எல்லாமே நமக்கு ஒரே வகையான உணர்வையும் தருவதில்லை. சிறையில் தன் தண்டனை நிறைவுபெறவதை எண்ணுகின்ற கைதி மகிழ்கிறார். ஆனால், நமக்குப் பிடித்தவர் நம்மோடு இருந்துவிட்டு நம்மை நகரும் நேரம் நிறைவுறும்போது நம் மனம் வருந்துகிறது. தொடங்கும் எல்லாம் நிறைவு பெற வேண்டும் என்பதே வாழ்வின் நியதி. நான் இந்த மறையுரையை எழுதத் தொடங்குகிறேன். அதை நிறைவு செய்யும்போதுதான் அது வாசிப்பவருக்குப் பலன் தரும். நிறைவுபெறாத எதுவும் நம்மைப் பாதிப்பதில்லை. சில நேரங்களில் சில நிறைவேறாததால் நாம் ஏங்குகிறோம். சில நிறைவுபெறாமல் செய்கின்றோம்.

கடவுளின் செயல் நிறைவுறுவதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டி, கடவுள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவதுபோல நாமும் நம் வாழ்வில் பணிகளை நிறைவேற்ற நமக்கு அழைப்பு விடுக்கிறது.

எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 14:21-27) பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப் பயணம் நிறைவு பெறுவதை லூக்கா பதிவு செய்கின்றார். பிசிதியா அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியா, லீஸ்திராவிலிருந்தும் தொழுகைக்கூடத் தலைவர்கள் மற்றும் மக்களால் துரத்திவிடப்பட்ட திருத்தூதர்கள் தெர்பைக்கு வருகிறார்கள் ஆனால், அங்கே அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மேலும், பல புறவனித்தார்கள் பதிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களை 'உறுதிப்படுத்தியபின்' தாங்கள் புறப்பட்ட இடமான (காண். திப 13:1-3) அந்தியோக்கியா திரும்புகிறார்கள். தாங்கள் எவ்வழி நடந்து வந்தார்களோ, அதே வழியில் திரும்பிச் செல்கிறார்கள். தங்கள் பாதச்சுவடுகளைத் தாங்களே பின்பற்றுகிறார்கள். சில இடங்களில் அவர்கள் எதிர்ப்புக்களையும் ஆபத்துக்களையும் சந்திக்க நேர்ந்தாலும் துணிந்து செல்கிறார்கள். ஏனெனில், தாங்கள் ஏற்படுத்திய குழுமங்களை 'ஊக்கப்படுத்துவம், உறுதிப்படுத்துவதும் அவசியம்' என அவர்கள் அறிந்திருந்தனர். புதிய நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய செய்தி எல்லாம், 'நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்றே இருந்தது. புதிய நம்பிக்கையாளர்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கும் என்று அவர்களுக்கு போலியான ஆறுதலைக் கொடுக்கவில்லை திருத்தூதர்கள். புதிய நம்பிக்கைக்கு எதிர்ப்பு இருக்கும் என்று அவர்கள் தெளிவுபட எடுத்துச் சொன்னார்கள். மேலும், தாங்கள் செல்கின்ற இடங்களில் தங்கள் பணியைத் தொடர்வதற்கான அடிப்படையான தலைவர்களையும் அவர்கள் நியமித்தார்கள். அவர்கள் அந்தியோக்கியா வந்தபோது, 'பணியைத் தாங்கள் செய்து முடித்துவிட்டதாகவும், கடவுளே தங்கள் வழியாக அனைத்தையும் செய்தார்' என்றும் அவர்களுக்குச் சொல்கிறார்கள். இவ்வாறாக, தாங்கள் நிறைவு செய்த அனைத்திலும் கடவுளின் கைவிரலைக் கண்டனர் பவுலும் பர்னபாவும்.

பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப் பணி நிறைவு கிறிஸ்தவம் என்னும் புதிய நம்பிக்கை வேகமாகப் பரவி வளர்வதற்கு வித்திட்டது. தாங்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும், ஆபத்துக்களை எதிர்கொண்டாலும், திருத்தூதர்கள் துணிந்து மேற்கொண்ட பணி கிறிஸ்தவத்தின் கதவுகளைப் புறவினத்தாருக்கு திறந்துவிட்டது. அவர்களின் நிறைவு புதிய தொடக்கமானது.

ஆக, எதிர்ப்பு, நிராகரிப்பு, ஆபத்து என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து தங்கள் முதல் தூதுரைப் பயணத்தை நிறைவு செய்கின்றனர் பவுலும் பர்னபாவும்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். திவெ 21:1-5) யோவான் கண்ட இறுதி வெளிப்பாடுகளின் ஒரு பகுதியாக இருக்கிறது. உலக முடிவில் கடவுள் 'நிறைவேற்றும்' செயலைக் காட்சியில் காண்கிறார் யோவான். நான்கு அடையாளங்களை இங்கே பார்க்கிறோம். முதலில், 'புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும்' காண்கிறார் யோவான். 'இதோ அனைத்தையும் புதியன ஆக்குகிறேன்' என்று சொல்லும் கடவுள் முன்னைய விண்ணத்தையும் மண்ணகத்தையும் புதியதாக ஆக்குகின்றார். இரண்டாவதாக, 'கடல் இல்லாமல் போயிற்று.' இது கடவுள் தீமையை வெற்றிகொண்டதை அடையாளப்படுத்துகிறது. ஏனெனில், 'கடல்' என்பது 'தீமை அல்லது பேயின்' உருவகமாகப் பார்த்தனர் இஸ்ரயேல் மக்கள். கடலின் குழப்பமும், ஆழமும், அலைகளின் கூச்சலும் கடலைக் கடவுளின் எதிரி என எண்ண வைத்தது. ஆக, தீமையின் துளி கூட இல்லாவண்ணம், கடல் அங்கே இல்லாமல் போகிறது. மூன்றாவதாக, 'புதிய எருசலேம் இறங்கி வருகிறது.' இத்திருநகர் மணமகள் என உருவகிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டில், எருசேலம் கடவுளின் பிரசன்னத்தோடு தொடர்புடையதாக இருந்தது. கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு திருமண உடன்படிக்கை உறவாகப் பார்க்கப்பட்டது. கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கத்தையே அருட்சாதனம் என்னும் அடையாளம் காட்டுகிறது. ஆக, இதே நெருக்கத்தோடு 'கடவுள் அவர்கள் நடுவே குடியிருப்பார்.' நான்காவதாக, 'சாவு இராது. துயரம் இராது.' இது உலகத்தின் முகத்திலிருந்தே கண்ணீர் துடைக்கப்படும் எனச் சொல்கிறது.

வேதகலாபனை, துன்பங்கள், அச்சுறுத்தல்கள் எனத் துயருற்ற கடவுளின் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது இக்காட்சி. கடவுள் அனைத்தையும் நன்மையாக நிறைவுறச் செய்வார் என்று சொல்வதன் வழியாக, இப்போதுள்ள அனைத்தும் ஒருநாள் நிறைவு பெறும் என்றும், இப்போது காண்பதும் அனுபவிப்பதும் நிறைவு அல்ல என்றும் சொல்கிறது இக்காட்சி. மேலும், துன்புறும் அனைவரும் கடவுளோடு திருமண உறவில் இணைவர். கடவுள் எல்லாவற்றையும் நிறைவு செய்துவிட்டார். மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த நிறைவை அடைவதற்கு எதிர்நோக்கோடு காத்திருப்பது மட்டும்தான்.

ஆக, தான் செய்த படைப்பு வேலையை நிறைவு செய்யும் கடவுள் அந்த நிறைவை நோக்கி மக்களை அழைத்துச் செல்கிறார். இறைமக்கள் அனுபவிக்கும் வேதகலாபனை என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' அவர்கள் கடக்க கடவுள் அவர்களோடு உடனிருக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 13:31-35) இயேசுவின் இறுதி இராவுணவு பிரியாவிடை உரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அப்பத்தைப் பெற்றுக்கொண்ட யூதாசு விருந்திலிருந்து வெளியேறியவுடன், 'இப்போது மானிட மகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்' என்கிறார் இயேசு. யோவான் நற்செய்தியில், 'மாட்சி பெறுதல்' அல்லது 'மாட்சிப்படுத்துதல்' என்பது இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, மற்றும் விண்ணேற்றத்தைக் குறிக்கிறது. தன்னுடைய மாட்சியால் கடவுளும் மாட்சி பெறுகிறார் என்று சொல்வதன் வழியாக, தன்னுடைய செயல் அனைத்தும் கடவுளின் திருவுளம் மற்றும் நோக்கத்தோடு இணைந்தது என்றும் சொல்கிறார் இயேசு. கடவுளுக்கும் இயேசுவுக்கும் நெருக்கமான இந்த உறவு உலகிற்கு வாழ்வு கொடுக்கிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் வழியாக இயேசு மீட்புப்பணியை நிறைவேற்றுகிறார்.

மேலும், தான் நிறைவேற்றும் பணியை தன்னுடைய சீடர்கள் இவ்வுலகில் 'புதிய அன்புக் கட்டளை' வழியாகத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்: 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்.' இவ்வாறாக, சீடத்துவத்தின் அடையாளமாக அன்பு செலுத்துவதை முன்வைக்கிறார் இயேசு.

ஆக, இயேசு தன்னுடைய பாடுகள் என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து மாட்சியடைகின்றார். சீடர்கள் தங்களுடைய அன்பு செலுத்துதல் வழியாக நாளும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து இயேசுவின் பணியை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் பவுலும் பர்னபாவும் தங்களின் முதல் தூதுரைப்பயணத்தை அனைவருக்கும் ஊக்கம் தந்து நிறைவேற்றுகின்றனர். இரண்டாம் வாசகத்தில் கடவுள் தன்னுடைய படைப்பை புதிய விண்ணகம்-மண்ணகம் என நிறைவேற்றியுள்ளதால் நம்பிக்கையாளர்கள் அதை நோக்கி நகர்கின்றனர். நற்செய்தி வாசகத்தில் தன் மீட்புச் செயலை நிறைவேற்றும் இயேசு, அன்பால் இவ்வுலகில் அது சீடர்கள் வழியாக தொடர்ந்து நிறைவேற்றப்படவும் வேண்டும் என்கிறார். கடவுளின் நிறைவுச்செயல்கள் அனைத்திற்காகவும் நன்றி கூறும் திருப்பாடல் ஆசிரியர் (பதிலுரைப் பாடல்), 'ஆண்டவர் தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்' (145:13) என்கிறார்.

இன்று நம்முடைய பணிகளை நாம் 'நிறைவேற்றுவதற்கு' இறைவாக்கு வழிபாடு தரும் பாடங்கள் எவை?

இந்த வாரம் நாம் பெரிய பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடப்போவதில்லை. சண்டை இடும் இரு நாடுகளைச் சேர்த்துவைக்கப்போவதில்லை. அணு ஆயுதங்களை ஒழிக்கப்போவதில்லை. ஊழல், இலஞ்சம் போன்றவற்றை துடைத்துப்போடப்போவதில்லை. நம்மை யாரும் சிலுவையில் அறையப்போவதில்லை. வேதகலாபனைக்கு உள்ளாக்குவதில்லை. கோவிலிலிருந்து வெளியே தள்ளிவிடுவதில்லை. ஆனால், சின்னச் சின்ன விடயங்கள் செய்வோம். புதிய தொழில் தொடங்குவோம். நண்பர்களைச் சந்திப்போம். மருத்துவமனைக்குச் செல்வோம். பயணம் செய்வோம். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது பற்றி யோசிப்போம். புதிய வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவோம். நம் வீட்டு நாய்க்குட்டியை குளிப்பாட்டுவோம். பூனைக்கு பால் சோறு வைப்போம். இவற்றை 'நிறைவேற்றுவதில்தான்' வாழ்வின் நிறைவு இருக்கிறது. இவற்றை எப்படி நிறைவேற்றுவது?

1. 'ஊக்குவித்தல்'
'ஊக்குவித்தல்' என்றால் உற்சாகம் கொடுத்தல். நமக்கும் பிறருக்கும். நாம் தொடங்கும் பலவற்றைப் பாதியில் நிறுத்தக் காரணம் ஊக்கக்குறைவுதான். 'என்னைக் கொஞ்சம் யாராவது ஊக்கப்படுத்தியிருந்தால் நான் சாதித்திருப்பேன்' என்ற புலம்பல்கள் நம்மில் இருக்கத்தான் செய்கின்றன. எனக்கு நானே ஊக்கம் கொடுப்பதையும், எனக்கு அடுத்திருப்பவர் தளர்ந்துபோகும்போது அவருக்கு ஊக்கம் கொடுப்பதையும் நான் என் பண்பாகக் கொள்ள வேண்டும். 'மகளை எந்தக் கல்லூரியில் சேர்ப்பது? எப்படி பணம் கட்டுவது?' என புலம்பல் கேட்கிறோமா! 'வாங்க! நான் கூட்டிட்டுப் போறேன். யார்கிட்டயாவது பணம் கேட்போம். எப்படியாவது அடைப்போம்' என்று சொல்வதுதான் ஊக்கம். ஆக, எனக்கு நானே ஊக்கம் கொடுக்கும் போது நான் என் வேலைகளை நிறைவேற்றி, அடுத்தவருக்கு ஊக்கம் கொடுத்து அவரின் வேலை நிறைவுபெற நான் உதவுகிறேன் - பவுல், பர்னபா போல.

2. 'ஒன்றின் முடிவை நினைத்துத் தொடங்குவது'
'முடிவை அல்லது இறுதியை மனத்தில் வைத்துத் தொடங்குங்கள்' என்கிறார் ஸ்டீபன் கோவே. வெறும் கட்டாந்தரையில் நிற்கின்ற ஒரு ஆர்கிடெக்ட் அந்த இடத்தில் கட்டாந்தரையைப் பார்ப்பதில்லை. ஒரு பெரிய அப்பார்ட்மெண்டை அல்லது மல்டி மாலை காட்சியில் பார்க்கிறார். அப்படிப் பார்ப்பதால்தான் அவரால், 'இங்கே கேட் வரும். இங்கே பார்க்கிங் வரும். இங்கே வீடுகள் வரும்' என்று அவரால் சொல்ல முடிகிறது. ஆக, கல்லூரியில் சேரும்போதே நம்முடைய கான்வொக்கேஷன் நாளை மனதில் வைத்துச் சேர வேண்டும். இதையே இரண்டாம் வாசகத்தில் யோவான் தன்னுடைய குழுமத்திற்குச் சொல்கின்றார். புதிய விண்ணகத்தையும் மண்ணகத்தையும் மனத்தில் வைத்து வாழச் சொல்கின்றார். இது வெறும் கற்பனை என்று நாம் எண்ணக் கூடாது. நாம் காட்சிப்படுத்துவதை பிரபஞ்சம் அப்படியே நமக்குக் கொடுக்கும். ஆக, இறுதியைக் காட்சிப் படுத்துதல் அவசியம். இராபின் ஷர்மா அழகான வாழ்க்கைப் பாடமாக இதைத் தருகிறார்: 'நல்ல வாழ்க்கை வாழனுமா? ரொம்ப சிம்பிள். உங்களுடைய ஃப்யூனரல் ஒரேஷன் (அடக்கத் திருப்பலி உரை) எழுதுங்கள். நான் இறக்கும்போது என்னைப் பற்றி இப்படிச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பதை எழுதுங்கள். அதை அப்படியே பின்னோக்கி வாழுங்கள். 'இவர் நிறைய மொழிகள் கற்றார்' என்று எழுதுங்கள். மொழிகளைப் படியுங்கள். 'இவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்' என்று எழுதுங்கள். நிறையப் பேரை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.' ஆக, நிறைவை அல்லது முடிவை மனத்தில் வைத்து எதையும் தொடங்குவோம்.

3. 'எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டும்'
நான் நிறைவுசெய்வது எனக்கும் என் சமூகத்திற்கும் பயன்தர வேண்டும். பிறர் என்னைப் பற்றி அறிய வேண்டும். ஒருவர் வாழ்க்கையிலாவது நான் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதைத்தான் இயேசு தன் சீடர்களுக்குச் சொல்கின்றார். 'நீங்கள் என் சீடர்கள்' என்பது எனக்கும் உங்களுக்குமான ஒன்று அல்ல. மாறாக, அதை மற்றவர்கள் உங்கள் அன்புச் செயலால் அறிய வேண்டும் என்கிறார். சீடத்துவத்திற்கான அடையாளமாக இயேசு மிகச் சிறிய ஒன்றைத் தெரிந்துகொள்கிறார்: 'அன்பு செய்வது.' மேலும், நாம் செய்யும் எல்லா வேலையிலும் அன்பு கலந்து செய்ய வேண்டும். இரண்டு பேர் லெமன் ஜூஸ் செய்கின்றனர். ஒரே மாதிரியான பொருள்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால். சுவை மாறுபடுகிறது. ஏன்? அன்பினால்தான்! நாம் செய்யும் அனைத்திலும் அன்பைக் கலந்தால் நிறைவு இனிமையாகும்.

இறுதியாக,

தொடங்கியது எல்லாம் நிறைவேற வேண்டும். நிறைவேற்றுதலின் பொறுப்பு தொடங்கியவரிடமே இருக்கிறது. அருள்பணியாளர் திருநிலைப்பாட்டுச் சடங்கில், கீழ்ப்படிதல் வாக்குறுதி கொடுத்தவுடன் ஆயர், 'உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் சொவ்வாராக' (பிலி 1:6) என்கிறார். தொடங்குவோம். அவரின் துணையோடு அனைத்தையும் நிறைவேற்றுவோம். தொடங்கும் அனைத்தும் இனிமையாய் நிறைவுறும்!
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை


"புதிய கட்டளை"
வாழ்வே நற்செய்தியாய்:


பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஆய்வுகள் நடத்தி வந்தவர் ஹென்றி ஸ்டான்லி. அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரான இவர், 1871 ஆம் ஆண்டு அங்கு நற்செய்திப் பணியோடு மருத்துவப் பணியையும் செய்துகொண்டிருந்த டேவிட் லிவிங்ஸ்டனைச் சந்தித்தார். இந்த டேவிட் லிவிங்ஸ்டன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். கடவுளுடைய வார்த்தையை அறிவித்துக்கொண்டே மருத்துவப் பணியைச் செய்வதற்காக அவர் ஆப்பிரிக்காவிற்கு வந்திருந்தார்.

ஆப்பிரிக்காவை ஆய்வு செய்வதற்காக வந்திருந்த ஹென்றி ஸ்டான்லி, டேவிட் லிவிங்ஸ்டனோடு ஒருசில மாதங்கள் தங்கியிருந்தார். அந்த நாள்களில் டேவிட் லிவிங்ஸ்டன் ஹென்றி ஸ்டான்லியிடம் எதுவும் பேசவில்லை. வழக்கம்போல் அவர் மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்துக் கொண்டும், அவர்கள் நடுவில் இருந்த நோயாளர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் பணிவிடை செய்துகொண்டும் இருந்தார். இதையெல்லாம் அவரோடு இருந்த ஹென்றி ஸ்டான்லி உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.

ஒரு கட்டத்தில், தனது முதிர்ந்த வயதிலும் மிகுந்த அன்புடனும் அர்ப்பணத்துடன் டேவிட் லிவிங்ஸ்டன் கடவுளின் வார்த்தையை அறிவித்துக்கொண்டே மருத்துவப் பணியை செய்து வருவதைப் பார்த்த ஹென்றி ஸ்டான்லி, "இவர் என்னிடம் இயேசுவைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை; ஆனாலும் எனக்கு இப்போது இயேசுவின்மீது நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது; இனிமேல் நான் என் வாழ்நாள் முழுவதும் அவரைப் பின்பற்றி வாழ்வேன் என்று, உறுதியேற்றுக் கொண்டு, ஒரு நல்ல கிறிஸ்தவராக வாழ்ந்து வந்தார்.

ஆம், இறையன்புக்கும் பிறரன்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய டேவிட் லிவிங்ஸ்டன், ஆய்வு மேற்கொள்வதற்காக ஆப்பிரிக்காவிற்கு வந்த ஹென்றி ஸ்டான்லியிடம் எதுவும் பேசாதபோதும், அவருடைய வாழ்க்கையே ஹென்றி ஸ்டான்லிக்கு மிகப்பெரிய நற்செய்தியாக இருந்தது. அதனால்தான் அவர் இயேசுவை நம்பி ஏற்றுக்கொண்டார். பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் இயேசு, "நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
என்னைப் போன்று அன்பு செய்யுங்கள்:

"ஒரு பசு மாட்டினை அன்பு செய்வது போல்தான் ஒருசிலர் கடவுளையும் பிறரையும் அன்பு செய்கிறார்கள்" இது மிகப்பெரிய அறிஞரான மெய்ஸ்டர் எக்கார்ட் சொல்லக்கூடிய வார்த்தைகள். பசு பால்கொடுக்கும் என்பதால் மனிதர்கள் அதை அன்பு செய்கின்றார்கள். அதைப் போன்று கடவுளும் மனிதர்களும் தங்களுக்கு ஏதாவது கொடுத்தால்தான் அவர்களை அன்பு செய்வோம் என்ற ரீதியில் சிலர் இருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் நாம் இயேசுவின் அன்பைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். இயேசு மனிதர்களாகிய நம்மை எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யவில்லை. அதற்கான தேவையும் அவருக்கு இருந்ததில்லை. மாறாக, அவர் எந்தவோர் எதிர்பார்ப்பும் இன்றி நம்மை அன்பு செய்தார். அதனால்தான் அவர் இன்றைய நற்செய்தியில், "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து, "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்கிறார்.

"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்று இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்வது ஒன்றும் புதிதில்லைதான். இது பழைய ஏற்பாட்டில் இடம்பெறுகின்றது. (இச 6;5; லேவி 19:18). ஆனால், அது புதிய கட்டளையாக மாறக் காரணம், இயேசுவின் தியாகம்தான். இயேசு தன்னையே தந்து நம்மை அன்பு செய்தார் (யோவா 15:13). அதனால் அது புதிய கட்டளையாகின்றது. ஆகவே, இயேசுவைப் போன்று தன்னையே தந்து, அன்பு செய்கின்ற யாவரும் அவரது உண்மையான சீடர்களாகின்றார்கள்.
அன்பு வேதனைகளையும் துன்பங்களையும் ஏற்கும்:

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இடம்பெறும் அன்பு பற்றிய புனித பவுலின் பாடலில் வரும் ஒரு சொற்றொடர், "அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்" (1 கொரி 13:7) என்பதாகும். இச்சொற்றொடரைப் பவுல் ஏதோ எழுதவில்லை; தனது அனுபவத்திலிருந்து எழுதியிருக்க வேண்டும். ஏனெனில், பவுல் கிறிஸ்துவின்மீது கொண்ட அன்பினால் எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டார் (2கொரி 11: 23-28). அதனால்தான் அவரால் அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் என்று சொல்ல முடிந்தது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், பர்னபாவோடு தனது முதல் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளும் பவுல், தான் சந்திக்கும் மனிதர்களிடம், "நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்" என்று சொல்லி, அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார். "பல வேதனைகள் என்று பவுல் இங்கே குறிப்பிடுவதை கிறிஸ்துவின்மீதும், அவரது மக்கள்மீதும் கொண்ட அன்பினால் ஏற்படும் வேதனைகள், துன்பங்கள் என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

கிறிஸ்துவின்மீதும் அவரது மக்கள்மீது அன்புகொள்ளாமலும், அதற்காக வேதனைப்படாமலும் ஒருவர் இறையாட்சிக்கு உட்பட முடியாது என்பதுதான் பவுல் கூற விழையும் செய்தியாகும். ஆகவே, இயேசுவின் சீடர் அவரைப் போன்று தன்னையே தியாகம் செய்யவேண்டும். அப்போதுதான் அவர் இறையாட்சிக்கு உட்பட முடியும்.
அன்புசெய்வோர் பெறும் கைம்மாறு:

இயேசு நம்மை எந்தவொரு நிபந்தனையின்றி அன்பு செய்தார், அவரது சீடர் அவரைப் போன்று எந்தவொரு நிபந்தனையின்றி அன்பு செய்யவேண்டும். அதற்காக வேதனைகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இறையாட்சிக்கு உட்பட முடியும் என்று நாம் சிந்திப்போம். திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம், இறையாட்சிக்கு உட்படுவோரின் கண்ணீர் துடைக்கப்படும்; சாவோ, துயரமோ, துன்பமோ இரவே இராது என்கிறது.

இறையாட்சி உட்படுகின்ற யாவரும் இறைவனோடு ஒன்றித்திருப்பர்; இறைவன் அவர்களோடு இருப்பார். அதனால் அவர்கள் துன்பமில்லாத, பெருமகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையினை வாழ்வார்கள். இத்தகைய ஆசிகளைத்தான் இயேசு, தன்னைப் போன்று எந்தவொரு பிரதிபலன் பாராமல் மற்றவரை அன்பு செய்வோருக்கும், அவர் பொருட்டுத் துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொள்வோருக்கும் தருகின்றார்.

எனவே, நாம் இயேசுவைப் போன்று ஒருவர் மற்றவரை அன்பு செய்து, அவர் தரும் ஆசிகளைப் பெற அணியமாவோம்.

சிந்தனைக்கு:
"பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் " (1 யோவா 3:18) என்பார் புனித யோவான். எனவே, நாம் இயேசுவைப் போன்று அன்பிற்குச் செயல் வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை


இயேசு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடங்களை எல்லாம் கூட்டி, வகுத்து, கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது அன்பே, தனது பணி வாழ்வில் நிபந்தனையில்லாமல் மனித குலத்தையே நேசித்தார் இயேசு. அன்பென்னும் பேருண்மையை மையமாக வைத்தே போதித்தார். கடவுளின் அன்பும், பிறர் அன்பும் ஒன்றோடொன்று இணைந்து பின்னிக் கிடக்கின்றன. பிறரன்பு இல்லாத இறையன்பு இல்லை. கற்கால மனிதன் முதல் பொற்கால மனிதன் வரை அனைவரும் தேடுவது அன்பே. அன்பைக் கொடுப்பவனுக்கு நண்பர்கள் அதிகம் என்பார்கள். அன்புக்கு அச்சமில்லை. அதற்கு பகைவர் இல்லை. அன்பு காற்றைப்போல எங்கும் நிறைந்தது. மேட்டிலும், பள்ளத்திலும், கல்லிலும், முள்ளிலும், கொட்டும் மழையைப் போன்று உறவிலும், நண்பனிலும், பகைவனிலும் நறுமணம் வீசும். அன்பு ஒரு சங்கிலி, அது ஒரு தொடர்கதை போன்றது. இத்தகைய இறை அன்பையும் பிறரன்பையும் நமது உறவுகளில் நிறைவு செய்து வாழ இன்றையத் திருவழிபாடு நம்மை அழைக்கின்றது.

இன்றைய நற்செய்தியில் இயேசு பிறரை அன்பு செய்யுங்கள் என்று மூன்று முறை கூறுகிறார். ஒன்று, இது இயேசுவின் அன்புக் கட்டளை. இரண்டாவது, இயேசுவே அன்புக்கு வழிகாட்டி, முன்னோடி. மூன்றாவது, நாம் அனைவரும் அவரின் சாட்சிகளாய் இருக்கிறோம் என்பதாகும். அன்பு எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார். இறைவன் எங்கு இருக்கின்றாரோ அங்கே மகிழ்ச்சி இருக்கின்றது. மகிழ்ச்சி எங்குள்ளதோ அங்கே அன்பு நிறைவாக்கப்படுகிறது. இன்று ஒவ்வொரு மனித இதயமும் அன்புக்காக, பாசத்துக்காக, இதமான உறவுக்காக ஏங்குவது உண்மையே. தனி மரமாக வாழ்வதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. அன்பு செய்யும் உள்ளங்களே உறவுகளைத் தேடிச் செல்கின்றன. அன்புக்கு மகத்தான ஆற்றல் உண்டு.புதுமைகளையும், புரட்சிகளையும் உருவாக்கும் மாபெரும் சக்தி, இந்த ஆற்றலையும், சக்தியையும் பகிர்ந்துகொள்ளவே ஒவ்வொரு மனிதனும் அழைக்கப்படுகிறான்.

தாய் தன் பிள்ளையிடம் காட்டும் அளவில்லாத அன்பைப் போல, சிலுவையின் நேரம் நெருங்க நெருங்க இயேசுவின் உள்ளம் அன்பால் உருகியது. விவிலியத்தில் வேறு எங்கும் இப்படி அழைக்காத இயேசு அன்புக் குழந்தைகளே என்று அழைத்து புதிய கட்டளைகளையும் தருகிறார். ஆயிரமாயிரம் கட்டளைகள், சட்டதிட்டங்கள் இருந்தாலும்கூட அதை நடைமுறைப்படுத்த அன்பு இல்லையேல் எந்த மனிதனையும் கட்டுப்படுத்த முடியாது. திருச்சட்டத்தின் நிறைவு அன்பே. அன்பைச் செயலாக்கம் பெறச் செய்ய வேண்டுமானால் தன்னைப்போல பிறரையும் நேசிக்க வேண்டும் என்ற வார்த்தைகள் நம்மில் உயிர் பெற வேண்டும். தனது குறைகள், நிறைகள், இல்லாமை, திறமைகள் இவைகளை அறிந்திருந்தால் மட்டுமே, அடுத்தவரின் இயலாமை, குறைகளை நம்மால் புரிந்துகொண்டு அன்பு செய்ய முடியும்.

அன்புக்கு இலக்கணம் வகுத்தவர் இயேசு. அன்பால் மனித குலத்தை ஒன்றுப்படுத்தத் தன்னையே சிலுவையில் அர்ப்பணித்தவர்.

காட்டிக் கொடுத்தவனையே தட்டிக்கொடுத்தது அவர் அன்பு.

மனதார மறுதலித்தவரையே மன்னித்து தலைவராக்கியது அன்பு.

விட்டுப் பிரிந்தவர்களோடு ஒட்டி உறவாடி உயிரூட்டியது அன்பு.

நம்ப மறுத்தவர்களையும் நம்பி நற்செய்தியின் தூதுவர்களாக்கியது அன்பு.

அழிக்கத் துடித்தவர்களையும் அரவணைத்து ஆக்கப் பணிக்கு அனுப்பியது அன்பு.

கல்லூரி சென்ற மாணவியைப் பின் தொடர்ந்த வாலிபன், நான் உன் மீது அளவில்லாத அன்பு வைத்துள்ளேன் என்றான். சந்தேகப்பட்ட அவள், என்னைவிட அழகான ஒருத்தி பின்னால் வந்து கொண்டிருக்கிறாள். அவளை அன்பு செய் என்றாள். அவன் திரும்பிச் சென்றான். சற்று தூரத்தில் அருவருப்பான தோற்றத்தில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். கோபப்பட்ட அவன், முதலில் பேசியவளின் முன்னே சென்று ஏன் என்னை ஏமாற்றினாய்? என்றான். அதற்கு அவள் நீ மட்டும் உண்மையா சொல்லி விட்டாய். உனக்கு என் மீது உண்மையான, எல்லையில்லாத அன்பு இருந்தால் இன்னொருத்திக்காக ஏன் காத்திருந்தாய் என்றாள். அவன் தலைகுனிந்து சென்றான்.

இன்றைய சமூகத்தில் நிலவும் பொறாமை, சுயநலம், ஆதிக்கப் போக்கு, மனத்தளர்வு இவைகளுக்கு மத்தியில் அன்பை பறைசாற்ற முடிகிறதா? குடும்பத்தில் அன்பு, அமைதி, சமாதானம் இல்லையென்றால், சமுதாயத்தில் நாம் இவைகளை எதிர்பார்க்க முடியாது. அன்பு பெற்றோர்களின் கட்டுப்பாட்டை இழந்து திசைமாறி சென்றுகொண்டிருக்கும் பிள்ளைகள் எத்தனை பேர்? அன்புக்காக ஏங்கி ஏங்கி தற்கொலைக்குத் தள்ளப்படும் இளைஞர்கள் எத்தனை பேர்? அன்பு, பாசம் இல்லாத பெற்றோர்களை விட்டு விட்டு ஓடும் பிள்ளைகள் எத்தனை பேர்? உண்மை அன்புக்காக ஏங்கி, நான்கு சுவருக்குள்ளே விரதத்தில் காலம் கடத்தும் உள்ளங்கள் எத்தனை? எத்தனை?

இதற்கெல்லாம் ஒரே வழி இயேசு காட்டும் அன்பு வழி மட்டுமே. நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் (யோவா. 13:34).

இயேசுவின் அன்பு மன்னித்து ஏற்றுக்கொள்ளும் அன்பு. பிறருடைய நலனில் அக்கறை கொள்ளும் அன்பு. இந்த அன்பை முதலில் குடும்பத்தில் உள்ளவர்கள் உள்வாங்கி அதை மற்றவர்களிடம் முழுமையாக வெளிப்படுத்தும்போது அங்கு அன்பு சூழல் உருவாகிறது. அங்கு புதிய மண்ணகம் உதயமாகியது. இயேசுவின் இலட்சியக் கனவு நனவாகிறது.

இயேசுவின் அன்பு கட்டளைகளைக் கடமைக்காகவும், கட்டாயத்தின பேரிலும் கடைப்பிடிக்காமல் அன்பில் நடமாடும் விளம்பரமாக, அன்புச் சீடர்களாக, அன்பின் சாட்சிகளாக வாழ முன்வருவோம்.
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

 

நாம் தீமையை நன்மையால் வெல்வோம்

ஒரு காட்டுக்குள்ளே துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒருபோதும் சினம் கொண்டதில்லை, கோபப்பட்டதில்லை.

அவருடைய முகம் ஒரு குட்டி நிலவு!

அவர் வாழ்ந்த காட்டுக்குப் பக்கத்திலுள்ள ஊரிலே மூன்று குறும்புக்கார இளைஞர்கள் வாழ்ந்தார்கள்.

அவர்களுக்குள் பந்தயம்! யார் அந்தத் துறவியை கோபப்படவைக்கின்றார்களோ அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு.

அந்தத் துறவி தினந்தோறும் காட்டைவிட்டு வெளியே வந்து ஊருக்குப் பக்கத்திலுள்ள குளத்தில் குளிப்பார்.

இளைஞர்களில் இரண்டு பேர் ஒரு புதருக்குப் பக்கத்தில் ஒளிந்துகொண்டார்கள்.

குளித்துவிட்டு துறவி கரையேறினார். அப்போது ஓர் இளைஞன் வாளியில் வைத்திருந்த சேற்றை எடுத்து அவர் மீது வீசினான். அதைப் பார்த்த மற்ற இருவருக்கும் எல்லையில்லா ஆனந்தம் ; சிரித்து மகிழ்ந்தார்கள்.

துறவி ஒன்றுமே சொல்லவில்லை! மீண்டும் குளத்தில் இறங்கி குளித்துவிட்டு கரையேறினார். மீண்டும் அந்த இளைஞன் சேற்றை வாரி இறைத்தான். துறவி ஒன்றும் சொல்லவில்லை! மீண்டும் மற்ற இரு நண்பர்களும் சிரித்து மகிழ்ந்தார்கள்.

இதுபோன்று பலமுறை நடந்தது! ஒரு முறை கூட துறவி கோபப்படவில்லை!

முடிவு? இளைஞன் துறவியின் காலில் விழுந்து தான் செய்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டான்.

அப்போது துறவி அந்த இளைஞனைப் பார்த்து, இனி இவ்வாறு செய்யாதே போ என்றார்.

அப்போது இளைஞன், நீங்கள் ஏன் கோபப்படவில்லை? என்றான். அதற்கு அந்தத் துறவி, அவனைப் பார்த்து, நீ கெட்டவனாகப் இருப்பதால் நானும் கெட்டவனாக மாறவேண்டுமா? இரண்டாவதாக அன்பை விட மற்றவர்களைத் திருத்த சக்தி வாய்ந்த ஆயுதம் இந்த உலகத்திலே வேறொன்றும் இல்லை! மூன்றாவதாக புதருக்குப் பின்னால் ஒளிந்திருந்து சிரித்து மகிழ்ந்த உன் நண்பர்களின் மகிழ்ச்சியை நான் கெடுக்க விரும்பவில்லை என்றார்.

மேலும் அறிவோம்:
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் (குறள் : 160).

பொருள் :
உடற்பசியைப் பொறுத்துக் கொண்டு உண்ணா நோன்பு மேற்கொள்பவர் பெரியவராகப் பாராட்டப் பெறுவர். எனினும் பொல்லாங்கு விளைவிக்கும் கடுஞ்சொல் பேசுவோரை மன்னித்திடும் மாமனிதர்க்கு அடுத்த நிலையினராகவே அவர்கள் கருதப்படுவர்!
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்


தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவு இரண்டு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்" என்றார். ஒரு மாணவன் எழுந்து, "சார்! எனக்கு இரண்டு மொழி தெரியும். அவர்கள் : கனிமொழி, தேன்மொழி" என்றான்.

கிறிஸ்து என்ற ஒப்புயர்வற்ற ஆசிரியரோ நமக்கு ஒரே ஒரு மொழி மட்டுமே தெரிந்தால் போதும் என்கிறார். அதுதான் அன்பு மொழி, நமக்கு விண்ணோர் மற்றும் மண்ணோர் மொழி அனைத்தும் தெரிந்திருந்தாலும், அன்பு மொழி தெரியவில்லை என்றால் நமக்கு ஒரு பயனுமில்லை என்கிறார் திருத்தூதர் பவுல் (1 கொரி 13:1-2).

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நமக்கு ஒரே ஒரு கட்டளை மட்டும் கொடுக்கிறார். அதுதான் அன்புக்கட்டளை. "நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (யோவா 13:34), கிறிஸ்துவின் கட்டளை புதியது. ஏனெனில் நாம் மற்றவர்களைக் கிறிஸ்துவைப் போல் அன்பு செய்யவேண்டும். கிறிஸ்து எவரையும் ஒதுக்கிவிடாமல் அனைவரையும் அன்பு செய்தார். கிறிஸ்து தமது உயிரையே மற்றவர்களுக்காகக் கையளித்தார்.

தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "பாசத்துக்கும் காதலுக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன?" என்று கேட்டார். ஒரு மாணவன் அவரிடம், "சார்! நீங்கள் உங்கள் மகள் மேல் வைத்திருக்கும் அன்புக்குப் பெயர் பாசம். உங்கள் மகள் மேல் நான் வைத்திருக்கும் அன்புக்குப் பெயர் காதல்" என்றான். ஆசிரியர் அவனிடம், "சரியான பதில், உட்காரு மாப்பிள்ளை" என்றார்.

நாம் மனிதர்களை உறவின் அடிப்படையில் வேறுபடுத்து கின்றோம். உறவினர் - அயலார், நண்பர்கள் - பகைவர்கள். வேண்டியவர் வேண்டாதவர் என்று வேறுபடுத்து கின்றோம். ஆனால் கிறிஸ்து எத்தகைய வேறுபாடுமின்றி அனைவரையும் சமமாக அன்பு செய்கிறார். அவர் அன்பு அனைவரையும் அரவணைக்கும் உலகளாவிய அன்பு. அவர் அனைவரையும் வரவேற்கிறார்; எவரையும் புறக்கணிப்பதில்லை. "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்" (மத் 11:28). "என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன் (யோவா 6:37).

கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் அனைவரையும் எத்தகைய வேறுபாடுமின்றி அன்பு செய்ய வேண்டும். நம்மிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடில்லை" (கலா 3:28).

"ஒன்றே குலம் ஒருவனே தேவன் - திருமூலர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் - களியன் பூங்குன்றனார்
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் - பாரதியார்

சாதிகளை ஒழித்துச் சரித்திரம் படைப்பது காலத்தின் கட்டாயம்.
கிறிஸ்துவின் அன்பு தம்மையே பிறருக்காகக் கையளிக்கும் தியாகமிக்க அன்பு "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோவா 15:13), அன்பின் உச்சக்கட்டம் உயிர்த்தியாகம், சில வேளைகளில் நம்முடைய அன்பு தன்னலமிக்க அன்பு; சந்தர்ப்பவாத அன்பு: பிறரைப் பயன்படுத்தும் அன்பாக உள்ளது. பிறரை நாம் பயன்படுத்தும் போது நாம் பயனற்றவர்களாகப் போய் விடுகின்றோம்.

திருமண அன்புகூடத் தன்னலமிக்க அன்பாகவே உள்ளது. அடுத்தடுத்து இரண்டு பேரைத் அருட்சாதனம் செய்து கொண்ட ஒரு பெண் கூறுகிறார்: "ஒருவன் என்னைக் காலுக்குச் செருப்பாகப் பயன்படுத்தி தூக்கி எறிந்தான்; மற்றவன் என்னைத் தோளுக்குப் போர்வையாக்கி வீசி எறிந்தான். இரண்டு பேரும் என்னிடத்தில் எலும்பைத் தேடினர். இதயத்தைத் தேடியவர் எவரும் இல்லை"

"எவன்தான் மனிதன்? பிறருக்காகக் கண்ணீரும், பிறருக்காக செந்நீரும் சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன், கொடுப்பவன் மனிதனா? எடுப்பவன் மனிதனா? கொடுப்பவன் எவன்டா அவனே மனிதன். தன் மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும் உழைப்பவன் எவன்டா அவனே மனிதன்" - திரைப்படப் பாடல்.

நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதற்கு அடையாளம் நம்முடைய ஆலயங்களும், திருவிழாக்களும், நம்முடைய நிறுவனங்களும் அல்ல. மாறாக, நாம் பிறரிடம் காட்டும் தன்னலமற்ற அன்பு, "நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (யோவா 13:35)

தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமை மீது உரிமை பாராட்டாமல் அனைத்தையும் பொதுவுடைமையாகக் கொண்டு வாழ்ந்தனர். இவ்வாறு கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு மிகுந்த வல்லமையுடன் சான்று பகர்ந்தனர் (திப 4:32-33).

கால் ஊனமுற்ற ஒருவர் ஒரு புகை வண்டியில் ஏற முயற்சி எடுத்தபோது அவர் கால் இடறிக் கீழே விழ, அவர் பையிலிருந்த பொருள்கள் சிதறின. ஒருவர் அவர் மேல் பரிவு கொண்டு, அவரைத் தூக்கி விட்டு, சிதறிய பொருள்களைச் சேர்த்து பையில் போட்டு, அவரைப் புகை வண்டியில் ஏற்றிவிட்டு, அவரிடம் பணம் கொடுத்தார், கால் ஊனமுற்றவர் தம் கண்களில் நீர்மல்க அவரைப் பார்த்து, "நீங்கள் இயேசுவா?" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் இயேசு அல்ல, ஆனால் இயேசுவின் சீடர்" என்றார்.

"நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1 யோவா 3:18).

கிறிஸ்து இறந்தபோதும் உயிர்த்த போதும் நில நடுக்கம் ஏற்பட்டது. அவரின் இறப்பும் உயிர்ப்பும் தன்னலத்தால் புரையோடிக் கிடந்த சமுதாயத்தை அழித்து, புதியதோர் அன்புச் சமுதாயத்தைத் தோற்றுவித்தது. இன்றைய இரண்டாம் வாசகம் குறிப்பிடும் புதிய வானகமும் புதிய வையகமும் மலரவேண்டு மென்றால் (திவெ 21:1). அதை அன்புப் புரட்சியால் மட்டுமே கொண்டு வரமுடியும், தன்னலமற்ற அன்பு மட்டுமே "அனைத்தையும் புதியன ஆக்கமுடியும்" (திவெ 21:5).

இன்று. ஒருவர் மற்றவரை வெறுக்கத் தூண்டும் மதங்கள் பல உண்டு, ஆனால் ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தூண்டும் மதங்கள் பல இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.

 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

இறைவனுக்காக அழகானது ஏதாவது செய்வோம் "Let us do something beautiful for God" (கடவுளுக்காக அழகானது ஏதாவது செய்வோம்). அருளாளர் அன்னை தெரசாவின் அன்புப்பணி நிலையங்களின் முகப்பில் - நுழைவாயிலில் காணப்படும் வார்த்தைகள். உடல் ஊனமுற்ற குழந்தைகள், மன நலமற்ற குழந்தைகள், ஆதரவற்ற நோயாளிகள், முதியவர்கள் என்று அனைத்துப் பணிகளிலும் அவள் செய்தது something beautiful for God.

அன்னை தெரசா அன்பின் இலக்கணம். அவள் நிறுவியது அன்புப் பணியாளர்கள் சபை (Missionaries of Charity). அன்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் சபை. மனிதரில் தான் கடவுளைக் காண முடியும் என்றாலும் கடவுளின் பொருட்டே மனிதன் அன்புக்குரியவன் ஆகிறான் என்ற உறுதி குலையாத நம்பிக்கை உணர்வில் செயல்பட்டவள். திருப்பலியிலும் தெருவோரங் களிலும் இறைமகன் இயேசுவைச் சந்தித்து இன்ப நிறைவு கண்டவள்.

"ஒரு காலத்தில் நான் ஆசிரியையாய் இருந்தேன். மற்ற பணிகளிலும் ஈடுபட்டேன். ஆனால் இப்போதுதான் கிறிஸ்துவின் அன்புக்கு நல்ல சான்று உரைக்க முடிகிறது என்று சொல்லிவந்த அவர் நோபல் பரிசு பெற்ற போது, இந்திய அரசு "பாரத ரத்னா" பட்டம் சூட்டிப் பாராட்டிய போது, அன்னை சொன்னார்: "நான் ஒரு சமூக சேவகி அல்லேன். நான் கிறிஸ்துவின் சேவகி. நான் செய்யும் பணிகள் எல்லாம் அவருக்காகவே அவர் பொருட்டே செய்கிறேன்". உண்மையில் உயிர்த்தெழுந்த இயேசுவின் பெருமை அவரது அடியார்கள் காட்டும் அன்புச் செயல்களிலேயே விளங்குகிறது.

ஒருவன் கிறிஸ்தவன் என்பதற்கு என்ன அடையாளம்? அணிந்திருக்கும் சிலுவையா? வைத்திருக்கும் பெயரா? அவைகள் என்றால் கிறிஸ்தவனாக இருப்பது எவ்வளவு எளிதாக இருக்கும்!

எல்லா அடையாளங்களிலும் சிறந்தது கிறிஸ்து கொடுத்த அடையாளம் - அன்பின் புதிய கட்டளை! "நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (யோவான் 13:35). "மரத்தை அதன் கனியால் அறியலாம்" (மத்.12:33). "தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவையாகும்" (கலாத்.5:22,23).

தொடக்க காலத் திருச்சபையில் "அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர் (தி.பா.4:33) என்றால் "நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்" (தி.ப.4:32) என்பதே காரணம். அன்பே தொடக்கக் காலத் திருச்சபையின் சிறப்புக்குக் காரணம். அதைப் பார்த்துத்தான் மக்கள் மனம் மாறி வந்தனர்.

செயற்கைப் பூ வெறும் பகட்டே. உண்மையான இயற்கைப் பூ மிகச் சிறியதாய் இருக்கலாம். மறைவான இடத்தில் கண்ணில் படாமல் இருக்கலாம். ஆனால் வண்டுகள் அதனை எப்படியும் அறிந்து விடும். மொய்த்துத் தேனருந்தி மகிழும். அன்பு என்ற உண்மைப் பூவாகத் திகழ்வோம்.

தனது சீடர்களைப் பார்த்துக் குரு கேட்டார். "இரவு நேரம் முடிந்து பகல் நேரம் தொடங்கி விட்டது என்பதை எவ்வாறு கண்டு பிடிப்பீர்கள்?" "தூரத்தில் நிற்கும் விலங்கைப் பார்த்து அது நாயா நரியா என்று இனம் காண முடியும் என்றால் விடிந்து விட்டது என்ற முடிவுக்கு வரலாமா?" என்று ஒரு சீடர் கேட்க "இல்லை" என்றார் குரு. "தூரத்தில் நிற்கும் ஒரு மரத்தைப் பார்த்து அது ஆலமரமா அரசமரமா என்று அடையாளம் காட்ட முடியும் என்றால் அது பகல் நேர ஆரம்பம் என்று சொல்லலாம்" என்று வேறு ஒரு சீடர் கூற, "இல்லை" என்று மீண்டும் சொன்னார் குரு.

'அப்படியானால் பகல் நேர ஆரம்பம்தான் எப்போது? சொல்லுங்கள்" என்று சீடர்கள் குருவை நச்சரித்தனர். அப்போது குரு சொன்னார்: "எந்த ஓர் ஆணையோ பெண்ணையோ முகத்தைப் பார்த்து இவன் என் சகோதரன், இவள் என் சகோதரி என்று எப்போது உங்களால் உண்மையிலேயே உள்ளார்ந்த முறையில் கூற முடிகிறதோ அப்போதுதான் இரவு முடிந்துவிட்டது பகல் விடிந்து விட்டது என்று சொல்லலாம். ஏனெனில் நீங்கள் மனிதர்களை சகோதரர்களாய், சகோதரிகளாய் அடையாளம் காண இயலவில்லை எனில், அது எந்த நேரமாக இருந்தாலும் இன்னும் விடியாத இருட்டுக் காலமேயாகும்".

விவிலியம் முழுவதும் அன்பு இழையோடும். அதில் ஒரு வளர்ச்சி உண்டு.

"கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" (வி.ப.21:24). மனிதன் பண்படாத நிலையில் மோசே அனுமதித்த பழைய எற்பாட்டு அன்பு நெறி இது. ஒருவன் உனது வலது கடைவாய்ப் பல்லை உடைத்தால் நீ அவனது வலது கடைவாய்ப் பல்லை (இடது கடைவாய்ப்பல்லை அல்ல) உடைக்கலாம்.

- மனிதன் தன்னை அன்பு செய்வது போலப் பிறரை அன்பு செய்ய வேண்டும். "நீ உன் மீது அன்பு செலுத்துவது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" (மார்க் 12:31) சீனாய் மலையில் கடவுள் தந்த பத்துக் கட்டளையின் சாரம்.

- கடவுள் மனிதனை அன்பு செய்வது போல் மனிதன் மனிதனை அன்பு செய்ய வேண்டும். "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (யோவான் 13:34) இயேசு தந்த புதிய கட்டளை.

- கடவுள் கடவுளை அன்பு செய்வது போல மனிதன் மனிதனை அன்பு செய்ய வேண்டும். "நான் தந்தையின் மீது அன்பு கொண்டுள்ளது போல (யோவான் 14:81)... தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல (யோவான் 15:9).... அன்பில் நிலைத்திருங்கள்". இந்தத் தெய்வீக திரித்துவ அன்பை ஒருவேளை விண்ணகத்தில் அனுபவிக்கலாம்.

திருவெளிப்பாடு நூல் கூறும் "புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும்" (தி.வெ.21:1) நாம் திருச்சபையில் காண வேண்டும். உயிர்த்த ஆண்டவர் நாம் அன்புப்பணி புரிவதை அழைப்பாக அல்ல, கட்டளையாகத் தருகிறார். அந்த அன்பின் புதிய கட்டளையை வாழ்வாக்கும்போது "இதோ நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" (தி.வெ.21:5) என்று உரைக்கும் கிறிஸ்துவோடு இணைந்து நாம் புதிய சமுதாயத்தை உருவாக்குகிறோம்.

பட்டை போடப்போடத்தான் பளபளக்கும் வைரமே
மெருகு ஏறஏறத்தான் மினுமினுக்கும் தங்கமே
அரும்பு விரியவிரியத்தான் அளிக்கும் மணத்தை மலருமே
அன்பு பெருகப்பெருகத்தான் அமைதி அடையும் உலகமே.

 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ