ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

        இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

    திருப்பலி முன்னுரை


வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
Sermon Fr.Albert Sr. Gnanaselvi (india)
இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா ஆசிபெற வந்திருக்கும் அன்பு மக்களே!
  எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வாருங்கள் என நம் உறவினர்கள் நம்மை வரவேற்பதுபோல் இன்று நம் பெருமான் இயேசுபிரான் நான் தரும் விருந்துக்கு வாருங்கள் என நம்மை அன்போடு இன்று இந்தத் திருப்பலியில் அழைக்கிறார்.

திருப்பலி ஒரு கொண்டாட்டம்!
திருப்பலி ஒரு அருட்சாதனப்பலி!
திருப்பலி ஒரு பலிவிருந்து!
பலி விருந்து ஒரு இறையனுபவம்!
இறையனுபவம் ஒரு மாற்றம்.

மாற்றம் இரு குணங்களை உடையது.
அப்பமும் இரசமும் இயேசுவின் திரு உடலும் திரு இரத்தமுமாய் ஆன நற்கருணை!
நற்கருணை ஒரு பலிப்பொருள்
நற்கருணை நோயுற்ரோருக்கு மருந்து
நற்கருணை ஆன்ம பசிக்கு உணவு
நற்கருணை விசுவாசத்தின் வெளிப்பாடு
நற்கருணை தியாகத்தின் நிறைவு
நற்கருணை அன்பின் வடிவம்
பழைய ஏற்பாட்டில் பேழைக்குள் மன்னா .....
புதிய ஏற்பாட்டில் பேழைக்குள் நற்கருணை
கானான் நாட்டை நோக்கிய பயணத்தில் மன்னா உணவு.....
விண்ணக நாட்டை நோக்கிய பயணத்தில் நற்கருணை உணவு........
மன்னா இது உடலுக்கு உணவு,
நற்கருணை இது ஆன்மாவுக்கு உணவு

நற்கருணையை மண்டியிட்டு தலைகுனிந்து வணங்கினால் நாம் தலை நிமிர்ந்து வாழுவோம் என்பது உறுதி.
இயேசுவின் திருவுடல் இரத்தப் பெருவிழாவில் விசுவாசத்தைப் பலப்படுத்துவோம், உறுதியாக்குவோம், ஆழமாக்குவோம்

தகுதியான மன நிலையில் நற்கருணையை உண்ணும்போது உலகம் தர முடியாத ஆறுதலைப் பெற்றுக் கொள்வோம் என்பதை இன்றைய திருப்பலிக் கொண்டாட்டம் நமக்குத் தருகிறது. நம்பிக்கையோடு நாம் விரும்புகின்ற ஆறுதலை நற்கருணையில் தேடுவோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

01. அன்றாடத் திரு உணவால் எம்மை ஆதரிக்கும் அன்பரே!
திருச்சபையின் திருப்பணியாளர்கள் உமது திருஉணவால் திடம்பெற்று இறைமக்களையும் உமது திருஉணவால் திடப்படுத்த வரம் கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


02. நாங்கள் உண்ணும் உணவில் எங்கள் பெயர் எழுதியுள்ள இறைவா! நாட்டுமக்கள் எல்லோருக்கும் அடிப்படைத் தேவையான உணவு, உடை, உறைவிடம், உரிமைகள் கிடைக்க நாட்டுத் தலைவர்கள் ஆற்றலோடு செயற்பட வரம் கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


03. வாழ்வுதரும் உணவளிக்கும் வள்ளலே! அன்றாட வாழ்வை வளமாக்கும் உணவை அருந்த வழிகாட்டிக்கொண்டிருக்கும் எங்கள் ஆன்மீகத் தந்தையர்க்கு வளம்மிகு உணவை எந்நாளும் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


04. உடைந்த உள்ளங்களை குணப்படுத்தும் அன்பரே! எங்களை அன்புசெய்ய யாருமில்லை, எங்களுக்கான உடமைகளை, உரிமைகளை பறித்துக்கொண்டு நாடுகடத்தி விட்டார்கள்;, அநீதி எங்களைச் சுற்றி தலைவிரித்தாடுகிறது எங்கள் நெஞ்சம் வருத்தத்தை சுமந்து கொண்டிருக்கிறது என அல்லல்படும் அனைவருக்கும் அவர்களின் உள்ளம் விரும்பும் உணவளிக்க வரம் கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


05. பசித்தோரை நலன்களால் நிரப்பும் பரமனே! உணவின்றித் தவிக்கும் ஏழைமக்களுக்கு அன்றாட உணவுக்கான வேலைவாய்ப்புக் கிடைக்கச் செய்யவும், அதிகம் வைத்திருப்போர் பகிர்ந்து கொள்ளும் மனநிலையையும், வரமாகக் கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்

ஒரு முறை மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜோண்போல் அமெரிக்காவில் உள்ள ஒரு குறிப்பிட்ட தேவாலயத்தில் செபிக்க விரும்பினார். அது குருத்துவப் பயிற்சிக்கான மாணவர்கள் தங்கிப்படிக்கும் செமினறி ஆலயம். திருத்தந்தையின் வருகைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசும் வேகமாகச் செய்தது ஆலயத்தின் உள்ளும் புறமும் மர்ம நபர்கள் நடமாட்டம், வெடிகுண்டு என ஏதேனும் உள்ளதா என காவற்துறையினர் மோப்ப நாயை வைத்து பரிசோதனை செய்தார்கள். அப்போது ஆலயத்தின் உள்ளும் புறமும் ஆபத்தான விஷயம் எதுவும் இல்லையென ஓடித்திரிந்து உறுதிசெய்த மோப்பநாய் திவ்விய நற்கருணைப் பேழைக்கு முன் வந்ததும் அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து நற்கருணைப் பேழையைப் பார்த்து விடாது குரைக்கத் தொடங்கியது. உயிருள்ள இயேசு ஆண்டவர் மனத வடிவத்தில் உள்ளே இருந்ததால் மனித நடமாட்டம் இங்கே இருக்கிறது எனத் தெளிவுபடுத்தியது.....

அந்தோனியாரின் புதுமையால் கழுதை நற்கருணை நாதரை மண்டியிட்டு வணங்கிய நிகழ்வு நமக்கு பல முறை கேள்விப்பட்ட செய்தி
விலங்குகள் நற்கருணையிலுள்ள இயேசுவை உணரும்போது நாமும் அவரை உணர்ந்து வழிபடவேண்டும்.

ஜேர்மன் நாட்டில் அரசன் ஒருவன் நற்கருணைநாதரின் மீது மிகுந்த பக்தி கொண்டவன். ஒரு நாள் காட்டுப் பகுதிக்குச் சென்றபோது அவன் கிணறு ஒன்றில் விழுந்து விட்டான். கிணறு மிக ஆழமானது என்பதால் அவனால் வெளியே வர இயலாமல் உள்ளே தவித்துக்கொண்டிருந்தான் அவனை எட்டிப்பார்த்து ஆறுதல் சொன்ன மனிதர்களிடம் நான் நற்கருணைநாதரை சந்திக்க விரும்புகிறேன். பங்குத் தந்தையிடம் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அவரைப் பார்த்த மனிதர்களும் பங்குத் தந்தையிடம் சொல்லி திவ்விய நற்கருணை வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார்கள்;. பங்குத் தந்தை திவ்விய நற்கருணையை ஏந்தி வந்து மேலே இருந்து அரசனுக்கு சிலுவை அடையாளம் வரைந்து ஆசீர் அளித்தார். அரசனும் மண்டியிட்டு ஆராத்தித்து வணங்கினார்.

உடலோடு நற்கருணை வடிவத்தில் உரையாடும், இறைவனை மண்டியிட்டு ஆராதித்து கிணற்றின் உள்ளேயே செபித்துதுக் கொண்டிருந்தார். தொடர்ந்து செபித்துக் கொண்டிருந்த பொழுது மண்வெட்டடியால் வெட்டும் சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தபோது நீண்ட நாட்களாக சுரங்கப் பாதைவெட்டி மேலே சொல்வதற்கு வழி அமைக்கும் மனிதர்கள் தென்பட்டனர். இரண்டு பேர் பாதை அமைத்து அரசன் மேலே செல்வதற்கு உதவி செய்தார்கள். அரசன் மேலே வந்போது அந்த இரண்டு மனிதர்களும் மறைந்து விட்டார்கள். பின்னர் தான் தெரிந்தது. இயேசுவின் திருவுடல் நற்கருணையில் உள்ளதை ஆழமாக அரசன் விசுவசித்ததால் காவல்தூதர்கள் வெளியே வர இயலாத கிணற்றில் இருந்து வெளியில் வர பாதை அமைத்த செய்தி. இதை உணர்ந்த அந்த அரசன் தனக்கு புதுமை நடந்த இடத்தில் இயேசுவின் திரு இருதய சுரூபம் ஒன்றை வைத்து வழிபட ஆரம்பித்ததார். இன்றும் அந்தப் பகுதியில் ஜேர்மன் நாட்டில் மியூனிச் என்னுமிடத்தில் அந்த சுரூபம் உள்ளதைப் பார்க்கலாம்.

ஐPதேந்திரன் என்ற மாணவன் விபத்தில் மூளைச்சாவுக்கு உள்ளானேன். அவனது தாய் தந்தை இருவரும் மருத்துவர்கள் என்பதால், தங்களது மகனின் உறுப்புக்களைத் தானம் செய்ய முன்வந்தனர். அவனது கண் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புக்கள், அறுவைச் சிகிச்சையின் மூலம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூன்று பேருக்குப் பொருத்தப்பட்டது. அதன் உயிரை பிறருக்காக அளித்து, இன்று இறந்த பின்னும் அவன் உயிர் வாழ்வதாக ஐPதேந்திரனின் பெற்றோர் மனதைத் தேற்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உடல் உறுப்புக்கள் தானம், இரத்ததானம் செய்யும்போது, தன் உடலையும், இரத்தத்தையும் அப்பமாக, இரசமாக பகிர்ந்து கொடுத்த இறைவனின் செயலைப் பிரதிபலிக்கின்றோம்.

வறுமையில் வாடுவோருக்கு, உணவின்றித் தவிப்போருக்கு உணவு கொடுத்து தேற்றும்போது, இயேசு அப்பத்தை பகிர்ந்து கொடுத்து ஆசீர்வதித்த செயல் நமதாகின்றது.

நாம் உயிர்வாழ தன்னுடலையும் குருதியையும் தந்தவர், நாழும் பிறர் வாழ நம்மைiயே அர்ப்பணிக்க வேண்டுமென விரும்புவது நியாயமானதுதானே.
திருவுணவை உண்ணும்போதெல்லாம் திடமான வாழ்வு பெறுகின்றோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தகுந்த முறையில் மனதைத் தயாரித்து, திருவுணவருந்தி நலமானவாழ்வு வாழ அன்றாட திருப்பலி நமக்கு நினைவுபடுத்துகின்றது.

என்னைப்போல் மாறமாட்டாயா? ஏன் உடலை உண்டு குருதி அருந்தி என்னைப்போல் மாறமாட்டாயா? என அன்றாடம் நம்மிடம் கேட்கும் இயேசுவுக்கு நமது பதில் என்ன?
நமது பிள்ளைகள் இயேசுவின் உடலை அருந்தி, ஆன்மீக வாழ்வில் வளர நாம் எத்தகைய முயற்சிகள் எடுக்கின்றோம்.

கண்தானம், இரத்ததானம், உடல் உறுப்புக்கள் தானம், அன்னதானம் இவைகள் பற்றிய நமது சிந்தனைகள் எந்த அளவுக்கு வலுப்பெற்றுள்ளன.

நாம் வாழும் நாட்களில் வரலாறு படைக்க இயேசுவைப்போல் எதைப் பகிர்ந்து அளிக்கப்போகிறோம். ஆன்மாவை வளப்படுத்தும் உணவை அடிக்கடி உண்டு மகிழ்வோம். ஆன்மீக பலம் பெறுவோம். அயலாரும் பலம் பெற உறுதுணை புரிவோம்.



 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
திரு உடல் திரு இரத்த பெருவிழா

நாம் உண்ணுகின்ற உணவுகள் அனைத்துமே உயிரற்ற உணவுகள். உயிரோடு இருப்பதைக் கொன்று உண்கிறோம். அது செடி கொடியானாலும் சரி, விலங்கினமாக இருந்தாலும் சரி. அதை நாம் உண்ணும் போது அதிலுள்ள சத்துக்கள் நம் உடலினுள் சென்று உடலுக்கு பலத்தையும் நலத்தையும் தருகின்றன. உயிருள்ள ஒன்று உயிரற்றதாக மாறி, உடலுக்கு உயிர் தருகிறது. ஆனால் இயேசு தரும் உணவு உயிருள்ள உணவு. உண்பதற்கு முன், உண்ணும்போது, உண்ட பின் என எல்லா நேரமும் உயிருள்ள உணவாக மாறி நமக்கு ஊட்டம் தருகிறது. நாம் தான் அதை உணர்வதில்லை. ஆண்டவரின் திருஉடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அந்த உயிருள்ள உணவின் உடனிருப்பை உணர்ந்து கொள்ள இன்றைய நாளின் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சீடர்களுடன் பாஸ்கா விருந்து உண்ணும் பகுதி இடம் பெற்றிருக்கிறது. அவரது பணிவாழ்வுக்குப் பின் சீடர்களோடு அவர் கொண்டாடிய இந்த விருந்தே, நமது கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைந்துள்ளது. பல இடங்களில் அப்பமும் மீனும் கொண்டு புதுமைகள் பல நிகழ்த்தி இருந்தாலும், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி இருந்தாலும் அந்த இடங்களில் எல்லாம் சொல்லாததை இந்த பாஸ்கா விருந்தின் போது சொல்கிறார். இது என் உடல் என் இரத்தம் என்று அப்புதுமைகளின் போது சொல்லி இருந்தால் இன்று நமது நற்கருணை வழிபாட்டு முறையே மாறி (கானாவூர்த் திருமணம், மீன்பிடித்திருவிழா, திபேரியக் கடல் மீன்பாடு, புல்வெளியில் பந்தி) இருந்திருக்கும். ஆனால் இயேசு நம்பிக்கை கொண்ட சீடர்கள் மத்தியில் மட்டுமே அப்பம் பிட்டு, இது என் உடல், இது என் இரத்தம் என்று சொல்கிறார். ஏனெனில் ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த போதோ, கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் புதுமை செய்த போதோ, அங்கிருந்த அனைவரும் நம்பிக்கை உடையவர்களாய் இல்லை. கூடியிருந்த அனைவரும் பல்வேறு நோக்கங்களுக்காய் கூடி இருந்தனர். உணவிற்காக, உறவிற்காக, உறவினர்க்காக, உடல் நலத்திற்காக, என்று பல நோக்கங்கள் இருந்திருக்கலாம். ஒரு சிலருக்கே இயேசுவைப் பற்றிய ஒரு புரிதல், நம்பிக்கை இருந்திருக்கும். எனவே தான் இயேசு தான் விரும்பி அழைத்துக் கொண்ட பன்னிரு சீடர்கள் மத்தியில் தன்னை பலியாக அளிக்கின்றார். ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இயேசுவின் செயலுக்கான காரணத்தையும் அவர் சொன்ன வார்த்தையின் ஆழத்தையும் புரிந்து கொள்கின்றனர். அவரது உடலை உண்டு இரத்தத்தை குடித்து நிலை வாழ்வு பெறுகின்றனர்.
இந்த பாஸ்கா உணவு உண்ண இயேசு சீடர்களை தயாரிக்கும் முறை மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது.

ஆர்வத்தைத் தூண்டுதல், பின்செல்லல்,கேட்டறிதல்,கண்டறிதல்,தொடுதல், உள்வாங்குதல் என பல நிலைகளில் தம் சீடர்களைத் தயார் படுத்துகிறார். இதனை புற தயாரிப்பு அகத் தயாரிப்பு என்று இரு நிலைகளில் வகைப்படுத்தலாம்.


(அ) வருடா வருடம் கொண்டாடும் விழா தானே எப்படி எங்கு கொண்டாடினால் என்ன என்று இருந்து விட அவர்களை விடவில்லை. மாறாக அவர்களுக்குள்ளே அந்த ஆர்வத்தைத் தூண்டுகிறார். சீடர்களே வந்து இயேசுவிடம் கேட்கிறார்கள், எங்கு இடம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று. விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டு தொடங்கும் காலம். புதிய பள்ளி கல்லூரி, பணி மாற்றம் இடமாற்றம் என்று இருந்தால் நினைவு முழுவதும் அதுவாகவே இருக்கும். பலரின் பேச்சுக்களும் கருத்துக்களும் கதைகளும் கண்முன்னே படமாக ஓடி அந்த இடத்திற்கே நம்மை அழைத்துச்சென்று விடும். பலரிடமும் அதைப் பற்றிக் கேட்டு குறிப்புகளை சேகரிக்கும் மனநிலை அதிகரிக்கும் . இத்தகையதொரு ஆவலை சீடர்கள் மனதில் ஏற்படுத்துகிறார் இயேசு.
பணி மேலும் இடத்தின் மேலும் பதவி மேலும் இருக்கும் நமது ஆர்வம், ஈடுபாடு நற்கருணை ஆண்டவர் மேல் உள்ளதா என்று சிந்தித்து பார்ப்போம்.


(ஆ) யார் எவர் என்று தெரியாத ஒரு மண்குடம் சுமந்த பணியாளரைப் பின் தொடரச் சொல்கின்றார். சீடர்கள் நகருக்குள் வந்து இயேசு சொன்ன அந்த மனிதரை சரியாக அடையாளம் காண்கின்றனர். தாங்கள் வந்த வழியை விட்டு எதிர்த்திசையில் தங்கள் பயணத்தை மாற்றி அமைக்கின்றனர். யார் என்று தெரியாது, எங்கிருந்து வருகின்றார், எங்கு செல்வார் என்று எதுவும் தெரியாது இருப்பினும் பின் தொடர்கின்றனர்.
கிறிஸ்தவ வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் அருட்பணியாளர்களும் ஒரு விதத்தில் இந்த மண் குடம் சுமந்த பணியாளர்கள் போலவே. அவர்கள் பணியை அவர்கள் செய்கின்றார்கள். நாம் தான் அவர் யார் எப்படி பட்டவர், என்ன பணிசெய்கிறார் எங்கிருந்து வருகின்றார், எங்கு செல்கின்றார் என்று விசாரிப்பதிலேயே நம் கவனத்தையும் ஆற்றலையும் செலவிடுகின்றோம். விளைவு எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்ல வழி தெரியாது, யாரைப் பின்பற்ற வேண்டும் என்று விடை தெரியாது தவிக்கிறோம்.


(இ) சீடர்கள் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நகர்ப்பகுதிக்குள் வருகின்றனர். வெளிப்புறத்தில் இருந்து உட்புறத்திற்கு வருகின்றனர்.
நாம் நமது வெளியுலக வாழ்வை விட்டு நம் உள் மனம் என்னும் நகருக்குள் செல்ல அழைப்புவிடுக்கின்றார்.


(ஈ) பணியாளரின் உரிமையாளரைச் சந்திக்கின்றனர். அவரின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கின்றனர். இதனால் இடத்தைக் கண்டறிகின்றனர். திடிரென்று இருவர் வந்து விழா கொண்டாட இடம் கேட்கின்றனர். உரிமையாளரும் இடத்தைக் காட்டுகின்றார். ஏற்கனவே இயேசுவால் முன்னேற்பாடு செய்யப் பட்ட அறையாக இருந்தால் அவர் முகவரி அல்லவா சொல்லி இருந்திருப்பார் சீடர்களுக்கு. இப்படி பணியாளரை பின் தொடர்ந்து செல்லுங்கள் என்று சொல்லி இருந்திருக்க மாட்டார் அல்லவா? ஆக முன்னேற்பாடு செய்யப்பட்டது அறை அல்ல மனித மனங்கள். விட்டின் உரிமையாளர் அவர் வீட்டை ஆண்டவர் இயேசுவிற்கு கொடுக்க எந்த நேரமும் தயாராக இருக்கிறார்.
நாம் எல்லோரும் எல்லோரையும் நம் வீடுகளில் தங்க அனுமதிப்பது இல்லை. சிலர் முன்னமே அனுமதி கேட்டாலும் மறுக்கப்படுகிறது. சிலர் திடிரென்று வந்து கேட்டாலும் சகல வசதிகளுடன் இடம் கொடுக்கப்படுகிறது. இதற்கு பேர் பாரபட்சம் அல்ல ஒருவர் மற்றவரின் குண நலன் நம்மில் ஏற்படுத்தும் தாக்கம். விருந்தினர்களே ஆனாலும் இவர்கள் வந்தால் சந்தோஷம், இவர்கள் வந்தால் தோஷம் என்று நினைக்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தவர்கள் நமது வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் நமது செயல்களிலே ஒரு புத்துணர்ச்சி மாற்றம் இருக்கும். வீடே புதுப் பொலிவுடன் இருக்கும். அதுவே விருப்பமில்லாதவர்கள் வந்தால் வராத நோய் கூட வந்து ஒட்டிக் கொண்டது போல் நமது செயல் பாடுகள் இருக்கும்.
நற்கருணை ஆண்டவரை அனுதினமும் உட்கொள்ளும் நாம் நமது உள்ளம் எனும் வீட்டை தயார் நிலையில் வைத்திருக்கிறோமா என்று சிந்திப்போம்.


(உ) புற தயாரிப்பு இந்நிலையில் இருக்க அகத் தயாரிப்பு நிலை அப்பம் உண்ணும் முன் தொடங்குகிறது. சீடர்கள் இயேசுவோடு பந்தியில் அமர்கிறார்கள் அவரது உடனிருப்பை உணர்கிறார்கள். அவரது செயல்பாடுகளைக் கண்களால் கண்டும் அவரது வார்த்தைகளைக் காதுகளால் கேட்டும், தெளிவு பெறுகின்றனர். அவர் ஆசீர்வதித்து கொடுத்த அப்பத்தையும் இரசத்தையும் கைகளால் தொட்டு உண்கின்றனர். அவரது உடலை உள்வாங்குகின்றனர். உள்ள நலன் பெறுகின்றனர். பரவசம் அடைகின்றனர். மறு இயேசுவாக மாறி ஆனந்தத்தில் பாடல் பாடி மகிழ்கின்றனர். உயிருள்ள உணவாக அவர்கள் உடலில் இயேசு வாழ்ந்ததினால் அவர்களது வாழ்வு புது வாழ்வாக மாறியது. நாம் அனுதினமும் நற்கருணையை உண்கிறோம் ஆனால் அதை இயேசுவின் உடலாக உயிருள்ள உடலாக எண்ணுவதில்லை.

சாதாரண ஒரு அப்பமாக எண்ணுவதினால் நமது வாழ்வில் மாற்றம் ஏற்படுவதில்லை. என்று ? நாம் அவரை உயிருள்ள உணவாக உட்கொள்கிறோமோ அன்று தான் நமது வாழ்விலும் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும்.
பழைய ஏற்பாட்டில் தந்தை இறைவனோடு இஸ்ரயேல் மக்கள் கொண்ட உடன்படிக்கையை மோசே ஆடு மாடுகளின் இரத்தம் கொண்டு கடவுளுக்கு பலி செலுத்தினார்.

புதிய ஏற்பாட்டில் இயேசு மக்களின் மீட்பிற்காக தன் இரத்தத்தை சிந்தி பலியினை நிறைவேற்றினார்.
நிகழ் ஏற்பாட்டில் மண்ணின் நலனுக்காக, எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காக எம் தலைமுறையினர் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்றனர்.
மோசே இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை பலி செலுத்த அனுப்பி வைத்தார். இங்கோ எம் இளைஞர்கள் பலிப் பொருளாகவே மாறி விட்டனர். அன்று மோசே ஆட்டின் இரத்தத்தை பலி பீடத்தின் மீது தெளித்து உடன்படிக்கையை நிருவினார். இன்றோ இளைஞர்களின் இரத்தத்தின் மேலே இந்த மண்ணின் மீட்பிற்கான சட்டம் இயற்றப்பட இருக்கிறது. இயேசுவின் உயிருள்ள உடலை உண்டு அவர் போல மக்களுக்காக இரத்தம் சிந்திய இவர்கள் வாழ்வு சொல்லும் நாம் அனைவரும் உயிருள்ள இறைவனின் உயிர்த் தசைகள் என்று. திரு உடல்திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாள் நாம் அனைவரும் அந்த உடலின் சிறு தசைகள் என்பதை இந்த உலகுக்கு சொல்லவே. இன்று நம் உள்ளங்களில் நாம் ஏந்தும் கிறிஸ்துவின் திரு உடல் நம்மிலும் நம்மை சுற்றிலும் ஒரு சில மாற்றத்தையாவது கொண்டு வரட்டும் . அவரது உடல் நம் உடலோடு கலந்து நம்மையும் அவரைப் போல் மாற்றுகிறது என்று நம்புவோம். உயிருள்ள உணவாய் உடன் வரும் இயேசுவை கண்டு கொள்வோம். இறைவனின் அருளும் ஆசீரும் என்றும் நம் ஓவ்வொருவர் மேலும் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 

 வி.ப 24:3-8
 எபி 9:11-15
 மாற் 14:12-16, 22-26

மண்குடத்தில் தண்ணீர்

இன்றைய நற்செய்திப் பகுதியில் வரும் ஒரு பெயரில்லாக் கதைமாந்தரிடமிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம்: 'மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள்.'

யார் இவர்? இவர்தான் மாற்கு நற்செய்தியாளரின் பதிவில் இயேசுவின் பாடுகளுக்கு 'உ' வரைபவர். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது என்றும், அந்த நாளில் ஆட்டுக்குட்டி பலியிடப்படும் என்றும் பதிவு செய்கின்ற மாற்கு நற்செய்தியாளர், பாஸ்கா விருந்திற்கான ஏற்பாடு பற்றி எழுதுகின்றார். எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்? என்ற சீடர்களின் கேள்விக்கு விடையாக வருபவர்தாம் இந்தக் கதைமாந்தர்.

'மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் (ஆண்)'

பெண்கள் தாம் மண்குடத்தில் தண்ணீர் எடுப்பார்கள் என்பது இக்காலத்தைப் போல அக்காலத்திலும் பரவலாக இருந்த ஒன்று. ஆகையால்தான் இயேசுவை சந்திக்க வந்த அல்லது இயேசு கிணற்றடியில் சந்தித்த சமாரியப்பெண்ணும் மண்குடத்தை கிணற்றடியில் போட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகின்றாள். இயேசுவின் சமகாலத்தில் செல்வந்தர்கள் தங்கள் வீட்டு வேலைகளுக்கு ஆண் அடிமைகளை வைத்திருந்தனர். இவர்களின் வேலை தண்ணீர் எடுப்பது. ஆக, இயேசு குறிப்பிடும் இந்தக் கதைமாந்தர் ஓர் ஆண் அடிமையாக இருந்திருக்கலாம். இவரின் தலைவருக்காக இவர் தண்ணீர்குடம் சுமந்திருக்கலாம். பல ஆண் அடிமைகள் இங்கும் அங்கும் தண்ணீர் குடம் சுமந்து கொண்டிருக்க இவரை மட்டும் எப்படி தனியாக சீடர்கள் அடையாளம் கண்டிருப்பார்கள்? - இந்தக் கேள்வி நமக்குள் எழலாம். ஆனால் கேள்வியை அப்படியே விட்டுவிடுவோம்.

இந்த தண்ணீர் சுமக்கும் ஆள் கிணற்றடிக்கும் வீட்டிற்கும் நடக்கிறார். ஆக, கிணற்றடிக்கும் வீட்டிற்குமான ஒரு சதைப்பாலம் இவர். இப்படிப் பாலமாக இருக்கும் ஒருவரே தான் விரைவில் நிகழ்த்தப் போகும் கல்வாரிப் பலியின் முன்னடையாளம் என இயேசு நினைத்திருக்கலாம். ஆகையால்தான் இந்த ஆளைத் தேர்ந்தெடுக்கிறார் இயேசு. சீடர்கள் 'அ' என்ற இடத்திலிருந்து 'ஆ' என்ற இடம் நோக்கிச் செல்கின்றனர். தண்ணீர் குடம் கொண்டு வருபவர் 'ஆ' என்ற இடத்திலிருந்து 'அ' என்ற இடம் நோக்கி - அதாவது, 'எதிரே' வருகிறார். இப்போது சீடர்கள் அவர் பின்னே செல்ல வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. அதாவது, அவர்களும் 'ஆ' விலிருந்து 'அ' நோக்கி அல்லது எல்லாரும் சேர்ந்து 'இ' ('இல்லம்') நோக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறாக, இந்த பெயரில்லாத ஆள் இயேசுவின் சீடர்களின் வழியைத் திருப்புகின்றார்.

இந்தப் பின்புலத்தில் பார்த்தால் இந்த ஆள் இயேசுவின் உருவகம் என்றும், இவர் சுமக்கும் தண்ணீர் இயேசுவின் உடன்படிக்கையின் இரத்தத்தின் உருவகம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. எப்படி?

1. இயேசு தந்தையின் திருவுளம் நிறைவேற்றுபவர் - அடிமை தலைவரின் திருவுளம் நிறைவேற்றுபவர்.

2. இயேசுவின் தந்தை பெரிய வீட்டின் உரிமையாளர் - அடிமையின் தலைவர் பெரிய இல்லத்தை தயாராக வைத்திருக்கின்றார்.

3. இயேசு சீடர்களின் பாதையைத் திருப்புகின்றார் - அடிமை சீடர்களின் பாதையைத் திருப்புகின்றார்.

4. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையேயான சதைப்பாலம் இயேசு - வீட்டிற்கும் கிணற்றுக்குமான சதைப்பாலம் அடிமை.

5. இயேசு மேலிருக்கும் தந்தையின் இல்லத்திற்கு வழி காட்டுகிறார் - அடிமை மேலறையைக் காட்டுகிறார்.

6. இயேசு இரத்தத்தின் கிண்ணத்தைக் கையிலெடுத்தார் - அடிமை தண்ணீரின் மண்குடத்தைக் கையில் எடுத்தார்.

7. இயேசு தம் சீடர் பருகக் கொடுத்தார் - அடிமை தலைவரின் தாகம் தணிக்கிறார்.

8. இங்கே இது இயேசுவின் உடல், இரத்தம் - அங்கே அது அடிமையின் உடல், இரத்தம், வியர்வை.

9. இங்கே இயேசுவின் உடன்படிக்கை முத்திரையிடப்படுகிறது - அங்கே அடிமை என்றென்றும் தன் தலைவருக்கான ஒப்பந்தத்தில் முத்திரையிடப்படுகிறது.

ஆக, இன்று நாம் கொண்டாடும் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவின் சிந்தனையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால்: 'நம் கையில் உள்ளதை வைத்து முன்னும் பின்னும் நடந்து பாலம் ஆவதே நற்கருணை.'

அது என்ன முன்னும் பின்னும் நடப்பது?

தொநூ 15:9-21ல் கடவுள் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை வாசிக்கின்றோம். இங்கே உடன்படிக்கை முத்திரையப்படும்போது ஆபிராம் பலிப்பொருள்களை இரண்டாக வெட்டி வைத்து நடுவில் ஒரு பாதை விடுகின்றார். இந்தப் பாதையின் ஊடாக அவர் முதலில் நடக்கின்றார். பின் ஆண்டவராகிய இறைவன் நெருப்பு வடிவத்தில் நடக்கின்றார். இவ்வாறாக, முன்னும் பின்னும் நடக்கும்போது நடப்பவர்களுக்கு இடையே இருக்கின்ற ஒப்பந்தத்தை அங்கிருக்கின்ற பலிப்பொருள்கள் உறுதி செய்கிறது. இப்படி உறுதி செய்யப்பட்ட நிலையில் உடன்படிக்கை செய்பவர்கள் இந்த உறுதியை மீறினால் அவர்களும் பலிப்பொருள்கள் போல இரண்டாகக் கிழிக்கப்படுவர் என்பதே பொருள்.

இன்றைய முதல் வாசகத்தில் (விப 24:3-8) ஆண்டவராகிய இறைவனுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நடக்கும் உடன்படிக்கை வாசிக்கின்றோம். உடன்படிக்கை இரண்டு நிலைகளில் நடக்கின்றது. முதலில், மோசே உடன்படிக்கையின் ஏட்டை வாசிக்கின்றார். இரண்டாவதாக, பலிப்பொருள்களின் இரத்தை எடுத்து முன்னும் பின்னும் சென்று பீடத்தின்மேலும் மக்களின் மேலும் தெளிக்கின்றார்.

இதே ஃபார்முலாவைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (மாற் 14:22-26) பார்க்கின்றோம். முதலில் இயேசு கடவுளைப் போற்றி, அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து சீடர்களிடம் பேசுகின்றார். இரண்டாவதாக, முன்னும் பின்னும் அவர்களுக்குப் பரிமாறுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்திலும் (எபி 9:11-15) இயேசுவின் கல்வாரிப் பலியை எருசலேம் ஆலயத்தின் பலியாக உருவகிக்கும் எபிரேயர் நூலின் ஆசிரியர், இயேசுவே உள்ளும் புறமும் சென்று தன் சொந்த இரத்தத்தால் 'புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார்' என்கிறார்.

ஆக, இன்றைய திருநாளின் மையமாக இருக்கும் செயல் 'முன்னும் பின்னும் செல்வது' - 'ஒன்றையும் மற்றொன்றையும் இணைப்பது.'

மண்குடத்தில் தண்ணீர் சுமந்தவர் தலைவரையும் கிணற்றையும் இணைத்தார்.

மோசே ஆண்டவரையும் மக்களையும் இணைத்தார்.

தலைமைக்குரு கடவுளையும் பாவிகளையும் இணைத்தார்.

இயேசு கடவுளையும் அனைவரையும் இணைத்தார்.

நீங்களும் நானும் ஒருவர் மற்றவரை இணைக்கும்போது - நற்கருணை ஆகின்றோம்!

ரொம்ப எளிதான லாஜிக்.

இதை வாழ்வாக்குவது எப்படி?

மீண்டும் மண்குடத்தின் கதைமாந்தருக்கே வருவோம்.

அ. தண்ணீர் சுமப்பவரின் கவனம் கிணற்றின்மேலும், தன் வீட்டின்மேலும், தன் தண்ணீர் குடத்தின்மேலும் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்று தவறினாலும் தண்ணீர் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேராது. இயேசுவின் கவனம் தன் தந்தையின் திருவுளம் மேலும், தான் மீட்க வந்த இந்த உலகின்மேலும், தன் கல்வாரிப் பலியின்மேலும் இருந்தது. ஆகையால்தான் அவரின் பலி சாத்தியமாயிற்று. ஆக, அவரின் பலியில் பங்கேற்கும் நம் கவனமும் இப்படித்தான் இருக்க வேண்டும். நம் ஊற்றாகிய இறைவன் மேலும், நாம் அன்றாடம் உறவாடும் நம் உலகின்மேலும், நாம் சுமக்கும் வாழ்க்கை மேலும். இவற்றில் ஏதாவது ஒன்றில் கவனம் தவறினாலும், அல்லது ஏதாவது ஒன்று நம் அதிக கவனத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கே தாகம் தணிவதில்லை.

ஆ. மண்குடத்தில் தண்ணீர் சுமக்கும் ஆள் மிகக் குறைந்த ஆடைகளையே அணிந்திருப்பார். மண்குடத்தை தோளில் சுமப்பதை விட தலையில் சும்மாடு கூட்டி சுமப்பதே எளிது. இப்படி சுமக்கும்போது கைகளை உயர்த்தி தாங்கிப் பிடிக்க வேண்டும். இப்படிப் பிடிக்க வேண்டுமானால் தளர்வான மேலாடை அணிதல் அல்லது மேலாடை அகற்றுதல் வேண்டும். தன் மேலாடையை அகற்ற முன்வரும் ஒருவரே தலையில் தண்ணீர்குடம் சுமக்க முடியும். தன் மேலாடை அகற்றி, தன் சீடர்களின் காலடிகளின் தண்ணீர் ஊற்றிக் கழுவியபோது இயேசு செய்ததும் இதுவே. மேலாடை என்பது என் ஆடம்பரம். மேலாடை என் அவசியம் அல்ல. இன்று அவசியங்களை விட ஆடம்பரங்களே நம் வாழ்வில் அதிகம் குறுக்கே வருகின்றன. ஆடம்பரங்களுக்காகத்தான் இன்று மனிதர்கள் தன்னலம் நாடுகிறார்கள். ஆக, மேலாடை அகற்றுவது என்பது தன்னலம் அகற்றுவது. மேலாடையை அகற்றாத வீட்டுத் தலைவர் தன் வீட்டுக்குள்ளேதான் இருப்பார். மேலாடையை அகற்றத் துணியும் அடிமைதான் கிணற்றடிக்கும் செல்வார். ஆக, மேலாடை என்பது நம்மைக் கட்டியிருக்கும் சங்கிலி. இன்று நான் அகற்ற விரும்பும், ஆனால், அகற்றத் தயங்கும் மேலாடை எது?

இ. முற்றிலும் பலியாவது. முதல் வாசகத்தில், மோசே உயிரோடிருக்கிறார். மக்கள் உயிரோடிருக்கின்றனர். ஆனால் மாடுகள் பலியாகின்றன - இறந்துவிடுகின்றன. இரண்டாம் வாசகத்தில், தலைமைக்குரு உயிரோடிருக்கிறார். பாவிகள் உயிரோடிருக்கின்றன. ஆனால், ஆடு பலியாகின்றது - இறந்துவிடுகின்றது. நற்செய்தி வாசகத்தில், கடவுள் உயிரோடிருக்கிறார். சீடர்கள்-நாம் உயிரோடிருக்கின்றோம். ஆனால், இயேசு பலியாகின்றார் - இறந்துவிடுகின்றார். மூன்று இடங்களிலும் இரத்தம் சிந்தப்படுகிறது. இரத்தத்தில்தான் உயிர் இருப்பதாக நம் முன்னோர் நம்பினர். விவிலியமும் அதே நம்பிக்கையைத்தான் கொண்டிருக்கிறது (காண். லேவி 17:11). பலியாகின்ற ஆடு, மாடு, ஆள் - இவர்களுக்குக் குரல் கிடையாது. இவர்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. ஏனெனில் தொண்டையில்தான் உயிர் இருக்கிறது என்பது மனுக்குலத்தின் முதல் நம்பிக்கை. ஆகையால்தான் நாம் இறக்கும்போது நம் வாய் அகலத் திறக்கிறது (!). ஆனால், பலியாகின்றவர்கள் மற்றவர்களின் குரலுக்காக தங்கள் குரலை நெரித்துக்கொள்கின்றனர். மண்குடம் சுமந்த அந்த அடிமை போல. ஆகையால்தான் இயேசுவம், 'அவர் அறையைக் காட்டுவார்' என்கிறார். நற்கருணையின் நிறைவான பொருள் இதுதான். நம் குரலை ஒடுக்கி அடுத்தவர்களின் குரலை ஒலிக்கச் செய்வது - நம் வாழ்வை அழித்தாவது.

இறுதியாக,

இன்று நாம் நம் குரல்வளை நெரிக்கப்பட்டு பலியாகி உடன்படிக்கையின் பலிப்பொருளாகவில்லை என்றாலும், அந்த அநாமிகா அடிமை போல நாம் அன்றாடம் சுமக்கும் நம் வாழ்வின் மண்குடங்களைத் தூக்கிக்கொண்டு முன்னும் பின்னும் சென்று, புன்னகையின் பாலமாக இருந்தாலே போதும்.

'ஆமென்' என்று வாய் திறந்து, பெற்று, மூடிக்கொள்ளும் நற்கருணை நம் வாழ்வில் பொருள்தரும்.

மண்குடத்தில் தண்ணீர் - கவனம் ரொம்ப தேவை. தவறினால் குடமும் உடைந்து விடும், தண்ணீரும் உடைந்துவிடும், சுமப்பவரும் காயம் படுவார். உடன் வருபவரும் அடிபடுவார்.

ஆண்டவரின் திருவுடலும், இரத்தமும் அப்படியே!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்!

ஓர் அழகான கிராமத்தில் வயது முதிர்ந்த சமையல்காரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சாமுவேல். அவர் சுடுகிற அப்பம் அந்த ஊருக்கே இனிப்பாக இருந்தது. அப்பம் சுடுவதில் சிறந்தவராக இருந்ததோடு, அன்பு காட்டுவதிலும் எளியவர்மேல் அக்கறை கொள்வதிலும் அவர் ஆர்வமாக இருந்ததால் மக்கள் அவரை மிகவும் விரும்பினார்கள். ஒரு நாள் மாலை, பயணத்தால் சோர்வுற்ற வழிப்போக்கர் ஒருவர் சாமுவேலின் கதவுகளைத் தட்டினார். அவரைத் தன் இல்லத்திற்குள் அழைத்த சாமுவேல் அவருக்கு அப்பம் பரிமாறினார்.

எடுத்துக்கொள்! என்று சொன்னார் சாமுவேல்.

கண்ணீர் மல்க சாமுவேலை உற்று நோக்கிய வழிப்போக்கர், உமக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை என்றார். அதற்கு சாமுவேல், இந்த அப்பம் வெறும் உணவு அல்ல. இது நான் உமக்குக் காட்டுகிற அக்கறை. எடுத்துக்கொள்! சாப்பிடு! ஊட்டம் பெறு என்றார்.

உண்ணத் தொடங்கிய வழிப்போக்கர் ஆற்றல் பெற்றார். ஒரு விதமான அமைதி அவருடைய மனத்தில் குடிகொண்டது. சற்று நேரம் சென்றவுடன், வழிப்போக்கர் தான் ஒரு கத்தோலிக்க குரு என்றும், நற்கருணையின் பொருள் தெரியாமல் தான் குழப்பத்தில் இருந்ததாகவும், சாமுவேலின் சொற்கள் இயேசுவின் சொற்களுக்கே உருவகமாக இருப்பதுபோல தான் உணர்வதாகவும் தெரிவித்தார்: இதை பெற்றுக்கொள்ளுங்கள். இது எனது உடல்.

நற்கருணை அன்பின் கொடை. இது கடவுளை நம் அருகில் கொண்டுவருவதுடன், நம்மையும் ஒருவருக்கொருவர் அருகில் கொண்டுவருகிறது என்று சொல்லி புன்னகைத்தார் சாமுவேல்.

அப்பம் சுடுபவரின் அச்சொற்கள் நற்கருணையின் பொருளை அருள்பணியாளருக்கு ஆழமாக உணர்த்தின. கிறிஸ்துவின் அன்பு நற்கருணையில் எப்போதும் உள்ளது. அவர் அவருடைய விருந்தில் பங்கேற்கவும், அந்த விருந்தால் மாற்றம் பெறவும் நம்மை அவர் தொடர்ந்து அழைக்கிறார்.

நிற்க.

இன்று நாம் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். கடந்த ஞாயிறு நாம் கொண்டாடிய மூவொரு கடவுள் பெருவிழா நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக, தொட்டு உணர முடியாததாக, மறைபொருளாக இருந்தது. இன்று நாம் கொண்டாடும் நற்கருணை நாம் தொட்டு உண்ணக் கூடிய அளவுக்கு நெருக்கமாக, நமக்கு நிறைவு தருவதாக இருக்கிறது.

திருப்பலியில் நாம் பங்கேற்கும்போதெல்லாம் நற்கருணையை நாம் தொடுகிறோம், பெற்று உண்கிறோம்.

பெற்றுக்கொள்ளுங்கள்! (அ) எடுத்துக்கொள்ளுங்கள்! இதுவே இயேசுவின் எளிய, ஆனால், ஆழமான அழைப்பு.

தம் திருத்தூதர்களோடு மேலறையில் பாஸ்கா உணவை இறுதி இராவுணவாக உண்கிற இயேசு, இவ்வார்த்தைகளைச் சொல்லி அழைக்கிறார். உணவின் எளிய பொருள்களை எடுத்து அரிய பொருளைத் தருகிறார் இயேசு. அப்பத்தைத் தம் உடலாகவும், இரசத்தை உடன்படிக்கையின் இரத்தமாகவும் வழங்குகிறார்.

இயேசுவின் இச்சொற்களை படைப்பின் தொடக்க நிகழ்வோடு பொருத்திப்பார்ப்போதம். ஆண்டவராகிய கடவுள் ஆண் மற்றும் பெண்ணிடம், இதை எடுக்க வேண்டாம்! எனச் சொன்னார். விலக்கப்பட்ட கனியை அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது அவருடைய கட்டளையாக இருந்தது. ஆனால், அவர்கள் அதை எடுத்து உண்டார்கள். கடவுளின் கட்டளையை மீறினார்கள். விளைவாக, ஆண்டவரின் திருமுன்னிலையிலிருந்தும் தோட்டத்திலிருந்தும் விரட்டப்பட்டார்கள்.

ஆனால், எடுத்துக்கொள்ளுங்கள்! என்னும் இயேசுவின் சொல் அவருடைய அழைப்பாக நம்மிடம் வருகிறது. தாங்களாகவே (கனியை) எடுத்துக்கொண்டதால் அவர்கள் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் அந்நியப்படுத்தப்பட்டார்கள். நாம் எடுத்துக்கொள்ளும் நற்கருணை நம்மை கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் ஒன்றிணைக்கிறது. முதற்பெற்றோரின் கீழ்ப்படிதலின்மை அவர்களுக்கு சாபத்தை வருவித்தது. இயேசுவின் கீழ்ப்படிதல் நமக்கு மீட்பைக் கொண்டு வந்தது.

பெற்றுக்கொள்ளுங்கள்! இச்சொல் கிறிஸ்துவின் தற்கையளிப்பை உருவகப்படுத்துகிறது. அதில் அவருடைய அன்பும் தியாகமும் நிறைந்துள்ளது. நற்கருணை என்பது முதலில் கிறிஸ்து நமக்கு வழங்குகிற கொடை. நாம் கிறிஸ்துவுக்கு எதையும் கொடுக்கத் தேவையில்லை. அவரே தம்மை நமக்குக் கொடுக்கிறார். அவருடைய ஆசையே நம்மை அவரை நோக்கி அழைக்கிறது. தம்மையே முழுமையாக நமக்குக் கொடுக்க அவர் காத்திருக்கிறார். ஏற்கெனவே நமக்காகத் தயாரித்து வைக்கப்பட்டுள்ள அறையைக் கண்டுபிடிப்பது மட்டுமே நம் வேலை. கிறிஸ்துவின் அளவுகடந்த அன்பை நமக்கு நினைவூட்டுகிற நற்கருணை அவரோடும் ஒருவர் மற்றவரோடும் தோழமை கொண்டிருக்க நம்மை அழைக்கிறது.

இரண்டாவதாக, உடன்படிக்கை. இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரையில் உடன்படிக்கை என்பது வெறும் சொல் அல்ல. மாறாக, அது ஓர் உணர்வு. கடவுளால் முன்னெடுக்கப்பட்ட உறவு அது. அங்கே கடவுள் தந்தையாகவும் மக்கள் அவருடைய மகன்களாகவும் மகள்களாகவும் மாறினார்கள். அவர் அவர்களுக்கு பாதுகாப்பையும், ஊட்டத்தையும், வளர்ச்சியையும் வாக்களித்தார். உடன்படிக்கை நிறைவேற்றப்படுவதையும் உறுதிசெய்யப்படுவதையும் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுளின் சொற்களை மோசே வாசிக்கிறார், எழுதிப் பதிவு செய்கிறார். ஆண்டவருடைய சொற்களுக்குச் செவிசாய்க்கிற மக்கள் அதற்கு பதிலிறுப்பு செய்கிறார்கள்: ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம் என்றார்கள். மக்களின் பதிலிறுப்பில் உடன்படிக்கை நிறைவேறுகிறது. இதை உறுதிசெய்யும் பொருட்டு வாளியில் உள்ள இரத்தத்தை எடுத்து மக்கள் மேலும் உடன்படிக்கைப் பேழை மேலும் தெளிக்கிறார் மோசே. ஒரே இரத்தம் மக்களையும் கடவுளையும் இணைக்கிறது. கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே ஒரே இரத்தம் பாய்கிறது. இவ்வாறாக, உடன்படிக்கை உடனிருப்பையும், கீழ்ப்படிதலையும், பிணைப்பையும் உறுதி செய்கிறது.

ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றி உறுதி செய்கிறோம். முதல் பகுதியான இறைவார்த்தை வழிபாட்டில் ஆண்டவருடைய சொற்களை விவிலியத்திலிருந்து வாசிக்கக் கேட்டுப் புரிந்துகொள்கிறோம். பதிலிறுப்பு செய்கிறோம். இரண்டாம் பகுதியான நற்கருணை வழிபாட்டில், நாம் கிறிஸ்துவின் உடலை உண்டு இரத்தத்தைப் பருகுகின்றோம். ஒரே கிண்ணத்தில் பங்கேற்கிறோம். சமையல்காரர் சாமுவேலின் (கதை) அப்பம் போல நற்கருணை நமக்கு ஊட்டமும் மாற்றமும் வலிமையும் தருகிறது.

இந்த உடன்படிக்கை முந்தைய உடன்படிக்கையைவிட இரண்டு நிலைகளில் மேன்மையாக இருக்கிறது: (அ) முந்தைய உடன்படிக்கைகள் விலங்குகளின் இரத்தத்தால் உறுதிசெய்யப்பட்டன. ஆனால், இந்த உடன்படிக்கை மாபெரும் தலைமைக் குருவான கிறிஸ்துவின் இரத்தத்தால் உறுதிசெய்யப்படுகிறது. இதையே, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் (இரண்டாம் வாசகம்), கிறிஸ்துவின் இரத்தம் வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! (ஆ) முந்தைய உடன்படிக்கை இஸ்ரயேல் மக்களோடு மட்டும் செய்யப்பட்டது. இந்த உடன்படிக்கை அனைத்து மாந்தருக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் உரியதாக இருக்கிறது பலருக்காகச் சிந்திப்படும் இரத்தம் (காண். மாற் 14:24).

மூன்றாவதாக, முன்நோக்கிப் பார்த்தல். பாஸ்கா உணவை நிறைவு செய்கிற இயேசு, இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன். அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் உன உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார். எதிர்காலத்தையும் எதிர்நோக்கையும் எண்ணியவராக இறையாட்சியில் பகிரப்படும் இரசம் பற்றிப் பேசுகிறார் இயேசு. திருப்பலியில் நாம் அருந்தும் உணவுடன் நற்கருணை முடிந்துவிடுவதில்லை. வரவிருக்கும் இறையாட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். நிரந்தரமான, நீடித்த சுவையான இறையாட்சிக்காக நாம் பொறுமையுடன் காத்திருக்கிறோம்.

இறுதியாக, ஒலிவ மலைக்குச் செல்தல். பாஸ்கா விருந்து இறுதி இராவுணவு முடிந்தவுடன் தம் சீடர்களோடு ஒலிவ மலைக்குச் செல்கிறார் இயேசு. அங்கிருந்து அவர் கல்வாரி மலைக்குச் செல்வார். இயேசு கடந்து செல்கிறார் மேலறையிலிருந்து ஒலிவ மலைக்கு, ஒலிவ மலையிலிருந்து கல்வாரிக்கு, கல்வாரியிலிருந்து உயிர்ப்புக்கு! பாஸ்கா ஆடு போல பலியிடப்படுவதற்காகத் தயாராகிறார் இயேசு. மேலறைக்கும் கல்வாரிக்கும் இடையே உள்ள பாலம்தான் ஒலிவ மலை. இங்கே இயேசு தம் நொறுங்குநிலையை முழுவதுமாக அனுபவிக்கிறார். துன்பக்கிண்ணம் தூக்க இயலாததாக இருக்கிறது. இருந்தாலும், தந்தையின் விருப்பத்துக்குத் தம்மையே சரணாகதி ஆக்குகிறார். நாம் கொண்டாடும் திருப்பலி நம் நொறுங்குநிலையையும் மற்றவர்களின் வலுவின்மைகளை ஏற்றுக்கொள்ளவும், இறைத்திருவுளத்துக்கு சரணாகதி அடையவும் நம்மைத் தூண்டுகிறது.
சவால்களும் பாடங்களும்:

(அ) இன்று, பல நேரங்களில், திருப்பலி அதை நிறைவேற்றுபவருக்கும், அதில் பங்கேற்பவருக்கும் சுமையாக (burden), சோர்வாக (boredom), விருப்பமில்லாததாக, தொடர்செயலாக (routine) மாறிவிட்டது. காரணம், திருப்பலி என்பது நம் செயல்பாடு எனக் கருதுகிறோம். இல்லை, இது நம் செயல்பாடு அல்ல, மாறாக, கடவுளின் செயல்பாடு. இயேசுவின் கொடை. நம் வேலை அவரிடமிருந்து கொடையைப் பெற்றுக்கொள்தல் மட்டுமே. நற்கருணையில் நாம் கடவுளுக்கு எதையும் கொடுப்பதில்லை. அவரே தம்மை நம்மிடம் கொடுக்கிறார். நம் கைகளைத் திறந்து நின்றால் போதும். மற்றவற்றை அவரே பார்த்துக்கொள்வார்.

(ஆ) எடுத்துக்கொள்ளுங்கள். இது என் உடல்! என இயேசு நம்மிடம் சொல்கிறார். இதே சொற்களை நாமும் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். நம் குடும்பத்தில், சமூகத்தில் ஒருவர் மற்றவரிடம், எடுத்துக்கொள்ளுங்கள்! இது நான்! என்று சொல்ல வேண்டும். அன்புக்கும் தற்கையளிப்புக்கும் தயாராக இருக்க வேண்டும். இரத்த உறவு, திருமண உறவு, நட்பு உறவு, மானுடத் தோழமை உறவு அனைத்தையும் உடன்படிக்கை உறவாக நான் மாற்ற வேண்டும். நான் என்னையே அளித்தாலன்றி, மற்றவர்கள் என்னைப் பெற்றுக்கொள்ள இயலாது.

(இ) கண்களைக் கடந்த பார்வையை எதிர்நோக்கியிருக்க நற்கருணை நம்மைத் தூண்டுவதால், நம் வாழ்வின் ஒலிவ மலைக்கு நாம் மகிழ்ச்சியோடு செல்ல வேண்டும். நற்கருணை தருகிற எதிர்நோக்கை நாம் ஒருவர் மற்றவருக்கு வழங்க வேண்டும். உலகம் என்னும் கெத்சமனியில் சிந்தப்படும் கண்ணீரை நாம் துடைக்க முன்வர வேண்டும்.

அன்பு, தற்கையளிப்பு, எதிர்நோக்கின் திருவிழா இது! வாழ்த்துகளும் செபங்களும்!
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
"இதை என் நினைவாய் செய்யுங்கள்"

வில்லி ஹோப்சுயூமர் (Willi Hoffsuemmer) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு.

ஒரு சமயம் நற்கருணையின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவன் ஒரு குருவானவரைச் சந்தித்து, "சாதாரண அப்பமும் திராட்சை இரசமும் எப்படி இயேசு உடலாகவும் இரத்தமாகமாகவும் மாறமுடியும்?" என்று கேட்டான். அதற்குக் குருவானவர், "உன்னாலேயே உண்ணும் உணவை உன்னுடைய உடலாகவும் இரத்தமாகவும் மாற்ற முடியும்போது, ஆண்டவர் இயேசுவால் ஏன் சாதாரண அப்பத்தை இரசத்தையும் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றமுடியாது?" என்றார்.

அவனோ விடாமல் அவரிடம், "அது எப்படி அண்ட சராசரங்கையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுளால் ஒரு சாதாரண அப்பத்துண்டுக்குள் இருக்க முடிகின்றது?" என்று கேட்டான். "பரந்து விரிந்து கிடக்கிண்ட இந்த் உலகினை உன்னுடைய சிறு கண்களால் பார்க்க முடிகின்றபோது, அகிலத்தையே படைத்த கடவுள் ஒரு சாதாரண அப்பத் துண்டுக்குள் ஏன் இருக்கமுடியாது?" என்று குருவானவர் அவனுக்கு மிகத் தெளிவான பதிலைத் தந்தார்.

மீண்டுமாக அவன் அவரிடம், "இதுதான் நான் கேட்டும் கடைசிக் கேள்வி. ஒரே ஒரு கிறிஸ்துவால் எப்படி எல்லாத் திருச்சபையிலும் பிரசன்னமாக இருக்க முடிகின்றது?" என்று கேட்டான். குருவானவோ எதுவும் பேசாமல், அருகில் இருந்த நிலைக்கண்ணாடியை எடுத்து, அவனுக்கு முன்பாக நிறுத்தி, "இதில் யாருடைய உருவம் தெரிகின்றது?" என்று கேட்டார். அவனோ, "என்னுடைய முகம் தெரிகின்றது" என்றான். உடனே குருவானவர் அந்த நிலைக்கன்னாடியைத் தூக்கிக் கீழே போட்டார். அது பல நூறு துண்டுகளாக உடைந்து சிதறியது. பின்னர் குருவானவர் அவனிடம் உடைந்து கிடந்த கண்ணாடித் துண்டுகளைச் சுட்டிக்காட்டி, "இந்தக் கண்ணாடித் துண்டுகளில் எல்லாம் யாருடைய பிம்பம் தெரிகின்றது?" என்று கேட்டார். அவனோ, "என்னுடைய முகந்தான் தெரிகின்றது" என்றான். அப்போது குருவானவர் அவனிடம், "நீ ஒரு சாதாரண மனிதன், உன்னாலேயே ஒரே நேரத்தில் உடைந்து கிடக்கும் எல்லாக் கண்ணாடித் துண்டுகளிலும் இருக்க முடிகின்றபோது, எல்லாம் வல்ல இயேசுவால் ஏன் ஒரே நேரத்தில் எல்லாத் திச்சபையிலும் இருக்க முடியாது" என்று சொல்லி அவனை வாயடைக்கச் செய்தார்.

ஆம், நற்கருணை என்பது சாதாரண அப்பம் கிடையாது. அது இயேசுவின் திருவுடல். நற்கருணையைக் குறித்துச் சொல்லும்போது திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் இவ்வாறாக குறிப்பிடுவார், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனுவுருவாகிய வார்த்தையாகிய இயேசு, இன்றும் நற்கருணை வடிவில் பிரசன்னமாக இருக்கின்றார்". எவ்வளவு ஆழமான உண்மை இது.

இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஆண்டவர் இயேசு தன்னுடைய இறுதி இராவுணவின்போது பாஸ்கா உணவின்போது - அப்பத்தைத் எடுத்து, "இது என் உடல்" என்கின்றார். பின்னர் கிண்ணத்தை தம் கையில் எடுத்து, "இது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்" என்கின்றார். இயேசு தான் இவ்வாறு சொல்வதன் வழியாகவும், செய்வதன் வழியாகவும் பாஸ்கா உணவிற்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார். இயேசு பாஸ்கா உணவிற்குக் கொடுக்கும் புதிய அர்த்தம் என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும் என்றால், பழைய பாஸ்கா விழா எப்படிக் கொண்டாடப்பட்டது அல்லது பழைய பாஸ்கா உணவு எப்படி உண்ணப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

பழைய பாஸ்கா உணவு எப்படி உண்ணப்பட்டது என்பதை விடுதலை பயண நூல் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அங்கே வெள்ளாட்டுக் கிடாயை வெட்டி, அதனை உணவாக உட்கொண்டார்கள். மேலும் அதனுடைய இரத்தத்தை பீடத்தின் மீதும், மக்கள்மீதும் தெளித்து உடன்படிக்கை செய்துகொண்டார்கள். இதுதான் பழைய பாஸ்கா உணவின்போது நடைபெற்றது. ஆனால், புதிய பாஸ்கா உணவில் அப்படியில்லை. ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுக்கின்றார், அதை உலகு வாழ்வு பெறுவதற்காகக் கொடுகின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கக்கேட்பது போல, "அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல. அவரது சொந்த இரத்தம்".

எனவே, இயேசுவின் திருவுடலும் திரு இரத்தமும்தான் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது, அது பலருடைய மீட்புக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டது என்னும் உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இயேசு தன்னுடைய உடலையும் இரத்தைதையும் நமக்கு வாழ்வளிக்கும் உணவாகவும், ஆன்மீகப் பானமாகவும் தந்துவிட்டு, "இதை என்னை நினைவாய் செய்யுங்கள்" என்பார். மாற்கு நற்செய்தியில் இவ்வார்த்தைகள் இடம்பெறாவிட்டாலும் லூக்கா நற்செய்தியிலும், தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலும் இவ்வார்த்தைகள் இடம்பெறுகின்றன (லூக் 22:19, 1 கொரி 11:24). ஆண்டவர் இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று சொல்வதற்கு பின்னால் என்ன அர்த்தம் இருக்கின்றது என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசுவின் வார்த்தைகளை நாம் இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளலாம். ஒன்று அப்படியே புரிந்துகொள்ளுதல். அதாவது ஆண்டவர் இயேசு நிறைவேற்றிய திருவிருந்தை அப்படியே நிறைவேற்றுவது. இன்றைக்கு ஒவ்வொரு நாளும் குருவானவரால் ஆண்டவருடைய திருவிருந்து நிறைவேற்றப் படுகின்றதென்றால் அதனுடைய தொடக்கம் என்று நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இங்கு இன்னொரு உண்மையையும் நம்முடைய மனதில் இருத்தவேண்டும். அது என்னவெனில், இதை என் நினைவாக செய்யுங்கள் என்று ஆண்டவர் இயேசு சொன்னதன்பேரில் ஒவ்வொருநாளும் நிறைவேற்றப்படும் திருப்பலியில் நாம் எப்படிக் கலந்துகொள்கின்றோம் என்பதுதான் அந்த உண்மை. இரண்டாம் வத்திக்கான் சங்கம், திருப்பலில், ஆண்டவரின் திருவிருந்தில் நாம் எப்படிக் கலந்து கொள்ளவேண்டும் என்று சொல்கின்றபோது, முழுமையாகவும், தெளிவோடும், பங்கேற்பாளராகவும் கலந்துகொள்ளவேண்டும் (Fully, Conscious active participateion) என்று சொல்கின்றது. இன்றைக்கு நிறையப் பேர், பாதித் திருப்பலிக்கு வந்து, சிந்தனைகளை எங்கோ அலையவிட்டு, ஏனோ தானோவென்று திருப்பலியில் கலந்துகொள்கின்றார்கள். அவர்களால் திருப்பலியின் முழுபலனையும் அடையமுடியாது என்பதே உண்மை. ஆகவே, இயேசுவின் வார்த்தைகளுக்கு இணங்க திருப்பலியை அனுதினமும் நிறைவேற்றவேண்டும். அது மட்டுமல்லாமல், அப்படி நிறைவேற்றப்படும் திருப்பலியில் ஒவ்வொருவரும் முழுமையாகக் கலந்துகொள்ளவேண்டும். அப்படிச் செய்வதனால் மட்டுமே ஒருவர் திருப்பலியின் முழுபலனையும் பெறமுடியும் என்பது உறுதி.

இதை என் நினைவாய் செய்யுங்கள் என்று ஆண்டவர் இயேசு சொல்வதில் உள்ள இரண்டாவது அர்த்தம், நற்கருணையை அடையாள முறையில் நிறைவேற்றுவது ஆகும். இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் பலருடைய மீட்புக்காகத் தந்தார். அப்படியானால், ஆண்டவரின் திருப்பலியில் கலந்துகொள்கின்ற ஒவ்வொருவரும் அவரைப் போன்றே தன்னுடைய வாழ்வை பிறருக்குத் தியாகமாகத் தரவேண்டும். அதில்தான் ஆண்டவரின் வார்த்தைகள் முழுமை பெறுகின்றன. ஆகவே, இயேசுவின் வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு, அதனை சடங்காக மட்டும் செய்துகொண்டிருக்காமல், இயேசுவைப் போன்று நம்முடைய வாழ்வினை பிறருக்குத் தியாகமாகத்தர முன்வரவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தென் அமெரிக்காவை சேர்ந்த கப்பல் ஒன்று கடலில் பயணம் செய்துகொண்டிருந்தது. அதில் குழந்தைள், பெண்கள், ஆண்கள் என்று ஏராளமான பேர் பயணம் செய்தார்கள். நன்றாகப் போய்க்கொண்டிந்த கப்பல், கடலில் திடிரென்று வீசிய கடும் புயலில் சிக்கி சின்னாபின்னமானது. இதனால் கப்பலுக்குள் தண்ணீர் வந்து, அது கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. இதைக் கண்டு கப்பலில் இருந்தோர் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினார்கள்.

அந்நேரத்தில் அவ்வழியாக ஒரு சிறிய படகு வந்தது. அந்தப் படகில் இருந்தவர் கப்பல் இப்படி சின்னபின்னமாகிப் போயிருப்பதையும் அதில் இருப்போர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதையும் கண்டார். எனவே, அவர் கப்பலில் இருந்தோர் சிலரை தன்னுடைய படகில் ஏற்றிக்கொள்ளத் தீர்மானித்தார். ஆனால், தன்னுடைய படகு சிறியது என்பதால், முதலில் குழந்தைகளையும் பெண்களையும் ஏற்றிக்கொண்டார். இன்னும் படகில் ஒரே ஒருவரை மட்டும் ஏற்றிக்கொள்கின்ற அளவுக்கு இடம் இருந்தது. ஆனால், கப்பலில் இருந்த நிறைய ஆண்கள் அந்த ஓர் இடத்தைப் பிடிப்பதற்கு முயன்றுகொண்டிருந்தார்கள்.

அப்போது படகை ஓட்டிவந்தவர் அவர்களிடம், "இந்தப் படகில் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரே ஒருவரைத் தான் ஏற்றிக்கொள்ளமுடியும். யார் அந்த ஒருவர் என்பதை இப்போது சீட்டுக் குலுக்கிப்போடுவோம், யாருடைய பெயர் வருகின்றதோ, அவர் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம்" என்றார். கப்பலில் இருந்தவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, எல்லா ஆண்களின் பெயர்களும் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டது. சீட்டு பெர்னத் என்ற வழக்குரைஞர் பெயருக்கு விழுந்தது. அவர் ஒரு பக்தியான கிறிஸ்தவர். அவரோ படகு உரிமையாளரிடம், "படகில் இருக்கும் அந்த ஓரிடம் எனக்கு வேண்டாம். மாறாக என்னுடைய நண்பனுக்குத் தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு படகு உரிமையாளர், "ஏன்?" என்று காரணத்தைக் கேட்டபோது, பெர்னத் என்ற அந்த வழக்குரைஞர், "இந்தக் கப்பலிலே பயணம் செய்வதற்கு முன்பாக நான் திருப்பலியில் கலந்து. திவ்விய நற்கருணை உண்கொண்டு வந்தேன். நான் உட்கொண்ட நற்கருணை என்னை ஆண்டவர் இயேசுவைப் போன்று பிறருக்கு வாழ்வுகொடுக்கத் தூண்டியது. அதனால்தான் என் பெயரில் விழுந்த சீட்டுக்கு என்னுடைய நண்பனுடைய பெயரைப் பரிந்துரைக்கின்றேன்,. அவனை நீங்கள் உங்கள் படகில் ஏற்றுக்கொண்டு, அவனுடைய உயிரைக் காப்பாற்றுங்கள்" என்றார். இதைக் கேட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.

நாம் உட்கொள்ளும் நற்கருணை நம்மை பிறருக்காக வாழ்வுகொடுக்கத் தூண்டவேண்டும். அப்போதுதான் நாம் உட்கொள்ளும் நற்கருணைக்கு அர்த்தம் இருக்கின்றது.

எனவே, ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர் நமக்காக தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் தந்தார் என்பதை உணர்ந்து, நாமும் அவரைப் போன்று பிறர் வாழ்வுபெற நம்மையே தியாகமாய் தருவோம், திருப்பலியில் முழுமையாய் கலந்துகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
ஒரு நாள் விண்ணகத்திலிருந்து மண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உன்னைப் பார்த்தேன். உனக்கு நல்ல பசி நீ வாடி வதங்கிக் கிடந்தாய். உன் கண்களில் ஒளியில்லை ! உன் கைகளில் அசைவில்லை! உன் கால்களில் உரம் இல்லை! உன் சமுதாயத்தில் நீதியில்லை! உன் நெஞ்சினில் அமைதி இல்லை! உன் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை!

நீ சருகாகும் முன்பே நீ பசியாற உனக்கு ஏதாவது கொடுக்க நான் விரும்பினேன். சிந்தித்தேன். இறுதியாக, உன்னை நான் சந்தித்தேன்.

உலகத்திலுள்ள எதைக் கொடுக்கலாம் என எண்ணிப் பார்த்தேன்! என்னைச் சுற்றிப் பார்த்தேன். எல்லாமே குறை உள்ளதாக இருப்பதைக் கண்டேன்.

நான் மட்டும்தான் நிறையுள்ளவன் என்பதை உணர்ந்தேன். ஆகவே உனக்கு நிம்மதி தர என்னையே உனக்குக் கொடுப்பதென்ற முடிவுக்கு வந்தேன்.

அப்பத்தை எடுத்து : இது என் உடல் என்றேன் (மாற். 14:22). இரசத்தை எடுத்து இது என் இரத்தம் என்றேன் (மாற். 14:24). இதோ நீ கங்கை போல் களிக்க, காவிரிபோல் சிரிக்க, தேன்போல் இனிக்க, மலர்போல் மணக்க, மயில்போல் ஆட, குயில்போல் பாட என்னையே நான் உனக்குக் கொடுத்துவிட்டேன்! (எபி. 9:11).

நான் உனக்குக் கொடுத்திருக்கும் உணவு பழைய ஏற்பாட்டு மக்கள் உண்ட மன்னாவைப் போன்றது அன்று! நான் தரும் இரத்தம் மோசே மக்கள் மீது தெளித்த மிருகங்களின் இரத்தத்தைப் போன்றது அன்று (வி.ப. 24:3-8).

அது சரி! இப்படி என்னையே கொடுத்த எனக்கு நீ எதைக் கொடுக்கப் போகிறாய்? நீ எதையாவது கொடுப்பாய் என எதிர்பார்த்து நான் என்னையே கொடுக்கவில்லை. ஆனால் கொடுப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் கொடுக்காதவர் களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்பதினால் இப்படியொரு கேள்விக் கணையை உன்மீது தொடுத்தேன்.

கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று மட்டும் நினைத்து விடாதே! நான் விரும்பும் ஒன்று உன்னிடத்தில் இருக்கிறது! நீ விரும்பினால் அதை நீ இதே வினாடியில் எனக்குக் கொடுக்கலாம். கொடுத்துப் பேரின்பமாகிய என்னைப் பெற்று நீ நிறை நிம்மதியோடு என்றென்றும் இனிதே வாழலாம்!

நீ எனக்குக் கொடுக்கக் கூடியது என்ன என்று கேட்கிறாயா? கதையொன்று சொல்கிறேன் கேள். அது உனக்கோர் உன்னதமான பதிலைச் சொல்லும்!

ஒரு தாய்க்குப் பிறந்தது மூன்று குழந்தைகள். முதல் குழந்தை அரசாங்க அலுவலன். தாய்க்கு அழகிய பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்தான். அவனுக்கு அடுத்தவன் ஒரு பள்ளி மாணவன். தாய்க்கு பிரியமான அல்வாவை வாங்கிக் கொடுத்தான். ஆனால் கடைசிக் குழந்தை வயது 5. யாரும் கொடுக்காத ஒன்றைத் தன் தாய்க்குக் கொடுக்க விரும்பினாள். சிந்தித்தாள். ஓடிபோய்த் தன் தாயின் மடியில் உட்கார்ந்து கொண்டு அம்மா என்னையே நான் உனக்குத் தருகிறேன் என்றாள். தாய்க்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி. உன்னையே நீ எனக்குக் கொடுத்தாய், என்னையே உனக்கு நான் தருகிறேன் என்று தாய் மகளுக்கு அன்பு முத்தம் கொடுத்து அரவணைத்தாள்.

இன்று உன்னிடமிருப்பதை நீ கொடுக்க முற்படுவதை விட உன்னையே நீ எனக்குக் கொடுக்க முற்படு. இந்த உலகிலேயே எனக்கு மிகவும் பிரியமான பொருள் நீதான்! ஆகவே இன்று எனக்கு உண்ண உணவு வேண்டாம்.

உடுக்க உடை வேண்டாம். முத்துமணிச் சுடர் வேண்டாம். முல்லை மலர்ச் சரம் வேண்டாம். தங்கத் தேரும் வேண்டாம். தாலாட்டுப் பாடவும் வேண்டாம். எனக்கு நீதான் வேண்டும். தருவாயா?..... தயக்கமா? மயக்கமா? மனதிலே குழப்பமா? உன் மனம் ஏன் மயங்குகிறது என்பது எனக்குப் புரிகிறது. உன்னையே எனக்கு நீ கொடுத்துவிட்டால் - உன்னையே நீ இழக்க வேண்டும் என்று பயப்படுகிறாயா? ஒன்று மட்டும் சொல்கிறேன். என்னிடம் தன்னையே கொடுத்தவர் யாரும் இதுவரை அழிவுக்கு உள்ளானதில்லை! மலருக்குத் தன்னையே கையளிக்கும் நாருக்கு நேர்வது என்ன? வாழ்வா? சாவா? பாலுக்குத் தன்னையே கையளிக்கும் நீருக்கு நேர்வது என்ன? வாழ்வா? சாவா?

சக்கேயு தன்னையே எனக்குத் தந்தானே! தந்தவனுக்கு நான் தந்தது என்ன? புதுவாழ்வு!
மதலேனாள் - தன்னையே எனக்குத் தந்தாளே! தந்தவளுக்கு நான் தந்தது என்ன? புது வசந்தம்!
தன்னைத் தந்தவர்களுக்கெல்லாம் நான் என்னைத் தந்தேன். ஆகவே உன்னையே நீ எனக்குத் தருவாயா? உன் பதிலுக்காக நற்கருணையில் நான் காலமெல்லாம் காத்திருப்பேன்.
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
தியாகம் தேவ

இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா ஒரு தியாகப் பெருவிழா. நான்கு வகையான தியாகங்கள் உண்டு:

உள்ளதிலிருந்து இழத்தல்
உள்ளதையெல்லாம் இழத்தல்
உள்ளதையெல்லாம் இழந்து உடலையும் இழத்தல்
உடலையும் இழந்து உயிரையும் இழத்தல்

இஸ்ரயேல் மக்கள் மாடுகளை (முதல் வாசகம்), வெள்ளாட்டுக் கிடாய்களை, கன்றுக் குட்டிகளை (இரண்டாம் வாசகம்) கடவுளுக்குப் பலியிட்டார்கள். அவர்களிடம் உள்ளதைக் கடவுளோடும், மனிதர்களோடும் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவரிடமிருந்த அனைத்தையும், உடல், உயிர் அனைத்தையும் மக்களுக்குக் கையளிக்க முன்வந்து (நற்செய்தி) தியாகச் சிகரமானார்.

இந்தத் திருவிழா அர்த்தமுள்ள திருவிழாவாக நமக்கு அமைய வேண்டுமானால் நாம் இயேசுவைப் போல தியாக வாழ்வு வாழ முன்வர வேண்டும்; நாம் உட்கொள்ளும் நற்கருணை நமது வாழ்வைத் தியாகத்தால் பற்றி எரியச் செய்யவேண்டும்.

ஒன்று மட்டும் உண்மை !

எங்கே தியாகம் இருக்கின்றதோ அங்குதான் மீட்பு இருக்கும்; விடுதலை இருக்கும்; சுதந்தரம் இருக்கும்.

இதோ ஒரு கதை!

எலிகள் மாநாடு நடந்தது 1 சுதந்தரமாக வாழ ஆசைப்பட்ட அந்த எலிகள் நடுவே பூனைக்கு மணிகட்டுவது யார்? என்ற கேள்வி எழுந்தது! சின்ன ரப்பர் வளையத்தில் சின்ன மணி தயாராக இருந்தது.யாரும் முன்வரவில்லை பூனைக்கு மணிகட்ட! இறுதியாக ஒரு குட்டி எலி முன் வந்தது! வரவேண்டிய நேரத்தில் பூனை வந்துவிட்டது!

குட்டி எலியைத் தவிர மற்ற எல்லா எலிகளும் ஓடி ஒளிந்து கொண்டன!

தன்னை நோக்கி வந்த குட்டி எலிமீது பூனை பாய்ந்தது! குட்டி எலி பூனையின் வாயில் சிக்கியது. ஆனால் குட்டி எலி மின்னல் வேகத்தில் ரப்பர் வளையத்தை பூனையின் கழுத்தில் மாட்டிவிட்டு உயிர் துறந்தது! அன்றிலிருந்து மற்ற எல்லா எலிகளுக்கும் மீட்புக் கிடைத்தது. விடுதலை கிடைத்தது, சுதந்தரம் கிடைத்தது.

விதை மண்ணில் விழுந்து மடிந்தால்தான் செடி முளைக்கும்.

மூங்கில் காயப்பட்டால்தான் இசை பிறக்கும்..

ஒரு ஊதுவர்த்தி எரிந்தால்தான் மணம் பிறக்கும்.

வீட்டிலுள்ளவர்கள் ஒருவர் மற்றவர்க்காகத் தியாகம் செய்ய முன்வரும் போதுதான் அந்த வீட்டுக்குள்ளே வாழ்வு பிறக்கும், நீதி பிறக்கும், அமைதி பிறக்கும், மகிழ்ச்சி பிறக்கும், இறையரசு பிறக்கும். (உரோ 14:17) இந்த இந்தத் திருவிழா தொட்டும் தொடாத, பட்டும் படாத திருவிழாவாக இல்லாமலிருக்க நாம் ஒவ்வொருவரும் தியாக மழை பொழியும் மேகமாவோம்.

மேலும் அறிவோம்:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று) ஆங்கே
பசும்புல் தலைகாண்(டி) அரிது (குறள் : 16).

பொருள் :
வான்வெளியாம் மேகத்திலிருந்து மழை நீர் நிலத்தில் விழுந்தால்தான் ஓரறிவு உயிராகிய பசும்புல் கூடத் துளிர்க்கும்! மழைத்துளி இல்லாவிட்டால் புல்லும் தளிர்க்காது!
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
தமிழ் ஆசிரியர் ஒருவர் இலக்கண வகுப்பில் மாணவர்களிடம் காதலுக்கும் பாசத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்று. கேட்டதற்கு, பிரவீன் என்ற மாணவன்: "சார், நீங்கள் உங்கள் மகளிடத்தில் வைத்திருக்கும் அன்பு பாசம்; உங்கள் மகளிடத்தில் நான் வைத்திருக்கும் அன்பு காதல்" என்றால், அதற்கு ஆசிரியர், "சரியான பதில், உட்காரும் மாப்பிள்ளை" என்றார்.

மனிதரை 'உறவுகளின் முடிச்சு' என்று பொருத்தமாக அழைக்கலாம். எல்லா உறவுகளுக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது அன்பு. அந்த அன்பு யாரிடம் காட்டப்படுகிறதோ அதற்கேற்ப, அது வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் எடுக்கிறது. இரு நண்பர்களுக்கு இடையே உள்ள அன்பு நட்பு என்றும், கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு காதல் என்றும், பெற்றோர் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு பாசம் என்றும், தாய் நாட்டின்மீதும் தாய்மொழி மீதும் காட்டப்படம் அன்பு பற்று என்றும், கடவுளிடம் காட்டப்படும் அன்பு பக்தி என்றும், கடவுள் காட்டும் அன்பு அருள் என்றும் அழைக்கப்படுகிறது.

விவிலியத்தில் கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவிய அன்பு உடன்படிக்கை அன்பு என்றழைக்கப்படுகிறது. விவிலியம் காட்டும் கடவுள் உடன்படிக்கையின் கடவுள். இன்றைய முதல் வாசகம் கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் தம் ஊழியன் மோசே வழியாக மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு செய்த உடன்படிக்கையை விவரிக்கிறது (விப 24:3-8). உடன்படிக்கையில் இறுதியில், 'ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்' (விப 19:8) என்று இஸ்ரயேல் மக்கள் இறைவனுக்கு வாக்குறுதி அளித்தபோதிலும், அவர்கள் பிற இனத் தெய்வங்களை வழிபட்டு, தங்கள் கடவுளோடு அவர்கள் செய்த உடன்படிக்கை அன்பை முறித்தனர். எனவே, இறைவன் இறைவாக்கினர் எரேமியா வாயிலாக புதியதோர் உடன்படிக்கையை முன்னறிவித்தார் (எரே 31:31).

கடவுள் முன்னறிவித்த இப்புதிய உடன்படிக்கையின் இணைப்பாளர் கிறிஸ்து. இவர், மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு அல்ல, மாறாக தமது சொந்த இரத்தத்தினால் புதிய உடன்படிக்கையைச் செய்தார். ஏனெனில் மிருகங்களின் இரத்தம் மனிதரின் பாவங்களைப் போக்கர் சக்தியற்றது. (எபி 9:11-15).

இன்றைய நற்செய்தி கிறிஸ்து தமது சீடரோடு கொண்டாடிய இறுதிப் பாஸ்காவை விவரிக்கிறது. அன்று மாலையில், அதாவது அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில், தமது கல்வாரிப்பலியை அப்ப, இரசஅடையாளத்தில் நிலைப்படுத்திப் புதிய உடன்படிக்கையைச் செய்கிறார், "இது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மாற் 14:21).

கிறிஸ்து தமது சிலுவைப் பலியால் முற்காலப் பலிகளை நிறைவு செய்து, அவரே குருவாகவும், பலிபீடமாகவும், செம்மறியாகவும் விளங்கினாம் (பாஸ்கா நன்றியுரை).

இன்று திருச்சபை கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. கிறிஸ்து தாம் பாடுபடுவதற்கு முன்பு பாஸ்கரா உணவைத் தம் சீடர்களுடன் உண்பதற்கு, 'ஆசை ஆசையாய் இருந்தார் (லூக் 22:16), அவர் நமக்கு வழங்கியுள்ள நற்கருணை என்னும் உயிருள்ளனவை (யோவா 6:51) உன்னை நாமும் 'ஆசை ஆசையாய்' இருக்கிறோமா?

திருச்சபையின் வாழ்வு முழுவதும் நற்கருணை என்னும் மறைபொருளுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. நற்கருணையின்றித் திருச்சபை இல்லை, திருச்சபையின்றி நற்கருணை இல்லை என்று சொல்லும் அளவிற்குத் திருச்சபையும் நற்கருணையும் இணைந்துள்ளன. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, நற்கருணைப் பலிதான். 'கிறிஸ்துவ வாழ்வனைத்தின் ஊற்றும் உச்சியுமாகும்' (திருச்சபை, எண் 11), அதே சங்கம் மேலும் கூறுகிறது: "நற்கருணைப் பல் இரக்கத்தின் அருளடையாளம், ஒற்றுமையின் அடையாளம், அன்பின் பிணைப்பு. பாஸ்கா விருந்து, இவ்விருந்தில் கிறிஸ்து உண்ணாப்படுகிறார்: அகம் அருளால் நிரப்பப்படுகிறது: வரவிருக்கும் மாட்சிமையின் உறுதி மொழி நமக்கு அளிக்கப்படுகிறது (திருவழிபாடு. எண் 47).

நற்கருணைக் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்பும் நினைவு கூரப்படுகிறது (இறந்தகாலம்). அதே மறைபொருள் பிரசன்னமாகிறது: அதில் நாம் அருளடையாள் முறையில் பங்கேற்கிறோம் (நிகழ்காலம்): நற்கருணை விண்ணக மகிமைக்கு அச்சாரமாகவும் உள்ளது (எதிர்காலம்), எனவே, நற்கருணை முக்காலத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நற்கருணை: நம்மைக் கிறிஸ்துவுடனும், ஒருவர் ஒருவருடனும் இணைக்கிறது, நற்கருணை நம்மைக் கிறிஸ்துவுடன் நெருக்கமாக இணைக்கின்றது. "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்" (யோவா 6:56). நற்கருணையை உட்கொள்வதால் நாமும் கிறிஸ்துவாக மாறி, 'இனி வாழ்பவள் நான் அல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்' (கலா 2:20) என்ற நிலையை அடைகிறோம்.

புனித தோமா அக்குவினா வாழ்ந்த துறவற மடம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தபோது, அவர் நற்கருணைப் பேழையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, "ஆண்டவரே! நாங்கள் வெந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறோம்" என்று கதறினார், என்ன புதுமை! தீயானது தானாகவே அமைந்துவிட்டது. நற்கருணை தான் நமது காமத்தீ. காய்மகாரத்தீ, போட்டித்தீ, பொறாமைத்தீ, பேராசைத்தீ முதலிய பல்வேறு தீக்களை அணைக்கக்கூடிய ஆற்றல்மிகு அருளடையாளம்.

நற்கருணை நம்மைக் கிறிஸ்துவோடு மட்டுமல்ல, ஒருவர் ஒருவருடனும் இணைக்கிறது. "அப்பம் ஒன்றே, ஆதலால் தாம் பரலாயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்" (1 கொரி 10:17). எனவே, 'கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும் நாமனைவரும் தூய ஆவியால் நிரப்பப்பட்டு, கிறிஸ்துவுக்குள் ஒரே. உடலும் உயிருமாக விளங்கவேண்டும்' (நற்கருணை மன்றாட்டு 3).

கிறிஸ்துவர்களிடையே நிலவிவரும் பாகுபாடு, குறிப்பாக சாதி வேறுபாடு ஓர் உயிர்க்கொல்லி நோய்: குணப்படுத்த முடியாத புற்றுநோய். சாதி வேறுபாட்டுடன் நாம் உட்கொள்ளும் நற்கருணை நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் தரும் மருந்தாக அமையுமா? அல்லது நம்மை நீதித் தீர்ப்புக்கும் தண்டளைக்கும் உள்ளாக்கும் சாபக்கேடாக அமையுமா? நம்மை ஓட ஓடத் துரத்திக் கொண்டுவரும் கேள்வி இது. இக்கேள்விக்கு பதில் என்ன?
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
வணங்கவா, வழங்கவா?

அப்பல்லோ 13 என்றால் என்ன தெரியுமா? வெண்ணிலவு நோக்கி அமெரிக்கா செலுத்திய விண்வெளிக் கப்பல் என்றா சொல்கிறீர்கள்? அல்ல.

அறிவியலுக்கு இறைவன் கொடுத்த சாட்டையடி! அப்பல்லோ 11, 12 என்று வெற்றி மேல் வெற்றி கண்டு விஞ்ஞானம் வீறுநடைபோட்ட நேரம். அதற்குத் தன்னிலை உணர்த்த, அதன் சக்தியின் எல்லையை வரையறுத்துக்காட்ட இறைவன் விடுத்த எச்சரிக்கையே அப்பல்லோ 13இன் வீழ்ச்சி.

அப்பல்லோ 13இல் ஜேம்ஸ் லோவல் தலைமையில் மூவர் பயணம் செய்தனர். திடீரென்று பிராண வாயுக்கலம் வெடித்து விட்டது. நிலவில் இறங்கியதும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த இருவருக்கென வைத்திருந்த கலத்தினுள் மூவரும் நுழைந்து கொண்டனர். கடுங்குளிர், காரிருள், இடிபாடுகள் இவற்றிற்கிடையே உயிருக்கு ஆபத்து' என்ற உண்மையை உணர்ந்தனர்.

அந்த அதிர்ச்சியில் குழுத் தலைவன் ஜேம்ஸ் லோவலுக்கு 76ஆக இருக்க வேண்டிய இதயத் துடிப்பு, 120 ஆக எகிறியது. அமைதிப் படுத்துவதற்காக, கீழே கட்டுப்பாட்டு அமைப்பகத்திலிருந்து செய்தி அனுப்பினார்கள் "பயப்படாதீர்கள். உயிரைக் கொடுத்தேனும் உங்கள் மூவரையும் காப்பாற்றுவோம்" என்று. உடனே ஜேம்ஸ் லோவல் உரக்கக் கூவினாராம்: "நாங்கள் மூவரா? இல்லை நால்வர் இருக்கிறோம். எங்களோடு கடவுள் இருக்கிறார்".

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் எத்துணை ஆறுதல்! "இதோ, உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்.28:20) என்ற இறைமகன் இயேசு தன் வாக்குறுதிக்கு இறுதி வடிவம் கொடுத்ததே நற்கருணை வழியாகத் தானே!.

சாது சுந்தர்சிங் என்பவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வு இது. நற்செய்திப் பணி ஆற்றச் செல்கிறார். குறுக்கே ஆறு - அக்கரையில் உள்ள ஊர்தான் பணித்தளம். ஆற்றைக் கடக்கப் படகோ பாலமோ இல்லை. "என்ன செய்வது? மக்கள் காத்திருப்பார்களே" என்று அங்கலாய்த்த போது அருகில் இருந்த குடிசையிலிருந்து பெரியவர் ஒருவர் வந்தார். சாது சுந்தர்சிங் அவர்களின் கவலையைப் பற்றி அறிந்ததும், "கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லி விட்டுக் குடிசைக்குத் திரும்பி ஓர் ஏர்ப்பில்லோ வடிவில் ஒரு பெரிய பலூனைக் கொண்டு வந்தார். அதனைக் காற்றால் நிரப்பி உப்பச் செய்து "இதைத் தண்ணீரில் போடுகிறேன். நீங்கள் அதன்மேல் இருந்து செல்லுங்கள்" என்றார். அதன்படியே நடக்கிறது. அக்கரை சென்றடைந்ததும் சாது. சுந்தர்சிங் சிந்திக்கிறார். "இந்தப் பொருள் நம்மை எப்படிக் கரை சேர்த்திருக்கிறது? அதற்குக் காரணம் உள்ளே உள்ள காற்றுத்தானே! உலகம் முழுவதும் தான் காற்று பரந்து விரிந்து பரவிக் கிடக்கிறது. அதனால் நமக்குப் பெரிதும் உதவியில்லை. ஆனால் அதே காற்றை இந்தப் பலூனுக்குள் அடக்கியதும் கரைசேர நமக்கு எவ்வளவு பயன்!".

அதுபோலத்தான் இறைவனின் உடனிருப்பு, பிரசன்னம் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், இயேசு அந்த உடனிருப்பை நற்கருணை என்னும் அருள்சாதனத்தில் நிறைத்து நம்மைக் கரை சேர்க்கிறார். நமக்குத் துணை நிற்கிறார். இலக்கை அடைய வழி செய்கிறார்.

அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே
அன்பெனும் குடில்புகு அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே -
என்று இறைவனை அன்பின் வடிவாக்கி இரசிக்கும் மனிதன். கிறிஸ்துவைப் பொருத்தவரை மலைப் பொழிவில் நின்று தெய்வ அறிவை வியந்து நிற்கிறானே தவிர, கல்வாரியில் அந்த அன்புத் தெய்வம் நம்மோடு இருக்க மட்டுமல்ல, நமக்கென தன்னையே கொடுக்கவும் திட்டமிட்டது.

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (யோவான் 6:51). உடனே எழுந்த வாக்குவாதம்: "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?''.

குழந்தைக்குப் பாலூட்டும் தாயைப் பார்த்ததில்லையா? பாலமுது என்பது என்ன? தன் உடலின் சத்தை, ஒடும் இரத்தத்தைத்தானே பாலாக மாற்றி உயிர் வளர்க்கிறாள் தாய்! ஒரு தாய் செய்வதைத் தாயைப் படைத்த கடவுளால், தாய் மறந்தாலும் நான் மறவேன் என்ற இறைவனால் செய்ய இயலாதா? ஆகட்டும் என்று சொல்லால் அனைத்தையும் படைத்தவருக்கு முடியாதது என்ற ஒன்று இருக்குமா என்ன ?

எவனோ ஒருவன் படைப்பின் நோக்கத்தை இப்படிப் பாடி வைத்தான். "படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக. மனுவைப் படைத்தான் தனை வணங்க" என்று. முதல் வரி பொருள் உள்ளது. மறுவரி பொருத்தமானதா? இறைவனை வணங்குவது மனிதனின் கடமைதான். ஆனால் படைப்பின் இலட்சியமாக இறைவன் எண்ணியிருப்பாரா? இரண்டாவது வரியில் 'ண' என்ற எழுத்தை நீக்கி 'ழ' என்று மாற்றிப் பாடியிருந்தால் எவ்வளவு பொருளும் பொலிவும் நிறைவும் பெற்றிருக்கும்!

படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக
மனுவைப் படைத்தான் தன்னை வணங்க அல்ல, தன்னை வழங்க

இயற்கை வழி, இறைவார்த்தை வழி, இப்படியாகப் பல்வேறு வழிகளில் தோன்றும் இறைவன், அருள்சாதனமாம் நற்கருணை வழித் தன் உடனிருப்பை மட்டுமல்ல, பகிர்தலின் உச்சத்தை உணர்த்துகிறார். நாமும் அங்கே அன்பைப் பெருக்கி நமதாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கைப் பார்க்கிறோம். ''வருந்திச் சுமைசுமக்கும் மக்களே, வாருங்கள்... தேற்றுவேன்" என்ற ஆறுதல் மொழியைக் கேட்கிறோம்.

எங்கோ படித்த ஆங்கில வரிகள் நினைவுக்கு வருகின்றன.
Life can be too lonely when nobody helps
Life can be so empty when nobody shares.

வாழ்க்கையில் நமக்குத் தனிமை உணர்வு இல்லை. காரணம்? நற்கருணையில் இயேசு நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் நமக்கு வெறுமை விரக்தி இல்லை. காரணம்? நற்கருணையில் இயேசு நமக்காகத் தன்னையே வழங்கிக் கொண்டிருக்கிறார்.
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தத் திருவிழா

இயேசு சபையின் முன்னாள் தலைவர் பேத்ரோ அருப்பே அவர்கள், சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணி புரிந்தவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில் அங்கு அவர் நவதுறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு, ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்தக் கொடுமையின்போது, அந்த நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசுசபை நவதுறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அதன் கதவு, சன்னல்கள் எல்லாம் உடைந்தாலும், கட்டிடம் ஓரளவு உறுதியாய் நின்றது. அந்த இல்லம் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும், காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அந்த இல்லத்தின் கோவிலில், பேத்ரோ அருப்பே அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:

"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத திருப்பலி அது" என்று அருள்தந்தை பேத்ரோ அருப்பே அவர்கள், தன் நினைவுகளை ஒரு நூலில் பதிவு செய்துள்ளார்.

அருள்தந்தை அருப்பே அவர்கள், மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்லாமல், வெளியிலும் சென்று, தன்னால் இயன்ற அளவு, மருத்துவ உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை, அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, நாகமுரா சான் என்ற இளம்பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால், அந்த இளம்பெண்ணின் உடல், பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையுடன். அப்பெண், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட தந்தை அருப்பே, அவர் அருகில் முழந்தாள் படியிட்டு, அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது, அந்தப் பெண், தந்தை அருப்பேயிடம், "சாமி, எனக்குத் திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். தந்தையவர்கள், கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக்கொண்டு, தலையை அசைத்தபடி, தான் கொண்டு வந்திருந்த திருநற்கருணையை அந்தப் பெண்ணுக்குத் தந்தார். மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட இளம்பெண் நாகமுரா சான், சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.

ஒரு மறக்கமுடியாத திருப்பலி, மறக்க முடியாத திருநற்கருணை பரிமாற்றம் இரண்டையும் அருள்தந்தை அருப்பே அவர்கள், தன் வாழ்வைப் பாதித்த ஆழமான நினைவுகளாக எழுதிச் சென்றுள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திருஉடல் திருஇரத்தத் திருவிழா.

நம்மில் பலர் சிறுவயதில் புது நன்மை வாங்கியிருப்போம். அந்த நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குத்தந்தையர், அல்லது, அருள்சகோதரிகள், நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித் தந்திருப்பர். அப்ப இரச வடிவில், இயேசு பிரசன்னமாகி இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப்பற்றி கதைகள் பல சொல்லியிருப்பர். இந்தக் கதைகள் இன்னும் நம் நினைவுகளில் தங்கியிருந்தால், இன்னும் நம் வாழ்வில் தாக்கங்களை உருவாக்கி வந்தால், நாம் பேறுபெற்றவர்கள்.

சென்ற வாரம், மூவொரு இறைவனைப்பற்றி, புனித அகுஸ்தினுக்கு, கடற்கரையில், ஒரு சிறுவன் சொல்லித்தந்த பாடத்தைப்பற்றி சிந்தித்தோம். இன்று, நாம் கொண்டாடும், ஆண்டவரின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவுக்குத் தேவையான பாடத்தை, மற்றொரு குழந்தையின் வழியே பயில முயல்வோம். நாம் சந்திக்கப்போகும் குழந்தை, அன்பு மருத்துவர் (Doctor Love) என்று புகழ்பெற்ற லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்ற பேராசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு பெற்ற ஒரு குழந்தை.

அதிக அன்பு காட்டிய குழந்தை யார் என்று தீர்மானிக்க, ஒருமுறை, லியோ புஸ்காலியா அவர்களை நடுவராக நியமித்தனர். பல குழந்தைகள், இந்தப் போட்டிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அண்மையில் செய்த மிக அன்பு நிறைந்த செயல்கள் லியோ அவர்களிடம் விவரிக்கப்பட்டன. அக்குழந்தைகளிலிருந்து ஒரு 4 வயது சிறுவன் மிக அன்பு காட்டிய சிறுவன் என்று லியோ தேர்ந்தெடுத்தார். அந்தச் சிறுவன் என்ன செய்தான்?

அந்தச் சிறுவன் வாழ்ந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில், வயதானவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் மனைவியை அண்மையில் இழந்தவர். ஒரு நாள் மாலை, அவர் தன் வீட்டுக்கு முன்புறத்தில், ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடிய வண்ணம் இருந்தது. அதைப் பார்த்த அச்சிறுவன், அந்த வயதானவர் அருகே சென்று, அவர் மடியில் ஏறி அமர்ந்தான். இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்ட நேரம் சென்று, சிறுவன் மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் செய்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா அவனிடம், "நீ தாத்தா மடியில உக்காந்திருந்தியே, அவர்கிட்ட என்ன சொன்ன?" என்று கேட்டார். சிறுவன் அம்மாவிடம், "ஒன்னும் சொல்லல. அவர் நல்லா அழட்டும்னு அவர் மடியில உக்கார்ந்திருந்தேன்" என்று சொன்னான்.

அச்சிறுவனின் இந்தச் செயலுக்காக, அதிகக் கனிவுடையக் குழந்தை என்ற பரிசை, அச்சிறுவனுக்கு, லியோ அவர்கள் வழங்கினார். வயதானவரின் மடியில் எவ்விதத் தயக்கமும் இல்லாமல், உரிமையோடு ஏறி அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன், இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவின் உட்பொருளை நமக்கு சொல்லித் தருகிறான்.
அன்பை ஆயிரமாயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்பு கொண்டவருடன் தங்கியிருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே, அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் சிகரம். அத்தகைய அன்பின் அருளடையாளமே, இயேசுவின் திருஉடலும், திருஇரத்தமும்.

எப்படி நம் இறைவன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்வியை விட, அவர் ஏன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை தேடுவது நமக்கு நல்லது என்று சென்ற வாரம் சிந்தித்தோம். அதேபோல், இயேசுவின் பிரசன்னம் எப்படி அந்த அப்ப இரச வடிவில் உள்ளதென்பதைக் கூறும் இறையியல் விளக்கங்களை காட்டிலும், ஏன் நம் இறைமகன் இயேசு அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கியுள்ளார் என்பதை உணர்ந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும்.

இறைமகன், ஏன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட எளிய உணவு. எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலின் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு, இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். எளிய உணவாக, நாம் தினமும் உண்ணும் உணவாக, நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவாக, இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இந்தக் கொடையை, இந்த அன்புப் பரிசைக் கொண்டாடும் திருநாளே, இயேசுவின் திருஉடல், திருஇரத்தத் திருவிழா.

தங்களுடன் இறைமகன் இயேசு எப்போதும் தங்கியுள்ளார் என்ற அந்த ஓர் உணர்வால், எத்தனையோ உன்னத உள்ளங்கள், உழைக்கவும், தங்கள் உயிரை இழக்கவும் தயாராக இருந்தார்கள். இந்த உன்னத உள்ளங்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள இரு வாழ்வு அனுபவங்களுடன் நம் சிந்தனைகளை நாம் இன்று நிறைவு செய்வோம்:

சான் பிரான்சிஸ்கோ உயர்மறைமாவட்டத்தின் பேராயர் ஜான் குவின் அவர்கள், தன் மறைமாவட்டத்தில் உழைக்க புனித அன்னை தெரேசாவையும் சில சகோதரிகளையும் அழைத்திருந்தார். அருட்சகோதரிகள் தங்குவதற்கு அவர் ஒரு வீட்டை தாயரித்திருந்தார். அன்னை தெரேசா அங்கு வந்தபோது, அந்த வீட்டில் செய்யப்பட்டிருந்த வசதிகளையெல்லாம் பார்த்தார். வீட்டின் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளங்களை எடுக்கச் சொன்னார். கதவு, சன்னல்களுக்குப் போடப்பட்டிருந்த திரை சீலைகளை எடுக்கச் சொன்னார். வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து தொலைபேசிகளுக்குப் பதில் ஒன்று போதும் என்று சொன்னார். இப்படி அவர் ஒவ்வொன்றாக அந்த வசதிகளையெல்லாம் குறைத்தபின், பேராயரிடம், "ஆயரே, இந்த வீட்டில் எங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே." என்று சொன்னாராம். இறைமகன் இயேசுவின் பிரசன்னம் இருந்தால் போதும் என்று வாழ்ந்த அன்னை தெரேசா, உலகில் உருவாக்கிய மாற்றங்களை நாம் அனைவரும் அறிவோம்.

17ம் நூற்றாண்டில், கனடாவில், பழங்குடியினரிடையே பணிபுரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் அவர்களும் ஒருவர். தன் 29வது வயதில், அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றதும், அம்மக்களிடையே தன் பணியைத் துவக்கிய அவர், அம்மக்களால் பல்வேறு வழிகளில் தொடர்ந்து சித்ரவதைகள் செய்யப்பட்டார். இந்தச் சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் அவர் இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பானிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இக்குரு திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கரங்களில் ஐசக் ஜோக்ஸ் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.

இப்படி கோடான கோடி மக்களின் மனங்களில் இத்தனை நூறு ஆண்டுகளாய் வீரத்தை, தியாகத்தை, அனைத்திற்கும் மேலாக, அன்பை வளர்த்துள்ளது, கிறிஸ்துவின் பிரசன்னம் என்ற மறையுண்மைக்கு முன், தாழ்ந்து, பணிந்து வணங்குவோம். இறைமகன்இயேசு, தன் திருஉடல் திருஇரத்தத்தின் வழியாக விட்டுச் சென்றுள்ள அன்பையும், தியாகத்தையும் வாழ்வாக்க முனைவோம்.
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்


இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன ? "பகிர்வு, அன்பு"
நாம்‌ அனைவரும்‌ நம்மிடம்‌ உள்ளதை ஒருவர்‌ மற்றவரிடம்‌ பகிர்ந்து வாழவும்‌, ஒருவர்‌ மற்றவரை அன்பு செய்து வாழவும்‌ இன்றைய பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
இயேசு நம்மீது கொண்டுள்ள அன்பை புனித பவுலடியார்‌ பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தில்‌ அழகாக எடுத்துரைக்கின்றார்‌.
பிலி 2:5-6-ல்‌ வாசிக்கின்றோம்‌... "கடவுள்‌ என்ற நிலையை வலிந்து பற்றிக்‌ கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக்‌ கருதவில்லை...
மாறாக அவர்‌ இரங்கி வருக்கிறார்‌. தன்‌ உடலையும்‌ இரத்தத்தையும்‌ நமக்காக உணவாகக்‌ கொடுக்கிறார்‌ எதற்காக? நாம்‌ வாழ்வு பெற வேண்டும்‌. அதுவும்‌ நிறைவாழ்வு பெற வேண்டும்‌ என்பதற்காக. இது தான்‌ இயேசு நம்மீது கொண்டுள்ள அன்பின்‌ உச்சக்கட்டம்‌... நிலையான அன்பின்‌ வெளிப்பாடு.
இயேசுவின்‌ அன்பை சற்று நினைத்துப்‌ பாருங்கள்‌. நமக்காக நம்‌ மீட்புக்காக எல்லாவற்றையும்‌ இழக்கிறார்‌.
என்னிடம்‌ இவ்வளவு தான்‌ இருக்கிறது என்று சொல்லி சிலுவையில்‌ இரண்டு கரங்களையும்‌ விரித்து தன்‌ உடலையும்‌ இரத்தத்தையும்‌ நமக்கு உணவாக கொடுத்துவிட்டார்‌.
காரணம்‌ அவர்‌ உங்களையும்‌, என்னையும்‌ அன்பு செய்வதின்‌ அடையாளம்‌.
ஒவ்வொரு முறையும்‌ நாம்‌ நற்கருணை பெறுகின்ற போது எந்த மனநிலையோடு வருகிறோம்‌ ? சிந்திப்போம்‌ !
வரிசையில்‌ வருகின்ற போது நமது முகத்தில்‌ ஒரு பிரகாசம்‌, ஒரு மகிழ்ச்சி தோன்ற வேண்டும்‌.
என்னை அதிகமாய்‌ நேசித்த இயேசுவே, எனக்காக உயிரையும்‌ கொடுத்த என்‌ இயேசுவை நான்‌ உட்கொள்ள போகிறேன்‌ என்ற உணர்வு நம்மிடம்‌ இருக்கிறதா ? சிந்திப்போம்‌.
என்னை இன்றளவும்‌ இயேசு அன்பு செய்கிறார்‌ என்னும்‌ நம்பிக்கையில்‌ எத்தனை பேர்‌ வாழ்கிறோம்‌?
ஒவ்வொரு முறையும்‌ நற்கருணை உட்கொள்ளும்போது இது என்‌ ஆண்டவர்‌ இயேசு என்மீது கொண்டுள்ள அன்பின்‌, பகிர்வின்‌... மன்னிப்பின்‌... தியாகத்தின்‌ வெளிப்பாடு என்பதை உணர்ந்து வாழ்வோம்‌! நல்லாயன்‌ இயேசு என்றும்‌ வாழ்த்தப்‌ பெறுவாராக!
ஞாயிறு மறையுரை அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
 தன்னையே வழங்கிய இறைமகனைப் பின்பற்றுவோம்!

"தன்னையே வெறுமையாக்கும் தலைவனின் அன்பு இதோ
தருகின்ற செயலிலும் நிகரற்ற பண்புஇதோ
தகைமை எனக்கில்லையே அதை நான் புரிவதற்கு
தகுதி எனக்காகுமோ எனக்குள் அவர் வருவதற்கு "
என்ற அழகிய பாடல் வரிகளோடு இயேசுவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புக்குரியவர்களே இன்று நாம் திருஅவையோடு இணைந்து இயேசுவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பாடல் வரிகள் உணர்த்துவதைப் போல இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் நமக்குத் தந்தது தன்னிகரற்ற பண்பு. அதை புரிந்து கொள்வது கடினம். ஆம் நம் அறிவால் அதைப் புரிந்து கொள்ளவது கடினம். ஆனால் நம் நம்பிக்கையால் அம்மறைபொருளை நாம் சற்று உணர முற்பட்டால் இவ்விழா நமக்கு விடுக்கும் வாழ்வியல் பாடத்தை நாம் கற்றுக்கொண்டு வாழ்வாக்க இயலும்.

இயேசுவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழா நமக்கு உணர்த்தும் முதன்மையான மற்றும் முக்கியமான சிந்தனை தன்னைக் கொடுத்தல். அல்லது தன்னையே வெறுமையாக்குதல். இதை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள நம் அனைவருக்கும் தெரிந்த உதாரணமான தாய்மையை எடுத்துக்கொள்வோம். தாயானவள் தன் குழந்தைக்கு தன் உடலையும் இரத்தத்தையும் தருகிறாள். கருவிலே குழந்தை உருவான உடன் முதலில் சிறு புள்ளிபோல்தான் இருக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகள் தோன்றி தசைகளும் வளர்கின்றன. அக்குழந்தை தன் தசையை தாயிடமிருந்தே எடுத்துக்கொள்கிறது. தாய் தன் கருவிலுள்ள குழந்தை வளர்வதற்காக பலவற்றை இழக்கிறாள். தன்னையே தருகிறாள். அதற்காக பல வேதனைகளைத் தாங்குகிறாள். பல தியாகம் புரிகிறாள். அதன்மூலம் குழந்தைக்கு உயிர்துடிப்பைத் தருகிறாள். எல்லா ஊட்டச்சத்துகளையும் தன்மூலம் வழங்குகிறாள். குழந்தை பிறந்த பிறகும் கூட தன் இரத்தத்தைப் பாலாக்கி கொடுக்கிறாள்.

ஆம் தன்னையே வழங்குதற்கு தாய் சிறந்த உதாரணம். அந்த தாயின் அன்பை எவ்வாறு நம்மால் புரிந்து கொண்டு விளக்க இயலாதோ அதைப்போலத்தான் தன்னையே வெறுமையாக்கிய தன் உடலையும் இரத்தத்தையும் வழங்கிய இயேசுவின் அன்பை நம்மால் ஒருபோதும் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முடியாது. இயேசு நமக்கு வழங்கிய இந்த உன்னதமான கொடை நம் ஆன்மாவிற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.அவ்வப்போது பாவங்களால் இறந்தாலும் மீண்டும் மீண்டும் உயிரளிக்கிறது. தாயின் அன்பை விட ஆயிரமாயிரம் மடங்கு மேன்மையான அன்பின் சின்னம் இவ்வுலகில் இதைவிட வேறு இல்லை எனலாம்.

இதை நாம் உணர்ந்தால் மட்டும் போதாது. அவரின் உடலையும் இரத்தத்தையும் பெறும் நாம் அவருடைய உடலாகவும் இரத்தமாகவும் மாறவேண்டும். நம்மையே தர வேண்டும். நம்முள்ளே இருக்கும் தாயுள்ளத்தை பிறக்கு நம்மால் இயன்ற பகிர்வின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். சின்ன சின்ன முறையிலாவது பிறர் நலனுக்காக நம் விருப்பங்களை, நம் உடைமைகளை, இழக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நாமும் இயேசுவின் திருஉடலாக இரத்தமாக உலகிலே திகழ முடியும்.தன்னிடமுள்ள ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஒலு சிறுவன் இழக்கத் துணிந்தான். அது ஐயாயிரம் பேருக்கு உணவானது. எனவே நம்மை இழக்கத் துணிவோம். பிறருக்கு நம்மை இயேசுவைப் போல வழங்குவோம். தன்னையே வழங்கும் இயேசுவைப் பின்பற்ற தயாரா?
இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மைப் போலவே பிறர் நலனுக்காக எங்களை இழக்கும் வரமருளும். ஆமென்.
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ