ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
   
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
                  திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு
B தவக்காலம்1  
நன்றியோடு கூடிய இறைவேண்டல் மற்றும் மன்றாட்டு வழியாக கடவுளிடம் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்து, அறிவெல்லாம் கடந்த இறை அமைதியைப் பெற வருகை தந்துள்ள அன்பு இறை மக்களே, உங்கள் அனைவரையும் திருவருகை கால 3-ஆம் ஞாயிறு வழிபாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

கிறிஸ்துவின் பிறப்பு நமக்கெல்லாம் மகிழ்வின் செய்தியாக உள்ளது என்பதற்கு அடையாளமாக மகிழ்வின் ஒளியேற்றி திருவருகை காலத்தின் மூன்றாம் வார்த்தையை தொடங்குகிறோம்.

நாம் இறைவனுக்கு முன்பாக அவரது நித்திய வீட்டில் உள்ள களஞ்சியத்தில் சேர்க்கப்படும் கோதுமை மணிகளா? அல்லது அணையா நெருப்பில் இடப்படும் பதர்களா? என்ற கேள்விகளை முன்னெழுப்பு நம்மை சிந்திக்க அழைக்கிறது இன்றைய வழிபாடு.

இறைவன் நம்மோடு இருப்பதை உணர்கின்றபோது மகிழ்ச்சி கிடைக்கும். அந்த உண்மையான மகிழ்ச்சியை அடைய பகிர்தல், மன நிறைவு அடைதல், மனிதத்தை மதித்தல் என்ற மூன்று முத்தான பண்புகளைக் கொண்டு வாழ்ந்தால் போதும் என்பதை இன்றைய வார்த்தை வழிபாடு தெளிவாக விளக்குகிறது.

நாம் எப்போதெல்லாம் இறைவனை விட்டுப் பிரிந்து வாழ்கிறோமோ அப்போ தெல்லாம் மகிழ்ச்சியை இழந்து நிற்கிறோம். அவரோடு ஒன்றித்திருக் கும்போதும், அவர் வழியில் நடக்கும் போதும் நிறைவான மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்கிறோம் என்ற சிந்தனையை இன்றைய திருப்பலி வழங்குகிறது.

மகிழ்ச்சியின் காரணிகளாக திருமுழுக்கு யோவான் குறிப்பிடுகின்ற அன்பு, பகிர்வு, நீதி போன்ற மதிப்பீடு களை வாழ்வாக்கி வாழவும், அதன் மூலம் இறைவன் நம்மோடு இருப்பதை உணர்ந்து மகிழ்ந்து வாழவும் இத்திருப்பலி வழியாக இறைவனை மன்றாடுவோம்.


முதல் வாசக முன்னுரை
கடவுள் தம் மக்கள் மீது என்றும் இரக்கம் வைத்துளார். துயரங்களை அவர் துடைப்பார். அவர்களின் பாவங்களை மன்னிப்பார் போன்ற நம்பிக்கையளிக்கும் வாக்குறுதிகளை தந்து, இறைவனின் உடனிருப்பை எடுத்துரைக்கிறார். இறைவாக்கினர் செப்பனியா மெசியாவின் வருகையை மறைமுகமாக முன்னறிவிக்கும் இவ் வாசகத்தை கவனமுடன் கேட்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை
பிலிப்பியருக்கு பவுலடியார் கூறும் இறுதி அறிவுரை இன்றைய இரண்டா வாசகமாக அருளப்பட்டுள்ளது. நமது செபங்களில் இறைப் புகழ்ச்சி, நன்றி, மகிழ்ச்சி முதலியவை முக்கிய இடத்தைப் பெறுவதன் வழியாக அறிவெல்லாம் கடந்த சமாதானம் நம்மை ஆட்கொள்ளும் என்ற உறுதியை வழங்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. எம் பொருட்டு அகமகிழ்ந்து களிகூரும் அன்பு இறைவா, கடவுளாகிய நீர் எப்போதும் எமக்குள் இருப்பதை உணர்ந்து மகிழ்ந்து வாழ எம்மை நெறிப்படுத்தி வழிநடத்தும். எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும். அன்பு, பகிர்வு, நீதி போனற் மதிப்பீடுகளை மக்கள் நெஞ்சங்களில் விதைத்து அனைவரும் உமது ஒன்றிப்பில் மகிழ்ந்துவாழ உழைக்கும் அவர்களுக்கு நல்ல உடல் நலத்தையும் ஆன்ம பலத்தையும் தந்தருள வேண்டுன்nறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தமது பேரன்பினால் எமக்குப் புத்துயிர் அளிக்கும் தந்தையே இறைவா, நாங்கள் எங்களிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து போதும் என்ற மனநிறைவோடு வாழவும், உமது கையில் உள்ள சுளகில் நாங்கள் கோதுமை மணிகளாய் இருந்து உமது களஞ்சியத்தில் சேரவும், எங்கள் உள்ளமும், மனமும் உம்மோடு இணைந்து மகிழ்ந்து வாழவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. எம்மை விட்டு விலகாமல், கைவிடாமல், காத்துவரும் அன்பு இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும், உரிய நிவாரணங்களையும் பெற்று இயல்பு நிலைத் திரும்பி நலமுடன் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உலகம் முடியுமட்டும் எந்நாளும் எம்முடன் இருக்கும் அன்பு இறைவா, எம் நாட்டை ஆளும் தலைவர்கள், தன்னலமின்றி பொதுநல நோக்குடன், மக்களுக்குத் தேவையான பல நல்ல வளர்ச்சிப் பணிகளைச் செய்திடவும், உண்மையுடனும், நேர்மையுடனும், நீதியுடனும் செயல்படவும், லஞ்சம் தவிர்த்து ஊழலற்ற நிர்வாகத்தினை பின்பற்றவும், மக்கள் வாழ்வை வளம் பெறச் செய்யக் கூடிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தக் கூடிய ஆற்றலையும் திறமையையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்,


 
மறையுரை சிந்தனைகள்
இறையேசுவில் எனக்கு மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே
கடந்த வாரம் திருவருகைக் காலத்தின் 2-ம் வார இறைவார்த்தைகளை உள்வாங்கி, பிறக்கவிருக்கும் இறைமகனை எதிர்கொள்ள, நாம் நடக்கும் பாதைகளை செம்மைப்படுத்திக் கொள்ள, கொடுத்த அழைப்பை ஏற்று நம்மையும் பிறரையும் வாழ வைக்கும் நேர்மையான பாதையில் நம்மை கொண்டு செல்ல முயன்றோம்.

ஆனால், அன்பான இறை சமூகமே இந்த வாரம் திருவருகைக்கால 3-ம் வாரத்தை நம் திருஅவை மகிழ்ச்சியின் வாரமாய் கொண்டாடிட நமக்கு அழைப்பினை கொடுக்கும் வாழ்வுதரும் இன்றும் வார்த்தைகளை உள்வாங்கியிருக்கிறோம்.

மகிழ்ச்சி என்றால் என்ன என்று முதலில் சிந்திப்போம். இந்த உலகிலேயே 2 பேர் மட்டும் தான் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். அவர்கள் யாரென்று உங்களுக்கு தெரியுமா...? ஒன்று பிறக்காத குழந்தை மற்றொன்று கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டவர்கள். உயிரோடு இருக்கிற நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? எனக் கேட்டால்... வாழ்ந்தவனை கேட்டால் சென்று விடு என்பான் சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான் உயிரோடு இருக்கும் நாம் மகிழ்ச்சியாயிருப்பதும் சோகமாயிருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது.

மகிழ்ச்சி
உன் சுயநலத்தை கடந்து அடுத்தவரை மையப்படுத்தி இயேசுவை முன்னிலைப்படுத்தினால் உன் வாழ்வில் என்னாளும் மகிழ்ச்சிதான். உண்மையான மகிழ்ச்சியில் வாழ நமக்கு கற்றுத் தருவது இறைவனின் வாழ்வு தரும் வார்த்தை. யோவான் 16:22-ல் உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கி விடமுடியாது என்கிறார் ஆண்டவர். இயேசு. உங்கள் துக்கமெல்லாம் மகிழ்ச்சியாய் மாறு என்றும் சொல்லுகிறார்.

இன்றைய முதல்வாசகத்தில் செப்பனியா 3:14-ல் மகளே சீயோனே மகிழ்ச்சியால் ஆர்ப்பரி... உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்கறை ஏனெனில் இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன்னோடு இருக்கிறார். இறைவன் நம்மோடு இருக்கையில் எப்பொழுதுமே நமக்கு மகிழ்ச்சிதான். அவர் நம் பொருட்டு மகிழ்ந்து களி கூறுகிறவர் என வாசிக்கின்றோம்.

இன்றைய 2-ம் வாசகத்திலே பவுலடிகளார் ஆண்டவரோடு இணைந்து மகிழுங்கள். நம் ஆண்டவர் அண்மையில் உள்ளாரென பிலிப்பு நகர மக்களுக்கு கூறியதை கேட்டோம். தெசனோக்சிய மக்களை நோக்கி எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள் இடைவிடாது செபியுங்கள் என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லுங்கள் என பவுல் அறிவுறுத்துகிறார்.

மகிழ்ச்சி நமதாக வேண்டுமென்றால் அன்பானவர்களே! நம்மிடம் திருமுழுக்கு யோவானிடம் விளங்கிய தாழ்ச்சி இருக்க வேண்டும். அவருடைய மிதியடிகளை தூக்கிச் செல்ல நான் தகுதியற்றவன் என்ற மனநிலை நமக்கு வேண்டும் இந்த தாழ்ச்சி நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அவரிடமிருந்த மனநிறைவு நமக்கு மகிழ்ச்சியை தரும் ஆண்டவர் இயேசுவிடம் இருந்த பகிர்தல்
(Share)
 நமக்கு மகிழ்ச்சியை தரும் பாதுகாத்தல் (Care)  நமக்கு மகிழ்ச்சியைத் தரும் கொடுத்தல் (Giving)  நமக்கு மகிழ்ச்சியை தரும்.

இயேசு இதையெல்லாம் செய்து காட்டினார். எனவேதான் அவர் யோவான் 16:22 இல் உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடம் இருந்து நீக்கிவிட முடியாது என்றார். இன்றைய நற்செய்தியில் வரும் திருமுழுக்கு யோவானை போல நாமும் பிறரை வாழவைத்தால் அந்த மகிழ்ச்சி நம்மிலே தங்கும் பகிர்ந்தால் பசிதீரும். மகிழ்ச்சியும் இரட்டிக்கும். பகிராது தனக்கென வாழும் மனிதன் பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சனையில் காற்றுவரும் தூக்கம்வராது.

ஆம் அன்பான இறைசமூகமே துன்பமானது பகிரப்பட்டால் பாதியாகும். மகிழ்ச்சியானது பகிரப்பட்டது இரட்டிப்பாகும். பிறரை நாம் பாராட்டினாலும், வாழ்த்தினாலும் நம் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்த்தும்பொழுதும், பாராட்டும்போதும் உறவுகள் மலர்கின்றன 6 மாத கர்ப்பிணியாக மலைநாடுகளிலே வாழ்ந்த வயது முதிர்ந்த எலிசபெத்தை வாழ்த்த கடவுளின் மகனை கருப்பையில் தங்கிய மரியா தாழ்ச்சியோடு சென்று பணிவிடை புரிய சந்தித்தபோது எலிசபெத்தின் வயிற்றில் உள்ள குழந்தை திருமுழுக்கு யோவான் மகிழ்ச்சியால் வயிற்றில் துள்ளிக் குதித்ததை ஒன்று நாற்பத்தி நாளில் நாம் வாசிக்கிறோம். நம் ஆண்டவர் இயேசு யோர்தான் நதியிலே திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்ற பொழுது வானம் திறக்க ஆவியானவர் புறா வடிவில் இறங்கிவர தந்தை கடவுள் தன் ஒரே மகனை பணி வாழ்விற்கு அறிமுகம் செய்து இவரே என் அன்பார்ந்த மகன். இவரில் நான் மகிழ்கிறேன் என சொன்னதை நற்செய்தி லூக்கா 3:22 பார்க்கமுடிகிறது.

ஆம் அன்பிற்கினிய அவர்களே, நாம் நமக்குள் கடவுள் இருப்பதை உணர்வோம். நமக்குள்ளதை இல்லாதவர்களோடு பகிர்ந்து, தாழ்ச்சி நிறை உள்ளம் கொண்டு பேராசையை துறந்து பணிநிறைவு கொண்டவர்களாய் நம்மத்தியிலே வாழும் கடவுளை பற்றிக் கொண்டு அவர் கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டவர்களாய் பிறரன்பை வாழ்ந்து காட்டுவோம். பிறரும் நம்மை விட உயர்ந்தவரென்று மகிழ்வோம் காரணம் கடவுள் நம்மோடு இருந்தாலும் மகிழ்ச்சி நாம் கடவுளோடு இருந்தாலும் மகிழ்ச்சி என்பதை சொல்லும் இன்றைய இறை வார்த்தைகளை வாழ்வாக்கி வாழ வரம் வேண்டுவோம். இறைவா நானும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் கருவியாய் என்னை மாற்றும் என்று இன்றைய மகிழ்ச்சியின் வாரத்தில் நம்மிடம் வரும் இறைமகன் இயேசுவைப் பற்றிக் கொண்டு வரம் கேட்டு மகிழ்வோம். ஆமென்

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
திருவருகை காலம்-மூன்றாம் வாரம், ஞாயிறு 13 12 2020
மகிழ்ச்சியின் குரலாவோம்..
ஏசா 61:1-2, 10-11, 1தெச5:16-24, யோவா1:6-8 19-28

கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே நாம் அனைவரும் ஒவ்வொரு வாரத்தையும் இறைபிரசன்னதில் மகிழ்ச்சியை நம்மில்புதுப்பிக்கும் நற்கருணை கொண்டாட்டத்தோடு துவங்குவதற்கு வாய்ப்பும் இறைவரம் பெற்றவர்களாகிறோம். நம்மை ஒன்றாக ஒன்றிக்க அழைக்கும் மேலும் நம்மை ஒற்றுமையோடு வாழவைக்கும் நற்கருணைகொண்டாட்டம் ஒரு மகிழ்ச்சியின் விருந்து. இதில் முழுமையாக பங்கெடுக்கும் நாமும் பல்வேறு இருளால் மூடப்பட்டிருக்கும் பலருடைய வாழ்வில் மகிழ்ச்சியை காண அனுபவிக்க பகிர அழைக்கப்படுகிறோம். காரணம் திருப்பலி நம்மை மகிழ்ச்சியின் பகிர்வின் வாழ்வுக்கு நம்மை அனுப்புகிறது. மகிழ்ச்சி ஒரு தருணமோ ஒரு உணர்வோ ஒருநாள் கிறிஸ்துமஸோ அல்ல. மாறாக இது ஒரு அனுபவம் எந்நாளும் நம்மிடம் தங்கும். இறைஇயேசுவை நற்கருணையில் அணுகி அனுபவித்து இங்கு அவர் தரும் முடிவில்லா மகிழ்ச்சியின் பயணம் தொடரட்டும்.

மகிழ்ச்சி சந்தோசம் ஆனந்தம் என்பது நம்மிடம் ஒருநாள் இருப்பதா? பலநாள் நாம் தக்க வைத்துக்கொள்வதா? அல்லது எந்நாளும் நம் சொந்தமாகுமா? என்ற கேள்விகளுக்கு பல்வேறு பதில்களை இளையோர் கருத்தமர்வில் பகிர்ந்துகொண்டார்கள் அவைகளில் இதோ சில:
மகிழ்ச்சி என்பது சில தருணங்கள் மணிநேரங்கள் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன இந்த உணர்வை நம்மில் கட்டிவைக்கமுடியாது காரணம் எனக்கு பிடித்த நடிகரின் படம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது அதை மூன்று மணிநேரம் பார்த்தபிறகு மகிழ்ச்சி என்னை விட்டு அகலுகிறது. கிரிக்கெட்டின் ஒருநாள்போட்டியோ எங்கள் கேர்ல் அல்லது பாய் பிரண்ட்ஸ்களுடன் இருக்கின்ற சில மணிநேரங்கள்தான் மகிழ்ச்சி பிறகு சோகம் தான்..

ஆனந்தம் என்பது ஒரு கொண்டாட்டத்தில் நிரம்பியிருக்கிறது ஆனால் அந்த கொண்டாட்டம் முடிந்தவுடன் திண்டாட்டம் தான். வீட்டுதிருமணத்திற்கு பலவாரங்கள் தயாரிப்பு புதுவீடு நிகழ்வு குழந்தைபிறப்பு இவைகள் எல்லாம் சில வாரங்கள் ஆனந்த உணர்வை நமக்கு தந்து உழைக்க ஈடுபட வைக்கின்றன. ஆனால் அனைத்தும் நடந்தேறியபிறகு நாம் சந்திப்பது வெறும் திண்டாட்டமே.

சந்தோசம் உலகம் சிலருக்கு மட்டுமே பாமரர்களுக்கு அல்ல. காரணம் குறையில்லா பணம் - நிரம்பிய சொத்து - அதிகாரம் செலுத்த உயர்ந்த பதவி - பொதுவாழ்வில் செல்வாக்கு இவர்களுக்கு தான் சந்தோசம் சொந்தம். நம்மிடமெல்லாம் சந்தோசம் தங்காது இது சில மாதங்களோ ஒருநாளோ சில மணி நேரங்களோ தான்தவழும். நோயிலேயே - வறுமையிலேயே - வெறுமையிலேயே - தனிமையிலேயே - மனஅழத்தத்திலேயே வாழ்வோருக்கு யார் மன மகிழ்ச்சியை பெற்றுதர முடியும்?...

இந்த எதார்த்த உணர்வு பூர்வமான கலந்துரையாடல் கருத்துகளுக்கு கேள்விகளுக்கு சிந்திக்க துணயாக கருத்தமர்வை வழிநடத்தியவர் சொன்னார். உங்கள் கருத்துகளை நான் மதிக்கின்றேன் உங்கள் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது காரணம் கிறிஸ்துபிறப்பு அர்த்தமுள்ளதென்றால் அது நமக்குச்சொல்வது மகிழ்ச்சி சந்தோசம் ஆனந்தம் ஒரு உணர்வோடு நின்றுவிடககூடாது ஒருநிகழ்வோடு ஒரு உறவோடு முடிந்துவிடக்கூடாது மாறாக இது ஒரு முடிவு அனுபவம்.. மகிழ்ச்சி அனுபவத்தில் நான் இருக்க அதை பிறரில் தங்கவைக்க நான் முடிவு எடுக்கவேண்டும். வாழ்வின் கவலைகள் கண்ணீர்களை கடந்த மகிழ்ச்சி அனுபத்திற்கு அழைக்கும் இறைவாசகத்தின் சிந்தனைகளை தியானிப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்களின் பார்வையும் சிந்தனையும் கவனிப்பாரற்று இடிந்துகிடக்கும் எருசலேம் நகரின் மீதும் இறைவன் உறையும் இடமாக பலிசெலுத்தி அவரோடு இணைந்திருந்த எருசலேம் ஆலயத்தின் அழிவுகளையும் பிரிந்து பரந்து கேட்பாரற்று கிடந்த நிலையின் மீதுமேயிருந்தது. இவர்களின் சோகத்திற்கு காரணம் 60-7-0 ஆண்டுகளில் பாபிலோனிய அடிமைதனத்தில் தங்கள் முன்னோர்களின் எருசலேமில் யாவே இறைவனுக்கும் அவர்களுக்குமிருந்த இறைநெருக்க அனுபவத்தை தாங்கள் இழந்ததுமட்டுமன்றி இடைவெளி அதிகமாகிவிட்டதால் கவலையால் சோகத்தால் இனிமேல் எதுவும் நல்லது நடக்காது என்ற மனஅழுத்த எண்ணத்தோடு இருந்தபொழுது இறைவனால் அனுப்பபட்ட ஏசாயா உள்ளமும் வாழ்வும் நொறுங்குண்டிருக்கும் உங்களுக்கு மகிழ்ச்சியை சொந்தமாக்கவே என்னை அனுப்பினார் என்றுரைத்து. இந்த மகிழ்ச்சி அருள் தரும் ஆண்டின் மகிழ்ச்சியைப்போலவே அமையும் என்று வெளிப்படுத்துகிறார்.

அருள்தரும் ஆண்டில் எது எவ்வாறு மகிழ்ச்சியை பெற்றுதரும்? எது வாழ்வின் சுமையாக மனக்கனமாகயிருந்து சோகத்திற்கு காரணமாயிருக்கிறதோ அந்தகடன் அனைத்திலிருந்தும் விலக்கு அளிக்கப்படும். உறவுகள் மற்றும் பல கசப்பான உறவுபரிமாற்றங்களிடையே மன்னிப்பு சமாதானம் நிலவும். இங்கு மகிழ்ச்சியின் அருள் உங்களில் தங்கும் இறைவன் உங்களை நிறைவாக மன்னித்து உங்கள் முன்னோர்கள் போல் அவருக்கு நெருக்கமாக சொந்தமாக்குகிறார். புது மணமக்களின் ஆடைகளை உங்களுக்கு அணிவிக்கின்ற அனுபவமாகவும் புதுவிளைச்சலைக்காணுகின்ற அனுபவமாகவும் அமையும் என்று ஏசாயா இறைவாக்கினர் மகிழ்ச்சியை அவர்களில் புதுப்பிக்கும் மகிழ்ச்சியின் குரலாக திகழ்கிறார். முடிவு எடுங்கள் தொடர்ந்து நடங்கள் யாவேயின் மகிழ்ச்சி எருசலேமிலும் உங்களிலும் தங்கும் என உற்சாகமும் உத்வேகமும் தருகிறார்.

யோவான் தன் வார்த்தைகளில் திருமுழுக்கு யோவானின் பாதையில் நமக்கு எவ்வாறு மகிழ்ச்சியின் குரலாக வாழவேண்டும் என எடுத்துச்சொல்கிறார். திருமுழுக்கு யோவான் நான் எலியாவோ இறைவாக்கினரோ மெசியாவோ அல்ல மாறாக ஒருமகிழ்ச்சியின் குரல் என்று சொல்லி அந்த மகிழ்ச்சிக்கு தேவையானது எடுக்கவேண்டியமுடிவு பழைய பாதைகள் உணர்வுகளை கடந்த திருமுழுக்கில் மகிழ்ச்சியின் வாழ்வை பற்றிகொள்ள அழைப்புவிடுக்கிறார். திருமுழுக்குயோவானின் சீடர்கள் அவரின் பாதையில் செயல்பட்டவர்கள் பல வருடம் தொடர்ந்தார்கள் என்றுசொல்லப்படுகிறது. பாலைவன வறண்ட இடங்களில் எளிமையான தோற்றத்தோடு தியாக வாழ்க்கையோடு அனைவரையும் கவர்ந்து ஈர்த்து அழைத்தது மகிழ்ச்சியை இயேசுவில் இயேசுவின் திருமுழுக்கில் மீட்பில் அவர்மத்தியில் அனுபவிக்கவே.

விவிலித்தில் பல இடங்களில் மகிழ்சியோடிரு. ஆர்ப்பரித்து அகமகிழ்ந்திடு என இறைவனின் உறைவிடத்தில் மகிழ்ச்சியை சொந்தமாக்கி வாழந்திட முடிவெடுஎன அழைப்பு விடப்படுகின்றது. மீட்பின் வரலாற்று மகிழ்ச்சியை மனிதப்பகிர்வில் சொல்லிக்கொடுக்கவந்த இயேசுவின் பிறப்பு பெருவிழா நம்மையும் பல கவலைகளில் மகிழ்ச்சியை மறைத்திருக்கும் சிலருக்கு மகிழ்ச்சியின் குரலாக அமைய அழைத்துச்செல்லட்டும்.

நீதிமொழிகள்17:22 சொல்கிறது " மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்" சிரிப்பு இன்று ஒரு தெரபியாகியிருக்கிறது. மனதார வாய்நிறைய சிரித்தால் நோயும் கவலையும் வலியும் குறைந்து மறையும் காரணம் நாம் அவர்மத்தியிலிருக்க மகிழ்ச்சியே நமக்கு சொந்தம். இரவே வாழ்வு சாமக்காவலே தொழில் என்ற இடையர்களுக்கு சொல்லப்பட்ட மகிழ்ச்சி உங்களிடையே பற்றிக்கொள்ளுங்கள் என்பது நமக்கும் நம் சுற்றியிருப்பவர்களுக்கும் சொந்தமாக மகிழ்ச்சியின் குரலாவோம் -ஆமென்.


 
  மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm

         
      
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி

ஆண்டவரில் பெருமகிழ்ச்சி

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு மகிழ்ச்சியின் ஞாயிறு என அழைக்கப்பட்டு, இந்த நாளின் திருவழிபாட்டு நிறம் " ரோஸ்" என வரையறுக்கப்பட்டுள்ளது.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 61:1-2,10-11) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில், இறைவாக்கினர் எசாயா தன் பணியின் இலக்கு மற்றும் தன்மை பற்றி எடுத்துரைக்கின்றார். இரண்டாவது பகுதியில், வரவிருக்கும் நன்னிலை ஏற்கெனவே வந்துவிட்டதாகவும், தன் கடவுளின் செயலால் தான் பூரிப்படைவதாகவும் இறைவாக்கினர் துள்ளிக் குதிக்கின்றார்.

இந்த வாசகத்தின் பின்புலம், ஆண்டவரின் ஊழியன் அல்லது பணியாளன் என்னும் பாடலே (காண். எசா 42:1,48:16). ஆண்டவரின் பணியாளன் என்னும் தன்மையை ஒருவர் ஆண்டவரின் ஆவியாலேயே பெறுகின்றார். ஆண்டவரின் அருள்பொழிவு ஒருவரை, அவருடைய பணியாளர் நிலைக்கு உயர்த்துவதுடன் சமூகத்தில் அவருக்கென்று சில பணிகளையும் வரையறை செய்கிறது: நற்செய்தி அறிவித்தல், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்துதல், விடுதலையைப் பறைசாற்றுதல், விடிவைத் தெரிவித்தல், அருள்தரும் ஆண்டினை அறிவித்தல். இதே வாசகப் பகுதியையே இயேசுவும் தன் பணித்தொடக்கத்தில் தொழுகைக்கூடத்தில் வாசிப்பதாக லூக்கா பதிவு செய்கின்றார் (காண். லூக் 4).

இரண்டாவதாக, ஆண்டவராகிய கடவுள் தனக்கு, " விடுதலை" மற்றும் " நேர்மை" என்னும் இரண்டு ஆடைகளை அணிவிப்பதாக இறைவாக்கினர் மொழிகின்றார். நாடுகடத்தலின் பின்புலத்தில் இதைப் பார்த்தால், அடிமைகளாக நாடுகடத்தப்படுபவர்கள் பெரும்பாலும் நிர்வாணமாக்கப்படுவர் அல்லது குறைவான ஆடைகள் அணிவிக்கப்படுவர். ஒருவரின் ஆடையைக் களைதல் என்பது அவர் அனைத்தையும் இழந்துவிட்டார் என்பதன் அடையாளம். ஆடைகள் களையப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு, ஆண்டவராகிய கடவுள், " விடுதலை" மற்றும் " நேர்மை" என்னும் இரண்டு ஆடைகளைக் கொடுக்கின்றார். " விடுதலை" என்பது அவர்கள் விரைவில் பெறவிருக்கின்ற கட்டின்மையையும், " நேர்மை" என்பது அவர்கள் இனிமேல் கடவுளின் உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாக இருப்பார்கள் என்பதையும் குறிக்கிறது. மேலும், " மணமகன்" மற்றும் " மணமகள்" என்னும் சொல்லாடல்கள் உடன்படிக்கை நிகழ்வை நினைவுறுத்தவதோடு, இஸ்ரயேல் மக்கள் பெறுகின்ற மகிழ்ச்சியையும் எடுத்துரைக்கிறது.

" ஆண்டவரின் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்" என உரக்கச் சொல்கிறார் இறைவாக்கினர். தன் செயல்களால் அல்ல, மாறாக, ஆண்டவரின் அருளாலேயே தனக்கு மகிழ்ச்சி என்பதை உணர்கிறார் எசாயா. ஆண்டவரில் ஒருவர் பெறும் மகிழ்ச்சி, ஒருவர் பெற்றுள்ள விடுதலை மற்றும் நேர்மையில் வெளிப்படுகிறது. தாம் பெற்றுள்ள விடுதலை மற்றும் நேர்மையில், அவர் தம் பணியின் நோக்கத்தைக் கூர்மைப்படுத்திக்கொள்வதோடு அதை நோக்கிப் பயணம் செய்யவும் தொடங்குகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 5:16-24), புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் கடிதத்தின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக கிறிஸ்தவ நம்பிக்கைக்குள் நுழைந்த மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்குகின்றார் பவுல். அந்த வகையில், இறைவேண்டல் பற்றிய அறிவுரைப் பகுதியாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. " மகிழ்ச்சியாக இருங்கள்," " இறைவனிடம் வேண்டுங்கள்," " நன்றி கூறுங்கள்" என்னும் மூன்று சொல்லாடல்கள் வழியாக அவர்களுடைய இறைவேண்டலின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்றார். மேலும், இதுவே " கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம்" என்று சொல்லி அதன் மேன்மையைக் கூட்டுகின்றார்.

தெசலோனிக்கத் திருஅவை ஓர் இளைய திருஅவை. அத்திருஅவையின் உறுப்பினர்கள் நாளும் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். துன்பங்கள், மற்றவர்களின் வெறுப்பு, நிராகரிப்பு, கேலிப் பேச்சு, அவமானம் என தங்களுடைய அண்டை வீட்டாரிடமிருந்து நிறைய இக்கட்டுகளை எதிர்கொண்டனர். பவுல் அந்த நகரத்தில் நற்செய்தி அறிவிக்கும்போதும் துன்பத்துக்கு ஆளானார். ஆனாலும், ஒரு நல்ல தந்தையாய் அவர்கள்மேல் அக்கறை கொண்டிருந்தார். ஆகையால்தான், " எப்போதும்," " இடைவிடாது," " எல்லாச் சூழ்நிலையிலும்" என்று உற்சாகப்படுத்துகின்றார். மேலும், " தூய ஆவியாரின் செயல்பாட்டைத் தடுத்துவிடவோ, அந்த நெருப்பை அணைத்துவிடவோ வேண்டாம்!" என எச்சரிக்கின்றார். ஏனெனில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவர்களைச் சோர்வுக்கு உள்ளாக்கி, தங்களுடைய நம்பிக்கை வாழ்விலிருந்து அவர்களை பின்நோக்கித் தள்ளிவிடும் என அஞ்சினார்.

ஆகவே,மகிழ்ச்சி, இறைவேண்டல், நன்றி ஆகியவற்றின் வழியாக தங்கள் நம்பிக்கை வாழ்வை அவர்கள் தக்கவைக்கவும், தகவமைக்கவும் வேண்டும் எனப் பவுல் விரும்புகின்றார். ஆண்டவரை மையமாக வைத்து வாழும் வாழ்வில் மகிழ்ச்சி மேலோங்கி நிற்கிறது.

நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவான் என்னும் கதைமாந்தரின் அடையாளம், பணி ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருக்கிறது. " நீர் யார்?" என்று மக்கள் யோவானிடம் கேட்டபோது, " நான் மெசியா அல்ல!" என்று வெளிப்படையாகச் சொல்லிவிடுகின்றார். மேலும், " நான் ஒரு குரல்" என்று தன்னை அடையாளப்படுத்துகின்றார். மேலும், யோவா 3:29-இல், " மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார். அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிற

" நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," " நான் மணமகனின் குரல் கேட்பதில் மகிழ்கிறேன்" என்று சொல்லும் திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளில் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது. ஆண்டவரின் மெசியாவை அறிந்து, அவரைப் பற்றி அறிவித்து, அவருக்கு வழிவிடுவதில் மகிழ்கின்றார் யோவான்.

மகிழ்ச்சி என்பதே நம் வாழ்வின் இலக்காக உள்ளது. சிலர் உடல்சார் இன்பம் என மகிழ்ச்சியைச் சுருக்கிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் அறிவுசார் திருப்திக்குக் கடந்து செல்கிறார்கள். இன்னும் சிலர் உறவுசார் விருப்பம் என இன்னும் ஒரு படி உயர்கிறார்கள். வெகுசிலரே ஆன்மிகம்சார் பேரின்பத்தை அடைகிறார்கள்.
மகிழ்ச்சிக்கான மூன்று வழிகளை இன்றைய வாசகங்கள் நமக்குக் கற்பிக்கின்றன:

(அ) வாழ்வின் இலக்கு மற்றும் நோக்கம் அறிவது

" ஆண்டவராகிய தலைவரின் ஆவி" தன்னிடம் உள்ளது என்பதை உணர்கிற ஊழியர் தன் பணியின் நோக்கம் பற்றி தெளிவாக இருக்கிறார். இதுதான் நம் வாழ்வின் இலக்கு மற்றும் பணி நோக்கம் என அறிபவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். கொரிந்து நகருக்கு எழுதுகிற முதல் திருமடலில் இதையொத்த கருத்தை வாசிக்கிறோம். " பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள்" என அறிவுறுத்துகிற பவுல், " நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப் போல ஓடுமாட்டேன். காற்றைக் குத்துபவரைப் போலக் குத்துச்சண்டை இடமாட்டேன்" (1 கொரி 9:24-25) என்று தன் நற்செய்திப் பணி எப்போதும் இலக்கு நோக்கியதாக இருக்கிறது எனப் பெருமைகொள்கிறார். இன்று நம் வாழ்வின் நோக்கம் எது என்னும் தெளிவு நமக்கு இருக்கிறதா? நோக்கம் தெளிவானால் நேரம், ஆற்றல் விரயம் குறையும். தொடர்ந்து, ஊழியர் விடுதலை, நேர்மை என்னும் ஆடைகளை அணிந்துகொள்கிறார். விடுதலை உணர்வும், நேரிய சொல்லும் செயலும் நமக்கு மகிழ்ச்சி தருகின்றன.
(ஆ) தெளிந்த தெரிவு

சில நேரங்களில் நம் தெரிவுகள் நம் மகிழ்ச்சியைக் கெடுத்துவிடுகின்றன. தவறான நபரைத் தெரிவு செய்வது, தவறான பாதையைத் தெரிவு செய்வது என பல நேரங்களில் சரியான தெரிவுகளை எடுக்க நாம் தவறிவிடுகிறோம். இரண்டாம் வாசகத்தில் பவுல் ஒரு ஃபார்முலா கற்றுத்தருகிறார்: " அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்." ஆக, அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, அல்லதை விலக்கி நல்லதைப் பற்றிக்கொள்ளும் ஒருவர் சரியான தெரிவை எடுக்கிறார். அத்தெரிவு அவருக்கு மகிழ்ச்சி தருகிறது. தேர்ந்துதெளிதல் வழியாக நம் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
(இ) குரல் கேட்டல், குரலாய் இருத்தல்

மணமகனாகிய இயேசுவின் குரல் கேட்பதில் மகிழும் தோழராகிய யோவான், பாலைநிலத்தில் அவருடைய குரலாக நிற்கிறார். ஓரிடத்தில் குரலைக் கேட்பவராக (செவிகொடுப்பவராக) இருந்தாலும், இன்னோர் இடத்தில் குரல்கொடுப்பவராக (அறிவிப்பவராக) இருக்கிறார் திருமுழுக்கு யோவான். ஆண்டவராகிய கடவுளின் சொற்களுக்குச் செவிமடுப்பதும், அவருடைய சொற்களை மற்றவர்களுக்கு அறிவிப்பதும் நமக்கு மகிழ்ச்சி தருகின்றன.

" என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது" என இன்றைய பதிலுரைப்பாடலில் அக்களிக்கிறார் மரியாள் (காண். லூக் 1). கடவுளை நினைத்தலே பேரின்பம். ஏனெனில், அவரே நம் மகிழ்ச்சியின் ஊற்று.


  
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்ட
 

" ஆண்டவரில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்"

நிகழ்வு: இரஷ்யாவை ஆண்டுவந்த வந்த மன்னன் ஒருவனுடைய அரசபையில் பெண்ணொருவர் பணிபுரிந்து வந்தார். ஒருநாள் இவர் ஒரு மறைப்பணியாளர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டுக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். மட்டுமல்லாமல் இவரும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார்.

இச்செய்தி மன்னனுடைய செவிகளை எட்டியது. இதனால் அவன் வெகுண்டெழுந்து, அந்தப் பெண்மணியைப் பிடித்துச் சிறையில் அடைத்துவைத்து, இருபத்து நான்கு மணிநேரங்களுக்குக் கடுமையாகச் சித்திரவதை செய்யச் சொன்னான். சிறையதிகாரியும் மன்னன் இட்ட ஆணைக்கு இணங்க, அந்தப் பெண்மணியைக் கடுமையாகச் சித்திரவதை செய்தார்.

இருபத்து நான்கு மணிநேரங்கள் முடிந்த பின் மன்னன், சிறையதிகாரியிடம் அந்தப் பெண்மணியை தன் முன்னே அழைத்து வரச்சொன்னான். அவரும் அவ்வாறு செய்தார். அப்பொழுது மன்னன் அந்தப் பெண்மணியிடம், " கிறிஸ்துவின்மீது நீ வைத்திருக்கும் நம்பிக்கையைத் துறந்துவிட்டு, என்னுடைய அரசபையில் இணைந்து மகிழ்ந்திருக்கத் தயாரா?" என்றான். அதற்கு அந்தப் பெண்மணி, " இத்தனை ஆண்டுகளும் நான் உங்களுடைய அரசபையில் இருந்து மகிழ்ந்ததை விடவும், ஒரு நாள் என் ஆண்டவர் இயேசுவோடு ஒன்றித்திருந்தால் கிடைத்த மகிழ்ச்சி மிகுதி. அதை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது" என்றார்.

ஆம், நாம் ஆண்டவரில் நிலைத்திருக்கும்பொழுது அல்லது ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது. மகிழ்ச்சியின் ஞாயிறு" என்று அழைக்கப்படும், திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதால் ஒருவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி எத்தகையது என்பதைப் பற்றி எடுத்துச் சொல்கின்றது. அதைப் பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கப் பவுல் விடுக்கும் அழைப்பு

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு என்றாலே, ஆண்டவர் தரும் மகிழ்ச்சியைப் பறைசாற்றக் கூடியதாக இருக்கும். இன்றைய இறைவார்த்தையும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், " எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று தெசலோனிக்க மக்களிடம் கூறுகின்றார். புனித பவுல் தெசலோனிக்க மக்களிடம் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், அவர்கள் புனித பவுல் அறிவித்த நற்செய்தியை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் திறந்த மனத்தோடும் ஏற்றுக்கொண்டார்கள் என்பதாலேயே ஆகும். அதனாலேயே புனித பவுல் தெசலோனிக்க மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டு இத்தகைய வார்த்தைகளைக் கூறுகின்றார்.

" எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று தெசலோனிக்க மக்களிடம் கூறுகின்ற புனித பவுல், எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதற்கான வழிமுறையையும் எடுத்துச் சொல்கின்றார். இன்றைக்குப் பலர் மகிழ்ச்சியைத் தவறான வழிகளில் சென்று, எதிலெல்லாமோ தேடிக்கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புனித பவுல், அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொண்டு, அதன்மூலம் மகிழ்ச்சியாக இருங்கள் என்கின்றார். இவ்வுலகில் நல்லது அல்லது நல்லவர் என்றால், அது ஆண்டவர் ஒருவரே (மத் 19: 17). ஆகவே, நல்லவராம் கடவுளைப் பற்றிக்கொண்டு மகிழ்ந்திருக்க வேண்டும் என்று புனித பவுல் அறைகூவல் விடுக்கின்றார். இன்றைய நற்செய்தியில் நல்லவராம் கடவுளைப் பற்றிக்கொண்டு, அவருக்குச் சான்று பகர்ந்த திருமுழுக்கு யோவானைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் எப்படி ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தார் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவருக்குச் சான்று பகர்வதில் மகிழ்ந்திருந்த திருமுழுக்கு யோவான்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், எருசலேமிலிருந்து யூதர்கள் அனுப்பி வைத்த குருக்களும் லேவியர்களும் திருமுழுக்கு யோவானிடம் வந்து, நீர் யார், நீர் ஏன் திருமுழுக்குக் கொடுக்கின்றீர் என்று கேட்கின்றபொழுது, அவர் அவர்களிடம், நான் மெசியா அல்ல, இறைவாக்கினரும் அல்ல என்று சொல்லிவிட்டு, " ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் என பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கின்றது என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே" என்று கூறுகின்றார் (எசா 40: 3). தொடர்ந்து அவர் அவர்களிடம், " நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன்... அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்கின்றார்.

திருமுழுக்கு யோவான் தான் யார் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் மிகுந்த தாழ்சியோடும் மகிழ்ச்சியோடும் ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தார். திருமுழுக்கு யோவான் நினைத்திருந்தால், நானே மெசியா என்று சொல்லியிருக்கலாம். மக்களும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகவே இருந்தார்கள். அதற்குக் காரணம் நான்கு நூற்றாண்டுகளாக இறைவனிடமிருந்து எந்தவொரு காட்சியும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் திருமுழுக்குக் யோவான் தன்னுடைய போதனையாலும் தோற்றத்தாலும் மற்றவர்களை விட மாறுபட்டு இருந்ததால், அவர் மெசியாவாக இருக்கக்கூடும் என்று மக்கள் நினைத்தார்கள்; ஆனால் திருமுழுக்கு யோவான் தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தாமல், தான் யார் என்பதை மக்களுக்கு உணர்த்திவிட்டு, ஆண்டவரில் உறுதியாக இருந்து, மகிழ்ச்சியோடு அவருக்குச் சான்று பகர்கின்றார்.

ஆண்டவரில் நிலைத்திருப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சி

நல்லவராம் ஆண்டவரைப் பற்றிக்கொள்வதாலும், அவரைப் பற்றி மக்களுக்குச் சான்று பகர்வதாலும் கிடைக்கும் மகிழ்ச்சி எத்தகையது என்று இதுவரை நாம் பார்த்தோம். இப்பொழுது ஆண்டவர் தருகின்ற மகிழ்ச்சி எத்தகைய பேறுபலன்களை உள்ளடக்கியிருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட தென்னாட்டினர், அதாவது யூதேயா நாட்டினர் அன்னிய மண்ணில் அறுபது ஆண்டுகால அடிமை வாழ்வு வாழ்ந்த பிறகு, தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வருகின்றபொழுது, ஆண்டவர் அவர்களை எத்தகைய ஆசிகளால் நிரப்புவார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. " நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்" என்று கூறும் இறைவாக்கினர் எசாயா, " ஆண்டவரில் நாம் பெரு மகிழ்ச்சி அடைவேன்" என்கின்றார்.

இறைவாக்கினர் எசாயா கூறுகின்ற இந்த வார்த்தைகள் அடிமை வாழ்வுக்குப் பின் சொந்த நாட்டிற்குத் திரும்பிய யூதேயா நாட்டினருக்கு ஆறுதலின் செய்தியை அளிப்பாக இருந்தாலும், மெசியாவின் வருகையின்பொழுது அவரில் நிலைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் ஆசிகளாகவே இருக்கின்றது. எனவேதான் இயேசு, " நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேற்றிற்று" (லூக் 4: 21) என்கின்றார்.

ஆகவே, நாம் புனித பவுல் கூறுவது போன்று நல்லவராம் ஆண்டவரைப் பற்றிக்கொண்டு, திருமுழுக்கு யோவானைப் போன்று ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து, அதன்மூலம் ஆண்டவர் தருகின்ற மகிழ்ச்சியில் திளைத்திருப்போம்.

சிந்தனை
நாம் மகிழ்ச்சியாய் இருக்கின்றோம் என்பதே நாம் இறையன்பில் நிலைத்திருக்கின்றோம் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. ஆகவே, நாம் நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக மகிழ்ச்சியை, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 

 
   மறையுரைச்சிந்தனை  - அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
 
உலகிற்கு ஒளி நானே (யோவா:8:12) என்று கூறி மனிதனாகப் பிறப்பெடுத்த நம் ஆண்டவர் இயேசு தெளிவாகக் கொள்கை வரைவை உலகிற்கு கொண்டு வந்தார். எளியோர்க்கு நற்செய்தி. சிறைப்பட்டோருக்கு விடுதலை, குருடருக்குப் பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு, ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவே வந்தேன் என்று (லூக் 4:18) வெளிப்படுத்தியுள்ளார். இறைவனை இதயத்தின் ஒளியாக எதிர்பார்ப்பதே இந்தத் திருவருகைக் காலம். ஆண்டவரின் வழியை ஆயத்தம் செய்து அவர் தம் பாதையைச் செம்மைப்படுத்துவதே அவாது பணி, காலம் நிறைவேறிற்று, இறையரசு நெருங்கி விட்டது. மனம் திரும்பி நற்செய்தியினை நம்புங்கள் (மாற்:1:15) என்பது இயேசுவின் பணிச் செய்தியின் சுருக்கமாகும்.

பேரொளியைக் கண்டதும் மகிழ்ச்சி பிறக்கிறது. இருளில் நடந்த இஸ்ரயேல் மக்கள் பேரொளியைக் கண்டனர். நாமும் இதய இருளைக் கண்டுகொண்டு, அந்த இருளிலிருந்து பேரொளியாம் இயேசுவை நமதாக்கிக் கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. இதை அறிந்து திருமுழுக்கு யோவான் இயேசுவை வரவேற்கத் தகுதி பெறுகிறார். மக்களையும் தகுதிப் பெற அழைக்கிறார். அவர் ஒளி அல்ல. ஒளியைக் குறித்துச் சான்றுப் பகர அனுப்பப் பட்டவரே.

மனித வாழ்வு பல சமயங்களில் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. துன்பம், கவலை, கண்ணீர், நோய் போன்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது, இருளில் தள்ளப்படுவதை உணருகிறோம். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசு நம்மைத் தேற்றி ஒளியின் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் (லூக்:7:11-15). விதவையின் மகனுக்கு உயிர் கொடுத்து, தாயின் முகத்தில் ஒளி ஏற்றுகிறார் இயேசு. அவளின் இதயம் மகிழ்கின்றது. இருளடைந்த விதவையின் உள்ளம் பேரொளியால் நிரப்பப்படுகிறது.

ஒரு துறவி தன் சீடர்களிடம், எனக்குப் பார்வை தெளிவாக இருக்கிறது என்று எப்போது சொல்வீர்கள் என்று கேட்டார். முதல் சீடன், தூரத்திலிருக்கும் விலங்கைப் பார்த்து அது கழுதையா அல்லது குதிரையா என்று தெரியும் போது பார்வை தெளிவாக இருக்கிறது என்றான். இரண்டாம் சீடன், இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் பார்க்கத் தெரியும் போது பார்வை தெளிவாக இருக்கிறது என்றான். ஆனால் துறவியோ, இருளடைந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, கவலையோடும், கண்ணீரோடும் வாழும் சகோதரனின் முகத்தைப் பார்த்து, இவன் என் உடன்பிறப்பு என்று எப்போது நீ கண்டுகொள்வாயோ, அப்போது உன் பார்வைத் தெளிவாக இருக்கும். பார்வை உள்ளவனாகக் கருதப்படுவாய் என்றார்.

உலகிற்கு ஒளி நீங்கள். மலைமேல் உள்ள ஊர் மறைவாக இருக்க முடியாது. மேலும் விளக்கைக் கொளுத்தி, மரக்காலின் கீழ் வைக்கமாட்டார்கள். ஒளி தரும் பொருட்டு விளக்குத் தண்டின் மீது வைப்பார்கள். உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்வதாக (மத்:5:1416) என்கிறார் நம் ஆண்டவர் இயேசு. இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்துகொள்வோமாக (உரோ:13:12) என்று திருத்தூதர் பவுல் அடிகளார் கூறுகின்றார்.

இருள் உள்ள இடத்தில் ஒளியேற்ற விரும்புகிறார் இயேசு. அவர் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளி விளக்கு. எனவே நமது இதயம் ஒளியால் நிரப்பப்பட்டால் இயேசு நமது உள்ளத்தில் ஒளிர்ந்து கொண்டே இருப்பார்.
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை  ஞானி
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

காலி மனத்தோடு காத்திருப்போம்

இதோ திருமுழுக்கு யோவான்ன் தன்னைப் பற்றி என்ன சொல்கின்றார் பாருங்கள் !
நாள் மெசியா அல்ல (யோவான்ன் 1:19).
நான் எலியா அல்ல (யோவான் 1:21அ).
நான் வரவேண்டிய இறைவாக்கினர் அல்ல (யோவான் 1:21ஆ)
எனக்குப் பின்வருபவர் என்னைவிட வலிமை மிக்கவர் (மாற்கு 1:7).
எனக்குப்பின் வருபவரின் மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை (யோவான் 1:27).
எனக்குப்பின் வருபவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர் (யோவான் 1:30அ)
வரவிருப்பவரை வெளிப்படுத்தவே நான் வந்துள்ளேன் (யோவான் 1:31).
நான் மெசியாவிற்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்(யோவான் 3:28).
நம் நடுவே வந்திருப்பவரின் செல்வாக்குப் பெருகவேண்டும்; எனது செல்வாக்குக் குறையவேண்டும் (யோவான் 3:30).

திருமுழுக்கு யோவான் தன்னைப் பற்றிக் கூறியுள்ளதையெல்லாம் கூட்டி, பெருக்கி, கழித்து, வகுத்துப்பார்த்தால் நமக்கு ஓர் உண்மை வெளிப்படும். அது என்ன உண்மை? தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்ட ஆண்டவராகிய இயேசுவே! நான் ஒன்றுமில்லாதவன், வெறுமையே உருவானவன் என்று திருமுழுக்கு யோவான் சொல்லாமல் சொன்னார்.

தன்னையே வெறுமையாக்கிக் கொண்டு, தன்னிடம் வருபவரின் நிறை ஆசியைப் பெற திருமுழுக்கு யோவான்ன் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, காலி மனத்தோடு காத்திருந்தார். இயேசுவுக்கு வெறுமை என்றால் மிகவும் பிடிக்கும். நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை (லூக் 9:58) என்றவர் இயேசு.

எல்லாரையும்விட அவரையே நாம் அதிகம் அன்பு செய்ய வேண்டும் (மத் 10:37) என்று விரும்புகின்றார் இயேசு.

என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரே அதைக் காத்துக்கொள்வர் (மத் 10:39) என்றவர் இயேசு.

தன்னையே வெறுமையாக்கிக் கொண்டவர் இயேசு (பிலி 2:7).

தனக்குப் பிரியமான ஒன்றைத் தந்த திருமுழுக்கு யோவானுக்கு எண்ணற்ற வரங்களை இயேசு அளித்தார்.

தனக்கு முன் சென்று மனிதர்களின் மனதைச் செம்மைப்படுத்தும் முன்னோடியாக திருமுழுக்கு யோவானைத் தேர்ந்துகொண்டார் இயேசு (யோவான் 1:23).

தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திவைக்கும் பேற்றினைத் திருமுழுக்கு யோவானுக்கு இயேசு தந்தார் (யோவான் 1:29).

தனக்குத் திருமுழுக்குக் கொடுக்க திருமுழுக்கு யோவானை இயேசு தேர்ந்துகொண்டார் (யோவான் 1:32-34).

தன்னை இறைமகன் என அறிந்துகொள்ளும் ஞானத்தைத் திருமுழுக்கு யோவானுக்கு இயேசு தந்தார் (யோவான் :34).

நம்மைச் சந்திக்க வரும் இயேசு திருமுழுக்கு யோவானை ஆசிர்வதித்ததுபோல நம்மையும் ஆசிர்வதிக்க விரும்பினால், அமைதி அருளும் ஆண்டவரால் நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமை பெற விரும்பினால் (1 தெச 5:23-24), வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த காலியான மனத்தோடு இயேசுவுக்காகக் காத்திருக்க வேண்டும்.

1868 1912 காலக்கட்டத்தில் , நான் - இன் (Nan - In) என்ற ஒரு ஜப்பானிய சென்மாஸ்டர், தியானத்தைப் (Zen) பற்றி அறிய விரும்பிய ஒரு பல்கலைக்கழக முதுநிலை ஆசிரியரை வரவேற்றார். நான் 1 - இன் அவருக்கு தேனீரை வழங்கினார். அப்பொழுது அவர் விருந்தாளியின் கோப்பையில் தேனீர் ஊற்றும்பொழுது, அது தேனீரினால் நிறைந்த பிறகும், கீழே வழிவதைப் பொருட்படுத்தாமல், மேலும் மேலும் ஊற்றிக்கொண்டே இருந்தார். இதைக் கவனித்த அந்த முதுநிலை ஆசிரியர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இது நிறைந்து : வழிகின்றது. மேலும் இதில் தேனீரை ஊற்றுவதால் என்ன பயன்? என்று கேட்டார். அதற்கு நான்-இன், இந்தக் கோப்பையைப் போல நீயும் உன்னுடைய கருத்துக்களாலும் யூகங்களாலும் நிரப்பப்பட்டிருக்கின்றாய்.

நீ முதலில் உன்னையே காலிசெய்துகொள்ளாவிட்டால், நான் எப்படி தியானத்தை உனக்குக் கற்றுத் தரமுடியும்? என்று கேட்டார்.

ஓ மனமே! நீ வெற்று மூங்கிலாகு!
உன் வழியாக இயேசுவின் இசை வெள்ளம் கரைபுரண்டோடும்!
உன்னையே நீ சாதாரணமாக எண்ணிக்கொள்!
ஆண்டவர் முன்னால் நீ அசாதாரணமாக விளங்குவாய்!

மேலும் அறிவோம் :

இன்மை ஒருவற்(கு) இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின் ( குறள் : 988).

பொருள் :
நிறைபண்பு எனப்படும் உறுதிப்பாடு ஒருவருக்கு உரியதாகிவிட்டால், இல்லாமை ஆகிய வறுமை அவருக்கு இழிவைச் செய்யாது!
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
யாராவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? ஆம், இரண்டுபேர் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை ; மற்றவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். அப்படியானால் உயிருடன் இருப்பவர் எவரும் மகிழ்ச்சியாய் இல்லை, "வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான். சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான் - ஒரு கவிஞர் பாடியுள்ளார். இத்தயை சூழ்நிலையில் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு 'மகிழ்ச்சியின் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது.

இன்றைய திருப்பலியின் வருகைப்பாடல் நம்மை ஆண்டவரில் மகிழ அழைக்கின்றது. ஏனெனில் ஆண்டவர் அண்மையில் உள்ளார் (பிலி 4:4-5). இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: " ஆண்ட வரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன். என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்" (எசா 61:10), இன்றைய பதிலுரைப் பாடலில் மீட்பரின் தாய் மரியா, "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை தினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது" (லூக் 1:47) என்று பாடுகிறார். இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், "எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்" (1 தெச 5:16) என்று அறிவுறுத்துகிறார். இன்றைய நற்செய்தியில், தன் தாயின் வயிற்றில் இருந்தபோதே மீட்பரை அடையாளம் கண்டு பேருவகையால் துள்ளிய திரு முழுக்கு யோவான் (லூக் 1:44) கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதில் மகிழ்ச்சி அடைகிறார். எனவே, இன்றைய வழிபாடு மகிழ்ச்சியில் தோய்த்துள்ளது.

எத்தயை சூழ்நிலையிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்டவர் அண்மையில் உள்ளார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நமக்காக இருக்கிறார். "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?" (உரோ 8:31), தாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கடவுள் இஸ்ரயேல் மக்களை பாபிலோனிய அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு அருள் தரும் ஆண்டை அருளப்போவதாக வாக்களித்தாம் (முதல் வாசகம்). கிறிஸ்துவில்தான் விடுதலை ஆண்டு நிறைவடைகிறது (லூக் 4:15-22). நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஏனெனில் மரியாவின் விடுதலைப் பாடலில் மரியா கூறுகிறார்: "கடவுள் பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்" (லூக் 1:53).

கடவுள் என்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பில் இருக்கிறார். பணக்காரர்களைவிட எழைகள் தான் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர், நரிக்குறவனும் குறத்தியும், "நாங்கள் புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க, நல்ல பாட்டுப் படிக்கும் வானம்பாடிதானுங்க" என்ற பாடி ஆனந்தமாய் இருக்கின்றனர். ஆனால் பணக்காரர்களோ, "பால் இருக்கும், பழம் இருக்கும், பசி இருக்காது. பஞ்சணையில் காற்று வரும், தூக்கம் வராது" என்று வேதனையுடன் பாடுகின்றனர்.

இவ்வுலகம் தரும் மகிழ்ச்சி உணவிலும் பானத்திலும் அடங்கியுள்ளது. ஆனால் இறையாட்சியின் மகிழ்ச்சி தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளது (உரோ 14:17), "கிறிஸ்து தூய ஆவியால் பேருவகை அடைந்தார்" (லூக் 10:21) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம்.

மகிழ்ச்சி என்பது நம் மனநிலையைப் பொறுத்துள்ளது. கடவுள் தரகத்தில் இருந்தாலும் அது சொர்க்கம் ஆகிவிடும். சாத்தான் சொர்க்கத்தில் இருந்தாலும் அது நரகமாகிவிடும். எனவே நாம் நரகத்தில் இருப்பதும் சொர்க்கத்தில் இருப்பதும் நம்மைப் பொறுத்துள்ளது.

நாம் மகிழ்ச்சியாய் இருக்க நமது உண்மையான நிலையை ஒளிவுமறைவின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். திருமுழுக்கு யோவான் தனது உண்மை நிலையை ஏற்றுக்கொண்டார். தான் மெசியாவோ இறைவாக்கினரோ இல்லை என்றும், மாறாக மெசியாவின் வழியைத் தயார் செய்ய அனுப்பப்பட்டவர் என்பதை வெளிப்படையாக அறிவித்தார். கிறிஸ்துதான் வார்த்தை என்றும் தான் வெறும் குரலொலி என்பதையும் ஒத்துக்கொண்டார். அவருடைய மகிழ்ச்சி எதில் அடங்கியுள்ளது என்பதை மிகவும் அடக்கத்துடன் கூறினார்: *மணமகள் மணமகனுக்கு உரியவள் மணமகளின் தோழரோ அருகில் தின்று அவர் சொல்வதைக் கேட்கிறார். என் மகிழ்ச்சியும் இதுபோன்றது... அவரது செல்வாக்குப் பெருக வேண்டும். எனது செல்வாக்கு குறைய வேண்டும்" (யோவா 3:29-30). திருமுழுக்கு யோவான் மலிவான விளம்பரத்தை விரும்பவில்லை.

நாம் நமது சக்திக்கு மிஞ்சியவற்றைத் தேடும் போது நாம் வீழ்ச்சியடைகின்றோம். விரக்தி அடைகின்றோம். திருப்பா ஆசிரியர் கூறுகிறார்: "எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் ஈடுபடுவதில்லை . தாய் மடியில் தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது" (திபா 131: 1-2)

மயிலிறகு இலேசானதுதான். ஆனால் அதையும் அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால், வண்டி அச்சு முறிந்துவிடும் என்று எச்சரிக்கின்றார் வள்ளுவர்,

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகத்துப் பெயின் (குறள் 475)

அகலக்கால் வைத்ததினால் எத்தனையோ பேர் அவதிப்பட்டு அழித்தொழிந்தனர். 'சிறுகக் கட்டி பெருக வாழ்' என்ற பழமொழிக்கேற்ப தாம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். திருமுழுக்கு யோவானைப்போல் பிறரை வாழவைத்து நாம் திரைக்குப் பின்னால் மறைந்து விடவேண்டும்.

திருவருகைக் காலத்தில் மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் தமது வாழ்வை நிர்ணயிக்க வேண்டிய அருள்வாக்கு: "எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள் இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் எவ்வாச் சூழ்நிலைகளிலும் நன்றி கூறுங்கள்" (1தெச 5:16)
 
மறையுறை மொட்டுக்கள்   Rev. Fr. Peter Jayakanthan sss


 
 
மறையுரைச்சிந்தனை  -திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ் -
 வார்த்தை அல்ல, குரல்

திருமுழுக்கு யோவானுடைய வாழ்வை, பணியை மிகத் தெளிவாக விளக்கும் சிற்பம் ஒன்று ஐரோப்பாவில் ஓர் ஆலயத்தில் உண்டு. உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறியாக இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அவர் அருகில் திருமுழுக்கு யோவான் தன் கையை நீட்டி ஆள்காட்டி விரலால் இயேசுவைச் சுட்டிக்காட்டுவது போலத் தோன்றுகிறார். அவரது ஆள்காட்டி விரலை, அவருடைய தலையை விடப் பருமனாக சிற்பி செதுக்கி இருக்கிறார். அந்தத் திருச்சிலையின் முன் நின்று பார்க்கின்ற போது அந்த விரல் திருமுழுக்கு யோவானுடைய தோற்றத்தையே மறைத்து விடுகிறது. அந்தச் சிலையை அமைத்த சிற்பி, மிக ஆழமான கருத்தை மனதில் கொண்டு அச்சிலை வழியாக வெளிப்படுத்துகின்றார். " அவர் வளர வேண்டும் நான் தேய வேண்டும்" என்பதே அந்தக் கருத்து. அதனால் தான் இயேசுவைச் சுட்டிக்காட்டும் அந்தச் செயலில் தன்னையே மறைத்துக் கொள்கிறார். சுருபத்தைப் பார்ப்பவர்கள் அவர் முகத்தைப் பார்க்க முடிவதில்லை. மாறாக அந்த விரல் சுட்டிக்காட்டும் இயேசுவை மட்டுமே பார்க்கத் தூண்டுகிறது.

திருமுழுக்கு யோவான் என்றுமே தனக்குப் பெருமை தேடிக் கொண்டதில்லை. தனக்குப்பின் ஒரு தலைவர், அதிலும் தனக்கு மிஞ்சிய ஒருவர் உருவாகக் கூடாது என்று ஆட்சியாளர்கள் முனைந்து செயல்படும் வேளையிலே, " அவர் எனக்குப்பின் வருபவர். அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை " (யோ .1:27) என்று உரைத்த திருமுழுக்கு யோவானின் பேருள்ளத்தை என்னென்பது!

பாலை நிலத்தின் அந்தக்குரல் கேட்டு மக்கள் திரண்டனர். மேல் மட்டத்தினரோ மிரண்டனர். திருமுழுக்கு யோவானின் மாறுபட்ட வாழ்வு, துணிச்சல்மிக்க போதனை மக்களிடையே ஓர் ஆர்வத்தைத் தூண்டி எழுப்பியது. இறைவாக்கினர்களுக்கெல்லாம் பெரியவராக, முந்தியவராக மெசியா தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பால், " நீர் மெசியாவோ?" என்ற கேள்வியை எழுப்புகின்றனர். தான் மெசியாவோ, எலியாவோ, இறைவாக்கினரோ அல்ல என்று தொடர்ந்து தன் பணி என்ன, தன் தகுதி என்ன, தன் அழைப்பு என்ன என்பதைத் தெளிவாக்குகிறார்.

தன்னை 'வார்த்தை' என்று அழைக்காமல் 'குரல்' என்று சொல்கிறார். கதிரவனை உலகுக்கு அறிமுகம் செய்து விட்டு நிலவு சிறிதுசிறிதாக மங்கி மறைகிறது. அந்த நிலவு உதிர்த்த அமுத மொழிகள்: " அவர் செல்வாக்குப் பெருக வேண்டும். எனது செல்வாக்கு குறைய வேண்டும்". (யோ.3:30) உண்மையான மெசியாவை, கடவுளின் செம்மறியை, தனக்குப்பின் வருகின்றவரை, தன்னிலும் முன்னிடம் பெற்றவரை, உலகின் பாவங்களைப் போக்குகின்றவரை அடையாளம் காட்டி விட்டுத் தன் கடமையை முடித்துக் கொள்கிறார். அந்த நல்லவருடைய பணியை நற்செய்தியாளரான யோவான் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்: " கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்... அவர் ஒளியல்லர்... அனைவரும் தம் வழியாக நம்புமாறு ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்" (யோ.1:6-8)

திருமுழுக்கு யோவான் சாட்சியம் கூறிச் சுட்டிக்காட்டும் இயேசு "ஒவ்வொரு மனிதனையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி" (யோ.1:9).

இன்றைய உலகில் பிறந்து வாழும் ஒவ்வொரு மனிதனையும் ஏன் பிறந்தோமோ எப்போ மடிவோமோ என்று வறுமையோடும் பிணியோடும் மரணத்தோடும் பாவத்தோடும் போராடித் தவித்துக் கொண்டிருக்கும் பலகோடி இந்தியப் பாமரப் புழுக்களையும் ஒளிர்விக்கும் ஒளி அவர்தானாம்! அவரை இன்று மறைக்கல்வித் தேர்ச்சிக்கான பாடப் பொருளாக, ஞாயிறு கடன் கழிக்க வழிபாட்டுச் சரக்காக மட்டுமே முடங்கச் செய்து விட்டோமோ? எல்லா மக்களையும் ஒளிர்விக்கும் ஒளி என்பதை எண்பிக்க என்ன செய்திருக்கிறோம்? இறைமகன் இயேசுவை இந்திய நாட்டிலே பயனற்ற விளக்காகத் தொழுபவர்களைவிட அவருடைய வருகைக்குக் கருப்புக் கொடி காட்டுபவர்கள் மிகமிக நேர்மையானவர்கள்' என்று சிந்திப்பவனை வெறும் தீவிரவாதி என்று ஓரம் கட்ட வேண்டாம்.

கதிரவன் என்றும் சுடர்விட்டுக் கொண்டுதான் இருக்கின்றான். ஆனால் கார்மேகம் உலகை இருளடையச் செய்வதில்லையா? இந்தப் பின்னணியில் தன்னை மையப்படுத்தாது, ஒளியாம் இயேசுவின் விழுமியங்கள் உலகில் நிலைபெறச் சிந்தித்ததும் செயல்படுத்தியதும் இருளை எதிர்த்து நின்றதுமே திருமுழுக்கு யோவானின் சாட்சிய வாழ்வு.

சாட்சிய வாழ்வுக்கான தடைகள் :
1. தன்னிலை உணராத தன்மை. " நான் ஒளி அல்ல" .
2. பிறர் வளர்ச்சி விரும்பும் மனமின்மை " அவர் வளர வேண்டும்''
3. கைமாறு கருதிப் பணி செய்யும் தன்னலம்.
4. தன் குடும்பம், தன் இனம் என்ற குறுகிய வட்டம்.

தடைகள் தாண்டிய சாட்சிய வாழ்வு:
1.எழுவது அனுபவத்தில் - தூய ஆவியால் உணர்த்தப்பட்டுத் திருமுழுக்கு யோவான் சொன்னார்: " நானும் கண்டேன் இவரே இறைமகன் எனச்சான்றும் கூறி வருகிறேன்" . (யோ.1:34) நற்செய்தியாளர் யோவானின் சான்றும் நினைத்துப் பார்க்கலாம். (1 யோ.1:1,2). " தொடக்க முதல் இருந்த வாழ்வு தரும் வாக்கை நாங்கள் கேட்டோம், கண்ணால் கண்டோம். உற்று நோக்கினோம், கையால் தொட்டுணர்ந்தோம்... அதற்குச் சான்று பகர்கிறோம்" .
2. வளர்வது அர்ப்பணத்தில் - உண்மைக்காக உயிரையும் கொடுக்கும் துணிச்சலோடு சொன்னார் " உன் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறையல்ல" (மார்க் 6:18). தீமையோடு சமரசம் எப்படி அர்ப்பணமாகும்?
3. நிறைவு காண்பது அறிவிப்பில் - " இவரே உலகின் பாவத்தைப்போக்குபவர்" (யோ.1:29) சாட்சிய வாழ்வின் நோக்கம் " அனைவரும் தம் வழியாக இயேசு மீட்பரை நம்பச் செய்வதே" (யோ.1,7).

 
சிந்தனைப் பயணம்: அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
 
மகிழுங்கள் ஞாயிறு

டிசம்பர் 24, அடுத்த ஞாயிறு கிறிஸ்மஸுக்கு முந்திய நாள். அன்று நாம் கிறிஸ்மஸ் திருவிழிப்பைக் கொண்டாடவிருக்கிறோம். எந்த ஒரு விழாவையும் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரம் நமக்குள் ஒருவித பரபரப்பையும், மகிழ்வையும் விதைக்கின்றது. இந்த மகிழ்வை, எதிர்பார்ப்பைக் கொண்டாட, இந்த ஞாயிறை, Gaudete Sunday அதாவது, 'மகிழுங்கள் ஞாயிறு' என்று கொண்டாட தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். இந்த ஞாயிறைக் கொண்டாட, மகிழ்வைப் பற்றியத் தெளிவை நாம் பெறுவது உதவியாக இருக்கும். மகிழ்வைப் பற்றி கூறும் பல கதைகளை நாம் கேட்டிருப்போம். அவற்றில் இதுவும் ஒன்று.

அழகும் செல்வமும் பெற்றிருந்த ஓர் இளம் பெண் தன் வாழ்வு, அர்த்தமற்றதாய், வெறுமையாக இருப்பதைப்போல் உணர்ந்தார். எனவே, அவர் மனநல வழிகாட்டி ஒருவரைச் சந்திக்கச் சென்றார். அந்த வழிகாட்டி, தன் அலுவலகத்தில் தரையைக் கூட்டிச் சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்மணியை அழைத்தார். அவரை அந்த பணக்காரப் பெண்ணுக்கு அறிமுகம் செய்துவைத்தார். "இவர் பெயர் மேரி. இவர் தன் வாழ்வில் எவ்வாறு மகிழ்ச்சியைக் கண்டார் என்பதைச் சொல்வார். அவர் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்" என்று கூறினார்.

பணிப்பெண் மேரி அவர்கள், அந்த பணக்கார பெண்ணிடம் தன் கதையைச் சொன்னார்: "என் கணவர் மலேரியாவால் இறந்தார், அவர் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு எனது ஒரே மகன் ஒரு விபத்தில் இறந்தார். எனக்கு யாரும் இல்லை, என்னிடம் எதுவும் இல்லை. என்னால் தூங்கமுடியவில்லை, சாப்பிடமுடியவில்லை, யாரையும் பார்க்க நான் விரும்பவில்லை, தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன். அப்போது, ​​ஒரு நாள் மாலை, நான் வெளியில் சென்று திரும்பியபோது, ஒரு பூனைக்குட்டி என்னை பின்தொடர்ந்து வந்தது. அந்த பூனைக்குட்டியைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. வெளியே அதிகக் குளிராக இருந்ததால், பூனைக்குட்டியை வீட்டுக்குள் அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். ஒரு தட்டில் அதற்கு முன் வைத்த பாலை முழுவதும் குடித்த பூனைக்குட்டி, என் காலுக்கருகே தன் உடலைத் தேய்த்த வண்ணம் நின்றது. பல மாதங்களுக்குப் பிறகு, அன்று, முதல்முறையாக, நான் சிரித்தேன்.

தொடர்ந்து, சிந்திக்க ஆரம்பித்தேன். ஒரு சிறிய பூனைக்குட்டிக்கு உதவியது என்னை சிரிக்க வைத்தால், என்னைச் சுற்றியிருப்போருக்கு ஏதாவது செய்வது என்னை மகிழ்ச்சியடையச் செய்யும் என்று நினைத்தேன். மறுநாள், சிறிது உணவை தயார் செய்து, உடல்நிலை சரியில்லாமல், படுத்த படுக்கையாய் இருந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் கொண்டு சென்றேன். அன்றுமுதல், ஒவ்வொருநாளும் யாராவது ஒருவருக்கு நல்லது செய்ய ஆரம்பித்தேன். அவர்களது மகிழ்ச்சி என்னையும் மகிழ்வித்தது. மகிழ்வை மற்றவர்களுக்குக் கொடுப்பதன் வழியே நான் மகிழ்ச்சியைக் கண்டேன்."

அந்தப் பணிப்பெண் பகிர்ந்த அனுபவத்தைக் கேட்ட பணக்காரப் பெண்ணின் கண்களில் கண்ணீர் வழிந்தது பணத்தால் வாங்கக்கூடிய அனைத்தும் அவளிடம் இருந்தது, ஆனால் பணத்தால் வாங்க முடியாதவற்றை தான் இழந்திருப்பதை அவர் உணர்ந்தார். "வாழ்க்கையின் அழகு என்பது, நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது அல்ல; ஆனால் உங்களால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதைப் பொருத்தது..." பணிப்பெண் மேரியின் வாழ்க்கையில் நுழைந்த சிறிய பூனைக்குட்டி, மகிழ்ச்சியின் மந்திரமாக மாறியது. நம் வாழ்வில் பெரும்பாலும் ('எப்போதும்' என்றுகூட சொல்லலாம்) மகிழ்ச்சி, சின்ன வடிவங்களில் வருகிறது, நாமோ, கிறிஸ்மஸ் தாத்தா கொண்டுவரும் பெரிய பரிசுகளுக்காகக் காத்திருப்பதால், இந்த சின்னச் சின்ன மகிழ்வுகளை இழந்துவிடுகிறோம்.

உண்மையான மகிழ்ச்சி, உள்ளத்தை நிறைக்கும் மகிழ்ச்சி, சின்னச் சின்ன நிகழ்வுகளில், எவ்வித ஆர்ப்பாட்டமோ, ஆடம்பரமோ, விளம்பரமோ இன்றி, நம்மை வந்தடைகின்றது என்பதைச் சொல்லித்தரும் விழா, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. குழந்தை இயேசுவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு, Gaudete Sunday அதாவது, 'மகிழுங்கள் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் புனித பவுல் அடியார் கூறியுள்ள இறை வார்த்தைகள், இன்றைய வழிபாட்டின் வருகைப் பல்லவியாக ஒலிக்கின்றன: ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். (பிலிப். 4:4-5)

உண்மையான மகிழ்வு, வெளியிலிருந்த வருவதல்ல, அது, நம் உள்ளத்திலிருந்து உருவாவது என்பதை, நாம் வாழ்வில் பலமுறை அனுபவித்திருந்தாலும், கிறிஸ்துபிறப்பு விழாவின் மகிழ்வு, கண்ணைக் கவரும் வெளிப்புற அலங்காரங்களிலும், பரிசுப்பொருள்களிலும் உள்ளது என்ற தவறான எண்ணங்களை, வர்த்தக உலகம், நம்மீது திணிக்க முயல்கிறது. வர்த்தக உலகின் பாடங்களுக்கு எதிராக, உண்மையான மகிழ்வு உள்ளத்திலிருந்து வருவது என்பதைச் சொல்லித்தரும் பல கதைகளில் இதுவும் ஒன்று. அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் இந்தக் கதையை, அவர் சொல்வதாகவேக் கேட்போம்: பனி கொட்டிக் கொண்டிருந்த ஒரு நாள் மாலையில், என் வீட்டுக் கதவைத் தட்டியபடி ஒரு சிறுவனும், சிறுமியும் நின்றனர். அவர்கள் ஏழைகள் என்பதை, அவர்கள் அணிந்திருந்த உடையே பறைசாற்றியது. "உங்களிடம் பழையச் செய்தித்தாள்கள் உள்ளனவா?" என்று அக்குழந்தைகள் என்னிடம் கேட்டனர். அப்போதுதான், அவர்களது கால்களை நான் பார்த்தேன். உறையவைக்கும் பனியிலும், அவர்கள் அணிந்திருந்தது, மெலிதான செருப்புக்கள்.

அந்தச் செருப்புக்களைப்பற்றி, இக்கதையில் வாசிக்கும்போது, வறுமைப்பட்ட நாடுகளில், செருப்பேதும் அணியாமல் நடக்கும் பல்லாயிரம் மக்களை எண்ணிப்பார்க்கிறோம். குளிரிலிருந்தும், சுடும் வெயிலிலிருந்தும் காலடிகளைக் காத்துக்கொள்ள, சாக்குத் துணி, " பிளாஸ்டிக் பாட்டில்" , செய்தித்தாள், என்று பலவடிவங்களில் வறியோர் உருவாக்கிக் கொள்ளும் 'செருப்புக்கள்' நம் நினைவில் நிழலாடுகின்றன. நம் கதையைத் தொடர்வோம்:

அக்குழந்தைகளை வீட்டுக்குள் வரச்சொன்னேன். அவர்கள் அணிந்திருந்த அழுக்கான செருப்புக்கள், பனியில் நனைந்திருந்ததால், ஈரமான, அழுக்கானச் சுவடுகளை வீட்டிற்குள் பதித்தன.

சுடச்சுட தேநீரும், சில " பிஸ்கட்டு" களும் தந்தேன். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் சென்று, பழைய நாளிதழ்களையும், அவற்றோடு, அவர்கள் அணிவதற்கு, சில உடைகளையும், காலணிகளையும் கொண்டு வந்தேன். தேநீரை அருந்திய சிறுவன், என்னிடம், "நீங்கள் பணக்காரரா?" என்று கேட்டான். எனக்குள் எழுந்தது சிரிப்பு. நான் எவ்வளவு ஏழை என்பது அவர்கள் அமர்ந்திருந்த அந்த " சோபா" வைப் பார்த்தாலே தெரியும். நடுத்தர வருமானம் உள்ள என்னைப் பார்த்து அவன் அந்தக் கேள்வியை ஏன் கேட்டான் என்று புரியாமல், "நானா, பணக்காரியா? இல்லையே. ஏன் அப்படி கேட்கிறாய்?" என்று அவனிடமே கேட்டேன். அப்போது அவனது தங்கை என்னிடம், "நீங்கள் தேநீர் கொடுத்த இந்த " கப்" பும் தட்டும் ஒரே நிறத்தில் உள்ளன. அதனால், நீங்கள் பணக்காரராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தோம்." என்று பதில் சொன்னாள்.

இதைச் சொன்னபின், நான் தந்தவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரும் சென்றனர். என்னிடம் " நன்றி" என்று கூட அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் நன்றி சொல்லவும் தேவையில்லை என்பதை உணர்ந்தேன். சொல்லப்போனால், நான்தான் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். என்னைப்பற்றி நானே இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்ளும்படி செய்த அவர்களுக்கு, நான்தான் நன்றி சொல்லவேண்டும்.

அவர்கள் சென்றபின், அந்த " கப்" பையும் தட்டையும் பார்த்தேன். அவை ஒரே நிறத்தில் இருந்தன என்பது, அவர்கள் கண்களில், என்னை ஒரு பணக்காரியாகக் காட்டியது. ஆனால், என் கண்களில், எண்ணங்களில், என் வறுமை மட்டுமே அதிகம் நிறைத்து வந்துள்ளதை எண்ணி வெட்கப்பட்டேன். உண்ண உணவு, உடுத்த உடை, வாழ ஒரு வீடு இவற்றைத் தந்த இறைவனை அப்போது நன்றியோடு எண்ணிப் பார்த்தேன்.

வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது, அக்குழந்தைகளின் நனைந்த, அழுக்கான பாதங்கள் விட்டுச்சென்ற சுவடுகளைச் சுத்தம் செய்யாமல் விட்டுவைத்தேன். நான் பணக்காரி இல்லையே என்று ஏங்கும்போதெல்லாம், அந்தப் பாதச் சுவடுகள், நான் எவ்வளவு பணக்காரி என்பதை, மீண்டும் மீண்டும் எனக்கு நினைவுறுத்த வேண்டும் என்பதற்காக, அந்தச் சுவடுகளை, துடைக்காமல் விட்டுவைத்தேன்.

அன்று, அவ்வீட்டில் பதிந்தன, இரு குழந்தைகளின் பாதங்கள்; அப்பெண்ணின் மனதில் பதிந்தன, அற்புதப் பாடங்கள்.

குழந்தை வடிவில் வரும் கண்ணனின் பாதங்களை வரைந்தால், வீட்டுக்குள், நல்லவை நடந்துவரும் என்று எண்ணுவது, இந்திய மண்ணில் ஓர் அழகிய மரபு. குழந்தை வடிவில் இறைவன் வரும் இந்த கிறிஸ்மஸ் நேரத்திலும், அவரது பாதங்கள் நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பல அழகிய பாடங்களைப் பதி்த்துச்செல்ல வேண்டும்.

மிக எளிதில் மகிழ்வையும், நிறைவையும் அடைவது, குழந்தைகளே என்பது, இந்தப் பாடங்களில் ஒன்று! மகிழ்வைத் தேடி, கடலையும், மலைகளையும் கடந்துசெல்லத் தேவையில்லை; நாம் மனது வைத்தால், நம்மைச் சுற்றியே மகிழ்வைத் தேடிக்கொள்ளலாம் என்பதை குழந்தைகள் சொல்லித்தருகின்றனர். இருப்பினும், அவர்களிடமிருந்து பாடங்கள் பயில, தேவையான பணிவு நமக்கு இல்லாததால், பொய்யான மகிழ்வைத் தேடி அலைகிறோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் கூறும் வழிகள் மிக, மிக எளிதான வழிகள். ஆயினும், நாம் அடிக்கடி பின்பற்றத் தவறும் வழிகள். எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்... அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். ( 1 தெசலோனிக்கர் 5: 16-24)

புனித பவுல் கூறுவதுபோல், மகிழ்ச்சியாக இருப்பதற்கு எளிதான வழிகள் இருந்தாலும், நெளிவு, சுளிவான, நெருக்கடியான வழிகளில் பயணம் செய்து, நமது நிம்மதியையும், மகிழ்வையும் இழப்பது நமக்குக் கைவந்த கலையாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

" உள்ளதை அனுபவித்து மகிழ்பவரே உண்மையில் செல்வந்தர்கள்" (The truly rich are those who enjoy what they have) என்பது ஒரு யூதப் பழமொழி. இல்லாத தேவைகளை உருவாக்கி, இன்னும் அதிகம், அதிகமாய் பெறுவதில் மட்டுமே நமது கிறிஸ்மஸ் மகிழ்வு உள்ளது என்று வர்த்தக உலகம் சொல்கிறது. 'நான்' என்ற உலகை நிரப்பிக்கொள்வதே மகிழ்வு என்று சொல்லும் வர்த்தக, விளம்பர உலகின் பாடங்களுக்கு முற்றிலும் நேர் மாறான பாடங்களை, உண்மையான கிறிஸ்மஸ் மகிழ்வைப்பற்றிய பாடங்களை, இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்லித் தருகின்றது. நமது வாழ்வின் பொருளும், மகிழ்வும் நம்மிடமிருந்து அல்ல, அடுத்தவரிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்பதை இறைவாக்கினர் எசாயா அவர்களின் வார்த்தைகள் முழங்குகின்றன:

இறைவாக்கினர் எசாயா 61: 1-3
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்: ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.

தங்களையே மறந்து, மற்றவருக்காக உழைப்பவர்கள் பெறும் மகிழ்வு, 'நான்' என்ற சிறைக்குள் சிக்கிக்கொள்ளாது. இத்தகைய மகிழ்வுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு, திருமுழுக்கு யோவான். தன்னைத் தேடி மக்கள் வந்தபோது, அத்தருணத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, பேரும், புகழும் பெறுவதற்குப் பதில், தான் உலக மீட்பர் அல்ல, அந்த மீட்பர் வரும் வழியைக் காட்டுவது மட்டுமே தன் பணி என்பதை, திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகச் சொன்னார். இதைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்: யோவான் நற்செய்தி 1: 6-8, 19-28

தான் ஒளி அல்ல; அந்த ஒளியை மக்களுக்கு அடையாளம் காட்ட வந்தவர் என்று யோவானைப் பற்றி சொல்லப்பட்டுள்ள வரிகள், கிறிஸ்மஸைப்பற்றிய ஓர் உருவகத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. திருமுழுக்கு யோவானின் பணியைக் குறித்தும், கிறிஸ்மஸ் விழாவின் உட்பொருளைக் குறித்தும் புரிந்துகொள்ள உதவும் அழகிய உருவகம் இது. நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய புயல் ஒன்று வீட்டைச் சூழ்ந்தபோது, தனி அறையில் படுத்திருக்கும் தன் சிறுவயது மகன் பயந்துவிடுவானே என்று அவனைப் பார்க்கச் செல்கிறார் ஒரு தந்தை. அங்கு, இருளில் படுத்திருக்கும் மகனைக் காண ஒரு " டார்ச்" விளக்கை எடுத்துச் செல்கிறார். அவர் கதவைத் திறந்து " டார்ச்" விளக்கை அடித்ததும், சப்தம் கேட்டு, எழுந்த மகன், பயத்தில், "யாரது?" என்று கேட்கிறான். தந்தை உடனே அந்த " டார்ச்" விளக்கை அவன் மீது அடித்து, அவனை இன்னும் பயத்தில் ஆழ்த்தாமல், அந்த டார்ச் ஒளியைத் தன் மீது திருப்பி, "மகனே, நான்தான்!" என்று சொல்கிறார். மகனும், அந்த ஒளியில், தந்தையைக் கண்டு, பயம் தெளிகிறான்; மகிழ்கிறான்.
இருள் சூழ்ந்த உலகில் தன் மீது ஒளியைத் திருப்பி, இதோ நான் வருகிறேன் என்று இறைவன் சொன்னதே கிறிஸ்மஸ் பெருவிழா. அந்த ஒளியை இறைவன் மீது திருப்பிய " டார்ச்" விளக்கு, திருமுழுக்கு யோவான்.

இது " மகிழ்ச்சி ஞாயிறு" என்றாலும், புனித பூமியில், குறிப்பாக காஸாவில் தொடர்நது நிகழும் வேதனையான உண்மைகள், நம் மகிழ்ச்சியைக் குறைக்கிறது. டிசம்பர் 12, கடந்த செவ்வாயன்று, காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையில், பெரும்பான்மையான நாடுகள் வாக்களித்த போதிலும், இஸ்ரேல் அரசு காசா மீது தன் தாக்குதலைத் தொடரும் என்று கூறியுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் கொடூரமான, இடைவிடாத குண்டுவீச்சு, அப்பாவி பாலஸ்தீனிய மக்களை இடைவிடாது வேட்டையாடி வருகிறது.

டிசம்பர் 11 அன்று, ஒரு வாட்ஸ்அப் செய்தி வெளியானது. எவாஞ்சலிக்கல் லூத்தரன் சபையைச் சேர்ந்த பணியாளர் Munther Isaac அவர்கள், வேதனையான கிறிஸ்மஸ் செய்தியொன்றைப் பகிர்ந்துகொண்டார்: " இந்த ஆண்டு, அனைவருக்கும் தெரிந்த வெளிப்படையான காரணங்களுக்காக, பெத்லகேமில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. காஸாவில் நம் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகும்போது, குழந்தைகள் இவ்வளவு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படும்போது, கிறிஸ்மஸைக் கொண்டாடமுடியாது. இவ்வாண்டு, கிறிஸ்துமஸ் திருநாள், கொண்டாட்டங்களாக இல்லாமல் பிரார்த்தனைகளாக இருக்கும் என்று எருசலேமில் உள்ள அனைத்து கிறிஸ்தவத் தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். பாலஸ்தீனியர்களாகிய எங்களுக்கு, இவ்வாண்டு, கிறிஸ்மஸ் தரும் பொருள் என்ன, கிறிஸ்மஸின் அர்த்தத்தைப் பற்றி உலகிற்கு என்ன செய்தியை அனுப்ப விரும்புகிறோம் என்று யோசித்தோம், எனவே, காசாவில், அழிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் குழந்தை இயேசு சிக்கியிருப்பதைப்போன்ற குடிலை அமைத்தோம்."

லூத்தரன் பணியாளர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, காஸாவில் இடிந்து வீழ்ந்த வீடுகளைக் குறிக்கும் கற்கள் மற்றும் பாறைகளின் குவியல்களை வீடியோவில் காண்கிறோம். உடைந்த கற்களுக்கு நடுவே குழந்தை இயேசுவின் திரு உருவம் வைக்கப்பட்டுள்ளது. பணியாளரின் செய்தி தொடர்கிறது: " இடிபாடுகளிலிருந்து வெளியே எடுக்கப்படும் குழந்தைகளை பல செய்திப் படங்களில் பார்த்திருக்கிறோம். அவர்களோடு குழந்தை இயேசு தன்னையே அடையாளப்படுத்துகிறார் என்பதை உணர்கிறோம். துன்புறுவோருடன் இயேசு தன்னையே இணைத்துக்கொள்கிறார் என்பது எங்களுக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கை தரும் செய்தி. உலகம் கிறிஸ்மஸைக் கொண்டாடும் வேளையில், இடிபாடுகளுக்குள் நம் குழந்தைகள் உள்ளனர். குடும்பங்கள் இடம்பெயர்ந்து, அவர்களது வீடுகள் அழிக்கப்படுகின்றன. இதுதான் பாலஸ்தீனத்தில் எங்களுக்கு கிறிஸ்மஸ்." தெய்வீகக் குழந்தையை நம் மத்தியில் வரவேற்கத் தயாராகும் வேளையில், காசாவில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களுடன் நம்மை இணைத்துக்கொள்வதன் வழியே, இந்த கிறிஸ்மஸை அர்த்தமுள்ள வகையில் நாம் கொண்டாட முயல்வோம்.

இறுதியாக ஒரு வேண்டுதல்... டிசம்பர் 17, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 87 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நல்லாயரான இயேசு, உரோமையின் ஆயராகப் பணியாற்றும் பிரான்சிஸ் அவர்களுக்கு உடல் நலம், மகிழ்வு, அமைதி ஆகிய நற்கொடைகளை வழங்க செபிப்போம்.
=========================================================================
 
ஞாயிறு மறையுரை - திரு. சின்னப்பன் டிசில்வா. - வெலிங்டன்.ஊட்டி
மகிழ்ச்சி - பெரு மகிழ்ச்சி

ஆர்க்கிமிடிஸ் என்ற கிரேக்க அறிஞர் - அனைவருக்கும் பயன்படக்கூடிய, அறிஞர்களால் தேடப்பட்டுக் கொண்டிருந்த - அந்த மிதத்தல் விதியைக் கண்டுபிடித்தபோது, தன் நிலை மறந்தவராக மகிழ்ச்சியால் உந்தப்பட்டவராக வீதிகளில் கண்டுபிடித்து விட்டேன் என்று கூவிக்கொண்டே ஓடினார் என்று சரித்திரம் சான்று பகர்கின்றது. ஆங்கில மொழியில் Rejoice என்று மகிழ்ச்சியை குறிப்பிடும் வார்த்தையை நல் தமிழ் மூன்று விதமான விளக்கங்களை

1) பெரு மகிழ்ச்சி அடை;
2) பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்து;
3) மகிழ்ந்து கொண்டாடு.
எனத் தந்து மகிழ்கிறது.

1)பெரு மகிழ்ச்சியடை;

யாரும் கண்டுபிடிக்காததை கண்டுபிடித்தபோது அறிஞர் ஆர்க்கிமிடிஸ் வீதிகளில் மகிழ்ச்சியால் ஓடினார் என்பது சரித்திரம். இங்கு நற்செய்தியில் யாரும் கண்டு பிடிக்காத செம்மறியானவர் கூட்டத்தின் நடுவே நிற்பதை கண்டுகொண்ட திருமுழுக்கு யோவான் (யோ 1:26),

இருக்குமிடம் பாலை நிலம் என்றாலும்; கூவி குரல் எழுப்பி மனம் திரும்ப மக்களை அழைத்தார். இந்த மகிழ்ச்சியை தன தாக்கிக் கொள்ள முதலில் அவர் தான் யார் தன் நிலை (யோ: 1:27) என்ன என்பதில் தெளிவாக இருந்ததார். எனவேதான் நீங்கள் யார் என்ற கேள்விக்கு, நான் அவர் அல்ல; எசாயா தீர்க்கதரிசியின் வார்த்தை படி பாலைவனத்தில் ஒலிக்கும் குரல் நான் (யோ 1:23) என்று அவரைவிட சமூகத்தில் எல்லா நிலைகளிலும் மேம்பட்ட யூதர்களுக்கு (யோ 1:19)

பயமின்றி, உறுதியாகவும் இறுதியாகவும் பதில் தந்தார். எவர் ஒருவர், தன் நிலையை முழுமையாக அறிந்திருக்கிறார்களோ அவர்கள் தங்கள் பணியைத் திறம்பட செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவார்கள் என்பதற்கு இந்தத் திருமுழுக்கு யோவான் ஒரு முன் உதாரணம். நாமும் பெரு மகிழ்ச்சியை அடைந்திட உறுதியுடன் உழைப்போம்.

2)பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்து.

மகிழ்ச்சி என்பதே வெளிப்படுத்துவதிலும் பகிர்வதிலும் தான் நிலை பெறுகின்றது. இதோ. யோவான் - அவர்களிடம், "நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;

(யோ 1:26) என்று தான் பெற்றுக் கொண்ட மீட்பரின் வருகையின் மகிழ்ச்சியை அனைவருக்கும் வெளிப்படுத்தினார். திரு அவை இந்த ஞாயிருக்கான மெழுகுவர்த்தியை இடையர்களின் மெழுகுவர்த்தி என்று அடையாளப்படுத்துகின்றது. ஏனெனில் இடையர்கள் - மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை (லூக் 2:10) கேட்டபின், விரைந்து சென்று (லூக் 2:10) நிகழ்ந்தவை அனைத்தையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை. (லூக் 2:17) மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை. அனைவருக்கும் வெளிப் படுத்தினார்கள்.

இதோ இன்று நாமும்
"உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" (லூக் 2:13-14) என்ற மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அனைவருக்கும் வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம். திரு முழுக்கு யோவான் கிறிஸ்துவிற்கு முன்னோடியாக வந்தார் - நாமோ உலகிற்கு கிறிஸ்துவாகவே வாழ அழைக்கப் பெற்றிருக்கின்றோம்.
3) மகிழ்ந்துகொண்டாடு.

கூடியிருப்போர் மத்தியில் மகிழ்ந்து கொண்டாட அவர்கள் நடுவில் உன்னதமான சிறப்புமிக்க நபரோ பொருளோ இருப்பது மரபு. திருஅவை இன்றைய மெழுகுவர்த்தியை ரோஜா வண்ணத்தில் உருவாக்கி உள்ளது. திருவழிபாட்டு முறைப்படி ரோஜா வண்ணம் உன்னதத்தை உயர்ந்ததை குறிக்க கூடியது. றொசெ என்ற ஆங்கில வார்த்தையும் மொழி இலக்கணப்படி உயர்ந்தது என்ற பொருள் கொண்டது. இது இப்படி இருக்க
நமது மகிழ்ச்சி ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் (எசாயா 61:1) அமையும் எனில் நமதுகொண்டாட்டங்களும் - வாழ்வும் இடையர்களின் மெழுகுவர்த்தியென உயர்வான உறுதியுள்ள ரோஜா வண்ணத்தில் திகழும் என்பதில் ஐயமில்லை.

மீண்டும் நமது நல் தமிழ் உணர்த்தும் Rejoice என்பதன் பொருளான
1) பெரு மகிழ்ச்சியடை;
2) பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்து;
3) மகிழ்ந்துகொண்டாடு
என்ற வார்த்தைகளை நினைவு கூறுவோம் முடிவாகக் கிறிஸ்து என்ற பெரு மகிழ்ச்சியை நாம் அடைய வேண்டும்
வெளிப்படுத்த வேண்டும்
அதை அனைவரோடும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடவும் முன் வர வேண்டும். ஏனெனில் உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார். எனவே எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருப்போம்.
(மகிழ்ச்சியாக இருக்க)
இடைவிடாது இறைவனிடம் வேண்டுவோம். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுவோம். (1 தெசலோனிக்கர் 5:16-18)
இறைவன் நம்மோடு.

   உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே! என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!