நல்லாயன் இயேசு இன்றைய திருப்பலிக்கு நம்மை வரவேற்கிறார்!
ஆயனின் குரலுக்கு ஆடுகள் செவிமடுத்து வாழ்வு பெறுவது போல ஆண்டவன்
குரலுக்கு செவிமடுத்து நிலை வாழ்வுபெறவும், நாமே நல்ல ஆயனாக மாறி
நிலை வாழ்வின் பாதையில் ஆடுகளை மேய்க்கவும் பாஸ்காக் காலம்
நான்காம் ஞாயிறு திருப்பலியில் நமக்கு நல்லாயன் இயேசு
அருள்பொழிகிறார்!
ஆம்..நல்லாயன் இயேசுவின் குரல் கேட்டு பயணித்தால், பாதை தவறினாலும் மீட்கப் பெறுவோம். நோயுற்றாலும் நற்சுகம் பெறுவோம்.
களைப்புற்றாலும் இளைப்பாறுதல் பெறுவோம். காயமுற்றாலும் மருந்திடப்
பெறுவோம். வறண்ட பள்ளத்தாக்கிலும் நீரூற்றைக் காண்போம். சிதறிப்
போனாலும் ஒன்றிணைக்கப் பெறுவோம். ஓடிப் போனாலும் தேடப்பெறுவோம்.
பசியுற்றாலும் பசியாறப் பெறுவோம். தாகமுற்றாலும் தாகம் தணியப்
பெறுவோம்.
ஆம் ஆயனின் குரல்கேட்டுப் பின்தொடரும் ஆடுகளை எந்தத் தீங்கும் பின்
தொடராது. ஆயனின் குரல் கேட்டு பின் தொடரும் ஆடுகளாக அலைவோம்!
ஆடுகளை மேய்க்கும் நல்ல ஆயனானால், ஆடுகளின் பெயர்களைச் சொல்லி
அழைப்போம். ஆடுகளின் முழுமுகவரி அறிவோம். காணாமல் போனதைத்
தேடுவோம். முள்ளில் சிக்கியதை கவனமாய் மீட்போம். பசியுற்ற ஆடுகளின்
பசியைத் தீர்ப்போம். தாகமுற்ற ஆடுகளின் தாகம் தீர்ப்போம். காயமுற்ற
ஆடுகளின் மீது மருந்து பூசுவோம். சிதறிய ஆடுகளை ஒன்றிணைப்போம்.
ஆடுகள் நலம்பெற தன்னலம் தவிர்ப்போம். ஆடுகள் வாழ்வுபெற நம் உயிர்
இழப்போம்.
ஆடுகளாக அலையும் போது ஆயனின் குரல் கேட்டு அலைவோம் ஆடுகளை
மேய்க்கும் போது நல்ல ஆயனாக மந்தையை மேய்ப்போம். மந்தையைவிட்டுப்
பிரியாத ஆடுகளாய் வலம் வரவும், மந்தையை விட்டுப்பிரிந்த ஆடுகளை
கூட்டிச்சேர்க்கும் ஆயனாய் வலம் வரவும் அருள் கேட்டு திருப்பலியில்
செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. 'எனது குரலுக்கு செவிசாய்க்கின்ற ஆடுகள் நிறைவாழ்வு
பெறுகின்றன' என மொழிந்த ஆயனே எம் இறைவா!
உமது குரலுக்கு செவி மடுத்து உம் பணிபுரியும் திருத்தந்தை
ஆயர்கள், குருக்கள், துறவியர், தங்கள் மேய்ப்புப் பணியை
திறம்பட ஆற்றும் நல்லாயானாக வலம் வர அருள் தர இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
2. 'எனது மந்தையைத் தேடிச் சென்று பாதுகாப்பேன்' என்று
மொழிந்த ஆண்டவரே!
நாடுகளின் தலைவர்கள் நலிவுற்ற மக்களைத் தேடிச் சென்று
பாதுகாப்புடன் வழிநடத்தும் நல்லாhயனாக வாழ வரம்தர
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. வாழ்வளிக்கும் நீரூற்றுக்கு எமை அழைத்துச் செல்லும்
ஆண்டவரே!
வாழ்வு தரும் பாதையில் தங்கள் மந்தையை மேய்க்க எமது
ஆன்மீகத் தந்தையருக்கு அருள் தரவேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
4. 'எனது குரலுக்கு செவிசாய்க்கும் ஆடுகளை எவரும் என்
கையிலிருந்து பறித்துவிட முடியாது' என மொழிந்த
ஆண்டவரே!
துன்பங்களால் வருந்தும் நாங்கள் உமது கரம் எம்மோடு
இருந்து வழிநடத்தும் என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன
குறைவு என்ற நம்பிக்கை உணர்வினால் நிரப்பப்படவும்,
மந்தையை விட்டு வெளியேறிய ஆடுகளை கூட்டிச் சேர்க்கவும்
அருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. ஆயன்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள உறவை சிந்திக்க
அழைக்கும் ஆண்டவரே!
ஆயனின் பாதுகாப்பில் இருக்கும் ஆடுகள் துன்புறும்
போதும், வழிதவறும் போதும், பசியுறும்போதும்,
நோயுறும்போதும் ஆயனின் அரவணைப்பை அதிகம் பெறுவதுபோல
பலவகை சிக்கலில் மாட்டித் தவிப்பவருக்கு நாங்களும்
நல்லாயனாக இருந்து வழிகாட்டவும், நல்லாயனாகிய உமது
குரலுக்கு செவிமடுத்து உம் மந்தையைச் சேர்ந்த ஆடுகளாய்
பயணிக்கவும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுப்பான்.
விர்ஜீனியா தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் ஒரு பெரும்
அசம்பாவிதம் நடந்தது. துப்பாக்கி ஏந்திய சமூக
விரோதிகள் ஒரு வகுப்பறையில் நுழைந்தார்கள். அங்கு
பாடம் நடத்திக் கொண்டிந்த 75 வயது மதிக்கத்தக்க
எரோநாட்டிக்கல் என்ஜினியர் துரிதமாக செயல்பட்டு
அறையின் கதவுகளை அடைத்து தன்னுடைய மாணவர்களை சன்னல்
வழியாக குதித்து தப்பச் செய்தார். கதவை பலமாக தட்டிய
சமூக விரோதிகள் கதவை துப்பாக்கியினால் சல்லடையாக
துளைத்தார்கள். இதனால் துளைக்கப்பட்டது கதவு மட்டுமல்ல
பேராசிரியரின் உடலும்தான். இரத்த வெள்ளத்தில்
சரிந்தார். அவர்தான் நல்ல ஆயன். 'நல்ல ஆயன் தன்
ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்' (யோவா10:11).
ஆடுகளுக்கு வாயில் நானே என் வழியாக நுழைவோருக்கு
ஆபத்து இல்லை. நான் ஆடுகள் வாழ்வை பெரும் பொருட்டு
அதுவும் நிறைவாகப் பெரும் பொருட்டு வந்துள்ளேன்
என்றார். ஆண்டவர் ஒரே மந்தையை உருவாக்குவது தனது பணி
என்றும் தனது கிடையைச் சேராத வேறு பல ஆடுகளும் உள்ளன:
அவற்றையும் நான் கூட்டிச் சேர்க்க வேண்டும் என்றார்.
தனது பணியை தன் சீடர்களிடம் ஒப்படைத்ததை குறிப்பாக
பேதுருவிடம் கூறியதை விவிலியத்தில் வாசிக்கிறோம்.
கடந்த வாரம் என் ஆடுகளை மேய் பேணி வளர் என்றார்.
இதனால்தான் திருத்தந்தை முதல் பங்குத்தந்தை வரை ஆயர்
கண்காணிப்பார் என்ற பெயரை பல்வேறு நிலைகளில்
பெறுகின்றார்கள். இதன்படி மக்களை வழிநடத்த உயிரை
கொடுத்து வழிநடத்த இவர்களுக்கு கடமையுண்டு.
கடவுளும் சாத்தானும் மலையுச்சியில் ஒருநாள்
சந்தித்தார்கள். கடவுள் சொன்னார், 'சகோதரா, உனது நாள்
நல்லதாக அமையட்டும்.!'
சாத்தான் மறுமொழி எதுவும் கூறவில்லை.
கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது இன்று நீ மிகவும் கோபமாக
இருக்கிறாய் போலிருக்கிறதே...!"
சாத்தான் சொன்னது, எல்லாம் இந்த அறிவு கெட்ட முட்டாள்
மனிதர்களால் தான்' இப்போதெல்லாம் சிலகாலமாக இந்த
மனிதர்கள் என் குரலை நீ என்று நினைத்துக்
கொள்கிறார்கள் தான்'
கடவுள் சொன்னார் 'இந்த மனிதர்கள் சில வேளைகளில் எனது
குரலையும் இப்படித்தான் நீ என்று நினைத்துக் கொண்டு
முணுமுணுக்கிறார்கள்
' அதற்காக நான் எதுவும்
செய்வதில்லையே என்றார்.
கடவுள்: நான் நல்லது செய்யும் போது இந்த சனியன்
பிடித்த கடவுளுக்கு இப்பதான் கண் தெரியுது என்று
சொல்கிறார்கள்.
நீ கீழே விழத்தாட்டும்போது அடக்கடவுளே ஏன் கீழே
தள்ளிவிட்டீங்கள் என்று என்னை முணுமுணுக்கிறார்கள்.
கீழே விழுந்தவனை பரிதாபப்பட்டு தூக்கிவிடும் போது நல்ல
வேளை இந்த சனியன் நம்மை எழுப்பிவிட்டு போச்சு
என்கிறார்கள்.
கனிவோடு நமை மேய்க்கும் மேய்ப்பனின் குரல் கேட்டு
மந்தையைச் சேர்ந்த ஆடுகளாய் மேய்வோம்.
ஆயன் கனிவோடு அழைக்கும் குரல் கேட்டு ஆடுகள் ஓடி
வரும். ஆடுகளின் வயிற்றுக்கு எடுக்கும் பசி ஆயனின்
இதயத்துக்குள்ளும் எடுக்கும்.
ஆடுகளின் நாவுக்கு எடுக்கும் தாகத்தை ஆயனின் இதயம்
தீர்க்கும். எதிரிகள் தாக்கும் துன்பத்தை, துயரத்தை
ஆயனின் கரங்கள் தடுக்கும்.
ஆயனின் குரலை கேட்டு பின் தொடரும் ஆடுகளை எந்தத்
தீங்கும் பின் தொடராது. ஆயனின் பாதுகாப்பில் இருக்கும்
ஆடுகள் ஆயனின் அரவணைப்பை மிகுதியாகப்பெறும்.
ஆயனின் அரவணைப்பில் இடம் பெறும் ஆடுகளைப் பற்றிய
முழுத்தகவலை அறிந்த ஆயன் சினையாடுகளை இளைப்பாறச்
செய்வதில் சலிப்படைய மாட்டான். காயமுற்ற ஆடுகளை
காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் தயங்கமாட்டான்.
நல்ல ஆயன் தன் ஆடுகளின் நலனுக்காக தன்னைத் தியாகம்
செய்வான்.
குடும்பத்தில் பிள்ளைகளை நல்ல ஆயனாக இருந்து
வழிநடத்த பெற்றோர்கள் கடமைப்பட்டுள்ளாகள்.
பள்ளியில் மாணவச் செல்வங்களை வழிநடத்த நல்ல ஆயனாக
ஆசிரியர்கள் செயல்பட கடமைப்பட்டுள்ளார்கள்.
பங்கில் இறைமக்களை வழிநடத்த நல்ல ஆயனாக பங்குத்
தந்தையர்கள் செயல்பட கடமைப்பட்டுள்ளார்கள்.
நாட்டு மக்களை வழிநடத்த நாடுகளின் தலைவர்கள்
நல்லாயனாக செயல்படக் கடமைப்பட்டுள்ளார்கள்.
பிள்ளைகளும் ஆயன் குரல் கேட்டு அலையும் ஆடுகளாய்
பெற்றோர் சொல் கேட்க வேண்டும்.
அவரவர் நிலையில் நல்ல ஆடுகளாய் மந்தைக்குள் நிலவ
அவரவர் கடமைகளை சிறப்பாக செய்ய வேண்டும்
இந்த நம்பிக்கை ஆண்டிலே மந்தையை விட்டு பிரிந்து
சென்ற ஆடுகளுக்காக செபிக்க கடமைப்பட்டுள்ளோம்.
நமது கத்தோலிக்க விசுவாசத்தில் வாழ்ந்துவிட்டு நம்மை
விட்டு பிரிந்து பிறமதத்திற்கு சென்றுள்ள நமது
சகோதரர்கள் ஆயனின் குரலைத் தெளிவாகக் கேட்டு நமது
மந்தைக்குள் வரவேண்டும்.
உலகமக்கள் யாவரும் ஒரே மந்தை ஒரே ஆயன் என்ற நிலை
வேண்டும் என வேண்டுதலை நல்லாயனிடம் எழுப்புவோம்.
மறையுரைச்சிந்தனை
அருட்சகோதரி: மெரினா
O.S.M.
அன்பு
ஆயனா? ஆடம்பர ஆயனா?
பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு
I. திருத்தூதர் பணிகள் 13:14, 43-52
II. திருவெளிப்பாடு 7:9, 14-17
III. யோவான் 10:27-30
பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிற்றை நல்லாயன் ஞாயிறாக
சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் ஆயனாம்
ஆண்டவர் இயேசுவின் பெயரில் அன்போடு அழைக்கின்றேன்.
"ஆண்டவரே என் ஆயர்" இது குழந்தைகள் வரை பெரியவர் வரை
அனைவரும் முணுமுணுக்கும் ஒரு நாம செபம். ஆண்டவர் இயேசுவை
ஆயன் தோற்றத்தில் பார்த்து அவர் ஆடுமேய்த்தாரா என்று பிற
மதத்தவர்கள் சிலர் என்னிடம் கேட்டது கூட உண்டு
அப்போதெல்லாம், அவர் ஆடுகளை மேய்க்கவில்லை, மந்தைகளாகிய
எங்களை மேய்க்க ஆயனாக மாறி இருக்கின்றார் என்று
கூறுவதுண்டு. ஆடுகள் நம்மோடு மிக நெருங்கிய தொடர்புடையவை.
வீடுகளில் கோவிலுக்கு நேர்ச்சை என்று ஆசைஆசையாக ஆடுகளை
வீட்டில் ஒருவர் போல வளர்ப்பது நம் பழக்கம். அப்போது அந்த
ஆடுகள் நம்மோடு ஏற்படுத்தும் உறவு, ஒரு விதமான உணர்வு. அதை
வார்த்தையால் விவரிக்க முடியாது. எங்கு சென்றாலும் உடன்
வருவது, அழைத்தவுடன் ஓடி வருவது,என நம்முடனான உறவை தன்
செயல்கள் மூலம் காட்டும் ஒரு சிறப்பான விலங்கினம்.
ஆயன் - தன் மந்தையை எல்லா விதமான இக்காட்டிலிருந்தும்
காக்கும் வலிமை உடையவர். தன்னுடன் வைத்திருக்கும் கோல்
கொண்டும் கழி என்னும் ஆயுதம் கொண்டும் தாக்க வரும்
விலங்குகளை எதிர்க்கும் துணிவு படைத்தவர். ஆடுகளின் பசி
தாக உணர்வினைப் புரிந்து அதற்கேற்ற புல்தரைக்கு அழைத்து
செல்பவர். ஆடுகளின் உடல் நலனில் அக்கறை கொண்டவர்.
இப்படியாக...... பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய
ஏற்பாட்டிலும் சரி ஆடுகளும் ஆயன்களும் மிகச்சிறப்பான ஒரு
இடத்தைப் பிடித்திருக்கின்றனர். ஆபேல், மோயீசன், சவூல்
தாவீது என பலர் ஆயன்களாக இருந்து ஆயர்களாக, மக்களை
வழிநடத்துபவர்களாக மாறி இருக்கின்றனர். நம் இயேசு
ஆயன்களுக்கெல்லாம் மேலான ஆயன். அவர் தமது மந்தையை எப்படி
வழி நடத்துகிறார் என்பதை தனது போதனையாலும் செயலாலும்
தன்னோடு வாழ்ந்த சீடர்களுக்கும் மக்களுக்கும்
வெளிப்படுத்தி இருக்கிறார். நாம் அவர் மந்தையைச்சேர்ந்த
ஆடுகள் . அவர் வழி நடக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம்
இரண்டு தான். ஒன்று அவர் குரலைக் கேட்டு நடப்பது. இரண்டு
அவர் நம்மை அறிந்து வைத்திருப்பது போல நாமும் அவரை அறிந்து
வைத்திருப்பது. இவை இரண்டிலும் வளர்ந்து ஆயனை
மகிழ்விக்கும் ஆடுகளாக நாம் மாற இன்றைய வாசகங்கள் வழி
இறைவன் நமக்கு அழைப்புவிடுக்கின்றார்.
அவர் குரலைக் கேட்கவும் அவரை அறிந்து கொள்ளவும் நாம் பல
முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆயனின் குரலைத் தெளிவாக கண்டு
கொள்ள பிற சப்தங்களுக்கு நம் மனதில் இடம்
கொடுக்காதிருப்போம். அவரை அறிந்து கொள்ள அவரோடு அதிக நேரம்
செலுத்துவோம். நாம் பல நேரங்களில் போலியான ஆயன்களின்
குரலுக்கு செவிமடுத்து ஏமாந்து போகிறோம். போலி ஆயன்களின்
பொய்யான பரப்புரைகளை நம்பி இது தான் என் ஆயன் என்று எண்ணி
தவறாக அறிந்துவிடுகிறோம். வீண் பகட்டு ஆடம்பரம் அமளி
ஆர்ப்பாட்டம் இவற்றால் உண்மையான ஆயனின் உருவத்தை
மறந்துவிடுகிறோம். பார்வையில் தெளிவும் கேட்டலில் கூர்மை
உணர்வும் கொண்டு வாழும் போது மட்டுமே உண்மையான ஆயனை கண்டு
கொள்ளமுடியும்.
ஒரு முறை பரந்த புல்வெளியில் ஆயன் ஒருவன் தன் ஆடுகளை
மேய்த்து வந்தான். அவனது கையில் தடிமனான பெரிய கோல்
ஒன்றும் அதனோடு முனையில் இணைக்கப்பட்ட கழி ஒன்றும்
எப்போதும் இருக்கும். பல நாட்களாக தன் மந்தையை மேய்ச்சல்
நிலத்துக்கு அழைத்துச்செல்வதும் மீண்டும் தன் பட்டிக்கு
கூட்டி வருவதுமாக தன் காலத்தைக் கழித்தான். ஒரு நாள்
மேய்ச்சல் நிலத்துக்கு தன்னால் போக முடியாமல் போகவே தன்
மகனை ஆடுகளை பட்டிக்கு திரும்ப அழைத்துவர அனுப்பினான்.
ஆயனின் தோற்றம் போல் இல்லாது மகன் இருக்கவே ஆடுகள்
தயக்கமுற்றன. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு முன்னேறின.
மகனின் கையில் ஆயனின் கோல். உறுதியான தடிமனான மரத்தாலான்
கோலைக் கண்டு, இது நிச்சயம் நம் ஆயனின் கோல் தான், அவர்
விருப்பத்தின் படியே நாம் அவர் மகனுடன் செல்கிறோம் என்பதை
உறுதி செய்து கொண்டன. சற்று நேரத்திற்கு அப்பால் இன்னொரு
இளைஞன். தோற்றம் இளவரசனைப் போல் இருந்தது. கையில்
தங்கத்தாலான ஒரு பெரிய செங்கோல். அதனூடே வைரங்களும்
பவளங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அவன் ஆடுகளைப் பார்த்து ,
எத்தனை நாள் தான் இப்படி அங்கும் இங்கும் ஓடி களைப்பீர்கள்
என்னோடு வாருங்கள் புல்வெலியை உங்களைத்தேடி
வரச்செய்கின்றேன். நீர் நிலைகளை நீங்கள் இருக்கும்
இடத்திலேயே அமைக்கின்றேன். வெயிலிலும் குளிரிலும் நீங்கள்
உணவுக்காக அலைய வேண்டாம் எல்லாம் உங்களைத் தேடி வரும்.
நீங்கள் இருக்கும் இடத்தை பஞ்சு மெத்தைகளால் நிரப்புவேன்.
என்று பலவாறு அடுக்கிக்கொண்டே போனான். சஞ்சலமுற்ற ஆடுகள்
சில, அந்த இளவரசன் சொன்ன பேச்சைக் கேட்டு அவர் பின்னே
செல்ல முயன்றன. தங்களோடு பிற ஆடுகளையும் வருமாறு அழைத்தன.
இறுதியில் பாதிக்கு பாதியாக பிரிந்து, சில இளவரசனைப்
பின்பற்றின. சில ஆயனின் மகனைப் பின்பற்றின.
ஆயனின் இல்லம் திரும்பிய ஆடுகள் ஆயனால் கட்டி
அணைக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்டன. வீடு திரும்பாத
ஆடுகளுக்காக ஆயன் கண்ணீர் விட்டான், அவற்றை நினைத்து
வருந்தினான். எஞ்சிய ஆடுகளை பத்திரமாக அதற்கான கொட்டிலில்
அடைத்து இரவு பகலாக காவல் செய்தான். இளவரசனோடு சென்ற
ஆடுகளோ, கொடிய இருட்டறையில் அடைக்கப்பட்டன. காய்ந்த
புற்களும் சிறிதளவு தண்ணீரும் கொடுக்கப்பட்டு
வளர்க்கப்பட்டண. இறுதியில் அவை அந்த இளவரசனுக்கு
பொழுதுபோக்கு காண்பிக்கும் விலங்கினங்களாக மாற்றப்பட்டன.
மரத்தாலான ஆயனின் கோலினை அவைகள் அப்போது நினைத்துப்
பார்த்தன. தங்கத்தாலான இளவரசனின் செங்கோலினை விட,
கரடுமுரடான ஆயனின் கோல் எவ்வளவோ மேல் என்று. தங்கள் ஆயன்
மீண்டும் வருவார் தங்களை மீட்க என்று எண்ணி காத்திருக்க
தொடங்கின.
நாமும் பல நேரங்களில் இப்படி தான் இழந்தவுடன் தான் அதன்
அருமை புரிந்துகொள்கின்றோம். பணமும் பகட்டும் ஆடம்பரமும்
கொண்ட ஆயன்களையே பெரும்பாலும் நாம் தேடுகிறோம். விளைவு
பகட்டு பகலிலேயே முடிவடைந்து விடுகிறது. நமது ஆயன் நம்
அருகிலேயே இருக்கின்றார். ஆடம்பரத்தை விட்டு விட்டு அன்பை
தேடுவோம் ... அன்பான ஆயனின் குரலில் தெளிவு இருக்கும்
குழப்பம் இருக்காது. கோல் கரடுமுரடானதாக வடிவமில்லாததாக
இருக்கும். தங்கமும் வைரமும் நிறைந்ததாய் இருக்காது. எனவே
அன்பு உள்ளங்களே நம் அன்பு நிறைந்த நம் ஆயனைத் தேடுவோம்
ஆடம்பரமான ஆயனை அல்ல. அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு
எக்குறையுமிராது. நாம் இருக்கும் இடம் பசும்புல்வெளியாக
மாறும். நீரோடை ஊற்றாக பொங்கி எழும். நாம் நம் ஆயனை
அறிந்தவர்களாவோம். அவர் நம்மை அறிந்தவராவார். இப்படிப்பட்ட
நிலையை நாம் அடைய ஆண்டவராம் ஆயனின் ஆசீரை
வேண்டுவோம்.இறையாசீர் என்றும் நம்மோடும் நம்
குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை - சகோ. செல்வராணி Osm
உயிர்ப்பு ஞாயிறு நான்காம் வாரம்
நல்லாயனும் நானும்.
சொர்க்கத்தின் சுகத்தையும் நரகத்தின் கொடுமையையும் பற்றி
இரண்டு மணி நேரம் இடைவிடாமல் விளக்கிய பின்பு உங்களில்,
சொர்க்கம் செல்ல விரும்புவோர் கை தூக்குங்க என்றார் ஒரு
ஞானி.
ஒருவனைத் தவிர அங்கிருந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன்
கைகளை உயர்த்தினார்கள். கையை தூக்காமல் அமைதியாக தலையை
குனிந்தபடி உட்கார்ந்திருந்த அந்த வாலிபனை உற்றுப்பார்த்தார்
ஞானி .
கை உயர்த்தியவர்களைப் பார்த்து, மகிழ்ச்சி மகிழ்ச்சி நீங்களெல்லாம்
சொர்க்கம் போவதற்கு ஆசைப்படுகிறீர்கள்.
ஆனால் நீ மட்டும் துன்பமும் கொடுமையும் நிறைந்த நரகத்துக்குப்
போக ஆசைப்படுகிறாயா?என்று ஆச்சரியத்துடன் கேட்டார்
கைதூக்காத அந்த ஒரு மாணவனைப் பார்த்து. நரகத்திற்கு
போக ஆசைப்படுவதாக நான் உங்களிடம் எப்போது சொன்னேன்,? என்று
அந்த வாலிபன் திருப்பி அவரைக் கேட்டார்.
ஞானியின் மனதில் குழப்பம் ஏற்பட்டது. நீ கைகளை உயர்த்தவில்லையே...!
அப்படி என்றால் நீ எங்கு செல்ல நினைப்பதாக அர்த்தம் என்று
கனிவுடன் அவனைக் கேட்டார். அதற்கு அந்த வாலிபன் சொன்னான்
நான் இருக்கும் இந்த உலகமே எனக்கு சொர்க்கம் தான் என்று.
ஆம் நாம் எங்கிருந்தாலும் நல்ல ஆயன் இயேசு நம்மோடு இருப்பதை
உணர்ந்தால் அந்த இடமே நமக்கு சொர்க்கம் தான்.
உயிர்ப்பு காலத்தின் நான்காம் ஞாயிறு நல்லாயன் ஞாயிறு என்று
அழைக்கப்படுகின்ற இந்த நாளில், நல்ல ஆயன் இயேசுவைப்பற்றி
சிந்திப்பதற்கும், நல்ல ஆயன் இயேசு மீது நம்பிக்கை வைப்பதற்கும்
இது ஒரு வாய்ப்பு.
எத்தனையோ சப்தங்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம். எத்தனை சத்தங்கள் நம்மை சுற்றி ஒலித்துக்
கொண்டிருந்தாலும், எத்தனை கூட்டநெரிசல்களுக்கு மத்தியில்
நாம் நடந்து சென்று கொண்டிருந்தாலும், நம்மை நேசிப்பவர்கள்
நம்மை அழைக்கும் போது அவர்களின் குரலுக்கு நாம் செவிமடுக்கிறோம்.
ஏனென்றால் நண்பர்களின் குரல் நமக்கு பரிட்சயமானது
தானே....!
நண்பர்களுக்கெல்லாம் நண்பரான நல்லாயன் இயேசுவின் குரலுக்கு
செவிமடுத்தால், எத்தனை எத்தனை நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆயரின் குரலுக்கு செவிமடுத்துத்தால், பரந்துவிரிந்த நீர்
நிலையையும் ,பசுமையான புல்வெளிகளையும் கண்டுகொள்ளலாம். ஆயரின்
குரல் கேட்டும் கண்டுகொள்ளாது, கால்போன போக்கில் நடந்தோம்
என்றால், ஓநாய்களின் பிடியில் சிக்கித் தவிக்க வேண்டிய
நிலை ஏற்படும். அதனால் ஆயரின் குரலுக்கு செவிமடுத்து அமைதியான
வாழ்க்கை வாழ்வோம். நாம் எதைச் செய்தாலும் ஆண்டவரின்
ஆசி பெற்று செய்வோம். எங்கு சென்றாலும் அவரின் அருளோடு
செல்வோம். இறைவனின் அருளும் ஆசீரும் எந்நாளும் நம்மோடு இருந்து
நம்மை வழி நடத்துவதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
ஆட்டுக்குட்டி
- ஆயன்: அவரும் நானும்
பாஸ்கா காலம் நான்காம் ஞாயிற்றை நல்லாயன் ஞாயிறாகக்
கொண்டாடுகிறோம். இந்த நாள் தான் பணிக்ஞானஸ்நானம் மற்றும்
துறவற வாழ்விற்கான அழைப்பு என சிறப்பிக்கப்படுகின்றது. இறைவன்
தன் மனதிற்கேற்ற நல்ல ஆண்-பெண் ஆயர்களைத் தரவேண்டுமெனவும்,
இந்தப் பணியை ஏற்றிருக்கும் அனைவரும் இயேசுவை தனிப்பெரும்
தலைவராகக் கொண்டு செயல்படவும் இன்றைய நாளில் சிறப்பாகச்
செபிப்போம்.
இன்றைய வாசகங்களை இணைக்கும் வார்த்தைகள் மூன்று: அ. அறிந்திருத்தல்,
ஆ. செவிமடுத்தல், இ. பின்பற்றுதல்
இன்றைய நற்செய்தி வாசகம் யோவான் நற்செய்தி பிரிவு 10ன் ஒரு
பகுதியாக இருக்கிறது. ஆட்டுக்கொட்டில் (10:1-1-6), ஆயன்
(10:1-18) என உருவகங்கள் வழியாக இயேசு பேச, அது யூதர்களின்
காதுகளுக்கு எட்டிக்காயாகக் கசக்கின்றது. இந்தக் காதுகள்
யாவே இறைவனை அல்லது ஆண்டவரை மட்டுமே ஆயன் என்று கேட்டு
(காண். திபா 23) பழக்கப்பட்ட காதுகள். இந்த நெருடலால் அவர்கள்
இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் (10:19-21). இருந்தாலும்,
ஒருவேளை இவர்தான் மெசியாவாக இருப்பாரோ? என்ற கேள்வியும் சிலருக்கு
எழுகின்றது (10:22-26). இந்தக் கேள்வியின் பின்புலத்தில்
'நீங்கள் என் மந்தையைச் சேர்ந்த ஆடுகள் இல்லை' (10:26) என்று
அவர்களைச் சாடிவிட்டு, தன் மந்தையைச் சார்ந்த ஆடுகள் என்ன
செய்வார்கள் என்று சொல்கின்றார் இயேசு (10:27-30).
முதலில், 'அறிதல்' அல்லது 'அறிந்திருத்தல்' என்பதன்
பொருளைப் பார்ப்போம். 'நான் அறிகிறேன்' (கினோஸ்கோ) என்ற
கிரேக்க வார்த்தையை (தன்மை ஒருமை நிகழ்காலம்) இரண்டாம் ஏற்பாட்டில்
ஏழு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. யோவான் நற்செய்தியாளர்
இந்த வார்த்தையை 3 முறை பயன்படுத்துகின்றார். இந்த 3
முறையும் இயேசுவை நல்லாயனாக உருவகிக்கும் 10ஆம்
பிரிவில்தான் பயன்படுத்துகின்றார் (10:14, 15, 25). லூக்கா
இரண்டு முறை - ஒருமுறை நற்செய்தியிலும் (1:34), ஒருமுறை
திருத்தூதர்பணிகளிலும் (19:15), பவுல் இரண்டு முறை - உரோ
7:15, 1 கொரி 13:12 பயன்படுத்துகின்றனர்.
இந்த வார்த்தைப் பயன்பாட்டை வைத்து 'அறிதல்' என்பது மூன்று
அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது என்று நாம் அறிகிறோம்(!):
1. 'அறிதல்' என்றால் 'திருமண உறவு கொள்ளுதல்.' 'நான் கணவனை
அறியேனே' (லூக்கா 1:34) என்று மரியாள் வானதூதரிடம்
சொல்லும்போதும், 'ஆதாம் ஏவாளை அறிந்தான்' (தொநூ 4:1) என்ற
இடத்திலும், 'அறிதல்' என்பது 'திருமண உறவு அல்லது உடலுறவு
கொள்ளுதலை' குறிக்கின்றது.
2. 'அறிதல்' என்றால் 'புரிந்து கொள்ளுதல்.' 'நான் செய்வது
இன்னதென்று நானே அறிவதில்லை' (உரோ 7:15) என்று புலம்பும்
பவுல், இங்கே 'நான் செய்வது இன்னதென்று எனக்கே
புரியவில்லை' என்று சொல்கின்றார். இதே அர்த்தத்தில்தான் 1
கொரி 13:12இலும், 'இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன் -
புரிந்து கொள்கிறேன்' என எழுதுகின்றார்.
3. 'அறிதல்' என்றால் 'அறிமுகமாயிருத்தல்' அல்லது
'அருகிருத்தல்' அல்லது 'அந்நியோன்யமாய் இருத்தல்'. இந்த
அர்த்தத்தில்தான் யோவான் இயேசுவின் அறிதலை
முன்வைக்கின்றார். தான் ஆடுகளை அறிந்திருத்தலைப் பற்றிச்
சொல்லும்போதெல்லாம், இயேசு தான் தந்தையை
அறிந்திருத்தலையும் சொல்கின்றார். இங்கே 'திருமண உறவு'
என்ற அர்த்தம் அறவே இல்லை. 'புரிந்து கொள்ளுதல்' என்ற
அர்த்தம் கொஞ்சமாக இருக்கிறது. இவை இரண்டிற்கும் மேலாக,
'அருகிருத்தல்' அல்லது 'நெருக்கமாக இருத்தல்' என்ற
அர்த்தம்தான் இங்கே மேலோங்கி நிற்கின்றது. ஆங்கிலத்தில்
'டு நோ' என்ற வினைச்சொல்லை ஒட்டுமொத்தமாக 'அறிதல்' என
மொழிபெயர்க்கின்றோம். இத்தாலியன் மொழியில் இதற்கு இரண்டு
வினைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: ஒன்று, 'சபேரே'
('மூளை சார்ந்த அறிவு'). உதாரணத்திற்கு, இசைக்கருவிகள்
மீட்டும் அறிவு, மொழி அறிவு, பொது அறிவு, பீட்சாவுக்கு
எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும் என்ற அறிவு. இரண்டு,
'கொனோஸரே' ('மனம் சார்ந்த அறிவு'). நண்பர்களை அறிவது,
புதியவர்களுக்கு அறிமுகம் ஆவது போன்றவை.
இந்த அறிதலை, 'பயன்' மற்றும் 'உணர்வு' என்ற அடிப்படையில்
இரண்டு விதமாகப் பிரிக்கலாம். முதலில், பயன். காம்பியா
நாடு எங்கே இருக்கிறது என்ற அறிவினாலோ, சச்சின்
டென்டுல்கரின் சாதனையை யார் முறியடித்தார் என்ற அறிவினாலோ,
பத்ம பூசன் விருது ஒருவருக்கு ஏன் வழங்கப்பட்டது என்ற
அறிவினாலோ நமக்கு பயன் ஏதும் இருக்கிறதா? (ஒருவேளை பொது
அறிவு தேர்வுக்குப் பயன்படலாம்!) இல்லை. இந்த அறிவு நம்
வாழ்வின்மேல் எந்தவொரு தாக்கத்தையும் நேரிடையாக
ஏற்படுத்துவதில்லை. ஆனால், அழுது கொண்டிருக்கின்ற ஒரு
குழந்தைக்கு, அல்லது பசியால் வாடும் ஒரு குழந்தைக்கு,
அம்மா எங்கே இருக்கிறாள் என்ற அறிவு முக்கியமானது. அந்த
அறிவு உடனடியாகக் குழந்தையைப் பாதிக்கிறது. அவள்
நெருக்கமாய் இருக்கிறாள் என்ற அறிவு குழந்தைக்கு
ஆறுதலாகவும், அவள் தூரமாக இருக்கிறாள் என்ற அறிவு
பதற்றமாகவும் இருக்கிறது. இரண்டாவது, உணர்வு. உணர்வு
என்பது மூளை சார்ந்ததே என்றாலும், நாம் உணர்வை இதயம்
சார்ந்ததாகவே பார்க்கிறோம். அந்த வகையில், முதல் வகை அறிவு
மூளை சார்ந்தது. இரண்டாம் வகை அறிவு இதயம் சார்ந்தது.
முதல் வகை அறிவால் நம் உணர்வில் எந்தவொரு மாற்றமும்
ஏற்படுவதில்லை. ஆனால், இரண்டாம் வகை அறிவில் நம் உணர்வு
அதிகமாகவே பாதிக்கப்படுகிறது.
மற்றொரு வார்த்தையில் சொன்னால், 'ஒன்றை அறிவது' அல்லது
'ஒன்றைப் பற்றி அறிவது' என்று சொல்லலாம். சோனி மியூசிக்
ப்ளேயரில் பாட்டு கேட்டால் நன்றாக இருக்கும் என்று நண்பன்
சொல்லிக் கேட்பது என்பது, 'சோனி மியூசிக் ப்ளேயர் பற்றி
அறிவது'. நானாகவே பாடலைக் கேட்டு இரசித்தல் என்பது, 'சோனி
மியூசிக் ப்ளேயரை அறிவது.'
மொத்தத்தில் இயேசு என்னும் ஆயனின் அறிதல் என்பது ஒரு தாய்
தன் குழந்தையை அறிதலைப் போன்றது.
இரண்டாவதாக, செவிமடுத்தல். 'இஸ்ரயேலே, செவிகொடு. நம்
கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே...' (இச 6:4) என்ற முதன்மைக்
கட்டளையின் பின்புலத்தில் பார்த்தால், 'செவிகொடுத்தல்'
என்பதற்கு, 'கேட்டல்' என்றும், 'கீழ்ப்படிதல்' என்றும்
இரண்டு பொருள் கொள்ளலாம். இந்த இரண்டு பொருளிலும் யோவான்
நற்செய்தியாளர் 'அகூவோ' என்ற கிரேக்க வினைச்சொல்லைப்
பயன்படுத்துகின்றார்: 'அவர்கள் அப்பெண்ணிடம், 'இப்போது உன்
பேச்சைக் கேட்டு ('காதால் கேட்டு') நாங்கள் நம்பவில்லை.
நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம்' என்றார்கள்' (4:42). 'என்
வார்த்தையைக் கேட்டு ('கீழ்ப்படிந்து') என்னை அனுப்பியவரை
நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்' (5:24). இயேசுவின்
உருமாற்ற நிகழ்வின்போது கேட்கின்ற தந்தையின் குரல், 'என்
அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர்பொருட்டு நான்
பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' (மத் 17:5).
இங்கே 'செவிசாயுங்கள்' என்ற வினைசொல்லில், 'கேளுங்கள்,'
'கீழ்ப்படியுங்கள்,' 'பின்பற்றுங்கள்' என்ற மூன்று
பொருள்கள் மறைந்திருக்கின்றன.
நம் மூளைக்குள் செல்லும் தகவல்கள் அதிகமாக நம் பார்வை
மற்றும் கேட்டல் வழியாகச் செல்கின்றன. கண்களை இமைகளைக்
கொண்டு மூடுவதன் வழியாக நாம் பார்வையைக்
கட்டுப்படுத்திவிடலாம். ஆனால், காதுகளை மூடுவதற்கு நம்
முழு முயற்சி தேவை. காதுகளை மூடுவதற்கு நாம் நம் மனத்தை
மூட வேண்டும். அதாவது, எதைக் கேட்க வேண்டும், எதைக்
கேட்கக் கூடாது என்று நம் மனத்திற்குப் பயிற்சி அளிக்க
வேண்டும். ஆக, செவிமடுத்தலில் காதுகளைவிட நம்
மூளைக்குத்தான் அதிக வேலை இருக்கிறது. நம் மூளை
கேட்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். கேட்டதை ஆய்வு
செய்து பார்க்க வேண்டும். கேட்டதை செயல்படுத்த வேண்டும்.
ஆடுகள் செய்ய வேண்டிய வேலை இதுதான் 'செவிமடுத்தல்.'
ஆடுகளைப் பற்றி கூகுள் செய்து பார்த்ததில், ஆடுகள் தாங்கள்
பார்ப்பதை வைத்து அறிவதைவிட, கேட்பதை வைத்துத்தான் அதிகம்
அறிகின்றன என்று கண்டேன். மேலும், தூரம் அதிகமாகும்போது
பார்த்தலைவிட கேட்டலே சாத்தியமாகிறது.
மூன்றாவதாக, 'பின்பற்றுதல்.' யோவான் நற்செய்தியில்
'பின்பற்றுதல்' (அகோலுதுவோ) என்பது மிக முக்கியமான
வார்த்தை. முதற்சீடர்கள் செய்த முதல் வேலையும் இதுதான்
(1:40), இறுதியாக பேதுருவிடம் பேசும் வார்த்தையும் இதுதான்
(21:19). 'பின்பற்றுதல்' என்பது இயேசுவின் சீடராக இருப்பதை
அல்லது இயேசுவுக்கு ஒத்திருப்பதைக் குறிக்கிறது.
அறிந்திருத்தல் - செவிமடுத்தல் - பின்பற்றுதல் என்னும்
மூன்று வார்த்தைகளில், ஆயனின் வேலை அறிந்திருத்தல்.
ஆடுகளின் வேலை செவிமடுத்தலும் பின்பற்றுதலும் .
இப்படி ஆடுகள் செவிகொடுப்பதாலும், பின்பற்றுவதாலும் என்ன
நடக்கிறது?
அ. ஆடுகள் நிலைவாழ்வைப் பெறுகின்றன - அவை என்றுமே அழியா
ஆ. அவற்றை யாரும் எனது கையிலிருந்து பறித்துக் கொள்ள
முடியாது
'நிலைவாழ்வு' என்பது இங்கே 'நிறைவாழ்வு' அல்லது
'இறைவாழ்வு' என்ற பொருளில்தான் எடுக்கப்பட வேண்டும்.
இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு பற்றிய புரிதல் இது
எழுதப்பட்ட காலத்தில் இன்னும் முழுமையாக வளரவில்லை. 'அவை
என்றுமே அழியா', 'அவைகளை யாரும் பறித்துக் கொள்ள முடியாது'
- ஆக, தங்களாலும் அவர்களுக்கு அழிவில்லை. பிறராலும்
அழிவில்லை. அவர்களுக்கு நிறைய உணவு கிடைக்கும். நோய்
நீங்கி இருப்பார்கள். எதிரிகள் மற்றும் திருடர்களின்
தொந்தரவும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆக, உணவு,
உடல்நலம், பாதுகாப்பு என்ற மூன்று தேவைகளை உறுதி
செய்கிறார் இயேசு.
இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்திலும் பார்க்கின்றோம்.
மானிட மகன் என்னும் ஆட்டுக்குட்டியைக் காட்சியில்
காண்கின்றார் யோவான். யாரெல்லாம் தங்கள் ஆடைகளை இந்த
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் நனைத்துக் கொள்கிறார்களோ,
அவர்களெல்லாம் ஆட்டுக்குட்டி தரும் பாதுகாப்பைப்
பெறுகின்றனர். பசியிலிருந்தும், இறப்பிலிருந்தும்
காப்பாற்றப்படுகின்றனர்.
தொடர்ந்து, 'என் தந்தையின் கையிலிருந்து அவற்றை
பறித்துக்கொள்ள முடியாது' என்கிறார். ஆக இரட்டிப்பு
பாதுகாப்பு. இயேசுவின் கையில் இருக்கும் ஆட்டை, தந்தையும்
அரவணைத்துக்கொள்கிறார்.
இறுதியாக, 'நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்' - இந்த
ஒன்றாய் இருத்தல் 'ஆயனும் ஆடுகளும் ஒன்றாய் இருப்பதற்கான'
அழைப்பாக இருக்கின்றது. 'ஒன்றாய் இருத்தல்' என்பது
'ஒன்றுபோல இருத்தல்' அல்ல. மாறாக, இரண்டும் ஒன்றென ஆவது.
'போல' இருப்பது என்பதிலிருந்துதான் 'போலியாக' இருப்பது
உருவாகிறது. ஆனால், ஒன்றென இருத்தலில் போலிக்கு இடமில்லை.
இயேசுவைப் போல நாம் இருக்கத் தேவையில்லை. அவ்வளவு ஏன்,
நாம் யாரைப்போலவும் இருக்கத் தேவையில்லை. ஆனால், இயேசுவும்
நானும் ஒன்றென வாழ்தல் சால்பு.
இவ்வாறாக, இயேசு ஆட்டுக்குட்டியும், ஆயனுமாக
இருக்கின்றார்.
1. ஆயனின் குரலுக்கு நாம் செவிகொடுக்க மறுத்தால், ஆயன்
வேறு மந்தையைத் தேடிப் போய்விடுவான். தன் குரலுக்குச்
செவிகொடுக்கும் ஆடுகளைத் தேடிச் செல்வான். இதைத்தான்
திருத்தூதர்கள் பவுலும், பர்னபாவும் செய்கின்றனர்.
யூதர்கள் இயேசு என்னும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள
மறுக்கிறார்கள். 'நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்'
என்ற எண்ணம் அவர்களின் கோப்பையை நிறைத்திருந்ததால், புதிய
தண்ணீரை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. இவர்கள்
மறுத்ததால் நற்செய்தி புறவினத்தார் நோக்கிச் செல்கின்றது.
ஆக, ஆட்டுக்குட்டிகளாகிய நாம், நம் ஆயனின் குரலுக்குச்
செவிகொடுக்கவில்லையென்றால், அவரைப்
பின்பற்றவில்லையென்றால், நம் ஆயனையே இழந்துவிடும் அபாயம்
இருக்கின்றது.
2. இன்று 'அறிதல் - செவிமடுத்தல் - பின்பற்றுதல்' என்பது
'ஃபேஸ்புக் - வாட்ஸ்ஆப் - டுவிட்டர்' என மாறிவிட்டது. நம்
நண்பர்களை, நண்பர்களின் நண்பர்களை ப்ரொஃபைல் கொண்டு
அறிகிறோம். அவர்களின் குரலை வாட்ஸ்ஆப்பில் கேட்கின்றோம்.
அவர்களை நாம் டுவிட்டரில் பின்பற்றுகிறோம். பொருளைச்
சுருக்கியதுபோல நம் உள்ளங்களையும் சுருக்கிவிட்டோம்.
எனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவில் இந்த மூன்று
வார்த்தைகள் எப்படி இருக்கின்றன? இறைவனைப் பற்றிய எனது
அறிதல் சிறுவயது மறைக்கல்வியோடு முடிந்துவிட்டதா? அல்லது
அவரை நான் திருநூலிலும், வாழ்க்கை அனுபவங்களிலும் இன்னும்
அறிகின்றேனா? அவருக்கு நான் செவிமடுப்பது எதற்காக? அவரை
நான் எப்போது, ஏன் பின்பற்றுகிறேன்? எல்லா நாட்களிலுமா?
அல்லது என் பயணம் கஷ்டமாக இருக்கும் நாட்களில் மட்டுமா?
அவரின் குரலை மற்ற குரல்களிலிருந்து என்னால் வேறுபடுத்த
முடிகிறதா?
3. இயேசு என்னும் ஆயன் தான் கொடுக்கும் 'உணவு - உடல்நலம் -
பாதுகாப்பு' என்னும் வாக்குறுதிகளை நிறைவு செய்கின்றார்.
இன்று இந்த வாக்குறுதிகளை நம் குடும்பத்திலும்,
சமூகத்திலும் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கின்றோம். ஆனால்
அவற்றை நிறைவு செய்கின்றோமா? ஆயன் என்ற பொறுப்பை
குடும்பத்தில் நாம் எப்படி நிறைவேற்றுகிறோம்? இன்று
ஓட்டுக்களைக் கேட்டு நம் தெருக்களில் வரும் ஆயன்களில்,
எந்த ஆயன் நம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்? அவரை நாம்
எப்படிக் கண்டுபிடிப்பது? 'நானும் தந்தையும் ஒன்றாய்
இருக்கிறோம்' என்று இயேசு சொன்னது போல, இந்த வேட்பாளர்கள்
நம்மைப் பார்த்துச் சொல்ல முடியுமா? அவர்கள் மேலே
இருக்கிறார்கள் - நாம் கீழே இருக்கிறோம் - ஒன்றாக என்றுமே
இருந்ததில்லையே!
4. 'என் ஆடுகள் நிலைவாழ்வைப் பெறும்' என்று இயேசு
சொல்கின்றாரே. இந்த நிலைவாழ்வை அல்லது நிறைவாழ்வை நாம்
எப்படி மதிப்பிடுவது? 'மகிழ்ச்சி' என்ற அளவுகோலால்தான்
மதிப்பிட முடியும். இன்றைய முதல் வாசகத்தில், பவுல்
மற்றும் பர்னபா அறிவித்த வார்த்தைகளைக் கேட்டவுடன் மக்கள்
மகிழ்ச்சி அடைகின்றனர். அதாவது, இவ்வளவு நாள்கள் அவர்கள்
எவ்வளவோ போதனைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இன்றுதான்
மகிழ்ச்சி தரும் போதனையைக் கேட்கிறார்கள். ஆக, இன்று நம்மை
நோக்கி வரும் ஆயனின் குரல்கள் பல இருக்கலாம். ஆனால், எது
நமக்கு மகிழ்ச்சி தருகிறதோ அதுவே நல்லாயனின் குரல். சில
குரல்கள் நம்மைக் கண்டிக்கும். சில குரல்கள் நம் மனத்தைக்
குத்தும். சில குரல்கள் ஏன்டா கேட்டோம் என்று சொல்வது போல
இருக்கும். ஆனால் வெகுசில குரல்களே அல்லது நல்லாயனின் ஒரு
குரல் மட்டுமே நம் ஆன்மாவைப் பண்படுத்தி அங்கே மகிழ்வை
விதைக்கும்.
5. அருள்பணி மற்றும் துறவற வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும்
நாளில், 'செவிகொடுத்தலும், பின்பற்றுதலும்' இன்று அருள்பணி
இனியவர்களுக்கு இன்னும் அதிகம் முக்கியத்துவம்
வாய்ந்ததாகிறது. இறையழைத்தல் முகாம் சென்ற முதல் நாள்
கேட்ட இறைவனின் குரல் படிப்படியாக மறைந்து போகும்
அபாயமும், அல்லது இறைவனின் குரலைக் கேட்க விடாமல் நம்
கவனத்தைத் திசைதிருப்பும் குரல்களும் எந்நேரமும் நம்மைச்
சுற்றிக் கேட்கும். யாரின் கவனம் திசைதிரும்புகிறதோ, அவர்
அல்லது அந்த ஆடு முன்னேறிச் செல்லமுடியாமல் தேக்க நிலையை
அடைந்துவிடுகிறது. 'வந்தவரைக்கும் போதும்!' என்று
ஓய்ந்திடத் துணிகிறது. இதற்கு மாற்றாக பவுல்,
'விடாமுயற்சியோடும், ஆர்வம் மிக்க உள்ளத்தோடும்
ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்' (உரோ 12:11) என்கிறார்.
மேலும், ஏதோ ஒரு வாழ்க்கைச் சூழல் காரணமாக ஆயனின்
குரலுக்குச் செவிமடுத்து, தொடர்ந்து பின்பற்ற முடியாமல்,
அல்லது பயணத்தில் சோர்வுற்ற ஆயன்களை (ஆடுகளை) நாம்
கனிவோடும் பரிவோடும் பார்த்தல் வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு,
ஒருவர் வேறொருவருடைய மந்தையிலிருந்து ஓர் ஆட்டைத்
திருடிவிட்டார் என்ற வழக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி
குற்றம் சுமத்தப்பட்டவரிடம், "நீர் ஆட்டைத் திருடியது உண்மையா?"
என்று கேட்க, குற்றம் சுமத்தப்பட்டவர், "நான் ஆட்டைத் திருடவில்லை;
பல நாள்களுக்கு முன்பு காணாமல் போன என் ஆட்டைத்தான் நான்
எடுத்தேன். இவர், 'நான் ஆட்டைத் திருடிவிட்டேன்' என்று என்மீது
அபாண்டமாப் பழி போடுகிறார்" என்றார்.
நீதிபதிக்கு யார் சொல்வது உண்மை என்று புரியவில்லை. உடனே
நீதிபதி எந்த ஆடு திருடப்பட்டதாகச் சொல்லப்பட்டதோ, அந்த ஆட்டினை
நீதிமன்றத்திற்குக் கொண்டு வரக் கட்டளை பிறப்பித்தார்.
பின்னர் அவர் ஆட்டைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டவரிடம்,
"வாசலுக்கு வெளியே சென்று, இந்த ஆட்டினைக் கூப்பிடு" என்றார்.
அவரும் வாசலுக்கு வெளியே சென்று, ஆட்டினை அழைத்தார். ஆடு
சத்தத்தைக் கேட்டு மிரண்டதே அன்றி, அவரிடம் செல்லவில்லை.
அதன்பிறகு நீதிபதி, ஆடு திருடுபோனதாக வழக்குத் தொடுத்தவரைக்
கூப்பிட்டு, நீதிமன்றத்தின் வாசலுக்கு வெளியே சென்று, அதனை
அழைக்கச் சொன்னார். ஆடு அவரது குரலைக் கேட்டதும், அவரிடம்
ஓடிச்சென்று, அவரோடு ஓட்டிக் கொண்டது. முடிவில் நீதிபதி ஆட்டை
அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு, அதைத் திருடிய மனிதருக்குத்
தண்டனை வழங்கினார்.
ஆம், ஆடுகள் ஆயனின் குரலுக்குச் செவிசாய்க்கும். அதைத்தான்
இந்த நிகழ்வு நமக்கு எடுத்தியம்புகின்றது. நல்லாயன் ஞாயிறு
என அழைக்கப்படும் பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ஆடுகளாகிய நாம், நல்லாயன்
இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்ற சிந்தனையைத்
தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
ஆடுகள் ஆயனுக்குச் செவிசாய்க்க வேண்டும்:
ஆட்டிற்கு அழகே ஆயனின் குரலுக்குச் செவிசாய்ப்பதுதான்; ஆனால்,
இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில் நல்லாயனாம் ஆண்டவரின் குரலுக்குச்
செவிசாய்க்கவும் இல்லை; அவரைப் பின்தொடரவும் இல்லை (திபா
81:11) இது இயேசுவின் காலத்திலும் தொடர்ந்தது. இயேசு மக்கள்
நடுவில் வல்ல செயல்களைச் செய்து, கடவுளின் வார்த்தையை அறிவித்து
வந்தபோது பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவரது குரலுக்குச்
செவி சாய்க்காமலும், அவரை நம்பாமலும் இருந்தார்கள். இந்நிலையில்தான்
இயேசு, யூதர்கள் கொண்டாடிய கோயில் அர்ப்பண விழாவின்போது,
"என் ஆடுகள் எனது குரலுக்குச் சாய்க்கின்றன; என்னைப்
பின்தொடர்கின்றன" என்கிறார்.
இயேசுவின் குரலுக்குச் செவிசாய்ப்பது மிகவும் இன்றியமையாதது.
திருத்தூதர் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில்
கூறுவது போன்று, "அறிவிக்கப்பட்டதைக் கேட்டால்தான் நம்பிக்கை
உண்டாகும்" (உரோ 10:17). இந்த அடிப்படையில் பார்த்தால், இயேசுவின்
குரலுக்கு ஒருவர் செவிசாய்க்கவேண்டும். அப்போதுதான் அவருக்கு
இயேசுவின்மீது நம்பிக்கை உண்டாகும். நற்செய்தியில் இயேசு,
"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன" என்கிறார்
எனில், அவர்மீது நம்பிக்கை கொண்டவர்கள் அவரது குரலுக்குச்
செவிசாய்க்கின்றனர்; அவரைப் பின்தொடர்கின்றனர் என்று சொல்லலாம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில், இயேசுவின் அடியார்களான பவுலும் பர்னபாவும்
பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவில் அவரைப் பற்றி அறிவித்தபோது,
பிறவினத்தவர் அவரை நம்பி ஏற்றுக்கொண்டார்கள். யூதர்களோ அவரை
ஏற்றுக்கொள்ளவில்லை. இதன்மூலம் இயேசுவின் ஆடுகள் அல்லது
அவரது மக்கள், எந்த இனத்தைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
அவர்கள் இயேசுவின் குரலுக்குச் செவிசாய்த்தால் அவரது உண்மையான
மக்கள் ஆகின்றார்கள்; அவரது சொந்த இனத்தவராக இருந்து, அவரது
குரலுக்குச் செவிசாய்க்காமலும், அவரைப் பின்தொடராமலும் இருந்தால்,
அவரது ஆடுகள் அல்லது அவரது மக்கள் இல்லை என்பது தெரிய வருகின்றது.
நிலைவாழ்வை அளிக்கும் ஆயர் இயேசு:
இயேசுவின் ஆடுகள் அவரது குரலுக்குச் செவிசாய்த்து, அவரைப்
பின்தொடர வேண்டும் என்று சிந்தித்தோம். ஒருவர் இயேசுவின்
குரலுக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்? அவரை ஏன் பின்தொடரவேண்டும்?
என்பன போன்ற கேள்வி எழலாம்.
இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டியதற்கான முதன்மையான
காரணம், இயேசு மந்தையைச் சூறையாடும் ஓநாய் அல்ல; மாறாக,
அவர் மந்தைக்காகத் தம் உயிரையும் கொடுக்கும் நல்ல ஆயர்
(யோவா 10:10). இயேசுவின் காலத்திற்கு முன்பு வந்தவர்கள் எல்லாம்
அவரே சொல்வதுபோல், மந்தையைச் சிதறடிக்கும் ஓநாய்கள்; இயேசுதான்
மந்தைக்காகத் தம் உயிரையும் தந்தவர். அவர்களுக்கு
நிலைவாழ்வு தருகிறவர். அதனால் அவரது குரலுக்குச்
செவிசாய்ப்பது மிகவும் முக்கியமானது.
இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டியதற்கான
இரண்டாவது முக்கியமான கரணம், அவர் நம்முடைய
கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார் என்பதாகும்.
திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில், "ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு
அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள்
அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்" என்று
வாசிக்கின்றோம். இங்கு இடம்பெறும் 'கடவுள்' என்பதை, இன்றைய
நற்செய்தியின் இறுதியில் இடம்பெறும், "நானும் தந்தையும்
ஒன்றாய் இருக்கின்றோம்" என்ற வரியோடு இணைத்துச்
சிந்தித்துப் பார்த்தால், இயேசு நம் கண்ணீர் அனைத்தையும்
துடைத்துவிடும் கடவுள் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
ஆதலால், நாம் நல்லாயன் இயேசுவின் குரலுக்குச்
செவிசாய்க்கும்போது நம் கண்ணீர் எல்லாம் துடைக்கப்பட்டு,
நிலைவாழ்வைப் பெறுகின்றோம் என்பது உண்மையாகின்றது.
நாம் எல்லாருக்கும் இரங்கும் நல்ல ஆயர்களா?
இயேசுவின் மந்தையில் யூதருக்கு மட்டுமில்ல; எல்லாருக்கும்
இடமுண்டு. "இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு
உள்ளன" (யோவா 10:16) என்ற இயேசுவின் வார்த்தைகள் இந்த
உண்மையை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. இயேசுவுக்கு
எல்லாரும் அவரது மக்கள்தான் எனில், அவரைப் பற்றிய செய்தியை
எல்லாருக்கும் அறிவிக்கவேண்டியது நமது கடமையாகும்.
இன்றைய முதல் வாசகத்தில் பவுலும் பர்னபாவும் யூதர்களுக்கு
மட்டுமல்லாமல், பிறவினத்தாருக்கும் நற்செய்தி அறிவிப்பதைக்
குறித்து வாசிக்கின்றோம். யூதர்கள் பவுலும் பர்னபாவும்
அறிவித்த நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லைதான். ஆனால்,
பிறவினத்தார் அவர்கள் அறிவித்த நற்செய்தியை
ஏற்றுக்கொண்டார்கள். ஆகையால், ஆயர்களாய் இருந்து,
இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் நாம்
ஒவ்வொருவரும், எல்லாரும் அவரது மக்கள் என்ற உண்மையை
உணர்ந்து, எல்லா மக்களுக்கும் அவரது நற்செய்தியை அறிவிக்க
வேண்டும். அவரைப் போன்று மக்களுக்காக உயிரையும் தர
முன்வரவேண்டும். அதுவே தலைசிறந்தது.
சிந்தனைக்கு:
'இஸ்ரயேலரே நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால் எவ்வளவு
நலமாயிருக்கும்' (திபா 81:8) என்பார் ஆண்டவர். எனவே, நாம்
நல்லாயனாம் ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்ப்போம்;
மற்றவரும் அவரது குரலுக்குக் செவிசாய்க்கச் செய்து,
அவர்களும் நிலைவாழ்வு பெறச் செய்வோம். அதன்வழியாக நாம்
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு
தன்னை நல்ல ஆயனாகவும், மாபெரும் தலைவனாகவும் சுட்டிக்
காட்டுகிறார். ஆயன், ஆடு உருவகத்தின் மூலம் தனக்கும் தனது
சீடர்களுக்குமிடையே உள்ள ஆழமான உறவை வெளிப்படுத்துகிறார்.
ஆயன், காணாமல் போன ஆட்டைத் தேடிக் கண்டுபிடிப்பதைக்
குறிப்பிட்டு (லூக். 15:1-7). அதே நேரத்தில் நல்ல ஆயன்
நானே என்று தன்னையே ஆயனாக இயேசு வெளிப்படுத்துகிறார்
(யோவா. 10:11). ஆயன் மந்தையை அறிவான், ஆடுகளும் ஆயனைப்
புரிந்துகொள்கிறது. ஆயனின் குரலைக் கேட்டு அவன் பின்னால்
செல்கிறது. ஆயனும் அளவில்லாத அன்புகொண்டு தனது உயிரைக்
கொடுக்கவும் தயங்குவதில்லை. இயேசு, இறைவனின் செம்மறியாகவும்,
நல்ல ஆயனாகவும் இந்த உலகிற்கு வந்தார். செம்மறி போல் நம்
மீட்புக்காகத் தம்மையே கையளித்தார்.
விவிலியக் கண்ணோட்டத்தில் அறிதல் என்ற சொல்
புத்தியிலிருந்து பிறக்கும் வெறும் அறிவை மட்டும்
குறிக்காது. ஒருவர் மற்றவரோடு கொண்டுள்ள ஆள் சார்ந்த உறவின்
அனுபவத்தை அதாவது அன்புறவையும், அன்பின் பரிமாற்றத்தையும்
குறிக்கிறது. ஆயன் மந்தையின் தலைவன், உரிமையாளன். எனவேதான்
மந்தையை நேசிக்கிறான். இது ஆயன் ஆடுகள் மீதுள்ள அன்பையும்,
உரிமையையும் காட்டுகிறது. இயேசுவை மேய்ப்பனாகவும், ஆடுகளை
மக்களாகவும் ஒப்பிட்டுப் பார்ப்பது சிறப்புமிக்க உவமைதான்.
உணவுக்காகவும், தண்ணீருக்காகவும், பாதுகாப்புக்காகவும், ஆடுகள்
மேய்ப்பர்களைச் சார்ந்து இருக்கின்றன. எல்லை மீறிச்
செல்லும் ஆடுகளை, வழி தவறும் ஆடுகளை குரல் கொடுத்து அழைக்கும்போது
அது மீண்டும் மந்தையோடு இணைந்துவிடுகிறது. அவைகள் மீண்டும்
மீறிச் செல்வதில்லை. ஆனால், ஆடுகளாகக் கருதப்படும் மனிதர்களைப்
பற்றி இன்றைய சூழலில் இவ்வாறு கூறமுடியுமா? இன்றைய முதல்
வாசகத்தில் வழி தவறி, வாழ்விழந்து, தடம் புரண்டு, தடுமாறி
நின்ற பிறவின மக்களுக்கு புனித பவுல் ஆண்டவரின் வார்த்தைகளை
அறிவிக்கின்றார். அவ்வார்த் தைகளைக் கேட்ட அவர்கள் எங்கள்
வாழ்வுக்கு வழியாக, ஒளியாக ஆண்டவரின் வார்த்தைகள் உள்ளன என்று
இயேசுவின் மீது நிறைவான விசுவாசம் கொள்கின்றனர். என் ஆயன்
ஆண்டவர் எனக்கென்ன குறைவு (தி.பா. 23:1). தாங்கள் அறிந்துகொண்ட
நல்ல ஆயனாம் கிறிஸ்துவை மற்றவர்களுக்கும், தங்களின்
சொல்லாலும், செயலாலும் அறிவித்து அன்பு வாழ்வு வாழ்ந்தனர்.
இன்றைய சூழலில் நாம் குடும்பத்தில் நல்ல தலைவராக, சமுதாயத்தில்
நல்ல வழிகாட்டியாக, தடுமாறுகிறவனுக்குப் புதிய பாதையாக,
வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வாக, இருட்டில் தடுமாறும் மனிதனுக்கு
ஒளியாக, ஒட்டுமொத்த மனித வாழ்வில் சாரமுள்ள உப்பாக நம்மை
அமைத்துக் கொண்டோமென்றால், நல்லாயனின் பாதையில் தடம்
மாறாது பயணம் செய்கிறோம் என்பதே பொருள். எனவே இயேசுவின் குரலுக்குச்
செவிமடுத்து அவரது அழைப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். அவரின்
வாழ்வையும், வாழ்க்கை முறைகளையும் நமதாக்கிக் கொள்வோம்.
அவரின் வழிகளை மேற்கொள்ளும்போது தடைகளைக் கண்டு அஞ்ச
வேண்டியதில்லை, கலங்க வேண்டியதில்லை. காரணம் என் ஆயன் ஆண்டவர்
எனக்கென்ன குறை.
ஒல்லியான சிறுவன், தன்னைவிட குண்டான, ஒரு சிறுமியைத் தனது
முதுகில் சுமந்துகொண்டு சாலை ஓரமாகச்
சென்றுகொண்டிருந்தான். அதைப் பார்த்த முதியவர் இந்தச்
சிறுமி கனமாக இல்லையா? என்றார். அதற்குச் சிறுவன், 'நான்
சுமந்து செல்வது ஒரு கால் ஊனமான எனது அன்புத் தங்கையல்லவா
என்றான். அவன் தங்கை கனமாக இருந்தாலும் அவள் மீதுள்ள அளவுகடந்த
அன்பால், அந்தச் சுமை சுகமாக இருந்தது.
இயேசுவின் மீது முழு நம்பிக்கையையும் வைப்போம் இன்றைய நற்செய்தியின்
வழியாக இயேசு, என் குரலுக்குச் செவிமடுத்தால், நீங்கள் என்
ஆடுகள் என்கின்றார். நாம் இயேசுவினுடைய ஆடுகளாக, உண்மைச்
சீடர்களாக வாழ விரும்பினால் நாம் அவருடைய குரலுக்கு, என்
மீது நம்பிக்கை வையுங்கள் என்ற குரலுக்குச் செவிமடுக்கவேண்டும்.
இயேசுவின் அன்புக்கு அடிபணிந்து அவர் மீது நம்பிக்கை
வைத்தால் அவர் நமக்கு என்றுமே அழியா வாழ்வைத் தருவார்!
அழியா வாழ்வு - அது எப்படியிருக்கும்? என்பதற்கு இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் அருமையான விளக்கம் ஒன்றைத்
தருகின்றார்.
நிலை வாழ்வு! அங்கே பசி இருக்காது. தாகம் இருக்காது, எவ்வகை
வெப்பமும் அங்கேயிருப்பவர்களைத் தாக்காது. தேவ ஆட்டுக்குட்டி
அனைவரையும் வாழ்வு அளிக்கும் நீருற்றுகளுக்கு வழிநடத்திச்
செல்லும். அனைவரின் கண்ணீர் அனைத்தையும் கடவுள்
துடைத்துவிடுவார் (திவெ 7:16-17).
நிலையற்ற வாழ்வின் மீது, மரணத்தின் மீது தனக்கு ஆற்றல் உண்டு
என்பதை இயேசு மூன்றுபேரை உயிர்த்தெழ வைத்து உலகுக்கு
நிரூபித்துக்காட்டினார்.
மூன்று உயிர்ப்புகளும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தவர்
நடுவில் நடந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
மத் 9:23-26 : சிறுமி ஒருத்தி இறந்துவிட்டாள்! அந்த
வீட்டிற்குள் இயேசு நுழைந்தார். சிறுமி இறக்கவில்லை, உறங்குகின்றாள்
என்றார் இயேசு. அதைக்கேட்டு சிரித்தவர் உண்டு ! ஆனால் அங்கேயிருந்த
ஐந்து பேருக்கு இயேசுவின் மீது நம்பிக்கை இருந்தது.
பேதுரு, யாக்கோபு, யோவான், சிறுமியின் தாய், தந்தை ஆகியோர்
இயேசுவை நம்பினர். அங்கே சிறுமி உயிர்த்தாள். ஆம். நம்பிக்கை
இருக்கும் இடத்தில் உயிர்ப்பு இருக்கும், வாழ்வு இருக்கும்.
லூக் 7:11-17 : நயீன் ஊர் கைம்பெண்ணின் மகன் இறந்துவிடுகின்றான்.
அவனைப் பாடையிலே தூக்கிச் சென்றார்கள். தாயைப் பார்த்து.
அழாதீர், என்று சொல்லிவிட்டு, பாடையின் அருகில் சென்று
பாடையை இயேசு தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நான்கு
பேரும் ஏன்? எதற்கு? என்று எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை!
அவர்களுக்கு இயேசுவின் மீது அவ்வளவு நம்பிக்கை! அங்கே
புதுமை நடக்கின்றது! இறந்த இளைஞன் எழுந்து பேசினான். எங்கே
நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உயிர்ப்பு நிகழும்.
யோவா 11:1-44 : இயேசுவைச் சுற்றி ஒரே கூட்டம். அந்தக் கூட்டத்திலே
இயேசுவை நூற்றுக்கு நூறு நம்பிய பெண்ணொருத்தி இருந்தார்.
அந்தப் பெண்ணின் பெயர் மார்த்தா. மார்த்தா இயேசுவைப்
பார்த்து, ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருந்தால் என் சகோதரன்
இறந்திருக்கமாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை
எல்லாம் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும் என்கின்றார்.
அவருக்கு இயேசுவின் மீது அவ்வளவு நம்பிக்கை. அங்கே புதுமை
நடக்கின்றது! இலாசர் உயிர்த்தார்! எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ
அங்கே உயிர்ப்பு நிகழும்.
இப்படி மூன்று புதுமைகளைச் செய்து, இறுதியாக தானே உயிர்த்தெழுந்து
மறுவாழ்வு அளிக்கும் ஆற்றல் தனக்கு உண்டு என்ற உண்மையை இயேசு
உலகுக்குப் பிரகடனப்படுத்தினார்.
இயேசுவின் அழகான குரல் இது : உயிர்தெழுதலும் வாழ்வும்
நானே. என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைக் கொள்ளும் எவரும்
என்றுமே சாகமாட்டார் (யோவா 11:25,26).
நிலைவாழ்வுக்கு நம்மையே நாம் தகுதியுள்ளவர்களாக்கிக்
கொள்வோம் ; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்து அவர்
மீது முழு நம்பிக்கை வைப்போம் (முதல் வாசகம்). மேலும் அறிவோம்
:
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (குறள் : 9).
பொருள் :
இயங்காத உடல், பேசாத வாய், நுகராத மூக்கு, காணாத கண்,
கேளாத செவி ஆகியவற்றால் பயன் எதுவும் விளையாது. அது போன்று
எண்ணரிய பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் இறைவனின் திருவடியை
வணங்கி நடவாதவரின் தலைகளின் நிலையும் பயன் அற்றவை ஆகும்.
ஒருவர் ஒரு காரைப் பயங்கர வேகத்தில் ஓட்டினார். காவலர் ஒருவர்
அக்காரை நிறுத்தி அவரிடம், "என்ன ஐயா! கார் பந்தயத்திலா ஓட்டுகிறீர்?
உங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு கிடைத்தால் என்ன
செய்வீர்?" என்று கேட்டார். அவர், "உடனே மரியாதையாய் கார்
ஓட்ட உரிமம் வாங்குவேன்" என்று சொல்ல, காவலர், "உரிமம் இன்றியா
இவ்வளவு வேகமாய் கார் ஓட்டுகிறீர்?" என்று அதிர்ச்சியுடன்
கேட்டார். காரிலிருந்த ஓட்டுனரின் மனைவி. "என் கணவர்
குடிபோதையில் ஓட்டுகிறார். அவர் உளறுவதைப் பொருட்படுத்த
வேண்டாம்" என்றார். காவலர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
காரிலிருந்த ஓட்டுனரின் அப்பா, "போலீஸ் ஐயா, திருடின
காரிலே வெகுதூரம் போக முடியாது என்று நான் அப்பவே சொன்னதை
இவன் கேட்கலை" என்றார். காவலர் மயக்கமடைந்தார்!
காரைத் திருடியது, உரிமம் இல்லாதது. குடிபோதையில் கார் ஓட்டியது
ஆகிய மூன்று குற்றங்கள் செய்யப்பட்டன. அவ்வாறே இன்று மனிதர்கள்
பல்வேறு குற்றங்களை அடுக்கடுக்காகப் புரிகின்றனர். இதற்குப்
பல காரணங்கள் இருப்பினும், மக்களை வழிநடத்த நல்ல ஆட்சியாளர்கள்
இல்லாதது ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை நாம் மறுக்கமுடியாது.
இச்சூழலில் நாம் இன்று "நல்லாயன் ஞாயிற்றுக் கிழமையைக்
கொண்டாடுகின்றோம். இன்றைய அருள் வாக்கு வழிபாடு நல்லாயனைப்
பற்றிப் பேசுகிறது. பழைய ஏற்பாட்டில் கடவுளே இஸ்ரயேல் மக்களின்
ஆயராகத் திகழ்ந்தார். "அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர்
மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்" என்று இன்றைய பதிலுரைப்
பாடல் கூறுகிறது (திபா 100:3). இத்திருப்பா, கடவுளுக்கும்
இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே உள்ள உறவை ஆயனுக்கும் ஆடுகளுக்கும்
இடையே உள்ள உறவுக்கு ஒப்பிடுகிறது.
காலப்போக்கில் கடவுள் இஸ்ரயேல் மக்களை வழிநடத்த ஏற்படுத்திய
ஆயர்கள் (அரசர்கள், நீதிபதிகள்) ஆடுகளை மேய்க்காமல் ஆடுகளைக்
கொண்டு தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொண்டனர். இந்நிலையில்
கடவுள் இறைவாக்கினர் எரேமியா வாயிலாக, "என் இதயத்திற்கேற்ற
ஆயர்களை உங்களுக்குக் கொடுப்பேன்" என வாக்களித்தார் (எரே
3:15).
கடவுளால் வாக்களிக்கப்பட்ட நல்ல ஆயர் தாம் இயேசு கிறிஸ்து
(யோவா 10:11, 14), அவர் மக்கள் மீது பரிவு கொண்டார். ஏனெனில்
அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டனர் (மத்
9:36), அவர் வழிதவறிச் சென்ற ஆடுகளைத் தேடிச் செல்கிறார் (மத்
18:12-14); ஆடுகள் ஒவ்வொன்றையும் அறிகிறார். பெயர் சொல்லி
அழைக்கின்றார் (யோவா 10:3), பசும்புல் தரைக்கும் தெளிந்த
நீரோடைக்கும் அவற்றை அவர் நடத்திச் செல்கிறார் (திபா 23:2)
இறுதியாக, தம் ஆடுகளுக்காகத் தம் இன்னுயிரையே கையளிக்கிறார்
(யோவா 10:15)
கிறிஸ்து நமது நல்லாயன்; நாம் அவர் மந்தையின் ஆடுகள் என்பது
உண்மையென்றால், நல்ல ஆடுகளின் பண்பு ஆயருடைய குரலுக்குச்
செவிமடுப்பதாகும். "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி
சாய்க்கும்" (யோவா 10:27), நாம் கிறிஸ்துவின் குரலுக்குச்
செவிசாய்க்கின்றோமா?
ஒரு தாய்க்கோழி தனது கால்களால் தரையைக் கிளறி விட்டுத் தனது
குஞ்சுகளுக்கு இரைகாட்டிக் கொண்டிருந்தது. அக்கோழியிடம்
கடவுள், "உனது குஞ்சுகள் எவ்வாறு நல்ல உணவை மட்டும் எடுத்துக்
கொண்டு, தீய உணவைத் தள்ளிவிடுகின்றன?" என்று கேட்டார். அதற்குத்
தாய்க்கோழி கடவுளிடம், "நல்ல உணவுக்கு ஒருவிதமாகவும், தீய
உணவுக்கு ஒருவிதமாகவும் எனது குரலை மாற்றிக் கொடுப்பேன்.
என் குரலைக் கேட்டு என் குஞ்சுகள் எந்த உணவை எடுத்துக்
கொள்ள வேண்டும். எந்த உணவைத் தள்ளிவிட வேண்டும் என்பதைத்
தெரிந்து கொள்கின்றன" என்றது. அதைக் கேட்டுக் கடவுள் அத்தாயக்கோழியிடம்,
"உனது குஞ்சுகளுக்கு இருக்கின்ற அறிவு என் மக்களுக்கு இருந்தால்
எவ்வளவு நல்லதாக இருக்கும்" என்றார்.
கடவுள் குரலுக்கு நாம் செவிகொடுத்து நல்லவை நாடி, அல்லவை
அகற்ற வேண்டும். கடவுள் பல்வேறு வகையில் முற்காலத்தில்
பேசினார். இந்த இறுதிக் காலத்தில் தம் மகன் கிறிஸ்து வழியாகப்
பேசியுள்ளார் (எபி 1:1); கிறிஸ்துவுக்குச் செவிசாய்க்கும்படி
நமக்குப் பணித்துள்ளார் (மத் 17:5). கிறிஸ்துவோ தமது பிரதிநிதிகளான
திருமேய்ப்பர்களுக்குச் செவிகொடுக்கும்படி பணித்துள்ளார்.
"உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்"
(லூக் 10:16).
ஆனால் இன்று நாம் டி.வி. மாயையில் சிக்கிக் கடவுளுடைய குரலுக்குச்
செவி கொடுக்கத் தவதுகிறோம். டி.வி. நமது வீட்டில் இறையாண்மை
செலுத்தி நமது விசுவாசத்தைப் பறித்துக் கொண்டு வருகிறது.
ஆண்டவரே என் ஆயர் என்ற 23வது திருப்பாவை இப்போது பின்வருமாறு
மாற்றி எழுத வேண்டியுள்ளது.
"டி.வி, எனது ஆயர்; ஆகவே எனக்கொரு குறையுமிராது. அது என்னைப்
பஞ்சு மெத்தையில் படுக்கச் செய்கிறது; விசுவாச
வாழ்விலிருந்து விலகச் செய்கிறது; என் ஆன்மாவைக் கொலை
செய்கிறது. பாலின்பத்திற்கும் வன்முறைக்கும் அது என்னை அழைத்துச்செல்கிறது;
என் மனச்சாட்சியை மழுங்கடிக்கிறது. நான் தனிமையைக் கண்டு
பயப்படவே மாட்டேன், ஏனெனில் என் டிவி. என்னுடன் இருக்கிறது.
'கேபிள் டிவி.யும், சிமோட் கண்ட்ரோலும் எனக்கு ஆறுதல் அளிக்கின்றன.
உலக மனப்பான்மையாலும் நுகர்வுக் கலாச்சாரத்தாலும் டி.வி.
என்னைத் திருநிலைப்படுத்துகிறது. எனது பேராசைப் பொங்கி
வழிகிறது. சோம்பலும் அறியாமையும் வாழ்நாள் முழுவதும் என்னைப்
பின்தொடரும். நான் நாள்தோறும் டி.வி. யைப் பார்த்த வண்ணம்
என் இல்லத்தில் குடியிருப்பேன்"
இந்தவின திருப்பாவை படிக்கும்போது நமக்குச் சிரிப்பு வரலாம்;
சிசிப்பதற்காக அல்ல, சித்திப்பதற்காகவே திருப்பா மாற்றிக்
கொடுக்கப்பட்டுள்ளது. கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும்!
இன்றைய ஞாயிறு இறை அழைத்தல் ஞாயிறு. 13ஆம் தூற்றாண்டில்
திருத்தந்தை 3ஆம் இன்னசெண்ட ஒரு பயங்கரக் கனவு கண்டா், அக்கனவில்
உரோமை தூய பேதுரு பேராலயம் கீழே சாய்ந்து விழும் ஆபத்தில்
இருந்தது. ஆனால் ஓர் இளைஞர் அப்பேராலயத்தைக் கீழே விழாமல்
தமது கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர்தான் புனித
பிரான்சிஸ் அசிசியார். இன்றைய உலகைப் பாதுகாக்கப் புனித அசிசியார்
போன்று 10 இளைஞர்கள் தேவை என்று லெனின் கூறினார் என்பது
குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைஞர்கள் உலகையும் திருச்சபையையும்
பாதுகாக்க வேண்டும். என்னைப் பின் செல்" என்று கிறிஸ்து
அவர்களை அழைக்கின்றார். கிறிஸ்துவின் குரலைக் கேட்டு இளைஞர்கள்
தங்களைக் கிறிஸ்துவின் திருப்பணிக்காக முற்றிலுமாக அர்ப்பணிக்க
முன்வருவார்களாக!
உரோமைப் பேரரசன் வெஸ்பாசியன் பேரவையில் ஒரு சர்ச்சை: "கடவுளுக்கு
என்ன பெயர் வைக்கலாம்?" அனைத்தையும் கடவுள் தனது கட்டுக்குள்
வைத்திருப்பதால், அவரை எல்லாம் வல்லவர்' என்று அழைக்கலாம்
என்றார் ஒருவர். தூய்மையே வடிவானவர் என்பதால் தூயவர்' என்று
சொன்னால் என்ன என்றார் இன்னொருவர். இப்படிப் பலயோசனைகளும்
மன்னனுக்குத் திருப்தி தரவில்லை. "அன்பின் உறைவிடம் இரக்கத்தின்
இருப்பிடம்" என்றால் பொருத்தமாக இருக்குமே என்று மூத்த உறுப்பினர்
சொன்னதும், "ஏற்ற பெயர் இதுவே" என்றனர் அனைவரும். கடவுள்
அன்பின் உறைவிடம் இரக்கத்தின் இருப்பிடம் என்ற உண்மைக்கு
இயேசு தந்த விளக்கம், வெளிப்பாடுதான் "நானே நல்லாயன்" என்பது.
இயேசுவின் வாழ்வும் சாவும் அவர் தன் ஆடுகளுக்காக உயிரையும்
இழக்கத் துணியும் நல்லாயன் என்பதற்குக் கட்டியம் கூறவில்லையா?
நல்லாயன் மடியில் ஓர் ஆடு. சுற்றிலும் பல ஆடுகள் மேய்ந்து
கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு படத்தைப் பார்த்ததும், இயேசுவின்
மடியில் இருக்கும் ஆடு எவ்வளவு கொடுத்து வைத்தது என்று
நினைக்கத் தோன்றுகிறதா? அது சிறந்த ஆடு என்பதால் அன்று, அது
நோயுற்றது, பலவீனமானது, துன்புறுவது என்ற காரணத்தால் இயேசு
தன் மடியில் தூக்கி வைத்திருக்கிறார். நீ முக்கியமானவன் என்பதால்
கடவுள் உன்னை அன்பு செய்வதில்லை. கடவுள் அன்பு செய்வதால்
நீ முக்கியமானவன். இப்போது புரிகிறதா நூறு ஆடுகளில் ஒன்று
காணாமற் போனால் அதனைக் கண்டு மகிழும் ஆயனின் மனநிலை?
(லூக்.15;4-6)
ஒரு பங்கின் ஞாயிறு செய்தி மடலில் ஆன்மீகப் பகுதி ஆசிரியர்
மறையுரைக்குத் தலைப்பிட மறந்து விட்டார். நினைவு படுத்தியதும்
"ஆண்டவர் என் ஆயன்" என்று தலைப்பிடச் சொன்னார். "அவ்வளவு
தானா?" என்று கேட்க, "அதுபோதும்" என்றிருக்கிறார். மறுநாள்
மடலிலோ "ஆண்டவர் என் ஆயன் - அதுபோதும்" என்றிருந்ததாம். தற்செயலாக
அமைந்த தலைப்பு என்றாலும் "ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும்
குறையில்லை" (தி.பா.23:1) என்ற திருப்பாடலின் வெளிப்பாடன்றோ!
இயேசு வெறும் ஆயனல்ல, நல்லாயன். இந்த நன்மைத்தனம் வெளிப்படும்
மூன்று வடிவங்கள்:
1. அறிந்து அன்பு செய்யும் நெருக்கம் (intimacy) தானும் தந்தையும்
ஒருவர் ஒருவரை அறிந்திருப்பது போல் என்கிறார் இயேசு
(யோவான் 10:14). விவிலியத்தில் அறிதல் என்பது உறவு கொள்ளுதல்,
அன்பு செய்தல், சொந்தமாகுதல் என்றல்லவா பொருள்படும்! ஆயன்
கையில் உள்ள "கோலும் நெடுங்கழியும்" (தி.பா.23:4) கூட நட்பின்
சின்னம்தான்.
2. தன்னையே கையளிக்கும் தியாகம் (Self giving). "எனது ஆடுகளுக்காக
எனது உயிரைக் கொடுக்கிறேன்" (யோவான் 10:15) தன்னையே பலியாக்குபவர்,
தன்னையே நமக்காக உணவாக்குபவர் அன்றோ இயேசு! "சிங்கக்
குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை
நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது" (தி.பா.34:10) 3. ஒன்றிப்புக்கான
அணையாத் தாகம் (desire for unity) "இக்கொட்டிலைச் சேரா
வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன (யோவான் 10:16) ஒரே மந்தையும்
ஒரே ஆயனும் என்னும் நிலை வேண்டும். இயேசுவையே கூறுபோடுவது
போல் எத்தனை பிளவுபட்ட பிரிவினைச் சபைகள்!
நல்லாயனின் முக்கியமான பண்பும் பணியும் வாழ்வு தருவதாகும்.
நிறைவாழ்வு மட்டுமல்ல நிலைவாழ்வு தருவதாக வாக்களிக்கிறார்
இயேசு. "நான் அவற்றிற்கு நிலை வாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே
அழியா" (யோவான் 10:28)
"கடவுள் நமக்கு நிலை வாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு
அவர் மகனிடம் இருக்கிறது" (1 யோவான் 5:11) "உண்மையான ஒரே
கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசுக் கிறிஸ்துவையும்
அறிவதே நிலை வாழ்வு" (யோவான் 17:3)
இந்த அறிந்து கொள்ளுதலில் நான்கு நிலைகள் அல்லது படிகள் உள்ளன.
1. நிலைவாழ்வு பெற முதல் தேவை - இயேசுவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை.
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல்
நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக்
கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16)
2. நிலைவாழ்வு பெற இரண்டாவது தேவை - இயேசுவின் வார்த்தைகளைக்
கேட்பது, ஏற்பது. "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?
நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன"
(யோவான் 6:68). "கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில்
அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித்தள்ளி
நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே
தீர்ப்பளித்துக் கொண்டீர்கள்" (தி.பா.13:46) என்ற திருத்தூதர்
பவுலின் கண்டனம் சிந்திக்கத் தகுந்தது.
3. நிலைவாழ்வு பெற மூன்றாவது தேவை - இயேசுவைப் பின்செல்வது.
"நிலைவாழ்வு பெற செய்ய வேண்டியது என்ன என்ற கேள்விக்கு இயேசு
சொன்ன பதில்: "நிறைவுள்ளவராக விரும்பினால், நீ போய் உன் உடைமைகளை
விற்று ஏழைகளக்குக் கொடும்... பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"
(மத்.19:16,21)
4. நிலைவாழ்வு பெற நான்காவது தேவை - இயேசுவோடு இணைவது.
"எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர்
நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்" (யோவான் 6:54). கடவுள் நல்லாயனாகிப்
புறத்தே உள்ள புல்வெளிக்கும் நீர் நிலைக்கும் அழைத்துச்
சென்று பசிதாகம் போக்குவது மட்டுமல்ல, தன்னையே உணவாக, பானமாகத்
தருகிறார் என்றால் தன்னோடு நம்மை ஐக்கியமாக்கிக் கொள்ள
விரும்புகிறார் என்றுதானே பொருள்!
மேற்கூறிய இந்த நான்கு அம்சங்களையும் உள்ளடக்கி இயேசு
கூறிய உவமைதான் "நானே நல்லாயன்" என்பது. இந்த நிலைவாழ்வு
கிட்டுவது உலக முடிவிலோ, தனிநபர் இறப்பிலோ அல்ல. இப்போதே,
இங்கேயே தொடங்குகிறது. திருவெளிப்பாடு 7:9ல் திருத்தூதர்
யோவான் கண்ட காட்சியாக உணர்த்தப்படுவது செம்மறியாகிய இயேசுவைச்
சுற்றியுள்ள சீடர்கள் அனைவருக்குமே உரியது.
குப்பை மேட்டில் தாய்க் கோழியின் குரலை இனம் பிரித்து நல்லதை
உண்டு நஞ்சானதை விலக்கும் குஞ்சுகள் போன்று ஆயன் இறைவனின்
குரல் கேட்டு மனிதன் செயல்படத் தொடங்கினால் எவ்வளவு நன்றாக
இருக்கும்! இறைவனின் ஏக்கப் பெருமூச்சு இது!
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ