ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

      திருக்குடும்ப பெருவிழாழா

    திருப்பலி முன்னுரை

    வருடாந்த
ஞாயிறு வாசகம்
  pdf/Calendrier-litrugique2021.pdf
 
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
திருக்குடும்ப பெருவிழா ஆசி பெற வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே!
B தவக்காலம்1 தியாகங்கள் ஏற்க சலிக்காத அன்பு, துன்பத்தில் உடனிருக்கும் பாசம், கடவுளின் பராமரிப்பில் பரம்பரையைத் தத்து கொடுத்த குடும்பம், இறை நம்பிக்கையில் தன்னை மறந்த குடும்பம், அதுதான் திருக்குடும்பம்;, உலகம் போற்றும் உயர் குடும்பம். அந்தக் குடும்பம் இன்று நம்மைத் திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கின்றது. நாம் இன்று திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

குடும்பம் என்பது ஒரு கோவில் குடும்பத்தில் பிள்ளைகள் பெற்றோருக்குத் தெய்வம். பெற்றோர் பிள்ளைகளுக்குத் தெய்வம். அப்படியென்றால் தெய்வங்கள் வாழும் இடம் கோவில் தானே!

குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றும்போது சோர்வுரும் நாம சூசை தந்தையின் பொறுமை, அன்னை மரியாளின் பணிவு, யேசுவின் கீழ்படிதல் என இத்தகைய மேலான பண்புகளை அடித்தளமாக்குவோம், அன்பை சுவராக்கி, மகிழ்ச்சியைக் கூரையாக்கி, குடும்பத்தைக் கட்டி எழுப்பி அந்த தரையில் அமர்ந்து உரையாடுவோம். அபபோது வருத்தம், பிரச்சனை, கவனக்குறைவு, விவாகரத்து, நோய், வறுமை, கவலை, தோல்வி, ஏமாற்றம் வந்து நம் குடும்பத்தை சிதைக்குமா? என்பதைச் சிந்திப்போம்.

எனவே நம் குடும்பத்தைக் கட்டி எழுப்ப பொறுமை, பணிவு, கீழ்படிதல், அன்பு, மகிழ்ச்சி என்ற நற்பண்புகளை வரமாக கேட்டு திருக்குடும்பமாய் பங்கேற்ப்போம்.
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
 
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. தியாக மிகு உள்ளத்தை தரும் தேவா!
நீர் அற்புதமாக படைத்து ஆசீர்வாதத்தோடு நடத்தும் திருச்சபையை உம் திருமுன் நினைவுக்கு கொண்டு வருகிறோம். திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் தங்கள் தியாகமிகு வாழ்வினால் ஒரே குடும்பத்தினராய் வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. அக்கறையான நெஞ்சங்களை அரவணைக்கும் நேசரே!
நாடுகளின் தலைவர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டு வாழ தன்னல வாழ்வினை தியாகம் செய்து அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. தெய்வீக குடும்பத்தை பராமரித்த தேவனே!
எங்கள் குடும்பங்களை திருகுடும்பமாக மாற்ற எங்களுக்காக பணி செய்யும் பங்கு தந்தையின் உழைப்பினால் எங்கள் பங்கில் உள்ள குடும்பங்கள் அனைத்தும் தெய்வீக பராமரிப்பினால் வழி நடத்த அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. குடும்பம் என்ற குட்டி திருச்சபையை கட்டி எழுப்பிய தேவனே!
எங்கள் குடும்பங்களை கூறு போடும் குழப்பம், சந்தேகம், அவமானம், தனிமை, பிரிவு, வறுமை, புலம் பெயர்ந்த நிலைமை என அனைத்து தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்து குட்டி திருச்சபையாய் குடும்பங்கள் வாழ உம் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உலகம் போற்றும் உன்னத திருகுடும்பமாக்க அருள் தரும் தேவா!
இங்கே கூடியுள்ள எங்கள் குடும்பங்களை உமது கரத்தில் தருகிறோம். எங்கள் குடும்பத்தின் தலைவன் புனித சூசையப்பரின் பொறுமையையும் குடும்பத்தின் தலைவி அன்னை மரியாளின் பணிவையும் குழந்தைகள் இயேசுவின் கீழ்படிதலையும் கற்றுக் கொண்டு
சமூகம் விரும்பும் குடும்பமாக வளர அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்

 
 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm


 

 
அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ்.

எனது குடும்பம்: தேன்கூடா? செங்கல் வீடா? காக்கை குடும்பமா?
அப்பா : மகனே.. பத்து நிமிசமாச்சு உன் அம்மா சத்ததத்தை காணோம்... பக்கத்து வீட்டுக்கு போயிருக்காளா..?
மகன் : அது வந்து... அம்மா என்னை நல்லா வெளுத்து வாங்கிட்டு இருக்காங்கப்பா..!
அப்பா : ஐய்யய்யோ.. எதுக்குடா அடிச்சா உன்னை.. நீ ஏடாகூடமாக எதாவது செய்தியா..?
மகன் : இல்லப்பா அம்மா லிப்ஸ்டிக் எடுத்து தர கேட்டாங்க. நான் தெரியாம பெவிஸ்டிக் எடுத்து கொடுத்துட்டேன்.!
அப்பா : நீ என் மகனில்லடா.. என் குலசாமிடா..!

இறை இயேசுவில் பிரியமான சகோதர சதோதரிகளே! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? இன்றைய நாளில் முக்கிய காரணங்களுக்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். முதலாவதாக நமது தாயாம் திருச்சபையானது திருக்குடும்ப விழாவைச் சிறப்பிக்கின்றது, இரண்டாவதாக நாம் அனைவருமே பங்கு என்ற பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை தெளிவுபடுத்தும் விதமாக கடவுளுக்கு நமக்கு செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தோடு இன்று பங்கெடுக்கின்றோம்.

பிரியமானவர்களே! அன்று ஒழுங்கான முறையில் தாஜ்மகால் கட்டப்பட்டதால்த் தான் இன்றும், அதேபோல் பார்ப்பதற்கு அழகாகவும், நேர்த்தியாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது என்றால், அதற்கு காரணம் அன்று போடப்பட்ட பலமான அஸ்திவாரமே காரணம் ஆகும். அது போல, டெல்லியில் குதுப்மினார், பல இரும்பு தூண்களால் கட்டப்பட்டதாகும். எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்து வந்திருந்தாலும், இன்றளவும் துரு பிடிக்காமல், பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை கொண்டு வருகிறது என்றால், அதற்கும் காரணம், அதன் அஸ்திவாரம் உறுதியாக இருப்பதே.

ஆம் அன்புக்குரியவர்களே எது ஒன்று நன்றாக நீடித்து, பலமாக இருக்க வேண்டும் என்றாலும், அதற்கு முக்கிய காரணம், அதன் உறுதியான அஸ்திவாரமே. அதைப்போலத்தான் சமூதாயம் என்ற கட்டிடம் உறுதியாக இருக்க வேண்டுமானால் அதற்கு குடும்பம் என்ற அஸ்திவாரம் மிக மிக முக்கியம். இந்த குடும்பத்தின் ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் இருப்பது கணவனும், மனைவியும் தான். இந்த அஸ்திவாரம் திருமணம் என்ற முதல் கல்லால் ஆரம்பிக்கப்படுகிறது. பின், அதன் மீது ஒவ்வொரு கற்களாக வைத்து கட்டி முடிக்கப்பட்டு, ஒர் அழகான வீடாக ஜொலிக்கிறது. இப்படியாக உறுதியான அஸ்திவாரத்தால் கட்டப்பட்டது தான் அன்னை மரியாவும், சூசையப்பரும், இயேசுவும் வாழ்ந்த குடும்பம். அதனால்த்தான் அக்குடும்பத்தை திருக்குடும்பம் என்கிறோம். அந்த திருக்குடும்பத்தின் பண்புகளை நாமும் பெற்று நம்முடைய குடும்பங்களையும் திருக்குடும்பமாக மாற்ற இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

ஒருமுறை திருமண திருப்பலியின் போது பங்குத்தந்தை கணவன், மனைவி இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்தவொரு செயலை செய்யும் போதும் நீ பாதி, நான் பாதி என்று சேர்ந்து ஒற்றுமையாக செய்தீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தில் சண்டைகளுக்கு இடம் கிடையாது என போதித்தார். திருமணம் முடிந்த மறுநாள் சந்தோசமாக மனைவியின் முதல் சாப்பாட்டை சாப்பிவதற்கு கணவன் மிகவும் சந்தோசமாக வந்தான். மனைவி டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். சாப்பிடுவதற்கு என்னா இருக்கின்றது என பாத்திரத்தை திறந்து பார்த்த போது அவனுக்கு ஒரே அதிர்ச்சி. இட்லி, தோசை இருந்தது ஆனால் சட்டினி இல்லை; பூரி இருந்தது ஆனால் குருமா இல்லை; பொங்கல் இருந்தது ஆனால் சாம்பார் இல்லை; பிரட் இருந்தது ஆனால் ஜாம் இல்லை; உடனே மனைவியை அழைத்து அனைத்தும் பாதிபாதியாக இருக்கின்றது இதையெல்லாம் எப்படி சாப்பிடுவது எனக் கேட்டான். உடனே மனைவி நேற்று பங்குத்தந்தை என்ன கூறினார்! மறந்துவிட்டதா உங்களுக்கு என்றாள். நேற்று பங்குத்தந்தை நீ பாதி; நான் பாதி என்று சொன்னாறே ஞாபகம் இல்லையா? நான் அனைத்திலும் பாதி பாதி செய்துவிட்டேன் உங்களுக்கான பாதியை நீங்கள் சீக்கிரம் செய்தால் நாம் சீக்கிரமாக சாப்பிடலாம் என்றாள். கணவன் அப்படியே மயங்கி விட்டான்.

பிரிமானவர்களே இதுதான் இன்றைய குடும்ப சூழல். யாரும் யாருக்கு தாழ்ந்தவர்கள் கிடையாது. ஒவ்வொருவருமே கணக்கு பார்த்துக் கொண்டு வாழும் வாழ்க்கை அதிகமாகி விட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் யார் பெரியவன்? யார் பெரியவள்? என்ற மனநிலை பரந்து விரிந்து காணப்படுகின்றது. ஆனாலும் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகின்றனர். ஆனால் திருமணம் ஆனவர்கள் ஏன்டா திருமணம் செய்தோம் என கவலைப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இன்று நம்முடைய குடும்பத்தின் உண்மையான நிலை எப்படி இருக்கின்றது? எத்தனை குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் மற்றவரோடு அத்தை, மாமா, மச்சான், கொளுந்தன், கொளுந்தியாள், பேரப்பிள்ளைகள் என்று சந்தோசமாக இருக்கின்றனர்? எத்தனை குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர்? என்று சிந்தித்துப் பார்க்க அனைவரும் கடமைப் பட்டிருக்கின்றோம்.

ஒருமுறை கணவன் தன் மனைவியைப் பார்த்து இன்று எனது துணிகளை துவைத்துவை என்று கூறினான். உடனே மனைவி நான் ஒன்றும் வேலைக்காரி கிடையாது உங்களது துணிகளை துவைப்பதற்கு என்று சொல்லி துவைக்க மறுத்துவிட்டாள். வேறு என்ன செய்வது கணவன் எழுந்து தனது துணிகளை துவைத்து வந்தான். அன்று இரவு இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டில் திருடன் புகுந்து மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழட்டித்தரச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தான். உடனே மனைவி என்னை காப்பாற்றுங்கள் என அலறினாள். கணவன் எழுந்து பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டான். உடனே மனைவி நீயெல்லாம் ஒரு கணவனா எழுந்து வந்து என்னை காப்பாற்று என கத்தினாள். உடனே கணவன் எழுந்து நான் ஒன்றும் போலிஸ்காரன் அல்ல உன்னை காப்பாற்றுவதற்கு; நான் கணவன் மட்டும் தான் என்று சொன்னானாம். ஆம் அன்புக்குரியவர்களே இதுதான் இன்றைய குடும்பச் சூழல்.

ஆனால் குடும்பம் என்பதற்கு நம்முடைய முன்னோர்கள் மிக முக்கியத்துவத்தைக் கொடுத்து குடும்பத்தை போற்றி வந்தனர். குடும்பம் ஒரு கோவில், குடும்பம் ஒரு கதம்பம், குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், குடும்பம் கடவுள் வாழும் இல்லம், என பல பெயரில் குடும்பத்தை அழைத்தனர். அப்படியே குடும்பத்திற்கான முக்கியத்துவத்தையும் கொடுத்தனர். குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்ந்தவர்களில் ஒருவர் தான் நமது முதுபெரும் தந்தை ஆபிரகாம். இவர் தன்னுடைய குடும்பத்தை முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைக்கின்றார். கடவுளின் அசீர்வாதத்தால் தனது குடும்ப வாழ்வைத் தொடங்குகின்றார். அதன் பயனாக கடவுளும் இவரது குடும்பத்தை பன் மடங்கு ஆசீர்வாதங்களால் நிரப்புகின்றார். எந்த அளவிற்கு என்றால் ஆகாயத்தின் விண்மீனைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் அக்குடும்பத்தின் சந்ததிகளை கடவுள் உருவாக்குகின்றார்.

ஆபிரகாமின் குடும்பத்தை கடவுள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

01. ஆபிரகாம் கடவுளுக்கு ஏற்ற முறையில் வாழ்ந்து வந்தார்.
ஒவ்வொரு குடும்பத்தின் அஸ்திவாரமும் திருமணத்தில் ஆரம்பிக்கின்றது என பார்த்தோம். அந்த திருமணத்தின் நிறைவு குழந்தைச் செல்வத்தில் முடிகின்றது. ஒரு குடும்பம் நிறைவான, முழுமையை அடைகிறது என்றால் அதற்கு காரணம் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் தான். குழந்தைகள் இல்லாத குடும்பம் தெய்வங்கள் இல்லாத கோயில்கள் ஆகும். அல்லது புத்தகங்கள் இல்லாத பல்கலைகழகங்கள் ஆகும். ஆக குழந்தைச் செல்வம் தான் ஒவ்வொரு குடும்பத்தையும் நிறைவுபெறச் செய்கின்றது. பிள்ளைகள் இல்லாத குடும்பங்களில் தம்பதிகளை, வெறுமை, தனிமை, இழிச்சொல் போன்ற துன்பங்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லை என்று சொன்னால் கடவுளின் மீது உள்ள நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடுகின்றனர்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் இதுபோன்ற நிகழ்வுகளை நாம் பார்க்கலாம். திருமணம் முடிந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டிலே அத்தம்பதியினர் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் இல்லை என்றால் அவர்களைச் இச்சமூகம் எப்படிப்பட்ட முறையில் சித்தறிக்கின்றது என்பதை நாம் அறிந்ததே. குழந்தைகளை பெற்றெடுக்கவில்லையென்றால் மருத்துவர்களை நாடுகின்றனர். அப்படியும் குழந்தை பாக்கியம் இல்லையென்றால் கோவில் கோவிலாக மடிப்பிச்சை ஏந்தி கடவுளின் வரத்திற்காக எத்தனையோ போர் காத்திருக்கின்றனர். இந்த கடவுள் கொடுக்க மாட்டாரா அல்லது அந்த கடவுள் கொடுக்க மாட்டாரா என ஒவ்வொரு கடவுளை நோக்கியும் மக்கள் செல்கின்றனர். அப்படியும் குழந்தைகள் கிடைக்க வில்லையென்றால் கடவுள் மீது உள்ள நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடுகின்றனர். கடவுளை வெறுக்கத் தொடங்கி விடுகின்றனர்.

ஆனால் ஆபிரகாமும், சாராவும், குழந்தைகள் இல்லாமல் ஒரு ஆண்டு அல்ல இரு ஆண்டு அல்ல 99 ஆண்டுகள் வாழ்கின்றனர். அத்தம்பதியினர் எத்தகைய பழிச்சொல்லுக்கு ஆழாயிருக்க நேரிடும். எத்தனைபேர் அவர் அவர்களை ஏளனம் செய்திருக்க கூடும். ஆனாலும் கடவுளை எதிர்த்து ஒருபழிச்சொல்லோ, கடவுளை புறக்கணித்து வேற்று தெய்வத்திற்கு வணக்கமோ, ஆராதனையோ செய்யாதவர்கள். கடைசி வரை கடவுளுக்கு ஏற்ற முறையில் தங்களது வாழ்வை நடத்துகின்றார். எனவே கடவுள் அவர்களை தேர்ந்தெடுத்து ஆசீர்வதிக்கின்றார்.

02. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்கள்
ஆம் அன்புக்குரியவர்களே கடவுளை நம்பியவர்கள் எப்போதும் கைவிடப்படார் எனக் கேள்விப் பட்டிருக்கின்றோம். அதற்கு உதாரணமாக ஆபிரகாமை எடுத்துக் கொள்ளலாம். தன்னுடைய வாழ்வில் எல்லச் சூழ்நிலையிலும் கடவுள் மீது கொண்டள்ள நம்பிக்கையை மட்டும் அவர் இழக்கவே இல்லை. பிரியமானவர்களே!
உதாரணமாக உங்களைப் பார்த்து திருச்சி வரை சென்று வாருங்கள் என நான் கூறுகின்றேன் என வைத்துக் கொள்வோம். பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள். திருச்சிக்கா? எதற்கு நான் செல்ல வேண்டும்? எனக்கு அங்கு என்ன வேலை இருக்கின்றது? என்று பல கேள்வில் நம் முன்னால் எளும்.
ஆனால் ஆபிரகாமுக்கு கடவுளும் இதைப்போன்று கூறுகின்றார் ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்றார்.

கடவுளின் வார்த்தையைக் கேட்டு எங்கு செல்லவேண்டும்? ஏன் செல்ல வேண்டும்? எதற்காக சொல்ல வேண்டும்? என ஒரு வார்த்தைகூட ஆபிரகாம் கடவுளிடம் கேட்கவில்லை. மாறக விவிலியம் கூறுகின்றது ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அப்படிச்செல்கின்ற போது அவருக்கு வயது எழுபத்தைந்து. தொ.நூல் 12:1-4. அந்த எழுபத்தைந்து வயதிலே கடவுள் மீது நம்பிக்கை கொண்டு கடவுள் காண்பித்த நாட்டிற்கு நம்பிக்கையோடு செல்கின்றார். எனவே கடவுள் ஆபிரகாமின் குடும்பத்தை தேர்ந்தெடுத்து தனது ஆசீர்வாதத்தால் நிரப்புகின்றார்.

03. கடவுளிடத்தில் தன்னுடைய தேவையை தைரியமாக கேட்கின்றார்
அன்புக்குரியவர்களே ஒரு முக்கியமான விலையுயர்ந்த பொருட்களை யாரிடம் நாம் தைரியமாக கேட்கவோ? வாங்கவோ? முடியும். முதலில் அந்த மனிதர் நமக்கு பரிச்சயமானவராக, அதாவது மிகவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். உதாரணமாக எனக்கு ஏதாவது ஒரு பொருள் வேண்டுமென்றால் நான் என் பெற்றோரிடத்திலே கேட்கலாம், அல்லது என்னை யார் அதிகம் அன்பு செய்கின்றார்களோ அவர்களிடம் நான் கேட்கலாம். காரணம் அவர்களுக்குத் தான் நம்முடைய (என்னுடைய) தேவைகள் அனைத்தும் தெரியும். மேலும் நம்முடைய தேவையை நிறைவு செய்யும் கடமை அவர்களுக்கு மட்டும் தான் உண்டு.

இன்றைய முதல் வாசகத்திலே ஆபிரகமாம் கடவுளை நோக்கி கேட்கின்றார். அப்படியானல் கடவுள் அவருக்கு மிகவும் பரிட்சயமானவர். கடவுளை நன்கு அறிந்து, தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆபிரகாம் கடவுளிடம் கேட்கின்றார் "என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லையே. பிரியமானவர்களே சற்று இந்த கேள்வியை உற்று கவனியுங்கள். ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? அப்படியென்றால் கடவுளிடம் நிறையமுறை அவர் இதைப்பற்றி கேட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதியை மீண்டும் கடவுளுக்கு நினைவு படுத்துகின்றார். அதாவது கடவுளே ஒவ்வொருமுறை நீர் காட்சி தரும்போதும் எனக்கு இதைத் தருவேன், அதைத் தருவேன் என வாக்களிக்கின்றீர். இப்பொழுது எனக்கு முக்கிய தேவையாக இருப்பது ஒரே ஒரு குழந்தை மட்டும் தான். என கடவுளிடம் பிள்ளைக்கு உரிய பாசத்தில் கேட்கின்றார்.

கடவுளும் உடனே பதில் தருகின்றார். ஆண்டவர் ஆபிராகமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்"என்றார். ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். ஆக ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்த குடும்பம் கடற்கரை மணலைப் போலவும் ஆகாயத்தின் விண்மீனைப் போலவும், ஆசீரை பெற்றுக்கொண்டது. இன்று நம்முடைய குடும்பங்கள் எதை மையமாகக் கொண்டுள்ளது? என்று சற்று சிந்திப்போமா? நம்முடைய குடும்பங்கள் கடவுளின் ஆசீர்வாதத்தை தேடும் குடும்பங்களா? அல்லது பணம், பதவி, பட்டம் இவற்றை தேடும் குடும்பங்களா? சிந்திப்போம்!.

இன்றைய நற்செய்தியிலே அன்னை மரியாவின் குடும்பம் திருக்குடும்பம் என அழைக்கப்படுகிறது. காரணம் அன்பு, ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகளை உள்ளடக்கியதாக இருந்தது. வழக்கமாக நமது ஊர்களில் ஒரு பழமொழி ஒன்று உண்டு தாயைப்போல பிள்ளை; நூலைப்போல சேலை என்று. ஒரு குழந்தை எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதன் குடும்பத்தை பற்றி தெரிந்திருந்தால் போதும். அதனால்த்தான் ஒருதிரைப்பட பாடல் இவ்வாறு கூறுகின்றது எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்திலே என்று!

அப்படியாக அன்னை மரியாவின் குடும்பம் எத்தகையது என்பதை இயேசு தனது வாழ்க்கையில் வெளிப்படுத்துகின்றார். இயேசு உலகில் வாழ்ந்தபோது அன்பு செய்யுங்கள் என போதித்தார்; அத்தோடு மட்டுமல்லாமல் அன்பு செய்தும் வாழ்ந்தார்; எந்த அளவிற்கு என்றால் தன்னுடைய பகைவர்களையும் அன்பு செய்யும் அளவிற்கு அன்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் தான் இயேசு. அன்னை மரியாள், சூசையப்பரிடமிருந்து இயேசு அன்பின் ஊற்றை பெற்றுக் கொள்கின்றார். மேலும் ஒற்றுமையின் அடையாளமாகவும் திருக்குடும்பம் திழ்கின்றது. எந்த அளவிற்கு என்றால் வானதூதர் சொல்வதையெல்லம் சூசையும், மரியாவும் முழுமையாக நம்பி ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்ததை நாம் பார்க்க முடிகின்றது.

திருக்குடும்பத்தைப் பற்றி ஒரு கதை கூறுவார்கள். அதாவது இராயப்பர் விண்ணகத்தின் வாயிலிலே நின்றுகொண்டு மனிதர்கள் செய்த நல்லது, கெட்டதிற்கு ஏற்ப தீர்பு அளித்துக் கொண்டிருந்தார். நல்லவர்களை விண்ணகத்திற்குள்ளும், தீயவர்களை நரகத்திற்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். உதராணமாக ஒரு நாளைக்கு இருபது நல்லவர்களை விண்ணகத்திற்கும் எண்பது கெட்டவர்களை நரகத்திற்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். ஆனால் நரகத்தைக் காட்டிலும் விண்ணகத்தில் மக்கள் கூட்டம் அதிமாகிக் கொண்டே போனது. எப்படி என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தார் இராயப்பர்!.

ஒவ்வொருநாளும் நூறுபேர், நூற்று ஐம்பது பேர் என தினமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. எப்படியாவது இதை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்து ஒருநாள் இராயப்பர் விண்ணகத்தின் நுழைவாயிலை மூடிவிட்டு அமர்ந்திருந்தார். ஆனால் மக்கள் கூட்டம் விண்ணகத்துக்குள் வந்து கொண்டிருந்தனர். இராயப்பர் எழுந்து எங்கிருந்து இந்த மக்கள் கூட்டம் வருகின்றது என்று பார்க்கப் போனார். அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. அதாவது சூசையப்பர் விண்ணகத்தின் ஓரத்தில் நின்று கொண்டு கீழிருந்து மக்களை விண்ணகத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார். இராயப்பர் சூசையப்பரிடம் சென்று தந்தையே! நீர் செய்வது முறையா? நான் மக்களின் செயலுக்கேற்ப அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா என கண்டுபிடித்து நல்லவர்களை மட்டும் விண்ணகத்திற்கு அனுப்பினால் நீரோ நல்லவன், கெட்டவன் என்று பாராமல் அனைவரையும் உள்ளே அனுப்புகின்றாய் என்று கோபப்பட்டு இருவரும் கடும் வாக்கு வாத்தில் ஈடுபட்டனர்.

உடனே சூசையப்பர் இராயப்பரை பார்த்து நீர் மனிதர்களை நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார் என்று பார்க்கின்றீர். ஆனால் நானோ கெட்டவர்களிலும் நல்லவர்கள் உண்டா என நான் பார்க்கின்றேன். ஆகவே நேர்மையாளனாகிய நான் எனக்கு நல்லவர்கள் யார் என்று தெரிகின்றார்களோ அவர்களை என்னுடைய ஜெபத்தால் விண்ணுலகம் கொண்டு வருகின்றேன். நான் செய்வது தவறு என்றால் எனக்கு விண்ணகத்தில் இருக்க விருப்பமில்லை என் கூறிக்கொண்டே தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு விண்ணகத்தை விட்டு வெளியேற முடிவெடுத்தார். இதைப் பார்த்த மரியாள் என்னுடைய கணவன் இல்லாத இடத்தில் எனக்கு என்ன வேலை நானும் எனது கணவனோடு செல்கின்றேன் என்று மரியாவும் அவரோடு புறப்பட்டார். இதையனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இயேசு எழுந்து வந்து என்னுடைய தாயும், தந்தையும் இங்கு இருக்க இடமில்லையென்றால் எனக்கென்ன இங்கு வேளை நானும் எனது பெற்றோருடன் செல்கின்றேன் என்று அவரும் கிளம்பினாராம். உடனே இராயப்படிர் ஓடி வந்து நீங்கள் மூவரும் இங்கு இல்லை என்றால் எங்களுக்கு என்ன வேலை நாங்களும் உங்களோடு வருகின்றோம் எனச் சொல்லி சூசையப்பரிடம் மன்னிப்பு கேட்டு திருக்குடும்பத்தை விண்ணகத்திலே தங்குமாறு வேண்டினாராம்.

ஆம் அன்பக்குரியவர்களே சூசையப்பர் இல்லையென்றால் மரியாள் இல்லை, மரியாள் இல்லையென்றால் இயேசு இல்லை, இயேசு இல்லையென்றால் சீடர்கள் இல்லை, சீடர்கள் இல்லையென்றல்; நீங்களும், நானும் இல்லை. ஆக திருக்குடும்பம் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கின்றது. இன்று நம்முடைய குடும்பங்கள் ஒற்றுமையின் அடையாளமா? அல்லது பிரிவினையின் கூடாரம? சிந்திப்போம்.

இன்று பணத்திற்காகவும், சொத்திற்காகவும் எத்தனை குடும்பங்கள் பிரிந்து கிடக்கின்றன இன்று எத்தனை குடும்பங்களில் பெற்றோர்கள் தாத்தாவிடம் பேசாதே, சித்தப்பாவிடம் பேசாதே, மாமா வீட்டிற்கு செல்லாதே, அண்ணனோடு உறவாடதே என மனித உறவுகளை சிதைத்து சிறுவயதிலே குழந்தைகளுக்கு நஞ்சை கற்றுக்கொடுக்கும் குடும்பத்தினர் நம்மில் எத்தனை பேர்? உறவுகளை இழந்து அநாதைகளாக வாழும் குடும்பத்தினர் நம்மில் எத்தனை பேர்? சிந்திப்போம்.

திருமணத்திற்கு முன் வரை ஒன்றாக இருந்த எத்தனை குடும்பங்கள் திருமணத்திற்கு பின்னர் தனிக்குடும்பாக மாறிவிட்டன. இன்று உன்னுடைய குடும்பம் தனிக்குடும்பமா? அல்லது கூட்டுக்குடும்பமா? குடும்பம் என்றுசொன்னாலே மக்கள் அனைவரும் ஒரு குழுவாக சேர்ந்து வாழ்வது தான் குடும்பம் ஆகும். ஆனால் குடும்பம் என்ற பெயரில் இன்று நாம் தனித்தனித் தீவுகளாக வாழ்ந்து வருகின்றோம். இன்று உயிருள்ள உறவுகளை தொலைத்துவிட்டு உயிறற்ற ஃபேஸ்புக், கணிணி, வாட்ஸ்அப் போன்றவற்றில் உறவாடிக் கொண்டிருக்கின்றோம்.

ஒருமுறை ஒரு பெண் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்புகையில் அங்கே சில மனிதர்கள் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். இந்த பெண் ஒரு பிச்சைக்காரரிடம் சென்று உங்களை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்திருக்கின்றேன் என்றாள். அதற்கு அந்த பிச்சைக்காரர்: ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம் என்றானாம். இன்று சொந்தக்குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல உறவு பரிமாற்றம் கிடையாது. ஆனால் இதுபோன்ற ஃபேஸ்புக், கணிணி, வாட்ஸ்அப் போன்றவற்றில் உறவுகளை கொண்டடி வருகின்றோம்.

இத்தருணத்தில் நம்முடைய குடும்பங்கள் செங்கற்களால் கட்டப்பட்ட குடும்பமா? அல்லது தேனீக்களின் குடும்பமா?, காக்கை கூட்டமா? அல்லது திருக்குடும்பமா?

செங்கற்களால் கட்டப்பட்ட குடும்பம்:
நம்முடைய பெரும்பாலன வீடுகள் செங்கற்கலால் கட்டப்பட்டவை. ஒரு நிமிடம் அவற்றை உற்று நோக்குங்கள். செங்கற்கள் வைத்து வீடுகள் கட்டும்போது அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும். ஒன்றின் மேல் ஒன்றாக அமர்ந்திருக்கும், ஆனால் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளாது, ஒரு செங்களுக்கும் மற்றொரு செங்களுக்கும் உறவுகள் இருக்காது. ஆனால் இப்படி இவை ஒற்றுமையாக ஒன்றோடு ஒன்று இருக்கமாக பிணைக்கப்பட்டு இருந்தலும் அவற்றிற்கு உயிர் கிடையாது. உயிர் இல்லாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கின்றன. உயிரில்லாத செங்கற்கள் ஒன்றின்மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு வாழ்வதால் பயன் ஏதேனும் உண்டா?

அதைப்போலத்தான் வெளியிலே மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நம்முடைய குடும்பங்கள் ஒன்றோடு ஒன்று ஒற்றுமையாக இணைந்து இருப்பது போல நடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையிலே உறவுகள் இல்லாத இறந்த பிணங்களைப்போல வாழ்ந்து வருகின்றோம். இப்படி வாழ்ந்து நாம் யாரை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம்.

தேனீக்களின் வீடு:
பிரியமானவர்களே ஒற்றுமைக்கு உதாரணம் தேனீக்களைச் சொல்லலாம். இந்த தேனிக்கள் தங்களது தேன் கூட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. ஆனால் ஒவ்வொரு தேனீக்கும் தனித்தனி அறைகள் இருக்கும். ஒற்றுமையாக ஒரே தேன்கூட்டில் அவை வாழ்ந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தனித் தீவுகாளாக வாழ்கின்றன. ஒவ்வொன்றும் தான் உண்டு தன் வேலை உண்டு என மற்றவர் மேல் அக்கறை இல்லாமல் வாழ்கின்றன.

இந்த தேனீக்களின் குடும்பத்தைப் போலத்தான் நம்முடைய பல குடும்பங்கள் காணப்படுகின்றன. ஒரே குடும்பத்தில் இருப்பார்கள் ஒருவர் மற்றவரோடு பேசிக்கொள்ள மாட்டார்கள். மகன் ஒரு பக்கம், மகள் ஒருபக்கம், கணவன், மனைவி ஒவ்வொருவரும் வெவ்வேறு பக்கம் என தனித்தனி தீவுகளாக நம்முடைய உறவு வட்டங்கள் காணப்படுகின்றன. ஒருவர் மற்றவர் மீது அக்கறை இல்லாதவர்களாக வாழ்ந்து வருகின்றோம். அதனால்த்தான் என்னவோ முதியோர் இல்லங்களும், சிறார் இல்லங்களும், அனாதை இல்லங்களும் நமது ஊர்களில் நிறைந்து காணப்படுகின்றன.

காக்கை குடும்பம்:
பிரியமானவர்களே காக்கை நிறத்தில் கறுப்பானாலும் உள்ளதில் கருணை உள்ளம் படைத்தது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என சொல்ல கேள்விபட்டிருக்கின்றோம். தன்னுடைய ஒவ்வொரு குஞ்சுகளையும் மிகவும் அக்கறை எடுத்து பேணி பாதுகாக்கும், ஒன்றை விட்டு மற்றொன்று தனியாக சாப்பிடாது. தனக்கு கிடைத்தது எதுவானாலும் மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணும் மனப்பான்மை கொண்டது. ஒரு காகாம் தனது கூட்டத்திலிருந்தோ அல்லது வேறொரு கூட்டத்திலிருந்தோ இறந்துவிட்டது எனச் சொன்னால் அனைத்து காகங்களும் ஒன்று கூடி அதற்காக அழுது ஓழமிட்டு அதனுடைய துக்கத்தில் அனைத்து காகங்களும் பங்கெடுக்கும். ஆம் அன்புக்குரியவர்களே மனிதனுக்கு இருக்க வேண்டிய பண்புநலன்கள் அனைத்தும் இன்று விலங்குகளிடத்தில் காணப்படுகின்றன. அதனால்த்தான் என்னவோ மேலை நாடுகளில் மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை தங்களது சொந்த பிள்ளைகளாக வளர்த்து வருகின்றனர்.

ஆனால் மனித குடும்பம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என திருக்குடும்பம் நமக்கு கற்பிக்கின்றது. திருக்குடும்பத்தில் தாய், தந்தை, மகன் என்ற உறவோடு, ஒருவர் மற்றவர் மீது அன்புசெலுத்தி, ஒருவர் மற்றவரை புரிந்துகொண்டு, அனைவர் மீதும் அக்கறை கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, உயிருள்ள, இரத்தமும் சதையும் இணைந்துள்ள குடும்பமாக வாழ்ந்து, கடைசி வரை கடவுளின் திட்டத்திற்கு கீழ்படிந்து, அனைத்து துன்பங்களையும் சந்தோசத்தோடு ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும் முன்மாதிரியாக கணவன் சூசையும், மனைவி மரியாளும் வாழ்ந்து தன்னுடைய மகனை அறிவிலும், ஞானத்திலும், தெய்வபயத்திலும் வளர்த்து, தன்னுடைய மகன் தன்னுடைய வயிற்றில் பிறந்தாலும் இந்த சமூதாயம் வாழ்வு பெற, மனிதகுலம் முழுவதும் மீட்புபெற உலகத்திற்கே தான் பத்துமாதம் சுமந்து பெற்ற மகனை இவ்லகத்தின் ஈடேற்றத்திற்காக கையளிக்கின்றனர். அதானல்த் தான் இக்குடும்பத்தை திருக்குடும்பம் என நாம் அழைக்கின்றோம்.

இன்று நம்மில் எத்தனை குடும்பங்கள் திருக்குடும்பத்தின் முன்மாதிரிகையை பின்பற்றுகின்றோம். ஆம் அன்புக்குரியவர்களே இன்று நாம் வருடத்தின் கடைசி நாளில் குடும்பமாக குழுமியிருக்கின்றோம். கடந்த காலம் முடிந்து விட்டது. இனிவருகின்ற நாட்களில் திருக்குடும்பத்தின் முன்மாதிரிகளை பின்பற்ற வாக்குறுதிகள் எடுப்போம். அன்னை மரியாவின் குடும்பத்தில் இருந்து ஏதாவது ஒரு புண்ணியத்தை நம்முடைய வாழ்வாக்க முயற்சி செய்வோம். பாலன் இயேசு தனது பெற்றோர் வழியாக நமது குடும்பத்தையும், பங்கு என்ற குடும்பத்தையும், சமூகம் என்ற குடும்பத்தையும் தன்னுடைய பிஞ்சு கரங்களால் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.

ஆபீசில் ஒருவர்: என்மனைவியை எப்படி திருத்துறதுனு ஒன்னுமே எனக்கு புரியல சார் எப்ப பாத்தாலும் டி.வி பார்த்துக்கொண்டே இருக்கின்றார் என்றாரம்.
நண்பர்: டி.வி.பார்க்கறது பெண்களுக்கு சகஜம்தானேஇதை ஏன் இவ்வளவு பெரிசா சொல்றீங்க எனக் கேட்டாராம்.
அட! நீ வேறப்பா கரண்ட் இருக்கும்போது டி.வி பார்ப்பது சரி. ஏற்றுக்கொள்ளலாம். என் வீட்டில் கரண்ட் இல்லைன்னாலும் டி.விப்பெட்டியவே வெரிக்க பாத்துக்கிடே உக்கார்ந்திருக்காங்க! என்றாராம்.

இன்று நாம் டி.விப்பெட்டியை பார்த்து குடும்பம் நடத்துகின்றோமா? அல்லது திருக்குடும்பத்தைப் பார்த்து குடும்பம் நடத்தப் போகின்றோமா? முடிவு உங்கள் கையில்


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.