சோதனையை மன உறுதியோடு தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்களது
தகுதி மெய்ப்பிக்கப்படுகிறது. தம்மீது அன்பு கொள்வோருக்கு கடவுள்
வாக்களித்த வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். எனவே
"சோதனையில் உழல்வோரே! வெற்றி வாகையினைப் பெற்றுக் கொள்ள வாருங்கள்"என அன்புடன் வரவேற்கின்றோம்.
உலகிலேயே சோதனையைத் தாங்கிக் கொள்ளும் ஆயுதம் ஒன்று இருக்கிறது.
அது தான் இறைவார்த்தையை சுமந்து வரும் திருப்பலி. இந்த திருப்பலியில்
கலந்து கொண்டு, சோதனையை வெல்ல சக்தி பெற வாருங்கள் என இந்த
ஞாயிறு அழைக்கிறது.
சோதனைகளும், வேதனைகளும், நோய் நோக்காடுகளும் நம்மைத் தாக்கும்
போது நிலைகுலைந்து போகிறோம். என்னை மட்டும் ஏன் இந்தக் கடவுள்
இப்படி வாட்டுகிறார் எனக் குற்றம் காண்கிறோம். துன்பங்களும்
சோதனைகளும் வருவது இயற்கைதான். ஆனால் அவற்றிலிருந்து எப்படி
மீள்கிறோம் என்பது நமக்கு முக்கியமானது.
சோதனையில்லாத வாழ்க்கையில்லை. சோதிக்கப்படாத மனிதர்
எவருமில்லை. சோதனைதான் மனிதனை அவனுக்கு அறிமுகம் செய்து
வைக்கிறது. சோதனைகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்.
இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்டார். இறைவார்த்தையால் அலகையை
வென்றார். அந்தச் சோதனையே அவருக்கு நற்செய்தி அறிவிக்கும்
சாதனைக்கு வழிகோலியது. நமக்கு வருகின்ற தாங்க முடியாத
சோதனையின் போது, சோதனையே சாதனை படைக்க உதவும் சரித்திரமாகும்
என்ற மனஉறுதியை பெற்றுக்கொள்ள, இறைவனின் அருட்துணையை நாடுவோம்.
சோதனைகளை வென்ற இயேசுவே! சோதனைகளை வெல்ல, செபம் என்ற ஆயுதம்
ஏந்தி போராட மனஉறுதி தாரும் என, இந்தத் திருப்பலியில்
வேண்டுதல் செய்வோம்.
1. ஆசைகளை வென்று உலகை ஆட்கொண்ட இறையேசுவே!
பல்வேறு ஆசைச் சக்கரத்தில் மாட்டி உழன்று
கொண்டிருக்கும் திருச்சபைத் தலைவர்கள், திருப்பணியாளர்கள்,
குருக்கள், துறவியர், இறைமக்கள் அனைவரும் ஆசைகளை
வென்று உலகை ஆட்கொண்ட உமைப் பின்பற்றி வாழும் ஆசையை
மனதில் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டுமென்று திருமகனே
உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியற்றவர்களாகிய எங்களுக்காக இறந்த நீதியுள்ள இயேசுவே!
நீதியை நிலைக்கச்செய்யும் ஆயுதங்களை நாடுகளின் தலைவர்கள்
பயன்படுத்தி, மக்களை பாதுகாக்கும் பக்குவமான மனநிலையுடன்
செயல்பட அருள்தர வேண்டுமென்று, தெய்வமே உம்மை மன்றாடுகிறோம்.
3. "உங்கள் இதயத்தைக் கிழித்துக் கொண்டு என்னிடம்
வாருங்கள்" என அழைக்கும் அருள்நாதரே!
எங்கள் இதயத்தை உம் பக்கம் திருப்ப உழைக்கும் எமது பங்கின்
பணியாளர்கள் இந்த இரக்கத்தின் காலத்தில், நீர் அருள்
நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், செய்யக் கருதிய
தீமையைக் குறித்து மனம் மாறுகின்றவர் என்ற செய்தியை,
எங்கள் இதயத்தின் ஆழத்தில் பதியச் செய்யும் ஆற்றலோடு
செயல்பட அருள் பொழிய வேண்டுமென்று, தெய்வமே உம்மை மன்றாடுகிறோம்.
4. அறச் செயல்களை செய்ய தவக்காலத்தில் எமக்கு ஞாபகப்படுத்தும்
அருள்நாதரே!
எம்மைப் புகழும் போதும், பிறருக்கு நாங்கள் உதவும்
போதும் பெருமையாக நினைக்காமல், விளம்பரமின்றி எம்மால்
இயன்ற நற்செயல் செய்ய அருள் பொழிய வேண்டுமென்று, தெய்வமே
உம்மை மன்றாடுகிறோம்.
5. எம்மீது அருள் பொழிய தவக்காலத்தை தேர்ந்தெடுத்த அருள்நாதரே!
நாங்கள் வாழ்ந்து வரும் சொகுசான வாழ்க்கைக்கு மத்;தியில்
சிறு சிறு ஒறுத்தல் செயல்களாலும், உண்ணா நோன்பினாலும்,
செப தப முயற்சிகளாலும் எங்களது பாவ நாட்டங்களை
குறைத்து அருள் வாழ்வின் பாதையில் வளர அருள் பொழிய
வேண்டுமென்று, தெய்வமே உம்மை மன்றாடுகிறோம்.
6. சோதனைகளை வென்ற இயேசுவே!
எங்கள் வாழ்வு முழுவதும் சோதனைகளால் தவிப்பு நிறைந்ததாக
உள்ளது. சோதனை வேளைகளில் எங்களைப் பாதுகாத்தருளும். சோதனைகளை
மன உறுதியோடு ஏற்று, அவைகளை சகிப்புத்தன்மையுடன் அணுக
அருள் பொழிய வேண்டுமென்று, தெய்வமே உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
இறை உதவியா?
மானிட உதவியா?
ஒரு மனிதன் கடவுளை நோக்கி "இறைவா! நான்தான் உலகிலேயே
அதிகத் துன்பப்படுகிறேன். என் வாழ்நாள் முழுவதும்செபம்
செய்கிறேன். ஆனாலும் நீர் என் செபத்தைக் கேட்பதில்லை.
இப்போது கூட எனக்கு அதிகமாக ஒன்றும் வேண்டாம்.என் துன்பங்களை
நீர் யாரிடமாவது மாற்றிக் கொடுத்து அவருடையதை நான்
பெற்றுக்கொள்ள வரம் தரவேண்டும். ஏனெனில் மற்ற அனைவரும்
என்னை விட மகிழ்வுடன் உள்ளனர். நான்தான் அதிகத் துயரங்களில்
ஆழ்ந்து கிடக்கிறேன். என் சுமைகளை மாற்றிக்கொள்ள ஒரு
மாற்று ஆளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தருளும். அது
போதும் எனக்கு"! என மன்றாடினான்
அன்று இரவு ஒரு கனவு கண்டான். வானிலிருந்து இடிபோன்ற
குரல் ஒன்று ஒலித்தது:
"அனைவரும் அவரவர் துயரங்களை கையில் எடுத்துக்கொண்டு
கோவிலை நோக்கி விரைந்து வாருங்கள்."
தன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவிசாய்த்து விட்டார்
என்று அவன் அகமகிழ்ந்தான். கடவுளுக்கு நன்றி சொன்னான்!
உடனே அவன் தன் துயரங்களையெல்லாம் ஒரு பையில்
நிறைத்துக்கொண்டு சாலைக்கு வந்தான்.
அங்கே சாலையில்.... அவனைப்போல்... பலர்!
அவன் கையில் இருந்த பைதான் மிகச் சிறியதாக இருந்தது.
பலர் பெரிய பைகளை தூக்கிச் சென்றனர். பலர் பணியாட்களின்
தலைகளில் சுமைகளாக வைத்து சுமந்து சென்றனர். அவனுக்கு
வியப்பாக இருந்தது.
இறைவா! இவர்கள்தான் நான் நினைத்த நிம்மதியான, மகிழ்வான
மனிதர்களா? நீர் ஏன் எனது பிரார்த்தனைக்குச்
செவிசாய்க்கவில்லை என்பது எனக்கு இப்போது தான் தெரிகிறது.
எனக்கு மாற்று ஆளும்
வேண்டாம். மாற்றுச் சுமையும்
வேண்டாம். குறைவான துயரங்களுடைய என் சிறிய பையுடன்
வீடு திரும்ப என்னை அனுமதித்துவிட்டால் அதுவே போதும்.
உமக்கு என்றும் நன்றி கூறுவேன் என்று செபித்தான்.
கோவிலில் மறுபடியும் அந்த குரல் ஒலித்தது.
"எல்லோரும் அவரவர் பைகளைச் சுவற்றில் தொங்க விடுங்கள்.
பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டு மணி அடிக்கப்படும். அதுவே
அடையாளம். இருளில் உங்களுக்கு வேண்டிய பையை நீங்கள்
தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வெளிச்சம் உள்ளபோதே உங்களுக்கு
விருப்பமான பையருகே நின்று கொண்டால் இருட்டில் தவற விடமாட்டீர்கள்."
தானே அதிகமாய் துன்புறுவதாக நினைத்துச் செபம் செய்த
இவன் தனது பையைப் பத்திரமாகப் பிடித்துக்
கொண்டிருந்தான். மற்றவர்களும் அவ்வாறே நின்றிருந்தனர்.
ஆச்சரியமடைந்தான். பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டான்:
"இவர்கள் ஏன் தங்கள் பைகளைப் பிடித்து வைத்துக்
கொண்டிருக்கிறார்கள்?" அவர்கள் சொன்னார்கள்: "நீ என்ன
காரணத்திற்காக பிடித்துக் கொண்டிருக்கிறாயோ அதே காரணத்திற்காகத்தான்.
இப்போது நமது கவலைகளைப் பற்றி ஓரளவாவது தெரியும். ஆனால்
மற்றவர்களுடைய துன்பங்கள் நமக்கு அறிமுகமாகாததும் நாம்
அறியாததும் அல்லவா? இந்த வயதில் ஏன் நாம் ஒன்றுமில்லாததிலிருந்து
திரும்ப ஆரம்பிக்க வேண்டும். நமது பழைய நண்பர்களுடன்
வாழ்வதே மேல்! நமது துயரங்களை நாம் ஏற்றுக்கொள்வதே
மேல் அல்லவா"?
விளக்கு அணைந்தது. அவரவர் தத்தம் பைகளைப்
பாய்ந்தெடுத்து இறுகப் பிடித்துக்கொண்டு கோவிலை விட்டு
ஆன்ந்தமுடன் ஓடினர்.
"கடவுள் மிகவும் கருணையுள்ளவர். என்னைப் பெரிய துன்பத்திலிருந்து
காப்பாற்றியுள்ளார். மக்கள் எல்லாரும் இதுகாரும் தத்தம்
துயரங்களை மறைத்தல்லவா வைத்திருக்கின்றனர்? பெரிய பைகளைச்
சுமந்திருக்கும் இவர்களே என்னைவிட மகிழ்ச்சியானவர்கள்
என்றல்லவா இதுவரை தவறாக நினைத்திருந்தேன்?" என்று அவன்;
கூறிக் கொண்டிருந்தான்.
துயரமில்லாத வாழ்க்கையில்லை!
துக்கத்திற்கு உள்ளாகாத மனிதரில்லை!
தேனைகளும் நோய் நோக்காடுகளும் நம்மைத் தாக்குகிற போது
நாம் நிலைகுலைந்து போகிறோம். என்னை மட்டும் ஏன் இந்தக்
கடவுள் இப்படி வாட்டுகிறார்என்று குற்றம் காண்கிறோம்.
துன்பங்களும் துயரங்களும் வருவது இயற்கைதான். ஆனால் அப்படி
வருகிற போது நாம் என்ன செய்கிறோம், அவற்றிலிருந்து எப்படி
மீள்கிறோம் என்பதுதான் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது.
தாங்கமுடியாத
துன்பம் ஒருவரைத் தாக்குகிறபோது, அவர்
என்னென்ன நினைக்கலாம், என்னென்ன சொல்லாம், என்னென்ன
செய்யலாம் என்று பாhப்போமா?
சோதனை வரும்போது இறை உதவியை நாடவேண்டும். இறைவா இந்த
வேதனையை தாங்கும் மனப் பக்குவம் தாரும். எனச் சொல்ல
வேண்டும். இறைவனின் மலர் பாதங்களில் முழுவதுமாக சரணடைய
வேண்டும்.
இன்றைய நவீன மனிதன் அறிவியலின் பல்வேறு வாய்ப்புகளைப்
பயன்படுத்தி துன்பமில்லா ஒரு வாழ்வைத் தேடி அலைகின்றான்.
துன்பமில்லாத வாழ்வு தவிர்க்க முடியாத ஒன்று என்பதை
உணர்வோம். துன்பங்களும் சோதனைகளும் தவிர்க்க முடியாதவை
என்றாலும் அவற்றை எந்த மனநிலையோடு சந்திக்கிறோம் என்பதைப்
பொறுத்து நம் வாழ்வின் உயர்வும், தாழ்வும், மகிழ்ச்சியும்,
இகழ்ச்சியும் அமையும்.
இயேசு ஆவியின் துணையோடு சோதனைகளையும் துன்பங்களையும்
ஏற்றுக் கொண்டு அவற்றிலிருந்து வெளியே வந்தார். அந்த
நற்செய்தியையும் மகிழ்ச்சியையும்தான் இயேசு சென்ற இடமெல்லாம்
அறிவித்தார். சோதனை இல்லா கிறிஸ்தவ வாழ்வு சோம்பல்
நிறைந்தது. சோர்வு நிறைந்தது. என உணர்வோம். சாதனை படைக்க
சோதனை வேண்டும். சரித்திரம் படைக்க வேதனை வேண்டும். என்போம்.
சோதனைகளை வென்ற இயேசுவே, உம்மைப் பின்பற்றி இறைவாக்கை
ஆயுதமாகப் பயன்படுத்தி சோதனைகளிலிருந்து வெற்றிபெற
துணைபுரியும் என மன்றாடுவோம்.
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
ஏதேன் வனமா? பாலை வனமா?
தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம்.
முன்னர் எல்லாம் தவக்காலம் என்றாலே தெளிவாகத் தெரிந்துவிடும். 40
நாட்களும் அசைவம் கிடையாது. சுபகாரியங்கள் அதாவது மொழி
, ஞானஸ்நானம்.
புதுநன்மை போன்ற திருவருள்சாதனக் கொண்டாட்டங்கள் கிடையாது. பெண்கள்,
சிறுமியர் முதல் பெரியவர் வரை பூ, பொட்டு வைக்க மாட்டார்கள். இப்படி
வெளிப்படையான அடையாளங்கள் பல இருக்கும். ஆனால் இப்போது அப்படி எல்லாம்
இல்லை. காலத்திற்கேற்றார்போல ஒழுங்குமுறைகளையும் சட்டதிட்டங்களையும்
நமக்கேற்றார் போல இலகுவாக்கி யிருக்கின்றோம். வருடம் தோறும் வரும்
தவக்காலம் தானே என்று எளிதாக எண்ணத் தொடங்கியிருக்கிறோம். அப்படி
எண்ணினால் அது முற்றிலும் தவறு.
கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்வில் இந்த தவக்காலம் மிகவும் முக்கியமான
காலம். ஓடிக்கொண்டே இருக்கும் நமது இயல்பு வாழ்க்கையில், நின்று
நிதானித்து, நமது பாதையையும் பயணத்தையும் சரிசெய்ய திருச்சபையால்
கொடுக்கப்பட்ட பொக்கிஷமான நாட்கள் இவை. இந்த தவக்காலத்தில் இயேசு
நமக்குக் கூறுவது என்ன?
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு திருமுழுக்கு பற்றிக்கூறும்போது,
" திருமுழுக்கு உடலின் அழுக்கை போக்கும் செயல் அல்ல, குற்றமற்ற மனச்சான்றுடன்
கடவுளுக்கு தரும் வாக்குறுதி" என்கிறார். நமது திருமுழுக்கின் போது
நாமும் கடவுளுக்கு இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறோம். நமக்கு பதிலாக
நம் சார்பாக நமது பெற்றோரும் ஞானப்பெற்றோரும் இந்த வாக்குறுதியை அளித்திருக்கின்றனர்.
அதன்பின் தான் தொடங்குகிறது நமது நம்பிக்கை வாழ்வு கிறிஸ்தவ
வாழ்வு. இது இன்று நேற்று தொடங்கியதல்ல, அன்று ஏதேன் தோட்டத்தில்
இறைவன் முதல்பெற்றோர்களை உண்டாக்கி ஆதாம் ஏவாள் எனப் பெயரிட்டு நம்பிக்கை
வாழ்வுக்கு அழைத்ததிலிருந்து தொடங்குகிறது. அவர்களும் கடவுளுக்கு
வாக்குறுதிக் கொடுத்து ஏதேன் தோட்டத்தில் தங்களது வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.
இயேசுவும் திருமுழுக்குப் பெறுகிறார். ஆனால் தூயஆவியால் பாலைநிலத்துக்கு
அனுப்பிவைக்கப்படுகிறார். நாமும் திருமுழுக்குப் பெற்றோம். நாம் அனுப்பப்பட்டது
ஏதேன் வனமா? பாலை வனமா? சிந்திக்க இந்நேரத்தில் நாம் அழைக்கப்படுகிறோம்.
ஏதேன் தோட்டம்: உணவு, உறையுள் [பாதுகாப்பு], உவகை. இது மூன்றும் தங்கு
தடையின்றி கிடைக்கும் ஓரிடம்.
உணவு அனைத்துவிதமான காய்களும் கனிகளும் நிறைந்த தோட்டம்.
தூய ஆவியாரின் உடனிருப்பு ஓர் பலமான பாதுகாப்பு.
வானதூதர்களோடு, இயற்கைப் படைப்புக்களோடு உரையாடி உலாவுகையில்
உண்டாகும் இன்பம் மகிழ்ச்சி.
இப்படி இவை மூன்றும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றும் அவர்களிடம்
நிறைவு இல்லை. நிறைவு இல்லாததால் உவகை இல்லை. உவகை இல்லாததால்
பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். இறுதியில் உணவிருந்தும் உண்ண
முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
இந்த உணவு உறையுள் உவகை இந்த மூன்றின் அடைப்படையிலேயே இயேசுவுக்கு
பாலைவனத்தில் மூன்று சோதனைகளும் ஏற்பட்டன.
1. நீர் இறைமகன் என்றால் கற்களை அப்பங்களாக்கி உண்.
2. கீழே குதி. தூதர்கள் உம்மை பாதுகாப்பர்.
3. தெண்டனிட்டு வணங்கு அரசுரிமையை உமக்கு அளிக்கிறேன்.
இயேசு சாத்தானின் இந்த சோதனைகளை முறியடித்ததால் வெற்றி கொண்டார்.
அதனால் அவருக்கு சாத்தானின் [ஏவலின்] சோதனை ஆட்டம் கூட ஏதேன் தோட்டமாக
தோன்றி மகிழ்ச்சியளிக்கிறது. மனிதன் அப்பத்தினால் மட்டுமன்றி கடவுளின்
வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான் என்ற
வார்த்தையை வாழ்விலே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். பாலைநிலமானாலும்
தூய ஆவியின் துணையோடு கடவுளைப் புகழ்ந்து ஆன்ம பலத்தோடு உடல்பலமும்
பெறுகிறார்.
தூய ஆவியாரின் துணை, வானதூதர்களின் பணிவிடை, உடனிருப்பு இதைவிட
மேலான ஒரு பாதுகாப்பு வேறெங்கும் இல்லை என்பதை ஆழமாக உணர்கிறார்.
கண்ணுக்குப் புலனாகின்ற வெளிப்படையான அனைத்தும் தாராளமாகக் கிடைத்த
ஏதேன் தோட்டம், ஆதாம் ஏவாளுக்கு ருசிக்கவில்லை, நிலைக்கவில்லை. ஆனால்
பாலை நிலத்தில் கண்ணுக்குப்புலப்படாமல் இருந்த இவை அனைத்தையும் இயேசு
அகத்தால் உணர்கிறார். அதனால் பாலவனம் ஏதேன் வனமாகக் காட்சியளிக்கிறது.
மேலும் நற்செய்தியில் இயேசு காட்டு விலங்குகளோடு இருந்தார் என்று
சொல்லப்படுகிறது. ஏதேன் தோட்டத்திலும் இத்தகைய காட்டு விலங்குகள்
இருந்திருக்கும் ஆனால் அவை ஆதிப் பெற்றோர்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை
மாறாக நல்லதொரு உடனிருப்பை அளித்திருக்கும். அவர்களுக்கே இப்படி என்றால்
'இறைமைந்தன் இயேசு' ,அவரை தெண்டனிட்டு அல்லவா வணங்கியிருக்கும்!.
வறட்சியான பலை நிலத்தில் இருந்தாலும் இயேசு நிறைவுடன் இருக்கின்றார்.
மாயை போல் தோற்றமளிக்கும் கானல் நீர் போல் அல்லாது வற்றாத நீர் சுரக்கும்
ஊற்று நீராக மாற எண்ணுகிறார். அதற்கேற்ப இந்த 40 நாட்களையும் அவர்
மாற்றுகிறார்.
இன்று இயேசு நமக்கு முன் வைக்கும் சவால் இது தான். ஏதேன் வனமோ பாலை
வனமோ அது கண்களால் பார்க்கும் வெளிப்புறத்தோற்றத்தில் இல்லை நமது
அகத்தோற்றத்தில் / பார்வையில் உள்ளது. நமது நல்லெண்ணங்களினால்
குறைவிலும் நிறைவைக் காண முற்படுவோம். இந்த 40 நாட்களும் இயேசுவுக்கு
எவ்வாறு இறையனுபவம் பெறக்கூடிய காலமாக இருந்ததோ அதுபோல நமக்கும் இத்தவக்காலம்
இறையருளின் காலமாக அமைய அருள் வேண்டுவோம். பாலைவன அனுபவம் பெற்ற இயேசு
அப்படியே இருந்துவிடவில்லை. மாறாக உடனே தனது நற்செய்திப் பணியைத்
தொடங்குகிறார்.
நாமும் பெற்ற இறையனுபவத்தை பிறரோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்குவோம்.
"காலம் நிறைவேறிவிட்டது. கடவுளின் அரசு நெருங்கி வந்துவிட்டது. மனம்மாறி
நற்செய்தியை நம்புங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைக்கிணங்க பழைய காலம்
மறைந்துவிட்டது. இறையாட்சி என்னும் நிகழ்காலம் வந்துவிட்டது. மனம்மாறி
எதிர்வரும் காலத்தில் நல்ல செய்திகளை [நன்மைகளை] நம்புங்கள்.
பாலை வனமோ ஏதேன் வனமோ எல்லாம் நமது நம்பிக்கையின் அடிப்படையிலேயே
என்பதை உணர்ந்து வாழ்வோம். குறைவிலும் நிறைவைக் காணும் இறைவன் நம்
வாழ்விலுள்ள குறைகளைக் களைந்து நிறைவினால் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள
அனைவரையும் நிரப்புவாராக ஆமென்..
நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும்
வானவில் மாற்றம்
ஒரு நாள் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு அறிவிப்பானது
பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அனைவரும் மிக ஆவலாக என்ன எழுதி இருக்கிறது
என்று பார்க்க சென்றனர். அதில் " உங்களின் வளர்ச்சிக்கு இதுவரை தடையாக
இருந்தவர் நேற்று காலமானார். அவரின் உடல் அடுத்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தவறாமல் அவரின் இறுதி சடங்கில் பங்கேற்கவும்" என்று எழுதப்பட்டு இருந்தது.
வாசித்த அத்தனை பேரும் தங்களுடைய வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்திருப்பார்கள்
என்று காண மிக ஆவலாய் அடுத்த அறைக்கு சென்றனர். அங்கு ஒரு சவப்பெட்டி
இருந்தது. அதன் அருகில் சென்று உற்று பார்த்தவர்கள் அனைவரும் மிக
வருத்தத்துடன் திரும்பி வந்தனர்.
சவப்பெட்டியினுள் ஒரு கண்ணாடியும் அதன் அருகில் "உங்களின் வளர்ச்சிக்கு
காரணரும் நீங்களே, தடையும் நீங்களே!" நீங்கள் நினைத்தால் மட்டுமே
உங்கள் வாழ்வை மாற்ற முடியும். தடையை மாற்றி வளர்ச்சியடையுங்கள் என்று
எழுதப்பட்ட வாசக அட்டையும் வைக்கப்பட்டு இருந்தன. கண்ணாடியில் தங்களது
முகத்தையும் வாசகத்தையும் கண்ட அவர்கள் அன்று முதல் அனைவரும் தங்கள்
பணிக்கு தடை தரும் செயல்களை விட்டு விட்டு, வளர்ச்சி தரும் மாற்றத்தை
நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.
நாமும் மாற்றத்தின் காலமாம் தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து
வைத்திருக்கின்றோம். தடைகள் பலவற்றை தகர்த்து வளர்ச்சி மாற்றத்தை,
மனமாற்றத்தை நோக்கி பயணிக்க இறைவன் இன்றைய நாளில் நமக்கு அழைப்புவிடுக்கின்றார்.
காலம் நிறைவேறிவிட்டது இறையரசு நெருங்கி வந்து விட்டது, மனம்மாறி
நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் இன்று நமக்கு அறிவுறுத்துகிறார்.
காலையில் பள்ளி பேருந்து வந்துவிட்டது என்றால் நம்முடைய வழக்கமான
செயல்பாடு எவ்வாறு மிக துரிதமாக இருக்குமோ அதுபோல் இருக்க வேண்டும்
இனி நம்முடைய வாழ்வு. அதற்கான ஒரு அறிவிப்பு தான் இந்த தவக்காலம்.
பிற நாட்களைப் போல் இருக்கக்கூடாது. வழக்கமான செயல்களை விட மிக சிறப்பான
செயல்களை நாம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதுவரை
நாம் எப்படி இருந்தோமோ அதுவும் நம்மால் தான் . இனிமேல் எப்படி இருக்க
போகிறோமோ அதற்கும் நாம் தாம் முழு பொறுப்பு அதை நல்ல விதத்தில்
மாற்றி அமைத்து கொள்ள நமக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் நோவா காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு
பின் மண்ணுலக மக்களுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கை பற்றி
கூறுகின்றார். அது உடன்படிக்கையின் வில். எவ்வாறு வானவில் நம் கண்களுக்கு
அரைவட்ட வடிவில் இரு துருவங்களை இணைப்பது போல் தென்படுகிறதோ அது
போல இறைவனை நம்மோடு இணைக்கிறது இந்த உடன்படிக்கையின் வில்.
சூரியனின் ஒளியால் மழைத்துளி பெறும் மாற்றம் ஒளிப்பிழம்பாக வானவில்.
இறைவனின் அருள் ஒளியால் நாம் பெரும் மாற்றம் செயல் வடிவமாக நம்
வாழ்வில்.
வானவில் மழை வந்து சென்ற பிறகே வரும். பார்க்கும் நமக்கு மகிழ்வைத்
தரும். பல்வேறு வண்ணங்களால் நம் மனதை கொள்ளை கொள்ளும். சிறிது நேரமே
என்றாலும் நம் உள்ளங்களை அள்ளி சென்று விடும். நமது வாழ்வும் வானவில்
போன்று மாற்றம் பெற்று நம்மோடு உடன் பயணிப்பவர்களுக்கும், வாழ்பவர்களுக்கும்
மகிழ்வை தரக் கூடியதாக அமைய வேண்டும்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு பாலைநிலத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்ட
நிகழ்வை வாசிக்கக் கேட்டோம். இயேசு சோதிக்கப்பட்ட நிலையிலும் வானதூதர்களால்
பணிவிடை பெறப்பட்டார். சோதனை காலத்திலும் துன்புற்ற நேரத்திலும் இறைப்பராமரிப்பை
உணர்கிறார். நமது வாழ்விலும் இத்தகைய இறைப்பராமரிப்பை நாம் உணர
வேண்டும். நாம் வாழுகின்ற உலகம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டதாக இருக்கின்றது.
அரசியல் மாற்றம், பொருளாதார மாற்றம், வரி மாற்றம் வட்டி மாற்றம் என்று
எல்லாமே மாறிக் கொண்டே இருக்கின்றது. எத்தனை மாற்றங்கள் வந்து
சென்றாலும் நாம் மாறாவிட்டால் எதையும் மாற்றவும் முடியாது, ஏற்கவும்
முடியாது. நம்மைச்சுற்றி இருக்கும் மாற்றங்கள் சில நம்மை வருத்தப்பட
வைக்கலாம் ஆனால் அது நாம் அனுமதித்தால் மட்டுமே நடக்கும். வெளிப்புறத்தில்
நடக்கும் வித்தியாசமான மாற்றங்களை விட நமக்குள் நாமே செய்யும் மனமாற்றங்கள்
தான் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன. இயேசுவின் துன்பத்திலும் வானதூதர்களின்
பணிவிடை ஆறுதல் தருகின்றது. நமது துன்பத்திலும் இறைவனின் உடனிருப்பு
நமக்கு ஆற்றலை தரும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது மாற்றத்திலும் துன்பத்திலும் இறைவனின்
உடனிருப்பை ஆழமாக உணர்வது தான். மாற்றத்தின் காலமாம் இந்த தவக்காலம்
நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நல்லதொரு வளர்ச்சி மாற்றத்தை தர
இறைவனின் ஆசீர் வண்டுவோம். சாதாரண மழைத்துளி சூரியனின் ஒளியால் வானவில்லாக
மாறி காட்சி அளிப்பது போன்று, நமது வாழ்வும் இறைவனின் அருள் ஒளியால்
மாற்றம் பெற அருள் வேண்டுவோம். மாற்றம் நல்லதொரு வளர்ச்சி மாற்றமாக
இத்தவக்காலத்தில் மலரட்டும் இறையாசீர் என்றும் நம்மோடும் நம்
குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்
மறையுரைச்சிந்தனை -
சகோ. செல்வராணி Osm
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
மனம் மாறும், மாற்றும் கடவுள்
'மனம்தான் எல்லாம்' என்று புத்தமதம், 'உங்கள் மனத்தை
விழித்திருந்து காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அங்கிருந்துதான்
உங்கள் எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன' என்று கிறிஸ்தவமும்
சொல்கிறது. 'மனமாற்றம்' என்பது நாம் அதிகம் கேட்டு அர்த்தம்
இழந்த சில வார்த்தைகளில் ஒன்று.
இன்று காலை 8:30 மணிக்கு நாகமலை செல்வதற்காக ஓலா டேக்ஸி பதிவு
செய்கிறேன் என வைத்துக்கொள்வோம். பதிவு செய்துவிட்டு முகம்
கழுவ வேகமாக செல்கிறேன். கழுவிக்கொண்டிருக்கும்போதே, 'நாளை
போகலாம்!' என மனம் சொல்கிறது. வேகமாக ஓடி வந்து ஈரக்கைகளுடன்
ஃபோனில் பின் கோடு இட்டு, ஓலா ஆப்பைத் திறந்து 'கேன்சஸ்
ரைட்' என கொடுக்கிறேன். உடனடியாக அது ஐந்து காரணங்களைப் பட்டியலிடுகிறது.
அதில் இரண்டாவது காரணமாக 'ஐ சேன்ஜ்ட் மை மைன்ட் - நான் எனது
மனதை மாற்றிக்கொண்டேன்' என்ற சொல்கிறது. அதற்கு நேர்
புள்ளி வைத்து 'சப்மிட்' கொடுத்துவிட்டு முகம் துடைக்க டவல்
தேடுகிறேன். 8:30க்கு நாகமாலை செல்ல வேண்டும் என நினைத்த
மனம் 8:32க்கு மாறிவிடுகிறது. இது ஒரு வகையான மனமாற்றம்.
என் நண்பர் என்னிடம் கடன் வாங்குகிறார். ஐம்பதாயிரம்
வாங்குகின்றார். 'எப்போது கொடுப்பார்?' என நான்
காத்துக்கொண்டிருக்க, 'உன்னிடம் வாங்கிய பணத்தை அன்றே
கொடுத்துவிட்டேன்' என்கிறார். பணமா? நட்பா? என்ற
கேள்வியில், 'இனிமேல் இவருக்கு பணம் கொடுக்கக்கூடாது' என்றும்,
'இனிமேல் இவரிடம் நட்பு பாராட்டக்கூடாது' என்றும் முடிவு
செய்கிறேன். இவரின் அம்மாவுக்கு ஒருநாள் உடல்நலம் சரியில்லாமல்
போய்விடுகிறது. அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அவர் கேட்காமலேயே
நான் போய் பண உதவி செய்து, 'உன்னிடம் பணம் இருக்கும் போது
கொடு' என்று சொல்லிவிட்டுவருகின்றேன். இது இன்னொரு வகையான
மனமாற்றம்.
இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் முதல் வாசகத்தில், 'இனி உலகை
அழிக்கமாட்டேன்' என கடவுள் மனம் மாறுகிறார். நற்செய்தி வாசகத்தில்
'மனம் மாறுங்கள்' என்று இயேசு அழைப்பு விடுக்கின்றார்.
மேற்காணும் இரண்டு மனம் மாற்றங்கள்போல்தான் இந்த மனம் மாற்றமா?
அல்லது இதன் பொருள் வேறா?
மனம் மாறுதல் என்பது ஒரு பெரிய போராட்டத்தின் கனியாக இருப்பதை
முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் குறிப்பிடுகின்றன. 'மனம்
மாற்றம்' என்பது விவிலியத்தைப் பொறுத்தமட்டில் மனத்தை இறைவனை
நோக்கி மாற்றுவது. அதாவது, சாலையில் செய்யும் பயணம்போல.
இலக்கினை உறுதியாக வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணம் செய்வது.
இந்தப் புரிதலை இன்றைய வாசகங்களுக்கான விளக்கத்தின் பின்புலத்தில்
பார்ப்போம்:
முதல் வாசகம்: தொடக்கநூல் 9:8-15
பெருவெள்ளத்திற்குப் பின் நோவோவுடன் கடவுள் பேசும்
வார்த்தைகளே இன்றைய முதல் வாசகம். வாசகத்தின் மையப் பொருள்
உடன்படிக்கை. உடன்படிக்கை என்ற சொல்லாடல் ஒரு அசீரியக் கலாச்சாரத்
தாக்கம். ஒரு நாட்டை அல்லது ஊரை வெற்றிகொள்கின்ற அரசன் அந்த
ஊர் மக்களோடு செய்து கொள்ளும் உறவு நிலைக்குப் பெயர்தான்
உடன்படிக்கை. உடன்படிக்கையில் இருவர் இருப்பர்: ஒன்று செய்பவர்,
மற்றொன்று செய்யப்படுபவர். இதில் உடன்படிக்கை செய்பவர் எப்போதும்
தலைமை நிலையிலும், செய்யப்படுபவர் பணியாளர் நிலையிலும் இருப்பர்.
மேலும், உடன்படிக்கை செய்யும் தலைவர், உடன்படிக்கை செய்யப்படும்
தனக்குக் கீழிருப்பவருக்கு பாதுகாப்பை வாக்குறுதியாகத் தருகின்றார்.
அதே போல கீழிருப்பவர் மேலிருப்பவர் சொல்வதையெல்லாம் கேட்டு
நடப்பதாக வாக்குறுதி தருகின்றார். இந்த இருவரும் தங்கள்
உடன்படிக்கையின் நினைவாக கல்தூண், மரம் போன்றவற்றை அடையாளமாக
ஏற்படுத்திக் கொள்வர். இந்தப் பின்புலத்தோடு இன்றைய முதல்வாசகத்தைப்
பார்த்தால் அர்த்தம் தெளிவாகிறது: (அ) பெருவெள்ளத்திலிருந்து
நோவாவின் குடும்பத்தைக் காப்பற்றியதன் வழியாக நோவாவை
வெற்றி கொள்கின்றார் இறைவன் (9:8). (ஆ) உடன்படிக்கை செய்பவர்
- கடவுள். செய்யப்படுபவர் - நோவா, அவரது சந்ததியினர் மற்றும்
எல்லாரோடும் (9:9-10). (இ) உடன்படிக்கையின் மையப்பொருள் -
இனி உயிர்கள் மீண்டும் அழிக்கப்படாது, மண்ணுலகில் அழிக்கும்
வெள்ளப்பெருக்கு மீண்டும் வராது (9:11) (ஈ) உடன்படிக்கையின்
அடையாளம் - வானவில் (9:12). 9:13-15ல் கடவுள் தான் 8-12ல்
சொன்னதையே திரும்பவும் சொல்கின்றார். கடவுளின் இந்த செயல்பாடு
'உன்னுடனோ என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்' (6:18) என்று
அவர் முன் சொன்ன வார்த்தைகளின் நிறைவாக இருக்கின்றது.
வானவில் - இது ஒரு இயற்கை நிகழ்வு. மழைபொழிந்த ஈரக்
காற்றுவெளியில் சூரியனின் கதிர்கள் படுவதால் ஏற்படும் ஒளிப்பிறழ்வே
வானவில். இந்த இயற்கை நிகழ்வை எடுத்து அதற்கு ஆன்மீகப்பொருள்
தருகின்றார் ஆசிரியர். இயற்கையின் நிகழ்வுகள் கடவுளின் செயல்பாடுகளாகச்
சித்தரிக்கப்படுவதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன
(காண். எரே 31:35-36, 33:19-26). 'வில'; கடவுளைச்
சுட்டிக்காட்டும் அடையாளமாக விப 12:13லும் உள்ளது. பழைய ஏற்பாட்டு
காலத்தில் வானவில் கடவுளின் ஆயுதமாகவும் கருதப்பட்டது
(திபா 7:12-13, 18:14, 144:6, புலம்பல் 2:4, 3:12, எபி
3:9-11). உடைந்த வில் சமாதானத்தின் அடையாளமாகவும் இருக்கிறது
(திபா 46:9). ஆக, இனி மனுக்குலத்திற்காக கடவுள் தாமே
போரிடுவார் எனவும், இதனால் கடவுளின் வல்லமையை அவரது சொந்த
மக்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும், இனி மனுக்குலம்; கடவுளின்
கைகளில் அமைதியாக ஓய்வெடுக்கலாம் எனவும்
குறித்துக்காட்டுகிறது இந்த உருவகம்.
நினைவுகூர்வது - 'நான் இந்த வானவில்லைப் பார்க்கும்
போதெல்லாம் நினைவுகூர்வேன்!' என்கிறார் கடவுள். அப்படியென்றால்
அதைப் பார்க்காதபோது கடவுள் மனுக்குலத்தை மறந்துவிடுவாரா?
இல்லை. இந்த வானவில் கடவுள் நம்மை நினைவுகூர்வதை நமக்குக்
காட்டும் ஒரு அடையாளம். ஆக, யார் கண்ணுக்கும் எளிதாய்த்
தெரிகின்ற ஒரு அடையாளம் என்பதால் இது கடவுள் நம்மை
நினைவுகூர்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டுவதாகவும் இருக்கிறது.
நான் அழிப்பதில்லை - கடவுள் தரும் வாக்குறுதி இதுதான்.
'கொல்பவரும் நானே, உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும்
நானே! குணமாக்குபவரும் நானே!' (இச 32:39) என்று சொல்லும்
இறைவன் தன்னை வாழ்வின் காரணியாக மட்டும் இங்கே
காட்டுகின்றார்.
ஆக, கடவுள் நமக்கு வாழ்வின் காரணியாக இருக்கிறார் என்றால்,
அந்த உடன்படிக்கையின் பங்கேற்பாளராக இருக்கும் நாம் சாவின்
காரணிகளுக்குத் துணைபோகலாமா?
இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 3:18-22
இந்த இரண்டாம் வாசகத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதன்
முன்னும், பின்னும் உள்ள வசனங்களையும் நாம் இணைத்துப்
பார்க்க வேண்டும். 'நீதியின் பொருட்டுத் துன்புறுதல்'
(3:8-22) என்ற தலைப்பில் தன் திருஅவைக்கு எழுதும் பேதுரு
நம் துன்புறுதலைப் பற்றி எழுதிவிட்டு, நம் துன்பங்களைப்
புரிந்து கொள்ள வேண்டுமானால் இயேசு அடைந்த துன்பங்களைப்
புரிந்து கொள்ள வேண்டும் என இயேசுவை மாதிரியாக வைப்பதோடு
மட்டுமல்லாமல், இயேசுவை வானதூதர்க்கும் மேலாக உயர்த்திக்
காட்டுகின்றார். ஒருபக்கம் துன்புறுதல் பற்றிப் பேசும்
பேதுரு திடீரென நோவாவின் தண்ணீரைப் பற்றிப் பேசும் போது
கிறிஸ்தவர்களின் திருமுழுக்கிற்கு (3:21) முடிச்சுப் போடுவது
நம் புரிதலை இன்னும் கடினமாக்குகிறது.
இந்த வாசகத்தில் உள்ள இரண்டு கருத்தியல் பிரச்சனைகளை மட்டும்
பார்ப்போம்:
அ. இயேசு காவலில் இருந்த ஆவிகளிடம் போய் நற்செய்தியை அறிவித்தார்
(3:19). இயேசு ஆவிகளுக்குப் போதித்ததாக எழுதுகிறார்
பேதுரு. இந்த ஆவிகள் யார்? இவர்கள் நோவாவிற்கு முன் வாழ்ந்தவர்களாக
இருக்கலாம், அல்லது நோவாவின் காலத்தில் வாழ்ந்த தீயவர்களாக
இருக்கலாம் அல்லது தொநூ 6:2-4ல் சொல்லப்படும் தெய்வப்புதல்வர்கள்
அல்லது அரக்கர்களாக இருக்கலாம். இப்படி இயேசு போதித்தார்
என்று சொல்வது இயேசு இவர்களுக்கும் முற்காலத்தில் இருந்தார்
என்று இயேசுவின் இருப்பை படைப்பின் தொடக்கத்திற்குக்
கொண்டு செல்கிறது. இந்த ஆவிகளிடம் அவர் என்ன
போதித்திருப்பார்? இன்று நாம் நம் சக மனிதர்களுக்குப்
போதிப்பதே பெரும்பாடாக இருக்க, ஆவிகளிடம் போதிப்பது எவ்வளவு
கடினமாக இருக்கும்? ஆனால், இயேசு பாலைநிலத்தில் ஆவியால்
சோதிக்கப்பட்ட நிகழ்வை அருகில் வைத்துப் பார்த்தால் அலகையோடு
இயேசு பேசும் சொற்கள் கடவுள் பற்றிய போதனையாகவே இருக்கிறது.
ஆ. நோவா காலத்துப் பெருவெள்ளம் மற்றும் திருமுழுக்குத் தண்ணீர்.
நோவாவின் குடும்பம் தண்ணீரிலிருந்து காப்பாற்றப்படுகிறது.
திருமுழுக்குப் பெறும் கிறிஸ்தவர் தண்ணீரின் வழியாக
மீட்பைப் பெறுகின்றார். ஆக, தண்ணீரிலிருந்து, தண்ணீர்
வழியாக என்று நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.
நற்செய்தி வாசகம்: மாற்கு 1:12-15
மாற்கு 1:12-15 என்னும் இறைவாக்குப் பகுதியை 12-13, 14-15
என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 12-13ல் இயேசு
சோதிக்கப்படுகின்றார் (காண் மத் 4:1-11, லூக் 4:1-13).
14-15ல் கலிலேயாவில் இயேசு தன் பணியைத் தொடங்குகின்றார்
(காண் மத் 4:12-17. லூக் 4:14-15).
முதல் பிரிவிலிருந்து தொடங்குவோம் (12-13):
இயேசு சோதிக்கப்படும் நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகள் என்று
சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்திகளில்
மட்டும் தான் உள்ளன. இயேசுவின் வாழ்வில் இது உண்மையாகவே
நடந்ததென்றால் அவருடைய அன்புச் சீடர் யோவான் மட்டும் ஏன்
இந்த நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். இது ஒரு வரலாற்று
நிகழ்வா? அல்லது இறையியல் நிகழ்வா? இது ஒரு இறையியல் நிகழ்வே.
இது இறையியல் நிகழ்வு என்பதற்கு காரணங்கள் இரண்டு:
அ. விவிலிய இலக்கியத்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கும் நபர்
'சோதிக்கப்படுதல்' என்பது ஒரு எழுத்தியல் நடை - காண். ஆபிரகாம்
(தொநூ 22), சிம்சோன் (நீத 13-16). இவர்களைப் போலவே கடவுளின்
மகனாகிய இயேசுவும் சோதிக்கப்பட வேண்டும்!
ஆ. பழைய இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வாக்களிக்கப்பட்ட
நாட்டிற்குச் செல்லும் வழியில் 40 ஆண்டுகள் கடவுளால் பாலைவனத்தில்
சோதிக்கப்படுகின்றனர். புதிய இஸ்ரயேலின் தலைமகனாய் இருக்கும்
இயேசுவும் 40 நாட்கள் பாலைவனத்தில் சோதிக்கப்படுகின்றார்.
12-13 என்ற இறைவாக்குகளை இன்னும் இரண்டு உட்பிரிவுகளாகப்
பிரிக்கலாம்:
அ. பாலைநிலத்தில் இயேசு நாற்பது நாள் இருந்தார். அப்போது
சாத்தானால் சோதிக்கப்பட்டார்.
ஆ. அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப்
பணிவிடை செய்தனர்.
பாலை நிலம் - காட்டு விலங்கு, சாத்தான் - வானதூதர் என்று
சோதிக்கப்படுதலை இரட்டைப்படையில் எழுதுவது மாற்கு நற்செய்தியாளரின்
எழுத்துக் கலை.
அ. பாலைநிலம் உடனடியாக நமக்கு பழைய ஏற்பாட்டு இஸ்ராயேல் மக்களை
நினைவுபடுத்துகின்றது.
ஆ. காட்டு விலங்குகளிடையே இருக்கும் இயேசு பழைய ஆதாமை நமக்கு
நினைவுபடுத்துகின்றார் (காண் தொநூ 2:19). ஆதாம் இறந்தபின்
அவனது உடலை வானதூதர்கள் எடுத்துச் சென்றதாக யூத ரபிகள்
போதிப்பது வழக்கம். ஆக, காட்டு விலங்குகள் மற்றும் வானதூதர்கள்
பழைய ஆதாமைச் சுற்றி இருந்தது போல, புதிய ஏற்பாட்டு ஆதாமாகிய
இயேசுவைச் சுற்றியும் இருக்கின்றனர். மேலும் பாலைநிலங்கள்
மெசியாவின் வருகையினால் உயிரினங்கள் அமைதியாகக் கூடிவாழும்
இடமாக மாறும் எசாயாவின் இறைவாக்கும் இங்கே நிறைவுபெறுகிறது
(காண் எசா 11:6-9, 32:14-20, 65:25).
மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவிற்கும்,
சாத்தானுக்கும் இடையே நடக்கும் போரட்டத்தை வர்ணிப்பதில் ஆர்வம்
காட்டுகின்றனர். ஆனால் மாற்கு அதைக் கண்டுகொள்ளாமல்
விட்டுவிடுகின்றார். ஏனெனில் மாற்கு நற்செய்தியாளரைப்
பொறுத்தவரையில் இயேசுவின் பணித்தொடக்கத்திலேயே சாத்தான் அமைதியாக்கப்படுகின்றான்
(காண் 1:21-27).
இரண்டாம் பிரிவு (14-15):
இதிலும் இரட்டைத்தன்மையைக் காணலாம்:
அ. காலம் நிறைவேறி விட்டது. இறையரசு நெருங்கி வந்துவிட்டது.
ஆ. மனம் மாறுங்கள். நற்செய்தியை நம்புங்கள்.
இவற்றில் 'அ' வெறும் கருத்து வாக்கியமாகவும், 'ஆ' கட்டளை
வாக்கியமாகவும் இருக்கிறது.
'காலம்' என்பதற்கு 'க்ரோனோஸ்' மற்றும் 'கைரோஸ்' என்னும்
இரண்டு கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
'க்ரோனோஸ்' என்றால் வரலாற்று நேரம் - எகா. பிப்ரவரி 17
மாலை 5:50 மணி. 'கைரோஸ்' என்பது மீட்பு நேரம் - அதாவது கடவுள்
வரலாற்றில் செயலாற்றும் நேரம். இங்கே இயேசு குறிப்பிடும்
காலம் இரண்டாம் வகை.
இறையரசு - இறையரசு என்றால் என்ன? பழைய ஏற்பாட்டில் கடவுள்
தாமே மக்கள் மேல் அரசாள்வார் என்பது ஆழமான நம்பிக்கையாக இருந்தது
(காண் 1 குறி 28:5, 2 குறி 13:8, சாஞா 10:10, 2 சாமு
7:12-26, திபா 132:11). இந்த இறையரசு ஒரு அரசியல் நிகழ்வோ,
இடம்சார்ந்த ஆட்சியோ அல்ல. இது ஒரு ஆன்மீக அனுபவம். 'நான்
கடவுளின் மகள் அல்லது மகன்' என்று உணரும் ஒவ்வொருவருக்குள்ளும்
தொடங்கும் ஒரு உள்ளொளிப் பயணம். இந்தப் பயணத்தின் நிறைவில்
நமக்கு அருகில் இருப்பவர் எந்த நிறத்தை, மொழியை, மதத்தை,
நாட்டை, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நம் சகோதரன், சகோதரியாகத்
தெரிய ஆரம்பிக்கின்றார். பரந்த மனப்பான்மை, சகோதரத்துவம்,
சமத்துவம், சுதந்திரம் என்னும் மதிப்பீடுகளில் இறையரசின்
பிம்பங்கள் தெரியும்.
மனம் மாறுங்கள் - 'மெட்டாநோயா' எனப்படும் கிரேக்கச்
சொல்லுக்கு ஆங்கிலத்தின் 'யு' டர்ன் எடுத்தல் என்பது
பொருள். கடவுளை விட்டு நம் முகம் திரும்பியிருந்தால், அவரை
நோக்கி மீண்டும் திரும்புதல் மனம் மாறுவது.
நற்செய்தியை நம்புங்கள் - இந்த நற்செய்தி வெறும் வார்த்தை
அல்ல. மாறாக, இயேசுவே (காண். மாற்கு 1:1).
வார்த்தையிலிருந்து வாழ்க்கைக்கு:
அ. பழைய ஏற்பாட்டில் நோவாவோடு உடன்படிக்கை செய்வதன் வழியாக
தன் உடனிருப்பை காலங்காலமாக மனுக்குலத்திற்கு வாக்களிக்கும்
இறைவன் புதிய ஏற்பாட்டு இயேசுவில் அதை
முழுமையாக்குகின்றார். கடவுளின் காணக்கூடிய முகமாக வரும்
இயேசு வாழ்வில் நம்மைப்போல பாலைநிலங்களைக் கடந்து
சென்றாலும் நம்மோடு ஒன்றிணைந்து நிற்கின்றார்.
ஆ. வானதூதரும், சாத்தானும் நம் வாழ்வின் இரு பக்கங்கள். 'கடவுள்
பாதி - மிருகம் பாதி' என்று நாம் நமக்குள் பிளவுபட்டு
நிற்கின்றோம். மற்றொரு பக்கம் இன்பமும், துன்பமும் நம்
வாழ்வில் மாறி மாறி வந்தாலும் நம் மனம் அவற்றை எப்படி எடுத்துக்கொள்கின்றது.
இன்பத்தால் ஏமாற்றப்படவும் வேண்டாம், துன்பத்தால் கலக்கமடையவும்
வேண்டாம்.
இ. நாம் பெற்ற திருமுழுக்கு கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை மட்டும்
நமக்குத் தருவதில்லை. மாறாக, மனம் மாறும் கடமையையும் நம்மேல்
சுமத்துகிறது. மனமாற்றம் பெற்ற நாம் ஆவிகளுக்குப்
போதிக்கும் அளவிற்குப் போகவில்லையென்றாலும், அன்றாடம் நாம்
சந்திக்கும் சக உயிர்களுக்கு நம் புன்சிரிப்பையும், இனிமையான
வார்த்தையையும் போதனையாக முன்வைக்கலாமே!
இறுதியாக, மனம் மாறும் கடவுள், மனம் மாற்றத்திற்கு நம்மை
அழைக்கின்றார். இன்று என் மனம் எதை நோக்கி இருக்கிறது என்பதைப்
பொறுத்தே என் வாழ்க்கை பயணம் இருக்கிறது. நோக்கம் சரியாக
இல்லாதபோது, பாதையைவிட பாதையின் ஓரத்திலிருக்கும் பூக்கள்தாம்
கவர்ச்சியாக இருக்கும். பூக்கள் இல்லாத பாலைவனங்களும், நம்
வாழ்வின் காய்ந்த பொழுதுகளும்கூட மனமாற்றத்தின் ஊற்றாக இருக்க
முடியும்.
I தொடக்க நூல் 9: 8-15 II 1 பேதுரு 3:
18-22 III மாற்கு 1: 12-15
ஆண்டவரின் துணையால் சோதனைகளை வெல்வோம்
அமெரிக்காவில் உள்ளாட்டுப் போர் ஏற்பட்டபோது, பருத்தியை
(Cotton) ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச்செல்வதற்குத்
தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையும் மீறி ஒருசிலர் தென் அமெரிக்காவிலிருந்து
வடஅமெரிக்காவிற்குக் கப்பல்கள் வழியாகப் பருத்தியைக்
கொண்டு சென்று, மிகுதியான இலாபம் அடைந்து வந்தனர்.
ஒருமுறை ஒருவர் ஒரு கப்பல் தளபதியிடம், "
என்னிடமுள்ள பருத்தியை
நான் சொல்கின்ற இடத்தில் நீங்கள் கொண்டுபோய் இறக்கி விடுங்கள்,
நான் உங்களுக்கு நூறு டாலர் தருகின்றேன்"
என்றார். (அன்றைய
காலத்திற்கு நூறு டாலர் என்றால் மிகப்பெரிய தொகை) அதற்குக்
கப்பல் தளபதி, "
முடியாது"
என்றார். மீண்டுமாக அந்த மனிதர்,
"
நான் உங்களுக்கு ஐநூறு டாலர் தருகிறேன். நீங்கள் என்னிடமுள்ள
பருத்தியை நான் சொல்கின்ற இடத்தில் கொண்டுபோய் இறக்கி
விடுங்கள்"
என்றார். அப்பொழுதும் கப்பல் தளபதி முடியாது என்றே
பதில் சொன்னார்.
வந்தவர் விடவில்லை. அவர் கப்பல் தளபதியிடம், "
நான் உங்களுக்கு
ஐயாயிரம் டாலர் தருகின்றேன். நீங்கள் என்னிடமுள்ள பருத்தியை
நான் சொல்கின்ற இடத்தில் கொண்டு போய் இறங்கி விடுங்கள்"
என்றார்.
இதைக் கேட்டதுதான் தாமதம் கப்பல் தளபதி தன்னிடமிருந்த
துப்பாக்கி எடுத்து, வந்தவரின் நெற்றிப்பொட்டில் வைத்து,
"
நீ என்னை மிகவும் சோதிக்கின்றாய். ஒழுங்கு மரியாதையாக இங்கிருந்து
ஓடிவிடு. இல்லையென்றால், நீ என்னுடைய துப்பாக்கிக்கு இரையாகிவிடுவாய்"
என்றார். உடனே வந்தவர் அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டார்.
இயேசு பேதுருவைப் பார்த்து, "
என் கண்முன் நில்லாதே
சாத்தானே! நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய்"
(மத் 16:
230. என்று சொன்னது போன்று, இந்த நிகழ்வில் வருகின்ற கப்பல்
தளபதி தன்னிடம் வந்த மனிதரிடம், "
நீ என்னை மிகவும்
சோதிக்கின்றாய். ஒழுங்கு மாதிரியாக இங்கிருந்து ஓடிவிடு"
என்று சொன்னது மிகவும் பாராட்டிற்குரியதாக இருக்கின்றது.
தவக்காலத்தின் முதல்ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை
நம்முடைய வாழ்வில் வருகின்ற சோதனைகளை ஆண்டவரின் துணையால்
வெற்றி கொள்வோம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது
குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சோதிக்கப்பட்ட இயேசு
மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில்,
இயேசு கிறிஸ்து சாத்தானால் சோதிக்கப்படுவதைக் குறித்து
வாசிக்கின்றோம். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில்
இடம்பெறுவது போன்று மாற்கு நற்செய்தியில் இயேசு சோதிக்கப்படுவது
பற்றி விரிவாக இல்லையென்றாலும் அங்கு ஒருசில குறிப்புகள்
காணக்கிடக்கின்றன.
"
இயேசுவும் சோதனைக்கு உட்பட்டாரா?"
என்று ஒருசிலர் தங்கள்
புருவத்தை உயர்த்தலாம். இது குறித்து அமெரிக்காவைச்
சார்ந்த மிகப்பெரிய மறைப்போதகரான டி.எல். மூடி (1837-1899)
என்பவர், "
சோதிக்கப்படுவது ஒன்றும் பாவமில்லை; சோதனையில்
விழுவதுதான் பாவம்"
என்பார். ஆம், இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார்;
ஆனால், அவர் சோதனையில் விழுந்துவிடவிலை. மாறாக அவர் இறைவார்த்தையின்
துணையால் சோதனையை வெற்றிகொண்டார். நாமும் நம்முடைய
வாழ்வில் சோதனைகள் வருகின்றபொழுது, புனித பேதுரு கூறுவது
போல், "
எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காமல்
கிறிஸ்துவின் துன்பங்களில் பங்கு கொள்கின்றோம் என்று மகிழ்வோம்
(1 பேது 4: 12).
சோதனையை வெற்றிகொண்ட இயேசு
இயேசு எல்லாரையும் போன்று சோதிக்கப்பட்டாலும், அவர் எல்லாரையும்
போன்று சோதனையில் விழுந்துவிடவில்லை. மாறாக அவர் தனக்கு வந்த
சோதனைகளை இறைவல்லமையால் துணிவோடு வெற்றி கொண்டார். இயேசுவுக்கு
பாலைநிலத்தில் அல்லது அவரது பணிவாழ்வின் தொடக்கத்தில் மட்டுமல்ல,
அவரது பணி இறுதிவரைக்கும் சோதனைகள் வந்துகொண்டுதான் இருந்தன.
கெத்சமனித் தோட்டத்தில் இயேசுவுக்குத் தன்னுடைய விருப்பத்தை
நிறைவேற்றுவதற்கான சோதனை வந்தபொழுது (லூக் 22: 42), அவர்
தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றாமல், தந்தையின் விருப்பத்தை
நிறைவேற்றத் தன்னையே கையளித்தார். இவ்வாறு அவர் தனக்கு வந்த
சோதனைகளை வெற்றிகொண்டார்.
கிரகாம் ஸ்க்ரோக்கி (Graham Scroggie) என்ற அறிஞர் இது தொடர்பாகக்
கூறும்பொழுது, "
ஆதாமும் ஏவாளும் "
ஏதேன் தோட்டத்தில்"
சோதனையில்
விழுந்தபொழுது, இயேசு கெத்சமனி தோட்டத்தில் தனக்கு வந்த சோதனையை
வெற்றிகொண்டார். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் சோதனையில்
விழுந்ததற்கும், இயேசுவால் கெத்சமணி தோட்டத்தில் சோதனையை
வெல்ல முடிந்ததற்கும் முக்கியக் காரணம், ஆதமும் ஏவாளும் தங்களுடைய
விருப்பத்தை நிறைவேற்றியதும், இயேசு தந்தையின் விருப்பத்தை
நிறைவேற்றியதே ஆகும். ஆதாமும் ஏவாளும் தங்களது விருப்பத்தை
நிறைவேற்றியதால் ஆண்டவர் அவர்களோடு இல்லை, அதனால் அவர்களால்
சோதனையை வெல்ல முடியவில்லை. இயேசுவோ தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றினார். இதனால் ஆண்டவர் அவரோடு இருந்தார். ஆகவே
அவரால் சோதனையை மிக எளிதாக வெற்றிகொள்ள முடிந்தது"
என்பார்.
ஆம் நாம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்கின்றபொழுது,
ஆண்டவர் நம்மோடு இருப்பார். அப்பொழுது நமக்கு வரும் சோதனைகளை
மிக எளிதாக வெற்றிகொள்ள முடியும் என்பது உறுதி.
சோதிக்கப்படுவோருக்கு உதவும் ஆண்டவர்
இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார் எனில், நாமும்
சோதிக்கப்படலாம். ஆகவே, நாம் இயேசுவைப் போன்று தந்தையின்
திருவுளத்தை நிறைவேற்றி, அவருக்கு உகந்த வழியில்
நடக்கும்பொழுது, கடவுளின் துணையால் நமக்கு வரும் சோதனைகளை
நாம் மிக எளிதாக வெற்றி கொள்ளலாம் என்பதைக் குறித்து
இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது இன்றைய
நற்செய்தியில் இடம்பெறும் "
வானதூதர் அவருக்குப் பணிவிடை
செய்தனர்"
என்ற இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப்
பார்ப்போம்.
வானத்தூதர் இயேசுவின் பிறப்பை ஒட்டியும், அவரது
பணிவாழ்விலும் முக்கியப் பங்காற்றியதைப் பற்றித்
திருவிவிலியம் நமக்குச் சான்று பகர்கிறது. இன்றைய
நற்செய்தியில் வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்
என்ற வார்த்தைகள், இயேசு சாத்தனை வெல்வதற்கு வானதூதர்
அவருக்கு உறுதுணையாய் இருந்திருக்கக்கூடும் என்ற செய்தியை
உணர்த்துவதாய் இருக்கின்றன. இன்றைய இரண்டாம் வாசகம் "
இயேசு
விண்ணகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்"
(1
பேது 3: 22) என்கிறது. இயேசு கடவுளின் வலப்பக்கத்தில்
இருக்கின்றார் எனில், அவர் சோதிக்கப்படுவர்களுக்கு உதவ
வல்லவராகவும் (எபி 2: 18), அவர்களுக்காகப்
பரிந்துபேசுபவராவும் இருக்கிறார் (எபி 7: 25) என்பது
பொருள். ஆகவே, நாம் நமது வாழ்வில் வரும் சோதனைகளை,
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவரது உடனிருப்பின்
மூலம் வெற்றிகொள்வோம். அதை விடவும் ஆண்டவர் நாம்
சோதிக்கப்படும்பொழுது நமக்கு உதவி செய்ய வல்லவர் என்பதில்
நம்பிக்கை வைத்து சோதனைகளை வெற்றி கொள்வோம்.
சிந்தனை:
"
உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும்"
(யாக் 1:3) என்பார் புனித யாக்கோபு. எனவே, நாம்
சோதிக்கப்படும்பொழுது மனம் தளர்ந்துவிடாமல் அல்லது
சோதனையில் விழுந்து விடாமல், இறைவனின் துணையால்
மனஉறுதியோடு இருந்து சோதனையை வெற்றி கொள்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
கிறிஸ்தவ வாழ்வு என்பது புதிய தொடக்கங்களின் வரலாறு. நமது
வாழ்வைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பானது
இக்கிறிஸ்தவ வாழ்வில் நமக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக
இந்த தவக்காலம் நாம் மாறுவதற்காக வழங்கப்படுகிறது. நமது
வாழ்வைச் சீர்தூக்கிப் பார்த்து, மாற்றிக் கொள்ளும் காலம்தான்
இந்த தவக்காலம்.
இன்று வாசிக்கப்பட்ட நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு கூறும்
இரு முக்கிய வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்ட
விரும்புகிறேன். காலம் நிறைவேறிற்று. கடவுளின் அரசு
நெருங்கி விட்டது. மனம் திரும்புங்கள். இந்நற்செய்தியை நம்புங்கள்
(மாற்கு 1:15) என்று அழைப்பு விடுக்கின்றார். கடவுளின் அரசு
என்பது நீதியிலும், அமைதியிலும், மகிழ்ச்சியிலும் அடங்கியுள்ளது
என்று புனித பவுல் அடிகளார் உரோ. 14:17ல்
குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில்
நீதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் சந்திக்க
விரும்பினால் தன் பாவத்தை விட்டு விட்டு நலன்களுக்கெல்லாம்
ஊற்றாகிய இறைவன் பக்கம் திரும்ப வேண்டும்.
பாவம் என்றால் என்ன?
கதை
ஒரு பாலைவனம். அதன் உள்ளே , நடுவே ஒரு சோலைவனம். அந்தச்
சோலைவனத்தில் ஒரு சிறு குளம். அந்தக் குளத்தில் பல தவளைகள்
வாழ்ந்தன. அந்தக் குளத்தில் மனித வார்த்தைகளில் சொல்லப்போனால்,
நீதியும், அமைதியும், மகிழ்ச்சியும் களி நடனம் புரிந்தன.
ஒருநாள் நஞ்சு நிறைந்த நாகப் பாம்பு வழி தவறி அந்தப் பாலைவனத்தில்
அகப்பட்டுத் தவித்தது. மணலின் வெப்பத்தைத் தாங்க முடியாது
இளைப்பாற இடம் தேடி அலைந்தது. இடம் கிடைக்காத நிலையில் தன்
உடலைச் சுட்ட மணலிலிருந்து தப்பிக்கத் தன் வாலை மணலில் ஊன்றி
உடலைத் தூக்கி உயர்த்திப் படம் எடுத்தது. உடலின் நிழல் மணல்மீது
பட்டது. குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குட்டித்
தவளையின் கண்ணில் பட்டது இது. அந்தப் பாம்பின் நிழலில் இளைப்பாற
ஆசைப்பட்டது. தன் தாய் தந்தை மற்ற தவளைகளை விட்டு அந்தக்
குட்டித் தவளை பாம்பின் நிழலை அடைந்தது. நல்ல பசியோடு இருந்த
பாம்பு தவளையைக் கவ்விப் பிடித்து விழுங்கி விருந்தாடியது.
இந்தக் கதையில் வந்த தவளையின் உள்ளத்தில் எழுந்த தவறான ஆசைக்குப்
பெயர்தான் பாவம். இதேபோன்று மனிதர்கள் தங்கள் உரிமை
வாழ்வை, மன அமைதியை, மகிழ்ச்சியை இழக்கக் காரணமாக இருப்பது
அவர்களின் உள்ளத்தில் எழும் வேண்டாத ஆசைகளே. தவறான ஆசைகள்
எப்போதும் அழிவிற்கே இட்டுச் செல்லும். ஊனியல்பின் செயல்களான
பரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம்,
பகைமை , சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை,
பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் இவைகளில்
இருந்து விடுதலை பெற வேண்டும்.
நாம் இரு காலங்களுக்கு இடையில் உள்ளோம். முதலாவதாக இது வளர்ச்சியின்
காலம். நமது குற்றங்களில் நாம் மூழ்கிப் போகாது, இறைவன் தரும்
நற்செய்தியை ஏற்று வளர்ச்சி பெற வேண்டிய காலம். தொடக்க
நூலில் 9:13-15ல் குறிப்பிடுவதுபோல ஆண்டவர் பக்கம்
திரும்புவோர் வாழ்வு பெறுவர். இறைவன் நோவாவையும், அவர் புதல்வர்களையும்
நோக்கி, என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். இது என்
உடன்படிக்கையின் அடையாளம். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத்
தண்ணீர் இனி ஒருபோதும் பெரு வெள்ளமாக வராது என்றார். இந்த
மீட்பைப் பெற்றுத் தரத்தான் கிறிஸ்து இறந்தார். எனவே முறையற்ற
வாழ்வால் சோர்ந்து நம்பிக்கை இழந்து போகாதபடி நாம் வளர்ச்சி
காணும் காலம். இரண்டாவது இது பயிற்சியின் காலம். இயேசு
யோர்தான் நீரில் திருமுழுக்குப் பெற்று 40 நாட்கள் பாலைவனத்தில்
தவமுயற்சியை மேற்கொண்டு தீமையை முறியடித்தார் (மாற்.
1:12-13). நாமும் நம்மைப் பயிற்றுவிக்கப் பாலைவனம் அனுபவம்
அடைய வேண்டும். குறையை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.
பழைய ஏற்பாட்டிலே தாவீது அரசன் தவறான ஆசைக்கு இடம்
கொடுத்து விபச்சாரம் செய்து அதை மறைக்கக் கொலையும்
செய்தான். ஆன்மாவை இழந்தான். ஆனால் இறைவாக்கினர் நாத்தான்
அறிவுரைக்குச் செவிமடுத்து (2 சாமு. 12:13) ஆண்டவரை ஏற்று
மனம் மாறினான். அமைதி, மகிழ்ச்சியைப் பெற்றுக்கொண்டான்.
புதிய ஏற்பாட்டில் பாவியாக வாழ்ந்த மதலேன் மரியா இயேசுவின்
பாதத்தைத் தொட்டுக் கண்ணீர் வடித்துப் பாவ ஆசைகளை விட்டு
பரமனின் பாதத்தைப் பற்றிக் கொண்டாள். திசை மாறிய பறவைக்குத்
தன் அன்பு கூட்டில் அடைக்கலம் கொடுத்தார் இயேசு. அவள் இழந்த
சமாதானத்தை மீண்டும் கண்டடைந்தாள். பாவம் நம்மிடம் இல்லை
என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம். உண்மையும்
நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்
கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலுமிருந்து
நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்கு
உரியவர், நேர்மையுள்ளவர் (1 யோவா. 1:8-9).
ஆகவே பாவ ஆசைகளை விட்டுவிட்டு, நமது மனதை எல்லா வரங்களுக்கும்
ஊற்றாகிய இறைவன் பக்கம் திருப்புவோம்.
இயேசு சோதிக்கப்பட்டதாக புனித மாற்கு இன்றைய நற்செய்தியிலே
கூறுகின்றார். ஆம். சாத்தான் இயேசுவைச் சோதித்தான். புனித
மத்தேயு எழுதிய நற்செய்தியின்படி இயேசுவை மூன்றுமுறை
சாத்தான் சோதித்தான். முதல் சோதனை வெளிப்புலன்களுக்கு,
குறிப்பாக வாய்க்கு எதிரான சோதனை (மத் 4:3). இரண்டாவது சோதனை
உள்புலன்களுக்கு, குறிப்பாக அறிவுக்கு எதிரான சோதனை (மத்
4:6). மூன்றாவது சோதனை இறைநம்பிக்கைக்கு எதிரான சோதனை (மத்
4:9).
"
அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை
அவரைவிட்டு அகன்றது" என்று புனித லூக்கா கூறுகின்றார்
(லூக் 4:13). அலகை ஏற்ற காலத்திற்காகக் காத்திருந்தது. ஏறக்குறைய
மூன்று ஆண்டுகள் காத்திருந்தது. இயேசு பாடுபடப்போவதற்கு
முன்னால் சிலுவையைச் சுமக்கப்போவதற்கு முன்னால் அவரை அலகை
சோதித்தது. இயேசு, தான் துன்பப்பட வேண்டும் என்பதைத் தமது
சீடர்களிடம் கூறியிருந்தார் (லூக் 9:22, 17:25, 24:26,
24:46). இயேசு துன்பப்படக்கூடாது, கொலை செய்யப்படக்கூடாது
என்று புனித பேதுரு கூறியபோது, இயேசு அவரைப் பார்த்து, "என்
கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய்;
ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு
ஏற்றவை பற்றியே எண்ணுகின்றாய்" (மத் 16:23) என்றார். ஆனால்
அவரோ லூக் 22:42-இல், "தந்தையே, உமக்கு விருப்பமானால்
இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும் ..." என்று
கூறுகின்றார். ஆம். சாத்தான் இயேசுவை நான்கு முறை
சோதித்தான்.
சாத்தான் யார்?
பாவத்தின் மறு உருவம்தான் சாத்தான். சாத்தான் எங்கு
இருக்கின்றானோ, அங்கே பாவமிருக்கும்; எங்கே
பாவமிருக்கின்றதோ அங்கே சாத்தான் இருப்பான்.
பாவம் என்றால் என்ன? இறையாட்சிக்கு எதிராகச் செயல்படுவதே
பாவம். சாத்தானின் வேலை, இறையாட்சிக்கு எதிராகச் செயல்பட
நம்மைத் தூண்டுவதாகும். இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி
என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக்
கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவியார் அருளும் நீதி, அமைதி,
மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய
இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர்
கடவுளுக்கு உகந்தோராயும், மக்களின் மதிப்புக்கு
உரியோராயும் இருப்பர் என்று புனித பவுலடிகளார்
கூறுகின்றார் (உரோ 14:17-18).
இன்றும் நாம் சாத்தானால் சோதிக்கப்படுகின்றோம்.
பாவச் சோதனைகளிலிருந்து விடுதலை பெற வழி ஏதும் உண்டோ?
உண்டு என்கின்றார் இயேசு.
இதோ இயேசு நம்மோடு பேசுகின்றார் : நோவா காலத்துத் தண்ணீர்
(முதல் வாசகம்) மக்களை அழித்தது. நான் தரும் தண்ணீரோ
உங்களை வாழ வைக்கும் (இரண்டாம் வாசகம், யோவா 7:37-39). தூய
ஆவியாரே நான் தரும் தண்ணீர். அவரால் உங்களை அருள்பொழிவு
செய்துகொள்ளுங்கள்; அவரில் திருமுழுக்குப்
பெற்றுக்கொள்ளுங்கள்.
நான் முதல் மூன்று சோதனைகளையும் வென்றது எப்படி? தூய
ஆவியாரால் நான் பாலைநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டேன்
(மாற் 1:12). அவர் எப்போதும் என்னோடு இருந்தார். அவரை
எதிர்க்கும் சக்தி இந்த உலகத்தில் எந்த சாத்தானுக்கும்
கிடையாது. நான்காவது சோதனையை விண்ணகத் தந்தை மீது நான்
வைத்திருந்த அளவிடமுடியாத அன்பால் (கலா 5:22-23) வென்றேன்.
என் வழியில் நடங்கள். உங்களை எந்தத் தீய சக்தியும்
தீண்டாது; எந்தப் பாவமும் நெருங்காது.
இயேசுவின் இந்த வார்த்தைகளின்படி நடந்தால் "
பேய்களின்
விருந்து மண்டபமாய் உன் மனசு மாறியதெப்படி? மூளையில்
எப்போது முள் முளைத்தது உனக்கு?"
என்று இறைவனோ,
இறையடிகளார்களோ நம்மைக் கேட்கமாட்டார்கள். மாறாக இறைவனும்,
இறையடியார்களும் நம்மைப்பார்த்து, "நீ செல்லும் பாதை
சரியான பாதை ... சிகரங்களில் வசிக்க சிங்காரமாய்
நடந்துசெல்"
என்பார்கள்.
பொருள் :
செயலுக்குரிய நல்ல வழியினை நாடாமலும் வெற்றிக்குரிய
செயலைச் செய்யாமலும் தன்மீது வரும் பழிக்கு நாணாமலும்
பண்பாடு இல்லாமலும் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால்
எளிதில் வெல்லப்படுவான்!
ஓர் இளைஞர் கூறினார்: "என்னைப் பொறுத்தமட்டில் ஓராண்டில்
325 நாள்களே உள்ளன. ஏனெனில் தவக்காலத்தின் 40 நாள்களும் எங்கள்
வீட்டில் சுத்த சைவ உணவு: முட்டையோ மீனோ கறியோ கிடையாது.
எனவே அந்த 40 நாள்களையும் கணக்கில் சேர்ப்பதில்லை. ஓர் இளைஞனின்
தவக்காலக் கணிப்பு!
தவக்காலமென்பது அசைவ உணவைத் தவிர்ப்பதிலோ, பூவும் பொட்டும்
வைக்காமல் இருப்பதிலோ, திரைப்படங்கள், மதுபானங்கள்,
புகைபிடித்தல் ஆகியவற்றை விலக்குவதிலோ அடங்கவில்லை, செபமும்
தபமும் ஒறுத்தல் முயற்சிகளும் தவக்காலத்தில் அடிப்படை நோக்கமான
ஆழமான இதய மனமாற்றத்தை உருவாக்க வேண்டும். இல்லையென்றால்,
இவையனைத்தும் பயனற்றவை; வெளிவேடம்.
இதய மனமாற்றமென்பது புதுப்படைப்பாக மாறுவதாகும். "ஒருவர்
கிறிஸ்துவோடு இணைத்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய்
இருக்கிறார், பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ " (2
கொரி 5:17). கடவுள் உலகத்தைப் படைத்தபோது படைப்புகள் அனைத்துமே
மிகவும் நன்றாயிருந்தது (தொநூ 1:31). ஆனால், மனிதர் தம் பாவத்தால்
கடவுளின் படைப்பைர் சீரழித்தபோது, கடவுள் அதை மீண்டும்
புதுப்படைப்பாக மாற்றினார்.
நோவாவின் காலத்தில் பாவர் சேற்றில் மூழ்கிக் கிடந்த உலகத்தை
வெள்ளப் பெருக்கினால் அழித்துவிட்டு, நோவாலையும் அவருடைய
குடும்பத்தையும் புதுப்படைப்பின் தொடக்கமாக விளங்கச்
செய்தார். வெள்ளப் பெருக்கிற்குப்பின், கடவுள் தமது அருளன்பைப்
புதுப்பித்து நோவாவுடன் உடன்படிக்கை செய்தார் (முதல் வாசகம்).
கடவுள் தாம் நல்லவரென்றும், நேர்மையுள்ளவரென்றும், எளியோரை
நேர்வழியில் நடத்தி, அவர்களுக்குத் தம் வழியைக் கற்பிப்பவரென்றும்
எண்பித்தார் (பதிலுரைப்பாடல், திபா 25:8-9).
வெள்ளப் பெருக்கின்போது காப்பாற்றப்பட்ட தோவாவின் குடும்பத்தினர்
எட்டுப் பேரும் தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர், இத்தண்ணீர்
திருமுழுக்கிற்கு முன் அடையாளம் என்கிறார் தூய பேதுரு (இரண்டாம்
வாசகம், 1 பேது 3:20-21). தண்ணீ ருக்கு ஆக்க சக்தியும் அழிக்கும்
சக்தியும் உண்டு, வெள்ளப் பெருக்கு பாவ உலகை அழித்தது. ஆனால்,
பேழையில் இருந்த நோவாவின் குடும்பத்தைக் காப்பாற்றியது.
செங்கடல் எகிப்தியன அழித்தது. ஆனால், இஸ்ரயேல் மக்களுக்கு
வழிவிட்டுக் காப்பாற்றியது. திருமுழுக்குத் தண்ணீருக்கும்
ஆக்க சக்தியும் அழிக்கும் சக்தியும் உண்டு. அது பழைய மனிதருக்குரிய
பாவ இயல்பை அழிக்கிறது, கடவுளுடைய சாயலாகப் படைக்கப்பட்ட
புதிய மனிதருக்குரிய இயல்பை உருவாக்குகிறது (எபே 4:22-24).
தவக்காலத்தின் இறுதிக் குறிக்கோளான இதய மனமாற்றம் இயேசுவின்
பாஸ்கா மறைபொருளில், அதாவது அவரது சாவிலும் உயிர்ப்பிலும்
பங்குபெறுவதில் நிறைவடைகிறது. பெரிய சனிக்கிழமை
திருவிழிப்புத் திருப்பலியின்போது மனம் திரும்புவோர்
திருமுழுக்குப் பெறுவர்; ஏற்கெனவே திருமுழுக்குப் பெற்றவர்கள்
தங்களது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வர்.
நாம் பெற்ற திருமுழுக்கு நம்மிடமிருந்து ஜென்மப்பாவத்தைப்
போக்கியது. ஆனால் ஜென்மப் பாவத்தின் விளைவாக தம்முன் குடி
கொண்டிருக்கும் பாவ நாட்டங்களையும் பாவத்தின் மீதுள்ள கவர்ச்சியையும்
போக்கவில்லை. எனவே, நம் வாழ்வின் இறுதி மூச்சுவலா பாவங்களையும்
பாவத்திற்குக் காரணமான அலகையையும் எதிர்த்துப் போராட
வேண்டியிருக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு போர், காயமில்லாத
போருண்டா? வாழ்க்கை என்பது ஒரு கடல், கொந்தளிக்காத கடல் உண்டா?
வாழ்க்கை என்பது ஒரு வேள்வி, தீயில்லாத வேள்வி உண்டா?
திருமுழுக்கு பெற்றும் நாம் சோதிக்கப்படுகிறோமே என்று வியப்படையவோ
வேதனைப்படவோ தேவையில்லை. திருமுழுக்குப் பெற்றவுடனே இயேசு
அலகையால் சோதிக்கப்படும்படி அதுவும் ஆவியானவரால் பாலைவனத்திற்கு
அனுப்பப்பட்டார் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது (மாற்
1:12), இயேசு எல்லாவகையிலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டார்
என்று எபிரேயர் திருமடல் கூறுகிறது (எபி 5:15).
மத்தேயுவும் (மத் 4:1-11), லுக்காவும் (லூக் 4:1-13) இயேசுவை
அலகை எவ்வாறு சோதித்தது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால்,
மாற்குவோ இயேசு அலகையால் சோதிக்கப்பட்டார் என்று பொதுவாகக்
குறிப்பிடுகிறார். இருப்பினும் மத்தேயுவோ லூக்காவோ
குறிப்பிடாத ஒன்றை மாற்கு மட்டும் குறிப்பிட்டுள்ளார். அதாவது
இயேசு பாலைவனத்தில் காட்டு விலங்குகளிடையே இருந்தார் (மாற்
1:13). காட்டு விலங்குகள் தீயசக்திகளைக் குறிக்கின்றன. தூய
பவுல் எபேசில் காட்டு விலங்குகளோடு போராடியதாகக்
குறிப்பிடுகிறார் (1 கொரி 15:32).
நாம் எதிர்த்துப் போராட வேண்டிய காட்டு விலங்குகள் நமக்கு
வெளியே மட்டுமன்று, தமக்குள்ளேயும் இருக்கின்றன. 'தெய்வம்
பாதி மிருகம் பாதி சேர்த்துச் செய்த கலவை தான். உள்ளே தெய்வம்,
வெளியே மிருகம், விளங்க முடியாத புதுக்கவிதை நான் (திரைப்படப்
பாடல்).
ஒரு பெண் குரங்கு குட்டியொன்றை என்றது. அக்குட்டியைப்
பார்த்து அழுத்து. ஏன்? என்று ஆண் குரங்கு கேட்டதற்கு, அப்பெண்
குரங்கு, 'நமக்குப் பிறந்துள்ள குட்டியின் முகம் மனித முகத்தைக்
கொண்டிருக்கிறது' என்றது. அதற்கு ஆண் குரங்கு, 'கவலைப்படாதே,
போகப் போக நம் முகம் வந்துவிடும்' என்று அதைத் தேற்றியது!
மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர வேண்டிய மனிதர்,
மனித நிலையிலிருந்து மிருக நிலைக்குத் தாழ்ந்து கொண்டிருப்பது
வேதனைக்குரியது. "நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை
நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்" (கலா
5:15).
நம்மை மிருகமாக்கும் அலகையின் வஞ்சகத் தந்திரங்களை மன உறுதியுடன்
எதிர்த்துப் போராட வேண்டும். அலகை இயேசுவைச் சோதிப்பதற்காகப்
பயன்படுத்திய அதே மூன்று வழிகளைத்தான் நம்மையும் கெடுக்கப்
பயன்படுத்துகிறது. கற்களை அப்பாமாக்கிச் சாப்பிட்டு உடல்
இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள் (trust), கோபுரத்தின் உச்சியிலிருந்து
குதித்து வல்லமையை வெளிப்படுத்து (Power), அலகையை வழிபட்டு
செல்வத்தைக் குவித்துக்கொள் (Moncy), 'உலகமனைத்தும்
தீயோனின் பிடியிலிருக்கிறது' (1 யோவா 5:19) என்று கூறும்
யோவான், உலகில் இருப்பது எல்லாம், "உடல் ஆசை, இச்சை
நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு" என்று (1 யோவா 2:16)
உலகின் நாடிப்பிடித்துச் சொல்லுகிறார். யோவான்
குறிப்பிடும் இம்மூன்று சக்திகளும் இயேசுவின் மூன்று சோதனைகளுடன்
ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.
காமத்திற்காக, பதவிக்காக, பணத்திற்காக மனிதன் நாயாக அலைகிறான்;
பேயின் வலையில் வீழ்கிறான்; தன்னையே இழக்கிறான். இயேசு
மூன்று முறையும் விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டி, கடவுளுடைய
வார்த்தையைக் கொண்டே அலகையை வெல்லுகிறார் (இச 8:3; 6:16;
6:13). நாமும் தூய ஆவி அருளும் கடவுளின் வார்த்தையைப்
போர்வாளாக எடுத்து அலகையை வெட்டி வீழ்த்துவோம் (எபே 6:17).
"மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின்
வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (மத் 4:4).
நடுக்கடலில் ஒரு பயணிகள் கப்பல். பயணிகளில் ஒருவர் துறவி -
சாது. பெரும்பாலோனோர் இளைஞர் பட்டாளம். சாதுவைக் கேலி
செய்து கிண்டல் அடித்தது அக்கூட்டம். சிலர் தங்கள் காலணிகளைக்
கூட கழற்றி சாது மீது வீசி விளையாடினர். ஆனால் சாதுவோ அமைதியாய்
இருந்தார். புன்னகை பூத்திருந்தார்.
திடீரென ஓர் அசரீரி கேட்டது. "சாதுவே, நீ விரும்பினால் இந்தக்
கப்பலை மூழ்கடிக்கிறேன். உன்னை அவமானப்படுத்தியவர்களை இந்த
ஆழ்கடலில் அமிழ்த்தி சாகடிக்கிறேன்"
இதைக் கேட்ட கப்பலில்
இருந்த அத்தனை பேரும் கதிகலங்கி சாதுவின் காலில் சரணாகதி
அடைந்தனர். சாதுவானவர் வான் நோக்கிக் கைகளை உயர்த்தி, "என்
அன்பான கடவுளே, நீர் ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறீர்?
கப்பலைக் கவிழ்த்து என்ன பயன்? முடிந்தால் இவர்களின் மனத்தை
மாற்றும்"
. வானிலிருந்து கடவுள் பதிலளித்தார்: "
என் அன்பு
மகனே, உன்னில் நான் மகிழ்கிறேன். முன்பு ஒலித்தது என் குரல்
அன்று! உண்மையிலேயே அது சாத்தானின் குரல் தான்! எவன் ஒருவன்
சாத்தானின் குரலை இனம் கண்டுகொள்ள முடிகிறதோ, அவனே என்னுடைய
குரலையும் புரிந்து கொள்ள முடியும்"
.
கடவுளின் குரலையும் அலகையின் குரலைஸயம் தரம் பிரித்துக்
காட்டும் கண்ணாடியே தவக்காலம்.
பேய் பேயாக வருவதில்லை. எடுத்த எடுப்பில் தீயவற்றில்
வீழ்த்த தோன்றும் விதங்களிலும் சொல்லும் வார்த்தைகளிலும்
உருமாறி, முகமூடி அணிந்துதான் வருகிறான். அந்தநேரத்தில் நம்
அறிவு என்ன சொல்கிறது?
ஒவ்வொரு கணமும் நமது செயல், சொல், சிந்தனை அனைத்திற்குப்
பின்னும் நம் உள்ளத்திலிருந்து எழும் ஒரு குரல் இருக்கும்.
இதனை உடல் ரீதியாக, அறிவியல் ரீதியாக மூளை கட்டளை இடுகிறது,
உடலின் உறுப்புகள் இயங்குகின்றன என்பார்கள். இதை அப்படியே
ஏற்றுக் கொள்வதனால் தன் வீட்டைத் தானே இடிக்கிறது போல் (தனக்கு
எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப் போகும்,
லூக்.11:17) நமது உடலையும், மூளை உட்பட அனைத்து உறுப்புகளையும்
நாசப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டளையை நமது மூளை கொடுக்கக்
கூடுமோ?
ஆன்மீகத்துக்கு முன்னே அறிவியல் கேள்விக்குறியாகிறது!
சிலர் குடிபோதைக்கு அடிமையாகிறார்கள். மற்றும் சிலர் தற்கொலை
செய்து கொள்கிறார்கள். வேறு சிலரோ தங்களது தீய செயலால் பிறரையும்
கெடுத்துத் தாங்களும் அழிந்து போகிறார்கள். ஆகவே நம் செயல்கள்
அனைத்தும் வெறும் மூளையின் கட்டளைகள் 11ன்று அல்லாது அதற்கும்
மேற்பட்ட ஏதோ ஒன்று செயல் ஊக்கியாக இருப்பதை உணர முடிகிறது.
பலரை வாழ வைக்கும் செயல்களைச் சிலர் செய்வதைக் காண்கிறோம்.
தாங்கள் நல்வழியில் நடப்பதோடு பிறரையும் நல்வழிப்படுத்துவதைக்
காண்கிறோம். காரணம்? நம் உள்ளத்திலிருந்து இருவிதமான குரல்கள்
எழும்புகின்றன. ஒன்று நற்செயல்களைச் செய்ய வைத்து நம்மை வாழவைக்கும்
இறைவனின் குரல்! மற்றொன்று திசெயல்கள் மூலம் பிறரையும் நம்மையும்
அழிவுக்கு இட்டுச் செல்லும் இலகையின் குரல்!
எனவேதான் "
இதோ பார், வாழ்வையும் நன்மையையும் சாவையும்
தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன் (இ.ச.30;15)...
அவரது குரலுக்குச் செவிகொடு" என்கிறார் மோசே வழியாக இறைவன்!
மத்தேயுவோ லூக்காவோ போல இயேசுவின் சோதனைகளைப் பட்டியலிடாமல்,
இயேசு சோதிக்கப்பட்டார் என்று பொதுவாகக்
குறிப்பிடுகின்றார். ஆனால் மத்தேயுவோ லூக்காவோ குறிப்பிடாத
ஒன்றை மார்க் மட்டும் குறிப்பிடுகிறார். "பாலை நிலத்தில்
இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார்"
(மார்க்.1:13)
நாம் எதிர்த்துப் போராட வேண்டிய தீய சக்திகளான காட்டு விலங்குகள்
நமக்கு வெளியே மட்டுமன்றி நமக்குள்ளேயும் இருக்கின்றன. உயிரினங்களைப்
படைத்த இறைவன் அவை ஒவ்வொன்றுக்கும் ஆயுள் காலத்தை 30 ஆண்டுகளாக
நிருணயித்தார். அதில் திருப்தி அடையாத கழுதை, நாய், குரங்கு,
மனிதன் மட்டும் திருப்தியின்றி முறையிட்டன.
கழுதை கடவுளிடம் "தினம் தினம் பொதிசுமக்கிற எனக்கு 30 ஆண்டுகள்
என்பது வேதனையானது" என்றது. சரி என்று 18 ஆகக் குறைத்தார்.
"குரைத்துக் குரைத்து தொண்டை காய 30 வயதா?"
என்ற நாய்க்கு
ஆயுளை 12 ஆக்கினார். பிறகு குரங்கு "மரத்துல தொங்கித்
தொங்கி ஆடுற என் பொழைப்புக்கு 30 தேவையா?"
என்று கேட்க அதை
10 என்றாக்கினார்.
இறுதியாக வந்த மனிதன் "
அனைத்தையும் அனுபவிக்க எனக்கு 30 ஆண்டுகள்
எப்படிப் போதும்? அதனால் கழுதையில் ஒதுக்கிய 12, நாயில
குறைத்த 18, குரங்கில் குறைத்த 20 எல்லாத்தையும் எனக்குச்
சேர்த்துக் கொடுத்தா நல்லா இருக்கும்"
என்று கெஞ்ச "
சரி அப்படியே
ஆகட்டும்"
என்றாராம் கடவுள்.
அதனால்தான் மனிதன் 30 ஆண்டு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு
அடுத்த 12 ஆண்டு கழுதை மாதிரி குடும்பப் பாரத்தை சுமக்கிறான்.
அடுத்த 18 ஆண்டு நாய் மாதிரி சொத்துச் சேர்க்கவோ, சேர்த்ததைக்
காக்கவோ அலையோ அலையின்னு அலைகிறான். பிறகு 20 ஆண்டு வயதாகி
வீட்டில் மரியாதை போய் யார் என்ன சொன்னாலும் குரங்காட்டம்
ஆடித் தவிக்கிறான்.
நமக்குள்ளே மிருகக்குணம் நிறையவே இருக்கு. கடித்து குதறாத
அளவுக்கு காட்டு விலங்குகளாக எதிர்த்து நிற்கும் தீய சக்திகளுக்கு
முன்னே நிராயுதபாணியாக நிற்பதா? அந்தப் போராட்டச் சோதனைக்
களத்தில் ஏந்த வேண்டிய ஆயுதங்கள் என்ன? எபேசியருக்கு எழுதிய
திருமடலில் (6:11-17) தூய பவுல் இடைக்கச்சையாக உண்மை,
மார்புக் கவசமாக நீதி, நற்செய்தி அறிவிப்பின் ஆயத்த
நிலையாக மிதியடி, தலைச்சீராக மீட்பு, போர் வாளாக இறைவார்த்தை
என்று பட்டியலிடுவார். இவற்றில் முதல் நான்கும் தற்காப்புக்கானவைகள்.
எதிரியை வீழ்த்தக் கூடிய போர் வாளாக இருப்பது இறைவார்த்தை
ஒன்றே!
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
பிப்ரவரி 14, புதன்கிழமை, நாம் தவக்காலத்தைத்
தொடங்கினோம். பிப்ரவரி 14ம் தேதி 'காதலர் தினம்' என்று அழைக்கப்படும்
Valentine's Day அன்று நாம் திருநீற்று புதனையும் சிறப்பித்தோம்.
வாலன்டைன் (அல்லது புனித வாலன்டைன்) ஒரு வரலாற்று நபராக இருக்கலாம்
அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரைப்பற்றி கூறப்படும்
பாரம்பரியக் கதை நமக்கு உண்மை அன்பு, அல்லது உண்மைக் காதலைப்
பற்றியும், தவக்காலத்தின் பொருள் குறித்தும் சிந்திக்க உதவுகிறது.
உரோமையப் பேரரசில் பிப்ரவரி மாதத்தில், Lupercalia என்ற
திருநாள் கொண்டாடப்படும். அதைத் தொடரும் நாட்களில், இளம்பெண்களின்
பெயர்களைச் சீட்டுக் குலுக்கி போட்டு, இளைஞர்கள் தெரிவு
செய்வர். தெரிவு செய்யப்பட்ட இளம்பெண்ணும், இளைஞனும், நண்பர்கள்
என்று அறிவிக்கப்படுவர். இப்படி ஆரம்பமாகும் நட்பு, பின்னர்
காதலாகி, திருமண வாழ்வில் முடிவடையும்.
மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் கிளாடியஸ் (Claudius) மன்னனாய்
இருந்தபோது, படைக்கு ஆட்கள் சேர்ப்பது அதிகக் கடினமாய் இருந்தது.
இளைஞர்கள் தங்கள் காதலைத் துறந்து, படைகளில் சேர விரும்பவில்லை.
எனவே, மன்னன் கிளாடியஸ், இந்த பிப்ரவரி மாதத்
திருநாளையும், அதைத் தொடரும் காதல், மொழி
இவற்றையும்
தன் பேரரசில் முற்றிலும் தடை செய்தான். அக்காலத்தில் உரோமையில்
வாழ்ந்த வாலன்டைன் என்ற அருள்பணியாளர், அரசனுக்குத் தெரியாமல்,
பல இளையோருக்கு திருமணங்கள் நடத்திவைத்தார். இதை அறிந்த
அரசன், அந்த அருள்பணியாளரைக் கைது செய்து, சிறையிலடைத்து,
சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினான். பின்னர், 270ம் ஆண்டு,
பிப்ரவரி 14 அன்று வாலன்டைன் அவர்கள், தலை வெட்டப்பட்டு உயிர்
துறந்தார்.
மனித வரலாற்றில் இதுவரை நடந்த எல்லா போர்களுமே வெறுப்பை,
வெறியை வளர்த்து, வேதனைகளையே உருவாகியுள்ளன. தங்கள் காதலைத்
துறந்து, போர்வெறியை வளர்த்துக்கொள்ள, வீரர்கள் முன்வரவில்லை
என்பதை உணர்ந்த மன்னன் கிளாடியஸ், காதலை, திருமணங்களைத் தடை
செய்தான். அன்பைத் தடுத்து, வெறியை உருவாக்க தன் அதிகாரத்தைப்
பயன்படுத்தினான்.
வெறியை வளர்க்கும் இந்த அதிகாரத்தை எதிர்த்து, அன்பையும்
காதலையும் வளர்க்க, அருள்பணியாளர் வாலன்டைன் செய்தது அழகான
ஒரு முயற்சி. அந்த முயற்சியையும் அவர் பகிரங்கமாய்
செய்திருக்கலாம். அவர் நினைத்திருந்தால், அவரது 'அன்புப்
படை'யில் ஆயிரக்கணக்கான இளையோரைச் சேர்த்து போராடியிருக்கலாம்.
("
அன்புப் படை"
என்பதே முரண்பட்ட, ஒன்றோடொன்று பொருந்தாத
சொற்றொடர்). வாலன்டைன் அவர்கள், போராட்டம், கலவரம் என்று
மன்னனை எதிர்த்திருந்தால், அந்த கலவரங்களில் பல உயிர்கள்
பலியாகியிருக்கும். அன்பின் பெயரால் இந்தக் கொலைகளைச்
செய்ய விரும்பாத அந்த அருள்பணியாளர், அமைதியாக, அரசனுக்குத்
தெரியாமல் அன்பை வளர்த்து வந்தார். அற்புதங்கள் நடத்தி வந்தார்.
மனித வரலாற்றில், வெறுப்பு, வெறி ஆகிய எதிர்மறை உணர்வுகளே
படை பலம், அதிகார பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டம்
செய்து, ஆரவாரமாய் வரலாற்றை ஆக்கிரமித்து வந்துள்ளன. இன்றும்,
காசா, உக்ரைன் போன்ற இடங்களில் நடைபெறும் போர்களில், அதிகாரத்தின்
வெறியை, நேரடியாக நம்மால் காணமுடிகிறது. இந்தியாவின் அடிப்படைவாத
அரசியலில் இந்த அதிகார வெறியை மறைமுகமாகக் காண்கிறோம்.
இவற்றின் எதிர் துருவத்தில், அன்பும், அதைச் சார்ந்த அற்புதங்களும்,
அமைதியாக, ஆனால் ஆழமாக மனித வரலாற்றில் இடம் பிடித்துள்ளன.
படை பலத்தோடு ஆண்ட அரசன் கிளாடியஸுக்கு திருநாள் எதுவும்
இல்லை. அன்பை வளர்த்த வாலன்டைனுக்கு திருநாள் உண்டு. ஆனால்,
இந்த அழகான, ஆழமான பின்னணியை மறக்கவைக்கும் அளவுக்கு,
Valentine's Day என்பதற்கு, "
காதலர் தினம்"
என்ற வியாபாரப்
பெயரைச் சூட்டி, வர்த்தக நிறுவனங்கள் அடையும் இலாபத்திற்கு,
நம் இளையோர் எல்லை மீறி பலியாகி வருவது கசப்பான உண்மை. பணம்
இல்லையெனில், பரிசு இல்லையெனில், அன்போ, காதலோ இல்லை என்று
எண்ணும் அளவுக்கு, இந்த நாள் பணக்காரத் திருநாளாகி விட்டது.
அன்பு, காதல் ஆகிய புனிதமான உணர்வுகளுக்கு சாயம் பூசும்
வியாபார உலகம் சொல்வது தான் உண்மை அன்பு, உண்மை காதல் என்று
குழம்பிப் போயிருக்கும் நம் இளையோர் தெளிவு பெற இறை அருளை
வேண்டுவோம்.
அதேவேளையில், மன்னன் கிளாடியஸ் போல, இன்றைய இளையோரை
வெறுப்பில் வளர்க்கும் உலகத் தலைவர்கள், இந்தியத் தலைவர்கள்
காட்டும் பாதை, நம் இளையோர் அனைவரையும் அழிவுக்கு இட்டுச்செல்லும்
என்பதை இளையோர் உணர்ந்து, அன்பின் பாதையை தெரிவு செய்ய
தேவையான உள்ளொளியை தூய ஆவியார் வழங்கவேண்டும் என்று சிறப்பாக
செபிப்போம்.
Valentine's Day என்றழைக்கப்படும் அன்பின் திருநாளன்று
நாம் தவக்காலத்தைத் துவங்கியிருப்பதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள
வரமாக எண்ணிப்பார்ப்போம். நாம் துவங்கியுள்ள தவக்காலம்
முழுவதையும், அன்பு எண்ணங்களால், செயல்களால் நிறைப்பதற்கு
முயற்சிகள் மேற்கொள்வோம். மேலும், இந்த வழிபாட்டு காலத்திற்கு,
நாம் வழங்கியுள்ள பெயர், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
தமிழில் "
தவக்காலம்"
என்று நாம் அழைப்பதை, ஆங்கிலத்தில்
Lent அல்லது Lenten Season என்று அழைக்கிறோம்.
Lent என்ற சொல், 'lente' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது.
இலத்தீன் மொழியில், 'lente' என்றால், "
மெதுவாக"
என்று
பொருள். Lenten என்ற சொல், Lencten என்ற ஆங்கிலோ சாக்ஸன் (Anglo
Saxon) சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் 'வசந்தகாலம்'.
'மெதுவாக', 'வசந்தகாலம்' என்ற இரு சொற்களையும் இணைக்கும்போது
உருவாகும், "
மெதுவாக வரும் வசந்தகாலம்"
என்ற சொற்றொடர்,
தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.
உலகின் பல நாடுகளில், மூன்று மாதங்கள் கடும் குளிர்காலம்.
குளிர்காலத்திற்கு முன்னர், மூன்று மாதங்கள் இலையுதிர் காலம்.
எனவே, ஏறத்தாழ ஆறு, அல்லது ஏழு மாதங்கள், மரங்களும் செடிகளும்,
தங்கள் இலைகளை இழந்து, பொழியும் பனியில் புதைந்துபோகும்.
இந்த மாதங்களில், மரங்களையும், செடிகளையும்
பார்க்கும்போது, அவற்றில் உயிர் உள்ளதா, அவை பிழைக்குமா என்ற
ஐயம் மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும், சிறு
துளிர்கள், கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனிப்போர்வை,
சிறிது சிறிதாகக் கரையும்போது, புதைந்துபோன துளிர்கள், தலை
நிமிரும். வசந்தகாலத்தில் மீண்டும் தாவர உலகம் தழைத்துவரும்.
"
வசந்தம்"
- கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான்.
ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன், சவால்கள் நிறைந்த
மாற்றங்கள், பொறுமையாக நிகழவேண்டும். ஆறு மாதங்களாய் உயிரற்று
காணப்படும் தாவர உலகில், திடீரென, ஓரிரவில், மாற்றங்கள் உருவாகி,
அது பூத்துக் குலுங்குவது கிடையாது. நம் கண்ணையும் கருத்தையும்
ஈர்க்காத வகையில், மிக, மிக மெதுவாக, வசந்த காலம் வந்துசேர்கிறது.
மெதுவாக, நிதானமாக, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம், தவக்காலத்திற்கு
அழகியதோர் அடையாளம்.
அடையாளங்கள், மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தவக்காலம் என்றதும், பொதுவாக, சாம்பல், சாக்குத்துணி,
சாட்டையடி என்ற சோகமான அடையாளங்களே மனதை நிரப்பும். ஆனால்,
தவக்காலத்தை, "
மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம்"
என்ற கோணத்தில்
பார்க்க நம்மை அழைக்கிறது, திருஅவை.
மாற்றத்தை, மிகக் குறிப்பாக, மனமாற்றத்தை உருவாக்க நமக்கு
வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு, தவக்காலம். மாற்றத்தை
நமக்கு நினைவுறுத்த, தவக்காலத்தின் முதல் நாளான
திருநீற்றுப் புதனன்று நாம் பயன்படுத்தும் ஓர் அடையாளம் -
சாம்பல். அருள்பணியாளர், நம் நெற்றியில் சாம்பலைக் கொண்டு
சிலுவை அடையாளம் வரைந்தபோது, "மனம் திரும்பி நற்செய்தியை
நம்புங்கள்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். சில ஆண்டுகளுக்கு
முன், சாம்பலைப் பூசும் நேரத்தில், அருள் பணியாளர் பயன்படுத்திய
வார்த்தைகள், நம் இறுதி முடிவை நினைவுறுத்தும் வார்த்தைகளாக
அமைந்தன: "நீ மண்ணாக இருக்கிறாய்; மண்ணுக்கேத்
திரும்புவாய்."
சாம்பலை, அழிவாக, மரணமாக மட்டும் எண்ணிப்பார்க்காமல்,
புதிய மாற்றங்களைக் கொணரும் அடையாளமாகவும் காண்பதற்கு, நம்
அனைவருக்கும் தெரிந்த 'சின்டரெல்லா' (Cinderella) என்ற பாரம்பரியக்
கதை உதவியாக இருக்கும். 'சின்டரெல்லா' என்ற இந்தப் பெயர்,
இரு சொற்களின் இணைப்பு. 'Cinders', அதாவது, சாம்பல், மற்றும்,
'Puella', அதாவது, 'சிறுமி' அல்லது 'சிறிய பெண்' என்ற இரு
சொற்களும் இணைந்து உருவானதே, Cinderella.
இந்தப் பாரம்பரியக் கதையின் கருத்து, மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
"ஒருவர் அழகு மிக்கவராக, அனைவராலும் விரும்பித் தேடப்படுபவராக,
பெரும் விருந்துகளில் கலந்துகொள்பவராக மாறுவதற்கு முன்,
சாம்பலுடன், தனிமையில் நேரத்தைச் செலவிடவேண்டும். அவருக்கென
ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை, யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல்,
பணிவோடு செய்யவேண்டும்" என்பதே, சின்டரெல்லா கதை நமக்குச்
சொல்லித்தரும் பாடம். தவக்காலம், நம்மை, சாம்பலில் அமர அழைக்கிறது.
ஒரு பொருள், நெருப்பில் அழிந்ததும், உருவாவது சாம்பல். எனவே,
சாம்பலை நாம் அழிவின் அடையாளமாகவே பெரும்பாலும் கருதுகிறோம்.
ஆனால், அதே சாம்பல், உயிர்களை வளர்க்கும் உரமாகவும்,
பொருள்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்கி, அவற்றை ஒளிமயமாக்கும்
காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அழிவின் அடையாளங்களாக நாம் கருதும், சாம்பலையும்,
நெருப்பைப்போலவே, பெருவெள்ளமாக வரும் நீரையும், அழிவின் அடையாளமாகக்
கருதுகிறோம். பெருவெள்ளத்தின் அழிவிலிருந்து, அற்புதங்களை
நிகழ்த்திய இறைவனை, இன்றைய முதல் வாசகம் - தொடக்கநூல் 9:
8-15 - நமக்கு நினைவுறுத்துகிறது. நோவா காலத்தில் ஏற்பட்ட
பெருவெள்ளத்தின் இறுதியில், இறைவன், புதியதொரு
வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் அடையாளமாக வானவில்லை
விண்ணில் பதித்தார். கிறிஸ்தவ மறையில் மட்டுமல்லாமல், பல்வேறு
மறைகளிலும், கலாச்சாரங்களிலும், வானவில், நம்பிக்கையின் அடையாளமாகக்
கருதப்படுகிறது. அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின்
வார்த்தைகள் இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கின்றன:
கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது:
"
இதோ! நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும்,
பேழையிலிருந்து வெளிவந்து உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள்
எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என்
உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்... நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின்
அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்."
(தொடக்கநூல்
9: 8-13)
ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு,
சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க, திருஅவை நம்மை
அழைக்கிறது. தவக்காலத்தை, "
மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம்"
என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளையும்
கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.
"
சோதனை"
என்ற வார்த்தையைக் கேட்டதும், அவ்விடத்தை விட்டு
ஓடிவிடவேண்டும் என்ற அச்சமே நம்மில் பலருக்கு தோன்றும்.
ஆறஅமர சிந்தித்தால், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற
உண்மையை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும், இன்றைய
நற்செய்தி (மாற்கு 1:12-15) நமக்குச் சொல்லித்தரும் நல்ல
பாடங்கள்
.
தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று பகிரக்கூடிய மறையுரையைப் பற்றி
இன்னொரு அருள்பணியாளரோடு நான் பேசிக்கொண்டிருந்தேன்.
"
சோதனை"
என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் "சோதனை மேல்
சோதனை, போதுமடா சாமி" என்ற பழைய திரைப்படப் பாடலைப் பாட
ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு
வீட்டுத்தலைவன் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. நம்மால்
செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கையின்மையை, உள்ளத்தில்
ஆழமாக ஊன்றிவிடும் ஆபத்தான சொற்கள் இவை.
சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? நோவா காலத்தில்
வந்ததுபோல், தப்பித்துக்கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு
காட்டாற்று வெள்ளமாக, சோதனைகளையும், அதில் அடித்துச் செல்லப்படும்
பரிதாபமானப் பாவிகளாக நம்மையும் எண்ணிப் பார்க்கிறோம். இத்தகைய
எண்ணங்களுக்கு இடம்கொடுக்கும்போது, சோதனைகளுக்கு ஓர் அபூர்வ
சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படைக்
காரணமான தீய சக்திக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம்
கொடுப்பதால், உள்ளத்தில் நம்பிக்கை குலைகிறதே, அதுதான் இன்று
நம்மில் பலர் சந்திக்கும் மாபெரும் சோதனை. சோதனைகள் சக்தி
வாய்ந்தவைதான். மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றை எதிர்த்து
நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றிபெறவும், நமக்கு சக்தி
உள்ளது. இதையும் நாம் நம்பவேண்டும்.
நாம் வாழும் உலகில், ஆக்கப்பூர்வமான செயல்கள், ஆயிரக்கணக்கில்,
ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. ஆங்காங்கே தீயவைகளும், அழிவுகளும்
நடக்கின்றன. ஆனால், நல்ல நிகழ்வுகளை காட்டுவது,
விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை
என்பதாலும், ஊடகங்கள், மீண்டும், மீண்டும், வன்முறைகளையும்,
குற்றங்களையும், விறுவிறுப்பானச் செய்திகளாகப் படைக்கின்றன.
ஊடகங்கள் காட்டிவரும் அந்நிகழ்வுகளின் தொகுப்பையே, ஒவ்வொரு
நாளும் தொடர்ந்து பார்க்கும்போது, "ச்சே, என்ன உலகமிது" என்ற
எண்ணம் ஆழமாகப் பதிகிறது. "சோதனை மேல் சோதனை... போதுமடா
சாமி." என்று நம்மைச் சொல்லவைத்து விடுகின்றது.
இப்படி ஓர் இயலாத்தன்மை ஒவ்வொரு நாளும் நமக்கு ஊட்டப்படும்போது,
இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும்
பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற
தவறான முடிவுக்கு நாம் வருகிறோம். இதுவே இன்று நம் மத்தியில்
உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல
வேண்டும்.
தன் பணிவாழ்வைத் துவக்குவதற்கு முன்னதாகவே இயேசு சோதனைகளைச்
சந்தித்தார். சோதனைகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால்,
அவர் தன் மீட்புப் பணியைத் துவக்கியிருக்கவே மாட்டார். நல்லவேளை.
இயேசு தனக்கு வந்த சோதனைகளை இனம் கண்டு வென்றதால், துணிவுடன்
தன் பணிகளைத் துவக்கினார். அதிலும் குறிப்பாக, தன் உறவினரும்,
முன்னோடியுமான யோவான் கைது செய்யப்பட்டதை அறிந்தபின், இயேசு,
அவரது கைது நிகழ்வால் மனம் தளர்ந்து போகாமல், "கடவுளின் நற்செய்தியைப்
பறைசாற்றிக்கொண்டே கலிலேயாவிற்கு வந்தார்" (மாற்கு 1:14)
என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.
"கலிலேயாவிற்கு வந்தார்" என்ற சொற்களில் பொதிந்துள்ள
பொருள், நாம் சோதனைகளை எவ்வாறு சந்திக்கவேண்டும் என்பதற்கு
மற்றுமொரு பாடமாக அமைகின்றது. யூதேயா, கலிலேயா ஆகிய இரு பகுதிகளும்,
ஏரோது மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. தன் உறவினரான
யோவானைக் கொலை செய்தது ஏரோது என்பதை அறிந்தும், அவரது அதிகாரத்திற்கு
கீழ் இருந்த கலிலேயாவிற்கு இயேசு வந்தார். அவர் அங்கு வந்தது,
ஏரோதுக்கு சவால் விடும் தன் துணிவைக் காட்டும் ஒரு வருகை
அல்ல, மாறாக, தான் பறைசாற்ற வந்த நற்செய்தியின் சக்தியால்
அவர் அந்த முடிவை எடுத்தார்.
இயேசு சோதனைகளைத் துணிவுடன் சந்தித்து வென்றது, அதைத் தொடர்ந்து
நற்செய்தியை பறைசாற்ற சென்றது ஆகிய நிகழ்வுகள், நமக்கு நல்லதொரு
பாடமாக அமைய வேண்டும்.
நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், நம் ஒவ்வொருவருக்குள்ளும்
"
மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலமாக"
விளங்க இறைவனை
வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நிகழவிடாமல், நம்மைத் தடுத்து
நிறுத்தும் மனத்தளர்வு என்ற சோதனையை வெல்வதற்கும், மனத்தளர்வில்
ஆழ்ந்திருக்கும் இவ்வுலகிற்கு நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும்,
தூய ஆவியார் நமக்கு துணிவை வழங்கவேண்டுமென்று மன்றாடுவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
பிரியமான வாசகர்களே !
பொதுவாக கிறிஸ்தவ நம்பிக்கையின் கருவான இயேசுவின் மரணம்
உயிர்ப்பு இயற்றை முறைப்படி கொண்டாட நம்மையே நாம் தயாரிக்கின்ற
காலம் தான் தவக்காலம்.
இன்றைய வாசகங்களில் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பாலைவனத்தில்
சோதிக்கப்பட்டதையும் முதல் வாசகத்தில் கடவுள் நோவாவுடன்
செய்த உடன்படிக்கையையும் இரண்டாம் வாசகத்தில்
கிறிஸ்துவின் உடன்படிக்கையை புனித பேதுருவின்
வார்த்தையில் கொடுக்கப்பட்டிருப்பதையும் நாம்
தியானிக்கின்றோம்.
முதல் வாசகத்தில் சொல்லப்பட்டது போல நாம் உடன்படிக்கையின்
மக்களாக வாழ வேண்டும் என்றால் முதலில் சோதனைகளில் புடமிட
பட வேண்டும். மனம் மாற வேண்டும். நற்செய்தியை
வாழ்ந்தும் காட்ட வேண்டும். இதுதான் தவக்காலம் நமக்குக்
கொடுக்கின்ற அழைப்பு.
நம்முடைய வாழ்வில் மனமாற்றம். காலத்தின் கட்டாயம். மனமாற்றத்தை
நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.
சோதனைக்கு உட்படாத வண்ணம் நாம் இறைவனை சிக்கென
பிடித்துக் கொள்ள வேண்டும்.
தவக்காலத்தில் நாம் உள்ளார்ந்த பயணத்தை மேற்கொள்ள
வேண்டும் ஆன்ம சோதனைக்கு நம்மையே நாம் ஆட்படுத்தப்பட
வேண்டும். இந்த ஆன்ம பரிசோதனை நாம் இறைவனிடமிருந்து எவ்வளவு
தூரம் விலகி நிற்கின்றோம் ?2அவர் கற்பித்த அறநெறிகளிலிருந்து
எப்படியெல்லாம் விலகி நிற்கின்றோம்2 என்பதனை அறிந்து
கொள்ள உதவி செய்யும்.
திருவிவிலிய அடிப்படையில் பாலைவனம் ஒரு சோதனை களம். இறைவனும்
மனிதனும் உரையாடும் புனித களம்.
விடுதலைப் பயண நூலில் இஸ்ரேல் மக்களின் நம்பிக்கையை புடமிட்ட
இடம் பாலைவனம். பாலைவனத்தில் நம்முடைய அடிப்படை தேவைகளை
நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அதற்காக நாம் போராட
வேண்டும். வறட்சி கடுமையான வாழ்க்கையை எதிர்த்து
போராடினால் தான் நாம் விரும்பித் தேடும் ஆறுதல்
கிடைக்கும்.
முதல் வாசகத்தில் நோவா எப்படி மற்ற மனிதர்களிடமிருந்து
விலகி காணப்பட்டாரோ பாவம் செய்யாமல் கடவுளுக்குப்
பிடித்த விதத்தில் வாழ்ந்தாரோ நற்செய்தியில் இயேசுவும்
பாலைவனத்தில் பாவம் செய்யாமல் சோதனையில் விலக்கி
வாழ்கிறாரோ அதேபோல நாமும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில்
உடன்படிக்கையின் மக்களாகவும் பாவத்தை விலக்கிப்
புண்ணியத்தை சிக்கன பிடித்துக் கொண்டு உடன்படிக்கையின்
மக்களாக வாழ்வோம் கடவுளின் பிள்ளைகளாக இருப்போம்.