ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

         பாஸ்கா 5ஆம் வாரம் - ஞாயிறுழா

    திருப்பலி முன்னுரைவருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
Sr. Gnanaselvi (india)
திராட்சைக் கொடியுடன் இணைந்த கிளைகளாக வந்திருக்கின்ற அன்பு உள்ளங்களே!

இன்று திராட்சைக் கொடி ஒன்று கிளைகளாகிய நம்மை அன்போடு வரவேற்கின்றது. நமது அன்றாட வாழ்க்கையில் இறைவனோடு இணைந்து அவரோடு ஒன்றித்து வாழ வேண்டும். இறைவனுக்கு சிறப்பிடம் தரும்போது வாழ்வும் சிறப்பிடம் பெறும் என்ற நற்செய்தியை இந்த ஞாயிறு போதிக்கிறது.

கொடியோடு இணைந்த கிளைகளுக்கு மட்டுமே வளர்ச்சியும், மதிப்பும் உண்டு. கொடியைப் பிரிந்த கிளையால் பயன் ஒன்றும் இல்லை என்பது நமக்குத் தெரிந்த எளிய உண்மை.

இந்த எளிய உண்மையை ஆண்டவர் இயேசுவோடு இணைத்துப் பார்க்க, திராட்சைக் கொடி இப்போது நம்மைத் தூண்டுகிறது. இயேசுவோடு இணைந்து வாழும்போது நமது வாழ்வு ஆசீர்வாதமாகவும், செழிப்பாகவும் இருக்கும். நம்மில் சிலர் இயேசுவை நான் அதிகமாக நேசிக்கிறேன். என் வாழ்வில் ஏன் இத்தனை சோகம் மேகமாய் சூழ்கிறது என கேள்வி எழுப்புகிறோம்.

கிளைகள் அதிகம் கனிதர நறுக்கி விடப்படுவதுபோல, நம்மைச் சூழும் துன்பங்கள் மிகுந்த இன்பம் தர நமக்கு கிடைத்த வாய்ப்பு என உணர வேண்டும்;. இயேசுவோடு இணைந்து வாழும்போது நம்மால் எல்லா செயல்களையும் வெற்றியோடு செய்து முடிக்க முடியும். அவராலன்றி நம்மால் எதுவுமே செய்ய இயலாது என்பதை நாம் பங்கேற்கும் இத்திருப்பலியில் பிரசன்னமாகும் நற்கருணை நம் உள்ளத்துக்குள் உணர்த்த வருகிறது.

கொடியோடு இணைந்த கிளையாய் வாழவும், மிகுந்த கனி தர நறுக்கிவிடப்படும் போது வலியைப் பொறுத்துக் கொள்ளவும் இந்த வழிபாட்டில் செபிப்போம்.  அவர் விரும்புவது போல அவரை நேசிப்போம்! அவராகவே வாழ்வோம்!
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. உண்மையான திராட்சைக் கொடியாகிய தந்தையே!
கனிதரும் கிளைகளாக திருச்சபையில் நீர் நட்டுவைத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், திராட்சைக் கொடியோடு இணைந்து அதிக பலன் தந்து மாட்சியளிக்க வரம்பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. செயலில் உண்மையான அன்பினை எதிரொலிக்கச் சொல்லும் தந்தையே!
கடவுள் திருமுன் மாசற்றவர்களாய் கடவுள் கொடுத்த கட்டளைப்படி வாழ்பவர்களாய் நாட்டுத் தலைவர்கள் உழைக்க வரம்பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. நாங்கள் விரும்பிக் கேட்பதை எல்லாம் கொடுக்கும் தந்தையே!
நாங்கள் உம்முள்ளும், உம் வார்த்தைகள் எங்களுள்ளும் நிலைத்திருந்தால் நாங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் என்ற செய்தியை எங்களது இதயச் சுவரில் பதித்துக் கொள்ள எம் மேல் வரங்களை பொழிய, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. திராட்சைக் கொடியாக இருக்கின்ற தலைவரே!
உம்மோடு இணைந்துள்ள கிளைகள் கனிதருவது போல குடும்பங்களில் அன்பும், உறவும் வேறூன்றி இருந்தால் மனநிம்மதி, மகிழ்ச்சி பெருகும். ஒரு கொடிக்கிளையாய் கணவன், மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள், பணியாளர்கள் அனைவரும் செழித்து வளர்ந்து கனி தருவதற்கு அருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. மிகுந்த கனி தர கிளைகளை வெட்டிவிடும் தலைவரே!
துன்பம், துயரம், நோய், பிணக்குகள், தகாத செயல்பாடுகள் இவைகளால் தாக்கப்படும்போது, நறுக்கப்படும் கிளைகள் மிகுந்த கனிதரும் என்ற உணர்வை இங்கே கூடியுள்ள எங்கள் மனதில் நட்டு வைத்து துளிர்க்கச் செய்ய, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6 நல்லாயனாகிய ஆண்டவரே !
உமது திருத்தூதர்களை ஆவியின் அருளினால் அன்புப்பணியாளர்களாக அகிலமெங்கும் அனுப்பினீரே. மரணத்தை வென்று உயிர்த்த கிறீஸ்துவில் மகிழும் திருச்சபை உண்மைக்கு என்றும் சான்று பகரவும், விசேடமாக, இத்திருப்பலியில் எம்மோடு இணைந்திருக்கும் அருட்தந்தைக்கு வேண்டிய உடல், உள நலன்கள் பெற்று, உமது ஆவியின் அருளில் என்றும் நிலைத்திருக்கவும் அருள் புரிய வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 
மறையுரை சிந்தனைகள்

அந்தத் தாய்க் கோழி தன் பிள்ளைகளை அதிகம் அதிகமாய் நேசித்தது. அவைகளிடம் என்னைப் பிரிந்து எங்கும் சென்று விடாதீர்கள் என்று சொல்லி அன்புக்கட்டளை ஒன்றையும் வைத்தது. அது தன் குஞ்சுகளோடு தீனியை தேடிக் கொத்திக் கொண்டிருந்தது.

கழுகு ஒன்று வட்டமடித்ததைக் கண்டவுடன் 'கொக் கொக்' என்று கோழி குரல் எழுப்பியவுடன் குஞ்சுகள் அனைத்தும் ஓடிவந்து தாயின் இறகுக்குள் ஒளிந்து கொண்டன. மீண்டுமாக வெளியே வந்த தன் குஞ்சுகளுக்கு ஒவ்வொரு விதையாக கொத்தி கொத்தி போட்டுவிட்டு 'கொக் கொக்' என குரல் எழுப்ப குஞ்சுகள் ஓடிவந்து கொத்தித் தின்றன.
உணவு உண்பதற்கும், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கும், ஓரிடம் விட்டு வேறோரிடம் செல்வதற்கும் 'கொக் கொக்' எனக் தாய்க்கோழி குரல் எழுப்பியது. குஞ்சுகள் அதனைக் கேட்டு உணவு உண்டன. எதிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருந்தன. மகிழ்ச்சியாக தாயுடன் சுதந்திரமாக திரிந்தன.

இதை கடவுள் வேடிக்கைப் பார்த்தார். தான் படைத்த ஐந்தறிவு படைப்பு தன் பிள்ளைகளை நடத்தும் விதம் கண்டு வியந்தார். அந்த தாய்க் கோழியின் அருகில் சென்று கேட்டும் விட்டார். "உன் பிள்ளைகள் உனது குரல் ஒலி கேட்டு கீழ்ப்படிந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், நான் படைத்த ஆறறிவு மனிதர்கள் இப்படியில்லையே! என் குரல்ஒலி கேட்டு நடக்கவில்லையே" எனக் கவலைப்பட்டார்.

அப்போது மேலிருந்து கீழ்வரை கடவுளை தாய்க்கோழி உற்றுப்பார்த்து "நீ பிள்ளை வளர்க்கும் லட்சணம் அது" என்று சொல்லி விட்டு கொக் கொக் என குரல் எழுப்ப குஞ்சுகள் பின் தொடர தீனியை தேடிச் சென்றது.

கடவுளோடு இணைந்திருந்தால் நாம் கூட பாதுகாப்பாக இருப்போம்.
கடவுள் எழுப்புகின்ற குரல் ஒலியை உற்றுக் கேட்க வேண்டும்.
கடவுளின் வார்த்தையை கடைபிடிப்போரிடம் அன்பு நிறைவாக இருக்கும். அவர்களுடைய வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
ஊர்ல பஞ்சாயத்து நடந்துக்கிட்டு இருந்தப்ப, தலையில அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஒரு நாய் வந்து "ஐயா! நான் தெருவுல போயிட்டு இருந்தப்ப அதோ அந்த பெரியவர் என் தலையில குச்சியால அடிச்சிட்டார்" னு புகார் சொன்னது. பஞ்சாயத்து தலைவர், "ஏன் நாயை அடிச்சீங்க?"னு கேட்க, அந்தப் பெரியவர், "நான் தெருவுல நடந்து வந்துக்கிட்டு இருந்தப்ப எனக்கு வழிவிடாம இந்த நாய் குறுக்கே புகுந்து இடைஞ்சல் பண்ணுச்சு. அதான் அடிச்சுட்டேன். தப்புதான், ஏத்துக்குறேன் தண்டனை குடுங்க"-னார்.

பஞ்சாயத்து தலைவர் நாயிடம், "நீயே சொல்லு என்ன தண்டனை குடுக்கலாம்?"-னு கேட்க, நாய் உடனே "கோயில் தர்மகர்த்தாவா போடுங்கள்"-னு சொன்னுச்சு. எல்லாருக்கும் ஆச்சரியம். அப்ப அந்த நாய் சொன்னுச்சு. நான் முற்பிறவியில கோயில் தர்மகர்த்தாவா இருந்தேன். ரொம்ப கவனமாதான் என் கடமைகளைச் செஞ்சேன். சில சமயம் என்னையும் மீறி தப்பு பண்ணி கோயில் சொத்தை அனுபவிச்சேன். அதுக்கு தண்டனை தான் இந்த நாய்ப்பிறவி. இந்த ஆளும் நாயா பிறந்து கஷ்டபடணும்னா கோயில் தர்மகர்த்தாவா இருந்தாதான் நடக்கும்.

கொடியோடு இணைந்த கிளைகள் சருகாகுமா? கடவுளோடு இணைந்திருந்தால் எத்தனைப் பெரிய நிலையில் இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும்... நமக்குத் தெரியாமல் கூட அதை தவறாக உபயோகிக்கமாட்டோம்.

கழுகு தன் குஞ்சுகளின் மேல் பறந்து அவைகளை பறக்கும்படி தூண்டுவது போலவும், தம் இறக்கைகளை விரித்துக் குஞ்சுகளை அவற்றின் மேல் வைத்து சுமப்பது போலவும், ஆண்டவர் ஒருவரே அவர்களை நடத்தினார். - இச 32:11.

நல்ல தொடர்புடையவர், சொந்தம் வைத்திருப்பவர்கள் நல்ல நண்பர்கள் எதையும் முகம் கோணாமல் மற்றவர்களுக்கு தொடர்புடையவர்களுக்கு கொடுப்பார்கள். கேட்டும் பெற்றுக் கொள்வார்கள்.

கொடியோடு இணைந்த கிளையாய் வாழ இறைவனோடு இணைய வேண்டும்.

இறைவனோடு இணைந்து வாழும் வாழ்க்கை இனியதாக அமையும்.

இறைவனோடு தொடர்பு கொண்டு வாழும் போது கேட்பதை நிறைவாகப் பெற்றுக் கொள்ளோம். ஏனெனில் இறைவனில் விருப்பப்படி வாழ்கிறோம்.

தந்தையின் பணியை இறைமகன் செய்தார். நாமும் இறைமகன் பணியை சிறப்பாக செய்ய பணிக்கப்படுகிறோம்.

அயலாரை அன்பு செய்து நமது நடத்தையால் இறைவனை மகிமைப்படுத்த வேண்டும்.

இறைவனின் குரல் ஒலியை கேட்பதில் கவனமுடன் இருப்போம். கேட்ட குரல் ஒலியை கருத்தாய் பின்தொடர்வோம்...

கொடியோடு இணையாத கிளை கருகும். இறைவனோடு இணையாத போது நமது வாழ்வும் கருகும்;.

ஒருவர் என்னுள்ளும் நான் அவருள்ளும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனிதருவார். நான் திராட்சைக் கொடி நீங்கள் தான் கிளைகள். கொடியோடு இணைந்த கிளையாய் வாழ்வோம்...

"என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. "என்னோடு இனணந்து மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே எனக்கு பிரியமாக இருக்கிறது".

கொடியோடு சேர்ந்த கிளையும் தழைக்கும்.  பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.

நல்லாரோடு நாம் கொள்ளும் நட்பு நம்மை நல்லோராக்கும்.

அறிஞரோடு நாம் கொள்ளும் தொடர்பு நம்மை அறிஞராக்கும்;.

ஒழுக்கமானவர்களோடு நாம் கொள்ளும் தொடர்பு நம்மை ஒழுக்கமானவர்களாக்கும்.

நேர்மையாளர்களோடு நாம் கொள்ளும் தொடர்பு நம்மை நேர்மையாளராக்கும்.

கடவுளோடு சேர்ந்தால்....... யாராவோம்.? ....

யாரோடு சேர்ந்து....யாராகப் போகிறோம்?....?....?
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
பாஸ்காகாலம் 5 ம் ஞாயிறு
இணைந்(த்)திரு......
ஐ. திருத்தூதர் பணி9:26- 31
1 யோவான் 3: 18- 24
யோவான் 15: 1-8

உயிர்த்த இயேசுவில் மிகவும் அன்பான இறைமக்களே, உண்மையான திராட்சைக்கொடியாம் இயேசுவை நம்பி அவரோடு இணைந்திருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. உலகமெங்கும் இருக்கக் கூடிய மக்கள் அனைவரும் தொற்று கிருமியின் தாக்குதலுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நேரத்தில், கனி தரும் திராட்சைக் கொடியாம் இயேசு, அவரோடு நாம் இணைந்திருக்க நம்மை அழைக்கிறார். அவரோடு நாம் இணைந்திருந்தால் நாம் அடையக் கூடிய பலன்களை எடுத்துரைக்கின்றார். இணைப்பு வலிமை சேர்க்கக்கூடியது. அது இரு பகுதிகளை இணைக்கும் பாலமாக இருந்தாலும் சரி, இருகைககளை இணைக்கும் பலமாக இருந்தாலும் சரி. இணைப்பு என்பது மிக வலிமையானது. சாதாரண இரண்டு பொருட்களை, நபர்களை இணைக்கும்போதே மிக வலிமை பெறும்போது, வலிமையின் உச்சமாம் இயேசுவோடு நாம் இணைந்திருக்கும் போது அதிகப்படியான வலிமையையும் ஆசீர்வாதத்தையும் பெறுகிறோம்.
நம்முடைய இணைப்பு அவருடன் செயலளவில், சொல்லளவில், வாழ்க்கையில் இருக்க வேண்டும். இணைந்திருந்தால் மட்டும் போதாது. பிறரையும் அவரோடு இணைத்திருக்க வழிவகை செய்ய வேண்டும்.
செயலால் இணைத்திருப்போம்:

நம்முடைய செயல் நாம் யார் என்பதை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் கருவி. நம்முடைய செயல் ஒன்றும், சொல் மற்றொன்றுமாக இருக்குமானால் இவ்வுலகமும் அதிலுள்ள மக்களும் நம்மை பலனற்றவர்கள் என்று நினைக்கக்கூடும். ஆக நம்முடைய சொல்லும் செயலும் ஒன்று போல இருக்க வேண்டும். சிலர் நல்லது செய்ய வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் செய்ய மாட்டார்கள். சிலர் செயலில் அதை முதலில் செய்து விடுவார்கள். அவர்களின் செயலை பிறர் பேசுவார்கள். இயேசுவோடு நாம் இணைந்திருக்கும் போது, நம்முடைய செயல்கள் வித்தியாசமானதாக மாறும். நம்முடைய சொல்லும் செயலும் ஒன்றோடொன்று இணைந்து செல்லும். முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்ட பர்னபா, சவுலின் வாழ்க்கை போல நம்முடைய வாழ்க்கையும் காணப்படும். பர்னபா துன்ப வேளையில் சவுலுக்கு துணை நிற்கிறார். சவுலைப் பற்றி தெரியாத சீடர்களுக்கு அவருடைய மனமாற்றத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். தன்னுடைய செயலால் சவுலோடு இணைந்துஅவர் பணியை நன்கு செய்ய மிக முக்கியமான காரணராகின்றார். இயேசுவோடு அவர் கொண்டிருந்த இணைப்பு செயலில் வெளிப்படுகிறது. ஆர்ப்பரிப்புடன் அவர் தன்னுடைய இந்த செயலை செய்யவில்லை. மாறாக மிக அமைதியுடன் செய்கின்றார்.
இயேசு என்னும் உண்மையான திராட்சை செடியுடன் அவர் கொண்ட இணைப்பு பர்னபவையும் சவுலையும் எந்த விதமான எதிர்பார்ப்புமின்றி பணி செய்ய மாற்றியது. நாமும் இயேசுவோடு உண்மையாக இணையும் பொழுது நமது செயலும் வாழ்வாக மாறும்.

இன்று உலகத்தில் உள்ள மக்கள் பல்வேறு தேவைகளினால் துன்புறுகின்றனர். அவர்களுக்கும் நம்முடைய செயலால் இணைப்பைக்
காட்டுவோம். உடலாலும் உள்ளத்தாலும் வருத்தமுற்றுக் கொண்டிருக்கும் அவர்கள் நம்முடைய சிறு செயலால் இளைப்பாறுதல் அடையட்டும். நற்செயல் நல்லவர்களின் அடையாளம்.

சொல்லால் இணைந்திருப்போம்:
சொல்லால் இணைந்திருப்போம். நாம் ஒரு நாளைக்கு பல நூறு வார்த்தைகள் பேசுகிறோம். அதில் பாதி வீணான வார்த்தைகள். அவைகளை நாம் சொல்லாமலும் பயன்படுத்தாமலும் கூட இருந்திருக்கலாம். பல நேரங்களில் அர்த்தமற்ற சொற்களால் நம்மை நம்முடைய குணத்தை நாம் கறைப்படுத்துகிறோம். என்ன சொல்ல வருகிறோம் என்று தெரியாமலேயே பல நேரங்களில் பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். நமது சொற்கள் பிறருக்கு பலம் தரக்கூடியதாக இருக்கவேண்டும். மாறாக பிறரின் பலத்தை அழிக்ககூடியதாக இருக்கக் கூடாது. சிலரிடம் பேசத்துடிக்கிறோம். சிலர் பேசினாலே துடிக்கிறோம். இரண்டாவது வகை மனிதர்களாக நாம் மாறிவிடக் கூடாது. தேளுக்கு கொடுக்கில் விசம். ஒரு முறை கொட்டினால் மறுமுறை விஷம் இருக்காது. ஆனால் மனிதரின் நாக்கோ தேளின் விஷத்தை விட கொடியது. ஆனால் நமது நல்ல சொல் கொண்டு
அந்த கொடிய விஷத்தையும் மாற்றிவிட முடியும். நாம் இயேசு என்னும் உண்மையான திராட்சைக் கொடியுடன் இணைந்திருக்கும் போது நம்முடைய சொல்லில் பல மாற்றங்களை நாம் காணலாம். நம்முடைய வார்த்தைகளுக்கும் பேச்சுக்கும் அதிக முக்கியத்துவம் இருப்பதைக் காணலாம். நமது பேச்சைக் கேட்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம். நமது சொல் உண்மையின் மறு வடிவமாக மாறலாம். உண்மையைச் சார்ந்தவர்களாக நாம் மாறுவோம். உண்மை அன்பை விளங்கச்செய்யும் இயேசுவின் கனி தரும் சீடர்களாவோம்.

வாழ்வால் இணைந்திருப்போம்:
சொல் செயல் மட்டுமன்று வாழ்வாலும் நாம் அவருடன் இணைந்திருக்க வேண்டும். எவ்வாறு ஒரு செடியோ கொடியோ அதன் கிளை, இலை கனியால் இது இந்த செடியை சார்ந்தது என்று அறியப்படுகிறதோ அது போல, நாமும் நமது வாழ்வால் இயேசுவோடு இணைந்திருக்கிறோம் என்று வெளிப்படுத்த வேண்டும். நமது வாழ்வு பிறருக்கு முன்மாதிரிகை தரும் வாழ்வாக அமைய வேண்டும். இயேசுவோடு இணைந்திருக்கும் போது நம்மிடமுள்ள பல கிளைகள் தறித்து எறியப்படலாம். அவை நமக்கு தேவையற்ற கிளைகள் என்று எண்ணி அவற்றை விலக்கிவிட நாம் தயாராக இருக்க வேண்டும். கிளைகளை தறித்து எறிதல் நம்மை
நமது வாழ்வை செம்மைப்படுத்த இயேசு எடுக்கும் முயற்சி என்று எண்ண வேண்டும். பல நேரங்களில் தறித்து எறியப்படும் கிளைகளை எண்ணி வருந்தி நமது வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். தறித்து எறியப்படுவது நம்முடைய பலவீனங்கள் என்று எண்ணி வாழ்வோம். கழிக்கப்படும் கிளைகள் நாம் மேலும் பலன் தர செய்யப்படும் ஒரு முயற்சி என்று நினைப்போம். நாம் செழுமையாக வளர, நல்ல கனிதர நம்முடைய வாழ்க்கை செயல்பாடுகள் சரி செய்யப்படுகின்றன. சிலநேரங்களில் கிளைகள் ஒடித்து நெருப்பிலிடப்படுகின்றன. சில சமயங்களில் வெட்டி கீழே வீசப்படுகின்றன. எப்படி இருந்தாலும் நம்முடைய வாழ்வு இயேசுவோடு இணைந்ததாக இருக்கவே இப்படி செய்யப்படுகின்றன என்று உணர்ந்து வாழ்வோம்.

நம்முடைய வாழ்வு முறையைப் பொறுத்து நாம் எப்படிப்பட்ட செடியுடன் இணைந்திருக்கிறோம் எப்படிப்பட்ட சுவையான கனியை உலகுக்கு தர இருக்கிறோம் என்று பிறருக்கு வெளிப்படுத்துவோம். வாழ்வால் சுவை மிகுந்த கனியால் நமது இணைப்பு யாருடன் என்று உலகுக்கு வெளிப்படுத்துவோம். நமது கனி சுவை மிகுந்ததாக இருக்க வேண்டும். அதற்கு நம்முடைய இணைப்பு மிக உறுதியாக இருக்க வேண்டும்.

ஆக உண்மையான திராட்சை செடியாம் இயேசுவோடு இணைந்து சொல்லால் செயலால் வாழ்வால் பலன் கொடுப்போம். அவரை விட்டுப் பிரிந்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அவரின்றி நாம் இல்லை என்பதை உணர்ந்து நலமுடன் வாழ்வோம். நமது வார்த்தையால் பிறருக்கு வலிமை தருவோம். நம்பிக்கை தருவோம். செயலால் பிறருக்கு நல்ல முன்மாதிரிகை தருவோம். நமது இணைந்த வாழ்வால் பிறருக்கும் வாழ்க்கை தருவோம். இயேசுவோடு நாம் இணைந்து மிகுந்த கனி தர அந்தக் கனியின் சுவையால் பிறரும் கவரப்பட்டு, இயேசுவோடு இணைய வழிவகுப்போம். மிகுந்த கனி தந்து இயேசுவின் சீடராய் இருந்து தந்தையாம் கடவுளுக்கு மாட்சிமையில் மகிழ்வோம். உயிர்த்த இறைவனின் அருளும் ஆற்றலும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவரோடும் இருந்து மகிழ்வையும் மன நிம்மதியையும் நல்ல உடல் நலத்தையும் உற்சாகத்தையும் தருவதாக ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
 பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு.

இறையோடு இணைந்திரு...
நிலைத்திருந்து கனிகொடு.....

மரத்தில் இருந்த இலைக்கு போர் அடித்தது, எத்தனை நாள் தான் இந்த மரத்திலே தொங்கிக் கொண்டிருப்பது... என சலித்துக்கொண்டது. வானத்தில் பறந்த பறவைகளைப் பார்த்து, ஏக்க பெருமூச்சி விட்டது.
இலையின் ஏக்கம் எரிச்சலாக மாறியது. இந்த பாலாய்ப் போன மரத்திலிருந்து எப்போது தான் எனக்கு விடுதலை கிடைக்குமோ ..... என்று புலம்பியது. இலை ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது, இலையுதிர் காலத்தின் வடிவில். மரத்திலிருந்த இலை விடுதலைப் பெற்றது. விடுபட்ட இலை தன்னை இதுவரை தாங்கிய மரத்திற்கு விடைகூடச் சொல்லாமல், வீசிய தென்றலில் மிதந்து சென்றது. பறவையைப் போல் தானும் பறக்க முடிகிறதே ... என்று இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி ஒரு சில நொடிகளே நீடித்தன.

மரத்தை விட்டு உதிர்ந்த இலை, இறுதியில் தரையில் விழுந்தது. எப்படி முயன்றாலும் அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. தரையோடு தரையாய்ப் போனது. வீசிய காற்று அதன்மேல் புழுதியைக் கொட்டியது.
மனிதர்களின் நடமாட்டம் அதனை மேலும் கிழே அமிழ்த்தியது. இலைக்கு மூச்சுத் திணறியது. கண்களில் நீர் பொங்க , அண்ணார்ந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் மற்ற இலைகள் தென்றலில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. தன்னைப் பார்த்து கைகொட்டி சிரிப்பதைப் போல் இருந்தது இலைக்கு. நான் மரத்திலேயே இருந்திருந்தால், மற்ற இலைகளைப் போல் நானும் மகிழ்ந்து கொண்டிருப்பேனே..... ! என்று ஏங்கியது.

மரத்தோடு இணைந்திருக்கும் வரையில் இலைக்கு இன்பமான வாழ்வு. பிரிந்ததால் தாழ்வு. ஆம் எதனோடு இணைந்திருந்தால் வாழ்வு சிறக்குமோ , அதனோடு இணைந்து செல்வதே சிறப்பு. செடியோடு கொடி
இணைந்திருந்தால் தான், அந்த கொடியால் சிறப்பான கனிகளை கொடுக்க முடியும். கொடிகள் எவ்வளவு நீண்டு சென்றாலும், பல கிளைகள் பரப்பி விரிந்து சென்றாலும், செடியில் இணைந்திராவிட்டால் பலன் ஒன்றுமில்லை.

அன்பு சொந்தங்களே ..! பாஸ்கா காலத்தில் இருக்கக் கூடிய நமக்கு, இன்றைய நற்செய்தி வாசகம் " இறைவனோடு இணைந்து , நற்கனிகளை கொடுக்க வேண்டும் " என்று அழைப்பு விடுக்கிறது. இன்று நமது நாட்டை அச்சுறுத்தும்தொற்றுக் கிருமியால் , மக்கள் அச்சத்தோடும் , பயத்தோடும் , வாழ்வா...? சாவா... ? என்ற கேள்விக்குள்ளாகி போராடி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எப்படி இறைவனோடு இணைந்திருக்க முடியும்..? என்ற கேள்வி நமக்குள் எழலாம். ஏன் இத்தனை சாவு ? ஏன் இத்தனை கொடுமை ? ஏன் இத்தகைய போராட்டம்? என்று நாம் கேள்வி கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால் எந்த கேள்விக்கும் நம்மால் விடை கண்டுபிடிக்க முடியாது. தேடினாலும் கிடைக்காது. அதற்குப் பதிலாக இந்த உலகம் இறைவனுடையது, ஆக்கவும், அழிக்கவும், பண்படுத்தவும், பக்குவப்படுத்தவும் இறைவன் ஒருவரால் மட்டுமே முடியும். அவரால் மட்டுமே இந்த உலகத்தை சுகமாக, மகிழ்ச்சியாக, அமைதியாக மாற்ற முடியும் என்று எண்ணுவோம். நம்மிடம் உள்ள சோகங்கள், வருத்தங்கள், கஷ்டங்கள், கவலைகள் அனைத்தையும் அவரிடம் விட்டு விடுவோம் அவரே பார்த்துக்கொள்வார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... நமக்கும், இறைவனுக்கும் உள்ள இணைப்பை புதுப்பித்துக் கொண்டே இருப்பதுதான். தனியாளாக இருந்து நம்மால் எதையும் செய்ய முடியாது. இறைவனோடு இணைந்து செயல்படும் போது, நிச்சயமாக நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அதனால் இறைவனை சிக்கெனப் பிடித்து வாழ்க்கையில் முன்னேறிச் செல்வோம்.

தாமரை இலையில் தத்தளிக்கும் தண்ணீர் போல , நிச்சயமற்றது மனித வாழ்க்கை. மரணம் வந்து நம் எதிரில் நின்றாலும், கற்ற கல்வியும்,, பெற்ற பணமும் நமக்கு கை கொடுக்காது. ஆனால் நாம் இறைவனோடு கொண்டுள்ள தொடர்பே, நம்மை அவரிடத்தில் இணைத்து விடும். " நானே உண்மையான திராட்சை செடி, நீங்கள் அதன் கொடிகள்" என்கிறார் இறைமகன் இயேசு. நாம் இறைவனில் நிலைத்திருக்கும் போதுதான் உண்மையான கனியைக் கொடுக்க முடியும்.

இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கனி என்பது, ஏதோ பொருள் கொண்டு நம்மால் உருவாக்கப்படுவது அல்ல. மாறாக இறைவனின் பண்புகள் நம்மில் மிளிர்ந்து, அதை மற்றவர்களுக்கும் கொடுத்து வாழ்வதே, இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கனி. இக்கனியை நாம் இவ்வுலகிற்கு கொடுக்க வேண்டுமென்றால் நாம் இறைவனில் இணைந்திருக்க வேண்டும். நாம் எத்தனை பேருடன் அறிமுகமாக இருந்தாலும், ஒரு சிலபேருடன் மட்டும் தான் இணைப்பில் இருக்கிறோம். ஏனெனில் அது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என உணர்கிறோம். நிலையற்ற மனிதர்களின் இணைப்பே நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதென்றால், இவ்வுலகின் முழு முதலாய் விளங்கும் இறைவனோடு நாம் கொண்டிருக்கும் இணைப்பு நமக்கு பேரின்பத்தைத் தரும்.

நிலைத்திருந்து கனிகொடு :

நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். நான் உங்களில் நிலைத்திருப்பது போல , நீங்களும் என்னில் நிலைத்திருங்கள். நீங்கள் என்னில் நிலைத்திருந்தால் மட்டுமே உங்களால் கனிதர முடியும். இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அதன் அதன் பலனை ஒவ்வொரு நாளும் இப்பூமியில் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இயற்கைகளிடம் நீங்கள் கனிதர வேண்டும் என்று இறைவன் சொல்லவில்லை. சொல்லாமலேயே அது தன் பலனைக் கொடுக்கிறது. ஆனால் தன் சாயலில் படைத்த மனிதர்களிடம் மட்டும் தான் " நீங்கள் கனிதர வேண்டும் என்றும் அதற்காகவே உங்களை ஏற்படுத்தினேன்" என்றும் தௌளத் தெளிவாக எடுத்துரைக்கிறார் இறைமகன் இயேசு. மரத்தை நட்டவன் நற்கனிகளை எதிர்பார்ப்பது நியாயம் தானே.....

ஒருமுறை இயேசு பயணம் செய்து கொண்டிருக்கும் போது, தான் பசியாய் இருப்பதை உணர்ந்து, அத்திமரம் ஒன்றை கண்டு அதனருகில் சென்றார். அதில் இலைகளைத் தவிர, கனி ஒன்றும் இல்லாததைக் கண்டு அந்த அத்திமரத்தை சபித்தார். நாம் கிறிஸ்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் , கனிகள் இல்லாமல்,
இலைகளால் நம்மை அலங்கரித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் , நாமும் சபிக்கப்பட்ட அத்திமரத்துக்கு ஒப்பானவர்களே.

சிற்பியானது கடலோடு இணைந்திருந்தால் தான், நல்ல முத்துக்களை கொடுக்க முடியும், ஆறானது கடலோடு சங்கமித்தால் தான், வற்றாத நதியாக வலம் வர முடியும், தண்ணீர் ஆவியாகி மேகத்தோடு இணைந்தால் தான் மழையை கொடுக்க முடியும். கிளைகளெல்லாம் அதனதன் மரத்தில் இணைந்திருந்தால் தான் கனிகளை கொடுக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் இறைவனில் நிலைத்திருந்தால் தான் ,இறைவன் விருப்பும் கனிகள் என்னும் நற்பண்புகளை இவ்வுலகிற்கு கொடுக்க முடியும். நம்முடைய வாழ்க்கையையும் சிறிது அலசிப்பார்ப்போம்....... அனுதினமும் இறைவார்த்தையை வாசிக்கிறோம் , திருப்பலியில் கலந்துகொள்கிறோம்,,. அப்படியானால் நாம் எவ்வளவு
பலன் கொடுக்க வேண்டும்.? நற்கனிகளை கொடுத்துக் கொண்டிருந்தால் மகிழ்வோம்.. இல்லையென்றால் முயல்வோம்...

அத்திமரம் எல்லாக் காலத்திலும் கனி கொடுக்காது, பருவகாலத்தில் மட்டுமே கனி கொடுக்கும். நாம் எல்லாக் காலத்திலும் கனி கொடுப்பவர்களாக வாழ்வோம். இறைவனோடு நிலைத்திருந்தால் நாம் ஹீரோ..... அவரைவிட்டு நீங்கினால் நாம் ஜீரோ..... நிலைத்திருந்து கனிகொடுப்போம், நிலையில்லா வாழ்வைப் பெறுவோம்.
இறைமகன் இயேசு நம்மையும், நமது நாட்டையும், நமது குடும்பங்களையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
தந்தைக்கு மாட்சி

புது நன்மை பெறுவதற்கு முன்னர், 'சின்ன குறிப்பிடம்' அல்லது 'புதிய குறிப்பிடம்' வழியாக நாம் கற்ற மறைக்கல்வியில் முதலில் கேட்கப்படுகிற சில கேள்விகளில் ஒன்று, 'கடவுள் நம்மை எதற்காகப் படைத்தார்?' 'நாம் கடவுளை அன்பு செய்யவும், நம் செயல்கள் வழியாக கடவுளை மாட்சிப்படுத்தவும் அவர் நம்மைப் படைத்தார்' என்று நாம் இக்கேள்விக்குப் பதில் சொன்னோம். நம் வாழ்வின் இலக்கு 'கடவுளின் மாட்சி' அல்லது 'கடவுளை மாட்சிப்படுத்துவது' என்று இருக்கிறது. புனித இரேனியு, 'மனிதர்களின் மேலான வாழ்வே கடவுளின் மாட்சி' என எழுதுகிறார். மலைப்பொழிவில் தம் சீடர்களை 'உப்பு', 'ஒளி' என அழைக்கிற இயேசு, 'உங்கள் நற்செயல்களைக் கண்டு மனிதர்கள் உங்கள் விண்ணகத் தந்தையை மாட்சிப்படுத்துவார்கள்' (காண். மத் 5:16) என எழுதுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில், 'நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது' என இயேசு மொழியும் சொற்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இந்த வாக்கியத்தில் மூன்று சொல்லாடல்கள் உள்ளன: (அ) மிகுந்த கனி தருதல், (ஆ) சீடராய் இருத்தல், (இ) தந்தைக்கு மாட்சி அளித்தல். இந்த மூன்றும் சாத்தியமாக வேண்டும் என்றால், அதற்குத் தேவை ஒற்றைச்சொல்தான்: 'இணைந்திருத்தல்.'

(அ) மிகுந்த கனி தருதல்

படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் நம் முதற்பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய முதல் கட்டளை (முதல் கதையாடலின்படி), 'பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்' (தொநூ 1:28) என்பதே. மனிதர்கள் ஓய்ந்திருக்க வேண்டும் என்பதல்ல, மாறாக, தொடர்ந்து கனிதர வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாக இருக்கிறது.

பழைய ஏற்பாட்டில், 'கனி தருவதற்கு' மூன்று வழிகள் தரப்பட்டுள்ளன: ஒன்று, மனிதர்கள் தங்களுடைய உழைப்பின் வழியாக. இதையே படைப்பின் இரண்டாம் கதையாடலில் வாசிக்கிறோம். படைப்பின் இரண்டாம் கதையாடலின்படி, ஆதாம் தோட்டத்தைப் பண்படுத்துபவராக இருக்கிறார் (காண். தொநூ 2:15). இரண்டு, திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் வழியாக. 'திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர், அதைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல இருக்கிறார். பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாக இருக்கிறார்' (காண். திபா 1:2-3). மூன்று, ஆண்டவருக்கு அஞ்சுவதன் வழியாக. 'ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்பவர் பேறுபெற்றோர்! இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்' (காண். திபா 128:1-3). ஆண்டவருக்கு அஞ்சி வாழ்தல் என்றால் ஞானத்தோடு வாழ்தல், நன்னடத்தையுடன் வாழ்தல்.

ஆக, உழைப்பு, திருச்சட்டம் கடைப்பிடித்தல், நன்னடத்தை வாழ்வு வழியாக ஒருவர் கனிதர இயலும் என்பது பழைய ஏற்பாட்டுப் புரிதலாக இருக்கிறது.

ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில், புதிய வழி ஒன்றைக் கற்பிக்கிறார்: 'இணைந்திருத்தல்.' 'ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்' என்கிறார் இயேசு (காண். யோவா 15:5). ஆக, இயேசுவைப் பொருத்தவரையில் கனிதருதல் என்பது அவசியம். இயேசுவோடு இணைந்திருத்தல் வழியாக நாம் கனிதர இயலும்.

(ஆ) சீடராக இருத்தல் (மாறுதல்)

யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் இயேசுவைப் பின்பற்றுதல் அல்லது அவருடைய சீடராதல் என்பது தனிப்பட்ட நபர் தன்னுடைய விருப்பத்துடன் எடுக்கிற ஒரு தெரிவு. அத்தெரிவு ஒருநாள் மட்டும் எடுத்தல் அல்ல, மாறாக, தொடர்ந்து நிலைத்திருத்தல். சீடராக ஒருவர் தினமும் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். நம் மனித வாழ்வு போல. நம்முடைய பிறப்பின் வழியாக அல்ல, அன்றாட உருவாக்கத்தின் வழியாகவே நாம் மனிதராக மாறுகிறோம்.

(இ) தந்தைக்கு மாட்சி அளித்தல்

இறுதி இராவுணவுப் பேருரையின் இறுதியில் இறைவேண்டல் செய்கிற இயேசு, 'தந்தையே நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்' எனத் தொடங்குகிறார் (காண். யோவா 17:1). மேலும், 'நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்' என்கிறார் (காண். யோவா 17:4). வேலைகளை நிறைவேற்றியதன் வழியாக, அவற்றைத் தந்தையோடு இணைந்து நிறைவேற்றியதன் வழியாக தந்தைக்கு மாட்சி அளிக்கிறார் இயேசு.

மேற்காணும் மூன்று கூறுகளும் 'கனி தருதல்,' 'சீடராக இருத்தல்,' 'தந்தைக்கு மாட்சி அளித்தல்' நம் வாழ்வின் முப்பரிமாண இலக்கு என எடுத்துக்கொள்ளலாம். அல்லது 'தந்தைக்கு மாட்சி அளித்தல்' என்னும் ஒற்றை இலக்கு, 'கனி தருதல்,' 'சீடராக இருத்தல்' என்னும் நம் செயல்கள் வழியாக வெளிப்படுகிறது என்று பொருள் கொள்ளலாம்.

இணைந்திருத்தல் உருவகமும் அழைப்பும்

'நானே திராட்சைச் செடி' எனத் தன்னை வெளிப்படுத்துகிற இயேசு, 'நான் உங்களோடு இணைந்திருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்' எனத் தம் சீடர்களை அழைக்கிறார். யோவான் நற்செய்தியில், 'இணைந்திருத்தல்' (கிரேக்கத்தில், 'மெனேய்ன்') என்பது முதன்மையான கருத்துரு. நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசுவைப் பின்பற்றுகிற முதற்சீடர்கள் அவரோடு தங்கியிருக்கிறார்கள் ('இணைந்திருக்கிறார்கள்').

'திராட்சைச் செடி' என்பது இஸ்ரயேல் மக்களுக்கு மிகவும் அறிமுகமான ஓர் உருவகம் (காண். எசா 5:1-7, எரே 2:21அ). திராட்சைச் செடி இருத்தலின் நோக்கம் கனிதருவதற்கே. திராட்சைச் செடி கனிதர வேண்டுமெனில் கொடி திராட்சைச் செடியோடு இணைந்திருக்க வேண்டும்.

இயேசுவோடு இணைந்திருத்தல் என்றால் என்ன?

(அ) ஊட்டம் பெறுதல் கொடி செடியிடமிருந்து தனக்கான ஊட்டத்தைப் பெற்றுக்கொள்வதுபோல, இயேசுவிடமிருந்து நாம் ஊட்டம் பெறுகிறோம்.

(ஆ) இயல்பு பெறுதல் கொடியும் செடியும் வேறு வேறு என்றாலும் அவை இணைந்திருக்கும்போது இரண்டும் ஒன்று என ஆகிவிடுகின்றன. அதுபோலவே, இயேசுவோடு இணைந்திருக்கும்போது அவருடைய இயல்பை நாம் பெற்றுக்கொள்கிறோம்.

(இ) பொறுப்புணர்வு பெறுதல் செடி தன் ஆற்றலையும் வளத்தையும் தனக்கென வைத்துக்கொள்வதில்லை. மாறாக, செடியின் நுனி வரை அது அவற்றைக் கடத்திக்கொண்டே இருக்கிறது. இயேசுவோடு இணைந்திருக்கும் நானும் அவரிடமிருந்து பெறுகிற ஆற்றலையும் வளத்தையும் தொடர்ந்து மற்றவர்களுக்கு வழங்கிக்கொண்டே இருத்தல் வேண்டும்.

இயேசுவோடு இணைந்திராவிட்டால் என்ன நிகழும்?

(அ) நாம் கனிதர இயலாது.

(ஆ) நாம் உலர்ந்து விடுவோம்.

(இ) உலர்ந்த பகுதிகள் செடிக்குப் பாரமாக இருப்பதால் அவை வெட்டி எறியப்படுகின்றன. அதுபோல நாமும் இயேசுவிடமிருந்து அகற்றப்படுவோம்.

இயேசுவோடு எப்படி இணைந்திருத்தல்?

(அ) இயேசுவின் சொற்களைக் கடைப்பிடித்தல் அல்லது அவற்றுக்குச் செவிசாய்த்தல். இன்றைய முதல் வாசகத்தில், பவுல் (சவுல்) மக்களிடமிருந்து எதிர்ப்புகளைச் சந்திக்கிறார். மக்கள் அவரைக் கண்டு அஞ்சியபோது, பவுலுக்காக நற்சான்று பகர்கிறார் பர்னபா. இவ்வாறாக, பவுல் தன் அழைப்பை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள உதவி செய்கிறார். இவர்கள் வழியாக திருச்சபை வளர்ந்து அமைதியில் திளைக்கிறது.

(ஆ) இயேசுவின் புதிய கட்டளையான அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்தல். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்' என எழுதுகிறார் யோவான்.

வாழ்வியல் பாடங்கள்:

(அ) மிகுந்த கனி தருதல்

ஒரு மரம் கனி தரும்போது அது தன்னிடம் உள்ளதை தனக்கு வெளியே நீட்டுகிறது. தனக்கு வெளியே நகர்வதே கனி தருதல். நாம் பல நேரங்களில் நம் எண்ணங்களுக்குள் அல்லது தொடர் செயல்பாடுகளுக்குள் சிக்கி நிற்கிறோம். எண்ணங்கள் வழியாக, நம் செயல்கள் வழியாகவே நாம் கனிதர இயலும். நாம் எந்த வாழ்வியல் நிலையில், சூழலில் இருந்தாலும் நம் வாழ்விடத்தில் நாம் கனிதர இயலும். பிறர்நலன் நாடுதல், பிறருக்காகத் நம்மையே வழங்குதல் போன்றவற்றின் வழியாக நாம் கனிதர வேண்டும். கனிதருவதற்குப் பவுல் தயாராக இருந்தாலும், அவரைக் கண்டு மற்றவர்கள் அஞ்சுகிறார்கள், அவர்மேல் பொறாமை கொள்கிறார்கள், அவரை எதிர்க்கிறார்கள். ஆனால், துன்பத்திற்கான எதிர்த்தகைவு கொண்டிருக்கிறார்கள் சீடர்கள். எதிர்வரும் தடைகளையும் சவால்களையும் நாம் துணிந்து கடக்க வேண்டும். நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் கனிதருவதற்கே.

பெரிய பெரிய திட்டங்கள் வழியாக நாம் கனிதர வேண்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை. சின்னஞ்சிறிய செயல்கள் வழியாக பூனைக்குட்டிக்கு பால் வைப்பதன் வழியாக, நம் மேசையை ஒழுங்குபடுத்துவதன் வழியாக, நம் அறையைச் சுத்தம் செய்வதன் வழியாக, தெருவில் நம்மைக் கடக்கும் ஒருவரைப் புன்னகையுடன் வாழ்த்துவதன் வழியாக, நமக்கு எதிராகச் செயல்பட்ட ஒருவரை மன்னிப்பதன் வழியாக என நாம் கனிதர இயலும்.

கொஞ்சம் அல்ல, நிறைய, குலுங்கக் குலுங்கக் கனிதர வேண்டும் நாம்!

(ஆ) சீடராதல

மாற்கு நற்செய்தியில் பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கிற இயேசு, அவர்கள் 'தம்மோடு இருக்க வேண்டும்' (காண். மாற் 3:14) என விரும்புகிறார். இயேசுவோடு இணைந்திருத்தலே முதன்மையான சீடத்துவம். மார்த்தா-மரியா நிகழ்விலும், இத்தகைய சீடத்துவத்தை முன்மொழிகிறார் இNயுசு (காண். லூக் 10). நாம் இயேசுவின் பக்தர்களாக அல்ல, மாறாக, அவருடைய சீடர்களாக மாறுதலே நாம் தேர்ந்துகொள்ள வேண்டியது. சீடர்களாக மாறுதல் என்பது தொடர்ந்து நற்செய்தியை அறிவித்தல் முதல் வாசகத்தில் நாம் காணும் பவுல், பர்னபா போல.

(இ) தந்தைக்கு மாட்சி அளித்தல்

தன்னுடைய மகன் அல்லது மகள் நல்ல நிலைக்கு உயர்வதைக் காண்கிற தந்தை அவர்களைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறார். அவர்களுடைய நற்செயல்களும் மேன்மையான இருத்தலும் தந்தையின் மதிப்பை உயர்த்துகின்றன. தந்தைக்கு மாட்சி அளித்தல் என்பது புதல்வர், புதல்வியரின் பொறுப்பாக மாறுகிறது. நாம் எச்செயலை முன்னெடுத்தாலும், அதன் வழியாக கடவுள் மாட்சி பெறுகிறார் என்னும் எண்ணத்தில் அதை மேன்மையாகச் செய்ய வேண்டும். முப்பது மடங்கு, அறுபது மடங்கு அல்ல, மாறாக, நூறு மடங்கு கனி தருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதையே பவுல், 'நீங்கள் செய்கிற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்' (கொலோ 3:23) என அழைக்கிறார்.

இணைந்திருத்தல் என்பது செடிக்குச் சுமையாக மாறிவிடாதபடி, நாம் கனிதருவோம், சீடராவோம், தந்தைக்கு மாட்சி அளிப்போம்!

'ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்கிறார்கள். அவர்கள் இதயம் என்றும் வாழ்கிறது' (காண். திபா 22:26)

 
என்னைவிட்டு பிரிந்து

 திருத்தூதர் பணிகள் 9:26-31
 1 யோவான் 3:18-24
 யோவான் 15:1-8

உயர்ந்த மரம் ஒன்று. அந்த மரத்தில் நிறைய இலைகள் தளிர்த்திருந்தன. எல்லா இலைகளும் காற்றில் சலசலத்துக்கொண்டிருக்க ஒரு இலை மட்டும் சலசலக்காமல் விறைப்பாக நின்றது.

மரம் கேட்டது, "எல்லாரும் காற்றில் சலசலக்க நீ மட்டும் விறைப்பாக இருப்பதேன்?"

இலை சொன்னது, "நான் கோபமாக இருக்கிறேன்?"

... "ஏன் கோபம்?"

... "எனக்கு ஒரே இடத்தில் இப்படி ஒட்டிக்கொண்டு இருப்பது பிடிக்கவில்லை."

... "அப்படியா? நீ ஒட்டிக்கொண்டு இருப்பதுதானே உனக்கு நல்லது"

... "எனக்கு இப்படி இருக்க விருப்பமே இல்லை"

மரம், "சரி நீ உனக்கு விருப்பம்போல் செய். இப்போது நான் வேகமாக என்னையே ஆட்டுகிறேன். நீ தனியே பிய்ந்து போவாய். சந்தோஷமாக இரு!"

அப்படியே மரம் வேகமாக ஆட்ட, இந்த இலை மரத்திலிருந்து பிரிந்துவிடுகிறது. அப்படியே ஒய்யாரமாக அது கீழே விழ ஆரம்பித்தது. "ஆஹா, நான் பறக்கிறேனே!" என்று சொல்லிக்கொண்டு மற்ற இலைகளையும், மரத்தையும் ஏளனமாகப் பார்த்தது. கீழே விழ ஆரம்பித்த இலை சற்று நேரத்தில் தரையைத் தொட்டது. தரையின் மண் உடலில் பட்டவுடன், "ஐயோ, உடம்பெல்லாம் அழுக்காயிடுச்சே" என்று வருத்தப்பட்டது. சற்று நேரத்தில் இன்னொரு காற்றடிக்க, அது மறுபடியும் பறக்க ஆரம்பித்தது. "அழுக்கானால் என்ன? நாம்தான் பறக்கிறோமே!" என்று மகிழ்ச்சி கொண்டது. சற்று நேரத்தில் சாலை, மனிதர்களின் மிதி, வாகனங்களின் சுமை, என அனைத்தையும் தாங்கி சாலையில் ஒதுங்கியது. காலையில் சாலையைக் கூட்ட வந்த குப்பை வண்டிக்குள் சிக்கி சில மணி நேரங்களில் நெருப்புக்கு இரையாகியது.

நிற்க.

கடந்த வாரம் ஒரு ஆலயத்தில் திருப்பலி முடிந்து அங்கிருந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் அந்த ஆலயத்தில் அருள்சகோதரராக வார இறுதி பணி செய்திருப்பதால் அவரை அப்போதிருந்தே தெரியும். தன் குடும்பம், வேலை, குழந்தைகள் பற்றி பேச ஆரம்பித்த அவர், "என் வாழ்க்கை ஓடாத பஸ்சில் ஏறி அமர்ந்துகொண்டு டிக்கெட் எடுப்பது போல இருக்கிறது" என்றார். அவர் பேசிய அந்த நேரத்தில் அவரின் வார்த்தைகள் என்னில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், மாலையில் வீடு வந்தவுடன் அதைப் பற்றி யோசித்தேன். "ஓடாத பஸ்சில் ஏறி அமர்ந்து டிக்கெட் எடுப்பது" - பஸ் ஓடாது என்று தெரிந்தும் ஏன் அதில் ஏற வேண்டும்? அப்படி ஓடாது என்று தெரிந்தும் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும்? பஸ்சில் ஏறி டிக்கெட் எடுப்பதன் நோக்கமே அதோடு ஓடி இலக்கை அடைவதுதான். அப்படி என்றால் இலக்கை அடைய உதவாத பேருந்தில் ஏறி அமர்வதால் என்ன பயன்? டிக்கெட் எடுப்பதால் யாருக்கு லாபம்?

இப்படி நிறைய கேள்விகள்.

ஆக, இருபது நிமிடம் ஏறி அமர்கின்ற பேருந்தில் நாம் அமர்வதன் நோக்கமே நம் இலக்கை அடைவதுதான். இவ்வாறாக, "பேருந்தில் ஏறுதல்," "இலக்கை அடைதல்" என்னும் இரண்டு நிகழ்வுகள் இங்கே நடந்தேறினால்தான் நாம் வாங்கும் டிக்கெட்டிற்கு மதிப்பு இருக்கிறது. இல்லையா?

"பேருந்தில் ஏறுதல்," "இலக்கை அடைதல்" - இந்த இரண்டு வார்த்தைகளை, "இணைந்திருத்தல்," "கனி தருதல்" என்னும் இரண்டு வார்த்தைகளாக நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம். இயேசு தன்னை திராட்சைக் கொடியாகவும், தன் சீடர்களை அதன் கிளைகளாகவும் உருவகித்துப் பேசுகின்ற இந்த நற்செய்திப் பகுதியை நாம் பலமுறை வாசித்திருக்கின்றோம். பல நேரங்களில் இங்கே "இணைந்திருத்தல்" என்ற ஒன்றை மட்டுமே நாம் சிந்திக்கின்றோம். ஆனால், அதையும் தாண்டி மற்றொரு பரிமாணம் இருக்கிறது. அதுதான் "கனி தருதல்."

"இணைந்திருத்தல்" மற்றும் "கனிதருதல்" என்னும் சொல்லாடல்களை இன்றைய நற்செய்தியின் பின்புலத்தில் புரிந்துகொள்வோம்:

அ. இணைந்திருத்தல். "திராட்சைச் செடியொடு அதன் கொடி இணைந்திருப்பதுபோல இணைந்திருக்க வேண்டும்" என்கிறார் இயேசு. "செடி" - "கொடி" என்று புதிய மொழிபெயர்ப்பில் இருப்பது குழப்பத்தைத் தருகிறது. ஏனெனில் நம் பேச்சுவழக்கில் "செடி-கொடி" என்று நாம் சொல்வது இரண்டு வேறுபட்ட தாவர வகைகளைக் குறிக்கிறது. பழைய மொழிபெயர்ப்பில் இருக்கும், "கொடி-கிளை" சொல்லாடல்தான் தெளிவான பொருளைத் தருகிறது. மேலும், திராட்சை தானாக நின்று வளரும் செடி அல்ல. மாறாக, தூணிலோ, குச்சியிலோ, வேலியிலோ, பந்தலிலோ படரும் ஒரு கொடிதான். திராட்சைக்கொடி என்பது யூதர்களின் காதுகளுக்குப் பரிச்சயமான ஒரு உருவகம். முதல் ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் "யாவே இறைவனின் திராட்சைத் தோட்டம்" என்று அழைக்கப்பட்டனர் (காண். எரே 2:21, எசே 19:10-14, ஒசேயா 10:1, திபா 80:8-19, எசா 27:2-6). ஆக, முதல் ஏற்பாட்டில் யாவே இறைவனுக்கும், இஸ்ராயேல் மக்களுக்குமான உறவைக் குறித்துக்காட்டிய ஒரு உருவகத்தை, இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவுக்கும், சீடர்களுக்கும் குறித்துக்காட்டுவதன் வழியாக, இயேசுவை புதிய இறைவன் என்றும், சீடர்களை புதிய இஸ்ரயேல் என்றும் முன்மொழிகின்றார் யோவான் நற்செய்தியாளர். இந்த இணைந்திருத்தல் மேல்நோக்கியும் இருக்க வேண்டும். கீழ் நோக்கியும் இருக்க வேண்டும். செடியோடு இணைகின்ற கொடி மேல்நோக்கி செடியோடும், கீழ்நோக்கி இலைகளோடும் இணைதல் வேண்டும். மேல்நோக்கிய இணைதல் இல்லையென்றால் கொடி காய்ந்துவிடும். கீழ்நோக்கிய இணைதல் இல்லையென்றால் இலைகள் வாடிவிடும். இவ்வாறாக, இயேசுவின் சீடர்கள் இயேசுவோடும், ஒருவர் மற்றவரோடும் இணைந்திருக்க வேண்டும்.

ஆ. கனிதருதல். கனிதராத மரத்தால் யாருக்கும் பலனில்லை. ஒரு மரத்தில் நிறைய கிளைகள் இருந்து அவற்றில் ஒன்றில்கூட கனிகள் இல்லையென்றால் அந்தக் கிளைகள் மரத்திற்குச் சுமையாகவே கருதப்பட்டு காலப்போக்கில் தறித்துவிடப்படும். இணைந்திருப்பதன் நோக்கம் கனிதருதலில் இருக்கின்றது. "நீங்கள் கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது" என்று சொல்கிறார் இயேசு. ஏனெனில் மரத்தின் கனி மரத்திற்கு மட்டுமல்ல, மரத்தை நட்டவருக்கும், மரத்தின் உரிமையாளருக்கும் பெருமை சேர்க்கிறது. சீடர்கள் எத்தகைய கனிகளைக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இயேசு சொல்லவில்லை. சீடர்களின் நல்வாழ்வு, மகிழ்ச்சி, இறைவார்த்தைப் பணி, அமைதி, பொருளாதார முன்னேற்றம், இவை அனைத்துமே இயேசு விரும்பும் கனிகளாக இருக்கலாம்.

"என்னைவிட்டுப் பிரிந்து" உங்களால் இணைந்திருக்கவும் முடியாது, கனிதரவும் முடியாது என்கிறார் இயேசு. இவ்வாறாக, இணைந்திருத்தலுக்கும், கனிதருதலுக்கும் முதற்பொருளாய் இருப்பவர் இயேசுவே.

நாம் ஒருவர் மற்றவரோடு உள்ள தொடர்பு கம்பித் தொடர்பிலிருந்து கம்பியில்லாத் தொடர்பாக இன்ஃப்ரா ரெட், ப்ளுடீத், ஏர், வைஃபை என மாறிக்கொண்டிருக்கிறது. கம்பியில்லாத் தொடர்பும் தொடர்புதான். இன்று கடவுளோடு இணைந்திருப்பதையும், ஒருவர் மற்றவரோடு இணைந்திருப்பதையும் இன்று சில நேரங்களில் சுமையாகப் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டோம். செடி கொடியைத் தாங்குவது அதற்கு வலிக்கத்தான் செய்யும். கொடி செடியோடு இணைந்திருப்பதால் அதன் சுதந்திரம் பறிபோய்விட்டதாக அது சில நேரங்களில் நினைக்கும். ஆனால், செடியும், கொடியும் இந்த வலியை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இன்று கடவுளோடு நாம் இணைந்திருக்கத் தடையாக இருப்பது எது?

சில நேரங்களில் கடவுள் நம்மைவிட்டுத் தூரமாக இருக்கிறார். அவருக்கும் நமக்குமான இணைப்பை ஏற்படுத்துகின்ற வைஃபை பாஸ்வேர்ட் நமக்குத் தெரியாததுபோல இருக்கிறது. "அன்பு" என்ற வார்த்தையே நம்மைக் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் இணைக்கிறது என்று சொல்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:18-24): "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துபவர் ... கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்." அன்பு என்பது மிகப்பெரிய அல்லது மிக அகலமான வார்த்தை. இது நட்பு, கனிவு, பரிவு, துணிவு, பணிவு, கருணை, பாசம், தாராள உள்ளம், பொறுமை, அமைதி என பல சிறுசிறு நிலைகளில் தன்னை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறாக, இன்று "என்னைப் பிரிந்து இணைந்திருக்கவும், கனிதரவும் உங்களால் முடியாது" என்று சொல்கின்ற இயேசு அன்பை நமக்கு வாழ்வாக்கிச் சென்றுள்ளார். அந்த வாழ்வையொட்டி நம் வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் நலம்.

இது சாத்தியமா? என்று கேட்டால், "சாத்தியம்" என்று விடை தருகிறது இன்றைய முதல் வாசகம் (காண். திப 9:26-31). இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கடவுளுக்கும் (தந்தைக்கும்) சீடர்களுக்கும் நடுவே நின்று இணைப்பை ஏற்படுத்துகின்றார். அந்த இணைப்பின் விளைவாக சீடர்கள் கனிதருகின்றனர். தந்தையும் மாட்சி பெறுகின்றார். அதே போல இன்றைய முதல் வாசகத்தில் பர்னபா சவுலுக்கும் திருச்சபைக்கும் நடுவே நின்று இணைப்பை ஏற்படுத்துகின்றார்.

பர்னபா."பர்னபா" என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கலாம். அரமேயத்தில் "பர் நப்யா" என்று பிரித்தால் "இறைவாக்கினரின் மகன்" அல்லது "இறைவாக்கின் மகன்" என்றும், கிரேக்கத்தில் "ஹ்யோஸ் பராக்ளேசேயுஸ்" எனப் பிரித்தால் "ஆறுதலின் அல்லது தேற்றரவின் மகன்" என்றும் மொழிபெயர்க்கலாம் (காண். திப 4:36). சைப்பிரசு நாட்டைச் சார்ந்த யோசே என்ற இவரைத்தான் "பர்னபா" என்று மாற்றுகின்றனர் திருத்தூதர்கள். திப 14:14ல் இவரும் திருத்தூதர் என அழைக்கப்படுகின்றார். பவுலின் தூதுரைப் பயணங்களில் உடனிருந்த உற்ற தோழர் பர்னபா.

பர்னபாவின் ஆளுமை நமக்கு மூன்று விதங்களில் இங்கே வெளிப்படுகிறது:

1. இணைப்புக்கோடு. பர்னபா ஒரு இணைப்புக் கோடு - பவுலுக்கும், மற்ற தூதர்களுக்கும். இணைப்புக் கோடாக இருக்க வேண்டியவர் இரு தரப்பினரையும் அறிந்தவராக இருக்க வேண்டும். அறிமுகம் செய்து வைப்பது ஒரு கலை. எல்லாருக்கும் இது வந்துவிடாது. அறிமுகம் செய்து வைக்க நமக்கு இரண்டு அறிமுகங்கள் தேவை: முதலில் நாம் யாரை அறிமுகம் செய்து வைக்கிறோமோ அவரைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். இரண்டு நாம் யாரிடம் அறிமுகம் செய்து வைக்கிறோமோ அவர்களைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். மேலும், இந்த இரண்டு பேருக்கும் இடையே இருக்கின்ற பொதுவான குணம் என்ன என்பதை அறிந்து, இடம், பொருள், ஏவல் உணர்ந்துதான் அறிமுகம் செய்து வைக்க முடியும். சவுலைப் பற்றி மூன்று விடயங்களைச் சொல்கின்றார்: (அ) சவுல் ஆண்டவரைக் கண்டார், (ஆ) ஆண்டவர் அவரோடு பேசினார் ("அவர் ஆண்டவரோடு பேசினார்" என்றும் மொழிபெயர்க்கலாம்), (இ) தமஸ்குவில் நற்செய்தியை அறிவித்தார். ஆக, நீங்கள் இயேசுவைக் கண்டது போல அவரும் கண்டார். நீங்கள் அவரோடு, அல்லது அவர் உங்களோடு உரையாடியது போல இவரோடும் உரையாடினார். உங்களைப் போல இவர் பணியும் செய்கின்றார். ஆக, "உங்களுக்கு சரி சமமானவர் இவர்" என்று அறிமுகத்தை நிறைவு செய்கின்றார்.

2. நம்பிக்கை. "ஆண்டவர் பவுலுக்குத் தோன்றினார்" என்பதை நம்புகிறார். ஆச்சர்யமாக இருக்கிறது? கேள்வி கேட்கும் மனம் அல்ல, சரணடையும் மனமே நம்பிக்கையை நம்மில் வளர்க்கும். "அப்படியா? ஆண்டவரைப் பார்த்தீங்களா? எங்கே? எப்போ? என்ன சொன்னார்?" என்ற எந்த கேள்வியும் இல்லாமல் நம்பும் துணிச்சல் இவருக்கு எங்கிருந்து வந்தது?

3. "அவர் வளர வேண்டும். நான் குறைய வேண்டும்." பர்னபாவால் அறிமுகம் செய்யப்பட்ட பவுலே காலப்போக்கில் பர்னபாவைவிட மிக முக்கியத்துவம் பெறுகின்றார். "உன் வளர்ச்சிக்கு நான்தான் காரணம்" என்று சொல்லிக் காட்டவோ, அல்லது "அவன் வளர்ந்து விட்டான், நான் அப்படியே இருக்கிறேன்" என்று பவுல் மேல் பொறாமைப்படவோ இல்லை பர்னபா. அடுத்தவரை வளரவிட்டுப் பார்க்கின்றார்.

பர்னபாவின் இந்தப் பண்பால் இன்றைய முதல் வாசகம் தொடர்ந்து, திருச்சபை வளர்ச்சி பெற்றது (திப 9:31) என நிறைவு பெறுகிறது.

இவ்வாறாக, இயேசுவைப்போல நாம் இணைந்திருத்தலும், கனிதருதலும் இயலும் என்பதை நமக்கு முன் பர்னபா என்னும் ஆளுமை வாழ்ந்துகாட்டிவிட்டது.

இறுதியாக, இந்தப் பர்னபாவின் பண்போ, அல்லது இயேசுவின் அன்போ நம்மிடம் இருந்தது என்றால்,

நாமும் அவரோடு இணைந்திருக்கவும், கனிதரவும் முடியும்.

ஏனெனில் அவரைப் பிரிந்து ... அவரைப் பிரிந்தால் வெற்றிடமே!
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
இறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம்!

டைட்டானிக் கப்பலைக் குறித்துச் சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி.

அந்தக் கப்பலை வடிவமைத்த பொறியாளர்கள் "டைட்டானிக் கப்பலுக்கு இணையான கப்பல் இந்த உலகத்தில் எங்கும் கிடையாது, இதனை இயேசு கிறிஸ்து நினைத்தாலும்கூட மூழ்கடிக்க முடியாது' என்ற ஒருவிதமான ஆணவத்தில் வடிவமைத்தார்கள். அதனால் அதன் பக்கவாட்டில் "NOT EVEN CHRIST COULD MAKE IT SINK, NO GOD, NO POPE, NEITHER EARTH NOR HEAVEN CAN SWALLOW HER UP' என்றெல்லாம் எழுதி வைத்தார்கள்.

இதனைப் பார்த்த அந்தக் கப்பலில் பணியாற்றிய ஒருசில இறை நம்பிக்கையாளர்கள், "இப்படியெல்லாம் தயவு செய்து எழுதவேண்டாம், இறைவனுக்கு முன்பாக நாமெல்லாம் ஒன்றுமில்லை" என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அவர்களோ, அதையெல்லாம் கேட்காமல், "நாம் யாரென்று இந்த உலகத்திற்குக் காட்டுவோம், அதனால் எழுதியது எழுதியதாகவே இருக்கட்டும்" என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள்.

குறிப்பட்ட நாளில் டைட்டானிக் கப்பல் கடலில் பயணமானது. தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் உலகத்தில் இருக்கும் மிகப்பிரமாண்டமான கப்பலில் பயணிக்கின்றோம் என்ற ஒருவிதமான மமதையோடு பயணம் செய்தார்கள். திடிரென்று கப்பல் பனிப்பாறையின் மீது மோதி மூழ்கத் தொடங்கியது. கப்பல் பனிப்பாறையில் மோதிய பகுதியில்தான் "NO GOD NO POPE' என்று எழுதப்பட்டிருந்தது. ஆம், "கடவுளே வேண்டாம், ஏன் கடவுளைவிட நாங்கள் பெரியவர்கள் என்ற ஆணவத்தோடு செயல்பட்டதால், உலகத்திலே மிகப்பெரிய சொகுசுக் கப்பல் என்று மார்தட்டுக்கொண்டு பயணப்பட்ட டைட்டானிக் கப்பல் கடைசியில் பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டது.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்வார்கள். ஆம், ஆண்டவரின் துனையின்று நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் "இணைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம் என்னும் சிந்தனையைத் தருகின்றது. நாம் அதனைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய நவீன உலகம் மிகவும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றது. பரபரப்பான இந்த உலகத்தில் ஒருசிலர் கடவுளை நினைப்பதற்கு "ஏது நேரம்' என்று வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இன்னும் ஒருசிலர் கடவுளையே மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கடவுளே வேண்டாம், எல்லாம் நாமே செய்துவிடலாம் என்ற ஒருவிதமான செருக்கோடு வாழ்கின்றபோது எத்தகைய அழிவினை நாம் சந்திக்கின்றோம் என்பதற்கு மேலே சொல்லபட்ட நிகழ்வே மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது. ஆகையால், நாம் இந்த உலகத்தில் இருப்பதற்கும் இயங்குவதற்கும் இறையருளானது, அவருடைய துணையானது தேவையாக இருக்கின்றது. நாம் எப்படி இறைவனோடு இணைந்திருப்பது என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து கூறுவார், "உண்மையான திராட்சைக் கொடி நானே... நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திரட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது". ஆம். நாம் மிகுந்த கனிதரவேண்டும் என்றால் இறைவனோடு/ இயேசுவோடு இணைந்திருக்கவேண்டும். இறைவனோடு எந்தெந்த வழிகளில் இணைந்திருக்கலாம் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவனோடு எப்போதும் இணைந்திருப்பதற்கான முதன்மையான வழி இறைவேண்டல் அல்லது ஜெபம் செய்வது ஆகும். ஆண்டவர் இயேசு சென்ற இடங்களில் எல்லாம் நன்மைகள் பலபுரிந்து, ஆண்டவருடைய வார்த்தையை மிகத் துணிச்சலோடு எடுத்துரைப்பதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தது அவர் அனுதினமும் செய்துவந்த ஜெபம்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் நாள்முழுவதும் செய்துவந்த பல்வேறு பணிகளுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது அவர் செய்துவந்த ஜெபம்தான். ஆகையால், நாம் இறைவனோடு இணைந்திருப்பதற்கு ஜெபம்தான் முதன்மையான வழி என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஜெபம் இறைவனோடு இணைந்திருப்பதற்கு முதன்மையான வழி என்று சிந்தித்த நாம் இதில் இருக்கின்ற இன்னொரு பிரச்சனையையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில் நிறையப் பேர் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஜெபம் மட்டுமே போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், விசுவாச வாழ்விற்கு ஜெபம் மட்டும் போதுமானது கிடையாது, ஜெபத்தோடு செயலும் இணைந்திருக்கவேண்டும். அதைதான் யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில், "நம்பிக்கை செயல்வடிவம் பெறவில்லை என்றால், அது தன்னிலே உயிரற்றது" என்கின்றார் (யாக் 2:17).

இறைவனோடு இணைந்திருப்பதற்கான இரண்டாவது வழி இறைவார்த்தையைக் கேட்டு நடப்பது ஆகும். யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், "கடவுளுடைய கட்டளையைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கின்றார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கின்றார்" என்கின்றார். இதுதான் உண்மை. யாராரெல்லாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்களோ அவர்களோடு கடவுள் இருந்தார் என்பதற்கு நாம் பல உதாரணங்களை/ எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தபோது அவர்களோடு கடவுள் இருந்தார். என்றைக்கு அவர்கள் கடவுளின் கட்டளையை மறந்து, அதாவது யாவே கடவுளை மறந்துவிட்டு பாகாலை வழிபடத் தொடங்கினார்களோ அன்றைக்கே அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து போனார்கள், அது மட்டுமல்லாமல், அவர்கள் வேற்று நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். ஆகவே, இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு இருந்தபோது, கடவுள் அவர்களோடு இருந்தார் என்பதையும், அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து சென்றபோது, கடவுள் அவர்களை விட்டுப்போனார் என உறுதியாகச் சொல்லலாம்.

இன்னொரு உதாரணம் மூன்று ஞானிகள். மூன்று ஞானிகள் குழந்தை இயேசுவைக் காணவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வந்தபோது, விண்மீன் அவர்களுக்கு முன்பாகச் சென்று, அவர்களை வழி நடத்தியது. எப்போது அவர்கள் தீயவனாகிய ஏரோதின் உதவியை நாடினார்களோ, அப்போது விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்து போனது. அவர்கள் ஏரோதின் அரண்மனையை விட்டு வெளியே வந்தபோதுதான் விண்மீனானது அவர்களுடைய பார்வைக்குத் தெரிந்தது. எனவே, நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது கடவுளோடு என்றும் இணைந்திருக்கின்றோம், கடவுள் நம்மோடு இணைந்திருக்கின்றார் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

கடவுளோடு ஜெபத்தின் வழியாகவும், அவருடைய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாகவும் அவரோடு இணைந்திருக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், கடவுளோடு இணைந்திருப்பதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். நற்செய்தியில் இயேசு கூறுவார், "ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்" என்று. ஆம், நாம் கடவுளோடு இணைந்திருக்கின்றபோது நாம் மிகுந்த கனிதருவோம் என்பது ஆழமான உண்மை. நிறையப் புனிதர்கள், இறையடியார்கள் யாவரும் மிகுந்த கனிதரும் வாழ்க்கை வாழ்ந்ததற்குக் காரணம் அவர்கள் கடவுளோடு இணைந்திருந்ததே என்று நாம் உறுதிபடச் சொல்லலாம்.

ஒரு கிறிஸ்தவக் கிராமத்தில் ஷீலா என்னும் கைம்பெண் ஒருத்தி இருந்தாள். கணவனை இழந்த அவள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டாள். தன்னுடைய பிழைப்பிற்காக அவள் செய்துவந்த வேலையும்கூட அவ்வளவு பெரிய வேலையும் கிடையாது, துணி தைக்கும் வேலையைத்தான் செய்துவந்தாள். அதிலிருந்து அவளுக்கு சொற்ப வருமானம்தான் கிடைத்தது. இதில் அவள் வசித்துவந்த வீடு வேறு வாடகைவீடு. வீட்டுக்காரர் வேறு மாதமாத வந்து வாடகைப் பணத்தைக் கொடு என்று நச்சரித்து வந்தார். இதனால் அவளுடைய வாழ்க்கையே மிகவும் திண்டாட்டமாய் போனது. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அவள் அனுதினமும் ஆலயத்திற்குச் செல்லத் தவறுவதில்லை, தன்னால் முடிந்த உதவிகளை தன்னைவிட வறியவர்களுக்கு செய்யத் தவறியதில்லை. இதைவிட முக்கியமான விஷயம் என்னவெனில் அவள் ஒவ்வொருநாளும் துணை தைக்கும் வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக விவிலியத்தை வாசித்து, அதைப் பற்றி சிறுது நேரம் தியானித்துவிட்டுத்தான் தொடங்குவாள்.

ஒருநாள் அவள் தன்னுடைய வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக விவிலியத்தை எடுத்து வாசிக்கும்போது அதில் நல்ல சமாரியன் உவமை வந்தது. அந்த உவமையைப் படித்ததும் அவளுக்கு யாராவது ஒருவருக்கு உடனடியாக உதவி செய்யவேண்டும் என்று தோன்றியது. யாருக்கு உதவி செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தது பக்கத்துத் தெருவில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த தன்னுடைய தோழியின் ஞாபகம்தான் வந்தது. உடனே ஷீலா தன்னுடைய வீட்டிலிருந்த கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொண்டு தோழியின் வீட்டுக்குப் புறப்பட்டாள். ஷீலாவைப் பார்த்ததும் படுக்கையில் கிடந்த அவளுடைய தோழி மிகவும் சந்தோசப்பட்டாள். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பேச்சின் இடையே ஷீலாவின் தோழி அவளிடம், "நீ என்னைப் பார்க்க வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது... சில நாட்களுக்கு முன்பாக பக்கத்தில் புதிதாக ஒரு வீடு வாங்கினேன். ஆனால், நான் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த பிறகு அந்த வீட்டில் குறியேற முடியாமலே போய்விட்டது. நீ வாடகை வீட்டில்தானே இருக்கின்றாய், எதற்காக நீ உன்னுடைய வாடகைவீட்டைக் காலிசெய்துவிட்டு, நான் வாங்கியிருக்கும் வீட்டில் குடியிருந்துகொண்டு என்னைக் கவனித்துக்கொள்ளக் கூடாது என்றார். இதைக் கேட்ட ஷீலாவிற்கு கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது. அவள் தன்னுடைய தோழி கேட்டதற்கு சரியென்று சொல்லிவிட்டு புது வீட்டில் குடி புகுந்தார். ஷீலா இறைவன் தனக்குச் செய்த இந்த உதவியை நினைத்து அவரை வாயாரப் புகழ்ந்தார்.

இறைவனோடு இணைந்திருக்கும்போது நம்முடைய வாழ்க்கை கனிதரக்கூடியதாகும், ஆசிர்வாதம் மிக்கதாகும் இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும்போது நாம் ஜெபத்தின் வழியாகும், இறைவார்த்தையைக் கேட்டு நடப்பதன் வழியாகவும் இறைவனோடு இணைந்திருப்போம், அதன்வழியாக மிகுந்த கணிதருகின்றவர்களாவோம், இறையருளை நிறைவாய் பெறுவோம்.


 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 ஒவ்வொரு மதமும்‌ இந்த உலகிலே சில அடையாளங்களால்‌, குறிக்கப்படுகின்றன. இனம்‌ கண்டு கொள்ளப்‌ படுகின்றன. சிலுவை என்றால்‌ கிறிஸ்தவம்‌, திரிசூலம்‌ என்றால்‌ இந்து மதம்‌, வளர்பிறை (பிறைச்சந்திரன்‌) என்றால்‌ இஸ்லாமிய மதம்‌ என அடையாளம்‌ காட்டப்படுகின்றன. அதேபோல்‌ காவி உடை என்றால்‌ இந்து, வெள்ளை தொப்பி என்றால்‌ முஸ்லீம்‌, வெள்ளை அங்கி என்றால்‌ கிறிஸ்தவம்‌ எனவும்‌ அடையாளம்‌ காண்கிறார்கள்‌. அதேபோல்‌ ஆறுமுகம்‌ என்றால்‌ இந்து, அப்துல்‌ என்றால்‌ முஸ்லீம்‌, அந்தோணி என்றால்‌ கிறிஸ்தவன்‌ எனவும்‌ மக்கள்‌ நினைக்கிறார்கள்‌.

ஆனால்‌ அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே! நீ ஒரு கிறிஸ்தவன்‌. நான்‌ ஒரு கிறிஸ்தவன்‌ என்பதற்கு உண்மையான அடையாளம்‌ என்ன என்பதை உணர வேண்டும்‌. இது ஆடையாலோ, பெயராலே அல்லது அடையாளங்களாலோ அமைவது மட்டும்‌ அல்ல. மாறாக எந்த நிலையில்‌ ஒருவன்‌ வாழ்கிறான்‌, எந்த நிலையில்‌ இறைவனோடு உறவு கொண்டிருக்‌ கிறான்‌? எந்த நிலையில்‌ இறைவனின்‌ கட்டளையைக்‌ கடைப்பிடிக்கிறானோ அந்த நிலையில்தான்‌ அவன்‌ உண்மையான இறை பக்தன்‌ என்பதை வெளிப்படுத்த முடியும்‌. இன்று வாசித்த வாசகங்களில்‌ இவைதான்‌ நமக்குப்‌ பதிலாக அமைந்துள்ளன.

புனித பவுல்‌ வாழ்க்கையைப்‌ பற்றி வாசிக்கக்‌ கேட்டோம்‌. ஆரம்பத்தில்‌ ஆதி கிறிஸ்தவர்கள்‌ புனித பவுலை இயேசுவின்‌ சீடனாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்‌. ஏனெனில்‌ அவர்‌ வேத விரோதியாக இருந்தார்‌. பர்னபாஸ்‌ பவுலைத்‌ திருத்தூதர்களிடம்‌ - கூட்டிச்‌ சென்ற போதும்கூட ஏற்றுக்கொள்ளத்‌ தயங்கினார்கள்‌. ஆனால்‌ பவுலின்‌ புதிய வாழ்வும்‌, அவர்‌ வீரத்தோடும்‌, துணிவோடும்‌ போதித்த நிலையும்தான்‌ திருச்சபையை வளரச்‌ செய்தது.

புனித யோவான்‌ தான்‌ எழுதிய திருமடலிலே கூறுவதுபோல்‌ சொல்லிலும்‌, பேச்சிலும்‌ அல்ல. மாறாக செயலில்‌, கடவுளின்‌ கட்டளையைக்‌ கடைப்பிடிப்பதில்தான்‌ உண்மை அன்பை விளங்கச்‌ செய்ய முடியும்‌ (1 யோவா. 3:18, 19) என்கிறார்‌.

இந்த உண்மையான வாழ்வை, உறவை மிக அழகாக ஆண்டவர்‌ இயேசு உவமை மூலமாக, அடையாளம்‌ மூலமாகத்‌ தருகின்றார்‌.

நானே உண்மையான திராட்சைச்‌ செடி, நீங்கள்‌ அதன்‌ கொடிகள்‌ (யோவா. 15:1) என்கிறார்‌. ஒரு மரத்தின்‌ கிளைகள்‌ அந்த மரத்தோடு இணைந்திருந்தால்தான்‌ அது வளரும்‌. மலரும்‌, கனியும்‌ தர முடியும்‌.

ஒருநாள்‌ ஒரு மகன்‌ தன்‌ தாயைப்‌ பார்த்து கோபத்தில்‌ கேட்டான்‌. உனக்கும்‌ எனக்கும்‌ என்ன உறவு என்றான்‌. தாயோ அமைதியாக தொப்புழ்‌ கொடி உறவு என்றாள்‌. தொப்புழ்‌ கொடிதான்‌ தாயையும்‌ சேயையும்‌ இணைக்கிறது. தாயோடு அக்கொடி இணைந்திருந்தால்தான்‌ குழந்தை வயிற்றில்‌ உயிரோடு இருக்க முடியும்‌. அது அறுந்துவிட்டால்‌ குழந்தை உயிரோடு இருக்காது.  இதேபோல்‌ நாம்‌ ஆடை அலங்காரம்‌ செய்து பொட்டு இன்றி, பூவின்றி வந்தும்‌, கிறிஸ்துவோடு இணைந்திராவிட்டால்‌ என்ன பயன்‌? எனவேதான்‌ இயேசு சொன்னார்‌ ஒருவன்‌ என்னுள்ளும்‌ நான்‌ அவனுள்ளும்‌ இணைந்திருந்தால்‌ அவன்‌ மிகுந்த கனி தருவான்‌. _ என்னை விட்டுப்‌ பிரிந்து உங்களால்‌ ஒன்றும்‌ செய்ய முடியாது (யோவா. 15:5).

இந்த இணைந்து வாழ்விற்கு நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌.

ஆண்டவர்‌ இயேசு: நான்‌ உங்களை அன்புசெய்தது போல, நீங்களும்‌ ஒருவர்‌ மற்றவரிடம்‌ அன்பு செய்யுங்கள்‌ (யோவா. 13:34) _ என்ற கட்டளையைத்‌ தருகிறார்‌.

கொடுங்கள்‌ உங்களுக்குக்‌ கொடுக்கப்படும்‌ (லூக்‌. 6:38) என்கிறார்‌ இயேசு. இதை விளக்கும்‌ வகையில்தான்‌ அன்னை தெரசா அழகாகச்‌ சொன்னார்கள்‌: அமைதியின்‌ கனி செபம்‌ - செபத்தின்‌ கனி அன்பு. அன்பின்‌ கனி சேவை, கொடுத்தல்‌. கொடுத்தலின்‌ கனி மகிழ்ச்சி என்றார்கள்‌. இது ஆழமான, அழகான வாழ்க்கை நெறி.

இதைத்தான்‌ தாயுமானவர்‌ சொன்னார்‌:


அன்பர்‌ பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்‌ இன்ப நிலை தானே வந்து எய்தும்‌ பராபரமே

அன்பு இல்லாமல்‌ பிறருக்குக்‌ கொடுக்க முடியும்‌. ஆனால்‌ கொடுக்காமல்‌ அன்பு செய்ய முடியாது. எனவேதான்‌ அன்பே உருவான இறைவன்‌ நம்‌ வாழ்வுக்குத்‌ தேவையான அனைத்தையும்‌ கொடுப்பதோடு, நமது மீட்புக்காகத்‌ தன்‌ ஒரே மகனையே கொடுத்தார்‌ (யோவா. 3:16).

பசுவின்‌ பால்‌ முழுமையாக கன்றிற்கில்லை பூவின்‌ நறுமணம்‌ முழுவதும்‌ சோலைக்கில்லை குளத்து நீர்‌ முழுவதும்‌ குளத்திற்கில்லை ' மரத்தின்‌ கனி முழுவதும்‌ மரத்திற்கில்லை யாழின்‌ இசை முழுவதும் யாழிற்கில்லை

இவ்வாறு இயற்கையே பிறருக்காகப்‌ பயன்படும்போது நாம்‌ மட்டும்‌ நமக்காக வாழ்ந்தால்‌ பயன்‌ என்ன?
தனக்காக வாழ்பவன்‌ மிருகம்‌
தனக்காகப்‌ பிறருக்காக வாழ்பவன்‌ மனிதன்‌

பிறருக்காகவே வாழ்பவன்‌ - தெய்வம்‌
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
நாம் புல்லாங்குழல் ஆவோம்.

இன்றைய நற்செய்தியிலே, நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் கிடைக்கும் (யோவா 15:7) என்கின்றார் இயேசு. இயேசுவின் வார்த்தைகளைக் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப் பார்த்தால் மூன்றெழுத்து மிஞ்சும். இயேசுவுக்கு மூன்றெழுத்து; அவர் போதித்த வேதத்திற்கும் மூன்றெழுத்து. அந்த மூன்றெழுத்துதான் அன்பு என்னும் மூன்றெழுத்து. இந்த அன்பு நமக்குள்ளிருந்தால் நாம் விரும்பிக் கேட்பதையெல்லாம் அன்பே உருவான கடவுள் (1 யோவா 4:8) நமக்குத் தருவார்.

அன்பு என்றால் என்ன? என்பதற்கு இதோ ஒரு சிறு விளக்கம்.

அப்போது நான் 9-ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். ஆண்டுத் தேர்வு எழுதும் நேரம். திடீரென டைஃபாய்ட் காய்ச்சல். படுத்த படுக்கையானேன். 21 நாள்கள். நிலமை மோசமாகிக்கொண்டே சென்றது. ஒரு நாள் இரவு! அது மறக்கமுடியாத இரவு! மணி 12 இருக்கும். என்னால் மூச்சுவிட முடியவில்லை! நான் செத்துவிடுவேனோ என்று பயந்தேன். அஞ்சி, அம்மா என்றேன். உடனே என்னப்பா? என்ற பதில் வந்தது! எல்லாரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் என்னுடைய அன்னை மட்டும் உறங்கவில்லை. என் பக்கத்திலேயே படுத்திருந்தார்கள். நான், செத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கின்றது என்றேன். என் தாயோ, நீ சாகமாட்டாய் பயப்படாதே என்றார்கள்.

அமைதியாக குழந்தை உறங்க தாய் உறங்காமலிருப்பதற்குப் பெயர்தான் அன்பு! அஞ்சுகின்றவர்களைப் பார்த்து, அஞ்சாதே! என்று சொல்வதற்குப் பெயர்தான் அன்பு! ஆறுதல் தேடுகின்றவர்களின் அருகிலிருப்பதற்குப் பெயர்தான் அன்பு!

அச்சப்பட்ட இடையர்களைப் பார்த்து, அஞ்சாதீர்கள் (லூக் 2:10) என்ற வானதூதரைப் போல வாழ முன்வருவதற்குப் பெயர்தான் அன்பு!

தம்மை நோக்கி மன்றாடுகின்றவர் அனைவரின் பக்கத்திலும் இருக்கும் ஆண்டவரைப் போல வாழ முன்வருவதற்குப் பெயர்தான் அன்பு!

யாரால் அன்பு செய்ய முடியும்? ஒரு கோழையால் ஒருபோதும் அன்பு செய்யமுடியாது! அன்பு செய்ய ஆசைப்படுகின்றவர்களுக்கு சவுலிடமும், பர்னபாவிடமும் நின்று நிலவிய துணிச்சல் வேண்டும்.

கடவுளிட மிருந்து நமக்கு வேண்டிய அருளாதாரத்தையும், பொருளாதாரத்தையும் நாம் பெற்று வாழ ஓர் அழகான வழி அன்பு வழி (1 யோவா 3:22-23).

நாம் அன்பினால்
வார்க்கப்பட்ட புல்லாங்குழலாவோம்!
இறைவன் அவரது தெய்வீகக் கீதத்தை
அதன் வழியாக இசைக்கட்டும்!

மேலும் அறிவோம் :

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).

பொருள் : அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
பெறுவதை விட தருவதே இன்பம்

ஓர் ஊரில் விவசாயி ஒருவர் வேளாண்மையில் தலைகீழ் புரட்சியை ஏற்படுத்த விரும்பினார் வெங்காயத்தை நறுமணமிக்க வாசனைப் பொருளாக மாற்ற நினைத்தார். எனவே கற்பூரத்தினால் பாத்திகட்டி, கஸ்தூரியை உரமாகப்போட்டு, பன்னீரைப் பாய்ச்சி வெங்காயத்தை நட்டார். வெங்காயம் தனக்குரிய நாற்றத்தை இழந்து விட்டு, கற்பூரம், கஸ்தூரி, பன்னீர் ஆகியவற்றின் வாசனைகளை ஈர்த்து ஒருவாசனைப் பொருளாக அது உருவெடுக்கும் என்று கனவுகண்டார். வெங்காயம் நன்றாக உருண்டு, திரண்டு வளர்ந்தது. ஆனால், அதைப்பிடுங்கி முகர்ந்து பார்த்தபோது, அதில் கற்பூரத்தின் வாசனையோ கஸ்தூரியின் வாசனையோ பன்னீரின் வாசனையோ கடுகளவும் காணப்பட வில்லை, மாறாக, வெங்காயத்தின் இயல்பான நாற்றம் இம்மியளவும் குறையவில்லை. 'சென்மப் புத்தியைச் செருப்பால் அடித்தாலும் போகாது' என்ற பழமொழி உண்மையானது.

கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் எவ்வளவோ செய்தும் அவர்களது திமிர்பிடித்த குணம் சிறிதளவும் மாறவில்லை , இந்த அவலநிலையைக் கடவுள் திராட்சைத் தோட்டக் கவிதை வாயிலாக இறைவாக்கினர் எசாயா நூலில் எடுத்துரைக்கிறார். ஒருவர் தனது திராட்சைத் தோட்டத்தை நன்றாகப் பண்படுத்தி, நல்ல இனத் திராட்சைக் கொடியை நட்டு, அது நற்கனிகளைத் தரும் என்று எதிர்பார்த்தார், ஆனால் திராட்சைக் கொடியோ காட்டுக் கனிகளைக் கொடுத்தன. இஸ்ரயேல் மக்கள்தான் அத்திராட்சைத் தோட்டம், கடவுள் அவர்களிடம் எதிர்பார்த்த கனிகள் நீதியும் நேர்மையும்; ஆனால் அவர்கள் கொடுத்த கனிகளோ இரத்தப்பழியும் முறைப்பாடு(எசா 5:1-7).

இப்பின்னணியில் நாம் இன்றைய நற்செய்திக்கு விளக்கம் காணவேண்டும். இஸ்ரயேல் மக்கள் உண்மையான திராட்சைக் கொடி அல்ல. இயேசு, "நானே உண்மையான திராட்சைச்செடி" என்கிறார். (யோவா 15:1). அவர் தான் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றி, மீட்பின் கனியை வழங்கினார், இயேசுவின் சீடர்கள் அவரில் நிலைத்திருந்து, அவரோடு இணைந்திருந்து நற்கனி தரவேண்டும். அவரை விட்டுப் பிரிந்து அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.

இயேசுவின் சீடர்களாகிய நாம் அவருடைய அன்பில் நிலைத்திருந்து, அவருடைய வார்த்தைகள் நமக்குள் நிலைத்திருந்து மிகுந்த கனிதர வேண்டும். அக்கனி நிலைத்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் கடவுளை மாட்சிமைப்படுத்த வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும்.

நாம் தரவேண்டிய கனியோ அன்பின் கனியாகும். "நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே எள் கட்டளை" (யோவா 15:17). இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் கூறுவது போல, நாம் இயேசுவில் நம்பிக்கை வைத்து, அவருடைய அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்தால் நாம் கடவுளோடு இணைந்து வாழ முடியும், கடவுளும் நம்மோடு இணைந்திருப்பார் (1 யோவா 3:23-24).

நாம் இயேசுவோடும் இயேசு நம்மோடும் நாம் விண்ணகப் புனிதர்களுடனும் ஒருவர் மற்றவருடனும் இணைந்திருப்பது தான் 'புனிதர்களின் தோழமை' என்னும் கோட்பாடாகும். திராட்சைக் கொடி உருவகமானது புனிதர்களின் தோழமைக்கு இறையியல் அடிப்படையாகும். திராட்சைக் கொடியின் உயிர்தான் அதன் எல்லாக் கிளைகளிலும் உள்ளது. எனவே நாமனைவரும் கிறிஸ்துவோடு இணைந்து ஒரே திருச்சபையின் உறுப்பினர்கள். நாம்! இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள். கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" (எபே 2:19), எனலே மனிதநேய அடிப்படையில் மட்டுமல்ல, புனிதர்களுடைய தோழமையின் அடிப்படையிலும் ஒருவர் மற்றவர்க்கு உதவிசெய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். "எல்லாருக்கும். சிறப்பாக, நம்பிக்கைக் கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன் வருவோம்" {கலா 6:10).

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழி என்ன என்பதை அன்னைத் தெரசா பின்வருமாறு கூறியுள்ளார்; "மெளனத்தின் கனி செபம்; செபத்தின் கனி அன்பு; அன்பின் கனி சேவை; சேவையின் கனி மகிழ்ச்சி." அழகான, ஆழமான வாழ்க்கை நெறி!

தாயுமானவரும் பிறரன்புப் பணியில்தான் இன்பநிலை அடங்கியுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.

"அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலைதானே வந்து எய்தும் பராபரமே."
"பெறுவதைவிடதருவதே இன்பம்" (திப 20:25)

பிறர்க்குக் கொடுத்துக் கொடுத்து இன்பம் பெறத் தெரியாத சுல்நெஞ்சம் உடையவர்கள், தமது உடமையை வைத்து வைத்து இறுதியில் இழந்து விடுவர் என எச்சரிக்கிறார் வள்ளுவர்,

"கத்துலக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடமை
வைத்து இழக்கும் வன் கணவர்" (குறள் 228)

அன்பு இல்லாமல் பிறர்க்குக் கொடுக்கமுடியும். ஆனால் கொடுக்காமல் அன்பு செய்ய முடியாது. எனவேதான் அன்பே உருவான கடவுள் நம்வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பதோடு, நமது மீட்புக்காகத் தமது ஒரே மகனையும் கொடுத்தார் (யோவா 3:18) அம்மகன் தம்மையே நமக்காகப் பலியாக்கித் தமது உடலையும் இரத்தத்தையும் நமக்குப் பிட்டுக் கொடுத்தார், பிழிந்து கொடுத்தார்.

"பசுவின்பால் முழுவதும் கன்றிற்கில்லை;
பூவின் நறுமணம் முழுவதும் சோலைக்கில்லை ,
நெற்கதிர் முழுவதும் வயலுக்கில்லை,
குளத்துநீர் முழுவதும் குளத்திற்கில்லை,
மரத்தின் கனி முழுவதும் மரத்திற்கில்லை,
யாழின் இசை முழுவதும் யாழிற்கில்லை"
இவ்வாறு இயற்கையிலே எல்லாமே தனக்காக மட்டும் பயன்படாது பிறர்க்காகப் பயன்படும்போது, நாம் மட்டும் நமக்காகவே வாழ்வது முறையா?

பிறரிடம் வாங்கி வாங்கி வாழ்ந்தார் என்ற நிலைமாறி, பிறர்க்குக் கொடுத்துக் கொடுத்துச் செத்தார் என்ற நிலையை அடைவோமாக. நாளை அல்ல, இன்றே அன்பென்னும் நற்கனி தருவோம், "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1 யோவான் 3:18)
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
சாலையோரம் ஒரு தடாகம்.

சாலையோரத்தில் ஒரு தடாகம். தடாகம் முழுவதும் பூத்துக் குலுங்கும் தாமரை மலர்கள். இந்த மலர்களுக்கு உயிர் அளிப்பது எது? ஒளி. உயிர் வளர்ப்பது எது? நீர். ஒருவர் தடாகத்தில் இறங்குகிறார். தண்டோடு இரு மலர்களைக் கொய்கிறார். ஒன்றைத் தண்ணீரிலும் இன்னொன்றைத் தரையிலும் வீசி எறிந்து விட்டுப் போய் விடுகிறார். மறுநாள் அதேவழியில் திரும்பும்போது பார்க்கிறார். தண்ணீரில் போட்ட மலர் அழுகிக் கிடக்கிறது. தரையில் வீசிய மலர் உலர்ந்து கிடக்கிறது. அதை அழுகச் செய்தது எது? நீர்தான். உலரச் செய்தது எது? ஒளி தான். உயிர் அளிக்கும் ஒளியே உலரச் செய்யுமா? உயிர் வளர்க்கும் நீரே அழுகச் செய்யுமா?

தடாகத்தில் வேரூன்றி நிற்கும் போது உயிர் வளர்க்கும் ஒளியே தடாகத்தோடு தொடர்பற்றுப் போகிறபோது மலரை உலரச் செய்கிறது. அதேபோல் உயிர் வளர்க்கும் நீரே, மலரை அழுகச் செய்கிறது. அவ்வாறே இறைவனை நினைப்பதும், இறைவனில் நிலைப்பதும்.

இறைவனை நினைப்பது, இறைவனில் நிலைப்பது என்பதுதான் எவ்வளவு கடினம்! கல்லூரி மாணவன் ஒருவன் இப்படிச் செபிப்பானாம்: "இறைவா, என்னால் உன்னை எங்கே நினைக்க முடிகிறது? தெருவெல்லாம் ஒரே சந்தடி ஆலயத்திற்குள் நுழைந்தாலோ பார்வையை இழுக்கும் பாவையர்!... இந்நிலையில் நான் உன்னை நினைக்கா விட்டால் என்ன, பொருட்படுத்தாதே. ஆனால் நீ மட்டும் என்னை நினைக்கத் தவறாதே".

வறுமையில், பிணியில், வாழ்க்கையின் மாயக் கவர்ச்சியில் கடவுளை நினைப்பது, கடவுளில் நிலைப்பது கடினம்தான். ஆனால் அந்தக் கடவுள் நம்மை நினைத்தால்...

படுக்கையிலிருந்து எழுந்ததும் புனித பிலிப்பு நேரி சொன்ன காலைச் செபம் என்ன தெரியுமா? "இறைவா, உன் கைகள் இன்று முழுவதும் என் தோள் மேல் இருக்கட்டும். இல்லையெனில் நான் உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவேன்" இது கடவுளுக்கு விடுத்த சவால் அல்ல. தனக்குத்தானே விடுத்துக் கொண்ட எச்சரிக்கை.

'Nothing good without God' என்பார்கள். GOOD என்ற நான்கெழுத்தில் GOD என்ற மூன்றெழுத்தை நீக்கினால் எஞ்சி இருப்பது என்ன? வெறும் '0'.

With Christ you are a hero. Without him just a zero. கிறிஸ்து இன்றி நமது வாழ்க்கை வெறும் சீரோ, சைபர், கூமுட்டை. கிறிஸ்து ஒருவரே மதிப்புள்ளவர். நமக்கு மதிப்பு ஊட்டுபவர். யார் முதலில் என்பதைப் பொருத்தது அது. எத்தனை பூஜ்யங்களை முதலில் அடுக்கிக் கடைசியில் இறைவன் என்ற ஒன்றை வைத்தால் அந்த ஒன்றுக்கு மட்டுமே மதிப்பு. பூஜ்யங்கள் வெறும் பூஜ்யங்களே! முதலில் ஒன்றை வைத்து அடுத்துப் பூஜ்யங்களை அடுக்கினால் ஒவ்வொரு பூஜ்யமும் மதிப்புப் பெறும், அந்த ஒன்றுக்கும் கூட மதிப்பூட்டும் - ஒன்று பத்தாக, ஒன்று நூறாக, ஒன்று ஆயிரமாக, ஒன்று இலட்சமாக, ஒன்று கோடியாக.

பம்பலூனா போரில் காயமுற்று இஞ்ஞாசியார் மருத்துவமனை யில் இருந்தபோது பொழுது போக்குக்காகப் படிக்க வீரர் வரலாறு கேட்டார். கிடைத்ததோ புனிதர் வரலாறு. "இவர்களால் முடிந்தால் என்னால் ஏன் முடியாது?' அப்பொழுது உணர்ந்தார்: "Nothing good without God", இறைவனிலன்றி நன்மையானது எதுவும் இல்லை . எல்லாம் தீமைகளே! இறைவனிலன்றி புனிதமானது எதுவும் இல்லை. எல்லாம் பாவங்களே! இறைவனிலன்றி வீரமானது எதுவும் இல்லை. எல்லாம் கோழைத்தனங்களே! "இறைவனின் அதிமிக மகிமைக்காகத்" தன்னையே அர்ப்பணித்தார். அவர் எழுதிய "மன்ரேசா' என்ற தியான நூலைப் பற்றிப் புனித சலேசியார் சொல்கிறார்: "அந்த நூலில் எத்தனை எழுத்துக்கள் உள்ளனவோ அதற்கும் அதிகமான புனிதர்களை உருவாக்கியுள்ளது".

மனித வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல, தவிர்க்க முடியாதவை. இன்பங்கள் சூழும் நேரம் கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என நினைக்கும் நாம், துன்பங்கள் வந்தால் மட்டும் கடவுள் நம்மை நாம் செய்யாத தவறுகளுக்காகத் தண்டிக்கிறார் என நினைத்து வருந்துகிறோம். திராட்சைக் கொடிக்கு உரமிட்டுத் தண்ணீர் ஊற்றும் போது மட்டுமல்ல, அதைக் கழித்துவிடும் போது கூட அதன் முழுமையான பலனை எதிர்பார்த்துத்தான் அவ்வாறு செய்கிறார். "கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனிதருமாறு கழித்து விடுவார் (யோவான் 15:2). கழிப்பதும் தறிப்பதும் திராட்சைக் கொடியின் நன்மைக்கே, ஆகவே இன்பங்களிலும் துன்பங்களிலும் இறைவன் நம்மைச் சமமாகவே அன்பு செய்கிறார் என்பதை உணர்ந்து இறைவனில் நிலைத்து நற்கனிகள் கொடுப்போம்.

திராட்சைக் கொடி செடியோடு இணைந்திருக்கவும், கனிதரவும் வேண்டும் என்ற இரு கருத்துக்கள் உவமையில் வலியுறுத்தப்படுகின்றன.

கனி தருவது இன்றியமையாதது. "கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்து விடுவார் . கொடி கனி தருவதற்குச் செடியோடு இணைந்திருத்தல் வேண்டும். இவ்வாறு கனி தருதல், இணைந்திருத்தல் இரண்டும் முக்கியமானவை. எனினும் கனி தருவதே முதன்மையானது. ஆக, கொடியின் குறிக்கோள் செடியோடு இருப்பதல்ல, மாறாகக் கனி கொடுப்பதே! கிறிஸ்தவச் செயல்பாட்டை முதன்மைப்படுத்தாது, கிறிஸ்தவராய்ப் பெயரளவில் இருப்பதிலே நிறைவு காண்பவர் இயேசுவின் சீடரல்லர்.

கிளைகளாகிய நாம் திராட்சைச் செடியான இயேசுவோடு மூன்று வழிகளில் இணையலாம்.

1. இயேசுவின் பெயரால் ஒன்று கூடும் போது, அவர் நம்மோடு, நம் மத்தியில் இருப்பதாக வாக்களித்திருக்கிறார். "இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூட்டியிருக்கிறார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்" (மத்-18:20)

2. இயேசுவின் வார்த்தைக்குச் செவி மடுக்கும் போது, நாம் கேட்பதையெல்லாம் தருவதாக வாக்களிக்கிறார். "நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்" (யோவான் 15:7) காண்க லூக்.10:16.

3. இயேசுவின் திரு உடலையும் தீரு இரத்தத்தையும் பகிர்ந்திடும் போது, "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்' (யோவான் 6:56). நாம் இயேசுவின் மறையுடலின் உறுப்புக்கள். உடலை பிரிந்து உறுப்புக்கள் ஒன்றும் செய்ய இயலாது. அதுபோல் இயேசுவில் இணைந்து நாம் நற்கனிகள் தர வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம்.
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
வலியின்றி வெற்றியில்லை

மரத்தில் இருந்த இலைக்கு 'போர்' அடித்தது. இன்னும் எத்தனை நாள் இந்த மரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பது என்ற சலிப்பு அதற்கு. வானில் சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட்டது. இலையின் ஏக்கம், எரிச்சலாக மாறியது. இந்தப் பாழாய்போன மரத்திலிருந்து எப்போதுதான் எனக்கு விடுதலை கிடைக்குமோ என்று புலம்பித் தீர்த்தது.

இலை, ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது, இலையுதிர் காலத்தில். மரத்திலிருந்து விடுதலை பெற்ற இலை, தன்னை இதுவரைத் தாங்கி, வளர்த்துவந்த மரத்திற்கு விடைகூடச் சொல்லாமல், வீசியத் தென்றலில் மிதந்து சென்றது. பறவையைப் போல தானும் பறக்க முடிகிறதே என்று இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி, ஒரு சில நொடிகளே நீடித்தது.

உதிர்ந்த இலை, இறுதியில் தரையில் விழுந்தது. என்னதான் முயன்றாலும், அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. தான் பறந்தபோது, தன்னைத் தாங்கியதுபோல் தெரிந்த காற்று, இப்போது, தன் மீது புழுதியை வாரி இறைத்தது. காய்ந்து விழுந்த மற்ற இலைகள் அதன் மீது விழுந்து மூடின. மனிதர்கள் அதனை மிதித்துச் சென்றனர். இலைக்கு மூச்சுத் திணறியது.

கண்களில் நீர் பொங்க, அண்ணாந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் அசைந்தாடிய மற்ற இலைகள், தன்னைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதைப்போல் இருந்தது. "நான் அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் இலையைச் சூழ்ந்தது.

மரத்துடன் இணைந்திருக்கும் வரையில் இலைக்கு இன்பமான வாழ்வு. பிரிந்தால், தாழ்வு... மரணம். இதையொத்த கருத்தை இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு:
"நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது." (யோவான் 15:5)

உவமைகளிலும், உருவகங்களிலும் பேசுவது, இயேசுவுக்குக் கைவந்த கலை என்று நமக்குத் தெரியும். நானே வாழ்வு தரும் உணவு, நானே உலகின் ஒளி, நல்ல ஆயன் நானே என்று, இயேசு, தன்னை, உருவகப்படுத்திக் கூறியுள்ள வாக்கியங்கள், யோவான் நற்செய்தியில் ஏழுமுறை இடம்பெற்றுள்ளன. நம் வாழ்விலும், நம்மைப்பற்றியும், அடுத்தவரைப்பற்றியும், அவ்வப்போது உருவகங்களில் பேசுகிறோம். விளையாட்டாக, கேலியாகச் சொல்லும் உருவகங்களைவிட, இக்கட்டான, நெருக்கடியான வேளைகளில் நாம் சொல்லும் உருவகங்கள் ஆழந்த பொருளுள்ளவை. "உங்களை நான் மலைபோல நம்பியிருக்கிறேன்" என்று, ஓர் இக்கட்டானச் சூழலில், நண்பரிடம் சொல்லும்போது, அவர்மீது நமக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படும். "என் மகள் கணக்குல புலி" என்று ஒரு தந்தை சொல்லும்போது, அவரது மகளைப்பற்றி அவர் கொண்டிருக்கும் உள்ளார்ந்த பெருமிதம் வெளிப்படும்.

நமது உண்மையான இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகும்போது, நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை, மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எது நமது வாழ்வின் அடிப்படை என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நாம் எப்படிப்பட்டவர்கள், எதை நம்பி வாழ்கிறோம் என்ற உண்மைகள் வெளிப்படும். உண்மைத் தங்கமோ, போலித் தங்கமோ அழகியதொரு கண்ணாடி பேழைக்குள் இருக்கும்போது, ஒரே விதத்தில் மின்னும். வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான் உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் தங்கள் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும்.

யோவான் நற்செய்தியில், இயேசு தன்னை உருவகப்படுத்திப் பேசிய 'நானே' என்ற வாக்கியங்கள் அனைத்தும், எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் சொல்லப்பட்டவை என்பதை உணரலாம். "நல்ல ஆயன் நானே" என்று இயேசு கூறியதை, சென்ற வார நற்செய்தியாக நாம் கேட்டோம். "உண்மையான திராட்சைச் செடி நானே" என்று, இயேசு, இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

"நல்ல ஆயன் நானே" என்று இயேசு சொன்னது, தன் புகழைப் பறைசாற்ற, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஒரு நெருக்கடியான நேரத்தில், அதுவும், தன்னால் நன்மைபெற்ற ஒருவர், மதத்தலைவர்களிடமிருந்து வெறுப்பைத் தேடிக்கொண்டார் என்பதை அறிந்த நேரத்தில், இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார். பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்குகிறார். அந்த அன்பான, அற்புதமானச் செயலுக்குத் தவறானக் காரணங்கள் சொல்லி, இயேசுவை ஒரு பாவி என்று முத்திரை குத்துகின்றனர், பரிசேயர்களும், மதத்தலைவர்களும் (யோவான் 9:24); அது மட்டுமல்ல, இயேசுவின் புதுமையால் பார்வை பெற்றவரையும், யூத சமூகத்திலிருந்து வெளியேத் தள்ளினர் (யோவான் 9:34) என்று வாசிக்கிறோம். இந்நேரத்தில் இயேசு அங்கு செல்கிறார்.

பிறவியிலேயே பார்வை இழந்ததால், தன்னை ஒரு பாவி என்று முத்திரை குத்தி, வெறுத்து ஒதுக்கிய சமுதாயம், தான் பார்வை பெற்றபிறகும் தன்னை ஒதுக்கிவைத்ததை அறிந்து, அம்மனிதரின் உள்ளம் வேதனையில் வெந்து போயிருக்கும். அவர் உள்ளத்தில் நிறைந்த வேதனையாலும், வெறுப்பாலும், அவர் மீண்டும் தன் 'பார்வை'யை இழந்துவிடக்கூடாது என்ற பரிவினால், இயேசு, ஒரு நல்லாயனாக, அவரைத் தேடிச்சென்றார். 9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வைத் தொடர்ந்து வரும் 10ம் பிரிவில் இயேசு 'நல்ல ஆயன் நானே' (யோவான் 10:14) என்று தன்னையே அடையாளப்படுத்துகிறார்.

இதைவிட நெருக்கடியான ஒரு சூழலில், தன் சீடர்கள் தவித்தபோது, இயேசு, தன்னை ஒரு திராட்சைச் செடியாகவும், அவர்களை, கிளைகளாகவும் ஒப்புமைப்படுத்திப் பேசினார். தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது, இயேசு, இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த இறுதி இரவுணவு, கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். பயம், கலக்கம், சந்தேகம் என்ற எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார்.

இறுதி இரவுணவின்போது, சீடர்கள் கலக்கமடையக் காரணம் என்ன? பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார்; மற்றொரு சீடர், இயேசுவை மறுதலிப்பார் என்ற இரு பெரும் கசப்பான உண்மைகளை, இயேசு அவ்வேளையில் பகிர்ந்துகொண்டார். உண்மைகள் பொதுவாகவே கசக்கும்; அதுவும், நம்பிக்கைத் துரோகம், மறுதலிப்பு என்ற உண்மைகள் பெரிதும் கசக்கும். இயேசு கூறிய கசப்பான உண்மைகளால், நம்பிக்கை இழந்து, பயத்தில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம், தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்தி இயேசு பேசுகிறார். அந்தச் செடியின் கிளைகளாக, தன் சீடர்கள் வாழவேண்டும் என்பதை அவர்கள் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிப்பதற்காக இயேசு இவ்வுருவகத்தைப் பயன்படுத்துகிறார்.

திராட்சைச் செடியும், கொடியும், பல சவால்களை நமக்கு முன் வைக்கின்றன. செடியுடன் கொடிகள் இணைந்துவிட்டால், எல்லாம் சுகமாக இருக்கும் என்ற தவறான கற்பனையை இயேசு தரவில்லை. "என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் என் தந்தை தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்." (யோவான் 15:2) என்று இயேசு கூறினார். கனிகொடாத கொடிகள் வெட்டப்படும். கனிதரும் கொடிகளும், கூடுதல் கனி தரவேண்டுமெனில், துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இயேசு சொல்கிறார்.

திராட்சைச் செடியும், கொடியும் பல வேதனைகளைத் தாங்கினால் மட்டுமே, தரமானக் கனிகள் தோன்றும். அதேபோல், சுவையுள்ள இரசமாக மாறுவதற்கு, திராட்சைக் கனிகள் கசக்கிப் பிழியப்படவேண்டும். இத்துன்பங்களில் எல்லாம் இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள் எவை? திராட்சைத் தோட்டத்தை கவனத்தோடு, கரிசனையோடு நட்டு வளர்ப்பவர் விண்ணகத் தந்தை என்பதும், கிளைகள் அனுபவிக்கும் துன்பங்களில் இயேசுவும் உடனிருப்பார் என்பதும், இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள்.

இயேசுவுடன் இணையும் வாழ்வு, பயன்தரும் வாழ்வாக, உயர்ந்து செல்லும் வாழ்வாக அமையும் என்பதை விளக்க மற்றோர் உருவகம் உதவியாக இருக்கும். அமெரிக்க இராணுவத்தில், பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களில், மேலே சுழலும் இறக்கைகளை ஹெலிகாப்டருடன் பிணைக்க, MRRN என்ற திருகாணிகளைப் பயன்படுத்தினர். MRRN என்றால், Main Rotor Retaining Nut, அதாவது, 'சுழல் விசையுடன் பிணைத்து வைக்கும் மையத் திருகாணி' என்று பெயர். இப்பெயர், சொல்வதற்கு, நீளமாக, கடினமாக இருந்ததால், இதற்குப் பதில், இராணுவ வீரர்கள், இந்தத் திருகாணியை, 'இயேசு திருகாணி' (Jesus Nut) என்று பெயரிட்டனர். இந்தப் பெயர் வைக்கப்பட்டதன் காரணத்தை வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் தந்த விளக்கம், அழகான உருவகமாகத் தெரிந்தது.

ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருக்கும்போது, இந்த MRRN, அல்லது, 'இயேசு திருகாணி' கழன்றுவிட்டால், மேலே சுற்றும் இறக்கைகள் ஹெலிகாப்டரிலிருந்து பிரிந்துவிடும். அந்த இறக்கைகளின் சுழற்சியால் அதுவரை வானத்தில் தாங்கப்பட்ட ஹெலிகாப்டர், நேரே பூமியில் விழுந்து நொறுங்க வேண்டியதுதான். அந்நேரத்தில், ஹெலிகாப்டரில் இருப்பவர்களை, இயேசு மட்டுமே காப்பாற்றமுடியும் என்பதை வீரர்கள் உணர்ந்ததால், அந்த மையத் திருகாணிக்கு, 'இயேசு திருகாணி' என்று பெயரிட்டனர்.
ஹெலிகாப்டரின் இறக்கைகள் போல சுற்றிச் சுழலும் நமது வாழ்வை, இறுகப் பிணைப்பதற்கு இயேசு என்ற திருகாணி இல்லையெனில், வானில் பறப்பதாய் நாம் நினைக்கும் வாழ்வு, பாதாளத்தில் மோதி, சிதற வேண்டியதுதான்.

பொறுமையாக, கடின உழைப்புடன் வளர்க்கப்பட்ட திராட்சைத் தோட்டம் வளமான, சுவையான கனிகளைத் தருவதுபோல், நாம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளும், இனி தொடரப்போகும் முயற்சிகளும் நல்ல கனிகளைத் தரவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.
இயேசு என்ற செடியுடன் இணைந்திருக்கும் வரை, நாம் மிகுந்த கனி தருவோம்.
இயேசு என்ற திருகாணியுடன் இணைந்திருக்கும் வரை, வானில் உயரப் பறப்போம்.
 
 ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
அன்பு, கட்டளைகள்‌ ஆகிய இரண்டும்‌ வாழ்க்கைக்கு இரு கண்கள்‌ போன்றவை. அன்பு ஒரு மனிதனுக்குத்‌ தேவையான 'சுதந்திரத்தை வழங்குகிறது. நாம்‌ யாரை அதிகமாக அன்பு செய்கின்றோமோ அவர்களது அன்பில்‌ நாம்‌ முகமூடி அணிவதில்லை: நாம்‌ நாமாக இருக்கின்றோம்‌. அதே வேளையில்‌ இந்த சுதந்திரத்தைப்‌ பாதிக்காத அளவிற்கு நாம்‌ செயல்பட நமக்கு உதவுபவைதான்‌ கட்டளைகள்‌. எனவேதான்‌ இயேசு கட்டளைகளையும்‌, அன்பையும்‌ இன்றைய நற்செய்தியில்‌ தொடர்புபடுத்துகிறார்‌. நான்‌ என்‌ தந்தையின்‌ கட்டளைகளைக்‌ கடைபிடித்து அவரது அன்பில்‌ நிலைத்திருப்பதுபோல நீங்களும்‌ நிலைத்திருங்கள்‌ என்று சொல்லி கட்டளைகளைக்‌ கடைபிடித்தலும்‌ அன்பு செய்தலும்‌ இணைந்து செல்ல வேண்டும்‌ என்று அறிவுறுத்துகின்றார்‌.

இன்று பல பெற்றோர்கள்‌ இந்த இரண்டுக்கும்‌ உள்ள இணைப்பைச்‌ சரியாக புரிந்து கொள்ளாததன்‌ காரணமாக, தங்கள்‌ பிள்ளை வளர்ப்பில்‌ கணிசமான அளவு தவறி விடுகிறார்கள்‌. அன்பு என்ற பெயரில்‌, வரைமுறையற்ற சுதந்திரம்‌ கொடுத்துவிடுகிறார்கள்‌. கட்டளைகளை அவர்கள்‌ மீது சுமத்துவது கசப்புணர்வை அவர்களில்‌ ஏற்படுத்தும்‌ என்று நினைக்கின்றனர்‌. இன்னும்‌ சில பெற்றோர்களோ, கட்டளைகளுக்கு அதிக முக்கியத்துவம்‌ கொடுத்து தேவையான அளவு அன்பு காட்ட மறந்து விடுகிறார்கள்‌. இந்த இரண்டு நிலைகளும்‌ தவிர்க்கபடவேண்டும்‌.

 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ