பயிர்கள் வளர்ந்தால் விவசாயிக்கு மகிழ்ச்சி!
பிள்ளைகள் வளர்ந்தால் பெற்றோருக்கு மகிழ்ச்சி!
இறையரசு வளர்ந்தால் இறைவனுக்கு மகிழ்ச்சி!
அந்த இறையரசு மலர நாமெடுக்கும் முயற்சி, தொடர் செயல்பாடுகள், அதன்
வளர்ச்சி பற்றி சிந்திக்க இந்த ஞாயிறும், அதன் வாசகங்களும் நம்மை
அழைக்கின்றது.
இறையரசு தன்னிலே ஆற்றலும், வல்லமையும் கொண்டது. இறையாட்சி என்பது
முழுக்க முழுக்க இறைவனின் செயல்.
இறையாட்சி வளர வேண்டுமென்றால் நம்மிடையே அன்பு, நீதி, நேர்மை, சமத்துவம்,
மன்னிப்பு, பணிவாழ்வு, பங்களிப்பு போன்ற கொள்கைகளை வாழ்வாக்கும் ஒரு
சமுதாயத்தை நம்மிடையே நாம் உருவாக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு முழுமையான இறையரசை இந்த உலகத்தில் நம்மால் ஏற்படுத்த
முடியுமா? அல்லது அந்த இறையரசு இங்கே நிரந்தரமாக மலர முடியுமா?
முடியும், கண்டிப்பாக முடியும் என்பதே நமது உள்ளப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான
பதிலாக இருக்க வேண்டும்.
மருந்து கொடுப்பது மருத்துவர் பணி, குணப்படுத்துவது கடவுளின் செயல்.
அவ்வாறே நற்செய்தியை அறிவிப்பது நமது பணி, இறை ஆட்சியின் வளர்ச்சி
கடவுளின் செயல்.
இறையரசு மண்ணில் வரவும், நமது கரம் ஒன்றாய் இணையவும், இறையரசுக்காக
நாமெடுக்கும் முயற்சி தொடர்ச்சியாக அமைந்து அதில் வளர்ச்சியும்,
வெற்றியும் காணவும் இந்த இறைபலியில் இறைவனோடு இணைவோம்.
1.இறையாட்சியை உவமைகளால் எடுத்துரைக்கும் இறைவா!
எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள்,
பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறையாட்சியின் வளர்ச்சியில்
பங்கெடுக்கவும், அவர்களிடம் உள்ள மக்களை இறையாட்சியில்
பங்கெடுக்கச் செய்யவும் தேவையான ஆற்றலையும், வல்லமையையும்
தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.இறையாட்சி மண்ணில் வரணேடுமென்ற இறைவா!
எம் தேசத்தை வழிநடத்தும் நாட்டுத்தலைவர்கள், சமுகத்தலைவர்கள்
அனைவரும் அன்பு, நீதி, நேர்மை, சமத்துவம், உண்மை, சகோதரத்துவம்
போன்ற நன்மதிப்பீடுகளில் வளரவும், இறையாட்சிக்கு தங்களை
தகுதியாக்கிக் கொள்ளவும் தேவையான வரங்களை தரவேண்டி இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
3.மரக்கிளையை நானே நட்டுவைப்பேன் என்ற இறைவா!
எம் பங்கில் கேதுரு மரமாக நீர் நட்டுவைத்துள்ள எம் பங்குத்தந்தையை
ஆசீர்வதியும்;. இறைமக்களிடமும், பிற இனத்து மக்களிடமும்
நிகழ வேண்டிய இறையாட்சி பணிக்கு உந்து சக்தியாகவும்,
தூண்டுகோலாகவும் இவர் அமைந்து இறையரசை செவ்வனே வளரச்
செய்ய தேவையான வரங்களை தரவேண்டி இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4.நிலத்துக்கு அல்ல விதைக்குமே முக்கியத்துவம் தரும்
இறைவா!
நாங்கள் எப்போதும் கனிவுடனும், நம்பிக்கையுடனும்
செயல்பட்டு வாழவும், இவ்வுடலோடு இருக்கும் போதும்,
இல்லாத போதும் உமக்கு மட்டுமே உகந்தோராய் இருக்கவும்,
விதை போல் முதலில் மவுனம் காத்து பின்னர் வளர்ச்சியில்
வேகம் காட்டவும் தேவையான வரங்களை தரவேண்டி இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
5.இறைவனின் இன்றியமையாத செயல் இறையாட்சி என்று மொழிந்த
இறைவா!
எம் பங்கிலுள்ள குழந்தைகளையும், இளையோரையும் உம் கரம்
தருகின்றோம். இறையாட்சியின் வளர்ச்சி ஒவ்வொருவரின்
வளர்ச்சியிலும் உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்தோராய்
வாழவும், கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வில் அவர்கள்
அனைவரும் ஒற்றுமையுடனும், உம் கரம் பற்றியும் வாழ
தேவையான வரங்களை தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
விதைகளா? விழுதுகளா?
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது இந்த
பழமொழியை நாம் பலமுறை உபயோகப்படுத்தியிருப்போம். பலர் சொல்லவும்
கேட்டிருப்போம். கடுகில் அவ்வளவு மருத்துவ குண நலன்கள் இருப்பதாலேயே
இவ்வாறு சொல்கிறோம். விதைகளிலேயே மிகவும் சிறிய விதை கடுகாகத்தான்
இருக்கும். பயன் தருவதிலேயும் அதிக பயன் தருவதும் இதுவாகத்தான்
இருக்கும். நாம் பொதுவாக வீடுகளில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும்
பொருட்களில் ஒன்று கடுகு. கடுகு, எண்ணெயோடு சேர்ந்து தரும் மணமும்
சுவையுமே நமது சமையலை நிறைவான ஒன்றாக மாற்றுகிறது. சிலருக்கு
கடுகு தாளிக்கும் வாசனையே பசியை தூண்டிவிடும் . சிறுவயதில் எங்கள்
வீட்டில் பெரும்பாலும் காலை உணவு பழைய சோறாகத் தான் இருக்கும்.
எண்ணெய் கடுகு கருவேப்பிலை மிளகாயோடு சேர்த்து தாளிக்கப்படும்
பழைய சோறுக்கு இணை எந்த இட்லி பொங்கலுக்கும் வராது. கடுகின்
மகத்துவம் அவ்வளவு மகத்துவமிக்கது. உடலின் உள்ளுறுப்புக்களின்
நலனான வாதம் பித்தம் ஜீரணம் போன்றவற்றிற்கும் வெளிப்புற உறுப்புக்களின்
நலனான மூட்டு வலி கை கால் இடுப்பு வலி போன்றவற்றிற்கும் மிகவும்
பயன்படுகிறது. கடுகு எண்ணெய், கடுகுத் தூள், கடுகு கீரை என அனைத்துமே
மருத்துவ குணம் வாய்ந்தவை. தெரிந்தோ தெரியாமலோ நாம் சமையலுக்கு
பயன்படுத்தும் கடுகு சார்ந்த பொருட்களில் அத்தனை நன்மைகள் இருக்கின்றன.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடுகின்
பயன் தெரியுமோ இல்லையோ கடுகைப் பற்றி நன்கு தெரியும்.
இயேசு தனது போதனைகளில் பெரும்பாலும் உவமைகளையும் கதைகளையும்
பயன்படுத்துவது அதிகம். அவை அதிகமாக அந்த பகுதி மக்களுக்கு பழக்கமான,
பயன்பாட்டோடு தொடர்புடைய ஒரு பொருளாகவோ கதையாகவோ தான் இருக்கும்.
வலை, முத்து, விதைப்பவர், காணாமல் போன ஆடு, விளக்கு, தாலந்து,
ஊதாரி மைந்தன், என அனைத்து உவமைகளுமே மக்களோடு தொடர்புடைய
பொருட்கள் ஆட்கள் சம்பந்தப்பட்டவை. அவ்வகையில் கடுகும் மக்களுக்கு
மிகவும் பழக்கமான ஒரு பொருளாகத் தான் இருந்திருக்கும். இன்றைய
நற்செய்தியில் இயேசு இறையாட்சியை கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார்.
சிறிய கடுகு விதை மண்ணில் விதைக்கப்பட்டு, பின்னர் பெரிய மரமாக
வளர்வது போல் இறையாட்சி என்னும் நம்பிக்கை நம்முள் கடுகு விதை
போல விதைக்கப்பட்டு கடுகு மரமாக வளர வேண்டும் என அழைப்பு
விடுக்கிறார்.
இறையாட்சி நமக்குள் இருக்கிறது. நம் உள்ளத்தில் இருக்கிறது. அது
விதையாக இருக்கிறதா? இல்லை விழுது தரும் மரமாக இருக்கிறதா என்று
சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. கடுகு
விதை மிகவும் சிறியது. மரமோ மிகப் பெரியது.
விதை சிறிய உருண்டை வடிவம். மரமோ சொல் வடிவத்தால் விவரிக்க
முடியாத அளவு பெரியது.
விதை பறவைகளுக்கு உணவாக அமைகிறது. மரம் பறவைகள் வந்து உணவு உண்ணும்
இடமாக (உண்ணும் விடுதி) மாறுகிறது.
விதை பறவையின் நிழலுக்கு அடியில் இளைப்பாறுகிறது. மரம் பல பறவைகள்
வந்து தங்கி இளைப்பாறும் இடமாக மாறுகிறது.
விதை பறவைகளால் எடுத்துச் செல்லப்பட்டு உணவாகிறது. மரம் பல பறவைகளை
தன்னிடம் வரவழைக்கும் இடமாக மாறுகிறது.
இறையாட்சி என்னும் கடவுளின் அரசு நம்பிக்கை, நம்முள்ளும்
துளிர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. சிலர் விதையை வளர
வைத்து , மரமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். பலர்
விதையாகவே வாழ்ந்து, பறவைகளுக்கு அந்த நேரத்துக்கு மட்டும் உணவாகின்றோம்.
சிலர் நம்முடைய சொல் செயல் வாழ்வு முறை மூலமாக பலர்
வாழ்க்கைக்கு மருந்தாகிறோம். சிலர் நம்முடைய பண்பு நலன் உறவு
முறை மூலமாக பலருடைய வாழ்வுக்கு மணமும் சுவையும் சேர்க்கிறோம்
. விதையாக இருந்தால் சிலருக்கு மட்டுமே பயன் தர முடியும். மரமாக
மாறினால் தான் பலருக்கும் பயன் தருவதோடு பல பயன் தரும் மரங்களையும்
உருவாக்க முடியும். விதைகளா? மரங்களா? நாம் எதுவாக இருக்கிறோம்.
எதுவாக மாறப்போகிறோம் என்பதை சிந்தித்து வாழ்வோம்.
வாழ்க்கையில் நடப்பவை அனைத்தும் நமக்கு சாதகமாக நடப்பதில்லை.
நாம் தாம் அதை தீர்மானித்து நமக்கு ஏற்றவையாக மாற்றிக் கொள்ள
வேண்டும். விதையோ மரமோ வீரியமிக்க ஒன்றாக இருக்கின்றோமா என நம்மை
நாமே சுய ஆய்வு செய்து கொள்வோம். இது தான் வாழ்க்கை என்று ஒரு
போதும் எண்ணிவிடாது இதைவிட மேலான ஒன்று உண்டு என்று முன்னோக்கி
செல்வோம். இதுவல்ல வாழ்க்கை, இதற்கு மேலான ஒரு வாழ்வு உண்டு என்று
எண்ணி தன் வாழ்வை மாற்றிய ஒரு மனிதனின் கதையைக் காண்போம்
ஒரு நகரத்தில் ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார்
வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால்,
அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!
ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம்
உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள்
கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன்
காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று
தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. (இப்படி
ஒரு சட்டம் நம்மூரில் இருந்திருக்க வேண்டும்). இந்த நிபந்தனைகளுக்கு
ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப்
பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே
யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை
பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்;
மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள்
இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு. இப்படி ஒரு மன்னனுக்கு
ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் கிடைத்தது. நன்கு பணி செய்தான் . மக்களுக்கு
தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான். அவன் ஐந்தாண்டு
பணி முடிந்தது. அவன் செயலைப் பார்த்த மக்களுக்கு மன்னனை அனுப்ப
மனம் வரவில்லை இருப்பினும் சட்டத்தை மாற்ற முடியாதல்லவா? அன்று
ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப
நாடே திரண்டிருந்தது. மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும்
நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன
மக்கள் முன் நின்றான். முகத்தில் எந்த் கவலையும் இல்லை. மிகவும்
சந்தோஷமாக இருந்தான். மக்கள் வாயைப் பிளந்தனர் "இன்னும் அரை
மணிநேரத்தில் சாகப் போகிறார்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!"
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்,
"மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்!
நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!"
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட
அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப்
பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன்
மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.
அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவரோ, மகிழ்ச்சிக்
களிப்பில் பொங்கி வழிகிறார். படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல்
கேட்டான் "மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?"
"தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!"
"அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை
தெரியுமா?"
"தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!"
"பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?"
"அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு
முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்;
அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்;
காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள்
சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள்
எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர்.
நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன்
சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப்
போகின்றேன்!
சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்!
உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப்
படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!" என்றான் மன்னன்.
காட்டை அழித்து நாட்டாக்கியது ஒரு தவறு. ஆட்சியில் கொள்ளை அடித்து
புது நாட்டை உருவாக்கியது ஒருதவறு என்றாலும் அந்த மன்னன் இன்னும்
வாழ வழி இருக்கிறது என்று எண்ணியது ஒரு புதுமை. இதற்கு முன் இருந்த
அனைவரும் இறந்து மடிய இவன் வேறு மாதிரியாக
சிந்தித்திருக்கிறான்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மன்னனின்
வெற்றிக்குக் காரணங்கள் யாவை? பல காரணங்கள் இருந்தாலும்
குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று: ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும்
மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு: அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால்
நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட
பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!
சிந்தனைத் திறனும் திட்டமிட்டு செயல் புரிதலும் ஒருவரிடம் அமைந்தால்
அவரால் எதையும்சாதிக்கமுடியும் நமது இயல்க்கு எது என தீர்மானிப்போம் விதையாக
வாழ்ந்து மடிவதா? இல்லை விழுது தரும் மரமாக வாழ்ந்து பயன் தருவதா?
!விவசாயமும் விவசாயிகளும் அழிந்து மாண்டு கொண்டிருக்கும் இன்றைய
காலகட்டத்தில் இந்த இறையாட்சி பற்றிய கடுகு உவமை நம்மை அவர்களுக்காக
செபிக்க அழைக்கிறது. விழுதாக மாறி நம்மை பாதுகாக்க வேண்டிய விவசாயம்
இன்று நம் கண்களுக்கு களைச்செடி போல் காட்சியளித்து நம் கண்
முன்னே இருந்து அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாற
செபிப்போம். இயற்கை முறையில் உண்டு உடல் நலத்தோடும் மகிழ்வோடும்
வாழ்ந்து வந்த நாம் செயற்கை உணவுகள் நல்லது என்று எண்ணும்
நிலைக்கு தள்ளப்பட்டதனால் வந்த விளைவு இயற்கையை தீமை என கருதியது.
இன்று ஏராளமான பாதிப்புக்கு உள்ளான பின்பு இயற்கையை நாடுகிறோம். அது நம்மை விட்டு வெகு தொலைவில் போய் கொண்டிருக்கிறது. இயற்கையையுமது
சார்ந்த பொருட்களையும் இயேசு உவமையாக பயன்படுத்தியது அதன்
மேன்மையை நாம் நன்கு உணர்ந்தவர்கள் என்பதனாலும், இன்னும் அதிகம்
உணர வேண்டும் என்பதனாலும் தான். கடுகு உவமையை இறையாட்சிக்கு
பயன்படுத்திய இயேசு நாம் அது போல் பயன் தரக்கூடிய வாழ்வு வாழ
வேண்டும் என்பதற்காகவே.
கதையில் பார்த்த மன்னன் போல நமது இலக்கு எதுவென நிர்ணயிப்போம்
. விதையாக வடிவம் பெற்ற நாம் மரமாக மாற முயற்சிப்போம். பல பறவைகள்
இளைப்பாறும், நிழல் பெறும் மரமாக நமது வாழ்வு மாற இறையருள்
வேண்டுவோம். இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும்
இருந்து நம்மை ஆசீர்வதிப்பதாக ஆமென்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக என் நண்பர் ஒருவருக்கு பிறந்த
குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன். பிறந்து 9 நாள்கள் ஆகியிருந்த
அந்த ஆண் குழந்தையை நாங்கள் போவதற்குச் சற்று நேரத்திற்கு முன்
குளிப்பாட்டி, சாம்பிராணி புகை போட்டு, பிங் கலரில்
னாட்-பிஹைன்ட் போட்டு, கைக்கு கருப்பு வளையல், வசம்புக் கயிறு,
சின்ன டயப்பர் அணிவித்து 'ஐ லவ் யு சோ மச்' என்று சின்ன சின்னதாய்
பிரின்ட் போட்ட மஞ்சள் கலர் துண்டில் கிடத்தியிருந்தார்கள். என்
உடன் நண்பர் அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அப்படியே வாரி எடுத்துக்கொண்டார்.
'கழுத்து, கழுத்து' என்ற மற்றவர்கள் கத்தினார்கள். ஆனால், வெகு
இலகுவாக பிறந்த குழந்தையின் கழுத்தை அசையாமல் சேர்த்துப்
பிடித்துக்கொண்டார் அவர். கையில் எடுத்தவர் குழந்தையை இரசக்க
ஆரம்பித்தார். 'சின்ன உதடு, சின்ன விரல், சின்ன நகம், சின்ன
மூக்கு' என வர்ணனை நீண்டுகொண்டே வந்தது. 'இறைவனின் படைப்பே அற்புதம்.
நமக்குத் தேவையான எல்லாவற்றையும் எப்படி குட்டி குட்டியாக
வைத்திருக்கின்றார்' என ஆச்சர்யப்பட்டார் அவர். நாம் பிறந்தபோது
நமக்கு இல்லாமல் பாதியில் வருவது பல் மட்டும்தான் என
நினைக்கிறேன். பாதியில் வருவதால் தான் என்னவோ அது பாதியிலேயே
போய்விடுகிறது.
'மனிதன் மனிதனாகப் பிறக்கிறானா?' அல்லது 'அவன் மனிதனாக
மாறுகிறானா?' என்பது சமூகவியலில் கேட்கப்படும் கேள்வி. அதாவது,
ஒரு மனிதனின் சூழல்தான் அவனை உருவாக்குகிறது என்பது சமூகவியலின்
வாதம். இயல்பாக விட்டுவிட்டால் மனிதர்கள் மனிதர்களாக உருவாவதில்லை
என அவர்கள் சொல்வதுண்டு.
வலுவற்ற ஒரு குழந்தை வலுவான ஓர் ஆணாக, பெண்ணாக வளர்ச்சி அடைய
எது காரணம்? பெற்றோர், சுற்றத்தார், பின்புலம், பணம், உணவு
போன்றவை காரணமாக இருந்தாலும் மனிதர்கள் தாங்களாகவே தங்கள்
வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள் என்பதே
உண்மை.
ஆக, வலுவற்றவை வல்லமை பெறுவதற்கு வெளிப்புற ஆற்றல் கொஞ்சம்
தேவைப்பட்டாலும், அவை தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்தால்
அவை வல்லமை பெற முடியும்.
இன்று நாம் பல நேரங்களில் - நம் உடல் நோய்வாய்ப்படும்போது, நம்
இல்லத்தில் வசதி குறைவுபடும்போது, நம் உறவுநிலைகள் நம்மைவிட்டுப்
பிரியும்போது, நமக்கப் பிடித்த ஒருவர் இறக்கும்போது, நம் வீடு
அல்லது தொழில் ஆகியவற்றை இழக்க நேரும்போது, நாம் எதிர்பாராத விபத்தை
சந்திக்கும்போது - நம் வலுவற்ற நிலைகளை உணரலாம். இப்படிப்பட்ட
நேரங்களில் நமக்கு வலிமையையும், நம் உருவற்ற நேரங்களில் நமக்கு
உருவையும் தருவது எது என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச்
சுட்டிக்காட்டுகிறது.
நேரிடையாகப் பார்த்தால் இன்றைய முதல் வாசகம் (காண். எசே
17:22-24) இஸ்ரயேலின் வளர்ச்சி பற்றியும், இரண்டாம் வாசகம்
(காண். 2 கொரி 5:6-10) மனித உடலின் உயிர்ப்பு பற்றியும்.
மூன்றாம் வாசகம் (காண். மாற் 4:26-34) இறையாட்சி பற்றியும்
பேசுகிறது.
ஆனால் இந்த மூன்றின் - இஸ்ரயேல், உடல், இறையாட்சி - பின்னணியில்
இருப்பவை எது? அல்லது இந்த மூன்றிற்கும் பொதுவாக இருக்கும் காரணி
எது? வலுவின்மை. எப்படி?
பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் தன் மண்ணை இழந்து,
தன் ஆலயத்தை இழந்து, தன் திருச்சட்டத்தை இழந்து, தன் கடவுளை
இழந்து அநாதையாக வலுவற்று நிற்கிறது.
நாம் இந்த உலகத்தில் குடியிருக்கும் உடல் நோய்வாய்ப்பாட்டு,
குறைவுபட்டு, இப்பவோ பிறகோ என்று நம்மைச் சுமந்து சோர்வுற்று
வலுவற்று நிற்கிறது.
இயேசு கொண்டு வந்த இறையாட்சி அவரின் இறப்புக்குப் பின் உயிர்
பெறுமா? இல்லையா? என்று தயங்கி நிற்கிறது.
இந்த மூன்று நிலைகளும் மாறிப்போகும்: இஸ்ரயேல் வளர்ச்சி
பெறும். உயிர் குடிபெயரும். இறையாட்சி வேரூன்றிப் பரவும்.
இப்படியான நம்பிக்கையை இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் உருவகங்கள்
நமக்குச் சொல்கின்றன.
உருவகம் 1: நுனிக்கிளை
'தலைவராகிய ஆண்டவர் கூறுவது: உயர்ந்து கேதுரு மரத்தின்
நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன்' எனத் தொடங்குகிறது இன்றைய
முதல் வாசகம். கேதுரு மரம் என்பது ஒரு ஊசியிலைத் தாவரம். நம்ம
ஊர் நெட்லிங்கம், யூகலிப்டஸ், சவுக்கு மரம் போல. இவைகள்
புதிதாக வளர்க்க வேண்டுமென்றால் இதன் தண்டுப்பகுதியை வெட்டி சாணம்
பூசி சாக்கில் சுற்றி வைக்க வேண்டும். வெறும் நுனிக்கிளையை
வைத்தால் இவை வளர்வதில்லை. ஆனால் ஆண்டவரின் செயல் வித்தியாசமாக
இருக்கிறது. அவர் நுனிக்கிளையை வைக்கின்றார்.
நுனிக்கிளை என்பதன் பொருள் மூன்று:
ஒன்று, நுனிக்கிளை வலுவற்றது. நாம் குளிக்கப் போகும் போது, அல்லது
நடக்கும்போது வேப்பமரம் கைக்கு எட்டும் தூரத்தில் கிளைபரப்பி
இருந்தால் அதைச் சற்றே வளைத்து நுனிக்கிளையை நாம் உடைத்து பல்
துலக்கவோ, அதன் கொழுந்தைச் சாப்பிடவோ செய்கின்றோம். இப்படியாக
எந்தவொரு ஆயுதமும் இன்றி நாம் வெறும் விரல்களால் ஒடிக்கும் அளவிற்கு
வலுக்குறைந்து இருப்பது நுனிக்கிளை.
இரண்டு, நுனிக்கிளை தேவையற்றது. நம் வீடுகளின் ஜன்னல்களை ஏதாவது
ஒரு மரம் உரசினால் அந்த மரத்தின் நுனிக்கிளையை நாம் தறித்துவிடுகிறோம்.
நுனிக்கிளையை இழப்பதனால் மரம் ஒன்றும் அழிந்து விடுவதில்லை. ஆக,
தேவையற்றது என நாம் ஒதுக்குவது நுனிக்கிளையைத்தான்.
மூன்று, நுனிக்கிளைகள் யாரின் பார்வைiயும் இழுப்பதில்லை. நம்
கண்முன் நிற்கும் மரத்தைப் பார்த்து, 'எவ்ளோ பெரிய மரம்!' என
வியக்கும் நாம், ஒருபோதும் அதன் நுனிக்கிளையைப் பார்த்து, 'எவ்ளோ
அழகான நுனிக்கிளை!' என்று நாம் வியப்பதில்லை. நுனிக்கிளைகள் ஒருபோதும்
நம் பார்வையை ஈர்ப்பதில்லை.
இப்படித்தான் வலுவற்றதாக, தேவையற்றதாக, யாரின் பார்வையையும் ஈர்க்காததாக
இருக்கிறது இஸ்ரயேல். ஆனால் அது இறைவனின் கை பட்டவுடன் எப்படி
மாறிப்போகிறது? 'கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத்
திகழும். அனைத்து வகை பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாக்கிக்கொள்ளும்'
என்கிறார் எசேக்கியேல் இறைவாக்கினர். ஆக, தலைவராகிய ஆண்டவரின்
கரம் பட்டவுடன் எந்தவித வெளிப்புற சூழலின் உதவியும் இல்லாமல்
மரமானது வலுப்பெறுகிறது. தேவையுள்ளதாகிறது. பறவைகளின் கவனத்தை
ஈர்க்கிறது.
இறுதியில், 'நானே செய்து காட்டுவேன்' என்று தன் செயலின் ஆற்றலை
உலகறியச் செய்கின்றார் இறைவன்.
உருவகம் 2: குடி பெயர்தல்
வாடகை வீட்டில் இருப்பவர்களின் வலி தெரியுமா? அவர்கள் அந்த
வீட்டிற்கு எவ்வளவுதான் வாடகை கொடுத்தாலும், எவ்வளவு உரிமையோடு
பயன்படுத்தினாலும், அதை தங்களின் முகவரியாகக் கொண்டாலும் அந்த
வீட்டின் மேல் அவர்களுக்கு உரிமை இருப்பதில்லை. அவர்கள் அந்த
வீட்டைவிட்டு ஒருநாள் வெளியேறியே ஆக வேண்டும்.
நம் உடலை இப்படிப்பட்ட வாடகை வீட்டிற்கு உருவகம் செய்கின்றார்
பவுல். நம் உயிர் வாடகைக்கு இருக்கும் வீடுதான் இந்த உடல். இந்த
உடலின் நிலையாமை நாம் வளரும்போதும், நோயுறும்போதும், முதுமை அடையும்போதும்,
இறக்கும்போதும் நமக்குத் தெரிகிறது. காண்கின்ற உடலாக இருப்பதால்
இது நிலையற்றதாக இருக்கிறது. நம்பிக்கை உடல் அல்லது காணாத உடல்
நிலையானது. ஆக, நாம் இறக்கும்போது நம் உயிர் காண்கின்ற இந்த
உடலிலிருந்து காணாத அந்த உடலுக்கு, நிலையற்ற இந்த உடலிலிருந்து
நிலையான அந்த உடலுக்கு குடிபெயர்கிறது. ஆக, வாடகை
வீட்டிலிருந்து நாம் சொந்தவீட்டிற்குப் போகின்றோம். வலுவற்ற
நிலையிலிருந்து வலுவான நிலைக்குப் போகின்றோம். மனிதத்தில் இருந்து
இறைமைக்குச் செல்கின்றோம்.
ஆக, இங்கேயும் இறைவனின் கரம்தான் செயலாற்றுகிறது. உயிரை இந்த
உடலில் வாடகைக்கு வைத்த இறைவன் அதை ஒரு நேரத்தில் எடுத்து வேறு
ஒரு உடலில் வைத்துவிடுகின்றார். நிலையற்ற ஒன்றை நிலையானதாக்குகின்றார்.
இவ்வாறாக, இங்கே செயலாற்றுபவர் இறைவன்.
உருவகம் 3: தானாக வளரும் விதை, கடுகு விதை
இரண்டு உருவகங்களாக இவை தெரிந்தாலும் 'தானாக வளரும் கடுகு
விதை' என இதைச் சுருக்கிவிடலாம். கடுகை விதைத்த விதைப்பவர் அதை
அப்படியே மறந்துவிடுகின்றார். அது சிறியதாக இருந்தாலும், அதை
யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அது வளர்கிறது - தளிர், கதிர்,
தானியம் என விரிகிறது. 'பயிர் விளைந்ததும் அரிவாளோடு புறப்படுகிறார்
விதைப்பவர்.'
இங்கே விதைப்பவர் விதைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.
விதை தான் பெற்றிருக்கின்ற ஆற்றலால் அப்படியே வளர்கிறது. ஆற்றல்
உள்ள விதையைக் கண்டுபிடித்து விதைத்தவர் அதன் உரிமையாளர். ஆக,
உருவம் சிறியதாக இருந்தாலும், அது வித்திடப்பட்டதை உரிமையாளரே
மறந்து போனாலும், அல்லது அதன் இருப்பை 'சிறிது' என்று மற்றவர்கள்
ஒதுக்கிவிட்டாலும் அது வளர்கிறது. தான் பெற்றிருக்கின்ற தன் ஆற்றலின்
முழு வளர்ச்சியை அது உணர்ந்துகொள்கிறது.
இவ்வாறாக, கடந்த உருவகங்களில் இறைவனின் அருள்கரமும், இங்கே வலிமையற்றது
தான் இயல்பாகவே பெற்றிருக்கின்ற உள்ளாற்றலும் செடியின் வளர்ச்சிக்குக்
காரணமாக அமைகின்றன.
இவ்வாறாக, வலிமையற்றது வலிமை பெற இரண்டு காரணிகள் அவசியம்: (அ)
இறைவன், (ஆ) விதை.
இந்த விதையை நான் என் வாழ்வின் வலுவின்மைக்கு ஒப்பிடுகிறேன் என
வைத்துக்கொள்வோம். என் வாழ்வை நுனிக்கிளையாக ஊன்றி வைத்தவரும்,
இந்த உடல் என்னும் வாடகை வீட்டில் என்னைக் குடிவைத்தவரும் இறைவன்.
அதே நேரத்தில் நான் உருவில் சிறியதாக இருந்தாலும், என் உரு மற்றவர்களின்
பார்வையில் சிறியதாக இருந்தாலும் வளர்ந்து கிளை பரப்பி, அடுத்தவரை
என்னிடம் ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் என்னகத்தே உண்டு.
இவ்வாறாக, வலிமையற்றது வலுப்பெறுதலும், உருவற்றது உருப்பெறுதலும்
இறைவன் கையிலும், என் கையிலும் உள்ளது.
இதன் உள்பொருள் அல்லது வாழ்வியல் சவால்கள் மூன்று:
அ. நான் இறைவனின் கையில் என்னை சரணாகதி ஆக்க வேண்டும். அவர் என்னை
எங்கே நட விரும்புகிறாரோ அங்கே அவர் என்னை நட என் கைகளை
விரித்துக்கொடுக்க வேண்டும்.
ஆ. என் பின்புலம், என் சூழல், என் நட்பு வட்டம், என் அழைப்பு
எனக்கு சில மேலோட்டமான அடையாளங்களைத் தந்தாலும் அவற்றையும்
தாண்டி என்னை உந்தித் தள்ளுவது என்னுள் இருக்கும் ஆற்றலே. இந்த
ஆற்றலை நான் அடையாளம் கண்டு அதை முழுமையாகச் செயல்படுத்துதல்
அவசியம்.
இ. வளர்ச்சி என்றால் வலியும் அங்கே சேர்ந்தே இருக்கும். விதை
தன் சொகுசான கூட்டை உடைக்க வேண்டும். வேர் மண்ணைக் கீறி உள்ளே
செல்ல வேண்டும். வாடகைக்கு இருந்து விட்டு மாறிச் செல்லும்போது
நிறைய சுமக்க வேண்டும். உடைதல், கீறுதல், சுமத்தல் அனைத்தும்
வலி தருபவை. ஆனால், வலி மறைந்துவிடும். அந்த வலியினால் வந்த
வளர்ச்சி நிலைத்து நிற்கும்.
வலுவற்ற, உருவற்ற என்னை, உங்களை அவர் கைகளில் சரணாகதி ஆக்குவோம்.
அவரின் கை பட்டவுடன் நம் ஆற்றல் நம்மை அறியாமலேயே நம்மிலிருந்து
வெளிப்படும்.
அவரின் கரமும், என் ஆற்றலும் இணைந்தால் வலுவற்றவை வலிமை
பெறும், உருவற்றவை உருவம் பெறும்.
கிராமம் ஒன்று பஞ்சத்தில் வாடியது. பருவமழை பொய்த்துப்
போய், ஏரிகள், குளங்கள் வறண்டன. நிலத்தடி நீரும் நாளுக்கு
நாள் கீழே சென்றது. விதைக்கும் காலம் நெருங்கி வரவே ஊரார்
ஒன்றுகூடி அடுத்து செய்ய வேண்டியவை குறித்துப் பேசினர்.
இனி இந்த ஊரில் இருக்க முடியாது! நாம் வேறு ஊர் நோக்கிப்
புலம்பெயர்ந்தால்தான் உயிர்பிழைக்க முடியும் என்றார்
ஒருவர்.
நம் நிலம், வீடு அனைத்தையும் விட்டுவிட்டு எங்கே செல்வது?
இங்கேயே இருந்தால்தான் அவற்றைப் பாதுகாக்க முடியும்
என்றார் இன்னொருவர்.
கூட்டத்தின் ஓரத்தில் நின்ற வயதான லட்சுமி பாட்டி,
இப்போது நாம் இருக்கும் நிலை வருத்தத்துக்குரியதே! ஆனால்,
சோர்ந்துவிட வேண்டாம். நம்மிடம் இருக்கும் சேமிப்புகளை
மாற்றி விதைகள் வாங்குவோம். வழக்கம்போல விதைப்போம்.
நிலத்தடி நீரைப் பகிர்ந்து கொள்வோம். பருவமழை இந்த ஆண்டு
பொய்க்காது. ஏனெனில், நாம் காண்பவற்றின் அடிப்படையில்
அல்ல, மாறாக, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்!
என்றார்.
அவருடைய சொற்கள் ஊராருக்கும் நம்பிக்கை கொடுத்தன. விதைகள்
விதைக்கப்பட்ட சில நாள்களுக்குள் பருவமழை வந்தது. விதைகள்
வேகமாக வளரத் தொடங்கின. பஞ்சம் மறைந்தது. வளமை பிறந்தது.
நிற்க.
நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல. மாறாக,
நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்! என உரைக்கிறார்
பவுல் (இரண்டாம் வாசகம்).
கொரிந்து நகருக்குப் பவுல் வரையும் கடிதம் கண்ணீர் மடல்
என அழைக்கப்படுகிறது. ஏனெனில், கொரிந்து நகர மக்கள் பவுல்
அறிவித்த நற்செய்தியை விடுத்து இன்னொரு நற்செய்தியைப்
பற்றிக்கொள்கிறார்கள். பவுலின் நம்பகத்தன்மையைக்
கேள்விக்கு உட்படுத்தி, அவருடைய திருத்தூது பணி பற்றி
இடறல்படுகிறார்கள். தன் பணி குறித்து அவர்களுக்கு எழுதுகிற
பவுல், தான் காண்கிற, கேட்கிற, உணர்கிற எதிர்ப்புகளின்
அடிப்படையில் அல்ல, மாறாக, தன் வாழ்க்கை இவற்றைத்
தாண்டியது என முன்மொழிகிறார். மேலும், நம் வாழ்வு
இவ்வுலகில் முடிந்துவிடக்கூடியது அல்ல, மாறாக,
முடிவுறாதது. அந்தப் புதிய வாழ்க்கை நம் புலன்களுக்கு
அப்பாற்பட்டது என மொழிகிறார்.
நற்செய்தி வாசகத்தில், இறையாட்சி என்னும் மறைபொருளை தம்
சீடர்களின் கேட்டறியும் திறனுக்கு ஏற்ப உருவகங்களாக
(சொல்லோவியங்களாக) வழங்குகிறார் இயேசு. தானாக வளரும்
விதை, கடுகு விதை என்னும் இரு உருவகங்களை இங்கே
காண்கிறோம். இவற்றை இணைத்துப் பார்க்கும்போது நான்கு
விடயங்கள் தெளிவாகின்றன:
(அ) விதை தன்னகத்தே ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. அந்த
ஆற்றல் கண்ணுக்குப் புலப்படாதது.
(ஆ) விதையின் வளர்ச்சியை நிறுத்தவோ, தடுக்கவோ,
தள்ளிப்போடவோ இயலாது (புளிப்புமாவு செயல்பாடும்
இத்தகையதே). வெளிப்புறக் காரணிகள் அவற்றைத் தடுத்த
நிறுத்தாலும் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.
(இ) சிறிய அளவில் இருக்கிற ஒன்று பெரிய அளவு மாற்றத்தைத்
தரும்.
(ஈ) விதையை யாரும் கவனிக்கவில்லை என்றாலும், அது தன் முழு
இயல்பை அடையும் வரை தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.
இந்த நான்கு விடயங்களின் பின்புலத்தில், இறையாட்சியின்
பண்புகளைப் புரிந்துகொள்வோம்.
(அ) இறையாட்சி தன்னகத்தே ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. அந்த
ஆற்றல் நமக்குப் புலப்படாமல் இருக்கிறது.
(ஆ) இறையாட்சியின் வளர்ச்சியை யாரும் நிறுத்தவோ, தடுக்கவோ,
தள்ளிப்போடவோ இயலாது. வெளிப்புறத்திலிருந்து இறையாட்சி
எதிர்க்கப்பட்டாலும் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே
இருக்கும்.
(இ) இறையாட்சி சிறிய அளவில் தொடங்கி அனைவரையும்
உள்ளடக்கும் நிலைக்கு உயரும்.
(ஈ) இறையாட்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அது
தன் முழு இயல்பை அடையும் வரை வளர்ந்துகொண்டே இருக்கும்.
இவ்விரு உருவகங்கள் தானாக வளரும் விதை, கடுகு விதை
இயேசு தம் சீடர்களுக்கும் (மாற்கு தன் குழுமத்தாருக்கும்)
சொல்வது என்ன? அவர்களுடைய சமகாலத்தில் இறையாட்சி
எதிர்க்கப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டாலும்
அவர்கள் சோர்வடையக் கூடாது. இறையாட்சி வளர்ந்து அதன் முழு
இயல்பை அடையும் என்னும் எதிர்நோக்கில் அவர்கள் உறுதியாக
நிற்க வேண்டும். காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, மாறாக,
நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் வாழ வேண்டும்!
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல்
உருவகம் ஒன்றைக் கையாளுகிறார்: நுனிக்கிளை ஒன்று பெரிய
மரமாக மாறுகிறது. நுனிக்கிளை தன்னிலே வலுவற்றது,
நொறுங்குதன்மை கொண்டது. வலுவற்றதும் நொறுங்கக்கூடியதுமான
நுனிக்கிளையை கடவுள் தொட்டவுடன் (நட்டவுடன்) பெரிய மரமாக
மாறுகிறது.
பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடக்கிற இஸ்ரயேல் மக்களையே
நுனிக்கிளை உருவகம் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுளே
இஸ்ரயேல் மக்களை மீண்டும் அழைத்து அவர்களைப் பெரிய இனமாக
மாற்றுவார். ஆக, தங்கள் கண்களால் தாங்கள் காண்கிற
அடிமைத்தனத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக, நம்பிக்கையின்
அடிப்படையில் கடவுள் அருளும் விடுதலை வாழ்வின்
அடிப்படையில் அவர்கள் வாழ வேண்டும்.
பவுல் போல, இயேசுவின் சீடர்கள்போல, இஸ்ரயேல் மக்கள்போல
நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எப்படி வாழ்வது?
(அ) பார்வை மாற்றம் வேண்டும்
ஒரு பப்பாளியைத் திறந்து பார்த்து, அந்தப் பப்பாளிக்குள்
இருக்கிற விதைகளை எண்ணிப் பார்ப்பது அறிவு என்றால், ஒரு
விதைக்குள் எவ்வளவு பப்பாளிகள் ஒளிந்திருக்கின்றன என்று
சிந்தித்துப் பார்ப்பது ஞானம். ஒரு விதைக்குள் நிறையப்
பப்பாளிகளைப் பார்ப்பதே நம்பிக்கைப் பார்வை. இத்தகைய
பார்வை கொண்டிருக்கும்போது வாழ்க்கை நமக்கு விரியத்
தொடங்கும். குழந்தை இயேசுவைக் காண வந்த கீழ்த்திசை
ஞானியரிடம் இருந்தது இதே நம்பிக்கைப் பார்வையே!
அதனால்தான், அவர்கள் ஒரு குழந்தையில் யூதர்களின் அரசனைக்
கண்டார்கள். ஏரோதுவோ, குழந்தையில் குழந்தையை மட்டுமே
கண்டார். நாம் காண்கிற அனைத்திலும் ஆற்றல்
மறைந்திருப்பதைக் காணும் பார்வை பெற வேண்டும்.
(ஆ) மாறுவது மதிப்புக்குரியதாகிறது
விதையும், கடுகு விதையும், நுனிக்கிளையும் மரமாக
மாறும்போது மதிப்புக்குரியதாக, வலிமைமிக்கதாக, அனைவரையும்
தழுவிக்கொள்வதாக மாறுகிறது. நாம் நம் முழு இயல்பாக
மாறும்போது மதிப்புக்குரியவர் ஆகிறோம். லெயோனார்டோ
டாவின்சி இவ்வாறு புலம்புகிறார்: நான் வயல்வெளியில்
காண்கிற அனைத்து மலர்ச்செடிகளும் தங்கள் முழு இயல்பை
அடைந்து பூத்துக் குலுங்குகின்றன. மனிதர்கள் என்னவோ தங்கள்
ஆற்றலை அறியாதவர்களாக, தங்கள் இயல்பை முழுமையாக அடையாமலேயே
இறந்துவிடுகிறார்கள்! நம் முழு இயல்பாக நாம் மாறும் வரை
தொடர்ந்து நாம் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இந்த
வளர்ச்சி போதும்! என எந்தச் செடியும்
நிறுத்திக்கொள்வதில்லை. வெட்ட வெட்ட அது வளர்கிறது,
துளிர்க்கிறது. அதுபோலவே, எதிர்ப்புகள் வந்தாலும் நாம்
தொடர்ந்து வளர வேண்டும்.
(இ) நம்பிக்கைப் பார்வை அளிப்பது
நம் கணவர், மனைவி, குழந்தைகள், நண்பர், உடன்பணியாளர்,
முன்பின் தெரியாதவர் என அனைவரும் தங்களுக்குளே ஆற்றல்
கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஆற்றலை நாம்
அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும். சோர்வும்,
விரக்தியும், அவநம்பிக்கையும் வரும்போது, வாழ்க்கை
ஒன்றும் முடிந்துவிடவில்லை! என்னும் நம்பிக்கைச் செய்தியை
நாம் மற்றவர்களுக்குத் தர வேண்டும். நம் சொற்களும்
செயல்களும் மற்றவர்களுக்கு ஆற்றல் அளிப்பதாக இருத்தல்
வேண்டும். நாம் ஒவ்வொருவருமே இறையாட்சியின் ஆற்றலைக்
கொண்டிருக்கிறோம். நம் வழியாகவே இறையாட்சி இந்த மண்ணில்
மலர்கிறது. நாமே இறையாட்சி. நம்முடைய வளமையும்
வளர்ச்சியும் வலிமையுமே இறையாட்சியின் அடையாளங்கள்.
ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் செழித்தோங்குவர், கனி
தருவர், செழுமையாய் பசுமையாய் இருப்பர் எனப் பாடுகிறார்
திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 92) (பதிலுரைப்பாடல்).
நாம் வாழும் இந்த உலகமே ஆண்டவரின் இல்லம். நாம் எல்லாருமே
இங்கு நடப்பட்டுள்ளோம்!
பெருஞ்செல்வந்தன் ஒருவனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியும்
இல்லை. நிம்மதியும் இல்லை. தனக்கு எல்லாம் இருந்தும் ஏன்
நிம்மதி இல்லை என்று யோசித்துக் கொண்டு தன் செல்வங்கள்
அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்று. அதனை
ஒரு துறவியின் காலடியில் வைத்து, அவரிடம் இதயத்தில்
மகிழ்ச்சி காண வழியைக் கேட்டான். துறவியோ அந்த மூட்டையை
எடுத்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினார். போலி துறவியிடம்
ஏமாந்துவிட்டதாக நினைத்த அச் செல்வந்தன் அவரை
துரத்திக்கொண்டே ஓடினான். திடீரென ஓட்டத்தை நிறுத்திய
துறவி, என்ன! பயந்துவிட்டாயா...? இந்தா உன் செல்வம். நீயே
வைத்துக்கொள் என்று கூறி அவனிடம் கொடுக்க, அவனோ இழந்த
செல்வத்தைப் பெற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.
அப்போது துறவி அவனிடம் இங்கு வருவதற்கு முன்னால் கூட
இந்தச் செல்வம் உன்னிடம்தான் இருந்தது. இருந்தும் அப்போது
உனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே
செல்வம்தான். ஆனால் இப்போது உனக்குள் மகிழ்ச்சி
இருக்கிறது. எனவே மகிழ்ச்சி என்பது, நிம்மதி என்பது,
வெளியே இல்லை. அது எங்கு கிடைக்கும் என்று தேட வேண்டியதும்
இல்லை. அது உனது இதயத்துக்குள்ளே தான் இருக்கிறது. அதை
நீயே கண்டுபிடித்தால் உனக்குள் நிம்மதி நிரந்தரமாக
இருக்கும் என்றார் துறவி.
இறையரசு என்பது மனித இதயம் என்னும் நிலத்தில் நீர்
பாய்ச்சி, அதில் அன்பு, அமைதி, நீதி போன்ற விதைகளைப்
பயிரிட்டு, இறுதியில் மகிழ்வை அறுவடை செய்வதாகும். மனிதன்
தேடும் அமைதியும், மகிழ்வும் அவன் இதயத்துக்குள்ளேதான்
இருக்கிறது. மனித இதயத்தில் தான் விதைக்கப்படுகிறது (கலா.
5:22). எந்த மனிதன் நான், எனது, எனது குடும்பம், நமது
சமூகம் என்பதை இதயத்தில் பதியம் போடுகிறானோ, அங்கே, தானாக
முளைத்து வளர்ந்து, பலருக்கும் பயன்தரும் மரம் போல இறையரசு
உதயமாகிறது. இறைவனையும், இறைச்சிந்தனைகளையும் ஏற்றுக்
கொள்ளத் தொடங்கும்போதே, இறையரசு இதயத்தில் குடிகொள்ள
தொடங்குகிறது என்றே கூறலாம்.
மகிழ்ச்சி. நம்பிக்கை என்ற விதைகளை விதைக்கிறார் இயேசு.
கடுகு விதையின் தோற்றத்தை வைத்து, தீர்க்கமாக தீர்மானிக்க
முடியாது. இறையரசு தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும், அதன்
வளர்ச்சி நம்மை வியக்கச் செய்கிறது. காரணம், அது கடவுளின்
செயல்திட்டமாகும். இறையரசு என்பது இறைச் சிந்தனைகளை
செயலாக்கம் பெற வைப்பதேயாகும். இறையரசின் பண்புகள்
இதயத்தில், மனித உறவுகளில் நிலைத்திருக்க வேண்டுமானால்,
நாம் இறை நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும். நன்மைகளை,
உண்மைகளை, நேர்மை யானவைகளை தன்னிலே கொண்டவர்கள்
இறையரசுக்கு உரியவர்கள் ஆவார்கள். இதற்கு எதிராகச்
செயல்படக்கூடியவர்கள் இறையரசை இதயத்தில் காணாது
இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றே கூற வேண்டும். இன்றைய
முதல் வாசகம் கூறுவதுபோல, மனித வாழ்க்கை வளர்ந்து அது
பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும் பல மடங்கு பயன்
தரும் மரமாக வேண்டும் (முதல் வாசகம்). நம்பிக்கை இழந்த
இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதையை அவர்களின்
இதயங்களில் விதைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல்.
இயேசுவின் உவமையில் வரும் விவசாயி, விதைகளை
விதைத்துவிட்டு, நிம்மதியாக இரவில் தூங்குகிறான். நாட்கள்
நகர விதைகள் தானாக முளைத்து வளர்கிறது (மாற். 4:27).
விதையானது தன்னகத்தே கொண்ட ஆற்றலால் தானாக வளர்ந்து பலன்
தருகிறது. இயற்கையாக நிகழும் விதையின் வளர்ச்சியை
இறையரசின் வளர்ச்சிக்கு இயேசு ஒப்பிடுகிறார். இறை
வார்த்தைகளை இதயத்தில் விதைத்துவிட்டு, பலனுக்காகப்
பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்று இயேசு
உணர்த்துகிறார்.
விதையோ சிறிது, மரமோ பெரிது.
இயேசு தொடங்கிய இறையரசு கடுகுமணிபோல் சிறிதாக இருந்தும்,
அவரது போதனைகள், புதுமைகள், வழியாக நன்கு வளரத்
தொடங்கியது. கடுகுமணி போல் இருந்த இறையரசு அவரின்
உயிர்ப்புக்குப் பிறகு பெரிதும் வளரத் தொடங்கியது. கடுகு
விதை சிறிதாக இருந்தாலும், அது விதைக்கப்பட்ட பின்,
வளர்ந்து, பெரிதாகி பலருக்கும் பயன் தருகிறது. வானத்துப்
பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப்
பெருங்கிளைகள் கொண்டது (மாற். 4:32). தொடக்க கால திருச்சபை
கடுகுமணி போல் உதயமானாலும், காலப்போக்கில் பல
நாட்டவருக்கும், இனத்தவருக்கும் அடைக்கலம் கொடுக்கும்
வகையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் இருள்
முழுவதையும் உடனே ஒளியாக்க வேண்டும் என்று நினைக்காமல்,
சிறிய விளக்கில் முதலில் ஒளியேற்றுவோம். அது சுடர்விட்டுப்
பிரகாசித்து இறுதியில் இருள் முழுவதையும் வெல்லும் என்பதை
உணர்வோம்.
நமது இதயத்தில் வேற்றுமை, சுயநலம் போன்ற கிளைகளைக்
களைந்துவிட்டு, அதை நீதி, அன்பு, மகிழ்ச்சி போன்ற
இறையரசின் கூறுகனை உள் வாங்கி, பூத்துக் குலுங்கும்
பூக்காடாக்குவோம். அவ்வாறு செயல்பட்டால், நமது இதயம்
இறையரசுக்கு உரிய , பக்குவப்பட்ட, பண்பட்ட, பயனுள்ள,
தோட்டமாக மலர்ந்து மணம் வீசும். அப்போது நாம் தேடும்
இறையரசு நமது இதயத்துக்குள் வசப்படும்.
சிந்தனைக்கு
இறையரசு இங்குள்ளது, அங்குள்ளது என்று தேடிக்
கொண்டிருக்காமல், நமது இதயத்துக்குள் உள்ளது என்பதை உணர
வேண்டும். அதை உள்வாங்கி, எப்படி வெளிப்படுத்துவது என்பதை
பற்றிச் சிந்திக்க வேண்டும். சூழ்நிலை அமைந்தால் குயில்
பாடுகிறது, முள் மரத்தில் இருந்தாலும் குயில் குயில் தான்.
அது போலதான் இறையரசு சூழ்நிலைக்கு ஏற்ப வளர்கிறது. உன்னால்
முடியும் தம்பி எல்லாம் உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
என்ற திரைப்படப் பாடலுக்கு ஏற்ப நமக்குள் இருக்கும்
இறையரசைக் கண்டுபிடித்து அதில் நிறைவான மகிழ்ச்சி காண
முயல்வோம்.
இறைவனுடைய ஆட்சி என்பதுதான் இறையாட்சி! இறையாட்சியை ஒரு
மரத்திற்கு ஒப்பிடலாம். இந்த மரம் தரும் கனிகள்தான் அன்பு,
மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை ,
கனிவு, தன்னடக்கம் (கலா 5:22-23) ஆகியவையாகும்.
கடவுள் நமது மீட்பை நாமே சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்று
விரும்புகின்றவர் ! ஆகவே கடவுள் நமது உள்ளங்களில் மரங்களை
நடாமல், விதைகளை விதைத்திருக்கின்றார்!
நமது உள்ளத்திற்குள்ளே திருமுழுக்கு நாளன்று கடவுள் அவரது
தூய ஆவியாரை பொழிந்திருக்கின்றார் ! அவரது கனிகளை நாம்
துய்க்க வேண்டுமானால், ஆவியார் நமக்குள் விதைத்திருக்கும்
விதைகள் முதலில் முளைக்க வேண்டும்!
ஒரு விதை எப்போது முளைக்கின்றது? என்பது நமக்குத்
தெரியும்! அமைதியில்தான் எப்போதும் விதைகள் முளைக்கின்றன
என்பதை நாம் நன்கு அறிவோம்! அமைதி தேவை, மண் தேவை, தண்ணீர்
தேவை, ஒளி தேவை; இவை அனைத்தும் ஒன்றுபட்டு செயல்படும்போது
நமக்குள் விதைகள் முளைத்து, விருட்சங்கள் வளரும், கனிகள்
பிறக்கும்!
ஓர் ஊரில் நீண்டகாலமாக மழை பெய்யவில்லை! நிலங்கள்
வரண்டுவிட்டன! மரங்கள் பட்டுப்போகத் துவங்கின!
விதைக்கப்பட்ட விதைகள் முளைக்கவில்லை! ஆகவே அந்த ஊர்
மக்கள் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவரிடம் சென்று
முறையிட்டார்கள்!
அந்த முனிவர் ஒரு நிபந்தனை விதித்தார்! திறந்தவெளியில்
ஒரு குடிசை கட்டித்தர வேண்டும்! பின் மூன்று நாள்கள் நான்
தனியாயிருக்க உதவ வேண்டும்! உணவும் தண்ணீரும் தேவையில்லை!
அப்போதுதான் என்னால் மழையை வரவழைக்க முடியும்" என்றார்.
மக்கள் அந்த முனிவர் சொன்னபடியே செய்தனர். மூன்றாவது நாள்
மழை பெய்தது!
நன்றி சொல்ல அவர் குடிசை முன்னால் பெருங்கூட்டம் கூடியது!
அவர்கள் அந்த முனிவரைப் பார்த்து, "மழையை எப்படி
வரவழைத்தீர்கள்? என்று கேட்டனர்!
அதற்கு முனிவர் சொன்னார், "மழையை வரவழைப்பது மிகவும்
எளிது! மழை வேண்டும் என்ற எண்ணத்திற்கு மட்டும் மனத்தில்
இடம் கொடுத்து, மற்ற எண்ணங்களையெல்லாம் மறந்துவிட
வேண்டும்! நான் மூன்று நாள்களும் மழையைப் பற்றியே
நினைத்துக்கொண்டிருந்தேன். என் எண்ணங்கள் வானத்தில்
மிதந்து சென்ற வெள்ளை மேகங்களைப் பாதித்தன ! என்
மனத்திலிருந்து, இதயத்திலிருந்து பிறந்த அதிர்வுகள்
மேகங்களை அதிர வைத்தன; மழை பெய்தது " என்றார். நமது
இதயத்திலிருந்து, மனத்திலிருந்து பிறக்கும் அதிர்வுகளால்
வானத்தைக்கூட புரட்டிப்போட முடியும்!
நமக்குள்ளே தூய ஆவி என்னும் ஆற்றல்மிகு சக்தி உண்டு! அந்த
சக்தியால் விதைகளை முளைக்க வைக்க முடியும்! தூய ஆவியால்
எல்லாம் ஆகும் என்று நாம் எண்ணத்துவங்கினால் அந்த எண்ணம்
மிக எளிதில் செயல்வடிவம் பெறும்! நாம் எதை எண்ணுகின்றோமோ
அதுவாக நாம் மாறிவிடுவோம்! நாம் அடைய விரும்பும் இறையரசை
நினைத்து அமைதியாக அமர்ந்திருந்தால் நாம் தேடும் இறையரசு
நமக்குள் மலரும்!
நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் கனிகளை நாம் என்ன
செய்வது? இந்த உலகில் நாம் படைக்கப்பட்டதே மற்றவர்களுக்கு
உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்து பழுத்த மரமாக வாழ நாம்
முன்வரவேண்டும்! இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல இந்த
உலகிலே நாம் செய்யும் நற்செயல்கள் மறு உலக வாழ்வை
நிர்ணயிக்கும் (2 கொரி 5:10).
நாம் விதைக்கப்படாத நிலமல்ல; விதைக்கப்பட்ட நிலம்!
கடவுளின் உதவியோடு இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியேல்
கூறுவது போல கனிதரும் மரங்களாக நம்மால் வாழமுடியும்,
பறவைகளின் சரணாலயங்களாக நம்மால் திகழமுடியும். விதைக்கு
உயிர்தரும் கடவுளுக்கு நாம் ஆழ்ந்த அமைதியையும், நல்ல
ஆன்மிக அதிர்வுகளையும் தந்தால் போதும்.
நாம் கடுகு விதைபோல இருக்கலாம் (நற்செய்தி). ஆனால் கடவுள்
காட்டும் அமைதி வழியில், ஆன்மிக வழியில் நடந்தால் நாம்
வானத்துப் பறவைகள் தங்கும் அளவுக்கு வளர்வோம்; நமது
உறவுகள் என்னும் கிளைகள் சிறகுகளாக விரியும்!
மேலும் அறிவோம் :
வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து) அனையது உயர்வு (குறள் : 595).
பொருள் : நீரின் மிகுதிக்கு ஏற்றவாறு நீர்ப்பூவாகிய
தாமரைத் தண்டின் நீளம் அமையும்; அதுபோன்று மக்கள்
ஊக்கத்திற்குத் தக்கவாறு வாழ்வின் உயர்வு விளங்கும்!
பிரஞ்சு புரட்சி பற்றி ஒரு நூல்
வெளியிடும் எண்ணத்துடன் 'ஸ்டுவர்ட் மில்' என்பவர் அதற்கான
கைப் பிரதிகளைத் தயாரித்தார். அவற்றை தன் அறையில் ஒரு
மூலையில் வைத்திருந்தார். அவருடைய வீட்டு வேலைக்காரி
அப்பிரதிகளைப் பழைய காகிதம் என்று நினைத்து அடுப்பில்
போட்டு எரித்து விட்டார், பல ஆண்டுகளின் உழைப்பு
சாம்பலாகிவிட்டது. இருப்பினும் அவர் மனம் உடைந்து போகாமல்,
மீண்டும் கைப் பிரதிகளைத் தயாரித்து, அவற்றை நூலாக
வெளியிட்டு உலகப் புகழ்மிக்க வரலாற்று ஆசிரியர் என்ற
பெருமையை அடைந்தார்.
வாழ்க்கையில் நாம் தோல்வியைத் தழுவும்போது. துவண்டு
விடாமல் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். இன்றைய முதல்
வாசகம் நம்பிக்கை இழந்து போன இஸ்ரயேல் மக்களுக்கு
நம்பிக்கையூட்டுகிறது, அவர்கள் பாபிலோனியாவுக்கு நாடு
கடத்தப்பட்டு அங்கு அடிமைகளாக அல்லற்பட்டனர், அம்மக்கள்
மீண்டும் தங்கள் தாயகம் திரும்புவர் என்ற நம்பிக்கையை
முதல் வாசகம் அளிக்கிறது. ஒரு மரத்தை வெட்டி விட்டாலும் ,
அதன் அடிமரம் துளிர்விட்டு மீண்டும் மரமாகும். அவ்வாறே
இஸ்ரயேல் மக்கள் பல்வேறு நாடுகளில் சிதறுண்டு போனாலும்
அவர்களில் 'எஞ்சி இருப்பவர்கள் கடவுளுடைய திட்டத்தை
நிறைவேற்றுவர் என்பது இறைவாக்கினர் எசாயாவின் இறையியல்
என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: "ஆண்டவர் இல்லத்தில்
நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில்
செழித்தோங்குவது" (திபா 92:13). நம்புவோர்
செழித்தோங்குவர், அவர்கள் பட்டமரம் தளிர்ப்பதுபோல்
புத்துயிர் பெறுவர். இது கடவுளின் செயல்; நமது கண்ணுக்கு
வியப்பளிக்கும் செயல்.
இன்றைய நற்செய்தியில், இறை ஆட்சியின் வளர்ச்சியைக்
கிறிஸ்து விதை உவமை மூலம் விளக்குகிறார். இந்த குறிப்பிட்ட
உவமை மாற்கு நற்செய்தியில் மட்டும் காணக்கிடக்கிறது.
நிலத்தில் விதைக்கப்பட்ட விதை முளைத்து, வளர்ந்து, பலன்
தருவது அவ்விதையை விதைத்தவரைப் பொறுத்ததன்று. அது தன்
இயல்பிலேயே வளர்ந்து பலன் தருவது உறுதி. அவ்வாறே இறையரசின்
வளாச்சியை எவரும் தடைசெய்ய முடியாது.
சிறையில் அடைக்கப்பட்ட திருத்தூதர் பவுல் கூறுகிறார்:
"கடவுளின் வார்த்தையைர் சிறைப்படுத்த முடியாது." (2 திமொ
2:9). திருப்பலியாளர்களை, நற்செய்தியாளர்களைச்
சிறைப்படுத்த முடியும்: ஆனால் நற்செய்தியை எவரும் சிறையிட
முடியாது. காற்று அது விரும்பும் திசையில் வீசுவதுபோல,
ஆவியாரும் அவர் விரும்பும் திசையில் வீசுவார், ஆவியாசின்
செயல்பாட்டை எவரும் தடைசெய்ய முடியாது (காண், யோவா 3:8),
எனவே, எத்தகைய எதிர்ப்பையும் கண்டு அஞ்சாமல், நற்செய்தியை
நாம் அறிவிக்கவேண்டும்.
"நான் நட்டேன். அப்பொல்லோ நீர் பாய்ச்சினார். கடவுளே
விளையச் செய்தார்" (1 கொரி 3:8). எனவே நடுவதும், நீர்
பாய்ச்சுவதும் நமது கடமை; விளையச் செய்வது கடவுளின் செயல்,
மருந்து கொடுப்பது மருத்துவர் பணி, குணப்படுத்துவது
கடவுளின் செயல். அவ்வாறே நற்செய்தியை அறிவிப்பது நமது பணி:
இறை ஆட்சியின் வளர்ச்சி கடவுளின் செயல்.
இன்றைய நற்செய்தியில் இறை ஆட்சியின் வளர்ச்சியை கடுகு விதை
உவமை மூலம் கிறிஸ்து விளக்குகிறார். அது சிறிய
விதையானாலும், பெரியதாக வளர்த்து வானத்துப் பறவைகள் அதன்
நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளை விடுகிறது.
கிறிஸ்து பன்னிரண்டு சீடர்களுடன் இறை ஆட்சியைத்
தொடங்கினார். அவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. அவர்
விண்ணகம் சென்றபின். தூய ஆவியின் வருகைக்காக மன்றாடிய
சீடர்களின் எண்ணிக்கை 120. தூய ஆவியாரின் பெருவிழாவில்
திருமுழுக்குப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3000. பின் அது
5030 ஆனது. இன்று எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும்,
எல்லாப் பண்பாட்டிலும் நற்செய்தி வேருன்றியுள்ளது. இது
கடவுளின் செயல்; நமது கண்ணுக்கு வியப்பளிக்கும் செயல்.
விண்ணகத்தில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
இஸ்ரயேல் மக்களிடமிருந்து மட்டும் 1,44,000 பேர். இந்த
எண்ணிக்கை எப்படி வந்தது? 12 123 1000 1,44,000,
பன்னிரண்டு முழுமையைக் காட்டும்; அது இஸ்ரயேலின்
பன்னிரண்டு குலங்களையும் குறிக்கும். அவர்களுடன் எல்லா
நாட்டையும் குலத்தையும் இனத்தையும் சார்ந்த எண்ண இயலாத
பெருந்திரளான மக்கள் இருந்தனர் என்று திகுவெளிப்பாடு நூல்
கூறுகிறது (திவெ 4:9), எனவே பலர் மீட்கப்படுவர். இது
கடவுளின் செயல், நமக்கு வியப்பூட்டும் செயல்.
நற்செய்தி நம்பிக்கையில் நற்செய்தி, நாம் மற்றவர்களுக்கு,
குறிப்பாக நமது பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு நம்பிக்கை
ஊட்ட வேண்டும், அவர்களை மட்டம் தட்டி மனம் உடைந்துபோகச்
செய்யக்கூடாது. பரிணாம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு
ஆசிரியர் கேட்டார், அசோக் என்ற மாணவன் எழுந்து கூறியது:
நான்தான் பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
ஏனெனில் நான் சிறுவனாக இருந்தபோது என்னை "வாடா,
கண்ணுக்குட்டி" என்று அழைத்த என் அப்பா, இப்போது 'வாடா
எருமைமாடு" என்று அழைக்கிறார், பிள்ளைகளை நாயே, பேயே.
எருமைமாடு என்று கூப்பிடுவது பெரிய அநீதியாகும்.
இக்காலத்துப் பிள்ளைகள் நம்மைவிட பல துறைகளில்
அறிவுமிக்கவர்களாய் உள்ளனர். அதைக்கண்டு நாம் பெருமிதம்
அடைய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
உணவு உட்கொள்வதில்லையா? திரும்பத் திரும்பக்
குளிப்பதில்லையா? திரும்பத் திரும்பப் பார்த்துப்
பார்த்து, திரும்பத் திரும்பப் பேசிப் பேசிக்
காதலிப்பதில்லையா? திரும்பத் திரும்பப் பாவம் செய்வது
மனிதப் பலவீனம்; திரும்பத் திரும்ப மன்னிப்பது இறைவனின்
இரக்கம்.
ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுகும் ஒவ்வொரு முறையும் நாம்
நாம் எவ்வளவு தீயவர்கள் என்பதை உணர்வதைவிட, கடவுள் எவ்வளவு
நல்லவர் என்பதை உணர வேண்டும். 'ஆண்டவரைப் போற்றுங்கள்,
ஏனெனில் அவர் நல்லவர்'.
"தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து
செய்வது, தவறு செய்தவன் வருந்தி ஆகனும், தப்பு செய்தவன்
திருந்தப் பார்க்கணும்
அமெரிக்காவில் கருப்பின மக்களின் விடுதலைக்காகப்
பாடுபட்டவர் மார்ட்டின் லூத்தர் கிங். அவரது கல்லறையில்
ஓர் அற்புதமான வடிவமைப்பைச் செய்துள்ளனர். ஒரு நீரூற்றினை
அமைத்து ஒரு துளித் தண்ணீர் மட்டும் சொட்டுச் சொட்டாக
விழுந்து ஒரு தடாகம் போல் தண்ணிர் தொட்டியை
உருவாக்கியுள்ளனர். அதன் அருகில் ஒரு வாக்கியம்
பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நீர்த்துளியும் மிகப் பெரிய
கடலையே உருவாக்கும் என்பதுதான் அது. அதாவது சிறிய சிறிய
செயல்கள்தாம் பெரிய சமூக மாற்றத்தையே உருவாக்கும் என்ற
பொருளில் எழுதப்பட்டுள்ளது.
நாம் செய்யும் பணி கடலிலே ஒரு சிறிய துளி என்றாலும்
அந்தச் சிறு துளி இல்லையென்றால் அந்தக் கடல் ஒரு துளி
குறைவு பட்டுத்தானே இருக்கும். பல பல சிறு துளிகள்
சேராவிட்டால் பெரிய கடல் ஏது?'' என்ற அன்னை தெரசாவின்
பொன்னான கூற்று சிந்திக்கத்தக்கது.
மிகப் பெரிய செயல்பாடுகள் மிகச் சிறிய தொடக்கத்திலிருந்து
அரும்பி மலர்கின்றன. இறையாட்சியும் அப்படியே!
அணு சிறியதுதான். அதற்குள்தான் மாபெரும் சக்தி மறைந்து
கிடக்கிறது. அது பிளக்கப்படும்போது அடங்கிக் கிடந்த
மாபெரும் சக்தி வெளிப்படுகிறது. அதன் வேகமோ சொல்லில்
அடங்குவதில்லை. ஆல மர விதை சிறியதுதான். அது பிளந்து
உயிர்ச்செடியாக முளைக்கத் தொடங்கிவிட்டால் அதன்
வளர்ச்சிக்குத் தடையே இல்லை. மண்ணை என்ன, மலைப்பாறையைக்
கூடப் பிளந்து விடுகிறது.
குழந்தை இயேசுவின் புனித தெரசா தன்னையே `சிறுமலர்' என்று
அழைத்துக் கொண்டதற்கு அவளது குழந்தைப் பருவத்தில் நடந்த
சுவையான நிகழ்ச்சியே காரணமாம். கார்மெல் சபைத்துறவியாகத்
தன் ஆசையை வெளிப்படுத்தியபோது அவளுடைய தந்தை லில்லி போன்ற
ஒரு சிறிய வெண்ணிற மலரை எடுத்து அவளிடம் கொடுத்து
விளக்கினாராம். இதை எவ்வளவு கவனமாக உருக்கொடுத்து மலரச்
செய்து கடவுள் இந்நேரம் வரை காத்து வந்திருக்கிறார்
என்றாராம். அந்தச் சிறுமலரையும் இந்தக் குட்டித்
தெரசாவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனது வாழ்க்கையின்
கதையைக் கேட்பது போலவே உணர்ந்தாளாம். தான் இயேசுவின் சிறிய
மலர் என்று பெருமிதப்பட்டுக் கொள்வாளாம்.
நாமெல்லாம் கடவுள் வித்திட்டு வளர்த்த மரங்களே என்கிறது
முதல் வாசகம். "தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே. உயர்ந்த
கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன்
..... அது கிளைத்துக் கனி தந்து சிறந்த கேதுரு மரமாகத்
திகழும். அனைத்து வகைப்பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக்
கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும் "
(ஏசேக . 17:22-23).
இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசுவின் இறையாட்சி மாபெரும் மரமாக
வளர்ந்துள்ளது. உலகின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும்
இறையாட்சியின் உண்மைக் கரு ஊடுருவி இருக்கிறது. கடுகு
விதையாகத் தொடங்கி பெரிய மரமாகி வானத்துப் பறவைகளுக்குப்
புகலிடமாக இருக்கிறது.
"இறைவனின் அரசு உங்களுக்குள்ளே" என்றுரைத்து மனித
உள்ளங்களிலேயே அதன் தடம் காண முயன்றார் இயேசு. மிகச்
சிறியதாய்த் தொடங்கி மிகப் பெரியதாய் வளர்ந்து விரிந்து
உலக இனங்கள் அனைத்திற்கும் அடைக்கலம் தரும் ஓர் அரசாக அதை
அவர் சித்தரிக்கிறார்.
கிறிஸ்தவம் என்னும் இயேசு இயக்கம் இன்று வேர் விடாத
இடங்களே இல்லை. அந்த அளவு பரவக் காரணம் நம் முன்னோர்களின்
நம்பிக்கை வாழ்வும் அருப்பணமும்தான். தடைகள், இடர்கள்
அனைத்தையும் தகர்த்து இறையாட்சியின் சாட்சிகளாக
நின்றார்கள்.
மனித வாழ்வில் தன்னல வேர்கள் அறுந்து, தான்' எனும் ஆணவம்
அழிந்து இறைவனின் விருப்பங்கள் நிறைவேறும் நிலைதானே
இறையாட்சி! உழவன் விதையை நடுகிறாரே தவிர அதனை முளைக்கச்
செய்வதில்லை. விதை எப்படி முளைக்கிறது, எப்படி வளர்கிறது
என்பவை கூட அவரது அறிவைக் கடந்தவை.
வாழ்வு வளம் பெற இறையருளும் தேவை. மனித முயற்சியும் தேவை.
அவற்றில் ஒன்று இல்லை என்றாலும் வாழ்வு சிறக்காது. செடி
வளர நாம் மண்ணை வளப்படுத்தலாம், உழலாம், உரமிடலாம், தண்ணீ
ர் பாய்ச்சலாம். இவையெல்லாம் தேவை. ஆனால் இவை மட்டும்
போதுமா? விதையை முளைக்கவைக்கும் சக்தி ஒன்று இருக்க
வேண்டும். ''நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்;
கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை;
நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும்
கடவுளுக்கே பெருமை (1 கொரி. 3:6-7). புதியதொரு இறைச்
சமூகத்தைக் கட்டி எழுப்பும் நமது முயற்சிகளின் முடிவில்
இறைவன் அருள் பொழிந்தால் தான் இறைச் சமூகம் செழித்து
வளரும். நமது முயற்சிகளில் பெருமை கொள்ளாது இறையாற்றலில்
நம்பிக்கை கொள்வோம்.
விதைகளுக்குள் உசும்பிக் கிடக்கும் உயிர் ஆற்றல் இயேசுவின்
இலட்சியக் கனவாம் இறையாட்சிக்குச் சரியான, பொருத்தமான
உவமை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. அதனை உணர்த்தும்
வகையில் தான் இயேசு சொல்வார்: ''உங்களுக்குக் கடுகளவு
நம்பிக்கை இருந்தால், நீங்கள் இம்மலையைப் பார்த்து
இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ' என்று கூறினால் அது
பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றுமிராது'' (மத்.
17:20). எரிக்கோ நகரின் மதில் சுவர் இடிந்ததும்
தகர்ந்ததும் அத்தகைய நம்பிக்கையால்தானே! (யோசுவா 6:20).
ஆடு மேய்த்த பணியில் இருந்த மோசேயால் இஸ்ரயேல் குலமே
விடுதலை பெறவில்லையா?
விதைகள் அளவில் சிறியதாயினும் ஆற்றலில் அணுகுண்டு
போன்றவைதான். இயேசுவின் இறையாட்சி வித்து நம்
ஒவ்வொருவரிலும் புதைக்கப்பட்டுள்ளது. இறையாட்சிக்குரிய
ஆற்றல் திருமுழுக்குப் பெற்ற நம் அனைவரிடத்திலும் உள்ளது.
இந்த ஆற்றலை தாம் அடையாளம் கண்டு பயன்படுத்த வேண்டும்.
பலவகைகளில் இறையாட்சியின் உயிர்த்துடிப்பு நம்மில்
இருப்பதில்லை. வாழ்க்கைச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு
இயேசுவின் இலட்சியக் கனவில் பங்கு கொள்ளத் தவறி
விடுகிறோம். நமக்குள் இருக்கும் இறையாட்சி வித்துக்கள்
முளைத் தெழுந்து செயல்பட அனுமதிப்போம்.
கிறிஸ்தவம் என்னும் இயேசு இயக்கம் எண்ணில்லா
உறுப்பினர்களின் ஆதரவோடு தொடங்கப்பட்டதல்ல. இயேசு நிறுவிய
இறையாட்சியின் தொடக்கம் அவரையும் அவருடைய பாமர பன்னிரண்டு
சீடர்களையும் மட்டுமே உள்ளடக்கி உதயமான ஒன்று. கடந்த 2000
ஆண்டுகளாக இந்த இறையாட்சி ஒரு மாபெரும் மரமாக கிளை பரப்பி
வளர்ந்தோங்கியுள்ளது. உலகின் சிந்தனைகளையும்
செயல்பாடுகளையும் இறையாட்சியின் உண்மைக் கரு பெரும்
பாதிப்புக்கே உள்ளாக்கி இருக்கிறது. இந்த வளர்ச்சியின்
வேகம் எந்நிலையிலும் தடைப்படப் போவதில்லை. வளர்ந்து
கொண்டேதான் இருக்கும். நம்முடைய சொந்த வாழ்விலும் இந்த
இறையாட்சியின் தாக்கம் செயல்படக் கருவிகளாக இருப்போம்.
திரு அவையின் எளிமையைக் காப்போம்.
எல்லாவற்றிற்கும் ஒரு நிறைவு உண்டு. இறுதியில்
அறுவடைவரும். கதிர்கள் கனிகள் சேகரிக்கப்படும். பதர்கள்
களைகள் ஒதுக்கப்படும். அந்த நிறைவாழ்வுக்காக நாம்
நம்பிக்கையோடு தயார்நிலையில் காத்திருப்போம்..
இயற்கையில் காணும் விந்தைகளில் ஒன்று ஒரு விதை முளைத்து
வளர்வது. கண்ணுக்குப் புலப்படாத வளர்ச்சி. மனித அறிவையும்
முயற்சியையும் கடந்த வியப்புக்குரிய மகத்தான வளர்ச்சி
அவ்வாறே இறையரசும் இருக்கும்.
இறைவார்த்தையைத் தூவ வேண்டியது நற்செய்தி அறிவிப்பவர்களின்
கடமை. வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் நற்பலனையும் தருவது
கடவுளின் செயல்.
நற்செய்தியாளர்களைச் சிறைப்படுத்த முடியும். ''ஆனால்
கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது (2 திமோ.
2:9).
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
பூமியை மேலும்
உடைக்காமல் விடுங்கள்!
மண், விதை, செடி, கொடி, மரம் என்று... தாவர உலகை
மையப்படுத்தி, இயேசு, பல வேளைகளில் பேசியிருக்கிறார்.
தச்சு வேலையை, தன் குடும்பத் தொழிலாகச் செய்து வந்த
இயேசுவுக்கு, தாவர உலகின் மீது எப்படி இவ்வளவு ஈடுபாடு
வந்திருக்க முடியும் என்று எண்ணி வியப்படைகிறேன். தன்னைச்
சூழ்ந்திருந்த இயற்கை வழியே, இறைவனைத் தொடர்ந்து
சந்தித்துவந்த இயேசுவுக்கு, இயற்கையின் அதிசயங்கள் மனதில்
பதிந்தது, ஒன்றும் அதிசயம் இல்லையே!
சாதிக்கவேண்டும் என்ற வெறியில், இயற்கை சழற்சிக்கு மாறாக,
இரவையும் பகலாக்கி, இடைவிடாமல், அவசரமாக
ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு...
சேகரிக்கவேண்டும் என்ற சுயநல வெறியில், சுற்றுச்சூழலுக்கு
எது நடந்தாலும் கவலையில்லை என்று, இயற்கை வளங்களை
அழித்துவரும் நமக்கு...
இந்த ஞாயிறு வாசகங்கள் வழியே பாடங்கள் சொல்லித் தருகிறார்,
இறைவன்.
இயற்கையை நினைவுறுத்தும் இவ்வாசகங்கள், இந்த ஞாயிறன்று
நம்மை வந்தடைந்துள்ளதை நான் ஒரு வரமாக, வாய்ப்பாக எண்ணிப்
பார்க்கிறேன். சுற்றுச்சூழலை மையப்படுத்தி, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள சுற்றுமடல், ஜூன் 18,
வருகிற வியாழனன்று, வெளியாகவிருக்கிறது. இயற்கையில்
தன்னையே கரைத்துக்கொண்ட அசிசி நகர் புனித பிரான்சிஸ்,
இயற்கையோடிணைந்து, இறைவனை வாழ்த்திப் பாடிய கவிதையின்
வார்த்தைகள், "Laudato Si"அதாவது, வாழ்த்தப் பெறுவாராக
என்ற வார்த்தைகளை, தலைப்பாகக் கொண்டு திருத்தந்தையின் இந்த
மடல் எழுதப்பட்டுள்ளது. படைப்பின் பாதுகாப்பு என்ற கருத்தை
வலியுறுத்தி, திருத்தந்தையர் 6ம் பவுல், 2ம் யோவான் பவுல்,
16ம் பெனடிக்ட் ஆகியோர் பல்வேறு தருணங்களில் கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர். எனினும், இயற்கையை மையப்படுத்தி,
சுற்றுமடல் ஒன்று வெளிவருவது, இதுவே முதல்முறை. பொதுவாக,
திருத்தந்தையர் வெளியிடும் சுற்றுமடல், இறையியல்
கருத்துக்களையும், திருஅவையின் படிப்பினைகளையும்
உள்ளடக்கிய ஒரு மடல். இந்தப் பின்னணியில்
சிந்திக்கும்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
வெளியிடவிருக்கும் "வாழ்த்தப் பெறுவாராக" என்ற சுற்றுமடல்,
சுற்றுச்சூழலைக் குறித்து, விவிலியமும், திருஅவையும்
கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை உலகிற்குத் தெளிவுபடுத்தும்
என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த எதிர்பார்ப்பு, இருவகையான தாக்கங்களை
உருவாக்கியுள்ளதென்பதை ஊடகங்கள் வழியே நாம் உணர்கிறோம்.
ஐ.நா.அவை பொதுச்செயலர், பான் கி மூன் உட்பட, பல உலகத்
தலைவர்கள், திருத்தந்தை வெளியிடவிருக்கும் சுற்றுமடலை,
தாங்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகக்
கூறியுள்ளனர்.
அதேவேளையில், இந்தச் சுற்றுமடலுக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் குரல்களும் எழுந்துள்ளன. ஆன்மீக வழிகாட்டியாக
விளங்கவேண்டிய திருத்தந்தை, ஏன் உலகைச் சார்ந்த கவலைகளைப்
பற்றிப் பேசுகிறார்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப்
பேசுவதை, அறிவியல் அறிஞர்களிடம் அவர் விட்டுவிடலாமே என்ற
கோணத்தில் எதிர்ப்புக்கள் எழுவதையும் காணலாம். இத்தகைய
எதிர்ப்புக்குரல் எழுவதற்கு, காரணம் உண்டு...
இந்தச் சுற்றுமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், இன்னும்
வெளிச்சத்திற்கு வரவில்லை எனினும், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் இயற்கையைக் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும்
அவ்வப்போது பேசிவந்துள்ள கருத்துக்களை மனதில் கொண்டு
சிந்தித்தால், இந்தச் சுற்றுமடல் நம் அனைவருக்கும்
சங்கடமான கேள்விகளை எழுப்பும் என்றும், குறிப்பாக,
இயற்கையைச் சீரழித்துவரும் சுயநல சுறா மீன்களுக்கு ஒரு
சாட்டையடியாக விழும் என்றும் ஓரளவு கணிக்கலாம். எனவேதான்,
திருத்தந்தை வெளியிடவிருக்கும் சுற்றுமடலுக்கு ஆங்காங்கே
எதிர்ப்புக்கள் எழுந்து வருகின்றன என்று நினைக்கிறேன்.
சுற்றுச்சூழல் பற்றி பேசுவதற்கு அறிவியல் மேதைகளும், அரசு
அமைப்புக்களும், பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளன என்று
எழும் எதிர்ப்புக்குரல், இவ்வுலகில் நாம் அவ்வப்போது
நடத்திவரும் பன்னாட்டுக் கருத்தரங்குகள், உலக உச்சி
மாநாடுகள் இவற்றை மனதில் வைத்துப் பேசியிருக்க வேண்டும்.
இயற்கையை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் உலக உச்சி
மாநாடுகள் நடத்தாமல் இல்லை.
ஆபத்தில் இருக்கும் நமது இயற்கையை எவ்விதம் காப்பாற்றுவது
என்று, உலக நாடுகள் இணைந்து, ஒவ்வொரு உச்சி மாநாட்டிலும்,
தீர்மானங்கள் நிறைவேற்றின. இருப்பினும், இயற்கை, இன்னும்
நம் கைகளில் சிக்கி, சின்னாபின்னமாகி வருவது உண்மைதானே!
இயற்கை என்ற பள்ளியில், இறைவன் நமக்குச் சொல்லித்தர
விழையும் பாடங்களைக் கவனமாகப் படித்திருந்தால், இந்த
நிலைக்கு நாம் வந்திருக்கத் தேவையில்லை. உச்சி மாநாடுகள்
நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைக் கேட்பதற்குமுன்னர்,
இன்றைய நற்செய்தி வழியாக இயேசு நமக்குச் சொல்லித்தரும்
பாடங்களுக்கு செவிமடுப்போம்.
மாற்கு நற்செய்தி 4ம் பிரிவில் இன்று நாம் வாசிக்கும்
முதல் உவமை, "தானாக வளரும் விதை" என்ற உவமை. மாற்கு
நற்செய்தியில் மட்டும் சொல்லப்பட்டுள்ள இந்த அழகிய
உவமையைக் கேட்கும்போது, விவசாயம், மிகவும் எளிதான ஒரு
விடயம் என்ற கற்பனையை இயேசுவின் வார்த்தைகள்
உருவாக்குகின்றன. விதைப்பவர் செய்யவேண்டியதெல்லாம் எளிதான
காரியங்கள்... விதைக்க வேண்டும், அறுவடை காலம் வந்ததும்,
அறுவடை செய்ய வேண்டும்... அவ்வளவுதான். இவ்விரு
செயல்களுக்கும் இடைப்பட்டக் காலத்தில், இயற்கை தானாகச்
செயல்படும் என்ற கருத்தில் இயேசு பேசியிருக்கிறார்.
"நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே
நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை
முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்
பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல்
அளிக்கிறது" என்பவை இயேசுவின் வார்த்தைகள்.
இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, இயேசுவுக்கு விவசாயம்பற்றி
சரிவரத் தெரியவில்லை என்ற மமதையில் எனக்குள் கேலி
உணர்வுகள் எழுந்தன. ஆனால், இயற்கையை மையப்படுத்தி, உலக
அரசுகளும், பன்னாட்டு அவைகளும் நடத்திவரும்
கருத்தரங்குகள், உச்சி மாநாடுகள் இவற்றின் பின்னணியில்
சிந்திக்கும்போது, இயேசு கூறிய இந்த உவமையின் ஆழம்
புரிந்தது. என் கேலி மறைந்து, கேள்விகள் மனதை
உறுத்துகின்றன. இந்த உவமையில் இயேசு சுட்டிக்காட்டுவது
எளிதான இயற்கை வழிகள்... இந்த இயற்கை வழியில் நாம்
சென்றிருந்தால்... நம் பேராசைகளுக்கு, அவசரங்களுக்கு
ஏற்றபடி இயற்கையை மாற்றாமல், இயற்கை செயல்படும் போக்கில்
நாம் சென்றிருந்தால்... இயற்கையை இவ்வளவு
சீரழித்திருப்போமா என்ற கேள்வி எழுகிறது.
இந்த உவமையில் இயேசு முக்கியமாக வலியுறுத்துவன... பொறுமை,
நிதானம், நம்பிக்கை... இந்த அற்புத குணங்கள், நாம் வாழும்
உலகில், பெருமளவு காணாமற் போய்விட்டன. இன்றைய அவசர உலகின்
கணக்குப்படி, இன்று விதைக்க வேண்டும், நாளையே அறுவடை
செய்யவேண்டும். இன்று விதைப்பதை நேற்றே அறுவடை செய்ய
முடியுமா என்று ஆய்வுகள் தற்போது நடைபெற்று வந்தாலும்
ஆச்சரியமில்லை.
அவசரம் மட்டுமல்ல, ஆசையும் நம்மை ஆட்டிப் படைக்கிறது. ஒரு
விதையிலிருந்து ஒரு நூறு பலன் விளைவது இயற்கை நியதி
என்றால், அந்த ஒரு விதையிலிருந்து 200, 300 என்று பலன்களை
எதிர்பார்த்து, அதனால், விதைகளில் மரபணு மாற்றம் செய்து,
உரத்தில் கூடுதல் சக்தியைச் சேர்த்து.... விளைநிலங்களைக்
கல்லறைகளாக்கி வருகிறோம்.
நமது அவசரத்துக்கும் ஆசைக்கும் ஈடுகொடுக்கும் வண்ணம்,
தொழில் நுட்பங்கள், வேதியல் உரங்கள், விதைகளில் மரபணு
மாற்றங்கள், திடீர் விதைகள், திடீர் பயிர்கள் என்று
எத்தனை, எத்தனை விபரீதப் பரிட்சைகள்... இந்த விபரீத, விஷப்
பரிட்சைகளில் தவறியதால், ஆயிரக்கணக்கில் விவசாயிகளின்
தற்கொலைகள்... முன்னேற்றம் என்ற பெயரில் ஆபத்தான வழிகளை
நமக்கு நாமே வகுத்துக் கொண்டோம். இப்போது, மாற்றுவழிகளைச்
சிந்திக்க உச்சி மாநாடுகள் கூட்டிப் பேசுகிறோம்...
சுயநலம், பேராசை, குறுக்குவழி, உடனடித்தீர்வுகள், அவசரம்,
என்ற களைகளை ஆரம்பத்திலிருந்தே நாம் நமது தனிப்பட்ட
வாழ்விலும், சமுதாய வாழ்விலும் வேரோடு களைந்திருந்தால்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பைப்பற்றி இவ்வளவு தூரம் நாம்
கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை. உச்சி மாநாடுகளையும்,
கருத்தரங்குகளையும் நடத்தியிருக்கத் தேவையில்லை.
பூமிக்கோள உச்சி மாநாடு (The Earth Summit) 1992ம் ஆண்டு,
பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ (Rio de Janeiro)
நகரில், முதல் முறை நடைபெற்றபோது, Severn Cullis Suzuki
என்ற 12 வயது சிறுமி, உலகத் தலைவர்களிடம் 6 நிமிடங்கள்
பேசினார். அச்சிறுமியின் சொற்கள் உலகத் தலைவர்களின்
உள்ளங்களில் அம்புகளாய் பாய்ந்தன. சிறுமி Severn சொன்ன ஒரு
சில உண்மைகளுக்கு மீண்டும் செவி மடுப்போம்: நான் என்
எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று உலகில்
பட்டினியால் இறக்கும் என்னைப்போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகள்
சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகின் பல
பகுதிகளில் அழிந்து வரும் உயிரினங்கள் சார்பில் நான் பேச
வந்திருக்கிறேன்.
இவ்விதம் தன் உரையைச் சூடாக ஆரம்பித்த சிறுமி Severn
Suzuki, அவர்களை நோக்கிச் சிலக் கேள்விகளை எழுப்பினாள்.
அன்று அம்புகளாய் அத்தலைவர்களை நோக்கிப் பாய்ந்த
அக்கேள்விகள் இன்று நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.
நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல்
சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப்
பட்டீர்களா? நான் வாழும் இந்த உலகில் நடக்கும்
பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத்
தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற
உண்மையை நீங்கள் உணர வேண்டும் என்று கூறவே நான் இங்கு
வந்திருக்கிறேன். விண்வெளியில் ஓசோன் படலத்தில்
விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.
இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க
உங்களுக்குத் தெரியாது.
காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும்
வழிகள் உங்களுக்குத் தெரியாது.
உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத்
தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும்
எங்கள் தலைமுறைக்கு.
அந்த ஆறு நிமிடங்கள் உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத்
தட்டி எழுப்பி, சங்கடமான கேள்விகளை விட்டுச் சென்றாள்
அந்தச் சிறுமி. இது நடந்து இப்போது 23 ஆண்டுகள் கழிந்து
விட்டன. Severn Suzuki அன்று எழுப்பிய அந்தக் கேள்விகள்,
இன்றும் நம்முன் எழுப்பப்படுகின்றன. இக்கேள்விக் கணைகள்
நம்மீது பாயும்போது, நாமும் தலைகுனித்து நிற்க
வேண்டியுள்ளது.
இறைவன், நமக்கு வழங்கியுள்ள கொடையான இயற்கையை நாம்
மதிக்கவேண்டும், பேணி, பாதுகாக்கவேண்டும், இயற்கை வளங்களை
ஒரு சிலர் மட்டுமல்ல, அனைவரும்... மீண்டும் சொல்கிறேன்...
அனைவரும் பகிர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணங்களை எல்லா
மதங்களும் சொல்கின்றன. இருப்பினும், நமது சுயநல வெறி, இந்த
உன்னதக் கொள்கைகளை உதைத்தெறிந்துவிட்டு, அழிவை நோக்கி
இந்தப் பூமியை இழுத்துச் செல்கிறது. இந்த ஞாயிறு சிந்தனையை
ஓர் ஆன்மீக ஆய்வோடு நிறைவு செய்வோம். நமது ஆன்ம ஆய்வுக்கு
உதவியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின்
தலைமைப் பொறுப்பை ஏற்ற திருப்பலியில் கூறிய கருத்துக்கள்
உதவட்டும்: நம் சகோதர சகோதரிகளையும், படைப்பையும் நாம்
பாதுகாக்கத் தவறும்போது, அழிவை நோக்கிய பாதையை நாம்
திறந்துவிடுகிறோம்.
பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுதாய தளங்களில் முக்கியப்
பொறுப்பில் இருக்கும் தலைவர்களுக்கும், அனைத்து நல்மனம்
கொண்டோருக்கும் நான் சிறப்பான ஒரு வேண்டுகோளை
விடுக்கிறேன். கடவுளின் திட்டம் ஆழப் பதிந்துள்ள படைப்பின்
பாதுகாவலர்களாக நாம் இருப்போம்.
இங்கு மற்றோர் எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
பாதுகாவல் என்ற பணிக்கு, நன்மைத்தனமும், மென்மையும்
கொண்டிருப்பது அவசியம். மென்மையான மனது கொண்டிருப்பதை
வலுவிழந்த நிலையாகக் காண்பது தவறு, மென்மை உணர்வுகள்
கொண்டோரிடமே, கனிவு, கருணை, பிறரின் உணர்வுகளுக்கு
மதிப்பளிப்பது போன்ற நற்பண்புகள் காணப்படும். எனவே,
நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம்
அஞ்சக்கூடாது.
அனைத்தையும் சுற்றிவளைத்து அபகரித்துக் கொள்ளும்
சுயநலத்தைக் களைந்து, மென்மையான மனதுடன், படைப்பு
அனைத்தையும் பேணிக் காக்கும் மனதை இறைவன் நம்
ஒவ்வொருவருக்கும் வழங்க மன்றாடுவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
இறையாட்சி என்பது சிறிய கடுகு விதயைய் போன்றுதான்
இருக்கும் என்று இன்றைய நற்செய்தி கூறுகின்றது. விண்ணரசை
எதற்கு ஒப்பிடுவேன் ? என்று இயேசு தனக்குத் தானே கேள்வி
எழுப்புகின்றார்.
கடுகு விதையின் அளவு, அதன் வீரியம் அதன் பயன் என்று
எடுத்துரைக்கின்றார்.
கடுகு விதை வளர்ந்து விருட்சமாகி வானத்து பறவைகள் வந்து
கூடு கட்டி தங்கும் அளவு பெரிதாகும்.
இயேசு சொல்கிரறர் - எல்லா இனத்துப் பறவைகளும் வந்து
தங்கும் என்று.
இயேசுவின் பணிவாழ்வை பாருங்கள்... ஆரம்பத்தில் இயேசு
மற்றும் சீடர்கள் 12 பேர் என்று ஒரு சிறிய குழுவை
வைத்து இறையாட்சியை ஆரம்பித்தார்.
திருத்தூதர்பணிகள் 2:41-ல் வாசிக்கின்றோம். பேதுருவின்
அருளுரையைக் கேட்டு 3000 பேர் கிறிஸ்துவில் இணைந்தனர்.
இப்படி மிக சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட திரு அவை இன்று
மிகப் பெரிய ஆழ மரமாக விருட்சமடைந்துள்ளது.
ஆபிரகாமுடைய வாழ்க்கையைப் பாருங்கள். சாதாரண மனிதர்,
குழந்தை பாக்கியம் இல்லாதவர், ஆனால் இறைவன் அவர்
சந்ததியை ஆசீர்வதித்தார். பலுகி பெருகியது.
இரண்டு குலங்களின் தந்தையானார். துவங்கியது
சிறியதுதான். ஆனால் அவருடைய வளர்ச்சி மிகப் பெரியது.
இன்று உலகில் மூன்றில் ஒரு பகுதி கிறிஸ்தவர்களாக
வளர்ச்சியடைந்துள்ளனர்.
நாம் தொடங்குகின்ற பணி மிகச்சிறியது என்றாலும்
கடவுளிடம் நம்மை ஒப்படைக்கும் போது அவர் நம்மை பெருக
செய்வார்... என்ற நம்பிக்கை கொள்வோம்.
கடுகு விதையைப் போல நம்மையும் ஆசீர்வதித்து பெருகப்
பண்ணுவார்.
நீதிமொழிகள் 16:3-ல் வாசிப்பதைப் போல உன் செயல்களை
ஆண்டவரிடம் ஒப்படை... அவற்றை வெற்றியோடு
நிறைவேற்றுவார்.
ஆண்டவரிடம் நம்மை ஒப்படைப்போம். நம் குடும்பத்தை
ஒப்படைப்போம். ஆண்டவர் நம்மை பெருக செய்வார் என்ற
நம்பிக்கையில் வாழ்வோம்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ