ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

         தவக்காலம் 5ம் ஞாயிறுழா

    திருப்பலி முன்னுரை

    வருடாந்த ஞாயிறு வாசகம்    
 
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
இயேசு பெருமானின் மாட்சியை அறிவிக்க வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே!
B தவக்காலம்1  
எங்கும் நிறைந்திருக்கின்றவர் நம் இறைவன். நம்மைத் தொடர்ந்து வந்து அவரின் சொந்த பிள்ளைகளாக நாம் மாறிட, அன்றாடம் பல வழி முறைகளைச் சொல்லித் தந்து கொண்டே இருக்கின்றார். நிலைவாழ்வுக்குள் நுழையும் தகுதி உடையோராகிடும் முறையை, இந்த ஞாயிறு திருப்பலி வழியாக நமக்கு சொல்லித் தருகின்றார்.
எனக்கென நிரந்தரமாக இருக்க ஒரு வீடு வாங்கி விட்டேன். எனக்கென நிரந்தரமாக ஒரு வேலை கிடைத்துவிட்டது. பிரச்சனையில்லாமல் சாப்பிட வழி இருக்கிறது. நான் நிம்மதியாக இருக்கிறேன். என தன்னலத்தோடு வாழும் மனிதர்கள் ஒருபுறம். இன்னொருபுறம் தனக்கு இல்லாத ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அடுத்தவரின் பெயரை கெடுப்பதும், பிறரின் உடமையை பறித்துக் கொள்வதும், பிறரை வன்முறையால் தாக்குவதும் என மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில் இயேசு பெருமானின் மாட்சிமிகு வாழ்வை நம் வாழ்வாக்க, தவக்காலமும் நம்மைச் சுற்றி வருகிறது.

நிலை வாழ்வு என்பது நமது பணம், பதவி, பட்டம், புகழ், சொத்து இவைகளின் அதிகபட்ச முதலீட்டால் சம்பாதிப்பது அல்ல. மாறாக இறைவனின் திருவுளப்படி வாழ்வதாலும், இறைவனின் மாட்சியை பிறருக்கு வெளிப்படுத்துவதாலும் சம்பாதித்துக் கொள்ளக் கூடியது.

தனது உயிரை இழந்து பிறர் உயிரை பாதுகாத்த இறைவன், தான் படைத்த மனிதனும் தன்னைப் போல செயல்பட வேண்டும் என விரும்புகிறார். அயலாருக்காக மனித மனம் துடிக்க வேண்டும். அதுவும் துன்புறும் மனிதனுக்காக மனித மனம் துடிக்க வேண்டும் என ஆசிக்கிறார்.

இவ்வுலக செல்வங்களின் மீது நாட்டம் கொள்ளாதோர் பிறரின் நலனுக்காக அக்கறையோடு தொண்டு செய்வர், நிலை வாழ்வுக்குத் தகுதி உடையவராக இருப்பர் என வாசிக்கும் நற்செய்தி, நம் நெஞ்சை வருடிவிட்டு இத்தவக்காலத்திலாவது தொண்டு செய்ய வேண்டும், நீயும் வாழவேண்டும், நானும்;; வாழவேண்டும் என்ற நல் எண்ணத்தை தூண்டிவிடட்டும்.

"பணிக் காலங்களில் துன்பங்கள் நேர்ந்தாலும், அவைகளை பொறுத்துக் கொண்டு தனக்கு பணிபுரிபவனுக்கு, தந்தை மேலான செல்வத்தை வாரிவழங்குவார். அதுதான் நிலையான வாழ்வு" என குறித்துக் காட்டும் இத்திருப்பலியில், பலரின் நிலை வாழ்வுக்கு தொண்டு செய்ய விரும்பும் மனம் வேண்டும் மன்னவா என மன்றாடுவோம்.
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. பலருக்கு பலன் தருவதற்காக கோதுமையாய் எமை விதைக்கும் இறைவா!
திருச்சபை என்னும் நிலத்தில் நீர் அள்ளித் தெளித்த கோதுமை மணிகளான திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் திருச்சபையின் வளர்ச்சிப் பணிக்காய் விதைக்கப்ப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் மக்களுக்காய் மடிந்து, பலமடங்கு பலன் தர ஆற்றல் பொழிய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. "என் சட்டத்தை அவர்கள் இதயத்தில் எழுதி வைப்பேன்" என்று மொழிந்த எம் பொருமானே!
உமது சட்டத்தை நாட்டுத் தலைவர்களின் உள்ளத்தில் பதியச் செய்து, அந்த சட்டத்தின்படி நாட்டின் மக்களை நிலை வாழ்வின் பாதையில் நடத்த அருள் பொழிய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்

3. இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே கீழ்ப்படியக் கற்றுக் கொண்ட இயேசுபெருமானே!
நீர் நிறைவுள்ளவராகி உமக்கு கீழ்ப்படிவோரின் மீட்புக்குக் காரணமானது போல, எங்கள் பங்கு மக்களையும் பங்கைச் சார்ந்த ஒவ்வொருவரையும் அயலார் மீது அக்கறைகொண்டு வாழுமளவுக்கு நிறைவுள்ளவராக்கி, எமது மீட்புக்கு காரணமாக்கியருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4. எனக்கு தொண்டு செய்வோர் என்னை பின்பற்றட்டும் என சொல்லிய எம்பெருமானே!
துன்புறுவோர், ஆதரவற்றோர், நோயுற்றோர் என பல தேவையில் இருப்போர் அனைவருக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற நல்ல மனதை, இங்கு கூடியுள்ள எம் எல்லோருக்கும் தரவேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

5. அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் என ஆசை வார்த்தை கூறிய எம் பெருமானே!
இந்த தவக்காலத்தில் நாங்கள் செய்கின்ற ஒறுத்தல் முயற்சிகளும், நோன்புடன் கூடிய செப தவங்களும், எங்களை நிலைவாழ்வுக்குள் நுழையும் தகுதியை அடையச் செய்திட அருள்தர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்


6.இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே கீழ்ப்படியக் கற்றுக் கொண்ட இயேசுபெருமானே!
நீர் நிறைவுள்ளவராகி உமக்கு கீழ்ப்படிவோரின் மீட்புக்குக் காரணமானது போல, எமது பங்குத் தந்தையையும் நிறைவுள்ளவராக்கி எமது மீட்புக்கு காரணமாக்கியருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்

இழப்பை இழப்பு என்று கருதினால் தான் இழப்பு. இழப்பை லாபம் என்று கருதினால் லாபமே! இந்த தவக் காலத்தில் நமது இழப்புகளை ஈடுசெய்யும் கனவுகளை சுமப்போம். பிறருக்காக நம்மை இழக்கும் போது ஈடேற்றம் பெறாமல் போக மாட்டோம். கிறிஸ்தவர்களாக பிறந்த நாம் கிறிஸ்துவைப் போல வாழ முயற்சிக்கும்போது, அதற்கான விழுமியங்களைப் பெற்றுக் கொள்வோம்.

நிலைவாழ்வை முன்னிட்டு "இவ்வுலகில் தன் வாழ்வைப் பொருட்டாக கருதாதோர்"(யோவா12:25) அரிதிலும் அரிது. தமிழீழம் காண உண்ணாநிலை இருந்து உயிர் நீத்த திலீபன், ஏழைகள் வாழ்வுபெற குரல் கொடுத்து படுகொலை செய்யப்பட்ட ஆஸ்கர், ரொமேரோ' தொழுநோயாளருக்காக வாழ்வை அர்ப்பணித்த பாபா ஆம்தே... போன்றோரை இன்று காண்பது அரிது. நிலைவாழ்வு என்பதெல்லாம், பலருக்குக் காலாவதியாகிப் போன பாட்டிக் கதைகளாக விட்டது. இவ்வுலகில் வாழும்போது, தன் வாழ்வை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதிலேயே பலருடைய சிரத்தை இருக்கிறது. அதற்காக பிறரை வீழ்த்தவும், பிறர் உடைமைகளை அபகரிக்கவும், பிறர் பெயரைப் பழிக்கவும்கூட பலர் தயங்குவதில்லை. ஆசைப்படும் அனைத்தும் கைவசமாகி விட்டால், அமைதி வந்துவிடும் என தவறான மன ஓட்டத்தில் அலைபாய்கிறார்கள். இந்நிலையை யாருக்கு ஒப்பிடலாம் என்றால், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் கூறுவதுபோல 'ஆடிஒடிப் பொருளைத் தேடி... அவனும் திங்காமே பதுக்கி வைப்பான். அதிலே இதிலே பணத்தைச் சேத்து, வெளியிட பயந்து மறச்சு வைப்பான். அண்ணன், தம்பி, பொண்டாட்டி, பிள்ளையாருக்கும் சொல்லாமப் பொதச்சு வைப்பான். ஆகக் கடைசியில் குழியை தோண்டி அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்' என்பது எவ்வளவு உண்மையான வாழ்க்கைப் பாடம்.
அலுவலகம் ஒன்றில் நேர்மையோடு தன் பணியை செய்து வந்தார் ஆனந்த். பெயருக்கு ஏற்றார்போல மிக சொற்ப வருமானத்தில் ஆனந்தமாக வாழ்ந்தார். எப்போதும் நேர்மையோடு உழைத்தார். பக்தியும், பண்பும் பிறரின் நலனுக்கு உழைக்கும் மனநிலை தந்தது.

உடன் பணியாற்றுவோர் லஞ்சம் வாங்குவதிலும், பதவி உயர்வு பெறுவதிலும் தங்கள் மனதை செலுத்தி செல்வம் சேர்ப்பதில் முனைப்பாக இருந்தனர். அன்பொழுக தம் பணிசெய்த ஆனந்துக்கு பணியில் மாற்றமேயில்லை. அவருடைய தகுதி, திறமை அடிப்படையில் பணிஉயர்வு கிடைக்கவில்லை. ஆனந்த் தன் பணியைப் பற்றி எள் அளவு கூட கவலைப்படவில்லை. அவரோடு பணியில் சேர்ந்தவர்கள், அவருக்குக் கீழ்பணியில் இருந்தவர்கள், பணத்தாலும், சிபாரிசுகளாளும், உயர் பதவிகளை, பொறுப்புகளை பெற்று மிகவே மகிழ்ச்சியாக வசதியாக வாழ்வதைக் கண்டும்கூட, தனது மனதில் கவலை ஏற்படுத்தாமல், தன்னால் இயன்ற நல் வாழ்க்கையை பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருந்தார். தனது நற்பணியில் எந்த மாற்றமும் இல்லாது, அமைதியாக, தன்னால் இயன்ற பிறர்நலப் பணியையும் செய்து வாழ்நாளைக் கடத்தி கொண்டிருந்தார்.

ஒரு காலை வேலையில் ஆனந்தின் அலுவலகத்திற்கு பார்வையிட உயர் அதிகாரி ஒருவர் வந்திருந்தார். ஆனந்தின் கோப்புகளை பார்வையிடும்போது, எங்கோ ஒரு மூலையில் தவறு நிகழ்ந்திருப்பதைக் கண்டுபிடித்தார். அவருக்கான பணிஉயர்வை வழங்கியதோடு, அது வரை பணி உயர்வு அளிக்கப்படாமைக்கு மனம் வருந்தி, அதற்கு உரிய ஊதியத் தொகை முழுவதுமாக ஆனந்துக்கு வழங்க உத்தரவு இட்டார். அன்று முதல் அவரது வாழ்க்கையில் உழைப்புக்கு கிடைத்த ஊதியம் பெற்று, மாற்றம் நிறைந்த நல்வசதி வாய்ப்புகள் பெருகி, ஆசீர்வாதமாக, ஆனந்தமாக வாழ்ந்தார். நமது அன்றாட வாழ்வில் வசதி வாய்ப்பு வேண்டும், நிம்மதி வேண்டும், இருக்கின்ற நிலையில் இருந்து உயர்வு பெற வேண்டும் என நினைக்கும் நாம், அதற்கான தகுதியை நிறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்;. அன்பு, அமைதி, பண்பு இரக்கம், பரிவு போன்ற நற்பண்புகளுடன் நாமும் வாழவேண்டும், பிறரையும் வாழ்விக்க வேண்டும். நம் அருகில் வாழும் மனிதனை மாட்சியடையச் செய்யும்போது, கடவுளையே மாட்சி அடையச் செய்தவர்களாவோம்.

சமீபத்தில் வங்கியில் கொள்ளை அடித்த கொள்ளைக்காரர்களை கண்டுபிடித்து, போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விட்டார்கள். அப்போது அவர்களை பற்றிய தகவல்களை விசாரித்தபோது, கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்தது. பணக்காரராக சொகுசு வாழ்க்கை வேண்டும், வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என உயர்ந்த வாழ்வு வாழ, குறுக்கு வழியில் நினைக்கும்போது மனநிம்மதி இழக்கிறோம். வெறுப்பை மனதில் சுமக்க ஆரம்பிக்கிறோம். அப்போது கொலை, கொள்ளை, அடிமைத்தனம் போன்ற செயல்களால் உலகை உருக்குலைக்கும், இதயத்தை நொறுக்கும் துணிச்சல், எளிதாக நுழைந்து விடுகிறது. மனிதத்தின் மாண்பு அழிவுக்கு உட்படுகிறது. வரலாறு விரும்பும் மாற்றம் நம்மில் ஏற்பட தடையாக இருக்கின்ற சிந்தனைகளை அறவே அகற்ற, தவக்காலம் சிறந்த ஒரு அழைப்பை அனுப்பி வைக்கிறது.

நமது சிறு சிறு கோபம், பகை உணர்வு, கீழ்படியாமை, பொறாமை, இவைகளை தூக்கி எறியும் போது அகமாற்றம் தானாக நிகழும். செபம், தவம், நோன்பு, ஈகை போன்ற நற்செயல்களால் அன்றாடம் செய்யும் சிறு தவறுகளை அலசிக் கொள்ளும்போது, பாவங்கள் அடர்த்தியாக மறுத்துப் போய் தேய்ந்து விடுகிறது. அப்போது நிலை வாழ்வுக்கான தகுதி இதயத்தில் நிரம்பி வழிய ஆரம்பிக்கிறது.

இதயத்தில் நிலை வாழ்வுக்கான தகுதியை நிரப்பிக் கொள்ள சின்னச் சின்ன டிப்ஸ்
நல்ல சமாரியனைப் போல வாழவேண்டும் என ஆசைப்படுவது.
பிறரின் உயர்வுக்கு எப்படி வழிகாட்டலாம் என யோசிப்பது.
நமது விருப்பத்தை இழந்து கடவுளது விருப்பதை நிறைவேறச் செய்வது.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை அறவே நீக்குவது.
சிறிய மனிதர்களை பிரியமுடன் நேசித்து பேசும் போதும், கடவுளை நேசிக்கும் செயலை செய்கிறோம் என உணர்தல்.
குடும்பத்தில் உள்ளவர்களோடு பாசம் பொங்கப் பேசுவது.
ஒழுக்கம் உயிரினும் மேலானது என்பதை அதிகம் உணர்தல்.
சோம்பலை தவிர்த்து உடனடியாக செய்ய வேண்டிய பிறர் நலசெயல்களை செய்து முடிப்போம்.
பிறரின் நலனுக்காக அதிக நேரங்களை செலவு செய்வோம்.

நாம் இழந்து போன இழப்புகளை நினைத்து கவலைப்படாமல், எல்லாம் நன்மைக்கே என்ற மனநிலையை இதயத்தில் எழுதி, திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருப்போம்.

"மானிடமகன் தொண்டு பெறுவதற்கு அல்ல, தொண்டு புரியவே வந்தார்". அதனால் தான் நிலையான மகிழச்சியில் நிலைத்திருக்கிறார். என்பதை மேற்கோளாக்கி நமது வாழ்நாளின் நாழிகைகளை நகர்த்தி மகிழ்வோம்.

நமது அன்றாடக் கடமைகளை கவனமுடன் ஆனந்தமாக செய்வோம்.
குறித்த காலத்தில் இறைவன் நம்மை உயர்த்துவார் என்ற எண்ணத்தை நங்கூரமாக்கி, அன்றாட செயல்களை அலுப்பின்றி சலிப்பின்றி செய்து மகிழ்வோம்.
 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.

பலன் தரும் கோதுமை மணி

எரேமியா 31; 31-34

எபிரேயர் 5;7-9

யோவான் 12: 20-33"சுடச்சுட பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு"

என்ற திருக்குறள் வரிகளுடன் இன்றைய ஞாயிற்றுக்கிழமை சிந்தனைக்குள் நாம் நுழைவோம். நெருப்பில் சுடப்படும் தங்கமானது மெருகேறுவது போல நோன்பிருந்து தவம் மேற்கொள்ளும் துறவிகள் துன்பத்தால் மேன்மைப்படுத்தப்படுவர் என்பது இக்குறளின் பொருள். தவக்காலத்தின் நிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் . நமக்கும் பல்வேறு துன்பங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கும் இவ்வேளையில் துன்புற்று, மண்ணில் மடிந்து பலன் தரும் கோதுமை போல நமது வாழ்வு இருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

துன்பம் எல்லோருக்கும் வரும். அது அவரவர் ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொருத்து அதன் தன்மைக் கணக்கிடப்படும். துன்பம் என்பது நாம் சுவைத்து மகிழும் கரும்பைப் போல என்று நான் புத்தகத்தில் வாசித்த நியாபகம். கரும்பின் சுவை நிறைந்த பகுதியின் முன்னும் பின்னும் ஒரு சிறு கடினமான கணுப்பகுதி இருக்கும் . அதைக் கடந்த பின்னரே கரும்பின் சுவையான பகுதியை நம்மால் ருசிக்க முடியும். அது போல தான் வாழ்க்கையும். துன்பமான ஒரு சூழல் இருக்கிறது என்றால், மகிழ்வான ஒரு சூழல் அதன் பின் நமக்காகக் காத்திருக்கிறது என்று அர்த்தம். கரும்பின் கணுப்பகுதிக்கு அஞ்சி கரும்பையே சுவைக்காமல் விட்டால் அதை விட முட்டாள் தனமான காரியம் வேறு இல்லை என்று தான் சொல்ல முடியும். அதைப் போல துன்பம் கண்டு வாழ்க்கையே இப்படி தான் என்று சோர்ந்து, வாழாமல் விட்டால் அதுவும் முட்டாள் தனமே.

இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமை மணி போல மண்ணில் மடிந்து வாழச் சொல்கின்றார். அதற்கு முதலில் நாம் நம்மை இழக்க தயாராக இருக்க வேண்டும். இயேசு வாழ மட்டும் அறிவுறுத்தவில்லை தாம் முதலில் வாழ்ந்து காட்டி அது போல வாழுமாறு அறிவுறுத்துகிறார். சொல்பவரல்ல, செய்பவர் நம் இயேசு. அவரைப் போல வாழ அவர் தம் சீடர்களாகிய நாமும் பயிற்சிக்கவேண்டும். அதற்காக சில உத்திகளை நமக்குக் கொடுக்கின்றார்.


1. இயேசுவைக் காண விரும்பு. 2. அவரிடம் அழைத்துச்செல். 3. பின்பற்று 4. குரலைக் கேள்.1. இயேசுவைக் காண விரும்பு:

எவ்வாறு கிரேக்கர்கள் இயேசுவைக் காண விரும்பி பிலிப்பிடம் வந்தார்களோ அது போல நாமும் இயேசுவை விரும்பிக் காண செல்ல வேண்டும். அவர் இருக்கும் இடம் அறிந்து அவரைப் பின் தொடர வேண்டும். நம்முடைய மேலான விருப்பத்தை பிறரிடம் எடுத்து சொல்ல வேண்டும். அப்போது தான் அது நிறைவேறும். பிரபஞ்ச சக்தி பற்றி படிப்பவர்கள் எழுதுபவர்கள் அடிக்கடி கூறுவது இதுவே. நாம் எதை அடைய நினைக்கின்றோமோ அதை பிரபஞ்சத்திடம் வெளிப்படுத்த வேண்டும். தனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லும் குழந்தை வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறது. எது கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் குழந்தை, ஒரு சில நேரத்தில் விரும்பியது கிடைக்காது வருத்தமடைகின்றது. அது போல நாமும் நமக்கு இது வேண்டும் என்பதை உரிமையுடன் நம் தந்தையிடம் கேட்க வேண்டும். ஆக இயேசுவை நாம் காண விரும்ப வேண்டும். கடவுள் உருவத்தில் என்று எதிர்பார்ப்பதை விட கண்ணுக்கு தெரியும் மனிதர் உருவத்தில் கடவுளைக் காண முயற்சிக்க வேண்டும். மனிதர்கள், நிகழ்வுகள், சூழல்கள் அனைத்திலும் இயேசுவைக் காண்பவர்களாக தேடுபவர்களாக நாம் இருக்க வேண்டும். காண விரும்புவோம் இயேசுவை குடும்பத்தில் குழுவில் நண்பர்களில் நன்னெறியில்....2. அவரிடம் அழைத்துச்செல்:

நாம் இயேசுவைக் கண்டு வாழ்ந்து கொண்டு இருந்தாலும் பிறரையும் இயேசுவிடம் அழைத்துச்செல்பவர்களாக வாழ வேண்டும். பிலிப்பு தன்னை நோக்கி வந்த கிரேக்கர்கள், முன் பின் அறிமுகமில்லாதவர்களாக இருந்த போதிலும் அவர்களின் ஆசையை நிறைவேற்றுகின்றார். தன்னால் இயேசுவிடம் அவர்களை அழைத்துச்செல்ல முடியுமா என்று எண்ணி தயங்கி விடவில்லை மாறாக அந்திரேயாவின் உதவியை நாடி கிரேக்கர்களின் ஆசையை நிறைவேற்றுகின்றார். கடவுள் தான் எல்லா நேரமும் நம்முடைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடவுள் வடிவில் இருக்கும் மனிதர்களால் கூட நமது ஆசைகள் நிறைவேறலாம். ஆனால் நாமும் ஒரு நாள் பிற மனிதர்களுக்கு கடவுளாக மாறும் சூழ்நிலை வரக்கூடும். அதையும் ஏற்கும் உள்ளம் வேண்டும். ஆக நாம் இயேசுவிடம் பிறரை அழைத்துச்செல்பவர்களாக இருக்க வேண்டும். தானம் கொடுப்பவர்களுக்கு தெரியாது கடவுளுக்கு தான் கொடுக்கிறோம் என்று . ஆனால் பெறுபவர்களுக்கு தெரியும் கொடுப்பது கடவுள் தான் என்று. நாம் கடவுளாக பார்க்கப்படும் தருணம் வரும். கடவுளை நோக்கி பிறரை அழைத்துச்செல்லும் தருணமும் வரும் . எதிர்பார்த்துக் காத்திருப்போம்.3. பின்பற்று:

இயேசுவைப் பின்பற்றியவர்கள் பலர். அதில் சிலர் மட்டுமே கடைசி வரை அருகிருந்தனர். அதற்கான பேற்றையும் பெற்றனர். அவரைப் பின்பற்றி அவருக்கு தொண்டு செய்பவர்கள், அவரைப் பின்பற்றினர். அவரைப் போல பாடுகள் பட்டு வேத சாட்சியாக இறக்கவும் செய்தனர். இயேசு சொன்ன கோதுமை மணி போல மண்ணில் மடிந்து பலன் கொடுத்தவர்கள் அவர்கள். துன்பம் என்னும் நெருப்பினால் புடமிடப்பட்டு தூய்மையான தங்கமாக மின்னியவர்கள். கரும்பின் கணுப்பகுதியை கடித்து எறிந்து முழு கரும்பையும் ருசி பார்த்தவர்கள். நம் இயேசு சொகுசான வாழ்க்கை வாழ, " என்னை பின்பற்று" என்று கூறவில்லை. துன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கை இது என்னைப் போல் வாழ்ந்து கடவுளின் பெயரை மாட்சிப்படுத்துங்கள் என்கின்றார். அவரைப் போல வாழ்வோம் அவரைப் பின்பற்றுவோம்.4.குரலைக் கேள்:

இன்றைய வாசகத்தில் கடவுளின் குரல் ஒன்று வானத்தில் இருந்து கேட்ட போது அங்கு கூடியிருந்த மக்கள் அக்குரலைக் கேட்கின்றனர். அது வானதூதரின் குரலாக இருக்குமோ என்று எண்ணுகின்றனர். அதற்கு இயேசு இக்குரல் எனக்காக அல்ல உங்களுக்காக ஒலிக்கப்பட்டது. இயேசுவின் மகிமையைக் காதுகளால் கேட்டு அன்றைய நாளில் சிலர் மனமாற்றம் அடைந்து இருக்கலாம். நமக்கும் பல நேரங்களில் இயேசுவின் குரல், இயேசுவைப் பற்றிய குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதை கேட்காதவாறு நமது காதுகள் வேறு பல சத்தங்களினால் அடைக்கப்பட்டுள்ளன. தொலைபேசி, தொலைக்காட்சி, என தொடர்பு சாதனங்களின் சத்தங்களினால் நாம் நம்முடைய குரலையே கேட்காது மறந்து போய் இருக்கின்றோம். பின் எப்படி இயேசுவின் குரலையும், இயேசுவைப் பற்றிய குரலையும் நம்மால் கேட்க முடியும். ஹார்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குள் ஹியர் என்ற வார்த்தை மறைந்து இருப்பதற்கு காரணம் என்ன? உன் இதயம் சொல்வதைக் கேள். பிறர் இதயம் கூற விரும்புவதையும் கேள் என்று அர்த்தம். இதயம் கொடுத்து பிறரின் குரலைக் கேட்போம். செவி கொடுப்போம் நமது குரலும் செவி சாய்க்கப்படும்.ஆம் அன்பானவர்களே கோதுமை மணி போல மடிந்து பலன் கொடுக்க முதலில் இயேசுவைக் காண விரும்புவோம் ஆலயத்தில், ஆன்மீகத்தில் அருகிருப்பவர்களின் உடனிருப்பில்.

பிறரையும் இயேசுவிடத்தில் அழைத்துச்செல்வோம் நண்பனாக உறவினராக, அயலாராக அண்டைவீட்டாராக....

பின்பற்றுவோம் அவரின் விழுமியங்களை வீரியமுள்ள வார்த்தைகளை, விதை போன்ற வாழ்வை....

குரலைக்கேட்போம். மகிழ்வில் மன்னிப்பில் மன்றாட்டில்.....

இறைமகன் இயேசுவின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பதாக ஆமென்,.
 
காணத்துடிக்கின்றேன் இயேசுவே உம்மை.......
சிலரைப் பார்க்கத் துடிக்கின்றோம்
சிலரைப் பார்த்தாலேத் துடிக்கின்றோம்.

முதல் துடிப்பு அன்பினாலும் ஆர்வத்தாலும் வருவது. இரண்டாவது துடிப்பு பயத்தினாலும் துன்பத்தினாலும் வருவது . இதில் கிரேக்கர்கள் இயேசுவைக் காண வந்தது கண்டிப்பாக முதல்வகைத் துடிப்பாகத் தான் இருக்கும். யூதர்களின் திருவிழாக் கொண்டாட்டத்தில் கிரேக்கர்கள் எப்படி? ஒருவேளை யூதர்களின் வழிபாட்டு முறை கொண்டாட்டங்கள் பற்றி நேரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கூட வந்து இருக்கலாம். இயேசுவின் பணியையும் செயலையும் காதால் கேட்டு மகிழ்ந்தவர்கள் நேரில் கண்ணால் பார்க்க துடிக்கிறார்கள். சாதாரண ஏழை எளிய மக்களே ஓடிச்சென்று அவரை நேரில் பார்க்கும் நிலையில் இவர்கள் முறையாக சீடர்களிடம் அனுமதிக் கேட்கிறார்கள். இயேசுவைக் காண வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை எடுத்துரைக்கின்றார்கள். வீடுகளில் குழந்தைகள் பெற்றவர்களிடம் நேரடியாக தங்களுக்குத் தேவையானதை கேட்டு வாங்குவதை விட, சில நேரங்களில் தங்களில் யாரைஅதிகம் பெற்றோர்களுக்குப் பிடிக்கிறதோ அவர்கள் மூலமாகக் கூறி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். கடைக்குட்டி பிள்ளைகள் பெரும்பாலும் இந்த உதவியை செய்வார்கள். அதுபோலவே கிரேக்கர்களும் சீடர்கள் மூலமாக இயேசுவைக் காண விரும்புகின்றனர். விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வும் அடைகின்றனர்.

இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்ற இயேசுவின் இலட்சியம் விருதுவாக்கு செயல்படும் வகையில் யூதர் அல்லாத புற இனத்தவரான கிரேக்கர்கள் இயேசுவைக் காண வருகின்றனர். இயேசுவே இறைமகன், அவர் வார்த்தையே நற்செய்தி , அவர் வாழ்க்கையே இறைமாட்சி என்று எண்ணி நம்பி வருகின்றனர். அவர்களது அன்பையும் ஆர்வத்தையும் கண்டு இயேசு அவர்களுக்கு மூன்று செய்திகளை சொல்கின்றார். அவர்களுக்கு மட்டுமல்ல ,இயேசுக் காண வேண்டும் என ஏங்கும் அனைவருக்கும் சொல்கிறார்.

மண்ணில் மடிந்து பலன் தா.
பிறர்க்கென வாழ்.
என் பணி செய்.

கோதுமை மணியை பற்றி அதிகம் தெரியும் அக்காலத்து மக்களுக்கு. எனவே அதையே உருவகமாக வைத்து சொல்கிறார். துன்பங்கள் மூலமாக உன் வாழ்வை மெருகேற்றி வளப்படுத்திக்கொள். உன்னால் முடிந்த அளவு உனது நூறு சதவிகித உழைப்பையும் கொடு. அதற்கேற்ற பலனை நீ பெறுவாய் என்கிறார்.

பிறர்க்கென வாழும் போது உன்னை நீயே புதிதாக கண்டு கொள்வாய். தனக்கென வாழ்பவன் அதை இழந்து விடுவான். அதை ஒரு பொருட்டாகக் கருதாதவன், அதாவது தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவன், கிறிஸ்துவுக்காக வாழ்பவன் நிலைவாழ்வு பெறுவான் . நம் மகிழ்ச்சியொடு பிறர் மகிழ்ச்சியும் இணையும் போது தான் நம் வாழ்வு நிறைவு பெற்றதாகும். இயேசுவின் பணியை தொடர்ந்து செய்யும் அவர் சீடர்களாக நாம் மாறவேண்டும். இதனால் தந்தையின் மதிப்பைப் பெறும் நல்ல தொண்டர்களாய் நாம் மாறலாம். இவ்வாறாக தன்னைக் காண வந்த கிரேக்கர்கள், கோதுமை மணி போல் உருமாற, பிறர் பணி செய்ய, தந்தையின் நல் மதிப்பைப் பெற வழிகாட்டுகிறார். தனது சொல்லும் செயலும் தந்தையிடமிருந்தே வருகின்றது என்பதை மெய்ப்பிக்க ஒரு உரையாடலை தந்தைக் கடவுளோடு நடத்துகிறார். மாட்சிப்படுத்தினேன் மாட்சிப்படுத்துவேன் என்ற குரல் மூலம் கடவுளும் தன் மகனுக்கு ஆறுதல் தருகிறார். இதனை கிரேக்கர்கள் மட்டுமல்லாது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் பார்க்கின்றனர்.

பார்ப்பது என்பது வேறு, காண்பது என்பது வேறு. பார்ப்பது, கண் பார்வையுடன் அச்செயல் முடிந்துவிடும். . வீதியில் வெளியில் நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகள் எல்லாமே இதில் அடங்கும். இது நம் மனதில் எந்த விதமான பாதிப்பையும் உணர்வையும் விதைப்பதில்லை. மாறாக காண்பது என்பது புலனுறுப்புக்கள் அனைத்தினாலும் உணர்ந்து காண்பது. இது எக்காலத்திலும் நம் மனதை விட்டு நீங்காது. நமக்கு மிகவும் பிடித்த ஒருவரின் வருகை அல்லது உடனிருப்பு, விழா போன்றவை. கிரேக்கர்கள் இயேசுவை மேலோட்டமாக பார்த்துவிட்டு போக வரவில்லை. அவரைக் கண்டு உணர வந்தனர். தந்தைக் கடவுளின் குரலையும் இயேசுவின் செயலையும் அங்குக் கூடியிருந்த அனைவரும் கேட்டனர் பார்த்தனர். ஆனால் அவர்கள் யாரும் அதை மனதில் இருத்தி காண முயலவில்லை. அதனால் தந்தைக் கடவுளின் குரல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணத்தைக் கொடுத்திருக்கிறது. கேட்கச் செவியிருந்தும் கேட்க இயலாத உள்ளத்தினராய் அவர்கள் மாறிவிட்டனர்.

தவக்காலத்தின் ஐந்தாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். இயேசுவின் பாடுகளில் அவரோடு பங்கேற்க நம்மை நாமே தயாரித்துக் கொண்டு இருக்கும் காலகட்டம் இது. இந்நிலையில் நாம் இயேசுவைக் காணத் துடிக்கிறோமா இல்லைப் பார்க்கத் துடிக்கிறோமா? நமது தந்தை அனுபவமும் இயேசு அனுபவமும் நம் கண்களைத் தாண்டி நம் மனதிற்கு செல்லாமல் வாழ்ந்திருக்கின்றோம் என்றால் நாமும் பல நேரங்களில் கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாழ்ந்திருக்கிறோம் என்றே அர்த்தம். கிரேக்கர்கள் போல இயேசுவைக் காண முயல்வோம். கண்ணால் காண்பதை உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வாழ முற்படுவோம். நம்மைச்சுற்றிலும் கேட்கும் தந்தைக் கடவுளின் குரலை இனம் கண்டு , அவரின் நன்மதிப்பைப் பெற முயல்வோம் . இறை ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

இயேசுவே உன்னைக் காணத்துடிக்கின்றேன் நான் என அனுதினமும் சொல்வோம் அருளாசீர் பெறுவோம்.

 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm

இதற்காகத்தான் நான் வந்தேன்..


இரண்டு நண்பர்கள் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். மலையின் உச்சிக்குச் செல்லச் செல்ல கடுமையான பனி, குளிர் காற்று வீசியதால், மேற்கொண்டு அவர்களால் ஏற முடியவில்லை. மலையேற முடியாமல் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர். அவ்வேளையில் சற்று தூரத்திலிருந்து, " ஐயோ நான் சாகிறேன் என்னை காப்பாற்றுங்கள் " என்ற அபயக் குரல் கேட்டது. அக்குரலைக் கேட்டதும் இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இருவரில் ஒருவர் மட்டும் அபயக் குரல் எழுப்பியவருக்கு உதவி செய்ய புறப்பட்டார். மற்றவர் செல்ல மறுத்து விட்டார். உதவி செய்யச் சென்றவர் அபயக் குரல் எழுப்பியவரின் உடலை நன்றாக தேய்த்துவிட்டார். அதன் விளைவாக அவரது உடலும் சூடேறியது. தன்னிடமுள்ள சூடான நீரை பருகக் கொடுத்தார். அவரும் புத்துயிர் பெற்று, அவரை தன் தோள்மீது சுமந்து கொண்டு, மற்ற நண்பர் இருக்கும் இடத்திற்கு வந்தார். ஆனால் அவரோ கடும்குளிரினால் ஏற்கனவே இறந்து விட்டார்.

"தன் உயிரை காத்துக்கொள்ள விரும்பியவர் அதை இழந்து விட்டார். பிறருக்காக தன் உயிரை இழக்க முன்வந்தவர் அதைக் காத்துக் கொண்டார்." இம்மண்ணுலகை பாவத்தளையிலிருந்து மீட்க, விண்ணிலிருந்து மனிதனாகப் பிறப்பெடுத்து , சிலுவைப்பாடுகள் ஏற்று, துன்பப்பட்டு, துயரப்பட்டு, தன்னுயிரைக் கொடுத்து நம்மை மீட்டார். இதற்காகத்தான் இம்மண்ணுலகில் மனிதான அவதரித்தார் இயேசு.

தவக்காலத்தின் ஐந்தாவது வாரத்தில் இருக்கும் நமக்கு, இன்றைய நற்செய்தியின் வாயிலாக பல்வேறு நற்சிந்தனைகளை நம்முன்வைக்கிறார் இறைமகன் இயேசு. தமகென வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். பிறருக்காக வாழ்வோர் நிலைவாழ்வுக்கு தம்மை உரியவராக்கிக் கொள்வர். என்று சொன்ன இயேசு , அதனை வாழ்ந்தும் காட்டினார் என்ற கருத்துக்களின் அடிப்படையில் நம் சிந்தனைகளை சீர்தூக்கிப் பார்த்து , செயல்வடிவம் பெற அழைக்கப்படுகிறோம்.

இந்த ஏழு கருத்துக்களின் அடிப்படையில் இயேசு இம்மண்ணுலகில் மனிதனாக அவதரித்தார்.
1. பாவிகளாகிய நம்மை பாவத்திலிருந்து மீட்க வந்தார்.
2. உதவியற்றவர்களுக்கு ஊழியம் செய்ய வந்தார்.
3. இறைவனுடைய வார்த்தையை எல்லாருக்கும் எடுத்துரைக்க வந்தார்.
4, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தார்.
5. உண்மைக்கு சாட்சியம் சொல்லவே வந்தார்.
6. சாத்தானின் அக்கிரமங்களை அழிக்க வந்தார்.
7. தன்னை ஏற்று விசுவசிப்பவர்களுக்கு, நிலைவாழ்வை கொடையாக கொடுக்க வந்தார். இப்படி தான் எதற்காக இம்மண்ணுலகிற்கு வந்தாரோ, அந்த நோக்கம் அறிந்து அதனை நிறைவேற்றினார். நாம் எதற்காக இவ்வுலகிற்கு வந்தோம் ? நமது நோக்கம் என்ன? நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்விகளை நமக்குள் எழுப்பி இறைவனிடம் நெருங்கி வர, இன்றைய நற்செய்தியின் வாயிலாக இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். சிறப்பாக கோதுமை மணி போல மடிந்து பலன் கொடுக்க அழைக்கின்றார்.

கோதுமை மணி போல, மடிந்து பலன் கொடு :

இன்று நாம் காணும் வானுயர்ந்த மரங்களெல்லாம் என்றொ ஒரு நாள் விதையாக மண்ணில் விழுந்து மடிந்தது தானே ! இன்று அதன் பலனை தந்து கொண்டிருக்கிறது. "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும் , மடிந்தால் தான் மிகுந்த விளைச்சலைக் கொடுக்கும்" என்று கூறிய இயேசு நம்மையும் அப்படி வாழ அழைக்கின்றார். கோதுமை மணிபற்றி சிந்திக்கும் பொது இரண்டு கருத்துக்கள் தெளிவுபடுகின்றன.
1. கோதுமை மணி மாவாக அரைக்கப்பட்டு அப்பமாக மாறி, மற்றவரை வாழ்வைக்கிறது.
2. விதையாக மாறி தன் இனத்தை பெருக்குகிறது. இது கோதுமை மணிக்கு மட்டுமல்ல, உலகில் படைக்கப்பட்ட அனைத்து தானிய மணிகளுக்கும் உள்ள இயல்பான காரணங்கள். நாம் கோதுமை மணி போல மடிந்து பலன் கொடுக்க வேண்டும், இதைத் தான் இயேசு நம்மிடம் எதிர்பார்க்கிறார். விதையின் பாதை மிகவும் கடினமானது, வலி நிறைந்தது, துயரம் நிறைந்தது. இத்தனை துன்பங்களையும் அனுபவித்துதான் விதையானது , விருட்சமாகி பலன் கொடுக்கிறது. அதே போல நம்முடைய வாழ்க்கையும் துன்பங்கள் நிறைநதது தான். அதனைக் கடந்து தான் வாழ்கையில் முன்னுக்கு வரமுடியும், வெற்றி பெற முடியும். துன்பங்களால் நிறைந்தது மட்டும் வாழ்கையல்ல, துன்பங்களை நம்பிக்கையோடு கடந்து செல்லும் போது தான், வாழ்க்கையின் மறுபக்கம் இன்பம் இருப்பதை நம்மால் அனுபவிக்க முடியும்.

ஆகவே கடவுள் நமக்கு கொடுத்த இந்த அழகான வாழ்க்கையை அர்த்தமுள்ள விதத்தில் வாழுவோம். துன்பங்கள் நம்மை தொடரும் போது அதை சுமூகமான முறையில் கையாளக் கற்றுக்கொள்வோம். நாம் மற்றவர்களுக்கு பணி செய்யவே ,இம்மண்ணுலகிற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து , கோதுமை மணி போல மடிந்து பலன் கொடுப்போம். சுயநலம் மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது பல்கிப் பெருகி உலகை சீரழித்து விடும், அது மடிந்து புதைக்கப்பட்டால், பிறர் நலம் என்ற விளைச்சல் மிகுந்த பலனைக் கொடுக்கும் , என்பதை உள்ளத்தில் இருத்தி, பிறர் வாழ் நாம் தொண்டு செய்வோம் . ஆண்டவர் இயேசு நம்மோடும், நம்மை சுற்றிவாழ்பவர்களோடும் இருந்து ஆசிர்வதிப்பாராக ஆமென்.
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.


 

இயேசுவைக் காண விரும்புகிறோம்!

எரேமியா 31:31-34
எபிரேயர் 5:7-9
 யோவான் 12:20-33

இயேசுவும் அவருடைய திருத்தூதர்களும் பாஸ்கா விழாவுக்காக எருசலேம் வந்திருக்கின்றனர். அதே நேரத்தில் அதே திருவிழாவுக்கு சில கிரேக்கர்களும் வந்திருக்கிறார்கள். கிரேக்கர்கள் ஏன் யூதர்களின் திருவிழாவுக்கு வந்திருந்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த கிரேக்கர்கள் ஒருவேளை எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்பவர்களாக இருந்திருக்கலாம். அல்லது அந்த திருவிழாவில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் வந்திருக்கலாம். அல்லது வேறு வேலையாக வந்திருக்கலாம். வந்த இடத்தில் திருவிழா நடந்து கொண்டிருக்கலாம். எது எப்படியோ இவர்கள் வந்த நேரம் திருவிழா நடக்கிறது. திருவிழா நடக்கிற நேரம் இவர்கள் வருகிறார்கள்.

இப்படி வந்த கிரேக்கர்கள் பெத்சாய்தா ஊரைச் சார்ந்த பிலிப்பிடம் - அவரை ஒரு பி.ஆர்.ஓ என நினைத்திருக்கலாம் - "ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்!" என்கின்றனர்.

இவர்களின் இந்தத் தேடலை, விருப்பத்தை நாம் நமது இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

"ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்"

இந்த ஆண்டு பேராயரின் செயலராக நான் ஏற்ற தொலைபேசி அழைப்புகளில், அல்லது மக்களின் வருகையில் நான் கேட்ட வார்த்தைகளும் இவையே:

"ஃபாதர், நாங்கள் பேராயரைக் காண விரும்புகிறோம்"

மக்கள் பேராயரைக் காண ஏன் விரும்புகின்றனர்?

"தங்கள் குறைகள் தீர்க்கப்பட," "குறைகள் தீர்க்கப்பட்டதற்கு நன்றி சொல்ல," "உதவி கேட்க," "அவரை வாழ்த்த," "பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்க," "முடிவுகள் எடுப்பதில் அறிவுரை கேட்க" -

இப்படியாக ஒவ்வொரு விருப்பத்தின் பின்னாலும் ஒரு நோக்கம் இருக்கும்.

நோக்கம் இல்லாத விருப்பம் மிகக் குறைவே.

"சும்மா பார்க்க வந்தேன்" என்று சொல்வதெல்லாம் சும்மா சொல்வதாக இருக்கிறது.

கிரேக்கர்கள் இயேசுவைக் காண்பதற்காக தெரிவிக்கும் விருப்பத்திற்கு எந்தவொரு நோக்கமும் இல்லாமல் இருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

ஆக, "நோக்கத்தோடு கூடிய விருப்பத்திலிருந்து" "நோக்கம் இல்லாத விருப்பத்தை நோக்கி" செல்வதற்கான அழைப்பாக இருக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

ஒரு குழந்தை தன் தாயைக் காண விருப்பம் தெரிவிக்கிறது என்றால், அந்த விருப்பத்திற்கென நோக்கம் எதுவும் இருப்பதில்லை.

ஒரு தந்தை தன் குழந்தையைக் காண குழந்தை படிக்கும் விடுதிக்குச் செல்கிறார் என்றால் அந்த விருப்பத்திற்கென நோக்கம் எதுவும் இருப்பதில்லை.

கடவுளைத் தேடுவதிற்கான நம் விருப்பம் பல நேரங்களில் நோக்கம் கொண்டதாக இருக்கிறது. இப்படி இருப்பது ஒரு தொடக்க நிலையே தவிர முதிர்நிலை அல்ல என்பதை இன்று நாம் உணர்ந்துகொள்வோம்.

எப்படி?

இன்றைய பதிலுரைப்பாடலாக திருப்பாடல் 51ன் ஒரு பகுதியை வாசிக்கின்றோம்.

"தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது" என்று திருப்பாடல் 51க்கு முன்னுரை தரப்பட்டுள்ளது.

தன் பாவத்தால் தான் தன் இறைவனிடமிருந்து அந்நியமாக்கப்பட்டுவிட்டதையும், தன் திருப்பொழிவு நிலை மாசுபட்டதையும் எண்ணுகின்ற தாவீது மனம் வருந்தி இறைவனின் இரக்கத்தை மன்றாடுகின்றார்.

கடவுளை தாவீதுக்கு ரொம்ப பிடிக்கும். கடவுளுக்கும் தாவீதை ரொம்ப பிடிக்கும். ஆக, எந்நேரமும் அவரைக் காண்பதையே தன் விருப்பமாகக் கொண்டிருந்த தாவீது தான் பத்சேபாவிடம் கொண்ட தவறான உறவினால் அந்த விருப்பத்திற்கு திரையிட்டுக்கொள்கின்றார். தாவீது பத்சேபாவை அடைய நினைத்தது அக்கால வழக்கப்படி தவறு அல்ல. ஏனெனில் அரசனுக்கு அவனது நாட்டில் உள்ள எல்லாரும், எல்லாமும் சொந்தம். கடவுளின் முறைப்பாடு என்னவென்றால், "உன்னிடமிருந்து நிறைவைக் காண்பதை விட்டு, உன்னிடம் இல்லாத ஒன்றை அல்லது உனக்கு வெளியே இருக்கும் ஒன்றை நீயாக அடைய நினைத்தது" என்பதுதான். "நீ என்னிடம் கேட்டிருக்கலாமே!" என்றுதான் கடவுள் வருத்தப்படுகின்றார்.

இந்தத் தவற்றால் கடவுளிடமிருந்து விலகிப்போன தாவீது கடவுளிடம் நான்கு விருப்பங்களை முன்வைக்கின்றார்:

அ. தூயதோர் உள்ளம்

ஆ. உறுதிதரும் ஆவி

இ. மீட்பின் மகிழ்ச்சி

ஈ. தன்னார்வ மனம்

இந்த நான்கும் இருந்தால் கடவுளைக் காண தாவீது மட்டுமல்ல. நாம் எல்லாருமே விருப்பம் கொள்வோம். ஏனெனில் இந்த நான்கிற்கும் கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி?

அ. தூயதோர் உள்ளம் - "தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத் 5:8) என்பது இயேசுவின் மலைப்பொழிவு. தூய்மை என்பது முழுமை. வெள்ளைத் துணியை தூய்மையாக இருக்கிறது என நாம் எப்போது சொல்கிறோம்? துணி முழுவதும் வெண்மையாக இருக்கும்போது. ஆக, ஒன்றின் இயல்பின்மேல் மற்றது படிந்திருந்தால் அது தூய்மையற்றதாகிறது. லட்டு வாங்கி வருகிறோம். சிகப்பு கலரில் இருக்கிறது. நான்கு நாள்கள் கழித்து அதன் மேல் வெள்ளையாக அல்லது பழுப்பு நிறத்தில் ஏதோ ஒன்று படிகிறது. உடனே "கெட்டுவிட்டது" என நாம் அதை தூக்கி வெளியே போடுகிறோம். முழுமையான உள்ளம் கடவுளை மட்டுமே தேடும். ஆகையால்தான் "பிளவுண்ட மனம்" தவறு என பவுலடியார் சொல்கின்றார் (காண். 1 கொரி 7:34).

ஆ. உறுதிதரும் ஆவி - தவறு செய்யும் மனம் தவறுக்கான வாய்ப்பு இல்லாதவரை உறதியாக இருக்கும். எனக்கு ஃபோர்னோகிராஃபி பார்க்கும் பழக்கம் உள்ளது என வைத்துக்கொள்வோம். கணிணி இல்லாதவரை, அல்லது இணைய இணைப்பு இல்லாத வரை என் மனம் "அதை பார்க்கக்கூடாது" என உறுதியாக இருக்கும். ஆனால், கணிணியும், இணையமும், தனிமையான இடமும் கிடைத்தவுடன் முதல் வேலையாக "அதைப் பார்க்கும்." ஆக, உறுதியாக இருந்த மனம் சூழல் மாறியவுடன் உறுதியை இழந்துவிடுகிறது. தாவீது கேட்கும் ஆவி உறுதியை தரக்கூடிய ஆவி.

இ. மீட்பின் மகிழ்ச்சி. அதாவது, தான் பத்சேபா வழியாக பெற்றது இன்பம் என்றும், இறைவனிடமிருந்து வரும் மீட்பால் கிடைப்பது மகிழ்ச்சி என்றும் சொல்கிறார் தாவீது. ஒருமுறை தவறு செய்துவிட்டு அந்தத் தவறிலிருந்து வெளிவந்து கடவுளின் மன்னிப்பை பெற்றவுடன் மனதில் ஒருவிதமான பெருமிதம் அமர்ந்துகொள்கிறது. அந்த பெருமிதமே மகிழ்ச்சி. மேலும் தாவீது, "மீண்டும் எனக்குத் தந்தருளும்!" என்று தான் இழந்ததை திரும்ப பெற்றுக்கொள்ள விழைகின்றார்.

ஈ. தன்னார்வ மனம். கடந்த வாரம் என் நண்பர் ஒருவரிடம் அருள்பணி வாழ்வு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னார்: "நீயா விரும்பித்தானே வந்தாய்!" அவ்வளவுதான். நான் ஞானம் பெற்றேன். யாரும் நிர்பந்தித்து நான் இந்த வாழ்வைத் தேர்ந்துகொள்ளவில்லை. ஆக, நான் ஏன் நிர்பந்திக்கப்படுவதாக உணர வேண்டும். தன்னார்வ மனம் என்பது நிர்பந்தம் இல்லாத மனம்.

இந்த நான்கு பண்புகள் வழியாக நாமும் அந்த கிரேக்கர்களைப் போல, "ஐயா, நாங்கள் கடவுளை (இயேசுவை) காண விரும்புகிறோம்" என்று சொல்ல முடியும்.

கடவுளைக் காண விரும்புகிறோம் என்றால் அவர் எங்கே இருக்கிறார்?

இந்தக் கேள்விகளுக்கான விடை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களில் இருக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 31:31-34) புதிய உடன்படிக்கை பற்றி பேசுகின்ற எரேமியா இறைவாக்கினர், இறுதியாக, "இனிமேல் எவரும் "ஆண்டவரை அறிந்துகொள்ளும்" எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அனைவரும் என்னை அறிந்துகொள்வர்" என்று யாவே இறைவன் சொல்வதாக இறைவாக்குரைக்கின்றார். இவ்வாறாக, கடவுளை வெளியே தேடும் நிலை மறைந்து, கடவுள் ஒவ்வொருவரின் உள்ளத்தில் தோன்றும் நிலை உருவாகிறது. ஆக, கடவுளை அறிவது என்பது அவர் நம் உள்ளத்தில் எழுதியிருக்கும் சட்டத்தை, உடன்படிக்கையை அறிவது மட்டுமல்ல. அதற்கு மேலும், "நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்" என்ற உணர்வை பெற்றுக்கொள்வது. அதாவது, ஒரு தாயின் கருவறைக்குள் இருப்பது போன்றது. தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை கேட்கும் ஒலி தன் தாயின் ஒலி மட்டுமே. மேலும், கருவறையில் இருக்கும் குழந்தை தன் தாயின் ஒரு பகுதியாகவே நினைக்கும். அங்கே தாய்க்கும், சேய்க்கும் வேற்றுமை இல்லை.

இயேசு கொண்டுவந்த மீட்பின் இரகசியம் இதுதான். கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள தூரத்தை இல்லாமல் செய்துவிட்டார்.

ஆக, கடவுளைக் காண்பதற்கு நாம் கண்களைத் திறக்கத் தேவையில்லை. கண்களை மூடினாலே போதும். அவரை நாம் நம் அகத்துள் உணர்ந்துகொள்ள முடியும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளைப் பற்றிய தேடல் நம் அன்றாட வாழ்க்கை நிலைகளிலும் தெரிகிறது என்பது தெளிவாகிறது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைப்பதற்கு முன் அவர் பெற்றிருந்த நிறைவை, "அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவரானார்" என எழுதுகிறார். ஆக, கடவுளுக்கான விருப்பம் நம் வாழ்வின் துன்பங்களிலிருந்தும் ஊற்றெடுக்கும்.

இவ்வாறாக, கடவுளை நோக்கிய நம் தேடல் நமக்கு வெளியிலிருந்தும், நமக்கு உள்ளிருந்தும் வருகிறது.

மீண்டும், கிரேக்கர்களின் வார்த்தைகளுக்கே வருவோம்:

"ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்"

இந்த வார்த்தைகளோடு நம் சிந்தனையை நிறைவு செய்வோம்:

இயேசுவை அவரின் வாழ்நாளில் மூன்று வகையான மக்கள் காண விரும்புகின்றனர்:

1. ஏரோது வகையினர். இயேசுவை தந்தை ஏரோதும் தேடுகிறார். மகன் ஏரோதும் தேடுகிறார். இயேசு பிறந்த போது யூதேயாவை ஆட்சி செய்த தந்தை ஏரோது இயேசுவைக் கொல்லத் தேடுகிறார் (மத்தேயு 2:16). இயேசுவின் பாடுகளின் போது கலிலேயாவை ஆண்ட மகன் ஏரோது அவரிடம் அறிகுறி எதிர்பார்த்துக் காண விரும்புகின்றார் (லூக்கா 23:8).

2. சக்கேயு வகையினர். சக்கேயு (லூக்கா 19:1-10) இயேசுவைக் காண விரும்பியதன் நோக்கம் ஒரு பேரார்வம். மனமாற்றம் இயேசுவைச் சந்தித்தபின் வந்ததுதான். இயேசுவைத் தேடி வந்த நோயுற்றோர், பேய்பிடித்தவர், தொழுநோயாளர், பார்வையற்றவர் எல்லாரும் இவ்வகையில் அடங்குவர்.

3. கிரேக்கர் வகையினர். இவர்களைத் தான் இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கின்றோம். தங்களின் முகத்தை மறைத்துக் கொண்டு இயேசுவின் முகத்தைத் தேடியவர்கள். இயேசுவிடமிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள். இயேசுவை தங்கள் எதிரியாகவோ, உபகாரியாகவோ பார்க்காதவர்கள்.

இன்று நாம் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய முதல் கேள்வி: நான் இயேசுவைக் காண விரும்புகிறேனா? விரும்புகிறேன் என்றால், நான் இந்த மூன்றில் எந்த வகையைச் சார்ந்தவர். முதல் இரண்டு வகைத் தேடலிலும், இயேசுவைக் கண்டவுடன் பயணம் முடிந்து விடுகிறது. ஆனால், மூன்றாம் வகையில் மட்டும் தான் பயணம் தொடர்கிறது. முதல் வகையினர், எதிரிகள். இரண்டாம் வகையினர் பக்தர்கள். மூன்றாம் வகையினர் சீடர்கள். இன்று இயேசுவுக்கு நாம் எதிரிகளா, பக்தர்களா அல்லது சீடர்களா? எதிரிகளாகக் கூட இருந்துவிடலாம். ஆனால், பக்தர்களாக இருப்பதுதான் மிகவும் ஆபத்தானது. ஆலயத்திற்கு வந்தோம், மெழுகுதிரி ஏற்றினோம், கைகளைக் கும்பிட்டோம், வழிபட்டோம், சென்றோம் என்று நாம் இருக்கும் போது இயேசுவை நம்மிடமிருந்து, அல்லது நம்மை இயேசுவிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகிறோம். நாம் சீடர்களாக அல்லது கிரேக்க வகையினராக இயேசுவைத் தேட வேண்டும்.

இரண்டாம் கேள்வி: இந்தக் கிரேக்கர்களைப் போலத் தேடுவது என்றால் எப்படி?

இயேசுவே இதற்கான பதிலை மூன்று நிலைகளில் தெரிவிக்கின்றார்:

1. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிய வேண்டும்.

2. தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதவராக இருக்க வேண்டும்.

3. என்னை (இயேசுவை) பின்பற்ற வேண்டும்.


1. கோதுமை மணி

இயேசு சொல்லும் இந்த உருவகம் ஒரு விவசாய உருவகம். நாம் விவசாயம் செய்து விதைகள் விதைக்கும் போது, நாம் செய்யும் விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம் வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை. விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை மண்ணோடு போராட வேண்டும். மண்ணைத் துளைத்து உள்ளே சென்று தன்னையே மறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னை மறைத்துக் கொள்ளும் விதை மடிய வேண்டும். தன் இயல்பை முற்றிலும் இழக்க வேண்டும். மூன்றாவதாக, அதே போராட்டத்துடன் மண்ணை முட்டிக் கொண்டு மேலே வர வேண்டும். இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் விதையின் போராட்டம் தடைபட்டாலும் விதை பயனற்றதாகிவிடுகிறது. "இல்லை! நான் என்னை மறைக்க மாட்டேன். கீழே போக மாட்டேன். என்னை எல்லாரும் பார்க்க வேண்டும்!" என்று அடம்பிடித்தால் வானத்துப் பறவைக்கு உணவாகிவிடும். அல்லது கதிரவனின் சூட்டில் கருகிவிடும். மடிய மறுத்தாலோ அல்லது போராடி உயிர்க்க மறுத்தாலோ அது மட்கிப்போய் விடுகிறது. இயேசுவின் வாழ்வையும் விதையின் இந்த போராட்டத்தைப் போலத்தான் இருக்கிறது: பாடுகள் படுகின்றார், இறக்கின்றார், உயிர்க்கின்றார். இயேசுவைக் காண விரும்பும் நம் மனநிலையும் இப்படித்தான் இருக்க வேண்டும். கோதுமை மணி போல மடிவது என்றால் நம் உயிரை மாய்த்துக்கொள்வது அல்ல. நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது. நாம் விதியினாலோ. இயற்கையின் விபத்தினாலே வந்தவர்கள் அல்லர். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. வெறும் 10 ரூபாய் கொடுத்து 10 நிமிடம் செல்லும் பயணத்திற்கே இலக்கும் நோக்கமும் இருக்கிறது என்றால் பல வருடங்கள் பயணம் செய்கின்ற நம் வாழ்க்கைப் பயணத்திக்கு இலக்கும், நோக்கமும் இல்லாமல் இருக்குமா? இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாழ்க்கை "சராசரி" வாழ்க்கையாக இருந்துவிடக் கூடாது. நம் முழு ஆற்றலும் வெளிப்படுகின்ற வகையில் நம் வாழ்க்கை ஓட்டம் அமைய வேண்டும். மாணவராக இருக்கிறோமா! முழு அர்ப்பணத்துடன் படிக்க வேண்டும். டாக்டராக, ஆசிரியராக, அன்றாட கூலியாக நாம் என்னவாக இருந்தாலும் அதில் நாம் முழுமையாக மடிய வேண்டும். பலன் தர வேண்டும்.

2. தமக்கென்று வாழ்வோர் - தமக்கென்று வாழாதோர்

இரண்டாவதாக, இயேசு இரண்டு வகை மனிதர்களைக் குறிப்பிடுகின்றார்: "தமக்கென்று வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுகின்றனர்", "தம் வாழ்வை ஒருபொருட்டாகக் கருதாதவர் நிலைவாழ்வு பெறுகின்றனர்". இரண்டும் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாததுபோல இருக்கிறது. இரண்டாவது வாக்கியம் லாஜிக் படி பார்த்தால், "தமக்கென்ற வாழாதோர்" என்றுதானே இருக்க வேண்டும். இயேசுவின் இந்தப் போதனையின் நோக்கம் நாம் நமக்காக வாழ வேண்டுமா அல்லது பிறருக்காக வாழ வேண்டுமா என்பதல்ல. மாறாக, வாழ்வின் மேலான நம் கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான். "ஒருவர் உலகம் முழுவதும் தமதாக்கிக் கொண்டாலும், தன் வாழ்வை இழந்து விட்டால் அதனால் வரும் பயன் என்ன?" (மத்தேயு 16:26) என்னும் இயேசுவின் போதனை இப்போது முரண்படுகிறது போல தெரிகிறதல்லவா! வாழ்வை ஒரு பொருட்டாகக் கருதாதது என்றால் சரியாகக் குளிக்கக் கூடாது, நல்ல டிரஸ் போடக்கூடாது, எம்.பி.3 ப்ளேயரில் பாட்டுக் கேட்கக் கூடாது என்பதல்ல. மாறாக, எதற்கும் நான் உரிமையாளன் அல்ல என்ற நிலையில் வாழ்வது. நாம் நம் வாழ்விற்கும், நம் உயிருக்கும், நம் உறவுகளுக்கும் கண்காணிப்பாளர்கள் தாம். நம் மேலும், நம் உறவுகள் மேலும் நமக்கு உரிமையில்லை. நம் வாழ்வில் அருட்பணி நிலையில் ஒரு பங்கோ, பொதுநிலை வாழ்வில் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ தரப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மேல் ஆட்சி செலுத்துவதற்கும், உரிமை கொண்டாடுவதற்கும் அல்ல. மாறாக, கண்காணிப்பதும், பராமரிப்பதும் தான் நம் வேலை. "எது இன்று உன்னுடையதோ, அது நாளை வேறொருவனுடையது!" என்ற கீதையின் சாரமும் இங்கே நினைவுகூறத்தக்கது. எதன்மேலும் உரிமையில்லை என்பதற்காக, "வந்த மாட்டையும் கட்ட மாட்டேன், போன மாட்டையும் தேட மாட்டேன்" என்ற கண்டுகொள்ளாத மனநிலையிலும் இருந்துவிடக்கூடாது.

3. எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்

இயேசுவின் சீடரோ அல்லது இயேசுவைக் காண விரும்புவரோ இருக்க வேண்டிய இடம் இயேசு இருக்கும் இடம்தான். ஒழுக்கம் என்றால் என்ன? "இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய பொருள் இருப்பதும், செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய வேலையைச் செய்வதும்தான்!" உதாரணத்திற்கு, படிக்கின்ற மாணவர்கள் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு வகுப்பறையில் இருக்க வேண்டும் என்பது ஒழுக்கம். அதே மாணவர்கள் திங்கள் கிழமை 10 மணிக்கு தியேட்டரில் இருந்தால் அது ஒழுங்கீனம். இயேசு இருக்க வேண்டிய இடத்தில் அவரைத் தேடுவோரும் இருப்பதும், இயேசு கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருப்பதும் தான் ஒழுக்கம். இயேசுவைப் பின்பற்றுவது என்றால் என்ன? பின்பற்றுவது அல்லது ஃபாலோ செய்வது என்றால் உடனடியாக நம் நினைவிற்கு வருவது டுவிட்டர்தான். டுவிட்டரில் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். அல்லது சிலர் நம்மைப் பின்பற்றுகிறார்கள். நாம் யாரைப் பின்பற்றுகிறோமோ அவர்களின் கருத்தியலைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், படிப்பு, வேலை என எல்லாத் தளங்களிலும் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். நாம் பின்பற்றும் நபர்கள் நம்மையறியாமலேயே நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். டுவிட்டரில் அடுத்தவர்களைப் பின்பற்றுவதற்கு மெனக்கெடும் நாம் இயேசுவைத் தேடுவதற்கும், பின்பற்றுவதற்கும் மெனக்கெடுவதில்லை என்பதுதான் வேதனையான விஷயம். அன்று கிறிஸ்தவராக மாறுவது கடினம். ஆனால் வாழ்வது எளிது. இன்று, கிறிஸ்தவராக மாறுவது எளிது. ஆனால், வாழ்வதுதான் கடினம்.

"நான் இயேசுவைக் காண விரும்புகிறேன்!" - இது ஒன்றே இன்று என் மன்றாட்டாக, ஆசையாக, தேடலாக இருந்தால் எத்துணை நலம்!

 

 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை


 

I எரேமியா 31: 31-34 II எபிரேயர் 5: 7-9 III யோவான் 12: 20-33


தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோரும், தமக்கென்றே வாழ்வோரும்
அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் சமூக சேவர் ஜான் டி ராக்பெல்லர் (John D Rockefeller 1839-1937). ஒரு காலத்தில் இவர் பணமீட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடுமையாக உழைத்தார்; அதற்காக இவர் தன்னிடம் வேலை பார்த்த பணியாளர்களைக் கசக்கிப் பிழித்தார். இதனால் இவர் தனது 33 வது வயதில் மில்லியனராகவும், 43 வது பில்லியனராகவும் ஆனார். தனக்குக் கீழ் வேலைசெய்து வந்த பணியாளர்களை இவர் தொடர்ந்து கசக்கிப் பிழிந்ததால் அவர்கள், " யாருக்கெல்லாமோ சாவு வருகின்றது... இவருக்குச் சாவு வராதா?" என்று சாடைமாடையாகப் பேசத் தொடங்கினார்கள். இதனாலோ என்னவோ இவருக்கு 53 வது நடக்கும்பொழுது அலோபேசியா (Alopecia) என்ற நோய் வந்தது. இந்த நோயின் காரணமாக இவருடைய இமைகளில் இருந்த முடியும், தலையில் இருந்த முடியும் கொட்டத் தொடங்கியது; இவர் நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே போனார். இதைப் பார்த்துவிட்டுச் செய்தியாளர்கள் இவருடைய இறப்புச் செய்தியைத் தயார் செய்துவிட்டார்கள்.

இதையெல்லாம் அறிந்த இவர், தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தினார். " இத்தனை ஆண்டுகளும் நான் எனக்காக வாழ்ந்துவிட்டேன்; இனிமேல் நான் ஏன் மற்றவருக்காக வாழக்கூடாது" என்று முடிவுசெய்தார். இதற்குப் பிறகு ராக்பெல்லர் பவுண்டேஷன் என்றோர் அமைப்பை இவர் தொடங்கி, பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் கோயில்கள், ஆகியவற்றிற்கு கோடிக்கணக்கில் உதவி செய்தார். மட்டுமல்லாமல் மலேரியா, காச நோய், டிப்திரியா ஆகிய நோய்களுக்கு இவர் தந்த உதவியினால் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு இவர் தனக்காக வாழாமல், பிறருக்காக வாழத் தொடங்கியதால் இவரது உடல்நலம் தேறி, 98 வயது வரை வாழ்ந்தார்.

ஆம், ராக்பெல்லர் தனக்காக வாழ்ந்தபொழுது சாவின் விளிம்புவரை சென்றார். எப்பொழுது அவர் பிறருக்காக வாழ்ந்தாரோ, அப்பொழுது அவர் நீண்ட நாள்கள் உயிர் வாழ்ந்தார். தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையானது, நமக்காக அல்ல, இயேசுவைப் போன்று பிறருக்காக வாழவேண்டும் என்ற சிந்தினையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கோதுமை மணியாய் மண்ணில் மடிந்த இயேசு
யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், கிரேக்கர் சிலர் இயேசுவைக் காண விரும்புவதோடு தொடங்குகின்றது. இயேசுவைக் காண விரும்பும் கிரேக்கர் பிலிப்பிடம் வருகின்றார்கள். ஒருவேளை பிலிப்பு பிறவினத்தார் மிகுதியாக வாழ்ந்த கலிலேயாவில் உள்ள பெத்சாய்தாவைச் சார்ந்தவர் என்பதால், அவர்கள் இயேசுவைக் காண விரும்பிப் பிலிப்பிடம் வந்திருக்கலாம். பிலிப்போ தன்னிடம் வந்த கிரேக்கர்களை அந்திரேயாவிடம் அழைத்துச் செல்ல, மக்களை இயேசுவிடம் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அந்திரேயா (யோவா 1: 42; 6:9) அவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்கின்றார். இவ்வாறு தன்னிடம் வந்த கிரேக்கர்களிடம் இயேசு பேசுகின்ற வார்த்தைகள்தான், " மானிடமகன் மாட்சிபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.....கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" என்பதாகும்.

இயேசு தன்னிடம் வந்த கிரேக்கர்களிடம் சொல்லும் இவ்வார்த்தைகளின்மூலம், அவர் தான் பாடுபட்டு இறந்து உயிர்த்தெழுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுகின்றார். இயேசு இந்த மண்ணுலகில் வாழ்ந்தபொழுது, இன்றைக்கு இவ்வுலகில் வாழும் பலரைப் போன்று தனக்காக வாழவில்லை; மாறாக, அவர் தான் சென்ற இடங்களிலெல்லாம் நன்மையே செய்து (திபா 10: 38), பிறருக்காக வாழ்ந்தார். இதைவிடவும் அவர் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார் (யோவா 4: 34). இப்பொழுது தன் பாடுகளின் வழியாக தந்தையை மாட்சியைப்படுத்தவேண்டிய நேரம் வந்ததும்தான், அவர் தன்னைக் கோதுமை மணிக்கு உருவகப்படுத்தி, " கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" என்கின்றார்.

தன்னைப் பின்பற்றுவோர் தன்னைப் போன்று வாழ அழைக்கும் இயேசு
கவிக்கோ அப்துல் இரகுமான் எழுதி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆலாபனை என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெறும் இருவரிக் கவிதை இது: " மனிதர்கள் இந்த உலகிற்குப் பிச்சைக்காரர்களாக வருகின்றார்கள்; ஆனால் கடன்காரர்களாகச் செல்கின்றார்கள." எவ்வளவு வேதனை மிகுந்த வரிகள் இவை. இந்த உலகத்திற்கு எதையுமே கொண்டு வராத மனிதர்கள், இங்குள்ள எல்லா வசதிகளையும் ஆண்டு அனுபவித்துவிட்டு, இந்த உலகத்திற்கு எதையுமே கொடுக்காமல் போனால், அவர்கள் கடன்காரர்கள்தானே!

நற்செய்தியில் இயேசு, இந்த உலகம் வாழ்வு பெறுவதற்காய்த் தான் கோதுமைமணியாய் மடியப்போவதைச் சுட்டிக்காட்டிவிட்டு, " தமக்கென வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்" என்கின்றார். அவ்வாறெனில், இயேசுவுக்குத் தொண்டுவோர், அவர் வழியில் நடப்போர் அவரைப் போன்று, தன்னையே இவ்வுலகம் வாழ்வு பெறத் தந்து, அவரைப் பின்பற்றவேண்டும். இது சீடர்கள் செய்யவேண்டிய தலையாய கடமையாக இருக்கின்றது. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மற்றும் யூதா வீட்டாரோடு புதிய உடன்படிக்கை செய்துகொள்ளப்போவதாகச் சொல்கின்றார். இப்புதிய உடன்படிக்கையின் மூலம், தான் அவர்களுக்குக் கடவுளாகவும், அவர்கள் தன் மக்களாகவும் இருப்பார்கள் இருப்பார்கள் என்கின்றார். நாம் கடவுளின் மக்களெனில், அவரது திருமகன் இயேசுவைப் போன்று நாமும் இவ்வுலகம் வாழ்வு பெற நம்மையே தரவேண்டும்.

தமக்குக் கீழ்ப்படிவோர் மீட்படையக் காரணமாகும் இயேசு
ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம்பெறுகின்ற, இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இரத்தவியர்வை வியர்த்த நிகழ்வு (மத் 26: 36-46; மாற் 14: 32-42; லூக் 22: 38-45), யோவான் நற்செய்தியில் இடம்பெறாவிட்டாலும், அதையொத்த நிகழ்வு இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இடம்பெறுவதாகத் திருவிவிலிய அறிஞர்கள் சொல்வர்கள்.

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு, " இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன செய்வேன்?" என்கின்றார். இது குறித்து இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறும்பொழுது, " கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில்..... கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார்" என்பார். இயேசு இவ்வாறு துன்பக் கிண்ணம் தன்னைவிட்டு அகலவேண்டும் என்று கண்ணீர் சிந்தி, மன்றாடினாலும், பின்னர் கடவுளுக்குச் செவிசாய்த்து, துன்பங்களின் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். மேலும் அவர் தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். ஆகவே, இயேசு இறைமகனாக இருந்தபொழுதும், துன்பங்களின் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டதுபோன்று, நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவர் நம்மோடு செய்துகொண்ட புதிய உடன்படிக்கைக்கேற்ப வாழவேண்டும். " கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது" (1 சாமு 15: 22) என்கிறது இறைவார்த்தை. ஆகவே, நாம் இயேசு எப்படித் தந்தைக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது திருவுளம் நிறைவேற்றினாரோ அப்படி நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது திருவுளம் நிறைவேற்றி வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை
" அரைகுறைக் கிறிஸ்தவர்களாக வாழ்வதில் திருப்தியடைந்து விடாதீர்கள். புனிதப் பாதையில் விடாமுயற்சியோடு நடங்கள்" என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் நமக்காக மட்டுமே வாழ்வதில் திருப்தியடைந்து விடாமல், கடவுளோடு நாம் செய்துகொண்ட புதிய உடன்படிக்கைக்கேற்ப, இயேசுவைப் போன்று கடவுளுக்குக் கீழ்ந்ப்படிந்து பிறருக்காக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
துன்பத்தின் வழியாய் இன்பம்

அது ஒரு மலையடிவாரம். அங்கு அந்த ஊர் மக்கள் ஆண்டவனுக்கு ஓர் அழகான கோயிலைக் கட்டினார்கள். அந்தக் கோயிலுக்குள் வைக்க கடவுளின் சுரூபம் ஒன்று தேவைப்பட்டது. சுரூபம் செய்யும் பணியை ஒரு சிற்பியிடம் ஒப்படைத்தார்கள்.

அந்தச் சிற்பி சுரூபம் செய்யப் பொருத்தமான கல்லைத்தேடி அலைந்தான். அவனுடைய கண்களிலே அந்த மலையடிவாரத்தில் கிடந்த இரண்டு கற்கள் தென்பட்டன. முதல் கல்லிடம் தனது விருப்பத்தைச் சொல்லி, அதன் சம்மதத்தைக் கேட்டான். அந்தக் கல்லோ: என்னை நீ உளியால் உடைப்பாய். நீ அப்படிச் செய்யும்போது என் உருவமும் சிதைந்து போகும். எனக்கு வலியும் ஏற்படும். நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். நான் மடிய வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் நான் தயாராக இல்லை. நானிருக்கும் நிலையிலேயே சுகமாக வாழ விரும்புகின்றேன். என்னை விட்டுவிடு என்றது. ஆகவே அந்தக்கல்லின் மீது அந்தச் சிற்பி கைவைக்கவில்லை. பக்கத்தில் கிடந்த கல்லோ: என்னை நீ பயன்படுத்திக்கொள். எனக்காக நான் வாழவிரும்பவில்லை ! இந்த ஊர் மக்களுக்காக நான் வாழ ஆசைப்படுகின்றேன். என் மீது உன் உளி விழட்டும்! வலியால் என் உடல் அழலாம்; ஆனால் என் உயிர் அழாது என்றது. இப்படிச் சொன்ன கல்லிலிருந்து ஓர் அழகான கடவுளின் சுரூபம் உருவானது; அது கோயிலின் மையப் பகுதியில் வைக்கப்பட்டது.

அந்தக் கடவுளுக்கு காணிக்கை செலுத்த வந்தவர்கள் தேங்காய் உடைப்பதற்காக உளி விழ மறுத்த, சிற்பிக்கு ஒத்துழைப்பு தர விரும்பாத முதல் கல்லைப் பயன்படுத்திக்கொண்டார்கள்! ஒரு கல்லிலே கலை வண்ணம் பிறக்கவேண்டுமானால் அந்தக் கல் தன்னையே ஒரு வகையிலே அழித்துக்கொள்ள முன்வரவேண்டும். இந்த உண்மையைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியிலே, கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்; தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர்; இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர் (யோவா 12:24-25) என்ற வார்த்தைகளால் சுட்டிக்காட்டுகின்றார்.

இறப்பிற்குப் பிறகுதான் உயிர்ப்பு! துன்பத்திற்குப் பிறகுதான் இன்பம்! இரவுக்குப் பிறகுதான் பகல்!

இது இயற்கையின் சட்டம், இறைவனின் திட்டம். இயற்கையின் சட்டத்திற்கும், இறைவனின் திட்டத்திற்கும் எதிராகச் செயல்படுகின்றவர்களுக்குப் புதுவாழ்வு, நிலைவாழ்வு கிடைக்காது !

துன்பத்தின் வழியாகத்தான் இன்பம் என்ற இறைத்திட்டத்தை நிறைவேற்ற இயேசு கடைசி மூச்சுவரை துன்பப்பட, பாடுபடத் தயாராக இருந்தார் (எபி 5:8). இந்தத் தவக்காலத்தில் துன்பங்களை உதறித்தள்ளிய, துன்பங்களை விட்டு ஓடிய, துன்பங்களுக்காக இறைவனைத் தூற்றிய நேரங்களுக்காக மனம் வருந்துவோம். மனம் வருந்தும் நமது பாவங்களை மன்னிக்கவும், மறக்கவும் இறைவன் தயாராக இருக்கின்றார் (எரே 31:34).

மேலும் அறிவோம்:
துன்பத்திற்கு யாரே துணைஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணைஅல் வழி (குறள் : 1299).

பொருள்: ஒருவருக்குத் துன்பம் வரும்போது தம்முடைய நெஞ்சமே துணை புரியவில்லை என்றால், அவருக்கு வேறு யார் துணைபுரிவார்? எவரும் துணைபுரியார்!
 

 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
இமயமலையின் மீது ஏறிய இரு நண்பர்கள், கடுமையான குளிர்காற்று வீசியதால், மேற்கொண்டு மலைமேல் ஏற முடியாமல் தரையில் அமர்ந்தனர். அவ்வேளையில் சற்றுத் தூரத்திலிருந்து, "ஐயோ! நான் சாகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்" என்னும் அபயக் குரல் கேட்டது. இருவரில் ஒருவர் மட்டும் அபயக்குரல் எழுப்பியவருக்கு உதவி செய்யப் புறப்பட்டார்; மற்றவரோ அவருடன் செல்ல மறுத்து விட்டார். உதவி செய்யச் சென்றவர் அபயக் குரல் எழுப்பினவரின் உடலை நன்றாகத் தேய்த்து விட்டார். அதன் விளைவாக அவரது உடல் சூடேறியது: அவருக்குப் புத்துயிர் வந்தது. தன்னிடமிருந்த சூடான காப்பியையும் அவருக்குக் கொடுத்து, அவரைத் தன் தோள்மேல் சுமந்துகொண்டு மற்ற நண்பரிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இது கதையல்ல. நிஜம்! இந்நிகழ்வு நமக்கு விடுக்கும் செய்தி: "தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பியவர் அதை இழந்து விட்டார். பிறருக்காகத் தன் உயிரை இழக்க முன் வந்தவர் அதைக் காத்துக் கொண்டார் "

மன்னுயிரை மீட்பதற்காகச் சிலுவைச் சாவை ஏற்க முன் வந்த கிறிஸ்து. மண்ணக மாந்தர் வாழ்வு பெற கோதுமை மணியென மண்ணிலே புதைக்கப்பட்டுத் துன்பங்கள் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்று. தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவருக்கும் முடிவில்லா மீட்பின் காரணமான கிறிஸ்து (எபி 5:8-9), இன்றைய நற்செய்தியில் நமக்கு வழங்கும் செய்தி: "தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" (யோவா 12:25-28).

பிறருடைய துன்பத்தைத் தனது துன்பமாகக் கருதாவிட்டால் பகுத்தறிவினால் என்ன பயன்? என்று வினவுகிறார் வள்ளுவர்,
'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை! (குறள் 315).

மிருகத்திற்கும் மனிதருக்குமிடையே உள்ள வேறுபாட்டை பின்வருமாறு விளக்குகிறார் தத்துவமேதை சாக்கரட்டீஸ்: "ஒரு மாடு மற்றொரு மாட்டைப் பற்றி அக்கறை கொள் ளாது. ஆனால் ஒரு மனிதன் அடுத்த மனிதனைப் பற்றி அக்கறை கொள்வான் - அடுத்தவனைப் பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி."

பன்றியும் பசுவும் சந்தித்தன. பன்றி பசுவிடம், "உன்னை எல்லாரும் வீட்டில் வரவேற்கின்றனர். என்னையோ துரத்துகின்றனர் " என்றது. அதற்குப் பசு பன்றியிடம், "நான் உயிருடன் இருக்கும் போதே மக்களுக்குப் பால் தந்து பயன்படுகிறேன். நீயோ செத்த பிறகு தான் மக்களுக்குப் பயன்படுகிறாய்" என்றது.

உயிரோடு இருக்கும்போதே நாம் பிறர்க்குப் பயன்பட வேண்டும். செத்த பிறகு நாம் தேடி வைத்த செல்வம் யாருக்குப் போகும்? "அறிவிலியே, இன்றிரவே உன்னுயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்போது நீர் சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" (லூக் 12:20).
"உலகிற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது" (1திமொ: 6:8), எனவே, செல்வம் உள்ளவர்கள், "நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக, தங்களுக்கு உள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்து கொள்வார்களாக" (1திமொ 8:18).

"இவ்வுலகை அழிக்க முடியாது; ஏனெனில் இவ்வுலகை அழிக்கும் அளவுக்குப் பெரிய 'ரப்பரை' இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை" என்றாராம் ஒரு மாணவர், இவ்வுலகம் ஏன் இன்றும் அழியாமல் இருக்கிறது? *உண்டாலம்ம இவ்வுலகம்" என்ற கேள்வியைப் புறநானூற்றுப் பாடல் எழுப்பி, அக்கேள்விக்கு அப்பாடல் தரும் பதில்: "இவ்வுலகில் தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்கின்றவர்கள் ஒருசிலர் இன்றும் இருப்பதால்தான்." "தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மையானே' (புறம் 182)

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் புதியதோர் உடன்படிக்கையைச் செய்யப் போவதாக இறைவாக்கினர் எரேமியா வாயிலாக வாக்களிக்கின்றார் (எரே 31:31). இந்தப் புதிய உடன் படிக்கையானது கிறிஸ்துவின் இரத்தத்தில் நிறைவேறியது (லூக் 22:20). இப்புதிய உடன்படிக்கையின் தனி முத்திரை பிறரன்புக் கட்டளையாகும். கிறிஸ்து நம்மை அன்பு செய்தது போலவே தாமும் பிறரை அன்பு செய்ய வேண்டும் (யோவா 13:34). கிறிஸ்து தம்மவர்களை இறுதிவரை அன்பு செய்தார் (யோவா 13:1). அன்பின் உச்சக்கட்டம் உயிர்த்தியாகம் (யோவா 15:13),

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தனது நேரம்' (யோவா 12:27) என்று குறிப்பிடுவது அவர் சிலுவையில் மானிட மீட்பிற்காகத் தம் உயிரைக் கையளித்த நேரமாகும். நாமும் கிறிஸ்துவைப் பின்பற்றி எல்லாரையும் அன்பு செய்ய, இறுதிவரை அன்பு செய்ய, தேவையானால் பிறருக்காக நமது உயிரையும் கையளிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

நம்மால் நமது வீட்டுக்கும் நாட்டுக்கும் தினையளவாவது நன்மை கிடைக்குமென்றால், நாம் இறக்கும் நாளைத் துக்கநாளாக அல்ல. திருநாளாகக் கொண்டாட வேண்டும்,

எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தமையீன்ற தமிழ்நாடு நாக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்,
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும், -
-பாரதிதாசன்

பெரிய வியாழனன்று பசிப்பிணி ஒழிப்பிற்காகச் சிறப்புக் காணிக்கை எடுக்கப்படும், தவக்காலத்தில் தேவையற்றச் செலவினங்களைக் குறைத்துக் கொண்டு நாம் சேமிக்கும் பணத்தை அந்த நல்ல காரியத்திற்காகத் தாராளமாகக் கொடுக்க மனமுவந்து முன்வருவோமாக, தியாக உணர்வு இல்லாத வழிபாடு நாட்டுக்குச் சாபக் கேடாகும்
 

 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
உடன்படிக்கை ஆன்மீகம்

" கல்வாரி மருத்துவமனை " ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. சாதாரண நோயாளிகளையெல்லாம் அங்கே அனுமதிப்பதில்லை. ஆறு வார காலத்திற்குள் நிச்சயமாய் மரணமடையப் போகும் நோயாளிகள் மட்டுமே அதில் சேர்க்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் நுழையும் போது வாழ்வு முடியப் போகிறது என்ற துயரத்துடன் சேருபவர்கள் ஒரு சில நாட்களுக்குள் தங்கள் மரணத்தைப் பக்குவமான மனநிலையில் எதிர்நோக்கி இருப்பவர்களாகி விடுகின்றனர். இத்தகைய மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்பது வியப்பானது.

அம்மருத்துவமனையின் உள்சுவர்களில் ஆண்டவர் இயேசுவின் கல்வாரிப் பயணத்தைக் காட்டும் படங்கள் வெளிக் கோடுகளால் (Line drawing) வரையப்பட்டிருக்கின்றன. படத்தின் சித்திரங்கள் கோட்டுக்குள் காலியாக இருக்கின்றன. அப்படங்களுக்கு அடியில் " இயேசுவின் பாடுகளில் இன்னும் குறைவாய் இருப்பதை நிறைவு செய்" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆம், அந்த மருத்துவமனையில் சேருகின்றவர்கள் அப்படங்களைப் பார்க்கின்றனர். தங்கள் உடல் வேதனைகளையும் நெருங்கிக் கொண்டிருக்கும் மரணத்தையும் இன்முகத்துடன் ஏற்று இயேசுவின் பாடுகளோடு ஒப்புக் கொடுத்து இயேசுவின் பாடுகளை நிறைவு செய்கின்றனர்.

இவ்வாறுதான் மரணத்தின் வாயிலில் நிற்பவனை மகிழ வைத்து சொல்லொண்ணா வேதனையுறுபவனைச் சிரிக்க வைத்து அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொள்கிறார்.

திருவிவிலியம் முழுவதுமே இரு உடன்படிக்கைகளின் வரலாறாகும். ) பழைய உடன்படிக்கை - மோசே வழியாக, 2) புதிய உடன்படிக்கை - இயேசு வழியாக.

1. அனைவரையும் ஈர்க்க ஓர் உடன்படிக்கை. (முதல்வாசகம் எரே 31:31).
அது சீனாய் மலையில் செய்ததுபோல கற்பலகைகளில் அல்ல, மனிதனின் இதயப் பலகையில் எழுதப்படும். அதன் முக்கிய சிறப்பு இனி இறைவாக்கினர் வழியாக அல்ல இறைவனே முன் வந்து போதிப்பார். இன்னொரு சிறப்பு மக்கள் கடவுளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். " நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்" . நெருக்கமான நேரடி உறவு!

2. அனைவரையும் ஈர்க்க ஒரு சிலுவைப்பலி
பழைய உடன்படிக்கை விலங்குகளின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டது. (வி.ப.24:3-8). புதிய உடன்படிக்கையோ பாவ மன்னிப்புக்காக இயேசுவின் இரத்தத்தில் நிலைப்படுத்தப்படுவது (லூக்.22:20, 1 கொரி.11:25), புதிய இஸ்ரயேலைப் பிறப்பிக்கும் புதிய உடன்படிக்கை இயேசுவின் இறப்பும் உயிர்ப்புமே!
"என் இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் என் நாட்டுக்காகச் சிந்துவேன்" என்று சொன்ன ஓரிரு நாட்களில் இந்திரா காந்தி கொடுமையாகக் கொல்லப்பட்டார். தன் சாவை நினைத்துத்தான் இந்த வார்த்தைகளைச் சொன்னாரா? சந்தேகம்தான். ஆனால் இயேசு " நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் சர்த்துக் கொள்வேன்" (யோ.12:32) என்றார். அடுத்துவரும் வசனத்திலேயே தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார் என்பார் யோவான்.

இயேசு மாட்சிபெறும் நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் விந்தையானது. அந்த நேரத்தில் எல்லாமே எதிர்மாறான முரண்பாடாகவே பொருள்படும். இறப்பு என்பது வாழ்வாகும். இழப்பு என்பது ஆதாயமாகும். ஒன்றின் இறப்பு என்பது இன்னொன்றின் பிறப்பு என்பது இயற்கை நியதி. மலரின் மரணம் கனியின் பிறப்பு. " கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" .

மரணத்தின் வழியாக மாட்சி பெறும் அந்த நேரத்தைச் சந்திப்பது இயேசுவுக்கு எளிதாகப்படவில்லை. யோவானின் பார்வையில் இது கெத்சமெனிப் போராட்டம். " இப்பொழுது என் உள்ளம் கலக்க முற்றுள்ளது" (யோ.12:27). தான் மடிந்தால்தான் மனித இனம் வாழ்வு பெறும் என்ற உணர்வில் இறைத் திருவுளத்திற்குத் தன்னையே கையளிக்கிறார்.

கிறிஸ்துவின் மீட்பை உலகம் தனதாக்கிக் கொள்ள வேண்டும். அங்கு அநீதி ஒழிந்து நீதி நிலவ வேண்டும். பாவம் மறைந்து அன்பு அரியனை ஏறவேண்டும். துக்கம் நீங்கி மகிழ்ச்சி பொங்க வேண்டும். பகைமை வற்றிப் பாசம் துளிர்க்க வேண்டும். அடிமைத்தனம் அகன்று விடுதலை மலர வேண்டும். இதற்கு விதையாக நாம் மண்ணில் விழுந்து மடிய வேண்டும். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து இறப்பதுதான் கிறிஸ்தவம். இதுவே புதிய உடன்படிக்கையின் சாரம்.

அந்தியோக்கு நகரின் ஆயரான தூய இஞ்ஞாசியார் கி.பி.108இல் காட்டு விலங்குகளுக்கு இரையாகி இயேசுவின் இரத்த சாட்சியான கதை நாம் அறிந்ததே. ஒருவேளை ரோமையில் இருந்த சில கிறிஸ்தவர்களின் செல்வாக்கால் தான் விடுதலை பெற்று இயேசுவுக்காக உயிர்ப்பலியாகும் பொன்னான வாய்ப்பை இழக்க நேருமோ என்று அஞ்சி ஆதிக் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதம் புகழ் பெற்றது: "காட்டு விலங்குகளுக்கு இரையாகும்படி என்னை விட்டுவிடுங்கள். என் இறைவனைச் சென்றடைய எனக்குள்ள வழி அது ஒன்றே. இறைவனுக்குரிய கோதுமை மணி நான். காட்டு விலங்குகளின் பற்களால் நன்றாக அரைக்கப்பட்டு நான் கிறிஸ்துவுக்கு எற்ற தூய அப்பமாக (பலிப் பொருளாக) மாற வேண்டும். இக்காட்டு விலங்குகளே எனக்குக் கல்லறையாகுமாறு அவற்றைத் தூண்டிவிடுங்கள்', இத்தகையோரது இரத்தத்தில் செழித்ததே தொடக்க காலத் திருச்சபை.
நமது மன அரியணையில் சுயம் அமர்ந்திருந்தால் இயேசு சிலுவையில் தொங்குவார். இயேசு நம் மன அரியணையில் அமர வேண்டுமா? சுயம் சிலுவையில் தொங்க வேண்டும்!
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
புதையுண்ட மணி பன்மடங்கு மணிகள்

இயற்கையில் இடம்பெறும் நான்கு பருவக்காலங்களில், வசந்த காலத்திற்குத் தனியொரு மந்திரசக்தி உண்டு. குளிர்காலத்தில், பனியில் புதைந்து, இறந்துபோனதுபோல் தோன்றும் தாவர உயிர்கள், வசந்தம் வந்ததும், மீண்டும் உயிர் பெற்று எழுவது, இயற்கை நமக்குச் சொல்லித்தரும் நம்பிக்கை பாடம். நம் தனிப்பட்ட வாழ்விலும், சமுதாயத்திலும் அனைத்தும் அழிந்துவிட்டதைப்போல் தோன்றினாலும், அங்கும் நம்பிக்கையின் தளிர்கள் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நம்பிக்கைப் பாடத்தைப் பயில, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் வசந்தகாலம் வரும். இவ்வாண்டு, மார்ச் 19, வருகிற செவ்வாய், புனித யோசேப்பு திருநாள், வசந்தகாலத்தின் முதல் நாள் என்ற அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது. பனியில் புதைந்திருக்கும் தாவர உலகில், வசந்தகாலம், வண்ணமயமான பல மாற்றங்களைக் கொணரும். இயற்கையில் மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலமும், நம் வாழ்வில் நன்மைதரும் மாற்றங்களைக் கொணரும் தவக்காலமும், மார்ச் மாதத்தில் இணைந்துவருவது, இறைவன் வழங்கும் கொடை.

தவக்காலத்திற்கும், வசந்தக்காலத்திற்கும் இடையே உள்ள நெருங்கியத் தொடர்பை, நாம் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று சிந்தித்தோம். தவக்காலத்தின் 5ம் ஞாயிறான இன்று, வசந்தக்காலத்தைப்பற்றி, மீண்டும் ஒருமுறை சிந்திக்க வந்திருக்கிறோம். தாவர உலகம் இறந்து, புதைந்து, மீண்டும் உயிர்பெற்றெழும் வசந்த காலத்தை நினைவுறுத்தும் வகையில், அழகான ஒரு கூற்றை, இறைமகன் இயேசு, இந்த ஞாயிறு நற்செய்தியில் நமக்கு வழங்குகிறார். " கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." (யோவான் 12:24) சவால்கள் நிறைந்த இந்தக் கூற்று, தியாகத்தை வலியுறுத்தும் ஒரு மேற்கோளாகப் பயன்படுத்துப்படுவதை நாம் அறிவோம். இயேசு எத்தகையச் சூழலில் இதைக் கூறினார் என்பதை புரிந்துகொள்வது பயனளிக்கும்.

வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் ... பிலிப்பிடம் வந்து, " ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று கேட்டுக்கொண்டார்கள். (யோவான் 12: 20-21) என்ற சொற்கள் வழியே, நற்செய்தியாளர் யோவான் இச்சூழலை பதிவு செய்துள்ளார்.
ஆர்வமாக, ஆவலுடன், தன்னைக் காண வந்த கிரேக்க நாட்டவரை, இயேசு வரவேற்று, அவர்களுக்கு நம்பிக்கை தரும் நாலு வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறும் வார்த்தைகள், கலக்கத்தை, அச்சத்தை உருவாக்கும் வார்த்தைகளாக ஒலிக்கின்றன. எருசலேமுக்கு கிரேக்கர்கள் ஏன் வந்தார்கள்? அவர்கள் ஏன் இயேசுவை காண விழைந்தார்கள்? அவர்களிடம் இயேசு ஏன் இப்படி ஒரு பதிலைத் தந்தார்? என்ற கேள்விகளுக்கு நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முனாச்சி என்ற அருள்பணியாளர், (Fr Munachi E. Ezeogu) தன் மறையுரையில் தரும் விளக்கம், புதிதாகவும், புதிராகவும் உள்ளது. அதேவேளையில், ஒரு சில தெளிவான பாடங்களையும் சொல்லித்தருகிறது.

அருள்பணி முனாச்சி அவர்கள் கூறுவது இதுதான்: கிரேக்கர்கள் உரோமையர்களைவிட கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற மேதை சாக்ரடீசை தாங்கள் கொன்றது பெரும் தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சாக்ரடீசின் கொலைக்குப் பின், எந்த ஒரு தனி மனிதரையும், அவர் பின்பற்றும் கொள்கைகளுக்காகவோ, அவர் மக்களிடையே பரப்பிவரும் கருத்துக்களுக்காகவோ கொல்வதில்லை என்று உறுதியான தீர்மானம் எடுத்தவர்கள் கிரேக்கர்கள். எனவே, அவர்கள் மத்தியில் பல்வேறு சிந்தனையாளர்கள் சுதந்திரமாக வாழமுடிந்தது, பேசமுடிந்தது. தங்கள் நாட்டின் அறிஞர்கள் வழங்கிய சிந்தனைகள் போதாதென்று, பல கிரேக்கர்கள், அண்டை நாடுகளுக்கும் சென்று, அங்குள்ள சிந்தனையாளர்களைச் சந்தித்து, தங்கள் அறிவைப் பெருக்கிக்கொண்டனர். தங்கள் சுதந்திரச் சிந்தனையை வளர்த்துக்கொள்ள விரும்பிய கிரேக்கர்களில் ஒரு சிலர், இயேசுவைத் தேடி, எருசலேம் நகருக்கு வந்தனர்.

எருசலேமில் அவர்கள் இயேசுவைத் தேடியபோது, ஒரு கசப்பான உண்மையை முதலில் கண்டுபிடித்தனர். இயேசு என்ற அந்த இளையவருக்கு எதிராக அந்நகரில் உருவாகியிருந்த எதிர்ப்பும், வெறுப்பும், கிரேக்கர்களை அதிர்ச்சியடையச் செய்தன. எனவே, அவர்கள் இயேசுவைச் சந்தித்ததும், தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளை அவருக்கு எடுத்துச்சொல்லி, சிந்தனைச் சுதந்திரம் உள்ள கிரேக்க நாட்டுக்கு தங்களுடன் வரும்படி அவரை அழைத்திருக்க வேண்டும். அவர்கள் தந்த அழைப்பை ஏற்க மறுத்த இயேசு, " தன்னுடைய நேரம் வந்துவிட்டது" என்று பேச ஆரம்பிக்கிறார்.

ஊருக்குப் புதிதாய் வந்த வேற்று நாட்டினரே இயேசுவுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்திருந்தார்கள் என்றால், இயேசுவுக்கு அது தெரியாமலா இருந்திருக்கும்? கட்டாயம் இயேசு இதை உணர்ந்திருப்பார். அந்த ஆபத்திலிருந்து தப்பித்துப் போகாமல், அதை நேருக்கு நேர் சந்திக்க அவர் முடிவெடுத்தார். அந்த கசப்பான முடிவை, இன்றைய நற்செய்தியில், பல விதங்களில் கூறியுள்ளார் இயேசு.

இயேசு சொன்ன முதல் வாக்கியம்: மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. (யோவான் 12:23) யோவான் நற்செய்தியில் "நேரம் வரவில்லை" என்ற வார்த்தைகள் மும்முறை சொல்லப்பட்டுள்ளன. கானாவில் நடந்த திருமணத்தின்போது மரியா அவரிடம் 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்று சொன்னதும், இயேசு அவரிடம், " அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" (யோவான் 2:3-4) என்று முதல் முறையாகச் சொல்கிறார். மீண்டும் யோவான் நற்செய்தியில் இரு இடங்களில் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை (யோவான் 7:30) அவரைப் பிடிக்கவில்லை (யோவான் 8:20) என்று வாசிக்கிறோம். தன் நேரம் இன்னும் வரவில்லை என்று அதுவரை உணர்ந்திருந்த இயேசு, இன்று, தன் " நேரம் வந்துவிட்டது" என்று சொல்கிறார். எதற்கான நேரம் இது? மானிட மகன் மாட்சி பெறும் நேரம்... மாட்சி பெறும் நேரம் என்றால், அதைத் தொடர்ந்து, அரியணை, மணிமகுடம், அரசாட்சி என்ற தோரணையில் இயேசு பேசியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறியவை, மேலும் புதிராக உள்ளன. அவர் தொடர்ந்து கூறிய வார்த்தைகள், காலம் காலமாக, பலருடைய உள்ளங்களில், குறிப்பாக, மறைசாட்சிகளின் உள்ளங்களில், உறுதியை, வீரத்தை விதைத்துள்ள வார்த்தைகள்: " கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." (யோவான் 12: 24)

கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு, முக்கியமான இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, அது, மாவாக அரைபட்டு, உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்கவேண்டும். அல்லது, அது, விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்கவேண்டும். இந்த இரண்டு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி, தன் சுய உருவை, உயிரை இழக்கவேண்டும்.
கோதுமை மணி, மாவாக அரைபட்டு, அப்பமாக மாறுவதை, மறைசாட்சியாக உயிர் துறந்த அந்தியோக்கு நகரின் புனித இஞ்ஞாசியார் அழகாகக் கூறியுள்ளார். தான் சிங்கங்களுக்கு உணவாகப் போகிறோம் என்பதை உணர்ந்த அவர் சொன்ன வார்த்தைகள் இவை: "இறைவனின் கோதுமை மணி நான். சிங்கத்தின் பற்களால் அரைக்கப்பட்டு, கிறிஸ்துவின் தூய்மையான அப்பமாக மாறுவதற்காக படைக்கப்பட்ட கோதுமை மணி நான்." (I am God's wheat, ground fine by the lion's teeth to be made purest bread for Christ.)

புனித இஞ்ஞாசியாரைப் போல, பல்லாயிரம் மறைசாட்சிகள், மரணம் வரை உறுதியாக நிலைத்திருக்க, கோதுமை மணியைக்குறித்து இயேசு கூறிய இந்த இறை வாக்கியம் தூண்டுதலாக இருந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்த வீர உள்ளங்களின் வரலாற்றில், நம் நினைவில் இறுதியாகப் பதிந்திருப்பவர், இரஷ்ய நாட்டின், அலெக்ஸெய் நவால்னி (Alexei Navalny) அவர்கள். 1999ம் ஆண்டுமுதல் இரஷ்ய நாட்டின் பிரதமராகவும், அரசுத்தலைவராகவும் தன்னையே நிலைநாட்டிவரும் விளாடிமிர் புடின் என்ற ஆணவம் நிறைந்த அரக்கனை எதிர்த்து குரல் கொடுத்துவந்தவர் நவால்னி அவர்கள். அவரைக் கொல்ல புடின் மேற்கொண்ட பல முயற்சிகளை வென்று போராடி வந்த நவால்னி அவர்கள், இறுதியில், இரஷ்யாவின் ஆர்க்டிக் பனிப்பகுதியில் உள்ள சிறையில், இவ்வாண்டு பிப்ரவரி 16ம் தேதி கொல்லப்பட்டார்.

நவால்னி அவர்களை இன்று, மார்ச் 17, ஞாயிறன்று நாம் நினைவுகூர ஒரு முக்கிய காரணம் உண்டு. இரஷ்ய நாட்டின் அரசுத்தலைவராக தற்போது வன்முறை ஆட்சி செய்துவரும் விளாடிமிர் புடின், 5வது முறையாக அரசுத்தலைவராகப் பொறுப்பேற்பதற்கு, மார்ச் 17, இஞ்ஞாயிறன்று, அந்நாட்டில், போலியான ஒரு தேர்தல் நாடகத்தை நடத்துகிறான். இவ்வேளையில், நவால்னி அவர்களின் ஆதரவாளர்கள் வாக்களிக்கும் இடங்களுக்கு இந்த ஞாயிறு மதியம் வந்து கூடுமாறு, நவால்னி அவர்களின் மனைவி, ஹூலியா நவால்னயா (Yulia Navalnaya) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கொல்லப்பட்ட தன் கணவரின் அடக்க நிகழ்வு மார்ச் 1ம் தேதி நடைபெற்றபோது, இரஷ்ய அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், ஆயிரக்கணக்காக மக்கள் மாஸ்கோவில் கூடியிருந்ததை நவால்னயா அவர்கள் பாராட்டினார். அதே துணிவோடு, மார்ச் 17, ஞாயிறன்று நடுப்பகல் நேரத்தில், நவால்னி அவர்களின் ஆதரவாளர்கள் நாடெங்கிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் கூடிவரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் புடினுக்கு எதிராக வாக்களிக்கலாம், அல்லது, வாக்குச் சீட்டுகளில், நவால்னி என்ற பெயரை எழுதி, வாக்கை செல்லாததாக மாற்றலாம், அல்லது, வாக்களிக்காமல் மீண்டும் இல்லம் திரும்பலாம். ஆனால், மதிய நேரத்தில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, நாடெங்கிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் கூடிவரவேண்டும் என்று, நவால்னயா அவர்கள் கூறியுள்ளார்.

அவ்வாறு கூடிவந்தால், தங்களைப் போல் பல்லாயிரம் பேர் புடின் ஆட்சியை எதிர்க்கின்றனர் என்பதையாவது ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள முடியும். நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்று எண்ணி, வாக்களிப்பதை புறக்கணித்து, வீட்டில் முடங்கியிருப்பதைக் காட்டிலும், வீட்டைவிட்டு வெளியேறி, வாக்குச் சாவடிகளில் நடுப்பகல் நேரத்தில் கூடிவருவதால், இந்த நாட்டில் மாற்றத்தை விரும்பும் மக்களின் சக்தியை நாம் உணரமுடியும் என்று ஹூலியா நவால்னயா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

விளாடிமிர் புடினின் அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுத்த அலெக்ஸெய் நவால்னி என்ற ஒரு கோதுமை மணி கொலையுண்டு, புதைக்கப்பட்டதால், மார்ச் 17, பல்லாயிரம் இரஷ்ய மக்கள் இணைந்து வர வாய்ப்புள்ளது. தற்போது நடைபெற்றுவரும் சர்வாதிகார ஆட்சியை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை உருவாக வாய்ப்புள்ளது. இதைத்தான் இயேசு: " கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார்.
இரஷ்யாவில் நல்லாட்சியை அமைக்க விரும்பும் மக்கள், மார்ச் 17, இஞ்ஞாயிறன்று, வாக்குச் சாவடிகளில் கூடிவந்து, புதைக்கப்பட்ட நவால்னி என்ற கோதுமை மணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்று நம்புவோம், அதற்காக மன்றாடுவோம்.

அதேபோல், இந்தியாவில் நடைபெறவிருக்கும் தேர்தலில், நல்ல பல மாற்றங்கள் நிகழவேண்டும் என்று நம்பிக்கையுடன் செபிப்போம். இரஷ்யாவில் இந்த ஞாயிறு நடைபெறும் நிகழ்வுகள், நாம் தேர்தலன்று மேற்கொள்ளவேண்டிய முயற்சிகளுக்கு ஒரு முன்னோடியாக, தூண்டுதலாக அமையவேண்டும். கடந்த பத்தாண்டுகளாக, நமது பாராளுமன்றத்தில் வேரூன்றியிருக்கும் களைகளை அகற்றிவிட்டு, நல்ல கோதுமை மணிகளை தேர்ந்தெடுத்து விதைக்கவும், அவற்றின் பலன்களை அனுபவிக்கவும் இறைவன் நமக்கு தெளிவையும், மன உறுதியையும் தருவாராக!
 
 
 
 ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
அருட்பணி மேரி ஜான் R . புனித அலோசியஸ் குரு மடம் கோட்டாறு