தமிழ் திருப்பயணிகள் ஆன்மீகப்
பணி மையம் உங்களை
வரவேற்கின்றது
மரியன்னை உங்களை அழைக்கிறாள்.........
இறை சித்தத்தை செயல்படுத்தும் மாபெரும் சக்தி மரியன்னை. அவள் மக்களின்
அன்னை. அன்னையிடம் வரம் கேட்க அல்ல, அன்னையையே வரமாகக் கேட்க,
லூர்து நகர் திருத்தலம் செல்வோம். குடும்பமாய்க் கூடி ஜெபமாலை
சொல்வோம். தூய ஆவியின் வரங்களும், அன்னை மரியின் பரிந்துரையும்
கிடைத்திட திருப்பலியில் விசேடமாக
தொடர்ந்து அனைவருக்காகவும் லூர்து அன்னை
மூலமாக ஜெபிக்கிறோம்.
தினம்
ஒரு நல்வார்த்தை..
ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது
போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை. ஞானம் - கதிரவனை
விட அழகானது; விண்மீன் கூட்டத்தினும் சிறந்தது; ஒளியைக்
காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால்,
ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.
" நீங்கள் தவஞ்செய்யாவிடில் எல்லோரும்.. எல்லோரும்
கெட்டுப்போவீர்கள் " என்கிறார் நம் ஆண்டவர்..
(லூக்.13:3)
தலை வெள்ளி அன்று ஒருசந்தி சுத்த போஜனம் அனுசரிப்போம்.
ஆண்டவர் இயேசு நம்மிடம் கேட்ட விசயங்களே தலை வெள்ளி,
முதல் சனி பக்தி முயற்சிகள். நம் இயேசு தெய்வத்தின்
இருதயமும், மாதாவின் மாசிற்ற இருதயமும் நாம் செய்யும்,
இந்த உலகத்தினர் செய்யும், கடவுள் நம்பிக்கையற்றவர்
செய்யும் பாவ துரோகங்கள் மற்றும் நிந்தைகளால் மிகவும்
நொந்துபோய் இருக்கின்றன. அவர்கள் இருதயங்களுக்கு நாம்
தரும் ஆறுதலே இந்த தலைவெள்ளி, முதல் சனி பக்தி
முயற்சிகள்.
" நீயாவது எனக்கு ஆறுதல் தர மாட்டாயா " என்று புனித
மார்கரெட் மரியம்மாளிடம் நம் இயேசு தெய்வம் கேட்டார்.
அதே போல் பாத்திமா சிறுமி லூசியாவிடம் நம் தேவ மாதா,
தன் குமாரன் இயேசுவின் பனிரெண்டு வயது தோற்றத்துடன்
தோன்றி " நீயாவது எங்களுக்கு ஆறுதல் தர மாட்டாயா "
என்று கேட்டார்கள்.
தலை வெள்ளி :
17- ஆம் நூற்றாண்டில் அதாவது 1675-ம் ஆண்டு திவ்ய
நற்கருணைத் திருநாளுக்கு அடுத்த வார
வெள்ளிக்கிழமையன்று தேவ நற்கருணைக்கு முன், ஜெபத்தில்
ஆழ்ந்திருந்த அர்ச்.மார்கரீத் மரியம்மாளுக்கு
நமதாண்டவர் தமது திருஇருதயத்தை திறந்து காட்டினார்.
அக்கினி சுவாலையின் மத்தியில் தோன்றிய அவ்விருதயத்தைச்
சுற்றி முள்முடியும் அதன் மேல் சிலுவையும் காணப்பட்டன.
சேசு அவளிடம், " இதோ மனுமக்களை அளவற்றவிதமாய்
நேசிக்கும் இருதயத்தைப்பார்! தனக்கென ஒன்றும் வைக்காது
தன்னையே வெறுமையாக்கிய இருதயம் தன் அன்பை வெளிப்படுத்த
உயிரையே அர்ப்பணித்த இருதயம். அதற்கு கைமாறாக
கிடைப்பது என்ன/ பெரும்பாலும் நன்றிகெட்டதனமும் நிந்தை
அவமானமும் தேவதுரோகமுமே.. எனக்கென தங்களை நேர்ந்து
கொண்டவர்களே இவ்வாறு துன்பம் தருகின்றனர் என்பதே என்
இருதயத்திற்கு மிகுதியான வேதனை தருகிறது. இந்த
நன்றிகெட்டதனத்திற்கு நீயாவது பரீகாரம்
செய்யமாட்டாயா?"
என்று இரக்கத்தோடு கேட்டார்..
நம் அன்பு தெய்வத்திற்கு நம் பதில் என்ன?
முதல் வெள்ளி அன்று ஒருசந்தி, சுத்தபோஜனம், சில
ஒறுத்தல் முயற்சிகள் தவிர நம் தெய்வத்தின்
திருப்பாடுகளை அதிகமாக தியானிக்க வேண்டும். திவ்ய
திருப்பலியில் பங்கேற்று 'பரிகார நன்மை' வாங்குவோம்..
ஏன் பரிகார நன்மை?
திவ்ய நற்கருணை ஆண்டவருக்கு எதிராக செய்யப்படும்
நிந்தை, துரோகம், அலட்சியம் மற்றும் அவசங்கைகளுக்கு
நாம் பரிகாரம் செய்து அவர்களுக்கெல்லாம் பதிலாக நாம்
கடவுளை நேசித்து, விசுவசித்து நம்பிக்கையோடு அவரை
தகுதியான உள்ளத்தோடு (முடிந்த அளவு நல்ல
பாவசங்கீர்த்தனம் செய்து) அவரைப் பெற்று அவரிடம்
பேசுவதே பரிகார நன்மை எனப்படும்..
மேலும் துக்க தேவரகசியங்கள் ஜெபமாலையில் தியானிக்க
வேண்டும். முடிந்தவர்கள் சிலுவைப்பாதை செய்ய வேண்டும்.
திருஇருதய ஜெபமாலை அல்லது இரக்கத்தின் ஜெபமாலை
ஜெபித்தல் போன்ற பக்தி முயற்சிகளையும் செய்யலாம்..
மேலும் இன்றைய தினம் நாம் சுமக்கும் அத்தனை
சிலுவைகளையும் நம் இயேசு தெய்வத்தின் திருஇருதய நிந்தை
அவமானங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுப்போம்...
முதல் சனி : அன்று குறிப்பாக நமதன்னையின் வியாகுலங்களை
தியானிக்க வேண்டும். அன்று சந்தோச, துக்க, ஒளி, மகிமை
தேவ இரகசியங்களில் மாதா சம்பந்தபட்ட நிகழ்வுகளில்
ஏதேனும் ஒன்றை மாதாவோடு தியானித்து ஜெபமாலை ஜெபித்து
மாதாவோடு தங்கியிருத்தல் வேண்டும்..அன்று வியாகுல
ஜெபமாலையும் ஜெபிக்கலாம்..
முக்கியமாக நம் இயேசு தெய்வத்தின் திருப்பாடுகளின்
போது நம் அன்புத்தாய் உள்ளத்தால் அனுபவித்த
பாடுகளையும், அவர்களின் பரிசுத்த வியாகுலங்களையும்
தியானிப்போம்.
இன்று வீட்டிலும், நாட்டிலும் நடக்கும் பிரச்சனைகளுக்கு
காரணம் குடும்ப ஜெபமாலை இப்போது இல்லாமல் போனதுதான்.
கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இவ்வளவு பெரிய அழிவுகள், அதுவும்
நாம் கேள்வியே பட்டிராத அழிவுகள் நடப்பது இப்போதுதான்.
கத்தொலிக்கத்திலிருந்து பிரிந்து 100 சபைகளுக்கும்
மேல் வந்ததிற்கும் காரணம் குடும்ப ஜெபமாலை நின்றதுதான்.
முன்பெல்லாம் நம் கத்தொலிக்க குடும்பங்கள் இரவு ஜெபமாலை
சொல்லாமல் தூங்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள்
எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஜெபமாலை சொல்வார்கள். பல வீடுகளில்
நற்செய்தி வாசித்து ஜெபமாலை ஜெபிப்பார்கள். இந்த ஜெபமாலை
கத்தொலிக்க குடும்பங்களை மட்டுமல்ல உலகையே
காப்பாற்றிக்கொண்டிருந்தது.
ஏனென்றால் ஜெபமாலை தனிப்பட்ட ஒருவருக்காக ஜெபிக்கப்படுவதில்லை.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே "பாவிகளாய்
இருக்கிற எங்களுக்காக "எங்களை சோதனையில் விழவிடாதேயும்"
என்று நாம் ஜெபிக்கும் போது உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்காகவும்
ஜெபிக்கிறோம். "
ஏன் குடும்ப ஜெபமாலை நின்று போனது? வீட்டிற்குள்
நுழைந்த டி.வி என்ற சாத்தான்தான் அதிலும் தனியார் சானல்கள்
வந்த பின்புதான் இத்தகையை இழிவான நிலையை நாம் சந்தித்துள்ளோம்.
அருட்தந்தை லீனஸ்
அ.ம.தி அவர்களோடு இணைந்து நாங்களும் செபிப்போம். செபம்
என்பது எம்மை இறைவனின் கரங்களில் கொடுத்து, அவரது
சித்தம் எம்வாழ்வில் நடைபெறவேண்டுமென்று மன்றாடுவோம்.
உமது சித்தம் பூவிலகில் செய்யப்படுவதாக!
பிரான்ஸ் லூர்து திருத்தலத்தில்
தமிழ் மொழிக்கு பொறுப்பாய் பணி செய்து கொண்டிருக்கும்
அருட்தந்தை லீனஸ் அவர்கள் உலக மக்களுக்கு சொல்லும்
செய்தி.
நாமனைவரும் அருட்தந்தை லீனஸ்
அவர்களோடு இணைந்து, கொரோணா வைரஸினால் பாதிக்கப்பட்ட
அணைத்து மக்களையும் இறைவன் தொட்டு குணப்படுத்த
வேண்டும் என மன்றாடும் இந்த செபத்தில் பங்கு
பற்றுவோம்.