ஏட்டுச் சுருள் ஒன்று ஆண்டின் பொதுக் காலம் 3 ஆம்
ஞாயிறு திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கின்றது!
அது ஏட்டில் எழுதப்பட்ட வார்த்தைகளை வீட்டில் வாசிக்கச் சொல்லி நம்மைக்
கேட்டுக்கொள்கிறது. ஏட்டில் இடம்பெற்றுள்ள இறை வார்த்தைகளோ எல்லாச்
சூழலிலும் இதயச் சுவரில் விளம்பரம் செய்ய அனுமதி கேட்கின்றன!
மறைநூல் வாக்கு நிறைவேற மானிடமகன், எசாயா எழுதிய ஏட்டுச் சுருளை
வாசித்தார். நம் வாழ்வின் நோக்கு நிறைவேற நாமும் இறைவாக்கை வாசிக்க
வேண்டும் என மானிட மகன் ஆசிக்கிறார்.
உண்மையை உரைக்கும் வார்த்தை
வறுமையை விரட்டும் வார்த்தை
செல்வத்தை சேர்க்கும் வார்த்தை
மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் வார்த்தை,
ஆறுதலை அளிக்கும் வார்த்தை
அன்பை பொழியும் வார்த்தை
துயரைத் துடைக்கும் வார்த்தை
நீதியை உருவாக்கும் வார்த்தை
நம்பிக்கையை வளர்க்கும் வார்த்தை
கவலைகளை தீர்க்கும் வார்த்தை
கஷ்டத்தை போக்கும் வார்த்தை
மனம் விரும்புவதை எல்லாம் கொடுக்கும் வார்த்தை
இப்படியான ஆசி மிக்க வார்த்தைகள் நிறைந்த மறை நூலை வாசிப்பது இறைவனோடு
உள்ள நம் தொடர்பை இன்னும் ஆழப்படுத்த ஓருவழி. கறைபடியாத மறை நூல்
வார்த்தைகளை முறையாக படிப்பதால், நாம் இறைவனோடு இன்னும் நெருங்கி
வாழலாம். நற்செய்தி நூலை வாசிக்கும் போதெல்லாம் வாழ்வுக்குத்
தேவையான வலுப்பெறுகிறோம்.
ஆம் இறைவார்த்தை
நம் கண்களுக்கு ஒளி
நம் கால்களுக்கு பாதை
நம் உடலுக்கு உயிர்
நம் உள்ளத்துக்கு ஊக்கம்..
நம் பேச்சுக்கு சொல்
நம் சுவாசத்துக்கு மூச்சு
நம் உணர்வுக்கு வேகத்தடை
இத்தகைய வார்த்தைகளை வாசிப்போம். இறை வார்த்தை வாசிக்கப்படும்
போதெல்லாம் காது கொடுத்து கேட்போம்! அந்த வார்த்தையை
வாழ்வாக்குவோம்!!!! இப்போது திருப்பலியில் வாசிக்கப்படும் இறைவார்த்தை
இதயச் சுவரில் தடம் பதிய இடம் கொடுப்போம்
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. வாழ்வு தரும் வார்த்தையான இறைவா!
திருச்சபையின் பணியாளர்கள் உமது வார்த்தையால் மக்களை
உருவாக்க வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதி நிறைந்த வார்த்தையை எமக்கு அளித்த இறைவா!
நாடுகளின் தலைவர்களை நீதியின் வார்த்தையால் போர்த்தி
வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள் தரும் வார்த்தையால் எமை நிரப்பும் இறைவா!
எமது ஆன்மீமத் தந்தையை உமதருள் நிறைந்த வார்த்தையால்
தாங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிக்கும் ஆவியை அனுப்பும் இறைவா!
எங்கள் அன்றாட வாழ்க்கையில் சங்கடமான, கண்ணீரான
வார்த்தைகளால் தொய்வு ஏற்படும் போதெல்லாம் வாழ்வளிக்கும்
வார்த்தையை அனுப்பி எங்களை பராமரிக்க வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
5. நம்பிக்கைமிகு வார்த்தைகளால் எங்களை வளர்த்தெடுக்கும்
இறைவா!
நாங்கள் அந்நிய தேசத்தில் இருக்கிறோம். எங்களோடு
பேசுவார் யாருமில்லை எங்களைத் தேற்றும் சொற்கள்
சொல்வாரைத் தேடித் திரிகிறோம் போலியான வார்த்தைகளை
பேசி எங்களை ஏமாற்றிய மனிதர்களுக்கு மத்தியில் உமது நம்பிக்கை
வார்த்தைகளைக் கண்டுணர்ந்து அதன் பாதையில் வளர அருள்
தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
கடவுள் நம்பிக்கையில்லாத ஒரு மனிதர் பலவகையான புத்தகங்களை அடுக்கிக்
கொண்டிருந்தார். அப்போது கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு மனிதர்
விவிலியநூலை எடுத்து எல்லாப் புத்தகங்களுக்கும் மேலான புத்தகம்
நற்செய்தி புத்தகம் என்று சொல்லி அடுக்கியிருந்த எல்லாப் புத்தகங்களுக்கும்
மேலே வைத்தார். அப்போது கடவுள் நம்பிக்கையில்லாத மனிதர் நற்செய்தி
நூலை எடுத்து எல்லாப் புத்தகங்களுக்கும் அடியில் வைத்தர். அப்போது
கடவுள் நம்பிக்கையுள்ள மனிதர் எல்லாப் புத்தகங்களுக்கும் ஆணிவேர்
இந்த நற்செய்தி புத்தகம்" என்று சொன்னார். கடவுள் நம்பிக்கையில்லாத
அந்த மனிதர் திரும்பவும் நற்செய்தி புத்தகத்தை எடுத்து அடுக்கியிருந்த
சிலப் புத்தகங்களை எடுத்து விட்டு நடுவில் நற்செய்தி புத்தகத்தை
வைத்தார். கடவுள் நம்பிக்கையுள்ள மனிதரோ "எல்லாப் புத்தகங்களுக்கும்
மையமானது இந்த நற்செய்தி புத்தகம்" என்று சொன்னார்.
நமது வாழ்க்கையில் நாம் வாசிக்கும் எல்லாப் புத்தகங்களையும்
விட மேலானது மறைநூல்
நமதுவாழ்க்கையில் மையமானது மறைநூல்
நமது வாழ்க்கையில் எல்லா செயல்களுக்கும் ஆணிவேர் மறைநூல்
குரு ஒருவர் தன் மீது அதிகம் பற்றும் பாசமும் வைத்திருந்த சீடர்
ஒருவரை அழைத்து தனக்கு உடம்பு முழுவதும் வலிக்கிறது எனவே என்
மீது ஏறி மிதி என்றார். சீடரோ நான் மாட்டேன் என்று சொன்னார்.
மீண்டுமாக அந்த குரு தனக்கு அதிகம் உடல் வலிக்கிறது எனவே என்
உடலின் மீது ஏறி மிதி என்று சொன்னார். அப்போதும் அந்த சீடன் மறுத்து
விட்டான். குரு அவனை அந்த ஆசிரமத்தை விட்டே வெளியே அனுப்பிவிட்டார்.
மற்ற சீடர்கள் அவன் உங்கள் மீது உள்ள மரியாதையால் தான் அவர் உங்களை
ஏறி மிதிக்கவில்லை அதற்காக அவனை ஆசிரமத்தைவிட்டு அனுப்பியது சரியில்லை
என்று சொன்னார்கள். குருவோ அந்த சீடன் என்; மீது மரியாதை பற்று
வைத்திருந்தான். என் வார்த்தையின் மீது பற்று மரியாதை வைக்கவில்லையே
என்று சொன்னாராம்.
நமது வாழ்க்கையில் பற்றும் மரியாதையும் மறைநூல்
வார்த்தைக்குக் கொடுக்கிறோமா?
அன்றாடம் மறைநூலை வாசிக்கிறோமா?
அன்றாடம் ஆலயத்திற்கு வருகிறோமா?
ஆலயத்தில் வாசிக்கப்படும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறோமா?
வாசிப்பு மனதனை முழுமனிதனாக்குகின்றது என்று பள்ளி முதல்
சொற்பொழிவு அரங்குகள் வரை வாய்பாடாக பேசப்பட்டு வருகின்றன!
நெல்லுக்குள் அரிசி இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால்
நெல் இல்லாத அரிசியும் உண்டு என்பதை அந்த நெல்லை உற்றுப்
பார்க்கும்போது தான் தெரியும். வாசிப்பும் உற்றுநோக்கிய
வாசிப்பாக அமைய வேண்டும்.
வாசிப்பு என்பது நுனிப்புல் மேய்வது போல இல்லாது அதிக கவனமாக
இருக்க வேண்டும். வாசிக்கும் வார்த்தையை முனைப்போடு வாழ்வாக்க
முன்வரவேண்டும்.
வரலாற்றில் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிலவிய அன்புறவைத்
தெளிவாகக் கூறும் நூலே திருவிவிலியம்
திருவிவிலியத்தின் ஆசிரியர் கடவுளே அதை அவர் நேரடியாக எழுதவில்லை
மாறாக மனிதர்களைக் கொண்டு எழுதினார்.
இவர்கள் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தார்கள்.
தூய ஆவியின் ஆற்றலால் தூண்டப்பட்டு திரு விவிலியத்தை எழுதினார்கள்.
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே
இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல!
திருவிவிலியத்தை வாசிக்கும் போது கடவுள் நம்மோடு பேசுகிறார்.
நம்மில் தங்கி செயல்படுகிறார்.நாம் அவரோடு உறவு கொள்கிறோம்.
கடவுளின் வல்லமையையும் ஆற்றலையும் பெற்றுக்கொள்கிறோம்.
இறைவார்த்தை நம் உள்ளத்தை தொடுகிறது. நம் வாழ்க்கையை
சீர்தூக்கிப் பார்க்க உதவுகிறது. இறைவனின் விருப்பத்தை நமக்கு
வெளிப்படுத்துகிறது. மனமாற்றம் பெற நம்மை அழைக்கிறது.
என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என்பாதைக்கு ஒளியும் அதுவே!
கடவுளை அன்பு செய்து அவரோடு வாழ வேண்டுமென்றால்திருவிவிலியத்தை
ஒவ்வொரு நாயும் வாசிக்க வேண்டும் வீட்டிலுள்ள அனைவரோடும்
சேர்ந்து வாசிக்க வேண்டும். அதைத் தியானிக்க வேண்டும். செபிக்க
வேண்டும் அதன்படி வாழவேண்டும்.
திருவிவிலியம் பல நூல்களின் தொகுப்பாகும். இதில் 73 நூல்கள்
உள்ளன.
பழைய ஏற்பாட்டில் 46 நூல்கள் உள்ளன: புதிய ஏற்பாட்டில் 27
நூல்கள் உள்ளன.
திருவிவிலியத்தில் 1334 அதிகாரங்களும் 35487 வசனங்களும் உள்ளன.
உலகிலேயே முதன் முதலில் அச்சிடப்பட்டநூல் திருவிவிலியம்.
தமிழ்மொழியில் அச்சிடப்பட்ட முதல் நூல் திருவிவிலியம்.
"இயேசு கிறிஸ்துவின் மலைப்பொழிவை வாசிக்கும் போது நான் ஆழ்ந்த
மன அமைதியையும் எல்லையில்லா மகிழ்ச்சியையும் பெறுகிறேன். அதுவே
எனது ஆன்மீக வாழ்விற்கும் அரசியல் வாழ்விற்கும் வழிகாட்டுகிறது."
-மகாத்மா காந்தி
"எனது வாழ்நாட்களில் திருவிவிலியத்தை தவிர நான் வேறு புத்தகங்களை
வாசித்ததே இல்லை" ---புனித அன்னை தெரசா.
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது: ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும்
வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும்
பிரிக்கும் அளவுக்கு குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும்
மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும்
நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கின்றது".
அன்புத் தந்தையே இறைவா உமது, வார்த்தையை எங்களுக்கு மாபெரும்
கொடையாகக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் உமது
வார்த்தையை நாள்தோறும் வாசிக்கவும், உமது விருப்பத்தை அறியவும்
அதன்படி வாழவும் அருள் தாரும் என செபிப்போம்.
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
அறியாமையிலிருந்து விடுதலை
2020ஆம் ஆண்டு முதல், ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிற்றை 'இறைவார்த்தை
ஞாயிறு' எனக் கொண்டாடுமாறு, நம் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் 'அப்பெர்யுய்த் இல்லிஸ்' என்னும் மடல் வழியாக அழைப்பு
விடுத்தார். இந்த ஆண்டு, நாம் கூட்டொருங்கியக்கத் திருஅவைக்கான
மாமன்றத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்ற வேளையில்,
'இறைவார்த்தை ஒளியில் நம் பயணம்' அறியாமையிலிருந்து விடுதலைக்கு
நம்மை அழைத்துச் செல்கிறது என்று சிந்திப்போம்.
ஜென் துறவி கிம்கானிடம் ஓர் இளைஞன் வருகிறான். 'சுவாமி!
எனக்கு வாழ்க்கை ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. எந்தப் பக்கம்
திரும்பினாலும் ஆபத்து இருப்பது போல இருக்கிறது. யாரும் என்னைக்
கண்டுகொள்வதில்லை. யாரைப் பார்த்தாலும் எனக்குப் பயமாக இருக்கிறது'
என்று புலம்புகிறான். அப்போது கிம்கான் ஓர் உவமை
சொல்கிறார்: 'காட்டு வழியே பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை
ஒரு புலி துரத்துகிறது. எப்படியாவது புலியிடமிருந்து தப்பி
ஓடவிட வேண்டும் என நினைத்த அவன் வேகமாக ஓடுகிறான். ஓடும்
வழியில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு. பின்னால் புலி. முன்னால்
பள்ளத்தாக்கு. இருந்தாலும் பள்ளத்தாக்கில் குதிக்கிறான்.
குதித்து கீழே போய்க்கொண்டிருக்கும் வழியில் ஒரு மரத்தின்
வேரைப் பற்றிக் கொள்கிறான். அப்பாடா! என்று பெருமூச்சு
விட்டவாறு கீழே பார்க்கிறான். அங்கே புலி அவனுக்காகக்
காத்திருக்கிறது. அண்ணாந்து மேலே பார்க்கிறான். இரண்டு எலிகள்
அவன் பற்றியிருந்த வேரைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன. தன்
அருகில் ஒரு செம்புற்றுக் கனி (ஸ்ட்ராபெரி) கொடி. அழகான
பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பறித்து
வாயில் போட்டு 'என்ன சுவையாய் இருக்கின்றது இந்தப்பழம்' என்றான்
அவன்.' உடனே ஞானம் பெற்றான் இளைஞன்.
'ஞானம் பெறுதல்' என்பது வெறும் உணர்வு அன்று. மாறாக, ஒருவரை
விடுதலைக்கு இட்டுச் செல்லும் செயல். ஏனெனில், அறியாமை என்பது
ஞானம் அடைவதற்கான தடையாக இருக்கிறது. அல்லது அறியாமை அகலும்போது
ஞானம் பிறக்கிறது.
இன்றைய முதல் வாசகம் (காண். நெகே 8:2-4,5-6,8-10) நெகேமியா
நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய கி.மு. 450ல்
நெகேமியா ஆளுநராக இருந்தபோதுதான் சிதைந்து கிடந்த எருசலேம்
நகரையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புகின்றார். எருசலேம் நகரின்
மதில்களைக் கட்டி முடித்த அவர், ஏழைகளின் கடன்களை செல்வந்தர்கள்
மன்னிக்க வேண்டும் என்று சமூகப் புரட்சியும், ஆலயத்தின் நிகழ்வுகளை
ஒழுங்குபடுத்தவும் செய்தார். இவரோடு தோள் கொடுத்து நின்றவர்
மறைநூல் அறிஞரும் குருவுமான எஸ்ரா. இருவரும் இணைந்து யூதா
நாட்டை குழப்பத்திலிருந்தும், சமயக் கண்டுகொள்ளாத்தன்மையிலிருந்தும்,
ஏழ்மையிலிருந்தும் காப்பாற்றுகின்றனர்.
எஸ்ரா தொடங்கிய மறுமலர்ச்சி ஒரு சமூக நிகழ்வாகத் தொடங்குகிறது.
அனைத்து மக்களையும் தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில்
ஒன்றுகூட்டுகிறார் எஸ்ரா. அவர்கள் முன் திருச்சட்டத்தை
வாசிக்கின்றார். 'ஒரே ஆளென மக்கள் கூடிவந்தார்கள்' எனப் பதிவு
செய்கிறார் ஆசிரியர். அதாவது, இவ்வளவு நாள்கள் தங்களுக்குள்
மக்கள் வேறுபட்டுக் கிடந்தாலும், அவர்களின் வெறுமை மற்றும்
அடிமைத்தன அனுபவம் எல்லாரையும் ஒன்றுகூட்டி, அவர்களுக்குள்
இருந்த வேற்றுமைகளைக் களைகின்றது. 'ஆண்களும், பெண்களும்,
புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்க சிறுவர்களும்' என அனைவரும்
இணைந்து வருகின்றனர். இந்தச் சொல்லாடல் இரண்டு முறை
பயன்படுத்தப்படுகிறது. எருசலேம் ஆலயம் ஆண்களை மட்டுமே
உள்ளே அனுமதித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியில்
நிறுத்தப்பட்டனர். ஆனால், தோரா என்னும் இறைவார்த்தையை
கேட்க எல்லாரும் அழைக்கப்படுகின்றனர். மேலும், தோரா முன்
எல்லாரும் சமம் என்னும் நிலை உருவாகிறது.
எஸ்ரா திருச்சட்ட நூலை வாசிக்க, மக்கள் அறியாமையிலிருந்து
விடுதலை பெறும் நிகழ்வு மூன்று பகுதிகளாக நடக்கிறது: (அ)
'திருநூலைத் திறந்தபோது எல்லாரும் எழுந்து நின்றார்கள்,'
(ஆ) 'எஸ்ராவோடு இணைந்து கடவுளை வணங்கினர்,' (இ)
'வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர்.' 'எழுந்து
நிற்றல்' மக்களின் தயார்நிலையையும், 'முகங்குப்புற பணிந்து
வணங்குதல்' அவர்களின் சரணாகதியையும், 'பொருளைப்
புரிந்துகொள்ளுதல்' அவர்கள் பெற்ற தெளிவையும் குறிக்கிறது.
திருச்சட்ட நூலின் பொருள் புரிந்த மக்கள் அழுது
புலம்பியதாகவும் அவர்களை எஸ்ரா ஆறுதல் படுத்துவதாகவும்
பதிவு செய்கிறார் ஆசிரியர்.
இவர்களின் கண்ணீர் இவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை
பெறச் செய்கிறது. ஆகையால்தான், மக்களின் கண்ணீர்ப்
பெருக்கைக் கண்ட எஸ்ரா உடனடியாக, 'இன்று கடவுளாகிய
ஆண்டவரின் புனித நாள். எனவே அழுது புலம்ப வேண்டாம்.
நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை
இரசத்தைக் குடியுங்கள். எதுவும் தயார் செய்யாதவருக்குச்
சிறிது அனுப்பி வையுங்கள் ... ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே
உங்களது வலிமை' என அறிவுறுத்துகிறார்.
எஸ்ராவின் இவ்வார்த்தைகளில், (அ) 'அழ வேண்டாம்' என்ற
கட்டளையும், (ஆ) இல்லாதவரோடு பகிருங்கள் என்ற கரிசனையும்,
(இ) 'ஆண்டவரின் மகிழ்வே உங்களின் வலிமை' என்ற
வாக்குறுதியும் இருக்கிறது. 'அழவேண்டாம்' என்ற செய்தியானது
இங்கே நான்கு முறை சொல்லப்படுகின்றது. 'ஆண்டவரின் மகிழ்வே'
என்னும் சொல்லாடலை, 'ஆண்டவர் தரும் மகிழ்வு' அல்லது
'ஆண்டவர் என்னும் மகிழ்வு' என்று பொருள் கொள்ளலாம். இனி
இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே
இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப்போகிறது. ஆக, இறைவனைப்
பற்றிய அறியாமையில் இருந்த மக்கள் அவரின் இருப்பை
திருச்சட்ட நூல் வாசிப்பின் வழியாக உணர்ந்ததால், அவர்களின்
அறியாமையிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:12-30),
தங்களுக்குள் யார் பெரியவர்? யார் அதிகக் கொடைகள்
பெற்றவர்? தங்களுள் யார் மேன்மையானவர்? என்ற பிளவுபட்டு
நின்ற கொரிந்து நகரத் திருச்சபைக்கு, உடல் மற்றும் அதன்
இருப்பு-இயக்கத்தை உருவமாக முன்வைத்து அனைத்து
உறுப்புகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை
வலியுறுத்துகின்றார். முதல் பிரிவில் (12:12-13), தூய
ஆவியார் வழியாக ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப்
பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர் ஆகிறார்கள்
என்ற இறையியலை முன்வைக்கின்றார் பவுல். இரண்டாம் பிரிவு
(12:14-26) மனித உடல், அதன் உறுப்புக்களின் இருப்பு,
இயக்கம், இன்றியமையாமை பற்றி விளக்குகிறது. மூன்றாம்
பிரிவில் (12:27-30), 'நீங்கள் கிறிஸ்துவின் உடல்.
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்' என்று மறுபடியும்
வலியுறுத்தி, திருச்சபையின் பல்வேறு பணிநிலைகளை
எடுத்துரைக்கின்றார்.
திருச்சபையின் பணிநிலைகள் எல்லாம் படிநிலைகள் என்ற
அறியாமையில் இருந்துகொண்டு ஒருவர் மற்றவரோடு
சண்டையிட்டுக்கொண்டிருந்த மக்களை அவர்களின்
அறியாமையிலிருந்து விடுதலை செய்து, அவர்களின் தனித்தன்மை
மற்றும் ஒருங்கியக்கத்தை நினைவூட்டுகின்றார் பவுல்.
தங்களுக்குள் நிலவிய ஒருமையை அறியாதவாறு அவர்களின் கண்கள்
மறைக்கப்பட்டிருக்க, அவர்கள் தங்களின் வேற்றுமைகளை மட்டும்
முன்னிறுத்தி ஒருவர் மற்றவரைத் தாழ்த்தவும்,
காயப்படுத்தவும், அழிக்கவும் முயல்வது தவறு என்பது
இதிலிருந்து தெளிவாகிறது. ஆக, 'நான்' என்ற
அறியாமையிலிருந்து விடுதலை செய்து, 'நாம்' என்ற
அறிவிற்குத் தன் திருச்சபையை அழைத்துச் செல்கிறார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:1-4, 4:14-21)
இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது:
(அ) லூக்காவின் நற்செய்தி முன்னுரை (1:1-4)
(ஆ) இயேசுவின் பணித் தொடக்கம் (4:14-21).
லூக்கா தன் நற்செய்தி தான் ஆராய்ச்சி செய்ததன் பயனாக
எழுதப்பட்டது எனவும், இதன் நோக்கம், தியோபில் அவர்கள் தான்
கேட்டதை உறுதி செய்துகொள்வதற்காகவும் என்று சொல்வதன்
வழியாக, 'தெயோபில்' அவர்களின் கிறிஸ்துவைப் பற்றிய
'அறியாமையிலிருந்து அவரை விடுதலை செய்வதற்கும்' என்று
மொழிகிறார். நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பிரிவை இன்னும்
மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) இயேசுவின்
கலிலேயப் பணி (14:14-15), (ஆ) இயேசு எசாயா இறைவாக்கினர்
வாசகத்தை வாசித்தல் (14:16-20), (இ) இயேசுவின் போதனை
(14:21).
மாற்கு 6ல் இயேசு நாசரேத்தில் பணி தொடங்குவதை ஒத்ததாக
இருக்கிறது லூக்காவின் இந்தப் படைப்பு. மாற்கு
நற்செய்தியாளருக்கும், லூக்கா நற்செய்தியாளருக்கும் இதில்
உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் எசாயாவின் இறைவாக்குப்
பகுதியை இயேசு வாசிக்கும் நிகழ்வுதான். 'இயேசு தம் சொந்த
ஊரான நாசரேத்துக்கு வந்தார்' என லூக்கா நிகழ்வைத்
தொடங்குகிறார். நாசரேத்து இயேசுவின் குழந்தைப் பருவ
நிகழ்வுகளில் முக்கியமான ஒரு ஊர் (காண். 1:26, 2:4, 39,
51). இயேசுவின் காலத்தில் தோரா நூல் எழுத்துவடிவத்தில்
முழுமை பெற்று, தொழுகைக் கூடங்களில் வாசிக்கப்பட்டது.
இறைவாக்கு நூல்கள் வாசிக்கப்படுவதற்கு
வாய்ப்பில்லையென்றாலும், எசாயா 61 முக்கியமான பகுதியாக
இருந்ததால் அது செபக்கூட வாசகத்தில் இடம் பெற்றது. எசாயா
61ல் தான் 'மெசியா', அதாவது 'அருள்பொழிவு பெற்றவர்' என்ற
வார்த்தை வருகிறது. ஒட்டுமொத்த யூத நம்பிக்கையின்
அடிப்படையே மெசியாவின் வருகையே. இந்தப் பகுதியை இயேசுவே
விரும்பி எடுத்தாரா, அல்லது அது விரித்து அவரிடம்
கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
லூக்கா 4:18-19, எசாயா 61:1 மற்றும் 58:6ன் கிரேக்க
பதிப்பிலிருந்து (எழுபதின்மர் நூல்) எடுக்கப்பட்டுள்ளது.
இதை அப்படியே எடுத்து பயன்படுத்தாமல், லூக்கா கொஞ்சம்
மாற்றம் செய்கின்றார்: 'ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது.
ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.ஏழையருக்கு
நற்செய்தி அறிவிக்கவும், ('உள்ளம் உடைந்தோரை
குணப்படுத்தவும்' என்னும் வாக்கியத்தை
விட்டுவிடுகின்றார்), சிறைப்பட்டோருக்கு விடுதலையை
பறைசாற்றவும், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என
அறிக்கையிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்யவும்,
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை
அனுப்பியுள்ளார்.' மேலும், 'கடவுள் அநீதிக்குப்
பழிவாங்கும்...' என்று தொடருமுன் இயேசு சுருளை
சுருட்டிவிடுகிறார். இயேசு வாசித்த இந்த இறைவாக்குப்
பகுதியில் மையமாக இருப்பது, 'பார்வையற்றோர் பார்வை
பெறுவர்' என்பதுதான். இங்கே வெறும் புறக்கண் பார்வையை
மற்றும் இறைவாக்கினர் குறிப்பிடவில்லை. மாறாக, 'ஆண்டவரின்
ஆவியையும், ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க வந்த
அருள்பொழிவு பெற்றவரான' இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளும்
அகப்பார்வையைத்தான் குறிக்கிறது. ஆகையால்தான், சற்று
நேரத்தில், 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று
நிறைவேறிற்று' என்று தன்னில் மறைநூல் வாக்கு நிறைவேறுவதாக
அறிக்கையிடுகின்றார் இயேசு. ஆக, தெயோபில் அவர்கள்
லூக்காவின் பதிவின் வழியாகவும், நாசரேத்து மக்கள்
இயேசுவின் போதனை வழியாகவும் அறியாமையிலிருந்து விடுதலை
பெறுகின்றனர்.
இவ்வாறாக, முதல் வாசகத்தில் எஸ்ராவின் திருச்சட்ட நூல்
வாசிப்பு எருசலேம் மக்களுக்கும், இரண்டாம் வாசகத்தில்
பவுலின் 'உடல் உருவகம்' கொரிந்து நகர மக்களுக்கும்,
நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தொழுகைக்கூடப் போதனை
நாசரேத்து மக்களுக்கும் 'அறியாமையிலிருந்து விடுதலை'
தருவதாக இருக்கின்றது. இம்மூன்றையும் இணைத்து இன்றைய
பதிலுரைப் பாடல், 'ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. அவை
இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை.
அவை கண்களை ஒளிர்விக்கின்றன' (திபா 19) என்கிறது.
இன்று பல நேரங்களில் நாம் பெற வேண்டிய புற விடுதலைகள்
என்று பொருளாதாரம், அரசியல், சமூகம், சமயம் போன்ற தளங்களை
ஆராய்கிறோம். ஆனால், இவையெல்லாம் தொடங்க வேண்டியது 'அக
விடுதலையில்தான்.' இன்று என் மனத்தில் இருக்கும் அறியாமை
இருள் அழிந்தால்தான் என்னால் அடுத்தவரைச் சரியாகப் பார்க்க
முடியும். இறைவார்த்தை என்னும் உண்மை நமக்கு விடுதலை
தருகின்றது. நாம் பெறுகிற இந்த விடுதலை எப்படி வெளிப்பட
வேண்டும்? (அ) ஆண்டவரின் மகிழ்வு நம் வலிiமாக வேண்டும்.
ஏனெனில், நம் மகிழ்வுகள் குறுகியவை. அவை நம் வல்லமையைக்
கரைத்துவிடுபவை. ஆனால், ஆண்டவரில் கொள்ளும் மகிழ்வு நமக்கு
வலுவூட்டும். (ஆ) வேற்றுமை பாரட்டாமல் ஒற்றுமையைக்
கொண்டாடுவது. இப்படிக் கொண்டாடும்போது நம்மால் ஒருவர்
மற்றவரின் திறன்களை மதிக்க முடிகிறது. (இ) தியோபில் போல
ஏக்கமும், நாசரேத்து மக்கள் போல 'இயேசுவின்மேல் கண்களைப்
பதிய வைத்தலும்' கொண்டிருப்பது. மகிழ்ச்சி, ஒற்றுமை,
நம்பிக்கை - இவை மூன்றும் அறியாமையிலிருந்து விடுதலை
பெறுபவர் சுவைக்கும் கனிகள்.
உலகிலுள்ள மரங்களில் செம்மரத்திற்கென தனிச் சிறப்பு உண்டு.
இம்மரம் 2500 ஆண்டுகள்வரை உயிர் வாழக்கூடியது; 100 மீட்டர்
உயரம் வரை வளரக்கூடியது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தச்
செம்மரத்தின் வேர்கள் ஆழமாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம்.
உண்மை அதுவல்ல.
செம்மரத்தின் வேர்கள் ஆழமானவை கிடையாது! பின்னர் எப்படி இந்த
மரம் 2500 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியதாகவும், 100 மீட்டர்
உயரம் வரை வளரக்கூடியதாகவும் இருக்கின்றது என்ற கேள்வி எழலாம்.
செம்மரத்தின் வேர்கள் ஆழமானவையாக இல்லாவிட்டாலும்கூட, மற்ற
செம்மரத்தின் வேர்களோடு பின்னிப் பிணையக்கூடவை. இதனாலேயே
இந்த மரம் மழையாலும் புயலாலும் தாக்கப்பட்டாலும் 2500 ஆண்டுகள்
வரை உறுதியாக இருந்து, 100 மீட்டர் வரை உயர்ந்து வளர்கின்றது.
ஆம், நாம் அனைவரும் ஒன்றித்து வாழும்போது, ஒரே உடலின் உறுப்புகளாய்
இருக்கின்றோம் என்ற உணர்வோடு வாழ்கின்றபோது உறுதியாய் இருப்போம்.
இதையே செம்மரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பொதுக் காலத்தின்
மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை,
"ஒரே உடலாய் இருப்போம்" என்ற சிந்தனையைத் தருகின்றது. அது
குறித்து நாம் சிந்திப்போம்.
ஒரே உடலாய் இருக்கவே திருமுழுக்குப் பெற்றோம்:
"சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று. எத்துணை இனியது"
(திபா 133:1) என்று கூறுவார் திருப்பாடல் ஆசிரியர். இவ்வார்த்தைகள்
மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வதன் முக்கியத்துவத்தையும்,
அதன் சிறப்பையும் மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. ஆனால்,
இன்றைக்கு மனிதர்கள் இனத்தின் பெயராலும், மொழியின் பெயராலும்,
நிறத்தின் பெயராலும் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்.
கொரிந்து நகரில் இருந்த மக்கள் தூய ஆவியார் அருளிய அருள்கொடைகளின்
அடிப்படையில் பிளவுபட்டுக் கிடந்தார்கள். எவ்வாறெனில்,
பொதுநன்மைக்காகவே தூய ஆவியார் அருள்கொடைகளைக் கொடுத்திருந்தபோதும்,
மக்கள் அவற்றைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்தினார்கள். அதைவிடவும்
அவர்கள் தங்களுக்குத் தூய ஆவியாரின் அருள்கொடைகள் மிகுதியாகக்
கொடுக்கப்பட்டிருக்கின்றன, மற்றவருக்கு அவை குறைவாகக்
கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று தங்களை உயர்வாக நினைத்து,
மற்றவர்களை இழிவாக நடத்தினார்கள். இதனால் பவுல், கொரிந்து
நகர மக்களிடம், "நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய்
இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்" என்கிறார்.
தூய ஆவியால் ஒரு உடலாய் இருக்கத் திருமுழ்க்குப் பெற்றோம்
எனில், பிரிவினைகள் இருக்கக்கூடாது; உயர்ந்தவன் தாழ்ந்தவன்
என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. ஒருவேளை யாராவது ஏற்றத்தாழ்வு
பார்த்தால், அவர் கிறிஸ்தவராகவே முடியாது. காரணம், நாம் அனைவரும்
ஒன்றாய், ஒரே உடலாய் இருப்பதையே கடவுள் விரும்புகின்றார்.
நாம் ஒரே உடலாய் இருக்கும்போது கடவுள் மகிழ்கின்றார்:
எஸ்ரா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்
"ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை" என்ற வார்த்தைகளுடன்
முடிகின்றது: குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ரா,
திருநூலை எல்லாரும் புரிந்துகொள்ளும்படி வாசித்தபோது அவர்கள்
அழுது புலம்பினார்கள். அப்பொழுதுதான் அவர் அவர்களைப்
பார்த்து, "ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை" என்கிறார்.
ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையைக் கடைப்பிடித்து,
அவரோடு ஒன்றித்து வாழவேண்டிய இஸ்ரயேல் மக்கள், ஆண்டவருடைய
கட்டளையைக் கடைப்பிடிக்காமல், வேற்று தெய்வங்களை வழிபட்டு,
அவருக்கு வருத்தத்தைத் தந்தார்கள். அதனாலேயே அவர்கள் நாடு
கடத்தப்பட்டு அன்னிய மண்ணில் அடிமைகளாய் வாழ்ந்தார்கள். இந்நிலையில்
பாரசீக மன்னர் சைரஸ் வழியாக யூதா நாட்டினர் அவர்களது சொந்த
நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அடிமைத்தான
வாழ்விற்குப் பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்பிய யூதா
நாட்டினர் ஆண்டவருடைய கட்டளையைப் கடைப்பிடித்து அவரோடு ஒன்றித்து
வாழ அழைக்கப்பட்டார்கள். அப்படி வாழ்வதுதான் ஆண்டவருக்கு
மகிழ்ச்சியைத் தரும். அதுவே மக்களுக்கு வலிமையாய் இருக்கும்
என்கிற பொருளில் குரு எஸ்ரா மக்களைப் பார்த்து, "ஆண்டவரின்
மகிழ்வே உங்களது வலிமை" என்கிறார். நற்செய்தியில் பெரிய
குருவாம் இயேசு, "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!"
(யோவான் 17:21) என்று தந்தையை நோக்கி வேண்டுவதைக்கூட நாம்
இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளலாம்.
ஒரே உடலாய் இருக்கும்போது மறைநூல் வாக்கு நிறைவேறுகிறது:
"நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேற்றிற்று"
என்று இயேசு சொல்லும் இந்த வார்த்தைகளுடன்தான் இன்று நற்செய்தி
வாசகம் நிறைவுபெறுகின்றது. இவ்வார்த்தைகளை இயேசு, நாசரேத்தில்
உள்ள தொழுகைக்கூடத்திற்கு வந்து, எசாயாவின் சுருளேட்டை
வாசித்து, ஏவளரிடம் கொடுத்த பின் சொன்ன வார்த்தைகள் ஆகும்.
யூதர்களால் ஏழைகள், சிறைப்பட்டோர், பார்வையற்றோர், ஒடுக்கப்பட்டோர்,
பாவிகள் யாவரையும் சபிக்கப்பட்டவர்களாகவும்,
"தீண்டத்தகாதவர்களாககவும்" கருதினார்கள். இந்தப் பட்டியலில்
பிற இனத்தாரையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில், பிற
இனத்தாரை அவர்களை தீண்டத்தகாகதவர்களாகவே கருதினார்கள். இப்படியிருக்கையில்
ஆண்டவர் இயேசு இவர்களெல்லாம் வாழ்வு பெறுவதற்காகவும், இவர்களையெல்லாம்
கடவுளோடு ஒப்புரவாக்கவும் வந்தார். இது தொடர்பாக பவுல், எபேசியருக்கு
எழுதிய திருமுகத்தில் கூறும்போது, "அவரே இரண்டு இனத்தவரையும்
பிரித்து நின்ற பகைமை என்ற சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பங்களின்
வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்" (எபேரேயர்
2:14) என்பார். இவ்வாறு தமது பணியின் வழியாகவும், பாடுகளின்
வழியாகவும் யாவரையும் ஒன்றுபடுத்தி, கடவுளோடு ஒப்புரவாக்கப்
போகிறார் என்பதை உணர்த்தும் விதமாக இயேசு எசாயாவின்
சுருளேட்டை வாசித்துவிட்டு, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல்
வாக்கு இன்று நிறைவேறிற்று" என்கிறார்.
பிரிந்து கிடந்த மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களைத் தமது உடலின்
உறுப்புகளாக மாற்றுவதற்காக இயேசு தம்மை அர்ப்பணித்தததால்
மறைநூல் வாக்கு நிறைவேறியது எனில், நாம் நம்மிடம் இருக்கின்ற
பிரிவினைகளை வேரறுத்து, கிறிஸ்துவின் உறுப்புகளாய்
வாழ்கின்றபோது மறைநூல் வாக்கு நிறைவேறும் என்பதில் எந்தவொரு
மாற்றுக் கருத்தும் இல்லை.
இன்றைக்குப் பலர் கிறிஸ்தவர்களாக இருந்து, பிறப்பின்
அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதும், அவர்களை
இழிவாக நடத்துவதற்கும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. நாம்
அனைவரும் கிறிஸ்து என்ற உடலின் உறுப்புகள் என்றால், எப்படி
நம்மால் அடுத்தவரை இழிவாக நடத்தத் தோன்றும்? ஆதலால், நாம்
அனைவரும் கிறிஸ்து என்ற உடலில் உறுப்புகளாய் வாழ்வோம்.
ஏனெனில், அப்படி வாழ்கின்றபோதுதான் கடவுள் மகிழ்கின்றார்;
அப்பொழுதுதான் மறைநூல் வாக்கு நிறைவேறுகின்றது.
சிந்தனைக்கு:
"குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்பார்
பாரதியார். ஆதலால், நாம் யாரையும் தாழ்வாக நினையாமல்,
யாவரும் கிறிஸ்துவின் உடலின் உறுப்புகளின் ஒன்றாய்
இருக்கின்றோம் என்ற உணர்வோடு ஒன்றித்து, வாழ்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தமது வழக்கப்படி, ஓய்வுநாளில்
தொழுகைக்கூடத்திற்குச் சென்றார் என்று வாசிக்கின்றோம்
(4:16). அப்படியானால், அவர் வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டு,
ஆண்டவரோடு கொண்டிருந்த உறவில், அன்பில் நிலைத்திருந்தார்
என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த நிகழ்வு மட்டும்
கிடையாது. பனிரெண்டு வயது நிரம்பிய ஒவ்வொரு யூதரும் எருசலேமில்
ஆண்டுதோறும் நடைபெறும் பாஸ்கா விழாவில் கலந்துகொள்ளவேண்டும்.
இயேசு அதில் தவறாது கலந்துகொண்டார் என்பதை விவிலியம் நமக்கு
மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது (லூக் 2:41-42, யோவா
2:13). இயேசுவுக்கு பரிசேயர்கள் பின்பற்றி வந்த சடங்குமுறைகளில்
மாற்றுக்கருத்து இருந்தாலும்கூட, அதைக் குறித்து காரசாரமாக
அவர்கோடு அவர் விவாதித்தாலும்கூட, வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டு
இறை மனித உறவில் நிலைத்திருந்தார்.
இன்றைக்கு ஒருசிலர், நான் ஏன் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை
வழிபடவேண்டும்? என்று பிதற்றுவதைப் பார்க்க முடிகின்றது.
இத்தகையோர் இயேசுவின் வாழ்வை ஆழமாக படித்துப் பார்ப்பது நல்லது.
நாம் ஏன் வழிபாடுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்கான
தெளிவாக பதிலை எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் இன்னும்
அழகாக எடுத்துரைப்பார். சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில்
கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒருவருக்கொருவர்
ஊக்கமூட்டுவோமாக; இறுதிநாள் நெருங்கிவருவதைக்
காண்கின்றோம்; எனவே இன்னும் அதிகமாக ஊக்கமூட்டுவோம் என்று.
(எபி 10:25). ஆம், வழிபாடு என்பது இறைவனைத் தொழுவதற்காக மட்டுமல்ல,
நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ளவும்தான். இதனை நாம் உணர்ந்து
செயல்படுவது நல்லது.
ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை எடுத்துரைத்த இயேசு
தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்ற இயேசு, எசாயாவின்
சுருளேட்டை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டு, அதற்கு
விளக்கம் கொடுக்கத் தொடங்குகின்றார். வழக்கமாக யூதர்களின்
தொழுகைக்கூடத்தில் வழிபாடனது இறைவேண்டலோடு தொடங்கி,
இறைவார்த்தை வாசிக்கப்பட்டு, அதற்கு விளக்கம்
கொடுக்கப்படும். பின்னர் குருவானவர் (ரபி) இருந்தால்
ஆராதனையோடு நிறைவுபெறும் (இச 6:4-9,11:13-21) இயேசு
தொழுகைக்கூடத்திற்குச் சென்றபோதும் அப்படித்தான்
நடைபெறுகின்றது. இதை ஒட்டி இன்னொரு விஷயம், இயேசு வாசித்த
எசாயாவின் சுருளேட்டை வாசிக்கின்றவர்கள், அதற்கு விளக்கம்
கொடுக்கின்றபோது மெசியாவைக் குறித்து விளக்கம்
கொடுப்பார்கள். ஆனால் இயேசுவோ, நீங்கள் கேட்ட வாக்கு
இன்று நிறைவேறிற்று என்கின்றார். அதுமட்டுமல்லாமல்
ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை எடுத்துரைக்க நான்
வந்திருக்கிறேன் என்கின்றார்.
அருள்தரும் ஆண்டு அல்லது ஜூபிலி ஆண்டினைக் குறித்து
லேவியர் புத்தகம் 25 அதிகாரம் எடுத்துச் சொல்கின்றது. ஏழு
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஐம்பதாம் ஆண்டில் அடிமைகள்
விடுவிக்கப்பட்டு, கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யவும்,
நிலைத்திற்கு ஓய்வு கொடுக்கப்படவும் வேண்டும். இத்தகைய
அருள்தரும் ஆண்டினை எடுத்துச் சொல்லும் இயேசு தன்னுடைய
பணிவாழ்வில் செய்துகாட்டுகின்றார். பொருளாதார ரீதியில்
அல்ல, ஆன்மீக ரீதியில் மக்களுடைய பாவங்களை மன்னித்து,
மக்களுக்கு இளைப்பாற்றி வழங்குவதன் வழியாக.
இயேசு கிறிஸ்து, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை
முழக்கமிட்டு அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், இன்னபிற
காரியங்களையும் செய்வேன், அதுவும் எலியா, எலிசா
இறைவாக்கினர்களைப் போன்று எல்லா மக்களுக்கு செய்வேன் என்று
சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த யூதர்கள்
கொதித்தெழுகிறார்கள்.
துணிவுள்ள (பெரிய) இறைவாக்கினர் இயேசு
மெசியா என்பவர் யூதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று
நினைத்துக்கொண்டிருந்த யூதர்கள் மத்தியில், மெசியாவாகிய
தான் யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் சொந்தம்,
எல்லாருக்கும் மத்தியிலும் தன்னுடைய பணி இருக்கும் என்று
சொல்வதனால் தனக்குப் பெரிய பிரச்சனை வரும் என்று
இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும்
அவர் துணிவோடு தன்னுடைய பணியென்ன, தன்னுடைய பனியின் இலக்கு
மக்கள் யார்? யார்? என்று எடுத்துரைக்கின்றார். இதனால்
யூதர்கள் இயேசுவை மலைமீது இருந்து தள்ளிவிட்டு
கொல்லமுயல்கின்றார்கள்.
ஏற்கனவே இயேசுவை தச்சர் மகன் என்று புறக்கணிக்கும்
யூதர்கள், அவர் எல்லாருக்கும் மத்தியிலும் பணிசெய்வேன்
என்று சொல்வதைக் கேட்டு அவரைக் கொல்லமுயல்கிறார்கள்.
அதற்காக பயந்துவிட்டு தன்னுடைய கொள்கையிலிருந்து அவர்
பின்வாங்கிவிடவில்லை. மாறாக இறுதிவரைக்கும் துணிவுடன்
இருந்து ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைக்கின்றார்.
இயேசுவின் வழியில் நடந்து, இறைப்பணியை செய்கின்ற
ஒவ்வொருவரும் எதிர்வரும் சவால்களைக் கண்டு பயந்துவிடாமல்,
துணிவோடு இருந்து இயேசுவுக்கு சான்று பகரவேண்டும்
என்பதுதான் அவர் இந்நாளில் நம்மிடமிருந்து
எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.
சிந்தனை
இறைவாக்கினருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் இலவசம்
என்பதுபோல, இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவருக்கும்,
அவர் பணிசெய்கின்ற ஒவ்வொருவருக்கும் அவரைப் போன்று
ஏச்சுக்களும் பேச்சுக்களும் உண்டு. அதற்காக நாம்
கலந்கிவிடாமல், அவர்மீது நம்பிக்கை வைத்து, துணிவோடு
இறைவாக்கினர் பணியைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம்
துணிவுள்ள இறைவாக்கினர்களாக மாறமுடியும்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், துணிவுள்ள
இறைவக்கினர்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
அன்று ஓய்வு நாள் . செபக்கூடத்திற்குச் சென்ற இயேசு
வாசிக்க எழுந்தார். அவர் கையில் எசாயா எழுதிய இறைவாக்குகளின்
ஏட்டுச் சுருள் தவழ்ந்தது. அதை விரித்தார், படித்தார். இயேசுவின்
விளக்கம் தேன் என்று சொல்லும் அளவுக்கு இதமாக இருந்தது. மக்களுக்கு
மறு வாழ்வு கொடுக்கத் தான் பாடுபடப்போவதாக இயேசு உரைத்தபோது
இருந்தவர்கள் எல்லையில்லா பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
இயேசு தான் போதித்ததைச் சாதித்துக் காட்டிய ஒரு சாதனை நாயகன்.
நேர்மையாளரை வெள்ளி காசுக்கும், வறியவரை இரு காலணிக்கும்
விற்கிறார்கள் என்று ஆமோஸ் (ஆமோஸ் 2:6) எழுதி
வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட வறியவர்க்கே நற்செய்தி
போதிக்க வந்ததாக இயேசு கூறுகிறார்.
ஆம்! அன்று பாவச் சிறையிலிருந்த மகதலா மரியா (லூக்கா
7:36-40), நல்ல கள்ளன் (லூக்கா 23:43) போன்றவர்களுக்கு சுதந்திரம்
அளித்தார் இயேசு. நேர்மையாளரைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட,
மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான
மகிழ்ச்சி உண்டாகும் (லூக்கா 15:7) என நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார். ஏழை எளியவருக்கு உதவாத எந்த இதயமும்
இயேசுவுக்கு ஏற்புடையது அல்ல என்பது இங்கே நமக்குப் புலனாகிறது.
இன்றைய முதல் வாசகமும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது.
நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் வெறுத்தால் அது நம்மையே
வெறுத்ததற்கு ஒப்பாகும். காரணம் மனித சமுதாயம் என்பது ஓர்
உடலைப் போன்றது. அந்தச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் உடலின்
உறுப்புகள் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் கோடிட்டுக்
காட்டுகிறது. கிறிஸ்தவ வாழ்வில் பொறாமை, அநீதி, அக்கிரமம்,
வஞ்சகம், சூழ்ச்சி, சுயநலம் என்ற சொற்களுக்கே இடமில்லை .
கடையிலே இரண்டு பெண்கள் பூ வாங்கினார்கள். ஒருத்தி வாங்கிய
பூவை தலையிலே சூடி, பொழுது விடிந்ததும் குப்பையிலே தூக்கி
எறிந்தாள். அடுத்தவளோ வாங்கிய பூவை தெய்வத்திற்கு
வைத்தாள். பொழுது விடிந்ததும் பக்தர்கள் தெய்வத்திற்கு படைக்கப்பட்ட
பூவை குருவிடமிருந்து பெற்றுச் சென்று பெட்டியிலே பத்திரமாக
பூட்டி வைத்தார்கள். ஒன்றுதான். ஆனால் ஒரு முழம்
குப்பையிலே . மறு முழம் பெட்டியிலே. வாழ்க்கை முறைக்கு ஏற்ப
அந்த வாழ்க்கையின் அர்த்தம் தாழ்ந்தோ, உயர்ந்தோ நிற்கும்.
ஏழை, எளியவர்களை அன்பு செய்து, ஆண்டவராம் நம் இயேசு
வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கை என்றும் விடிவெள்ளியாக நம்
வாழ்க்கையில் சுடர் விடுவதாக.
இன்றைய பாரதத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 125 கோடி. இவர்களில்
பல கோடி மக்கள் ஒருவேளை உணவோடு உறங்கச் செல்கின்றார்கள்!
இன்று பல வீடுகளில் கூரை வழியாக வறுமை எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கின்றது.
பாவம் தலைவிரித்தாடுகின்றது. 30.12.2006 தேதியிட்ட தமிழ்
நாளேடு ஒன்றில் வந்த செய்தி இது. சென்னையில் நடந்த கொடூரம்
இது! செல்ஃபோன் வாங்கவேண்டுமென்பதற்காக ஒருவனுடைய மூன்று
நண்பர்கள் அவனைக் கடத்திச்சென்று அவனைக் குத்திக் கொலை
செய்திருக்கின்றார்கள். மூன்று பேரும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.
சர்க்கரை வியாதியின் சாம்ராஜ்யமாக மாறிக்கொண்டு வருகின்றது
இந்தியா!
மரணம்! இன்று நம் நடுவே எத்தனை கார் விபத்துக்கள், இரயில்
விபத்துக்கள், விமான விபத்துக்கள்! நான் பயணம்
செய்யும்போது தவறாது செய்யும் மன்றாட்டு: கடவுளே என்னையும்
இந்த வாகனத்தை ஓட்டும் ட்ரைவரையும் காப்பாற்றும் என்பதாகும்!
பயணம் செய்து திரும்பி வரும்போது அப்பாடா பிழைத்தோம் என
பெருமூச்சு விட வேண்டியிருக்கின்றது.
நம்மைச் சுற்றி ஒரு புறம் வறுமை! மறு புறம் நோய்! வேறொரு
புறம் மரணம்! நமது வாழ்க்கையில் எத்தனைக் கீறல்கள்! இறுக்கத்திலிருந்தும்,
தயக்கத்திலிருந்தும் விடுபட்டு நாம்
சுதந்தரப் பறவைகளாக சிறகடித்துப் பறக்க முடியாதா? ஏன்
முடியாது? முடியும் என்கின்றது இன்றைய நற்செய்தி ! இன்று
இயேசு நற்செய்தியிலே தோன்றி, ஆண்டவருடைய ஆவி என்மேலே. அவர்
என்னை அருள்பொழிவு செய்துள்ளார். எளியோர்க்கு நற்செய்தியை
அறிவிக்கவும், சிறைப்பட்டோர்க்கு விடுதலை வாழ்வு வழங்கவும்,
அடிமைகளுக்கு உரிமை வாழ்வு கொடுக்கவும், கண்ணொளி இழந்தவர்க்குப்
பார்வை வழங்கவும், அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் தாம்
அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றார்.
இவர் போதித்ததைச் சாதித்துக் காட்டியவர்!
யோவான் 2:1-11: கானாவூர் கல்யாணம்! அங்கே பஞ்சம்! வறுமை !
திருமணத்திற்குத் தேவையான திராட்சை இரசம் வேண்டும்.
இயேசு என்னும் மீட்பர் அங்கே தோன்றி, புதுமை செய்து கல்யாண
வீட்டின் இறுக்கத்தையும் புழுக்கத்தையும் போக்கினார்.
மத்தேயு 9:27-31: அவர்கள் இருவரும் பார்வை இழந்தவர்கள்!
ஆகவே பாதையோரத்தில் தள்ளப்பட்டார்கள். மீட்பர் இயேசு அவர்களைச்
சந்திக்க, அங்கே புதுமை ஒன்று நடந்தது. அவர்களது இறுக்கமும்
புழுக்கமும் நீங்கின.
லூக்கா 7:36-50: அவள் ஒரு பாவத் தொடர்கதை! எங்கோ , எப்படியோ,
மன நிம்மதியைத் தொலைத்துவிட்டாள். இயேசு என்னும் மீட்பரை
அவள் சந்தித்தாள்! அவள் வாழ்க்கையிலே வசந்தம் பிறந்தது.
அவளிடமிருந்த இறுக்கமும் புழுக்கமும் மறைந்தன.
யோவான் 11:1- 44 : இலாசரை அடக்கம் செய்துவிட்டார்கள்!
இலாசர் அடக்கம் செய்யப்பட்டபோது அவரது சகோதரிகளின்
மகிழ்ச்சியும் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இயேசு என்னும்
மீட்பர் தோன்றினார்! இலாசர் உயிர்பெற்று எழுந்தார்! அந்த
சகோதரிகளின் மனத்திலிருந்த இறுக்கமும் நடையிலிருந்த
தயக்கமும் மறைந்தன.
அன்று அப்படிப் புதுமை செய்த இயேசு இன்றும் நம் நடுவிலே
நற்கருணை உருவிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நாம்
செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே!
மத்தேயு 21: 22: நீங்கள் நம்பிக்கையோடு கேட்பதையெல்லாம்
பெற்றுக்கொள்வீர்கள் என்றவரிடம்,
திவெ 3:20: இதோ நான் கதவருகில் நின்று
தட்டிக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் கதவைத் திறந்தால்
உள்ளே வந்து உணவருந்துவேன் என்றவரிடம் நாம் நமக்கு
வேண்டியதைக் கேட்க வேண்டும்; அவரது ஆசியை, உதவியை நாம்
பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
டி.வி.யில் கோடீஸ்வரன், குரோர்பதி நிகழ்ச்சியைப்
பார்த்திருக்கின்றோம். அதில் ஒரு காலக்கட்டத்தில் ஹெல்ப்
லைன்ஐ அதாவது வெளியே இருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய
உதவியைப் பயன்படுத்திக்கொள்கின்றீர்களா? என்று
கேட்பார்கள்.
நாம் அன்றாட வாழ்க்கையிலே 3 ஹெல்ப் லைன்களைத்தான்
பயன்படுத்துகின்றோம். அதாவது மூன்று உதவிகளைத்தான் நாம்
பயன்படுத்திக்கொள்கின்றோம்.
ஒன்று இயற்கையின் வளங்களை, பொன்னையும், மண்ணையும்,
மணியையும் பயன்படுத்தி நமது வாழ்க்கையை
வளப்படுத்திக்கொள்ளப்பார்க்கின்றோம்.
இரண்டாவதாக நமது திறமைகளைப் பயன்படுத்தி நமது வாழ்க்கையை
வளப்படுத்திக் கொள்ளப்பார்க்கின்றோம்.
மூன்றாவதாக நமது சொந்தங்களையும் பந்தங்களையும்
நண்பர்களையும் அன்பர்களையும் பயன்படுத்தி நமது வாழ்க்கையை
வளமாக்கிக்கொள்ள விரும்புகின்றோம்.
நான்காவது ஹெல்ப் லைன் ஒன்று உண்டு! அது ஹியூமன் ஹெல்ப்
லைன் அல்ல ! அது டிவைன் ஹெல்ப் லைன் ! அது ஒரு தெய்வீக
உதவி! அது மீட்பராம் இயேசுவிடமிருந்து வரும் அற்புத உதவி,
ஆனந்த உதவி, அதிசய உதவி. அந்த உதவியைப் பெற நாம்
செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே!
ஆண்டவரை உதவிக்கு அழைத்தால் போதும்!
வறுமையும் நோயும் பாவமும் மரண பயமும் சூழ்ந்து நின்று
நம்மை அச்சுறுத்தும்போது கூனிக்குறுகிப்போய்
கலக்கத்திற்கும் கவலைக்கும் கண்ணீருக்கும் இடம்
கொடுக்காமல் எல்லா ஆற்றலும் மிக்க இயேசு ஆண்டவர் பக்கம்
நமது நம்பிக்கை நிறைந்த கண்களைத் திருப்புவோம். நாம்
கிறிஸ்துவின் உடல் (இரண்டாம் வாசகம்). ஆகவே அவர் நமது
உடலிலுள்ள எந்த உறுப்பையும் துன்புற விடமாட்டார். அவர்
நமது அழுகையை அழித்து, வருத்தத்தைப் போக்கி, நம்மை வளமுடன்
வாழவைப்பார் (முதல் வாசகம்).
எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் வகுப்பு ஆசிரியர் அவர்களுடைய
முக்கியமான பிரச்சினை என்னவென்று கேட்டதற்கு அவர்கள்: "எங்கள்
பெற்றோர்கள்" என்றனர். பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களின்
கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற விரும்புகின்றனர். கல்லூரி
மாணவர்களின் தாரக மந்திரம்: "கல்லூரிக்குக் 'கட்' அடிப்போம்;
தேர்விலே 'பிட்' அடிப்போம்; பெண்களைச் 'சைட்' அடிப்போம்",
இது கல்லூரி மாணவர்களின் கனாக்காணும் காலங்கள்! ஒரு கணவர்
தம் மனைவியிடம், "நீ என்னை உன் நாயைப் போல் நடத்து; நாயோடு
கொஞ்சி விளையாடுவதுபோல் என்னுடனும் கொஞ்சி விளையாடு:
நாயுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுவது போல எனக்கும் வயிறு
நிறைய சாப்பாடு போடு, எல்லாவற்றிற்கும் மேலாக, நாயை இரவிலே
அவிழ்த்து விடுவதுபோல, என்னையும் அவிழ்த்துவிடு: தேடாதே"
என்றார். இது ஒரு கணவர் காணும் விடுதலை வாழ்வு!
இன்றைய உலகிலே எல்லாருமே எவ்விதக் கட்டுப்பாடு மின்றிச் சுதந்திரப்
பறவையாகப் பறக்க விரும்புகின்றனர். ஆனால், விடுதலைப்
பெருமூச்சு விடுவதற்குப் பதிலாக ஏக்கப் பெருமூச்சு
விடுகின்றனர். விடியலைத் தேடுபவர்கள் அமாவாசை இருட்டில்
அகப்பட்டு அவதிப்படுகின்றனர். எங்கே விடுதலை? என்று வினவுகின்றனர்,
இவ்வினாவுக்கு விடையளிக்கிறது இன்றைய அருள்வாக்கு வழிபாடு.
கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து
விடுவித்து, அவர்களுடன் உடன்படிக்கை செய்தார். ஆனால் அந்த
மக்களோ கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கட்டளைகளை
மீறி, பிற இனத்தெய்வங்களை வழிபட்டனர். அதன் விளைவாகப் பல்வேறு
நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். கி.மு.
5ஆம் நூற்றாண்டில் பாபிலோனியாவுக்கு யூதர்கள் அடிமைகளாகச்
சென்றனர்.
50 ஆண்டுகள் அடிமை வாழ்வுக்குப் பின்னர், சீருஸ் மன்னர்
அவர்களுக்கு விடுதலை அளித்தார். அவர்கள் 61 ருசலேம்
திரும்பி, ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பி ஆண்டவரை வழிபட
முயற்சி எடுத்தனர், எஸ்ரா என்ற சட்ட வல்லுநர் மக்களுக்குச்
சட்ட நூலை வாசித்தபோது அவர்கள் அழுதனர் (முதல் வாசகம்).
கடவுளும் அவருடைய அருள் வாக்கு அடங்கிய மறைநூலும் அவர் களுக்கு
விடுதலை கொடுத்தது. கடவுளை விட்டு அகலும் எவரும் அடிமைகளாகின்றனர்;
கடவுளை நெருங்கும் எவரும் விடுதலை பெறுகின்றனர். கடவுளுக்கு
வெளியே தேடும் விடுதலை வெறும் பகற்கனவே! இன்றைய நற்செய்தியில்
கிறிஸ்து நாசரேத்து தொழுகைக் கூடத்தில் இறைவாக்கினர் எசாயா
நூலிலிருந்து தம்மைக் குறித்து எழுதப்பட்ட பகுதியை (எசாயா
61:1-2) வாசித்து, மக்களிடம் கூறியது: "நீங்கள் கேட்ட இந்த
மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக்கா 4:21). மறைநூலின்
மையம் கிறிஸ்து. மறைநூலில் எழுதப்பட்ட எல்லா இறைவாக்குகளும்
கிறிஸ்துவில் நிறைவடைகின்றன, மறைநூல் கிறிஸ்துவுக்குச்
சாட்சியம் அளிக்கிறது (யோவான் 5:39). முற்காலத்தில் இறைவாக்கினர்
வாயிலாக முன்னோரிடம் பேசிய கடவுள் இறுதிக் காலத்தில்
கிறிஸ்து வழியாகப் பேசியுள்ளார் (எபிரேயர் 1:1).
கிறிஸ்து மக்களுக்கு வழங்கிய செய்தி விடுதலைச் செய்தி. எளியவர்களுக்கு
நற்செய்தி சொல்லவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு
வழங்கவும் அவர் இவ்வுலகிற்கு வந்தார், கிறிஸ்து கொண்டு வந்த
விடுதலை வெறும் புறவிடுதலை மட்டுமல்ல, மாறாக அக விடுதலை,
ஆன்மீக விடுதலை, அவர் யூதர்களிடம் கூறியது: "பாவம்
செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. மகன் உங்களுக்கு விடுதலை
அளித்தால்தான் நீங்கள் உண்மையில் விடுதலை பெற்றவராய் இருப்பீர்கள்"
(யோவான் 8:34-36). கிறிஸ்து தான் உலகின் பாவங்களைப்
போக்கும் உண்மை யான செம்மறி (யோவான் 1:29), அவர் பலருடைய
பாவ மன்னிப்புக்காக இரத்தம் சிந்தினார் (மத்தேயு 26:28).
நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். 38 ஆண்டுகளாகத்
தீராத நோயால் அவதிப்பட்ட ஒருவரைக் குணப்படுத்திய கிறிஸ்து,
மீண்டும் அவரைப் பார்த்த போது அவரிடம் கூறியது: "பாரும்!
நீர் நலமடைந்துள்ளீர். இதை விடக் கேடான எதுவும் உமக்கு நிகழாதிருக்க
இனிப்பாவம் செய்யாதீர்" (யோவா 5:14). ஒரு தீய செயல் மற்றொரு
தீய செயலுக்கு வித்திடுவதால், தீக்குப் பயப்படுவதை விடத்
தீய செயலுக்குப் பயப்பட வேண்டும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும் (குறள் 202)
அழிவுக்குச் செல்லும் அகலமான பாதையில் செல்லாது.
வாழ்வுக்கு இட்டுச் செல்லும் இடுக்கமான வாயிலின் வழியாகச்
செல்ல அழைப்பு விடுக்கிறார் ஆண்டவர் (மத்தேயு7:13-14). பாவங்களில்
எல்லாம் கொடிய பாவம் வடிகட்டிய தன்னலம். பிறரைப் பற்றி அலட்டிக்
கொள்ளாத நிலை. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல்
திருச்சபையை, இறைமக்கள் சமூகத்தை ஓர் உடலுக்கு ஒப்பிடுகிறார்.
உடலில் ஒர் உறுப்பு துன்புற்றால், உடல் முழுவதும்
துன்புறுகிறது. உடலில் ஓர் உறுப்பு இன்புற்றால், முழு உடலும்
இன்புறுகிறது (1 கொரி 12:26). அவ்வாறே நாமும் பிறருடைய
துன்பத்தை நம்முடைய துன்பமாகவும், பிறருடைய இன்பத்தை நம்முடைய
இன்பமாகவும் கருதி. அழுவாரோடு அழுது மகிழ்வாரோடு மகிழ
வேண்டும் (உரோ 12:15) நமக்குச் சமுதாய அக்கறை வேண்டும். பிறருடைய
துன்பத்தை நம்முடைய துன்பமாகக் கருதாவிட்டால், நம்மிடம் பகுத்தறிவு
இருந்தும் அது பயனற்றது.
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை (குறள் 315)
ஒரு பெரியவர் ஒரு குடும்பத் தலைவரிடம், "மனிதராகப் பிறந்ததற்கு
நாலு பேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்றார். அதற்குக்
குடும்பத் தலைவர், "நானும் நாலு பேருக்கு நன்மை
செய்கிறேன். அவர்கள் எனது மனைவியும் எனது மூன்று பிள்ளைகளும்"
என்றார், நமது அன்பு நமது குடும்பம் என்னும் குறுகிய வட்டத்துக்குள்
முடங்கிவிடாமல் மற்றவர்களையும் அரவணைக்கும் உலகளாவிய அன்பாக
இருக்கவேண்டும். புறநானூற்று ஆசிரியர் இந்த உலகம் இன்னும்
அழியாமல் இருப்பதற்குக் கூறும் காரணம்: இவ்வுலகில் இன்னும்
தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் மனிதர் ஒரு சிலர் இருப்பதால்,
சுதந்திர தினம் - அன்னியர் ஆட்சியினின்றும் ஆதிக்கத்தினின்றும்
பாரதம் விடுதலை பெற்ற நாள். - குடியரசு தினம் - புதிய பாரதத்தை
எப்படிக் கட்டி எழுப்பப் - போகிறோம் என்பதை நிருணயித்த
நாள்.
1947 ஆகஸ்டு 15ல் இந்தியா விடுதலை கண்டது. உடனே புதிய குடியரசுக்கான
ஏற்பாடுகள் தொடங்கின. அதன் முதல் - முக்கியத்தேவை இந்தியக்
குடியரசுக்கென ஓர் அரசியல் சாசனம் - வேண்டும் என்பதே. அம்பேத்கார்
போன்ற மேதைகளால் - வரையப்பட்டதுதான் நமது இந்திய அரசியல்
சாசனம். அதன் * அடிப்படையில் 1951 ஜனவரி 26ல் இந்தியா குடியரசானது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் - இன்று புதிய பாரதம் எப்படி
இருக்கிறது? இந்தியாவெங்கும் ஆறுமாதம் சென்று பார்த்த அயல்நாட்டுச்
சுற்றுலாப் பயணி சொன்னான்: "நான் இங்கே நிறைய நிறைய தமிழர்களைப்
பார்க்கிறேன், வங்காளிகளைப் பார்க்கிறேன், மலையாளிகளைப்
பார்க்கிறேன் மராட்டியர்களைப் பார்க்கிறேன். இந்தியர்களை
எங்கும் காணோம். நான் சந்தித்தவனெல்லாம் நான் தமிழன், நான்
தெலுங்கன், நான் சீக்கியன் ... என்றுதான் சொன்னானே தவிர
நான் இந்தியன் என்று எவனும் சொல்லவில்லை"
இன்றைய இந்தியாவின் இந்த இழிநிலைக்குக் காரணம் என்ன ?
"முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்
செப்புமொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள்"
என்று பாடினான் பாரதி. ஆனால் இன்று செப்புமொழி பதினெட்டுப்
போல் சிந்தனை பதினெட்டாகிவிட்டது. அவனவன் தன் மொழி, தன்
இனம், தன் நலம் என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டதால் தமிழர்கள்
பெருகிவிட்டனர், கன்னடர்கள் பெருகிவிட்டனர்.....
இந்தியா இந்தியர்களை இழந்து கொண்டிருக்கிறது.
தமிழ்க் கிறிஸ்தவ உலகுக்குள் புகுந்து பார்த்தால் இங்கே
வெள்ளாளர் உண்டு , வன்னியர் உண்டு , பரதர் உண்டு , பறையர்
உண்டு மறவர் உண்டு, பள்ளர் உண்டு .... கிறிஸ்தவர்கள் எங்கே
என்று கேட்க நேருமோ? கிறிஸ்தவம் கிறிஸ்தவர்களை இழந்துகொண்டிருக்கிறது.
ஏற்ற அடித்தளம் இல்லாமல் எதையோ கட்டி எழுப்பிக்
கொண்டிருக்கிறோம். புனித பவுல் திருஅவை இயேசுவின் மறை உடல்.
நாமெல்லாம் அதன் உறுப்புக்கள் (1 கொரி. 12:12) என்ற சிந்தனையைத்
தருகிறார். ஆனால் இங்கோ வாயும் வயிறும் மூக்கும் முழியும்
ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. இலட்சிய உணர்விழந்து
இயேசுவின் மறையுடல் சிதறிச் சின்னாபின்னமாகிக்
கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் அடித்தளம் சரியில்லை. இறைவனின்
வார்த்தையைப் புறக்கணித்து கிறிஸ்தவ வாழ்க்கையை உருவாக்க
முடியாது. இயேசுவின் மறையுடலைக் கட்டி எழுப்ப முடியாது.
கி.மு. 500 காலக் கட்டத்தில் பபிலோனியாவின் அடிமைத்தனத்தினால்
உள்ளம் ஒடிந்து மாண்பிழந்து நின்ற யூத மக்களுக்கு எஸ்ரா,
நெகேமியா ஆகிய தலைவர்கள் இறை வார்த்தையைக் கொண்டுதானே ஊக்கமும்
மகிழ்ச்சியும் ஊட்டினர்! (நெகேமி. 8:2-10). ஆவியும் உயிருமான
இறைவார்த்தையால் புதிய சமுதாயம் படைத்தனர்!
பாவத்தால் சிதைந்த , சீரழிந்த உலகம் புதிதாக மறுப்படைப்பாக
வேண்டும். இந்த இலட்சியப் பணிவாழ்வின் தொடக்கத்தில் இயேசுவுக்கு
ஒரு வழிகாட்டுதல் தேவை. எதன் அடிப்படையில் பணியைத் தொடர்வது
என்ற அவரது தேடலுக்குக் கிடைத்த பதிலே நற்செய்தி வாசகம்.
எசாயாவின் சுருள் ஏட்டில், தான் வாசித்ததையே இயேசு தமது சாசனமாக்குகிறார்.
இறைவார்த்தையின் ஒளியில் அவருக்கு இலட்சியத் தெளிவு
கிடைத்துவிட்டது. ஏழைகளுக்கு நற்செய்தி, ஒடுக்கப்பட்டோருக்கு
உரிமை வாழ்வு, சிறைப்பட்டோருக்கு விடுதலை... என்ற அவரது பட்டியல்
தெளிவாகத் தெரிகிறது. தான் யார், தன்னை அனுப்பிய தந்தையின்
விருப்பமென்ன; தனது பணித்தளம் எத்தகையது, தான் சார்ந்த சமூகம்
எப்படிப்பட்டது என்ற புரிதல் வேண்டாமா? உணவைக் கேட்பது
கொக்கா நரியா என்பது தெளிவுபடத் தெரிந்தால்தானே, குவளையில்
அதனை வழங்குவதா தட்டில் வழங்குவதா என்பதே பிடிபடும்!
மலையேறும் வீரன் ஒருவன் இமயமலையின் உச்சியை அடைய முயன்றான்.
பல்வேறு சிரமங்களுக்கிடையே இலட்சியத்தைச் சாதித்தான்.
"எப்படி இந்த கடுங்குளிரையும் செங்குத்தான பனிப்பாறைகளையும்
சமாளித்து உச்சியை அடைந்தீர்கள்?" என்று கேட்டபோது அவன்
சொன்னான்: "எனது உடல் உச்சியை அடைவதற்கு முன்னால் என் உள்ளம்
அங்கே சென்றுவிட்டது. இதயம் அங்கே இருந்ததால் எல்லாத் தடைகளையும்
எளிதாக மேற்கொள்ள முடிந்தது".
இலட்சியங்களை வகுத்துக் கொள்ளாமல் வாழ்பவனால் இமயங்களைத்
தொட முடியாது. எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களால்
எதையும் சாதிக்க முடீயாது. இலக்குகளும் இலட்சியங்களும் கண்முன்னே
கொண்டு பயணம் செய்தவர்களே வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள்,
வையகத்தை மாற்றி இருக்கிறார்கள்.
காட்டு நாய்களுக்கெல்லாம் தலைவராக இருந்த நாய் ஒன்று ஒரு
காட்டு முயலைத் துரத்தியது. நாயின் கால்கள் முழுவதும்
காட்டு முள்கள் குத்தி குருதி வடிந்தது. ஆனால் தன்
கௌரவத்தைக் காத்துக் கொள்ளத் தொடர்ந்து முயலை விரட்டி
ஓடியது. எதிரே ஒரு பள்ளத்தாக்கு அதில் நாய் மயங்கிக் கீழே
விழுந்தது.
தலையில் அடி. நாய் சாகும் தறுவாயில் இருந்தது. இரக்கம்
மிகுந்த முயல் அதன் பக்கத்தில் சென்று பரிவோடு "நீ என்
எதிரிதான். இருப்பினும் உன் கடைசி ஆசையை நிறைவேற்றி
வைக்கிறேன். உன் கடைசி ஆசை என்ன?" என்று கேட்டது.
நாயோ, "எனக்குக் கடைசி ஆசை என்று ஒன்றுமில்லை. கடைசி
சந்தேகம் ஒன்று இருக்கிறது. நீ அதைத் தீர்த்து வைத்தால்
நான் அமைதியாகச் சாவேன். என்னை விட எப்படி உன்னால் வேகமாக
ஓடி முடிந்தது?" என்றது. அதற்கு முயல் "நீ வயிற்றுக்காக
ஓடி வந்தாய். நான் உயிருக்காக ஓடினேன். வயிறு பெரியதா,
உயிர் பெரியதா ? உயிர்தான் பெரியது. அதனால்தான் நான்
வென்றேன் " என்று பெருமிதத்தோடு சொன்னது. "ஓ அப்படியா!"
என்று சொல்லி நாய் உயிர்விட்டது.
ஒருவனது குறிக்கோளைப் பொறுத்தே அவனது வாழ்க்கையில் வேகம்
பிறக்கும், வெற்றி அமையும்!
தெளிவான குறிக்கோள் இருந்தாலும் தெளிவற்ற செயல்பாடுகள்
பணியின் பயனைப் பாதிக்கும். வாழ்வில் முன்னுக்கு
வரவேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துவிட்டு, தீய
பழக்கங்களில் சிக்கி சோம்பித் திரிந்தால் இலட்சியத்தால்
என்ன பயன்? இறைபணி ஆற்ற ஒவ்வொருவரும் தனித்தனி
அருங்கொடைகளைப் பெற்றிருக்கிறோம். இதனை விளக்கும் வண்ணம்
திருத்தூதர் பவுல் 1 கொரி. 12:29,20இல் எழுப்பும் கேள்வி
ஆழ்ந்த சிந்தனைக்குறியது. ''எல்லோருமே திருத்தூதர்களா?
எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? .....
எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? .... இல்லையே!
எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்''
"நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி
திருமுழுக்குப் பெற்றோம்" (1 கொரி. 12:13). இலக்குத்
தெளிவானது. அதற்கு ஏற்ப அமையட்டும் நமது செயல்பாடுகள்.
இறையாட்சி மலரப் புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இயேசு
நம்மை அழைக்கிறார். நமது பதில்? மிதமிஞ்சிய பேச்சு என்று
புறக்கணிக்கப் போகிறோமா? அல்லது அவரது வார்த்தையைக் கேட்டு
வியந்து அத்துடன் நின்றுவிடப் போகிறோமா?
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
இயேசு தன் பணிவாழ்வின் துவக்கத்தில்,
அவர் ஆற்றிய முதல் உரை, லூக்கா நற்செய்தி 4ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
"
ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது"
என்று ஆரம்பமாகும் நற்செய்தி
வார்த்தைகள், துறவியர், அருள்பணியாளர், மக்கள் பணிகளில் ஈடுபடுவோர்
பலருக்கும் உந்துசக்தியாக விளங்குகின்றன. பல அழைப்பிதழ்களிலும்,
பாடல்களிலும் இந்த வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதை நாம் காணலாம்.
மனதைத் தூண்டும் இவ்வார்த்தைகள், இயேசு தன் பணிவாழ்வைத் துவக்கியபோது
அறிவித்த 'கொள்கை விளக்க அறிக்கை' (Manifesto)!
பல அரசியல் தலைவர்களின் உரைகளைக் கேட்கும்போது, என் மனம்
'ஸ்டீரியோ' பாணியில் வேலை செய்வதை உணர்ந்திருக்கிறேன். உங்களுக்கும்
இதையொத்த அனுபவம் இருந்திருக்கும். அதாவது, தலைவர்களின்
கூற்றுக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், நமது
மனங்கள், அக்கருத்துக்களை ஏற்று, அல்லது, மறுத்து, பேசிக்
கொண்டேயிருக்கும். பெரும்பாலும் மறுப்பு ஒலிகளே நம் மனதில்
அதிகம் எழும். இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது... உரையாற்றும்
தலைவருக்கும், அவரது பேசும் கூற்றுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள்.
"
இவரை நமக்குத் தெரியாதா? இவர் சொல்வதற்கும், இவரது
வாழ்வுக்கும் தொடர்பில்லையே!"
என்ற எண்ணங்கள் 'ஸ்டீரியோ'
பாணியில் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
இயேசு தன் பணிவாழ்வின் துவக்கத்தில் நாசரேத்து தொழுகைக் கூடத்தில்
துவக்க உரையாற்றினார். தன் 'கொள்கை விளக்க அறிக்கை'யை மக்களுக்கு
அளித்தார். இதோ இன்றைய நற்செய்தியில் தன் பணிவாழ்வைப் பற்றி
இயேசு கூறும் வார்த்தைகள்:
லூக்கா நற்செய்தி 4 16-21
இயேசுவின் இந்த அற்புத உரையைப் பல்வேறு கோணங்களில் நாம்
சிந்திக்கலாம். இன்றைய நற்செய்தியின் இறுதியில் அவர்
சொல்லியிருக்கும் ஒரே ஒரு கூற்றை மட்டும் சிறிது ஆழ்ந்து
சிந்திக்க உங்களை அழைக்கிறேன்... "
நீங்கள் கேட்ட இந்த மறைநூல்
வாக்கு இன்று நிறைவேறிற்று"
என்று இயேசு தன் உரையை நிறைவு
செய்கிறார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள், நாளை நல்ல காலம் பிறக்கும்
என்று கனவு காண்பதற்கு அதிகம் பழகிப் போயிருந்தனர். நாளை
நமக்கு விடிவு வரும் என்று அடிக்கடி பேசிவந்த அவர்களிடம்,
இயேசு அந்தத் தொழுகைக் கூடத்தில் நின்று முழங்கிய வார்த்தைகள்
இவை: "நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று."
இன்று, இப்போது, இங்கு... நிறைவு, விடிவு, மீட்பு வந்துவிட்டது
என்று இயேசு கூறினார். தான் கூறியதை நம்பியவர்; வாழ்ந்தும்
காட்டியவர், இயேசு.
இயேசு உலகில் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு
பொழுதையும் முழுமையாக வாழ்ந்தவர். நேற்று, நாளை என்பதெல்லாம்
அவர் மனதை, வாழ்வை ஆக்ரமிக்கவில்லை. ஆக்ரமிக்க விடவில்லை
அவர். அவர் ஆற்றிய புதுமைகள், சொன்ன சொற்கள், இவற்றைச்
சிந்தித்தால், அவர் நிகழ்காலத்தில், நிகழ் நொடியில் வாழ்ந்தவர்
என்பதைப் புரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு
சில...
நாம் கடந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்து கொண்ட கானா திருமணப்
புதுமை, இயேசு செய்த முதல் அருங்குறி என்று சொல்லப்படுகிறது.
அந்தப் புதுமையில், தண்ணீர் திராட்சை இரசமாய் மாறியதைக்
குறிக்க அவர் சொன்ன வார்த்தைகள்: (யோவான் 2:8) "இப்போது
மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்." அவர்
செய்த முதல் புதுமையிலேயே இப்போது என்ற எண்ணத்தை
விதைத்தார்.
லூக்கா நற்செய்தியில் பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும்போது,
"
நீங்கள் நாளைச் சென்று, குருக்களிடம் காட்டுங்கள்"
என்று
சொல்லாமல், (லூக்கா 17:14) "
நீங்கள் போய் உங்களை குருக்களிடம்
காட்டுங்கள்"
என்றார். இயேசு இப்படி சொன்னபோது, தொழுநோய்
அவர்களை விட்டு நீங்கியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போதே
நம்பிக்கையுடன் எழுந்து போனார்கள்; போகும் வழியில் குணமடைந்தார்கள்.
இதேபோல், (மத்தேயு 9:6) இயேசு, முடக்குவாதமுற்றவரைப்
பார்த்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு உடனே நடக்கச்
சொன்னார். பாலை நிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த
புதுமையில் (லூக்கா 9:13, மாற்கு 6:38) நகருக்குச் சென்று
உணவு வாங்கி வரலாமா என்ற எதிர்காலத் திட்டம் தீட்டிய சீடர்களிடம்,
"உங்களிடம் இங்கே எவ்வளவு உணவிருக்கிறது?" என்ற கேள்வியுடன்
அந்தப் புதுமையை ஆரம்பித்தார்.
இயேசு சொல்லித்தந்த அந்த அற்புதமான செபத்திலும், "எங்கள்
அனுதின உணவை எங்களுக்கு நாளை தாரும்." என்றா சொல்லித்தந்தார்?
இல்லையே. மாறாக, இன்றே தாரும் என்றார். இன்று இப்போது என்று
வாழ்ந்து காட்டிய இயேசு, இறுதியில் கல்வாரியில் சிலுவையில்
தொங்கியபோதும் அதே எண்ணங்களை வெளிப்படுத்தினார். (லூக்கா
23:43) "இன்றே என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்று
இயேசு கூறியது அவரது இறுதி வாக்கியங்களில் ஒன்று.
இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டவர் விண்ணரசில் நுழைய அனுமதி
கேட்டபோது, அந்தக் கொடிய துன்பத்தின் உச்சியில், இயேசு விரக்தியுடன்,
"
என்ன பெரிய அரசு... அந்த அரசுக்கு வந்த கதியைத்தான்
பார்க்கிறீரே. ஒரு வேளை நாளை அந்த அரசு வரலாம். அப்போது
நான் அந்த அரசில் ஒரு வேளை நுழைந்தால், நீரும் நாளை என்னோடு
வரலாம்"
என்று நம்பிக்கை இழந்து சொல்லியிருக்கலாம். ஆனால்,
அதற்கு மாறாக, இயேசு கூறிய நம்பிக்கையூட்டும் சொற்கள் இவை:
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக
உமக்குச் சொல்கிறேன்." இயேசு இன்றையப் பொழுதில், இப்போதைய
நொடியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு இதைவிட
சக்திவாய்ந்த சாட்சி இருக்க முடியாது. நிகழ் பொழுதின் அருள்
என்று பொருள்படும் The Grace of the Present Moment என்ற
ஆங்கிலச் சொற்றொடரின் முழு விளக்கமாக இயேசு வாழ்ந்தார்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஈடுபாட்டுடன் செய்தால்,
வாழும் ஒவ்வொரு நொடியையும் ஈடுபாட்டுடன் வாழ்ந்தால், உண்மையான
விடுதலை பெறமுடியும். நிகழ் பொழுதின் அருளில் வாழ்வது, மனதுக்கு
மட்டுமல்ல, உடலுக்கும் அதிகப் பயன் தரும்.
நாசரேத்தின் தொழுகைக் கூடத்தில் இயேசு வாசித்த ஏசாயாவின்
சொற்கள், பல சமுதாயச் சிந்தனைகளை எழுப்பக்கூடியவை; அவற்றைப்
பற்றி சிந்திக்காமல், இன்று, இப்போது என்று நாம் சிந்தித்தது,
இன்றைய நற்செய்திக்குத் தகுந்த விளக்கம் இல்லையோ என்று உங்களில்
ஒரு சிலர் தயங்கலாம். உடலளவிலும், மனதளவிலும் கட்டுண்டு கிடந்த
மனித சமுதாயத்தை விடுவிக்கவே தான் வந்ததாக, இயேசு கூறிய இந்த
வார்த்தைகளுக்கு விளக்கங்கள் தேவையில்லையே! சமுதாய நீதி பற்றிய
கனவுகள், என்றாவது, எப்போதாவது, நனவாகுமா என்று, ஏக்கத்துடன்
வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இன்றே, இப்போதே அவை
நனவாகிவிட்டன, நிறைவேறிவிட்டன என்று இயேசு சொன்ன வார்த்தைகள்,
நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். சமுதாய மாற்றங்கள் இனிவரும்
என்றல்ல, இப்போதே வந்துவிட்டது என்று அவர்களை நம்பவைக்க இயேசு
முயன்றது, அவரது முதல் அரசியல் வெற்றி என நான் கருதுகிறேன்.
இன்று, இப்போது என்று வாழ்வில் நாம் முழுமையாக ஈடுபட்டால்...
அவ்வண்ணமே நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஈடுபட்டால்,
சமுதாயத்தில் குறைகள் அதிகம் தோன்றாது. அப்படியே தோன்றும்
குறைகளைக் களைய அன்றே, அப்போதே செயல்பட்டு தீர்வுகளைக் கண்டால்,
உண்மை விடுதலை, தூரத்துக் கனவாக இருக்காது
ஒன்றே செய்யினும், நன்றே செய்வோம்;
நன்றே செய்யினும், இன்றே, இப்போதே செய்வோம்.
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (நெகே. 8:2-6, 8-10)
கி.மு. 587-இல் பாபிலோனிய மன்னன் நெபுக்கதனேசர்
எருசலேம் நகர் மீது படையெடுத்தது மட்டுமல்லாமல்
யூதர்கள் அனைவரையும் தனது நாட்டிற்கு அடிமைகளாகக்
கொண்டு செல்கிறான். ஆனால் கி.மு. 536-இல் சைரசு என்ற
மன்னன் ஆட்சிக்கு வந்ததும் அடிமைகளாக இருந்த
யூதர்களுக்கு விடுதலை வழங்குகிறான். அப்படி விடுதலை
பெற்றவர்களில் பலர் நாடு திரும்பவில்லை. ஏனென்றால்
சென்ற இடத்திலேயே சிலர் வாணிபம் செய்து தங்கள் வாழ்வை
அமைத்துக் கொண்டதாலும், சிலர் அந்நாட்டு அரசாங்க
அலுவல்களில் ஈடுபட்டதாலும் அங்கேயேத் தங்கிவிட்டனர்.
எனவே பாபிலோனிலிருந்து நாடு திரும்பியவர்கள் யாரென்றால்
வசதிகள் இல்லாத ஏழை எளிய மக்களே. சொந்த நாடு திரும்பீய
இவர்கள் தான் பாழ்பட்ட சீரழிந்துக் கிடந்த எருசலேம்
நகரையும் எருசலேம் ஆலயத்தையும் மிகவும் சிரமப்பட்டு
செப்பனிட்டு மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். தாங்கள்
இறைவனின் சினத்திற்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டோம் என்பதை
உணர்கிறார்கள். இனிமேல் இந்நிலை ஏற்படக்கூடாது
என்பதற்காக மனம் மாறியவர்களாய் உண்மை இறைவனுக்குக்
கீழ்ப்படிந்து வாழவும். திருச்சட்ட நூலின் படி வாழவும்
உறுதி எடுக்கின்றனர். அப்பொழுது குருவாய் இருந்து
எஸ்ராவிடம் திருநூலை வாசிக்கும்படி அனைவரும் தண்ணீர்
குளத் திற்கு அருகே வருகின்றனர். இச்சூழலில் திருநூல்
வாசித்துக் காட்டப்படுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி. 12:12-30)
தொடக்கக்கால திருச்சபையில் திருமுழுக்குப்பெற்ற உறுப்-
பினர்களாக இருந்தவர்கள் யாரென்றால் யூதர்கள்,
கிரேக்கர்கள், அடிமைகள், உரிமைக் குடிமக்கள், பிற இன
மக்கள் ஆகியோர். இவர்கள் ஒவ்வொருவரும் தூய ஆவியின்
அருட்கொடைகளையும் பல்வேறு வரங்களையும் பெற்றவர்களாக
இருந்தனர். இதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றி
மக்களிடையே ஏற்றத் தாழ்வு தலை தூக்கத் தொடங்கியது. இதை
உணர்ந்தத் திருத்தூதரான பவுல், தூய ஆவியின் வரங்கள்
பலருக்கும் பல்வேறு வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டு
இருப்பது தன் சொந்த வாழ்வுக்காக அல்ல, மாறாக,
திருச்சபையின் வளர்ச்சிக்காக என்பதைச் சுட்டிக் காட்ட
விரும்பி நாம் அனைவரும் கிறிஸ்துவின் மறையுடலாகவும்,
அதன் உறுப்புகளாகவும் இருக்கிறோம் என்பதை
அறிவுறுத்துகிறார். பொது நலத்தை மறந்து தன்னலத்தோடு
வாழுகின்ற மக்களைக் கிறிஸ்துவின் மறையுடலோடு இணைக்க
வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் ஓர் ஒன்றுபட்ட
சமுதாயம் காண அழைப்பு விடுக் கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 1:1-4, 4:14-21)
யூதச் சமுதாயத்தினர் அனைவரும் தங்களை மீட்க மெசியா
வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
இவர்களைப் போலவே பரிசேயர், சதுசேயர், தலைமைக்
குருக்கள், அனைவரும் மெசியாவின் வருகைக்குக்
காத்துக்கொண்டிருந்தனர். இதனால் யூத வழக்கப்படி ஓய்வு
நாளில் செப கூடங்களுக்குச் சென்று மறைநூலைப்
படிப்பதும், கேட்பதுமாக இருந்தனர். இத்தகைய சூழலில்தான்
இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் தனது பணியை
கலிலேயாவில் தொடங்கி ஊர் ஊராகச் சென்று, இறையாட்சி
பற்றி அறிவித்தும் அற்புதங்கள் செய்தும், போதித்தும்
தன்னைப் பற்றி மக்கள் அறிந்திடச் செய்கிறார்.
இயேசுவும் ஓய்வு நாளில் செபக் கூடம் செல்ல அங்கு
அவரிடம் எசாயா இறைவாக்கினர் எழுதிய நூல்
கொடுக்கப்படூகிறது. தன்னைக் குறித்து மறைநூலில்
எழுதப்பட்டுள்ளதை மக்கள் உணர்ந்து கொள்ளவே இயேசுவும்
திருநூலைப் பக்தியுடன் படிக்க மற்றவர்கள் ஆவலுடன் அதை
கேட்கின்றனர்.
மறையுரை
தவிக்கின்ற மனிதனுக்குத் தேவை வாழ்வு பெற நல்வழி
காட்டும் திருநூல், அது என்றும் அழியா இறைவார்த்தைகள்
அடங்கிய அற்புதநூல். அது அறியப்பட வேண்டும். புதிய
சமுதாயம் படைக்கப்பட வேண்டும். ஏனென்றால் திருநூல்
இறைவன் எழுதியக் கடிதம். பதில் எழுதுவது நம் கடமை.
இறை பேரன்பின் வெளிப்பாடுதான் திருநூல் என அறிய
வேண்டும். இன்றைய முதலாவது வாசகத்திலும், நற்செய்தி
வாசகத்திலும் திருநூல் பிரிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டது
என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது. உயிருள்ள
இறைவார்த்தைகள் அடங்கிய ஏட்டுச்சுருள் வாசிக்கப்பட
உயிரற்ற, உணர்வற்றிருந்த மனித இதயங்கள் உயிர்
பெறுகின்றன. அழுகின்ற நேரமல்ல. ஆனந்தம் அடைந்து ஆண்டவனை
மகிழ்விக்கின்ற நேரம் என்கின்றன.
முதல் வாசகத்திலே திருநூல் வல்லுநர் எஸ்ரா, மோசேயின்
வழி கிடைத்த திருநூலை அதற்குரிய மேடையில் நின்று கொண்டு
வாசிக்க, அதனை ஆடவரும், பெண்டீரும் புரிந்து கொள்ளும்
ஆற்றல் உள்ள சிறுவரும் கேட்கினறனர். எஸ்ரா நூலைத்
திறக்கும் பொழுது மக்கள் அனைவரும் எழுந்து நின்று
ஆண்டவரை வாழ்த்தி, பணிந்து முகங்குப்புற விழுந்து
ஆண்டவரைத் தொழுகின்றனர். திருச்சட்ட நூலில் எழுதப்பட்ட
வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து மக்களின் இதயம்
குத்தப்பட்டு அழுகின்றனர். ஆனால் எஸ்ரா "
இன்று கடவுளாகிய
ஆண்டவரின் புனித நாள். நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்.
வருந்த வேண்டாம். ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை"
என்று ஆண்டவரின் நாளினுடைய மகத்து- வத்தை மக்களுக்கு
எடுத்துரைக்கின்றார்.
அன்று இறைவார்த்தைகளைக் கேட்ட மக்கள் மனம் வருந்தி
அழுதனர். ஆனால் இன்றைய நாட்களில் திருப்பலிக்குப்
பங்கேற்க வருகிறவர்கள் இறைவாக்கு வழிபாடு
முடிந்தவுடன்தான் ஆலயத்திற்குள் நுழைகின்றனர். இது
எதைக் குறிக்கின்றது. நாம் ஆண்டவரின் மீது கொண்ட
அன்பையா? இறைவார்த்தையின் மீது கொண்ட
நம்பிக்கையின்மையையா? நற்செய்தி வாசகத்திலே, ஓய்வு நாளில்
இயேசு தொழுகைக் கூடத்தில் இறைவாக்கினர் எசாயா நூலை
வாசித்தப் பிறகு... "
நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு
இன்று நிறைவேறியது"
என்று கூறுகிறார்.
இதை கேட்டவுடன் நம் உள்ளத்தில் ஒரு கேள்வி எழலாம்.
மறைநூல் மட்டும் தானே வாசிக்கப்பட்டது அப்படி இருக்க
எப்படி "
இன்று நிறைவேறியது' என்று கூறினார்.
இறைவாக்கினர்கள் அனைவரது இறைவாக்கிலும் மீட்பரைப் பற்றி
முன் அறிவிக்கப்பட்டு திருநூலில் எழுதப்பட்டது இவரைக்
குறித்துதான் என்பது மிகத் தெளிவான உண்மை. இவரே
வார்த்தையானவர். இவரே மனுவுருவும் ஆனவர். இவரே மெசியா.
இறைவாக்கினர் எசாயாவின் வாயிலாக உரைக்கப்பட்ட மறைநூல்
வாக்கு முழுதும் இவரைப்பற்றியே எழுதப்பட்டுள்ளது.
உயிருள்ள ஆற்றல் மிக்க வார்த்தையானது பூமியின் மேல்
பொழிகின்ற மழையும், பனியும் போல் பலன் தராமல்
திரும்பாது என்பதையும், மக்களைச் செயல்பாட்டுக்கு
இட்டுச்செல்ல வல்லமையுடையதுதான் இறைவார்த்தை. வெறும்
வார்த்தையாக மட்டும் அமையாமல் செயல் வடிவம் பெற்று
பலனளிக்கிறது. "
நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியேத்
தீரும்"
(எசாயா 12:14) என்று ஆணித்தரமான உறுதியுடையது
என்பதையும் நாம் இன்றைய நாளில் உணர வேண்டும்.
இயேசு 40 இரவும் 40 பகலும் பாலைவனத்திலே உண்ணா
நோன்பிலிருந்து பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டவராய்
அலகையின் முதல் சோதனைகளை வென்ற வெற்றி வீரராய்த் தமது
பணியைக் கலிலேயா பகுதியில் தொடங்குகிறார்.
பணக்காரர்களாலும் மதகுருக்களாலும் ஓடுக்கப்பட்டடிருந்த
மக்கள் இவரது அருளால் விடுதலை பெற்றுக்கொண்டனர்.
இடிந்து போயிருந்த எருசலேம் மதிற்சுவர் போல வாழ்விழந்து,
தன்னிலை யிழந்து மறுவாழ்வை எதிர்பார்த்தவர்கள். தங்களின்
பாவச் சுமைகளைச் சுமக்க முடியாமல், பொருளாதாரச்
சமூகக் கலாச்சாரப் பண்பாடூுகளால் பாகுபாடு காட்டப்
பெற்றவர்கள் என்று சமுதா யத்தால் புறக்கணிக்கப்பட்ட
மக்களுக்கு மீட்பு வழங்கி இறை- வார்த்தைகளை
நிறைவேற்றுகின்றார். தன் பணீயாலும் வாழ்வாலும்
போதனையாலும் மக்களை சர்த்து புதிய சமுதாயம் அமைத்து
கடவுளிடம் கொண்ட உடன்படிக்கைக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறார் இயேசு.
அடிமைத்தளையிலிருந்து மீண்டு வந்த மக்கள் மீண்டும் ஒரு
புதிய சமுதாயமாகத் தங்களைத் திருசட்ட நூலின் வழியாக
உருமாற்றுகின்றனர். இதைப்போல் இயேசுவும் தன்
அன்பினால், அருட்செயல்களால், மன்னிப்பால், தன்னையே
பலியாக்கி ஓர் புதிய சமுதாயம் படைக்கிறார். அதுதான்
நாம் வாழும் திருச்சபை. அப்படி படைக்கப்பட்ட புதிய
சமுதாயத்தின் அமைப்பானது எப்படி இருக்க வேண்டும்
என்றுதான் 2-ஆம் வாசகத்தில் பவுல் தெளிவு
படூத்துகின்றார். புதிய சமுதாயமான திருச்சபையிலே,
திருமுழுக்குப் பெற்றவர்களின் எண்ணிக்கைப் பெருகிக்
கொண்- டிருந்த காலம் அது. திருச்சபையில்
உறுப்பினர்களாய் இருந்தவர்கள் யாரென்றால், யூதர்கள்,
கிரேக்கர்கள், அடிமைகள், உரிமைக் குடிமக்கள் பிற
இனத்தாரில் திருமுழுக்குப் பெற்றவர்கள் எனப் பலர்
இருந்தாலும், ஒவ்வொருவரும் தூய ஆவியின் கொடைகளாலும்
வரங்களாலும் நிரப்பப்பட்டவர்களாக இருந்தனர். இதனால்
இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் பல தோன்றின.
எனவேதான் பவுல், ஆலியின் ஹங்கள் பல்வேறு வகையில்
பகிர்ந்தளிக்கப் பட்டது, ஒருவருடையத் தனிப்பட்ட சொந்த
வாழ்வுக்கு அல்ல, மாறாகத் திருச்சபையின் வளர்ச்சிக்காக
எனச் சுட்டிக் காட்டுகிறார். நமது உடலில்
உறுப்புக்கள் பலவாறு இருந்தாலும் சீரான வாழ்வுக்கும்,
உடலின் வளர்ச்சிக்கும் ஒன்றுக்கொன்று துணையாக இருப்பது
போல புதிய சமுதாயததின் உறுப்பினர்கள் அனைவரும்
ஒன்றிணைந்து கிறிஸ்துவின் மறையுடலான திருச்சபையைக்
கட்டியெழுப்ப வேண்டும். இந்தத் திருச்சபையிலிருந்து
தன்னை விடுவித்துக் கொள்ளாமல் இவ்வுலகில் காணப்படும்
அநீதிகளை அழித்து நீதி தழைக்கவும், வறுமை நீங்கி வளமை
நிறையவும், ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் மலரவும்,
பகைமை நீங்கி அன்பு ஓங்கிடவும், பணியாற்றுகின்றத்
திருச்சபையோடு இணைந்து இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி
வாழ்வியல் மதிப்பீடுகளை மண்ணில் பரவச்செய்து அதன்படி
வாழவும், ஆண்டவரின் நாளினைப் புனித நாளாகக் கொண்டாடி
மகிழ வேண்டும். ஒவ்வொரு இல்லத்திலும் திருநூல்
திறக்கப்பட்டு பக்தியோடு இறைவார்த்தைகள் வாசிக்கப் பட்டு
இல்லங்கள் இறை இல்லமாக, உள்ளங்கள் இறை உறவுக்குப்
பாலமாக அமைய வேண்டும். புதிய சமுதாயம் புது ஒளி
பெறட்டும். மனிதக் குலத்திற்கு கடவுள் வழங்கியுள்ள
மிகச் சிறந்த கொடை திருநூல் என உலகம் அறியட்டும்.
இறைவார்த்தைகள் அடங்கிய திருநாலை வாசிக்க
ஆரம்பித்ததால்தான் காந்தியடிகள் அகிம்சை வழியில்
அடிமைபட்டுக் கிடந்த நம் இந்திய நாட்டைச் சுதந்திரம்
பெறச் செய்தார், "
இன்னும் ஒரு நூற்றாண்டில் திருநூலான
விவிலியம் அனைவராலும் மறக்கப்படூம் அதன்பின் அதனைப்
பொருட்காட்சியில், அல்லது நூலகத்தில்தான் பார்க்க
முடியும்"
என்று கூறிய 19 ஆம் நூற்றாண்டில் ஜெனிவாவில்
வாழ்ந்த வோல்ட்டர் (Walter) என்பவரின் வீடு இன்று
விவிலியக் கூடமாகச் செயல்படுகிறது என்றால் செயலாற்றும்
உயிருள்ள இறைவனுடைய வார்த்தைக்கு அழிவில்லை என்பதை உணர
வேண்டும். ஏனென்றால் திருநூல் வெறும் அறிவு நூல்
அல்ல. ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு நடுவே
வைக்கப்படுகின்ற கதைப் புத்தகம் அல்ல. மாறாக இது நம்
வாழ்வின் மையம். நம் அன்றாட உணவு என்று எண்ணி அதை உண்ண
வேண்டும். சுவைக்க வேண்டும், ஏனென்றால் அதுவே நம்
வாழ்வின் ஊட்டச் சத்தாகவும் உந்து சக்தியாகவும்
இருந்து மனம் மலரச் செய்து புது வாழ்வு பெற்ற மனிதனாக
மாற்றக்கூடியது.
எனவே திருப்பலியில் பங்கேற்பவர்கள் வெறும் கடமைக்காக
நற்கருணை வழிபாட்டிற்கு மட்டும் வராமல் இறை வார்த்தை வழி
பாட்டிலும் பங்கேற்று தனக்குள் மாற்றம் பெற்று, தான்
வாழுகின்ற சமுதாயத்திற்குள் இன்றும் என்றும்
இறைவார்த்தைகள் நிறை- வேறிடப் பக்தியுடன் பங்கேற்கும்
பங்காளர்களாக, தூய மக்களின- மாக மாறுவோம். இறைவன் தன்
அன்பினால் தன் திருமகனை உ.லகிற்குக் கொடுக்கும் முன்
தன் கட்டளைகளைக் கடைபிடிக்கத் திருநூலையும்
கொடுத்துள்ளார்.
ஏனென்றால் மலையெனத் துயர் வரும் போது மனபலம் தருவது
இறைவார்த்தை. உப்பாக, ஒளியாக, உலகினுக்கு உறு துணையாக
இருந்து வழி நடத்தி அப்பா-பிள்ளை என்ற உறவை நமக்குள் வ்ளர
வைத்து அன்பின் அரசை அமைத்திடும் இறை. வார்த்தைக்கு
என்றும் செவிமடுப்போம். இறைவார்த்தையின் முழு நிறைவான
இயேசுவை உணர்ந்திடவும், அவரால் வாழ்வு பெற்றிடவும்,
இப்பலியில் வரம் கேட்போம். என்றும் நம் குடும்பங்கள்
திருநூலைப் போற்றவும், பொருள் புரிந்து வாசிக்கவும்
ஆவியின் அருட்கொடை களால் புதுப்பிக்கப்பட்டு வாழவும்
அருள் வேண்டுவோம். என்னில் இன்று இறைவார்த்தை
நிறைவேறியது என்ற உறுதியுடன், மகிழ் வுடன் தொடர்ந்து
திருப்பலியில் பங்கேற்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
⏺ ஏழை எளியவருக்கு உதவாத எந்த இதயமும்
இயேசுவுக்குஏற்புடையது அல்ல.
⏺ நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் வெறுக்கும் பொழுது
நம்மையே நாம் வெறுக்கிறோம் என்பதுதான் அர்த்தம்.
ஏனென்றால் நாம் வாழுகின்ற இந்த மனிதச் சமுதாயமும் ஓர்
உடலைப் போன்றதுதான். எனவே அனைவரும் உடலின்
உறுப்புக்கள்.
⏺ வாழ்வில் திருப்புமுனை வேண்டுமெனில் நம் கரங்களில்
திருநூலை ஏந்திடுவோம்.
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
பொதுக் காலம் மூன்றாம் ஞாயறு
இன்றைய இறைவாக்குகள் மூன்றுமே மிகவும் ஆழமான தாகவும்,
பொருள் பொதிந்தவையாகவும் உள்ளன. அதிலும் குறிப்பாக
முதல் வாசகமும் நற்செய்தியும் பல நிலைகளில்
ஒத்திருக்கன்றன. எஸ்ராவைப் போல இயேசுவும்
செபக்கூடத்தில் இறைவாக்குகளின் ஏட்டை வாசிக்கின்றார்.
இருவரும் அதற்கு விளக்கமும் தருகின்றனர். இங்கு
பக்கங்களின் அளவு கருதி நற்செய்திப் பகுதியை மட்டும்
விளங்கிக்கொள்ள முயற்சி எடுப்போம்.
1. அர்ப்பணம்
இன்றைக்கு நற்செய்தியாக நமக்கு அளிக்கப்பட்டிருப்பது
லூக்கா நற்செய்தியின் இரு வேறு அதிகாரங்களிலிருந்த இரு
சிறு பகுதிகளாகும். அதாவது முதல் அதிகாரத்தின் முதல்
நான்கு வசனங்களும், நான்காம் அதிகாரத்தின் சில
வசனங்களுமாகும்.
முதல் அதிகாரத்தின் முதல் வசனங்கள் நிகழ்ச்சிப்
பகுதிக்கு வெளியே மொத்த நூலுக்கும் முன்னுரையாக,
மாண்புமிகு தியோபில் என்பவருக்கு அர்ப்பணமாக அமைகின்றது.
அதன் ஒரு சில உள்கூறுகளை இவண் காண்போம்.
அ. வரலாற்று நூல்
லூக்கா தனது நற்செய்தியை எழுதத் தொடங்கும்முன் தான் ஒரு
வரலாற்று நூலை எழுதப் போகின்றோம் என்று
உணர்ந்திருந்தார். "
நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி
எழுதியது"
, "
பலர் இதை எழுத முயன்றது"
(வச. 1), நேரில்
கண்டவர்களைப் பற்றிய குறிப்பு (வச. 2), நற்செய்தியாளர்
கருத்தாய் செய்த ஆராய்ச்சி (வச. 3), அதை
ஒழுங்குபடுத்தியது (வச. 4) ஆகியவற்றைப்பற்றி
குறிப்பிடுவதன் வழியாக அவர் ஒரு சிறந்த வரலாற்று நூலை
எழுதப் போகின்றார் என்பதை உணர்ந்திருந்தார் என்பது
புலப்படுகின்றது.
ஆ. வித்தியாசமான நூல்
லூக்கா தனக்கு முன்பே சிலர் இயேசுவின் வரலாற்றை.
முறைப்படுத்தி எழுதியுள்ளனர், அல்லது எழுத முயன்றுள்ளனர்
என்பதை அறிந்திருந்தார். அதை பதிவும்
செய்திருக்கின்றார் (வச. 1-2). ஆனால் லூக்கா அதில்
எதிலும் நிறைவு அடைந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவை
முழுமையாக இல்லை என்பது அவரது கருத்தாக இருக்கலாம். அதே
வேளையில் தன்னுடைய நரல் அந்த முந்தைய நூல்களைவிட
சிற்ததாக முழுமையானதாக இருப்பதாகவும் அவருக்கு ஓர்
உணர்வு' இருந்ததை நாம் உணரமுடிகின்றது. எனவே லூக்காவின்
நூலை சிறப்பானதாக ஆக்குவது மாற்றுவது எது எனும் கேள்வி
எழுகின்றது. லூக்காவே இதற்குப் பதில் தருகின்றார்.
அதாவது, அவரின் "
ஓழுங்குபடுத்துதல்"
(வச. 4) சரியானதாக,
முழுமையானதாக அமைகின்றது. இந்த 'ஒழுங்குபடுத்துதல்'
எதில் அடங்கியிருக்கின்றது எனும் வினாவிற்கு
நிகழ்ச்சிகளுக்கு இடையேயுள்ள தொடர்பை லூக்கா சரியாக
கணித்திருப்பதாக உணர்ந்திருக்கலாம் என சில அறிஞர்கள்
எண்ணுகின்றனர். இந்தத் "
தொடர்புகள் பிற நூல்களின்
ஆசிரியர்களுக்கு புரிபடாமல் போயிருக்கலாம்.
இ. நற்செய்தி நூலின் நோக்கம்
இந்தப் பகுதிக்கு இது முக்கியமானது. லூக்கா இந்த
நற்செய்தி நூலை எழுதுவதற்கு முக்கிய நோக்கம் தியோபிலும்,
அவரைப் போன்ற பிறஇன கிறிஸ்தவர்களும் நம்பி
ஏற்றிருக்கும் இயேசுவைப் பற்றிய நம்பிக்கையை
உறுதிப்படுதற்காகத்தான்.
ஈ. இறையியல் நோக்கம்
இந்த முன்னுரையை வெறும் வரலாற்று நூலுக்கோ அல்லது ஒர்
இலக்கியப் படைப்புக்கோ அளிக்கப்பட்ட அர்ப்பணமாக மட்டும்
பார்க்கக்கூடாது. மாறாக இங்கும் ஓர் இறையியல்
செய்தியையும் பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். எனவே
இந்த நற்செய்தி நூல் ஏற்கெனவே இருந்த நூல்களையும்,
தரவுகளையும் லூக்கா தொடக்கத்திலிருந்தே ஆய்ந்து, அறிந்து
எழுதிய அவர் காலத்து "
அறிவியல்"
பூர்வமான வரலாற்று நூல்
என்று மட்டும் கொள்ளக் கூடாது. மாறாக இது ஓர் இறையியல்
புத்தகமாகவும் பார்க்கப்பட வேண்டும். அதை இந்த
அதிகாரத்தின் முதல் வசனத்திலேயே குறிப்பிடுகின்றார்.
அதாவது வரலாற்று நிகழ்ச்சிகளை "
நிறைவேறிய"
(வச. 1)
நிகழ்ச்சிகள் எனக் குறிப்பிடுகின்றார். எனவே இயேசு
காலத்திலும், அதற்கு பின்னும் நிகழ்ந்தவை வெறும்
வரலாற்று நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, மாறாக அவை மீட்புத்
திட்டத்தின், விவிலிய வரலாற்றின், தொடர்ச்சியும்,
நீட்சியுமாகும். எனவே பிறஇனத்தாராகய தியோபில் போன்ற
வார்கள் கிறிஸ்துவை ஏற்று இருப்பது இறைத்திட்டத்தின்
மீட்டு வரலாற்றின் ஒரு நோக்கம் ஆகும். இதை விரிவாக
விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். திருத்தூதர் பணிகள்
நூலையும் இந்த நற்செய்தியோடு இணைத்துப் பார்த்தால்
இக்கருத்து தெளிவாய் விளங்கும். அங்கும் அவர்
தியோபிலுக்கு அந்நூலை அர்ப்பணிப்பதையும் நாம் நோக்க
வேண்டும்,
இனி இன்றைய நற்செய்திப் பகுதியின் இரண்டாம் பகுதியான
நாசரேத்தில் இயேசு நிகழ்த்தியவற்றின் பொருளைக் காண
முயல்வோம்.
2. நாசரேத்தில் இயேசு
இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தில் நிகழும் இந்த
நிகழ்ச்சி இயேசுவின் வாழ்வில் ஒரு முக்கியமான
நிகழ்வாகும். இங்கு இயேசுவின் பணியின் இலக்கை
நிர்ணயிக்கும் "
நாசரேத்து அறிக்கை"
அறிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்நிகழ்ச்சி இயேசு யார் என்பதையும் விளக்க
லூக்காவுக்குப் பயன்படுகின்றது. இயேசு மெசியா என்பதை
லூக்கா நற்செய்தியை தொடக்க முதல் வாசிப்பவர்
அறிந்திருப்பர். ஆனால் அவர் எத்தகைய மெசியா என்பதை இந்த
நற்செய்திப் பகுதி விளக்குகின்றது. இறைவாக்கினர்
எசாயாவின் சுருள் ஏடு (வச. 17) அதில் ஆண்டவரின் ஆவி
இறைவாக்கினர் மேல் உள்ளது (வச. 18), அருள் பொழிவு (வச.
18), மறைநூல் வாக்கு நிறைவேறுவது (வச. 21) ஆியவை பற்றிய
குறிப்புகள் எல்லாம் _அவர் "
இறைவாக்னெரான மெசியா"
என்பதைப் புலப்படுத்துகின்றன. இந்த நிகழ்ச்சிப்
பகுதிக்கு அடுத்துவரும் பகுதியில் இறைவாக்கினர்களான
எலியாவும் (வச. 25-26), எலிசாவும் (வச. 27)
குறிப்பிடப்படுவதிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகின்றது.
3. ஏழையருக்கான பணி
இயேசு தன் பணி என ஏற்றுக்கொண்ட இந்த அறிக்கையில்
இருவிடயங்கள் நோக்கப்படவேண்டும் இயேசு தனது பணி
ஏழையருக்கு நற்செய்தி அறிவிப்பது, சிறைப்பட்டோருக்கு
விதெலை அளிப்பது, பார்வையற்றோருக்கு பார்வை தருவது,
ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வழங்குவது என சமூகத்தின்
கடைநிலையில் உள்ளவருக்கே என தெளிவுபடுத்.துகின்றார்.
இரண்டாவதாக, "
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை"
முழக்கமிடுவதைப் பற்றிய குறிப்பு, கடன்கள்
மன்னிக்கப்பட்டு, நிலங்கள் உரியவரிடம்
சேர்ப்பிக்கப்பட்டு, அடிமைகள் விடுதலைபெற்று
அனுப்பப்படும் யூபிலி ஆண்டைக் குறிப்பதாக அமைகின்றது.
இதைப் பற்றிய குறிப்புகள் லேவி 25:10-18ல் மேலும்
காணக்டைக்கின்றன.
இந்த விடுதலை வாழ்வை நிஜமாக்குவதற்கு உதவுவதற்காகத்தான்
யூபிலி ஆண்டுகள் கொம்பூதி அறிவிக்கப்பட்டு,
கொண்டாடப்பட்டன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்
இறையிரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை புனிதக் கதவுகளை
திறந்து துவங்கி வைத்தார். இயேசு தனது பணி என்று ஏற்றுக்
கொண்ட கடைநிலையினரின் நல்வாழ்வு, விடுதலை வாழ்வு நமது
பணியாகவும், அறிக்கையாகவும், பிரகடனமாகவும் ஆகட்டும்.
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - மூன்றாம் ஞாயிறு
- மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் :நெகே. 8:2-6,8-10
பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பின் எருசலேம் வந்த
மக்கள் அழிந்த ஆலயத்தை நெகேமியா தலைமையில் மீண்டும்
கட்டி எழுப்பினர். எஸ்ரா என்னும் திருச்சட்ட வல்லுநர்,
மோசேயின் சட்டத்தை மக்கள் கடைப்பிடிக்கும் பழக்கத்தைப்
புதுப்பித்தார். விழாக் காலங்களில் வேத நூல்கள்
வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டன. இன்றைய வாசகத்தில் வரும்
நிகழ்ச்சி, a யில் வரும் இறைவார்த்தை வழிபாட்டின்
எதிரொலியாகவும் நமதாண்டவர் நாசரேத்தூர் செபக்
கூடத்தில் ஏட்டுச் சுருளை வாசித்து விளக்கம் அறித்ததன்
பின்னணி ஆகவும் அமைந்துள்ளது.
வார்த்தை வழிபாடு
திருச்சட்ட நூல் வேதவாக்கு ஆனதால் அதற்குத் தக்க
வணக்கம் செலுத்தப்படுகிறது. எஸ்ரா, பன்னிருவர் புடை சூழ
திருச்சட்ட நூலை எடுத்து வருகிறார்; மேடைக்குச்
செல்லுகிறார் (4) நூலைத் திறந்து ப வாசிக்கிறார்;
அனைத்து மக்களும் எழுந்து நிற்கின்றனர்; எஸ்ரா இறைவனைத்
துதித்து வாழ்த்தவே அனைவரும் கைகளை உயர்த்தி ஆமென்,
ஆமென்"
என்று சொல்லிப் பணிந்து, முகம் குப்புற விழுந்து
கடவுளைத் தொழுதார்கள் (7); வாசிக்கப்பட்ட பகுதிக்கு
லேவியர் விளக்கம் கூறினர்.
வார்த்தை வழிபாட்டில் பக்தியுடன் பங்கெடுக்க
வேண்டுமானால், வேத ஏடுகள், தேவ ஏடுகள், இறைவனின்
வார்த்தைகளைக் கொண்ட ஏடுகள் என்ற விசுவாசம் தேவை. "
இதோ
பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன் "
(எரே.
1:9). ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப் பட்டது.
"
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம்
எட்டுச் சுருளில் எழுதிவை "
(எரே. 30 : 2). "
மறைநூல்
அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது" (2 திமொ. 3
: 16). "
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள்
அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித
விருப்பத்தால் உண்டானது அல்ல "
(2 பேது. 1 : 21)
இறைவார்த்தையைப் படிக்கும் பொழுதும் கேட்கும்
பொழுதும் அதற்குரிய வணக்கத்தைச் செலுத்துகிறேனா?
நாள்தோறும் திருவிவிலியம் படிக்கும் . நல்ல பழக்கம்
உண்டா?
வார்த்தையின்படி நடக்கவேண்டும்
"
உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றாள் ' மரியா.
திருச்சட்ட நூலை வாசிக்கக் கேட்ட மக்கள், சட்டங்களை
மீறியதற்காக மனம் வருந்தி அழுதனர்... அழவேண்டாமென
அவர்களைத் தடுத்து, இந்த நல்ல நாளில் நீங்கள்
விருந்துண்டு, உணவு இல்லாதவர்களுக்கு உணவு அனுப்பி
வையுங்கள் என்கிறார் எஸ்ரா. இதுவே இறைவாக்குகளைக்
கேட்டதன் பயனாயிருக்க வேண்டும். தூய ஆவியின்
தூண்டுதலால் எழுதப்பட்ட இறைவாக்கு "
கற்பிப்பதற்கும்
கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப்
பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது"
(2 திமொ. 3 : 16).
இறைவார்த்தை எந்த வாளினும் கூர்மையானதாய் ஆன்மாவின்
உள்ளாழத்தையும், ஆவியின் உள்ளாழத்தையும் ஊடுருவி,
மூட்டு மச்சை வரை எட்டி (எபி. 4 : 12) நம்மில் ஒரு
சலனத்தை ஏற்படுத்தவேண்டும். வார்த்தைகளைக் கேட்டு,
அதன்படி நடக்காதவன் முகச்சாயலைக் கண்ணாடியில்
பார்த்துவிட்டுப் போனதும், அச்சாயலை மறந்து
விடுபவனுக்குச் சமம் என்கிறார் யாக்கோபு (1: 24).
வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவன் பாறைமீது
அடித்தளம் அமைத்து வீடு கட்டுபவனுக்குச் சமம்
என்கிறார் நமதாண்டவர் (லூக். 6 : 7). இறைவார்த்தையைக்
கேட்டும் அதன்படி நடக்காதவனைத் தீர்ப்பிடுவது
இறைவார்த்தையே என்கிறார் இயேசு (யோ. 12 : 48). எத்தனை
முறை இறைவார்த்தையை நான் வாசித்துள்ளேன், கேட்டுள்ளேன்.
என்னில் ஏற்பட்ட மாற்றம் என்ன?
இரண்டாம் வாசகம் : 1கொரி. 12:12-30
அருட்கொடைகள் வெளிப்படும் வகையிலும் அவற்றின்
செயல்முறையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து
வரங்களும் ஒரே தெய்வீக ஊற்றிலிருந்தே பிறக்கின்றன (12 : 4
- 11). திருச்சபையின் பொது நன்மைக்காகவே இவை
அளிக்கப்படுகின்றன என்பதை பவுல் உடலின் உவமை வழியாகத்
தெளிவுபடுத்துகிறார்.
கிறிஸ்துவில் உறவு
நமக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு வேறு எந்த
உறவுடனும் ஒப்பிட முடியாத உறவு. புறக்கண்ணுக்குப்
புலப்படாத உறவு. ஆனால் இது ஒர் உண்மையான இணைப்பு.
யூதராயினும், புறவினத்தாராயினும் ஒரே ஆவியால், ஒரே
உடலாகிய கிறிஸ்துவுக்குள் திருமுழுக்கு பெற்றதால் வரும்
உறவு (1: 13; காண். உரோ 4: 25). உறுப்பினர்கள்
கூடித்தான் ஒர் அமைப்பை உருவாக்குவர். ஆனால்
திருச்சபையாகிய அமைப்பில் உறுப்பினர்கள் சேர்ந்து அதை
உருவாக்குவதில்லை. மாறாக, கிறிஸ்துவே மனிதர்களைத் தம்
உறுப்புகளாக ஏற்றுக்கொள்ளுகிறார். எனவே "
கிறிஸ்துவின்
உடல்"
என்னும் தொடர் வெறும் உருவகம் அன்று; இது ஓர்
உண்மைச் செயல். கிறிஸ்தவர்களின் உடல்கள் கிறிஸ்துவின்
உறுப்புகள் (6 : 15; எபே. 5 : 30); கிறிஸ்துவே தலை (கொலே.
1 : 18), அதனின்றே முழு உடலும் ஊட்டம் பெறுகிறது. அதன்
செயலால்தான் உறுப்புகள் ஒன்றோடொன்று இணைந்து
செயல்படுகின்றன (கொலே 2 : 19). நமது தலையுடன் ஏனைய
உறுப்புகள் பொருந்தி ஒரே உயிரைப்பெற்று வாழ்வதுபோலவே,
நாமும் கிறிஸ்துவை தலையாகக்கொண்ட திருச்சபை என்ற உடலின்
உறுப்புகளாக இருக்கின்றோம் என்பதை உணர்கின்றோமா?
படிப்பினைகள் பல.
"
கண் கையைப் பார்த்து நீ எனக்குத் தேவையில்லை என்று
கூறுவதில்லை"
(21). அப்படியே திருச்சபையில் உள்ள
அனைவரும் ஒருவர் மற்றவருக்குத் தேவை. உடல்
உறுப்புகளில் உயர்ந்தவை, தாழ்ந்தவை, பயனுள்ளவை பயனற்றவை
என்ற பாகுபாடு இல்லை. அனைத்தும் உடலுக்குத் தேவை.
அப்படியே திருச்சபைக்கு அனைத்துப் பணியாளர்களும் தேவை.
ஆண்டவரோடு வாழ்ந்து, அவரது உயிர்ப்புக்குச் சான்று கூறிய
திருத்தூதர்கள் (திப. 1 : 22), திருநூலுக்கு விளக்கம்
சொல்லி விசுவாசப் படிப்பினைகளின் பொருளையும், கிறிஸ்தவ
மரபுகளையும் எடுத்துரைக்கும் போதகர்கள் (காண். உரோ. 12
: 8; கலா. 6 : 6), சமூகத் தொண்டர்கள் (உரோ. 12 : 7),
இறைமக்களை வழிநடத்திச் செல்லும் மேற்பார்வையாளர்கள்,
மூப்பர்கள் (திப. 20 : 17, 28) ஆகிய அனைவரும்
திருச்சபைக்குத் தேவை. ஒருவர் அழைப்பையும் பணியையும்
கண்டு மற்றவர் பொறாமைப்படுதலும், ஒருவர் பெற்றுள்ள
அருட்கொடைகளைக் கண்டு மனம் புழுங்குதலும் கிறிஸ்துவின்
உடலையே வெறுக்கும் பாவமாகும். உறுப்பினர்களுக்கு
அளிக்கப்படும் அருட்கொடைகள் திருச்சபையைக் கட்டி
எழுப்பவே அளிக்கப்படுகின்றன. ஐந்து தாலந்து பெற்றவன் அதை
மேலும் ஐந்து தாலந்தாகப் பெருக்க வேண்டும்.
"
உறுப்பு ஒன்று துன்புற்றால், எல்லா உறுப்புகளும்
அதனுடன் சேர்ந்து துன்புறும்; உறுப்பு ஒன்று
மாண்புற்றால், எல்லா உறுப்புகளும் சேர்ந்து இன்புறும்"
(269. ஒவ்வொரு கிறிஸ்தவனும், மற்றவனின் துன்பத்திலும்
இன்பத்திலும் பங்குகொள்ள வேண்டும் என்ற பாடமே இங்கு
போதிக்கப்படுகிறது.
"
எவ் உயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கும் நின்
தெய்வ அருட்கருணை செய்வாய் ! பராபரமே! (தாயுமானவர்)
என் உடன் உழைப்பாளிகளுடன் இணைந்து செயல்படுகின்றேனோ?
ஒற்றுமையின் கருவியாக உள்ளேனா?
நீங்களா கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் ஓர் உறுப்பு
நற்செய்தி : லூக் 1 : 1-4; 4 : 14-21
அருள்பொழிவு செய்துள்ளார்
செபக்கூட்டத்தில் இயேசு தம் பணியின் இலட்சிய இலக்கை
அறிவிக்கிறார். இறைவாக்கினர் வரிசையில் தாம்
அனுப்பப்பட்டவர் என்பதைக் குறிக்க "
அருள்பொழிவு
செய்துள்ளார் "
என சாட்சியம் கூறுகிறார். பேதுருவும்
தம் அருளுரையில் இஸ்ரயேல் மக்களுக்கு சாட்சியம்
கூறுகிறார். "
கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய
ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்...'"
(திப. 10 :
38).
"
கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; அவரே நமக்கு
அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை
உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம்
உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப்
பதித்தார் " (2 கொரி. 1: 22)
நாம் பெற்ற அருள்பொழிவு கடவுளின் மக்களாகும் ஒரு உரிமை
மட்டுமல்ல... கடவுள் மக்களாக வாழ்வதற்கு ஒரு சவால். இறை
அடியார்களின் அருள்பொழிவு அனுபவத்தை உள்ளார்ந்த விதமா
விளக்குகிறது
திருமந்திரம்:
எல்லா இறைவாக்கினருமே ஏழைகளுக்கு சார்பாக... ஏழைகளின்
உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தனர். குறிப்பாக ஆமோஸ்
இறைவாக்கினர் சாட்சியம் நம் உள்ளத்தைத் தொட்டு
உலுக்குகிறது.
"
எளியவனை ஒரு சோடி செருப்புக்கு விற்கிறார்கள் 2:6
ஏழை மக்களது கூக்குரல் இறைவனை எட்டுகிறது என்கிறார்
திருப்பாடல் ஆசிரியர். அவர்களே இறைவனைச் சார்ந்து
வாழ்கிறார்கள் (திபா. 9, 22.25,59). ஏழைகளின் எதிரிகள்
இறைவனின் எதிரிகள் (திபா. 18 : 22; 9 : 14). எனவே
இறைவனின் அன்புக்குச் சிறப்பாக உரியவர்களாகிறார்கள் ஏழை
மக்கள்.
"
இறைவா! நீ எடுத்துள்ள எண்ணிலா வடிவங்களுள் ஏழை வடிவத்தை
நான் என்றென்றும் ஏத்துவேனாக!"
' என்று விவேகானந்தர்
வேண்டினார். ஏழைகள் பற்றிய நம்து கண்ணோட்டம் என்ன?
ஏழைகளை நண்பர்களாகக் கொள்ள நாம் பெருமிதப்படுகிறோமா?
இயேசுவும் ஒரு ஏழைதானே!
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க
அருள் தரும் ஆண்டு ஜூபிலி ஆண்டைக் குறிக்கிறது.
லேவியர் ஆகமத்தில் (25 : 10 - 13) இவ்வாண்டு மெசியாவின்
ஆண்டை, மீட்பின் காலத்தைக் குறிக்கிறது. ஜூபிலி ஆண்டின்
மகிழ்ச்சியை இயேசுவின் வருகை கொணர்ந்துள்ளது என்பது இங்கு
அறிவிக்கப்படுகிறது. ஏன்? ஜூபிலி ஆண்டில் (ஏழாவது ஏழு
ஆண்டுகளின் நிறைவு) அதாவது ஒவ்வொரு 50-வது ஆண்டிலும்
மக்கள் மத்தியில் சமத்துவ - சகோதரத்துவ உறவுகள் மலர,
சில உடைமைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இது மன்னர்கள்
ஆட்சி வருமுன் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நிகழ்ந்த
சமூக சீர்திருத்தமாகும். யாவே ஆண்டவரே நிலம்
அனைத்திற்கும் உரிமையாளர். மக்கள் அவரது பங்காளிகள்.
எனவே ஒரு சிலர் மட்டும் நிலம் வைத்திருப்பது இறைவனின்
திட்டத்திற்கு எதிரானது என உணர்ந்திருந்தனர் (எசா. 5 : 8
- 10; எசே. 46 - 7). இந்த நிலவுடைமைப் பார்வையும்,
கருத்தும் சமத்துவ சமுதாயம் உருவாக மிகவும்
அடிப்படையென்று நாம் விஞ்ஞானப்பூர்வமாக அறிகிறோம்.
இன்று ஏழைகள் விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான
அம்சம் நிலஉடைமைச் சீர்திருத்தமாகும். ஏனெனில் நில
பகிர்வு இல்லையேல், அடிப்படை - நீதியான- நிலையான -
சமத்துவம் நிகழ முடியாது.
ஆண்டவரின் ஆவி என்மேலே... என்னை அருள்பொழ்வு
செய்துள்ளார்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ