ஆண்டின் பொதுக்காலம்
17 ஆம் ஞாயிறு திருப்பலி
முன்னுரை - 3ம் ஆண்டு
இயேசுவின் மீது கொண்ட உறவை ஆழப்படுத்த வந்திருக்கும்
அன்புள்ளங்களே!
காலத்தாலும் கடலாலும் அழிக்க முடியாத செபம் ஒன்று, இன்று நம்மை இந்த
திருவழிபாட்டு நிகழ்வுக்கு அழைக்கின்றது. இறைமகன் இயேசு தம்
சீடர்களுக்கு கற்றுத்தந்த செபம்தான் அது! இந்த இனிய செபத்தில்
இடைவிடாமல் இறைவனைப் புகழவும், அவரது அரசை வரவேற்கவும் விண்ணகத்தின்
நிலவரம் மண்ணகத்தில் நிலவவும், அமைதியும், உணவும் பாதுகாப்பும் அருளும்
படியாகத்தான் கேட்கின்றோம்.
பெருங்குரலெடுத்துத் தம்மைக் கூவி அழைப்போருக்கு பெருமகன் இயேசு
செவிகொடுத்து உதவுகின்றார்.
அருள் பொழிந்து நலம் தருகின்றார்.
இறைவனின் வியத்தகு செயல்களுக்காக அவரைப் போற்றுவோம்.
செபிக்கக் கற்றுத்தந்ததற்கு நன்றி சொல்லுவோம்.
நம் தவறுகளுக்காக அவரின் இரக்கத்தை மன்றாடுவோம்.
அவரைத் தேடி நம் ஆன்மீகத் தாகத்தை தீர்த்துக் கொள்வோம்.
நம்மைப் படைத்த அவரை சார்ந்து வாழ முன் வருவோம்.
அவர் துணையின்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து
வாழ்வோம். அவரது திருவுளத்தைப் புரிந்து கொள்ள செபத்தில் வளர்ச்சி அடைய நாம் இன்று
செபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்!
கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். என இயேசு உறுதி மொழி ஒன்று
தருகின்றார். நாம் மட்டும் கட்டாயம் கேட்டால் கிட்டாதது கிட்டும்.
எட்டாதது எட்டும். இந்த திருப்பலியில் நன்றி நிறைந்த உறுதியான உள்ளத்தை
செபிக்கத் தூண்டும் நெஞ்சத்தைப் பெற்றுக் கொள்ள இறைவன் இயேசு தாம்
கற்றுத் தந்த செபத்தின் வழியாக நமக்குத் தருகின்றார் அன்புடன்
செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே!
இறை ஆட்சியை நோக்கி இதயத்தை திருப்பவும் நீதியை நோக்கி வழி நடக்கவும்
இயேசு செபிக்க கற்றுக் கொடுத்த பாதையில் திருச்சபையை வழி நடத்தும்
அருளை திருச்சபை தலைவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்
2. எங்களை அட்சி புரியும் பேரரசரே!
ஆட்சியுரிமை பெற்றவர்களுக்கு உம் மாபெரும் ஆற்றலைப் பொழிந்து உமது அரசு
விண்ணகத்தில் இருப்பது போல மண்ணகத்தில் கட்டி எழுப்பத் துணைபுரிய
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு அன்றாடம் தருகின்ற இறைவா!
எல்லா நாடுகளிலும் அமைதி நிலவவும், மனித உரிமைகள் மதிக்கப்படவும்
வளங்கள் அனைத்தும் தாராளமாக பகிர்ந்து கொள்ளப்படவும், உணவின்றி
தவிப்போருக்கு உணவு கிடைக்கவும் அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4. எங்கள் பாவங்களைப் பொறுத்து எங்களை காப்பவரே!
வருகின்ற நாட்களில் நாங்கள் செய்கின்ற தவறுகளில் இருந்து திருந்தி
வாழவும் பிறர் செய்கின்ற தீமைகளை பொறுத்துக் கொண்டு வாழவும், பிறருக்கு
ஒரு போதும் தீமைசெய்யாமல் வாழவும் அருள் பொழிய வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
5. நாங்கள் செபிக்க ஆற்றல் தரும் இறைவா!
காலையில், பகலில், இரவில், வெளியே செல்லுமுன், வீடு திரும்பியதும்,
வேலையைத் தொடங்கு முன், வேலையை முடித்தபின், வெற்றியின் போதும்,
தோல்வியின் போதும், இன்பத்தில், துன்பத்தில், சோதனையில், வேதனையில்,
நோயில், நலத்தில், உழைப்பில், ஓய்வில் எப்பொழுதும் செபிக்க ஆற்றல் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
பல அரிய சாதனங்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் நவீன
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அதன் மூலம்
யாரிடமும் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். எந்தக்
கேள்விக்கும் அந்தக் கம்ப்யூட்டர் பதில் சொல்லும் என்று மகிழ்ச்சியில்
மிதந்தனர். அவர்கள் ஆவலோடு முதல்கேள்வியை செலுத்தினர். இறைவா
முதன்முதலில் உலகம் எப்படி உருவானது'? என்று கேட்டவுடன் அவர்களுக்கு
வந்த பதில் "விவிலியத்தில் ஆதி ஆகமத்தைப் பார்".
இறைவா! என்றும் எப்பொழுதும் நாங்கள் செபிக்க வேண்டிய முறையில் நான்
செபிக்க அருள்புரியும்" என செபிப்போம்
சிறுமியர் படிக்கும் பள்ளி ஒன்றுக்கு ஆரோக்கிய மேரி என்ற மாணவியை அவரது
பாட்டி அழைத்துக் கொண்டு வந்தார். ஆரோக்கிய மேரி தனது மகளுடைய மகள்
என்றும், அவளது தாய் அவள் பிறந்த போது இறந்து விட்டார். அவளது
தந்தையும் விபத்து ஒன்றில் இறந்து விட்டார். அந்த பாட்டி தான் அவளை
வளர்ப்பதாகவும், அவளை வளர்க்க போதுமான வசதியில்லை என்றும், பள்ளித்
தலைமை சகோதரியிடம் ஒரு வேலை வேண்டும் என்றும் கேட்டார். தற்சமயம் வேலை
ஒன்றும் இல்லை, பிறகு பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார் தலைமை
சகோதரி. பாட்டி தினமும் அந்த தலைமை சகோதரியை சந்தித்து தனக்கு ஒரு வேலை
வேண்டும் என நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். பாட்டிக்கு கொடுப்பதற்கு
ஏற்ற வேலை எதுவும் இல்லை என்று சொல்லிப் பார்த்தார் தலைமை சகோதரி.
பாட்டி விடுவதாக இல்லை. விடாப்பிடியாக கேட்டுக் கொண்டே இருந்ததால்
அவருக்கு பள்ளிக் குழந்தைகளை பராமரிக்கும் ஆயா வேலையை கொடுத்து விட்டார்.
இவரின் தொல்லையில் இருந்து விடுபட அவருக்கு ஆயா வேலையை கொடுத்து
விட்டார்.
நற்செய்தி வாசகத்தில் இரவு வேளையில் கதவைத் தட்டி நண்பரிடம் அப்பம்
கடன் கேட்ட நிகழ்வு பாட்டியைப் பார்க்கும் போது நினைவுக்கு வருவதாக தன்
சக ஆசிரியர்களிடம் தலைமை சகோதரி பகிர்ந்து கொள்கிறார்.
கேட்பது தான் செபம். கேட்பது கிடைக்கலாம்.. கிடைக்காமல் போகலாம்.
கேட்காதது கிடைக்கலாம்.. கேட்டது கிடைக்காதது பற்றி முணுமுணுக்காமல்
கேட்காதது கிடைத்ததை விரும்பி ஏற்கும் ஆற்றலைக் கேட்பதுவும் செபம்.
விண்ணகத் தந்தை தந்ததை, விரும்பி ஏற்கும் ஆற்றலை தருபவர் தூய ஆவி.
விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்பவருக்கு தூய ஆவியை தருவது நிச்சயம்.
லூர்து நகருக்கும் வேளாங்கன்னிக்கும் பல்வேறு செபவழிபாட்டு
நிகழ்வுகளுக்கும், திருத்தலங்களுக்கும் திருயாத்திரையாக விரும்பிச்
செல்வோர் இத்தகைய வியத்தகு அனுபவத்தைப் பெறுகிறோம். நமக்கோ நம்மைச்
சார்ந்தோருக்கோ இறைவன் தர வேண்டும் எனக் கேட்டவை கிடைக்காவிடினும்
நல்லதொரு மாற்றமும் மன அமைதியும் கிடைக்கிறது. நம்பிக்கை கூடுகிறது.
உள் மன ஆறுதல் மிகுதியாகின்றது. கேட்டது கிடைக்கவில்லை என நினைப்பதைவிட
கேட்காதது கிடைத்தது நினைத்து மகிழ்வோம்.
அப்பம் கேட்டால் கல்லைக் கொடுத்து உண்ணச் செய்யும் கல் நெஞ்சரல்ல,
கடவுள். மீனுக்குப் பதிலாய் பாம்பையும், தேளையும் தருபவரல்ல நம்
தெய்வம்.
நீயே துணை, என் அன்பேசு நாதா, உம் திருவடி சரணம் ஐயா என இறைவனிடம் சரண்
அடைவோம்.
கரங்களை விரித்து தேவைகளை சொல்லி செபிபோம். அவர் விரும்புவதைத்
தரட்டும்! நாம் கேட்காதது கிடைத்தால் அது கடவுள் விரும்பியது அல்லவா
கிடைத்திருக்கிறது. அதற்காய் நன்றி சொல்லி செபிப்போம்.
வீழ்ந்து கிடக்கும் மனிதனை பாய்ந்தெழச் செய்யும் வலிமை செபத்திற்கு
உண்டு. இயேசு கற்றுத் தந்த செபம் இதயப் பூர்வமான ஒரு உரையாடல்.
செபிக்க இயலாவிட்டாலும் செபிக்க இயலவில்லை இறைவா என்று கூட சொல்லுவோம்.
எந்த இடத்திலும் செபிக்கத் தெரிந்திருப்பது நல்லது. இருந்தாலும்
அமைதியான இடத்தில் செபிப்பது நலம் பயக்கும்?
எந்த நேரத்திலும் செபிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது நல்லது.
இருப்பினும் செபிப்பதற்கென்று அமைதியான ஒரு நேரத்தை தேர்ந்தெடுப்பது
நலம் பயக்கும்.
எம் மனம் விரும்புவதை கொடுக்கும் இறைவா உம்மிடம் எம் மனம் திறந்து
உரைக்கும் முன்னே உலகில் எம் தேவை என்னவென நீர் அறிவீர்.
குழந்தையின் உள்ளம் எமக்குத் தாரும் மற்றவருக்கான நன்மைகளையும் எம்
நலன்களையும் மனம் விரும்பி உம் மலரடியில் வைத்திடச் செய்யும்
வாழ்வில் விருப்பும் ஜெபத்தில் பொறுப்பும் வழங்கிடும் தந்தையே!!
ஜெபிக்கும் மனநிலை தாரும்.
எம் ஜெபம் பொருள்பொதிந்ததாக இருக்கச் செய்யும்..