ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

       பொதுக்காலம் 31ஆம் வாரம் - ஞாயிறு

    திருப்பலி முன்னுரை

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
இறைவனையும் பிறரையும் நேசிக்க அருள் கேட்டு வந்திருக்கும் நெஞ்சங்களே!
B தவக்காலம்1
இறையாட்சிக்கு அருகில் செல்ல வாழ்வுக்குத் தேவையான வளங்களை பெற்றுக்கொள்ள வாருங்கள்... மக்கள் வெள்ளம் பெருகி வருகின்றது... ஆனால் மக்கள் உள்ளத்தில் அன்பு குறைந்து வருகின்றது... இறைவனையும் அவர் படைத்த மக்களையும் நேசியுங்கள்... என்று சொல்லி சுவாசிக்கிறது இந்த 31 ஆம் ஞாயிறு!

அனைத்தையும் படைத்த இறைவனை அன்றாடம் நினைப்பது நம் வேலை! அவருக்கும் நமக்கும் நெருக்கம் இறுக்கமாக இருக்க தவறாது அவரை எண்ணவேண்டும். நம் எண்ணத்தில் அவரை எண்ணிவிட்டால் எண்ணியவை திண்ணமாகும். மாறாத அன்புடன் மனிதனை நினைப்பவன் இறைவன். இறைவனை மாறி மாறி மறப்பவன் மனிதன். பெருமையின் எல்லை கடவுள். சிறுமையின் எல்லை மனிதன். உடலின் வணக்கத்தை விட உள்ளத்தின் வணக்கம் மதிப்பு மிகுந்தது.

இறைவனுக்குக் காட்டப்படும் வணக்கத்தையும் மரியாதையையும் அவரது படைப்புகளுக்கும் காட்டுவதும் முறையே! அவற்றுள் முதலிடம் நமக்கு நாமே அன்பு செய்யவேண்டும்.

நம் ஆசை, நம் அன்பு, நம் உணர்வு எப்படியோ அப்படியே நம் அயலாரும்! நம்முடன் வாழும் அயலாரும் இறைசாயல்...! ஆகவே நம்மை நேசிப்பதுபோல் நம் அயலாரையும் நேசிக்க மதிக்க அன்பு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

இன்று பணத்திற்கு ஒரு மதிப்பு, வெள்ளைத் தோலுக்கு ஒரு மதிப்பு, நாட்டிற்கு ஒரு மதிப்பு, இனத்திற்கு ஒரு மதிப்பு இப்படியாக வறியோர், கறுப்பர், ஈழதேசத்தினர், இந்திய தேசத்தினர் படிக்காதவர், மகளிர், மழலையர் முதிர்ந்தவர் என்பதால் மதிப்புகளின் மதிப்பெண்கள் மறுக்கப்பட்டு வாழும் சூழல்.... நலிவுற்றோரை அவமதிப்பதும், எளியோரை பழிப்பதும் வழக்கமாக கொண்டுள்ள சமுதாயத்தின் மதிப்பீடுகளை விடுத்து கடவுள் சாயலாக படைக்கப்பட்ட மனிதனை அன்புடன் மதிக்க முன் வருவோம்.

படைத்து காக்கும் இறைவனை திருப்பலியின் வழியாக பக்தியுடன் வணங்கி அன்பு செய்வோம். இறைசாயலாக படைக்கப்பட்ட அயலாரையும் அன்பு செய்ய அருள் கேட்போம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 
1. வாழ்நாளெல்லாம் பாலும் தேனும் பொழியும் நாட்டில் எங்களை குடியிருக்கச் செய்யும் ஆண்டவரே!
நலம் பல பெற்று திருச்சபைத் தலைவர்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் இறை அன்பை அனுபவித்து மக்களையும் இறை அன்பை அனுபவிக்கச் செய்ய அருள்கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்ட எம் ஆண்டவரே!
மக்களுக்காக பரிந்து பேச ஏற்படுத்தப்பட்ட தலைவர்கள் தன்னையே நமக்காக பலி ஒப்புக் கொடுத்த இயேசுவைப் போல தங்கள் பணியை மக்களுக்காக முழுமையாக செய்ய அருள்கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றென்றும் நிறைவுள்ள குருவே எம் ஆண்டவரே!
மாறாத குருத்துவத்தால் உம்மோடு தன்னை இணைத்துக் கொண்ட எங்கள் பங்குத் தந்தைக்கு உமது அன்புக்கட்டளையை போதிக்கவும், சாதிக்கவும் மிகுதியான அருள்கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நலமாய் நெடுநாள் எங்களை வாழச் செய்யும் இறைவா!
எங்கள் சுவாசப்பை நிறைய மனிதனையும், இறைவனையும் அன்பு செய்யும் நல் உணர்வுகளை நிரப்ப அருள்கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்றாட துன்பத்தை அன்பால் துடைக்கும் ஆண்டவரே!
எங்களிடையே அன்பை இழந்து தவிக்கும் ஆறுதலற்ற உள்ளங்களை தேடிக்கண்டு பிடித்து உமது அன்பை பறைசாற்றி உமது பிரசன்னத்தில் நாங்களும் எங்களது அயலாரும் நிம்மதியாக வாழ அருள்கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



 
மறையுரை சிந்தனைகள்
 

மெக்ஸிகோ நாடடில் சில பகுதிகளில் மிக வெப்பமான நீரூற்றும் குளிர்ச்சியான நீரூற்றும், அருகருகே காணப்படுகின்றன.  துணிதுவைக்க விரும்பும் பெண்கள் வெப்பமான நீரில் சலவை செய்து விட்டு குளிர்ச்சியான நீரில் துணிகளை அலசி எடுப்பதற்கு இது மிகவும் வசதியாக இருந்தது.

ஒரு ஜெர்மானியப் பயணி இதனைக் கண்டு அதிசயித்து ஆச்சரியத்துடன் அருகில் இருந்த மெக்ஸிகோ நண்பனிடம் சொன்னார்.
"உண்மையில் இயற்கைத் தாய் தாராளமாய் வாரி வழங்கி இருக்கிறாள். மக்கள் ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருப்பார்களே" என்றார். "அப்படி ஒன்றும் இல்லை மக்களிடம் ஏராளமான முணு முணுப்பும் புகார்களும் உள்ளன."என்று மெக்ஸிகன் சொன்னான். என்ன புகார்? ஆச்சரியமாக ஜெர்மானியர் கேட்டார். "இவ்வளவையும் தாராளமாகத் தந்த இயற்கை அன்னை சோப்புக் கட்டிகளையும் சேர்த்து தந்திருக்கக் கூடாதா? என்பது தான் அந்தப் புகார்" என்றான் மெக்ஸிகன்.

இன்றைய நிலை இது தான். எங்கு நோக்கினும் ஓருவரை ஓருவர் குறை பேசித் திரிவதும் நற்பணி செய்வோரை பாராட்டாததும், முழுமையாக தன் உடன் வாழ்வோரை ஏற்றுக் கொள்ளாததும் இல்லறத்திலும் துறவறத்திலும் மிகுந்து காணப்படுகின்றது. இத்தகைய முணுமுணுப்புக்களுக்குக் காரணம், தான் தேர்ந்தெடுத்த நிலையை, உடன் வாழ்வோரை நேசிக்காததே காரணம்.

இந்த வேலைக்கு அந்த வேலை செய்திருக்கலாமே என எண்ணுவது.
பெற்றோர் சரியில்லை என பிள்ளைகள் முறையீடு
பிள்ளைகள் சரியில்லை என பெற்றோர் முறையீடு.
கணவன் சரியில்லை என மனைவி முறையீடு.
மனைவி சரியில்லை என கணவன் முறையீடு.
தொழிற்சாலைகளில் முதலாளி சரியில்லை என முறையீடு.
தொழிலாளி சரியில்லை என முதலாளிகள் முறையீடு.
இல்லறம் சரியில்லை என இல்லறத்தார் முறையீடு.
துறவறம் சரியில்லை என துறவறத்தார் முறையீடு.
குறைகளை பெரிதாக நினைப்பதாலும், நிறைகளை மதிக்க மறப்பதாலும் தான் இந்த முறையீடு.
தன்னைப் போல பிறரை நேசிக்கும் போது, குறைகள் பெரிதாகத் தெரியாது.
அன்பு பிறரை பாராட்டும்
அன்பு பிறரை மதிக்கும்.
அன்பு பிறரை ஏற்றுக் கொள்ளும்.
அன்பு அனைதையும் தாங்கிக் கொள்ளும்.

 அவன் மாபெரும் செல்வந்தன். மகிழ்ச்சி அவனிடம் இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை. இதைக் கண்டுபிடிக்க துறவியாக விரும்பினான். வைத்திருந்த பொன், பொருள் மூட்டையாக கட்டிக் கொண்டு துறவி ஓருவரிடம் வந்தான். துறவியிடம் சொன்னான் "ஐயா எனக்கு மகிழ்ச்சி வேண்டும். இதில் என் சொத்து முழுவதும்உள்ளது. இனி எனக்கு இது தேவையில்லை" என்று சொன்னான்.

துறவி இதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. ஆனால் மூட்டையை மட்டும் அவசரமாக பிரித்தப் பார்த்தார். கண்ணை கூச வைக்கும் வைரம் ஒளியுடன் தென்பட்டதும் மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடத் தொடங்கினார்.

செல்வந்தனுக்கு ஒரே அதிர்ச்சி ஒரு போலிச் சாமியாரிடம் தான் வசமாக மாட்டிக் கொண்டோம் என எண்ணி துறவியை விரட்டிக் கொண்டு ஓடினான். ஆனால் பிடிக்க முடியவில்லை. களைத்துப் போய் மூச்சு இரைக்க மரத்தின் அடியில் உட்கார்ந்தான். துறவியும் ஓடிவந்து என்ன பயந்து விட்டாயா? இந்தா உன் மூட்டை என்று கொடுத்தார். இதைப் பெற்றுக் கொண்ட செல்வந்தன் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தான். அவனது மகிழ்ச்சியைப் பார்த்த துறவி "இங்கே வருவதற்கு முன்னும் இந்த செல்வம் உம்மிடம் தான் இருந்தது. அப்போது உனக்கு நிறைவு இல்லை இப்போதும் உம்மிடம் தான் உள்ளது. ஆனால் மகிழ்ச்சி உள்ளது." என்றார்.

செல்வந்தன் கூடவேதான் அவனது செல்வமும் இருந்தது. ஆனால் அவன் அதை சரியான விதத்தில் கையாளவில்லை. ஆனால் இப்போதைய அவனது கண்ணோட்டமும் மன ஓட்டமும் மாறிப்போயிருந்தது. விலையேறப் பெற்றதும் மிக மதிப்புவாய்ததுமாக அச்செல்வம் அவனுக்கு தோன்றியது.

குடும்பத்தில், துறவறத்தில், பணிசெய்கின்ற இடங்களில் உடன் வாழ்வோரை சரியான விதத்தில் கண்டு கொளவதில்லை. அவர்களது பிரசன்னத்தை, எண்ணத்தை, தியாகத்தை, பாசத்தை, மதிப்பதில்லை. பொருட்படுத்துவதில்லை. அதனால்தான் பல பிரச்சனைகளும் உறவில் விரிசல்களும் தோன்றுகின்றன.

கணவன்-மனைவியை விட்டுக் கைவிட்டுப்போன அந்த அன்புச்செல்வமும் பாசவைரமும், பாராட்டு வைடூரியமுமாக மதிப்புமிக்க தங்கமுமாக கிடைக்கட்டும் என முயன்றால் விட்டுப் போன அன்பும் நேசமும் திரும்பக் கிடைக்காதா போய்விடும். துறவிகள் உடன் வாழ்வோரை நேசிக்கும் போதும், மதிக்கும் போதும் இறையன்பும், பிறரன்பும் சமாதானமும் சந்தோஷமும் பொங்கி வழியாமலா போய்விடும்? இருக்கும் இடங்களில் செய்யும் பணிகளில் மறைந்து கிடக்கும் அன்பை பாசத்தை கண்டு மதிக்கும் போது இறையன்பும் பிறரன்பும் போட்டியிட்டு நம்மைத் தொடரும். நம் வாழ்நாளெல்லாம் தொடரும்.

இறைவனை நேசிக்கிறேன் என்று சொல்லி விட்டு அயலானை நேசிக்க மறந்தால் அதற்கு பொருளில்லை.

ஆண்டவனுக்கு அள்ளிக் கொடுக்க நினைக்கும் நம் மனம், அருகில் இருக்கும் அயலானுக்கு கிள்ளி கொடுக்க மறுக்கும்.

இறைவனையும் மனிதனையும் நேசிக்க கடமைப்பட்டுள்ள நாம் அள்ளியும் கொடுப்போம். கிள்ளியும் கொடுப்போம். அப்போது வாழ்வோர் நாட்டில் நீடூழி வாழ்வோம்.

கடவுள் தந்த இயற்கையை அன்போடு நேசித்து பாதுகாப்போம்.

அன்றாட அலுவல்களை ஆண்டவனிடம் ஓப்புக் கொடுப்போம்.

அவரது சாயலாக நம் அருகில் வாழும் உள்ளங்கள் அனைத்தையும் மதிப்போம்.

குடும்பத்தில் அன்பையும் பாசத்தையும் கொட்டி உறவுகளை மதிப்போம். பிரிந்த உறவுகளை அன்பினால் சீர் படுத்துவோம். இவைதான் இறைவனுக்கு பிரியமானது.

பக்தியோடு திருநிகழ்வுகளில் பங்கேற்று இறைவனை அன்பு செய்வோம். அவரது பிரியங்களை நமதாக்கி ஆசி பெற்றவர்களாய் பாலும் தேனும் பொழியும் நாட்டில் நாளெல்லாம் குடியிருப்போம். அப்போது இறையட்சிக்கு அருகில் நாம் குடியிருப்போம்.
 
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 

இன்றைய வாசகங்கள்:-
இணைச்சட்டம் 6:2-6
எபிரேயர் 7:23-28
மாற்கு 12:28-34


வாழ்வின் முதன்மைகள்

மனித குலம் தன் முதல் அடியை எடுத்துவைக்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நம்மைத் தொடர்ந்து வரும் கேள்வி, 'வாழ்வின் முதன்மை எது?' அல்லது 'எல்லாவற்றிலும், எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் பொருந்தக் கூடிய வாழ்வின் முதன்மை எது?' மெய்யியல், இறையியல், அறிவியல் என எல்லாத் துறைகளும் இக்கேள்விக்கான விடையைத் தேடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய கேள்வி முதல் ஏற்பாட்டுக் காலத்திலும், இயேசுவின் காலத்திலும் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கான மோசே மற்றும் இயேசுவின் பதில்களும், அவை நமக்கு விடுக்கின்ற அழைப்புகளுமே இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் கேட்கவிருப்பவை.

இன்றைய முதல் வாசகம், யூத நம்பிக்கை அறிக்கையின் அடிநாதமாகக் கருதப்படுகின்றது. 'பெரிய ஷெமா' அல்லது 'பெரிய கேட்டல்' என்றழைக்கப்படுகின்ற இந்தப் பகுதி, 'கேள்' ('செவிகொடு') என்ற வினைச்சொல்லோடு தொடங்குகிறது. நம் வாசகப் பகுதியில், இச்சொல் இருமறை வருகின்றது. இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய பாலைநிலப் பகுதியின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றனர். பாலும் தேனும் பொழிகின்ற வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் அவர் நுழைவதற்கு முன் மோவாபு சமவெளிப் பகுதியில் மோசே அவர்களுடன் உரையாடுகின்றார். அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளின் முக்கியமான பகுதிகளை மீண்டும் சுட்டிக்காட்டுகின்றார். புதிய நாட்டில் அவர்களுடைய வாழ்க்கைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். அவர்கள் தன் போதனைகளை நினைவில் வைத்திருப்பது சாத்தியமன்று என உணர்கின்ற மோசே, அவர்களுடைய நம்பிக்கை மற்றும் வாழ்வுக்கு அடிப்படையான இரு விடயங்களை, 'செவிகொடு' என்னும் இரு கட்டளை வினைச்சொற்கள் வழியாக எடுத்துரைக்கின்றார்.

முதலில், 'கட்டளைகளுக்குச் செவிகொடுத்தல்.' கட்டளைகள் என்பவை ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக சீனாய் மலையில் வழங்கிய பத்துக் கட்டளைகளையும், மற்றும் பல்வேறு சூழல்களில் மோசே மக்களுக்கு வழங்கிய நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளையும் உள்ளடக்கியவை. கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் பலன் நெடுநாள் வாழ்வு என முன்மொழிகின்றார் மோசே. இரண்டாவதாக, 'ஆண்டவர் ஒருவரே கடவுள், ஆண்டவர் மட்டுமே!' என்பதைக் 'கேள்' என்கிறார் மோசே. இங்கே, 'ஆண்டவர்' என்பது யாவே இறைவனின் பெயரைக் குறிக்கின்றது. இந்தக் கடவுளே இஸ்ரயேலின் கடவுள் என்பதை உறுதியாகக் கூறுகின்ற மோசே இதுவே முதன்மையான நம்பிக்கை அறிக்கை என்றும், இந்த அறிக்கையின்மேல் தான் இஸ்ரயேலின் சமயம் கட்டப்படுகிறது என்றும் மறைமுகமாகக் கூறுகின்றார். இந்தக் கடவுளை 'முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு வலிமையோடும் இஸ்ரயேல் மக்கள் அன்பு செய்தல் வேண்டும்.' இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரையில், 'இதயம்' என்பது சிந்திக்கும் தளமாகவும், 'ஆன்மா' என்பது உயிர் உறையும் தளமாகவும், 'வலிமை' என்பது உயிர் ஆற்றல் என்றும் கருதப்பட்டது. ஆக, ஒருவரின் உடல், உள்ளம், உயிர் என அனைத்திலும் இறைவன் உறைய வேண்டும் என்பது மோசேயின் 'செவிகொடு' கட்டளை வழியாகத் தெளிவாகின்றது. இஸ்ரயேல் பின்நாள்களில் அனுபவித்த அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் அவர்கள் இக்கட்டளைகளை மறந்தது தான்.

ஆக, வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் ஒருவர் முதன்மையாகக் கொள்ள வேண்டியது ஆண்டவராகிய கடவுளை அன்பு செய்தல் என்பது முதல் வாசகத்தின் பாடம்.

இரண்டாம் வாசகத்தில், எபிரேயருக்கு எழுதப்பட்;ட திருமடலின் ஆசிரியர், தனிப்பெரும் தலைமைக்குரு இயேசு என்னும் கருத்துருவைத் தொடர்கின்றார். இயேசுவின் குருத்துவம் அல்லது அருள்பணியாளர் நிலை நீடித்த மற்றும் நிலையானதொன்றாக இருக்கிறது. மற்ற தலைமைக்குருக்கள் மனிதர்கள் என்பதால் அவர்களுடைய குருத்துவம் அவர்களுடைய வாழ்வோடு முடிந்துவிடுகிறது. ஆனால், இயேசு, கடவுள் என்ற நிலையிலும், இறந்து உயிர்பெற்ற நிலையிலும் நிரந்தரமானவராக இருக்கின்றார். ஆக, அவருடைய அருள்பொழிவும் நிரந்தரமானதே. 'நீர் என்றென்றும் குருவாக இருப்பீர்' என்று கடவுள் அளித்த வாக்குறுதியில் அவருடைய குருத்துவம் கட்டப்பட்டிருப்பதால் அது நிரந்தரமானதாக இருக்கின்றது. இயேசுவின் குருத்துவத்தின் முதன்மை கடவுளுடைய வாக்குறுதியில் நிலைபெறுவதாக அமைந்துள்ளது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவைச் சந்திக்க வருகின்ற மறைநூல் அறிஞர் குழப்பமுற்றவராக இருக்கின்றார். இவர் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் வரவில்லை. மாறாக, தன் குழப்பத்திற்கு விடை அல்லது தெளிவு காணவே வருகின்றார். இயேசுவின் காலத்தில் யூதச்சட்டத்தில் 613 கட்டளைகளும் நியமங்களும் விதிமுறைகளும் இருந்தன. இவற்றுள் முதன்மையானவை எவை என்று ஒவ்வொரு ரபியும் அல்லது ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நிலையில் கற்பித்தது. மேலும், ஒரு பள்ளி சார்ந்தவர்கள் மற்ற பள்ளி சார்ந்தவர்களோடு வாதாடவும் விவாதிக்கவும் செய்தனர்.

இயேசு தன் விடையை மிக எளிதாக முன்வைக்கின்றார். முதல் ஏற்பாட்டின் 'ஷெமா' கட்டளையைச் சுட்டிக்காட்டி இறையன்பையும், லேவியர் நூல் 19:18-ஐச் சுட்டிக்காட்டி, அடுத்திருப்பவருக்கான அன்பையும் முன்வைத்து இரண்டையும் ஒரே தளத்தில் நிறுத்துகின்றார். ஆக, கட்டளைகளுக்குள் படிநிலை அமைப்பை உருவாக்காமல், கட்டளைகள் ஒன்று மற்றொன்றோடு தொடர்புடையவை என்றும், கட்டளைகளுக்குள் அடிப்படையான தொடர்பை ஏற்படுத்துவது அன்பு என்றும் முன்வைக்கிறார் இயேசு.

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில், அன்பு என்ற சொல் வாழ்வின் முதன்மையை நிர்ணயத்தாலும், இறைவனை அன்பு செய்தல் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதிலிருந்து புறப்படுவதே பிறரன்பு.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

நாம் இந்த நாள்களில் மாமன்றத்தின் மறைமாவட்ட நிலையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

ஒட்டுமொத்த திருஅவை அளவிலும், நம் மறைமாவட்ட அளவிலும், நம் தனிப்பட்ட வாழ்விலும் நம் முதன்மைகளைச் சரி செய்ய இந்த நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. வாழ்வின் முதன்மைகளைச் சரி செய்ய நாம் முதன்மைகள் எவை என்பதை முதலில் வரையறுத்துக்கொள்ள வேண்டும். மேலும், அந்த முதன்மைகள் முதன்மையாக இருக்க வேண்டும். தொடர்ந்து முதன்மைகளைத் தக்க வைக்க முயற்சிகள் வேண்டும்.

இறையன்பு என்பதே நாம் கொண்டிருக்க வேண்டிய இணைதலைக் குறிக்கிறது. அதாவது, இதுவே அனைத்திற்கும் அடித்தளமாக இருக்கின்றது. இறைவனை நாம் அன்பு செய்தல் என்பதைப் பல நேரங்களில் செபித்தல், அல்லது திருப்பலி ஒப்புக்கொடுத்தல் என்று குறுகிய அளவில் சுருக்கியே நாம் புரிந்துகொள்கின்றோம். ஆனால், இறையன்பு என்பதை நான் நம் வாழ்வின் தொடக்க நிலை என்று புரிந்துகொள்கின்றேன். இயேசு தன் தந்தையுடன் இறைவேண்டலில் இணைந்திருந்தார். இறைவேண்டல் வழியாகத் தன் இணைப்பை நாள்தோறும் புதுப்பித்துக்கொண்டார் இயேசு. ஆக, இயேசுவின் ஆன்மா, உள்ளம், மற்றும் உடல் என அனைத்தும் இந்த இணைப்பிலிருந்தே ஊட்டம் பெற்றன.

பிறரன்புக்கும் இறையன்புக்கும் நடுவில் இருப்பது 'தன்னன்பு.' 'உன்னை அன்பு செய்வது போல' என்று மொழிகின்றார் இயேசு. தன்னன்பு என்பது தன்னலம் அல்ல. மாறாக, தன்மதிப்பு. தன் உடலை எவரும் குறைத்து அன்பு செய்வதில்லை என்கிறது விவிலியம். இயல்பாகவே நாம் நம்மேல் அன்பும் ஆவலும் காட்டுகின்றோம். தன்னன்பில் நான் என்னை அறிந்து, ஏற்றுக்கொண்டு, மதிக்கிறேன்.

பிறரன்பு என்பது நான் அடுத்தவருக்கு நீட்ட வேண்டிய கரம். இறைவனின் காலூன்றி, என்னையே உயர நிறுத்தி, என் கரத்தை மற்றவர்களுக்கு நீட்டும்போதுதான் என் வாழ்வை நான் பயனுள்ளதாக மாற்ற முடியும். அப்படி இல்லையென்றால் என் வாழ்க்கை எனக்குள்ளாகவே முடிந்துவிடும்.

இன்றைய பதிலுரைப்பாடல் ஆசிரியர், 'என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்' (காண். திபா 18) என்று தன் அன்பை ஆண்டவராகிய கடவுள்முன் அறிக்கையிடுகின்றார். இந்த அன்பை அறிக்கையிட்ட ஆசிரியர், தன் வாழ்வை இந்தப் பற்றுறுதியின் நிழலில் நகர்த்துகின்றார். தன் வாழ்வின் முதன்மையை அறிவதும் அறிக்கையிடுவதும் வாழ்வதற்கான தொடக்கம் என உணர்கிறார் ஆசிரியர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 
"இதனால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்"

நிகழ்வு

எதிர்பாராத விதமாக நடந்தேறிய ஒரு கோர விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்த அறிவழகன், தன் தங்கை செல்விக்கு ஒரு நல்ல தந்தையாகவும் தாயாகவும் இருந்து வந்தான். அறிவழகனின் பெற்றோர் விபத்தில் இறந்தபோது, அவன் அப்போதுதான் கல்லூரிப் படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.; அவனுடைய தங்கை செல்வி வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள்.

அறிவழகனின் தாயார் சிறந்ததொரு கதை சொல்லி. அதனால் அவர் தன் பிள்ளைகளுக்குக் கதைசொல்லித் தூங்க வைப்பதுண்டு. தாயின் இறப்பிற்குப் பிறகு அறிவழகன் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு, இரவு நேரங்களில் தன் தங்கைக்குக் கதை சொல்லித் தூங்க வைத்தான். இப்படி நாள்கள் மெல்ல நகர்ந்தன. ஒருநாள் அறிவழகன் கடைத்தெருவிற்குச் சென்றிருந்தபோது, மின்னணுச் சாதனம் ஒன்றைக் கண்டான். அதில் பாடல்கள், உரைகள் போன்ற பலவற்றையும் சேமித்து வைக்கலாம் என்று கடைக்காரர் சொன்னதும், அவன் அதை விலை கொடுத்து வாங்கிக் கொண்டான்.

வீட்டிற்கு வந்ததும் அறிவழகன் தான் வாங்கிவந்த மின்னணுச் சாதனத்தில், இரவு நேரங்களில் தன் தங்கைக்குச் சொல்லும் கதைகளைப் பதிவேற்றி, அதைத் தன் அவளிடம் கொடுத்து, "இந்த மின்னணுச் சாதனத்தில் நிறையக் கதைகளைப் பதிவேற்றி வைத்திருக்கின்றேன். அதனால் இனிமேல் நீ இரவு தூங்கச் சொல்லும்போது இதிலுள்ள் கதைகளைக் கேட்டுத் தூங்கு. அண்ணனுக்குப் பல வேலைகள் இருக்கின்றன" என்றான்.

செல்வி தன் அண்ணன் கொடுத்த மின்னணுச் சாதனத்தைக் கையில் வாங்கி, அதை உற்றுப்பார்த்தாள். பின்னர் அவள் தன் அண்ணனிடம், "அண்ணா! இந்த மின்னணுச் சாதனத்தில் நிறையக் கதைகள் இருக்கலாம்; ஆனால், அதில் எனது தலையைச் சாய்த்துகொள்ள மடி இல்லையே! அதனால் எனக்கு இந்த மின்னணுச் சாதனம் வேண்டாம்" என்றாள். அப்பொழுதுதான் அறிவழகனுக்குத் தன் தவறு புரிந்தது. "என்னுடைய இடத்தைச் சாதாரண இந்த மின்னணுச் சாதனத்தால் நிரப்ப முடியாது" என்பதை உணர்ந்தவனாய், வழக்கம்போல் அறிவழகன் தன் தங்கை செல்வியைத் தன் மடியில் வைத்துக் கதைகள் சொல்லித் தூங்க வைத்தான்.

பொருளோ, மின்னணுச் சாதனங்களோ, பணமோ எதுவுமே அன்பிற்கு இணையகிவிடாது. அன்புக்கு மாற்று அன்புதான். இத்தகைய அன்பை நாம் ஆண்டவரிடமும் அடுத்திருப்பவரிடம் கொண்டிருந்தால், நாம் நெடுநாள் வாழ்வோம் என்று இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

இறையன்பு முதன்மையான கட்டளை

எதையெல்லாம் செய்யவேண்டும் என்று 248 கட்டளைகளும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்று 365 கட்டளைகளும் இருந்த நிலையில், யூத இரபிகள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் நடுவில் எது முதன்மையான கட்டளை என்ற விவாதம் அடிக்கடி எழுவதுண்டு. இந்நிலையில், இயேசு சதுசேயருக்கு நன்கு பதிலளித்தைப் பார்த்த மறைநூல் அறிஞர் ஒருவர் அவரிடம் வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்.

மறைநூல் நூல் அறிஞர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இயேசு, மறைநூல் அறிஞர் அதுவரை கேட்டிராத ஒன்றைப் பதிலாகத் தரவில்லை. மாறாக, அவர் நன்கு அறிந்திருந்த, இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற, யூதர்களின் நம்பிக்கை அறிக்கை என்று சொல்லப்படுகின்ற ஒன்றையே பதிலாகத் தருகின்றார். ஆம், யூதர்கள் காலையிலும் மாலையிலும் சொல்லும் ஷம்மாவில் (இச 6: 4-9), இடம்பெறும் முதல் இரு இறைவார்த்தைகளையே (4-5) இயேசு முதன்மையான கட்டளை என்கிறார்.

இயேசு, மறைநூல் அறிஞரிடம் முதன்மையான கட்டளை என்று கூறுகின்ற பகுதியில் ஒரு முக்கியமான உண்மை அடங்கியிருக்கின்றது. அது என்னவெனில் கடவுளை அரைகுறை மனத்தோடு அல்ல, முழு மனத்தோடு அன்பு செய்யவேண்டும் என்பதுதான். இஸ்ரயேல் மக்கள், "நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்" என்று சொல்லிகொண்டு, அவரை முழுமையான அன்பு செய்யாமல், பிற தெய்வங்களை வழிபாட்டார்கள். இதனால் அவர்கள் நாடுகடத்தப்பட்டு, அடிமைகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். எனவேதான் கடவுள் ஒருவரே, அவரை முழு இதயத்தோடு அன்பு செய்வதுதான் முதன்மையான கட்டளை என்கிறார் இயேசு.

பிறரன்பு இறையன்புக்கு இணையான கட்டளை

மறைநூல் அறிஞர் தன்னிடம் கேட்ட, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்ற கேள்விக்கு, இயேசு, ஒரே கடவுளை முழு இதயத்தோடு அன்பு செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, "உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீது அன்பு கூர்வாயாக" என்று லேவியர் நூலில் (லேவி 19: 18) இடம்பெறும் இறைவார்த்தையைக் குறிப்பிட்டுவிட்டு, "இது இரண்டாவது கட்டளை" என்கிறார். இதே பகுதியை மத்தேயு நற்செய்தியில் நாம் படித்துப்பார்க்கும்போது, அங்கே, "இதற்கு இணையான இரண்டாவது கட்டளை" (மத் 22: 39) என்று வரும். எனில், இறைவனை அன்பு செய்யவேண்டும் என்ற கட்டளைக்கு இணையானது பிறரை அன்புசெய்யவேண்டும் என்ற கட்டளை.

லூக்கா நற்செய்தியிலோ திருச்சட்ட அறிஞர், "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" (லூக் 10: 29) என்று கேட்கின்றபோது, இயேசு அவரிடம், நல்ல சமாரியர் உவமையைச் சொல்லிவிட்டுத் தேவையில் உள்ளவர் யாவரும் அடுத்திருப்பவரே என்பார். இவ்வாறு இயேசு ஒரே கடவுளை முழு இதயத்தோடு அன்பு செய்யவேண்டும் என்பது முதன்மையான கட்டளை என்றும் அதற்கு இணையாக அடுத்திருப்பவரை அன்பு செய்து இரண்டாவது கட்டளை என்றும் கூறுகின்றார்.

அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்தால் நீண்டநாள் வாழலாம்


மறைநூல் அறிஞர், இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு இயேசு நன்றாகப் பதிலளித்தும் அல்லது தான் கேட்ட கேள்விக்கு நல்ல பதில் கிடைத்ததும், மறைநூல் அவர் அத்தோடு பேச்சை நிறுத்தியிருக்கலாம்; ஆனால், அவர், இறைவனிடமும் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவது, "எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது" என்கிறார். அப்பொழு இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியின்று தொலைவில் இல்லை" என்கிறார்.

இயேசு, அறிவுத்திறனோடு பதிலளித்த மறைநூல் அறிஞரிடம், நீர் இறையாட்சியில் இருக்கின்றீர் என்று சொல்லவில்லை; இறையாட்சியின்று தொலைவில் இல்லை என்று சொல்கிறார். காரணம், அவரும் அவரைப் போன்றவர்களும் முதன்மையான கட்டளை எது என நன்றாகத் தெரிந்துகொண்டு கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொண்டார்கள் (மாற் 10: 40). ஆகையால், முதன்மையான கட்டளை எது எனத் தெரிந்தும் அதைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், அவர் இறையாட்சிலிருந்து தொலைவில்தான் இருக்கவேண்டும்.

அதேவேளையில் முதன்மையான கட்டளை எது எனத் தெரிந்துகொண்ட பிறகு அதைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, நமக்காகவே பரிந்து பேசுவதற்கென என்றும் உயிர் வாழ்கிற இயேசுவின் துணையுடன், இன்றைய முதல்வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, நெடுநாள் வாழ முடியும். ஆகையால், நாம் மறைநூல் அறிஞரைப் போன்று முதன்மையான கட்டளையை அறிந்து வைத்திருப்பதோடு நின்றுவிடாமல், அதைக் கடைப்பிடித்து வாழ்ந்து, இறையாசி பெறுவோம்.

சிந்தனை:

"அன்பு செய்வதும் அன்பு செய்யப்படுவதையும் விட இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியானது வேறொன்றும் இல்லை" என்பார் பிரஞ்சு எழுத்தாளரான ஜார்ஜ் சான்ட். ஆகையால், நாம் இறைவனையும் நமக்கு அடுத்திருப்பவரையும் முழுமையாக அன்புசெய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறையுரைச் சிந்தனைகள் அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
அன்பே நம் வாழ்வு

இறை இயேசுவில் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே,

இன்றைய உலகம் பலவிதமான முன்னேற்றப் பாதைகளிலே கால் எடுத்து வைத்து 21-ஆம் நூற்றாண்டைக் கடந்து - கொண்டிருக்கிறது.
மாதக் கணக்காக கடலிலே பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த மனிதன் இன்று சில மணி நேரங்களிலே ஒரே நாளிலே ஆகாய விமானம் மூலம் அடையத் துடிக்கிறான்.

தன் வீடு விட்டு தன் உறவினர் வீடு செல்ல தனி காரிலே, வாகனத்திலே செல்ல நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுக்கிறான். ஏனெனில் தங்கு தடையின்றி தான் நினைக்கும் நேரத்தில் தான் விரும்பும் இடத்தை அடைய முடியும் என்பது அவனது திட்டம்.

வாழ்க்கையிலே இன்று பணம், பதவி, சொகுசான வாழ்வு விரைவில் பெற வேண்டுமானால் மருத்துவராகவோ, கணினி பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ விளங்க வேண்டும் என்பதற்குப் படிப்பில் கவனம் செலுத்தி அத்தகையப் பயிற்சியைத் தேடுகின்றான்.

நோயற்ற வாழ்வும், ஆரோக்கியமான உடலும் கொண்டவனாகத் திகழ, தகுந்த தண்ணீரைப் பருகவும், அன்றாட உடல் பயிற்சியும், உணவும் பெற வழிவகைகளைத் தேடுகின்றான் மனிதன். இவ்வாறு மனித சமுதாயம் வாழ்வில் முன்னேற எடுக்கும் பாதைகளை, முயற்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அன்பார்ந்தவர்களே, இதேபோல், இறை இயேசுவின் சீடத்துவ நிலையில் நீங்களும், நானும் நிறைவு பெற்று அவரைப் பின்பற்றும் நமக்குப் பலவிதமான கடமைகள் உண்டு. இவைகளில் எது முக்கியம்? தேவை? என்பதை நம் ஆண்டவரே நமக்குத் தெளிவாகத் தருகின்றார்.
மனிதன் தேடுதலிலே ஈடுபட்டவன். உம்மில் இளைப்பாறும் வரை என் உள்ளம் நிம்மதி காணவில்லையே என்று அகுஸ்தினார் கூறியது போல் மனித உள்ளம் இறைவனைத் தேடுகின்றது. தேடும் இந்த மனித உள்ளம் இறைவனை அடைய சிறந்த வழி என்ன?

இன்றைய வாசகங்கள் மிகத் தெளிவாக அந்த வழியை என்பதை மிக ஆணித்தரமாகத் தருகின்றன. இணைச் சட்டத்திலே (6:5) கூறப்பட்டதுபோல : நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே. இருவர் அல்ல. எனவே உன் முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்வாயாக (மாற்கு 12:30). இது முதற் கட்டளை. உன் மீது அன்பு கூறுவதுபோல, உன்னை அடுத்து இருப்பவர் மீதும் அன்பு காட்டுவாயாக (மாற்கு 12:31). இது இரண்டாம் கட்டளை. இவை இரண்டும் மேலான கட்டளை என நம் ஆண்டவர் இன்று நமக்குத் தருகிறார்.

ஆனால் நாம் எவ்வாறு கடவுளை அன்பு செய்கிறோம் என்பதை அறிய முடியும்? சிலர் சொல்லலாம். நான் தினமும் செபிக்கிறேன். செபமாலை சொல்லுகிறேன். விவிலியம் வாசிக்கிறேன். ஞாயிறு திருப்பலியில் தவறாது பங்கெடுக்கிறேன். இதனால் நான் இறைவனை அன்பு செய்கிறேன் என்று நீங்கள் கூறலாம். இவையெல்லாம் நமக்குத் தேவைதான். இவை அந்த அன்புக்கு இட்டுச் செல்லும் செயல்கள் என்பதை மறுக்க முடியாது.

ஆனால் இவைகள் நான் சரியான பாதையில் கடந்து செல்கின்றேன் என்பதற்குச் சாட்சியாக இருக்க முடியாது. ஏனெனில் நான் உங்களுக்குப் புதியதொரு கட்டளை கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல், நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். இந்த அன்பால் நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வார்கள் (யோவா. 13:34) என்றார். சின்னஞ்சிறிய ஒருவருக்குச் செய்தபோதெல்லாம் நீ எனக்கே செய்தாய் (மத். 25:40) என்கிறார் ஆண்டவர்.

ஆனால் அன்புக்குரியவர்களே இன்று மனிதன் மதத்தால், மொழியால், இனத்தால், சாதியால் கூறுபோட்டு சங்கங்கள், கட்சிகள் என்று சுற்றுச் சுவரை எழுப்பி மனித மாண்பையே கொலை செய்து கொண்டிருக்கிறான். சாத்தானின் கூட்டங்கள் இரவும், பகலுமாக இந்த அழிவுப் பாதையிலே இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

அன்பார்ந்தவர்களே! அழைக்கப்பட்டவர்களாகிய நாம் வாழ்வது எப்படி? அழுகிய நாற்றமெடுத்த தொழுநோயாளியின் புண்களையே கழுவித் துடைத்து கொண்டிருந்த அன்னை தெரெசாவைப் பார்த்து ஒருவன் கேட்டான், அம்மா! நான் 10000 ரூபாய் கொடுத்தாலும் இதைச் செய்ய மாட்டேன். உங்களால் இதைச் செய்ய எவ்வாறு முடிந்தது என்று. அன்னை சொன்னார்கள்: 'துன்புறும் கிறிஸ்துவையல்லவா இவனிடத்தில் நான் காண்கிறேன்' என்று. ஏன்! கிறிஸ்மஸ் நள்ளிரவில் திருப்பலிக் காண அன்னைத் தெரெசா தன் சகோதரிகளோடு இரவில் கல்கத்தாவில் நடந்து சென்றபோது அருகில் உள்ள மருத்துவமனையில் பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை குளிரிலே நடுங்கி அழும் சப்தம் கேட்டு திடுக்கிட்டார்கள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு மடத்திற்கு வந்து சுத்தம் செய்து புதிய ஆடை உடுத்தி அந்தக் குழந்தையைச் சுற்றி அமர்ந்து தாலாட்டுப் பாடி மகிழ்ந்தார்கள். ஆம் இந்த அன்பைத்தான் நம் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.

புனித பவுல் அடிகளார் (1 கொரி. 13:4) கூறுவது போல இந்த அன்பு பொறுமையுள்ளது, கனிவுள்ளது, பொறாமைப் படாது, இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, தீங்கு நினையாது. மாறாக இந்த அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்.

இறுதியாகப் புனித அசிசியாரோடும் சேர்ந்து செபிப்போம். ஓ! தெய்வீகக் குருவே ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் கொடுக்கவும், பிறர் என்னைப் புரிந்துகொள்வதை விட பிறரைப் புரிந்து கொள்ளவும், பிறர் அன்பைத் தேடுவதைவிட, பிறருக்கு அன்பு காட்டவும் எனக்கு அருள் புரியும்.
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
தேவை திசை மாறாத அன்பு கடவுளை நாம் முழு இதயத்தோடும், முழு அறிவோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்கின்றோமா? ஒரு பங்குத் தந்தையிடம் அவரது பங்கு மக்களில் ஒருவர் வந்து, "சுவாமி, எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என்றார். "செபிக்கும்போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிப்பது நல்லது. ஆகவே எந்தக் கருத்துக்காக செபிக்கவேண்டுமென்று கூறினால் நன்றாக இருக்கும்" என்றார் பங்குத் தந்தை, வந்தவரோ, "என் மனைவி என்னை அன்பு செய்ய வேண்டும்" என்று செபியுங்கள் என்றார். பங்குத் தந்தையோ, "ஏன், உங்களுக்கும், உங்கள் மனைவிக்குமிடையே ஏதாவது பிரச்சினையா?" என்றார். அதற்குக் கணவர், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சுவாமி. என் மனைவி நான் விரும்புகின்ற அளவுக்கு என்னை அன்பு செய்வதில்லை" என்றார்.

நிகழ்ச்சியில் வந்த கணவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சினையைப் போன்றதுதான் நமக்கும் கடவுளுக்குமிடையே உள்ள பிரச்சினை. கடவுளைப் பார்த்து, "கடவுளே உமது மக்கள் நீர் விரும்பும் அளவுக்கு உம்மை அன்பு செய்கின்றார்களா?" என்று கேட்டால், கடவுள் என்ன பதில் சொல்வார்? "என் மக்கள் நான் விரும்பும் அளவுக்கு என்னை அன்பு செய்கின்றார்கள்" என்று கடவுள் கூறினால் (முதல் வாசகம், நற்செய்தி) நாம் மகிழ்ச்சி அடைவோம். அப்படிச் சொல்லமாட்டார் என்றால், நமது வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்வோம்.

நமது இதயம் (உணர்வுகளின் கூட்டு) எப்பொழுதும் சூரியனைப் பார்த்திருக்கும் சூரியகாந்திப் பூவைப் போல் இறைவனைப் பார்த்திருக்க வேண்டும். நமது அறிவு (எண்ணங்களின் கூட்டு) எப்பொழுதும் ஞாயிறைப் பார்த்திருக்கும் தாமரையைப் போல கடவுளைப் பார்த்திருக்க வேண்டும். நமது ஆற்றல் (நமது செயல்களின் கூட்டு) நாளும், பொழுதும் ஆண்டவரைப் போற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். நமது இறை அன்பு | திசை மாறினால், நமது பிறர் அன்பு திசை மாறும் ! நமது இறை அன்பு திசை மாறும்போது மீட்பராம் இயேசுவின் துணையை நாடுவோம் (இரண்டாம் வாசகம்).

மேலும் அறிவோம் :

அன்பகத்(து) இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த்(து) அற்று (குறள் : 78).

பொருள் :
உள்ளத்தில் அன்பு இல்லாமல் குடும்பம் நடத்துவது என்பது பாலைவனத்தில் பட்ட மரம் மீண்டும் துளிர்விட்டுத் தளிர்த்தது என்று கூறுவது போலாகும்! அன்பில்லாமல் குடும்பம் நடத்துவது கொடுமை மிக்கது!
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
ஒரு வழக்கறிஞருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, ஏனென்றால், அவர் சட்டத்தைக் கரைத்துக் குடித்து விட்டாராம்! கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த சட்ட வல்லுநர்களுக்கும் அடிக்கடி சட்ட வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவர்கள் கடவுள் தந்த பத்துக் கட்டளைகளை 613 சட்டங்களாகப் பெருக்கினர். இவற்றில் 248 சட்டங்கள் மனிதர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விதித்த நேர் மறைச் சட்டங்கள், எஞ்சியிருந்த 365 சட்டங்கள் மனிதர் என்னென்ன செய்யக்கூடாது என்று தடை செய்த எதிர்மறைச் சட்டங்கள். இச்சட்டங்கள் மனிதர் தாங்க முடியாத பெருசுமையாகிவிட்டன. மறைநூல் அறிஞர்களும் பரிசேயரும் "சுமத்தற்கரிய பழுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் வைக்கிறார்கள்" (மத் 23:4) என்ற கிறிஸ்துவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞர் ஒருவர் கிறிஸ்துவை அணுகி வந்து அவரிடம், "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" (மாற் 12:28) என்ற கேட்டது நியாயமான கேள்வி, கிறிஸ்து எல்லாச் சட்டங்களின் சாரத்தை இரண்டே கட்டளைகளில் அடக்கிவிட்டால், விவிலியத்தை மேற்கோள் காட்டியே அவர் பதிலளிக்கிறார், இணைச்சட்ட நூலை மேற்கோள் காட்டி, கடவுளை முழு உள்ளத்துடன் அன்பு செய்வது முதன்மையான கட்டளை என்று அறிக்கையிடுகின்றார் (இச 8:4 5). லேவியர் நூலை மேற்கோள் காட்டி நம்மை நாம் அன்பு செய்வது போல் அடுத்திருப்பவரையும் அன்பு செய்வது இரண்டாம் கட்டளை என்று கூறுகிறார் (லேவி 19:18).

கிறிஸ்துவினுடைய போதனையின் புதிய அம்சம், அவர் இறையன்பையும் பிறரன்பையும் வெவ்வேறாகப் பிரித்துக் காட்டாமல், இரண்டையும் இணைத்துக் காட்டுகிறார். மேலும் பிறரன்புக் கட்டளை, இரண்டாம் கட்டளை முதலாவது கட்டளைக்கு இணையானது என்று கூற அவர் தயங்கவில்லை ) (மத் 22:39). உண்மையில் பிறரன்புதான் இறை அன்பின் வெளிப்பாடாகும்.

'அபு பென் ஆடம்' என்பவர் கண்ட ஒரு காட்சியில் ஒரு வானதூதர் கடவுளை அன்பு செய்வோரின் பட்டியலைக் காட்டினார். அதில் தன்னுடைய பெயர் இடம் பெறாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்த அவர் வானதூதரிடம் : "அபு பெண் ஆடம் தனது அயலாரை அன்பு செய்யும் மனிதன்" என்று எழுதும்படி கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் அதே வானதூதர் காட்சியில் இறையடியார்கள் பட்டியலைக் காட்டினார். அதில் அடி பென் ஆடத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தது. கண்ணுக்குப் புலப்படுகின்ற மனிதர்களை அன்பு செய்ய முடியாதவர்கள் கண்ணுக்குப் புலப்படாத கடவுளை அன்பு செய்ய இயலாது. அப்படி அவர்கள் சொன்னால், அது பச்சைப் பொய் என்கிறார் புனித யோவான் ( 1 யோவா 4:19).

இக்காலத்தில் அடுத்தவர்களுடைய பிரச்சினைகளைக் குறைந்த அளவு பொறுமையுடன் கேட்டால், அதுவே மாபெரும் அன்பாகும். இன்றைய மனிதர் பரபரப்பான உலகில் இயந்திரமயமான வாழ்க்கை நடத்துகின்றனர், அவர்களுக்கு மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்க மனமில்லை . "எல்லாரிடமும் கைக்கடிகாரம் உள்ளது; ஆனால் எவருக்குமே நேரம் இல்லை " (Everybady have a 'watch; but nobady has time.) ஒருவர் தன் நண்பருடன் ஒருமணி நேரம் பேசித் தன் பிரச்சினைகளைக் கொட்டித் தீர்த்தார். இறுதியில், "நன்றி நண்பா! என் தலைவலி எல்லாம் போய் விட்டது" என்றார், அதற்கு நண்பர் அவரிடம், "உன் தலைவலி எங்கும் போகவில்லை : எனக்கு இப்ப உன்னுடைய தலைவலி வந்துவிட்டது" என்றார், பிறருடையப் பிரச்சினைகளைக் கேட்பதால் நமக்குத் தலைவலி வந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்குப் பொறுமையுடன் செவிசாய்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாம் கிறிஸ்துவை நம் வாழ்வில் பிரதிபலிக்கின்றோம். "மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; தமது துன்பங்களைச் சுமந்து கொண்டார்" (எசா 53:4).

கடவுளை அன்பு செய்கிறோம். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கேட்பதைப்போல் அவரை முழு உள்ளத்துடன் அன்பு செய்கின்றோமா ? கடவுளை அன்பு செய்வதில் நாம் இருமனப்பட்டவர்களாய் இருக்கின்றோம். ஒரு பாட்டி ஆலயத்திகுச் சென்றபோதெல்லாம், மிக்கேல் வானதூதரைத் தொட்டுக் கும்பிடுவார்; அதே நேரத்தில் அத்தூதரின் காலடியில் கிடக்கும் லூசிப்பேயையும் தொட்டுக் கும்பிடுவார். ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்: "விண்ணகம் சென்றால், மிக்கேல் தூதர் கவனித்துக் கொள்வார்; நரகம் சென்றால் லூசிப்பேய் கவனித்துக் கொள்ளும். இருவரையும் திருப்திப்படுத்துவது நல்லது.

அப்பாட்டி போன்று நாமும் இருமனப்பட்டவர்களாய் உள்ளோம், ஒவ்வொரு கனமான பாவமும் ஒரு வகையில் சிலை வழிபாடு எனலாம். சிலைவழிபாட்டிற்குத் திருத்தூதர் பவுல் கூறும் இலக்கணம்; "படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணிவிடை செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள் " (உரோ 1:25). அதே திருத்தூதர் பொருளாசையைச் சிலைவழிபாட்டிற்கு ஒப்பிடுகிறார், கிறிஸ்துவும், நாம் இரு தலைவர்களுக்கு, ஊழியம் செய்ய முடியாது என்கிறார், "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய் முடியாது" (மத் 5:24)

இன்றையப் பதிலுரைப்பாடல் (திபா 18) கூறுகிறது: "கடவுளே நமது ஆற்றல், கற்பாறை, மீட்பர், கேடயம், அரன்," அவரை முழுமையாக அன்புகூர நமக்கு அழைப்பு விடுக்கிறது.

எனவே கடவுளை முழுமையாக அன்பு செய்து, நம்மை நாம் அன்பு செய்வதுபோல நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வோம். இறை அன்பு இல்லாத பிறர் அன்பு வேரற்ற மரம், பிறர் அன்பு இல்லாத இறை அன்பு கனிகொடாத மரம், பிறர்க்கு உதவி செய்வதைவிட பிறரிடம் இனிமையாகப் பேசுவது சிறந்ததாகும்.
.

அகார், அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன் நிசாலன் ஆகப்பெறின் (குறள் 92)
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
உள்வாங்கி வெளிவிடுவது

பிறரன்புக்கு இலக்கணமாக வாழ்ந்த புனித அன்னை தெரசா, ஏழ்மையில்‌ வாடிய ஒரு பெண்ணிடம்‌ இருந்துதான்‌ அன்பைக்‌ குறித்துத்‌ தான்‌ கற்றுக்‌ கொண்டதாகக்‌ கூறியுள்ளார்‌. அந்நிகழ்வை அன்னை சொன்னது போலவே கேட்போம்‌.

"இர்‌ இரவு எங்கள்‌ துறவு இல்லத்திற்கு ஒருவர்‌ வந்தார்‌. அவர்‌ என்னிடம்‌, "தாயே, அருகில்‌ ஒரு குடும்பத்தில்‌ எட்டுக்‌ குழந்தைகள்‌. அத்தனைபேரும்‌ பல நாள்கள்‌ பட்டினியாய்‌ இருக்கிறார்கள்‌" என்றார்‌. . நான்‌ உடனே அவர்களுக்குத்‌ தேவையான உணவுப்‌ பொருள்களை எடுத்துக்‌ கொண்டு அவ்வில்லத்திற்குச்‌ சென்றேன்‌. அங்கு அக்குழந்தைகள்‌ பட்டினியால்‌ உடல்‌ மிகவும்‌ மெலிந்து, கண்கள்‌ . இருண்டு படுத்துக்கிடந்தார்கள்‌. நான்‌ கொண்டு சென்ற உணவை அக்குழந்தைகளின்‌ தாய்‌ நன்றியோடு பெற்றுக்‌ கொண்டதும்‌, அதில்‌ பாதியை எடுத்துக்‌ கொண்டு வெளியே சென்றார்‌. சிறிது நேரம்‌ கழித்து அவர்‌ மீண்டும்‌ வந்து தன்‌ குழந்தைகளுக்கு மீதம்‌ இருந்த உணவைப்‌ பரிமாறினார்‌. எங்கே அவ்வளவு அவசரமாகப்‌ போய்விட்டு வருகிறீர்கள்‌ என்று கேட்டபோது அந்தத்தாய்‌ அடுத்த வீட்டில்‌ உள்ளவர்களும்‌ பலநாள்கள்‌ பட்டினியாய்‌ இருக்கிறார்கள்‌' என்று பதில்‌ சொன்னார்‌.

ஓர்‌ ஏழை மற்றோர்‌ ஏழையுடன்‌ உணவைப்‌ பகிர்ந்து கொள்வதில்‌ ஆச்சரியம்‌ எதுவும்‌ இல்லை. அன்று என்னை வியக்க வைத்தது இன்னொரு உண்மை. பட்டினியால்‌ துடித்துக்‌ கொண்டிருந்த தன்‌ குழந்தைகளின்‌ அழுகைக்‌ குரலைத்‌ தினமும்‌ கேட்டு வந்த அந்தத்தாய்‌ அடுத்த வீட்டில்‌ உள்ளவர்களும்‌ பட்டினியாய்‌ இருந்தனர்‌ என்பதைத்‌ தெரிந்து வைத்திருந்தாரே என்பதுதான்‌. பொதுவாக நாம்‌ துன்பப்படும்போது நம்மை பற்றி மட்டுமே நமது கவனம்‌ இருக்கும்‌. அடுத்தவர்களைப்‌ பற்றிச்‌ சிந்திக்க நமக்கு மனமோ, நேரமோ சக்தியோ இருக்காது. ஆனால்‌ அந்தத்‌ தாயிடம்‌ நான்‌ கண்ட பரிவும்‌ அன்பும்‌ பகிர்வும்‌ என்னை ஆச்சரியத்தில்‌ ஆழ்த்தியது.

புனித அன்னை தெரசா அவர்கள்‌ பகிர்ந்து கொண்ட இந்த அனுபவம்‌ அன்பின்‌ ஆழத்தை; இலக்கணத்தை நமக்குச்‌ சொல்லித்‌ தருகிறது.

யூதர்கள்‌ விவிலியத்தில்‌ காணப்படும்‌ கட்டளைகளை ஒன்றாகத்‌ தொகுத்து மொத்தம்‌ 613 (செய்ய வேண்டியவைகள்‌ 2498. செய்யக்‌ கூடாதவைகள்‌ 365) என்று பட்டியலிட்டனர்‌. இவைகளில்‌ முக்கியமானது எது என்று பேர்‌ பெற்ற ரபீக்களிடம்‌ மக்கள்‌ கேட்டறிவது வழக்கம்‌. இயேசுவிடமும்‌ மறைநூல்‌ அறிஞர்‌ ஒருவர்‌ இதைத்தான்‌ கேட்கிறார்‌. "கட்டளைகளின்‌ முதன்மையானது கடவுளை அன்பு செய்வதும்‌ (இ.ச. 6:6), தன்னைப்‌ போல்‌ அடுத்தவரை அன்பு செய்வதும்‌ (லேவி. 19:18) " என்பது இயேசுவின்‌ பதில்‌.

இந்த இரண்டு கட்டளைகளும்‌ கிறிஸ்தவ வாழ்வின்‌ உயிர்‌ நாடி. நாம்‌ மூச்சுவிடும்‌ போது, காற்றை உள்வாங்கி வெளிவிடுவதுபோல, கடவுள்‌ அன்பை உள்வாங்கி பிறர்‌ அன்பாக அதை வெளிக்கொணர வேண்டும்‌. எனவே இரண்டும்‌ பிரிக்க முடியாதவை. அப்படியெனில்‌ நாம்‌ அடுத்தவர்‌ மீது காட்டும்‌ அன்பு நாம்‌ சுவைத்து இன்புற்ற இறையன்‌ பே! இதில்‌ களங்கமிருக்காது, கலப்படமிருக்காது மாறாகக்‌ கனிவிருக்கும்‌. நல்ல கனி கொடுக்கும்‌ கடவுளின்‌ சாயலைப்‌ பழித்துக்‌ கடவுளை அன்பு செய்ய இயலுமா? (1 யோ. 4:11--21).

இறைவன்‌ முழுமையான மனத்தோடும்‌ பிளவுபடாத உள்ளத்தோடும்‌ அன்பு செய்வதும்‌, தன்னிடம்‌ அன்பு கொள்வது போல அடுத்திருப்பவரிடம்‌ அன்பு செலுத்துவதும்‌ எரிபலிகளையும்‌ வேறு பலிகளையும்‌ விட மேலானது என்று சொன்னதும்‌ அவர்‌ அறிவுத்‌ திறனோடு பதில்‌ அளித்ததைக்‌ கண்ட இயேசு அவரிடம்‌ "நீ இறையாட்சியினின்று தொலைவில்‌ இல்லை" என்றார்‌ (மார்க்‌. 12:34).

இந்தக்‌ கூற்று பாராட்டா? இல்லை, எச்சரிக்கையா? இயேசுவின்‌ இந்த வார்த்தைகள்‌ பாராட்டாகக்‌ கிடைத்த பெரும்‌ பேறுதான்‌. ஆனால்‌ "நீ பக்கத்தில்‌ வந்து விட்டாய்‌. ஆனால்‌ இன்னும்‌ உள்ளே நுழையவில்லை" என்ற எச்சரிக்கையாகவும்‌ அல்லவா தொனிக்கிறது!

இறையாட்சிக்கு, விண்ணகப்‌ பேரின்பத்துக்கு மிக அருகில்‌ வந்து விட்டு அதை அனுபவிக்காமல்‌ போவது எவ்வளவு வருந்தத்தக்கது! ஆகா, இத்துணை. விலையுயர்ந்த கலைநயமிக்க மாளிகையை என்‌ தந்த எனக்காகக்‌ கட்டியிருக்கிறார்‌ என்று அருகில்‌ வந்து வியந்து பார்த்துவிட்டு உள்ளே நுழைந்து அதில்‌ வாழவில்லையென்றால்‌ என்ன பயன்‌?

"நிலை வாழ்வை உரிமையாக்கிக்‌ கொள்ள நான்‌ என்ன செய்ய வேண்டும்‌?" (லூக்‌. 10:25) என்ற கேள்விக்குத்‌ திருச்சட்ட அறிஞர்‌ சரியாக விடையளித்ததில்‌ வியப்பில்லை. உரையாடல்‌ அத்துடன்‌ முடிந்திருக்க வேண்டும்‌. ஆனால்‌ முடியவில்லை. ஏன்‌? அந்தப்‌ பதில்‌ அப்படியே திருச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஒன்று. (இ.ச, 6:5). அது 'அறிவளவில்‌ மட்டும்தானா? அனுபவமாக வேண்டாமா? செயலாக மலர வேண்டாமா? எனவே தான்‌ உரையாடல்‌ தொடர்கிறது. "சரியாய்ச்‌ சொன்னீர்‌. அப்படியே செய்யும்‌. அப்பொழுது வாழ்வீர்‌" (லூக்‌. 10:28). அதன்‌ விளக்கம்‌ நல்ல சமாரியர்‌ உவமை.

"நீங்கள்‌ மனந்திரும்பி சிறு பிள்ளைகள்‌ ஆகாவிட்டால்‌ விண்ணரசில்‌ புக மாட்டீர்கள்‌" - இந்த இறைவாக்கை மனப்பாடம்‌ செய்தால்‌ மட்டும்‌ நாம்‌ உள்ளே நுழைந்துவிட முடியுமா? குழந்தை உள்ளத்தோடு கடவுளின்‌ வார்த்தையை நம்பும்‌ பண்பும்‌, மன்னித்து மறக்கும்‌ மனமும்‌ கொண்டவர்களாய்‌ நம்மையே தாழ்த்தினால்தானே "நமக்கு விண்ணரசில்‌ இடம்‌ கிடைக்கும்‌. செயலற்ற இறைநம்பிக்கை _- உயிரற்றது (யாக்‌. 2:17).

இறைவனை அன்பு செய்தல்‌ என்றால்‌ என்ன? எளிய முறையில்‌ விளக்க வேண்டும்‌ என்றால்‌ அது 1. இறைவன்‌ திருவுளத்துக்குச்‌ சரணடைவது. 2. அடுத்திருப்பவரை - அயலாரை அன்பு செய்வது. இரண்டுமே எளிதல்ல. இறைவன்‌ திருவுளத்தை இனம்‌ காண்பதும்‌ கடினம்‌. நம்மைச்‌ சுற்றி இருப்பவர்களில்‌ இறைவனைக்‌ காண்பதும்‌ கடினம்‌.

இறையன்பும்‌ பிறரன்பும்‌ இரு வேறு அன்புறவுகள்‌ அல்ல. மாறாக ஒரு நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌, இரு வெளிப்பாடுகள்‌. இறையன்பைப்‌ பிறரன்பில்‌ தான்‌ காண முடியும்‌. "கடவுளிடம்‌ அன்பு செலுத்துவதாகச்‌ சொல்லிக்‌ கொண்டு தன்‌ சகோதரர்‌ சகோதரிகளை வெறுப்போர்‌ பொய்யர்‌. தம்‌ கண்முன்னேயுள்ள சகோதரர்‌ சகோதரிகளிடம்‌ அன்பு செலுத்தாதோர்‌ கண்ணுக்குப்‌ புலப்படாத கடவுளிடம்‌ அன்பு செலுத்த முடியாது" (1 யோ. 4:20).

காற்றை அது நம்‌ உடலில்‌ படும்போதும்‌, மரங்கள்‌ அசையும்‌ போதும்‌, புழுதிப்படலம்‌ சுழலும்‌ போதும்‌ தான்‌ நாம்‌ உணர்வுது போல இறைவனை அன்னை தெரசா ஏழை நோயாளிகளிடமும்‌, வலேசா உழைக்கும்‌ தொழிலாளர்களிடமும்‌, அண்ணல்‌ காந்தி மக்கள்‌ விடுதலையிலும்தானே காண முடிந்தது! நாமும்‌ எதார்த்த வாழ்வில்‌ அயலானில்‌ காண விரும்பாத இறைவனின்‌ உடனிருப்பை திருவிழாக்களிலும்‌ தேரோட்டங்களிலும்‌ மட்டுமே காண நினைப்பது அபத்தமே! கண்ணை மூடி செபிப்பதைக்‌ கைவிட்டு இறைபுகழ்ச்சி ஆர்ப்பரிப்புக்களில்‌ மட்டுமே உணர முயற்சிப்பது கூட அபத்தமே!

இறையன்பு இல்லாத மனித அன்பு வேரற்றது. மனித நேயமாக, மன்னிப்பாக மலராத இறையன்பு பொருளற்றது, போலியானது.

"அன்புள்ள இடத்தில்தான்‌ உயிர்‌ இருக்கிறது. அன்பில்லா வாழ்க்கை இறப்பே. அன்பும்‌ உண்மையும்‌ ஒரு நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌. உண்மையினாலும்‌ அன்பினாலும்‌ நாம்‌ உலகத்தையே வெற்றி கொள்ள முடியும்‌ என்பது என்‌ உறுதியான நம்பிக்கை." இது அண்ணல்‌ காந்தி சொன்னது.

தேடல்‌ ஆன்மீகம்‌ (ஆங்கிலக்‌ கவிதை தமிழில்‌)

இதயத்தைத்‌ தேடினேன்‌
  இருக்குமிடம்‌ தெரியவில்லை.
கடவுளைத்‌ தேடினேன்‌
  கண்களுக்குப்‌ புலப்படவில்லை.
மனிதனைத்‌ தேடினேன்‌
  தேடிய மூன்றும்‌ கிடைத்தன.
 திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
கலப்படமற்ற அன்பு

'அன்பை'க் குறிக்க, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் 'Love' என்ற சொல், வர்த்தக, விளம்பர உலகிற்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல். இச்சொல், மிக எளிதாக, மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், அதன் உண்மைப் பொருள் காணாமல் போய்விட்டதைப்போன்ற ஓர் உணர்வு எழுகிறது. ஓர் உணவு பிடிக்கும் என்றோ, தன் வீட்டு நாயை பிடிக்கும் என்றோ, பார்த்த படம், வாசித்த நூல் ஆகியவை பிடிக்கும் என்றோ நாம் தமிழில் கூறுவது அனைத்திற்கும், ஆங்கிலத்தில் 'Love' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். I love ice cream, I love my dog, I love going for a long walk என்று அனைத்தையும் 'Love' என்ற சொல்லால் குறிக்கும்போது, அந்த சொல்லில் மட்டுமல்ல, அது குறித்துக்காட்டும் உணர்விலும், கூடுதலான கலப்படங்களும், போலிகளும் உருவாக வாய்ப்பு அதிகமாகின்றது. நம் உள் உலகின் ஆணிவேராக, அடித்தளமாக இருக்கவேண்டிய உண்மையான அன்பு உணர்வு, அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்ட, போலியான, கடை சரக்காக விற்கப்படுகிறது.

அன்பை இவ்வாறு கலப்படம் செய்து போலியாக்கி, விளம்பரம் செய்யும் இவ்வுலகில், இன்றைய ஞாயிறு வழிபாடு, அன்பைக் குறித்து சிந்திக்க நம்மை அழைக்கிறது. கிறிஸ்தவ மறைக்கும், உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர், அன்புதான். இந்த அன்பு, முப்பரிமாணம் கொண்டது. இந்த முப்பரிமாண அன்பைப்பற்றி, இறைமகன் இயேசு, இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித் தருகிறார்.

இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த ஒரு மறைநூல் அறிஞர், இயேசுவை அணுகியதாக இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்பது, அவர் இயேசுவிடம் கேட்ட கேள்வி. இம்மறைநூல் அறிஞர், உண்மையைத் தேடுகிறார், ஏனைய மதத் தலைவர்களைப் போல், மறைமுக நோக்கங்களுடன், குதர்க்கமான எண்ணங்களுடன் இவர் கேட்கவில்லை என்பதை இயேசு உணர்ந்ததால், அவரிடம், கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான கட்டளைகளைக் கூறுகிறார். அவற்றை, அந்த மறைநூல் அறிஞருக்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் இயேசு கூறுகிறார். "இஸ்ரயேலே கேள்" என்ற சிறப்பான அறைகூவலுடன், இயேசு, மூன்று கட்டளைகளைக் கூறுகிறார்.

மூன்று கட்டளைகளா? இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார்? என்ற கேள்விகள் எழலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், அங்கு, இரு அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்பு கொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ஒருவர் தன் மீது அன்பு கூர்வதுபோல், அடுத்தவர் மீது அன்பு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அடுத்தவர் மீது அன்பு கொள்வதற்கு ஓர் உந்துசக்தியாக, தன் மீது கொள்ளும் அன்பை இயேசு குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சிறிது ஆழமாகச் சிந்தித்தால், இதை, இயேசு, ஒரு நிபந்தனையாகச் சொன்னார் என்றும் எண்ணிப்பார்க்கலாம். அதாவது, அடுத்தவர்மீது அன்புகூர்வதற்குமுன், ஒருவர் தன்மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று, இயேசு கூறுவதுபோல் தெரிகிறது. நம்மீது நாம் கொள்ளும் அன்பு, அக்கறை, மரியாதை என்ற அடித்தளம் உறுதியாக அமையவில்லையென்றால், அடுத்தவர் மீது அன்பு, ஆண்டவர் மீது அன்பு, என்ற வானளாவியக் கோபுரங்களை நம்மால் எழுப்ப இயலாது.

நம்மீது நாம் காட்டும் அக்கறை, அன்பு ஆகியவற்றை, சுயநலம் என்று, தவறாக முத்திரை குத்தவேண்டாம். சுயநலம் என்பது, உண்மையிலேயே ஒரு சிறை. சரியான, உண்மையான அன்பை சுவைக்கத் தெரியாதவர்கள்தான், சுயநலத்தை வளர்த்துக் கொள்வார்கள். தன்னைப்பற்றிய சரியான மதிப்பும், மரியாதையும் இல்லாமல் போகும்போது, தன்மீது தனக்கே எழவேண்டிய உண்மையான அன்பு இல்லாமல் போகிறது. அது, ஒருவரை, சுயநலச் சிறைக்குள் தள்ளிவிடுகிறது. இந்தச் சிறைக்குள் 'நான்' என்ற ஒருவர் மட்டுமே வாழமுடியும். அங்கு அடுத்தவருக்கோ, ஆண்டவனுக்கோ இடமிருக்காது.

"உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" (மாற்கு 12: 31) என்று இயேசு சொன்ன சொற்களைக் கேட்டபோது, எனக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி, திருப்தி. காரணம் என்ன? இந்தக் கட்டளையை நிறைவேற்ற என்னால் முடியும் என்ற மகிழ்ச்சி அது. இயேசு, தன் சீடரோடு இறுதி இரவுணவு அருந்துகையில், அவர்களுக்குக் கொடுத்த கட்டளை, இக்கட்டளையைவிட, அதிகமான சவால் நிறைந்ததாக இருந்தது.

யோவான் நற்செய்தி 15 12-13 இயேசு தன் சீடர்களிடம் கூறியது: நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

இயேசு என்மீது அன்பு கொண்டிருப்பதுபோல் நான் பிறர்மீது அன்பு கொள்ளவேண்டும் என்ற கட்டளை, நான் கனவில் மட்டுமே காணக்கூடிய ஓர் இலட்சியம். ஆனால், என் மீது நான் கொண்டிருக்கும் அன்பையும், மதிப்பையும் அடுத்தவருக்கு வழங்க வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் கூறியிருக்கும் கட்டளை, நான் நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய ஒரு சவால்.

'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்று இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தார் மறைநூல் அறிஞர். இயேசுவின் வார்த்தைகளை முற்றிலும் ஏற்றுக்கொண்ட அவர், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, " கடவுளிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும், எரிபலிகளையும், வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார் (மாற்கு 12: 33) என இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

மறைநூல் அறிஞர் ஒருவர் இவ்விதம் கூறுவது பெரும் ஆச்சரியம்தான். கோவில் சார்ந்த செயல்களும், அங்கு செலுத்தப்படும் காணிக்கைகளுமே இஸ்ரயேல் மக்களின் தலை சிறந்த கட்டளைகள் என்று நம்பி, அவ்விதமே மக்களையும் நம்ப வைத்தவர்கள் மறைநூல் அறிஞர்கள். அவர்களில் ஒருவர், அன்பு செலுத்துவது, எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது என்று சொன்னது, இயேசுவையும் வியப்படையச் செய்திருக்கவேண்டும். மறைநூல் அறிஞர், மனப்பாடம் செய்த கட்டளைகளை, கிளிப்பிள்ளைப் பாடமாய்ச் சொல்லாமல், உண்மையான ஆர்வத்தோடு பேசியதைக் கண்ட இயேசு, அவரிடம், 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்று, தன் வியப்பையும், மகிழ்வையும் வெளிப்படுத்துகிறார்.

அன்பு செலுத்துவதையும், எரிபலிகளையும் இணைத்து, மறைநூல் அறிஞர் பேசியது அழகான ஓர் எண்ணம். ஆழமாகச் சிந்தித்தால், அன்புநிறைந்த வாழ்வு, உண்மையிலேயே, ஒரு பலிவாழ்வு, தியாக வாழ்வு என்பதை உணரலாம். வெளிப்படையான பலிகளை விட நமது சொந்தப் பலிவாழ்வு எவ்வளவோ மேலானதுதான். இத்தகையத் தியாக வாழ்வைக் கூறும் பல்லாயிரம் நிகழ்வுகளை நாம் அறிவோம். அவற்றில் ஒன்று இதோ...

2012ம் ஆண்டு, சீனாவில் நடந்த ஒரு நிகழ்வு இது. Deng Jinjie என்ற 27 வயது இளைஞர், ஓர் ஆற்றங்கரை ஓரமாக தன் இரு நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆற்றில், இளவயது தம்பதியரும், அவர்களின் ஐந்து வயது குழந்தையும் நீந்திக் கொண்டிருந்தனர். அக்குழந்தைக்குப் பாதுகாப்பாக, இடுப்பு வளையம் போடப்பட்டிருந்தது. திடீரென, அக்குழந்தை ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட பெற்றோர் அலறவே, இளைஞர் Deng Jinjie அவர்கள், தனக்கு என்ன ஆகும் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல், அக்குழந்தையைக் காக்க ஆற்றில் குதித்தார். அந்நேரத்தில், அப்பெற்றோரும் ஆற்றின் ஆழத்திற்கு இறங்கவே, இளையவர் Deng Jinjie அந்த மூவரையும் காக்க வேண்டியதாயிற்று. ஆற்று நீரின் வேகம் கூடிக்கொண்டே இருந்ததால், அவர் அதிக போராட்டத்திற்குப் பின், மூவரையும் கரைக்கு அருகே கொண்டுவந்து சேர்த்தார். அந்த போராட்டத்தில் அவர் தன் சக்தியை முற்றிலும் இழந்ததால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். ஒரு மணி நேரத்திற்குப் பின், அவரது உயிரற்ற உடல் கரைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்நிகழ்வின் மிகக் கொடூரமான ஓர் உண்மை என்னவென்றால், Deng Jinjie அவர்களால் காப்பாற்றப்பட்ட மூவரும் கரையை அடைந்ததும், தங்களைக் காப்பாற்றியவருக்கு என்ன ஆயிற்று என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கரையில் நிறுத்தி வைத்திருந்த தங்கள் காரில் ஏறிச் சென்றுவிட்டனர். நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவர் அவர்களை இடைமறித்து, அந்த இளைஞனைப் பற்றி கேட்டபோது, "எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். அன்பையும், சுயநலத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஒரு கண்காட்சித் திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில் பல பள்ளிக் குழந்தைகள் அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த ஓர் இளைஞர் அக்குழந்தைகளை எல்லாம் காப்பாற்றினார். பலமுறை எரியும் நெருப்புக்குள் சென்று, குழந்தைகளைக் காப்பாற்றியவர், இறுதியில் அந்தப் புகை மண்டலத்தில் மூச்சு முட்டி, மயங்கி விழுந்து, தீயில் கருகி, இறந்தார்.

சீன இளைஞர், Deng Jinjieக்கும், இந்திய இளைஞருக்கும், அவர்களால் காப்பாற்றப்பட்டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள் தங்கள் பெயர் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் இந்தத் தியாகச் செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை, அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே ஒரு உந்துதலால் அவர்கள் இத்தியாகச் செயல்களைச் செய்தனர். "தன் நண்பர்களுக்காக உயிரைத் தருவதை விட மேலான அன்பு இல்லை" என்று இயேசு சொன்னதையும் தாண்டி, செயலாற்றிய இவ்விரு இளையோரைப் போல், பல தியாக உள்ளங்கள், அறிமுகமே இல்லாதவர்களைக் காத்த முயற்சியில், தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

சுயநலமும், அன்பும் ஒன்றுதான் என்ற எண்ணங்களை மீண்டும், மீண்டும் விளம்பரம் செய்து, உண்மை அன்பை, கலப்படமான, போலியான ஓர் உணர்ச்சியாகச் சொல்லித்தரும் இவ்வுலகில், பல்லாயிரம் தியாக உள்ளங்கள் வழியே, உண்மையான, கலப்படமற்ற அன்பின் தெய்வீக இலக்கணத்தை நாம் கற்றுக்கொள்ள இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
மறையுரை அருட்பணி.குழந்தை இயேசு பாபு சிவகங்கை மறைமாவட்டம்
பொதுக்காலத்தின் 31 ஆம் ஞாயிறு
முதல் வாசகம்
மு.வா: இச: 6: 2-6
ப.பா : திபா: 18: 1-2, 2-3,46, 50
இ.வா: எபி: 7: 23-28
ந. வா : மாற்: 12: 28-34

அன்புடையோராய் இறையாட்சிக்கு அருகில் இருக்கத் தயாரா?


அன்பென்ற நதி மீது படகாகு அறியாதப் பேரின்ப கரைசேர்க்கும் என்கிறது ஒரு அருமையான பாடல் வரிகள். ஆம் அன்புதான் அனைத்திற்கும் ஆணிவேராய்த் திகழ்கின்றது. வாழ்க்கையின் அச்சாரமே அன்புதான். கடவுளிடம் கொண்டுள்ள அன்பே பக்தியாய், செபமாய் இறுதியில் முக்திக்கு வழிகாட்டுவதாய் உள்ளது. மனிதரிடம் கொண்டுள்ள அன்புதான் பாசமாய் நேசமாய் உறவாய் நட்பாய் அமைகிறது. இயற்கையிடம் கொண்டுள்ள அன்பு பயிராய் உணவாய் மழையாய் நல்வாழிடமாய் ஆகிறது. தன்னிடம் கொண்டுள்ள அன்பே நல்வாழ்வாய் ஆரோக்கியமாய் திறமையாய் வெற்றியாய் உருவெடுக்கிறது. அன்பில்லாமல் இவ்வுலகம் வெறுமையே.
இவ்வாறு அன்பைப் பற்றி நாம் கூறிக்கொண்டே செல்லலாம்.
இன்றைய வாசகங்கள் நம்மை அன்புடையவர்களாக வாழ அழைக்கிறது.
இறையாட்சிக்குள் நுழைய நமக்கு அனுமதிச்சீட்டே அன்புதான்.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் முதன்மையான கட்டளை எது என்ற கேள்வியை கேள்வியைக் கேட்ட மறைநூல் அறிஞருக்கு இயேசு சரியான விடையைக் கூறினார். அதாவது கடவுளை முழு மனதுடனும் ஆற்றலுடனும் அன்பு செய்ய வேண்டுமெனக் கூறினார். இயேசுவிடம் கேட்கப்பட்டது முதன்மையான கட்டளை மட்டும் தான். ஆனால் அவர் முதன்மையான கட்டளைக்குரிய விடையோடு நிறுத்திவிடவில்லை. மாறாக இரண்டாவதாகவும் ஒரு கட்டளை இருக்கிறது எனக் கூறி பிறரன்புக் கட்டளையைக் கூறுகிறார். அதைக் கேட்ட மறைநூல் வல்லுநர் இயேசு கூறியதை ஆமோதிக்கிறார். இறுதியாக இயேசு அம்மறைநூல் அறிஞரை நோக்கி " நீர் இறையாட்சியிலிருந்து வெகு தொலைவில் இல்லை" எனப் பாராட்டுகிறார்.

இயேசு தாம் பாடுபட்டு இறக்கும் முன்பு நமக்கெல்லாம் கொடுத்த கட்டளை அன்புக் கட்டளையே. அந்த அன்புக் கட்டளையை நாம் அறிவால் அறிந்திருந்தால் மட்டும் நாம் இறையட்சிக்கு அருகாமையில் இருக்கிறோம் என பொருளில்லை. மாறாக அக்கட்டளையை செயல்படுத்துவதாலேயே நாம் இறையாட்சியை நெருங்கிச் செல்ல முடியும் என்ற சிந்தனையைத்தான் இன்றைய திருவழிபாடு நமக்கு வழங்குகிறது.

இக்கட்டளையை நாம் செயல்படுத்துவது எவ்வாறு என நாம் பலமுறை சிந்தித்திருக்கிறோம். இருப்பினும் மீண்டுமாக நாம் நம்மை நினைவுபடுத்திக்கொள்வோம்.
* பிறரை முழுமனதுடன் அவர்களுடைய நிறை குறையோடு ஏற்றுக்கொள்வது
* தேவையில் இருப்போருக்கு நம்மாலான உதவியைச் செய்வது
* பிறரின் துன்பத்தில் உடனிருப்பது
* பிறர் நமக்கெதிராக செய்யும் குற்றங்களை மன்னிப்பது
* விட்டுக்கொடுப்பது
* கடுமையான சொற்களைத் தவிர்த்து அன்பான ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவது

போன்ற பிறரன்புச் செயல்களை நாம் கடைபிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய செயல்களை செய்யத்தூண்டுவது நாம் கடவுளிடம் கொண்டுள்ள அன்பே. ஆம் பிறரன்புச் செயல்களால் நாம் கடவுளை நெருங்குகிறோம். கடவுளிடம் நெருங்குவதால் நாம் பிறரிடம் அன்புகொள்கிறோம். கடவுளோடும் பிறரோடும் கொண்டுள்ள அன்பால் நாம் இறையாட்சியை நோக்கிப் பயணிக்கின்றோம்.
எனவே அன்பு சகோதர சகோதரிகளே அன்போடு வாழக் கற்றுக்கொள்வோம்.


இறைவேண்டல்

அன்பே உருவான இறைவா! எம்மை அன்பால் நிரப்பும். நாங்கள் உம்மோடும் பிறரோடும் அன்பால் இணைந்து இறையாட்சியின் மக்களாய் வாழத் துணை செய்யும். ஆமென்.
அருட்பணி.குழந்தை இயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
மறையுரை அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

அன்பை குறைக்காதீர்கள்.. அள்ளி கொடுங்கள்

இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 31ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ' உள்ளே வரலாமா ' என்று கேட்டனர். தந்தை 'வாருங்கள்' என்றார். 'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது யாராவது ஒருவர் தான் வரமுடியும் என் பெயர் பணம் இவர் பெயர் வெற்றி இவர் பெயர் அன்பு.. எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் வரமுடியும் எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை 'வெற்றியை அழைக்கலாம்.. நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார். ஆனால் குமரனோ ' அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம் நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால் எல்லாவற்றையும்.. வெற்றி.. உட்பட அனைத்தையும் வாங்கலாம்' என்றான். ஆனால் குமரனின் தாயோ 'வேண்டாம் அன்பையே அழைக்கலாம். அன்பு தான் முக்கியம்' என்றாள். பின் மூவரும், "அன்பு உள்ளே வரட்டும்" என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் உள்ளே நுழைந்தனர். குமரனின் அம்மா 'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார். அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

ஆம் அன்புமிக்கவர்களே! அன்பு மட்டும் நமக்கு இருந்தால் போதும்.. நம் வாழ்வில் வெற்றியும், தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும். பொதுக்காலம் 31ம் ஞாயிறு நம்முடைய முழுமையான அன்பை வெளிப்படுத்த சொல்கிறது. அன்பை குறைக்காமல் அள்ளி அள்ளி பொழியச் சொல்கிறது. வாருங்கள் அன்பின் மாந்தர்களாய் வாழ்வோம். மூன்று விதங்களில் நம் முழுமையான அன்பை வாரி வழங்குவோம்.

1. முழு இதயத்தோடு அன்பு
புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறவர் மகதலா மரியாள். மகதலின் மரியா இயேசுவின் கடைசி நாட்களில் - பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது, அன்பிற்குரிய யோவானைத் தவிர பிற ஆண் சீடர்கள் ஓடியபோது அருகில் இருந்தவர் இவர், பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். இவர் இயேசுவைப் பின்சென்று அவருக்கு சேவை செய்து வந்தார். இயேசு தனக்குச் செய்த உதவிகளுக்கு நன்றியாக, இவர் தனது உடமைகளைப் பயன்படுத்தி, அவருக்குச் சேவை செய்தார். சாகும்வரை அவருக்குப் பிரமாணிக்கமாய் இருந்தார்.

"என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறும் அளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசுவைப் பற்றிக் கொள்வதில் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை திகழ்கிறார். நற்செய்தியாளர் யோவான் மற்றும் மாற்கு ஆகிய இருவர் கூற்றுப்படி, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.

உயிர்த்த இயேசுவைக் காணும்வரை இவர் இளைப்பாறவில்லை. "அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்? நான் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வேன்" என்றார். அவரைத் தூக்கிச் செல்ல இவரால் முடியாதென்றாலும், இச்சொற்கள் இவளது அன்பைக் காட்டுகின்றன. சாதாரண அன்பு அல்ல, மாறாக முழுமையான அன்பு. முழு இதயத்தோடு அவர் இயேசுவை அன்பு செய்ததைக் காட்டுகின்றது.

அன்புமிக்கவர்களே! மகதலா மரியா இயேசுவை அன்பு செய்தது போல நாம் ஆண்டவரை அன்பு செய்வோம். இறுக்கமாய் பற்றிக்கொள்வோம். அரைகுறையான அன்பிலிருந்து முழு அன்போடு ஆண்டவரை அணுகுவோம். நம் இதயம் முழுவதும் அவர் நிறைந்திருக்கட்டும்.

2. முழு மனத்தோடு அன்பு
ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான், அவள்மீது அளவுகடந்த பாசத்தையும் காட்டினான். இவ்வாறிருக்க ஒரு நாள் அவள் ஒரு தோல்நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான். அவன் திரும்பி வரும்போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்திருந்தான். ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மணவாழ்வு தொடர்ந்தது.

நாட்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிடையே இருந்த அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர். அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறுதான் இருந்தாள்.

அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள். அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது. தன் அன்பு மனைவியின் இறுதிச் சடங்கை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான். அவன் திரும்பி வரும்போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து "எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்?" இது வரைக்கும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?" எனக் கேட்டான்.அதற்கு அவன், "நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக்கூடும் என்பதால்தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன். அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன். அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" எனப் பதிலளித்தான்.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் அடுத்தவரிடம் இருக்கும் குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை என்பதற்கு இந்த நிகழ்வு சான்று. முழுமையான அன்பு குறைகளை பார்ப்பதில்லை. நாம் வாழும் இடத்தில் பலரை ஒதுக்குகிறோம். காரணம் என்ன? நம்மிடத்தில் முழுமையான அன்பு இல்லை. அருகிலிருக்கும் அனைவரையும் முழுமையாக அன்பு செய்வோம். பிறகு வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பிருக்கும் போதே முழு மனத்தோடு அனைவரையும் அன்பு செய்வோம்.

3. முழு அறிவோடு அன்பு
இறந்த மனிதன் தான் செல்லமாக அன்பு செய்த நாயையும் அழைத்துக் கொண்டு மேலே மோட்சத்திற்கு சென்றான். ஒரு சாலையின் வழியாக சென்றான். அந்தச் சாலை எங்கு போகிறதோ எனச் சிந்தித்தான்.
கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் ஒரு பக்கத்தில் உயரமான சலவைகல்லாலான மதிற்சுவரைக் கண்டான்.

சிறிது தூரத்தில் மலை மேல் அந்த மதிற்சுவரில் அழகிய நுழைவாயில் ஒன்றைக் கண்டான். அருகில் சென்று பார்த்தபோது, அந்த வாயிலின் கதவில் ரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருப்பதையும், அந்த வாயிலை நோக்கிச் செல்லும் பாதை தங்கத்தால் போடப்பட்டிருப்பதையும் கண்டான். அந்த வாயிலை நோக்கித் தன் நாயுடன் நடக்க ஆரம்பித்தான். அருகில் செல்லும்போது அந்த வாயிலின் உள்ளே ஒரு மனிதன் தங்க மேசையின் முன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அருகில் சென்ற அவன் அந்த மனிதனிடம் கேட்டான்" இந்த இடத்தின் பெயர் என்ன?" அந்த மனிதன் சொன்னான்" சொர்க்கம்" அவன் கேட்டான்" குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?"

"நிச்சயமாக! உள்ளே வாருங்கள் குளிர்ந்த நீர் வரவழைக்கிறேன்"சொல்லியவாறே அவன் கதவைத் திறக்கலானான்! வழிப்போக்கன் தன் நாயைக் காட்டிக் கேட்டான்"என் நண்பனும் என்னோடு வரலாம் அல்லவா?" "மன்னிக்கவும்! நாய்களுக்கு இங்கு அனுமதி இல்லை" வழிப்போக்கன் யோசித்தான். பின் தன் வந்த பாதையில் சாலையை நோக்கி நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.

நீண்ட தூரம் நடந்தபின் மற்றொரு வாயிலைக் கண்டான். துருப்பிடித்த கதவு. அதை நோக்கி ஒரு மண்பாதை சென்று கொண்டிருந்தது. அந்த வாயிலை அவன் நெருங்கியதும் ஒரு மனிதன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அவனிடம் கேட்டான்"குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?"
"உள்ளே ஒரு குழாய் இருக்கிறது, வாருங்கள்"
"நாயைக் காட்டிக் கேட்டான் "என் தோழனுக்கும் நீர் வேண்டும்"
அந்த மனிதன் சொன்னான் "குழாயடியில் ஒரு குவளை இருக்கிறது. எடுத்துக் கொள்ளலாம்" அவன் உள்ளே சென்றான். குழாயையும் குவளையையும் கண்டான்.தண்ணீர் எடுத்து நாய்க்கும் கொடுத்துத் தானும் அருந்தினான்.

தாகம் தீர்ந்தது. மரத்தடி மனிதனை அணுகிக் கேட்டான்" இந்த இடத்தின் பெயர் என்ன?" அவன் சொன்னான் "சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது" வழிப் போக்கன் திகைத்தான், "குழப்பமாயிருக்கிறதே! நான் வரும் வழியில் ஒருவர் வேறு இடத்தையும் சொர்க்கம் என்று சொன்னாரே!" ஓ! இந்த ரத்தினக்கல் பதித்த கதவுள்ள இடத்தைச் சொல்கிறீர்களா? அது---நரகம்!!"
"அப்படியென்றால் சொர்க்கம் என்று அவர்கள் சொல்லி அவர்கள் ஏமாற்றுவது உங்களுக்கு எரிச்சலாக இல்லையா?" "இல்லை. மாறாக மகிழ்ச்சியடைகிறோம். அந்த இடத்தை கடந்து வரும் நண்பர்களை நாங்கள் கண்டுபிடிக்கிறோம். உண்மையான அன்பு கொண்டவா்கள் மட்டுமே அந்த இடத்தை கடந்து இங்கு வர முடியும். ஆகவே அந்த இடம் முழு அன்பிற்கான தேர்வு மையம். அங்கு வெற்றி பெற்றால் தான் இங்க நிலைவாழ்வு கிடைக்கும் என்றார்.

அன்புமிக்கவர்களே! மனிதர்களைத் தாண்டி நாம் உயிர்களையும் நம் முழு அறிவோடு அன்பு செய்ய வேண்டும். தாவரங்கள், பறவைகள், விலங்குகள் இவற்றை நம் முழு அறிவோடு அன்பு செய்ய வேண்டும். வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும். பறவைகளை வீட்டில் வைத்து நேசிக்க வேண்டும். விலங்குகளை நம் அன்பால் மகிழ்விக்க வேண்டும். அவைகளை நம் முழுஅறிவோடு அன்பு செய்ய வேண்டும்.

மனதில் கேட்க
1. என் வாழ்கையில் நான் வெறுத்ததை எல்லாம் என் அன்பால் திரும்ப பெற்றுக்கொள்ளலாமா?
2. அன்பில் குறை வைக்காமல் முழுமையான அன்பை பொழிய ஆசையாய் நான் செயல்படுவேனா?
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
 
 
மறையுரை அருள்பணி. குமார்ராஜா
அறிவு, ஆர்வம், திறந்த மனம்

" அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கான விடைக்குத் தனது சொந்த விளக்கத்தையும் அளித்த மறைநூல் அறிஞர் ஒருவரை இயேசு " நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" எனப் பாராட்டும் நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.

இந்தப் பாராட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்:
மறைநூல் அறிஞரின் அறிவுத் திறனை இயேசு பாராட்டுகிறார். அறிவாற்றல் இறைவனைப் பற்றி அறிவதில், வாழ்வின் மதிப்பீடுகளை தெரிந்துகொள்வதில் செலவழிக்கப்படுவது பாராட்டுக்குரியது. மாறாக, இறைவனை மறுப்பதற்கோ, இறையாட்சி மதிப்பீடுகளைச் சிதைப்பதற்கோ பயன்படுத்தப்படும் அறிவு அழிவுக்குரியது.

அறிவாற்றல் மிக்க மறைநூல் அறிஞரின் ஆர்வம் இங்கே பாராட்டப்படுகிறது. அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான், இயேசு " சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு" தாமும் கேள்வி கேட்க முன்வந்தார். " அணுகி வந்தார்" என்னும் சொல்லாடல் கவனத்திற்குரியது. ஆர்வம் இருந்தால் அணுகிவரவேண்டும்.

மறைநூல் அறிஞரின் திறந்த மனதை இயேசு பாராட்டினார். அறிவும், ஆர்வமும் மிக்க பலரும் இறையாட்சியை நெருங்கிவருவதில்லை. காரணம், அவர்களிடம் திறந்த மனம் இல்லை. ஆனால், இயேசு சொன்ன விளக்கத்தை ஏற்று, " இறையன்பும், பிறரன்பும் பலிகளைவிட மேலானது" என்று கண்டுணர்ந்த உண்மையை அறிக்கையிடுகிறார் இந்த அறிஞர்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இறையாட்சியின் மதிப்பீடுகளைக் கண்டுணரவும், இறையாட்சியை நெருங்கி வரவும், எங்களுக்கு அறிவும், ஆர்வமும், திறந்த மனமும் தந்தருள்வீராக. உமது தூய ஆவியால் எம்மை நிரப்புவீராக. ஆமென்.
அருள்பணி. குமார்ராஜா


 
மறையுரை - சகோ. நிஜவந்த் ராஜ்
சிந்தனைக் குறிப்பு
மோசேயின் கட்டளைகள் பற்றிய கேள்வி இயேசுவிடம் எழுப்பப்படுகிறது. அக்காலக்கட்டத்தில், கடவுள் மோசேயின் வழியாகத் தந்த பத்து கட்டளைகளும், பல்வேறு விளக்கங்களுடன் 613 நியமங்களாக உருவெடுத்திருந்தன. அவற்றுள் எது முதன்மையானது? சிறந்தது? என்ற கேள்வி அந்த மறைநூல் அறிஞருக்கு ஏற்பட்டிருக்கவேண்டும். இயேசுவோ அனைத்துக் கட்டளைகளையும் உள்ளடக்கி இரண்டே கட்டளைகளாகச் சொல்கிறார். கடவுளன்பு - பிறரன்பு. சுய அன்பு இன்றி இவை இரண்டையும் நிறைவேற்ற இயலாது. கடவுளின் அளவற்ற அன்பை உலகிற்கு உணர்த்த, மெய்ப்பிக்க வந்தவர் இயேசு. அவரது அன்பில் வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இதைத்தான் இயேசு, 'உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்று முதன்மையான கட்டளையாகச் சொல்கிறார்.

கடவுளை எவ்வாறு அன்பு செய்வது? பிறரை அன்பு செய்வதன் வழியாக. கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது (1யோவா 4:20) என்கிறார் திருத்தூதர் யோவான். எனவே 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்." (1 யோவா 4:7) என திருத்தூதர் யோவான் அறிவுறுத்துகிறார்.

அன்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி புனித பவுலடியார் பட்டியலிடுகிறார். 'அன்பு பொறுமையுள்ளது. நன்மை செய்யும். பொறாமைப்படாது. தற்புகழ்ச்சி கொள்ளாது. இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது. தன்னலம் நாடாது. எரிச்சலுக்கு இடம் கொடாது. தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது. மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் (1 கொரி 13:4-7)." எனவே அன்பே உருவான கடவுளிடம் நாம் அன்பு கொள்ள வேண்டுமானால் மேற்சொன்ன அனைத்தையும் மனதில் கொள்வோம். நம்மை சுயகவனத்துடன் எவ்வாறு அன்போடு நடத்துகின்றோமோ அவ்வாறே பிறரையும் அன்புடன் நடத்துவோம். கடவுளை முழுமையாக அன்பு செய்து நிறைவுடன் வாழ்வோம்.
- சகோ. நிஜவந்த் ராஜ்
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ