ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

       பொதுக்காலம் 24ஆம் வாரம் - ஞாயிறு

    திருப்பலி முன்னுரை

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
தன்னலம் தவிர்க்க தயவு கேட்டு வந்திருக்கும் நெஞ்சங்களே!
B தவக்காலம்1
தன்னலம் நிறைந்த உலகில் தன்னலம் தவிர்த்து வாழ 24 ஆம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது.

மனிதர்கள் மகிழ்ச்சியில் வாழவேண்டும், கிடைத்ததை எல்லாம் பதுக்கிக் கொள்ள வேண்டும். நிம்மதி, ஆறுதல், செல்வம், சுகம், படிப்பு, பணம், பதவி என அனைத்தும் தனக்கு மட்டுமே வேண்டும் என்ற மனநிலையில் வாழ்கின்றனர். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கின்றனர். தனக்குக் கிடைக்காதது மற்றவர்களிடம் இருக்கக் கூடாது என்ற கெட்ட நினைவு பரவலாக மிகுதியாகிக் கொண்டே வருகிறது.

ஆனால் சிலுவையின் அடியில் நின்றால், வெற்றியின் மடியில் அமரலாம் என்ற போதனையை இறை மகன் இயேசு நமதாக்குகிறார்.
ஒன்றை இழக்கும் போது ஒன்றைப் பெறலாம். நமது துன்பத்தை, துயரத்தை பொறுத்துக் கொள்ளும்போது மகிழ்ச்சிக்கு வித்திடலாம். நம் வசதிக்காக வைத்திருப்பதை இல்லாதோருக்கு கொடுக்கும் செயல் நமது நம்பிக்கையை வளர்க்கும். வேண்டியதைவிட அதிகமாக வைத்துக்கொண்டு பசியோடு வருகின்றவரைப் பார்த்து நலமே சென்று வாருங்கள், குளிர் காய்ந்து கொள்ளுங்கள் என வார்த்தையால் மட்டும் கூறினால் பயன் என்ன? மாறாக அவர்களுக்கு தேவையான பொருட்களைக் கொடுத்து உதவி செய்தல்தானே அவசியம். அதுவே நம்பிக்கையின் செயல் வடிவம் என இன்றைய வாசகத்தில் வாசிக்கின்றோம்.

தன்னலம் தவிர்க்கும் போது அன்பு, கருணை, இரக்கம், பண்பு, பாசம் என அத்தனை பண்புகளும் அப்படியே வந்து ஒட்டிக்கொள்ளும். வேற்றுமை, வறுமை, பொறாமை இவை தலை தெறிக்க ஓடி விடும்.
"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னை பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்புகிற எவரும் அதை இழந்து விடுவர்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வர்." என்ற யேசுவின் தன்னலமற்ற வார்த்தையை மனதுக்குள் இருத்தி தன்னலப் போக்கினை தவிடு பொடியாக்குவோம்;.

தன்னலம் தவிர்க்க அருள்தரும் திருப்பலி இது. நாங்கள் இழந்து போனவை அனைத்தையும் விண்ணகத்தில் பெற்றுக் கொள்ள, எங்கள் அன்றாட சிலுவையை அகமகிழ்வுடன் தூக்கிக் கொண்டு சுமக்க ஆவலாயிருக்கின்றோம். தன்னல உணர்வை உடைத்து விட்டு பிறர் நல உணர்வால் எமை நிரப்பும் இறைவா என மன்றாடுவோம்.


 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. சிலுவையைத் தூக்கிக் கொண்டு உம்மைப் பின் தொடர எமை அழைக்கும் ஆண்டவரே!
திருச்சபைத் தலைவர்கள் நற்செய்தியின் பொருட்டு வரும் துன்பங்களை பொறுமையோடு ஏற்று, தன்னலமின்றி பணியாற்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உமக்கு ஏற்புடைய எண்ணங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க எமை அழைக்கும் ஆண்டவரே!
பிறருக்கு ஏற்புடைய எண்ணங்களால் சட்டங்களை அமைத்து, அவைகளை ஏழை எளிய மக்களின் நலனுக்கு பயன்படுத்தி வாழும் தன்னலமற்ற தலைவர்கள் பலரை எங்கள் நாட்டிற்கு தரவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஒவ்வொரு நாளையும் புதிய நாளாகப் பிறக்கச் செய்யும் தெய்வமே! நீர் கருவிலே பெயர் சொல்லி அழைத்து, அன்புப் பணியாளனாக உருவாக்கிய எமது ஆன்மிகத் தந்தை லீனஸ் அவர்கள், எதிர்வரும் பதினேழாம் நாள் தனது வயதில் இன்னும் ஓர் ஆண்டை நிறைவு செய்கின்றார். கடந்து வந்த பாதையில் கண்மணிபோல் அவரைக் காத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். தொடர்ந்தும் அவர் உடல், உள நலன்கள் பெற்று, பணிவாழ்வில் ஆலமரம் போல தழைத்து ஓங்கி வளர்ந்து, செய்யும் பணி; சிறந்தோங்க, உமது அருள் வரங்களை நிறைவாகப் பொழிய வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. தன்னலம் தவிர்க்க எமக்கு கற்பிக்கும் ஆண்டவரே!
எங்கள் குடும்பங்களில் நிலவுகின்ற தன்னலத்தால் தான் பல்வேறு சோதனைகளை சந்திக்கிறோம். எங்கள் துன்பங்கள் எங்களை விட்டு விலக தன்னலத்திலிருந்து எங்களை மீட்டெடுக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. தன்னலம் தவிர்ப்போரை நேசிக்கும் இறைவா! துன்புறுவோரை நேசிக்கவும், நோயுற்றோரை கவனிக்கவும், ஏழைகளுக்கு உதவவும், முதிர் வயது பெற்றோரை கவனிக்கவும், அழுவோரின் கண்ணீரைத் துடைக்கவும், ஆதரவற்றோருக்கு ஆறுதல் சொல்லவும் போதுமான நேரமில்லை என ஓடித்திரியும் எங்கள் தன்னலப் போக்கை மாற்றி, அக்கறையுடன் அடுத்தவருக்கு உதவும் மனநிலையை இங்கே கூடியுள்ள அனைவருக்கும் தரவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்க வலுவைத் தரும் ஆண்டவரே!
நாட்டில் எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகள், தீவிபத்து, இரயில்விபத்து, சாலைவிபத்து, இயற்கையின் சீற்றம், வன்முறைதாக்குதல் போன்ற பேரிடர்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, உடனடி ஆறுதல் கிடைக்க தடையாக எழுகின்ற தன்னலப் போக்கினை அகற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



 
மறையுரை சிந்தனைகள்
 
அவர் ஒரு நீதிபதி. காரில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தார். நேரமாகி விட்டது என்ற நினைப்பில் விரைந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு கூட்டம் சாலையைக் கும்பலாக அடைத்துக் கொண்டு ஏதோ விபத்தாம். ஓர் இளைஞன் விபத்துக்கு உள்ளாகிக் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கிறானாம். உடனே மருத்துவமனைக்குக் கொண்டுபோனால் உயிர் பிழைப்பானாம். இவரிடம் உதவி கேட்டார்கள் காரில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு போக.
இந்த நேரத்தில் இது என்ன முட்டாள்தனம்? நான் அவசரமாகப் போக வேண்டும். வழியை விடுங்கள். யாருக்கும் உதவி செய்ய எனக்கு நேரமில்லை.நான் உடனே போயாக வேண்டும்! என்று கத்தினார் நீதிபதி.

கூட்டம் வழிவிடவில்லை. காரைப் பின்பக்கம் நகர்த்தி வேறு பக்கம் திரும்பி மாற்றுப் பாதையில் சென்று நீதிமன்றத்தை அடைந்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். தன் பணியைத் தொடங்கினார்.

போன் மணி அடித்தது. நீதிபதிக்கு அவரசரச் செய்தி. அவரது மகன் சாலை விபத்துக்குள்ளாகி யாரும் உதவி செய்யாததால் ரோட்டிலேயே கிடந்து சற்று நேரத்துக்கு முன்புதான் இறந்துபோனான்.

பின்னர் கிடைத்தன சரியான தகவல்கள். வரும் வழியில் எந்த இளைஞனை மருத்துவமனைக்குக் கொண்டுபோகத் தனக்கு நேரமில்லையென்று ஒதுங்கி ஓடி வந்தாரோ அதே இளைஞன் தான் அவரது மகன். அதுவும் ஓரே மகன்!
இப்படியும் சில மனிதர்கள்! பிறருக்கு எவ்விதத்திலும் பயன்படாமலே வாழ்ந்து மறைகின்றவர்கள்!

தன்னலத்தின் ஆழத்தைத் தொட்டு அங்கேயே கிடந்து மக்கி மண்ணாகிப் போகின்றவர்கள். தமக்காகத்தான் எல்லாரும் எல்லாமும் என்று எண்ணி பிறருக்காகத் துளியேனும் வாழ விரும்பாதவர்கள்.

இத்தகைய மக்கள் நடமாடும் இந்தப் பூமியில்தான் சில தெய்வ சாயலுள்ள மாமனிதர்களும் வாழ்கின்றார்கள்.

நாலு பேருக்கு நல்லது செய்வதே நாலுபேரை வாழ வைப்பதே நாலு பேருடன் வாழ்க்கைச் சுமையைப் பகிர்ந்துகொள்வதே ஆனந்தமயமான வாழ்வு என்று நம்புகின்றவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

படித்த பதவியிலுள்ள நல்லது கெட்டது தெரிந்த ஒரு நீதிபதியே இத்தகைய தன்னலவாதியாக இருந்திருக்கிறார் என்று அறிந்து வருந்துகின்ற அதே நேரத்தில் படிக்காத பாமர ஏழை விவசாயி ஒருவரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டால் மனத்தில் எதுவோ நெருடும்.

மழைக்காலம் அது!
ஊழிக்காலப் பேரழிவைக் கற்பனையில் கொண்டுவரும் பேய்த்தனமான மழை! எங்கும் வெள்ளக்காடு.
போதாக்குறைக்கு அருகில் ஆறு ஒன்று கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்து விட்டது. பொருள்கள் வீடுகள் கால்நடைகள் என்று எல்லா நிலைகளிலும் பேரழிவு. உயிர் பிழைக்க மேட்டு நிலப்பகுதி நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர் மக்கள்.
இந்த ஏழை விவசாயியும் தனது ஒரே மகனைத் தோள்களில் தூக்கிக் கொண்டு கழுத்தைத் தொட்டு ஓடும் வெள்ளத்தில் தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருந்தார்.சற்று மேடான பகுதிக்கு வந்து நிம்மதி பெருமூச்சு விட்ட அவர் தூரத்தில் வெள்ளத்தில் சில பேர் குழந்தை குட்டிகளுடன் தத்தளிப்பதைப் பார்த்தார். வெள்ளம் ஒவ்வொருவராக இழுத்துக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்துவிட்டு இவரால் தொடர்ந்து போக முடியவில்லை. ஒரு முடிவெடுத்தார்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த பனை மரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பயப்படாமல் நிற்க தன் மகனைக் கேட்டுக் கொண்டார். அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்டு உடனே வருவதாகச் சொன்னார். கழுத்தளவு ஓடிக்கொண்டிருந்த வெள்ளத்தைக் கண்டு பயப்படாமல் பையனும் பனை மரத்தைக் கட்டியணைத்தபடி நின்றான்.

விவசாயி நீந்திச் சென்று போராடி அவர்களைக்காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் விட்டபிறகு தன் மகன் இருந்த இடத்திற்கு நீந்தி வந்தார்.
அந்தோ பரிதாபம்! அங்கே மகனும் இல்லை அந்தப் பனை மரமும் இல்லை. திடீரெனப் பெருகிவந்த வெள்ளம் மகனையும் மரத்தையும் அடித்துச் சென்றிருந்தது.
இந்தத் தியாகியின் தியாகத்தைப் பற்றி அறிய வந்த நமது இதயத்தை ஏதோ நெருடவில்லையா? இப்படியும் சில மாமனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?
எல்லாவற்றையும் இழந்தும் பிறரை இவர்கள் வாழ்விக்கின்றார்களே! இறப்பைக் கண்டும் அஞ்சாமல் பிறருக்கு வாழ்வுக் கொடையை வழங்குகிறார்களே. இந்தத் தியாக உள்ளம் தூய உள்ளம் ஓரளவுக்காவது நமக்கும் இருந்தால் நாம் எவ்வளவு பேறு பெற்றவர்கள்!

மகான்களும் தியாகிகளும் பிறக்கும்போதே அப்படிப் பிறப்பதில்லை. எல்லாரையும் போல சாதாரணமாக குறைகளோடும் நிறைகளோடும் இருக்கின்ற இவர்கள் முயற்சி எடுத்துத் தம்மை மாற்றி புதுப்பிறப்பு அடைந்து புதிய மனநிலையை உருவாக்கிக் கொண்டு உயர்ந்த மதீப்பீடுகளையும, இலட்சியங்களையும் வாழ்ந்து காட்டிச் சாதனை புரிகின்றார்கள். அதன் பிறகு அவர்களது சிந்தனை, சொல், செயல் எல்லாமே மாறிவிடுகின்றன. கீழ்த்தரமான குணங்கள் குடிகொண்டிருப்பதை ஐயந் திரிபற அறிந்தாலும் மாறுவதில்லை. மாற முயற்சிப்பதில்லை. பிறர் நினைவூட்டினாலும் நன் மனங்கொண்டோர் நல்ல அறிவுரைகள் கூறினாலும் சிலர் தேறுவதே இல்லை.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னை பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்புகிற எவரும் அதை இழந்து விடுவர். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வர்."


 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

நீ யா(ர்)???!!!
நீ யா!!! என்று கேட்ப‌த‌ற்கும் நீ யார் என்று கேட்ப‌த‌ற்கும் ஏராள‌மான‌ வித்தியாச‌ங்க‌ள் உண்டு. முன்னைய‌து ஆச்ச‌ரிய‌த்தினாலும் ப‌ய‌த்தைனாலும் கேட்ப‌து. (நீ யா!!! என்று ஆச்ச‌ரிய‌த்திலும் கேட்க‌லாம். வெறுப்பிலும் கேட்க‌லாம்.) நீ யா....... இர‌ண்டாவ‌து ஒருவ‌ரைப் ப‌ற்றி தெரிந்து கொள்வ‌த‌ற்காக, நீ யார் ??? என்று கேள்வி கேட்ப‌து. இந்த‌ இர‌ண்டு கேள்வியையும் ப‌ல‌ முறை நாம் ந‌ம‌க்குள்ளும் பிற‌ர் ந‌ம்மிட‌மும் கேட்காம‌ல் இருப்ப‌தனால் தான் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள். இத‌னையே ந‌ம‌து முன்னோர்க‌ள் நாம் யார் என்று அறிந்து கொள்ளாத‌தே எல்லா பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் மூல‌ கார‌ண‌ம் என்ப‌ர். ந‌ம்மிட‌ம் யாராவ‌து வ‌ந்து நீங்க‌ யாரு? என்று கேட்டால் உட‌னே நாம் சொல்வ‌து ந‌ம‌து பெய‌ர். பெய‌ர் தான் நீயா உன் பெய‌ர் கொண்ட‌ ப‌ல‌ரை நான் பார்த்திருக்கிறேனே என்றால் உட‌னே வேலை அல்ல‌து இருக்கும் இட‌ம் கூறுவோம். அதையும் மீறி ஏதாவ‌து கேட்டால் இன்னாருக்கு இன்ன‌ உற‌வின் முறை என்று கூற‌ ஆர‌ம்பிப்போம். மொத்த‌த்தில் நாம் யார் என்று ந‌ம‌து புற‌ செய‌ல்பாடுக‌ளைச் சொல்லி விள‌க்க‌ அதிக‌ முய‌ற்சி செய்வோம். இதை விடுத்து யாரும் நான் அன்பான‌வ‌ள், இர‌க்க‌ குண‌ம் மிக்க‌வள், பிற‌ருக்கு உத‌வுப‌வ‌ள் என்று சொல்வ‌தில்லை மாறாக‌ அப்ப‌டிச் சொல்வோமானால் ஏதோ வேற்று கிர‌க‌ வாசிக‌ளைப் பார்ப்ப‌து போல‌ நம்மை மேலே கீழே பார்த்து செல்வ‌ர்.

இன்றைய‌ முத‌ல் வாச‌க‌த்தில் எசாயா இறைவாக்கின‌ர் துன்புறும் ஊழிய‌ர் யார் என்று ,அவ‌ர‌து புற‌ அடையாள‌ங்க‌ளை வைத்து எடுத்துரைக்கின்றார். அவ‌ர் ந‌ன்மைக்காக‌ துன்புறும் ந‌ல்லாய‌ன், அநியாய‌த்துக்காக‌ போராடும் அன்புருவ‌ம், நிந்த‌னை அவ‌மான‌ங்க‌ளையும் பொறுமையோடு ஏற்கும் பேராள‌ன், என்று ப‌ல‌ நிலைக‌ளில் ஊழிய‌ராம் இயேசுவை, அவ‌ர்த‌ம் வாழ்வை வெளிப்ப‌டுத்துகிறார். அவ‌ரைப் பின்ப‌ற்றும் சீட‌ர்க‌ளாகிய‌ ந‌ம‌தின் உருவ‌ம் எத்த‌கைய‌து என்ப‌தை க‌ண்டுண‌ர‌ இன்றைய வாசக‌ங்கள் வ‌ழி ந‌ம‌க்கு அறிவுறுத்துகின்றார்.

இன்றைய‌ இர‌ண்டாம் வாசக‌த்திலோ செய‌லற்ற‌ ந‌ம்பிக்கை செத்த‌ ந‌ம்பிக்கை எனவே நீங்க‌ள் செய‌ல் வீர‌ர்க‌ள் என்ப‌தை உங்க‌ள‌து செயல்க‌ளில் காட்டுங்க‌ள் என்று அக‌த்தில் (எண்ண‌த்தில் செய‌லில்) நாம் யார் என்ப‌தை வெளிப்ப‌டுத்த‌ அழைப்புவிடுக்கின்றார் புனித‌ ப‌வுல‌டியார். இதை இர‌ண்டையும் த‌ன் வாழ்வில் இணைத்து தான் யார் என்ப‌தை தானும் வாழ்ந்து காட்டி ,ந‌ம்மையும் அது போல‌ வாழ‌ அழைக்கின்றார் இயேசு.

தான் யார் என்று த‌ன்னை ந‌ன்கு அறிந்த‌ இயேசு த‌ன்னைப் போல‌வே த‌ன்னைப் பின்ப‌ற்றுகிற‌வ‌ர்க‌ளும் புரிந்து வைத்திருக்கின்றார்க‌ளா என்று அறிந்து கொள்ள‌ இந்த‌ கேள்வியை முன்வைக்கின்றார். நான் யார் என்று ம‌க்க‌ள் சொல்கிறார்க‌ள்??? மூன்று வித‌மான‌ ப‌தில் அவருக்கு சீட‌ர்க‌ள் வ‌ழி கிடைக்கின்ற‌து. திருமுழுக்கு யோவான், எலியா, இறைவாக்கின‌ருள் ஒருவ‌ர்.

திருமுழுக்கு யோவான்

அதிகார‌த்தோடு போதித்த‌வ‌ர், எளிய‌ வாழ்வு வாழ்ந்த‌வ‌ர், ம‌க்க‌ளின் ம‌ன‌மாற்ற‌த்திற்கு வ‌ழிவ‌குத்த‌வ‌ர். இயேசுவும் அதிகார‌த்தோடு போதித்தார், எளிமையான‌ வாழ்வு வாழ்ந்தார், போத‌னைக‌ளின் வ‌ழி ம‌க்க‌ளை ம‌ன‌மாற்ற‌ம் அடைய‌ச் செய்தார்.

எலியா
க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைக‌ளை அப்ப‌டியே க‌டைபிடித்த‌வ‌ர், பாலைவன‌த்துக்கு போ காக‌ம் உன‌க்கு உண‌வு த‌ரும் ஓடையில் நீர் அருந்துவாய் என்ற‌வுட‌ன் உட‌னே கிள‌ம்பிய‌வ‌ர், இர‌க்க‌ குண‌ம் கொண்டு சாரிபாத் ஏழைக் கைம்பெண்ணின் இற‌ந்த‌ ம‌கனை‌ உயிர்ப்பித்த‌வ‌ர். அவ‌ர்க‌ளின் ப‌ஞ்ச‌ம் தீர்த்த‌வ‌ர். இயேசுவும் பாலைவ‌ன‌த்துக்கு க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைப்ப‌டி சென்றார். நயீன் ஊர் வித‌வை ம‌க‌னுக்கு மீண்டும் உயிர் கொடுக்கின்றார். ஏழை ம‌க்க‌ளின் ப‌சித்துய‌ர் போக்குகின்றார்.

இறைவாக்கின‌ருள் ஒருவ‌ர்
திடீரென்று தோன்றிய‌வ‌ர்க‌ள், கட‌வுள் சொல்வ‌தை அப்ப‌டியே நிறைவேற்றுகின்ற‌வ‌ர்க‌ள், இக்க‌ட்டிலிருந்து மீட்க‌ க‌ட‌வுளால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இயேசுவும் நாச‌ரேத் என்னும் ஊரிலிருந்து திடீரென்று த‌ன் ப‌ணியைத் துவ‌ங்கிய‌வ‌ர். க‌ட‌வுளின் திட்ட‌த்தை நிறைவேற்றிய‌வ‌ர், இக்க‌ட்டிலிருந்து ம‌க்க‌ளை மீட்டு புது வாழ்வு த‌ருப‌வ‌ர். இப்ப‌டியாக‌ இயேசுவையும் அவ‌ர‌து குண‌ந‌ல‌ன்களையும் முன்ன‌ர் இருந்த‌வ‌ர்க‌ளின் குண‌ந‌ல‌ன்க‌ளுட‌ன் ஒப்பிட்டு மீண்டும் ஒரு இறைவாக்கின‌ர் ந‌ம்மிடையே தோன்றிவிட்டார் என்று ம‌கிழ்ந்த‌ன‌ர். இயேசுவிற்கு இப்ப‌திலில் திருப்தி இல்லை .(அதுக்கும் மேலே) இதைவிட‌ மேலான‌ ஒரு ப‌திலை , தான் த‌ன்னைப் ப‌ற்றி நினைத்து வைத்திருந்த‌ ஒன்றை எதிர்பார்த்து நேர‌டியாக‌ சீட‌ர்க‌ளிட‌ம் கேட்கின்றார். ச‌ரி நீங்க‌ள் என்னை யாரென்று சொல்கின்றீர்க‌ள் என்று . அத‌ற்கு பேதுரு நீரே மெசியா என்கிறார். தான் எதிர்பார்த்த‌ ப‌தில் த‌ன் மாண‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து வ‌ந்த‌தும் ம‌கிழும் ஆசிரிய‌ர் போல‌ ம‌கிழ்வ‌டைகின்றார் இயேசு. இயேசுவிற்கு முன் தோன்றிய‌ அனைத்து இறைவாக்கின‌ர்க‌ளின் ஒட்டு மொத்த‌ மைய‌ம் தான் ,மெசியா என்னும் இயேசு என்ப‌தை அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்கு அறிவுறுத்துகின்றார். உயிரோடு இருக்கும் போதே தான் இற‌ந்த‌ பின் எப்ப‌டி அட‌க்க‌ச்ச‌ட‌ங்கு ந‌ட‌த்த‌ வேண்டும் என்று உயில் எழுதும் ம‌னித‌ர்க‌ள் ம‌த்தியில் இயேசு வித்தியாச‌மாக‌ சிந்திக்கிறார்.

த‌ன‌து சாவைப் ப‌ற்றி தெளிவாக‌ எடுத்துரைக்கின்றார்.
இயேசுவின‌து வாழ்வில் நீர் யார் ??? என்ற‌ கேள்வியும் நீ யா!!! என்ப‌தும் மாறி மாறி கேட்க‌ப்ப‌ட்ட‌ ஒன்று. நீர் யார் என்று பிலாத்து கேட்டு யூத‌ர்க‌ளின் அர‌ச‌ன் என‌ க‌ண்டு கொள்கிறான். நீ யா!!! என்னை விட்டு அக‌ன்று போ என்று கூறிய‌ இலேகியோன் என்னும் பேய் பிடித்த‌வ‌ன் ந‌ல‌ம் அடைகிறான். இதே கேள்வியை நாமும் இயேசுவைப் பார்த்துக் கேட்ப‌வ‌ர்க‌ளாவோம். ந‌ம் அர‌ச‌ரைக் க‌ண்டு கொள்வோம். ந‌ம் உள்ள‌ ந‌ல‌ன் பெற்று குண‌ம‌டைவோம். நீ யார் என்று ந‌ம்மை பார்த்து கேட்ப‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம‌து செய‌ல்க‌ளால் ந‌ல்ல‌ ப‌தில‌ளிப்ப‌வ‌ர்க‌ளாவோம் . சிறு மெசியாக்க‌ளாக‌ வ‌ள‌ர‌, திருமுழுக்கு யோவானிட‌ம் உள்ள‌ துணிவையும், எலியா இறைவாக்கின‌ரிட‌ம் இருந்த‌ இர‌க்க‌ குண‌த்தையும் இறைவாக்கின‌ர்க‌ளிட‌ம் இருந்த‌ ந‌ல்ல‌ மாற்ற‌ம் ஏற்ப‌டுத்தும் குண‌த்தையும் பெற்று வாழ்வோம். நீ யா !!! என்று ந‌ம்மைப் பார்த்து பிற‌ர் ஆச்ச‌ரிய‌ப்ப‌டும் அள‌விற்கு வாழ்ந்து காட்டுவோம். இறைய‌ருள் என்றும் ந‌ம்மோடும் ந‌ம் குடும்ப‌த்திலுள்ள‌ அனைவ‌ர் மீதும் நிலைப்ப‌தாக‌ ஆமென்
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 நீர் மெசியா!

இன்றைய நற்செய்தி வாசகத்தில், திருத்தூதர்கள் சார்பாக நம்பிக்கை அறிக்கை செய்கிற பேதுரு இயேசுவிடம், நீரே மெசியா! என்று மொழிகிறார். இயேசு யார் என அறிக்கையுடவும், அவரைப் புரிந்துகொள்ளவும், அவருடைய வழியில் அவரைப் பின்பற்றவும் அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

(அ) கிறிஸ்துவை அறிக்கையிடுதல்: நம்பிக்கைப் பயணம்


நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? என்று தம் திருத்தூதர்களைக் கேட்கிறார் இயேசு. இந்தக் கேள்வியும் பேதுருவின் விடையும் மாற்கு நற்செய்தியைத் திறக்கிற சாவிகளாக இருக்கின்றன. இதற்கு முந்தைய பகுதியில், இயேசு யார்? அவர் எப்படிப்பட்டவர்? என்ற கேள்வி வாசகர்கள் உள்ளத்தில் எழுந்தது. இக்கேள்விகளுக்கான விடையே பேதுருவின் அறிக்கை: இயேசு மெசியா.

மெசியா (அருள்பொழிவு பெற்றவர்) என்னும் சொல், மஸியாக் என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து வருகிறது. அருள்பணியாளர்கள் (விப 30:30), அரசர்கள் (1 சாமு 16:13), இறைவாக்கினர்கள் (1 அர 19:16) எண்ணெய் கொண்டு அருள்பொழிவு செய்யப்பட்டார்கள். எசாயா, எரேமியா, தானியேல் இறைவாக்கினர்கள், தாவீதின் வழி வரக்கூடிய மெசியாவை முன்னுரைக்கிறார்கள் (காண். எசா 11:1-5). அவரே இஸ்ரயேல் மக்களுக்கு நீதியும் அமைதியும் மறுவாழ்வும் கொண்டுவருவார். இவர் துன்புறும் ஊழியன் என உருவகப்படுத்துகிறார் எசாயா (காண். எசா 53). நிலையான ஆட்சியை ஏற்படுத்துவார் என மொழிகிறார் தானியேல் (காண். 7:13-14). இயேசுவின் சமகாலத்தில் மெசியா எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்தது.

பேதுருவின் அறிக்கை அனைவருக்கும் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. இந்த இடத்தில்தான் இயேசு தம்மை யார் என மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து, தம் மெசியா நிலை என்பது துன்பத்தின் வழியாக வரக்கூடியது என உரைக்கிறார் இயேசு. இன்றைய முதல் வாசகத்தில், நாம் காண்கிற துன்புறும் ஊழியன் கடவுளுக்காகத் துன்பம் ஏற்பதுடன், கடவுளின் உடனிருப்பையும் உணர்ந்துகொள்கிறார்.

இன்று நாம் இயேசு யார் என அறிக்கையிடுகிறோம்? அவரைப் பற்றிய புரிதலே நம்மைப் பற்றிய, உலகைப் பற்றிய புரிதல்களை வரையறுக்கிறது. அவரைப் பற்றிய அறிதலே அர்ப்பணத்தோடு அவரைப் பின்பற்றுவதற்குத் தொடக்கமாக இருக்கிறது.

(ஆ) மெசியா பற்றிய புரிதல்: சிலுவையைப் புரிந்துகொள்தல்

நற்செய்தி வாசகத்தின் இரண்டாவது பகுதியில், தம் பணியின் உண்மையான இயல்பை வெளிப்படுத்துகிறார் இயேசு. மெசியா புறக்கணிக்கப்பட்டு, துன்பம் ஏற்பார், கொல்லப்படுவார். உயிர்த்தெழுவார். இயேசுவின் இந்த விளக்கம் பேதுருவுக்கு ஏற்புடையதாக இல்லை. அவருடைய எதிர்பார்ப்புகள் வேறு மாதிரியாக இருந்தன. மெசியாவும் துன்புறும் ஊழியனும் ஒன்றே என்பதை பேதுருவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பேதுருவைக் கடிந்துகொள்கிறார் இயேசு. துன்பத்தையும் சிலுவையையும் ஏற்கிறவராக இருக்கிறார் மெசியா. சீடத்துவத்தின் விலை இதுதான் என்பதை நாம் உணர்தல் வேண்டு;ம். இயேசுவைப் பற்றிய புரிதல் நமக்கு எப்படி வருகிறது?

(இ) மெசியாவைப் பின்பற்றுதல்: செயலாற்றுகிற நம்பிக்கை

நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதியில், சீடத்துவத்துக்கான நிபந்தனைகளை முன்மொழிகிறார் இயேசு: தன் மறுப்பு, சிலுவை ஏற்றல், பின்பற்றுதல். நம்பிக்கை என்பது செயல்களில் வெளிப்பட வேண்டும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கிறோம்.

இயேசுவைப் பற்றிய அறிக்கை வாயால் அறிக்கையிடும் நம் நம்பிக்கை அறிக்கையைத் தாண்டிச் செல்கிறது. நம்பிக்கையும் செயல்களும் இணைந்தே செல்ல வேண்டும்.

இன்றைய வாசகங்கள் விடுக்கும் சவால்கள் எவை?

(அ) தனிப்பட்ட அறிக்கை: நம் ஆன்மாவின் இதயத்தில் நாம் ஒவ்வொருவரும் இயேசு யார் என அறிக்கையிட வேண்டும். நீரே மெசியா என்று அவரைப் பற்றிய அறிக்கை செய்தவுடன் நம் வாழ்வு மாற்றம் பெறுகிறது. நம் இதயத்தின் அமைதியில் அவர் தம்மையே நம்ககு வெளிப்படுத்துகிறார்.

(ஆ) சிலுவையைத் தழுவிக்கொள்தல்: நாம் அனுபவிக்கிற துன்பங்கள் அனைத்துமே நாம் தழுவிக்கொள்கிற சிலுவைகள். பற்றுறுதி, சரணாகதி ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு.

(இ) செயல்படுகிற நம்பிக்கை: அன்பிலும் பணியிலும் கனிகிற நம்பிக்கை நம் அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளை நெறிப்படுத்த வேண்டும்.

செப்டம்பர் 15-ஆம் நாளில் அன்னை கன்னி மரியாவை, வியாகுல அன்னை அல்லது துன்பங்களின் அன்னை எனக் கொண்டாடுகிறோம். நம் துன்பங்களில் அவர் நமக்குப் பரிந்துபேசுவாராக! துன்பங்களில் அவர் கொண்டிருந்த அமைதியும் சரணாகதியும் நம்மைத் தூண்டி எழுப்புவனவாக!
 
தெரிவும் அர்ப்பணமும்

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சரியானவற்றைத் தேர்வு செய்யவும், தேர்ந்து தெரிவு செய்ததற்கு முழுமையாக நம்மை அர்ப்பணம் செய்யவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது. சரியானவற்றைத் தெரிவதும், தெரிந்து கொண்டபின் அதற்கு முழுமையாக அர்ப்பணிப்பதுமே ஒருவருக்கு வெற்றியைத் தரும். நாம் சரியான தெரிவுகளைச் செய்ய கிறிஸ்தவர்களாகிய நமக்கு துணைநிற்பவை நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையும், கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள உறவு நெருக்கமுமே.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 50:5-9) 'துன்புறும் ஊழியன்' என்று தலைப்பிடப்படும் நான்கு பாடல்கள் வரிசையின் மூன்றாம் பாடல். 'நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர் கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார். காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார். கற்போர் கேட்பதுபோல் நானும் செவிசாய்க்கச் செய்கின்றார்' (எசா 50:4) என்று தொடங்குகிறது. ஆண்டவரின் ஊழியன் யாரென்றால் இவருக்கு கடவுள்தாமே கற்றுத் தருகின்றார். மேலும், கடவுளின் கற்றுக்கொடுத்தலுக்கு தினமும் அவர் காதுகளைத் திறந்து காத்திருக்கின்றார். ஆனால், இப்படிப்பட்டவருக்கு என்ன நேருகிறது? 'முதுகில் அடிக்கப்படுகின்றார். இவருடைய தாடி பிடுங்கப்படுகிறது. பிடுங்குவதற்கு தாடையையும் இவர் ஒப்புவிக்கின்றார். இவர் நிந்தனை செய்யப்படுகின்றார். காறி உமிழப்படுகின்றார்.' இவ்வாறாக, ஒட்டுமொத்த அவமானத்திற்கும், நிந்தனைக்கும், வேதனைக்கும் ஆட்படுகின்றார். ஏன் இவருக்கு இந்த நிலை? இதற்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், ஒருவேளை இவர் எடுத்த தெரிவுக்காகவும், அந்த தெரிவு கொணர்ந்த அர்ப்பணத்திற்காகவும்தான் இவர் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கின்றார். இருந்தாலும், இவர் தன் தெரிவையும் அர்ப்பணத்தையும் விட்டுவிடவில்லை. தன் எதிரிகளைத் துணிவோடும் மனத்திடத்தோடும் எதிர்கொள்கின்றார். இவர் கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும், இவருடைய கடவுள்சார்நிலையும், கடவுளின் உடனிருப்பும் தொடர்ந்து போராட இவருக்கு ஆற்றல் தருகின்றது. 'ஆண்டவராகிய தலைவர் உடன் நிற்பதால்' இவருடைய எதிரிகள் ஆற்றல் இழக்கின்றனர். இறுதியாக, 'அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்.'

இங்கே 'துணியைப் போல இற்றுப்போதல்' என்ற ஒரு உருவகத்தைப் பார்க்கிறோம். நீண்ட காலமாக மண்ணில் கிடக்கும் ஒரு துணி பார்ப்பதற்கு துணிபோல இருந்தாலும், அந்தத் துணியின் நிறம், அந்தத் துணியின் அச்சு எல்லாம் அப்படியே இருந்தாலும், அதை நாம் கையில் எடுக்கத் தொடங்கினால், அது அப்படியே உதிர ஆரம்பிக்கும். அதுதான் இற்றுப்போதல். ஆக, ஒரு காலத்தில் கையால் வலு கொண்டு இழுத்தாலும் கிழியாத துணி, இப்போது பார்ப்பதற்கு முழுமையாக, வலுவானதாக இருந்தாலும் தொட்டவுடன் உதிர்ந்துபோகும் அளவிற்கு அது வலுவற்று இருக்கிறது.

துன்புறும் ஊழியன் பாடலின் பின்புலம் யூதர்களின் எருசலேம் வருகைதான். பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து பாரசீக மன்னன் சைரஸ் அவர்களால் விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர் யூத மக்கள். தங்களின் சொந்த நகரான எருசலேமுக்கு வந்தபோது எருசலேம் நிலைகுலைந்து கிடக்கிறது. இப்போது தங்கள் நகரத்தையும், ஆலயத்தையும் அவர்கள் கட்ட வேண்டும். இப்போது இவர்கள் முன் இரண்டு தெரிவுகள்: ஒன்று, பாரசீக அரசோடு கைகோர்த்துக்கொள்வது. அவர்களின் துணையால் மீண்டும் நகரத்தையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புவது. இந்த எண்ணத்தைக் கொண்டவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தார்கள். ஏனெனில், கடவுள் தாமே தங்களை எதிரியிடம் ஒப்படைத்துவிட்டார் என்று கடவுளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். இரண்டு, பாரசீக தாக்கத்திலிருந்து விலகி இருப்பது. கடவுளின் உதவியோடு மீண்டும் தங்கள் நகரத்தையும், ஆலயத்தையும் கட்டி எழுப்புவது. இங்கே நாம் காணும் 'துன்புறும் ஊழியன்' இந்த இரண்டாம் குழுவின் தலைவராக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவரைப் பொறுத்தவரையில் கடவுளின் குரலைக் கேட்பதும், அவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதுமே நன்மையைப் பெற்றுத்தரும். ஆகையால்தான், இவர் 'நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவும் இல்லை' (50:5) என்கிறார். இவ்வாறாக, சரியான தெரிவும், சமரசம் செய்துகொள்ளாத இவரது அர்ப்பணமும் இவருக்குத் துன்பங்களைத் தந்தாலும், இறுதியில் இவர் கடவுளின் துணை கொண்டு அனைவர்மேலும் வெற்றிகொள்கிறார். தன் உயிரே போகும் நிலை வந்தாலும் இவர் தன் தெரிவிலும், அர்ப்பணத்திலும் உறுதியாக இருக்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். யாக் 2:14-18) தொடக்ககால எருசலேம் திருச்சபையில் நிலவிய ஒரு குழப்பம் பற்றி வாசிக்கின்றோம். '... திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம்' (கலா 2:16) என்ற பவுலின் போதனையைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர் சிலர். இவர்கள், 'நம்பிக்கை' என்பது 'வெளிப்படுத்தப்பட்ட கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வது' என்றும், 'வேறு எந்தச் செயல்களையும் இதற்குச் செய்யத் தேவையில்லை' என்றும் தங்களின் தவறான புரிதலை மற்றவர்களுக்குப் பரப்பினர். மேலும், விருத்தசேதனம், தூய்மைச் சடங்கு, ஓய்வுநாள் சட்டம் அனைத்தையும் வேண்டாம் எனப் புறந்தள்ளினர். அத்தோடு சேர்த்து இறைவனின் கட்டளைகளையும் ஓரங்கட்டினர். ஆக, 'நான் கடவுளை ஏற்றுக்கொண்டால் போதும்' என்று சொல்லிக்கொண்டு, கடவுளின் 'அன்புக் கட்டளையை' புறக்கணித்தனர். ஆனால், பவுல், 'அன்பின் வழியாகச் செயலாற்றும் நம்பிக்கையே இன்றிமையாதது' (காண். கலா 5:6) என்று சொன்னதை அவர்கள் மறந்தார்கள். இத்தகைய தவறான புரிதல் யாக்கோபின் திருச்சபையை மிகவும் பாதித்தது. நம்பிக்கையாளர்கள் என்று தங்களையே கருதியவர்கள், தங்களின் நம்பிக்கை ஒன்றே தங்களுக்கு மீட்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில், செயல்களை - பிறரன்புச் செயல்களை - ஓரங்கட்டினர். இப்படிச் செய்வது இவர்களுக்கு மிக எளிதாகவும் இருந்தது. ஏனெனில், இப்படி இருக்கும்போது யாரும் யாரைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. 'நம்பிக்கை' என்ற அக உணர்வு 'நடத்தை' என்ற புறச் செயலில் வெளிப்படவேண்டும் எனச் சொல்கிறார் யாக்கோபு. அப்படி செயல்படாமல் இருக்கிற நம்பிக்கை வெறும் கானல்நீர்தான். கானல்நீர் ஒருபோதும் நம் தாகம் தீர்க்காது. மேலும், தன் திருச்சபையில் உள்ள ப்ராக்டிகலான எடுத்துக்காட்டையும் சொல்கின்றார்: 'உணவும், உடையும் இல்லாத ஒருவர் நம்மிடம் வர, அவரிடம் நாம், 'நலமே சென்று வாருங்கள். குளிர்காய்ந்துகொள்ளுங்கள். பசியாற்றிக்கொள்ளுங்கள்' என்று சொல்வதால் அவருக்குப் பயன் என்ன?' செயல் இல்லாத சொற்கள் வெற்றுச்சொற்களே.

ஆக, நம்பிக்கை என்பதை நாம் தெரிவு செய்கிறோம் என்றால், அந்தத் தெரிவிற்கான அர்ப்பணம் இயேசுவின் மனநிலையை நாமும் பெற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது. அந்த மனநிலை நம்முடைய பிறரன்பிலும், பிறர்சேவையிலும் வெளிப்பட வேண்டும். அதைவிடுத்து, செயலற்ற நம்பிக்கையை தெரிவு செய்வதும், எந்தவொரு வலியையும் தராத அர்ப்பணத்தைக் கைக்கொள்வதும் சால்பன்று.

நற்செய்தி வாசகத்திற்கு (காண். மாற் 8:27-35) வருவோம்.

'பேதுருவின் அறிக்கை' என்று சொல்லப்படும் இன்றைய நற்செய்தி வாசகப் பகுதிதான் மாற்கு நற்செய்தியின் மையமாக இருக்கிறது. இந்தப் பகுதிதான் மாற்கு நற்செய்திதான் திருப்புமுனை. இதுவரை 'இயேசு யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்த வாசகர், 'இயேசுவே மெசியா' என்ற புரிதலை இங்கேதான் பெறுகின்றார். இதற்கு முன்னால் உள்ள பகுதியில் இயேசு தீய ஆவிகளை விரட்டினார், நோயாளர்களுக்கு நலம் தந்தார், சீடர்களுக்குப் போதித்தார், தொழுகைக்கூடத்தில் போதித்தார். ஆனால், இவற்றிற்காக இயேசு இவ்வுலகிற்கு வரவில்லை. இயேசுவின் இச்செயல்களைக் கண்ட மக்கள் அவரை இறைவாக்கினரில் ஒருவராக, திருமுழுக்கு யோவானாக, எலியாவாக அல்லது அவர்களுக்கு இணையானவராகப் பார்த்தனர். ஆகையால்தான், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்ற கேள்வியிலிருந்து, 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்பதன் வழியாக, தன் அடையாளத்தையும், தன் பணியையும் தானே வெளிப்படுத்த தயாராகிறார் இயேசு. பேதுரு சரியாக, 'நீர் மெசியா' என்று சொன்னபோது, தான் வந்ததன் நோக்கத்தையும் வெளிப்படுத்த விளைகிறார் இயேசு. தன் பணியின் உண்மையான இலக்கு - துன்பம், உதறித் தள்ளப்படுதல், கொலை, உயிர்ப்பு - பற்றி முதன்முதலாக பேச ஆரம்பிக்கிறார். தன் இறப்பு மிக அருகில் இருக்கிறது என்பதை மனித அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இயேசுவுக்கே கடினமாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும், தான் தெரிவு செய்ய வேண்டிய பாதையும், தான் காட்ட வேண்டிய அர்ப்பணமும் அதுவே என்பதில் தெளிவாக இருந்தார் இயேசு. உயிர்ப்பின் மேல் உள்ள நம்பிக்கை அவருக்கு துணிவைக் கொடுத்தாலும், மனிதன் என்ற நிலையில் தான் கொடுக்க வேண்டிய அர்ப்பணத்தின் விலை அவருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கும்.

பேதுரு இயேசுவின் தெரிவையும், அர்ப்பணத்தையும் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், பேதுரு இயேசுவைப் பற்றி வேறு எண்ணங்கள் வைத்திருந்தார். மேலும், இயேசுவின் தெரிவு மற்றும் அர்ப்பணத்திலிருந்து அவரை விலக்கிவிடத் துடிக்கின்றார். ஆனால், இயேசு பேதுருவை 'சாத்தானே' என கடிந்துகொள்கின்றார். ஏனெனில், பேதுருவின் வார்த்தை இயேசுவின் தெரிவை மாற்றுவதாகவும், அவரின் அர்ப்பணம் என்னும் பாதையில் குறுக்கே நிற்பதாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் இயேசு சீடத்துவத்தின் விலை என்ன என்பதைப் பற்றித் தன் சீடர்களோடு பகிர்ந்துகொள்கின்றார். தன் தெரிவும் அர்ப்பணமும் மட்டுமல்ல. மாறாக, தன் சீடர்களின் தெரிவும் அர்ப்பணமும் தான் தேர்ந்துகொண்டதை ஒட்டியதாகவே இருக்க வேண்டும் எனக் கற்பிக்கின்றார். இயேசு இறப்பைத் தேடிச் செல்லவில்லை. மாறாக, இறப்பை தழுவிக்கொள்வதால்தான் வாழ்வை அடைய முடியும் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். இந்தக் காரணத்திற்காகவே அவர் உலகிற்கு வந்தார். இப்பாதை துன்பத்தின் பாதை என்றாலும் இதைத் தெரிந்துகொண்டார்.

இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு நாம் சரியானவற்றைத் தெரிவு செய்யவும், சரியானவற்றிற்கு நம்மை அர்ப்பணம் செய்யவும் தூண்டுகிறது.

எசாயாவின் காலத்தில், கடவுளுக்கு எதிரான பாதையைத் தெரிவு செய்யப் பலர் நினைத்தனர். ஆனால், துன்புறும் ஊழியன், 'கடவுள்' என்னும் பாதையைத் தெரிவு செய்து, அதற்குத் தன்னை அர்ப்பணிக்கிறார்.

யாக்கோபின் திருச்சபையில், வெறும் கோட்பாடுகளை நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளும் எளிய பாதையைத் தெரிவு செய்த நம்பிக்கையாளர்கள், தம் சகோதர, சகோதரிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அவர்களை நற்செயல்களோடு கூடிய நம்பிக்கை என்னும் பாதையைத் தெரிவு செய்யவும், ஒவ்வொரு பொழுதும் தங்கள் நம்பிக்கையை நற்செயல்களால் வெளிப்படுத்தும் அர்ப்பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் அவர்கள் தூண்டுகிறார் யாக்கோபு.

பேதுருவுக்கு துன்பம் மற்றும் சிலுவையின் தெரிவும், அர்ப்பணமும் 'மெசியா' என்னும் இயேசுவுக்குத் தேவையற்றதாகத் தெரிந்தது. ஏனெனில், இயேசுவை ஓர் 'அரச' அல்லது 'அருள்பணியாளர் மெசியாவாக' அவர் கற்பனை செய்திருந்தார். ஆனால், இயேசு தன் தெரிவும், அர்ப்பணமும் சிலுவையே என்பதை பேதுருவுக்கும், சீடர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் தெளிவாகச் சொல்கின்றார்.

இப்படிப்பட்ட சரியான தெரிவுகளைச் செய்பவர்களும், சரியான தெரிவுகளுக்குத் தங்களையே அர்ப்பணம் செய்பவர்களுமே, இன்றைய பதிலுரைப் பாடல் சொல்வதுபோல, 'உயிர் வாழ்வோர் நாட்டில் ஆண்டவரின் திருமுன் வாழ முடியும்' (திபா 116).

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு விடுக்கும் சவால்கள் எவை?

நம் வாழ்வில் நமக்கு முன் பல தெரிவுகள் உள்ளன. எந்நேரமும் நம் கண் முன் நிறைய விருப்பங்கள், நம் காதுகளில் நிறைய ஒலிகள், நிறைய வசீகரங்கள், நிறைய மயக்கங்கள் நம்மை இங்கும் அங்கும் அலைக்கழிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், நம்பிக்கையாளர் உறுதியான தளத்தில் நிற்க வேண்டும். அந்த தளத்தில் இருந்து தன் தெரிவில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் சரியான தெரிவை மேற்கொள்ளவும், சரியான அர்ப்பணத்தைக் கொண்டிருக்கவும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைக்கிறது.

நாம் சரியான தெரிவை மேற்கொள்ளும்போது, அந்தத் தெரிவிற்கு ஏற்ற அர்ப்பணத்தைக் கொண்டிருக்கும்போது இறைவன் நம் அருகில் இருக்கிறார் என்பதை முதல் வாசகத்தின் துன்புறும் ஊழியன் நமக்குச் சொல்கிறார். ஊழியனின் விடாமுயற்சியும் அர்ப்பணமும் அவரை எதிரிகளின் நிலையிலிருந்து உயர்த்தியது. அவருக்கு கடவுளின் பாதுகாப்பு எப்போதும் உடனிருந்தது. அவர் தன் அர்ப்பணத்திற்கு கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருந்தாலும் அவர் பெற்ற பரிசு பெரிதாக இருந்தது. நாம் இங்குமங்கும் அலைக்கழிக்கப்படும்போது கடவுளை நோக்கி குரல் எழுப்பினால் அவர் அருகில் வருவார். நாம் சரியான தெரிவுகளை மேற்கொள்ள அவர் நமக்கு உள்ளொளி தருவார்.

இரண்டாவதாக, நம் நம்பிக்கை நம் நற்செயல்களில் வெளிப்பட வேண்டும். நம்பிக்கை என்பது வாழ்க்கை. இந்த வாழ்க்கை மற்றவரோடு உள்ள உறவில் வெளிப்பட வேண்டும். அன்றாடம் நம் கண்முன் நிறைய மக்களைப் பார்க்கிறோம் - பசித்தவர்கள், இருப்பிடம் இல்லாதவர்கள், தேவையில் இருப்பவர்கள். இவர்களைக் காணும்போதெல்லாம் நாம் தெரிவு எப்படி இருக்கிறது? நம்முடைய இயலாமையிலும் அவர்களுக்கு நம் உடனிருப்பைக் காட்ட முடிகிறதா? அவர்களோடு கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க முடிகிறதா நம்மால்?

மூன்றாவதாக, இயேசுவின் வாழ்வு மற்றும் பணியின் திருப்புமுனையில் அவர் எடுக்க வேண்டிய தெரிவு மற்றும் அர்ப்பணத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கண்டோம். அவரின் தெரிவையும் அர்ப்பணத்தையும் கண்ட நாம் அலைக்கழிக்கப்படும் நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் தெரிவும் அர்ப்பணமும் எப்படி இருக்கிறது?
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

I எசாயா 50: 5-9a
II யாக்கோபு 2: 14-18
III மாற்கு 8: 27-35


என் தலைவர் துணை நிற்கின்றார்

மனைவி, இரண்டு மகன்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் அந்த அஞ்சல்காரர் (Post Man). கிறிஸ்தவரான அவர் குடும்பத்தோடு காலையிலும் மாலையிலும் இறைப்புகழ்ச்சிப் பாடல்பாடி, இறைவனிடம் வேண்டி வந்தது, அவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்குப் பிடிக்கவே இல்லை. ஆகவே, அவர் தனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதியிடம் சென்று, அஞ்சல்காரரின் குடும்பத்தை ஒழித்துக் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். மந்திரவாதியும் அதற்குச் சரியென்று ஒப்புக் கொண்டார்.
அன்று இரவு மந்திரவாதி கிறிஸ்தவரின் குடும்பத்தை அழிக்கச் சாத்தானை ஏவி விட்டான். சாத்தானும் கிறிஸ்தவரின் குடும்பத்தை அழிப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றது. சாத்தான் கிறிஸ்தவரின் வீட்டிற்குச் சென்ற நேரம், அவர் தன் குடும்பத்தோடு சேர்ந்து, இறைவனுக்குப் புகழ்ப்பா பாடி வேண்டிக் கொண்டிருந்தார். இதனால் அவருடைய வீட்டைச் சுற்றி பெரிய நெருப்புச் சுவரானது சூழ்ந்து நின்றது. இதைப் பார்த்து மிரண்டு போன சாத்தான், அங்கிருந்து வேகமாக வந்து, மந்திரவாதியிடம் நடந்ததையெல்லாம் சொன்னது.

இதையடுத்து மந்திரவாதி, கிறிஸ்தவரின் குடும்பத்தின்மீது சாத்தானை ஏவிவிட்டு, அழிக்கச் சொன்ன கிறிஸ்தவரின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருந்தவரை அழைத்து, நீ என்னிடம் சாத்தானை ஏவிவிட்டு, அழிக்கச் சொன்ன குடும்பம் சாதாரண குடும்பம் அல்ல, அது கடவுளே துணை நிற்கும் குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தை என்னால் அழிக்க முடியாது. அதனால் நீ அந்தக் கிறிஸ்தவரிடம் சென்று, நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டு, அவரிடம் நட்பு பாராட்டு. அதுதான் உனக்கு நல்லது என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
ஆம், ஆண்டவர் தன் அடியார்களுக்குத் துணை நிற்கின்றார். அதனால் அவர்களை எதுவும் ஒன்றும் செய்துவிட முடியாது. பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை தலைவராகிய ஆண்டவர் துணை நிற்கின்றார் என்ற செய்தியைத் தருகின்றது. அவர் யாருக்குத் துணை நிற்கின்றார், அவருடைய துணையைப் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

தன் ஊழியருக்குத் துணை நிற்கும் ஆண்டவர்
இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும் துன்புறும் ஊழியரைப் பற்றிய நான்கு பாடல்களில் மூன்றாவது பாடலாக வருவதுதான் இன்று நாம் முதல்வாசகமாக வாசிக்கக் கேட்ட இறைவார்த்தைப் பகுதி. மற்ற மூன்று பாடல்களும் கீழ்க்காணும் இறைவார்த்தைப் பகுதிகளில் இடம்பெறுகின்றன: எசா 42: 1-9, 49: 1-13, 52: 13- 53: 12.

இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் துன்புறும் ஊழியர் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான்: ஆண்டவராகிய என் தலைவர் துணைநிற்கிறார் என்பதாகும்.. இவ்வார்த்தைகள் இரண்டுமுறை வருவது நமது கவனத்திற்கு உரியது. இன்றைக்கு மக்கள் திரைப்பட நடிகர், அரசியல்வாதி, டிக்டாக் பிரபலம் என யார் யாரையோ தலைவர் என அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்! இவர்களெல்லாம் நமக்கு இறுதிவரைக்கும் துணை நிற்பார்களா என்பது கேள்விக்குறியே! ஆனால், ஆண்டவர் தன் ஊழியர்களுக்குத் துணை நிற்பார். அதனால் அவர்களைக் குற்றவாளிகள் என்று யாராலும் தீர்ப்பிட முடியாது.

பழைய ஏற்பாட்டில் ஆண்டவரின் ஊழியராகப் பலர் அறியப்பட்டாலும், அவர்களில் மிகவும் மிகவும் குறிப்பிடத்தக்கவர் மோசே (இச 34: 5). இந்த மோசே எத்தியோப்பிய பெண்ணை மணந்தபோது, மோசேயின் சகோதரியான மிரியாம் ஆரோனோடு சேர்ந்துக்கொண்டு மோசேக்கு எதிராகப் பேசுவார். இதனால் மிரியாம் தொழுநோயால் பீடிக்கப்படுவார் (எண் 12: 10). மோசே சாந்தமுள்ள மானிடராய், ஆண்டவருக்கு நம்பிக்கைக்குரிய ஊழியராய் இருந்தபோது மிரியாம் மோசேக்கு எதிராகப் பேசியதால் அல்லது அவரைத் தீர்ப்பிட்டதால் தொழுநோயால் பீடிக்கப்படுகின்றார். ஆதலால், ஆண்டவர் தம் ஊழியருக்குத் துணை நிற்பதால் அவருக்கு எதிராக யாரும் தீர்ப்பிட முடியாது!

தனது திருவுளத்தை நிறைவேற்றுவோருக்குத் துணை நிற்கும் ஆண்டவர்
கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடப்பதற்குப் பதிலாகத் தங்களுடைய விருப்பத்திற்குக் கடவுளைப் பணிய வைக்கிற அல்லது இழுக்கின்ற பல மனிதர்களை இன்று நாம் கண்கூடாகக் காணலாம். அந்த அடிப்படையில் நற்செய்தியில் வருகின்ற பேதுருவும் இயேசுவைக் கடவுளின் திருவுளத்தின்படி நடக்கவிடாமல், தன்னுடைய விருப்பத்திற்கு இழுப்பதைக் குறித்து நாம் வாசிக்கின்றோம்.

நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? என்ற கேள்விக்குப் பின், நீங்கள் நான் யார் எனச் சொல்கின்றீர்கள்? என்று இயேசு தன்னுடைய சீடர்களிடம் கேட்டபொழுது, நீர் மெசியா என்ற பதிலளிப்பார் பேதுரு. இதையடுத்து இயேசு தம் சீடர்களிடம், தம்மைப் பற்றி எவரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டு தன் பாடுகளையும் இறப்பையும் கூடவே உயிர்ப்பையும் முன்னறிவிப்பார். அப்பொழுதுதான் பேதுரு, இயேசுவை தனியே அழைத்துக் கொண்டு போய், அவரைக் கடிந்துகொள்வார். இயேசு கடவுளின் திருவுளத்தை (திப 2: 23) நிறைவேற்ற முன்வருகையில், பேதுரு மனிதருக்கு ஏற்றவை பற்றி எண்ணுகிறார். இதனால் இயேசு அவரை, என் கண் முன் நில்லாதே சாத்தானே! என்கிறார். இயேசு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகையில் எதிர்கொண்ட சவால்களும், அனுபவித்த துன்பங்களும் ஏராளம். ஒருகட்டத்தில் அவரது சீடர்களே அவரை விட்டு ஓடிபோனார்கள். ஆனால், தந்தைக் கடவுள் அவரோடு இருந்தார் (யோவா 16: 32). இதன்மூலம் யாரெல்லாம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்களோ, அவர்களுக்குத் தந்தைக் கடவுள் துணைநிற்கின்றார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்போருக்குத் துணைநிற்கும் ஆண்டவர்
சிலருக்கு மடி நிறையப் பொருள் இருக்கும். ஆனால், அதைப் பிறருக்கு, அதிலும் குறிப்பாகத் தேவையில் உள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கு நல்ல மனது இருக்காது. யாக்கோபு வாழ்ந்த முதலாம் நூற்றாண்டில் சிலர் தேவையில் இருந்தவர்களுக்கு எதுவும் கொடுக்காமல், பெயருக்குக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் யாக்கோபு, நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும் என்கிறார். அவ்வாறெனில், ஒருவர் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார் என்றால், அவர் அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கவேண்டும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் ஆண்டவர்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை அன்பாக, கருணையாக, இரக்கச் செயல்களாக வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு ஒருவர் தமது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கின்றபோது கடவுள் அவருக்குத் துணை நிற்கின்றார். ஆம், இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற, நம்பிக்கை கொண்டோன் பதற்ற மடையான் (எசா 28: 16) என்ற வார்த்தைகள் இதற்குச் சான்று பகர்கின்றன. ஆகையால், நாம் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து வாழ்கையில் பதற்ற மடையத் தேவையில்லை; ஏனெனில் நமக்குத் துணை நிற்பார் என்பது உறுதி.

சிந்தனை
அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர், ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார் (திபா 118: 13) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நமக்குத் துணை நிற்கும் ஆண்டவரின் திருவுளத்தின் நடந்து, நம்பிக்கைச் செயல்வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
மனிதன் மாண்புடன் படைக்கப்பட்டவன். இயற்கையிலேயே மதிப்புடன் படைக்கப்பட்டாலும் பணம், பதவி, பட்டம் போன்ற அணிகலன்கள் இருந்தால் மட்டுமே தான் மதிப்புடன் வாழ்வதாக ஒரு மாய எண்ணம் அவனுக்குள் விதைக்கப்பட்டு, அது வளர்ந்து, விழுது விட்டு பரந்து கிடக்கிறது. இந்த மதிப்புடன் வாழ்தல் என்பதில் துன்பங்களோ , துயரங்களோ, கஷ்டங்களோ இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். ஏன் இயற்கையான சாவு கூட அவனுக்கு அருகில் வராமல் இருக்க வேண்டும் என்று எண்ணற்ற விதத்தில் போராடுகிறான். இங்ஙனம், மலர்ப் பாதை மட்டுமே வாழ்க்கைப் பாதையாக இருக்க வேண்டும் என்பது மனிதரின் சிந்தனையாகவும், அதுவே மனிதருக்கு ஏற்றவையாகவும் இருக்கிறது.

ஒரு சொல்லால் எல்லாவற்றையும் படைத்தவர், ஒரே மகனை மீட்பிற்காய் தந்தவர், நாம் ஒன்றுபட்டு வாழ்வதில் பெருமகிழ்ச்சியும் கொள்கிற கடவுள், எல்லாவற்றையும் கடந்த அவர் துன்பத்தைத் தன் அக வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டார். தன் ஒரே மகனை பாடுகள் பட அனுமதித்தார். சிலை செதுக்கப்படும்போது உளிக்கு வலிக்கும் என்று செதுக்குபவன் நினைப்பானா? பாறைக்குச் சேதம் ஏற்படுகின்றது என செதுக்காமல் இருப்பானா? கை வலிக்கிறது என எடுத்த வேலையை நிறுத்துவானா? சிற்பியின் கை வலி, உளியின் வெப்பம், பாறையின் சிதைவு இவை அனைத்தின் காரணமாக உருவாகும் அற்புதமே பார்ப்போர் வியக்கும் அற்புதச் சிலைகள். சிரமங்களும், துன்பங்களும், தடைகளும் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில், வளர்ச்சியில் இன்றியமையாத காரணிகள். இதை உணருகிற மனிதன் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறான்.

படைக்கப்பட்டவை அதன் மாண்பிலிருந்து விலகியதை மீட்பதற்காகவே வந்த இறைமகன் சுமைகளைத் தன் மேல் ஏற்றுக் கொள்ளத் தயாரானார். நான் கிளர்ந்தெழவில்லை : விலகிச் செல்லவுமில்லை. அடிப்போக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை என்ற எசாயாவின் வார்த்தை இதை வெளிப்படுத்துகின்றன. மானிட மகன் பலவாறு துன்பப்படவும், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் என்ற இயேசுவின் வார்த்தைகள் மெய்யாகிறது (மத் 16:21).

இயேசுவில் நம்பிக்கையும், அவர்தம் பாடுகள் வழியாக நம்மை மீட்கிறார் என்பதில் விசுவாசமும் கொண்டுள்ள இறைமக்களின் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நம்முடைய நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும். குறிப்பாக சமூகத்தின் விளிம்பிலும், ஒடுக்கப்பட்ட நிலையிலும் இருந்துகொண்டு துன்பமே வாழ்வின் பாதை, துயரமே அனுதின அனுபவம் என்று வாழ்கின்ற மக்களிடத்தில் வார்த்தையை மட்டுமல்ல, நம் தலைவராம், மீட்பராம் இயேசுவைப்போல நம் செயல்பாடுகளின் வழியாக அவர்களின் வாழ்வில் மாறுதலைக் கொணர முற்படுவோம். தான் என்று வாழ்கிறவர் மண்ணோடு மண்ணாகிப் போவர். அதே நேரத்தில் பிறர் நலச் சிந்தனையோடு வாழ்பவர், பிறரின் துன்பத்தில் பங்கேற்பவர், என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார் (மத் 10 : 39) என்ற ஆண்டவரின் வார்த்தையை வாழ்வாக்குவர். வாழ்வோம், வாழ்விப்போம். கிறிஸ்துவே மெசியா என அறிக்கையிடுவோம்.

=அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
தன்னலம் துறப்போம்

இன்றைய நற்செய்தியிலே நாம் தன்னலத்தைத் துறந்தவர்களாக வாழ வேண்டும் என்று இயேசு நமக்கு அறிவுரை பகர்கின்றார்.

தன்னலத்தைத் துறத்தல் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உவமை.

ஓர் ஊரிலே பரம ஏழை ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இரவு மணி பன்னிரெண்டு இருக்கும். திடீரென பெரும் மழை பெய்தது. அப்போது அந்த ஏழையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தார் அந்த ஏழை! வெளியே ஓர் உப்பு வியாபாரி! அந்த வியாபாரி அந்த வீட்டுக்காரரைப் பார்த்து, ஐயா, நான் ஓர் ஏழை உப்பு வியாபாரி! மழை பெய்கின்றது. இரவு மட்டும் நானும், என் கழுதையும் தங்க சற்று இடம் தாருங்கள் என்றார். அந்த ஏழைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! தன் மனைவியைப் பார்த்தார். தன் மனைவியைப் பார்த்து, நான் உன்னை ஒன்று கேட்கலாமா? என்றார். அன்பும், அறனும் படைத்த பண்பு மிக்க அந்தப் பெண்ணோ , எதை வேண்டுமானாலும் கேளுங்கள் என்றார். இப்பொழுது இரவு மணி 12. பொழுது விடிய இன்னும் 5 மணி நேரம் இருக்கின்றது. நீயும், நானும், நமது குழந்தைகளும், தரையில் படுக்காமல், நின்றுகொண்டிருந்தால், இந்த வியாபாரிக்கும், கழுதைக்கும் நம் வீட்டில் இடமிருக்கும் என்றார்.

மனைவி, சரி என்றார். பெற்றோரைப் போல பிள்ளைகள் ! பொழுது விடியும்வரை அந்த வீட்டாரும், உப்பு வியாபாரியும், கழுதையும் அந்த வீட்டுக்குள்ளே நின்றுகொண்டிருந்தனர். எங்கே மனமுண்டோ அங்கே இடமுண்டு!

இந்த உவமையிலுள்ள குடும்பத்தார் அனைவரும் தன்னலத்தைத் துறந்தவர்கள்!

இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் வாழ்வதே பிறர்நலம் (இரண்டாம் வாசகம்).

தன்னலம் துறத்தலைப் பொறுத்தவரையில், நம்மிடம் உள்ள பொருள்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்வது ஓரளவு எளிது. ஆனால் நமது உடலையும், உயிரையும் துறப்பது மிகவும் கடினம்!

நம்மையே நாம் மறந்து, நமது விருப்பு, வெறுப்புகளை நாம் கடந்து, குற்றமற்ற நம்மை குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடுகின்றவர்களை மன்னித்து அவர்களுக்காகச் செபிப்பது மிகவும் கடினம்.

எதற்குமே கிளர்ந்தெழாத (முதல் வாசகம்) நிலையை அடைவது அவ்வளவு எளிது அல்ல! ஆனால் முற்றும் துறந்த வாழ்வை இயேசு வாழ்ந்து காட்டியிருப்பது உண்மைதானே!... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

மேலும் அறிவோம் :

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு? (குறள் : 987).

பொருள் : தமக்குத் துன்பம் தரும் கொடிய செயல் புரிந்தவர்க்கும் இன்பம் தரும் நல்லவற்றையே செய்யவில்லை என்றால் நிறை பண்பாகிய சால்புடைமையால் எந்தப் பயனும் விளையாது!


மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 முற்றும் துறந்த துறவியாகிய பட்டினத்தார் வயலில் ஒரு வரப்பின்மேல் தலையை வைத்துப் படுத்திருந்தார். அவ்வழியே விமலா, கமலா என்ற இரு பெண்கள் சென்றனர். விமலா கமலாவிடம், "பஞ்சு மெத்தைமேல் படுக்க வேண்டிய இவர் வரப்பின்மேல் படுத்திருக்கிறார்" என்றார். கமலா விமலாவிடம், "பஞ்சு மெத்தையைத் துறந்தாரே தவிர, தலைக்கு உயரமான இடம் வேண்டும் என்ற எண்ணத்தைத் துறக்கவில்லையே" என்றார். அவர் கூறியதைக் கேட்ட பட்டினத்தார் எழுந்து வயலில் சமதளமான இடத்தில் படுத்துக் கொண்டார், மீண்டும் விமலா கமலா விடம், "பாரு, அவருடைய துறவு இப்பொழுது பூரணமாகிவிட்டது" என்றார். கமலா சும்மா விடவில்லை . அவர் கூறினார்: "ஊரார் பேசுவதையெல்லாம் கேட்டு நடக்கும் இவர் ஒரு துறவியா?" அப்பொழுதுதான் பட்டினத்தார் பின்வருமாறு பாடினார்; "வித்தாரமும் கடமும் வேண்டாம், மட நெஞ்சே! செத்தாரைப் போலத் திரி." அதாவது, மூட நெஞ்சே, பிறருடைய புகழுரையும் பாராட்டும் உனக்குத் தேவையில்லை. செத்தவனைப்போல் இரு, செத்தவன் யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்பதில்லை.

துறவியின் மனநிலை இப்படியிருக்கும்போது, கிறிஸ்து இன்றைய நற்செய்தியில், "மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?" என்று கேட்கின்றாரா? இது அவருக்குத் தேவையா? "எனக்கு மக்கள் தரும் மகிமை தேவையில்லை " என்று கூறிய அவர் (யோவா 5:34) மக்களின் கருத்துக் கணிப்பைக் கேட்கவேண்டியதன் காரணம் என்ன? ஏனெனில் மக்கள் தம்மைப்பற்றித் தவறான எண்ணம் கொண்டிருப்பதை அவர் விரும்பவில்லை. உண்மையில் மக்களும் சீடர்களும் அவரைப்பற்றித் தவறான கண்ணோட்டம் கொண்டிருந்தனர்.

மாலைக் கல்லூரியில் படித்த இளம் பெண் இரவில் மிகவும் தாமதமாக வீடு திரும்பினார், அவருடைய அம்மா, "ஏண்டி லேட்டாய் வந்தே?" என்று கேட்டார். இதே கேள்வியை அவருடைய அப்பா ஆங்கிலத்திலும், அண்ணன் மலையாளத்திலும், தம்பி தெலுங்கிலும் கேட்டனர். ஏனென்றால் வயசுப் பெண்ணு லேட்டாய் வந்தா, நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்களாம்! இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் மக்கள் நாலு விதமாகப் பேசினார்கள், அவரைத் திருமுழுக்கு யோவான் என்றும், எலியா என்றும், இறைவாக்கினருள் ஒருவர் என்றும், மெசியா என்றும் நான்கு விதமாக விமர்சித்தனர்.

பேதுரு இயேசுவை 'மெசியா' என்றார். ஆனால் மெசியா சிலுவையில் அறையப்பட வேண்டியவர் என்பதை அவர் ஏற்க மறுத்து, கிறிஸ்துவைக் கடிந்து கொண்டார். கிறிஸ்து அவரைச் சாத்தான் என்று குறிப்பிட்டு, அவருடைய எண்னாம் மனித எண்ணமேயன்றி, கடவுளுடைய எண்ணம் இல்லை என்றார். அப்படியானால், கடவுளுடைய எண்ணம் என்ன? அதைப் பற்றி இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. மெசியா துன்புறும் இறை ஊழியனாக இருப்பார், அவர் பாடுகள் பல படவேண்டியிருக்கும். திந்தனைகளை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் அவர் முகத்தைக் காட்டுவார் (எசா 50:5-9). கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னும் சீடர்கள் சிலுவையில் அறையுண்ட மெசியாவைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை . எனவேதான், நம்பிக்கை இழந்து, வாடிய முகத்துடன் எம்மாவும் சென்ற இரு சீடர்களிடம் கிறிஸ்து : "அறிவிலிகளே! மெசியா தாம் மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!" என்ற கூறி கடிந்து கொண்டார் (லூக் 24:25-26)

சிலுவைச் சாவை எற்று, தம்மையே வெறுமையாக்கிய கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் நம்மையே மறுத்து. நமது சிலுவையைச் சுமக்க வேண்டுமென்கிறார் கிறிஸ்து. கிறிஸ்தவ வாழ்வில் சிலுவை விருப்பப்பாடமல்ல! கட்டாயப்பாடம், நமது தனிவாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் நம்மை அழுத்துகின்ற பாரமான சிலுவை ஆணவம் என்ற அரக்கன். கிறிஸ்துவைப்போல நாமும் தம்மைத் தாழ்த்தி, மற்றவர்களை நம்மைவிட உயர்வாகக் கருத வேண்டும்.

ஒரு திருமண வரவேற்பில் பங்கேற்ற மக்கள் வாய்விட்டு சிரித்தனர். ஏன்? மணமகன் உயரமானவர்; மணமகள் குட்டையானவர், அவர்கள் மாலை மாற்றிக் கொண்டபோது, மணமகள் தனக்கு மாலையிட வசதியாக மணமகன் மிகவும் குணிந்தார். திருமண நாள் அன்றே, மணமகள் மணமகனைத் தலைகுனிய செய்துவிட்டார். அதைப் பார்த்த நான், "குலியத் தெரிந்த மணமக்களுக்குப் பணியத் தெரியவில்லையே!" என்றேன்.

பிறரை மட்டம் தட்டுவதில் நாம் ஆனந்தம் அடைகிறோம். ஒருவர் தன் நாயுடன் வீதியில் சென்றார். அவருக்கு எதிரில் வந்தவர் அவரிடம், "கழுதையுடன் செல்லுகிறீர்களா? என்று கேட்க அவர், "இல்லை , தாயுடன் செல்கிறேன்" என்றார். அதற்கு மற்றவர், "நான் உங்களைக் கேட்கவில்லை. உங்கள் தாயிடம் கேட்கிறேன்" என்று சொல்லி கடகடவெனச் சிரித்தார்,

சிலுவை என்பது தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுவதாகும். நாம் நமக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும். பிறரை வாழவைக்க நாம் தியாகம் செய்ய வேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்: "நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றது." நமது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பது நமது அன்புச் செயல்கள், "மனிதனாக பிறந்ததற்கு நாலுபேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்று ஒருவரிடம் கூறியதற்கு அவர் கூறியது: "தான் நான்கு பேருக்கு நன்மை செய்கிறேன். அவர்கள்: என் மனைவி மற்றும் எனது மூன்று பிள்ளைகள். நமது அன்பு குடும்பம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடாமல், மற்றவர்களையும் அரவணைக்கும் அன்பாக விரிய வேண்டும்.

சிலுவையில் அறையுண்ட மெசியாவை ஏற்று. நமது அன்றாட வாழ்க்கைச் சிலுவையைச் சுமப்போம். ஆணவத்தை அழித்து மற்றவர்களை நம்மைவிட உயர்ந்தவர்களாக மதிப்போம். தன்னலம் மறந்து பிறர் நலம் பேணுவோம். அன்பில் உயிர் நிலைத்துள்ளது. அன்பிலார் தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூடு.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் 80)
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
சாவுக்கு சாட்சிகள்‌ நாம்‌

அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனாவுக்குப்‌ பயணித்துக்‌ கொண்டிருந்தது அந்தக்‌ கப்பல்‌. அதன்‌ மேல்தளத்தில்‌ இருவர்‌ உரையாடிக்‌ கொண்டிருந்தார்கள்‌. ஒருவர்‌ கத்தோலிக்கக்‌ குருவானவர்‌. மற்றவர்‌ அமெரிக்க வணிகர்‌. "மறை பரப்புப்‌ பணிக்கெனச்‌ சீனாவுக்கா போகிறீர்கள்‌?" என்ற வணிகர்‌ அச்சுறுத்தும்‌ வகையில்‌ தொடர்ந்தார்‌: "போதிக்கச்‌ செல்லும்‌ குருக்களை அந்த நாட்டில்‌ எப்படியெல்லாம்‌ கொடுமைப்படுத்துகிறார்கள்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாதா? அப்படித்தான்‌ ஒருமுறை மர்‌ஃபி என்ற குருவானவரை கலகக்காரர்கள்‌ பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்‌. அவரை விடுவிக்க வேண்டுமென்றால்‌ பெரும்‌ தொகையைப்‌ பணயமாகக்‌ கேட்டார்கள்‌. பணம்‌ வந்து சேரத்‌ தாமதமான ஒவ்வொரு நாளுக்கும்‌ ஒரு விரலாக அவருடைய வலக்கையின்‌ மூன்று விரல்களைத்‌ துண்டித்து விட்டார்கள்‌. இப்போது அந்தக்‌ குரு அமெரிக்காவில்தான்‌ இருக்கிறாராம்‌. இனியும்‌ நற்செய்திப்‌ பணிக்கெனச்‌ சீனா போக மனம்‌ வருமா?" புன்முறுவலோடு ஏதோ சொல்லக்‌ குரு முனைந்தார்‌. அதற்குள்‌ உணவருந்த அழைப்பு மணி ஒலித்ததால்‌ இருவரும்‌ கை குலுக்கி விடைபெற்றனர்‌. கைகுலுக்கியபோது வணிகருக்கு ஒரே வியப்பு! காரணம்‌, அந்தக்‌ குருவானவரின்‌ வலக்கையில்‌ மூன்று விரல்கள்‌ இல்லை.

ஓர்‌ இறைவாக்கினருக்குரிய இறை வார்த்தைப்‌ பணியில்‌ இழிவுக்கும்‌ எதிர்ப்புக்கும்‌ ஏளனத்துக்கும்‌ ஆளானாலும்‌ வாய்மூடி மெளனமாக இருக்க முடியாது. இறை வார்த்தையின்‌ பொருட்டு வேதனைக்குள்ளாவதில்‌ ஒரு தனி மகிழ்ச்சி உண்டு. அதுதான்‌ துயரத்தின்‌ மகிழ்ச்சி. ( The joy of sorrow) அதனைத்‌ திருத்தூதர்‌ பவுல்‌ வெளிப்படுத்துவார்‌: "நாங்கள்‌ எல்லாச்‌ சூழ்நிலைகளிலும்‌ இன்னலுற்றாலும்‌ மனம்‌ உடைந்து போவதில்லை... வீழ்த்தப்பட்டாலும்‌ அழிந்து போவதில்லை. இயேசுவின்‌ வாழ்வே எங்கள்‌ உடலில்‌ வெளிப்படுமாறு நாங்கள்‌ எங்கு சென்றாலும்‌ அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள்‌ உடலில்‌ சுமந்து செல்கிறோம்‌" (2 கொரி. 4:8-10).

"இயேசுவுக்குச்‌ சிலுவைச்சாவா; அது எப்படி?" என்ற பேதுருவின்‌ எண்ண ஒட்டத்துக்குக்‌ காரணம்‌ - துன்பத்தைக்‌ கண்டு பின்வாங்கும்‌ மனித இயல்பு மட்டுமல்ல. அவர்‌ சார்ந்த யூதர்களின்‌ மன நிலையும்‌ கூட. மெசியா என்ற மீட்பரை அவர்கள்‌ எதிர்பார்த்தார்கள்‌ - உண்மை! ஆனால்‌ துன்புறும்‌ மெசியா அல்ல. வல்லமையுடன்‌ "தன்‌ பகைவரைத்‌ தனக்குக்‌ கால்‌ மணையாக்கும்‌"" மெசியா (தி.பா. 110:1). "முடிவே இராத ஆட்சியுரிமையும்‌ மாட்சியும்‌ அரசும்‌ கொடுக்கப்பட்ட" மெசியா (தானி 7:14).

இயேசு என்ற இந்த மெசியாவின்‌ துன்பம்‌ பற்றி எண்ணிய பேதுரு, அதே மெசியாவின்‌ துன்பம்‌ பற்றி எசாயா போன்ற இறைவாக்கினர்கள்‌ முன்னுரைத்ததை மறந்து போனார்‌. "அடிப்போர்க்கு என்‌ முதுகையும்‌, தாடியைப்‌ பிடுங்குவோர்க்கு என்‌ தாடையையும்‌ ஒப்புவித்தேன்‌. நிந்தனை செய்வோர்க்கும்‌ காறி உமிழ்வோருக்கும்‌ என்‌ முகத்தை மறைக்கவில்லை": (எசா. 50:6) என்ற துன்புறும்‌ ஊழியனின்‌ மனநிலை பேதுருவின்‌ உள்ளத்தில்‌ பதியவில்லை.

யூதர்களையோ, பேதுருவையோ சொல்லிப்‌ பயனில்லை மனித மனமே அப்படித்தான்‌. அதனால்‌ "நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல்‌ மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்‌" என்று இயேசு கடிந்து காண்டார்‌ (மார்க்‌ 8:33).

நினைவொப்பம்‌ (autograph) வாங்குவதற்கு சாந்தி நிகேதனுக்கு வந்தான்‌ ஒருவன்‌. தாகூரின்‌ செயலர்‌ மாலீக்‌ எழுதினார்‌: "உன்னை நீ அறிவாய்‌". ஏட்டின்‌ மறுபக்கம்‌ புரட்டி தாகூர்‌ எழுதினார்‌: "உன்னை நீ மறப்பாய்‌'. உன்னை அறிவது என்ற சாக்ரட்டீசின்‌ தத்துவம்‌ சிறந்தது. ஆனால்‌ உன்னை மறப்பது என்ற தாகூரின்‌ தத்துவம்‌ தான்‌, தனது என்ற குறுகிய வட்டத்தைத்‌ தகர்த்து நிற்பதால்‌ தலைசிறந்தது.

கரைய விரும்பாத உப்பினால்‌ உணவுக்குச்‌ சுவை கொடுக்க இயலாது. "தன்‌ உயிரைக்‌ காத்துக்கொள்ள விரும்பும்‌ எவரும்‌ அதை இழந்துவிடுவர்‌. என்‌ பொருட்டும்‌ நற்செய்தியின்‌ பொருட்டும்‌ தன்‌ உயிரை இழக்கும்‌ எவரும்‌ அதைக்‌ காத்துக்‌ கொள்வர்‌": (மார்க்‌. 8:35).

இறைமகன்‌ இயேசு .நம்மைப்‌ பார்த்துச்‌ சொல்கிறார்‌: "நான்‌ யார்‌ என்பதைப்‌ புரிந்து கொண்டால்‌, நீங்கள்‌ யார்‌ உங்களுடைய அழைப்பு என்ன என்பதைப்‌ புரிந்து கொள்ளலாம்‌. என்னைப்‌ போல்‌ கடவுளின்‌ உண்மை ஊழியனாய்‌ இருக்க விரும்பினால்‌ நீங்களும்‌ துன்புறும்‌ இறை ஊழியர்களாக வேண்டும்‌... எனவே தியாக வாழ்வுக்கு, பலிவாழ்வுக்கு, துன்பச்‌ : சிலுவை வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கிறார்‌.

இன்றைய வழிபாட்டில்‌ இயேசுவைச்‌ சந்திப்பது என்பது ஒர்‌ அழைப்பாகும்‌. ஏன்‌, ஓர்‌ அறை கூவலாகும்‌.

மெசியா மாட்சியுள்ளவராய்‌, ஆட்சி புரிபவராய்‌, அடக்கி ஆள்பவராய்‌ விளங்க வேண்டும்‌ என்பதே மக்களின்‌ எதிர்பார்ப்பு. இத்தகைய சரியான புரிதல்‌ இல்லாத நிலையில்‌, இயே௬வை ஸசியா என்று மேதுரு அறிக்கை எசய்தது அவரது நம்பிக்கை வளர்ச்சியாகும்‌. ஆனால்‌ ஹசீயாத்‌ தன்மை புறக்கணிப்ப்னும்‌ நத்தம்‌ சிந்துவதீனும்‌ அடங்கி ஒருக்கிறது என்பதைப்‌ புரிந்து காள்ளாமல்‌ ருந்தது பேதுருவின்‌ நம்ப்க்கை ஆஹம்ன்மையாகும்‌.

துன்புறாமல்‌ சுகத்தை அனுபவிக்க விரும்புபவன்‌ சாத்தானுக்கு ஒத்தவன்‌. பாலைவனச்‌ சோதனை நினைவுக்கு வரட்டும்‌ (மத்‌. 4:10). துன்பங்களை ஏற்க மறுப்பதும்‌ சாத்தானிடம்‌ சரணடைவதும்‌ ஒன்றே!

இயேசுவுக்குச்‌ சிலுவை (துன்பம்‌) என்பது மீட்பின்‌ கருவி. அவரது மீட்புப்‌ பணியில்‌ பங்கேற்கும்‌ எவரும்‌ சிலுவையை எப்படி ஒதுக்க முடியும்‌, ஓரங்கட்ட முடியும்‌?

தொடக்க காலத்‌ திருஅவையில்‌ சிலுவை பற்றிய சிந்தனை அழுத்தமானது. "நாங்கள்‌ சிலுவையில்‌ அறையுண்ட கிறிஸ்துவையே பறைசாற்றுகிறோம்‌'" (1 கொரி. 1:23). "இயேசுகிறிஸ்து சிலுவையில்‌ அறையப்பட்டவராய்‌ உங்கள்‌ கண்முன்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டப்படவில்லையா?"" (கலாத்‌ 3:1). சிலுவை மீட்பின்‌ கருவி மட்டுமல்ல, அன்றாட வாழ்வில்‌ நமக்கு ஆறுதலின்‌ ஊற்று. முதல்‌ உலகப்‌ பெரும்‌ போரில்‌ ஓர்‌ ஊரே தகர்க்கப்பட்டது. அவசர சிகிச்சைக்கு அவ்வூர்க்கோயிலே மருத்துவமனையானது காலில்‌ குண்டடிப்பட்டு ரத்தக்‌ கசிவுக்கும்‌ எலும்பு முறிவுக்கும்‌ ஆளான ஒரு மனிதனைத்‌ தூக்கி வந்து பீடத்தின்‌ மேல்‌ கிடத்தினர்‌. ஒரு காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை. மயக்க மருந்து எதுவுமில்லை. பீடத்தின்‌ மேல்‌ இருந்த பெரிய பாடுபட்ட சிலுவையை உற்று நோக்கினான்‌ அவன்‌. "சிலுவையில்‌ தொங்கும்‌ இயேசுவின்‌ முகத்தை மட்டும்‌ மறைக்காமல்‌ அறுவைச்‌ சிகிச்சையைத்‌ தொடங்குங்கள்‌. எனக்காகத்‌ துன்புற்ற அவரைப்‌ பார்த்துக்‌ கொண்டே என்‌ வலியைப்‌ பொறுத்துக்‌ கொள்வேன்‌ " என்றார்‌.

அன்னை மரியா மனித இனத்துக்கு இயேசு தந்த மகத்தான கொடை. அந்தக்‌ கொடையைச்‌ சிலுவையடியில்‌ வியாகுல அன்னையாகவன்றோ தந்தார்‌! மீட்பரின்‌ தாய்‌ மரியாவுக்கு பிறவிப்பாவத்திலிருந்து விலக்களித்தார்‌. ஆனால்‌ அந்தப்‌ பாவத்தின்‌ விளைவான துன்பத்திலிருந்து அவருக்கு விலக்களிக்கவில்லையே! பாவமே கல்லாத ஒரு தாயை ஆந்த உலகத்துக்குத்‌ தந்த கடவுள்‌ துன்பமே ஒல்லாத ஒரு தாயை ஏன்‌ தரன்ல்லை?

சீடர்களில்‌ எல்லாம்‌ தலையாய சீடர்‌ அல்லவா மரியா! சிலுவைத்‌ துன்பத்திலிருந்து இயேசு தம்‌ சீடரைப்‌ பிரிப்பதில்லை. பங்கேற்க அழைத்தவரன்றோ அவர்‌! (மார்க்‌. 8:34). எனவே தாயும்‌ சேயும்‌ கல்வாரிப்பலியில்‌ ஒன்றிணைகிறார்கள்‌. ஏன்‌, நாமும்‌ "இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்‌ போதெல்லாம்‌ ஆண்டவரின்‌ சாவை அறிவிக்கிறோம்‌" (1 கொரி. 11:26). திருத்தூதர்‌ பவுலின்‌ பார்வையில்‌ இரத்தம்சிந்தாமல்‌ மன்னிப்பு இல்லை. சிலுவையே மீட்பின்‌ வழி. சிலுவையில்‌ பங்கு கொண்டால்தான்‌ நாமும்‌ மீட்படைவோம்‌. நம்‌ மீட்புக்குத்‌ தடையாக இருப்பதைத்‌ தகர்த்தெறிய நாம்‌ தயாரா?

துன்யங்களின்‌ நடுவலும்‌ வாழ்க்கையின்‌ அருத்தத்தை, கறைவனின்‌ வீருப்பத்தைத்‌ தேடுபவன்‌ மனிதன்‌. அதனைக்‌ கண்டுபிடிப்பவன்‌, கடைப்பிடிப்பவன்‌ புனிதன்‌.
 திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
கிராமத்திலிருந்து நகரம் வந்துசேரும் ஓர் அப்பாவியின் அனுபவம், நமது சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. நகரத்தில், எந்நேரமும், மக்கள், கூட்டம் கூட்டமாய் இருப்பதைப் பார்த்து மிரண்டு விடுகிறார் கிராமத்து அப்பாவி. பார்க்கும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். இந்த வெள்ளத்தில் தானும் அடித்துச் செல்லப்படுவோமோ என்ற ஒரு பயம் அவருக்கு.

இரவில் படுத்துறங்க இடம் தேடுகிறார். ஒரு மண்டபம் கண்ணில் படுகிறது. அந்த மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் படுத்திருக்கின்றனர். கூட்டமாய் படுத்திருந்த அம்மனிதர்களைப் பார்க்கையில், ஏதோ வரிசையாக மூட்டைகள் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போல் ஓர் உணர்வு நம் நாயகனுக்கு. இந்த மூட்டைகளில் ஒரு மூட்டையாக தான் இரவில் காணாமல் போய்விடுவோமோ என்று பயந்தார்.

காலையில் எழுந்ததும் தன்னை அடையாளம் கண்டு கொள்வதற்காக, தன் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு படுத்தார். இந்த அப்பாவி கிராமத்து மனிதர் செய்ததைக் கவனித்துக் கொண்டிருந்தார், நகரத்து மனிதர் ஒருவர். அவர் கொஞ்சம் குறும்புக்காரர். எனவே, அந்த கிராமத்து மனிதர் நன்கு உறங்கிய பின், அவர் காலில் கட்டியிருந்த அந்த வெள்ளைத் துணையை கழற்றி, தன் காலில் கட்டிக்கொண்டு படுத்து விட்டார். விடிந்தது. கிராமத்து மனிதர் எழுந்தார். அவர் காலில் கட்டியிருந்த வெள்ளைத் துணியைக் காணாமல் திகைத்தார். கொஞ்ச தூரம் தள்ளி, மற்றோருவர் காலில் அது கட்டியிருப்பதைக் கண்டார். அவரது திகைப்பு, குழப்பம், பயம் எல்லாம் அதிகமானது. நகரத்திற்கு வந்து ஒரு நாளிலேயே, ஓர் இரவிலேயே தான் காணாமற் போய்விட்டோமே என்று அவர் மிகவும் வருந்தினார். இயேசு சபையைச் சேர்ந்த Carlos Valls என்ற ஆன்மீக எழுத்தாளர், தன் நூல் ஒன்றில் பகிர்ந்துகொண்ட கதை இது.

இந்தக் கதை, நம் வாழ்வுக்கு ஓர் உவமையாகப் பயன்படுகிறது. 'நான்' என்பதை நமக்குக் காட்ட, நமது குலம், படிப்பு, பதவி, சம்பளம் என்ற வெளிப்புற அடையாளங்களை அதிகம் நம்புகிறோமா? அவை காணாமற் போகும்போது, நாமே காணாமற் போனதைப் போல் உணர்கிறோமா? எளிதில் காணாமற்போகக் கூடிய இந்த அடையாளங்களே 'நான் யார்' என்பதைத் தீர்மானிக்க விட்டுவிட்டால், நாம் உண்மையிலேயே யார் என்பதை அறியாமல், தொலைந்துபோக நேரிடும். வெளி அடையாளங்களைக் கட்டி வேதனைப்பட்டு, அவை தொலைந்துபோனால், நாமும் தொலைந்துபோனதைப் போல் உணர்வது, தவறு என்பதையும், இந்த அடையாளங்கள் ஏதுமில்லாமல், அடிப்படையில், உண்மையில் நான் யார் என்பதை அறிந்துகொள்வதே, அனைத்து அறிவிலும் சிறந்தது என்பதையும், சாக்ரடீஸ் உட்பட, பல மேதைகள் சொல்லிச் சென்றுள்ளனர். 'நான் யார்' என்ற இந்தக் கேள்வி இயேசுவுக்கும் எழுந்தது. இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது. இந்த நற்செய்தியின் இரு வாக்கியங்கள், இயேசுவின் இரு கேள்விகள் நம் சிந்தனைகளை இன்று நிறைக்கட்டும். "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?"
"நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?"

நான் ஆசிரியர் பணி புரிந்தபோது, அரசு அதிகாரிகள் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அவ்வப்போது சொன்ன ஒரு சில தகவல்கள், இப்போது என் மனதில் நிழலாடுகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும், முந்திய நாள் இரவு தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப்படுத்தி, பட்டியலிட்டு, நாட்டின் பிரதமர் அல்லது மாநிலத்தின் முதலமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென ஓர் அரசு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இத்தகவல்களைத் திரட்டுவதன் வழியாக, நாட்டு நடப்புபற்றி தெரிந்துகொள்வது என்பது ஒரு புறமிருக்க, நாட்டில் தங்களைப்பற்றி, தங்கள் ஆட்சிபற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே, இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அந்தக் கேள்வி: "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?"

இவர்கள் மனதை இந்தக் கேள்வி ஆக்கிரமிக்கின்றது, உறுத்துகின்றது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், இத்தலைவர்கள், உள்ளொன்றும், வெளியோன்றும் என இரட்டை வேடமிட்டு வாழ்வதால், எது தங்கள் உண்மை நிலை என்பதே மாறி, மக்கள் முன் தங்கள் வேடம் எவ்வளவு தூரம் நிலைத்துள்ளது என்ற சந்தேகமும், பயமும் இவர்களை ஆட்டிப் படைக்கிறது. மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனையே நாள் முழுவதும் சிந்தித்து, செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ, இந்தக் கேள்வியே எழாது. அப்படியே எழுந்தாலும், அது பயத்தை உண்டாக்காது.

இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு ஒரு முக்கிய காரணம்?... தன்னை இன்னும் சரிவர புரிந்து கொள்ளாத சீடர்களுக்கு அவர் ஒரு வாழ்வுப் பாடத்தைக் கற்றுக்கொடுக்க விழைந்தார் என்பதே. மக்கள் தன்னைப்பற்றி சொல்வதைக் கேட்டாகிலும், சீடர்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக, தன்னைப் புரிந்துகொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் இயேசுவுக்கு இருந்திருக்கலாம். அல்லது, இந்தக் கேள்வி பதில் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, தன் பாடுகளைப்பற்றி சொல்லப்போவதை சீடர்கள் புரிந்துகொள்ள, மக்களிடமிருந்து அவர்கள் கேட்ட ஒரு சில விசுவாச அறிக்கைகள், அவர்களுக்கு உதவாதா என்ற ஏக்கமாக இருக்கலாம்.

மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
இருபது நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் அதிகமான, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம், அல்லது, முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மனித வரலாற்றில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தனை ஆழமானப் பாதிப்புக்களை உருவாக்கியவர்கள் ஒரு சிலரே. இவர்களில் ஒருவர் இயேசு என்பது, மறுக்கமுடியாத உண்மை.

இன்றைய நற்செய்தியில் இயேசு கேட்கும் இரண்டாவது கேள்வி: "நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?"
ஹலோ, உங்களைத்தான்... என்னையும்தான்... இந்தக் கேள்வி நமக்குத்தான்... நாம் சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், அருள்பணியாளர்கள், சகோதரிகள், ஆசிரியர்களிடம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற அந்த முதல் கேள்விக்குப் பதில் சொல்லிவிடலாம். ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.
நான் கேட்டவையும், படித்தவையும் இந்தக் கேள்விக்கு பதிலாக முடியாது. நான் பட்டுணர்ந்தவை, மனதார நம்புகிறவை... இவையே இந்தக் கேள்விக்கான பதிலைத் தர முடியும்.
இயேசுவின் இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல. இது ஓர் அழைப்பு. அவரது பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க, அவர் தரும் அழைப்பு. கேள்வி பதில் என்ற வாய்மொழி வித்தைகளைத் தாண்டி, செயலில் இறங்க இயேசு இந்த அழைப்பை விடுக்கிறார். "இயேசுவை இறைவன் என்று, தலைவர் என்று, மீட்பர் என்று நம்புகிறேன்" என்று சொல்வது எளிது. ஆனால், அந்த நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவது எளிதல்ல. செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீண் என்று, இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்:
யாக்கோபு 2 14-17

என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;" என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப்போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்ற முதல் கேள்விக்கு நாம் அளிக்கும் விடைகள், நம் அறிவை வளர்க்கும். நமது விவாதங்களுக்கு உதவும். பல நூறு பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாக மாறும். மனித வரலாற்றில், இயேசு யார் என்பதை விளக்க எழுந்த காரசாரமான விவாதங்கள், பலரது வாழ்வைப் பறித்ததே தவிர, அவர்கள் வாழ்வை மாற்றியதா என்பது கேள்விக்குறிதான்.

கடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளை, கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை, இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேட்ட கதை. நீங்களும் இதைக் கேட்டிருக்கலாம்.

குடி பழக்கத்தில் இருந்து முற்றிலும் திருந்திய ஒருவரை, பங்குத் தந்தை சந்திக்கிறார். அவரது மனமாற்றத்திற்கு, பங்குத் தந்தை காரணம் கேட்கும்போது, தான் இயேசுவைச் சந்தித்தாக சொல்கிறார், மனமாற்றம் பெற்றவர்.

அவர் உண்மையிலேயே இயேசுவைத்தான் சந்தித்தாரா என்று அறிய விழைந்த பங்குத் தந்தை, அவரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். இயேசு எங்கே பிறந்தார்? எத்தனை வருடம் வாழ்ந்தார்? எத்தனை புதுமைகள் செய்தார்? எங்கே இறந்தார்? என்று பங்குத் தந்தை அடுக்கிக்கொண்டே சென்ற கேள்விகள் எதற்கும், மனம் மாறியவரால் பதில் சொல்ல முடியவில்லை. பங்குத் தந்தைக்கு ஒரே கோபம்... இந்தச் சாதாரணக் கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர், எப்படி இயேசுவைச் சந்தித்திருக்க முடியும் என்று சந்தேகப்படுகிறார். அதற்கு, மனம் மாறிய அவர் சொல்லுவார்: "சாமி, நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். ஆறு மாதங்களுக்கு முன்பு வரை என் வாழ்வு நரகமாக இருந்தது. நான் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, என் மனைவி, குழந்தைகளைக் கொடுமைப் படுத்தினேன். மாலையில் நான் வீடு திரும்பும் நேரத்தில் என் கண்களில் படக்கூடாது என்று, என் குழந்தைகள் தெரு முனையில் சென்று ஒளிந்து கொள்வார்கள். ஆறு மாதங்களுக்கு முன், நான் பங்கேற்ற ஒரு செப வழிபாட்டின்போது, இயேசுவைச் சந்தித்தேன். அன்றிலிருந்து என் வாழ்வு மாறியது. நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நான் மாலையில் வீடு திரும்பும்போது, என் குழந்தைகள், தெரு முனையில் எனக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாற்றத்தைத் தந்தது, இயேசு. அது மட்டும்தான் எனக்குத் தெரியும்" என்று அவர் சொன்னதும், பங்குத் தந்தை மௌனமானார்.

இயேசு கேட்கும் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பது, கேள்வி அல்ல, ஓர் அழைப்பு. அவரை அனுபவப்பூர்வமாகச் சந்திக்க, அவரை நம்பி, அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க, வாழ்வுப்பாதையை மாற்றியமைக்க, அவர் தரும் ஓர் அழைப்பு. இந்த அழைப்பிற்கு நாம் தரும் பதில்கள், வார்த்தைகளாக அல்லாமல், செயல் வடிவம் பெறட்டும். குறிப்பாக, வாழ்வில் அனைத்தையும் பறிகொடுத்ததால், நம்பிக்கை இழந்திருப்போருக்கு நம்பிக்கை தரும் வகையில், நம் செயல்கள் அமையட்டும்.
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 மறையுரை

நம்பிக்கை என்பது நாம்‌ எதிர்நோக்கியிருப்பவை கிடைக்கும்‌ என்னும்‌ உறுதி; கண்ணுக்கு புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1). ஆம்‌. கடவுள்‌ இவ்வுலகைப்‌ படைத்தார்‌. அதுவும்‌ வார்த்தையினால்‌ உருவாக்கினார்‌ என்கிறது தொடக்க நூல்‌. அசைக்க முடியாத பாரவோனின்‌ அடக்குமுறையிலிருந்து இஸ்ரயேல்‌ மக்களை விடுவித்துச்‌ செங்கடலை இரண்டாகப்‌ பிளந்து, இஸ்ரயேல்‌ மக்களைக்‌ கடக்கச்‌ செய்தது இறைவன்‌ செயலில்‌ வல்லவர்‌ என்பதைத்‌ தெளிவாக்குகிறது.

கடவுள்‌ வார்த்தை வடிவில்‌ செயல்பட்டு, அவ்வார்த்தையே கடவுளாயும்‌ இருந்து, மனிதராகப்‌ பிறந்தார்‌. இறைமகனாகிய இயேசுவே மெசியா என நாம்‌ நம்புவதற்காகவும்‌, நம்பி அவர்‌ பெயரால்‌ வாழ்வு பெறுவதற்காகவுமே நற்செய்தி நூல்கள்‌ நமக்கு உதவுகின்றன (யோவா 1). இதை உறுதிப்படுத்துவதற்காக இன்றைய வாசகம்‌ நமக்கு வலுச்சேர்க்கிறது. இத்தகைய சூழலில்‌, கிறிஸ்துவை நம்புகிறோம்‌. ஆனால்‌ கிறிஸ்துவுக்காக நாம்‌ வாழ்வதில்லை. இயேசு கிறிஸ்துவின்‌ மீதுள்ள நம்பிக்கையை அறிக்கையிடு கிறோம்‌. ஆனால்‌ செயல்‌ வடிவம்‌ கொடுக்கிறோமா என்பதுதான்‌ இன்றைய கேள்வி
.
 
ஞாயிறு மறையுரை  அருள்பணி. ஜெ. ஞானசேகரன்,

சிலுவை இல்லாமல் சீடத்துவம் இல்லை!

இயேசு யார்? அவரை எப்படிப் பின்பற்றுவது? எனும் இரு கேள்விகளுக்கு விடை காண அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு. மாற்கு நற்செய்தி 16 அதிகாரங்களைக் கொண்ட மிகச்சிறிய நற்செய்தி. இந்த நற்செய்தியின் முதல் பகுதி, இயேசுவின் கலிலேயப் பணியை மையமாகவும் (1:14-8:26), இரண்டாம் பகுதி எருசலேம் பணியை மையமாகவும் (8:31-16:8) கொண்டு பிரித்துக் கூறுகின்றனர் திருவிவிலியப் பேராசிரியர்கள். மாற்கு நற்செய்தி 8 -ஆம் அதிகாரம் இயேசுவின் கலிலேயப் பணியின் நிறைவுப் பகுதியாகவும், எருசலேம் பணியின் தொடக்கப் பகுதியாகவும் அமைகிறது. இவ்வதிகாரத்தில் இயேசு கேட்கும் இரு கேள்விகளை மையமாகக் கொண்டு நம் சிந்தனைகளை நிறைப்போம்.

இயேசு மெசியாவாக மக்களுக்கும் குறிப்பாக, தம் சீடருக்கும் வெளிப்படுத்த விரும்பி, அதற்கேற்ப தம் இறையாட்சிப் பணிகளை ஆற்றினார். மக்களும் சீடரும் இயேசுவின் வல்ல செயல்களைக் கண்டு வியந்தனர்; அவர் போதனைகளை ஏற்றனர்; பரிசேயர், மறைநூல் அறிஞர் போன்றவர்களைத் தவிர ஏனைய மக்கள் இயேசுவைப் பற்றி நல்லெண்ணம் கொண்டனர். தம்மைப் பிற்காலத்தில் மக்களுக்கு அறிவித்துத் தம் இறை யாட்சிப் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டிய சீடர்கள், தம்மைப் பற்றித் தெளிவான அறிவுபெற வேண்டும் என இயேசு விரும்பினார். ஆகவே, கலிலேயாவில் பணி முடியும் வேளையில் தம்மைப் பற்றிய ஆய்வை இயேசு சீடரிடம் நடத்துகிறார். அவர் நடத்தும் ஆய்வில் கேட்கும் இரண்டு கேள்விகள்தான் நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?, நீங்கள் நான் யார் எனச்
சொல்கிறீர்கள்?

இயேசுவின் இந்த இரு கேள்விகளையும் ஆழமாகச் சிந்திக்கும்போது, இது வெறும் கேள்விகள் அல்ல; மாறாக, சீடத்துவத்துக்கான ஓர் அழைப்பு எனப் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க அவரே நமக்குத் தரும் அழைப்பு. அழைப்புக்கு வெறும் வாய்மொழி அறிக்கையால் அல்ல; செயல் வடிவம் கொடுக்க அல்லது இயேசுவின்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவதற்கான அழைப்பாகும் (முதல் வாசகம் யாக் 2:14-18). இயேசு தருகின்ற அழைப்பைச் சீடர்கள் புரிந்துகொண்டனரா? நாம் புரிந்துகொண்டுள்ளோமா? சிந்திப்போம்.

இயேசு கேட்ட முதல் கேள்வி: நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? என்பது. இயேசு இந்தக் கேள்வியைக் கேட்ட இடமும் முக்கியத்துவம் பெறுகிறது. இயேசு பிலிப்புச் செசரியாவைச் சேர்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லும் வழியில் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார். மன்னன் ஏரோதின் மகன் பிலிப்பு தன் நினை வாகவும், சீசரின் நினைவாகவும் உருவாக்கிய பிரமாண்டமான நகரம் பிலிப்புச் செசரியா. மேலும், அப்பகுதியில் பால் (Bal), பான் (Pan), சீயுஸ் (Zeus) போன்ற கடவுள்களுக்குக் கோவில்களும் இருந்தன. அரசர்கள், பிற கடவுள்கள் போன்றோரின் பெருமைகளையும், அவர்கள் கட்டிய பிரமாண்டமான நினைவுச் சின்னங்களையும் அடையாளப்படுத்தும் அப்பகுதியில், சீடரின் எண்ணங்களில் தாம் எத்தகைய அடையாளத்தைப் பதித்திருக்கிறோம் என்பதை அறிய விழைந்தார் இயேசு. இயேசுவின் முதல் கேள்விக்குச் சீடர் இயேசுவிடம், வல்ல செயல்கள் செய்ததால் எலியா என்றும், ஆட்சியாளர்களின் குற்றங்களைச் சுட்டிக்காட்டியதால் திருமுழுக்கு யோவான் என்றும், எரேமியாவைப்போல செயல்பட்டதால் இறை வாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் என்கிறார்கள் (8:28). ஆனால், சீடர்கள் தம்மை என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆர்வம் கொண்ட இயேசு, நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? என வினவுகிறார். இயேசுவின் இந்தக் கேள்வி மாற்கு நற்செய்தியின் மையக்கேள்வியாக அமைகிறது. பேதுரு நீர் மெசியா என்று ஒரே வார்த்தையில் பதிலளிக்கிறார். பேதுருவின் பதில்மொழி ஒட்டுமொத்தக் கிறிஸ்தவர்களின் பதிலாகவே பார்க்கப்பட வேண்டும். மெசியா என்றால் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்று பொருள். பழைய ஏற்பாட்டில் குருக்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் அருள்பொழிவு செய்யப்பட்டு கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டனர் என நம்பினர். ஆனால், இயேசுவின் காலத்தில் மெசியா குறித்த யூதர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது அவசியம். தாவீதின் வழித்தோன்றலில் மெசியா மாபெரும் அரசராக இருப்பார்; உரோமையரின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து நலமான எதிர்காலத்தை அமைத்துத் தருவார்; அவர் எருசலேம் நகரைப் புதுப்பிப்பார்; அவருக்கு எதிராக எழும் போரில் அவரே வெற்றி பெறுவார்; அவருடைய எதிரிகள் காணாமல் போவார்கள்; மெசியாவே உலக நாடுகளை அரசாள்வார்; அவரது அரசு என்றென்றும் நீடித்திருக்கும்; அமைதியும் நன்மையும் நிறைந்த புதிய காலத்தை அவர் அருள்வார். இவ்வாறான மெசியா குறித்த பெருங்கனவு யூதர்களுக்கு மட்டுமல்ல, சீடர்களுக்கும் இருந்தன. மெசியா வீரதீரச் செயல்கள் புரிந்து, யூத மக்களுக்கு ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவராக இருப்பார் என்ற நம்பிக்கையின் எதிரொலிதான் பேதுருவின் மெசியா அறிக்கை.

பேதுருவும், மற்ற சீடரும் இயேசுவை மெசியா என்று அறிக்கையிட, இயேசுவோ தமது மரணத்தைப் பற்றி அறிக்கையிடுகிறார். தம்மை மானிட மகன் என்கிறார். இந்த மானிட மகனைத் தம் மக்களுக்காகத் தியாகம் செய்து இறக்க வேண்டிய துன்புறும் மெசியாவாக மிக அழகாக வடிக்கிறார் நற்செய்தியாளர் மாற்கு.

இயேசு தம் துன்பங்களையும் இறப்பையும் முதன்முறை வெளிப்படுத்துகிறார் (8:31). தம்மைப் பின்தொடர்தல் என்பது தமது பாடுகள், இறப்பு, உயிர்ப்பில் பங்குகொள்வதா கும் எனும் படிப்பினையை இயேசு தொடர்ச்சியாகக் கற்பிக்கிறார். பேதுருவால் இதைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. எனவே, பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துக் கடிந்துகொள்கிறார். இயேசுவும் பேதுருவிடம் என் கண்முன் நில்லாதே, சாத்தானே என்றும், மனிதருக்கு ஏற்றவை பற்றி எண்ணுகிறாய் எனவும் கடிந்துகொள்கிறார்.

சாத்தான் என்றால் எதிரி என்று பொருள்படும். நம்பிக்கை இல்லாத சீடர்கள் சாத்தானுக்குரியவர்கள். இயேசுவின் குழுமத்தில் சாத்தானுக்கு இடமில்லை. மனிதர்கள் என்பவர்கள் இவ்விடத்தில் யூதத் தலைமைத்துவத்தையும், அல்லது தொடக்கக்கால திரு அவையில் இயேசுவிற்கு எதிராக இருந்த அனைத்துத் தலைமைத்துவத்தையும் குறிப்பதாக அமைகிறது. இப்பின்னணியில் இயேசு பாடுபடக் கூடாது என்று அடம்பிடிக்கும் பேதுரு தமக்கு எதிரி என்றும், அவர் விரும்பியபடியே தாம் வல்ல செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டிய மெசியா அல்ல என்றும் இயேசு ஆவேசத்துடன் இங்கே அறிவிக்கிறார் (8:33).

சீடருடன் உரையாடிய இயேசு, மக்களையும் தம்மிடம் அழைத்து, தம்மைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தங்கள் வாழ்வில் துன்பங்களை ஏற்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக விளக்கம் தருகிறார். எனவே, தம்மைப் பின்பற்றுதல் என்பது ஓர் அழைப்பு என்றும், அதற்கு ஒருவர் தமது சிலுவையைச் சுமக்க வேண்டும் என்றும் சொல்கிறார். இங்கே சீடத்துவம் என்பது அனைவருக்கும் உரிய ஓர் அழைப்பு என்பது புலப்படுகிறது. இயேசு கற்றுத் தரும் சீடத்துவம் என்பது சிலுவையைத் தூக்கிச் சுமப்பதே. எனவே, சிலுவையைத் தூக்கிச் சுமப்பவரே ஆண்டவரின் ஊழியர் என்பதை முதல் வாசகம் வழி புரிந்துகொள்கிறோம்.

ஆண்டவரின் ஊழியராக எவ்வாறு செயல்படுவது என்பதை ஆண்டவரின் ஊழியரைப் பற்றிய மூன்றாம் கவிதையில் எசாயா (எசா 50:5-9) அழகுறக் குறிப்பிடுகிறார். எசாயா குறிப்பிடும் ஆண்டவரின் ஊழியரின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது, அவருக்கு எதிர்ப்புகள் வரும் (மோசே); பல வழிகளில் துன்பங்கள் வரும் (எரேமியா); இருப்பினும், அவர் ஆண்டவரின் வார்த்தைகளை மக்களுக்குக் கொடுப்பார்; அதன் வழியாக அவர்களைக் கடவுள் சார்பில் ஊக்குவிப்பார்; அவர் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பார்; ஆண்டவரின் குரலைக் கேட்க எப்போதும் தம் செவிகளையும் மனத்தையும் திறந்து வைத்திருப்பார்; துன்பங்கள் சூழ்ந்தாலும் கடவுளது விருப்பத்தை நிறைவேற்றத் தயாராக இருப்பார்; ஆண்டவரின் துணையும் அவருக்கு எப்போதும் இருக்கும். இந்தப் பண்புகளைப் பார்க்கும்போது, ஆண்டவரின் உண்மையான ஊழியராகிய இயேசுவின் பணியையும் வாழ்வையும் புரிந்துகொள்ள முடிகிறது.

கற்றுக்கொள்வோம்...
சிலுவை இல்லாத சீடத்துவம் வெறுமை யானது. இயேசுவிற்காக அனைத்தையும் இழக்கலாம், இயேசுவை எதற்காகவும் இழக்கக்கூடாது என்பதை உணர்வோம்.
இயேசுவை நம்பி, அவரோடு பயணிக்க, அவரைப் போல் வாழ, துயருற்றாலும் துணிந்து பின் தொடர, நமது வாழ்வுப்பாதையை மாற்றியமைப்போம்.
வெறும் அலங்கார வார்த்தைகளால் தேவையிலிருப்போருக்கு ஆறுதல் கூறாமல், அவர்களின் குறைகளை நீக்க நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முற்படுவோம்.
அருள்பணி. ஜெ. ஞானசேகரன்,
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ