![]() |
![]() தாவீதின் மகனுக்கு ஓசான்னா! |
![]() |
பெரிய வியாழன் | புனித வெள்ளி | பாஸ்காத் திருவிழிப்பு | உயிர்ப்பு ஞாயிறு |
குருத்தோலை ஏந்தி நிற்கும் அன்பு நெஞ்சங்களே!
இன்று நாம் நமக்காக சிலுவையை தூக்கிக் கொண்டு நடந்த இயேசுவின் பாடுகளின் பாதையில்
பாதத்தை எடுத்து வைக்கிறோம். பரிசுத்த வாரத்தில் நுழையும் நாம் இயேசுவைப் போல
பரிசுத்தமாக வாழ அழைக்கப்படுகிறோம்.
இறைமகன் இயேசு வாழ்வு கொடுக்கும் பணியை செய்ய வந்தவர். நீதி, அன்பு, நேர்மை,
சமத்துவம், சகோதரத்துவம் பாதையில் பயணம் செய்தவர். ஆயுதமின்றி அதிகார வர்க்கத்தை
எதிர்க்கும் பேரணி நடத்துகின்றார். அதே பாதையில் பயணிக்க நம்மையும் இன்று
அழைக்கின்றார்.
மனிதவாழ்வு ஒரு போராட்டம் நிறைந்த வாழ்வுதான் நீதியைப் பற்றி பேசுபவர்கள் எல்லாம்
அநீதிக்கு ஆளாக வேண்டிய நிலை. அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்புபவர்களின் குரல்
ஒடுக்கப்படுகின்ற நிலை. மனிதவடிவில் வாழ்ந்த இறைமகன் இயேசுவுக்கும் இதே நிலை. இயேசு
அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் எழுப்புகின்றார். ஏழையர் வாழ்க்கையை
உயர்த்துகிறார். போலிகளை விரட்டுகின்றார். சமூகம் ஒதுக்கியவர்களை சகோதர உணர்வுடன்
நேசிக்கிறார். உண்மையை உரத்து பேசுகிறார். பலர் உண்ணவும், உறங்கவும், வழியின்றி
தன்னலவாதிகளின் பிடிக்குள் கிடப்பதைக் கண்டு மனம் குமுறுகிறார். தச்சன் மகனாய்
அவதாரமெடுத்தவர், ஜெகத்தை மீட்க கோவேறு கழுதையை வாகனமாக்கி புறப்படுகிறார். இவரின்
பயணத்தால் பலரின் வாழ்க்கை தடம் புரட்டிப் போடப்படுகிறது. சாலை மறியல் செய்யாதவர்
பயணத்தால் பலரின் பயணம் நின்றுபோய் தடுமாறுகிறது. இருப்பவர், இல்லாதவர் என்ற
நிலைமாறி, சமதள பூமியாய் சங்கீதம் பாடச் செய்ய புறப்பட்டவரை விட்டுவைக்க விரும்பாத
உயர்மட்ட சமூகம், வாழ்த்துபாடி வரவேற்று, சதிசெய்து சாவுக்கு கையளித்து, கைதட்டி
நிற்கின்றது. இயேசுவின் சாவு, பலருடைய வாழ்வுக்கு சான்றாக வெளிச்சம் சிந்துகிறது.
இதுதான் இன்றும் நாம் பயணிக்க வேண்டிய பாதை. இயேசுவின் வாழ்வு கொடுக்கும் மனநிலைப்
பாதையில் தொடர் பயணம் செய்ய வேண்டியது நமது பொறுப்பாகும். இயேசுவிடம் விளங்கிய
பணிவேட்கையை நமதாக்க, குருத்து ஓலை மூலம் விளக்கும் திருப்பலி தரும் கருத்துகளை
இதயத்தில் பொருத்தி செபிப்போம்.
இறைவேண்டல்
1. மனித வடிவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்த
அன்பு இயேசுவே!
தந்தையாம் கடவுளின் மாட்சியை விளம்பரமாக்க உழைக்கும் திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவியர் இறைமக்கள் அனைவரும் பாடுகள் வழியாகத்தான் மீட்பை அடையமுடியும்
என்பதை உணர்ந்து, உமது கீழ்படிதலையும், தாழ்ச்சியையும் பின்பற்றி வாழ அருள் தர
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியும் நேர்மையும் நிறைந்த இறைவா!
பொய்யும் புரட்டும் நிறைந்த தலைவர்களை அகற்றி, மக்களை நேசித்து அன்பு செய்து
வாழும் நல்ல தலைவர்களை, எங்கள் நாட்டிற்குத் தரவேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. இரக்கம் நிறைந்த பாதையில் பயணித்த இறைவா!
குருத்தோலை ஞாயிறை சிறப்பிக்கும் நாங்கள், உமது வாழ்வுப் பயணத்தைப் போல எமது
வாழ்க்கைப் பயணத்தில் வரும் துன்பங்களுக்கு மத்தியில், ஒடுக்கப்பட்ட ஏழை எளிய
மக்களுக்காக நாங்களும் பயணிக்க அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. விடுதலையின் தலைவரே எம் இறைவா!
மக்களின் விடுதலை வாழ்வுக்காக உழைக்கும் அனைத்து
தலைவர்களுக்காகவும், சிறப்பாக எம் பங்குத் தந்தைக்காகவும் உம்மை மன்றாடுகிறோம்.
இயேசுவைப்போல இலட்சியத் தாகத்துடன் உழைக்க அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
5. துன்புறுவோரைத் தேற்றும் தூயவரான இயேசுவே!
துன்பங்களையும், வேதனைகளையும்
அனுபவித்து உமது பாடுகளில் பங்கு பெறுவது போல, மகிழ்ச்சியிலும் பங்கு பெற அருள் தர
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனை
குருத்தோலைகளை ஏந்திக் கொண்டு பவனியாக ஓசானா பாடிக் கொண்டு வந்த நாம், நம் கையில்
இருக்கும் குருத்தோலையை உற்றுப்பார்ப்போம். நாம் வீட்டிற்கு போவதற்கு முன்பாகவே நம்
கையிலிருக்கும் குருத்தோலைகள் எல்லாம் சிலுவை வடிவாக மாறிப்போகிறது. யார் மீது அதை
சுமத்தப் போகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் மீது சிலுவையை
சுமத்தி, சிலுவையில் அறைந்து கொல்லுங்கள் என பெரிய வெள்ளியன்று கூச்சலிட்ட மக்களைப்
போல, நாமும் குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் சிலுவையை சுமத்தி கூச்சலிட்டுக்
கொண்டுதானிருக்கிறோம். கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும், பிள்ளைகள் பெற்றோர்
மீதும், பெற்றோர் பிள்ளைகள்மீதும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் கீழ்
பணிபுரிபவர்கள் மீதும், பணியாளர்கள் தங்கள் அதிகாரிகள் மீதும் சிலுவையைச்
சுமத்தி, அன்றாடம் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இவ்வாறு அடுத்தவர் மீது
நம் சிலுவைகளை சுமத்தாமல் ஒருவர் ஒருவருக்கு சிலுவையாக இல்லாமல், தன்னலம் துறந்து
இயேசுவைப் போல, சிலுவையை தூக்கிக் கொண்டு
"இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்,
திரும்பிப் பார்க்க மாட்டேன்" என செல்வோம்.
டாக்டார் ஜான் இன்று பிரபல நீதிபதி. அவர் ஒரு நாட்டில் இருந்து வேறு நாட்டிற்குச்
செல்கிறார் என்றால், அவரைத்
தொடர்ந்து காவல் துறையின் பாதுகாப்பு படையும் பின்
தொடரும். அத்தகைய தரம் உயர்ந்த நிலையில் வாழும் மகன், தாய் தந்தையின் தரத்தை
எப்படிக் கணித்தார்
தெரியுமா? தனக்குத் திருமணப் பெண்ணைத் தானே
தேர்ந்தெடுத்தார்.
"அப்பா எனக்கு அருட்சாதனம்
குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தேதியில் நடைபெற
இருக்கிறது. ஆனால் நம் வீட்டில் இருந்து நீங்கள் வரவேண்டாம். காரணம் பார்க்க
பிச்சைக்காரர் போல நீங்கள் இருக்கிறீர்கள்" என்றார். தந்தையும் தாயும் அதிர்ந்து
போனாலும், மகனின் நலவாழ்வுக்காக மனதார அந்த வார்த்தையை ஏற்றுக் கொண்டார்கள். அந்தத்
தந்தையின் உரையாடலைக் கேட்ட போதும், அதை எழுத்தில் வடிக்கும் போதும் மனதில்
வேதனையின் அடர்த்தி தடித்துவிட்டது.
இன்று குடும்பத்தில் இந்நிலை சர்வ
சாதரணமாகிவிட்டது. படிக்கும் மாணவர்கள் தாய் தந்தையரை தங்கள் வீட்டு வேலைக்காரராய்
வர்ணிப்பது. இதுதான் உறவுகளின் பின்னனியாய் இன்றும் நிலவுகிறது.
ஒரு தாய்க்கு மூத்த மகன் செலவுக்கு பணம் தவறாது மாதம் தோறும் அனுப்புவான். அவன் கை
நிறைய சம்பளம் வாங்குபவன். இளையவன் கூலி வேலை செய்து பிழைப்பவன். தாய் மூத்த மகன்
தரும் பணத்தை அநேகருக்கு வட்டிக்கு கொடுத்தாள். சொந்த இளைய மகனிடமே வட்டிக்கு
கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள். புற்று நோய் தாயைத் தாக்கியது. கடனாய்
கொடுத்த பணம் யார் யாரிடம் உள்ளது என்று சொல்ல முயற்சி செய்தவளை, சொல்ல விடாமல்
மரணம் தின்று விட்டது. அவள் இறந்த பின்
"பெற்ற பிள்ளைக்கே வட்டிக்குக் கொடுத்தவள்
செத்துப் போய்விட்டாள், என்ன வாரிக் கொண்டு போயிருப்பாள்" என
பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
வாழும்போது குறைந்த பட்சமாக குடும்பத்திலாவது பாசத்தை கொட்டிவிடலாமே!
அது ஓர் மறைமாவட்டப் பேராலயம். குருவானவர் ஒருவர் இறந்துவிட்டார். ஆயர்
தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. ஆயரின் இல்லத்துக்கு அருகில் உள்ள
கல்லறையில், அடக்கச்சடங்கு ஆடம்பரமாக முடிந்து போனது. இறந்து போன குருவானவரின்
தாயும், குடும்ப உறவினர்களும் வேதனையின் உச்சத்தை விட்டு இறங்க இயலாது, ஆயர்
இல்லத்தில் ஒரு பெஞ்சில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார்கள். மகனை இழந்த வறுமையான
கோலம் கொண்ட அந்தத் தாயையும், எவரும் கண்டு கொள்ளவில்லை. தூரத்தில் நின்று வேதனையோடு
பார்த்து கொண்டிருந்த ஈரமனம் கொண்ட இளம்குரு, மூத்த குருவிடம் கேட்டார்.
"மகனை இழந்த அந்த தாய்க்கு ஆயர் இல்லத்தில் இருந்து ஏதாவது உதவி செய்வார்களா?" மூத்த
குரு "பொறுத்திருந்து பார்" என்றார். ஆயர் உட்பட நுற்றுக்கு மேற்பட்ட குருக்கள்,
கன்னியர் என அனைவரும் கலைந்து சென்றனர். ஆயர் அறைக்குள் சென்று கதவை சாத்திக்
கொண்டார். ஆயர் இல்லத்தில் இருந்த மற்ற குருக்களும் தங்கள் வேலைகளைச் செய்ய சென்று
விட்டார்கள். இதைவிடக் கொடுமை கணினியில் (பேஸ்புக்கில்) முகபுத்தகத்தில் இறந்து போன
குருவானவரின் செய்தியுடன் போட்டோவை போட்டவரும் ஒரு குருவானவர்தான். அவராவது
அந்தத் தாய் முகத்தை பார்த்திருப்பாரா? என்பதும் கேள்விக்குறியே!
வறியோருக்கு ஒரு
உபசரணை, செல்வந்தருக்கு ஒரு உபசரணை. மாற்றமுடியாத சமூகம் கதவைத் தாழிட்டுத்
தப்பித்துக் கொள்கிறது. சிலுவையை பிறர் மீது சுமத்தி விட்டு ஒதுங்கி நிற்கிறது.
உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கொஞ்சம்கூட சொந்தமாக இருக்க மாட்டார்கள். ஆனால்
அவரை சொந்தம் என சொல்லிக் கொள்வதில் ஏற்படுகிற பெருமைக்கு அளவு அதிகம். பணத்திற்காக
என்ன வேண்டுமானலும் செய்யத் தயாராக இருக்கின்ற உலகமிது. ஐந்து ரூபாய் தந்தால் கூடப்
போதும், வாய் கூசாமல் பொய் கோஷம் போடப் புறப்படுகின்ற உலகமிது. ஆடம்பரத்திற்கும்
அதிகாரத்திற்கும் பணிகின்ற பாசம் எத்தனை ஆண்டு பழகினால் என்ன? காசுக்காகத் தானே
யூதாஸ் கூட முத்தமிடுகிறான். அன்று மட்டுமல்ல இன்றும்
தெரிந்தே காட்டிக் கொடுக்கும்
செயலில் ஈடுபட்டுவிட்டு, கல்மனதை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.
காட்டில் இருந்த மரங்களெல்லாம் பேசிக் கொண்டன.
"என்ன? இந்த நாட்களில் மரமாகிய நம்மை
எல்லாம் கிறிஸ்தவர்கள் வெட்டிக் கொண்டு போகிறார்கள், நம்மை வைத்து என்ன செய்யப்
போகிறார்கள்" என்று. இன்னும் வெட்டாமல் நின்ற மரம் கூறியது
"அதுவா இது "தவக்காலம்" கிறிஸ்தவர்கள் சிலுவை செய்ய நம்மை வெட்டிக்கொண்டு போகிறார்கள்" என்றது. அப்போது
ஒரு குட்டி மரம் சொன்னது
"மரமாகிய நம்மை சிலுவையாக மாற்றுகிற இந்த மனிதர்கள்
எல்லோரும், எப்போது அதை சுமக்கும் இயேசுவாக மாறப் போகிறார்கள்" என்றது.
*
பரிசுத்த வாரம் இது. இந்த பரிசுத்த வாரத்தில் பரிசுத்தமான வாழ்வுக்கு நாம்
மாறுவோம்.
பிறர்மாற வேண்டுமென காத்திருக்க வேண்டாம்.
*
சிலுவையை சுமக்கும் இயேசுவாக நாமே பரிசுத்த வாரத்தில் நடக்கலாமே!
*
ஆடம்பர வாழ்க்கை, அழகான மனிதர்கள், அதிகார வர்க்கம் என, மனதில் அலையும்
எண்ணங்களை
நிதானமாக்கல்.
*
உறவினரை வெறுத்த பொழுதுகளுக்கு பிராயசித்தம் தேடுதல்.
*
உறவினரின் மரணத்தில் இறந்து போனவருக்காக அல்ல, இழப்பை அனுபவிப்பவரின்
துயரத்திற்காக ஆறுதல் பகிர்தல்.
*
சிலுவையில் தொங்கிய செம்மறி இயேசுவிடம் தாங்கமுடியாத துன்பத்தில்சரணடைதல்
*
நீதி, நேர்மை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம் இவைகளை அன்றாட அலுவல்களில்
பயன்படுத்துதல்.
*
பிறர் மீது சுமைகளை ஏற்றிவிட்டு ஒன்றும் அறியாது போல் இருத்தலைத் தவிர்த்தல்.
*
குடும்பத்தில் பிறருக்கு சிலுவையாய் அல்ல, பிறரை சுமக்கும் இயேசுவாய் நடமாடுதல்.
*
செல்வருக்கு அழகு தம்மிடம் இருப்பதை வறியோருக்குத் தானமாய் தருதல்.
*
பிறர் பழித்துக்கொண்டிருந்தாலும், நேர்மையாய்
உழைத்துக் கொண்டிருத்தல்.
*
சிலுவையை நேசித்தவரை சிலுவையும் நேசித்தது. இயேசுவை நேசிக்கும்போது
இயேசுவும் நம்மை
நேசிப்பார்.
*
கண்ணீரோடு நம் நடுவில் நடமாடுபவர்கள் எல்லாம் நம் அன்பர் இயேசுதான்
*
கூட்டைச் சுமக்கும் நத்தையாய் அயலாரை அக்கறையுடன் சுமந்தால் சுமை லேசானதே!
*
குடும்பத்தை கோவிலாக்க பாசத்தை பொழிதல்.
குடும்ப செழிப்பே சமூகத்தின், தேசத்தின் செழிப்பு
குருத்தோலை பவனி :
தக்க நேரத்தில் மக்கள் கோயிலுக்கு வெளியே ஒரு
சிற்றாலயத்தில் அல்லது மற்றொரு தகுந்த இடத்தில் கூடுவார்கள். அவர்கள் கையில்
குருத்தோலை பிடித்திருப்பார்கள்.
சிவப்புநிறத் திருப்பலி உடைகளை அணிந்த குரு பணியாளருடன் அங்கு வருவார். குரு (காப்பா)
மேற்போர்வையை அணியலாம். பவனி முடிந்ததும் இதை அகற்றிவிடுவார்.
குரு வருகையில் கீழ்க்கண்ட பல்லவி அல்லது
மற்றொரு பொருத்தமான பாடல் பாடப்படும்.
பல்லவி மத் 21: 9
தாவீதின் மகனுக்கு ஓசான்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆசி நிரம்பப் பெற்றவரே!
இஸ்ராயேலின் பேரரசே,
உன்னதங்களிலே ஓசான்னா!
பின்னர் குரு வழக்கம்போல மக்களை
வாழ்த்துகிறார். சிற்றுரை ஆற்றி, இந்நாள் கொண்டாட்டத்தை அனைவரும் நன்கு அறிந்து
அதில் ஈடுபட்டுப் பங்கெடுக்கத் தூண்டுகிறார். இதற்குக் கீழுள்ள உரையை அல்லது
அதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.
அன்புமிக்க சகோதரர்களே சகோதரிகளே! தவக்காலத் தொடக்கத்திலிருந்தே தவமுயற்சிகளாலும்
அன்புப் பணிகளாலும் நம் இதயங்களைப் பண்படுத்திய பின் நம் ஆண்டவரின் பாஸ்கா
மறைநிகழ்ச்சியின் தொடக்கத்தைத் திருச்சபையோடு சேர்ந்து கொண்டாட நாம் இதோ
கூடியிருக்கிறோம். பாஸ்கா மறைநிகழ்ச்சியின் ஆண்டவருடைய திருப்பாடுகளையும்
உயிர்த்தெழுதலையும் குறிக்கின்றது. பாஸ்காவை நிறைவேற்றவே அவர் தம் நகரான
எருசலேமுக்கு எழுந்தருளினார். எனவே, மீட்பளிக்கும் இந்த வருகையை நாம் முழு
விசுவாசத்துடனும் பக்தியுடனும் நினைவிற்கொண்டு, ஆண்டவரைப் பின்செல்வோம். இவ்வாறு
அவருடைய அருளினால் சிலுவையில் பங்குகொள்ளும் நாம் உயிர்ப்பிலும் முடிவில்லா
வாழ்விலும் பங்குபெறுவோமாக.
சிற்றுரைக்குப்பின் குரு கீழுள்ள
மன்றாட்டுகளில் ஒன்றைச் சொல்கிறார்:
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
இந்தக் குருத்தோலைகளை உமது ஆசியால் புனிதப்படுத்தியருளும்.
கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக அவரோடு புதிய
எருசலேமுக்கு வந்து சேர்வோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல். ஆமென்.
(அல்லது)
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இரக்கமுள்ள இறைவா,
உம்முடைய மக்களாகிய எங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்தருளும். எங்கள்
வேண்டுதலைக் கனிவுடன் கேட்டருளும்.
வெற்றி வீரராய்ப் பவனிவரும் கிறிஸ்துவின் திருமுன் நாங்கள் குருத்தோலைகளை ஏந்தி
வருகின்றோம்.
கிறிஸ்துவில் ஒன்றித்து வாழ்ந்து நாங்கள் ஒவ்வொருவரும் நற்செயல்களால் அவரை
மகிமைப்படுத்த அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
குரு மௌனமாக குருத்தோலைகள்மீது தீர்த்தம்
தெளிக்கிறார். ஆண்டவரின் வருகையைப்பற்றி நான்கு நற்செய்தியாளர் எழுதியவற்றிலிருந்து
நற்செய்தி வாசிக்கப்படும். அதை வழக்கம்போலத் திருத்தொண்டரோ, அவர் இல்லையெனில்
குருவோ வாசிப்பார்.
தூய லூக்கா எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம்
19:29-40
ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர்
நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், "எதிரே
இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்
குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.
யாராவது உங்களிடம், "ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத்
தேவை" எனச் சொல்லுங்கள்" என்றார். அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச்
சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின்
உரிமையாளர்கள், "கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை" என்றார்கள்; பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி
வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி
வைத்தார்கள். அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில்
விரித்துக் கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது
திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக்
குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்; "ஆண்டவர் பெயரால் அரசராய்
வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" என்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம்
சீடர்களைக் கடிந்து கொள்ளும்" என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இவர்கள்
பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்குப்பின் சுருக்கமாக மறையுரை
ஆற்றலாம். பவனி தொடங்குமுன் குரு அல்லது பணியாளர் கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று
அழைப்பு விடுப்பார்:
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே! இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்த மக்கள் திரளைப்
பின்பற்றி, நாமும் சமாதானமாகப் புறப்பட்டுப் பவனியாகச் செல்வோம்.
திருப்பலி நடக்கவிருக்கும் கோயிலுக்குப் பவனி புறப்படுகிறது. தூபம் பயன்படுத்தினால்
புகையும் கலத்துடன் தூபப் பணியாளர் முன்செல்ல, எரியும் திரிகளைத் தாங்கும்
இருபணியாளர்களிடையே அலங்கரிக்கப்பட்ட சிலுவை பிடித்திருப்பவரும், அவர்களுக்குப்பின்
குருவும் மற்றப் பணியாளரும் செல்வர். இறுதியாக இறைமக்கள் குருத்தோலை பிடித்துக்
கொண்டு அணிவகுத்துச் செல்வர்.
பவனியின்போது, பாடகர் குழுவும் மக்களும்
கீழ்க்கண்ட அல்லது வேறு பொருத்தமான பாடல்களைப் பாடுவர்.
ஆயிரக்கணக்கான வருடங்களாய் -எம்
ஆண்டவரே உம்மை எதிர் பார்த்தோம்
இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் - எம் இயேசு
இரட்சகரே எழுந்தருளும்.
ஓசானா தாவீதின் புதல்வா
ஓசானா ஓசானா ஓசானா
மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா
முனிசூசைக் கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசானா....
அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் தாபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர் - ஓசானா....
தாவீது அரசரின் புத்திரரே - ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமரெனப் புகழ் அடைந்தவரே - எம்
தேவனே தேவனே வருவீரே - ஓசானா....
கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டுவரச் சொன்னீர் சுத்த தண்ணீர் - அதை
சுத்த ரசமாக்கிப் பெயரடைந்தீர் - ஓசானா....
புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்
புத்தியில் புகுத்தினீர் அருள் மொழிகள்
பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா
பவனியோடு வாரீர் படைத்தவரே - ஓசானா....
குருடர்கள் அனேகர் ஒளி பெற்றார் - முடம்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம்
கடவுளே எம்மோடே வாரும் நீரே - ஓசானா....
மரித்தவர்கள் பலர் உயிர் பெற்றார் - ஒரு
மனமுடைந்த விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சகோதரன் பெற்றொர் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே - ஓசானா....
யூதேயா நாட்டினில் புகழப் பெற்றீர் - எம்
யூதர் ராஜனென்று முடிபெற்றீர்
யெருசலேம் நகர் தனில் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசனே அரசாள்வீர் - ஓசானா....
பாவிகளைகத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் போக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே - ஓசானா....
கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே - ஓசானா....
உலகமே உமது அரிய வேலை - எம்
உயிருமே உமது மா புதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே - ஓசானா....
பல்லவி 1:
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக் கிளைகளைப் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா
என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர்கொண்டனரே.
மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன,
பூவுலகும் அதில்வாழும் குடிகள் யாவரும் அவர்தம் உடைமையே,
ஏனென்றால், கடல்களின்மீது பூவுலகை நிலைநிறுத்தியவர் அவரே,
ஆறுகளின்மீது அதை நிலைநாட்டியவர் அவரே.
ஆண்டவரது மலைமீது ஏறிச்செல்லத் தகுந்தவன் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவன் யார்?
மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன்.
பயனற்றதில் தன் மனத்தைச் செலுத்தாதவன்,
தன் அயலானுக்கு எதிராகவஞ்சகமாய் ஆணையிடாதவன்.
இவனே ஆண்டவரிடம் ஆசிபெறுவான்,
இவனே தன்னைக் காக்கும் ஆண்டவரிடம் மீட்பு அடைவான்.
இறைவனைத் தேடும் மக்களின் இதுவே,
யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே.
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்,
பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்.
போரில் வல்லவரான கொண்ட ஆண்டவரே இவர்.
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்.
பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
சேனைகளின் ஆண்டவரே இவர். மாட்சிமிகு மன்னர் இவரே."
பல்லவி 2
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
வழியில் ஆடைகள் விரித்தவராய்
"தாவீதின் மகனுக்கு ஓசான்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி நிரம்பப் பெற்றவரே"
என்று முழங்கி ஆர்ப்பரித்தார்.
(தேவைக்கேற்ப இப்பல்லவியை 46ஆம்
சங்கீதத்தின் அடிகளுக்கு இடையே பல்லவியாகப் பாடலாம்.)
சங்கீதம் 46
மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் கைகொட்டுங்கள்:
அக்களிப்போடு இறைவனுக்குப் புகழ்பாடி ஆர்ப்பரியுங்கள்.
ஏனெனில் அண்டவர் உன்னதமானவர், அஞ்சுதற்குரியவர்,
உலகுக்கெல்லாம் பேரரசர்.
மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்.
நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார்.
நமக்கு உரிமைப் பொருளாக நாட்டைத் தேடித் தந்தார்.
தாம் அன்புசெய்யும் யாக்கோபுக்கு அது பெருமை தருவதாகும்.
மக்கள் ஆர்ப்பரிக்க இறைவன் அரியணை ஏறுகிறார்.
எக்காளம் முழங்க, ஆண்டவர் எழுந்தருளுகிறார்.
பாடுங்கள் நம் இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்
பாடுங்கள் நம் வேந்தனுக்குப் புகழ் பாடுங்கள்.
ஏனெனில் கடவுள் உலகுக்கெல்லாம் அரசர்.
அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்.
நாடுகள் அனைத்தின்மீதும் இறைவன் ஆட்சிபுரிகின்றார்.
தம் புனித அரியணைமீது இறைவன் வீற்றிருக்கின்றார்.
ஆபிரகாமின் இறைமக்களோடு புறவினத்தாரின் தலைவர்கள் கூடியிருக்கின்றனர்
ஏனெனில் உலகின் தலைவர்களெல்லாம் இறைவனுக்குரியவர்கள்.
அவரே மிக உன்னதமானவர்.
கிறிஸ்து அரசருக்குப் பாடல்
கிறிஸ்து அரசே இரட்சகரே மகிமை வணக்கம் புகழ்
உமக்கே:
எழிலார் சிறுவர் திரள் உமக்கு அன்புடன் பாடினர்: "ஓசான்னா!"
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: இஸ்ராயேலின் அரசர் நீர் தாவிதின் புகழ்சேர் புதல்வர் நீர்
ஆசிபெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர்.
எல். கிறிஸ்து அரசே,....
பாடகர்: வானோர் அணிகள் அத்தனையும் உன்னதங்களிலே உமைப் புகழ்
அழிவுறும் மனிதரும் படைப்புகளும் யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே.
எல். கிறிஸ்து அரசே,....
பாடகர்: எபிரேயர்களின் மக்கள் திரள் குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்;
செபமும் கீதமும் காணிக்கையும் கொண்டு யாம் இதோ வருகின்றோம்.
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: பாடுகள் படுமுன் உமக்கவர் தம் வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே:
ஆட்சி செய்திடும் உமக்கன்றே யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்.
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: அவர்தம் பக்தியை ஏற்றீரே, நலமார் அரசே, அருள் அரசே,
நல்லன எல்லாம் ஏற்கும் நீர் எங்கள் பக்தியும் ஏற்பீரே.
எல். கிறிஸ்து அரசே.....
பவனி கோயிலுக்குள் நுழைகையில் கீழுள்ள
பதிலுரைப் பாடல் அல்லது இக்கருத்துள்ள வேறு பாடல் பாடப்படும்.
ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில்
எபிரேயச் சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய். குருத்து மடல்களை ஏந்திநின்று
"உன்னதங்களிலே ஓசான்னா!" என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.
எருசலேம் நகருக்கு இயேசுபிரான் வருவதைக் கேட்ட மக்களெலாம்
அவரை எதிர்கொண்டழைத்தனரே. குருத்து மடல்களை ஏந்திநின்று
"உன்னதங்களிலே ஓசான்னா!" என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.
குரு பீடத்தை அடைந்ததும் அதற்கு வணக்கம்
செலுத்துவார்; வசதிபோலத் தூபம் காட்டலாம். பின்னர் தம் இருக்கைக்குச் சென்று ("காப்பா"
மேல்போர்வையை அகற்றித் திருப்பலி உடை அணிந்து), திருப்பலியின் தொடக்கச் சடங்கை
விட்டுவிட்டு, பவனியின் முடிவுரையாகத் திருப்பலியின் சபை மன்றாட்டைச் சொல்வார்.
வழக்கம்போலத் திருப்பலி தொடர்ந்து நடைபெறும்.
சபை மன்றாட்டு
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய திருவுளத்திற்குப் பணிந்து எங்கள்
மீட்பர் மனிதராகி, சிலுவைச் சாவுமட்டும் தம்மையே தாழ்த்தினார். நாங்கள் அவர்தம்
பாடுகளின் பாதையைப் பின்பற்றி அவரது உயிர்ப்பின் மகிமையிலும் பங்குபெறத் தயவாய்
அருள்வீராக. உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும்
வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக
உம்மை மன்றாடுகிறோம்.
முதல் வாசகம்:
அநீதிகளும், அராஜகங்களும், சுயநலமும் நிறைந்த உலகத்தினை எதிர்த்து போராடுகிறபோது,
பல துன்பங்களும் அவமானங்களும், ஏற்படும். பலர் இகழ்வார்கள், ஆனால் தாழ்ச்சியோடும்,
துணிவோடும் அவைகளை எதிர்த்துப் போராட ஆண்டவர் இயேசு நமக்கு துணையாயிருக்கிறார்.
அவரை நாடுங்கள் அவர் நம்மை எல்லாச் சூழ்நிலையிலும் வழிநடத்துவார் என்று எசாயாவின்
நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்:(எசாயா 50, 4-7)
நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர்,
கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி
எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.
ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச்
செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என்
தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என்
முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார் நான் அவமானம்
அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை
என்றறிவேன்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்: திருப்பாடல்: 22:8-9, 17-18, 19-20, 23-24
பல்லவி: என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை
நெகிழ்தீர்
என்னைப் பார்ப்போர் எல்லோரும் என்னை ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன் மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்
ஏனெனில் பல நாய்கள் என்னை சூழ்துகொண்டன
பொலலாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளை யெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
அவர்களோ என்னைப பார்கின்றார்கள் பார்த்து அக்களிக்கின்றார்கள்
என் ஆடைகளைகத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப்போடுகிறார்கள்
ஆனால் நீரோ ஆண்டவரே என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்குத் துணையான நீர் எனக்கு உதவி புரிய விரைந்து வாரும்.
இரண்டாம் வாசகம்
இயேசு இறைமகன் எல்லாவற்றின் மேலும் அதிகாரமும், வல்லமையும் இருந்தாலும் அன்புகருதி,
அமைதி கருதி, சமாதானம் கருதி தன்னையே வெறுமையாக்கினார். தாழ்த்திக்கொண்டார்.
தாழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல. ஆனால் அவரை அனைத்திற்கும் மேலாக உயர்த்தினார்.
நாமும் நமக்கு அறிவுத்திறமை, ஆள்திறமை, பணம் பதவி இருந்தாலும் பணிவோடு பிறர் வாழ்வு
முன்னேற முயற்சி செய்யும்போது கடவுள் நம்மை மேன்மைப்படுத்துவார், என்று கூறும்
இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
அப்போஸ்தலரான தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம்:(பிலி 2, 6-11)
கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து
பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி
அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும்
அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே
தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான
பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர்
அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்"
என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம்: பிலிப் 2:8-9
கிறிஸ்து தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே
ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார். ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும்
மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
ஆண்டவருடைய திருப்பாடுகளில் வரலாறு. எரியும் திரிகளும் தூபமும் இன்றிஇ வாழ்த்துரை
கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும். திருத்தொண்டர்
அல்லது அவரில்லையெனில், குரு அதை வாசிப்பார். வாசகர்களும் அதை வாங்கிக்கலாம். ஆனால்
கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கூடியமட்டும் குருவே வாசிக்க வேண்டும்.
திருப்பாடுகளின் வரலாற்றைப் பாடுமுன் திருத்தொண்டர்கள் மட்டும் நற்செய்திக்குமுன்
நடப்பது போல குருவிடம் ஆசி பெறுவார்கள்.
நற்செய்தி வாசகம்:
லூக்கா 22:14 - 23:56