இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா நமக்குத் தரும் சிந்தனை, இயேசு
விண்ணகம் சென்றது போல, நம் வாழ்வின் பயணமும் விண்ணக வாழ்வை மையப்படுத்தியே
அமைய வேண்டும். "இவ்வுலகில் தாங்கள் அந்நியர் என்பதையும்
தற்காலிகக் குடிகள் என்பதை நம் மூதாதையர் உணர்ந்தவர்களாக, அவர்கள்
விண்ணக வாழ்வையே நாடினார்கள". கானான் நாட்டை காணவி;ல்லை என்ற
போதிலும் அவர்கள் அதையும் விட மேலான நாட்டையே, விண்ணக நாட்டையே
நாடினார்கள். "விண்ணகமே நமக்குத் தாய்நாடு" என்ற புனித பவுலின்
வார்த்தைகளை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்களும்,
ஆசைகளும் விண்ணகம் சார்ந்ததாகவே இருந்திடல் வேண்டும். உயிர்நீத்து
கிறிஸ்துவோடு வாழ வேண்டும் என்ற ஆசை ஒருபுறம், அதுவே மிகச்
சிறந்தது, இருப்பினும் நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற
வேண்டும் என்பதற்காக உங்களுடன் தங்கியிருக்கிறேன்" என்று புனித
பவுல் கூறுவது போல, நாமும் நம் விண்ணக வாழ்வை கண்முன் கொண்டவர்களாக
மண்ணகத்தில் இறையாட்சியை மலரச் செய்ய வேண்டும். இறைமகன் சென்ற
இடமெல்லாம் நன்மைகள் செய்து கொண்டே சென்றதுபோல, நாமும் நமது
சுயநலமென்ற பேராசை உலகில் அடைப்பட்டு கிடக்காமல், பிறர்நலனை
முன்னிருத்தி, பரந்த உள்ளத்துடன், நற்செயல்களைச் செய்திட வேண்டும்.
இயேசுவின் பிரசன்னமும், வாக்குறுதிகளும் கவலையுடனிருந்த
சீடர்களுக்கு நம்பிக்கையையும். சக்தியையும் தந்ததுபோல, நாமும்
அவருடைய பிரசன்னத்திலும். உடனிருப்பிலும், வார்த்தையிலும்,
வாக்குறுதியிலும் நம்பிக்கைக் கொண்டு, நம் வாழ்வாலும், பணியாலும்
நற்செய்தியை பறைசாற்றுவோம். புனித பிரான்சிஸ் அசிசியார், அன்னை
தெரசா இவர்கள் நற்செய்தியாகவே வாழ்ந்தார்கள். நாமும் அவர்களைப்போல
நற்செய்தியை அறிவித்து, நற்செயல்கள் புரிந்து இயேசுவின் வாழ்வே,
நம் வாழ்வாக வாழ்ந்து காட்டுவோம். விண்ணகம் சென்ற அவர் மீண்டும்
வருவார் என்ற நம்பிக்கையுடன், உயிர்ப்பின் மக்களாக, அவர் சென்ற
வெற்றியின் பாதையில் நாமும் பயணித்து, விண்ணகம் ஏறிச் செல்வோம்.
இறையாசீர் பெற்று புதுவாழ்வு வாழ, தொடரும் பலியில் அருள் வேண்டி,
நம்மையே அர்ப்பணிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
" வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்"
என்ற இறைவார்த்தைக்கேற்ப,
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள்,
இருபால் துறவியர் அனைவருக்கும் நல்ல உடல், உள்ள நலன்
தந்து, அவர்கள் எவ்வித சோதனைகளிலும், வேதனைகளிலும்
வீழ்ந்திடாமல், தளாந்திடாமல், உம் பணியை ஆற்றலோடு,
வல்லமையோடு செய்திட உற்சாகத்தை, ஊக்கத்தைக்;;
கொடுத்து, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தைகளை நேரிய
பாதையில் வழிநடத்திடவும், உம் அருள்நலமும், பேரன்பும்
என்றும் அவர்களுக்கு நிறைவாய் கிடைத்திடவும் வரம்
வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
" இளையோரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின்
வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கின்றது, நீங்கள்
தீயோனை வென்றுள்ளீர்கள்" என்ற இறைவார்த்தைக்கேற்ப,
இன்றைய இளைய சமூகத்தினர் எந்தவித தவறான, நெறிகேடான
வழிகளில் தங்கள் வாழ்வை தொலைத்து விடாது, உண்மைத்
தெய்வமாகிய உம்மையே தங்கள் வாழ்வின் ஒப்பற்ற
முன்மாதிரியாகக்; கொண்டு, உயர்ந்த இலட்சியத்துடன்,
தங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நற்செயல்கள்
புரிபவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
" கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர்
பணிந்திருங்கள்" என்ற இறைவார்த்தைக்கேற்ப,
திருமணமான தம்பதியர்கள் தங்கள் இல்லற வாழ்வில்,
"தான்" என்ற ஆணவத்துடன் தங்கள் இல்லற வாழ்வை
சீர்குலைக்காது, விலகிச் செல்லாது, தாங்கள் கொடுத்த
வாக்குறுதிக்கு என்றும் பிரமாணிக்கமுள்ளவர்களாக, ஒருவiயொருவர் நன்கு புரிந்து கொண்டு,
விட்டுக்கொடுத்து, கரம் கொடுத்து, உறவில் ஆழமான
நம்பிக்கையுடன் என்றும் இணைபிரியாது வாழ்ந்திடவும்,
அவர்களுக்கு நன்மக்கட்பேற்றினைக் கொடுத்து, சிறந்த
பெற்றோர்களாக வாழ்ந்திடவும் அருள் வேண்டி, இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
" ஏழைகளை மறக்க வேண்டாம்" என்ற இறைவார்த்தைக்கேற்ப,
வறுமையினால் தங்கள் வாழ்வில் துன்ப. துயரங்களை
அனுபவித்து, கஷ்டத்துடனும், கண்ணீருடனும் வாழும் ஏழை
மாந்தர்களை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். அவர்களை
புறக்கணிக்காமல், ஒதுக்காமல் அவர்களிலேதான் நீh
உறைந்திருக்கின்றீர் என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள்
அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து, அவர்கள் வாழ்வில்
வளமையைக் கண்டிடச் செய்தருளக் கூடிய நன்மனதைத் தந்தருள
வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
" பண்பற்ற பேச்சுக்கு உன் நாவைப் பழக்காதே, அது
பாவத்துக்குரிய பேச்சு" என்ற இறைவார்த்தைக்கேற்ப,
உடலில் மிகச் சிறிய உறுப்பான எங்கள் நாவினால் எங்கள்
உடன் வாழும் மனிதர்களை பழித்துரைத்து, அவமானங்களைக்
கொடுத்திருக்கின்றோம். பண்பற்ற பேச்சினால் பலரது
வாழ்வை பாழ்படுத்தியுள்ளோம், அவர்கள் நன்மதிப்பை
இழக்கச் செய்திருக்கின்றோம். இத்தகைய இழிவான மனநிலையை
அகற்றி, இனிய பேச்சிற்கும், பிறர் வாழ்விற்கு
ஊக்கத்தையும் கொடுத்தருள எங்கள் நாவைப் பயன்படுத்திட,
அருள் தரவேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை
அருட்சகோதரி: மெரினா O.S.M.
மறையுரைச்சிந்தனை - சகோ. செல்வராணி Osm
விண்ணேற்றப் பெருவிழா
சீடராவோம் ... சீடராக்குவோம்....
குரு, சீடர்களின் உறவு உன்னதமானது, புனிதமானது. தொடக்கக்
காலத்தில் சீடர்கள் தான், குருவை தேடிச் சென்று, அவருடன்
தங்கி, நற்சிந்தனைகளையும், நற்பயிற்சியையும் கற்றுக்
கொண்வார்கள். இதைத் தான் நாம் குருகுல கல்வி என அறிந்திருக்கின்றோம்.
ஆனால் நம் குருவாம் இயேசு சற்று வித்தியாசமானவர் அதனால்
தான், தானே சீடர்களைத் தேடிச் சென்று, நற்போதனைகளை கற்றுக்
கொள்ள அழைத்தார். இயேசுவால் தேடிச் சென்று, தேர்ந்தெடுக்கப்பட்ட
சீடர்கள், அவருடன் தங்கினார்கள். அவருடைய போதனைகளும் ,
புதுமைகளும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால், சீடர்களே இயேசுவைத்
தேடிச் சென்றன. இயேசு சென்ற இடமெல்லாம் சீடர்களும் சென்று,
தங்கள் வாழ்க்கை முழுவதையும் இறையாட்சிப் பணிக்காக அர்ப்பணித்தார்கள்.
மூன்று ஆண்டுகள் இயேசுவோடு கூட இருந்து, நன்கு பயிற்சி
பெற்ற சீடர்கள், இறுதியில் தேர்வை சந்திக்கும் காலத்தை
நெருங்குகிறார்கள். அதுதான் இயேசுவின் விண்ணேற்றம். "நான்
உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன் " என்று
சொன்ன இயேசுவின் உடனிருப்பையும், உயிர்ப்பு சக்தியையும்
பெற்றுக் கொண்ட சீடர்கள், இயேசு தங்களிடம் பணித்த படியே,
உலகெங்கும் சென்று, நற்செய்திக்கு சான்று பகர்ந்து, அனைவரும்
இயேசுவின் சீடர்களாக வாழ அழைப்பு விடுத்தார்கள். அவர்களின்
அழைப்பாலும், போதனையாலும் நாம் கிறிஸ்துவின் பிள்ளைகளாகவும்,
அவரின் சீடர்களாகவு் வாழ அழைப்புப் பெற்றிருக்கிறோம். இயேசுவின்
சீடர்களாக வாழ அழைப்புப் பெற்ற நாம், அவரின் சீடர்களாக
வாழ்கின்றோமா ? நம்மையே நாம் கேள்வி கேட்டுக்கொள்வோம். சோதனைகளை
வென்று, சாதனைகள் புரிந்த இயேசுவின் சீடர்கள் நாம் என்றால்,
அவர் வழியில் சென்று, அவரைப் போல வாழ நம்மை தயார்படுத்திக்
கொள்ளவேண்டும், தகுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
சீடத்துவ வாழ்வு என்பது, தூண்டில் போட்டு மீன் பிடிப்பது
அல்ல. மாறாக ஆற்றில் குதித்து மீனைப் படிப்பது போன்றதாகும்.
தூண்டில் போட்டவுடன் மீன் கிடைத்துவிடும் ஆனால் ஆற்றில்
குதித்து மீன் பிடிப்பது என்பது கஷ்டமான காரியம். சீடத்துவ
வாழ்க்கையும் இதைப் போன்றதே. இத்தகையதொரு கடினமான வாழ்க்கை
வாழ்ந்து, மற்றவர்களையும் இயேசுவின் சீடராக்கியவர்கள் தான், அவரின் பன்னிரெண்டு சீடர்களும். தொடர் ஓட்டத்தில் ஒரு
வீரரின் கையிலிருந்து, மற்ற வீரனின் கைக்கு மாறும் குச்சி
போல, இயேசு தம் சீடர்களிடம் ஒப்படைத்த இறையாட்சிப் பணி,
இன்று நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இயேசு நம்மிடம்
ஒப்படைத்த பணி என்னவென்றால், நாம் இயேசுவின் சீடர்களாக
வாழ்ந்து, மற்றவர்களையும் அவரின் சீடராக்குவதாகும்.
உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்றார்
இயேசு. ஆனால் இன்று பக்கத்து வீட்டிற்கே போக முடியாத
சூழ்நிலையில் , அச்சத்தோடும் , நடுக்கத்தோடும் ,
பயத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட
நிலையில் நாம் எப்படி மற்றவர்களை இயேசுவின் சீடர்களாக
மாற்ற முடியும்? மற்றவர்களை மாற்ற முயற்சிப்பதை விடுத்து,
நாம் இயேசுவின் சீடர்களாக வாழ முற்படுவோம். நாம் இருக்கும்
இடத்திலேயே, இயேசு நமக்கு கற்றுக் கொடுத்த மதிப்பீடுகளை
கடைபிடிப்போம். இறைவேண்டல் செய்வதிலும், இறைவார்த்தை
வாசிப்பதிலும் , அன்புப் பணி புரிவதிலும், சீடருக்குரிய
பண்பு நலனை வெளிப்படுத்துவோம். அன்போடும், கரிசனையோடும்
நாம் செய்யும் செயல்களால், மற்றவர்களையும் இயேசுவின்
சிடராக்க முற்படுவோம். ஆண்டவர் இயேசுவின் அருளும் ஆசீரும்
என்றும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவதாக... ஆமென்.
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
மறைதலே இறைமை
'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று
நம்பிக்கை கொள்வதற்காகவே'
இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் நாம் காணும் புனித அகுஸ்தினாரின்
இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு
எடுத்துரைக்கின்றன.
'இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை
நோக்கிச் செல்லத் தீர்மானித்து...' (9:51) என லூக்கா இயேசுவின்
பயணத்தை முன்கூட்டியே தொடங்கி வைக்கிறார். இயேசுவின்
வாழ்வில் நிறைவு அவரின் விண்ணேற்றம்.
இயேசுவின் விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும்,
புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:
தடை 1: இயேசுவின் உடல்
மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார்.
வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார்.
நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார்.
உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல்
உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத்
தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார்.
அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம்
அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று
சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின்
இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட்
மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று,
புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க
வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர்
அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய
ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல்
இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா?
(இருக்க வேண்டும் - ஏனெனில் மாறாதவராக இருந்தால்தானே அவர்
கடவுள்!) உடல் என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும்
இருக்க வேண்டும். உடை இல்லாத மனித உடலை அதுவும்
கடவுள்-மனிதனின் உடலை நாம் நினைத்துப் பார்க்கவும்
முடியுமா? பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக
மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம்
சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு
நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என
ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா?
இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள
தடையாக இருக்கிறது.
தடை 2: காலம்-இடம்; கூறு
மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி
எழுதும்போது, 'இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம்
அமர்ந்தார்' (16:19) என எழுதிவிட்டு, உடனே, 'ஆண்டவரும்
திருத்தூதர்களோடு உடனிருந்தார்' (16:20) என
முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து
கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர்,
காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு
எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா?
அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஒரு உள்ளுணர்வு
போல இருந்ததா? அதாவது, இறந்து போன நம் நண்பர் அல்லது
உறவினர் இருக்கிறார் என்று நாம் சொல்கிறேன் என்றால், 'என்
கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது' என்பது போன்ற 'இருப்பு'
அல்ல அது. மாறாக, அது ஒரு உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும்
இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.
தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள்
பார்க்கவில்லை
இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே
எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் ('கடவுள்
நம்மோடு') என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து
விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை
(காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும்
நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த
மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். 'பிள்ளைகளே
சாப்பிட வாருங்கள்' என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன
உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன்
எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா?
மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன்
திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா,
இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்:
இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக
நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாட்களுக்குப் பின்
நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.
இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது:
'விண்ணேற்றமா?' அல்லது 'விண்ணேற்பா?'
முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும்
இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில்
இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை
12ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி
அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம்.
இங்கே 'விண்ணேற்றம்' என்பது செய்வினை. 'விண்ணேற்பு' என்பது
செயப்பாட்டுவினை. விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே,
தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு
மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால்
அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர்
ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது.
முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ?
ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை
மாற்றங்களோ? தெரியவில்லை!
ஆனால், லூக்கா நற்செய்தியில் 'அனாஃபெரோ' என்ற வினைச்சொல்
செயப்பாட்டுவினையிலும் ('அனஃபெரெட்டோ'), திருத்தூதர்
பணிகளில் 'எபைரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும்
('எபெர்தெ') உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா
வௌவேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி
மொழிபெயர்த்தால், 'அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்' என்றும்
'அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்' என்றும் சொல்ல வேண்டும்.
ஆக, 'இயேசு விண்ணேற்றம் அடைந்தார்' என்பது நம்
புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு
அல்ல.
இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க,
இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?
கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.
எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன்
விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள்
தெரிந்துவிடும்.
விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம்
பெறுகின்றது:
1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின்
இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).
2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன்
இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக்
கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு.
விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று
மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு
(தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34),
புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின்
நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும்
நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ)
பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை.
இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல்
ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி
9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா
நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும்
முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33,
8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம்
திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.
3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக
வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).
இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு
நம்பிக்கையின் மறைபொருளே. 'நம்பிக்கை' என்ற இந்த ஒற்றைச்
சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும்
தொடர்பே இல்லை. 'விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை' நாம்
எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல்
பாடங்கள் எவை?
பாடம் 1: மறைதலே இறைமை
இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல,
அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. 'தேவை'
என்பதால் இது உருவாக்கப்பட்டது என்று பொருள் கொள்ளக்
கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன்
அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை
மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல.
கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல.
கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை.
மாறாதவைகள் கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை
மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என
வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது.
என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை
எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை.
'ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க்
காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்' (1 கொரி
13:12). இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார்.
மறையும்போதுதான் இறைவனாகின்றார். இதை இன்றைய இரண்டாம்
வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பார்க்கின்றோம்.
இரண்டாம் வாசகத்தில் இயேசுவை புதிய உடன்படிக்கையின்
தலைமைக்குருவாக உருவக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட
திருமடலின் ஆசிரியர், 'அதனால்தான் கிறிஸ்து மனிதரின்
கையால் அமைக்கப்பட்ட இவ்வலகின் தூயகத்திற்குள் நுழையாமல்,
விண்ணகத்திற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்' (9:24) என்றும்,
'அவர் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே
வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி' (10:20) என்றும்
எழுதுகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு 'ஆசி வழங்கிக்
கொண்டிருந்தார்' (24:51) என எழுதுகின்றார் லூக்கா. 'ஆசி
வழங்குதல்' என்பது தலைமைக்குருவின் பணி மற்றும் உரிமை.
இயேசு மேலே ஏறிச்சென்றவுடன், சீடர்கள் 'நெடுஞ்சாண்கிடையாக'
விழுகின்றனர் ('ப்ரோஸ்குனேயோ'). இது கடவுள் முன் மட்டுமே
மனிதர்கள் செய்யும் செயல். ஆக, சீடர்கள் இங்கே இயேசுவை
இறைவனாக ஏற்றுக் கொள்வதன் வெளி அடையாளமே இந்த
நெடுஞ்சாண்கிடை வணங்குதல். 'கடவுள் நம்மோடு' என இறங்கி
வந்தவர், 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கின்றார்.
பாடம் 2: சீடர்களின் பணி
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு
குறிப்பிடுவது இரண்டு: ஒன்று, மனமாற்றம். இரண்டு,
மன்னிப்பு. மேலும், 'இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்' (லூக்
24:48) என்கிறார் இயேசு. 'நீங்கள் சாட்சிகள்' என்னும்
சொல்லாடல் இன்றைய முதல் வாசகத்திலும் (திப 1:8) உள்ளது.
'சாட்சி' என்பது நீதிமன்றச் சொல். சாட்சியம்தான்
தீர்ப்பின் போக்கையே மாற்றும். சாட்சி சொல்பவருக்கும்,
சாட்சி சொல்லப்படுபவருக்கும் முரண் இருக்கக் கூடாது.
சாட்சி சொல்பவர் தான் யார் சார்பாக சாட்சி சொல்கிறாரோ,
அவரின் மனநிலையைத்தான் அவர் பிரதிபலித்தல் வேண்டும்.
'மனமாற்றம்,' மற்றும் 'மன்னிப்பு' இந்த இரண்டைத்தான் இயேசு
நம்மிடம் விரும்புகின்றார். நம் இறைவன் கனிவின், கருணையின்
இறைவன். அவர் நம்மைத் தண்டிப்பவர் அல்லர். ஆகையால்தான்
இன்றைய இரண்டாம் வாசகமும், 'ஆதலால், தீய மனச்
சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில்
கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிக
உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக' (எபி
10:22) என்று ஊக்கம் தருகின்றது. ஆக, மனமாற்றம்,
மன்னிப்பு, சாட்சியம் இம்மூன்றும் சீடர்களாகிய நம்
பண்புகளாக இருத்தல் நலம். தொடர்ஓட்டத்தில் ஒரு வீரரின்
கையிலிருந்து மற்ற வீரரின் கைக்கு மாறும் குச்சியைப்போல,
ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் ஒருவரின் கையிலிருந்து
அடுத்தவரின் கைக்கு மாறும் தீபம் போல விண்ணரசுப் பணி
இயேசுவின் கையிலிருந்து இன்று நம் கைக்கு மாறுகின்றது.
எந்த அளவிற்கு இது ஒரு கொடையோ, அந்த அளவிற்கு இது ஒரு
கடமை. 'விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்குட்பட்டு
விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும' (2 திமொ
2:5)
பாடம் 3: எதிர்நோக்கு
'அவர் மீண்டும் வருவார்' (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம்
நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன.
எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம்
வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே.
காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு
தூங்கச் செல்லுமுன் 'வேக்அப் கால்' வைக்கின்றோம்.
படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில்
சம்பாதிப்பது, அருட்சாதனம்
முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி
கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும்
எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த
எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, 'அவர் மீண்டும்
வருவார்' என்ற எதிர்நோக்கும், 'நாமும் அங்கு செல்வோம்'
என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக
முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்?
நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச்
சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு
எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம்
விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த
எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).
பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!
'கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே
இருக்கிறீர்கள்?' (திப 1:11) என்ற கேள்வி நம்மைப்
பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும்
ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம்
அவசியம். 'அவர் வருகிறார்!' என்பதற்காக அவரைத் தேடி
வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து
சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக்
கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில்
இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன்
கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள்.
நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில்
பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி
பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள்.
விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள்.
ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும்
அவரால் வர முடியும்.
பாடம் 5: மகிழ்ச்சி
இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு
'பெருமகிழ்ச்சி' ('காராஸ் மெகாலெஸ்') என்று பதிவு
செய்கின்றார் லூக்கா (லூக் 24:52). இந்தச் சொல்லாடலை
மீண்டும் ஒருமுறை வானதூதரின் வார்த்தையாகப் பதிவு
செய்கின்றார்: 'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும்
பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு
அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்
உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்' (லூக்
2:10). இயேசுவின் பிறப்பு, பணி, உயிர்ப்பு, விண்ணேற்றம் என
அவரின் வாழ்வு நமக்குத் தருவது மகிழ்ச்சி ஒன்றே. இந்த
மகிழ்ச்சி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைவாக
இருந்து, நாம் செய்வது அனைத்திலும் வெற்றி கண்டு,
வளமோடும், நலமோடும் வாழ்தலே அவருக்கு மாட்சி.
'நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி
வந்தார். இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு
நாமும் உடன் செல்கிறோம். ஏனெனில் அருளால் நாமும் அவரோடு
இணைந்துள்ளோம்!' (புனித அகுஸ்தினார்)
ஒப்படைத்தார்; உயரே சென்றார்
பழமையான கடிகாரமும் சிறுவனும்:
அது ஒரு வசதியான குடும்பம். அவர்களது வீட்டில் மிகவும் பழமையான
ஒரு கடிகாரம் இருந்தது. அது தலைமுறை தலைமுறையாகப் பத்திரமாகப்
பாதுகாக்கப்பட்டு வந்தது. ஒரு நாள் அந்தக் குடும்பத்தில்
இருந்த தந்தையும் தாயும் தெரிந்தவர் ஒருவருடைய இல்லத்தில்
நடைபெற்ற திருமண விருந்தில் கலந்துகொண்டு, இரவில் சற்றுத்
தாமதமாகவே வந்தார்கள். வாசலில் அவர்களுடைய மகன் அன்பு
தூங்காமல் அமர்ந்திருந்தான். அவன் தன் பெற்றோரைப் பார்த்ததும்
எழுந்து நின்றான்.
"அன்பு! நீ இன்னும் தூங்கவில்லையா?" என்று அவனுடைய தந்தை
அனிடம் கேட்டபோது, "தூக்கம் வரவில்லை" என்று பதற்றத்தோடு
சொன்னான் அன்பு. "ஏன்? உனக்கு என்ன ஆயிற்று?" என்று தந்தை
மீண்டுமாகக் கேட்டபோது, அன்பு பதற்றம் குறையாமல் பேசினான்:
"அப்பா! நம்முடைய வீட்டில் மிகவும் பழமையான ஒரு கடிகாரம்
உள்ளதே! அந்தக் கடிகாரத்தைக்கூட உங்கள் அப்பா உங்களுக்குக்
கொடுத்ததாகவும், அவருக்கு அவருடைய தந்தை கொடுத்ததாகவும்,
உங்களுக்குப் பின் நான் என் பிள்ளையிடம் ஒப்படைக்க
வேண்டும் என்று சொன்னீர்களே! அதன்மீது நான் தெரியாமல்
மோதி, உடைத்து விட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்."
தன் மகன் இவ்வாறு சொன்னதைக் கேட்ட கடுஞ்சீற்றம் அடைந்த தந்தை,
"என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பழமையான கடிகாரத்தை எப்படி நான்
உன்னிடம் பத்திரமாக ஒப்படைத்தேனோ, அப்படி நீயும் உன்
பிள்ளையிடம் பத்திரமாக ஒப்படைப்பாய் என்றல்லவா நினைத்தேன்.
இப்படி உடைத்துவிட்டாயே!" என்று அவனைத் தாக்குவதற்கு அவன்மீது
பாய்ந்தார்.
ஆம், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நமக்குப் பின் வரும்
சந்ததியிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். அதுவே உவப்புடையது.
ஆண்டவர் இயேசு மண்ணுலகத்தில் தான் செய்யவேண்டிய பணிகளை
முடித்துக்கொண்டு, அந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற
வேண்டும் என்று, அவற்றைத் திருத்தூதர்களிடம் ஒப்படைத்துவிட்டு
விண்ணேறிச் செல்கின்றார். அதைத்தான் இன்று நாம் ஆண்டவருடைய
விண்ணேற்றப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா
நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
பொறுப்புகளை ஒப்படைத்தார்:
கிறிஸ்தவ வாழ்க்கையை அல்லது கிறிஸ்தவத்தை ஒரு தொடர் ஓட்டத்தோடு
ஒப்பிடலாம். ஏனெனில், கடவுளால் தொடங்கப்பட்ட நற்செயல்
(பிலி 1:6), அல்லது மீட்புச் செயல் அவரது மகன் இயேசு
கிறிஸ்து மூலம் முன்னெடுத்துச் செல்லப்பட்டு, இன்றைக்குக்
கிறிஸ்து ஏற்படுத்திய மறையுடலாம் திருஅவை வழியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த உண்மையை இன்றைய வாசகங்களோடு இணைத்துச் சிந்தித்துப்
பார்த்தால் இன்னும் தெளிவாக விளங்கும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில், "இயேசு தாம் தேர்ந்துகொண்ட திருத்தூதர்களுக்கு
அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக்
குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்" என்று
வாசிக்கின்றோம். தூய ஆவியின் துணையோடு திருத்தூதர்கள் செய்யவேண்டியவை
எவை என்பதை இன்றைய நற்செய்தியில் இயேசு மிக அழகாக எடுத்துக்
கூறுகின்றார். "பாவ மன்னிப்புப் பெற மனம்மாறவேண்டும்" என்ற
செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று தம் சீடர்களுக்குச்
சொல்லும் இயேசு தொடர்ந்து அவர்களிடம், "இவற்றுக்கு நீங்கள்
சாட்சிகள்" என்கிறார்.
சாட்சிகள் என்று சொல்வதை இரண்டு விதங்களில்
புரிந்துகொள்ளலாம். முதலாவது இயேசு சொன்னதை வார்த்தையால்
அறிவித்து, அவருக்குச் சாட்சிகளாய் இருப்பது, இரண்டாவது
முதலாவதை விட மேலானது - வாழ்வால் இயேசு சொன்னதை அறிவித்து,
அவருக்குச் சாட்சிகளாய் இருப்பது. திருத்தூதர்கள் இயேசு
சொன்னதை தங்கள் வார்த்தைகளால் மட்டுமல்ல, வாழ்வாலும்
அறிவித்து, அவருக்குச் சாட்சிகளாய் இருக்கவேண்டும்
என்பதைத்தான், "இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்ற
வார்த்தைகள் நமக்கு எடுத்தியம்புகின்றன. இவ்வாறு இயேசு
மண்ணுலகில் தன்னுடைய பணிகளை முடித்துக்கொண்டு, அந்தப்
பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று அவற்றைத்
திருத்தூதர்களிடம் ஒப்படைத்துவிட்டு, விண்ணேற்றம்
அடைகின்றார்.
பரிந்து பேசுவார்:
மண்ணுலகத்தில் தன் பணிகளை முடித்துவிட்டு இயேசு விண்ணுலகம்
சென்றுவிட்டதால், மண்ணுலகில் உள்ள மக்களுக்கும் அவருக்கும்
தொடர்பிருக்காதா? விண்ணுலகில் அவர் என்ன செய்வார்? என்பன
போன்ற கேள்விகள் எழலாம். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்
தருகின்றது இன்றைய இரண்டாம் வாசகம்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் அதன் ஆசிரியர்,
"விண்ணுலகத்திற்குள்ளே நுழைந்திருக்கும் இயேசு அங்கே
இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார்"
என்கிறார். நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கின்றார்
என்று சொல்லும் ஆசிரியர், "நமக்காகப் பரிந்து பேசுவதற்கென
என்றுமே உயிர் வாழ்கின்றார்" (எபி 7:25) என்ற
கருத்தினையும் வலியுறுத்திக் கூறுகின்றார்.
இந்த மண்ணுலகத்தில் தன்னுடைய பணி, அல்லது தான் சீடர்களிடம்
ஒப்படைத்துவிட்டுச் சென்ற பணி தொடர்ந்து நடைபெறும்போது
பல்வேறு விதமான எதிர்ப்புகளும் ஆபத்துகளும் வரலாம்
என்பதால், இயேசு அவர்கள் சார்பாக இருக்கின்றார்.
அவர்களுக்காக அவர் பரிந்து பேசுகின்றார். இயேசு அவரது
சீடர்கள் சார்பாக இருக்கும்போது, யாருமே அவர்களுக்கு
எதிராக இருக்க முடியாது (உரோ 8:31) என்பதுதான் உண்மை.
மீண்டும் வருவார்:
மண்ணுலகத்தில் தன் பணிகளை முடித்துக்கொண்டு, அப்பணிகள்
தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்பிய இயேசு,
அவற்றைத் தன் சீடர்களிடம் ஒப்படைத்தார், அவர்கள் அவற்றைத்
திறம்படச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் சார்பாக அவர்
கடவுளின் திருமுன் நிற்கின்றார் என்று இதுவரை நாம்
சிந்தித்துப் பார்த்தோம். இவ்வாறு தான் ஒப்படைத்துவிட்டு
சென்ற பணிகளைத் திறம்படச் செய்து, காத்திருப்போருக்கு
மீட்பு அருள அவர் தோன்றுவார் என்று இன்றைய இரண்டாம்
வாசகத்தில் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறுகின்றார்.
மேலுள்ள வார்த்தைகளை நாம் சிந்தனைக்கு உட்படுத்திப்
பார்க்கும்போது இரண்டு உண்மைகள் புலம்படுகின்றன. ஒன்று,
இயேசு மீண்டும் வருவார் என்பது. இரண்டு, தாம்
ஒப்படைத்துவிட்டுச் சென்ற பணிகளைச் செய்து, தமக்காகக்
காத்திருப்போருக்கு அவர் மீட்பை அருள்வார் என்பது. ஆதலால்,
ஆண்டவராகிய இயேசு நம்மிடம் திருத்தூதர்கள் வழியாக
ஒப்படைத்திருக்கும் பணியைத் திறம்படச் செய்வோம். அப்போது
அவர் நமக்குத் தக்க கைம்மாறு அளிப்பார் (மத் 16:27).
சிந்தனைக்கு:
தூய ஆவியாரின் வல்லமையால் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை
அறிவித்துவிட்டு, அதன் முடிவுகளைக் கடவுளின்
ஒப்படைத்துவிடுவதே உண்மையான சாட்சிய வாழ்வாகும் என்பார்
பில் பிரைட் என்ற மறைப்பணியாளர். எனவே, நாம் தூய ஆவியாரின்
வல்லமையால் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, அவரது உண்மையான
சாட்சிகளாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
மறையுரைச்சிந்தனை
-
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை பெரியவர் ஒருவர் மரணப் படுக்கையில்
இருந்தார். சாவின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் முனங்கல்
சப்த த்தில் இருந்தார். மூடிய கண்களோடு இருந்தவர், மூத்த
மகன் எங்கே? என்று கேட்டார். அப்பா, உங்கள் கால்
மாட்டில்தான் நிற்கி றேன் என்றான். அடுத்ததாகப் பெரியவர்
என் நடுமகன் எங்கே என்று கேட்டார். உங்கள் அருகில்தான்
நிற்கிறேன் என்றான். இளைய மகன் எங்கே என்று மூன்றாம்
முறையாகக் கேட்டார். அவனோ, அப்பா! உங்கள் தலைமாட்டில்தான்
நிற்கிறேன் என்று பதில் கொடுத்தான். கவலைப்படாதீர்கள் என்றும்
சொன்னான். பெரியவரோ எரிச்சலோடு மூன்று பேரும் இங்கே சும்மா
ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள். நான் நடத்திய பெட்டிக்கடையை
நடத்துவது யார்? என்று கேட்டார். தான் நடத்திய வியாபாரத்
தைத் தொடந்து நடத்த வேண்டும் என்று அந்த பெரியவர் எதிர்பார்த்தது
தவறு அல்ல. இவ்வுலகில் பெரும்பாலான மனிதர்கள், தங்கள் பணியை,
தங்கள் வாரிசுகள் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இயேசுவுக்கு இது விதிவிலக்கல்ல. மூன்று ஆண்டுகள் இரவும்,
பகலும் கடினமாக உழைத்து இறையரசுக்குப் பணி ஆற்றினார். உவமைகள்,
புதுமைகள், போதனைகள், பாடுகள், துன்பங்கள் பல பட்டு மக்களுக்கு
இறையரசைப் போதித்தார், தன் இறையரசுப் பணியைத் தம் சீடர்கள்
தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்,
நோக்கம்.
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி யைப் பறைசாற்றுங்கள்
(மாற். 16:15) என்றார். எனவேதான் இன்றைய முதல் வாசகம்
திருத்தூதர் பணியில் வானதூதர் சீடர்களை நோக்கி: கலிலேயரே!
நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே
நிற்கிறீர்கள்? (தி.ப. 1:11). புறப்பட்டு இதற்கு சாட்சியாக
நீங்கள் செல்லுங்கள் (லூக். 24:48) என்றார்.
I. இன்றைய விண்ணேற்பு விழா நமக்கு உணர்த்துவது என்ன?
கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு தொடர் ஓட்டம். தொடர் ஓட்டத்தில்
ஒருவர் ஓடி முடிந்த பின் மற்றொருவர் அவரிடமிருந்து கொடிக்
குச்சியை வாங்கிக் கொண்டு ஓடுகிறார். இந்தத் தொடர் ஓட்டத்தில்
ஒருவர் சரியாக ஓடவில்லை என்றால் ஒட்டுமொத்த வெற்றிக் கனியை
எட்ட முடியாது. இயேசுவின் பணிவாழ்வு முடிந்தபின் அவரது பணியைத்
தொடர்ந்து ஆற்ற சீடர்களும், இன்று நாமும் அழைக்கப்படுகிறோம்.
நாம் இந்தப் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்றால் இயேசுவின்
இறையரசுப் பணியில் தொய்வும் தடையும் ஏற்படும். இன்று இயேசு
நம்மைப் பார்த்து உன் கரங்களே என் கரங்கள். உன் கால்களே என்
கால்கள். அன்பு செய்ய உன் இதயமே என் இதயம் என்கிறார்.
இரண்டாவது தன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்து எதை எதை கட்டுவீர்களோ
அது கட்டப்படும். எதை எதையெல்லாம் கட்டு அவிழ்ப்பீர்களோ அவை
அவிழ்க்கப்படும் (மத். 18:18) என்று அதிகாரப் பகிர்வு
செய்கிறார். இந்தப் பகிர்வு திருச்சபையில் குருக்கள்
பொதுநிலையினரிடமும், கணவன் மனைவியிடமும், மாமி மருமகளுக்கும்.
பெற்றோர் பிள்ளைகளுக்கும் அதிகாரப் பகிர்வு செய்தால் வளர்ச்சி
உண்டு என்பதை இன்றைய விழா நமக்குக் காட்டுகிறது.
மெசியா தாம் மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்களைப் பட
வேண்டும் அல்லவா (லூக். 24:26). ஆம் இயேசு பாடுபட்டு மரித்து
உயிர்த்த பின் மாட்சியுடன் தந்தையின் வலப்பக்கம்
வீற்றிருக்கிறார். இதேபோல்தான் நமது வாழ்விலும் கோதுமை
விதையானது மண்ணிலே விழுந்து மடிந்தால்தான் பலன் தரும். சந்தனக்
கட்டையை மாவாக்கித் தண்ணீரில் கலக்கும் போதுதான் மணம்
வீசுகிறது. தங்கத்தைப் புடம் போடும் போதுதான் வேண்டிய புது
உருவத்தைப் படைக்க முடிகிறது. அதேபோல் நமது வாழ்விலும்
துன்பம் இன்றி இன்பம் இல்லை, பாடுகள் இன்றி மாட்சிமை இல்லை
என்பதை இயேசு நமக்குக் காட்டிவிட்டார்.
தலையாகிய இயேசு மாட்சிமை அடைந்தார் என்றால் அவரது உடலாகிய
நாம் மாட்சிமை பெறுவோம் என்ற நம்பிக்கை சாசனத்தை இயேசு நமக்கு
விட்டுச் சென்றார்.
II. நற்செய்தியாளர் புனித யோவான் நமக்குக் காட்டியது என்ன?
இயேசுவின் இறையரசைக் கட்டி எழுப்ப அழைக்கப்பட்ட
பன்னிருவரில் ஒருவர் யோவான். இயேசுவுக்கு உறவினர்,
நெருக்கமானவர், அன்புச் சீடர் என்ற செல்லப் பெயரையும்
பெற்றவர். இவர் செய்தது என்ன
தன் அழைப்பில் இலட்சியத் தெளிவு கொண்டிருந்தார். ஒன்றை
இழந்தால்தான் மற்றொன்றை அடைய முடியும் என்ற இலட்சியத்
தெளிவு கொண்டிருந்தார். நடந்து செல்லும் பாதை குறுகிய பாதை
என்பதை அறிந்திருந்தார்.
இரண்டாவதாக, இலட்சிய தயாரிப்பில் மூன்று ஆண்டுகள்
இயேசுவின் போதனையில் தன்னையே அர்ப்பணித்து ஆவியின்
திருமுழுக்குக்குத் தன்னையே தயாரித்தவர்.
மூன்றாவதாக, இலட்சிய உறவில் இயேசுவோடு இரண்டறக் கலந்தவர்.
என்னை விட்டு உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது (யோவா.
15:5) என்பதை நன்கு உணர்ந்தவர். ஆவியானவரின்
புதுப்படைப்பாக இயேசுவின் விண்ணேற்புக்குப் பின் மாற்றம்
பெற்றவர்
இறுதியாக இலட்சியப் பயணம் செய்தவர். மற்ற சீடர்கள்
அனைவரும் ஓடிவிட்டாலும் இயேசுவோடு கல்வாரி மட்டும்
இருந்தவர். ஏனெனில் இயேசுவின் அன்புச்சீடன் அல்லவா?
ஓர் இந்தியர் ஓர் அமெரிக்கரிடம், "அமெரிக்கர்களாகிய நீங்கள்
நிலவுக்குத் தான் போனீர்கள். ஆனால், இந்தியர்களாகிய நாங்கள்
சூரியனுக்கே போகப் போகிறோம்" என்றார். அமெரிக்கர் அவரிடம்,
"அது எப்படி முடியும்? சூரியனுக்குப் போகும் பாதி
வழியிலேயே வெந்து சாம்பலாகி விடுவீர்களே" என்றார். இந்தியர்,
"நாங்கள் இரவோடு இரவாகச் சூரியனுக்குப் போய்விட்டுத்
திரும்பிவிடுவோம்" என்று கூறிச் சிரித்தார்.
இவ்வுலகில் ஒவ்வொருவரும் மற்றவர்களைவிட அரிய, பெரிய சாதனைகளைப்
படைக்க வேண்டும். 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெறவேண்டும்
என்று ஆசைப்படுகின்றனர். 'எவரெஸ்ட்' சிகரத்தை எட்டிப்பிடிக்கும்
முயற்சியில் சிலர் தங்கள் உயிரையே இழந்துள்ளனர். ஆனால், இயேசு
கிறிஸ்து 'எவரெஸ்ட்' சிகரத்தை அல்ல. விண்ணகத்தையே எட்டிப்பிடித்து
விட்டார், "ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர். பாவத்தையும்
சாவையும் தோற்கடித்த வெற்றி வீரர், வானதூதர் வியப்புற இன்று
வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார் (இன்றைய திருப்பலிக்கான
தொடக்கவுரை).
இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்றது இவ்வுலக வாழ்வின் துன்ப
துயரங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக அல்ல. மாறாக, நமது
தலைவரும் முதல்வருமாகிய அவர் சென்ற அதே இடத்திற்கு நாமும்
ஒருநாள் செல்வோம் என்ற நம்பிக்கையை நம்மிடம் உருவாக்குவதற்கே.
கிறிஸ்து திருச்சபைக்குத் தலை; நாம் அவருடைய மறையுடலின் உறுப்புகள்.
தலையையும் உடலையும் பிரிக்க இயலாது. எனவே, கிறிஸ்துவின்
விண்ணக மகிமையில் நாமும் ஒருநாள் பங்கு பெறுவோம் என்பது உறுதி.
கிறிஸ்து விண்ணகம் சென்று, அங்கு நமக்காக ஓர் இடத்தை ஏற்பாடு
செய்தபின், திரும்பி வந்து நம்மையும் அழைத்துக் கொண்டு
போவார். அப்போது அவர் இருக்கும் இடத்திலேயே நாமும் இருப்போம்
(யோவா 14:1-3).
கிறிஸ்து விண்ணகத்தில் கடவுளின் வலப்பக்கம் அமர்ந்துள்ளார்.
(மாற் 16:19), கடவுளின் மகிமையில் சரி நிகராக இருக்கிறார்.
அங்கு நமக்காகப் பரிந்து பேசுகிறார் (உரோ 8:34). திருத்தூதர்
யோவான் கூறுகிறார்: நாம் பாவம் செய்யக்கூடாது. அப்படியே
நாம் பாவம் செய்தாலும் நமக்காகத் தந்தையிடம் கிறிஸ்து பரிந்து
பேசுகிறார் (1 யோவா 2:1). கிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுவதற்காகவே
உயிர் வாழ்கிறார் என எபிரேயர் திருமுகம் கூறுகிறது (எபி
7:25) இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: கிறிஸ்து விண்ணகம்
நுழைந்து நம் கடவுளின் முன் நிற்கிறார். எனவே உறுதியான நம்பிக்கையுடன்
அவரை அணுகிச் செல்லவேண்டும். ஏனெனில் அவர் நம்பிக்கைக்கு
உரியவர் (எபி 10:22-23).
கிறிஸ்து விண்ணகம் சென்றபோது தமது கைகளை உயர்த்திச் சீடர்களுக்கு
ஆசி வழங்கினார் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது (லூக்
24:50). அவருடைய ஆசி என்றும் நம்முடன் இருக்கின்றது. ஒவ்வொரு
திருப்பலியிலும் அவர் தமது திருப்பணியாளர்கள் வழியாகத் தம்
கைகளை உயர்த்தி ஆசி வழங்கிக் கொண்டே இருக்கிறார். கிறிஸ்து
விண்ணக கத்திலிருந்து மண்ணகத்திற்கு வந்தபோது அவர் தமது தந்தையைவிட்டுப்
பிரியவில்லை. மண்ணகத்திலிருந்து விண்ணகம் சென்றபோது அவர்
நம்மை விட்டுப் அவ்வாறே அவர் பிரியவில்லை: இவ்வுலகம்
முடியும்வரை அவர் என்றும் நம்மோடு. இருக்கிறார் (மத்
28:20).
ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், "சூரியன் பூமியைச் சுற்றுகிறதா?
அல்லது பூமி சூரியனைச் சுற்றுகிறதா? எது எதைச் சுற்றுகிறது?"
என்று கேட்டதற்கு, ஒரு மாணவன், "சார்! தலை சுத்துகிறது" என்றான்.
நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி டாக்டரிடம், "டாக்டர்!
காலையில் எழுந்தவுடனே அரை மணி நேரம் என் தலை சுத்துகிறது"
என்றதற்கு, டாக்டர் அவரிடம், "அப்ப, அரை மணி நேரம் பிந்தி
எழுந்திருங்க" என்றார். நாம் காலையில் எவ்வளவு நேரம் கழித்து
எழுந்தாலும் நமது பிரச்சினைகள் நம்மோடு எழுகின்றன; தலை
சுற்றுகிறது. இதற்குத் தீர்வு கிடையாதா? கிறிஸ்து
கூறுகிறார்: "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும்
துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டு
விட்டேன்" (யோவா 16:33). எனவே. மனத் துணிவு பெறுவோம்.
கிறிஸ்துவுடன் இணைந்து நம்மால் சமாளிக்கமுடியாத பிரச்சினைகள்
எதுவுமில்லை.
ஒரு மனைவியிடம் இருந்து கணவர் பிரிந்துவிட்டார். அக்கணவரை
நினைத்து. "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டு பிரிந்த கணவர் இன்னும் வீடு திரும்பலை" என்று
பாடுகிறார். நம்மை விட்டுப் பிரிந்த இயேசு திரும்பி வருவாரா?
எப்போது வருவார்?
விண்ணகம் சென்ற இயேசு மீண்டும் வருவார் (திப 1:11). நமக்கு
வானகமே தாய்நாடு: அங்கிருந்து மீட்பர் வருவார் எனக்
காத்திருக்கிறோம் (பிலி 3:20). தொடக்கக் கிறிஸ்தவர்களின்
ஏக்கம்: ''மாரனாத்தா', ஆண்டவரே வருக (1 கொரி 16:22),
விவிலியத்தின் இறுதி வேண்டுகோள்: "ஆண்டவராகிய இயேசுவே
வாரும் (திவெ 22:20). கிறிஸ்துவின் வருகையை நாம் மகிழ்ச்சியோடு
எதிர்பார்க்கிறோம். பேதுரு கூறுகிறார்: அவர் காலம் தாழ்த்தவில்லை;
பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும்
மனம் மாற விரும்புகிறார் (2 பேது 3:6-9).
கிறிஸ்து எப்போது வருவார் என்று வானத்தை அண்ணாந்து
பார்க்காமல், அவர் நமக்கு விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து
ஆற்றுவது நமது கடமை. அவர் நமக்கு விட்டுச் சென்ற பணிகள்:
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்: எல்லா இனத்தாரையும்
என் சீடராக்குங்கள்: மண்ணுலகின் இறுதி எல்லைவரை என் சாட்சிகளாய்
இருங்கள்; பேய்களை விரட்டுங்கள்; நோய்களைக் குணமாக்குங்கள்
(மாற் 16:15-18).
இவ்வாறு செய்ய நம்மால் இயலுமா? என்ற கேள்வி எழுகிறது.
நம்மால் நிச்சயமாகச் செய்ய முடியும். ஏனெனில் சீடர்கள்
நற்செய்தியை அறிவித்தபோது, அவர்களுடன் கிறிஸ்து இருந்து
செயல்பட்டார்; அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை
உறுதிப்படுத்தினார் (மாற் 16:19-20). எனவே, நாம்
சிறுமந்தையாக இருந்தாலும், கிறிஸ்துவின் உடன் இருப்பிலும்.
வல்லமையிலும் நம்பிக்கை வைப்போம். நற்செய்தி விழுமியங்களான
அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை
நிலைநாட்டி உலகுக்குக் கிறிஸ்துவின் உருவைக் கொடுப்போம்.
மாரனாத்தா - ஆண்டவரே வாரும்!
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
-
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
விண்ணகத்திற்குள் நாம் நுழைவோமா?
ஓர் ஊரிலே ஒரு கணவனும், ஒரு மனைவியும்! அவர்கள்
வாழ்க்கையில் அருட்சாதனம்
ஆன நாளிலிருந்து சண்டையும்
சச்சரவும் போரும் பூசலும் !
கணவர் வடக்கு வடக்கு என்றால் மனைவி தெற்கு தெற்கு என்பார்!
காலச் சக்கரம் சுழன்றது! இருவருக்கும் வயதாகி விட்டது!
கணவருக்கு 90 வயதும், மனைவிக்கு 85 வயதும் இருக்கும்.
ஆனால் சண்டை ஓயவில்லை !
ஒரு நாள் இரவு வீடு முழுவதும் வெளிச்சம். வானதூதர் ஒருவர்
அந்த தாத்தா, பாட்டியின் முன்னால் நின்றார்.
அவர் அந்தத் தம்பதியரைப் பார்த்து, உங்களில் யாராவது
ஒருவரை விண்ணகத்திற்கு அழைத்துப் போக வந்திருக்கின்றேன்.
உங்கள் இருவரில் யாருக்கு என்னோடு வர ஆசை? என்றார்.
உடனே தாத்தா, இவளை அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
பாட்டியோ. இல்லை, இல்லை இவரை அழைத்துச் செல்லுங்கள்
என்றார்.
வானதூதருக்கு ஆச்சரியம்! அவர்களைப் பார்த்து, இப்படி அன்பு
செய்யும் கணவன், மனைவியை இதுவரை நான் பார்த்ததே இல்லை !
என்றார்.
அதற்கு தாத்தா என்ன சொன்னார் தெரியுமா? அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை! இவள் இல்லாத இடமே எனக்கு மோட்சம் என்றார்.
பாட்டியும், இந்தக் கிழவன் இல்லாத இடமே எனக்கு மோட்சம்
என்றார்.
இது ஒரு விளையாட்டான கதையாக இருக்கலாம்! ஆனால் மோட்சம்
என்பது, விண்ணகம் என்பது துன்ப துயரங்கள், சோதனைகள்,
வேதனைகள் இல்லாத இடம், நிலை என்பது நமக்குப் புரிகின்றது.
விண்ணகம் என்பதற்கு அழகானதோர் விளக்கத்தை திருவெளிப்பாடு
நமக்குத் தருகின்றது! விண்ணகம் என்பது வெண்மையான தொங்கலாடை
அணிந்தவர்கள் வாழும் இடம்! அவர்கள், ஆமென், புகழ்ச்சியும்
பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும்
வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்
(திவெ 7:12) என்று பாடிக்கொண்டிருப்பார்கள்!
அவர்கள் அனைவரும் தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின்
இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள் (திவெ
7:14). வானுலகில் யாருக்கும் எந்தத் துன்பமும் இருக்காது
(திவெ 7:16-17).
இன்றைய இரண்டாம் வாசகம் விண்ணகத்தை தூயகம் என்று
அழைக்கின்றது (எபி 9:24). விண்ணகத்தில் தூய்மைக்கு மட்டுமே
இடமுண்டு.
இப்படிப்பட்ட விண்ணகத்திற்குள் இயேசு
நுழைந்திருக்கின்றார். [முதல் வாசகம், இரண்டாம் வாசகம்,
நற்செய்தி ).
உலகின் ஒளி நானே (யோவா 8:12) என்றார் இயேசு. அவருக்குள்
இருள் கிடையாது! இவர் ஒருவரால் மட்டும்தான், என்னிடம்
பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம்
சுமத்த முடியுமா? (யோவா 8:46) என்று கேட்க முடிந்தது.
இன்று நம் எல்லாருக்குமே இயேசுவைப் போல விண்ணகம் எழுந்து
செல்ல ஆசை ! மோட்சத்தை அடைய ஆசை!
நம் ஆசை நிறைவேறவேண்டுமானால் இயேசுவைப் போல நாம் தூய்மையான
மனமும், உள்ளமும் படைத்தவர்களாக வாழ முன்வரவேண்டும்.
விண்ணகம் என்பது தூய்மையான இடம்! அது தூயவர்களுக்கு
மட்டுமே சொந்தம் !
நம்மையே நாம் தூய்மையாக்கிக்கொண்டு விண்ணகத்துக்குள்
இயேசுவைப் போல நுழைந்து, துன்பமில்லா. துயரமில்லா நிலை
வாழ்வை அனுபவிப்போம்.
பொருள் : சிறப்பாகிய வீடுபேற்றையும் செல்வச் செழிப்பையும்
வழங்குவது அறநெறி ஆகும். இத்தகைய அறத்தைக் காட்டிலும்
மேன்மை மிக்கது எதுவும் இல்லை.
மறையுரைச்சிந்தனை
-திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
நெஞ்சை விட்டு நீங்காதவை
இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வு பற்றி லூக்கா தரும் இரண்டு
குறிப்புகள். ஒன்று நற்செய்தி நூலின் முடிவாக. இன்னொன்று
திருத்தூதர் பணிகள் நூலின் தொடக்கமாக.
இயேசுவின் விண்ணேற்றம் :
-இயேசுவின் வாழ்விலும் திருச்சபையின் வரலாற்றிலும் ஒரு
முக்கிய கட்டம்.
- இயேசுவின் பாடுகள், மரணம் இவற்றைத் தந்தையான கடவுள்
அங்கீகரித்தார், ஏற்றுக் கொண்டார் என்பதன் அடையாளம்.
இயேசுவின் விண்ணேற்றம்:
-இயேசுவின் ஊனுடல் வரலாற்றுக்கு ஒரு முடிவு. இயேசுவின்
மறையுடல் வரலாற்றுக்கு ஒரு தொடக்கம்.
- கிறிஸ்துவின் நேரடிப் பணிக்கு ஒரு முடிவு, திருத்தூதர்,
கிறிஸ்தவர் பணிக்கு ஒரு தொடக்கம்.
- போதனை வாழ்வுக்கு முடிவு போல சாட்சிய வாழ்வுக்கு
ஆரம்பமாக.
ஆக இயேசுவின் விண்ணேற்புப் பெரு விழா இரு பெரும்
சிந்தனைகளை முன் வைக்கிறது.
1. இயேசுவின் மண்ணகப் பணி நிறைவு :
இயேசுவின் மானிட உருயேற்றலும் விண்ணேற்றமும் நேரடித்
தொடர்புடையவை. எந்த நோக்கத்திற்காக இயேசு விண்ணகம்
துறந்தாரோ அதே நோக்கத்தின் நிறைவாக விண்ணேறுகிறார் என்பது.
தந்தையான இறைவனின் விருப்பத்தையும் அவரது இறையாட்சிப்
பணியையும் உலகில் நிலைநிறுத்திய இயேசு, உலகப் பணியின்
நிறைவாக விண்ணகம் ஏறினார் என்பது. அவருக்குப் பணி முழுமை
எவ்வாறு சாத்தியமாயிற்று? இயேசு தமக்கென இறைவன் தந்த
பணியினைப் பற்றிய தெளிவும் ஆர்வமும் கொண்டிருந்தார்.
எச்சூழலிலும் எவ்விதத்திலும் பணியிலிருந்து விலகிச்
செல்லவில்லை. இறைவன் தந்த பணியை நிறைவேற்றுவதே இயேசுவின்
தனிப்பெரும் ஒரே குறிக்கோளாயிருந்தது. "என்னை
அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த
வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு" (யோவான் 4:34).
அத்தோடு இறையாட்சிப் பணியில் அவர் சந்தித்த தடைகள்,
தடங்கல்கள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் அனைத்தையும்
துணிந்த மனநிலையுடன் எதிர்கொண்டார். மேலாக அவர்தம் பணியின்
உச்சம் சிலுவைச் சாவு என அறிந்தும் மன உவப்புடன் தன்னை
ஈந்தார். எனவே அவரது வாழ்வின் பரிசு அவரின் உயிர்ப்பு,
பணியின் நிறைவு விண்ணேற்றம்.
2. இயேசுவின் பணியில் அவருடைய சீடர்கள் கொண்டிருக்க
வேண்டிய பங்கேற்பு பற்றிய நினைவூட்டல்.
இயேசு தொடங்கிய இறையாட்சிப் பணியைத் தொடர வேண்டிய கடமை
இப்போது சீடர்களுடையது. அவர் செயலாற்றியதை வீரியம்
குறையாமல் துணிவோடு செயல்படுத்த வேண்டிய பொறுப்பும்
அவர்களுடையது. அவர் மீண்டும் வரும் வரை மறவாமல்
இம்மண்ணகத்தில் இயேசுவின் மீட்புப் பணியை ஆற்றுவதே தேவை.
"கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்
கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து
விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர்
மீண்டும் வருவார்" (தி.ப.1:11). எனவே விண்ணேற்றப் பெருவிழா
இயேசுவின் இறையாட்சிப் பணியை அவரை நம்பித்
தொடர்கின்றவர்கள், தொடர வேண்டிய அவசியத்தை, பணிப்
பகிர்வினை, அப்பணியினை ஆழமாக ஆற்ற உருவாக்க வேண்டிய
பங்கேற்பு அமைப்புகளைப் பற்றிய சிந்தனைகளை ஆழப்படுத்த
அழைக்கிறது.
இந்த இறையாட்சிப் பணியைத் தனி ஆளாக அல்ல, கூட்டாக,
கூட்டொருமிப்பாக, குழுக்களாகச் செயலாற்றுங்கள் எனப்
பணிக்கிறார். இப்பணியை அவரை நம்புகிறவர்கள் தாங்கள் வாழும்
இடங்களில் வாழ்ந்து காட்ட முனைய வேண்டும் என அறைகூவல்
விடுக்கிறார். தொடக்கக் காலத் திருச்சபையில் பார்க்கிறோம்.
"அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும்,
அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய்
நிலைத்திருந்தார்கள்... நம்பிக்கை கொண்டோர் அனைவரும்
ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய்
வைத்திருந்தனர்... அனைவருக்கும் அவரவர் தேவைகளுக் கேற்ப
பகிர்ந்தளித்தனர்... ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை
நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டே இருந்தார்".
(தி.ப. 2:42-27). இன்று, இயேசு தொடங்கிய இறையாட்சிப் பணியை
நாம் தொடர்ந்தாற்ற வேண்டிய தேவையை உணர்வோம். அருள்
பணியாளர்களை மையப்படுத்தியோ, அல்லது குறிப்பிட்ட
இனத்தினரை, மொழியினரை முன்னிலைப்படுத்தியோ அல்ல, நம்பிக்கை
கொண்ட யாவருமே பணிப்பகிர்ந்து செயல்படுவோம்.
இயேசுவின் விண்ணேற்றத்தில் சீடர்களின் நெஞ்சை விட்டு
நீங்காத்வைகள் இரண்டு:
1. இயேசு தந்த பொறுப்பு
(நற்செய்தி அறிவிப்பு + நற்சான்று வாழ்க்கை) (தி.ப.1:8)
நமது பணி வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பது
அல்ல. மாறாக அவர் விட்டுச் சென்ற பணியைத் தொபர்ந்து
ஆற்றுவது இயே கனவு கண்ட புதிய உலகை உருவாக்குவது. இனி
இயேசு மட்டுமல்ல, நாமும் உலகின் ஒளி, பூமியின் உப்பு, மனித
வாழ்வின் புளிப்பு மாவு.
திருச்சபையில் எத்தனை ஆயிரம் புனிதர்கள்! அத்தனை பேரும்
ஓர் அச்சில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் போல ஒரே விதத்தில்
சான்று பகர்ந்தவர்கள் அல்ல. வானவில்லின் வண்ண நிறங்கள் போல
ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் வேறுபட்ட சூழல்களில்
சான்று பகர்ந்தவர்கள். அந்தப் பணியில் இயேசுவே நம்மோடு
இருந்து நம்மில் செயல்படுகிறார் என்பதுதான் தனிச்சிறப்பு
(மார்க் 16:20)
2. இயேசு தந்த வாக்குறுதி
(இயேசு மீண்டும் வருவார். ஆவியைத் தருவார்) "இந்த இயேசு
உங்களிடமிருந்து விண்ணேற்ற மடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா?
அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" (தி.ப.1:11, பிலிப்.3:20).
இயேசுவின் உடனிருப்புக்கும் வல்லமைக்கும் ஓர் அழியாமை
உண்டு. ஊனுடலில் நடமாடிய போது அவர் ஒரு நேரத்தில் ஒரு
இடத்தில் மட்டும் இருந்தார். விண்ணகம் சென்றபின் தூய
ஆவியின் வழியாக அண்ட கோளங்கள் அனைத்திலும் இருக்கிறார்.
மண்ணில் விண்ணகத்தை உருவாக்க மனிதர்களைக் கருவியாக்கிக்
கொள்வார் என்பதே விண்ணேற்ற விழாச் சொல்லும் செய்தி.