ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

        பொதுக்காலம் 13ம் ஞாயிறு

    திருப்பலி முன்னுரை


வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
இயேசு என்னைத் தொட வேண்டுமென வந்திருக்கும் அன்பர்களே!
B தவக்காலம்1

"என்னைப் போல நீங்களும் இயேசுவைத் தொட்டு குணம் பெற வாருங்கள்" என இயேசுவின் மேலுடையைத் தொட்டு குணமடைந்த கெனசரேத் பெண்மணி நம்மை இன்றைய திருப்பலிக்கு வரவேற்கின்றார்.

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், மற்றும் தொடுதல் என்னும் ஐம்புலன்களின் செயல்பாடுகளில் அதிகம் நிகழ்வது தொடுதலே. தொடுதல் நம் வாழ்வில் எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்ற ஒரு செயல. மகிழ்ச்சியான தருணத்தில் கைகுலுக்குவதும், இறப்பு நிகழ்வில் கைகொடுத்து வருத்தம் தெரிவிப்பதும், ஆழமான அன்பில் கட்டி அணைத்து தட்டிக் கொடுப்பதும் தொடுதலின் வெளிப்பாடே!

இயேசுவும் மக்கள் பலரை தொட்டுக் குணப்படுத்தினார். நோயாளியின் நோயுற்ற உடல் பகுதியை தொட்டுக் குணப்படுத்தினார்;. பார்வையற்ற குருடரின் கண்களைத் தொட்டார். செவிடரை ஊமையரையும் நாவிலே தொட்டார். தொழுநோயாளியின் தோலைத் தொட்டார். இயேசு தொட்டுக் குணப்படுத்தியோர் பட்டியல் இது.

மக்களும் இயேசுவைத் தொட வேண்டுமென்று ஆவல் கொண்டனர். அவரைத் தொட்டு குணம் பெற விரும்பினர். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் மேலுடை ஓரத்தை தொட்டு குணம் பெற மக்கள் கூட்டம் அலைமோதியது. தொட்ட அனைவரும் நலம் பெற்றனர்.
இயேசுவைத் தொடவிரும்பியோரும் இயேசு தொட்டவர்களும் நலம் பெறுகிறார்கள் என்பதை நமக்கு சொல்லும் திருப்பலி இது. நாமும் இயேசுவைத் தொடவும் அவரால் தொடப்படவும் நம்மையும் அழைக்கும் திருப்பலி இது. இயேசுவே என்னைத் தொடும், நானும் உம்மைத் தொடுவதற்கு என் கரம் நீட்டுகிறேன் என்னை குணமாக்கும் என நெஞ்சுருகி திருப்பலியில் மன்றாடுவோம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. மக்கள் பலரைத் தொட்டுக் குணப்படுத்திய இயேசுவே!
எங்கள் திருச்சபைத் தலைவர்களை தொட்டு ஆசீர்வதியும். திருப்பணியாளர்கள் தங்கள் பணியால் மக்களின் மனங்களை தொட்டு வழிநடத்த அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. செவிடரையும் ஊமையரையும் நாவிலே தொட்ட இயேசுவே!
நாடுகளின் தலைவர்களின் நாவைத் தொட்டு வாக்குப் பிறழாமல் எளியோர் நலனுக்கு உழைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. குருடரின் கண்களைத் தொட்டு பார்வை பெறச் செய்த இயேசுவே!
எங்கள் அகக்கண்களை நற்செய்தியால் தொட்டு திறக்கச் செய்யும் எமது பங்குத்தந்தையின் செயல்பாடுகள் அனைத்தும் உம்மால் தொடப்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தொழுநோயாளியின் தோலைத் தொட்டு சுகமளித்த இயேசுவே!
உடல் நோயினால் வருந்திக் கொண்டிருக்கும் அனைவரையும் தொடும். புற்றுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மனநோயாளிகள் அனைவரையும், நீரே தொட்டு குணப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நீர் எம்மைத் தொடவும் நாங்கள் உம்மைத் தொடவும் வேண்டுமென விரும்பும் இயேசுவே!
எங்கள் உடல் உள்ள உறுப்புகளைத் தொட்டு வாழ்நாளெல்லாம் நற்சுகத்துடன் எங்களை வாழ்விக்க வேண்டுமென்றும், எங்களது துன்பத்திலும், வருத்தத்திலும், நோயிலும் நீரே எங்களைத் தொடவும் நாங்களும் உம்மைத் தொடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்

ஒரு இடத்தில் ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை எடுத்து ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக, தூசி படிந்ததாக, அதனுடைய நரம்புகள் எல்லாம் தொய்ந்து போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது. ஏலம் விடுபவர் நினைத்தார் இதைப்போய் நான் ஏலம் விடுகிறேனே யார் வாங்கப் போகிறார்கள்? என் நேரம் தான் வீணாகிப்போகிறது. என நினைத்தவராக அதை ஏலம் விடுவதற்கு ஒரு டாலர், இரண்டு டாலர் என்று ஆரம்பித்தார். ஒருவர் மூன்று டாலர் என்று கூறவும் மூன்று டாலர் ஒருதரம், மூன்று டாலர் இரண்டுதரம், மூன்று டாலர் என்று கூறி முடிப்பதற்குள் ஒரு சத்தம் "பொறுங்கள்"என்று கேட்டது.

ஒரு உயரமான மனிதர் முன்பாக வந்து கொண்டிருந்தார். அவர் வந்து அந்த வயலினைக் கையில் எடுத்து, அதைத் துடைத்து தொய்ந்து போயிருந்த அதன் நரம்புகளை சரியாக டியூன் பண்ணி அதை மெருகேற்றினார். இப்போது அந்த வயலின் புதுப்பொலிவோடு ஜொலித்தது. இப்போது அதிலே அழகான ஒருபாடலை இசைக்க ஆரம்பித்தார். பாடல் நின்றவுடன் ஏலம் விடுபவர் மெதுவான சத்தத்தில் அந்த வயலினின் அருமையை உணர்ந்தவராக இப்போது இந்த வயலின் 1000 டாலர் ஒருதரம் என்று கூற ஆரம்பித்தார். ஒருவர் 2000 என்று கூற, இன்னொருவர் 3000 என்று போட்டியிட ஆரம்பித்தார். கடைசியாக 4000-த்தில் அந்த ஏலம் முடிந்தது. கூடியிருந்த மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை "2 டாலருக்கு விலை போன அந்த வயலின் இப்போது 4000 டாலருக்கு எப்படிப் போயிற்று?" என்று அந்த ஏலம் விடுபவரை கேட்டபோது அவர் சொன்னார் "அதுதான் எஜமானுடைய கைகளின் தொடுதல் என்று.

நாம் நினைக்கலாம் என்னால் என்ன பயன்? பாவத்திலும் துன்பத்திலும் நோயிலும் அகப்பட்டு பொலிவிழந்து கிடக்கிறேன் என்று. இயேசு நம்மைத் தொடும்போது நாம் ஜொலிக்க ஆரம்பிப்போம்.

கடவுளின் கரத்தில் நம்மை அர்ப்பணிக்கும் போது என்னைத் தொட்டுப் பயன்படுத்தும் என மன்றாடும்போது அவர் நம்மை நிச்சயமாக ஆசீர்வதித்து ஜொலிக்கவைப்பாரே!
ஒர் முறை யானை குட்டி ஒன்று இறந்து விட்டது. அப்போது அதன் தாய் யானையும் மற்ற யானையும் இறந்த யானைக்குட்டியைத் சுற்றி வந்து தொட்டுத் தொட்டு அழுதன.

நமது குடும்பத்தில் நம் பிள்ளைகளை அன்பு நிறைந்த சொற்களால் தொடுவோம்.
சாதனை படைத்து மகிழ்ச்சியாக இருப்போரை பாரட்டும் சொற்களால் தொடுவோம்.

பிறரை உற்சாகப்படுத்துவதற்காக மட்டுமே பிறரின் முதுமைத் தொட்டுத் தட்டிக் கொடுப்போம்.
கணவன் மனைவி புரிதல் உணர்வுடன் ஒருவர் ஓருவரைத் தொட்டுக் கொள்வோம்.
நோயாளிகளை வருத்தத்தில் இருப்போரை அவமானமுற்று குறுகி இருப்போரை ஆறுதல் சொற்களால் தொடுவோம்.

சமூகம் பிறபடுத்தப்பட்டோர் என வேறுபாடுகாட்டி ஒதுக்கி வைத்திருப்போரை உரிமை உணர்வுகளால, மனிதாபிமான உணர்வுகளால் தொடுவோம்.
நம் கடவுள் வாழும் கடவுள். நம்மை வாழ்விக்கும் கடவுள். நாம் வாழ அவரைத் தொடுவோம். நம்மை வாழ்விக்க அவர் நம்மைத் தொடுகின்றார்.
இயேசு நம்மைத் தொட வேண்டும் என ஆவல் கொள்வோம். நம்பிக்கையோடு அவரை நாடி வருவோம். நலம் பெறுவோம். இயேசுவின் சாட்சிகளாக வலம் வருவோம்.

நாம் இயேசுவால் தொடப்படும்போது மிக மகிழ்ச்சியாக இருப்போம்.

தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
தொடும் என் காதுகளை
உம் குரல் கேட்க வேண்டுமே
தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆற வேண்டுமே
தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீரவேண்டுமே
தொடும் என் ஆன்மாவையே
என் பாவம் போக வேண்டுமே
தொடும் உன் இதயத்தையே
உம் அன்பு பெருக வேண்டுமே

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
பொதுக்காலம் 13 வாரம்
உனது பயணம் எத்திசையை நோக்கியது?????
இன்றைய நமது வாழ்க்கைச்சூழலில் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அனைவரும் பயன்படுத்துவது ஊடுறுவல் வரைபடம் என்னும் NAVIGATION MAP . அலைபேசி நமது வாழ்வை மிகச்சுருக்கி நமது உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்துவிட்டது. இளையோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இதைதான் பயன்படுத்துகின்றனர். பக்கத்து தெருவிற்கு செல்ல வேண்டுமென்றாலும் பாதையை தொடுதிரையில் பார்த்து மகிழ்கின்ற காலமாகமாறிவிட்டது. அதில் நாம் சென்று சேர வேண்டிய இடத்தை குறித்து வைத்தால் அது நமக்கான எளிதான பாதையை காட்டும். இதன் மூலம் நமது பயணம் சுலபமானதாக மகிழ்வானதாக அமையும். நமது வாழ்வும் அப்படி தான் ஆனால் அதற்கான பாதை இயேசு என்னும் அலைபேசியில் அடங்கி இருக்கிறது. முதலி நாம் இயேசுவை அறிய வேண்டும் அதன் பின் நமது வாழ்வுக்கான பாதையை அறியலாம்.

வாழ்க்கையில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதை விட எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே மிக முக்கியம். நமது வாழ்வு ஒரு பயணமாக பயணித்துக் கொண்டே இருக்கின்ற ஒரு நதியாக ஆறாக இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கும் நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கும் ஒரு செழிப்பையும் பசுமையையும் தர முடியும். இல்லையெனில் தேங்குகின்ற கழிவு நீர் போல நமது வாழ்வு மாறிவிடும். அது பசுமையையும் செழிப்பையும் ஒரு போதும் தர முடியாது. இன்றைய நற்செய்தியின் மூலம் இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பும் இதுதான். யாயீர் என்னும் தொழுகைக் கூடத் தலைவரின் மகள் குணமடைதலும் , பெரும்பாடுள்ள பெண் குணமடைதலும் பகுதியை வாசிக்கக் கேட்டோம் . இன்றைய நற்செய்தியில் பல நபர்கள் இடம் பெறுகின்றனர். இயேசு, அவர் தம் சீடர்கள், யாயீர் அவருடைய மகள், இரத்தப்போக்குள்ள பெண், மக்கள் கூட்டம் என பலர் இருப்பினும் நம்பிக்கையோடு பயணித்தவர்கள் சிலர் மட்டுமே. அவர்கள் யாயீர், யாயீர் மகள்,பெரும்பாடுள்ள பெண். இவர்களின் இன்றைய செயல்பாடுகள் நமக்கு கொடுக்கும் செய்தி என்ன என்பதை அறிய முயல்வோம்.

யாயீர்;
தொழுகைக் கூடத் தலைவர். அவர் நினைத்திருந்தால் பணியாளரையோ அல்லது தொழுகைக்கூடத்து முக்கியமான நபர்களையோ இயேசுவிடம் அனுப்பி தன் மகளுக்கு உடல் நலம் வேண்டி இருந்திருக்கலாம். ஆனால் தன் மகள் மேல் கொண்ட அன்பின் நிமித்தம் தன் வீட்டிலிருந்து தானே வெளியேறி இயேசுவைத் தேடி செல்கிறார். தன் மகள் குணமாக வேண்டும் என்ற ஆவல் , HB ஏக்கம் அவரை வெளியே இயேசுவை நோக்கி அவர் இருந்த திசையை நோக்கி அழைத்து செல்கிறது. தன் வீட்டிலேயே இருந்து தன் மகளுக்காக அழுது கொண்டிருக்காமல் வெளியே பயணிக்கிறார். அந்த நம்பிக்கை பயணம் அவருக்கு நலம் பயக்கிறது. அவரது மகள் குணமடைகிறாள். அவரது நம்பிக்கை செயல்பாடுள்ள நம்பிக்கையாக இருக்கிறது.

யாயீரின் மகள்:
பன்னிரண்டு வயதுள்ள சிறுமி. உடல் துன்பத்தோடு உள்ள துன்பமும் வருத்த நோய்வாய்ப்பட்டு இறக்கின்றாள். தன் வயது சிறுமிகள் எல்லாம் ஓடியாடி விளையாட இவள் மட்டும் படுக்கையில் கிடக்கிறாள். இயேசு வந்து தன் கரங்களை தொட்டு எழுந்திரு என்று சொன்னதும் உடனே எழுந்ததோடு மட்டுமல்லாமல் நடக்கவும் ஆரம்பிக்கிறாள் . இயேசுவின் வல்லமை தன்னை குணப்படுத்தும் என்று நம்பிய சிறுமி , தனது நம்பிக்கை தன்னை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரும் என்று எண்ணி அதை செயல்படுத்துகிறாள். குணமும் பெறுகிறாள்.

பெரும்பாடுள்ள பெண்;
பன்னிரண்டு ஆண்டுகள் இரத்தப் போக்கினால் அவதிப்பட்ட பெண் . தனது ஊர் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி இயேசுவைக் காண வருகிறாள். தான் நலம்பெற வேண்டும். வீட்டிற்குள் அடைந்து கிடப்பதாலோ அல்லது மனித மருத்துவம் கை விட்டு விட்டதே என்று எண்ணி வருந்தி அழுவதாலோ நலம் கிடைத்து விடாது. மாறாக, நலம் அருள்பவரை நாடி செல்ல வேண்டும் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் வருகிறாள். நம்புகிறாள் நலம் பெறுகிறாள்.

இயேசு ;
தனது ஆற்றல் இறை வல்லமை தன்னைப் பின் தொடரும் மக்களோடு மட்டும் இருந்து விடாமல் தனது இருப்பினை நாடுபவர்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என எண்ணுகிறார். அதனால் தான் மக்களை நாடி செல்கிறார். நம்பிக்கையோடு தொடுபவர்கள் நலம் பெற்றுக்கொள்கின்றனர். சிலரை இயேசு தொட்டு குணப்படுத்துகிறார். சிலர் இயேசுவைத் தொட்டுக் குணம் பெறுகின்றனர். இயேசுவும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு போதனைகளையும் புதுமைகளையும் செய்யவில்லை . இயக்கம் ஒன்றே இயல்பான இன்பமான வாழ்வு தரும் என்பதை அறிந்தவர் அவர். எனவே அவர் உதவியை நாடிய மக்களை தேடி செல்கிறார்.

மக்கள் கூட்டம் :
இயேசுவோடு மறுகரையிலிருந்து இக்கரைவரை அவரைப் பின் தொடர்ந்தவர்கள், இக்கரை மக்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள், என பலவிதமான மக்கள் அவரைப் பின் தொடர்கின்றனர். இவர்களும் பயணம் செய்தவர்களே ஆனால் இவர்கள் பயணமும் இயக்கமும் தெளிவில்லாத பயணமாக இயக்கமாக இருக்கிறது. இவர் என்ன தான் செய்கிறார் பார்ப்போமே என்ற வேடிக்கை பார்க்கும் மனப்பான்மையே இவர்களிடம் அதிகமாக இருக்கிறது. சிலர், இரத்தப்போக்குடைய பெண்ணை விமர்சனம் செய்பவர்களாக, சிலர் யாயீரிடம் இயேசுவை ஏன் தொந்தரவு செய்கின்றீர் என்று அவருக்கு சாதகமாக பேசுபவர்களாக, சிலர் நடப்பது அனைத்தையும் பார்த்து மலைத்து போனவர்களாக, சிலர் இதைக் காணாத மக்களுக்கு நடந்ததை விளக்கிச்சொல்ல முயல்பவர்களாக இருக்கின்றனர்.
இயக்கமோ பயணமோ ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வது மட்டுமல்ல. ஒரு குறிக்கோளோடும் தெளிவான முடிவோடும் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளையும் நம்பிக்கையோடு எடுத்து வைப்பதே முழுமையான பயணம் அல்லது இயக்கமாகும்.
யாயீரின் பயணத்தில் தன் மகள் நலம் பெற வேண்டும் இயேசுவை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து தன் மகளை தொட வைத்து நலம் பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோளும் ஆசையும் இருந்தது. நம்பிக்கையோடு தன் அடியை எடுத்து வைத்தார் வெற்றி பெற்றார்.
யாயீரின் மகள் இயேசு தன்னை தொட்டு விட்டார் தன் உடல் பலவீனத்தை மாற்றி விட்டார் என்று அறிந்ததும் எழ முயற்சித்தவள் நடக்க ஆரம்பிக்கிறாள். தனது பயணத்தை அப்பொழுதே தொடங்கிவிடுகிறாள். முயற்சிக்கிறாள் வெற்றி பெறுகிறாள்.
இரத்தப் போக்குடைய பெண் தன் வீட்டை விட்டு , தனது மருத்துவ சூழல்களை விட்டு வெளியே வருகிறாள். இயேசு இருக்கும் திசையை நோக்கி பயணிக்கிறாள் நலம் பெற்று மகிழ்வுடன் திரும்புகிறாள்.
மக்கள் கூட்டம் இலக்கற்ற பயணம் மேற்கொண்டவர்கள் எனவே வியப்பையும் ஆதங்கத்தையும் மட்டுமே பெற்றவர்களாக இல்லம் திரும்புகின்றனர்.
நமது பயணம் யாருடைய பயணத்தைப் போல இருக்கிறது எந்த திசையை நோக்கியதாக இருக்கிறது என்று சிந்திப்போம். வில்லிலிருந்து பாயும் அம்பு இலக்கின்றி பயணித்தால் திசை மாறி காணாமலேயே போய்விடும். நமது அன்றாட வாழ்வும் அப்படித்தான் ஒவ்வொரு நாளும் ஒரு பயணம் இலக்கு தெளிவாக இருந்தால் பாதை தெளிவானதாக அமையும் பயணமும் இனிதாக அமையும். எனவே தெளிவான இலக்கோடும் பயணத்தை தொடர இறைவனின் ஆசீர் வேண்டுவோம் இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு

நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு.........!

மனதில் உறுதி வேண்டும்.

வாக்கினிலே இனிமை வேண்டும்,

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,

கனவு மெய்ப்பட வேண்டும்.....!

என்ற மகாகவி பாரதியின் சிந்திக்கத் தக்க வரிகளை நம் மனதில் இருத்தி, இந்த வார மறையுரை சிந்தனைக்குள் நுழைவோம். சென்ற இடமெல்லாம் நம்மையே செய்த இயேசுவை நோக்கி, மக்கள் கூட்டம் அலை அலையாய் பின்தொடர்ந்தனர். ஏனென்றால் நோய்வாய்ப்பட்டவர்களையும், தீய சக்தியால் ஆட்கொள்ளப்பட்டவர்களையும் இயேசு தொட்டு குணமாக்கினார். இப்படியெல்லாம் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட மக்கள், இயேசு செய்த புதுமையை பார்த்த மக்கள் அவரை பின்பற்றினர். சிலர் தங்களை குணமாக்க வேண்டுமென்று பின்தொடர்ந்தனர், சிலர் இயேசுவின் இரசிகர்களாக பின்தொடர்ந்தனர். இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு, இரண்டு விதமான கதாப்பாத்திரங்களை நமக்கு அறிமுகம் செய்கின்றார்.

*தொழுகைக் கூடத் தலைவர் யாயீர்,

*இரத்தப் போக்குடைய பெண்.

இவர்கள் வழியாக இயேசு நமக்கு உரைக்கும் செய்தி இதுதான், எழுந்திரு .... ! எழுந்து நட......! பழையனவற்றை களைந்து, புதியனவற்றை அணிந்து கொள், தீய வழியிலிருந்து விலகி, நல்வழியில் பயணம் செய், எதிர்மறை எண்ணங்களை களைந்து, நல்ல எண்ணங்களால் மனதை அணி செய் என்கிறார்.

தொழுகைக் கூடத் தலைவர் யாயீர் :

தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயீர் எனபவரின் மகள் உடல் நலக்குறைவால், சாகும் தருவாயில் இருக்கிறாள். தன் மகளின் கடைசி நிலையை கண்ட தந்தை யாயீர், மனமுடைந்து போகிறார். என்ன செய்வதென்று அறியாது...! ஏது செய்வதென்று புரியாது திகைக்கிறார். இயேசுவின் அற்புதங்களையும் புதுமைகளையும் பற்றிக் கேள்விப்பட்டு ,அவரை நாடி தேடிச் செல்கின்றார். இயேசு படகேறி கலிலேயக் கடலின் அக்கறையை அடைந்தாலும், மக்கள் கூட்டம் அவரை விடுவதாக இல்லை. இனிப்பைக் கண்டதும் எறும்புகள் வட்டமிடுவது போல, இயேசுவைக் கண்டதும் அவரை பின்தொடர்கின்றனர். இந்நிலையில் தான், இன்றைய கதாநாயகர் யாயீரும் இயேசுவை சந்திக்கின்றார். நீண்ட தூரம் பயணம் செய்து வந்த களைப்பு இருந்தாலும், இயேசுவைக் கண்ட மகிழ்ச்சியில் அவரின் காலில் விழுந்து " அய்யா என் மகள் சாகும் தருவாயில் இருக்கிறாள், அவள் மீது உம் கைகளை வையும் அவள் பிழைத்துக்கொள்வாள்" என்றார். இயேசுவும் அவரின் வீட்டிற்குச் சென்றார். ஆனால் அதற்கு முன்பே சிறுமி இறந்துவிட்டதாள் என்ற செய்தி யாயீரின் செவிக்கு எட்டியது. இன்னும் போதகரை ஏன் தொந்தரவு செய்கின்றீர்...? வந்த வழியைப் பார்த்து போதகரை அனுப்பிவிடும் என்று பலரும் பல கருத்துக்ளை கூறுகின்றார்கள். சிறுமி இனி உயிருடன் வரபோவதில்லை,அவள் இறந்துவிட்டாள். இனி நடக்க வேண்டிய வேலையைப் பார்க்க வேண்டியதுதான் என்று அவ்வூர் மக்கள் பல கருத்துக்களையும், யோசனைகளையும் கூறுகின்றனர். ஆனால் யாயீரோ யார் சொல்லையும் தன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

" நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,

கனவு மெய்ப்பட வேண்டும்"

என்று பாரதியின் வார்த்தையை அன்றே உள்வாங்கியது போல, மனதில் உறுதி கொண்டு எழுந்தார்.... இயேசுவோடு நடந்தார்... அவர் விரும்பியது போல , நம்பியது போல, இறந்த அந்த சிறுமியின் அருகில் இயேசு சென்றார், சிறுமியின் கையைப் பிடித்து, " சிறுமியே நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு...! " என்றார். சிறுமியும் மீண்டும் உயிர் பெற்று எழுந்து நடந்தாள்.

நமது அன்றாட வாழ்க்கையில் வந்து செல்லும் இன்ப , துன்ப நிகழ்வுகள், பல்வேறு பிரச்சனைகள், மன அழுத்தங்கள், போராட்டங்கள், மற்றவர்களின் ஏளனப் பேச்சுக்கள், தனிமைப் போராட்டங்கள், அன்புறவுகளை இழந்த பிரிவுகள் இப்படிப்பட்ட பிரச்சனைகளில் மூழ்கி தவிக்கும் நம்மைப் பார்த்து இயேசு கூறுகின்றார்" மகளே உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு..... ! எழுந்து என்னோடு நட...." என்று. அதனால் நாமும் எல்லா போராட்டங்களையும் , பிரச்சனைகளையும் உதறித்தள்ளி விட்டு ,இயேசுவோடு நடப்போம்.
இரத்தப்போக்குடையப் பெண் :

பன்னிரெண்டு ஆண்டுகளாய் கடும் இரத்தப்போக்கால் துயரவாழ்வு வாழ்ந்து வந்த ஒரு பெண்ணின் நிலை வர வர மிகவும் மோசமாகிக்கொண்டே போனது. யூத மண்ணில் அன்று நிலவிய பொதுச்சட்டத்தின் படி, மாதவிலக்கு ஒரு நோய்க்கூறாகி அவதிப்படும் பெண்கள், பொது இடங்களுக்கு வரக்கூடாது. அப்படியே வர நேர்ந்தாலும் யாரையும் தொடக்கூடாது. இத்தனை கொடுமைகளையும் பன்னிரெண்டு ஆண்டுகளாய் சகித்துக் கொண்டிருந்த அந்தப் பெண், இயேசு அப்பக்கமாய் கடந்து செல்கிறார் என்பதை கேள்விப்பட்டதும், எல்லா சட்டங்களையும், தடைகளையும் உடைத்தெறிந்து, விருட்சமாய் எழுந்து, விரைந்து செல்கிறாள் இயேசுவை நோக்கி.... !

" காலில் விலங்கிட்டால் பெண்ணே!

நீ கையில் எழுந்து நடந்திடு....!

உன் வாழ்க்கை முந்தது என்று !

சவமாய் வாழாதே...!

என்று பாரதி கண்ட புதுமைப் பெண்யைப் போல், தீட்டு என்ற அவமானத்தைத் தாண்டி, நீ ஒரு பெண் வெளியே செல்லக் கூடாது என்ற தடையைத் தாண்டி, தனது உடலின் வலியையும், சோர்வையும் தாண்டி, யாரையும் தொடக்கூடாது என்ற அவமானத்தைத் தாண்டி, வீறு கொண்டு எழுந்து.... மெல்ல மெல்ல நடந்து, இயேசுவின் அருகில் சென்று அவர் ஆடையை தொடுகிறாள். இயேசுவைத் தொட்டவுடனே அவளின் நோய் அவளை விட்டு நீங்கிற்று. இயேசு கனிவுடன் மகளே! என அழைத்து உன் நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று என்றாள். அந்த பெண்ணிற்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்..?

நாம் பார்த்த இந்த இரண்டு நிகழ்விலும், இயேசு இரண்டு பெண்களை குணமாக்குகின்றார். முதலில் பன்னிரெண்டு வயது சிறுமியை குணமாக்குகிறார். அடுத்து பன்னிரெண்டு ஆண்டுகளாய் துயருற்ற ஒரு பெண்ணை குணமாக்குகின்றார். இந்த இரண்டு குணமாக்குதலுக்கும் முன்பும், பலவிதமான பிரச்சனைகள், போராட்டங்கள், பலரின் எதிமறைத் தாக்கங்கள், வலிகள், என அத்தனை தடைகளையும் உடைத்து, மனஉறுதியோடும், நம்பிக்கையோடும் மீண்டும் எழுந்து... இயேசுவின் அருகில் சென்றதால் நலம் பெற்றனர். இயேவை தொட்டவர்களும் நலம் பெற்றனர், இயேசுவால் தொடப்பட்டவர்களும் நலம் பெற்றனர்.

ஆகவே அன்புள்ளங்களே ! நமக்கு ஏற்படுகின்ற அன்றாட தொல்லைகளிலிருந்து, பிரச்சனைகளிலிருந்து, மனச்சோர்விலிருந்து, மனஅழுத்தங்களிலிருந்து மேலே எழுந்து, இயேசுவின் அருகில் செல்வோம். இயேசு நம் மனக் குணமாக்குவார். ஆகவே அவர் கரத்தை பிடித்துக்கொண்டு நமது பயணத்தை தொடர்வோம். இறைவனின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும், நம் சொந்தங்களோடும் இருந்து வழிநடத்துவதாக ஆமென். 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
சாலமோனின் ஞானம் 1:1315; 2:2324
2 கொரிந்தியர் 8:7, 9, 1315
 மாற்கு 5:2143

இருவகை வாழ்க்கை

மனித குலம் தோன்றியது முதல் நாம் விடை தேடுகின்ற கேள்விகளில் ஒன்று, 'தீமை எங்கிருந்து வந்தது?' கடவுள் அனைத்தையும் நல்லதெனக் கண்டார் எனில், தீமை எப்படி வந்தது? கடவுள் நல்லவர் என்றால், அவர் தீமையை ஏன் அனுமதிக்கிறார்? தீமை இந்த உலகில் இருக்கிறது என்றால் கடவுள் வலிமை அற்றவரா? - இப்படி நிறைய மெய்யியல் கேள்விகளை மனுக்குலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தீமைகளில் கொடிய தீமையாகக் கருதப்படுவது இறப்பு.

இறப்பை யாருக்கும் பிடிப்பதில்லை. பிறப்பு நமக்குப் பிடிப்பது போல இறப்பு பிடிப்பதில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்வது போல, 'நீ இறந்தவுடன் விண்ணகத்திற்குச் செல்வாய்' என்று ஒருவரிடம் சொன்னாலும்கூட, அவருக்கு இறப்பதற்குப் பிடிப்பதில்லை. இந்த உலகை விட மறுவுலகம் நன்றாக இருக்கும் என்ற உறுதியைத் தந்தால்கூட இறப்பை யாரும் விரும்புவதில்லை. இந்த இறப்பு எப்படி வந்தது? என்ற கேள்விக்கு நிறைய இலக்கியங்களும் சமயங்களும் தத்தம் முறைகளில் விடை காண முயற்சி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, கில்கமேஷ் என்ற சுமேரிய அக்காடிய இலக்கியத்தில், 'கடவுள் உலகைப் படைத்தபோதே இறவாமையைத் தனக்கென வைத்துக்கொண்டு இறப்பை நமக்குத் தந்துவிட்டார். ஆக, குறுகிய இந்த வாழ்க்கையில், நன்றாகக் குளி, நல்ல ஆடை அணி, நறுமணத் தைலம் பூசு, காதல் மனையாளைத் தழுவிக்கொள், அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளைப் பேணி வளர். அதுவே இறவாமை' என்று இறவாமைக்கு புதிய பொருள் தரப்படுகின்றது.

இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற சாலமோனின் ஞானநூல் இறப்பு எப்படி வந்தது என்பதற்கான விடையைச் சொல்லும் பகுதியே இன்றைய முதல் வாசகம். கிறிஸ்து பிறப்பதற்கு மிகவும் சில மாதங்களுக்கு முன்பு வடிவம் பெற்ற நூல் இது. கிரேக்கமயமாக்கலின் பின்புலத்தில் எழுதப்பட்ட நூல் மனித இறப்பு பற்றி பேசுகின்றது. நூலின் ஆசிரியர் இறப்பு எப்படி வந்தது என்பதை மிக எளிமையாகப் பதிவு செய்கின்றார்: 'சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. அழிவில் அவர் மகிழ்வதில்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். அலகையின் பொறாமையால் சாவு உலகில் வந்தது.' அதாவது, படைப்பின் தொடக்கத்தில் ஆதாம்-ஏவாள் பாம்பால் சோதிக்கப்பட்ட நிகழ்வை, அலகையின் பொறாமை என்று மொழிகின்றார் ஆசிரியர். அலகை இருக்கிறதா? என்ற அடுத்த கேள்விக்கு நாம் சென்றுவிட வேண்டாம். மாறாக, அனைத்தும், அனைவரும் வாழ வேண்டும் என விரும்புகின்றார்.

நாம் அனைவரும் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். இருந்தாலும், நாம் வாழும் இந்த உலகில் வாழ்வை அழிக்கக் கூடிய முதல் காரணியாக அன்று இருந்தது நோய். இன்றும், நோய்தான் முதன்மையான காரணி. அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நாம் முன்னேறினாலும் இன்று நோய்தான் வெல்ல முடியாத எதிரியாக நம் முன் உள்ளது.

இரு வகை நோய்களால் துன்பப்பட்டவர்கள் எப்படி இயேசுவால் நலம் பெற்றார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். இரத்தப் போக்குடைய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன் நலம் பெறுகின்றார். தொழுகைக் கூடத் தலைவரின் மகள் இயேசு தொட்டவுடன் உயிர் பெறுகின்றார். இரண்டு நிகழ்வுகள் ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டது பற்றி நிறையக் கருத்துகள் உள்ளன. இரண்டு நிகழ்வுகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை. பெண் 12 ஆண்டுகள் நோயினால் வருந்துகிறார். இளவலுக்கு வயது 12. இரத்தம் உயிர் சார்ந்தது. இளவல் உயிர் துறக்கின்றார். இரண்டு இடங்களிலும் கூட்டம் தடையாக இருக்கின்றது. இரண்டு நிகழ்வுகளிலும் நம்பிக்கை வலியுறுத்தப்படுகின்றது. இளவல் இறப்பதற்கான தளத்தை பெண் நிகழ்வு ஏற்படுத்திக்கொடுக்கிறது. தொழுகைக்கூடத் தலைவரின் அவசரத்தைக் குறைப்பதற்காக நிகழ்வு நடக்கிறது. கூட்டம், பெண், இயேசுவின் உரையாடல் என அனைத்தும் இளவல் உயிர் பெறுவாரா? என்ற கேள்வியை வாசகரில் எழுப்புகிறது.
நம் வாழ்க்கையில் துன்பம் உண்டு என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம். நோய், முதுமை, இறப்பு போன்ற உடலியல் துன்பங்களாக இருக்கலாம். அல்லது சோர்வு, தயக்கம், பயம், குற்றவுணர்வு, வெறுமை, தனிமை போன்ற உளவியல் துன்பங்களாக இருக்கலாம். அல்லது பாவம், உடனடி இன்பம் போன்ற ஆன்மிகத் துன்பங்களாக இருக்கலாம். துன்பங்களை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், துன்பங்களை நாம் இரண்டு முறைகளில் எதிர்கொள்ளலாம். அல்லது துன்பம் நிறைந்த இவ்வாழ்க்கையை நாம் இரண்டு முறைகளில் வாழலாம்.

ஒன்று, இரத்தப் போக்குடைய பெண் வாழ்ந்தது போல.
இரண்டு, தொழுகைக் கூடத் தலைவர் வாழ்ந்தது போல.

முதலில், இரத்தப் போக்குடைய பெண் போல எப்படி வாழ்வது?
நிகழ்வில் வரும் இந்தப் பெண் மூன்று நிலைகளில் துன்பம் அனுபவிக்கின்றார்: உடல்சார் துன்பம். உயிர் குடியிருக்கிறது என்று மக்கள் நம்பிய இரத்தம் அன்றாடம் வெளியேறிக்கொண்டிருக்க, இந்தப் பெண் வெளிறிப் போயிருப்பாள். இரண்டாவது, பொருள்சார் துன்பம். மருத்துவரிடம் தன் பணத்தை எல்லாம் செலவிட்டதாக நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். ஆன்மிகம்சார் துன்பம். உடலில் ஒழுக்கு இருப்பது தீட்டு எனக் கருதப்பட்ட நிலையில் இந்தப் பெண் கடவுளிடமிருந்து தான் அந்நியப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்திருப்பார். உடல் வலி பொறுக்காமல், கையில் காசு இல்லாமல், கடவுளால் கைவிடப்பட்ட உணர்வில், தனக்கிருந்த இறுதி வாய்ப்பாக இயேசுவின் மேலாடையைப் பார்த்தார். தன் இயலாமையில், தன் இல்லாமையில் இயேசுவால் எல்லாம் இயலும் என்றும், அவர் வழியாகவே தன் இருத்தல் சாத்தியம் என்றும் உணர்ந்த அவர் கூட்டத்தை ஊடுருவுகின்றார். கூட்டம் இங்கே ஒரே நேரத்தில் தடையாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது. கூட்ட மிகுதியால் இயேசுவை நெருங்க முடியவில்லை. அதே வேளையில் கூட்டம் இருந்ததால் தன் முகத்தை இயேசுவிடமிருந்து மறைத்துக்கொள்ளவும் இவரால் முடிந்தது. இயேசுவின் மேலாடையைத் தொட்ட அந்த நொடியில் தன் உடலில் மாற்றத்தை உணர்கின்றார் பெண். என்னே ஒரு ஞானம்! தன் உடலின் இயக்கத்தைத் தெளிவாக உணர்ந்தவராக இருக்கிறார். உடல் நலம் பெற்ற மகிழ்ச்சி சற்று நேரத்தில் களைகிறது. 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்வி இவளுடைய காதுகளில் விழுகிறது. இவ்வளவு நேரம் தன் உடல் போராட்டத்தை மட்டுமே எதிர்கொண்ட அவள், இப்போது, 'மக்கள் என்ன நினைப்பார்கள்?' என்ற உள்ளப் போராட்டம் அனுபவிக்கின்றாள். இருந்தாலும், இயேசுவிடம் சரணடைகின்றார். தனக்கு நடந்தது அனைத்தையும் சொல்கின்றார். 'மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று' என அனுப்புகிறார் இயேசு.

இந்தப் பெண், தன் பார்வையை இயேசுவின்மேல் பதிய வைத்தாள். தனக்கு முன் இருந்த கூட்டம் என்ற தடையை வாய்ப்பு எனப் பயன்படுத்தினார். இயேசுவிடம் சரணாகதி அடைந்தார். இயேசுவின் மேலாடைக்கும் நலமாக்கும் ஆற்றல் உண்டு என உணர்ந்தார். பாதியில் வந்தார். பாதியில் சென்றார். நலமற்று வந்தவர், உடலிலும் உள்ளத்திலும் நலம் பெற்றுச் செல்கின்றார்.

இரண்டாவதாக, தொழுகைக்கூடத் தலைவர் போல எப்படி வாழ்வது?
இயேசுவின் தொடுதல்தான் தன் மகளுக்கு நலம் தரும் என நம்புகிறார் தலைவர். இயேசு உடனடியாக அவருடன் செல்வது நமக்கு ஆச்சர்யம் தருகிறது. ஆனால், வேகம் உடனடியாகக் குறைகிறது. கூட்டம் ஒரு தடையாக மாறுகிறது. பாதியில் வந்து நலம் பெற்ற பெண் தடையாக இருக்கிறார். ஆனாலும், அந்த நிகழ்வைக் கண்டவுடன் தலைவரின் நம்பிக்கை உறுதியாகியிருக்கும். ஆனால், சற்று நேரத்தில் வந்த மகளின் இறப்புச் செய்தி அவருக்குப் பயம் தருகிறது. 'அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!' என அவருக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. வீட்டில் இருந்த கூட்டம் இன்னொரு தடை. அவர்கள் பேசிய கேலிப்பேச்சு மற்றுமொரு தடை. தடைகளைத் தாண்டிச் சென்றவர் தன் மகளை நலமுடன் பெற்றுக்கொள்கின்றார்.

இந்த நிகழ்வில், நம்பிக்கையில் இவர் நிலைத்து நிற்க கடவுளின் துணை தேவைப்படுகிறது. ஆனால், முதல் நிகழ்வில், நம்பிக்கையால் உந்தப்பட்டு அந்தப் பெண் வருகின்றார். அங்கே, நம்பிக்கை பாராட்டப்படுகிறது. தலைவர் நிகழ்வில் நம்பிக்கை அறிவுறுத்தப்படுகின்றது.
ஆக, இரத்தப் போக்குடைய பெண் போல நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வது முதல் வகை.
தலைவர் போல கடவுள் நமக்கு நம்பிக்கை தந்தால்தான் அவருடன் பயணிப்பது இரண்டாவது வகை.

இன்னொரு வகையான வாழ்க்கை முறையும் இருக்கிறது. கூட்டத்தின் மனநிலை. இயேசுவின் உடனிருப்பும் நம்பிக்கை நிறைந்த சொற்களும் அவர்களுக்குக் கேலியாக இருக்கின்றன. வாழ்க்கையின் துன்பத்தைக் கண்டே பழகிப் போனவர்கள் விரக்தியாகச் சிரிக்கிறார்கள்.

இவர்களுக்கு வேலைக்காரர்கள் பரவாயில்லை. 'உம் மகள் இறந்துவிட்டாள். போதகரைத் தொந்தரவு செய்யாதீர்!' என எதார்த்தமாகச் சொல்கின்றனர். 'பால் கொட்டிவிட்டது! இனி அழுது புலம்பி என்ன செய்ய?' என்பது அவர்களுடைய மனநிலை. பல நேரங்களில் இதுதான் நம் மனநிலையாகவும் இருக்கிறது.

ஆக, பெண், தொழுகைக்கூடத் தலைவர், கூட்டம், வேலைக்காரர்கள் என நாம் நம் வாழ்க்கையை நான்கு நிலைகளில் எதிர்கொண்டாலும், நம்பிக்கையின் பாடங்களைக் கற்பிப்பவர்கள் பெண்ணும் தலைவரும். பெண் கொண்டிருந்த நம்பிக்கை போல நம் நம்பிக்கை இருந்தாலும், அங்கே சில சஞ்சலங்கள் எழவே செய்கின்றனர். இறைவனின் உடனிருப்பால் அதைத் தக்கவைக்கின்றார் தலைவர்.
நம்பிக்கை என்பது கொடை. கடவுள் கொடுத்தாலன்றி அதை எவரும் பெற்றுக்கொள்ள இயலாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளின் உடனிருப்பு மேலோங்கி நிற்கிறது. நாம் நோயுற்றாலும் இருந்தாலும் நாம் தொடும் தூரத்தில் கடவுள் இருக்கிறார், கடவுளின் மேலாடை இருக்கிறது.
இதுவே இயேசு கிறிஸ்துவின் அருள்செயல் என்று கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்றார் பவுல்: 'அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்!'

இறுதியாக,
தீமை கண்டும், சாவு கண்டும், நோய் கண்டும் நாம் அஞ்சத் தேவையில்லை. இவை நம்மோடு இருந்தாலும், நமக்கு அருகில் இறைவன் இருக்கின்றார். கையை நீட்டி அவரைத் தொட்டாலோ, அவர் தன் கையை நீட்டி நம்மைத் தொட்டாலும் நாம் நலம் பெறுவோம்!
இதையே திருப்பாடல் ஆசிரியர் (காண். 30), 'நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்!' என்று பாடுகின்றார்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

I சாலமோனின் ஞானம் 1: 13-15; 2: 23-24
II 2 கொரிந்தியர் 8: 9, 13-15
III மாற்கு 5: 21-43

"நம்பிக்கையை மட்டும் விடாதீர்"

நிகழ்வு

எதிர்பாராத திருப்பங்களுடன் முடியும் கதைகளை எழுதுவதில் வல்லவரான ஓ. ஹென்றியின் பிரபலமான சிறுகதைகளில் ஒன்று "கடைசி இலை" (Last Leaf). 1907 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தச் சிறுகதை மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தச் சிறுகதையில் வரும் கதாநாயகன் உடல் நலம்குன்றி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பான். மருத்துவமனையில் இவனுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்படும்; ஆனாலும் இவன் "இன்னும் ஒருசில நாள்களில் நான் இறந்துவிடுவேன்!" என்ற அவ ம்பிக்கையோடு இருப்பான். இதனால் இவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனில்லாமல் போகும்.

இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய செவிலிப்பெண் ஒருவர் இவனிடம், நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைச் சொல்லி, "நீ விரைவில் நலமடைவாய்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் இவன் படுத்திருந்த படுக்கைக்கு அருகிலிருந்த சன்னல் வழியாக இவன் வெளியே பார்த்தபொழுது, ஒரு செடி இருக்கக் கண்டான். நன்றாக இருந்த அந்தச்செடி ஏனோ திடீரெனப் பட்டுப்போய், ஓர் இலையைத் தவிர்த்து மற்ற எல்லா இலைகளும் அதிலிருந்து உதிர்ந்தன. இதை இவன் தன்னிடம் அடிக்கடி பேசவரும் செவிலிப்பெண்ணிடம் சுட்டிக்காட்டி, "இந்தச் செடியைப் போன்றவன்தான் நான். இச்செடியில் ஓர் இலையைத் தவிர்த்து, மற்ற எல்லா இலைகளும் உதிர்ந்துவிட்டன. நாளைக்கு, எஞ்சியிருக்கும் இந்த இலையும் உதிர்ந்துவிடும். இந்த இலையைப் போன்று நானும் உதிர்ந்துவிடுவேன்" என்றான்.

இதைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த செவிலிப்பெண், "அப்படியெல்லாம் இந்த இலை உதிராது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் இவன் சன்னல்வழியாகச் செடியைப் பார்த்தபொழுது, அந்த செடியில் இருந்த எஞ்சிய இல்லை உதிராமல் அடிப்படியே இருந்தது. இவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. "இந்த இலையைப் போன்று நானும் உயிரோடு இருப்பேன்" என்று இவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். இதற்குப் பிறகு இவன் தனக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையை நம்பிக்கையோடு பெற்று, விரையில் நலமடைந்தான். மருத்துவமனையில் இவனுக்குச் சிகிச்சை முடிந்ததும், இவனிடம் அடிக்கடி பேசிவந்த செவிலிப்பெண் இவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபோனார். போகும்வழியில் செடியில் உதிராமலிருந்த இலைக்கு அருகில் இவனைக் கொண்டுசென்று, அதை உற்றுப்பார்க்கச் சொன்னார். இவன் அதை உற்றுப்பார்த்தபொழுதுதான் தெரிந்தது, அது உண்மையான இலை அல்ல, துணியால் செய்யப்பட்ட இல்லை என்று. அப்பொழுது செவிலிப்பெண் இவனிடம், "உனக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காகவே, நான் ஓர் ஓவியரைக் கொண்டு துணியால் இந்த இலையை செய்து பொருத்தினேன்" என்றார்.

ஆம், நமக்கு நம்பிக்கை இருந்தால், உயிரோடு பல ஆண்டுகள் வாழலாம். அதைத்தான் இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

நம்பிக்கையினால் நலம்பெற்ற இருவர்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இருவருக்கு நலமளிக்கின்றார் அல்லது ஒருவரை நலமாக்கி இன்னொருவரை உயிர்த்தெழச் செய்கின்றார். ஒருவர் இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி; இன்னொருவர் தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகள்.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கின்றன. முதலாவதாக, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தொடுதலாலேயே வல்ல செயல் நடக்கின்றது. இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, "நான் ஆண்டவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று தொட்டு நலம்பெறுகின்றார். தொழுகைக்கூடத் தலைவரான யாயிர் இயேசுவிடம், "நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்கிறார். இயேசுவும் அவருடைய மகளை கைகளைப் பிடித்துத் தொட்டு உயிர்த்தெழச் செய்கின்றார். இரண்டாவதாக, இரண்டு நிகழ்வுகளிலும் பன்னிரண்டு என்ற எண்ணானது இடம்பெறுகின்றது. இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி பன்னிரண்டு ஆண்டுகளாய்த் துன்புறுகின்றார். யாயிரின் மகளுக்குப் பன்னிரண்டு வயது. மூன்றாவதாக, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இடம்பெறுகின்றவர்களும் நம்பிக்கையாலேயே நலம் பெறுகின்றார்கள். நான் இயேசுவின் ஆடையைத் தொட்டால் போதும், நலம் பெறுவேன் என்று இரத்தப்போக்கினால் பதிக்கப்பட்ட பெண்மணி நம்பிக்கையோடு தொட்டு நலம்பெறுகின்றார். யாயிரோ இயேசுவின்மீது இறுதிவரை நம்பிக்கையோடு இருந்து, இறந்த தன் மகளை உயிரோடு பெறுகின்றார்.

இவ்வாறு நாம் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழும்பொழுது நலமான வாழ்வினைப் பெறுவோம் என்பதை நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

அழியாமைக்கென்றே கடவுள் மனிதர்களைப் படைத்தார் என்பதை நம்புவோம்

ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் இவ்வுலகில் போர்களும் இயற்கைப் பேரிடர்களும் ஏற்படும்பொழுது, கடவுள் மனிதர்களை அழிப்பதற்காகவே இவற்றையெல்லாம் அனுப்புகின்றார் என்று சொல்வார்கள். நாமும் இக்கூற்றைப் பலமுறை சொல்லியிருக்கலாம். உண்மை அதுவல்ல,

சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம் மேலே உள்ள கூற்றிற்குப் பதில் தருவதாக இருக்கின்றது. ஆம், "இருக்கவேண்டும் என்பதற்காகவே கடவுள் அனைத்தையும் படைத்தார்". மேலும் "கடவுள் மனிதர்களை அழியாமைக்கேன்றே படைத்தார்". அப்படியானால், இவ்வுலகில் சாவும் அழிவும் நேரிடுகின்றன என்றால், அவை மனிதன் செய்த பாவத்தின் விளைவே ஆகும். எனவே, கடவுளின் ஒரே மகனாம் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அழியாமல் நிலைவாழ்வு பெறுவோம் (யோவா 3: 16).

நம்பிக்கை என்பது சொல்லல்ல, செயல்

ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டால் நலமான வாழ்வு கிடைக்கும்; அழியாமைக்கென்றே கடவுள் மனிதரைப் படைத்திருக்கின்றார் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் நிலைவாழ்வைப் பெறுவோம் என்பன குறித்து மேலே நாம் சிந்திப்போம். இப்பொழுது நம்பிக்கையின் அடுத்த பரிமாணத்தைக் குறித்துப் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவதைப் பற்றி சிந்திப்போம்.

இன்றைய இரண்டாம்வாசகத்தில் புனித பவுல் கொரிந்து நகர் மக்களிடம் நம்பிக்கை, நாவன்மை ஆகியவற்றை மிகுதியாகக் கொண்டிருக்கும் நீங்கள், "அறப்பணியிலும் முழுமையாய் ஈடுபட வேண்டும்" என்கிறார். புனித பவுலின் இவ்வார்த்தைகளை புனித யாக்கோபின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், "நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலேயே அது உயிரற்றது" (யாக் 2: 17) என்று சொல்லலாம். கொரிந்து நகர் மக்கள் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவையில் உள்ள அல்லது வறியநிலையில் உள்ள மக்களுக்கு அறப்பணிகளைச் செய்து, அவர்களது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கச் சொல்கின்றார் புனித பவுல். இதற்கு அவர், செல்வராயிருந்தும் நமக்காக ஏழையான இயேசுவை (பிலி 2: 5-8) எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். ஆகவே, நம்மை அழியாமைக்கென்று படைத்திருக்கும் ஆண்டவரில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

சிந்தனை

"நம்பிக்கையானது புதிய மற்றும் கற்பனை செய்யமுடியாத சாத்தியங்களைத் திறக்கிறது" என்பார் இராபர்ட் சி. சாலமோன் என்ற அறிஞர். எனவே, நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ