|
ஜெபத்தின்
முக்கியத்துவம்
அக்காலத்தில் இயேசு தம் சீடரை
நோக்கிக் கூறியது: கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்...........................மத்தேயூ7:
7-12
செபத்திற்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்தவர்கள் யூதர்கள். அனைத்திலும் முதன்மையானது செபம்
என்பது அவர்களின் எண்ணம். செபத்தைப்பற்றி யூதர்களுக்கு
ஏதாவது கவலை இருந்தததென்றால் அது நாள்முழுவதும் நம்மால்
செபிக்க முடியவில்லையே என்பதுதான். அந்த அளவுக்கு
செபத்திற்கு வாழ்வில் முக்கிய இடத்தை கொடுத்திருந்தார்கள்.
யூதர்களுடைய வாழ்வே செபத்தை மையப்படுத்தியதாகத் தான்
இருந்தது. இத்தகைய பின்புலத்தில் இயேசு செபிப்பதால்
கிடைக்கும் பலன்களை நமக்குச்சொல்கிறார். இறைவன் நம்
செபத்தைக் கேட்கிறாரா? நாம் கேட்பதை இறைவன்
நமக்குத்தருவாரா? இறைவன் எப்படிப்பட்டவர்? போன்ற
கேள்விகளுக்கு பதிலையயும் நாம் வாசித்த நற்செய்தியிலே
தருகிறார்.
செபம் இறைவனோடு பேசுவதற்கு மட்டுமல்ல, இறை ஆற்றலை நிறைய
பெற்றுக்கொள்வதற்கான பலமான ஆயூதம் என்பதை இயேசு ஆணித்தரமாக
வலியுறுத்துகிறார். இயேசு இங்கே தருகிற எடுத்துக்காட்டு
தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு அதாவது ஒரு மகன்
ஊதாரித்தனமாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.
வீட்டில் யார் பேச்சையும் கேட்காமல் தான்தோன்றித் தனமாக
திரிகிறான். தவறுகளுக்கு மேல் தவறு செய்கிறான். குற்றங்கள்
பல செய்கிறான். அப்படி ஒருவருடைய மகன் இருப்பதால் அந்த
தந்தை அவனை வெறுத்து விடுவாரா? ஒருவேளை அந்த மகனுக்கு
அடிபட்டு விட்டது அல்லது அவன் தவறு செய்தது தெரிந்து
காவல்துறை அழைத்துச்சென்று விட்டது அல்லது நோயுற்று
இருக்கிறான். அவனுடைய தந்தை சும்மா விட்டுவிடுவாரா? எப்படி
இருந்தாலும் தன் மகன் என்ற பாசம் அவரை உடனடியாக அவனுக்கு
உதவ உந்தித்தள்ளாதா? எப்படி இருந்தாலும் தன் இரத்தம்
என்கிற அந்த உணர்வு அவனைக் காப்பாற்றுவதற்கு முயற்சி
செய்யாமல் இருக்குமா? சாதாரண மனிதர்களுக்கே இந்த உணர்வு
என்றால் படைப்பின் சிகரமான மனிதனை தன் முழுமையான அன்பில்
தனது சாயலில் படைத்த இறைவனுக்கு நம்மீது எவ்வளவு
அன்பிருக்கும்? நாம் கேட்பதை தராமல் இருப்பாரா? நம்மை
தேவையில் இருக்க விட்டு விடுவாரா? என்பதுதான் இயேசுவின்
கேள்வி. இறைவன் நிச்சயம் நம்முடைய தேவைகளை அறிந்தவராக
இருக்கிறார். நாம் கேட்பதையெல்லாம் தந்தால் அவர் நல்ல
தந்தையாக இருக்க முடியாது. மாறாக நமக்குத் தேவையானதை
தருவார். அதுவும் நாம் விரும்புகிறபடியெல்லாம் அல்ல அவரது
திருவுளத்தின்படி. ஏனென்றால் அவர் முக்காலமும் அறிந்தவர்.
நம்முடைய தேவைகளை நிறைவாகத் தெரிந்தவர். எனவே கடவுள்
நிச்சயம் நமக்குத் தேவையானதை அவருடைய வழியில் தருவார்
என்கிற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
இறைவன் நம்மைப் படைத்தவர் மட்டுமல்ல பராமரித்து
பாதுகாக்கிறவரும் கூட. நமக்கு பார்த்து பார்த்து நல்லது
செய்கிறவர். நம்முடைய தேவை அறிந்து நமக்கு உதவி செய்கிறவர்.
இறைவனை நம்பிக்கையோடு அணுகுவதுதான் நம் கடமை. கடவுள்
அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதும்
அதுவே. கடவுளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அவரின்
பிள்ளைகளாகிற நம் அனைவரின் கடமையாகும். |
கரம் தூக்கி துதிப்பது
மட்டுமா ஜெபம் ?
கரம் பற்றி உதவுவதும் ஜெபம்
முணுமுணுத்து உரைப்பது மட்டுமா ஜெபம் ?
முன்னேற தூண்டுவதும் ஜெபம்
அமைதியில் பேசுவது மட்டுமா ஜெபம் ?
அன்பொழுக பேசுவதும் ஜெபம்
கண்ணை மூடி தியானிப்பது மட்டுமா ஜெபம் ?
கண்ணில் படும் நண்பர் நலம் நாடுவதும் ஜெபம்
பக்கம் பக்கமாக படிப்பது மட்டுமா ஜெபம் ?
பக்கத்தில் இருப்பவரை நேசிப்பதும் ஜெபம்
தினமும் ஜெபமாலை சொல்வது மட்டுமா ஜெபம் ?
பிறரை ஜெபமாலை சொல்ல வைப்பதும் ஜெபம்
மனம் ஒன்றித்து எழுப்புதல் மட்டுமா ஜெபம் ?
மனம் கோணாமல் தாழ்ந்து போவதும் ஜெபம்
சிற்றாலயத்தில் ஆண்டவரோடு உரையாடுவது மட்டுமா ஜெபம் ?
சின்ன சின்ன நற்செயல்களால் ஆண்டவரை மகிழ வைப்பதும் ஜெபம்
தியானத்தில் நாளெல்லாம் அமர்ந்திருப்பது மட்டுமா ஜெபம் ?
தியானத்திற்கு வரமறுப்பவரை அழைப்பதும் ஜெபம்
ஆலயத்தில் பக்தியோடு வேண்டுவது மட்டுமா ஜெபம் ?
ஆதரவற்றோர் வீட்டில் பரிவோடு உரையாடுவதும் ஜெபம்
ஜெபிப்பது மட்டுமல்ல... பங்கேற்பதும் ஜெபம்.....
ஜெபிப்போம், ஜெயம் பெறுவோம். |
ஜெபத்தைப்பற்றிய
பொன்மொழிகள்
1. உதட்டின் முனையிலிருந்து வருவது
ஜெபமல்ல,உள்ளத்தின்அடியிலிருந்து வருவதே ஜெபம்.
2. ஜெபம் நிலைமைகளை மாற்றுகிறது. தேவன் மனிதரை மாற்றுகிறார்.
3. ஜெபமாகிய கோல், துன்பமென்னும் கற்பாறையினின்று
ஆசிர்வாதமென்னும் நீருற்றைப் புறப்படச் செய்கிறது.
4. கல்வாரி சிலுவையையூம், முழங்காலில் நிற்கும் ஒரு பக்தனையூம்
கண்டு, சாத்தான் அஞ்சி நடுங்குகிறான்.
5. ஜெபத்துக்கு அந்நியன், ஜெயத்துக்கும் அந்நியன்.
6. ஜெபத்தின் இரகசியம், ஜெயத்தின் இரகசியம்.
7. ஜெபத்தின் இரகசியமென்றால் ---- இரகசியத்தில் ஜெபம் என்பதே.
8. நிலத்தில் பாதமூன்றி நிற்பதற்கு முன் நாம் ஜெபத்தில்
முழங்காலுன்றி
நிற்க வேண்டும்.
9. தேவன் ஜெபத்தின் நிறையைப் பார்ப்பாரேயன்றி, எண்ணிக்கையில்
பாரார்.
10. குடும்ப ஜெபமில்லாத வீடு கூரையில்லாத வீட்டிற்க்கு சமம்.
11. ஜெபம் விசுவாசத்தை அறிக்கையிடுகிறது. கவலை விசுவாசத்தை
மறுதலிக்கிறது.
12. தேவனுடைய வார்த்தையை கேட்க மனமற்றவனின் ஜெபமும்
கேட்கப்படுவதில்லை.
13. ஜெபிப்பதினால் நாம் ஜெபிக்க கற்றுக் கொள்கிறௌம்.
14. அதிகம் ஜெபித்தால் அடிக்கடி ஜெயிப்போம்.
15. தாம் இஷ்டப்பட்ட நேரம் ஜெபித்தும், ஏனோதானோ என்று
ஜெபித்தும்,
ஒருவர் ஜெபத்தில் வல்லவராகலாம் என்று எண்ணுவது
தப்பிதம்.
16. சரீரத்துக்கு காற்றும், ஆத்துமாக்கு ஜெபமும்
இன்றியமையாதவைகளாகும். |
|