கிறிஸ்து அரசர் தம் அரசு இப்படி இருக்கிறது. நம் மனசு எப்படி இருக்கவேண்டும்.
என்ற ஒத்திகையை நடத்துகிறார் இந்த ஞாயிறு வழிபாட்டு விழாவில்.
தலைவர்களைத் தேடிச் செல்லும் மக்கள் நிறைந்த உலகம் இது! ஆனால் மக்களைத்
தேடி தலைவர் ஒருவர் வருகின்றார். நம்மைத் தேடி தலைவர் ஒருவர் வந்து
இன்றைய வழிபாட்டு விழாவிற்கு நம்மை வரவேற்கின்றார். கூடவே அவரது
அரசும் தன்னை இப்படி விளம்பரப்படுத்திக் கொள்கின்றது.
நீதியின் அரசு, நிம்மதியின் அரசு,
அன்பின் அரசு, அமைதியின் அரசு.
நன்மையின் அரசு, உண்மையின் அரசு,
கருணையின் அரசு, கனிவின் அரசு.
பரிவின் அரசு, பாசத்தின் அரசு.
பணிவின் அரசு, பணியின் அரசு.
தன்னலமில்லா அரசு, தயவு நிறைந்த அரசு.
ஏழையரை செல்வராக்கும் அரசு! எளியோரை நேசிக்கும் அரசு!
பாவியை மன்னிக்கும் அரசு பகைவரை ஏற்க்கும் அரசு.
மனித நேயத்தை மலர்ந்திடச் செய்யும் அரசு.
குடும்ப பாசத்தை ஓங்கிடச் செய்யும் அரசு.
ஒரே குடும்பமாய் மக்களை இணைக்கும் அரசு.
இந்த அரசின் தலைவர் தன்னையே வென்று உலகமக்களின் மனசுக்குள் நுழைந்தவர்.
இந்த அரசுக்குள் நுழைவோரின் மனசும் அப்படியே இருந்தால்
சிபாரிசின்றி மாபெரும் தலைவராக திகழலாம் என்ற விதிமுறை வகுக்கின்றார்.
மேன்மையான தரமான எண்ணம் கேட்டு மன்றாடுவோம். அப்போது தரணிவாழ் மக்கள்
நேசிக்கும் தலைவராய் அடையாளம் காணப்படுவோம். மேலே இருந்து கீழே இறங்கி
வந்து திருப்பலியில் மக்களின் மனசுக்குள் அப்பவடிவில் நுழையும்
கிறிஸ்தரசர் அருளைப் பெற்று நல்ல தலைவர்களாக வலம் வருவோம்.
1. ஆற்றலின் ஊற்றான இறையரசே, எம் இறைவா!
உமது மந்தையின் ஆடுகள் வாழ்வு பெறவும், அதை நிறைவாக பெறவும்
தம் உயிரையே கொடுக்கும் அளவிற்கு நீர் எங்களுக்கு தந்தருளிய
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும்
உமது இறையாட்சியின் பாதையில் இறைமக்களை வழிநடத்த, இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதி, நேர்மையின் அரசே எம் இறைவா!
எம் நாட்டுத் தலைவர்களும், ஏனைய நிறுவனத் தலைவர்களும்,
ஊர் தலைவர்களும் தன்னலம் நாடாது, பிறர் நலத்துடன் ஆட்சி
புரியவும, நாட்டின் அமைதிக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும்
தொண்டு புரிய தேவையான ஆற்றலைத் தந்தருள, ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
3. எல்லாம் வல்ல இறைவா!
உமது மீட்பின் பணியை உலகில் ஆற்றிவரும் குருக்கள், உமது
வருகைக்காக மக்களை தயாரித்து அவர்கள் உம்மோடு வான்
வீட்டில் வந்து சேர்வதற்கு தகுந்தவர்களாக உருவாக்கிட
வேண்டுமென்று, ஆண்;டவரே உம்மை மன்றாடுகிறோம்.
4. அரசும, வல்லமையும், மாட்சியும் என்றென்றைக்கும் உரிய
எம் இயேசுவே!
உமது அரசின் பெருவிழாவினைக் கொண்டாடும் நாங்கள் உமது
இறையாட்சியின் மக்களாக திகழவும், உமது மதிப்பீடுகளைப்
பின்பற்றி உமக்கு உகந்த பிள்ளைகளாய் வாழவும், எமது
பங்கில் உள்ள அனைத்து இளைஞர், இளம்பெண்கள் அவர்களது
தகுதிக்கேற்ற வேலையைத் தந்தருள, ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
5. நல்ல ஆயனாய் எம்மைத் தேடிவரும் இயேசுவே!
உமது மந்தையிலிருந்து விலகி போலிப் போதனையாலும்,
கவர்ச்சியான வார்த்தையாலும் பிற சபைகளை நோக்கி
சென்றுள்ள விசுவாசிகள், உண்மையை உணர்ந்து
திருச்சபையில் மீண்டும் வந்து சேரவும், நீர் உலகை
நடுத்தீர்க்க வரும் நாளில் நாங்கள் உமது இறையரசுக்கு
உரியவர்களாக திகழ்ந்திட எங்களுக்கு அடுத்திருப்பவர்களை
என்றும் அன்பு செய்து வாழ்ந்திடவும் அருள்புரியும்படி,
ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
வத்சலா பறந்தாலே எல்லோரும் சந்தோஷமடைவார்கள். அந்த வத்சலா ஒரு
சந்தோஷப் பறவை. அந்த நாட்டின் மன்னன் திடீரென்று இறந்து
போய்விட்டான். அப்போது எல்லோரும் வத்சலாவை எதிர்பார்த்தார்கள்.
காரணம் யாருடைய தலையின் மீது அது அமர்கிறதோ அவர்கள் தான் அந்த
நாட்டின் மன்னன். வத்சலா வழக்கம் போல பறந்து வந்தது. அப்போது
எல்லோரும் ஆவலோடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும்
தன் தலையின் மீது உட்காராதா? என ஏக்கத்தோடு காத்திருந்தார்கள்.
அந்த வத்சலாவோ ஆள் நடமாட்டமில்லாத காட்டில் ஒரு மனிதன் தன்னந்தனியாக
நின்று கொண்டிருந்தான் அவனது தலையில் போய் உடகார்ந்தது. மக்கள்
அவனை அழைத்து வந்து அவனுக்கு முடி சூட்டி அரசனாக்கினார்கள். அன்று
முதல் அந்த மனிதன் அரச கடமைகளை எல்லாம் மிக மகிழ்ச்சியாக சிறப்பாக
செய்தான். இருந்த போதிலும் வாரத்தில் இரண்டு நாட்கள் அவன் அரண்மனையை
விட்டுவிட்டு அருகில் உள்ள குடிசைக்குள் போய் அமர்ந்து விட்டு
வருவான்.
மக்கள் பலர் இதைக் கண்டு அந்தக் குடிசைக்குள் சென்று பார்த்தபோது,
அங்கே அவன் காட்டில் வசித்தபோது உடுத்தியிருந்த விலங்குத் தோலை
சுவரில் தொங்கவிட்டிருந்தான். அதன் அருகில் அமர்ந்து தனது
வேலையை மகிழ்ச்சியோடு செய்து கொண்டிருந்தான். மக்கள் அரசே அரண்மனையில்
அமர்ந்து இந்த வேலையை செய்யக்கூடாதா? என வினவினார்கள். அப்போது
அவன் நான் காட்டில் வசித்த காலங்களே என்க்கு அரச பதவியைப்
பெற்றுத் தந்தது. வாழ்வு வந்தவுடன் பழையதை மறந்தால் எனது அரசு
பாழாய் போய்விடும் என்று பணிவுடன் பதில் சொன்னான்.
பணிவுக்கு பார் முடி சூட்டி மகிழும்.
அந்த அரசர் ஓய்வு பெற விரும்பினார். அதற்குமுன் நல்ல இளைஞன் ஒருவனைத்
தேர்ந்தெடுத்து முடிசூட்ட முடிவு செய்தார். பல சுற்று பரிசோதனைகளுக்குப்
பிறகு இருபது இளைஞர்கள் தேறினார்கள். எல்லேரிடமும் சில விதைகளைக்
கொடுத்தார். இந்த விதைகளைத் தொட்டியிலிட்டு அழகிய பூஞ்செடியாய்
இரண்டு மாதங்களில் வளர்த்து வருபவர்களுக்கே அரச பதவி என்றார்.
இரண்டு மாதங்கள் போயின. அழகிய பூந்தொட்டிகளோடு இளைஞர்கள் வந்தனர்.
ஒருவனின் தொட்டியில் மட்டும் எதுவுமே விளையவில்லை. "அவன்தான்
அரசன்" என அறிவித்தார் அரசர். பிறகு சொன்னார் "எல்லோருக்கும்
வேக வைத்த விதைகளைக் கொடுத்தேன். மற்றவர்கள் ஏதோ விதைகளைப்
போட்டு விளைய வைத்தனர் இவன்தான் உண்மையாய் இருந்திருக்கிறான்."
உண்மைக்கே உலகம் முடிசூட்டி மகிழும்.
உண்மையின் அரசு, உயர்வின் அரசு கிறிஸ்துவின் அரசு...!
உண்மையை பேசி நன்மைகள் செய்ய முன்வரும் போது பதவி நம்மைத் தேடிவரும்.
உண்மை உருஇழக்கும் போது கை கொடுக்க முன்வருவோம்.
கிறிஸ்து அரசர் தன்னை வென்று தரணிக்கு தன்னிகரில்லாத் தலைவராக
திகழ்ந்தார்.
எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றதல்ல யோவான் 18:36
கிறிஸ்து அரசரை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறோம்?
மண்ணுலக அரசர்கள் பாரபட்சத்துடன் செயல்படுவர். கிறிஸ்து அரசர்
நிச்சயமாக பாரபட்சத்துடன் செயல்படமாட்டார்.அவராக செயல்பட முன்வருவோம்.
நீதியின் மனசு, நிம்மதியின் மனசு,
அன்பின் மனசு, அமைதியின் மனசு
நன்மையின் மனசு, உண்மையின் மனசு,
கருணையின் மனசு, கனிவின் மனசு
பரிவின் மனசு, பாசத்தின் மனசு
பணிவின் மனசு, பணியின் மனசு.
தன்னலமில்லா மனசு, தயவு நிறைந்த மனசு.
ஏழையரை செல்வராக்கும் மனசு! எளியோரை நேசிக்கும ;மனசு!
பாவியை மன்னிக்கும் மனசு பகைவரை ஏற்க்கும் மனசு.
மனித நேயத்தை மலர்ந்திடச் செய்யும் மனசு.
குடும்ப பாசத்தை ஓங்கிடச் செய்யும் மனசு
ஒரே குடும்பமாய் மக்களை இணைக்கும் மனசு.
நம்மிடம் இருந்தால் நமது வாழ்வு கிறிஸ்தரசரை அறிக்கையிடும்
வாழ்வாகும்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
அனைத்துலகின் அரசர் இயேசு....
இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே இன்று நமது தாய்
திருச்சபையானது இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் என்னும்
பெருவிழாவைக் கொண்டாடுகிறது. அரசர் என்பவர் யார் ? அவரின் பண்பு
குண நலன்கள் என்ன? இயேசு நமக்கு யாராக இருந்தார் இப்போது யாராக
இருக்கிறார் எனும் கேள்வி சிந்தனைகளுடனே இன்றைய வாசகங்களுக்குள்
நுழைவோம்.
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
என்பது அரசனுக்கு கொடுக்கப்படும் திருக்குறள் சான்று. நல்ல
வீரமிக்க படை, நாட்டுப்ப்பற்று உள்ள மக்கள், குறையாத செல்வம், நல்ல
அமைச்சர்கள், ஆபத்தில் உதவும் நண்பர்கள், நல்ல பாதுகாப்பான அரண்
இவை ஆறையும் உடைய மன்னன் உயர்ந்த அரசர்களுள் ஒருவனாக கருதப்படுவான்
என்கிறார் திருவள்ளுவர். இயேசு இவை அனைத்தையும் கடந்தவர். அவர்
அரசர்களுக்கெல்லாம் பேரரசர். அவரிடம் உள்ள படைபலம் மனித படைபலத்தை
விட உயர்ந்தது. அவரது அரசின் கீழ் உள்ள மக்கள் அவர் மேல் அளவற்ற
பற்று கொண்டவர்கள். மேலும் அள்ள அள்ள குறையாத செல்வத்தையும், நல்ல
பணி புரியும் பணியாளர்களையும், நண்பர்களையும் அரண் சூழ்
பாதுகாப்பையும் கொண்டது அவரது அரசு. கேள்வி என்னவென்றால் நாம்
ஒவ்வொருவரும் அவரது அரசைச் சார்ந்த மக்கள் தானா என்பது தான். அவரை
அரசராக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தோமானால் நமது வாழ்வு முறை அவரைப்
பிரதிபலிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். இல்லையென்றால் சாதாரண ஒரு
அரசியல் தலைவனைப் பின்பற்றி வாழும் சாதாரண மக்களின் வாழ்வு முறை
போல் நமது வாழ்வு முறை அமைந்துவிடும்.
இயேசுவின் அரசாட்சி எத்தகையது?
இன்றைய முதல் வாசகம் இயேசுவின் அரசாட்சி என்றுமுள ஆட்சி,
முடிவில்லாத மாட்சி, அழியா அரசாட்சி என்று எடுத்துரைக்கின்றது .
இரண்டாம் வாசகமோ, அகரமும் நகரமும் ஆனவர், இருந்தவர்,
இருக்கின்றவர், வரஇருக்கின்றவர் என்று அரசராம் இயேசுவை பற்றி
எடுத்துரைக்கின்றது. நற்செய்தி வாசகமோ தனது அரசின் கீழ் இருக்கும்
மக்களைப் பற்றி கூறுகிறது. அவர்கள் உண்மையை சார்ந்தவர்கள், என்
குரலுக்கு செவிசாய்க்கின்றவர்கள், எனக்காக போராடுபவர்கள். என்று
தனது மக்களைப் பற்றிக் கூறுவதாக அமைகின்றது. ஆக, வாழும் இடம்,
வாழவைக்கும் தலைவன், வாழும் நாம் இவை மூன்றைப் பற்றியும் சிந்திக்க
இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
வாழும் இடம்;
கிறிஸ்து இயேசு நம் அரசர் என்றால் நாம் வாழும் இடத்தில் அவரது
அமைதியான அரசு இருக்க வேண்டும். அவரது புகழ் என்னும் மாட்சியை
ஓயாது கேட்கும் சூழல் நிலவ வேண்டும். அவரது அன்பான அழிந்து போகாத
வழிநடத்துதல் நிலைத்திருக்க வேண்டும். நாம் வாழும் சூழல் எப்படி
இருக்கிறது என்று பார்ப்போம். அமைதியான சூழல், இறைப்புகழ்,
வழிநடத்துதல் இருக்கிறதா? இல்லையே அமைதிக்கு பதில் ஆர்ப்பாட்டம்.
எங்கும் சந்தடி குழப்பம், மழை வெள்ளம் புயல் என பாதிப்புகளின்
பயங்கரங்கள் என நம்மை சுற்றிலும் அமைதியற்ற ஒரு சூழல்
உருவாகிக்கொண்டு இருக்கிறது. இருக்கும் இடத்தில் அமைதி இல்லாதபோது
உள்ளத்தில் அமைதி நிலவுவது எப்படி சாத்தியமாகும்? இப்படி இருக்க
நாம் வாழும் இடத்தில் இறைவனின் அரசை அரசாட்சியை எப்படி
நிலைநாட்டுவது ? உதாரணம் இயேசு தான் . தன்னைப் பின்தொடர்ந்து வந்த
மக்களே தன்னை கொல்லத் துடிக்கும் போதும் நிதானமாக அமைதியாக
இருக்கின்றார் இயேசு. என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்று
தெளிவாகக் கூறுகின்றார். அத்தனை சந்தடியிலும் தன் மனதை அமைதியாக
வைத்திருக்கின்றார். அதன்பயனாக அமைதியான அரசாட்சியை இன்றும் ஆண்டு
வழிநடத்திக்கொண்டிருக்கின்றார். வாழுகின்ற இடத்தை பாலைவனமாகுவதும்
சோலைவனமாக்குவது நமது உள்ளமும் அது சார்ந்த எண்ணமும் தான் என்பது
உணர்ந்து வாழ்வோம்.
வாழவைக்கும் தலைவன்;
தலைவன் அரசன் மன்னன் வேந்தன் என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும்
அதன்பொருள் ஒன்று தான் . தன்னை நாடி வந்த மக்களை, தனக்கு கீழ்
இருக்கும் மக்களை அன்போடு வழிநடத்துபவனே உண்மையான அரசன்.
அவ்வகையில் இயேசு நமக்கு அரசர் தலைவர் மட்டுமல்ல அவர் நம் நண்பர் .
ஏனெனில் அவர் நம்மை நண்பர்கள் என அழைத்திருக்கின்றார்.
கொடையளி செங்கோல் குடியோம்பல் ஆகிய நான்கும் உடையவன் அரசன்
என்கிறது திருக்குறள் அவ்வகையில் ஏராளமான கொடைகளை
அள்ளித்தருபவரும், அன்பு செய்பவரும், நல்லாட்சி புரிபவரும், நம்
தேவைகளை நிறைவு செய்பவருமான இயேசு நம்மை வாழவைக்கும் தலைவரே. அவர்
காலம் கடந்த தலைவர். என்றும் நிலைத்து இருப்பவர். இப்படி ஒரு
அருமையான அரசன் நம்மை ஆண்டு வழி நடத்த இருக்க அழிந்து போகக் கூடிய
மனித தலைவர்களை நாடி அவர்களுக்காக கோஷம் எழுப்பிக் கொண்டு நம்
வாழ்க்கையை வீணடிப்பது முறையா என்று சிந்திப்போம். முறையற்ற தலைவனை
பின் தொடர்வது குருடருக்கு குருடர் வழிகாட்டுவதற்கு ஒப்பாகும்
என்பதை உணர்ந்து என்றும் நிலைத்து இருக்கும் அரசராம் இயேசுவின்
வழியைப் பின் தொடர முயற்சிப்போம்.
வாழும் நாம்;
வாழும் இடமும் அருமையாய் இருந்து , நம்மை வழி நடத்தும் தலைவனும்
அருமையாய் அமையப் பெற்றாலும், வாழும் நாம் அதற்கேற்ப நம்மை
தகுதியானவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஓட்டை
விழுந்த பானையில் சேகரிக்கும் நீர் போலாகிவிடும் நமது வாழ்வு.
எதுவும் தங்காது நிலைக்காது. வெறுமையான பானையாய் மாறிவிடும் நம்
வாழ்வு. அதற்கு வாழுகின்ற நாம் வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதையும்
அனுபவித்து வாழ வேண்டும். அன்பின் அரசராம் இயேசுவின் ஆட்சியின்
கீழ் நாம் இருக்கிறோம். எக்குறையும் நமக்கு நேர்ந்திடாது. நிறைவாய்
வளமாய் நாம் அவரில் வாழ்வோம் என்னும் நம்பிக்கையோடு வாழவேண்டும்.
அவர் கூறுவது போல உண்மைக்கு சான்று பகரக் கூடியவர்களாக நாம் மாற
வேண்டும். அவரது குரலுக்கு செவி சாய்க்கக் கூடியவர்களாக வாழ
முயன்றோமானால் அவரது அன்பின் ஆட்சியில் நீடித்த நிலையானதொரு இடத்தை
நாம் அடைவோம்.
இயேசு அனைத்துலகின் அரசர் என்னும் பெருவிழாவைக் கொண்டாடும் நாம்
இயேசுவை நமது முழு மனதுடன் தலைவராக ஏற்று வாழ முற்படுவோம். வாழும்
இடமும் நம்மை வாழ வைக்கும் தலைவராம் இயேசுவின் அருளினால் அமைதியான
சோலைவனமாக மாற ஆசிப்போம். அவரது அரசின் கீழ் அவரோடு வாழும் நாமும்
அரசராம் அவரின் குண நலன் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம். அரசன்
எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்பதே உண்மை என நிருபித்து
வாழமுற்படுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார்
அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா
இன்றைய வாசகங்கள்:-
தானியேல் 7:13-14
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37
ஆண்டவரின் ஆட்சி!
'கிறிஸ்து அரசர் பெருவிழா' திருவழிபாட்டு ஆண்டை நிறைவு
செய்கிறது. 'அரசர்' என்ற சொல் 'செங்கோல், கிரீடம், அரியணை,
போர், அரண்மனை, கோட்டை, அதிகாரம், படைவீரர்கள், பணியாளர்கள்,
பணம், தங்கம்' ஆகியவற்றை நமக்கு நினைவூட்டுகிறது. அரசாட்சி
எந்த வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் - குடியரசு, சமய அரசு,
வாரிசு அரசு தீயதாகவே இருக்கிறது என்பது நம் வாழ்வியல்
அனுபவமாக இருக்கிறது. 'தீமை இல்லாத அதிகாரம்' என்பது இல்லை
என்பது அக்வினா நகர் புனித தோமாவின் கருத்து. நீதித் தலைவர்கள்
நூலில், யோத்தாம் கூறும் உருவகத்தில் வருகின்ற ஒலிவ மரங்களும்,
அத்தி மரங்களும், திராட்சைக் கொடியும் அரசாட்சி ஏற்க மறுத்ததால்,
முட்புதர் அரசாட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
முட்புதரிடம் அரசாட்சியைக் கொடுத்துவிட்ட ஒலிவ மரங்களும்,
அத்தி மரங்களும், திராட்சைக் கொடியும் காய்க்க முடியுமா?
கனிதர இயலுமா? இன்னொரு பக்கம், அரசாட்சி என்பதை, 'தலைமைத்துவம்'
என்று புரிந்துகொண்டால், இன்று நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில்
- குடும்பத்தில், பணியிடத்தில், பங்கில், மறைமாவட்டத்தில்,
சமூக அமைப்பில் - தலைவராக இருக்கின்றோம். எல்லாவற்றுக்கும்
மேலாக, நமக்கு நாமே (அதாவது, எனக்கு நானே) தலைவராக இருப்பதும்
அரசாட்சி சார்ந்ததே.
ஆக, நாம் விட்டு விலக முடியாத அரசாட்சிக்கும், நம் தனிப்பட்ட
மற்றும் வாழ்வியல் தலைமைத்துவத்துக்கும் இன்று நாம்
கொண்டாடுகிறது கிறிஸ்து அரசர் பெருவிழா முன்வைப்பது என்ன?
முதல் வாசகத்தில் (தானி 7:13-14) தானியேல் இறைவாக்கினர்
காட்சி ஒன்றைக் காண்கின்றார். 'மானிட மகனைப் போன்ற ஒருவர்
தோன்றினார்' எனக் கூறுகிறார் தானியேல். 'தொன்மை வாய்ந்தவர்'
என்னும் சொல்லாடல் கடவுளைக் குறிக்கிறது. மானிட மகனுக்கு
ஆட்சியுரிமையும் மாட்சியும் கொடுக்கப்படுகின்றது. அவர் அனைவரும்
வழிபடக் கூடிய கடவுளாக இருக்கின்றார். அவருடைய ஆட்சி
நீடித்த, முடிவுறாத ஆட்சியாக இருக்கிறது. இக்காட்சியின்
பின்புலத்தில் இருப்பது செலூக்கிய ஆட்சி. கிரேக்கர்களுக்குப்
பின்னர் பாலஸ்தீனத்தை செலூக்கியர்கள் ஆட்சி செய்கின்றனர்.
செலூக்கிய அரசன் நான்காம் அந்தியோக்கஸ் எபிஃபானஸ் (கிமு
167 164) யூதர்கள் அனைவர்மேலும் கிரேக்கக் கலாச்சாரத்தையும்,
மொழியையும், வழிபாட்டையும் திணிக்கின்றான். தன்னையும் தான்
நிறுவுகின்ற கடவுளையும் மக்கள் வழிபட வேண்டும் என்றும்,
ஆலயத்தில் படைக்கப்படும் பன்றிக்கறி உணவை அனைவரும் உண்ண
வேண்டும் என்றும் இஸ்ரயேல் மக்களைக் கட்டாயப்படுத்துகின்றான்.
அரசக் கட்டளையை மீறுகின்ற பலர் கொல்லப்படுகின்றனர் (காண்.
1 மக் 1:41-63). இதற்கு எதிராக எழுகின்ற மக்கபேயர்கள், மத்தத்தியா,
யூதா போன்றவர்களால் நீடித்த ஆட்சியைத் தர முடியவில்லை. ஆக,
தங்களை ஆட்சி செய்கின்ற கொடுங்கோல் அரசன், தங்களைக்
காப்பாற்ற இயலாத தங்கள் தலைமை என வாடியிருந்த மக்கள்
விரைவில் தங்களுடைய ஆட்சியுரிமையைப் பெறுவார்கள் எனக்
காட்சி காண்கின்றார் தானியேல்.
மானிட மகன்' என்னும் சொல்லாடல், 'மெசியா' அல்லது 'இஸ்ரயேல்
மக்கள்' ஆகியோரைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். இஸ்ரயேல்
மக்களின் கையில் ஆட்சியுரிமை கொடுக்கப்படுகிறது. கடவுள் ஏற்படுத்துகின்ற
நீதி மற்றும் நேர்மையின் அரசை அவர்கள் மக்கள் நடுவில் மலரச்
செய்வார்கள். துன்புறும் மக்களுக்கு தானியேல் நம்பிக்கையின்
செய்தியைத் தருகின்றார். அவர்களுடைய துன்பம் நீடித்தது அல்ல
என்றும், கடவுள் விரைவில் குறுக்கிட்டு, அவர்களின் துன்பத்தை
அகற்றுவார் என்றும், கடவுளே வரலாற்றைத் தன் கைகளில்
கொண்டுள்ளார் என்றும், தீமையின்மேல் அவரே வெற்றிகொள்வார்
என்றும் மொழிகின்றார். வானத்தில் தோன்றுகின்ற மனித உருவம்
வெற்றியைக் கொண்டு வரும்.
ஆக, மனித வரலாறு கடவுளின் கண்முன் விரிந்து நிற்கிறது. நம்பிக்கையாளர்களைத்
துன்பத்திலிருந்து அவரே விடுவிக்கின்றார். தீமையின் ஆதிக்கத்தை
வேரறுக்கின்ற கடவுள் தான் படைத்த இந்த உலகை நம்பிக்கையாளர்களிடம்
மீண்டும் அளிப்பார். ஆண்டவரின் ஆட்சி தானியேலின் காட்சியாகவும்,
ஏக்கமாகவும் இருக்கிறது.
இரண்டாம் வாசகம் (திவெ 1:5-8), இயேசுவை, 'அரசர்க்கெல்லாம்
அரசர்' என்று முன்மொழிகின்றது. தானியேல் நூலுக்கும்
திருவெளிப்பாட்டு நூலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும்
திருவெளிப்பாட்டு நடையில், உருவங்கள், எண்கள், அடையாளங்கள்
ஆகியவற்றைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இரண்டு நூல்களும் எழுதப்பட்ட
சூழல் நம்பிக்கையாளரின் துன்பமே. நம்பிக்கையாளர்களின் துன்பம்
கடவுளின் குறுக்கீட்டால் நிறைவுக்கு வரும் என்பது இந்நூல்கள்
தரும் நம்பிக்கை.
கிறிஸ்துவை மூன்று தலைப்புகளால் குறிக்கிறார் ஆசிரியர்:
(அ) 'நம்பிக்கைக்குரிய சாட்சி' ஏனெனில், தன் மண்ணகப் பணியில்
இறுதிவரை நிலைத்து நின்று சான்று பகர்ந்தார், (ஆ) 'முதலில்
உயிர்பெற்று எழுந்தவர்' கடவுளின் வல்லமையால், (இ) 'மண்ணுலக
அரசர்க்கெல்லாம் தலைவர்' அவருடைய விண்ணேற்றத்துக்குப்
பின்னர் கடவுள் அவருக்கு எல்லா ஆற்றல்களையும் வழங்குகின்றார்.
இந்த மூன்று தலைப்புகளும், இயேசு கடவுளுக்குக் காட்டிய அர்ப்பணம்
மற்றும் பிரமாணிக்கம், அந்த அர்ப்பணம் மற்றும் பிரமாணிக்கத்திற்கு
கடவுள் தந்த பரிசு அவருடைய அதிகாரமும் ஆட்சியுரிமையும் என்று
அடையாளத்தப்படுத்துகின்றன.
இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஆட்சி உரிமை
பெற்ற குருக்களாக மாறுகின்றனர். அவர் விரைவில் வரவிருக்கின்றார்.
அவரே தொடக்கமும் முடிவுமான இறைவன்.
ஆக, உரோமையர்களின்கீழ் துன்புற்ற கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கு
தானியேல் இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை தந்தது போல ஆசிரியர்
நம்பிக்கை தருகின்றார். மண்ணுலகில் நிலவும் தீமையின் ஆட்சி
மறைந்து ஆண்டவரின் ஆட்சி மலரும் என்பது அவருடைய எதிர்நோக்காக
இருக்கின்றது.
நற்செய்தி வாசகம் (யோவா 18:33-37), உரோமை ஆளுநர்
பிலாத்துவுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கின்ற உரையாடலின்
ஒரு பகுதியாக உள்ளது. மற்ற நற்செய்தியாளர்களை விட யோவான்
நற்செய்தியாளர், பிலாத்து இயேசுவை விசாரிக்கும் நிகழ்வை
நீண்டதாகப் பதிவு செய்கின்றார். யோவான் நற்செய்தி, 'அரசர்'
என்னும் தலைப்பில் தொடங்கி, அதே தலைப்போடு நிறைவு செய்கிறது.
இயேசுவைக் காண்கின்ற நத்தனியேல், 'நீர் இறைமகன், நீரே இஸ்ரயேல்
மக்களின் அரசர்' (யோவா 1:49) என அறிக்கையிடுகின்றார். நற்செய்தியின்
இறுதியில், 'யூதர்களின் அரசர்' என்று பிலாத்து இயேசுவுக்கு
குற்றஅறிக்கை எழுதுகின்றார் (யோவா 19:19). பிலாத்து இயேசுவை
விசாரிக்கும் நிகழ்வில், இயேசுவே அரசன்போல அரியணையில் அமர்ந்திருப்பவராகவும்,
உறுதியாகப் பேசுவதாகவும், தன்னைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும்
பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர். இதற்கு மாறாக,
பிலாத்து உள்ளேயும் வெளியேயும் நடப்பவராகவும், முடிவெடுக்க
இயலாதவராகவும், மக்களுக்கும் இயேசுவுக்கும் அஞ்சுபவராகவும்
காட்டப்படுகின்றார்.
பிலாத்துவோடு கொண்ட உரையாடலில் இயேசு தன் அரசாட்சி பற்றிய
தெளிவை அவருக்கு அளிக்கின்றார்: ஒன்று, 'என் ஆட்சி இவ்வுலக
ஆட்சி போன்றது அல்ல.' இவ்வுலகில் உள்ள ஆட்சிக்கு அதிகாரத்தை
இன்னொருவர் தர வேண்டும். மேலிருக்கிற இன்னொரு அரசர் தர
வேண்டும். அல்லது மக்கள் தர வேண்டும். ஆனால், இயேசு அதிகாரத்தை
தன்னுள்ளேயே கொண்டிருக்கின்றார். அது அவருக்கு மேலிருந்து
அருளப்படுகின்றது. இரண்டு, இவ்வுலக ஆட்சி போட்டி, பொறாமை,
இரத்தம், பிறழ்வு நிறைந்த ஆட்சி. ஆனால், இயேசுவின் ஆட்சி
அமைதியின், நீதியின், சமத்துவத்தின், சகோதரத்துவத்தின் இறையாட்சி.
மூன்று, அரசாட்சி என்பது உண்மையை அறிவிக்கும் பணி. பணி
செய்வதே அரசாட்சியின் முதன்மையான இலக்கு.
இயேசுவுக்குச் செவிசாய்க்கும் அனைவரும் அவருடைய ஆட்சியில்
உறுப்பினராக மாற முடியும். 'உண்மையைச் சார்ந்தவர் அனைவரும்
என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்று சொல்வதன்
வழியாக, 'நீ உண்மையைச் சார்ந்தவரா?' என்று பிலாத்துவிடம்
கேள்வி கேட்கின்றார் இயேசு. பிலாத்து தன் போலியான அதிகாரத்திலிருந்தும்,
முழமையற்ற ஆற்றலிலிருந்தும் வெளியே வர வேண்டும் என்பது இயேசுவின்
அழைப்பாக இருக்கிறது.
ஆக, தன் சமகாலத்து உரோமையர் கொண்டிருந்த புரிதலைவிட ஒரு
மாற்றுப் புரிதலை முன்வைக்கின்றார் இயேசு.
இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மையக்கருத்துகளைப் பின்வருமாறு
தொகுக்கலாம்:
(அ) ஆண்டவராகிய கடவுளின் கையில் ஆட்சி உள்ளது. அவர்
நினைக்கும் நேரத்தில் அனைத்தும் மாறி விடும்.
(ஆ) ஆண்டவருடைய ஆட்சி நீடித்த ஆட்சியாக இருக்கும். அங்கே
நீதிமான்கள் துன்பமுற மாட்டார்கள். தீமையின் ஆதிக்கம்
முழுமையாக அழிக்கப்படும்.
(இ) ஆண்டவருடைய ஆட்சி உண்மைக்குச் சான்று பகரும் பணியாக
மிளிர்கிறது. இந்த ஆட்சியில் பங்குபெற அனைவரும் அழைப்பு
பெறுகின்றனர்.
கிறிஸ்து அரசர் இன்று நம் தனிப்பட்ட வாழ்வியல் தலைமைத்துவத்துக்குத்
தரும் பாடங்கள் எவை?
(அ) அரசர்கள் சமரசம் செய்துகொள்வதில்லை (Kings don't
comrpromise).
இயேசு தன் வாழ்வில் இறுதிவரை தன் மதிப்பீடுகளோடு சமரசம்
செய்துகொள்ளவே இல்லை. பாலைநிலத்தில் சாத்தான் அவரைச்
சோதித்தபோதும் சரி, பணியில் மக்கள் அவரைச் சோதித்தபோதும்
சரி, இறுதியில், 'இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி
வா!' என்று மக்கள் சொன்னபோதும் சரி, அவர் அவர்களுடைய சோதனைகளுக்குள்
விழவே இல்லை. இவை அனைத்திலும் தன் சுதந்திரத்தையும் கட்டின்மையையும்
காத்துக்கொள்கின்றார். கட்டின்மை (சுதந்திரம்) மிகப்பெரிய
மதிப்பீடு. இதை இழந்த எவரும் சமரசம் செய்துகொள்கின்றார்.
இதை இழக்கிறவரை நாம் அடிமை என்கிறோம். அடிமைகள் அனைத்திலும்
அனைவரோடும் சமரசம் செய்துகொள்கின்றனர். அரசர்கள் சமரசம்
செய்துகொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிறார்கள்.
(ஆ) அரசர்கள் தங்கள் மையத்தை இழப்பதில்லை (Kings are
centred).
சதுரங்க ஆட்டம் அரசர் என்றை மையத்தைச் சுற்றியதாகவே உள்ளது.
தன்னைச் சுற்றியிருப்பவர்கள் வீழ்ந்தாலும் அரசர் உறுதியாகவே
இருக்கின்றார். தன் நம்பிக்கையிணைவையும், நோக்கத்தையும்,
நலத்தையும் அரசர் இழப்பதில்லை. தன்னைச் சுற்றி நடந்த அனைத்து
பரபரப்புகளுக்கு நடுவிலும் இயேசு தன் அமைதியைக்
காத்துக்கொள்கின்றார்.
(இ) அரசர்கள் மற்றவர்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்
(Kings leave a legacy).
அரசர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் நேர்முகமாக தாக்கத்தை
ஏற்படுத்தி, அங்கே மாற்றத்தைக் கொண்டுவருகிறார்கள். தங்கள்
இலக்கு சரியாக இருக்க வேண்டும் என்றும், அந்த இலக்கை தாங்கள்
எட்டியே தீர வேண்டும் என்றும் உறுதிகொண்டவர்களாக இருக்கிறார்கள்
அரசர்கள்.
இறுதியாக,
நாம் அனைத்துத் தலைவர்களுக்காகவும் இன்று மன்றாடுவோம். இவ்வுலக
ஆட்சி நமக்குத் துன்பமாக மாறும்போது அவ்வுலக ஆட்சியைக்
காட்சியில் கண்டு மனநிறைவு கொள்வோம் என்றோ, நாம் இறந்த
பின்னர் நமக்கு மாட்சி காத்திருக்கிறது என்றோ ஓய்ந்துவிட
வேண்டாம். சிறிய சிறிய தளங்களில் நாமும் அரசர்கள் என்பதை
உணர்ந்து அதன்படி நடப்போம். ஆட்சியாளர்களை அதிகாரத்தில்
அமர்த்திய நாம்தான் அரசர்கள். அனைத்துத் தளங்களிலும் நம்
தலைமைத்துவத்தை நம் கட்டின்மையை வைத்து நிர்ணயம் செய்வோம்.
எந்த நபரும், எந்தக் கருத்தியலும், எந்தச் சூழலும் நம் கட்டின்மையை
(சுதந்திரத்தை) எடுத்துவிட அனுமதிக்க வேண்டாம். இப்படியாக,
கட்டின்மையில் நாம் உறுதியாக இருக்கும்போது, மற்றவர் நம்மைப்
பார்த்து, 'நீ அரசரா?' எனக் கேட்பார். 'அரசர் என்று நீர்
சொல்கிறீர்!' என நாம் புன்னகைத்துக்கொண்டே அவரைக் கடக்க
முடியும்.
'ஆண்டவர் ஆட்சி செய்கின்றார். மாட்சியாய் ஆடையாய் அணிந்துள்ளார்'
(திபா 93) என்னும் பதிலுரைப் பாடல் வரி நம் வாழ்வியல் அனுபவமாக
மாறும் வரை, நாம் அதை உணரும் வரை, நாம் அரசர்களாக
வாழ்வோம்!
நீ அரசன்தானோ?
இன்று கிறிஸ்துவை அனைத்துலகிற்கும் அரசராகக்
கொண்டாடுகிறோம். உலகின் பல இடங்களில் அரசாட்சி இன்று மறைந்துவிட்டாலும்,
'அரசன்' என்பது நமக்கு ஒரு வார்த்தை-உருவகமாகவே இருக்கிறது.
'அரசன்' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், பகட்டான ஆடை, தலையில்
மணிமுடி, கையில் செங்கோல், பெரிய அரியணை, காலில் பெரிய காலணி,
சாமரம் வீசும் இரண்டு பெண்கள், கம்பீரமான பார்வை என எல்லாம்
நம் உள்ளத்தில் தோன்றி மறைகின்றன. 'கிறிஸ்து அரசர்' உருவப்படங்களைப்
பார்த்துப் பழகிய நம் மனம், கிறிஸ்துவையும் மேற்காணும் உருவத்திலேயே
பார்க்கின்றது.
'அரசன்' என்ற சொல்லாடல் அல்லது 'அரசாட்சி' என்ற சொல்லாடல்
இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் சாமுவேலின் காலத்தில்தான்
வருகின்றது. '... அனைத்து வேற்றினங்களிடையே இருப்பதுபோல ஓர்
அரசனை நியமித்தருளும்' (1 சாமு 8:5) என்று இஸ்ரயேல் மக்கள்
சாமுவேலிடம் முறையிட்டபோது, '... அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை.
அவர்கள் நான் ஆளாதபடி என்னைத்தான் புறக்கணித்துவிட்டனர்'
(1 சாமு 8:7) என்கிறார் ஆண்டவராகிய கடவுள். ஆண்டவராகிய கடவுளே
அரசாண்ட நிலையில் அவருடைய அரசாட்சியைப் புறக்கணிக்கின்றனர்
இஸ்ரயேல் மக்கள். ஆண்டவர் சாமுவேல் வழியாக அவர்களை எச்சரித்தது
போலவே அரசர்கள் அவர்களுக்குத் தோல்வியாகவே முடிகின்றனர்.
இந்தப் பின்புலத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக இறைவாக்குரைக்கின்ற
கடவுள், 'நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக்
காப்பேன்' (எசே 34:11) என்கிறார். அன்று முதல் மெசியா அரசராக
வருவார் என்ற நம்பிக்கை இஸ்ரயேல் மக்கள் நடுவில் வளரலாயிற்று.
இயேசுவின் சமகாலத்தில் விளங்கிய எஸ்ஸீனியர்கள் என்ற அமைப்பினரும்
'அரச மெசியாவை' எதிர்பார்த்துக் காத்திருந்ததை அவர்களின்
குழும வாழ்வு ஏடுகள் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான்
இயேசு பிறக்கின்றார்.
மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், 'அவர்
யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி
செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' (லூக்
1:33) என்று உரைத்து, இந்த எதிர்பார்ப்பைக்
கூட்டுகின்றார். இயேசுவின் பணிவாழ்வு முழுவதும் அவருடன் இருந்தவர்களும்,
அவரால் பயன்பெற்றவர்களும் இந்த எதிர்பார்ப்பிலேயே வளர்கின்றனர்.
உண்டு பசியாறியவர்கள் அவரை அரசராக்கிவிடத் துடிக்கின்றனர்
(யோவா 6:15). அவரோடு உடனிருந்தவர்கள் அவரின் அரியணையின் அருகில்
அமர ஆசைப்படுகின்றனர் (மாற் 10:35-45). ஆனால், கழுவுற
மீனில் நழுவுற மீனாக ஓடுகிறார் இயேசு.
இருந்தாலும், இயேசு தன்னை அரசன் என்று சொன்னாரா? ஆம். எப்போது?
ஐந்து முறை தன்னை அரசன் என்று சொல்லாமல் சொல்கின்றார்:
1. 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' (மத்
2:2) என்று தேடி வரும் மூன்று ஞானியருக்கு இயேசு மறுப்பு
சொல்லவில்லை. அவர் ரொம்ப குட்டிக் குழந்தையாய் இருந்ததால்
அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.
2. 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு
அவர்களதே' (மத் 5:3) என்று தொடங்கி, தன் போதனை, தன்
உருவகம், தன் அறிகுறிகள் அனைத்திலும் விண்ணரசை (அல்லது
இறையரசு) மட்டுமே முன்னிறுத்துவதன் வழியாக, தன்னை அரசன்
என்று மறைமுகமாகச் சொல்கின்றார்.
3. 'ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக!'
(லூக் 19:38) என்று எருசலேம் மக்கள் வெற்றி ஆரவாரம்
செய்தபோது மறுப்பேதும் சொல்லவில்லை.
4. 'அப்படியானால் நீ அரசன்தானோ?' (யோவா 18:37) என்று
பிலாத்து விசாரித்தபோதும், 'யூதரின் அரசரே வாழ்க!' (யோவா
19:3) என்று பிலாத்தின் அரண்மனை படைவீரர்கள் கன்னத்தில்
அறைந்த போதும், 'இதோ, உங்கள் அரசன்!' (யோவா 19:14) என்று
மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டபோதும், தன் மௌனத்தால்
'ஆம்' என மொழிகின்றார் இயேசு.
5. 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை
நினைவிற்கொள்ளும்' (லூக் 23:42) என்ற நல்ல கள்வனுக்கு
உடனடியாக பேரின்ப வீட்டில் இடம் தந்ததும் இயேசுவை
அரசனாகத்தான் காட்டுகிறது.
மேற்காணும், ஐந்து நிகழ்வுகளில் நான்காம் நிகழ்வின் ஒரு
பகுதியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.
பிலாத்து இயேசுவை விசாரிக்கும் நிகழ்வை நற்செய்தியாளர்
யோவான் மிக நீண்டதாகவும், ஆழமாகவும் பதிவு செய்கின்றார்.
பிலாத்துவின் முன் இயேசு மட்டும் விசாரிக்கப்படுவதாக
நினைக்க வேண்டாம். இயேசுவைக் காட்டிக் கொடுத்ததால் இப்போது
காட்டிக்கொடுத்தவர்களும் விசாரணை வளையத்திற்குள்
வருகின்றனர். இதைப் புரிந்துகொண்டால் நமக்கு இன்றைய
திருநாளின் பொருள் புரிந்துவிடும்.
பிலாத்து உரோமை ஆளுநன். யூதேயா, கலிலேயா, சமாரியா போன்ற
பகுதிகளுக்கு அரசன் இருந்தாலும், இவர்களை நிர்ணயிக்கும்
பொறுப்பை பிலாத்து பெற்றிருந்தார். அன்றைய அகில உலகப்
பேரரசின் பதிலி பிலாத்து. ஆக, எங்கும் சீசர்தான் அரசராக
இருக்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டியவர் பிலாத்து.
ஆனால், உரோமையின் ஆட்சி யூதர்களுக்குப் பிடிக்கவில்லை.
எனவே, அவ்வப்போது சிலர் எழும்பி உரோமைக்கு எதிராகக்
கிளர்ச்சி செய்வர். அவர்களை அடக்க வேண்டியதும், அழிக்க
வேண்டியதும் ஆளுநரின் பொறுப்பு. பிலாத்துவிடம் இயேசுவை
ஒப்படைக்கும் அவர்கள் அவர்மேல் எந்தவொரு குற்றச்சாட்டையும்
வைக்கவில்லை. 'இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள்
உம்மிடம் ஒப்புவித்திருக்கமாட்டோம்' (யோவா 18:30) என்று
மொட்டையாகச் சொல்கின்றனர். ஆனால், மற்ற
நற்செய்தியாளர்களின் கருத்துப்படி, 'இவன் தானே மெசியாவாகிய
அரசன் என்று சொல்லிக்கொள்கிறான்' (காண். லூக் 23:2) என்று
இயேசுவைக் குற்றம் சாட்டுகின்றனர். இயேசுவிடம் பிலாத்து
கேட்கும் முதல் கேள்வியே, 'நீ யூதரின் அரசனா?' (யோவா
18:33) என்பதுதான். இந்தக் கேள்வியின் ஊற்று என்ன? என்று
பிலாத்தை விசாரிக்கிறார் இயேசு: 'நீராக இதைக் கேட்கிறீரா?
அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி சொன்னதை வைத்து
கேட்கிறீரா?' பிலாத்து புத்திசாலி. இயேசுவின் கேள்விக்கு
மற்றொரு கேள்வியால் விடை தருகிறார்: 'நான் ஒரு யூதனா,
என்ன?' இப்படியே விசாரணை நகர, இயேசுவும், 'எனது ஆட்சி
இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல' என்கிறார். பிலாத்துவுக்கு
பாதி சந்தேகம் தீர்ந்துவிட்டது. இயேசுவால் சீசரின்
ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஏனெனில், 'மறுவுலகில் யார் ஆட்சி
செய்தால் என்ன? இந்த உலகில் சீசர் தான் ஆள வேண்டும்' என
நினைத்தார் பிலாத்து. மீதிச் சந்தேகத்தைத் தீர்க்க,
'அப்படியானால் நீ அரசன் தானோ?' என்று பிலாத்து கேட்க,
'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என்
பணி. இதற்காகவே நான் பிறந்தேன். வளர்ந்தேன். பணி செய்தேன்'
என்கிறார். ஆக, அரசன் என்ற டைட்டிலை விடுத்து தன் அரச
நிலையைப் பணியாக முன்வைக்கிறார் இயேசு. மீதி சந்தேகமும்
தீர்ந்தது. இயேசு யூதர்களின் அரசன் இல்லை.
இப்போது பிலாத்துவுக்கு சந்தேகம் மக்கள் மேல்
திரும்புகிறது: 'நீ யூதர்களுக்கு அரசன் இல்லை' என்பது
தெளிவாகிறது என்று இயேசுவைப் பற்றி முடிவெடுத்த பிலாத்து,
'இந்த மக்களுக்கு யார் அரசன்?' என்பதை உறுதி செய்ய,
இப்போது மக்களை விசாரிக்கிறான். நேருக்கு நேர்
விசாரிக்காமல் மற்றொரு யுக்தியைக் கையாளுகின்றார். இயேசுவை
நன்றாக அடித்து, மேலுடை, முள்முடி அணிவித்து அவரை வெளியே
கொண்டு போய் மக்களிடம், 'இதோ, உங்கள் அரசன்' (யோவா 19:15)
என, அவர்கள், 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை'
என்று சொல்கின்றனர். மறைமுகமாக மக்களையும்
விசாரித்தாயிற்று. சீசரின் அரச நிலையை உறுதி செய்தாயிற்று.
உடனே நிகழ்வை முடிக்கின்றார் யோவான்: 'அப்போது பிலாத்து
அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான்.
அவர்கள் இயேசுவைத் தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொண்டனர்'
(யோவா 19:16). 'ஆண்டவரே எங்கள் அரசர்' (திபா 47:7) என்று
வாய்நிறையப் பாடிய இஸ்ரயேல் மக்கள், 'சீசரைத் தவிர
எங்களுக்கு வேறு அரசர் இல்லை' என்று பொய்யுரைக்கின்றனர்.
இயேசு, 'உண்மை' என்ற வார்த்தையால் தன் அரச நிலையை உறுதி
செய்தார். ஆனால், மக்கள், 'பொய்' ஒன்றைச் சொல்லி
ஆண்டவராகிய கடவுளின் அரச நிலையை மறுதலிக்கின்றனர்.
இதுதான், யோவான் நற்செய்தியாளரின் இலக்கியத்திறன்.
ஆக, 'இயேசு அரசரா? யூதர்களின் அரசரா?' என்பது இன்றைய
கேள்வி அல்ல.
மாறாக, 'எனக்கு அவர் அரசரா?' என்பதுதான் இன்றைய திருநாள்
முன்வைக்கின்ற கேள்வி. நாம் ஏற்கனவே கண்ட ஐந்து நிலைகளில்
மக்கள் தங்களுக்கு இயேசுவை அரசராக ஏற்றுக்கொண்டனர். அந்த
நேரங்களில் அவர் அந்த டைட்டிலை மறுக்கவில்லை. மாறாக, அது
தன்னை மையப்படுத்தியதாக இருந்தபோதுதான் இயேசு அதை
மறுக்கிறார்.
'எனக்கு அவர் அரசராக இருக்க வேண்டும்' என்றால் நான் சில
பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று பட்டியலிடுகின்றது
இன்றைய இறைவாக்கு வழிபாடு.
1. உண்மையை எடுத்துரைத்தல்
'உண்மையா? அது என்ன?' என்ற பிலாத்துவின் கேள்வி இன்றுவரை
நாம் விடை காண இயலாத கேள்வி. ஏனெனில், உண்மை என்பது
தனிநபர் சார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்குச் சூழல்
மாறுபடுவது. தண்ணீரின் மூலக்கூறுகள் 2 ஹைட்ரஜன், 1
ஆக்ஸிஜன் என்னும் உண்மை எல்லா இடத்திற்கும், எல்லா
சூழலுக்கும் பொருந்தும். ஆனால், உறவுநிலை, அறநெறி, தனிநபர்
வாழ்வு, சமூகம் என்று வரும்போது உண்மை எப்போதும் இடம்
சார்ந்தே இருக்கிறது. அதனால்தான், ஒரு நபர் கீழிருந்து
பார்க்கப்படும்போது போராளியாகவும், மேலிருந்து
பார்க்கப்படும்போது தீவிரவாதியாகவும் தெரிகின்றார். இந்த
சார்புநிலையைத்தான் பிலாத்து, 'உண்மையா? அது என்ன?' என்று
கேட்கிறார். 'உண்மை' என்பதை இயேசுவே மற்றொரு இடத்தில்
வரையறை செய்கிறார். 'உண்மையினால் அவர்களை உமக்கு
அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை' (17:17)
எனத் தமது சீடர்களுக்காகச் செபிக்கிறார் இயேசு. இங்கே,
உண்மை என்பது இறைவனுக்கு ஒருவரை அர்ப்பணமாக்குகிறது
என்றும், இறைவனின் பார்வையில் ஒன்றைப் பார்ப்பதே உண்மை
என்பதும் பொருளாகிறது. ஆக, ஒரு நிகழ்வை அல்லது நபரை இறைவன்
பார்ப்பதுபோல நான் பார்க்கும்போது நான் உண்மை உடையவன்
ஆகிறேன். இறைவன் என்றும் மாறாதவர். ஆக, இந்த உண்மையும்
சார்புநிலை அற்றது. இறைவன் எப்படிப் பார்க்கிறார்? 'மனிதர்
பார்ப்பதுபோல இறைவன் பார்ப்பதில்லை. மனிதர் புறத்தைப்
பார்க்கின்றனர். இறைவனோ அகத்தைப் பார்க்கின்றார்' (1 சாமு
16:7). புறத்தையும் தாண்டி அகத்தைப் பார்த்து, அகத்தை
நிறைவாகப் பார்த்து, அதில் நிறைவைக் காண்பதே உண்மை. ஆக,
நான் என் புறம்சார்ந்த நிறம், உடை, அழகு, ஆபரணம், செயல்
ஆகியவற்றை விடுத்து, என் அகத்தில் இருக்கும் இறைவனைக்
கண்டு, அதே மனநிலையில் எனக்கு அடுத்திருப்பவரின் இதயத்தின்
இறைவனையும் நான் கண்டால் நான் உண்மை உள்ளவன் ஆகிறேன்.
2. பணி செய்தல்
இயேசுவைப் பொறுத்தவரையில் அரசர் என்பவர் பணியாளர்.
பணியாளருக்கு என்று எந்தவொரு விருப்பு வெறுப்பும் இருக்க
முடியாது. அவர் முழுக்க முழுக்க தன் தலைவருக்கு உரியவராக
இருக்கிறார். இந்த நிலையை அடைய நிறைய சரணாகதி வேண்டும்.
ஏனெனில், இயல்பாகவே நம் உடலில் உள்ள ஜீன்கள் ஆளப்பிறந்தவை.
அவை எவ்வழியிலும் தங்களைக் காத்துக்கொள்ளும் துணிவு
பெற்றவை. அவை தன்னலம் ஆனவை. எந்நேரமும் அவை தங்களை மட்டுமே
முன்நிறுத்துபவை. ஆக, நம் உடலின் ஜீன்களுக்கும்,
உள்ளத்தின் பேரார்வத்திற்கும் எதிர்திசையில் செல்வதுதான்
பணியாளர் நிலை. ஏனெனில், பணியாளர் நிலை என்பது ஒரு
நொறுங்குநிலை உணர்வு. இங்கே, ஒருவரின் விருப்பு, வெறுப்பு,
நல்லது, கெட்டது எதுவும் மதிக்கப்படாது. ஒருவர் எந்நேரமும்
கடிந்துகொள்ளப்படலாம், சந்தேகப்படப்படலாம், குற்றம்
சுமத்தப்படலாம், பணிநீக்கம் செய்யப்படலாம்,
தண்டிக்கப்படலாம். அரசநிலைக்கு எதிர்நிலை இது. ஏனெனில்,
அரசரை யாரும் கடிந்துகொள்ளவோ, சந்தேகப்படவோ, குற்றம்
சுமத்தவோ, தண்டிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ முடியாது.
இப்படியாக, பணியாளர் நிலையோடு தன் அரசநிலையைப்
பொருத்திப்பார்க்கிறார் இயேசு. என்னை அரசனாக்கும்
இரண்டாவது பண்பும் இதுவே.
3. அவரின் குரலுக்குச் செவிமடுத்தல்
'உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச்
செவிசாய்க்கின்றனர்' (யோவா 18:38). மெல் கிப்ஸன் அவர்கள்
இயக்கிய தெ பேஸ்ஷன் ஆஃப் தெ க்ரைஸ்ட் என்ற திரைப்படத்தில்
பிலாத்துவுக்கும், அவருடைய மனைவி கிளவுதியாவுக்கும் இடையே
ஓர் உரையாடல் நடக்கும்: பிலாத்து: 'உண்மையா அது என்ன
கிளவுதியா? எனக்கு நீ அதைச் சொல்வாயா?' கிளவுதியா: 'அதை
நீங்களாகக் கேட்கும் வரை உங்களுக்கு யாரும் சொல்ல
முடியாது.' ஆக, நானாகக் கேட்காமல் உண்மையை நான்
அறிந்துகொள்ள முடியாது. அவரின் குரலே என் மனத்தில்
உண்மையாக ஒலித்துக் கொண்டிருந்தால்தான் வெளியில் இருக்கும்
உண்மை எனக்குத் தெரியும். இன்று நான் விரும்பிக் கேட்கும்
அலைபேசி அல்லது நேரடி உரையாடல்கள், விரும்பாமல் கேட்கும்
காணொளி, இசை என குரல்கள் என் காதுகளில் விழுந்துகொண்டே
இருக்கின்றன. இந்தக் குரல்களும் என் உள்ளத்தில் கேட்கும்
அவரின் குரல்களும் எதிரெதிரே இருக்கின்றன. நான்
எக்குரலுக்குச் செவிமடுக்கிறேனோ, அக்குரலைப் பொறுத்தே என்
உண்மையை நிர்ணயம் செய்கிறேன். அவரின் குரலை நான் கேட்பதும்
அரச நிலைக்கு என்னை உயர்த்தும்.
இறுதியாக,
'அவரை அரசர்' எனக் கொண்டாடும் நான், 'அவரை நான் என் அரசராக
ஏற்கிறேனா?' எனக் கேட்டு, அதற்குரிய பண்புகளை என் வாழ்வில்
செயல்படுத்தினால், எனக்கும், என் குடும்பம், பணியிடம்,
சமூகம் என அனைத்து நிலைகளிலும் நான் அரசராக இருக்க
முடியும். அவரைக் கொண்டாடும் நான் இன்று என்னையே
கொண்டாடுகிறேன். அவரை அரசராக ஏற்கும் நானும் அரசராகிறேன்.
இதுதான் அவருடைய அரசின் மாற்றம், ஏற்றம், தோற்றம் - இதையே
காட்சியில் காண்கின்றனர் தானியேலும் (முதல் வாசகம்),
யோவானும் (இரண்டாம் வாசகம்).
Rev. Fr. Yesu Karunanidhi.
இன்றைய வாசகங்கள்:-
தானியேல் 7:13-14
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37
நான் சிறுவனாக இருந்த காலத்தில் எனக்குப் பெரியோர்கள்
சொன்ன கதையெல்லாம், ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு
ஒரு ராணி இருந்தாள் என்றுதான் தொடங்கக் கேட்டிருக்கிறேன்.
நாடக மேடைகளில் நடிக்கப்பட்ட நாடகங்கள் எல்லாம் ராஜா, மந்திரி,
அரண்மனை காட்சிகளாகத்தான் அமைந்தன. நமது நாட்டிலும் 50 ஆண்டுகளுக்கு
முன்பாக ஆங்கிலேயர் காலத்தில் நடந்ததும் முடியாட்சிதானே!
பேரரசு என்று கூறப்படும் இங்கிலாந்தில் முடியாட்சி என்பது
பெருமைப்படும் ஒரு காரியமாக இருந்து வந்துள்ளது. பல்லாண்டு
வாழ்க எம் பேரரசு, எம் பேரரசி என்றெல்லாம் பெருமை கொண்டார்கள்
மக்கள். இங்கிலாந்து மட்டுமல்ல, உலகமேதான். ஏனெனில்
முடியாட்சி என்பது ஜனநாயம் அற்ற ஒரு நிலை. இருந்தாலும்
முடியாட்சிக்கு உரியவர்கள் நல்லவர்களாக வாழ, வழிநடத்த உருவாக்கப்பட்டு
வந்ததாகத்தான் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இன்று
முடியாட்சிக்கு உரியவர்கள் எத்தனையோ விதத்தில் தங்கள் மானம்,
மரியாதை, மதியை இழந்து வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலையைத்
தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மக்கள்
விழிப்புணர்வு பெற்ற இந்த காலகட்டத்தில் முடியாட்சிக்கு
முற்றுப்புள்ளி வைத்துக் குடியாட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை
அகில உலக அரசராகப் போற்றி இன்று விழா எடுத்துக்
கொண்டிருக்கிறோம்.
இயேசு வாழ்ந்த காலத்தில் தான் ஒரு அரசர் என்றே காட்டிக்
கொள்ளாது எளிமையிலே வாழ்ந்து தன் அரசு உடைமை இன்றி, அரசத்
தன்மையையே மறைத்தவராக வாழ்ந்துள்ளாரே. அப்படி என்றால் அவரது
அரசின் பொருள் என்ன?
பிலாத்தின் முன்பாகக் கூறுகிறார் என் அரசு இவ்வுலகைச்
சார்ந்ததன்று. இவ்வுலகைச் சார்ந்ததாக இருந்தால் நான் யூதரிடம்
கையளிக்கப்படாதபடி என் காவலர்கள் எனக்காகப் போராடி இருப்பார்கள்.
உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே என் அரசு. அதற்காகவே வந்தேன்.
உண்மையைச் சார்ந்தவன் எவனும் என் குரலுக்குச் செவி
கொடுக்கிறான் (யோவா. 18:36).
மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும் பலருடைய
மீட்புக்கு விலையாகவும் தன் உயிரை அளிக்கவுமே வந்தேன் (மத்.
20:28) என்றார்.
எபிரேயருக்குத் திருமடலை வரைந்தவர் கூறும் வார்த்தைகள்: இயேசு
கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்
(எபி. 13:8). மற்றவர்கள் எல்லாம் மாறி, மறையும் தன்மை உடையவர்கள்.
ஆனால் இயேசு கிறிஸ்துவோ என்றுமே மாறாதவர். எனவேதான் கபிரியேல்
தூதர் அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றும் அரசாள்வார்.
அவரது ஆட்சிக்கு என்றுமே முடிவு இராது (லூக். 1:33) என்றார்.
இந்த அரசராம் இயேசுவைப் பற்றிப் புனித பவுல் அடிகளார் மிக
அழகாகச் சித்திரிக்கின்ற வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்ட
விரும்புகிறேன். கடவுள் தன்மையில் விளங்கிய அவர் தம்மையே
வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார்.
தந்தை அவரை உயர்த்தியதால் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும்
மண்டியிட இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று எல்லா நாவுகளும் அறிக்கையிடும்
(பிலி. 2:6-11) என்று விவரிக்கிறார்.
இந்த அன்பின் பிணைப்பால், ஆட்சி புரியும் இந்த ஒப்பற்ற
அரசராம் இயேசுவின் பரமத் திருநாட்டின் குடிமக்களாக இருப்பதில்
நாம் பெருமைப்படுகின்றோம். பெருமையால் நம் இல்லமும் இன்று
விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாக் கொண்டாடும் நாம் என்ன செய்ய வேண்டும்?
அவரது குரலைக் கேட்கும் ஆடுகளாக நாம் இருக்க வேண்டும்.
நீங்கள் என் கட்டளையைக் கடைப்பிடித்தால் என் அன்பில்
நிலைத்திருப்பீர்கள். என் நண்பர்களாக இருப்பீர்கள் (யோவா.
15:10).
செய்தியிலே வாசிக்கின்றோம். ஜான் டேவிட் , இவன் ஒரு கிறிஸ்தவனா?
இவனா இப்படிப்பட்ட இழிச் செயலைச் செய்தான்?
அன்றொரு நாள் கற்பழிப்பு கொலைக் குற்றத்திற்கு ஆளாகிய ஒருவன்
நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டான். கழுத்திலே சிலுவையை அணிந்திருந்த
அந்தக் கைதியை நோக்கி நீ ஒரு கிறிஸ்தவனா? சிலுவை அணியும்
நீயா இப்படிச் செய்தாய் என்று கேட்டார் நீதிபதி.
அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
நீதிபதியாரே என் கழுத்தில் இருக்கும் சிலுவைக் கல்வாரியின்
நடுவில் தொங்கிய இயேசுவின் சிலுவை அல்ல. வலது புறத்தில்
தொங்கினானே கள்ளன் அவனது சிலுவையும் அல்ல. ஆனால் இடது புறத்து
கள்ளனின் சிலுவை என்றான். இது எப்படி இருக்கு!
புறமுதுகு காட்டி ஓடிய அலெக்சாண்டர் என்ற போர் வீரனை
நோக்கிக் கூறினாரே பேரரசர் : 'நண்பா! நீ என்னோடு இருக்க
வேண்டுமென்றால் உன் நடத்தையை மாற்றிக் கொள். இல்லையேல் உன்
பெயரை மாற்றிவிடு' என்றாரே! அந்தச் சிந்தனையை மட்டும் உங்கள்
முன் வைக்கிறேன்.
பாவங்களிலிருந்து விடுவித்த அரசர்!
நிகழ்வு: பன்னிரண்டாம் நூற்றாண்டில், இங்கிலாந்தை ஆட்சி
செய்தவர் முதலாம் லிச்சர்ட். இவர் 1193 ஆம் ஆண்டு, எருசலேமில்
நடைபெற்ற சிலுவைப்போரில் கலந்துகொண்டுவிட்டு, ஆஸ்திரியா
வழியாக இங்கிலாந்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்பொழுது ஆஸ்திரியாவை ஆட்சி செய்தவர் நான்காம் லியோபோல்ட்
(Leopold IV) என்ற மன்னர்.
இந்த நான்காம் லியோபோல்ட், தன்னுடைய நாட்டின் வழியாக வந்த
முதலாம் ரிச்சர்டைக் கைதுசெய்து சிறையிலடைத்தார். தவிர,
அவரை விடுவிக்க வேண்டுமெனில் மூன்று டன் வெள்ளியை அனுப்பவேண்டும்
என்று அவர் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு அறிவிப்புக்
கொடுத்தார். இங்கிலாந்து நாட்டுமக்கள் முதலாம் ரிச்சர்ட்மீது
மிகுந்த அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்ததால்,
அவர்கள் மூன்று டன் வெள்ளி சேகரித்து, ஆஸ்திரிய மன்னர்
நான்காம் லியோபோல்ட்டிடம் அனுப்பி வைக்க, அதன் பிறகே அவன்,
இங்கிலாந்து மன்னரை விடுவித்தான்.
மன்னர் நாட்டு மக்களை விடுவிப்பது போய், நாட்டு மக்களே மன்னரை
விடுவித்த இந்த நிகழ்வு மிகவும் துயரமானது. ஆனால், ஆண்டவர்
இயேசு நம் அனைவரையும் பாவத்திலிருந்து விடுவித்தார். அதனாலேயே
அவர் அனைத்துக்கும் அரசராக இருக்கின்றார். அன்னையாம் திருஅவை
இன்று, அனைத்துக்கும் அரசராம் நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்து என்ற பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. இப்பெருவிழா
நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
என்றுமுள்ள அரசர்
உலக வரலாற்றில் எத்தனையோ அரசர்கள் தோன்றியிருக்கின்றார்கள்,
அவர்கள் பல நாடுகளையும் தங்களுடைய அதிகாரத்திற்குக் கீழ்
கொண்டுவர என்னவெல்லாமோ செய்திருக்கின்றார்கள். அவர்கள்
தோன்றிய வேகத்தில் மறைந்து போனார்கள் என்பதுதான் வேதனை கலந்த
உண்மை. உலக நாடுகளையெல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வர முயன்ற மாவீரன் அலெக்சாண்டர் இன்றைக்கு இருந்த
இடம் தெரியவில்லை. பல நாடுகள்மீது படையெடுத்துச் சென்று
வெற்றிகொண்ட மாவீரன் நெப்போலியனை நினைத்துப் பார்ப்பதற்கு
இன்று ஆளில்லை. இப்படி எத்தனையோ அரசர்களைச் சொல்லிக்கொண்டே
போகலாம்; ஆனால், ஈராயிரம் ஆண்டுகள் ஆனபின்னும் இன்றுக்கும்
மக்களுடைய மனங்களில் நிறைந்திருக்கின்ற ஓர் அரசர் இருக்கின்றார்.
அவர்தான் அனைத்துலக அரசரான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
இயேசுவின் ஆட்சியும் அவரது அரசும் என்றென்றும்
நிலைத்திருக்கக் காரணம், அவை தொன்மை வாய்ந்தவரும், அகரமும்
னகரமுமானவருமான கடவுளால் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டன என்பதாலேயே
ஆகும். இதைத் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகமும், திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகமும் மிகத் தெளிவாக விளக்குகின்றன. மேகங்கள்மீது
வருகின்ற மானிட மகனாம் இயேசு, தொன்மை வாய்ந்த கடவுள் அருகில்
வருகின்றார். கடவுள் அவருக்கு ஆட்சியுரிமையையும்
மாட்சியையும் அரசையும் கொடுக்கின்றார். இதனால் இயேசுவின்
அரசு என்றுமுள்ள அரசாகத் திகழ்கின்றது. ஆம், மனிதர்களிடமிருந்து
ஆட்சியுரிமையைப் பெற்றவர்கள் நிலைத்து நிற்கமுடியாமல் போகலாம்.
இயேசு கடவுளிடமிருந்து ஆட்சியுரிமையைப் பெற்றதால், அவரது
அரசு என்றுமுள்ள அரசு ஆகும். அதனால் அதற்கு முடிவே இல்லை.
உண்மையின் அரசர்
இயேசு கிறிஸ்து என்றுமுள்ள அரசர் என்று இறைவார்த்தை எடுத்துக்கூறும்
அதே வேளையில், இன்றைய நற்செய்தி வாசகம் அவர் உண்மையின்
அரசர் என்று எடுத்துக்கூறுகின்றது.
பிலாத்துவைப் போன்று, உண்மையா அது என்ன? என்று கேட்கக்கூடியவர்கள்
இங்கே ஏராளம். காரணம், இன்றைய அரசுகளும் சரி, மக்களும் சரி
பொய் புரட்டிலும், போலித்தனத்தாலும் தங்களுடைய
வாழ்க்கையைக் கட்டி எழுப்பியிருக்கின்றார்கள். இதனாலேயே
அவர்கள், உண்மையா அது என்ன? என்று கேட்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு கிறிஸ்து தன்னுடைய அரசை உண்மையில்
கட்டி எழுப்பி இருக்கின்றார். ஏனெனில், அவரே உண்மையாக இருக்கின்றார்
(யோவா 14:6).
உண்மை இருக்கும் இடத்தில் போலித்தனங்களுக்கு இடமில்லை; ஏன்,
தீமைக்குக் கூட இடமில்லை. மாறாக, நன்மை இருக்கும். ஆண்டவர்
இயேசு உண்மையின் அரசராக இருந்ததால், அவர் சென்ற இடங்களில்
எல்லாம் நன்மை செய்து கொண்டே சென்றார் (திப 10: 38). ஆகவே,
உண்மை இருக்கும் இடத்தில் நன்மை இருக்கும் என்பதாலும், இயேசு
நன்மையின் ஊற்றாய் இருக்கிறார் என்பதாலும், அவர் உண்மையின்
அரசராக இருக்கின்றார். அவரைப் போன்று யாரெல்லாம் உண்மையின்
வழி நடக்கின்றார்களோ, அவர்கள் இயேசுவின் ஆட்சிக்கு உட்படுவர்
என்பது உறுதி.
நம்மைப் பாவங்களிலிருந்து விடுவித்த
அரசர்
புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு
கூறுவார்: அனைவரின் மீட்புக்காக இயேசு தம்மையே ஈடாகத் தந்தார்
(1 திமொ 2:6). புனித பவுல் கூறும் இவ்வார்த்தைகள் மிகவும்
முக்கியமானவை. ஏனெனில், உலக வரலாற்றில் எத்தனையோ அரசர்கள்
தோன்றியிருந்தாலும், அனைத்து மக்களுடைய மீட்புகாகத் தம்மையே
தந்த அரசர்கள் சொற்பம். ஏன், இல்லவே இல்லை என்றுகூடச் சொல்லலாம்;
காரணம், ஓர் அரசர் தன் அதிகாரத்திற்கு உட்பட நாட்டு மக்களுக்காக
வேண்டுமானால், தம் உயிரைக் கொடுக்கலாம், கொடுத்திருக்கலாம்;
அனைவரின் மீட்புக்காக ஓர் அரசர் தம்மையே தருவதற்கு
வாய்ப்பு குறைவு. ஆனால், இயேசு கிறிஸ்து அனைவரின்
மீட்புக்காகத் தம்மையே தருகின்றார். மேலும், இன்றைய இரண்டாம்
வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று இயேசு நம்மைப் பாவங்களிலிருந்து
விடுவிக்கின்றார்.
ஆம், ஆதாமினால் வந்த பாவத்தை, இயேசு தம் விலைமதிக்கப்
பெறாத இரத்தத்தை ஈடாகத் தந்து, நம்மைப் பாவத்திலிருந்து
விடுவித்தார். இது இவ்வுலகில் இதுவரைக்கும் தோன்றிய அரசர்களில்
யாருமே செய்யாத ஒரு செயல். அதனாலேயே இயேசு கிறிஸ்து ஒப்பற்ற
அரசராகத் திகழ்கின்றார். எனவே, என்றுமுள்ள அரசரும், உண்மையின்
அரசரும், நம்மைப் பாவங்களிலிருந்து விடுவித்த அரசரருமான ஆண்டவர்
இயேசுவின் வழியில் நடந்து, அவரது ஆட்சியுரிமையில் பங்கு
பெறுவோம்.
சிந்தனை
உமது ஆட்சி வருக (மத் 6:10) என்று இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு
இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்திருப்பார். எனவே, நாம்
உமது ஆட்சி வருக என்று கடவுளிடம் மன்றாடுவோம். அதே நேரத்தில்,
நாம் கடவுளின் ஆட்சிக்கு உட்படுவதற்கு அவருக்கு உகந்த
வழியில் நடப்போம். உண்மையையும் நீதியையும் அன்பையும் இரக்கத்தையும்
நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
நான் சிறுவனாக இருந்த காலத்தில் எனக்குப் பெரியோர்கள்
சொன்ன கதையெல்லாம், ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார்.
அவருக்கு ஒரு ராணி இருந்தாள் என்றுதான் தொடங்கக்
கேட்டிருக்கிறேன். நாடக மேடைகளில் நடிக்கப்பட்ட நாடகங்கள்
எல்லாம் ராஜா, மந்திரி, அரண்மனை காட்சிகளாகத்தான் அமைந்தன.
நமது நாட்டிலும் 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர்
காலத்தில் நடந்ததும் முடியாட்சிதானே! பேரரசு என்று
கூறப்படும் இங்கிலாந்தில் முடியாட்சி என்பது பெருமைப்படும்
ஒரு காரியமாக இருந்து வந்துள்ளது. பல்லாண்டு வாழ்க எம்
பேரரசு, எம் பேரரசி என்றெல்லாம் பெருமை கொண்டார்கள்
மக்கள். இங்கிலாந்து மட்டுமல்ல, உலகமேதான். ஏனெனில்
முடியாட்சி என்பது ஜனநாயம் அற்ற ஒரு நிலை. இருந்தாலும்
முடியாட்சிக்கு உரியவர்கள் நல்லவர்களாக வாழ, வழிநடத்த
உருவாக்கப்பட்டு வந்ததாகத்தான் சரித்திரம் கூறுகிறது.
ஆனால் இன்று முடியாட்சிக்கு உரியவர்கள் எத்தனையோ விதத்தில்
தங்கள் மானம், மரியாதை, மதியை இழந்து வெறுப்பைச்
சம்பாதிக்கும் நிலையைத் தோற்றுவித்துக்
கொண்டிருக்கிறார்கள். இதனால் மக்கள் விழிப்புணர்வு பெற்ற
இந்த காலகட்டத்தில் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி
வைத்துக் குடியாட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை
அகில உலக அரசராகப் போற்றி இன்று விழா எடுத்துக்
கொண்டிருக்கிறோம்.
இயேசு வாழ்ந்த காலத்தில் தான் ஒரு அரசர் என்றே காட்டிக்
கொள்ளாது எளிமையிலே வாழ்ந்து தன் அரசு உடைமை இன்றி, அரசத்
தன்மையையே மறைத்தவராக வாழ்ந்துள்ளாரே. அப்படி என்றால்
அவரது அரசின் பொருள் என்ன?
பிலாத்தின் முன்பாகக் கூறுகிறார் என் அரசு இவ்வுலகைச்
சார்ந்ததன்று. இவ்வுலகைச் சார்ந்ததாக இருந்தால் நான்
யூதரிடம் கையளிக்கப்படாதபடி என் காவலர்கள் எனக்காகப்
போராடி இருப்பார்கள். உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே என்
அரசு. அதற்காகவே வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் என்
குரலுக்குச் செவி கொடுக்கிறான் (யோவா. 18:36).
மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும் பலருடைய
மீட்புக்கு விலையாகவும் தன் உயிரை அளிக்கவுமே வந்தேன்
(மத். 20:28) என்றார்.
எபிரேயருக்குத் திருமடலை வரைந்தவர் கூறும் வார்த்தைகள்:
இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராய்
இருக்கிறார் (எபி. 13:8). மற்றவர்கள் எல்லாம் மாறி,
மறையும் தன்மை உடையவர்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ என்றுமே
மாறாதவர். எனவேதான் கபிரியேல் தூதர் அவர் யாக்கோபின்
குலத்தின் மீது என்றும் அரசாள்வார். அவரது ஆட்சிக்கு
என்றுமே முடிவு இராது (லூக். 1:33) என்றார்.
இந்த அரசராம் இயேசுவைப் பற்றிப் புனித பவுல் அடிகளார் மிக
அழகாகச் சித்திரிக்கின்ற வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்ட
விரும்புகிறேன்.
கடவுள் தன்மையில் விளங்கிய அவர் தம்மையே வெறுமையாக்கி
அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார்.
தந்தை அவரை உயர்த்தியதால் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர்
அனைவரும் மண்டியிட இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று எல்லா
நாவுகளும் அறிக்கையிடும் (பிலி. 2:6-11) என்று
விவரிக்கிறார்.
இந்த அன்பின் பிணைப்பால், ஆட்சி புரியும் இந்த ஒப்பற்ற
அரசராம் இயேசுவின் பரமத் திருநாட்டின் குடிமக்களாக
இருப்பதில் நாம் பெருமைப்படுகின்றோம். பெருமையால் நம்
இல்லமும் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாக் கொண்டாடும் நாம் என்ன செய்ய வேண்டும்?
அவரது குரலைக் கேட்கும் ஆடுகளாக நாம் இருக்க வேண்டும்.
நீங்கள் என் கட்டளையைக் கடைப்பிடித்தால் என் அன்பில்
நிலைத்திருப்பீர்கள். என் நண்பர்களாக இருப்பீர்கள் (யோவா.
15:10).
செய்தியிலே வாசிக்கின்றோம். ஜான் டேவிட் , இவன் ஒரு
கிறிஸ்தவனா? இவனா இப்படிப்பட்ட இழிச் செயலைச் செய்தான்?
அன்றொரு நாள் கற்பழிப்பு கொலைக் குற்றத்திற்கு ஆளாகிய
ஒருவன் நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டான். கழுத்திலே
சிலுவையை அணிந்திருந்த அந்தக் கைதியை நோக்கி நீ ஒரு
கிறிஸ்தவனா? சிலுவை அணியும் நீயா இப்படிச் செய்தாய் என்று
கேட்டார் நீதிபதி.
அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
நீதிபதியாரே என் கழுத்தில் இருக்கும் சிலுவைக் கல்வாரியின்
நடுவில் தொங்கிய இயேசுவின் சிலுவை அல்ல. வலது புறத்தில்
தொங்கினானே கள்ளன் அவனது சிலுவையும் அல்ல. ஆனால் இடது
புறத்து கள்ளனின் சிலுவை என்றான். இது எப்படி இருக்கு!
புறமுதுகு காட்டி ஓடிய அலெக்சாண்டர் என்ற போர் வீரனை
நோக்கிக் கூறினாரே பேரரசர் : 'நண்பா! நீ என்னோடு இருக்க
வேண்டுமென்றால் உன் நடத்தையை மாற்றிக் கொள். இல்லையேல் உன்
பெயரை மாற்றிவிடு' என்றாரே! அந்தச் சிந்தனையை மட்டும்
உங்கள் முன் வைக்கிறேன்.
இன்றைய வாசகங்கள்:-
தானியேல் 7:13-14
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37
உண்மையே விடுதலை அளிக்கும்!
இன்றைய நற்செய்தியிலே இயேசு இவ்வுலகத்தில் எதற்காகப் பிறந்தார்
என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். உண்மையை எடுத்துரைப்பதே
என் பணி; இதற்காகவே பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன்:
உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச்
செவிசாய்க்கின்றனர் (யோவா 18:37) என்கின்றார் இயேசு.
ஒரு நாட்டைப் பேரரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் வாரிசு
இல்லா அரசன்! அவனுக்குப் பிறகு நாட்டை ஆள ஆண் வாரிசு ஒருவனைத்
தேர்ந்தெடுக்க நாட்டிலிருந்த தலைசிறந்த பன்னிரெண்டு இளைஞர்களை
அழைத்துவரச் சொன்னான். பன்னிரெண்டு பேரும் வந்து நின்றனர்.
அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான்.
விதைகள் நிரம்பிய கூடையைக் காட்டி :
"இளைஞர்களே, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதையைப் பொறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் எடுக்கும் விதையைக் கொண்டு செழிப்பான செடியை யார்
வளர்த்துக்காட்டுகின்றீர்களோ அவரே அடுத்த அரசர். மூன்று மாதங்கள்
கழித்துச் சந்திப்போம்" என்றான்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு பதினோரு தொட்டிகளில் அழகான
செடிகள் காணப்பட்டன. ஒரே ஒரு தொட்டி மட்டும் வெற்றுத்
தொட்டியாக இருந்தது! அந்தத் தொட்டிக்குச் சொந்தமான இளைஞனைத்
தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்தான் அரசன். மற்ற பதினோரு
பேரும் திகைத்து நின்றார்கள்.
அவர்களைப் பார்த்து அரசன், "நான் தந்த விதைகள் அனைத்துமே
வேகவைத்துக் காயவைத்த விதைகள். பின் எப்படி உங்கள் தொட்டிகளில்
செடிகள் முளைத்தன? வாய்மையே வெல்லும். நீங்கள்
வீட்டுக்குப்போகலாம் என்றான்.
இந்தக் கதையில் வந்த அரசனைப் போன்றவர்தான் நமது கிறிஸ்து
அரசர். இயேசு, வழியும், உண்மையும், வாழ்வும் நானே (யோவா
14:6) என்கின்றார். தந்தையே! உண்மையினால் அவர்களை (அவரிடம்
ஒப்படைக்கப்பட்டவர்களை) உமக்கு அர்ப்பணமாக்கியருளும் (யோவா
17:17) என்று இயேசு மன்றாடுகின்றார்.
இயேசுவுக்கு உண்மையை மிகவும் பிடிக்கும்.
காரணம் உண்மை அழிந்து போகாத அரசுக்கு நம்மை அழைத்துச்
செல்லும் (தானி 7:14). உண்மை அகரமும், னகரமுமான (இரண்டாம்
வாசகம்) இயேசுவுக்கு நம்மை செவிசாய்க்க வைக்கும் (யோவா
18:37). உண்மை நமக்கு விடுதலை அளிக்கும் (யோவா 8:32).
மாறாக பொய் கடவுளிடமிருந்து மனிதனைப் பிரிக்கும் (தொநூ
3:1-12). பொய் தூய ஆவியாருக்கு எதிராக நம்மைச் செயல்படத்
தூண்டும் (திப 5:1-10).
இன்று இயேசு உண்மையையும், பொய்யையும் சுட்டிக்காட்டி நீங்கள்
எதைத் தேர்ந்தெடுக்கப்போகின்றீர்கள்? என்று கேட்கின்றார்.
நாம் என்ன பதில் சொல்லப்போகின்றோம்? '
மேலும் அறிவோம்:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் : 297).
பொருள் : ஒருவன் பொய் பேசாமையினை இடைவிடாது தொடர்ந்து
மேற்கொண்டால், அதுவே அவனுக்குப் பேரறமாகும்! செய்யக்கூடாதவற்றைச்
செய்யாதிருத்தல் மேலும் பெருமைதரும்.
இன்றைய வாசகங்கள்:-
தானியேல் 7:13-14
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா
மாமன்னன் நெப்போலியன் மமதையில் இருந்த காலத்தில் பின்வருமாறு
கூறினார்; "உலக வரலாற்றில் மகான்கள் என்று அழைக்கப்படத் தகுதியுடையவர்கள்
மூவர் மட்டுமே; மாமன்னன் அலெக்சாண்டர், நெப்போலியனாகிய
நான், நாசரேத் ஊர் இயேக கிறிஸ்து." ஆனால், அவர் 'வாட்டர்லூர்'
என்ற இடத்தில் நடந்த போரில் படுதோல்வி அடைந்து, 'கெலேனா'
என்ற தீவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவ்வேளையில் ஒருவர் அவருடைய பழைய மகிமையை நினைவூட்டியபோது,
நெப்போலியன் கூறினார்: அதிகாரம், மகிமை எல்லாம் வெறும்
புகை. ஒரு காலத்தில் அலெக்சாண்டரை மகான் என்று அழைத்தேன்.
இப்போது அவருடைய எலும்புகளைக்கூட காண முடியவில்லை. என்னையே
மகான் என்ற அழைத்துக் கொண்டேன், இப்போது அந்நிய நாட்டில்
ஆரியணையோ, போர் வீரர்களோ இன்றி சிறைக் கைதியாக வாழ்ந்து
கொண்டிருக்கிறேன், நாசரேத்தூர் இயேசு கிறிஸ்து இறந்து இரண்டாயிரம்
ஆண்டுகள் ஆன பின்னும், அவரது அரசு மறையவில்லை, அலெக்சாண்டரும்
நானும் ஆயுத பலத்தால் ஆட்சி செய்தோம். எங்கள் ஆட்சி நிலை
பெறவில்லை. ஆனால் கிறிஸ்து அன்பினால் ஆட்சி செய்கிறார்,
அவரது அரசு என்றும் நீடிக்கும்," திருவழிபாட்டு ஆண்டிகள்
சிகரமாக இன்று கிறிஸ்து அரசருடைய பெருவிழாவைக்
கொண்டாடுகிறோம். கிறிஸ்து உண்மையிலேயே ஓர் அரசர். அரசர்களுக்கெல்லாம்
அரசர், அவராலேயே அனைத்தும் படைக்கப்பட்டன. அவராலேயே அனைத்தும்
மீட்கப்பட்டன, படைப்பாலும் மீட்பாலும் அனைத்தும் அவருக்கு
உரியன. இன்றைய முதல் வாசகம், கிறிஸ்து அரசர் என்றும், அவரது
ஆட்சிக்கு முடிவு இராது என்றும் கூறுகிறது (தானி 7:13-14).
இரண்டாம் வாசகம், கிறிஸ்துவுக்கு மாட்சியும் ஆற்றலும் என்றென்றும்
உரியன என்று அறிக்கையிடுகிறது (திவெ 1:6), நற்செய்தியில்,
கிறிஸ்து தாம் அரசர் என்றும், ஆனால் அவரது ஆட்சி இவ்வுலக
ஆட்சி போன்றது அல்ல என்றும் தெளிவுபடுத்துகிறார்,
கிறிஸ்துவின் அரசு எல்லா நாடுகளையும் மக்களையும் அரவனைக்கும்
அரசு, இன்றைய பெருவிழாவின் தொடக்கவுரை அறிக்கையிடுவதுபோல,
கிறிஸ்துவின் அரசு, 'உண்மையின் அரசு, வாழ்வுதரும் அரசு,
புனிதமும் அருளும் கொன்ட அரசு, நீதியும் அன்பும் அமைதியும்
கொண்ட அரசு." கிறிஸ்துவின் அரசு இவ்வுலகைச் சார்ந்தது என்று
யூத மக்கள் எண்ணினார்கள். அவரை அரசியல் மெசியாவாகக் கருதினர்.
ஆனால் கிறிஸ்து அவர்களது எண்ணம் தவறானது என்று தெளிவுபடுத்தினார்
கிறிஸ்து. அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அளிக்க வரவில்லை
, மாறாக, மக்களைப் பாவத்திலிருந்து விடுவிக்க வந்தார். பாவம்
செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை; கிறிஸ்து ஒருவரே பாவத்திலிருந்து
விடுவிக்க வல்லவர் (யோவா 8:34-36). கிறிஸ்துவோடு
சிலுவையில் அறையப்பட்ட இரு கள்வர்கள் அவரின் அரசைப்பற்றி
மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர், ஒரு கள்வன்
கிறிஸ்துவிடமிருந்து உடனடியாக விடுதலையை எதிர்பார்த்து.
"நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று" (லூக்
23:39) என்றான். ஆனால், மற்றொரு கள்வன் கிறிஸ்துவின் அரசு
நிறைவுகால அரசு என்பதை உணர்ந்து, " இயேசுவே, நீர் ஆட்சியுரிமை
பெற்று வரும்போது என்னை நினைவுகூர்ந்தருளும் (லூக் 23:42)
என்றான். கிறிஸ்துவில் அரசு இவ்வுலகைச் சார்ந்த அரசாக இருந்திருப்பின்,
அவர் சாவுக்கு உள்ளாகாதவாறு, அவருடைய காவலர்கள்
போராடியிருப்பர் (யோவா 18:36).
தம்முடைய சீடர்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் உடனடியாக
விடுவிக்கப் போவதாக கிறிஸ்து ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை,
மாறாக, அவர்கள் துன்புற்று இன்புறுவார்கள் என்றுதான் வாக்களித்தார்.
'நீங்கள் அழுவீர்கள். புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும்
நீங்கள் துயருறுவீர்கள், ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக
மாறும்" (யோவா 16:20).
கிறிஸ்துவின் அரசு வல்லரசு அல்ல, மாறாக வாய்மையின் அரசு.
உண்மையை எடுத்துரைக்கவே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்
(போவா 18:37). கிறிஸ்துவே உண்மை; அவர் வழியாகவே நாம் தந்தையை
அடைய முடியும் (யோவா 14:6), உண்மையால் கிறிஸ்து தம் சீடர்களை
அர்ப்பணமாக்குகின்றார் (யோவா 17:17),
உண்மையா? அது என்ன? (யோவா 18:23), உள்ளம் என்பது ஆமை, அதில்
உண்மை என்பது ஊமை, சொல்லில் வருவது பாதி; நெஞ்சில் தங்கிக்
கிடப்பது மீதி: முழு உண்மையைப் பேசுவோர் யாருமில்லை.
"வாய்மையே வெல்லும்" என்பது நமது நாட்டின் விருதுவாக்கு,
ஆனால் அரசியல் தலைவர்கள் எல்லாம் அண்டப் புளுகர்களும், ஆகாசப்
புளுகர்களாகவும் இருந்து. பொய்யானத் தகவல்களைக் கூறி மக்களை
ஏமாற்றுகின்றனர், இக்கட்டத்தில் முழு உண்மையை வெளிச்சத்திற்குக்
கொண்டு வருவது நமது கடமையாகும். உண்மை பேசுவோர் வேறு எந்த
அறத்தையும் செய்யத் தேவையில்லை என்கிறார் வள்ளுவர்,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)
ஓர் அரசியல்வாதி கூறுகிறார்; கொலை செய்தேன், என்னைக்
கொலைக்காரன் என்றனர்: திருடினேன், என்னைக் கொள்ளைக்காரன்
என்றனர்; இலஞ்சம் வாங்கினேன், என்னை ஊழல் பேர்வழி என்றனர்,
இம்மூன்றையும் செய்தபோது, என்னைத் தலைவன் என்கின்றனர்.
கொலை, கொள்ளை, இலஞ்ச ஊழல் பெருகிவரும் இக்காலத்தில் நம்
நாட்டில் நல்லாட்சி மலர்ந்திட உழைப்போம்; மன்றாடுவோம்.
ஒரு மகன் தன் அப்பாவிடம், "அப்பா, என் எதிர்காலம் பற்றி என்ன
கனவு காண்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, அப்பா கூறிய பதில்:
நீ பிறந்ததிலிருந்து எனக்குத் தாக்கமே இல்லை. அப்படியிருக்க
கனவு எப்படி வரும்?" கடவுள் மனிதரைப் படைத்ததற்காக வருந்தினாலும்
(தொநூ 8:6), கடவுள் இவ்வுலகிற்காக ஒரு கனவு கண்டுள்ளார்.
அதுதான் இறை அரசின் கனவு. அக்களவு என்ன? வாள் எடுத்துப்
போர் புரியாத உலகம் போர்க் கருவிகளை விவசாயக் கருவிகளாக
மாற்றும் உலகம் (எசா 2:4), சிங்கமும் செம்மறி ஆடும் ஒன்றாகப்
படுத்துறங்கும் உலகம் (எசா 11:6) ஆம், இறை அரசு அமைதியின்
அரசு: கிறிஸ்து அமைதியின் அரசா (எசா 11 9:8),
வன்முறையும் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்து, மனித சமுதாயத்தில்
அமைதி நிலவ அயராது உழைப்போம். அமைதிக்காக உழைப்பவர்களே கடவுளின்
மக்கள்."கிறிஸ்து ஆட்சி செய்தாக வேண்டும் (1கொரி 15:25),
ஏனெனில், அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் அவருடையது.
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
இன்றைய வாசகங்கள்:-
தானியேல் 7:13-14
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37
கிறிஸ்து அரசர் என்றால் நாம்.....
அரசன் என்ற சொல்லே வழக்கற்றுப் பொருளற்றுப் போன இந்நாளில்,
எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலையில் ஆயிரம் ஆயிரம்
உள்ளங்களை அன்பால் ஆட்சொண்டு உரிமையோடு ஆட்சி செய்யும் ஒரே
அரசர் கிறிஸ்து மட்டுமே!
இயேசுவின் இந்த இணையற்ற அரசுரிமை மரபுவழி பிறப்பால் அல்ல,
புரட்சியால் அல்ல, தேர்தலால் அல்ல மாறாக படைப்பால்
மீட்பால் பெற்ற , எவரும் பறிக்க முடியாத பிறப்புரிமை.
படைப்பால் உலகம் அவருக்குச் சொந்தம். "வாக்கு என்னும் அவரே
தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின.
உண்டானது எதுவும் அவராலன்றி உண்டாகவில்லை" (யோ . 1:2,3).
மீட்பால் உலகம் அவருக்குச் சொந்தம். ''ஒருவர் கிறிஸ்துவோடு
இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராக இருக்கிறார்...
இவை யாவும் கடவுளின் செயலே! அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத்
தம்மோடு ஒப்புரவாக்கினார்" (2 கொரி. 5:17,18).
ஆனால் அரசாளும் அவரது இந்த உரிமையின் பெருமை எப்படியெல்லாம்
வியப்புக்குரிய வகையில் வெளிப்படுகிறது!
எப்பொழுதெல்லாம் அரச மகிமைக்கான அறிகுறியோ அடையாளமோ
சிறிதும் இல்லையோ, அப்பொழுதெல்லாம் அவர் அரசர் எனத் தன் அன்பர்களால்
அல்ல, அந்நியரால் அறிமுகம் அற்றவரால் பறைசாற்றப்படுகிறார்
பகிரங்கமாக!
1. பெத்லகேம் குகையில் பிறந்தபோது .... மூவுலகாளும் வேந்தனின்
மகிமை மூன்று காணிக்கைகளிலே (மத். 2:11). கந்தையில்
பொதிந்த குழந்தையைக் கண்ட கீழ்த்திசை ஞானிகள் தூபமிட்டனர்.
தெய்வம் என்று காட்ட, மீரையை வைத்தனர். மனிதன் என்று கூற.
அந்தக் குழந்தை உண்மையான இறைவன் மட்டுமல்ல, உண்மையான மனிதன்
மட்டுமல்ல உண்மையான அரசன், மனித குலத்தின் மன்னன் என்று பறைசாற்றப்
பொன்னை வைத்து வணங்குகின்றனர். ஆம், தெய்வத்தின் வழிகள்
விந்தையானவை! எப்பொழுதெல்லாம் அரச மகிமைக்குரிய அறிகுறியோ
அடையாளமோ சிறிதும் இல்லையோ, அப்பொழுதெல்லாம்... இயேசு அரசராக
வெளிப்படுகிறார்.
2. கல்வாரிக் குன்றில் இறந்தபோது
..... மூவுலகாளும் மன்னனின்
பெருமை மூன்று மொழிகளிலே. (யோவான் 19:19,20). பாவி மனிதனாக
இயேசு சிலுவையில் தொங்கியபோது ரோமைப் பேரரசின் பதிலாள் பிலத்துவின்
ஆணையால், எழுதியது எழுதியதே என்ற மாற்ற முடியாத கட்டளையால்
பொறிக்கப்பட்ட வாக்கியம் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்"
உலக மொழிகள் இவைதாம் என்று கருதப்பட்ட மூன்று மொழிகள் :
நீதிக்கும் சட்டத்துக்கும் பேர் பெற்ற மொழி - லத்தீன்.
அழகுக்கும் இலக்கியத்துக்கும் புகழ் கண்ட மொழி - கிரேக்கம்
நடைமுறை வழக்கில் மக்கள் பயன்படுத்திய மொழி - எபிரேயம்
ஆம் தெய்வத்தின் வழிகள் விந்தையானவை! எப்பொழுதெல்லாம் அரச
மகிமைக்குரிய அறிகுறியோ அடையாளமோ சிறிதும் இல்லையோ, அப்பொழுதெல்லாம்......
இயேசு அரசராக வெளிப்படுகிறார்.
கிறிஸ்து அரசர் என்றால் நாம் யார்? அரசன் என்றதும் அடிமைகள்,
குடிமக்கள் இவர்களே நினைவுக்கு வருகின்றனர்.
திருமுழுக்கால் கடவுளின் மக்களாகிறோம். கிறிஸ்துவின் சகோதரர்களாகிறோம்.
கடவுள் மன்னர் என்றால் அவரது மக்கள்...? கிறிஸ்து அரசன் என்றால்
அவர்தம் சகோதரர்கள்....? நாம் இளவரசர்கள்! வேந்தர்
கிறிஸ்துவின் விந்தையான ஆட்சியில் நாம் அடிமைகள் அல்ல ஆளப்படுபவர்கள்
அல்ல. அத்தனை பேரும் ஆள வேண்டியவர்கள். அப்பெருமைக்கு ஏற்ப
வாழ வேண்டியவர்கள் ! பேதுரு அன்றே சொன்னார்: "நீங்கள் அரச
குருக்களின் கூட்டத்தினர்" (1 பேதுரு 2:9).
மாமன்னன் அலெக்சாண்டர் கோழையாகிவிட்ட வீரனைப் பார்த்து "உன்
பெயர் அலெக்சாண்டரா? ஒன்றில் உன் பெயரை மாற்று, இன்றேல்
நடத்தையை மாற்று என்றாராம். அப்படி நம்மைப் பார்த்து "நீ
கிறிஸ்தவனா? பெயரை மாற்று அல்லது வாழ்க்கையை மாற்று'' என்று
எவராவது கேட்க முடியுமா? இயேசுவால் கூட முடியாது.
திருமுழுக்கால் ஒருவன் கடவுளின் மகன். அவன் ஊதாரியாகலாம்
என்றாலும் என்றென்றும் அவன் கடவுளின் மகனே!
உறுதி பூசுதலால் ஒருவன் கிறிஸ்துவின் வீரன். அவன் கோழையாகலாம்
என்றாலும் என்றென்றும் அவன் கிறிஸ்துவின் வீரனே!
குருத்துவத்தால் ஒருவன் இறைவனின் குரு. அவன் துரோகியாகலாம்
என்றாலும் என்றென்றும் அவன் இறைவனின் குருவே!
இந்நிலை இல்லை எனில் திருவருள் சாதனத்தின் அழியாத
முத்திரைக்குப் பொருளேது? மதிப்பேது? எப்படிப் பெயரை
மாற்றுவது? நடத்தையை மாற்றுவதைத் தவிர ஒரு கிறிஸ்தவனுக்கு
வேறு வழி இல்லை .
"பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக்
கூப்பிட்டு, அவரிடம், 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான்
.... இயேசு மறுமொழியாக, எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றதல்ல.
அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம்
காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள்
போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றதல்ல'
என்றார் (யோ. 18,33,36)
இயேசுவின் ஆட்சி இவ்வுலகைச் சார்ந்தது அல்ல என்றால் ....
அவர் மனித இதயங்களின் அரசர்.
தொடக்கக் காலத் திருஅவையில் சமயக் கலவரம். உரோமை நீதிமன்றத்தில்
கிறிஸ்தவன் ஒருவன் நிறுத்தப்படுகிறான். "நீ ஒரு கிறிஸ்தவனா?"
என்ற கேள்விக்கு "ஆம்" என்கிறான் அழுத்தமாக.
''அப்படியானால் நீ சீசரின் எதிரியா?"
"உறுதியாக இல்லை "அப்படியானால் சீசருக்கு நீ தூபமிடு. ஆராதனை
செய்"
"அது முடியாது. கடவுள் மட்டுமே ஆராதனைக்குரியவர். இயேசு மட்டுமே
என் இறைவன், அரசன், ஆண்டவர், மீட்பர். அவர் மட்டுமே என் அன்புக்கும்
ஆராதனைக்கும் உரியவர்''
"நீ சீசருக்குத் தூபமிட மறுத்தால் உன் தலை உன் உடலில் இருக்காது"
"என் உடலிலிருந்து என் தலையைத் தான் உங்களால் வெட்ட
முடியும். என் அரசனும் ஆண்டவருமான இயேசுவினின்று என் இதயத்தைப்
பிரிக்க முடியாது".
இயேசு அரசரை இதயத்தில் அரியணையேற்றி.... இப்படி எத்தனை இரத்த
சாட்சிகள் !
முடியாட்சியோ , குடியாட்சியோ எல்லா ஆட்சியும் இறையாட்சிக்கு
உட்பட்டது. அதனால் தான் பிலாத்துவைப் பார்த்து இயேசு அறைகூவல்
விடுத்தார்: "மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல்
எந்த அதிகாரமும் இராது" (யோவான் 19:11). எங்கே மன்னனின்
விருப்பம் நிறைவேறுகிறதோ அங்கே முடியாட்சி . எங்கே மக்களின்
விருப்பம் நிறைவேறுகிறதோ அங்கே குடியாட்சி . எங்கே இறைவனின்
திருவுளம் நிறைவேறுகிறதோ அங்கே இறையாட்சி அதனால்தான் உமது
அரசு வருக' என்றதும், உமது திருவுளம் நிறைவுறுக' என்று
செபிக்கிறோம். இறைவனின் திருவுளம் இயேசுவில்தான் நிறைவாக
நிறைவேறியது. அதனால்தான் இயேசுவே இறையாட்சி!
கடவுள் கண்ட இறையாட்சிக் கனவு வாளெடுத்துப் போர் புரியாத
உலகம். போர்க் கருவிகளை விவசாயக் கருவிகளாக மாற்றும் உலகம்
(எசா. 2:4). சிங்கமும் செம்மறியும் ஒன்றாகப் படுத்துறங்கும்
உலகம் (எசா. 11:6). இறையரசு அமைதியின் அரசு. கிறிஸ்து அமைதியின்
அரசர் (எசா. 9:6).
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
முதல் உலகப்போர் முடிவுற்று,
நான்கு ஆண்டுகள் சென்று, 1922ம் ஆண்டு, திருஅவையின்
தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள்,
அரசர்கள், மற்றும், அரசுத்தலைவர்களின் அகந்தையும்,
பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய்
இருந்தன என்பதை உணர்ந்திருந்தார். இந்த அரசர்களுக்கு ஒரு
மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அனைத்துலக
அரசரென அறிவித்தார். கிறிஸ்துவின் அரசத்தன்மையையும், அவர்
நிறுவ வந்த அரசையும் கண்டு, மக்கள், குறிப்பாக,
அரசுத்தலைவர்கள், பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென
இத்திருநாள் ஏற்படுத்தப்பட்டது.
கிறிஸ்து அரசர் திருநாளைப் பற்றி நினைக்கும்போது, நமக்குள்
ஒரு சங்கடம் எழ வாய்ப்புண்டு. அதை முதலில் சிந்திப்போம்.
ஆயன், மீட்பர், செம்மறி, வழி, ஒளி, வாழ்வு என்ற பல
கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது, மனநிறைவு
பெறுகிறோம். ஆனால், கிறிஸ்துவை அரசராக எண்ணும்போது, மனதில்
சங்கடங்கள் உருவாகின்றன. ஏன் இந்த சங்கடம் என்று
சிந்திக்கும்போது, ஓர் உண்மை புலப்படுகிறது. சங்கடம்,
கிறிஸ்து என்ற வார்த்தையில் அல்ல, அரசர் என்ற
வார்த்தையில்தான்.
அரசர் என்றதும், மனதில் எழும் எண்ணங்கள், மனத்திரையில்
தோன்றும் காட்சிகள்தாம் இந்தச் சங்கடத்தின் முக்கியக்
காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட,
ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம... என்ற அர்த்தமற்ற பல
அடைமொழிகளைச் சுமந்துத் திரியும் உருவம்! பட்டாடையும்,
வைரமும் உடுத்தி, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும்
பல்லக்கில் அமர்ந்துவரும் கொழுத்த உருவம்! ஆயிரமாயிரம்
அப்பாவி மக்களின் சடலங்களைப் படிக்கற்களாக்கி, அரியணை
ஏறும் அரக்க உருவம்!
அரசர் என்றதும் கும்பலாய், குப்பையாய் வந்துசேரும் இந்தக்
கற்பனை உருவங்களுக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும்
சம்பந்தமில்லையே. பிறகு, எப்படி இயேசுவை அரசர் என்று
ஏற்றுக்கொள்வது? சங்கடத்தின் அடிப்படை, இதுதான்.
அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், தவறான
இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர்
அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர்
அரசர், ஓர் அரசை நிறுவியவர். அவர் நிறுவிய அரசுக்கு
நிலப்பரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத்
தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை,
போட்டிகள் இல்லை, அதைப் பாதுகாக்கக் கோட்டைகள் தேவையில்லை,
படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை.
இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே
தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும்
என்று சொல்லக்கூடிய மனங்களில் மட்டுமே இந்த அரசு
நிறுவப்படும். யார் பெரியவர் என்ற எண்ணமே இல்லாத இந்த
அரசில், எல்லாருக்கும் அரியணை உண்டு, எல்லாரும் இங்கு
அரசர்கள்! இந்த அரசர்கள் மத்தியில், இயேசு, ஓர் உயர்ந்த,
நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று நாம்
தேடினால், ஏமாந்துபோவோம். காரணம்?... அவர் நமக்குமுன்
மண்டியிட்டு, நம் காலடிகளைக் கழுவிக்கொண்டிருப்பார்.
மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக,
அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற
மன்னரின், வேறுபட்ட அரசத்தன்மையைக் கொண்டாடத்தான், இந்த
கிறிஸ்து அரசர் திருநாள்.
ராஜாதி ராஜ என்று நீட்டி முழக்கிக்கொண்டு, தன்னை
மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு.
எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி
மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை
அரசர்கள். இந்த இரு வேறு அரசுகளின் பிரதிநிதிகளான
பிலாத்துவையும், இயேசுவையும் இணைத்து சிந்திக்க, இன்றைய
நற்செய்தி வாய்ப்பளிக்கிறது. யோவான் நற்செய்தியில்,
இயேசுவின் பாடுகள் குறித்து கூறப்பட்டுள்ள ஒரு காட்சி,
இத்திருநாளின் நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது.
நற்செய்தியாளர் யோவான், இயேசுவின் பாடுகளைப்பற்றி பதிவு
செய்துள்ள 82 இறைவாக்கியங்களில் (பிரிவு 18,19) பெரும்
பகுதி, தலைமைகுருவுக்கு முன்னும், பிலாத்துவுக்கு முன்னும்
நிகழ்ந்த விசாரணைகளாக அமைந்துள்ளது. இவ்விரு
விசாரணைகளிலும், இயேசு, குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தப்பட்டிருந்தாலும், உண்மையில், தலைமைக்குரு,
மதத்தலைவர்கள், பிலாத்து, மற்றும் அங்கிருந்த மக்கள்
அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுகின்றனர்.
கரங்கள் கட்டப்பட்டு, கசையடிப்பட்டு, முள்முடி தாங்கி,
சக்தி அனைத்தையும் இழந்த நிலையில், மக்கள் முன்
நிறுத்தப்பட்டிருந்த இயேசு, சூழ நின்ற அனைவரையும் விட
சுதந்திரமாக, சக்தி மிகுந்தவராக விளங்கினார் என்பதை,
நற்செய்தியாளர் யோவான், இப்பகுதியில், நமக்கு, மீண்டும்,
மீண்டும் நினைவுறுத்துகிறார்.
அதற்கு நேர்மாறாக, தன் பதவியைக் காத்துக்கொள்வதற்காக,
தவறான தீர்ப்பு சொன்ன பிலாத்து, பொறாமையாலும்,
வெறுப்பாலும் சிறைப்பட்டிருந்த மதத்தலைவர்கள்,
சுதந்திரமாகச் சிந்திக்கும் சக்தியை இழந்து நின்ற மக்கள்
அனைவரும், பல்வேறு வழிகளில், தங்கள் சுதந்திரத்தை இழந்து,
குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இன்றைய நற்செய்தியில் சித்திரிக்கப்பட்டிருக்கும்
காட்சியில், யார் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவர், யார்
பெரியவர் என்பதில் இன்னும் சந்தேகமா? தன் மனசாட்சியும்,
மனைவியும் கூறும் உண்மைகளைக் காண மறுத்து, எப்போது தன்
பதவி போய்விடுமோ என்ற பயத்தில், அரியணையில் தன்னையே
இறுக்கமாக அறைந்துகொண்ட பிலாத்து பெரியவரா? அல்லது, பதவி
என்ன, உயிரே பறிபோனாலும், உண்மையை நிலைநாட்டுவதே முக்கியம்
என்று, பதட்டம் ஏதுமின்றி, நிமிர்ந்து நிற்கும் ஏழை இளைஞன்
இயேசு பெரியவரா? யார் பெரியவர்? யார் உண்மையில் அரசர்?
இக்கேள்விகளின் விடை, அனைவருக்கும் தெரிந்ததே!
அரியணையில் அமர்வது ஒன்றே நிரந்தர வாழ்க்கை என்று
எண்ணிக்கொண்டிருந்த பிலாத்து, இன்றைய உலகத் தலைவர்கள் பலரை
நம் நினைவுக்குக் கொணர்கிறார். மற்றவர்களை அடிபணியச்
செய்து, அல்லது, அடிபணிய மறுத்தவர்களை சடலங்களாக்கி,
அவர்கள் மீது ஏறிச்சென்று, தங்கள் அரியணையில் அமர்ந்துள்ள
ஆயிரமாயிரம் தலைவர்களை நாம் அறிவோம். இவர்கள் அனைவரும்,
உண்மைக்கு எதிர் சாட்சிகளாக வாழ்பவர்கள்.
உண்மைக்காக வாழ்ந்தவர்கள், இன்றும் வாழ்பவர்கள், அலங்கார
அரியணைகளில் ஏற முடியாது. அவர்களில் பலர், சிலுவைகளில்
மட்டுமே ஏற்றப்படுவார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே
இறைவனின் அரசில் என்றென்றும் அரியணையில் அமர்வர் என்ற
உண்மையே, இந்தத் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் பாடம்.
உன்னதமான இந்தப் பாடத்தைப் பயில, கிறிஸ்து அரசருக்கு
இவ்வுலகம் தந்த சிலுவை என்ற அரியணையை நாமும்
நம்பிக்கையுடன் அணுகிச் செல்வோம்.
இறுதியாக, ஓர் எண்ணம்... "அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி"
என்ற பழமொழியை நாம் அறிவோம். ஆனால், மற்றொரு கோணத்தில்
சிந்தித்தால், "குடிகள் எவ்வழி, அரசன் அவ்வழி" என்றும்
சொல்லத் தோன்றுகிறது. அதாவது, குடிமக்கள் அடிமைகளாக வாழ
தீர்மானித்துவிட்டால், அரசர்கள் கட்டுப்பாடற்ற
அதிகாரத்துடன் ஆள்வர் என்பதும் உண்மை. கிறிஸ்துவை
அனைத்துலக அரசர் என்று கொண்டாடும் இந்த விழாவன்று,
அடிமைகளாக வாழ்வதில் சுகம் கண்டு, தலைவர்களையும்,
தலைவிகளையும் துதிபாடி வாழும் மக்கள், தங்கள்
தவறுகளிலிருந்து விழித்தேழவேண்டும் என்றும், உண்மையானத்
தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தலைமைப்
பொறுப்புகளை வழங்கி, அவர்களுடன் இணைந்து, நீதி நிறைந்த
உலகை உருவாக்க முன்வர வேண்டும் என்றும், அனைத்துலக அரசர்
கிறிஸ்துவிடம் வேண்டுவோம்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
மறையுரை அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
இவரைப் போல வருமா?
இறையேசுவில் இனியவா்களே! கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை
ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும்
அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக
இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள்
வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
கிறிஸ்து அரசர் பெருவிழா நல்வாழ்த்துக்களை பெருமகிழ்ச்சியோடு
தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும்
கிறிஸ்து அரசரின் ஆட்சி நடைபெறுவதாக!
கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன்
பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள்
கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிந்திருந்தாலும், உலகத்தில்
இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. இந்த
உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது, அரசர்கள்,
மற்றும் தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை
விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் தங்கள் காலனிய ஆதிக்கத்தின்
வழியே, இன்னும் பல கோடி மக்களைக் கட்டுப்படுத்தவும்
வேண்டுமென்ற வெறி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது. மன்னர்களும்,
தலைவர்களும் கொண்டிருந்த அதிகார வெறியைக் கண்ட திருத்தந்தை
பதினோராம் பயஸ் அவர்கள், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக,
1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அரசராக அறிவித்தார்.
கிறிஸ்துவும் ஓர் அரசர்தான், அவரது அரசத்தன்மையையும், அவர்
நிறுவ வந்த அரசையும், மக்கள், குறிப்பாக, தலைவர்கள் கண்டு
பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது.
இந்தத் திருநாளின் உதவியோடு, அரசர்களாகிய நாம் பாடங்களை பயில
முன்வர வேண்டும் என்பதே இன்றைய திருநாளின் நோக்கம். மூன்று
பாடங்களை கிறிஸ்து அரசரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.
1. எப்போதும் மக்களுக்காக வாழ்பவர்
முன்பொரு காலத்தில் பெர்சியா நாட்டை ஆண்ட ஷா என்ற மன்னர்
மக்கள்மீது அதிகமான அக்கறையும், அன்பும் கொண்டவராக இருந்தார்.
எந்தளவுக்கு என்றால் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் நகர்வலம்
சென்று, மக்களோடு பேசுவார். அப்போது அவர்கள் சொல்லக்கூடிய
குறை, நிறைகளை எல்லாம் கருத்தில் எடுத்துகொண்டு, மக்களுக்கு
எது தேவையோ அதைச் செய்துவந்தார். இதனால் மக்கள் அனைவரும்
அவரது ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருநாள் அரசர் ஊரில் இருக்கக்கூடிய 'பொதுக்குளியல் அறைகள்'
பகுதிக்குச் சென்றார். அங்கே மக்கள் குளிப்பதற்காகத் தண்ணீர்
வெதுவெதுப்பான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வேலையை
முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பக்கூடியவர்கள் அதில்
மகிழ்ச்சியாகக் குளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவார்கள்.
இப்படி மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகக் குளிக்க, தண்ணீரைச்
சூடாக்குகின்ற பணியை யார் செய்கிறார்? என்று பார்ப்பதற்காக
மன்னர் 'பொதுக்குளியல் அறைகள்' இருக்கக்கூடிய பகுதியின் உட்புறத்திற்குச்
சென்றார்.
அங்கே ஒரு தாழ்வான அறை இருந்தது. அதில் ஒரு பெரியவர் நாள்
முழுவதும் வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய அளவில் தண்ணீரைச்
சூடாக்கிக் கொண்டிருந்தார். சாதாரண மனிதர் உருவில் இருந்த
அரசர், அம்மனிதரிடம் பேச்சுக் கொடுத்தார். அதற்கு அம்மனிதர்,
"நாள் முழுவதும் இந்த இருட்டு அறைக்குள் சூட்டையும்,
வெக்கையையும் தாங்கிக்கொண்டு வேலைப் பார்த்தாலும் மக்கள்
மகிழ்ச்சியாகக் குளிக்கிறார்ளே என்று நினைக்கும்போது எனக்கு
இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். அதோடு
நின்றுவிடாமல், அவர் தன்னிடம் இருந்த கொஞ்சம் உணவையும்
சாதாரண உடையில் இருந்த அரசரோடு பகிர்ந்து உண்டார்.
இவற்றையெல்லாம் பார்த்து அரசருக்குச் சந்தோசம் தாங்கமுடியவில்லை.
சிறிதுநேரம் அவர் அவரிடம் பேசிவிட்டு, இன்னொரு நாள் வருவதாக
வாக்குறுதிக் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச்
சென்றார்.
ஒருசில நாட்களுக்குப் பிறகு அரசர் மீண்டுமாக அந்த மனிதர்
இருக்கும் இடத்திற்குச் சென்று, அவரிடம் பேசினார். அன்றைக்கு
அரசர் அவரிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், நான் தருகிறேன்"
என்று சொல்லிவிட்டு, தான் யார் என்பதை அவருக்கு வெளிப்படுத்தினார்.
அரசர் தான் தன்னைப் பார்க்க இங்கே மாறுவேடத்தில் வந்திருக்கிறார்
என்பதை அறிந்துகொண்டு அந்த மனிதர், "அரசே! எனக்கு எதுவும்
வேண்டாம். யாருமே வராத இந்தப் பகுதிக்கு வந்து, என்னைப்
பார்த்துப் பேசினீர்களே, அந்த அன்பு ஒன்றே போதும்" என்றார்.
தான் அரசனாக இருந்தாலும், தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி
வந்து, சாதாரண மனிதரைப் பார்க்க வந்த அந்த ஷா மக்களுக்காகவே
வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது.
அரசர் மக்களுக்காக வாழ வேண்டும். மக்கள் தன்னிறைவு பெற அனைத்தையும்
செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் மகிழ்சிக்காக அவர் இறங்கி
வர வேண்டும். இரவும், பகலும் மக்களுக்கு சேவை செய்வதையே மிகவும்
பெரிதாகக் கொள்ள வேண்டும். விண்ணிலிருந்த ஆண்டவர் இயேசு
மணணகம் வந்து பாவிகளாகிய நம்மை தன்னுடைய நிபந்தனையற்ற நிரந்தரமான
அன்பினால் அரவணைத்தார். நமக்காகவே மரித்தார். அன்பு என்பது
இன்னதென்று சொல்லித்தந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவே
முடியாது.
அரசர்களாக அரசிகளாக இருக்கின்ற நாம் நமக்காக வாழாமல் அருகிலிருப்பவர்கள்
நலனில் அக்கறை கொண்டு வாழும் போது வாழும் வாழ்க்கை இனிக்கிறது.
நம் அருகிலிருப்பவர்கள் நலம்பெற நாம் கரம் கொடுப்போம். அதிகாரம்
காட்டாமல் அன்பை வெளிப்படுத்தி அன்பின் மாந்தர்களாக
வாழ்வோம். நம் அருகிலிப்பவர்களின் மனங்களில் குடிகொள்வோம்.
தரைமட்டும் தாழ்த்தி அடுத்தவருக்கு பணிசெய்வோம். சீடர்களின்
பாதங்களைக் கழுவிய இயேசு தரும் பாடம் நமதாகட்டும். நம் அன்பின்
ஆட்சியால் அகிலம் ஆரோக்கியமடையச் செய்வோம்.
2. எப்போதும் நல்லதையே பேசியவர்
1927ம் ஆண்டு வெளியான ஒரு புகழ்பெற்ற திரைப்படம், "The
King of Kings". இந்த மௌனப்படம், இயேசு இவ்வுலகில் வாழ்ந்த
இறுதி வாரங்களைத் திரைக்குக் கொணர்ந்தது. இத்திரைப்படம்,
பல கோடி மக்களால் பாராட்டு பெற்றாலும், இதன் இயக்குனர்,
Cecil B.De Mille அவர்கள், தனக்கு கடிதமாக வந்து சேர்ந்த
ஒரே ஒரு பாராட்டு மட்டுமே தன் உள்ளத்தைத் தொட்டதென்று
கூறினார். அந்த மடலை எழுதியவர், இறக்கும் நிலையில் இருந்த
ஒரு பெண்.
ஒரு சில நாட்களே வாழப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்தப்
பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் இத்திரைப்படத்தைப்
பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் Cecil அவர்களுக்கு ஒரு
மடல் அனுப்பினார். "The King of Kings திரைப்படத்திற்காக
உங்களுக்கு மிக்க நன்றி. சாகப்போவதை எண்ணி இதுவரை பயந்த என்
மனதில், இப்போது, ஆவலுடன் மறுவாழ்வை எதிர்பார்க்கும் மகிழ்வு
வந்துள்ளது" என்று அப்பெண்மணி தன் மடலில் எழுதியிருந்தார்.
.
வேதனையின் உச்சியில், சிலுவையில் அறையப்பட்டவர்கள்
சொல்லும் வார்த்தைகள் எல்லாம், வெறுப்புடன் வெளி வரும். தங்களை,
பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே
அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின்
கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண
போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, "நீர் இன்று என்னோடு
பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச்
சொல்கிறேன்" என்று வழங்கிய வாக்குறுதி, அந்தக் குற்றவாளிக்கு
மட்டுமல்ல, கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கோடான
கோடி மனிதர்களுக்கு, நம்பிக்கை வழங்கியுள்ளது. குறிப்பாக
நான் நம்பிக்கையுடன் உள்ளேன். எனக்கு இயேசு நம்பிக்கை அளித்துள்ளார்.
என் சாவை துணிவுடன் சந்திப்பேன். ஆண்டவரில் உயிர்த்தெழுவேன்
என்றார் நம்பிக்கையுடன் அந்த பெண்.
கிறிஸ்து அரசர் எப்போதும் நல்ல வார்த்தைகளையே வழங்கியவர்.
அவர் சொன்ன வார்தைகள் இன்றும் பலருக்கு குணம் அளிக்கின்றது.
நம்பிக்கை தருகின்றது. பலம் கொடுக்கின்றது. பாதை
காட்டுகின்றது. புனித பயணத்தை அமைத்துக் கொடுக்கின்றது. மிகப்பெரிய
தாக்கத்தை அவர்மீது தாகம் கொண்ட அனைவரிலும் ஏற்படுத்துகின்றது.
நாமும் கிறிஸ்து அரசரின் வழியில் அரசாட்சி செய்யவே இந்த
நாள் அழைக்கின்றது. அதட்டி காரியத்தை செய்ய விரும்பாதீர்கள்.
பண்புடனே பாராட்டி காரியங்களை செய்யுங்கள். நல்ல வார்ததைகளை
அனைவருக்கும் நல்லாசீராக வழங்குவோம். நன்மைகள் செய்து நம்முடன்
இருப்பவரோடு நன்கு பழவோம். நம் வார்த்தைகள் பிறருக்கு மருந்தாக
அமையட்டும். பிறரை மயக்கும் மந்திரசக்தியாக வல்லமையை பொழியட்டும்.
3. எப்போதும் நம்மோடு இருப்பவர்
ஒரு போர்த்துக்கீசிய நாவலில் வரக்கூடிய நிகழ்வு இது. ஜான்
என்ற இளைஞன் கப்பலுக்கு வேலைக்குச் சென்று, பல ஆண்டுகளுக்குப்
பிறகு பெரும்செல்வம் திரட்டிக்கொண்டு, தன்னுடைய சொந்த ஊரான
லிஸ்பனில் வந்து இறங்கினான். அப்போது அவனுடைய உள்ளத்தில்
ஓர் எண்ணம் உதித்தது. இப்படியே உறவினர்களது வீட்டிற்குச்
செல்லாமல், கிழிந்த, அழுக்கான உடையில் செல்வோம். அப்போது
அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்துவிட்டு,
அதன்பிறகு அவர்களது வீட்டிற்குச் செல்வோம் என்று
நினைத்துகொண்டு, ஒரு கிழிந்த அழுக்கான சட்டையும், ட்ரவுசரையும்
போட்டுக்கொண்டு தன்னுடைய நெருங்கிய உறவினரான பட்ரோவின்
வீட்டிற்குச் சென்றான்.
அங்கே அவரிடம், "கப்பலில் விபத்து ஏற்பட்டு, என்னிடம் இருந்த
பணமெல்லாம் போய்விட்டது, இப்போது இந்தநிலைக்கு ஆளாகிவிட்டேன்.
அதனால் ஒரு நல்ல வேலைக் கிடைக்கும்வரைக்கும் இங்கே தங்கிக்
கொள்ளலாமா? என்று கேட்டான். அதற்கு அவருடைய உறவினரோ, "என்னுடைய
வீட்டில் போதுமான இடமில்லை, அதனால் தயவுசெய்து வேறொரு இடத்தில்
போய்த் தங்கிக்கொள்" என்று சொல்லி விரட்டிவிட்டார்.
அவனும் சரி என்று சொல்லிவிட்டு, தன்னுடைய நண்பர்கள்,
தெரிந்தவர்கள் என்று எல்லாரிடமும் கேட்டுப்பார்த்தான். ஆனால்
எல்லாருமே ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லி, அவனுக்கு
இடம்தராமல் விரட்டிவிட்டார்கள். இறுதியாக அவன், இனிமேலும்
இவர்களை நம்பி எந்த பயனும் இல்லை' என்று தான் வைத்திருந்த
பெரும் செல்வத்தை வைத்து ஒரு மிகப்பெரிய மாடமாளிகை கட்டினான்,
அவனுக்கென்று பணியாளர்களை வைத்துக்கொண்டான். இதனால் சில
நாட்களிலேயே அவனுடைய செல்வச் செழிப்பைப் பற்றிய பேச்சு
லிஸ்பன் நகர் முழுவதும் பரவியது.
இதைக் கேள்விப்பட்ட ஜானின் உறவினர்கள், நண்பர்கள் "இவையெல்லாம்
முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கு வீட்டில் இடம்
கொடுத்திருக்கலாமே" என்று வருத்தப்பட்டார்கள்.
மக்கள் நம்மிடம் பணம் இருந்தால் ஒருவிதமாக நடந்துகொள்வதும்,
பணம் இல்லையென்றால் வேறொரு விதமாக நடந்துகொள்வதும் நடக்கும்
இக்காலத்தில் கிறிஸ்து அரசரின் பணியும், பாணியும் மிக
வித்தியாசமாக நமக்கு தென்படுகிறது.
கிறிஸ்து அரசர் செல்வந்தராக இருந்தும், நமக்காக ஏழையானார்.
எல்லாம் நம்மீது வைத்த அன்புதான். கிறிஸ்து அரசர் எல்லா
சூழ்நிலையிலும் நம்முடன் இருப்பவர். பலவீனத்தில் நம்மோடிருந்து
தன்னுடைய முழுஉடனிருப்பையும் தருபவர். மிகவும் நெருக்கமாக
நம்மோடிருப்பவர். குறைகளில் நம்மை விட்டுவிட்டு ஓடாதவர்.
கூடவே இருந்து குறைகளை நிறைவாக்கும் நல்அரசர் அவர்.
நாம் எப்போதும் மற்றவரோடு இருக்கும் நட்பை உருவாக்குவோம்.
பயன்படுத்திவிட்டு தூரே எறியும் கலாச்சாரத்தை காணாமல் ஆக்குவோம்.
எப்போதும் இருந்து ஆறுதல் அளிக்கும் ஆற்றுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான
பணிகளைச் செய்ய புறப்படுவோம். அடுத்தவரின் குறைகளில் அவரைத்
தூக்கி எறியாமல் அவரின் துயர்துடைக்க ஏற்பாடு செய்வோம்.
நிறைகளை கண்டு மனிதரிடம் பழகாமல் குறைகளிலே நிறைவடையும் பண்பை
வளர்ப்போம். யாரையும் விலக்காத, கைவிடாத அரசர்களாக, அரசிகளாக
வலம் வருவோம். நம் ஆட்சி இன்றிலிருந்து இனிதே இனிப்பையும்,
இன்பத்தையும் அனைவருக்கும் வழங்கட்டும்.
மனதில் கேட்க
1. நான் நடத்தும் ஆட்சி எனக்கு பிடித்திருக்கிறதா? என்னுடைய
நிர்வாகம் சரியானதா?
2. இயேசுவைப் போல ஆட்சி நடத்தி பலரின் மனங்களில் வாசம் வீச
நான் செய்யும் ஏற்பாடுகள் என்னென்ன?
மனதில் பதிக்க
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள்
அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது
என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே
இராது" என்றார். (லூக் 1:32-33)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா
இன்றைய வாசகங்கள்:-
தானியேல் 7:13-14
திருவெளிப்பாடு 1:5-8
யோவான் 18:33-37
7. ஞாயிறு மறையுரை அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
"இயேசுவின் அரசாட்சி வாழ்வளிக்கும் அரசாட்சி! "
ஒரு வகுப்பில் வரலாறு பாடம் நடத்தும் பொழுது வரலாற்று ஆசிரியர்
"அரசர் என்றால் என்ன நினைக்கிறீர்கள்? " என்று கேட்டார்.
அதற்கு அந்த மாணவன் "அரசர் என்பவர் ஆடம்பரத்தோடும் வசதியோடும்
வாழ்பவர். அவருக்கு ஏராளமான பணியாளர்கள் பணிவிடை செய்வர்.
அரசர் பிறரை அடக்கி அதிகாரத்தோடும் ஆடம்பரத்தோடும் வாழ்பவர்"
என்று பதிலளித்தான். இந்த நிகழ்வில் நாம் கண்டதைப் போல, நம்முடைய
அன்றாட வாழ்க்கையில் அரசர் என்றால் ஆடம்பரமான அதிகாரம்
கொண்ட ஒருவர் என்று நினைக்கலாம். இத்தகைய பிம்பத்தைத் தான்
இவ்வுலகில் வாழ்ந்த அரசர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடும் நாம் உண்மையான அரசர்
என்பவர் யார் என்று அறிந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். பிறரை
அடக்கி ஆள்பவர் அரசர் அல்ல ; மாறாக, அன்பு செய்து வாழ்பவர்
தான் அரசர். பிறரை ஒடுக்கி வாழ்பவர் அரசர் இல்லை; ஒடுக்கப்பட்டோருக்கு
வாழ்வு கொடுப்பவரே உண்மையான அரசர். பணிவிடை ஏற்பவர் மட்டும்
அரசர் அல்ல; பணிவிடை செய்பவரே அரசர். இவ்வாறாக அரசரின்
மேன்மையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
உண்மையான அரசர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மண்ணுலக
விண்ணுலக அரசராகிய ஆண்டவர் இயேசு மிகச் சிறந்த உதாரணம்.
"நீ யூதரின் அரசனா? " என்று இவ்வுலக அரசாட்சிக்கு முக்கியத்துவம்
கொடுத்த பிலாத்து இயேசுவைப் பார்த்து கேட்டான். இதற்கு காரணம்
யூதத் தலைவர்கள் இயேசுவின் மீது இத்தகைய குற்றச்சாட்டை
வைத்தனர். இத்தகைய குற்றச்சாட்டை வைத்தால் மட்டுமே இயேசு
அரசால் தண்டிக்கப்பட முடியும் என்று ஆழமாக அறிந்து குற்றம்
சுமத்தினர். எனவேதான் பிலாத்து இத்தகைய கேள்வி கேட்டான்.
ஆண்டவர் இயேசு "நீராக இதைக் கேட்கிறீரா?" என்ற கேள்வியை
பிலாத்துவைப் பார்த்து கேட்டார். பிலாத்து கேட்ட கேள்வியை
இயேசு ஆழமாகப் புரிந்து கொண்டவராய் "ஆம் " அல்லது "இல்லை"
என்று ஆண்டவர் இயேசு பதில் கூறாமல் வித்தியாசமான பதிலைக்
கூறினார். அதுதான் "நீராக இதை கேட்கிறீரா?" என்ற
கேள்வியோடு கூடிய பதில். இதற்கு காரணம் பிலாத்து இயேசுவை
இவ்வுலகம் சார்ந்த குறுகிய வட்டத்தில் சுருக்கி இந்தக்
கேள்வியை கேட்டான். பிலாத்து இந்தக் கேள்வியை கேட்டதற்கு
காரணம் உரோமை அரசாட்சியில் யாராவது தான் தான் அரசர் என்று
சொன்னால், அவற்றைச் தீர விசாரித்து தண்டனை கொடுப்பது ஆளுநரின்
கடமையாக இருந்தது. யூதர்கள் "இயேசு தன்னை அரசராக காட்டிக்
கொள்கிறார் " என்று குற்றம் சுமத்தியதால் தான் இத்தகைய
கேள்வியைக் கேட்டார்.
ஆனால் ஆண்டவர் இயேசு "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல"
என்று கூறினார். இதற்கு காரணம் மெசியா என்பவர் இவ்வுலகில்
பேரரசைக் கட்டுவார் என்று யூத மக்கள் எண்ணினர். உரோமை அரசை
வென்று இஸ்ராயேல் மக்களை நிலை நிறுத்துவார் என்று ஆழமாக நம்பினர்.
ஆனால் இயேசுவின் செயல்பாடுகளில் இவ்வுலகம் சார்ந்த அரசரைப்
போல் ஆடம்பரம் இல்லாமல், அன்பே நிறைந்திருந்தது. ஏனென்றால்
இயேசுவின் அரசாட்சி விண்ணுலக அரசாட்சியை மையப்படுத்தியது.
இயேசு தன்னை இவ்வுலகம் சார்ந்த அரசரைப் போல் நான் இல்லை என்று
சொல்வதற்கு "அரசன் என்று நீர் சொல்கிறீர் " என்று
கூறினார். இதற்குப் பொருள் என்னவென்றால் இயேசு தன்னை உலகம்
சார்ந்த அரசர்களைப் போல வெளிப்படுத்தவில்லை; மாறாக, தன்னை
ஒரு ஆன்மீக அரசராகவும் உண்மைக்குச் சான்று பகரும் அரசராகவும்
வெளிப்படுத்தினார். உண்மைக்கு சான்று பகர்வதே அவருடைய
முக்கியப் பணியாக வெளிப்படுத்தினார். இவ்வாறாக இன்றைய நற்செய்தி
வாசகம் கிறிஸ்து அரசராகிய நம் ஆண்டவர் இயேசுவின் அரசாட்சியை
பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு அடிப்படையாக இருக்கின்றது.
கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடும் நம்மை இயேசுவின் உண்மையான
அரசாட்சியை பற்றி அறிந்துகொள்ள திருஅவை அழைப்பு வருகிறது.
நாம் வாழும் இன்றைய சமூகத்தில் அரசர்கள் எப்படி
வாழ்ந்திருப்பார்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியாது.
பல நேரங்களில் திரைப் படங்களைப் பார்த்துதான் அரசர்கள் இப்படித்தான்
இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து கொள்ளுகிறோம்.
திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் கிறிஸ்து அரசர்
பெருவிழாவை திருவருகைக் காலத்துக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை
கொண்டாட முதன் முதலில் அழைப்பு விடுத்தார். திருவழிபாட்டு
ஆண்டின் தொடக்கமும் முடிவுமாக கிறிஸ்து அரசர் பெருவிழா அமைகின்றது.
இதன் நோக்கம் என்னவென்றால் ஆண்டவர் இயேசு நம் அரசராக இறையாட்சியில்
பங்குகொள்ள நமக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார் என உணர்ந்து
கொள்வதே.
இயேசுவின் இறையாட்சி என்றால் என்ன? இறைவனுடைய ஆட்சியிலே இணைந்திருப்பதுதான்
இறையாட்சி. அதாவது இறைவனோடு இணைந்து அவரின் வார்த்தையின்படி
நடப்பது தான் இறையாட்சி. இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு,
நீதி, நேர்மை, மன்னிப்பு, சமத்துவம், உரிமை வாழ்வு போன்ற
நற்பண்புகளை வாழ்வதுதான் உண்மையான இறையாட்சி. இயேசுவின் இறையாட்சிக்கும்
இவ்வுலகம் சார்ந்த அரசாட்சிக்கு அதிக வேறுபாடு உண்டு. இயேசு
தன்னுடைய ஆன்மீக அரசாட்சியில் அன்பை மையமாகக்கொண்டு ஆட்சி
செய்தார். ஆனால் இவ்வுலகம் சார்ந்த அரசர்கள் அதிகாரம் என்ற
ஒன்றை வைத்து மக்களை அடக்கி ஆண்டனர்.
இயேசுவின் ஆன்மீக அரசாட்சியில் நீதியும் நேர்மையும் இருந்தன.
உண்மைக்கு சான்று பகர்வதே எனது பணி என்று கூறிய இயேசுவைப்
போல நீதியோடும் நேர்மையோடும் வாழ நாமும் அழைக்கப்பட்டுள்ளோம்.
இவ்வுலகம் சார்ந்த அரசாட்சியில் நீதியும் நேர்மையும் உண்மையும்
எட்டாக்கனியாக இருந்ததன. எனவேதான் பிலாத்து "உண்மையா அது
என்ன? " என்று கேட்டான். ஆனால் இயேசுவின் அரசாட்சியில்
நீதி நேர்மை உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.
அதுதான் உண்மையான நிலை வாழ்வுக்கு வழிகாட்டும்.
இயேசுவின் ஆன்மீக அரசாட்சியில் மன்னிப்பு இருந்தது. ஆனால்
இவ்வுலகம் சார்ந்த அரசாட்சியில் மன்னிப்பை விட அதிகமாக தண்டனை
இருந்தது. எனவே மனிதன் சிதைக்கப்பட்டான். சமத்துவமும் சகோதரத்துவமும்
இறையாட்சி மதிப்பீடாக கருதப்படுகிறது. சாதி மதம் மொழி இனம்
போன்ற பாகுபாடுகளைக் கடந்துதான் இயேசுவின் இறையாட்சி. இத்தகைய
இறையாட்சி தான் இயேசுவை மெசியா என்று உளமார ஏற்றுக்கொள்ள
அடிப்படையாக இருக்கின்றது. உலகம் சார்ந்த அரசாட்சி ஆளும்
அரசனுக்குத் தான் மகிழ்ச்சியான வாழ்வை வழங்கியது. ஆனால்இயேசுவின்
ஆன்மீக அரசாட்சியில் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது.
எனவே இன்றைய நாளிலே இயேசுவின் அரசாட்சியில் இறையாட்சிப் பணியாளர்களாக
இணைந்து உண்மை அன்பு நீதி நேர்மை சமத்துவம் சகோதரத்துவம்
போன்ற நற்பண்புகளை நமது வாழ்வாக்க முயற்சி செய்வோம். அப்பொழுது
இயேசுவின் அரசாட்சியில் அகமகிழ முடியும். இயேசுவின் இறையாட்சியில்
இணையத் தயாரா?
இறைவேண்டல்:
என்றும் அரசராகிய இயேசுவே! உம்முடைய இறையாட்சியில் நாங்களும்
கருவிகளாக பயன்பட உம் அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ