ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 தவக்காலம் 3ம் ஞாயிறு  

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே!

 தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நம் கடவுள் இரக்கத்தின் கடவுள். தண்டனையின் இறைவன் அல்ல. மாறாக மன்னிப்பின் இறைவன். எனவே பிறர் வழியாக இறைவன் நம் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அலட்சியம் செய்யாமல் அக்கறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் பாவிகள் மனம் திரும்புவதை விரும்புகிறார். அதற்காகக் காத்திருக்கிறார்.

இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக்கூடாது. அத்திமரத்திற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இன்றும் நம் ஆண்டவர் நமக்கு தருவதை நன்கு பயன்படுத்திக் கொள்வோம். ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்தவர்களாக அவர் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் எதிர்பார்க்கிற பலனைத் தருபவர்களாக வாழ உறுதி எடுப்போம். அப்போது தான் இந்தத் தவக்காலம் நமக்கு இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக அமையும். அதற்காக இன்றைய திருப்பலி வழிபாட்டில் வரம் வேண்டி பங்கேற்போம்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 
01. அன்புத் தந்தையே! எம் இறைவா!
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறை இரக்கத்தின் ஆண்டின் மையமான இறை இரக்கம் அனைத்து மாந்தருக்கும் முழுமையாக சென்றடைய அவர்கள் அனைவரும் தங்கள் சொல்லாலும், செயலாலும் சான்று பகர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

02. நல்ஆலோசனை கர்த்தரே!
எம் நாட்டில் நிலவும் அரசியல், பண்பாடு, மொழி, இனவேறுபாடுகள் வேரறுக்கப்பட்டு உம் மதிப்பீடுகளான நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் சேர்ந்த நல்ல ஆட்சி அமைக்க தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

03.நல் ஆயனே! எம் இறைவா!
இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளையோரை பாதுகாத்து உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

04.கருணையின் தெய்வமே! எம் இறைவா!
சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களை புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

05. ஞானத்தின் இருப்பிடமே இறைவா!
உலகெங்கும் ஏற்பட்டுள்ள போர்கள், பயங்கரவாதங்கள், மீண்டும் தொற்று நோயின் தாக்கத்தினால் புதியதாய் வரும் நோய்கள் ஆகியவற்றால் மக்கள் படும் துன்பங்களிலிருந்து அனைவரையும் காத்தருளும். தங்கள் வாழ்வாதரங்களை இழந்து அவதிபடும் மக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பத் தேவையான எல்லா வசதிகளைப் பெற்றிடத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



 
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.

I. விடுதலைப் பயணம் 3:1-8, 13-15
II. 1 கொரிந்தியர் 10:1-6,10-12
III. லூக்கா 13:1-9

முட்புதரின் வழி மீட்பு

முட்புதர் காடுகளிலும் மனிதர் நடமாட்டம் இல்லா இடங்களிலும் அதிகம் காணப்படும் ஒரு வகை களைச்செடிகளின் தொகுப்பு எனலாம். இது பெரும்பாலும் உயர்ந்த மலைகள், அடர்ந்த காடுகள், வனவிலங்குகளின் இருப்பிடங்கள் ஆகியவற்றில் காணப்படும். ஆனால் இத்தகைய பயன்படா காட்டுக்களைச்செடிகளின் மூலமாக நமக்கு மீட்பைக் கொண்டு வர நம் இறைவனால் முடியும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றில் நுழைந்திருக்கக்கூடிய நம்மை இன்றைய வாசகங்கள் முட்புதர் வழி மீட்பைப் பெற அழைக்கின்றன. மோயீசன் இஸ்ரயேல் மக்களின் விடுதலைப்பயண வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு நபர். அடிமைப்பட்டுக் கொண்டிருந்த மக்களை மோயீசன் மூலமாக இறைவன் மீட்கின்றார். இந்த மோயீசன் மூலமாக அவரது அழைத்தல் மூலமாக இறைவன் நமக்கு இன்று விடுக்கும் செய்திக்கு செவிமடுப்போம்.

மோயீசனின் செயல்பாடுகள், உணர்வுகள், எண்ணங்கள் பல்வேறு நற்தூண்டுதல்களை வெளிப்படுத்துகின்றன. அந்தக் கருத்துக்களை நமது வாழ்க்கைக்கென்று பயன்படுத்தி தவக்காலத்தில் ஆண்டவரின் அழைப்பிற்கு செவிமடுக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
 1. மோயீசனின் மலையேற்றம்.
2. முட்புதர் பற்றிய ஆர்வம்.
3. புதர் நிலத்தை புண்ணிய நிலமாய் கண்ட கீழ்ப்படிதல்.
4. கடவுளின் குரலுக்கு காது கொடுத்த கவனம்.

1. மலையேற்றம்:
பழைய ஏற்பாட்டில் மலையேற்றம் என்றாலே அது இறைவனுடனான உறவைப் புதுப்பிக்க மனிதன் ஏற்படுத்திய மலை வாசஸ்தலம் எனலாம். ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என நமது குல முதுவர்கள் அனைவரும் மலையேறியே இறைவனுடனான தங்கள் உறவைப் புதுப்பித்தும் பலப்படுத்தியும் கொண்டனர். இன்று நாம் நற்செய்தியில் வாசிக்கக் கேட்கும் நம் பழைய ஏற்பாட்டு நாயகன் மோசேயும் மலையேறுகிறார். ஆனால் ஏறும் போது ஆடுமாடுகளை மேய்ப்பவராகச்செல்கின்றார். திரும்பும் போது ஒரு இஸ்ரயேல் இனத்தையே வழிநடத்திச் செல்பவராக மாறுகிறார். எகிப்தில் இருந்து தப்பித்து, மிதியான் நாட்டிற்கு ஓடிவந்து, தனது மாமனாரின் வீட்டில் அவருக்கு கீழே பணிபுரிந்து கொண்டிருப்பவர், எத்தனை இன்னல்களை அனுபவித்து இருக்கக்கூடும். இன்று நாம் நம் விருந்தினர்கள் வீட்டில் இரண்டு நாளுக்கு மேல் தங்க இயலாது. (விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்பது எல்லாம் பழசு. இன்று எல்லாமே உடனடி. மருந்தானாலும் சரி .விருந்தானாலும் சரி.) அப்படியிருக்க மோயீசன், மாமனார் வீட்டில் பல ஆண்டுகள் தங்கி இருக்கிறார். அவர் சொன்ன வேலைகளை செய்து அவர் தரும் உணவை உண்டு, உறவுள்ள அடிமை போலவே தனது வாழ்நாளைக் கழித்திருக்கக் கூடும். அப்படி இருக்கும் தருணத்தில் தன் மாமனாரின் ஆடுகளோடு மலையேறுகிறார். தன்னுடைய வருத்தம் துன்பம் கவலை ஏமாற்றம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மேலே ஏறிச்செல்கிறார். விடுதலை அடைகிறார். விடுதலைப் பயணத்தின் தலைவராகிறார்.

நாமும் நம்முடைய வாழ்வில் பல நேரங்களில் வருத்தங்களினாலும் துன்பங்களினாலும் சோர்ந்து போகிறோம். நாம் நமது எல்லாக் கவலைகளையும் விட்டு இறைவனை நோக்கி நமது மனங்களை உயர்த்தும் போது இறைவனும் நம்மைக் கண்ணோக்குகின்றார். நாமும் நமது விடாமுயற்சியால் நமது துன்ப நிலைகளிலிருந்து விடுதலை பெற்று வீறுநடை போடும் காலம் விரைவில் வரும். விடாமுயற்சியுடன் இறைநம்பிக்கை என்னும் மலையேறுவோம்.

2. முட்புதர் பற்றிய ஆர்வம்:

ஆர்வம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் அடிப்படை உணர்வு. ஒவ்வொருவரின் இரசனைக்கேற்ப அந்த ஆர்வம் வேறுபடும். மோயீசன் ஆடுகளுக்கான புல்வெளியைத் தேடி பயணம் மேற்கொள்கிறார். ஆனால் கண்ணில் சிக்கியதோ, எரியும் முட்புதர். அவர் தேடிச் சென்றது ஒன்று, கண்டடைந்தது மற்றொன்று. ஆனாலும் ஆர்வத்தோடு, அருகில் செல்வேன் அது என்ன என்று பார்ப்பேன் என்று எண்ணி அருகில் செல்கின்றார். கடவுளின் மாட்சியைக் கண்டு கொள்கின்றார். அவர் அதைக்க்ண்டும் காணாமல் விட்டிருந்தால் விடுதலைப்பயணத்தை மேற்கொள்ளும் தகுதியை இழந்திருப்பார். அல்லது இன்னும் பல வருடங்கள் காத்திருந்திருக்கக் கூடும். அவரது ஆர்வமே அவரை மேலான செயல்கள் செய்யத் தூண்டியிருக்கின்றது.

நாமும் பல்வேறு விதமான ஆர்வங்களை உடையவர்களாக இருக்கிறோம். நமது ஆர்வங்கள் அனைத்தும் நம்மை நன்மையின் பாதைக்கு அழைத்துச்செல்கின்றனவா? அல்லது நமது ஆர்வத்துக்கும் எதிர்பார்ப்பிற்கும் மாறான செயல்களையும் நிகழ்வுகளையும் பார்த்து மனம் வாடி வருந்தி காலத்தைக் கழிக்கின்றோமா? நமது ஆர்வம், முறையானதாக நம்மை முன்னுக்கு கொண்டுவருவதாக இருக்கின்றதா? சிந்திப்போம். சுடர் விட்டு எரியும் முட்புதர் நெருப்பில் தான் இறைவன் மோயீசனுக்கு காட்சி அளித்தார். பசுமையான செடியில் அல்ல. என்பதை மனதிற் கொண்டு செயல்படுவோம்.

3. கீழ்ப்படிதல்:

கீழ்ப்படிதல் இறைவனின் அடியார்கள் அனைவருக்கும் இருக்கவேண்டிய இருந்த ஒரு முக்கியமான பண்பு குணநலன். இங்கு மோயீசன் முட்புதர் நிலத்தை புண்ணிய நிலம் என்று இறைகுரல் சொன்னதும் உடனே தனது மிதியடிகளை அவிழ்க்கின்றார். தரை குப்புற விழுந்து அவ்விடத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கின்றார். தனது பாவ செயல்களை எண்ணி மனம்வருந்தி மன்னிப்பு கேட்கும் விதமாய், தலை தாழ்த்துகிறார். தனது அங்கியால் முகத்தை மறைத்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டுகிறார். அந்த நிமிடமே அவ்விடத்தை புண்ணிய நிலமாகக் கருதி கீழ்ப்படிகிறார். நமது கீழ்ப்படிதல் எப்படி இருக்கின்றது? புதர் நிலத்தை புண்ணிய நிலமாகக் கருதாவிட்டாலும், புண்ணிய தலத்திற்குரிய மரியாதையைக் கொடுக்கின்றோமா? இன்று எத்தனை கோவில்கள் வெறும் பார்வைக்கும் காட்சிக்கும் மட்டுமே உரியதாக இருக்கின்றன.? தவக்காலத்தில் கோவில்களை சந்தித்தால் புண்ணியம் என்று எண்ணி வெறும் பயணம் செய்வதிலேயே நமது தவக்காலக் கொண்டாட்டங்கள் முடிவடைந்து விடுகின்றனவா? இறைவன் வதியும் அனைத்து ஆலயமும் புண்ணிய தலமே என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

4. செவிமடுத்தல்:
இன்று நம்மில் பலரிடத்தில் குறைவுபடக் கூடிய ஒன்று செவிமடுத்தல். நாம் சொல்வதை மற்றவர் கேட்கவேண்டும் என்று விரும்பும் நாம், மற்றவர் சொல்வதைக் கேட்க விரும்புவதில்லை. இன்று நாம் ஆலயங்களுக்கு செல்கிறோம். ஆண்டவர் பேசுவதைக் கேட்பது கிடையாது. பெரும்பாலும் நாம் பேசுவதை ஆண்டவர் கேட்கவேண்டும் என்ற வரைமுறையோடுதான் செல்கிறோம். ஆனால் மோயீசன் அப்படி இல்லை இறைவனின் குரலுக்கு முழுமனதோடு செவிமடுக்கிறார். தான் பட்டதுன்பம் எகிப்திலிருந்து தப்பி வந்த தன் சோதனைக் கதை, பாரவோனின் வளர்ப்பு மகன் போல வாழ்ந்த தான் இன்று பாலை நிலத்தில் ஆடு மேய்க்கும் நிலை என எதைக் குறித்தும் புலம்பவில்லை மாறாக கவனமுடன் செவிமடுக்கின்றார். இத்தகைய செவிமடுத்தல் குணம் நம்மில் இருக்கின்றதா?

இப்படிப்பட்ட குணமுடைய மோயீசன் இறைவனின் குரலுக்கு செவிமடுத்து இறைத்திருவுளம் நிறைவேற்றுகின்றார். இவர் தான் இயேசு கூறும் , மனம்மாறிய வாழ்வு வாழ்பவர்களுக்கான முன்னுதாரணம். இவர்கள் நிறைந்த கனிதரும் அத்தி மரத்திற்கு ஒப்பாவர். இறைவனின் அழைப்பு எல்லாருக்கும் எல்லாவேளையிலும் எல்லா நிலையிலும் வரும். ஆனால் அவரவர் ஆர்வம் கவனம் கீழ்ப்படிதல் செவிமடுத்தல் இதற்கேற்றார்போல வாழ்வில் பலன் தருவர். சிலர் பலன் தர இயலாமல் கனி தராத அத்தி மரம் போல பார்வைக்கு மட்டும் காட்சிப் பொருளாய் விளங்குவர். சிலர் பலன் தராது வெட்டி வீழ்த்தப்படுவர். நாம் எவ்வாறு இருக்கிறோம்?. மோயீசன் போல இறைவனின் குரலுக்கு செவிமடுத்து வாழ்ந்து வெற்றி பெற, ஆன்மீகப்பாறையாம் இயேசுவில் பருகி நிறைவு அடைய அருள் வேண்டுவோம். ஒருவனை மனிதனாக ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல, அவரவர்க்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களுமே. மோயீசன் பவுலடியார் இயேசு என அனைவருமே தங்கள் வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகளையும் துன்பங்களையும் தங்கள் வாழ்க்கைக்கென எடுத்து நிறைபலன் தருபவர்களாய் வாழ்ந்தனர். நாமும் நிறை கனி கொடுப்பவர்களாக வாழ நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் துன்பங்களையும் சவாலாக மாற்றி வாழ முயல்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

கனி கொடுப்போம்

ஒரு ஊர்ல ஒரு மந்திர மரம் இருந்துச்சு, அந்த மரம் மிகவும் சக்தி வாய்ந்த மரம். யாரு வந்து எது கேட்டாலும் அந்த மரம் கொடுக்கும். ஒரு நாள் ஒரு முதியவர் வந்து அந்த மரத்திடம்... மந்திர மரமே, என் குடும்பம் ரொம்ப வருமையிலே இருக்கு கொஞ்சம் பணம் தந்து உதவு என்றார். உடனே அந்த மரம் பணம் கொடுத்து உதவியது. இன்னும் சிறிது காலம் கழித்து ஒரு பெண்மணி வந்து, மந்திர மரமே ` நான் மிகவும் கஷ்டப்படுகிறேன், என் பிள்கைகள் சாப்பிட ஒரு வேளை உணவுகூட என்னால் கொடுக்க முடியவில்லை. அதனால் எனக்கு தங்க நகைகள் கொஞ்சம் தா என்றாள் அந்த பெண்மணி. அடுத்த வினாடியே அந்த மரம் கேட்டதைகொடுத்து விட்டது. இப்படி அந்த ஊர்ல உள்ள எல்லாருமே அந்த மந்திர மரத்தாலே பயன் பெற்றாங்க. அந்த மரத்த போகும் போதும், வரும்போதும் வாழ்த்துனாங்க. இப்படி ஆண்டுகள் பல உருண்டோடின. தியாகு என்பவன் அந்த ஊரைச் சேர்ந்த பையன். அவன் வெகுநாட்களாக வெளியூரில் படித்துவிட்டு, அன்று ஊருக்கு திரும்பினான். ஊருக்கு வந்ததும் அவன் முதலில் தேடியது அந்த மந்திர மரத்தைத் தான். ஆனால் அந்த மந்திர மரம் இருந்த இடத்துல ஒரு பட்டுப்போன மரம் தான் இருந்துச்சு. சிறுவயதில் அந்த மந்திர மரத்தால் அவனும் நிறைய பயன் பெற்றிருக்கிறான். பட்டுப்போன அந்த மரத்தைப் பார்த்து, மந்திர மரம் தான் இப்படி பட்டுப்போச்சா...? அவனால நம்பவே முடியல. ஒரு பெரியவரிடம் கேட்குறான், இந்த மரத்துக்கு என்னாச்சு..? ஏன் இப்படி பட்டுப்போச்சு...? என்று. அந்த பெரியவர்.. தம்பி பல வருங்களாக நம்ம ஊருல மழையே இல்ல. குடிக்க தண்ணீ இல்லாம மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஆனா ரொம்ப தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருவார்கள். அதனால் அந்த மந்திர மரத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை . அதனால் அந்த மரம் பட்டுப் போய்விட்டது என்று கூறினார். உடனே தியாகு தண்ணீர் எடுத்து வந்து அந்த பட்டுப்போன மரத்தில் ஊற்றினான். உடனே அந்த மரம் நன்றி சொன்னது. தியாகுவிற்கு ஆச்சரியம் .. அட அட மந்திர மரமே நீயா பேசுகிறாய்..? என்னாச்சு உனக்கு, எல்லாருக்கு உதவி செய்த நீ ஏன் பட்டுப்போய் விட்டாய்..? என்று கேட்டான். மரம் சொன்னது, "ஆமாம் நான்  எல்லாருக்கும் உதவினேன். ஆனா எனக்கு நானே தண்ணீர உருவாக்கிக்க முடியாது. தண்ணீர் இல்லாம நான் மிகவும் கஷ்டப்பட்டேன். தண்ணீர தேடி என்னோட வேர்கள் வெகு தூரம் போயிருச்சி.. அப்படியிருந்தும் தண்ணீர் கிடைக்கல. வேறு இடங்களுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்த மக்கள், அவுக்களுக்கு மட்டுமே பயன்படுத்திக்கிட்டாங்க. என்னைய கண்டுக்கவே இல்ல. அதனாலே நான் கொஞ்ச கொஞ்சமா பட்டுப்போய், என்னோட சக்தியை முழுசா எழந்துட்டேன். அதனால மக்கள் கேட்குற எதனையுமே என்னால தரமுடியல. அதனால மக்களும் என்ன மறந்து, கண்டுக்காம விட்டுட்டாங்க. நான் மக்களுக்கு தேவையானது கொடுத்தப்ப, என்ன சுத்தி சுத்தி வந்தாங்க. இப்ப என்னால எதுவும் கொடுக்க முடியாதப்ப, மக்கள் என்ன தவிக்கவிட்டுட்டு போயிட்டாங்க என்று அந்த வாலிபனிடம் முறையிட்டது அந்த மந்திர மரம். மேலும் சில நாட்கள் கழித்து, அந்த பட்டுபோன மரத்த வெட்டிட்டாங்க.

நம்மிடம் பணமோ, செல்வமோ, பொருளோ இருக்குற வரைக்கும் தான் இந்த மனிதர்கள் நம்மை தேடிவருவாங்க. எதுவும் இல்லையினா, அல்லது நம்மால மற்றவர்களுக்கு எந்தப் பயனும் இல்லையினா, நம்மல ஒதுக்கிருவாங்க, அல்லது தூக்கி எரிஞ்சிருவாங்க.

ஆம் அன்பானவர்களே ! தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தில் நாம் இருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு அத்திமர உவமையை கூறுகிறார். ஒருவர் தம் தோட்டத்தில் அத்தி மரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடிய போது, எதையும் காணவில்லை. பாரும்.... மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடிவருகிறேன். எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்.? என்று தன் தொழிலாளியிடம் கூறினார் அந்த தோட்டக்காரர். அதற்கு அந்த தொழிலாளி, ஐயா... இந்த ஆண்டும் இதை விட்டு வைப்போம், நான் இதை சுற்றிலும் வெட்டி எருபோடுகிறேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி, இல்லையென்றால் வெட்டி விடலாம் என்று கூறினார்.

அன்பிற்கினியவர்களே ! இன்றைய நற்செய்தி வாசகமும், மேலே நாம் வாசித்த கதையும் நமக்கு சொல்லவரும் செய்தி
 இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்காக அழைக்கப்பட்டுள்ளோம். பிறந்தோம், வாழ்தோம், இறந்தோம் என்று இல்லாமல், ஏதோ ஒருவகையில் நாம் மற்றவர்களுக்கு பலன் கொடுப்பவர்களாக வாழ வேண்டும். இதையே இந்த உலகம் நம்மிடம் எதிர்ப்பார்கிறது. இந்த உலகம் மட்டுமல்ல, நம்மைப் படைத்த இறைவனும் இதைதான் எதிர்பார்க்கிறார். நமது வீட்டில் நாம் பார்த்திருப்போம் அல்லது நாமே செய்திருப்போம, நமக்கு பயன்படாத பொருட்கள், தேவையில்லாத பழைய சான்மாங்கள், ஒன்றுக்கும் உதவாமல் ஒரே இடத்தில் பல வருடங்களாக அடுக்கி வைதிருக்கும் பொருட்கள் அனைத்தையும் ஒரு மூட்டையில் கட்டி தூரமாக தூக்கிப் போடுவதை அல்லது தீயிட்டு கொழுத்துவதை. இதைப் பார்த்து யாராவது நம்மிடம் கேட்டால் நாம் என்ன சொல்வோம்? இது தேவையில்லாதது.... இதனால் எந்த பயனும் இல்லை என்றுதான் சொல்லுவோம். சாதாரண , நாம் வாங்கிய பொருட்களே பலன் கொடுக்காத போது அதை குப்பையில் போட்டுவிடுகிறோம். நம்மை ஒரு நோக்கத்திற்காக இம்மண்ணில் படைத்த இறைவன், நாம் பலன் கொடுக்கவில்லை என்றால், நம்மை என்ன செய்வார்...? நாம் தான் முடிவு செய்யவேண்டும். சிந்திப்போம். இன்றைய நற்செய்தியே கனி கொடுக்காத மரத்தை வெட்டி வீழ்த்துவது தான். அதனால் நாம் ஏதோ ஒருவகையில் பலன் கொடுக்க வேண்டும்.
நம் வாழ்க்கையால் கனிதருதல் என்பது கடவுள் நமக்கு தந்த ஆலோசனை அல்ல, கட்டளை. கனிதரும் வாழ்க்கை வாழ்வது என்பது நமது சாய்ஸ் அல்ல, அது இறைவனின் விருப்பம். அந்த கட்டளையை மீறும் போது, நாம் இறைவனின் கட்டளைய மீறிய பாவம் செய்கிறோம் என்பதை உணர வேண்டும். இந்த பூமி என்னும் நிலத்தில், கனி தரவேண்டும் என்பதற்காக நாம் கடவுளால் நடப்பட்டவர்கள். கனி கொடாமல் வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கையாகிறது, வெற்று வாழ்க்கையாகிறது. மரங்கள் மண்ணின் வரங்கள், கனி கொடுக்கவே அவை நடப்பட்டவை. கனிகொடுக்காத போது, அவை வெட்டப்பட்டு அதன் பிறவி பயனை இழக்கிறது. மரங்களுக்கே இப்படியென்றால், உயர்ந்த படைப்பாகிய மனிதர்களிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்.

இறைவனை நேசி, மனிதனை நேசி என்ற இரண்டு கட்டளையின் பாதையில் நமது பயணம் தொடரும் போது நமது வாழ்க்கையும் கனி கொடுக்கும் வாழ்க்கையாக, அர்த்தமுள்ள வாழ்க்கையாக, இறைவன் விரும்பும் வாழ்க்கையாக மாறுகிறது. ஆகவே தவக்காலத்தில் இருக்கும் நாம் இறைவிரும்பும் கனியை கொடுக்கக் கூடியவர்களாக வாழ் அருள்வேண்டுவோம். இறைவனின் ஆசீர் நம்மை என்றும் வழிநடத்துவதாக ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.

பாலைநிலத்திலிருந்து இல்லம் திரும்ப

புனித இஞ்ஞாசியாரின் புகழ்பெற்ற 'ஆன்மிகப் பயிற்சிகள்' நூலில், 'தெரிதலும் தெரிவுசெய்தலும்' பற்றிச் சொல்லும்போது, இருவகை உணர்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்: 'ஆறுதல்,' 'வெறுமை.' நம் வாழ்வின் நிகழ்வுகள் நாம் எதிர்பார்ப்பது போலச் செல்லும்போது, அல்லது நமக்கு நடக்கும் எல்லாம் நேர்முகமாகவே நடக்கும்போது, நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் நாம் வெற்றி பெறுகிறபோது, நம் உறவுநிலைகள் நமக்கு அமைதி தருவனவாக இருக்கும்போது, நம் உடல்நலம் நன்றாக இருக்கும்போது போன்ற சூழல்களில் நாம் 'ஆறுதல்' கொள்கிறோம். ஆனால், 'ஆறுதல்' மட்டுமே நம் வாழ்வியல் அனுபவமாக இருப்பதில்லை. சில நிகழ்வுகள் நம் எதிர்பார்ப்பிற்கு முரணாக நடந்தேறும். நமக்கு நடக்கும் எல்லாம் எதிர்மறையாகவே நடக்கும். நம் முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தரும். நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி தராது. நம் உறவுநிலைகளில் அமைதி குலையும். நம் உடல்நலம் குன்றும். இச்சூழல்களில் நாம் அடையும் உணர்வின் பெயர் 'வெறுமை.'

நம் உடல் பசியால், தாகத்தால் வாடுவதுபோல, நம் மூளை புதிய சிந்தனை இல்லாமல் வறண்டு போவதுபோல, நம் இதயம் புதிய உறவுகளைத் தேடுவதுபோல, நம் உள்ளம் அல்லது ஆன்மாவும் வெறுமையை அனுபவிக்கிறது. ஆன்மாவின் ஊற்று சுரப்பது நிற்கும்போது, ஆன்மா என்னும் கிணறு வற்றும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையே இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. தவக்காலத்தின் முதல் வாரத்தில் இயேசுவோடு புறப்பாலைவனத்தில் இருந்து, அவரோடு இணைந்து நம் நம்பிக்கையை அறிக்கையிட்டோம். கடந்த வாரம் அவரோடு உருமாற்ற மலையில் இருந்து நம் வாழ்வின் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டோம். இன்று, நம் ஆன்மிகப் பாலைநிலத்திலிருந்து திரும்புவோம்.

இன்றைய முதல் வாசகம் (காண். விப 3:1-8,13-15) மோசேயின் அழைப்பு நிகழ்வை நமக்குப் படம்பிடித்துக்காட்டுகிறது. 'மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்துவந்தார்' என்ற தொடக்க வசனமே மோசேயின் பாலை அனுபவத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. எகிப்தின் வளம் மிக்க நைல் நதியிலிருந்து 'வெளியே எடுக்கப்பட்டு,' 'எபிரேயத் தாயே தாதியாகப் பாலூட்ட,' 'பாரவோனின் மகளின் அரவணைப்பில்' வாழ்ந்த மோசே, இப்போது, தனக்குச் சொந்தமில்லாத இடத்தில், தனக்குச் சொந்தமில்லாத ஆடுகளை, தனக்குச் சொந்தமில்லாத நிலத்தில் மேய்த்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக தனக்குத்தானே அந்நியராக நிற்கின்றார் மோசே. இந்த நேரத்தில்தான், முள்புதர் ஒன்று எரிந்துகொண்டிருப்பதையும் அது தீய்ந்துபோகாமல் இருப்பதையும் காண்கின்றார். 'இந்த மாபெரும் காட்சியைக் காண்பதற்காக நான் அப்பக்கமாகத் திரும்புவேன்' என்று மோசே முள்புதர் நோக்கித் திரும்புகின்றார். அவர் அணுகி வருவதைக் கண்டு, 'இந்த இடம் தூய்மையானது. இங்கே அணுகி வராதே. உன் மிதியடிகளை அகற்று' என எச்சரிக்கிறார் கடவுள். கடவுள் தன்னையே, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று மோசேயின் மூதாதையரின் கடவுளாகத் தன்னை முன்வைக்கின்றார். எகிப்தில் தன் மக்கள் படும் துன்பங்களைக் கண்டு தான் இறங்கி வந்திருப்பதாகச் சொல்கின்றார் கடவுள்.

'அவர் பெயர் என்ன?' என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்? என முதல் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார் மோசே. மோசே தன் கடவுள் பற்றியும், தன் மூதாதையர் பற்றியும் அறியாமல் இருக்கிறார். அல்லது அவருடைய இந்த இக்கட்டான நிலையில் கடவுள் தன்னிடம் இல்லை என்றுகூட அவர் நினைத்திருக்கலாம். 'இருக்கின்றவாக இருக்கின்றவர் நானே' என்று தன் பெயரை வெளிப்படுத்துகின்றார் கடவுள். 'யிஹ்யே' என்ற இந்த எபிரேயச் சொல்லை, 'இருக்கின்றவராக இருக்கின்றவர்,' 'இருக்கின்றவற்றை இருக்கச் செய்கிறவர்' போன்று பல பொருள்களில் மொழிபெயர்க்கலாம். கடவுளின் பெயர் ஒன்றை மட்டும் நமக்குச் சொல்கிறது. 'இல்லாததை இருக்கச் செய்பவரும்,' 'இருப்பதை இருக்கச் செய்கிறவரும்' இறைவனே. மோசேயின் வெறுமையை நிரப்புகிறவரும், மக்களின் துன்பங்கள் துடைக்கிறவரும் இறைவனே. ஆக, இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த அடிமைத்தனம் என்னும் பாலைநிலைத்திலிருந்து அவர்களை விடுவிக்க மோசே என்னும் வெறுமையின் பாலைநிலத்தைத் தேர்ந்துகொள்கிறார் கடவுள். எப்படி எரிகின்ற முள்புதர் தீய்ந்துபோகவில்லையோ, அப்படியே கடவுளின் இருத்தல் இஸ்ரயேல் மக்களுக்கு தீர்ந்துபோகவில்லை. இந்த அனுபவத்தையே இன்றைய திருப்பாடலில் (காண். 103) ஆசிரியர், 'ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்' என்று புகழ்கின்றார்.

ஆக, 'ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசே' பாலைநிலத்திலிருந்து எகிப்திற்குத் திரும்புமாறு கடவுளால் அழைக்கப்படுகின்றார். இப்படித் திரும்பும் அவர் தன் கடவுளைக் கண்டுகொள்கின்றார். கடவுளைக் கண்டுகொண்ட அவர் கடவுள் அவருக்குத் தந்த பணியைச் செய்யப் புறப்படுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 10:1-6, 10-12), சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணலாமா, வேண்டாமா என்பது பற்றிய அறிவுரையை கொரிந்து நகரத் திருச்சபைக்கு வழங்குகின்றார் பவுலடியார். கொரிந்து நகரத் திருச்சபை ஓர் அறிவுசார் திருச்சபை. எனவே, ஒரு சாரார், 'வேறு எந்தக் கடவுளும் இல்லை' (காண். 1 கொரி 8:4-6) என்ற புரிதலில், எல்லா உணவையும் - அது எந்த ஆலயத்தில் படைக்கப்பட்டாலும் - உண்ணலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். மற்றொரு குழுவினர், இச்செயலைச் சிலைவழிபாடு என்று கருதி, மற்றவர்களின் இச்செயல்பாடு குறித்து இடறல்பட்டனர். இது நம்பிக்கையாளர்கள் நடுவே குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கியது. சிலைகள் கடவுளர்கள் அல்ல என்பதால் அவற்றுக்குப் படைக்கப்பட்ட யாவற்றையும் உண்ணலாம் என்று சொல்கின்ற பவுலடியார், அதே வேளையில், மற்ற நம்பிக்கையாளர்கள் இதைக் குறித்து இடறல் பட்டாலோ அல்லது இச்செயல் பிரிவினையை உண்டாக்கினாலோ, இச்செயல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் (காண். 1 கொரி 8:7-12, 10:23-30).

இந்தப் பின்புலத்தில், தனது அறிவுரைக்கு வலுசேர்க்கும் வண்ணம், முதல் ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை எடுத்தாளுகின்றார் பவுல். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் கடவுள் ஆற்றிய அரும் பெரும் செயல்களை அறிந்திருந்தாலும், மேகத்தின்கீழ் வழிநடத்தப்பட்டு, கடலைக் கால் நனையாமல் கடந்து, ஒரே ஆன்மிக உணவை உண்டு, ஒரே பாறையின் தண்ணீரைக் குடித்தாலும் அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கவும், சிலைவழிபாட்டில் ஈடுபடவும் செய்தனர். இதனால், அவர்கள் கடவுளின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானார்கள். இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டும் பவுலடியார், 'இவை யாவும் நமக்கு முன்னடையாளமாய்த் திகழ்ந்தன' என்கிறார். மேலும், கொரிந்து நகர மக்களும் 'ஒரே திருமுழுக்கு பெற்றாலும்,' 'ஒரே ஆன்மிக உணவை' (நற்கருணை) உண்டாலும், சிலைவழிபாட்டிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இஸ்ரயேல் மக்களைப் போல கொரிந்து நகர மக்களும் பவுலின் அறிவுரைகளுக்கு எதிராக முணுமுணுக்கவே செய்தனர்.

ஆக, நம்பிக்கை கொண்ட கொரிந்து நகர மக்கள், சிலைவழிபாடு என்னும் தங்களின் பழைய பாலைநிலத்திலிருந்து, 'தண்ணீர் தரும் ஒரே பாறையாகிய கிறிஸ்துவை' நோக்கித் திரும்ப அவர்களை அழைக்கின்றார் பவுலடியார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். லூக் 13:1-9) முதல் பகுதி இரண்டு கொடூரமான நிகழ்வுகளோடு தொடங்குகிறது: ஒன்று, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான். இரண்டு, சீலோவாமிலே கோபுரம் விழுந்து அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பதினெட்டுப் பேர் இறக்கின்றனர். இப்படி இறந்தவர்கள் எல்லாருமே எதிர்பாராத விதத்தில், இறப்புக்கான எந்தவித முன்தயாரிப்புமின்றி இறக்கின்றனர். நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதி, கனி தராத அத்திமரம் ஒன்று தன் தலைவரால் தான் எதிர்கொள்ளவிருக்கின்ற அழிவைப் பதிவு செய்கிறது. இந்நிகழ்வில் இயேசுவின் உருவகமாக வரும் தோட்டக்காரர், தலைவரிடம் அத்திமரத்திற்காக பரிந்து பேசி, கடைசி வாய்ப்பு ஒன்றைக் கெஞ்சிக் கேட்கின்றார்.

மேற்காணும் இரண்டு நிகழ்வுகள் வழியாகவும், காய்க்காத அத்திமரம் உருவகம் வழியாகவும் இயேசு தன் சமகாலத்தவரைத் தங்களின் 'பாலைநிலத்திலிருந்து உடனடியாக திரும்ப' அழைப்பு விடுக்கின்றார். எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் இறந்தவர்களைப் பாவிகள் என்று அடையாளப்படுத்தும் போக்கை விடுத்து, தாங்கள் அந்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும், இறப்பு எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் உடனடியாக மனம் மாறவும், அந்த மாற்றத்திற்கு உறுதுணையாக இயேசுவைப் பற்றிக்கொள்ளவும் வேண்டும்.

ஆக, கனிதராத வாழ்வு என்ற பாலைநிலத்திலிருந்து கனிதருதல் என்ற நிலைக்குத் திரும்ப தம் சமகாலத்தவரை அழைக்கிறார் இயேசு.

நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வுநிலையை உடல்சார், அறிவுசார், உறவுசார், ஆன்மிகம்சார் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பாலைநில அனுபவம் பெறுகின்றோம். பசி என்பது உடல்சார் பாலை, அறியாமை என்பது அறிவுசார் பாலை, தனிமை என்பது உறவுசார் பாலை, வெறுமை, உறுதியற்ற தன்மை, தவறான தெரிவுகள் போன்றவை ஆன்மிகம்சார் பாலை. முதல் மூன்றுநிலைப் பாலை அனுபவங்களை நாம் மிக எளிதாக வெற்றிகொள்ள முடியும். ஆனால், நான்காம் பாலை - ஆன்மிகம்சார் பாலைநிலைத்தை - வெற்றிகொள்வது அவ்வளவு எளிதல்ல. மோசேக்கு கடவுளின் பெயர் தேவைப்பட்டது. கொரிந்து நகர மக்களுக்கு பவுலின் நினைவூட்டல் தேவைப்பட்டது. இயேசுவின் சமகாலத்தவருக்கு எச்சரிக்கையும் வேகமும் தேவைப்பட்டது.

இன்று நாம் உணரும் ஆன்மிகம்சார் பாலைநில அனுபவம் என்ன? அதிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது? அல்லது பசுமை நோக்கித் திரும்புவது? இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு மூன்று வழிகளைக் கற்பிக்கிறது:

1. இறைவனை அறிதல் வேண்டும்
மோசே இறைவனால் அழைக்கப்படுவதற்கும் அனுப்பப்படுவதற்கும் முன் இறைவனை அவர் அறிந்துகொள்கின்றார். இறைவனின் அழைப்பும் அனுப்பப்படுதலும் மோசேக்கு அவர் எதிர்பாராத இடத்தில், அவர் எதிர்பாராத நேரத்தில், அவர் தன்னுடைய வேலையில் மும்முரமாய் இருந்தபோது அருளப்படுகின்றது. இறைவனின் அழைப்பை மோசே இரண்டு நிலைகளில் கண்டுகொள்கின்றார்: ஒன்று, தன் ஆடுகளின் பக்கம் இருந்த தன் முகத்தை எரியும் முள்புதர் பக்கம் திருப்புகின்றார். இரண்டு, இறைவனின் பெயரை அறிந்துகொள்கின்றார். ஆடுகளிலிருந்து கண்களைப் முள்புதர் பக்கம் திரும்புவது எளிதன்று. ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற வேண்டும். மலை என்னும் பாதுகாப்பின்மையை நோக்கிச் செல்ல வேண்டும். தன் மிதியடிகளைக் கழற்ற வேண்டும். சில நேரங்களில் நம் மனம் பாலை அனுபவத்தில் இருக்கும்போது, விரக்தியை அனுபவிக்கும்போது, நாம் நம் ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருப்பதில்லை. நம் பாதுகாப்பின்மையை அல்லது வலுவின்மையை ஏற்றுக்கொள்ளத் தயராhக இருப்பதில்லை. அந்நேரங்களில், 'இது என்ன? வித்தியாசமாக இருக்கிறதே! எனக்குள் வெறுமையும் இருக்கிறது. அதே வேளையில் நான் உயிரோடும் இருக்கின்றேனே!' என்று நம்மைப் பற்றி நாமே ஆச்சர்யப்பட்டுக் கொண்டால் அங்கே இறைவனை அறிதல் சாத்தியமாகும். அங்கே, ஒன்றும் 'இல்லாமையில்,' 'இருக்கின்ற இறைவன்' எல்லாவற்றையும் இருக்கச் செய்வார். இழந்ததையும் திரும்ப அளிப்பார். நாம் விட்டுவிட்டு ஓடிவந்த எகிப்திற்கே நம்மை புதிய பணிக்காக அனுப்புவார்.

2. அதீத நம்பிக்கை அகற்ற வேண்டும்
பிரபலமான டைட்டானிக் கப்பல் தன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால் தனக்கு முன் சென்ற படகின் எச்சரிக்கையை எடுத்துக்கொள்ளவில்லை. 'இறைவன் தங்களோடு இருக்கிறார்' என்ற அதீத நம்பிக்கையே, இஸ்ரயேல் மக்களை, 'நாங்கள் என்ன செய்தாலும் ஆண்டவர் அன்பு செலுத்துவார்' என்று நினைக்கத் தூண்டியது. ஆகையால்தான், அவர்கள் சிலைவழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினர். 'சிலைவழிபாட்டு உணவை விட வேண்டும்' என்ற எச்சரிக்கையையும் கொரிந்து நகர மக்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆக, ஆன்மிகப் பாலை அனுபவம் சில நேரங்களில் நம் அதீத நம்பிக்கையாலும், எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்துவதாலும் வரலாம்.

3. செயல் மாற்றம் வாழ்வு மாற்றம்
சில நேரங்களில் நாம் பயம் அல்லது விரக்தி உணர்வுகளால் அல்லது எதிர்மறை உணர்வுகளால் ஆட்கொள்ளப்படும்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். அந்த மாதிரியான நேரங்களில் இரண்டு விடயங்கள் செய்ய வேண்டும் என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்: (அ) இதுவரை செய்யாத ஒன்றைச் செய்வது - அத்திமரத்தை தலைவர் வெட்டப்போகிறார் என்று முடிவெடுத்தவுடன் தோட்டக்காரர் உடனடியாக மரத்திற்கு உரம் போட ஆரம்பிக்கிறார். இதுவரை செய்யாத ஒன்றை இவர் செய்ய ஆரம்பிக்கிறார். (ஆ) செயலை மாற்றுவதன் வழியாக உணர்வை மாற்றுவது - இது முந்தைய விடயத்தின் நீட்சியே.

இவ்வாறாக, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நம் ஆன்மிகப் பாலைவனத்திலிருந்து நம்மை வெளியே வர அழைக்கிறது. ஆறுதலும், வெறுமையும் மாறி மாறி வரும் வாழ்வியல் அலைகள். வெறுமையில் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால், அங்கே 'இருக்கின்ற அவர் இருக்கின்றவராக இருப்பார்' - இன்றும் என்றும்!

 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

பீட்டர் என்பவர் கடவுளைத் தேடும் மனிதர். ஒருவன் பீட்டரைப் பார்த்து நீ கடவுளைக் காண வேண்டும் என்றால் உயர்ந்த மலையின் உச்சிக்குச் செல்ல வேண்டும் என்றான். இதை நம்பி மலை ஏறத் தொடங்கினான் பீட்டர். இந்த ஆவலால் தூண்டப்பட்ட இவரை, பசியோ, தாகமோ, களைப்போ தடுக்க முடியவில்லை. இதே நேரம் கடவுள் என்ன செய்ய விரும்பினார் தெரியுமா?

மக்களோடு இருக்க விரும்பினார். மக்களின் துன்பம், துயரம், கண்ணீர் இவைகளால் தூண்டப்பட்டு இவர்களைத் தேற்ற வேறு வழியாக கீழே இறங்கி வந்தார். ஆனால் பீட்டர் தான் சென்ற வழியிலும், மலை உச்சியிலும் கடவுளைக் காண முடியவில்லை. இதை அறிந்த பீட்டர் கவலையோடும், மனக் கலக்கத்தோடு கடவுளே! நீர் எங்கே இருக்கிறீர் என்று உச்சக் குரலில் கேட்டார். ஒரு குரல் பதிலாக எதிரொலித்தது. அவர் இங்கே இல்லை. தன் மக்களோடு இருக்கிறார் என்ற பதில் வந்தது. இதை ஜாண் டோன் என்ற கவிஞர் தன் கவிதையில் இவ்வாறு விவரிக்கிறார். கடவுள் ஆகாயத்திலும், பாலைவனத்திலும், காட்டிலும், மேட்டிலும் இல்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார். இந்தப் பேருண்மையைத் தான் இன்றைய வாசகம் நமக்குத் தருகிறது.

இன்றைய மோசேயின் அழைப்பைப் பற்றிய விடுதலை பயண நூல் நமக்கு என்ன கூறுகிறது? மோசே ஒரு கொலைகாரன். பார்வோனின் அரண்மனையில் வளர்ந்தவன். எகிப்தியனை வெட்டி மண்ணிலே புதைத்தவன். இப்படிப்பட்ட கொலைகாரனைக் கடவுள் எரியும் புதரிலே எரியாது நின்று இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை வீரராகத் திகழ அழைக்கின்றார். ஆம், பாவிகள் மனம் திரும்பினால் பரமனின் செயல்களில் சிறந்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்குத் தகுந்த சான்று.

புதிய ஏற்பாட்டிலே இயேசுவைச் சந்திக்கின்றோம். இயேசு எப்படிப்பட்டவர் என்பதற்கு ஓர் அழகான உவமையைத் தருகிறார். தோட்டத்திலே காய்க்காத அத்திமரத்தை ஏன் பூமிக்குப் பாரமாக உள்ளது, வெட்டி வீழ்த்தி விடு என்கிறார் தோட்டக்காரனை நோக்கி. ஐயா பொறும், இந்த ஆண்டு மட்டும் சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன். காய் தந்தால் சரி, இல்லையேல் வெட்டிவிடலாம் என்கிறான் தோட்டக்காரன். ஆம் தோட்டக்காரனைப் போன்றவர் தான் நம் ஆண்டவர் இயேசு. தந்தையிடம் பாவிகளுக்காகப் பரிந்து பேசுகிறார். எத்தகைய பெரிய வேசியாக இருந்தாலும் சரி பழைய பாவ வாழ்க்கையைக் களைந்துவிட்டு நற்செய்திக் கனி கொடுக்கும் வாழ்க்கைப் பிறப்பால் அவன் மீட்புப் பெறுவான். இதற்குச் சான்றுதான் இன்று வாசிக்கப்பட்ட மோசே வாழ்க்கை.

நிகழ்ச்சி
புனித பெலார்ஜியா. இவள் மயக்கும் அழகியாக இருந்தாள். ஆலயம் செல்வாள். இறைவார்த்தையைக் கேட்க அல்ல, மாறாக மனிதர்களின் மனதை மயக்க. ஆலயத்தில் ஆயர், "இதுவரை மனம் திரும்பாத பாவிகளே! இன்றாவது மனம் திரும்புங்கள். ஏனெனில் யாராலும் கடைசித் தீர்ப்பில் தப்ப முடியாது" என்றார். கூட்டத்தில் பலர் கண்ணீர் வடித்தார்கள். பெலார்ஜியாவின் இதயத்தையும் ஆயரின் ஆணித்தரமான மறையுரை அம்பாக துளைத்தது. முகத்தைத் துணியால் மூடித் தேம்பித் தேம்பித் தன் பாவத்திற்காக அழுதாள். மனம் திரும்பி பாவ அறிக்கையிட்டு புதிய வாழ்வில் நுழைந்தாள். இன்று அவள் மாபெரும் புனிதை (பயங்கர முடிவு 1 கொரி, 10:10-12).

இறைவன் பாவிகள் மனம் திரும்புவதை விரும்புகிறார். அதற்காகக் காத்திருக்கிறார். ஆகவே இது இறைவனது இரக்கத்தின் காலம். இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நான் விட்டுவிடக் கூடாது. ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்த வர்களாக அவர் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் எதிர்பார்க்கிற பலனைத் தருபவர்களாக வாழ உறுதி எடுப்போம்.

ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை

"நீங்களும் மனம்மாற வேண்டும்"

மனம்மாறியவர்களை கடவுள் மன்னிக்கும் முறை:

ஒருவர் தனது மகிழுந்தில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தார். அவரைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவலர் அவரிடம், "நீங்கள் குறிக்கப்பட்ட வேகத்தை விடவும் அதிவேகத்தில் சென்றதால், அதற்குரிய அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். ஆனால், அதை இங்கு அல்ல, நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும்" என்றார். மகிழ்ந்தை ஓட்டி வந்தவரும், சரி என்று கேட்டுக்கொண்டு, நீதிமன்றத்தில் இருந்த குற்றவாளிக் கூண்டில் போய் நின்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வண்டி ஓட்டுநரிடம், "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறி, உங்களுடைய வண்டியில் அதிவேகத்தில் சென்றீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?" என்றார். "ஆமாம் ஐயா! நான் என்னுடைய தவற்றை ஒப்புக் கொள்கிறேன்" என்றார் வண்டி ஓட்டுநர். அவர் இவ்வாறு சொன்னதும்தான் நீதிபதிக்குத் தெரிந்தது, குற்றவாளிக் கூட்டில் இருப்பவர் ஓர் ஆன்மிகப் பேச்சாளர் என்று. அதனால் நீதிபதி அவரிடம், "நீங்கள் உங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஐந்நூறு உரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும்" என்றார்.

இப்படிச் சொல்லிக்கொண்டே நீதிபதி, தனது மேல் பையில் இருந்த ஐந்நூறு உரூபாயை எடுத்து, அதைக் காசாளரிடம் கொடுத்து, "இந்தப் பணத்தை நான் இவருடைய சார்பாகக் கொடுக்கின்றேன்" என்றார். இதைப் பார்த்துவிட்டு, நீதிமன்றத்தில் இருந்த யாவரும் மலைத்துப் போயினர். பின்னர் எல்லாரும் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது வண்டி ஓட்டுநர், அதாவது ஆன்மிகப் பேச்சாளர் நீதிபதியிடம் சென்று, "கடவுள், ஒருவருடைய பாவத்தை மன்னிக்கும்போது இப்படித்தான் தாராளமாக மன்னிக்கின்றார்" என்றார்.

ஆம், கடவுள் மன்னிப்பதில் தாராளமானவர். அப்படிப்பட்டவரிடம் நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, அவரிடம் திரும்பவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. தவக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத்தான் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

பிறரைக் குற்றவாளியை எனத் தீர்ப்பிடுதல்:
பலருக்குத் தங்களுடைய கண்ணில் மரக்கட்டையே இருந்தாலும், அதெல்லாம் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது; அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பே அவர்களுக்குப் பெரிதாகத் தெரியும்! இன்னும் ஒருசிலருக்கு மற்றவரிடம் குற்றம் காண்பதில் அலாதியான இன்பம் ஏற்படும். இத்தகைய மனிதர்கள் இன்று, நேற்று அல்ல, இயேசுவின் காலத்திலும் இருந்தார்கள்.

நற்செய்தியில் இயேசுவிடம் வரும் சிலர், பலிசெலுத்திக் கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்ற செய்தியைச் சொல்கிறார்கள். இயேசுவிடம் வந்தவர்கள் அவரிடம் இச்செய்தியைச் சொன்னதன் மூலம், கொல்லப்பட்ட கலிலேயர்கள் பாவிகள்; அதனால்தான் அவர்கள் பிலாத்துவால் கொல்லப்பட்டார்கள் என்பதை மறைமுக அவரிடம் உணர்த்த விரும்பினார்கள். ஏனெனில் பாவிகளுக்குத்தான் இதுபோன்று நடக்கும் என்ற நம்பிக்கை அன்று யூதர்களிடம் இருந்தது (யோபு 4:7; யோவா 9:2).

பிலாத்துவால், பலிசெலுத்திக்கொண்டிருந்த கலிலேயர்கள் கொல்லப்பட்டார்கள். அதனால் அவர்கள் பாவிகளாகத்தான் இருக்கவேண்டும் என்பதைக் கூற விழைந்தவர்களிடம் இயேசு, சீலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டு பேர் இறந்த செய்தியைச் சொல்கின்றார். இயேசு இச்செய்தியைத் தன்னிடம் வந்தவர்களிடம் கூறுவதன் மூலமாக நம் ஒவ்வொருவருக்கும் சொல்லும் செய்தி என்ன? அதைப் பற்றித் தொடர்ந்து நாம் சிந்திப்போம்.

ஒவ்வொருவரும் மனம்மாறவேண்டும்.
"அவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது; அவர் பாவம் செய்திருக்க வேண்டும். இவருக்குத் தீராத நோய் வந்திருக்கின்றது. இவர் பாவம் செய்யாமல், இப்படியெல்லாம் நோய் வராது" என்று இன்றைக்கும்கூட ஒருசிலர் பேசித்திரிவதை நாம் பார்க்கலாம். இத்தகைய மனநிலையோடு வந்தவர்களிடம் நற்செய்தியில் இயேசு, "மனம்மாறாவிட்டால் நீங்களும் அப்படியே அழிவீர்கள்" என்கிறார். இதன்மூலம் ஒவ்வொருவரும் மனமாறவேண்டும். அப்படி மனம்மாறாவிட்டால் அழிவது திண்ணம் என்பதை அவர் எடுத்துக் கூறுகின்றார்.

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகச் செய்த பாவங்களைப் பட்டியலிடுகின்றார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகப் பல பாவங்களைச் செய்திருந்தாலும், நான்கு பாவங்கள் மிகப்பெரிய பாவங்களாகக் கருதப்படுகின்றன. சிலைவழிபாடு, ஒழுக்கக்கேடு, ஆண்டவரைச் சோதித்தல், ஆண்டவருக்கு எதிராக முணுமுணுத்தல் ஆகிய நான்கு பாவங்கள்தான் பெரிய பாவங்களாகக் கருதப்படுகின்றன. பவுல் இவற்றைக் கூறிவிட்டு, இவையாவும் உங்களுக்கு எச்சரிக்கையாகவும், அறிவுரையாகவும் எழுதப்பட்டுள்ளன என்கிறார். ஆதலால், இஸ்ரயேல் மக்களுக்கு நேர்ந்த அழிவு நமக்கும் ஏற்படாத வண்ணம் இருக்க, இதுவே தகுந்த காலம் (2 கொரி 6:2) என்று நாம் மனம்மாறுவது சிறந்தது.

கண்டவர், கேட்டவர், இரக்கம் கொண்டவர்:
மனம்மாறவிட்டால் அனைவரும் அப்படியே அழிவீர்கள் என்று இயேசு சற்றுக் கடினமான வார்த்தைகளைச் சொன்னாலும், அதற்கு அடுத்ததாக அவர், கடவுள் பாவிகள் மனம்மாறுவதற்காக எவ்வளவு பொறுமையோடு இருக்கின்றார் என்ற செய்தியைச் சுட்டிக் காட்டுகின்றார். அதற்காக அவர் கையாளும் உவமைதான் அத்திமர உவமை ஆகும். அத்திமரத்தில் மூன்று ஆண்டுகள் கனிகள் இல்லை. அதனால் அதனை வெட்டிவிடுமாறு தோட்டத்தின் உரிமையாளர் சொல்கின்றபோது, பணியாளர் அவரிடம், இன்னும் ஓராண்டு பொறுத்திருக்கச் சொல்கிறார். இதன்மூலம், இயேசு பாவிகள் மனம்மாறவேண்டும் என்பதற்காக ஆண்டவர் பொறுமையோடு இருக்கின்றார் என்ற செய்தியைக் கூறுகின்றார். இதே கருத்தினைத்தான் பேதுருவும் தனது இரண்டாம் திருமுகத்தில் கூறுவார் (2 பேதுரு 3:9).

விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், கடவுள் பாவிகள் மட்டில் பொறுமையோடு இருக்கின்றார் என்பதையும் கடந்து, அவர் தன் மக்கள்மீது பரிவும் இரக்கமும் கொண்டவராக இருக்கின்றார் என்பதை மிக அழகாகக் காட்டுகின்றது. முட்புதர் நடுவில் மோசேக்கு காட்சியளிக்கின்ற ஆண்டவர், எகிப்தில் என் மக்கள் துன்பங்களை நான் கண்களால் கண்டேன். அவர்கள் எழுப்பும் குரலைக் காதால் கேட்டேன். அவர்களை விடுவிக்க இறங்கி வந்திருக்கின்றேன் என்கிறார். இதுதான் கடவுள் தன் மக்கள்மீது கொள்ளும் பரிவும் இரக்கமுமாக இருக்கின்றது.

இத்தகைய கடவுளிடம் நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்தவர்களாய், மனம்திருந்தி வந்தால், அவர் நம்மை மன்னிப்பது உறுதி. எனவே, நம்மைக் காணும், நமது குரலைக் கேட்கும், நம்மீது இரங்கும் ஆண்டவரிடம் மனம் திரும்பி வந்து, அவரது ஆசியைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:
"தீயோர் சாக வேண்டும் என்பது என் விருப்பம் அன்று, அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதே என் விருப்பம்" (எசே 33:11) என்பார் ஆண்டவர். எனவே, நாம் மனம்மாற வேண்டும் என்பதற்காகப் பொறுமையோடும் இரக்கத்தோடும் பரிவோடும் இருக்கும் ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



மறையுரைச் சிந்தனை: அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை

மனம்மாறி இறைவனிடம் திரும்பி வருவோம்.



இங்கிலாந்து நாட்டின் டார்லிங்டன் நகரில் வாழ்ந்த ஒரு திருடன் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு வீடு திரும்பினான். வீட்டுக்கு வந்த அவனை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவன் வாழ்க்கையை வெறுத்துப் போயிருந்தான். ஒருநாள் அவன் தெருவில் நடந்துசென்று கொண்டிருந்தபோது, எதிரிலே அந்நகரின் மேயர் ஜான் மோர்சல் வந்துகொண்டிருந்தார். அவருக்கு இவனை நன்றாகவே தெரியும். உடனே அவன், அவரிடமிருந்து எப்படியாவது தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒளிந்து ஒளிந்து சென்றான். அப்போது திடிரெண்டு ஒரு கை அவன் தோள்மேல் பட்டது. திரும்பி பார்த்த அவன் அதிர்ந்துபோனான். ஏனென்றால் அவன் எதிரே ஜான் மோர்சல் நின்றுகொண்டிருந்தார். அவர் அவன் தோள்மேல் கைபோட்டு, என்ன சகோதரா! நன்றாக இருக்கிறீர்களா? என்று நலம் விசாரித்தார். இது அவனுக்கு இன்னும் அதிர்ச்சியைத் தந்தது. சிறிது நேரம் அவர் அவனிடம் பேசிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.



வருடங்கள் பல சென்றன. ஒரு நாள், வேறொரு நகரில் அவன் ஜான் மோர்சலைப் பார்த்து, மிகுந்த சந்தோசத்தோடு அவரிடம் சென்று, ஐயா! என்னை ஞாபகம் இருக்கிறதா? என்றான். ஒரு நிமிடம் அவனை அமைதியாகப் பார்த்துவிட்டு அவர் ஞாபகம் இருக்கிறது என்பதுபோல் தலையாட்டினார். அப்போது அவன் அவரிடம்இ ஐயா! அன்றைக்கு மட்டும் நீங்கள் என் தோள்மேல் கைபோட்டு, அன்பாகப் பேசி இருக்காவிட்டால், இன்றைக்கு நான் எப்படியோ இருந்திருப்பேன்இ என் வாழ்க்கையே முற்றிலும் சீரழிந்து போயிருக்கும். நீங்கள்தான் எல்லாரும் வெறுத்து ஒதுக்கிய திருடனாகிய என்னிடம் அன்பொழுகப் பேசினீர்கள்; நீங்கள்தான் என் குற்றங்களையெல்லாம் எல்லாம் மன்னித்து ஏற்றுக்கொண்டீர்கள் என்றான். அன்போடு நடந்துகொண்டால் எப்படிப்பட்ட குற்றவாளியும் மனந்திரும்புவான் என்பதை இக்கதையானது சுட்டிக்காட்டுகிறது.



தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை வாசகங்கள் நமக்கு மனந்திரும்பி வாழ அழைப்புத் தருகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம் சிலர், பிலாத்து பலிசெலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைக் கொன்றான் என்ற செய்தியைச் சொல்கின்றனர். அதற்கு இயேசு, மனம் மாறாவிடில் நீங்கள் ஒவ்வொருவருமே அழிவீர்கள் என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் சற்றுக் கடினமாக இருந்தாலும், அவர் நாம் அனைவரும் மனந்திரும்பி வரவேண்டும் என்று அன்போடு காத்துக்கொண்டிருக்கிறார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், நீங்கள் கடவுளைவிட்டு விலகி சென்ற இஸ்ரயேல் மக்கள் போன்று அல்லாமல், கடவுளை நோக்கி வரும் மக்களாக வாழவேண்டும் (1கொரி 10:6) என்றதொரு அழைப்பினைத் தருகிறார். ஆம், கடவுளை விட்டு விலகிச்செல்வதுதான் பெரிய பாவம், விலகிச் சென்றவர்கள் மீண்டுமாக இறைவனிடம் திரும்பி வருவதே உண்மையான மனமாற்றம். ஆதலால் நாம் இருகின்றவராக, இருக்கின்ற இறைவனிடம் திரும்பி வருவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

கடவுள் பொறுமையே உருவானவர்

காய்க்காத, கனி கொடாத, அத்திமரத்தை வெட்டிவிடச் சொல்லும் முதலாளியிடம், தொழிலாளர், இந்த மரத்தை இப்போது வெட்ட வேண்டாம்; இந்த மரத்தைச் சுற்றிலும் கொத்தி எருபோட்டுக் காத்திருப்போம் என்று சொல்வதை இன்றைய நற்செய்தி நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.

தொழிலாளரின் கூற்று வழியாக இயேசு நமக்குச் சுட்டிக் காட்டும் உண்மை என்ன? இயேசு நம்மைப் பார்த்து, கடவுள் பொறுமையே உருவானவர் ; ஒரு பாவி சாகவேண்டும் என்று அவர் விரும்புவதில்லை; அவன் எப்படியாவது வாழவேண்டும் என்றே விரும்புகின்றார் ; அவர் பாவிகள் ஒரு நாள் மனம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பவர் என்று கூறுகின்றார்.

கடவுள் அன்பே உருவானவர். அன்பு பொறுமையுள்ளது ... எரிச்சலுக்கு இடம் கொடுக்காது அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் ; அனைத்தையும் நம்பும் ; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; ... (1கொரி 13 : 4-7) என்கின்றார் புனித பவுலடிகளார். இதோ நமது கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்ட கதையொன்று!

விண்ணிலிருக்கும் வானதூதர்களுக்கெல்லாம் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக ஒரு சந்தேகம்! நினிவே நகர் மக்களைப் பார்த்து யோனா வழியாகக் கடவுள், நினிவே அழிக்கப்படும் என்று கூறினார். ஆனால் கடவுள் அவர்களை அழிக்கவில்லை (யோனா 3:1-10). விண்ணகத் தந்தை இயேசு வழியாக மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அழிவீர்கள் (லூக் 13 : 3) என்கின்றார். ஆனால் யாரையும் அவர் அழிக்கவில்லை.

விண்ணகத் தந்தையிடம் எல்லா வானதூதர்களும் சென்றார்கள்! கடவுள். என்ன எல்லாரும் சேர்ந்து வந்திருக்கின்றீர்கள்? என்றார்.

எல்லா சம்மனசுக்களும், ஆண்டவரே, உலகத்திலுள்ள எத்தனையோ பேர் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கின்றார்கள். உமது பத்துக்கட்டளைகளையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றார்கள். நீர் எத்தனையோ இறைவாக்கினர்களை அனுப்பிவைத்தீர். யாருக்கும் அவர்கள் செவி கொடுக்கவில்லை. இறுதியாக உமது ஒரே பேரான மகனை அனுப்பிவைத்தீர். அவரையும் ஈவு இரக்கமின்றி சிலுவையிலே தொங்கவிட்டு கொன்றுவிட்டார்கள்.

இவ்வளவு பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவர்களை ஏன் நீர் விட்டுவைத்திருக்கின்றீர்? உமக்குக் கோபமே வராதா? என்றார்கள்.

அதற்குக் கடவுன் அவர்களைப் பார்த்து, என் பெயர் அன்பு; அன்புக்குள் எப்படி கோபம் இருக்க முடியும்?

அன்புக்கு மறுபெயர் பொறுமை ; அன்புக்கு மறுபெயர் நம்பிக்கை; அன்புக்கு மறுபெயர் எதிர்நோக்கு என்றார்.

மனம் திருந்தி, திரும்பி வந்த மகனின் (லூக் 15 : 11-32) தந்தை அவரது மகனுக்காகக் காத்திருந்தது போல, பாவிகளாகிய நமது மனமாற்றத்திற்காகக் காத்திருப்பவர் விண்ணுலகிலிருக்கின்ற நமது தந்தை.

நம்மையே நாம் எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் நாம் வாழுகின்ற பூமி புனிதமானது. தொடக்க நூல் 1 : 31 கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன என்கின்றது. கடவுளின் கைவேலைப்பாடுகள் எப்படி புனிதமில்லாமல் இருக்க முடியும்?

நாம் வாழும் வீடு, இந்த உலகம் புனிதமாக இருப்பதால், அந்த வீட்டுக்குள் வாழும் நாம் அனைவரும் புனிதர்களாக, புனிதைகளாக இருக்க வேண்டும்!

மோசே காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களில் பெரும்பான்மையோர் உண்மையான இறைவனை மறந்து, தீயனவற்றின் மீது ஆசை வைத்தார்கள் (1 கொரி 10 : 6). நாமோ கிறிஸ்து என்னும் பாறையின் மீது நமது வீட்டைக்கட்டி அவர் தரும் அருளைப் பருகி விண்ணகத் தந்தைக்கு ஏற்புடைய மக்களாக வாழ்வோம் .

மேலும் அறிவோம்:

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (குறள் : 155).

பொருள் : அயலார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டிப்போரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கருதி மதிக்கமாட்டார்கள். ஆனால் அயலார் செய்திடும் தீமையைப் பொறுத்தாற்றிக் கொள்வோரை அறவோர் அருமையும் அழகும் மதிப்பும் மிக்க பொன்னைப் போன்று போற்றிப் பேணிக் கொள்வர்.

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
ஒரு பங்குத்‌ தந்தை ஞாயிறு மறையுரையின்போது, "இந்தப்‌ பங்கு மக்கள்‌ அனைவரும்‌ நரகத்துக்குத்தான்‌ போவார்கள்‌" என்று கத்தினார்‌. அதைக்‌ கேட்ட ஓர்‌ இளைஞர்‌ சிரித்தார்‌. ஏன்‌ அவர்‌ சிரித்தார்‌ என்று பங்குத்‌ தந்தை கேட்டபோது அவர்‌, "நான்‌ இந்தப்‌ பங்கு, இல்லை; வெளியூர்ப்‌ பங்கு" என்றார்‌.

நம்மிலே பலர்‌ மற்றவர்கள்தான்‌ மனம்‌ மாற வேண்டும்‌; நான்‌ மனம்‌ மாறத்‌ தேவையில்லை. மற்றவர்கள்தான்‌ நரகத்துக்குப்‌ போவார்கள்‌. நான்‌ நரகத்துக்குப்‌ போக மாட்டேன்‌ என்று நினைக்கின்றனர்‌. ஆனால்‌. இன்றைய நற்செய்தியில்‌, கிறிஸ்துவிடம்‌ இரண்டு விபத்துக்களில்‌ இறந்தவர்களைப்‌ பற்றிக்‌ கூறிய போது இரு முறையும்‌ இயேசு கூறியது: "இவ்விருவிபத்துக்களில்‌ இறந்தவர்கள்‌ தான்‌ பாவிகள்‌, மற்றவர்கள்‌ நீதிமான்கள்‌ என்று நினைக்காதீர்கள்‌. மனம்‌ மாறாவிட்டால்‌ அனைவரும்‌ இழிவீர்கள்‌". ஒவ்வொரு சாவும்‌ கூறும்‌ செய்தி: மனம்‌ மாறுங்கள்‌.

மனம்‌ மாற்றம்‌ என்றால்‌ மனதைக்‌ சுட்டுப்படுத்தும்‌ முயற்சியல்ல. ஓர்‌ இளைஞன்‌ காமவேட்கையால்‌ வேதனையுற்று, காட்டுக்குச்‌ சென்று ஒரு மரத்தடியில்‌ அமர்ந்து கண்களை மூடித்‌ தியானம்‌ செய்ய முற்பட்டான்‌. காலை 10 மணிக்குக்‌ கண்களைத்‌ திறந்தபோது அவன்‌ முன்‌ நின்றுகொண்டிருந்த ஓர்‌ அழகிய பெண்‌ அவன்‌ தியானத்தைக்‌ கலைத்து விட்டாள்‌. இரண்டாம்‌ நாள்‌ அவன்‌ தன்‌ கண்களை ஒரு "துண்டால்‌ இறுகக்‌ கட்டிக்‌ கொண்டு தியானம்‌ தொடங்கினாள்‌. காலை: 10 மணிக்கு மறுபடியும்‌ அவன்‌ முன்‌ நின்ற அந்த அழகியை அவன்‌ கண்ணால்‌ காணவில்லை என்றாலும் அவள்‌ காலில்‌ அணிந்திருந்த கொலுசின்‌ சத்தம்‌ அவன்‌ தியானத்தைக்‌ கலைத்துவிட்டது.

மூன்றாம்‌ நாள்‌ அவன்‌ தன்‌ கண்களைத்‌ துண்டால்‌ மூடியதுடன்‌ தன்‌ இருகாதுகளிலும்‌ பஞ்சை வைத்து அடைத்துத்‌ தியானம்‌ செய்தான்‌. காலை 10 மணிக்கு அவள்‌ வந்தபோது, அவளை அவன்‌ கண்ணால்‌ பார்க்கவில்லை, கொலுசு சத்தத்தைக்‌ காதால்‌ கேட்கவில்லை. எனினும்‌. அவள்‌ கூந்தலின்‌ மல்லிகைப்பூ அவன்‌ மூக்கைத்‌ துளைத்து அவன்‌ தியானத்தைக்‌ கலைத்துவிட்டது.

நான்காம்‌ நாள்‌ அவன்‌ தன்‌ கண்‌, காது, மூக்கு அனைத்தையும்‌ அடைத்துவிட்டுத்‌ தியானம்‌ தொடங்கினான்‌. காலை 10 மணிக்கு இவள்‌ வந்தபோது, அவன்‌ அவளைக்‌ கண்ணால்‌ காணவில்லை, கொலுசு சத்தத்தைக்‌ காதால்‌ கேட்கவில்லை; மல்லிகைப்‌ பூவை மூக்கால்‌ நுகர வில்லை. இருப்பினும்‌ அவன்‌ மனம்‌, "பத்து மணி ஆகிவிட்டது. இந்நேரம்‌ அவள்‌ வந்திருப்பாள்‌" என்று நினைவூட்டி அவனை வறுத்தெடுத்தது!

மனமாற்றம்‌ என்பது தீய எண்ணங்களுடன்‌ போராடுவது அல்ல, விவிலிய அடிப்படையில்‌, மனம்‌ மாற்றம்‌ என்பது, நம்மையே நமது, வாழ்வின்‌ மையமாக வைக்காமல்‌ கடவுளை நம்‌ வாழ்வின்‌ மையமாக வைப்பது, பாவம்‌ என்பது, கடவுளுக்கு முதுகையும்‌, உலகிற்கு முகத்தையும்‌, காட்டுவது. மனம்‌ மாற்றம்‌ என்பது, கடவுளுக்கு இதயத்தையும்‌, உலகிற்கு முதுகையும் காட்டுவது. "எனக்கு முகத்தையல்ல முதுகையே சாட்டுகின்றனர்‌" (எரே 2:27).

மனமாற்றம்‌ அடையக்‌ கடவுளைப்‌ பற்றிய சரியான எண்ணம்‌ தேவை. கடவுள்‌ யார்‌? இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ கடவுள்‌ மோசேவிடம்‌ "இருக்கின்றவராக இருக்கிறவர்‌ நானே" (விப 3:14 3) என்று தம்மை வெளிப்படுத்துகிறார்‌. மெய்யியல்‌ அடிப்படையில்‌ கடவுள்‌ என்றும்‌ இருக்கிறவர்‌; முதலும்‌ முடிவும்‌ இல்லாதவர்‌. அவரிடம்‌ மாற்றமோ மாற்றத்தின்‌ நிழலோ கிடையாது (யாக்‌ 1:17) ஆனால்‌ இறையியல்‌ அடிப்படையில்‌ கடவுள்‌ அன்பே உருவானவர்‌ (1 யோவான்‌ 4:16). இன்றைய பதிலுரைப்‌ பாடல்‌ கூறுவதுபோல, "ஆண்டவர்‌. இரக்கமும்‌ அருளும்‌ கொண்டவர்‌; நீடிய பொறுமையுள்‌ அவர்‌ நம்‌ குற்றங்களையெல்லாம்‌ மன்னிக்கிறார்‌. நம்‌ நோய்களையெல்லாம்‌ குணமாக்குகிறார்‌" (திபா 103).

கடவுள்‌ அன்பினால்‌ மனிதனைப்‌ படைத்தார்‌. அவன்‌ பாவம்‌ செய்தபோது நீதியின்படி அவனைத்‌ தண்டித்தார்‌. ஆனால்‌ இரக்கமிகுதியினால்‌ அவனை மீட்டருளினார்‌. கடவுளிடம்‌. அன்பு உண்டு; நீதியும்‌ உண்டு. ஆனால்‌. அனைத்துக்கும்‌ மேலாக அவரிடம்‌ இரக்கம்‌ உண்டு. எனவேதான்‌ அவர்‌ பாவியின்‌ அழிவை விரும்பாமல்‌, அவன்‌ மனம்‌ மாறி வாழ்வதையே விரும்புகிறார்‌ (எசே 18:23) கடவுள்‌ நீடிய பொறுமையுள்ளவர்‌. மூன்று ஆண்டுகளாகக்‌ கனி தொடாத அத்தி மரத்தை வெட்டி வீழ்த்தாமல்‌, அது கனி தரும்‌ என்று எதிர்பார்த்து அதற்கு உரமிடுபவர்‌ (லூக்‌ 13:5-9), ஆனால்‌ அதே நேரத்தில கனி தராத அத்தி மரத்தைச்‌ சபிக்கவும்‌ செய்கிறார்‌ (மத்‌ 21:18-19) கடவுள்‌ நம்மிடம்‌ என்ன எதிர்பார்க்கிறார்‌ என்பதை அவரே கூறுவதைக்‌ கேட்போம்‌. "நேர்மையைக்‌ கடைப்பிடித்தலையும்‌, இரக்கம்‌ கொள்வதில்‌ நாட்டத்தையும்‌, உன்‌ கடவுளுக்கு முன்பாகத்‌, தாழ்ச்சியோடு நடத்து கொள்வதையும்‌ தவிர வேறு எதை ஆண்டவர்‌ உன்னிடம்‌ கேட்கிறார்‌" (மீக்‌ 6:85) நீதி, நேர்மை, இரக்கம்‌, தாழ்ச்சி ஆகிய நற்கனிகளைக்‌ கடவுள்‌ நம்மிடம்‌ எதிர்பார்க்கிறார்‌. பாவிகளாகிய நாம்‌ நமது ஆணவத்‌ திமிரைத்‌ தளர்த்தவும்‌, ஏழைகளுக்கு உணவளித்து அவரின்‌ வள்ளல்‌ தன்மையைக்‌ கண்டுபாவிக்கவும்‌ கடவுள்‌ நமக்குச்‌ சிறப்பாக 'இத்தவக்காலத்தைக்‌ கொடுத்துள்ளார்.

‌ மணமில்லாத மண்ணில்‌ வளரும்‌ மல்லிகைச்‌ செடி மணமிக்க மலரைத்‌ தருகிறது. மணமில்லா மண்ணில்‌ வளரும்‌ மாமரம்‌ சுவையான மாங்கனியைத்‌ தருகிறது. சுவையில்லாத புல்லைத்‌ தின்கின்ற பசு சுவையான பாலைக்‌ கொடுக்கிறது. ஆனால்‌, கடவுளுடைய சுவையான அருள்வாக்கைக்‌ கேட்டும்‌, ஆற்றல்மிக்க அருளடையாளங்களில்‌ பங்கேற்றும்‌ நாம்‌ நற்கனி கொடாதது ஏன்‌?

நாம்‌ நற்கனித்தராவிட்டால் இஸ்ரயேல்‌ மக்களுக்கு நேரிட்ட அதே அழிவு நமக்கும்‌ நேரிடும்‌. இஸ்ரயேல்‌ மக்கள்‌ ஒரே ஆன்மீக உணவை உண்டும்‌, ஒரே ஆன்மீகப்‌ பானத்தைப்‌ பருகியும்‌ அவர்களில்‌ பெரும்பான்மையினர்‌ கடவுளுக்கு உகந்தவர்களாய்‌ இருக்கவில்லை. அவர்களுக்கு நிகழ்ந்தது நமக்கு ஓர்‌ எச்சரிக்கை என்கிறார்‌ திருத்தூதர்‌ பவுல்‌ (1 கொரி 10:1-6)

இன்று கிறிஸ்து நமக்கு விடுக்கும்‌ எச்சரிக்கை: "மனம்‌ ‌மாறாவிட்டால் நீங்கள்‌ அனைவரும்‌ அழிவீர்கள்‌" (லூக்‌ 13:3)
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
இந்தச்‌ சோதனை எதற்கு?

சாதனையாளர்களின்‌ பேரும்‌ புகழும்‌ தான்‌ நம்‌ நினைவுக்கு வருகிறதே தவிர அவர்கள்‌ நடந்து வந்த பாதையில்‌ கடந்து வந்த சோதனைகளையும் வேதனைகளையும்‌ நாம்‌ நினைத்துப்‌ பார்ப்பதில்லை.

மாமன்னன்‌ நெப்போலியன்‌ ஒருமுறை அமைச்சரவையைக்‌ கூட்டி ஏதோ முக்கியமான திட்டம்‌ பற்றி விவாதித்துக்‌ கொண்டிருந்தான்‌. இந்தக்‌ கலந்துரையாடலில்‌ நெப்போலியன்‌ பேசியபோதெல்லாம்‌ கடைசி இருக்கைகளில்‌ அமர்ந்திருந்த இரண்டு அமைச்சர்கள்‌ சிரித்துக்‌ கொண்டனர்‌. சிரிப்பா என்று மன்னனுக்கு வியப்பு! கூட்டம்‌ முடிந்தபின்‌ அந்த அமைச்சர்‌ இருவரையும்‌ தனியாக அழைத்து இதுபற்றிக்‌ கேட்டான்‌. அவர்களோ உதறல்‌ எடுத்துப்‌ பயத்தில்‌ ஒன்றுமே இல்லை என்று சத்தியம்‌ செய்தனர்‌. மன்னன்‌ விடுவதாக இல்லை. உண்மையைச்‌ சொன்னால்‌ தண்டிக்கப்‌ போவதில்லை என்று உறுதி அளித்தான்‌. உடனே அந்த அமைச்சர்கள்‌ "அரசே, நீங்கள்‌ பேசும்‌ ஒவ்வொரு முறையும்‌ இரண்டு தோள்களையும்‌ மேல்நோக்கிக்‌ குலுக்குகிறீர்கள்‌. அளவுக்கு அதிகமாகக்‌ குலுக்கிக்‌ கொண்டே பேசுவது பார்ப்பதற்குப்‌ பரிகாசமாய்‌ இருக்கிறது. எனவே சிரித்து விட்டோம்‌. மன்னித்துங்கள்‌" என்றனர்‌.

மன்னன்‌ அவர்களை அனுப்பிவிட்டுத்‌ தன்‌ அறைக்குச்‌ சென்று யோசித்தான்‌. தீரச்‌ சிந்தித்தவனாய்‌ திடீரென்று எழுந்து இரண்டு கூரிய வாள்களைத்‌ தன்‌ இரு தோள்களுக்கு மேலே கட்டித்‌ தொங்க விட்டு கூட்டத்தில்‌ பேசுவதுபோல்‌ பேசத்‌ தொடங்கினான்‌. தன்‌ இயல்பான, வழக்கமான தோள்‌ குலுங்கல்‌ அப்போதும்‌ ஏற்பட கூரிய வாள்கள்‌ தோள்களைப் பதம்‌ பார்த்தன. குருதி கொட்டியது. மன்னன்‌ விடவில்லை. அப்பழக்கம்‌ தீருமட்டும்‌ பேசி இறுதியில்‌ வெற்றி கண்டான்‌.

வாழ்க்கை என்பது சவால்‌. சோதனைகளின்றி போராட்டங்‌களின்றி எந்த மனிதனும்‌ மேதையானதில்லை, வீரனானதில்லை, புனிதனானதில்லை.

இந்தப்‌ பிண்ணனியில்‌ இறைவார்த்தையை நினைத்துப்‌ பாருங்கள்‌. "பாவத்திற்கு எதிரான போராட்டத்தில்‌ (சோதனையில்‌) இரத்தம்‌ சிந்தும்‌ அளவுக்கு நீங்கள்‌ இன்னும்‌ எதிர்த்து நிற்க வில்லை" (எபி.12:4)

ஆலிவ்‌ எண்ணெய்‌ வேண்டுமா? ஒலிவ இலைகள்‌ நசுக்கப்பட வேண்டும்‌. திராட்சை மது வேண்டுமா? திராட்சைக்‌ கனிகள்‌ பிழியப்பட வேண்டும்‌. வாசனைத்‌ திரவியங்கள்‌ வேண்டுமா? மல்லிகை போன்ற மலர்கள்‌ கசக்கப்பட வேண்டும்‌. அதுபோலத்தான்‌ நசுக்கப்படாமல்‌, பிழியப்படாமல்‌, கசக்கப்படாமல்‌, சோதிக்கப்படாமல்‌ எதையும்‌ சாதிக்க முடியாது.

புனிதர்கள்‌ எல்லாம சோதனைகளைக்‌ கண்டு புலம்பியதில்லை. மகிழ்ச்சியோடு ஏற்று தங்கள்‌ விசுவாசத்தை வெளிப்படுத்தும்‌ அரிய வாய்ப்பாகவே எடுத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. "நாங்கள்‌ எல்லாச்‌ சூழ்நிலைகளிலும்‌ இன்னலுற்றாலும்‌ மனம்‌ உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும்‌ நம்பிக்கை இழப்பதில்லை, துன்புறுத்தப்பட்டாலும்‌, கைவிடப்படுவதில்லை, வீழ்த்தப்பட்டாலும்‌ அழிந்து போவதில்லை. இயேசுவின்‌ வாழ்வே எங்கள்‌ உடலில்‌ வெளிப்படுமாறு நாங்கள்‌ எங்கே சென்றாலும்‌ அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள்‌ உடலில்‌ சுமந்து செல்கிறோம்‌" (2 கொரி.4:3-10) என்ற திருத்தூதர்‌ பவுலின்‌ மனஉறுதி இருந்தால்‌ சோதனைகளைக்‌ கண்டு துவண்டு விடமாட்டோம்‌.

லூக்‌.22:31இல்‌ படிக்கிறோம்‌: "சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்‌ போல உங்களைப்‌ புடைக்கச்‌ சாத்தான்‌ அனுமதி கேட்டிருக்கிறான்‌ (யோபு நினைவுக்கு வரட்டும்‌). ஆனால்‌ நான்‌ உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன்‌" என்றார்‌ இயேசு, சோதனையில்‌ நாம்‌ விழாதபடி, விழுந்தாலும்‌ உடனே எழுந்துவிட இயேசு நமக்காகச்‌ செபித்துக்‌ கொண்டிருக்கிறார்‌. அதனால்தான்‌ மறுதலித்த மறுகணம்‌ பேதுருவால்‌ மனந்திரும்ப முடிந்தது!

மனிதனுக்குச்‌ சோதனைகளை அனுமதிக்கும்‌ இறைவன்‌, அனுமதிப்பதோடு வாளாவிருப்பதில்லை. திருத்தூதர்‌ பவுல்‌ மொழிவது போல் "நம்பிக்கைக்குரியவர்‌. அவர்‌ உங்களுடைய வலிமைக்கு மேலே நீங்கள்‌ சோதனைக்குள்ளாக விடமாட்டார்‌. சோதனை வரும்போது அதைத்‌ தாங்கிக்‌ கொள்ளும்‌ வலிமையை உங்களுக்கு அருள்வார்‌; இதிலிருந்து விடுபட வழிசெய்வார்‌'' (1 கொரி.10:13)

சோதனைகளும்‌ கீழான எண்ணங்களும்‌ எழும்‌ அதே ஆன்மாவில்தான்‌ இறைவனும்‌ உள்ளார்‌ என்பதை மறந்து விடுகிறோம்‌. அவர்‌ நம்மைக்‌ கைநெகிழ்ந்து விட்டது போன்ற உணர்ச்சிக்கும்‌. உள்ளாகிறோம்‌.

இதே உணர்ச்சியின்‌ தாக்குதலுக்கு ஆளான தூய சியன்னா தத்தரின்‌ ஆண்டவரை வினவினார்‌: "ஆண்டவரே என்‌ இதயம்‌ தூய்மையற்ற எண்ணங்களால்‌ நிறைந்தபோது நீர்‌ எங்கே இருந்தீர்‌?". அவரோ அவளது இதயத்திலேயேதான்‌ அவ்வமயம்‌ இருந்ததாகக்‌ கூறினார்‌. அவளால்‌ முதலில்‌ நம்ப முடியவில்லை. அவர்‌ இருக்கும்‌ இதயத்திலும்‌ அத்தகைய எண்ணங்களா? பின்‌ ஆண்டவர்‌ அவளிடம்‌ "அச்சோதனைகள்‌ உனக்கு வேதனை தந்ததா, மகிழ்ச்சி அளித்ததா?" எனக்‌ கேட்க, தாளமுடியாத வேதனை என்று அவள்‌ கூற, ஆண்டவர்‌ நான்‌ உன்‌ இதயத்தில்‌ இருந்ததாலேயே நீ வேதனையுற்றாய்‌. நான்‌ இல்லாதிருந்திருப்பின்‌ அவை உனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்‌. உனக்குள்ளே இருந்து உன்‌ எதிரிகளிடமிருந்து உன்னைப்‌ பாதுகாத்தேன்‌'" என்றார்‌.

சுடச்சுட ஒளிரும்‌ பொன்‌ போல்‌ சோதனையில்‌ விழாது விளங்க விளங்க நம்‌ இதயங்கள்‌ இயேசுவின்‌ திரு இருதயத்துக்கு ஏற்ற இதயங்களாகின்றன. ஏற்றவையா எனக்காணவே அவர்‌ சோதிக்கிறார்‌ வெள்ளியை உலைக்‌களமும்‌ பொன்னைப்‌ புடக்‌ குகையும்‌ சோதித்துப்‌ பார்க்கும்‌. உள்ளத்தைச்‌ சோதித்துப்‌ பார்ப்பவர்‌ ஆண்டவர்‌" (நீதி.17:3)

சோதனைக்கும்‌ சாதனைக்கும்‌ என்ன வேறுபாடு? சோதனையின்‌ கொம்பை முறித்தால்‌ அது சாதனை!
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
சிந்தனைப் பயணம். திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
மன மாற்றம் தரும் மறுவாழ்விற்கு உரிமையாளர் ஆவோம்

இறை சமூகமே தவக்காலத்தின்
முதல் வாரம் நமது கண்களின் தூணை அகற்றி, பார்வையை விரிவடையச் செய்த தேவன், இரண்டாம் வாரம் அந்த பார்வைக்கு வாழ்வு தரும் விதமாக தன்னையே முழுமையாக ஒளிவெள்ளத்தில் இறை வல்லமையை வெளிப்படுத்தி காணும் வாய்பைத் தந்து நானே உன் தேவன் என்றார். இந்த வாரம் ஐக்கியத்தின் வேரான மனமாற்றத்தை பெற்று அவரில் நிலைத்திருக்க அழைப்பு விடுகின்றார்.

எகிப்திலிருந்து மக்களை மீட்டு கானான் தேசம் வரை அழைத்துச் செல்ல நீண்ட பயணத்திற்கு தலைமை ஏற்க ஆண்டவர் மோசேக்கு அழைப்பு விடுகின்றார். அவரது சந்தேகங்களை அகற்றி கையில் அடையாளங்களையும் தருகின்றார். இன்னும் அவர் நம்பிக்கை அற்றவராக செயல்பட்டதால் அவர் மீது சினம் கொள்கிறார் இருந்தும் இரக்கத்தின் இறைவன் என்பதால் முடிவாக தம்பி ஆரோனை துணை கொடுத்து துணிந்து சென்று செயல்பட அனுப்பி வைக்கிறார்.

நம்முடைய வான் வீட்டிற்கு இப்படித்தான் நம்மைத் தகுதி உள்ளவர்களாக ஆக்கி பயணப்பட வைக்கின்றார். நமது திருமுழுக்கால் ஜென்ம பாவம் போகிறது. ஒப்புரவு அருட்சாதனத்தால் வாழ்க்கைப் பாதையில் கடக்கும் பாவங்கள் போகின்றன. இவை மட்டும் போதாது என நாம் பார்க்கும்போது அவருடைய அருமையான கல்வாரி அன்பையும் மன்னிப்பையும் அரவணைப்பையும் நமது அடையாளங்களாக தந்து நம்பிக்கையோடு பயணப்படக் கட்டளைத் தருகிறார்.

இன்று நற்செய்தியில் இயேசு கோடிட்டு காட்டும் மீதமுள்ள மனமாற்றம் அடைய விரும்பாத கலிலேயர்களும், மற்றும் எருசலேம் வாழ் மக்களும் போன்று நாம் வாழக்கூடாது என்கிறார். நமக்குள் அனேகர் இதோ தோட்டக்காரர் விண்ணப்பித்து விட்டாரே இனி வெட்ட மாட்டார்கள் என்று கொண்டாடுகிறோம், ஆனால் தோட்டக்காரர் அறிவித்த காலக்கெடு ஒரு வருடம் என்பதை, ஒரே ஒருமுறை வாழும் இந்த வாழ்க்கைதான் என்பதை - ஏன் மறந்து போனோம்?. கள்வனுக்கு இயேசு சிலுவையில் அருகில் இருந்தார், நமக்கோ இன்று நமக்குள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். என்ன செய்யலாம்?. விலைமதிப்பற்ற புதையலைத் தேடிச் சென்றவனைப் போல நமக்குள் இருக்கும் நம் ஆண்டவரை நோக்கி நாமும் பயணிக்கலாமா?

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கிணங்க நம் மனதையும் ஏன் மாற்றக்கூடாது.? மன மாற்றத்தைத் தானே ஆண்டவரும் விரும்புகின்றார். நாம் விரும்பும் நிலைவாழ்வு தரும் ஆண்டவருக்கு நாம் ஏன் நமது மன மாற்றத்தை தரக்கூடாது? . யோசிக்க வேண்டிய நேரம் இந்த் தவக்காலம்.

இயேசுவின் முன் அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் மட்டுமன்றி இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தம்மை நல்லவர்கள் என்று அடையாளப் படுத்துவதில் முழு மூச்சாக செயல்படுவதை நாம் அறிவோம்.

ஒருமுறை ஒரு பெரும் நிர்வாகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த - அதிலும் பண நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் ஒரு அதிகாரியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதாவது "உங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோர் நேர்மை உள்ளவர்களா ? " என்று அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பணம் புழங்கும் இடத்தில் நேர்மையா? என்ற ஒரு கேள்வியை கேட்டு விட்டு .கூறினார் இங்கே வாய்ப்பு கிடைக்காத வரை அனைவரும் மிக மிக நேர்மையானவர்கள் என்று. என்ன இறை சமூகமே பதில் சரிதானா

சில வாக்கியங்கள் நம்மைச் சுற்றி சுற்றி சுழல்வதை நினைவில் கொள்ளுவோம்
1. நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியாதா
2. உங்கள் யோக்கியதை எங்களுக்கு தெரியாதா.
3. வந்துட்டாருடா அரிச்சந்திரர் நியாயம் சொல்றதுக்கு.
4. அடுத்தவன் வீட்டு நியாயம் என்றால் அல்வா தின்ற மாதிரி வந்துட்டாங்க.
இப்படி கூறிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு நம்மை அறியாமல் நாம் நம் தகுதி அறியாமல் மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வெளிப்படும் வார்த்தைகள்.

இயேசுவிடமும் இப்படித்தான் அன்று பில்லாத்துவால் கொல்லப்பட்ட கலிலேயரைப் பற்றிய செய்தி அவர் காதுக்கு வந்தது. ஆண்டவர் இயேசு அவர்களுடைய உள் மனநிலையை அறிந்தவராக மனமாற்றம் அடைய, இறைவனை நோக்கி மண்டியிட, அப்பா என்று அழைத்து விண்ணபிக்க, எடுத்துக் கூறுகின்றார். நல்ல கல்வனைப் போல கடைசி மூச்சுவரை வாசல் உனக்கும் எனக்கும் திறந்திருக்கிறது உண்மைதான் ஆனால் உள்ளே நுழைவதும் வெளியே கீழே விழுவதும் நமது சுதந்திரம். மறக்கவேண்டாம் காலம் கனியும் போது கனிகள் கிடைக்குமானால் உரமிட்டு வளர்க்கவும் இல்லையெனில் அடி மரத்தில் கோடாரி வைக்கவும் அவருக்கு உரிமை உண்டு.

இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் கடவுளுடைய பாரபட்சமற்ற அனைவருக்கும் சமமான பராமரிப்பை பற்றி நினைவுபடுத்துகிறார் அப்படிப்பட்ட பராமரிப்பில் வாழ்ந்தவர்கள் தவறு செய்யும்போது தண்டிக்கபட்டார்கள் என்றும் எழுதுகின்றார் நிறைவாக இவ்வாறு நிகழ்ந்தவை யாவும் இன்று நமக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக அமைந்துள்ளது என்கிறார். பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. (1 யோவான் 1:8) என யோவானும் எழுதி வைக்கிறார்.

தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும். (1 கொரிந்தியர் 10:12) என்று பவுல் அடிகள் நினைவு படுத்துகிறார். எனவே எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். (யாக்கோபு 1:21-22) என்று யாக்கோபும் கூறுகின்றார்.

சுயநலமில்லாத பொது நலம் இல்லை ஆகையால் முதலில் நம்மையும் நம் வாழ்வையும் ஆண்டவருடைய வார்த்தைக்கு ஏற்ப மாற்றி மகிழ்ச்சியுடன் வாழ மனமாற்றத்தை வரவேற்போம். மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் (யாக்கோபு 2:24) என்பதற்கிணங்க நமது சொல்லும் செயலும் வார்த்தையின் அடையாளங்களாக பயணிப்பதாக. வானகம் நமக்கும் திறக்கப்படுவதாக.

இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக
சிந்தனைப் பயணம்.
திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ