ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பொதுக்காலம் 15ஆம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
ஆண்டின் பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு திருப்பலி
முன்னுரை - 3ம் ஆண்டு

அயலாரை அன்பு செய்ய வந்திருக்கும் அன்புறவுகளே!
நமது பக்கத்து வீட்டில் எழ முடியாமல் குற்றுயிராய் விழுந்து கிடப்போரை திரும்பிப் பார்க்க அழைக்கும் திருப்பலி இது!
குற்றுயிராய் கிடப்பவரை தொட்டால், நமது கதி என்ன ஆகும் என சிந்திப்பவன் தன்னலவாதி. குற்றுயிராய் கிடப்பவனைத் தொடாவிட்டால், அவனது கதி என்ன ஆகும் என சிந்திப்பவன் பொது நலவாதி! அயலாரை நம்மைப் போல் அன்பு செய்ய வேண்டும் என்ற கட்டளையை அறிய, விண்ணில் பறக்கவோ கடலை தாண்டவோ தேவையில்லை. அவை நம் இதயத்தில் ஏற்கெனவே கடவுளால் எழுதப்பட்டுவிட்டது.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது ஆலய வழிபாட்டிற்கு அவசரமாக வருமுன், வழியில் குற்றுயிராய் கிடந்த நம் அயலாரை அவசியமாக நேசிக்க மறந்த பொழுதுகளை.......

ஆம், ஆலயம் நுழைந்து அடுத்தவர்களின் அழுகைக் குரலை கேட்காத பொழுதுகளை விட, ஆலயம் வர இயலாது அயலாருக்கு உதவி செய்தபொழுதுகள் கடவுளுக்கு பிரியமான பொழுதுகள். 'என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்தவை எல்லாம் எனக்கே செய்தீர்கள்' ஏழை எளியவர்களிடத்திலும் துன்புறுவோர்களிடத்திலும் கடவுள் இருக்கின்றார். மனிதனை மதிப்பது கடவுளை மதிப்பதாகும்.

மனிதனை மதிக்கச் சொல்லி அழைக்கும் திருப்பலியில், மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை மனமதை செம்மையாக்கு இறைவா என மனதுருகி மன்றாடுவோம்.
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. அடுத்தவரைப்பற்றி அக்கறை கொண்டு வாழ எமை அழைக்கும் இறைவா!
மனிதநேய செயல்பாடுகளை வளர்க்கும் வகையில் திருச்சபை பணியாளர்கள் செயல்பட அருள் தர, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அயலாரை அன்பு செய்ய எமை அழைக்கும் இறைவா!
உதவிக் கரம் தேவைப்படுவோர் எல்லாம் நமது அயலான் என உணர்ந்து மதம், இனம், மொழி வேறுபாடு மறந்து மக்கள் பணி செய்ய நாட்டுத் தலைவர்களுக்கு அருள் தர, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. 'மனிதனை நினைப்பவன் கடவுளை நினைக்கிறான்' என மொழிந்த இறைவா!
ஏழையின் உடலிலும், இரத்தத்திலும் இருக்கும் கிறிஸ்துவை மதிக்காதவன், நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் மதிக்க முடியாது என்ற சிந்தனையை, இறைமக்கள் இதயத்தில் எழுதும் பணியை இறைவழிபாடாக ஆற்ற அருள் தர, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அயலாருக்கு உதவி செய்பவர்களை நேசிக்கும் இறைவா!
துன்புறும் மனிதர்களை நேசிக்கும் போதெல்லாம் உம்மை நேசிக்கிறோம் என்ற உணர்வுடன், வாழ்க்கையில் நொந்து போய் குற்றுயிராய் கிடக்கின்ற எங்கள் அயலாரை நேசிக்க அருள் தர, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. விழுந்து கிடப்பவர்களுக்கு கருணை காட்டும் இறைவா!
எழ முடியாத வேதனை எமை அழுத்துகிறது என கண்ணீரோடு உமைத் தேடி வந்துள்ள மக்கள் சுமை அகற்றி சுகம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 
மறையுரை சிந்தனைகள்
  
நல்ல தச்சன்


பார்த்ததுமே தெரிந்துவிடும் அது ஒரு தச்சனின் வீடென்று. அந்தப் பகுதியிலேயே அதிக வேலைப்பாடுகள் கொண்ட வீடாக அது இருந்தது. களிமண்ணும் கல்லும் கலந்து செய்த கூரையையும், சுவர்களையும் நன்கு செதுக்கி செம்மையாக்கப்பட்ட மரங்கள் தாங்கி நிற்கின்றன. அறைகளில் போதுமான அளவுக்கு மரக்கலன்கள் இருந்தன. வெளியே செதுக்கப்பட்டதும், செதுக்கப்படாததுமாக பல மரத்தூண்டுகளும், தடிகளும் கிடந்தன.

தச்சன் எருசலேம் நகரத்தில் தனது தூரத்து சொந்தக்காரர் வீட்டின் மாடியில் பெரிய விருந்து மேசை ஒன்றை செய்யச் சென்றிருந்தார். அன்று அவர் ஊர் திரும்பும் நாள். மாலை வேளை. தச்சனின் மனைவி ரொட்டி சுடுவதற்காக மாவைத் தயார் செய்து கொண்டிருந்தார்.

தச்சனின் மகனுக்கு பத்து வயதிருக்கும். அவன் விளையாட பல பொம்மைகளை தச்சன் தானே செய்து கொடுத்திருந்தார்.

அவனது அறையில் சில மரப் பொம்மைகள் இருந்தன. ஆதாம் ஏவாள் கதை முதல் சில விவிலியக் கதை மாந்தர்களின் உருவ பொம்மைகள் அங்கே இடம் பெற்றன. அவ்வப்போது தச்சனும் அவரது மகனும் சேர்ந்து கதைகளை சொல்லிக் கொண்டு விளையாடுவது உண்டு.

வெளியே கழுதையின் காலடிச் சத்தம் கேட்டது. தச்சனின் மகன் வெளியே வாசலுக்கு வந்தான். தச்சன் தன் கழுதையின் மீது இன்னொருவரை தாங்கி நிற்பதைக் கண்டான். தச்சன் அந்த மனிதரை கழுதையிலிருந்து கீழே இறக்கி வீட்டினுள் வெளி அறையில் கட்டிலில் கிடத்தினார். சப்தம் கேட்டு தச்சனின் மனைவி உள்ளிருந்து ஓடி வந்தார். கட்டிலில் கிடந்த மனிதரைக் கண்டதும் எல்லாவற்றையும் புரிந்து கொண்டார்.
அவன் கோலத்தைக் கண்டதும் திருடர்கள் தாக்கி இருப்பார்கள் என்று புரிந்து கொண்டார். அவன் காயத்தைக் கழுவ தண்ணீரும், துணியையும் எடுத்து வந்தார். தச்சனின் மகன் காயத்துக்கிட எண்ணெய் எடுத்து வந்தான். தச்சனின் மனைவி அவனுக்கு கஞ்சி செய்தார். தச்சன் அதை அவனுக்கு ஊட்டினார்.

'இவருக்கு என்ன ஆச்சு அப்பா?' என்றான் தச்சன் மகன். 'எரிக்கோ வரும் வழியில் திருடர்கள் இவரைத் தாக்கி குற்றுயிராக விட்டுவிட்டனர்' என்றார் தச்சன்.
'இவருக்கு அடிபட்டு ரொம்ப நேரமாகியிருக்குமே! யாருமே பார்க்கலியா?'
எனக்கு முன்னால நிறைய பேர் போனாங்க, ஆனா யாருமே இவரை கண்டுக்கிடலை. இவர் இறந்து விட்டார்னு நினைச்சிட்டாங்களோ என்னவோ?' என்றார் தச்சன்.
இரண்டு நாட்களில் அந்த அந்நியன் உடல் தேறியிருந்தான். அதற்குள் சுற்று வட்டாரத்தில் செய்தி பரவியிருந்தது. வழியில் அடிபட்டுக் கிடந்த ஓர் அந்நியனை தச்சன் வீட்டில் வைத்து மருத்துவம் செய்கிறான். அவன் ஒரு சமாரியன் என்றும் பேச்சு பரவியிருந்தது.

அன்று மாலை ஒருசிறு கூட்டம் தச்சனின் வீட்டிற்கு வந்தது. எல்லோருமே தச்சனின் அண்டை வீட்டார்கள். தச்சனும் அவர் மனைவியும் மகனும் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தார்கள். 'வாருங்கள் உட்காருங்கள்' என வரவேற்றார். தச்சன்
அவர்கள் யாரும் உட்காரவில்லை. சிலர் முகத்தை கடுகடுப்பாக வைத்திருந்தார்கள், சிலர் சலிப்பாக எரிச்சலுடன் காணப்பட்டார்கள். அங்கிருந்தவர்களில் ஒருவர் மட்டும் என்ன 'யோசேப்பு, உன் வீட்டில் இருப்பவர் சமாரியனாமே? நீ அவனை எப்படி இங்கே கொண்டு வரலாம்? அவனுக்கு பணிவிடை வேறு செய்கிறாயாமே?' என்று கேட்டார்.
தச்சன் சாந்தமாக அவரை நோக்கினார். பின்பு "என் வீட்டிலிருப்பவர் யார் என்பதில் உங்களுக்கு என்ன அக்கறை" என்றார்.

ஏனென்றால் 'நாங்கள் உனது அண்டை வீட்டுக்காரர்கள். உமது நண்பர்கள், உறவினர்கள்' என்றார். அந்த மனிதர் சற்று கோபமாக. மீண்டும் சாந்தமாக அவரையும் அங்கிருந்தவர்களையும் பார்த்துவிட்டு ஒரு மெல்லிய புன்னகையுடன் 'அவனும் தான்' என்றார் தச்சன்.

அவர்கள் எல்லோரும் ஒரு கணம் அமைதியாக நின்றனர். தச்சனின் கனிவான வார்த்தைகளை அவர்கள் மனதில் உள்வாங்கிக் கொண்டது போல இருந்தது.
தச்சனின் மகன் கூட்டத்தில் நின்ற தன் நண்பன் கையைப் பிடித்துத் தன் வீட்டிற்குள் இழுத்துச் சென்றான். அவர்களை யாருமே தடுக்கவில்லை. பின்பு அந்த பெரியவர் முன் செல்ல எல்லோருமே தச்சனின் வீட்டிற்குள் சென்று அந்த சமாரியனைப் பார்த்து நலம் விசாரித்தனர்.


ஆதிக்கம் பேசி அடுத்தவர்களின் அழுகைக் குரலைக் கேட்காதவர்களைவிட, நாத்திகம் பேசி அயலாருக்கு உதவி செய்பவர்கள் கடவுளுக்கு நெருக்கமாய் உள்ளனர்.
இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு: கடவுளை மற மனிதனை நினை.
வங்கக் கவிஞர் தாகூர் கூறுகின்றார்.
 
"மந்திரம் ஒதுவதையும் பாடல் பாடுவதையும் செபமாலை உருட்டுவதையும் நிறுத்து! கோவிலின் தனிமையான இருளடைந்த மூலையிலே கதவுகளை அடைத்துக் கொண்டு யாரையப்பா வணங்குகிறாய்? கண்களைத் திறந்து பார். கடவுள் உன் முன்னிலையில் இல்லை . கடினமான தரையை உழுகின்ற உழவனிடத்தில் அவர் இருக்கின்றார். சாலை அமைக்கச் சாலைக் கல் உடைத்துக் கொண்டிருப்பவனிடத்தில் அவர் இருக்கின்றார். அவர்களுடன் அவர் மழையில் நனைகின்றார், வெயிலில் காய்கின்றார்."

"நான் பசியாய் இருந்தேன்: தாகமாய் இருந்தேன்: அந்நியனாய் இருந்தேன்: நோயுற்றிருந்தேன்: சிறையிலிருந்தேன்: என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" ஏழை எளியவர்களிடத்திலும், துன்புறுபவர்களிடத்திலும் கடவுள் இருக்கின்றார். மனிதனை மதிப்பது கடவுளை மதிப்பதாகும்.

நமது வழிபாடுகள் அனைத்தும் மனிதத்தை வளர்க்க துணைபுரிவனவே!
மனிதம் மதிப்பிழந்து இரத்தக் கறை பூசிவரும் இந்த நாளில் வழிபாட்டை விட உயிருக்குப் போராடும் நமது அயலாருக்கு தேவையான உதவியை செய்து ஆண்டவனின் அருளைப் பெற்றுக் கொள்வோம்.
சாதி மத பேதமின்றி அயலாரை நேசிக்க முன்வருவோம். அப்போது இறையருள் நம்மோடு இருக்கும்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
பொதுக் காலத்தின் 15-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்:-
இணைச்சட்டம் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37


வாயில்! இதயத்தில்! கையில்!

இந்து மரபில் இறைவனை அடைவதற்கு மூன்று மார்க்கங்கள் உண்டெனச் சொல்லப்படுகிறது: பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம். பக்தி மார்க்கம் இறைவனை வழிபடுதலையும், மந்திரங்களை உச்சரிப்பதையும், வழிபாடுகள் நடத்துவதையும் முதன்மைப்படுத்துகிறது. ஞான மார்க்கம் இறைவனின் திருநூல்களை அறிவதையும், இறைவன் பற்றிய மறைபொருளை சிந்தித்து, தியானித்து அறிதலையும் முதன்மைப்படுத்துகிறது. கர்ம மார்க்கம் பிறரன்புச் செயல்கள் செய்வதையும், தன்னுடைய வேலைகளை சரிவரச் செய்தலையும் முதன்மைப்படுத்துகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் வரும் வாய், இதயம், கை என்னும் மூன்று வார்த்தைகளும் முறையே பக்தி, ஞானம், மற்றும் கர்மம் ஆகியவற்றைக் குறிப்பது போல இருக்கின்றன. இறைவனின் திருச்சட்டங்கள் தூரத்தில் இல்லை, மாறாக, அவை வாயிலும், இதயத்திலும் உள்ளன என்று மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கற்பிக்க, இயேசுவோ இன்னும் ஒரு படி மேலே போய், அது கையில் - அதாவது, செயலில் - இருக்கிறது என்று இன்னும் அதை நெருக்கமாக்குகிறார்.

இன்றைய நற்செய்தியில் (காண். லூக் 10:25-37) திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். சட்ட அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்பது மற்ற நற்செய்திகளில் காணக் கிடந்தாலும் (காண். மாற் 12:28-34, மத் 22:34-40, லூக் 18:18-20), லூக்கா மட்டும்தான் இந்த கேள்வியைப் பயன்படுத்தி 'நல்ல சமாரியன்' உருவகத்தைப் பதிவு செய்கின்றார்.

இயேசு பணிக்கு அனுப்பிய எழுபது (எழுபத்திரண்டு) சீடர்களும் மகிழ்வோடு திரும்புகின்றனர். அவர்களின் மகிழ்வில் மகிழ்கின்ற இயேசு தன் தந்தையை வாழ்த்திப் புகழ்கின்றார் (காண். லூக் 9:21-22). தொடர்ந்து, 'நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்பு பெற்றோர் பேறுபெற்றோர்!' (லூக் 9:23) என தம் சீடர்களை வாழ்த்துகின்றார். இந்தச் சூழலில் அங்கே வருகிறார் திருச்சட்ட அறிஞர். அவர் வருவதன் நோக்கம் இயேசுவைச் சோதிக்க.

போதகரே' என்றுதான் இயேசுவை அழைக்கிறார். இந்த அழைப்பிலேயே ஒரு கிண்டல் இருக்கிறது. 'திருச்சட்டத்தை முறையாகக் கற்ற ஒருவரையே' இந்த தலைப்பு கொண்டு அழைப்பர் யூதர்கள். 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' - 'நிலைவாழ்வை உரிமையாக்குதல்' என்பது ஒவ்வொரு யூதரும் ஏங்கிக் கொண்டிருந்த ஒன்று. ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட இந்த 'உரிமையாக்குதல்' வாக்குறுதி (காண். தொநூ 12:1-3) தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதாக நினைத்தனர் அவர்கள். இயேசு அவருக்கு விடையாக மற்றொரு கேள்வியை முன்வைக்கின்றார்: 'திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?' மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசுவே பதில் தருகின்றார். 'ஆண்டவரை அன்பு செய்' என இச 6:5ஐயும், 'அயலானை அன்பு செய்' என லேவி 19:18ஐயும் மேற்கோள் காட்டுகின்றார். இச 6:4-9 ஒவ்வொரு யூதரும் அறிந்திருக்கும் ஒரு இறைவார்த்தைப் பகுதி. 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' என்னும் நான்கு வார்த்தைகளில் முதல் மூன்று வார்த்தைகள் மட்டுமே எபிரேய அல்லது கிரேக்க பதிப்புகளில் உள்ளன. மூன்று வார்த்தைகளோ, நான்கு வார்த்தைகளோ, இவ்வார்த்தைகள் நமக்குச் சொல்வதெல்லாம் ஒன்றே: நம் வாழ்வின் எல்லாமாக இறைவன் வேண்டும் - இதயத்தின் ஆழத்தில், ஆன்மாவின் அடையாளமாய், நம் புத்தியின் தெளிவாய், நம் ஆற்றலின் நிறைவாய். நம் உடலின் எந்தச் சிறுபகுதியும் அவரிடமிருந்து அந்நியப்பட்டுவிடக் கூடாது. இறைவனை அன்பு செய்யும் கட்டளையோடு ஒன்றித்துச் செல்லும் மற்ற கட்டளை அடுத்தவரை அன்பு செய்வது (காண். 1 யோவா 4:7-21). 'உன்னைப்போல்' என்ற வார்த்தையில் ஒருவர் தன்னை அன்பு செய்ய வேண்டிய கட்டளையும் பதிவு செய்யப்படுகிறது. மூன்று அன்புகள்: ஆண்டவரை, அடுத்தவரை, என்னை - இதே வரிசையில் என் வாழ்வில் இருக்க வேண்டும்.

திருச்சட்ட அறிஞர் இந்தக் கட்டளைகளை அறிந்திருந்தார். ஏனெனில், அகிபாவின் போதனையின்படி, 'திருச்சட்டத்தை அறிதல் அதைப் பின்பற்றுவதைவிட மேலானது!' ஆனால், இயேசுவைப் பொருத்த வரையில், அறிதல் மட்டும் போதாது நிலைவாழ்விற்கு. 'அப்படியே செய்யும். நீர் வாழ்வீர்' என கட்டளையும், வாக்குறுதியும் தருகின்றார் இயேசு. ஆக, திருச்சட்ட அறிஞர் 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்ட கேள்வியையே, 'நீர் செய்யும்!' என விடையாகத் தருகின்றார் இயேசு.

ஆக, நிலைவாழ்வு என்பது ஆண்டவரை, அடுத்தவரை, தன்னை அன்பு செய்வது. இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் வந்த அறிஞருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, இன்னொரு கேள்வியை எழுப்புகிறார் அறிஞர்: 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?'

யூத சமயம் வரையறைகள் நிறைந்தது. 'தூய்மை - தீட்டு' என்ற அடிப்படையில்தான் அவர்களின் சமூகமும், சமயமும் கட்டப்பட்டிருந்தது. யூதர்கள் புறவினத்தார் மற்றும் சமாரியர்களிடம், குருக்கள் மற்ற மக்களிடம், ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நிறைய சட்டங்களும், விதிமுறைகளும் வழக்கத்தில் இருந்தன. வரையறைகள் நிர்ணயித்தல் சமூகத்தின் செயல்முறைக்கு அதிகம் தேவைப்பட்டது. அது ஒரு சமயக் கடமையாகவும் பார்க்கப்பட்டது.

இந்தப் பின்புலத்தில் தான், 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?' 'என் அயலான் என்பதை நான் என்பதை நான் எப்படி வரையறுப்பது?' எனக் கேட்கிறார். இயேசு சொல்லும் கதையின் நாயகன் வரையறையைக் கடந்து நிற்கின்றான். அவனது இனம், மதம், சமூகம், தொழில் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. 'ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குச் சென்றார்' என்று மட்டும் குறிப்பிடுகின்றார் இயேசு. 'ஒருவர்' என்பது லூக்கா உவமைகளில் பரவலாகக் காணக்கிடக்கும் கதைமாந்தர் (காண். 12:16, 14:2, 15:11, 16:1, 19:12, 20:9). எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு செல்லும் வழி ஆபத்தானது. ஏறக்குறைய 3300 அடி தாழ்வாக இருக்கும் இந்தப் பாதை 25 கிமீ தூரம் செல்லக்கூடியது. திருடர்கள் பதுங்குவதற்கு ஏற்ற குழிகளும், புதர்களும் இவ்வழியில் நிறைய உண்டு. அவர்களின் கைகளில் சிக்கிய நம் கதைமாந்தர் குற்றுயிராய் விடப்படுகிறார். உடைமையின்றி, உடல்நலமின்றி இருக்கும் இவர் இப்போது அதிக தேவையில் இருக்கிறார். 'தற்செயலாக' அந்த இடத்திற்கு வரும் அடுத்த வழிப்போக்கர் வாசகருக்கு நம்பிக்கை தருகிறார். வந்தவர் ஒரு குரு. கண்டிப்பாக இவர் உதவி செய்வார் என வாசகர் நினைத்துக் கொண்டிருக்க, 'அவர் மறுபக்கம் சென்றார்.' நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. தொடர்ந்து வரும் லேவியரும் அவ்வாறே செய்கின்றார். அவர்கள் எதற்காக மறுபக்கம் சென்றார்கள் என்று சொல்லப்படவில்லை. ஆனால், அவர்கள் அப்படிச் சென்றதை நாம் நியாயப்படுத்த முடியாது. தொடர்ந்து வரும் மூன்றாமவர்தான் கதையில் முக்கியமானவர். 'குரு, லேவி, இஸ்ரயேலர்' என எல்லாரும் எதிர்ப்பார்க்க, மூன்றாம் நபரை, 'ஒரு சமாரியன்' என அறிமுகப்படுத்துகிறார் இயேசு. இவ்வாறாக, நீண்ட காலம் மக்கள் மனத்தில் இருந்த 'சமாரிய வெறுப்பை' கிண்டி விடுகின்றார் இயேசு. அசீரியர்களோடு திருமண உறவு கொண்டு தங்கள் தூய்மையை இழந்துவிட்ட யூதர்களே சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர் (காண். 2 அர 17:6, 24). சமாரியர் ஒருவரை கதாநாயகனாக முன்வைப்பதன் வழியாக இயேசு மக்கள் மனத்தில் இருந்த வரையறை எண்ணங்களையும், வேற்றுமை உணர்வுகளையும் புரட்டிப் போடுகின்றார்.

குரு மற்றும் லேவியைப் போல சமாரியர் காயம் பட்ட மனிதனைக் கண்டாலும் அவரை விட்டு விலகிச் செல்லவில்லை. மாறாக, அவர்மேல் பரிவு கொள்கின்றார். 'அவரை அணுகி,' 'எண்ணெயும் மதுவும் வார்த்து,' 'அவற்றைக் கட்டி,' 'விலங்கின் மீது ஏற்றி,' 'சாவடிக்குக் கொண்டு போய்,' 'அவரைக் கவனித்துக் கொள்கின்றார்' - இப்படி அடுக்கடுக்காக வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறார் லூக்கா. 'இந்த மூவரில் காயம்பட்டவரின் அயலார் யார்?' என அறிஞரிடம் கேட்கின்றார் இயேசு. 'சமாரியர்' என்ற வார்த்தையைக் கூட சொல்ல மறுக்கும் திருச்சட்ட அறிஞர், 'அவருக்கு இரக்கம் காட்டியவரே!' என்கின்றார். இவர் இப்படிச் சொன்னது அந்த சமாரியரின் இரக்கத்தையும், செயலையும் அடிக்கோடிடுவதுபோல இருக்கிறது. 'அயலாராக இருப்பது' என்பது ஒருவர் தானாக விரும்பி செயல்படும் நிலையே. 'நமக்கு ஒரு நல்ல அடுத்திருப்பவர் வேண்டுமெனில், நாமும் முதலில் நல்ல அடுத்திருப்பவராக இருத்தல் அவசியம்.'

'இதைச் செய்யும், வாழ்வீர்' (வ. 28) என்று முதலில் கட்டளையிட்ட இயேசு. இப்போது, 'நீரும் போய் அவ்வாறே செய்யும்' என்கிறார் (வ. 37). 'வாழ்வீர்' என்ற வாக்குறுதி இப்போது இல்லை. அயலாருக்கு நாம் காட்டும் பரிவன்பு எல்லாவகை பரிசுகளையும் கடந்தது. காயம்பட்ட மனிதனிடம் எந்தவொரு அன்பளிப்பையும் சமாரியர் எதிர்ப்பார்க்கவில்லை. ஆக, இரக்கம் என்பது கணக்குப் பார்க்கும் இதயம் அல்ல. நிலைவாழ்வு என்பது வெறும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது மட்டும் அல்ல. பரிவு அல்லது இரக்கம் தேவையை மட்டுமே பார்க்கும்.

இவ்வாறாக, 'உனக்கு மிக அருகில்' இருக்கிறது நிலைவாழ்வு என திருச்சட்ட அறிஞருக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்திலும் (காண். இச 30:10-14) இதே எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது.

எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றபின், வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கி, இஸ்ரயேல் மக்களோடு நாற்பது ஆண்டுகள் வழிநடந்த மோசே, மோவாபு பள்ளத்தாக்கில், புதிய தலைமுறை இஸ்ரயேலருக்கு, இதுவரை நடந்த அனைத்தையும், யாவே இறைவன் தந்த திருச்சட்டங்களையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார். 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாhக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது 'புரியாததோ' அல்லது 'வெகு தொலைவில் இருப்பதோ,' 'விண்ணிலோ' அல்லது 'கடலுக்கு அப்பாலோ' இருப்பது அல்ல, மாறாக, 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். ஆக, ஒருவர் தன் உள்ளத்திலிருந்தே இந்தக் கட்டளையை உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடியும். ஒருவரின் உள்ளுறைந்து கிடப்பதே இறைவனின் கட்டளை. இந்த நெருக்கம் கட்டளையின் மேல் ஒருவர் கொள்ள வேண்டிய ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. 'எனக்குப் புரியவில்லை' என்றும், 'அதைப்பற்றி எனக்குத் தெரியாது,' என்றும் 'நான் அதைக் கண்டதில்லை' என்றும் யாரும் ஒதுங்கிவிடவும் முடியாது. அடிபட்டுக் கிடந்த அந்த பெயரில்லாத மனிதரைப் போல திருச்சட்டம் என் கண்முன், என் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. குரு மற்றும் லேவி போல மறுபக்கம் ஒதுங்கிச் செல்லாமல், சமாரியர்போல கைநீட்டி நான் தழுவிக் கொள்ள வேண்டும் திருச்சட்டத்தை.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 1:15-20) தொடக்கத் திருஅவையில் புழக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தியல் பாடல் (காண். பிலி 2:6-11). கிறிஸ்து தொடக்கமில்லாதவர், படைப்பனைத்தையும் முந்தியவர் என்று சொல்லும் பவுல், தொடர்ந்து, 'கிறிஸ்துவே திருச்சபையின் தலை' என்கிறார். ஆக, தூரமாக இருந்த ஒருவர் இன்று திருச்சபை என்னும் உடலின் தலையாக இருக்கும் அளவிற்கு நெருக்கமாக வந்துள்ளார். கிறிஸ்துவில் நடந்தேறிய இந்த நெருக்கத்தை, 'ஒப்புரவாதல்' என்ற இறையியல் கருதுகோள் வழியாக முன்வைக்கிறார் பவுல்: 'சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்' (1:20). விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையும், மனிதத் தன்மையும் ஒன்றையொன்று கைகோர்த்து நிற்கின்றன கிறிஸ்துவில். கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, 'மிக அருகில் உள்ள' கடவுள்தன்மையைத் தொட்டு நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்.

ஆக, திருச்சட்டம், இயேசு, அயலார் என்னும் மூவரும் நம்முடைய வாய் மற்றும் இதயத்தைத் தாண்டி கையால் தொட்டுவிடும் நெருக்கத்தில் இருக்கின்றனர்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால் ஒன்றுதான்: 'வாய்' மற்றும் 'இதயத்தை' தாண்டி என்னால் 'கைக்கு' செல்ல முடிகிறதா?

நல்ல சமாரியன் எடுத்துக்காட்டில் வரும் குருவுக்கும் லேவியருக்கும் 'அடுத்திருப்பவர்' என்பர் அவர்களுடைய வாயிலும், இதயத்திலும் இருந்தாரே தவிர அவர்களுடைய கைகளில் இல்லை. தங்களுடைய வாயால் இறைவனைப் புகழ்ந்த, தங்களுடைய இதயத்தால் இறைவனைச் சிந்தித்த அவர்களால் அடிபட்டுக் கிடந்த அயலாருக்கு கரம் நீட்ட முடியவில்லை. கரம் நீட்டுதல் மூன்று நிலைகளில் சாத்தியமாகும்:

அ. அறிதலிலிருந்து செய்தலுக்குக் கடத்தல்
'நிறைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?' என கேட்டு வருகிற அறிஞரிடம், 'நீ முதலில் செய்!' என கட்டளை கொடுத்து அனுப்புகிறார் இயேசு. ஆக, கட்டளைகளை அறிதல் அல்ல, மாறாக, அவற்றைச் செய்தல் அல்லது அவற்றின்படி நடத்தல் அல்லது அவற்றைச் செயல்படுத்துதலே நிறைவாழ்வைத் தரும். சர்க்கரை நோய் உள்ளவர் உணவில் சர்க்கரை சேர்க்கக் கூடாது என்பது நான் கொண்டுள்ள அறிவு. இந்த அறிவு மட்டும் இருந்தால் போதுமா? இல்லை. அறிவோடு சேர்ந்து செயலும் இருக்க வேண்டும். 'சர்க்கரை சேர்க்கக் கூடாது' என்று அறிந்துள்ள நான் அதைச் செயல்படுத்த வேண்டும் - என் உணவில் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். ஆக, அறிவு மட்டும் ஆற்றல் அல்ல. அறிவோடு கூடிய செயலே ஆற்றல். அறிதலிலிருந்து செயல்பாட்டிற்கு திருச்சட்ட அறிஞரை அழைத்துச் செல்கின்றார் இயேசு.

ஆ. 'எனக்கு அருகிருப்பவர் யார்?' எனக் கண்டுணர்தல்
என் பெற்றோர், உறவினர், நண்பர், அறிமுகமானவர் ஒரு வட்டம் என் அருகில் இருந்தாலும், என் அருகிலிருப்பவர்கள் இவர்கள் அல்லர். எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், எல்லாம் சிதைந்து, முகம் இழந்து, உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு, முணுமுணுத்துக் கொண்டு இருப்பவரே என் அருகிலிருப்பவர். அவரின் ஒரே தேவை என்பது 'தேவை மட்டுமே.' அந்த தேவையை நான் நிறைவு செய்தால் நானும் அவரின் அருகிருப்பவரே. அவரின் தேவையில் நான் அவருக்கு பரிவு காட்டுவதற்குப் பதிலாக, அவரின் அடையாளத்தை நான் தேட ஆரம்பித்தாலோ, அல்லது 'இவருக்கு உதவினால் எனக்கு என்ன கிடைக்கும்?' என நான் கணக்குப் பார்க்க ஆரம்பித்தாலோ என்னால் அவரின் அடுத்திருப்பவராக இருக்க முடியாது. அவரின் முணகல் சத்தம் என் காதில் விழ வேண்டும். நான் என் கழுதையிலிருந்து இறங்க வேண்டும். குனிய வேண்டும். என் கையை அழுக்காக்க வேண்டும். என் உடையை இரத்தக்கறையாக்க வேண்டும். அவரைத் தொட வேண்டும். மருந்திட வேண்டும். காயத்திற்குக் கட்டுப்போட வேண்டும். என் விலங்கில் ஏற்றிக்கொண்டு சென்று அவரின் பாதுகாப்பை நான் உறுதி செய்ய வேண்டும். 'அவரைப்போல' நானும் செய்ய என்னை அழைக்கிறார் இயேசு.

இ. நிலைவாழ்வு - இங்கே இப்போதே!
இறப்பிற்குப் பின் வருவதல்ல நிறைவாழ்வு. இருக்கும்போதே வருவதுதான் நிலைவாழ்வு. 'ஆண்டவர்-அடுத்திருப்பவர்-நான்' என்ற புதிய மூவொரு இறைவனை முன்வைக்கின்றன இன்றைய வாசகங்கள். இந்த மூவொரு அன்பில் நான் இணைந்திருந்தால் அதுவே எனக்கு நிலைவாழ்வு. 'நான் ஆண்டவரை அல்லது அடுத்தவரை அல்லது என்னை அன்பு செய்தால் எனக்கு நிறைவாழ்வு கிடைக்கும்' என்று நினைப்பது சால்பன்று. ஆக, அன்பு என்பது நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் கொடுக்கும் விலை அன்று. அப்படி அதை விலை என நான் நினைத்தால், நான் ஆண்டவரையும், அடுத்தவரையும், என்னையும் வியாபாரப் பொருளாக்கிவிடுகிறேன். அடுத்தவரை அல்லது காயம்பட்டவரை அன்பு செய்து நான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்கிறேன் என்றால், அங்கே நான் அவரை ஒரு பொருளாக ஆக்கிவிடுகிறேன் என்றுதானே அர்த்தம். ஒவ்வொரு மனிதரும் ஓர் ஆள். அவரை நான் பொருளாக்க எனக்கு உரிமை இல்லை. நான் செய்யும் அன்பிற்கு எனக்கு நிறைவாழ்வு அல்லது நிலைவாழ்வு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நான் தொடர்ந்து அன்பு செய்வேன் என்ற மனப்பான்மை என்னில் உதிக்கிறதா? நிறைவாழ்வு என்பது பயணத்தின் இறுதியில் நான் கண்டடையும் பொருள் அல்லது இடம் அல்ல. மாறாக, பயணமே நான் கண்டடையும் பொருள். என் இலக்கு பயணத்தின் இறுதி அல்ல, மாறாக, பயணமே. இந்தப் பயணத்தில் வழிப்பாதையில் விழுந்துகிடக்கும் அனைவரும் என் அடுத்திருப்பவரே. அவரைத் தொட்டுத் தூக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு நிறைவாழ்வே!

'உனக்கு அருகில் நான்' என என் ஆண்டவரும், என் அடுத்திருப்பவரும் என்னிடம் சொல்ல, 'உனக்கு மிக அருகில் நான்' என நான் அவர்களிடம் சொல்ல முடிந்தால் அதுவே நிலைவாழ்வு. வாயில் தொடங்கும் இப்பயணம் கைகளில் முடியட்டும் - இன்றும் என்றும்!
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை


இயேசுவே நல்ல சமாரியர்!


இயந்திரங்களால் முடியாது; மனிதர்களால் முடியும்:

கடிதம் எழுதும் பழக்கம் இருந்த காலக்கட்டம் அது. பாக்கியம் என்றொரு மூதாட்டி இருந்தாள். அவளுக்கு உடலில் பலவிதமான நோய்கள் இருந்தன. தவிர, நீண்ட தூரம் நடப்பதுகூட அவளுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்தப் பாக்கியத்திற்கு ஒரு மகன் இருந்தான். அவன் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தான். அவனோடு அவள் கடிதம் வாயிலாகவே பேசி வந்தாள். அதனால் அவள் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் அஞ்சல் நிலையத்திற்குச் சென்று, அங்கு ஸ்டாம்புகள் (தபால் தலைகள்) வழங்கப்படும் இடத்தில், ஸ்டாம்புகள் வாங்கி, தான் எழுதிய கடிதத்தில் ஒட்டி, அதைத் தன் மகனுக்கு அனுப்பி வைப்பாள். இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

ஒருமுறை அவள் வழக்கம்போல் ஸ்டாம்புகள் வாங்குவதற்காக அஞ்சல் நிலையத்திற்குச் சென்றாள். அன்றைய நாளில் ஸ்டாம்புகள் வழங்கப்படும் இடத்தில் கூட்டம் மிகுதியாக இருந்தது. அது விழாக்காலம் என்பதால் அங்கே கூட்டம் மிகுதியாக இருந்தது.

எப்படியும் தன் மகனுக்குக் கடிதம் அனுப்பவேண்டும் என்பதால் பாக்கியம், ஸ்டாம்புகள் வழங்கப்படும் இடத்திற்கு முன்பாக இருந்த நீண்ட வரிசையில் போய் நின்றாள். அப்போது அப்பக்கம் வந்த இளைஞன் ஒருவன், "பாட்டி! ஸ்டாம்புகள் வழங்கத் தானியங்கி எந்திரம் அருகில் இருக்கின்றது. நீங்கள் அங்கே சென்று, ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டால், மறுவினாடி ஸ்டாம்பு வந்துவிடும். எதற்காக நீங்கள் இங்கே கால்கடுக்க நின்றுகொண்டிருக்கின்றீர்கள்?" என்றான். அதற்குப் பாக்கியம் அவனிடம், "தானியங்கி எந்திரம் இருக்கும் இடத்திற்குச் சென்றால், விரைவில் ஸ்டாம்புகளைப் பெற்றுவிடலாம்தான். ஆனால், அந்த எந்திரத்தால் என்னிடம் நலம் விசாரிக்கத் தெரியாது. ஸ்டாம்புகளை வழங்கும் மனிதரால்தான் நலம் என்னிடம் விசாரிக்க முடியும். அதனால்தான் இந்த நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கின்றேன்" என்று புன்னகை மாறாமல் பதில் சொன்னாள்.

ஸ்டாம்பு வழங்கும் இடத்தில் இருந்த மனிதரிடம் பாக்கியம் என்ற அந்த மூதாட்டி, ஒவ்வொருமுறையும் ஸ்டாம்பு வாங்கச் சென்றபோதும் அவர் அவளிடம் அன்போடு நலம் விசாரித்தார். அவர் மூதாட்டியிடம் காட்டிய அன்பும் பரிவுமே, அவளை எந்திரத்தை நோக்கி அல்ல, அவரை நோக்கிச் செல்ல வைத்தது.

ஆம், மனிதர்கள் அன்பிற்காகவும் பரிவிற்காகவும் ஏங்குகின்றார்கள். அதை நம் ஆண்டவர் இயேசு நம்மீது காட்டினால் அது எத்துணை இனிமையாக இருக்கும்! பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை இயேசுவே நல்ல சமாரியர் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

தேடி வந்த இயேசு:
தன்னிடம் வந்த திருச்சட்ட அறிஞர், "நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற கேள்விகளைக் கேட்டதும், இயேசு அவரிடம் சொல்லக்கூடிய உவமைதான் நல்ல சமாரியன் உவமை ஆகும். இந்த உவமையில் வருகின்ற நல்ல சமாரியர் வேறு யாருமல்லர், இயேசு கிறிஸ்துதான் என்று திருவிவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். இயேசு எப்படி நல்ல சமாரியராகத் திகழ்கிறார் என்று பார்ப்போம்.

எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்லும் சாலை இன்றைக்கும்கூட ஆபத்துகள் நிறைந்த, கள்வர்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ள ஒரு சாலையாகும். இந்தச் சாலையில் சமாரியர்கள் பயணிக்க வாய்ப்புகள் குறைவு. காரணம், யூதர்கள் சமாரியர்கள்மீது எப்போதும் வெறுப்போடு இருந்ததால், சமாரியர்கள் அந்தச் சாலை வழியாக வர நேர்ந்தால், அவர்களை யூதர்கள் தாக்கக்கூடும். ஆனால், இயேசு சொல்லும் உவமையில் வரும் சமாரியர் ஒருவர் அச்சாலை வழியாக வருகின்றார். அவர் கள்வர் கையில் அகப்பட்டவர்மீது பரிவுகொள்கின்றார்.

இதை நாம் இயேசுவோடு இப்போது பொருத்திப் பார்ப்போம். பாவத்தின் பிடியில் சிக்கி, வாழ்வையே இழந்த மனிதர்களை மீட்பதற்காக, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுவதுபோல், கட்புலனாகாத கடவுளின் சாயலான இயேசு தேடி வந்தார் (லூக் 19:10). மட்டுமல்லாமல், அவரது காயங்களாலும், விலைமதிக்கப் பெறாத இரத்தத்தாலும் மானிடருக்குப் புத்துயிர் தந்தார். அந்த வகையில் இயேசுவை ஒரு நல்ல சமாரியன் என்று சொல்லலாம்.

விண்ணகத்திற்கு சாவடிக்கு - அழைக்குச் செல்லும் இயேசு:
சமரியரின் பணி, குற்றுயிராய்க் கிடந்த மனிதரின் காயங்களில் திராட்சை மதுவையும், எண்ணெயையும் வார்த்ததோடு முடிந்துவிடவில்லை. அவர் அந்த மனிதரைத் தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார் என்று வாசிக்கின்றோம். இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

சமாரியர் தான் பயணம் செய்த விலங்கின்மீது அடிபட்டுக் கிடந்த மனிதரை ஏற்றி, அவரைச் சாவடிக்குக் கொண்டு சென்றார் என்பதை, இயேசு தான் சுமந்து சென்ற சிலுவை மூலம் மானிடரை மண்ணகத்திலிருந்து விண்ணகத்திற்குக் கூட்டிச் சென்று, அங்கு அவர்களைக் கவனித்துக் கொள்கின்றார் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். எனவே, நல்ல சமாரியர் எப்படி ஆபத்தான சாலையிலிருந்து அடிபட்டுக் கிடந்தவரைச் சாவடிக்குக் கூட்டிக் கொண்டு போனாரா, அப்படி இயேசு நம்மை மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்குக் கூட்டிச் செல்கின்றார் என்ற அடிப்படையில் அவரை நல்ல சமாரியர் என்று சொல்லலாம்.

திரும்பி வருகையில் கைம்மாறு தரும் இயேசு:
சமாரியர் அடிபட்டுக் கிடந்தவரைச் சாவடியில் சேர்த்ததோடு நின்றுவிடாமல், சாவடிப் பொறுப்பாளரிடம், "இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருகிறேன்" என்கிறார்.

சமாரியர் சாவடிப் பொறுப்பாளரிடம் சொல்லும் இந்த வார்த்தைகளில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. முதலாவதாக, நாம் ஒவ்வொருவரும் நம்மோடு இருப்பவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், ஒவ்வொருவரிலும் இயேசு இருக்கின்றார் (மத் 25:40). இரண்டாவதாக, நாம் நம்மோடு இருப்பவர்களைக் கவனித்துக் கொள்ளும்போது, இயேசு திரும்பி வரும்போது தக்க கைம்மாறு தருவார் (உரோ 2:6). ஆகவே, சமாரியர் எப்படிச் சாவடிப் பொறுப்பாளரிடம், தான் திரும்பி வரும்போது உரியதை அவருக்குத் தருவதாகச் சொன்னாரோ, அப்படி இயேசுவும் திரும்பி வரும்போது பரிவோடு நடந்து கொள்பவர்களுக்கு உரிய கைம்மாறு தருவார் என்பதால் அவரை நல்ல சமாரியர் என்று சொல்லலாம்.

இயேசு நல்ல சமாரியர் உவமையைச் சொல்லிவிட்டு, தன்னிடம் கேள்வி கேட்ட திருச்சட்ட அறிஞரிடம், "நீரும் போய் அப்படியே செய்யும்" என்கிறார். இதை நாம் இயேசு செய்தது போல், அல்லது இயேசு வாழ்ந்தது போல் நாமும் வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால், நாம் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளலாம். மேலும் இத்தகைய போதனை கடலுக்கு அப்பாலோ, மலைகளுக்கு அப்பலோ இல்லை. மாறாக, இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, அது நமது வாயில், நமது இதயத்தில் இருக்கின்றது.

எனவே, நாம் இயேசுவைப் போன்று எளியவர்மீது வறியவர்மீது பரிவுகொண்டு, அவர்களுக்குப் புதுவாழ்வு தந்து, நாம் நிலைவாழ்வைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:
'அன்பும் பரிவும் ஆடம்பரம் அல்ல, அவை அடிப்படைத் தேவைகள். அவை இல்லையென்றால், மானிடம் தழைக்காது' என்பார் தலாய் மாமா. எனவே, மானிடத்தைத் தழைக்கச் செய்யும் அன்பையும் பரிவையும் ஒருவர் மற்றவரிடம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை

நல்ல சமாரித்தன்

ஒரு கிராமத்து பெண் ஒரு ஞானியிடம் சென்று நான் மீட்புப் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அவர் ஆம்! அது மிகவும் எளிது. மீட்புப் பெற வேண்டும் என்ற விருப்பம் உனக்கு வேண்டும் என்றார் அந்த ஞானி. இதேபோல்தான் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சட்டவல்லுநன் ஆண்டவர் இயேசுவிடம் இந்தக் கேள்வியை எழுப்பினான்.

ஆண்டவர் இயேசு, என் வார்த்தையைப் பின்பற்றி என் கட்டளையை ஏற்று அதன்படி நடப்பதாலே நிலை வாழ்வு பெற முடியும் (யோவா. 8:51) என்று கூறுகிறார். இன்னும் ஒரு படி சென்று என் மீது நம்பிக்கை வைப்பவன் என்றுமே சாகமாட்டான் (யோவா. 6:47) என்கிறார் ஆண்டவர்.

மோசே வழியாக இறைவன் கொடுத்த 10 கட்டளைகளை கால ஓட்டத்தில் யூதர்கள் பலுக்கிப் பெருக்கி இயேசுவின் காலத்தில் சுமார் 618 சட்டங்கள் ஆக்கினர். எனவே. நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று திருச்சட்ட வல்லுநன் (அறிஞன்) இயேசுவைச் சோதிக்க விரும்பினான். உள்ளத்தை அறியும் இறைவன் இயேசு அவனுக்கு அழகான நல்ல சமாரியன் உவமையை வைக்கிறார். உனக்கு அடுத்து இருப்பவனுக்கு அன்பு செய் என்கிறார் இயேசு. எனக்கு அடுத்து இருப்பவன் யார் என்று கேட்டான். அப்போது இயேசு இந்த அழகான நல்ல சமாரியன் உவமையைத் தருகிறார்.

எருசலேமிலிருந்து எரிக்கோ போகிறான் ஒருவன். தான் போகும்போது கள்வன் கையில் அகப்பட்டு, அடிபட்டு அனைத்தையும் இழந்து காயமுற்றுக் கிடக்கிறான் அநாதையாக. அதன் வழியே சென்ற ஒரு யூத குரு கண்டும் விலகிச் செல்கிறார். ஒரு யூத குருமாணவன் (லேவியன்) அவரைக் கண்டும் மறுபக்கம் விலகிச் செல்கிறான். ஆனால் அவ்வழியே வந்த சமாரியன் அருகில் வந்து அடிபட்டவன் மீது பரிவு கொண்டு காயங்களில் திராட்சை ரசம், எண்ணெய் வார்த்து அவனைக் கட்டித் தன் கழுதையின் மீது ஏற்றி ஒரு சாவடிக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்றுகிறான்.

இதில் வந்த மூன்று கதாபாத்திரங்களை (பேர்களை) உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

திருடன் கொள்ளைக்காரன்:- இவனது சிந்தனை, செயல் அத்தனையும், என்னுடையதெல்லாம் என்னுடையதே! உன்னுடையதும் என்னுடையதே என்ற சுரண்டல் புத்தி கொண்டவன். இது இவனது ஆழமான சுயநலத்தைக் காட்டுகிறது. இவன் யார் தெரியுமா? தண்ணீரில் கிடந்த பஞ்சு பொம்மை போன்றவன். பஞ்சு பொம்மையானது தண்ணீரை உறிஞ்சி, தன்னைப் பெருக்கி வைத்து, தண்ணீரைக் காலியாக்குவது. இந்த நிலையில்தான் இந்தக் கள்வர்கள் பிறர் உடைமைகளை அபகரித்து பிறரையும் காலில் போட்டு மிதிப்பவர்கள்.

குரு, லேவியன்:- இவர்கள் இருவர்கள் எப்படிப்பட்ட மனநிலை உடையவர்கள் தெரியுமா? என்னுடையதெல்லாம் என்னுடையதே! உன்னுடையதெல்லாம் உன்னுடையதே. எனக்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற மனநிலை உடையவர்கள். இவர்கள் தண்ணீர் உள்ள வாளியிலே நெடுநேரம் கிடக்கும் இரும்பு பொம்மை போன்றவர்கள். இந்தப் பொம்மை தனக்கு எந்த மாற்றமும் பெறுவதில்லை. தண்ணீருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்து வதில்லை. இதேபோல்தான் இந்தக் குருவும், இந்த லேவியரும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தங்களைச் சுற்றி ஒரு வட்டமிட்டு அந்த வட்டத்திற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். பிறர் இன்பத்திலும். துன்பத்திலும் பங்கு பெறத் தெரியாதவர்கள். சமுதாய ஈடேற்றத்தில் ஈடுபாடு காட்டாதவர்கள். ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள். பதுங்கிக் கொண்டு தங்களைப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள். பழைய ஏற்பாட்டில் எரோபவா அரசனின் சிலை வழிபாட்டைக் கண்டுகொள்ளாத அமாசியா என்ற குருவைப் போல (ஆமோஸ் 7:10-17), அல்லது பயந்து ஒதுங்கிக் கொண்ட பிலாத்தைப் போன்றவர்கள் அல்லவா இந்தக் குருவும், வேலியனும்.

சமாரியன் மனநிலை: உன்னுடையதெல்லாம் உன்னு டையதே. என்னுடையதும் உன்னுடையதே என்ற தியாக மனநிலையை உடையவன் சமாரியன். இந்த மனநிலை கொண்டவர் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு ஒருசிலரே. தன்னையே தண்ணீருக்குள் இருக்கும்போது இழந்து, தண்ணீருக்குச் சுவை சேர்க்கும், சர்க்கரைப் பொம்மையைப் போல் தங்கள் நேரத்தையும், சக்தியையும், செல்வத்தையும் இழந்து பிறருடைய வாழ்வை வளமூட்டும் நல்ல மனிதர்கள் இவர்கள். பிறர் வாழ்வு வளம் பெற, உயர, உரமாகத் தங்களையே கரைப்பவர்கள். சமாரியர்கள் என்பவர்க கலப்பின மக்கள். எனவே யூதர்கள் இவர்களை வெறுத்தார்கள். தீண்டத்தகாதவர்கள் எனவும் கருதினார்கள். ஆனால் இவர்களோ மனிதர் அனைவரும் சமம், மனித மாண்பை மதிக்கின்றவர்களாக நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்று காட்டுபவர்கள்.
எனவே பணமோ, பட்டமோ, பதவியோ நிலைவாழ்வைப் பெற்றுத்தர முடியாது. அன்பு ஒன்றுதான் அதைச் செய்ய முடியும். அப்படியே நீரும் செய்யும் (லூக். 10:37) என்ற இயேசுவின் சொல்லை ஏற்று, சமாரிய மனிதன் ஆற்றிய அன்புச் செயலை நம் வாழ்வில் செயல்படுத்த முயலுவோம்
.
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

 
வேண்டியது விழிப்புணர்வே

இயேசு ஓர் ஆசிரியர். ஆசிரியர்கள் சாதாரணமாக உவமைகள் வழியாக, உருவகங்கள் வழியாக, கதைகள் வழியாக, பழமொழிகள் வழியாகத்தான் பேசுவார்கள்; தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு நம்மை அழைத்துச் செல்வார்கள்.

நல்ல சமாரியர் உவமையின் வழியாக இயேசு பிறரன்பு என்றால் என்ன என்பதைச் சுட்டிக்காட்டி நமது இதயத்திலே திருமுழுக்கு நாளன்று இயேசுவின் ஆவியால் எழுதப்பட்ட அன்புக் கட்டளையை (முதல் வாசகம்) வாழ்வாக்க அழைக்கின்றார்.

உண்மை அன்பை ஒரு காசுக்கு ஒப்பிடலாம். அதற்கு இரு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கத்திற்குப் பெயர் தன்னை மறத்தல்; மற்றொரு பக்கத்திற்குப் பெயர் மற்றவரை நினைத்தல். சமாரியர் தன்னை மறந்தார்; தனது வியாபாரத்தை மறந்தார்; தன் சுகத்தை மறந்தார்; அனைத்தையும் மறந்து அடிபட்டுக் கிடந்தவரின் பரிதாப நிலையை மட்டும் நினைத்தார்; அவரின் தேவையை மட்டும் நினைத்தார்; அவரின் உயிரை மட்டும் நினைத்தார்; அவருக்கு உதவி செய்தார்.

சாதாரணமாக, மற்றவரை அன்பு செய்யவிடாமல் நம்மைத் தடுப்பது எது? நமது சுயநலம்! இதோ சுயநலம் என்றால் என்ன என்பதற்கு ஒரு சிறு விளக்கம்.

இரு நண்பர்கள்! ஒருவன் இல்லறத்தைத் தேர்ந்தெடுத்தான், மற்றொருவன் துறவறத்தைத் தேர்ந்தெடுத்தான்! இல்லறத்தைத் தேர்ந்தெடுத்தவன் பரம ஏழையானான். ஏழை இல்லறவாசி ஒரு நாள் தனது துறவற நண்பனை காட்டிலே சந்தித்தான்.

துறவியான நண்பன் ஏழையைப் பார்த்து, உனக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனச்சொல்லி, ஒரு சிறு கல்லைத் தொட்டான். அந்தக் கல் பொன்னானது. அந்தத் தங்கக் கட்டியை ஏழை நண்பனிடம் கொடுத்தான். ஏழை திருப்தி அடையவில்லை. பின்பு அந்தத் துறவி மரக்கட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதைத் தமது சுட்டுவிரலால் தொட்டான். அது பொன்னானது. அதை ஏழை

பெற்றுக்கொண்டான். அப்போதும் அவன் திருப்தி அடையவில்லை! இன்னும் உனக்கு என்ன வேண்டும்? என்றான் துறவி நண்பன். அதற்கு அந்த ஏழை, எதைத் தொட்டாலும் பொன்னாக்கும் உனது சுட்டுவிரலை எனக்குக் கொடு என்றான்.

அந்த ஏழை மனிதனின் எண்ண அலைக்குப் பெயர்தான் சுயநலம்.

சுயநலத்திலிருந்து விடுதலை அடைய நமக்கு ஓர் அழகான வழியை புனித பவுலடிகளார் இன்றைய இரண்டாவது வாசகத்தில் சுட்டிக்காட்டுகின்றார். உங்களது உடலின் (திருச்சபையின்) தலையாக விளங்குபவர் இயேசு! உங்களது தலையாக விளங்குபவர் இயேசு என்றால், அவர் சொல்கின்றபடி நடப்பதுதானே முறை என்று நமக்கு அறிவுரை பகர்கின்றார். மேலும் அறிவோம்:

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்(று) உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு (குறள் : 351).

பொருள்:
மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று கொள்ளுவது அறியாமை ஆகும்; அத்தகைய மயக்கம் உடையவர் இழி பிறப்பினராகக் கருதப்படுவர்.
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்


ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு

பகவத்கீதை இந்துக்களையும், பைபிள் கிறிஸ்தவர்களையும், குரான் முகமதியர்களையும் உருவாக்கியுள்ளன. ஆனால் இம்மூன்றும் சேர்ந்து மனிதர்களை உருவாக்கவில்லை. மனிதனாகப் பிறப்பது ஒரு விபத்து; மனிதனாக வாழ்வது ஒரு சாதனை. இன்று சமயங்களுக்கும், கோவில்களுக்கும், வழிபாடுகளுக்கும பஞ்சமில்லை. ஆனால் மனிதனுக்கு அதாவது, மனித நேயத்துக்குத்தான் பஞ்சம் வந்துவிட்டது.

"மனிதனுக்கும் மாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று கேட்டதற்கு ஒருவர் கூறிய பதில்: மாட்டின் கழுத்தில் தொங்குவது "பெல்". மனிதன் கழுத்தில் தொங்குவது 'செல்.' இந்தக் கேள்விக்கு சாக்ரட்டீஸ் கூறிய பதில்: "ஒரு மாடு அடுத்த மாட்டைப் பற்றி அக்கறை கொள்ளாது. ஆனால், ஒரு மனிதன் அடுத்த மனிதனைப்பற்றி அக்கறை கொள்வான். அடுத்தவனைப் பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி.

அடுத்தவரைப் பற்றி அக்கறை கொண்டு, மனித நேயத்தோடு வாழவேண்டும் என்பதை இன்றைய நற்செய்தியில் நல்ல சமாரியர் உவமை வழியாக இயேசு வலியுறுத்துகின்றார். "கடவுளை மற. மனிதனை நினை" என்ற தந்தை பெரியாரின் கூற்று நாத்திகத்தின் வெளிப்பாடாக நமக்குத் தோன்றலாம். ஆனால் நல்ல சமாரியர் உவமையின் சுருக்கம்; "கடவுளை மற. மனிதனை நினை" என்பதே! ஆலய வழிபாட்டுக்காகச் சென்ற குருவும் லேவியரும் கள்வர் கையில் அகப்பட்டு. குற்றுயிராய் கிடந்தவருக்கு முதல் உதவி செய்ய முன்வரவில்லை. அவர்களிடம் கடவுள் பற்று இருந்தது. மனித நேயம் இல்லை. மாறாக கீழ்சாதியைச் சார்ந்த சமாரியனிடம் கடவுள் பற்று இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் மனித நேயம் இருந்தது. மரண ஆபத்தில் இருந்தவர் யூதராக இருந்தும் சமாரியர் அவருக்கு முதல் உதவி செய்து அவரைச் சாவடியில் சேர்த்து . அவருக்கான மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

'குற்றுயிராய் கிடந்தவரைத் தொட்டால் நமது கதி என்ன ஆகும்?" என்று தங்களையே மையமாக வைத்து செயல்பட்டனர் குருவும் லேவியரும். ஆனால், குற்றுயிராய்க் கிடந்தவரைத் தொடாவிட்டால் அவர் கதி என்ன ஆகும்?" என்று பிறரை மையமாக வைத்து சமாரியர் செயல்பட்டார். நாம் எந்த ரகம்? நம்மையே மையமாக வைத்து செயல்படும் தன்னலவாதிகளா? அல்லது பிறரை மையமாக வைத்துச் செயல்படும் பொதுநலவாதிகளா? அல்லது எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாத மந்தவாதிகளா?

"எனக்கு அயலான் யார்?" (லூக் 10:29) என்று சட்ட வல்லுநர் கேட்கின்றார். ஆனால் இயேசுவோ அவருடைய கேள்வியை மாற்றி, "கள்வர் கையில் அகப்பட்டவனுக்கு யார் அயலான்?" (லூக் 10:36) என்று கேட்கின்றார். நமக்கு அடுத்திருப்பவர் எல்லாம் நமது அயலான் அல்ல; மாறாக, யாருக்கு நம் உதவிக்கரம் தேவைப் படுகிறதோ அவரே நமது அயலான். மேலும், துன்புறும் எவரும். அவரின் மதம், இனம், மொழி வேறுபட்டிருப்பினும், அவர் நமது அயலான். ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன்; காரணம் அவனும் மனிதன்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்; "இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்" (கொலோ 1:15). ஒவ்வொரு மனிதனும் கடவுளின் சாயல் (தொ நூ 1:26). எனவே, மனிதர் கடவுளின் சாயல் என்னும் இறையியல் அடிப்படையில் நாம் அயலாரை அன்பு செய்யும் புனிதமான கடமையைக் கொண்டுள்ளோம்.

வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார்; "மந்திரம் ஒதுவதையும் பாடல் பாடுவதையும் செபமாலை உருட்டுவதையும் நிறுத்து! கோவிலின் தனிமையான இருளடைந்த மூலையிலே கதவுகளை அடைத்துக் கொண்டு யாரையப்பா வணங்குகிறாய்? கண்களைத் திறந்து பார். கடவுள் உன் முன்னிலையில் இல்லை. கடினமான தரையை உழுகின்ற உழவனிடத்தில் அவர் இருக்கின்றார். சாலை அமைக்கச் சரலைக்கல் உடைத்துக் கொண்டிருப்பவனிடத்தில் அவர் இருக்கின்றார். அவர்களுடன் அவர் மழையில் நனைகின்றார்; வெயிலில் காய்கின்றார்."

தாகூரின் கூற்று நமக்கு வியப்பளிக்கலாம். ஆனால் இயேசுவின் கூற்றும் தாகூரின் கூற்றுடன் ஒத்திருக்கின்றது என்பதை நாம் கவனிக்க வேண்டும். "நான் பசியாய் இருந்தேன்; தாகமாய் இருந்தேன்; அன்னியனாய் இருந்தேன்; நோயுற்றிருந்தேன்; சிறையிலிருந்தேன்; என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்"( காண்:மத் 25:35-40). ஏழை எளியவர்களிடத்திலும் துன்புறுகின்றவர்களிடத்திலும் கடவுள் இருக்கின்றார். மனிதனை மதிப்பது இறைவனை மதிப்பதாகும்; மனிதனை மிதிப்பது இறைவனை மிதிப்பதாகும்.

இறை வழிபாடு மனித நேயத்தை வளர்க்க வேண்டும். மனித நேயத்தை வளர்க்காத இறைவழிபாடு வடிகட்டிய சிலை வழிபாடாகும். ஏழையின் உடலிலும் இரத்தத்திலும் இருக்கும் கிறிஸ்துவை மதிக்காதவன், நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் மதிக்க முடியாது - அயலானை வெறுத்துவிட்டு ஆண்டவனை அன்பு செய்வதாகக் கூறும் எவனும் பொய்யன். கடவுளின் அன்பு அவனிடம் இல்லை (1 யோவா 4:40). கடவுளை முழு இதயத்தோடு அன்பு செய்ய வேண்டும். அயலாரை நம்மைப்போல் அன்பு செய்ய வேண்டும். கடவுளுடைய இக்கட்டளையை அறிய நாம் விண்ணில் பறக்கவோ, கடல் கடந்து செல்லவோ தேவையில்லை. அவை நம் இதயத்தில் கடவுளால் பொறிக்கப்பட்டுள்ளன என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது (இச 30:10-14).

போக்குவரத்துக் காவலர் ஊதிய விசிலைப் பொருட்படுத்தாது, வாகன நெரிசல்மிக்க ஒரு சாலையைக் கடக்க முயற்சி எடுத்த ஒரு பாட்டியிடம் காவலர், "என்ன பாட்டி! விசில் அடிச்சா திரும்பிப் பார்க்காமல் போறீங்க?" என்று கேட்டார். அதற்கு அப்பாட்டி, "விசில் அடிச்சா திரும்பிப் பார்க்கிற வயசா இது?" என்று கேட்டார்.

விசில் அடிச்சா திரும்பிப் பார்க்காத பாட்டிகள் இருக்கலாம்; ஆனால் விசில் அடிச்சா திரும்பிப் பார்க்கிற காதலர்கள் நிறைய இருக்கின்றனர். "சரிகமபதநி. சைட் அடிப்பேன் கவனி" என்கின்றனர் பலர், ஆனால், பிறருடைய அழுகைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கின்றவர்கள் எத்தனைபேர் உள்ளனர்?

ஆத்திகம் பேசி அடுத்தவர்களின் அழுகைக் குரலைக் கேட்காதவர்களைவிட, நாத்திகம்பேசி அயலாருக்கு உதவி செய்பவர்கள் கடவுளுக்கு நெருக்கமாய் உள்ளனர். இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அறைகூவல்: கடவுளை மற: மனிதனை நினை.
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை


நல்ல சமாரியரின் நகல்களாவோம்

கருப்பின மாமனிதர் என உலகம் புகழும் மார்ட்டின் லூத்தர் கிங் மகத்தானவர். தனக்கென ஒரு தனித்துவத்தைத் தன் உழைப்பாலும் தியாகத்தாலும் உலகத்தில் உணர வைத்தவர்.

ஓர் அமெரிக்க வெள்ளைக்காரன் மார்ட்டின் லூத்தர் கிங்கைத் தன் பார்வையில், பேச்சில், செயலில் மிருகத்துடன் பழகுவதுபோல் அருவெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டு வந்தான். ஆனால் மார்ட்டின் லூத்தர் கிங்குக்கென ஒரு நிதானம், ஒரு விவேகம் உள்ளூரச் செயல்பட்டுக் கொண்டே இருந்தது. அமைதியே உருவான அவர் சொன்னார்: "நண்பா, நான் சுத்தமாக இல்லையெனில், சுத்தத்தைக் கற்றுத்தா. நான் முகமலர்ச்சியற்று இருப்பின், என்னில் புன்னகை புலரச் செய். என்னிடம் நற்பண்புகள் இல்லையென்றால், நற்குணங்களில் பயிற்சி கொடு. ஆனால் நீ என்னை வெறுப்பது என்னுடைய கருப்பு நிறத்திற்காகத்தான் என்றால் நான் என்ன செய்ய இயலும்? படைத்தவனைத் தான் கேட்க வேண்டும்".

நீங்களும் நானும் இச்சூழலைச் சந்தித்தால், கத்தியைக் கையில் எடுப்போம். ஆனால் இம்மனிதரும் ஓர் ஆயுதத்தை எடுத்தார். அதுதான் அன்பு, உண்மை, பொறு மற்றும் அகிம்சை. அவைதான் ஒரு நாள் கருப்பினச் சகோதரர்களைக் கொடுமைப்படுத்திய அமெரிக்க வெள்ளையரை நாணிக் கூனிக் குறுக வைத்தது - "Lasting Impression" என்ற நூலில் காணும் நிகழ்வு இது.

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் (வழிபாட்டில் பாடுகிறோம். செயல்பாட்டில் ...?) காரணம் அவனும் மனிதன். அது மட்டும்தானா? காரணம் அவனும் இயேசு, இறைச்சாயல் என்பதன்றோ! "மிகச்சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" (மத். 25:40) என்ற இயேசுவின் கனவு சொல்லில் மட்டுமல்ல, செயலில் அழுத்தம் பெறுகிறது நல்ல சமாரியர் உவமையில்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அன்பு செய்ய, அன்பு செய்யப்பட விழைகிறோம். அதனை குடும்பம், உறவு, சாதி, ஊர், இனம் என்று குறுகிய வட்டத்துக்குள் வெளிப்படுத்துகிறோம். ஆனால் இயேசு விடுக்கும் சவால்: "உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைமாறு கிடைக்கும்?... பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?'' (மத். 5:46,47).

இங்கே அன்பு செய்கிறாயா இல்லையா என்பது அல்ல கேள்வி. என் அயலான் யார்? "எனக்கு அடுத்திருப்பவன் யார்?" (லூக். 10:29) என்பதே! அந்தக் கேள்விக்கான பதிலே நல்ல சமாரியர் கதை.

பாகுபாடு பாராமல் நண்பனோ பகைவனோ நன்னயம் செய்தல் வேண்டும். தேவையில், சிக்கலில், துன்பத்தில், ஆபத்தில் தவிப்பவரைத் தேடிச்சென்று உதவுபவரே அயலான், அடுத்திருப்பவன் என்கிறார் இயேசு.

ஓர் இந்துத் துறவி அன்னை தெரசாவிடம், "நீங்கள் கிறிஸ்தவர். கிறிஸ்தவர்களில் பாதிப்புக்கு ஆளாகும், வாழ்வதற்குப் போராடும் தொழுநோயாளிகள், ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற அனாதைகள்... இத்தகையோருக்கு உதவுவதற்குப் பதில் சமய வேறுபாடு இன்றி அனைவருககும் ஏன் அன்புப் பணியாற்றுகிறீர்கள்? மதம் மாற்றுவதற்காகவா?" என்று கேட்டார். "யாரையும் கிறிஸ்தவர்கள் என்பதற்காக நாங்கள் அன்பு செய்பவர்கள் அல்ல. நாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் அனைவரையும் அன்பு செய்யக் கடமை ஏற்றவர்கள்" என்றாராம் அன்னை.

1998ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் லாஸ் ஏஞ்சல்ஸ் 'டைம்ஸ்' செய்தித்தாளில் வெளிவந்த ஒரு நிகழ்வு. அமெரிக்காவில் சட்டக் கல்லூரித் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது தேர்வு எழுதிய 50 வயதான மனிதர் திடீரென்று மாரடைப்பால் துடித்தார். இதைக் கண்ட இரு மாணவர்கள் தேர்வு எழுதுவதை நிறுத்திவிட்டு மருத்துவர் வரும்வரை முதலுதவி செய்து அவரைப் பிழைக்க வைத்தனர். அவர்கள் இழந்த 40 நிமிடங்களை தேர்வு ஆய்வாளர் வழங்க மறுத்ததால் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அவர்களுக்குக் கிடைத்த பதில்: "வழக்கறிஞர்களாக விரும்பும் உங்கள் இருவருக்கும் எந்த நேரத்தில் எது முக்கியம் எனத் தெரிந்திருக்க வேண்டும். எனவே தேர்வில் நீங்கள் இழந்த அந்த 40 நிமிடங்கள் உங்களுக்குத் தரப்படாதது சரியே".

இதுதான் உலகின் போக்கு. இதைக் குறித்தே அன்னை தெரசா கூறுவார்: "இன்றும் உலகத்தில் மிகக் கொடிய நோய் தொழு நோயல்ல, புற்று நோயல்ல, மாறாக யாராலும் கவனிக்கப்படாத, ஏற்றுக்கொள்ளப்படாத, அன்பு செய்யப்படாத அவலமே மிகப்பெரிய தீங்கு". "நான் என்ன, என் சகோதரனுக்கு காவலாளியா?" (தொ.நூ.4:9) என்ற காயினின் குரல் இன்று பரவலாக ஒலிப்பது வேதனைக்குரியது.

எருசலேமிலிருந்து எரிக்கோ சென்ற வழிப்போக்கன் சந்தித்தது மூன்று விதமானர்கள்:
1. திருடன், கொள்ளைக்காரன்: "என்னுடையதெல்லாம் என்னுடையதே உன்னுடையதும் என்னுடையதே" என்ற சிந்தனை கொண்டவன்.
2.குரு, லேவியர்: "என்னுடையதெல்லாம் என்னுடையதே, உன்னுடையதெல்லாம் உன்னுடையதே" என்ற உணர்வு கொண்டவன்.
3. சமாரியர்: ''உன்னுடையதெல்லாம் உன்னுடையதே.
என்னுடையதும் உன்னுடையதே" என்ற தியாக மனநிலை கொண்டவன். இவர்களில் நாம் யார்?

ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியை கேட்டாள்: "அந்தக் குருவுக்கும் லேவியருக்கும் உதவ வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?" துடுக்காண ஒரு மாணவன் சொன்னான்: "திருடனால் கொள்ளையடிக்கப்பட்ட அவனிடம் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது என்ற ஏமாற்ற உணர்வாக இருக்கலாம்".

எதிர்பார்ப்பு எதுவுமின்றி தேவையில் சிக்கலில் பிறருக்கு உதவும்போது நமது நேரம், முயற்சி, சக்தி, செல்வம் ஆகியவற்றை இழக்க நேரிடும். இழப்பை ஏற்றுக் கொள்ள மனப்பக்குவமும், அதைப் பொருட்டாக நினையாத பெருந்தன்மையும் இன்றியமையாதது. இதற்கு எடுத்துக்காட்டு நல்ல சமாரியர்.

குற்றுயிராய்க் கிடந்தான் ஓர் அனாதை. அவனைத் தூக்கி வந்தார் அன்னை தெரசா. விலையுயர்ந்த மருந்துகளைக் கொடுக்கச் அன்னை.மருத்துவர் சொன்னார்: "இவன் உடனே செத்துப் போவான். இந்த மருந்தெல்லாம் வீண்தானே". அன்னை தெரசா கண்ணில் நீர்மல்கச் சொன்னார்: "இவன் செத்துப்போவான். ஆனால் இவனுள் வாழும் கிறிஸ்து என்றும் சாகார்".

கிறிஸ்து சாகார். அவரது அன்புப் பசியும் சாகாது. எங்கெல்லாம் மனித மாண்பு சிதைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இறைவனின் மாண்பு சிதைக்கப்படுகிறது. மண்ணிலும் மரத்திலும் சிலை வடித்து இறைவனை நினைவூட்டிக் கொள்ளும் நம்மால் மனிதனில் மட்டும்எப்படி இறைச்சாயலை இனம் காண இயலாமல் போகிறது?

சீனாவில் ஒரு சாலையில் குற்றுயிராய்க் கிடந்த ஓர் ஏழையை ஓர் அமெரிக்கப் போதகர் அணுகிப் பணிவிடை புரிந்தார். விழித்ததும் வெள்ளையர் ஒருவர் இப்படிப் பணிபுரிவதை எண்ணி வியந்து "ஏன் இப்படிச் செய்கிறீர்?" என்று கேட்டாராம். போதகரோ இயேசுவைப் பற்றிச் சொல்லி அவர் பணித்ததைக் குறிப்பிட்டார். "அவர் எப்பொழுது வாழ்ந்தார்?" என்று கேட்க "2000 ஆண்டுகளுக்கு முன்னே" என்று சொன்னார். அவன் கேட்டானாம் "இரண்டாயிரம் ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இதை உணர்த்தவில்லையே!"

ஆம், அன்பும் இரக்கமும் காட்டாத தவறு இயேசுவை அறிக்கையிடாத தவறாகும். கிறிஸ்தவ வாழ்வு என்பது "அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை" (கலா.5:6). "செயலற்ற நம்பிக்கை பயனற்றது" (யாக். 2:20).

தேவையில் இருக்கும் மனிதன், நாம் விசுவாசத்தில் வாழ்ந்திட இறைவன் தரும் கொடையாகும். நமது நம்பிக்கையை அளக்கும் கருவியாகும். அன்பை வாழ்வாக்கிட நாம் பெறும் வாய்ப்பாகும்.

அன்பினால் நம் இதயம் நனையட்டும். அப்போது இரக்கம் கசியும். கருணை பிறக்கும். நல்ல சமாரியருடைய பணி நம் வாழ்வில் தொடரும்.

நல்ல சமாரியரின் நகல்கள் நாம்!
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி


பட்டப் பகலில் விளக்கைப் பிடித்துக் கொண்டு மனிதர்களைத் தேடிய டயோஜீனஸ் போன்ற அறிஞர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி ஒரு செயலில் ஈடுபட்டிருப்பதைப் போல் இன்று உணர்கிறேன். நானும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு, நடுப் பகலில் சூரியனைத் தேடுவதைப் போன்ற ஓர் உணர்வு எனக்கு. ஏன் இந்த உணர்வு?

இன்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ள புகழ்பெற்ற ஓர் உவமை இப்படி ஓர் உணர்வை என்னில் எழுப்பியுள்ளது. 'நல்ல சமாரியர்' என்ற இந்த உவமையைப் பற்றி பேசுவது கையில் விளக்கை எடுத்துக் கொண்டு சூரியனைத் தேடுவது போல் இருக்காதா? கட்டாயம் இருக்கும். இயேசுவின் எல்லா உவமைகளுக்கும் விளக்கம் தர முயலும் போது, இந்த உணர்வுதானே எழும்!

ஆனால், மற்றொரு கண்ணோட்டத்தோடு இதைப் பார்க்க விழைகிறேன். இயேசுவின் உவமைகள், அவரது கூற்றுகள்... ஏன்? விவிலியம் முழவதுமே ஒரு கடல். அந்தக் கடலில் ஒவ்வொரு முறை மூழ்கும்போதும், ஏதாவது ஒரு முத்தை கையில் ஏந்தி கரை சேர முடியுமே. இந்தக் கண்ணோட்டத்தோடு, உணர்வோடு நல்ல சமாரியர் என்ற இந்த உவமைக்குள் மூழ்குவோம். இன்றைய ஞாயிறு சிந்தனையில் இந்த உவமையைப் பற்றி பேசாமல், இந்த உவமையைச் சார்ந்த மூன்று அம்சங்களைப் பற்றி மட்டும் பேசுவோம்.

முதலில்... இந்த உவமைக்குத் தரப்பட்டுள்ள "நல்ல சமாரியர்" என்ற பெயர். இரண்டாவது... இந்த உவமையை இயேசு சொல்வதற்குத் தூண்டுதலாய் இருந்த கேள்வி. மூன்றாவது... இந்த உவமையின் இறுதியில் இயேசு தரும் ஆலோசனை.

தலைப்பு:
'நல்ல சமாரியர்' என்ற இந்தத் தலைப்பு எங்கிருந்து வந்தது? இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுவதாக, லூக்கா 10: 33ல் நாம் வாசிப்பது இதுதான்: "அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது..." சமாரியர் என்ற வார்த்தைதான் நற்செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நல்ல சமாரியர் என்ற வார்த்தைகள் கிறிஸ்துவ பாரம்பரியத்தில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள். இதேபோல், கல்வாரியில் இயேசுவுடன் அறையப்பட்டிருந்த இரு குற்றவாளிகளில் ஒருவரை நாம் 'நல்ல கள்வர்' என்று தலை முறை, தலை முறையாய் அழைத்து வருகிறோம். இதுவும் நற்செய்தியில் சொல்லப்படாத ஓர் அடைமொழி. கள்வர்களில் நல்லவர், கெட்டவரா? கேட்கச் சிரிப்பாய் இருக்கிறது.

யூதர்களிடம் யாராவது நல்ல சமாரியர் என்று சொன்னால், அவர்களும் இப்படி சிரித்திருப்பார்கள். சமாரியர்களில் நல்லவர்களா? இருக்க முடியாது என்பது அவர்களது தீர்மானம். இப்படி யூதர்கள் தாங்களாகவே தீர்மானம் செய்துகொண்ட, தாங்களாகவே இலக்கணம் வகுத்துக் கொண்ட பலர் உள்ளனர். வரி வசூலிப்பவர், ஆயக்காரர், தொழுநோயாளிகள், என்று பலருக்கும் யூதர்கள் வகுத்திருந்த இலக்கணம்... அவர்கள் நல்லவர்கள் இல்லை, கடவுளின் சாபம் பெற்றவர்கள். இந்த இலக்கணத்தை மாற்றி, இயேசு அவர்களில் பலரை நல்லவர்களாக்கி அரியணை ஏற்றியுள்ள நிகழ்ச்சிகளை நற்செய்தியில் வாசிக்கிறோம். இதுதான் இயேசுவின் அழகு.

நல்ல சமாரியர் என்ற இந்த இரு சொற்கள் லூக்காவின் இந்த உவமையைத் தாண்டி, நமது மனித குலத்தில் அன்று முதல் இன்று வரை பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு மனிதர் பிறருக்கு உதவி செய்கிறாரோ, அவருக்கு மதம், குலம், சமூக நிலை என்று எல்லாவற்றையும் கடந்து தரப்படுவது "அவர் ஒரு நல்ல சமாரியர்" என்ற அற்புதமான பட்டம். அந்த அளவுக்கு இவ்விரு சொற்களும் மனித குலத்தின் ஆழ் மனதில் இடம் பிடித்துள்ளன.

நல்ல சமாரியர், Good Samaritan என்ற வார்த்தைகள் இவ்வளவு புகழ் பெற்றவையா? இவ்விரு வார்த்தைகளையும் Google வழியாக இணைய தளத்தில் தேடிப்பாருங்கள், இந்த இரு வார்த்தைகளின் பெருமையை ஓரளவாகிலும் உணர்ந்து கொள்வீர்கள். Good Samaritan Hospital என்ற சொற்றொடருக்கு மட்டும் ஒரு நொடியில் Googleல் 12 லட்சத்து 60 ஆயிரம் தகவல்கள் கிடைத்தன. இன்னும் Good Samaritan Institute, Good Samaritan Award என்று ஒவ்வொன்றாகத் தேடினால், ஒரு நாள் முழுவதும் இந்தத் தேடலில் நாம் மூழ்கி, மூச்சடைத்துப் போவோம். நல்ல சமாரியர் என்பது அவ்வளவு சாதாரண வார்த்தைகள் அல்ல.

கேள்வி:
இரண்டாவது, இயேசு இந்த உவமையைச் சொல்லத் தூண்டுதலாய் இருந்த அந்தக் கேள்வியைப் பற்றி சிந்திக்கலாம். இயேசுவைத் தங்கள் அறிவுத்திறனால், கேள்விகளால் மடக்கி விட நினைத்த பரிசேயர், மறை நூல் அறிஞர், சட்ட அறிஞர்.. இவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர்களது கேள்விகளுக்கு இயேசு சொன்ன பதில்கள், அற்புதமான, காலத்தால் அழியாத கதைகளாய் நமக்கெல்லாம் கிடைத்த அரிய பரிசுகள். இப்படி சொல்லப்பட்ட கதைகளில், உவமைகளில் ஒன்று தான் நல்ல சமாரியர் உவமையும்.

இயேசுவை அணுகிய சட்ட அறிஞரின் முதல் கேள்வி மிகவும் ஆழமானது. நிலை வாழ்வை, நிறை வாழ்வை அடைய வழி என்ன என்ற கேள்வி ஒரு மனிதரின் உண்மையானத் தேடலைப் போல் ஒலிக்கிறது. ஆனால், இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள் வித்தியாசமாகச் சொல்கின்றன. இந்த உவமை கூறப்பட்ட பின்னணி இதோ: லூக்கா 10: 25-30

விடைகளைத் தெரிந்து கொண்டு கேள்விகள் கேட்பவர்களைப் பார்த்திருக்கிறோம். நம்முடைய நேரத்தையும் அவர்களது நேரத்தையும் வீணாக்கும் இவர்களைப் பார்த்து நான் எரிச்சல் அடைந்திருக்கிறேன். பல நேரம் பரிதாபப்பட்டிருக்கிறேன். நிலை வாழ்வைக் குறித்து, சட்ட அறிஞர் கேட்ட கேள்விக்கு அவரிடமே விடையை வரவழைக்கிறார் இயேசு.

அறிவுப் பூர்வமாய் சட்ட அறிஞர் சொன்ன அந்த பதிலோடு அவர் விடை பெற்றிருக்கலாம். அவரது அறிவுத் திறனைக் கண்டு மக்களும் வியந்திருப்பார்கள். ஆனால், அவர் விடுவதாயில்லை. அடுத்ததாய்க் கேட்டாரே ஒரு கேள்வி! எப்படிப்பட்ட கேள்வி அது!

"எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று அவர் கேட்டதும், சூழ இருந்த மக்கள், சீடர்கள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஒருவேளை இயேசுவே இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்படி அவர் கேள்வி கேட்டதை குழந்தைத் தனம் என்று ஒதுக்குவதா? இல்லை, குதர்க்கமாய்க் கேட்கிறார் என்று குற்றம் சாட்டுவதா?

இயேசு இந்தக் கேள்விக்கு விரிவாகப் பதில் சொல்கிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால், நிலை வாழ்வைப் பற்றி சட்ட அறிஞர் கேட்ட முதல் கேள்வி மிக முக்கியமான கேள்வி. அதற்கு இயேசு பெரிய விளக்கம் சொல்லியிருக்க வேண்டும். என் அயலவர், அடுத்திருப்பவர் யார் என்ற இந்தக் குதர்க்கமான கேள்விக்கு ஒரு இலேசான புன்னகையை உதிர்த்து விட்டு, இயேசு புறப்பட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதை விட, முக்கியமான பணிகள் இயேசுவுக்குக் காத்துக் கொண்டிருந்தன.

ஆனால், இயேசு இந்தக் கேள்விக்கு விரிவான பதில் சொல்கிறார். சட்ட அறிஞர் கேட்ட அந்தக் கேள்வியால் அதிர்ச்சியடைந்திருந்த யூதர்களுக்கு, இயேசுவின் இந்த பதில் இன்னும் அதிக அதிர்ச்சியைத் தந்திருக்கும். அயலவர், அடுத்திருப்பவர் தங்கள் குலத்தைச் சேர்ந்த இஸ்ராயலர் என்பது எல்லாருக்கும் தெரிந்த தெளிவான பதில். ஆனால், இயேசு சொன்ன பதில், சட்ட அறிஞர் கேட்ட கேள்வியை விட அதிக குதர்க்கமாய் ஒலித்திருக்க வேண்டும் யூதர்களுக்கு.

என் அயலவர், அடுத்திருப்பவர் யார்? இன்றும் இந்தக் கேள்விக்குப் பதில் தேடி வருகிறோம். ஜூலை 11 உலக மக்கள் தொகை நாள் என்று நாம் சிறப்பிக்கிறோம். இன்றைய கணக்குப்படி உலகில் 680 கோடிக்கும் அதிகமாய் மக்கள் இருப்பது உண்மை. இத்தனை பேர் இருந்தும், நமது அயலவரை, அடுத்தவரை இன்னும் தேடிக் கொண்டுதானே இருக்கிறோம்.

"இந்த உலகத்தைத் தாண்டி, விண்வெளியைக் கடந்து வெண்ணிலவில் காலடி வைத்து விட்டுத் திரும்பி விட்டோம். ஆனால், நம் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் காலடி வைக்கத் தயங்குகிறோம்." என்று நாம் வாழும் இந்தப் புதிரான காலத்தைப் பற்றி George Carlin என்பவர் கூறியுள்ளார். "என் அயலவர், அடுத்தவர் யார்?" என்று சட்ட அறிஞர் கேட்டது குதர்க்கமான கேள்வியாக இருக்கலாம். ஆனால், இதே கேள்வியைத் தானே இன்றும் நம்மில் பலர் கேட்டு வருகிறோம். எப்போது இதற்கு விடை கண்டு பிடிப்போம்?

பதில் (ஆலோசனை):
அயலவர் யார் என்ற கேள்விக்குப் பதில் தேட உண்மையிலேயே ஆவலாய் இருக்கிறோமா? பதில் தேடி கிடைத்து விட்டால், அது நம்மைப் பிரச்சனைகளில் சிக்க வைத்து விடும்.

அடுத்தவர் யார் என்று கேள்வி கேட்ட சட்ட அறிஞர் தன் அறிவுத் திறனை மக்கள் முன் பறைசாற்ற கேள்விகள் கேட்டார். பதிலுக்கு இயேசுவும் தனக்கு கதை சொல்லும் திறமை உண்டு என்பதை மக்கள் முன் பறைசாற்ற இந்த உவமையைச் சொல்லவில்லை. இயேசு தந்த பதில் வெறும் தத்துவ உண்மை அல்ல. நம் அறிவுப் பசிக்குத் தீனி போடும் வார்த்தை விளையாட்டல்ல. அடுத்தவர் யார் என்பதை இயேசு தெளிவுபடுத்தியதும், செயல்படச் சொன்னார்.

இதைத்தான் பிரச்சனை என்று நான் சொன்னேன். அடுத்தவர் யார் என்று நாம் கண்டுபிடித்து விட்டால், உடனே செயலில் இறங்க வேண்டும். இந்தச் செயல்கள் பல நேரங்களில் நம்மைப் பிரச்சனைகளில் சிக்க வைக்கும். இயேசு இந்த உவமையின் இறுதியில் சொன்ன வரிகள் நமது தோளை உலுக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்து... தேவைப்பட்டால், முகத்தில் அறைந்து நம்மைத் தூக்கத்திலிருந்து, மயக்கத்திலிருந்து எழுப்பும் வரிகள் இன்றைய நற்செய்தியின் இறுதி வரிகள்:

லூக்கா 10: 36-37
அடுத்தவர் யார் என்ற கேள்விக்குப் பதில் செயல் வடிவில் இருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
நாம் மேற்கொண்டுள்ள இந்த உலகப் பயணத்தில், தேவைகளில் இருப்பவர்களைக் கண்டதும், நமது பயணங்களை நிறுத்த வேண்டும். தேவையில் இருப்பவர்கள் யார் என்ற கேள்விகளை எழுப்பாமல், அவர்களது தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். முடிந்தால், அவர்களையும் நமது பயணத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லது, சுமந்து செல்ல வேண்டும். தேவைகள் நிறைவேறும் வரை மீண்டும், மீண்டும் உதவிகள் செய்ய வேண்டும்.

"நீரும் போய் அப்படியே செய்யும்."
நாமும் போய் அப்படியே செய்வோமா?
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ