ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

         புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா

    திருப்பலி முன்னுரை

    வருடாந்த ஞாயிறு வாசகம்    
 
 திருப்பலி முன்னுரை
 
வாழ்க்கை என்பது பயணம், அதில் நம்பிக்கை என்னும் நங்கூரம் கொண்டு நம் வாழ்வைத் துவங்கும் போது, மகிழ்ச்சிநிறை அக்களிப்புத் தோன்றுகிறது. ஆண்டவர் இயேசுவின் அமைதி கிடைக்கிறது. இத்தகைய இறை நம்பிக்கையில் தளராது, தன் வாழ்வுப் படகை ஓட்டி மகிழ்ந்தவர்தான் புனித சூசையப்பர். இறைவனைத் தன் வாழ்வின் முழுப்பாதுகாப்பும் அடைக்கலமாகக் கொண்டு, தன் வாழ்வைச் செம்மைப்படுத்திய வளனாரின் நம்பிக்கையுடன், நமது நம்பிக்கையையும் இணைத்து இறைவனுக்கு அர்ப்பணிப்போம். தன்மீது வைக்கும் நம்பிக்கை, நேர்மறையான சிந்தனை, கடவுள் நம்பிக்கை, பிறர்மீது வைக்கும் நம்பிக்கை, நமக்கப் புதிய பலத்தைக் கொடுக்க அருள் வேண்டுவோம். சூசையிடம் விளங்கிய பணிவு, அமைதி, தாழ்ச்சி, நேர்மை, தூய்மை, உழைப்பு இவைகளை வாழ்வாக்க உறுதிபூணுவோம். அவரவர் இருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்வோம். வீணான விமர்சனத்தை விலக்குவோம். உண்மையோடு, எதார்த்தத்தை கண்முன் கொண்டு, வாழ்வுப் பயணத்தைத் தொடர்வோம். பெற்றோர்கள் தம் மக்களை அறவழியில் நடத்திச் செல்ல புனித வளனாரை மேல்வரிச் சட்டமாகக் கொள்வோம். இதற்கான அருள் வேண்டுவோம். இதற்கான அருள் வேண்டுவோம். பலியில் இணைவோம்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. தந்தையே இறைவா!
உமது திருப்பணியில் தம் வாழ்வைச் செலவிட யோசேப்பைத் தூண்டினீர். உமது இறையரசை நோக்கி எமது உள்ளத்தைத் திருப்பி, நீதியை அனைத்திற்கும் மேலாக நாங்கள் நாடவும், அதன் வழியில் நடக்கவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் வானகத் தந்தையே இறைவா!
ஒவ்வொரு மனிதனும் உமது அழைப்பிற்குப் பணிந்து, வாழ்வின் ஏற்படும் எல்லாச் சூழலிலும் கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து, சாட்சியாகிட அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. படைப்பின் சிகரமே இறைவா!
பெற்றோர்கள் தம் மக்கட்செல்வங்ளை உமது அன்பின் வழியில் நடக்க பயிற்றுவிக்கவும், பெற்றோர் குழந்தைகளின் உறவு ஆளப்பட்டு அறவழியில் நடக்கவும் அருள் புரிய வேண்டுமென்று சூசைத் தந்தையின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் வானகத் தந்தையே இறைவா!
உமது படைப்புக்கள் அனைத்தின் மீதும் எமக்கு முழு அதிகாரம் அளித்து, உமது படைப்பாற்றலில் பங்கு கொள்ளவும் எம்மை அழைத்துள்ளீர், எமது கடமைகளில் பொறுப்புணர்வும், அக்கறையும் கொண்டு உமது மாட்சிக்காகவும், அனைத்து மக்களின் நல்வாழ்விற்காகவும் உழைக்க அருள் புரிய வேண்டுமென்று புனித சூசையப்பர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

5. பராமரித்தாளும் பரமனே இறைவா!
நாங்கள் வாழும் சமூகத்தில் நிலவுகின்ற தீமைகளுக்ஈக அடிமையாகாமல் உழைப்பு, நேர்மை, தூய்மை கொண்டு வாழ்ந்த சூசையப்பரைப் போல, நாங்கள் அவர் பாதுகாவலில் வழிநடக்க அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 

 ஒருமுறை ஒர் இளம் துறவி, வயது முதிர்ந்த புத்த பிட்சுவிடம் வந்து சுவாமி! நான் என்னுடைய வாழ்க்கையை நல்ல காரியத்திற்காக அர்ப்பணித்த பிறகும், அமைதியின்றி, நிம்மதியற்று வாழ்வதாக உணர்கிறேன் என்றார். உடனே அந்த முதிய துறவி, இளம் துறவியிடம், ஒரு பாத்திரத்தைக் கொடுத்து குளத்திலுள்ள கலங்கிய நீரை எடுத்து வருமாறு கேட்டுக் கொண்டார். இளம் துறவி குளத்தில் இருந்து நீரை முகர்ந்து கொண்டு வந்தார். பாத்திரத்தில் இருந்த நீர் கலங்கி, பாதி சேறாக இருந்தது. துறவி அதைப்பார்த்து பாத்திரத்தை ஒன்றும் செய்ய வேண்டாம். சிறிது நேரம் அப்படியே வைத்திரு என்றார். சிறிது நேரம் கழித்து அந்த பாத்திரத்தை உற்றுப்பார்த்தார். கலங்கியிருந்த நீர் தெளிவாக சுத்தமாக இருந்தது. பிறகு அந்த இளம் துறவியைப் பார்த்து, உன் வாழ்க்கையும் இது போன்றதுதான். வாழ்க்கையில் நாம் பல காரியங்களைச் செய்யும்போது, நம் மனம் அலைக்கழிக்கப்படுகிறது. ஆனால் சிறிது நேரம் அமைதியாக இருந்து, தியானிக்கும்போது மனமானது பாத்திரத்தில் உள்ள தண்ணீர் போலத் தெளிவாகி விடுகிறது என்றார்.

மரியா தூய ஆவியால் கருவுற்று இயேசுவை ஈன்றெடுத்த நிகழ்ச்சி மண் விண்ணைத் தொடுவதற்குச் சமம். மரியா கருவுற்றது யோசேப்பிற்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் புனித சூசையப்பர் ஒரு நேர்மையாளர். மரியாவை அவர் சந்தேகப்படவில்லை.

யூதர்களைப் பொறுத்தமட்டில் ~திருமணம்| இருகூறுகளை உடையது. முதலில் மண ஒப்பந்தம் செய்து கொள்ளல், பின்னர் மணமகன் மணமகளை தன் இல்லத்தில் ஏற்றுக் கொள்ளல். மண ஒப்பந்தம் செய்து கொண்ட ஆணும் பெண்ணும், கணவனும் மனைவியும ஆகின்;றனர். இருவரும் தனியே தத்தம் இல்லங்களிலேயே வாழ்ந்து வருவர். ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின் மணமகன் மணமகளை தன் வீட்டில் ஏற்றுக்கொள்வான். அதோடு திருமணம் முழுமை அடையும். சூசைக்கு மண ஒப்பந்தமாயிருந்த மரியாள் இந்த இடைப்பட்ட காலத்தில் தான் இயேசுவைக் கருத்தாங்கினாள்.

காட்டிக் கொடுத்தல்: இந்தச் செயலைச் செய்ய சூசை விரும்பவில்லை. திருச்சட்டத்தை நுணுநுணுக்கமாக அனுசரிப்பவர். சூசை நீதிமானாக (லூக். 1:6) விளங்கினாலும் மரியாவிடம் கொண்ட இரக்கமே கடினமில்லாத ஒரு தண்டனையைக் கொடுக்கும் முடிவுக்கு அவரை இட்டுச் சென்றது.

மரியாள் கல்லால் எறியப்பட்டு சாக வேண்டியது நியதி. (இச. 22: 20-21) நீதிமான் என்ற நிலையில் சூசை இதைத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவரின் இரக்கக்குணம் மேலோங்கியது. மரியாவை அவமானத்திற்கு ஆளாக்க மனம் இடம் கொடுக்கவில்லை. யாரும் அறியாத முறையில் மரியாவை விலக்கிவிட சூசை முயன்றார்.
அதே நேரத்தில் யூதச் சட்டத்தை கடைப்பிடிப்பவராகவும் விளங்குகிறார். மரியாளுக்க வரும் அவமானத்தையும் தடுத்து விடுகிறார். கனவு| முதல் இரு அதிகாரங்களில் ஐந்து முறை இடம் பெறுகிறது. மத். 1:20, 2:12, 13, 19, 22, யூத மக்கள் கனவை இறைவன் மக்களுடன் உறவாடக் கையாளும் ஒரு வழியாகக் கருதினார்கள். மரியாள் தூய ஆவியால் கருத்தாங்கி இருப்பதாகவும் அவளை மனைவியாக ஏற்றுக் கொள்வதால் திருச்சட்டம் கடைப்பிடிக்கப்படாமல் போகுமோ என அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் வானதூதர் உறுதி கூறுகிறார். சூசையும் உடனே அடிபணிகிறார்.

- யோசேப்பிற்கு (சூசைக்கு) தூதர் வழியாகப் பெற்ற வெளிப்பாடு மூன்று.
1. இது கடவுளின் திட்டம், தூய ஆவியின் வல்லமையால் இயேசு உருவாகியிருக்கிறார்.
2. பிறக்கும் குழந்தைக்கு இயேசு என்று பெயரிட சூசையப்பர் உரிமை பெறுகிறார்.
3. சூசையப்பர் தாவீது குலத்தில் தோன்றியவர் என்ற காரணத்தால் இயேசு தாவீதின் மகனாகும் உரிமையும் பெறுகின்றார்.
இவ்வாறு தூதர் வழியாக பெற்ற தெளிவு அனைத்தையும் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டு, அவரது திருவுளத்தை நிறைவேற்றினார். இறுதிவரை உறுதியாக இருந்தார். தந்தைக்குரிய பாசம், அன்பு, கரிசனையோடு இயேசுவை வளர்த்தார். சிறந்ததொரு குடும்பத் தலைவர். உழைத்துக் குடும்பத்தைக் காத்தார். இயேசுவின் வளர்ச்சியில் தன்னையே கரைத்துக் கொண்டார். அமைதி, அமைந்த மனம், பொறுமை, பணிவு இவருக்கு அழகு சேர்த்தது. தாவீதின் மரபில் வந்தவர். சூசை, வளன் என்று வீரமாமுனிவர் கூறுகிறார். வரங்களில் வளமுடையவராய் இருந்தமையால் வீரமாமுனிவர் வளன் என்றார். தம் மகனிடம் கேட்டு வரங்களைப் பெற்றுக் கொடுக்கும் வள்ளல். கற்பின் காவலர், நற்படிப்பின் பாதுகாவலர் ஆங்கிலத்தில் தழளநிhஇ எயடயn

           joseph,                                             valan

J - joy - மகிழ்ச்சி  -                         V - victory - வெற்றி
O - onenes  - ஒன்றித்திருத்தல்    A - aiespices  - ஆதரவாளர்
S - sanetimony - பக்திமான்         L - loyality - தேசப்பற்று மிக்கவர்
E - equanisity  -அமைதி, சாந்தம்  A - affection -  நல்லெண்ணம் கொண்டவர்,
P - probity  - நேர்மை அன்பானவர்.
H - holiness - புனிதம்               N - neatness  - நேர்த்தியானவர்

இந்த பண்புகள் நம்மில் வளர வேண்டுவோம். நம் வாழ்வில் பல பணிகளைச் செய்யும்போது, பல குழப்பம் தயக்கம் போன்றவற்றால் அலைக்கழிக்கப்படும் அனைத்தையும் நம்பிக்கையோடு இறைவனிடம் கையளிப்போம். நான் இறைவன் மீது நம்பிக்கை வைத்து தினமும் ஜெபிக்கவில்லையென்றால், இன்று நான் ஒரு பைத்தியக்காரனாக மாறியிருப்பேன் என்றார் காந்தியடிகள். நம் நம்பிக்கையைத் தளரவடாமல் அதில் ஊன்றியிருக்க அருள் கேட்போம்.
 

தாவீது குலத்தின் மாமணியே
தலைவன் இயேசுவின் தாதையே
வளன் என்னும் பெயருக்கு உரியவரே!
வளங்களை வளங்கும் வள்ளல் பெருமானே!
அன்னை மரியின் அன்புத் துணைவரே!
அண்டிவந்தவரை அரவணைத்து நிறைப்பவரே!
கடின உழைப்பும் நேர்மையும் உன் கவசம்!
கள்ளமில்லா உள்ளம் பணிவு உன் பொக்கிஷம்!
உழைத்து உயர்ந்திடுவதே உன் விருப்பம்!
அறிவு ஞானம் விவேகம் கொண்டவரே!
பகுத்து அறியும் ஆற்றல் நிறைந்தவரே!
தூய ஆவியில் மகன்வளர உடனிருந்தவரே!
உலகம் போற்றும் உத்தமரே!
தொழிலாளரின் மாதிரிகையே!
இல்லற வாழ்வின் அச்சாணியே!
கன்னியர்களின் காவலரே! கல்வியின் பாவலரே!
நன்மரண பேற்றை நல்குபவரே!
குடும்பங்களின் குலவிளக்காய் ஒளிர்பவரே!
துன்புறுவோரின் துயர் துடைக்கும் ஆறுதலே!
திருச்சபையின் பரிபாலகரே! சூசை மாமுனியே!
புதுமைகளின் நாயகரே! பூவுலகின் பாவலரே!
பெருந்துயரைப் போக்குபவரே! பொறுமையின் சிகரமே!
ஏழைகளின் காவலரே! ஏழ்மையின் அன்பரே!

அமைதிக்குப் பொருள் உன் வாழ்வு சொல்லும்,
இறையின் திட்டத்தை வாழ்வாக்கிய வீரரே!
உம் தூய வாழ்வு எம்மவர்க்குப் பாடம்
நும் புகழ் பாடிப் பரவி நிற்கிறோம்.
மறையுரைச்சிந்தனை ஞானஒலி.
திருப்பலி முன்னுரை

புனித சூசையப்பர் பெருவிழா
முன்னுரை


ஆழ்ந்த அமைதியில் இறைசெய்தியைக் கேட்டு, சந்தேகங்களை சந்தோசமாக மாற்றி, தெளிவடைந்து, அமைதியில் பணிந்து நடப்பதுவே அழகு என்று வாழ்ந்து காட்டிய தூயசூசையப்பரைப் போல் நாமும் வாழ வேண்டும் என்ற வேட்கை யோடு இந்த இறை சந்நதி முன் குழுமியுள்ள அன்பு இறைமக்களே, உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன்.

சூசையப்பர் தாவீதின் வழி வந்தவர், நேர்மையாளர், நீதிமான், அன்னை மரியாவுக்கு அனைத்திலும் உறுதுணையாக இருந்த உற்ற துணை. குழந்தை இயேசுவை கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்த அன்புத் தந்தை.

கடவுளின் திருவுளம் இதுதான் என்றால் அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று தனது வாழ்க்கை முழுதும் பிரமாணிக்கத் தோடு வாழ்ந்தவர்.

எல்லோரும் நல்லவரே, அனைவரும் நேர்மை யாளர்களே என்ற சிந்தனை உள்ளவர்களால் மட்டுமே நேர்மையாளர்களாக வாழ முடியும். அத்தகைய சிந்தனை கொண்ட சித்தராக, பண்பாளராக வாழ்ந்த சூசை, கன்னி மரியாவின் கணவர் என்பதை மகிழ்ச்சியோடு அறிக்கையிட்டு அதனை ஆனந்தமாகக் கொண்டாட திருச்சபை நம்மை அழைக்கிறது.

இல்லறமோ, துறவறமோ நாம் எந்த நிலையை தேர்வு செய்தாலும், இறைவன் நம்மை அழைத் திருக்கிறாரா இல்லையா? இவர் தான் அல்லது இவள் தான் என் வாழ்க்கை துணையா? என்று கேள்வி கேட்டுக் கொண்டே காலத்தைக் கடத்தாமல் தேர்ந்தெடுத்த வாழ்வில் புனித சூசையப்பரைப் போல் இறுதி மட்டும் உறுதியுடன் பயணம் செய்து வாழ்வை நிறைவு செய்ய இறையருளை வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.


புனித சூசையப்பர் பெருவிழா
மன்றாட்டு


அன்புத் தந்தையே இறைவா, திருச்சபையின் தலைவரான எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள் மற்றும் அருட்பணியாளர்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும். எல்லாவற்றிலும் உம்மையே முழுமையாக தேடி, உமக்குத் தொண்டு செய்வதையே எந்நாளும் தம் கடமை என்று வாழ்ந்த தூய வளனாரைப் போல் இவர்கள் வாழவும், அவர் கொண்டிருந்த ஆன்மீகம், அவர் கடைபிடித்த கடவுள் பக்தி, அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கை ஆகியவற்றை இவர்கள் பெறவும், அதன் மூலம் சிறந்த ஞானத்தையும், நிதானத்தையும், நிறை வாழ்வையும், நிம்மதியையும் அவர்கள் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று புனித சூசையப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


உனது குடும்பமும், உனது அரசும் உறுதியாக இருக்கும் என்று தாவீதுக்கு நம்பிக்கை அளித்த அன்பு தந்தையே இறைவா, புனித சூசையப்பரை குடும்பங்களின் பாதுகாவலராகத் தந்தமைக்காக உம்மை போற்றுகிறோம். அவரது நன்மாதிரியை பின்பற்றி நேர்மையாளராக வாழவும், பிறர் மீது நல்லெண்ணம் கொண்டோராய் வாழவும், அவரைப் போல் மௌனத்தில் உம்மைத் தேடியும், உழைப்பில் உம்மைக் கண்டும் வாழ அருள் புரிய வேண்டுமென்று தூய சூசையப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


அன்புத் தந்தையே இறைவா, தனது வாழ்வில் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலும் சரியான முடிவெடுத்து, யாருக்கும் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்து காட்டிய புனித சூசையப்பரைப் போல் எங்களது வாழ்வில் விடை காண முடியாத பல கேள்விகள் எங்களை வாட்டுகிறபோது, அவற்றை பொறுமையோடும், நம்பிக்கையோடும் எதிர்கொண்டு வெற்றிப் பெறவும், உமது விருப்பத்தை கண்டுணர்ந்து கடமை உணர்வோடு வாழவும் அருள் செய்ய வேண்டுமென்று புனித சூசையப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


குடும்பங்களின் தலைவரான இறைவா, எங்களது குடும்ப வாழ்க்கை விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் முழுமையாக உணர்ந்து வாழவும், கணவன் மனைவியாகிய நாங்கள் ஒருவரையொருவர் நிபந்தனையின்றி ஏற்று, குறை நிறைகளை ஒன்றாக பாவித்து வாழும் மனப்பக்குவத்தையும், முதிர்ச்சியையும் தாரும். எங்கள் அன்பில் விளைந்த எங்கள் பிள்ளைகளை ஞானத்திலும், ஒழுக்கத்திலும் வளர்த்து தூய வளனாரின் திருக்குடும்பம் போல் எங்கள் குடும்பமும் திகழ அருள்புரிய வேண்டுமென்று புனித சூசையப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.
தொழிலாளரான புனித யோசேப்பு

தச்சனின் மகன்

இன்று உழைப்பாளர் தினம். இன்று தூய வளனாரை தொழிலாளர், உழைப்பாளி எனக் கொண்டாடி மகிழ்கிறது தாய்த்திருச்சபை.

அம்மா, அப்பாக்கள் சாதாரண கூலி வேலை செய்வதை பிள்ளைகள் அவ்வளவு எளிதாக வெளியில் சொல்வதில்லை. ஒரு டாக்டரின் மகன், ஒரு பொறியாளரின் மகன், ஒரு வழக்குரைஞரின் மகன், ஒரு ஆசிரியரின் மகன் என உள்ள வட்டத்தில் மில்லுக்கு வேலை செய்யும் ஒருவரின் மகன் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். 'உங்க அப்பா என்ன வேலை செய்றார்?' என்ற கேள்விக்கு பெரும்பாலும் அவர் 'மில் சூபர்வைசர்' என்று பதில் சொல்வார்.

வேலையை நாம் அதன் கூலி மற்றும் செய்முறையை வைத்து நல்ல வேலை, கெட்ட வேலை என்று பிரித்துவிடுவதால்தான் அதைச் செய்பவர்களையும் நல்லவர்கள், கெட்டவர்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என பிரித்துவிடுகின்றோம்.

'இவர் தச்சனின் மகன் அல்லவா!' இயேசுவைக் காயப்படுத்த அவரின் சமகாலத்தவர் கையாண்ட ஒரு பெரிய உத்தி அவரின் பழைய காலத்தை நினைவூட்டுவது. பழைய காலத்தை ஒருவருக்கு நினைவூட்டுவதன் மூலம், 'நீ ஒன்னும் பெரிய ஆளு இல்ல!' 'நீ தச்சனின் மகன்தான்!' 'உனக்கு எப்படி விவிலியம் தெரியும்?' 'உனக்கு எப்படி திருச்சட்டம் தெரியும்?' 'உனக்கு எப்படி வல்லசெயல்கள் செய்யத் தெரியும்?' என்று மறைமுகமாகக் கேட்டனர் இயேசுவின் சமகாலத்தவர். ஆனால் இயேசு ஒருபோதும் இதற்கு எதிர்வினை ஆற்றவே இல்லை.

'ஆம். நான் தச்சனின் மகன்தான்' என்று ஏற்றுக்கொள்வதுபோல இருக்கிறது அவருடைய மௌனம்.

மற்றவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். ஆனால் இயேசு தன்னை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவே இல்லை. தன்னை ஏற்றுக்கொள்பவரே தன்னை முழுமையாக வளர்த்தெடுக்க முடியும். வளர்த்தெடுத்த தன்னை மற்றவருக்குக் கொடுக்க முடியும்.

உழைப்பு சில காலம்தான் என்பதை நாம் உணர வேண்டும். 70 வருடம் வாழ்கின்ற வாழ்க்கையில் நாம் 25 முதல் 55 வரை வெறும் 30 ஆண்டுகள்தாம் உழைக்கிறோம். 25க்கு முன்னும் 55க்கு; பின்னும் நாம் உழைக்கவில்லை என்றாலும் நம் இயல்பில் ஒன்றும் குறைவுபடுவதில்லையே. ஆக, உழைப்பை இரசிக்கும் அளவுக்கு ஓய்வையும் நாம் இரசிக்க வேண்டும். பல நேரங்களில் ஓய்வு வேலை செய்வதற்கான தயாரிப்பு என பார்க்கப்படுகிறது.

ஆகையால்தான் உழைப்பை பற்றி பேசுகின்ற இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 90) ஆசிரியர், 'ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்' என்று வேண்டிவிட்டு, வேகமாக 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்' என்கிறார்.

உழைப்பின் தினமாகிய இன்று கடவுள் தந்த இந்த மனித உழைப்பிற்காக, மனித உழைப்பின் பிதாமகன் ஆதாமுக்காக நன்றி கூறுவோம்.

உழைப்பு மட்டும் இல்லையென்றால் கடவுளிடம் கையேந்துபவர்களாக நாம் நின்றிருப்போம். உழைப்பு மட்டுமே கடவுளோடு நம்மைக் கைகோர்க்க வைக்கிறது. உழைப்பால் நாம் கடவுளின் உடன்படைப்பாளர்கள் ஆகிறோம்!



உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

அருள்திரு. யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்டம்


 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி