ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

        தூய ஆவியானவர் பெருவிழாழா

    திருப்பலி முன்னுரை


வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
B தவக்காலம்1
கடவுள் ஒளியானவர். அவரைக் கண்களால் பார்க்க முடியாது. பத்தாயிரம் சூரியன்களின் ஒளியைவிடப் பிரகாசமானவர். பலியான இயேசு நற்கருணையில் நம்மோடு வாழ்கின்றார். தூய ஆவியார் நாள்தோறும் ஆற்றல் அளித்து புனிதப்படுத்தி தந்தையோடும் மகனோடும் நம்மை இணைக்கிறார்.

மூவொரு இறைவனின் மக்களே! படைப்புகளை பராமரித்து வாழ்வோம். நற்கருணையில் இயேசுவோடு ஒன்றிப்போம். தூயஆவியின் தூண்டுதலுக்குப் பணிந்து, அவரது வழி நடத்தலுக்கு ஏற்ப நடப்போம். கடவுளை அடைவதில் உண்மையான மகிழ்ச்சி காண்போம். அனைவரையும் அன்பு செய்து வாழ்வோம். மூவொரு இறைவனில் சொர்க்கத்தைக் காண்போம்.

பூக்கள் பூத்துக் கிடக்கும் இடம் நந்தவனம். அருள் கொட்டிக் கிடக்கும் இடம் ஆலயம். இந்த ஆலயத்தில் நம்மோடு உரையாடி அருள் பொழிய வந்திருக்கும் இறைவனிடம் படைப்புகளை பாதுகாத்து வாழ வரம் கேட்போம். பலியினில் பக்தியோடு பங்கெடுப்போம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.மூவொரு கடவுளாகிய ஆண்டவரே!
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள் அனைவரையும், நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியை கேட்டு வாழ்ந்த மக்களினத்தாரைப் போல ஆசீர்வதியும். அவர்கள் நல்வழியில் பிளவின்றி ஒருவர் ஒருவரோடு இணைந்து திருச்சபையை வழிநடத்த, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எம்மை அன்போடு வழிநடத்தும் மூவொரு தந்தையே!
இந்த நாட்டை ஆளும் தலைவர்கள் கடவுளின் ஆவியால் இயக்கப்படவும் நல்ல முறையில் நாட்டை ஆளவும், ஒற்றுமையோடு இருக்கவும், நாட்டை அமைதியின் வழியில் நடத்தவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்று மொழிந்த மூவொரு இறைவா!
கடவுளின் பிள்ளைக்குரிய மனப்பான்மையோடு எம் பங்கை வழிநடத்தும் பங்கு குருவோடு நீர்தாமே இருந்து பங்கை சிறப்பாக வழிநடத்த, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.அன்பின் மூவொரு தந்தையே!
இன்று அன்போடு கூடியிருக்கும் எங்களைப் பாரும். அப்பா தந்தையே என அழைக்கும் எங்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன தேவை என்பதை நீர்தாமே அறிந்திருக்கிறீர். உம் பிள்ளைகளுக்கு உரிய உரிமைப்பேற்றைக் கொடுத்து எங்கள் ஒவ்வொருவரின் நல்ல கருத்துக்கள் நிறைவேற்ற, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.நலன்களின் நாயகனே மூவொரு தேவா!
நோயால் வாடும் அனைத்து நோயாளிகளையும் உம் பாதத்தில் வைக்கிறோம். 'உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும்' என்ற வார்த்தையின்படி அவர்களுக்கு தேவையான நற்சுகத்தையும், ஆறுதலையும் கொடுக்க உமது அருளை வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. படைப்புகளை படைத்து பாதுகாத்து வரும் பரம்பொருளே இறைவா!
மரங்களை வெட்டும்போதும், மனிதத்தை சிதைக்கும்போதும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுகிறது. மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்கவும், மனிதத்தை வளர்த்து மக்களைப் பாதுகாக்கவும் இங்கே கூடியுள்ள அனைவருக்கும் அருள் பொழியுமாறு, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்

1964 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், பரிசுத்த தந்தை ஆறாம் சின்னப்பர் இயேசு பிறந்த பாலஸ்தீன் நாட்டிற்குத் திருயாத்திரையாகச் சென்றார். இயேசு ஞானஸ்நானம் பெற்ற யோர்தான் நதிக் கரையை அடைந்ததும், முழந்தாள்படியிட்டு, யோர்தான் நதித் தண்ணீரில் தம் கைகளை நனைத்துக் கொண்டே விசுவாசப் பிரமாண ஜெபத்தை ஜெபித்தார்;. கிறிஸ்துவ மறையின் அடிப்படை உண்மைகள் எல்லாம் விசுவாசப் பிரமாண ஜெபத்தில் அடங்கி உள்ளன. ஒரே கடவுள் மூன்று ஆட்களாக உள்ளார் என்ற உண்மை யோர்தான் நதிக்கரையில் வெளிப்படுத்தப்பட்டது. சுதனாகிய இயேசு ஸ்நாபக அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெற்றபோது, "இவரே என் அன்பார்ந்த மகன், இவரிடம் நான் பூரிப்படைகிறேன்." என்று பிதா வானிலிருந்து கூறினார். அப்போது வானம் திறக்க, கடவுளின் 'ஆவியானவர்' புறாவைப் போல் இறங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியின் வழியாக ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார் என்ற உண்மையை அறிகின்றோம்.

உடனே வானம் திறந்ததையும், கடவுளின் ஆவி புறா இறங்குவதைப் போலத் தம்மீது வருவதையும் இயேசு கண்டார். அப்பொழுது "இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. (மத்தேயு 3:16,17).

திருமதி ஆரோக்கியமேரி ஒரு ஆசிரியை. மிகுந்த பக்தியுடன் தனது கல்விப்பணியை சிறப்பாக செய்பவர். தனது குடும்பத்தை இறைவனிடம் முழுமையாக ஒப்புக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர். தன் கணவரையும் இரு ஆண் பிள்ளைகளையும் பக்தியிலும் ஒழுக்கத்திலும் நடத்திச்செல்பவர். ஆலயவழிபாட்டிலும், தனி செபத்திலும் மிகுந்த ஈடுபாட்டுடன் தவறாது பங்கேற்பவர். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் பரிசுத்தமாய் வாழ விரும்பி இடைவிடாது செபிப்பவர். தனது கடமையை சிறப்பாக செய்பவர்.

ஒரு மாலை வேளையில் தனக்கு அறிமுகமான அருட்சகோதரி ஒருவர் நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டு அவரை சந்திக்கச் சென்றிருந்தார். அப்படியான வேளையில், அவருக்கு அவரது பதினோரு வயதுப்பையன் போன் செய்து அம்மா உங்களைத் தேடி ஆன்ட்டி ஒருவர் கண்ணீரோடு வந்திருக்கிறார். உடனே வாருங்கள்" என்றான்.

வீடு திரும்பிய ஆசிரியையைக் கண்டவுடன் அங்கே வங்திருந்த பெண்மணி ஓவென அழத் தொடங்கிவிட்டாள். தனது கணவர் அயல்நாட்டில் வேலைபார்த்து வருகிறார். தற்போது விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் இருப்பதாக தகவல் வந்தது. கடவுள் மீது நம்பிக்கை கொண்டவரிடம் சொல்லி அவருக்காக செபியுங்கள். அவர் உடல் நலம் பெறுவார் என்று நான் அழுதபோது ஆறுதல் சொன்னார்கள். எனக்கு உடனே உங்கள் நினைவு வந்தது ஆகவே இங்கே வந்தேன். அவரது பெயர் ஹரிஹரன் அவருக்காக செபியுங்கள் என்று சொன்னார். அந்த ஆசிரியை உடனே அந்தப் பெண்மணிக்காக செபிக்கத் தொடங்கினார். கண்ணீரோடு வந்த பெண்மணியும் ஆறுதலோடு வீடு திரும்பினார். அந்த ஆசிரியை தன்னோடு பணிபுரிபவர்களிடம் இதுபற்றி பேசும் போது, இதுதான் கடவுளின் மறை பொருள். கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்தும் ஆற்றலை பிதா, சுதன், பரிசுத்தஆவி என மூவரும் இணைந்து செய்கின்றார்கள். இதுதான் தமதிருத்துவத்தின் வேலை எனக் குறிப்பிடுகிறார்.

பிளவுபடாத அன்பும், வேலையில் ஒருங்கிணைவும், துயரத்தில் ஆறுதலும், நோயில் நற்சுகமும் தருபவர் இந்த தமதிருத்துவ வடிவத்தில் இருக்கும் மூவொரு கடவுளாகிய தேவன்.

அந்த மாயஜால வித்தைக்காரன் ஒரு போர்வையை எடுத்து உதறி ஒன்றுமில்லை எல்லோரும் பாருங்கள் என்றான். பின் அந்தப் போர்வையை தரையில் விரித்து அதன் மீது மூன்று குழந்தைகளைப் படுக்க வைத்து மூட்டையாக கட்டிவிட்டான். உள்ளே எத்தனை குழந்தைகளைக் கட்டி வைத்தேன் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து கேட்டான். மூன்று என்று கூட்டத்தார் கோ~ம் போட்டார்கள். அந்த மாயஜால வித்தைக்காரன் இப்போது பாருங்கள் அந்த மூவரும் எப்படி? என்று சொல்லிக் கொண்டு ஆ....ஊ...ஓ....என கத்திக் கொண்டு மூட்டையைப் பிரித்தான். அங்கே வெளிப்பட்டவர் வயது முதிர்ந்த ஒரு பெரியவர்.
இதுபோன்ற மாயவித்தையோ, கண்கட்டி வித்தையோ அல்ல நமது கடவுளின் பிரசன்னம். தந்தை, மகன், தூயஆவி தங்களுக்குள் எந்த வேறுபாடும் இன்றி, தங்கள் பணியை தங்கு தடையின்றி, தொய்வு ஏதுமின்றி நமக்காய் செய்து வருகிறார்கள். படைப்பின் தேவன் நம்மை பலப்படுத்த, மகனை பாடுகள் பல அனுபவிக்க அனுப்பியபோது, மகன் மறுக்கவில்லை. வேதனையின் உச்சத்தில் உடனிருந்து ஆறுதலை அளிக்க தந்தைக் கடவுளும் தவறவில்லை. தூய ஆவியின் துணையோ உறவுகளை உறுதிபடுத்துவதில் வேற்றுமை பாராட்டவில்லை.

இப்படியாக மகன், தந்தை, துணையாளர் என மூவரும் வேறுபாடின்றி இணைந்து இயங்குவது நம் குடும்பங்களில் குழப்பமின்றி பணியை லேசாக்கவும், பகிர்தலை தாராளமாக்கவும், சுமையை குறைக்கவும், ஒற்றுமையை வளர்க்கவும், புரிதலை கூடுதலாக்கவும் நமக்கு மாதிரியாக மறைபொருளாக மூவரும் இணைந்திருக்கின்றார்கள்.

'அப்பா தந்தையே' என பாசத்தோடு நாம் அழைக்கும் போது கடவுள் தம் திருமுக ஒளியை நாமிருக்கும் திசையை விட்டு வேறு திசைக்கு அனுப்புவாரா?

'உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருப்பேன்' என வாக்களித்த அன்பின் ஆண்டவர் நாம் துன்புறும்போது, தான் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டு நம்மைத் தனியே தவிக்க விட்டுவிடுவாரா?

இயேசு உலகெங்கும் சென்று தம் சீடர்கள் போதிக்க வேண்டும் எனப் பணிக்கிறார். இந்த கட்டளை நமக்கும் தானே?  நாம் இயேசுவின் சீடர்கள் தானே?

அப்பா தந்தாய் என அழைக்கும் உரிமை தந்தவர் நம்மை அடிமையாக்குவாரா?
உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? சின்னக் குழந்தையிடம் பாசம் மிகுந்த பெற்றோரை சுட்டிக் காட்டி கேட்கும்போது, அம்மாவும் பிடிக்கும் அப்பாவும் பிடிக்கும் எனச் சொல்லும் குழந்தையைப்போல தந்தையும் பிடிக்கும், மகனும் பிடிக்கும், தூயஆவியும் பிடிக்கும் எனச் சொல்லும் மனநிலை நம்மிடம் உள்ளதா?

மூவுலகையும் படைத்து ஆளும் வேந்தனை நினைத்துவிட்டால் எந்தப் பிரச்சனைக்கும் நம்மை அடையாளம் தெரியாது தானே?

மறைபொருளின் உட்பொருளை இறைவழிபாட்டால் உறுதிப்படுத்துகிறாரே இதயத்தில் உள் வாங்குகிறோமா?

நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் நலம்தரும் செயல்கள் பலனாகக் கிடைக்க இறைவனின் கட்டளைகளையும் நியமங்களையும் கடைபிடிக்கவேண்டும் என்ற செய்தி நமக்குத் தெரியும் அதைக் கடைபிடிக்கிறோமா?

படைப்புப் பொருட்களைப் பேணிப் பாதுகாக்க நமக்கு உரிமையும் உண்டு, கடமையும் உண்டு. சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது என வருந்தும் நாம் ஏன் மாசுபடுகிறது? அதைத் தடுக்க என்ன செய்யலாம்? என யோசிக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம். மரங்களை வெட்டுவதை தவிர்ப்போம். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.

பிறரால் உலகம் மாசுபடுகிறது என்ற சிந்தனையை அகற்றி, நம்மால் மாசுகளை களைய முடியும் என்ற சிந்தனையுடன் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம். 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 நான் உங்களோடு!

இணைச்சட்டம் 4:32-34, 39-40
உரோமையர் 8:14-17
மத்தேயு 28:16-20

"லைக் தெ ஃப்ளோயிங் ரிவர்" என்ற தனது புத்தகத்தில்"பவுலோ கொயலோ' பின்வரும் நிகழ்வைப் பதிவு செய்கின்றார்: "பைஜாமா அணிந்த மனிதர்." 2005ம் ஆண்டு மே மாதம் 25ம் நாள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரின் ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பில்"பைஜாமா அணிந்த ஒருவர் இறந்து கிடந்தார்' என்ற செய்தி வந்தது. யாராவது ஒருவர் இறந்தால் அவர் இல்லத்தில் அல்லது மருத்துவமனையில் தம் நண்பர்கள், உறவினர்கள் சூழ இருந்திருப்பார். அவர் இறந்த இடம் இல்லமோ, மருத்துவமனையோ அல்ல. பாழாய்ப்போய்க் கிடந்த 25 மாடிக் கட்டிடத்தை உடைக்க தொழிலாளர்கள் சென்றபோது ஒரு அறையில்"பைஜாமா அணிந்த ஒருவர் படுத்துக்கிடந்தார். பைஜாமா அணிந்த ஒரு எலும்புக்கூடு படுத்துக்கிடந்தது. அந்த எலும்புக்கூட்டின் அருகே 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் நாள் வெளியான செய்தித்தாள் ஒன்று கிடந்தது. அங்கே விரித்து வைக்கப்பட்டு தூசி நிரம்பியிருந்த மேசை நாட்காட்டியும் அதே நாளைத்தான் காட்டியது.இவர் யார் என்று விசாரித்தபோது, இவர் ஒரு பெரிய பிஸினஸ்மேன் என்றும், இவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டபின் இவருடைய மனைவி இவரைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்றும், இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றும் கண்டுபிடிக்கின்றனர்.

ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஒருவர் இந்தப் பூமிப்பந்திலிருந்து மறைந்து போயிருக்கிறார். அவரைத் தேடியவர் யாருமில்லை. டோக்கியோ நகரம் மின்னணு இணைப்பில் மேலோங்கி நிற்கின்ற நகரம். இப்படிப்பட்ட நகரத்திலும் தொலைந்துபோன இவரைத் தேடியவர் யாரும் இல்லை.

பைஜாமா அணிந்து கிடந்த இந்த மனிதர் அனுபவித்த ஒரே உணர்வு தனிமை. தனிமை என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல. அது ஒரு செயல்பாடு. ஏனெனில் அந்த உணர்வு ஒருவருக்கு வந்தவுடன் அவர் மற்றவர்களைவிட்டு தனியே சென்றுவிடுகின்றார். அல்லது தனித்துவிடப்படுகின்றார்.

இன்று மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். தனிமை இனிமை அல்ல என்று நமக்கச் சொல்கிறது இன்றைய பெருவிழா.

'இவ்வாறு, முதலும் முடிவுமற்ற உண்மையான இறைத்தன்மையை அறிக்கையிடும்போது,

ஆள்வகையில் தனித்தன்மையையும்,

இறையியல்பில் ஒருமையையும்,

மகத்துவத்தில் சமத்துவத்தையும் ஆராதிக்கின்றோம்!'

என்று இன்றைய நாளின் மறைபொருளைப் பதிவு செய்கிறது இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை (பழைய மொழிபெயர்ப்பு).

மூவொரு இறைவனில் காணப்படும் தனித்தன்மையும், ஒருமையும் தனிமை அன்று. மாறாக,"இதோ நான் உங்களோடு இருக்கிறேன்' என்று அவர்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் வாக்குறுதி.

மனிதன்-மனிதை ஒரு சமூகப் பிராணி - ஆகையால்தான் இவர்கள் தனிமையை உணர்கிறார்கள் - என்கிறது சமூக அறிவியல்.

குறைவு மனப்பான்மை (sense of lack), இழப்பு (sense of loss), அன்பு (sense of love)' - இந்த மூன்றும்தான் மனித தனிமை உணர்வுக்கான அடிப்படையான காரணிகள் என்கிறது உளவியல். குறைவு மனப்பான்மை என்பது நமக்கு எல்லாம் இருந்தும் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு, "நான் அடுத்தவரைப் போல இல்லையே" என்று சொல்லும் மனநிலை. இந்த மனநிலையில் அடுத்தவர் எதிரிபோல நமக்குத் தோன்றுவதால் நாம் அவரிடமிருந்து மெதுவாக விலகிவிடுகிறோம். இழப்பு நமக்கு உரிமையான ஒன்றை அல்லது ஒருவரை இழக்கும்போது வருகிறது. நம்மிடமிருந்த வீடு அல்லது பணம் பறிபோய்விட்டால், அல்லது நமக்குரியவர் ஒருவர் இறந்துவிட்டால் மற்றவர்மேல் - அது கடவுளாக இருந்தாலும் - நாம் நம்பிக்கையை இழந்துவிடுகிறோம். அடுத்தவர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்ற உணர்வு நம்மைத் தனிமையில் தள்ளிவிடுகிறது. குறைவு மனப்பான்மையும், இழப்பும் நமக்குத் தனிமையைத் தருகின்றன என்பது சரி. ஆனால், அன்பு எப்படி தனிமையைக் கொண்டுவரமுடியும்? நாம் நமக்கு உரியவரை, விருப்பமானவரை அன்பு செய்தாலும் நம்மிடமிருக்கின்ற அன்பு என்ற அந்த உணர்வு அடங்கிவிடுவதில்லை."இன்னும் நான் நிறைய பேரை அன்பு செய்ய வேண்டும்?" என் வாழ்வு நிறைய பேரைத் தொட வேண்டும்? என்ற ஏக்கத்தை அது நம்மில் உருவாக்கிவிடுகிறது. இந்த நிலையில்தான் நாம் புதிய வேலை, புதிய நண்பர்கள், புதிய சுற்றத்தார் என புதியவற்றைத் தேட ஆரம்பிக்கிறோம். இந்தத் தேடலே நம்மைத் தனிமையில் விட்டுவிடுகிறது. ஏனெனில் இந்தப் புதிய தேடலில் நாம் புதியவற்றோடும் இல்லாமல், பழைய நண்பர்களோடும் இல்லாமல் போய்விடுகிறோம். முதல் இரண்டு தனிமை காரணிகளும் சீக்கிரம் மறைந்துவிடும். ஆனால், இந்த மூன்றாம் காரணி நம் வாழ்வு முழுவதும் நம்மைத் தொற்றிக்கொண்டே வருகிறது.

மூவொரு இறைவனின் மறைபொருளை நாம் புரிந்துகொள்ள முடியுமா? விவிலியமும் பாரம்பரியமும் இதற்கு மூன்று முயற்சிகள் எடுத்துள்ளன:

1. விவிலியம் காட்டும் மூவொரு இறைவன். தொநூ 1:1ல் (மற்றும் 1:26, 3:22, 11:7, எசாயா 6:8, 48:16, 61:1) கடவுளின் பெயர் 'எலோஹிம்' (கடவுள்கள்!) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் மூவொரு இறைவனுக்கு முதல் அடிக்கல். கடவுள் தன்னை ஒருமையில் அல்ல, பன்மையில் அழைக்கிறார். இப்படிப் பலராக இருக்கும் கடவுள் பலர் அல்லர், ஒருவரே என்றும் உறுதியாகச் சொல்கிறது விவிலியம் (இச 6:4, 1 கொரி 8:4, கலா 3:20, 1 திமொ 2:5). சில இடங்களில் தந்தை என்னும் கடவுள் தன் மகனிடம் உரையாடுவதாகவும் நாம் வாசிக்கின்றோம் (எசா 48:16, 61:1, லூக் 4:14-19). இயேசுவின் திருமுழுக்கின் போது தந்தையாகிய இறைவன் பேசுவதாகவும், தூய ஆவியானவர் புறா வடிவில் இறங்குவது போலவும், மகனாகிய இயேசு யோர்தான் நதிக்கரையில் நின்று கொண்டிருப்பதாகவும் எழுதுகிறார் மத்தேயு (3:16-17)."தந்தை-மகன்-தூய ஆவி' என்று திருமுழுக்கு ஃபார்முலா ஒன்றைச் சொல்லிக்கொடுக்கின்றார் இயேசு (மத் 28:19). 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!' என்று கொரிந்து நகரத் திருச்சபையை வாழ்த்தி தன் மடலை நிறைவு செய்கின்றார் பவுலடியார். (இந்தப் பவுலடியாரின் வார்த்தைகளைக் கொண்டே நாம் திருப்பலியின் தொடக்கத்தில் இறைமக்களையும் வாழ்த்துகின்றோம்!). மூவொரு இறைவன் தங்களுக்குள் தனித்தன்மை கொண்டிக்கிறார்கள் (தொநூ 19:24, ஓசே 1:4, திபா 2:7, நீமொ 30:2-4, எண் 27:18) என்றும், தமதிருத்துவத்தின் ஒவ்வொரு நபரும் கடவுள் (யோவா 6:27, உரோ 1:7. 1பேதுரு 1:2, யோவா 1:1, திப 5:3-4, 1 கொரி 3:16) என்றும் நாம் வாசிக்கின்றோம். மேலும் தமதிருத்துவத்தின் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு பணி இருக்கின்றது (1 கொரி 8:6, திவெ 4:11, யோவா 3:16-17, 14:10). மேலும் ஆபிரகாமை மம்ரே என்ற இடத்தில் கடவுள் சந்தித்த போதும் (தொநூ 18:2), இயேசு தாபோர் மலையில் உருமாறிய போதும் (மத் 17:1-13), அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை அறிவித்த போதும் (லூக் 1:5), இயேசுவின் அருள்மொழிகளிலும் (மத் 11:27, யோவா 1:18) மூவொரு இறைவனின் வெளிப்படுதலை விவிலியத்தில் பார்க்கின்றோம்.

2. தமதிருத்துவத்தை இரண்டு நிலைகளில் புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: (அ) இயல்புசார்ந்த தமதிருத்துவம், (ஆ) பணிசார்ந்த தமதிருத்துவம். இயல்புசார்ந்த புரிதலில், தந்தை, மகன், தூய ஆவியார் மூன்றுபேரும் கடவுள் என்பதும், ஒருவரின் பிரசன்னம் மற்றவரோடு தொடர்புடையதல்ல என்றும் சொல்லப்படுகி;றது. பணிசார்ந்த புரிதலில், தமதிருத்துவத்தின் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றனர் (தந்தை - படைப்பது, மகன் - மீட்பது, தூய ஆவி - பராமரிப்பது) என்று சொல்லப்படுகிறது. முதல் ஏற்பாட்டு காலத்தை 'தந்தையின்' காலம் என்றும், நற்செய்தி நூல்களை"மகனின்' காலம் என்றும், திருத்தூதர் பணிகள் மற்றும் மடல்களை"ஆவியின்' காலம் என்றும்கூட சிலர் பிரிக்கின்றனர். பணிசார்ந்த புரிதல் இந்து மதத்திலும் இருக்கின்றது. பிரம்மா-விஷ்ணு-சிவா என்னும் மும்மூர்த்திகள் முறையே படைத்தல்-காத்தல்-அழித்தல் வேலைகளைச் செய்கின்றனர். ஆனால், இவர்கள் மூன்று-ஆள்-ஒரு-கடவுள் அல்லர். மாறாக, மூன்று-ஆள்-மூன்று-கடவுள்கள்.

3. தமதிருத்துவமும் உருவகங்களும். ஒன்றின் பொருளை மற்றொன்றோடு தொடர்பு படுத்தி அறியச் செய்பவை உருவகங்கள். தந்தை-மகன்-தூய ஆவி என்பதை கணவன்-மனைவி-பிள்ளை (தந்தை-தாய்-பிள்ளை) என குடும்ப உறவு உருவகம், திடம்-திரவம்-ஆவி என தண்ணீர் உருவகம், ஓடு-வெள்ளை-மஞ்சள்கரு என முட்டை உருவகம், கிளாவர் எனப்படும் இலை உருவகம், முக்கோணம் உருவகம் என நாம் உருவகங்களைக் கையாளுகின்றோம்;. ஆனால் உருவகங்கள் வெறும் நிலவைச் சுட்டிக்காட்டும் விரல்கள்தானே தவிர அவைகள் நிலவு அல்ல என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். உருவகங்கள் எந்த அளவுக்கு எதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றனவோ, அந்த அளவுக்கு எதார்த்தை மறைக்கவும் செய்கின்றன. சில நேரங்களில் உருவகங்கள் ஆபத்தானவைகளாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, என் அப்பா எந்நேரமும் வீட்டில் சண்டையிடுபவராக, என் அம்மாவை அடிப்பவராக, பிள்ளைகளிடம் கோபப்படுபவராக இருந்தால், நான் எப்படி தந்தை அன்பானவர் என்றும் அந்த அன்பே தூய ஆவியானவர் என்றும் உணர முடியும். மேலும், தந்தை-தாய்-பிள்ளை என தமதிருத்தவத்தை உருவகிக்கும்போது மற்றொரு பிரச்சனையும் வருகிறது. தமதிருத்துவத்தில் வரும் மூன்று பேரும்"ஆண்கள்'. அவர்களுக்கு 'மனைவி' அல்லது"தாய்' என்ற உருவகம் எப்படிப் பொருந்தும்?

இப்புரிதல் ஓரளவுக்கு தெளிவாக இருந்தாலும், தொடக்கத் திருஅவையிலும் இன்றும் தமதிருத்துவம் பற்றி ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன:

அ. இயேசு மனிதராகப் பிறந்தபோது தமதிருத்துவத்தில் குறை ஏற்பட்டதா?

ஆ. இயேசு பிறப்பிலேயே கடவுளின் மகனா, அல்லது"நீ என் அன்பார்ந்த மகன்' என்று திருமுழுக்கின்போது தத்தெடுக்கப்பட்டாரா? (அடாப்ஷன்)

இ. இயேசு சிலுவையில் இறந்தபோது, அவர் மட்டும் இறந்தாரா? அல்லது அவரோடு சேர்ந்து மூவொரு இறைவனும் இறந்தாரா? அவர் மட்டும் இறந்தாhர் என்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்? மூவொரு இறைவனும் இறந்தார் என்றால், அந்த இரண்டு நாட்கள் நாம் கடவுள் இல்லாமல் இருந்தோமா?

ஈ. இவர்கள் மூவரும் மூன்று கடவுளர்களா?

உ. தந்தை-மகன் என்று நாம் அழைக்கும்போதே, ஒருவர் மற்றவரைவிட மேலாக அல்லது முதன்மையாக இருக்கிறார் என்று ஆகிவிடுகிறது இல்லையா? (சப்ஆர்டினேஷனிசம்)

ஊ. கடவுள் ஒருவர்தான். ஆனால் அவர் மூன்று பேராக தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார். முதல் ஏற்பாட்டில் யாவே என்றும், இரண்டாம் ஏற்பாட்டில் இயேசு என்றும், தொடர்ந்து திருச்சபை வரலாற்றில் தூய ஆவி என்றும் தன்னை வெளிப்படுத்துகின்றார். (மோடலிசம்). ஆக, தமதிருத்துவம் என்பது ஒரு வெளிப்பாடே அன்றி அது இறைஇயல்பு அல்லவே?

எ. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை மனிதர் என்று சொல்வது மனித இனம் மற்ற உயிர்களிடமிருந்து தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளும் ஆணவத்தின் வெளிப்பாடு இல்லையா?

இந்தக் கேள்விகளையும் தாண்டி நாம் மூவொரு இறைவன் என்னும் மறைபொருளை நம்பவும், புரிந்துகொள்ளவும் வேண்டுமெனில், நாம், 'தமதிருத்துவம் எப்படி?' என்ற கேட்பதை விடுத்து, 'தமதிருத்துவம் ஏன்?' என்று கேட்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவராகிய இறைவனின் அரும்பெரும் செயல்களைத்"தெரிந்துகொள்ளவும்,' 'நினைவுகூறவும்,'"பின்பற்றவும்' அழைப்பு விடுக்கின்றார். கடவுளின் இந்தச் செயல்கள் தொடக்கத்தில் அவர்,"நான் உங்களோடு' என்ற வாக்குறுதியை நமக்குத் தருகின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில்"தூய ஆவி அருளும் வாழ்வு' என்றால் என்ன என்பதைப் பற்றி உரோமைத் திருஅவை இறைமக்களோடு தன் கடிதம் வழியாக உரையாடும் பவுலடியார்"தூய ஆவி என்பது நம்மில் இருக்கும் ஒரு மனப்பான்மை' என்ற புதிய அடையாளத்தை தூய ஆவியானவருக்குக் கொடுக்கின்றார். இந்தத் தூய ஆவியானவர் இறைமக்களின் உள்ளத்தில் இருப்பதால் இறைமக்களுக்குக் கிடைப்பது என்ன? அ."கடவுளின் மக்கள்' என்ற அடையாளத்தை இவர் தருகின்றார். ஆ. கடவுளை"அப்பா, தந்தையே' என அழைக்கும் உரிமையைத் தருகின்றார். இ. நாம் கடவுளின் பிள்ளைகள் என்று மற்றவர்களிடம் சான்று பகர்கின்றார்.

முதலில்"தந்தை-மகன்' உறவு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். நம் தமிழில் மற்றவர்ளை அழைக்கும்போது,"அம்மா' என்று பெண்களிடம் எளிதாக நாம் பயன்படுத்துவதுபோல,"அப்பா' என்பதை ஆண்களிடம் எளிதாகப் பயன்படுத்துவதில்லை. அல்லது பயன்படுத்த இயலவில்லை. அப்படிப் பயன்படுத்தினாலும், அதில் ஒரு சொல்லமுடியாத தூரம் இருக்கின்றது. நான் என் அப்பாவை,"அப்பா' என்று அழைப்பதும், என் நண்பனின் அப்பாவை"அப்பா' என்று அழைப்பதும் ஒன்றா? என் அப்பாவை நான்"அப்பா' என அழைக்கக் காரணம், அவருக்கும் எனக்கும் உள்ள"உடல்முறை உறவு' - அதாவது என் அப்பாவின் உயிரணுவின் ஒரு மாற்று வடிவமே நான். என் நண்பனின் அப்பாவை நான்"அப்பா' என அழைக்கக் காரணம், அவருக்கும் எனக்கும் உள்ள"உடல்முறை உறவு' அல்ல. மாறாக, எனக்கும் என் நண்பனுக்கும் இடையே உள்ள நட்பு. ஆக, எனக்கருகில் இருக்கும் என் நண்பனோடு இருக்கும் நட்ப, எனக்குத் தூரத்தில் இருக்கும் அவனது அப்பாவையும்,"அப்பா' என்று அழைக்க எனக்கு உரிமை அளிக்கிறது.

இயேசு கடவுளை,"அப்பா' என அழைப்பதற்கும், நான் கடவுளை,"அப்பா' என அழைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இயேசு"அப்பா' என அழைக்கக் காரணம், கடவுளுக்கும், அவருக்கும் இடையே இருக்கும் 'உடல்முறை உறவு'. நான்"அப்பா' என அழைக்கக் காரணம் இயேசுவுக்கும், எனக்கும் இடையே இருக்கும்"உடன்பிறப்பு முறை' உறவு அல்லது நட்பு.

இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது, தூய ஆவியானவருக்கு 'உறவு' என்ற புதிய அடையாளம் பிறக்கின்றது. எனக்கும், என் நண்பனுக்கும் இடையே உள்ள உறவை நான்"நட்பு' என பெயரிடுகிறேன். அதேபோல தந்தைக்கும், மகனுக்கும் அல்லது இயேசுவுக்கும் நமக்கும் இடையே இருக்கும் உறவை"தூய ஆவி' எனப் பெயரிடுகின்றோம். ஆக, தூய ஆவி மேல்நோக்கியும் செயலாற்றுகின்றார். சமநிலையிலும் செயலாற்றுகின்றார். இந்த இரண்டு நிலைகளிலும் அவர் உறவாக இருக்கின்றார்.

அவர் உறவாக இருக்கின்றார் என்று சொல்வது நம்மை அடுத்த கட்ட சிந்தனைக்கு அழைக்கிறது. உறவு என்றால் அங்கே இரண்டு பரிமாணங்கள் உண்டு: ஒன்று, அகப் பரிமாணம். இரண்டு, புறப் பரிமாணம். அகப் பரிமாணத்தில், நான் என் நண்பனோடு கொண்டுள்ள உறவை நட்பாக என் மூளையில் பதிவு செய்கிறேன். புறப் பரிமாணத்தில், நான் அவனோடு பேசுகிறேன், அன்பளிப்பு கொடுக்கிறேன், வெளியே சாப்பிடச் செல்கிறேன் அல்லது சேர்ந்து இருக்கிறேன். இரண்டு பரிமாணமும் இணைந்திருந்தால் தான் உறவு முழுமையடைகிறது.

தூய ஆவியானவரின் பிரசன்னமும் இந்த இரண்டு பரிமாணங்களை என்னில் கொண்டிருக்கின்றது. அகப் பரிமாணத்தில்,"நான் கடவுளின் மகன் அல்லது மகள்' என்ற புத்துணர்வை இது தருகின்றது. புறப் பரிமாணத்தில், கடவுளை"என் அப்பா' என அழைக்கும் உரிமைப்பேறு தருகின்றது. இந்தப் புறப் பரிமாணம் மற்றவர் முன் ஒரு சான்றாகவும் அமைகின்றது. என்னைப் பார்க்கும் எனக்கு அடுத்திருப்பவர்,"இதோ! இவர் கடவுளின் மகன்! அல்லது மகள்!' என்று சொல்லத் தொடங்குகின்றார்.

இவ்வாறாக, தூய ஆவியானவர் எனக்கு கடவுள் பிள்ளை என்ற உரிமையையும், கடவுளை அப்பா என்று அழைக்கும் பேற்றையும், மற்றவர்கள் என்னைப் பார்த்து"இவர் கடவுளின் மகன்' என்று சொல்லும் சான்றையும் தருகின்றார்.

மூவொரு இறைவனைக் குறித்த புரிதலில், இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வது என்னவென்றால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே இருக்கும் உறவு தூய ஆவி. கடவுளி;ன் மகன் இயேசுவுக்கும், நமக்கும் உள்ள உறவிற்குப் பெயரும் தூய ஆவியே. ஆக, தூய ஆவியானவர் கடவுளைச் சார்ந்தவர் மட்டுமல்லர். உங்களையும், என்னையும் சார்ந்தவர் அவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விண்ணேற்றம் அடையுமுன் தன் சீடர்களுக்கு மறைத்தூது கட்டளை கொடுத்ததோடு, இறுதிவரை தன் உடனிருப்பையும் வாக்களிக்கின்றார்.

மூவொரு இறைவன் நமக்கு விடுக்கும் செய்தியும் இதுதான்: "நான் உங்களோடு"

'கடவுள் - நான் - அடுத்தவர்' - இந்த மூன்றும்தான் இன்றைய மூவொரு இறைவனின் உருவகம். அவர் என்னிடம்,"நான் உங்களோடு' என்று வாக்களிக்கின்றார் என்றால், நான் ஒருவர் மற்றவரிடம் 'நான் உங்களோடு' என்று சொல்லும்போது மூவொரு இறைவன் என்னில் உயிர்பெறுகிறார்."இம்மானுவேல்' ('கடவுள் நம்மோடு') என்ற கடவுளின் முதல் வாக்குறுதியே இயேசுவின் இறுதி வாக்குறுதியாகவும் இருக்கிறது.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில்"நான்' என்பதும்,"எனது' என்பதும் ஒன்றே.

இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறேன்.

"நான் உங்களோடு" - இதுவே அவரின் மையம். இந்த மையம் நம் மையமாகட்டும்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
மூவொரு இறைவன் பெருவிழா

"உலக முடிவுவரை எந்நாளும் நம்மோடு இருக்கும் மூவொரு இறைவன்!

ஒருமுறை ஒரு நகரப் பங்கில் உறுதிபூசுதல் கொடுப்பதற்காக ஆயர் அவர்கள் சென்றிருந்தார்கள்.

வழிபாட்டின்போது ஆயர், பின்வரிசையில் உறுதிபூசுதல் பெற இருந்த சிறுமி ஒருத்தியிடம், "மூவொரு கடவுள் என்றால் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, "ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கின்றார்" என்று பதிலைச் சொன்னாள். ஆனால், சிறுமி சொன்னது ஆயரின் காதில் சரியாக விழாமல் போகவே, அவர் மீண்டுமாக அந்தச் சிறுமியிடம், "நீ சொன்னது எனக்கு சரியாக விளங்கவில்லை. மீண்டுமாக அதைச் சொல்" என்றார். சிறுமியோ, "மூவொரு கடவுளைப் பற்றி முழுமையாக விளக்கமுடியாது, அது ஒரு மறைபொருள். அதை அப்படியேதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று சொன்னதும், ஆயர் மிகவும் ஆச்சரியப்பட்டுபோய், அந்தச் சிறுமியை வாழ்த்தினார்.

ஆம், "மூவொரு இறைவன்" என்பது ஒரு மறைபொருள், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் ஒழிய, அதை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம்.

இன்று நாம் மூவொரு கடவுளது பெருவிழாக் கொண்டாடுகின்றோம். இவ்வேளையில் இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். மூவொரு கடவுளைக் குறித்து திருமறைச் சுவடியில் சொல்லப்படுகின்ற விளக்கம், "யாதொரு வேறுபாடும் இன்றி, மூவருக்கும் ஒரே அன்பு அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்".

மூவொரு கடவுளான தந்தை, மகன், தூய ஆவி இவர்கள் மூவரும் எப்படிப்பட்டவர்கள், இவர்கள் எத்தகைய பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள் என இன்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம் தந்தைக் கடவுளைக் குறித்து மிகத் தெளிவாக விளக்குகின்றது. அங்கு மோசே மக்களைப் பார்த்துக் கூறுகின்றார். நெருப்பின் வழியாகப் பேசிய கடவுளை, அடிமைப்பட்டுக் கிடந்த இனத்தை மீட்டு, ஒரு நாட்டையே உரிமைச் சொத்தாகத் தந்த கடவுளை வேறு எங்கேனும் பார்த்ததுண்டா?" என்று. ஆம், கடவுள் என்றால் அவர் வானுலகில் உறைகின்ற கடவுள் கிடையாது, மண்ணுலகில் மக்களோடு மக்களாக இருந்து செயல்படக் கூடியவர் என்பதைத்தான் மேசேயின் வார்த்தைகள் நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. ஆகையால், தந்தைக் கடவுளை வரலாற்றில் செயல்படுகின்ற கடவுளாக நாம் புரிந்துகொள்ளலாம்.

தூய ஆவியாரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார், "நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு தூய ஆவியார் சான்று பகர்வார் என்பார். பவுலடியாரின் வார்த்தைகள் உண்மையிலும் உண்மையான வார்த்தைகள். ஏனென்றால், ஆண்டவர் இயேசு தூய ஆவியாரைக் குறித்துச் சொல்கின்றபோது, "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்" என்பார். (யோவா 15:26) ஆகையால், தூய ஆவியார் கடவுளை/ ஆண்டவர் இயேசுவைக் குறித்து சான்று பகற்கின்றவர் என நாம் உறுதியாகச் சொல்லலாம்.

தூய ஆவியார் ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகர்வதோடு மட்டுமல்லாமல், நாம் சான்று பகர்வதர்கான வலுவினையும் தெம்பினையும் தருகின்றார் என்பது உண்மையாக இருக்கின்றது. பெந்தகொஸ்தே நாளில் அதுவரைக்கும் அஞ்சி அஞ்சி வாழ்ந்த இயேசுவின் சீடர்கள், மிகப்பெரிய மக்கள் கூட்டத்திற்கு முன்பாக மிகத் துணிச்சலாக நற்செய்தியை அறிவிக்க முடிந்தது என்றால், அது தூய ஆவியினால் அருட்பொழிவாலன்றி வேறெதுவும் இருக்க முடியாது. எனவே, தூய ஆவியார் ஆண்டவர் இயேசுவைக் குறித்து சான்று பகர்கின்றவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், நாம் இயேசுவைக் குறித்து சான்று பகர்வதற்கும் துணையாய் இருக்கின்றார் என்பது உண்மையாகின்றது.

ஆண்டவர் இயேசு யார் எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது .தூய பவுல், "நாம் கிறிஸ்துவின் பங்காளிகள் என்பார். கிறிஸ்து நமக்குப் பங்காளி என்றால், அவர் நம்முடைய சகோதரர் என்பதே உண்மை. எப்படிப்பட்ட சகோதரர் என்று பார்க்கும்போது, நமது மீட்புக்காக துன்பங்களையும், பாடுகளையும் ஏற்றுக்கொண்ட சகோதரர் என்றுதான் சொல்லவேண்டும். ஆகையால், இயேசுவை நம்முடைய சகோதரர், நமக்காக துன்பப்பட்ட சகோதரர் என்றுதான் நாம் சொல்லவேண்டும்.

சகோதர அன்பிற்கு உதாரணமாகச் சொல்லப்படுகின்ற ஒரு கதை.

அது அறுவடைக் காலம். அப்போது ஓர் ஊரில் இருந்த உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் அவ்வூரில் இருந்த பண்ணையாரை அணுகி, "ஐயா! நாங்கள் இருவர் மட்டுமே சேர்ந்து உங்கள் வயலில் விளைந்திருக்கும் நெல்லை அறுத்து அதனை மூட்டையாகக் கட்டி களஞ்சியத்தில் சேர்கின்ற வரை எல்லா வேலைகளையும் செய்து தருகின்றோம். ஆனால், நீங்கள் எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளமாகத் தரவேண்டும். அது சம்மதமில்லை என்றால், நாங்கள் வேறு ஆட்களைப் பார்த்துக்கொள்கின்றோம்" என்றார்கள். அதைக் கேட்ட பண்ணையார், "நீங்கள் இருவரும் மட்டுமே வேலைசெய்வது என்பது நல்லதுதான். ஆனால், பத்தாயிரம் என்பது அதிகமான தொகை. ஏன் இவ்வளவு பெரிய தொகையைக் கேட்கின்றீர்கள். இந்த பத்தாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு அப்படி என்ன செய்யப் போகின்றீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு சகோதர்களில் ஒருவன் அவரிடம், "ஐயா! எங்களோடு பிறந்தது மொத்தம் மூன்று பேர். நான், இவன், வீட்டில் இருக்கின்ற இன்னொரு சகோதரன். அந்த சகோதரனோ கால் ஊனமுற்றவன், அவனால் எங்கேயும் சென்று வேலை செய்யமுடியாது. அவனுடைய வாழ்க்கையையும் நாங்கள் பார்க்கவேண்டும் அல்லவா, அதனால்தான் அவனுக்கும் சேர்த்து நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கின்றோம்" என்றார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பண்ணையார் அவர்கள் இருவரும் தங்களுடைய கால் ஊனமுற்ற சகோதரன் மீது கொண்டிருக்கும் அன்பைக் கண்டு மெச்சினார்.

பின்னர் அவர் அவர்களிடம், "நீங்கள் சொன்னவாறே வேலையைச் செய்துமுடித்துத் தந்தால், நான் உங்களுக்கு நீங்கள் கேட்ட தொகையினைத் தருகின்றேன்" என்றார். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடங்கினார்கள். ஏறக்குறைய ஒருவார காலம் அவர்கள் கடுமையாக உழைத்து, பண்ணையாரின் நிலத்தில் விளைந்திருந்த நெல்லை அறுத்து, அவற்றை அவருடைய களஞ்சியத்தில் சேர்த்தார்கள். சகோதரர்கள் இருவரும் செய்த வேலைப் பார்த்துவிட்டு, "நான் நினைத்ததைவிடவும் மிக நன்றாக வேலை செய்திருக்கின்றீர்கள். அதனால் நீங்கள் கேட்டதைவிடவும் அதிகமான தொகையை, நான் உங்களுக்கு சம்பளமாகத் தருகின்றேன். இதை வைத்து உங்களுடைய சகோதரனை நன்றாகப் பராமரித்துக்கொள்ளுங்கள்" என்றார்.

தங்களோடு பிறந்த கால் ஊனமுற்ற சகோதரனுக்காக அந்த சகோதர்கள் இருவர் கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்தது போன்று, இயேசு கிறிஸ்துவும் அவருடைய சகோதர சகோதரிகளுக்காக - நமக்காக - பல்வேறு துன்பங்களையும், பாடுகளையும் அனுபவித்தார் என்பதுதான் உண்மை. அவர் பட்ட பாடுகளின் வழியாக அவர், தன்னுடைய சகோதர சகோதரிகளாகிய நம்மீது எத்துணை அன்பு கொண்டிருக்கின்றார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். ஆகையால், இயேசுவை நம்முடைய சகோதரன் என அழைப்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

இதுவரைக்கும் மூவொரு கடவுள் எப்படிப்பட்டவர் என்று சிந்தித்த நாம், இந்த மூவொரு கடவுள் நம்மிடம் எத்தகைய பணியைச் செய்ய அழைப்புவிடுக்கின்றார், அவருடைய பணியைச் செய்யும்போது அவருடைய பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்வார், "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள்" என்று. ஆம், நற்செய்தியை அறிவிப்பதும், ஆண்டவர் இயேசு கட்டளையிட்டவற்றை மக்கள் கடைபிடிக்கச் செய்வதுதான் அவருடைய வழியில் நடக்கும் நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கின்றது.

நற்செய்தி அறிவிப்பு என்பது வெறுமென ஆண்டவருடைய வார்த்தைகளைப் மக்களுக்குப் போதிப்பது மட்டும் இல்லை, அதனை நாம் வாழ்ந்து காட்டுவது, நம்முடைய வாழ்வையே நற்செய்தியாக மக்களுக்கு விளங்கச் செய்வது, தேவைப்பட்டால் உயிரையும் தருவது அதுதான் உண்மையான நற்செய்தியாக இருக்கும். நாம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை வார்த்தைகளால் மட்டுமல்ல, வாழ்வாலும் அறிவித்து, மக்களை ஆண்டவர் பக்கம் கொண்டுவருகின்றபோது அதுதான் மிகச் சிறந்த நற்செய்தி அறிவிப்புப் பணியாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆண்டவர் இயேசு நமக்குக் கொடுத்த நற்செய்தி அறிவிப்புப் பணியினைச் செய்கின்றபோது அவருடைய பராமரிப்பு எப்படி இருக்கும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கத் தவறவில்லை. இன்றைய நற்செய்தியின் இறுதியில் நாம் வாசிக்கின்றோம், "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கின்றேன்" என்று. ஆம். தன்னுடைய பணியினைச் செய்கின்ற இறையடியார்களை ஆண்டவர் இயேசு ஒருபோதும் கைவிடுவதில்லை, அவர்களைக் கண்ணின் கருவிழி போல பார்த்துக்கொள்வார் என்பதுதான் நிதர்சனம்.

ஆகவே, மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், அவர்களிடம் இருக்கும் அன்பையும், அவர்கள் நம்மீது செலுத்தும் அன்பினையும் உணர்ந்துகொள்வோம், அது மட்டுமல்லாமல், இந்த நாளில் அவர் நமக்கு விடுக்கின்ற நற்செய்தி அறிவிப்புப் பணியினை சிறப்புடன் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ