ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 பொதுக்காலம் 8 ஆம் - ஞாயிறு  

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)

பொதுக்காலத்தின் எட்டாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே!

உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம். இன்றைய வாசகங்கள் நம் மனதில் உண்மை நிலையை உணர்ந்து வாழ்ந்திட அழைப்பு விடுக்கிறது. பிறரைத் திருத்துவதற்கு முன் நம்மில் என்ன மாற்றம் தேவைப்படுகிறது என நாம் கேட்டுப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். புனித வாழ்வு என்பது பிறரன்பைப் பொறுத்தே அமைகின்றது. தவறுக்குத் தவறு செய்யாமல், தீமைக்குத் தீமை செய்யாமல் பிறரை மன்னிக்கும் மேலான நிலைக்கு உயர்ந்து வர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நல்ல இதயம் உள்ளவர்களாக மாறும் போதுதான் நாம் கடவுளைப் போலத் தூயவர்களாக, நிறைவுள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவுக்கு நாம் தரும் பதில் தான் என்ன? குற்றம் காணும் போக்கினை நாம் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் நம் சகோதரர் சகோதரிகள் மன மாற்றம் பெற்று நல்மனிதராக மாறிட வேண்டும் என்னும் நோக்கத்தோடு அவர்களைத் திருத்திடவும் நாம் முயல வேண்டும். அப்போது சிறிய துரும்பைப் பெரிதுபடுத்தாமல், பெரிய மரக்கட்டையைக் கவனியாது விட்டுவிடாமல், நாம் தெளிந்த பார்வை உடைய மனிதராக மாறுவோம். தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. நலன்களுக்கெல்லாம் தொடக்கமும் நிறைவுமாகிய இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் எத்தகைய துன்பங்கள் சோதனைகள் வந்தாலும் இறை நம்பிக்கைக் குறையாமல் உமது அன்பின் சாட்சிகளாக நற்செய்திகளின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வாக மாற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியாக வாழ்ந்திடத் தேவையான வரங்களை அருள்மிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா! எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பரிவன்பமிக்க எம் தந்தையே, இறைவா! எம் பங்கிலுள்ள ஏழைகள், திக்கற்ற எளியோர்கள், வறியோர்கள், முதியோர்கள், அனாதைகள் ஆகிய அனைவருக்கும் இரக்கம் காட்டும். அவர்கள் நோய்நெடியின்றி வாழ அவர்களுக்கு நலம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நம்பிக்கையின் புகலிடமே! எம் இறைவா! குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம், சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து அதன்படி பிறருடன் உன்னதப் பண்புடன் நடந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கருணைக் கடலாகிய எம் இறைவா! புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

6. கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா! எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா! எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 
மறையுரை சிந்தனைகள்


 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.

வார்த்தை என்னும் வண்ணஜாலம்

குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுடன் ஓர் ஊரைக் கடந்து மறு ஊருக்கு செல்கின்றார். இவரையும் இவரது போதனைகளையும் பிடிக்காத ஒருவன் இவர்கள் எதிரே வந்து தகாத வார்த்தைகளால் பேசுகின்றான். குரு தனது முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் அவனைக் கடந்து செல்கின்றார். சீடர்களுக்கோ ஆச்சரியம் எப்படி இவரால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது என்று. ஆச்சரியத்தை அடக்க முடியாமல் சீடன் ஒருவன் குருவிடம் இதைக் குறித்து கேட்டும் விடுகிறான். குரு அவனுக்கு பதில் மொழி ஒன்றும் கூறாமல் அழுகிய நிலையில் இருந்த ஒரு பழத்தை கொடுத்து உண்ண சொல்கின்றார். அவன் அதை வாங்க மறுக்கிறான். குரு அவனை வற்புறுத்தி உண்ண சொல்கின்றார். இவனும் பழம் அழுகிய நிலையில் இருக்கிறது இதனை உண்டால் என் உடல் நிலை கெட்டு விடும் ஆகையால் இதனை தன்னால் வாங்கி உண்ண முடியாது என்று மறுபடியும் மறுக்கிறான். குரு அதற்கு மறுமொழியாக,இந்த அழுகிய பழம் போல் தான் அந்த மனிதனின் வார்த்தைகளும். ஒன்றிற்கும் உதவாது அதனை நாம் ஏற்று மனதிற்குள் செலுத்தினால் நமது மனம் உடைந்து விடும். நமது வாழ்க்கைக்கும் பயன்படாது. எனவே நம்மை எதிர்கொள்ளும் அனைவரின் சொற்களையும் நாம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எது நமக்கு நன்மை தருமோ எது நம் வாழ்விற்கு வளம் சேர்க்குமோ அதை மட்டும் ஏற்றால் போதும் நம்முடைய வாழ்வு நலமாக மாறும் என்றார்.

வார்த்தை வாழ்வளிக்கும் என்பதே இன்றைய வாசகங்கள் அனைத்தும் உணர்த்தும் பாடம். சொல் எனும் மந்திரம். சில சொல் ஆக்கும் சில சொல் அழிக்கும். சில சொல் படைக்கும் சில சொல் பாழாக்கும். சிலருடைய வார்த்தைகள் நம் மனதிற்கு இதமளிக்கும். சிலருடைய வார்த்தைகள் நம் மனதைக் காயப்படுத்தும். தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்து அமைதியடைந்து இருக்கும் சூழலில் இருக்கின்றோம். எத்தனை விதமான வாக்குறுதிகள், எண்ணிலடங்கா வசன கவிதைகள். சிலரின் வார்த்தை வாழ்வாகின்றது. சிலரின் வார்த்தை வானில் கரைந்த புகையாகின்றது இன்றைய வாசங்கங்கள் வழி நமது வார்த்தை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன. நமது வார்த்தைகள் தரமானதாக , திடம் தருவதாக, வலிமையூட்டுவதாக இருக்க அழைக்கின்றன.

வார்த்தையின் தரம்:
வார்த்தையின் தரத்தினை மேம்படுத்த சொல்லில் உரையாடலில் கவனிக்கும் முறையில் நாம் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். நமது சொல் நெருப்பில் சுடப்பட்ட கலன் போல உடையாமல் உறுதியாக இருக்க வேண்டும்.
மரத்தின் கனி போல உரையாடலில் இனிமை இருக்க வேண்டும்.

பிறரைப் புகழ்ந்து பேசும் வார்த்தைகளை விட அவர்களின் சொற்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் யார் எப்படிப் பட்டவர் என்பதை அவர் பேசும் முன் புகழாதே அவர் பேச்சைக் கொண்டே அறிந்து கொள் என்கின்றது முதல் வாசகம். சல்லடையில் தங்கும் உமி போல நமது பேச்சின் முடிவும் சாரமும் நாம் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கிறது. சூளையில் பரிசோதிக்கப்படும் கலன் போல நம்முடைய உரையாடல் நமது தரத்தை வெளிப்படுத்துகிறது.

ஆக தரம் என்பது பொருட்களுக்கு மட்டுமல்ல வார்த்தைகளுக்கும் முக்கியம். இன்று சில இடங்களில் வார்த்தைகளின் தரம் மிக மலிந்து போய்விட்டது. தரமற்ற பொருளுக்கே மதிப்பில்லாத போது தரமற்ற வார்த்தைகளுக்கும் அதனை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் மதிப்பில்லாமல் போகிறது. வார்த்தையின் தரம் நிரந் தரமாக இருக்க முயற்சிப்போம்.

திடமான வார்த்தை:
சிலரது வார்த்தைகள் கடினமான சூழலையும் இலகுவாக்கிவிடும். சிலரது வார்த்தைகள் கலகலப்பான வாழ்வையும் கலவர பூமியாக்கிவிடும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம் பெரும் பவுலடியாரின் வார்த்தைகள் சோர்ந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு திடமளிப்பதாக உள்ளது. உறுதியாயிருங்கள். நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து இன்னும் அதிகமாக பணி செய்யுங்கள். என்று திடமான வார்த்தைகளின் மூலம் நம்முடைய வாழ்விற்கு திடமளிக்கின்றார். உறுதி, நிலைத்து நிற்றல், நம்பிக்கை மனம் கொண்டு வார்த்தைகளில் செயல்படுத்த அழைக்கின்றார்.

வலிமையான வார்த்தை:
நற்செய்தி வாசகத்தில் இயேசு மூன்று விதமான வலிமைகளை எடுத்துரைக்கின்றார்.
1. உன்னை பார்.
2. உள்ளத்தைப் பார்.
3. உயர்வைப் பார்.

1. உன்னை பார்
இன்று நம்மில் பலர் செய்ய மறக்கும் மறுக்கும் செயல் இது. தன்னைப் பார்க்காமல் பிறரைப் பார்ப்பது. நம்மிடம் இருக்கும் ஆயிரம் குறைகள் நம் கண்களுக்கு தெரிவதில்லை ஆனால் பிறரிடம் இருக்கும் ஒரு சிறு குறை நம் கண்களுக்குள் சென்று உறுத்திவிடும். அதனால் தானோ என்னவோ இயேசு உன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து விடு அதன்பின் உன் சகோதரன் கண்ணில் இருக்கும் சிறு துரும்பை எடுக்க உனக்கு நன்றாக கண் தெரியும் என்றாரோ. மரத்துண்டு பெரியது அது கண்ணில் விழுந்தால் கண் பார்வை சரியாக சில பொழுதுகள் ஆகும். நமது குறை நீங்கி நம் பார்வை தெளிவானால் பிறரது நிறை குறைகளை எளிதில் கண்டும் விடலாம் அதை நிவர்ந்தி செய்ய வழிவகையும் செய்து விடலாம். வெறும் குறையை மட்டும் காணாதே குறைக்கான நிவர்த்தியையும் செய் என்கின்றார். உன்னை நீ சரி செய்து கொண்டால் பிறரது குறையை கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை சரி செய்யவும் உன்னால் முடியும் என்கின்றார். நம்மைப் பார்ப்போம். நம்மை சரி செய்து கொள்வோம். பார்வை பெறுவோம் அப்போது தான் பார்வையற்றவர்களின் வலி புரியும். குறையுள்ள மனிதனுக்கு குறைபாடுள்ளவனின் நிலை நன்கு புரியும்.


2. உள்ளத்தைப் பார்:
உள்ளத்தின் நிறைவை வாய் பேசும் என்கின்றார் நம்முடைய உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தால் மகிழ்வான வார்த்தைகள் வெளிப்படுகின்றன. துன்பத்தில் ஆழ்ந்து இருக்கும் போது, வருத்தமான வார்த்தைகள் வெளிப்படுகின்றன. மகிழ்வும் துன்பமும் நம்முடைய எண்ணங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன. நாம் நல்லவர்களானால் நல்ல கருவூலச்சொற்கள். தீயவர்களானால் தீய கருவூல சொற்கள். ஆக உள்ளம் எப்போதும் நல்லவற்றையே சிந்தித்து நல்லவற்றையே பேச அழைக்கின்றார். நாம் நல்லவற்றை பேசும் போது நம்மை சுற்றிலும் நல்ல எண்ண அலைகள் பரவுகின்றன. அவை நன்மையை மட்டும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன. தீமையை பற்றி பேசும்போது ஏராளமான எதிர்மறை உணர்வுகள் வெளிப்படுகின்றன. அவை தீய நிகழ்வுகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன. எனவே கூடுமானவரை நல்ல எண்ணங்களாலும் செயல்களாலும் நம் மனதை நிரப்புவோம். உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டியல்ல . பலவகை மணம் பரப்பும் மலர்கள் பூக்கும் பூஞ்சோலை.

3. உயர்வைப்பார்:
குருவை மிஞ்சிய சீடர் இல்லை ஆனால் தகுந்த தேர்ச்சி பெற்றால் சீடனும் குருவைப் போல ஆகலாம் என்கின்றார். ஆக முயற்சி உயர்வை தரும். முயற்சி செய்கின்ற மனிதன் முன்னேற்றம் அடைகின்றான். எவன் ஒருவன் தன்னுடைய உயர்வை விரும்பி தேடுகின்றானோ அவன் தானும் உயர்கின்றான் தன் அருகில் இருப்போரையும் உயர்த்துகின்றான். எனவே நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளும் செயல்களும் எப்போதும் உயர்ந்ததாக இருக்க முயற்சிப்போம். எப்போதும் நமது வார்த்தைகள் நமது உயர்வை நோக்கியதாகவும் பிறரையும் உயர்வை நோக்கி அழைத்து செல்வதாகவும் அமையட்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.

ஆக நாம் ஒவ்வொருவரும் உன்னைபார், உள்ளத்தைப் பார்,  உயர்வைப் பார் என்ற நோக்கில் வாழ முயற்சித்தால் நமது வார்த்தைகள் தரமானதாக திடமானதாக வலிமயானதாக மாறும். நம்மை சுற்றி இருக்கும் சுழலும் தரமானதாக திடமானதாக வலிமையானதாக மாறும். நாம் அனைவரும் நல்ல கனி தரும் நல்ல மரங்கள் நல்ல கருவூலத்திருந்து நல்ல கருத்துக்களை பேசும் நல்லவர்கள் . நன்மைகள் பல செய்து நல்லவர்களாக திகழ இறைவன் ஆசீர் நிறைவாக நம்மில் பொழியப்படுவதாக ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm


பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு.

நீ உன்னை அறிந்துகொள்

" உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் , தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் நம்மை சிந்திக்க அழைக்கின்றது.

பொதுக்காலத்தின் எட்டாம் வாரத்தில் நாம் இருக்கிறோம். உண்மைகளை எடுத்துச் சொல்ல பல உவமைகளை கையாளுகிறார் இறைமகன் இயேசு. இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் உவமை இப்படியாக சொல்லப்படிகிறது. 1. பார்வையற்ற ஒருவர், பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட முடியுமா? 2. உன் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை பார்க்காமல், உன் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீ ஏன் கூர்ந்து கவனிக்கிறாய்? இப்படி இரண்டு கேள்விகளை நம்முன் வைக்கிறார் இயேசு. இவை இரண்டுமே நம்மை நாம் எப்படி அறிந்திருக்கவேண்டும் " எப்படி புரிந்திருக்க வேண்டும் என எடுத்துக்காட்டுகிறது.

1.உன்னையே நீ செதுக்கிக்கொள் :

பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட முடியுமா ? என்றால், அவர் வெளிப்புற பார்வையை மட்டும் சொல்லவில்லை. உள்புற பார்வை, அதாவது அகப்பார்வை பெறவேண்டும் என்றும் கூறுகிறார். அகப்பார்வை என்றால் நமது உள்ளம் எப்போதும் தூய்மையான உள்ளத்தோடும், தெளிவான சிந்தனையோடும், இன்ப துன்பங்களை சமமாக கருதும் மனபக்குவமும் பெற்றிருக்க வேண்டும். முதலில் நம்மை நாமே சீர்படுத்திக் கொண்டால் தான், மற்றவர்களுக்கு நம்மால் துணிந்து வழிகாட்ட முடியும். மனம் உள்ளதாலே மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறோம் நாம். இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, பயம், கவலை, விருப்பு, வெறுப்பு, ஆசை அனைத்தையும் மனத்திம் மூலமாக அனுபவிக்கிறான் மனிதன். மனதைப் பொருத்தே மனிதனுகு உயர்வும், தாழ்வும் உண்டாகிறது. இதைதான் மனம் போல் வாழ்வு என்கின்றனர். இதனையே வள்ளுவர்,

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு."

என்கிறார். தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு ,அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும். மனம் தான் உடலை ஆள்கிறது . மனவலிமை இல்லாதவரால் எதையும் சாதிக்கமுடியாது. எல்லாம் இருந்தும் இல்லாதவன் ஆகிறான். வலிமையான மனம் கொண்டவன் தான் நினைத்தை செயலுக்கு கொண்டுவருகிறான். அதனால் நம்மை நாமே வலிமை படுத்திக் கொள்ளவேண்டும். நம்முடைய பலம், பலவீனம் /, நம்மை, தீமை / பிடித்தவை, பிடிக்காதவை / நண்பர், பகைவர் / என அனைத்தையும் கண்டறிந்து, எதை வளர்க்க வேண்டும். எதை விலக்க வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். விலக்க வேண்டியவற்றை விலக்கி, வளர்க்க வேண்டியவற்றில், இன்னும் அக்கறை கொண்டு நம்மை வளர்த்துக் கொண்டால் தான், நம்மால் மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும். அப்போதுதான் அகப்பார்வை கொண்ட நாம் மற்றவருக்கு வழிக்காட்டமுடியும் . இதனையே நம் முன்னோர்கள் " சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்கின்றனர். சீடர்களுக்கு கற்பிக்கும் குருவே சிறந்தவர். ஆனாலும் சீடரும் குருவைப்போல் உயரலாம், எப்பொழுதென்றால் முயற்சியை பயிற்சியாக்கும் போது. எனவே தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும் அகப்பார்வை பெற்று, அனைவரையும் அன்பாய் வழிநடத்த முட்படுவோம்.

கண்ணை மறைக்கும் மரக்கட்டை:
அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு...!
அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! என்று
ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?"
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை‌ பெரியவரை நெருங்கினான்.
ஐயா...!  "என்ன தம்பி?"
உங்கள் கையில இருப்பது கண்ணாடிதானே?"
"ஆமாம்!"அதில் என்ன தெரிகிறது?" நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!"
அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?"
"ஆமாம்!""பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?"
பெரியவர் புன்னகைத்தார்.
"சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!" பாடமா ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்? அப்படிக் கேள். நாம் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்
எத்துணை ஆழமான உவமை இது!" இந்த உவமையில் என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை!

ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா ஆமாம். அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும. எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.

இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்! அடடே...! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து?"

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். இல்லையா? ஆமாம்! அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும்

இரண்டாவது பாடம்!.
கிரேட்! அப்புறம்?.
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?. இல்லையே...! மாறாக அந்தக்கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!" சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!"

ஐயா...! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா...! அப்பப்பா! யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்! என்றார் பெரியவர்.
ஆக , இந்த கண்ணாடி மூன்று உண்மைகளை நம்முன் வைக்கிறது.

1.மற்றவரின் தவற்றை மிகைப்படுத்திச் சொல்லக் கூடாது.

2.மற்றவரின் குற்றத்தை நேரடியாகவே , அவர்களிடம் சொல்ல வேண்டும்.

3.மற்றவர் நம்மிடம் காணும் குற்றம், உண்மையாடயின் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். என்று இக்கதையின் மூலம் தெரிந்து கொண்டோம். ஆனால் நாம் மற்றவரின் குற்றத்தைக் காணும் முன், நமது குற்றத்தைக் காணவேண்டும். இதனையே இறைமகன் இயேசு நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறார். கடலின் ஆழத்தை அறிந்தாலும், மனத்தின் ஆழத்தை அறிய முடியாது என்பார்கள். அது எத்தனை உண்மை. மற்றவர்களின் மனத்தை அறிய முற்படும் நாம், முதலில் நாம் நம் மனதைப் பற்றி தெரிந்திருக்கவேண்டும். நமது கண்ணை மறைக்கும் மரக்கட்டையை தூக்கி எறிந்துவிட்டு, பிறகு மற்றவரின் கண்ணில் இருக்கும் மரக்கட்டடையை எடுக்க முயற்சிப்போம்.

ஆகவே நம்மை நாமே, சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து, நமது மனவலிமையை ஆழப்படுத்துவோம், நமது எண்ணங்களை நெறிப்படுத்துவோம். அடுத்தவரின் குறைகளை காணாது, அக்கறை காட்டுவோம். அடுத்தவருக்கு கற்றுக் கொடுக்கும் முன்பு, நமது ஆளுமையை அகலப்படுத்துவோம். அதனால் நம்மை நாமே நன்றாக அறிந்துகொள்வோம் அதற்கு, நம்மை அறிந்த இறைவனை அண்டிச்செல்வோம். ஆண்டவரின் அருளும், ஆசீரும் என்றும் நம்முடனும், நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும் இருப்பதாக. ஆமென்.



 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.

 
நற்கனிகள் அறிதலும் தருதலும்

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற ஆடம்பரப் பயணிகள் கப்பல் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். 'கடவுளால் கூட இக்கப்பலைக் கவிழ்க்க முடியாது' என்று விளம்பரம் செய்யப்பட்டு, 1912ல் தன் முதல் சேவையைத் துவக்கியது இக்கப்பல். உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலும் இதுவே. இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியுயார்க் நகர் நோக்கிச் சென்ற இக்கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் இரவு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதி, மோதிய 3 மணி நேரங்களில் முழுவதுமாகக் கடலில் மூழ்கியது. கப்பலின் கேப்டன் எவ்வளவோ முயன்றும் கப்பலைப் பனிப்பாறையின்மேல் மோதவிடாமல் தடுக்க முடியவில்லை என்பதுதான் சோகம். கடலில் தெரிந்த பனிப்பாறை கடலுக்கு மேல் நீட்டிக்கொண்டிருந்த அளவை மட்டும் வைத்து பனிப்பாறையின் கனத்தை குறைவாக மதிப்பிட்டதால்தான் இந்த ஆபத்து நேரிட்டது. வெறும் 5 சதவிகத பனிப்பாறை மட்டுமே கடலின் மேற்புரத்தில் தெரிய மீதி 95 சதவிகிதம் கடலுக்கு அடியில் மூழ்கி மிதந்துகொண்டிருக்கும். வெளியில் தெரியும் சிறு பகுதியை மட்டும் வைத்து ஒட்டுமொத்த பனிப்பாறையின் அளவை ஊகிப்பது தவறு. அதே வேளையில், பனிப்பாறையின் இருப்பை இந்த நுனிப்பகுதி காட்டுகிறது என்பதை அறியாமல் அதன் இருப்பைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறு.

இன்னொரு உருவகம். நம் தோட்டத்தில் இருக்கின்ற ஒரு மாமரம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாம்பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன என வைத்துக்கொள்வோம். மாம்பழம் என்ற கனியை மரத்தின் மற்ற பகுதிகளான கிளை, தண்டு, வேர் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கனியின் அமைப்பும் அளவும் மிகவும் சிறியது. ஆனால், அச்சிறிய கனியைக் கொண்டே நாம் அந்த மரத்தின் இயல்பைச் சொல்லிவிடலாம். அது இனிமையான கனி கொடுக்கும் மரமா அல்லது புளிக்கும் கனி கொடுக்கும் மரமா என்பதை நாம் சொல்வதற்கு அதன் கனியை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். யாரும் மரத்தின் இலை அல்லது தண்டைச் சாப்பிட்டுவிட்டு மரத்தை ஆய்வு செய்வதில்லை. கனி என்ற மரத்தின் சிறிய நீட்சி ஒட்டுமொத்த மரத்தின் இயல்பைச் சுட்டிக்காட்டுகிறது.

பனிப்பாறையின் நுனி மற்றும் மரத்தின் கனி இவை இரண்டிற்கும் இன்றைய இறைவாக்கு வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? வெறும் நுனியைக் கண்டு மொத்தத்தையும் அளந்துவிடாதே என எச்சரிக்கிறது இன்றைய முதல் வாசகம். வெறும் கனியைக் கண்டு ஒரு மரத்தின் இயல்பை அளவிடு என அறிவுறுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். மறைந்திருக்கும் நல் இயல்பு வெளியில் தெரியும் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுகிறது. நல்ல இயல்பிலிருந்தே நல்ல சொற்களும், நற்செயல்களும் வெளிவர முடியும்.

எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 27:4-7) இஸ்ரயேலின் பிந்தைய ஞானத் தொகுப்பான சீராக்கின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஞானம் என்பது கடவுளின் கட்டளைகளுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிவதன் கொடை எனப் பொதுவாக அறியப்பட்டாலும், ஞானம் மனித வாழ்வின் அன்றாட அறநெறி மற்றும் வாழ்வியல் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகவே அமைகிறது. உருவகங்கள், பழமொழிகள் என காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத மதிப்பீடுகளுக்கு மக்களை அழைத்துச் சென்றனர் ஞானியர். இவ்வகையில் ஏறக்குறைய கி.மு. 200ல் யேசு பென் எலயேசர் பென் சீராக் (காண். சீஞா 50:27) என்பவரால் எழுதப்பட்ட சீராக்கின் ஞானநூல் பல ஞானக் கோர்வைகளைப் பல்வேறு தலைப்புக்களில் தாங்கி நிற்கிறது. இஸ்ரயேல் மக்களின் சட்டநூல்கள் என்றழைக்கப்படுகின்ற முதல் ஐந்நூல்களில் உள்ள கருத்துக்களை எடுத்து அக்கருத்துக்களை அன்றாட வாழ்வில் செயல்முறைப்படுத்தும் வழிமுறைகளைத் தருகிறார் ஆசிரியர்.

அவ்வகையில் ஒரு மனிதரின் மறைந்திருக்கும் குணம் அல்லது இயல்பு எப்படி வெளிப்படும் என்பதை இரண்டு பழமொழிகள் வழியாக விளக்குகிறார் ஆசிரியர். முதல் பழமொழி: 'சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது. அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்து விடுகின்றது.' அதாவது, சலிக்கின்ற போது சல்லடையில் மேலே தங்குகின்ற உமி, அந்த அரிசியில் இவ்வளவு மாசு இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உமி குறைவாக இருந்தால் அரிசி கலப்படமற்றது என அறிகிறோம். அதுபோல, ஒரு மனிதர் பேசும்போது அவரிடம் எவ்வளவு மாசு இருக்கிறது என்பதை அவரிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் காட்டிவிடுகின்றன. ஆக, பேச்சும் மாசுள்ளதாக இருக்கலாம். பேசுபவரின் உள்ளமும் மாசுள்ளதாக இருக்கலாம். எனவே, வார்த்தைகளைப் பற்றிய அக்கறையும், வார்த்தை வெளிவரும் உள்ளம் பற்றிய அக்கறையும் அவசியம். இரண்டாவது பழமொழி: 'குயவரின் கலன்களை சூளை பரிசோதிக்கிறது. மனிதரை உரையாடல் பரிசோதிக்கிறது.' மண்பானை செய்கின்ற குயவன் எப்படிப்பட்ட மண்ணைப் பயன்படுத்தினான், எப்படிப் பிசைந்தான், எவ்வளவு நீர் ஊற்றினான், எப்படி சக்கரத்தில் சுற்றினான் என்னும் அவனுடைய கைப்பக்குவத்தை நெருப்பு பரிசோதிக்கும். அதுபோல, மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை அவனுடைய உரையாடலை வைத்து மற்றவர்கள் பரிசோதிப்பர். நெருப்பில் இடும் போது கீறல் விடாத பானை நல்ல பானை என அறியப்படுவது போல, ஒரு மனிதர் நல்லவர் என்பதை அவருடைய உரையாடல் வழியாக நாம் கண்டுகொள்கிறோம். தொடர்ந்து, 'ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே. பேச்சைக் கொண்டே அவரை அறிந்துகொள்ளலாம்' என எச்சரிக்கிறார் ஆசிரியர். ஒருவனுடைய உரையாடலைக் கேட்குமுன்பே, அவனுடைய வெளி அலங்காரத்தை வைத்து அவனைப் புகழ வேண்டாம் என்றும், பார்ப்பதற்கு பகட்டாக இருக்கும் அவன் பேசுவது மடமையாக இருக்கலாம் என்பதும் இதன் பொருள்.

ஆக, ஒருவரின் நாணயம், நற்குணம், நல்மதிப்பீடு ஆகியவை வெளிப்புற அடையாளங்களால் அறிந்துகொள்ளப்பட முடியாதவை. மாறாக, அவர் பேசும் சொற்கள் அவருடைய மூளையின், உள்ளத்தின் நீட்சியாக இருக்க, அவற்றை வைத்து நாம் அவரின் நாணயத்தையும், நற்குணத்தையும், நல்மதிப்பீட்டையும் அறிந்துகொள்ளலாம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 15:54-58) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் வாதம் நிறைவுக்கு வருகிறது. எசா 25:8 மற்றும் ஆமோ 13:14 என்னும் இறைவாக்குகளின் பின்புலத்தில், 'சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?' என்று அக்களிக்கிறார் பவுல். பவுலின் பார்வையில் கிறிஸ்துவின் உயிர்ப்பு இறந்தோர் அனைவருக்கும் கிடைத்த கொடை. ஏனெனில், கிறிஸ்துவில் இறந்தோர் அனைவரும் கிறிஸ்துவில் உயிர்ப்பர். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இறவாமையைப் பெற்றுத் தருகிறது. தொடர்ந்து பவுல், 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி' என்கிறார்.

இதன் பின்புலத்தில் உயிர்ப்பு பற்றிய உரையை நிறைவு செய்கிற பவுல், நிறைவாக கொரிந்து நகரச் சபைக்கு அறிவுரையும் வழங்குகின்றார்: 'உறுதியோடு இருங்கள். நிலையாய் இருங்கள். ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.' நாம் இறந்தவுடன்தான் எல்லாம் ஒன்றிமில்லாமல் போய்விடுகிறதே. அப்புறம் எதற்கு உழைக்க வேண்டும்? எனச் சிலர் கேள்வி எழுப்பியதன் பின்புலத்தில், 'நீங்கள் உழைப்பது வீண்போகாது' என்கிறார் பவுல். ஆக, இவ்வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் உயிர்ப்பின் கனிகளாகக் கனிகின்றன. இச்செயல்களை நிறுத்தும்போது நாம் கனிகளையும் நிறுத்துவிட வாய்ப்புண்டு. கனிகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து நம் வேலைகளைச் செய்ய வேண்டும்.

ஆக, இவ்வுலக வாழ்வு என்பது ஒரு மரம் போன்றது என்றால், அம்மரத்திற்காக நாம் செய்யும் உழைப்பு மறு உலகில் கனியாக நீளும். அக்கனிகள் இனிமையாக இருக்க வேண்டுமென்றால், நான் என் வாழ்க்கை என்ற மரத்தின் இயல்பை இனிமையானதாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நான் உழைக்க வேண்டும். என் நம்பிக்கையில் உறுதியாகவும் நிலைத்தும் இருத்தல் வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:39-45) ஒருவரின் நாணயம், நற்குணம், மற்றும் நன்மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்றும், அது எப்படி கனியாக சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் என்பதை மூன்று உருவகங்கள் வழியாகப் பதிவு செய்கிறது. முதலில், 'பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற மற்றவருக்கு வழிகாட்டுவது' - இது முதலில் சீடர்களுக்கான போதனையாக இருக்கிறது. இயேசுவின் சீடர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு முன்பாக, தாங்கள் முதலில் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வது அவசியம். தங்களிலேயே நற்செயல் அல்லது நற்சொல் இல்லாத ஒருவர் அவற்றை மற்றவருக்குக் கொடுக்க முடியாது. இரண்டாவதாக, 'ஒருவர் தன் கண்ணில் இருக்கும் கட்டையைப் பார்க்காமல் மற்றவரின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கக் கைநீட்டுவது.' இதுவும், சீடர்கள் மத்தியில் இருந்த ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் தன் குறையைக் கண்டுகொள்ளாமல் அடுத்தவரின் குறையைப் பெரிதுபடுத்தியிருக்கலாம். இயேசு இந்த வெளிவேடத்தைக் கண்டித்து, தன் சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களையே தன்னாய்வு செய்து பார்க்க அழைக்கின்றார். இப்படித் தன்னாய்வு செய்யும்போது ஒருவர் தன் மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்ய முடியும். அப்படிச் செய்யாதபோது அவர் வளர முடியாமல் போய்விடும். மேலும், தன் கண்ணையே ஒரு கட்டை மறைப்பதால் அடுத்தவருக்கு உதவி செய்வது தொந்தரவிலும் முடியலாம். மூன்றாவதாக, 'கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை. நல்ல கனி தரும் கெட்ட மரமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்.' ஒருவர் நீண்ட காலம் நடிக்கவும், ஏமாற்றவும் முடியாது. ஏனெனில், அவரின் செயல்களே அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் என எச்சரிக்கிறார் இயேசு. பொய்மை நீண்ட காலத்திற்கு உண்மை என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வலம் வர முடியாது. மேலும், 'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்' என்று சொல்வதன் வழியாக ஒருவரை அவருடைய சொல் காட்டிக்கொடுத்துவிடும் என்கிறார் இயேசு.

இயேசுவின் இம்மூன்று உருவகங்களுமே சீடத்துவத்தை மையமாக வைத்திருக்கின்றன. இயேசுவின் சீடர் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், வெளிவேடமின்றி தன்னையே ஆய்வு செய்து பார்க்க வேண்டும், அடுத்தவருக்கு வழி காட்டுவதற்கு முன் தன்னையும், தன் வழியையும் அறிந்திருக்க வேண்டும், தன் வாழ்வில் உள்ள இரட்டைத்தன்மை அகற்ற வேண்டும்.
ஆக, ஒருவரின் உள்ளியல்பு அவரின் வழிகாட்டுதல், குற்றங்கடிதல், மற்றும் உரையாடுதல் ஆகியவற்றில் வெளிப்பட்டுவிடும் என்பதால் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இவ்வாறாக, எளிய பழமொழிகள் மற்றும் உருவகங்கள் வழியாக சீராக்கும் இயேசுவும், 'ஒரு மனிதரின் உண்மையான குணம் அல்லது இயல்பும் அவரடைய உள்ளத்தின் பண்பாடும் அவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது' என்றும், பவுல், 'நல்ல செயல்கள் வழியாக உயிர்ப்பின் நற்கனிகளை அனுபவிக்க முடியம்' என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

நாணயத்தின், நற்குணத்தின் நற்கனிகள் தருவது எப்படி?

1. நல்ல உளப்பாங்கு கொண்டிருத்தல்

ஆங்கிலத்தில், 'ஆட்டிட்யூட்' என்று சொல்கிறோம். இன்று, ஒருவரின் நேர்காணலில் அவரின் சொற்கள் மற்றும் செயல்களைவிட, இந்த 'ஆட்டிட்யூட்' தான் அதிகாக ஆய்வு செய்யப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம் நான்கு வகை உளப்பாங்கை எடுத்துக்காட்டி, முதல் மூன்று வகை உளப்பாங்கை விட்டுவிடவும், நான்காவதைப் பற்றிக்கொள்ளவும் அழைக்கிறது. (அ) கெட்ட கனி தரும் மரம் - 'கெட்ட கனியால் யாருக்கும் பலன் இல்லை. கெட்ட கனிகள் விஷமாக மற்றவர்களைக் கொல்லும் ஆற்றல் பெற்றவை' இம்மரம் இயல்பிலேயே கெடுதல் செய்வதாக இருக்கிறது. இவ்வகை மரம் தீங்கையே உருவாக்குவதால், காலப்போக்கில் அதே தீங்கினால் தானும் அழிந்துவிடும். (ஆ) முட்செடிகள். முட்செடிகள் முள்கனிகளைத்தான் கொடுக்குமே தவிர அத்திப்பழங்களைக் கொடுக்காது. முட்செடிகள் போன்றவை அடுத்த மரங்களின் தண்ணீர் மற்றும் உரத்தை எடுத்துக்கொண்டாலும் இவைகள் தங்கள் இயல்பிலேயே தொடர்ந்து இருப்பவை. இவைகள், என்னதான் பசுமையாக, செழுமையாக இருந்தாலும் இவைகளின் அருகில் யார் சென்றாலும் இவை அவர்களைக் காயப்படுத்திவிடுகின்றன. (இ) முட்புதர் திராட்சைக் கனியை நாம் முட்புதரிலிருந்து பெற முடியாது. திராட்சை உயரமான பந்தலில் வளரக் கூடியவை. ஆனால், முட்புதரோ தரையோடு தரையாக மண்டிக் கிடந்து, விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறிவிடும். புதருக்குள் மறைந்திருப்பது யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர்கள் தங்கள் எண்ணங்களை மிகவும் தாழ்வான எண்ணங்களாக வைத்துக்கொண்டு விஷம் தங்கும் இடமாக மாறிவிடுவர். மற்றும் (ஈ) நல்ல கருவூலம் - ஒவ்வொரு வீட்டின் பாதுகாப்பான இடம் கருவூலம். இங்கே மிகவும் மேன்மையானவற்றிற்கு மட்டுமே இடமுண்டு. நல்லவரின் உள்ளம் நல்ல கருவூலமாக இருக்கும். இதிலிருந்து வெளிப்படுபவை மதிப்பு மிக்கவையாகவும், மற்றவர்களுக்குப் பயன் தருவனவாகவும் இருக்கும். ஆக, என் உளப்பாங்கு நல்ல கருவூலமாக இருத்தல் வேண்டும்.

2. இனிய வார்த்தைகளைப் பேசுதல்

இனிய சொற்கள் பற்றிப் பேச அறிவுறுத்தும் வள்ளுவர், இனிய வார்த்தைகளைப் பேசாதவர்கள் நல்ல கனிகளை விட்டுவிட்டு கசக்கின்ற காய்களைப் பறித்துக்கொள்கிறார்கள் என்கிறார். பேச்சு ஒரு கொடை. அதே வேளையில் அது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. நம் வார்த்தைகளே நம் உலகத்தை உருவாக்குகின்றன. நம் பேச்சு நம்மைப் பல்லக்கிலும் ஏற்றும், பாழுங்கிணற்றிலும் தள்ளும். இன்று நாம் அரசியல் மற்றும் ஊடகங்களில் கேட்கின்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகளே. அவற்றால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அவ்வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல வார்த்தைகள் வதந்திகளாகவும், பொய்களாகவும் இருக்கின்றன. இவற்றால் வீணான அச்சமும் குழப்பமும் உருவாகிறது. ஆனால், இவற்றிற்கு மாறாக நம் வார்த்தைகள் அடுத்தவரின் மேல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளாக இருத்தல் வேண்டும். ஆக, பொறுப்புணர்வோடு நாம் வார்த்தைகளைக் கையாள வேண்டும்.

3. உன் வார்த்தையே நீ

'நீ அதிகமாக வெட்கம் அடைகிறாய். இந்த வெட்கத்திற்குக் காரணம் உன் பொய்மை. பொய் சொல்லாதே! அதிலும் உனக்கு நீயே பொய் சொல்லாதே. உனக்கு நீயே சொல்லும் பொய் உன்னைப் பெரிய தோல்விக்கு இட்டுச் செல்லும்' என்று இரஷ்ய எழுத்தாளர் டாஸ்டாய்வ்ஸ்கியும், 'நீ வெற்றி பெற வேண்டுமெனில் உனக்கு நீயே ஒரு போதும் பொய் சொல்லாதே' என்று பவுலோ கோயல்லோவும், 'உன் உள்ளத்தின் நிறைவே உன் பேச்சும்' என்று இயேசுவும் சொல்கின்றனர். நம்மிடம் உள்ள நாணயம் மற்றும் நன்மதிப்பீட்டின் நீட்சியாக நம் வார்த்தைகள் இருக்க வேண்டும். எனக்கு நான் கொடுக்கும் வாக்குறுதிகள் மற்றும் அடுத்தவருக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளில் நான் உண்மையோடு இருக்க வேண்டும். ஆகையால்தான், ஒளவையார், 'கற்பு என்பது சொல் திறம்பாமை' என்கிறார். சொல்லும், செயலும், என் இயல்பும் ஒன்றாக இருத்தலே கற்பு, தூய்மை. என் வார்த்தைகளே நானே நம்பவில்லை என்னும் நிலை வரும்போது, அடுத்தவர்கள் என் வார்த்தைகளை எப்படி நம்புவார்கள்?

வார்த்தையும் வாழ்வும், கனியும் மரமும், இயல்பும் வெளிப்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதை அறிந்து செயல்படும் 'நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர். கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர் ... அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர். என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்' (திபா 92:12,14).




 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

சொல், உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது

சொல்லில் கவனம்:

அது நகரில் இருந்த அரசு மருத்துவமனை. அந்த மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சை அறைக்குள் வேகமாக நுழைந்த மருத்துவரைத் தடுத்து நிறுத்தினார் அன்றைய நாளில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருந்த சிறுவனின் தந்தை. "என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். நீங்கள் இப்படிப் பொறுப்பே இல்லாமல், இவ்வளவு தாமதமாக வருவீர்களே!" என்று கத்தினார் சிறுவனின் தந்தை. அதற்கு மருத்துவர் அவரிடம், "ஐயா! தயவுசெய்து பதற்றப்பட வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று பொறுமையோடு பதிலளித்துவிட்டு முன்னோக்கி நகர்ந்தார் மருத்துவர். "பதற்றப்பட வேண்டாம் என்று எளிதாகச் சொல்லிவிட்டீர்கள். உங்களுடைய மகனுக்கு இப்படி நடந்திருந்தால் இவ்வாறு பேசுவீர்களா?" என்று சீற்றம் குறையாமல் கத்தினார் சிறுவனின் தந்தை. அவரை கூர்ந்து பார்த்துவிட்டு அறுவைச் சிகிச்சை அறைக்குள் வேகமாக நுழைந்தார் மருத்துவர்.

ஏறக்குறைய ஒருமணி நேரம் கழித்து, அறுவைச் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர், சிறுவனின் தந்தையிடம், "உங்களுடைய மகனுக்கு அறுவைச் சிகிச்சை நல்லமுறையில் நடந்து முடிந்திருக்கின்றது. அது குறித்து வேறு ஏதாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், செவிலியரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார். அப்போதும் சிறுவனின் தந்தைக்குச் சினம் அடங்கவில்லை. "என்ன மாதிரியான மருத்துவர் இவர்! சிறிதுநேரம்கூடப் பொறுமையாகப் பேசமாட்டேன் என்கிறீராரே! சரியான திமிர் பிடித்தவர்" என்று அவரைத் தன் மனத்திற்குள் திட்டித் தீர்த்தார் சிறுவனின் தந்தை.

அந்நேரத்தில் செவிலியர் அங்கு வந்தார். அவரிடம் தன்னுடைய ஆற்றாமையைச் சிறுவனின் தந்தை கொட்டித் தீர்த்தபோது, செவிலியர் அவரிடம், "நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் மருத்துவரின் ஒரே மகன் இறந்துவிட்டான். அவனுடைய இறுதிச் சடங்கு நடந்துகொண்டிருந்தபோதுதான், நாங்கள் உங்களுடைய மகனுக்குச் செய்யவேண்டிய அறுவைச் சிகிச்சையைப் பற்றிச் சொன்னோம். அவர் சிறிதும் தாமதிக்காமல் இங்கு வந்து அறுவைச் சிகிச்சையை நடத்திக் கொடுத்துவிட்டுப் போயிருக்கின்றார். இது எதுவுமே தெரியாமல் இப்படியெல்லாம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கின்றீர்களே!" என்றார். அப்போதுதான் சிறுவனின் தந்தைக்குத் தன் தவறு புரிந்தது. அவர், மருத்துவரிடம் தான் பேசிய கடுமையான வார்த்தைகளுக்காக மிகவும் வருந்தினார்.

ஆம், பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவனின் தந்தையைப் போன்று ஒருவரின் சூழ்நிலை என்ன என்ற தெரியாமல் கடுமையாக சொற்களை உதிர்த்து விடுகின்றார்கள். பின்னர் அதை நினைத்துப் பெரிதும் வருந்துகிறார்கள். பொதுக் காலத்தின் எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகம், "பேச்சைக் கொண்டே ஒருவரை அறிந்துகொள்ளலாம்" என்கிறது. நமது பேச்சு எப்படி இருக்க வேண்டும், அதன்மூலம் நாம் எப்படிக் கனிதரும் வாழ்க்கை வாழவேண்டும் என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

சொற்கள், உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி:

செவ்விந்தியர்களிடம் ஒரு வழக்கம் இருக்கின்றது. அவர்கள் வேட்டையாடச் செல்கின்றபோது, தங்களோடு எடுத்துச் செல்லும் ஆயுதங்களை எக்காரணத்தைக் கொண்டும் தவறவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி அவர்கள் தங்களோடு எடுத்துச் சென்ற ஆயுதங்களைத் கீழே தவற விட்டுவிட்டால், அவற்றை அவர்கள் எப்படியாவது எடுத்துவிட்டுத்தான் வீடு திரும்புவார்கள். காரணம், அவர்கள் தவற விட்ட ஆயுதம் அவர்களுடைய எதிரிகளின் கையில் அகப்பட்டால், அதுவே அவர்களுடைய உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால்! "ஆயுதங்களைவிடவும் சொற்கள் வலிமையானவை. அதனால் அவற்றை வீணாகச் சிந்திவிடக் கூடாது" என்பார் சாகித்ய அகடாமி விருது பெற்ற எஸ். இராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளர்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், "மனிதரின் பேச்சில் மாசு படிந்திருக்கின்றது; பேச்சைக் கொண்டே ஒருவரை அறிந்துகொள்ளலாம்" என்கிறது. மனிதர்கள் முழுமையானவர்கள் கிடையாது. அதனால் அவர்களுடைய பேச்சில் நிச்சயம் மாசு படிந்திருக்கும். ஆகவே, அவர்கள் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வது போன்று யாரையும் தீர்பிடக் கூடாது அல்லது யாரைப் பற்றியும் குறைகூறிக் கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில், மாசு படிந்துள்ள மனிதரின் பேச்சு மற்றவரைக் காயப்படுத்தும்! இதனாலேயே மனிதர்கள் தங்கள் சொற்களைக் கவனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அழிவுக்குரியது அழியாமை அணிந்துகொள்ள வேண்டும்

வாழ்க்கை என்பது முழுமையை நோக்கிய ஒரு தொடர் தோட்டம். அந்த அடிப்படையில், முழுமையில்லாத மனிதர்கள் முழுமையை நோக்கி நகரவேண்டும்; அழிவுக்குரிய மனிதர்கள் அழியாமையை அணிந்துகொள்ளவேண்டும். இது பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகின்றபோது, "அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்துகொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்" என்கிறார்.

அழிவுக்குரியது அழியாமையை அணிந்துகொள்ளவேண்டும் என்று புனித பவுல் சொல்வதை, அழிந்து போகும் அல்லது மாசு படிந்த சொற்களைப் பேசும் மனிதர்கள், அழியாத நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தையாம் (யோவா 6:68) கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி வாழ்ந்தால், அவர்கள் அழியாமையையும் சாகாமையையும் அணிந்துகொள்ளலாம். அதன்மூலம் அவர்கள் மறைநூலில் எழுதியுள்ள வாக்கை நிறைவேற்றலாம் என்று புரிந்துகொள்ளலாம். அப்படியெனில் நிலைவாழ்வு அளிக்கும் கடவுளின் வார்த்தைகளை ஒருவர் கேட்பது, அதன்படி நடப்பது எவ்வளவு முதன்மையானவை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

மிகுந்த கனிதர வேண்டும்

"ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்" இது இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகின்ற மிக முக்கியமான வார்த்தைகள். இங்கே கனி என்று சொல்வதை மனிதர்கள் பேசும் சொல்லோடு தொடர்புபடுத்திக் கொள்ளலாம். மனிதர்களின் சொல் என்ற கனியானது நல்ல கனியாக இருக்கவேண்டும். அதற்கு ஒருவர் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகளை உள்வாங்கி, அதன்படி வாழவேண்டும். இதைப் பற்றி நாம் மேலே பார்த்தோம்.

எதற்காக மனிதரின் சொல் என்னும் கனி நல்ல கனியாக இருக்க வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் மிகுந்த கனி தந்து இயேசுவின் சீடராக இருக்கவேண்டும் என்பதே தந்தைக்கு மாட்சி அளிக்கின்ற செயலாக இருக்கின்றது. எனவே, அழிவுக்குரியவர்களான நாம், அழியாத, நிலைவாழ்வளிக்கும் வார்த்தைகளால் நமது உள்ளத்தையும் வாழ்வையும் நிரப்புவோம். அப்படி நாம் நிரம்புகின்றபோது, நாம் ஆண்டவரில் நிலைத்திருப்போம். ஆண்டவரோடு அவரது அழியா வார்த்தைகளோடு நாம் நிலைத்திருக்கும்போது, நாம் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் (யோவா 15:7). இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

சிந்தனைக்கு:

"நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்" (நீமொ 10:11) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் நல்லவற்றைப் பேசி, நற்கனிகள் தருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறையுரைச் சிந்தனை: அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை


 
 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 தன்னிடம்‌ உள்ள தவறை ஏற்றுக்கொள்ளாமல்‌ அடுத்தவர்‌ மீது குற்றம்‌ சுமத்துவது என்பது மனிதனுக்கு கை வந்த கலையாகிவிட்டது. ஒருவன்‌ டிக்கெட்‌ வாங்காமல்‌ ரயிலில்‌ பயணம்‌ செய்கிறான்‌. அவனிடம்‌ எப்படி வந்தாய்‌...? என்று கேட்டால்‌ அவன்‌ திருட்டு ரயிலில்‌ வந்தேன்‌ என்கிறான்‌. திருட்டுத்தனம்‌ செய்வது இவன்‌... அந்த ரயில்‌ திருட்டு ரயிலாம்‌. அதற்குக்‌ கெட்ட பெயர்‌. ஒருவன்‌ ரூபாய்‌ நோட்டு அடிக்கிறான்‌. ஆனால்‌ அந்த நோட்டுக்குப்‌ பெயர்‌ கள்ளநோட்டு. சட்ட விரோதமாக சாராயம்‌ காய்ச்சுவதும்‌, விற்பதும்‌ இவன்‌... ஆனால்‌ அதற்குப்‌ பெயர்‌ கள்ளச்‌ சாராயம்‌. தான்‌ செய்த தவற்றை ஏற்றுக்கொள்ளாமல்‌ அடுத்தவர்‌ மீது குற்றம்‌ .. சுமத்துகிறவர்கள்‌ இன்றைக்கு அதிகம்‌ பேர்‌. உன்‌ கண்ணில்‌ உள்ள்‌ விட்டத்தைக்‌ கவனியாது உன்‌ சகோதரன்‌ கண்ணிலிருக்கும்‌ துரும்பை பார்ப்பதேன்‌ (நற்செய்தி).

புதிதாகக்‌ கட்டிய மதில்‌ சுவரின்‌ ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஏன்‌? இந்த சுவரை இடித்தாய்‌...? என்று வேலைக்காரனிடம்‌ கேட்டார்‌ வீட்டின்‌ உரிமையாளர்‌. அதற்கு அவன்‌ என்‌ மீது எந்த தவறும்‌ இல்லை. சுவரும்‌ உறுதியாக இல்லை, அதை கட்டிய கொத்தனார்தான்‌ காரணம்‌ என்றான்‌. கொத்தனாரைக்‌ கேட்டால்‌, கலவை போட்டுக்‌ கொடுத்தவன்‌ கலவையில்‌ அதிகமாகத்‌ தண்ணீர்‌ ஊற்றிவிட்டான்‌ என்றான்‌. கலவைப்‌ போட்டவனை கேட்டால்‌, அந்தக்‌ குடத்தின்‌ வாய்‌ அகலமாக இருந்தது. லேசாக சாய்த்தேன்‌. தண்ணீர்‌ அதிகமாகக்‌ கொட்டிவிட்டது. குடத்தை தயாரித்தவன்தான்‌ காரணம்‌ என்றான்‌. இப்படி தங்கள்‌ தவற்றை ஏற்க மறுத்து அடுத்தவர்‌ மீது குற்றம்‌ சுமத்துவதைப்‌ பார்க்கிறோம்‌. இன்றைய நற்செய்தியும்‌ இதே கருத்தை வலியுறுத்துகிறது.

மனிதனுடைய வார்த்தைகள்‌ தான்‌ மனதிலுள்ள எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன (முதல்‌ வாசகம்‌). நல்லவன்‌ நல்லவற்றையே, தீயவன்‌ தீயவற்றையே தனதாக்கிக்‌ கொள்கிறான்‌. மனிதனுடைய வார்த்தைக்கும்‌ செயலுக்கும்‌ பிறப்பிடம்‌ அவன்‌ உள்ளமே. உள்ளம்‌ நல்லதாக இருப்பின்‌ சொல்லும்‌ செயலும்‌ நல்லவையாக இருக்கும்‌. பிறர்‌ உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும்‌ அவர்களுக்குச்‌ செய்யுங்கள்‌ (லூக்‌. 6:31). கெட்ட கனி தரும்‌ நல்ல மரமுமில்லை. நல்ல கனி தரும்‌ கெட்ட மரமும்‌ இல்லை. ஒவ்வொரு மரத்தையும்‌ அறிவது அதன்‌ கனியாலே. ஏனெனில்‌ முட்செடியில்‌ அத்திப்பழம்‌ பறிப்பாருமில்லை. நெருஞ்சியில்‌ திராட்சைக்‌ குலை கொய்வாருமில்லை (லூக்‌. 6:4346). தனது நிலையை அறியாமல்‌ அடுத்தவர்களைக்‌ குறைகூறும்‌ மனிதர்கள்‌ ஒரு விதத்தில்‌ மனநோயாளிகள்‌ எனலாம்‌. தன்னையே முழுவதும்‌ அறிவதுதான்‌ வாழ்க்கையின்‌ முதற்படி. தன்னை முழுமையாகப்‌ புரிந்தவன்‌ பிறரையும்‌ புரிந்துகொள்வான்‌. ஒருவன்‌ தன்னையே நன்கு புரிந்துகொண்டால்தான்‌ நிறை, குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும்‌. தான்‌ செய்யும்‌ தவறுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவன்தான்‌ பிறருக்கு வழிகாட்ட முடியும்‌. இருளைப்‌ பழிப்பதைவிட ஒளியேற்றுவதே மேல்‌ என்பதை உணர வேண்டும்‌.

ஒரு முதியவர்‌ தூங்கிக்‌ கொண்டிருந்தபோது அவரது பேரப்பிள்ளைகள்‌ அழுகிய முட்டையை உடைத்து அவரின்‌ மீசையில்‌ தடவி விட்டார்கள்‌. தூக்கம்‌ கலைந்து, எழுந்திருந்த தாத்தாவுக்கு ஏதோ துர்நாற்றம்‌ அடிக்கிறது. இங்கு என்ன போட்டு வைத்திருக்கிறீர்கள்‌ என்று வீட்டில்‌ உள்ளவர்களைத்‌ திட்டிவிட்டு மாடிக்குச்‌ சென்றார்‌. மணக்க மணக்க உணவு வகைகளுக்கு மத்தியில்‌ இவருக்கு மட்டும்‌ நாற்றம்‌ அடித்தது. தாத்தா தன்‌ மீசையில்‌ இருந்து வரும்‌ நாற்றத்தை உணராமல்‌, கண்டு பிடிக்காமல்‌ மற்றவர்களை குறை சொல்கிறார்‌. முட்டையின்‌ நாற்றம்‌ எப்படி அவரை மற்ற வாசனைகளை அனுபவிக்க அனுமதிக்க வில்லையோ, அதேபோல்தான்‌ சில விஷயங்களைப்‌ பற்றி நாம்‌ கொண்டிருக்கும்‌ தவறான கருத்துக்கள்‌ மற்ற நல்ல காரியங்களைப்‌ பரிசீலிக்கக்கூட நம்மை அனுமதிப்பதில்லை. இதை இன்றைய நற்செய்தி வாசகத்தின்‌ வழியாக நன்கு அறிந்துகொள்ளலாம்‌. நாம்‌ எந்தெந்த விதத்தில்‌ சரியாகச்‌ செயல்படுகிறோம்‌. எந்தெந்த விதத்தில்‌ தப்பித்துக்கொள்ள மற்றவர்கள்‌ மீது குற்றம்‌ சுமத்துகிறோம்‌ என்று சிந்திப்போம்‌. பல சமயங்களில்‌ மற்றவர்களைப்‌ பற்றி குறை சொல்லி, குற்றவாளியாக்குவதில்‌ இருக்கும்‌ ஆர்வம்‌, நிறைவு காணும்‌ பண்புகளில்‌ இருப்பதில்லை. மிகப்பெரிய தவறுகள்‌ செய்பவன்‌, சிறிய தவறு செய்தவனை மிகப்பெரிய குற்றவாளியாக்குவது மிகப்பெரிய தவறாகும்‌ என்பதை உணர்வோம்‌. மற்றவர்களிடம்‌ குறைகளைக்‌ காண்பதை தவித்து, நிறைகளைக்‌ காணும்‌ நல்ல இதயத்தை இறைவன்‌ நமக்குத்‌ தர வேண்டும்‌ என செபிப்போம்‌.

சிந்தனைக்கு
நொண்டி நொண்டி நடந்தவனைப்‌ பார்த்து மனதுருகிப்போன அவனது நண்பன்‌ எனக்கும்‌ இப்படித்தான்‌ இருந்தது. நான்‌ மொட்டை அடித்துக்‌ கொண்டேன்‌. கால்‌ சரியாகிவிட்டது என்றான்‌. அப்படியே இவனும்‌ மொட்டை அடித்துக்கொண்டான்‌. கால்‌ சரியாகவில்லை. அன்னதானம்‌ செய்தும்‌ பணத்தை அள்ளி இறைத்தும்‌, பத்தியங்கள்‌ மேற்கொண்டும்‌ சரியாகவில்லை. இறுதியில்‌ தன்னைத்தானே ஆராய்ந்துப்‌ பார்த்ததில்‌ தன்‌ செருப்பில்‌ குத்திக்‌ கொண்டிருந்த ஆணியே தன்னை நொண்டியாக நடக்க வைத்தது என்று கண்டுபிடித்தான்‌. அந்த ஆணியைப்‌ பிடுங்கி எறிந்த பிறகு நன்றாக நடந்தான்‌. தன்னிடம்‌ இருக்கும்‌ தவற்றை அறியாது வாழ்ந்துக்‌ கொண்டிருக்கும்‌ மனிதர்கள்‌ இன்று அதிகம்‌.

முதலில்‌ நாம்‌ திருந்துவோம்‌; பிறகு மற்றவர்கள்‌ திருந்த அறிவுரைகள்‌ சொல்வோம்‌, வழி காட்டுவோம்‌.

ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
குறையில்லாத மனிதரில்லை

இன்றைய நற்செய்தியின்‌ வழியாக இயேசு மற்றவர்களின்‌ குறைகளை நாம்‌ சுட்டிக்காட்ட அவர்களைக்‌ குறைவாகப்‌ பேசக்கூடாது என்கின்றார்‌.

ஓர்‌ இளைஞனும்‌, ஓர்‌ இளம்‌ பண்ணும்‌ ஒருவரையாருவர்‌ சந்தித்தனர்‌. அவனுக்கு வயது 35 இருக்கும்‌; அவளுக்கு வயது 30 இருக்கும்‌. அது ஓர்‌ இரயில்‌ பயணம்‌. இருவருக்குமிடைய உரையாடல்‌ தொடங்கியது. அவன்‌ அவளைப்‌ பார்த்து, உனக்குத்‌ திருமணம்‌ ஆகிவிட்டதா? என்று கேட்டான்‌. அவள்‌, இல்லை என்றாள்‌. அவன்‌, எனக்கும்‌ திருமணம் ‌ ஆகவில்லை என்றான்‌.

அவள்‌ அவனைப்‌ பார்த்து, எப்படிப்பட்ட பண்ணை நீ திருமணம் ‌ செய்துகொள்ள விரும்புகின்றாய்‌? என்று கேட்டாள்‌. அதற்கு அந்த இளைஞன்‌, நான்‌ திருமணம் ‌ செய்துகொள்ள விரும்பும்‌ பண்‌ அழகாக இருக்க வேண்டும்‌, அன்பு உள்ளம்‌ கொண்டவளாக இருக்க வேண்டும்‌, பொய்‌ சொல்லாதவளாக, திருடாதவளாக, புறணி பசாதவளாக, கோபப்படாதவளாக, பத்துக்கட்டளைகளைத்‌ தவறாது பின்பற்றுபவளாக, ஏழைகளின்‌ சிரிப்பில்‌ இறைவனைக்‌ காண்பவளாக இருக்கவேண்டும்‌ என்றான்‌. அப்போது அந்த இளைஞன்‌, நீ எப்படிபட்ட இளைஞனை திருமணம்‌ செய்துகொள்ள விரும்புகின்றாய்‌? எனக்‌ கேட்டான்‌.

அதற்கு அந்தப்‌ பெண்‌, என்னை மணம்‌ முடிக்க விரும்புகின்றவன்‌ அழகாக இருக்க வேண்டும்‌, அன்பு நடமாடும்‌ கலைக்கோயிலாக இருக்கவேண்டும்‌, பாய்‌ சொல்லக்கூடாது, திருடக்கூடாது, என்னை எப்போதும்‌ மதிப்போடும்‌ மரியாதையோடும்‌ நடத்தவேண்டும்‌, பத்துக்கட்டளைக்களுக்கு எதிராக ஒருபோதும்‌ செயல்படக்கூடாது என்றாள்‌.

அதற்கு அந்த இளைஞன்‌, எனக்கும்‌ திருமணம்‌ நடக்கப்‌ போவதில்லை. உனக்கும்‌ திருமணம்நடக்கப்‌ போவதில்லை என்றான்‌.

அந்த இளைஞன்‌ சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. குறையில்லாத மனிதர்‌ இந்த உலகத்தில்‌ கிடையாது. குறையில்லாத மனிதரைத்‌ தேடுவது, முள்ளில்லாத மீனைத்‌ தேடுவதற்குச்‌ சமம்‌.

இதனால்தான்‌ இயேசு, மனிதர்களின்‌ குறைகளைப்‌ பார்க்க வேண்டாம்‌. அதைப்பற்றி பேச வேண்டாம்‌ என்கின்றார்‌.

இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ சீராக்கின்‌ ஞான நூல்‌ நாம்‌ பேசுவதற்கு முன்னால்‌ நம்மையய நாம்‌ சோதித்துப்‌ பார்க்க வேண்டும்‌. எனக்‌ கூறுகின்றது. நாம்‌ எப்போதுமே மற்றவர்களிடம்‌ உள்ள நிறைவைக்‌ கண்டு அவர்களின்‌ ஈடற்றத்திற்காக உழைக்க வேண்டும்‌. மோசேயினுள்‌ இறைவன்‌ சுதந்தரத்‌ தாகத்தைக்‌ கண்டது போல , இயேசு மகதலா மரியாவுக்குள்‌ ஒரு நற்செய்தியாளரைக்‌ கண்டது போல நாம்‌ எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களின்‌ நிறைவைப்‌ பாராட்டூகின்‌டறாமமா, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள்‌ குறைகள்‌ குறைய, மறைய வாய்ப்பு உண்டு.

மேலும்‌ அறிவோம்‌ :

தன்குற்றம்‌ நீக்கிப்‌ பிறர்குற்றம்‌ காண்கிற்பின்‌
என்குற்றம்‌ ஆகும்‌ கீறைக்கு (குறள்‌: 436)

பொருள்‌ : முதலில்‌ தன்‌ குறையை அறிந்து அதனைப்‌ "போக்கிக்கொண்டு, பிறகு பிறர்‌ குறையைக்‌ காணும்‌ வல்லமை வாய்ந்த ஆட்சியாளர்க்கு எந்தக்‌ குறையும்‌ வராது!

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
ஒர் அம்மா தனது 10 வயது மகனிடம் 30 ரூபாய் கொடுத்து சல்லடை வாங்கி வரும்படி கேட்டார். அவன் கடைக்குச் சென்று சல்லடை வாங்காமல் வெறுங்கையுடன் திரும்பினான். "சல்லடை எங்கடா?" என்று அம்மா கேட்டதற்கு அவன், "போமா! அது எல்லாம் பொத்தலாக இருக்கின்றது" என்றான். அம்மா தனது மகனின் மரமண்டையை கண்டு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியமல் மெளனியாக நின்றார்.

இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "சல்லடையில் சலிக்கின்ற போது உமி தங்கிவிடுவதுபோல, மனிதரின் பேச்சில் மாசு படிந்து விடுகிறது, மரத்தின் கனி மரத்தின் தன்மையை வெளிப்படுத்துவது போல, மனிதரின் சொல் உள்ளத்தில் உள்ளதைக் காட்டுகிறது" (சீஞா 27:4-7). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்: " ஒரு மரத்தை அதன் கனிகொண்டே அறிய முடியும். அவ்வாறே ஒருவரின் பேச்சைக் கொண்டே அவர் எத்தகையவர் என்பதை அறிய முடியும். ஏனெனில் உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" (லூக் 6:43-45).

பயனில்லாத சொற்களைப் பேசுபவரை மனிதரில் பதர் என்று முத்திரை குத்துகிறார் ஐயன் திருவள்ளுவர்.

மயன்இல்சொல்பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல் (குறள்196)

இரண்டு பேருடைய நாக்கு மட்டும் அவர்கள் இறந்த பின்னும் அழியாமல் இருந்தது என்று திருச்சபை வரலாறு கூறுகிறது. ஒருவரின் நாக்கு அதிகம் பேசியதற்காக அழியாமல் பாதுகாக்கப்பட்டது. மற்றவரின் நாக்கோ அவர் ஒன்றுமே பேசாமல் மெளனம் காத்தமைக்காக அழியாமல் பாதுகாக்கப்பட்டது.

புனித பதுவை அந்தோணியார் கி.பி. 1231-ஆம் ஆண்டு இறந்தார். அடுத்த ஆண்டு அவரது கல்லறையைத் திறந்தபோது, அவரது உடல் முழுவதும் அழிந்துபோன நிலையில், அவரது நாவு மட்டும் அழியாமல் இருந்தது. அதைக்கண்ட புனித பொனவெந்தூரா என்பவர், "கடவுளைப் புகழ்ந்த நாவைக் கடவுள் அழியாமல் பாதுகாத்தார்" என்றார்.

ஐரோப்பாவில் பொகேமியா நாட்டு அரசன் வென்செஸ்லாசின் மனைவி சோபியா என்பவர். அவரின் ஆன்ம குரு ஜான் நெபோமுக். அவரிடம் அரசன் தன் மனைவி சோபியாவின் பாவ அறிக்கையை வெளியிடுமாறு கேட்க, அவர் மெளனம் காத்தார். அதற்காக அவர் கொல்லப்பட்டார். 1363-ஆம் ஆண்டு அவர் அடக்கம் செய்யப்பட்டார். 330 ஆண்டுகளுக்குப்பின் அவரது கல்லறை திறக்கப்பட்டது. அப்போது அவரது நாக்கு அழியாமல் இருந்து. 1729-ஆம் ஆண்டு திருத்தந்தை 13-ஆம் பெனடிக்ட் அவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார். பாவசங்கீர்த்தன இரகசியத்தை வெளியிடாமல் மெளனம்.
காத்தமைக்காக அவரது நாவு அழிவுறாமல் பாதுகாக்கப்பட்டது.

நாம் பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும், பேசக் கூடாத நேரத்தில் மெளனம் காக்க வேண்டும் என்பதற்கு இந்த இரண்டு புனிதர்களும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்

கிறிஸ்து பேச வேண்டிய நேரத்தில் பேசினார், அதிகாரத்துடன் பேசினார். அவருடைய பேச்சில் விளங்கிய ஞானத்தைக் கண்டு மக்கள் மலைத்துப் போயினர் (மத் 7:28). ஆனால் பாடுகளின் நேரத்தில், அவர்மீது அவரது பகைவர்கள் அடுக்கடுக்காய் குற்றங்களைச் சுமத்தியபோது அவர் மெளனம் காத்தார். அதைக் கண்ட ஆளுநர் பிலாத்து வியப்படைந்தார் (மத் 27;4). "நானோ செவிடர் போல் காது கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கிறேன்" (திபா 38:13) என்ற திருப்பாவுக்கு இலக்கணம் ஆனார்.

நாம் அடிக்கடி பிறருடைய குற்றங்களை மிகைப்படுத்தி. அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம். அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமையில்லை என்கிறார் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து. ஏனெனில் நம்மிடத்தில் கணக்கற்ற குற்றங்கள் உள்ளன. முதலில் நம் கண்ணில் உள்ள மரக்கட்டயை எடுத்துவிட்டு, அதன்பின் மற்றவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க முன்வரவேண்டும். (லூக் 6:41-42). முதலில் தன்னுடைய குற்றங்களை நீக்கிவிட்டு. அதன்பின் பிறருடைய குற்றங்களைக் களைய முற்பட்டால், ஒரு தலைவனுக்கு எந்தக் குற்றமுமில்லை என்கிறார் ஐயன் திருவள்ளுவர்,

தன்குற்றமநீக்கிபபிறர்கற்றம்காண்கிற்பின்
என்குற்றமாகும் இறைக்கு? (குறள்)

வழக்கமாக, தலைவர்கள் தமக்கடியில் உள்ளவர்களுடைய குற்றங்களைச் சுட்டிக்காட்டுவர். தங்களிடத்திலும் அதே குற்றங்கள் இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. பிறருடைய குற்றங்கள் உடைத்தெறியப்பட வேண்டிய கண்ணாடி அல்ல, நமது குற்றங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்.

ஒருவர் தனது மகளுக்குத் அருட்சாதனங்கள் செய்து அவரைத் தன் மருமகனிடம் ஒப்படைத்து, "மாப்பிள்ளை என் மகளுக்குக் கொஞ்சம் வாய் நீளம்; அவளைக் கவனிச்சுக்குங்க" என்றார். அதற்கு மருமகன் மாமனாரிடம், "கவலைப்படாதீர்கள்; நான் அவளை நன்றாக கவனித்துக் கொள்வேன். எனக்குக் கொஞ்சம் கை நீளம்" என்றார், பெண்களுக்கு வாய் நீளமாக இருப்பதால் ஆண்களுக்கு கை நீளமாகிறது. நாவை அடக்கினால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் தலையெடுக்காது.

மிக நல்லவர்களிடத்திலும் பல குற்றங்கள் உள்ளன; மிகக் கெட்டவர்களிடத்திலும் சில நல்ல குணங்கள் உள்ளன; எனவே பிறருடைய குறைகளைப்பற்றிப் பேசலாகாது.
 தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை


குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

ஊசியைப்பார்த்துச் சல்லடை சொன்னதாம் நீ ஒட்டையென்று. நுனிமரத்தில் நின்று அடிமரத்தை வெட்டலாமா? இன்றைய வழிபாடு எழுப்பும் கேள்வி இது.

கணவன். மனைவி வாடகை வீட்டில் குடியிருந்து ஒரு நாள் காலையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த வேளையில் சன்னல் வழியாக மனைவி பார்க்கிறாள். அடுத்த வீட்டுப் பெண் துணி
துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவள் கணவனை நோக்கிச் சொல்லுகிறாள்‌: "பாருங்கள், அந்தப் பெண் சரியாகத் துவைக்காமல் அழுக்கோடும் கரும்புள்ளிகளோடும் காயப்போடுகிறாள்‌". இப்படிப் 'பலநாள்கள் குறை "சொல்லிக் கணவன் மெளனமாக இருந்தான்.

ஒருநாள் வியப்போடு சொல்கிறாள்‌: "இப்போது அவள் நன்றாகத் துவைக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள்‌.. இப்போது எவ்வித அழுக்கோ கரும்புள்ளியோ இல்லை". உடனே கணவன் சொன்னான் அப்படியல்ல. நேற்று மாலையில்தான் நமது வீட்டுச் சன்னல் கண்ணாடிகளையெல்லாம் நன்றாகத் துடைத்துக் கறைகளையெல்லாம் அகற்றினேன்‌".

"நீங்கள் . உங்கள் கண்ணிலிருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல்‌' உங்கள் சகேர்தரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்‌?" (லூக். 6:41) என்ற இயேசுவின் கேள்வி எவ்வளவு பொருள் பொதிந்தது!

மற்றவர் குற்றவாளி, குறையுள்ளவர் என்று நமது ஒரு விரல் அவர்களைச் சுட்டிக்காட்டும் போது, மற்ற மூன்று விரல்களும் நம்மை நாக்கி அல்லவா திரும்பி இருக்கின்றன! கண்ணாடி முன் நின்று பிம்பத்தைப் பார்த்து "நீ குற்றவாளி என்றால் என் பிம்பமே என்னைப் பார்த்து நீ குற்றவாளி என்கிறது"...

கண்ணில் சிறு தூசி விழுந்துவிட்டால். துடிதுடிக்கிறோம். "கண்ணைக் கசக்குகிறோம். கண் சிவந்துவிடுகிறது. கண்ணீர்‌" வடிகிறது. கண் கூசுகிறது. சில நேரங்களில் கண்ணைக் காயப்படுத்துகிறது. எதையும் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. தெளிந்த நீரில் கண்ணைக் கழுவும்போது மறுபடியும் கண் சரியாகிறது. " சிறு தூசி கண்ணில் விழுந்தாலே இவ்வளவு பிரச்சனை என்றால் ஒரு பெரிய மரக்கட்டையே உள்ளே இருந்தால் எப்படி இருக்கும்‌? தன்னிடம் உள்ள குறைகளை மறைத்துக் கொண்டு பிறரது குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களை இயேசுவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

விடுதலை அடைந்தவர்களால்தான் விடுதலை கொடுக்க முடியும். குறையில்லாதவர்களுக்குத்தான் பிறர் குறைகளைச் சுட்டிக்காட்ட உரிமை உண்டு. வழிகாட்ட விரும்பினால் முதலில் வழியை நீ அறிந்திடு. அதனால்தான் "தீர ஆராயாமல் குற்றம் சுமத்தாதே. முதலில் சோதித்தறி; பின்னர் இடித்துரை" என்கிறது சீராக்கின் ஞானம் 11:7.

பிறருடைய குறைகளைச் சுட்டிக் காட்டக்கூடாது என்பது அல்ல நோக்கம். மாறாக எந்த நோக்கத்தோடு குறைகளைச் சுட்டிக்காட்டுகிறோம் என்பது முக்கியம். ஒரு சிலர் தங்களுடைய குறைகளை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள். ஆனால் பிறருடைய சிறு குறையைக் கூட பூதக்கண்ணாடி கொண்டு பெரிதுபடுத்தி அதில் குளிர் காயும் மன நிலையைத்தான் இயேசு சாடுகிறார்.

"யாகாவராயினும் நா காக்க" என்பார் வள்ளுவர். நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கொண்டு பிறரை ஆக்கவோ, அழிக்கவோ முடியும்‌: ஒரு நாள் நாக்கு பல்லைப் பார்த்து "நீ அரைத்துக் கொடுப்பதை நான் சுவைத்து உண்டுள்ளேன். அதனால் உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்‌" என்றது. அதற்குப் பல் நாக்கைப் பார்த்து "நான் அரைத்துக் கொடுப்பதை ஒழுங்கா மரியாதையா தின்னுட்டு அடக்கிப் பேசு. நீ கண்டதைப் பேச அவன் உன்னை விட்டு விட்டு, எடுத்தவுடன் என்னைப் பார்த்தல்லவா "பல்லை. உடைப்பேன்‌" என்கிறான்‌" என்றதாம் சோகத்தோடு.

நாக்குக்கு. நரம்பில்லை. எதையும் பேசும். "தீயினால் சுட்டபுண் உள் ஆறும். நாவினால் சுட்ட வடு எளிதில் ஆறுவதில்லை. உறவுகள் சிதைய பேசும் வார்த்தைகளே பெரிதும் காரணம். சொல்லக்கூடிய இடத்தில் சொல்லக்கூடிய வார்த்தைகளை சொல்லாமல் இருப்பதும் தவறு. சொல்லக் கூடாத இடத்தில் சொல்லக்கூடாத வார்த்தைகளை சொல்லுவதும் தவறு.

"கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை. நல்ல கனி தரும்‌" கெட்ட மரமும் இல்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்‌" (லூக். 6:43-44). இந்தக் கூற்றின் மூலம் இயேசு கற்றுத்தரும் பாடம் என்ன தெரியமா? "நல்லவர் தன் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பார். தீயவரோ "தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பார். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்‌" (லூக். 6:45) என்பதுதான்.

உள்ளத்தின் நிறைவுஎப்போதும் நல்லதாக இருக்க வேண்டும். என்ற தேவையில்லை. "உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்‌... மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்‌"" (மத்‌: 42:34, 36-37).

திருத்தூதர் யாக்கோபு (3:11-12) சொல்வார்‌: "ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா? அவ்வாறே உப்பு நீர்ச் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது.

பிறரைப் பற்றி, பிறரின் குறைகளைப் பற்றி பேசுவதற்கு முன் நான்கு கேள்விகளை நம்மை, நோக்கி எழுப்பிக் கொள்ள வேண்டும்.

1. பிறர்குறைகள் பற்றிப் பேசுவதில் இன்பம் காண்கிறேனா?
2. எனது பேச்சு பிறர் வளர்ச்சிக்கும் நல் உறவுக்கும் உதவுமா?
3. பிறர், செய்யும் தவறுகளை உரியவர் முகத்தைப் பார்த்து நேரடியாகச் சொல்லும் துணிவு உண்டா?
4.குறை கூறுவது பிறர் மீது எனக்குள்ள அன்பை வெளிப்படுத்துவதாக இருக்குமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும்போது "பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (மத். 7:12) என்ற பொன்விதியை நினைத்துக் கொள்வது நல்லது.

குறைகள் கூறுவதைவிட அக்குறைகளைக் களைய ஏதாவது நம்மாலான எளிய முயற்சிகளில் ஈடுபடலாமே!

மூன்றடி அகலப் பள்ளத்தில் சேறும் சகதியுமாக இருந்த அந்த வீதியைக் கடக்க நேர்ந்தவர்கள் அரசையும், ஊராட்சி அலுவல்கத்தையும் திட்டிக் கொண்டும், பொருமிக் கொண்டும் போய்க் கொண்டிருந்தனர். அங்கே வந்த 10 வயதுச் சிறுமி பக்கத்தில் பாதையோரம் கிடந்த ஆறு அரைச் செங்கற்களை எடுத்து பள்ளத்தில் அரையடிக்கொரு கல்லாக வைத்தாள். அவற்றின் மேல் கால் வைத்து கடந்து சென்றாள். பலரும் பின்பற்றிச் சொன்றார்கள்.

நமது சமுதாயத்திலும் சேறாக இருக்கும் நிலை கண்டு புலம்பித் திரியப் போகிறோமா? சேற்றைக் கடக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்துச் செயல்பட முனைவோமா?

மனிதன் குறையுடையவன் மட்டுமல்ல. குறை காண்பவனும் கூட. பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன் தன் குறையைக் காண்பவன் முழு மனிதன்.

"மற்றவர்களை எடை போடுவதில் . காலத்தைச் செலவழிக்காதீர்கள். 'ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கே நேரம் இல்லாமல் போகும்‌" என்பார் புனித அன்னை தெரசா.

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிற்கு என்பது திருக்குறள்.

நம்மிலிருந்து பிறக்கட்டும் மாற்றம்
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 மறையுரை முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
 
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌ பெங்களூர்
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
 
சிந்தனைப் பயணம்.  திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
உள்ளத்தின் நிறைவை வாய்பேசும்

பொதுக்காலத்தின் 8ம் ஞாயிறான இன்று மனிதனின் வார்த்தை, வார்த்தையின் ஆளுமை, அந்த வார்த்தை தரும் வாழ்வு, என இறை வார்த்தைகளின் வழியாக நாம் யார் ?, நம் தேவை என்ன ? என்பதை திருஅவை நமக்கு நினைவு படுத்துகிறது. இன்றைய முதல் வாசகத்தில் மனிதருக்கு வார்த்தைகள் அல்லது உரையாடல்கள் எவ்வளவு முக்கியமானது என வலியுறுத்தப்பட்டு இருப்பதை நாம் படிக்க கேட்டோம். சீராக் ஆகம ஆசிரியர் ஒரு மனிதனைப் பற்றி அறிந்துகொள்ள அவனுடைய பேச்சு ஒன்றே போதும் என்கிறார் அவன் நல்லவனா? பண்பாளனா? தகுதியுள்ளவனா? திறமைமிக்கனா? அவன் யார் என்று ஆய்ந்து அறிய அவனுடைய உரையாடல் ஒன்றே பதில் சொல்லும் என்கிறார். மேலும் தனி மனிதனின் அன்றாட வாழ்வு, சமூகத் தொடர்பு ஆகியவைகள் இந்த உரையாடல்களை மையமாகக் கொண்டு - நகர்வதால் அதனைக் கையாள்வதில் எச்சரிக்கை தேவை இல்லையெனில், உமி சல்லடையில் தங்குவது போல் நம் வாழ்விலும் இடையுறுகள் தங்கும் அபாயம் உண்டு என்கிறார்.. .

நற்செய்திலோ ஆண்டவர் இயேசுவின் மலைப் பொழிவு அருவி எனக் கொட்டுகிறது. விவிலியத்தில் இன்றும் உலகில் வாழ் அனைத்து மக்களாலும் மதிப்புடனும் மரியாதையுடனும் வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் பகுதி இயேசுவின் இந்த மழைப் பொழிவு மட்டும்தான். யூத மக்களிடையே நீதிமொழிகள் சீராக் ஆகமம் சாலமோனின் ஞான ஆகமம் இணைச்சட்டம் என பல நூல்கள் வாழ்க்கை நெறிகளை மக்களுக்கு கூறுவனவாக இருந்தாலும், இயேசுவின் இந்த மழைப்பொழிவு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இன்றும் இருக்கின்றது.

யூதமத திருச்சட்டத்திற்கும் இயேசுவின் மலைப் பிரசங்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை காண்போம். திருச்சட்டம் அனைத்தும் பரிகாரம், தண்டனை என்று நிபந்தனைகளுடன் தொடர்கின்றது , இயேசுவின் வார்த்தைகளோ நிபந்தனைகள் இன்றி, தனிமனித செயல்பாட்டிற்கு சுதந்திரம் தரும் இயேசுவின் ஆளுமைகளாக இன்றும் பவணி வருகின்றன. இயேசு அழகாக , தெளிவாக, முடிவாக கேட்கச் செவி உள்ளவன் கேட்கட்டும் என்று ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு தருகின்றார். நிபந்தனையற்ற இறை அன்பின் வழிநடத்தலையும், அதேவேளை நேர்மறையான தனிமனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறுகின்றார். குருடன் வழிகாட்ட கூடாது உண்மைதான், ஆனால் வழிகாட்டுபவன் குருடனாய் இருக்கக்கூடாது என்பது மிக மிக முக்கியம் என்று கூறுகிறார். ஒளியான இயேசு நம்முள் இருப்பதால் நாம் குருடராய் வாழக்கூடாது. நமது கண்கள் ஒளியில் பிரகாசிப்பதால், பிறருக்கு வழியான அவரை அடையாளம் காட்டுவது நமது கடமை என்பதை மறக்கக்கூடாது.(லூக்கா நற்செய்தி 6:39)

மனிதன் ஒருகாலும் கடவுளாக முடியாது, ஆனால் இறை பற்றுதலும், மனிதநேயமும் - உள்ள வாழ்க்கைமுறை அவனுக்கு கடவுளின் அருகாமையை எளிமையாக்கும் என்கிறார். (லூக்கா நற்செய்தி 6:40) பிறரை குறை கூறுவதை கடுமையாக கண்டிக்கும் இயேசு முதலில் நாம் குற்றமற்றவராக வாழ வேண்டும் என்கிறார. (லூக்கா நற்செய்தி 6:41-42 ) பாருங்கள்:ஒருவரை சுட்டிக் காட்ட நமது கையை முன்னெடுக்கும் போது, நமது கட்டைவிரல் வானத்தையும் (இறைவனையும்), நம்மை நோக்கி மடங்கிடும் மூன்று விரல்களும் நேற்று, இன்று, நாளை என நாம் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகின்ற நிலைகளை ஆய்ந்து அறிந்திட அழைப்பு தருவதை கவனித்து இருக்கிறோமா?. நாம் கண்டிப்பாக நம் கையை நீட்டும் முன் அதை கவனிக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.

" தீதும் நன்றும் பிறர் தர வாரா"

என்பதற்கிணங்க நாம் உச்சரிக்கும் நமது வார்த்தைகள்தான் நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பயன் தருகின்றது. அது நன்மையானதா? தீமையானதா? என்பது, அவரவர் உள்ளத்தின் நிறைவைப் பொறுத்தது. எனவேதான், உள்ளத்தின் நிறைவை வாய் பேசும் என்று முடிக்கிறார் இயேசு. (லூக்கா நற்செய்தி 6:43-45) ஆகவே நாம் நல்லவராக வாழவும், நம் உள்ளமாகிய நல்ல கருவுலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுக்கவும். இயேசுவின் உயிருள்ள வார்த்தைகள் நம்மை அழைக்கின்றன. இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை தனது வாழ்வாக்கிய பவுல் அடிகளார் - அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்; "சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது என்கிறார். அதாவது சாவுக்குரியவனும் அழிந்து போகக்கூடியவனுமாகிய மனிதன் உயிர் உள்ள இயேசுவின் இறை வார்த்தைகளை அணிந்து கொள்ளும்போது, அதைத் தனது வாழ்வாக்கும் போது நிலை வாழ்விற்குரிய அழியாமையையும், சாகாமையையும் பெற்றுக் கொள்கிறான் என்று கூறுகின்றார். மேலும் இயேசுவின் நிபந்தனையற்ற அன்பை அடித்தளமாகக் கொண்ட வாழ்க்கை முறையை, மனிதன் பின்பற்றும் போது பாவம் அதன் வலிமையை இழந்து, அழிந்தும் போகின்றது என்பதும் உண்மையே. அது மட்டுமன்றி உயிர்ப்போடு, உவப்புடன், உண்மை உள்ள மனிதனாக, உலகோடு உறவாட நமக்கு வாய்ப்பையும் உரிமையையும் அளிக்கின்றது.

தனிமனித வாழ்க்கையில் உரையாடல்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதையும் அந்த உரையாடல்களை கம்பீரமாக கையாண்ட இயேசுவின் ஆளுமையையும் அதன் அறிவுரைகளையும் புரிந்து கொண்ட நாம், நம் வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில்; புனித பவுல் அடிகளார் கூறுவது போல

நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.

(1கொரிந்தியர்13:10) என்பதற்க்கிணங்க நம்முள் உள்ள அரைகுறையான பாவத்தை அழித்து, பாவமற்றவர்களாக நமது உள்ளத்தின் நிறைவான இயேசுவின் அன்பை, எடுத்துக் கூறுகின்ற - பேசுகின்ற வாய்ப்பைப்பெற்ற மனிதர்களாக, ஆண்டவருக்காக உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து; ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக்கும் செயல்வீர்களாக வாழ்வோம்.

இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக


சிந்தனைப் பயணம்.
திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ