தமிழ் திருப்பயணிகள் ஆன்மீகப்
பணி மையம் உங்களை
வரவேற்கின்றது
மரியன்னை உங்களை அழைக்கிறாள்.........
இறை சித்தத்தை செயல்படுத்தும் மாபெரும் சக்தி மரியன்னை. அவள் மக்களின்
அன்னை. அன்னையிடம் வரம் கேட்க அல்ல, அன்னையையே வரமாகக் கேட்க,
லூர்து நகர் திருத்தலம் செல்வோம். குடும்பமாய்க் கூடி ஜெபமாலை
சொல்வோம். தூய ஆவியின் வரங்களும், அன்னை மரியின் பரிந்துரையும்
கிடைத்திட திருப்பலியில் விசேடமாக
தொடர்ந்து அனைவருக்காகவும் லூர்து அன்னை
மூலமாக ஜெபிக்கிறோம்.
தினம்
ஒரு நல்வார்த்தை
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,
எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். திபா
32: 1
இரக்கத்தின் சிறப்பு காலமாகிய தவக்காலத்தை தொடங்குகின்றோம்.
இந்த நாளும் இனிவரும் நாட்களும் கடவுளின் இரக்கத்தையும்,
மன்னிப்பையும், அன்பையும் அதிகம் உணரும் காலமாகவும்,
அதனையே பிறரோடு பரிமாறிக் கொண்டு சாட்சிய வாழ்வு
வாழும் காலமாக இருந்திட மனதார அன்புடனே வாழ்த்தி வரவேற்கின்றேன்.
இயற்கை ஒரு பாடத்தை அற்புதமாக கற்றுத் தருகின்றது. மரத்தின்
இலைகள் எல்லாம் உதிர்ந்து, மொட்டை மரங்களாக காட்சி தந்து,
இலையுதிர் காலம் என்று சொல்லிக் காட்டுகின்றது.
ஆனால் இந்த மரங்கள் மொட்டை மரங்களாகவே இருந்து போவதில்லை.
தளிர் விட்டு, பசுமையோடு மரம் முழுவதும் இலைகளோடு, அடுத்து,
பூக்களோடு, காயோடு, கனியோடு, மிகுந்த பலன் கொடுக்க உள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை, தன்னிடம் உள்ள தேவையில்லாத பழுப்பேறிய,
பழைய இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு, புதிய தளிர்
விட்டு, பூத்து குலுங்கி, காண்போருக்கு பசுமையான
காட்சியையும், இதமான குளிரான நிழலையும், காய், கனி தந்து
தன் இருப்பின் பலனை பிறருக்கு பகிர்ந்து கொடுத்து பாடம்
சொல்லி தருகின்றது.
நாமும் நம்மிடம் உள்ள பழுப்பேறிய, பழைய, தேவையில்லாத,
பாவ பழக்க வழக்கங்களையெல்லாம், இச்சையோடு கூடிய நாட்டங்களையெல்லாம்
விட்டு ஒழித்து விட்டு, புதிய தளிரை, கிறிஸ்து என்கின்ற
தளிரை நம்மிலே வளர விட்டு, பலன் தந்து வாழும் போது, நம்முடைய
பிறப்பின் பலன் காண்போம் என்பதுவே உண்மை.
கிறிஸ்து என்ற தளிர் நம்மிலே வளர இடமளிக்க, அவருக்கு
ஒவ்வாத பழைய பாவ வாழ்க்கையையெல்லாம் உதறிவிட ஏற்ற காலமே
இந்த தவக்காலம்.
இதனையே இன்று, உங்களது உள்ளங்களை தூய்மையாக்குங்கள் என்ற
அறைகூவலோடும், ஒப்புரவாகுங்கள் என்ற பவுலின்
வேண்டுகோளோடு, தவம், செபம், தான தர்மங்கள் வழியாக
கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ இறைவார்த்தை நம்மை
அழைக்கின்றது.
பலியிலே பங்கேற்று, நெற்றியிலே இடப்படும் சாம்பலின் அறிகுறி
சொல்லும் மண்ணிலிருந்து உருவான நாம் மண்ணுக்கே திரும்ப
உள்ளோம் என்ற உணர்வோடு நீட்டித்து தரும் காலத்தை
பயனுள்ளதாக்க உறுதியெடுப்போம்.
மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக்
கேட்டருளும்.
1. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா!
நீர் கொடையாகக் கொடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவிகள்: இன்றைய சவால்கள் நிறைந்த உலகின்
நடுவே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் உமது அழைப்பை
சரியான முறையில் அடையாளம் கண்டு, நீர் அவர்களிடம்
ஒப்படைத்துள்ள இறைமக்களை நிறையுண்மையை நோக்கி
வழிநடத்திச் செயல்படவும், உமது திருவுளம்
நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்ச்சியடையவும் அருள்தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. இரக்கத்தின் நாயகனே ஆண்டவரே!
இத்தவக்காலம் என்னும் கொடைக்காக உமக்கு நன்றி
கூறுகிறோம். இந்த நாள்களில் நீர் எங்கள்மீது
பொழியவிருக்கிற சிறப்பான பேரன்புக்காக, இரக்கத்துக்காக
நன்றி கூறுகிறோம். இறைவா, இந்த நாள்களை நாங்கள்
பலனுள்ள விதத்தில் செலவழிக்க உமது அருளை, ஆற்றலை
எங்களுக்குத் தர வரம் அருள இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
3. கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற
ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே
இறைவா!
எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய
நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும்
மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத்
தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து
குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும்
நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
4. தூய ஆவியின் வல்லமையைக் கொண்டவரான இயேசுவே,
இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம்
நாடாது செயல்பட அருள் தந்தருள வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
5. வழிகாட்டும் இறைவா!
நாங்கள் ஒவ்வொரும் நீர் ஏற்படுத்திய திருச்சபை வழியாக
நீர் வெளிப்படுத்தும் பாதைகளையும், கற்பிக்கும் உண்மை
நெறிகளையும் அறிந்து அவற்றைப் பின்பற்றி, எம் ஆன்மீக
வாழ்விற்கெதிராக வரும் சோதனைகளை வென்று அர்த்தமுள்ள
வாழ்வு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
6. எமக்கு ஆதரவளிக்கும் இறைவா!
கடின நோய்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும்,
மருத்துவ மனைகளிலிருந்தும் வேதனைப்படும்
அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். மக்களை வாட்டி
வதைக்கும் எல்லா நோய்களும் அகன்று, அவர்கள்
சுகமடையவும், அவர்களுடைய வேதனைகளைத் தணித்தருளவும்
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நோன்போடு சேர்ந்த மனமாற்றத்தையே தவக்காலம்
நமக்கு வலியுறுத்துகின்றது
மீட்பின் காலம், அருளின் காலம், செபத்தின் காலம் மனமாற்றத்தின்
காலம் என்ற அறைகூவலை விடுக்கும் தவக்காலத்தில் நாம்
நுழைந்துள்ளோம். "நீங்கள் உங்கள் உடைகளை
கிழித்துக்கொள்ள வேண்டாம்
.
இதயத்தை கிழித்துக்கொண்டு உங்கள் ஆண்டவராகிய இறைவனிடம்
திரும்பி வாருங்கள" என்று இறைவாக்கினர் யோசேவ்
கூறுகின்றார். (யோசேவ் 2:12-13)
ஆகவே பாஸ்கா திருவிழாவைக் கொண்டாட விசுவாசிகள் தங்களை
முழு மனதுடன் ஆயத்தம் செய்யும் காலம் தான் தவக்காலம்.
நம் ஆண்டவர் நாற்பது நாட்கள் நோன்பிருந்தார் என்று நற்செய்தி
கூறுகின்றது.
பழைய ஏற்பாட்டில் நாற்பது நாள் வெள்ளப்பெருக்கு, இஸ்ராயேல்
மக்கள் பாலைவனத்தில் பயணம் செய்த நாற்பது ஆண்டுகள்,
மோசே நாற்பது நாள் நோன்பிருந்து மன்றாடியது, இறைவாக்கினர்
எலியா ஒரேப் மலைக்கு செல்ல எடுத்துக்கொண்ட நாற்பது
நாட்கள், நினிவே மக்கள் உண்ணா நோன்பிருந்த நாற்பது
நாட்களையும் குறிக்கின்றது.
பழைய ஏற்பாட்டில் சுவையான உணவு, இறைச்சி, திராட்சை
இரசம் ஆகியவற்றை கைவிட்டு நோன்பிருந்த தானியேலுக்கு ஆண்டவரின்
திருக்காட்சி அருளப்பட்டதாக தானியேல் 10:2-3 வசனங்களில்
காண்கின்றோம்.
புதிய உடன்படிக்கையில் நம் ஆண்டவர் கிறிஸ்துவின்
நோன்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தேயூ 4:1-11, லூக்
4:1-13 அவர் தூய ஆவியால் நிரப்பப்பட்டவராய் பசாசை
வென்றார். பழைய இஸ்ராயேல் மக்கள் பாலை நிலத்தில்
மூன்று சோதனைகளிலும் வெற்றிகாணவில்லை. ஆனால் புதிய இஸ்ராயேலின்
தலைவரான இயேசு வனாந்தரத்தில் மூன்று சோதனைகளிலும்
வெற்றி பெறுகின்றார்.
இவரது வெற்றிக்கு நோன்பு, செபம், இறைவார்த்தையின் வல்லமை
இவையே காரணமாக அமைந்தது. ஆண்டவர் யேசு மலைப்பொழிவில்
நோன்பு எவ்வாறானதாக அமைந்திட வேண்டுமென்று கற்பிக்கின்றார்.
அது வெறும் வெளிவேடச் சொல்லாகிவிடக்கூடாது. மத்தேயு
(6:16-18)
முதல் கிறிஸ்தவர்களுக்கு நோன்பும், மன்றாட்டும் ஆற்றல்
அளிப்பதாக இருந்தன. திருத்தூதர்களான பவுல், பர்னபாவையும்
நோன்பிருந்து திருப்பணியில் அமர்த்தினர். (தி.ப. 12:3)
அவர்கள் நோன்பிருந்து செபித்தே மூப்பர்களைத்
தேர்ந்தெடுத்தனர். (தி.ப. 14:23)
திருத்தூதர் பவுல் தனது பணி வாழ்வில் தான் அடைந்த இன்னல்களை
தமது திருமுகத்தில் குறிப்பிட்டுள்ளார். (2 கொரி
11:27, 6:5) கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனை
யுற்றார். அவர் மேலும் பட வேண்டிய வேதனையை நாம் நம்
உடலில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார்.
(கொலோ 1:24) தூய்மையான வழி நோன்பு என்று புனித ஏப்ரம்
கூறுகின்றார்.
திரு முழுக்கு, பாவப்பரிகாரம் ஆகிய இரண்டிற்கும் சரியான
ஆயத்தம் தேவை. அப்போதுதான் உண்மையான விதத்தில் உயிர்ப்பு
விழாவை கொண்டாட முடியும். அதற்கு நோன்பு அவசியம்.
நோன்பு பாவத்தை போக்குகிறது என்று இரண்டாம் வத்திக்கான்
சங்க ஏடு எடுத்தியம்புகிறது.
வெறும் நோன்பினால் எவ்வித பயனுமில்லை என்பதை நாம் உணர்ந்து
எமது பழைய பாவ வாழ்வை களைந்து புதிய இதயத்தை அணிந்து
கொண்டால்தான் நோன்பு பலன் தருமென்று புனித லொயோயா
கூறுகிறார். ஆகவே தவக்காலத்தில் மாமிச உணவை மட்டுமல்ல,
பாவத்தையும் தீய செயல்களையும் கைவிட்டு வாழ முயற்சி எடுப்போம்.
தவக்கால
சிந்தனைகள் -1 : தவக்காலம் ஏன் ?
இது வெறும்
40 நாட்கள் மட்டும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ நம்மை அழைக்கும்
காலம் அல்ல. வருடத்தின் 365 நாட்களும் நல்ல கிறிஸ்தவர்களாக
ஆண்டவர் இயேசு சுவாமிக்கு மிகவும் பிரியமான பிள்ளைகளாக
வாழ்வதற்கு நம்மை நாமே தயாரிக்கும் காலம். அதற்குத்
தேவையான முயற்சியும், பயிற்சியும் எடுக்கும் காலம்தான்
தவக்காலம். அதே போல் ஆண்டவர் இயேசு சுவாமியின்
திருப்பாடுகள் தவக்காலங்களில் மட்டுமல்ல எப்போதும்
தியானிக்கப்பட வேண்டும். தவக்காலங்களில் இன்னும் அதிகமாக
ஆழமாக தியானிக்கப்பட வேண்டும்...
40 நாட்கள் நான் நல்லவனாக, நல்லவளாக வாழ்வேன். பயனற்ற
வார்த்தைகள், தீய பேச்சுகள் பேசமாட்டேன். தவம்
செய்வேன்; பரிகாரம் செய்வேன், அதிகமாக ஒறுத்தல் முயற்சிகள்
(பாத்திமா சிறுமிகள் புனித ஜெசிந்தா, புனித
பிரான்ஸிஸ், லூசியா மற்றும் புனித குழந்தை தெரசம்மாள்
போல) செய்வேன், ஆண்களில் பலர் புகைக்க மாட்டேன், 40
நாட்கள் குடிக்கமாட்டேன், பெண்களில் பலர் வு.ஏ. சீரியல்கள்
பார்க்க மாட்டேன் (???), பொதுவாக தொலைக்காட்சியில்
சினிமா, சினிமா பாடல்கள் பார்க்க மாட்டேன், 40 நாட்கள்
மாமிசம் சாப்பிடாமல் இருப்பது, புலன்களை அடக்குவது, சண்டைச்சச்சரவுகள்
செய்யாமல் இருப்பது என்று இருந்துவிட்டு ஈஸ்டருக்கு அப்புறம்
முன்னைவிட அதிகமாக அனைத்து காரியங்களையும் செய்வேன் (
நல்ல வு.ஏ. சீரியல் (???), நல்ல சினிமா (?), நல்ல
சினிமா பாடல்களுக்கு (???) தவக்காலத்திற்குப் பின்
விதிவிலக்கு கொடுத்துவிடலாம். மற்ற கெட்ட பழக்கங்கள்
நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும்) என்றால் இந்த தவக்காலமே
நமக்கு தேவையில்லை.
மாற்றங்கள் வேண்டும், முன்னேற்றம் வேண்டும் இறைவனை
நோக்கி தவக்காலத்தில் எடுத்த நல்ல முடிவுகள் பின்பற்றப்பட
வேண்டும். ஆண்டவரை நோக்கி ஒரு ஸ்டெப்பாவது எடுத்து
வைக்க வேண்டும். எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிடப்படக்கூடாது.
எல்லா நாளுமே நாம் நன்றாக இருந்துவிட்டால் தவக்காலங்களில்
கஷ்ட்டங்கள் இருக்காது.
நாம் இன்னும் பலவிதமான பாவங்கள்களை மனதிற்குள்
வைத்துக்கொண்டு அதோடுதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
அதை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு அவைகளை வெளியேற்ற
வேண்டும். உள்ளத்தில் இருக்கும் நாற்றங்கள் வெளியேற
வேண்டும். உள்ளத்தை நன்றாக கொத்தி பாத்திகட்டி மனம்
வீசும் மலர் உள்ள செடிகளை விதைக்க வேண்டும். அவைகள்
வளர்ந்து மனம் வீசும் மலர்கள் அங்கே பூக்கும். நம் ஒவ்வொருவர்
உள்ளமும் குழந்தைகள் உள்ளமாக மாறினால் குழந்தைகள்
சிரிப்பை கேட்டு பூக்கள் பூப்பதுபோல் நம் உள்ளத்திலும்
ஒவ்வொரு முறையும் பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும்.
இதற்கு ஆண்டவர் இயேசு சுவாமியின் திருப்பாடுகள் நமக்கு
உதவும். நம் பாவங்களுக்காக சிலுவை சுமந்து தன் கடைசி
சொட்டு இரத்தம் வரை சிந்தி நம்மை மீட்டு இரட்சித்த ஆண்டவர்
இயேசு சுவாமிக்காய் நாமும் நம் பாவங்களை முழுமையாக
விட்டு விடுவோம். ஞானஸ்தான வழிபாட்டில் நம்மிடம்
குருவானவரால் கேட்கப்படும் கேள்வியை இப்போது நம் சேசு
சுவாமி நம்மைப்பார்த்து கேட்கிறார்,
" பசாசையும், அவன் கிரியைகளையும், அவன் ஆரவாரங்களையும்
முழு மனதோடு விட்டுவிடுகிறாயா? "
ஆண்டவருக்கு நாம் என்ன பதில் சொல்ல இருக்கிறோம்...
இயேசு சுவாமியின் உயிருள்ள வார்த்தையான " என்னைப் பின்
செல் " என்ற வார்த்தைக்கு உடனே கீழ்படிந்து எதைப்பற்றியும்
யோசிக்காமல் தந்தையையும், வலைகளையும் விட்டு பின்
சென்ற புனித சந்தியாகப்பர் (பெரிய யாக்கோபு), புனித அருளப்பரைப்போல்
நாமும் இந்த உலகக்கவர்ச்சி மாயைகளை யோசிக்காமல் தூக்கி
எரிந்துவிட்டு நம் ஆண்டவர் இயேசு சுவாமியை முழு உள்ளத்தோடும்,
முழு ஆன்மாவோடும், முழு வலிமையோடும் பின் செல்ல தயாராய்
இருக்கிறோமா? சிந்திப்போம்...
அதற்காக இந்த தவக்காலத்தில் நம்மை தயாரிப்போம், பயிற்ச்சி
எடுப்போம். அதை செயல்படுத்துவோம். 365 நாட்களும் நல்ல
கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.
இன்று வீட்டிலும், நாட்டிலும் நடக்கும்
பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப ஜெபமாலை இப்போது இல்லாமல்
போனதுதான். கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இவ்வளவு பெரிய அழிவுகள்,
அதுவும் நாம் கேள்வியே பட்டிராத அழிவுகள் நடப்பது இப்போதுதான்.
கத்தொலிக்கத்திலிருந்து பிரிந்து 100 சபைகளுக்கும்
மேல் வந்ததிற்கும் காரணம் குடும்ப ஜெபமாலை
நின்றதுதான்.
முன்பெல்லாம் நம் கத்தொலிக்க குடும்பங்கள் இரவு ஜெபமாலை
சொல்லாமல் தூங்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள்
எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஜெபமாலை சொல்வார்கள். பல வீடுகளில்
நற்செய்தி வாசித்து ஜெபமாலை ஜெபிப்பார்கள். இந்த ஜெபமாலை
கத்தொலிக்க குடும்பங்களை மட்டுமல்ல உலகையே
காப்பாற்றிக் கொண்டிருந்தது.
ஏனென்றால் ஜெபமாலை தனிப்பட்ட ஒருவருக்காக ஜெபிக்கப்படுவதில்லை.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே "பாவிகளாய்
இருக்கிற எங்களுக்காக "எங்களை சோதனையில் விழவிடாதேயும்"
என்று நாம் ஜெபிக்கும் போது உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்காகவும்
ஜெபிக்கிறோம். "
ஏன் குடும்ப ஜெபமாலை நின்று போனது? வீட்டிற்குள்
நுழைந்த டி.வி என்ற சாத்தான்தான் அதிலும் தனியார் சானல்கள்
வந்த பின்புதான் இத்தகையை இழிவான நிலையை நாம் சந்தித்துள்ளோம்.