ஆண்டவரின் பேரன்பைத் தேடி வந்திருக்கும் அன்பு இதயங்களே!
நம்பிக்கையை மனதுக்குள் நட்டுவைக்கவும், கடவுளின் பேரன்பை
சுட்டிக் காட்டவும் விரும்பி வரவேற்கின்றது பாஸ்காக் காலம் ஐந்தாம்
ஞாயிறு. கடவுளது பேரன்பில் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கும்
போது தந்தையைக் கண்டு கொள்வோம். அவர் செய்ததை அப்படியே மறுபதிவு
செய்வோம்.
மனிதரால் உதறித் தள்ளப்பட்டாலும்... கடவுளால் தெரிந்து கொள்ளப்படுவோம்...
அநியாயமாக தீர்ப்பிடப்பட்டாலும்... நீதிமானாகவும் எண்ணப்படுவோம்.
தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும்... தேர்ந்தெடுக்கப்படுவோம்.
தடுக்கி விழுந்தாலும்.... தூக்கி நிறுத்தப்படுவோம்.
இல்லிடமின்றி அலைந்தாலும்...இருப்பிடம் பெறுவோம்.
புறக்கணிக்கப்பட்ட கல்லாக இருந்தாலும்....
முதன்மையான கல்லாகவும் மாற்றப்படுவோம்.
அவமதிக்கப்பட்டாலும்...வெகுமதியும் பெறுவோம்.
தீயவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டாலும்... தூயவர்கள் எனவும்
தீர்மானிக்கப்படுவோம்.
இகழப்பட்டாலும்...
புகழவும் படுவோம்.
அனுமதி மறுக்கப்பட்டாலும்...அனுமதிக்கவும் படுவோம்.
உரிமைச் சொத்தை இழந்தாலும்...உரிமைப்பேறும் பெறுவோம்.
இருளுக்குள் நடத்தப்பட்டாலும்...ஒளிக்குள்ளும் நடத்தப்படுவோம்.
ஆம் கடவுளது பேரன்பில் நம்பிக்கை வைத்து வாழும் போது
மனிதர்களால் வலுக்கட்டாயமாக நமது நேர்மறையான எண்ணங்களும்
செயல்களும் மறைக்கப்பட்டாலும். கடவுளால் எதிர்மறையான
எண்ணங்களும் செயல்களும் வலுக்கட்டாயமாக மறைக்கப்படும்.
இத்தகைய சக்தி வாய்ந்த கடவுளது பேரன்பு மீது நம்பிக்கை வைத்து
தந்தை செய்த நல்லவைகளை உடன் வாழ்வோருடன் பகிர்ந்து கொள்ள வரம்
தரும் திருப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினரை ஆசிவதிப்பவரே
எம் இறைவா!
திருச்சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை, குருக்களின் கூட்டத்தினர்,
தூய மக்களினத்தினர், தமது வியத்தகு ஒளிக்கு அழைத்தவரின் பணியை
மேன்மைமிக்க வழியில் செய்ய ஆற்றல் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
2. தலைமைப் பணியாளர்களை ஆசிர்வதிப்பவரே எம் இறைவா!
நம்பிக்கையும், தூய ஆவியும் நிறைந்தவர்களாக மக்களின் மாண்புக்காக,
உடன் வாழ்வோரின் நலனுக்காக உழைக்க தலைவர்களுக்கு அருள் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. மேன்மைமிக்க செயல்களை அறிவிக்கும் பணி ஆற்றுவோரை
ஆசிர்வதிப்பவரே எம் இறைவா! கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய கட்டிடமாக மக்களைக்
கட்டி எழுப்ப எங்கள் பங்குத் தந்தைக்கு உடல் உள்ள சுகம் தர இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் சொல்லையும், செயலையும் ஆசிர்வதிப்பவரே
எம் இறைவா!
இறைவனின் பேரன்பை உணர்ந்து வாழவும், இறை நம்பிக்கையை வளர்த்துக்
கொள்ளவும், நல்ல செய்திகளை, நல்ல உணர்வுகளை, நல்ல எண்ணங்களை, நல்ல
செயல்களை உடன்வாழும் மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு
அவைகளைத் தடையின்றி எடுத்துச் செல்லவும் இங்கே கூடி நிற்கின்ற எங்கள்
அனைவருக்கும் அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. உள்ளம் கலங்க வேண்டாம் என மொழிந்த ஆண்டவரே!
நீதியை இழந்து, நிம்மதியை இழந்து, மனிதரால் ஒதுக்கி வைக்கப்பட்டு
சொல்லமுடியாத துன்பங்களை அனுபவிக்கும் இதயங்களை உமது பேரன்பும் நம்பிக்கையும்
எந்நாளும் வழிநடத்த அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
சீடன் ஒருவன் குருவிடம் "தாங்கள் ஞானம்பெற்று விட்டீர்களே இனி என்ன
செய்ய
போகிறீர்கள்? எனக் கேட்டார்... "காட்டிற்கு போவேன்...அடுப்பு எரிக்க
சுள்ளிகளை பொறுக்குவேன். அன்றாட பணிகளை மேலும் நம்பிக்கையுடன் ஆர்வத்துடன்
செய்வேன்" என கூறினார்... "அதுதான் தொடர்ந்து செய்கிறீர்களே" என சீடர்
கூறினார். "நேற்றைய என் பணிகளில் இருந்த குறைகளை களைந்து இன்றைய என்
பணிகளில் மேலும் சிறப்பை கூட்டுவேன் இது தான் ஞானமடைதல் என
கூறினார்" குரு ...
நாமும் அவர் போலத்தான்... நேற்றைய நம் கடமைகளை செயல்களை இன்று தொடரும்
போது இன்னமும் சிறப்பாக விருப்பத்துடன் நம்பிக்கையுடன் செய்வோம்...நம்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்தும் கொள்வோம் . இயேசுவின் வார்த்தைகளின்
பொருட்டும் செயல்களின் பொருட்டும் அவரை நம்பி அவரைப் பின் தொடர்வோம்.
அப்போது நமது நம்பிக்கை பெரியன செய்ய துணை புரியும்.
பேராசிரியர்கள் சிலர் அன்னை தெரசாவை சந்தித்து உரையாடிக்
கொண்டிருந்தார்கள். அப்போது உரையாடல் முடிந்து விடை பெறும் நேரம்
வந்தது.
"அன்னையே வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவில் வைத்து வாழ ஏதேனும்
அனுபவ மொழி ஒன்று சொல்லுங்கள்!" என்று கேட்டனர். அனுபவித்து அன்னை
சொன்னார். ஒருவரையொருவர் பார்த்ததும் புன்னகை புரியுங்கள்! குடும்பத்தோடு
அமர்ந்து அளவளாவ நேரம் ஒதுக்குங்கள்: கூட்டாக சிரித்து மகிழுங்கள்.
தொற்றிக் கொள்ளும் குணமுடைய நல்ல குணம் ஒன்று உண்டு. அது தான் புன்னகை.
அதுவே அன்பின் தொடக்கம். நம்பிக்கையின் வெளிப்பாடு.
நம்பிக்கை இருக்குமிடத்தில் புன்னகையும் அன்பும் பொலிவு பெறும்.
உறவு வளரும். பிளவு பிரிந்துவிடும்.
இணந்திருக்கின்ற குடும்பங்கள் அத்தனையும் இன்பத்தின் மையம். அவையே
எதிர்கால மனித குலத்திற்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன.
உலகில் உள்ள துன்பங்கள் அத்தனைக்கும் காரணம் நம்பிக்கையை இழந்து
பிரிந்திருக்கின்ற குடும்பங்களே!
ஆன்டவர் இயேசு இன்று "உள்ளம் கலங்க வேண்டாம் என் மீதும் என் தந்தையின்
மீதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள் நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு
செய்யப் போகிறேன்" என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பேரன்புடன்
நமக்குச் சொல்கின்றார்.
அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும் சோதனைகளால் தவறானத்
தீர்மானங்களால், நம்மை ஆளுகின்ற தலைவர்களால், பணி செய்கின்ற இடங்களில்
ஏற்படுகின்ற தவறான புரிதலால் எது நடந்தாலும், ஆண்டவரின் பேரன்பு நம்மோடு
இருந்து நம்மை வழி நடத்தும் என நம்புவோம். அவரது வார்த்தைகளின்
பொருட்டு, அவரது செயல்களின் பொருட்டு அவரைப் பின் தொடர்வோம். நம்பிக்கையோ
பொய்க்காது.
அன்பான வார்த்தைகள் குறுகியதாகவும் பேச எளிதாகவும் இருக்கலாம். ஆனால்
அதன் எதிரொலிகளுக்கு முடிவு இராது.
நாம் நம்பிக்கையுள்ளவர்கள் என்றால் எந்த ஒரு வாழ்த்தும் வசவும் நம்மைத்
தீண்டாது. எனென்றால் நாம் யாரென்று நமக்குத் தெரியும். நமது நம்பிக்கை
உணர்வும் அதைத் தெரிய வைக்கும். நாம் செபித்தால் நம்புவோம். நம்பினால்
அன்பு செய்வோம். அன்பு செய்தால் பணிசெய்வோம்.
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு
முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து "சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல
வரும்படி கிடைக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக்
கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் சொற்பொழிவு ஆற்றிவந்தார்.
சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும்
சாமியார் சொல்லும் "ஜோக்"கைக் கேட்போமே என்று போவான். நல்ல
குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.
ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில்
அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, "குருவே! வணக்கம் பல!
எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்" என்றான். அவரும் ,
"மகனே! நீ யார்?" என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச்
சொன்னான்: "நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத்
தொழில்தான் செய்து வருகிறேன்"
சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?
திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி
மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.
சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல
அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும்
சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப்
பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.
திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.
சாமியார்: முதல் மந்திரம்: " "உண்மையே பேசு"
திருடன்: "சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது.
கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது
ஒன்றும் கடினமில்லையே" என்றான்.
சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.
மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது
என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு" என்றாள்.
அது என்னடி கதை? என்றான்.
ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது
அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப்
போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக்
கொள்வீர்" என்றாள்.
"கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்" என்று சொல்லிவிட்டுப்
புறப்பட்டான்.
இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை,
அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.
இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய
சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப்
பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு
மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய
ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில்
மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு.
ராஜா: நில், யார் அங்கே?
திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.
ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன்.
எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி
கொடுத்தால் போதும்.
திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.
ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை
நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.
இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த
பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.
திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று.
மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப்
பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.
ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு
ஒரு பங்கா?
திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது
இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும்,
50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு
காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன், ஒரு கல்லாவது திருடுபோகாமல்
இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?
ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு
திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும்,
அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான்
என்பதை குறித்துக்கொண்டார்.
மறு நாள் அரசவை கூடியது.
ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.
நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை
கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ,
உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்.
அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை
மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப்
பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.
அரசவைக்கு ஓடோடி வந்தார்.
நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ
விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு,
மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.
ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?
நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு
விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்
ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது.
யார் அங்கே? காவலர்கள் எங்கே?
அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள
திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும்
செய்துவிடாதீர்கள்.
குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து,
அரசன் முன்னர் நிறுத்தினர்.
திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)
ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.
திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள்
நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன.
நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக்
கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று
வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன்
சமர்ப்பிக்கிறான்)
ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து
உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த
மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)
நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.
நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக
எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில்
எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத்
திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை
தெரியும்
ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை
சமர்ப்பிக்கவில்லையானால், உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.
நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்;
அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான்
திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து
வைத்தார்.
ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை
சிறையில் தள்ளுங்கள்.
முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல்
நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள்
அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக
அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.
அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர்
வாழ்க, வாழ்க!!
புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து
உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.
சாமியார்: (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை.
நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. "எனைத்தானும் நல்லவை
கேட்க"- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம்
கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.
திருடனாயிருந்தும் குரு மீது கொண்ட நம்பிக்கையால் திருந்திய மனிதனாய்
மாறினான். அவனது நம்பிக்கை அவனுக்கு வாழ்வு தந்தது.
அது ஒரு புத்ததுறவிகள் வாழும் மடாலயம். அடுத்த தலைவரை
தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போதையத் தலைவர் அதிகம் யோசித்தார்.
மூன்று சீடர்களை அழைத்து ஆளுக்கு ஐந்து சீப்புக் கொடுத்து இதை நமது
மடாலயத்தில் உள்ள புத்த துறவிகளிடம் மட்டுமே விற்க வேண்டும் என்றார்.
தலையை முழுவதும் மழித்துக் கொள்ளும் துறவிகளுக்கும் இந்த சீப்பு
எதற்கு என யோசித்தார்கள் இருப்பினும் தலைமைப் பதவி கண்முன் வந்தது.
ஏதாவது செய்யலாம் என முனைப்புடன் சென்றனர். முதல் துறவி திரும்பி
வந்து "இரண்டு சீப்பு விற்றேன்" என்றார். "எப்படி?" எனக் கேட்டார்
தலைவர். "முதுகு சொரிய சீப்புகள் பயன்படும்" என்றேன். "இரண்டு
புத்த துறவிகள் வாங்கினர்" என்றான்.
இரண்டாம் சீடன் ஐந்து சீப்புகள் விற்றேன் என்றான். தலைவர் விளக்கம்
ஏட்டார். நீண்ட தொலைவில் இருந்து பயணம் செய்து வரும் பக்தர்கள் முகம்
கழுவும் இடத்தில் தலைவாரிக் கொள்ள சீப்புகளை வைத்தால் மிகவும் பயணுள்ளதாய்
இருக்குமென்றேன். ஐந்து சீப்புகள் விற்றன.
மூன்றாமவர் "பத்து சீப்புகள் விற்றுவிட்டேன். இன்னும் நூறு தேவைப்படுகிறது"
என்றான். "எப்படி" எனக் கேட்டபோது, "இந்த மடாலயத்தை சந்தித்து, பயிற்சிகள்
முடித்து, வகுப்புகள் முடித்து வீடு திரும்புமுன் பக்தர்கள் அனைவருக்கும்,
இந்த சீப்பில் புத்தரின் பொன்மொழிகள் வாசகத்தை அச்சடித்து நினைவுப்
பரிசாய்த் தரலாமே!" என்றேன். "அவ்வளவுதான் எல்லாம் விற்றுத் தீர்ந்தது.
இன்னும் தேவையுடன் வந்துள்ளேன்" என்றான். அவனே தலைமைப் பொறுப்பு ஏற்றான்.
நல்ல செய்திகளை, நல்ல உண்ர்வுகளை, நல்ல எண்ணங்களை நல்ல செயல்களை,
உடன் வாழும் மனிதர்களோடு பகிர்ந்து வாழ்வதே சிறந்த பணியாகும்.
ஆண்டவர் இயேசுவின் போதனைகளில் மிக முக்கியமான ஒன்று இன்றைய போதனை.
என் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் என் தந்தையின் மீதும் நம்பிக்கைக்
கொள்வார்கள். நானே வழியும் உண்மையும் என் வழியாயன்றி தந்தையை அடைய
முடியாது. என் வழி உண்மை, நீதி, நேர்மை, அன்பு, சமத்துவம் சகோதரத்துவம்
இவை நிரம்பியது. தந்தையை அப்படியே பிரதிபலிப்பது, மறுபதிவு செய்வது
என் வேலை என்றால் அதை அப்படியே செய்வதுதான் உங்கள் பணியாகும் என
நமக்கு அறிவுறுத்துகிறார்.
இன்று நம் பணி எப்படி ஆண்டவரை பிரதிபலிக்கிறது என சிந்திப்போம். ஆண்டவர்
இயேசுவின் மீது நம்பிக்கையை பதிய வைப்போம். அவரை பிரதிபலிப்போம்.
அப்போது அவர் நம்மை பத்திரமாக பார்த்துக் கொள்வார். அவர் நமக்கு
ஆதரவளிப்பார். அவரது பேரன்பு நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தும்.
ஆண்டவர் நேர்மையாளரை ஒரு போதும் வீழ்ச்சியுறவிடமாட்டார்.
தந்தையை அடையாளம் காண்போம். அவரது அன்பை, நேர்மையை, நீதியை நம்மிடையே
உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வோம்
மறையுரைச்சிந்தனை
அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை - சகோ. செல்வராணி Osm
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
பந்தி பரிமாறுவது முறையல்ல!
தொடக்கக் கிறிஸ்தவர்கள் வாழ்வு பற்றி வாசிக்கும்போதெல்லாம், 'அவர்கள்
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். தேவையில் இருந்தவர்கள்
யாருமில்லை. எல்லாம் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது' என ரொம்ப
ரொமான்டிக்காகவே வாசிக்கின்றோம். ஆனால், தொடக்கக் கிறிஸ்தவர்களின்
தேனிலவு முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.
அமைதியான குளமாக இருந்த அவர்களுடைய வாழ்வின் நடுவில் கூழாங்கல் ஒன்று
வந்து விழுகிறது. யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை. முதல் முதலாக
குழுமத்தில் குழப்பம் வருகிறது. சீடர்கள் எண்ணிக்கை பெருகியதால் பிரச்சினையும்
பெரிதாக ஆரம்பிக்கிறது:
'கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில்
முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக
முணுமுணுத்தனர்.'
இதுதான் பிரச்சினை.
இந்தப் பிரச்சினையில் மூன்று கூறுகள் இருக்கின்றன:
(அ) உணவு பரிமாறப்படுவதில் பாரபட்சம். நம் இல்லங்களில் நடக்கும்
அருட்சாதனம்
மற்றும் நல்ல நிகழ்வுகளில் பந்தியில்தான் நிறையப் பிரச்சினைகள்
வருவதுண்டு. குடும்பத்திலும் உணவு எல்லாருக்கும் கிடைத்துவிட்டால்,
நல்ல உணவை மனைவி சமைத்துவிட்டால் அங்கே பிரச்சினை இல்லை. அது போலவே,
அருள்பணியாளர் மற்றும் துறவற இல்லங்களில் வருகின்ற முதல் பிரச்சினை
சாப்பாட்டில்தான் இருக்கும்.
(ஆ) மொழிப் பிரச்சினை. இந்த நிகழ்வு எருசலேமில் நடக்கிறது. எருசலேமில்
இருந்தவர்கள் பெரும்பாலும் யூதர்கள்தாம். ஆக, பந்தியில் உணவுண்டவர்கள்
அனைவரும் யூதர்கள்தாம். அப்புறம் எப்படி மொழிப் பிரச்சினை? சில யூதர்கள்
கிரேக்க மொழி பேசும் நாடுகளில் குடியேறியதால் எபிரேயத்தை மறந்து
கிரேக்கம் பேசினர். எபிரேய மொழி பேசுவோர் தங்களையே மேன்மையானவர்கள்
என நினைத்து கிரேக்க மொழி பேசுவோரைத் தாழ்வாக நடத்துகின்றனர்.
(இ) முணுமுணுத்தல். ஏன் முணுமுணுத்தல்? பிரச்சினையை சொல்வதற்கு எங்கெல்லாம்
வடிகால் இல்லையோ அங்கெல்லாம் மக்கள் முணுமுணுப்பார்கள். எடுத்துக்காட்டாக,
சாப்பாடு சரியாக வேகவில்லை என்றால் யாரிடம் சொல்ல வேண்டும் என்று
தெளிவாகத் தெரிந்தால் நாம் அவரிடம் சென்று முறையிடலாம். யாரிடம் போவது
என்று தெரியாத பட்சத்தில் நாம் முணுமுணுக்கத்தான் வேண்டும்.
இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கேள்விப்படுகின்ற திருத்தூதர்கள்
உடனடியாக அதற்குத் தீர்வுகாண முயல்கின்றார்கள். இது உண்மையிலேயே
பாராட்டப்பட வேண்டியது.
முதலில், திருத்தூதர்கள் தங்களையே ஆய்வு செய்து பார்க்கின்றனர். எங்கே
தவறு நடந்தது? என்று யோசிக்கின்றனர். அப்போதுதான் அவர்கள் தங்கள்
முதன்மைகளில் கோட்டை விட்டதை எண்ணிப் பார்க்கின்றனர்:
'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில்
பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறையல்ல!'
ஞானமிகு வார்த்தைகள் இவை.
நான் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் வேறொன்றைச் செய்து
கொண்டிருக்கின்றேனே என எண்ணிப் பார்க்கிறார்கள்.
இது எப்படின்னா?
இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல்,
தன்னுடைய கச்சேரிக்கு டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ
அப்படி!
பாடல்களை பாடுவதை விட்டுவிட்டு டிக்கெட் விற்பது முறையல்ல!
இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: என்னுடைய முதன்மைகளை
நான் சரியாக வரையறுத்துள்ளேனா? என் முதன்மைகளைச் சரி செய்ய நான் என்ன
செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, திருத்தூதர்கள் தங்கள் பணிகளைப் பகிர்ந்து கொள்ள முன்வருகின்றனர்.
இது அவர்களின் பரந்த உள்ளத்திற்கான சான்று. எல்லாவற்றையும் நானே
செய்வேன் என்று நினைக்காமல், மிகவும் எதார்த்தமாக, அடுத்தவர்களுக்குப்
பகிர்ந்து கொடுக்கின்றனர். இது ஒரு சிறந்த தலைமைத்துவப் பண்பு:
'உங்களிடமிருந்து நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவியின் வல்லமையும்
ஞானமும் கொண்டவர்களுமான எழுவரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நாம் இந்தப்
பணியில் நியமிப்போம்.'
ஆக, பணியாளர்கள் மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு இரண்டு தகுதிகள் இருக்க வேண்டும்: (அ) நற்சான்று பெற்றவர்கள்
- மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும், நாலு பேரைத்
தெரிந்திருக்க வேண்டும், நாலு பேரு வாழ்க்கையில ஏதாவது நல்லது
செய்திருக்க வேண்டும். (ஆ) ஆவியின் வல்லமையும் ஞானமும் பெற்றிருக்க
வேண்டும் - கடவுளோடு உள்ள உறவிலும் நன்றாக இருக்க வேண்டும்.
இன்றைய அருள்பணியாளர்களும் இந்த இரண்டு நிலைத் தகுதிகளைப்
பெற்றிருத்தல் அவசியம். மக்களின் உறவைப் பிடித்துக்கொண்டு இறை உறவைக்
கைவிடுவதும், இறைஉறவைப் பிடித்துக் கொண்டு மக்கள் உறவைக் கைவிடுதலும்
ஆபத்தே.
மூன்றாவதாக, திருத்தூதர்கள் தங்களுடைய பணியை மறுவரையறை செய்கின்றனர்:
இங்கே, 'நிலைத்திருப்போம்' என்ற வார்த்தை முக்கியமானது. அதாவது,
விடாமுயற்சியுடன் ஒன்றைப் பற்றிக்கொள்ளுதல். இன்னைக்கு ஒன்னு,
நாளைக்கு இன்னொன்னு என்று தங்களுடைய பணியின் போக்கை மாற்றிக்
கொண்டே இராமல், 'இதுதான்! இது ஒன்றுதான்!' என்று நிலைத்திருத்தல்.
நான்காவதாக, தங்கள் கைகளை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மேல் வைத்து இறைவனிடம்
வேண்டுகின்றனர்.
அவ்வளவுதான். பிரச்சினை தீர்ந்தாயிற்று.
எந்த ஒரு பேப்பர் ஒர்க்கும் இல்லாமல், எந்த ஒரு மீட்டிங்கும் இல்லாமல்,
எந்த ஒரு அவைக்குறிப்பும் இல்லாமல் இனிதே நடந்தேறுகிறது கூட்டம்.
தீர்வு கண்டாயிற்று.
இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
பிரச்சினைகள் தயிர் போல. உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நாளை,
நாளை என்று தள்ளிப்போட்டால் புளித்துவிடும். அப்புறம் ஒன்றும்
செய்ய முடியாது. இதை நன்றாக அறிந்திருக்கிறார்கள் திருத்தூதர்கள்.
இந்த நிகழ்வு திருத்தூதர்கள் வாழ்விலும், தொடக்கத் திருஅவை
வாழ்விலும் ஒரு சறுக்கலாக அல்லது, ஒரு சிறிய இறப்பாக இருந்திருக்க
வேண்டும். இருந்தாலும் புத்துயிர் பெற்று எழுகிறார்கள். ஏனெனில்
அவர்கள், இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 2:4-9), அவர்கள்,
'தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர்,
தூய மக்களினத்தார், அவரது உரிமைச் சொத்தான மக்கள்.'
நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நம்முடைய தற்காலிக இறப்புக்களே.
இவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது?
இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே'
என அறிக்கையிடுகிறார் இயேசு. இம்மூன்றும் நம் முதன்மைகளாக இருத்தல்
நலம். இந்த மூன்றும் இயேசுவையே மையமாகக் கொண்டுள்ளன.
'நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?'
என்னும் தோமாவின் கேள்விக்கு, 'நானே வழியும் உண்மையும் வாழ்வும்'
என மொழிகிறார் இயேசு. இது யோவான் நற்செய்தியில் இயேசு பயன்படுத்தும்
ஆறாவது 'நானே' வாக்கியம். இந்த வாக்கியத்தில் மூன்று கூறுகள் உள்ளன:
வழி என்றால் பாதை மட்டும் அல்ல, மாறாக, வாய்ப்பும் தீர்வும்கூட.
நம் நடத்தலை நெறிப்படுத்துகிறார் இயேசு.
உண்மை என்றால் இருத்தல் மற்றும் அறிதல். நம் இருத்தலையும்
அறிதலையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.
வாழ்வு என்றால் இயங்குதல் மற்றும் வளர்தல். நம் இயக்கத்தையும்
வளர்ச்சியையும் நெறிப்படுத்துகிறார் இயேசு.
'வழி' என்பதை 'இலக்குக்கான பாதை' என்றும்,
'உண்மை' என்பதை 'இலக்கு'
என்றும்,
'வாழ்வு' என்பது 'இலக்கை அடைவதன் பலன்' என்றும்
புரிந்துகொள்ளலாம்.
நாம் எந்த வாழ்வியல் நிலையில் இருந்தாலும் நம் வாழ்வின் இலக்கு
என்னவோ 'உண்மை' என்பதுதான். அந்த உண்மையை நாம் இயேசு வழியாகவே
அடைகிறோம். நம் வாழ்க்கையில் இயக்கமும் வளர்ச்சியும் இருக்கும்போது
நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
தொடக்கத் திருஅவை தன்னில் எழுந்த விருந்துப் பிரச்சினையால் இறந்து
மீண்டும் உயிர் பெற்றது.
பிரச்சினைகள் தீர்ந்ததால் ஆழமான அமைதி வந்தது.
இதையே திருப்பாடல் ஆசிரியர்,
'ஆண்டவரின் பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது' (காண். திபா 33:5)
எனப் பாடுகிறார்.
சீனாவிற்குக் கடவுளின் வார்த்தையை முதன்முதலில் கொண்டு சென்றவர் ஹட்சன்
டெய்லர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரான இவர், சீனாவிற்கு நற்செய்தி
அறிவிக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு மருத்துவரிடம் உதவியாளராகப் பணியாற்றி
வந்தார்.
கப்பலில் இவர் சீனாவிற்குச் செல்வதற்கான நாள் நெருங்கிக்கொண்டே வந்தது;
இவரது கையில் சொற்ப அளவில்தான் பணம் இருந்தது. அந்தப் பணத்தையும்
ஒருநாள் இவர் தன் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி
வரும்போது, ஒரு குடும்பம் பணமின்றி மிகவும் துன்பப்படுவதைப்
பார்த்துவிட்டு, அந்தக் குடும்பத்திடமே கொடுத்துவிட்டார்.
கையில் இருந்த பணமும் போய்விட்டதே! இப்போது சீனாவிற்கு எப்படிச்
செல்வது? என்று இவர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கவில்லை; மாறாகக்
கடவுள் தனக்கு வேண்டிய பணத்தை நிச்சயம் தரும் என்ற நம்பிக்கையோடு
இருந்தார்.
இவர் சீனாவிற்குச் செல்வதற்கு முந்தைய நாள், யாரிடம் இவர் உதவியாளராகப்
பணிபுரிந்து வந்தாரோ, அந்த மருத்துவர் இவரை அழைத்து, "இதுவரைக்கும்
நான் உனக்குச் சரியாகவே ஊதியம் கொடுத்ததில்லை. காரணம் என்னிடம்
சிகிச்சைக்காக அவ்வளவாக யாரும் வருவதில்லை. இது உனக்கு நன்றாகத்
தெரியும். சிறிது நேரத்திற்கு முன்பாக என்னிடம் சிகிச்சை பெற்றுவந்த
செல்வந்தர் ஒருவர் ஒரு பெரிய தொகையைக் கட்டணமாக என்னிடம்
கொடுத்துவிட்டுப் போயிருக்கின்றார். அந்தப் பணத்தை ஊதியமாக நீயே
வைத்துக்கொள்"என்று சொல்லி. பணத்தை இவரிடம் கொடுத்தார்.
அதைப் பெற்றுக்கொண்டதும் இவர், கடவுளை நான் நம்பியிருந்தேன்; அவர்
என்னைக் கைவிடவில்லை என்று அவருக்கு நன்றி சொன்னார்.
மிகப்பெரிய நற்செய்திப் பணியாளரான ஹட்சன் டெய்லரைப் போன்று, நாம்
கடவுளை நம்பியிருக்கும்போது அவர் நம்மைக் கைவிடுவதில்லை அதனால்
நாம் எதற்கும் பதற்றமடையத் தேவையே இல்லை. பாஸ்கா காலத்தின் ஐந்தாம்
ஞாயிறான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, "நம்பிக்கை
கொண்டோர் பதற்றமடையார்"என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து
நாம் சிந்திப்போம்.
நம்பிக்கையளிக்கும் இயேசு
பொதுவாக, புதிதாக ஒரு பயணத்தை, திட்டத்தைக் கையிலெடுக்கும் ஒருவரை
அவரது நண்பர்களும் நல விரும்பிகளும் நம்பிக்கை நிறைந்த சொற்களால்
திடப்படுத்துவதுண்டு, தேற்றுவதுண்டு; அவர் யாரையும் தேற்றுவது
கிடையாது. ஆனால், இன்றைய நற்செய்தியில் இதற்கு நேர் எதிராக நடக்கின்றது.
இயேசு யூதர்கள் கையில் ஒப்புவிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவிருந்தார்.
அதனால் அவரது சீடர்கள்தான் அவரைத் தேற்றியிருக்க வேண்டும் அல்லது
நம்பிக்கையூட்டியிருக்க வேண்டும். ஆனால், இயேசு தம் சீடர்களுக்கு
நம்பிக்கையூட்டுகின்றார். காரணம் அவர்கள் தங்கள் தலைவரைவிட்டுப்
பிரிந்து என்ன செய்யப் போகிறோமோ? என்று உள்ளம் கலங்கி இருந்தார்கள்.
அதனால் இயேசு அவர்களிடம், "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம்
நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடம் நம்பிக்கை கொள்ளுகள்"என்கின்றார்.
பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய
இரண்டாம் வாசகம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதன் முக்கியத்துவத்தைப்
பற்றிப் பேசுகின்றது. இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும், "இதோ
சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகின்றேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட,
விலையுயர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்"(எசா
28: 16) என்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசும் பேதுரு,
"நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது இயேசு - உயிர் மதிப்புள்ளதாக விளங்கும்"
என்கிறார்.
நற்செய்தியில் இயேசு சொல்வதுபோல், பாறையின்மீது கட்டப்பட்ட வீடு உறுதியாய்
இருக்கும். அதற்கேற்ப எவர் ஒருவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து
வாழ்கின்றாரோ, அவர் எதற்கும் கலங்கிடத் தேவையில்லை.
நம்பிக்கையினால் எதையும் எதிர்கொள்ளலாம்
கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்தபோது, ஒருசில பிரச்சனைகளும் தலைதூக்கத்
தொடங்கின. அதில் முதன்மையான ஒரு பிரச்சனை விருந்துகளில் கிரேக்க
மொழி பேசும் கைம்பெண்கள் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்பதாகும்.
கிரேக்க மொழி பேசிய கைம்பெண் அடிப்படையில் யூதர்களாய் இருந்தாலும்,
அவர்கள் பாலஸ்தினத்திற்கு வெளியே, சிதறி வாழ்ந்ததால், அவர்களுக்கு
அப்படியொரு நிலை ஏற்பட்டது.
இதனை அறிந்த திருத்தூதர்கள், இப்பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது
என்று பதற்றமடையவில்லை. ஏனெனில், அவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை
கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள் மிகவும் விவேகத்தோடு நற்சான்று
பெற்ற, தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்த எழுவரைத்
திருத்தொண்டர்களாக நியமித்து, பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி
வைத்தார்கள்.
பொதுவாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் இதுபோன்ற பிரச்சனைகளும்
இடர்களும் நமக்கு வரலாம். அப்போது நாம் அவற்றை எப்படி எதிர்கொள்வது
எனக் கலங்கித் தவிக்கவேண்டிய தேவையில்லை. மாறாக, நாம்
உயிர்மதிப்புள்ள கல்லான ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து
வாழ்ந்தால், எதற்கும் பதற்றமடையத் தேவையில்லை.
கடவுளின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்போம்
ஆண்டவர் இயேசு கலங்கித் தவிக்கும் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றார்
என்றால், நாம் சந்திக்கும் பிரச்சனைகளை விவேகத்தோடு
எதிர்கொள்வதற்கான ஆற்றலை அவர் அளிக்கின்றார் எனில், இன்று நாம்
பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 33 இல் சொல்லப்படுவது
போல், அவர் நம்மீது இரக்கம் காட்டுகின்றார் எனில், அதற்குக்
கைம்மாறாக நாம் அவரது மேன்மைமிக்க செயல்களை அறிவிக்க வேண்டும். அது
நமது கடமையும், நம்மீது சுமத்தப்பட்ட பொறுப்பும் கூட.
இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் பேதுரு, "உங்களை இருளினின்று
தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை
அறிவிப்பது உங்கள் பணி"என்கின்றார். பேதுருவும் சரி, ஏனைய
திருத்தூதர்களும் சரி, இயேசு கைது செய்யப்பட்டுச் சிறையில்
அறையப்பட்டுக் கொல்லப்பட்டபோது, அவரை விட்டு ஓடிப்போனார்கள்;
ஆனாலும் இயேசு அவர்களை மன்னித்து, அவர்களுக்கு
நம்பிக்கையூட்டினார். இதனால் அவர்கள் இயேசுவைப் பற்றி
எல்லாருக்கும் துணிவுடன் எடுத்துரைத்தார்கள். இயேசுவின் சீடர்களைப்
போன்று நாமும் அவரிடமிருந்து ஏராளமான நன்மைகளை அடைந்திருக்கலாம்.
அதற்குக் கைம்மாறாக, நாம் அவரது மேன்மை மிக்க செயல்களை
எல்லாருக்கும் அறிவிக்கவேண்டும். அதுவே நாம் இயேசுவுக்குச்
செய்யும் மிகப்பெரிய கைம்மாறாக இருக்கும்.
ஆகையால், நம்மீது பேரன்பு காட்டி, நமக்கு நம்பிக்கையூட்டி
இருக்கும் இயேசுவைப் பற்றி எல்லாருக்கும் எடுத்துரைத்து, அவரது
உண்மையான சீடர்களாய்த் திகழ்வோம்.
சிந்தனைக்கு
"உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச்
செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்"(மாற் 5:19) என்று
கெரசேனர் பகுதியில் பேய்பிடித்திருந்த மனிதரை நலமாக்கிய பின் இயேசு
அவரிடம் கூறுவார். கடவுள் நம்மீதும் இரக்கம் கொண்டு, நமக்குக்
ஏராளமான நன்மைகளைச் செய்த்திருப்பார். அதனால் நாம் அவற்றை
மற்றவருக்கு அறிவித்து, அவர்களும் இயேசுவின் மீது நம்பிக்கை
கொள்ளச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறையுரைச்சிந்தனை
-
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
ஒரு நாள் தன் அலுவலகப் பணியை
முடித்துக் களைப்போடு தன் வீடு சென்று இளைப்பாறப் புறப்பட்டான்
ஒருவன். பம்பாய் நகரத்தில் 28 மாடிகள் உள்ள மாடியில்
22-வது மாடியில் அவர்கள் வீடு இருந்தது. Elevator என்ற
ஏணியில் அவன் தூக்கிச் செல்லப்பட்ட போது மாடியை
நெருங்கிக் கொண்டிருந்தான். எங்கும் ஒரே அழுகைக் குரல்.
பயங்கரமான ஓலமிட்ட சப்தம், வெளியே எட்டிப் பார்த்தான்.
கட்டிடம் தீப்பிடித்துப் புகை மண்டலம் பரவிய நிலை எல்லாப்
பகுதியும் தீப்பரவும் நிலை. தீயணைப்புப் படை தண்ணீரைக்
கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்யும் காட்சி. : இந்த
இளைஞரின் ' உள்ளத்தில் பயம். இன்று நான் கருகிச்
செத்தேன் என்ற அவநம்பிக்கைக்கு ஆளானார். இவரைப் பார்த்த
தீயணைப்புப் படையினர் தம்பி கீழே குதி இல்லையென்றால் எரிந்து
சாம்பலாவாய் என்றனர். பக்கத்தில் நின்றவர்களும் உனக்காகக்
கீழே ஒரு வலையைக் கட்டியுள்ளோம். ஒன்றும் செய்யாது குதி
என்றார்கள். ஆனால் இந்தக் கூட்டத்தின் வார்த்தையில்
இவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கூட்டத்தில் நின்ற தன்
தந்தை கையைக காட்டி உரத்த குரலிலே "மகனே கீலே குதி. உனக்கு
ஒன்றும் நேராதபடி இங்கே வலையைத் தாங்கியுள்ளோம்" என்றார்.
கண்களை மூடி இளைஞன் கீழே குதித்தான்.
தன் தந்தையின் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை . அவனைக்
கீழே குதிக்கத் தூண்டியது. உயிர் தப்பிப் பிழைத்தான்.
இதேபோல்தான் நம் வாழ்வில் பலவிதமான தீ நம்மைப் பற்றிக்
கொள்கிறது. அது நமது அன்புக்குரியவராக இருக்கலாம். அல்லது
தாங்க முடியாத ஒரு நோயாக இருக்கலாம். அல்லது குடும்பத்திலே
தங்கை, அக்காள் இவர்களின் திருமணத்தில் பொருளாதாரக் கஷ்டமாக
இருக்கலாம். சகோதரர் ஒருவர் வேலை இன்றி, வேலை
கிடைத்தும் இழந்தும் தவிக்கலாம். இதனால் நம்மில் சந்தேகங்கள்
நம்பிக்கையின்மை வேர் ஊன்றி நம் விசுவாசத்தில் நாம் ஆட்டம்
ண்கிறோம். எங்கே கடவுள் என்ற கேள்வியும் எழுந்து விடுகிறது.
இன்றைய நற்செய்தி தரும் வார்த்தைகள் மிக ஆழமானவை. இயேசு
தன் சீடர்களை நோக்கிச் சொல்லும் வார்த்தைகள் இதுதான்.
நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை
வையுங்கள். என்னிடமும் நம்பிக்கை வையுங்கள் (யோவா.
14:1). மனித வாழ்விலே மனிதன் அர்த்தமற்றவனாக, வாழ்ந்தும்
இறந்தவர் போலாவதற்கு காரணமே நம்பிக்கை இன்மையும், விசுவாசமின்மையும்தான்.
ஆம் கடவுளை நம்மால் காண முடியாது. கடவுளை இதுவரை யாரும்
பார்த்ததில்லை. இந்த உலகில் நடக்கும் கொலை, கொள்ளை, விபச்சாரம்,
வியாதி, இறப்பு இவைகளை நோக்கும்போது நான் கண்டிராத ஒரு சக்தி
உண்டா என்பது கேள்விதான். இயேசு, இறைவா ஏன் என்னைக் கை
விட்டீர் (மத். 27:46) என்றார்.
எத்தகைய விசுவாசத்தை நம்மிடம் இயேசு எதிர்பார்க்கிறார்?
உரோமையிலே கட்டடக் கலைஞனை அரசன் அழைத்தான். அழகிய மண்டபம்
ஒன்றை கட்டப் பணித்தான். 5 ஆண்டுகளில் அழகிய மண்டபத்தைக்
கட்டி முடித்தான். இந்த அழகான மண்டபத்தைக் கட்டி முடித்த
கலைஞனை அரசன் மனமாரப் பாராட்டி, இம்மண்டபம்
கிறிஸ்துவைக் கைவிட மறுப்பவர்கள் விலங்குகளுக்கு இரையாக்கப்படும்
போது மக்கள் அமர்ந்து இரசிக்க கட்டப்பட்டதாகும் என்றான்.
கட்டட கலைஞனோ அதிர்ச்சி அடைந்தான். அப்படியானால் நான்
முதலில் பலியாக விரும்புகிறேன் - நானும் கிறிஸ்தவர் என்று
கூறி இரையானார் விலங்குகளுக்கு.
நான் இறந்தாலும், என்னை என் இயேசு வாழ வைப்பார் என்று
நம்புவதுதான் விசுவாசம். இந்த விசுவாசத்தை நாம் இயேசு
மீது வைத்தால் நம் உள்ளம் கலங்கமாட்டோம். மரணத்தைக்
கண்டு ஜோன் ஆப் ஆர்க் அமைதி முகத்தோடு ஆண்டவரை
நெருப்பிலே சந்திக்கவில்லையா? சிரித்துக் கொண்டே தன் சிரசை
கொலையாளிக்கு தாமஸ் மூர் கையளிக்கவில்லையா? ஓரியூர் திடலிலே
உமது திட்டம் நிறைவேறட்டும் என்று அருளானந்தர் தலை
சாய்க்கவில்லையா? ஆம்! விசுவாசிக்கு மரணம்கூட இனிமையாகும்.
6 கற்சாடிகள் இரசத்தால் பெருகியது விசுவாசத்தால்.
இன்று இயேசு ஒவ்வொருவரையும் பார்த்து நீங்கள் விசுவசிக்கிறபடி
உங்களுக்கு ஆகும் என்கிறார்.
கிழக்கு வெளுக்கும் என நம்புகின்றோம்! கீழ்வானம் சிவக்கும்
என நம்புகின்றோம்! விதை முளைக்கும் என நம்புகின்றோம்!
பலன் கிடைக்கும் என நம்புகின்றோம்! பூ காயாகும் என
நம்புகின்றோம்! காய் கனியாகும் என நம்புகின்றோம்!
ஆண்டவராம் இயேசுவின், நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்:
கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; என்னிடமும் நம்பிக்கை
கொள்ளுங்கள் (யோவா 14:1) என்ற வார்த்தைகளின் மீது நம்பிக்கை
வைத்தால் என்ன? கலங்கும் இதயங்களுக்கு இயேசு கலங்கரைத்
'தீபமாகத் திகழ்கின்றார் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு!
எந்த மதத்தின் மீதும், சபையின் மீதும் நம்பிக்கையில்லாத
மனிதர்கள் இந்த உலகத்தில் உண்டோ? உண்டு என்பதற்கு கேரளாவிலிருந்து
வேளாங்கண்ணிக்கு வந்த பண் ஓர் உதாரணம்! எங்கே நிம்மதி?
எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று
கேட்டு அலைந்தவர் அவர். சில ஆண்டுகளுக்கு முன்
வேளாங்கண்ணியைச் சுற்றிப் பார்ப்பதற்காக மற்ற
சுற்றுலாப் பயணிகளோடு அவர் வேளாங்கண்ணிக்குச்
சென்றிருந்தார். எல்லா "இடங்களையும் சுற்றிப்
பார்த்த அவர் காணிக்கைப் பொருள்களின். காட்சி
சாலைக்குள் சென்றார். அங்கேயிருந்த காணிக்கைப்
பொருள்களையல்லாம் பார்த்துவிட்டு அவர் ஆச்சரியப்படவில்லை!
அன்னையைப் புகழவில்லை! மாறாகச் சிரித்தார். இதல்லாம்.
நடக்குமா? அறிவுப்பூர்வமாக இந்த மக்கள் சிந்திக்க
வேண்டாமா? என்று அவரது நண்பரைக் கேட்ச் சிரித்தார்.
வெளியில் சிரித்தாலும் அவரின் மனத்தின் ஒரு
மூலையிலே ஒரு சிறு சந்தேகம்। ஒரு வேளை பக்தர்களின்
வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உண்மையாக இருக்குமோ? என்ற
சந்தேகம்!
குழப்பத்தோடு அவர் கேரளா திரும்பினார். ஒரு நாள்
கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவிலே புனித ஆரோக்கிய
மாதா தோன்றினார். மாதா அந்தப் பெண்ணைப் பார்த்து,
பெண்ணே ஏன் கலங்குகின்றாய்? என் கையிலிருக்கும் அன்புக்
குழந்தை இயேசுவைப் பார். இவர் உன்னை அன்பு
செய்கின்றார். தம் மகனை உலகுக்குக் கொடுக்கும் அளவுக்கு,
உலகை அன்பு செய்த கடவுள் உன்னை அன்பு செய்கின்றார்.
நம்பு, கடவுள் இருக்கின்றார் என்று நம்பு! அவர் உன்னை
ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டார்; கைவிடமாட்டார்.
வேளாங்கண்ணிக்கு வந்து அங்கே ஒரு வாரம் தங்கு என்றார்.
அன்னை சொன்னபடியே அந்தப் பெண் அவருடைய தோழியுடன்
வேளாங்கண்ணிக்குச் சென்று தங்கியிருந்தார். அவர் உள்ளத்தில்
கடவுள் நம்பிக்கைப் பிறந்தது. அங்கே அவர் மனத்திலிருந்த
சுமைகளெல்லாம் இயேசுவால் இறக்கி வைக்கப்பட்டன. கடவுள்
அவருக்குச் செய்த அரும்பெரும் செயல்களை அனைவருக்கும்
அவர் எடுத்துச் சொன்னார். (இரண்டாம் வாசகம்].
யேசுவின் வார்த்தைகள் மீது முழு நம்பிக்கை வைத்து,
அவரையே நமது வாழ்க்கையின் மூலைக்கல்லாக்கி நாமும்
வாழ்வாங்கு வாழ்வோம்.
மேலும் அறிவோம் :
அகர முதல எழுத்தல்லாம் ஆதி
பகவன் முதற்கற உலகு (குறள்: 1)
பொருள் : எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரம் முதலாக
அமைகிறது. அதுபோன்று உலக உயிர்கள் அனைத்திற்கும்
இறைவன் முதல்வனாக. விளங்குகிறான்.
அரசுப் பொது மருத்துவமனைக்குச் செல்ல ஒருவர் மூன்று பேரிடம்
வழிகேட்டார். முதலாம் நபர் கூறினார்: "நான் இந்த ஊருக்குப்
புதியவர் எனக்கு வழி தெரியாது."இரண்டாம் நபர், "பைபிள்,
பகவத்கீதை, குரான் சத்தியமாகச் சொல்லுகிறேன் எனக்கு வழி
தெரியாது" என்று கூறினார். மூன்றாவது நபரோ, "அரசுப் பொது
மருத்துவமனைக்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு செல்ல
வேண்டும்"என்றார்.
அரசுப் பொது மருத்துவமனைக்கே வழிகாட்டத் தெரியாத மனிதர்
விண்ணகம் செல்ல வழிகாட்ட முடியுமா? ஒரு கணவர் இறந்து நரகத்துக்குச்
சென்றார். அங்கும் ஒரு பொதுத் தொலைபேசி நிலையம் இருந்தது
நிலையப் பொறுப்பாளரிடம் அவர் மண்ணாகத்தில் உள்ள. தனது மனைவியுடன்
தொலைபேசி மூலம் பேச அனுமதி கேட்டார். பொறுப்பாளர் அவரிடம்,
"தாராளமாகப் பேசுங்கள்: நரகத்திலிருந்து நாகத்துடன் பேசுவதற்குக்
கட்டணம் செலுத்தத் தேவையில்லை". என்றார்.
விண்ணகம் சென்றவர்களோ, நரகத்துக்குச் சென்றவர்களோ மண்ணக மனிதர்களுடன்
பேசியது இல்லை. ஆனால் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்துவிடம்
விண்ணகத்திற்கு வழிகேட்டத் தோமாவிடம் கிறிஸ்து கூறுகினறார்:
"நானே வழி.. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை"
(யோவா 14:6), தம்மிடம் இரவில் வந்த நிக்கதேமிடம் கிறிஸ்து
கூறினார் "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத்
தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை" (யோவா
3:13), கிறிஸ்து ஒருவரே விண்ணகத்திற்கு வழிகாட்ட முடியும்.
ஏனெனில் அவர் ஒருவரே விண்ணகத்திலிருந்து மண்ணகத்திற்கு வந்தவர்.
இன்றைய நற்செய்தியில் விண்ணகத் தந்தையைக் காட்டும்படி தம்மிடம்
கேட்ட பிலிப்புவிடம் கிறிஸ்து கூறுகிறார்: "என்னைக் காண்பது
தந்தையைக் காண்பதாகும்" (யோவா 14:9). கடவுளைக் கண்டவரும்
அவரை வெளிப்படுத்துகிறவரும் கிறிஸ்து ஒருவரே யோவான் நற்செய்தியாளர்
உறுதிப்படக் கூறுகிறார்: "கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை;
தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை
கொண்டவகுமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்" (யோவா
1:18), கிறிஸ்து லூக்கா நற்செய்தியில் கூறுகிறார்: "தந்தை
யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த
விரும்புகிறாரோ அவருக்குத் தெரியும். வேறு எவரும் தந்தையை
அறியார்" (லூக் 10:22).
கிறிஸ்துதான் "கட்புலனாகாத கடவுளது சாயல்" (கொலோ 1:15).
அவரில் நாம் கடவுளைக் "கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்;
கையால் தொட்டோம்* (1 யோவா 1:1) இன்றைய இரண்டாம் வாசகத்தில்
பேதுரு கூறுகிறார்: "கட்டுவோர் புறக்கணித்தக் கல்லே மூலைக்
கல்லாயிற்று மூலைக் கல்லாகிய கிறிஸ்து அவரை ஏற்றுக்
கொள்ளாதவர்களுக்கு இடறி விழச்செய்யும் கல்லாக உள்ளார்.
ஆனால் அவரை ஏற்றுக்கொண்டவர்களைத் தமது உரிமைச் சொத்தான
மக்களாக மாற்றியுள்ளார். கிறிஸ்துவை ஏற்றுகொண்ட நாம்
"தேர்ந்தெடுக்கப் பட்ட வழிமரபினர், அரச குருக்களின்
கூட்டத்தினர். தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான
மக்கள் (1பேது 2:9).
மனிதரின் உள்ளக் கிடக்கையில் உள்ள இரண்டு வேட்கைகள்: ஒன்று
கடவுளைக் காணவேண்டும் (பிலிப்புவிடம் இருந்த வேட்கை);
மற்றொன்று விண்ணகம் செல்ல வழியை அறிய வேண்டும் (தோமாவிடம்
இருந்த வேட்கை). இவ்விரு வேட்கைகளையும் நிறைவு செய்கிறவர்
கிறிஸ்து ஒருவரே. அவரில் உலகம் கடவுளைக் காண்கிறது. அவரில்
உலகம் விணணகம் செல்ல வழியைக் கண்டது. கிறிஸ்து வெறும்
கைகாட்டியல்ல; மாறாக, அவர் நமது வழிகாட்டி. வழியை
காட்டுபவர் மட்டும் அல்ல; நம்மோடு பயணிப்பவர்.
கிறிஸ்து நமக்குக் காட்டிய வழி அன்பின் வழி; தியாகத்தின்
வழி: மன்னிப்பின் வழி; தாழ்ச்சியின் வழி: பணிவிடை புரியும்
வழி நம்மையே வெறுமையாக்கும் வழி. இவ்வழியில் சென்றால் நாம்
விண்ணகம் அடைவது உறுதி; விண்ணகத்தில் கிறிஸ்து நமக்காசு
ஏற்பாடு செய்துள்ள இடத்தைப் பெறுவதும் உறுதி.
ஒருவர் கோவிலுக்குக் குதித்துக் குதித்துச் சென்றாராம்.
ஏனெனில் அவர் ஒரு பக்திமான்; மற்றொருவர் ஓடி ஓடி நன்மை
வாங்கினார்; ஏனெனில் அவர் ஒரு நீதிமான். ஆம், மான்
குதித்துக் குதித்து ஓடுவது போல் நாமும் ஆர்வத்துடன்
ஆண்டவரது இல்லம் செல்வோம். "கலைமான்கள் நீரோடைகளுக்காக
ஏங்கித் தவிப்பது போல், கடவுளே! என் நெஞ்சம் உமக்காக
ஏங்கித் தவிக்கின்றது" (திப 42:1).
ஆலயம் வந்து ஆண்டவர் நம்மோடு பேசும் அருள்வாக்கிற்கு
செவிமடுப்போம்; நமது இதயத்தை மேலே எழுப்புவோம்:
கிறிஸ்துவின் திருவுடலை உண்டு அவருடன் இணைவோம். அப்போது,
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுவதுபோல, நாமும்
கிறிஸ்து புரிந்த வல்லர் செயல்களைச் செய்ய முடியும்;
அவற்றைவிடப் பெரிய செயல்களையும் செய்ய முடியும் (யோவா
14:12).
இன்று நாம் செய்ய வேண்டிய பெரிய புதுமை கடவுள் நம்மோடு
இருப்பதை, அவருடைய உடனிருப்பை, இன்றைய உலக மக்களுக்கு
மறுக்க முடியாத விதத்தில் வெளிப்படுத்துவதே. ஒருமுறை
ஒருவர் சாலையில் என்னைப் பார்த்து, தன்னுடைய காலணிகளைக்
சுழற்றிவிட்டு, தன்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு
கூறினார்: "இயேசு ஜீவிக்கிறார்; அல்லேலூயா." அவர் சொன்னது
என் நெஞ்சை நெகிழச் செய்தது. நம்மைக் காண்பவர்கள் நம்மில்
கிறிஸ்துவைக் காணும் அளவுக்கு நமது வாழ்வு ஒளிமயமாக அமைய
வேண்டும். இன்றைய உலகிற்கு நாம் வழிகாட்டிகளாக இருக்க
வேண்டும். அப்போது இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டது
நமது காலத்திலும் மீண்டும் நிகழும். அதாவது, கடவுளின்
வார்த்தை பரவியது: சீடர்களின் எண்ணிக்கை பெருகியது (திப
6:7).
கடவுள் இப்படித்தான் இருக்கிறார் - ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு
கிறிஸ்தவப் பிரிவும் சொல்வதைக் கேட்டு தலைமுடியைப்
பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
யானையைச் சுற்றி நின்று கொண்டு பார்வையற்ற ஐந்து மனிதர்கள்
யானை எதுபோல் இருக்கிறது என்று பேசுவதுதான் நினைவுக்கு வருகிறது.
யானையின் உடலைத் தடவிப் பார்த்து அது சுவர் போல் இருக்கிறது
என்கிறார் ஒருவர். இன்னொருவரோ, தந்தத்தைத் தொட்டு வாள்
போல் என்கிறார். மூன்றாவது நபரோ தும்பிக்கையைத் தொட்டு மலைப்பாம்பு
போல் என்கிறார். நான்காவது நபர் காதைத் தடவி முறம் போல் என்கிறார்.
இறுதியாக ஒருவர் வாலை இழுத்துக் கயிறு போல் இருக்கிறது என்பார்.
யானை எதைப் போல் இருக்கிறது? யார் சொல்வது சரி?
கடவுளைப் பொருத்தும் இப்படித்தான் சமயங்கள் பேசுகின்றனவோ!
நாம் கிறிஸ்தவர்கள் கடவுள் பற்றிய சரியான தெளிவான பார்வை
பெற்றிருப்பதாகப் பெருமைப்படுகிறோமே, எந்த அடிப்படையில்?
இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையின்
அடிப்படையில்தான்!
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும்
தந்தையிடம் வருவதில்லை" (யோவான் 14:6) என்று இயேசு உரிமை
கோரினார். "என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்...
நான் தந்தையுள் இருக்கிறேன். தந்தை என்னுள் இருக்கிறார்"
(யோவான் 14:9,11) என்று உறவு கொண்டாடினார்.
1964இல் திருத்தந்தை 6ஆம் பவுலின் இந்திய வருகையின் போது
இந்து மறைநூலிலிருந்து மேற்கோள் காட்டி உரையாற்றினார்.
உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெடித்துச் சிதறும் ஏக்கம் அது!
"பொய்மையிலிருந்து உண்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும்,
சாவிலிருந்து சாகாமைக்கும், இறைவா என்னை வழிநடத்து'
உண்மையான மகிழ்ச்சிக்கு வழி எது? அந்த வழியில் நம்மை
நடத்தும் உண்மை எது? சாவை வென்று முடிவில்லா வாழ்வு காண
நான் செய்ய வேண்டியதென்ன? இத்தனை கேள்விகளுக்கும் இயேசுவே
பதிலாக இருக்கிறார்.
"நானே வழி"- "உலகின் ஒளி நானே. என்னைப் பின் தொடர்பவர்
இருளில் நடக்க மாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக்
கொண்டிருப்பார்" (யோவான் 8:12).
"நானே உண்மை"- "உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே
உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என்
குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்" (யோவான் 18:37).
அதனால்தான் "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம்
நம்பிக்கை கொள்ளுங்கள், என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்"
(யோவான் 14;1) என்கிறார் இயேசு.
எப்பொழுது மன அமைதி இழக்கிறோம்? எங்கே போவது, யாரை
நம்புவது என்று தெரியாமல் திணறும்போது இயேசுவே
நம்பிக்கைக்குரிய ஆயனாக நம்மை வழிநடத்துகிறார். ஏனெனில்
அவரே வழி.
விவிலியம் முழுவதும் வழிநடத்தும் இறைவனைப் பார்க்கிறோம்.
தொடக்கத்தில் எகிப்திலிருந்து கானான் நாடு நோக்கித் தன்
மக்களை வழிநடத்தினார் பகலில் மேகத் தூணாக, இரவில்
நெருப்புத் தூணாக. (வி.ப.13:21). அதுதூரப் பாதை, இத்தனை
கிலோ மீட்டர் என்று அளக்கலாம்.
இந்தத் தூரப் பாதை சீனாய் மலையில் ஆன்மீகப் பாதையாக
மாறியது. அதுதான் 10 கட்டளைகள் காட்டும் பாதை. "ஆண்டவரின்
திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர், அவரது சட்டத்தைப்
பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். அவர் நீரோடையோரம்
நடப்பட்ட மரம்போல் இருப்பார். பருவ காலத்தின் கனிதந்து
என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்துக்கு ஒப்பாவார்.
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்" (தி.பா.1:2,3).
இந்த ஆன்மீகப் பாதை திருமுழுக்கு யோவான் காலம் வரை
தொடர்கிறது.
இறுதியாகக் கிறிஸ்து வழிநடத்துபவராக மட்டுமன்றி "நானே வழி"
என்கிறார். 10 கட்டளைகள் என்ற ஆன்மீக வழி இங்கே ஓர் "ஆளாக"
நிற்கிறது. இங்கே எத்தனை சட்டங்கள் என்ற கேள்விக்கு
இடமில்லை. "யார்" என்பதே கேள்வி.
கிறிஸ்துவே வழி! கிறிஸ்தவ மறையை ஒரு வாழ்க்கை முறை என்றோ
அல்லது சட்டங்கள் சடங்குகள் இவற்றின் தொகுப்பு என்றோ
மட்டும் சொல்ல முடியாது. சொல்வதும் தகாது. வாழ்க்கை நெறி
முறைகளை மட்டும் எடுத்துக் கொண்டால், மனுநீதியோ,
திருக்குறளோ, நாலடியாரோ, கிறிஸ்தவ வாழ்க்கை முறையைப்
போன்று, சிலருக்கு அதை விட மேலானதாகக் கூட இருக்கலாம்.
மாறாக கிறிஸ்துவே நமக்கு வாழ்க்கை நெறி.
எனவே கிறிஸ்தவம் என்பது கிறிஸ்து என்ற ஓர் ஆளுக்கு நம்மையே
அர்ப்பணித்தல் ஆகும். கிறிஸ்து நம்மைத் தனக்குச் சொந்த
மாக்கிக் கொண்டார். "நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட
வழிமரபினர். அரச குருக்களின் கூட்டத்தினர். தூய
மக்களினத்தினர். அவரது உரிமைச் சொத்தான மக்கள்" (1 பேதுரு
2:9). பெருமிதம் தரும் பேதுருவின் வார்த்தைகள்.
இயேசுவுக்கு நாம் சொந்தம் என்பதை சட்டங்களைக்
கடைப்பிடிப்பதிலும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் நாம்
வெளிப்படுத்தலாம். அவைகள் தேவையான அடையாளங்களே! ஆனால்
நாளடைவில் அந்தச் சட்டங்களும் சடங்குகளுமே கிறிஸ்தவம்
என்று எண்ணுவதுதான் "கிறிஸ்து இல்லாக் கிறிஸ்தவம் ஆகி
விடுகிறது. அதனால் அவரது வார்த்தையால், உணர்வால்,
மனநிலையால், அவரது ஆவியால் நிரப்பப்பட வேண்டும்.
அப்போதுதான் அவரே நமது வழி!
உயிர்த்தெழுந்த ஆண்டவரைச் சந்தித்த தொடக்க காலத் திருச்சபை
தயங்கவில்லை, கலங்கவில்லை. ஏனென்றால் போராட்டம்,
பிரச்சனைகளுக்கிடையிலும் இயேசுவை நம்பியது, இயேசுவை
வழியாகக் கொண்டது. பல்வேறு பணிகளுக்கிடையே மோதல். தீர்வு :
திருத்தொண்டர் அமைப்பு. திருத்தொண்டன் - மக்களின்
நன்மதிப்பைப் பெற்றவன். ஞானம் நிறைந்தவன். ஆவியால்
நிரப்பப்பட்டவன். (தி.பா.6:3) நமது அரசியல், சமூக, சமயத்
தலைவர்கள் எத்தகையவர்கள்?
"கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும்
இருக்கட்டும்" (பிலிப்.2:5).
கிறிஸ்து வழியாக மட்டுமல்ல வாகனமாகவும் இருக்கிறார். நாம்
வானோக்கிச் சென்று சேர!
சிந்தனைப் பயணம்:
அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
வழியும், உண்மையும், வாழ்வுமான இயேசு
இயேசுவின் கூற்றுகளாக நற்செய்திகளில் பதிவாகியிருக்கும் ஒருசில
சொற்கள், வழிபாடு என்ற எல்லையைத் தாண்டி, நினைவில் பதியக்கூடிய
சொற்களாக விளங்குகின்றன. அவ்வாறு, தலைமுறை, தலைமுறையாக மிகவும்
புகழ்பெற்ற இயேசுவின் கூற்றுகளில் ஒன்று, இன்றைய நற்செய்தியில்
இடம்பெற்றுள்ளது. "வழியும், உண்மையும், வாழ்வும் நானே..."
யோவான் நற்செய்தியில் இயேசு, ஏழு முறை "நானே..." என்ற
சொல்லைப் பயன்படுத்தி, தன்னைப் பற்றி கூறியுள்ளார்:
வாழ்வு தரும் உணவு நானே - யோவான் 6: 35
உலகின் ஒளி நானே - 8: 12
நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை - 10:
9
நல்ல ஆயன் நானே - 10: 12
உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே - 11: 25
வழியும், உண்மையும், வாழ்வும் நானே - 14: 6
உண்மையான திராட்சைச் செடி நானே - 15: 1
என்பவை, அந்த அற்புதமான 'நானே' வாக்கியங்கள்.
இயேசு கூறிய இந்த நானே வாக்கியங்களை மையப்படுத்திய பல பாடல்களை
நாம் பயன்படுத்துகிறோம். பல்வேறு மாறுபட்டச் சூழல்களில் இந்த
வாக்கியங்களை நாம் மேற்கோள்களாகப் பயன்படுத்துகிறோம். பாடல்களாக,
மேற்கோள்களாக இந்த வாக்கியங்கள் ஒலிக்கும்போது, மனதில்
நிறைவான பல எண்ணங்கள் எழும். தன்னைப் பற்றிய இந்த வாக்கியங்களை,
தன்னைப் பற்றிய இந்த இலக்கணங்களை, இயேசு எதற்காகக்
கூறினார் என்பதைச் சிந்திக்கும்போது, இந்த வாக்கியங்கள் இன்னும்
கூடுதலானப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன.
யோவான் நற்செய்தியில் இயேசு தன்னைப்பற்றிக் கூறிய
"நானே..." வாக்கியங்கள் எத்தகையச் சூழல்களில் சொல்லப்பட்டன
என்பதை ஆழ்ந்து ஆராய்ந்தால், இவை அனைத்துமே, எதிர்ப்புகள்,
குழப்பங்கள் மத்தியில், இயேசு கூறிய வார்த்தைகள் என்பதை
உணரலாம். போராட்டமும், குழப்பமும் தன்னை நெருக்கும்போது ஒருவர்
'நான் இப்படிப்பட்டவன்' என்று கூறுவதில் நல்ல பாடங்களைக்
கற்றுக்கொள்ள முடியும். இயேசு இன்று அத்தகையப் பாடங்களை
நமக்குச் சொல்லித் தருகிறார்.
நம்முடைய வாழ்வைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். நமது உண்மையான
இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம்,
போராட்டம் இவை பெருகும்போது, நமது உண்மை இயல்பு வெளிப்படும்.
வாழ்க்கை, மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை
நம்புகிறோம், எதை நம்புவதில்லை, எது நமது வாழ்வின் அடிப்படை
என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில்
நாம் சிக்கிக்கொள்ளும்போது, நமது நிலைப்பாடு என்ன, நாம் எப்படிப்பட்டவர்கள்
என்பதெல்லாம் முதலில் நமக்குத் தெரியவரும், பின்னர் இவை பிறருக்கும்
தெரியவரும். உண்மைத் தங்கமோ, போலித் தங்கமோ அழகிய ஒரு கண்ணாடி
பேழைக்குள் இருக்கும்போது ஒரே விதத்தில் மின்னும்.
வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான் உண்மைத் தங்கமும்,
போலித் தங்கமும் தங்கள் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும்.
இந்த ஒரு பின்னணியுடன் இன்றைய நற்செய்தியை நாம் அணுகுவது
நமக்கு உதவியாக இருக்கும். "வழியும் உண்மையும் வாழ்வும்
நானே"என்ற சொற்களை, இயேசு, அமைதியான ஒரு சூழலில், ஒரு
புன்முறுவலுடன், இலேசான ஒரு பெருமையுடன் கம்பீரமாகச் சொல்லவில்லை.
தன் சீடர்களுடன் இறுதி இரவுணவை அருந்திய வேளையில் இயேசு இச்சொற்களைக்
கூறினார். பயம், கலக்கம், சந்தேகம்... போன்ற எதிர்மறை உணர்வுகளில்
மூழ்கிக் கொண்டிருந்த சீடர்களிடம், இயேசு, "வழியும் உண்மையும்
வாழ்வும் நானே"என்ற வார்த்தைகளைச் சொல்கிறார்.
சீடர்கள் அச்சமும், கலக்கமும், சந்தேகமும் அடையக் காரணம்
என்ன? இயேசு அப்போதுதான் அவர்களிடம் இரு பெரும் கசப்பான உண்மைகளைப்
பகிர்ந்துகொண்டார். இயேசுவின் மிக நெருக்கமான பன்னிரு சீடர்களில்
ஒருவர், அவரைக் காட்டிக் கொடுப்பார் என்றும், மற்றொரு சீடர்,
இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலிப்பார் என்றும்,
இயேசு, இரு கசப்பான உண்மைகளைக் கூறியிருந்தார். உண்மைகள்
பொதுவாகவே கசக்கும், அதுவும் நம்பிக்கைத் துரோகம் என்ற உண்மை
பெரிதும் கசக்கும். எனவே, சீடர்கள் கலக்கத்திலும், குழப்பத்திலும்
ஆழ்ந்திருந்தனர்.
நாம் சந்திக்கும் கலக்கம், குழப்பம், போராட்டம் ஆகியவற்றிற்கு
காரணமாக இருப்பது, நாம் வாழும் இரு வேறு உலகங்கள். இவ்விரு
உலகங்களைப்பற்றி, யூத மத குரு Harold S.Kushner அவர்கள்,
Living a Life That Matters என்ற தன் நூலின் முதல்
பிரிவில் இவ்வாறு கூறுகிறார்:
வேலை மற்றும் வர்த்தகத்தின் உலகம், (the world of work and
commerce) நம்பிக்கையின் உலகம் (the world of faith) என்ற
இரு உலகங்களுடன் நாம் வாழ்கிறோம். வேலை-வர்த்தக உலகம்,
வெற்றிபெற்றவர்களை போற்றுகிறது, தோற்றவர்களை ஏளனம் செய்கிறது.
மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து பணி செய்யும் ஒருவர்,
தேர்தலில் தோற்றுப்போகும்போது, அவரை இந்த உலகம் எள்ளி நகையாடுகிறது.
1996ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் Atlanta என்ற நகரில்
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அப்போது வெளியான ஒரு விளம்பரத்தில்,
"நீ வெள்ளிப் பதக்கத்தை வெல்லவில்லை, தங்கப் பதக்கத்தை இழந்துள்ளாய்."
(You dont win the silver medal, you lose the gold) என்ற
வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன: இந்த வார்த்தைகள் நமது
வேலை-வர்த்தக உலகம் காட்டும் வழி. வெள்ளி போதாது, தங்கம்
வேண்டும்; வேண்டும்... இன்னும் வேண்டும் என்று ஆவலைத்
தூண்டும் ஓர் உலகம் இது. இந்த ஆவலைத் தீர்க்க, போட்டிகளை
உருவாக்கும் உலகம் இது. இந்த உலகில், ஒருவர் வெற்றி அடைய,
பலர் தோல்வி அடையவேண்டும். அடுத்தவரது பலமற்ற நிலைகளைப்
பயன்படுத்தி, அவரைத் தோல்வியடையச் செய்வதே வெற்றிக்குச் சிறந்த
வழி என்று இங்கு சொல்லித் தரப்படுகிறது.
வேலை-வர்த்தக உலகை இவ்வாறு படம்பிடித்துக் காட்டும்
Kushner அவர்கள், தொடர்ந்து, நம்பிக்கையின் உலகைப்பற்றி விவரிக்கிறார்:
நல்ல வேளை... நம்பிக்கையின் உலகம் என்ற மற்றொரு உலகமும் இருக்கிறது.
ஆன்மீகத்தை வளர்க்கும் உயர்ந்த கொள்கைகள் நிறைந்த வேறொரு
உலகம் இது. இந்த உலகில் போட்டிகள் இல்லை. அடுத்தவரது பலமற்ற
நிலைகளைக் கண்டு, அவருக்கு உதவிகள் செய்வதே இங்கு இயல்பாக
நடைபெறும் ஒரு செயல். இந்த உலகில் அனைவரும் வெற்றிபெற
வேண்டும் என்றே எல்லாரும் பாடுபடுகின்றனர். இந்த உலகில்
தோற்பவர்களைவிட, வெற்றி பெறுபவர்களே அதிகம்.
இறுதி இரவுணவின் வேளையில், நம்பிக்கையிழந்து, தோற்றுவிட்டவர்களைப்போல்
முகம் கவிழ்ந்து அமர்ந்திருந்த சீடர்களிடம் இயேசு கூறிய
சொற்களே இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது.
யோவான் நற்செய்தி 14:1-6
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: "நீங்கள் உள்ளம் கலங்க
வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை
கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.
அப்படி இல்லையெனில், உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்
என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு
செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக்
கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.
நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்"என்றார்.
தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத்
தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள்
எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?"என்றார். இயேசு அவரிடம்,
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே"என்றார்.
அவர்கள் அனைவரும் தன் தந்தையின் இல்லத்தை வென்றவர்கள் என்ற
எண்ணத்தை சீடர்கள் உள்ளங்களில் இயேசு ஆழமாகப் பதிக்கிறார்.
அந்த இல்லத்திற்கு செல்லும் வழியாக, அந்த இல்லத்தில் சீடர்கள்
பெறவிருக்கும் வாழ்வாக தான் இருப்பதை, "வழியும் உண்மையும்
வாழ்வும் நானே"என்ற சொற்கள் வழியே இயேசு உணர்த்துகிறார்.
இறுதி இரவுணவின் வேளையில், சீடர்களைவிட அதிக குழப்பத்திற்கும்,
போராட்டங்களுக்கும் உள்ளானவர் இயேசு என்பதை நாம் அறிவோம்.
இருப்பினும், அவர், தன்னைப்பற்றியும், தன் தந்தையைப்பற்றியும்
கொண்டிருந்த தெளிவினால், அமைதியாக, தன் பாடுகளை எதிர்கொள்ள
துணிவுபெற்றார்.
போராட்டமான, குழப்பமானச் சூழல்களில் முதலில் நம்மைப்பற்றியத்
தெளிவு நமக்கு இருந்தால் மட்டுமே, அந்தப் போராட்டத்திற்கு,
குழப்பத்திற்கு தீர்வுகாண முடியும். நம்மைப்பற்றியத்
தெளிவோ, அல்லது நம்மைப்பற்றிய நம்பிக்கையோ இல்லாமல்
போகும்போது, போராட்டங்கள், நம்மில் அடிப்படைக் கேள்விகளை
எழுப்பும். பிறரைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் கேள்விகள்
எழும். இக்கேள்விகளின் சுமையில், நாம் உடைந்துபோகவும், சிதறிப்போகவும்
வாய்ப்பு உண்டு. தம்மையும், சீடர்களையும் சுற்றி எதிர்ப்பும்,
போராட்டமும் சூழ்ந்துவருவதை நன்கு உணர்ந்த இயேசு, தான்
யார், தன் பணி என்ன என்பவை குறித்தத் தெளிவைப்
பெற்றிருந்தார். தன் சீடர்களிடமும் அந்தத் தெளிவை உருவாக்க,
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே"என்ற வார்த்தைகளை அவர்களுடன்
பகிர்ந்துகொள்கிறார்.
இது மே மாதம். வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத்
தீர்மானிக்கும் நேரம் இது. பலருக்கு வேலை மாற்றம், இடம்
மாற்றம், என்று பல மாற்றங்களை சந்திக்கும் சூழல்கள் எழுந்திருக்கலாம்.
பல்வேறு பாதைகள் குறுக்கும் நெடுக்குமாக நம் வாழ்வில்
தெரியும்போது, இறைவன் சரியான வழியை, சரியான திசையை நமக்குக்
காட்ட வேண்டும் என்று செபிப்போம்.
பல இளையோர் தங்கள் பள்ளிப்படிப்பை, அல்லது கல்லூரிப் படிப்பை
முடித்துவிட்டு தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது
வாழ்வு நிலையைத் தீர்மானிக்கும் தருணத்தில் உள்ளனர். இத்தருணத்தில்,
இயேசு கூறும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்ற
வார்த்தைகள், அவர்களை, நல் வழிக்கு, ஒளிமிக்க, உண்மையான
வாழ்வுக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று மன்றாடுவோம்.
உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே!
என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!