இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா ஆசிபெற வந்திருக்கும் அன்பு
மக்களே!
எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வாருங்கள்" என நம் உறவினர்கள் நம்மை
வரவேற்பதுபோல், இன்று நம் பெருமான் இயேசுபிரான் நான் தரும்
விருந்துக்கு வாருங்கள் என நம்மை அன்போடு இன்று இந்தத் திருப்பலியில்
அழைக்கிறார்.
திருப்பலி ஒரு கொண்டாட்டம்!
திருப்பலி ஒரு அருட்சாதனப்பலி!
திருப்பலி ஒரு பலிவிருந்து!
பலி விருந்து ஒரு இறையனுபவம்!
இறையனுபவம் ஒரு மாற்றம்.
மாற்றம் இரு குணங்களை உடையது.
அப்பமும் இரசமும் இயேசுவின் திரு உடலும் திரு இரத்தமுமாய் ஆன நற்கருணை!
நற்கருணை ஒரு பலிப்பொருள்! நற்கருணை நோயுற்ரோருக்கு மருந்து !நற்கருணை
ஆன்ம பசிக்கு உணவு! நற்கருணை விசுவாசத்தின் வெளிப்பாடு! நற்கருணை
தியாகத்தின் நிறைவு! நற்கருணை அன்பின் வடிவம்! பழைய ஏற்பாட்டில்
பேழைக்குள் மன்னா .....
புதிய ஏற்பாட்டில் பேழைக்குள் நற்கருணை.
கானான் நாட்டை நோக்கிய பயணத்தில் மன்னா உணவு.....
விண்ணக நாட்டை நோக்கிய பயணத்தில் நற்கருணை உணவு.... மன்னா இது உடலுக்கு
உணவு, நற்கருணை இது ஆன்மாவுக்கு உணவு.
நற்கருணையை மண்டியிட்டு தலைகுனிந்து வணங்கினால், நாம் தலை
நிமிர்ந்து வாழுவோம் என்பது உறுதி.
இயேசுவின் திருவுடல் இரத்தப் பெருவிழாவில் விசுவாசத்தைப் பலப்படுத்துவோம்,
உறுதியாக்குவோம், ஆழமாக்குவோம்
தகுதியான மன நிலையில் நற்கருணையை உண்ணும்போது உலகம் தர முடியாத ஆறுதலைப்
பெற்றுக் கொள்வோம் என்பதை இன்றைய திருப்பலிக் கொண்டாட்டம் நமக்குத்
தருகிறது. நம்பிக்கையோடு நாம் விரும்புகின்ற ஆறுதலை நற்கருணையில்
தேடுவோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
01. அன்றாடத் திருஉணவால் எம்மை ஆதரிக்கும் அன்பரே!
திருச்சபையின் திருப்பணியாளர்கள் உமது திருஉணவால் திடம்
பெற்று
இறைமக்களையும் உமது திருஉணவால் திடப்படுத்த வரம்
கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
02. நாங்கள் உண்ணும் உணவில் எங்கள் பெயர் எழுதியுள்ள
இறைவா! நாட்டுமக்கள் எல்லோருக்கும் அடிப்படைத் தேவையான
உணவு, உடை, உறைவிடம், உரிமைகள் கிடைக்க நாட்டுத் தலைவர்கள்
ஆற்றலோடு செயற்பட வரம் கேட்டு இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
03. வாழ்வுதரும் உணவளிக்கும் வள்ளலே! அன்றாட வாழ்வை
வளமாக்கும் உணவை அருந்த வழிகாட்டிக்கொண்டிருக்கும்
எங்கள் ஆன்மீகத் தந்தையர்க்கு வளம்மிகு உணவை எந்நாளும்
தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
04. உடைந்த உள்ளங்களை குணப்படுத்தும் அன்பரே! எங்களை
அன்புசெய்ய யாருமில்லை, எங்களுக்கான உடமைகளை, உரிமைகளை
பறித்துக்கொண்டு நாடுகடத்தி விட்டார்கள்;, அநீதி
எங்களைச் சுற்றி தலைவிரித்தாடுகிறது எங்கள் நெஞ்சம்
வருத்தத்தை சுமந்து கொண்டிருக்கிறது என அல்லல்படும்
அனைவருக்கும் அவர்களின் உள்ளம் விரும்பும் உணவளிக்க
வரம் கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. பசித்தோரை நலன்களால் நிரப்பும் பரமனே!
உணவின்றித் தவிக்கும் ஏழைமக்களுக்கு அன்றாட உணவுக்கான
வேலை வாய்ப்புக் கிடைக்கச் செய்யவும், அதிகம்
வைத்திருப்போர் பகிர்ந்து கொள்ளும் மனநிலையையும்,
வரமாகக் கேட்டு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
இறைமகன் இயேசு மனுக்குலத்தோடு
ஏற்படுத்திக் கொண்ட உறவின் உச்சக்கட்ட அடையாளம் நற்கருணை.
இயேசு இறுதி இராவுணவில் நற்கருணையை ஏற்படுத்தினாலும்,
நற்கருணை இயேசுவின் பணிவாழ்வின் பல இடங்களில் நிழலாடுகின்றது.
இயேசுவின் அப்பம் பலுகச் செய்யும் நிகழ்வில் நற்கருணையின்
சாயல் அதிகமாகவே உள்ளது. நான்கு நற்செய்தியாளர்களும்
குறிப்பிடும் செய்தி இது. இயேசு மக்கள் கூட்டத்திற்கு
உணவு கொடுப்பது, யாவே இறைவன் இஸ்ராயேல் மக்களுக்கு
பாலைவனத்தில் மன்னாவும், இறைச்சியும், தண்ணீரும் அளித்த
நிகழ்வையும், எலிசா இறைவாக்கினர் 20 அப்பங்களைக்
கொண்டு 100 பேருக்கு அளித்த நிகழ்வையும் (2அர.
4:42-44) நினைவூட்டுகிறது.
இயேசுவின் அப்பம் பலுகும் அறிகுறியிலும், நற்கருணை ஏற்படுத்தும்
இறுதி இராவுணவு நிகழ் விலும், உயிர்த்த ஆண்டவரின் எம்மாவூஸ்
பயண நிகழ்விலும் ஒரே மாதிரியான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றது.
(எடுத்து, ஆசீர்வதித்து, உடைத்து, அளித்து). இந்த
நான்கு சொற்கள் இன்றி நமக்கு நற்கருணையின் பொருளையும்,
சவால்களையும் முன்வைக்கின்றன.
எடுத்து:
நாம் அன்றாடம் நம்மை அறியாமலே எடுத்துக் கொண்டே இருக்கிறோம்.
நாம் பேசும் மொழி, நாம் கற்ற கல்வி, நாம் பெற்ற உறவுகள்,
நம் தாயின் கருவறையில் நாம் உண்ட உணவு, பெற்ற உயிர் அனைத்தும்
நம்மை அறியாமல் நாம் எடுத்தவைதாம். 'எடுத்தல்"; ஒரு
கொடையாக வந்தாலும் அது 'கொடுத்தல்" என்ற கடமையை உள்ளடக்குகின்றது.
இயேசு மனுவுரு 'எடுத்தது" தம்மையே மீட்பராகக் 'கொடுப்பதற்காகத்தான்".
எடுத்தல் அவரின் முன்னெடுப்பைக் காட்டுகின்றது. நற்கருணை
விருந்தில் 'நன்மை" 'எடுக்கும்" நாம் அதையே மற்றவர்களுக்குக்
கொடுக்க வேண்டும்.
ஆசீரளித்தல்:
(கடவுளுக்கு நன்றி செலுத்தி) 'ஆசீர் அளிப்பது என்பது
நமக்கு கீழ் இருக்கும் நபர்களுக்கு நாம் விரும்பும்
நலன் மட்டுமல்ல மாறாக நம் இறைவனைப் புகழ்ந்து நன்றி
சொல்வதும் 'ஆசீர் அளிப்பதுதான்". நாம் உண்ணும் உணவு இறைவன்
தந்த கொடை. இயற்கை தந்த கொடை. வாழ்வில் நடக்கும் அனைத்தும்
கணிதவியல் கோட்பாடுகளின்படி நடப்பதில்லை. நாம் விதை
விதைப்பதால் பலன் வந்துவிடும் என்று இயற்பியல்
கோட்பாடும் எழுதிவிட முடியாது. உணவில் எப்போதும் ஒரு
மறைபொருள் இருக்கத்தான் செய்கிறது. 10 பேர் ஒரே
மாதிரிப் பொருட்களைப் பயன்படுத்தி உணவு சமைத்தாலும் பத்துப்பேர்
சமைத்த உணவுகளின் சுவையிலும் வேறுபாடு உள்ளது. நாம்
வாழ்வில் காணும் அனைத்து நபரிலும் ஏதோ ஒரு மறைபொருள்
இருக்கிறது. எனவே ஒவ்வொருவருக்கும் ஆசீர் அளிப்பதில்
முந்திக் கொள்வோம்.
உடைத்து:
உணவு உடைந்தால்தான் நமக்கு உருக்கொடுக்க முடியும். உணவை
வைத்துக் கொண்டு (ரொட்டி) அழகாக இருக்கின்றது என்று
பார்த்துக் கொண்டேயிருந்தால் பசி ஆறிவிடாது. அதுதன்
இயல்பை உடைத்தால்தான் உணவாக முடியும். தன்னையே உடைத்து
மனுக்குலத்திற்கு உணவாக்கிய இயேசுவின் நற்கருணை நமக்கு
உணர்த்துவதும் இதுவே. நம் உழைப்பிலும் உறவிலும் நம்மையே
உடைக்கும் போதுதான் நாம் இந்த சமுதாயத்திற்கு அர்த்தம்
ஆகின்றோம். உடைப்பது நமக்கு வலியைத் தந்தாலும் நாம் மற்றவர்களுக்கு
உணவாகும் அழகு அந்த வலியை மறக்கச் செய்கின்றது.
கொடுத்து:
'எடுத்தலின் நிறைவு கொடுத்தல்" உள்ளவர்களால் மட்டுமே
கொடுக்க முடியும். இயேசுவைப் பொறுத்தவரையில் கொடுத்தல்
என்பது 'விரித்துக் கொடுப்பது" எந்த அளவிற்கு? இந்த
அளவிற்கு என்று இரண்டு கைகளையும் சிலுவையில்
விரித்துக் கொடுத்ததே இயேசுவின் அன்பு. கொடுத்தலில்
நமக்கு வரும் பயம் 'கொடுத்தால் குறைந்துவிடும்" என்பதுதான்.
நம் மகிழ்ச்சி, நம் அறிவு, நம் ஆற்றல், நம் திறன்
போன்ற அழியாதவைகள் கொடுக்கும் போதுதான் நம் ஆற்றல் அதிகமாகின்றன.
= 7, 12 எண் முழுமையைக் குறிக்கும். 12 கூடைகளில் என்பது
இஸ்ராயேல் மக்கள் முழுவதையும், பன்னிரு திருத்தூதர்களையும்
குறித்துக் காட்டுகிறது. அவர்களிடம் இருந்தவரை 5 அப்பம்,
2 மீன் மட்டுமே. இயேசுவிடம் வந்த பின்பு பெருகின.
ரூ நற்கருணையை சிந்திக்கும் இந்நாளில் தூய ஜோன்
கிறிஸ்சோஸ்தம் கூற்றினை உள்வாங்குவோம்.
= கற்களாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கோயில்களைவிட
முக்கியமானவர்கள் வெகு ஜன மக்கள். ஏனெனில் பொது மக்களே
இறை இயேசுவின் நிஜமான உடல். அதிலும் ஏழை எளியவர்களே!
இறைஇயேசுவின் முதல் திருவுடல். அப்படியானால் நற்கருணையை
வாழ்த்த விரும்பும்போது நசுங்கி நிற்கும் மக்களுக்கு
நற்கருணை செய்திடு.
= வாழ்வுக்கான உணவை வாடியவர்களுக்கு வழங்காதவரை
வாழ்வின் உருவாகிய வள்ளல் இயேசுவின் நற்கருணையை வாங்க
எவ்வாறு இயலும்?
பேதுரு அருளப்பே - இயேசுசபையின் முன்னாள் தலைவர்.
= 'இது என் உடல்" இது என் இரத்தம் என்று சொன்னவரே!
நீ என்னைப் பசியாய் இருக்கக் கண்டாய், எனக்கு உணவு தரவில்லை
எனச் சொல்லியிருக்கிறார். (மத். 25:31-46).
= திருப்பலிப் பீடத்தை அப்பத்தால் நிறைத்தால் மட்டும்
போதுமா? முதலில் பசியால் வாடுபவருக்கு உணவளி. பிறகு பீடமேறி
நற்கருணை விருந்து கொண்டாடு. பொன்முலாம் பூசப்பட்ட
இரசக் கிண்ணத்தை வைத்திருக்கின்றாய். அதனால் என்ன பலன்..........?
என்றெல்லாம் புனித கிறிஸ்சோஸ்தம் கூறியுள்ளார். ஒடுக்கப்பட்டோரின்
வாழ்வுக்கு வழிசெய்வதே நற்கருணைப்பலிக்கு தகுதி பெறுவது.
= மத்திய காலத்தில் தூய பெர்னாந்தும்
சொல்லியிருக்கிறார். நற்கருணை ஆராதனை கொண்டாடப்படும்
திரு ஆலயங்களை பொன்னால் அலங்கரித்துவிட்டு தனது ஏழைகளை
திருச்சபை ஆடையின்றி இருக்கும் அளவிற்கு புறக்கணித்து
விட்டால் பயன்? சிந்தித்து செயல்படுவோம்.
= மனிதனின் உரிமைக்காக, நல்வாழ்வுக்காக, சமத்தவ
சூழலுக்காக நம்மையே ஈடுபடுத்திக்கொள்ள நற்கருணைப்பலி
வலியுறுத்துகிறது. நீதிப்போராட்டத்தில் நாம்
ஆக்கபூர்வமாக செயல்ப்பட நமக்கு உரமாக உணவாக நற்கருணை
அமைகிறது என்பதை உணர்வோம்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
முழுமையான அக்கறை
இன்றைய நாளில் நாம் ஆண்டவராகிய கிறிஸ்துவின் திருவுடல்
திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நம் ஆண்டவராகிய
கிறிஸ்து தன் உடலோடும், இரத்தத்தோடும் அப்ப, இரசத்தில்
வீற்றிருக்கிறார் என்ற மறைபொருளே இன்றைய திருநாளின் பின்புலத்தில்
இருக்கிறது. இருந்தாலும், இந்த நாள் மனிதர்கள் மிக அடிப்படையான
ஓர் உணர்வான பசியோடு தொடர்புடையது. பசி என்ற மனித உணர்வை
எதிர்கொள்கின்ற கடவுள், மனிதர்களின் ஆன்மாவிற்கு மட்டுமல்லாமல்,
உடலுக்கும் உணவு கொடுக்கிறார் என்பதே மறைபொருளின் நீட்சி.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 14:18-20) ஆபிராமும்
அவருடைய சகோதரர் லோத்தும் நான்கு அரசர்களை வெற்றி கொண்ட
நிறைவுப் பகுதியை வாசிக்கின்றோம். இந்த நான்கு அரசர்களும்
லோத்து மற்றும் அவருடைய ஆள்களைக் கொண்டு, அவரையும் அவருடைய
உடைமைகள் மற்றும் கால்நடைகளையும் சிறைப்பிடிக்கின்றனர்
(காண். தொநூ 14:12). அவர்கள் தன்னைவிட வலிமை வாய்ந்தவர்களாக
இருந்தாலும், ஆபிராம் தன்னுடைய துணிச்சலாலும், இராணுவ
யுத்தியாலும் ஆபிராம் அவர்களைத் தோற்கடிக்கின்றார். தோற்கடித்து
வீடு திரும்பும்போது உள்நாட்டுக்காரர்கள் அவரை சிறப்பாக
வரவேற்கின்றனர். உள்நாட்டின் அரசராக இருந்த சாலேம் அரசர்
மெல்கிசெதேக்கும் அங்கே வந்து ஆபிராமை வாழ்த்துகின்றார்.
'மெல்கிசெதேக்கு' என்பது ஓர் உருவகப் பெயர். 'நீதியின்
அரசர்' என்பது இதன் பொருள். மேலும், 'சாலேம்' என்றால் 'அமைதி.'
இவ்வாறாக, மெல்கிசெதேக்கு நீதியின், அமைதியின் அரசராக இருக்கும்
இவர், உன்னத கடவுளின் அர்ச்சகராகவும் இருக்கிறார். அருள்பணியாளரின்
முதல் ஆசீர் இப்பகுதியில்தான் வருகிறது. ஆபிராமிற்கு ஆசி
வழங்குகின்ற இவர், ஆபிராமை வாழ்த்துவதோடு, ஆபிராமிற்கு
வெற்றியைத் தந்த உன்னத கடவுளுக்கும் வாழ்த்துக்
கூறுகிறார். மேலும், அப்பமும் திராட்சை இரசமும் கொடுத்து
ஆபிராமையும் அவருடன் வந்தவர்களையும் வரவேற்கின்றார்.
போரினாலும், பசியாலும் துவண்டு போயிருந்து ஆபிராமுக்கும்
அவருடைய வீரர்களுக்கும் இவ்வுணவு ஊட்டம் தருவதாக இருந்திருக்கும்.
ஆபிராமுக்கு மெல்கிசெதேக்கு அளித்த வரவேற்பு அவருடைய
முழுமையான அக்கறையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆபிராமையும்
கடவுளையும் வாழ்த்தியதன் வழியாக, ஆபிராமின் வெற்றிக்குக்
காரணம் உன்னத கடவுளே என்று வெற்றியின் ஆன்மீக அடித்தளத்தைக்
கோடிட்டுக் காட்டுகிறார் மெல்கிசெதேக்கு. உன்னத கடவுள் ஆபிராமோடு
உடன் இருந்ததால்தான் அவரால் போரில் வெற்றிபெற முடிந்தது.
உன்னத கடவுளே அந்நான்கு அரசர்களையும் ஆபிராமின் கைகளில் ஒப்புவித்தார்.
மேலும், ஆபிராமுக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொடுத்ததன்
வழியாக ஆபிராம் மற்றும் அவரோடு உடனிருந்தவர்களின் உடல்
தேவையையும் நிறைவேற்றுகிறார் மெல்கிசெதேக்கு. இவ்வாறாக,
கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுபவர்களின் ஆன்மாவுக்கும்,
உடலுக்கும் உணவு தந்து முழுமையாக அக்கறை காட்டுகிறார் என்பதை
மெல்கிசெதேக்கின் செயல் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 11:23-26), பவுல்,
ஆண்டவரின் இறுதி இராவுணவு எப்படிக் கொண்டாடப்பட வேண்டும்
என கொரிந்தியத் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்றார். இதன்
பின்புலத்தில் இருப்பது கொரிந்து நகர மக்களின் பிறழ்வான செயல்பாடு?
அது என்ன பிறழ்வான செயல்பாடு? இயேசுவின் இறுதி இராவுணவை
நினைவுகூரும் வகையில் கொரிந்து நகர மக்கள் கூடி விருந்து
உண்டனர். அந்த விருந்திற்கு ஆன்மீக மற்றும் சமூக அர்த்தம்
இருந்தது. ஆன்மீக அர்த்தம் என்னவென்றால், அவர்கள் கூடி வரும்
போது அந்த இடம் கூட்டு செபத்திற்கான இடமாகவும், இயேசுவின்
பாடுகள் மற்றும் உயிர்ப்பு பற்றிய அறிவைப் பெறுகின்ற இடமாகவும்
மாறியது. சமூக அர்த்தம் என்னவென்றால், உணவையும் பானத்தையும்
சாதாரண மக்களோடு பகிர்ந்துகொள்ளும் இடமாக அது இருந்தது.
ஆனால், காலப்போக்கில் ஆன்மீக அர்த்தம் மறைய ஆரம்பித்தது.
பணக்காரர்கள் சிலர் தாங்கள் கொண்டு வந்ததை உண்டு குடித்து,
மது மயக்கத்தில் இருந்ததோடு ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும்
உணவு கிடைக்காமல் செய்துவிட்டனர். வேலை முடிந்து வந்து
பார்க்கின்ற ஏழைகளும், அடிமைகளும் ஒன்றும் கிடைக்காமல் பசியால்
வாடினர். ஆக, கிறிஸ்துவை மையமாக வைத்திருந்த கூடுகை மதுபானக்
கூடுகையாக மாறிப் போனது (காண். 1 கொரி 11:17-22).
இந்தப் பின்புலத்தில் அவர்களுக்கு அறிவுறுத்துகின்ற பவுல்,
கூடுகையின் நோக்கம் இயேசுவின் பாடுகளையும் தியாகத்தையும்
நினைவுகூறுவதே என்று நினைவூட்டுகிறார். இயேசு செய்ததை தாங்கள்
செய்யும்போது அதனால் ஆன்மீக ஊட்டம் பெறுகிறார்கள் என்றும்,
இதை அவர்கள் இயேசு வரும் நாள் மட்டும் செய்ய வேண்டும் என்றும்
அறிவுறுத்துகின்றார். ஆன்மீக அப்பமானது சாதாரண உணவிற்கு
முன் அல்லது பின் உண்ணப்பட்டது. இப்படிப்பட்ட இடங்களில்தான்
சாதாரண மக்கள் நல்ல விருந்து உண்ணும் வாய்ப்பு பெற்றனர்.
ஆக, நற்கருணைக் கொண்டாட்டத்தின் நோக்கம் ஆன்மீக உணவு என்றாலும்,
உடல்சார் உணவும் பகிர்வும் முக்கியம் என்பதை அறிவுறுத்துகின்ற
பவுல், ஒன்று மற்றதை விலக்கிவிட முடியாது என்கிறார். ஆக,
ஆன்மீக அக்கறையும், உடல்சார் அக்கறையும் இணைந்தே செல்வதே
முழுமையான அக்கறை.
இன்றைய நற்செய்தி (காண். லூக் 9:11-17), இயேசு அப்பம் பலுகும்
நிகழ்வை லூக்கா பதிவு செய்யும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
எல்லா நற்செய்தியாளர்களும் ஏறக்குறைய ஒருமித்த கருத்தோடு
எழுதப்படும் அறிகுறி இது ஒன்றுதான். தன்னுடைய போதனையைக்
கேட்க வந்த மக்களுக்கு இயேசு உணவளிக்கின்றார். ஆக, ஆன்மாவுக்குப்
பயன்படும் தன்னுடைய போதனையைப் போல, உடலுக்குப் பயன்படும்
உணவும் முக்கியமானது என்பதை உணர்கின்ற இயேசு, அவர்களுக்குக்
காட்டும் முழுமையான அக்கறையின் வெளிப்பாடே இந்த அற்புதம்.
இயேசு உணவளிக்கும் நிகழ்வு இரண்டு விடயங்களை அடிக்கோடிடுகிறது:
ஒன்று, அப்பத்தை பலுகச் செய்யுமுன் இயேசு கடவுளுக்கு நன்றி
கூறி செபிக்கிறார். உணவு என்பது கடவுளின் கொடை. அவரே, ஊட்டம்
அனைத்தின் ஊற்று. இரண்டு, சீடர்களே உணவைப் பகிர்ந்து
கொடுக்கிறார்கள். ஆக, கடவுளிடமிருந்து வருகின்ற உணவு மனிதர்கள்
கைகளால் பகிரப்படுகின்றது. இங்கே, ஆன்மாவும் உடலும் ஒருசேர
ஊட்டம் பெறுகிறது. தன்னுடைய திருத்தூதர்கள் பிற்காலத்தில்
எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இயேசு இதன்வழியாக அவர்களுக்குக்
கற்பிக்கிறார். ஆகையால்தான், திருத்தூதர் பணிகள் நூலில்
கைம்பெண்கள் விருந்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தபோது
திருத்தூதர்கள் உடனடியாகச் செயல்பட்டு திருத்தொண்டர்களை ஏற்படுத்துகின்றனர்
(காண். திப 4:32-37).
ஆன்மாவின் அக்கறையும், உடலின் அக்கறையும் இணைந்தே செல்கின்றன
என்பதை இன்றைய இறைவார்த்தை வழிபாடு இனிதே நமக்குக் கற்பிக்கிறது.
ஆபிராமின் வெற்றி கடவுளிடமிருந்தே வருகிறது என்று அவருக்கு
நினைவூட்டுகிற மெல்கிசெதேக்கு ஆபிராமின் உடல் தேவைக்கான அப்பத்தையும்
திராட்சை இரசத்தையும் வழங்குகின்றார். ஆண்டவருடைய பாடுகளின்
உயிர்ப்பின் நினைவுகூறுதலோடு, எளியவர்க்கு உணவளிப்பதும் நற்கருணையின்
நோக்கம் எனக் கொரிந்து நகரத் திருச்சபைக்கு வலியுறுத்திறார்
பவுல் (காண். 1 கொரி 11:33). இயேசு தன்னுடைய இறையாட்சிப்
போதனையைப் பற்றிக் கருத்தாய் இருந்தாலும், பசியால் வாடிய
மக்களுக்கு உணவு தருகின்றார். ஆக, கடவுளின் அக்கறை ஆன்மாவையும்,
உடலையும் தழுவிய முழுமையான அக்கறையாக இருக்கிறது. இறைமனிதர்களான
மெல்கிசெதேக்கு, பவுல், இயேசு போல, ஆன்மா-உடல் என்னும்
முழுமையான அக்கறையைக் காட்டும் இஸ்ரயேல் அரசனையும், நம்மையும்,
'மெல்கிசெதேக்கின் முறைமைப்படி நீர் என்றென்றும் குருவே'
என அழைக்கிறது இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 110).
இன்றைய திருநாள் நமக்கு வைக்கும் பாடங்கள் எவை?
1. தேவையை அறிதலும், அக்கறை காட்டுதலும்
பசியால் இருக்கும் ஒருவருக்கு உணவும், நாடோடியாய் இருக்கும்
ஒருவருக்கு பாதுகாப்பும், தனிமையாய் இருக்கும் ஒருவருக்கு
அன்பும், தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஒருவருக்கு தன்மதிப்பும்
தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு தேவையும் நிறைவு செய்யப்பட
வேண்டும். தேவைகளில் ஆன்மா வேறு, உடல் வேறு என்றல்ல. பசியால்
இருக்கும் வயிற்றுக்கு உணவுதான் முக்கியமே தவிர கடவுள் பற்றிய
போதனை முக்கியமல்ல. ஆக, இன்று உடலையும், ஆன்மாவையும் நாம்
ஒருசேர முக்கியமாக எடுத்து அக்கறை காட்ட வேண்டும். பல நேரங்களில்
நம் ஆன்மாவைக் காக்கும் முயற்சியில் உடலை வதைக்கிறோம், வருத்துகிறோம்.
உடல் என்பது பாவத்தின் காரணி என்றும், பாவத்திற்கான வழி என்றும்
கருதுகின்றோம். இது தவறு. உடல் இல்லாமல் நம் ஆன்மா இருக்க
முடியாது. ஆன்மா இல்லாமல் உடல் உயிரற்றதாகிவிடும். இரண்டும்
ஒன்று மற்றொன்றை நிரப்பக் கூடியது. ஆக, இரண்டம் சரியான
விகிதத்தில் கவனிக்கப்பட வேண்டும். நற்கருணை நாம் பசிக்காக
சாப்படவில்லை என்றாலும், அதில் உடலுக்கான உணவுதான் முதலில்
இருக்கிறது. நற்கருணையை மட்டுமே உண்டு உயிர்வாழ்ந்த புனிதர்கள்,
மனிதர்கள் இந்த உலகில் இருந்திருக்கிறார்கள். ஆக, இன்று
நான் என் உடல்மேல் எப்படி அக்கறை காட்டுகிறேன்? என்பது முதல்
கேள்வி. அத்தோடு இணைந்து, எனக்கு அருகிருப்பவரின் உடலை
நான் எப்படிப் பார்க்கிறேன்? உடலை வெறும் பொருளாகப்
பார்த்து அதை அடைய விரும்புகிறேனா? அல்லது உடலை நான் தீண்டத்தகாதவர்
என்ற சாதீய அடிப்படையில் பார்க்கிறேனா? அல்லது குழந்தையின்
உடலைப் பார்த்துவிட்டு, அவர்கள் வளர்ச்சியற்றவர்கள் என்று
அவர்களை நடத்துகிறேனா? அல்லது பசி, நோய், முதுமை என்று உடல்சார்
துன்பம் கொண்டவர்களை நான் எப்படி அணுகுகிறேன்?
அக்கறை காட்டுதல் என்பது கொடுத்தல். கொடுத்தல் எப்போதும்
திரும்பப் பெறப்படுவதில்லை. அப்பமும் இரசமும் கொடுத்த
மெல்கிசெதேக்கு அதைத் திரும்பப் பெறுவதில்லை. பத்தில் ஒரு
பகுதி கொடுத்த ஆபிராம் அதைத் திரும்பப் பெறுவதில்லை. இயேசுவின்
உடலாகவும் இரத்தமாகவும் மாறிய அப்பமும் இரசமும் திரும்ப பழைய
நிலைக்குச் செல்வதில்லை. கொடுத்தல் ஒரு வழிதான். தன்னைப்
பின்பற்றிய மக்களுக்கு உணவளித்த இயேசு திரும்பப் பெறுவதில்லை.
வழியில் காயம்பட்டக் கிடந்தவனுக்கு செய்த உதவியை நல்ல சமாரியன்
திரும்பப் பெறுவதில்லை. கொடுத்தல் எப்போதும் ஒருவழிப் பயணமாகவே
இருக்க வேண்டும். அப்போதுதான் கொடுத்தலில் நிறைவு இருக்கும்.
நற்கருணை காட்டும் அக்கறை இதுதான். ஆன்மா-உடல் என்று
முழுமையான அக்கறையை நான் எனக்கும் பிறருக்கும்
கொடுக்கிறேனா?
2. வினைச்சொற்கள்
ஒரு குறிப்பிட்ட பலிபீடத்தில், ஒரு குறிப்பிட்ட ஆடை அணிந்து,
ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு ஃபார்முலாவை, ஒரு குறிப்பிட்ட
டிகிரி கோணத்தில் நின்று சொல்லிக் கைகளை விரித்தால், அப்பமும்,
இரசமும், இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறிவிடும் என்ற
மேஜிக் சிந்தனையை நாம் விட வேண்டும். இந்த மேஜிக் சிந்தனை
பல நேரங்களில் அருள்பணியாளரையும், மக்களையும் இயேசுவிடமிருந்து
அந்நியமாக்கிவிடுகிறது. அதாவது, அருள்பணியாளராகிய நான்,
உடல் அல்லது மனதளவில் என் வாழ்க்கை நிலைக்குத் தகுதியற்று
இருந்தாலும், கைகளை விரித்து மந்திரம் சொன்னால் அப்பம் இயேசுவின்
உடலாகிவிடும் என்றால், என்னில் மாற்றம் வருவது சாத்தியமா?
இல்லை. நான் எப்படி இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கை
வாழ்ந்தாலும், மந்திரம் சொல்லி, கைகளை விரித்தால் எல்லாம்
நடந்துவிடும் என்று நான் நினைப்பது தவறல்லவா? அதேபோலவே, இந்த
அப்பம் பிட்குதலில் பங்கேற்கும் மக்களும் இதை ஒரு மேஜிக்
நிகழ்வாகக் கருதக் கூடாது. அப்படி மேஜிக்காக
நினைக்கும்போது, நாம் நம் வழிபாட்டு முறைமைகள் மட்டும் சடங்குகளுக்கு
அடிமையாகிவிடுகிறோம். ஒன்பது நாள் நற்கருணை உட்கொண்டால்
நான் கேட்டது நடக்கும் என்றெல்லாம் சொல்லத் தொடங்கிவிடுகின்றோம்.
நற்கருணை விடுதலையின் விருந்து. அதை நாம் ஒரு சடங்காகப்
பார்த்து அந்தச் சடங்கிற்கு அடிமையாகிவிடக்கூடாது.
நற்கருணை வழிபாட்டை நடத்தும் அருள்நிலை இனியவரும், அதில்
பங்கேற்கும் பொதுநிலை இனியவர்களும் இன்றைய நற்செய்தியில்
நாம் காணும் ஐந்து வினைச்சொற்களை வாழ்வாக்குபவர்களாக இருக்க
வேண்டும். அந்த ஐந்து சொற்கள் எவை? 'எடுத்தல்,' 'அண்ணாந்து
பார்த்தல்,' 'ஆசிகூறுதல்,' 'உடைத்தல்,' 'கொடுத்தல்' இந்த
ஐந்து சொற்களும், இயேசுவின் பிறப்பு, பணி, இறப்பு என்னும்
மூன்று நிகழ்வுகளையும் உள்ளடக்கி நிற்கிறது. இயேசு மனுவுரு
'எடுத்தார்.' 'அண்ணாந்து பார்த்து' தன் தந்தையோடு இணைந்திருந்தார்.
எந்நேரமும் 'இறைவனைப் புகழ்ந்து அவரை ஆசீர்வதித்தார்.' தன்
வாழ்வு முழுவதும் தன்னை மற்றவர்களுக்காக 'உடைத்தார்.' இறுதியில்,
தன்னையே நமக்காகக் 'கொடுத்தார்.'
இந்த ஐந்து சொற்களில் இன்று நமக்கு அதிகம் தேவைப்படுவது 'அண்ணாந்து
பார்ப்பது.' ஏன்?
இன்றைய நம் தொடுதிரைக் கலாச்சாரம் நம்மை 'குனிந்தே பார்ப்பவர்களாக'
மாற்றிவிட்டது. எல்லாவற்றையும் சின்ன சின்ன செயலிகளைக் (ஆப்ஸ்)
கொண்டு செய்து முடிக்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறது
ஸ்மார்ட்ஃபோன். 'உனக்கு யார் துணையும் வேண்டாம் - கடவுளும்
வேண்டாம், மனிதர்களும் வேண்டாம். என்னையே பார்த்துக்
கொண்டிரு. உனக்கு எல்லாம் நடக்கும்' என்று சொல்கிறது
தொடுதிரை என்னும் மாயக்கண்ணாடி. அந்த மாயக்கண்ணாடியில்
நாம் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், குனிந்து பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும், நாம் கடவுளுக்கும், மற்றவர்களுக்கும்,
ஏன், நமக்கு நாமே அந்நியமாகிவிடுகின்றோம். இக்கண்ணாடியை
விட்டுவிட வேண்டும் என நான் சொல்லவில்லை. அப்பப்போ அண்ணாந்து
பார்க்க வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.
3. 'யாரைப் போல பேசுகிறேன்?'
'எல்லாரையும் போகச் சொல்லுங்க!' 'இருட்டாயிடுச்சு!' 'இது
பாலை நிலம்!' 'பாம்பு, பல்லியெல்லாம் வந்துடும்!' 'இங்க
சாப்பாடு ஒன்றுமில்லை!' என்று இயேசுவுக்கு ரிமைண்டர்
கொடுக்கின்றனர் சீடர்கள். 'நீங்களே அவர்களுக்கு உணவு
கொடுங்கள்' என்று கட்டளை கொடுக்கின்றார் இயேசு.
இன்று நாம் இயேசுவைச் சந்தித்தபின், உட்கொண்டபின் அவரிடம்
செபிக்கின்றோம். நம் செபங்கள் எல்லாம் ரிமைண்டர்களாகவே இருக்கின்றன.
'எனக்கு அது இல்லை. இது இல்லை. அவன் சரியில்லை. இவள் சரியில்லை.
க்ளைமேட் சரியில்லை. சாப்பாடு சரியில்லை. சுகர்
கூடிடுச்சு. பிரஷ்ஷர் கூடிடுச்சு. காசு இல்லை' - இப்படிப்பட்ட
ரிமைண்டர்களை நாம் அவருக்குக் கொடுக்கும்போது அவர்
சொல்லும் பதில் என்ன தெரியுமா? 'நீங்களே
பார்த்துக்கொள்ளுங்கள்!' நாம்தான் பார்க்க வேண்டும் நம்
வாழ்க்கையை. ஆனால் அதில் என்ன அற்புதம் என்றால், நாம் நம்
வாழ்வைப் பார்க்கத் தொடங்கிய உடனே அவர் அற்புதம் செய்யத்
தொடங்குகிறார். 'ஆண்டவரே, இங்க பாருங்க ஐந்து அப்பங்கள்,
இரண்டு மீன்கள் இருக்கு!' என்று சொன்னவுடன், அவர் 'எல்லாரையும்
அமரச் சொல்லுங்கள்' என அற்புதம் செய்கின்றார்.
ஆக, நற்கருணையை உண்டபின் நம் பதிலும் இப்படித்தான் இருக்க
வேண்டும்: 'ஆண்டவரே, இங்க பாருங்க சுகர் மாத்திரை இருக்கு!'
'ஆண்டவரே, இங்க பாருங்க பர்சில் கொஞ்சம் பணம் இருக்கு!' 'ஆண்டவரே,
இங்க பாருங்க, கொஞ்சம் அரிசி இருக்கு!' என நம்மிடம் இருப்பவற்றை
அவர்முன் கொண்டுவர வேண்டும். இல்லாத ஒன்றிலிருந்து புதிதாக
புறப்பட்டு வருவது அல்ல நற்கருணை. ஏற்கனவே இருக்கும் அப்பமும்,
இரசமும் உருமாறுவதே நற்கருணை. ஆக, நம்மிடம் இருக்கும் ஒன்றிலிருந்துதான்
அவரின் அற்புதம் தொடங்கும்.
இறுதியாக,
உணவு - மனித வாழ்வின் கையறுநிலையைக் குறிக்கும் ஒரு
குறியீடு. பசி, தாகம் என்னும் உணர்வுகள்தாம் நாம் மற்றவர்களைச்
சார்ந்து நிற்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே
இருக்கின்றன. இந்த இரண்டு உணர்வுகளின் நீட்சிகள்தாம் மற்ற
எல்லா உணர்வுகளும். இந்த அடிப்படை உணர்வுகளை நிறைவு செய்யத்
தேவையான உணவு என்ற குறியீட்டையே தன் நிலையான உடன்படிக்கையின்
அடையாளமாகத் தெரிந்துகொள்கிறார் இயேசு. ஆன்மாவும் உடலும்
இணைவது உணவில்தான்.
நமக்குப் பசி இருக்கும் வரை இந்த உணவின் தேவை இருக்கும்!
கையை நீட்டி இவரை உணவாகக் கொள்ளுமுன், என் கையை நீட்டி மற்றவருக்கு
என்னையே உணவாக நான் தந்தால், நானும் அவரின் திருவுடல்,
திருஇரத்தமே!
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மன்னர்:
ஒரு காலத்தில் பிற தெய்வத்தை வழிபட்டவர் விட்டிகைன்ட் (Wittekind).
ஜெர்மனியில் உள்ள சாக்ஸனி என்ற மாகாணத்தின் மன்னராக இருந்த
இவர், பிரான்ஸ் நாட்டை ஆண்ட சார்லஸ் என்ற மன்னரோடு
போர்தொடுக்கச் சென்றார். அவ்வாறு போர்தொடுக்கச் சென்றபோது
அவருக்குள், "இந்தப் பிரான்ஸ் நாட்டுப் படை எப்படிப்
போரில் தொடர்ந்து வெற்றி பெறுகின்றது?" என்ற எண்ணமானது எழுந்துகொண்டே
இருந்தது.
பிரான்ஸ் நாட்டுப் படை பாளையம் இறங்கிய இடத்திற்குச் சற்றுத்
தொலைவில் வந்தும், விட்டிகைன்டும் அவரோடு ஒருசிலரும்
வழிபோக்கர்களைப் போன்று மாறுவேடம் பூண்டு, அவர்கள் இருந்த
இடத்திற்குள் நுழைந்தார்கள். அன்றைய நாளில் உயிர்ப்புப்
பெருவிழா. அதனால் அருள்பணியாளர் திருப்பலி நிறைவேற்றிக்
கொண்டிருக்க, மன்னர் சார்லசும் அவரது படைவீரர்களும் பக்தியோடு
அதில் பங்கேற்றுக் கொண்டிருந்தனர். நற்கருணை வழங்கும்
வேளையில், அருள்பணியாளர் ஒவ்வொருவருக்கும் நற்கருணையை வழங்கும்போது,
மகிழ்ச்சியோடு அதை உட்கொண்டவர்களின் உள்ளத்திற்குள் இயேசு
ஒளி வெள்ளத்தோடு செல்வதையும், ஏனோதானோவென்று நற்கருணையை
வாங்கியவர்களின் உள்ளத்திற்குள் இயேசு வருத்தத்தோடு செல்வதையும்
கண்டு விட்டிகைன்ட் வியந்துபோனார்.
இக்காட்சி அவருக்கு இரண்டு உண்மைகளை உணர்த்தியது. முதலாவதாக,
பிரான்ஸ் நாட்டினரின் வெற்றிக்கு அவர்கள் உட்கொள்ளும் நற்கருணையே
காரணம். இரண்டாவதாக, நற்கருணையைத் தகுதியில்லாமல் உட்கொள்வது
இயேசுவுக்கு வருத்தத்தைத் தரும். இந்த உண்மைகளை நன்கு உணர்ந்த
விட்டிகைன்ட் கிறிஸ்தவனார்.
ஆம், திருப்பலியில் நாம் உட்கொள்ளும் நற்கருணை, சாதாரண உணவு
அல்ல, அது ஆற்றலையும் வாழ்வையும் அளிக்கின்ற உணவு. அதையே
மேலே உள்ள நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. இன்று நாம்
கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடலும் திரு இரத்தமும் என்ற
விழாவைக் கொண்டாடுகின்றோம்.. இவ்விழா நமக்கு உணர்த்தும்
செய்தி என்ன என்று சிந்திப்போம்.
தன்னையே தந்த இயேசு கிறிஸ்து:
"நற்கருணை வழியாக மூவொரு கடவுள் தன்னையே உணவாகத் தருகின்றார்"
என்பார் குப்பெர்டினோ நகர்ப் புனித யோசேப்பு. இது உண்மை.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தூயகத்திற்குள் நுழையும் தலைமைக்
குரு காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் பலியாக ஒப்புக்கொடுத்தார்.
இதை அவர் ஒவ்வோர் ஆண்டும் செய்துவந்தார். இயேசுவோ
வெள்ளாட்டுக் கிடையை அல்ல, தன்னையே ஒரே ஒருமுறை பலியாக ஒப்புக்கொடுத்தார்.
இவ்வாறு அவர் நம்மைத் தூயவராக்கினார் (எபி 10:10). இயேசு
தம்மைப் பாவம் போக்கும் பலியாக ஒப்புக்கொடுத்தது மட்டுமல்லாமல்,
வாழ்வளிக்கும் உணவாகத் தந்தார். அதைக் கொரிந்தியருக்கு எழுதிய
முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம்
வாசகத்தில் தெளிவாக நாம் வாசிக்கின்றோம்.
"ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை
எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, "இது
உங்களுக்கான உடல்" என்றார். அப்படியே கிண்ணத்தையும் எடுத்து,
"இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும்
புதிய உடன்படிக்கை" என்றார்" என்று பவுல் கூறுவதன் வழியாக
இயேசு நமக்கு வாழ்வளிக்கும் உணவாகின்றார் என்பதைப்
புரிந்துகொள்ளலாம்.
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்
சலேம் அரசர் மெல்கிசெதேக்குவைப் பற்றி வாசிக்கின்றோம். அப்பமும்
திராட்சை இரசமும் கொண்டுவரும் கடவுளின் உன்னத அர்ச்சகரான
இவர் அமைதியின் அரசர் என்றும், நீதியின் அரசர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
மேலும், திருப்பாடல் 110:4, எபிரேயர் 7: 17 ஆகிய இரண்டு இறைவார்த்தைப்
பகுதிகளை இவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது குருவும் அரசருமான
இயேசுவை நமக்கு நினைவுபடுத்துகின்றார். இயேசு தமது உடலையும்
இரத்தத்தையும் வாழ்வளிக்கும் உணவாகத் தந்தார். அந்த அடிப்படையில்,
அவர் தம்மையே நமக்காகத் தந்தார்.
உணவளிக்கும் இயேசு:
இயேசு தம்மையே நமக்கு வாழ்வளிக்கும் உணவாகத் தந்தது அவரின்
அன்பின் ஒரு பரிமாணம் எனில், பசியோடு இருந்த மக்களுக்கு
உணவளித்தது அவரது அன்பின் இன்னொரு பரிமாணம் ஆகும். இயேசுவின்
பாடுகள், உயிர்ப்பு தவிர்த்து நான்கு நற்செய்தி நூல்களிலும்
இடம்பெறும் ஒரே அரும் அடையாளம். இயேசு ஐந்து அப்பங்களையும்
இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததுதான்
(மத் 14: 15-21; மாற் 6: 35-44; யோவா 6: 4-13). இயேசுவின்
சீடர்கள் அவரைத் தேடிவந்த மக்களை அனுப்ப முயன்றபோது, இயேசு
அவர்களிடம், "நீங்கள் அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்கிறார்.
இயேசுவின் இவ்வார்த்தைகள் அன்று சீடர்களுக்கும், இன்று நமக்கும்
இருக்க வேண்டிய சமூகக் கடமையை உணர்த்துகின்றது. இயேசுதான்
மக்களுக்கு உணவு வழங்கினார் என்றாலும், அதைச் சீடர்கள்
வழியாக அவர் வழங்கியது, அவரது சீடராக இருக்கும் ஒவ்வொருவரும்
பசியோடு இருக்கின்ற ஏழைகளுக்கு உணவளித்து, வறியோரின்
தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது.
இயேசுவின் இந்த அழைப்பினை இன்றைய இரண்டாம் வாசகப் பின்னணியில்
பொருத்திப் பார்த்தால் இன்னும் பொருள் பொதிந்ததாக இருக்கும்.
இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது பற்றிப் பவுல் இன்றைய இரண்டாம்
வாசகத்தில் கூறினாலும், அவர் அதை எத்தகைய சூழலில்
பொருத்திப் பேசினார் என்பது கவனிக்கத்தக்கது. கொரிந்து நகரில்
இருந்த பணக்காரர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை ஏழைகளோடு பகிர்ந்து
உண்ணாமல், தாங்கள் மட்டுமே உண்டுவிட்டு, ஏழைகளைப் பட்டினி
கிடக்கச் செய்தார்கள். இத்தகைய பின்னணியில்தான் பவுல் இயேசு
நற்கருணையை ஏற்படுத்தியதைப் பற்றிப் பேசுகின்றார். இயேசு
தம்மையே தந்திருக்கும்போது, அவருடைய சீடர்கள் தங்களிடம் உள்ளதைப்
பிறரோடு பகிரவில்லையே என்பதுதான் பவுலின் ஆதங்கமாக இருக்கின்றது.
இதை என் நினைவாகச் செய்ய அழைப்பு:
இயேசு தம்மையே ஆன்மிக உணவாகத் தந்தார்; பசியோடு இருந்த
மககளுக்கு வயிற்றுக்கு உணவு தந்தார். அதை விடவும், "இதை என்
நினைவாகச் செய்யுங்கள்" என்ற கட்டளை கொடுக்கின்றார். இதைப்
பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கின்றோம்.
"இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று இயேசு சொல்வதன் மூலம்
நமக்கு அவர் எதை உணர்த்துகின்றார் என்பதைத்
தெரிந்துகொள்கொள்வோம். முதலாவதாக, இயேசு இறையன்பை இவ்வுலகிற்கு
வெளிப்படுத்தினார் (மத் 11:28). இரண்டாவதாக, இச 6: 5. லேவி
19: 18 ஆகிய இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளையும் இணைத்து,
இறையன்புக்கு இணையானது பிறரன்பு (மத் 22: 39) என்றார்.
நிறைவாக, நமக்காகத் தன்னையே தந்து, இறப்புக்குப் புதிய அர்த்தம்
தந்தார் (லூக் 9: 23-24). ஆகையால், இதை என் நினைவகச்
செய்யுங்கள் என்று இயேசு சொல்வதை, இறையன்பை மக்களுக்கு
வெளிப்படுத்துவதையும், பிறரன்புவோடு நாம் வாழ்வதையும், அதற்காகத்
நாம் உயிரைக் கொடுப்பதையும் சொல்கின்றார் எனப் பொருள் கொள்ளலாம்.
எனவே, கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடலும் திரு இரத்தமும்
பெருவிழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நம்மையும் நம்மிடம்
இருப்பதையும் பிறர் வாழ்வு பெறுவதற்காகத் தந்து, அவரது உண்மையான
சீடர்களாவோம்.
சிந்தனைக்கு:
"ஒரு மனிதனின் மதிப்பு அவனால் எதைப் பெறமுடியும் என்பதைவிட,
அவனால் எதைக் கொடுக்க முடியும் என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்பட
வேண்டும்" என்பார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். எனவே, நாம் இந்த நன்னாளில்
இயேசுவைப் போன்று பிறருக்காக நம்மையே கொடுப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
2001-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி
எவராலும் மறக்க முடியாத நாள். குஜராத் பூகம்பம். பல அழிவுகளைக்
காட்டியிருந்தாலும், பல அற்புதங்களையும் நமக்கு விட்டுச்
சென்றுள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்களையே பலி கொண்ட குஜராத்
பூகம்பத்தில் பிழைத்தவர்கள் சிலரே! அதில் மிக அதிர்டவசமாக
உயிர் பிழைத்தது ஒரு 8 மாத பச்சிளம் குழந்தை. பால்
கொடுத்துக் கொண்டிருந்த தாயின் தலையில் வீடே சரிந்து விழ
அடுத்த சில நொடிகளில் மடிந்து போனாள் அந்தப் பெண். மடியில்
புரண்டு பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை தாய் இறந்தது
தெரியாமல் அவள் மார்பில் வழிந்த இரத்தத்தையே பால் எனக் கருதி
குடித்து 8 மணி நேரம் இடிபாடுகளிலேயே கதறிக் கதறி அழுது ஓய்ந்த
பிஞ்சுக் குழந்தை மீட்புப் பணி படையினரின் கண்ணில் பட்டதால்
உயிர் பிழைத்தது. (தின மலர் செய்தி)
அன்பின் தனித்தன்மையே வாழ்வு கொடுப்பதுதான். அந்த எட்டுமாத
குழந்தைக்குத் தாயின் இரத்தம்தான் வாழ்வு கொடுத்தது. இன்று
இயேசுவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவைக்
கொண்டாடுகிறோம்.
நானே வானின்று இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு. இதை யாராவது
உண்டால் அவன் என்றுமே வாழ்வான் (யோவா. 6:49- 51). என் சதையை
உணவாகக் கொடுக்கிறேன். இது பழைய ஏற்பாட்டின் மன்னாவைப்
போல் அல்ல. அவர்கள் உண்டார்கள். ஆனால் இறந்தார்கள். இயேசு
தம் திருவுடலால், தன் திரு இரத்தத்தால் நமக்கு வாழ்வு
கொடுக்கிறார். இதை உண்டு, குடித்தால் ஒழிய உங்களுக்கு
நிலைவாழ்வு இல்லை (யோவா. 6:54). இது அன்பின் வெளிப்பாடு.
இன்றைய நற்செய்தியிலே மக்கள் இயேசுவைத் தேடி வருகிறார்கள்.
இயேசு அவர்களுக்குப் போதிக்கிறார். பலரைக் குணமாக்குகிறார்.
அவர்கள் 3 நாட்களாக இயேசுவோடு உணவில்லாமல் தங்கிவிடுகிறார்கள்.
இயேசு அவர்கள் மீது இரக்கம் காட்டுகிறார். அந்த அன்பின் பிரதிபலனாக
இயேசுவே அவர்களுக்கு வயிறார உணவளிக்கிறார். ஆனால் இயேசு
சொல்கிறார் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலை
வாழ்வு தரும் அழியா உணவுக்காக உழையுங்கள் (யோவா. 6:27). அவ்வுணவை
மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார் என்றார் அந்த உணவுதான்
இந்த நற்கருணை. இது மிகப் பெரிய அன்பு.
இப்படி தன்னையே கொடுத்த ஆண்டவர் இயேசுவுக்கு நாம் எதைக்
கொடுக்கப் போகிறோம்? நாம் தருவோம் என எதிர்பார்த்து அவர்
நமக்குக் கொடுக்கவில்லை.
அன்பார்ந்தவர்களே! கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று மட்டும்
நினைத்துவிடாதீர்கள். அவர் விரும்புவது நம் ஒவ்வொருவரிடத்திலும்
உண்டு. நாம் விரும்பினால் இதே வினாடியில் அவருக்கு நாம்
கொடுக்கலாம். கொடுத்துப் பேரின்பமாகிய அவரைப் பெற்றுச்செல்லலாம்.
என்ன என்று கேட்கிறீர்களா?
ஆம் உன்னிடம் இருக்கும் உயிரற்றப் பொருட்களைக் கொடுப்பதைவிட
உயிருள்ள உன்னைக் கொடுப்பதுதான் கடவுளுக்கு விருப்பம்.
சக்கேயு தன்னையே கொடுத்தான். தந்தவனுக்கு இயேசு
புதுவாழ்வு.
கல்வாரியில் தொங்கிய கள்வன் தன்னையே கொடுத்தான். இயேசு
கொடுத்ததோ நித்திய வாழ்வு (நிலை வாழ்வு). இன்று இயேசு
கேட்கிறார். மகனே மகளே உன்னை எனக்குத் தருவாயா? பதில்
சொல்வோம்.
ஐரோப்பாவிலுள்ள பெல்ஜியம் நாட்டில் விவர்செல் என்ற ஊரில்
ஹார்கன்ரோடு என்கின்ற துறவற இல்லத்தில் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு
முன்னால் புதுமை ஒன்று நடந்தது. ஓர் அருள்பணியாளர்
நோயுற்றிருந்த ஒருவருக்கு நோயில் பூசுதல் என்ற திருவருள்சாதனத்தை
அளிக்க கைப்பையில் எண்ணெயையும், சிமிழில் நற்கருணையையும்
எடுத்துச்சென்றார். அவர் தனது கைப்பையை நோயாளியின் அறைக்கு
வெளியே வைத்துவிட்டு அவர் அறைக்குள்ளே சென்றார். அந்த நேரத்தில்
திருடன் ஒருவன் அருள்பணியாளர் வெளியே வைத்துவிட்டுச் சென்ற
பையை எடுத்தான்; அதற்குள்ளேயிருந்த சிமிழை எடுத்தான்; அந்த
சிமிழுக்குள்ளேயிருந்த நற்கருணையை எடுத்து வெளியே
வீசிவிட்டு சிமிழை மட்டும் எடுத்துச் செல்ல முயற்சித்தான்.
அப்போது அற்புதம் ஒன்று, அதிசயம் ஒன்று. புதுமை ஒன்று நடந்தது.
அந்தத் திருடன் நற்கருணையை வெளியே எடுத்ததும், அதிலிருந்து
இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அதிர்ச்சியுற்ற திருடன் அந்தச்
சிமிழிலேயே அந்த நற்கருணையை வைத்துவிட்டு ஓடிவிட்டான்.
அருள்பணியாளர் நோயாளிக்கு ஒப்புரவு அருள்சாதனத்தை வழங்கிவிட்டு
அறையை விட்டு வெளியே வந்தார். நற்கருணை வைத்திருந்த
சிமிழிலே இரத்தத்தைக் கண்டு அவர் அதிர்ச்சியுற்றார். அந்தத்
துறவற மடாதிபதி சைமனிடம் அவர் நடந்ததைச் சொன்னார்.
அந்த மடாதிபதி நற்கருணையை தேவாலயத்தின் பீடத்தின் மீது
வைத்தார். தேவாலயத்தில் கூடியிருந்த துறவிகள், அந்த நற்கருணையில்
இயேசுவின் முள் முடி தரித்த திருமுகத்தைக் கண்டார்கள் : ஆச்சரியத்துடனும்,
பக்தியுடனும் அந்த நற்கருணையை அவர்கள் ஆராதித்தார்கள்.
இன்றும் இந்த நற்கருணையின் முன் மக்கள் மண்டியிட்டு மன்றாடுகின்றார்கள்:
அவர்கள் வாழ்க்கையிலே அற்புதங்களும் அதிசயங்களும் புதுமைகளும்
நடந்துகொண்டிருக்கின்றன. பெல்ஜியத்தில் நடந்திருக்கும் இப்புதுமை
இயேசு உண்மையிலேயே நற்கருணையில் பிரசன்னமாகியிருக்கின்றார்
என்பதை நமக்குக் கற்பிக்கின்றது.
என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்று அன்று இயேசு கூறியதற்கிணங்க
(இரண்டாம் வாசகம்) இன்று அருள்பணியாளர், இது என் உடல் என்றும்,
இது என் இரத்தம் என்றும் கூறும்போது அப்பம் இயேசுவின் உடலாகவும்.
இயேசுவின் இரத்தமாகவும் மாறுகின்றது. அன்று பழைய ஏற்பாட்டில்
மேகத்தூண் வழியாக தனது பிரசன்னத்தை வெளிப்படுத்தி இஸ்ரயேல்
மக்களுக்கு ஒளியாக விளங்கிய இறைவன் (முதல் வாசகம்) இன்று
நம் நடுவே நற்கருணையில் பிரசன்னமாகி நமக்கு இருளகற்றும் ஒளிவிளக்காகத்
திகழ்கின்றார். அது ஒரு பாலைவனம் ! அந்தப் பாலைவனத்தில் அங்கேயிருந்த
மக்கள் ஒரு சோலைவனத்தைத் தேடினார்கள்.
இருந்ததோ ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்! மக்களோ ஆயிரக்கணக்கில்!
இத்தனை பேருக்கும் எப்படி உணவு அளிப்பது ? எல்லாருடைய மனத்திலும்
ஒரே குழப்பம்.
இப்படிப்பட்டச் சூழ்நிலையிலே இயேசு புதுமை செய்யச் சித்தமானார்.
அவருடைய ஆசிரைப் பெறுவதற்கு முன் ஐந்து அப்பங்களும், இரண்டு
மீன்களும், ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களுமாகத்தானிருந்தன.
ஆனால் இயேசுவின் ஆசியைப் பெற்றதும் அவைப் பலுகிப் பெருகின.
அன்று அப்படி புதுமை செய்த அதே இயேசுதான் இன்று நம் நடுவே
நற்கருணை உருவிலே பிரசன்னமாயிருக்கின்றார்.
இன்று நம் வாழ்வில் எத்தனையோ பாழ்வெளிகள் !
தனிமை என்னும் பாழ்வெளி!
வறுமை என்னும் பாழ்வெளி!
நோய் என்னும் பாழ்வெளி!
பேய் என்னும் பாழ்வெளி!
மரணம் என்னும் பாழ்வெளி!
பயம் என்னும் பாழ்வெளி!
அநீதி என்னும் பாழ்வெளி!
அக்கிரமம் என்னும் பாழ்வெளி!
வஞ்சகம் என்னும் பாழ்வெளி!
சூழ்ச்சி என்னும் பாழ்வெளி!
பாழ்வெளி பால்வெளியாக மாற நமது நம்பிக்கை நிறைந்த கண்களை
நற்கருணை ஆண்டவர் பக்கம் திருப்புவோம்! மேலும் அறிவோம் :
தமிழ் ஆசிரியர் ஒருவர் பிரதீப் என்ற மாணவரிடம், "பிரதீப்!
உன் இதயம் எங்கே இருக்கிறது?" என்று கேட்டதற்கு அவன்,
"சார்! மூன்றாவது பெஞ்சில் அமர்ந்திருக்கும் சாந்தியிடம்
இருக்கிறது" என்றான்.
ஒவ்வொருவருடைய இதயத்தையும் யாராவது ஒருவர் அல்லது ஏதாவது
ஒன்று ஆட்கொண்டுள்ளது. திருச்சபையின் இதயம் எங்கே இருக்கிறது?
நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆப்பிரிக்காவில் அபித்தினியா
என்ற நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் ஞாயிறு தோறும் ஒன்றுகூடி
நற்கருணைக் கொண்டாட்டத்தை நடத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்ட
போது அவர்கள் கூறியது: "நற்கருணை இல்லாமல் எங்களால் வாழமுடியாது".
எனவே, நற்கருணையே திருச்சபையின் இதயம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்:
நற்கருணைக் கொண்டாட்டம் திருச்சபை கிறிஸ்துவிடம் இருந்து
பெற்றுக் கொண்ட தொன்மையான மரபு: கிறிஸ்து கொடுத்த கட்டளை:
ஆண்டவரின் இரண்டாம் வருகை வரை இக்கொண்டாட்டத்தில் அவரின்
சாவு அறிவிக்கப்படும் (1 கொரி 11:23-26). சாவு மட்டுமல்ல.
அவரின் உயிர்ப்பும் அறிவிக்கப்படும். "ஆண்டவரே தேவரீர் வருமளவும்
உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம்: உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்"
எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்கள் கிறிஸ்து அப்பம் பிட்டபோது
தான் அவரை அடையாளம் கண்டு கொண்டனர் (லூக் 24:30-31) தொடக்கக்
காலக் கிறிஸ்தவர்கள் ஒன்று கூடிய போதெல்லாம் அப்பம் பிட்டனர்'
(திப 2:24), 'அப்பம் பிட்குதல்' என்பது நற்கருணைக்
கொண்டாட்டத்தைக் குறிக்கின்றது. நற்கருணை இல்லாத திருச்சபையும்
இல்லை; திருச்சபை இல்லாத நற்கருணையுமில்லை. இரண்டாம் வத்திக்கான்
சங்கம் கூறுகிறது: நற்கருணை தான் கிறிஸ்தவ வாழ்வு அனைத்துக்கும்
ஊற்றும் உச்சியும் ஆகும் (திருச்சபை, எண் 11).
"அன்பின் அருளடையாளம்' என்ற தலைப்பில் திருத்தந்தை 16-ஆம்
பெனடிக்ட் வழங்கியுள்ள திருத்தூது அறிவுரையில், நற்கருணை
பற்றிய மூன்று முக்கியமான உணமைகளைச்
சுட்டிக்காட்டியுள்ளார். 1.நற்கருணை நம்பப்பட வேண்டிய மறைபொருள்.
2.நற்கருணை கொண்டாடப்பட வேண்டிய மறைபொருள், 3. நற்கருணை வாழப்பட
வேண்டிய மறைபொருள்.
நற்கருணையில் கிறிஸ்து உண்மையாகவே பிரசன்னமாய் இருக்கிறார்.
பலியாக ஒப்புக் கொடுக்கப்படுகின்றார்; உணவாக உட்கொள்ளப்படுகின்றார்.
இவற்றை நாம் நம்புகிறோம். இதில் பிரச்சினை இல்லை. அவ்வாறே.
கதிரவன் தோன்றி கதிரவன் மறையும்வரை. உலகெங்கும் கடவுளின்
மகிமைக்காகவும் மானிடரின் மீட்புக்காகவும் ஒவ்வொரு நாளும்,
குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் நற்கருணை கொண்டாட்டத்தை
நிகழ்த்துகிறோம். இதில் நமக்குப் பெரிய பிரச்சனை ஏதுமில்லை.
ஆனால், நற்கருணை மறைபொருளை நம் வாழ்வில் வாழ்ந்து
காட்டுகின்றோமா? இதுதான் நமது சிந்தனையைக் கிறைவேண்டிய ஒன்று.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தாம் சாவதற்குமுன் குருக்களுக்குப்
பெரிய வியாழனன்று வழங்கிய மைய செய்தி: "இது உங்களுக்காக கையளிக்கப்படும்
என் உடல்; இது உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தம்".
இவ்வார்த்தைகள் வெறும் வசீகர வாய்ப்பாடாக மட்டும் அமையாமல்,
வாழ்க்கை முறையாக அமைய வேண்டும்". எனவே நற்கருணைத் திருப்பலியை
ஒப்புக் கொடுக்கும் குருக்களும் அதில் பங்கேற்றும் ஏனைய
விசுவாசிகளும் தங்கள் வாழ்வையே பலியாக்க வேண்டும். நம்மைப்
பிறருக்காகப் பிட்டுக் கொடுக்கவும். நமது இரத்தத்தைப் பிறருக்காகச்
சிந்தவும் முன்வரவேண்டும்.
எவன் மனிதன்? கொடுப்பவன் மனிதன்; எடுப்பவன் மனிதன் அல்ல
எவன் மனிதன்? பிறருக்காகக் கண்ணீரும் செந்நீரும் சிந்துபவன்
மனிதன். கிறிஸ்து ஓர் இலட்சிய மனிதன். ஏனெனில் அவர் பிறருக்காகத்
தம்மைப் பிட்டுக் கொடுத்தார்; பிறருக்காகத் தம்மைப்
பிழிந்து கொடுத்தார்.
இன்றைய நற்செய்தியில், பசியால் வாடிய மக்களை அனுப்பிவிட
விரும்பிய சீடர்களிடம் கிறிஸ்து. "நீங்களே அவர்களுக்கு உணவு
கொடுங்கள்" (லூக் 9:13) என்கிறார். அவர்களிடமிருந்த ஐந்து
அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு வயிறார உணவளிக்கிறார்;
எஞ்சியிருந்த அப்பங்களை பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
இவ்வுலகில் எல்லாருக்கும் தேவையான உணவு இருக்கின்றது. ஆனால்
உள்ளவர்கள் அதைப் பதுக்கி வைக்கின்றனர்; பகிர- மறுக்கின்றனர்.
திருத்தந்தை தமது திருத்தூது அறிவுரையில் (எண் 90) பின்வரும்
கசப்பான உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
உலகமயமாக்குதல் என்ற பெயரில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்
இடையேயுள்ள இடைவெளி அதிகரிக்கின்றது. ஏழைகளின் அழுகைக் குரல்
விண்ணை முட்டுகிறது. (யாக்கோபு 5:4). எத்தனையே போ அந்நியநாட்டில்
அகதிகளாக வாழ்கின்றனர். அவர்கள் நமது சகோதரர்கள் சகோதரிகள்,
அவர்களுக்கும் முழுமையான மனித வாழ்வு வாழ உரிமையுண்டு. உலக
நாடுகள், ஆயுதக் குளிப்புக்காகச் செலவிடும் பணத்தில்
பாதிக்கும் குறைவாகச் செலவழித்தாலே ஏழைகளை வறுமையிலிருந்து
விடுவிக்க முடியும். நமக்குத் தேவையானது அன்புக்கலாச்சாரம்;
தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களிடையே நிலவிய பகிர்வு மனப்பான்மை
(திப 4:32). உலகில் உள்ள உயிரனைத்தையும் பாதுகாக்க
வேண்டும். அதற்காக நமக்குள்ளதைப் பிறருடன் பகிர வேண்டும்.
பகிர மறுப்பது கொலை செய்வதற்கு சமம், நாம் பிறருக்குக்
கொடுக்காததால் அவர்கள் இறந்தால், நாம் அவர்களைக் கொலை செய்தவர்கள்
ஆவர்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எவ்லாம் தலை (குறள் 322)
கடவுள் இவ்வுலகை எல்லாருக்காகவும் படைத்தார். தனிமனிதன் ஒருவருக்கு
உணவில்லையென்றால், இவ்வுலகையை அழித்திடுவோம் என ஆவேசத்துடன்
கொதிக்கின்றார் பாரதி.
இனியொருவிதி செய்வோம் அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவு இவ்வை எனில்
சகத்தினை அழித்திடுவோம்.
ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், "அப்பா! காக்கா கத்தினால்
விருந்தாளிகள் வருவார்களா?" என்று கேட்டான். அப்பா அவனிடம்,
"காக்கா கத்தினால் விருந்தாளிகள் வருவார்கள் உன் அம்மா கத்தினால்
விருந்தாளிகள் போய் விடுவார்கள்" என்றார்.
ஆண்களைவிடப் பெண்கள் தான் மணிமேகலை போன்று, அன்னை தெரசா
போன்று ஏழை எளியவர்களுக்கு உணவளித்து தங்களது தாய்மைப் பண்பை
வெளிப்படுத்த வேண்டும். "இரக்க மற்றவர்கள் மனிதர்கள் அல்ல.
அவர்கள் நன்றாகத் தின்று கொழுத்த பன்றிகள்" - சாக்கரட்டீஸ்.
ஏழைகளின் உடலிலும் இரத்தத்திலும் இருக்கும் கிறிஸ்துவை மதிக்காதவர்கள்
நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும்
மதிக்க முடியாது. வாழ்வுக்கும் வழிபாட்டுக்கும். இடையேயுள்ள
முரண்பாடு களையப்பட வேண்டும். நற்கருணையை நாம் நம்பினால்
மட்டும் போதாது; அதைக் கொண்டாடினால் மட்டும் போதாது; நற்கருணையை
வாழ்வாக்க வேண்டும். ஏழைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி
குற்றம் மட்டுமல்ல. அது இறைநிந்தனை; தேவ துரோகம்! பிறருக்காக
வாழாத எந்தவொரு குருவுக்கும் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்
தகுதியில்லை. அவ்வாறே பிறருக்காக வாழாத பொதுநிலையினருக்குத்
திருப்பலியில் பங்கேற்கும். தகுதியில்லை.
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே" - இவை பிறந்த மண்ணின் பெருமை பாடும்
வரிகள்! சிந்தையில் வளர்ந்த எண்ணங்கள், செம்மையான வாழ்க்கை
முறைகள் இவற்றால் நம் முன்னோர் இந்த நாட்டை எப்படியெல்லாம்
புகழின் சிகரத்துக்குக் கொண்டு சென்றார்கள் என்பதை
நினைந்து நினைந்து தாய்த்திருநாட்டை வாழ்த்தி வணங்குகிறான்
பாரதி. அந்த வீரவணக்க, வீர முழக்கப் பாடலின் கடைசி வரிகள்
நம் கருத்தில் பதியட்டும். இப்படிப் பாடி முடிக்கிறான் பாரதி.
அங்கவர் மாய,, அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!
அங்கவர் மாய - அந்த மண்ணிலேயே அவர்கள் மடிய, அந்த மண்ணுக்காகவே
அவர்கள் சாக, அவருடன் பூந்துகள் - அவர்களது உடலின் சிதைவுகள்
இந்த மண்ணோடு மண்ணாகக் கலந்திருக்கின்றன. மண்ணோடு
நிலைகொண்டு வாழ்கின்றன... என்பது கவிஞனின் சிந்தையில்
சிலிர்த்தெழுகிறது! தாய் மண்ணே, வணக்கம் என்கிறான்.
இந்த வரிகள் நேரு பெருமகனார் தன் இறுதி ஆசைக்கு வடிவம்
கொடுத்து எழுதிச் சென்ற உயிலை நினைவுப் படுத்துகின்றன:
"நான் இறந்த பிறகு எனது சடலத்தை எரிக்க வேண்டும் - மதச்சடங்கு
கருதி அல்ல. எரித்து நீறாக்கிய அந்தச் சாம்பலை எடுத்து இந்த
நாடு முழுவதும் தூவி விட வேண்டும். இந்த நாட்டிலே
வாழுகின்ற உழவர்கள் நிலங்களைக் கலப்பைகளால் கீறிப்பிளப்பார்களே,
அதோடு அது கலக்க வேண்டும். என் சாம்பலும் இந்த மண்ணுக்குப்
பயன்பட்டது என்பதை வரலாறு உணர வேண்டும்"
இதை எண்ணும் போது உடல் பூந்துகள் அதாவது உடலின் சிதைவுகள்
இந்த மண்ணிலே நிலைக்க வேண்டும், மண்ணோடு மண்ணாகக் கலக்க
வேண்டும், உரமாகித் தாவர இனங்கள் வளர, வாழ உதவ வேண்டும் என்ற
நம் முன்னோரின் வேட்கை என்னே! இந்த மண்ணின் மீது அவர்கள்
கொண்டிருந்த ஈடுபாடு என்னே! இந்த மண்ணுக்காக அவர்கள் செய்த
அர்ப்பணம் என்னே! மேற்கொண்ட தியாகம் என்னே!
இன்று இயேசு சொல்கிறார்: "இதோ என் உடல் உங்களுக்காகச்
சிதைக்கப்படுகிறது. இதோ என் இரத்தம் உங்களுக்காகச் சிந்தப்படுகிறது...
என் சதையை உணவாக உலகு வாழ்வதற்காகக் கொடுக்கிறேன்"
இயேசுவின் வாழ்க்கையை
1. மேலோட்டமாகப் பார்த்தால் இயேசு பசியைப் போக்கி உணவளித்தார்.
நோயை நீக்கி நலமளித்தார். வறுமை, வன்முறை, அடிமைத்தனம்
போன்ற தளைகளிலிருந்து விடுவிக்கும் பிறரன்புப் பணிகள்.
திருச்சபை என்பது நன்கு திறம்பட நிர்வகிக்கப்படும் தர்ம சத்திரம்
அல்ல. அதனால் தான் ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம்
பேருக்கு உணவளித்த மறுநாள் தன்னைத் தேடி அலைந்த மக்கள்
நோக்கத்தைக் கிண்டல் செய்கிறார். "நீங்கள் அரும் அடையாளங்களைக்
கண்டதால் அல்ல. அப்பங்களை வயிறாற உண்டதால் தான் என்னைத்
தேடுகிறீர்கள்" (யோவான் 6:26). கண்டனத்துக்குப்பின் அறிவுறுத்துகிறார்:
"அழிந்து போகும் உணவுக்காக அல்ல நிலைவாழ்வு தரும் அழியாத
உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக்
கொடுப்பார்" (யோ.6:27).
2. சிறிது ஆழமாக நோக்கினால், சமுதாயச் சீர்கேடுகளுக்கும்
அநீதிகளுக்கும் இயேசு தாமே பொறுப்பேற்கிறார். அதனால் தன்
வாழ்வுக்கும் பிறரது வாழ்வுக்கும் ஒவ்வொருவரும் எவ்வாறு
பொறுப்பேற்க வேண்டும் என்பது தெளிவாகும். அநீதியான சமூக,
பொருளாதார, அரசியல் அமைப்புகளுக்கு அனைவருமே காரணம். அதனால்
பிறரன்புச் செயல்களில் ஈடுபட்டதுடன் நிற்காமல் "மெய்யாகவே
அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச்
சுமந்து கொண்டார்... நம் தீச் செயல்களுக்காக (எசா.53:4-5)
நொறுக்கப்பட்டார்... அவர்தம் காயங்களால் நாம் குணமடைந்தோம்"
3.மிக வேரோட்டமாகச் சிந்தித்தால் அனைத்துச் சீர்கேடுகளுக்கும்
காரணமான ஆசை, ஆணவம் இவற்றினின்று விடுபட இயேசு தன்னையே
வெறுமையாக்கினார். ஆசை ஆணவம் கொன்றார். "கடவுள் வடிவில் விளங்கிய
அவர்... தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு
ஒப்பானார்" (பிலிப். 2:6-7). மீட்பின் திட்டத்தில் - பாவப்
பரிகாரப் பணியில் தன்னையே வெறுமையாக்குவது ஒரு கட்டாயமாகும்.
4. அனைத்திற்கும் உச்ச கட்டமாக - நிறைவாகப் புதிய இறையாட்சிச்
சமுதாயத்தைக் கட்டி எழுப்ப, இயேசு தன்னையே
பலியாக்குகிறார். தன்னையே நமக்கு உணவாக்குகிறார்.
தன்னையும் தனக்குள்ளதையும் பகிர்ந்தளித்த வாழ்வு.
இறைமக்கள் விடுதலைக்காகத் தன்னையே பலியாக்கிய வாழ்வு. அந்த
இரத்தம் நமக்குள்ளே பாய வேண்டும். குடிபோதை தொடர்பான ஓர்
ஆய்வு நடந்தது. ஒரு எலியைக் கூண்டில் அடைத்து ஒருநாள்
பட்டினி போட்டு வெளியே ஒரு கிண்ணத்தில் கலங்கிய தண்ணீரும்
இன்னொன்றில் தெளிந்த நன்னீரும் வைத்துக் கூண்டைத்
திறந்தனர். தாகமுற்ற எலி விரைந்து ஓடி தெளிந்த நீரைப்
பருகியது. இயல்பான உணர்வு. அடுத்து ஒரு கிண்ணத்தில்
கலங்கிய நீர் இன்னொன்றில் தெளிந்த நீர், மற்றொன்றில்
சாராயம்... எந்தக் கிண்ணம் நோக்கி ஓடியிருக்கும்? மீண்டும்
தெளிந்த நீரை நோக்கித்தான். அடுத்து அந்த எலியின் உடலில்
ஊசியால் சாராயத்தை உட்செலுத்தினார்கள். மறுநாள் அது
சாராயம் இருந்த கிண்ணத்தை நாடியது. ஏன்? சாராயம் அதன்
உடலில் இரத்தத்தோடு இரத்தமாகக் கலந்து விட்டதால்... அதற்கு
அடிமையாகிவிடுகிறது. விடுபடுவது கடினமாகி விடுகிறது.
"குடிப்பதில் என்ன தவறு? இயேசுவே கானாவூரில் தண்ணீரை
இரசமாக்கி கொடுத்தாரே' என்று ஒருவர் கேட்டார். கொடுத்தார்.
தற்காலிக ஒரு கலாச்சாரத்தின் விளைவாக. ஆனால் அதற்கு
அப்பால் அதே திராட்சை ரசத்தைத் தனது இரத்தமாக மாற்றிப்
பருகுங்கள் வாழ்வீர்கள் என்றாரே! அந்த இரத்தம் நம்
ரத்தத்தோடு ரத்தமாகி விட்டால் வேறு எதையும் தேட மாட்டோம்.
அப்போது நாமல்ல வாழ்வது இயேசு நம்மில் வாழ்வார். நாமாக
வாழ்வார்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம்...
ஏன்
கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா
இயேசு சபையின் முன்னாள் தலைவர் பேத்ரோ அருப்பே அவர்கள்,
சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணி புரிந்தவர்.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில் அங்கு அவர்
நவதுறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு
ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு ஹிரோஷிமாவை
அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த
கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு
சபை நவதுறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அந்த
இல்லம் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு
கோவிலும் காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு
வீசப்பட்டதற்கு அடுத்த நாள் அந்தக் கோவிலில் பேத்ரோ
அருப்பே அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். அந்தத்
திருப்பலி நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம்
கூறியுள்ளார்: "நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு
காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு
இருப்பாராக' என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு
நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன்
காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக் குலத்தை, அவர்களை அந்த
நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை
எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன.
அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை
என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு
ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பீடத்திலிருந்து ஆறுதல்
வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன்.
என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது" என்று
அருள்தந்தை பேத்ரோ அருப்பே அவர்கள் தன் நினைவுகளை
எழுதியுள்ளார்.
அருள்தந்தை பேத்ரோ அருப்பே மருத்துவம் படித்தவர் என்பதால்,
ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில்
மட்டுமல்ல, வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ
உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை அவர் வீடு வீடாகச்
சென்று உதவிகள் செய்து வந்தபோது, Nakamura San என்ற இளம்
பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர்
வீச்சால் அந்த இளம் பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய்,
கொடூரமான வேதனையில் அந்தப் பெண் உயிருக்குப் போராடிக்
கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட தந்தை அருப்பே
அவர்கள், கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக் கொண்டு, அவர்
அருகில் முழந்தாள் படியிட்டு, அவரது காயங்களுக்கு
மருந்துகள் இட்டபோது, அந்தப் பெண் தந்தை அருப்பேயிடம்,
"பாதர், எனக்கு திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?"
என்று கேட்டார். தந்தை தலையை அசைத்தபடி, தான் கொண்டு
வந்திருந்த திருநற்கருணையை அந்தப் பெண்ணுக்குத் தந்தார்.
மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட Nakamura San சில
நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.
ஒரு மறக்கமுடியாத திருப்பலி, மறக்க முடியாத நற்கருணைப்
பகிர்வு இரண்டையும் அருள்தந்தை அருப்பே அவர்கள் தன்
வாழ்வைப் பாதித்த ஆழமான நினைவுகளாக எழுதிச் சென்றுள்ளார்.
காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக்
காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று
இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருவிழா.
நம்மில் பலர் சிறுவயதில் புது நன்மை வாங்கியிருப்போம்.
அந்த நாளுக்கென நம்மைத் தயாரிக்க, பங்குதந்தையர் அல்லது
அருள்சகோதரிகள் நமக்கு மறைகல்விப் பாடங்கள் சொல்லித்
தந்திருப்பர். அப்ப இரச வடிவில் இயேசு பிரசன்னமாகி
இருக்கும் இந்தப் பெரும் மறையுண்மையைப் பற்றி கதைகள் பல
சொல்லியிருப்பர். இந்தக் கதைகள் இன்னும் நம் நினைவுகளில்
தங்கியிருந்தால், இன்னும் நம் வாழ்வில் தாக்கங்களை
உருவாக்கி வந்தால், நாம் பேறு பெற்றவர்கள்.
குழந்தைகளாய் நாம் இருந்தபோது கற்றுக்கொண்ட பாடங்கள் பல
இன்னும் நம் வாழ்வில் பாதிப்புக்களை உருவாக்கி வருகின்றன.
வயதில் நாம் வளர்ந்த பின், சிந்திப்பதிலும் பல மாற்றங்களை
உணர்ந்திருக்கிறோம். இந்த மாற்றங்கள் நமது குழந்தைப்
பருவச் சிந்தனைகளைவிட சிறந்தவை என்று எப்போதும் சொல்லிவிட
முடியாது. பல நேரங்களில் நாம் சிந்திப்பதில்
குழம்பிப்போயிருக்கும்போது, குழந்தைகளைப் போல் எளிதாக,
தெளிவாக சிந்திக்க முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறோம்.
பல நேரங்களில் வயதில் வளர்ந்தவர்களுக்கு, குழந்தைகள்
பாடங்கள் சொல்லித் தருகின்றனர். சென்ற வாரம் மூவொரு
இறைவனைப் பற்றி புனித அகஸ்தினுக்கு கடற்கரையில் ஒரு
சிறுவன் சொல்லித்தந்த பாடத்தைப்பற்றி சிந்தித்தோம். இன்று
நாம் கொண்டாடும் ஆண்டவரின் திரு உடல், திரு இரத்தத்
திருவிழாவுக்குத் தேவையான பாடத்தை மற்றொரு குழந்தையின்
மூலம் பயில முயல்வோம். நாம் சந்திக்கப் போகும் குழந்தை,
அன்பு மருத்துவர் (Doctor Love) என்று புகழ்பெற்ற Leo
Buscaglia என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு பெற்ற
ஒரு குழந்தை.
அதிக அன்பு காட்டிய குழந்தை யார் என்று தீர்மானிக்க,
ஒருமுறை Leo Buscagliaவை நடுவராக நியமித்தனர். பல
குழந்தைகள் இந்தப் போட்டிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் அண்மையில் செய்த மிக அன்பு நிறைந்த செயல்கள்
Leoவிடம் விவரிக்கப் பட்டன. அக்குழந்தைகளிலிருந்து ஒரு 4
வயது சிறுவன் மிக அன்பு காட்டிய சிறுவன் என்று Leo
தேர்ந்தெடுத்தார். அந்தச் சிறுவன் என்ன செய்தான்?
அச்சிறுவனின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு முதியவர்
வாழ்ந்து வந்தார். அவர் தன் மனைவியை அண்மையில் இழந்தவர்.
ஒரு நாள் மாலை அவர் தன் வீட்டுக்கு முன்புறத்தில் ஒரு
சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் கண்களில்
கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்த அச்சிறுவன் அந்த
முதியவர் அருகே சென்று, அவர் மடியில் ஏறி அமர்ந்தான்.
இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்டநேரம் சென்று சிறுவன்
மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன்
செய்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா
அவனிடம், "நீ தாத்தா மடியில உக்காந்திருந்தியே, அவர்கிட்ட
என்ன சொன்ன?" என்று கேட்டார். சிறுவன் அம்மாவிடம்,
"ஒன்னும் சொல்லல. அவர் நல்லா அழட்டும்னு அவர் மடியில
உக்கார்ந்திருந்தேன்." என்று சொன்னான். அச்சிறுவனின்
இந்தச் செயலுக்காக அதிகக் கனிவுடையக் குழந்தை என்ற பரிசை
அந்தச் சிறுவனுக்கு Leo வழங்கினார். அந்த முதியவரின்
மடியில் எவ்விதத் தயக்கமும் இல்லாமல், உரிமையோடு ஏறி
அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன், இயேசுவின் திரு உடல்,
திரு இரத்தத் திருவிழாவின் உட்பொருளை நமக்கு சொல்லித்
தருகிறான்.
அன்பை பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த
வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்பு கொண்டவருடன்
தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது,
செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு
வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப்
பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம்
வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின்
உச்சம். அந்த அன்பின் சிகரத்தை நமக்குக் காட்டுவது,
இயேசுவின் திருஉடல், திருஇரத்தத் திருவிழா.
எப்படி நம் இறைவன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற
கேள்வியை விட, அவர் ஏன் மூவொரு இறைவனாய் இருக்கிறார் என்ற
கேள்விக்கு விடை தேடுவது நமக்கு நல்லது என்று சென்ற வாரம்
சிந்தித்தோம். அதேபோல், இயேசு எப்படி அந்த அப்ப இரச
வடிவில் பிரசன்னமாகி இருக்கிறார் என்ற கேள்விக்கு இறையியல்
விளக்கங்கள் தேடுவதற்குப் பதில், இயேசு ஏன் அப்ப இரச
வடிவில் நம்முடன் தங்கவிழைந்தார் என்பதை உணர்ந்துகொள்வது
நமக்குப் பயனளிக்கும்.
ஏன் இறைமகன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில்
விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்களிடம்
இருந்த எளிய உணவுப் பொருட்கள். இந்த உணவு இவர்கள் தினமும்
உண்ட உணவு. எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம்
உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக,
எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை
குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட,
இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன்.
எளிய வடிவங்கள் அவருக்குப் பிடித்த வடிவங்கள். எளிய
உணவில், நாம் தினமும் உண்ணும் உணவில், நம் உடலாகவே மாறி
நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார்
என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை.
இணைபிரியாமல், எப்போதும் மனித குலத்துடன்
தங்கியிருப்பதற்கு இயேசு இந்த வழியை நிறுவிச் சென்றார்.
இயேசுவின் இந்த பிரசன்னத்தைப் பற்றிய பல புதுமைகள் மனித
வரலாற்றில் நடந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. தங்களுடன்
இறைமகன் இயேசு இருக்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால்
எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை அவருக்காக
அர்ப்பணித்தனர்.
அத்தகைய ஓர் உன்னத உள்ளத்தின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வு
இதோ:
17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி
புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல
இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித Isaac Jogues
அவர்களும் ஒருவர். அந்த மக்களால் சித்ரவதைகள்
செய்யப்பட்டு, அவர் தன் கை விரல்களையெல்லாம்
இழந்திருந்தார். இந்நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத்
திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார்.
கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு
திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது.
அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் Urban அவர்களிடம்
உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக
வாழும் இந்த அருள்பணியாளர் திருப்பலி நிகழ்த்த யாரும் தடை
செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு
அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி,
அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கரங்களில்
புனித Isaac Jogues அவர்கள் உயர்த்திப் பிடித்தது,
கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை
உணர்த்தியிருக்கும்.
தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய
இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருநாளன்று, நாமும்
மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் நம்மையே வழங்கும்
வழிகளை இறைமகன் நமக்குச் சொல்லித்தர வேண்டுமென்று
மன்றாடுவோம்.
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
திருவுடல் திருஇரத்தப் பெருவிழா
முதல் வாசகப் பின்னணி (தொ.நூ. 14:18-20)
இந்த வாசகம் இயேசு பிறப்பதற்கு 1800 ஆண்டுகளுக்கு முன்
நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை நம் கண்முன் கொண்டு வருகிறது.
அபிரகாம் தாம் போரில் பெற்ற வெற்றியோடு பிணைப்பொருட்-
களையும் எடுத்துக்கொண்டு சலேம் என அழைக்கப்பட்ட இன்றைய
எருசலேம் வழியாகச் செல்கையில் அந்நகரத்து அரசராகவும்
குருவாகவும் இருந்த மெல்கிசதேக் அபிரகாமுக்கு அப்பமும்
திராட்சை இரசமும் கொடுத்து அபிரகாமையும் அவருடன்
வந்தவர்களையும் ஆசிர்வதித்தார். அதற்கு நன்றியாக அபிரகாம்
தாம் கொண்டுவந்த பிணைப்பொருட்களில் பத்தில் ஒரு பகுதியை
அவருக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார். மெல்கிசெதேக்
அளித்த அப்ப இரச காணிக்கை பின்னர் இயேசு எல்லா
மனிதருக்காகவும் ஒப்புக்கொடுத்த புதிய உடன்படிக்கையின்
காணிக்கைக்கு முன் அடையாளமாக அமைந்தது.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி 11:23-26)
இயேசு தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் பாஸ்கா விழா
சூழலில் அப்பத்தை எடுத்து 'இது என் உடல்' என்றும் இரசத்தை
எடுத்து 'இது பாவ மன்னிப்பிற்கென்று எல்லாருக்காகவும்
சிந்தப்படும் என் இரத்தம்' என்றும் கூறினார். இவ்வாறு
அவரது உடல் அவரது மக்களுக்காக உடைக்கப்படும்: அவரது
இரத்தம் புதிய உடன்- படிக்கையை நிறுவ சிந்தப்படும் எனக்
கூறுகிறார். புதிய உடன்- படிக்கை' என்றால் 'புதிய மக்கள்'
எனப் பொருள்படும். இவர்கள் மரித்து உயிர்த்தக்
கிறிஸ்துவில் கடவுளின் பிள்ளைகள். கொரிந்து நகரத்து
மக்களில் பணக்காரர்கள் ஏழைகளை உடன் பிறப்புகளாகக் கருதாமல்
வேறுபாடு காட்டி வந்தனர். இதனைக் கண்டிக்கும் முகமாக
இவ்வாசகத்தை எழுதும் பவுலடியார் நற்கருணை ஒன்றிப்- பின்
ஒருமைபாட்டின் திருவருட்சாதனம் என்பதை வலியுறுத்துகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லுாக். 9:11-17)
மக்கள் தங்கள் உணவை வாங்க அனுப்பிவிடுமாறு சீடர்கள் கூற
'நீங்களே ஏற்பாடு செய்யுங்கள்' என்கிறார் இயேசு. தங்களிடம்
இருப்பது 5000 பேருக்குப் போதாது என அவர்கள் கூற அவர்களை
50 பேருடையக் குழுக்களாக அமரச்சொல்லி அவர்களுக்கு
உணவளிக்கிறார் இயேசு. இந்த நிகழ்ச்சி மனிதர்களின் பசியைப்
போக்கச் சீடர்களுக்கு இருந்த ஆர்வம், இயேசுவின் தாராளமாய்
உதவும் குணம், இயேசு எல்லா மனித தேவைகளையும் தீர்க்க
வல்லவர் என்ற உண்மை என்பனவற்றை இந்த நற்செய்தி வாசகம்
வலியுறுத்துகிறது. திருத்தூதர்களைப்போல் இயேசுவின் இன்றைய
சீடர்களும் மற்றவர் தேவையை உணர்ந்து செயல்பட இவ்வாசகம்
அழைப்பு விடுக்கிறது.
மறையுரை
இன்றையப் பெருவிழா நான்கு முக்கிய கருத்துக்களை
வவியுறுத்துகிறது. அவை திவ்ய நற்கருணை உடன்படிக்கையின்
உணவு, பலி உணவு, உறவின் உணவு, இறை பிரசன்ன உறவு
என்பனவாகும்.
உடன்படிக்கையின் உணவு:
யாவே கடவுள் இஸ்ராயேல் மக்களோடு மோயீசன் வழியாகச்
செய்துகொண்ட உடன்படிக்கை எரேமியாஸ் காலத்தில் முறிந்து
விட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே இறைவாக்கினர் புதிய
உடன்படிக்கையையும் அறிவிக்கிறார் (31:31-34), இந்தப் புதிய
உடன்படிக்கையை இயேசு தமது இரத்தத்தால் ஏற்படுத்தினார்.
பழைய உடன்படிக்கையில் கடவுள் அரசராகவும் இஸ்ரயேல் மக்கள்
அவரது குடிமக்களாகவும் ஏற்றுக்- கொள்ளப்பட்டனர்.
உடன்படிக்கையில் உரிமைகளும் உண்டு: கடமைகளும் உண்டு.
கடவுளால் பாதுகாக்கப்படுவது மக்களுக்கு உரிமை. பத்துக்
கற்பனையின்படி வாழ வேண்டியது அவர்களது கடமை. கானான் நாட்டை
அடைந்தபின் இம்மக்கள் பிற கடவுளை வழிபடத் துவங்கினர்.
தங்களுக்கென அரசர்களை அமைத்துக்- கொண்டனர். அந்த
அரசர்களும் பிற மத வழிபாடுகளைப் புகுத்தினர். இதனால்
கடவுளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முதலிடம்
கொடுக்கப்படவில்லை. எனவே அந்த உடன்படிக்கை முறிந்து
விட்டதாக இறைவன் அறிவித்தார். புதிய உடன்படிக்கையிலோ
கடவுள் நம் தந்தையாகவும் கிறிஸ்துவிலே விசுவாசம் கொள்ளும்
அனைவரும் கடவுளின் பிள்ளைகளாகவும் மாறுகிறோம். பழைய
உடன்படிக்கையின் மக்கள் உடன்படிக்கையால் ஏற்படும்
கடமைகளைப் புறக்கணித்ததால் அந்த உடன்படிக்கை முறிந்தது
எனினும் கிறிஸ்துவின் இரத்தத்தில் ஏற்பாடாகிய புதிய
உடன்படிக்கை முறிக்க முடியாதது என்பதை உணர்த்தத்தான்
`நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்' என்கிறார் இயேசு.
ஆயினும் பழைய உடன்படிக்கையைப் போல் புதிய உடன்படிக்கை-
யிலும் கடமைகள் உண்டு. இறைவனை எல்லாவற்றிக்கும் மேலாக
அன்பு செய்வதும் தன்னைத்தான் அன்பு செய்வது போல பிறரை
அன்பு செய்வதும் இந்த உடன்படிக்கையிலிருந்து பிறக்கும்
கடமைகளாகும். இந்த இரண்டு கடமைகளில் ஒன்றை புறக்-
கணித்தாலும் உடன்படிக்கைக்கு எதிராகச் செயல்படுபவர்களா-
கிறோம். இதிலிருந்து விடுபடத் திருப்பலியின் துவக்கத்தில்
இருக்கும் பாவமன்னிப்புச் சடங்கில் அற்பப் பாவங்களுக்கு
மன்னிப்பு பெற முடியும். சாவான பாவம் இருந்தால் ஒப்புரவு
திருவருட்- சாதனத்தைப் பெற வேண்டும். இவ்வாறு
திருப்பலியில் பங்குபெற உடன்படிக்கை உறவுகள் சீராக
இருப்பது அவசியம்.
பலி உணவு:
பழைய உடன்படிக்கையில் ஆட்டு இரத்தம் பீடத்தின் மீதும்
மக்களின் மீதும் தெளிக்கப்பட்டது போல புதிய
உடன்படிக்கையில் கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டது.
இயேசுவின் மரணம் அவர் தனது தந்தையின் திருவுளத்திற்குப்
பணிந்து செயல்பட உதவியது. இவ்வாறு தனது விருப்பத்தைக்
கைவிட்டு தந்தையின் விருப்பத்தை ஏற்று செயல்பட்டதுதான்
இயேசுவின் பலியில் முக்கியமானது. இயேசுவின் சீடர்களான
நாமும் அவரோடு இணைந்து நமது விருப்பத்தைப் பலியாக்கி
இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற அழைக்கப்படுகிறோம்.
நம்முடைய விருப்பத்தைப் பலியாக்கும்போது இறைமக்களில்
தேவையில் இருப்போருக்கு உதவ அழைக்கப்படுகிறோம். இதனால்
நாம் காணிக்கைக் கொடுக்கிறோம். கோவிலில் தரப்படும்
காணிக்கையில் தேவையில் இருப்போருக்கு நமது ஆற்றலுக்கும்
வருமானத்திற்கும் ஏற்ப நாம் கொடுக்க வேண்டும். நாம் வாழத்
தன் விருப்பத்தைப் பலியாக்கிய இறைமகனோடு நாமும் பிறர் வாழ
அர்ப்பணிப்பது தான் நமது காணிக்கை. இவ்வாறு பிறர் வாழ நாம்
எடுக்கும் முயற்சிகளில் நாம் காணும் வெற்றிகள் தோல்விகள்
அனைத்தையும் இறைமகனோடு நாம் காணிக்கையாக்க வேண்டும்.
நீதியான சமத்துவ சமூகத்தை உருவாக்க நாம் காணும்
வேதனைகளையும் காணிக்கையாக்கலாம். இவ்வாறு நாம்
கிறிஸ்துவின் பலியோடு இணைந்து நம் வாழ்வைப் பிறர்பணியில்
பலியாக்குவதே நற்கருணை கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதன்
பொருளாகும்.
உறவின் உணவு:
இயேசு எல்லாருக்காகவும் தம் இரத்தத்தைச் சிந்தியதாலும்
அப்பம் பலருக்காகப் பிடப்படுவதாலும் தூய பவுலடியார்
இரண்டாம் வாசகத்தில் கூறியதுபோல பலி உணவில் பங்கு பெறும்
அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே மனமும் ஒரே உயிரும் கொண்டு
வாழ வேண்டுமென குரு திருப்பலியில் செபிக்கிறார். இது
வெறும் செபமாக மட்டும் இல்லாமல் ஒரே உடலில் பங்கு பெறும்
அனைவரும் ஒன்றித்து வாழுதல் அவசியமானது. ஒற்றுமை உணர்வு
இல்லாமல் பலி உணவில் பங்கு பெருதல் கிறிஸ்துவில் உடலுக்கு
எதிராகச் செய்யும் பாவம் என்கிறார் தூய பவுலடியார்.
சாதியின் பெயரால் பிளவுபட்டு ஒரு பங்கு இருக்குமானால்
அங்கேத் திருப்பலி நிறைவேற்றுதல் பொருளற்றதாகும். இன்று
பலவித பிரிவினைப் போக்குகள் திருச்சபையில் வளர்ந்து
வருகின்றன. அத்தகையப் பிரிவினை வாதங்களுக்கு மனதில் இடம்
கொடுப்போர் பலி உணவில் பங்குபெறத் தகுதி அற்றோர் என்பதைக்
குருக்களும் இறைமக்களும் உணருதல் அவசியமாகிறது. பலி உணவில்
பங்குபெறும் அனைவரும் ஒற்றுமை சமாதானம் ஆகியப் பண்புகளைச்
சமூகத்தில் வளர்ப்பதில் கவனமுடன் செயல்பட வேண்டியது
அவசியமாகும்.
பிரசன்ன உறவு:
இயேசு திவ்ய நற்கருணையில் உண்மையாகவே பிரசன்னமாக
இருக்கிறார் என்பதை நாம் முழு மனதுடன் ஏற்று வாழ
அழைக்கப்படுகிறோம். அப்பமும் இரசமும் இயேசுவின் உடலாகவும்
இரத்தமாகவும் உண்மையில் மாறுகின்றன என்பதை நாம் விசுவாசக்
கண்ணோடு ஏற்றுக்கொண்டு அவரை உட்கொள்ள வரும்போது உடலளவில்,
உள்ளத்தளவில், உறவளவில் தூய்மையாய் இருப்பது அவசியம்.
வாயில் வெத்தலைப் பாக்கோடு திருவிருந்தில் பங்கு பெறுதல்
சிலருடையப் பழக்கமாக உள்ளது. பாவ நிலையில் மனம்
இருந்தாலும் திருப்பலியின் துவக்கத்தில் நடைபெறும்
பாவமன்னிப்பு சடங்கில் பங்கு பெறாமல் தாமதமாக வந்துவிட்டு
திருவிருந்தில் எந்தவிதத் தயாரிப்புமின்றி பங்கு பெறுவோர்
கூட்டம் அதிகமாகி வருவது வருத்தத்துக்குரியது. மேலும்
பிறரோடு உறவை முறித்தவர்களாய்த் திருவிருந்தில் பங்கு
பெறுவோர் கூட்டமும் பெருகிவருகிறது.
இவ்வாறு உடன்படிக்கை உணவு, பலி உணவு,உறவின் உணவு, பிரசன்ன
உறவு என்னும் கருத்துக்களைக் கேட்ட நாம் நற்செய்தியில்
இயேசுவும் சீடர்களும் மற்றவர் தேவையில் அக்கறை உள்ளவர்களாக
இருப்பதற்கு ஏற்ப, நாமும் மற்றவர் நலனில் அக்கறை
உள்ளவர்களாக வாழ முயலுவோம். முதல் வாசகத்தில் அபிரகாம்
தனது வரவில் பத்தில் ஒரு பகுதியைக் கொடுத்ததுபோல நம்
வருமானத்திலும் பத்தில் ஒரு பகுதியைப் பங்கு
வளர்ச்சிக்காகக் கொடுப்போம். மக்களிடையே ஒற்றுமையும்
சமாதானமும் வளர நாம் கருவிகளாய் வாழவும் திவ்ய
நற்கருணையில் இயேசுவைத் தகுதியோடு உட்கொண்டு அவர் உறவில்
வளரவும் வரம் வேண்டி இத்திருப்பலியில் தொடர்ந்து பங்குப்
பெறுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் உள்ளத்திற்கு
மட்டுமன்றி உடலுக்கும் சுகம் தரும் மருந்தாகும்.
நாம் இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தத்தையும் உட்கொள்-
வதால் நமது உடல் கடவுளின் ஆலயமாகிறது.
ஒரே பந்தியில் அமர்ந்து இயேசுவின் திரு உடலையும் திரு
இரத்தத்தையும் உட்கொள்வதால் நாம் அனைவரும் கிறிஸ்து- வின்
மறைஉடலில் உறுப்பினராகி ஒரே குடும்பமாகிறோம்.
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம்
பெருவிழா
வேறெந்த சபைகளிலும் காணக் கிடைக்காத, கத்தோலிக்க
திருஅவைக்கே தனிச்சிறப்பான கிறிஸ்துவின் திருஉடல்
திருஇரத்தம் பெருவிழாவை இன்று கொண்டாடுகின்றோம். இன்றைய
இறை வார்த்தையில் முதல் வாசகம் நற்கருணைக்கு
முன்னோடியான மெல்கிசதேக்கின் காணிக்கையைப் பற்றிக்
கூறுகிற து; அப்பமும் இரசமும் கொண்டுவந்ததைப் பற்றி
கூறுகின்றது. இரண்டாம் வாசகம், புதிய ஏற்பாட்டு
நூல்களில் முதன்முதலாக இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை
பதிவுசெய்த பவுலடியாரின் மடலிவிருந்து விவரிக்கின்றது.
இவ்வாசகங்களுக்கு நற்கருணை யோடு தொடர்பு இருப்பது
தெளிவாகின்றது. ஆனால் நற்செய்திக் கும் நற்கருணைக்கும்
தொடர்பு இல்லாததுபோல தோன்றிலும், தொடர்பு இருக்கின்றது
என்பதுதான் உண்மை அதைப்பற்றி அலகும் மூன்
நற்செய்தியின் பின்னணிப்பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
பின்னணி
இன்றைய நற்செய்தி லூக் 9 ஆம் அதிகாரத்தின் முதல்
பகுதியிலிருந்து (வச 71-17) எடுக்கப்பட்டது. இது இறைவாக்கி
னருக்கு ஏற்பும் எதிர்ப்பும் எனும் கண்ணோட்டத்தில்
நோக்கப் படவேண்டும். இங்கு சாதாரண சாமான்யர்கள் இயேசுவை
ஏற்று பின் தொடர சமூக உயர்நிலையில் இருப்போர் இயேசுவை
எதிர்த்தனர் (உ-ம் ஏரோது. இற்திலையில் இயேசு தன்னை
ஏற்று பின் தொடர்ந்தவர்களை ஓர் இறையரசு சமூகமாக
உருவாக்கு கின்றார். அதற்காக தனக்கு அடுத்தகட்டத்
தலைவர்களையும் உருவாக்குகின்றார். அதற்கான முயற்சியும்
இவ்வதிகாரத்தில் நடக் கின்றது. இந்தப் பின்னணியில்
இன்றைய நற்செய்திப் பகுதிக்கு நற்கருணையோடு உள்ள
தொடர்பையும், தலைவர்களான கா் களின்
உருவாக்கத்தைப்பற்றியும் இவண் விளக்க முயல்வோம்.
1. எடுத்து . . . ஆசிகூறி . . . பிட்டு . . . கொடுத்து
யோவான் நற்செய்தியில் (யோவா 6) அப்பம் பலுகுதல்
நிகழ்வு இயேசுவின் - இறுதி இராவுணவை முன்குறித்துக்
காட்டியது போலவே, இந்த நிகழ்வினை விவரிக்க லூக்கா பயன்
படுத்தும் ":எடுத்து, அசிகூறி, பிட்டு, கொடுத்தார்": (வச.
16) எனும் செயல்கள் இயேசு இறுதி இராவுணவில் செய்த
நிகழ்வுகளை அதே வரிசையில் கூறுகின்றன (காண். லூக்
22:19, முதல் வாசகம்). எம்மாவு சீடர்களோடு இயேசு
பந்தியமர்ந்த போதும் இயேசு ":அப்பத்தை எடுத்து, கடவுளைப்
போற்றி, பிட்டு, அவர்களுக்கு கொடுத்தார்": (லூக் 24:30).
அதித் திருஅவையும் இதையே நற்கருணையாக, அண்ட வரின்
திருவிருந்தாகக் கொண்டாடியது.
மேலும் இந்நிகழ்வின் வழியாக இயேசுவை ஓர் இறைய
வாக்கினராக பார்த்தால், இது நமக்கு மோசே தலைமையில்
விடுதலைப் பயணத்தில் நிகழ்ந்த பாலையில் மன்னா பொழிவு
நிகழ்வையும் (காண். விப 76:4-36; வச 12-ல் ":பாலைநிலம்
எனும் சொற்றொடர்பயன்படுத்தப்பட்டுள்ளது நோக்கப்பட
வேண்டும்). எலிசா இறைவாக்கினரின் உணவளிக்கும்
புதுமையையும் (காண். 2 அர 4:42-44) நமக்கு
நினைவூட்டுகின்றது. எனவே இயேசு மோசே, எலிசா போன்ற
இறைவாக்கினர் என்பதும் தெளிவாகின்றது.
2. சீடர்களின் உருவாக்கம்
இந்த நிகழ்வுக்கு முந்தைய இரு நிகழ்வுகளில் (சீடர்களை
அனுப்புதல் (வச. 7-5), சீடர்களின் நற்செய்திப் பணி (வச.
6) சீடர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள். அவர்களைத்
தனக்கு அடுத்த தலைவர்களாக உருவாக்குகின்றார். இந்த
வகையில் இன்றைய அப்பம் பலுகும் நிகழ்விலும் சீடர்கள்
மையப்படுத்தப் படுகின்றனர்: பன்னிருவரும் இயேசுவிடம்
வந்து மக்களை அனுப்பிவிடும்படி. கேட்கின்றார்கள் (வச.
12); சீடர்களையே மக்களுக்கு உணவளிக்கச் சொல்கிறார் இயேசு
(வச. 13); சீடர்களையே மக்களைப் பந்தியில் அமரச்
செய்யச்சொல்கிறார் (வ. 74; சீடர்களும் மக்களைப்
பந்தியில் அமரச்செய்கிறார்கள் (வச. 15), மக்களிடம்
பரிமாறுவதற்கு அப்பத்தையும், மீன்களையும் சீடர் களிடம்
கொடுக்கிறார் (வ௪. 16); மீதியானவற்றை சீடர்கள் கூடையில்
எடுக்கின்றனர் (வச. 17); பன்னிரண்டு கூடைகள் புதிய
இஸ்ரயேலின் 12 கோத்திரங்களான பன்னிரண்டு சீடர்களைக்
குறிப்பதாகக் கொள்ளலாம். ஆக இப்புதுமையில் சீடர்களின்
பங்கு வெளிப்படையாக முக்கியத்துவம் பெறுகின்றது.
முடிவாக. . .
பாழ்வெளியான உலகில் இறைவன் புதிய மன்னாவான
தனதுதிருஉடலையும்,திரு இரத்தத்தையும் உணவாகத்
தருகின்றார். அது நற்கருணையாக இன்றும்
அளிக்கப்படுகின்றது. ":நான் உங்கள் நடுவே பணிவிடை
புரிபவனாக இருக்கின்றேன்": (லூக் 22:22) என்றுகூறிய
இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி அவரது சீடர்களும்
மக்களுக்குப் பணி செய்பவர்களாக, ஆண்டவரின் உணவை,
நற்கருணையை பந்தியில் பரிமாறுபவர்களாக பணி செய்ய
அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ":தம் ஊளழியருக்கு வேளா
வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரிய":
வீட்டுப் ரெபறுப்பாளர்களாக இருக்கவேண்டும் (காண். லூக்
12:41-48). தொடக்கத் திருஅவையில் திருத்தூதர்கள்
இதைத்தான் செய்தார்கள் (காண். திப 4:35; 6-2), நாமும்
இதைச்செய்ய அழைக்கப்படுகின்றோம்.
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
இயேசுவின் திருவுடல், திரு இரத்தம்
முதல் வாசகம் : தொநூ 14 : 18-20
எதிரி அரசர்களின் படைகள்மேல் வெற்றிகொண்டு, லோத்தை
மீட்டுத் திரும்பிய ஆபிரகாமை மெல்கிசெதேக் அரசன்
எதிர்ப்படுவது இன்றைய வாசகம். இன்றைய திருநாளுக்கும் இந்த
வாசகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு, மெல்கிசெதேக்
அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் கொண்டுவந்தது
மட்டுமன்று (திருப்பலிப் பொருட்கள்), அவர் என்றும் வாழும்
குருவாகிய இயேசுவைச் சுட்டி நிற்கிறார் என்பதேயாகும்.
இயேசுவின் குருத்துவம் இவருடைய குருத்துவத்தோடு
ஒப்பிடப்பட்டு, இதற்கும் மேலானது என்று காட்டப்படுகிறது
(காண் : எபி.6:5-10; 7:1-1).
மெல்கிசெதேக் நீதிமான்
மெல்கிசெதேக் என்பது மெலெக்-செதேக் என்று பிரிக்கப்பட்டு,
நீதியின் (செதேக்) அரசர் (மெலெக்) என்று எபிரேயத்தில்
பொருள்படும் (எபி.7:2). மெசியா இயேசு ":நீதி": யெனும்
திருவருட் செயல்முறைக்காக மீட்புக்காக (காண்: மூவொரு
கடவுள் விழா, இரண்டாம் வாசகம்-உரோ 5:1-5) வாழ்ந்து மரித்து
உயிர்த்தவர். இவ்வாறு இயேசு நீதியின் அரசர் ஆகிறார்.
எனவேதான் ":நீர் மெல்க்கிசெதேக் முறைமைப்படி என்றென்றும்
குருவாயிருக்கிறீர்": என்று திருப்பாடல் ஆசிரியர் (110:4)
பாடுவது இயேசுவுக்கு முழுதும் பொருந்தி அமையும் (எபி.6-7).
புதிய மெல்க்கிசெதேக் இயேசுவின் அருளன்பு நம்மை வழிநடத்த
வேண்டுவோம்.
மெல்கிசெதேக் சமாதானக் குரு
":அவர் சாலேமின் அரசர்": (14:1). எபிரேயத்தில் Shalom என்ற
சொல்லுக்கு அமைதி, சமாதானம், நிறைவு, முழுமை என்ற பொருள்
உண்டு. ":ஷலோம்' என்பது ":சலேம்": ஆகி, எருசலேம் நகரைச்
சுட்டும் பெயராயிற்று. புதிய மெல்கிசெதேக் இயேசு அமைதியின்
குரு. ":ஏனெனில் கிறிஸ்துவே நம் அமைதி'' (எபே.2:14) என்பார்
பவுலடியார். பிறப்பிலே அவர் தந்தது அமைதி (லூக் 2:14).
இறப்பிலே அவர் தந்தது அமைதி (லூக்.23:34). உயிர்ப்பிலே
அவர் ஈந்தது அமைதி (யோவா 20:19); வாழ்வு முழுவதும் அவர்
அளித்தது அமைதி. ஆம், இப்புதிய மெல்கிசெதேக் நம்
உள்ளங்களுக்கும், இல்லங்களுக்கும், ஊருக்கும், அமைதி
அளித்திட வேண்டிடுவோம். "அமைதி ஏற்படுத்துவோர்
பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள்
எனப்படுவார்கள்": (மத்.5:9). இயேசுவோடு சேர்ந்து அவரின்
குருத்துவத் திருப்பணியைத் தொடர்வோமா?
மெல்கிசெதேக் ஆசீர் அளிக்கும் குரு
குலமுதல்வரின் தந்தையாகிய ஆபிரகாமை ஆசீர்வதிக்கிறார்
மெல்கிசெதேக் (14:19). இயேசு தலைமைக் குரு என்ற முறையில்
ஆசீர் அனைத்தும் அவருக்கே உரியது. அன்றாடம் திருப்பலியில்
தந்தையைப் புகழ்ந்து பாடுவதோடு நம்மையும் ஆசீர்வதிக்கிறார்
இயேசு. ரொட்டியையும் இரசத்தையும் எடுத்து ஆசீர்வதித்த அவர்
பிரசன்னமே இன்று நம்மையும் ஆசீர்வதிக்கிறது. இவ் ஆசீரைப்
பெற்று, அன்றாடம் நம் கிறிஸ்துவப் பணிகளைக் குறைவறச்
செய்து முடிக்க, கூடிய மட்டும் தினமும் திருப்பலியில்
பங்கு பெறுவோமா? திவ்ய நற்கருணை இறைவனின் தொடர்ந்த ஆசி
என்பதை உணர்ந்து, அன்றாடம் திவ்ய நற்கருணைப் பந்தியில்
பங்குபெற நம்மைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கிக்கொள்வோமா?
திவ்ய நற்கருணை பற்றி வழிமுறையாக வந்த ஆதிகாலப்
பாரம்பரியத்தை, இன்றைய வாசகத்திலே பவுலடியார்
விளக்குகிறார் (மத்.26:26; மாற் 14:22-25; லூக்.21:14-20).
உடைந்த அப்பம்
இயேசு அப்பத்தைப் பிட்டு அளிக்கிறார். பிடாத, உடைக்கப்படாத
அப்பம், பகிர்ந்து அளிக்கப்பட முடியாது. இயேசுவின் உடைந்த
உடலைச் சுட்டும் அறிகுறி இது. தம் இறப்பினாலே மட்டுமே
இயேசு சாவின்மேல், பாவத்தின் மேல் வெற்றிகொள்ளமுடிந்தது.
நம்மை நாம் உடைக்காவிடில், பிறருக்காக நாம்
துன்பப்படாவிடில், ஏனையோருக்குப் பயனுள்ளவர்களாக மாட்டோம்.
"இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல்" (11:24) என்று
நாம் கூறமுடியாவிடில் நாம் அருந்தும் திவ்ய நற்கருணையால்
யாதொரு பலனும் இருக்க முடியாது. நாம் உடைந்த அப்பங்கள்
ஆகும்போதுதான் பிறர் நம்மால் வாழ்வடைய முடியும். எனவே
நம்முடைய துன்ப துயரங்களையும் பொருட்படுத்தாது, பிறருக்காக
உழைத்து உழைத்து உருக்குலைவோமா? "எவ்வுயிரும் என்
உயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்வாய்
பராபரமே": (தாயுமா) என்பதை ":எவ்வுயிரும் என் உயிராய் எண்ணி
என்னை ஈந்திட நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே"
என்று மாற்றி அமைப்போமா?
இரத்தத்தின் கிண்ணம்
பழைய உடன்படிக்கை இரத்தத்தினால் நிறைவுற்றது (விப 24:3-8).
":இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு என்பது இல்லை":
(எபி.9:22). எனவே புதிய உடன்படிக்கை வழி நமக்குப்
பாவமன்னிப்பளிக்க விரும்பிய இயேசுவும் தம் இரத்தத்தைச்
சிந்துகிறார். ":இக்கிண்ணம் எனது இரத்தத்தினாலாகும் புதிய
உடன்படிக்கை": (1கொரி.11:25). திவ்ய நற்கருணையில்
பங்கெடுப்போர் அனைவரும், பிறருக்காகத் தம் இரத்தத்தைச்
சிந்துவதன் வழியேதான் இவ்வுடன்படிக்கைக்கு முழுப்பொருள்
கொடுக்க முடியும். பிறருக்காக, அவர்கள் நல்வாழ்வுக்காக
நான் இரத்தம் சிந்தும்போதும் வேதனை அடையும் போதெல்லாம்
இப்புதிய உடன்படிக்கையைத் தொடர்கிறேன் என்பதை உணர்கிறேனா?
என்னுடைய இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவ மன்னிப்பு இல்லை
என்பதை எண்ணிப் பார்க்கின்றேனா?
இயேசுவின் நினைவிலே
திருப்பலி, திவ்ய நற்கருணை இயேசுவின் நினைவிலே நடப்பன.
இயேசுவின் வாழ்வை, பலியைத் தொடர்ந்து வாழ்வுப்படுத்தும்
போதுதான் உண்மையிலே நாம் இவ்வருட்சாதனத்தில் பங்கு
பெற்றவர்களாவோம். திருப்பலி முடிந்தவுடன்தான் நமது
திருப்பலி தொடங்குகிறது. திவ்ய நற்கருணைப் பந்தியில் பங்கு
பெற்றபின்தான் நாம் திவ்ய நற்கருணையாக அமைவது தொடர்கிறது.
எனவே நமது வாழ்வு பிறருக்காக வாழப்படும் போது,
உடைக்கப்படும்போது, நாம் பிறருக்காக உழைத்து ஓயும்போது,
இரத்தம் சிந்தும்போது, நாமே திருப்பலி செலுத்துகிறோம்
என்பதை உணர்வோமா? ":திருப்பலி முடிந்தது, சென்று வாழுங்கள்":
என்பதன் பொருள் "இப்போது உங்கள் திருப்பலி தொடங்குகிறது.
இயேசுவின் மாதிரிகையை உங்கள் வாழ்விலே தொடருங்கள்":
என்பதாகும். திருப்பலி வாழ்வுப்பலி என்பதை உணர்வோம்;
செயல்படுவோம்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
நற்செய்தி : லூக். 9 : 11-17
திவ்ய நற்கருணைத் திருநாளன்று, இயேசு அப்பங்களைப் பலுக்கிய
நற்செய்தி வாசகம் மிகப் பொருத்தமானது. அப்பங்களைப்
பலுக்கிப் பகிர்ந்தளித்த புதுமை திவ்ய நற்கருணையைச்
சுட்டுகிறது என்பது சிறப்பாக யோவான் 6ஆம்
அதிகாரத்திலிருந்து புலனாகின்றது. ஏனைய நற்செய்திகளிலும்,
":எடுத்து, இறைபுகழ் கூறி, பிட்டு, கொடுத்தார்": என்ற
சொற்கள் திவ்ய நற்கருணையை இயேசு ஏற்படுத்திய பகுதிகளில்
வருதல் 5 (1. 26: 26-29 . 14:22-25; . 22:19-20; ໙ 6 :
51-58; 1.11 : 23-25).
இயேசுவின் கனிவு
பாழ்வெளியிலே பல்லாயிரம் பேருக்கு உணவு அளிப்பது என்பது
இயலாதது. சீடர் இதை உணரினும், இயேசு சீடரின் சொற்களை
ஏற்கவில்லை. அவரது இதயம் கனிவுள்ளது. "ஆயனில்லா ஆடுகள்போல்
இருந்ததால் இயேசு அவர்கள்மீது மனமிரங்கினார்": என்பர்
நற்செய்தியாளர் (காண்.மாற்.6:34; மத்.9:36). ":அவர்களை
அனுப்பிவிடும்": என்ற சீடருக்கு, ":நீங்களே அவர்களுக்கு உணவு
கொடுங்கள்": (9:12-13) என்கிறார். துன்புறுவோர் கண்டு
துயருறுகிறார் இயேசு. அவர்களது துன்பத்தைத் தமதாக உணர்ந்து
அவர்களுக்கு உணவளிக்கிறார். பழைய ஏற்பாட்டில் கடவுளின்
இரக்கமும் கனிவும் பாழ்வெளியில் அவர் இஸ்ரயேலருக்கு அளித்த
மன்னா வழி வெளிப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இயேசுவின்
கனிவு பசித்தோருக்கு அவர் உணவு அளித்தது வழி வெளியாகிறது.
இயேசுவின் இக்கழிவிரக்கம் நம்பாலும் அன்றாடம்
வெளிப்படுகிறதை உணர்கிறோமா? உணர்ந்து, அவருக்கு நன்றி
கூறுகிறோமா?
இயேசுவின் திருவுடல் நமக்கு ஒரு சவால்
பசித்தோருக்கு உணவளித்த இறைவன், உடலுக்கு உணவளித்த இறைவன்
நாமும் பசித்து வந்தோருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதை
உணர்த்துகிறார். திவ்ய நற்கருணையில் நாம் பங்கெடுக்கும்
போதெல்லாம், நாம் பிறருக்குக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை
உணர்கிறோமா? "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்": என்பது
அவர் திருவுணவில் பங்கெடுக்கும் நமக்கு இயேசு விடும் சவால்
ஆகும். ":தனியொருவனுக்கு உணவில்லையெனில் செகத்தினை
அழித்திடுவோம்": (பாரதி) என்ற பாரதியாரின் புரட்சிச்
சொற்கள் வெறும் கனவாகவே அமைந்துவிடுமா? அன்றாடம் நாம்
பங்கேற்கும் ":திருப்பந்தி":, பசித்துவரும் மக்களுக்குத்
":தெருப்பந்தி": அமைத்துத் தர நமக்கு விடுக்கப்படும்
அழைப்பாகும் என்பதை உணர்வோம். ":உண்டி கொடுத்தோர் உயிர்
கொடுத்தோர்": என்பதை உணர்ந்து, நமது உணவுத் தேவைகளைக்
குறைத்து, ஏழை எளியோருக்கு ஊட்டமும் உயிரும் அளிப்போம்.
நாம் பிறருக்கு அளிக்கும் இயேசு, நாம் பிறருக்கு அளிக்கும்
உணவு வழி அல்லது அவ்வுணவை அடைய உதவுவது வழி
வெளிப்படட்டும்.
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ