ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பாஸ்கா 2ஆம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
அச்சம் தீர்க்க அருள் வேண்டி வந்திருக்கும் இனிய நெஞ்சங்களே!

அச்சத்தை அகற்றி மனதை அமைதிப்படுத்தவும், கூடவே சந்தேகத்தை அகற்றி நம்பிக்கையை வளர்த்தெடுக்கவும் வரவேற்கிறது இந்த பாஸ்காக் காலம் 2 ஆம் ஞாயிறு!

அமைதியும் நம்பிக்கையும் அன்றாட வாழ்வுக்கு அவசியமான ஒன்று. இன்று நாம் காணும் உலகில் அமைதியும், நம்பிக்கையும் வலுவிழந்து மக்களை வாழ்விழந்த சூழ்நிலைக்குள் வலியதள்ளிக் கொண்டு இருக்கிறது. இப்படியான சூழலில் நம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நம்பிக்கையை தருகிறது. உயிர்த்த இயேசுவின் காயங்களை தொட்டுப் பார்த்து நம்புவேன் என்ற தோமாவின் பிடிவாதமான குணமோ, காணாமல் நம்புவதற்கு நம்மை கட்டளையிடுகிறது!

அமைதியை, மகிழ்ச்சியை, நம்பிக்கையை உயிர்ப்பு விழா உற்பத்தி செய்ய வேண்டும் என்பது உயிர்த்த இயேசுவின் ஆவல். சீடர்களின் மனதுக்குள் குடியிருந்த அச்சத்தை அகற்றி தைரியத்தையும், தோமாவின் சந்தேகத்தை அகற்றி நம்பிக்கையையும் இயேசு தருகிறார். அச்சத்தால் மூடியிருந்த சீடர்களின் இதயத்தை திறக்க கதவு மூடியிருந்த அறைக்குள் நுழைகிறார்.

தோமா இயேசுவின் தழும்புகளைத் தடவி விசுவசித்தது போல திருப்பலியில் இயேசுவை தழுவி நம் விசுவாசத்தை ஆழப்படுத்துவோம். மூடியிருந்த அறைக்குள் நுழைந்த இயேசு நம் இதயத்துக்குள் நுழைந்து நாம் தேடும் அமைதி, மகிழ்ச்சி, விசுவாசம் அவைகளைத் தருவார். நம்பிக்கையோடு இணைந்து செபிப்போம்.
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 
1. அஞ்சாதே முதலும் முடிவும் நானே என்று மொழிந்த இயேசுவே!
திருச்சபையின் விசுவாச வளர்ச்சிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் மனவுறுதியோடு உடல்நலத்தோடு செயல்பட முதலும் முடிவுமாக உமதருட்துணை உடனிருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உமது வலது கையை எங்கள் மீது வைத்து எங்களை வழி நடத்தும் ஆண்டவரே!
நாடுகளை தங்கள் எண்ணப்படி வழிநடத்தும் தலைவர்களை உமது வலக்கரம் தாங்கிப் பிடித்து மக்களை நம்பிக்கையோடு வாழச் செய்யும் பாதையில் பயணிக்க செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என மொழிந்த இயேசுவே!
உம் பணியை அற்புதமாக ஆற்றும் குருக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் உமது அருஞ் செயல்களை தங்கள் அன்றாட வாழ்வில் கண்டுணர்ந்து அவைகளை இறைமக்களும் கண்டுணரச் செய்ய உழைக்க அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.அச்சத்தினின்று எங்களை பாதுகாக்கும் அன்பு யேசுவே!
ஒவ்வொரு நாளும் என்ன நிகழுமோ என்ற அச்சுறுத்தலுக்கு நடுவில் புலம் பெயர்ந்து வாழும் மக்களை அச்சுறுத்தும் கொடுமையாளர்களிடம் இருந்து பாதுகாத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.மாலை வேளையில் மூடி வைத்த கதவு வழியாக சீடர்கள் முன் தோன்றிய யேசுவே!
சந்தேகங்களால், அச்சங்களால், அமைதியின்மையால் மூடிகிடக்கும் எங்கள் இதயங்களுக்குள் தோன்றி அமைதியை நிலைக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 
மறையுரை சிந்தனைகள்


அச்சம் தவிர்ப்போம் ஆனந்தம் பெறுவோம்.
ஒரு இராணுவ வீரணும் ஒரு இளம் பெண்ணும் விரும்பித் அருட்சாதனம் செய்து கொண்டார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவரும் மன ஏக்கத்தோடு பிரிந்தார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்கு போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்பினான் விமானதளத்தில் அவன் மனைவியும் மகனும் அவனுக்காக காத்திருந்தார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாக கட்டியணைத்துக் கொண்டான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் வீடு திரும்பினார்கள். கணவனுக்கு பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும் தந்தையும் மட்டுமே இருந்தார்கள். அச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான் 'அப்பாவுடன் ஏன் பேசமாட்டேன்கிறாய்?' அந்த சிறுவன் பயத்துடன் தந்தையை பார்த்து விட்டு சொல்கிறான் 'நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்ல' வீரன் மகனைக் கேட்கிறான் 'பின் யார் அப்பா?  தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும்போது அவரும் உட்காருவார். படுக்கும் போது அவரும் கூடப்படுத்துக்கொள்வார். அவர்தான் உன் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.' வீரனுக்கு காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போன்று இருந்தது. மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவன் அவள் அருகில் வருவதைக்கூட மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து பேசுவதை நிறுத்திக் கொண்டாள். நாட்கள் பல இருவரும் பேசாமல் நகர்ந்தது. ஒரு நாள் மனைவி அம்மா வீட்டிற்கு சென்றாள். அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான் 'இதோ என் அப்பா திகைத்த வீரன் மகனை விசாரிக்கும்போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்து மகன் ஒரு நாள் இது யார்? என்று வெகுளித்தனமாய் கேட்ட போது மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இதுதான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான். வீரன் தாங்க முடியாத குற்ற உணர்ச்சியால் மனமுடைந்து போனான். இந்தக் கதையை மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டான். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் அறிந்தாள். இருவரும் வெளிப்படையாக மனம்விட்டு பேசியதால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றது.

கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். அதற்காக வருந்தினான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம் அப்படி செய்யாமல் தானாக வாழ்க்கையை வீணடித்ததை நினைத்து கவலைப்பட்டாள்.

இன்று பல குடும்பங்களில் வாய் விட்டுக் கேளாமல் மனம் விட்டுப் பேசாமல் இருப்பதினால் அல்லவா எதையும் தவறாகப் புரிந்து கொள்வதும் தவறாக ஆக்கி வடுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.. சந்தேகக் கண்ணாடியை வைத்து பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காணமுடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான். புரியாத போது வாய்விட்டுக்கேட்போம். முரண்பாடாக நடந்து கொள்வதாகக் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேட்போம். நாமாக அனுமானிப்பதை தவிர்ப்போம்.

அதே போல் நாமும்ம் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வோமேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துவோம். அவர்களுக்கும் புரியும் என்று நாமாக நினைத்துக்கொள்ளக் கூடாது..

தவறு என்று நினைப்பதை நம் குடும்பத்தினரிடமும் சரி நம் நண்பர்களி;டமும் சரி கண்டிப்பாகத் தெரிவிப்போம். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக்கூட இருக்கலாம் அப்படியில்லையென்றாலும் நாம் சொன்ன பிறகு தவறு என்பதை புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையே ஏற்படுத்தி விடும். எனவே நீண்டநாள் ஆழமான நட்பும் உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரகை மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடிப்போம். வாய்விட்டுப் கேட்போம். மனம் விட்டு பேசுவோம்..

சந்தேகப்பட்டால் சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தேகம் தன்னையும் பிறரையும் அழித்து விடும். சந்தேகம் சந்தோஷத்தைக் கெடுக்கும்.

மன்னிக்க முடியாத தவறுகள் எதுவுமில்லை. தவறுகளை ஏற்றுக்கொள்ளும்போதும், சந்தேகத்தை தவிர்க்கும் போதும் புரிதலும் நம்பிக்கையும் போட்டி போட்டு நம்மை மகிழ்ச்சிப்படுத்தும்.

'அஞ்சாதே நான் என்றும் உன்னோடு' என்று சொன்ன ஆண்டவர் நம் அருகில் இருக்கிறார். நாம் ஏன் அஞ்ச வேண்டும்?.

அச்சத்தோடு செய்யும் போது எந்த வேலையையும் திறம்பட செய்யமுடியாது.

அமைதியையும், மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உயிர்ப்பு விழா பரிசாக உயிர்த்த இயேசு நமக்குத் தருகிறார். நாம் வாழும் சமுதாயத்துக்கு நாம் என்னதரப் போகிறோம்? நம் குடும்பத்து உறவினர்களுக்கு, நம் நண்பர்களுக்கு என்ன தரப்போகிறோம்? சிந்தித்துப் பார்ப்போம்.

சுந்தேகங்களாலும், அச்சத்தாலும் இன்றைய உலகில் விரிசல்கள் நிரம்பிக்கிடக்கின்றன. பல குடும்பங்கள் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன.

வீண் சந்தேகங்களால் அமைதியிழந்து தத்தளிக்கும் சமுதாயத்திற்கு அமைதி கிடைக்க அன்போடு செபிப்போம்.

தேமாவின் சந்தேகம் விசுவாசத்தை வளர்க்கிறது. நமது சந்தேகங்கள் சந்தோஷத்தை வளர்க்கட்டும்.

பள்ளி முடிந்து வேலை முடிந்து தாமதமாக வீடு திரும்பும் பிள்ளைகளை கேட்காமல் மனம் புழுங்கும் பெற்றோர் அன்புடன் காரணம் கேட்கும் போது தவறு செய்யும் பிள்ளைகள் கூட திருந்துவார்கள். மாறாக தவறு செய்யாத பிள்ளைகளை சந்தேகக் கண்ணுடன் உற்று நோக்கும் போது தவறு செய்யாத பிள்ளைகள் கூட மனம் சலித்து தவறு செய்ய நேரிடும்.

நம்பிக்கைதான் நாள் தோறும் நல்ல பொழுதை விடியச் செய்கிறது!  நம்பிக்கை நம் நம்பிக்கைக் கனவுகளை வளர்த்தெடுக்கும் ஆண்டு. நம் குடும்பங்களில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம். நட்பும் உறவும் மனம் விட்டுப் பேச முடிந்த அளவுக்கு மட்டுமே ஆழப்படுகின்றன!

மனம் விட்டுப் பேசுவது விட்டுப் போகுமானால் அனுமானங்களும் சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தை பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன.

மனம் விட்டுப் பேசுவோம். ஆனந்தமாய் வாழுவோம். அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்.


 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm

சந்தேகம் தீர்த்த தோமா

பாஸ்கா காலம் 2ஆம் ஞாயிறு

ஒருவருக்கு சந்தேகமும், குழப்பமும் வருவதை எதிர்மறைப் பார்வையுடன் பார்க்கிறோம். நம்முடைய சந்தேகம் நியாயமானதாக இருந்தால், நிச்சயமாக அதில் இருந்து நன்மையை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த உலகத்தில் 100% சரியானது என்றோ, அல்லது 100% தவறானது என்றோ எதுவும் இல்லை என்கிறார் சத்குரு. வகுப்பறையில் சந்தேகம் கேட்கும் மாணவனை நல்லவன் என்று பாராட்டுவதும், கூடி வாழும் சக மனிதர்களிடம்... எனக்கு இதைப் பற்றி சந்தேகமாக இருக்கிறது என்று சொன்னாள், நீ தோமாவின் தங்கையாக இருப்பாயோ என்று கூறுவதும் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. சந்தேகம் இருந்தால் தானே தெளிவு கிடைக்கும்...?

இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான தோமா... சந்தேகத்தின் தோமாவாக பேசப்படுகிறார். இவர் மட்டும்தான் இயேசுவின் உயிர்ப்பில் சந்தேகப்பட்டாரா? மற்ற சீடர்கள் இயேசுவின் உயிர்ப்பை பார்க்காமல் இருந்திருந்தால் நம்பிருப்பார்களா?? இல்லை.

11 பேரும் உயிர்ப்பு செய்தியைக் கேட்டு நம்பவில்லை,மாறாக பார்த்த பிறகு தான் நம்புகிறார்கள். இங்கு சந்தேகம் என்னும் அடைமொழி தோமாவுக்கு மட்டுமல்ல அத்தனை சீடர்களுக்கும் பொருந்தும் என்பது தான் உண்மை.

தோமா ஒரு சாதாரண மனிதர், எதார்த்த வாழ்க்கையோடு இணைந்தவர். துறுதுறுவென்று பேசும் பேதுருவை போன்றவரும் அல்ல, இயேசு அதிகமாக அன்பு செய்த மூன்று சீடர்கள் குழுவில் இடம்பெற்றவரும் அல்ல ,ஆனால் எளியவர்களின் சார்பாக நின்று எளிய கேள்விகளை எழுப்பியவர்.

உதாரணமாக நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின், திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள், நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்கு தெரியும் என்று இயேசு சொன்னபோது,.... ஆண்டவரே நீர் போகும் இடமே எங்களுக்கு தெரியாத போது, அதற்கான வழி எப்படி தெரியும்? என்றார் தோமா. இது எளிய மனிதனின் புரிதலில் இருந்து எழுப்பப்படுகின்ற எதார்த்தமான கேள்வி. ஒருவேளை மற்ற சீடர்கள் விண்ணரசு பற்றிய மறைபொருளை புரிந்து கொள்ளும் அளவிற்கு விசுவாசத்தில் வளர்ந்திருக்கலாம். ஆனால் தோமாவுக்கு இவ்வளவு பெரிய மறைபொருளை புரிந்து கொள்ள முடியாத ஒரு சாதாரண மனிதராக இருந்திருக்கிறார். அதனால்தான்

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே "என்கின்ற உன்னதமான வார்த்தைகள் இயேசுவின் நாவிலிருந்து உதிர்வதற்கு காரணமாக இருந்தவரும் தோமாவே.

தோமா கடைசிவரை இயேசுவுக்கு துணை நின்ற துணிவுள்ளவராகவே கருதப்படுகின்றார்.
அவர் மறுதலிக்கவில்லை, காட்டிக் கொடுக்கவில்லை,  பதவிக்காக தன் தாயாரை பரிந்து பேச அழைக்கவில்லை, தன்னை பெருமை பாராட்டிக் கொள்ளவில்லை , எப்போதும் மறுத்துப் பேசவில்லை,
நீ பெரியவனா நான் பெரியவனா என்று பதவிக்காக போராடவில்லை
ஆனால் இப்படியெல்லாம் செய்யாது இருந்தும், தன்னையும் , தன்னுடைய சுயநலமற்ற எண்ணத்தையும் முழுமையாக அறிந்த இயேசு, தான் இல்லாதபோது தோன்றி விட்டாரே, என்று கலக்கம் கொண்டிருந்திருந்திருப்பார். தன்னை மறந்து விட்டாரே, என்று ஆதங்கப்பட்டிருப்பார்.

" தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்", எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற ஆசீர்வாதத்தை எனக்கு மட்டும் கொடுக்க மறுத்துவிட்டாரே என்று சங்கடப்பட்டு இருப்பார் .
இயேசுவின் மீது அளவுகடந்த கோபம் கொண்டிருப்பார். கோபம் எல்லாரிடத்திலும் வந்துவிடாது. எவரிடத்தில் அதிக அன்பும் உரிமையும் கொண்டிருக்கின்றோம் அவர்களிடத்தில் அளவுகடந்த கோபமும் இருக்கும். அந்த வகையில் இயேசுவின் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தோமாவும், தான் இல்லாதபோது இயேசு தோன்றிவிட்டாரே என்ற கோபம் நிச்சயமாக இருந்திருக்கும்.

தான் எந்தவிதத்தில் மற்றவருக்கு கீழானவன் என்று வெகுண்டெழுந்து இருப்பார் , தான் செய்த தவறு தான் என்ன...? என உணர்ந்து எழுந்திருப்பார் ,தன்னை மட்டும் எதற்காக உதாசீனப் படுத்த வேண்டும் என்ற கேள்விக்கணை தனக்குள்ளே
கேட்டிருந்திருப்பார்.

ஒருவேளை இயேசுவை மீண்டும் பார்க்க நேர்ந்தால் இத்தனை கேள்விகளுக்கும் விடை கேட்டே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்திருப்பார். ஆம்
தோமாவின் உள்மனப் போராட்டங்களை அறிந்திருந்த இயேசு, தோமாவின் முன்பு தோன்றி அமைதியாக பதில் உரைக்கின்றார் தோமாவின் அத்தனை கேள்விகளுக்கும்.
"இதோ என் கைகள், இங்கே உன் விரலை இடு "உன் கையை நீட்டி என் விலாவில் இடு" ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள் என்று இயேசு சொன்ன போது , தோமா தான் சொல்ல நினைத்த கேள்விகள் எதையும் கேட்கவில்லை.

"மாறாக நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" என்ற வார்த்தைகள் மட்டுமே தோமாவின் வாயிலிருந்து உதித்தன. காரணம் உயிர்த்த இயேசுவை பார்த்த அந்தக்கணமே தோமாவின் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது. தோமாவின் சந்தேகம் தீர்ந்தது, தெளிவு கிடைத்தது , நம்பிக்கை பிறந்தது.
தோமாவின் சந்தேகம் அவருக்கு மட்டுமல்ல, அவர்களுடைய சீடர்களுக்கும், எருசலேமின் மக்களுக்கும், யாரெல்லாம் நம்பிக்கையற்று இருந்தார்களோ அவர்களுக்கும், நமக்கும் நம்பிக்கை வெளிச்சமாக இருந்தது .

அதனால் நம்முடைய சந்தேகங்கள் நியாயமானதாக இருக்கும் போது நிச்சயமாக அதற்கு தெளிவு கிடைக்கின்றது .அதன்மூலம் நம்பிக்கை பிறக்கின்றது. இனி தோமா... சந்தேகத்தோமா...அல்ல. சந்தேகம் தீர்த்த தோமா என்று தான் சொல்ல வேண்டும். அவரின் சந்தேகமே நமக்கு தெளிவையும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. எனவே நாமும் ஐயம் தவிர்த்து, சந்தேகம் தவிர்த்து இயேசுவின் உயிர்ப்பு சக்தியை பெற்று உன்னத வாழ்க்கை வாழ்வோம். உயிர்த்த ஆண்டவரை உலகிற்கு பறைசாற்றுவோம்.
உயிர்த்த ஆண்டவரின் அருளும், ஆசீர்வாதமும் என்றென்றும் நம்மோடு இருந்து, நம்மை வழி நடத்துவதாக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
பாஸ்கா கால 2-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்
திருத்தூதர் பணிகள் 5: 12-16
திருவெளிப்பாடு 1: 9-11a, 12-13, 17-19
யோவான் 20: 19-31


அருள்பணி ஏசு கருணாநிதி மதுரை

கூட்டிலிருந்து வெளியே...
போன வாரம் உயிர்ப்பு பெருவிழா அன்று நீங்கள் யாருக்காவது 'ஈஸ்டர் முட்டை' பரிசளித்தீர்களா? கிறிஸ்துமஸ் அன்று 'கிறிஸ்துமஸ் மரம்' வைக்கும் வழக்கம் எப்படி வந்தது என்று நமக்கு காலப்போக்கில் மறந்துவிட்டதுபோல, உயிர்ப்பு பெருநாள் அன்று 'ஈஸ்டர் எக்' எப்படி வந்தது என்றும் மறந்து வருகிறது. இன்று பேக்கரிகளையும், சூப்பர் மார்க்கெட்டுகளையும் அலங்கரிக்கும் ஈஸ்டர் முட்டைகள் பல பொறிக்காமலேயே போய்விடுகின்றன. ஈஸ்டர் முட்டையின் பொருளை நாம் அறிந்துள்ளோமோ இல்லையோ, இன்றைய கார்ப்பரெட் உலகம் அறிந்திருக்கிறது. ஆகையால்தான் அதையும் ஒரு பரிசுப்பொருளாக, விற்பனைப் பொருளாக மாற்றிவிட்டது.

ஈஸ்டர் முட்டை இரண்டு விடயங்களை அடையாளப்படுத்துகிறது. ஒன்று, இயேசு. சிலுவையில் அறையப்பட்ட இறந்த அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகின்றார். ஆக, கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவை முதலில் அடையாளப்படுத்துகிறது முட்டை. இரண்டு, திருத்தூதர்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட இறக்க, தங்களையும் கைது செய்துவிடுவார்களோ என்று அஞ்சிய திருத்தூதர்கள் பூட்டிய அறைக்குள் ஒளிந்துகொள்கின்றனர். திருத்தூதர்கள் அறைக்குள் அடைந்து கிடந்ததை இரண்டாவதாக அடையாளப்படுத்துகிறது முட்டை. கல்லறை என்ற முட்டையை இயேசு தாமே உடைத்து வெளியேறுகின்றார். புதிய வாழ்வுக்குக் கடந்து செல்கின்றார். பூட்டிய அறை என்ற முட்டையை திருத்தூதர்கள் உடைத்து வெளியேற இயேசு என்ற தாய்க்கோழியின் துணை தேவைப்படுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:12-16), தூய ஆவியானவரின் வருகைக்குப் பின் துணிவுடன் இயேசுவுக்குச் சான்று பகர்ந்த திருத்தூதர்களின் வாழ்க்கை முறை பற்றி பதிவு செய்கின்ற லூக்கா, அவர்கள் வழியாக நடந்தேறிய அருஞ்செயல்கள் மற்றும் அரும் அடையாளங்கள் பற்றி இங்கே குறிப்பிடுகின்றார். இயேசுவுக்கும், திருத்தூதர்களுக்குமான இடைவெளியை மிக அழகாக பதிவு செய்கின்றார் லூக்கா. அதாவது, இயேசு அறிகுறிகளை செய்தார். ஆனால், இங்கே திருத்தூதர் வழியாக அறிகுறிகள் செய்யப்படுகின்றன. 'நம்பிக்கை கொண்டவர்கள்' ஒரே மனத்தோடு கூடி வருகின்றனர்.இந்தக் கூடிவருதல் அவர்கள் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவி செய்ததோடு, நம்பிக்கை குன்றியவர்களுக்கு துணிவையும் தந்தது. தங்களின் குடும்பம், பின்புலம், சமூக அந்தஸ்து, வேலை போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஒருமனத்தோடு இவர்கள் வாழ வழிசெய்கிறது. திருத்தூதர் பேதுருவை முதன்மைத் திருத்தூதராக தொடக்கத் திருஅவை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. அவரின் நிழல் பட்டாலே நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் பெறுகின்றனர். இயேசு செய்த அறிகுறிகள் பெரும்பாலும் அவரின் தொடுதலால் செய்யப்பட்டவை. இயேசு விண்ணேறிச் சென்றிபின் அவரின் தொடுதல் இனி சாத்தியமில்லை. மேலும், விண்ணேறிச் சென்ற இயேசுவால் தன் திருத்தூதரின் நிழலை வைத்துக்கூட குணம் தர முடியும். இவ்வாறாக, இங்கே முதன்மைப்படுத்தப்படுவது இயேசுவின் ஆற்றலே.

'ரிலே' ஓட்டத்தில் ஓடுவதுபோல கையில் இறையாட்சி என்னும் தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடிய இயேசு, அதைத் தன் சீடர்களின் கையில் கொடுத்துவிட்டார். இனி அவர்கள்தாம் அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். 'அவர்களிடம் கொடுத்துவிட்டோம். நம் பணி முடிந்துவிட்டது' என அவர் ஓய்ந்துவிடாமல், நிழலாக இன்றும் தொடர்கின்றார். இவ்வாறாக, தன்னுடைய தொடர் உடனிருப்பின் வழியாக இயேசு திருத்தூதர்களை அவர்களின் மூடிய கதவுகளிலிருந்து வெளியேற்றுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். திவெ 1:9-13, 17-19) பத்முதீவுக்கு நாடுகடத்தப்படும் திருத்தூதர் யோவான் கிறிஸ்துவைக் காட்சியாகக் காண்பதையும், கிறிஸ்துவைக் கண்டபோது அவரிடம் எழுந்த உள்ளுணர்வுகளையும், இந்தக் காட்சியை எழுதி வைக்குமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும் முன்வைக்கிறது. தான் திருத்தூதராக இருந்தாலும், கிறிஸ்துவையே காட்சியில் கண்டாலும், நம்பிக்கை கொண்ட நிலையில் அனைவரோடும் 'வேதனையிலும், ஆட்சியுரிமையிலும், மனவுறுதியிலும்' ஒன்றித்திருப்பதாகச் சொல்கின்றார் யோவான். ஆக, கிறிஸ்து தான் தரும் நம்பிக்கையால் இன்னும் பலரை அழிவிலிருந்து வெளியேற்றுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், கூட்டிலிருந்து வெளியே தம் சீடர்களை அழைக்கும் இயேசு நம்மையும் நம்முடைய சௌகரிய மையங்களிலிருந்து வெளியேற அழைக்கின்றார்.

எப்படி?

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-31) மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது:

20:19-23 இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
20:24-29 இயேசு தோமா மற்றும் மற்ற சீடர்களுக்குத் தோன்றுதல்
20:30-31 நற்செய்தி முடிவுரை

இந்நற்செய்தி வாசகத்தின் பின்புலத்தை முதலில் புரிந்துகொள்வோம்:

இயேசு பிறந்த ஆண்டு '0' என வைத்துக் கொள்வோம். அவர் இறந்த ஆண்டு 33. யோவான் நற்செய்தி எழுதப்பட்ட ஆண்டு '100.' ஒரு தலைமுறை என்பது 40 ஆண்டுகள். இயேசுவின் இறப்புக்குப் பின் ஏறக்குறைய இரண்டு தலைமுறைகள் கடந்துவிடுகின்றன. இயேசுவைப் பார்த்த அவரின் சமகாலத்தவருக்கு அவரையும், அவரின் உயிர்ப்பையும் நம்புவது பெரிய விஷயமல்ல. ஆனால், அடுத்தடுத்த தலைமுறை வரும்போது கூடவே நம்பிக்கை சிக்கல்களும் எழுகின்றன. அப்படி முதன்மையாக எழுந்த சிக்கல்கள் மூன்று: (1) இயேசு உயிர்த்தார் என்றால், அவர் உடலோடு உயிர்த்தாரா? அல்லது ஆவியாக உயிர்த்தாரா? ஆவியாக உயிர்த்தார் என்றால், அதை உயிர்ப்பு என்று நாம் சொல்ல முடியாது. உடலோடு உயிர்த்தார் என்றால் அவர் எப்படிப்பட்ட உடலைக் கொண்டிருந்தார்? பூட்டிய அறைக்குள் நுழைந்த அவர் எப்படி உடலைப் பெற்றிருக்க முடியும்? - 'உடலா' 'ஆவியா' என்பது முதல் கேள்வி. (2) கிரேக்க தத்துவ இயல் மேலோங்கி நின்ற இயேசுவின் சமகாலத்தில், 'புலன்களுக்கு எட்டுவது மட்டுமே உண்மை' (எம்பிரிசிஸ்ட்) என்று சொன்ன தத்துவம் மேலோங்கி நின்றது. இந்த தத்துவயியலார்கள், கண்களுக்குத் தெரிவதை மட்டுமே நம்பினார்களே தவிர, கண்ணுக்குத் தெரியாத கடவுள், ஆவி, மறுபிறப்பு, மோட்சம், நரகம், வானதூதர் என எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர்.
இப்படிப்பட்டவர்களுக்கு இயேசுவின் மேலுள்ள நம்பிக்கையை எப்படி உருவாக்குவது? - இது அடுத்த பிரச்சினை. மற்றும் (3) திருத்தூதர்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்து இயேசுவுக்குச் சான்று பகர்கின்றனர். திருத்தூதர் தோமா தான் அதிக தூரம் பயணம் செய்து நம் ஊர் வரைக்கு வருகின்றார். இப்படி இவர்கள் போகும் இடத்தில் இவர்களுக்கு வரும் புதிய சிக்கல் என்னவென்றால், இந்த தூர நாடுகளில் வசிப்பவர்கள், இயேசு என்ற வரலாற்று எதார்த்தத்திடமிருந்து காலத்தாலும், இடத்தாலும் அந்நியப்பட்டவர்கள். 'நீங்க அவரைப் பார்த்திருக்கிறீங்க! நம்புறீங்க!' 'ஆனா, நாங்க அவரைப் பார்த்ததில்லை. அவரை எதுக்கு நம்பணும்?' என அவர்கள் கேள்வி கேட்டால், அவர்களுக்கு சொல்வதற்காக கண்டுபிடித்த ஒரு பதில்தான்: 'கண்டதாலா நம்பினாய்! காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்.' தோமாதான் அதிக தூரம் செல்ல வேண்டியிருந்ததால், தோமாவே இந்நிகழ்வின் கதைமாந்தராக்கப்படுகின்றார்.

தோமா - இயேசு - விரல் நிகழ்வு தோமாவின் நற்செய்தியிலும், அவரின் பணிகள் பற்றிய குறிப்பேட்டிலும் இல்லை. மேலும், தோமாவைப் பற்றிய மற்ற நிகழ்வுகள் (யோவா 11:16, 14:5, 21:2) அவரை 'சந்தேகிப்பவராக' நமக்கு அடையாளப்படுத்தவில்லை. மேலும், இயேசு தோமாவுக்குத் தோன்றும் நிகழ்வு ஒரு பிற்சேர்க்கை போலவே அமைந்துள்ளது. அதாவது, இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றி தூய ஆவி கொடுக்கின்றார். பாவம் மன்னிக்கும் அதிகாரம் கொடுக்கின்றார். அப்புறம் மறைந்துவிடுகின்றார். நற்செய்தியாளர் டக்கென்று தன் குரலை மாற்றி, 'ஆனால் இயேசு வந்தபோது தோமா அங்கு இல்லை' என்கிறார். அப்படியெனில் தோமா தூய ஆவியைப் பெறவில்லையா? அல்லது பாவ மன்னிப்பு அதிகாரம் அவருக்கு கொடுக்கப்படவில்லையா? 'சீடர்கள்' என முதலில் சொல்லுமிடத்திலேயே, 'தோமாவைத் தவிர மற்ற சீடர்கள்' என்று அவர்கள் சொல்லியிருக்கலாமே? இந்த பாடச் சிக்கல்களை வைத்துப் பார்க்கும்போது, யோவானின் திருஅவை கொண்டிருந்த இறையியல் கேள்விகளுக்கு விடையாக, நற்செய்தியாளர் உருவாக்கிய நிகழ்வே 20:24-31.

இந்நிகழ்வு இயேசு உயிர்த்த அன்றே மாலை நேரத்தில் நடப்பதாக எழுதுகிறார் யோவான். 'மூடிய கதவுகள்' என்னும் சொல்லாடல் கதையில் இறுக்கத்தை அதிகரிக்கிறது. யோவான் நற்செய்தியாளர் திருத்தூதர்களை பன்னிருவர் என அழைப்பதில்லை. யூதாசு காட்டிக்கொடுப்பவனாக மாறிவிட்டதால், அவரை உள்ளிழுக்கும் பெயரை இவர் தவிர்க்கிறார். இங்கே 'சீடர்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று இயேசு சீடர்களை வாழ்த்துகிறார். இது ஒரு சாதாரண வாழ்த்து என்றாலும், இங்கே இயேசு நிறைவேற்றும் முதல் வாக்குறுதியாக இருக்கிறது (காண். யோவா 14:27). உலகின் பகையையும், எதிர்ப்பையும் தாங்க வேண்டிய தன் சீடர்களுக்கு (15:18-25) அமைதியை பரிசளிக்கின்றார் இயேசு. சீடர்கள் தோமாவிடம், 'ஆண்டவரைக் கண்டோம்' என்று சொல்கின்றனர். இந்த வார்த்தைகள் வழியாக யோவான் இந்நிகழ்வை 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்ற (20:18) மகதலாவின் வார்த்தைகளோடு இணைக்கின்றார். அங்கே மரியாள் இயேசுவைக் கட்டிப்பிடிக்கின்றாள். இங்கே தோமா அவரின் உடலை தன் விரலால் ஊடுருவுகின்றார். இந்த இரண்டு நிகழ்வுகளும் இயேசு உடலோடு இருந்தார் என்பதற்குச் சான்றாக அமைகின்றன. இயேசுவை நேரில் கண்ட தோமா, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்' என அறிக்கையிடுகின்றார். இதுதான் யோவான் நற்செய்தியின் இறுதி நம்பிக்கை அறிக்கை. 'என்னைக் கண்டவர் தந்தையைக் கண்டார்' (14:9) என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கே உண்மையாகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று வகையான நகர்வுகள் இருக்கின்றன:

அ. பூட்டிய அறைக்குள்ளிருந்து வெளியே

'தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்கிறார் இயேசு. அழைத்தலின் மறுபக்கம்தான் அனுப்புதல். அழைக்கின்ற அனைவரும் அனுப்பப்படுவர் என்பதே நிதர்சனமான உண்மை. அழைப்பு என்பது வெறும் உரிமை அல்ல. அதில், அனுப்பப்படுதலின் கடமையும் இருக்கிறது. இன்று, அருட்சாதனம் , அருள்பணிநிலை என நாம் எந்த அழைப்பைப் பெற்றிருந்தாலும் அதில் அடங்கியிருக்கும் அனுப்புதலையும் நாம் உணர வேண்டும். அனுப்பப்படாமல் இருக்கும் வாழ்வு - முட்டைக்குள் அடைந்த கோழிக்குஞ்சு முட்டைக்கும் தனக்கும் ஆபத்தாய் மாறுவது போல - ஆபத்தாய் மாறிவிடும்.

இன்று நான் அடங்கியிருக்கும் பூட்டிய அறை எது? பூட்டிய அறையின் இருள், பாதுகாப்பு, மற்றவர்களின் உடனிருப்பு என்னுடைய சௌகரிய மையமாக மாறிவிடும்போது என்னால் வெளியே செல்ல முடிவதில்லை. வெளியே செல்வதற்கு நான் என் சௌகரிய மையத்தை விட்டு வெளியே வர வேண்டும். 'கடவுள் தன்மை' என்ற சௌகரிய மையத்திலிருந்து இயேசு வெளியேறியதால்தான் அவரால் மனித தன்மையை ஏற்க முடிந்தது. மேலும், நான் என்னையே அடுத்தவரிடமிருந்து தனிமைப்படுத்திப் பூட்டிக்கொள்ளும்போது என் வாழ்க்கை முழுமை அடைவதில்லை.

ஆ. கோபத்திலிருந்து மன்னிப்புக்கு

சீடர்கள்மேல் ஊதி தூய ஆவுpயை அவர்கள்மேல் பொழிந்த இயேசு பெந்தெகோஸ்தே திருநாளின் முன்சுவையை அளிக்கின்றார். மேலும், முதல் ஆதாமின்மேல் கடவுள் தன் மூச்சைக் காற்றி ஊதி அவனுக்கு வாழ்வு தந்தது போல. இங்கே தன் சீடர்களின்மேல் ஊதி அவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்கின்றார் இயேசு. 'நீங்கள் எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ' என்ற வாக்கியத்தை நாம் பெரும்பாலும் ஒப்புரவு அருள்சாதன உருவாக்கம் என்று மேற்கோள் காட்டுகின்றோம். அல்லது இது அருள்பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது என்று சொல்கிறோம். ஆனால், இங்கே இயேசு மன்னிப்பு என்ற மதிப்பீட்டை அனைவருக்குமான மதிப்பீடாகப் பதிவு செய்கின்றார். சீடர்கள் அறைக்குள் ஒளிந்து நிற்கக் காரணம் யூதர்களின் மேல், உரோமையரின் மேல் கொண்டிருந்த பயமும் கோபமுமே. தங்கள் தலைவரை இப்படிக் கொன்றுவிட்டார்களே என்ற கோபம், தங்களையும் அதே போல செய்துவிடுவார்களோ என்ற பயம். இந்தப் பின்புலத்தில்தான் அவர்களுக்குத் தோன்றுகின்ற இயேசு அவர்களை மன்னிப்பிற்கு அழைத்துச் செல்கின்றார். ஆக, மன்னிப்பின் வழியாக நாம் நம்முடைய கூட்டை உடைத்து வெளியே செல்கிறோம்.

மன்னிக்க மறுக்கும் உள்ளம் மற்றவர்களை உள்ளே வராமல் பூட்டிக்கொள்கிறது. மேலும், அமைதியின் தொடர்ச்சியாகவே இயேசு மன்னிப்பை முன்வைக்கின்றார். மன்னிக்கின்ற மனம் அமைதியை அனுபவிக்கும். அமைதியை அனுபவிக்கும் மனம் மன்னிக்கும்.

இ. சந்தேகத்திலிருந்து நம்பிக்கைக்கு

'கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபேற்றோர்' என்கிறார் இயேசு. இயேசுவின் வெற்றுக் கல்லறையை நோக்கி ஓடும் யோவான் 'கண்டார், நம்பினார்' (20:8). இங்கே தோமா இயேசுவைக் 'கண்டார், நம்பினார்.' ஆனால், இனி வரப்போகும் தலைமுறைகள் காணாமல்தான் நம்ப வேண்டும் முதல் ஏற்பாட்டில் ஈசாக்கின் பார்வை மங்கியிருந்தபோது, யாக்கோபு ஏசாவைப்போல உடையணிந்து, அவரை ஏமாற்றி தன் தந்தையின் ஆசியை உரிமையாக்கிக் கொள்கின்றார். ஈசாக்கு தன் கண்களையும், தொடுதலையும் நம்பியதால் ஏமாற்றப்பட்டார். ஆனால், ஆபிரகாம் காணாமலேயே இறைவனின் வாக்குறுதியை நம்பினார். அவரே நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடையவராகிறார். 'நம்பிக்கை கொள்கிற உள்ளம் நஞ்சையும் எதிர்கொள்ளும்' என்பது பழமொழி. நம்பிக்கை ஒன்றே நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. முதல் வாசகம் சொல்லும் அறிகுறிகள் அல்லது அரும் அடையாளங்கள், இரண்டாம் வாசகம் சொல்லும் காட்சி - இந்த இரண்டும் நமக்கு நடக்கவில்லையென்றாலும், நாம் காணாமலே நம்பினால், இன்றும் என்றும் பேறுபெற்றவர்களே.

இறுதியாக, இன்று நம் ஒவ்வொருவரையும் நாம் ஒளிந்திருக்கும் அல்லது அடைந்திருக்கும் ஈஸ்டர் முட்டையிலிருந்து வெளிவர அழைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. இன்றைய ஞாயிற்றை நாம் இறைஇரக்கத்தின் ஞாயிறு என அழைக்கின்றோம். இயேசுவில் நாம் இறைவனின் இரக்கத்தின் முகத்தைக் காண்கிறோம். இதையே நாம் இன்று மற்றவர்களுக்கு அளிக்கவும் அழைக்கப்படுகிறோம். இன்றைய உலகின் தேவை இரக்கமே. தன் கூட்டைவிட்டு தான் வெளியேறும் ஒருவர் தன் கட்டின்மையில், மன்னிப்பில், நம்பிக்கையில், சரணாகதியில் இரக்கம் காட்ட முடியும்.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை
"நம்புங்கள்; வாழ்வு பெறுங்கள்"
இதுவன்றோ நம்பிக்கை!


கம்யூனிச ஆட்சி நடைபெறும் உரோமனியா (Romania) என்ற நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளையும் அடக்குமுறைகளையும் மீறி நற்செய்திப் பணி செய்தவர் ஃளாரஸ்கு (Florescu). இவர் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அங்கிருந்த மக்களுக்கு அறிவித்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார். குறிப்பாக, பசியோடு இருக்கும் எலிகள் இவர் இருந்த அறைக்குள் அனுப்பி வைக்கப்படும், இவர் அந்த எலிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள, அவற்றைத் தூங்காமல் விரட்ட வேண்டும். ஒருவேளை இவருக்குத் தூக்கம் வந்து, தூங்கிவிட்டால், எலிகள் இவரைக் கடித்துக் குதறிவிடும். அதற்காகவே இவர் பல நாள்கள் தூங்காமல் இருந்தார்.

ஒருநாள் படைவீரர்கள் இவரது கைகளையும் கால்களையும் விலங்குகளால் கட்டிப் போட்டுவிட்டு, "யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் என்று எங்களிடம் சொல்லிவிடு, இல்லையென்றால் உன்னைக் கொன்றுபோட்டுவிடும்" என்று மிரட்டினார்கள். இவர் வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தார். சிறிதுநேரம் கழித்து, இவரது பதினான்கு வயது மகனை இவர் முன் கொண்டு வந்து நிறுத்தி, "இப்போதாவது யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் என்று எங்களிடம் சொல்லிவிடு. இல்லையென்றால் இவனை அடித்தே கொன்றுவிடுவோம்" என்று எச்சரித்தார்கள்.

தன் மகன் தன் கண்முன்னாலேயே கொல்லப்படப் போவதைக் காணச் சகியாத ஃளாரஸ்கு, கிறிஸ்தவர்களின் பெயரை வரிசையாகச் சொல்ல வாயை எடுத்தார். அப்போது இவருடைய மகன், "அப்பா! தயவுசெய்து யாருடைய பெயரையும் சொல்லிவிட்டாதீர்கள். நான் கிறிஸ்துவுக்காக என்னுடைய உயிரையும் இழக்கத் தயார்" என்றான். இதைக் கேட்டுச் சீற்றமடைந்த படைவீரர்கள் சிறுவனை அடித்தே கொன்றார்கள். அவன் 'இயேசுவே என்று சொல்லிக்கொண்டு இறந்தான். பின்னர் அவர்கள் ஃளாரஸ்குவையும் கொன்றுபோட்டார்கள்.

ஆம், உரோமனியா நாட்டைச் சேர்ந்த நற்செய்திப் பணியாளரான ஃளாரஸ்கு கிறிஸ்துவின் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கைக்காக அவர் தன் மகன், தன்னுடைய உயிர் என எல்லாவற்றையும் இழந்தார். இவ்வாறு அவர் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கைக்காகத் தன் உயிரையும் இழந்து, நிலைவாழ்வைப் பெற்றார். இறை இரக்கத்தின் ஞாயிறு என அழைக்கப்படும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை "நம்புங்கள்; வாழ்வு பெறுவீர்கள்" என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

தோமாவின் நம்பிக்கை அறிக்கை:
இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் மிகவும் துணிச்சலானவர் தோமா என்று உறுதியாகச் சொல்லலாம். ஏனெனில், "மீண்டும் யூதேயாவிற்குப் போவோம், வாருங்கள்" என்று இயேசு சொன்னதற்கு, மற்றவர்கள், "இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா? என்று தயங்கினார்கள். தோமாவோ, "நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்" (யோவா 11:16) என்று சொன்னார். அப்படிப்பட்டவர், இயேசு உயிர்த்தெழுந்ததையும், தங்களுக்கு அவர் காட்சியளித்ததையும் பற்றி மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு, "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்" என்கிறார்.

தோமாவின் இவ்வார்த்தைகள், நான் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று இயேசு சொன்னதையும், உயிர்த்த ஆண்டவர் இயேசுவை நேரில் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாததை வெளிப்படுத்தினாலும், அவை முழு உண்மையை அறிந்துகொள்வதற்கான தோமாவின் தேடல் என்றும் புரிந்துகொள்ளலாம். இதையடுத்து, உயிர்த்த ஆண்டவர் இயேசு மீண்டுமாகத் திருத்தூதர்களுக்குத் தோன்றியபோது, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்" என்று தோமா தனது நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்.

இயேசுவை ஆண்டவர் என்றும், கடவுள் என்றும் தோமா அறிக்கையிட்டது மட்டுமல்லாமல், அவருக்காகத் தன் உயிரையும் இழக்கின்றார். இவ்வாறு தோமா ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

நம்பிக்கைக்காக யோவான் அனுபவித்த துன்பம்:
அன்பின் பல பரிமாணங்களில் ஒன்று, நம்பிக்கை. ஏனெனில், அன்பு இருக்கும் இடத்தில் நம்பிக்கை தானாகவே வரும். நம்பிக்கை இருக்கும் இடத்தில் அன்பும் தானாகவே வரும்.

இயேசுவை மிகவும் அன்பு செய்தவர், அவரால் மிகவும் அன்பு செய்யப்பட்டவர் நற்செய்தியாளரான யோவான். இவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையினால், அவருக்குச் சான்று பகர்ந்ததற்காகப் பத்மூ தீவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். தற்போதைய துருக்கியில் உள்ள பத்மூ தீவிற்கு அனுப்பி வைக்கப்படும் யோவான் அங்கே பலவிதமான துன்பங்களை அனுபவித்திருக்கவேண்டும். அவையெல்லாம் யோவான் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையின் பொருட்டே என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இன்றைய நற்செய்தியின் இறுதியில் யோவான், "நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவே இந்நூல் உள்ளவை எழுதப்பட்டுள்ளன" என்கிறார். யோவான் இவ்வார்த்தைகளை எழுதியது மட்டுமல்லமல், இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டார். அந்த நம்பிக்கைக்காகப் பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, முடிவில் நிலைவாழ்வைப் பெற்றுக்கொண்டார். ஆதலால், நாம் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வதும், அவர் பொருட்டுத் தாங்கிக் கொள்வதும் இன்றியமையாதவை.

நம்பிக்கையினால் கிடைக்கும் ஆசி
தனது உயிருக்கு அஞ்சி இயேசுவை மறுதலித்த பேதுரு, இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு, அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவராய்ப் பல அருமடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்கின்றார். இன்னும் சொல்லப்போனால் அவரது நிழல் நோயாளர்கள்மீது பட வேண்டும் என்று, சிலர் அவர்களை வீதிகளில் வைக்கின்றார்கள். இவ்வாறு பேதுருவின் நிழல் பட்ட நோயாளர்கள் அனைவரும் நலம் பெறுகின்றார்கள். இதைத்தான் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

ஒருகாலத்தில் பேதுருவால் கடல்மீது நடந்து வரமுடியாமல் போனபோது, "நம்பிக்கை குன்றியவேன, ஏன் ஐயம் கொண்டாய்? (மத் 14:31) என்று இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டிருக்கலாம்; ஆனால், அதே பேதுரு இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு, அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவராய்ப் பல அருமடையாளங்களைச் செய்தார். இதுதான் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோருக்கு அவர் அளிக்கும் பேறுபலன் ஆகும்.

இன்றைக்குப் பலர் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொள்வதுமில்லை; அவர் பொருட்டுத் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதுமில்லை. எப்போது நாம் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொள்கின்றோமா, அப்போது நாம் தோமாவைப் போன்று, யோவானைப் போன்று, பேதுருவைப் போன்று இயேசுவின் பொருட்டுத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள முன் வருவோம். அதைப் பார்க்கும் ஆண்டவரும் நமக்குத் தக்க கைம்மாறு தருவார்.

எனவே, நாம் உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, அவர் பொருட்டுத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள முன்வருவோம்; அவர் அளிக்கும் ஆசியைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:
'நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க முடியாது' (எபி 11:6) என்பார் எபிரேயர் திகுமுகத்தின் ஆசிரியர். எனவே, நாம் உயிர்த்த ஆண்டவரில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அவர் பொருட்டு துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 
உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு - 27 ஏப்ரல் 2025

I திருத்தூதர் பணிகள் 5: 12-16
II திருவெளிப்பாடு 1: 9-11, 12-13, 17-19
III யோவான் 20: 19-31


இயேசுவே இறைமகன் என நம்பி வாழ்வு பெறுவோம்

சில ஆண்டுகளுக்கு முன்பாக யூகோஸ்லாவியாவில் நீதிபதி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய வீட்டுக்குளியறையில் குளித்துக்கொண்டிருந்தபொழுது மின்சாரம் தாக்கி, மயக்கம் போட்டுக் கீழேவிழுந்தார். உடனே அவருடைய மனைவி அவரை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனார். மருத்துவமனையிலோ அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்துபோய்விட்டதாக அறிவித்தார்கள். இதனால் அந்த நீதிபதியின் மனைவி உட்பட, அவருடைய குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்தது. நீதிபதி இறந்த செய்தி சிறிதுநேரத்துக்குள் பண்பலைகளிலும் (FM) தொலைக்காட்சிகளிலும் வெளிவரத் தொடங்கி, எல்லாரையும் கவலைக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து இறந்துபோன அந்த நீதிபதியின் உடலானது, மறுநாள் மின் குமிழில் (Electric Cramotorium) வைத்து எரிக்கப்படுவதற்காகப் பிணவறையில் (Mortuary) வைக்கப்பட்டது.

நள்ளிரவில் திடிரென்று சுயநினைவுக்கு திரும்பிய அந்த நீதிபதி, தான் பெட்டியில் வைக்கப்பட்டு, பிணவறையில் இருப்பதை நினைத்து அதிர்ந்துபோனார். உடனே அவர் வெளியேவந்து, பிணவறையைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலாளியிடம், தான் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று எடுத்துச்சொன்னார். அவரோ தன்னிடம் பேசுவது பேய்தான் என்று நினைத்துக்கொண்டு, அங்கிருந்து அலறியடித்து ஓடினார். இதற்குப் பின்பு அவர் தன்னுடைய மனைவியைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, தான் உயிரோடு இருக்கின்ற செய்தியை அவரிடம் சொன்னார். அவரும் தன்னிடம் பேசுவது பேய்தான் என நினைத்துத் தொடர்பைத் துண்டித்தார். இப்படி அவர் அந்த நள்ளிரவில், நகரில் இருந்த தன்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாருடைய வீட்டுக்கதவைத் தட்டி, தான் இறக்கவில்லை என்பதை அவர்களிடம் எடுத்துச்சொன்னபோதும் அவர்கள் அவர் சொன்னதை நம்பாமல், பேய் என்று நினைத்து, கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றனர். இதனால் அவர் பக்கத்து நகரில் இருந்த தன்னுடைய நண்பருக்குத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவரோ, இவர் இறந்துவிட்டதாக வந்த செய்தியைக் கேள்விப்படாதவர். அவரிடம் நீதிபதி நடந்த எல்லாவற்றையும் சொல்ல, அந்த நண்பர் நீதிபதியின் மனைவி மற்றும் நண்பர்களைத் தொடர்புகொண்டு உண்மையை எடுத்துஹ் சொன்னபின்பு அவர்கள் நீதிபதி இறக்கவில்லை உயிரோடுதான் என்று நம்பினார்கள்.

இந்நிகழ்வு, இயேசு உயிர்த்தெழுந்தபின்பு, தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றியபொழுது, அவர்கள் ஏதோ ஆவியைக் கண்டதுபோல் திகிலுற்றதை (லூக் 24: 37-39) நினைவூட்டுவதாக இருக்கின்றது. ஓர் ஆவியை கண்டதுபோல் திகிலுற்று இருந்தவர்களிடம் இயேசு, " நானேதான்" என்று சொல்லி, அவர்களிடம் இருந்த அவநம்பிக்கையை விளக்கி நம்பிக்கையை ஏற்படுத்துகின்றார். இப்படி உயிர்த்த இயேசு தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றிய இந்நிகழ்வு நமக்கு என்னென்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பயத்திலிருந்த சீடர்களுக்கு அபயம் தந்த இயேசு
யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றதைப் பார்த்துவிட்டு, எங்கே தங்களையும் அவர்கள் பிடித்துக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்து, சீடர்கள் தாங்கள் இருந்த அறையின் கதவை மூடிவைத்திருந்தார்கள் (யோவா 20:1) இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, " உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று வாழ்த்துகின்றார். இயேசு உயிர்த்து, தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றியபோது, தன்மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை என்றோ, தன்னை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என்றோ அவர்களைத் திட்டவில்லை. மாறாக, அமைதி உரித்தாகுக என்ற ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளைப் பேசுகின்றார். அதுமட்டுமல்லாமல், தூய ஆவியாரை அவர்மேல் ஊதி, தன்னுடைய பணியைச் செய்ய மீண்டுமாக அவர்களை அழைக்கின்றார். இவ்வாறு இயேசு பயந்துகொண்டிருந்த சீடர்களுக்கு அபயம் தந்து துணிவைத் தந்து வல்லமையோடு பணியைச் செய்ய வழி வகுக்கின்றார். இந்நிகழ்விற்குப் பிறகு சீடர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டதைக்கொண்டே இயேசு தன் சீடர்களுக்கு தந்த அபயம், துணிவு எத்துணை உயர்ந்தது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அவநம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டிய இயேசு
இயேசு உயிர்ந்தெழுந்த செய்தியை இயேசுவின் பெண் சீடர்கள் திருத்தூதர்களிடம் சொன்னபோது, திருத்தூதர்கள் அவர்கள் சொன்னதை நம்பாமல், ஏதோ பிதற்றுகிறார்கள் (லூக் 24: 11) என்று இருந்தார்கள். இப்படி நம்பிக்கை இல்லாமல் இருந்த சீடர்கள் மத்தியில்தான் இயேசு தோன்றி, அவர்கள் அவர்மீது நம்பிக்கைகொள்ளச் செய்கின்றார். மேலும் தோமா சீடர்கள் சொன்னதைக் கேட்டும், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததால், இயேசு அவருக்குத் தன்னை வெளிபடுத்தி, " ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்று சொல்ல, அவரும் இயேசுவிடம் நம்பிக்கைகொள்கின்றார். இவ்வாறு அவநம்பிக்கையோடு இருந்த சீடர்களுடைய உள்ளத்தில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களைப் புதுப்படைப்பாக மாற்றுகின்றார் இயேசு.

இங்கு ஒரு சிறிய தகவல். இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை மற்ற சீடர்கள் தோமாவிடம் எடுத்துச் சொன்னபோது, அவர் அதை நம்பவில்லை. இந்தத் தோமா அல்லது திதிம் என்றால் இரட்டையர்கள் (Twin) என்று அர்த்தம். தோமாவோடு உடன்பிறந்த சகோதரரைக் குறித்த குறிப்புகள் எங்கினும் இல்லை. இது குறித்து ஒருசில விவிலிய அறிஞர்கள் சொல்லும்பொழுது, தோமோவோடு உடன்பிறந்த சகோதர் நீங்களோ, நானோ இருக்கலாம் என்றும் தோமா எப்படி அவநம்பிக்கையோடு இருந்து, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டாரோ, அதுபோன்று நாம் ஒவ்வொருவரும் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு வாழவேண்டும் என்றும் சொல்வார்கள். ஆகவே, இயேசுவின் சீடர்கள் எப்படி அவர்மீது கொண்டுவாழத் தொடங்கினார்களோ அதுபோன்று நாமும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ முயற்சிப்போம்.

சாவிலிருந்து வாழ்விற்கு அழைக்கும் இயேசு
இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு திருத்தூதர்களுக்கு தோன்றி, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதோடு நின்றுவிடவில்லை. மாறாக, நாமும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காக, " இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்கும் நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டுள்ளன" என்ற செய்தியோடு முடிகின்றது. யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தி நூலின் வழியாக, இயேசுவை இறைமகன் என ஒவ்வொருவரும் நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற செய்தியைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கூறுகின்றார். ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் அவர்மீது நம்பிக்கை கொண்டால் வாழ்வு, அவநம்பிக்கை கொண்டால் தாழ்வு என்ற உண்மையை உணர்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து, அதை வாழ்வாக்கி, அவர்தரும் ஆசியைப் பெற முயற்சி செய்வோம்.

சிந்தனை
இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள் என்பார் தூய பவுல் (உரோ 10:9). ஆகவே, நாம் இயேசுவே இறைமகன்/ ஆண்டவர் என்று நம்பி, அவருடைய விழுமியங்களை வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
 
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
உயிர்த்த ஆண்டவர் இயேசு தனது திருத்தூதர்களுக்குத் தோன்றியபோது, தோமையார் இல்லாத நிலையில் மாபெரும் உண்மை ஒன்று கற்பிக்கப்படுகிறது. கண்ணால் கண்டு, தொட்டு உணர்ந்து ஏற்று வாழ்வதைவிட கண்ணால் காண முடியாத நிலையில், ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாழும் வாழ்வே பேறுபெற்றது என்ற பேருண்மையை இயேசு வெளிப்படுத்துகிறார். இயேசுவோடு இறப்போம் (யோவா. 1:16) என்றவர் தோமா.

இயேசுவைக் கண்டால்தான் நம்புவேன் என்பது, அம்மா ஊட்டினால்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கும் குழந்தையைப் போன்று இருக்கிறது. ஆனால் ஆண்டவர் இயேசுவை, அவரது காயங்களைப் பார்த்தவுடன் தோமா, என் ஆண்டவரே, என் கடவுளே எனக் கதறினார்.

புனித தோமாவின் பெயரைக் கேட்டவுடன் நம்மில் பலருக்குத் தோன்றுவது அவர் சந்தேகப் பேர்வழி என்பதுதான். ஆனால் இயேசுவைச் சந்தித்த பின் தோமாவைத் தவிர வேறு யாரும் இவ்வாறு விசுவாச அறிக்கை வெளியிடவில்லை. ஊனக் கண்களால் இயேசுவைக் காண வேண்டும் என்று தோமா துடித்தாலும், இயேசுவைக் கண்ட பிறகு உள்ளத்தில் ஆழமாக விசுவசித்தார். இந்த விசுவாச ஆழத்தால்தான் இந்திய நாட்டில் திருச்சபையின் விசுவாசக் கண்களை திறந்துவிட்ட பெருமையை தோமா பெறுகின்றார்.

புனித தோமாவைப்போல, இயேசுவைச் சந்திப்பதற்கு முன்பு, அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள், சந்தித்த பிறகு புதுப்படைப்பாக மாறினார்கள் என்பதை விவிலியத்தில் பல இடங்களில் பார்க்கிறோம். இயேசுவைச் சந்திப்பதற்கு முன் சமாரியப் பெண், பிறவிக் குருடன், புனித பவுல், சக்கேயு போன்றவர்கள் இருந்த நிலை மாறி, இயேசுவைச் சந்தித்த பின் புதுப்படைப்பாக, புது வாழ்வு, புது வசந்தம் பெற்று இயேசுவின் சாட்சிகளாய் மாறினார்கள் என்பதை விவிலியத்தில் வாசிக்கிறோம்.

இன்றைய சூழலில் விசுவாசத்தோடு துன்ப துயரங்களை ஏற்றுக்கொண்டு மகிழ்வையும், சமாதானத்தையும் தேடும் மக்கள் உயிர்ப்பின் மக்களாவர். இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை, விசுவாசம் ஆழமானதாக இல்லாதவரை, நம்முடைய ஆன்மீக வாழ்வு மேலோட்டமானதாகவும், நுனிப்புல் மேய்வதாகவும்தான் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நல்லவர்களாகப் பிறந்து தனக்கும் இறைவனுக்கும் மட்டுமே நல்லுறவை ஏற்படுத்தி, யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் வாழ்ந்து இறப்பதைவிட, நல்லவராகப் பிறந்து, சூழ்நிலையின் காரணமாக சில தவறுகள் புரிந்து, அதன் பிறகு மனம் மாறி புது வாழ்வைத் தழுவிக் கொண்டவர்களே இந்த உலகில் அதிகம் சாதித்தவர்கள் ஆவார்கள். அதற்கு தோமா ஒரு சான்றாகத் திகழ்கின்றார்.

 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 இயேசு விரும்புவது சண்டை சச்சரவை அல்ல, அமைதியையே!

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கடைசி நாள்கள். மரணப்படுக்கையில் படுத்திருந்தார். அவரிடம் சில பத்திரிகையாளர்கள் பேட்டி காணச் சென்றார்கள். அவரைப் பார்த்து, விஞ்ஞானி அவர்களே, மூன்றாவது உலகப்போர் ஒன்று உருவானால் மக்கள் எத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தி சண்டைபோடுவார்கள்? போர் புரிவார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த ஞானி, அந்த விஞ்ஞானி இவ்வாறு கூறினார்: மூன்றாவது உலகப் போரின் போது என்ன ஆயுதங்களை மனிதர்கள் பயன்படுத்துவார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப்போரின் போது என்ன ஆயுதங்களை மனிதர்கள் பயன்படுத்துவார்கள் என்று எனக்குத் தெரியும் என்றார்.

உடனே அந்தப் பத்திரிகையாளர்கள், மக்கள் நான்காவது உலகப்போரின் போது எத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவார்கள்? என்று கேட்டனர்.

அதற்கு அந்த விஞ்ஞானி, நான்காவது உலகப்போரின்போது மக்கள் மரக்கிளைகளைப் பயன்படுத்தி சண்டைபோடுவார்கள் என்றார்.

அந்த விஞ்ஞானி சொல்ல விரும்பாதது என்ன? மூன்றாவது உலகப்போர் ஒன்று உருவானால் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களும் போரில் மடிந்து போவார்கள். இந்த உலகத்தில் எந்த நாட்டு மனிதர்களும் உயிரோடு இருக்கமாட்டார்கள். கடவுள் புதிய ஆதாமையும், புதிய ஏவாளையும் உருவாக்குவார். அவர்கள் வழியாக கற்கால மனிதர்கள் தோன்றுவார்கள்.

அவர்களிடம் ஏ.கே.47 இருக்காது; அணுகுண்டுகள் இருக்காது. மாறாக மரக்கிளைகள் இருக்கும்!

ஆம். மூன்றாவது உலகப்போர் ஒன்று உருவானால் நாம் எல்லாரும் அழிந்து போவோம். சண்டை சச்சரவுக்கு ஒருபோதும் ஆக்கும் சக்தி கிடையாது, அழிக்கும் சக்தி மட்டுமே உண்டு.

அதனால்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு, வாழ ஆசைப்படும் நம் அனைவரையும் பார்த்து, உங்களுக்கு அமைதி உரித்தாகுக! உலகம் தராத அமைதியை உங்களுக்கு நானின்று தருகின்றேன் என்கின்றார்.

இந்த உலகத்திற்குள்ளே போரும் பூசலும் எப்போது நுழைந்தன? ஆதாம், ஏவாள் காலத்திலேயே சண்டையும், சச்சரவும் இந்த உலகத்திற்குள் புகுந்துவிட்டன.

தொநூ 3-இல் கடவுள் ஆதாமைப் பார்த்து, விலக்கப்பட்ட கனியை ஏன் உண்டாய்? என்று கேட்கின்றார். அப்போது ஆதாம் என்ன செய்திருக்க வேண்டும்? நான் செய்தது தவறுதான்; என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கவேண்டும்.

ஆனால் அவன் அப்படிச் சொல்லவில்லை. நான் அப்படி செய்வதற்கு, கடவுளே நீர்தான் காரணம் என்றான். கடவுளோ, நானா? என்றார். ஆதாம், ஆமாம் நீர்தான். நீர்தான் இந்தப்பெண்ணை என்னிடமிருந்து உருவாக்கினீர். உம்மால் விலக்கப்பட்ட கனியை என்னிடம் தந்து அவள்தான் என்னை உண்ணச் சொன்னாள் எனச் சொல்லி அவன் தப்பித்துக்கொள்ளப்பார்த்தான்.

இப்படி தன்னைக் காப்பாற்ற நினைக்காது, தன்னைக் காட்டிக்கொடுக்க நினைத்த ஆதாமை அன்றிலிருந்து ஏவாள் ஓரங்கட்டத் தொடங்கினாள். முதல் கணவனுக்கும், முதல் மனைவிக்குமிடையே முதல் சண்டை உருவானது.

ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் வெறுக்கத் தொடங்கினர். அவர்கள் வெறுப்பு, பகை அவர்களது குழந்தையைப் பாதித்தது. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிள்ளை தப்பாது பிறந்தது. வெறுப்பு நிறைந்த அந்த அண்ணன் தனது தம்பியைக் கொன்றான்.

இப்படி அன்று தொடங்கிய போர், பூசல், சண்டை சச்சரவு இன்றும் நம்மைத் தொடர்கின்றன.

இன்று எத்தனையோ வீடுகளில், தெருக்களில், மாநிலங்களில், நாடுகளில் சண்டை சச்சரவுகளால் எத்தனையோ பேர் பலியாகின்றனர்.

குழந்தை பிறக்கும் போதே அதன் தொப்புள் கொடியை அறுக்கும் சமுதாயத்தை குழந்தை வெறுக்கத் தொடங்குகின்றது. அந்த வெறுப்பை அழுகை மூலம் வெளிப்படுத்துகின்றது.

நான் எங்க அம்மாவோட எவ்வளவு சுகமா வாழ்ந்துகிட்டிருந்தேன்! எனக்கும் என் அம்மாவுக்குமிடையேயுள்ள உறவை ஏன் அறுத்தீர்கள்? என்று கேட்டு அந்தக் குழந்தை அழுகின்றது.

பிறப்பிற்கும். இறப்பிற்குமிடையே மனிதர்கள் வாழும்போது எத்தனை சண்டைகள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அமைதியில்லாத இல்லங்ளுக்கு, உள்ளங்களுக்கு கடவுள் இயேசு ஒருபோதும் ஆசியளிப்பதில்லை.

இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன் என்கின்றார் இயேசு.

இம்மானுவேல் என்று அழைக்கப்படும் இயேசு நம்மோடு வாழவேண்டுமென்றால் நாம் சமாதானமாக வாழ்ந்துதான் ஆகவேண்டும்.

மத் 5:23-24 நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதர சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து, உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் என்கின்றார் இயேசு.

இயேசுவுக்கு அமைதி என்றால் மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவர் பிறந்தபோது உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக; உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்றார் வானதூதர்.

இதனால்தான் அவர் வாழும்போது திருத்தூதர்களைப் பார்த்து, நீங்கள் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் முதலில் உங்களுக்கு சமாதானம் என்று சொல்லுங்கள் என்றார். இதனால்தான் இயேசு உயிர்த்த பிறகு மூன்று முறை அவரது சீடர்களைப் பார்த்து, உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்றார். எங்கும், எதிலும், எப்பொழுதும் எனக்குப் பிரியமானது சமாதானமே என்று சொல்வோம்.

நமக்கு எது முக்கியம்?

கர்வம், வைராக்கியம். போட்டி, பொறாமை, ஆகியவையா நமக்கு முக்கியம்? இல்லை. இயேசுவின் ஆசிகளான நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவைதான் நமக்கு முக்கியம்.

ஒன்றை மட்டும் நமது உள்ளத்திலே நன்றாகப் பதியவைத்துக்கொள்வோம். இயேசு விரும்புவது சண்டை சச்சரவை அல்ல, அமைதியையே!

மேலும் அறிவோம் :

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் (குறள் 214).

பொருள் : உலக நலம் கருதி வாழ்பவனே உயிர்வாழ்பவன் ஆவான். பிறருக்கு உதவாத தன்னல நாட்டமுடையவன் இறந்தவர் பட்டியலில் சேர்க்கப்படுவான்!
 
மறையுரைச்சிந்தனை  - தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 ஒருவர் ஒரு பெரிய அங்காடிக்குச் சைக்கிளில் சென்றார். சைக்கிளைப் பூட்டி வைக்க மறந்து விட்டார். தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் கழித்து வெளியே வந்தபோது, சைக்கிள் திருடு போகாமல் வைத்த இடத்திலேயே இருந்ததைக் கண்டு வியப்படைந்தார். கடவுளுக்கு நன்றி செலுத்தும் வண்ணம் அருகாமையிலிருந்த கோவிலுக்குச் சென்றார். ஆனால் இப்போது சைக்கிளைப் பூட்டி வைத்தார். கோவிலை மூன்று முறை வலம் வந்து, ஒரு தேங்காயை உடைத்துவிட்டு வந்தபோது, சைக்கிள் திருட்டுப் போய்விட்டது.

அவர் கடைக்குச் சென்றபோது அவருக்குக் கடவுளின் மேல் நம்பிக்கை இருந்தது; பூட்டின் மேல் நம்பிக்கை இல்லை; சைக்கிள் பத்திரமாக இருந்தது. அவர் கோவிலுக்குச் சென்றபோது, அவருக்குப் பூட்டின் மேல் நம்பிக்கை இருந்தது. கடவுளின் மேல் நம்பிக்கை இல்லை. எனவே சைக்கிள் காணாமல் போய்விட்டது.

கடவுள் மீது நம்பிக்கை வைத்தால், எல்லாம் பாதுகாப்பாக இருக்கும். மாறாக, பணம், பட்டம், பதவி ஆகியவற்றிலும், மனைவி மக்களிடமும் நாம் நம்பிக்கை வைக்கும்போது, நமது உடல்நலம், மனநலம். அமைதி அனைத்துமே திருடப்படும். எல்லாவற்றையும் பெற்றுக் கடவுளை இழப்பதைவிட எல்லாவற்றையும் இழந்து கடவுளைத் தக்க வைப்பது சாலச் சிறந்தது. ஏனெனில் கடவுள் ஒருவரே நமது கற்பாறை, கோட்டை, கேடயம் மற்றும் அரணும் ஆவார் (திபா 18:1-2),

இன்றைய அருள்வாக்கு வழிபாடு கடவுள் நம்பிக்கையை வலியுறுத்துகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நமது கிறிஸ்தவ வாழ்வு நான்கு தூண்களில் ஊன்றியுள்ளது எனக் கூறியுள்ளது. அவை முறையே: 1. நாம் அறிக்கையிடும் நம்பிக்கை (விசுவாசப் பிரமாணம்); 2. நாம் கொண்டாடும் நம்பிக்கை (அருளடையாளங்கள்); 3. நாம் கடைப்பிடிக்கும் நம்பிக்கை (பத்துக் கட்டளைகள் ); 4. நாம் செபிக்கும் நம்பிக்கை (இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல்).

இன்றைய முதல் வாசகம் கிறிஸ்தவர்களை, "ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களின் கூட்டம்" என்றழைக்கிறது (திப 6:14). கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோர் பல்வேறு பிணிகளிலிருந்து விடுதலை பெற்றனர். பிணியாளர்கள் மீது பேதுரு நிழல் பட்டதாலேயே அவர்கள் குணமடைந்தார்கள். கிறிஸ்துவின் நிழல்பட்டு யாரும் குணம் அடைந்ததாக நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை, ஆனால் பேதுருவின் நிழல்பட்டு மக்கள் குணமடைந்தனர். "நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்" என்ற ஆண்டவரின் அருள்வாக்கு நிறைவேறியது (யோவா 14:12).

புதிய ஏற்பாட்டின் முதல் பேறும், இறுதிப் பேறும் நம்பிக்கையைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்பேறு, "ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" (லூக் 1:45). மரியா நம்பினார்; நம்பிக் கருவுற்றார். உடலால் கருவுறுமுன் உள்ளத்தால் கருவுற்றார். இறுதிப்பேறு, "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (யோவா 20:29), நாம் கடவுளைக் காணாமலேயே அவரை நம்புகிறோம். "நீங்கள் அவரைப் பார்த்ததில்லை. எனினும் அவர் மீது அன்பு செலுத்துகிறீர்கள்" (1 பேதுரு 1:8). முகக்கண் கொண்டு காண முடியாத கடவுளை அகக்கண் கொண்டு காண்கிறோம். மேலும் கிறிஸ்துவைக் காண்பது கடவுளைக் காண்பதாகும் (யோவா 14:9).

தோமாவிடம் அறிவியல் மூளை இருந்தது. எனவேதான் அவர் எதையும் கண்டு, கேட்டு, தொட்டுப் பார்த்த பின்னரே நம்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். எனவே அவர் அவநம்பிக்கையின் பாதாளத்தில் விழுந்தார். இருப்பினும், நம்பிக்கையின் சிகரத்தை எட்டிப் பிடித்தார். நம்பிக்கையை அறிவியலுக்கு அடைமானம் வைத்த அவர், அறிவியலுக்கு அப்பாற் சென்று கிறிஸ்துவின் இறைத்தன்மையை அறிக்கை யிட்டார். அவர் கண்ணால் கண்டது கிறிஸ்து என்னும் மனிதரை, ஆனால் அவர் அறிக்கையிட்டதோ கிறிஸ்து என்னும் கடவுளை, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்" (யோவா 20:28) நற்செய்தியில் தோமாவைத் தவிர வேறு யாரும் கிறிஸ்துவை "என் கடவுளே" என்று அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியலுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் இடையே உன்மையான முரண்பாடு இருக்க முடியாது. ஏனெனில் இவ்விரண்டிற்கும் கடவுள் தான் ஊற்று. கல்வியின் பயன் கடவுளைச் சரணடைவதாகும்.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள் 2)

முழுமையான அறிவு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் சங்கமிக்கும். அறிவியல் மேதைகள் எல்லாம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'கிறிஸ்து உயிர்த்து விட்டார்' என்பதை தோமா முதலில் நம்ப மறுத்தார். அதற்குக் காரணம்: அவர் மற்றச் சீடர்களிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டார். அவர் மீண்டும் மற்றச் சீடர்களுடன் இணைந்த பிறகுதான் அவருக்கு உயிர்த்த கிறிஸ்துவைக் காணும் பேறு கிடைக்கது.

இக்காலத்தில் பல கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை இழக்கக் காரணம், அவர்கள் திருச்சபையின் வழிபாட்டிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொள்கின்றனர். எட்டாம் நாள் என்றாலும் வாரத்தின் முதல் நாள் என்றாலும் ஒன்று தான். அது ஞாயிற்றுக்கிழமையைக் குறிக்கும்.

ஞாயிறு அன்றுதான் கிறிஸ்து தம் சீடர்களுக்குத் தோன்றினார். இன்றைய இரண்டாம் வாசகத்தில், ஒரு ஞாயிறு அன்றுதான் தூய ஆவி தம்மை ஆட்கொண்டு திருவெளிப்பாடு நூலை எழுதக் கூறியதாக யோவான் குறிப்பிடுகிறார் (திவெ 1:10). ஒவ்வொரு ஞாயிறும் ஒரு சிறிய பாஸ்கா ஞாயிறு, ஞாயிறு வழிபாட்டைப் புறக்கணிப்போர் காலப்போக்கில் கிறிஸ்துவ நம்பிக்கையை இழப்பர் என்பதில் ஐயமில்லை.

ஒரு கிராமத்திலிருந்து ஒரு குடும்பத்தினர் தீப்பந்தங் களுடன் ஒரு திருமணத்திற்குச் சென்றார்கள், ஏனெனில் திருமண அழைப்பிதழில், "சொந்த பந்தங்களுடன் திருமணத்திற்கு வரவும்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். ஞாயிறு அன்று நாம் சொந்த பந்தங்களுடன் செம்மறியின் விருந்தில் கலந்து கொண்டு நமது கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்துவோம். தோமாவுடன் இணைந்து நற்கருணையில் மறைந்துள்ள கிறிஸ்துவை "நீரே என் ஆண்டவர்; நீரே என் கடவுள்" என்று அறிக்கையிடுவோம்.

"சிலர் வழக்கமாக நம் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்று கூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக" (எபி 10:25) என்னும் எபிரேயர் திருமுகத்தின் அறிவுரையை ஏற்றுச் செயல்படுத்துவோம்.

"கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும், உலகை வெல்லுவது நம்பிக்கையே" (1 யோவா 5:4), நம்பிக்கை யின்றி இவ்வுலகை நாம் வெல்லமுடியாது!



 
மறையுரைச்சிந்தனை  -திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஒன்பதாவது பேறு

"நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்". உயிர்ப்பின் உண்மைக்கு இவ்வாறு சரணடைவதுதான் இறைநம்பிக்கை. அப்படிச் சரணடைவதற்கு முன்னே ஒரு போராட்டத்தை அல்லவா கடக்க வேண்டி நேருகிறது.

தோமாவுக்கு அப்படித்தான் தற்காலிகமாக ஒரு சோதனை, ஒரு போராட்டம். போராட்டத்தில்தானே இறைநம்பிக்கை வெளிப்படுவதாக விவிலியத்தில் பார்க்கிறோம்.

பக்திப் பரவசமான உணர்ச்சி நிலைகளிலா, அல்லேலூயாக் கூத்திலா கூச்சலிலா, துன்பதுயரம் போன்ற அவலங்களிலா, ஆபிரகாம் நம்பிக்கையின் தந்தை என்றும் அன்னை மரியா நம்பிக்கையின் தாய் என்றும் போற்றப்படுகிறார்கள்? ஒரு மனப்போராட்டத்தில் அன்றோ! 'சொந்த நாட்டை விட்டுத் தூர நாட்டுக்குப் போ', 'உன் ஒரே மகனைக் கொண்டு போய் ஓரேப் மலையில் பலிகொடு..... இந்த வார்த்தைகளில் ஆபிரகாமின் பக்திப் பரவசத்தையோ, துன்ப துயரத்தையோ அல்ல, போராட்டத்தைப் பார்க்கிறோம். 'கன்னியாயிற்றே இது எப்படி இயலும்' என்ற வார்த்தைகளில் மரியா வெளிப்படுத்தியதும் போராட்டமே!

தோமாவின் இறைநம்பிக்கையும் அப்படியே ஒரு போராட்டத்தில் தான் மலர்கிறது. அறிவியலின் உச்சத்திலிருந்து இறைநம்பிக்கையின் உச்சத்தை அடைகிறார். புலன்களாலே அறிய இயலாக் குறையை நீக்க இறைநம்பிக்கையின் உதவியை நாடுகிறார். "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" இயேசுவின் இறைத்தன்மையை இவ்வளவு தெளிவாக, வெளிப்படையாக வேறு எவருமே வெளியிட்டதில்லை. தோமாவில் அறிவியலும் இறைநம்பிக்கையும் ஒன்றிணைந்து விடுகிறது. அந்த வேளையில்தான் இயேசு மொழிந்த இறுதிப்பேறு - ஒன்பதாவது பேறு பிறக்கிறது: "காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்" (யோவான் 20:29) நாமும் இறைநம்பிக்கைக் குடும்பத்தில் பேறுபெறும் பெருமை அடைகிறோம்.

இயேசுவின் காயங்கள் அடையாளப்படுத்துபவை மட்டுமல்ல அடைக்கலம் தருபவை மட்டுமல்ல. நலமளிப்பவை, மீட்புத் தருபவை, குணப்படுத்துபவை. இயேசுவின் பாடுகளாலும், மரணத்தாலும் தோமாவின் மனத்திலும் காயம். நாமும் கூடப் பலவிதத் துயரங்களால் புண்பட்டு இரத்தம் கசிந்து நிற்கிறோம். அந்த நேரத்தில் எல்லாம் காயமில்லாத கடவுள் அல்ல இயேசுவைப் போன்ற காயங்கள் நிறைந்த கடவுளே ஆறுதல் அளிக்கிறார். வாழ்வுக்குப் பொருள் கொடுக்கிறார்.

"அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வு அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடை- கின்றோம்" (எசா.53:5)

*சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். (1 பேதுரு 2:24)

இயேசுவின் காயங்கள் நலம் தருபவை மட்டுமல்ல, எல்லையற்ற இறையன்பை உணர்த்துபவை. கை அறுவைச் சிகிச்சையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர் ஒருவர் ஒவ்வொரு அறுவைச் சிகிச்சையின் போதும் "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" என்று சொல்வாராம். அதற்கான பின்னணி? வியட்நாம் போரின் போது ராணுவ வீரர் ஒருவருடைய கையில் பாய்ந்திருந்த துப்பாக்கித் தோட்டாவை அகற்றும்படி அழைக்கப்பட்டிருந்தார். அந்த அறுவைச் சிகிச்சை அவரது இதயத்தை ஆழமாய்த் தொட, போர் முடிந்ததும் கை அறுவைச் சிகிச்சையில் சிறப்புத் தேர்ச்சியும் பயிற்சியும் பெற்றார். துப்பாக்கிக் குண்டுகளினாலோ, வேறு கூர்மையான ஆயுதங்- களினாலோ, கைகளின் சதையையும் எலும்பையும் துளைக்கின்ற காயங்களையும் அதனால் ஏற்படுகின்ற வேதனைகளையும் நன்கு உணர்ந்திருந்தார்.

அதனால், இயேசுவின் திருக்கைகள் சிலுவையில் ஆணியால் அறையப்பட்ட பொழுது அவர் அனுபவித்த வேதனையை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு பதைப்பதாகக் கூறுகிறார். "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள் " என்று தோமா அறிக்கையிடுவதை விசுவாசத்தின் அடையாளமாக மட்டுமே அவர் பார்க்கவில்லை; இயேசுவின் கிழிக்கப் பட்டிருந்த திருக்கைகளில் காயத்தின் ஆழத்தைப் பார்த்த அதிர்ச்சியிலும் தோமா கதறியிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்தார். மானவே அவர் உறுதியோடு சொல்லும் வார்த்தைகள்: "ஒவ்வொரு முறையும் காயம்பட்ட மனிதனுடைய கையை அறுவைச் சிகிச்சை செய்யும் பொழுதெல்லாம், கிறிஸ்து தனது திருக்கையை என்னிடம் தருவதாக நினைக்கிறேன். எனவே நானும் தோமாவோடு சேர்ந்து "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" என்று சொல்வதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறேன்".

நம் நண்பர்களின் நம்பிக்கை நமக்கு உதவலாம். ஆனால் அது மட்டும் போதாது. அந்தக் கை அறுவைச் சிகிச்சை நிபுணரும் தூய தோமாவும் செய்ததைப் போல நாமும் இயேசுவிடம் கொண்ட தனிப்பட்ட சிறப்பு அனுபவத்தால் நமது இறைநம்பிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும்.

ஒரு சுவையான கட்டுக்கதை. கலிலேயக் கடலில் சீடர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது உயிர்த்த இயேசு கடலில் நடந்து வந்தார். சீடர்கள் உற்சாகத்தோடு "ஆண்டவரே வாரும் படகில் ஏறும்" என்று அழைக்க சில அடிகள் எடுத்து வைத்ததும் இயேசு மூழ்கத் தொடங்கினார். அவரை இழுத்துப் பிடித்துப் படகில் ஏற்றிக் கொண்டார்கள். அப்பொழுது தோமா, "என்ன ஆச்சு ஆண்டவரே? பேதுருவை கூட அன்றொருநாள் மூழ்காமல் காப்பாற்றினீரே! இப்போது நீரே..." தோமா முடிக்கவில்லை. உணர்ச்சிக் குழப்பத்தோடு இயேசு சொன்னார்: "இப்போது என் கால்களில் காயத்தால் ஏற்பட்ட துளைகள் இருக்கின்றன"

இயேசுவின் காயங்கள் முழ்கடிப்பவை அல்ல. கரை சேர்ப்பவை.
இயேசுவின் ஊனுடல் மட்டுமல்ல. அவரது மறைஉடலாகிய திருச்சபையும் அதே பாடுகளின் காயங்களைத் தாங்கியிருக்கும், தூய ஆவியின் ஆற்றலால் அது என்றும் உலகம் என்னும் பெருங்கடலில் மூழ்கிவிடாமல் மக்களைக் கரை சேர்த்துக் கொண்டிருக்கும்!

1. இறைவார்த்தையைக் கேட்கும் போது (in the spoken word)
"வழியிலே அவர் நம்மோடு பேசி மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? (லூக்.24:32). சீடர்கள் இயேசுவை அடையாளம் காணாவிட்டாலும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் அளித்தன. இறைவார்த்தைக்குத் தனி ஆற்றல் உண்டு, ஞாயிறு வழிபாடு முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் வயதான மூதாட்டி அவளைக் கண்ட இளைஞர்கள் கிண்டலாக, "பாட்டி, இன்று மறையுரையில் சாமியார் என்ன சொன்னார்?" என்று கேட்டார்கள். வயதான பெண்மணி நினைத்துப் பார்த்தாள். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. "சாமியார் சொல்வது ஒன்றும் நினைவில் பதிவதில்லை என்றால் எதற்காகக் கோவிலுக்குப் போகிறாய்?" என்று கேட்டுச் சிரித்தனர். ஒரு மூங்கில் கூடையை அவர்களிடம் கொடுத்து அருகில் உள்ள நீரோடையில் அமிழ்த்தித் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள். அவர்கள் கொண்டு சென்று நீரில் அமிழ்த்தி வெறுங் கூடையைக் கொண்டு வந்தனர். "இந்தக் கூடையில் எத்தனை ஓட்டைகள். இதில் எப்படித் தண்ணீர் தங்கும்?" என்றனர். அவள் சொன்னாள்! "உண்மைதான். கூடையில் தண்ணீர் தங்காது. ஆனால் கூடையை இப்போது பாருங்கள். நீரில் நனைந்ததும் அதன் மேல் படிந்திருந்த தூசி அகலவில்லையா? கூடை இப்போது சுத்தமாக இல்லையா?" அதுபோல் இறைவார்த்தை எனக்குள்ளே பதியவில்லை என்றாலும் அதைக் கேட்கும் போது நான் தூய்மையாவதை உணருகிறேன்"

2. அப்பத்தைப் பிட்கும் போது (in the broken bread)
"அவர் அப்பத்தைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது... அவர்களும் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்" (லூக்.24:30,31) இயேசுவை இனம் காண, உணர்ந்து ஏற்க இறைவார்த்தை மட்டும் போதாது, நற்கருணை என்னும் அருள்சாதனம் வேண்டும்.

இறைவார்த்தை - மனித சொல்லுரு எடுத்தது. அது விவிலியம்
- மனித உடலுரு எடுத்தது. அது நற்கருணை
கத்தோலிக்குத் திருச்சபை வைத்திருக்கும் கருவூலம் திருவருள் சாதனம். எவ்வளவு பெருமைக்குரியது!

 
மறையுரைச்சிந்தனை  -செல்வராஜ் சூசைமாணிக்கம்

இரக்கமுடையோர் இரக்கம் பெறுவர்

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். நம் அன்னையாம் திருஅவை இஞ்ஞாயிறை இறைஇரக்கத்தின் ஞாயிறாகக் கொண்டாடுகிறது. இறைவனின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகிய மூன்றுமே அவருடைய இரக்கத்தின் வெளிப்பாடுகள்தாம் என்பதை நாம் சுருக்கமாகக் கூறிவிட முடியும். மீட்பின் வரலாற்றில், பழைய ஏற்பாடு முழுவதும் இறைத்தந்தையின் இரக்கச் செயல்களையும், புதிய ஏற்பாடு முழுவதும் அவருடய அன்பு மகன் இயேசுவின் இரக்கப்பெருக்கத்தையும், அவருடைய விண்ணேற்றத்திற்குப் பின்பு திருத்தூதர்கள் வழியாகச் செயல்பட்ட தூய ஆவியாரின் இரக்கச் செயல்களையும் நம்மால் காணமுடிகிறது. ஆக, மூவொரு இறைவனின் இரக்கத்தால் இவ்வுலகம் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது என்பது கண்கூடு. இரக்கம் காண்பிக்கும் அனைவரும் இரக்கம் பெறுகின்றனர்.

அன்று அரசரின் பிறந்த நாள், ஆகவே, சிறைக் கைதிகளில் ஒருவனை விடுவிக்கவேண்டும் என்று மனதில் தீர்மானம் கொண்டார் அரசர். ஆனால் யாரை விடுவிப்பது என்பது குறித்து அவருடைய மனதில் பெரிய குழப்பம் நிலவியது. அப்போது தன் திட்டத்தை தன் மதகுருவிடம் இரகசியமாகப் பகிர்ந்தார் அரசர். அதைக் கேட்ட அந்த மதகுரு, அவருக்கு அருமையான ஆலோசனை ஒன்றைக் கொடுத்தார். அரசருக்கு அது திருப்தியாக இருந்தது. அதன்படி சிறைக் கைதிகள் எல்லோரும் அழைக்கப்பட்டனர். " உங்களை அரசர் விடுவிக்கப்போகிறார், அதற்காக இந்தப் பெட்டியில் ஆளுக்கொரு முத்திரை சீட்டு கொண்டு வந்திருக்கிறேன், மாலையில் அரசவைக்கு வந்து இந்த முத்திரை சீட்டைக் காண்பித்து நீங்கள் விடுதலைப் பெற்றுச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டுச் சென்றார் அந்த மதகுரு. அதன்படி மாலையில் எல்லா கைதிகளும் முத்திரை சீட்டுடன் வந்தனர். ஒருவர் மட்டும் வரவில்லை. அப்போது அரசர், இங்கு வராத அந்தக் கைதியை உடனே அழைத்து வாருங்கள் என்றார். காவலர்கள் அவரை அழைத்து வந்து அரசர் முன் நிறுத்தினர். அப்போது, " எல்லாரும் வந்துவிட்டார்கள். நீ மட்டும் ஏன் வரவில்லை? உன்னைத் தனியாக அழைக்க வேண்டுமா என்ன?" என்று அக்கைதியைப் பார்த்து கேட்டார் அரசர்.

அதற்கு அக்கைதி. " அரசே, உங்கள் மதகுரு கொடுத்த முத்திரை சீட்டில் ஒரு கைதிக்கு முத்திரை சீட்டு குறைவாக இருந்தது. அதோ அந்தப் பக்கம் நிற்கிறாரே கைதி, அவருக்கு மனைவி, குழந்தைகள் மட்டுமல்ல, வயதான பெற்றோரும் உண்டு. ஏதோ சந்தர்ப்பச் சூழ்நிலை அவரைக் கைதியாக்கிவிட்டது. அவரின் நிலையை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். அவருக்குத்தான் முத்திரை சீட்டுக் கிடைக்கவில்லை. ஆகவே எனக்குக் கிடைத்த முத்திரை சீட்டை அவருக்குக் கொடுத்துவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் அரசே" என்று கூறினான்.

" நல்லது, நீயே சிறந்தவன், உன்னைத்தான் நான் விடுதலை செய்யப்போகிறேன், இவ்வளவு இரக்கமுள்ள நீ சிறையில் இருப்பது அர்த்தமல்ல" என்று கூறி மதகுரு தந்த ஆலோசனையைப் பாராட்டினார் அரசர். மேலும், அந்தக் கைதியைப் பார்த்து, " உனது நல்ல குணத்திற்கு நான் பரிசளிக்க விரும்புகின்றேன். உனது விருப்பத்தைக் கூறு அதை நான் நிறைவேற்றுகிறேன்" என்றார் அரசர். அப்போது அக்கைதி தயங்கியவாறே, " அரசே, நான் விடுதலை பெற்றால், யார் விடுதலை பெறவேண்டுமென நான் நினைத்தேனோ அவன் விடுதலைப் பெற முடியாதே. ஆகவே அவனின் விடுதலையை எனக்குப் பரிசாகக் கொடுங்கள்" என்று அரசரைப் பார்த்து வேண்டினான். அவனது பதிலால் உள்ளம் பூரிப்படைந்த அரசர், " சரி, உன் விருப்பப்படி, நீ கேட்டுக்கொண்டவரையே நான் விடுதலை செய்கிறேன், ஆனால், இனி உனக்கு எப்போதும் விடுதலை கிடையாது" என்றார். உடனே மதகுரு வருத்தமுடன் அரசரை உற்றுநோக்கினார். அப்போது அரசர், " ஆம், உன்னை சிறையிலிருந்து நான் விடுவிக்கப் போவதில்லை. ஆனால், உனது இரக்கச் செயலுக்காக உன்னை சிறைத் துறைக்கு அதிகாரியாக உயர்த்துகிறேன்" என்று மகிழ்வோடு கூறினார். " மேலும் பிறர்மீது இந்தளவுக்கு இரக்கம் கொண்டுள்ள நீ, சிறைத் துறையின் அதிகாரியாக இருந்தால் சிறையில் உள்ள அனைவரும் திருந்தி வாழ்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு" என்று கூறி உளம் பூரித்தார் அரசர். அப்போது அரசவை முழுவதும் மகிழ்ந்தது, அரசரின் பிறந்த நாளும் சிறப்படைந்தது. ஆம் இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுகிறார்கள்.

இன்றைய உலகில் நிகழும் அநீதி, சாதி, மத, இன, மொழி, வேறுபாடுகள், போர், கொலை, கொள்ளை, போதைப்பொருள், பாலியல் வன்மங்கள், மனிதக் கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகிய யாவும் இரக்கமற்றச் செயல்களின் அடையாளங்களாக அமைகின்றன. யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, நானும் என் குடும்பத்தாரும், சுற்றத்தாரும் நலமோடு வாழ்ந்தால் போதும் என்ற சுயநலக் கோட்டைக்குள் நம்மில் பெரும்பாலோர் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போர் மற்றும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் மனிதத்தன்மையற்ற படுகொலைகள், இன்னும் வாய்விட்டுக் கூற முடியாத செயல்கள் யாவும் இரக்கமற்ற அரக்கக் குணங்களின் வெளிப்பாடுகளே!

அன்பும் கருணையும் நமது பிறப்பிலே இயல்பாகவே இருந்ததுதான். காலப்போக்கில் நாம்தான் அதனைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறோம். நம் இந்திய தேசத்தில் பசுவின் பெயரால் எத்தனை படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன? மனிதரைக் கொல், பசுவைக் காப்பாற்று என்பதுதான் சில மனிதத்தன்மையற்றோரின் அறைகூவலாக ஒலிக்கின்றது. இங்கே மிருகங்களுக்குக் காட்டப்படுகின்ற இரக்கம் கூட மனிதருக்குக் காட்டப்படுவதில்லை என்பது எவ்வளவு வெட்கத்துக்குரிய செயலாக அமைந்துள்ளது!

இரக்கமா...? அப்படி என்றால் என்ன? அது என்னப்பா விலை? என்று கேட்கும் அளவிற்கு இன்று மனித இனம் சுயநலத்தின் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றது. ஆனாலும் மேற்கண்ட கதையில் நாம் கேட்டதுபோல், இரக்கமற்றவர்களின் மத்தியில் சில இரக்கமுடையவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இறக்கத்தானே பிறந்தோம் அதுவரையில் இரக்கத்துடன் வாழ்வோம் என்றார் அன்னை தெரசா. இன்றைய முதல் வாசகத்தில் இறைவனின் இரக்கம் பேதுரு வழியாக உடல்நலற்றோர்மேல் இறங்குவதைப் பார்க்கிறோம். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர் (திப 5:14-16).

எகிப்து நாட்டில் அடிமைத்தளையில் உழன்ற மக்களைக் காப்பாற்ற கடவுள் மோசேயை அனுப்பும் நிகழ்வைப் பார்க்கும்போது, தான் படைத்த மானிடர்மீது இறைவன் எந்தளவுக்கு ஆழமாக இரக்கம் கொண்டுள்ளார் என்பதை நம்மால் உணரமுடிகிறது. மக்களின் துன்பத்தைத் தனது துன்பமாகக் கருதுகிறார் கடவுள். அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். (விப 3:7). அவ்வாறே, துயருறும் தன் மக்களின் விடுதலைக்காக இறைவாக்கினர் எசாயாவை அனுப்புவதைக் காண்கின்றோம். " யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?" என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, " இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்றேன். (எசா 6:8). மேலும், புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களில் எங்குநோக்கினும் நமதாண்டவர் இயேசுவின் இரக்கச் செயல்கள் பொங்கிவழிவதைப் பார்க்கிறோம். " இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்" (மத் 5:7) என்ற தனது வார்த்தையின் வழியாகவே தனது இரக்கச் செயல்களைத் தொடக்கி வைக்கிறார் இயேசு. ஏழைகள், கைம்பெண்கள், நோயாளிகள், பாவிகள் என்று கருதப்பட்ட வரிதண்டுவோர் என அனைவரிடமும் அவர் தனது இரக்கச் செயல்பாடுகள் வழியாக, அவர்களின் உண்மை உறவில் ஒன்றிப்பதைக் காண முடிகிறது. கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். (லூக் 4:40-41).

இன்றைய இரண்டாம் வாசகத்தில் சாவை வெற்றிகொண்ட இறைமகன் இயேசுவின் இரக்கம் முடிவில்லாமல் என்றும் தொடர்வதாகக் காட்சியில் காண்கின்றார் புனித யோவான். " அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு (திவெ 1:17-18). இறுதியாக, இன்றைய நற்செய்தியில் தோமாவுக்கு வெளிப்படும் உயிர்த்த இயேசுவின் இரக்கப்பெருக்கம் அவர் வழியாக இவ்வுலக மக்களுக்கு வழங்கப்படுவதன் அடையாளமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

அண்மையில் வாட்ஸ்அப்பில் ஒரு சிறிய காணொளிக் காட்சி ஒன்றைக் கண்டேன். அதிலே செய்தியாளர் ஒருவர் சுடுகாட்டிற்குச் சென்று பிணங்களை எரிக்கும் பெண் ஒருவரைச் சந்திக்கின்றார். அப்போது அப்பெண் தனது அனுபவங்களை அச்செய்தியாளருடன் பகிர்ந்துகொள்கிறார். உண்மையிலேயே மனித வாழ்வு நிலையில்லாதது என்பதை அவருடைய பகிர்வில் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. " யார் எப்படிப்பட்ட பொறுப்பில் இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இறுதியில் எல்லாமே இங்கே முடிந்துவிடும். 70 அல்லது 80 கிலோ எடைகொண்ட இறந்த ஒரு மனிதர் எரிந்து சாம்பலாகும்போது அவரின் எடை வெறும் 2 கிலோ கூட வராது. ஆகவே மனிதர் இதை உணர்ந்துகொண்டு வாழவேண்டும்" என்கிறார் அப்பெண். மேலும், " இரக்கமே இல்லாமல் பெற்ற தாய் தந்தையரை கவனியாது விட்டுவிட்டு, அவர்கள் இறந்து இங்கே கொண்டுவரப்படும்போது, ஈமச் சடங்குகளைச் செய்வதற்கு நான் நீ என்று போட்டிப்போட்டுக்கொண்டு வருவார்கள். அப்போது அவர்கள்மீது எனக்கு அதிகம் கோபம் வரும். நீங்க யாரும் ஈமச் சடங்குகள் செய்யவேண்டாம், எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி அவர்களை அனுப்பிவிடுவேன்" என்று தனது இரக்கச்செயல் பற்றி எடுத்துரைக்கிறார் அப்பெண்.

இரக்கம், எளிமை, பொறுமை இவை மூன்றும்தான் ஒரு மனிதரின் மிகப்பெரும் செல்வங்கள். இந்த மூன்றையும் அடையப்பெற்ற ஒருவர், இவ்வுலகில் வெல்ல முடியாதது எதுவுமில்லை என்கிறார் புத்தர். இரக்கம், அன்பு, தியாகம் இவை மூன்றுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இரக்கத்திலிருந்து அன்பும், அன்பிலிருந்து தியாகமும் ஊற்றெடுக்கின்றன. ஆகவே இரக்கமில்லாத அன்பும், அன்பில்லாத தியாகமும் இருக்கவே முடியாது. பணம் உலகத்தைக் கவரும், அழகு உள்ளதை கவரும், வார்த்தைகள் மனிதரைக் கவரும், ஆனால் நமது இரக்கம் நிறைந்த ஒரு செயல்தான் நம்மை உருவாக்கிய இறைவனைக் கவரும். ஆகவே, இரக்கத்தின் மறுஉருவான இயேசுவின் வழியிலே நாமும் இரக்கமுள்ள மக்களாய் வாழ்வோம். இரக்கத்தைக் கொடுப்போம், இரக்கத்தைப் பெறுவோம். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம்.
செல்வராஜ் சூசைமாணிக்கம்
 
மறையுரைச்சிந்தனை  -அருட்தந்தை குமார்ராஜா

நம்பவும், வாழ்வு பெறவும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி வாழ்வுபெறுவதற்காகவுமே இந்நுhலில் உள்ளவை எழுதப்பட்டன" என்று முடிகிறது இன்றைய நற்செய்தி வாசகம். உயிர்ப்பு என்பது ஒரு சவால், ஓர் அறைகூவல். அதை நம்புவதற்கு இறைவனின் சிறப்பான ஆசி தேவை.

இயேசு தோமாவின் நம்பிக்கை இன்மையைக் கடிந்துகொண்டார். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்று மொழிந்தார். இயேசு சாவையும், இருளின் ஆற்றல்களையும் வென்று உயிர்த்துவிட்டார் என்பதை நம்புவதற்கு அவரது சீடர்கள் அனைவருமே பெரிதும் தயங்கினர் என்பதை அறியும்போது, நாம் வியப்படையலாம். ஆனால், நாமும் அப்படித்தானே! நமது வாழ்வில் நோய்கள், துன்பங்கள், ஏமாற்றங்கள் வரும்போது, நாம் நம்பிக்கை இழக்கவில்லையா? இனி ஒன்றும் இல்லை என்று விரக்தி அடையவில்லையா? நம்மீதே நாம் கழிவிரக்கம் கொள்ளவில்லையா? இவை எல்லாம் நாமும் உயிர்ப்பை நம்பவில்லை என்பதன் அடையாளங்களே. நாம் உயிர்ப்பின் சீடர்கள் என்றால், உயிர்ப்பின் வாழ்வில், அனைத்தும் இறைவனில் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வலிமை அடையவேண்டும். அவ்வாறு, நாம் நம்பவும், நம்பி வாழ்வடையவுமே நற்செய்தி நம்மை அழைக்கிறது. அந்த அழைப்பை ஏற்போம்.
அருட்தந்தை குமார்ராஜா

 
மறையுரைச்சிந்தனை  -அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

அன்பார்ந்த நண்பர்களே!
-- சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசு பலருக்குத் தோன்றினார் என நற்செய்தி நூல்களும், திருப்பணிகள் நூலும், தூய பவுலும் குறிப்பிடுகின்றனர். தாம் தேர்ந்துகொண்ட சீடர்களுக்கு இயேசு தோன்றிய நிகழ்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக, தூய தோமா இயேசுவைக் கண்டு அவரில் நம்பிக்கை கொண்ட நிகழ்ச்சி நம் கவனத்தை ஈர்க்கிறது. ஏனென்றால் இயேசு தோன்றியபோது தோமா அங்கே இல்லை. தோமாவிடம் பிற சீடர்கள் தாங்கள் இயேசுவைக் கண்டதாகக் கூறிய பிறகும் அவர் நம்ப மறுக்கிறார். தாமாகவே நேரடியாக இயேசுவைக் கண்டால்தான் நம்பமுடியும் என அவர் உறுதியாகக் கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பிறகு இயேசு மீண்டும் ஒருமுறை சீடர்களுக்குத் தோன்றியபோது தோமாவும் கூட இருக்கிறார். இயேசு தோமாவை அழைக்கிறார். தம் அருகே வந்து தம்மைத் தொட்டுப் பார்க்கச் சொல்கிறார். ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்ளக் கேட்கிறார். இயேசுவை அணுகிச் சென்று, அவரைத் தொட்டுப் பார்க்கும் துணிச்சல் தோமாவுக்கு வரவில்லை. ஏன், இயேசுவின் குரலைக் கேட்டதுமே அவருடைய உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. தம் தலைவரும் போதகருமான இயேசுவே தம் முன்னால் நிற்கிறார் என்னும் எண்ணம் தோமாவின் இதயத்தை நிரப்பிவிட்டது. அப்போது இயேசு தோமாவைப் பார்த்து, 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்கிறார்.

-- இங்கே ''பேறுபெற்றோர்'' எனக் குறிப்பிடப்படுவோர் நாம்தாம். நாம் உயிர்த்தெழுந்த இயேசுவை நேரடியாக நம் கண்களால் காணவில்லை. அவருடைய குரலை நாம் நம் காதுகளால் கேட்கவில்லை. அவரை அணுகிச் சென்று தொட்டுப்பார்க்கவும் நமக்கு வாய்ப்பில்லை. ஆனால் நாம் இயேசுவை நம் ஆண்டவராக, உயிர்த்தெழுந்து நமக்கு உயிர் வழங்கும் இறைவனாக ஏற்கிறோம். தோமாவுக்குத் தோன்றிய ஐயம் நமக்கும் தோன்றலாம். ஆனால் ஐயத்தைத் தவிர்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு நம் இதயச் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தோமா இயேசுவைத் தம் ''ஆண்டவர்'' என்றும் ''கடவுள்'' என்றும் அறிக்கையிட்டார் (காண்க: யோவா 20:28). அதுபோல நாமும் இயேசுவை நம் மீட்பராக ஏற்று, அவருடைய வழியில் நடந்துசென்றிட அழைக்கப்படுகிறோம். உண்மையிலேயே நாம் ''பேறுபெற்றோர்''.

அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
 
மறையுரைச்சிந்தனை  -அருட்தந்தை பணி குமார்ராஜா

பகிர்வே உயிப்பின் நம்பிக்கை வெளிப்பாடு!

உயிர்த்த இயேசு பன்னிருவருக்கும் தோன்றி, அவர்களை உறுதிப்படுத்தியதையும், அவர்களுக்குப் பாவ மன்னிப்புக்கான அதிகாரத்தை வழங்குவதையும் இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. இன்றைய முதல் வாசகம் நம்பிக்கை கொண்ட தொடக்க காலத் திருச்சபையினரின் வாழ்க்கை முறையைப் பற்றிப் பார்க்கிறோம்.

தொடக்க காலத் திருச்சபை மிகவும் ஆற்றலுடன் வளர்ச்சி அடைந்தது, பெருகிப் பலுகியது. அனைவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றுகளாக விளங்கினர். சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார், தங்களோடு வாழ்கின்றார் என்பதனை அனைவரும் நம்பினர். அவ்வாறு நம்புவதற்கு சீடர்களின் வாழ்வு மிகப்பெரிய ஓர் ஆற்றலாக, ஆதாரமாக விளங்கியது.

நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறையைத் திருத்தூதர் பணிகள் நூல் இவ்வாறு சுருங்கத் தருகிறது:
1. அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாக இருந்தனர். (நம்பிக்கை)
2. அவர்களது உடமைகள் அனைத்தும் பொதுவாக இருந்தன. (பிறரன்பு)

அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே உயிருமாக இருந்தது அவர்களின் இறைநம்பிக்கையைக் குறிக்கிறது. அவர்களிடத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எந்தவித பேதங்களும் இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இது பிறரின் கவனத்தை ஈர்த்தது.

இரண்டாவதாக, கிறித்தவர்கள் தன்னலம் துறந்து, பகிர்ந்து வாழ முன்வந்தனர். இதுவும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பகிர்வைவிட மிகச் சிறந்த சான்றைக் காண இயலாது. இதுவே நம்பிக்கை கொண்டோரின் எண்ணிக்கை பெருகியதற்குக் காரணமாக அமைந்தது.
நமது வாழ்விலும் நமது செல்வம், பொருள், திறமைகள், ஆற்றல்கள்... என்னும் கொடைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முன்வருவோம்

மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். தொடக்க காலத் திருச்சபையில் இருந்த அதே விசுவாசத்தை, இறைநம்பிக்கையை எங்களில் உருவாக்கும். பகிர்ந்து வாழும் தாராள உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும். உமது ஆவியினால் எங்களை நிரப்பியருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
பணி குமார்ராஜா

 
மறையுரைச்சிந்தனை  -அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

" ஆண்டவர் தோற்றுவித்த நாள் இதுவே"

" கடவுள் தோற்றுவித்த நாள்" என்கிற இந்த வரிகள் பல நேரத்தில் தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது புதிய நாளை குறிக்கக்கூடிய அர்த்தத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், அது தவறு. இது கடவுள் பிற்காலத்தில் அனுப்ப இருக்கிற மீட்பரின் நாளை குறிக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது, இயேசுவைக் குறிக்கும் வார்த்தையாக இது இருக்கிறது. இயேசுவில் மீட்பிற்கான அடித்தளக்கல்லை கடவுள் நட்ட இருக்கிறார் என்பதை, இந்த வரிகள் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பழங்காலத்தில், மிகப்பெரிய அரசுகள், வெகு எளிதாக தங்களது அதிகாரத்தை சாதாரண நாடுகள் மீது நிலைநாட்டின. இஸ்ரயேலை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. ஆனால், கடவுள் அவர்கள் வழியாகத்தான் இந்த உலகத்தை மீட்டார். பாபிலோனிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்கள், தங்களது நாட்டிற்கு வந்து, மீண்டும் கோவிலைப் புதுப்பிக்கத் தொடங்கிய நாட்களில், இந்த திருப்பாடல் எழுதப்பட்டிருக்கலாம். எனவே தான், கட்டிடத்தின் தொடர்பான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு, இஸ்ரயேலின் அரசர்களை " கற்களுக்கு" ஒப்பிட்டுச் சொல்லியிருக்கலாம். ஏனென்றால், இஸ்ரயேலின் அரசர்கள், இஸ்ரயேல் நாட்டை பிரதிபலித்தனர். கடவுளின் நாள் நிச்சயம் வரும். அந்த கடவுளின் நாளில், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். அந்த மகிழ்ச்சியை கடவுள் அனைவருக்கும் தருவார் என்கிற ஆழமான செய்தியை இது தருவதாக இருக்கிறது.

கடவுள் எப்போதும் நமது மகிழ்ச்சியை விரும்புகிறவராக இருக்கிறார். நாம் எவ்வளவு தான் பிரச்சனைகளுக்கு மத்தியில் வேதனைப்பட்டாலும், அதிலிருந்து நம்மை முழுமையாக விடுவிப்பதற்கு, அவர் எல்லாவித வழிகளிலும் முயற்சி எடுக்கிறார். அந்த கடவுளிடம் முழுமையான அன்பு கொண்டு, அவரது நாள் வர வேண்டுமென்று நாம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
 
மறையுரைச்சிந்தனை  -http://www.tamilcatholicdaily.com


உயிர்த்த இயேசு தரும் சமாதானம்
யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தனர். சீடர்கள் தங்கியிருந்த அறை, இயேசுவோடு கடைசி இரவு உணவு உண்ட அறையாக இருக்கலாம். அவர்கள் இருந்தது மேல் அறை. யூதர்களின் கோபம், வெறுப்பு முதலானவை சீடர்களுக்கு நன்றாகத்தெரியும். இயேசுவை ஒழித்தாயிற்று. இனி எப்படியும், அடுத்த இலக்கு தாங்கள்தான் என்பது அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எந்தநேரமும் தலைமைச்சங்க காவலர்கள் வந்து தங்களை கைது செய்யலாம் என்று நினைத்தனர். எனவே, மேலறையிலிருந்து அவர்களுக்கு கேட்கும் ஒவ்வொரு சத்தமும், அவர்களின் இருதயத்தை கலங்கடித்துக்கொண்டிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உயிர்த்த இயேசு அவர்களுக்குத் தோன்றுகிறார்.

உயிர்த்த இயேசு அவர்களுக்கு சொல்லும் செய்தி: உங்களுக்கு அமைதி உண்டாகுக!. கலங்கிப்போயிருந்த சீடர்களின் கலக்கத்தை இயேசு அறியாதவரல்ல. அவர்களின் வேதனையை இயேசு உணராதவர் அல்ல. அவருக்கு சாவின் பயம் நன்றாகத்தெரியும். ஏனென்றால், சாவை எதிர்நோக்கியிருந்த அவரே, கெத்சமெனி தோட்டத்தில், திகிலும் மனக்கலக்கமும் அடைந்திருந்தார். எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது என்று அவரே சொல்லியிருக்கிறார். எனவே, சீடர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்ட இயேசு, அவர்களுக்கு அந்த நேரத்தில் எது தேவையோ, அதை அறிந்து வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். கலங்கிப்போயிருக்கிற சீடர்களுக்கு அப்போதைய தேவை அமைதி. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட சீடர்களின் பயஉணர்வுகள் அகன்று போனது. அவர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். உயிர்த்த இயேசு கலங்கிப்போயிருந்த சீடர்களுக்கு கலக்கத்தைப்போக்கி மகிழ்ச்சியைத் தருகிறார்.

வாழ்வில் கலக்கம் வரும்போது, உயிர்த்த இயேசு நமக்கு தரும் அமைதி மிகப்பெரிய பொக்கிஷம். நம்முடைய கவலைகளை, துயரங்களை அறிந்தவர், நம்மைக் கைவிடப்போவதில்லை. நம்முடைய கலக்கத்தைப்போக்கி நமக்கு மகிழ்ச்சியை, மனஅமைதியை தருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறவர். அந்த அமைதியை, மகிழ்ச்சியைப்பெற்றுக்கொள்ள முனைவோம். உயிர்த்த ஆண்டவரில் நம் நம்பிக்கையை வைப்போம்.

மன்றாட்டு:
உயிர்ப்பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
http://www.tamilcatholicdaily.com
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ