கிறீஸ்தரசரின் ஆசிபெறவந்திருக்கும்
அன்பு நெஞசங்களே!
அன்பும், அமைதியும், அருளும், ஆசியும் நிறைந்த ஒரு பேரரசர்
இன்று நம்மை இந்த திருப்பலிக்கு வரவேற்கின்றார்.
இந்த உலகம் தோன்றியது முதல் இன்று வரை பல சாம்ராஜ்யங்கள்
தோன்றி சரித்திரங்கள் பல படைக்கத் துடித்தன. உற்சாகமாய்
எழும்பிய சாம்ராஜ்யங்கள் அத்தனையும் உருத் தெரியாமல்
அழிந்தமைக்குக் காரணம் புகழாசை, பதவியாசை, மண்ணாசை,
பெண்ணாசை, பொன்னாசை எனப் பல பேராசைகளால் அடுக்கப்பட்டு
அடித்தளம் அமைக்கப்பட்டதாலே!.
இத்தனை அரசுக்களுக்கு மத்தியிலும் நிரந்தரமான ஒரு பேரரசு
இன்று வரை மக்களின் உள்ளத்துக்குள் புதைந்து
வாழ்க்கைக்கு வளம் தருகிறது என்றால் அது கிறிஸ்துவின்
அரசே!
ஆம்! கிறிஸ்துவின் அரசும் பல்வேறு ஆசைகளால் வடிவமைக்கப்பட்டதே!
ஆயன் மந்தையைத் தேடிச் செல்வது போல மக்களைத் தேடிச்
செல்ல வேண்டும் என்ற ஆசை. காணாமல் போன ஆட்டை தேடிக் கண்டு
பிடிக்க வேண்டும் என்ற ஆசை. ஏழை எளிய மக்களை நேசிக்க
வேண்டும் என்ற ஆசை. வாழ்வின் விளிம்பு நிலையில் உள்ளோரின்
தேவைகளும் நிறைவு பெறவேண்டும் என்ற ஆசை. இப்படியான ஆசைகளால்
அடுக்கப்பட்டு அன்பு, அமைதி, சமாதானம், மகிழ்ச்சி, ஆசீர்
என்ற உணர்வலைகளால் நிரப்பி எழுப்பப்பட்ட அரசு.
கிறிஸ்தரசர் மிக வித்தியாசமானவர் ஏழைகளுக்கு எதை எல்லாம்
கொடுக்கிறோமோ அதை எல்லாம் தனக்கே கொடுத்ததாகச்
சொல்கிறார். நாம் கொடுத்ததைக் கூட முழுப்பூசணிக்காயை
சோற்றில் அமுக்குவது போல இல்லவே இல்லை என்று சொல்கின்ற
நபர்கள் நிறைந்த காலமிது. அப்படி இருக்க நம் ஆண்டவர்
யேசு, சிறியோருக்குக் கொடுத்தது தனக்கேக் கொடுத்தது என்கிறார்.
பிறரின் நிறைவு தன் நிறைவு என்பது, பிறருக்காகத் தன்னையே
கொடுப்பது, தன்னையே இழப்பது, பகிர்ந்து கொள்பவர்களைப்
பார்த்து மகிழ்ச்சி அடைவது, கிறிஸ்தரசரின் தன்னலமில்லா
உள்ளார்ந்த வெளிப்பாடு ஆகும். இதே மனநிலை நம்மிலும்
வெளிப்பட வேண்டுமென்று இன்று கிறி;ஸ்தரசர்
விரும்புகின்றார்.
கிறிஸ்தரசரின் மனநிலையை நமதாக்குவோம். அப்போது நம் மத்தியில்
நிலவும் வன்கொடுமை அகலும். கிறிஸ்தரசரின் மனநிலையை
பெற்று புதிய உலகம் படைப்போம். கிறிஸ்தரசரிடம் அதற்கான
அருள் கேட்டு இந்த திருப்பலியில் செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. ஆற்றலின் ஊற்றான இறையரசே, எம் இறைவா!
உமது மந்தையின் ஆடுகள் வாழ்வு பெறவும், அதை நிறைவாக பெறவும்
தம் உயிரையே கொடுக்கும் அளவிற்கு நீர் எங்களுக்கு தந்தருளிய
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும்
உமது இறையாட்சியின் பாதை யில் இறைமக்களை வழிநடத்த, இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதி, நேர்மையின் அரசே எம் இறைவா!
எம் நாட்டுத் தலைவர்களும், ஏனைய நிறுவனத் தலைவர்களும்,
ஊர் தலை வர்களும் தன்னலம் நாடாது, பிறர் நலத்துடன் ஆட்சி
புரியவும,; நாட்டின் அமைதிக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும்
தொண்டு புரிய தேவையான ஆற்றலைத் தந்தருள, ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
3. அரசும,; வல்லமையும், மாட்சியும் என்றென்றைக்கும் உரிய
எம் இயேசுவே!
உமது அரசின் பெருவிழாவினைக் கொண்டாடும், நாங்கள் உமது
இறையாட்சியின் மக்களாக திகழவும், உமது மதிப்பீடுகளைப்
பின்பற்றி உமக்கு உகந்த பிள்ளைகளாய் வாழவும், ஆண்டவரே
உம்மை மன்றாடுகிறோம்.
4. அருளின் அரசே எம் இறைவா!
எமது பங்கில் உள்ள அனைத்து இளைஞர், இளம்பெண்களை உம்
திருப்பாதத்தில் அர்பணிக்கிறோம். அவர்களது
தகுதிக்கேற்ற வேலையைத் தந்தருள, ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
5. எல்லாம் வல்ல இறைவா!
உமது மீட்பின் பணியை உலகில் ஆற்றிவரும் குருக்கள்,
உமது வருகைக்காக மக்களை தயாரித்து அவர்கள் உம்மோடு
வான் வீட்டில் வந்து சேர்வதற்கு தகுந்தவர்களாக
உருவாக்கிட வேண்டுமென்று, ஆண்;டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
6. நல்ல ஆயனாய் எம்மைத் தேடிவரும் இயேசுவே!
உமது மந்தையிலிருந்து விலகி போலிப் போதனையாலும்,
கவர்ச்சியான வார்த்தையாலும் பிற சபைகளை நோக்கி
சென்றுள்ள விசுவாசிகள், உண்மையை உணர்ந்து
திருச்சபையில் மீண்டும் வந்து சேர்வதற்கு
அருள்புரியும்படி, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
7. அன்பின் அரசை படைத்த இறைவா!
நீர் உலகை நடுத்தீர்க்க வரும் நாளில் நாங்கள் உமது
இறையரசுக்கு உரியவர்களாக திகழ்ந்திட எங்களுக்கு
அடுத்திருப்பவர்களை என்றும் அன்பு செய்து வாழ்ந்திட
துணைபுரியும்படி, ஆண்டவரே உம்மை மன்ளாடுகிறோம்.
8. கருணையின் இறைவா!
உலகில் தீவிரவாதத்தாலும், போரினாலும், மழை, வெள்ளம்,
நிலநடுக்கம் போன்ற இயற்கையின் சீற்றத்தாலும்
பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு உரிய
நிவாரணமும், மறுவாழ்வும் கிடைத்திட, ஆண்டவரே உம்மை
மன்றாடுகிறோம்.
9. காயங்களுக்குக் கட்டுப் போடுகின்றவரே எம் அரசே!
மருத்துவமனையில் கடுமையான வேதனை
அனுபவிப்பவர்களுக்கும், மனநோயால் துன்புறுவோர்க்கும்
நீர் துணையாளராக இருந்து வேதனை தணிக்க வேண்டும் என்று,
ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
அந்த நாட்டின் அரசர் மிகச் சிறந்த வீரர். எதிரிகளுக்கு
சிங்கம் போன்றவர். அதனால், அண்டை நாட்டு மன்னர்கள் அவரிடம்
எப்போதும் வால் ஆட்டுவது இல்லை. நாட்டு மக்களுக்கு எல்லா
நல்ல விஷயங்களையும் செய்து, மிகச் சிறந்த அரசர் என்ற
பெயரையும் பெற்றவர். அவருக்கு ஒரே மகன். அவன் அழகான முகம்
உடையவன். ஆனால், அவனது முதுகோ கூன். எப்போதும்
குனிந்தே நடந்து திரிந்தான். அவனை நினைத்து அரசருக்கு
மிகுந்த கவலை. 'வருங்காலத்தில் நாட்டை ஆளப்போகும் தன்
ஒரே மகன் இப்படி இருக்கிறானே என்று வருந்தினார். புகழ்பெற்ற
பல மருத்துவர்களை வரவழைத்து, இளவரசனுக்கு சிகிச்சை
செய்தார். ஆனால், எந்தப் பயனும் இல்லை. இறுதியாக, வயதான
ஒரு மருத்துவர் பற்றி கேள்விப்பட்ட அரசர், அவரை வரவைத்து
ஆலோசனை கேட்டார். ''உங்கள் மகனுக்கு மருந்து அவரிடமே
இருக்கிறது. இளவரசன் கம்பீரமாக நிமிர்ந்து நடந்து செல்வதுபோல
ஓவியம் ஒன்றை வரைவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அந்த ஓவியத்தை
இளவரசனின் அறையில் வையுங்கள். அந்த ஓவியம், அடிக்கடி
அவர் கண்களில் தென்படட்டும்'' என்றார் மருத்துவர். அதன்படி
இளவரசனின் ஆளுயர ஓவியம் வரையப்பட்டது. அதைப் பார்த்தபடியே
வளர்ந்தான் இளவரசன். சில ஆண்டுகளில் அவனது கூன் முதுகு
கொஞ்சம் கொஞ்சமாகச் சரியானது. மிக நன்றாக நிமிர்ந்து
நடக்க ஆரம்பித்தான்.
மன்னருக்கு மகிழ்ச்சி. அந்த மருத்துவரை அழைத்து,
பொற்காசுகளை அள்ளிக்கொடுத்தார். 'மன்னா, முன்பே சொன்னதுபோல
உங்கள் மகனுக்கான மருந்து அவரிடமே இருந்தது. நான் எதுவும்
செய்யவில்லை. ஓவியத்தை தினமும் பார்த்த இளவரசன், அதில்
உள்ளபடியே தானும் மாறி விட முடியும் என்ற எண்ணத்தை ஆழ்
மனதில் வளர்த்துக்கொண்டார். அந்த நம்பிக்கைதான் அவரை
நிமிர்த்தியது'' என்றார் மருத்துவர். இந்தக் கதையில்
வரும் இளவரசர் போன்று நாமும் நம்முடைய தீமையான செயல்பாடுகளால்
வளைந்து காணப்படுகின்றோம். நம் காப்பாளராம் கிறிஸ்து
அரசர் நம்முடைய வளைவுகளை சரி செய்ய வெற்றி அரசராக நம்மை
நோக்கி வருகின்றார் என்பதனை இன்றைய வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன.
அவர் ஆயனாக நம்மைக் காப்பவர். உயிர்த்த ஆண்டவராக நம்மை
இறுதி நாளில் எதிர்கொள்பவர். நாம் செய்யும் செயல்களுக்கு
ஏற்ப நமக்கு தீர்ப்பு அளிக்கக் கூடிய வல்லமையுள்ளவர்.
அவர்........
ஆயன் என்னும் காப்பாளர்:
தன்னுடைய மந்தையைக் காக்கும் ஆயன் செய்யும் முக்கிய பணிகள்
மூன்று.
உணவு, பாதுகாப்பு, பராமரிப்பு.
உணவு என்பது ஆடுகளுக்கான நல்ல மேய்ச்சல் நிலத்தைக் கண்டு
பிடித்து அவ்விடத்திற்கு அழைத்துச்செல்வது. ஆடுகளின்
சுவை அறிந்து அவைகளுக்கேற்ற நல்ல புல்வெளியைக்
காண்பிப்பது. ஆயனின் தேடல் எப்பொழுதும் ஆடுகளைப்பற்றிய
தேவையைப் பற்றியதாக மட்டுமே இருக்கும்.
நாமும் அவர் மந்தையின் ஆடுகள் தாம் . ஆனால் ஆறறிவுள்ள
மனிதர்கள். நமக்கு வெறும் உடலை வளர்க்கும் உணவு மட்டும்
போதாது. நம் அறிவு, மனம் திறமைக்கேற்ற நல்ல உணவினைக்
கொடுப்பதும் நம் ஆயனின் கடமை. ஆயன் காட்டும் எல்லா வகை
புற்களையும் எல்லா ஆடுகளும் உண்பதில்லை . சில ஆடுகள்
ஆயனின் சொல்லைக் கேட்காது செயல்படும், நடக்கும் .
நாமும் சில நேரங்களில் ஆயன் நமக்கு தரும் அனைத்தையும்
ஏற்காது செயல்படுகின்றோம்.
பாதுகாப்பு:
ஆயன் தன் ஆடுகளை தீய விலங்குகளிடமிருந்து
பாதுகாக்கின்றார். செம்மையான பாதையில் நடத்தி
செல்கின்றார். ஆடுகளின் முன்னும் பின்னும் அதனுடனே நடந்து
அவைகளுக்கு பாதுகாப்பளிக்கின்றார்.
நம்மையும் எல்லா விதமான இக்கட்டிலிருந்தும் காப்பவர்
நம் ஆயன். நமக்கு முன்னும் பின்னும் நம்முடனே நடந்து
நமக்கு பாதுகாப்பளிப்பவர்.
பராமரிப்பு:
ஆடுகளுக்கு தேவையான பராமரிப்பு வசதிகளை செய்து தருபவர்.
நீர் நிலைகளுக்கு அழைத்து சென்று தூய்மைப்படுத்துவது
தொடங்கி, அதன் காயங்களுக்கு மருந்திடுவது நலிந்த ஆடுகளை
தேற்றுவது என அவரின் பராமரிப்பு நீண்டு கொண்டே போகும்.
நம்மைப் பராமரிப்பதும், நம்முடைய காயங்களுக்கும் மருந்திட்டு
கட்டுப் போடுவதும் ஆயனாம் இயேசுவின் கடமை இதை அவர் கருத்தாய்
செய்துகொண்டு வருகின்றார்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு நீதித்தீர்ப்பளிக்கும்
அரசராக நம் முன் வருகின்றர். சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுக்கு
செய்ததைப் பொறுத்து நம்மை ஆசீர்பெற்றவர்கள் சபிக்கப்பட்டவர்கள்
என பிரிக்கின்றார். நாமும் நமது குடும்பமும் ஆசீர்
பெற்றவர்களாக இருப்பது நம்முடைய செயல்பாடுகளைப்
பொறுத்தே என்பதை எடுத்துரைக்கின்றார். நாம் வாழும் காலத்திலேயே
நம்முடைய குறைகளை, கூன்களாக இருக்கும் வளைவுகளை நேராக
மாற்ற ஏராளமான வாய்ப்புக்களைக் கொடுக்கின்றார். நம்
உடன் வாழும் சகோதர சகோதரிகளிடம் நாம் காட்டும் அன்பு
கருணை இரக்கத்தைப் பொறுத்து, நம்மை ஆசீர்வாதமுள்ளவர்களாக
வாழ அழைக்கின்றார்.
கண்ணாடி போல நாம் பிறருக்கு செய்யும் நன்மையும்
தீமையும் இயேசுவில் பிரதிபலிக்கின்றன என்கின்றார். பசியோடும்
தாகத்தோடும் இருக்கும் ஏராளமான மக்களை அனுதினமும் நாம்
பார்க்கின்றோம். அவர்களின் மேல் நாம் காட்டும் இரக்கம்
இயேசுவின் மேல் காட்டும் இரக்கமாக இருக்கும் என்கின்றார்.
ஆக ஆன்மீக பசியாளர்கள், விடுதலை தாகமுடையோர், உடல் மன
நோயாளிகள், அமைதி மகிழ்ச்சி என்னும் ஆடையின்றி இருப்பவர்கள்,
தனிமை, தாழ்வு மனப்பான்மை என்னும் சிறையில் இருப்பவர்கள்
அனைவரிலும் இயேசு இருக்கின்றார். அவர்களை நாம் கண்டுணர்ந்து
அவர்களின் துயர் நீக்க நாம் முயலும் போது, நாமும்
காப்பாளராம் கடவுளின் கடைக்குட்டி செம்மறி ஆடுகளாகின்றோம்.
ஆசீர்வதிக்கப்பட்டவர் களாகிறோம். எனவே நம்முடன் வாழ்பவர்களின்
தேவை அறிந்து சேவை செய்து வாழ்வோம். நம்முடைய வளைவுகளை
நாமே நிமிர்த்தி நேர் கொண்ட பார்வையுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய்
வலம் வருவோம். காக்கும் கடவுள் கிறிஸ்து அரசர் நம்மையும்
நம் குடும்பத்தார் அனைவரையும் எல்லா விதமான ஆசீர்வாதங்களால்
நிரப்பி காப்பாராக ஆமென்.
மறையுரைச்சிந்தனை - சகோ. செல்வராணி Osm
நிலையான அரசு.
அனைவருக்கும் கிறிஸ்து அரசர் வாழ்த்துக்களைக் கூறி மகிழ்கின்றேன்.
இன்றைய நாளில் கிறிஸ்துவை அரசராகக் கொண்டாட திருஅவை அழைப்பு
விடுக்கின்றது. பொதுவாக அரசர், மன்னர் என்று நாம் எண்ணும்
போது , பட்டாடையும், வைரமோதிரமும் அணிந்து, இருபுறமும்
மக்கள் சூழ்ந்து நிற்க , பலரை வதைத்து பல்லக்கில் அமர்ந்து
வருவதையே நினைக்கத் தோன்றுகிறது. இவ்வுலகில் எத்தனை எத்தனை
ஆட்சி முறைகள் உருவெடுக்கின்றன. ஆனால் ஒன்று கூட உருப்படியில்லை.
ஒன்று கூட நிலையானதும் இல்லை. மாறிக்கொண்டிருக்கும் இவ்வுலகில்,
மன்னர் ஆட்சியெல்லாம் மலையேறிவிட்டது என்று நாம்
நினைத்தாலும் , இன்னும் மன்னராட்சி இருக்கத்தான்
செய்கிறது. ஐ. நா. ச உறுப்பிராக இருக்கும் 193 நாடுகளில்,
28 நாடுகள் இன்னும் மன்னராட்சியில் தான் உள்ளது. மன்னரின்
பதவியும், அதனையொட்டிய ஆடம்பரங்களுமே முக்கியம் எனக்
கருதி, கடைநிலை மனிதர்களை கண்டுகொள்ளாத நிலைதான் இன்றைய
அரசியலில் நிலவுகிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்
. இன்றைய நாட்டை ஆளும் தலைவர்கள், தங்கள் கையில் இருக்கும்
அதிகாரத்தை பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்தும்
கொடுக்காமல், நாட்டை சீரழிக்கும் சுயநல அரசாங்கமாக
மாறிவருவதை நாம் பார்க்கிறோம். இந்நிலை இன்று மட்டுமல்ல.
திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட தலைவர்களின் அதிகாரத்தையும், அடக்குமுறையையும்
திசைமாற்றும் பொருட்டும், அரசர்களுக்கும் மன்னர்களுக்கும்
ஒரு மாற்று அடையாளமாக ,திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள்,
1925 ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்துவை அனைத்துல அரசர் என அறிவித்தார்.
அன்றிலிருந்து பொதுக்காலத்தின் இறுதி வாரத்தில்,
கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆட்சி மன்னராட்சியும்
அல்ல, மக்களாட்சியும் அல்ல. மாறாக அவரது ஆட்சி அன்பின்
ஆட்சி. நமது அரசர் அன்பின் அரசர், இரக்கத்தின் அரசர்,
நீதியின் அரசர், நம்பிக்கையின் அரசர், தாழ்ச்சியின்
அரசர் என்பதால் தான் சிலுவை மட்டும் கீழ்படிந்து, நம்
பாவங்களுக்காக தனது இன்னுயிரைத் தந்தார். ஏழ்மையின்
அரசர், அதனால் தான் மாளிகையில் பிறக்காமல் மாட்டுத்
தொழுவத்தில் பிறந்தார். பணிவின் அரசர் என்பதால் தான்,
தாம் அழைத்த சீடர்களின் பாதங்களைக் கழுவினார். ஆண்டவர்
இயேசுவை நாம் தந்தை என்றும், தாய் என்றும், அன்பன்
என்றும், நண்பன் என்றும், வழிகாட்டுபவர் என்றும், உடனிருப்பவர்
என்றும் எண்ணுகிறோம். ஆனால் அரசர் என்று சொல்லுவதில்
நம் மனம் அவ்வளவு முழுமை அடைவதில்லை. காரணம்! அரசர்கள்
எல்லாருமே பலவித அலங்காரங்களுடன் பகட்டாக வருவதும் ,
எப்போதும் அவர்களைச் சூழ்ந்து காவலர்களும், அமைச்சர்களும்
, பணியாளர்களும் இருப்பதே அரசவை என்று நாம் எண்ணுகிறோம்.
ஆனால் தந்தைக் கடவுள் தம் ஓரே மகனையே நீதியை
நிலைநாட்டும் அரசராக இம்மண்ணகத்திற்கு அனுப்பினார். இத்தகைய
அரசரின் பெருவிழாவைதான் இன்று நாம் கொண்டாடுகின்றோம்.
கலிங்கப் போரில் வெற்றி பெற்ற அசோக மன்னனின் படைகள்
பெருமிதத்தோடு தங்கள் நாடு திரும்பிக்கொண்டிருந்தன. மன்னன்
வெற்றியை கணக்கிட போர்க்களத்தை பார்வையிட்டான்.
நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் சிதைந்த உடல்கள்,
அங்கங்களை இழ்ந்து துடிதுடித்த வீரர்கள், ஆறாய் ஓடிய
இரத்த வெள்ளம் இவையனைத்தும் அசோக மன்னனின் உள்ளத்தை,
கல்லைத் துளைக்கும் அணு குண்டாய் பிளந்தன. கணவனை இழந்த
தாய்க்குலத்தின் அழுகுரல் போர்க்களத்தையே சுடுகாடாய்
மாற்றிவிட்டது. வெற்றிவாகை சூடிய மன்னன் வெட்கத்தால்
தலைகுனிந்து நின்றான். தன்னால் தான் இத்தனை உயிர்கள்
பலியாயின என வருந்தினான். எனது மன்னாசையும், பதவி ஆசையுமே
இத்தனை உயிர்களை இழந்ததற்கு காரணம் என்றெண்ணினான்.
உலகத்தை வென்றுவிட்டாய் ! ஆனால் உன்னையே வெல்லத் தவறிவிட்டாயே!
என்ற குரல் அவனுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. இனி
போர் புரிவதில்லை என முடிவெடுத்தான். அரசவை, பதவி, புகழ்,
பட்டம், ஏராளமான சொத்துக்கள், என அனைத்தும் இருந்தும்
இவை எதுவும் தனக்கு நிறைவைத் தரவில்லை என உணர்ந்தான்.
நிலையற்ற இவை அனைத்தையும் விட்டுவிட்டு, நிலையான அரசாம்
இறைவனைத் தேட ஆரமித்தான். புத்த மதத்தைத் தழுவினான்.
ஆம் பதவி, பட்டம், புகழ் ,பணம் இவை எதுவும் நிறைவைத்
தருவதிலை. இறையரசு ஒன்றே நிலையானது. இறையரசு எனபது இறைமகன்
இயேசு விட்டுச் சென்ற மதிப்பீடுகளே. பசியுற்றோர், தாகமுற்றோர்,
நோயுற்றோர், சிறுமையுற்றோர், சிறைப்பட்டோர், இவர்களது
துன்பத்தில் நாமும் பங்கெடுக்க வேண்டும். நமது வசதிகளை
குறைத்து பிறருக்கு உதவி செய்ய வேண்டும். நம் வாழ்வு
பெற பிறரைப் பயன்படுத்துவது இயேசுவின் வழி அல்ல. மாறாக
பிறர் உயர நம் வாழ்வை செல்விடுவதே இயேசு காட்டும் வழி.
இதுவே இறைவனின் நிலையான அரசில் நுழைவதற்கான தகுதி. நமக்கு
பதவி, புகழ் வரும்போது அதை மற்றவர்களின் நலனுக்காக பயன்படுத்துவே
சிறந்தது. ஆகவே ஆடம்பரங்களை விடுத்து ,நமக்கெல்லாம்
அரசராம் அரியனையில் வீற்றிருக்கும் அன்பர் இயேசுவின்
பாதம் அமர நம்மை தகுதியுள்ளவர்ளாக ஆக்குவோம். இதுவே இறைவன்
நம்மிடம் விரும்புவது. நிறைவாக பணி செய்வோம், நிலையான
அரசில் நுழைவோம். இறைமகன் இயேசு நமக்கும், நம்மைச்
சுற்றி இருப்போருக்கும் ஆசிர்வழங்குவாராக .ஆமென்.
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
எனை நீதிவழி நடத்திடுவார்!
நம் ஆண்டவராகிய இயேசு பிறப்பின்போது தாவீது அரசரின் மகன்
என அறியப்பட்டார். கீழ்த்திசை ஞானியர், "
யூதர்களின் அரசர்"
என வாழ்த்தி வணங்கினர். தன் அரசாட்சிக்குத் தீங்கு
நேர்ந்துவிடக்கூடாது என எண்ணிய பெரிய ஏரோது அவரைக் கொல்ல
முயற்சி செய்தார். இயேசுவின் போதனைகளும் வல்ல செயல்களும்
இறையாட்சியைக் குறித்துக் காட்டின. பிலாத்துவுடனான உரையாடலில்
தம் அரசு இவ்வுலக ஆட்சியைச் சார்ந்தது அல்ல என
முன்மொழிந்தார்.
இந்நாளில் இயேசு கிறிஸ்துவை அனைத்துலக அரசர் என நாம்
கொண்டாடுகிறோம். அரசாட்சி முறைகள் மறைந்து மக்களாட்சி மலிந்து
நிற்கும் இன்றைய நம் சூழலில், ஆட்சி செய்பவர்கள் எல்லாரும்
அதிகாரத்தை மையமாக வைத்து மக்கள்மீது கொடுங்கோலாட்சி
செய்யும் இக்காலத்தில், இயேசு கிறிஸ்து என்னும் அரசர் தம்மையே
சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார் என எடுத்துரைக்கிறது
இன்றைய நற்செய்தி வாசகம்.
அரசர் அல்லது அரசர் தொடர்புடைய நேரடி சொல்லாடல்கள் மூன்றை
இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம்:
(அ) அரியணையில் அமர்தல். "
வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட
மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில்
வீற்றிருப்பார்"
(மத் 25:31) என்று தொடங்குகிறது நற்செய்திப்
பகுதி.
(ஆ) அரசன். "
அரசன்"
(பஸிலேயோஸ்) என்ற வார்த்தை இரண்டு வசனங்களில்
பயன்படுத்தப்பட்டுள்ளது (25:34, 40). "
அரசர்"
என்ற
வார்த்தையை நற்செய்தியாளர் நேர்மையாளர்களோடு (வலப்பக்கம்
உள்ளவர்களோடு) உரையாடும் இடங்களில் மட்டுமே பதிவு
செய்கின்றார். இடப்பக்கம் உள்ளவர்களோடு உள்ள உரையாடலில்
அரசன் என்ற வார்த்தை இல்லை. மேலும், இருதரப்பினரும் அவரை
"
ஆண்டவர்"
என அழைக்க முடிந்தாலும், வலப்பக்கம் உள்ளவர்களுக்கு
மட்டுமே அவர் அரசராக இருக்கின்றார்.
(இ) அரசாட்சி அல்லது அரசுரிமை. "
அரசாட்சியை"
(பஸிலேயோ)
உரிமையாக்கிக்கொள்ளுமாறு அரசர் வலப்பக்கம்
இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். "
அரசாட்சி"
என்றால் என்ன என்பது இங்கே தெளிவாகக் குறிக்கப்படவில்லை
என்றாலும், இந்த அரசாட்சி உலகின் தொடக்கமுதல் ஏற்பாடு
செய்யப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெளிவாகக்
கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் மூன்று சொல்லாடல்களை வைத்து இந்த நற்செய்தி
வாசகத்திற்கும், இன்றைய பெருவிழாவுக்கும் தொடர்பு
இருக்கிறது என முதற்கட்ட முடிவுக்கு நம்மால் வர முடிகிறது.
இரண்டாம் கட்டமாக, இயேசுவே தன் வாயிலிருந்து தன்னை "
அரசர்"
என்று சொல்வது இந்த நிகழ்வில் மட்டுமே.
இயேசுவின் "
அரசர்"
தன்மை எப்படிப்பட்டது என்பதை இன்றைய
நற்செய்தியிலிருந்து கற்றுக்கொள்கிறோம்:
1. அதிகாரம் என்பது தன்னுள்ளே ஊற்றெடுப்பது. எந்த அதிகாரம்
ஒருவருக்கு உள்ளிருந்து ஊற்றெடுக்கிறதோ அதுவே ஒருவரை அரசர்
ஆக்குகிறது. தன்னை வெல்பவர் தனக்குள் அதிகாரத்தைக்
கண்டுகொள்கிறார். அதிகாரம் என்பது மற்றவர்கள்மேல்
செலுத்துவதல்ல. அது தன்னை வெல்வதில்தான்
அடங்கியிருக்கிறது. இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி
15:20-26,28), புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல்
திருமுகத்தின் இறுதிப் பகுதிகளிலிருந்து
எடுக்கப்பட்டுள்ளது. பிரிவினை, வழிபாட்டில் பிறழ்வு,
சிலைகளுக்குப் படைத்தவை, பாலியல் பிறழ்வு போன்ற
மேய்ப்புப்பணி பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வரையறுத்த
பவுல், இறுதியாக, இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லை என்று
வாதிட்ட சிலருக்கு விடையளிக்கும் நோக்குடன் இறுதிக்கால
நிகழ்வுகள் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றார்.
இறந்தோர் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவின் உயிர்ப்பை
அடிப்படையாகக் கொண்ட ஒன்று. கிறிஸ்து வரும்போது இறந்த
நம்பிக்கையாளர்கள் அனைவரும் உயிர்பெறுவர். "
கிறிஸ்து
ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய
அனைவரையும் அழித்துவிடுவார்."
எல்லாவற்றுக்கும் மேலாக,
கடைசிப் பகைவனாக இருக்கின்ற இறப்பும் அழிக்கப்படும்.
இறப்பு அழிக்கப்படுவதன் வழியாக, படைப்பு தன் பழைய
நிலைக்குக் கொண்டுவரப்பட்டுப் புதுப்பிக்கப்படும்.
அனைத்தின் மேலும் கிறிஸ்து ஆட்சி செலுத்துவார். இதனால்,
"
கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்."
கிறிஸ்து செய்த
மீட்புச் செயல், இறப்பின்மேல் வெற்றி, படைப்பில் ஏற்பட்ட
ஒழுங்குநிலை, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே
மீண்டெழுந்த நெருக்கம் அனைத்தையும், "
கடவுளே அனைத்திலும்
அனைத்துமாயிருப்பார்"
என்ற ஒற்றைச் சொல்லாடல் வழியாகச்
சொல்லிவிடுகின்றார். ஆக, பாவம் அழித்த அமைதியையும்,
ஒழுங்கையும் கிறிஸ்து மறுபடியும் கொண்டுவருகின்றார்.
2. சின்னஞ்சிறியவர்களின் சகோதரர். தம் அதிகாரத்தை அல்லது
அரசதன்மையை தம்மைவிட சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைப்பதில்
வரையறுக்கின்றார். ஆறு சொல்லாடல்கள் வழியாக
சின்னஞ்சிறியவர்களைக் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்த ஆறு
சொல்லாடல்களுமே அரசத்தன்மைக்கு எதிர்மறையானவை: "
பசி,"
"
தாகம்,"
"
ஆடையின்மை,"
"
அந்நியம்,"
"
நோய்,"
"
சிறை."
அரசனுக்கு முற்றிலும் தொடர்பு இல்லாத ஆறு சொல்லாடல்களைக்
கையாண்டு தன் அரசத்தன்மையை வரையறுக்கின்றார் இயேசு.
"
பசித்திருப்போர்,"
"
தாகமுற்றோர்,"
"
ஆடையின்றி இருப்போர்,"
"
அந்நியர்,"
"
நோயுற்றோர்,"
"
சிறையிலிருப்போர்"
என
அனைவரையும் தம் சகோதர, சகோதரிகள் என்று சொல்வதன்வழியாக
அவர்களும் அரசர்கள் என வரையறுக்கின்றார் இயேசு.
3. சின்னஞ்சிறிய செயல்களைச் செய்பவர்கள் அரசர்கள். இன்றைய
முதல் வாசகத்தில் (காண். எசே 34:11-12,15-17), எருசலேமின்
அழிவுக்கான காரணம் என்ன என்பதை அடிக்கடி நினைத்துப்
பார்க்கும் இறைவாக்கினர் எசேக்கியேல், "
இஸ்ரயேலர்களின்
ஆயர்களாகிய"
தலைவர்களே எருசலேமின் அழிவுக்கு முக்கியக்
காரணம் என்று பழிசுமத்துகிறார். ஏனெனில், அவர்கள் தங்கள்
மக்களை மேய்ப்பதற்குப் பதிலாக, அவர்களை மேய்ந்தனர்.
வளர்ச்சிக்கான பாதையில் அவர்களை இட்டுச் செல்லாமல்
அழிவுக்குரிய சிலைவழிபாட்டுப் பாதையில் அவர்களை இட்டுச்
சென்றனர். இன்றைய வாசகத்தில் நல்ல ஆயன் என்னும் புதிய
தலைவரைப் பற்றி எசேக்கியேல் பேசுகின்றார். இந்த நல்லாயன்
ஆண்டவராகிய கடவுளே.
நல்லாயனாகிய ஆண்டவராகிய கடவுள் மூன்று பணிகளைச்
செய்கின்றார்: ஒன்று, சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் சென்று
கூட்டிச் சேர்க்கின்றார். இங்கே, "
சிதறுண்ட ஆடுகள்"
என்னும் சொல்லாடல் பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டு
அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது.
ஆண்டவராகிய கடவுள் அவர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதாகச்
சொல்வது அவர்கள் விரைவில் பெறவிருக்கின்ற விடுதலை வாழ்வைக்
குறிக்கின்றது. இரண்டு, காயத்திற்குக் கட்டுப் போட்டு,
நலிந்தவற்றைத் திடப்படுத்துகின்றார். சொந்த நாட்டிலேயே
அலைந்து திரிந்தவர்களும், பாபிலோனிய அடிமைத்தனத்தால்
சிதைந்து போனவர்களும் இங்கே அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
ஆண்டவராகிய கடவுள், அவர்களின் உடல் காயங்களுக்கும்,
விரக்தி, சோர்வு, மரண பயம் என்னும் உள்ளத்தின்
காயங்களுக்கும் மருந்திடுகின்றார். அவர்களைத் திடப்படுத்தி
வலுவூட்டுகின்றார். மூன்று, நீதியுடன் மேய்த்து, நீதி
வழங்குகின்றார். "
கொழுத்ததையும் வலிiயுள்ளதையும்
அழிப்பேன்"
என்னும் எச்சரிக்கை, இஸ்ரயேலின் ஆயர்கள் தங்கள்
ஆடுகளைப் பேணிக்காக்கத் தவறியதற்காக, கடவுள் அவர்களுக்கு
நீதியுடன் அருளும் தண்டனையை அவர்கள் ஏற்றாக வேண்டும்
என்பதைக் குறிக்கிறது. மேலும், ஒவ்வோர் ஆடும் வலுவற்றதாய்
இருந்தாலும், அதற்குரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பது
ஆண்டவராகிய கடவுளின் விருப்பமாக இருக்கிறது.
தன் அரசநிலை அல்லது அரசாட்சி சின்னஞ்சிறியவர்கள்மேல்
கொள்ளும் அக்கறையில் அடங்கியுள்ளது என்று மொழிகின்ற
கிறிஸ்து அரசர், தன்னையே சின்னஞ்சிறியவர்களுள் ஒருவராக
அடையாளப்படுத்திக்கொள்கிறார். கிறிஸ்துவை அரசராகக்
கொண்டாடும் நாம் இன்று அண்ணாந்து பார்க்க வேண்டும். சற்றே
குனிந்து பார்ப்போம். நாம் அண்ணாந்து பார்த்து பிரமித்த
அரசர்கள் எல்லாம் நம்மை அடிமையாக்கிவிட்டனர் அல்லது
அடிமையாக்குகின்றனர். சற்றே குனிந்து நம்மையும், நமக்கு
கீழ் இருப்பவர்களையும் பார்ப்போம். எல்லாரும்
எழுந்துவிட்டால், யாரும் யாரையும் அண்ணாந்து பார்க்கத்
தேவையில்லை.
இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 23), "
ஆண்டவர் என்
ஆயர்"
என அழைக்கிற தாவீது, "
அவர் என்னை நீதிவழி
நடத்திடுவார்!"
என இறைவனுடைய நீதியை எடுத்துரைக்கிறார்.
சின்னஞ்சிறியவர்களோடு நாம் காட்ட வேண்டிய ஒன்றிப்பு
இரக்கத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக, நீதியின்
அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதும் நம் அரசர்
கற்பிக்கும் பாடம்.
கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடுகிற வேளையில், நாம்
ஒவ்வொருவரும் அவருடைய அரசின் இளவரசர்கள், இளவரசிகள்
என்பதையும் நினைவுகூர்வோம்.
I எசேக்கியேல் 34: 11-12, 15-17
II 1 கொரிந்தியர் 15: 20-26, 28
III மத்தேயு 25: 31-46
சிந்தனை 1
வறியவர்களைத் தேடிவந்த (ஆயர்) அரசர்
பிரான்சு நாட்டில் உள்ள திஞ்சு என்ற நகரில் மியோலிஸ் என்றோர் ஆயர்
இருந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு,
நாட்டுப் புறங்களுக்குச் சென்று, ஞாயிறு மறைக்கல்வி எடுப்பது வழக்கம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் இவர் திருப்பலி நிறைவேற்றிவிட்டு,
வழக்கம் போல் நாட்டுப் புறங்களுக்குச் சென்றுகொண்டிருக்கும்பொழுது,
சிறுவன் ஒருவன் ஆடுமேய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அவனோடு இவர்
பேசியதிலிருந்து, அவன் ஞாயிறுத் திருப்பலி காணவில்லை என்பது தெரிந்தது.
உடனே இவர் அந்தச் சிறுவனிடம், "
உன்னுடைய ஆடுகளை நான்
மேய்த்துகொண்டிருக்கின்றேன். நீ போய் பக்கத்துப் பங்கில் நடைபெறும்
திருப்பலியில் பங்கேற்றுவிட்டு வா"
என்றார். சிறுவனும் தன்னிடமிருந்த
கோலை ஆயரிடம் கொடுத்துவிட்டு, திருப்பலியில் பங்குபெறச் சென்றான்.
சிறுவன் திருப்பலியில் பங்கேற்றுவிட்டுக் கோயிலைவிட்டு வெளியே வந்தபொழுது,
அவனுடைய முதலாளி, "
உன்னை நான் ஆடுமேய்க்க அனுப்பி வைத்தால், நீ இப்படிக்
கோயிலுக்கு வந்திருக்கின்றாய்? ஆடுகளை என்ன செய்தாய்?"
என்றார்.
சிறுவன் நடந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னான். "
ஆடுகளைத் களவாடுவதற்குத்தான்,
திருடன் ஆயர் வேடம் போட்டு வந்திருப்பான். இதுகூடத் தெரியாமல், நீ
ஆடுகளை எல்லாம் அவனிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கின்றாயே!"
என்று
திட்டிக்கொண்டே முதலாளி அந்தச் சிறுவன் ஆடுகளை
மேய்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு ஓடினார்.
முதலாளி, அந்த இடத்திற்கு வந்தபொழுது, ஆயர் தன்னுடைய கோலை ஏந்தியவாறு
ஆடுகளை மேய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு, சிறுவன் சொன்னது உண்மைதான்
என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் அந்த மனிதரிடம் ஆயர்
ஒருசில வார்த்தைகள் பேசினார். அந்த வார்த்தைகளைக் கேட்ட முதலாளி,
நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டு, இனிமேல் சிறுவனை
ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலித் தவறாமல் அனுப்பி வைக்கின்றேன் என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஆயர் மியோலிஸ், தன் மந்தையை, மக்களைத்
தேடிவந்தார். இன்று நாம் கொண்டாடுகின்ற ஆயரும் அரசருமான
கிறிஸ்துவும் தன் மக்களைத் தேடிவந்து, அவர்களுக்கு வாழ்வளிப்பவராக
இருந்தார். ஆம், இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக்
கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்திகள் என்ன
என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஒரு நல்ல அரசரை எப்படி இனங்கண்டு கொள்வது?
வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்றபொழுது எத்தனையோ அரசர்களை நாம் எதிர்கொள்கின்றோம்.
ஒரு சில அரசர்கள் கொடுங்கோலர்களாகவும், வேறு சில அரசர்கள் மக்கள்மீது
அக்கறையில்லாதவர்களாகவும், மற்றும் சில அரசர்கள் நாட்டின் எல்லையை
விரிவுபடுத்துவதிலேயே தங்களுடைய வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்களாகவும்,
வெகு சில அரசர்கள் நல்லவர்களாகவும் இருந்ததை நாம் வாசிக்கின்றோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நல்ல அரசருக்கான அடையாளம் எது...?
இயேசு எப்படி நல்ல அரசராக, நல்ல ஆயராக இருக்கின்றார்...? என்பன
குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது.
மிகப்பெரிய சிந்தனையாளரும், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான
ஹர்பர்ட் ஹம்ப்ரே (Hurbert Humphrey), "
ஓர் அரசு நல்ல அரசா அல்லது
கெட்ட அரசா என்பதை, அது அந்த நாட்டில் உள்ள வயது முதிர்ந்தவர்களையும்
குழந்தைகளையும் நோயாளர்களையும் தேவையில் உள்ளவர்களையும் உடல் ஊனமுற்றவர்களையும்
எப்படி நடத்துகின்றது என்பதைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்"
என்பார்.
ஹர்பர்ட் ஹம்ப்ரேவின் இவ்வார்த்தைகளைக் கொண்டு, கிறிஸ்து அரசர் எப்படிப்பட்டவர்
என்பதைத் தெரிந்துகொள்வோம்.
இயேசு என்னும் மக்கள் அரசர்
தன் நாட்டிலுள்ள வறியவர்களை எந்த அரசு நல்லமுறையில் பேணிப் பராமரிக்கின்றதோ,
அந்த அரசு நல்ல அரசு என்று ஹர்பர்ட் ஹம்ப்ரே சொன்னதைக் மேலே
பார்த்தோம். அவருடைய வார்த்தைகளைக் கிறிஸ்து அரசரோடு ஒப்பிட்டுப்
பார்க்கின்றபொழுது, அவருடைய அரசு, நல்ல அரசு என்று சொல்லலாம். ஏனென்றால்,
இயேசு சமூகத்தில் இருந்த விளிம்பு நிலை மக்களான ஏழைகளை, கைவிடப்பட்டவர்களை,
பாவிகளை, குழந்தைகளை, பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்குப்
புதுவாழ்வு தந்தார். இவ்வாறு இயேசு ஒரு நல்ல, ஒப்பற்ற அரசராகத் திகழ்ந்தார்,
திகழ்கின்றார்.
கிறிஸ்துவை நாம் நல்ல அரசர் என்று அழைத்தாலும், அவர் தன்னை ஒரு நல்ல
ஆயர் என்றே அழைத்தார் (யோவா 10: 11). அந்த அடிப்படையில் இயேசு சமூகத்தில்
வறிய நிலையிலிருந்தவர்களுக்கு வாழ்வு தந்து, அவர் நல்ல ஆயராகத் திகழ்கின்றார்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகம் ஆண்டவராகிய கடவுள் எப்படி ஒரு நல்ல ஆயராக இருக்கின்றார் என்பதைப்
பட்டியலிடுகின்றது. சிதறுண்ட, காணாமல் போன ஆடுகளைத் தேடுவேன்; காயப்பட்டதற்குக்
கட்டுப்போடுவேன்; நலிவுற்றவற்றைத் திடப்படுத்துவேன் என்று ஆண்டவராகிய
சொல்லக்கூடிய வார்த்தைகள் யாவும் இயேசுவில் அப்படியே பொருந்திப்
போகின்றன. இவற்றின்படி பார்க்கின்றபொழுது இயேசுவை ஒரு நல்ல ஆயராக,
அரசராகச் சொல்லலாம்.
மக்கள்மீது பரிவுகொள்வோருக்கே இறையாட்சியில் இடமுண்டு
இயேசு ஒரு நல்ல அரசராக, நல்ல ஆயராக இருக்கின்றார் எனில், அவரது ஆட்சியில்
பங்குபெறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துச்
சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
மத்தேயு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில்
இறுதித் தீர்ப்பின்பொழுது என்ன நடக்கும் என்பதைக் குறித்து
வாசிக்கின்றோம். இதில் பசியாய் இருந்தோருக்கு உணவளித்தோரும், தாகமாய்
இருந்தோருக்குத் தண்ணீர் அளித்தோரும், அன்னியரை ஏற்றுக்கொண்டோரும்,
ஆடையின்றி இருந்தோருக்கு ஆடை அளித்தோரும், நோயுற்றிருந்தோரைக் கவனித்துக்
கொண்டோரும், சிறையில் இருந்தவரைத் தேடிச் சென்றோரும் இறையாட்சியை
உரிமைப் பேறாகப் பெறுவதை நாம் வாசிக்கின்றோம்.
ஆம், கிறிஸ்து அரசர் வறியோரைப் பேணிக் காத்ததுபோல், யாரெல்லாம் வறியோரை,
தேவையில் உள்ளவரை பேணிக் காக்கின்றாரோ அவர் கிறிஸ்துவின் ஆட்சியில்
அல்லது இறையாட்சியில் பங்குபெறும் பேற்றினைப் பெறுகின்றார். இன்றைக்கு
இருக்கின்ற அரசர்களும் தலைவர்களும்; ஏன் நாம் கூட வரியவர்களைக் கண்டும்
காணாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழநிலையில் நாம் வறியோரைத்
தேடிச் சென்ற, கிறிஸ்து அரசரைப் போன்று, வறியோரிடம் நம்முடைய அன்பைச்
செயலில் வெளிப்படுத்தி, இறையரசை உரிமைப் பேறாகப் பெறுவோம்.
சிந்தனை
"
அரசன் செல்லும் வழிகளிலேயே குடிகளும் செல்வர்; அரசனுடைய கட்டளைகளைப்
பார்க்கினும், அவன் வாழ்க்கையில் நடந்து காட்டும் முறையே மிகுந்த
வலிமையுள்ளது"
என்பார் கிளாடியன் என்ற அறிஞர். தன்னுடைய வாழ்வால்
ஓர் அரசர் எப்படி இருக்கவேண்டும் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்திய
கிறிஸ்து அரசரின் வழியில் நாமும் நடந்து, அவரது ஆட்சியில் பங்குபெறும்
உரிமையைப் பெற்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறையுரைச்சிந்தனை
-
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
கிறிஸ்து அரசர் பெருவிழா
இன்று நாம் இயேசு கிறிஸ்து ஒப்பற்றப் பேரரசர் என்று அழைத்து
விழாக் கொண்டாடுகிறோம். அதோடு மட்டுமல்லாது, அவரது மகிமை
மிக்க இரண்டாம் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். ஏனெனில்
அந்நாள், எல்லா மக்களும், எல்லா இனத்தாரும், எல்லா நாட்டினரும்,
விண்ணவரும் இயேசு ஆண்டவர், மகிமைமிக்க மன்னர் என்று ஏற்று
ஆராதிப்பார்கள்.
அன்பார்ந்தவர்களே! மன்னர் ஆட்சியானது மறைந்து மக்கள் ஆட்சி
எங்கும் உதயமாகிக் கொண்டிருக்கும் காலக்கட்டத்திலே இருக்கிறோம்.
இன்று அரசர் ஆட்சி என்பது வரலாற்றுப் பாடமாகவே பள்ளிகளில்
கற்பிக்கப்படுகின்றன. ஆனால் நம் வாழ்க்கை அனுபவம் அல்ல. இன்று
எல்லாம் குடியாட்சித் தலைவர்கள், மக்கள் தலைவர்கள், முதல்வர்கள்,
அதிபர், பிரதமர்கள் என்றெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
தன்னையே அடிமையாக்கிச் சிலுவைச் சாவை ஏற்ற இயேசுவை அரசராக்கித்
திருச்சபையானது கொண்டாடுகிறதே! (பிலி. 2:7-8). இன்றையக் காலகட்டத்தில்
இன்றைய கலாச்சாரத்தில் இந்த விழா ஏற்புடையதுதானா? அரசர் என்ற
குடியாட்சி மறைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், மன்னராட்சி
இயேசு அரசர் என்பது சரிதானா?
அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவை அரசர் என்று அழைப்பது இன்னும்
பொருந்தும். இறைமகன் என்ற முறையில் இயேசு கிறிஸ்து எக்காலத்திற்கும்
அரசராக ஆட்சி உரிமைப் பெற்றுள்ளார். இயேசு கிறிஸ்து
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் (எபி.
13:8).
அவரது ஆட்சிக்கு முடிவே இராது (லூக். 1:33) என்றார் தூதர்.
ஆட்சி என்பது அதிகாரம் செலுத்துதல் என்பது பொருள் அல்ல.
ஆட்சி செலுத்துதல் என்றாலே வழிகாட்டுதல்,
நெறிப்படுத்துதல், வழி அமைத்தல், ஒழுங்குபடுத்துதல்,
திசைகாட்டல், முறைப்படுத்துதல் என்ற பொருள் கொண்டது.
அதாவது முழுமையை நோக்கி இட்டுச் செல்வதாகும். தந்தையாகிய
இறைவனை நோக்கித் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை இட்டுச்
செல்லுவதுதான் இயேசுவின் ஆட்சி.
நீ யூதரின் அரசனா? (யோவா. 18:33) என்று பிலாத்து இயேசுவை
நோக்கிக் கேட்டபோது, தான் அரசர் என்று மறுக்கவில்லை. தன்
ஆட்சி வித்தியாசமானது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
என் ஆட்சி இவ்வுலகைச் சார்ந்ததன்று. உண்மையை
எடுத்துரைப்பதே என் பணி (யோவா. 18:37).
நானே என் ஆடுகளின் ஆயன். ஆயன் சிதறுண்ட ஆடுகளைத் தேடிச்
செல்வதுபோல் நானும் என் மந்தையைத் தேடிச் செல்வேன்.
அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவேன்.
காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன். நலிந்தவற்றைத்
திடப்படுத்துவேன். கொழுத்ததையும், வலிமையுள்ளதையும்
அழிப்பேன் (எசே . 34:12, 15, 16) என்கிறார் ஆண்டவர். இறுதி
நாளில் ஆயன் ஆடுகளைப் பிரிப்பது போல செம்மறியை
வலப்பக்கமும், வெள்ளாட்டை இடப்பக்கமும் வெவ்வேறாகப்
பிரித்து நிறுத்துவார் (மத்.23:33).
அன்பார்ந்தவர்களே ! இயேசு சொன்னார், என் ஆட்சி இந்த
உலகத்தைச் சார்ந்ததல்ல (யோவா. 18:36). இந்த உலக
அரசர்களுக்கு அரண்மனை உண்டு, அரியணை உண்டு, மணிமகுடம்
உண்டு, அந்தப்புரம் உண்டு, படை வீரர்கள் உண்டு ,
பணியாட்கள் உண்டு, இட எல்கையும் உண்டு. ஆனால் இயேசுவுக்கோ
அரண்மனை இல்லை (மத் 8:25). தெருக்கள் தான் அரண்மனை.
சிலுவைதான் அரியணை, முள்முடிதான் மணி மகுடம், கெத்சமணி
தோட்டம் தான் அந்தப்புரம். பன்னிரு சீடர்கள் தான் அவரது
படை வீரர்கள். இந்த உலக அரசல்ல இயேசுவின் ஆட்சி
புரட்சியானது இயேசுவின் ஆட்சி.
தன் தொண்டர்கள் தன்னைப் புடை சூழ்ந்து வரவேண்டும்.
வாழ்த்து கோஷங்கள் எழுப்ப வேண்டும். தன் புகழ்பாட
வேண்டும். தன்னைத் தெய்வமாகக் கருதி வழிபடும் தான்
தோன்றித் தனத்தை விரும்புகிறார்கள். தான் தான்
கெட்டிக்காரன், நல்லவன், இதய தெய்வம் என்றெல்லாம்
அழைக்கப்பட விரும்புகிறார்கள். விளம்பரப் பிரியர்களாகப்
புகழ விரும்புகிறார்கள் இன்றையத் தலைவர்கள். ஆனால் இயேசு ,
தலைவன் எப்படிப்பட்டவன் என்ற மாற்றுச் சிந்தனையை,
புரட்சிச் சிந்தனையை வைக்கிறார். நான் நல்லவன் என்று ஏன்
சொல்கிறார் கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் யாருமில்லை
(மாற். 10:17-18) என்று மறுப்புரையாக சவுக்கடி
வழங்குகிறார் இயேசு. அதிகாரத்தைப் பயன்படுத்தி,
அடக்குமுறையைக் கையாளும் நம் தலைவர்களுக்கு உங்களுள்
பெரியவனாக இருக்க விரும்புபவன் உங்கள் தொண்டனாக, ஊழியனாக
இருக்கட்டும் (மத் 20:26-27) என்று சவால் விடுகின்றார்
இயேசு.
வன்முறையையும், கலவரங்களையும், பயங்கரவாதத்தையும்
தூண்டிவிட்டு குளிர்காயும் இன்றைய நம் தலைவர்களுக்கு
எச்சரிக்கையாக, பேதுரு, உன் வாளை அதன் உறையிலே போடு.
ஏனெனில் வாளை எடுப்பவன் வாளாலே மடிவான் (மத் 26:52)
என்றும் இயேசு எச்சரிக்கின்றார். சட்டங்களைக் கையில்
எடுத்தும், புதிய புதிய சட்டங்களைப் பெருக்கிக் கொண்டும்,
உண்மையை ஊமையாக்கி, நீதியைச் சீர்குலைய வைத்துத் தான்
நினைப்பதும், சொல்வதும், செய்வதும்தான் சரி என்று
நியாயப்படுத்திச் சாதிக்கும் தலைவர்கள் நம் நாட்டில்
உண்டு. இவர்களுக்காக உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே எனது
பணி. இதற்காகவே பிறந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும்
என் குரலுக்குச் செவிமடுக்கிறான் (யோவா. 18:37) என்று
அறைகூவல் விடுக்கின்றார்.
ஏழைகளின் வயிற்றுப் பசியைக்கூட அரசியலாக்கி, கஞ்சித்
தொட்டியாக்கி கஞ்சி, பிரியாணி என்று தங்களுக்குச்
சாதகமாகப் பயன்படுத்தும் தலைவர்கள் உண்டு. ஆனால் இயேசுவோ
ஏழைகளுக்கு நற்செய்தி சொல்லவே வந்தேன் (லூக் 4:18).
இறையரசு ஏழைகளுக்குச் சொந்தம், பணக்காரர் மோட்சம் நுழைய
முடியாது (மத். 19:24) என்ற புரட்சி மிகுந்த போதனையைத்
தருகிறார். தனக்காகத் தொண்டனைப் பலிகடாவாக்கும் தலைவர்கள்
இன்றையத் தலைவர்கள். ஏழைகளை நசுக்கி, பணக்காரர்களுக்கும்
வல்லவர்களுக்கும் சரிபோகும் தலைவர்கள் இன்றைய
ஆட்சியாளர்கள். ஆனால் தொண்டு புரியவும்,பலருடைய மீட்புக்கு
விலையாகத் தன் (என்) உயிரையுமே கொடுக்க வந்தேன் (மத்.
20:28) என்கிறார் நம் அரசர் இயேசு.
இந்த உன்னத ஒப்பற்ற அரசரின் அரசில் பங்கு பெறுபவர்கள் யார்
? மத்தேயு கொடுக்கும் பதில் தான் இதற்கு விடையாக முடியும்.
பசித்தவருக்கு உணவு, தவித்திருப்பவருக்குத் தண்ணீர்,
அந்நியரை வரவேற்றல், ஆடையற்றவருக்கு ஆடை உடுத்துதல்,
நோயுற்றோரைப் பேணுவது, சிறைப்பட்டோரைச் சந்தித்து ஆறுதல்
கூறுவது (மத். 25:35). ஏனெனில் இந்த ஏழை, எளியவருக்கு
நீங்கள் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத். 25:40).
நமது கிறிஸ்து அரசரின் ஆசி பெற நாம்
என்ன செய்ய வேண்டுமென்பதை இன்றைய நற்செய்தி நமக்குத்
தெளிவுப்படுத்துகின்றது.
ஆறுவகையான மக்களுக்குஆண்டவரின் ஆசிகிடைப்பது விண்ணகம்
கிடைப்பது உறுதியார்அந்தஅறுபேர்? பசித்தவர்களுக்கு உணவு
கொடுப்பவர்கள். தாகமாக இருப்பவர்களுக்குத் தண்ணீர்
கொடுப்பவர்கள். அன்னியராக இருப்போரை ஏற்றுக் கொள்பவர்கள்.ஆடையின்றி
இருப்பவர்களுக்கு ஆடைஅணிவிப்பவர்கள், நோயுற்றோரைக் கவனித்துக்
கொள்கின்றவர்கள், சிறையிலிருப்பவர்களைத்
தேடிச்செல்கின்றவர்கள் ஆகிய ஆறு பேரும் கடவுள் வாழும்
இல்லத்திற்குள் நுழையும்பேறுபெறுவார்கள்.
கிறிஸ்தவ மறையைப் பொறுத்தவரையில் இறைவனின் ஆசிபெற நம்மிடமுள்ளதை
மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழி
கிடையாது.
நம்மிடமுள்ளதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவிடாமல் நம்மைத்
தடுப்பது எது? நமது சுயநலம். சுயநலம் என்றால் என்ன? என்பதைச்
சுட்டிக்காட்ட ஒரு கதை!
ஒரு பெரிய பணக்காரருக்கு மூன்று மகன்கள் அந்தப்பணக்காரரிடம்
நிறைய சொத்து இருந்தது அவருக்கு வயதாகிவிட்டது அவர்
மரணப் படுக்கையில் படுத்திருந்தார் அப்போது அவர் இறந்த
பிறகு எப்படி அவரை கல்லறைக்குத் தூக்கிச்செல்வது என்பதைப்
பற்றி மூன்று மகன்களும் தங்களுக்குள்ளேபேசிக்கொண்டனர்.
மூத்தவன் "கல்லறைக்கு தூக்கிச்செல்ல வாடகைக் கார் ஒன்றை
வைத்துக்கொள்ளலாம்" என்றான்.
இரண்டாமவன் "காருக்கு அதிக செலவாகும் இறந்த பிறகு எதில்
தூக்கிச்செல்கின்றோம் என்பது அவருக்குத் தெரியவாபோகின்றது
ஒரு மாட்டு வண்டிபோதும்" என்றான்.
மூன்றாமவன் : "மாட்டுவண்டி எதற்கு நம்ம ஊர் சவ வண்டி
இருக்கின்றது அது இனாமாகக் கிடைக்கும்" என்றான்.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிழவர், "எங்கே என்
செருப்பும், கைத்தடியும்?" என்றார்.
மகன்கள் "இப்போது அவை உங்களுக்கு எதற்கு?" என்றார்கள்.
தகப்பனோ, "நீங்கள் எனக்காக எந்தச் செலவையும் செய்ய
வேண்டாம் நான் நடந்தே கல்லறைக்குச் சென்று
விடுகின்றேன்" என்றார்.
இந்தக் கதையில் வந்த மூன்று மகன்களும் கொண்டிருந்த மனநிலைக்குப்
பெயர்தான் சுயநலம்! சுயநலம் என்பது, தான் வாழவேண்டும்,
தான் மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணுவது.
இந்தச் சுயநலத்தை அழிக்க வழி ஏதாவது உண்டா? உண்டு என்கின்றது
முதல்வாசகம்! நல்லாயனாம் கடவுள் காணாமல் போன நமது நல்ல
வாழ்க்கையை நமக்குக் கண்டுபிடித்துத் தருவார் என்கின்றது.
தீயவை அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் கடவுளுக்கு உண்டு.
நமது வாழ்க்கை இந்த உலகத்தோடு முடிந்து போகும் ஒன்று
அன்று நாம் அனைவரும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் (இரண்டாம்
வாசகம்). அப்படி உயிர்தெழும்போது கிறிஸ்து அரசரால்
விண்ணகத்திற்குள் நாம் வரவேற்கப்பட தகுதியுள்ளவர்களாகத்
திகழ்வோமா? திகழ்வோம். எப்போது? நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களுடன்
பகிர்ந்து கொள்ளும்போது...
மேலும் அறிவோம்:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் (குறள் : 229).
பொருள்: பெரிதும் தேடித்திரட்டிய பொருள் அனைத்தையும்
பிறருக்குக் கொடுத்தால் குறையுமோ என்றுதாமே சுவைப்பது,
பிறரிடம் கையேந்திக் கெஞ்சிக் கேட்பதைக் காட்டிலும்
கொடிய செயலாகும்.
சிந்தனை 4
ஓர் ஊரில் இரண்டு பைத்தியங்கள் இருந்தன. முதல் பைத்தியம்
இரண்டாம் பைத்தியத்திடம், "நான் உலகத்தையே விலைக்கு
வாங்கப் போகிறேன்" என்றது. அதற்கு இரண்டாவது பைத்தியம்,
"நான் உலகை விற்றால்தானே நீ அதை வாங்க முடியும்? இப்போதைக்கு
உலகை விற்கும் எண்ணம் எனக்கு இல்லை" என்றதாம்!
இன்று ஒவ்வொரு நாடும் வல்லரசாக மாறவேண்டும் என்ற மமதைப்
பிடித்துச் செயல்படுகிறது. அவ்வாறே அரசியல் கட்சிகளும்
அரசியல்வாதிகளும் நாட்டை ஆளவேண்டும் என்ற நப்பாசையில்
ஆதிக்க வெறிபிடித்து அலைகின்றனர். தனி மனிதர்களையும்
இத்தகைய தலைக்கணம் விட்டுவைக்கவில்லை.
அலெக்சாண்டர் உலக நாடுகளையெல்லாம் தனது ஆதிக்கத்தின்
கீழ் கொண்டு வந்தார். அவர் இறந்து அடக்கம் செய்யப்பட்டபோது
ஒரு தத்துவமேதை கூறினார். "நேற்றுவரை அலெக்சாண்டர் மண்ணை
ஆண்டார். இன்று மண் அலெக்சாண்டரை ஆண்டுகொண்டிருக்கிறது."
"மனிதனுக்கு மண்மேல் ஆசை மண்ணுக்கு மனிதன் மேல் ஆசை கடைசியில்
மண்தானே ஜெயித்தது" என்று திரைப்படப் பாடல் கூறுகிறது.
இப்பின்னணியில் இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் சிகரமாகக்
கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடு கின்றோம்.
கிறிஸ்து அரசரா? ஆம், அவர் ஒருவர் மட்டுமே உண்மையான
அரசர், படைப்பிலும் மீட்பிலும், இம்மையிலும் மறுமையிலும்
அவர் அரசர், அவர் மூலமாகவே அனைத்தும் உண்டாயின (யோவா
1:37). "அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும்
ஆட்சி செலுத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது"
(லூக் 1:33), "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கின்றவர்
எங்கே?" (மத் 2:12) "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர்
போற்றப்பெறுக" (லூக் 19:38). "நாசரேத்து இயேசு யூதர்களின்
அரசர்" (யோவா 19:19), "இயேசுவே நீர் ஆட்சியுரிமை
பெற்று வரும்போது என்னை நினைவிற் கொள்ளும்" (லூக்கா
23:42).
இயேசு கிறிஸ்து உண்மையான அரசர், ஆனால் அவரது அரசு
வித்தியாசமான அரசு, இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை
அவருடைய அரசின் தனிப்பண்புகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுக்
காட்டுகிறது: "உண்மையின் அரசு நீதியின் அரசு அருளின்
அரசு புனிதத்தின் அரசு; அன்பின் அரசு அமைதியின் அரசு
வாழ்வின் அரசு, கிறிஸ்து ஆயுத பலத்தால் அல்ல. அன்பின்
பலத்தால் ஆட்சி செய்கிறார். மாமன்னன் நெப்போலியன்
கூறினார்: "நானும் அலெக்சாண்டரும் ஆயுத பலத்தால் அடக்கி
ஆள முயன்றோம் எங்கள் அரசு நிலைக்கவில்லை. ஆனால் இயேசு
கிறிஸ்து அன்பினால் ஆட்சி செய்கின்றார். அவரது அரசு என்றும்
நிலைத்திருக்கும்."
மண்ணக அரசர்கள் மக்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்வை
மேம்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் நல்ல மேய்ப்பர்கள்
அல்ல. மாறாக, கிறிஸ்து நல்ல மேய்ப்பர் என்று இன்றைய முதல்
வாசகம் கூறுகிறது. அவர் மந்தையை மேய்த்து இளைப்பாறச்
செய்கிறார் காணாமற்போன ஆடுகளைத் தேடிச் செல்கிறார்; காயப்பட்டதற்குக்
கட்டுப்போடுகிறார். நலிந்தவற்றைத் திடப்படுத்துகிறார்.
நீதியுடன் ஆடுகளை மேய்க்கின்றார் (எரே 34:11-17) ஆடுகள்
வாழ்வு பெறவும் அதை நிறைவாகப் பெறவும் அவர் தமது உயிரையே
கொடுக்கிறார் (யோவா 10:10).
இன்றைய பதிலுரைப் பாடல் நல்லாயன் திருப்பாடல் (திபா
23). கிறிஸ்து நல்லாயர் நமக்குக் குறை ஏதுமில்லை. நம்மைப்
பசும்புல் தரைக்கும் அமைதியான நீர் நிலைக்கும் அழைத்துச்
செல்கிறார் நமக்கு விருந்தளிக்கிறார். அருள்வாக்காலும்
அடையாளங் களாலும் நமக்கு அவர் புத்துயிர் அளிக்கிறார்.
அவரால் வழிநடத்தப்படும் நாம் எதற்கும் பயப்படத்
தேவையில்லை, ஓர் அப்பா தம் மகளிடம், "ஆங்கிலத்
தேர்வில் எத்தனை கேள்விகள் கேட்டிருந்தார்கள்? நீ எத்தனை
கேள்விகளுக்குப் பதில் எழுதினாய்?" என்ற கேட்டதற்கு
அவன், "ஆறு கேள்விகள் இருந்தன. முதல் நான்கு கேள்விகளுக்கும்
கடைசி இரண்டு கேள்விகளுக்கும் பதில் எழுதவில்லை" என்றான்.
இறுதித் தேர்வில் நம்மிடம் கிறிஸ்து கேட்கப்போகும் ஆறு
கேள்விகளையும் வெளியிட்டுவிட்டார்.
அவை: 1.நான் பசியாய் இருந்தேன், உணவளித்தாயா? 2. நான்
தாகமாய் இருந்தேன், தண்ணி கொடுத்தாயா? 3.நான் ஆடையின்றி
இருந்தேன், என்னை உடுத்தினாயா? 4.நான் அன்னியனாய் இருந்தேன்.
எனக்கு உன் வீட்டில் இடம் கொடுத்தாயா? 5 நான் நோயுற்று
இருந்தேன், என்னைக் காண வந்தாயா? 8.நான் சிறையில் இருந்தேன்,
என்னைப் பார்க்க வந்தாயா? இக்கேள்விகளுக்கு "ஆம்" என்று
பதில் சொன்னால், விண்ணகமும் 'இல்லை" என்றால் நாகமும்
கிடைக்கும்.
ஏழைகளுக்குச் செய்யும் உதவி இயேசுவுக்குச் செய்யும்
உதவி, மக்கள் பணி மகேசன் பணி ஒருவன் தேர்வில்
தோற்றுவிட்டான். ஏன்? என்று கேட்டதற்கு அவன் கூறியது
"நான் கடினமான கேள்விகளைப் படித்தேன், ஆனால் தேர்வில்
எளிதான கேள்விகளைக் கேட்டுவிட்டார்கள்." அவனுடைய கதியே
நம்முடைய கதியாகிவிடும். ஏனெனில் விண்ணகம் செல்வதற்குக்
கிறிஸ்து நமக்குக் காட்டிய எளிய வழிகளைப் பின்பற்றாமல்,
மிகவும் கடினமான வழிகளைப் பின்பற்றி இறுதித் தேர்வில்
கோட்டைவிடப் போகிறோம் பிறரிடம் பெறுவது நல்லது என்றாலும்
அது தவறு. ஆனால் விண்ணகமே இல்லையென்று
வைத்துக்கொண்டாலும் பிறர்க்கு ஈதல் நன்று.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவது
நிறைவேறும் "எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை
அவர் (கிறிஸ்து) ஆட்சி செய்ய வேண்டும்" (1 கொரி
15:25). "ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும்
உமதே."
மறையுறை மொட்டுக்கள் Rev. Fr. Peter
Jayakanthan sss
பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க வீரன் ஒருவன் சுவீடன்
நாட்டில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். பக்கத்திலிருந்தவரிடம்
"
அமெரிக்கா மிகச் சிறப்பான மக்களாட்சி நாடு. யாரும்
வெள்ளை மாளிகைக்குச் சென்று அமெரிக்கக் குடியரசுத் தலைவரைப்
பார்க்க முடியும், பேச முடியும்"
என்றார்.அருகில் அமர்ந்திருந்தவர்
"
அப்படியா! அதைவிட எங்கள் நாட்டில் அரசரே மக்களோடு
பேருந்தில் பயணம் செய்வார்"
. என்றார்.
பேருந்திலிருந்து அவர் இறங்கிச் சென்றபொழுது தன்னோடு
பேசிய அவர்தான் சுவீ டன் நாட்டு அரசர் என்பதை அந்த வீரன்
கேட்டறிந்து வியந்து நின்றான்.
சிலுவையே அரியணையாக முள்முடியே மகுடமாகக் கொண்ட இயேசு
அரசரோ விண்ணிலிருந்து இறங்கி வந்து மானிடப் பிறப்பெடுத்து
மனிதரோடு ஒன்றானார். அவர் சொன்னார்: "
பிற இனத்தவரின்
அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள். அதிகாரம்
காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.
ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர்
சிறியவராகவும் ஆட்சி புரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற
வேண்டும்"
(லூக். 22:25-26).
வேந்தனுக்கழகு செங்கோல் முறைமை. ஒர் அரசனுக்கு வெற்றி தருவது
ஆயுத பலமல்ல. நீதி நெறி தவறாத ஆட்சி முறையே! அதனால்தான்
மன்னன் சாலமோனுக்காகத் திருப்பாடல் ஆசிரியர் இப்படி மன்றாடுகிறார்:
"
கடவுளே அரசனுக்கு உமது நீதித் தீர்ப்பை வழங்கும். ஆற்றலை
அளியும். அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
அவர்தம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோருக்கு
நீதித்தீர்ப்பு வழங்குவாராக!"
(தி.பா. 72:1-2).
இறுதித் தீர்ப்பு எந்த அடிப்படையில் அமையும் என்பதற்கான
இரண்டு குறிப்புகள்:
1. "
யேசுவின் வாழ்வு தரும் வார்த்தை"
(யோ. 12:48)
"
என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளாதவருக்குத்
தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு. என் வார்த்தையே அது. இறுதி
நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பளிக்கும்."
2. "
நாம் வாமும் சூவ்வுலக வாழ்க்கை"
(மத். 25:45, 46)
"
மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம்
செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லையென உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும்,
நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்".
"
ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் கடன்
கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்து
விடுவார்"
(நீ.மொ. 19:17).
நவம்பர் 11ஆம் நாள் நாம் விழா எடுத்துக் கொண்டாடும்
புனித மார்ட்டின் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
ஹங்கேரியில் பிறந்த அவர் இளமையிலேயே உரோமை இராணுவத்தில்
கட்டாயப்பணிக்கு உட்படுத்தப்பட்டார். இன்னும்
கிறிஸ்துவின் ஒளி பெறவில்லை. இருந்தாலும் ஒரு கிறிஸ்தவத்
துறவி போல் வாழ்ந்து வந்தார். ஒருநாள் கடுங்குளிர் காலத்தில்
நகரின் நுழைவாயிலில் குளிரினால் நடுங்கி அரை அம்மணமாய்
பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஏழை ஒருவரைக் கண்டார்.
தனது மேலாடையை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை அந்த ஏழையின்
மீது போர்த்தினார். அதே நாள் இரவு இயேசு
மார்ட்டினுக்குத் தோன்றி, "
மார்ட்டின், இதோ இந்தப்
போர்வையினால் என்னை நீ போர்த்தினாய்"
"
என்றாராம். இந்த
நிகழ்வுதான் பிற்காலத்தில் இரஷ்ய எழுத்தாளர்
டால்ஸ்டாயின் கதை இலக்கியத்திற்குக் கருவாக அமைந்தது.
"
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி"
. இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் படும் துன்பம்
கண்டு இறைவன் தானும் துன்பப்படுகிறார். (வி.ப. 3:7)
வாழ்வில் வருந்தும் பசித்தோரில், நோயுற்றோரில், அந்நியரில்,
ஒடுக்கப்பட்டோரில், சிறைப் பட்டோரில் தன்னை இணைத்துத்
தானே துன்பப்படுவதாகக் காட்டும் இயேசுவின் அன்புதான்
என்னே! சவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தமஸ்கு நகரை
நெருங்குகையில் இயேசு எதிர்கொண்டு, "
நீ துன்புறுத்தும்
இயேசு நான்"
(தி.ப. 9:5) எனத் துன்புறும் மக்களோடு எப்படித்
தன்னை இணைத்துக் கொள்கிறார்! இறுதித் தீர்ப்பும் இந்த
அடிப்படையில்தான்!
இயேசுவின் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று. மக்களின் இரத்தத்தில்
தனக்கு மாளிகை கட்டுபவரல்ல இயேசு. தனது இரத்தத்தில் மக்களுக்கு
விண்ணக மாளிகையை எழுப்புபவர்.
இவ்வுலக அரசினின்று வேறுபட்ட இறையாட்சியின் அளவுகோல் என்ன?
1. உணவு, உடை, உறைவிடம் யோன்ற அடிப்படைத் தேவைகளில் உதவும்
பேரன்பே, பிறரன்பே அவரது நீதித் தீர்ப்பின் அளவுகோல்.
"
நான் பசியாய் இருந்தேன். நீங்கள் உணவு கொடுத்தீர்கள்..."
(மத். 25:35-36) தன் குடிமக்களோடு தனக்குள்ள நெருங்கிய
ஒன்றிப்பைத்தான், தர்ன் வழங்கும் நீதியின் அளவுகோலாகக்
கொண்ட உயர்ந்த அரசர் இயேசு. "
இத்தகையோருக்குச் செய்தது
எனக்கே செய்தது"
(மத். 25:40).
2. தீயவர்களுக்குத் தண்டனை வழங்குவது மட்டுமல்ல,
நல்லவர்களுக்கு வெகுமதி அளித்துப் பாராட்டுவது
இறையாட்சியின் அளவுகோல். இவ்வுலக அரசு நீதி
நியாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சட்டம்
இயற்றும். இயேசுவின் அரசோ அன்புக்கு முக்கியத்துவம்
கொடுத்துப் புதிய கட்டளை தரும். நீதி என்பது
பிறருக்குரியதை, தான் கவர்ந்து கொள்ளாமல் அவரிடமே
இருக்கச் செய்வது. அன்பு என்பது தனக்கு உரியதையும்
பிறருக்குக் கொடுப்பது.
3. தீமை செய்வது மட்டுமல்ல. நன்மை செய்யத் தவறுவதும்
தண்டனைக்குரியது என்பதும் இறையாட்சியின் அளவுகோல்.
திருடினால் 'ஏன் அவ்வாறு செய்தாய்?"
என்று கேட்டுத்
தண்டிக்கும் இவ்வுலக அரசு, பிச்சைக்காரனுக்கு உதவாத
நிலையில் 'ஏழைக்கு ஏன் உதவவில்லை?"
என்று நீதிமன்றமோ,
காவல்துறையோ கேட்காது. பாவம் இரண்டு வகை. 1. செய்யும்
தீச்செயல்கள் 2. செய்யத் தவறும் நன்மைகள். கண்டு
கொள்ளாமை. செல்வரும் இலாசரும் என்ற இயேசுவின் உவமை
சொல்வது இதுதானே!
சேவை என்றாலே அன்னை தெரசாதான். "
நீங்கள் எல்லாம்
தற்செயலாக நிகழ்ந்த பிறப்பினால் இந்தியர்கள். நானோ என்
முழு விருப்பத்தால் இந்தியன்"
என்று இந்த நாட்டு
மக்களோடு மக்களாக வாழ்ந்த அப்புனிதை மறைந்தபோது,
இந்தியநாட்டின் மத்திய அரசு நிறைவேற்றிய இரங்கல்
தீர்மானம்: "
ஏழைகளிலும் ஏழைகளுக்குத் தாழ்ச்சியிலும்
அன்பிலும் இரக்கத்திலும் ஆற்றிய பணி மகத்தானது. உலகம்
வழக்கமாக ஒதுக்கித் தள்ளும் மக்களுக்கு அன்பையும்
அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரத் தன் வாழ்வை
அர்ப்பணம் செய்தார். இவரது மரணத்தால் இந்திய நாடு
மாபெரும் சமூகப் பணியாளர்களில் ஒருவரை இழந்து
நிற்கிறது'"
.
அன்னை தெரசா வெறும் சமூக சேவகியாக என்றும் தன்னைக்
கருதியதில்லை. கிறிஸ்து சேவகி என்பதில் மட்டுமே
பெருமையும் நிறைவும் கண்டவர். கிறிஸ்தவன் செய்யும்
சேவைக்குக் கிறிஸ்துவின் பார்வை தேவை!
இயேசு நிறுவியது உண்மையின் அரசு, வாழ்வு தரும் அரசு,
புனிதமும் அருளும் கொண்ட அரசு, அன்பும் நீதியும்
அமைதியும் விளங்கும் அரசு என்றால், அந்த இறைவாட்சிப்
பண்புகள் நம் வாழ்வில் மரலட்டும்!
இறையாட்சி வருக!
சிந்தனைப் பயணம்:
அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
பசியாய், தாகமாய்... சிறைப்பட்டிருக்கும் அரசர்!
இங்கிலாந்து நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டுவந்த 2ம் எலிசபெத்
அரசி, 2022ம் ஆண்டு, செப்டம்பர் 8ம் தேதி இவ்வுலகை விட்டு
மறைந்தார். அவரது அடக்கச் சடங்கு செப்டம்பர் 19ம் தேதி நடைபெற்றது.
அந்த சடங்கின் ஒரு பகுதியாக, அரசியின் சவப்பெட்டிக்கு மேல்
வைக்கப்பட்டிருந்த அவரது மகுடம், அவரது செங்கோல் ஆகியவை
நீக்கப்பட்டு, அந்த பெட்டி கீழே இறக்கப்பட்டது. அவ்வேளையில்,
உலக அரசர்கள், மற்றும் அரசிகள் அனைவருக்குமே வழங்கப்பட்டுள்ள
அதிகாரம் நிரந்தரமற்றது என்ற உண்மை அனைவருக்கும் தெளிவாகப்
புரிந்திருக்கவேண்டும். இருந்தாலும், இன்றைய உலகத் தலைவர்களில்
சிலர், தாங்கள் நிரந்தரமாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பதாக
கனவு கண்டு வருவது நாம் காணும் ஒரு வேதனையான போக்கு.
வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த மொயிசெஸ் நயிம் (Moiss Nam)
என்ற சிந்தனையாளர், சென்ற ஆண்டு வெளியிட்ட ஒரு நூலின் தலைப்பு:
"அதிகாரத்தின் பழிவாங்குதல் - எதேச்சாதிகாரிகள் 21ம்
நூற்றாண்டில் உருவாக்கிவரும் அரசியல்" ("
The Revenge of
Power How Autocrats are Reinventing Politics for the
21st Century"
) அதிகாரத்தைத் தேடும் உலகத் தலைவர்களைப்பற்றி
இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் அறிமுகப்
பிரிவில் அவர் கூறும் ஒரு சில கருத்துக்கள் இதோ:
அதிகாரம் தேடுவோரின் ஒரு புதிய சந்ததியினர், அண்மைய ஆண்டுகளில்
அடைந்துவரும் வெற்றியைப் பார்த்துவருகிறோம். இவர்கள், செல்வம்
மிகுந்த நாடுகளிலும், வறுமைப்பட்ட நாடுகளிலும், முன்னேற்றம்
அடைந்த நாடுகளிலும், முன்னேற்றம் இல்லாத நாடுகளிலும்
தோன்றியுள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராக
இருந்த டொனால்டு டிரம்ப்பை எண்ணிப் பார்க்கிறோம். அதே
வேளையில், வெனிசுவேலாவின் ஹ்யூகோ சாவேஸ், ஹங்கேரியின் விக்டர்
ஓர்பன், பிலிப்பைன்ஸின் ரொட்ரிகோ துத்தெர்த்தே, இந்தியாவின்
நரேந்திர மோடி, பிரேசிலின் ஜெயிர் பொல்சனாரோ, துருக்கியின்
ரெசெப் தையிப் எர்டோகன், எல் சால்வதோரின் நயிப் பூக்கலே மற்றும்
பலர்
அதிகாரத்தில் ஊறிப்போயிருக்கும் இவர்கள், வரம்பற்ற சக்தியைப்
பெறுவதற்கும், பின்னர் தங்களால் முடிந்தவரை அதை தக்கவைத்துக்கொள்வதற்கும்
புதிய நுட்பங்களை முன்னெடுத்துள்ளனர். வாழ்நாளெல்லாம் அதிகாரத்தைப்
பெற்றிருப்பது இவர்களது இலக்கு... அவர்கள் அடைந்துள்ள
வெற்றி, உலகம் முழுவதும் அவர்களைப்போன்ற முயற்சிகளை
மேற்கொள்ள பலரைத் தூண்டுகிறது.
21 ஆம் நூற்றாண்டின் இத்தகைய எதேச்சாதிகாரிகளை 20 ஆம்
நூற்றாண்டில் இருந்த எதேச்சாதிகாரிகளுடன் ஒப்பிட்டுப்
பேசுகிறார் ஆசிரியர். இருபதாம் நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகள்
(ஹிட்லர், ஸ்டாலின், பினோஷே, மாவ் சேதுங், மற்றும்
முசோலினி போன்றவர்கள்) முரட்டுத்தனமாக செய்ததை, இருபத்தியோராம்
நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகள் மறைமுகமாகச் செய்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகள், சட்ட திட்டங்களுக்கு
உட்பட்ட ஆட்சியை, வெறிகொண்டு அழிக்கப் புறப்பட்டனர். இருபத்தியோராம்
நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகளோ, அவர்களுக்குத் துதிபாடும்
இராணுவம், நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தின் உதவியுடன்
அதிகாரத்தில் நீடிக்க சட்டத்தையும் அமைப்பையும் பெருமளவு
மாற்றியமைத்துள்ளனர். இதற்கு, இரஷ்ய அரசுத்தலைவர்
விளாடிமிர் புடின் சிறந்த எடுத்துக்காட்டு.
2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில், விளாடிமிர் புடின் அவர்கள்,
அவரது கைப்பாவையாக இருந்த பாராளுமன்றத்தின் உதவியுடன்,
2036ம் ஆண்டு முடிய பதவியில் நீடிக்கும்படி சட்டத்தை இயற்றினார்.
அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன், 2018ம் ஆண்டு, சீனாவின் அரசுத்தலைவர்
ஜி ஜின்பிங்க் அவர்கள், வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில்
இருக்கும் முயற்சியை மேற்கொண்டு, சீன பாராளுமன்றத்தின் ஒப்புதலைப்
பெற்றார். அவ்வாண்டு அமெரிக்க அரசுத்தலைவராக இருந்த ட்ரம்ப்,
"வாழ்நாள் முழுவதும் அரசுத்தலைவர் என்பது மிகவும் அருமையான
திட்டம்... அதற்கு நாமும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால் என்ன?"
என்று கூறியதாகத் தெரிகிறது. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்
நெருங்கி வரும் நிலையில், இந்தியாவில் இதேபோன்ற நடவடிக்கையை
நரேந்திர மோடி சிந்தித்துப் பார்த்தால் நாம் ஆச்சரியப்பட
வேண்டியதில்லை. இந்த எதேச்சாதிகாரிகளின் போக்கு, நாம்
விழித்தெழுவதற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை. ஆனால், இதை
நாம் கவனத்தில் கொள்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறியே!
அதிகாரத்தின் பழிவாங்குதல் என்ற இந்நூலின் முதல் பக்கங்களில்
இரண்டு அச்சுறுத்தும் மேற்கோள்களைக் காண்கிறோம். நமது அறியாமை
மற்றும் மௌனத்தால், இத்தகைய அரக்கர்களை எவ்வாறு உருவாக்குகிறோம்
என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது:
அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் நோக்கத்துடன் யாரும் அதிகாரத்தைக்
கைப்பற்றுவதில்லை என்பதை நாம் அறிவோம். (George Orwell,
"
Nineteen Eighty-Four"
)
நமக்கு என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவதில்லை. அதுதான்
நமக்கு நிச்சயமாக நடந்துகொண்டிருக்கிறது. (Jos Ortega y
Gasset, "
Man and Crisis"
)
இத்தகையதொரு காலக்கட்டத்தில், "
அனைத்துலகின் அரசர்
கிறிஸ்து"
என்ற திருநாள் வழியே, நாம் விழிப்புணர்வு பெறுவதற்கு,
தாய் திருஅவை, இஞ்ஞாயிறன்று, நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
திருஅவையில் நாம் கொண்டாடும் அனைத்துத் திருநாள்களில், இந்த
ஒரு திருநாள், நமக்குள் சங்கடங்களை உருவாக்க வாய்ப்பு உண்டு.
கிறிஸ்துவை, நல்லாயன், நல்லாசிரியர், நண்பர், மீட்பர், என்று...
பல கோணங்களில் எண்ணிப்பார்க்கும்போது, உள்ளம் நிறைவடைகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், (எசேக்கியேல் 34:11-12,15-17) பரிவுகொண்ட
ஓர் ஆயனாக, இறைவன், தன்னையே உருவகித்துப் பேசுவதைக்
கேட்கும்போது, நம் உள்ளம் மகிழ்கிறது. அதைவிட அதிகமாக, இன்றைய
பதிலுரைப்பாடலாக வழங்கப்பட்டுள்ள "
ஆண்டவரே என் ஆயர்"
என்ற
23வது திருப்பாடலின் வரிகள், நம் வாழ்வில் பலமுறை நமக்கு
ஆறுதல் வழங்கியுள்ளன. ஆனால், கிறிஸ்துவை, அரசராக கற்பனை
செய்து பார்க்கும்போது, சங்கடங்கள் எழுகின்றன. அரசர் என்றதும்,
மனத்திரையில் தோன்றும் காட்சிகளே, இந்தச் சங்கடத்தின்
முக்கியக் காரணம்.
அரசர் என்றதும், பட்டும், வைரமும் மின்னும் உடையணிந்து,
பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும்
ஓர் உருவம், நம் கற்பனையில் வலம் வருவதால், சங்கடமடைகிறோம்.
"
அரசர்"
என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், குறுகலான
இந்த இலக்கணத்தை வைத்துப்பார்த்தால், இயேசு, நிச்சயமாக
அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர்.
ஓர் அரசை உருவாக்கியவர். அவர் உருவாக்கிய அரசுக்கு நிலப்பரப்பு
கிடையாது!
அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம்
இல்லை என்றால், எல்லைகள் இல்லை, எல்லையைப் பாதுகாக்க, போர்
இல்லை, படைகள் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை... ஆம், இயேசு
கொணர்ந்த அரசுக்கு, இவை எதுவுமே தேவையில்லை. இத்தகைய மன்னரைக்
கொண்டாடவே, கிறிஸ்து அரசர் திருநாள் நம்மை அழைக்கிறது.
கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன்
பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள்
கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிவுற்ற பின்னரும்,
உலகத்தில், பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை.
முதல் உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது, அரசர்கள்,
மற்றும் தலைவர்களின் அத்துமீறியப் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை
விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில், தங்கள் காலனிய
ஆதிக்கத்தை நிலைநாட்டி, இன்னும் பலகோடி மக்களைக் கட்டுப்படுத்தவும்
வேண்டுமென்ற வெறி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது. அரசர்களும்,
தலைவர்களும் கொண்டிருந்த அதிகார வெறியைக் கண்ட திருத்தந்தை
பதினோராம் பயஸ் அவர்கள், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக,
1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அரசராக அறிவித்தார்.
அன்று நிலவிய அதிகார வெறி, முதல் உலகப்போருடன் முடிவடையாமல்,
இரண்டாம் உலகப்போரையும் உருவாக்கியது. இன்றும், அதே அதிகார
வெறி, மூன்றாம் உலகப்போரை, சிறு, சிறு துண்டுகளாக, உலகெங்கும்
நடத்திவருகின்றது. இத்தகையப் போர்களை ஊக்குவித்து, மக்களின்
உயிர்களைக் கொன்று குவித்து அந்தக் கல்லறைகள் மேல் தங்கள்
அரியணைகளை அமைத்து அமர்ந்திருக்கும் தலைவர்களை உலகின் அனைத்து
நாடுகளிலும் இன்று காண்கிறோம்.
இத்தகையத் தலைவர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை
அரசர் என்று பறைசாற்றுகிறது, கத்தோலிக்கத் திருஅவை.
கிறிஸ்து என்ற அரசரிடமிருந்து, மக்கள், குறிப்பாக,
தலைவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத்
திருநாள் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திருநாளின் உதவியோடு,
தலைவர்கள், பாடங்களைப் பயில்வார்களா என்பது தெரியவில்லை.
நாம் பாடங்களை பயில முன்வருவோமே!
உண்மை அரசரின் பண்புகளை கற்றுக்கொள்ள, இன்று நாம் கேட்கும்
நற்செய்தி வாசகம், உதவியாக உள்ளது. மத்தேயு நற்செய்தியில்
இயேசு கூறும் இந்த இறுதி உவமையில் பங்கேற்கும்
கதைமாந்தர்கள் பலருடன், ஆண்டவர் தன்னையே இணைத்து, அவர்கள்
வடிவாகவே மாறுகிறார். அரியணையில் வீற்றிருப்பவராகமட்டும்
தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல், இவ்வுலகில் துன்புறும்
பலராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார் இறைவன். 'பசியால்
இருந்தோருக்கு நீங்கள் உணவு கொடுத்தீர்கள்' என்று அரசர்
சொல்லவில்லை; மாறாக, "
நான் பசியாய் இருந்தேன், நீங்கள்
உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத்
தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்
கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு
ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்
கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி
வந்தீர்கள்' (மத்தேயு 25: 35-36) என்று அரசர் சொல்கிறார்.
இறுதித் தீர்வையின்போது, "பசியாய் இருந்தேன், தாகமாய்
இருந்தேன்..." என்று இயேசு, தன்னையே அடையாளப்படுத்துவதை
நம்மால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. "சிறையில்
இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்று அவர்
கூறும்போது, "எந்தக் குற்றமும் செய்யாத இயேசு, சிறையில்
அடைக்கப்பட்டார்" என்று, அந்தக் கூற்றுக்கு, ஒரு விளக்கம்
தந்து, இயேசுவை ஒரு சிறைக்கைதியாக நம்மால் ஏற்றுக்கொள்ள
முடிகிறது. ஆனால், இயேசு, அவ்விதம் தன்னை
அடையாளப்படுத்தவில்லை. "குற்றமேதும் புரியாத நான்
சிறையிலிருந்தேன்" என்று அவர் கூறாமல், பொதுவாக, "நான்
சிறையிலிருந்தேன்" என்று மட்டும் கூறியுள்ளார். குற்றம்
புரிந்தோ, புரியாமலோ, சிறையில் தள்ளப்பட்டுள்ள அனைவரோடும்
இயேசு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டார். இது நமக்குச்
சவாலாக அமைகிறது.
சிறைக்கைதிகளில் இயேசுவைக் காண்பதோடு, அவர்கள்
விடுதலைபெற்று வெளியே வரும்வேளையில், அவர்களை சமுதாயத்தில்
ஒருவராக உணரச்செய்வதும் நம் பொறுப்பு. இது கடினமான ஒரு
சவால் என்பதை வெளிப்படுத்தும் ஓர் உண்மை நிகழ்வு இது:
சிறைக்கைதிகளில் ஒருவர் திருமுழுக்கு பெறுவதற்கு தன்னையே
தயார் செய்துவந்தார். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகம்
செய்துவைத்த அருள்பணியாளர், அவரிடம், "நாளை
ஞாயிற்றுக்கிழமை. நீங்கள் என்னுடன் கோவிலுக்கு வருவதாக
இருந்தால், சிறைக்காவலரிடம் நான் அனுமதி பெறுகிறேன்" என்று
கூறினார். அந்தக் கைதி, தன் கைகளிலும், முகத்திலும்
கத்தியால் கீறப்பட்ட தழும்புகளை அருள்பணியாளரிடம் காட்டி,
"சாமி, சிறையிலிருந்து வெளியேச் செல்வதற்கு, சிறைக் காவலர்
எனக்கு எளிதாக அனுமதி தந்துவிடுவார். ஆனால், இந்தத்
தழும்புகளுடன் நான் கோவிலுக்குள் நுழைவதற்கு மக்கள் அனுமதி
தருவார்களா?" என்று கேட்டார். அவரது கேள்விக்கு பதில்
சொல்லமுடியாமல், அருள்பணியாளர் அமைதியாக நின்றார்.
மனமாற்றம் பெற்று மறுவாழ்வைத் துவக்கும் எத்தனை கைதிகள்,
மீண்டும் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத கொடுமையால்,
சிறைவாழ்வே மேல் என்று எண்ணி வருகின்றனர்! இவர்களை
மீண்டும் சமுதாயத்தில் இணைப்பதற்குத் தடையாக இருப்பன, நாம்
உள்ளத்தில் அவர்களைப்பற்றி செதுக்கி வைத்திருக்கும்
முற்சார்பு எண்ணங்களே.
மூன்று ஆண்டுகளுக்கு முன், 2020ம் ஆண்டு, நவம்பர் 20ம்
தேதி, கிறிஸ்து அரசர் திருநாளன்று, சிறையில் இருந்தேன்,
என்னைத் தேடி வந்தீர்கள்' என்ற சொற்களை நற்செய்தியில்
வாசித்த வேளையில், அநீதியான முறையில் மும்பைச் சிறையில்
அடைக்கப்பட்டிருந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை நோக்கி
நம் எண்ணங்கள் திரும்பின. மற்றொரு சிறைக்கைதியின்
உதவியுடன் எழுதி, அருள்பணி ஸ்டான் அவர்கள் வெளியிட்டிருந்த
ஒரு மடலில், தான் சிறையில் உணர்ந்துவரும் மனிதாபிமானத்தை
புகழ்ந்து பேசியுள்ளார். பார்க்கின்சன்ஸ் நோயினால்
துன்புறும் அவர், உண்பதற்கும், குளிப்பதற்கும், அவருடன்
தங்கியிருக்கும் இருவர் உதவி செய்ததாக அம்மடலில்
கூறியிருந்தார். அவ்விருவரும் மிகவும் வறிய குடும்பங்களைச்
சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்காக செபிக்கும்படியும்
அவர், தன் மடல்வழியே விண்ணப்பித்திருந்தார். அநீதியான
பழிகளைச் சுமந்து, மும்பை சிறையில் அடைக்கப்பட்டிந்த 83
வயதான அருள்பணி ஸ்டான் அவர்கள் உருவில், இயேசுவும் அந்தச்
சிறையில் அடைபட்டிருந்தார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
ஏழைகள் வடிவில் இறைவன் வாழ்வதை, பல்வேறு மதங்களும்,
கலாச்சாரங்களும் பல வழிகளில் சொல்லித் தந்துள்ளன.
மெக்சிகோவில் வாழ்ந்த Aztec என்ற பழங்குடியினர் எழுதிவைத்த
ஒரு கவிதை, இறைவனை இவ்வகையில் அடையாளப்படுத்துகிறது.
மண்ணோடு மண்ணாக, சிறு, சிறு துண்டுகளைப்போல் வாழும்
மக்களைத் தேடினால், அங்கு அவர்களோடு தன்னையே
அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இறைவனைக் காணமுடியும் என்பதை,
இக்கவிதை கூறுகிறது. இக்கவிதையின் சுருக்கம் இதோ:
"வாழ்வுப் பாதையில் நீங்கள் நடந்து செல்லும்போது, உங்கள்
வாழ்வை வழிநடத்தும் ஒரு சக்தியை, கடவுளின் ஒரு சிறு
பகுதியை நீங்கள் தேடினால், கீழ்நோக்கி நீங்கள்
பார்க்கவேண்டியிருக்கும். நீங்கள் தேடும் கடவுள், சின்ன
விடயங்களில் இருப்பார், பூமிக்கு மிக நெருக்கமாக
இருப்பார். ஒருவேளை, பூமிக்கு அடியிலும் அவர் இருக்கலாம்.
கடவுளைத் தேடுவோர், தலையைத் தாழ்த்தி, கீழ்நோக்கிப்
பார்க்கவேண்டும், கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும்."
துன்புறும் மனித சமுதாயம், தன்னில் ஒரு பகுதி என்றும்,
இறைவன் ஏழையாகவே இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார் என்றும்,
இன்றைய நற்செய்தி ஆணித்தரமாகக் கூறுகிறது.
வறியோர் வடிவில் இறைவன் வாழ்வதை மீண்டும் ஒருமுறை நினைவில்
கொள்ள கடந்த வாரம் சிறப்பித்த வறியோரின் உலக நாள் நமக்கொரு
வாய்ப்பை வழங்கியது. இவ்வுலக வாழ்வு முடிந்து, இறுதித்
தீர்வை நேரத்தில், கிறிஸ்து அரசருக்கு முன் நாம் நிற்கும்
வேளையில், அரசர் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நம்மிடம்
கேட்பார்: உன் வாழ்வைக்கொண்டு, உனக்கு வழங்கப்பட்டச்
செல்வங்களை, திறமைகளை, வாய்ப்புக்களைக்கொண்டு
அடுத்தவருக்கு என்ன செய்தாய்? முக்கியமாக, செல்வம், திறமை,
உரிமை, வாய்ப்புக்கள் இவை யாவும் மறுக்கப்பட்டுள்ள
வறியோருக்கு என்ன செய்தாய்? என்பது ஒன்றே, இறைவனாக,
அரசனாக, நம் முன் தோன்றும் இயேசு கேட்கும் கேள்வி. இறுதித்
தீர்வையில் இக்கேள்விக்கு நாம் தரப்போகும் பதில், இன்று
முதல் நம் வாழ்வில் செயல்வடிவம் பெறட்டும்!
இறுதியாக ஓர் எண்ணம். ஒரு வேண்டுதல்... ஒவ்வோர் ஆண்டும்,
கிறிஸ்து அரசர் திருநாள், இளையோர் நாளாகவும்
கொண்டாடப்படுகிறது. பல்வேறு தளங்களில் 'ஸ்டார்'களாக
வலம்வரும் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்கள்
காட்டும் தவறானப் பாதைகளில் பயணித்து தங்கள் வாழ்வை
வீணடித்துவரும் இளையோர், வறியோர், பசித்தோர், நோயுற்றோர்,
சிறைக்கைதிகள் ஆகியோருடன் தங்களையே இணைத்துக்கொண்டு,
அவர்கள் வாழ்வை மேம்படுத்தி, அவர்களுடன் விண்ணக அரசில்
இடம்பெறும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்று சிறப்பாக
செபிப்போம்.
ஞாயிறு மறையுரை- திரு. சின்னப்பன் டிசில்வா. -
வெலிங்டன்.ஊட்டி
நமது இடம் "
வலமா இடமா"
வாழ்ந்து
காட்டுவோம்
அந்த நாள் வந்துவிட்டது நாம் ஆயத்தமா?... பெற்றுக்கொண்ட
போதனைகள், வாழக் கற்றுக் கொண்ட வழிமுறைகள், எடுத்துக்காட்டாய்
எண்ணங்களில் இணைந்த உவமைகள், கண்டிப்புடன் கடைபிடிக்க
வேண்டிய கற்பனைகள் - கட்டளைகள் என எத்தனை எத்தனை. கடந்த
33 வாரங்களாக நமக்குத் தரப்பட்டன சற்று பின்னோக்கி
சிந்திப்போம். நாம் கற்றுக் கொண்டவைகளும் கைப்பற்றியவைகளும்
கடவுள் முன் நமக்கு எந்த இடத்தைத் தந்துள்ளது என்பதை கவனிப்போம்.
இறைவன் முன் அழைப்புப் பெற்றவர்களுக்கு வலப்புறமும் இறைவனை
விட்டு விலக்கப்பட வேண்டியவர்களுக்கு இடப்புறமும் உறுதி
செய்யப்பட்டுள்ளது. (மத்தேயு நற்செய்தி 25:33)
நமது இடம் வலமா? இடமா? இறைவன் நமக்குத் தரும் இட ஒதுக்கீடு
என்ன?.
நமக்குத் தேவையான பதிலைத் தரும் சிறுகதையைக் கவனமுடன்
வாசிப்போம்.
விண்ணகத்திற்குள் நுழைய அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு
நிற்கிறார்கள். வாசலில் நிற்கும் பேதுரு நுழைவுச்சீட்டு உள்ளவர்களை
மட்டும் அனுமதிக்கின்றார். மற்றவர்கள் வெளியே தள்ளப்படுகிறார்கள்.
.வெளியே தள்ளப்பட்டவர்கள் கோபத்துடன், நாங்கள் என்ன தவறு
செய்தோம்? ஏன் எங்கள் அனுமதி மறுக்கப்படுகிறது? என்று
கூக்குரலிட ஆரம்பித்தார்கள். இதனைக் கேள்வியுற்ற இறைவன் அங்கு
வந்து; என்ன ஓசை இடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்களோ எங்களுடைய
விண்ணக அனுமதி மறுக்கப்படுகிறது, என்ன தவறு செய்தோம்? நாங்கள்
கால காலமாக உமது கற்பனைகள் படியும் நியமங்கள் படியும்
வாழ்ந்தவர்கள் தானே. அனுமதி பெற்று விண்ணகத்திற்குள் சென்றவர்களுக்கும்
எங்களுக்கும் என்ன வித்தியாசம்? என்று மீண்டும் ஓசை எழுப்பினர்.
இறைவன் அவர்களை நோக்கிக் கவலை வேண்டாம் இதோ அவர்களுக்கும்
உங்களுக்கும் இனிய விருந்தொன்று ஏற்பாடு செய்கின்றேன்.
யார் அதை முழுமையாக நிறைவாக உண்டு முடிக்கிறார்களோ! - அவர்கள்
அனைவரும் விண்ணகம் செல்லலாம் என்று கூறினார்.
வலப் பக்கம் இருப்பவர்களுக்கும் இடப்பக்கம் நின்றவர்களுக்கும்
அறுஞ்சுவை விருந்தைப் படைத்து, அனைவரையும் உண்ண அழைக்கின்றார்.
விருந்து பரிமாறப்பட்ட மேசையின் இருபுறமும் அனைவரும் அமர்ந்தபின்
உண்ண ஆரம்பிக்கும் முன் இறைவன் ஒரு நிபந்தனையை அவர்கள்
முன் வைத்தார். இந்த உணவு உங்களுக்காகவே உங்களுக்கெனப் படைக்கப்பட்டு
பரிமாறப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக நீங்கள் உண்ணலாம் ஆனால்,
ஒரு நிபந்தனை உணவை உண்ணும்போது யாரும் தங்கள் கைகளை மடக்கக்
கூடாது - கைகளை மடக்காமல் உண்ண வேண்டும் என்றார். கேட்ட அனைவரும்
வியப்புக்கு ஆளானார்கள்.
விண்ணகத்திற்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் இடது புறம்
நின்ற அனைவரும் இது எப்படி சாத்தியம்? இறைவன் நம்மை
விருந்துக்கு அழைத்து அவமதிக்கின்றார் என்று கோபம் கொண்டு
கூக்குரல் எழுப்பினார்கள். இந்த நிபந்தனையின்படி உணவை எங்களால்
உண்ண முடியாது. கைகளை மடக்காமல் உணவு எப்படி உண்ண
முடியும்? நிபந்தனையை மாற்றுங்கள் என்று ஓசையிட ஆரம்பித்தார்கள்.
பதிலாக இறைவன் - நான் தந்த நிபந்தனை அனைவருக்கும் சமமாகத்
தானே இருக்கின்றது, சற்று வலது பக்கம் திரும்பிப் பாருங்கள்
என்று கூறினார். அங்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இருக்கையை விட்டு எழுந்து, தங்கள்
முன் நிற்பவர்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு, இன் முகத்தோடு,
விருந்தை உண்ண அவர்களை அழைத்தவர்களாகத் தங்கள் கைகளை
நீட்டியவாரே படைக்கப்பட்ட உணவை எடுத்துத் தங்கள் எதிரே இருந்தவர்களுக்கு
(அயலானுக்கு) உண்ணக் கொடுத்தார்கள். ஒருவர் மற்றொருவருக்கு
உணவூட்டி உள்ளம் மகிழ்ந்தார்கள். வானக விருந்தை உண்டு
முடித்தவர்கள் விண்ணகத்தில் இறைவனுக்குள் மகிழ்ந்திருந்தார்கள்.
விருந்தை உண்ண முடியாதவர்கள் அருகில் நின்ற அயலானை
நினைத்தும் பார்க்காதவர்கள் . அருவருப்பும் அங்கலாய்ப்பும்
நிறைந்த இருளுக்குள் தள்ளப்பட்டார்கள். இறைவன் இந்த முடிவு
நீங்களாகவே தேர்ந்து கொண்டது இதற்கு நீங்களே சாட்சி என்று
கூறினார்.
இந்தக் கதையை இன்னும் சற்று உணர்ச்சிபூர்வமாக ரத்தமும் சதையுமாக
நற்செய்தியில் நல்ல சமாரியன் உவமை வழியாக வாழ்வு பெறும்
வழியைத் தேடும் மறைநூல் அறிஞனுக்கு ஆண்டவர் இயேசு,
யாருக்கு யார் அயலான் என்றும், வாழ்வின் வழியைப் பெற்றுக்
கொள்ள என்ன செய்ய வேண்டும் என்றும் எடுத்துக்
கூறுகின்றார். (லூக்கா நற்செய்தி 10:31-33).
நாம் யார்?.. நம் திறமைகள் என்ன ?.. தகுதிகள் என்ன?.. என்பனவைகளை
விட, நம்மிடமிருந்து வெளிப்படும் மனிதநேய செயல்கள் மட்டுமே;
நம்மையும் செம்மறி ஆடுகள் என வலப்பக்கம் நிற்க, நிருத்த
உதவி செய்யும். பலநிலைகளில் இறைவனுக்கு உகந்தவை என்று நாம்
செய்த பல நல்ல காரியங்களைவிட, இந்த மனிதம் மகிழும் மனிதநேய
செயல்களே நமக்கு நமது விண்ணகத் திறவுகோலாக அமைகின்றது என்பதே
உண்மை என்கிறார் இறைமகன் இயேசு.
இன்றைய நற்செய்தி தரும் முடிவுரையை கவனமுடன் கேட்போம்
என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம்
தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்
ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். (மத்தேயு
நற்செய்தி 25:34). மிகச் சிறியோராகிய என் சகோதரர்
சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே
செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப்
பதிலளிப்பார். என்கிறது நற்செய்தி. (மத்தேயு 25:40).
"
நான் யார்?"
என்ற கேள்விக்கு,
நான் மனிதத்தை - மனிதநேய செயல்களைச் சுவாசிப்பவன் என்று
பதில் கூற முடிந்தால் ஆதியில் இறைவனோடு அசைவாடிக்
கொண்டிருந்த வார்த்தை இன்றும் இப்போதும் நமது உள்ளத்தில்
அசைவாடிக் கொண்டிருப்பதும் உண்மை என்பதில் ஐயமில்லை.
நமது இடம் "
வலமா - இடமா"
வகைப்படுத்தி வாஞ்சையுடன்
வாழ்வாங்கு வாழ்ந்திட வல்லவனை வாழ்நாள் எல்லாம்
வழிபடுவோம். அயலானை வளத்துடன் வாழச் செய்வோம். வாழ்க
வையகம்.
இறைவன் நம்மோடு.
உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே!
என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!