ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

       பொதுக்காலம் 21ஆம் வாரம் - ஞாயிறு

    திருப்பலி முன்னுரை

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
வாழ்க்கையை வசந்தமாக்கும் வார்த்தைகளைத் தேடி வந்திருக்கும் அன்பு நெங்சங்களே!
B தவக்காலம்1

அழுகையின் ஆழத்தில் புதைத்துவிடும் அவமான வார்த்தைகள் அச்சமூட்டுகின்றன. கோபத்தின் இரக்கமற்ற வார்த்தைகள் கொலை வெறியைத் தூண்டுகின்றன. அநீதிக்கு அடிமையான வார்த்தை நீதியைப் பேச மறுத்து ஓய்வெடுத்துப் படுத்துக் கிடக்கின்றன. சொல்லிய வார்தைகளுக்கும் சொல்லாமல் போன வார்த்தைகளுக்கும் நிறைய வருந்த வேண்டியிருக்கின்றது வலி வாளினால் மட்டுமல்ல வருத்தம் தரும் வார்த்தைகளாலும் வருகின்றன. இப்படியான சூழலில் யாரிடம் செல்வோம் என ஏங்கும் நம் இதயத்தைத் தேடி வாழ்வு தரும் இதமான வார்த்தைமழையை அருவி நீராய் ஓடி வந்து பாய்ச்சுகிறது இந்த 21 ஆம் ஞாயிறு திருப்பலி.

வார்த்தைகள் வலிமை மிகுந்தது. சரித்திரம் படைக்கும் சக்தி மிகுந்தது. வார்த்தைகள் ஆயுதங்களைவிடக் கூர்மையானது. சரியான வார்த்தையை சரியான சூழலில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். ஆறுதல் தரும் வார்த்தை, அன்புகலந்த வார்த்தை, கோப வார்த்தை, தன்னம்பிக்கை வார்த்தை, மீட்டெடுக்கும் வார்த்தை இப்படியான வார்த்தை நமக்குள்ளோ சமூகத்திலோ பிரமிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

மன்னித்துவிடு" "பரவாயில்லை" என்ற ஒற்றை வார்த்தைகள் உரசலைத் தவிர்க்கும் உயவு எண்ணெய் போன்றது. நம் காதில் திரும்பத் திரும்ப விழும் வார்த்தைகள் நம்மை வழி நடத்தும். காதில் விழும் வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறது. எப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கிறோமோ, பயன்படுத்துகிறோமோ அதுவாகவே நம் எண்ணம் செயல்பட முயற்சிக்கும்.

நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக வாழ்வு தரும் இறை வார்த்தைகளை அன்புக் கடிதமாகக் கடவுள் விவிலியத்தின் வடிவத்தில் நமக்குத் தந்திருக்கிறார். இதை வாசிக்கும் போதும், கேட்கும் போதும் வாழ்வு பெறுகிறோம். ஆறுதலை இழந்து தவிக்கும் போது ஆறுதல் வார்த்தையால் தேற்றப்படுகிறோம். நம்பிக்கையிழக்கும் போது இறை நம்பிக்கை வார்த்தையினால் பலப்படுத்தப்படுகிறோம். இறைவன் நமக்காக நம்மோடு வார்த்தை வடிவத்தில் திருப்பலியில் உரையாடுகின்றார்.

யாரிடம் செல்வோம் இறைவா? வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் உள்ளது. என சீடர்கள் இயேசுவிடம் சொன்னது போல நாமும் நமது நம்பிக்கையை இயேசுவிடம் திருப்பி வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் இறைவா உம்மிடம் உள்ளது என சொல்ல முயற்சிப்போம். நம்மிடம் வருபவர்களுக்கு வாழ்வு தரும் வார்த்தைகளை நம்மால் உச்சரிக்க முடியுமா? என நாம் பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகளை உள் வாங்கி சிந்திப்போம். வாழ்வுதரும் வார்த்தைகளை தாங்கி வந்திருக்கும் திருப்பலி இது. வார்த்தையை வாழ்வாக்க வரம் கேட்டு திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
வார்த்தை வடிவத்தில் எம்மோடு வழி நடக்கும் இறைவா!
வார்த்தையான உம்மை மகிமைப்படுத்த உழைக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் தகுந்த தயாரிப்புடன் திரும்பத் திரும்ப ஆற்றும் மறையுரை வார்த்தைகளால் மக்களின் வளமிகு வாழ்வுக்கு வழிகாட்டிட அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. வாழ்வு தரும் வார்த்தையை எமக்குத் தருகின்ற இறைவா!
மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்த நாட்டுத் தலைவர்களுக்கு அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நிலைவாழ்வளிக்கும் வார்த்தைகளை வாழ்வாக்க குருக்களைத் தேர்ந்தெடுத்த இறைவா!
வார்த்தையை வாழ்வாக்க வழிகாட்டும் எம் ஆன்மீகத்தந்தையின் பணிவாழ்வை ஆசீர்வதிக்கவும் அவர் வழியாக நாங்கள் வாழ்வு பெறவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பும் அக்கறையும் மிகுந்த இனிய வார்த்தைகளால் எமை நேசிக்கும் இறைவா!
காயம்பட்ட வார்த்தைகளால் கனத்த இதயத்தோடு வந்திருக்கின்ற இறைமக்கள் எல்லோரின் இதயக் குமுறலை நீக்கி ஆறுதல் வார்த்தைகளையும், அன்பு வார்த்தைகளையும் சந்தித்து அமைதியான வாழ்க்கை வாழ அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. மீட்பளிக்கும் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைத் தருகின்ற இறைவா!
நோயாளிகள் சுகம் தரும் வார்த்தைகளைக் கேட்கவும், சமாதானக் குறைவோடு இருப்பவர்கள் சமாதான வார்த்தைகளைக் கேட்கவும், மகப்பேறு இல்லாதோர் . மழலை ஒலி கேட்கவும், முதியோர் தங்களுக்கான ஆறுதல் மொழி கேட்கவும், அவமானத்தால் தலை குனிந்து வாழ்வோர் மதிப்புமிகு வார்த்தைகளைக் கேட்கவும், அநியாயமாகப் பாதிக்கப்பட்டவர்கள் நியாயமான வார்த்தைகளைக் கேட்கவும் அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



 
மறையுரை சிந்தனைகள்


அது ஒரு மிகப் பெரிய மடாலயம். ஒரு காலத்தில் அங்கு பேச்சுரிமை தடை செய்யப்பட்டிருந்தது. தடை என்றால் உங்க வீட்டுத் தடை எங்க வீட்டுத் தடை அல்ல மாபெரும் தடை.
யாரும் பேசக் கூடாது. பேசவே கூடாது. ஒரே ஒரு விதிலக்கு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புத்த பிட்சுகள் மட்டும் பேசலாம் அதுவும் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும்! அந்த புத்தமடத்தில் தலைமைப் பிஷு இருந்தார். அவரது சீடர் ஒருவர் அந்த மடத்தில் 10 ஆண்டுகளை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கழித்தார். பின்னர் தலைமைப் பிஷுவிடம் வந்தார்.
"சொல்லு நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?"
"படுக்கை கடினம்"
"ஓ அப்படியா" என்று பதிலளித்தார் தலைமை குரு.
பத்தாண்டுகள் கழித்து அந்த பிஷு திரும்பி தலைமை குருவிடம் வந்தார்.
"ஓ அதற்குள் பத்தாண்டுகள் போய்விட்டதா" கேட்டார் தலைமை குரு.
"சரி இந்த முறை நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?"
"சாப்பாடு நாத்தம்.."
"ஓ அப்படியா" என்று கேட்டுக் கொண்டார் தலைமை குரு.
மேலும் பத்தாண்டுகள் கழிந்தன. பிஷு வந்தார்.
தலைமை பிஷூ 'ம்.. பத்துவருடங்கள் ஓடிவிட்டன இப்போது நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?" என்றார்.
"நான் போகிறேன்"
"நல்லது" என்றார் குரு.
பின்னர் "கண்ணா இது நான் எதிர்ப்பார்த்த ஒண்ணுதான்" என்ற தலைமை குருஇ "இந்த முப்பது வருடங்களும் நீ ஒன்றை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருந்தாய் அது புகார்.. கிளம்பு!" என்றார்.
சுவாங்ட்ஸ என்பவர் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன மேதை ஜென் மாஸ்டர் .
ஒருமுறை அவருடைய சிஷ்யர் ஒருவர் கேட்டார் "குருவே நீங்கள் எத்தனையோ பெரிய மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அவர்களில் உங்களுடைய மனதை கவர்ந்தவர் யார்? சுவாங்ட்ஸ சிரித்தார். என்னுடைய மனதை கவர்ந்த அந்த மனிதரை நான் இன்னும் சந்திக்கவில்லை!
அப்படியா? யார் அவர்?
வார்த்தைகளை மறந்த ஒருவர்!
புரியவில்லையே!
சுவாங்ட்ஸ விளக்கத் தொடங்கினார். நீங்கள் வலை வீசி மீன் பிடிக்கிறீர்கள். மீன் கிடைத்தவுடன் வலையை என்ன செய்வீர்கள்?  தூர வீசிவிடுவோம்.  ஆக வலை தூர வீசப்படும்வரை உங்களுக்கு மீன் இன்னும் கிடைக்கவில்லை என்று அர்த்தம் இல்லையா?   ஆமாம் குருவே!
அதேப்போல் முயலைப் பொறி வைத்துப் பிடிக்கிறோம். முயல் கிடைத்தவுடன் பொறியைத் தூர வீசிவிடுகிறோம். இல்லையா?  உண்மைதான். அதற்கென்ன?
வலை பொறியைபோலதான் நாம் பேசும் வார்த்தைகளும். அவை உயர்ந்த கருத்துக்களைக் கொண்டுசெல்லும் வாகனங்கன். நாம் அந்தக் கருத்தைப் புரிந்துகொண்டவுடன் வார்த்தைகன் மறந்துபோகும் என்றார் சுவாங்ட்ஸ. ஆனால் நான் சந்தித்த எவரும் வார்த்தைகளை இன்னும் மறக்கவில்லை. தொடர்ந்து அவற்றோடுதான் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் உலகப் பேருண்மைகளை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்?


இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா?" என உங்களில் எவருக்கும் தோன்றினால் தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில் பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும். யார் கண்டது? ஒரு புன்னகையில் ஒரு சொல்லில் ஒரு கையின் வெப்பத்தில் ஒரு ஆழமான பார்வையில் ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.

தற்கொலையை நோக்கி நகரும் ஒருவருக்கு சில சமயம் வெற்று வார்த்தைகள் எதுவும் இல்லாமல் சில சின்ன சின்ன செயல்கள் கூட அவரை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டு வரலாம். இந்த வார்த்தைகள் தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று தோன்றுகின்றது. இந்த ஆறுதல் வார்த்தைகள் உதவுவது மரணத்தை நோக்கிச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல. மரணத்தைப் பற்றி சிந்திக்காத உடலால் வாழ்ந்து கொண்டு உணர்வால் இறந்து கொண்டிருக்கும் சிலருக்கு கூட இப்படி சில ஆறுதல் வார்த்தைகளோ அன்றில் வார்த்தைகள் எதுவுமற்ற செயல்களோ அவருள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நிரந்தரமற்ற இந்த வாழ்வில் எவரும் எப்போதும் இல்லாமல் போகலாம். அப்படி இருக்கையில் ஒருவர்மேல் ஒருவருக்கு எதற்கு தேவையற்ற ஆதங்கங்கள் கோபங்கள். சில சமயம் உண்மையான அன்பால் பிணைக்கப்பட்டவர்களே கூட கோப தாபங்களால் ஒருவரை ஒருவர் வருத்திக் கொள்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ஒருவருக்கு ஏதாவது ஆகி விட்டால் மற்றவரின் நிலை என்ன? நாம் வாழும் குறுகிய வாழ்க்கை காலத்தை ஏன் நல்ல விதமாக அமைத்துக் கொள்ளக் கூடாது?

இனிய வார்த்தைகளைப் பயன்படுத்துவோம். இறைவன் நமக்காகத் தந்த இறை வார்த்தைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி மகிழ்வோம்.
வெறுப்பு, ஏமாற்றம் ,விரக்தி இதனால் பழிவாங்கும் வார்த்தை, அடக்கி ஆளும் வார்த்தை இவைகளைத் தவிர்ப்போம்.
குடும்பங்களில் அன்பு கலந்த அமைதி வார்த்தையை விதைப்போம்.
கணவன் மனைவி சந்தேக வார்த்தைகளைத் தவிர்ப்போம்.
பிள்ளைகளை நற்பண்பில் வளர்த்தெடுக்கும் வார்த்தைகளினால் உருவாக்குவோம்.
முதிர் வயதுப் பெற்றோரைப் பாதுகாக்கும் வார்hத்தைகளால் தாங்குவோம்.
உறவினரை உறவு வார்த்தைகளால் உறுதிப்படுத்துவோம்.
தாழ்ச்சி மிகு வார்த்தைகளை பயன்படுத்தி பணிவான வாழ்க்கையால் பணிசெய்கின்ற இடங்களை அழகுபடுத்துவோம்.
வார்த்தையின் வடிவத்தில் விவிலியத்தின் வழியாக நம்மோடு உரையாடும் இறைவனை இனம் காண்போம்.
அவர் பாதையில் பயணிக்க நாள் தோறும் இறை வார்த்தையை வாசிப்போம்.
வாசிக்கும் வார்த்தையை வாழ்வாக்குவோம்.
நல்ல வார்த்தைகளால் சுபிட்சமான வாழ்க்கை வாழ முன்வருவோம்
.நறசெய்தி வார்த்தைகளால் வாழ்க்கையை அமைத்து மகிழ்வோம்.
மனதுக்குப் பிடித்த இறைவார்த்தைகளை மீண்டும் மீண்டும் படித்து வாழ்க்கையின் தரத்திற்கு மெருகு கூட்டுவோம்.
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நற்செய்தி வார்த்தையை நாலுபேருடன் பகிர்ந்து மகிழ்வோம்.

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா?

இம்மாதிரியான கேள்வியை எல்லோராலும் கேட்க முடியாது. அளவுக்கதிகமாக அன்பு செய்பவர், அன்பு செய்யப்படுவரால் மட்டுமே இக்கேள்வியைக் கேட்க முடியும். இதுவரை உடன் இருந்த இவர்கள் இனி தனிமையை நமக்கு பரிசாக தந்து விடுவார்களோ என்ற பயம் ஏக்கம் இருப்பவர்கள் இம்மாதிரியானக் கேள்வியைக் கேட்பார்கள். ஏனெனில் தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமாக எடுத்துக் கொண்டால் இனிக்கும். மற்றவர்களால் அது நமக்குக் கொடுக்கப்பட்டால் கசக்கும். இயேசுவுக்கு இத்தகைய தனிமையோ, பயமோ, ஏக்கமோ இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் நடக்க இருப்பது அனைத்தையும், முன்னரே அறிந்தவர். இருப்பினும் நீங்களும் என்னைவிட்டுப் போய்விட நினைக்கின்றீர்களா என்று சீடர்களைப்பார்த்துக் கேட்கிறார். எதற்காக? அவர்களின் உளப்பாங்கினை தெரிந்து கொள்வதற்காக. எண்ணத்தை அறிந்து கொள்வதற்காக கேட்கிறார்.

தனது சீடர்களையும் மக்களையும் அளவுக்கதிகமாக அன்பு செய்து, அவர்களாலும் அபரிமிதமாக அன்பு செய்யப்பட்டவர் இயேசு. அப்படியிருக்க அவரை சூழ்ந்திருந்த ஏராளமான மக்கள் கூட்டம் மறைந்து சுருங்கி பன்னிரண்டு சீடர்கள் என்று வந்திருக்கும் நிலைமையில் கேட்கிறார். அவர்களைப் போல நீங்களும் என்னை விட்டுப் போய்விட நினைக்கின்றீர்களா என்று. இந்த கேள்வி இன்றைய அவர்தம் சீடர்களாகிய நம்மிடம் கேட்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தூங்கி எழுந்து ஊர் சுற்றிப் பார்த்து என் விடுமுறையை பயனுள்ளதாக்குவேன், நண்பர்களுடன் வண்ணத்திரை சின்னத்திரை பார்த்து மகிழ்ந்து இன்புறுவேன், என்று உலகப்போக்கில் வாழும் ஏனைய கிறிஸ்தவ மக்களைப் போல நீங்களும் என்னைவிட்டுப் போய் விட நினைக்கின்றீர்களா? என்று கேட்கிறார். அவரது கேள்விக்கு தூய பேதுருவின் பதிலைப் போல நாம் இங்கு அமர்ந்திருக்கின்றோம் . யாரிடம் செல்வோம் இறைவா, வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன என்று கூறி அவர் வார்த்தைக்கு செவிமடுக்க வந்திருக்கிறோம். ( அப்ப... விண்ணகத்தின் திறவுகோல் நமக்கும் சொந்தம் தானே....)

இன்றைய மூன்று வாசகங்களும் இணைந்திருத்தலைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் யோசுவா இஸ்ரயேல் மக்களை யாவே இறைவனுடன் இணைந்திருக்க வலியுறுத்துகிறார். அதற்கு முன்மாதிரிகையாக தன்னையும் தன் குடும்பத்தாரையும் சுட்டிக்காட்டுகிறார். நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம். நீங்கள் யாரை வழிபட இருக்கின்றீர்கள் இப்போதே முடிவு செய்யுங்கள் என்கிறார். இறைவனோடு இணைந்திருந்ததால் நீங்கள் பெற்ற நன்மைகள் என்னென்ன என்பதை அவர்கள் நினைவிற்கு கொண்டு வருகிறார். ஆண்டவரைப் பின்பற்றாத, பிற தெய்வ வழிபாடு நிகழ்த்தும் மக்கள் அடையும் இன்னல்கள் என்னென்ன என்பதையும் இஸ்ரயேல் மக்கள் நினைவு கூறுகின்றனர். இன்று நாம் இணைந்திருக்கிறோம் இறைவனோடு அல்ல அதைவிட அதிகமாக இணையத்தோடு. தனிமையை யாரும் நமக்கு பரிசாக தந்து விட முடியாது. ஏனெனில் நாம் அதிகமாக தனிமையில் தான் இருக்கிறோம். இணையத்தோடு இணைந்து ஆனால் பிறரோடு இணைய விரும்பாமல். இந்த இணைய இணைப்பை விடுத்து இறை இணைப்போடு வாழ இறைவன் நம்மை அழைக்கிறார். நீங்கள் யாரை வழிபட இருக்கின்றீர்கள் இணையத்தையா/ இறைவனையா? சிந்திப்போம்.
இன்றைய இரண்டாம் வாசகம் குட்டித்திருச்சபையாம் குடும்பத்தைப் பற்றிப் பேசுகிறது. தலையாம் கணவனும், உடலாம் மனைவியும் இணைந்து திருச்சபை என்னும் குடும்பத்தை நல்ல முறையில் உருவாக்க அழைக்கப்படுகிறார்கள். மனைவி கணவனுக்கு பணிந்திருப்பது , கணவன் மனைவியை முழு உள்ளத்தோடு அன்பு செய்வது இவை அனைத்தும் குடும்பம் செழித்து வளர மிகவும் முக்கியமானவை. கிறிஸ்து திருச்சபையை அன்பு செய்வது போல், நாம் ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல என்று ஒவ்வொன்றையும் கிறிஸ்துவிற்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறார். இதிலிருந்து திருமணம் என்பது வெறும் சடங்கல்ல, அதில் மாபெரும் மறைபொருள் அடங்கி இருக்கிறது என்று கூறுகிறார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணம் ஒரு வெற்றுச்சடங்காக மாறிவிட்டது. நினைத்தவுடன் காதல் செய்து, அவசரமாய் திருமணம் செய்து, அற்ப காரியங்களுக்காக பிரிந்து விடுவது தான் இப்போதுள்ள நடைமுறையாக இருக்கிறது. கிறிஸ்து திருச்சபை நிலைத்து நிற்க தன்னையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் கழுவி அதை தூய்மையாக்கினார் என்று வாசிக்கக் கேட்டோம். திருமணம் நிலைக்க, குட்டித் திருச்சபை உருவாக, கணவன் மனைவியர் இருவருமே தங்களை ஒப்புவிக்க வேண்டும். பொதுவாக குடும்பத்தில் நல்ல சுமூகமான உறவு நீடித்து நிலைக்க இரண்டு வார்த்தைகளைக் கடைபிடித்தால் போதும் என்பர். அவை சரி, சாரி. ஆம் பிறர் கூறுவதைக் கேட்டு சரி என்று ஏற்றுக்கொள்ளும் மனம் . மற்றொன்று செய்த தவறுக்கு (சாரி) மன்னிப்பு என்று கேட்கும் குணம். இரண்டும் இருந்தால் போதும் அவை நம்மையும் குடும்பத்தில் இணைக்கும், நம் குடும்ப உறவையும் நீடித்து நிலைக்க வைக்கும்.

ஊனியல்பு என்னும் நம்முடைய தேவையற்ற நான் என்னும் தன்முனைப்பினை விடுத்து, நாம் நமது என்னும் வாழ்வு தரும் ஆவியை பெற்றுக் கொள்ள முயல்வோம். நமது வேலை, பழக்க வழக்கம், பணம் இவற்றை எல்லாம் விட நம்முடன் வாழ்பவர்களை அதிகமாக அன்பு செய்ய முயல்வோம். ஏனெனில் அவைகளுக்கெல்லாம் நம்மேல் பதிலன்பு செலுத்தத் தெரியாது. உடன் வாழ்பவர்களுக்கே பதிலன்பினை பல மடங்கு செலுத்தத் தெரியும்.

இறுதியாக , திருமணத்தின் போது மோதிரம் மாற்றும் பழக்கம் நம்மிடம் உண்டு . ஏன் மோதிர விரலில் அதனை மாட்டுகிறார்கள் தெரியுமா? நமது இதயத்திலிருந்து ஒரு நரம்பு நேரடியாக மோதிர விரலுடன் இணைக்கப்பட்டுள்ளதாம் அதனால் தான் திருமணத்தின் போதும் ஏனைய துறவற வார்த்தைப்பாடுகளின் போதும் மோதிரத்தை அவ்விரலில் மாட்டுகிறார்கள். இதன் முலம் இதயப் பூர்வமாக சொல்கிறார்கள் நாங்களும் எம் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம் என்று.

நாமும் இதயப் பூர்வமாக சொல்வோம் ஆண்டவரே நீரே எங்கள் கடவுள் உமக்கே நாங்கள் ஊழியம் புரிவோம் . உம்மை விட்டு வேறு யாரிடம் செல்வோம்....

இத்தகைய அருள் நிலையினை நாம் அடைந்திட அவரோடு நிலைத்து வாழ்ந்திட அருள் வேண்டுவோம். இறைவன் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாருடனும் இருப்பாராக ஆமென்.
 
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
நமக்குத் தெரியாதா?

'தெரியும்' என்ற தமிழ் வார்த்தை 'நம் கண்கள் பார்ப்பதையும்,' 'நம் மனம் அறிவதையும்' குறிக்கிறது. உளவியிலில் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளக் கற்பிக்கும் நுணுக்கத்தில் 'ஜோஹரி ஜன்னல்' (Johari Window) என்ற ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஜன்னலில் நான்கு கட்டங்கள் இருக்கும்: (அ) எனக்குத் தெரியும், பிறருக்குத் தெரியும், (ஆ) எனக்குத் தெரியாது பிறருக்குத் தெரியும், (இ) எனக்குத் தெரியும் பிறருக்குத் தெரியாது, (ஈ) எனக்கும் தெரியாது பிறருக்கும் தெரியாது. எ.கா. 'நான் அணிந்திருக்கும் சட்டையின் நிறம் கறுப்பு' - இது எனக்கும் தெரியும், பிறருக்கும் தெரியும். 'என் சட்டையின் பின்பக்கம் கிழிந்திருக்கிறது' - இது எனக்குத் தெரியாது, பிறருக்குத் தெரியும். 'நான் இப்போது தனிமையாக உணர்கிறேன்' - இது எனக்குத் தெரியும், பிறருக்குத் தெரியாது. 'நாளை மழை வரும்' - இது எனக்குத் தெரியாது, பிறருக்கும் தெரியாது.

இந்த நான்கு கட்டங்களில் நம் வளர்ச்சியை நிர்ணயிக்கும் மற்றும் தடை செய்யும் கட்டம் 2வது கட்டம். எப்படி?

'என் சட்டையின் பின்பக்கம் கிழிந்திருப்பது' எனக்குத் தெரியாது. ஆனால் அது பிறருக்குத் தெரியும். நான் வகுப்பிற்குச் செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். கிழிந்த சட்டையோடு நான் மாணவர்முன் நின்றால் அது நான் என்னைப் பற்றி அக்கறையில்லாதவனாய் இருக்கிறேன் என்ற ஒரு உருவத்தை அவர்கள் மனத்தில் உருவாக்கும். அல்லது கிழிந்த சட்டை போட்டிருப்பதால் எனக்கே அது எதிர்மறையான உணர்வைத் தரும். நான் பாதிவழி போய்க்கொண்டிருக்கும்போது வழியில் வரும் ஒரு மாணவர், 'ஃபாதர் உங்க சட்டை பின்னால் கிழிந்திருக்கு' என சுட்டிக்காட்டும்போது, நான் உடனடியாக அறைக்குச் சென்று சட்டையை மாற்றிக்கொள்கிறேன். ஆக, அந்த மாணவர் சுட்டிக்காட்டியதால் நான் இங்கே வளர்கிறேன். ஆனால், அதே வேளையில், 'எனக்குத் தெரியவில்லை என்றாலும், 'எனக்குத் தெரியாதா?' நீ வேலையைப் பார்த்துக்கொண்டு போ' என்று சொல்லும்போது, அதுவே என் வளர்ச்சியைத் தடை செய்கிறது.

ஆக, எனக்குத் தெரியவேண்டுமென்றால் மற்றவர் எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

'தெரிதலும், கற்றுக்கொடுத்தலும்' என்ற இரண்டு வார்த்தைகள் நம் வாழ்நாள் வரை நம்மோடு வரக்கூடிய வார்த்தைகள். ஏனெனில் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், பொழுதிலும் நாம் தெரிந்துகொள்கிறோம், கற்றுக்கொடுக்கப்படுகிறோம்.

'தெரிதல்' 'கற்றுக்கொடுத்தல்' என்ற இரண்டு வார்த்தைகளை மையமாக வைத்து இன்றைய வாசகங்கள் சுழல்கின்றன:

அ. 'நான் நல்லவன் அல்ல. நான் சாக வேண்டும்' என்று தன்னைத் தெரிந்து வைத்துள்ளார் எலியா. ஆனால் இறைவன், 'நீ எழுந்து சாப்பிடு. நீண்ட பயணம் செய்ய வேண்டும்' எனக் கற்றுக்கொடுக்கின்றார்.

ஆ. 'இயேசுவின் சிலுவை இறப்பு என்பது ஒரு சோகம், தோல்வி, அவமானம்' என இயேசுவைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளனர் எபேசுத் திருச்சபை மக்கள். ஆனால், 'அது நறுமணம் வீசும் பலியும் காணிக்கையும்' என கற்றுக்கொடுக்கின்றார் பவுல்.

இ. 'இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு என்பதும், இவருடைய தாய் மற்றும் தந்தை யார் என்று தெரியும்' என இயேசுவைத் தெரிந்து வைத்துள்ளனர் யூதர்கள். ஆனால், 'நான் வானிலிருந்து இறங்கி வந்த உணவு' எனக் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். 1 அர 19:4-8) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

இஸ்ரயேலின் அரசன் ஆகாபு சமாரியாவில் இருந்துகொண்டு ஆட்சி செய்தபோது சீதோனிய நாட்டு ஈசபேலை மணக்கின்றார். மணமகளாக வருகின்ற ஈசபேல் தன்னோடு தன் பாகால் தெய்வத்தையும் சமாரியாவுக்குள் கொண்டு வருகின்றார். தன் மனைவியை திருப்திப்படுத்த நினைக்கும் ஆகாபு தன் இறைவனாம் யாவேயை மறந்துவிட்டு பாகாலுக்கு கோவிலும் பலிபீடமும் கட்டுகின்றான் (1 அர 17:32). பாகால் வழிபாட்டைக் கண்ணுற்ற யாவே வானங்களை அடைத்து மழைபொழியாமால் செய்துவிடுகிறார். கொடிய பஞ்சம் நிலவுகிறது. 'பஞ்சத்தைப் போக்கும் வழி என்ன?' என்று தன் இறைவாக்கினர் எலியாவைக் கேட்கின்றான் ஆகாபு. 'பாகால் தெய்வ வழிபாடும், பாகாலின் இறைவாக்கினர்களும் அழிக்கப்பட வேண்டும்!' என்கிறார் எலியா. சொன்னதோடு மட்டுமல்லாமல், கர்மேல் மலையில் (1 அர 18:20) அரசன் மற்றும் மக்கள் முன்னிலையில் பாகால் இறைவாக்கினருக்கு சவால் விட்டு, பாகால் பொய் என்றும், யாவே இறைவனே உண்மையானவர் என்றும் நிரூபிக்கின்றார். வானம் திறக்க, மழை கொட்டுகின்றது. பாகால் தெய்வத்தின் பீடமும், அதன் பொய்வாக்கினரும் அழிக்கப்பட்டதைக் கேள்வியுற்ற அரசி ஈசபேல் எலியாவைக் கொல்லத் தேடுகின்றார். எலியா இப்போது அவளிடமிருந்து தப்பி ஓடுகின்றார். அப்படித் தப்பி ஓடும் வழியில் நடக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.

தன் உயிரை எடுத்துக்கொள்ளுமாறு எலியா இறைவனிடம் முறையிடுகின்றார் (19:4). வானதூதர் 'எழுந்து சாப்பிடு!' என உணவு தருகின்றார் (19:5). மீண்டும் படுத்துக் கொள்கிறார் எலியா (19:6). வானதூதர் மறுபடியும் சாப்பிட அழைக்கின்றார் (19:7). அப்பத்தினால் நிறைவுபெற்ற எலியா நீண்ட பயணம் மேற்கொள்கின்றார் (19:8). 'சாக வேண்டும்', 'தூங்க வேண்டும்', 'நடக்க வேண்டும்' என்று எலியாவின் வாழ்க்கை படுக்கையிலிருந்து நடத்தலுக்குக் கடந்து போகின்றது. வானதூதர் இரண்டு முறை உணவு தருகின்றார்: முதல் முறை அவரது உயிருக்கு, இரண்டாம் முறை அவரது உடலுக்கு.

இஸ்ரயேலின் மாபெரும் இறைவாக்கினராக எலியா இருந்தாலும், யாவே இறைவனின் உடனிருப்பை மக்களுக்கு அவர் வெளிப்படுத்தினாலும், யாவே இறைவனின் எதிரியான பாகாலின் ஆலயத்தை இடித்து, பொய்வாக்கினர்களைக் கொன்றாலும், வெறுமையும், தனிமையும், பயமும் அவரைப் பற்றிக்கொள்கின்றன. ஈசபேலின் வாள்தான் தன் கண்முன் தெரிகின்றது. உயிரைக் காத்துக்கொள்ளுமாறு தப்பி ஓடும் (19:3) எலியா அதை எடுத்துவிடுமாறு இறைவனிடம் இரண்டுமுறை வேண்டுகின்றார் (19:4). அதாவது, வாழ்வதற்கு இன்னும் வாய்ப்பில்லை என்றவுடன் மனம் எளிதாகத் தப்பித்துக்கொள்ள தேர்ந்தெடுக்கும் குறுகிய வழிதான் 'மறைசாட்சி மனப்பான்மை' (Martyr Complex). மேலும், தான் அளப்பரிய பணியைச் செய்து முடித்தாலும், 'நான் அவர்களைவிட நல்லவன் அல்ல' எனப் புலம்புகின்றார்.

எலியா தன்னைப் பற்றித் தெரிந்து வைத்திருந்ததோ இவ்விரண்டும்தான்: 'நான் சாக வேண்டும்,' 'நான் நல்லவன் இல்லை.'

ஆனால், இறைவனின் கற்றுத்தருதல் இங்கே வேறுவிதமாக இருக்கிறது. மூன்று அற்புதங்கள் இந்த நிகழ்வில் நடந்தேறுகின்றன. ஒன்று, பாலைவனத்தில் சூரைச் செடி இருக்கிறது. அந்த சூரைச்செடியின் நிழலில் ஒருவர் படுத்துறங்கும் அளவிற்கு நிழல்தரக்கூடியதாக இருக்கிறது. இரண்டு, தணல் மூட்டப்பட்டு அதில் அப்பம் சூடாகிக்கொண்டிருக்கிறது. மூன்று, குவளையில் தண்ணீர் இருக்கின்றது. பாலைநிலத்தில் மரங்கள் வளர்வதில்லை. ஏனெனில் பாலைநிலக் காற்றை மரங்களால் எதிர்த்து நிற்க முடிவதில்லை. ஆக, நம் காலுயரச் செடிகள்தான் அதிக அளவில் இருக்கும். காலுயரச் செடிகள் நிழல் தருவதுமில்லை. ஆனாலும், இறைவனின் பராமரிப்பால் நிழல்தரும் சூரைச்செடி கிடைக்கின்றது. மரம் அல்லது நிழல் என்பது நமக்கு மேல் இருக்கும் ஒருவகையான கூரை. யாரின் தலைமேல் கூரை இருக்கிறதோ அவர்தான் பாதுகாப்பானவர் என்கிறோம்.தலையின் மேல் கூரையாக மரத்தைத் தருவதன் மூலம் எலியாவின் பாதுகாப்பை உறுதி செய்கின்றார் இறைவன். இரண்டாவதாக, அப்பம். அப்பம் சுடுவது (அன்றைய நாளில்) மிக நீண்டகால வேலை. மாவு பிசைய வேண்டும். அது புளிக்க வேண்டும். நெருப்பு மூட்ட வேண்டும். பின் பக்குவமாக செய்ய வேண்டும். இந்த எந்த உழைப்பும் இல்லாமல் எலியாவின் பசி ஆற்றப்படுகிறது. மூன்று, குவளையில் தண்ணீர் குடிப்பவர்கள் வீட்டில் வசிப்பவர்கள் மட்டும்தான். பயணத்தில் அல்லது பாலைநிலத்தில் தோல்பைகள்தாம் தண்ணீர்கொள்ளப் பயன்படுத்தப்படும். ஆக, ஒரு வீட்டில் இருப்பது போல பாதுகாப்பையும், பசிதாகம் ஆற்றப்படும் பாக்கியத்தையும் பெறுகின்றார் எலியா.'சாக வேண்டும்' என மன்றாடிய எலியா 'படுத்துக் கொள்கிறார்'. தான் சொன்னதை செயலில் காட்டுகின்றார். அதாவது, ஒருவர் அதிகம் தூங்குகிறார் என்றால் அவரின் மனச்சோர்வு அல்லது மனச்சுமை அதிகம் என்பது அர்த்தம். தூக்கம் ஒரு தற்காலிக சுதந்திரம் தருகிறது. தூக்கத்தில் இந்த உலகம் நமக்கு இருட்டாகிவிடுகிறது. நம் எதிரிகள் எல்லாம் மறைந்துவிட்டதாக ஒரு மாயை பிறக்கிறது. 'நான் இனி எந்தச் செயலையும் செய்யப்போவதில்லை' என்பதைச் சொல்லாமல் மற்றவர்களுக்குச் சொல்வதும் தூக்கம்தான்.இப்படித் திரும்பப் படுத்துக்கொள்வது நம்மை எதார்த்தத்திலிருந்து தப்பிக்க உதவினாலும், இந்தத் தீர்வு தற்காலிகமானதுதான். நாம் எழுந்து இந்த உலகைச் சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறாக, உணவு கொடுத்து நீண்ட பயணத்திற்கு எலியாவை அனுப்புகிறார் இறைவன்.

'என் வாழ்வு முடிந்துவிட்டது' எனத் தெரிந்துவைத்துள்ளார் எலியா. ஆனால், 'முடிவு அல்ல இது. இன்னும் நீ செல்லவேண்டிய பாதை இருக்கிறது' எனக் கற்றுக்கொடுத்து அனுப்பி வைக்கிறார் இறைவன்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 4:30-5:2), கிறிஸ்துவின் உடலில் துலங்கும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மாதிரியாக தன் எபேசுத் திருச்சபைக்கு அளிக்கும் பவுலடியார், அவர்கள் அந்த மாதிரியில் தங்கள் வாழ்வை கட்டமைத்துக்கொள்ள வாழ்வியல் விதிமுறைகளைத் தருகின்றார். 'மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்!' (4:31), 'ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள். ஒருவரையொருவர் மன்னியுங்கள்' (4:32), 'நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப் போல் ஆகுங்கள்!' (5:1), என்று அறிவுரை சொல்கின்ற பவுல் இறுதியாக ஒரு அழகிய உருவகத்தைக் கையாளுகின்றார்.

தொடக்கக் கிறிஸ்தவர்கள் இயேசுவை நம்புவதற்குத் தடையாக இருந்தது அவருடைய சிலுவை மரணம். குற்றவாளிகளில் ஒருவராக, இரண்டு குற்றவாளிகளுக்கு நடுவே, கொடிய சிலுவை மரணத்தைத் தழுவிய இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர்களுக்குச் சிலுவை இடறலாக இருந்தது. இவ்வாறாக, அவர்களுக்குத் தெரிந்த இந்த உண்மை அவர்களுடைய நம்பிக்கைக்குத் தடையாக இருந்தது. இந்தத் தடையை நீக்க புதிய இறையியலைக் கற்றுக்கொடுக்கின்றார் பவுல்:

'கிறிஸ்து உங்களுக்காக தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாக கடவுளிடம் ஒப்படைத்து ...'

இயேசுவின் இறப்பு அவருக்கான இறப்பு அல்ல, மாறாக, அனைவருக்குமான இறப்பு. மேலும், தூசியும், துர்நாற்றமும், எலும்புக் கூடுகளும், கழுகளின் ஓலமும், இரத்தமும், வியர்வையும், அழுக்கும், புளித்த காடியும் இருந்த கல்வாரி மலை சிலுவைப் பலியை, ஏதோ ஒரு ஆலயத்தில், தூய்மையான இடத்தில் நடந்தேறிய 'நறுமணம் வீசும் பலியும் காணிக்கையும்' எனக் கற்றுத்தருகின்றார் பவுல். இவ்வாறாக, தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றுக்கு அவர்களை அழைத்துச்சென்று, அந்த நிகழ்வையே வாழ்வியல் மற்றும் நம்பிக்கை பாடமாக ஆக்குகின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 6:41-51) கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சியே. யூதர்களுக்கும், இயேசுவுக்கும் இடையே 'வாழ்வுதரும் உணவு' விவாதம் தொடர்கிறது. 'யூதர்கள்' என்பவர்கள் யூத மதத்தை அல்லது சமூகத்தைச் சார்ந்தவர்கள் எனச் சொன்னாலும், இங்கே 'யூதர்கள்' என்பதை 'இயேசுவுக்கு எதிரானவர்கள், அவரை ஏற்றுக்கொள்ள இடறல்படுபவர்கள்' என்ற அர்த்தத்தில்தான் பொருள் கொள்ள வேண்டும்.

'வாழ்வு (6:48), நிலைவாழ்வு (6:47), இறுதிநாளில் உயிர்ப்பு (6:44)' - இந்த மூன்று வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியில் வருகின்றன. வாழ்வு என்பது சாவிற்கு எதிர்ப்பதம் அல்ல. மாறாக, நிறைவாழ்வு. நிலைவாழ்வு அல்லது இறுதிநாளில் உயிர்ப்பு என்பது மறுவாழ்வைக் குறிப்பது போல தோன்றினாலும், அவை மறுவாழ்வைக் குறிப்பதில்லை. மறுவாழ்வு குறித்த சிந்தனை இன்னும் அதிகமாக வேரூன்றாத சூழலில்தான் யோவான் தன் நற்செய்தியை எழுதுகின்றார். மேலும், இயேசுவின் இரண்டாம் வருகை மிக சீக்கிரமாக இருக்கும் என அவர்கள் நம்பினார்கள். ஆக, இறுதிநாள் என்பது அந்த இரண்டாம் வருகையின் நாள் (ஒரு மாதம், இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் என்றுதான் அவர்கள் நினைத்தனர்!). 'நிலைவாழ்வு' என்பதை 'நிறைவாழ்வு' (யோவா 10:10) எனவும் எடுத்துக்கொள்ள முடியாது.

யோவான் கிரேக்க சிந்தனை மற்றும் 'அறிவுவாதம்' (Gnosticism) கருத்தியலால் அதிகம் கவரப்பட்டவர். அவர்காலத்தில் நிலவிய கிரேக்க சிந்தனைப்படி மனிதர் என்பவர் உடல் மற்றும் ஆன்மாவின் கலவை என்று கருதப்பட்டார். ஆக, உடல் அழியக் கூடியது. ஆன்மா அழியாததது. மனிதர்கள் உடலைச் சார்ந்தவற்றைத் தேடினால் அவர்கள் அழிவைத் தேடுகிறார்கள். ஆன்மா சார்ந்தவற்றைத் தேடினால் அழியாததைத் தேடுகிறார்கள். ஆகவேதான், செக்ஸ், குடி, போசனப்பிரியம் மற்றும் விபச்சாரம் என்று வாழ்ந்தவர்கள் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டனர். இதற்கு மாறாக, அறிவு, புகழ், வெற்றி, கணிதம், ஆராய்ச்சி, தத்துவம் என தேடியவர்கள் அழியாததைத் தேடியவர்களாகக் கருதப்பட்டனர். உடல்-ஆன்மா பிளவு யோவான் நற்செய்தியில் அதிகம் புலப்படுகிறது. இந்த உடல்-ஆன்மா பிளவை யோவான், 'உலகம்-கடவுள்', 'இரவு-பகல்', 'கீழ்-மேல்' என்ற சொல்லாடல்கள் வழியாகவும் வெளிப்படுத்துகின்றார். வாழ்வு பற்றி யோவான் எழுத மற்றொரு காரணம் அவருக்கு யூத விவிலியம் (அதாவது, நம் முதல் ஏற்பாடு) நன்றாகத் தெரிந்தது. யூதர்களின் தோரா நூலின் படி மனிதர்களுக்கு இறுதியாக கடவுள் மோசே வழியாகக் கொடுத்த கட்டளை வாழ்வைத் தேடுங்கள் என்பதுதான்: 'இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். நீயும் உன் வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்!' (காண் இச 30:15-20). மனிதர்கள் தேட வேண்டிய வாழ்வு இயேசுதான் என்று இயேசுவை யூத சட்ட மற்றும் இறைவாக்கு நூல்களின் நிறைவாக முன்வைக்கின்றார் யோவான்.

இங்கே, யோவான் நற்செய்தியில் வரும் 'எதிர்மறை நேர்கருத்து' (irony) என்னும் இலக்கியப் பண்பை புரிந்துகொள்வோம். இவ்வகை இலக்கியப் பண்பில் இரண்டு பேருக்கும் இடையில் உரையாடல் நடக்கும். அந்த உரையாடலில் ஒருவர் மேல் கோட்டிலும், மற்றவர் கீழ் கோட்டிலும் இருப்பார். இந்த உரையாடலை வாசிக்கும் நபர் இந்த மேல் கோட்டிற்கும், கீழ் கோட்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு உரையாடலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார். இந்த இலக்கியப் பண்பு யோவான் நற்செய்தியில் பல இடங்களில் உள்ளன: 'ஒருவர் மீண்டும் பிறக்க வேண்டும்' என மேல் கோட்டில் பேசுவார் இயேசு. 'மீண்டும் எப்படி தாய் வயிற்றுக்குள் நுழைந்து பிறக்க முடியும்' என கீழ்கோட்டில் பேசுவார் நிக்கதேம் (3:1-8). 'அவர் வாழ்வு தரும் தண்ணீரை உனக்குக் கொடுப்பார்' என்பார் இயேசு. 'உம்மிடம் வாளி இல்லையே' என்பார் சமாரியப் பெண் (4:1-42). இந்த நிகழ்வுகளை வாசிக்கும் வாசகர், இந்த இரண்டு கோட்டு அர்த்தங்களையும் பார்த்து ஒரு நொடி புன்னகைப்பார். அந்தப் புன்னகையில் உரையாடலின் அர்த்தம் அவருக்கும் புரிந்துவிடும். இதுதான் இந்த இலக்கியப் பண்பின் சிறப்பு. இன்றைய நற்செய்தியிலும் இந்த இலக்கியப் பண்பு இருக்கிறது. 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே' என மேல் கோட்டில் இயேசு சொல்ல, 'இவர் அப்பா - அம்மா நமக்குத் தெரியுமே' எனக் கீழ் கோட்டில் யூதர்கள் சொல்கின்றனர். வாசிக்கும் நமக்குப் புரியும் இந்த யூதர்கள் இயேசுவைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என்று.

இவ்வாறாக, 'எங்களுக்குத் தெரியும்' என்ற அவர்கள் நிலையிலிருந்து சற்று உயர்த்துகின்றார். 'கடவுள்தாமே கற்றுத்தருவார்' என்று அவர்கள் தெரிந்திருந்தும், கடவுளின் கற்றுத்தருதலுக்கு அவர்கள் திறந்த மனம் இல்லாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். எசாயா இறைவாக்கினரின் இறைவாக்கு (54:13) இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்தக் கற்றல் யாருக்குச் சாத்தியம்? 'தந்தையால் ஈர்க்கப்படுபவர்களுக்கே' அது சாத்தியம்.கடவுளை நம்புவதற்கும் கடவுள்தான் அருள்தர வேண்டும். தந்தை தன்னிடம் ஈர்ப்பது என்பது அவரது கற்றுக்கொடுத்தலில் நிறைவு பெறுகிறது (யோவா 6:45). இஸ்ரயேல் மக்களை தன் மகனாக, மகளாக நினைத்து தன்னிடம் அழைக்கின்றார் யாவே இறைவன். யூதர்களின் பொய்யைத் தோலுரித்துக் காட்டுகின்றார் இயேசு: 'உங்க கடவுள் உங்களை மகன் என்றார், ஆனால் அந்தக் கடவுளின் மகனை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர் யோசேப்பின் மகன் என்று சொல்லித் தப்பிக்கப்பார்க்கிறீர்கள்.' இவ்வாறாக, இயேசுவின் உடல் பற்றி தெரிந்தவர்களுக்கு, அவர்கள் அறியாத 'விண்ணிலிருந்த உணவு' என்ற சிந்தனையை அவர்களுக்குக் கற்றுத்தருகின்றார் இயேசு.

இன்றைய இறைவாக்கு வழிபாடு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

நாம் சிலவற்றைத் தெரிந்துவைத்துள்ளோம். சிலவற்றை மற்றவர்கள் கற்றுத்தருகிறார்கள். அப்படி அவர்கள் கற்றுக்கொடுக்கும்போது அந்தக் கற்றலை நாம் ஏற்றால்தான் நம் தெரிதல் வளரும்.

அ. மூன்று நிலைகள்
'சாகப்போகிறேன்,' 'தூங்கப் போகிறேன்,' 'நடக்கப் போகிறேன்' என்ற நிலையில்தான் கற்றல் நடக்கிறது. 'சாகப்போகிறேன் மனநிலையில்' கற்றலுக்கு இடமே இல்லை. 'தூங்கப் போகிறேன் மனநிலையில்' கற்றல் பாதி நடைபெறுகிறது. 'நடக்கப் போகிறேன் மனநிலையில்தான்' கற்றல் முழுமை அடைகிறது. ஆக, நான் என் வாழ்வில் இந்த மூன்றில் எந்த நிலையில் இருக்கிறேன்? எனக்குத் தெரிவதுதான் உலகம் என நான் நினைத்துவிடக்கூடாது. நாளை நான் புதியவற்றைத் தெரியலாம். எனக்குச் சிந்தனை மாற்றம் வரலாம். ஆக, ஒன்றை நாம் கேட்டவுடன், உணர்ந்தவுடன், 'இதுதான் எல்லாம்!' என்ற முடிவுக்கு வந்துவிடாமல், நம்பிக்கையோடும், துணிவோடும் காத்திருக்க வேண்டும்.

ஆ. தெரிதல் வாழ்வில் வெளிப்பட வேண்டும்
'தெ ப்ருஃப் ஆஃப் புட்டிங் இஸ் இன் தெ ஈட்டிங்' ('the proof of pudding is in the eating') என்பார்கள். புட்டு நன்றாக இருக்கிறது என்றால், அது சாப்பிடுபவருக்கு இனிக்க வேண்டும். ஆக, எனக்கு வாழ்வில் தெரிதல், அறிதல் இருக்கிறது என்றால், அந்தத் தெரிதல் என் வாழ்வில் செயல்களாக, என் பழக்கமாக வெளிப்பட வேண்டும்.

இ. எனக்குத் தெரியாதா?
கற்றுக்கொள்வதற்கு மிகவும் பெரிய தடையாக இருப்பது இதுதான். 'எனக்குத் தெரியாதா?' என்று நான் சொல்லும்போதே, கற்றுக்கொடுப்பவர் உள்ளே வந்துவிடாமல் நான் கதவுகளை அடைத்துவிடுகிறேன். மேலும் இந்த மனநிலை நம் முற்சார்பு எண்ணங்களே உண்மை என்ற கிட்டப்பார்வைக்கும் இட்டுச்செல்கின்றன.

இறுதியாக,

'எனக்குத் தெரியாது, பிறருக்கும் தெரியும்' ஜன்னலை நான் எனக்கும் எனக்கும், எனக்கும் பிறருக்கும், எனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுநிலைகளில் சரி செய்ய, எனக்குத் தெரிவதிலிருந்து, அடுத்தவரின் கற்றுத்தருதலுக்கு என் மனம் திறக்க வேண்டும். அப்படி மனம் திறந்தால் என் வாழ்விலும் சோர்வு, துயரம், முற்சார்பு எண்ணம் மறையும். இவைகள் மறைந்தால் மகிழ்ச்சி பிறக்கும்.

 
இப்போது முடிவு செய்யுங்கள்!
காலையில் எழுந்து குளித்துவிட்டு துணி அலமாரியின் முன் நின்று கொண்டு, 'இன்று எந்த ஆடை அணிவது?' என்று நாம் தலையைச் சொறிகிறோம். எல்லா ஆடைகளையும் வேகமாக அலசிப் பார்த்துவிட்டு, நேற்று அணிந்து இரவு கழற்றி அழுக்குக்கூடையில் போட்ட சட்டையை நோக்கியும் கண்களும் போகும். 'ச்சே, நேற்று போட்ட டிரசை இன்று போட்டிருக்கலாமோ!' என்ற எண்ணமும் தோன்றி மறையும். ஒருவழியாக, ஏதாவது ஒன்றை எடுத்துப் போடலாம் என்றால், ஒன்றும் மேட்ச் ஆகாமல் இருக்கும். சில நேரங்களில் நம் சாக்ஸூம், கைக்குட்டையும்தான் மேட்ச் ஆகிற மாதிரி நிலையில் ஆடை அணிய வேண்டியதிருக்கும். ஆடை அணிவதற்குத் தெரிவு செய்யவே இவ்வளவு நேரம் ஆகிறது என்றால், புதிய ஆடையை வாங்க எவ்வளவு நேரம் ஆகும்? ஏன் நாம் இவ்வளவு நேரம் எடுக்கிறோம்? அல்லது ஏன் நாம் ஆடையைத் தெரிவு செய்கிறோம்? கைக்கு வருவதை எடுத்து அணிந்துகொண்டு போய்விடலாமே? 'இந்த ஆடைதான் இன்று' என்ற முடிவு அன்றைய நாளின் நம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், தன்மதிப்பையும் நிர்ணயிக்கிறது. ஆனால், என்னதான் அழகான ஆடை அணிந்து சென்றாலும், நாளின் இறுதியில், 'உவப்பன வெறுப்பாம், உடுத்தியது அழுக்காம்' என்று அந்த ஆடை அழுக்குக் கூடைக்குள்தான் போகும். ஒரு டிரஸ் அணிந்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, பின் வீட்டை விட்டு வெளியே போகும்போது, 'இது நல்லா இல்ல. வேறு ஒன்று மாத்திக்குவோம்' என்று திரும்பவும் அலமாரியைத் திறந்த நாள்களும் நமக்கு இருந்திருக்கலாம். சில நேரங்களில், 'என்ன, இந்த டிரஸ்லயா வர்ற!' என்று யாராவது சொல்ல, அவர்களுக்காகவும் நாம் ஆடையை மாற்றியிருப்போம். இவ்வாறாக, 'நான் இன்று இந்த ஆடை அணியப் போகிறேன்' என்ற முடிவை எடுக்க, நான் நேரம் எடுக்கிறேன், மனம் குழம்புகிறேன், 'இதற்கு முன் இந்த ஆடை எப்போது அணிந்தேன், அன்று என்ன நடந்தது?' என ஆய்கிறேன், எடுக்கிறேன், அணிகிறேன், வெளியே வருகிறேன், சாப்பிடும்போதும் அது பற்றியே நினைக்கிறேன், மற்றவர்களின் கருத்தைக் கேட்கிறேன், மீண்டும் ஆடை மாற்றுகிறேன்.

நிற்க.
ஆடையைக் குறித்து நாம் எடுக்கும் முடிவு போல, நாம் அன்றாடம் முடிவுகளை எடுத்துக்கொண்டே இருக்கிறோம்: 'எந்த பேருந்தில் ஏறுவது?' 'அமர்வதா?' 'நிற்பதா?' 'எங்கு படிப்பது?' 'எந்த வேலை பார்ப்பது?' 'யாரை திருமணம் செய்வது?' 'குழந்தைகள் பெற்றுக்கொள்வதா, வேண்டாமா?' 'ஆம் என்றால், எத்தனை?' 'இல்லை என்றால், எப்போது?' 'அவர்களை எங்கே படிக்க வைப்பது?' 'எந்த மருத்துவரிடம் பல்லைக் காட்டுவது?' 'எந்த மெடிக்கலில் மருந்து வாங்குவது?' இப்படி நிறைய முடிவுகளை நாம் ஒருநாளில் எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த முடிவுகளை எடுக்க நம்மை உந்தித் தள்ளுவது நம் கட்டின்மை அல்லது சுதந்திரம். ஆனால், நாம் ஒரு முடிவை எடுக்கும்போது மற்ற முடிவுகளை நீக்கித்தான் ஆக வேண்டும். 'பேருந்தில் நிற்பதா? அமர்வதா?' என்று நான் எடுக்கும் முடிவில், 'அமர்வேன்' என்று முடிவு எடுத்தவுடன், 'நான் நிற்க முடியாது.' பாதி நிற்பதும், பாதி அமர்வதும் இயலாத நிலை. இவ்வாறாக, நான் எடுக்கும் ஒரு முடிவு மற்றதை என்னிடமிருந்து நீக்கிவிடுகிறது.

இம்மாதிரி சின்னச் சின்ன முடிவுகள் ஒருபக்கம். என் வாழ்வையே மாற்றிப்போடும் முடிவுகள் இன்னொரு பக்கம் இருக்கின்றன. 'திருமணம் செய்துகொள்வது,' 'வேலை பார்ப்பது,' 'சொத்து வாங்குவது' போன்ற முடிவுகள் நம் உறவு மற்றும் சமூக நிலையை மாற்றிப்போடவல்லவை. இவற்றை நாம் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்லிவிட முடியாது.

இப்படியாக, முடிவுகளின் விளைவு பெரிதாகப் பெரிதாக, அதை எடுப்பதற்கான வலியும், கலக்கமும் பெரிதாகிக்கொண்டே இருக்கின்றது. ஆகையால்தான் சில நேரங்களில் நாம் முடிவுகளைத் தள்ளிப் போடுகிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை இருத்தியல் முடிவு எடுக்க அழைக்கிறது:

யோர்தான் நதிக்கரையில் நிற்கும் யோசுவா, அங்கே கூடியிருக்கும் மக்களைப் பார்த்து, 'நான் ஆண்டவர் பக்கம். நீங்கள் யார் பக்கம் என முடிவு செய்யுங்கள்' என அவர்களை அழைக்கிறார்.

திபேரியக் கடற்கரையில் நிற்கும் இயேசு, தன் சீடர்களில் பலர் தன்னைவிட்டுப் போய்விட, தன் திருத்தூதர்களிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? முடிவு செய்யுங்கள்' என அவர்களை அழைக்கிறார்.
இஸ்ரயேல் மக்கள் எடுக்கும் முடிவு கடவுளின் இயல்பை மாற்றுவதில்லை. திருத்தூதர்களின் முடிவு இயேசுவின் இயல்பை மாற்றுவதில்லை. ஆனால், இவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே இவர்களின் - இஸ்ரயேல் மக்கள், திருத்தூதர் - வாழ்வு அல்லது இயல்பு இருக்கும். ஆக, இது ஒரு முக்கியமான தருணம். 'இப்போ சரினு சொல்லிட்டு, அப்புறம் மாத்திக்கலாம்' என்ற ஆடை முடிவு அல்ல இது. ஒருவரின் இருத்தலைப் புரட்டிப்போடுகின்ற முடிவு.

இந்த முடிவு வாசகர்களாகிய நம்மிடம் அப்படியே திரும்புகிறது?
எப்படி?
இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். யோசு 24:1-2,15-17,18) நம் சிந்தனையைத் தொடங்குவோம். யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்த பாலும், தேனும் பொழியும் கானான் நாடு கைக்கெட்டிய தூரத்திற்கு வந்துவிட்டது. இப்போது மக்கள் அதில் நுழைவதற்கு முன் அவர்களை செக்கேமில் ஒன்றுகூட்டும் யோசுவா, இறைவனுக்கும், அவர்களுக்கும் இடையேயான உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். யாவே இறைவன் அவர்களுக்கு செய்த அரும் பெரும் செயல்களை நினைவூட்டுகின்றார். உடன்படிக்கை மக்களுக்கு முன்வைக்கும் ஒரே கட்டளை என்னவென்றால், அவர்கள் மற்ற தெய்வங்களை விடுத்து யாவே இறைவனை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இவர்களின் பதில் 'ஆம்' என இருந்தாலும், இந்த வார்த்தையில் அவர்கள் நிலைத்திருக்க முடியாமல் இறைவனின் கோபத்திற்கு ஆளாகிறார்கள் என்பது பிந்தைய வரலாறு.

'நீங்கள் உங்களிடையே இருக்கும் வேற்று தெய்வ வழிபாட்டை விட்டுவிடத்தயாரா?' என்று கேட்கும் யோசுவா, 'நானும், என் வீட்டாரும் ஆண்டவருக்கே பணிபுரிவோம்!' என மக்கள்முன் அறிக்கையிடுகின்றார். இங்கே 'பணிபுரிதல்' அல்லது 'ஊழியம் புரிதல்' (நவாத்) என்ற வார்த்தைக்கு 'வழிபடுவோம்' என்ற பொருளும் உண்டு. 'வேலை' அல்லது 'பணி' என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டதன் முக்கியத்துவம் என்னவென்றால், எகிப்தில் பாரவோனுக்கு இஸ்ராயேல் மக்கள் 'பணி' புரிந்தனர். பாரவோனே அவர்களின் கடவுளாக இருந்;தான். இனி அப்படியிருக்கப் போவதில்லை. இனி இறைவன்தான் இவர்களின் தலைவன். ஆக, பணி என்ற வார்த்தையின் வழியாக இறைவன் தலைவராக முன்வைக்கப்படுகின்றார்.

யோசுவாவும், இஸ்ரயேல் மக்களும் - இரண்டு பேருமே - 'நாங்கள் ஆண்டவருக்குப் பணிபுரிவோம்!' என்று சொன்னாலும், இரண்டு பேரின் நம்பிக்கை அளவும் வேறுபடுகிறது. எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் கடவுளைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்கிறார் யோசுவா. ஆனால், 'அவர் எங்களுக்கு விடுதலை தந்ததால், அவர் எங்கள் முன் அறிகுறிகள் நிகழ்த்தியதால், அவர் எங்களைப் பாதுகாத்ததால் நாங்கள் நம்புகிறோம்!' என்று நிபந்தனையோடு நம்புகின்றனர் மக்கள். ஆக, மக்களின் இந்த எதிர்பார்ப்பு பின் நாட்களில் நிகழாமல் போவதால் அவர்கள் எளிதாக வேறு அரசனையும், வேறு தெய்வங்களையும் பின்தொடரத் துணிகின்றனர்.

கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். இஸ்ரயேல் மக்கள் இப்போது பாலைநிலத்தில் இருக்கின்றனர். கொஞ்ச சுமை வைத்துக்கொண்டால் மட்டும்தான் இனிதாக பயணம் செய்ய முடியும். அதில் ஆடை, அணிகலன்கள், தண்ணீர் என்றே சுமை இருக்கும். இந்தச் சுமையிலும் இந்த 'குட்டி தெய்வங்களுக்கு' அல்லது 'வேற்று கடவுளர்களுக்கு' எப்படி இவர்களின் பொதிகளில் இடம் இருந்தது? தொல்லியில் ஆராய்ச்சியில் 'ஃபிகுரின்' என்று சொல்லப்படும் விரல் அளவு தெய்வ உருவங்கள் நிறையக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள்தாம் 'டிராவல் ஃபார்மட் கடவுளர்களாக' இருந்திருக்க வேண்டும். இவைகளைப் பார்க்கும்போதெல்லாம் இவர்களுக்கு கடவுளின் பிரசன்னம் தங்களோடு இருப்பதாக இவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இன்று இவர்கள் இந்த எல்லா குட்டி தெய்வங்களையும் தூக்க எறிய வேண்டும். கடவுள் என்பது வெளிப்புற அடையாளம் அல்ல, அவர் நம் உள்புறம் இருந்து நம் அனுபவமாக இருக்கிறார் என்ற ஒரு மாற்று சிந்தனை பெற வேண்டும். தங்கள் கைகளுக்குள் இருக்கும் குட்டித் தெய்வங்களை அவர்கள் தூக்கி ஆற்றில் எறிய வேண்டும். இனி அவர்கள் தேடினாலும் அவற்றைக் கண்டுகொள்ள முடியாது.

இஸ்ரயேல் மக்கள் இறுதியாக, 'நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்' என்று முடிவு எடுக்கின்றனர்.

தொடர்ந்து, இன்றைய நற்செய்தி வாசகத்தில், கடந்த ஐந்து வாரங்களாக நாம் கேட்டுக்கொண்டு வரும் இயேசுவின் 'வாழ்வுதரும் போதனை' இன்றோடு நிறைவுபெறுகிறது. இயேசுவின் போதனை அனைத்து மக்கள், கொஞ்சம் யூதர்கள் எனத் தொடர்ந்து இன்று மிகவும் சில சீடர்கள் எனச் சுருங்கிவிட்டது. இது ஒரு இலக்கிய உத்தி. பெரிய இடத்தில் தொடங்கி, சிறிய அளவில் முடிப்பது. இந்த இடத்தில் யோவான் நற்செய்தியாளரின் நோக்கம் என்னவென்றால், இதை வாசிக்கும் இயேசுவின் சீடர் ஒவ்வொருவரும் இந்த இடத்தில் தன்னைத் தானே ஒரு கேள்வி கேட்க வேண்டும்: 'இயேசுவை நான் வாழ்வுதரும் உணவாக ஏற்றுக்கொள்கின்றேனா?'

இயேசுவின் போதனை கடினமாக இருப்பதாக முணுமுணுக்கும் சில சீடர்கள் அவரை விட்டுப் பிரிகின்றனர். 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று தம் பன்னிருவரிடம் கேட்கின்றார் இயேசு. அவர்கள் பிரதிநிதியாக பேதுரு, 'நாங்கள் யாரிடம் போவோம்?' என்று கேள்வியையே பதிலாக முன்வைக்கின்றார்.

இயேசுவின் போதனையைக் கேட்டு முடித்த சீடர்கள், 'இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று கேட்கின்றனர்.'நீங்கள் நம்புவதற்கு இது தடையாக இருக்கிறதா?' என இயேசு கேள்வியைத் திருப்புகின்றார். எது தடையாக இருக்கிறதா? இயேசு சொன்னதா? அல்லது இயேசு சொன்ன விதமா? இயேசுவின் போதனையைக் கேட்ட சீடர்கள் முணுமுணுக்கக் காரணம் அது புதியதாக இருந்ததால்தான். 'எல்லாரும் மாதிரியே நீரும் சொல்லலாமே! ஏன் நீர் மட்டும் புதியதாகச் சொல்கிறீர்?' என்பதுதான் அவர்களின் மனதில் இருக்கும் கேள்வி. 'எல்லா தெய்வங்களையும் போல இவரும் இருக்கலாமே! ஏன் இவர் மட்டும் வேறு மாதிரி இருக்கிறார்' என்று முதல் வாசகத்தில் யாவே இறைவனை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்குகின்றனர்.

'அன்றே பலர் அவரை விட்டு விலகினர்' என்று சோகமாகப் பதிவு செய்கிறார் யோவான். உடனே இயேசு தன் பன்னிருவரிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' எனக் கேட்கிறார். இயேசு கேட்கும் இந்தக் கேள்வியில் நிறைய வலியும், வேதனையும் ஒளிந்திருக்கிறது. இது அவரின் மனித உரு தந்த வலியால் வரும் கேள்வி. மனிதருக்கு மனிதரின் உடனிருப்பு தேவைப்படுகிறது. 'என்கூட இவர்கள் எல்லாம் இருப்பார்கள்' என நினைத்த இயேசு தன் பன்னிருவரும் தன்னைவிட்டுப் போய்விடுவார்களா என்று கேட்கின்றார். ஆனால், இந்த இடத்தில் யூதாசைப் பற்றிக் குறிப்பிடுவதால், இயேசுவின் இந்தக் கேள்வியில், 'நீங்களும் போய்விடுவீர்கள்' என்ற பதில் ஒளிந்திருக்கின்றது. ஒத்தமைவு நற்செய்திகளில் 'நீர் கடவுளின் மெசியா' என அறிக்கையிடும் பேதுரு, யோவான் நற்செய்தியில் 'நீர் கடவுளின் தூயவர்' அல்லது 'அர்ப்பணமானவர்' என அறிக்கையிடுகின்றார். இங்கே பேதுரு இயேசுவை 'வார்த்தையாக' ஏற்றுக்கொள்கின்றார். ஆக, இயேசுவின் மனுவுரு நிகழ்விலிருந்து, அவரின் ஏறிச்செல்லுதல் வரை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இயேசுவின் முன் சராணகதியாவதாகவும் சொல்கின்றார் பேதுரு.

இப்படியாக, பன்னிருவர் சார்பாக, பேதுரு முடிவெடுக்கின்றார்.

'கடவுளை' மட்டும் தேர்ந்துகொண்டால் நல்லதுதானே? அப்புறம் ஏன் நம் மனித மூளை 'கடவுளை' ஏற்றுக்கொள்ள அல்லது 'கடவுளே போதும்' என முடிவெடுக்க மறுக்கின்றது?

இந்தக் கேள்விக்கு தூய அகுஸ்தினாரின் 'ஒப்புகைகள்' மற்றும் இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் விடை காண்போம்.

1. மூளையின் விதிமுறை
நம் மூளை ஒரே நேரத்தில் இரண்டு விதிமுறைகளால் இயங்க வல்லது: ஒன்று, 'நல்லதைத் தேர்ந்துகொள், தீயதை விட்டுவிடு.' இரண்டு, 'இன்பமானதைத் தேர்ந்துகொள், துன்பமானதை விட்டுவிடு.' உதாரணத்திற்கு, தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என மூளை நினைக்கும்போது அது நல்லதைத் தேர்ந்துகொள்கிறது. ஆனால், அதற்குப் படிக்க வேண்டுமே? என்ற கேள்வி வந்தவுடன், 'துன்பமமான படிப்பை விட்டுவிடு', 'இன்பமான காப்பி அடித்தல், அல்லது பணம் கொடுத்து பாஸ் ஆகுதல்' என்பதைப் பிடி! என்று சொல்லிவிடுகிறது. 'கடவுளைப் பின்பற்றுவது நல்லதுதான்'. ஆனால், அப்படிச் செய்யும் போது நமக்கு வலிக்குமே. கடவுள் விரும்பியதை நான் செய்ய வேண்டும் என்றால், எனக்கு விருப்பமானதை நான் செய்வதை விடுக்க வேண்டும். 'நல்லதைச் செய். நலமோடு வாழ்வாய்' என்பது கடவுளின் வார்த்தை. ஆனால், நல்லதைச் செய்வது கடினமாக இருக்கிறதே. என் மனத்தை நான் எப்படி அதற்கு ஆள்படுத்துவேன்? நான் நல்லதைச் செய்யாததால் துன்பம்தான் வருகிறது என எனக்குத் தெரிந்தும், என்னால் அதைச் செய்ய முடியவில்லையே? 'நட' என்று என் மூளை சொன்னவுடன் என் உடல் அதற்கு கீழ்ப்படிகிறது. ஆனால், 'செய்யாதே' என்று என் மனம் சொல்வதை என் மூளை கேட்க மறுக்கிறதே. ஏனெனில், மூளை இயல்பாகவே துன்பத்தை வெறுக்கிறது.

2. உடனடி ரிசல்ட்
எனக்குப் பணத் தேவை இருக்கிறது என வைத்துக்கொள்வோம். மூன்று வழிகள்: ஒன்று, அதற்காக உழைப்பது. இரண்டு, கடவுளிடம் வேண்டி ஏதாவது ஒரு வழி காட்ட வேண்டும் என்று சொல்வது. மூன்று, எனக்கு அடுத்திருப்பவரிடம் திருடுவது. நான் மூன்றாவது வழியைத் தெரிந்துகொண்டால், எனக்கு அடுத்த நொடி பணம் கிடைத்துவிடுகிறது. நான் எதிர்பார்த்த ரிசல்டை நான் பெற்றுவிடுகிறேன். ஆனால், நான் உழைத்தால் ஓரிரு நாளில் பணம் கைக்குவந்துவிடுகிறது. ஆனால், கடவுளைப் பற்றிக்கொண்டால் - எனக்கு ஒன்றும் நடப்பதில்லை. ஆக, உடனடி ரிசல்ட் தராத எதையும் மூளை ஏற்பதில்லை. அகுஸ்தினாரும் தன் மனமாற்றத்திற்கு முன் இப்படித்தான் புலம்புகின்றார்: 'நான் ஒரு பெண்ணை நுகர்ந்தால் அந்த இன்பம் உடனடியாக என் உடலில் தெரிந்து விடுகிறது. மூளையும் அந்த இன்பத்தைப் பதிவு செய்கிறது. ஆனால், நான் கற்பு கொண்டு உம்மில் வாழ நினைத்தால் என் உடலுக்கு என்ன இன்பம்? என் மூளைக்கு என்ன இன்பம்.' ஆக, உடனடி ரிசல்ட் தராத எதையும் மூளை ஏற்பதில்லை. ஆகையால்தான் இயேசுவின் சீடர்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். இயேசுவை ஏற்றுக்கொள்வதால் எந்த ஒரு உடனடி ரிசல்டும் கிடைப்பதில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு கண்களுக்குத் தெரியாத கடவுளைவிட, தங்களின் கையிடுக்கில் தெரிந்த குட்டிக்கடவுளர்கள் பாதுகாப்பைத் தந்தனர். அவர்களுக்கு கைகளில் ரிசல்ட் உடனே கிடைத்தது.

3. மறையுண்மை பெரிது
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபே 5:21-32) 'ஒளிபெற்றவர்களாய் வாழுங்கள்' என்று எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் தூய பவுல், தொடர்ந்து, கணவர்-மனைவியர் வாழ்க்கை நடத்தை பற்றி அறிவுறுத்துகின்றார். முதலில் மனைவியருக்கும் (5:22-24), பின் கணவருக்கும் (5:25-32) என இரண்டு படிகளாக அவரின் அறிவுரை இருக்கின்றது. கணவன்-மனைவி ஒன்றிப்பு பற்றிப் பேசும் பவுல், 'இருவரும் ஒரே உடலாயிருப்பர்' என்று முதல் ஏற்பாட்டு படைப்பு நிகழ்வை மேற்கோள் காட்டி, 'இந்த மறைபொருள் பெரிது!' என்கிறார். ஆக, இயேசுவும் திருச்சபையும் கணவன்-மனைவியாக இணைந்திருப்பது என்பது கண்களால் காண முடியாதது. காண்பது மட்டுமே உண்மை. காணாதவை பொய் அல்ல. கணவன் மனைவி உறவிலும் காணாத மறைபொருளே அவர்களை இணைக்கிறது. அதுபோல, ஒருவர் தான் எடுத்த முடிவினால் கடவுளைத் தேர்ந்துகொள்கிறார் என்றால் அது ஒரு மறைபொருள். அது கண்ணுக்குத் தெரியாது என்று சொல்வதால் அது பொய் என்று ஆகிவிடாது. இவ்வாறாக, மேற்காணும் காரணிகள் நாம் கடவுளைத் தேர்ந்துகொள்ளும் முடிவிற்கு துணைநிற்கலாம், எதிர்க்கலாம், அல்லது முடிவிலிருந்து நம்மை வழிமாற்றலாம். ஆனால். முடிவைத் துணிந்து எடுக்க ஒருவர் ஊனியல்பிலிருந்து தூய ஆவிக்குக் கடந்து செல்ல வேண்டும்.

'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்கிறார். ஆக, நம்மில் உள்ள உடல், மூளை, இவற்றைக் கடந்து மனம் அல்லது ஆவி என்ற ஒன்று உண்டு. முன்னவை ஒன்றுக்கும் உதவாதவை. முன்னவை ஒன்றோடொன்று முரண்படுபவை. ஆனால், மனம் அல்லது ஆவி முரண்படாதது. உடல், மூளை, மனம் என ஒவ்வொரு நிலையாகக் கடந்துசெல்பவரே கடவுளைத் தெரிந்துகொள்ளும் முடிவை எடுக்க முடியும். இந்தக் கடந்துசெல்லதலுக்கும் கடவுளின் துணை தேவை. ஆகையால்தான், 'தந்தை அருள்கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' (யோவா 6:65) என்கிறார் இயேசு.

இறுதியாக, நாம் காலையில் அணிந்து மாலையில் கழற்றி எறியும் ஆடை தொடங்கி, காலத்திற்கும் மாற்ற முடியாத கடவுளைப் பின்பற்றுதல்வரை நாம் முடிவுகள் எடுத்துக்கொண்டே இருக்கும் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கிறோம். ஊனியல்பு மற்றும் அதன் இன்பத்தில் நாம் பிடிபட்டிருக்கும் வரை முடிவுகள் சுமையே. 'நான் இந்த முடிவை எடுத்து கஷ்டப்படுகிறேன். அவன் அந்த முடிவை எடுத்து நல்லா இருக்கிறானே' என்ற ஒப்பீடு நம் முடிவை மாற்றிவிட சோதனை தரும். முடிவிலிருந்து பின்வாங்க மூளை நிறையக் காரணங்களைத் தேடும். காரணங்கள் கிடைக்காதபோது நம் மனத்தோடு சண்டையிடும். அங்கே 'அவரின் அருள்கொடையை நாடுதல் நலம்.' ஏனெனில், அவராக அனுமதித்தாலன்றி நாம் எதையும் தெரிவுசெய்ய முடியுது.
எனினும், இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது!
- அருள்பணி. இயேசு கருணாநிதி.
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

I யோசுவா 24: 1-2a, 15-17, 18b II எபேசியர் 5: 21-32 III யோவான் 6: 60-69


" முழு உள்ளத்துடன் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம்"

ஒரு பங்கில் பங்குப்பணியாளராகப் பணியாற்றிய அருள்பணியாளர் ஒருவர், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியில், முழு உள்ளத்தோடு ஆண்டவருக்கு ஊழியம் புரியவேண்டும் என்று மறையுரை ஆற்றிக்கொண்டிருந்தார். இடையில் அவர் பகிர்ந்த நிகழ்வு இது.
ஒருவர் சிற்றூரில் இருந்த தன்னுடைய வீட்டை விற்றுவிட்டு, நகரத்தில் தனது மனைவி மக்களுளுடன் குடியேறலாம் என்று திட்டமிட்டார். இதைத் தொடர்ந்து இவர், தன் வீட்டிற்கு முன்பாக, வீடு விற்பனைக்கு என்றோர் அறிவிப்புப் பலகையை வைத்தார். நாள்கள் நகர்ந்தன; வீட்டை விலைக்கு வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. ஒருசில மாதங்கள் கழித்து, ஒருவர் வீட்டை வாங்குவதற்கு வந்தார்; அவரிடம் வீட்டை வாங்குகின்ற அளவுக்குப் போதுமான பணம் இல்லை. இதனால் வீட்டின் உரிமையாளர், இனிமேலும் பொறுத்திருந்தால், இவரையும் இழக்க நேரிடும் என நினைத்துக்கொண்டு, ஒரு நிபந்தனையுடன், புதியவரிடம் வீட்டைப் பாதி விலைக்கு விற்றார். வீட்டின் உரிமையாளர் புதியவருக்குப் போட்ட சொன்ன நிபந்தனை இதுதான்: " நீங்கள் இந்த வீட்டிற்குப் பாதி விலைதான் கொடுத்திருப்பதால், தலைவாசலில் உள்ள கதவில் இருக்கும் ஆணி மட்டும் எனக்குச் சொந்தம்." இவ்வளவு பெரிய வீட்டில், சிறிய அளவு ஆணிதானே இவருக்குச் சொந்தம்; இருந்துவிட்டுப் போகட்டும்! என்று புதியவர் வீட்டின் உரிமையாளர் போட்ட நிபந்தனைக்குச் சம்மதம் தெரிவித்து வீட்டை வாங்கிக்கொண்டார். ஆண்டுகள் வேகமான உருண்டோடின. நகரத்தில் குடியேறிய வீட்டின் உரிமையாளருடைய மனைவி திடீரெனத் தவறினார். பிள்ளைகளும் வேறுவேறு நகரங்களில் குடிபெயர்ந்துவிட, கடைசிக் காலத்தில் சிற்றூரில் முன்பிருந்த வீட்டிலியே குடியேறுவது உத்தமம் என இவர் நினைத்தார். இதை இவர் வீட்டைப் பாதிவிலை கொடுத்து வாங்கிவரிடம் சொன்னபொழுது, அவர் வீட்டைத் தர மறுத்தார். இதனால் என்ன செய்வது என்று யோசித்த இவர் அவ்வீட்டின் தலைவாசலில் தனக்குச் சொந்தமாக இருந்த ஆணியில் செத்த நாயைத் தொங்கவிட்டார். புதிதாக வீட்டில் குடியேறியவரால் எதுவும் பேசமுடியவில்லை. இதையே இவர் பல நாள்களாகச் செய்து வந்தால், நாற்றம் தாங்க முடியாமல், புதிதாக வீட்டில் குடியேறியவர் வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டார்.
அருள்பணியாளர் இந்த நிகழ்வை மக்களிடம் சொல்லிவிட்டு இவ்வாறு தன் மறையுரை நிறைவுசெய்தார்: " வீட்டை வாங்கியவர் முழு விலை கொடுத்து வாங்கியிருக்கலாம்! அவர் பாதிவிலைக்கு வாங்கியதால், வீட்டின் உரிமையாளர் போட்ட நிபந்தனைக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. இறுதியில் வீட்டையே இழக்க வேண்டியதாயிற்று. கடவுளை அன்புசெய்து, அவருக்கு ஊழியம் செய்கின்ற ஒருவர் அரைகுறை உள்ளத்தோடு அல்ல, முழு உள்ளத்தோடு ஊழியம் புரியவேண்டும்."

ஆம், பொதுகாலத்தின் இருபத்து ஒன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளுக்கு நாம் முழு உள்ளத்தோடு ஊழியம் செய்யவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

ஆண்டவருக்கு ஊழியம் புரிவதற்கு அவரது வார்த்தைகளைக் கேட்கவேண்டும்.
" அறிவிக்கப்பட்டதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்" (உரோ 10: 17) என்று பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார். பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள், உண்மையிலும் உண்மையானவை. ஏனெனில், கடவுளின் வார்த்தையைக் கேளாத ஒருவருக்கு அவர்மீது நம்பிக்கை ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு.

கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில், " விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே" என்று இயேசு பேசியபொழுது, அவரது சீடர்களுள் ஒருசிலர், " இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று, அவரை விட்டுப் பிரிந்து செல்கின்றார்கள். இவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கருத்தூன்றி கேட்காததால்தான் அவரை விட்டுப் பிரிந்துசெல்கின்றார்கள்; ஆனால், பேதுரு உட்பட பன்னிரு திருத்தூதர்கள் இயேசுவின் நிலைவாழ்வு வார்த்தைகளை, வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கும் வார்த்தைகளைக் கருத்தூன்றிக் கேட்டார்கள். அதனால்தான் அவர்களுக்கு இயேசுவின்மீது நம்பிக்கை ஏற்பட்டது; அவர்களால் அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் செய்ய முடிந்தது. இதில் யூதாஸ் இஸ்காரியோத்து போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம். இருந்தாலும் ஆண்டவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரிவதற்கு அவருடைய வார்த்தைகளைக் கருத்தூன்றிக் கேட்பது இன்றியமையாதது.

ஆண்டவருக்கு ஊழியம் புரிவதற்கு அவருக்குப் பணிந்து அன்புசெய்வோம்
கடவுளுக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரிவதற்கு அவருடைய வார்த்தையைக் கேட்பது முதல்நிலை என்றால், அவருக்குப் பணிந்து, அவரை அன்புசெய்வது இரண்டாவது நிலை என்று சொல்லலாம்.

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு எப்படி இருக்கவேண்டும் என்ற பின்னணியில் வரும் இன்றைய இரண்டாம்வாசகம், மனைவி தன் கணவனுக்குப் பணிந்திருப்பது போல, கிறிஸ்து என்ற உடலின் உறுப்புகளாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் அவருக்குப் பணிந்திருக்கவேண்டும் என்றும், கணவன் தன் மனைவியை அன்புசெய்வது போல் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அன்பு செய்யவேண்டும் என்றும் கூறுகின்றது. இதில் மனைவி தன் கணவனுக்குப் பணிந்திருக்கவேண்டும் என்பதை கட்டாயத்தினால் அல்ல, உள்ளார்ந்த அன்பினால் பணிந்திருக்கவேண்டும் என்று புரிந்துகொள்ளலாம். அதைப் போன்று கணவன் தன் மனைவியை அன்பு செய்யவேண்டும் என்பதை, மனைவி தன் உடல் என்ற விதத்தில் அன்பு செய்யவேண்டும் என்றும் புரிந்துகொள்ளலாம். இவ்வாறு ஒவ்வொருவரும் தலையாகிய கிறிஸ்துவுக்கு உடல் உறுப்புகளாகிய நாம் ஒவ்வொருவரும் பணிந்து, அவரை அன்பு செய்கின்றபொழுது, அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் செய்ய முடியும் என்பது உறுதி.

ஆண்டவருக்கு ஊழியர் புரிவோர் அவரில் நிலைத்திருக்க வேண்டும்.
ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவருக்குப் பணிந்து, அவரை அன்பு செய்து, அவரில் நிலைத்திருப்பதை, ஆண்டவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் செய்வதில் மூன்றாம் நிலை என்று சொல்லலாம்

சிலர் கடவுளைச் சிறிதுகாலத்திற்கு அன்பு செய்வார்கள். கால ஓட்டத்தில் அவர்கள் கடவுளை மறந்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வாழ்வார்கள். யோசுவா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களுக்கும் முன்பாக, " நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று சொல்கின்றபொழுது, அவர்களும், " நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே என் கடவுள்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் பின்னாளில் கடவுளை மறந்து, அவரை முழு உள்ளத்தோடு அன்புசெய்யாமல், அவருக்கு முழு உள்ளத்தோடு ஊழியம் செய்யாமல் பாகால் தெய்வத்தை வழிபட்டார்கள். எனவேதான் அவர்கள்மீது அன்னியரின் படையெடுப்பு நடந்தது.

ஆகையால், நாம் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அவருக்குப் பணிந்து, அவரை அன்பு செய்கின்றோம் எனில், அதில் இறுதிவரை நிலைத்து நிற்கவேண்டும். அப்பொழுதுதான் அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரியமுடியும். கலப்பையில் கைவைத்த பின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியாற்றவர் (லூக் 9: 62). அதுபோன்று அரைகுறை உள்ளத்தோடு ஆண்டவரை அன்புசெய்பவராலும், அவருக்கு முழு உள்ளத்தோடு ஊழியம் செய்ய முடியாது. ஆகவே, நாம் இயேசுவை முழு உள்ளத்தோடு அன்பு செய்து, அவருக்கு முழுமையாக ஊழியம் செய்வோம்.

சிந்தனை:
இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்கப்பபடுவர் (மத் 10: 22) என்பார் இயேசு. ஆதலால், நாம் இறுதிவரை மன உறுதியுடன் ஆண்டவரில் நிலைத்திருந்து, அவருக்கு முழு உள்ளத்துடன் ஊழியம் புரிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
நற்கருணை

அன்பார்ந்த சகோதரனே! சகோதரியே! ஆண்டவர் இயேசு படிப்படியாகத் தம் சீடர்களைத் தயாரித்து ஒரு மாபெரும் உண்மையை, உண்மை மசோதாவாக அறிவிக்கப் போகிறார். மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டு வரும்போது அதை எதிர்கட்சியினர் எதிர்த்து வெளிநடப்பு செய்வதை நாம் அன்றாடம் வாசிக்கிறோம், T.V-யில் பார்க்கிறோம். அதேபோல் மசோதாவை அறிவித்து, அறிமுகம் செய்தபோது யூத மக்கள் எதிர்த்தார்கள். இது மித மிஞ்சிய பேச்சு என்று முணுமுணுத்து வெளி நடப்புச் செய்தார்கள். இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் வரவில்லை (யோவா. 6:66)

அருமையான சகோதரனே! சகோதரியே! தீர்மானம் எடுப்பது என்பது வாழ்க்கையில் இன்றியமையாதது. வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கிறது. வாழ்க்கையையே அமைத்துக் கொடுக்கிறது. ஆனால் சமூகத்தில் பலர் தீர்மானம், அல்லது முடிவு எடுக்கத் தடுமாறுகிறார்கள். தெளிவின்றி வாழ்வை இழந்து வாடுகிறார்கள். ஆனால் தீர்மானம் எடுக்கும்போது நிறைவான, மகிழ்வான, உயரிய , உண்மைக்கு இட்டுச் செல்வதில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இயேசுவைப் பாருங்கள்!
தன் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்டு இயேசு சிறிதும் தயங்கவில்லை . தன் முடிவையும் மாற்றிக் கொள்ளவில்லை. மாறாகத் தன் பன்னிரு சீடர்களைப் பார்த்து நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? (யோவா. 6:67) என்று கேட்கிறார் இயேசு. ஏனெனில் உண்மை ஒருபோதும் மறையாது. உண்மை உறங்குவதில்லை. இயேசு இந்த நற்கருணை மசோதாவைக் கொண்டு வந்தபோது பெரும்பான்மையோரின் வாக்கெடுப்புக்கு விடவில்லை. எதிர்ப்புக்கு மத்தியிலும் நிறைவேற்றினார்.

சீடர்கள் தீர்மானம் எடுப்பதில் முதலில் தயக்கம் காட்டினாலும், பேதுரு சீடர்கள் சார்பாக முடிவு எடுக்கிறார். ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன (யோவா. 6:68) என்று நம்பிக்கையின் தீர்மானத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் கூடியிருந்த கூட்டம் எடுத்த தீர்மானம் வாழ்வை இழக்கும் தீர்மானமாக, உண்மையை மறுக்கும் தீர்மானமாக, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தீர்மானமாக அமைகிறது.

இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் நமது வாழ்வில் சரியான தீர்மானங்கள் எடுக்க அழைப்பு விடுக்கின்றன.

கடந்த 2000 ஆண்டுகளாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைத் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது, மறையாது, குன்றாது, குறையாது திருச்சபையின் வாழ்வு முழுவதற்கும் ஊற்றாக, சிகரமாக உள்ளது. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இறுதி உணவின் போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அவனை இருளில் அழைத்துச் சென்றது அலகை.

யூதாஸ் நமக்கெல்லாம் எச்சரிக்கை!
இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகி பிரிவினை சபைக்கு ஓடுகிறார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்கள் தீரா நோயை எடுத்துவிடுவோம் என்று பிரிந்த சபையினர் அழைத்தனர். நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்துவார். வேறு எந்தச் சபைக்கும் நான் போகத் தயாராக இல்லை என்று உறுதிபடக் கூறினார் அந்தப் பெண். சுண்டல் கொடுக்கின்ற கோவில்களுக்கெல்லாம் ஓடும் சிறுபிள்ளைபோல, புற்றீசல் போல் பெருகி வரும் பிரிவினைச் சபைக்கு ஓடும் நிலையை நாம் கைவிட வேண்டும். ஓடியவர்களை நாம் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நாம் வாழ்வு பெறுவோம்.

மலைகள் நிலை பெயரலாம். குன்றுகள் அசையலாம். என் அன்போ என்றுமே மாறாது. உன் மீது முடிவில்லா அன்பு கொண்டுள்ளேன் (எசா. 54:10). உன்னோடு முடிவில்லா உடன்படிக்கை செய்வேன் (எசா. 55:3-4).
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
நற்கருணை

அன்பார்ந்த சகோதரனே! சகோதரியே! ஆண்டவர் இயேசு படிப்படியாகத் தம் சீடர்களைத் தயாரித்து ஒரு மாபெரும் உண்மையை, உண்மை மசோதாவாக அறிவிக்கப் போகிறார். மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டு வரும்போது அதை எதிர்கட்சியினர் எதிர்த்து வெளிநடப்பு செய்வதை நாம் அன்றாடம் வாசிக்கிறோம், T.V-யில் பார்க்கிறோம். அதேபோல் மசோதாவை அறிவித்து, அறிமுகம் செய்தபோது யூத மக்கள் எதிர்த்தார்கள். இது மித மிஞ்சிய பேச்சு என்று முணுமுணுத்து வெளி நடப்புச் செய்தார்கள். இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் வரவில்லை (யோவா. 6:66)

அருமையான சகோதரனே! சகோதரியே! தீர்மானம் எடுப்பது என்பது வாழ்க்கையில் இன்றியமையாதது. வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கிறது. வாழ்க்கையையே அமைத்துக் கொடுக்கிறது. ஆனால் சமூகத்தில் பலர் தீர்மானம், அல்லது முடிவு எடுக்கத் தடுமாறுகிறார்கள். தெளிவின்றி வாழ்வை இழந்து வாடுகிறார்கள். ஆனால் தீர்மானம் எடுக்கும்போது நிறைவான, மகிழ்வான, உயரிய , உண்மைக்கு இட்டுச் செல்வதில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இயேசுவைப் பாருங்கள்!
தன் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்டு இயேசு சிறிதும் தயங்கவில்லை . தன் முடிவையும் மாற்றிக் கொள்ளவில்லை. மாறாகத் தன் பன்னிரு சீடர்களைப் பார்த்து நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? (யோவா. 6:67) என்று கேட்கிறார் இயேசு. ஏனெனில் உண்மை ஒருபோதும் மறையாது. உண்மை உறங்குவதில்லை. இயேசு இந்த நற்கருணை மசோதாவைக் கொண்டு வந்தபோது பெரும்பான்மையோரின் வாக்கெடுப்புக்கு விடவில்லை. எதிர்ப்புக்கு மத்தியிலும் நிறைவேற்றினார்.

சீடர்கள் தீர்மானம் எடுப்பதில் முதலில் தயக்கம் காட்டினாலும், பேதுரு சீடர்கள் சார்பாக முடிவு எடுக்கிறார். ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன (யோவா. 6:68) என்று நம்பிக்கையின் தீர்மானத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் கூடியிருந்த கூட்டம் எடுத்த தீர்மானம் வாழ்வை இழக்கும் தீர்மானமாக, உண்மையை மறுக்கும் தீர்மானமாக, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தீர்மானமாக அமைகிறது.

இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் நமது வாழ்வில் சரியான தீர்மானங்கள் எடுக்க அழைப்பு விடுக்கின்றன.

கடந்த 2000 ஆண்டுகளாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைத் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது, மறையாது, குன்றாது, குறையாது திருச்சபையின் வாழ்வு முழுவதற்கும் ஊற்றாக, சிகரமாக உள்ளது. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இறுதி உணவின் போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அவனை இருளில் அழைத்துச் சென்றது அலகை.

யூதாஸ் நமக்கெல்லாம் எச்சரிக்கை!
இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகி பிரிவினை சபைக்கு ஓடுகிறார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்கள் தீரா நோயை எடுத்துவிடுவோம் என்று பிரிந்த சபையினர் அழைத்தனர். நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்துவார். வேறு எந்தச் சபைக்கும் நான் போகத் தயாராக இல்லை என்று உறுதிபடக் கூறினார் அந்தப் பெண். சுண்டல் கொடுக்கின்ற கோவில்களுக்கெல்லாம் ஓடும் சிறுபிள்ளைபோல, புற்றீசல் போல் பெருகி வரும் பிரிவினைச் சபைக்கு ஓடும் நிலையை நாம் கைவிட வேண்டும். ஓடியவர்களை நாம் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நாம் வாழ்வு பெறுவோம்.

மலைகள் நிலை பெயரலாம். குன்றுகள் அசையலாம். என் அன்போ என்றுமே மாறாது. உன் மீது முடிவில்லா அன்பு கொண்டுள்ளேன் (எசா. 54:10). உன்னோடு முடிவில்லா உடன்படிக்கை செய்வேன் (எசா. 55:3-4).
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
******************************************************************************
இறைவார்த்தை வழியில்

ஒரு பங்குப் பணியாளர் ஞாயிறு மறையுரையின் போது, ஒரு மருந்து பாட்டிலெ மக்களுக்குக் காட்டி, இது என்ன? என்று கேட்டார். அதற்கு பங்கு மக்கள், மருந்துப் பாட்டில் என்றார்கள். இதன் மீது என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றதா? என்றார். மக்களோ, தெரியவில்லை, நீங்களே படித்துச் சொல்லுங்கள் என்றனர். பங்கு பணியாளர் படித்தார். காலையில் ஒரு ஸ்பூன், மதியம் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடும்படி சொல்லப்பட்டிருக்கின்றது என்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு மக்களைப் பார்த்து, இந்த மருந்துப் பாட்டிலை உங்கள் கையில் கொடுத்து, இதில் எழுதியுள்ளபடி குடியுங்கள் என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். அதற்கு மக்கள், அதில் எழுதியுள்ளபடி செய்வோம் என்றார்கள்.

அப்போது பங்குப்பணியாளர் மக்களைப் பார்த்து, ஒரு டாக்டர் சொல்வதை நம்புகின்றீர்கள் ? கடவுள் சொல்வதை, இறைவார்த்தையை நம்ப ஏன் தயங்குகின்றீர்கள்? என்றார். அன்றிலிருந்து அந்தப் பங்கில் பெரும் ஆன்மிக மாற்றங்கள் துளிர்விடத் துவங்கின.

நமக்கு வாழ்வளிக்கும் ஆற்றல் இறைவார்த்தைக்கு உண்டு (நற்செய்தி). கடவுளின் வார்த்தை நேர்மையானது (திபா 33:4).
கடவுளின் வார்த்தைக்குக் குணமளிக்கும் ஆற்றல் உள்ளது (திபா 107:20).
கடவுளின் வார்த்தை நமது காலடிக்கு விளக்கு (திபா 119:105).
கடவுளின் வார்த்தை வல்லமை மிக்கது (எசா 55:10-11).
கடவுளின் வார்த்தை என்றும் அழியாதது (மத் 24:35).
கடவுளின் வார்த்தை நம்மை தூய்மைப்படுத்துகின்றது (இரண்டாம் வாசகம்).

நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி இறைவார்த்தைக்கு உண்டு! இதை மனத்தில் கொண்டு, நான் ஆண்டவரின் அடிமை ; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்ற அன்னை மரியாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, இறைவார்த்தையை நம்பி அதை நம் வாழ்வின் மையமாக்கி வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :

கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (குறள் : 643)

பொருள் : சொல்லாற்றல் என்று சான்றோரால் பாராட்டப்படுவது கேட்ட வரைக் கவரத்தக்கதாகவும் கேளாதவரைக் கேட்க விரும்பச் செய்வதாகவும் விளங்குவதாகும்!
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டுவரும்போது அதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வெளி நடப்புச் செய்கின்றனர். அவ்வாறே கிறிஸ்து நற்கருணை மசோதாவை, நம்பிக்கைக் கோட்பாட்டை யூதர்களுக்கு அறிமுகம் செய்தபோது, அதை எதிர்த்து மக்கள், "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?" (யோவா 6:60) என்று கூறிவிட்டு வெளிநடப்புச் செய்தனர். அவ்வாறு இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் திரும்பி வரவில்லை (யோவா 6:66).

தம் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்ட இயேசு சிறிதும் கலங்கவில்லை . மாறாக, தம்முடன் இருந்த பன்னிருவரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறார்களா?* (யோவா 6:67) என்றுதான் கேட்டார்.

உண்மை ஒருபோதும் பின்வாங்காது; சுடச்சுட ஒளிரும் பொன்னைப் போன்று எதிர்க்க எதிர்க்க மிளிரும் தன்மை உடையதுதான் உண்மை, "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே: இச்செகத் துள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்று எத்தகையச் சவாலையும் எதிர்த்து நிமிர்ந்து நிற்பதுதான் உண்மை.

வழியும் வாழ்வும், உண்மையும் உயிருமான கிறிஸ்து நற்கருணை மசோதாவை பெரும்பான்மையோரின் வாக்கெடுப்பிற்கு விடவில்லை. மாறாக, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதை நிறைவேற்றினார், கடந்த 2000 ஆண்டளவாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைப்பற்றித் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது மறையாது. குன்றாது குறையாது, திருச்சபை வாழ்வு முழுவதற்கும் ஊற்றாகவும் சிகரமாகவும் உள்ளது.

நற்கருணை மறை உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு கை கொடுக்காது, அதற்குத் தேவையானது வானகத் தந்தையின் அருள், எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு, "என் தந்தை அருன் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது"(யோவா 6:65) என்று கூறி, தமது நீண்ட உரைக்கு முத்திரை வைக்கிறார்.

இயேசு கிறிஸ்து 'ஆமென் என்ற பெயர் கொண்டவர்; நம்பிக்கைக்குரிய உண்மையான சாட்சியானவர் {திவெ 3:14}; ஒரே நேரத்தில் அவர் 'ஆம்' என்றும் 'இல்லை ' என்றும் பேசாமல், 'ஆம்' என்று உண்மையையே பேசுபவர் (2 கொரி 1:19). அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). உண்மையும் நம்பிக்கையும் உடைய அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும் உண்மையும் நம்பிக்கையும் பற்றுறுதியுமாகும்.

கடவுளிடம் நாம் எவ்வாறு பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவும், நற்செய்தியில் பேதுருவும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்கின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" (யோசு 24:15) என்று திட்டவட்டமாகக் கூறினார். அவ்வாறே, எல்லாரும் இயேசுவை விட்டுச் சென்ற கட்டத்திலும் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:67) என்று திண்ணமாக அறிக்கையிடுகிறார். ஒருவருக்குக் கேடுகாலம் வருவதும் ஒருவிதத்தில் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை இனம் காண முடியும் என்கிறார் வள்ளுவர்.

கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)

குளத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் அதில் கொக்கும் மீனும் இருக்கும். தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வேறிடத்திற்குப் பறந்து போய்விடும். மாறாக, அக்குளத்திலுள்ள செடிகொடிகன் அக்குளத்திலேயே இருந்து அதிலேயே மாண்டுவிடும். இன்பத்தில் நட்புரிமை கொண்டாடி துன்பத்தில் காலை வாரிவிடுபவர்கள் நண்பர்கள் அல்ல, நயவஞ்சகர்கன்.

ஓர் உண்மைக் காதலன் தன் காதலியிடம், 'நீ மாலையானால் நான் அதில் மலேராவேன். நீ பாலையானால் நான் அதில் மணலாவேன்" என்கிறான். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள பிரிக்க முடியாத உறவு என்பதை விளக்குகிறார் புனித பவுல். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் வெட்டிப் பிரித்தாலும் விட்டுப் பிரியாமல் இருப்பவர்களே உண்மையான தம்பதியர். அவ்வாறே இயேசுவுக்கும் அவருடைய அன்பின் அருள் அடையாளமாகிய நற்கருணைக்கும் நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், அவனுக்கு இயேசுவின் மீதோ நற்கருணை மீதோ உண்மையான பற்றுறுதி இல்லை. நற்கருனை பற்றி இயேசு கொடுத்த விளக்கத்தின் இறுதியில் அவர் யூதாசை "அலகை" என்று அழைத்தார் (யோவா 6:70). இயேசுவின் இறுதி உணவின்போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அலகை அவனை இருளில் அழைத்துச் சென்றது (யோவா 13:27-30).

யூதாசு நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை இன்றும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகிப் பிரிவினை சபைகளுக்குச் செல்கின்றனர், அவர்கள் மீண்டும் நற்கருணையிடம் திரும்பி வருவது அரிது.

ஒரு பெண்மணியிடம் பிரிவினை சபையினர், "நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்களின் தீராத நோயை எடுத்துவிடுகிறோம்" என்று அழைத்தனர். அப்பெண்மணியோ, "நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்தாவிட்டால், வேறு எந்த சபைக்கும் போக நான் தயாராக இல்லை " என்று உறுதிபடக் கூறினார், சுண்டல் கொடுக்கிற கோவில்களுக்கெல்லாம் ஒடும் சிறு பிள்ளைகளைப்போல், இங்கும் அங்குமாகப் புற்றீசல்போல் பலுகிவரும் பிரிவினை சபைகளுக்கு ஓடும் இழிநிலையைக் கைவிட வேண்டும். அல்கையின் வஞ்சக வலையில் வீழ்ந்து நம் ஆன்மாவை இழக்கக் கூடாது.

எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்து, தம்மை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உயிர்த்த ஆண்டவர். அவர்கள் கண்கள் திறந்தவுடன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார், ஏன்? இனிமேல் இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை நாம் அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் காண வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும். இயேசுவின் விருப்பத்தை ஏற்காதவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல. அவர்கள் யாரோ? யான் அறியேன் பராபரமே!

தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
நாம் தேர்ந்து கொண்டவர்கள்

திரைப்படம் ஒன்றில் இப்படி ஒரு காட்சி. பெற்றோரை இழந்த இரு சகோதரர்கள். மூத்தவன் தன் தம்பியை பாசத்தோடும் கண்டிப்போடும் வளர்த்து ஆளாக்கி விடுகிறான். ஒரு தாயின் நிலையிலிருந்து அண்ணியும் அன்பைப் பொழிகிறாள். குடும்பத்தில் செல்வமும் வசதியும் பெருகுகிறது. தீயமனம் படைத்த நண்பர்கள் இளையவனின் மனதைக் கெடுக்கிறார்கள்: "உன் அண்ணன் சொத்தையெல்லாம் தன் விருப்பம் போல் செலவிடுகிறார். நாளை உன்னை ஏமாற்றிவிடுவார். இப்போதே உனக்கு உரியதைப் பிரித்து வாங்கிவிடு" . அந்த ஆலோசனையின்படி தம்பியும் தன் அண்ணனைப் பார்த்து பாகப்பிரிவினை கோருகிறான். தன்மீது நம்பிக்கை இழந்துவிட்ட தம்பியை எண்ணி அண்ணன் அதிர்ச்சி அடைகிறான். அனலில் இட்ட புழுப்போலத் துடிக்கிறான். இருப்பினும் தன் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்கிறான்.

குறிப்பிட்ட நாளில் ஊர்ப் பெரியவர்கள், உற்றார் உறவினர் அனைவரையும் கூட்டிப் பாகம் பிரிக்கின்றான். தன்னிடம் இருந்த பொன், பொருள், நிலம் வீடு அனைத்தையும் மொத்தமாக ஒரு பக்கம் வைக்கின்றான். எதிர்ப்புறத்தில் அண்ணன் போய் நின்று கொண்டு " நம் செல்வங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்" என்றான். உண்மையைப் புரிந்து கொள்ளாத ஒருவர் குழம்புகிறார். சொத்து எல்லாம் ஒரே கும்பலாக ஒரு பக்கத்தில் அல்லவா இருக்கின்றன. எங்கே இரண்டு பாகங்கள் என்று தவிக்கிறார். ஆனால் உண்மையிலேயே சொத்து அனைத்தும் ஒரு பக்கம் இருக்க அண்ணன் மறுபக்கம் இருந்தார். " நான் வேண்டுமா இந்தச் செல்வங்கள் வேண்டுமா?" நல்ல முடிவெடுக்க. தன் தம்பியை அழைக்கிறார். அறிவு தெளிந்து தம்பி தன் அண்ணனிடம் ஓடிச் சென்று அவனைக் கட்டி அணைத்துப் பற்றிக் கொள்கிறான்.

பழைய ஏற்பாட்டில் யோசுவா இப்படி இஸ்ரயேல் மக்களை முடிவெடுக்க அழைக்கிறார். மீட்பின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் உருவெடுக்கும்போது இறைவன் நம்பிக்கை அறிக்கையை எதிர்பார்க்கிறார். ஆபிரகாம், யாக்கோபு எனத் தொடங்கி அம்முறை இஸ்ரயேல் மக்களுடன் சீனாய் மலையில் உடன்படிக்கையாக நிறைவுறுகிறது.

மோசேயை அடுத்து இஸ்ரயேல் மக்களை வழி நடத்தும் பொறுப்பேற்ற யோசுவா தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையுமுன் திரும்பவும் இந்த நம்பிக்கை அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. " உங்களை விடுதலை செய்து வழி நடத்திய அன்புக் கடவுளா? அந்நிய பொய்த் தெய்வங்களா? முடிவெடுங்கள்" என்று யோசுவா மக்களைச் சிந்திக்க வைக்கிறார். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் " நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" (யோசு. 24:15) என்று உறுதிபடக் கூற, மக்களும் "நாங்களும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" என்கின்றனர்.

அதே தொனியில் பேதுரு வெளியிட்ட நம்பிக்கை அறிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. " ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன! நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்" (யோ. 6:68,69). எந்தப் பின்னணியில்? "எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (யோ. 6:51) என்ற இயேசுவின் உரையைக் கேட்ட சீடர்கள் மத்தியில் பிளவு ஏற்படுகிறது. " அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்" என்ற சோக வரியை யோ. 6:66இல் பார்க்கிறோம். மீண்டும் இயேசு " எதிர்க்க ப்படும் அடையாளமாகிறார்" (லூக். 2:34).

" நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி மரபினர்" (1 பேதுரு 2:9) என்று அழுந்தக் கூறும் பேதுரு இங்கே " இயேசுவின் சீடர்கள் நாம் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்கள் மட்டுமல்ல, மாறாகத் தேர்ந்துகொண்ட மக்கள்" (We are not just the chosen people but the choosing people) என்று வலியுறுத்துவதை உணர்கிறோம்.

நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏனோ தானோவென்று மதில் மேல் பூனையாக, ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்று இரு மனம் கொண்டவர்களாக இருக்க முடியாது. " என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்" (லூக். 11:23) என்று இயேசு தெளிவுறுத்தவில்லையா? குடிகாரன் ஒருவன் தினமும் கோவிலிலே மிக்கேல் சம்மனசிடம் வேண்டிக் கொள்வானாம். ஆனால் முடிக்குமுன் வானதூதரின் காலடியில் கிடக்கும் பேயிடமும் சிறு செபம் சொல்லி தொட்டு முத்தி செய்வானாம். இது பற்றிக் கேட்டபோது, " என் வாழ்க்கை எங்கே போய் முடியுமோ யார் கண்டது? சொர்க்கத்துக்குப் போனால் மிக்கேல் அதிதூதர் பார்த்துக் கொள்வார். நரகத்துக்குப் போனால் ... பேயிடமும் கொஞ்சம் சமரசம் செய்து கொள்வது நல்லதுதானே!'' என்றானாம். இது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்தால் நம் இறைநம்பிக்கைக்கு நல்லதல்லவா!

இயேசுவைப் பின்பற்றுவது என்பது வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் உறுதியான நிலைப்பாடு எடுப்பது. அதாவது தெளிவான தெரிவு செய்வதாகும். அன்றாட வாழ்க்கையில் உடுத்துகிற உடை, படிக்கிற புத்தகம், செய்ய விரும்பும் தொழில், தொழிலிலே கூட்டாளி, வாழ்க்கைத் துணை என்று நாம் தேர்ந்து கொள்பவைகள் பல. அதே வேளையில் நாம் தேர்ந்து கொள்ள இயலாத முக்கியமானவைகள் உள. எடுத்துக்காட்டாக நமது பெயர், நமது பெற்றோர், நாம் சார்ந்துள்ள இனம், ஏன் பிறப்புக்கூட. நாம் விரும்பியா, ஒப்புதல் தந்தா மனிதனாக, இந்தியனாக கிறிஸ்தவனாகப் பிறந்தோம்?

நாம் கிறிஸ்தவர்களாகப் பிறந்திருக்கிறோம். கிறிஸ்தவர்களாக ஆகி இருக்கிறோமா? பெற்றதனாலா அப்பா அம்மா? "என்னைப் பெற்றெடுக்க யார் சொன்னது. எனக்காகவா சுமந்தீர்கள்? உங்கள் இன்பத்துக்காகத்தானே என்னைச் சுமந்தீர்கள்!" என்று இன்றைய இளைஞன் கேட்கிறான். அப்பா அம்மாவாக செயல்பட வேண்டாமா? பெற்றோரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் அவர்களை நேசிக்கிறோம். இந்தியனாகப் பிறக்க வேண்டும் என்று கேட்டதில்லை. ஆனால் தாய்த்திருநாடு என்று பெருமைப்படுகிறோம். பிறப்பால் கிறிஸ்தவர்களானவர்களை விட மனமாற்றத்தால் கிறிஸ்தவர்களானவர்கள் உறுதிப்பாட்டோடு இருக்கிறார்கள் என்றால் காரணம் : தெரிவு'.

இயேசுவை ஒரு முறையல்ல மீண்டும் மீண்டும் குறிப்பாக நம் நம்பிக்கை கிண்டலுக்கு ஆளாகிறபோது, எதிர்ப்புக்கும் அரசு சலுகை இழப்புக்கும் ஆளாகுகிறபோது, இப்படிக் கடினமான குழப்பமான சூழல்களில் இயேசுவை தெரிந்து தேர்ந்தெடுக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும்.

" யாரிடம் போவோம் இறைவா" - பேதுருவின் உருக்கம் இயேசுவின் உள்ளத்தைத் தொட்டிருக்கும். இந்த நிலையில் இயேசுவுக்கு இன்னொரு சங்கடம் போக விரும்பியவர்கள் எல்லாம் போய் விட்டார்கள். போக வேண்டிய அந்த யூதாஸ் போகாமலேயே 'அப்போஸ்தல' வேடத்தில் அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கிறானே, எவ்வளவு பெரிய வேதனை!

ஆயிரம் எதிரிகளைவிட ஒரு துரோகி ஆபத்தானவன் அல்லவா! அடையாளம் கண்டு கொண்ட பிறகும் கூட இயேசுவால் அவனை பிறர் முன்னே காட்டிக் கொடுக்க முடியவில்லை. அவரது உயர்ந்த பண்பு அப்படி! அதே நேரத்தில் அவனது துரோகம் பற்றி மறைமுகமாகவாவது முன்னறிவிப்புச் செய்யாமல் இருக்கவும் அவரது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. "பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்து கொண்டேன். ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்" (யோ. 6:70).

இறைமகன் இயேசுவாக அல்ல, மானிட மகன் இயேசுவாக அவரது மனம் படும்பாடு நம் உள்ளங்களிலும் உளியைப் பாய்ச்சத்தான் செய்கிறது. இயேசு என்னைத் தேர்ந்து கொண்டார். நானும் அவரைத் தேர்ந்து கொண்டேன் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நம் நம்பிக்கை ஊன்றப்படட்டும்.

இயேசுவின் சீடன் கிறிஸ்தவனைப் பொருத்தவரை, பிறந்ததற்காக வாழ்கிறோம் என்ற அவல உணர்வு நெஞ்சில் தஞ்சம் புகக்கூடாது. வாழ்வதற்காகப் பிறந்தோம், வாழ்விப்பதற்காகப் பிறந்தோம் என்ற பெருமித உணர்வு ஊற்றெடுக்கட்டும்!
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
கடவுள்-மக்கள்-மையப்படுத்திய முடிவுகள்!

கடந்த நான்கு வாரங்களாக ஞாயிறு வழிபாடுகளில் யோவான் நற்செய்தி 6ம் பிரிவிலிருந்து நற்செய்திப் பகுதிகளைக் கேட்டு வந்துள்ளோம். இன்று ஐந்தாவது வாரமாக, இப்பிரிவின் இறுதிப் பகுதி நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.

6ம் பிரிவு, அற்புதமான ஒரு விருந்துடன் துவங்கி, இறுதியில், இயேசுவைப் பின்தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கவேண்டிய ஓர் இக்கட்டானச் சூழலுடன் முடிகிறது. 6ம் பிரிவின் துவக்கத்தில், சிறுவன் ஒருவன் வழங்கிய ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும், 5000த்திற்கும் அதிகமான மக்களை, ஒரு பகிர்வுப் புதுமைக்கு அழைத்துச் சென்றது. அப்புதுமையால் நிறைவுபெற்ற மக்கள், அத்தகைய உணவும், பகிர்வும் மீண்டும், மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இயேசுவைத் தேடிச் சென்றபோது, அவர், கொஞ்சம், கொஞ்சமாக அவர்களது எண்ணங்களை வேறு திசைகளில் திருப்பினார். பெரியதொரு சவாலை அம்மக்கள்முன் வைத்தார்.

ஏனைய உயிரினங்களைப் போலவே, மனிதருக்கும் உருவாகும் வயிற்றுப்பசியை உணவைக்கொண்டு போக்கிவிடலாம்; ஆனால், மனிதர்களுக்கு மட்டுமே உருவாகும் வேறு பல பசிகளைப் போக்க, ஒருவர் தன்னையே முழுமையாக வழங்கவேண்டும் என்பதே, இயேசு அவர்கள் முன் வைத்த சவால்.

உலகினரின் பசியைப் போக்க, "எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (யோவான் 6:51) என்று இயேசு கூறியதைக் கேட்ட மக்கள் அதிர்ச்சியுற்றனர். இயேசு இன்னும் ஒருபடி மேலே சென்று, 'என் சதையை உண்டு, இரத்தத்தைக் குடிப்பவரே நிலைவாழ்வு பெறமுடியும்' (யோவான் 6:54) என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார். சவால்கள் நிறைந்த இச்சொற்கள், சூழ இருந்தோரை, அதிர்ச்சியில், இன்னும் சொல்லப் போனால், அருவறுப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். எனவே, அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக் கொண்டனர். (யோவான் 6:60)

அற்புத விருந்துடன் ஆரம்பமான ஒரு நிகழ்வு, அதிர்ச்சி தரும் சவாலாக தங்களை அடைந்தபோது, மக்களும், சீடர்களும் முடிவெடுக்க இயலாமல் தடுமாறினர். இயேசுவைப் பின்தொடர்ந்தால், எளிதாக உணவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்கள், இயேசு விடுத்த சவால்களைச் சமாளிப்பது கடினம் என்று உணர்ந்து, அவரை விட்டு விலகினர். இதையொத்த ஒரு சூழலை, இன்றைய முதல் வாசகத்திலும் காண்கிறோம். யோசுவா, தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்ந்து, மக்கள் அனைவரையும் கூட்டிச் சேர்த்து, அவர்கள் முன் ஒரு சவாலை வைக்கிறார். ஆண்டவரைப் பின்தொடர்வதா, வேற்று தெய்வங்களைப் பின்தொடர்வதா என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்து, "இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்." (யோசுவா 24:15) என்று தன் முடிவைப் பறைசாற்றுகிறார்.

மனித வாழ்வில் நாம் அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம் முடிவெடுப்பது. இந்த அடிப்படை அனுபவத்தை ஆழமாகச் சிந்திக்க இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

"நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" (யோசுவா 24: 15) என்று யோசுவா சொல்வதை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம். "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைச் சொல்லும் சீமோன் பேதுருவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.

யோசுவாவும், சீமான் பேதுருவும் கூறிய சொற்களில் உள்ள ஒரு பொதுவான அம்சம் நம் கவனத்தை ஈர்க்கிறது. இருவருமே தங்கள் முடிவை ஒருமையில் எடுப்பதாகக் கூறவில்லை. தங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் சேர்த்தே அவர்கள் முடிவெடுக்கிறார்கள். "நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்வேன்" என்று யோசுவா சொல்லவில்லை. மாறாக, " நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" (யோசுவா 24: 15) என்று உறுதியுடன் கூறுகிறார். "வீட்டார்" என்று யோசுவா கூறியுள்ளதை அவரது குடும்பத்தினர் என்று மட்டும் பொருள்கொள்ளத் தேவையில்லை. தன் உற்றார், உறவினர், பணியாட்கள் என்று அனைவரையும் இந்த வார்த்தையில் யோசுவா உள்ளடக்குகிறார். இதே உறுதி சீமோன் பேதுருவின் வார்த்தைகளிலும் ஒலிக்கிறது. "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், பேதுரு, "ஆண்டவரே, இவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் யாரிடம் செல்வேன்?" என்று தன்னைப் பிரித்துப்பேசாமல், பன்னிரு சீடர்களுக்கும் சேர்த்து அவர் பதிலிறுக்கிறார்.

தங்கள் குடும்பத்தை, குலத்தை, நண்பர்கள் குழுவை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களே, இவர்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை பெற்றவர்களே, மற்றவர்கள் சார்பில் பேசமுடியும், முடிவுகள் எடுக்கமுடியும். இத்தகைய ஆழமான புரிதலும், நம்பிக்கை உணர்வுகளும் நம் குடும்பங்களிலும், நண்பர்கள் மத்தியிலும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பார்க்கலாம்.

முடிவுகள் எடுக்கப்படும் சூழலைச் சிந்திக்கவும் இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. எல்லாமே நலமாக, மகிழ்வாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் முடிவுகள் எடுக்கும் தேவையே எழுவதில்லை. சிறு, சிறு முடிவுகள் அந்நேரங்களில் தேவைப்பட்டால், அவை எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில் சவால்கள் நம்மை நெருக்கும்போது முடிவுகள் எடுப்பது கடினமாக இருக்கும். எதை நம்பி முடிவெடுப்பது? யாரை நம்பி முடிவெடுப்பது?

முக்கியமான முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பியே இந்த முடிவுகளை எடுக்கமுடியும். இப்படிப்பட்ட ஓர் உணர்வையே பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.
யோவான் நற்செய்தி 6: 68-69

" ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்"

"வேறு யாரிடம் செல்வோம்?" என்று பேதுரு கூறுவதை "உம்மைவிட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை" என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் காணமுடியும். ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும் அவரது நண்பர்களும் மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். இயேசுவின் வார்த்தைகள் கடினமானவை என்று முடிவெடுத்து, மற்ற சீடர்கள் அவரைவிட்டு விலகியபோது, பன்னிரு சீடர்களும் நினைத்திருந்தால், அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து முடிவெடுத்து, தங்கள் பழைய வாழ்வுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால், கடலையும், படகையும், வலைகளையும் நம்பி அவர்கள் வாழ்ந்துவந்த அந்த பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்த பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. அந்தப் புதுவாழ்வு... உணவு, உடை, உறைவிடம், எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வகையிலும் உறுதியற்ற வாழ்வாக இருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளில் அவர்கள் அனைத்தையும் கண்டனர். இந்த உணர்வுகளைத் தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் அன்பு உள்ளங்களை இப்போது இறைவன் பாதத்திற்குக் கொணர்வோம். முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டியச் சூழலில், குடும்பத்தினர் இணைந்து வந்து முடிவுகள் எடுக்கவேண்டும் என்று மன்றாடுவோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல, இன்னும் பல்லாயிரம் உன்னத உள்ளங்களைப் போல, இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து, மக்கள் சார்பாக நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 

இன்றைய நற்செய்தி ஒரு செய்தியை நமக்குத்தருகிறது. இதுவரை இயேசுவைச்சாராத மற்றவர்கள்‌, இயேசுவின்‌ போதனையை ஏற்றுக்‌ கொள்வது கடினமென்றும்‌, அது குழப்பத்தை உண்டாக்குகிறது என்றும்‌ சொல்லி வந்தனர்‌. ஆனால்‌, இன்றைய பகுதியில்‌ இயேசுவோடு உடனிருந்த சீடர்களே, இயேசுவின்‌ போதனையைக்கேட்டு, " இதை ஏற்றுக்கொள்வது கடினம்‌: இப்பேச்சைக்‌ கேட்டுக்கொண்டிருக்க முடியுமா ?" என்று சொல்லிக்‌ கொள்கிறார்கள்‌. இயேசுவின்‌ போதனை சீடர்களுக்கு ஏற்றுக்‌ கொள்வதற்குக்‌ கடினமாக இருக்கிறது. கிறிஸ்தவ மறையைப்‌ பொறுத்தவரையில்‌, இரண்டு கடினமான காரியங்களை நாம்‌ பார்க்கலாம்‌.

1. நம்மை முழுவதும்‌ இயேசுவிடம்‌ சரணடையச்‌ செய்ய வேண்டும்‌.

2. இயேசு சொல்கிற வார்த்தைகளைச்‌ செயல்படுத்த வேண்டும்‌. இதில்‌ இயேசுவிடம்‌ நம்மைச்‌ சரணடையச்செய்வது அனைவரும்‌ விருப்பத்தோடு செய்கிற செயல்பாடுகளுள்‌ ஒன்று. ஆனால்‌, இயேசுவின்‌ மதிப்பீடுகளை, விழுமியங்களை வாழ்வாக்குவது எல்லாராலும்‌ முடிகின்ற ஒன்று அல்ல. ஏனென்றால்‌, அது ஒரு சவாலான வாழ்வு. நம்மையே ஒறுத்து வாழ்கிற வாழ்வு. உடலின்‌ உணர்வுகளை ஒட்டுமொத்தமாக அடக்கி ஆள்கிற வாம்வு. சுயத்தை விடுத்து பொதுநலனில்‌ அக்கறை கொள்கிற வாழ்வு. ஆனால்‌,

அத்தகைய வாழ்வுதான்‌ உன்னதமான வாழ்வு. இறைவன்‌ நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற வாழ்வு. அத்தகைய உன்னதமான வாழ்வை வாழத்தான்‌ கிறிஸ்தவர்‌ களாகிய நாம்‌ அனைவரும்‌ அழைக்கப்படுகிறோம்‌. அது கடினமான, சவாலான ஒன்றாக இருந்தாலும்‌, முடியாத ஒன்றல்ல. ஆண்டவரின்‌ துணைகொண்டு நம்மால்‌ எதையும்‌ செய்ய முடியும்‌. அப்படிப்பட்ட ஒரு சாட்சிய வாழ்வு வாழ, இறைதுணையை நாம்‌ நாடுவோம்‌.
 
ஞாயிறு மறையுரை அருள்பணி. குழந்தை இயேசு பாபு சிவகங்கை

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
திருஅவைச் சட்டப்படிப்பு
புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரி, பெங்களூர்
பொதுக்காலம் 21ஆம் வாரம் ஞாயிறு மறையுரை 25.08.2024)
யோசு:24: 1-2,15-17,18
 திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22
 எபே: 5: 21-32
 யோவா: 6: 60-69

நிலைவாழ்வு தரும் இறைவனைத் தேடி .....

இன்று நம் வாழ்வில் பல "ஆண்டவர்" கள் உள்ளார்கள் என்று சொன்னால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இல்லை என்று மறுப்போம். ஆனால் நாம் பல தெய்வங்களை நம் வாழ்வில் கொண்டுள்ளோம் என்பது உண்மை. இதை இன்னும் தெளிவாக நாம் உணர கடவுளுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை முதன்மையை நேரத்தை நாம் பலவற்றிற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். சில வேளைகளில் நம் வேலைகளும் பொறுப்புகளும் நம் தெய்வங்களாகின்றன. பல சமயங்களில் நம் கடந்த காலமும் கவலைகளும் கடவுளாகின்றன. இன்னும் சில சமயங்களில் நம் பலவீனங்கள் நம்மை ஆண்டவராய் ஆள்கின்றன. கேளிக்கைகள் சிற்றின்பங்கள் இவற்றை முதன்மைப்படுத்திக்கொண்டு நாம் வாழ்கிறோம். என்றால்.....ஆண்டவருக்கு எப்போது பணிசெய்யப்போகிறோம் ?

முதல் வாசகத்தில் யோசுவா தானும் தன் வீட்டாரும் கடவுளுக்கே அஞ்சி பணிபுரிந்து வாழ்வதாகக் கூறுகிறார். அதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் அனைவரும் கடவுள் செய்த அரும் பெரும் செயல்களை நன்றியோடு நினைத்தவர்களாய் தங்களுக்கும் ஆண்டவர் மட்டுமே எந்நாளும் தெய்வம் என முழங்கினர்.

அதே போல இரண்டாம் வாசகத்தில் பவுலடிகள் திருமணமானவர்களுக்கு கூறும் அறிவுரையில் கூட கிறிஸ்து ஒருவருக்கே அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள் என்று கூறுகிறார். இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் பற்றி கூறிய போதனையைக் கேட்டு பலர் விலகிய போதும் பேதுரு " நாங்கள் யாரிடம் போவோம். நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன" என்று சொல்லி இயேசுவை நம்பினார் என்பதை நற்செய்தி வாசகப்பகுதியில் நாம் காண்கிறோம்.

இன்று நம் நிலை என்ன? கடவுளை மட்டும் நம் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு அவருக்கு பணிசெய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக நாம் நம்முடைய குழப்பங்கள் சோதனைகள் துன்பங்கள் நிறைந்த காலத்தில் அவர் செய்த நன்மைகளையெல்லாம் நினைக்க வேண்டும். இரண்டாவதாக நிலை வாழ்வு தரும் அவருடைய வார்த்தைகளை நம்ப வேண்டும். இதை உணர்வோம். செயல்படுவோம். நிலைவாழ்வு தருபவர் அவர் ஒருவரே.

இறைவேண்டல்
எங்கள் ஆண்டவரே! உம்மையல்லாமல் எமக்கு வேறு தெய்வம் இல்லை என்ற அசையா நம்பிக்கையில் வாழ்ந்து நிலைவாழ்வு தரும் உம்மைத் தேடி வர அருள்தாரும். ஆமென்
 
 
 
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ