ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

       பொதுக்காலம் 28ஆம் வாரம் - ஞாயிறு

    திருப்பலி முன்னுரை

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
சொர்க்கத்துக்கு சொந்தமான ஞானத்தைப் பெற வந்திருக்கின்ற நெஞ்சங்களே!
B தவக்காலம்1
சொர்க்கம் செல்ல சம்பாதித்த செல்வத்தை என்ன செய்ய வேண்டும் என்ற இறைவார்த்தையை ஞானம் ஞாபகப்படுத்தி உச்சரிக்கிறது. அதன்படி வாழச்சொல்லி நச்சரிக்கிறது, எச்சரிக்கிறது இந்த ஆண்டின் பொதுக்காலம் 28 ஆம் ஞாயிறு

நாம் தேடி வைத்திருக்கின்ற, தேடிச் சேமித்துக் கொண்டிருக்கின்ற, இன்னும் தேட இருக்கின்ற செல்வங்கள், பணம், படிப்பு, பதவி புகழ், பெருமை, உறவு அனைத்தும் பிறர் நலத்துக்காக பயன்படுத்தப்பட்டால் மட்டுமே, சொர்க்கத்தில் இடமுண்டு. கோடி, கோடியாய் சம்பாதித்தாலும் ஒன்றும் கூட வராது. நமக்குப் பின் பூமியில் விட்டு விட்டுப் போகும் சொத்து அனைத்தும் கூட செல்லரித்து போகும். வீடு வரை மனைவி வீதிவரை உறவுகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? என நெருங்கிய உறவும் காணாது போகும்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதையும் தாண்டி பற்றற்று பயன்படுத்தும் உறவும், பொருளும் இம்மையிலும், மறுமையிலும் பல மடங்கு பலன் அளிக்கும். அதை வாங்கி அனுபவிக்க வாருங்கள் என ஞானம் வரவேற்கிறது.

வசதிகளும், வாய்ப்பும், சுற்றமும், நட்பும் சுகம் தருகிறது என படைத்தவனையும், பக்கத்தில் இருப்பவனையும் மறந்தால், சொர்க்கத்தின் கதவு தானாக நம்மைப் பார்த்தவுடன் அடைத்துக் கொள்ளும். செய்த பாவத்தை துடைத்துக் கொள்ள, துயரத்தைக் கழுவிக் கொள்ள, இதயத்தை ஈரமாக்கிக் கொள்ள, சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்ள இருக்கின்ற செல்வத்தை இரக்கத்துடன் பிறருக்கு வாரி வழங்கினால், இறைவார்த்தையை வாழ்வாக்கினால் சொர்க்கம் நம்மைத் தேடி நம் வீட்டுக்குள் வந்து நம்மை விட்டு போக மறுத்து கதவை பூட்டிக் கொள்ளும். நாம் இருக்கின்ற இடம் சொர்க்கமாக மாறி விடும்.

ஞானத்தோடு எல்லா நலன்களையும் பெற்று சொர்க்கத்தில் இடம்பெறச் செய்யும் அருளை ஏந்தி வருகின்ற திருப்பலியில் வளம் தரும் ஞானத்தை வரமாய் தரச் சொல்லி கரம் ஏந்துவோம். சொர்க்கத்தின் சுகத்தை இம்மையிலும் மறுமையிலும் அனுபவிக்க மனமுருகி மன்றாடுவோம்.

 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 
1. அளவற்ற செல்வத்தை ஏந்தி வரும் ஞானத்தை அள்ளித் தரும் இறைவா!
திருப்பீடப் பணியாளர்கள் அனைவரும் உமது ஞானத்தை மேலாடையாக அணிந்து இவ்வுலக ஆசைகள் மீது கொண்ட பற்றினைத் துறந்து, உம்மைப் பற்றிக் கொண்டு இறைமக்களும் உம்மைப் பற்றிக் கொண்டு ஞானத்தின் பலனை அனுபவிக்கும் தூண்டு கோலாக செயல்பட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஞானத்தின் ஆவியைப் பொழியும் இறைவா!
விலையுயர்ந்த பொன்னையும், பொருளையும் சேமித்து வைப்பதில் பொருளில்லை. இல்லை என வருந்துவோருக்கு செய்யும் நற்செயலே பொருளுள்ளது என்பதை உணர்ந்து, நாடுகளின் தலைவர்கள் வறுமையில் தவிக்கும் மக்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை உரிமை கிடைக்கச் செய்ய பாடுபடும் நல் ஞானம் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பற்றற்ற வாழ்க்கை வாழ்வோரை இம்மையிலும் மறுமையிலும் பல மடங்கு பலன் தந்து ஆசிர்வதிக்கும் இறைவா!
தாய், தந்தையை, சகோதர, சகோதரியை விட்டு விட்டு பற்றற்ற வாழ்க்கை வாழும் எமது ஆன்மீகத் தந்தையின் பணிவாழ்வால், இறைமக்கள் தங்கள் ஆசையாக ஞானத்தை கண்டுணர அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. விண்ணரசில் செல்வத்தால் நுழைய முடியாது என்ற சிந்தனையைத் தந்த தெய்வமே!
பணம் வைத்திருப்பதால் மட்டும் போதாது அதை ஏழைகட்கு பயன்படுத்தும் மனம் வேண்டும் என்பதை உணர்ந்த நாங்கள், தேவையில் உழலும் எமது சகோதர சகோதரிகளுக்கு கொடுத்து உதவும் நற்பண்பில் வளர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. துன்புறுவோரைத் தேடும் தெய்வமே!
எங்களோடு வாழும் மக்களில் துன்புறுவோரைத் தேற்றும், கண்கலங்கி வாடுவோரின் கலக்கம் நீக்கும், பற்றற்ற வாழ்க்கை வாழும் துறவிகள் எங்கள் குடும்பங்களில் இருந்து உருவாகட்டும், நலிவுற்றோர் நலம் பெறட்டும். அதற்கான அருளை ஞானமாக இன்றைய திருப்பலி தரட்டும் என இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 
மறையுரை சிந்தனைகள்
   

அன்று அதிகாலை சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டது. அற்புதமான நல்ல மனிதர் ஒருவர், முதன் முதலாக தான் செய்த அறச்செயலின் பலனாக உள்ளே நுழைந்தார். நுழைந்தவுடன் அங்கே அவசர அவசரமாக ஒருவரைத் தேடினார். பல இடங்களில் தேடியும் தான் தேடிய நபரைக் காணாது மிகவும் கவலையுடன் நின்றார். அவரை குட்டி சம்மனசு ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவர் அருகில் சென்று "யாரைத் தேடுகிறீhர்கள்?" எனக் கேட்டது. உடனே அவர் "தான் பூமியில் வாழ்ந்த போது மிகவும் நேசித்த மாமி தனக்கு முன் இறந்து விட்டதாகவும், அவர் அழகானவர், பெரிய பணக்காரர் அவரை எப்படியாவது நான் பார்க்க வேண்டும்" என்று சொன்னார். குட்டி சம்மனசு "வாழ்வு நூலில் சொர்க்கத்தில் இடம் பெற்றவர்கள் பெயர் பட்டியலில், அவர் பெயர் இருக்கிறதா எனப் பார்ப்போம்" என்று, இருவரும் வாழ்வு நூல் பெயர் பட்டியலை வாங்கி புரட்டிப் பார்த்தபோது, அங்கே அவரது பெயர் இல்லை. பின்னர் நரகத்தில் அவள் இருப்பதை பார்த்துவிட்டார்கள். இதனால் அந்த மனிதன் மனம் துடித்துப் போய் அவரை எப்படியாவது சொர்க்கம் அழைத்து வர முயற்சித்து, குட்டி சம்மனசிடம் ஆலோசனை கேட்டான். குட்டி சம்மனசும் வாழ்வு நூலில் இறைவன் குறித்து வைத்திருக்கும் குறிப்பேடு ஒன்றை எடுத்து புரட்டிப் பார்த்தபோது, அங்கே அவனது மாமி ஒரு முறை பசு மாடு ஒன்றிற்கு தவிடு புண்ணாக்கு அளித்ததாக எழுதப்பட்டிருந்தது. இது கண்டு மகிழ்ந்த சம்மனசு இப்போது அந்தப் பசுவை தேடிக் கண்டுபிடித்தது. அந்தப் பசுவை நரகத்திற்கு அனுப்பி அதன் காலைப்பிடித்துக் கொண்டு வரும்படி அந்தப் பெண்ணிடம் கூறினார்கள். அந்தப் பெண்ணும் அப்படியே பசுவின் காலைப் பிடித்துக் கொண்டு சொர்க்கம் புறப்பட்டாள். அப்போது அவளது காலை இன்னொரு பெண்மணி தொடுவது போல உணர்ந்து எரிச்சலுடன் கீழே பார்த்தாள் தன் காலை பிடித்துக் கொண்டு பின் தொடரும் பெண்மணியை குனிந்து ஒரு கையால் தள்ளிவிட முயன்றாள். அப்போது அவளது கை பிடி நழுவ பசுவை விட்டுவிட்டாள் மீண்டும் நரகத்திற்குள் விழுந்து விட்டாள்!

தன்னல உணர்வின்றி வாழ்ந்தால் மட்டுமே சொர்க்கத்தில் இடம் பெற முடியும்.

தன்னலமின்றி நாம் செய்கின்ற நற்செயல்களை நாம் மறந்து விட்டால் கூட, கடவுள் இதற்கான பெருமையை தன்னுடைய குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கட்டாயம் தருவார்.

செல்வமும், அழகும், அறிவும் சொர்க்கத்தை சம்பாதித்து தராது.

பணம் சேர்த்து வைப்பவர்கள் திருடனை உருவாக்குகிறார்கள்.

மனமிரங்கிக் கடன் கொடுப்பவன் நல்லதை செய்கிறான்.

முக மலர்ச்சியோடு கொடுப்பவருக்கு ஆண்டவரும் முக மலர்ச்சியோடு கொடுக்கின்றார்.

ஏழைகளை நேசிப்பவரை ஆண்டவரும் நேசிக்கிறார்.

கணக்கு பார்க்காமல் கொடுப்பவருக்கு கடவுளும் கணக்கு பார்க்காமல் கொடுக்கிறார்.

பணம் இருப்பவருக்கு குணம் இருக்காது, குணம் இருப்பவருக்கோ பணம் இருக்காது என்பார்கள்.

தைவானில் காய்கறி விற்கும் பெண்மணி ஒருவர், தான் சம்பாதித்த எல்லாவற்றையும் ஏழைகளுக்காக வாரிவழங்கும் வள்ளலாக வாழ்ந்து வருகிறார். அவரது பெயர், சென்சூசு இவருக்கு 60 வயதாகிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். கிழக்கு தைவானின் டாய்டுங் மாகாணத்தில் உள்ள காய்கறிச் சந்தையில் சிறிய அளவில் காய்கறி கடை வைத்து வியாபாரம் தொடங்கினார். இளம் வயதில் வறுமையில் வாடியதால், வறுமையின் கொடுமை அனுபவித்தார். இயற்கையாகவே ஏழைகளுக்கு உதவும் மனப்பக்குவம் நிறைந்தவர் சென்சூசு

தன்னுடைய வருமானம் முழுவதையும், ஏழைக் குழந்தைகளுக்கு, ஆதரவற்ற காப்பகங்களுக்கு வாரி வழங்குகின்றார். கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை ஒரு கோடிக்கு மேல் தானமாக வழங்கி உள்ளார். ஊட்டச் சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நூலகம் அமைப்பதற்காகவும், உள்ளுரில் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்காகவும் அதிகமான நன்கொடை அளித்துள்ளார்.

நூறு ரூபாய்தானம் கொடுத்தாலே விளம்பரம் தேடிக்கொள்வோர் மத்தியில், தன் சம்பாத்தியம் முழுவதையும் வாரி வழங்கும் இவர் தன்னுடைய உதவியைப் பற்றி வெளியில் யாரிடமும் கூறுவது இல்லை. இவரது செயலை வெளி உலகிற்கு எடுத்துக் காட்டினாலும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதவர் போல மிகவும் எளிமையாக இருக்கிறார்.

"என் உயிர் உள்ளவரை தொடர்ந்து ஏழைகளுக்கு உதவுவேன். பீரோக்களில் நகையையும் பணத்தையும் அடுக்கிவைத்து, மனிதாபிமானத்தை மறந்து குப்பை மனதுடன் வாழ என்னால் இயலாது" என மிக அழுத்தம் திருத்தமாக பேசுகிறார்.

பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இருண்ட உன் நிலை நண்பகல் போல ஒளிரும்.

மகா அலெக்ஸாண்டர் "தான் இறந்த பின் தனது இரண்டு கைகளையும் சவப் பெட்டிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்குமாறு வையுங்கள். சவ ஊர்வலத்தின் போது ஏன் அலைக்ஸாண்டர் கை வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது என்று கேட்டால் உலக சாம்ராஜ்யத்தின் பெரும்பகுதியை தன் வசமாக்கிய மன்னன், இறந்த பின் எதையும் எடுத்துக் கொண்டு செல்லவில்லை. என்று சொல்லுங்கள்" என்று சொன்னாராம்;.

வாழும் நாளில் வரலாற்றில் இடம்பெற மனிதவளர்ச்சிக்கு உகந்த நற்செயல் செய்து மகிழ்வோம். அப்போது விண்ணகத்திலும் இடம் பெறுவோம்.

ஞானி ஒருவர் ஊர் தோறும் சென்று போதித்து வந்தார். ஓரு ஊருக்கு சென்றபோது அந்த ஊர் மக்கள் அவரை அன்போடு வரவேற்றார்கள். அந்த ஊரில் ஒரு மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவரும் ஞானியை வரவேற்ற கூட்டத்தில் இருந்தார். அவருக்கு ஞானியை தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றால் இன்னும் தன் மதிப்பு கூடும் என்று எண்ணி, அவரை தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒவ்வொரு அறையையும் சுற்றி காண்பித்தார். அங்கே செல்வம் குவிந்திருப்பதைக் கண்டார். அந்த செல்வந்தருக்கு அறிவு புகட்ட விரும்பினார் ஞானி. "ஐயா எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?" என ஞானி செல்வந்தரிடம் கேட்டார். மிகப் பெரிய ஞானி தன்னிடம் உதவி கேட்கும் அளவிற்கு தம்மிடம் செல்வம் குவிந்திருக்கிறது என்ற பெருமையை நினைத்து மகிழ்ந்து "ஐயா தங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். எது வேண்டுமானாலும் கேளுங்கள்" என்றார். ஞானி ஒரு சின்ன ஊசியை எடுத்து, "நான் சொத்துகளை சேமிக்கத் தெரியாத பரதேசி, எனவே இந்த ஊசியை பத்திரமாக வைத்திருந்து விண்ணகத்தில் என்னை சந்திக்கும் போது மீண்டும் தாருங்கள்" என்று சொன்னார். அதற்கு அந்த செல்வந்தன் "மிகுந்த கோபத்தோடு விண்ணகத்திற்கு எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது என்பது உமக்குத் தெரியாதா?" என்றார். "ஞானி மிகுந்த பொறுமையோடு "பின் ஏன் இவ்வளவு செல்வங்களை ஏழைகளுக்குக் கொடுக்காது உமது அறையில் வைத்திருக்கிறீர்?" என்று கேட்டார். செல்வந்தர் தன் கடமையை உணரவே ஞானி இவ்வாறு கேட்டார்.

உலகின் முதல் தந்தை தனிமையாகப் படைக்கப்பட்ட போது ஞானம் அவரைப் பேணிக் காத்தது.
தனக்கு பணிபுரிந்தவர்களை ஞானம் துன்ப துயரங்களிலிருந்து விடுவித்தது.
ஞானத்தோடு ஒப்பிடும் போது பொன்னெல்லாம் சிறு மண்ணுக்குச் சமம்.
ஞானத்தைக் கேட்டு மன்றாடுவோம். அளவற்ற நலன்களை ஏந்திக்கொண்டு அது நம்மிடம் வரும்.

 
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.


அருளா? ???  பொருளா????
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இருந்தும் இல்லாதது போலவே என்பார் திருவள்ளுவர். கடவுளின் அருள் நம்மிடம் இல்லை என்றால் அவ்வுலகமாகிய நிலைவாழ்வு நமக்கு இல்லை. பொருள் இல்லையென்றால் நாம் வாழும் இவ்வுலகத்தில் எதுவும் நமக்கு இல்லை. நம்மிடம் இருப்பது அருளா பொருளா ? அதைக் கொண்டு நாம் பெற விரும்புவது அவ்வுலகத்தையா இவ்வுலகத்தையா என்பதை சிந்தித்தறிய இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசர், பொன், வெள்ளி, மாணிக்கம், உடல் நலம், அழகு, ஒளி ஆகிய எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக ஞானத்தைக் கருதுகின்றார். அதன் முலம் மேற்கூறிய அனைத்து செல்வங்களையும் நான் பெற்றுக் கொள்வேன் என உறுதிகூறுகிறார். இரண்டாம் வாசகத்தில் கடவுளின் வார்த்தையே செல்வங்களுக்கெல்லாம் சிறந்த செல்வம் என்று நம்பிக்கை ஊட்டுகிறார். நற்செய்தியிலோ இயேசு, நாம் பெற்ற செல்வங்களை செயல்களின் மூலம் பிறருக்கு பகிர்ந்தளிக்கச்சொல்கின்றார். ஞானம்,வார்த்தை செயல் என மூன்று வாசகங்களும் ஒவ்வொன்றை செல்வமாகக் கருதுகின்றன. நாம் நமது செல்வமாக கருதுவது எதை என்பதை கண்டறிய இறைவன் நம்மை அழைக்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் செல்வந்தர் போலவே நாமும் பல நேரங்களில் நமது வாழ்வில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
தனது உண்மையான மகிழ்வைத் தேடுபவர்.
தன்னை நல்லவராக காட்டிக்கொள்பவர்.
இழக்க மனமில்லாதவர்.

உண்மையான மகிழ்வைத் தேடுபவர்:
தான் மிகப்பேரிய செல்வந்தனாக இருந்த போதிலும் தனக்கு ஏதோ ஒன்று குறைவுபடுகின்றது , அது என்ன என்று தேடும் எண்ணம் உடையவராக இருக்கின்றார். நிலைவாழ்வு ஒன்றே தனக்கு மனநிம்மதி மகிழ்வு தரக்கூடியது அதை அடையும் வழி இயேசுவிடம் இருக்கின்றது என்று நன்கு அறிந்து அவரை எதிர்கொண்டு வருகின்றார். நாமும் இந்த செல்வந்தர் போல செயல்பட்ட தருணங்கள் பல இருக்கலாம். எல்லாம் இருந்தும் வெறுமையாகவும், எதுவும் இல்லாமல் மன நிம்மதியுடனும் இருந்த நாட்கள் ஏராளம். நம்முடைய உண்மையான மகிழ்வை மனநிம்மதியை நாம் எங்கு தேடிக்கொண்டிருக்கின்றோம் என்று சிந்திப்போம். செல்வந்தர் நிலை வாழ்விற்கான வழி ஒன்றே தனது மகிழ்விற்கான காராணம் என்பதை கண்டறிந்தார். அதைக் கண்டடைய விரும்பி இயேசுவை எதிர் கொண்டார். நாம் நமது பயணத்திற்கான பாதையை கண்டறிந்துவிட்டோமா? சிந்திப்போம்.


தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்பவர்:
நல்ல போதகரே என்று கூறி இயேசுவின் அன்பைப் பெற எண்ணுகின்றார். முழந்தாள்படியிட்டு அனைவரும் தன்னை பார்க்கும் நிலைக்கு ஆளாக்குகின்றார். உணவிற்காகவும் உடல்நலத்திற்காகவும் அவரைப் பின் தொடரும் மக்கள் மத்தியில் நிலைவாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டு அனைவரையும் வியக்க வைக்கின்றார். சிறுவயது முதலே தான் அனைத்து கட்டளைகளையும் கடைபிடிப்பதாக அனைவர் முன்னிலையிலும் எடுத்துரைக்கின்றார். நாமும் இப்படித்தான் இந்த செல்வந்தர் போல செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். நம்மை அடுத்தவர் முன்னிலையில் பெரியவர்களாக காட்டிக்கொள்ள என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கின்றோம். வீண் பகட்டும் ஆடம்பரமும் நம்மை நம்முடைய இயல்பு வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கின்றது. அதை உணராது நாம் பிறர் முன் நம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயன்று கொண்டிருக்கின்றோம். மனிதர் முன் தன்னை பெரியவனாக காட்டிக் கொள்ள முற்படுபவன், கடவுள் முன் சிறியவனாகக் கருதப்படுவான். மனிதர் முன் சிறியவனாக தன்னை தாழ்த்துபவன் கடவுள் முன் பெரியவனாக உயர்த்தப்படுவான். நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் சிந்திப்போம்.

இழக்க மனமில்லாதவர்:
நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பர். செல்வந்தரின் விசயத்தில் அது பொய்யாகிப் போனது. நிலைவாழ்வைப் பெற வேண்டும் அதற்கான வழி இயேசுவிடம் உள்ளது என்று கண்டறிந்து அவரை எதிர்கொண்டு வந்தார். ஆனால் முடிவு நினைத்தது போல் இல்லை. இயேசு சொன்ன வார்த்தைகளை அவரால் வாழ்வாக்க முடியவில்லை. அதனால் பயணத்தில் வெற்றியும் பெற முடியவில்லை. உண்மையான நிலைவாழ்வு பெற உனக்குரியதை விற்று ஏழைகளுக்குக் கொடு என்று சொன்னதை அவரால் செயல்படுத்த முடியவில்லை.விளைவு பயணத்தில் திருப்பம். எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது. ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெறமுடியும். இதை உணராமல் வாழ்வதினால் தான் எந்த ஒரு புதிய மாற்றத்தையும் பெறாமல் இருக்கின்றோம். இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கும், நாம் அவருக்காக இழக்க நினைக்கும் ஒன்றை இழக்க துணிவோம்,முயல்வோம். இழப்போம் மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கையில்.

இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் போல எல்லாவற்றையும் இழப்போம் நம்மிடம் சேரும் செல்வம் பொருள் , பெயர் பதவி என் அனைத்தையும் இறைவனுக்காக இழப்போம். நூறு மடங்காக திரும்ப பெற்றுக் கொள்வோம் என்னும் நம்பிக்கையில். அருளா? பொருளா ? என்றால் பொருளை பகிர்ந்து அருளை பெற்றுக்கொள்வோம். இவ்வுலகில் வாழும் மனிதர்களோடு நம்முடைய அனைத்தையும் பகிர்ந்து அவ்வுலகத்திற்கு செல்ல அடிக்கல் நாட்டுவோம். நிலைவாழ்வை நோக்கிச்செல்லும் நமது பயணத்தில் எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் நேரடியாக பயணிக்க அருள் வேண்டுவோம்.இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து பகிர்வு என்னும் செல்வத்தை நம்முடையதாக்குவோம் . இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி. ஜெ. ஞானசேகரன்

வாழ்க்கை என்பது பெறுவது மட்டுமல்ல, கொடுப்பதும்!


நாம் வாழும் இந்த வாழ்வின் அழகு, நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதில் அல்ல; " என்னால் இத்தனை பேர் மகிழ்ச்சியடைகின்றனர்" என்பதிலேயே அடங்கியிருக்கிறது. ஆம், மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை; மாறாக, பிறருக்குக் கொடுப்பதில்தான் அமைகிறது. " நல்வாழ்க்கை என்பது நம்மிடம் இருப்பதைப் பொறுத்தது அல்ல; மாறாக, கடவுளுடன், மற்றவர்களுடன், மேலும் குறைவாகப் பொருள் உள்ளவர்களுடன் நாம் கொண்டுள்ள அணுகுமுறையைப் பொறுத்தே அமைகிறது" (திருத்தந்தையின் " டுவிட்டர்" குறுஞ்செய்தி, 24.01.2024).

சிலர் இறைவனிடம் " இறைவா, எனக்கு நீண்ட ஆயுளைக் கொடு" என்று வேண்டுகின்றனர். " உனக்கு ஏன் கொடுக்க வேண்டும்? நீ என்ன செய்தாய்?" என்று இறைவன் கேட்டால், என்ன பதில் சொல்வது? அதற்காகவாவது நாம் அறம் செய்ய வேண்டும். தர்மமே அறம்!

ஏழைகளுக்கு உதவி செய்யும்போது உதவி பெற்றவர்கள் " நீ நீடூழி வாழணும் சாமி" என்று இரு கைகூப்பி வேண்டுவதைப் பார்த்திருப்போம். அவர்கள் கடவுளை நோக்கி எழுப்புகின்ற இந்த வேண்டுதலை, இறைவன் ஒருபோதும் நிராகரிப்பதில்லை. ஏன் தெரியுமா? உதவுகின்றவர்களால் ஏழைகளுக்கு உதவிகள் கிடைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். ஏழைகளுக்கான வாழ்வாதாரத்தைக் கடவுள் இப்படியும் நிறைவு செய்வாரன்றோ!

ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு " பொருள் தேடும் இவ்வுலகில்" மற்றவரிடமிருந்து " எதைப் பெறுவேன்?" என்ற சிந்தனையில் எந்நேரமும் மூழ்காமல், " என்னால் மற்றவருக்கு எதைக் கொடுக்க முடியும்?" என்று சிந்திக்க நம்மை அழைக்கிறது.

இன்றைய நற்செய்தியில் " நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" (மாற் 10:17) என்ற வேட்கையுடன் இயேசுவைத் தேடிவந்த செல்வரிடம், இயேசு கட்டளைகளைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார். அவரோ, கட்டளைகளைத் தான் கடைப்பிடித்து வந்துள்ளதாகவும், அதற்கும் மேல் என்ன செய்வது என்று கேட்கும்போது, " நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்" (10:21) என்கிறார். அந்தச் செல்வர் சற்றும் எதிர்பாராத இந்தச் சவாலைக் கேட்டதும் " அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார்; ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது" (10:22) என்று வாசிக்கிறோம். அவர் தேடிவந்த நிலைவாழ்வை விட, அவருடைய சொத்துகள் அவரை அதிகமாய்ப் பற்றியிருந்ததால், இயேசு விடுத்த சவாலான அழைப்பை அவரால் ஏற்க முடியவில்லை.

இறையாட்சிக்கும் இறையாட்சிப் பணிக்கும் தேவையான எளிமை, ஏழ்மை, செல்வத்தில் பற்றற்ற தன்மை போன்ற மதிப்பீடுகளை ஏற்க முடியாமல் செல்வம் அந்தச் செல்வரைத் தடுத்தது. எந்தப் பொருள்மீது மனிதனுக்கு அளவற்ற பற்று ஏற்படுகிறதோ, அந்தப் பொருளால் அடையக்கூடிய துன்பங்கள்தான் மிகுதியாகும். எவற்றிலிருந்து நாம் பற்றறுந்து விலகி நிற்கிறோமோ, அவற்றினால் வரும் துன்பங்களிலிருந்தும் அப்போதே விலகி விடுகிறோம் என்பதுதான் வாழ்வின் பேருண்மை. இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (குறள் 341)
என்கிறார். இந்த மாபெரும் பேருண்மையை எப்படியேனும் செல்வருக்குப் (நமக்கும்) புரிய வைக்க முயல்கிறார் இயேசு. இயேசு அவரை அன்பொழுகக் கூர்ந்து நோக்கியும், இயேசுவின் பார்வையில் தன் பார்வையைச் செல்வர் பதிக்க முன்வரவில்லை. பாவம்! செல்வத்தைச் சேர்த்து, அச்செல்வங்களுக்குள் தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டார் போலும்.
செல்வத்திற்கு முதலிடம் தரும் யாராலும் இறைவனுக்கும் இறையாட்சிக்கும் முதலிடம் தர முடியாது என்பதை இந்தச் செல்வரின் முடிவு நமக்கு உணர்த்துகிறது. ஒருவர் செல்வராய் நிலைத்திருப்பதிலேயே தனது முழுக்கவனத்தையும் குவித்துவிட்டால், இறையாட்சி எனும் கொடையை அவர் கண்டுகொள்ளாமலும், அதை அடைய முயற்சி எடுக்காமலும் போய்விடலாம்.

செல்வப்பற்று மிக்கவர்கள் கடவுளைத் தேடுவதில்லை. நிலைவாழ்வில், மீட்பில் அக்கறையற்றவர்களாகவே இருப்பர். செல்வத்தை மையமாக வைத்துச் செயல்படுவோர் நிறைவு பெறமுடியாது. செல்வம் சேரச் சேர மீண்டும் அதிகமாகச் சேர்க்க வேண்டுமென்ற ஆசையே அதிகமாகும். " உலகச் செல்வத்தால் எதையும் செய்ய எங்களால் இயலும்" என்ற சுயநம்பிக்கையில் வளர்வர். செல்வம் அவரது வாழ்வில் கடவுளைவிட முன்னுரிமையாக மாறிவிடும். செல்வத்தை அதிக ஆர்வத்தோடு நாடுவது சுயநலத்தின் வெளிப்பாடு; சுயநலம் இறையாட்சிக்கு எதிரானது. எனவேதான் இயேசு, " பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" (10:24) என்கிறார்.

இயேசு செல்வத்திற்கோ, செல்வருக்கோ எதிரானவர் அல்லர். செல்வத்தால் ஒரு மனிதருக்கு வரக்கூடிய தீமைகள், ஆபத்துகள் குறித்து எச்சரிக்கிறார். செல்வத்தின் மீதிருக்கும் நீங்காத பற்று ஒருவரை நிரந்தர அடிமையாக்கி விடுகிறது. முதலில் ஒரு பொருளின்மீது ஆசை; அந்த ஆசை அதிகமாகும்போது அது பற்றாகப் பரிணமிக்கும். அந்தப் பொருளை எப்படியேனும் தன்னுரிமையாக்கத் துடிக்கும் வேட்கை ஒரு மனிதரைத் தூக்கம் மறக்கச் செய்யும். ஒருவேளை விரும்பிய பொருள் கிடைக்கவில்லையெனில், அந்த ஏக்கம் உயிரை வாட்டும் (சில நேரங்களில் உயிரையே எடுக்கும்!). விரும்பிய பொருள் கிடைத்துவிட்டால் கைநழுவி விடுமோ என்ற அச்சம் கவலைகொள்ளச் செய்யும். நாள்பட்ட கவலை கோபமாக மாறும். கோபம் பகையை உருவாக்கும்; நிம்மதியைக் கெடுக்கும். ஆகவே, அனைத்துக்கும் அடித்தளம் பணம், பொருள், செல்வம்... இவற்றின்மீது மனிதர்கள் கொள்ளும் பற்றே. எனவேதான் இயேசு சொல்கிறார்: " எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" (லூக் 12:15). இந்தக் கூரிய சிந்தனை நமக்கும் தேவைதானே!

அச்சம், சினம், போட்டி, பொறாமை, பேராசை, பற்று... இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமெனில் இன்றைய முதல் வாசகம் குறிப்பிடுவதுபோல ஞானத்தைக் கண்டடைய வேண்டும். செல்வத்திற்கும் மேலானது ஞானம். அதை விரும்பித் தேடவேண்டும். ஞானத்தோடு ஒப்பிடும்போது, செல்வம் என்பது ஒன்றுமே இல்லை. செங்கோலும் அரியணையும்கூட ஞானத்தின் முன்னால் வெறுமையே. இந்த உண்மையை உணர்ந்ததாலே " உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!" என்று கடவுள் கூறியபோது, " ஆண்டவரே, ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" (1அர 3:9) என சாலமோன் வேண்டிக்கொண்டார். ஆண்டவர் அவருக்கு ஞானத்தோடுகூட செல்வங்களையும், நீடிய ஆயுளையும் தருகிறார். ஆக, ஞானத்தோடு ஒப்பிடும்போது பொன்னும் சிறிதளவு மணலே. பொன்னுக்கு நிகராகக் கருதப்பட்ட வெள்ளி வெறும் களிமண்ணே. ஒளிகூட மங்கக்கூடியது, ஆனால், ஞானம் மங்காதது. ஞானத்தைப் பெறுபவர் அனைத்தையும் பெறுகிறார். ஞானம் தனிமையாக வராமல், அனைத்துச் செல்வங்களையும் சேர்த்துக் கொண்டு வருகிறது. அதாவது, ஞானத்தைப் பெறுகிறவர் உண்மையாகவே செல்வராகிறார். ஞானமே இயேசு - இறைவார்த்தையே ஞானம்!

ஏழைகள் யார்? அவர்கள் நம்மைப் போன்றவர்கள்; நம்மோடு வாழ்கின்றவர்கள். அவர்கள் ஏழைகளாக இறைவனால் படைக்கப்பட்டவர்களல்லர். அநீதியான சமூக அமைப்புகளாலும், மனிதப் பேராசைகளாலும், பெரும் பணக்காரர்கள் மேலும் வாழ சமனற்ற பொருளாதாரக் கொள்கைகளாலும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்களுக்காக ஏழையரின் வாழ்வாதாரம் சுரண்டப்படுவதாலும், ஏழைகள் நம் சமூகத்தில் அன்றாடம் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு உரியவற்றையும் உரிமைகளையும் இழந்து நிற்கிறார்கள். இவர்களுக்கான மனித மாண்பும் மரியாதையும் மறுக்கப்படுகின்றன. இவர்கள் ஏழைகளாக வாழ்வது இயேசுவின் விருப்பமல்ல; இயேசு வறுமையை வரவேற்பவருமல்லர். அவர்கள் வாழ்வு ஏற்றம்பெற்று, அனைத்து மக்களோடும் ஏற்றத்தாழ்வின்றிச் சமநிலையில் வாழவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். கடவுள் நமக்குக் கொடைகளையும், திறமைகளையும் கொடுத்திருக்கிறார் என்றால் அதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகவே. " பகிரப்படாமல் பதுக்கும் செல்வம் யாவும் அநீதியானது" என்பதே இயேசுவின் நிலைப்பாடு.

புனித அன்னை தெரேசா இவ்வாறு சொல்வார்: " இரு கைகூப்பிக் கடவுளை வணங்குவதைவிட, ஒரு கை நீட்டி உதவி செய். இரு கை உன்னை வணங்கும் கடவுளாக. கொடுப்பது சிறிது என்று தயங்காதே. ஏனென்றால், அதைப் பெறுபவருக்கு அது பெரிது. வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; மாறாக, மற்றவர் மனத்தில் நீ வாழும்வரை. நோய்களிலே மிகக்கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே." எவ்வளவு அற்புதமான வரிகள்!

கடவுள் இரு கரங்களை நமக்குத் தந்துள்ளார். ஒன்று, நமக்கு உதவவும், மற்றொன்று அடுத்தவருக்கு உதவவும். எனவே, ஒட்டிய வயிறோடும், கட்டிய கந்தல் துணியோடும் அன்றாட வாழ்வுக்கான உத்தரவாதம் இல்லாத எண்ணற்ற ஏழைகளுக்கு நம் கரத்தை நீட்டப் போகிறோமா? (சீராக் 7:32) அல்லது ஏழைகளுக்குக் கொடுக்க மனமில்லாது முகம் வாடிய வருத்தத்தோடு சென்ற செல்வரைப்போல (மாற் 10:22) இயேசுவை விட்டு விலகிச் செல்ல விரும்புகிறோமா? இயேசு " அன்பொழுக" நம்மைப் பார்க்கிறார். முடிவு நம் கையில்தான்!
அருள்பணி. ஜெ. ஞானசேகரன்

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 

தெளிவும் தெரிவும்

மனிதர்களாகிய நமக்கும், மற்ற விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 'சிரிப்பு' என்று பரவலாக சொல்வார்கள். ஆனால், இந்தக் காலத்தில் பூனை, நாய்க்குட்டிகளும் சிரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. மனிதர்களுக்கு மட்டுமே உள்ள ஒரு பண்பு அவர்களின் விருப்புரிமை. அதாவது, 'நான் விரும்புவதை நான் செய்ய முடியும்.' இதையும் கேள்விக்கு உட்படுத்துவார் சார்த்தர் என்ற மெய்யியலாளர். குருவி கூடு கட்டுகிறது. குருவி என்ற ஒரு இனம் தோன்றியதுமுதல் அது ஒரே மாதிரிதான் கட்டுகிறது. ஏனெனில், அதன் ப்ரோகிராமிங் அப்படி. ஆனால், நம் வீடுகளை எடுத்துக்கொள்வோம். எத்தனை வடிவங்கள்? எத்தனை வித்தியாசங்கள்? நமக்கு ப்ரோக்ராமிங் இல்லை. நாம் உடுத்தும் ஆடை, உண்ணும் உணவு, உறையும் வீடு, பயன்படுத்தும் பொருள்கள், உறவுகொள்ளும் நபர்கள் என அனைத்திலும் நாம் தெரிவு செய்கின்றோம். சின்ன விடயத்தில் தொடங்கும் தெரிவு, வாழ்க்கையில் பெரிய பெரிய முடிவுகளை எடுக்கும்வரை நீள்கிறது.

தெரிவுகளை நாம் தெளிவாக எப்படி எடுப்பது? - என்ற கேள்விக்கு விடையாக இன்றைய இறைவாக்கு வழிபாடு அமைகிறது. நாம் செய்யும் தெரிவுகளே நம்மை உருவாக்குகின்றன. ஆக, நம் தெரிவுகளைப் பற்றிய தெளிவு அல்லது தெளிவான தெரிவு மிகவும் அவசியமாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 7:7-11), சாலமோன் அரசர் தான் ஞானம் பெற்ற நிகழ்வைப் பதிவு செய்கிறார். சாலமோன் கடவுளிடம் ஞானம் கேட்கும் நிகழ்வு கனவில் நடந்தேறுகிறது (காண். 1 அர 3:5-15). பிறப்பிலும், வளர்ச்சியிலும் எல்லாரையும் போல ஒத்திருத்த சாலமோன், எல்லாரும் பெற்றிருக்கும் ஒன்றைவிட தான் சிறந்ததைப் பெற்றிருக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இறைவனிடம் ஞானத்தை வேண்டிப் பெறுகின்றார். தான் மன்றாடியதால் இறைவனின் ஞானத்தின் ஆவி தன்னிடம் பொழியப்பட்டது (7:7) என்று சொல்லும் அவர் ஞானத்தின் மேன்மையை இன்றைய முதல் வாசகப் பகுதியில் விவரிக்கின்றார். இவ்வாறு அவர் பெற்ற ஞானமே அவரின் தெளிவிற்கும், தெரிவிற்கும் காரணமாக இருக்கிறது.

தான் பெற்ற ஞானம் மூன்று நிலைகளில் மேலோங்கி இருப்பதாக வர்ணிக்கிறார் சாலமோன்.

1. அதிகாரத்தைவிட மேலானது (7:8)
ஓர் அரசனின் அல்லது அதிகாரத்தின் அடையாளம் செங்கோலும், அரியணையும். இந்த இரண்டும் சாலமோனுக்கு இறைவனால் வழங்கப்பட்டவை அல்லது தன் தந்தை தாவீதிடமிருந்து அவருக்குக் கிடைத்தவை. ஆனால் இந்த இரண்டையும்விட அவர் ஞானத்தையே நாடித் தேடுகின்றார்.

2. செல்வத்தைவிட மேலானது (7:9)
மாணிக்கம், பொன், வெள்ளி இந்த மூன்றும்தான் பணமதிப்பாக சாலமோன் அரசன் காலத்தில் கருதப்பட்டவைவ. பணப்பரிமாற்றங்கள் இந்த மூன்று உலோகங்களை மையமாக வைத்தே நடத்தப்பட்டன. இந்த மூன்றையும் பெற்றவர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கினார். இந்த மூன்றையும்விட ஞானம் மேலானது என்கிறார் சாலமோன். ஞானத்திற்கு முன் பொன் வெறும் மண் எனவும், வெள்ளி களிமண் எனவும் சாலமோன் சொல்வது நமக்கு விந்தையாக இருக்கிறது. மண்ணையும், களிமண்ணையும் எடுத்து சல்லடை போட்டு தேடி, மிக அரிதாகக் கண்டுகொள்ளப்படும் பொருள்களே பொன்னும், வெள்ளியும். ஆனால் ஞானத்தோடு அவற்றைச் சேர்த்தால் அவை வெறும் மண்ணாகவும், களிமண்ணாகவும் ஆகிவிடுகின்றன.

3. உடல்நலத்தைவிட, அழகைவிட மேலானது (7:10)
நம் கண்களில் தெரியும் ஒளியைவிட, நாம் உள்ளுக்குள் அனுபவிக்கும் உடல்நலத்தைவிட, நம் வெளிப்புறத்தில் மற்றவர்களுக்குத் தெரியும் நம் அழகைவிட ஞானம் மேலானது. உடல்நலம் அல்லது கண்களின் ஒளி அல்லது அழகு கடவுளின் கொடையாகக் கருதப்பட்டது. இவற்றை நம்மால் உருவாக்கிவிட முடியாது. வெளியிலிருந்து கடவுள்தான் இதை நமக்குத் தரவேண்டும். புறக்கண்களில் ஒளி மங்கினாலும், அகக் கண்களில் இருக்கும் ஞானம் என்றென்றும் மங்காத சுடரொளியாக இருக்கிறது. ஆக, ஒருவருக்கு உடல்நலம் எப்படி இன்றியமையாததோ, அப்படியேதான் ஞானமும். மேலும், வெளி அழகும், ஒளியும் மங்கினாலும், கறைபடியாத அழகையும், மங்காத சுடரொளியையும் தருகின்றது ஞானம்.

இவ்வாறாக, ஞானம் வந்ததால் தன்னிடம் எல்லாம் வந்து சேர்ந்தன (7:11) என ஞானத்திற்குப் புகழாரம் சூட்டுகின்றார் சாலமோன்.

இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு தந்த மீட்பை அந்த மீட்பிற்கு கொடுக்கும் பதிலும் எப்படி இருக்க வேண்டும் என எழுதுகிறார். இதன் பின்னணியில் கடவுளுடைய வார்த்தையின் இயல்பு என்ன என்பதை இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் (காண். எபி 4:12-13) பதிவு செய்கின்றார். இன்றைய இரண்டாம் வாசகத்தை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. இறைவார்த்தையின் இயல்புகளும், செயல்களும் (4:12)
இறைவார்த்தையின் இயல்புகள் மூன்று: உயிருள்ளது, ஆற்றல் மிக்கது, கூர்மையானது. இறைவார்த்தையின் செயல்களும் மூன்று: உடல் சார்ந்ததையும், ஆவி சார்ந்ததையும் பிரித்துக் காட்டுகிறது, வன்மையானது எது, மென்மையானது எது என்று அடையாளம் காட்டுகிறது, உள்ளத்தின் சிந்தனைகளை சீர்தூக்கி அல்லது பகுத்தாய்ந்து பார்க்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களின் நடுவில் எண்ணற்ற கடவுளர்கள் இருந்தனர். வானம், பூமி, நிலா, சூரியன், நட்சத்திரங்கள் என வானில் கண்டவற்றையும், கடல்மீன்கள், விலங்குகள் என நீரில் மற்றும் தரையில் வாழ்ந்தவற்றையும் வழிபட்டனர். தங்களின் இறைவனும் இவர்களைப் போல ஒருவர்தான் என்றும் நினைத்து, அவரின் வெளிப்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டனர். ஆனால், யாவே இறைவன் தன் வார்த்தையால் உலகைப் படைத்தவர் (தொநூ 1), தன் கட்டளையால் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை எகிப்திலிருந்து மீட்டவர், தன் கட்டளைகளால் வழியாக அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டவர், பற்பல இறைவாக்கினர் வழியாக அவர்களின் வாழ்வையும், அழிவையும் சுட்டிக்காட்டியவர். வரலாற்றில் நுழைந்த வார்த்தையாக அவர் உயிருள்ளவர், ஆற்றல் மிக்கவர், கூர்மையானவர். இவரின் வார்த்தைகளின் முக்கியமான செயலும் இதுதான். அதாவது, நன்மை, தீமையைப் பகுத்தாய்ந்து நல்லதைத் தெரிந்து கொண்டு, தீயதைத்தள்ளிவிடுவது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடின உள்ளத்தால் தீயதைத் தேர்ந்து கொண்டதால் இறைவன் தரும் இளைப்பாற்றியைக் கண்டடையத் தவறிவிட்டனர் (எபி 4:1-11).

2. படைத்தவரும், நாமும் (4:12)
நம்மைப் படைத்த இறைவனுக்கு யாவும் தெரியும் என்பதால் நாம் அவரிடமிருந்து எதையும் மறைத்துவிட முடியாது. மேலும் அவருக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றோம். கடவுளின் பார்வையை நாமும் பெற்றால் நம்மால் நன்மை, தீமையைக் கண்டுகொள்ளவும், தீமையை விலக்கவும் முடிகிறது.

இவ்வாறாக, 'உள்ளத்தின் எண்ணங்களை சீர்தூக்கிப் பார்க்கும்' இறைவார்த்தை ஒவ்வொருவரின் தெளிவுக்கும், தெரிவுக்கும் காரணமாக அமைகிறது என்பது இன்றைய இரண்டாம் வாசகம் அறிவுறுத்தும் பாடம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 10:17-30) இளவல் ஒருவரை நாம் சந்திக்கிறோம். கதாபாத்திரங்களின் அடிப்படையில் இன்றைய நற்செய்திப் பகுதியை மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. இயேசுவும், செல்வரும் (10:17-22)
2. இயேசுவும், சீடர்களும் (10:23-27)
3. பேதுருவும், இயேசுவும் (10:28-30)

இன்றைய நற்செய்திப் பகுதி ஒத்தமைவு நற்செய்திகள் என்று சொல்லப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகளில் காணக்கிடக்கிறது. மத்தேயு நற்செய்தியாளர் இந்தப் பகுதியோடு திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் உவமையைச் சேர்த்து எழுதுகின்றார். லூக்கா நற்செய்தியாளர் மிகவும் சுருக்கமான பகுதியாக இந்த நிகழ்வைப் பதிவு செய்கின்றார்.

1. இயேசுவும், செல்வரும் (10:17-22)
அ. இரண்டு வகை ஆன்மீகத்தை இயேசு முன்வைக்கின்றார்: ஒன்று, சட்டங்கள் பின்பற்றும் ஆன்மீகம். இரண்டு, இயேசுவைப் பின்பற்றும் ஆன்மீகம். பத்துக்கட்டளைகள் முடிவில்லாத வாழ்வு தரும் என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தாலும், இயேசு பத்துக்கட்டளைகளையும் பற்றிக் கேட்காமல் ஐந்தாம் கட்டளையிலிருந்து கேட்கின்றார். கடவுளுக்கும், மனிதருக்கும் உறவிற்கு அடிப்படையான முதல் நான்கு கட்டளைகளைப் பற்றி கேட்காமல், மனிதருக்கும், பிற மனிதருக்கும் இடையேயான உறவைக் குறித்த ஆறு கட்டளைகளை செல்வர் பின்பற்றுகிறாரா இல்லையா என்று கேட்கிறார். ஏன்? செல்வர் இயேசுவை 'நல்லவர்' என்று 'கடவுள்' என்று கண்டுகொள்கின்றார். ஆக, கடவுளுக்கும், அவருக்குமான உறவு செம்மையாகவே இருந்திருக்கும். மேலும், செல்வராய் இருந்து கொண்டு முதல் நான்கு கட்டளைகளைக் கடைப்பிடிப்பது வெகு எளிது. எனக்கு அடுத்திருப்பவரை நான் கண்டுகொள்ளாமல் கோவில் உண்டியலில் நான் லட்சம், லட்சமாகக் கொட்டுவது எளிதுதானே. இயேசுவைப் பின்பற்றும் ஆன்மீகத்தில் வெறும் ஆறு கட்டளைகள் தான் உள்ளன. இன்று நாம் பின்பற்றும் ஆன்மீகம் எத்தகைய ஆன்மீகம்?

ஆ. ஐந்து வினைச்சொற்கள். 'செல்', 'விற்பனை செய்', 'கொடு', 'வா', 'பின்செல்' என ஐந்து வினைச்சொற்களை அடுக்கடுக்காகக் கட்டளையிடுகின்றார் இயேசு. ஆனால் பாவம் அந்த இளவல். முதல் வினைச்சொல்லை மட்டும்தான் அவரால் செயல்படுத்த முடிந்தது: 'செல்கிறார்!' அவ்வளவுதான். இன்று இயேசுவை நான் பின்பற்றுவதில் அவரின் எத்தனை கட்டளைகளைக் கடைப்பிடிக்க முடிகிறது?

. முகவாட்டத்தோடு. புன்னகையோடு வந்தவர் முகவாட்டத்தோடு செல்கிறார். பாதிவழி வந்தவருக்கு மீதிவழி வர முடியவில்லை. நாம் பெறும் திருமுழுக்கும் மற்ற அருளடையாளங்களும் இயேசுவை நாம் பின்பற்றுவதற்கு பாதிவழிதான் உதவுகின்றன. மற்ற வழியில் நாம் அவரைப் பின்பற்று நம்மால் முடிகிறதா? அல்லது நம் முகமும் வாடிவிடுகிறதா?

2. இயேசுவும், சீடர்களும் (10:23-27)
செல்வம் பற்றியும், செல்வர்களின் இயலாமை பற்றியும் சொல்கிறார் இயேசு. செல்வம் இருந்தால் எல்லாம் இருக்கும் என்பது பொருள் அல்ல. செல்வத்தால் இறையரசை வாங்க முடியாது. 'ஊசியின் காது' என்பது எருசலேம் நகரின் மதில்களில் இருக்கும் சின்னச் சின்ன கதவுகள். ஒட்டகங்கள் இதில் நுழைய வாய்ப்;பில்லை. இந்த உருவகத்தின் வழியாக இயேசு செல்வத்தின் இயலாமை பற்றி விளக்குகின்றார். மேலும், 'இது மனிதர்களால் இயலாது என்றும், கடவுளால் மட்டுமே முடியும்!' என்றும் சொல்கின்றார். இன்றைய முதல்வாசகத்தின் பின்புலத்தில் இதைப் பார்த்தால் கடவுளின் ஞானம் பெற்றவர்களால் மட்டுமே இது முடியும். ஆக, மேலான இறைவனைத் தேர்ந்து கொள்வதா அல்லது கீழான செல்வத்தைத் தேர்ந்து கொள்வதா என்பதுதான் கேள்வி.

இதற்காக, செல்வமே தேவையில்லை என்று சொல்லிவிட முடியுமா? இல்லை. எபிரேயத்தில் 'செல்வம்' அல்லது 'செல்வந்தர்' என்பதற்கு 'ஆசீர்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை நம் தமிழ்மொழியிலும் இருக்கிறது. ஆக, நான் கடவுளின் ஆசீர் பெற்றவர் என்பதை நான் உணர அல்லது பிறர்முன் துலங்க, நான் என் முழு ஆற்றலையும், திறன்களையும் பயன்படுத்த வேண்டும். அதன்வழியாக நான் செல்வமும், பொருளும், புகழும் பெற வேண்டும். இதைத்தான் தூய இரேனியு, 'மனிதத்தின் மாட்சிமையே இறைமாட்சி' என்கிறார்.

3. பேதுருவும், சீடர்களும் (10:28-30)
'எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உம்மைப் பின்பற்றினோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்ற பேதுருவின் கேள்வி சீடர்களின் ஒட்டுமொத்த கேள்வியாகவே இருக்கிறது. சீடர்களுக்கான கைம்மாறு, இம்மை மற்றும் மறுமை என்ற இரண்டு நிலைகளில் இருக்கிறது. இம்மையில் நூறு மடங்கு. நூறு மடங்கு என்பதும் உருவகமே. அதாவது, எதுவும் எனக்கு இல்லை என்பவர்களுக்கு, 'எல்லாமே எனது' என்று ஆகிறது. என்னேவொரு மனச்சுதந்திரத்தை இது தருகிறது! நிலைவாழ்வு என்பது இயேசுவில் கிடைக்கும் வாழ்வு.

இயேசுவிடம் வந்த செல்வந்த இளவலிடம் நிலைவாழ்வு பற்றிய தேடல் இருந்தது. ஆனால், அதற்கான தெளிவும், தெரிவும் இல்லை. ஆகையால்தான், அந்த இளவலை அன்பொழுகப் பார்க்கிறார் இயேசு. 'குறைப்பதில்தான்' நிறைவு இருக்கிறது என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது. ஆனால், குறைத்துவிட்டால் அது எப்படி நிறைவாகும்? என்பது இளவலின் ஆழ்மனக் கேள்வியாக இருக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்க்கைப்பாடம் ஒன்றுதான்: 'வாழ்வில் நாம் கொள்ளும் ஞானமிகு தெளிவே நம் தெரிவுகளை நலமானதாகச் செய்யும்.'

பல நேரங்களில் நாம் வாழ்வில் தவறான முடிவுகள் எடுக்கக் காரணம் நம் மனத்தில் இருக்கும் குழப்பமே. நாம் வளர வளர நாம் பெறும் அனுபவங்கள் நம் மனதில் அடுக்கடுக்காக படிந்துகொண்டே வருகின்றன. ஒரு குறிப்பிட்ட நிகழ்வுபற்றி நாம் முடிவெடுக்கும்போது, படிந்த அவ்வனுபவங்கள் மேலே எழும்பி நம்மில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றன. தெளிந்த நீரோடை போல, நீரோட்டத்தின் மேலிருந்தே தரையின் அழகைப் பார்ப்பது நமக்குக் கடினமாக இருக்கிறது.

இந்த நிலையிலிருந்து எப்படி விடுதலை பெறுவது?

1. சமரசம் இல்லாத தேடல்
சாலமோன் தன் சமகாலத்து அரசர்களின் தேடல்களை ஒரு நிமிடம் எண்ணிப்பார்க்கிறார்: சிலர் செங்கோலையும், அரியணையையும் தேடுகிறார்கள். அப்படித் தேடிக் கண்டுபிடித்தாலும் அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள அனுதினம் போராடுகிறார்கள். மற்றும் சிலர் மாணிக்கம், பொன், வெள்ளி என செல்வத்தைத் தேடுகின்றனர். தேடி அவை கிடைத்தபின் அவற்றை அடுத்தவர்களிடமிருந்து பாதுகாக்க மிகவும் போராடுகின்றனர். மற்றும் சிலர் உடல்நலம், அழகு எனத் தேடி அலைகிறார்கள். ஆனால், சின்ன உணவுக் கோளாறும் உடல்நலத்தைப் பாதித்துவிடுகிறது. உடலில் படும் சின்னக் கீறலும் அழகை அசிங்கமாக்கிவிடுகிறது. இப்படியாக, மற்றவர்களின் தேடல்கள் எல்லாமே புறம் சார்ந்த, மற்றவர்களுக்குப் பயந்த, அடுத்தவர்களால் அச்சுறுத்தப்படுகின்ற, மிகவும் நொறுங்கிய தேடலாக இருக்கிறது. இந்தத் தேடல்கள் போதும் என்று சாலமோன் இவற்றைத் தன் தேடல்களாக்கிக்கொள்ளவில்லை. மாறாக, ஞானத்தை தேடுகின்றார். அந்தத் தேடல் சமரசம் இல்லாத தேடலாக இருக்கிறது. 'மிகச் சிறிய இலக்கை அடைவதைவிட, மிகப் பெரிய இலக்கை அடையாமல் தோற்பது நலம்' என்பார் பிளேட்டோ. பிளாட்டினம் ஆசைப்பட்டு கிடைக்காமல்போனால் பரவாயில்லை. களிமண் ஆசைப்பட்டு அது கிடைத்துவிட்டால்தான் ஆபத்து. ஏனெனில், களிமண் கிடைத்தவர் களிமண்ணைத் தாண்டி வேறெதையும் பார்க்கமாட்டார். ஆனால், பிளாட்டினம் கிடைக்காதவர் தொடர்ந்து தேடுவார். ஆக, இன்று முதலில் நம் தெரிவுகள் சரியானவையாக இருக்கவேண்டுமென்றால், மிகத் தாழ்ந்தவையோடு நாம் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து தேட வேண்டும். சில நேரங்களில் மிக உயர்ந்த இலட்சியங்களை நாம் தேடுவோம். அவற்றால் எந்தவொரு பயனும் நமக்கு இல்லாமல் இருப்பதாகத் தெரியும். ஆனால், காலப்போக்கில் அது நம் வாழ்வுப் பாதையை நல்லநிலைக்கு மாற்றிவிடும். செங்கோல், அரியணை, மாணிக்கம், பொன், வெள்ளி, உடல்நலம், அழகு என்பவை எல்லாம் காணக்கூடியவை. ஆனால், ஞானத்தை நம்மால் காண முடியாது. பல நேரங்களில் காணக்கூடியவற்றை நோக்கியே நம் மனம் ஓடுகிறது. காண்பவை நிலையற்றவை. காணாதவை நிலையானவை. அவற்றை நம்மால் காணமுடியாததால் அவை நமக்கு நீடித்த மகிழ்வைத் தருகின்றன.

2. நாம் அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்
இறைவார்த்தையின் பண்புகளை மிக நன்றாக எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இறுதியில், 'நாம் அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்' என்கிறார். அதாவது, நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுக்கும், நாம் மேற்கொள்கின்ற ஒவ்வொரு தெரிவுக்கும் நாம் பொறுப்பாளர்கள். இவற்றிற்கு நாம் அடுத்தவர்களைக் காரணம் காட்ட முடியாது. இறைவார்த்தை, 'உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.' நகைக்கடைக்குச் சென்று நம்முடைய பொன் நகையை மாற்ற, விற்க, அல்லது அடகு வைக்க விரும்பினால், கடைக்காரர் அந்த நகையை நம்மிடமிருந்து வாங்கித் தன் கையில் எடுத்து அதைச் சற்று தூக்கிப் பிடிப்பார். அந்தக் குறுகிய நேரத்தில் அவர் நம் நகையின் நிறம், வளமை, வேலைப்பாடு, எடை என அனைத்தையும் மதிப்பிட்டுவிடுவார். இந்தச் செயலுக்குப் பெயர்தான் 'சீர்தூக்கிப் பார்த்தல்.' ஆக, ஒவ்வொரு முறைம் நாம் தெரிவு செய்யுமுன், அந்தத் தெரிவில் உள்ள நல்லது, கெட்டது ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சீர்தூக்கிப் பார்க்க சில நொடிகள் போதும். ஆனால், அந்தச் சில நொடிகளை நாம் சரியாக பயன்படுத்தாததால் பல ஆண்டுகளை வருத்தத்தில் கழிக்க வேண்டிய நிலை வந்துவிடுகிறது. மேலும், நாம் கணக்குக் கொடுக்க வேண்டிய நபர் இறைவன். அவருக்கு நம் அகம், புறம், ஆன்மா, எலும்பு மூட்டு, மச்சை என அனைத்தும் தெரியும். சாதாரண மனிதர்களுக்குக் கீழ் வேலை பார்க்கும்போது எவ்வளவு கவனமாக இருக்கிறோம். அப்படியெனில், எல்லாம்வல்ல இறைவன்முன் நாம் இன்னும் எவ்வளவு கவனமாக இருத்தல் வேண்டும்!

3. கடந்து வந்த பாதை பற்றிய தெளிவு
இன்றைய நற்செய்தியில் வரும் இளவலுக்கு வயது 18 முதல் 25 வயதுக்குள்தான் இருக்க வேண்டும். இந்த வயசுல என்ன ஆசை இருக்கும் ஒரு இளைஞருக்கு? நல்ல வேலை, கைநிறைய சம்பளம், கைநிறைய மொபைல் ஃபோன், அந்த ஃபோனில் எந்நேரமும் இன்டெர்நட், பைக்கில் பின்னால் அமர ஒரு இளவல், நிறைய ஃபரண்ட்ஸ் என இப்படி நிறைய ஆசை இருந்திருக்க வேண்டும். இவற்றில் எது ஒன்றையாவது கேட்டிருக்கலாம். ஆனால், இவரின் ஆசை, 'நிலைவாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?' எனக் கேட்கின்றார். ஆக, 25 வயதுக்குள் இந்த இளவல் இந்த முதிர்ச்சி பெற்றுவிட்டாரா? அல்லது வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் அனுபவித்துவிட்டாரா? அல்லது இன்பங்களைத் துறந்துவிடலாம் என எண்ணிவிட்டாரா?

'நிலைவாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?' 'கட்டளைகளைக் கடைப்பிடி' 'இவையெல்லாம் கடைப்பிடித்துள்ளேன்' 'இன்னும் என்ன குறைவுபடுகிறது?' 'நிறைவுள்ளவராக விரும்பினால் போய் விற்று ஏழைகளுக்குக் கொடும் ...' இளைஞன் 'நிலைவாழ்வு பெறத்தானே' இயேசுவிடம் ஐடியா கேட்டான். ஆனால், இயேசு இங்கே 'நிறைவுள்ள வாழ்வு' பற்றி சொல்கிறாரே? 'குறைவில்தான் நிறைவு' என்ற புதிய புரிதலைத் தருகின்றார் இயேசு. ஆனால், அந்த இளைஞன் 'வருத்தத்தோடு செல்கின்றான்'. ஏன் வருத்தம்? இயேசுவின் ஐடியா ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்ததா? 'அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது' என நிகழ்வை நிறைவுசெய்கின்றார் மாற்கு அப்படி என்ன ஏராளமான சொத்து இருந்திருக்கும்? 'எங்கே புதையல் இருக்கிறதோ அங்கே இதயம் இருக்கும்' என்ற இயேசுவின் மலைப்பொழிவு வார்த்தைகள்படி, இந்த இளவலின் இதயம் சொத்தோடு இணைந்துகொண்டதோ? என்னைப் பொறுத்தவரையில் இந்த இளவலின் இந்தச் செய்கை பிடித்திருக்கிறது. ஏனெனில், 'முடியும்' என்றால் 'முடியும்' என்றும், 'முடியாது' என்றால் 'முடியாது' என்றும் அவரால் முடிவெடுக்க முடிகிறது. 'ஆம்' என்றால் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றால் 'இல்லை' என்று சொல்ல பழகிக்கொள்வது.

அது கடவுளுக்கே என்றாலும். இப்படிப்பட்ட தெளிவை இந்த இளவல் நமக்குக் கற்றுத்தருகிறார். பேதுருவிடம் இந்த தெளிவு கொஞ்சம் குறைவுபடுகிறது என நினைக்கிறேன். ஆகையால்தான், தெரிவு செய்தபின், 'இது எப்படி? அது எப்படி? எங்களுக்கு என்ன கிடைக்கும்? உங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று அங்கலாய்க்கின்றார். பேதுரு தான் கடந்த வந்த பாதை பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கிறார். ஆனால், இளவல் தெளிவாக இருக்கிறார். வருத்தத்தோடு சென்ற இளவல் மீண்டும் வருவார். அவர் நம் ஒவ்வொருவர் வழியாகவும் வருகின்றார்.

நம் வாழ்வின் தெளிவும், தெரிவும் பெற அவரின் ஞானம், அவரின் வார்த்தை, அவரின் அன்பான பார்வை நம் உடனிருப்பதாக! நம் தெரிவுகள் தவறானாலும், தெளிவில்லாமல் இருந்தாலும், நம் முகம் வாடினாலும், அவர் நம்மை அன்பொழுக உற்றுப்பார்க்கிறார் - இன்றும், என்றும்.

-அருட்பணி.இயேசு கருணாநிதி.
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

யாரால் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள முடியும்?

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பசுமையாக புல்வெளி, சலசலத்து ஓடுகின்ற ஆறு, ஓங்கி உயிர்ந்த மரங்கள், அதற்கு பின்னால் இருந்த உயரமான மரங்கள், அதற்கும் பின்னால் இருந்த நீலநிற வானம். இத்தகையதொரு இரம்மியமான சூழ்நிலையில் தன் மனைவி மற்றும் மக்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் ஓர் இறைமனிதர். இறைமனிதர் என்றால் பெயருக்கு அல்ல, உண்மையாக அவர் இறைமனிதராக வாழ்ந்து வந்தார்.

நன்றாக இருந்த அவர் திடீரென நோய்வாய்பட்டார். அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர், அவருக்குப் புற்றுநோய் இருக்கின்றது என்றும், அதனால் அவர் ஓரிரு மாதங்கள்தான் உயிர்வாழ்வார் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார். மருத்துவர் இவ்வாறு சொன்னது இறைமனிதருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும் அவர் அதை நினைத்துக் வருத்தப்படவில்லை. இது நடந்து ஒருசில நாள்கள் கழித்து, இறைமனிதர் தம் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அவர் கண்முன்னே பசுமையான புல்வெளியும், சலசலவென ஓடும் ஆறும், ஓங்கி உயர்ந்த மரங்களும், அதற்குப் பின்னால் நீலநிற வானமும் அவரோடு ஏதோ பேசுவதைப் போன்று உணர்ந்தார்.. அப்பொழுது அவர் அவற்றைப் பார்த்து, " இன்னும் ஒருசில நாள்களுக்குப் பிறகு உங்களோடு நான் இல்லாமல் போகலாம். ஆனாலும், நான் நீங்களெல்லாம் முற்றிலுமாக மறைந்துபோனாலும் நான் என்றென்றும் இருப்பேன். ஏனெனில், நான் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் அவர் எனக்கு நிலைவாழ்வை அளிப்பார். அதனால் நான் என்றென்றும் உயிர்வாழ்வேன்" என்றார். ஆம், ஆண்டவர்மீது நம்பிக்கைகொள்ளும் ஒருவர் நிலைவாழ்வைப் பெறுவார் என்று இந்த நிகழ்வும், பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு நமக்கு உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.


செல்வம் படைத்தவரால் நிலைவாழ்வைப் பெற முடியாது

இன்று ஒருசிலர், கையில் பணம் இருந்தால் எதையும் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார். கையில் பணமிருந்தாலும் விலை கொடுத்து வாங்கமுடியாதவை எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது நிலைவாழ்வு. இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற செல்வரும் (மத் 19: 29), தலைவருமான (லூக் 18: 18) இளைஞர், தன்னிடம் பணம் இருந்ததால், தன்னால் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு அவரிடம், " நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்கிறார். அப்பொழுது இயேசு அவரிடம், " உமக்கு உள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்" என்றதும், அவர் முகம் வாடி வருத்தத்தோடு செல்கின்றார்.

செல்வம் வைத்திருந்தால் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இருந்த அந்த இளைஞனிடம், செல்வம் வைத்திருப்பதால் அல்ல, அதை ஏழைகளுக்குக் கொடுப்பதால் நிலைவாழ்வு உரிமையாக்கிக் கொள்ளலாம் என்று இயேசு சொன்னதும், அவர் வருத்தத்தோடு செல்கின்றார். இந்த இளைஞரிடம் இரண்டு குறைகள் இருந்தன. ஒன்று, தன்மீது அன்புகூர்ந்ததுபோல் தனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூராதது (லேவி 19: 18). ஒருவேளை அவர் தன்மீது அன்பு கூர்ந்ததுபோல், தனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்ந்திருந்தால், தன்னிடம் இருந்ததை ஏழைகளுக்குக் கொடுத்திருப்பார். அவர் தன்னிடம் இருந்ததை அடுத்திருப்பவருக்குக் கொடுக்காததன்மூலம், அடுத்திருப்பவர்மீது அன்புகூரவேண்டும் என்ற ஆண்டவரின் கட்டளையை மீறுகின்றார். இளைஞரிடம் இருந்த இரண்டாவது குறை அவர், கடவுள், செல்வம் என்ற இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முயன்றது (மத் 6: 24). ஒரு காலமும் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது என்பதால், செல்வத்தின்மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்த அந்த இளைஞரால் கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியவில்லை; நிலைவாழ்வையும் பெற முடியவில்லை.

நற்செய்தியில் வரும் இந்த இளைஞரைப் போன்றுதான் பலர் பணத்தின்மீது மிகுதியான பற்று வைத்துக்கொண்டு கடவுளுக்குப் பணிவிடை செய்யவும், நிலைவாழ்வையும் பெற முயன்று பார்க்கின்றார்கள். சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பதுபோல, கடவுளின் ஞானம் செல்வத்தைவிட, மாணிக்கக் கல்லைவிட, பொன்னைவிட மேலானது. எனவே, கடவுளை, அவரது ஞானத்தைத் தேடாமல், பணத்திற்கு மட்டும் பணிவிடை செய்யும் ஒருவரால் நிலைவாழ்வை ஒருநாளும் பெற முடியாது.

ஏழைக்குக் கொடுப்பவராலும் நிலைவாழ்வைப் பெற முடியாது
" ஏழைகளுக்குத் தர்மம் அல்லது அறச்செயல்களைச் செய்வதன்மூலம் ஒருவர் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளலாம்" என்று யூதர்களின் தால்முத் சொன்னது. இதை யூதர்கள் பெரிதாக நம்பினார்கள்.

இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது. ஏழைகளுக்கு வாரி வாரிக் கொடுப்பவர், அவ்வாறு கொடுப்பதைத் தவறான வழியில் சம்பாதித்தால், அவரால் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியுமா...? முடியாதுதானே! ஒருவேளை ஏழைகளுக்கு வாரி வாரிக் கொடுப்பவரால் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளமுடியும் என்றொரு நிலை இருந்தது எனில், ஒருவர் எப்படியும் வாழலாம், ஏழைகளுக்கு ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கினால் போதும் அவர் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வார் என்று ஆகிவிடும். அது தவறான மனிதர்களைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லும். ஆகவே, ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரிக் கொடுப்பதால் மட்டும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஆண்டவரில் நம்பிக்கைகொள்பவரால் மட்டுமே நிலைவாழ்வைப் பெறமுடியும்
மிகுதியான பணம் படைத்தவராலும், ஏழைகளுக்கு வாரி வாரிக் கொடுப்பவராலும் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளமுடியாது எனில், யாரால்தான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளலாம் என்ற கேள்வி எழலாம். இயேசுவின் சீடர்களுக்கும் இத்தகையதொரு கேள்வி எழுந்தது. அதனால் அவர்கள் இயேசுவிடம், " பின் யார்தான் மீட்புப் பெற முடியும்?" என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு கூறும் பதில்தான், " மனிதரால் இது இயலாது; கடவுளால் எல்லாம் இயலும்" என்பது.

கடவுளால் எல்லாம் இயலும் என்று இயேசு சொல்வதை கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஏற்புடையவற்றை செய்கின்ற ஒருவருக்குக் கடவுளால் நிலைவாழ்வை அளிக்க இயலும் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம், கடவுளின் வார்த்தை எத்துணை ஆற்றல் வாய்ந்து என்று கூறுகின்றது. ஒருவர் ஆற்றல் வாய்ந்த கடவுளின் வார்த்தையின்படி வாழ்கின்றபோது... சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் நாம் வாசிப்பதுபோன்று, நாம் கடவுளிடம் மன்றாடுவதால் கிடைக்கின்ற இறை ஞானத்தின்படி நடக்கின்றபோது நம்மால் கடவுள் தரும் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இயலும் என்பது உறுதி.

அப்படியானால், செல்வந்தர்களால், ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குபவரால் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளமுடியாதா? என்று மற்றொரு கேள்வி எழலாம். அவர்களாலும் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும். எப்போது எனில், அவர்கள் கடவுளின் வார்த்தையாலும், அவரது ஞானத்தாலும் உந்தப்பட்டு, கடவுளின்மீது ஆழமான நம்பிக்கைவைத்துத் தங்களிடம் இருப்பதைப் பிறருக்கு வாரி வாரி வழங்கினால் அப்போது! ஆம், இறைநம்பிக்கையின்றிச் செய்யப்படும் நற்செயல்கள் அடித்தளமில்லாத வீட்டிற்கு ஒப்பாகிவிடும். நற்செயல்கள் இல்லாமல், ஒருவரிடம் இருக்கும் நம்பிக்கை கூரையில்லாத வீட்டிற்கு ஒப்பாகிவிடும். எனவே, நாம் இறைநம்பிக்கையில் விளைந்த நற்செயல்களைச் செய்து, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வோம்!

சிந்தனை:
" மானிட மகன்மீது நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்" (யோவா 3: 15) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கையை நமது செயலில் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
 

விண்ணரசின் மதிப்பை உணராமல் வாழும் மானிடர்கள்!


நிகழ்வு
ஜூலியன் என்றொரு பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவருக்கு ஒரு பண்ணை வீடு இருந்தது. அந்தப் பண்ணை வீட்டில்தான் இவர் தன்னுடைய பெரும்பாலான நேரங்களைச் செலவழித்தார். இவருடைய பண்ணை வீட்டின் ஒருபுறம் அருமையானதொரு தோட்டம் இருந்தது. அதில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. பண்ணை வீட்டின் இன்னொரு பக்கம், மீன்குளம் ஒன்று இருந்தது. அதில் அரியவகை மீன்களெல்லாம் இருந்தன.

இப்படிப்பட்ட ஓர் அருமையான பண்ணைவீட்டில் எப்பொழுதும் இருந்து பழகியதால், ஜூலியனுக்கு அந்தப் பண்ணைவீடு பிடிக்காமல் போனது. அதை எப்படியாவது விற்றுவிட்டு, வேறோர் இடத்தில் நிலம் வாங்கிப் பண்ணை  கட்டி அதில் வாழலாம் என்று முடிவுசெய்தார் ஜூலியன். இதைத் தொடர்ந்து இவர், நிலங்களை வாங்கி விற்கும் ஓர் இடத் தரகரிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் இவரிடம் "அப்படியே செய்துவிடுவோம்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

மறுநாள் செய்தித்தாளில் இப்படியொரு விளம்பரம் வந்திருந்தது: "பண்ணை வீடு ஒன்று விற்பனைக்கு வருகின்றது. அதன் ஒருபுறம் அருமையான தோட்டமும், இன்னொரு புறம் மீன் குளமும் உள்ளது. சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் இந்தப் பண்ணை வீட்டின் விலை மிகவும் குறைவுதான். இதை வாங்க விருப்பமுள்ளோர் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை அழைக்கவும்."

செய்தித்தாளில் வந்த இந்த விளம்பரத்தைப் பார்த்ததும், ஜூலியன் மிகவும் உற்சாகமடைந்து, " எப்படியாவது அந்தப் பண்ணை வீட்டை வாங்கிவிடவேண்டும்" என்று நினைத்துக்கொண்டு, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசினார். கடைசியில்தான் தெரிந்தது, அது தன்னுடைய பண்ணை வீடுதான் என்று. இப்படிப்பட்ட பண்ணை வீட்டையா நாம் விற்கத் துணிந்தோம் என்று நினைத்து, ஜூலியன் தன்னுடைய பண்ணை வீட்டை விற்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ஜூலியன், எப்படித் தன்னுடைய பண்ணை வீட்டின் அருமையையும் மகத்துவத்தையும் உணராமல் இருந்தாரோ, அப்படித்தான் இன்றைக்குக் பல கிறிஸ்தவர்கள் விண்ணரசின் மகத்துவத்தை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எல்லாருக்கும் உரிய விண்ணரசின் மகத்துவத்தை நாம் உணரவும், அந்த விண்ணரசில் நாம் பங்குபெற என்ன செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கொடுக்கப்பட்ட அழைப்பைப் புறக்கணிக்கும் மக்கள்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, விண்ணரசைப் பெரிய விருந்துக்கு ஒப்பிடுகின்றார். இந்த உவமையில் வருகின்ற மன்னர் தன்னுடைய மகனுக்கு நடத்திய திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்கு, ஏற்கெனவே அழைப்புப் பெற்றிருந்தவர்களிடம். " விருந்து ஏற்பாடாகிவிட்டது" என்ற செய்தியைச் சொல்ல தன் பணியாளர்களை அனுப்பி வைக்கின்றார். ஆனால், அழைப்புப் பெற்றவர்களோ மன்னர் அனுப்பி வைத்த பணியாளர்களிடம் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி திருமண விருந்துக்குக் வராமல் போகின்றார்கள். இன்னும் ஒருசிலர் அனுப்பப்பட்டவர்களைப் பிடித்துக் கொலைசெய்கின்றார்கள்.

இங்கு மன்னர் ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்து என்பது விண்ணரசைக் குறிக்கின்றது; அழைப்புப் பெற்றவர்கள் யூதர்களைக் குறிக்கின்றார்கள். யூதர்கள் கடவுளால் சிறப்பாக அழைப்புப் பெற்றிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர்களைப் பிடித்துக் கொன்றொழிக்கின்றார்கள். இதனாலேயே அவர்களுக்கு கிபி. 70 ஆம் ஆண்டு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. அன்று யூதர்கள் கடவுளின் அழைப்பைப் புறக்கணித்ததுபோல், இன்று நாம் விண்ணரசில், ஆண்டவருடைய திருவிருந்தில் கலந்துகொள்ளாமல், ஏதோவொரு சாக்குப் போக்கைச் சொல்லிப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலையை நாம் மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது.

விண்ணரசில் எல்லாருக்கும் இடமுண்டு
திருமண விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்கள் அதாவது யூதர்கள் கடவுளின் அழைப்பு உதறித் தள்ளியதால், அந்த அழைப்பானது எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது. இதன்மூலம் விண்ணரசு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அது எல்லா மக்களுக்கும் உரியது என்ற செய்தியானது சொல்லப்படுகின்றது. இந்த உண்மையை, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இன்னும் அழகாக, ஆழமாக எடுத்துக்கூறுகின்றது.

"படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்" என்று இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற வரிகள், விண்ணரசு மக்கனினங்கள் அனைவருக்கும் உரியது என்ற செய்தியை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றது. மேலும் இந்த விருந்தில் கலந்துகொள்வோருடைய முகத்தை மூடியுள்ள முக்காட்டையும், துன்ப துகிலையும் அகற்றி, கண்ணீரைத் துடைத்துவிடுவார் என்கின்றார் ஆண்டவர்.

இப்படி எல்லாருக்கும் உரிய... நம்முடைய துன்ப துயரங்கள் எல்லாம் நீங்கும்... திருவிருந்தில் அல்லது விண்ணரசில் பங்குபெறுவதற்கு நமக்கு ஒரு முக்கியமான தகுதி அல்லது நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அது என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

விண்ணரசில் பங்குபெற தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டும்
மன்னர் கொடுத்த விருந்தை, அழைப்புப் பெற்றவர்கள் புறக்கணித்ததால், மன்னர் தன் பணியாளரிடம், "நீங்கள் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் அழைத்து வாருங்கள்" என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். மன்னர் செய்த இத்தகையதொரு செயல், விண்ணரசு எல்லாருக்குமானது என்ற செய்தியை உணர்த்துகின்றது என்று மேலே பார்த்தோம். இவ்வாறு சாலையோரங்களில் இருந்து அழைக்கப்பட்டவர்களுள் ஒருவர், திருமண ஆடையின்றி இருப்பதைக் கண்டு, அவரை இருளில் தள்ளுமாறு தன்னுடைய பணியாளர்களுக்குக் கட்டளையிடுகின்றார் மன்னர்.

மன்னரின் இச்செய்தி, விண்ணரசு எல்லாருக்கும் உரியது என்றாலும், அதில் கலந்துகொள்வதற்கு தகுதி வேண்டும் என்ற செய்தியை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. இங்கு திருமண ஆடை அல்லது விண்ணரசுக்குள் நுழைவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய தகுதி " நேர்மை" என்று திருவிவிலிய அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இறைவாக்கினர் எசாயா நூல் 61: 10 இல் வருகின்ற, "நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்" என்ற வரிகளோடு இணைத்துப் பார்ப்பது நல்லது. திருமண விருந்தில் பங்கு பெறுவதற்குத் திருமண ஆடை எப்படித் தேவையானதாக இருக்கின்றதோ, அப்படி நாம் விண்ணரசுக்குள் நுழைய நேர்மை என்ற பண்பானது தேவையானதாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மை இல்லாமலும், உண்மை இல்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையை நாம் நம்மிடமிருந்து தவிர்த்து, நேர்மையோடு வாழ்ந்து கடவுள் தருகின்ற விண்ணரசை உரிதாக்கிக் கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை
" கடவுள் படைப்பில் நேர்மையான மனிதனே, தலைசிறந்தவன்" என்பார் போப் என்ற அறிஞர். ஆகையால், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மையோடு நடந்து, இறைவன் தருகின்ற விண்ணரசை உரித்தாக்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறையுரைச் சிந்தனைகள் அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
 கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு திடீரென ஒரு அச்சம் தோன்றியது: கடலில் விழுந்து விட்டால் தான் எப்படி உயிர் பிழைப்பது என்ற எண்ணம் அவனை வாட்டியது. கப்பல் தலைவனிடம் சென்று தன் அச்சத்தை விளக்கினான். கவலைப்படாதே , உனக்குத்தான் நன்கு நீந்தத் தெரியுமே என்றான் கப்பல் தலைவன். உடனே அவன், இல்லை ! நேற்று கூட நன்கு நீந்தத் தெரிந்த ஒருவன் கடலில் விழுந்து மூழ்கி இறந்து போனானே என்றதற்கு கப்பல் தலைவன் அம்மனிதன் கடலில் வீழ்ந்தபோது தன்னுடைய பொருட்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை தன் இரு கைகளிலும் பிடித்திருந்தான். அப்பெட்டிகளின் எடை அவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவேதான் எங்களால் கூட அம்மனிதனைக் காப்பாற்ற இயலவில்லை என்று சொன்னான். இக்கதை தரும் பாடத்தை நமக்கு அளிப்பதே இன்றைய வாசகங்கள். மனிதன் படைக்கப்பட்ட போது கள்ளங்கபடம் இல்லாமல் (Innocence) இருந்தான். அவன் வளர வளர அவனுக்குள் பல மூட்டைகள் ஏறிக் கொண்டன. நல்லவைகள் பஞ்சு மூட்டையைப் போல இலேசாக இருந்தன. தீயவையே பாறாங்கற்களைப்போல கடினமாயின. இதுபோன்ற மூட்டைகள் அவனுக்குள் இருக்கும் வரை குழப்பம்தான்.

கட்டளைகளை யெல்லாம் கடைப்பிடித்த இளைஞன் ஒருவனுக்குத் தனக்கு நிலைவாழ்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆண்டவர் இயேசுவிடம் சென்று வினவினான். பாதி கிணற்றைத் தாண்டும் சக்தி கொண்ட அவுனுக்கு மீதிப் பாதி கிணற்றைத் தாண்ட ஆண்டவர் வழிவகைச் சொன்னார். உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற்.10:21) என்றார். ஆண்டவர் காட்டிய வழி அவனுக்கு உகந்ததாக இல்லை. நீ கட்டளைகளையெல்லாம் கடைப்பிடிப்பதால் மீட்பு அடைந்துவிட்டாய் என்று இயேசு சொல்வார் என்று எண்ணி வந்த இளைஞனுக்கு, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தையும் இழக்கச் சொல்கிறாரே என்று முகம் வாடி வருத்தத்தோடு சென்றான்.

நாமும் மீட்படைய வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை மீட்க வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். அவ்விருப்பத்தை நிறைவேற்ற இயேசு தன்னுயிரைத் தந்தார். இன்னும் குறைவாக இருப்பது என்ன? நம் ஒத்துழையாமை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் சேகரித்தவற்றை, நாம் அடைந்தவற்றைக் காப்பாற்றுவதற்காக நாம் நடத்துகின்ற போராட்டம் பெரிது. நாம் சேர்த்தவைகள்: பணம், பதவி, படிப்பு, பட்டம், பகைமை, சொத்து, சொந்தம்... போன்ற சுமைகளே நம்மை மூழ்கடிக்கும். இவற்றையெல்லாம் விடுத்துக் கள்ளம் கபடற்ற முதல் நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அறிவு நம்மை அனைத்தையும் துறக்க வைக்கும். வளர்ந்தாலும், பெரியவரானாலும் ஞானம் என்கிற கொடை நம்மைக் குழந்தைகளாக்கும். இது தனி மனித முயற்சியால் இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் (மாற் 10:27). பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற் 10:21) என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம்.



அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
எப்படி பணத்தைப் பயன்படுத்துவது?

அந்தப் பள்ளிக்கூடத்தில் அந்த வகுப்பில் அவன்தான் கணக்கில் முதல் மாணவன். அவன் 99 மதிப்பெண் பெற்று முன்னிலையிலிருந்தான். ஆனால் அவனுடைய கணித ஆசிரியர் அவனைக் கடுமையாகக் கண்டித்தார். கண்டிக்கப்பட்டவன் கண்டிப்புக்குக் காரணம் கேட்டான். ஆசிரியரோ ஒரு வெள்ளைத்தாளில் ஒரு கரும்புள்ளியை வைத்துவிட்டு, மாணவனைப் பார்த்து, நீ பெற்றிருக்கின்ற மதிப்பெண் இந்த வெள்ளைத் தாளிலுள்ள கருப்புப் புள்ளி போல் இருக்கின்றது. நீ முழுவதும் வெள்ளையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என்றார். இயேசு இன்றைய நற்செய்தியிலே அவரைச் சந்திக்க வந்த மனிதரிடம் ஒரு கறுப்புப் புள்ளி இருப்பதை, ஒரு குறை இருப்பதைக் கண்டார். நிலை வாழ்வை, இறைவனுடைய நிறை ஆசியை உரிமையாக்கிக்கொள்ள விரும்பிய அந்தச் செல்வர் மோசே கொடுத்திருந்த கட்டளைகளை அப்பழுக்கில்லாமல் பின்பற்றியவர். இருப்பினும் இயேசுவின் சீடத்துவத்துக்கு ஒவ்வாத ஒன்று அவரிடமிருந்தது. அது என்ன? அவருக்கு அடிமையாக இருக்க வேண்டிய சொத்து அவரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

ஞானம் நிறைந்த (முதல் வாசகம்), உயிருள்ள, ஆற்றல் மிக்க (இரண்டாம் வாசகம்) இயேசுவின் வார்த்தைகள் அந்தப் பணக்காரரின் மனத்துக்குள் புகாதவாறு அவருடைய பண ஆசை அவரைத் தடுத்து நிறுத்திவிட்டது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பணம் ஒன்றுதான். இயேசுவின் அறிவுரை, விண்ணகம், விண்ணக வாழ்வு போன்ற மதிப்பீடுகளெல்லாம் அவருடைய அகராதிக்கு அப்பாற்பட்டவை. அவர் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே என்று பாடித்திரிந்தவர். இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புகின்றவர்கள் நூற்றுக்கு நூறு அவருடைய வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பற்றற்றவர்களாகத் திகழ்கின்றோமோ அந்த அளவுக்கு அம்மையும், அப்பனுமாகிய கடவுள் நம்மைத் தாங்கிப்பிடித்து வாழவைப்பார். பணத்தைச் சோற்றுக்கு ஊறுகாய் போலப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் அறிவோம் :

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (குறள் : 341).

பொருள் : ஒருவன் எத்தகைய பொருள்களில் இருந்து வேண்டாம் என்று விட்டு விலகுகிறானோ, அந்தப் பொருள்களால் அவனுக்குத் துன்பம் எதுவும் நேராது!

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
கிரேக்க நாட்டுத் தத்துவமேதை ஒருவர் தம் வீட்டிற்கு முன்புறம், "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று ஒரு விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார், இந்த நூதனமான விளம்பரத்தைப் படித்த ஒரு பணக்காரர் தமது வேலைக்காரரிடம் பணம் கொடுத்து, ஞானம் வாங்கி வரும்படி அவரை அம்மேதையிடம் அனுப்பினார். அம்மேதை அப்பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு காகிதத் துண்டில், "நீ எதைச் செய்தாலும் தன் இறுதி முடிவை நினைத்துக்கொள்" என்று எழுதிக் கொடுத்தார், அப்பணக்காரர் அவவாக்கியத்தைப் பொன் எழுத்துக்களால் பொறித்து, சட்டம் கட்டி, தம் வீட்டின் மையப் பகுதியில் தொங்கவிட்டு, நாள்தோறும் படித்து, வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, தம் செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவி, உண்மையில் ஞானியாக வாழ்ந்து நல்ல மரணமடைந்தார்.

நாம் எதைச் செய்தாலும் நம் வாழ்வின் இறுதி முடிவை நம் கண்முன் நிறுத்த வேண்டும். "இருப்பது பொய், போவதுமெய்." இதுதான் வாழ்வு. "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள் ளை, கடைசிவரை யாரோ?" திலையற்ற வாழ்வை எண்ணிப்பார்த்ததால்தான் பலர் ஞாளிகளாக மாறினர். இன்றைய பதிலுரைப் பாடலும், "எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்போது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திபா 30:12) எனக் கூறுகிறது.

இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. ஞானத்திற்கு ஈடு இணையானது இவ்வுலகில் வேறெதுவுமில்லை. ஞானத்திற்கு முன் வெள்ளி வெறும் களிமண்; தங்கம் வெறும் தவிடு; செல்வம் வெறும் குப்பை: அழகு வெறும் மாயை; புகழ் வெறும் புகை.

அறிவு ஞானமாகக் கனிய வேண்டும். அறிவைப் புத்தகம் வாயிலாகவும் பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் பெற முடியும். நவீனக்கலையைக் கலைக்கணிப் பொறிவாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும், இவ்வுலகம் முழுவதையும் இணையதளம் மூலமாக இணைக்க முடியும். சின்னத் திரைகளும் பெரிய திரைகளும் நமக்குக் கேளிக்கைகளை வழங்க முடியும். ஆனால் ஞானமானது கடவுள் நமக்கு அளிக்கும் மேலான கொடை; தூய ஆவியார் நம் மீது பொழியும் ஒப்புயர்வற்ற வரம் சாலமோன் அரசர் கடவுளிடமிருந்து செல்வத்தையோ புகழையோ ஆயுளையோ கேட்காமல் ஞானத்தைக் கொடையாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவு இறைஞானமாகக் கனிய வேண்டும். மெய்யறிவு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் சங்கமிக்கும்: கடவுளிடம் சரண் அடையும். பழங்காலத்தில் அறுவது வயது நிறைவடைந்த கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து வனவாசம் மேற்கொள்ளக் காட்டுக்குச் சென்றனர். முன்னே சென்ற கணவர் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளைக் காலால் மணலைக் கொண்டு மறைத்தார். அதைக் கவனித்த மனைவி அவரிடம், "எதைக் காலால் மூடி மறைக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, கணவர், "தரையில் மாணிக்கக் கல் ஒன்று கிடக்கிறது. அதை உன் கண்களில் படாதபடி மூடி மறைத்தேன்" என்றார், அதற்கு மனைவி, " என்னங்க, துறவறம் மேற்கொண்ட பிறகும், உங்களுக்கு மண்ணுக்கும் மாணிக்கத்திற்கும் வேறுபாடு தெரிகிறதா?" என்று கேட்டார். ஞானத்தில் தம் கணவரையே விஞ்சி விட்டார் அந்த மனைவி!

கடவுளை யார் தேடுவர் ? மண்ணையும் மாணிக்கத்தையும் சமமாகப் பார்ப்பவர்கள். ஒட்டையும் செல்வத்தையும் ஒன்றாகக் காண்பவர்கள் தான் கடவுளை நாடுவர் என்கிறார் தாயுமானவர்.

"ஓடும் இருநிதியம் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பராபரமே".

இன்றைய நற்செய்தியில், கடவுளுடைய ஞானம் எனப்படும் கிறிஸ்துவை (1கொரி 1:24) பணக்கார வாலிபர் ஒருவர் மேலோட்டமாகப் பின்பற்ற விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ தம்மை வேரோட்டமாக, நெருக்கமாகப் பின்பற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார், அவருடைய உடமைகளை எல்லாம் விற்று, அவற்றை ஏழைகளுக்கு வாரி வழங்கிவிட்டு, வெறுங்கையுடன் தம்மைப் பின்பற்ற அழைத்தார், ஆனால் அப்பணக்கார வாலிபர் தமது உடமைகளைத் துறக்க மனமின்றி முகவாட்டத்துடன் போய் விட்டார், அவருக்கு மண்ணக அறிவு இருந்தது. ஆனால் விண்ணக ஞானமில்லை . கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் புரிய அவர் விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ, "எவரும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது" (மத் 6:24) என்பதை அவருக்குத் திட்டவட்டமாக உணர்த்தினார்.

கிறிஸ்து இவ்வுலகச் செல்வத்தின் அவசியத்தை மறுக்க வில்லை. பொருட்பால் இல்லை என்றால், காமத்துப் பாலும் வாங்க முடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்க முடியாது என்பது கிறிஸ்துவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கிறிஸ்துவோடு ஒப்பிடும் போது, இவ்வுலகச் செல்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரண்டாம் நிலையை அடைகின்றன, கிறிஸ்து எல்லாவற்றையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். இவ்வுண்மையைத் திருத்தூதர் பவுல் தன்குனர்ந்திருந்தார், எனவே தான் அவர், "கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையாகக் கருதுகிறேன்" (பிலி 3:8) என்றார். இவ்வுலக செல்வங்களுக்கு அடிமை ஆகிறவர்கள் கடவுளுக்கு அடிமை ஆகமுடியாது.

அரிது, அரிது, பணக்காரர் விண்ணரசில் நுழைவது அரிது என்று ஆணித்தரமாக அறிக்கையிடும் கிறிஸ்து, பணக்காரர்களும் இறையருளால் விண்ணகம் செல்ல முடியும் என்பதையும் எடுத்துக்கூறத் தயங்கவில்லை , பணக்கார சக்கேயு ஓர் ஊழல் பெருச்சாளி: இறையருளால், அதாவது கிறிஸ்துவின் பிரசன்னத்தால் மனமாற்றம் அடைந்தார். அதன் விளைவாகத் தாம் இழைத்த அநீதிகளுக்கு நான்கு மடங்கு ஈடு செய்யவும், தமது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கவும் முன் வந்தார்; மீட்படைந்தார் (லூக் 19:8-10).

எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் செல்வப் பெருக்கால் வாழ்வு வந்துவிடாது. (லூக் 12:15). நிலையற்ற செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து அதன்மூலம் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (லூக் 18:9), உலகச் செல்வத்தைப் பயன்படுத்தும் போது அவற்றில் மூழ்கி ஆன்மாவை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கைக் கலையாகும் (1 கொரி 7:31).

கணவர் ஒருவர் தம் மனைவிக்குக் குடைபிடித்துக் கொண்டு போனார், ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் தந்த பதில்: "போகும் வழியில் துணிக்கடை, நகைக்கடைகள் உள் ளன், அக்கடைகளை என் மனைவி பார்க்காதப்டி கு கடை யை இருபக்கங்களிலும் வளைத்துப்பிடித்து மிகவும் தந்திரமாக அவளை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போய் விடுவேன்."

இவ்வுலக மாயை நமது கண்களில் பட்டு நம்மைத் திசை திருப்பாமல் செய்ய நமக்கொரு குடை தேவைப்படுகிறது. அதுதான் கடவுளுடைய வார்த்தை : உயிருள்ள, ஆற்றல்மிக்க, இருபக்கமும் வெட்டக்கூடிய கூர்மையான வாளான, உள்ளத்தை சாடுருவுகிற கடவுளுடைய வார்த்தையால் மெய்யறிவும் ஞானமும் பெற்று ஞானிகளாக வாழக் கற்றுக் கொள்வோம். பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களால் நாம் நசுக்கப்பட்டு, பிழியப்பட்டு பெறுகின்ற பட்டறிவினால் நாம் ஞானிகளாக மாறவேண்டும், வாழ்க்கை அனுபவம்தான் நமது சிறந்த ஆசான். கெட்ட பின்னாவது ஞானியாக வேண்டாமா?

தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, சுட்டபின் நெருப்பு, கெட்டபின் ஞானி! "நீ எதைச் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்"


தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

"அது சரி, ஆனால்..." விளையாட்டு


இரண்டு சந்தர்ப்பங்களில்‌ இறைவன்‌ சிரிக்கிறாராம்‌!

மருத்துவர்‌ ஒரு நோயாளியிடம்‌ "கவலைப்படாதீர்கள்‌. கண்டிப்பாக உங்கள்‌ உயிரைக்‌ காப்பாற்றி விடுவேன்‌" என்று கூறித்‌ தேற்றும்போது இறைவன்‌ சிரிக்கிறார்‌. காரணம்‌? உயிரை எடுப்பதும்‌ கொடுப்பதும்‌ மருத்துவர்‌ கையிலோ இருக்கின்றது? அடுத்தது இரு சகோதரர்கள்‌ தங்கள்‌ நிலத்தைப்‌ பிரித்துக்‌ கொள்கின்றபோது இது என்னுடையது' என்கிறான்‌ ஒருவன்‌. "இல்லை தன்னுடையது" என்கிறான்‌ மற்றவன்‌. சிரித்துக்‌ கொண்டே கடவுள்‌ தனக்குள்‌ சொல்கிறார்‌: "இந்த உலகம்‌ அனைத்தும்‌ என்னுடையது. ஆனால்‌ இவர்களோ இது என்னது அது உன்னது எனச்‌ சொல்லிச்‌ சண்டையிட்டுக்‌ கொள்கின்றனர்‌.

அன்று பேதுருவும்‌ யோவானும்‌ ஆலய முற்றத்தில்‌ முடவனைச்‌ சந்திக்கின்றனர்‌. பிச்சை கேட்ட அவனிடம்‌ பேதுரு "பொன்னும்‌ வெள்ளியும்‌ என்னிடம்‌ இல்லை. என்னிடம்‌ உள்ளதை நான்‌ தருகிறேன்‌. இயேசுவின்‌ பெயரால்‌ உனக்குச்‌ சொல்கிறேன்‌. எழுந்து நட" (தி.ப. 3:6) என்றார்‌. அவனும்‌ எழுந்து நடக்கிறான்‌.

திருத்தந்தை 13ம்‌ சிங்கராயர்‌ ஒரு மனிதரைப்‌ பேதுரு பேராலயத்துக்கும்‌ தனது மாளிகைக்கும்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அங்குள்ள ஆடம்பரப்‌ பொருள்களையெல்லாம்‌ காட்டி, '"பேதுருவோடு சேர்ந்து வெள்ளியும்‌ பொன்னும்‌ என்னிடமில்லை என்று இனி எங்களால்‌ கூற முடியாது" என்றாராம்‌. உடனே அந்த மனிதர்‌ திருத்தந்தையைப்‌ பார்த்து, "ஆகவேதான்‌ உங்களால்‌ எழுந்து நட என்றும்‌ சொல்ல இயலவில்லை" என்று பதில்‌ கூறினாராம்‌.

பணத்துக்கோ பணக்காரர்களுக்கோ எதிரானவரல்ல இயேசு. நிக்கதேம்‌, சக்கேயு போன்ற செல்வந்தர்களின்‌ நெருங்கிய 'நண்பர்‌ அன்றோ! பணத்தால்‌ வரும்‌ தீமைகள்‌, ஆபத்துக்கள்‌ குறித்து எச்சரிக்கிறார்‌.

பணம்‌ என்ற தேவதைக்குப்‌ பலியாகாதது எது? கற்பு பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ விபச்சாரம்‌. உண்மை பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ பொய்ச்சாட்சி, நீதி பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ அநீதத்‌ தீர்ப்பு. அன்பு பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ வஞ்சனை. நேர்மை பலியாக்கப்படுகிறது, அதுதான்‌ ஊழல்‌. நியாயம்‌ பலியாக்கப்படுகிறது, அதுதான்‌ சுரண்டல்‌. இப்படிப்‌ பணத்துக்காக பலியாக்கப்படுபவை பல. அவை ஒவ்வொன்றிலும்‌ கிறிஸ்துவின்‌ சீடன்‌ . என்ற நிலையும்‌ பலியாக்கப்படுகிறது. "எவரும்‌ இரு தலைவர்களுக்குப்‌ பணிவிடை செய்ய முடியாது" (மத்‌. 6:24).

பணத்தை மட்டும்‌ நம்பி இருப்பவர்கள்‌ கடவுளின்‌ அரசில்‌ நுழைவது எவ்வளவு அரிது! (மார்க்‌ 10:23). ஆலமரம்‌ எதை நம்பி வாழ வேண்டும்‌? வேரையா, விழுதையா? ஐயமில்லாமல்‌ வேரைத்தான்‌. அதற்காக விழுதுகளை விட்டுவிட வேண்டும்‌ என்றில்லை. ஆனால்‌ விழுதான செல்வத்தை மட்டுமே நம்பிக்கொண்டு ஆணி வேரான ஆண்டவனை மறக்கும்போது முன்னுரிமை கொடுப்பதில்‌ முறைகேடு அல்லவா ஏற்பட்டுவிடுகிறது! பணநிலை அல்ல, மனிதனின்‌ மனநிலையே நம்பிக்கையின்‌ உரைகல்‌.

ஒருவன்‌ யாரை நம்பி வாழ்கிறான்‌ என்று கண்டறிய இறைவன்‌ சோதனைகளை நடத்தி இருக்கிறான்‌. 2 எடுத்துக்காட்டுகள்‌.

1. ஆபிரகாமிடம்‌ மகனைப்‌ பலிகொடுக்கக்‌ கேட்டது. ஆபிரகாம்‌ நம்பி இருந்தது வேரான கடவுளையா, விழுதான மகனையா?சோதனையில்‌ வென்றார்‌. மனநிறைவோடு திரும்பினார்‌.

2. இயேசு சந்தித்த பணக்கார இளைஞனை அழைத்தது. அவன்‌ நம்ப வேண்டியது வேரான இறைவனையா, விழுதான சொத்து சுகத்தையா? சோதனையில்‌ தோற்றான்‌ மனம்‌ வாடித்‌ திரும்பினான்‌.

கிறிஸ்தவ வாழ்க்கை கட்டளைகளுக்கு அப்பால்‌. பத்துக்‌ கட்டளைகள்‌ மனிதன்‌ மனிதனாக வாழத்தானே தவிர மனிதன்‌ கிறிஸ்தவனாக வாழ அல்ல. திருஅவைக்‌ கட்டளைகள்‌ கடமை மறந்த கிறிஸ்தவனுக்கு ஒரு குறைந்த நிலை -வடிவமைப்பே தவிர இலட்சிய வாழ்க்கைக்கான வழியல்ல.

வானக வாழ்வு ஒரு மாளிகை என்றால்‌, அம்மாளிகையைக்‌ கட்டி எழுப்பக்‌ கடவுள்‌ அமைத்துத்‌ தந்த சாரம்தான்‌ இவ்வுலகம்‌. உலகம்‌ தரும்‌ செல்வம்‌. செல்வத்தால்‌ வரும்‌ இன்பம்‌. வீடு எதற்காகக்‌ கட்டுகிறோம்‌, இருக்கவும்‌, அமரவும்‌, படுக்கவும்‌ நடமாடவும்தானே, சாரத்திலும்‌ ஒரளவு அவற்றைச்‌ செய்யலாமே என்றெண்ணி வீட்டைக்‌ கட்டுவதை விடுத்து, சாரத்திலேயே குடியிருக்க நினைப்பவனை என்னவென்பது?

இன்று நாம்‌ யாரை நம்பி வாழ்கிறோம்‌ என்றறிய இறைவன்‌ நம்மைச்‌ சோதித்தால்‌ ... சோதனையில்‌ வெற்றி பெறத்‌ தேவையான ஞானத்தை நாடுவோம்‌. ஒழுங்காக ஒரு புள்ளிவிவரம்‌ எடுத்தால்‌, உலகத்தில்‌ அருள்‌ இல்லாமல்‌ அல்லது பொருள்‌ இல்லாமல்‌ துன்புறுபபர்களை விட அறிவில்லாமல்‌ ஞானமில்லாமல்‌ அல்லல்படுபவர்கள்‌ தாம்‌ அதிகம்‌ என்பது தெரியவரும்‌. ஞானத்தின்‌ ஆவியோடு ஒப்பிடும்போது செல்வம்‌ ஒன்றுமே இல்லை. (சா.ஞா. 7:7-11)

கருத்தரங்கு ஒன்றில்‌ பெண்‌ அடிமைத்தனம்‌, வரதட்சணை போன்ற சமூகத்‌ தீமைகள்‌ பற்றி அலசப்பட்டது. வரதட்சணை ஒழிக்கப்பட வேண்டும்‌ என்று தீர்க்கமாக முடிவு எடுக்கப்பட்டது. சில நாள்களுக்குப்‌ பின்‌ அதில்‌ கலந்து கொண்ட இளைஞனுக்கு மொழி ‌, வரதட்சனை ஐந்து லட்சமாம்‌!

இன்று நம்மிடையே நல்ல கருத்துக்கள்‌, தீர்மானங்கள்‌ இல்லாமல்‌ இல்லை. ஆனால்‌ செயல்பாடுதான்‌ கேள்விக்குறி. இத்தகைய நடைமுறையை எரிக்‌ புரோம்‌ என்ற உளவியல்‌ நிபுணர்‌ "அது சரி, ஆனால்‌" ("yes, but" game) என்ற உளவியல்‌ விளையாட்டு என்கிறார்‌. நல்ல நல்ல கருத்துக்களை மகிழ்ச்சியுடன்‌ ஏற்றுக்‌ கொண்டு 'ஆம்‌' என்பது. தொடர்ந்து 'ஆனால்‌' என்று சொல்லி மறுத்துவிடுவது. இன்று சமுதாயத்திலும்‌ அரசியலிலும்‌, திருஅவையிலும்‌ உள்ள பெரிய நோய்‌ இதுதான்‌!

பணக்கார இளைஞன்‌ வருகிறான்‌. வருத்தத்தோடு. திரும்புகிறான்‌. நிகழ்ச்சியின்‌ தொடக்கத்தில்‌ நம்பிக்கையும்‌ உற்சாகமும்‌. இறுதியில்‌ வருத்தமும்‌ விரக்தியும்‌. நல்ல மனம்‌ மட்டும்‌ போதாது. அது வெறும்‌ கற்பனையே. உழைப்பும்‌ உற்சாகமான முயற்சியும்‌ எந்தத்‌ தடையையும்‌ மேற்கொள்ளும்‌ துணிவும்‌ தேவை.

இயேசுவா? செல்வமா? செல்வத்தை இழக்க மனமில்லாத இளைஞன்‌ இயேசுவை இழக்கத்‌ துணிந்துவிட்டான்‌. பணத்திற்கு முதலிடம்‌ தரும்‌ யாரும்‌ இறைவனை, இறையரசை உரிமையாக்கிக்‌ கொள்ள முடியாது. செல்வத்தை இழக்கத்‌ துணியும்‌ மனம்‌ மகிழ்ச்சியை இழப்பதில்லை. இயேசுவை இழக்கத்‌ துணியும்‌ மனம்‌ மகிழ்ச்சியை இழக்கிறது. காரணம்‌ செல்வம்‌ நிலையற்றது. இயேசு நிலையானவர்‌, நிரந்தரமானவர்‌.

வாழ்வதற்குப்‌ பொருள்‌ வேண்டும்‌.
வாழ்வதிலும்‌ பொருள்‌ வேண்டும்‌.
ஒர்‌ இளைஞன்‌ ஒரு துறவியிடம்‌ "நான்‌ இதுவரை பொய்‌ சொன்னதில்லை. திருடியதில்லை. யாருக்கும்‌ தீங்கு நினைத்ததில்லை. எனக்கு விண்ணகப்‌ பேறு கிடைக்குமா?'' என்று கேட்டான்‌. துறவியோ "மரமும்‌ மண்ணும்‌ மட்டையும்‌ முக்தி பெறுமாயின்‌ உனக்கும்‌ முக்தி உண்டு: என்றார்‌. அதாவது மரமும்‌ மண்ணும்‌ பொய்‌ சொல்வதில்லை. திருடுவதில்லை. எவருக்கும்‌ தீங்கு இழைப்பதில்லை. நீ மோட்சம்‌ செல்ல வேண்டுமானால்‌ அதை நிர்ணயிப்பது நீதான்‌ எனவே நீ நல்லவனாக, குறிப்பாக உன்னிடம்‌ உள்ளதைப்‌ பிறரோடு பகிர்ந்து கொள்பவனாக வாழும்‌ போது நிலை வாழ்வு என்பது நிச்சயம்‌.

ஒவ்வொரு மனிதனுக்கும்‌ இரண்டு இலக்குகள்‌ உண்டு.
1. இந்நேரத்து இலக்கு (Immediate goal)

2. இறுதி இலக்கு (ultimate goal)

ப அனைவருக்கும்‌ இறுதி இலக்கு நிலை வாழ்வை உரிமையாக்கிக்‌ கொள்வதாகும்‌. இன்றைய இலக்கு அன்றாடம்‌ உண்மையிலும்‌ நீதியிலும்‌ தூய்மையிலும்‌ புனிதத்திலும்‌, பாசத்திலும்‌ பகிர்விலும்‌ வாழ்வதாகும்‌.
 திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படும் "Pandora's box", அதாவது, "பண்டோராவின் பேழை" என்ற சொற்றொடர், கிரேக்கப் புராணத்தில் சொல்லப்படும் ஒரு கதையிலிருந்து உருவானது. பண்டோரா என்ற பெயர்கொண்ட பெண்ணிடம், அவரது கணவர் ஒரு பேழையைக் கொடுத்து, அதைப் பத்திரமாகக் கண்காணிக்கும்படியும், எக்காரணத்தைக் கொண்டும் அதை திறந்துவிடக்கூடாது என்றும் கட்டளையிட்டார். அந்தக் பேழையில் என்னதான் இருக்கிறது என்று காணும் ஆவலில், பண்டோரா, அந்தக் பேழையைத் திறந்தார். அதற்குள் அடைக்கப்பட்டிருந்த சாவு, நோய்கள், தீமைகள் அனைத்தும் வெளியேறி, உலகெங்கும் பரவியது என்று கிரேக்க புராணக் கதையொன்று கூறுகிறது.

இந்தக் கதையைப் பின்புலமாகக் கொண்டு, யாராவது ஒருவர், அறிந்தோ, அறியாமலோ, பிரச்சனைகளைத் துவக்கிவைத்தால், அவர், `பண்டோராவின் பேழை'யைத் திறந்துவிட்டார் என்று சொல்வது, ஆங்கில மொழியில் ஒரு சொல்லாடலாக உருவெடுத்துள்ளது.

உலகின் பல முக்கிய மனிதர்கள் குவித்துவைத்திருக்கும் சொத்துக்களைப்பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள், அண்மையில், அதாவது, 2021 ஆண்டு, அக்டோபர் 3ம் தேதி, வெளியாயின. அந்தத் தகவல்களின் தொகுப்பிற்கு, 'Pandora papers', அதாவது, `பண்டோரா பக்கங்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 117 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், பல மாதங்களாக கவனமாகத் திரட்டிய, 1 கோடியே, 19 இலட்சம் தகவல்கள், `பண்டோரா பக்கங்கள்' என்ற பெயரில் வெளியாகி, உலகெங்கும் அதிர்ச்சி `சுனாமி'யை உருவாக்கியுள்ளன.

`பண்டோரா பக்கங்கள்' வழியே, செல்வந்தர்கள் பலரின் சொத்துக்குவிப்பு வெறி, வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ள இத்தகைய ஒரு சூழலில், செல்வம் சேர்ப்பதைப்பற்றிய, தெளிவான சிந்தனைகளை, இந்த ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நமக்கு வழங்குகின்றன.

செங்கோல், அரியணை, செல்வம் அனைத்தும் தன்னைச் சூழ்ந்திருந்தாலும், ஞானத்திற்கு முதலிடம் தந்த மன்னன் சாலமோன், ஞானத்தையும், செல்வத்தையும் ஒப்பிட்டுப் பேசுவது, இன்றைய முதல் வாசகத்தில் பதிவாகியுள்ளது.

ஏராளமாய் செல்வம் சேர்த்து வைத்திருந்த ஒருவர், நிலைவாழ்வு பெற என்ன வழி என்று தேடிய நிகழ்வு, இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தேடல், அவரை, இயேசுவிடம் கொண்டுவருகிறது. இயேசு, அவரிடம், கட்டளைகளைக் கடைபிடிக்கச் சொல்கிறார். அவரோ, கட்டளைகளை தான் கடைபிடித்து வந்துள்ளதாகவும், அதற்கும் மேல் என்ன செய்வது என்றும் கேட்கும்போது, இயேசு: "நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" (மாற்கு 10:21) என்கிறார். அந்த செல்வர் சற்றும் எதிபாராத சவாலை இயேசு அவர்முன் வைத்தார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது (மாற்கு 10:22) என்று, இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். அவர் தேடிவந்த நிலைவாழ்வை விட, அவருடைய சொத்துகள் அவரை அதிகமாய் பற்றியிருந்ததால், இயேசு விடுத்த சவாலான அழைப்பை, அவரால் ஏற்கமுடியவில்லை.

போகும்போது, அவர், இயேசுவை, திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே போயிருப்பார் என்று கற்பனைசெய்து பார்க்கலாம். எந்த நிமிடமும், இயேசு, மற்றுமோர் எளிதான வழியைச் சொல்லமாட்டாரா என்ற ஏக்கத்தில், அவர், அப்படி பார்த்தபடியே சென்றிருப்பார். இயேசுவும், அவரை, கனிவோடு பார்த்தபடியே நின்றிருப்பார். இத்தனை செல்வங்கள் இருந்தும், அவர் கடவுள் மட்டில் இவ்வளவு ஈடுபாடு கொண்டு, கட்டளைகளை எல்லாம் இளவயது முதல் கடைபிடித்திருக்கிறாரே என்று, இயேசுவுக்கு அவர்மேல் மதிப்பு இருந்திருக்கும்... ஆனாலும், என்ன செய்வது? அவரால் அடுத்த நிலைக்கு உயர முடியவில்லையே என்று இயேசுவுக்கு அவர்மேல் பரிதாபம் ஏற்பட்டிருக்கும். அந்த பரிதாப உணர்வினால், இயேசுவிடமிருந்து வெளிவந்த ஆழமான வார்த்தைகள், இன்றைய நற்செய்தியில் இவ்வாறு பதிவாகியுள்ளன: " பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது." (மாற்கு 10: 24-25)

இயேசுவின் இந்தக் கூற்று சீடர்களை, திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாக, நற்செய்தி சொல்கிறது. இருக்காதா பின்னே? செல்வந்தர் விண்ணரசில் கட்டாயம் நுழைவார்கள்; அவர்களுக்கு, விண்ணகத்தில், ஏற்கனவே உயர்ந்த இடங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, விண்ணகத்தின் நுழைவாயிலில், அவர்கள் வரிசையில் நிற்கக்கூட தேவையில்லை என, சீடர்கள், அதுவரை நம்பிவந்த எண்ணங்களுக்கு முற்றிலும் மாறாக, "மன்னிக்கவும். அவர்கள் விண்ணரசில் நுழைவது கடினம்" என்ற அதிர்ச்சியானத் தகவலை இயேசு தருகிறார்.

செல்வத்தைப்பற்றி, செல்வந்தரைப்பற்றி, சீடர்கள் கொண்டிருந்த எண்ணங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு, அவர்களைச் சிந்திக்கவைத்தார் இயேசு. இன்று நமக்கும் செல்வம், செல்வந்தர் இவற்றைப்பற்றி சிந்திக்க, ஓர் அழைப்பு விடுக்கிறார். நம் சிந்தனைகளை, செல்வம் சேர்ப்பது, செல்வங்களால் சிறைப்படுவது, செல்வத்தைப் பகிர்வது என்று மூன்று கோணங்களில் மேற்கொள்வோம்.

செல்வம் சேர்ப்பது, முதல் கருத்து. ஒருவர், தன் சொந்த முயற்சியாலோ, அல்லது பரம்பரையாய் வந்த வசதியாலோ, செல்வந்தர் ஆகிறார். " ஆகட்டுமே, அதனால் நமக்கென்ன?" என்று அவ்வளவு எளிதாக, மேலோட்டமாக சொல்லிவிடமுடியாது. அந்தச் செல்வம், நேர்மையான வழிகளில் வந்த செல்வம் என்றால், அவர்கள், தலைமுறை, தலைமுறையாய் வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்று மனதார வாழ்த்துவோம். ஆனால், சேர்க்கப்பட்ட செல்வம், நேர்மையற்ற, குறுக்குவழிகளில் வந்திருந்தால், அதுவும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி, அவர்கள் வாழ்வை சீரழித்து சேர்க்கப்பட்ட செல்வம் என்றால், அது, அவர்களுக்கு, ஆசீரா, சாபமா என்பதை சிந்திக்கவேண்டும்.

செல்வங்களால் சிறைப்படுவது, இரண்டாவது கருத்து. செல்வங்களால் சிறைப்படுவது என்பதைச் சிந்திக்கும்போது, பல ஆண்டுகளுக்கு முன்னால், செய்திதாளில் வாசித்த ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது. இதை எழுதியவர் பிரெஞ்ச் நாட்டில் பிறந்து, இந்தியாவில் பல ஆண்டுகளாக் வாழ்ந்துவரும் Francois Gautier. பல ஆண்டுகளுக்கு முன்னால், (1994) சூரத் என்ற நகரில் கொள்ளைநோய் பரவியதை மையமாகக் கொண்டு அவர் எழுதிய ஒரு கட்டுரையில், அவர் செல்வந்தர்களைப்பற்றி கூறியது, இந்த பெருந்தொற்று காலத்தில், இன்னும் அதிகமாக நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. அவர் கூறுவது இதோ: இந்தியாவில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளை அதிக சுத்தமாக வைத்திருப்பதைப் பார்த்து அசந்துபோயிருக்கிறேன். ஆனால், இதே ஆட்கள், தங்கள் வீட்டை சுத்தம் செய்து சேகரித்த குப்பையை, வீட்டுக்கு முன் போடுவார்கள். தெரு சுத்தம்பற்றி அவர்களுக்கு கொஞ்சமும் கவலை இருக்காது. அவர் பகிர்ந்துகொண்ட எண்ணங்கள், செல்வம் எப்படி ஒருவரைச் சிறைப்படுத்துகிறது என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

இச்சிறையிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? செல்வத்தைப் பகிர்வது, அதுவும், இயேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிட்டுச் சொன்னதுபோல், ஏழைகளிடம் பகிர்வது ஒன்றே, இச்சிறையிலிருந்து நம்மை விடுவிக்கும். தோர்டன் வில்டேர் (Thorton Wilder) என்ற நாடக ஆசிரியர் பணத்தைப் பற்றி கூறியுள்ள ஒரு கருத்து, பயனுள்ளதாக இருக்கும்: "பணம் உரத்தைப் போன்றது. குமித்து வைத்தால், நாற்றம் எடுக்கும். பயனளிக்காது. நிலமெங்கும் தூவப்படும்போதுதான், அது பயனளிக்கும்."

பெருந்தொற்று அவசரகால உதவி நிதிக்கென வழங்கியவர்களைப் பற்றியச் செய்திகளைக் கேட்கும்போது, மனிதம் இன்னும் வாழ்கிறது என்ற நம்பிக்கை வளர்கிறது. " நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்" என்று இயேசு விடுக்கும் சவாலான அழைப்பு, நம் உள்ளங்களில் பசுமரத்தாணியாகப் பதியவேண்டும் என்று மன்றாடுவோம்.

செல்வத்தைக் குவித்துவைக்கும் நோய் பரவியுள்ளதைப்போலவே, அதிகாரம், சக்தி அனைத்தும், அதிகம், அதிகமாக தங்களிடம் மட்டுமே மையம் கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றும் அரசுகளும், நிறுவனங்களும் பெருகிவரும் இன்றைய உலகில், ஒரு மாற்று அடையாளமாக, கத்தோலிக்கத் திருஅவை, தன் அதிகாரம், சக்தி ஆகியவை, வத்திக்கானில் மையம் கொண்டிராமல், தலத்திருஅவைகளில் மையம்கொண்டிருக்கவேண்டும் என்ற கருத்தை இவ்வுலகிற்கு உணர்த்தும்வண்ணம், தற்போது ஆரம்பமாகியிருக்கும் இந்த ஒருங்கிணைந்த பயணத்தை, இறைவன் ஆசீர்வதித்து, வழிநடத்தவேண்டும் என்று மன்றாடுவோம்.
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
பெருவாழ்வு வாழ, பேரின்பம்‌ வாழ நம்மில்‌ குறைபடுவது என்ன என நாம்‌ ஆய்வு செய்ய இன்றையத்‌ திருவழிபாடு நம்மை அழைக்கிறது. அது ஞானமா ? கீழ்படிதலா ? உய்த்துணர்தலா உண்மை உணர்தலா ? தேவையற்றதை விட்டுவிடுதலா எது... முதல்‌ வாசகம்‌ ஞானமே எல்லாவற்றிலும்‌ சிறந்த கொடை என்கிறது. நம்முடைய பேச்சிலும்‌ மூச்சிலும்‌ பல தடவை ஞானமற்ற போக்கு தான்‌ காணப்படுகிறது. ஞானமும்‌ முன்மதியும்‌ ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவற்றை நம்‌ வாழ்வில்‌ வெளிப்படுத்த முயல்வோம்‌.

எல்லாவற்றையும்விட இறைவார்த்தையே மேலானது என இரண்டாம்‌ வாசகம்‌ எடுத்துக்‌ கூறுகிறது. ஏனெனில்‌ இறைவார்த்தையில்தான்‌ எல்லாம்‌ அடங்கியுள்ளது. " கூழுக்கும்‌ ஆசை; மீசைக்கும்‌ ஆசை? என்பதுபோல நற்செய்தியில்‌ வரும்‌ செல்வர்‌ சொத்தா ? நிலைவாழ்வா என்பது வேடிக்கையானது.

" எல்லா நலன்களுக்கும்‌ இயேசுதான்‌ ஊற்று" என நன்குணர்ந்த பேதுரு தங்களுக்கு என்ன கிடைக்கும்‌ என்ற தம்‌ எதிர்நோக்கை வெளிப்படுத்துவது அவர்‌ கொண்டிருந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துகிறது. ஞானம்‌, இறைவார்த்தை, நம்பிக்கை இவற்றில்‌ எதுவுமே குறைபடாமல்‌ பார்த்துக்‌ கொள்வோம்‌.
 
மறையுரை புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
பொதுக்காலம்‌ 28-ஆம்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி சா.ஞா. (7:7-11)


கடவுள்‌ மனிதன்‌ முன்‌ தோன்றி உனக்கு என்ன வரம்‌ வேண்டுமென்றால்‌ நாம்‌ உடனே கேட்பது. " நல்ல உடல்‌ சுகத்தை தாரும்‌, அதிக பொருள்‌ வசதிகள்‌ தாரும்‌, சொத்துக்கள்‌ தாரும்‌" என்ற மனித சுயநல நோக்கோடு தான்‌ கேட்போம்‌. ஆனால்‌ ஆண்டவர்‌ சாலமோனிடம்‌ (1அர. 3:5) என்ன வரம்‌ வேண்டுமென்று கேட்ட போது சாலமோன்‌ ஞானத்தை கேட்டார்‌, அந்த ஞானம்‌ கடவுளில்‌ வேரூன்றியுள்ளது (யோபு. 12:13,16). அதை ஆண்டவரே கூறுகிறார்‌. (அர. 3:11)-இல்‌ " நீ ஆயுளையோ செல்வத்தையோ கேட்கவில்லை. உன்‌ எதிரிகள்‌ சாவையும்‌ விரும்பவில்லை. மாறாக மக்களுக்கு நீதி வழங்கத்‌ தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்‌" . சாலமோன்‌ அரசன்‌ பிறர்க்காக கடவுளிடம்‌ கேட்கிறான்‌. அழிந்து போகின்ற சொத்துக்களை விட என்றும்‌ அழியாத விலை மதிப்பில்லாத ஞானத்தை கடவுளிடம்‌ கேட்கிறார்‌.


இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (எபி. 4112-13).

" நிலையான வாழ்வு' என்ற சொத்தை கொடுக்க வல்லது கடவுளின்‌ வார்த்தை தான்‌. இதைதான்‌ இணைச்சட்டம்‌ 32:47 கூறுகிறது. " திருச்சட்டத்தின்‌ வார்த்தைதான்‌ உங்கள்‌ வாழ்வு". கடவுளுடைய வார்த்தை ஒவ்வொன்றும்‌ உயிருள்ளது. அது செயலாற்றுகிற வார்த்தை (performative word) கடவுள்‌ " ஒளி தோன்றுக" என்றார்‌. " ஒளி தோன்றியது" . வார்த்தை செயல்‌ வடிவம்‌ பெறுகிறது. அந்த வார்த்தையான இறைவனும்‌ (யோவான்‌ 1:1) சோதனைக்கு உட்பட்டவர்‌. (லூக்கா 4:1-13) ஆனால்‌ கடவுள்‌ சோதனையை வெற்றிக்‌ கொண்டார்‌. ஏனெனில்‌ மனிதனுக்காக மனுவுருவானார்‌. (யோவான்‌ 1:14) அந்த இறைவார்த்தையை நாடிச்‌ செல்லவே இந்த வாசகம்‌ அழைக்கிறது.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி மாற்கு (10:17-30)

பணக்கார மனிதன்‌, வாலிப வயது, இவர்‌ பாதம்‌ வணங்கி எத்தனையோ பேர்‌ சம்பளம்‌ வாங்கி செல்லுகிற அளவுக்கு வசதியானவர்‌. ஆனால்‌ இன்றைய நற்செய்தியில்‌ அவன்‌ இயேசுவின்‌ காலில்‌ விழுகிறான்‌. யூத மரபுப்படி சொத்துக்களும்‌ வசதி வாய்ப்புகளும்‌ கடவுளின்‌ ஆசீர்வாதம்‌. இவ்வாறு எல்லா வளங்களையும்‌ கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தவன்‌ இப்போது நிலையான வாழ்வைத்தேடி அலைகிறான்‌. அவனைத்தான்‌ இயேசு அன்பொழுக உற்றுப்பார்த்து அழைப்புவிடூக்கிறார்‌. " அத்தகைய சீடத்துவத்தை. பின்பற்ற சொத்து தேவையில்லை. உறவினர்கள்‌ தேவையில்லை. கடவுளே உனக்கு அனைத்தையும்‌ கொடுப்பார்‌" என்று நற்செய்தியில்‌ பார்க்கிறோம்‌.

மறையுரை


இன்றைய நற்செய்தி மூலம்‌ இயேசுவின்‌ சீடர்கள்‌ வாழ அழைக்கப்படுகிறோம்‌. ஆனால்‌ இந்த சீடத்துவ வாழ்க்கையை நினைத்தால்‌ ரொம்ப கடினமாக இருக்கிறது. உண்மை இது தான்‌, இயேசுவுக்கு பொய்‌ பேச வராது. முன்னாடி கலர்‌ கலரா உறுதிமொழிகள்‌ கொடுத்திட்டு பின்னாடி உறுதிமொழிகளை யெல்லாம்‌ ஏப்பம்‌ விடுற முதலாளி அல்ல நம்ம இயேசு, " இது கடினம்தான்‌ ஆனால்‌ நான்‌ உன்னோட எப்போதும்‌ இருப்பேன்‌; நீ என்‌ சீடனாக விருப்பமா? என்று நம்மை பார்த்துக்‌ கேட்கிறார்‌ இயேசு.

உலகத்துல பார்க்கிறோம்‌ மனிதன்‌ எல்லாத்துக்கும்‌ ஒரு விலை வைத்திருக்கிறான்‌. தேர்தல்ல எனக்கு ஓட்டு போடு உனக்கு 100 ரூபாய்‌ தர்றேன்‌. எங்க சபைல சேர்ந்திடு உங்க வீட்டுகாரருக்கு வேலை; உங்க பிள்ளைங்க படிப்பு செலவு; உங்களுக்கு மசாலா சாமான்௧ள்‌ தர்றேன்‌ என்று சேர்க்கிறாங்க. ஆனால்‌ இயேசு கூறுகிறார்‌, " என்னை பின்பற்ற விரும்புகிறாயா? உனக்கு தங்க இடம்‌ கூட கிடைக்காது. 'நரிகளுக்கு வலைகள்‌ உண்டு, வானத்துப்‌ பறவைகளுக்கு கூடுகள்‌ உண்டு, ஆனால்‌ மனுமகனுக்கோ தலை சாய்க்க இடம்‌ இல்லை என்கிறார்‌ (மத்தேயு 8:19). என்னை பின்பற்ற விரும்புகிறாயா? உனக்கு கொடுக்க என்னிடத்தில்‌ ஒன்றுமில்லை, " சவால்களைத்‌" தவிர, உன்‌ சிலுவைகளை சுமந்து கொண்டு என்‌ பின்னால்‌ தொடர்ந்து வா" (மத்தேயு 16:24).


என்னை பின்பற்ற விரும்புகிறாயா?

ஒரு திட்டம்‌, கனவு, ஏன்‌ வீடு கூட இருக்கக்‌ கூடாது என்ற ஆசை. ஏனெனில்‌ என்‌ திட்டம்‌ தான்‌ உன்‌ திட்டம்‌. என்‌ கனவு தான்‌ உன்‌ கனவு. என்‌ ஆசை தான்‌ உன்‌ ஆசை. உன்‌ உடல்‌, உள்ளம்‌, ஆன்மா, நாடித்துடிப்பு எல்லாவற்றிலும்‌ இயேசு இயேசுவென்று தான்‌ சத்தம்‌ கேட்கணும்‌. நான்‌ நீயா இருக்கணும்‌, நீ நாணா இருக்கணும்‌. இதுக்கு தயாரான்னு கேட்கிறார்‌. இதைதான்‌ தூய பவுல்‌ கூறுகிறார்‌. " நீங்கள்‌ கிறிஸ்துவின்‌ மனநிலையைக்‌ கொண்டிருங்கள்‌" (பிலி. 2:5) என்று விவிலியத்தில்‌ பார்க்கிறோம்‌. இயேசு, ஒரு நல்ல சீடனின்‌ பண்புகளுக்காக இரண்டைக்‌ கூறுகிறார்‌.

1. சீடன்‌ இயேசுவுக்கே சொந்தமானவன்‌

மத்தேயு நற்செய்தியில்‌ 8:18-22-இல்‌ பார்க்கிறோம்‌, " என்‌ தந்தையை அடக்கம்‌ செய்து விட்டு உங்களை பின்பற்றுகிறேன்‌" என்று ஒருவர்‌ கூறுகிறார்‌. அப்படி அவங்க என்ன உலகத்தில்‌ இல்லாததை கேட்டாங்க? நியாயமான வேண்டுகோள்‌ தான்‌. ஒருத்தர்‌, போய்‌ என்‌ வீட்டில்‌ சொல்லிட்டு வருகிறேன்‌ என்றார்‌. அதுல என்ன தப்பு இருக்குது. எல்லா மனுசனுக்கும்‌ இருக்கிற அளவு தானே. ஆண இந்த இயேசு கேட்கிறாரா? இல்லையே! அதெல்லாம்‌ அவங்க பாத்துக்குவாங்க. நீ என்ன வந்துப்‌ பின்பற்றுன்னு சொல்றார்‌. அப்படின்னா என்ன அர்த்தம்‌? நம்ம உறவுகளெல்லாம்‌ தேவையில்லை என்று சொல்றாரா? நிச்சயமா இல்ல. ஆனா நாம முதலிடம்‌ கொடுக்கிறோமா என்பது தான்‌ முக்கியத்துவம்‌. முதலிடம்‌ எனக்குதான்னு இயேசு சொல்றார்‌. இதத்‌ தான்‌ இன்றைய நற்செய்தியில்‌ பார்க்கிறோம்‌. எனக்காக எவணெொருவன்‌ தன்‌ தந்தைதாய்‌ சகோதரன்‌ சகோதரியை விட்டு வருகிறானோ அவன்‌ மறுமையில்‌ நிறைவாக பெறுவான்‌ என்கிறார்‌.

இது எதைக்‌ குறிக்கிறது என்று சொன்னால்‌, முதல்ல, நீ எனக்கு சொந்தம்‌. அதன்‌ பிறகு தான்‌ மற்றவை அனைத்தும்‌. முதலில்‌ என்னோட சொந்தக்காரன்‌. பின்னாடி தான்‌ ஒரு அப்பாவுக்கு மகன்‌. அப்புறம்‌ மகனுக்கு அப்பாட கணவனுக்கு மனைவி, மனைவிக்கு கணவன்‌. இன்றைக்கு நாம்‌ அழைக்கப்படுகிறோம்‌. கடவுளின்‌ சொந்தக்காரனாவதற்கு.

ஒரு நிகழ்வு எனக்கு நினைவு வருகிறது:

நியூயார்க்‌ நகரில்‌ (in Amrica) ஒரு shopping complex-ல் ஒரு பயங்கர கூட்டம்‌. பணக்காரர்கள்‌ மட்டுமே போகக்‌ கூடிய இடம்‌. கிறிஸ்து பிறப்பு விழா நெருங்குகிற சமயத்தில்‌ ஒரு ஏழை ஆப்பிரிக்க சிறுவன்‌ கந்தல்‌ ஆடையுடன்‌ ஒவ்வொரு கடையாக பார்த்து வந்தான்‌. அப்போது வாயிலில்‌ காவலாலி அந்த சிறுவனை பிடித்து வெளியே தள்ளினான்‌. கீழே விழுந்த சிறுவனை தாக்கிய பணக்கார பெண்மனி ஒருத்தி அவனை முத்தமிட்டு உனக்கு என்ன வேண்டும்‌? என்றாள்‌. அவன்‌ கேட்டவை எல்லாம்‌ வாங்கிக்‌ கொடுத்து கிறிஸ்து பிறப்பு விழாவை சிறப்பாக கொண்டாடு என்றாள்‌. அதற்கு சிறுவன்‌ " உங்கள்‌ பெயர்‌ தான்‌ கடவுளா? அதற்கு அப்பெண்‌ " இல்லை" என பதிலளித்தாள்‌. " நான்‌ ஒரு சாதாரண பெண்மனி" அச்சிறுவன்‌ கடவுள்‌ இல்லை என்றாளும்‌ பரவாயில்லை. நீங்கள்‌ கடவுளோடு நெருங்கிய சொந்தமான்னு கேட்டான்‌. நீங்க கோயிலை விட்டு வெளியே போகும்போது மத்தவர்கள்‌ எல்லாம்‌ சொல்லணும்‌ அதே அவர்கள்‌ எல்லாம்‌ இயேசுவின்‌ உறவினர்கள்‌ என்று. சீடனின்‌ அடையாளம்‌ முதல்‌ இயேசுவின்‌ உறவுகளில்‌ தான்‌.

இரண்டாவது பண்பு

ஒரு சீடன்‌ இயேசுவிடம்‌ இருந்து தன்‌ கண்களை எடுப்பதில்லை. இதைதான்‌ லூக்கா நற்செய்தி (9:62) கூறுகிறது. கலப்பையில்‌ கை வைத்த பின்‌ திரும்பிப்‌ பார்ப்பவன்‌ எவனும்‌ இறையாட்சிக்கு தகுதியில்லாதவன்‌. குழந்தை இயேசுவை பார்க்க வந்த மூன்று ஞானிகளும்‌ சீடத்துவ வாழ்க்கைக்கு முன்‌ உதாரணம்‌. நட்சத்திரத்தை வானத்துல பார்க்கிறாங்க அது மெசியாவோட பிறப்பை குறிக்கிறதுன்னு தெரிஞ்சிக்கிறாங்க. உடனே புறப்பட்டு நட்சத்திரத்தை தொடர்ந்தனர்‌. ஆனால்‌ வர வழியில்‌ எத்தனை கடினங்கள்‌ இருந்திருக்கும்‌. பாலைவனம்‌ கடும்‌ வெயிலில்‌ புழுதிகாற்று ஆனால்‌ அவையும்‌ அவர்கள்‌ பயணத்தை நிறுத்த முடியவில்லை. ஆனால்‌ அவர்கள்‌ பார்வை எப்போதும்‌ நட்சத்திரத்தை நோக்கியே இருந்தது. சீடர்களோட வாழ்க்கை இப்படித்தான்‌. நம்பிக்கை நட்சத்திரமான நம்முடைய பார்வை இயேசுவிடமிருந்து நமது பார்வை அகல கூடாது.
இன்றைக்கு நான்‌ நினைத்து பார்க்கிறேன்‌

இதே நமக்காக திருப்பலி நிறைவேற்றுகிற அருள்‌ தந்தையர்‌கள்‌ திருச்சபையில்‌ பல வருடங்களாக குருத்துவ பணியை செய்கின்றனர்‌. நானும்‌ ஓரிரு ஆண்டுகளில்‌ நல்ல குருவாக மாற ஆசை படுகிறேன்‌. குரு மாணவர்கள்‌ நிறைய பேர்‌ படிக்கின்றார்கள்‌ அவர்கள்‌ யார்‌ என கேட்கப்போகிறேன்‌. கண்களில்‌ கனவோடா நெஞ்சில்‌ ஏக்கத்தோடா ஆண்டவனுக்கு நாங்கள்‌ பணி செய்வோம்‌. அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்‌. நிறைய கன்னியர்களை இன்று பார்க்கிறேன்‌. எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இறைபணிக்காக தங்களையே இவர்கள்‌ அர்ப்பணித்தார்கள்‌.

இவர்கள்‌ எல்லாம்‌ இன்றைய நற்செய்திக்கு பெரிய சவாலைத்‌ தருகிறது, வீட்டில்‌ சொந்தங்கள்‌ அனைத்தையும்‌ விட்டு வந்தால்‌ மறுமையில்‌ பன்மடங்கு கிடைக்கும்‌. ஆனால்‌ துன்பங்களும்‌ கூடவே கிடைக்கும்‌ என்பதாகும்‌. இருந்த போதும்‌ கடவுளின்‌ அழைப்பை ஏற்று வந்துள்ளனர்‌. சீடத்துவ வாழ்வுக்காக.
இதை நாம்‌ முதல்வாசகத்தில்‌ பார்க்கிறோம்‌. பண வேண்டாம்‌, பதவி வேண்டாம்‌, சொத்து வேண்டாம்‌ உமது ஞானத்தை மட்டும்‌ கொடு என்று கேட்கிறார்‌ சாலமோன்‌ அரசர்‌, கடவுளின்‌ சீடத்துவ அழைப்புக்கு ஏற்ற வாழ்வு வாழ அவருக்கு கடவுளின்‌ தேவையாக இருக்கிறது.

நாம்‌ பொதுவா செய்யற தப்பு என்ன தெரியுமா? ஏதோ சீடத்துவம்‌ என்றாலே சாமியார்‌ sister, brother... நமக்கும்‌ அதுக்கும்‌ சம்பந்தமேயில்லை. அப்படி என்று ஒதுங்குகின்றோம்‌. திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும்‌ சீடத்துவ வாழ்வு வாழ அழைக்க படுகிறோம்‌.

இயேசு நடத்துற கம்பெனியோடு சீடத்துவ வேலைக்கு துறவிகள்‌ மட்டுமல்ல. எல்லோரும்‌ விண்ணப்பிக்கலாம்‌. இயேசு அன்றைக்கு சொன்னாரே என்‌ சீடனாய்‌ இருக்க விரும்புகிறாயா? உன்‌ சிலுவைகளை தாக்கிக்‌ கொண்டு என்னை பின்பற்று(லூக்கா 9:23) என்று சொன்னது துறவிக்கு மட்டுமல்ல. இறை வாழ்வு வாழ்கிற அனைவருக்கும்‌ பொருந்தும்‌. ஒரு நாள்‌ நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மனி தனது கணவனை முதுகில்‌ சுமந்து கொண்டு பிறரிடம்‌ உதவி கேட்டு ரோட்டைக்‌ கடந்து சென்று கொண்டிருந்தாள்‌. அப்பெண்ணானவள்‌ எனக்கு சிலுவை சுமக்க இயேசுவுக்காக பாடுபட்டாள்‌.

தனக்கு பிறந்த மாற்றுத்திறன்‌ (handicapped) கொண்ட குப்பை தொட்டியில்‌ போடாமல்‌ அநாதை இல்லத்தில்‌ சேர்க்காமல்‌ தானே வளர்க்கும்‌ தாய்மார்கள்‌ அனைவரும்‌ இயேசுவின்‌ சீடர்கள்‌ தூன்‌. எதை கொடுத்தாலும்‌ குறை சொல்லும்‌ மாமியார்‌. கீழ்படியாத மருமகள்‌, ஊதாரி கணவன்‌ என பல இன்னல்களை தாங்கிய குடும்ப அமைதிக்காக மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்தும்‌ எல்லா இல்லத்தாரும்‌ சீடர்கள்‌ தான்‌.

சீடனின்‌ வாழ்க்கை கடினமானது தான்‌. ஆனால்‌ கடவுளின்‌ வார்த்தை நமக்கு துணையாக இருக்கும்‌. இரண்டாம்‌ வாசகம்‌ நமக்கு அதைத்‌ தான்‌ கூறுகிறது. கடவுளின்‌ வார்த்தை உயிருள்‌ளது. ஆற்றல்வாய்ந்தது. இந்த நம்பிக்கையோடு இயேசுவின்‌ சீடராக அழைக்கப்படுகிறோம்‌. இயேசுவோட கம்பெனியில்‌ சீடர்கள்‌ வேலை காலியாக இருக்கிறது. சேர விரும்புகிறவர்கள்‌ இருந்து ஜெபித்து விட்டு போங்க.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1. இறைவார்த்தை ஆற்றல்‌ மிக்கது. ஆனால்‌ நல்ல இதயத்தில்‌ விழுந்தால்‌ பலன்‌ நிச்சயம்‌. விழுகின்ற மழைநீர்‌ கோயில்‌ குளமானால்‌ தீர்த்தமாகிறது. சாலை ஓரங்களில்‌ அசுத்தமாகிறது. நாம்‌ எப்போதும்‌ கோயில்‌ குளமாக இருக்க முயற்சி செய்வோம்‌.
2. உலக செல்வம்‌ அழியக்‌ கூடியது. நிலையான செல்வம்‌ இறைவன்‌ ஒருவனே.
3. ஏழைக்கு உதவுவது நமது கடமை எனக்‌ கடவுள்‌ விரும்புகிறார்‌.
4. கடவுளால்‌ முடியாதது ஒன்றுமில்லை...
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம்‌ - இருபத்தெட்டாம்‌ ஞாயிறு
முதல்வாசகம்‌ :சாஞா.7 7-1

பின்னைய திருமுறை நூல்களுள்‌ (மப௦can௦nicals) ஒன்றான 'சாலமோனின்‌ ஞானம்‌' ஆசிரியர்‌ பற்றி யாதொன்றும்‌ அறிவதற்கில்லை. பாரம்பரியம்‌ சாலமோனை இதன்‌ ஆசிரியராகச்‌ சுட்டும்‌! இது எழுதப்பட்ட காலம்‌ ஏறத்தாழ கி.மு. 50 என்பர்‌ ஆய்வாளர்‌. திருச்சட்டத்தைக்‌ கடைப்பிடித்தலே உண்மையான ஞானம்‌; இஞ்ஞானம்‌ தீமை அனைத்திலுமிருந்து மக்களை மீட்க வல்லது; வரலாற்றிலே விடுதலைப்‌ பயணத்தில்‌ கடவுளின்‌ ஞானம்‌ வெளிப்படுகிறது (தொநூ. 10 - 19) என்ப போன்றவை இந்நூலிலிருந்து பெறப்படுகின்றன. இன்றைய வாசகம்‌ ஞானத்தின்‌ மேல்‌ ஆசிரியர்‌ கொண்டுள்ள மதிப்பை வெளிப்படுத்துகிறது. ஞானத்தைக்‌ கிறிஸ்துவுக்கும்‌ மரியன்னைக்கும்‌ ஒப்பிடுசிறது திருவழிபாடு.

ஞானத்தை வேண்டிப்‌ பெறல்‌

" நீ விரும்புவதைக்‌ கேள்‌" என்ற இறைவனிடம்‌ " உம்‌ மக்களுக்கு நீதி வழங்கவும்‌, நன்மை தீமையைப்‌ பகுத்தறியவும்‌ வேண்டிய ஞானத்தை அடியேனுக்கு அளித்தருளும்‌" என்பார்‌ சாலமோன்‌ (காண்‌ : 1 அர. 3:4 - 9). எனவே தான்‌ "நான்‌ மன்றாடிக்‌ கேட்டேன்‌, எனக்கு அறிவு வழங்கப்பட்டது; கடவுளிடம்‌ வேண்டிக்‌ கொண்டேன்‌, எனக்கு ஞான உணர்வு கிடைத்தது (7 : 7) என்பார்‌ ஆசிரியர்‌. " வானகத்திலுள்ள உங்கள்‌ தந்தை தம்மிடம்‌ கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய்ப்‌ பரிசுத்த ஆவியை அளிப்பார்‌!" (லூக்‌. 11: 13) என்ற இயேசுவின்‌ சொற்களும்‌ நம்மை ஞானத்திற்காக மன்றாடி வேண்டிக்கொள்ளத்‌ தூண்டுகின்றன. ஏனெனில்‌ " தூய ஆவியாரே ஒருவருக்கு வல்ல செயல்‌ செய்யும்‌ ஆற்றலையும்‌, இன்னொருவருக்கு. இறைவாக்குரைக்கும்‌ ஆற்றலையும்‌, வேறொருவருக்கு ஆவிக்குரிய வற்றைப்‌ பகுத்தறியும்‌ ஆற்றலையும்‌, மற்றொருவருக்குப்‌ பல்வகை பரவசப்‌ பேச்சு பேசும்‌ ஆற்றலையும்‌, பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும்‌ ஆற்றலையும்‌ அருளுகிறார்‌ ' (1 கொரி. 12 : 7 - 11), ஞானத்தின்‌ ஊற்றாகிய தூய ஆவியிடம்‌ இஞ்ஞானத்திற்காக வேண்டுவோம்‌. நன்மை தீமையைப்‌ பகுத்தறியவும்‌, நல்லதை ஏற்று, அல்லதைத்‌ தவிர்க்க உதவும்‌ இறை ஞானம்‌ நமக்குக்‌ கிட்டுவதாக! " வாரும்‌ தூய ஆவியே...

ஞானத்தின்‌ மேன்மை

" கிடைத்தற்கரிய கருவூலம்‌ ஞானம்‌ (7 : 14). அதைப்‌ பெற்றவர்‌ கடவுளின்‌. நட்பைப்‌ பெறுகிறார்கள்‌; அவருக்கு உகந்த வாழ்க்கை நடத்துகிறார்கள்‌ (7:17). ஏனெனில்‌ ஞானம்‌ ஒருவனிடத்தில்‌ குடிகொள்ளும்போ தது. " ஆண்டவரே என்றென்றைக்கும்‌ அவனுக்கு ஒளியாய்‌ இருக்கிறார்‌; கடவுளே அவனுக்கு மகிமையாய்‌ விளங்குகிறார்‌ (எசா. 61:19-20). ஆண்டவரால்‌ தடுத்தாட்‌ கொள்ளப்பட்ட நிலையே உண்மை ஞானம்‌. " ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமான்‌', " அவன்‌ என்னை ஆட்கொண்டருளினன்‌ " என்னை ஆட்கொண்ட எம்பிரான்‌ (திருவாசகம்‌) என்ப போன்ற திருவாசகச்‌ சொற்கள்‌ ஞானத்தின்‌ உச்சக்கட்டத்தைச்‌ கட்டுவன எனலாம்‌. இத்தகைய ஒரு நிலையே உண்மை ஞானம்‌.

இந்த உண்மை ஞானத்தைப்‌ பெற்றவனுக்கு, "தானே அவனாகி, அவனே தானாகிய'' ஒருவனுக்கு வெள்ளியும்‌ பொன்னும்‌ மண்ணே; ஆட்சியும்‌ அரியணையும்‌ வெறும்‌ தூசியே (7 : 8 - 10). ஞானமே இறைவன்‌; இறைவனே ஞானம்‌. இறை ஞானமே எல்லாம்‌.

ஞானத்தைப்‌ பகிர்ந்துகொள்ளல்‌

" யான்‌ பெற்ற பேறு பெறுக இவ்வையகம்‌ ' என்ற முறையிலே நாம்‌ பெற்ற இறை ஞானத்தைப்‌ பிறருடன்‌ தாராளமாகப்‌ பகிர்ந்து கொள்ள வேண்டும்‌. " உற்றாரை யான்‌ வேண்டேன்‌, ஊர்‌ வேண்டேன்‌, பேர்‌ வேண்டேன்‌... உன்‌ குரைகழற்கே கற்றாவின்‌ மனம்‌ போலக்‌ கசிந்துருக வேண்டுவனே (திருவாசகம்‌, திருப்புலம்பல்‌) என்று ஏக்கமுற்று வாடுகின்றனர்‌ பலர்‌. இவர்களுக்கு இறை ஞானத்தை, இறைப்பற்றை அளிக்கின்றோமா? பெற்ற பெரும்‌ பேற்றைப்‌ பிறரோடு பகிர்ந்துகொள்ள நாம்‌ முன்‌ வருகிறோமா? இறை ஞானம்‌ " தொட்டனைத்தூறும்‌ மணற்கேணி. பிறரோடு பகிரப்‌ பகிர நம்மையும்‌ இஞ்ஞானத்திலே வளரச்‌ செய்யும்‌; பிறருக்கும்‌ ஞானக்‌ கண்களைத்‌ திறந்துவிடும்‌. இறைவனை அறியாதார்பால்‌, அறிந்தும்‌ அன்பு செய்யாதார்பால்‌, அறிய விரும்பாதவர்பால்‌ நம்‌ கடமையென்ன? நமது உணர்வென்ன?
( ஞானம்‌ மனிதருக்குக்‌ குன்றாத கருவூலம்‌. )

இரண்டாம்‌ வாசகம்‌ : எபி. 4 : 12 - 13

தம்‌ குரலைக்‌ கேட்டுக்‌ கீழ்ப்படியும்‌ மக்களுக்கு இறைவன்‌ இளைப்பாற்றி தருகிறார்‌ என்று எபிரேயருக்கு மடல்‌ எழுதிய ஆசிரியர்‌ கூறும்போது இறைவனின்‌ குரலைப்‌ பல சொற்களால்‌ விளக்குகிறார்‌. " தூய ஆவியின்‌ கூற்று'' " ஆணை "', " வாக்குறுதி ", " நல்லசெய்தி ', " வார்த்தை என்பன இவையாகும்‌ (காண்‌ : எபி. 3 : 7 - 4 : 11). இன்றைய வாசகத்திலே இந்த இறைவார்த்தையின்‌ தன்மை பற்றி விளக்குகிறார்‌.

" வார்த்தை" உயிருள்ளது

திருமுழுக்குப்‌ பெற்றவர்களைப்‌ பார்த்துப்‌ புனித பேதுரு " நீங்கள்‌ அழியக்கூடிய வித்தினால்‌ அல்ல; மாறாக, உயிருள்ளதும்‌, நிலைத்திருப்பதுமான, அழியா வித்தாகிய கடவுளின்‌ வார்த்தையால்‌ பிறந்துள்ளீர்கள்‌ ' (1 பேதுரு 1:23) என்கிறார்‌. " தொடக்கத்தில்‌ கடவுள்‌. விண்ணுலகையும்‌, மண்ணுலகையும்‌ படைத்தபொழுது மண்ணுலகு. உருவற்று வெறுமையாக இருந்தது" (தொநூ. 1-2). ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்த மக்கள்‌ அதே இறைவார்த்தையாலே விடுதலையை நோக்கிப்‌ பீடு நடைபோடுகின்றனர்‌ (விப). இயேசுவிலே இவ்‌இறைவார்த்தை பார்வையற்றோருக்குப்‌ பார்வை அளிக்கிறது, செவித்திறன்‌ அற்றவருக்குக்‌ கேள்விப்புலன்‌ அளிக்கிறது. இவை அனைத்திற்கும்‌ மேலாக, பாவக்‌. கட்டுகளினின்‌ று மனிதனை விடுவிக்கிறது. ஆண்டவரின்‌ வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்மிக்கது, படைப்பைக்‌ கொணர்வது, மீட்பை வழங்குவது.

இவ்‌இறைவார்த்தையையே இன்றும்‌ என்றும்‌ நாம்‌ விவிலியத்தில்‌ எதிர்ப்படுகிறோம்‌. " வாக்கு மனிதர்‌ ஆனார்‌; நம்மிடையே குடிகொண்டார்‌ ' (யோ. 1 : 14). அதே வார்த்தை எழுத்து வடிவானார்‌; நம்மிடையே குடி கொண்டிருக்கிறார்‌. வேதாகமத்தை வாசிக்கும்போது இறைவனை எதிர்ப்படுகிறோமா? வேதாகமம்‌ நமக்கு வெறும்‌ புத்தகம்‌ மட்டும்‌ தானா? அல்லது உயிருள்ள இறைவனின்‌ பிரசன்னமா? விவிலியத்தின்பால்‌ பற்றுக்கொள்கிறோமா? விவிலியத்தை அடிக்கடி வாசிக்கிறோமா? விவிலியம்‌ நம்‌ வாழ்வுப்‌ பாதைக்கு ஒளியாக அமைகிறதா? விவிலியம்‌ நமக்குச்‌ சவால்‌ விடுக்கிறதா? நம்மைக்‌ குற்றம்‌ சாட்டுகிறதா? நமக்குப்‌ பாடம்‌ புகட்டும்‌ ஆசானாயிருக்கிறதா? " ஆண்டவரே நாங்கள்‌ யாரிடம்‌ போவோம்‌? நிலைவாழ்வு அளிக்கும்‌ வார்த்தைகள்‌ உம்மிடம்தானே உள்ளன ' (யோ. 6 : 68). " வாழ்வளிக்கும்‌ வார்த்தைகளை நமக்குப்‌ பெற்றுத்‌ தந்தவரும்‌ இவரே ' (திப. 7 : 38). எனவே, உயிர்‌ பெற்று, நம்‌ வாழ்க்கையை வளப்படுத்துவோம்‌.

" வார்த்தை" க்கு அனைத்தும்‌ வெளிச்சம்‌

இறைவார்த்தை இரு புறமும்‌ கருக்கு வாய்ந்த வாளினும்‌ கூர்மையானது (திவெ. 1 : 16). இது தேவ ஆவியாரே நமக்களிக்கும்‌ போர்வாள்‌ (எபே. 6 : 17) தீட்டிய அம்பு (எசா. 49 : 2), ஆன்மா, ஆவி ஆகியவற்றின்‌ மறைந்த உள்‌ ஆழத்தையும்‌ ஊடுருவிச்‌ செல்லும்‌ தன்மை வாய்ந்தது. இரகசியம்‌, அந்தரங்கம்‌, ஒழிவு, மறைவு அனைத்தையும்‌ மீறிச்‌ சென்று நமது நினைப்புகள்‌, கருத்துகள்‌, தீர்ப்புகள்‌, ஆசைகள்‌, அவலங்கள்‌ | . அனைத்தையும்‌, சீர்தூக்கிப்‌ பார்க்கும்‌ வல்லமையுடையது. இவ்வார்த்தையின்‌ பார்வைக்கு எட்டாததும்‌, பார்வையில்‌ கிட்டாததும்‌ ஒன்றும்‌ கிடையாது. எனவே தான்‌ ஆண்டவரே, " என்னைப்‌ புறக்கணித்து நான்‌ சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குக்‌ தீர்ப்பளிக்கும்‌ ஒன்று. உண்டு; என்‌ வார்த்தையே அது. இறுதி நாளில்‌ அவர்களுக்கு அது தண்டனைத்‌ தீர்ப்பு அளிக்கும்‌ (யோ. 12 : 48) என்றார்‌. நமக்குத்‌ தீர்ப்பளிக்கும்‌ இவ்வார்த்தை இறைமகன்‌ இயேசுவேயாவார்‌. அவ்‌ இயேசுவே வேதாகம வாசகங்கள்‌ வழி நம்மிடம்‌ உரையாடுகிறார்‌. அன்றாடம்‌ திருப்பலியிலும்‌, மற்றும்‌ தனியாகவோ குழுவிலோ வேதாகமத்தை வாசிக்கக்‌. கேட்கும்போது உண்மையிலேயே இறைவன்‌ நம்மைத்‌ தொடுகிறாரா? அவர்‌. நம்மைத்‌ தொடவும்‌, நம்மிடம்‌ உரையாடவும்‌ விடுகின்றோமா? அவரைத்‌ தொடுதலால்‌, அவரிடம்‌ நாம்‌ உரையாடுவதால்‌ ஏதேனும்‌ நம்மில்‌ மாற்றம்‌. ஏற்படுகிறதா ?
( கடவுளுடைய வார்த்தை எந்த வாளினும்‌ கூர்மையானது.)

[நற்செய்தி மாற்கு 10-17-20]

மோசேயின்‌ கட்டளைகளை அனுசரித்து வந்த செல்வந்தன்‌ ஒருவன்‌ ஆண்டவரை அணுகி முடிவில்லா வாழ்வை அடைய (தானி. 12: 2;2மக்க.7:9) சிறப்பான வழி எதுவெனக்‌ கேட்கிறான்‌. இதே செல்வந்தனை மத்தேயு வாலிபனாகவும்‌ (19 : 20), லூக்கா தலைவனாகவும்‌ (18 : 18) அறிமுகப்படுத்துகின்றனர்‌. இந்த வாலிபனுக்கு நமதாண்டவர்‌ அளித்த பதிலும்‌, செல்வம்‌ பற்றிய போதனையுமே இன்றைய நற்செய்தியின்‌ மையக்‌ கருத்துக்கள்‌.

" இயேசுவே நிலைவாழ்வு"

முடிவில்லா வாழ்வு பெற என்ன செய்யவேண்டும்‌ என்ற கேள்வியும்‌, ஓடிவந்து முழந்தாளிட்டு பணிவுடன்‌ கேட்டதும்‌, நித்திய வாழ்வு பற்றி அவன்‌ கொண்டுள்ள ஆர்வத்தைக்‌ காட்டுகிறது. ஒருவன்‌ அழியாத வாழ்வு பெற அனுசரிக்க வேண்டிய சட்டங்கள்‌ எவை எனப்‌ பழைய ஏற்பாடு பட்டியல்‌ போட்டுக்‌ கூறுகிறது (விப. 20 : 12 - 16; இச. 5 : 16 - 20). இதை நன்கறிந்த இளைஞன்‌ சட்டம்‌ காட்டும்‌ வழியைவிட மேலான வழி ஒன்றை இயேசுவிடம்‌ கேட்கிறான்‌. இவ்வுலக வாழ்வை அறிந்துள்ளோம்‌. அதை வாழ்வதில்‌, வளப்படுத்துவதில்‌ அக்கறை காட்டுகிறோம்‌. அதைவிட மேலான அளவு ஆர்வமும்‌ அக்கறையும்‌ காட்டாவிட்டாலும்‌, அந்த அளவாவது நித்திய வாழ்வில்‌ அக்கறை காட்டுகின்றோமா? நித்திய வாழ்வு உண்டென்பதை விசுவசித்தால்‌ தான்‌, அதை எப்படி அடைவது என்ற அடுத்த வினா எழும்‌. இயேசுவின்‌ வருகைக்குழுன்‌ சட்டங்களைச்‌ சரிவர அனுசரித்தாலே நித்திய வாழ்வை சுதந்தரித்துக்‌ கொள்ளலாம்‌ என்ற நியதி இருந்தது. இயேசு வந்த யுகத்தில்‌ வாழும்‌ நாம்‌ நமதாண்டவரிடம்‌ நித்திய வாழ்வை அடைய என்ன செய்ய வேண்டுமென்று கேட்டால்‌, அவர்‌ தன்னையே சுட்டிக்‌ காண்பித்து " உயிர்த்தெழச்‌ செய்பவனும்‌ வாழ்வு தருபவனும்‌ நானே (யோ. 11 : 253; " உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும்‌ நீர்‌ அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும்‌ அறிவதே நிலைவாழ்வு ' (யோ. 17 : 3) என்பார்‌; " மகனிடம்‌ நம்பிக்கை கொள்வோர்‌ நிலைவாழ்வைப்‌ பெறுவர்‌" (யோ. 3 : 36) என்பார்‌. நித்திய வாழ்வு பற்றி என்‌ கணிப்பு என்ன? இதைப்‌ பெற நான்‌ என்ன செய்கிறேன்‌?

இயேசுவே உண்மைச்‌ செல்வம்‌

செல்வந்தன்‌ நித்திய வாழ்வு பெற, மேலான வழியைத்‌ தேடினான்‌. இயேசு அவனை உற்று நோக்கினார்‌. அவன்மீது கொண்டிருந்த பரிவும்‌ பாசமும் அப்பார்வையில்‌ பளிச்சிட்டது. நான்‌ விடுக்கும்‌ சவாலை ஏற்கத்‌ தயாரா என்ற கேள்வியும்‌ அதில்‌ தொனித்தது; இச்செல்வந்தன்‌, செல்வத்திற்கு அடிமையாகி விட்டானே என்ற பரிதாபமும்‌ அதில்‌ காணப்பட்டது. நமது ஆண்டவரின்‌ பார்வை நம்மீது பட்டு, நம்மை அது ஈர்க்க வேண்டும்‌. அவர்‌ ஆணையிட்டால்‌ நான்‌ எதையும்‌ ஏற்கத்‌ தயார்‌ என்ற மனநிலை என்னிடத்தில்‌ எழவேண்டும்‌.

தன்னையொத்த நாடோடி வாழ்வு, வறுமை வாழ்வு வாழ அவ்வாலிபனை அழைத்தார்‌. அதுவே அவன்‌ கேட்ட மேலானவமி. " உனக்குள்ளதை விற்று. ஏழைகளுக்குக்‌ கொடு; வானகத்தில்‌ உனக்குச்‌ செல்வம்‌ கிடைக்கும்‌; பின்பு. வந்து என்னைப்‌ பின்‌ செல்‌" என்றார்‌ (10 : 2). இந்த உன்னத அழைப்பை. ஏற்கத்‌ தடையாயிருந்தது அவனது செல்வமேயாகும்‌. எனவேதான்‌ செல்வந்தர்கள்‌ கடவுளின்‌ அரசில்‌ நுழைவது அரிதென்கிறார்‌ இயேசு (10 : 25). யூத சமயத்தில்‌ செல்வந்தர்கள்‌ இறைவனின்‌ ஆசீரைப்‌ பெற்றவர்களாக எண்ணப்பட்டனர்‌ (இச. 28 : 1- 4). இயேசுவோ, செல்வமுடையோர்‌ நித்திய வாழ்வைப்‌ பெறுவது கடினம்‌ என்கிறார்‌. செல்வந்தர்கள்‌ மீட்புப்‌ பெறார்‌ என்று ஆண்டவர்‌ கூறவில்லை. செல்வந்தர்களை அவர்‌ வெறுக்கவில்லை. அரிமத்தியா சூசை, நிக்கதேம்‌ என்ற பொருட்செல்வர்கள்‌, இயேசுவாகிய அருட்செல்வரின்‌ நண்பர்கள்‌. செல்வம்‌ தன்னிலே தீமையுடையதன்று; ஆனால்‌ எளிதில்‌ ஒருவனை இறைவனிடம்‌ இருந்து பிரிக்கவல்லது. செல்வம்‌ சேர்ப்பதையே குறியாகக்‌ கொண்டு, இறைவனை மறந்து, செல்வத்தையே கடவுளாகக்‌ கருதும்‌ நிலை செல்வந்தர்களுக்கு ஏற்படலாம்‌. இந்த இளைஞனிடம்‌ நித்திய வாழ்வை அடைய ஆசை இருந்தது; அதைச்‌ செயல்படுத்த வேண்டிய உறுதி இல்லை. உனது நிலை என்ன?
(உனக்கு உள்ளதெல்லாம்‌ விற்று ஏழைகளுக்குக்கொடு. வானகத்தில்‌ உனக்குச்‌ செல்வம்‌ கிடைக்கும்‌.)
 
ஞாயிறு மறையுரை  அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

இறைவார்த்தையும் சீடத்துவ வாழ்வும்!

இன்றைய வாசகங்கள் மூன்றுமே நம்மை இறைவார்த்தை வழி சீடத்துவ வாழ்வுக்கு இட்டுச்செல்வதாக அமைகின்றன. சீடத்துவ வாழ்வு என்பதென்ன? உலக மாயைகளையும் கவர்ச்சிகளையும் புறந்தள்ளிவிட்டு இறைவனை பின்பற்றுவது. அதற்கு நமக்கு வழிகாட்டுவது இறைவார்த்தையே.

முதல்வாசகமானது ஞானத்தின் மேன்மையை எடுத்துக்கூறுகிறது. ஞானம் இறைவனிடமிருந்து மட்டுமே வருகிறது. அவ்வாறெனில் இறைவார்த்தை ஞானத்தை நிச்சயமாகத் தாங்கி இருக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.

இரண்டாம் வாசகம் இறைவர்த்தை உயிருள்ளது எனக்கூறுகிறது. இறைவார்த்தை என்பது என்ன? இயேசுவே மனுஉருவான இறைவார்த்தை என நாம் நம்புகிறோம் அல்லவா! இந்த இறைவார்த்தையாலேதான் உலகமே உண்டானது. என்றால் இறைவார்த்தை உயிருள்ளதாக உயிரூட்டும் ஆற்றல் கொண்டதாக நம் சிந்தனைகளை செம்மைப்படுத்தி நம்மை வழிநடத்துவதாக இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் நாம் இரு விதமான மனிதர்களைக் காண்கிறோம். ஒருவர் இயேசுவை பின்பற்ற ஆவல் இருந்தும் உலக மாயை மற்றும் செல்வத்தை கைவிட மனமில்லா இளைஞன். மற்றவர்கள் இயேசுவை பின்பற்ற எல்லாவற்றையும் துறந்த சீடர்கள். சீடர்களை அவ்வாறு செய்யத் தூண்டியது எது? மனுஉருவான இறைவார்த்தையாம் இயேசுவின் வாழ்வும் போதனையுமன்றோ!

ஆக இறைவார்த்தை ஞானத்தை அளித்து, உலக மாயைகளிடமிருந்து நம்மை விலக்கி சீடத்துவ வாழ்வுக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. இத்தகைய இறைவார்த்தையை வாழ்வாக்க முயல்வோமா!
இறைவேண்டல்

வார்த்தையால் வாழ்வளிக்கும் இறைவா! உமது வார்த்தையால் எம்மை வழிநடத்தி சீடத்துவ வாழ்வுக்கு எம்மை அழைத்துச்செல்லும். ஆமென்.
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ