ஆசைகள் நிறைந்த உலகமிது! எதற்கெடுத்தாலும் மனசும் ஆசைபட்டு விடுகிறது.
இதோ இந்த ஞாயிறுக்கும் ஒரு ஆசை வந்து விட்டது. ஆண்டின் பொதுக்காலம்
29 ஆம் ஞாயிறு வழியாக தொண்டு செய்வதற்கான உணர்வு நதிகளை மனசுக்குள்
தோண்டி எடுக்க ஆசைப்படுகிறது! சிம்மாசனம் அமர ஆசைப்படும் மனசு,
தொண்டு செய்யவும் ஆசைப்படவேண்டும்.
அடுத்தவரை அடக்கி ஆளநினைக்கும் மனசை அடக்கி ஆளும் போதும்,ஏழையரை முன்னுற்றும் பயிற்சியை முறையாய் மேற்கொள்ளும் போதும்,
காது மடல்களுக்குள் நற்செய்தியை நாள்தோறும் விழச் செய்யும்போதும்,
இரக்கமிகு செயல்களால் இதயங்களை ஈரமாக்கும் போதும்,
உதவும் கரங்களை நீட்டுவதில் உற்சாகத்தைக் கூட்டும் போதும்,
தீப்பிழம்பான பார்வையை தீப்பொறிக்கு இரையாக்கும் போதும்,
தலைக்கனம் தவிர்த்து தலையின்கணத்தை இறக்கிவிடும் போதும்,
தோல்வியால் துவண்டவரை தோளில் தூக்கித் தாங்கும் போதும்,
நடுநிலை தவறாத பேச்சை நாவு உச்சரிக்கும் போதும்,
கிடைக்காத வாய்ப்புகளை கிடைக்கும் வாய்க்காலாக வெட்டும் போதும்,
சிம்மாசனம் கூட சும்மா இருக்க முடியாது. சுமக்கும் ஆசைக்கு
அடிமைப்பட்டுவிடும்
ஆம்தொண்டு செய்ய ஆசைப்படும் மனசை சிம்மாசனமும் சுமக்க ஆசைப்படும்!
தலைவனாக மாற, தொண்டனாக வாழும் வழி சொல்லித் தர ஆசையோடு
வந்திருக்கும் இந்த ஞாயிறிடம், கடவுளுக்கும் அவர் ஆசையோடு தொண்டு
செய்த மனிதருக்கும், பணிசெய்யும் நல்ல மனசை ஆசை ஆசையாய் கேட்டுப்
பெற்றுக் கொள்வோம்.
1 உம் அறிவால் பலரை நேர்மையாளராக்கிய இயேசுவே!
உமது திருவுளப்படி தங்கள் பணியை திருச்சபையோடு இணைந்து
செயலாற்றும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்,
இறைமக்கள் அனைவரும் தங்கள் நேரிய பணியால் தொண்டு
செய்யும் நல்ல தலைவர்களாக வாழச்செய்ய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவே!
நாடுகளின் தலைவர்கள் எல்லா வகையிலும் உம்மைப் போல செயல்படவும்,
ஏற்ற வேளையில் மக்களுக்கு தொண்டு செய்யும் நற்பண்பால்
ஆட்சி செய்யவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. உம்மை நம்புவோர் மீது பேரன்பை பொழியச் செய்யும்
தேவனே!
உமது பேரன்பை இறைமக்கள் அனுபவிக்க உழைக்கும் எம்
ஆன்மீகத் தந்தைக்கு வேண்டும் வரம் யாவும் பொழியச்
செய்ய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. மானிடருக்கு தொண்டு புரிய வந்த மானிடமகனே எம்
இறைவா!
எங்களிடையே தலைவராக வாழ ஆசைப்படும் நாங்கள் அதற்குரிய
தகுதியான பணிவு, எளிமை, உண்மை, நேர்மை இவைகளில் வளரச்
செய்ய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. நல்ல தலைவராகிய இயேசுவே!
குடும்பங்களின் தலைவர்கள் குழப்பமின்றி குடும்பத்தை
வழிநடத்தவும், பணியகங்களில் உள்ள தலைவர்கள் பணிவோடு
செயல்படவும், கலக்கங்கள் நிரம்பிய உணர்வுடன்
பொறுப்புகளை ஏற்றுள்ளோர் கடவுளின் நெறியால்
ஆட்கொள்ளப்படவும், சேவை செய்யும் தாகம் கொண்ட புதிய
தலைவர்கள் அநேகர் உருவாகும்படியும் இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
6. அனைவருக்கும் பணியாளராக இருந்து ஆசி பொழிந்த எம்
இயேசுவே!
குடும்பத்தின் தலைவர்கள் ஊதாரித்தனமாக இருக்கிறார்கள்,
தலைவர் பதவியில் இருந்து கொண்டு பணத்தை
ஏமாற்றுகிறார்கள், மனித நேயமில்லாமல் அதிக வேலை
வாங்குகிறார்கள், ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள்.
பதவியில் இருந்து கொண்டு நீதியை மறைக்கிறாhகள், என
வருந்தும் உள்ளங்களுக்கு தலைவராம் இயேசுவின் தயவு
மிகுதியாக கிடைக்க இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
காந்தியடிகள் ஒரு முறை கடுமையான உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது உடல் நலக் குறைவாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்..
அவரது பணியாளர் தவிர வேறு எவரும் அவரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அந்த அளவுக்கு உடல் நலக்குறைவாக இருந்தார். அந்த நேரத்தில்
கையில் செம்புடன் விவசாயி ஒருவர் காந்தியைப்பார்க்க வேண்டும்
எனக் காத்திருந்தார். காந்தியின் பணியாளர்கள் இதை அறிந்து என்ன
விஷயம் என்று கேட்டபோது "தனது ஒரே மகள் சாகக் கிடப்பதாகவும்,
அவள் குணமடைய நல்ல ஒரு தலைவரின் காலடியைக் கழுவி அந்தத் தண்ணீரை
குடிக்க வேண்டும்!" என்று மகான் ஒருவர் சொன்னதாகவும் அதனால் நல்ல
தலைவராம் காந்தியைத் தேடி வந்ததாகக் கூறினார். இதைக் காந்தியிடம்
சொன்னபோது உடனே அந்த விவசாயியை உள்ளே அழைத்து வரும்படி
சொன்னார்.
அந்த விவசாயி வந்தவுடன் காந்தி மிக கோபமாக கத்தினார். எந்த
முட்டாளாவது இப்படிச் செய்வானா? காலில் எவ்வளவு அழுக்கு இருக்கும்.
இந்த அழுக்கு நீரைக் குடித்தால் உடல் நிலை இன்னும் மிக மோசமாகிவிடும்
ஆகவே அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று காந்தி சொன்னார்.
மகள் மீது கொண்ட பாசத்தாலும் மகான் சொன்ன வார்த்தையின் மீது
கொண்ட நம்பிக்கையாலும் காந்தியைப் பார்த்து தன் மகள் உயிர்
பிழைக்க தங்கள் காலைக் கழுவ அனுமதியுங்கள் என மிகுந்த கவலையோடும்
ஆதங்கத்தோடும் மீண்டும் மீண்டும் கேட்டார்.
காந்தியோ பலமுறை முயன்ற மனிதரை பார்த்து எரிச்சலும் கோபமும் அடைந்தார்.
"தன் காலைத் தொடுவதைவிட கடவுள் பாதத்தை தொழு" என்று சொல்லி அந்த
மனிதரை வெளியே அனுப்பி விட்டார். அந்த மனிதரோ மிகுந்த வருத்தத்தோடு
சென்று விட்டார்.
தன் காலை பிடித்து விடவேண்டும், தன் காலில் விழுந்து வணங்க
வேண்டும் என ஆணையிட்டு வாழும் தலைவர்கள் மத்தியில் மகான்
காந்தி வித்தியாசமான தலைவர் அல்லவா!
வித்தியாசமான தலைவர்களாக வாழ விருப்பப்படுவோம்.!
வதிஷ்டாவுக்கு கொஞ்சம் அலகு சப்பை மற்றவர்கள் முன் அமர்ந்து
உணவைக் கொத்தி தின்ன கொஞ்சம் வெட்கம். மற்றவர்கள் தன்னைப் பற்றி
கேலி பேசுவார்கள் என அதிக பயத்துடன் தனியே ஒதுங்கி பறந்து
செல்லும், தன்னைப் பற்றி அடிக்கடி கவலை கொள்ளும். யாருடனும் எளிதில்
பேசாது. அன்று காக்கைகள் மகாநாடு. கூட்டத்திற்கு புதிதாக வந்த
ஆராதனா அங்கும் இங்கும் ஓடுவதும், பாடுவதும் எல்லோருக்கும்
பிரியமாக நடப்பதுமாக இருநததை, இந்த வதிஷ்டா உற்றுக் கவனித்தது.
அது பார்க்க அவலட்சனமான உருவம் உடையாதாக இருந்தது. இறுதியில்
வதிஷ்டா அந்த ஆராதனா அருகில் சென்று உன்னால் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக
இருக்க முடிகிறது? என்று கேட்டே விட்டது. அப்போது என்ன
சொன்னாய்? எனக்கு கொஞ்சம் காது மந்தம் என்று ஆராதனா சொன்னது.
நான் கேட்க வந்ததை நீயே சொல்லி விட்டாய் என்று சொல்லி வதிஷ்டா
பறந்து சென்று விட்டது.
அன்று முதல் எல்லோரிடமும் இயல்பாக பேச ஆரம்பித்தது. யார் கேலி
பேசினாலும் அதற்காக வருந்தாது. எல்லோருக்கும் ஓடி ஓடி உதவ ஆரம்பித்தது.
யாரைக் கண்டாலும் ஓடி ஒளிவதில்லை நல்ல அன்புடனும், பணிவுடனும்
பலருடன் பழகிய வதிஷ்டாவை எல்லோருக்கும் மிகப் பிடித்தது.
மீண்டும் நடந்த காக்கைகள் கூட்டத்தில் வதிஷ்ட்டாவை தலைவராக பிற
காக்கைகள் தேர்வு செய்தன. இப்போது வதிஷ்டாவுக்கு மரியாதையும்
புகழும் கூடியது. காக்கைகள் உலகம் மகிழ்ச்சியில் மிதந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு காக்கைகள் கூட்டத்தில் வதிஷ்டாவை சந்தித்த
"மூத்த காக்கை நீ கோழையாக இருந்தாயே இப்போது எப்படி புகழ்பெற்றாய்?"
என்று கேட்டது. அதற்கு வதிஷ்டா "நான் எனக்குள் நல்ல பழக்க வழக்கங்களைக்
கற்றுக் கொண்டேன். முதலில் என்னை நானே ஏற்றுக் கொண்டேன். பிறரின்
விமர்சனங்களை பொருட்படுத்தாமல் கடினமாக வேலை செய்தேன். என்னால்
இயன்ற அளவு நேர்மையாக பிறருக்கு உதவும் வண்ணம் உழைத்தேன். எனது
நற்செயலைக் கண்டு எல்லோரும் என்னைத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.
இன்று எனது செயலை மிகவே பணிவுடன் பலருக்கும் பயன்படுமாறு
செய்து கொண்டிருக்கிறேன். அதனால் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்"
என்று பெருமிதத்துடன் பதில்சொல்லி மகிழ்ந்தது.
நல்ல மனிதர்களின் முகவரி தேடி தலைமைப் பதவி வந்து சேரும்.
தலைவர்களுக்கு தொண்டு செய்யும் ஆர்வம் வேண்டும்.
பணிவான பேச்சை தலைமைப் பதவி கூட அதிகம் நேசிக்கும்.
நம் தலைவர் யேசு தன் பணியை பணிவோடு ஏழைகளுக்காகச் செய்தார்.
இயேசுவின் தலைமைப் பண்பை நமது வாழ்வில் செயல்படுத்த நமது
குடும்பத்தை பயிற்சி களமாக்கி பாசத்துடன் ஆட்சி செய்து
பார்ப்போம். விளைவை பட்டியலிட்டு மகிழ்வோம்.
பணிவிடை பெற அல்ல பணிவிடை செய்ய நம் தலைவர் இயேசுபிரான் முன்
வந்தார்.
மூன்று மணி நேரம் தேவையில்லாமல் காக்க வைத்தும் திரும்பிச்
செல்லாத ஒரு மாணவனின் பெற்றோரை ஒரு பல்கலைக்கழகத் தலைவர்
வேண்டா வெறுப்போடு சந்திக்கச் சம்மதித்தார். அங்கு படித்த தங்கள்
ஒரே மகனை இழந்துவிட்ட அவர்கள் மகனின் நினைவாக அப்பல்கலைக்கழகத்துக்கு
ஏதாவது செய்ய வேண்டும் என அவரைப் பார்க்க வந்திருந்தனர். ஏனெனில்
தங்கள் மகன் திடீரென இறப்பதற்கு முன்பு அங்கு படித்த அந்த ஒரு
வருடம் முழுவதும் நல்ல மகிழ்ச்சியோடு இருந்தான். இவர்களது எளிய
தோற்றத்தைப் பார்த்த தலைவர் அவர்களது பேச்சை காதுகொடுத்து கேட்கக்கூட
விரும்பாதவராய் அவனுக்கு சிலை வைக்க வேண்டுமா? இப்படிப்பட்ட ஒவ்வொருவருக்கும்
சிலை வைப்பதாக இருந்தால் ஹார்வார்டு கல்லறைத் தோட்டமாக மாறும்
என கூற அவர்கள் மீண்டும் பணிவாக "இல்லை ஐயா" நாங்கள் அப்படி
கேட்கவில்லை. அவன் நினைவாக ஒரு கட்டடம்என்று ஆரம்பிக்கும்போதே
மீண்டும் கிண்டலாக குறுக்கிட்டார் தலைவர். "என்ன கட்டடமா? இந்தப்
பல்கலைக்கழகத்தின் மதிப்பு 30 கோடி உங்களால் எதை கட்டிக்
கொடுக்க முடியும்? என பேசும்போதே மனைவி கணவன் பக்கம் திரும்பி
"ஒரு பல்கலைக்கழகத்துக்கே 30 கோடிதானா? நாமே ஆரம்பித்தால் என்ன?
இந்நிகழ்வால் ஆரம்பிக்கப்பட்டது தான் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்.
அவர்கள் கொடுக்க விரும்பிய தொகை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின்
அப்போதைய மொத்த மதிப்புக்கு இணையான தொகை. இன்றுவரை
ஹார்வார்டுக்கு இணையாக அனைத்து விதத்திலும் நிமிர்ந்து
நிற்கின்றது ஸ்டாhன்போர்டு பல்கலைக்கழகம். தலைவர் காட்டிய அதிகார
கர்வமும், தலைக்கனமும் இழக்க வைத்தது. இதைப் போன்ற நிகழ்வுகள்
வரலாற்றில் ஏராளம் உண்டு.
காது கொடுத்து கேட்காத தலைவரால் கல்லூரி நிர்வாகம் மிகப்
பெரிய இழப்பை சந்தித்தது.
தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பிறருக்கு நன்மை செய்ய மனமே
இல்லாவிட்டால் கூட பரவாயில்லை அவர்களது பிரச்சனையைக் காது
கொடுத்து கேட்கவாவது செய்ய வேண்டும்.
பிறருக்காக தொண்டாற்றி வாழும் வாழ்க்கை பயனள்ள வாழ்க்கை.
ஒருவனுடைய வாழ்க்கை அவனது சேவை மனப் பான்மையினால் தான்
வெற்றி அடைகிறது.
மக்களுக்குச் செய்யும் தொண்டு மூலமே கடவுளை அறியலாம்.
ஆர்வத்துடன் ஏழைகளுக்கு நற்பணி ஆற்றும் தலைவர்கள் எங்கெங்கு
உள்ளனரோ அங்கெல்லாம் இறைவன் இருக்கின்றார்.
தலைமை என்பது மகுடமல்ல கடிவாளம். யாரோ
வளையாத மானத்தோடு வாழ்க்கை வாழ்வது தலைவனின் நல்ல லட்சணம்.
நல்ல தலைவன் தான் வாழும் தலைமுறையைப் புதிய பொருளாதார பண்பாட்டு
சிகரங்களை நோக்கி ஓர் அங்குலமாவது உயர்த்தி இருக்கவேண்டும்.
வருகின்ற தலைமுறைக்கும் தன் பெயரை ஊட்டச் சத்தாய் விட்டுச்
செல்ல வேண்டும்.
தாழ்ச்சியே எல்லா குணங்களின் தாய்வீடு.
தாழ்ச்சியும் எளிமையும் பதவிக்கு பெருமை சேர்க்கும்.
பதவியைப் பயன்படுத்தி பிறருக்கு உதவுவதோ புகழ் சேர்க்கும்.
தலைப்பாகையாக வாழ காலணியாய் வாழ்வோம்.
"பணிவிட பெற அல்ல பணிவிடை புரியவே வந்தேன்"
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
தோழமை-பங்கேற்பு-பணி
இன்றைய ஞாயிறு நம் தாய்த்திருஅவை வரலாற்றில் மிகவும்
முக்கியத்துவம் பெறுகின்ற ஞாயிறு. கடந்த ஞாயிறன்று நம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மாமன்றம் 2021-2023:
கூட்டொருங்கியக்கத் திருஅவை தோழமை-பங்கேற்பு-பணி' (Synod
for a Synodal Church: Communion, Participation, Mission)
என்னும் மாமன்றத்தை உரோமையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக
அகில உலகிலும் அனைத்து மறைமாவட்டங்களிலும் தலத்திருஅவையின்
தலைவராகிய ஆயர் தலைமையில் நாம் இன்று மாமன்றத்தைத் தொடங்குகின்றோம்.
மாமன்றத்தின் தலத்திருஅவைத் தொடக்கமாகவும், மாமன்றத்தின்
முதல் படியான மறைமாவட்ட நிலை மாமன்றத்தின் (அக்டோபர் ஏப்ரல்
2022) தொடக்கமாகவும் இது அமைகின்றது.
'மாமன்றம்' என்பது 'சினட்' என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப்பதம்.
இச்சொல்லின் கிரேக்க வேர்ச்சொல்லுக்கு, 'இணைந்து பயணம்
செய்தல்' அல்லது 'பாதையில் நடத்தல்' என்பது பொருள்.
'இணைந்து பயணம் செய்தல்,' 'கூட்டொருங்கியக்கம்,' மற்றும்
'தோழமை-பங்கேற்பு-பணி' என்னும் சொற்களை இன்றைய இறைவார்த்தை
வழிபாட்டின் பின்புலத்தில் நாம் புரிந்துகொள்ள முன்வருவோம்.
இயேசுவும் அவருடைய சீடர்களும் 'எருசலேமுக்குப் போகும்
வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்கள்' (காண். மாற் 10:32).
எருசலேம் என்பது இயேசுவின் பணிவாழ்வின் இடம்சார் இலக்காகவும்,
அவருடைய பணி முடிந்து விண்ணேற்பு அடையும் நிகழ்வாகவும்,
திருத்தூதர்கள் தங்கள் பணியைத் தொடங்கும் தொடக்கப்புள்ளியாகவும்
இருக்கின்றது. ஆக, எருசலேம் நோக்கிய பயணம் இயேசுவுக்கும்
திருத்தூதர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
தன் பயண இலக்கு நெருங்குகின்ற வேளையில் இயேசு தன் பாடுகள்
மற்றும் இறப்பை மூன்றாம் முறையாக அறிவிக்கின்றார். முதல்
இரண்டு முறை அவர் அறிவித்தபோது சீடர்கள் அதைத் தவறாகப்
புரிந்துகொண்டது போல இம்முறையும் தவறாகவே புரிந்துகொள்கின்றனர்.
முதல் முறை அறிவித்தபோது, பேதுரு இயேசு துன்பம் ஏற்பதைத்
தடுக்கின்றார். இரண்டாம் முறை அறிவித்தபோது, சீடர்கள் தங்களுக்குள்ளே,
'யார் பெரியவர்?' என்ற கேள்வியை எழுப்பி போட்டி போடுகின்றனர்.
மூன்றாம் முறை அறிவித்தபோது, திருத்தூதர்கள் யாக்கோபும்
யோவானும் இயேசுவை அணுகிச் சென்று, 'நீர் அரியணையில் இருக்கும்போது
எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும்
அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்' என்று வேண்டுகின்றனர்.
யூதச்சிந்தனையில் அரசரின் அரியணை என்பது முக்கியமானது. அந்த
அரியணையும், அரியணையின் வலமும் இடமும் அதிகார மையங்களாக இருந்தன
(காண். 1 அர 2:19ளூ திபா 110:1). இயேசுவின் எருசலேம்
நோக்கிய பயணம் உரோமை அரசை வீழ்த்தக் கூடிய அரச பயணம் என்று
திருத்தூதர்கள் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். இயேசுவைத்
தவறாகப் புரிந்துகொள்வதோடு, அதிகாரத்தின்மேல் ஆவல் கொள்பவர்களாகவும்
இருக்கின்றனர் திருத்தூதர்கள். அவர்களின் புரிதலைச் சரிசெய்ய
முயல்கின்ற இயேசு, 'துன்பக் கிண்ணம்,' மற்றும்
'திருமுழுக்கு' என்னும் இரு முதல் ஏற்பாட்டு உருவகங்கள்
வழியாக அவர்களுக்குக் கற்பிக்கின்றார். 'துன்பக் கிண்ணத்தில்
பருகுதல்' என்பது 'துன்பங்களில் பங்கேற்பதையும்,'
'திருமுழுக்கு' என்பது 'இரத்தத்தினால் இயேசு பெறவிருக்கின்ற
திருமுழுக்கையும்' குறிக்கின்றது. திருத்தூதர்கள் கிண்ணத்தில்
பங்கேற்கவும், திருமுழுக்கு பெறவும் தயாராக இருப்பதாகச்
சொல்கின்றனர். பின்நாள்களில் அவர்கள் துன்பம் ஏற்கின்றனர்.
இயேசு சற்றே சிந்தனையை உயர்த்தி, 'இடம்' என்பதை இறுதிக்கால
நிகழ்வோடு பொருத்திப் பேசுகின்றார். தொடர்ந்து, 'அதிகாரம்
என்பது தொண்டு செய்வதில் இருக்கிறது என்றும்,' அல்லது
'தொண்டு செய்பவரே ஆற்றல் பெற்றவராக இருக்கின்றார்' என்றும்
அறிவுறுத்துகின்றார். மண்ணுலகம் அதிகாரம் என்பதை
நிமிர்ந்து அரியணையில் அமர்வது எனப் புரிந்துகொள்கின்ற
வேளையில், 'அதிகாரம்' என்பது குனிந்து பணியாற்றுவதில் அடங்கியுள்ளது
என விளக்குகிறார் இயேசு. மேலும், மானிட மகனின் வருகையின்
இலக்கும் பணி செய்வதும், இறுதியில் தம் உயிரைக் கொடுப்பதுமே
எனத் தெளிவுபடுத்துகின்றார்.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 53:10-11) துன்புறும் ஊழியன்
பாடல்களில் நான்காவதாக உள்ள பாடலின் (எசா 52:13-53:12) ஒரு
பகுதியாக அமைந்துள்ளது. 'துன்புறும் ஊழியன் யார்?' என்பதற்கான
விடை இன்று வரை தெளிவாக இல்லை. கிறிஸ்தவப் புரிதலில்,
'துன்புறும் ஊழியன்' என்பவர் வரவிருக்கின்ற மெசியாவையும் (இயேசு)
அவர் அனுபவிக்கின்ற துன்பத்தையும் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்கின்றோம்.
துன்புறும் ஊழியன் அநீதியாகத் தண்டிக்கப்படுகின்றார், துன்பம்
அடைகின்றார், நிந்தையும் அவமானமும் அவர்மேல் சுமத்தப்படுகின்றது.
இத்துன்பத்தை அவர் மற்றவர்களுக்காக அடைகின்றார். துன்பத்திலும்
இறைவனின் துணையைக் கண்டுகொள்கின்றார். ஆக, துன்புறும் எவரும்
தன் முகத்தை இத்துன்புறும் ஊழியனின் முகத்தோடு பொருத்திப்
பார்க்க முடியும்.
இரண்டாம் வாசத்தில் (காண். எபி 4:14-16), எபிரேயருக்கு எழுதப்பட்ட
மடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக
முன்வைத்து, இயேசுவின் இக்குருத்துவத்தின் இயல்பு அவருடைய
இரக்கத்தில் இருக்கிறது என முன்மொழிகின்றார். முதல் ஏற்பாட்டில்
தலைமைக்குரு என்பவர் மக்களிடமிருந்து தனியாக இருக்கக் கூடியவர்.
ஏனெனில், ஆலயத்தின் திருத்தூயகத்திற்குள் அவர் நுழைவதால்
தூய்மையற்ற மக்களிடமிருந்தும், இடத்திலிருந்தும் அவர் எப்போதும்
தன்னையே தனிமைப்படுத்திக்கொள்வார். மேலும், மற்றவர்களுடை
பாவம் அல்லது வலுவின்மையை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார்.
ஆனால், இயேசுவோ தன்னை மக்களோடு மக்களாக இணைத்துக்கொள்வதுடன்,
மக்களின் வலுவின்மை, நொறுங்குநிலை கண்டு அவர்கள்மேல் இரக்கம்
காட்டுகின்றார். நம்மைப் போலவே சோதனைகளுக்கும் உட்படுகின்றார்.
மேற்காணும் மூன்று வாசகங்களும், மாமன்றத்தின் குறிச்சொற்களான,
'இணைந்து வழிநடத்தல்,' 'கூட்டொருங்கியக்கம்,' 'தோழமை-பங்கேற்பு-பணி'
ஆகியவற்றை எப்படி முன்வைக்கின்றன?
(அ) 'இணைந்து வழிநடத்தல்'
இயேசு தன் திருத்தூதர்களுடன் எருசலேம் நோக்கி இணைந்து வழிநடக்கின்றார்.
அப்படி வழிநடக்கும்போது அவருடன் மக்கள் கூட்டமும் இணைகின்றது.
ஆக, திருஅவை என்பது 'கூட்டம்-திருத்தூதர்கள்-இயேசு' என்னும்
குழுமத்தைக் குறிக்கிறது. இந்தக் குழுமத்தில் மூன்று
பேரும் இணைதல் வேண்டும். கூட்டம் இல்லாமல், திருத்தூதர்களும்
இயேசுவும் மட்டும் இருந்தால் திருஅவை என்பது தனிப்பட்ட ஒரு
கருத்தியல் எனச் சுருங்கிவிடும். திருத்தூதர்கள் இல்லாமல்
கூட்டமும் இயேசுவும் மட்டும் இருந்தால் அது வெறும் சமயமாக
மாறிவிடும். இயேசு இல்லாமல் திருத்தூதர்களும் கூட்டமும் மட்டும்
இருந்தால் அது வெறும் கொள்கையளவில் கூடிய கும்பலாக
மாறிவிடும். கூட்டம்-திருத்தூதர்கள்-இயேசு என்னும் இணைதலே
திருஅவையை உருவாக்குகின்றது. மேலும், இவர்கள் ஒரே இடத்தில்
நிற்கவில்லை. மாறாக, இணைந்து நடக்கின்றனர். துன்புறும் ஊழியன்
தன் துன்பம் ஏற்றலின் வழியாக மற்றவர்களுடன் பயணம்
செய்கின்றார். இயேசு கடவுள் நிலையிலிருந்து மனித நிலைக்கு
இறங்கி வந்ததும், நமக்கு இரக்கம் காட்டித் தன் உயிரை ஈந்து
சிலுவையில் இறந்ததும் பயணமே. இணைந்து நடத்தல் என்பது பயணத்தையும்,
வளர்ச்சியையும், இலக்கு நோக்கிய தெளிவையும் குறிக்கிறது.
இன்று நாம் இணைந்து நடக்கும் இந்தப பயணத்தில் நம் துணைவர்கள்
அல்லது இணையர்கள் யார்? இன்று நம் தலத்திருஅவையில் ஆயர்,
அருள்பணியாளர்கள், துறவியர்கள், இறைமக்கள் என அனைவரும் இணைந்து
வழிநடக்கின்றோம். நமக்கு அருகில் இருக்கும் மற்றவர்களும்
இந்தப் பயணத்தில் நம்மோடு இணைந்திருக்கிறார்கள்.
(ஆ) 'கூட்டொருங்கியக்கம்'
கூட்டொருங்கியக்கம் ('சினடாலிட்டி') என்பது ஓர் அதிகார உடைப்பு.
அல்லது அதிகார மேன்மை. அதிகாரம் என்பது பல நேரங்களில் தனிநபர்
அல்லது ஒருநபர் சார்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஆனால், உண்மையில்
அதிகாரம் அல்லது ஆற்றல் என்பது பல கைகள் இணைதலில்தான் இருக்கின்றது.
எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை வழிநடத்தக்கூடிய முதல்வர் அல்லது
தலைவர் ஒருவர்தான் என்றாலும், அவருடைய ஒற்றைக் கைதான் என்றாலும்,
அந்த ஒற்றைக் கையைத் தேர்ந்தெடுத்தது மக்களாட்சியில் அவருக்காக
வாக்களித்த பல கைகள்தாம். ஆக, ஒரு கையின் ஆற்றல் பல கைகளிலிருந்து
வருகின்றது. அதிகாரம் என்பது எப்போதும் அருளப்படுவது. ஒருவர்
அதிகாரத்தை தானே வலிந்து பற்றிக்கொள்ள நினைத்தாலும், மற்றவர்கள்
அந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதிகாரத்திற்கு
அர்த்தம் இல்லை. ஆக, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவே அதிகாரம்
என்பது கூட்டொருங்கியக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.
கூட்டொருங்கியக்கத்தில் பலரின் கைகள் இணைவதால் அதிகாரம் மற்றும்
ஆற்றல் இன்னும் அதிகம் வலுப்பெறுகிறது. மேலும்,
கூட்டொருங்கியக்கத்தில் ஒருவகையான நகர்வு அல்லது வேகம் அடங்கியிருக்கிறது.
இயேசு கூட்டொருங்கியக்கத்தின் பொருளை உணர்ந்தவராக இருக்கின்றார்.
தானே தனித்திருந்து செயல்படாமல் தன்னோடு இணைந்து செயல்படுவதற்கென
திருத்தூதர்களை ஏற்படுத்துகின்றார். திருத்தூதர்களிடம் தன்
இயக்கம் மற்றும் நகர்வு பற்றி ஒளிவுமறைவின்றி அறிவிக்கின்றார்.
தன் துன்பக் கிண்ணத்திலும் திருமுழுக்கிலும் அவர்களை இணைத்துக்கொள்கின்றார்.
மேலும், தொண்டு செய்ய வேண்டும் என்றும், பணியாளராக இருக்க
வேண்டும் என்றும் கற்பிக்கும் அவர், தானே தன் திருத்தூதர்களின்
பாதங்களைக் கழுவுகின்றார் (காண். யோவா 13).இன்று நம்மிடம்
கூட்டம் இருக்கிறது, இயக்கம் இருக்கிறது. ஆனால்,
கூட்டொருங்கியக்கம்தான் குறைந்த அளவில் உள்ளது. இணைந்து
செல்லும்போது நம் தான்மை பாதிக்கப்படும் என்ற நிலையில்
நாம் தனியாக இருக்கவே விரும்புகிறோம். தனிமையான அதிகார மையம்,
மக்களிடமிருந்து தள்ளியே நிற்கும் மனப்பான்மை என்னும் தடைகள்
இன்று தாண்டப்பட வேண்டும்.
(இ) தோழமை-பங்கேற்பு-பணி
16வது மாமன்றத்தின் குறிச்சொற்களாக இம்மூன்று வார்த்தைகள்தாம்
உள்ளன. 'தோழமை' (அல்லது 'கூட்டுறவு') என்பது மூவொரு இறைவனின்
அன்பை மையமாகக் கொண்ட ஒரு கருத்துரு. மூவொரு இறைவனின் அன்பினால்
கட்டப்பட்ட திருஅவை அதே அன்பில் ஒருவர் மற்றவருடன் இணைந்திருக்கின்றது.
இயேசு தனிப்பெரும் தலைமைக்குருவாக மாறும் நிலை அவருடைய தோழமை
உணர்வினால் சாத்தியமாகிறது. இயேசுவின் தோழமை இரக்கப்
பெருக்காக வெளிப்படுகின்றது. அவர் நம் வலுவின்மையில் பங்கேற்று
நம்மேல் இரக்கம் காட்டுவதால் அவருடைய அரியணையை நாம் துணிவுடன்
அணுகிச் செல்ல முடியும். ஏனெனில், அவருடைய அரியணை அச்சத்தையும்,
பதைபதைப்பையும் தருவதில்லை. மாறாக, நமக்கு உற்சாகத்தையும்
உடனிருப்பையும் தருகின்றது. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாகிய
நாம் நம் நடுவே இருக்கும் தோழமையைக் கொண்டாடுவதோடு, நம்மைச்
சுற்றி வாழும் பிற சபை மற்றும் சமயச் சகோதர சகோதரிகளோடும்
தோழமை பாராட்ட வேண்டும். தோழமைக்கு நம் அரியணை தடையாக இருக்கலாம்.
நம் அரியணை மற்றவர்களை விடத் தள்ளி இருப்பதாலும், உயர்ந்து
நிற்பதாலும் மற்றவர்களிடமிருந்து ஒரு தனிமையை ஏற்படுத்தலாம்.
ஆனால், இணைந்து செல்கின்ற பயணத்தில் தோழமை கொள்ள நாம் நம்
அரியணையை விட்டு இறங்க வேண்டும். அருள்நிலையில் இருப்பவர்கள்
தங்கள் இருக்கைகளை விட்டு எழ வேண்டும். அனைவருடனும் கரம்
கோர்க்க வேண்டும். ஏனெனில், மற்றவர்கள் இல்லாத இடத்தில்
வெறும் அரியணை மற்றும் இருக்கையினால் ஒரு பயனும் இல்லை.
'பங்கேற்பு' என்பது நாம் அருளடையாளக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை
அல்ல, மாறாக, பணிநிலைகளில் பங்கேற்பதைக் குறிக்கிறது. பங்கேற்பு
எந்தவொரு செயலையும் எளிதாக்குகிறது. ஒரு கரம் தூக்க
வேண்டிய சுமையை இரு கரங்கள் இணைந்து தூக்கினால் சுமை எளிதாகிறது.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களைப் பங்கேற்பாளர்களாக
அழைக்கின்றார். மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய
மீட்புக்கு விலையாகத் தன் உயிரை அளிக்கவும் வந்துள்ளார் எனில்,
திருத்தூதர்களும் இறைமக்களும் இயேசுவின் இந்த மீட்புச் செயலில்
பங்கேற்பாளராக அமைகின்றனர்.
தோழமை மற்றும் பங்கேற்பு ஆகியவை திருஅவையில் இருக்கக் காரணம்
பணியே. ஏனெனில், பணி இல்லை என்றால், திருஅவை வெறும் தற்சார்பு
அல்லது தன்குவி நிறுவனமாக உறைந்துவிடும். சமூக, அரசியல்,
பண்பாட்டு, பொருளாதார விளிம்புநிலையில் உள்ள மக்களைத்
தேடிச் செல்வதே பணி. முதல் வாசகத்தில், இந்தப் பணியை
துன்புறும் ஊழியன் செய்கின்றார். மற்றவர்களின் தீச்செயல்களுக்காகத்
தன்னையே துன்பத்துக்கு உட்படுத்துகின்றார்.
இறுதியாக,
இன்று நம் மறைமாவட்டத்தில் மாமன்றம் தொடங்கப்படும் நிகழ்வின்
அடையாளமாக, நம் பங்குத்தளத்திலும், நிறுவனங்களிலும், குழுமங்களிலும்,
அன்பியங்களிலும் குடும்பங்களிலும் பின்வருவனவற்றை நாம்
செய்யலாம்:
(1) மாமன்ற இறைவேண்டல். திருத்தந்தை அவர்கள் இயற்றியுள்ள
தூய ஆவியார் இறைவேண்டலை நாம் செபிக்க வேண்டும்.
(2) நம் பங்குத்தளங்களில், நிறுவனங்களில், நம் இல்லங்களிலும்,
நம் செயல்திறன் பேசிகளில் 'மாமன்ற இலச்சினையை' (லோகோ)
நிறுவ வேண்டும்.
(3) இன்று ஒரு ஐந்து பேரிடமாவது தனிப்பட்ட முறையில் இந்த
மாமன்றம் பற்றிப் பேச வேண்டும்.
(4) கூட்டொருங்கியக்கம் பற்றிய நம் கருத்துக்களை தலத்திருஅவை
ஆயருக்கும், ஆயரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கும் அனுப்பி
வைக்க வேண்டும்.
(5) மாமன்ற கலந்தாலோசித்தலுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
(6) நம் பங்குத்தளத்திலும், நிறுவனங்களிலும், குழுமங்களிலும்,
அன்பியங்களிலும், குடும்பங்களிலும் கூட்டொருங்கியக்கத்தைச்
செயல்படுத்தும் விதமாக, ஒருவர் மற்றவருடன் உரையாடவும், மற்றவரின்
வார்த்தைகளுக்குச் செவிமடுக்கவும் வேண்டும்.
கூட்டொருங்கியக்கத்தை நோக்கிய நம் பயணம் இனிதே நிறைவுற இறைவன்
நம்முடன் உடன்வருவாராக!
நிகழ்வு
இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம் அது. ஹிட்லரின்
நாஜிப் படை டென்மார்க்கின்மீது படையெடுத்து வந்து, அதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
அப்பொழுது டென்மார்க்கை ஆண்டவர் பத்தாம் கிறிஸ்டியான் என்ற
மன்னர்.
ஒருநாள் அவர் நகரில் இருந்த ஒரு பெரிய கட்டடத்தில் ஹிட்லரின்
நாஜிக் கொடியானது பறந்துகொண்டிருப்பதைக் கண்டார். அதை அப்புறப்படுத்துமாறு
நாஜிப் படையிலிருந்த ஓர் உயர் அதிகாரியிடம் அவர் சொன்னபோது,
"முடியாது" என்று அந்த உயிர் அதிகாரி மறுத்துவிட்டார்.
"நீங்கள் அப்புறப்படுத்தாவிட்டால் இங்குள்ள ஒரு படைவீரரைக்
கொண்டு நான் அப்புறப்படுத்த வேண்டி வரும்" என்றார் மன்னர்.
"ஒருவேளை நீங்கள் உங்கள் நாட்டில் உள்ள ஒரு படைவீரரைக்
கொண்டு இக்கொடியை அப்புறப்படுத்த முயன்றால், நான் அவரைச்
சுட்டுவீழ்த்துவேன்!" என்று எச்சரித்தார் நாஜிப் படை உயர்
அதிகாரி. "உங்களால் படைவீரரைச் சுட்டுவீழ்த்த முடியாது, ஏனெனில்,
படைவீரரின் இடத்தில் இருந்து நான் அந்தக் கொடியை அப்புறப்படுத்தப்
போகிறேன்" என்றார் மன்னர்.
மன்னர் ஒரு படைவீரரின் இடத்தில் இருந்து, கொடியை அகற்றப்போகிறா,
இப்படியும் ஒரு மன்னர் இருக்க முடியுமா? என்று அதிர்ந்துபோன
அந்த நாஜிப்படை உயர் அதிகாரி, மறுநிமிடம் கொடியை அகற்றினார்.
தான் ஒரு நாட்டு மன்னர் என்பதைப் பொருட்படுத்தாமல், கொடியை
அகற்றினால் கொல்லப்படுலாம் என்பதையும் பொருட்படுத்தாமல் ஒரு
சாதாரண படைவீரர் நிலைக்கு இறங்கிவந்து, கொடியை அகற்றப்போவதாகச்
சொன்ன டென்மார்க் மன்னர் பத்தாம் கிறிஸ்டியான், ஒரு தலைவர்
எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட
இறைவார்த்தை, இயேசுவைப் பின்பற்றுகின்ற ஒருவர் எப்படி இருக்கவேண்டும்
என்ற செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றது. அது குறித்து
நாம் சிந்திப்போம்.
அதிகாரத்திற்கு ஆசைப்பட்ட சீடர்கள்
அதிகாரம் என்பது ஒரு போதை. அதற்கு ஆசைப்பட்டுவிட்டாலோ அல்லது
அதுதரும் மாயக் கவர்ச்சியில் வீழ்ந்துவிட்டாலோ அதிலிருந்து
மீண்டுவருவது மிகவும் கடினம். கடைநிலையில் உள்ளவர்கூட, அதிகாரம்
செலுத்துவதற்குத் தனக்கு ஒருவர் கிடைத்துவிட்டால், அதனால்
அடைகின்ற ஒருவிதமான பரவச நிலையைக் கொண்டே அதிகாரம் என்பது
ஏன் ஒருவிதமான போதை என்பது புரிந்துவிடும்.
நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற யோவானும் யாக்கோபும்
அவரிடம், "நீர் அரியணையில் இருக்கும்போது, எங்களுள் ஒருவர்
உமது வலப்புறமும், இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள
எங்களுக்கு அருளும்" என்கிறார்கள். யோவானும் யாக்கோபும் இயேசுவிடம்
இவ்வாறு கேட்பதைக் கொண்டு, அவர்கள் இயேசுவையும், அவரது போதனையையும்
சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில்,
இயேசு மன்னருக்கெல்லாம் மன்னராக இருந்தபோதும் (திவெ 19:
16), மனத்தாழ்மைக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் (மத் 11:
29). அப்படிப்பட்டவரிடம், யோவானும் யாக்கோபும் அதிகாரத்திற்கு
ஆசைப்பட்டுப் பேசுகின்றபோதுதான், ஒரு தலைவர் அல்லது பெரியவராக
இருக்க விரும்புகின்றவர் எப்படி இருக்க வேண்டும் என்று இயேசு
கற்பிக்கின்றார்.
இயேசுவின் சீடர்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டார்கள் என்பதை
இந்த நிகழ்வின்மூலமாகத்தான் நாம் கண்டுகொள்ள முடியும் என்று
இல்லை. இதற்கு முன்பும் (மாற் 9: 33, 34), இதற்குப்
பின்பும் (லூக் 22: 24) அவர்கள் அதிகாரத்திற்கு அல்லது
தாங்கள் பெரியவர்களாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்
என்பதைக் கண்டுகொள்ளலாம். இந்நிலையில்தான் இயேசு அதிகாரத்தில்
இருப்பவர் அல்லது முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் எப்படி
இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றார்.
தன் வாழ்வையே பெரிய போதனையாய்த் தந்த இயேசு
உலகத்தில் எத்தனையோ போதகர்கள் தோன்றி மறைந்திருந்தாலும் இயேசு
அளவுக்கு மக்கள் மனத்தில் குடிகொண்டிருக்கவில்லை. காரணம்,
இயேசு போதித்ததோடு நின்றுவிடாமல், தன் வாழ்வையே பெரிய போதனையாக
மக்களுக்குத் தந்ததுதான். ஆம், எம்மாவு நோக்கிச் செல்லும்
சீடர் இருவர், இயேசுவைப் பற்றிச் சொல்லும்போது, "அவர்
சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்"
(லூக் 24: 19) என்கிறார்கள்.
தன்னுடைய சீடர்கள் தன்னைப் பற்றியும், தன்னுடைய போதனையைப்
பற்றியும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை அறிந்த இயேசு
அவர்களிடம், "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும்
பலருடைய மீட்புக்கு ஈடாகத் தன் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்"
என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டுப் பின்னர் அவர் தன் சீடர்களிடம்
காலடிகளைக் கழுவி முதன்மையானவராக, அதிகாரத்தில் இருக்க
விரும்புகிறார் எப்படி இருக்கவேண்டும் என்று தான் வாழ்வால்
போதிக்கின்றார்.
இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகம், இயேசு எப்படி இருந்தார்
என்பதையும், அவருடைய சீடர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும்
கற்பிக்கின்றன. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல்வாசகம் துன்புறும் ஊழியரைப் பற்றிப் பற்றிய பாடல்
ஆகும். இதில் வருகின்ற ஒரு சொற்றொடர், "ஆண்டவரின் திருவுளம்
அவர் கையில் சிறப்புறும்" என்கிறது. கடவுள் உலகை மீட்கத்
திருவுளம் கொண்டார். அதற்காக இயேசு தன்னையே கையளித்தார்.
இயேசுவிடம் மிகுந்த தாழ்ச்சி இருந்தாலேயே அவரால் கடவுளின்
திருவுளத்திற்குத் தன்னைக் கையளிக்கமுடிந்தது (பிலி 2:
5-8). இவ்வாறு இயேசு தன்னுடைய தாழ்ச்சியால் கடவுளின்
திருவுளம் சிறப்புறச் செய்தார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில், "அருள் நிறைந்த இறை
அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக" என்றொரு
சொற்றொடர் வருகின்றது. இயேசுவின் காலத்திற்கு முன்பும் சரி
(எஸ்(கி) 4: 11), இன்றைக்கும் சரி ஒருவர் அதிகாரத்தில்
இருப்பவரை அல்லது அரியணையில் இருப்பவரை அவ்வளவு துணிவுடன்
அணுகிச் சென்றுவிட முடியாது; ஆனால், இயேசுவின் அரியணையை
நம்மால் துணிவுடன் அணுகிச் செல்ல முடியும் எனில், அவர்
கனிவும் மனத்தாழ்மையும் உடையவராக இருக்கின்றார்
என்பதால்தான். இவ்வாறு இயேசு தன் வாழ்வையே பெரிய
போதனையாகத் தன் சீடர்களுக்குத் தந்து, அவர்கள் இன்று
நாம் எப்படித் தாழ்ச்சியோடு பணிவிடை செய்யவேண்டும் என்று
கற்பிக்கின்றார்.
தாழ்ச்சியோடு இருப்பவர் நீடு வாழ்வார்
அதிகாரத்தில் இருப்பவர் மற்றவரை அடங்கியாளக் கூடாது, அவர்
இயேசுவைப் போன்று பணிவிடை செய்யவேண்டும், இயேசுவைப் போன்று
தாழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்த
நாம்,. இயேசுவைப் போன்று தாழ்ச்சியோடு இருந்து கடவுளின்
திருவுளத்தை நிறைவேற்றுக்கு என்ன ஆசி கிடைக்கும் என்று
சிந்திப்போம்.
இன்றைய முதல்வாசகம், ஆண்டவரின் திருவுளம் நிறைவேற்றும் இறை
ஊழியர் தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார் என்கிறது. இயேசு
கடவுளின் திருவுளத்தைத் தாழ்ச்சியோடு நிறைவேற்றியதால்,
கடவுள் அவரை மிகவும் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை
அவருக்கு அருளினார் (பிலி 2: 9). அந்த அடிப்படையில்
இயேசுவைப் போன்று தாழ்ச்சியோடு கடவுளின் திருவுளத்தை
நிறைவேற்றுகின்ற ஒருவர் தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்;
அவர் கடவுளால் எல்லா நலன்களையும் நன்மைகளையும் பெறுவார்
என்பது உறுதி. எனவே, நாம் இயேசுவின் முன்மாதிரியைப்
பின்பற்றி, அவரைப் போன்று தாழ்ச்சியோடு பணிசெய்து,
கடவுளின் திருவுளம் சிறப்புறச் செய்வோம்.
சிந்தனை:
பணம், புகழ், பதவி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு
பாடுபடும் திருஅவைப் பணியாளர்கள் கடவுளின் உண்மையான
பணியாளர்கள் அல்ல என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகவே,
நாம் இயேசுவைக் கருத்தில்கொண்டு, அவரது எடுத்துக்காட்டைப்
பின்பற்றி மனத்தாழ்ச்சியோடு பணிசெய்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
ஜனநாயக அரசியலில் அவ்வப்போது புதுக்கட்சிகள் தோன்றுவதைப்
பார்க்கிறோம். உடனே, பல புதிய, பழைய அரசியல்வாதிகள் அக்கட்சிகளிலே
அங்கத்தினர்களாகின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு, அக்கட்சி
வளர்ந்து பெரியதாகி விட்டால் தாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்போம்
என்பதுதான். இப்படிப்பட்ட மனிதர்களில் பெரும்பான்மையானவர்களில்
சுயநலமே விஞ்சியிருக்கிறதேயொழிய பொதுநலம் என்பது அறவே இல்லை
என்பது நாம் காண்கின்ற எதார்த்தம். இப்படிப் பதவியில் இருக்க
வேண்டும் என்கின்ற ஆசையும், எதிர்பார்ப்பும் காலம் காலமாக
இருக்கின்ற உணர்வு. இவ்வுணர்வுகள் தவறல்ல, மாறாக அவ்விடத்தில்
இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை
எடுத்தியம்புவது இன்றைய வார்த்தை வழிபாடு .
இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தில் அவரது சொல்லாலும், செயலாலும்
கவரப்பட்ட எண்ணற்றோர் அவரது சீடர்களாயினர். அச்சீடர்களிலிருந்து
இயேசு பன்னிருவரைத் திருத்தூதுப் பணிக்காகத்
தேர்ந்தெடுத்தார். அவர் அவர்களைத் தேர்ந்தெடுக்கக் காரணம்
தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறை சாற்ற அனுப்பப்படவும்,
பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டி ருக்கவும் (மாற். 3:14) ஆகும்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தால் தாங்கள் சிறப்புத்
தகுதி வாய்ந்தவர்கள், மற்றவர்களைவிட மேலானவர்கள் என்கிற
உணர்வு அவர்களில் சிலருக்கு வந்திருக்கலாம். மற்றவர்களுக்குச்
சிறப்பான இடம் கிடைப்பதற்கு முன் அவ்விடத்தை நாம்
பெற்றுவிட வேண்டும் என்கின்ற எண்ணமும் இருந்திருக்கலாம்.
ஏனெனில், தாவீது, சாலமோன் காலத்திய அரசியல் விடுதலையும்,
மேன்மையும் தங்களுக்கு கிடைக்காதா? தங்கள் இனத்தைச்
சார்ந்த ஒருவர் சுதந்திரமாக நம்மை ஆளமாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு
உரோமை ஆட்சியின் கீழ் இருந்த இஸ்ரயேல் மக்களிடத்தில் இருந்தது.
இந்த அரசியல் விடுதலை உணர்வு பரவலாக இருந்த காரணத்தினால்
இயேசு அரசியல் விடுதலையைத் தரும் மெசியாவாக இருப்பாரோ என்கின்ற
எண்ணமும் இருந்தது. அதன் விளைவாகவே செபதேயுவின் மக்கள்
யாக்கோபும், யோவானும் நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள்
ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள
எங்களுக்கு அருளும் (மாற். 10:37) என்று வேண்டினர். என்னே
சுயநலம்! வலப்புறமும், இடப்புறமும் ஒரே குடும்பத்தைச்
சார்ந்த சகோதரர்கள் அமர வேண்டும், வேறு எவரும் ஆண்டவரின்
அரியணையை அண்டக்கூடாது என்கிற உணர்வு அவர்களிடமிருந்தது.
இயேசு தன்னைப் பின்பற்றுவதின் நோக்கத்தையும், விளைவுகளையும்
விளக்கி கண்மூடித்தனமாக அல்ல, மாறாகச் சிந்தனைத் தெளிவோடு
தன்னைப் பின்பற்ற அழைக்கிறார். இயேசு இவ்வுலகிற்கு வந்ததன்
நோக்கமே தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத்
தம் உயிரைக் கொடுப்பதற்கும் (மாற். 10:45) ஆகும். எனவே, இயேசுவைப்
பின்பற்ற விழைபவர் பதவிக்காக , வசதிகளுக்காக அல்ல, மாறாகத்
தொண்டு ஆற்றுவதற்கும், பிறருக்காகத் தன்னையே இழக்கவும் தயாராக
இருக்க வேண்டும். இதைத்தான் இயேசு தன் நண்பர்களுக்காக உயிரைக்
கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவா. 15:13)
என்றார். ஆவியின் கொடையால் அனைத்தையும் தாங்கும் இதயம்
பெறுவோம், பணி செய்து பரமனின் சீடர்கள் என்பதை
மெய்ப்பிப்போம்.
ஓர் ஊரிலே எல்லாருக்கும் நல்லவராக மனிதநேயம் மிகுந்த பெரியவர்
ஒருவர் வாழ்ந்து வந்தார். காலையிலே சூரியோதயமாகவும்,
மாலையிலே சந்திரோதயமாகவும் விளங்கிய அவருக்கு ஒரு மகன்.
அவனுக்கு வயது பத்து இருக்கும். ஒருநாள் அவன் அவனது தாயைப்
பார்த்து, அம்மா, அப்பாவைப்போலவே நானும் ஒருநாள் எல்லாராலும்
போற்றப்படும் பெரிய மனிதராக வாழ விரும்புகின்றேன். அதற்கு
நான் என்ன செய்ய வேண்டும்? என்றான்.
தாய் மகனைப் பார்த்து, "மகனே, நான் உன்னை ஒரு கேள்வி
கேட்கின்றேன். நீ சரியான பதிலைச் சொன்னால், நீ கேட்ட
கேள்விக்கு நான் பதில் சொல்கின்றேன்" என்றாள். "சரி" என்றான்
மகன். "உன் உடலிலே உள்ள உறுப்புகளில் மிகவும் உயர்ந்தது எது?"
மகன் சொன்ன எந்த பதிலையும் தாய் சரியானது என ஏற்றுக்கொள்ளவில்லை.
மகன் தோல்வியை ஏற்றுக்கொண்டு, "நீங்களே பதிலைச் சொல்லி
விடுங்கள் அம்மா" என்றான்.
தாய் மகனைப் பார்த்து, "மனித உடலிலே மிகவும் உயர்ந்த உறுப்பு
அவனது தோள்தான். காரணம் அதுதான் சோர்ந்துகிடக்கும் மனிதர்களையெல்லாம்
தாங்கிப்பிடித்து ஆறுதல் அளிக்கின்றது. நீ உயர்ந்த மனிதனாக
வாழ விரும்பினால், ஆறுதல் தேடும் தலைகளுக்கு உனது தோள்கள்
மீது சாய அனுமதி அளி. அப்போது ஊரும், உலகும் உன்னைப்
போற்றும் " என்றாள். இதே உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியிலே
இயேசு சுட்டிக் காட்டுகின்றார். தொண்டுகளிலே சிறந்த தொண்டு
துவண்டு விழும் தலையை நமது தோள் மீது சுமப்பதாகும் (முதல்
வாசகம்).
இயேசு, தொண்டர்களாக வாழ முன் வாருங்கள், அப்போது உலகம் உங்களை
வணங்கும் என்று போதித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. போதித்ததைச்
சாதித்தும் காட்டினார். "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே,
எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல்
தருவேன்" (மத் 11:28) என்று சொன்ன இயேசு, வார்த்தையை
வாழ்வாக்கி, வலுவற்றவர்களின் மீது இரக்கத்தைப் பொழிந்து (இரண்டாம்
வாசகம்) மக்களின் உடல் பாரத்தை (மத் 9:27-31), மன பாரத்தை
(லூக் 7:36-50) இறக்கி வைத்தார். இயேசு பலரின் பாவத்தைச்
சுமந்தார் (எசா 53:12). "சிலுவையின் மீது தம் உடலில் நம்
பாவங்களை அவரே (இயேசுவே), சுமந்தார்" (1 பேதுரு 2:24) என்கின்றார்
புனித பேதுரு. "எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார்.
இவ்வாறு அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச்
சுமந்துகொண்டார் என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது
நிறைவேறியது" (மத் 8:16இ-17) என்கின்றார் புனித மத்தேயு.
இதுவே நமது செபமாக இருக்கட்டும்:
"இறைவா, நடந்து, நடந்து கால்கள் களைத்துவிட்டன !
ஏந்தி, ஏந்தி கைகள் சோர்ந்துவிட்டன!
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துவிட்டன!
இப்போது எங்களுக்குத் தேவையானதெல்லாம்
சாய்ந்துகொள்ள ஒரு தோள்! ஒரு தொண்டர்!
என்று சொல்லி அழுகின்ற இடிந்துபோன இதயங்களுக்கு நான் இதம்
தர,
நான் தோள் கொடுக்க, எனக்கு
உமது இரக்கத்தையும், ஆசியையும் தந்தருளும். ஆமென்."
மேலும் அறிவோம் !
பள்ளி ஆய்வாளர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம்,
"எந்தப் பாடத்திலும் 'பெயில்' ஆகாத மாணவர்கள் மட்டும் வலது
கையை உயர்த்திப் பிடியுங்கள்" என்றார். ஒரே ஒரு மாணவன் மட்டும்
கையை உயர்த்தினான், அதைப்பார்த்த மற்ற மாணவர்கள் சிரித்தனர்,
அவர்கள் ஏன் சிரிக்கின்றனர்? என்று ஆய்வாளர் கேட்டார். அதற்கு
மாணவர்கள், "சார், அவன் ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை
" என்றனர். ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை யென்றால்,
'பெயில்' ஆகமுடியாது. ஆனால் அது ஒரு சாதனையா?
துறைமுகத்தில் இருக்கும் கப்பல் எவ்வித ஆபத்துமின்றி
பாதுகாப்பாக இருக்கும். ஆனால் துறைமுகத்தில் இருப்பதற்காக
எத்தக் கப்பலும் செய்யப்படுவதில்லை , கப்பல் கடலில் பயணம்
செய்யவேண்டும்: கடல் கொந்தளிப்பு, புயல், பனிப்பாறை முதலிய
பல்வேறு தடைகளையும் மேற்கொள்ள வேண்டும், தனது இலக்கை அடைந்து
சாதனை படைக்க வேண்டும், அவ்வாறே மனிதர்களும் தங்கள்
வாழ்வில் எழும் பல்வேறு சவால்களைச் சமாளித்து சாதனை புரிய
வேண்டும்.
பறவை பிறந்தது பறப்பதற்காக: மனிதன் பிறந்தது துன்புறுவதற்காக
(யோபு 5:7). கிறிஸ்துவும் துன்புறுவதற்காகவே இவ்வுலகிற்கு
வந்தார். அவர், "எல்லாவகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்,
எனினும் பாவம் செய்யாதவர்" (எபி 4:15) என்று. இன்றைய இரண்டாவது
வாசகம் தெளிவாகக் கூறுகிறது.
இறைவாக்கினர் எசாயா என்பவர் கிறிஸ்துவைத் 'துன்புறும் ஊழியனாகச்
சித்தரித்து நான்கு கவிதைகள் எழுதியுள்ளார், துன்புறும் ஊழியனைப்
பற்றிய நான்காம் கவிதையின் ஒருபகுதி இன்றைய முதல் வாசகமாக
அமைந்துள்ளது. கடவுள் கிறிஸ்துவைப் பலருடைய பாவங்களுக்காக
வதைத்தார்; கிறிஸ்து பிறருடைய பாவங்களுக்காகத் தம்மைப் பரிகாரப்பலியாக்கினார்.
ஆனால் இறுதியில் உயர்வடைந்து. தமது வாழ்வின் நிறைவை எய்தினார்,
சிலுவை அவரை வீழ்த்தவில்லை, மாறாக, சிலுவையைக் கொண்டே பாவத்தையும்
பாவத்திற்குக் காரணமான அலகையையும் அவர் வீழ்த்தினார்.
கிறிஸ்துவின் சீடர்களுக்குச் சிலுவை விருப்பப்பாடமல்ல), கட்டாயப்பாடம்,
"என்னைப் பின்பற்ற விரும்புவர் எவரும் தன்னலம் துறந்து தம்
சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்"
(லூக் 9:23). தமது சிலுவைச் சாவைக் கிறிஸ்து மூன்று முறை
முன்னறிவித்தார். மூன்று முறையும் சீடர்கள் அதைப்புரிந்து
கொள்ளவில்லை. முதன்முறை. பேதுரு கிறிஸ்துவிடம், "ஆண்டவரே,
இதுவேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" (மத் 16:22)
என்றார், இரண்டாம் முறை, சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர்
என்று வாதாடினர் (மாற் 9:34), மூன்றாம் முறை, யாக்கோபும்
யோவானும் விண்ணகத்தில் தங்களுக்கு முதல் இரண்டு இடங்களை ஒதுக்கீடு
செய்து கொடுக்கும்படி கிறிஸ்துவிடம் விண்ணப்பித்தனர் (மாற்
10:37) வீடுபற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்ட
கதை!
கிறிஸ்து தம் சீடர்களின் மடமையைக் கண்டு மனவருந்தி, அவரோடு
விண்ணக மகிமையில் பங்குபெற விழைகின்றவர்கள் அவருடைய துன்பக்
கலத்தில் பருக வேண்டுமென்றும், அவருடைய பாடுகளின்
திருமுழுக்கைப் பெறவேண்டுமென்றும் திட்டவட்டமாகக்
கூறினார். மேலும், கிறிஸ்துவின் சீடர்கள் மற்றவர்களிடமிருந்து
பணிவிடை ஏற்காமல், மற்றவர்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்றும்
சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஒரு குடும்பத்தில் கணவர் தம் மனைவியிடம் சமைக்கும் படி
கேட்டதற்கு அவர், "நான் உங்கள் மனைவி மட்டுமே; சமையல்காரி
அல்ல" என்று நறுக்கென்று பதில் சொன்னார். அன்று இரவு திருடன்
வீட்டில் புகுந்து மனைவியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப்
பறித்தான். கணவர் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார்,
மனைவி அவரிடம், "என்னங்க, சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறீங்க;
திருடனை அடிச்சு விரட்டுங்க" என்றதற்கு. கணவர், "நான் உனக்குக்
கணவன் மட்டுமே; காவற்காரன் அல்ல; போலிசைக் கூப்பிடு" என்று
பதிலடி' கொடுத்தார்!
கணவனும் மலைவியும் கடமை, உரிமை என்ற குறுகிய வட்டத்திற்குள்
வாழ்ந்து கொண்டு, ஒருவர் மற்றவர் மீது வஞ்சகம் தீர்த்துக்
கொள்ள விரும்பினால், இல்லறம் நரகமாகி விடும். பழி வாங்குவதில்
அல்ல, பணிவிடை புரிவதில் ஒருவர் மற்றவருடன் போட்டிபோட
வேண்டும். "உணவு விடுதியில் சாப்பிடும் இட்லிக்கும்
வீட்டில் சாப்பிடும் இட்லிக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று
ஒரு கணவரிடம் கேட்டதற்கு அவர், உணவு விடுதியில் இட்லி
சாப்பிட்ட பிறகு மாவு ஆட்டுவேன்: வீட்டில் மாவு ஆட்டியபின்
இட்லி சாப்பிடுவேன்" என்றார் வீட்டு வேலையில் மனைவிக்கு
உதவி செய்வது கணவனுக்கு இழிவு அல்ல. அது அவருடைய கடமையாகும்.
பயிற்சி காலத்தில் குருவானவர்களும் நவகன்னியர்களும் கிராமங்களுக்குக்
களப்பணிபுரிய மகிழ்ச்சியுடன் செல்வர். ஆனால் குருக்களாகவும்
கன்னியர்களாகவும் மாறியபின் அவர்கள் அத்தகைய பணிகளை
மேற்கொள்ளவதில்லை. தாழ்ச்சி அவர்களிடமிருந்து விடைபெற்றுக்
கொள்கிறது; தலைக்கனம் ஏறிவிடுகிறது. இருப்பினும், வித்தியாசமான
துறவிகளும் இருக்கின்றனர். ஓர் அருள்சகோதரி ஒரு பணக்காரரிடம்
சென்று தனது அனாதைக் குழந்தைகளுக்காக நன்கொடை கேட்டார். அப்பணக்காரர்
அந்த அருள்சகோதரி முகத்தில் காரித் துப்பி, அவருடைய கன்னத்தில்
அறைந்தார். ஆனால் அந்த அருள்சகோதரியோ மிகவும் பணிவுடன்,
புன்னகை பூத்த முகத்துடன் பணக்காரரிடம், "இது நீங்கள் எனக்கு
அளித்த பரிசு; என் அனாதைக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்"
என்று கேட்டார். பணக்காரர் அச்சகோதரியிடம் மன்னிப்புக்
கேட்டு, அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தார், அவர்
தான் அன்னை தெரசா!
தாழ்ச்சியின் அவசியத்தைப் பற்றிக் கிறிஸ்து தமது சீடர்களுக்குப்
பலமுறை "கொள்கை விளக்கம்" (Theory) அளித்தார். அது அவர்களது
மரமண்டையில் ஏறவில்லை . இறுதியாக அவர் "செய்முறைப் பயிற்சி"
(Practical) செய்து காட்டினார், இறுதி இரவு உணவின்போது அவர்களுடைய
பாதங்களைக் கழுவி, "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு
உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" (யோவா 13:15) என்றார்.
இல்லறத்தாரும் துறவறத்தாரும் மற்றவர்மேல் ஆதிக்கம்
செலுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மற்றவருக்கு
ஊழியம் புரிய முன்வந்தால் இவ்வையகம் வானமாக மாறாதா?
"அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை
தாளே வந்து எய்தும் பராபரமே" - தாயுமானவர்
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்". பழைய திரைப்படப் பாடல்
இது. வயது என்றாலே வருடக்கணிப்பில் தான் பார்க்க வேண்டுமா
என்ன!
அந்த விந்தை மனிதருக்கு நாள் கணிப்பில்தான் ஞானம் பிறக்குமாம்.
உங்கள் வயது என்ன என்று கேட்டால் ஏறத்தாழ 100 ஆண்டை எட்டிய
அவர் 100 என்று சொல்ல மாட்டார். 36525 நாள்கள் (லீப் ஆண்டுகளில்
வரும் எக்ஸ்ட்ரா நாட்களையும் இணைத்து) என்பார். இப்படி ஒரு
பழக்கத்துக்குக் காரணம் திருப்பாடல் 90:12ல் வரும் வரிகளாம்:
"எங்கள் (வாழ்) நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்.
அப்போது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" உண்மைதான் 100
ஆண்டுகள் என்பதை விட 36525 நாள்கள் என்று சொல்லும்போது கால
ஓட்டத்தில் ஒரு விரைவைப் பார்க்கலாம். அந்த வேகத்தின்
முன்னே வாழ்க்கை என்ற லட்சியப் பயணத்தில் ஒரு பின்னடைவும்
கண்ணில் படும். தன்னிலை உணர்வுதானே ஞானம்!
இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து நான் சாதித்தது என்ன? இந்த சமுதாயத்துக்காகச்
செய்தது என்ன?
அவுட்லுக் என்ற ஆங்கில இதழில் 1999 மே 3ல் வந்த செய்தி தினத்தந்தியில்
2012 செப்டம்பர் 1ல் "இயற்கை நாயகி திம்மக்கா" என்ற தலைப்பில்
கட்டுரையாக வந்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு 70
கி.மீ. தொலைவில் கூலிகல் என்று ஒரு சிற்றூர். அங்கே 80 வயதைக்
கடந்த ஒரு மூதாட்டி, திம்மக்கா என்பது பெயர். கணவனை இழந்தவர்.
குழந்தைகள் இல்லை. இந்த சாமானியப் பெண்மணி செய்த சாதனை என்ன
தெரியுமா? 50 ஆண்டுகளுக்கு முன்பு 400 ஆலமரக் கன்றுகளை
வாங்கி சொந்த ஊரின் சாலையோரத்தில் நட்டு 2 கி.மீ. தண்ணீர்
சுமந்து மாற்றி வளர்த்து வந்திருக்கிறார். இன்று 284 பெரிய
வளர்ந்த ஆலமரங்கள் சாலையின் இருபுறமும் வரிசையாக
விழுதுவிட்டுப் படர்ந்து நிழல் தருகின்றன. தினமும்
காலையில் வந்து அம்மரங்களைக் கட்டி அணைத்து, "எனக்கு இப்போது
284 குழந்தைகள்" என்று பூரிக்கின்றார். வயது
முதிர்ந்தோருக்கான உதவித் தொகை பெற்று உயிர் வாழும் அவர்
கூறுகிறார்: "மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தான் வாழும்
சமுதாயத்துக்கு ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும்". மரங்களை
நாம் வளர்த்தால் அவை நம் சந்ததியை வாழவைக்கும் என்பதும்
அவரது நம்பிக்கை .
எங்கோ எப்பொழுதோ படித்தது நினைவுக்கு வருகிறது: "நீ இங்கே
பூமியில் வாழ வந்ததற்காகத் தருகிற வாடகை தான் நீ செய்வதாகச்
சொல்லுகிற சேவை" (Service is the rent you pay for your
life on earth).
- மனிதனாகப் பிறப்பெடுத்ததற்கே வாடகையாகச் செலுத்த வேண்டியது
சேவை என்றால் இயேசுவின் சீடனாக மாற எத்தகைய தியாகம்
நிறைந்த தொண்டு எதிர்பார்க்கப்படும்? "மானிட மகன் தொண்டு
ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய
மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்"
(மாற்கு 10:45) என்று தன்னை முன்னிலைப்படுத்தித் தன் சீடர்களுக்கு
விடுக்கும் சவால்: "நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில்
உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால்
பெற இயலுமா?" (மாற்கு 10:38) பலிவாழ்வுக்கு இட்டுச்
செல்லும் பணி வாழ்வு.
தலைவர் இயேசுவின் இலட்சியம் எங்கே? அவரது தொண்டர்களாக அர்ப்பணித்த
சீடர்களின் எதிர்பார்ப்புக்கள் எங்கே?
ஆசைக்கோர் அளவில்லை. அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல்
மீதிலே ஆணை செயவே நினைவர்' - மனித ஆசையை வெளிப்படுத்தும்
தமிழ்க்கவிதை. ஏனையச் சீடர்களின் உள்ளங்களில் பொறாமை தீ பற்றி
எரியும் அளவுக்கு யாக்கோபும் யோவானும் எப்படித் தங்கள் ஆசையை
வெளிப்படுத்துகிறார்கள் ?
"போதகரே, நாங்கள் கேட்பதை எங்களுக்குச் செய்ய வேண்டும் என
விரும்புகிறோம்" இயேசு நம்மை அழைத்தது நாம் கேட்பதை இயேசு
செய்ய வேண்டும் என்பதற்காகவா? மாறாக இயேசு - கேட்பதை,
விரும்புவதை நாம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே!
"நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவன் உமது வலப்புறமும்
இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்".
இயேசு நம்மை அழைத்தது உரிமைகளையும் சலுகைகளையும் பதவிகளையும்
நாம் அனுபவித்து ஆனந்தம் கொள்வதற்காகவா? மாறாக இயேசுவின்
எண்ணம் இலட்சியம் இவற்றை நமதாக்கி அவரது எதிர்பார்ப்புக்கு
ஏற்பப் பொறுப்புடன் செயல்பட அன்றோ !
''இதைக் கேட்டுக் கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு
மீதும் யோவான் மீதும் கோபம் கொள்ளத் தொடங்கினர்" இப்படிப்
பொறாமைக்கும் சீற்றத்துக்கும் காரணம், என் குடும்பம், என்
இனம், இரத்த வழி சகோதர பாசம் என்ற குறுகிய வட்டத்தில்
கோரிக்கை வைத்ததுதான். இயேசு நம்மை அழைத்தது இந்தத் தன்னல
உறவுச் சுவரை தகர்த்தெறிந்து எல்லா மக்களின் நலனுக்காகவும்
நம்மை அர்ப்பணிப்பதற்காக அல்லவா!
இயேசுவின் சீடர்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்குப்
பிற இனத்தாரை எடுத்துக்காட்டாக்கும் இயேசு எப்படி இருக்க
வேண்டும் என்பதற்குத் தன்னையே முன்னிறுத்துகிறார். இயேசுவுக்கு,
தான் மானிடப் பிறப்பு எடுத்ததன் நோக்கம் தெளிவாக இருந்தது.
"பணி புரிய, பலருடைய மீட்புக்குத் தன் உயிரை விலையாகக்
கொடுக்க" என்பதுதான் அது. இறைமகனாயிருந்தும் தன் சீடர்களின்
காலடிகளைக் கழுவியது இதற்கு அசைக்க முடியாத சான்று. இத்தகைய
குறிக்கோள் தெளிவு இல்லாமல் ஏனோ தானோ வென்று வாழ்பவர்கள்
பலர். பதவி, பட்டம், பணம் பொருள் இவற்றை இலக்காகக் கொண்டு
வாழ்கின்றனர் பலர்.
தான் சாகாமலிருக்க ஏதாவது வழி உண்டா ? என்று முனிவர் ஒருவரிடம்
இளைஞன் ஒருவன் கேட்டான். முனிவரோ "நான் சொல்லித் தரும் மந்திரத்தை
நாள்தோறும் நீ மட்டும் சொன்னால் நிலைத்து வாழ்வாய். பிறருக்கு
நீ சொல்லிக் கொடுத்தால் இறந்துவிடுவாய்'' என்றார்.
இந்த இளைஞனோ ஊர் மக்களையெல்லாம் ஒன்று திரட்டி இந்த மந்திரத்தை
எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தான். விளைவு? நோயுற்றான்.
சாகக் கிடந்தான். அப்போது முனிவர் அவனைச் சந்திக்க நேர்ந்தது.
"நான்தான் முன்கூட்டியே எச்சரித்திருந்தேனே. உனக்கு மட்டும்
நான் சொன்ன இரகசியத்தை பிறருக்கு ஏன் வெளிப்படுத்தினாய்?"
என்று கேட்டார். இளைஞனோ, "நான் மட்டும் சொல்லிவந்தால் நான்
மட்டும் தானே வாழ்வேன். இப்போது நான் இறந்தாலும் இவர்கள்
பலர் நீடு வாழ்வார்கள் அன்றோ!" என்றான்.
இந்த இளைஞனைப் போல நான் மடிந்தாலும் பிறர் வாழட்டும் என்று
நினைக்காவிட்டாலும், தன்னைப் போல பிறரும் வாழட்டும் என்று
நினைப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?
"இயேசு அவர்களுக்கு முன் போய்க் கொண்டிருந்தார்" (மாற்கு
10:32) என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் சீடர்கள்
பின்வாங்குகின்றனர். இயேசு தனக்கு நிகழப்போகும் அனைத்தையும்
அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். ஆனால் சீடர்கள் ஒன்றில்
மட்டும் தெளிவோடிருக்கின்றனர். அதுதான் "இருக்கை". இயேசு
சிலுவையில் இறந்து தன்னைக் கடவுளுக்கும் மனிதருக்கும்
காணிக்கையாக்குவதில் கருத்தாய் இருக்கின்றார். சிலுவையில்
தொங்குவதைவிட இருக்கையில் அமர்வது எளிதானது, இன்பமானது. இருக்கை
ஓர் அரசியல் அடையாளம், அதிகாரத்தின் அடையாளம். அதைத்தான்
மனித மனம் நாடுகிறது. மரியாதை கிடைப்பதாக நினைக்கிறது. இயேசுவோ
மனித இன மீட்புக்காகச் சிலுவையையே அரியணையாக ஏற்றார். அதனால்
இன்றும் அவர் மனித மனங்களில் ஆட்சி செய்கிறார். இருக்கையில்
இடம் பிடிக்க நினைப்பவர்கள் இதயங்களில் இடம் பிடிக்க இயலாது.
அன்பு உடையவர்களே ஆட்சி புரிபவர்கள்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே - இதுவே இயேசுவின் சிந்தனை".
நமது கிறிஸ்தவ அழைப்பு அழகான ஒரு பூமாலை. அது குரங்கு
கையில் சிக்கலாமா?
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
அரியணையில் அமர்வதா, சிலுவையில் அறையப்படுவதா?
மதிப்பும் மரியாதையும் பெறுவது ஒவ்வொரு மனிதருக்குள்ளும்
ஊற்றெடுக்கும் தாகம். இத்தாகத்தைத் தணிக்க நாம்
மேற்கொள்ளும் முயற்சிகளைக் கொண்டு, மரியாதையின் இலக்கணத்தைப்
பலரும் பல வழிகளில் எழுதுகிறோம். சிம்மாசனங்களில் அமர்ந்து
மாலைகள் பெறுவது ஒருவகை மரியாதை. சிலுவைகளில் அறையப்பட்டு
உருகுலைந்தாலும், மக்களின் மனம் எனும் சிம்மாசனங்களில் அமர்வது
மற்றொரு வகை மரியாதை.
இறை வார்த்தை சபையைச் சார்ந்த ஜான் புல்லன்பாக் (John
Fullenbach) என்ற குரு தன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தைச்
சொல்கிறார். உரோமையில் இறையியல் ஆசிரியராக இருக்கும் ஜான்,
அருளாளரான அன்னை தெரேசா உயிரோடிருந்தபோது, கொல்கத்தா
சென்று அன்னையுடன் பணிசெய்ய விரும்பினார். அன்னையும் அழைப்பு
விடுத்தார். கொல்கத்தாவில் பணியை ஆரம்பித்த முதல் நாள் ஓர்
அருட்சகோதரியுடன் கொல்கத்தாவின் மிகவும் ஏழ்மையான ஒரு பகுதிக்கு
ஜான் செல்லவேண்டி இருந்தது. அப்பகுதியில் ஒரு வயதானப் பெண்மணி
அவர்களிடம், "தயவு செய்து என் வீட்டுக்கு வாருங்கள். என்
கணவர் சாகக்கிடக்கிறார்." என்று வேண்டினார். மிகவும் அழுக்காய்
இருந்த ஒரு குடிசைக்குள் ஜானும் அந்தச் சகோதரியும் சென்றனர்.
பல நாட்கள் படுக்கையில் இருந்த ஒரு மனிதரை அங்கே கண்டனர்.
ஜானுக்குப் பெரிய அதிர்ச்சி. இவ்வளவு மோசமான நிலையில் ஒரு
மனிதர் இருக்கமுடியுமா என்ற அதிர்ச்சி... அவ்வளவு நாற்றம்
அங்கே. அவரைத் தங்கள் இல்லத்திற்குக் கொண்டு செல்லலாம் என்று
சகோதரி கூறியதும், இருவரும் குனிந்து அவரைத் தூக்க முயன்றனர்.
அப்போது, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த மனிதர்,
ஜான் முகத்தில் எச்சில் துப்பினார். அதிர்ச்சி, கோபம் எல்லாம்
ஜானைத் தாக்கின. ஓரளவு சமாளித்துக்கொண்டு, அந்த மனிதரை அன்னையின்
இல்லத்திற்குக் கொண்டு போய் சேர்த்தார். தொடர்ந்து அங்கே
தங்கிய நாட்களில், ஜான் அனுபவித்த அதிர்ச்சிகள் பல உண்மைகளைச்
அவருக்குச் சொல்லித்தந்தன. அவரது விசுவாசத்தை உறுதிபடுத்தின.
அன்னை தெரேசாவும், பிற சகோதரிகளும் செய்த சேவை அவரை அதிகமாய்ப்
பாதித்தது. அதைவிட, அந்த நோயாளிகளில் சிலர் சகோதரிகள்
மீதும், அன்னை மீதும் கோபப்பட்டு, பேசிய வார்த்தைகள், நடந்துகொண்ட
விதம்... இவைகளை அந்த சகோதரிகள் சமாளித்த அழகு... இவை அனைத்தும்
அவரது விசுவாச வாழ்வை ஆழப்படுத்தியதாகக் கூறுகிறார்.
இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் இரு அரியணைகளில் அமர்வதற்குத்
தங்கள் விருப்பத்தைத் தெரிவித்த இரு சீடர்கள் இன்றைய நற்செய்தியின்
நாயகர்கள். அவர்களிடம், "
நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத்
தெரியவில்லை"
என்று இயேசு சொல்கிறார். இயேசு சொல்லும் இந்த
வார்த்தைகள் இன்றையத் தலைவர்கள் பலருக்குப் பொருத்தமான
வார்த்தைகள்... அரியணையில் ஏறுவதற்கும், ஏறியபின் அங்கேயே
தொடர்ந்து அமர்வதற்கும் தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்
நம்மை ஆச்சரியத்தில், அதிர்ச்சியில், அவமானத்தில் நெளிய
வைக்கின்றன. இவர்கள் அறியாமல் செய்கிறார்களா, அல்லது மதியிழந்து
செய்கிறார்களா என்ற கேள்வியை நம்முள் எழுப்புகின்றன. மரியாதை,
அதிகாரம் எனபனவற்றை தவறாகப் பயன்படுத்தும் தலைவர்கள் அறியாமையில்
செய்கிறார்கள் என்று இயேசு பெருந்தன்மையுடன் சொல்கிறார்.
இந்த அறியாமையின் உச்சக்கட்டமாக, இயேசுவை இத்தலைவர்கள்
சிலுவை என்ற அரியணையில் ஏற்றியபோது, மீண்டும் இயேசு 'இவர்கள்
அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்' என்று தந்தையிடம்
வேண்டியது நமக்கு நினைவுக்கு வருகிறது.
செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இரு அரியணைகளில்
அமர்வதற்கு விடுத்த இந்த விண்ணப்பம் மற்ற சீடர்களுக்குக்
கோபத்தை மூட்டியது. பேராசை, பொறாமை, கோபம் என்ற இந்தச் சங்கிலித்
தொடர் தன் சீடர்களைக் கட்டிப்போடும் ஆபத்து உள்ளது என்பதை
உணர்ந்த இயேசு, உண்மையான மதிப்பு என்றால் என்ன, மரியாதை
பெறுவது எவ்விதம் என்ற பாடத்தை அவர்களுக்குச் சொல்லித் தருகிறார்.
"
உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய்
இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர்,
அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்."
இயேசுவின் இந்தக்
கூற்று நமக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. இயேசுவின் இக்கூற்றை
அடிப்படையாகக் கொண்டு பணியாளர் தலைமைத்துவம் (Servant
Leadership) என்ற கருத்து, தற்போது மேலாண்மைப் பள்ளிகளில்
பாடமாகச் சொல்லித் தரப்படுகிறது.
இயேசுவின் இந்த சவாலை ஏற்று வாழ்ந்த தலைவர்கள் வரலாற்றில்
இருக்கத்தான் செய்கிறார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் பற்றி
சொல்லப்படும் ஒரு கதை என் நினைவுக்கு வருகிறது. ஒரு நாள்
ஜார்ஜ் வாஷிங்டன் சாதாரண உடைகள் அணிந்து தன் குதிரையில்
ஏறிச் சென்றார். போகும் வழியில் ஒரு தளபதியின் குதிரைவண்டி
சேற்றில் அகப்பட்டிருந்ததைப் பார்த்தார். அந்த வண்டியைச்
சேற்றிலிருந்து வெளியேற்ற நான்கு வீரர்கள் வெகுவாக முயன்று
கொண்டிருந்தனர். தளபதியோ அருகில் நின்று அவர்களுக்கு
கட்டளைகள் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற
வாஷிங்டன் தளபதியிடம், "ஏன் நீங்களும் இறங்கி உதவி
செய்தால் வண்டியை வெளியில் எடுத்துவிடலாமே!" என்று
சொன்னதற்கு, தளபதி, "நான் ஒரு தளபதி" என்று
அழுத்தந்திருத்தமாய் சொன்னார். உடனே, வாஷிங்டன்
குதிரையிலிருந்து இறங்கி, வீரர்களுடன் சேர்ந்து முயற்சி
செய்து, வண்டியை வெளியில் தூக்கிவிட்டார். பின்னர்
தளபதியிடம் "அடுத்த முறை உங்களுக்கு உதவி தேவைப்பட்டால்,
உங்கள் அரசுத் தலைவரைக் கூப்பிடுங்கள்... நான் வந்து உதவி
செய்கிறேன்" என்று சொல்லி தளபதியின் கையைக் குலுக்கினார்.
அப்போதுதான் தளபதிக்குப் புரிந்தது, தன்னிடம் பேசிக்
கொண்டிருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் என்று.
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேள்விப்பட்ட
ஒரு சம்பவம் ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது.
சீக்கியரான ஒரு மாவட்ட ஆட்சியர், தமிழ் நாட்டில் ஒரு
முக்கிய நகருக்கு நியமனம் ஆனார். மக்களுக்கு நன்மை
பயக்கும் பல அதிரடி மாற்றங்களை மாவட்ட ஆட்சியாளர்
அந்நகரில் கொணர்ந்தார். சிம்மாசனத்தில் அமர்ந்து
மாலையையும், மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை இத்தலைவர்..
நேர்மையாக, சிறப்பாக செயல்பட்டார்.
ஒரு நாள் அதிகாலையில் இவர் வழக்கம்போல் உடற்பயிற்சிக்காக
நடந்து போனபோது, ஓர் இடத்தில் சாக்கடை அடைத்துக்கொண்டு
தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. ஒரே நாற்றம். நகராட்சி
ஊழியர் அதைச்சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தனர். மாவட்ட
ஆட்சியர் அங்கே போனதும், கேட்டார்: "என்ன பிரச்சனை?"
"சாக்கடை அடைச்சிருக்கு, சார்." "அது தெரியுது. சுத்தம்
பண்றதுதானே." "ஒரே நாத்தமா இருக்கு சார், எப்படி
இறங்குறதுன்னு தெரியல." அவர்கள் சொல்லி முடிக்கும் முன்பு,
அவர் சாக்கடையில் இறங்கி, அங்கிருந்த கருவிகளை வைத்து,
அந்த அடைப்பை எடுத்து விட்டார். பிறகு மேலே வந்து,
"இப்படித்தான் செய்யணும்" என்று சொல்லி அவர் வழி போனார்.
சாக்கடை அடைப்பு திறந்தது, அவர்கள் வாயடைத்து நின்றனர்.
வாழ்க்கையின் பெரும் பகுதியை ஏழைகளுக்காகவும்,
சமுதாயத்தால் விலக்கப்பட்டவர்களுக்காகவும் செலவழித்த அன்னை
தெரேசா ஒரு பெரிய தலைவரா? ஆம். கோடான கோடி மக்கள் மனதில்
அரியணை கொண்டிருக்கும் தலைவர் அவர். அதிகாரம் என்பதற்குச்
சரியான இலக்கணம் சொல்பவர்கள்.. ஜார்ஜ் வாஷிங்டனும்,
சீக்கியரான அந்த மாவட்ட ஆட்சியரும்... இவர்களை இந்தப்
பாதையில் சிந்திக்கத் தூண்டிய இயேசுவின் வார்த்தைகள்
நம்மையும் நல்வழிபடுத்த வேண்டுவோம்.
சிம்மாசனம், சிலுவை, இரண்டுமே அரியணைகள் தாம். நாம்
மட்டும் சுகம் காணலாம் என்று அரியணை ஏறி அமர்ந்தால்,
சுற்றியிருந்து சாமரம் வீசுகிறவர்கள் கூட நம்மை
மதிக்கமாட்டார்கள். கட்டாயம் நேசிக்க மாட்டார்கள். ஆனால்,
பலருக்கும் சுகம் தருவதற்கு சிலுவை என்ற அரியணை ஏறினால்,
பல நூறு ஆண்டுகளுக்கும் மக்கள் மனதில் மதிப்போடும்,
அன்போடும் அரியணை கொள்ள முடியும்.
சிம்மாசனமா, சிலுவையா... தேர்ந்து கொள்ளுங்கள்.
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
யார் நீடு வாழ்பவர்?
* தலைவர்மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கும் ஊழியர்.
* தலைவரது ஆணையை தாரக மந்திரமாக ஏற்றுக்கொள்பவர்.
* தலைவரது திருவுளத்தை நிறைவேற்றுவதில் இன்பம்
காண்பவர்.
* தலைவன் தரும் துன்பம் தனது வெற்றிக்கான முதல்படி
எனக் கருதுபவர். இப்படிப்பட்ட ஊழியனைக் குறித்து
தலைவர் பெருமிதம் கொள்வார். எனக்கு நல்ல பணியாளர்
கிடைத்துள்ளார், எனது பணியாளர் நல்ல பண்பாளர் என்று
தலைவர் அகமகிழ்வார்.
அருள்நிறைந்த இறை அரியணை யார்?
* நமது தனிப்பெரும் தலைமைக்குருவான இயேசு கிறிஸ்து.
* வானங்களைக் கடந்து தந்தையின் வலப்பக்கத்தில்
வீற்றிருக்கும்
இயேசுதான் இரக்கத்தின் அரியணை.
* நம்மைப் போன்ற சோதனைகள் இயேசுவுக்கும் இருந்தன
எனினும் அவர் பாவத்தின் நிழல்கூட தம்மீது படாமல்
வாழ்ந்தார். பணிவிடை பெறுவதா? வழங்குவதா?
* நமக்கு வழங்கப்படும் பொறுப்புகள் கடவுள் நமக்கு
அளிக்கும் பணிபுரியும் வாய்ப்புகள்.
* கடமையைச் செய்யும் போது எதிர்பார்ப்பு எதையும் முன்
வைத்தல் கூடாது.
* பணிவிடை பெறுபவர் தன்னிடம் உள்ளதையும் இழக்கிறார்;
பணிவுடை புரிபவரோ பன்மடங்காகப் பலனைப் பெறுகிறார்.
* இருக்கும் இடம் எதுவாயிருந்தாலும் நினைக்கும் மனம்
உயர்ந்ததாக இருந்தால் எல்லாம் சுபமாகும்.
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 53:10-11)
இறைவாக்கினர் எசாயாவின் காலத்தில் யூதா வலிமை மிக்க
அண்டை நாடான பாபிலோனியாவின் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகியிருந்தது. யூதாவின் மக்கள் தொடர்ந்து
ஆண்டவருக்கு. பணியாற்றாது அவர்மீது நம்பிக்கையிழந்து
பல்வேறு வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தார்கள். ஆகவே
யூதாவின் மக்களுள் பலர் பாபிலோனில் அடிமைகளாக
நசுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். இந்த
சூழ்நிலையில் தான், இரண்டாம் புத்தகமாகிய 40 முதல் 55
அதிகாரங்கள் கடவுள் தம் மக்களை விடுவித்து அவர்களது
சொந்த நாடான எருசலேமில் புதுவாழ்வு வாழுமாறு அழைத்துச்
செல்வார் என்று கூறுகிறது. இப்பகுதியில் மறுவாழ்வு
என்பது பல்வேறு வழிகளில் கொண்டு வரப்படுகிறது. அதில்
ஒன்று துன்புறும் ஊழியனது செயல்பாடுகள். ஆக அதிகாரம் 40
முதல் 55 வரை மொத்தம் 4 பாடல்கள் இந்த ஊழியனது
பணியையும், புதுவாழ்வு செய்தியையும் நமக்குத்
தெரிவிக்கின்றன. கடைசியில் வரும் 4-ஆவது பாடல் இன்றைய
முதல் வாசகத்தை உள்ளடக்கியுள்ளது (எசா 52;13-53:12).
இன்றைய முதல்வாசகத்தில் (53:10-11) துன்புறும் ஊழியரின்
உச்சகட்ட துன்பங்களுக்கு ஆண்டவர் அளிக்கும் பரிசு
மிகச்"
சிறந்தது என்று வாசிக்கிறோம். ஆகவே "
நீங்கள்
பாபிலோனில் துன்புறுத்தப்பட்டாலும் உங்களை தன்னுடைய
ஊழியன் வழியாக வாக்குறுதியின் நாட்டுக்கு அழைத்துச்
செல்வார் என்பது உறுதி"
என்பது தெளிவாக புலப்படுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபி. 24:14-16)
"
கண்ணுக்குக் கண்' "
பல்லுக்குப் பல்' என்று வாழ்ந்த
யூதர்களுக்கு, "
எதிரியை அன்பு செய்"
'கீழ்ப்படுதலின் வழி
மீட்பு"
, "
துன்பத்தின் வழி இன்பம்' என்ற அன்றாட
வாழ்க்கையின் அனுபவங்கள் முரண்பாடாகத் தெரிந்தது. இந்த
நற்செய்தியை ஏற்று கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் யூதக்
கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
யூதக்கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மீது தீராத தாகம்
கொண்டிருந்தாலும், பல்வேறு தீயசக்திகளின்
ஆக்கிரமிப்பால், அவ்வப்போது நம்பிக்கையிழந்து தங்களது
விசுவாசத்தில் தளர்ச்சி அடைந்தார்கள். இச்சூழலில்தான்
எபிரேயருக்கு எழுதிய திருமுகம் தரப்படுகிறது.
விசுவாசத்தில் முன்மாதிரிகள் பலர் மேற்கோள்
காட்டப்படுகின்றனர்.
குறிப்பாக இன்றைய இரண்டாம் வாசகத்தில், தலைமைக்குருவான
இயேசு எல்லாவற்றிற்க்கும் மேலானவர். இருப்பினும் நாம்
வாழ்வு பெறும் பொருட்டு அவர் எல்லா துன்பங்களையும்,
துயரங்களையும் ஏற்றுக்கொண்டார். "
துன்பங்களின் வழி
ஆறுதல்"
தரும் ஆண்டவர் நம் தலைமைக்குருவாம் இயேசு.
எவ்வளவுதான் துன்பம் அனுபவித்தாலும், தன் தந்தைக்கு
விசுவாசமுள்ளவராக விளங்குகிறார். இதைப்போல நாமும்
துன்பத்தின் மத்தியிலும் நம்பிக்கை குன்றாமல் இருக்க
கருத்தாயிருக்க வேண்டும்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 10:35-45)
உரோமையர்களின் ஆட்சிக் காலத்தில் பூதக்கிறிஸ்தவர்கள்
பட்ட துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அளவே கிடையாது.
இத்ததைய சூழ்நிலையில் இயேசுவை ஏற்றுக் கொண்டு அவரை வாயார
அறிக்கையிட்டவர்கள், நம்பிக்கையில் தளர்ந்து போவது
எதார்தமாகியது. இத்ததையோரைத் தேற்றுவது ஒரு கட்டாயக்
கடமையாகத் தென்பட்டது. இத்தகைய பின்னணியில் எழுதப்பட்டது
தான் மாற்கு நற்செய்தி. இயேசு தனது சாவைப்பற்றி மூன்றாவது
முறையாக (மாற்கு 10:32-34) அறிவித்தபின் இன்றைய நற்செய்தி
வாசகப் பின்னணி (1035-45) நமக்குக் கொடுக்கப்படுகிறது.
துன்பத்தை நாளும் பொழுதும் தியானித்து ஏற்றுக்கொள்ள
தந்தையிடம் சக்தி கேட்க, சீடர்கள் வந்து அரசுரிமை
கேட்கிறார்கள். இங்கு துன்பத்தை ஏற்றுக் கொள்வதே நான்
தரும் அரசுரிமை என்று புது வாக்குக்கொடுக்கிறார்.
மறையுரை
சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் மெய்யியல் படித்துக்
கொண்டிருந்த காலம் அது விடுமுறைக்காலங்களில் பங்குத்தள
அனுபவத்திற்காகச் சென்றிருந்தேன். நல்ல பங்கு பாசமான
மக்கள். அதிகம் படித்தவர்கள் முடிந்த அளவுக்கும்
கற்றறிந்தவர்கள். விவசாயிகள். மீன்பிடித்தெழிலாளர்கள்
என பலவகைப்பட்ட பங்கு மக்களை பார்க்க முடிந்தது. அப்படியாக
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே அந்த பங்குத்தந்தை சீரும்
சிறப்புமாக பணியாற்றிக். கொண்டிருந்தார்.
ஒரு நாள் பலவற்றையும் பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறோம்.. தீடிரென நான் கேட்டேன். "
ஏன்
Father என்னதான் இருந்தாலும் ஒரு மனிதன் எவ்வளவு
துன்பங்களை அனுபவிக்க முடியும்? இதுக்கு என்னதான் முடிவு
சாமி? இந்தக் கேள்வி அவருக்கு எட்டுச்சோ, இல்லையோ
"
பிரதர் நான் ஒன்று சொல்றேன், அத மனசுலயே வச்சிக்கோங்க"
என்று ஆரம்பித்தார்.
"
எங்க வீட்டுல நாங்க எட்டு பேர் ரொம்பக் கடினப்பட்ட
குடும்பம். எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஏதாவது வேலை
செஞ்சாத்தான் எங்களுக்கு ஒரு வேளை சோறாவது கிடைக்கும்.
நிறைய நாள் சாப்பிட்டும், சாப்பிடாமலும்
தூங்கியிருக்கேன். சாப்பாட்டுக்காக கண்ணீர்விட்டுக்
கதறியிருக்கிறேன். நான்பட்ட துன்பங்கள்கூட எனக்கு ஒரு
பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் எனக்கு பிறகு ஒரு
தங்கச்சியும் தம்பியும் இருக்காங்க. அவங்கள
நினைச்சாத்தான் இன்னும் எனக்கு வருத்தமா இருக்கு! ஏன்ண
வசந்தாமேரி என்ற ஒரு தங்கச்சியும் இருக்காங்க. அவங்கள
நினைச்சா தான் இன்னும் எனக்கு வருத்தமா இருக்கு! ஏன்னா,
வசந்தா மேரி என்ற என் தங்கச்சி பிறவியிலேயே இரண்டு
கால்களும் முடமாகிப் பிறந்தவள். இது மட்டுமல்ல. என்
தம்பி அந்தோணி கூட காதும் கேட்காதவன், பார்வையும்
இல்லாதவன் எனக்கு இருந்த ஒரு அண்ணனும், அக்காவும்
திருமணமாகி தனிக்குடித்தனம் போன: வர்கள் தான். திரும்பி
செத்தார்களா? பிழைச்சாங்களான்னு கூட கேட்கவரவில்லை"
என்று
சொன்னவர். தொடர்ந்தார், துன்பங்கள் ஆயிரம், ஆயிரம்
ஆனால் நாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோம் என்பது தான்
நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு அடங்கியிருக்கிறது. இதைதான்
இன்றைய முதல் வாசகமாகிய எசாயா 53:10-11 இறை-
வார்த்தைகளில் வாசிக்கிறோம்.
துன்பமில்லாத வழ்க்கையே இல்லை, ஏனென்றால் நாம் அனைவரும்
நமது விருப்பு வெறுப்புகளின் படி வாழக் கற்றுக் கொண்டு
விட்டோம். இதையும் கடவுள் ஏற்றுக் கொண்டு "
நீ இதை
விரும்புகின்றாயா? சரி எடுத்துக் கொள்; உன்
விருப்பப்படி ஆகக்கடவது"
என்று கொடுக்கிறார். ஆனால் நமது
சுயநல எண்ணங்களால் நாம் நமது பொறுப்புணர்வை இழந்து
போய்விடுகிறோம். இங்கு தான் தேவையற்ற சிறு சிறு
துன்பங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது.
இருப்பினும் இத்தகைய துன்பங்களை நாம் ஏற்று
வாழ்ந்தோமென்றால் அதிலும் ஆண்டவர் நம்மை நிறைவாக
ஆசிர்வதிப்பதை பார்க்க முடியும். ஆபிரகாம் தொடங்கி
திருவெளிபாடு எழுதிய யோவான் வரை எல்லாருமே துன்பங்களை
மனமுவந்து ஏற்று ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்து
வாழ்ந்தார்கள்!
1.அந்த சமுதாயத்தில் 90 வயதுவரை குழந்தை இல்லாமல்
துன்பப்படுவது என்பது மிகவும் கொடூரமானது; இழிவானது.
அதுவும் கூட 90 வயதுக்கு பிறகு குழந்தை பாக்கியம்
கிடைப்பது என்பது அதைவிட கொடூரமானது. இருப்பினும்
ஆண்டவருக்காய் ஏற்றுக் கொண்டார்கள். ஆபிரகாம் -
சாராள் தம்பதியினர்.
2.யோசேப்பு, தண் கூடப்பிறந்த சகோதரர்களாலேயே
கைவிடப்பட்டார்; ஆள்கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்டு.
அனாதையாக கிடந்தார்; ஊரும் பேரும் தெரியாத நாட்டிற்கு
விற்கப்பட்டு படாத துன்பங்கள் பட்டார். ஆனால் இத்தனை:
மையும் ஏற்றுக் கொண்டதால் இறைவன் கொடுத்த பரிசு -
அரண்மனை - அதிகாரி?
3. பெண்மணியைச் சான்று காட்ட வேண்டுமா? கணவனை இழந்தார்.
கணவன் இறந்து விட்டாரே என்று நினைத்து, இருந்த. இரண்டு
மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். நகோமி
அந்தத் தாய்! இரண்டு மகனும் இறந்து போகிறார்கள். ஒரு
மருமகள் (ஓர்பா) தன் அப்பா வீட்டுக்கு சென்று
விடுகிறார். ஆனால் மருமகள் (ரூத்து) எந்த சூழ்நிலை
வந்தாலும், "
நான் உம் கூடவே இருப்பேன் என்று சொல்லி
வேதனைகளையும் பொறுத்துக் கொண்டு தன் மாமியாரைக்
காப்பாற்றுகிறாள்!"
இந்த மகா பாக்கியவான்களெல்லாம் நமக்கு நம் துன்ப
வேளைகளில் முன் மாதிரி! நாம் எவ்வாறு வாழ வேண்டும்
என்று கற்றுத் தருபவர்கள். ஏன் இன்னும் தெளிவாகவே
இன்றைய நற்செய்தியில் இயேசுவான நம் ஆண்டவர் "
நான்
குடிக்கும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? என்று
கேட்கிறார். நாம் யாக்கோபு மற்றும் யோவானைப் போல
"
ஆம்"
என்று சொல்ல முடியுமா?
குடும்பங்களில் வருமானம் மிகவும் குறைவாக இருக்கிறதா?
கணவன் மனைவியரே உங்களிடையே சண்டை சச்சரவு வேண்டாம்.
இளைஞர்களே நீங்கள் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும்
நினைத்ததெல்லாம் நடக்கவில்லை என்று குழப்பமாக இருக்கிறதா?
எல்லாவற்றையும் மனநிம்மதியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
பிள்ளைகளே, பள்ளிக் கூடத்தில் அதிகமான வீட்டுப்பாடம்.
அப்பா அம்மா தொந்தரவு, நண்பர்கள் புரியாத நிலை, என
பிரச்சனைகள் ஆயிரம்! ஆண்டவரிடத்தில் ஓப்புக்கொடுங்கள்.
தினந்தோறும் அவரிடம் கொண்டுப்போய்ச் சேருங்கள். பிறகு
அவர், உங்களை இந்த பாத்திரங்களிலுள்ள துன்பத் தண்ணீரைப்
பருக ஆற்றல் தருவார்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
* துன்பங்களை ஏற்று பிரமாணிக்கமாய் வாழ்தல்.
* கடவுளின் திட்டத்தை தேர்ந்து தெளிந்து அதன்படி
வாழ்தல்.
* இயேசுவைப்போன்று துணிவுடன் வாழக்கற்று கொள்ளல்.
* தலைவன் பணியாளனக வாழ்தல்.
* இழப்பதில் தான் பெறுகிறோம்.
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
"
துன்புறும் ஊழியனைப் பற்றி ' எசாயா 4 பாடல்கள்
பாடியுள்ளார் (காண்: 42 : 4-4; 49 : 1-6; 50 : 4-9; 52:
13-53 : 12). இவற்றிலே நான்காவது பாடலின் ஒரு பகுதி
இன்றைய வாசகமாயமைகிறது. இத்துன்புறும் ஊழியன் யார்
என்பது பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. எசாயா
காலத்திலேயே, குறிப்பிட்ட ஒரு நபரை (2 ம் எசாயா
எனப்படுபவர்) இது குறிக்கலாம். எனினும், "
பலருடைய
(அனைவருடைய) மீட்புக்காகவும் தன் உயிரையே தந்த (மாற்.10
: 45) இயேசுவைச் சுட்டும் என்பதில் தவறேதும் இல்லை.
மத்தேயுவும் துன்புறும் ஊழியன் இயேசுவே என்று
கூறுவதும் காணற்பாலது (மத்.12 ; 15 -21).
ஆண்டவரின் திட்டம்
"
அவரை"
வேதனையில் ஆழ்த்தி நொறுக்க ஆண்டவர் விரும்பினார்
' (53 : 10). ஆம், துன்பமும் துயரமும் இறைவன்
திட்டத்திலே இடம் பெறுகின்றன. எனவே துன்பப்படும் எவனும்
ஆண்டவரால் தண்டிக்கப் படுகிறான் என்று எண்ணுவது தவறு.
"
இவன் பார்வையற்றவனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம்?
இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா? என்று
வினவியோருக்கு இயேசு தந்த பதில் "
இவர் செய்த பாவமும்
அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின்
செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப்
பிறந்தார் ' (யோ. 9 : 1-3) என்பதாகும். எனவே
துன்பத்தின் வழி ஆண்டவர் திருவுளம் நிறைவேறுகிறது
என்பதை நாம் உணர்ந்து, நம் வாழ்வில் வரும் இன்னல்,
இடைஞ்சல்கள், துன்ப துயரங்களை விரும்பி ஏற்று, அவை வழியாக
இறைவனை மகிமைப்படுத்துவோம். துன்பங்களிலிருந்து விடுபட
முயற்சியெடுக்கக் கூடாது என்பது அன்று; மாறாக,
துன்பங்கள் வழியும் இறைத் திருவுளம் நம்மில்
நிறைவேறுகிறது என்பதை நாம் உணர வேண்டும் என்பதே கருத்து.
துன்பம் வழி வாழ்வு : துன்பம் ஒரு புதிர்
"
நான் ஏன் துன்பப்பட வேண்டும்? குற்றம் ஒன்றும்
செய்யவில்லையே. நல்லவர்களுக்கு வாழ்வு இவ்வுலகில்
இல்லையா? கடவுளுக்குக் கண்ணில்லையா?"
' என்பதெல்லாம்
துன்பக் குழுறல்களின் வெளிப்பாடு என்பதை உணர்வோம்.
நம்முடைய வாழ்விலும் இத்தகைய கேள்விகள் எழாமலில்லை.
எனினும், இறைத்திட்டத்திலே துன்புறும் ஊழியன்
வேதனைப்படுவது தனக்காக அன்று, தன்னைப் பாவங்களில்
இருந்து விடுவித்துக் கொள்வதற்காக அன்று; ஆனால்
பிறருக்காக , பிறர் தம் பாவங்களிருந்து விடுதலை
பெறுவதற்காக என்பது உணரற்பாலது. "
அவர்களுடைய
அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொண்டார் ', "
பலருடைய
பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து
பேசிணார் ' (53 : 11 - 12) என்பதன் மூலம் இக்கருத்து
அப்பட்டமாக வெளிப்படுகிறது. கிறிஸ்துவும் "
பலருடைய
மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார் '
(மாற். 10 : 45) என்பார் மாற்கு.
கிறிஸ்துவின் வழியே கிறிஸ்தவனின் வழியுமாகும்.
"
கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு
முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார் (1 பேது. 2 : 21 -
24). ஆம், சிலுவை வழியைத் தவிர வேறு வழியை அவர்
நமக்குக் காண்பித்துச் செல்லவில்லை. "
எமக்காக இறைவா,
இடர்பட வந்தீர். ' நாங்களும் பிறருக்காக இடர்படப்
பின்வாங்காத மனவுறுதியைத் தாரும் என்று வேண்டுவோம்.
"
பாவிகளுக்காக அவர் பரிந்து பேசினார் ' (எசா 53 : 12).
நாமும் நம்முடைய அன்றாட செபங்களிலே பாவிகள் மனம்
திரும்ப வேண்டுவோம் . நம்முடைய துன்ப துயரங்கள்
அனைத்தையும் பாவிகளின் மனமாற்றத்திற்காக
ஒப்புக்கொடுப்போம்.
அவர் பாவிகளுள் ஒருவனாகத் கருதப்பட்டார். அவர்
பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்.
இரண்டாம் வாசகம்: எபி. 4:14-16
நம்முடைய தலைமைக் குருவாகிய இயேசு இறைவன்பால் ஆழ்ந்த
நம்பிக்கையுடையவர்; அதே வேளையில் மனிதர் பால் அளவற்ற
இரக்கம் மிகுந்தவர் (எபி. 2 : 17 - 18) என்பது
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் சாரமாகும். இன்றைய
வாசகத்திலே கிறிஸ்து தலைமைக் குரு மனிதர் பால்
காட்டும் அளவிறந்த இரக்கம் பற்றிக் கூறப்படுகிறது.
கிறிஸ்து தனிப்பெரும் தலைமைக் குரு
மனிதருக்கும் இறைவனுக்கும் இடையே நின்று இருவரையும்
இணைக்கும் பாலம் குரு எனலாம். மனிதர்களுடைய வேண்டுதல்
மன்றாட்டுக்களை இறைவனிடம் எடுத்துச் செல்வதும்,
இறைவனின் ஆசியையும் அருளையும் மனிதருக்குக்
கொணர்வதும் இவரது பணி. எனவே தான் இவர் "
இடையாளர் '
எனப்படுவார். கிறிஸ்துவோ இவ்இடையாளர்களுக்கு எல்லாம்
தலைமையானவர். "
"
விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.
அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன்
நிற்கிறார் (எபி. 9 : 24). பழைய உடன்படிக்கையின்
குருக்கள் முன்கூடாரத்திலும், தலைமைக் குரு பின்
கூடாரத்திலும் ஆண்டுக்கு ஒரு முறை நுழைவது வழக்கம் (9 :
6 - 10). கிறிஸ்துவோ "
முன்னதைவிட மேலானதும்
நிறைவுள்ளதுமான கூடாரம் ஒன்றைக் கடந்து ஒரே முறையில்
எக்காலத்திற்குமே தூயகத்தில் நுழைந்துவிட்டார் (9 : 1).
எனவே இவரே தனிப்பெரும் தலைமைக்குரு. நமக்கு வாழ்வும்
வளமும் மன்னிப்பும் மகிழ்வும் பெற்றுத்தரும் தலைமைக்
குரு நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுமாறு வேண்டுவோம்.
கிறிஸ்து இரக்கம் மிகுந்த தலைமைக் குரு
பழைய உடன்படிக்கையின்படி தலைமைக் குரு தலைமுறை அட்டவணைப்
படி, லேவியர் குலத்திலிருந்து வந்தவர். "
சாதாரண
இஸ்ரயேல் மக்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டவர்.
ஆனால் கிறிஸ்து தலைமைக் குருவோ நம்மோடு நாமானார்.
பாவம் தவிர மற்றனைத்திலும் நம்மில் ஒருவரானார்.
"
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான்
தெரியும் ' என்பது மரபு. நம்முடைய இழிநிலை, சோதனை,
துன்பங்கள் அனைத்தையும் தனதாக ஏற்றார் கிறிஸ்து. இவை
யாவும் அவர் ஏற்றது நமது ஈன நிலையை அறிந்து, நம்மோடு
அவரும் துன்பப்பட்டு, அதன் வழி நம்மைத்
துன்பத்திலிருந்து மீட்பதற்காக. "ஊனும் இரத்தமும் கொண்ட
பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார்
' (எபி. 2 : 14). மனிதரைத் தன் "
சகோதரர்கள் என்று
ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை, எல்லாவற்றிலும்
சகோதரர்களைப் போலானார் (காண் : எபி. 2:10 - 18).
ஒன்றிலே மட்டும் அதாவது பாவத்தைப் பொ றுத்தமட்டிலும்
அவர் நம்மிடமிருந்து வேறுபட்டார் (4 : 15). இவ்வாறு
இயேசு தம் மக்களோடு இணைந்த நிலையிலே தன் தலைமைக்
குருத்துவத்தை வாழ்ந்ததுபோல, நாமும் நம்முடைய குருத்துவ
அழைப்பை (காண் : 1 பேது. 2 : 9; விப. 19 : 5 - 6)
பிறருடைய துன்ப துயரங்களில் பங்குகொள்வதன் மூலம்
வாழ்ந்து காட்ட வேண்டும். எங்கெல்லாம் துன்பம் துயரம்,
நோய் நோக்காடு, இன்னல் இடைஞ்சல், எளிமை ஏமாற்றம்,
தாழ்வு தனிமை, வேதனை வருத்தம் உளவோ, அங்கெல்லாம் நாமும்
இருக்க வேண்டும். இதுவே நமது குருத்துவ அழைப்பு.
கிறிஸ்துவை அணுகி வேண்டுவோம்.
"
வானங்களை எல்லாம் கடந்து: சென்ற ' கிறிஸ்து குரு (4 :
14) நமக்காக இறைவனிடம் பரிந்து பேசும் சக்தி
வாய்ந்தவர். "
கடவுளின் வலப்புறத்திலே அமர்ந்திருக்கும்
அவர் ' (10 : 12) கடவுளிடம் வல்லமையுள்ளவர்.
"
நமக்காகப் பரிந்து பேசுவதற்கெனவே என்றும் வாழ்கிறார்
(7 : 25). நாம் எத்தகைய பாவச்சேற்றில்
அமிழ்ந்துவிடினும் "
தந்தையிடம் பரிந்து பேசுபவர்
ஒருவர் நமக்கு இருக்கிறார் (1யோ. 2 : 1) என்ற ஆம்ந்த
நம்பிக்கையோடு அவரைத் துணிவுடன் அணுகிச் செல்வோம்.
"
கனித்துணை நீ நிற்க யான் தருக்கித் தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய் (திருவா. நீத்தல்
விண்ணப்பம்)
அவர் நம்மைப்பால் ஒருவர். தக்கவேளையில் உதவக்கூடிய
இயேசு குரு
நற்செய்தி மாற்கு: 10:35-45
இயேசு பன்னிரண்டு திருத்தூதர்களை அழைத்தார். அவர்களில்
இருவர் யாக்கோபும், யோவானும் (1, 19 - 20). இவர்கள்
நமதாண்டவருடன் 3 ஆண்டுகள் தங்கி, அவரது போதனையைக்
கேட்டும், எல்லா மனிதர்களிடமும் காணப்படும் போட்டி,
பொறாமை, பதவிஆசை என்ற பலவீனங்கள் இவர்களிடமும்
காணப்பட்டன. இவற்றைத் திருத்தும் வகையில் அமைந்ததே
இன்றைய நற்செய்தி.
தாழ்விலே தான் உயர்வு
யோவானும் யாக்கோபும் தாமே நேரில் இயேசுவிடம் பதவி
கேட்டதாக மாற்கு குறிப்பிடுகிறார். ஆனால் மத்தேயு
இவர்களின் தாய் சலோமி தன் மக்களுக்காக மன்றாடியதாகக்
கூறுகிறார் (20 : 20 - 23). தன் சக திருத்தூதர்களின்
பலவீனத்தை அம்பலப்படுத்த விரும்பாததால் மத்தேயு இப்படிக்
கூறியிருக்க வேண்டும். திருத்தூதர்கள் புனிதர்களாகப்
பிறக்காதது மட்டுமன்று, ஆண்டவருடன் வாழ்ந்த காலத்திலும்
உலக கண்ணோட்டமும், உள்ளப் பேராசையும் நிறைந்தவராகவே
வாழ்ந்தனர் என்பதற்கு இந்நிகழ்ச்சி சான்று. "
நீர்
மாட்சிமையில் வீற்றிருக்கும் பொழுது எங்களில் ஒருவர்
வலப்பக்கமும், மற்றவர் இடப் பக்கமுமாய் அமர அருள்
புரியும்" என வேண்டினர் (10 : 32). அப்பொழுது
நமதாண்டவர் தான் குடிக்கும் கிண்ணத்தையும், தான்
பெறவிருக்கும் திருமுழுக்கையும் குறிப்பிட்டு அதில்
பங்கு பெறும் திடமனது உண்டா எனக் கேட்கிறார். மனித
உருவிலே இறைவன் வந்தது பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு
அன்று. தன்னையே அழித்துக் கொள்வதன் வழியாக மக்களுக்கு
மீட்பு வழங்கவே ஆகும். அவர் தந்தையின் பிரிய மகன்
(மாற். 1 : 11) ; அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதே இவரது
வாழ்வின் குறிக்கோள். இக்குறிக்கோள் கல்வாரியில் தான்
முற்றுப்பெறும். தான் இறைவன் திருச்சித்தத்திற்குப்
பணிந்து நடப்பதுபோல, தன் சீடர்களும் நடக்கவேண்டும்
என்று எதிர்பார்க்கிறார்.
பேரன்பு செய்தாரில் யாவரேஈ பெருந்துயர் எய்தா நின்றார்?
(பாரதியார்!)
பணியே பலி
கிண்ணம் இறைவனது கோபத்தையும் தண்டனையையும் குறிக்கும்
(எரே. 25 :15,17). எனவே தான் துன்பங்கள், பாடுகளின்
சின்னமாக கருதப்பட்டது (எசா. 51 : 17 - 23; எசே. 23, 31 -
33). இதே பொருளில் தான் இயேசு இக்கிண்ணத்தை கெத்சமனித்
தோட்டத்தில் கண்டார் (மாற். 14 : 23). நான்
பெறவிருக்கும் திருமுழுக்கு என்பதும் நமதாண்டவர்
படவிருக்கும் பாடுகளையும் மரணத்தையும் குறிக்கும்.
எனவே இயேசுவின் சீடனாக இருக்க விரும்புபவன், அவரது
மரணத்திலும் பங்குகொள்ள விரும்புபவனாய் இருக்கவேண்டும்.
இந்த இரு திருத்தூதர்களிடம் தொடக்க நிலையில் உலகப்
போக்குத் தென்பட்டாலும், அவர்கள் நாளடைவில் தெளிவு
பெற்று இயேசுவுக்காக வேதனைகள் அனுபவித்து அவரது பாடுகளிலே
பங்கு பெற்றனர்.
தங்களுக்கெனத் தனியிடம் வேண்டிய இந்த இரு
திருத்தூதர்களைக் கண்டு ஏனைய சீடர்கள் பொறாமைப்பட்டனர்.
இவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறார் இயேசு. ஆள்பலம்,
அதிகார பலம் என்ற அடிப்படையில்தான் உலகம் ஒருவனை எடை
போடுகின்றது. "
பிறவினத்தாரிடையே தலைவர்கள் ஆளுகின்றனர்;
உங்களுள் எவன் பெரியவனாக இருக்க விரும்புகிறானோ அவன்
பணியாளனாய் இருக்கட்டும்"
(10 : 44). மற்ற உயிர்களைத்
தனது பணிக்காகப் பயன் படுத்துவதைவிட, தனது சேவையால்
மற்றவர்கள் பயன் அடைய வேண்டும். முதன்மை பெற
விரும்புபவன் பணியாளனாகட்டும். இறுதி இராவுணவு வேளையில்
தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுவதின் வழியாக இயேசு
தன் போதனையைச் சாதனையாக்கினார். ஒவ்வொரு கிறிஸ்தவனும்
திருமுழுக்கின் வழியாக இயேசுவின் மரணத்திலும்
உயிர்ப்பிலும் பங்கு கொள்கிறான். இதைச் செயலில்
காட்டுகின்றோமா? அவரைப்போல் பணி வாழ்வு, பலி வாழ்வு
வாழ்கின்றோமா? இறை அரசைப் பரப்புவதில் என் பங்கென்ன?
என் கடன் பணி செய்து கிடப்பது தானா?
மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவே வந்தார்.
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி
அரியணை ஏறுவதா? அருகில் சென்று
பணிபுரிவதா?
நீட் தேர்வைக் குறித்து பல கலந்துரையாடல்கள் நம்
சமூகத்தில் அரங்கேறு கொண்டிருக்கின்றன. நீட்டின் எண்ணம்
மிக நீண்ட தொலைவில் இல்லையென்றாலும் நீடித்த கொள்கைப்
பிடிப்புடன் நீட் வேண்டாமென்று பலரும் போர்க்கொடி உயர்த்தி
நிற்கும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இப்படிப்பட்ட நிலையில் பள்ளிப்படிப்பை முடித்த பல மாணவ,
மாணவியர் தங்களை இந்த நுழைவுத்தேர்வுக்கு தகுதியுள்ளவராக
மாற்றிட பயிற்சியெடுத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில்
பணம் படைத்தோர் உயர்ந்த நிறுவனத்தில் படித்து நீட்டில்
வெற்றி பெறுகின்றனர். ஆனால் ஏழை எளிய மாணாக்கரோ என்ன
செய்வதென்று விழிபிதுங்கி நிற்கும் அவலமும் அரங்கேறுகிறது.
இத்தகு தருணத்தில் நம் கண்களைச் சற்று அகல விரித்தால் நம்
விழிகளில் விழுந்து விடுகிறது 'ஆற்றுப்படை' என்ற
அறக்கட்டளை. இளைஞர்களின் சக்தி, உலகத்தின் மாபெரும் சக்தி
என்பதை உணர செய்து வருகின்றனர் நம்மில் பல இளைஞர்கள். அந்த
வரிசையில் சென்னையில் உள்ள பெல்லோ சிட்டிசன் பவுண்டேஷன் பல
இளைஞர்களை ஊக்குவித்து தன் பணியை ஆற்றி வருகிறது. இந்த
நிறுவனம் துடிப்புமிக்க செயல்திறனுடன், திறமையாக உள்ள
இளைஞர்களை அடையாளம் கண்டு பெரும் பணியைச் செய்து
வருகின்றனர். அவ்வாறாக, நீட் தேர்வுக்கென்று ஆன்லைன்
மூலமாக பயிற்சி அளித்துக்கொண்டிருந்த கார்த்தி;க்கேயன்
என்னும் இளைஞனை இந்த குழுமம் அடையாளம் கண்டது. அவர்கள் ஒரு
குழுவாக இணைந்து இப்போது ஏழை எளிய மாணவர்களுக்கு தங்களால்;
முடிந்தவரை ஆன்லைன் வகுப்பின் மூலம் நீட் தேர்வுக்கான
பயிற்சியளித்து வருகின்றார். 'ஆற்றுப்படை' என்ற
அறக்கட்டளையின் வழியாக கார்த்திக்கேயனும், பெர்சி மேரி
வர்க்கீசும் தற்போது சென்னையில் மாணாக்கருக்குப் பயிற்சி
அளித்து வருகின்றனர். இவர்களின் இந்த வியத்தகு பணியானது
அரியணையில் நிற்பது என்பதற்கல்ல. மாறாக, முடியாதவர்களின்
அருகில் சென்று முடிந்தவரை ஏன் இயலாத சூழலில்கூட
பணியாற்றுவதன் அடையாளம். ஆகவே பெல்லோ சிட்டிசன் பவுண்டேசன்
மூலம் உதித்த ஆற்றுப்படை அறக்கட்டளை அரியணையில் ஏறுவதைக்
காட்டிலும், அருகில் சென்று பணிபுரிகிறது என்பதே உண்மை!
இறைஇயேசுவில் இனியவர்களே!
இன்றைய இறைவாக்கு வழிபாடானது மிக அழகான ஒரு செய்தியை
வலியுறுத்தி நிற்கிறது. இறைவன் விரும்புவது அரியணை
ஏற்பதையா? அல்லது அருகில் சென்று பணிபுரிவதா? என்பதை மிகத்
தெளிவாக எண்பித்துகாட்டுகிறது இயேசுவின் வாழ்க்கை. இயேசு
தன்னுடைய பணிவாழ்வு யாருhக்கானது. அவரின் இலக்கு மக்கள்
யார்? எத்தகைய பணியைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்
என்பதையெல்லாம் தெளிவாக தன் வாழ்வில் எடுத்துரைத்தார்
(லூக் 4:18-19). அதுமட்டுமல்லாமல் தான் எத்தகைய
வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்து பயணிக்க தந்தை என்னை
அனுப்பியிருக்கிறார் என்பதையும் அவ்வப்போது சொல்லாமல்
இல்லை. தன்னுடைய வாழ்வு எருசலேமில் சிலுவையில்
உயிர்த்துறந்து, உயிர்த்தெழுவது என்கிற ஆழமான சிந்தனையை
அடிக்கடி சீடர்களிடத்தில் உச்சரித்து சில நேரங்களில்
அவர்கள் உணர்வற்றவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை
எச்சரித்து இருக்கிறார். அதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய
நாள் நற்செய்தி அமைந்துள்ளது. இயேசுவின் வாழ்வில் நான்கு
வார்த்தைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தன.
பயணம்
துன்பம்
பணிபுரிதல்
நற்செய்தி அறிவித்தல்
இந்த நான்கின் அடிப்படையில்தான் இயேசு தன் சீடர்களுக்கு
பலவற்றைக் கற்றுக்கொடுத்தார்.
அரசர்களின் பயணம் அடுத்தவர்களுக்கானது அல்ல தங்களுக்கானது.
ஆனால் இயேசுவின் ஒவ்வொரு பயணமும் அடுத்தவர்களுக்கானது.
அரசர்களின் வாழ்வு இன்பத்தில் திளைத்து நிற்பதற்கானது.
ஆனால் இயேசுவின் வாழ்வோ துன்பத்தில் நுழைந்து
நிற்பதற்கானது. அரசர்களின் வாழ்வு அனைத்தும் பணிவிடை
பெறுவதிலே குறியாய் இருந்தன. இயேசுவின் வாழ்வு முழுவதும்
பணிபுரிவதிலேயே கரைந்துபோயின.
அரசர்கள் கட்டளைகளைப் பிறப்பித்து, கால்மேல் கால் போட்டு
அறிவிப்பார்கள். ஆனால் இயேசுவோ காலார நடந்து நற்செய்தியை
அறிவித்தார்.
இயேசு என்னவோ மாபெரும் அரசர்தான். ஆனால் மனிதநேயமிக்க
அரசர். மனிதர்களுக்காக தன் உயிரை இழக்கத் துணிந்த அரசன்.
அத்தகைய அரசனின் வாழ்வெல்லாம் கட்டிவைப்பு, அடிப்பு,
இறப்பு, உயிர்ப்பு இவற்றைப் பொருத்தது. இதை உணர
வழியில்லாமல் உணர்ச்சிவயப்பட்டு உரக்க கேட்கின்றனர்
செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும். என்னக்
கேட்கிறார்கள்: வலப்புறம் மற்றும் இடப்புறம் அரியணையில்
அமரும் உரிமை. இயேசுவின் பதிலோ நான் பருகும் துன்பக்
கிண்ணத்திலும், பெறும் திருமுழுக்கிலும் பங்கேற்பீர்கள்.
ஆனால் அரியணையை வழங்குவது என் தந்தையின் விருப்பம் என்று
நிறைவு செய்கிறார். மற்ற சீடர்கள் கோபம் கொள்கிறார்கள்.
இங்கு நமக்கான பாடமாக இயேசு சொல்ல விரும்புவது என்ன என்பதை
சிந்தித்து பார்ப்போம். இயேசு அரியணைக்கு ஆசைப்பட்ட மனிதர்
கிடையாது. காரணம் இரண்டு:
மாட்சிமிகு அரியணை அவருக்கு ஏற்கெனவே தந்தையால்
கொடுக்கப்பட்டிருக்கிறது (லூக் 1:32), (பிலி 2:6-11).
ஆனால் அவர் அதை வலிந்து பற்றிக்கொண்டிருக்கவில்லை.
தன் பணிவாழ்வின் வழியாக மக்கள் மனமென்னும் அரியணையில்
இயேசு அமர்ந்துவிட்டார்.
தன்னைப் போன்று தம் சீடர்களும் இருக்க வேண்டுமென்று இயேசு
நினைத்தார். அவரின் நினைப்பு இங்கு
மாற்றுச்சிந்தனைக்குட்பட்டதை எண்ணி மிக ஆழமான
படிப்பினைகளைத் தம் சீடர்களிடம் கூறுகிறார்:
தலைவர்கள் அடக்கி ஆளுகிறார்கள் - நீங்கள் அன்புச்
செய்யுங்கள்
அதிகாரம் கொள்கிறார்கள் - நீங்கள் ஆளுமைகளை உருவாக்குங்கள்
பெரியவராக இருக்க ஆசைப்படாதீர்கள் - நீங்கள் தொண்டராய்
இருங்கள்
முதன்மையானவராய் இருக்காதீர்கள் - பணியாளராக இருங்கள்
தொண்டு ஏற்பவராக அல்ல நீங்கள் தொண்டு புரிபவராக இருங்கள்
உயிரை எடுப்பவராக அல்ல பலருடைய மீட்பிற்காய் உயிரைக்
கொடுப்பவராய் இருங்கள்
இவையெல்லாம் இயேசு வெறும் வார்த்தையில் சொல்லவில்லை.
மாறாக, இன்று வாசிக்க கேட்கும் முதல் மற்றும் இரண்டாம்
வாசகத்தின் அடிப்படையில் கற்றுக்கொடுக்கிறார். அரியணை
ஏற்பதில் ஆர்வம் கொள்ளாமல், அருகில் சென்று பணிபுரிய
விரும்புவதே உண்மையான சீடத்துவ வாழ்வு. அதை
பிரமாணிக்கத்தோடு ஆற்றிட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
அதற்கான வழியையும் நமக்கு காட்டுகிறார்.
எவ்வாறு அரியணையைத் தவிர்த்து, அருகில் செல்வது:
முதல் வாசகத்தின் அடிப்படையில், இயேசுவைப் போன்று
துன்பத்தை ஏற்க துணிந்தால், நாமும் அரியணை தவிர்த்து
அருகில் சென்று பணிபுரியலாம். அவர்களின் பணி
எப்படியிருக்குமென்றால்,
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதாய் அமையும்
நேர்மையானதாய் இருக்கும்
தீச்செயல்களைப் பிறருக்காய் சுமப்பதாய் உருவாகும்
நீடு வாழ்வதாய் உதிக்கும்
பிறருக்காய் தன்னை இழப்பதாய் அமையும்
எவ்வாறு அரியணைத் தவிர்த்து, பணிபுரிவது:
இரண்டாம் வாசகத்தின் அடிப்படையில், இயேசுவின் சீடத்துவ
வாழ்வில் பங்கேற்கும் நாம், பின்வரும் சிந்தனைகளை
உள்வாங்கினால் அரியணை தவிர்த்து, பணிபுரிய முடியும்.
இயேசுவின் போதனையை விடாமல் பற்ற வேண்டும்
இறைஇரக்கத்தை நாட வேண்டும்
இறையருளைக் கண்டடைய வேண்டும்
இறைமன்னிப்பை பாவத்தால் புறக்கணிக்காமல் இருக்க வேண்டும்
இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச்செல்ல வேண்டும்
இவற்றையெல்லாம் நாம் செய்கையில் நிச்சயமாய் இறைவிருப்பத்தை
நம்மில் நிறைவேற்றும் அன்பர்களாய் வாழ்வோம். அத்தகைய
வரத்தை வேண்டி செபிப்போம்.
நம்முடைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்து
இருக்கின்ற ஆயர் மாமன்ற (2021-2023) சிந்தனைகள்கூட அரியணை
ஏற்பதை காட்டிலும், அருகில் சென்று பணிபுரிவதற்கான
வாய்ப்புகளே என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஆயர் மாமன்றத்தின் மூன்று வார்த்தைகள் அருகில் சென்று
பணிபுரிவதன் அடையாளங்களே தோழமை, பங்கேற்பு, பணி
(communion, participation, mission) எனவே நாமும் இறைவனின்
துணையோடு தோழமையுணர்வுடன், பங்கேற்பு மனநிலையோடு, பணி
செய்திடவும், பரமன் இயேசுவின் சீடத்துவ வாழ்வில் நம்மை
இணைத்துகொள்ளவும் அருள்வேண்டுவோம். அரியணையைத் தவிர்த்து
அருகில் சென்று பணிபுரிவோம்!
மறையுறை அருள்பணி. ஜெ. ஞானசேகரன்
கைம்மாறு கருதாத மறைப்பணி!
19-ஆம் நூற்றாண்டில் (1819-1900) இங்கிலாந்தில் வாழ்ந்தவர்
ஆங்கில எழுத்தாளர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர் ஜான்
இரஸ்கின் (John Ruskin). ஒரு கிறிஸ்தவரின் வாழ்வுப் பயணம்
எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதை ஓர் அழகிய உருவகத்தின்
வழியே இவர் கூறுகிறார்.
ஜான் இரஸ்கின் அவர்கள் ஒருநாள் நண்பர் ஒருவருடன் தன்
வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்தார். சூரியன் மறைந்து, இருள்
சூழும் நேரம் அது. அவரது வீட்டுக்குமுன் அமைந்திருந்த ஒரு
குன்றில், தெரு விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சுடர்விடத்
துவங்கின. மின்சக்தி இல்லாத காலம் என்பதால், தெரு விளக்குகளை
ஏற்றியபடி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவர் யார் என்று
இரஸ்கின் அவர்கள் வீட்டிலிருந்து பார்க்க முடியவில்லை. ஆனால்,
அவர் கையில் ஏந்திச் சென்ற விளக்கும், அவர் தெருவில் ஏற்றிவைத்த
விளக்குகளும் இருளில் ஒளிர்ந்தன. அதைக் கண்ட ஜான் இரஸ்கின்
தன் நண்பரிடம், "
தெருவிளக்கை ஏற்றும் அவர்தான் உண்மையான
கிறிஸ்தவருக்கு எடுத்துக்காட்டு. அவர் யாரென்று நம்மால்
பார்க்க முடியவில்லை என்றாலும், அவர் செல்லுமிடத்தையெல்லாம்
ஒளிமயமாக மாற்றுகிறார். அதேபோல், உண்மைக் கிறிஸ்தவர்களும்
தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ளாமல், செல்லுமிடங்களை
ஒளிமயமாக்குகின்றனர்"
என்று கூறினார். இன்றைய ஞாயிறு சிந்தனையைத்
துவக்க உதவியாக அமைகிறது இந்த உருவகம்.
எங்குச் சென்றாலும் அரியணைகளும் மாலைகளும் மரியாதைகளும் தங்களுக்கு
மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற வேட்கையோடு நடைப்பயணம்
மேற்கொள்ளும் அரசியல் மற்றும் சமயத் தலைவர்களின் உலகப்போக்கிற்குச்
சவால்விடும் வண்ணம் பணியாளர் தலைமைத்துவம் (Servant
Leadership) பற்றிக் கற்றுத் தருகிறார் இயேசு. பணியாளர் தலைமைத்துவம்
என்பது கைம்மாறு கருதாமல் மக்களுக்குத் தொண்டாற்றும் தலைமைத்துவம்.
இன்று பலருமே தங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென
விரும்புகிறார்களே தவிர, பிறர் தேவைகளில் உதவிடும் பண்புள்ளவர்கள்
மிகச் சிலரே. அவ்வாறு தொண்டாற்ற முன்வருபவரே இயேசுவின் வழி
சீடர்கள் என இன்றைய வாசகங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
இன்றைய முதல் வாசகம் ஆண்டவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குத்
தம்மையே முழுமையாகக் கையளிக்கின்ற ஒரு குற்றமற்ற ஊழியரைப்
பற்றிய பாடலாக அமைகிறது. தம் ஊழியரை நொறுக்கவும், நோயால்
வதைக்கவும், ஆண்டவர் திருவுளம் கொள்கிறார் என்று இறைவாக்கினர்
எசாயா கூறுவதை இன்றைய முதல் வாசகத்தில் (53:10-11)
கேட்கிறோம்.
யார் இந்தத் துன்புறும் ஊழியர்? ஆண்டவரின் ஊழியர் யார் என்பதில்
திருவிவிலிய அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும்,
திருஅவையும் புதிய ஏற்பாடும் இயேசு கிறிஸ்துவில் இந்த ஆண்டவருடைய
ஊழியரைக் காண்கின்றன. "
அவர் தம் உயிரைக் குற்ற நீக்கப் பலியாகத்
தந்தார்"
(53:10) என எசாயா குறிப்பிடுவது இயேசுவில் மட்டுமே
முழுமை பெறுவதை நம்மால் காண முடிகிறது. "
பலரின் பாவத்தைச்
சுமந்தார்"
(53:12) என்ற வார்த்தைகள் இயேசுவுக்கு மட்டும்தான்
பொருந்தும். நற்செய்தி நூல்களில் இயேசுவின் பாடுகளையும்
இறப்பையும் பற்றி வாசிக்கும்போது, அவரில் துன்புறும் ஆண்டவரின்
ஊழியரைப் பார்க்க முடிகிறது. ஆண்டவரின் துன்புறும் ஊழியராக
தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, தாம் எவ்வாறு சிலுவை மரணத்திற்கு
உள்ளாவோம் என்பதை இயேசு தம் சீடருக்குக் கூறியதை இன்றைய நற்செய்தியில்
காணமுடிகிறது. ஏற்கெனவே இருமுறை தம் சீடரிடம் தாம் சந்திக்கப்போகும்
துன்பங்களையும் மரணத்தையும் குறித்துப் பேசிய இயேசு, இப்போது
மூன்றாம் முறையாகத் தம் மரணத்தைக் குறித்துப் பேசுகிறார்.
முன்னணிச் சீடர்களான செபதேயுவின் மக்கள் யாக்கோபும்,
யோவானும் இயேசுவோடு அரியணையில் ஏறும் வாய்ப்பு வேண்டும் என்று
விண்ணப்பிக்கின்றனர் (மாற் 10:35-45).yh
இயேசுவின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளாமல் சீடர்கள் சுயநலம்
நிறைந்த எண்ணங்களில் உ லாவி வந்ததை நற்செய்தியாளர் மாற்கு
மூன்று முறை குறிப்பிடுகிறார் (மாற்கு 8:31-33; 9:33-37;
10:35-40). இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வலப்பக்கமும்,
இடப்பக்கமும் இரு அரியணைகளில் அமர்வதற்குத் தங்கள் விருப்பத்தைத்
தெரிவிக்கும் யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய இருவரிடம்,
"
நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை"
என்று இயேசு சொல்கிறார். இன்றைய தலைவர்களும்கூட அரியணையில்
ஏறுவதற்கும், ஏறியபின் அங்கேயே தொடர்ந்து அமர்வதற்கும் அவர்கள்
மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் அறிவோம்.
மதியிழந்து, அறியாமையில் இயேசுவிடம் யாக்கோபும் யோவானும்
முன்வைத்த வேண்டலுக்கு, தாம் குடிக்கும் கிண்ணத்திலும்,
தாம் பெறும் திருமுழுக்கிலும் சீடர்கள் முதலில் பங்கேற்க
வேண்டும் என்று இயேசு கேட்டுக்கொள்கிறார். இங்கு சொல்லப்படும்
கிண்ணமும் திருமுழுக்கும் இயேசுவின் பாடுகளைக் குறிக்கின்றன.
திருமுழுக்கு என்பது வாழ்க்கையில் சந்திக்கும் கடின போராட்டங்களுக்கு
ஓர் உவமையாக இங்கே கூறப்படுகிறது.
இயேசு குறிப்பிட்ட கிண்ணத்தையும் திருமுழுக்கையும் சீடர்
ஏற்றுக்கொண்டாலும்கூட பதவிகளும் பொறுப்புகளும் "
யாருக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே தரப்படும்"
என இயேசு
மொழிகிறார். அதாவது, அதிகாரத்தைத் தருவது சீடத்துவம் அல்ல;
மாறாக, பணிபுரிவதும் துன்புறுவதற்குமான உள்ளார்ந்த வலியைத்
தருவதுமே சீடத்துவம். ஒருவர் அதிகாரத்தை எதிர்நோக்கி ஆண்டவரைப்
பின்பற்றக் கூடாது. ஏனெனில், இயேசு அதிகாரத்தைப் பறைசாற்றுகிறவர்
அல்லர் என்பது இங்கே சொல்லப்படுகிறது. பதவிகளைச் சீடர்கள்
நாடிச் செல்லக் கூடாது; அவை சீடரை நாடி வரவேண்டும். பதவி
என்பது பணி செய்வதற்கே என்று திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவைத்
தலைவராகப் பொறுப்பேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரை நம்
நினைவுக்கு வருகிறது.
யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் பெற்ற விளக்கத்தைச் சரியாகப்
புரிந்துகொள்ளாத ஏனைய சீடர் அவர்கள்மீது கோபம் கொள்ளத் தொடங்கியது
சீடரிடையே இருந்த பதவி ஆசைகளை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.
சீடர்களின் ஆபத்தான இந்த மனநிலையை உணர்ந்த இயேசு அவர்களிடம்
புதிய சட்டத்தை முன்வைக்கிறார்.
இறையாட்சிப் பணியில் தொண்டுதான் அடிப்படையாக இருக்கவேண்டும்.
அனைவருக்கும் பணியாளராக இருப்பவர்தாம் முதன்மை பெறுவர்;
அவர்களே பொறுப்புகளைப் பெறவும் தகுதி உடையவர்கள். இத்தகைய
புதிய கருத்திற்குத் தாமே ஒரு மகத்தான முன் உதாரணம் என்று
இயேசு காட்டுகிறார். அதாவது, மெசியா - தாவீதின் வாரிசு,
கடவுளின் மகன், மானிட மகன், ஆற்றல் மிக்கவர் என்றாலும்,
அவர் தொண்டு ஏற்கும் அதிகாரத்தை விடுத்து, பிறருக்குத்
தொண்டு செய்யவும், அத்தொண்டின் வழியாக மக்களுக்கு இறையாட்சி
அல்லது மீட்புத் தரவும், அதே தொண்டின் விளைவாகத் தம்முயிரையே
தியாகம் செய்யவும் தாம் உலகிற்கு வந்ததாக இயேசு உறுதியுடன்
அறிக்கையிடுகிறார். இயேசு பணி மற்றும் தாழ்ச்சிக்கு உதாரணமாக
இதனைவிட வேறு எதனையும் காட்ட முடியாது. மெசியாவே தொண்டராகவும்,
பலியாகவும் மாறுகின்றபோது, சாதாரண சீடர்கள் நாம் எந்நிலையில்
இருக்க வேண்டும் என்பது இங்கே சட்டமாகிறது.
கைம்மாறு கருதாமல் இயேசுவின் வழிசென்று மக்கள் பணியாற்றும்
சீடர்களாக நாம் மாற வேண்டுமெனில் இரண்டு மனநிலைகள் தேவை:
1. மக்கள் நிலை இறங்கும் மனநிலை. 2. மக்கள் நிலை அறியும்
மனநிலை.
இயேசுவைப்போன்று மக்கள் தொண்டாற்ற முன்வரும் சீடர் முதலில்
தன் நிலைநின்று கீழ்நிலை இறங்கி வரும் மனம்வேண்டும்.
"
இயேசுவின் சீடராக வாழ விரும்புவோர், நற்செய்தி விடுக்கும்
அழைப்பை ஏற்று, எளியோருள் எளியோராக மாறி பணிபுரிய
வேண்டும்"
என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (மூவேளைச் செப
உரை, 21.10.2018). இதையே இன்றைய இரண்டாம் வாசகமும், "
நம்
தலைமைக்குரு எல்லா வகையிலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டவர்"
(எபி 4:15) எனக் கூறுகிறது. அதாவது, இயேசு மானிட
மீட்புக்காகத் தம் நிலை நின்று நம் நிலை இறங்கி வந்தார்.
அவருடைய மக்கள் நிலை இறங்கும் மனநிலையே மக்கள்
தொண்டாற்றும் சீடரின் முதல் தகுதி.
இரண்டாவது மக்கள் நிலை அறிதல் தொண்டாற்றும் பணிக்கு மிக
அவசியம். மக்களின் சுமைகள், வலிகள், கவலைகள், துக்கங்கள்,
எதிர்பார்ப்புகள் என அனைத்தையும் அறிந்து தொண்டு செய்யவும்
இயேசுவைப்போல "
உயிரைக் கொடுப்பதற்கு"
(10:45) தயாராக இருக்கும்
பணியாளராக இருக்கவேண்டும். இதுவே இயேசுவழி செல்ல நாம் கற்றுக்கொள்ள
வேண்டிய அன்றாட வாழ்க்கைப் பாடம்.
நிறைவாக, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் நான்காம்
ஞாயிறை உலக மறைப்பணி நாளாகச் சிறப்பிக்கிறோம்.
"
எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்"
(மத்
22:9) என்பது இவ்வாண்டின் மையச்சிந்தனை. "
மறைப்பணி என்பது,
எவ்விதச் சோர்வுமின்றி மீண்டும் மீண்டும் மக்களை நோக்கிச்
சென்று, அவர்கள் இறைவனைச் சந்திக்க வர அழைப்பதாகும்"
என்பதை
உணர்ந்து கைம்மாறு கருதாமல் மறைப்பணியாற்றுவோம் (மறைப்பணி
தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி, 02.02.2024). நற்செய்தி
அறிவிக்கும் பணிக்கெனத் தங்களையே அர்ப்பணித்துள்ள மறைப்பணியாளர்களை
நன்றியோடு எண்ணிப் பார்ப்போம்.
அருள்பணி. ஜெ. ஞானசேகரன்
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ