திருக்குடும்பப் பெருவிழாவை
கொண்டாடி ஆசி பெற வந்திருக்கும் நெஞ்சங்களே!
இன்று திருச்சபை திருக்குடும்பப் பெருவிழாவை
கொண்டாடி மகிழ்கின்றது. இயேசு மரி சுசை என்ற குட்டிக் குடும்பம்,
நம்மை அன்போடு இந்தத் திருப்பலிக்கு இன்று வரவேற்கின்றது.
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம். குடும்பம் மனிதன் கண்டெடுத்த
மணிமகுடம். குடும்பம் குழந்தைகள் புத்துக் குலுங்கும் புந்தோட்டம்.
குடும்பம் வாழ்க்கைப் பாடம் நடத்தும் பள்ளிக்கூடம். குடும்பம் பக்தி,
ஒழுக்கம், அன்பு, பரிவு, பாசம், பகிர்தல், உறவு கற்றுக் கொடுக்கும்
தேவாலயம். குடும்பம் என்ற அமைப்பே, உலகை ஐPவனுள்ளதாய் வைத்துள்ளது.
குடும்ப உறவுகளுக்காக மனிதன் பழிபாவங்களுக்கு அஞ்சி வாழ்கின்றான்.
நாகரீகமற்ற மனிதனை நாகரீகமாக மாற்றியது குடும்பம். பிணக்குகள் வந்தால்
பேசித் தீர்த்து, குடும்ப அமைப்பை காப்பாற்றுவோம். விட்டுக்
கொடுத்து வாழ்தலும், சரியான புரிதல்களும், ஒப்பீடல்;கள் இல்லாத குணங்களும்,
குடும்பவாழ்வின் அவசியங்கள்.
குடும்பம் எப்படியோ அப்படியே சமூகம். சமூகத்தின் அடித்தளமான குடும்பத்தை
பூந்தோட்டமாய், பள்ளிக்கூடமாய், ஆலயமாய் எப்படி பராமரித்து வளர்த்தெடுக்கின்றோம்
என, சற்றே ஆழமாக சிந்திப்போம். சமூகம் உயர குடும்பத்தை உயர்த்துவோம்;.
வளர்ந்து வரும் நாகரீக உலகில் நமது குடும்பங்கள் எப்படி வளர்கின்றன?
பணம் சம்பாதிக்க நேரம் ஒதுக்கும் தந்தையர் பிள்ளைகளின் பாசம் சம்பாதிக்க
நேரம் ஒதுக்குகின்றோமா? பெற்றோரின் தூய அன்பை பிள்ளைகள் மறப்பது ஏன்?
அன்பினை அடித்தளமாகக் கொண்டு அடுத்தவர்களின் உணர்வுகளை மதித்து,
குடும்பத்தில் பொறுப்புடன், வெறுப்பின்றி விருப்பத்தோடு பகிர்ந்தால்,
அங்கே திருக்குடும்பம் மலரும். மகிழ்ச்சியின் பிறப்பிடம் குடும்பம்.
இறைவன் உறையும் மையம் திருக்குடும்பம். தியாகங்கள் நிறைந்த அன்பு,
துன்பத்தில் உடனிருக்கும் பாசம். கடவுளின் பராமரிப்புக்கு
முழுமையாத் தந்த ஒத்துழைப்பு. இதனால் உலகம் போற்றும் உயர் குடும்பமானது
இயேசு மரி சூசை என்ற குட்டிக் குடும்பம். இயேசு மரி சூசை என்ற
குட்டிக் குடும்பத்திடம் நம் குடும்பங்களை அர்ப்பணிப்போம். நமது
குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் நீங்கி தியாகம், அன்பு, பாசம் நிரம்பி
வழிய, வரம்தர, இந்தத் திருப்பலி நமக்கு வாய்ப்புத் தருகிறது. இணைந்து
ஜெபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
திருக்குடும்பத்தின் தலைவரே இறைவா!
திருச்சபை என்னும் மாபெரும் குடும்பத்தை வழிநடத்தும்
நமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரையும்
ஆசீர்வதியும். குடும்ப உணர்வோடு திருச்சபையின் மதிப்பீடுகளை,
இறைமக்கள் குடும்பங்களில் வளர்த்தெடுக்கும் வித்துக்களாக,
திருப்பணியாளர்களுக்கு உமது ஆவியின் அருள் தர
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உலக நாடுகளுக்கெல்லாம் தலைவரே எம் இறைவா!
நாட்டுமக்கள் எல்லோரும், ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற
கொள்கையோடு வாழ, தடையாக இருக்கின்ற வேற்றுமை எண்ணங்களை
அகற்றி, சமத்துவ சகோதரத்துவ உணர்வோடு வாழ, நாடுகளின்
தலைவர்கள், எல்லா மக்களுக்கும் எல்லா வசதி வாய்பபும்
கிடைக்கச் செய்ய உழைக்க, அருள் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
எங்கள் தலத்திருச்சபை என்ற குடும்பத்தின் தலைவரே இறைவா!
இங்கே கூடியிருக்கின்ற தலத்திருச்சபை என்ற, இறைமக்களின்
தலைவராக இருந்து, எங்களை வழிநடத்தும் எங்கள் ஆன்மீகத்
தந்தைக்கு, உடல் உள்ள சுகம் தந்து, இந்த தலத்திருச்சபையை
உமது ஆன்மீக வழியில் நடத்திட அருள் தர வேண்டுமென்று,
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எங்கள் குடும்பங்களின் தலைவரே இறைவா!
இன்று எல்லாக் குடும்பங்களுக்கும் உமது ஆசீரை நிறைவாகத்
தாரும். பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தில் தங்கள்
பொறுப்புக்ளை உணர்ந்து, ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து, பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு
உமது திருக்குடும்பத்தைப்போல் வாழ, அருள் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மாபெரும் தலைவரே இறைவா!
பிரச்சனையால் பிரிந்து வாழும் தம்பதியினர், நோயினால்
அவஸ்தைப்படுவோர், மகப்பேறின்றி வாடுவோர், வரன்
தேடுவோர், திருநங்கைகள், முதியோர், நலிவுற்றோர், ஆதரவற்றோர்,
உடல் ஊனமுற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், இங்கே
வரஇயலாத நிலையில் இருக்கின்றவர்கள் அனைவரையும்
ஆசீர்வதியும். இவர்களுக்கு பாசமும் பரிவும் ஏராளமாகக்
கிடைக்கக் கூடிய சூழ்நிலையை, குடும்பங்களில் நீரே
உருவாக்கி, எல்லோரையும் பேணிப்பாதுகாக்க வேண்டுமென்று,
இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.
எழுச்சி மிக்க இறைவா!
இளைஞர்களை சிறப்பாக நாங்கள் இன்று நினைவுகூருகின்றோம்.
திருக்குடும்ப விழாவினை சிறப்பிக்கும் இன்று,
இளைஞர்கள் தங்கள் குடும்பங்களில் தங்களது பொறுப்புகளை
உணர்ந்து, தவறான வழியில் பாதை மாறி சென்று விடாமல்,
நல்ல வழியில் சென்று திருக்குடும்பத்தில் ஒரு
அங்கத்தினராக மாறி, உம் அன்பில் திளைத்திட இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
மறையுரை சிந்தனைகள்
ஒருவன் தந்திரம் மந்திரம் நிறைந்த வேலைகளைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டான்.
எனவே அவன் எல்லா இரகசியங்களும் தெரிந்தவர் என்று கருதப்பட்ட ஒரு
துறவியிடம் வந்து சேர்ந்தான். தனக்கு ஒன்றும் தெரியாது என்று
துறவி மறுத்துப் பார்த்தார். வந்தவன் விடுவதாக இல்லை. சித்து
இரகசியங்களைத் தெரிந்து கொள்ளாமல் போகமாட்டேன் என்று அங்கேயே
தங்கிவிட்டான். இறுதியாகத் துறவி ஒருநாள் அவனிடம் நன்றாகக் கவனி.
இதுதான் மந்திரம். வெறுமனே ஓம் ஓம் என்று ஓம்காரத்தை திரும்பத்
திரும்பச் சொல்லிக் கொண்டிரு. அந்த மந்திரத்தோடு ஒன்றல்ல அனைத்து
சித்துக்களின் இரகசியங்களும் உனக்குக் கிடைக்கும் என்றார்.
அவன் வீட்டுக்குப் புறப்பட்டான். அவன் வாசலை விட்டுக் கீழே இறங்கும்
முன்பு துறவி அவனை அழைத்தார். நான் ஒரு விசயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன்.
குளித்துவிட்டு நீ அந்த மந்திரத்தை உச்சரிக்க உட்காரும் முன்,
உனது நினைவில் குரங்குகள் மட்டும் வராமல் பார்த்துக்கொள் என்று
இரக்கம் தொனிக்கக் கூறினார். அவன் என் வாழ்நாளில் எனது மனதில்
எந்தக் குரங்கும் நுழைந்தது கிடையாது. கவலைப்படாதீங்க என்றான்.
நான் கவலைப்படவில்லை. உனக்கு ஞாபகப்படுத்தவே அதைச் சொன்னேன்.
ஏனென்றால் ஒரு குரங்கு வந்து என் காரியத்தை எல்லாம்
கெடுத்துவிட்டது என்று நீ என்னிடம் பிறகு குறை கூறக் கூடாதல்லவா?
அதற்காகத்தான் கூறினேன் என்றார் துறவி. ஜென்மத்திற்கும் எனக்கு
குரங்கு ஞாபகம் வராது என்று ஜம்பமாகக் கூறிவிட்டுக் கிளம்பினான்.
ஆனால் அவன் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றபோது அவனுக்கு ஆச்சரியம்
ஏற்பட்டது. அவனது மனத்திரையில் குரங்குகள் பெருங்குரங்குகள் பல்லை
இளித்துக்கொண்டு சொறிய ஆரம்பித்தன. உடனே அவன் அடக் குரங்குகளே
வெளியே போங்கள் போய்த் தொலையுங்கள் என்று கூறி அவைகளை
வெளியேற்ற முயற்சித்தான். ஆனால் ஒரு குரங்கல்ல ஒரு பெருங்கூட்டமே
எல்லாப் பக்கங்களிலிருந்தும் தன் மனதிற்குள் வருவதைக் கண்டு
அவன் ஆச்சரியப்பட்டான்.
கடவுளே! எனது மனதில் இத்தனை குரங்குகள் ஒளிந்து
கொண்டிருக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை! முதலில்
நான் குளித்துவிட்டு வருகின்றேன் என்று போய் அவன் குளிக்க ஆரம்பித்தான்.
அவனால் குளிக்க முடியவில்லை. ஏனெனில் தொடர்ந்து அவன்
ஓடிப்போங்கள் தொலைந்து போங்கள் என்று குளியலறையில் கத்த
வேண்டியதாயிற்று. அந்த அளவுக்கு ஏகப்பட்ட குரங்குகள் அங்கேயும்
எப்படியோ குளித்துவிட்டுப் பூஜை அறையில் வந்து அமர்ந்தான். ஆனால்
குரங்குகள் உள்ளுக்குள் இருந்தன. அவன் கண்களை மூடிக் கொண்டான்.
அவனைச் சுற்றிலும் குரங்குகள் உட்கார்ந்திருந்தன. அன்று இரவு
அநேக தடவைகள் அவன் குளித்தான். அநேக முறைகள் அவன் செபித்தான்.
ஆனாலும் குரங்குகள் அவனை விட்டுப் பிரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால்
அவனது குளியலறை முழுவதும் குரங்குகள் நிறைந்துவிட்டன. அவனது
பூஜை அறை முழுவதும் குரங்குகள் அமர்ந்திருந்தன. ஒருபெரிய குரங்கு
தலைமாட்டில் உட்கார்ந்தபடி ஓம், ஓம், என்று கத்திக் கொண்டிருந்தது
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
காலை வரை தன்னால் காத்திருக்க முடியாது என்று அவன் எண்ணினான்.
ஆசிரமத்திற்கு ஓடினான். துறவியை எழுப்பினான். சாமி எனக்கு எந்தவிதமான
சித்துக்களும் வேண்டியதில்லை. இரகசியங்களும் வேண்டியதில்லை. இந்தக்
குரங்குகளை மட்டும் ஒழிப்பதற்குத் தயவு செய்து எனக்கு உதவுங்கள்.
அவை எல்லா இடங்களிலும் அமர்ந்திருக்கின்றன. என்னைக்
காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினான். அதில் பிரச்சினையே
கிடையாது. சித்து வேலைகளைக் கற்க வேண்டும் என்ற எண்ணத்தை நீ
விட்டுவிட்டால் அந்தக் குரங்குகள் தாமே மறைந்துவிடும் என்றார்
துறவி. அவ்விதமே அவன் வாழ்விலிருந்து குரங்குகள் மறைந்து
போயின.
குரங்குகள் நம் வீட்டிற்குள் நுழைந்தால் அவைகளை விரட்டி விடலாம்.
வேண்டாத சிந்தனைக் குரங்குகள் நம் மனத்திற்குள் நுழைந்தால் அவற்றையும்
பெரு முயற்சி செய்து துரத்திவிடலாம். ஆனால் வீணான சந்தேகக்குரங்குகள்
உள்ளத்தில் நுழைந்துவிட்டால்..? அவை நன்கு சம்மணம்
போட்டு உட்கார்ந்துவிட நாம் இடம் கொடுத்துவிட்டால்? அந்தச்
சந்தேகக் குரங்குகள் கோலேடுத்து நம்மை ஆட்டுவிக்கிற அளவுக்கு
நாம் விட்டுவிட்டால், அதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்
என்பதையும் பலரின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
சித்துக் கலையில் முக்தி அடைய விரும்பிய அந்த மனிதனின்
வாழ்க்கையில் நடந்ததென்ன?
குரங்குகளைப் பற்றி மட்டும் எண்ணாதே என்று சொல்லி அனுப்பினார்
துறவி. ஆனால் குரங்குகள் தான் அவனது தோழர்கள் என்கிற அளவுக்கு
ஆகிவிட்டது. உண்மையில் குரங்குகள் இருந்தனவா? பின்பு அவைகள் எங்கிருந்து
வந்தன? அவ்வளவும் அவனது கறபனையே! குரங்குகள் தோன்றியதும் செயல்பட்டதும்
அவனது மனத்திலே.
பல குடும்பங்களில் இந்தக் குரங்குகள் ஆட்டம் போட்டுக்
கொண்டிருக்கின்றன. சந்தேகக் குரங்குகள் ஒரு கணவனின் மனத்தை ஆக்கிரமித்து
விட்டால் அந்தக் குரங்குகளை அவன் வெளியேற்றாதவரை அவனுக்குப் பிரச்சினைகள்தான்.
இத்தகைய ஆசாமிகளுக்கு இருக்கும் அடுத்த பிரச்சினை குடிப்பிரச்சினை!
குடியையும் விடமாட்டார்கள். மனைவிமேல் கொண்ட சந்தேகத்தையும் விடமாட்டார்கள்.
சுயமாகச் சிந்திக்க செயல்பட அந்தச் சாராயம் அவர்களை விடாது. இத்தகைய
கணவர்களின் அடுத்த கட்டப் பிரச்சினை, மனைவியின் ஆளுமையை சுதந்திரத்தைப்
பறிப்பது அல்லது கொச்சைப்படுத்துவதுதான்.
ஓரேயடியாக ஓவர் கண்ட்ரோல் பண்ணுவார்கள். தம் துணைவியாரை ஒரு மனிதப்
பிறவியாகவே கருதவோ, நடத்தவோ மாட்டார்கள். இப்படிச் சந்தேகநோயும்,
குடிநோயும், துணைவியை நோகடிக்கும் நோயும் கொண்டிருக்கின்ற
குடும்பத்தில் பிறக்கிற குழந்தைகள் எவ்வாறு வளரும்? அவர்களின்
எதிர்காலம் எப்படி இருக்கும்?
தாய் நண்டும் மகள் நண்டும் பேசிக் கொண்டே நடந்துபோயின.
திடீரென்று தாய் நண்டுக்குக் கோபம் வந்தது. நில்! என்று கத்தியது.
மகள் நண்டு அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டது. எவ்வளவு அசிங்கமாக
நடக்கிறாய் என்று பார். மகள் நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை.
மற்ற எல்லாரையும் போல நீ ஏன் நடக்கக்கூடாது? மற்றவர்கள் நேரே
முன்னோக்கி நடக்கிறார் கள். நீ ஏன் கோணலாக நடக்கின்றாய்? என்று
கர்ஐpத்தது தாய் நண்டு.
மகள் நண்டு சிரித்தது. ஏன் சிரிக்கிறாய்?அம்மா இவ்வாறு நடக்க
நீதானே எனக்குக் கற்றுக் கொடுத்தாய்? உன்னைப் பின்பற்றி நானும்
அப்படியே நடக்கிறேன். அப்புறம் ஏன் என்னைத் திட்டுகிறாய்? மகள்
நண்டு சொல்வது உண்மை என்று தாய் நண்டு புரிந்து கொண்டு மவுனம்
சாதித்தது. நடக்காத கதை! பேசாத நண்டு! ஆனால் அது சொல்லாமல்
சொல்கிறது ஓர் உண்மையை. என்ன அது?
பிள்ளைகளின் நடத்தைக்கும் பெற்றோரின் நடத்தைக்கும் அசாத்திய ஒற்றுமை
உண்டு. தாயைப் போல பிள்ளை! நூலைப் போல சேலை! அப்பனுக்குப்
பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்பன போன்ற சொல்வடைகள் உணர்த்துவது
என்ன? பெற்றேரைப் போலத்தான் பிள்ளைகளும் இருப்பார்கள். விதை ஒன்று
போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்? அப்பனை அப்படியே உரிச்சு
வச்சிருக்கான்! மூக்கு முழியைப் பாரு. அப்படியே ஆத்தா
மாதிரி! என்று அத்தைகளும் மாமாக்களும் ஊர் பேர் தெரியாத சுற்றங்களும்
உச்சிமோந்து உளறி விட்டுப் போவது வெறும் தோற்றத்தைப் பற்றி மட்டுமல்ல.
அதன் உள்ளே ஊறிக்கிடக்கும் குணங்களையும் பற்றித்தான்!
பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு பெரிய கலை! அது ஒரு கடினமான
காரியம்! அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. என்றெல்லாம் புலம்பும்
பெற்றோர்கள் தமது பேச்சும் செயல்பாடுகளும் பழக்க வழக்கங்களும்,
அந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறாக உள்ளன என்பதை
மட்டும் உணர்வதே இல்லை.
தாயொருத்தி தன் எட்டு வயது மகள் மாலாவை கடற்கரைக்கு ஒரு நாள்
அழைத்துச் சென்றாள். அம்மா நான் மணலில் விளையாடப்
போறேன். வேண்டாம். உடைந்த பீங்கான் கிடக்கும். காலில்
குத்திடும். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு மாலா
மீண்டும் கேட்டாள். அம்மா அதோ அந்தக் குழந்தைகளோடு ஓடிப்பிடிச்சு
விளையாடப் போறேம்மா. வேண்டாம் நீ காணாமல் போயிடுவே.
சிறிது நேரம் பேசாமல் இருந்த மாலா மீண்டும் கேட்டாள். அம்மா
கடல்நீரை ஒரே ஒருமுறை தொட்டுட்டு வர்றேம்மா. என்ன முட்டாள்
பிள்ளை நீ? ஜலதோஷம் பிடிக்காதா? <
அந்த வழியாகச் சுண்டல் வியாபாரி ஒருவன் சென்றான். வாங்கித் தரும்படித்
தாயை வேண்டினாள் மாலா. இதையெல்லாம் சாப்பிட்டா இரவு ஒழுங்காச்
சாப்பிடமாட்டே. சிறிது நேரத்தில் ஐஸ்கிரீம் சும்மா இருக்க
மாட்டே? ஐஸ்கிரீம் தொண்டைக்கு நல்லதில்ல. சிறுமி மாலா அழத்தொடங்கினாள்.
சொல்ற பேச்சைக் கேக்கவே மாங்டேங்குறா. இப்படிப்பட்ட கெட்ட
பிள்ளையை நீங்க எங்கேயாவது பார்த்திருக்கீங்களா? என்று போவோர்
வருவோரிடம் எல்லாம் புகார் செய்து கொண்டிந்தாள் அந்தப் புண்ணியவதி
தாய்! இந்தத் தாய் நமக்கு நல்ல எடுத்துக்காட்டு. எதற்கு?
பிள்ளைகளை எப்படி வள்ர்க்கக்கூடாது என்பதற்கு!
பிள்ளைகளை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தவேண்டும். எந்த அளவுக்குச்
சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதைப்பற்றிச் சிறிது கூட
யோசிக்காமல், வீட்டிலும் வெளியிலும் இராணுவ ஆட்சி நடத்தும் சர்வாதிகாரிகளைப்
போன்றவர்கள் இத்தகைய பெற்றோர்கள்.
பிள்ளைகளுக்கு ஓரளவுக்குக்கூட சுதந்திரமே தராதது முதல் பிரச்சினை!.
தம்மிடமுள்ள அச்சத்தையும் தயக்கத்தையும் குழப்பத்தையும் குழந்தைகளின்மேல்
திணிப்பது இரண்டாவது பிரச்சினை! எப்போதும் எதிர்மறையாகவே
நினைப்பதும், பேசுவதும், முடிவெடுப்பதும் மூன்றாவது பிரச்சினை!
மக்கு, முட்டாள், சனியன், உருப்படாதது, ஆங்காரி, தண்டம் என்றெல்லாம்
முன் தீர்மானம் செய்து அத்தகைய எண்ணங்களையே வெளிப்படுத்துவது
நான்காவது பிரச்சினை! பிள்ளைகளிடம் இருக்கிற அல்லது இருப்பதாக
அவர்கள் தீர்மானிக்கிற குற்றங்குறைகளை, பலவீனங்களை ஊரெல்லாம்
தெருவெல்லாம் பக்கத்து வீட்டுக் கெல்லாம் தண்டோரா போட்டு அறிவிக்காத
குறையாக முறையிடுவது ஐந்தாவது பிரச்சினை. இந்த ஐந்து பிரச்சினைகளின்
குறியீடுதான் . நாம் வாசித்துக் கொண்டருக்கும் இந்த நிகழ்வின்
தாய்.
இத்தகைய தவறான அணுகுமுறைகளும் செயல்பாடுகளும் சட்டதிட்டங்களும்
சில விபரீதங்களைக்கூட வலிய கொண்டு வரலாம்.
கட்டுப்பாட்டில் வளர்ந்த குடும்பம் என்று பேரெடுக்க
முடிவுசெய்து, முயற்சித்த ஒரு குடும்பம் இருந்தது. எல்லாரும்
அமர்ந்து உணவு உண்ணும்போது பேசக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு
அங்கே.
ஒருநாள் குடும்பமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இளைய
பையன் ஜானி தந்தையிடம் ஏதோ சொல்ல விரும்பி அப்பா! என்றான்.
அதிகக் கெடுபிடிக்காரரான அத்தந்தை கண்கள் சிவக்கக் கோபத்துடன்
சாப்பிடும்போது பேசக்கூடாது என்று தெரியாதா? அமைதியாகச்
சாப்பிடு என்று உறுமினார். அமைதியாகச் சாப்பிடும்போது மீண்டும்
பையன் தந்தையை அழைத்து ஏதோ சொல்ல விரும்பினான். இம்முறையும் தந்தை
சினந்து அவனை அடக்கினார். சாப்பாடு முடிந்தது. தந்தை அமைதியாக
ஜானியிடம் நீ கூற விரும்பியதை இப்போது சொல் என்றார். பயனில்லை
அப்பா எல்லாம் முடிந்துவிட்டது. ஒரு கரப்பான் பூச்சியை
சோற்றோடு சேர்த்து உயிரோடு நீங்கள் முழுங்கி விட்டீர்கள். அதைத்
தடுக்கத்தான் வாயைத் திறந்தேன் என்றான் ஜானி. தந்தை மயங்கி
வீழ்ந்தார்.
உரிய கட்டுப்பாடு! ஓரளவு கட்டுப்பாடு !
ஓவர் கட்டுப்பாடு! என மூன்று நிலைகளை வைத்துக் கொண்டால் ஓவர்
கட்டுப்பாட்டின் விபரீதத்தை உணர்த்தவில்லையா இந்தக் கரப்பான்
பூச்சி?
ஒரே குடும்பமாக வாழ்ந்த அண்ணன் - தம்பி குடும்பத்தினரில் தம்பிக்கு
பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல ஆசை. அண்ணனிடம் சென்று அண்ணா!
நான் தனிக்குடித்தனம் போகிறேன். என் பாகத்தைப் பிரித்துக்
கொடுன்னு தம்பி கேட்க. அண்ணன் காரணத்தைக் கேட்டான். தம்பி
எனக்கு உன்மேல கோபம் இல்ல. அண்ணிதான் சரியில்லை னு
சொன்னான். நான் அண்ணியிடம் சொல்லி உன்னை நல்லா கவனிக்கச்
சொல்றேன். தயவுசெய்து போகாதே னு அண்ணன் கேட்டுக் கொண்டான்.
அடுத்தநாள் சாப்பிடும்போது அண்ணி சாதம் போட்டு வழக்கமாக ஊற்றும்
ஒரு கரண்டி நெய்க்கு பதிலாக இரண்டு கரண்டி நெய் ஊற்றினாள்.
சாப்பிட்டு முடிந்ததும் அண்ணனிடம் நான் தனிக்குடித்தனம் போயத்;தான்
ஆகணும். எனக்கே இரண்டு கரண்டி நெய் ஊற்றுகிற அண்ணி உனக்கு நாலு
கரண்டி நெய் ஊற்றுவாள். ஆகமொத்தம் ஒருவேளைக்கு ஆறு கரண்டி நெய்
செலவாகிறது. இப்படி செலவழித்தால் குடும்பம் உருப்படுமா? நான்
தனிக்குடித்தனம் போய் சிக்கனமாய் இருக்கிறேன் -னான் தம்பி.
மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத்
தாங்கிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். நமக்கு உகந்ததையே தேடலாகாது.
அடுத்தவர்களுடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு
அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள். உரோ.15.1இ2.
புது மணமக்களை வாழ்த்திப் பேசும்போது ஒரு பெரியவர் சொன்னார்.
கணவனும் -மனைவியும் டூ இன் ஒன் போல வாழ வேண்டும். டூ இன் ஒன்
சாதனத்துல ரேடியோ பாடும்போது ஒலி நாடாவிலிருந்நு சத்தம் வராது.
டேப்பில் பாட்டு கேட்கும் போது ரேடியோ அமைதியாக இருக்கும். அதேபோல
கணவன் பேசும்போது மனைவி கேட்கணும். மனைவி பேசும்போது கணவன்
கேட்கணும். டூ இன் ஒன் -ல ரேடியோவும் டேப்ரிக்கார்டரும் ஒரே நேரத்துல
பாடினால் அது பழுதடைந்துவிட்டது என்று பொருள். அதுபோல கணவனும்
மனைவியும் ஒரே நேரத்துல பேசினால், குடும்பம் ரிப்பேர் ஆகி பலருடைய
கேலிப் பேச்சுக்கு ஆளாக வேண்டி இருக்கும்.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு,
அன்பு செய்து வாழும் திருமண வாழ்வுதான் முழுமையான மகிழ்ச்சியைத்தரும்.
நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன். உம்
சொற்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. என் உள்ளத்திற்கு உவகை அளித்தன.
உம் பெயரே எனக்கு வழங்காலாயிற்று.எரேமி.15.16
குடும்பம்
பரந்த மனமும் அடுத்தவர்களை அவர்தம் குறைபாடுகளோடு ஏற்றுக்கொள்ளும்
உள்ளமும் இருந்தால், தாம்பத்யம் என்பது போராட்டமாக இருக்காது.
நீரோட்டமாக நீடிக்கும்.
கணவன் மனைவி உறவு என்பது அதிக உரிமைகளைக் கொண்டாடும் ஒன்றாக இருக்கிறது.
ஒருவர்மீது மற்றொருவர் ஆதிக்கம் செலுத்த ஆசைப்படும் உறவாக உள்ளது.
அதனாலேயே பல தம்பதிகள் வெகு விரைவில் சலித்துப் போகிறார்கள்.
நம் எல்லோர் வீடுகளிலும் அழைப்புமணியை அமைத்திருக்கின்றோம்.
கதவில்லாத வீடுகளுக்கு அழைப்புமணி அவசியமில்லை.
இவர்கள் (பெற்றோர்கள்) தங்கள் சிறகுகளால் மூடி மூடித் தங்கள்
வாரிசுகளைக் காப்பாற்ற முனையும் பொழுதெல்லாம் அவர்கள் (பிள்ளைகள்
) பறக்கின்ற முனைப்பைத் தொலைத்துவிடுகிறார்கள்.
பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் தொலைக்காட்சிப் பெட்டியின்
முன் அமர்ந்து தொலைந்துபோனால், தன் குழந்தைகளுடைய திறமைகளை எப்படிக்
கண்டுபிடிக்க முடியும்?
சனி ஞாயிறுகளில் வெளியே சென்று வருபவனுக்கு வீடே சொர்க்கமாகத்
தோன்றும். அல்லது வீட்டை சொர்க்கமாக்கும் உபாயம் தெரியும்.
குழந்தையைப் பார்க்கின்ற போது நாம் ஒரு குழந்தையைப் போல்
மாறிவிட வேண்டும். பூக்களுக்கு அருகே செல்கிறவன் தானும் ஒரு
பூவாக மாறிவிட வேண்டும்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி:
பற்றீசியா
குடும்பம் என்பது அன்பு உள்ளங்களின் சங்கமம். ஆழமான உறவுகளின்
அர்ப்பணம். சமுதாய கட்டமைப்பின் அடிப்படையான ஓர் அங்கம்.
ஒரு கோவில். அங்கே இறைவன் பிரசன்னமாகிறார். குடும்பம் இறைவனால்
அமைக்கப்பட்ட ஒரு தெய்வீக அமைப்பு. நாசரேத்தில் வாழ்ந்த
திருக்குடும்பத்தை, நினைவு கூருகிறோம். இன்றைய காலங்களில்
வேலைப்பளு, மன அழுத்தம், சோர்வு, பரபரப்பு, அவசரம் என்று சதா
ஓடிக்கொண்டேயிருக்கும் மனிதர்களுக்கு, குடும்பம் வெறும் துணி
மாற்றும் அறைகளாக மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. படைப்பு இஸ்ராயேல்
மக்களின் விடுதலை வரலாறு, மீட்பின் வருகை என இம்மூன்று நிகழ்வுகளிலும்
குடும்ப உறவு இழையோடி, நிற்கிறது. மேலும் ஆபிரகாம், சாரா, ஈசாக்கு,
ரபேக்கா, யாக்கோபு, லேயா, ரேச்சல் என்ற முதுபெரும் தந்தையர்களின்
குடும்பங்களும் தோபியா, சாரா என இணைத் திருமறையின் குடும்பமும்,
யோசேப்பு - மரியாள் என புதிய ஏற்பாட்டுக் குடும்பமும், குடும்ப
உறவில் அன்பை, தியாகத்தை, பகிர்தலை, எதிர்நோக்கியிருத்தலை நமக்குக்
கற்பிக்கின்றது.
இயேசுவை நாம் சந்திக்க வேண்டுமானால், அங்கே அவரது குடும்பத்தையும்
நாம் சந்திக்க வேண்டும். இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும்,
யோசேப்பையும், தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்,
கண்டார்கள். (லூக்;: 2.16)
அமைதி:
இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளை லூக்கா நற்செய்தியாளர்
தொகுக்கும்போது, திருக்குடும்பத்தைப்பற்றிய இடத்திலெல்லாம் ஒருவிதமான
அமைதியை அடிநாதமாக எழுதுகின்றார். மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம்,
தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக் கொண்ருந்தாள். (லூக்:
2-19) இயேசுவின் பிறப்பு, அவர்களை ஆழ்மன அமைதிக்கு அழைத்துச்
செல்கின்றது. நம் குடும்பங்களில் இருக்க வேண்டியது இத்தகைய அமைதிதான்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் மிக நீண்ட பயணம், தன் ஆழ்மனதை
நோக்கிய பயணம்தான். அமைதியில் திளைக்கும் குடும்பம்தான்,
வெற்றி பெற முடியும். எந்நேரமும் சண்டை சச்சரவுகளையும், எரிச்சலையும்,
சலசலப்பையும் கொண்டிருக்கும் குடும்பம், தோல்வியில்தான்
முடியும். கற்களும், செங்கற்களும் கொண்டு, ஒரு அழகிய கட்டிடத்தைக்
கட்டலாம். அதை இல்லமாக மாற்றுவது அமைதியான மனங்கள்தான்.
ஒழுங்கு:
இதில் ஒழுங்கு என்பது ஒருவர் மற்றவரைக் கட்டுக்குள் கொண்டுவரத்
துடிக்கும் வேகத்தையல்ல. மற்றவரின் நலன் காப்பதுதான் நோக்கம்.
வழியில் எச்சரிக்கைகள், வேகத்தடைகள்
Signal இவைகள் எல்லாம் நம்மைக்
கட்டுப்படுத்த அல்ல. நம் நலனுக்காய், நாம் பத்திரமாய் வீடு
திரும்புவதற்கே. குடும்பத்தில் நிலவ வேண்டிய ஒழுங்கும், ஒழுக்கமும்
அடக்கி ஆள அல்ல. பிறர் நலனுக்கே. பிறர் நலன் என்று வரும்போது,
சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், தூக்கியெறியத் துணியவேண்டும்.
யோசேப்பு, மரியா கருவுற்றிருக்கிறார் என்று தெரிந்தும் ஏற்றுக்கொண்டபோது,
யூத மரபை மீறத் துணிகின்றார். மரியா மற்றும் குழந்தையின் நலன்
காக்கிறார்.
இறை நம்பிக்கை:
இறை நம்பிக்கை, திருக்குடும்பத்தின் ஆணிவேராக இருந்ததுபோல, நம்
வாழ்விலும் இருக்க வேண்டும். இறைவன் மையமாக இருக்கும் குடும்பமே
இணைந்து நிற்கும். நம்மிடம் குறைவுபடுகின்ற வெறுமையை மற்றவரிடம்
தேடும்போது வறுமையும், வெறுமையும் இணைந்து வெறுமையே மிஞ்சும்.
அந்த இடத்தில் இறைமையைத் தேடினோமென்றால் நம் குறைகள்
நிறைவாகும்.
தேவ ஆவியால் நிரப்பப்பெற்று, கருவுற்று ஆண்டவர் யேசுவை குழந்தையாகப்
பெற்ற மரியாவும், வளர்ப்புத் தந்தையாகத் தரப்பட்ட புனித சூசையப்பரும்
குழந்தையாகத் தாலாட்டி, சீராட்டி கையில் எடுத்து ஏந்தி, ஏரோதிடம்
தப்புவிக்க எகிப்துக்கு ஓடி, பின் திரும்ப ஜெருசலேமுக்கு வந்து,
இறுதியாக நாசரேத்தில் அன்பால், பாசத்தால் உடல் வளர்ச்சி மட்டுமல்ல
ஞானத்திலும், அறிவிலும் வளர்ந்து, 12 வயதில் ஜெருசலேமில் தவறவிட்டபோதும்,
ஏக்கத்தோடு இருவரும் தேடி கண்டடைந்த பின், 30 வயதுவரை வளர்த்து
உருவாக்கி, மனித குலத்திற்காக தம்மகனை பலியாக அர்ப்பணித்த
குடும்பம்தான் திருக்குடும்பம். குடும்பத்தின் வெற்றிக்கு அடித்தளம்
கூட்டு முயற்சியும், விட்டுக் கொடுக்கும் மனநிலையுமாகும். இறை
வார்த்தையை ஆழ்ந்து சிந்திக்கும் உள்ளம் தேவை. இறைமகன் பிரசன்னம்
இருக்க இவர்களின் நிறையன்பும், நிறை மகிழ்ச்சியும் உன்னதமான
அர்ப்பணமும், திருக்குடும்பத்தில் மிளிர்ந்தன. குடும்பத்தின்
மையமாக இயேசுவை வைப்போம்.
மனித மாண்பை வளர்க்கும் இல்லமாக அன்பும், அரவணைப்பும்
அக்கறையும், கரிசனையும் நிறைந்திருக்கும் குடும்பமாக இருக்க
அருள் வேண்டுவோம். அன்பு ஒன்றே நம் குடும்பங்களை ஆளட்டும்.
அதற்கு திருக்குடும்பம் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளி விளக்கு,
என்பதை உணர்வோம்.
பீட்டர் ஒரு ஏழைக்குடியானவன். தினமும் நண்பகல் வேளையில்
ஆலயத்திற்குச் செல்வதும், ஐந்து நிமிடங்களிலேயே வெளியே
வருவதும், வழக்கம். நீண்ட நாட்களாகக் கண்காணித்துக் கொண்ருந்த
உபதேசியார், ஒருநாள் அவனிடம் கேட்டார். "
நீ யார். எதற்காகப்
கோவிலுக்குப் போகிறாய்? என்ன செய்கிறாய்? பீட்டர் அமைதியாகச்
சொன்னான். "
கோவிலில் இயேசுவைப் பார்த்து, இயேசுவே! பீட்டர்
வந்திருக்கிறேன். என்று சொல்லிவிட்டுத் திரும்புவேன்"
என்றான்.
ஒருமுறை விபத்தில் அடிபட்டு, அரசாங்க மருத்துவ மனையில்
சேர்க்கப்பட்டான்;. அவன் அங்கு போன நாளிலிருந்து, அங்குள்ள
சூழல், மகிழ்ச்சி நிரம்பியதாக மாறியது. பிறருக்க உதவுவதும்,
அவர்களுக்கு செவிமடுப்பதும், என எல்லோருக்கும் எல்லாமாகச்
செயல்பட்டான். அங்கிருந்த தாதி ஒருவர், அவனிடம், "
எப்படி
இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? என்று கேட்டார். ஓ
அதுவா. தினமும் என்னைப் பார்க்க வரும் என் நண்பரால்தான்,
என்றான் பீட்டர். "
நண்பரா? எப்போது வருகிறார்? நான் ஒருநாளும்
பார்த்ததில்லை"
என்றார். தினமும் பகல் 12 மணிக்கு வருகிறார்.
என் கட்டிலருகே வந்து, "
பீட்டர், இயேசு வந்திருக்கிறேன்"
என்று
சொல்லிவிட்டுப் போய்விடுவார், என்றான் பீட்டர்.
அழகே! நித்திய பேரழகே! மிக தாமதமாகவன்றோ உம்மை நான் கண்டு
பிடித்திருக்கிறேன். கடைசியாகவன்றோ உம்மை அன்பு
செய்திருக்கிறேன். (புனித அகுஸ்தீன்)
நற்கருணையில் பிரசன்னமாய் இருக்கும் இயேசு, நம்மில்
குழுமத்தில் ஒருவராய் இருக்க வேண்டும். இதனை உணர்ந்திருக்க
வேண்டும். இயேசு நம் இல்லங்களை அரசாளட்டும், என்றும் இறைவன்
நம்மோடு இருப்பாராக!
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
மறையுரைச்சிந்தனை -
சகோ. செல்வராணி Osm
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
குழந்தையே தந்தை
நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் உலகின் ஏதோ ஒரு
மூலையில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்: ஒரு ஆணும்,
இன்னொரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும். இன்னொரு பெண்ணும்
திருமணம் செய்து கொண்டிருப்பர். அல்லது இன்னொரு பெண்
தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக டுவிட் செய்து
கொண்டிருப்பார். அல்லது நாம் இருவரும் நண்பர்களாகவே
இருப்போம் என ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ
முடிவெடுத்துக்கொண்டிருப்பர். அல்லது நம் சேர்ந்து வாழ்தலை
இன்றோடு முடித்துக்கொள்வோம் என்ற இருவர் தத்தம் வீடுகள்
நோக்கிச் செல்வர். அல்லது ஒரு பெண் தன் நண்பனுக்கு வாடகைத்
தாயாக இருக்க முன்வருவதாக வாக்குறுதிப் பத்திரத்தில்
கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பாள்.
'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும்
ஆனவள்' என்று ஆண் பெண் ஏற்றுக்கொண்டு, 'ஆதாம் தன் மனைவி
ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப்
பெற்றெடுத்தாள். அவள், 'ஆண்டவரின் அருளால் ஆண் மகன் ஒருவனை
நான் பெற்றுள்ளேன்'' என்று சொன்ன மனிதக் குடும்பம் கடந்து
வந்த பாதையை நினைக்கும்போது, குடும்பம் என்ற நிறுவனம்
இன்று தேவையற்ற சுமையாக, அல்லது தேவைக்கேற்ற சுகமாகப்
பார்க்கும் நிலையில் வந்து நிற்கிறது.
இந்தப் பின்புலத்தில் இன்று நாம் கொண்டாடும்
'திருக்குடும்ப திருவிழா'வை எப்படிப் பொருள் கொள்வது?
கடவுளால் படைப்பின் தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட
சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம் ஒரு தோல்வியா?
'குழந்தையே தந்தை' என்ற மையக்கருத்தில் இன்றைய நாளில்
சிந்திப்போம்.
ஆங்கிலத்தில், 'தெ சைல்ட் இஸ் த ஃபாதர் ஆஃப் தெ மேன்'
(குழந்தையே மனிதனின் தந்தை) என்ற ஒரு சொல்லாடல் உண்டு. இது
ஆங்கில ஆல்பம் பாடல் ஒன்றின் வரிதான். இதை எழுதியவர்கள்
பிரயன் வில்சன் மற்றும் ஃபான் டைக் பார்க்ஸ். இதன் பொருள்
என்ன? 'குழந்தை எப்படி மனிதனின் தந்தையாக இருக்க முடியும்?
மனிதன் தான் குழந்தையின் தந்தை' என நினைக்கிறீர்களா?
நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால், இந்தச் சொல்லாடலின்
பொருள் வேறு. குழந்தையாக இருக்கும்போது ஒருவர்
கற்றுக்கொள்ளும் பழக்கங்களும், பண்புகளுமே ஒருவரை மனிதனாக
உருவாக்குகின்றன. இந்த நிலையில் குழந்தை மனிதனின் தந்தையாக
இருக்கிறது. குழந்தையின் பழக்கங்களும், பண்புகளும்
எங்கிருந்து வருகின்றன? குடும்பத்திலிருந்துதான்.
குழந்தையை தந்தையாக மாற்றுவது குடும்பம்.
திருக்குடும்பத் திருவிழாவின் வாசகங்கள் நம்மை குழந்தை
பிறப்பு நிகழ்வுகளிலிருந்து குழந்தை வளர்ப்பு நிகழ்வுக்கு
அழைத்துச் செல்கின்றன. குழந்தைகள் தந்தையர்களாக உருவெடுக்க
குடும்பம் அவசியமானது என்பதை இன்றைய மூன்று வாசகங்களும்
நமக்குச் சொல்கின்றன.
இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 1:20-22, 24-28)
சாமுவேல் நூலின் முதல் பக்கங்களிலிருந்து
எடுக்கப்பட்டுள்ளது. சாமுவேலின் பிறப்பு மிகவும் சோகமான
பின்பலத்தோடு தொடங்குகிறது. எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த
எல்கானாவுக்கு இரண்டு மனைவியர் - அன்னா ('அருள்'),
பெனின்னா ('விலைமதிப்பில்லாத கல்' 'முத்து' 'மாணிக்கம்'
'மரகதம்'). பெனின்னாவுக்கு குழந்தைப்பேறு இருக்கிறது.
அன்னாவுக்கு இல்லை. இதை ஒரு குறையாக அன்னாவிடம்
சுட்டிக்காட்டுகிறார் பெனின்னா. ஆக, வீட்டில் அவருக்கு
மிஞ்சியதெல்லாம் கண்ணீரும், கேலிப்பேச்சும்தான். இதை
கடவுளிடம் முறையிட சீலோவில் அமைந்திருந்த ஆண்டவரின்
ஆலயத்திற்கு செல்கின்றார். அங்கிருந்த ஏலி என்னும் குரு
அன்னாவின் செபத்தை குடிவெறி என தவறாகப் புரிந்து கொண்டு
அவரைக் கடிந்து கொள்கிறார். அதே நேரத்தில், 'மனநிறைவோடு
செல்ல. இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது
வேண்டுகோளை கேட்டருள்வார்' என்று நல்ல வார்த்தையும்
சொல்கிறார். மேலும், அன்னா ஆண்டவருக்கு ஒரு வாக்குறுதியும்
கொடுக்கிறாள். அன்னாவின் எதிர்பார்ப்புக்களைவிட கடவுளின்
அருள் மிகுதியாக இருக்கிறது. அன்னா ஒரு குழந்தையைப்
பெற்றெடுத்ததோடல்லாமல், அந்தக் குழந்தை இஸ்ரயேலின் மிக
முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாறுகிறது.
சாமுவேல் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு அன்னா மிக முக்கியக்
காரணம். முதலில், அன்னா குழந்தையின் உடல் ஊட்டத்திற்கு
உதவுகிறார். மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பால்
கொடுக்கிறார். அடுத்து, தன் குழந்தையைச் சரியான பாதையில்
தூக்கி நிறுத்துகின்றார். 'நான் அவனை ஆண்டவரிடமிருந்து
கேட்டேன்' என்று சொல்லி, குழந்தைக்கு 'சாமுவேல்' எனப்
பெயரிடுகிறாள். இவள் பெயரிட்டது போலவே, குழந்தையும்
வளர்ந்து தன் வாழ்க்கை முழுவதும் கடவுள் சொல்வதைக்
கேட்டுக்கொண்டே இருக்கிறது. மேலும், அன்னா தன் கணவரிடம்,
'பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன்
ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்'
என்கிறாள். இவ்வாறாக, குழந்தையின் வாழ்க்கைக்கான முடிவை
தானே எடுக்கின்றாள். அக்காலச் சமுதாயம் அத்தகைய உரிமையை
தாய்க்கு வழங்கியது. 'மேமல்ஸ்' என்று சொல்லப்படும்
பாலூட்டி இனம் (சில விலங்குகள் மற்றும் மனிதர்கள்) தன்
குழந்தைக்கு கொடுக்கும் மார்பகப் பாலை நிறுத்தும், அல்லது
குழந்தை தாயிடம் பால் குடிக்கும் நேரம்தான் பால்குடி
மறக்கும் பருவம். இது குழந்தையின் வாழ்வில் மிக முக்கியமான
பருவம். இந்த பருவத்தில்தான் குழந்தை
சார்புநிலையிலிருந்து, தனித்தன்மை (அடானமி) நிலைக்கு
கடந்து போகின்றது. ஆங்கிலத்தில் இந்த பருவத்தை 'வீனிங்
பிரியட்' என அழைக்கின்றனர். 'வீன்' என்ற ஆங்கில
வார்த்தைக்கு 'பழுத்தல்' (அதாவது, பழம் பழுத்தல்) என்பது
பொருள். திராட்சை செடியில் பழுத்த கனிக்கு இனி அந்தச்
செடியில் வேலையில்லை. அது தன் தாயாகிய செடியை விட்டு
விடைபெறும் நேரம் வந்துவிட்டது. இனி அது தாயோடு
ஒட்டிக்கொண்டிருந்தால், புழு வைத்து தாய்க்கும்
ஆபத்தாகிவிடும். தனக்கும்; ஆபத்தாகிவிடும். பால்குடி
பருவத்தில் தாய் என்னும் திராட்சைச் செடியிலிருந்து
உறவுநிலை மாறத் தொடங்குகிறது குழந்தைக்கு. ஒரு
உறவிலிருந்து அடுத்த உறவுக்கு மாறும் பாதைதான் இந்தப்
பருவம். ஆனால் இதை தாயின் உறவின் முறிவு என்று
எடுத்துக்கொள்ளக்கூடாது. உளவியல் அடிப்படையில் எந்த ஒரு
குழந்தை இந்த பருவத்தை சரியாக கடக்கிறதோ, அந்தக் குழந்தையே
'நிறைவு பெற்ற குழந்தை' (ஃபுல்பில்ட்) என்று
அழைக்கப்படுகிறது. ஏன்? ஒரு குழந்தை அதிக நாள் பால்
குடித்தது என்றால் அது பிற்காலத்தில் அடுத்தவர்களை
சார்ந்தே நிற்கும் அல்லது அடுத்தவர்களைக் கேட்டே
முடிவெடுக்கும் மனிதராக உருப்பெறுகிறது. குறைந்த நாளே பால்
குடித்தது என்றால், அடிப்படையிலேயே பாதுகாப்பற்ற,
யாரிடமும் ஒட்டிக்கொள்ளாத, தன்னை மட்டுமே
மையப்படுத்துகின்ற மனிதராக உருப்பெறுகிறது. சாமுவேலின்
தாய் தன் குழந்தையை ஒரு நிறைவுபெற்ற குழந்தையாக
ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்ய விழைகிறாள்.
ஆண்டவரின் இல்லத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்கின்ற
அன்னா, 'அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கே
அர்ப்பணிக்கப்பட்டவன்' என்று கடவுளுக்கான நாசீராக
ஒப்படைக்கின்றாள். அவன் 'ஆண்டவருக்கு' அல்ல, 'ஆண்டவருக்கே'
அர்ப்பணிக்கப்பட்டவன். ஆக, அவனுடைய அர்ப்பணம் இனி வேறு
யாருக்கும் இல்லை. ஆண்டவருக்கு மட்டுமே. இப்படியான
கடினமான, தூய்மையான அர்ப்பண வாழ்வு மற்ற இஸ்ரயேலருக்கு ஒரு
பாடமாக இருந்தது. அவர்களைத் தூய்மை வாழ்வுக்குத்
தூண்டியது. இத்தகைய உயர்ந்து அர்ப்பணத்திற்குத் தன்னை
அர்ப்பணிக்கிறாள் அன்னா. தன் ஒரே மகனை, கடவுள் கொடுத்த
கொடையை அவருக்கே கொடுக்கிறாள். இதுவே அன்னாவின் உயர்ந்த
தியாகம். தன் மகனைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் ஆண்டவரின்
இல்லத்தில் அவன் வளர, அவருடைய அழைப்பைக் கேட்டு இஸ்ரயேலின்
நடுவராக, ஆள்பவராக, அருள்பணியாளராக மாற
விட்டுவிடுகின்றாள்.
சாமுவேல் என்ற குழந்தை இத்தகைய தந்தை என்ற நிலை அடையக்
காரணம் அன்னாவும் அவருடைய கணவரும்தான், அதாவது, அவருடைய
குடும்பம்தான். அன்னா தன் குழந்தையை உச்சி முகர்ந்து
கொண்டாடிவிட்டு, ஆண்டவரிடம் கொடுத்துவிடுகிறார். இதுதான்
முழுமையான அர்ப்பணம். அதாவது, எதையும் திரும்ப
எதிர்பார்க்காத அர்ப்பணம். இந்த அர்ப்பணம்தான்
குடும்பத்தில் கணவனையும், மனைவிiயும் இணைக்கிறது. சேர்ந்து
வாழ்தல் அல்லது ஒரேபாலினத் திருமணம் அல்லது வாடகைத்
தாய்-தந்தை - இந்த எல்லாவற்றிலும் ஒருவர் மற்றவருக்கு
சொல்வது என்ன? 'உன் இடத்தில் நான் யாரையும் வைக்க
முடியும்!' ஆனால், திருமணம் என்ற உறவில் மட்டும்தான், 'நீ
எனக்கு மட்டும்தான்' என்ற நிலை உருவாகிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-2, 21-24)
கடவுளின் குடும்பம் என்ற பெரிய குடும்பத்தைப் பற்றிப்
பேசுகிறது. 'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படும் மக்கள்,
அந்த நிலையில் நிலைத்திருக்க, 'நம்பிக்கை,' 'அன்பு' என்ற
இரண்டு பண்புகள் தேவைப்படுகின்றன. அல்லது, 'நம்பிக்கை'
என்ற கணவனும், 'அன்பு' என்ற மனைவியும் இணைந்து 'கடவுளின்
மக்களை' பெற்றெடுக்கின்றனர். இந்த இரண்டும் கடவுளின்
மக்களை அவர்கள் தொடர்ந்து அதே நிலையில் நிலைத்திருக்க உதவி
செய்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 2:41-52)
திருக்குடும்பம் ஒரு பிரச்சினையைச் சந்திக்கிறது. சிறுவன்
இயேசுவைக் காணவில்லை. திருக்குடும்பம் பாஸ்கா விழாவைக்
கொண்டாட எருசலேம் செல்கிறது. அந்த நேரத்தில் இயேசுவுக்கு
வயது 12. யூத சமூகத்தில், 12 வயதில்தான் ஒரு குழந்தை
முழுப்பருவம் அடைகிறது. இந்த வயதிலிருந்து அக்குழந்தை
யூதச் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவும், அவற்றின்படி
நடக்கவும் வேண்டும் என்பது வழக்கம். அந்தச் சட்டங்களில்
ஒன்றுதான் எருசலேமுக்குத் திருப்பயணம் செல்வது. இந்த
வழக்கப்படியே, இயேசுவை அழைத்துக்கொண்டு தங்களின் ஆண்டு
ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற திருக்குடும்பம் எருசலேமுக்கு
வருகிறது.
இங்கே நற்செய்தியாளர் லூக்காவின் நோக்கம் இயேசுவைக்
கடவுளின் மகன் என்று முன்வைப்பதாகவும், இயேசு செய்ய
வேண்டிய பணிக்கான அர்ப்பணத்தை வெளிப்படுத்துவதாகவும்
இருக்கிறது. தன் பெற்றோருடன் ஆலயம் வரும் இயேசு,
அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன் தந்தையின்
இல்லத்தில் தங்கிவிடுகின்றார். அந்த இல்லத்தில்தான் அவர்
மறைநூல் வல்லுநர்கள் மறைநூலைப் புரிந்துகொள்ளும் விதம்
பற்றிக் கேள்வியெழுப்புகின்றார். சிறுவனாய் இருந்தாலும்,
அவருக்குத் தன் பயணம் முழுவதும் இந்த ஆலயத்தை
மையப்படுத்தியதே என்று அவர் அறிந்திருந்தார்.
இயேசுவின் பெற்றோர்களின் நிலை மிகவும் கடினமானதாக
இருக்கிறது. இது மரியாவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
இருந்தாலும், தாங்கள் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச்
செய்கிறார்கள். முதன் முதலாக இயேசுவை எருசலேமுக்கு அழைத்து
வந்து அவருக்கு அந்த நகரையும், ஆலயத்தையும் அறிமுகம்
செய்கின்றனர். காணாமல்போன இயேசுவைக் கண்டுபிடித்தபின்
அவரைக் கடிந்துகொள்ளும் மரியா இயேசுவின் வார்த்தைகளைக்
கேட்டவுடன் மௌனம் காக்கிறார்: 'இந்நிகழ்ச்சிகளையெல்லாம்
உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.'
ஆக, இயேசுவின் பெற்றோர் இயேசு என்னும் குழந்தையை அறிவு,
கட்டின்மை, ஞானம், உடல்வளர்ச்சி பெற்ற தந்தையாக
மாற்றுகின்றனர்.
இவ்வாறாக, குழந்தையே தந்தையாக மாறுவதற்கு அதன் குடும்பம்
மிக அவசியம். அது சாமுவேல், இயேசுவின் சிறிய குடும்பமாக
இருந்தாலும் சரி. அல்லது, கடவுளின் மக்கள் என்ற பெரிய
குடும்பம் என்றாலும் சரி. தன்னலமில்லாத் தாயாக தன் ஒரே
மகனைத் தயாரித்துக் கடவுளுக்குக் கொடுத்தாள் அன்னா.
நம்பிக்கை மற்றும் அன்பின் வழியே கடவுளின் குழந்தையாக மாற
முடியும் என தன் குழுமத்திற்கு அறிவுறுத்துகிறார் யோவான்.
தங்களின் இரத்த உறவுக் குடும்பத்தைக் கடந்த ஒரு
குடும்பத்தைச் சார்ந்தவர் தன் மகன் என அறிந்துகொள்கின்றனர்
இயேசுவின் பெற்றோர். இவ்வாறாக, பெற்றோர்கள் தங்கள்
வாழ்வின் சூழல்கள் வௌ;வேறாக இருந்தாலும் தங்களின் தாராள
உள்ளத்தாலும், தியாகத்தாலும் தங்கள் குழந்தைகளைத்
தந்தையராக்குகின்றனர். அத்தந்தையர்கள், 'ஆண்டவரின்
இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்' (திபா 84) என்ற
நிலையை அடைகின்றனர்.
இப்படியான ஒரு ரொமான்டிக் குடும்பமாக இன்றைய நம்
குடும்பங்கள் இருப்பதில்லை.
கணவன்-மனைவி சண்டை, திருமணத்திற்குப் புறம்பே உறவு,
அவ்வுறவைத் தக்க வைக்க தன் துணையையும், பிள்ளைகளையும்
கொல்லும் நிலை, குடும்ப வன்முறை, மணமுறிவு, உடைந்த
குடும்பங்கள் என நிறைய எடுத்துக்காட்டுகளை நாம் அன்றாடம்
செய்தித்தாள்களிலும், மற்ற ஊடகங்களிலும் பார்க்கிறோம். நம்
குடும்பமும் இந்த ஒரு இக்கட்டான நிலையில்தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறது. தங்கள் குழந்தைகள்மேல்
பொறுப்புணர்வு குறைந்த பெற்றோர்களையும், தங்கள்
பெற்றோர்களை மதிக்காத குழந்தைகளையும்தான் இன்று நாம்
அதிகம் பார்க்கிறோம். இந்தப் பின்புலத்தில்
திருக்குடும்பம் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
பெற்றோர்களின் வாழ்க்கைமுறை குழந்தைகளை நிறையப்
பாதிக்கிறது. 'நண்டு புறாவைப் பெற்றெடுப்பதில்லை' என்பது
ஆப்பிரிக்க பழமொழி. ஆக, பெற்றோர்களைப் போலவே பிள்ளைகளும்
இருக்கிறார்கள், இயங்குகிறார்கள். ஒரு சமூகத்தின்
வளர்ச்சியின் அளவுகோலாக இருப்பது குடும்பமே.
இன்று நாம் நம் இருப்பில் இருக்க நம் குடும்பங்கள் காரணமாக
இருப்பதுபோல, நம் குழந்தைகளின் இருப்பு இருக்க நம்
குடும்பங்கள் காரணமாக இருத்தல் வேண்டும். மனுக்குலத்தின்
மிகத் தொன்மையான இந்த நிறுவனத்திலிருந்தே மனுக்குலம்
தழைக்கிறது. இந்நிறுவனம் வழியாகவே குழந்தை தந்தையாகிறது.
ஏனெனில், குழந்தையே தந்தை.
அன்னாவின் தியாக உள்ளம், எல்கானாவின் மனைவியை மதிக்கும்
குணம், சாமுவேலின் நீடித்த அர்ப்பணம், யோசேப்பின் தேடல்,
மரியாளின் ஏக்கம், இயேசுவின் பணித்தெளிவு ஆகிய அனைத்தும்
நம் குடும்பங்களுக்கும் ஊக்கம் தருவனவாக.
இன்றைய நாளில் நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம்
உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவரையும் எண்ணிப்பார்த்து
இவர்களின் இருப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
இவர்களே நம் ஒவ்வொருவரின் வேர்கள்.
குழந்தையரைத் தந்தையர்களாக, தாயார்களாகக் கனவு
கண்டவர்களும், அந்தக் கனவுகளை நனவுகளாக்கியவர்களும்
இவர்களே!
அன்பில் மலரும் குடும்பங்கள்
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,-arulvakku.com
தாய் தந்தை அவர்களுடைய ஒரே செல்ல மகள் என்றிருந்த
குடும்பத்தில் ஒரு நாள் மகள் தந்தையிடம் சென்று, "
அப்பா!
எனக்கு ஒரு சந்தேகம்... மனித இனம் எப்படித் தோன்றியது?
சொல்லுங்கள்"
என்று கேட்டாள். அதற்குத் தந்தை, "
கடவுள்
ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், அவர்களிடமிருந்து
பிள்ளைகள் தோன்றினார்கள். அவர்களுடைய பிள்ளைகளிலிருந்து
பிள்ளைகள் தோன்றினார்கள். இப்படித்தான் மனித இனம்
தோன்றியது"
என்றார். மகளும் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டு அவரிடமிருந்து நகர்ந்து சென்றார்.
பின்னர் சமயலறையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த தாயிடம்
சென்ற மகள் தந்தையிடம் கேட்ட அதே கேள்வியை கேட்டாள். அவளோ,
"
மனித இனம் குரங்கிலிருந்து தோன்றியது"
என்றாள்.
இருவர் சொன்ன பதிலையும் கேட்டுக் குழம்பிப்போன மகள்
மீண்டுமாக தந்தையிடம் சென்று, "
அப்பா மனித இனம் எப்படித்
தோன்றியது என்ற ஒரு கேள்விக்கு இருவரும் இருவேறு விதமாகப்
பதில் தருகின்றீர்கள். இதில் எது உண்மை?"
என்று கேட்டார்.
அதற்கு அவளுடைய தந்தை, "
நான் என்னுடைய முன்னோர் எப்படித்
தோன்றினார்கள் என்று சொன்னேன். உன் தாயோ அவளுடைய
முன்னோர்கள் எப்படித் தோன்றினார்கள் என்று சொல்கின்றார்.
இதில் குழம்புவதற்கு என்ன இருக்கின்றது?"
என்றார்.
இதைக் கேட்டு சமையறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மனைவி
தன்னுடைய கணவன்மீது செல்லமாய் கோபம் கொண்டு முகத்தைத்
திருப்பிக்கொண்டாள். உடனே கணவன் மனைவிடத்தில் சென்று, அவளை
சமாதானப்படுத்தி ஒரு வழிக்குக் கொண்டுவர அக்குடும்பத்தில்
இன்பம் கரைபுரண்டு ஓடியது.
சிறு சிறு சண்டைகள், ஒருவர் ஒருவர்மீதான உள்ளார்ந்த
அன்புப் பரிமாற்றங்கள். இவைகள்தான் ஒரு குடும்பத்தை
இன்னும் உறவில் வலுப்பெறச் செய்கின்றன. "
நெருப்பில்லாமல்
மனித முன்னேற்றமில்லை, குடும்ப உறவில்லாமல் வாழ்க்கை
இல்லை"
என்பார் ராபர்ட் இங்கர்சால் என்னும் எழுத்தாளர்.
ஆம், மனித முன்னேற்றத்திற்கான விதை குடும்பத்தில்தான்
விதைக்கப்படுகின்றன. பின்னர் அது வளர்ந்து நிறைந்த பலனைக்
கொடுக்கின்றது.
இன்று நாம் திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த
நல்ல நாளில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு
என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
கல்லாலும் மண்ணாலும் செங்கற்களாலும் மட்டும் ஒரு வீடானது
கட்டப்படுவதில்லை, அன்பினாலேயே ஒரு வீடு கட்டப்படுகின்றது"
என்பார் மறைந்த நா. முத்துக்குமார் என்ற கவிஞர். ஆம்,
அன்பில்தான் ஒரு வீடானது கட்டப்படுகின்றது. அப்படி அன்பில்
கட்டப்படாத வீடானது ஒருபோதும் உறுதியாக இருக்காது
என்பதுதான் உண்மை.
நற்செய்தி வாசகத்தில் அன்பில் கட்டப்பட்ட ஒரு வீட்டைக்
குறித்துப் படிக்கின்றோம். அக்குடும்பம் வேறெதுவும்
கிடையாது இயேசு மரி சூசையை உள்ளடக்கிய
திருக்குடும்பம்தான். இக்குடும்பத்தில்தான் எத்துணை அன்பு
கரைபுரண்டு ஓடியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கும்போது
உண்மையிலே மெய்சிலிர்க்கின்றது. குறிப்பாக அன்னை மரியா
தன்னுடைய கணவர் சூசையப்பர் மீதும், இயேசுவின் மீதும்
மிகுந்த அன்பு கொண்டிருப்பார்; ஒருசிறந்த மனைவிக்குரிய,
தாய்க்குரிய இலட்சணங்களோடு விளங்கி இருப்பாள் என்று
சொன்னால் அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இத்தனைக்கும்
மரியா தன்னுடைய கணவராகிய யோசேப்பு தன்னைவிட நிறைய வயது
மூத்தவராக இருந்தாலும்கூட அவர்மீது மிகுந்த அன்பு
காட்டியிருப்பார். அந்த அன்பில் யோசேப்பும்
மகிழ்ந்திருப்பார்.
ஆகையால், ஒவ்வொரு மனைவிமாரும் மரியாவைப் போன்று தன்னுடைய
கணவர்மீதும் பிள்ளைகள் மீதும் மிகுந்த அன்பு காட்டி
அவர்களை சிறந்த விதமாய் பராமரிக்கவேண்டும் என்பதுதான்
நம்முடைய மனதில் பதிய வைக்கவேண்டிய முதன்மையான செய்தியாக
இருக்கின்றது.
யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம், "
கடவுள்
நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, (அவருடைய மகன் இயேசுவிடம்
நம்பிக்கை கொண்டு) ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்தவேண்டும். கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்
அவரோடு இணைந்திருக்கின்றார்; கடவுளும் அவரோடு
இணைந்திருக்கின்றார் "
என்று. ஆம், அன்னை மரியா கடவுளின்
கட்டளையான அன்பினை தன்னுடைய கணவர்மீதும், மகன்மீது காட்டி
அதனைக் கடைப்பிடித்துவந்தார். அதனாலேயே கடவுளின் அன்பு
அக்குடும்பத்தில் என்றும் குடிகொண்டிருந்தது. (மரியா
சூசையப்பர்மீது அன்பு காட்டினார் என்று சொல்லும்போது,
சூசையப்பர் மரியாவின் மீதும் இயேசுவின் மீதும் அன்பு
காட்டவில்லை என்று அர்த்தம் கிடையாது. அவரும் மரியாவின்
மீது மிகுந்த அன்பு காட்டினார் என்பதே உண்மை)
ஒரு குடும்பம் சிறந்த, முன்மாதிரியான குடும்பமாக
விளங்குவதற்கு அந்த குடும்பத்தில் இருக்கின்ற மனைவி
மட்டும் அன்புள்ளம் கொண்டவராக இருப்பது போதாது.
அக்குடும்பத்தில் இருக்கின்ற கணவனும் அன்புள்ளம் கொண்டவராக
இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணவர் தன்னுடைய
மனைவிக்கு மிகுந்த மதிப்பளிப்பவராகும் அவருக்கு முன்னுரிமை
கொடுப்பவராகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தக்
குடும்பம் முன்மாதிரியான குடும்பமாய் விளங்கமுடியும்.
இயேசு, மரி, சூசையைக் கொண்ட குடும்பம் திருக்குடும்பமாக
துலங்கியதற்கு சூசை தன்னுடைய மனைவி மரியாவுக்கு மிகுந்த
மதிப்பளித்ததை ஒரு காரணமாகச் சொல்லலாம். இன்றைய நற்செய்தி
வாசகம் சூசை தன்னுடைய மனைவி மரியாவுக்கு முக்கியத்துவம்
கொடுத்து வாழ்ந்ததற்கு மிகச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.
நற்செய்தி வாசகத்தில் சூசையும் மரியாவும் குழந்தை
இயேசுவும் பாஸ்கா விழாவிற்காக எருசலேம் செல்கின்றார்கள்.
சென்ற இடத்தில் குழந்தை இயேசுவோ தொலைந்து
போய்விடுகின்றார். மூன்று நாட்களாக அவரை சூசையும்
மரியாவும் தேடி, இறுதியில் எருசலேம் திருக்கோவிலில் கண்டு
கொள்கின்றார்கள். இங்கே ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்,
எருசலேம் திருக்கோவிலானது எல்லாரும் குழுமி இருக்கக்கூடிய
ஒரு பொதுவான இடம். பொது இடத்தில் பெண்கள் பேசுவதற்கு உரிமை
மறுக்கப்பட்ட காலம் அது. அக்காலத்திலும் கூட சூசை தன்னுடைய
மனைவி மரியாவைப் பேச அனுமதிக்கின்றார். அதனால்தான் மரியா,
"
மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும்
நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோம்"
என்கின்றார். மரியா பொது இடத்த்தில் இவ்வாறு பேசியது, சூசை
தன்னுடைய மனைவி மரியாவுக்கு மிகுந்த முக்கியத்துவமும்
மதிப்பும் அளித்து வந்தார் என்பதைத்தான் காட்டுகின்றது.
ஆகையால், ஒவ்வொரு கணவரும் தன்னுடைய மனைவிக்கு மிகுந்த
மதிப்பளித்து, அவருக்கு தன்னுடைய வாழ்வில் முக்கியத்துவம்
தரவேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு
எடுத்துக்காட்டுகின்றது.
இன்றைக்கு நிறைய குடும்பங்களில் மனைவிக்கு மதிப்பில்லாத
சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கின்றது. மனைவியை ஏதோ போகப்
பொருளாகவும் குழந்தை பெற்றெடுக்கின்ற எந்திரமாகவும்
பார்ப்பதுகூட நிறைய குடும்பங்களில் நிலவும் அவல
நிலையாகத்தான் இருக்கின்றது. இந்த நிலை மாறவேண்டும்,
சூசையைப் போன்று ஒவ்வொரு கணவரும் தன்னுடைய மனைவிக்கு
மிகுந்த மதிப்பளிப்பவராக இருக்கவேண்டும்.
மனைவியும் கணவனும் ஒரு திருக்குடும்பத்தைக் கட்டி
எழுப்புவதற்கு எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்த
நாம், ஒரு குடும்பத்திற்கு கிடைக்கின்ற மிகப்பெரிய
சொத்தாகிய பிள்ளை(கள்) எப்படி இருக்கவேண்டும், அது எப்படி
வளர்க்கப்படவேண்டும். குடும்பத்தில் அதனுடைய பங்கு என்ன
என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் பெற்றோர்கள்
தன்னுடைய பிள்ளைகளை இறைவழியில் எப்படி
வளர்த்தெடுக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றன.
முதல் வாசகத்தில் அன்னா தனக்குப் பிறந்த சாமுவேலை
ஆண்டவரின் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்து, அவரை கடவுளின்
பிள்ளையாகவே வளர்த்தெடுக்கின்றாள். நற்செய்தி வாசகத்தில்
சூசையும் மரியாவும் பனிரெண்டு வயது நிரம்பிய இயேசுவை
எருசலேமில் நடந்த பாஸ்காவிற்கு அழைத்துச் சென்று, அவரை
இறைவழியில் வளர்த்தெடுத்து, கடவுளுக்கு உகந்தவராக
மாற்றுகின்றார்கள். இவ்வாறு சூசையும் மரியாவும் குழந்தை
இயேசுவை நல்வழியில் வழிநடத்திச் சென்ற மிகச் சிறந்த
பெற்றோரை விளங்குகின்றார்கள்.
இன்றைக்கு உள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை
இறைநெறியில் வளர்கின்றார்களா?, அவர்கள்மீது உண்மையான அன்பு
காட்டுகின்றார்களா? அவர்களுக்கு போதுமான நேரத்தை
ஒதுக்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக
இருக்கின்றது.
குருவானவர் ஒருவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும்
அருகாமையில் இருக்கும் சிறைச்சாலைக்குச் சென்று,
அங்கிருக்கும் கைதிகளுக்கு ஆற்றுப்படுத்தும் பணியினைச்
(Counselling) செய்வது வழக்கம். ஒருநாள் அவர் அங்கு
சென்றபோது ஒரு சிறைக்கூடத்தில் பதினெட்டு வயதுக்கும்
குறைவான சிறுவன் ஒருவன் இருந்தான். அவர் அவனைத் தன் அருகே
அழைத்து, அவன் தோள்மேல் கைகளைப் போட்டு வாஞ்சையோடு
பேசியபோது அவன் கண்ணீர்விட்டு அழுது தன்னுடைய கதையை
குருவானவரிடம் சொல்லத் தொடங்கினான். "
என்னுடைய குடும்பம்
வசதியான குடும்பம், என்னுடைய அப்பா எப்போதும் வேலை வேலை
என்று அலையக்கூடியவர், அம்மாவோ என்னை எதற்கும்
கண்டுகொள்ளவே மாட்டார். அதனால்தான் இந்த சிறிய வயதிலேயே
கெட்டு, இந்த சிறைச்சாலையில் கிடக்கின்றேன். ஒருவேளை
என்னுடைய தந்தையும் தாயும் உங்களைப் போன்று என் தோள்மீது
கைகளைப் போட்டு வாஞ்சையோடு பேசி என்னுடைய தவற்றைச்
சுட்டிக்காட்டியிருந்தால், இன்றைக்கு நான் இந்த நிலை
ஆளாகியிருக்க மாட்டேன்"
என்றான்.
ஆம், நிறைய குழந்தைகள் இன்றைக்குக் கெட்டுப்போவதற்குக்
காரணமே பெற்றோர்களின் சரியான வளர்ப்பு இல்லாமையால்தான்.
ஆனால், சூசையும் மரியும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள்
இயேசுவை இறைவனுக்கு உகந்த வழியில் வளர்த்தெடுத்து, உலகம்
போற்றும் பிள்ளையாக மாறினார்கள்.
ஆகவே, திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல
நாளில் நம்முடைய குடும்பங்கள் திருக்குடும்பமாக விளங்க
இயேசு மரி, சூசையை நம்முடைய முன்மாதிரியாகக் கொண்டு
வாழ்வோம். ஒருவர் மற்றவர்மீது உண்மையான அன்பு காட்டுவோம்,
ஒருவர் மற்றவருக்கு உகந்த மதிப்பளிப்போம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
இன்று, நாசரேத்தில் வாழ்ந்த
திருக்குடும்பத்தை நினைவு கூறுகிறோம். தேவ ஆவியால்
நிரப்பப் பெற்று கருவுற்று ஆண்டவர் இயேசுவை, குழந்தையாகப்
பெற்ற மரியாவும், வளர்ப்புத் தந்தையாகத் தரப்பட்ட புனித
சூசையப்பரும் குழந்தையைத் தாலாட்டி, சீராட்டி கையில்
எடுத்து ஏந்தி, ஏரோதிடம் தப்புவிக்க எகிப்துக்கு ஓடி, பின்
திரும்ப எருசலேம் வந்து, இறுதியாக நாசரேத்தில் அன்பால்,
பாசத்தால் இயேசுவை உடல் வளர்ச்சியில் மட்டுமல்ல்
ஞானத்திலும், அறிவிலும் வளர்த்து, 12 வயதில் எருசலேமில்
தவறவிட்ட போதும் ஏக்கத்தோடு இருவரும் தேடிக் கண்டடைந்த
பின், 30 வயது வரை வளர்த்து உருவாக்கி, மனித குலத்திற்காக
மகனையே பலியாக அர்ப்பணித்த குடும்பம் தான் இந்த
திருக்குடும்பம் (லூக். 2:40 - 52).
இத்திருக்குடும்பத்தில் மூவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப்
புரிந்து செயல்பட்டார்கள். நீ பெரியவனா, அல்லது நான்
பெரியவனா என்ற பட்டிமண்டபத்திற்கே இடம் தரவில்லை. இந்தக்
குடும்பத்தின் வெற்றிக்கு அடித்தளமே கூட்டு முயற்சியும்,
விட்டுக் கொடுக்கும் மனநிலையும் ஆகும். இறைவார்த்தையை
ஆழ்ந்து சிந்திக்கும் உள்ளம் கொண்டவர்கள் (லூக். 2:19).
இறைமகன் பிரசன்னம் இருக்க, இவர்களில் நிறை அன்பும், நிறை
மகிழ்ச்சியும் உன்னதமான அர்ப்பணமும் வெளிப்பட்டது.
தாய் தந்தையைப் போற்றி மதித்து வாழ்பவன் எல்லா ஆசீரையும்
பெற்றவன். தாய் தந்தையை மதித்து நடப்பது பாவ
மன்னிப்புக்குச் சமம். அவர்கள் எல்லா செல்வங்களையும்
நிறைவாகப் பெற்று, நீடூழி வாழ்வர் எனக் கூறுகிறது (சீரா:
3:3-6) முதல் வாசகம். மனத்தாழ்ச்சி, கனிவு, பொறுமை
குடும்பத்தில் மேலோங்கி நிற்க வேண்டியவை. இவை
அனைத்திற்கும் மேலாக நிறை அன்பு தேவை என்பதை (கொலோ
3:12-14) இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. கணவன் மனைவியை
அன்பு செய்தல், மனைவி கணவனுக்குப் பணிந்து நடத்தல்,
பெற்றோருக்குப் பிள்ளைகள் கீழ்ப்படிதல் குடும்பத்தை நிறைவு
செய்யும் எனத் திருத்தூதர் பவுல் கூறுகிறார் (கொலோ
3:18-21).
குடும்பம் என்பது அன்பு உள்ளங்களின் சங்கமம். பின் ஆழமான
உறவுகளின் அர்ப்பணம். சமுதாய கூட்டமைப்பின் அடிப்படையான
ஓர் அங்கம். குடும்பம் ஒரு கோயில். அங்கே இறைவன்
பிரசன்னமாகிறார். பாலோடு கலந்த நீர் பாலாகுவது போல, ஆணும்,
பெண்ணும் திருமணத்தால் ஓருடலாகிறார்கள். இது இறைவனால்
அமைக்கப்பட்ட ஒரு தெய்வீக அமைப்பு.
ஒரு மனிதன் கடைக்குச் சென்று தலைக் கவசம் (Helmet) ஒன்று
வாங்கி வந்தான். "ஏனப்பா இந்தக் கவசம் ? மோட்டார் சைக்கிள்
வாங்கி விட்டாயா?" என்று கேட்டார் வழியில் சந்தித்த
நண்பர். "இல்லையடா! நேற்று என் மனைவி பூரிக்கட்டை வாங்கி
வந்து விட்டாள். அதனால் தான் இந்த ஹெல்மட் வாங்கினேன்"
என்றான் இந்த மனிதன். இப்படி வாழ்வது அல்ல குடும்ப வாழ்வு!
ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொன்னான், "சார் எங்க அப்பா
ஆபிசிலே ரொம்ப பெரியவர். ஏனெனில் 5000 பேருக்கு போலீஸ்
அதிகாரி அவர். ஆனால் எங்க வீட்டிலே எங்க அம்மாதான்
பெரியவங்க. ஏன்னா, எங்க அப்பாவையே எங்க அம்மா
அடக்கிவிடுவாங்க!" இதுவும் சரியல்ல!
ஒரு ஆசிரியர் மாணவன் ஒருவனிடம், "தம்பி! பரிணாம
வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறு" என்றார். "சார்!
நான் சிறுவனாக இருந்த போது என் அப்பா என்னைப் பார்த்து
வாடா கன்னுக்குட்டி என்று செல்லமாகக் கூப்பிடுவார். ஆனால்
இப்போ போடா எருமை மாடு என்று திட்டுகிறார். இதுதான் பரிணாம
வளர்ச்சியென்றான்" மாணவன். இதுவும் சரியல்ல!
மாறாக குடும்பம் மனித மாண்பை வளர்க்க வேண்டும் அன்பும்,
அரவணைப்பும், நிலையான பண்புகள் என்பதை குடும்பம்
எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறது. அதற்கு திருக்குடும்பம்
நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு!
கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்
குடும்பம் வாழ்வாங்கு வாழும்.
நமது குடும்பங்கள் நாளும் நம்பிக்கையில் வளர இன்று
திருச்சபை திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகின்றது.
இன்று இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூன்று பேரும் நமக்குத்
தரும் அருள்வாக்கு என்ன ?
மூன்று பேரும் நம் குடும்பங்களைப் பார்த்து, நீங்கள்
எங்களைப்போல, உங்களை அன்பு செய்யும் கடவுள் மீது முழு
நம்பிக்கை வையுங்கள் ! வாழ்வாங்கு வாழ்வீர்கள்
என்கின்றார்கள். இதோ மூன்று பேரின் வாழ்க்கையிலிருந்தும்
மூன்று நிகழ்வுகள்.
அன்று மங்கள் வார்த்தைத் திருநாள்.
லூக் 1: 26 - 35 : கபிரியேல் தூதர் மரியாவின் முன் தோன்றி,
வாழ்க என்ற போது அன்னையின் மனம் சிறகடித்துப் பறந்தது.
ஆனால் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார் என்ற போது அவர் மனம்
கலங்கினார்.
காரணம், கன்னிப்பெண் ஒருத்தி குழந்தைக்குத் தாயானால்
அவளைச் சட்டப்படி கல்லால் எறிந்து கொன்றுவிடுவார்கள்.
ஆனால் தூதர் , கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற போது
மரியா அந்த வானதூதரின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து,
நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்
என்றார் (லூக் 1:38).
இந்த நிகழ்ச்சிக்குப் பின் மரியா ஒருபோதும் கலங்கியதில்லை.
மகன் காணாமல் போன போது மாதா கவலையோடு தேடினார்
(நற்செய்தி). ஆனால் அருள் நிறைந்த மரியா கலக்கத்தோடு
தேடவில்லை !
இதோ யோசேப்பு வாழ்க்கையில் ஒரு நாள் . மத் 1: 19 - 24
முடிய உள்ள பகுதி.
திருமணம் ஆவதற்கு முன்னால் திருமண ஒப்பந்தம் மட்டும்தான்
நிகழ்ந்திருந்தது. மரியா கருவுற்றிருப்பது யோசேப்பிற்குத்
தெரியவருகின்றது. யூத சமுதாயம் இப்படிப்பட்டவருக்கு எப்படி
நீ அடைக்கலம் கொடுக்கலாம்? என்று கேட்டு தன்னைத்
தண்டிக்கக்கூடும் என்ற அச்சம் அவர் மனத்தில்
எழுந்திருக்கும்! அப்போது அவர் ஒரு கனவு கண்டார். கனவிலே
வானதூதரைக் கண்டார். வானதூதர், மாதா கருவுற்றிருப்பது
கடவுளால்தான் என்றார்.
கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து மரியாவை யோசேப்பு
ஏற்றுக்கொண்டார்.
இறுதியாக மத் 26 : 36 - 46 முடிய உள்ள பகுதி.
இயேசுவின் வாழ்க்கையில் வேதனைக்கு மேல் வேதனை, சோதனைக்கு
மேல் சோதனை ; அடிதாங்கும் உள்ளம் இது இடிதாங்குமா? என்ற
நிலை.
அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர் விண்ணகத் தந்தையே! எனது
விருப்பத்தின்படி அல்ல உமது விருப்பப்படியே ஆகட்டும்
என்றார். சிறுவயதில் தன் பெற்றோருக்குள் கடவுளைக் கண்டு
அவர்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார் (லூக் 2:52).
தன் மீது முழு நம்பிக்கை வைத்த இயேசுவை உயிர்த்தெழச்
செய்து விண்ணகத் தந்தை தமது வலப்பக்கத்தில் அமரவைத்தார்.
ஆம். ஒரு குடும்பம் கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் அது
வாழ்வாங்கு வாழும். இதோ நம்பிக்கை என்றால் என்ன? என்பதை
இந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகின்றது.
இரண்டாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்தது.
ஒரு பெண் மட்டும் எந்தச் சுரங்கத்தையும் எந்தப்
பாதுகாப்பான இடத்தையும் தேடிச் செல்லவில்லை. அவர் வீட்டில்
அமைதியாக உறங்கி, அமைதியாக எழுந்தார்.
நான் உறங்கினாலும் என் ஆண்டவர் இயேசு உறங்குவதில்லை
என்றார்.
இந்த மனநிலைக்குப் பெயர்தான் நம்பிக்கை.
கடவுளின் அருளை நாம் பெற ஓர் அழகான வழி உண்டு. அதுதான்
அவர்மீது நமது முழு நம்பிக்கையை வைப்பதாகும். நம்பிக்கை
இருக்கும் இடத்திலே
வாழ்வு இருக்கும்!
வழி இருக்கும்! ஒளி இருக்கும்!
உயிர் இருக்கும்!
பூக்கள் இருக்கும்!
காய்கள் இருக்கும்!
கனிகள் இருக்கும்!
30 மடங்கு, 60 மடங்கு, 100 மடங்கு பலன் இருக்கும்!
எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை இருக்கும் இடத்தில்
அன்பு இருக்கும். நாம் கடவுளையும் மனிதரையும் (இரண்டாம்
வாசகம்) நம்மையும் இயற்கையையும் அன்பு செய்து வாழ்வாங்கு
வாழ்வோம்.
ஒரு வீட்டில் மாமியாருக்கும்
மருமகளுக்கும் இடையே எப்போதும் பயங்கர சண்டை நடக்கும்,
ஒருநாள் சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது, மருமகள் தன்
கணவரிடம், "இந்தாங்க! இந்த வீட்டில் ஒன்று நான் இருக்க
வேண்டும், அல்லது உங்கள் அம்மா இருக்க வேண்டும். உடனடியாக
முடிவு சொல்லுங்கள் " என்றாள். அதற்குக் கணவர், "நீயும்
வேண்டாம்; என் அம்மாவும் வேண்டாம், வேலைக்காரி மட்டும்
இருந்தால் போதும்" என்றார். இதைக்கேட்டு மாமியார், மருமகள்
இருவருமே அதிர்ச்சியுற்றனர்.
இன்று பல குடும்பங்களில் மகிழ்ச்சி இல்லை. கணவரும்
மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர்; அல்லது மணமுறிவு பெற்று
மறுமணம் புரிகின்றனர். இவற்றிற்கு உளரீதியான. பொருளாதார
f"தியான, சமூக ரீதியான பல காரணங்கள் இருந்தாலும்,
அடிப்படையில் இறையியல் ரீதியான காரணங்களை ஆராய வேண்டும்,
ஆண்டின் இறுதிக் கட்டத்தில் திருக்குடும்பப் பெருவிழாவைக்
கொண்டாடுகிறோம். அக்குடும்பத்தில் வளமை பொங்கவில்லை;
செல்வம் கோலோச்சவில்லை, இருப்பினும் அக்குடும்பத்தில்
மகிழ்ச்சி இருந்தது. ஏனென்றால் அக்குடும்பத்தில் கடவுளின்
பிரசன்னமும் கடவுள் பயமும் இருந்தது,
| இன்றைய பதிலுரைப் பாடல் கூறுவதுபோல, ஆண்டவருக்கு அஞ்சி
நடப்பவருக்கு நல்ல மனைவியும் நல்ல குழந்தைகளும் இருப்பர்,
நிலவுலகில் நீண்ட காலம் வாழ்ந்து, தங்களின் பிள்ளைகளின்
பிள்ளைகளைக் காண்பார்கள் (திபா 128), கடவுள் பயமே
ஞானத்தின் ஆரம்பமாகும். கடவுளை மையப்படுத்தாத எந்தக்
குடும்பமும் மகிழ்வுடன் வாழ இயலாது. "ஆண்டவரே வீட்டைக்
கட்டவில்லையெனில் அதைக் கட்டுவோர் உழைப்பு வீணாகும்" (திபா
127:1).
திருக்குடும்பத்தில் கடவுளின் பிரசன்னம் என்றும் இருந்தது.
அருளும் 2.காமையும் நிறைந்து விளங்கிய இயேசுவிடம் கடவுளின்
மகிமை குடி கொண்டிருந்தது (யோவா 1:14) அருள் மிகப் பெற்ற
மரியாவுடன் கடவுள் இருந்தார் (லூக் 1:28). நேர்மையாளரான
யோசேப்பு (மத் 1:19) கடவுளின் திட்டத்தை அறிந்து தூய
ஆவியாரால் கருவுற்றிருந்த மரியாவைத் தமது மனைவியாக
ஏற்றுக்கொண்டார்,
ஒரே ஒருமுறை மட்டும் திருக்குடும்பத்தைச் சோகம் கவ்வியது.
| மரியாவும் யோசேப்பும் இயேசுவை இழந்து துயரத்தில்
மூழ்கினர்.
ஆனால், இழந்த இயேசுவை மூன்றாம் நாள் மீண்டும் கோவிலில்
கண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தனர் (லூக் 2:41-46). நமது
வீட்டில் எல்லா நவீன வசதிகளும் இருந்தும் நாம் நிம்மதியாக
இல்லை , ஏனெனில் நாம், கடவுளையே தொலைத்து விட்டோம்.
ஒருவர் தமது வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டு அதை ஒரு
மின் விளக்குக் கம்பத்தின் அடியில் தேடினாராம். ஏனெனில்
அங்குதான் வெளிச்சம் இருந்ததாம். சாவியைத் தொலைத்தது
ஓரிடம், அதைத் தேடுவது வேறோரிடம்! நாம் இவ்வுலகக்
கவர்ச்சியில் கடவுளைத் தேடுகிறோம். அதில் நாம் கடவுளைக்
காண முடியாது. மரியாவும் யோசேப்பும் இயேசுவைப் பல
இடங்களில் தேடியும் அவரைக் காண முடியவில்லை, இறுதியில்
அவரைக் கோவிலில் கண்டு அகமகிழ்ந்தனர் (லூக் 2:44 - 46).
"என் தந்தையின் இல்லம்' (லூக் 2:43) என்று இயேசு கோவிலைக்
குறிப்பிடுகிறார். ஆண்டவரின் நாள் என்று அழைக்கப்படும்
ஞாயிறு அன்றாவது குடும்பமாகக் கோவிலுக்குச் செல்வோம்.
எல்லா இறைமக்களுடன் இணைந்து. இறைவார்த்தையைக் கேட்டு,
திருவிருந்தில் பங்கேற்று, கடவுளின் அருளையும்
மன்னிப்பையும் பெற்று மகிழ்வோம், கோவிலில் மட்டுமல்ல,
'இல்லத் திருச்சபை' என்று அழைக்கப்படும் நமது
குடும்பத்தில் திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும்
ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக்
கடவுளைப் போற்றுவோம் (கொலோ 3:16),
கலகலப்பில் தொடங்கிய திருமண வாழ்வு கைகலப்பில்
முடிவடைகிறது. திருமணத்திற்கு முன் அவள் ஒர் "ஏஞ்சல்;"
திருமணத் திற்குப்பின் அவள் ஓர் "இடைஞ்சல்;"
திருமணத்திற்கு முன்பு, "உனக்கும் எனக்கும் Sorictlu
Sontling திருமணத்திற்குப் பின்பு உனக்கும் எனக்கும்
Notting, Naling." காரணம், தலைக்கனம், ஆணவம், தான் என்ற
அகந்தை; விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை .
ஒரு பங்குத் தந்தையிடம் ஒரு கணவர் வந்து, "என் மனைவி என்னை
மதிப்பதில்லை; எனக்குக் கீழ்ப்படிவதில்லை; அவளை அடக்குவது
எப்படி என்று சொல்லித்தாங்க சாமி!"
என்று கேட்டார், அதற்கு
அவர், "
அது தெரிஞ்சா நான் எப்பா சாமியார் ஆனேன்?"
என்றாராம்!
"அவளை அடக்கு, அல்லது அவளுக்கு அடங்கு" என்ற நிலைப் பாட்டை
எடுக்காமல், "அவளுக்கு விட்டுக் கொடு; அவளுக்கு
அதிகாரத்தைப் பிட்டுக்கொடு" என்ற நிலைப்பாட்டை எடுப்பதுவே
சாலச் சிறந்தது.
திருக்குடும்பத்தில் ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்த
வில்லை , ஒருவர் ஒருவரை மதித்து அன்புக்கு அடிமையாகினர்,
தொண்டு ஏற்பதற்கல்ல. தொண்டு ஆற்றுவதற்கே கிறிஸ்து
இவ்வுலகிற்கு வந்தார் (மாற் 10:45). கிறிஸ்துவின் மனநிலை
நம்மை ஆட்கொள்வதாக.
குடும்பத்தில் பிள்ளைகள், கணவர்-மனைவி ஆகிய இருவரின்
அன்புக் கனிகள்; அன்பின் நீங்காத நினைவுச் சின்னங்கள்,
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாமல் இருக்க
வேண்டும்; பிள்ளைகளும் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படிய
வேண்டும் (கொலோ 3:20-21),
மகள் தன் அப்பாவிடம், "நான் ஒரு பையனைக் காதலிக்கின்றேன்"
என்றாள். அப்பா அவளிடம், "பையன் எப்படி இருக்கிறான்?"
என்று கேட்டதற்கு அவள், "பையன் வயிற்றுக்குள்ளே
உதைக்கிறான்" என்றாள். வேடிக்கையல்ல, வேதனை; கதையல்ல,
உண்மை! இன்றைய இளைஞரும் இளம் பெண்களும் சமூக ஊடகத்தின்
தாக்கத்தால், தங்கள் பாலுணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல்
திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொண்டு, தங்கள் வாழ்வைப்
பாழ்படுத்துவதுடன், வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டித் தங்களை
வளர்த்தப் பெற்றோர்களுக்கு அவமானத்தைத் தேடித்
தருகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் தங்களுடைய
பிள்ளைகளுக்கு உற்ற நண்பர்களாகவும் சிறந்த
வழிகாட்டிகளாகவும் திகழ அழைக்கப்படுகின்றனர்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விவிலியம் காட்டும் தீர்வு
தன்னலமற்ற அன்பு, "அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்;
அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர் நோக்கியிருக்கும்
... அன்பு ஒருபோதும் அழியாது" (1 கொரி 3:7-8)
எங்கே அன்பு உண்டோ அங்கு சுமையில்லை; அப்படியே
சுமையிருந்தாலும் அது சுகமான சுமையாக மாறிவிடுகிறது.
பெற்றோரும் பிள்ளைகளும்
.
மேலை நாடு ஒன்றில் தொலைக்காட்சி நிலையத்தில் இப்படி ஒரு
வழக்கம். இரவு 8 மணிச் செய்தியைப் படிக்குமுன் ஒரு
கேள்வியை எழுப்புவார்களாம். "இப்போது நேரம் இரவு 8 மணி.
பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் இப்போது எங்கே
இருக்கின்றனர், என்ன செய்கின்றனர் என்று உங்களுக்குத்
தெரியுமா?"
நல்ல பெற்றோர்கள் கூட இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க
வேண்டிய நிலைக்கும் கட்டாயத்துக்கும் தள்ளப்படுகின்றனர்.
எருசலேம் சென்று திரும்பிய முதல் நாள் மாலையிலேயே
யோசேப்பும் மரியாவும் இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க
நேரவில்லையா? இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரியாமல்
கவலைக்கும் சஞ்சலத்துக்கும் ஆளாகவில்லையா?
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் உடல் அளவில், உள்ளத்தளவில்,
ஆன்ம அளவில் எங்கே இருக்கிறார்கள் என்று உங்களுக்குத்
தெரியுமா?
1. உடலளவில் : லூக்.2:44 சொல்கிறது "பயணிகள் கூட்டத்தில்
அவர் இருப்பார் என்று எண்ணினர். நமது பிள்ளை கோவிலில்
இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அதுவோ கோமதி
திரைப்பட அரங்கிலோ, கிரிக்கெட்டு விளையாடுத் திடலிலோ,
அடுத்த வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டி முன்னோ , யார்
கண்டது? அவன் படிக்கும் புத்தகம் என்ன? பழகும் நண்பன்
யார்? பார்க்கும் திரைப்படம் எது? என்பதில் பெற்றோர் கவனம்
செலுத்த வேண்டாமா? பெற்றோரின் ஆதிக்க உணர்வான அடக்குமுறை
அன்று, அக்கறை கலந்த ஈடுபாடு மிகவும் இன்றியமையாதது.
புகழ்வாய்ந்த கவிஞர் கோல்ரிட்சு என்பவரைக் காண அவருடைய
இரசிகர் வந்திருந்தார். உரையாடலில் குழந்தை வளர்ப்புப்
பற்றிய பேச்சு எழுந்தது. ''சிறுவர்கள் சுயமாகச்
சிந்திக்கவும் சுதந்திரமாகச் செயல்படவும் வாய்ப்பு
அளிக்கப்பட வேண்டும். அவர்கள் இளம்பருவத்திலேயே தாங்களாகவே
தக்க முடிவெடுக்கக் கற்றுக்
கொள்ள வேண்டும்" என்றார் நண்பர். அதற்குக் கவிஞர் ''எனது
தோட்டத்தில் உள்ள மலர்களைக் கண்டுகளிக்க சற்றே என்னோடு
வாருங்கள்"
என்று அவரைத் தனது தோட்டத்துக்கு அழைத்துச்
சென்றார். சுற்றுமுற்றும் பார்த்த நண்பர் ''தோட்டமா இது?
எங்கும் களைகள் தானே மண்டிக் கிடக்கின்றன" என்றார். கவிஞரோ
அவரை நோக்கிச் சொன்னார். "நண்பரே உண்மையில் இந்தத் தோட்டம்
உரோசா மலர்கள் நிறைந்ததாகக் காட்சி அளிக்க வேண்டும். ஆனால்
சென்ற ஆண்டு நான் அவை தானாகவே வளரட்டும் என்று நிலத்தைக்
கொத்தி உரமிடாமலும், நீர் பாய்ச்சாமலும் விட்டுவிட்டேன்.
அதன் விளைவு தான் இது"
. ஒடித்து வளர்க்காத முருங்கையும்
அடித்து வளர்க்காத குழந்தையும் உருப்படாது, உறுபயன் தராது.
2. உள்ளத்தளவில் : லூக் 2:45, 46. இரண்டு நாட்கள்
உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் தேடி அவரைக்
காணாததால் கோவில் என்பது தேடலின் கடைசி இடமாக இருந்தது.
சிறுவன் இயேசுவின் எண்ணம், எழுச்சி, இலட்சியம், ஈடுபாடு,
விருப்பம் ஆர்வம் இவை பற்றிய சரியான, தெளிவான பார்வை
மரியாவுக்கும் யோசேப்புக்கும் இருந்ததுபோல் தெரியவில்லையே!
''நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின்
அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத்
தெரியாதா?"
(லூக் 2:49) என்ற இயேசுவின் கேள்விக்கு வேறு
என்ன பொருள்?
3. ஆன்ம அளவில் : இறைவன் சாயலாகப் படைக்கப்பட்ட காரணத்தால்
ஒவ்வொரு குழந்தைக்கும் இறைவன் தொடர்பானவற்றில் இயல்பான ஓர்
ஈர்ப்பு இருக்கும். நன்மையானவற்றில் தனி நாட்டம்
இருக்கும். அதற்குக் காரணம் அவர்கள் கடவுளின் கறைபடியாச்
சாயல்கள். அதனால் திருத்தூதர் பவுல் அறிவுறுத்துவார்:
"தந்தையரே உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள்.
மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத்
திருத்தி அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள்"
(எபேசி.6:4)
அறிவுரை மட்டுமல்ல பெற்றோரின் நடத்தையே முக்கியம். அறிவுரை
வலியுறுத்தித் திணிக்கும் உணவு போன்றது. செரிப்பது கூடச்
சிரமம். நடத்தையோ விரும்பி உண்ணும் உணவு போன்றது.
ஒரு குழந்தையின் வாழ்வில் மிகக் கடினமானது என்ன? அது தன்
பெற்றோரின் முன்மாதிரி இன்றி நல்லவனாக முயல்வது.
விவேகானந்தருக்குப் பெற்றோர் வைத்த பெயர் நரேந்திரன்.
ஒருநான் தன் தந்தையைப் பார்த்து நரேந்திரன் கேட்கிறான் :
"அப்பா, எனக்காக என்ன தயாரித்து வைத்திருக்கிறீர்கள்?"
தந்தை சொல்கிறார்: "போய், அதோ இருக்கிறதே அந்தக்
கண்ணாடியில் பார்"
, பார்க்கிறான். அறிவும் ஆற்றலும்
சுடரும் அழகான தோற்றம். "ஆம் உன்னைத்தான்
தயாரித்திருக்கிறேன்", வீடு வாசல் சொத்து இவற்றைத்
தயாரித்து வைத்திருக்கிறேன் என்பது நிறைவான பதிலாக
இருக்காது. பொருள் தேடி வைப்பதை விட நல்ல பழக்க வழக்கங்கள்
உண்டாகுமாறு வளர்ப்பதே தேடி வைக்கும் உன்னத செல்வமாகும்.
நிறைவாக, முப்பரிமாண வளர்ச்சியே குழந்தையின் முழுமனித
வளர்ச்சி என்பார் மார்ட்டின் லூத்தர்கிங்.
எந்த வேலையில் இறங்கினாலும் உள்ளம் உடல் இரண்டையும்
ஈடுபடுத்திச் செயல்பட்டால் அது நீளத்தில் வளர்ச்சி. அது
கடமை உணர்வு. தனது, தனக்கு என்ற தன்னல உணர்வின்றி, சுற்றி
இருப்பவர்களுக்கு உதவி செய்பவனாக வாழ்ந்தால் அது அகலத்தில்
வளர்ச்சி. அது மனித நேயம். தன்னைப் படைத்த ஆண்டவனை மறவாமல்
வழிபட்டு வாழ்ந்தால் அது உயரத்தில் வளர்ச்சி. அது
இறைபக்தி.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் இறைவன் படைப்பினிலே
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர் வளர்ப்பினிலே.
குழந்தை எழுதப்படாத ஒரு காகிதம் - அதில் அழகான ஓவியத்தை
வரைவது பெற்றோரே!
குழந்தை செதுக்கப்படாத ஒரு பளிங்குக்கல் - அதில்
எழில்மிக்க சிற்பத்தைச் செதுக்குவது பெற்றோரே!
குழந்தை அரியதோர் இசைக்கருவி - அதில் அதிசய, அபூர்வ |
இராகத்தை மீட்டுவது பெற்றோரே!
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ