ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

        தூய ஆவியானவர் பெருவிழாழா

    திருப்பலி முன்னுரை


வருடாந்த
ஞாயிறு வாசகம்
    pdf/Calendrier-litrugique2021.pdf
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
B தவக்காலம்1 மூவொரு இறைவனின் ஆசி பெற வந்திருக்கும் அன்பு மக்களே!
புதியன படைக்கவும், படைப்புகளை பராமரிக்கவும், படைப்புகள் வழியாக மோட்சத்தை தரிசிக்கவும் தமதிருத்துவப் பெருவிழா இன்று நம்மை அழைக்கிறது.
அருட்திரு தேவ தேவன் போற்றி!
அவர்தம் திருநாமம் போற்றி!
அவர் மகன் இயேசுக்கிறிஸ்து போற்றி!
அவர் தம் திரு அன்பு போற்றி!
அருட்திரு தூய ஆவி போற்றி!
அவர்தம்திரு ஞானம் போற்றி!
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி, இயேசு உயிர் விட்டு பாவம் செய்த மனிதரை மீட்டார். மீட்புப் பணியைத் தொடர தூய ஆவியார் திருச்சபையில் இருந்து வழி நடத்துகிறார். படைத்தல், மீட்டல், வழி நடத்துதல் என மூவொரு கடவுள் பணி சிறப்பாக அமைகிறது.
கடவுள் ஒளியானவர். அவரைக் கண்களால் பார்க்க முடியாது. பத்தாயிரம் சூரியன்களின் ஒளியைவிடப் பிரகாசமானவர். பலியான இயேசு நற்கருணையில் நம்மோடு வாழ்கின்றார். தூய ஆவியார் நாள்தோறும் ஆற்றல் அளித்து புனிதப்படுத்தி தந்தையோடும் மகனோடும் நம்மை இணைக்கிறார்.
மூவொரு இறைவனின் மக்களே! படைப்புகளை பராமரித்து வாழ்வோம். நற்கருணையில் இயேசுவோடு ஒன்றிப்போம். தூயஆவியின் தூண்டுதலுக்குப் பணிந்து, அவரது வழி நடத்தலுக்கு ஏற்ப நடப்போம். கடவுளை அடைவதில் உண்மையான மகிழ்ச்சி காண்போம். அனைவரையும் அன்பு செய்து வாழ்வோம். மூவொரு இறைவனில் சொர்க்கத்தைக் காண்போம்.
பூக்கள் பூத்துக் கிடக்கும் இடம் நந்தவனம். அருள் கொட்டிக் கிடக்கும் இடம் ஆலயம். இந்த ஆலயத்தில் நம்மோடு உரையாடி அருள் பொழிய வந்திருக்கும் இறைவனிடம் படைப்புகளை பாதுகாத்து வாழ வரம் கேட்போம். பலியினில் பக்தியோடு பங்கெடுப்போம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.மூவொரு கடவுளாகிய ஆண்டவரே!
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள் அனைவரையும், நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியை கேட்டு வாழ்ந்த மக்களினத்தாரைப் போல ஆசீர்வதியும். அவர்கள் நல்வழியில் பிளவின்றி ஒருவர் ஒருவரோடு இணைந்து திருச்சபையை வழிநடத்த, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எம்மை அன்போடு வழிநடத்தும் மூவொரு தந்தையே!
இந்த நாட்டை ஆளும் தலைவர்கள் கடவுளின் ஆவியால் இயக்கப்படவும் நல்ல முறையில் நாட்டை ஆளவும், ஒற்றுமையோடு இருக்கவும், நாட்டை அமைதியின் வழியில் நடத்தவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்று மொழிந்த மூவொரு இறைவா!
கடவுளின் பிள்ளைக்குரிய மனப்பான்மையோடு எம் பங்கை வழிநடத்தும் பங்கு குருவோடு நீர்தாமே இருந்து பங்கை சிறப்பாக வழிநடத்த, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.அன்பின் மூவொரு தந்தையே!
இன்று அன்போடு கூடியிருக்கும் எங்களைப் பாரும். அப்பா தந்தையே என அழைக்கும் எங்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன தேவை என்பதை நீர்தாமே அறிந்திருக்கிறீர். உம் பிள்ளைகளுக்கு உரிய உரிமைப்பேற்றைக் கொடுத்து எங்கள் ஒவ்வொருவரின் நல்ல கருத்துக்கள் நிறைவேற்ற, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.நலன்களின் நாயகனே மூவொரு தேவா!
நோயால் வாடும் அனைத்து நோயாளிகளையும் உம் பாதத்தில் வைக்கிறோம். 'உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும்' என்ற வார்த்தையின்படி அவர்களுக்கு தேவையான நற்சுகத்தையும், ஆறுதலையும் கொடுக்க உமது அருளை வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. படைப்புகளை படைத்து பாதுகாத்து வரும் பரம்பொருளே இறைவா!
மரங்களை வெட்டும்போதும், மனிதத்தை சிதைக்கும்போதும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுகிறது. மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்கவும், மனிதத்தை வளர்த்து மக்களைப் பாதுகாக்கவும் இங்கே கூடியுள்ள அனைவருக்கும் அருள் பொழியுமாறு, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்

1964 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், பரிசுத்த தந்தை ஆறாம் சின்னப்பர் இயேசு பிறந்த பாலஸ்தீன் நாட்டிற்குத் திருயாத்திரையாகச் சென்றார். இயேசு ஞானஸ்நானம் பெற்ற யோர்தான் நதிக் கரையை அடைந்ததும், முழந்தாள்படியிட்டு, யோர்தான் நதித் தண்ணீரில் தம் கைகளை நனைத்துக் கொண்டே விசுவாசப் பிரமாண ஜெபத்தை ஜெபித்தார்;. கிறிஸ்துவ மறையின் அடிப்படை உண்மைகள் எல்லாம் விசுவாசப் பிரமாண ஜெபத்தில் அடங்கி உள்ளன. ஒரே கடவுள் மூன்று ஆட்களாக உள்ளார் என்ற உண்மை யோர்தான் நதிக்கரையில் வெளிப்படுத்தப்பட்டது. சுதனாகிய இயேசு ஸ்நாபக அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெற்றபோது, "இவரே என் அன்பார்ந்த மகன், இவரிடம் நான் பூரிப்படைகிறேன்." என்று பிதா வானிலிருந்து கூறினார். அப்போது வானம் திறக்க, கடவுளின் 'ஆவியானவர்' புறாவைப் போல் இறங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியின் வழியாக ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார் என்ற உண்மையை அறிகின்றோம்.

உடனே வானம் திறந்ததையும், கடவுளின் ஆவி புறா இறங்குவதைப் போலத் தம்மீது வருவதையும் இயேசு கண்டார். அப்பொழுது "இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. (மத்தேயு 3:16,17).

திருமதி ஆரோக்கியமேரி ஒரு ஆசிரியை. மிகுந்த பக்தியுடன் தனது கல்விப்பணியை சிறப்பாக செய்பவர். தனது குடும்பத்தை இறைவனிடம் முழுமையாக ஒப்புக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர். தன் கணவரையும் இரு ஆண் பிள்ளைகளையும் பக்தியிலும் ஒழுக்கத்திலும் நடத்திச்செல்பவர். ஆலயவழிபாட்டிலும், தனி செபத்திலும் மிகுந்த ஈடுபாட்டுடன் தவறாது பங்கேற்பவர். எத்தனை பெரிய சோதனை வந்தாலும் பரிசுத்தமாய் வாழ விரும்பி இடைவிடாது செபிப்பவர். தனது கடமையை சிறப்பாக செய்பவர்.

ஒரு மாலை வேளையில் தனக்கு அறிமுகமான அருட்சகோதரி ஒருவர் நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டு அவரை சந்திக்கச் சென்றிருந்தார். அப்படியான வேளையில், அவருக்கு அவரது பதினோரு வயதுப்பையன் போன் செய்து அம்மா உங்களைத் தேடி ஆன்ட்டி ஒருவர் கண்ணீரோடு வந்திருக்கிறார். உடனே வாருங்கள்" என்றான்.

வீடு திரும்பிய ஆசிரியையைக் கண்டவுடன் அங்கே வங்திருந்த பெண்மணி ஓவென அழத் தொடங்கிவிட்டாள். தனது கணவர் அயல்நாட்டில் வேலைபார்த்து வருகிறார். தற்போது விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் இருப்பதாக தகவல் வந்தது. கடவுள் மீது நம்பிக்கை கொண்டவரிடம் சொல்லி அவருக்காக செபியுங்கள். அவர் உடல் நலம் பெறுவார் என்று நான் அழுதபோது ஆறுதல் சொன்னார்கள். எனக்கு உடனே உங்கள் நினைவு வந்தது ஆகவே இங்கே வந்தேன். அவரது பெயர் ஹரிஹரன் அவருக்காக செபியுங்கள் என்று சொன்னார். அந்த ஆசிரியை உடனே அந்தப் பெண்மணிக்காக செபிக்கத் தொடங்கினார். கண்ணீரோடு வந்த பெண்மணியும் ஆறுதலோடு வீடு திரும்பினார். அந்த ஆசிரியை தன்னோடு பணிபுரிபவர்களிடம் இதுபற்றி பேசும் போது, இதுதான் கடவுளின் மறை பொருள். கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்தும் ஆற்றலை பிதா, சுதன், பரிசுத்தஆவி என மூவரும் இணைந்து செய்கின்றார்கள். இதுதான் தமதிருத்துவத்தின் வேலை எனக் குறிப்பிடுகிறார்.

பிளவுபடாத அன்பும், வேலையில் ஒருங்கிணைவும், துயரத்தில் ஆறுதலும், நோயில் நற்சுகமும் தருபவர் இந்த தமதிருத்துவ வடிவத்தில் இருக்கும் மூவொரு கடவுளாகிய தேவன்.

அந்த மாயஜால வித்தைக்காரன் ஒரு போர்வையை எடுத்து உதறி ஒன்றுமில்லை எல்லோரும் பாருங்கள் என்றான். பின் அந்தப் போர்வையை தரையில் விரித்து அதன் மீது மூன்று குழந்தைகளைப் படுக்க வைத்து மூட்டையாக கட்டிவிட்டான். உள்ளே எத்தனை குழந்தைகளைக் கட்டி வைத்தேன் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து கேட்டான். மூன்று என்று கூட்டத்தார் கோ~ம் போட்டார்கள். அந்த மாயஜால வித்தைக்காரன் இப்போது பாருங்கள் அந்த மூவரும் எப்படி? என்று சொல்லிக் கொண்டு ஆ....ஊ...ஓ....என கத்திக் கொண்டு மூட்டையைப் பிரித்தான். அங்கே வெளிப்பட்டவர் வயது முதிர்ந்த ஒரு பெரியவர்.
இதுபோன்ற மாயவித்தையோ, கண்கட்டி வித்தையோ அல்ல நமது கடவுளின் பிரசன்னம். தந்தை, மகன், தூயஆவி தங்களுக்குள் எந்த வேறுபாடும் இன்றி, தங்கள் பணியை தங்கு தடையின்றி, தொய்வு ஏதுமின்றி நமக்காய் செய்து வருகிறார்கள். படைப்பின் தேவன் நம்மை பலப்படுத்த, மகனை பாடுகள் பல அனுபவிக்க அனுப்பியபோது, மகன் மறுக்கவில்லை. வேதனையின் உச்சத்தில் உடனிருந்து ஆறுதலை அளிக்க தந்தைக் கடவுளும் தவறவில்லை. தூய ஆவியின் துணையோ உறவுகளை உறுதிபடுத்துவதில் வேற்றுமை பாராட்டவில்லை.

இப்படியாக மகன், தந்தை, துணையாளர் என மூவரும் வேறுபாடின்றி இணைந்து இயங்குவது நம் குடும்பங்களில் குழப்பமின்றி பணியை லேசாக்கவும், பகிர்தலை தாராளமாக்கவும், சுமையை குறைக்கவும், ஒற்றுமையை வளர்க்கவும், புரிதலை கூடுதலாக்கவும் நமக்கு மாதிரியாக மறைபொருளாக மூவரும் இணைந்திருக்கின்றார்கள்.

'அப்பா தந்தையே' என பாசத்தோடு நாம் அழைக்கும் போது கடவுள் தம் திருமுக ஒளியை நாமிருக்கும் திசையை விட்டு வேறு திசைக்கு அனுப்புவாரா?

'உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருப்பேன்' என வாக்களித்த அன்பின் ஆண்டவர் நாம் துன்புறும்போது, தான் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டு நம்மைத் தனியே தவிக்க விட்டுவிடுவாரா?

இயேசு உலகெங்கும் சென்று தம் சீடர்கள் போதிக்க வேண்டும் எனப் பணிக்கிறார். இந்த கட்டளை நமக்கும் தானே?  நாம் இயேசுவின் சீடர்கள் தானே?

அப்பா தந்தாய் என அழைக்கும் உரிமை தந்தவர் நம்மை அடிமையாக்குவாரா?
உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? சின்னக் குழந்தையிடம் பாசம் மிகுந்த பெற்றோரை சுட்டிக் காட்டி கேட்கும்போது, அம்மாவும் பிடிக்கும் அப்பாவும் பிடிக்கும் எனச் சொல்லும் குழந்தையைப்போல தந்தையும் பிடிக்கும், மகனும் பிடிக்கும், தூயஆவியும் பிடிக்கும் எனச் சொல்லும் மனநிலை நம்மிடம் உள்ளதா?

மூவுலகையும் படைத்து ஆளும் வேந்தனை நினைத்துவிட்டால் எந்தப் பிரச்சனைக்கும் நம்மை அடையாளம் தெரியாது தானே?

மறைபொருளின் உட்பொருளை இறைவழிபாட்டால் உறுதிப்படுத்துகிறாரே இதயத்தில் உள் வாங்குகிறோமா?

நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் நலம்தரும் செயல்கள் பலனாகக் கிடைக்க இறைவனின் கட்டளைகளையும் நியமங்களையும் கடைபிடிக்கவேண்டும் என்ற செய்தி நமக்குத் தெரியும் அதைக் கடைபிடிக்கிறோமா?

படைப்புப் பொருட்களைப் பேணிப் பாதுகாக்க நமக்கு உரிமையும் உண்டு, கடமையும் உண்டு. சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது என வருந்தும் நாம் ஏன் மாசுபடுகிறது? அதைத் தடுக்க என்ன செய்யலாம்? என யோசிக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம். மரங்களை வெட்டுவதை தவிர்ப்போம். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.

பிறரால் உலகம் மாசுபடுகிறது என்ற சிந்தனையை அகற்றி, நம்மால் மாசுகளை களைய முடியும் என்ற சிந்தனையுடன் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம்.
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

துணையாளரே துணையாய் வாருமே

தூய ஆவியின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றோம். தூய ஆவி யார்? தந்தையிடமிருந்து மகன் இயேசு மூலம் நமக்கு அனுப்பப்பட்டவர். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாள் தூய ஆவியின் வல்லமையை சீடர்களுக்கு அளிக்கிறார். தூய ஆவியைப் பெற்ற சீடர்களும் துணிச்சலுடன் நற்செய்தியை அறிவிக்கின்றனர். ஆவியின் வல்லமையை, ஆற்றலை,உணர்ந்ததால் அவர்கள் புதுத்துடிப்புடன் செயல்படுகின்றனர். நாமும் தூய ஆவியைப் பெற்றிருக்கின்றோம் உறுதிப் பூசுதலின் போது. ஆனால் அவர் வழி செயல்படுகிறோமா? என்று சிந்திக்க இன்றைய பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. எங்கள் பள்ளியில் நான்கு வயதே உடைய சிறுமி ஒருத்தி ஒருநாள் கழண்டு விழுந்த தன் காலணிகளை தானாக மாட்டிக் கொண்டிருந்தாள். அருகில் சென்று நான் உதவட்டுமா? என்றேன். உடனே அவள், வேண்டாம். எனக்கு நான்கு வயது என்னுடைய காலணிகளை நானே சரி செய்து கொள்ளும் வயது இது. நானே செய்து கொள்கிறேன் என்றாள். எனக்கு ஒரே ஆச்சரியம். நீ வளர்ந்து விட்டாய் என்று உனக்கு சொன்னது யார் என்றேன். அவளோ, என் அம்மா என்றாள் சற்றும் யோசிக்காமல். மேலும் தொடர்ந்து கூறினாள், சென்ற வாரம் தான் நான் நான்காவது ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடினேன். அப்போது என் அம்மாவும் அப்பாவும் நான் வேகமாக வளர்கிறேன் எனவே என்னுடைய உடைகள் காலணிகள் படுக்கைகள் முதலியவற்றை சரி செய்தல் போன்ற சிறு சிறு வேலைகளை நானாக செய்து கொள்ள வேண்டும், தானாக சாப்பிட வேண்டும் என்று கூறினார்கள் என்று தன்னுடைய மழலை மொழியில் அடுக்கிக் கொண்டே போனாள். நான் அவள் பேச்சைக் கேட்டு திகைத்ததை விட, தன்னுடைய வளர்ச்சியின் மேல் நம்பிக்கை கொண்டு அவள் நடந்த விதம் தான் என்னை மலைக்கச்செய்தது. மேலை நாட்டு கலாச்சாரம், தாய் தந்தையர் இருவரும் வேலைக்கு செல்லும் நிலை, குழந்தைகளுக்கு தனி அறை, என்ற தங்களது சூழலை எளிமையாக தங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்து வருகின்றனர். எங்களால் உனக்கு உண்டான வேலைகளை செய்ய இயலாது என்று கூறாமல், நீ வளர்ந்து விட்டாய், உனக்கான வேலைகளை நீயே செய்யத் துவங்கு என்று கூறுகின்றனர். வளர்ச்சி என்னும் ஆற்றல் உன்னிடத்தில் இருக்கிறது. உன்னால் முடியும் என்று அடிக்கடி சொல்லும் போது குழந்தைகளும் அதன்படியே மாறுகின்றன. இயேசுவும் சீடர்களை அப்படியேக் கூறி வளர்க்கிறார். தூய ஆவியை உங்களிடம் அனுப்புவேன். உண்மைக்கு சாட்சியம் பகர்வீர்கள், நற்செய்தியை அறிவிப்பீர்கள், திருமுழுக்கு கொடுப்பீர்கள் என்று சொல்ல சொல்ல சீடர்களும் அதனை உணர்கிறார்கள். அதன்படி மாறுகின்றார்கள். இனிமேலும் உங்களுடன் என்னால் இருக்க இயலாது, என் தந்தையிடம் நான் திரும்பிச்செல்ல வேண்டும் என்று கூறியவர், என்னைப் போல் வாழுங்கள், நான் கற்பித்ததை செயல்படுத்துங்கள் என்கிறார். சீடர்களும் தங்களால் முடியும் என்பதை உணர்கிறார்கள். அனைத்து மக்கள் முன்பும் அதை செயல்படுத்திக் காண்பிக்கிறார்கள். பரவசப் பேச்சு பேசுதல், அற்புதங்கள் நிகழ்த்துதல், அதிகாரத்தோடு போதித்தல் போன்றவற்றை திறம்படச்செய்கிறார்கள். புற வளர்ச்சி என்பது கண்களுக்கு புலனாகும். அக வளர்ச்சியைப் புரிந்து உணர்ந்து கொண்டால் மட்டுமே புலனாகும். தூய ஆவி அன்று சீடர்கள் மேல் பொழியப்பட்டது. அகவளர்ச்சியில் மாற்றம் கண்டனர். அந்த மாற்றத்தை பிறரும் அறியும்படி வாழ்ந்தனர். நாமும் உறுதிப்பூசுதலின் போது தூய ஆவியைப் பெற்றிருக்கிறோம். ஆனால் என்ன? நம் புற வளர்ச்சி தான் பல மாற்றங்களை அடைந்திருக்கிறது. ஆவியின் துணையால் வளர்ச்சி அடைந்திருக்கிறோமா என்றால் அது கேள்விக்குறியே. தூய ஆவியை துணையாளர் என்கிறோம் யார் துணையாளர்? நமதுஇன்பம், துன்பம், வறுமை செழிப்பு, ஏற்றம் , இறக்கம் அனைத்திலும் நம்மோடு உடன் நடந்து நமக்கு உதவிகளை செய்பவர். நமக்கு துணையாய் இருந்து நம்மை ஆள்பவர். தூய ஆவியார், திடப்படுத்துபவராக, வழிநடத்துபவராக, தெளிவு படுத்துபவராக நமக்கு விவிலியத்தில் காட்டப்படுகிறார். உதாரணத்திற்கு அன்னை மரியாளை திடப்படுத்தினார், இயேசுவை சீடர்களை வழிநடத்தினார், சூசையப்பருக்கு தெளிவை ஏற்படுத்தினார். இது போன்ற ஆவியின் செயல்பாடுகள் விவிலியத்தில் ஏராளமாய் இருக்கின்றன. இதே தூய ஆவியானவர் நமது துன்பத்தில் நம்மை திடப்படுத்தி, வாழ்வில் வழிநடத்தி, குழப்பத்தில் தெளிவு படுத்துபவராக இருக்கின்றார். நாம் தான் இந்த ஆவியின் அருளை உணராது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், எங்கு சென்றாலும் எதை செய்ய நினைத்தாலும், செய்யத் தொடங்குவதற்கு முன்பு, தூய ஆவியின் துணை நாடி செபிக்கச்சொல்வது நவதுறவு பயிற்சி வாழ்வில் வழக்கம். அப்படி செய்தால் நினைத்த காரியம் நல்லபடியே நடக்கும் என்பர். அது உண்மையும் கூட. நம்மிடம் ஏராளமான ஆற்றல்கள் மறைந்து கிடக்கின்றன. நாம் தான் அதை வெளிக்கொணர மறுத்து மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். துணையாளர், நம் உடன் நடப்பவர், வழிகாட்டுபவர், தெளிவுபடுத்துபவர். அவரைஅடையாளம் கண்டு கொள்வோம். மறைந்து கிடக்கும் அவரை வெளியேக் கொண்டு வர முயல்வோம். புதையல் தனக்கு அடியில் தான் உள்ளது என்று அறியாமல் அதன் அடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மனிதன் போல் இல்லாமல் நமக்குள் புதைந்திருக்கும் புதையலாம் துணையாளரை இனம் கண்டு கொள்வோம். நாம் தூய ஆவியின் ஆற்றலினால் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்புவோம். அப்போது தான் வளர்வோம். துணையாளராம் தூய ஆவியை துணையாகக் கொண்டு வாழ முற்படுவோம் . இறைவனின் அருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


யார் இந்த தூய ஆவியானவர்..?

தாயாம் திருச்சபை இன்று தூய ஆவியின் பெருவிழாவினை கொண்டாடி மகிழ்கின்றது. தூய ஆவியின் செயல்கள் திருச்சபை வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. திருச்சபையின் வரலாற்றில் மட்டுமல்ல, விண்ணுலகையும், மண்ணுலகையும் தந்தை கடவுள் படைத்த பொழுது, உருவமற்று இருந்த இந்த மண்ணுலகில், கடவுளின் ஆவி நீர்த்திரளின் மீது அசைந்தாடிக் கொண்டிருந்தது என்று நாம் தொடக்க நூலில் வாசிக்கின்றோம். ஆக தூய ஆவியார் , உலகத்தின் தொடக்கம் முதல், இன்று வரை ஒவ்வொருவரின் துணையாளராய் இருந்து வருகிறார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

தூய ஆவியாருக்கு பல பெயர்கள் இருப்பதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். துணையாளர், திருச்சபையை வழிநடத்துபவர், ஆட்கொள்பவர், ஆற்றல் அளிப்பர், கடவுளின் மூச்சுக் காற்று, வரங்களையும், கொடைகளையும் கொடுப்பவர், காற்றாக ,நெருப்பாக சுழல்பவர் என்றெல்லாம் நாம் கேட்டிருகிறோம். அத்தனையும் மறுப்பதற்கில்லை. ஆனால் எனக்கு மறைக்கல்வி பாடம் எடுத்த அருட்சகோதரி லீமாரோஸ் அவர்கள் இப்படியாக கூறுவார்கள்."தந்தை கடவுளுக்கும் , மகன் இயேசுவுக்குமிடையே புறப்படுகின்ற அன்புறவு தான் தூய ஆவி" என்று கூறுவார்கள். அன்றிலிருந்து இன்று வரை ,தூய ஆவி என்றாலே, தந்தைக்கும், மகனுக்குமிடையே உள்ள அன்புறவே என்பது என் மனதில் ஆழமாக பதிந்த கருத்து. நாம் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணப்படி தூய ஆவியாரை உருவகப்படுத்துகிறோம். எப்படியிருந்தாலும் தூய ஆவி ஒருவரே. நாம் அழைக்கும் போது நம் உடனிருப்பார் என்பது மறுக்கப்படாத உமை இயேசு உயிர்த்து நாற்பது நாட்கள், தம் சீடர்களுடன் உடனிருந்து, அவர்களை திடப்படுத்தி, வலுவூட்டி அனைத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஏனெனில் தாம் ஆற்றி வந்த மீட்பு பணி, உலகம் முடிவு வரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என விரும்பினார். அதனால் தான் தாம் விண்ணேற்றம் அடைந்த பிறகு, "உங்களுக்கான துணையாளரை அனுப்புவேன் " என வாக்களித்தார். தாம் வாக்களித்த படியே, விண்ணகம் சென்ற பத்தாம் நாள் தூய ஆவியாரை அனுப்பினார். தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட திருத்தூதர்கள் , துணிவு கொண்டு, உள்ள தைரியத்துடன் ,உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்றினார்கள். ஆக தூய ஆவியார் என்பவர் துணையாளர் என்று இயேசு கூறுகிறார்.

ஆயத்தமாக்குபவர் ;

அரசியல் தலைவர்கள் ஒரு இடத்திற்கோ அல்லது ஓரு நிழச்சிக்கோ செல்கிறார்கள் என்றால், அவர்கள் அந்த இடத்தை அடைவதற்கு முன்பே அவர்களுடைய உதவியாளர்கள், அவ்விடத்தை தூயமைப் படுத்தி, அலங்காரப்படுத்தி, அழகுபடுத்தி, ஆயத்தமாகவைத்து விடுவார்கள். ஆயத்தமான நிலத்தில் விழும் விதை தான் விரைவில் முளைக்கிறது. அதுபோல தான், நாம் எந்த செயல் தொடங்குவதற்கு முன்பும், தூய ஆவியை அழைக்கிறோம். ஏனெனில் தூய ஆவியார் தான், நம்முடைய கரடுமுரடான மனநிலையை சமதளப்படுத்தி, சரிபடுத்தி, அச்செயலைச் செய்ய நம்மை தயார்படுத்துகிறார். கிறிஸ்தவ பள்ளிகளில் தேர்வு எழுத தயாராக இருக்கும் மாணவர்களுக்கு, ஒலிபெருக்கியின் உதவிகொண்டு தூய ஆவி பாடல் போடுவதை , நாம் கேட்டிருக்கிறோம். ஏனெனில் ஒவ்வொரு மாணவர்களும் தாம் படித்தவற்றை நினைவில் நிறுத்தி, தேர்வு எழுதுவதற்கு அவர்களை தகுதிபடுத்த வேண்டும், ஆயத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தூய ஆவியை அழைக்கின்றோம். தூய ஆவியாரும் அவ்விடத்தை தகுந்த விதத்தில் ஆயத்தப்படுத்துகின்றார்.

இறைமகன் இயேசு தன் முப்பதாவது வயதில் தனது பணிவாழ்வை தொடங்குவதற்கு முன்னால், யோர்தான் ஆற்றில் ஸ்நாபக அருளப்பரிடம் திருமுழுக்கு பெற்றார். அப்போது தூய ஆவியார் புறா வடிவில் வந்து " நீரே என் அன்பார்ந்த மகன், உம் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று இயேசுவை திடப்படுத்தி , ஊக்கப்படுத்தி , உச்சாகப்படுத்தி, இறையாட்சிப் பணிக்கு ஆயத்தமாக்கினார். பெந்தக்கோஸ்து நாளன்று அன்னைமரியாவும், திருத்தூதர்களும் செபித்துக் கொண்டிருந்த போது, நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் அமர்வதைக் கண்டார்கள். ஒவ்வொருவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார்கள். இத்தகைய சிறப்புமிக்க பெந்தக்கோஸ்தே விழாவைத் தான் இன்று நாம் கொண்டாடுகின்றோம். திக்குமுக்காடிய திருச்சபையை, திடப்படுத்தி, இறையாட்சிப் பணி செய்ய ஒவ்வொருவரையும் ஆயத்தமாக்கியவர் தூய ஆவியானவரே. இத்தகைய தூய ஆவியானவரே நம் ஒவ்வொருவருக்கும் கொடைகள் வழங்குபவராக, கனிகள் வழங்குபவராக, வரங்கள் பல வழங்குபவராக இருக்கின்றார்.

கொடைகளின் தூய ஆவி :

கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள், வாரி வாரி வழங்கியதாலே வள்ளல்கள் எனப் போற்றப்படுபவர்கள் சங்கக் கால கடையேழு வள்ளல்கள். இவர்கள் கொடை வள்ளல்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். கடையேழு வள்ளல்களை கொடை வள்ளல்கள் என அழைக்கப்படக் காரணம், அவர்கள் தங்களிடம் உள்ள பொன்னையும், பொருளையும் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் தாராளமாக, மனமுவந்து கொடுத்ததினாலே கொடை வள்ளல்கள் என அழைக்கப்பட்டார்கள். உயர்ந்த நிலையில் எல்லாவித வசதி வாய்ப்புக்களோடும் இருப்பவர்கள், முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும் , எவ்வித எதிர்பார்ப்புமின்றி நன்கொடை வழங்குவார்கள். மற்றவர்களுக்கு கொடுப்பதே தங்களுக்கு மகிழ்ச்சி என நினைப்பவர்களால் மட்டுமே கொடுத்து உதவமுடியும். இது மனிதர்களின் கொடைத்தன்மை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக , இன்றைய நாளின் விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் தூய ஆவியானவர், நம் ஒவ்வொருவருக்கும் தாராளமாக ஏழு கொடைகளை அதாவது : ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, இறைப்பற்று, இறையச்சம் என்னும் கொடைகளை நமக்கு பரிசாக கொடுத்துள்ளார். இக்கொடைகள் ஏன் நமக்கு கொடுக்கப்பட்டது ? ஏனென்றால் இவற்றில் நன்கு வளர்ச்சி பெற்று, ,இறையாட்சிப் பணியை இம்மண்ணில் ஆற்றிடவே ,தூய ஆவி நமக்கு இக்கொடைகளை வழங்கியுள்ளார். இந்த ஏழு கொடைகளில் நாம் எவற்றில் சிறந்து விளங்குகிறோம் ? சிந்திப்போம். தூய ஆவி பரிசாகக் கொடுத்த கொடைகளை நம் வாழ்வாக்கி, இறையில் வேறூன்றுவோம்.

கனிகளின் தூய ஆவி :

பழத்தையே கொண்டாடியவர்கள் நம் 'பழந்தமிழர்கள்'. முத்தமிழே... முக்கனியே.... என கொஞ்சிபேசியவர்கள் நாம். உணவாகவும், மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும், உடல் ஆரோக்கியத்தையும் அள்ளித் தருபவை கனிகள். இயற்கை தந்த கனிகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல் நம் மனதையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, தூய ஆவியானவர் பன்னிரெண்டு கனிகளை நமக்கு இலவசமாக கொடுத்துள்ளார். அதாவது: அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை. பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம், பணிவு, தாராள குணம், நிறை கற்பு. இவையே தூய ஆவியாரிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட கனிகள். இயற்கை தந்த கனிகளில், எல்லாரும் எல்லாக் கனிகளையும் விருப்பி சாப்பிடுவதில்லை, மாறாக சிலவற்றை விரும்பி சாப்பிடுவர், சிலவற்றை சாப்பிட வேண்டும் என்பதற்காக சாப்பிடுவர். ஆனால், நமக்கு பிடித்த பழம் மட்டும் நமக்கு எல்லா வித ஊட்டச்சத்துக்களையும் தந்துவிடாது. அதுபோல தூய ஆவியானவர் கொடுத்த கனிகளில் ஏதாவது ஒன்றை மட்டும் வாழ்வாக்கினால் போதாது. தூய ஆவியின் கனிகள்,நம் மனதையும், ஆன்மாவையும் தூய்மைப் படுத்தி நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. அதனால் அனைத்து கனிகளையும் வாழ்வாக்க வேண்டும். தூய ஆவியின் கனிகளுள் நமக்கு பிடித்தவற்றில் உயர்ந்து நிற்போம், மற்றவைகளில் சிறந்து விளங்குவோம்.

அன்பு உள்ளங்களே! இவ்வாறாக தூய ஆவியானவர் நமக்கு துணையாளராக, வழிகாட்டுபவராக, ஆயத்தப்படுத்துபவராக, கொடைகள் வழங்குவராக, கனிகள் கொடுப்பவராக நம் அருகிலேயே இருக்கிறார். நாம் தூய ஆவியின் குரலுக்கு செவிமடுத்து, அவரின் பண்புகளை வாழ்வாக்குவோம். இறைவனின் பராமரிப்பும், மகனின் அன்பும், தூய ஆவியின் வழிநடத்துதலும் நம்மோடும், நம் உறவுகளோடும் இருந்து, நம்மை வழிநடத்துவதாக ஆமென்.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 

திருத்தூதர் பணிகள் 2:1-11
1 கொரிந்தியர் 12:3-7,12-13
யோவான் 20:19-23

ல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட ஆவி

"பிளவுண்ட நாவுகள் இறங்கி வந்து பிளவுபட்ட மானிடத்தை இணைத்தது" - இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லி பெந்தகோஸ்தே திருநாளின் பொருளை விளக்கிவிட முடியுமா?

"தூய ஆவியானவர் திருவிழா" நம்முள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது:

1. இவரை எப்படி அழைப்பது? "தூய ஆவி" என்று அழைப்பதா? அல்லது "தூய ஆவியார்," அல்லது "தூய ஆவியானவர்" என்று அழைப்பதா?

2. "தந்தை" மற்றும் "மகன்" என்னும் இருவருக்குள் இருக்கும் உறவே தூய ஆவி என்றும், இந்த தூய ஆவியே மூவொரு இறைவன் என்று கற்பிக்கும் கத்தோலிக்க திருஅவை, கணவன்-மனைவி-பிள்ளை என்ற உருவகத்தையும் கொடுக்கின்றது. ஆனால், இந்த உருவகம் அடுத்த பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. "தூய ஆவியானவர்" உறவின் கனியாகிய குழந்தை என்றால், அது அல்லது அவர் மற்ற இருவரைவிட சிறியவர் என்று ஆகிவிடுவதில்லையா?

3. "தந்தை உலகைப் படைத்தார்," "மகன் உலகை மீட்டார்," "தூய ஆவி உலகை வழிநடத்துகிறார்" என்று அவர்களின் செயல்கள் அடிப்படையிலான புரிதலும் தூய ஆவியானவரைப் பற்றி நமக்கு முழுமையாகச் சொல்வதில்லை.

4. இன்று "பெந்தகோஸ்தெ" என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு அணியக்கூடாது, பூ அணியக் கூடாது, வெள்ளைநிற ஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி நம் தெருக்களில் வழிநடக்கும் இவர்கள், "நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?" என்று நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள்.

5. "அருங்கொடையாளர்கள்" ("Charismatics") என்று தங்களையே அழைக்கும் ஒரு சிறு பகுதியினர், நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர்.

பவுல், எபேசு நகரில் எதிர்கொண்ட கேள்விதான் இங்கே நினைவிற்கு வருகிறது: "தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!" (காண். திப 19:1-10)

இந்த நாளின் பொருளைப் புரிந்து கொள்ளுமுன் "தூய ஆவி" என்னும் பெயரைப் புரிந்து கொள்வோம்.

விவிலியத்தில் "தூய ஆவி" என்ற பெயர் நான்கு நிலைகளில் கையாளப்படுகின்றது:

அ. "ஆண்டவரின் ஆவி." எபிரேயத்தில் "ருவா" என்ற வார்த்தையை "ஆவி" என்று மொழிபெயர்க்கிறோம். இந்த "ஆவி" தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (காண். தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், "ஆண்டவரின் ஆவி என்மேல் உளது" என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான்.

ஆ. "இயேசுவின் ஆவி." தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். இங்கே தூய ஆவியானவர் இயேசுவின் கொடையாக, அவரிடமிருந்து ஊற்றெடுக்கின்றார்.

இ. "மூவொரு இறைவனில் ஓர் ஆள்." தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், "தூய ஆவியானவர்" என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார், நினைவூட்டுவார் என்றும் வாக்களிக்கின்றார். இங்கே இயேசு மூவொரு இறைவனின் மூன்றாம் ஆளைச் சுட்டிக்காட்ட "தூய ஆவி" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தப் புரிதலை பிற்கால திருமடல்களிலும் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலை நிறைவு செய்யும் பவுல், "ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!" (2 கொரி 13:13) என எழுதுகின்றார்.

ஈ. தூய பவுலடியாரின் திருமடல்களுக்கு வரும்போது அங்கே புதியதொரு புரிதலைப் பார்க்கின்றோம். "ஊனியல்பு," "ஆவிக்குரிய இயல்பு" என்று இருதுருவ வாழ்க்கை நிலைகளை எடுத்துச் சொல்லும் பவுல், ஒரு கட்டத்தில் "ஆவிக்குரிய இயல்பு" என்பது இயல்பாகவே நம் ஒவ்வொருவரிடமும் இருப்பதுபோல எழுதி முடிக்கின்றார் (காண். கலா 5:16-26).

இந்த நான்கு புரிதல்களில் எந்தப் புரிதலை நாம் எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்திலிருந்து நாம் தெளிவாவதற்கே தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது!

திருத்தூதர்கள் மேல் இன்று தூய ஆவியானவர் இறங்கி வந்த நிகழ்வை வாசிக்குமுன் முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் எப்படி இருந்தார் என்பதைப் புரிந்து கொள்வோம்:

அ. "ஒருசிலருக்கு மட்டுமே தூய ஆவியானவர்." முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டார். குறிப்பாக, அரசர்கள் மட்டும் இறைவாக்கினர்கள். ஆக, ஒரே அரண்மனையில் இருந்தாலும் அரசர்மேல் தூய ஆவியானவர் இருப்பார். ஆனால், அரசி மேலோ, பணிப்பெண் மேலோ இருக்கமாட்டார். இறைவாக்கினர்மேல் இருப்பாhர். ஆனால், சாதாரண மக்கள்மேல் இருக்க மாட்டார்.

ஆ. "நிபந்தனைக்குட்பட்டவர்." தூய ஆவியானவர் ஒருவருக்கு கொடுக்கப்படுவதுபோல அவரிடமிருந்து திரும்பவும் எடுத்துக்கொள்ளப்படுவார். உதாரணத்திற்கு, சிம்சோன் பிறக்கும்போதே ஆண்டவரின் ஆவி அவருக்குள் இருக்கின்றார். அவரின் குழந்தைப் பருவத்தில் அவரை ஆட்டுவிக்கின்றார். ஆனால், அவரின் தலை மழிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து ஆவியானவர் விலகுகின்றார். அதேபோல, சவுல் அரசராக அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர்மேல் தூய ஆவியானவர் இருக்கிறார். ஆனால், தாவீதின் மேல் பொறாமை கொண்டு அவரை அம்பு எய்து கொல்ல முயலும்போது, ஆண்டவரின் ஆவி அவரைவிட்டு அகல்கின்றார்.

இ. "அவர் ஒரு ஆற்றல்." தூய ஆவியானவர் என்பவர் ஆற்றல், அல்லது சக்தி. அவர் ஒரு மனிதர் அல்லர்.

இந்த மூன்று புரிதல்களும் இன்றைய முதல் வாசகத்தில் புரட்டிப்போடப்படுகின்றன:

அ. "அனைவருக்கும் தூய ஆவி." திருத்தூதர்களும், அன்னை மரியாளும் தூய ஆவியானவரைப் பெறுகின்றனர். மேலும் இவர்கள் கைகளை விரிக்கும் அனைவர்மேலும் தூய ஆவியானவர் அருளப்படுகின்றார்.

ஆ. "நிபந்தனைகள் அல்லாதவர்." ஒருவருக்கு ஒருமுறை வழங்கப்படும் தூய ஆவி அவரிடமிருந்து திரும்ப எடுக்கப்படுவதில்லை. அவர் தூய ஆவியின் ஆற்றல் பெற்ற வாழ்க்கையை வாழவில்லை என்றாலும், அந்த ஆவியானவர் அழியாத முத்திரையாக அவரின் உள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றார்.

இ. "அவர் ஒரு மனிதர்." மூவொரு இறைவனின் மூன்றாம் நபராக இருக்கும் இவர் வெறும் ஆற்றல் அல்லது சக்தி மட்டுமல்ல. மாறாக, மூன்றாவதாக இருக்கின்ற ஒரு மனிதர். இவரின் பெயரால் ஆசி வழங்கவும் முடியும் (காண். 2 கொரி 13:13).

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டுப் புரிதலைவிட இரண்டாம் ஏற்பாட்டுப் புரிதல் மாறுபட்டு நிற்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தின்படி (காண். திப 2:1-11) தூய ஆவியானவர் பெந்தக்கோஸ்து என்னும் நாளில் திருத்தூதர்கள்மேல் பொழியப்படுகின்றார். எதற்காக இந்த நாளை இறைவன் தெரிவு செய்ய வேண்டும்? இதற்கு ஐந்து காரணங்களைச் சொல்கின்றது வரலாறு:

1. "பெந்தக்கோஸ்து" என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பாஸ்கா திருவிழாவுக்குப் பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது (காண். லேவி 13:15). யூதர்கள் தங்கள் முதற்கனிகளை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு வந்த இந்த நாளில்தான் திருத்தூதர்கள் ஆவியின் கொடைகளை முதற்கனிகளாகப் பெறுகின்றனர்.

2. மோசேக்கு சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதை இந்த நாளில்தான் யூதர்கள் நினைவுகூர்ந்தனர். இந்தக் கட்டளைகள் நமக்கு வெளியில் இருப்பவை. ஆனால் எரேமியா புதிய கட்டளைகள் நமக்கு உள்ளேயே இருக்கும் (31:33) என முன்னுரைக்கின்றார். நம் உள் உறையும் கட்டளையாக, நம் மனச்சான்றின் ஒளியாக இங்கே இறங்கி வருகிறார் தூய ஆவியானவர்.

3. மோசே மலைக்கு ஏறிச்சென்று கட்டளைகளைப் பெற்று வந்ததுபோல, இயேசு விண்ணேற்றம் அடைந்து தூய ஆவியானவரை அனுப்புகின்றார்.

4. மலையிலிருந்து இறங்கி வந்த மோசே வெறும் சத்தங்களை மட்டும் எழுப்பினார் என்றும், அந்தச் சத்தங்களை அங்கே கூடியிருந்த மக்கள் 70 மொழிகளில் கேட்டனர் என்றும் சொல்கிறது தாக்குமா 26 என்னும் ரபிக்களின் விளக்கவுரை. இதேபோல, தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்களின் பேச்சை அங்கே கூடியிருந்தவர்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர்.

5. தோரா அல்லது சட்டம் யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், தூய ஆவியானவர் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றார். மேலும், இங்கே; இறங்கி வரும் பிளவுண்ட நாவுகள், முதல் ஏற்பாட்டு பாபேல் நிகழ்வையும் நினைவூட்டுகின்றன (காண். தொநூ 11:1-9). தங்களுக்கென்ற ஒரே நகரம், ஒரே மொழி, ஒரே கோபுரம் எனக் கட்ட விரும்பியவர்களின் நாவுகள் பிளவுபடுகின்றன. இங்கே பிளவுபட்ட நாவுகள் எல்லாரையும் இணைக்கின்றனர். அங்கே கோபுரம் கட்டி மக்கள் கடவுளிடம் ஏறிச் செல்ல விரும்பினர். இங்கே கடவுளே தன் ஆவியானவரின் வழியாக இறங்கி வருகின்றார்.

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:

அ. அவர்களின் நா கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் வௌ;வேறான மொழிகளில் (க்ளோசலாலியா) பேசத் தொடங்குகின்றனர். மொழி அவர்களுக்கு இனி தடையல்ல.

ஆ. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. "எல்லாம் முடிந்தது!" என பயந்து கொண்டு, விரக்தியிலும், கவலையிலும் சோர்ந்திருந்தவர்கள் தங்களின் கதவுகளைத் திறந்து வெளியே வருகின்றனர். இனி யாரும் அவர்களை அடைத்து வைக்கவோ, அவர்களின் வேகத்திற்கு தடை போடவோ முடியாது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7,12-13) தூய ஆவியாரின் இருப்பு அல்லது பிரசன்னம் என்பது செயல்களில் வெளிப்படவேண்டும் என்கிறார் தூய பவுல். மேலும், திருஅவையில் தூய ஆவி பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் அடிப்படையான இணைப்பாக இருக்கிறார். அதாவது, நீங்களும் நானும் வேறு வேறு கொடைகளைப் பெற்றிருந்தாலும் திருச்சபையில் ஒன்றாய் இருக்கிறோம் என்றால், வேறுபாடுகளைக் கடந்த ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடியவர் தூய ஆவி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 20:19-23) இயேசு தான் உயிர்த்த (விண்ணேற்றம் அடைந்த) நாளில் தன் சீடர்கள்மேல் ஊதுகின்றார். ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். முதல் ஏற்பாட்டில் "ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்" (தொநூ 2:7) - முதல் ஆதாம் உயிர்பெறுகின்றான். இங்கேயும் கடவுளாகிய இயேசு சீடர்கள்மேல் ஊத அவர்கள் அவரின் உயிர்மூச்சைப் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறாக, கடவுளின் பழைய செயலை புதிய செயலாக நிறைவு செய்கின்றார் இயேசு.

இறுதியாக, இவ்வளவு விளக்கங்களுக்குப் பின் தூய ஆவி என் வாழ்வில் யார்? என்ற கேள்வியைக் கேட்போம். தூய ஆவியார் வெறும் அருங்கொடை இல்லத்தில் கிடைப்பவரா? அல்லது திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் அருளடையாளங்களில் மட்டும் நம்மிடம் வருபவரா? தூய ஆவியின் செயல்பாட்டை நாம் நம் அன்றாட வாழ்வில் தடுக்கின்றோமா? (காண். 1 தெச 5:19)

பெந்தகோஸ்தே நிகழ்வின் சவாலாக நாம் 2 திமொத்தெயு 1:7 எடுத்துக்கொள்வோம்:

"கடவுள் நமக்கு கோழையுள்ளம் தரும் ஆவியை அல்ல. மாறாக, வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட ஆவியையே வழங்கியுள்ளார்."

திமொத்தெயு திருப்பொழிவின் போது பெற்ற அருள்கொடைகளை அவருக்கு நினைவுறுத்துகின்ற பவுல், "கோழையுள்ளம்" விடுத்து "வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும்" கொண்டிருக்க அவரை அழைக்கின்றார். கோழையுள்ளம் இருக்கும் இடத்தில் வல்லமை, அன்பு, கட்டுப்பாடு இருக்காது. கோழையுள்ளம் எதையும் துணிந்து முன்னெடுக்காது. அன்புக்கென்று வரையறைகளை விதித்துக்கொள்ளும். கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். நாம் வாழ்வில் பலவற்றை இழக்கக் காரணம் இந்தக் கோழையுள்ளம். கோழையுள்ளத்தில் இயல்பாகவே பயமும், குற்றவுணர்வும் குடியிருக்கும் - அடுத்து என்ன நடக்குமோ? என்ற பயம். அய்யோ அன்று இப்படி நடந்து விட்டதே? என்ற குற்றவுணர்வு.

இந்துக்கள் சாமியை கும்பிட்டுவிட்டு சிறிது திருநீற்றை அள்ளி தலையில் பூசிக்கொள்வர் அல்லது தலையில் போட்டுக்கொள்வர். இது எதைக்குறிக்கிறது என்றால் தான் வணங்கும் கடவுளின் ஆவி தன்னிடம் வந்துவிட்டதன் அடையாளமான ஆங்கரிங் தான் அது. இந்த ஆங்கரிங் கிடைத்தவுடன் எந்தக் கப்பலையும் (!) அவர்களால் நிறுத்துவிட முடிகிறது. எந்த வகை காற்று மற்றும் புயலையும் எதிர்க்க முடிகிறது. ஆக, இயல்பாகவே நம்மிடம் இருக்கின்ற ஆவியை நாம் மறந்துவிடுகிறோம். இந்த பெந்தகோஸ்தே விழாவில் அவருடைய இருப்பை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வோம்.

இந்த இருப்பு நம்மை வல்லமை, அன்பு, கட்டுப்பாடு நோக்கி நகர்த்துவதாக.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் "வல்லமை" கொண்டவர்களாக புறப்பட்டுச் செல்கின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் முதல் கிறிஸ்தவர்கள் "அன்பு" கொண்டவர்களாக ஒரே உடலாக இணைகின்றனர்.

இன்றைய மூன்றாம் வாசகத்தில் திருத்தூதர்கள் "கட்டுப்பாடு" பெற்றவர்களாக ஆண்டவரின் அமைதியால் ஆட்கொள்ளப்படுகின்றார்கள்.

தூய ஆவி என்பது நம் செல்ஃபோனில்; இருக்கும் சிம் கார்டு மாதிரி. அதை நாம் பார்ப்பது கிடையாது. ஆனால், அது தன் நெட்வோர்க்கோடு இணைந்துகொண்டு தன்னில் இணைந்திருக்கும் அனைவரையும் இணைக்கிறது. இந்த சிம்கார்டுக்கும் வேலிடிட்டி உண்டு. அதை நாம் புதுப்பிக்காமல் விட்டுவிட்டால் அது அப்படியே முடங்கிவிடும். "என் ஆவியின் செயல்பாட்டை நான் அணைத்துவிட மாட்டேன்" என்ற உறுதியோடு அவரின் செயல்பாடுகள் நம்மில் நாளும் வளம்பெற இன்று மன்றாடுவோம்.

தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்கள்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
துணையாளராம் தூய ஆவியார்!   (பெந்தகொஸ்தேப் பெருவிழா)

பிரபல பியானோ இசைக் கலைஞராகிய இஞ்ஞாசி படேரவ்ஸ்கி (Ignace Paderewski) நடத்திவந்த இசைக் கச்சரியைப் பார்ப்பதற்காக ஒரு தாய் இசையில் மிகவும் ஆர்வமாக இருந்த தன்னுடைய ஐந்து வயது மகனை கூட்டிக்கொண்டு போனார். அதன்மூலம் அந்தத் தாய் தனது மகனுக்கு இசையில் இன்னும் ஆர்வத்தை ஊட்டவேண்டும் என்று நினைத்தார்.

இசைக் கச்சேரி நடைபெற இருந்த அரங்கில் நுழைந்த தாயானவள் முன் வரிசையில் போய் அமர்ந்துகொண்டார், அவர் அருகிலே அவருடைய மகனும் அமர்ந்துகொண்டான். தற்செயலாக அந்தத் தாயானவள் திரும்பிப் பார்த்தபோது அவருடைய நீண்ட நாளையத் தோழி பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்தார். எனவே, அவர் அருகிலிருந்த தனது மகனை மறந்துவிட்டு, தோழியோடு பேசத் தொடங்கிவிட்டார்.

இதற்கிடையில் சரியான நேரத்தில் இசைக் கச்சேரி ஆரம்பமானது, முதலில் மேடையில் மெல்லிய ஒளி தோன்றியது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் சிறுவன் ஒருவன் பியானோவிற்கு முன்பாக அமர்ந்து "Twinkle Twinkle Little Star" என்னும் பாடலை வாசித்துக்கொண்டிருந்தான். முன்வரிசையில் அமர்ந்திருந்த தாயானாள் அந்தச் சிறுவனைக் கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது அது தன்னுடைய மகன் என்று. மகனை அவ்வாறு பார்த்த தாய் ஒருவிதமான பதற்றமடைந்தார். தன்னுடைய மகன் இஞ்ஞாசி படேரவ்ஸ்கி வாசிக்கும் பியானோவை வாசிப்பதா?, என்ன நடக்கப்போகின்றதோ என்று ஒருவிதமான தடுமாற்றத்தோடு மகனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது மேடையில் இஞ்ஞாசி படேரவ்ஸ்கி தோன்றினார். அரங்கில் திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். இஞ்ஞாசி படேரவ்ஸ்கியைப் பார்த்ததும் சிறுவன் பியானோவை வாசிப்பதை நிறுத்தினான். உடனே அவர் அவனிடம், "நிறுத்தவேண்டாம், தொடர்ந்து வாசி" என்று சொல்லிக்கொண்டே அவன் வாசித்துக்கொண்டிருந்த Twinkle Twinkle Twinkle Little Star பாடலுக்கு வலுசேர்க்கும் விதமாக பக்கவாட்டில் இருந்த கட்டைகளை பாடலுக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றிப் பிடித்தார். அது சிறுவன் வாசித்துக்கொண்டிருந்த பாடலை இன்னும் இனிமையாக்கியது. தொடர்ந்து சிறுவன் வாசிக்க, அவனுக்குத் துணையாக இஞ்ஞாசி படேரவ்ஸ்கி பக்கவாட்டில் இருந்த கட்டைகளை வாசிக்க வாசிக்க அந்த இசை மிகச் சிறந்த இசையாக மாறிப்போனது. இதைக் கேட்டு அரங்கில் திரண்டிருந்த அனைவரும் (சிறுவனின் தாய் உட்பட) கைகளைத் தட்டி தங்களுடைய வாழ்த்துகளை அவர்களுக்குத் தெரிவித்துக்கொண்டார்கள்.

இசை மேதை இஞ்ஞாசி படேரவ்ஸ்கியும் ஐந்து வயது சிறுவனும் பியானோ வாசித்த அந்த அற்புத நிகழ்வு, பயந்தாகோழிகளாக இருந்த சீடர்கள் தூய ஆவியின் வருகைக்குப் பிறகு எந்தளவுக்கு துணிச்சல் மிக்க மனிதர்களாக மாறினார்கள் என்பதை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கின்றது. ஆம், இசை மேதை இஞ்ஞாசி படேரவ்ஸ்கியின் வருகைக்குப் பிறகு சிறுவனின் பியானோ வாசிப்பு இன்னொரு லெவலுக்குச் சென்றதுபோல தூய ஆவியின் வருகை சீடர்களைப் புதிய மனிதர்களாகவே மாற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்று நாம் தூய ஆவியின் விழாவை, அதாவது பெந்தகொஸ்தே விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில்தான் தூய ஆவியானவர் சீடர்கள் மீது இறங்கி வருகின்றார், அவர்களை புதிய மனிதர்களாக மாற்றுகின்றார். மகிழ்ச்சி பொங்கும் தூய ஆவியானவரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், இவ்விழா நமக்கு உணர்த்து செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஆண்டவர் இயேசு இந்த உலகினை விட்டுப்போவதற்கு முன்பாக தன்னுடைய சீடர்களிடம், "நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை தந்தையாம் கடவுள் உங்களிடம் அனுப்புவார்" என்பார் (யோவான் 16:7) இயேசு சொன்னதுபோன்றே அவருடைய விண்ணேற்றத்திற்குப் பிறகு தூய ஆவியானவர் சீடர்கள் மீது இறங்கி வருகின்றார். அதுவரைக்கும் பயந்து பயந்து வாழ்ந்துவந்த சீடர்கள் தூய ஆவியின் வருகைக்குப் பிறகு துணிச்சலோடு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைகின்றார்கள். ஆகையால், தூய ஆவியின் வருகை திருச்சபையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். இத்தகைய வல்லமைமிக்க தூய ஆவியார் எத்தகையவர் எத்தகையர் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு, கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் பவுலடியார் கூறுகின்ற தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப எப்படி நாம் வாழலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

தூய ஆவியாரைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்றபோது அவர் உண்மையை வெளிப்படுத்துகின்றவராக இருக்கின்றார் என்பார் இயேசு கிறிஸ்து. இது முற்றிலும் உண்மை. இக்கட்டான சூழ்நிலையில் அல்லது குழப்பமான சூழ்நிலையில் நாம் இருக்கும்போது, தூய ஆவியானவரை நோக்கி நாம் எழுப்பும் ஜெபம், நமக்கு சரியான பாதையை, உண்மையை எடுத்துரைப்பதாக இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. தூய ஆவியானவர் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துபவராக, உண்மையை வெளிப்படுத்துபவராக இருக்கக்காரணம் அவரே உண்மையாக இருக்கின்றார் என்பதுதான் நிதர்சனம். யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் வாசிக்கின்றோம், "தூய ஆவியாரே உண்மை" என்று (1 யோவா 5:6). ஆகையால், தூய ஆவியாரே உண்மை, அவரே நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்தக்கூடியவர் என்பதை உணர்ந்து, எப்போதும் அவருடைய பாதுகாப்பில் வாழ்வோம்.

தூய ஆவியாரைக் குறித்து இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கின்ற செய்தி அவர் வலுவூட்டுகிறவர் என்பதாகும். சீடர்கள் யாவரும் யூதர்களுக்கு அஞ்சி தங்களை அறைக்குள் அடைத்துக்கொண்டு வாழ்ந்துவந்தார்கள். அப்போதுதான் பெந்தகொஸ்தே என்னும் ஐம்பதாம் நாளில் அதாவது அறுவடைப் பெருவிழாவில் எல்லா இனத்தாரும் கூடி இருக்கின்றபோது தூய ஆவியார் அவர்கள் மீது நெருப்புப் போன்ற நாவுகள் வடிவில் இறங்கி வருகின்றார். நெருப்பு கடவுளின் பிரசன்னத்தை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கின்றது (விப 19:16-18). நாவுகள் என்பது வாய் அல்லது வாய்ச்சொல்லோடு தொடர்புடையதாக இருக்கின்றது. தூய ஆவியார் நெருப்புப் போன்ற நாவுகள் வடிவில் எல்லார் மீது இரங்கி வந்ததால் சீடர்கள் வலுபெற்றவர்களாய் உணர்கின்றார்கள். எனவே, அவர்கள் துணிவோடு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய எடுத்துரைக்கின்றார்கள்.

விவிலியத்தில் தூய ஆவியானவரைப் பற்றி எங்கெல்லாம் சொல்லப்படுகின்றதோ அங்கெல்லாம் வாழ்வும், வலுவும் இணைந்தே வருகின்றது என்பதை நாம் மறுக்கமுடியாது. தொடக்க நூல் முதல் அதிகாரத்தில் வெறுமையாய் இருந்த உலகில் தூய ஆவியார் தண்ணீரில் அசைவாடிக்கொண்டிருந்தார் என்னும் வார்த்தையும் (தொநூ 1:2), எசேக்கியேல் புத்தகத்தில் உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்ற நிகழ்வும் (37) தூய ஆவியார் வாழ்விற்கும், வலுவிற்கும் ஊற்றாக இருக்கின்றார் என்னும் உண்மையை உணர்ந்துகொள்ளலாம். ஆகையால், தூய ஆவியார் நமக்கு உண்மையை வெளிப்படுத்துபவராக இருக்கின்றார் என்னும் உணரும் அதே வேளையில், அவர் நமக்கு வலுவூட்டுகிறவராகவும் இருக்கின்றார் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய் வாழ்வோம்.

தூய ஆவியாரைக் குறித்து இன்றைய இறைவார்த்தை நமக்கு சொல்லுகின்ற மூன்றாவது செய்தி அவர் ஆண்டவரைக் குறித்து சான்று பகர்வர், சீடர்களையும் சான்று பகரச் செய்வார் என்பதாகும். நற்செய்தியில் இயேசு மிகத் தெளிவாகச் சொல்கின்றார், "அவர் (தூய ஆவியார்) வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். தூய ஆவியார் ஆண்டவர் இயேசுவைக் குறித்து எத்தகைய சான்று பகர்ந்தார் என்பதை யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் மிக அழகாகக் கூறுகின்றார், "நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கின்றார்" என்று (1 யோவா 5:6). ஆம். தூய ஆவியார் இயேசு எப்படிப்பட்டர் என்பதை இந்த உலகிற்கு எடுத்துக் கூறி சான்றுபகர்கின்றார். அது மட்டுமல்லாமல், சீடர்களும் ஆண்டவர் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்வதற்கும் உறுதியாக இருக்கின்றார். இவ்வாறு அவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகர்வதில் சிறந்து விளங்குகின்றார்.

இவ்வாறாக தூய ஆவியார் உண்மையை வெளிப்படுத்துகின்றவராக, நமக்கு வலுவூட்டுகின்றவராக, ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகற்கின்றவராகிய இருக்கின்றார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அது நமக்கு பெருமகிழ்ச்சியைத் தருவதாக இருக்கின்றது.

இதுவரைக்கும் தூய ஆவியார் எப்படிப்பட்டவர் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், அவருடைய தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கலாத்தியருக்கு எழுதப்பட்ட திருமுகம்) பவுலடியார், "சகோதர சகோதரிகளே, நீங்கள் ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்" என்பார். தூய ஆவியின் தூண்டுதல் - கனிகள் -என்ன என்பதை அவரே வரிசைப்படுத்துவார், "அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவையே ஆகும் என்று அவர் சொல்வார். இப்படி தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழும்போது இறையாட்சியை உரிமைப் பேறாக பெற்றுக்கொள்வது உறுதி. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் அப்படியெல்லாம் நம்மால் நடக்க முடிவதில்லை. நாம் தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழாமல், ஊனியல்புக்கு ஏற்ப வாழ்கின்றோம். அதனாலேயே இறையாட்சிக்கு உட்பட முடியாமல் ( 5:21) கடவுளை விட்டு வெகு தொலைவில் போய்விடுகின்றோம். நம்முடைய சிற்றின்ப நாட்டங்கள் நம்மைக் கடவுளை விட்டு வெகுதொலைவில் கொண்டுபோய்விடுகின்றது.

மனிதன் எப்படி சிற்றின்பங்களுக்காக எல்லாவற்றையும் இழக்கின்றான் என்பதற்கு சொல்லப்படுகின்ற கதை.

இளைஞன் ஒருவன் தன் தந்தையின் மாடுகளை காட்டுப் பகுதியில் மேய்த்து வந்தான். அவன் மேய்த்து வந்த ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் ஒரு சிறியமணி கட்டப்பட்டிருந்தது. அந்த மணி எழுப்புகின்ற ஓசையை வைத்தே மாடுகள் எங்கே இருக்கின்ற என்று அவன் எளிதாய் கண்டுகொண்டான்.

ஒருநாள் அவன் மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்தபோது வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் இளைஞனிடம், "தம்பி! மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிகள் மிகவும் அருமையாக இருக்கின்றனவே, அவையெல்லாம் எவ்வளவு ரூபாய் பெறும்" என்று கேட்டான். அதற்கு இளைஞன், "மிஞ்சி மிஞ்சிப் போனால், எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாய் பெறும்" என்றான். "நான் உனக்கு மூவாயிரம் ரூபாய் தருகின்றேன். எல்லா மாடுகளின் கழுத்திலும் கட்டப்பட்டிருக்கும் மணிகளையும் எனக்குக் கழற்றித் தருவாயா?" என்று கேட்டான் வழிபோக்கன். "சாதாராண மணிகளுக்கு மூவாயிரம் ரூபாயா" என்று வாயைப் பிளந்த இளைஞன் எல்லா மாடுகளின் கழுத்தில் இருந்த மணிகள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்துவிட்டான். இப்போது மாடுகளின் கழுத்தில் மணிகள் இல்லை.

மறுநாள் அவன் வழக்கம்போல காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு வெயில் அதிகமாக இருந்தது. அதனால் அவன் அருகிலே இருந்த மர நிழலில் அமர்ந்தான். அப்படியே தூங்கிப் போனான். சிறிது நேரத்தில் அவன் கண்விழித்துப் பார்த்தபோது மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் ஒன்றுகூட இல்லை. அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது மாடுகள் களவுபோனது முந்தைய தினத்தில் வந்த வழிபோக்கனின் சதித்திட்டம் என்று. மாடுகளில் கழுத்தில் மணி இருந்தால், அது ஒலி எழுப்பே என்பதை அவன் நன்றாக அறிந்துதான், மணிகளைப் பூராம் என்னிடமிருந்து விலைகொடுத்து வாங்கிகொண்டு, இன்றைக்கு என்னையே ஏமாற்றிவிட்டான்" என்று அந்த இளைஞன் தன்னையே நொந்துகொண்டான்.

சிறிய தொகைக்காக எல்லா மாடுகளையும் - சொத்துகளையும் - இழந்த இளைஞனைப் போன்றுதான் நாமும் ஊனியல்பின் படி வாழ்ந்து, கடவுள் கொடுக்கின்ற இறையாட்சியை இழந்துவிடுகின்றோம்.

ஆகவே, நாம் ஊனியல்புகளின் படி நடவாமல், தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழும்போது இறைவன் தரும் எல்லா ஆசியையும் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. எனவே, நமக்கு வாழ்வுளிகும், வலுவூட்டும் உண்மையை வெளிபடுத்தும் தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ