தவக்காலம்,
மனிதவாழ்க்கையை வளப்படுத்தும் வசந்தகாலம். இறைமகனின் பேரன்பையும்,
சிலுவைத் தியாகத்தையும் தியானித்துப் பலன் பெறும் பேரருட்காலம். இக்காலத்தின் இறுதி வாரமாகிய புனிதவாரம், புடமிடப்பட்ட பொன்னாக
எம்மை மாற்றிப் புதுமை படைக்கும் பொற்காலம். இறைமகன்யேசு, ஒடுக்கப்பட்டோரின்
உரிமைகளை நிலைநாட்டும் இலட்சிய வீரனாக, ஜெருசலேமுக்குப் பயணமாகின்றார்.
தரணியர் போற்றும் தாவீதின் தவமகன், ஓசான்னா வாழ்த்து வரவேற்க,
தம்மையே தியாகப்பலியாக அர்ப்பணிக்கும் புனித செம்மறியாய்,
சிலுவைப் பாதையில் நுழைகின்றார். இப்புனிதபாதையில் அன்பர் இயேசு
அனுபவித்த திருப்பாடுகளைத் தியானிக்க, இன்றைய திருப்பலி எம்மை
வரவேற்கின்றது.
தேடக்கிடையாத தெய்வீகஅன்பு, ஒப்புவுமையற்ற உன்னத அன்பு, தன்னலமற்ற
தியாக அன்பு, தன்னுயிர் ஈந்து மன்னுயிர் காத்த மட்டற்ற அன்பு,
கல்வாரிச் சுமைகளைச் சுகமாக ஏற்ற கனிந்த அன்பு, எக்காலமும்
நிலைத்திருக்கும் நித்திய அன்பு, இறைமகன் இயேசுவாக எம்முள்ளே
மலர்ந்து, வாழ்வில் நறுமணம் பரப்ப, எமது மனமாற்றத்தைப் பரிவோடு
வேண்டி நிற்கின்றது. தவறுகளைத் திருத்தித், தனிமனித உரிமைகளைக்
காக்கும் மனிதநேய வாழ்க்கை வாழ எம்மை அழைக்கின்றது.
இப்புனிதவாரத்தில் கிறீஸ்துவோடு இணைந்து, சிலுவையின் மறைபொருளைப்
புரிந்து கொள்ள, அவர் காட்டிய சிலுவைப் பாதையில் நடப்போம். இன்றைய
வழிபாடுகளை அர்த்தமுள்ளதாக்க, எமது வாழ்க்கையை மாற்றுவோம். மனிதநேயம்
மிகுந்த சுதந்திர விடியலைச் சமைப்போம். ஓசான்னா ஆர்ப்பரிப்புடன்
வெற்றிவீரனாகப் பவனி வந்து, இறைமாட்சியை உலகிற்கு உணர்த்திய
விடியலின் வேந்தரை, இஸ்ராயேலின் பேரரசரை வரவேற்க, நாமும் உளம்
நிறைந்து ஓசான்னா பாடுவோம். குருத்தோலைகள் உயர்வது போல, எமது
உள்ளங்களையும் உன்னதர் இயேசுவுக்காக உயர்த்துவோம். புனிதமாக்குவோம்.
"
இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் . திரும்பிப் பார்க்க
மாட்டேன்"
என்ற நம்பிக்கை உணர்வோடு, இயேசுவின் அடி தொடர்வோம்.
கிறீஸ்துவின் அரசமகிமையை உலகுக்கு வெளிப்படுத்த, இறையன்பின்
சாட்சிகளாக விளங்க, இப்புனிதவாரம் எம்மை வழி நடத்த வரம்
வேண்டுவோம். இத்திருப்பலியில் பத்தியோடு இணைவோம்.
1) ஓசான்னா ஆர்ப்பரிப்பு வரவேற்க,
வெற்றிவீரனாகப் பவனிவந்து, இறைமாட்சியை உலகிற்கு உணர்த்திப்
புதுமை படைத்த அரசரே, திருச்சபையின் நற்செய்திப்பணி
உலகெங்கும் பரவவும், இறைபணிக்கு வேண்டிய திடத்தையும்,
ஆற்றலையும் அதன் தலைவர்கள் நிறைவாகப் பெற்று, இறையன்பை
நிறைவாக அனுபவிக்கவும், விசேடமாக, இத்திருப்பலியில் எம்மோடு
இணைந்திருக்கும் அருட்தந்தையர்கள் வேண்டிய உடல், உள
நலன்கள் பெற்று, உமது ஆவியின் அருளில் என்றும்
நிலைத்திருக்கவும் அருள் புரிய வேண்டும் என்று, இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
2) அமைதியின் ஆண்டவரே, கிறீஸ்து அளித்த சமாதானத்தை,
புதிய விடியலை எமது குடும்பங்கள், நாடு, உலகம் எல்லாம்
பெற்று மகிழவும், எமது நாட்டை ஆளும் தலைவர்கள்
நீதியின் வழியில் அமைதியைக் கண்டடையவும் அருள் புரிய
வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3) தாழ்மையின் செம்மறியே திருச்சுதனே, அடிமைக் கோலம்
ண்டு;, அனைத்து வேதனைகளையும், சிலுவை மரணத்தையும்
ஏற்று, உயிர்ப்பின் மகிமையின் மூலம் எமக்குப்
புதுவாழ்வு அளித்தீரே. நாமும் இப்புனிதவாரத்தில் உமது
திருப்பாடுகளைத் தியானித்து, எமது பாவங்களுக்காக மனம்
வருந்திப் புதுவாழ்வு வாழ வரமருள வேண்டும் என்று,
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4) உரிமை வாழ்வுக்காக உயிர்ப்பலியான உன்னதரே, உமது
பிள்ளைகளாகிய நாம் பதவிகளுக்காகப் பாதை மாறிப்
போகாமல், நீர் காட்டிய பாடுகளின் பாதையில் பயணிக்கும்
மனிதநேயம் மிகுந்தவர்களாக, "
இயேசுவின் பின்னால் நானும்
செல்வேன். திரும்பிப் பார்க்க மாட்டேன்"
என்ற
நம்பிக்கை உணர்வுடன் உமது அன்புப் பாதையைத் தொடரும்
விடியலின் மக்களாக உருவாக, வரமருள வேண்டும் என்று,
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5) கருணை இறைவா, நாம் அனைவரும் உமது உறவிலும்,
வார்த்தையிலும் நிறைந்த விசுவாசத்துடன் நிலைத்து
வாழவும், உமது உயிர்ப்பின் மகிமைக்கு உறுதியான சான்று
பகரவும் வரமருள வேண்டும் என்று, இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை
அருட்சகோதரி: மெரினா
O.S.M.
முயன்றிடு முன்னேறி சென்றிடு
சென்று கொண்டிருப்பவன் காலத்தை வென்று கொண்டிருக்கிறான்.
நின்று கொண்டிருப்பவன் காலத்தை தின்று கொண்டிருக்கிறான்.
என்றோ எங்கோ படித்த புத்தக வரிகள். தவக்காலத்தின் மிக
முக்கியமான காலகட்டத்தில் அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில்
இவ்வரிகளுடன் எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர
விரும்புகிறேன்.புனித வாரத்தின் முதல் நாள். தூய மனதுடன்
நம்மை புதுப்பிக்க நாம் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி
இந்த குருத்தோலைப் பவனி. நமது ஊர்களில் பலவிதமான பவனிகள்
நடைபெறுகின்றன. குடும்பம் சம்பந்தப்பட்டது முதல் அரசியல்
ஆன்மீகம் என பலவிதமான பவனிகள். நேர்மறை எதிர்மறை என ஏகப்பட்ட
பவனிகள். சில வெற்றிகரமாக நடைபெறுகின்றன. பல வெற்றி பெறாமலேயே
மறைந்து விடுகின்றன. சில தொடங்கிய இடத்திலேயே நிறைவு பெறுவதுமுண்டு.
பல நிறைவு பெற்ற இடத்திலிருந்து மீண்டும் தொடங்குவதுண்டு.
பவனிகள் எதற்காக?
தனது, அல்லது தங்களது ஆதரவாளர்களின் எண்ணிக்கையை திறமையைப்
பிறர் அறியச்செய்ய, தங்களது நோக்கத்தை பிறருக்கு அறிவிக்க,
தங்களது மகிழ்வை ,வெறுப்பை வெளிப்படுத்த பவனிகள் நடைபெறுகின்றன.
ஆனால் இயேசுவின் எருசலேம் பயணம் முற்றிலும் மாறுபட்டது.
தனது அன்பர்கள் ஆதரவாளர்களின் திறமையை பிறர் அறியச்செய்ய
அல்ல, தனது தாழ்ச்சியை பிறருக்கு அறிவிக்க. வெற்றிவாகை சூட
அல்ல, வேதனைகளை நாடிச்செல்ல. பதவியையும் பணத்தையும் பெருக்கச்செல்லவில்லை.
மாறாக பாசத்தையும் இரக்கத்தையும்வெளிப்படுத்த செல்கிறார்.
இன்று பலர் பதவியும் பணமும் பார்த்தவுடன் ஒரே இடத்தில் காலத்திற்கும்
அசையாமல் அமரத்துடிக்கின்றனர். வேறு இடத்திற்கு நகர்ந்தால்
இதே போல் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயத்தில்.... நகர மறுக்கின்றனர்.
இயேசுவுக்கு அத்தனையும் கிடைத்தது. மக்களின் மனதில் நீங்கா
இடம், பசிக்கு பகிர்ந்துண்ண உணவு, பாசம் காட்ட சீடர்கள்,
செல்லும் இடமே தங்கும் இடம். ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும்
செய்ய ஆயிரமாயிரம் மக்கள் என எல்லாமே நிறைவாக இருந்தது. இருப்பினும்
இது போதும் என்று இயேசு இருந்து விடவில்லை. அந்த இடத்திலேயே
நிலைத்து நிற்க விரும்பவில்லை. இது நிரந்தரமல்ல, நிலையானதுஒன்று
உண்டு என உணர்ந்து முன்னேறிச்செல்கிறார். தனது பயணம் தொடங்கும்
இடம் மகிழ்வானது தான் ஆனால் பயணிக்கும் பாதை துன்பமயமானது
என்பதை உணர்ந்தவர் இயேசு. ஆனால் அதன் வழியாக மட்டுமே உலகை
மீட்க முடியும் என்பதையும் நன்கு அறிந்தவர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பவனி இது. இன்றும்
நாம் அவர் வழியை பின்பற்றுகிறோம் என்பதற்கான வெளிப்படையான
அடையாளம் இது. இன்று நாம் கைகளில் குருத்தோலை ஏந்தி இறைப்புகழ்
பாடி பவனி வந்தோம். அரச பரம்பரையில் மன்னர் நகர்வலம் வரும்போது
மக்கள் இப்படி செய்வது வழக்கம். தங்களை ஆளும் மன்னர்கள்,
மக்கள் மத்தியில் வந்து தங்கி அவர்களது குறைகளைத் தீர்த்து
தன் அரண்மனை திரும்புவர். அந்நேரத்தில் இதுமாதிரியான வரவேற்புகள்
இருக்கும். நம் மன்னர் இயேசுவோ, நம் குறை தீர்த்து நம்மை
விட்டு அகல்பவர் அல்லர். நமது நிறைவிலும் குறைவிலும் நம்மோடு
எந்நாளும் இருப்பவர். நீங்கள் முன்னால் சென்று பாஸ்கா
கொண்டாட இடத்தை ஏற்பாடு செய்யுங்களென்று சொல்வதோடு மட்டுமல்லாமல்
நம் உடன் வருபவர்.
நமது கிறிஸ்தவ மக்களிடையே திருவழிபாடு சேர்ந்த பல விதமான
பவனிகள் நடைபெறுகின்றன. மாதா பவனி, சூசையப்பர் பவனி, அந்தோணியார்
பவனி, அருளானந்தர் பவனி என ஏகப்பட்ட புனிதர்களின் பவனிகள்
நடைபெறுகின்றன. ஆனால் அவை எல்லாம் ஒன்று போல் ஒரே நேரத்தில்
நடப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் பவனியினை வழிநடத்துவர்.
ஆனால் குருத்து ஞாயிறு பவனி , தவக்காலத்தின் ஆறாம் ஞாயிறு
காலையில் அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் பல்வேறு இடங்களில்
பல்வேறு நாடுகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. காரணம்,
வழிபாட்டால் நாம் வேறுபட்டாலும் , வழிபடும் கிறிஸ்து ஒருவர்
என்ற கருத்தில் ஒன்றுபடுவதால் தான். நாம் கொண்டாடும் இயேசு
இன்பத்தையும் நிறைவையும் மகிழ்வையும் மட்டும் அனுபவித்த இயேசு
அல்ல. மாறாக துன்பத்தையும் கலக்கத்தையும் அனுபவித்த இயேசு.
இன்பம் மட்டும் வாழ்க்கையல்ல, இன்பமும் துன்பமும் இரண்டறக்
கலந்தது தான் வாழ்க்கை என்பதை வாழ்ந்து காட்டியவர். துன்பத்தின்
வழிதான் உலகை மீட்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்த வந்த
இயேசு .
குருத்து ஞாயிறு இன்று நமக்குவிடுக்கும்
செய்தி என்ன?
குருத்தோலை, போர்வை, கழுதை என பல பொருட்கள் இப்பவனியில்
இடம் பெறுகின்றன. இவை மூன்றும் இந்நாளில் நமக்கு சொல்லும்
செய்தி என்பதை அறிய முயல்வோம்.
குருத்தோலை.: இளம் குருத்து
ஓலைகள், எளிதில் வளைத்து ஓலைப்பாய், ஓலைப்பெட்டி, என உபயோகமான
பொருட்கள் செய்ய, ஓலைச்சுவடிகளாக பாதுகாக்க பயன்படுகிறது.
இயேசுவை மெசியாவாக, நம்மை மீட்க வந்த ஆண்டவராக பார்க்கும்
நாமும் குருத்தோலைகளே. தகுந்தவனோடு, தகுந்தவனின் கையில் இருக்கும்
போது நாம் தகுதியான பொருட்களாவோம். இல்லையேல் கீழே
விழுந்து மிதிபடும் குப்பையோடு குப்பையாக மாறுவோம்.
போர்வை மேலாடை: இளைப்பாற, குளிர் வெயிலில் இருந்து
கூடாரமாக நம்மை பாதுகாக்க, பயன்படுகிறது. கிறிஸ்தவர்களாகிய
நாம் இயேசுவின் வார்த்தையில் இளைப்பாறி, அவரது நிழலில்
பாதுகாக்கப்படுகிறோம். பெற்றதைப் பிறருக்கு கொடுத்து
வாழும்போது அதாவது, பிறர் நம் சொல்லால் இளைப்பாறுதல்
பெறும்போது, செயலால் பாதுகாப்பை நம்பிக்கையை உணரும்போது
நாமும் இயேசுவின் பாதம் பட்ட போர்வை மேலாடைகளாகிறோம்.
கழுதை: பொதி சுமக்க, பயணம்
செய்ய, சில வீடுகளில் என்னைப் பார் யோகம் வரும் என்று படத்தோடு
ஒட்டப்பட என பல வகைகளில் பயன்படுகிறது. கிறிஸ்தவர்களாகிய
நாம் இயேசுவின் துணையுடன் பிறர் சுமைகளையும் பகிர்ந்து,
அவர்மீது ,அவரோடு பயணம் செய்ய அழைக்கப்படுகிறோம், சில நேரங்களில்
கிறிஸ்தவனைப்பார் அவன் வாழ்வைப் பார் உன் வாழ்க்கை மாறுபடும்
செழிப்பாகும் என்று சொல்லுமளவிற்கு வாழ தூண்டப்படுகிறோம்.
எனவே குருத்தோலையாக உருமாற, போர்வை மேலாடையாக நம்பிக்கை
பாதுகாப்பு தர, கழுதை போல இயேசுவை சுமந்து வாழ முயற்சிப்போம்.
இரண்டு கழுதைகள் குருத்து ஞாயிறு முடிந்து தங்களுக்குள்
பேசிக்கொண்டன. முதல் கழுதை சொன்னது. என்ன இந்த மக்களை
புரிஞ்சுக்கவே முடியல. நேற்று என்னடான்னா, என் மேல போர்வை
மேலாடை எல்லாம் போட்டு, வழியில இலை தளைகள் நிரப்பி, பாட்டு
பாடி அழைத்துச்சென்றனர். இன்றைக்கு என்னை கண்டுகொள்ளவே
மாட்டேன்றாங்க. என்னாச்சு இவங்களுக்கு???அதற்கு இரண்டாம்
கழுதை சொன்னபதில், "நேற்று உனக்காக அவர்கள் அதை செய்யவில்லை.
உன் மீது அமர்ந்து பவனி வந்த இயேசுவுக்கு செலுத்தப்பட்ட மரியாதை
அது. கடவுளோடு இருந்தால் மட்டுமே நீ ஹீரோ. இல்லையேல் நீ
வெறும் ஸீரோ என்றதாம்.
. நாமும் அப்படித்தான். இயேசுவோடு மகிழ்வாக பவனி வந்து ஓசான்னா
பாடல் பாடிய நாம், பவனியோடு என் பணி முடிந்துவிட்டது என்று
நினைத்து நின்றுவிட்டால் எதுவும் மாறாது. மாறாக இயேசுவோடு
தொடர்ந்து பயணிப்போம். அவர் துன்பத்தில் துணையாவோம். அவரோடு
உயிர்த்து காலத்தை வெல்வோம்.முயன்றிடுவோம்
முன்னேறிச்சென்றிடுவோம். புனித வாரத்தில் புதுத் தெம்புடன்
அடியெடுத்துவைப்போம். புனிதர்களாக மாற இயலாவிட்டாலும் புது
மனிதர்களாகவாவது உருமாறுவோம். பாடுகளின் வாரத்தில் அவரோடு
உடனிருப்போம். நின்று கொண்டிருப்பவர்களாக அல்ல, அவரோடு உடன்
சென்று கொண்டிருப்பவர்களாக மாறுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும்
நம் குடும்பத்தோடும் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்..
மறையுரைச்சிந்தனை - சகோ. செல்வராணி Osm
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி
இது ஆண்டவருக்குத்
தேவை!
இயேசு எருசலேம் நகருக்குள் ஆர்ப்பரிப்போடு நுழையும் நிகழ்வை எல்லா
நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர். யோவான் தவிர மற்ற மூன்று
நற்செய்தியாளர்களும் தங்கள் பதிவில் கழுதையைப் பற்றிய வர்ணனையை
வைக்கின்றனர். அவர்களின் பின்வரும் சொல்லாடல் எனக்கு ரொம்ப
பிடிக்கும்: 'இது ஆண்டவருக்குத் தேவை.' என் அருள்பணி வாழ்வின்
விருதுவாக்காக இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று நான்
முன்னால் நினைத்ததுண்டு.
'பேனா எதற்குப் பயன்படும்?' என்று ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களிடம்
கேட்டார். எல்லாரும் சேர்ந்து, 'எழுத' என்றனர். 'அவ்வளவு தானா?' என்றார்.
'அவ்வளவுதான்' என்றனர் மாணவர்கள். ஒரு மாணவி மட்டும் எழுந்து
நின்று, 'இல்லை. பேனா எழுத மட்டுமல்ல. அது இன்னும் நிறைய பயன்படும்.
படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தின் நடுவில் அடையாளமாக வைக்க,
ஃபேன் காற்றில் பறக்கும் தாளின் மேல் வைக்கும் பேப்பர் வெயிட்டாக,
சட்டைப் பையில் குத்தி வைத்து ஒருவரின் அந்தஸ்தைக் காட்டும் அடையாளமாக,
பிறருக்கு அளிக்கும் பரிசுப்பொருளாக, பள்ளியின் இறுதிநாளில் ஒருவர்
மேல் ஒருவர் இன்க் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த, முன்பெஞ்சில்
அமர்ந்திருக்கும் ஒருவரின் முதுகில் தட்டி அவரைத் திரும்பிப்
பார்க்க வைக்க, ஆடியே கேசட்டின் சக்கரப்பற்களில் நடுவே விட்டு சக்கரங்களை
வேகமாகச் சுழற்ற,' என்று சொல்லிக்கொண்டே போனார்.
'கழுதை எதற்குப் பயன்படும்?' என்று நம்மிடம் யாராவது கேட்டால்,
'பொதி சுமக்க' என்று சொல்லி அமைதி காத்துவிடுவோம். ஆனால், விவிலியத்தில்
'கழுதையின் தாடை' எதிரியை அழிக்க, 'கழுதை' மற்றவர்களைச் சபிக்க, 'கழுதை'
அரசர்களைச் சுமந்துவர, 'கழுதை' அமைதியின் இறைவாக்கின் அடையாளமாக என
நிறையப் பயன்பாடுகள் உள்ளன.
'இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' - இங்கே ஆண்டவர் என்பது இயேசுவையும்,
தந்தையாகிய இறைவனையும் குறிக்கின்றது. இயேசு இக்கழுதையைப் பயன்படுத்தி
எருசலேம் ஆலயம் நுழைகிறார். இறைவன் இக்கழுதையைப் பயன்படுத்தி இயேசுவின்
எருசலேம் பயணத்தை, பாடுகள் மற்றும் இறப்பை துவங்கி வைக்கின்றார்.
இன்னும் கொஞ்சம் தாராளமான உருவகமாகப் பார்த்தால், 'ஆண்டவர்' என்பது
தந்தையாகிய இறைவனையும், 'கழுதை' என்பது இயேசுவையும் குறிக்கிறது என
வைத்துக்கொள்ளலாம். மேலும், இந்தக் கழுதை நம் ஒவ்வொருவரையும்
குறிக்கும் உருவகமாகவும் இருக்கிறது.
எப்படி?
இன்றைய நற்செய்தி வாசகமாக இயேசுவின் பாடுகளை மாற்கு நற்செய்தியாளரின்
பதிவிலிருந்து வாசிக்கக் கேட்டோம்.
ஒட்டுமொத்த வாசகத்தின் பின்புலத்தில் இழையோடும் செய்தி ஒன்றுதான்:
'இந்தக் கழுதை (இயேசு) எங்களுக்குத் தேவையில்லை!'
இயேசு என்பவர் சீடர்களுக்கு, தலைமைச் சங்கத்தாருக்கு,
பிலாத்துவிற்கு, ஏரோதுவிற்கு தேவையில்லாமல் போகின்றார். ஆகையால்
அவரை தீர்ப்பிட்டு, வதைத்து, அழித்துவிடுகின்றனர்.
ஆக, மனிதர்கள், 'இது எங்களுக்குத் தேவையில்லை' என்று சொன்னதை, இறைவன்,
'இது ஆண்டவருக்குத் தேவை' என்று புரட்டிப் போடுகின்றார்.
கடந்த வாரத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியலாளர் இறந்துபோனார்.
உடல் செயலாற்றாமல் மூளை மட்டுமே செயலாற்றியது இவருக்கு. 'எ ப்ரீஃப்
ஹிஸ்டரி ஆஃப் டைம்' என்று நூலின் வழியாக அறிவியல் அறிவையும் சாமானியருக்கும்
கொண்டுவந்ததோடு, 'கருந்துளை,' 'கடவுள் துகள்' என்னும் தன் ஆராய்ச்சியின்
வழியாக ஐன்ஸ்டைன் போன்றதொரு அழியாத இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
'இவர் எனக்குத் தேவையில்லை' என்று மற்றவர் தன்னைச் சொன்னாலும், 'என்னாலும்
ஒரு பயன் உண்டு' எனத் தன் இருப்பை பதிவு செய்தார் ஹாக்கிங்.
நிற்க.
உலகப்போரின்போது நாசிச ஜெர்மனி நாட்டில் ஹிட்லர் முதியவர்கள்,
நோயுற்றவர்கள், கைகால் இழந்தவர்கள், பேச்சற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர்
அனைவரையும் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டார். 'இவர்களால் நமக்கு ஒரு
தேவையும் இல்லை' என்பது ஹிட்லரின் வாதம்.
'இவர் எங்களுக்கு தேவை இல்லை' என்று இயேசுவைப் பார்த்து மற்றவர்கள்
சொல்லி அவரை கொல்லும் அளவிற்குச் சென்றதன் காரணம் என்ன?
அவர் இவர்களுக்கு தொந்தரவாக இருந்தார்.
அவர் இவர்களைப் போல பேசவில்லை, செயல்படவில்லை.
இவர்கள் நிறைய தன்னிறைவு கொண்டிருந்தனர். இவர்களுக்கென்று
வேறெதுவும் தேவையில்லை.
இப்படி நிறைய சொல்லலாம்.
ஆனால், இந்த உலகமே தன்னைத் தேவையில்லை என்று சொன்னாலும் இயேசு தளர்ந்து
போகவில்லை. அதுதான் குருத்து ஞாயிறு சொல்லும் பாடம்.
ஆபிரகாம் மாஸ்லோ என்ற உளவியல் அறிஞர் மனித தேவைகளை ஐந்தடுக்குகள்
கொண்ட பிரமிடாக முன்வைத்து, 'உடல்சார்ந்த தேவைகள்,' 'பாதுகாப்பு
தேவைகள்,' 'அன்புத் தேவைகள்,' 'தன்மதிப்பு தேவைகள்,' 'தன்நிர்ணய
தேவைகள்' என வரையறுக்கின்றார். மனித உறவுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில்
தேவை சார்ந்தே இருக்கின்றது என்பது நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய எதார்த்தம்.
'தேவைக்காகவாவது என்னிடம் பேசுகிறார்களே' என்று மகிழ வேண்டும். ஏனெனில்,
'தேவையில்லை என்று பேச மறுக்கிறார்களே' என்பது அதனிலும் கொடிய வேதனை.
ஆக, இந்த உலகமே, 'இவர் எனக்குத் தேவையில்லை' என்று சொன்னாலும், இயேசு,
'இது ஆண்டவருக்குத் தேவை' என்று தன் உள்ளத்தில் துணிவோடு இருக்கின்றார்.
இந்த துணிச்சல்தான் அவரை எதையும் எதிர்கொள்ள வைக்கிறது. 'தைரியம்
இழந்தவன் எல்லாம் இழப்பான்' என்பது முதுமொழி.
இன்றைய நாளின் கழுதைக்குட்டியிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் நாம்
கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப்பாடங்கள் மூன்று:
அ. இறைவனின் அல்லது தேவையில் இருப்பவரின்
திருவுளம் நிறைவேற்ற எப்போதும் தயார்நிலை.
ஆ. அடுத்த என்ன நடக்கும் என்பதை நாம் அறியாததால்
நடப்பதை அப்படியே புன்முறுவலோடு எதிர்கொள்வது.
இ. அடுத்தவரின் சத்தம் ஓங்கி ஒலிக்கும் நேரத்தில்
நாம் மௌனம் காப்பது
அ. தயார்நிலை
இந்தக் கழுதை எத்தனை மாதங்கள் அல்லது எத்தனை நாள்கள் அங்கு நின்றது
என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், அவிழ்த்தவுடன் அவிழ்த்தவரோடு
சென்றுவிடுகிறது. 'இல்ல, நான் அப்புறம் வர்றேன்!' என்றோ, 'இல்ல எனக்கு
வேற வேலை இருக்கிறது' என்றோ சொல்லவில்லை. இந்த மனநிலை இருந்தால்
நாம் எந்த விரக்தியையும் வென்றுவிடலாம். என்னைப் பொறுத்தவரையில்,
திட்டமிடுதலும், முதன்மைப்படுத்துதலும், டாஸ்க் லிஸ்ட் போடுவதும்
பல நேரங்களில் செயற்கைத்தனத்தையும், விரக்தியையும், ஏமாற்றத்தையும்
உருவாக்குகிறது. தயார்நிலை நமக்கு சுதந்திரத்தையும், கட்டின்மையையும்
தருகிறது. இயேசு தனக்கு என்ற எந்த அஜென்டாவையும் வைத்திருக்கவில்லை.
ஆ. புன்முறுவல்
கழுதை தன்னை அவிழ்த்தவர்மேல் எந்த எதிர்பார்ப்பும் வைத்திருக்கவில்லை.
தன்னை அடிக்க கொண்டு செல்கிறார்களா, அல்லது வேலைக்கு கூட்டிச்
செல்கிறார்களா என்று எதுவும் அதற்குத் தெரியாது. இருந்தாலும் அடுத்த
வேலைக்கு அப்படியே செல்கிறது. அதுதான் அதன் இருப்பின் நோக்கம். ஆக,
கழுதையின் நோக்கம் கட்டிக் கிடப்பதற்கு அல்ல. கட்டிக்கிடத்தலில் சுகம்
இருக்கும். உணவு நேரத்திற்கு கிடைக்கும். நிழல் இருக்கும். எந்த
தொந்தரவும் இருக்காது. ஆனால், கட்டிக்கிடப்பதற்காக கழுதை பிறக்கவில்லையே.
என் வாழ்வின் நோக்கம் என்ன என்பது நான் அறியவில்லை என்றாலும்,
வாழ்க்கை அடுத்தடுத்து அழைக்கும்போது புன்முறுவலோடு நகர்ந்து செல்வதே
சிறப்பு.
இ. மௌனம்
வாழ்க்கையில் பல நேரங்களில் நம் பேச்சு அதிக பேச்சையே வளர்க்கும்.
ஆனால் மௌனம் எல்லாவற்றையும் வென்றுவிடும். தன்னை நோக்கி எதிர் மற்றும்
பொய்ச்சான்றுகளைச் சொன்னவர்கள்மேல் இயேசு கோபப்பட்டு எதிர்த்துப்
பேசவில்லை. பேச்சு பேச்சையும், எதிர்ப்பு எதிர்ப்பையும் வளர்க்கும்
என்பது அவருக்குத் தெரிந்ததால் அடுத்தவரின் பேச்சு அதிமாகும் பட்சத்தில்
அவர்களுக்கு மேல் தன் குரலை ஓங்காமல் தன் குரலைத்
தாழ்த்திக்கொள்கின்றார்.
இறுதியாக,
'எல்லாரும் என்னை பயன்படுத்துகிறார்கள்' என்ற கோபத்திற்கும்,
'என்னை யாராவது தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களோ' என்று பயத்திற்கும்
மேலே பயணம் செல்கிறது மனித வாழ்க்கை என்ற இரயில்.
ஆனால், 'இந்த இரயில் ஆண்டவருக்குத் தேவை' என்ற மனநிலை மட்டும் வந்தால்
கோபமும், பயமும் தண்டவாளம் போல தரையோடு தரையாய் மறைந்து போகும்.
மூன்று பயணங்கள்!
இன்று பவனியில் நாம் வாசிக்கும் நற்செய்தி வாசகம்,
'
எருசலேமை நெருங்கியபோது'
என்று தொடங்குகிறது. ஆண்டவர்
இயேசுவுடன் இணைந்து நாமும் இன்று எருசலேமை நெருங்கி
நிற்கிறோம். எருசலேம் என்பது இயேசுவைப் பொருத்தவரையில்
இறுதி அல்ல, மாறாக, புதிய தொடக்கம். இங்கிருந்துதான்
இயேசு மாட்சியுடன் உயிர்த்தெழுந்தார், இங்கிருந்தே தம்
சீடர்களைப் பணிக்கு அனுப்பினார், இங்கேதான் புதிய
இஸ்ரயேல் என்னும் திருஅவை தொடங்கியது.
இன்று நாம் வாசிக்கக் கேட்ட வாசகங்களை இணைத்துப்
பார்க்கும்போது, இயேசு மேற்கொண்ட மூன்று பயணங்களை அவை
முன்மொழிகின்றன:
(அ) எருசலேம் நோக்கிய பயணம்
(ஆ) கொல்கொதா (கல்வாரி) நோக்கிய பயணம்
(இ) விண்ணகம் நோக்கிய பயணம்
இயேசுவின் மேற்காணும் மூன்று பயணங்களோடு நம்
வாழ்க்கைப் பயணத்தையும் இணைத்து சிந்திப்போம்.
(அ) எருசலேம் நோக்கிய பயணம் '
ஓசன்னா!'
இந்தப் பயணத்தை இயேசுவே தொடங்குகிறார். தாம் பயணம்
செய்ய வேண்டிய வாகனத்தை கழுதைக்குட்டியை தாமே
தேர்ந்தெடுக்கிறார். '
இது ஆண்டவருக்குத் தேவை'
என்று
சொல்லப்பட்டு, கழுதை கொண்டுவரப்படுகிறது. தொடர்ந்து,
சீடர்கள் தங்கள் மேலாடைகளை கழுதையின்மேல்
விரிக்கிறார்கள், மற்றவர்கள் இலைதழைகளை வெட்டி வழியில்
பரப்புகிறார்கள். இயேசு-சீடர்கள்-மக்கள் என
அடுத்தடுத்து செயல்களில் ஈடுபடுகிறார்கள். கழுதையில்
பவனி என்பது இங்கே கவனிக்க வேண்டியது. இயேசுவின்
சீடர்கள் தங்களுடைய ஆண்டவர் ஓர் அரச மெசியாகவாக வந்து
உரோமை வெற்றிகொள்வார் என்று அவரைத் தவறாகப்
புரிந்துகொள்கிறார்கள். தாம் தேர்ந்துகொள்ளும்
கழுதைக்குட்டி அடையாளம் வழியாக அவர்களுக்குக் கற்பிக்க
விரும்புகிற இயேசு, தம் ஆட்சி ஆன்மிகம் சார்ந்தது
என்றும், அமைதியை விரும்புவது என்றும் கூறுகிறார்.
மக்கள், '
ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர்
போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு
போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!'
என்று
அக்களிக்கிறார்கள். '
ஓசன்னா'
என்றால் '
எங்களை
மீட்டருளும்! எங்களைக் காப்பாற்றியருள்க!'
என்று
பொருள். உரோமையின் அடிமைத்தளையிலிருந்த இயேசுவின்
சமகாலத்து மக்கள், இயேசுவே தங்களைக் காப்பாற்ற வந்த
அரசர் என நினைத்து, '
ஓசன்னா'
முழக்கம்
எழுப்புகிறார்கள். வாடகைக் கழுதையில் வந்த இறுதி
நம்பிக்கையாக இயேசுவை அவர்கள் வரவேற்றார்கள். உரோமை
அரசை வீழ்த்துகிற இயேசு தாவீதின் அரசை நிலைநாட்டுவார்
என்பது அவர்களுடைய எதிர்நோக்கு.
இந்தப் பவனியில் நாமும் ஒருவராக அன்று நின்றிருந்தால்
நாமும் இதே நம்பிக்கையையும், எதிர்நோக்கையுமே
கொண்டிருப்போம்.
எளிமை, அமைதி, நம்பிக்கை, எதிர்நோக்கு ஆகியவற்றை
அடையாளப்படுத்துகிறது இயேசுவின் முதல் பயணம். இந்தப்
பவனியில் இயேசுவை எருசலேமுக்குள் அழைத்து வருபவர்கள்
மக்கள். அவர்கள் எழுப்புகிற வாழ்த்தொலி, '
ஓசன்னா!'
(ஆ) கொல்கொதா (கல்வாரி) நோக்கிய பயணம் '
சிலுவையில்
அறையும்!'
மாற்கு நற்செய்தியாளர் எழுதியபடி இயேசுவின் பாடுகள்
வரலாற்றை வாசிக்கக் கேட்டோம். இந்தப் பயணத்தையும்
இயேசுவே தொடங்குகிறார். கழுதைக்குட்டியை அவிழ்க்குமாறு
தம் சீடர்களை முன்னர் அனுப்பிய இயேசு, பாஸ்கா உணவை
உண்ணுவதற்கான இடத்தை ஏற்பாடு செய்வதற்காக அவர்களை
அனுப்புகிறார். கழுதைக்குட்டி, இல்லம், அவற்றின்
உரிமையாளர்கள் என அனைவர்மேலும் இயேசு ஆற்றல் கொண்டவராக
இருக்கிறார். கொல்கொதா நோக்கிய பயணம் பல பயணங்களை
உள்ளடக்கியதாக இருக்கிறது: கெத்சமனி நோக்கி,
தலைமைச்சங்கம் நோக்கி, பிலாத்து நோக்கி.
பவனியில் கழுதைக்குட்டியின்மேல் தங்கள் மேலுடைகளைப்
போட்ட சீடர்கள் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறார்கள்,
மறுதலிக்கிறார்கள், அவரை விட்டுத் தப்பி ஓடுகிறார்கள்.
'
ஓசன்னா!'
என்று தங்களுடைய எதிர்நோக்கைத் தெரிவித்த
மக்கள், அவநம்பிக்கை மற்றும் வெறுப்பின் உச்சத்தில்,
'
சிலுவையில் அறையும்'
எனக் கத்துகிறார்கள். இவர்களுடைய
செயல்கள் மாற்றத்துக்குக் காரணம் இவர்கள் இயேசுவைத்
தவறாகப் புரிந்துகொண்டதே. இயேசுவை ஓர் அரசியல்
மெசியாவாகக் கருதினார்கள். அவருடைய தளம் ஆன்மிகம்
சார்ந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவைக்
கொன்றாகிவிட்டது என மகிழ்ச்சி அடைகிறார்கள்.
பிலாத்துவோ இந்தக் கலவரத்தை அடக்கியாயிற்று என்று
நினைத்து பெருமிதம் கொள்கிறார். தலைமைக்குருக்கள்
பொறாமையால்தான் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார்கள் என
நினைத்தாலும், விழாக்காலத்தில் எருசலேமின் அமைதியே
அவருடைய முதன்மையான தேவையாக இருந்தது. இறுதியில்,
சிலுவைக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர்,
'
இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்!'
எனச் சான்று
பகர்கிறார்.
தனிமை, பகைமை, வெறுப்பு, பொறாமை, பிடிவாதம் ஆகிய
எதிர்மறை உணர்வுகள் நிறைந்ததாக இந்தப் பயணம்
இருந்தாலும், பயணத்தின் தொடக்கத்தில் இளவல் ஒருவர்
இயேசுவின் தலைமேல் எண்ணெய்பூசி வெளிப்படுத்தும்
அன்பும், நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை அறிக்கையும்
நேர்முகமான உணர்வுகளை எழுப்புகின்றன. இந்தப் பயணத்தில்
மக்கள் எழுப்புகிற வாழ்த்தொலி, '
ஓசன்னா!'
(இ) விண்ணகம் நோக்கிய பயணம் '
இயேசு கிறிஸ்து
ஆண்டவர்'
எருசலேம் நோக்கிய பவனி, கொல்கொதா நோக்கிய பயணம்
என்னும் நம் பார்வையைச் சற்றே அகலமாக்கி, இப்பயணங்கள்
இயேசுவின் நீண்ட பயணத்தின் சில பகுதிகளே என மொழிகிறது
இன்றைய இரண்டாம் வாசகம். மனத்தாழ்மை, ஒற்றுமை,
துன்பத்தின் வழியாகவே வெற்றி என்னும் அறிவுரையை
பிலிப்பி நகரத் திருஅவைக்கு வழங்குகிற பவுல், ஒரு
கிறிஸ்தியல் பாடல் வழியாக இயேசுவை அவற்றின்
முன்மாதிரியாக மொழிகிறார். கடவுள் வடிவை விடுத்து,
தம்மையே வெறுமையாக்கி, மனித உரு ஏற்கிற இயேசு, சாவை
ஏற்கும் அளவுக்கு, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குத்
தம்மையே தாழ்த்துகிறார். கடவுளோ அவரை உயர்த்தி,
எப்பெயருக்கும் மேலான பெயரை அளிக்கிறார். பவுல் இங்கே
மொழிகிற முதன்மையான அடையாளம் சிலுவை.
மண்ணகம் நோக்கி வந்த இயேசு விண்ணகம் ஏறிச் செல்கிறார்.
சிலுவையில் இறந்த அவர் உயிர்த்தெழுகிறார். இந்தப்
பயணத்தை வழிநடத்துபவர் கடவுளே. இந்தப் பயணத்தின்
இறுதியில் மக்கள் எழுப்புகிற வாழ்த்தொலி அல்லது
அறிக்கை, '
இயேசு கிறிஸ்து ஆண்டவர்'
என்பதாகும்.
திருப்பாடுகளின் வாரத்திற்குள் நுழைகிற நாம்
மேற்காணும் மூன்று பயணங்களையும் மனத்தில் இருத்துவோம்.
கழுதைக்குட்டியில் அரசர்போலப் பயணம் செய்கிற இயேசு,
சிலுவை என்ற அரியணையில் அமர்கிறார். இது முரண் அல்ல,
மாறாக, இரு பக்கங்கள்.
தவக்காலத்தின் முத்தாய்ப்பாக இருக்கிற இந்த வாரத்தில்,
இயேசுவின் பயணங்களோடு நம் வாழ்க்கைப் பயணத்தையும்
இணைத்துக்கொள்வோம். நம்பிக்கை, எதிர்நோக்கு என
நேர்முகமாக பயணம் அமைந்தாலும், சில நேரங்களில் தனிமை,
பகைமை, காட்டிக்கொடுக்கப்படுதல், மறுதலிக்கப்படுதல்,
இறப்பு, சோகம், இழப்பு ஆகியவை நம் வாழ்க்கை
அனுபவங்களாகவும் இருக்கின்றன. இறுதியில், வெற்றி
என்பது உறுதியாக உள்ளது.
(அ) '
ஆண்டவர் என் துணையாக உள்ளார்'
முதல் வாசகத்தில், எசாயா இறைவாக்கு நூலிலிருந்து,
துன்புறும் ஊழியனின் மூன்றாவது பாடலை வாசிக்கக்
கேட்டோம். இஸ்ரயேல் மக்களை உருவகிக்கிற இந்தப்
பணியாளர் நிராகரிப்பையும் வன்முறையையும் துன்பத்தையும்
அவமானத்தையும் எதிர்கொண்டாலும் இறுதியில், '
ஆண்டவர்
என் துணையாக உள்ளார்'
எனக் கண்டுகொள்கிறார். தம்
தனிமையிலும் தந்தையின் உடனிருப்பை உணர்ந்தார் இயேசு.
இறைவனின் உடனிருப்பை நாம் கண்டுணர்வதற்கான வாரமாக இந்த
வாரம் அமையட்டும்.
(ஆ) சிலுவை
இன்று நாம் ஏந்துகிற குருத்து சிலுவை மரமாக மாறுகிறது.
குருத்தின் மென்மை மறைந்து சிலுவையின் வன்மை இயேசுவைத்
தழுவிக்கொள்கிறது. மென்மையும் வன்மையும் மாறி மாறி
வரும் நம் வாழ்வில் சிலுவையைப் பற்றிக்கொள்வோம்.
சிலுவையின் அவமானத்தை தம் உயிர்ப்பின் வழியாக
மாட்சியாக உயர்த்துகிறார் இயேசு. துன்பங்களின் வழியாக
மீட்பு அல்லது வெற்றி என்பதை உணர்ந்தவர்களாக,
சின்னஞ்சிறு துன்பங்கள் வழியாகவே நம் வாழ்க்கை
நகர்கிறது என்பதை ஏற்றுக்கொள்வோம்.
(இ) மனமாற்றம்
உயிர்ப்புக்கான தயாரிப்பாக, நம் தாய்த் திருஅவை
ஒப்புரவு அருளடையாளம் செய்ய நம்மை அழைக்கிறது. நம்
பாவங்களுக்காக ஒட்டுமொத்தமாக இயேசு இறந்தார் எனில்,
தனிப்பட்ட பாவங்கள் நம்மில் இறக்க வேண்டுமெனில்,
நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும். நாம் தொடர்ந்து
செய்கிற பாவங்கள் நாம் மேற்கொள்கிற தெரிவுகள் என்பதை
மனத்தில் இருத்துவோம். இறைவனின் மன்னிப்பை
உணர்ந்தவர்களாக ஒருவர் மற்றவருடன் ஒப்புரவாகுவோம்.
மார்செல்லெஸ் (Marseilles) என்னும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய
மக்கள் வாழ்ந்த நகரில் கயோட் (Guyot) என்னும் பெரியவர் ஒருவர் வசித்து
வந்தார். அவர் திருமணமாகாதவர்; உணவுக்காகவோ, உடுத்தும் உடைக்காகவோ
அதிகமாக செலவு செய்யாதவர். அவர் மிகவும் கடினமாக உழைத்து ஒரு பெரிய
மண்டபத்தைக் கட்டிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து மார்செல்லெஸ்
நகரில் இருந்த மக்கள் எல்லாம் '
இவர் ஒரு சரியான கஞ்சப்
பேர்வழி' , இவருக்குத்தான் குடும்பமோ, குழந்தையோ இல்லையே. பிறகு எதற்கு இவர்
இவ்வளவு பெரிய மண்டபத்தைக் கட்டிக்கொண்டிருக்கின்றார்?; எதற்காக
இவர் இப்படி பணத்தை சேமித்து வைக்கின்றார்'
என்று கேலி செய்தார்கள்.
சில நேரங்களில் அந்நகரில் இருந்த இளைஞர்களில் ஒருசிலர் அவர்மீது கல்லெறிந்து
சீண்டிப் பார்த்தார்கள். அப்போதெல்லாம் அவர் எந்தவொரு எதிர்வினையும்
ஆற்றாமல் அப்படியே இருந்தார். நாட்கள் நகர்ந்தன. அவர் தான் கட்டிக்கொண்டிருந்த
மண்டபத்தைக் கட்டி முடித்தார். அந்த சந்தோசத்திலே அவர் சிறுதுகாலம்
திளைத்திருந்தார். இப்படியான சமயத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு, படுக்கையில்
விழுந்து கவனிப்பார் யாருமின்றி அப்படியே இருந்து போனார். கயோட்
இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அக்கம் பக்கத்துக்கு வீட்டார் அனைவரும்
அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். அப்போது அவருடைய இறந்த உடலுக்கு அருகே
ஓர் உயில் இருந்தது. அந்த உயிலில், "
மார்செல்லெஸ் நகர மக்களே! வணக்கம்.
நான் உங்களிடம் ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும். இங்கு இருக்கின்ற
மக்களின் வாழ்வை என்னுடைய சிறுவயதிலிருந்தே நான் கவனித்து வருகின்றேன்.
இங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை, மட்டுமல்லாமல்,
மக்கள் தங்குவதற்கு போதிய வீடு இல்லை. நிறையப் பேர் ஓலைக் குடிசைகளில்தான்
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் நான் மக்கள் தங்குவதற்காகவே
ஒரு மண்டபத்தைக் கட்டி எழுப்பினேன். மேலும் மக்கள் தங்களுடைய அடிப்படை
வசதிகளை பூர்த்தி செய்துகொள்வதற்குத்தான் சரியான உணவுகூட உண்ணாமல்
பணத்தைச் சேமித்து வைத்தேன். நான் இந்நாள் வரை சேமித்த பணமெல்லாம்
அருகேயுள்ள பெட்டியில் இருக்கின்றது. அதை எடுத்துக்கொண்டு உங்களுடைய
அடிப்படை வசதிகளைப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள்"
என்று எழுதி இருந்தது.
அவர் எழுதிய உயிலைப் படித்துப் பார்த்த மக்கள், "
இந்தப் பெரியவர்
இத்தனை ஆண்டுகளும் மக்களுக்காகத்தான் வாழ்ந்திருக்கின்றார்,
நாம்தான் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை'
என்று மிகவும் வருந்தினார்கள்.
மார்செல்லெஸ் நகர மக்களுக்காக கயோட் தன்னுடைய வாழ்வு முழுவதையும்
அர்ப்பணித்ததுபோன்று ஆண்டவர் இயேசுவும் நம்முடைய மீட்புக்காக தன்னுடைய
வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார், அதற்காகப் பாடுகளையும்,
சிலுவையும் சுமந்து கொண்டார் என்று நினைத்துப் பார்க்கின்றபோது நமக்குப்
பெருமையாக இருக்கின்றது. பாடுகளின் குருத்து ஞாயிறான இன்று நாம் படிக்கக்
கேட்ட வாசகங்கள், '
நமக்காக இயேசு பட்ட பாடுகளை நமக்குக் எடுத்துக்கூறுகின்றன..
நாம் நமது மீட்புக்காக இயேசு பட்ட பாடுகளை சிந்தித்துப் பார்த்து,
அவருடைய வழியில் நடக்க முயற்சி எடுப்போம்.
இயேசு நமக்காகப் பட்ட பாடுகள், அடைந்த அவமானங்கள், இழந்த இழப்புகள்
எல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் நாம் வார்த்தையால் விளக்கிச்
சொல்ல முடியாது. பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு கிறிஸ்து நமது
மீட்புக்காக எந்தளவுக்கு பாடுகள் பட்டார் என்பதை விளக்கிச்
சொல்கின்றது. "
கடவுள் தன்மையில் விளங்கிய அவர்... தம்மையே
வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித
உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே
ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்"
.
என்று நாம் அங்கு வாசிக்கின்றோம். இங்கே நாம் இயேசுவின் வாழ்வில்
இருக்கும் ஐந்து நிலைகளைப் பார்க்கின்றோம். ஒன்று தம்மையே
வெறுமையாக்குதல். இரண்டு. அடிமையின் நிலையை ஏற்றல். மூன்று. சாவை
அதுவும் சிலுவைச் சாவை ஏற்றல். நான்கு கீழ்ப்படிதல். ஐந்து தம்மையே
தாழ்த்திக்கொள்ளுதல். இந்த ஐந்து நிலைகளையும் நாம் ஆழமாகச்
சிந்தித்துப் பார்க்கின்றபோது இயேசு செய்த செயல் மிகவும் வியப்புக்குரியதாக
இருப்பதை அறிந்துகொள்ளலாம். இந்த உலகத்தில் யாரும் தன்னுடைய
நிலையிலிருந்து இறங்கி வந்ததாகத் தெரியவில்லை. ஒருசில விதிவிலக்குகள்
இருக்கலாம். ஆனால், ஆண்டவர் இயேசுவோ கடவுள் வடிவில் இருந்தவர். அப்படிப்பட்டவர்
ஓர் அடிமையைப் போன்று தம்மையே தாழ்த்தி, சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார்
என்றால் அங்குதான் நாம் இயேசுவின் அன்பைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகம் துன்புறும் ஊழியன் படுகின்ற பாடுகளை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இங்கே சொல்லப்படும் துன்புறும் ஊழியன் என்பவர் '
ஆண்டவரின்மீது நம்பிக்கை
கொண்ட மக்களினமாக'
இருக்கலாம் (எசா 49:1-5) அல்லது இறைவாக்கினர் எசாயவோ
அல்லது அவரைப் போன்று துன்பங்களை அனுபவித்த இறைவாக்கினர் எரேமியாவாகவோ
இருக்கலாம் என்று சொல்வர். ஆனால், இவர்கள் எல்லாரையும் விட இயேசுவோடுதான்
மேலே சொல்லப்பட்ட வார்த்தைகள் மிகவும் பொருந்துவதாக இருக்கின்றன.
ஏனெனில், அவர்தான் அடிப்போருக்கு முதுகையும், தாடியைப்
பிடுங்குவோருக்குத் தாடியையும் கொடுத்தார்; நிந்தனை செய்வோருக்கும்
காரி உமிழ்வோருக்கும் தன்னுடைய முகத்தை மறைக்கவில்லை. ஆகையால், இறைவாக்கினர்
சொல்கின்ற துன்புறும் ஊழியன் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு இல்லை
என்று உறுதியாக நாம் நம்பலாம். பாடுகளின் குருத்து ஞாயிறான இன்று,
நமக்காக இயேசு எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார் என்று சிந்தித்துப்
பார்த்த நாம், இவ்விழா நமக்கு உணர்த்தும் மூன்று முக்கியமான செய்திகளை/
உண்மைகளைச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். குருத்து ஞாயிறு
நமக்குச் சொல்லும் முதலாவது செய்தி. நற்செய்திக்காக/ இறைவனுக்காக
நாம் படும் துன்பங்களை ஒருபோதும் அவமானமாகப் பார்க்கக்கூடாது என்பதாகும்.
முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் '
ஆண்டவராகிய என் தலைவர் துணை
நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்"
என்று கூறுகின்றார். ஆம்,
நாம் ஒன்றும் இழிவான செயலைச் செய்யவில்லை. இன்றைக்கு இழிவான செயலைச்
செய்கின்றவர்களே அவமானப்படாதபோது ஆண்டவருடைய பணியைச் செய்கின்ற
நாம் எதற்கு அவமானம் அடையவேண்டும் என்பதுதான் நாம் நம்முடைய மனதில்
வைத்துக் கொள்ளவேண்டிய முதன்மையான செய்தியாக இருக்கின்றது. பல நேரங்களில்
இயேசுவின் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும் பிறர் நம்மைத்
துன்புறுத்தலாம், வசைபாடலாம், இழிவாக நடத்தலாம். அத்தகைய தருணங்களில்
மனம் உடைந்து, அவமானம் அடையத் தேவையில்லை என்பதுதான் நாம் கருத்தில்
கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. குருத்து ஞாயிறு நமக்கு உணர்த்தும்
இரண்டாவது முக்கியமான செய்தி நற்செய்தியின் பொருட்டும், இயேசுவின்
பொருட்டும் நாம் அடையும் துன்பங்களுக்கு இறைவன் தக்க கைம்மாறு தருவார்
என்பதாகும். இரண்டாம் வாசகத்தில் '
தம்மை வெறுமையாக்கி, அடிமையின்
கோலம் பூண்டு, சிலுவை சாவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை ஆண்டவராகிய கடவுள்
எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு
அருளினார் என்று நாம் வாசிக்கின்றோம். ஆம், ஆண்டவருடைய பணியைச்
செய்வோருக்கு ஆண்டவர் தக்க கைமாறு தருவார் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும்
கிடையாது என்பதுதான் உண்மை. மத்தேயு நற்செய்தி 5:11 ல் நாம் அதைத்தான்
வாசிக்கின்றோம், "
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து,
துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை, பொல்லாதவை எல்லாம்
சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள்! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்!
ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு
மிகுதியாகும் என்று. ஆகவே, இறைப்பணி செய்யும் ஒவ்வொருவருக்கும், இயேசுவின்
பொருட்டுத் துன்ப துயரங்களை அனுபவிக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவன்
தக்க கைம்மாறு தருவார் என்ற உண்மையை நம்முடைய மனதில் பதிய
வைத்துக்கொள்வோம்.
குருத்து ஞாயிறு நமக்கு உணர்த்தும் மூன்றாவது முக்கியமான செய்தி ஆண்டவரின்
துணை எப்போதும் நம்மோடு இருக்கின்றது என்பதாகும். முதல் வாசகத்தில்
எசாயா இறைவாக்கினர் கூறுகின்றார், "
ஆண்டவராகிய என் தலைவர் துணை
நிற்கின்றார்"
என்று. யோவான் நற்செய்தி 16: 32 ல் இதைத்தான்
வாசிக்கின்றோம். "
இதோ காலம் வருகின்றது, ஏன் வந்தே விட்டது. அப்போது
நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்;
என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆனால், நான் தனியாய் இருப்பதில்லை,
தந்தை என்னோடு இருக்கின்றார்"
என்று. ஆகையால், நம்முடைய வாழ்வில்
வரும் இன்னல் இக்கட்டுகளில் இறைவன் நம்மோடு இருக்கின்றார், நமக்குத்
துணையாக இருந்து வழி நடத்துகின்றார் என்னும் செய்தியை நாம் உணர்ந்துகொண்டு
வாழவேண்டும். இளைஞர்களின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகின்ற தொன்
போஸ்கோ தீய வழியில் வாழ்ந்து வந்த ஏராளமான இளைஞர்களை ஆண்டவர் இயேசுவுக்குள்
கொண்டுவந்து அவர்கள் தூய வாழ்க்கை வாழக் காரணமாக இருந்தார். இதனால்
அவருக்கு நிறைய எதிரிகள் உருவானார்கள்.
சில நேரங்களில் அவருடைய எதிரிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவரைக்
கொல்வதற்கு முயற்சி செய்தார்கள். இன்னும் சில நேரங்களில் அவருடைய
எதிரிகள் அவரை இருள் மண்டிக்கிடக்கும் பகுதிக்குத் தூக்கிச்சென்று
அவர்மீது தாக்குதல் நடத்த முயற்சித்தார்கள். அப்போதெல்லாம் ஒரு
நாய் அங்கு வந்து, தொன் போஸ்கோவை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும்.
அந்த நாய் எங்கிருந்து வருகின்றது, எங்கு செல்கின்றது என்று
யாருக்கும் தெரியாது. ஏன் தொன் போஸ்கோவிற்குக்கூடத் தெரியாது. அவர்
அந்த நாயை கிரிகியோ (Grigio) என்று அழைத்து வந்தார். தொன்
போஸ்கோவிற்கு ஆபத்து வருகின்ற சூழலில் எல்லாம் கிரிகியோ என்னும் அந்த
நாய் திடிரென்று தோன்றி, அவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிவிட்டு,
மாயமாக மறைந்துவிடும் சம்பவம் பல முறை அவருடைய வாழ்க்கையில் நடந்திருக்கின்றது.
கரிகியோ என்னும் அந்த நாய் வேறு யாரும் கிடையாது, தொன் போஸ்கோவின்
காவல்தூதர்தான் என்று சொல்வர்.
துன்ப நேரத்தில் இறைவன் நம்மைக் கைவிட்டுவிட மாட்டார். அவர் நமக்குத்
துணையாக (காவல் தூதர்கள் வழியாக) நம்மைக் காத்திடுவார் என்னும் உண்மையைத்தான்
இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, இயேசுவின் பாடுகளின்
குருத்து ஞாயிரை சிறப்பிக்கும் நாம் இயேசுவை போன்று மானுட
மீட்புக்காக துன்பங்களை துணிவோடு ஏற்போம். துன்பங்களை அவமானமாகப்
பார்க்காமல், அவையே நம்மையே இறைவனிடம் சேர்க்கும் கருவி என்பதை உணர்வோம்.
இறைவனின் துணை எப்போதும் நம்மோடு இருக்கின்றது என்பதை உணர்ந்து, இறைவனுக்கு
உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
சாவை ஏற்றுக்கொண்ட இயேசு
2001 ஆண்டு, செப்டம்பர் திங்கள் 11 ஆம் நாள், அமெரிக்காவில் இருந்த
இரட்டைக் கோபுரத்தின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை யாரும்
அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. இத்தாக்குதலில் ஆயிரக்கணக்கானக்கோர்
கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தார். '
மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின்மீதே
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டார்களா?'
என்று உலக நாடுகள் அஞ்சி
நடுங்கின; தங்களது பாதுகாப்பைக் குறித்து எல்லா நாடுகளும் கேள்வி
எழுப்பத் தொடங்கின. இத்தகைய கொடுஞ்செயலுக்கு நடுவில், தனது உயிரைத்
துச்சமென நினைத்து 2700 பேர்களுடைய உயிர்களைக் காப்பாற்றி, இறுதியில்
தன் உயிரை இழந்த ரிக் ரெஸ்கோர்லா (Rick Rescorla) என்பவரைக்
குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும்.
இந்த ரிக் ரெஸ்கோர்லா இரட்டைக் கோபுரத்தின், தெற்குக் கோபுரத்தின்
தலைமைக் காவலராக இருந்தவர். வடக்குக் கோபுரத்தின்மீது தீவிரவாதிகள்
தாக்குதல் நடத்தியதைக் கண்ட இவர், தெற்குக் கோபுரத்தில் இருந்தவர்களையெல்லாம்
காப்பாற்றுவதற்காக அக்கோபுரத்தின் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, அங்கிருந்தவர்களிடம்,
நேரிடப்போகும் ஆபத்தைச் சொல்லி, அவர்களைக் கீழே இறங்கச் சொன்னார்.
இவ்வாறு அவர் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, தீவிரவாதிகளின் தாக்குதலைக்
குறித்துச் சொல்லிக்கொண்டு போகும்போது, அந்தக் கோபுரத்தின்மீதும்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அவர் இறந்து போனார்.
ஆம், தீவிரவாதிகளின் தாக்குதலிருந்து மக்களைக் காப்பாற்ற ரிக்
ரெஸ்கோர்லா தன்னையே சாவுக்குக் கையளித்தார். ஆண்டவர் இயேசு நம்மைப்
பாவத்திலிருந்து மீட்புப் புதுவாழ்வளிக்க தன்னையே தியாகமாகத் தந்தார்.
அதைத்தான் இன்று நாம் கொண்டாடுகின்ற பாடுகளின் குறித்து ஞாயிறு உணர்த்துகின்றது.
இயேசு ஏன் பாடுகள் படவேண்டும், அவருடைய பாடுகளால் நாம் அடையும்
பேறுபலன் என்ன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தம்மையே தாழ்த்திக்கொண்ட இயேசு
இவ்வுலகில் எதுவுமே இல்லாதவர்களும், எந்தவோர் அதிகாரத்திலும் இல்லாதவர்களும்
எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் இருப்பதில் எந்தவொரு வியப்புமில்லை;
ஆனால் எல்லாம் இருந்தும் ஒருவர் எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் இருப்பதில்தான்
வியப்பிக்கின்றது. ஆண்டவர் இயேசு செல்வராயிருந்தவர், அப்படிப்பட்டவர்
நமக்காக ஏழையானார் (2கொரி 8: 9). மேலும் அவர் கடவுள் வடிவில் விளங்கினார்;
எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார் (மத் 28: 18). அப்படிப்பட்டவர்
தம்மையே வெறுமையாக்கி, மனிதருக்குக் ஒப்பாகி, சிலுவைச் சாவையே ஏற்கும்
அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்.
சிலுவைச்சாவானது நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கும் துரோகிகளுக்கும்
தரப்பட்டது. இத்தண்டனையானது முதலில் பாரசீக மன்னன் முதலாம்
தாரியுஸ் என்பவனால் கி.மு 519 ஆம் ஆண்டு, பாபிலோனில் தனக்கெதிராகக்
கலகம் செய்த மூவாயிரம் பேர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர்
கி.மு. 88 ஆண்டு யூதேயாவைச் சாந்த தலைமைக்குருவான அலெக்சாண்டர் ஜன்னேயுஸ்
(Alexander Janneaus) என்பவரால் பரிசேயச் சட்டங்களுக்கு எதிராகச்
செயல்பட்ட எண்ணூறு பேர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பின்னாளில் உரோமையர்களால்
கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடிய தண்டனையானது, கி.பி நான்காம்
நூற்றாண்டில், கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்த முதலாம்
காண்டண்டைன் என்பவரால் நிறுத்தப்பட்டது.
இத்தகைய கொடிய தண்டனையை கடவுள் வடிவில் விளங்கியவரும், எல்லா அதிகாரமும்
தன்னகத்தே கொண்டவருமான இயேசு தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதுதான் வியக்குரியதாக
இருக்கின்றது. இயேசு சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து,
தம்மையே தாழ்த்திக் கொண்டதன் மூலம், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர்
சொல்வது போன்று கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். மேலும் அவர் தமக்குக்
கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார் (எபி 5:
8)
கடவுளால் மிகவும் உயர்த்தப்பட்ட இயேசு
சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே
தாழ்த்திகொண்ட இயேசுவை தந்தைக் கடவுள் அப்படியே விட்டுவிடவில்லை.
மாறாக, அவர் இயேசுவை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை
அவருக்கு அருளுகின்றார். அப்படியெனில், நாம் இயேசுவைப் போன்று
கீழ்ப்படிதலுடனும் தாழ்ச்சியுடனும் வாழ்கின்றபொழுது கடவுள் நம்மை
மிகவும் உயர்த்துவார் என்பது உறுதி.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்
துன்புறும் ஊழியரைக் குறித்துப் பேசுகின்றது. இங்குக் குறிப்பிடப்படும்
துன்புறும் ஊழியர் "
கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச்
செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்"
என்கின்றார். ஆண்டவருக்குச் செவிகொடுப்பதாகவும் அல்லது அவருக்குக்
கீழ்ப்படிந்து நடப்பதாகவும் துன்புறும் ஊழியர் சொல்கின்ற இந்த
வார்த்தைகளை இஸ்ரயேல் மக்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது
மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இஸ்ரயேல் மக்களிடம் கடவுள், "
மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி
இருந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து
எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால் திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்"
(எசா 1: 19-20) என்பார். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு இணங்கவோ,
அவருக்குச் செவிசாய்க்கவோ அல்லது அவருக்குக் கீழ்ப்படியோ இல்லை.
இவ்வாறு அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் வாளுக்கு
இரையானார்கள்; ஆனால் துன்புறும் ஊழியனாம் இயேசு கடவுளுக்குக்
கீழ்ப்படிந்ததால், அவர் கடவுளால் மிகவே உயர்த்தப்பட்டார். ஆகவே,
நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவரால் நிச்சயம்
உயர்த்தப்படுவோம்.
துணை நிற்கும் இறைவன்
துன்புறும் ஊழியராம் இயேசுவைப் போன்று, கடவுளின் திருவுளம் நிறைவேற
நாம் நம்மையே கையளிக்கின்றபொழுது இன்றைய முதல் வாசகத்திலும்,
நற்செய்தி வாசகத்திலும் சொல்லப்படுவதுபோல் அடிக்கப்படலாம்; காறி
உமிழப்படலாம். அவமானப்படுத்தப்படலாம். இன்னும் பல்வேறு துன்பங்களை
நாம் அனுபவிக்கலாம். இத்தகைய தருணங்களில் நாம் மனந்தளர்ந்து
போய்விடாமல் ஆண்டவராகிய கடவுள் நமக்குத் துணையாக இருக்கின்றார்
என்ற நம்பிக்கையோடு வாழலாம் என்கிறது இன்றைய முதல் வாசகம், இதை,
"
ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்"
என்று இன்றைய
முதல்வாசகத்தின் இறுதியில் வருகின்ற வார்த்தைகளில் காணலாம்.
இயேசுகூட இதையேதான், "
நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு
இருக்கிறார்"
(யோவா 16: 32) என்பார். ஆகவே, நாம் இயேசுவைப் போன்று
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே நாம் அர்ப்பணித்து
வாழ்கின்றபொழுது, சவால்களையும் துன்பங்களையும் வரலாம். அவற்றைக்
கண்டு அஞ்சாமல், அவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு
வாழ்ந்தால், அவர் தரும் மேலான ஆசிகளைப் பெறுவோம்.
சிந்தனை:
வைரம் ஜொலிக்க வேண்டுமானால் சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம்
பிரகாசிக்கவேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான்
வேண்டும்' என்பார்
சி. என். அண்ணாத்துரை. எனவே, இந்த உலகை மீட்க வந்த இயேசு அதற்காகப்
பல்வேறு துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தம்மையே தந்தது போன்று,
நாமும் இந்த உலகை உய்விக்க நம்மையே தருவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
மறையுரைச்சிந்தனை
-
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
குருத்துவக் கல்லூரியிலே விவிலியப் பாடம் எடுத்துக்
கொண்டிருந்த ஒரு பேராசிரியர் குருமாணவர்களைப் பார்த்து
இவ்வாறு கூறினார்: நற்செய்தியை எடுத்துரைக்க ஏழை, எளியவர்
வாழ்ந்த கலிலேயாவுக்கு இயேசு சென்றார். சிலுவையில் அறையப்பட
பணக்காரர்களும், படித்தவர்களும் வாழ்ந்த யூதேயாவிற்குச்
சென்றார். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நற்செய்தியைப்
போதிக்க விரும்பினால் ஏழைகளைத் தேடிச் செல்லுங்கள்.
சிலுவையில் அறையப்பட வேண்டும் என விரும்பினால் பணக்காரர்களைத்
தேடிச் செல்லுங்கள் என்றார்.
எருசலேம் பெரு நகர். அது பணம் படைத்தவர்கள் நிறைந்த
நகர். குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும்
அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள் வாழ்ந்த நகர் அது. அங்கே
தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞரும் இயேசுவை எப்படிச்
சூழ்ச்சியாய் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழி
தேடிக் கொண்டிருந்தனர் (மாற். 14:1). தான் படப்போகும்
பாடுகள் அனைத்தையும் பற்றி இயேசு மூன்று முறை முன்னறிவித்
திருக்கிறார் (லூக். 22:1 24:46). எனவே தனக்கு நடக்கப்போகும்
அனைத்தையும் அறிந்த இயேசு கோவேரிக் கழுதையில் ஏறி, எபிரேயச்
சிறுவர்கள், தாவீதின் மகனுக்கு ஓசான்னா! என்று பாடிப்
புகழ எருசலேம் நுழைகிறார். எருசலேமில் தனக்குச் சிலுவை
மரணம் காத்திருக்கிறது என்பதைத் தெரிந்தும் அந்தச் சவாலைச்
சந்திப்பதற்காகப் புறப்பட்டார்.
இத்தகைய துணிச்சல் இயேசுவுக்கு எங்கிருந்து வந்தது? உலகில்
வாழ்ந்த காலம் முப்பத்து மூன்று ஆண்டுகள். அதிலும்
தாம் புரிந்த பொதுப்பணி மூன்று ஆண்டுகள் மட்டுமே! ஆனால்
எல்லாம் தந்தையின் மகிமைக்காகவும், உலகத்தின்
மீட்புக்காகவும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கோடு புறப்பட்டார்.
அந்த இலட்சிய பிடிப்பே அவருக்கு எதிர்ப்புகளைத் துச்சமென
மதித்து சிலுவையில் மரிக்கும் துணிச்சலைத் தந்தது.
குருத்தோலைகளைக் கையிலே பிடித்துக்கொண்டு கோவிலை, அல்லது
வீதியை வலம் வந்த நாம் நம்மையே கேட்க வேண்டிய சில கேள்விகள்
உண்டு.
அதில் முதலாவது, என் வாழ்க்கைக்கென்று ஓர் இலட்சியம்
உண்டா? அவ்வாறெனில் அது என்ன? இலட்சியம் இல்லாத
வாழ்க்கையென்றால் திசைக்கருவி இல்லாத கப்பல் பயணம் போன்றதல்லவா!
இலட்சியமே நம்மைச் சரியான வழியில் நடத்தும். இல்லாவிடில்
திக்குத் தெரியாத காட்டில், தெளிவில்லா இருட்டில்தான்
நாம் சிக்கித் தவிக்க நேரிடும்.
இரண்டாவது நாம் கேட்க வேண்டிய கேள்வி, என் ஆயுட்காலம்
குறுகியதோ . . . நீண்டதோ .. . கிடைத்த வாழ்வை ...
எப்படிப் பயன்படுத்துகிறேன் என்பதாகும்.
இயேசுவைப்போல குறுகிய காலமானாலும் பெருமைக்குரியது செய்து
வருகிறேனா? அல்லது ஏனோ தானோவென்று இழுத்துக் கொண்டு காலத்தை
விரயமாக்குகிறேனா?
மூன்றாவதாக, நாம் கேட்க வேண்டிய அடுத்த கேள்வி, சமுதாயத்தில்
இன்று புரையோடிக் கிடக்கும் தீமைகளைப் பார்த்து நான்
பயந்து ஒதுங்குகிறேனா? அல்லது அவற்றோடு எதிர்த்துப்
போராடி அவற்றை களைய முன் வரும் துணிவு எனக்கு உண்டா?
தந்தை பெரியார் நாத்திகர் என்ற பட்டம் பெற்றவர்தான்.
ஆனால் அவர் ஒரு தன்னிகரற்ற தலைவர். கடும் எதிர்ப்புகளுக்கு
மத்தியில் இயேசுவைப்போல கடுகளவும் கவலைப்படாது, தன் கருத்துகளை
மக்கள் முன் வைத்தவர். ஒரு பொதுக் கூட்டத்தில் அவர்
பேசும்போது ஒரு செருப்பு அவர் மீது வீசப்பட்டது. அவர்
தயங்கினாரா? நகைச்சுவையோடு, ஒரு செருப்பை வீசினா எப்படி?
இன்னொன்றையும் வீசு. ஜோடியாகப் பயன்படுத்தலாம். அல்லது
உனக்கும் பிரயோசனம் இல்லை. எனக்கும் பிரயோசனம் இல்லை
என்று சொன்னார். அன்று சாதித் துவேசம், தீண்டாமை போன்ற
சமுதாயத் தீமைகளைக் களைவதில் துணிச்சலுடன் போராடியவர்தான்
தந்ைத பெரியார். இத்தகைய துணிச்சலுடன் அவர் போராடி இருக்காவிடில்
இந்நேரம் திமிங்கலங்கள் அளவுக்கு அவை வளர்ந்திருக்கும்.
ஆகவே தீமைகளை எதிர்த்து இறையரசை நிறுவ இயேசு மரணம் வரைப்
போராடிய வீரத்தில் நமக்கும் ஒரு பங்கு அவசியம் தேவை.
இறுதியாக, இயேசு எருசலேம் நுழையும் நிகழ்ச்சி உலக மக்களுக்கு
இரு மாபெரும் உண்மைகளை எடுத்துரைக்கிறது.
முதலாவதாக, கடவுள் இந்த உலகத்தை எவ்வளவு அன்பு
செய்கிறார் என்பதை இயேசுவின் மரணத்தின் வழியாகக் காட்ட
விரும்புகிறார். உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை
(யோவா. 15:13) என்பதை வெளிப்படுத்துகிறார்.
இரண்டாவதாக, மன்னிப்பு வழங்க சிலுவையில் மன்றாடி மனிதன்
எந்த அளவுக்கு மன்னித்து அன்பு செய்ய வேண்டும் எனவும்
காட்டுகிறார் (லூக். 23:34).
இந்த மறை உண்மைகளை நாம் உணர்ந்து நமது ஆன்மிக வாழ்வை அர்த்தமுள்ளதாக
அமைத்துக் கொள்வோம்.
ஒருமுறை எங்கள் குருத்துவக் கல்லூரிப்
பேராசிரியர் ஒருவர் இவ்வாறு கூறினார்: "நற்செய்தியை எடுத்துரைக்க
ஏழை எளியவர்கள் வாழ்ந்த கலிலேயாவிற்கு இயேசு சென்றார்.
சிலுவையிலே அறையப்பட பணக்காரர்களும், படித்தவர்களும்
வாழ்ந்த யூதேயாவிற்குச் சென்றார். உங்கள் வாழ்க்கையிலே
நீங்கள் நற்செய்தியைப் போதிக்க விரும்பினால் ஏழைகளைத்
தேடிச்செல்லுங்கள்; சிலுவையிலே அறையப்படவேண்டும் என
விரும்பினால் பணக்காரர்களைத் தேடிச்செல்லுங்கள்."
எருசலேம் பெருநகர். அது பணம் படைத்தவர்கள் நிறைந்த நகர்.
குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு
அதிகாரம் படைத்தவர்கள் வாழ்ந்த நகர் அது! அங்கே "தலைமைக்
குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு
சூழ்ச்சியாய் பிடித்துக் கொலை செய்யலாம் என்று
வழிதேடிக்கொண்டிருந்தனர்" (மாற் 14:1).
எருசலேமில் படப்போகும் பாடுகள் அனைத்தையும் பற்றி இயேசு
மூன்று முறை முன் அறிவித்திருந்தார் (லூக் 22:15;
24:26; 24:46). தமக்கு நடக்கப்போவது அனைத்தையும் அறிந்துதான்,
தெரிந்துதான் இயேசு எருசலேமுக்குள் நுழைந்தார்.
இதோ இன்று தன்னையே சிலுவைச் சாவுக்குக் கையளிக்க இயேசு
எருசலேம் நகருக்குள் நுழைகின்றார்.
ஏன் இந்தச் சாவு? (முதலாம், இரண்டாம் வாசகங்கள், மாற்
11:9-10).
இன்று ஓசான்னா பாடுகின்றவர்கள் நாளை இவனைச் சிலுவையில்
அறையும் (மாற் 15:14) என்று கூக்குரலிடுவார்கள் என்பதைச்
சுட்டிக்காட்டவா?
இன்று நமது பாத்திரத்தில் தொட்டு உண்பவன் (மாற் 14:20)
நாளை காட்டிக்கொடுப்பான் (மாற் 14:44) என்பதை எடுத்துரைக்கவா?
சீடன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யத்
துணிவான் (மாற் 14:66-72) என்பதைப் படம்பிடித்துக்காட்டவா?
பதவியிலிருப்பவர்கள் தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள
கடவுளைக் கூட கல்லறைக்கு அனுப்பத் தயங்கமாட்டார்கள்
(மாற் 15:15) என்பதைப் பறைசாற்றவா?
எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு மாபெரும் உண்மைகளை உலக
மக்களுக்கு எடுத்துரைக்க இயேசு இன்று எருசலேம் நகருக்குள்
நுழைந்திருக்கின்றார்.
முதல் உண்மை : கடவுள் இந்த உலகத்தை எவ்வளவு அன்பு
செய்கின்றார் என்பதை இயேசு தம் மரணத்தின் வழியாக உலகிற்குப்
போதிக்க விரும்பினார். உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு
ஒன்று இருக்க முடியாது. தம் உயிரைக் கொடுத்து, இதுதான்
அன்பின் ஆழம், அகலம் என்கின்றார் இயேசு.
இரண்டாவது உண்மை : "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில்
தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை
"
(லூக் 23:34) எனச் சொல்லி ஒரு மனிதன் எந்த அளவுக்கு
இந்த உலகை அன்பு செய்ய முடியும் என்பதை இயேசு
சிலுவையில் தொங்கியபோது அவர் நிகழ்த்திய மறையுரை
வழியாக சுட்டிக்காட்ட விரும்பினார்.
இன்றைய ஆரவாரத்திற்குள் மறைந்திருக்கும் அர்த்தத்தைக்
கண்டுபிடித்து நமது ஆன்மிக வாழ்வை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்வோம்.
மேலும் அறிவோம் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).
பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே
உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல்
பொருள் ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.
ஒர் அப்பா தனது சிறிய மகனைத் தன் வீட்டிற்கு முன் இருந்த
மரத்தின் மேல் ஏறி, அதன் கிளை ஒன்றில் உட்காரச் சொல்லி,
அவனிடம், "மகனே! கீழே குதி! நான் உன்னைப் பிடித்துக்
கொள்வேன்"
என்றார். அவன் முதலில் மறுத்தாலும், அப்பாவின்
வாக்குறுதியை நம்பி கீழே குதித்தான். ஆனால் அப்பா அவனைப்
பிடித்துக் கொள்ளாமல் விட்டு விட, அவள் தரையில் விழுந்து
கால் பிசகிக் கொண்டு அழுதான், அப்பா அவனைப் பார்த்துச்
சிரித்துக் கொண்டே, "மகனே, உலகில் யாரையும் நம்பாதே; உன்
அப்பனையும் நம்பாதே" என்றார்.
இவ்வுலகில் நாம் யாரையும் எளிதில் நம்பிவிட முடியாது. உன்
பகைவன் உன்னைக் கைகூப்பி வணங்கினால் அவனை நம்பாதே; ஏனெனில்
அவனுடைய கூப்பிய கைகளிலே கத்தியை வைத்திருப்பான் என்று எச்சரிக்கிறார்
வள்ளுவர், "தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்"
(குறள் 828)
கிறிஸ்து பல அற்புதங்களையும் அருங்குறிகளையும் செய்தபோது
பலர் அவரை நம்பினர், ஆனால் கிறிஸ்துவோ அவர்களை எளிதில் நம்பிவிட
வில்லை. "இயேசு அவர்களை நம்பி விடவில்லை. ஏனெனில் அவருக்கு
அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதர் உள்ளத்தில் இருப்பதை
அவர் அறிந்திருந்தார்"
(யோவா 2:25)
மனிதர்களைப் பற்றிய இயேசுவின் கணிப்புச் சரியானதே. ஏனெனில்,
குருத்து ஞாயிறு அன்று. "ஓசன்னா; ஆண்டவர் பெயரால் வருகிறவர்
போற்றப் பெறுக' (மாற் 11:9) என்று ஆர்ப்பரித்த அதே மக்கள்,
பெரிய வெள்ளிக்கிழமையன்று, 'அவனைச் சிலுவையில் அறையும்"
(மாற் 15:13) என்று கூச்சல் இட்டனர், எலும்பில்லாத நாக்கு
எப்படியும் பேசும், "போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து
வருகின்றன" (யாக் 3:10).
கிறிஸ்துவோ, "
போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித்
தூற்றுவார் தூற்றட்டும்" என்ற மனநிலையுடன் புகழ்ச்சியிலும்
இகழ்ச்சியிலும் சமச்சீர்நிலையில் வாழப் பழகிக் கொண்டார்.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா சித்தரிக்கும்
துன்புறும் இறை ஊழியனாக, கிறிஸ்து தம்மை அடிப்போர்க்கு
முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்குத் தாடையையும் கையளித்தார்;
நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் தமது முகத்தை
மறைக்க வில்லை (எசா 50:6). அவர் மனிதர் தருகின்ற மகிமையைத்
தேடாமல் (யோவா 5:41), அவரது தந்தை அவருக்கு அளிக்கவிருந்த
மகிமை ஒன்றையே நாடினார் (யோவா 8:54), இன்றைய இரண்டாம் வாசகத்தில்
சொல்லப்பட்டுள்ளது போல, கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, சாவை
ஏற்கும் அளவுக்கு. அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்தார். எனவேதான் கடவுள் அவரை உயிர்த்தெழச்
செய்து மாட்சிமைப்படுத்தினான் (பிலி 2:6-11).
உலக வாழ்வின் எதார்த்தநிலை: பானையிலே சோறு இருந்தா பூனைகளும்
சொந்தமடா; வேதனையைப் பங்கு வைச்சா சொந்தமில்லை பந்தமில்லை
" (திரைப்படப்பாடல்), நாம் வசதியாக வாழும்போது நமக்கு
நெருக்கமாக இருந்தவர்கள், நாம் நொடித்துப் போகும்போது தலை
மறைவாகிவிடுகின்றனர். எனவே, இன்பத்தில் தலை கால் தெரியாமல்
அலையவோ, துன்பத்தில் மனமுடைந்து போகவோ கூடாது." வளமையிலும்
வாழத் தெரியும்; வறுமையிலும் வாழத் தெரியும். நிறைவோ
குறைவோ, எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி
பெற்றிருக்கிறேன்" (பிலி 4:12) என்று கூறிய புனித பவுலின்
மனநிலையைப் பெறவேண்டும்.
இன்றைய நற்செய்தியில் மாற்கு எழுதியுள்ள படி நமது ஆண்டவரின்
பாடுகள் வாசிக்கப்பட்டன. இந்நற்செய்தியில் வருகின்ற இருவர்
நாம் இயேசுவை எப்படி பின்பற்றக்கூடாது, எப்படிப் பின்பற்ற
வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்.
இயேசு பிடிபட்டபோது, ஓர் இளைஞர் வெறும் உடம்பின் மீது ஒரு
போர்வையைப் போர்த்திக் கொண்டு இயேசுவின் பின்னே சென்றார்.
அவரைப் பிடித்தபோது, அவர் போர்வையை விட்டுவிட்டு ஆடையின்றித்
தப்பி ஓடினார் (மாற் 14:51-52). இந்த இளைஞரைப் போல நாம் இயேசுவைப்
பின்பற்றக்கூடாது.
சிலர் இயேசுவின்மீது உண்மையான பற்றுறுதியின்றி. ஒருசில
கொள்கைகள், இலட்சியங்கள், இலக்குகள் என்னும் போர்வையைப்
போர்த்திக் கொண்டு இயேசுவைப் பின்பற்றுகின்றனர். ஆனால்,
அவர்களுடைய உயிருக்கு ஆபத்து வரும்போது, அக்கொள்கைகளையும்
இலக்குகளையும் தூக்கி எறிந்துவிட்டுத் தப்பி ஓடிவிடுகின்றனர்.
இன்று ஒரு சில போலி இறையியலார் உள்ளனர். இவர்கள் இறையியல்
சந்தையில் பேரம் பேசுகின்றவர்கள்: மலிவுச் சரக்குகளை
விலைக்கு வாங்குபவர்கள், விற்பவர்கள், பங்குதாரர்கள், இவர்களின்
இறையியல் அங்காடி இறையியல்". ஓர் இறையியல் சந்தையில் சரிவு
ஏற்பட்டால், தயங்காமல் மற்றோர் இறையியல் சந்தையைத் தேடிச்
செல்வார்கள்.
பொதுநிலையினர்களிலும் ஒருசிலர் பல்வேறு பிரிவினைச் சபைகளுக்கு
மாறிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு உறுதியான
நிலைப்பாடில்லை. திசைமாறிய பறவைகள், இவர்களுக்கு இயேசு
கூறுவது: "
கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர்
எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக்
9:62)
கிறிஸ்து சிலுவையில் உரக்கக் கத்தி உயிர் நீத்த போது, அவருக்கு
எதிரே நின்று கொண்டிருந்த நூற்றுவர் தலைவர், "இம்மனிதர் உண்மையாகவே
இறைமகன்" என்றார் (மாற் 15:39). இவர் பிற இனத்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது. இஸ்ரயேல் மக்களும், மறைநூல் அறிஞர்களும்,
மக்களின் மூப்பர்களும், தலைமைச் சங்கமும், ஆளுநரும், ஏன்,
வானகத் தந்தையும் கூட இயேசுவைக் கைவிட்ட நிலையில், (என் இறைவா,
என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?), நூற்றுவர் தலைவர் இயேசுவைக்
கடவுளின் மகன்' என்று அறிக்கையிட்டார்.
'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின்
தொடக்கம்' (மாற் 1:1) என்று தமது நற்செய்தியைத் தொடங்கிய
மாற்கு, "இயேசு கடவுளின் மகன்" (மாற் 15:39) என்ற நூற்றுவர்
தலைவரின் விசுவாச அறிக்கையுடன் தமது நற்செய்தியை
முடிக்கிறார்.
இயேசுவின் இறைத்தன்மையைக் கூட மறுதலிக்கும் இறையியலார்
வாழும் இக்காலத்தில், நூற்றுவர் தலைவரைப் பின்பற்றி இயேசுவின்
இறைத்தன்மையில் அசையாத நம்பிக்கை வைப்போம், வேதனையோ நெருக்கடியோ,
பசியோ ஆடையின்மையோ, சாவோ வாழ்வோ, வேறு எந்தச் சக்தியோ இயேசுவிடமிருந்து
ஒருபோதும் நம்மைப் பிரிக்கவிடக் கூடாது (உரோ 8:38-39).
"இறக்கும் வரை நம்பிக்கையோடு இரு, அவ்வாறாயின் வாழ்வை உனக்கு
முடியாகச் சூட்டுவேன்" (திவெ 2:10).
குருத்து ஞாயிறு நிகழ்வு மக்களின் நிலையற்ற தன்மையின்
தெளிவான வெளிப்பாடு. ஒருநாள் ஓசன்னா' பாடி வாழ்த்தும் மந்தைத்தன
மக்கள் கூட்டம் மறுநாளே ஒழிக' என்றும் கூச்சலிடத் தயங்காது.
ஆனால் கிறிஸ்துவின் பாடுகளோ அவரது நெஞ்சுறுதியின்
நிலைப்பாடு. தலைமைக் குருக்களின் சதித்திட்டமாகவோ அல்லது
ஏதோ தற்செயலாக நிகழ்ந்த விதியின் விளையாட்டாகவோ பார்த்தல்
தவறு. சிலுவை மரணம் என்பது தந்தை கடவுளின் நித்திய திட்டம்.
அதனால்தான் இயேசு சிலுவைப் பாடுகளை, கல்வாரி மரணத்தை -
மனமுவந்து ஏற்றார் இறைவாக்கினர் எசாயாவின் துன்புறும் ஊழியனாக.
இறைவாக்கு அவரில் நிறைவு காண வேண்டும்.
நெஞ்சுறுதியுடன் ஏற்றார் இலக்குத் தெளிவு இருந்த காரணத்தால்.
இறைவனின் திருவுளம் அவரில் நிறைவு பெற வேண்டும்.
"ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ரயேல் மக்களை ஆளவாரும்- எம்
இயேசுவே தேவனே எழுந்தருளும்"
- பட்டி தொட்டிகளில் எல்லாம் இன்று ஒலிக்கும் பழந்தமிழ்ப்
பாடல் இது! "ஓசன்னா, தாவீதின் புதல்வா ஓசன்னா" உலகின் மூலை
முடுக்கெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கும். இந்த ஓசன்னாவின்
பின்னணி என்ன?
அன்று யூதர்களுக்குக் கூடாரத் திருவிழா. வீதியெல்லாம்
விழாக்கோலம். விண்ணைப் பிளந்தன வெற்றி முழக்கங்கள். அந்த
வெற்றி முழக்கச் சுலோகம் என்ன? "
ஆண்டவரே, மீட்டருளும்.
ஆண்டவரே, வெற்றி தாரும்" (தி.பா.118:25). ஆண்டவரே
மீட்டருளும் என்பதற்கு எபிரேயச் சொல் "ஓசன்னா"
போருக்குப் புறப்படும் போது ஓசன்னா ' அபயக் குரலாக
எழும்பும். வெற்றி பெற்றுத் திரும்பும் போது ஒசன்னா'
வெற்றி முழக்கமாக அதிரும். ஆக ஓசன்னா என்பது ஒரு செபம்,
ஓர் அபயக் குரல், ஒரு வெற்றியின் வீரமுழக்கம்,
மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு, புகழ்ச்சியின் கூக்குரல்.
அந்நியர் ஆட்சியில் அடிமைகளாக அல்லலுக்கும் அவலத்துக்கும்
ஆளாகிய சூழலில் இறைவன் தலையிட்டுத் தங்களைக்
காப்பாற்றுவார் என்பது இஸ்ரயேலரின் நம்பிக்கை அனுபவம்.
எகிப்தில் மோசே வழியாக விடுதலை கண்ட பாலஸ்தீனப் பாமரர்கள்
இயேசுவின் உருவில் புதிய மோசேயைக் கண்டார்கள். இயேசுவின்
பணிவாழ்வுக் காலமாகிய மூன்று ஆண்டுகளும் அந்த எளிய
மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் பூத்திருந்த அரசியல் மெசியா'
என்ற எதிர்பார்ப்பு, திடீரென உணர்ச்சிப் பிழம்பாகக்
கொப்பளித்ததன் விளைவுதான் குருத்தோலைப் பவனி.
ஆன்மீக மீட்பராக அல்ல, அரசியல் மீட்பராக, பலியாகும்
தியாகச் செம்மலாக அல்ல, பவனி வரும் மகிமையின் மன்னராக அரச
மரியாதையைச் செலுத்தினர். 'தாவீதின் மகனுக்கு ஓசன்னா!
யூதர்களின் அரசே வாழி!"
(இவைகள் எல்லாம் மெசியாவுக்கான
அடைமொழிகள்) என்று விண்ணதிர முழங்கினர். இந்த மக்களின்
எதிர்பார்ப்பும் ஆர்ப்பாட்டமும் நமது உள்ளத்தையும் நெகிழ
வைக்கின்றன. இயேசு கூட இந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து
கல்வாரிச் சிலுவையைத் தவிர்த்து அரசியல் அரியணை நோக்கிச்
சென்றிருக்கலாமோ என்று நினைக்கக் கூடத் தோன்றுகிறது.
இயேசுவைப் பொருத்தவரை அவரது மகிமை, மாண்பு, உயர்வு எல்லாம்
கோதுமை மணியாக மடிவதில் மட்டுமே, எனவே எருசலேம் நோக்கிய
இயேசு இறுதிப் பயணத்தில், மக்களுக்காகத் துன்புறும்
ஊழியனாக, பலருடைய பாவங்களைச் சுமந்து செல்லும் செம்மறியாக,
நம்மை நலமாக்கும் தண்டனையைத் தன்மேல் ஏற்றுக் கொள்பவராக
வருகிறார். இது இஸ்ரயேல் மக்களின் எண்ணத்தைக் கடந்தது,
எற்றுக் கொள்ளக் கடினமானது. எனவே பெரிய வெள்ளி அன்று
ஓசன்னா பாட இயலவில்லை, கொல்லும் கொல்லும் என்று தான்
கூக்குரலிட முடிந்தது.
இயேசுவை மூன்று நிலைகளில் தொடக்கக் காலத் திருச்சபை
காண்கிறது. (பிலிப்.2:5-11)
தந்தைக்கு ஈடான தெய்வீக நிலை. விண்ணகத் தந்தையோடு தெய்வீக
சமத்துவத்தில் வாழ்ந்த நிலை.
அடிமையின் தன்மை பூண்டு சிலுவைச் சாவு வரை அர்ப்பணித்துத்
துன்புறும் மண்ணக வாழ்வு நிலை.
மூவுலகும் மண்டியிட இயேசுவே ஆண்டவர் என்று எல்லா நாவும்
அறிக்கையிடத் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கும் மகிமை
நிலை.
இவற்றில் முதலாவது, மூன்றாவது நிலைகளில் இயேசுவைக் கண்டு
பெருமிதம் கொள்ள நாம் தயார்; ஆனால் இரண்டாவது நிலையை
ஏற்றுக் கொள்ளத் தயக்கம்!
முதல் உலகப் போர் முடிந்த நேரம். பிரான்சும் இங்கிலாந்தும்
பயங்கரமாக மோதிக் கொண்ட போர் அது. பிரான்சு நாட்டு வீரன்
ஒருவன் காயமுற்று இங்கிலாந்து மருத்துவமனையில் சேர்க்கப்
பட்டிருந்தான். சிகிச்சை பெறும் வீரர்கள் தனது
நாட்டினர்தானா என்று அறிய ஒவ்வொரு வீரனையும் உன் தலைவன்
யார்?' என்று கேட்டான் இங்கிலாந்து நாட்டுத் தளபதி.
பிறநாட்டு வீரன் என்றால் அந்த இடத்திலேயே அந்தக்
கணத்திலேயே கொன்றுவிடக் கட்டளையிட்டான், பிரான்சு நாட்டு
வீரனிடம் கேட்ட போது அவனது பதில் இங்கிலாந்து நாட்டுத்
தளபதியை வியக்க வைத்தது. "
எனது நெஞ்சைக்குத்திப் பிளந்து
பாருங்கள் அங்கே என் தலைவன் நெப்போலியன் இருப்பான்"
என்று
கூறினானாம். அவனது அரச பக்தியை, அசாத்தியத் துணிவைக் கண்டு
அவனை விடுவித்து விட்டனராம்.
தன் உயிர் போய்விடும் என்ற நிலையிலும் கூட, தன் தலைவன்
நெப்போலியன் என்று நெஞ்சுறுதியுடன் சொன்ன வார்த்தைகள்
நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஓசன்னா என்று உண்மையில்
பாடினால் இயேசுவின் பாடுகளிலும் பங்கேற்க வேண்டும் அவருடைய
சீடன்!
சிந்தனைப் பயணம்:
அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
குருத்தோலை ஞாயிறு
உலகின் மிகப்பெரிய குடியரசு என்றழைக்கப்படும் இந்திய நாடு,
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தங்கள் குடியரசைக் காப்பாற்றக்கூடிய
தகுதிபெற்ற தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியைத் துவங்கியிருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மத சார்பற்ற குடியரசு
என்ற உன்னத கொள்கைக்கு எதிராக, இந்து அடிப்படைவாதக் கருத்துக்களைத்
திணிக்க, கடந்த பத்தாண்டுகளாக, பாசிச கொள்கைகள் கொண்ட ஒரு
கட்சி முயன்றுவருவதை உலகம் அறியும். இந்த அடிப்படைவாத அராஜகத்தை,
வருகிற தேர்தலில், ஒரு முடிவுக்குக் கொணர்வதற்குத் தேவையானத்
தெளிவையும், துணிவையும் இறைவன் இந்திய மக்களுக்கு வழங்குவார்
என்று நம்புவோம், அதற்காக வேண்டுவோம்.
ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி முடிய இந்தியாவில்
நடைபெறவிருக்கும் தேர்தல் விழாவையொட்டி, தற்போது பல ஊர்வலங்களும்,
கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இவற்றில் கலந்துகொள்ள
மக்கள் பணம் கொடுத்து திரட்டப்படுகின்றனர் என்பது பொதுவான
கருத்து. அண்மையில், மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி,
இந்தியப் பிரதமர் தமிழகத்தில் மேற்கொண்ட ஓர் ஊர்வல நாடகத்தில்,
50 பள்ளிகளிலிருந்து மாணவ மாணவியர் பிரதமர் செல்லும்
சாலையின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டதைக் கண்டோம். தேர்தல்
பிரச்சார விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய அற்பத்தனமான
முயற்சிகள், கூட்டம் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் கேவலமான
ஒரு யுக்தி. பணம் கொடுத்து, அல்லது, தங்கள் அதிகாரத்தைப்
பயன்படுத்தி, மக்களைத் திரட்ட முயலும் இத்தகைய முயற்சிகளுக்கு
முற்றிலும் மாறாக, மக்கள் தாங்களாகவே கூடிவந்துள்ள கூட்டங்களும்
வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டங்களில் ஒருசில, மக்களின்
சக்தியை உலகறியச் செய்துள்ளன. அண்மைய ஆண்டுகளில், மக்களின்
சக்தியை உணர்த்திய ஒரு சில கூட்டங்களை நினைவுகூர முயல்வோம்.
சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன், 2018ம் ஆண்டு, மார்ச் 24,
குருத்தோலை ஞாயிறுக்கு முந்தைய நாள், சனிக்கிழமை, உயர்நிலைப்
பள்ளிகளில் பயிலும் மாணவ சமுதாயத்தைச் சேர்ந்த 5 இலட்சத்திற்கும்
அதிகமான இளையோர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர் வாஷிங்டனில்
பேரணியையும், கூட்டத்தையும் நடத்தினர். இவ்வாண்டைப் போலவே,
2018ம் ஆண்டு, திருநீற்றுப் புதனும், காதலர் நாளும் இணைந்துவந்த
பிப்ரவரி மாதம் 14ம் தேதியன்று, அமெரிக்காவின் ஃபுளோரிடா
மாநிலத்தில், ஓர் உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த
துப்பாக்கித் தாக்குதலில், 17 பேர் உயிரிழந்த கொடுமை, அமெரிக்க
ஐக்கிய நாட்டின் பள்ளிகளில் பயிலும் இளோயோரை விழித்தெழச்
செய்துள்ளது. "துப்பாக்கி கலாச்சாரத்தை வளர்த்துவரும் வயது
முதிர்ந்தோரே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்ற
கேள்வியை முன்வைத்து, இளையோர் இந்த ஊர்வலத்தை தலைநகர்
வாஷிங்டனில் நடத்தினர்.
வாஷிங்டனைப் போலவே, அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும்,
உலகின் பெரு நகரங்களான ஜெனீவா, இலண்டன், சிட்னி, பெர்லின்,
பாரிஸ் மற்றும் பல நகரங்களிலும், அன்று இளையோரின் ஊர்வலங்களும்,
கூட்டங்களும் நிகழ்ந்தன. 'எங்கள் வாழ்வுக்காகப் பேரணி' -
'
March For Our Lives'
- என்ற பெயரில் நடத்தப்பட்ட இப்பேரணிகளில்
பல இலட்சம் இளையோர் பங்கேற்றனர். அதே வேளையில், இளையோர்
நடத்திய இந்தப் பேரணிகளுக்கு எதிராக, அமெரிக்க ஐக்கிய
நாட்டில், துப்பாக்கிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின்
தூண்டுதலால், ஒரு சில இடங்களில், கலக்கார கும்பல்களும் கோஷங்கள்
எழுப்பின.
'ஜல்லிக்கட்டு' என்ற பாரம்பரிய விளையாட்டைக் காப்பதற்காக,
2017ம் ஆண்டு, சனவரி மாதம், சென்னை மெரீனா கடற்கரையில், தமிழகத்தின்
இளம் பெண்களும், இளைஞர்களும் இணைந்து, மேற்கொண்ட ஒரு
போராட்டம், உலகெங்கும் வாழும் தமிழர்களை, தலைநிமிரச் செய்தது.
அரசியல் நாற்றம் அறவே இன்றி நடத்தப்பட்ட இந்த அறப்போராட்டம்,
நம்பிக்கையை விதைத்தது. அதேவண்ணம், 2011ம் ஆண்டு, 'அரபு
வசந்தம்' ('Arab Spring') என்ற பெயரில் துனிசியா, எகிப்து,
லிபியா ஆகிய நாடுகளில், இளையோர் இணைந்து நடத்திய போராட்டங்களும்
நம் நினைவுகளில் ஆழப் பதிந்துள்ளன.
மக்களின், குறிப்பாக, எளிய மக்களின் சக்தியை உணர்த்தும்வண்ணம்
நடைபெற்ற இந்த ஊர்வலங்கள், மற்றும், கூட்டங்களைப் போல்,
2000 ஆண்டுகளுக்கு முன், எருசலேம் நகரில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.
உரோமைய அதிகாரத்திற்கும், யூத மதத் தலைவர்களின் அதிகாரத்திற்கும்
சவால் விடுக்கும்வண்ணம் நடைபெற்ற அந்த ஊர்வலம், எருசலேமில்
பாஸ்கா விழாவைக் கொண்டாட வந்திருந்த எளிய மக்களால், எவ்வித
வற்புறுத்லும் இன்றி, இயல்பாக, எதேச்சையாக நிகழ்ந்தது. இதைத்தான்
இன்று, குருத்தோலை ஞாயிறன்று நாம் கொண்டாடுகிறோம்.
இன்று நாம் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு பற்றி
சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப்
பதிவைக் காண நேர்ந்தது. அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு:
குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920 (The Palm Sunday Tornado
1920). அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில்,
1920ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, குருத்தோலை ஞாயிறன்று உருவான
38 சூறாவளிகளால் பல கட்டிடங்களும், மரங்களும் சாய்ந்தன.
ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில்
அடிக்கடி வெளிவரும் ஒரு செய்தி, சூறாவளிகள். சூறாவளி உருவாகும்
மாதங்களில் குருத்தோலை ஞாயிறும் இடம்பெறுகிறது.
குருத்தோலை ஞாயிறு - சூறாவளி இவை இரண்டையும் இணைத்துச்
சிந்திக்கும்போது, பல எண்ணங்கள் உருவாகின்றன. முதல்
குருத்தோலை ஞாயிறு நடந்தபோது, சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத்
தாக்கியது. அது, இயற்கையில் உருவான சூறாவளி அல்ல, இயேசு என்ற
ஓர் இளையப் போதகரின் வடிவில், எருசலேமுக்குள் நுழைந்த சூறாவளி.
சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை
அடியோடு பெயர்த்துவிடும், அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும்.
இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, முதல் குருத்தோலை
ஞாயிறு நிகழ்வுகள், மதத்தலைவர்கள் உருவாக்கிவைத்திருந்த பல
கட்டமைப்புக்களை, குறிப்பாக, மதத்தின் பெயரால் நிகழ்ந்த பல
தவறுகளை, தலைகீழாக மாற்றின என்பதை உணரலாம்.
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத்தலைவர்களுக்கு
எல்லாமே தலைகீழாக மாறியதுபோல் இருந்தது. இந்தத் தலைகீழ்
மாற்றங்களின் சிகரம், இந்தக் குருத்தோலை ஊர்வலம். இதைத் தொடர்ந்து,
இயேசு அந்த மதத்தலைவர்களின் அதிகாரக் கோட்டையாக விளங்கிய
எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அவலங்களை
சீராக்கினார். எனவே, இந்தக் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை,
பல வழிகளிலும் புரட்டிப்போட்ட ஒரு சூறாவளிதானே!
இந்த குருத்தோலை ஞாயிறு நம்மையும் விழித்தெழச்செய்யும் ஓர்
அழைப்பாக விளங்கட்டும். நம் வாழ்விலும் இயேசு நுழைந்து, அங்கு
மாற்றங்களை - அவை தலைகீழ் மாற்றங்களானாலும் சரி - உருவாக்கவேண்டுமென்று
விழைவோம், வேண்டுவோம்.
அடுத்து, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனிதவாரம்.
குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா முடிய உள்ள இந்த
ஏழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்று கொண்டாட
அழைக்கிறார். வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும்
ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில்
வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவுகூர்வதால், இதை, புனிதவாரம்
என்றழைக்கிறோம். ஆனால், அந்த இறுதி நாட்களில் நடந்த நிகழ்வுகள்
எதிலும் புனிதம் வெளிப்படையாகத் தெரியவில்லையே!
நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவர் இயேசுவைக்
காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் அவரை தனக்குத்
தெரியாது என்று மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்துகொண்டனர்.
மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு
என்ற பெயரில், உண்மை உருகுலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர்,
குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது.
இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல்
துணியைப்போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.
நாம் இங்கே பட்டியலிட்ட நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றை புனிதமான
நிகழ்வு என்று சொல்ல இயலுமா? புனிதம் என்ற சொல்லுக்கு,
மாற்று இலக்கணம் எழுதவேண்டியுள்ளதே. ஆம்... வேறோர் இலக்கணம்
எழுதப்பட்டது. கடவுள் என்ற மாபெரும் மறையுண்மைக்கே மாற்று
இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான்.
அதுவும், அன்புக்காக, எத்தகையத் துன்பமாயினும், எவ்வளவு
துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி,
வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில்
சொல்லித்தந்தார். புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய,
கற்றுக்கொள்ளவேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன.
புனிதவாரம் முழுவதும், குறிப்பாக, இவ்வாரத்தின் இறுதி
மூன்று நாள்கள் நடைபெறும் பல திருவழிபாட்டு நிகழ்வுகளில்
கலந்துகொள்ள தாய் திருஅவை நமக்கு வாய்ப்பளிக்கிறார். இந்த
வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் ஓர் ஆபத்து உள்ளது.
அதாவது, இந்த வழிபாட்டு நிகழ்வுகளை, சடங்குகளாக, வரலாற்று
நிகழ்வுகளாக காணும் பார்வையாளர்களாக நாம் மாறிவிடும் ஆபத்து
உள்ளது. அன்று, இயேசுவின் பாடுகளுக்கு அவரை இட்டுச்சென்றது,
அன்றைய சமுதாயத்தில் நிலவிய கொடுமைகள். அதே கொடுமைகள் இன்று
நாம் வாழும் சமுதாயத்திலும் தொடர்ந்து நிகழ்கின்றன.
இயேசுவுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கேள்விப்பட்டு, அவர்
மீது பரிதாபம் கொள்வதோடு நமது பங்கேற்பு நின்றுவிட்டால்,
புனிதவாரம், வெறும் சடங்காக மாறிவிடும். இந்த
திருவழிபாட்டு நிகழ்வுகள், இன்றைய சமுதாயக் கொடுமைகள்
குறித்து சிந்திக்கவும், அவற்றை நீக்குவதற்குத் தேவையான முயற்சிகளில்
நம்மை ஈடுபடுத்தவும் நமக்கு உதவினால், நம் புனிதவார முயற்சிகள்,
பொருளுள்ளவையாக அமையும்.
நமது கோவில்களில் நடைபெறும் திருவழிபாட்டு நிகழ்வுகள், சமுதாயத்தில்
நடைபெறும் நிகழ்வுகளுக்கு நம்மை அழைத்துச் செல்லவேண்டும்.
சமுதாயத்தில் இன்று, பல்வேறு அநீதிகளால் நசுக்கப்பட்டு, இயேசுவின்
பாடுகளில் தொடர்ந்து பங்கேற்கும் மக்களுக்கு நம்மால் இயன்றதைச்
செய்வதற்கு, நாம் பங்கேற்கும் வழிபாட்டு நிகழ்வுகள், நம்மைத்
தூண்டவேண்டும். அவ்வாறு இல்லையெனில், துன்பப்படும் இயேசுவைக்
கண்டும் காணாமல் செல்லும் அக்கறையற்ற மனநிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.
இக்கருத்தை, Geoffrey Studdert Kennedy என்ற ஆங்கிலிக்கன்
போதகர் ஓர் அழகிய கவிதையில் கூறியுள்ளார். Kennedy அவர்கள்,
முதல் உலகப்போர் காலத்தில், ஆங்கிலேயப் படைவீரர்கள் நடுவே
ஆன்மீகப் பணியாற்றியவர்.
Kennedy அவர்கள் எழுதிய '
Indifference'
- 'அக்கறையற்ற
நிலை' என்ற கவிதையின் வரிகள் இதோ:
இயேசு, கொல்கொதா வந்தபோது, அவரை ஒரு மரத்தில் தொங்கவிட்டனர்
அவரது கரங்களையும், கால்களையும் ஆணிகளால் துளைத்தனர்
தலையில் சூட்டிய முள்முடியால் ஆழமான காயங்களை உருவாக்கினர்
அவை, கொடுமையான நாள்கள், மனித உயிர் மலிவாகிப்போன நாள்கள்.
இயேசு, பர்மிங்காம் (இங்கிலாந்தின் இன்றைய நகர்) வந்தபோது,
மக்கள் அவரைக் கடந்து சென்றனர் அவரை எந்த வகையிலும் அவர்கள்
துன்புறுத்தவில்லை, அவரை சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை
தெருவோரத்தில், குளிரில் இயேசு நடுங்கிக்கொண்டிருந்ததை
யாரும் உணரவில்லை
இயேசு, "இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது என்னெவென்று
இவர்களுக்குத் தெரியவில்லை" என்று கதறி அழுதார். குளிர்காலப்
பனி இயேசுவை மூடி, அவரை குளிரில் உறையவைத்தது கடந்து சென்ற
மக்களெல்லாம் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர் சுவர்
ஓரமாக, குளிரில் நடுங்கியபடி, கடவுளை நோக்கி, 'கல்வாரியைத்
தாரும்' என்று இயேசு கதறினார்.
இயேசுவின் பாடுகள் என்ற வரலாற்று நிகழ்வை, வழிபாட்டு நிகழ்வாகக்
கொண்டாடும் இந்த புனித வாரத்தில், கோவில்களில் நிகழும்
வழிபாடுகளில் பொருளுள்ள முறையில் பங்கேற்கவும், அந்த பங்கேற்பின்
பயனாக நம் வீதிகளில் நிகழும் கொடுமைகளைக் களைவதற்குத்
தேவையானத் தெளிவையும், துணிவையும் பெறவும் சிறப்பாக
வேண்டிக்கொள்வோம்.
மறையுரைச்சிந்தனை
-குடந்தை
ஞானி
இலட்சியப் பயணிகளாக
குருத்தோலையைக் கரங்களில் ஏந்தி, ஓசான்னா கீதம் பாடி, தரையினில்
தன்னுடைகளை விரித்து, ஆண்டவரை தலைவராக மீட்பராக, செம்மறியாக
கருதி, இலட்சியப் பயணம் மேற்கொள்ள நாம் தயாரா?
எருசலேம் யாத்திரை இயேசுவின் புரட்சி ஒவ்வொரு புரட்சிக்கும்
பிறகும் ஒரு வீரவரலாறு ஒழிந்திருக்கும். இன்றைய எருசலேமின்
திருபவனியை -குருத்து ஞாயிறை- '
இயேசுவின் புரட்சி'
என்றே
அழைக்கலாம். இது ஒர் இலட்சியப் பயணம்! இலக்கு நோக்கிய புரட்சிப்
பயணம். வரலாற்றில் இரண்டு யாத்திரை-பவனி- முக்கியமானவை. முதலாவதாக,
மாசேதுங்கின் மரண யாத்திரை'
சீனாவில் 1911 ஆம் ஆண்டு
சீனாவின் தந்தை என்றழைக்கப்படும் சன்யெட்சன் '
தைப்பிங் புரட்சி'
செய்து மன்னர் ஆட்சியை முடிவுக்குக் கொணர்ந்து மக்களாட்சியை
மலரச்செய்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு சியாங்கே ஷேக்
ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இன்னொரு புறம், மாசேதுங் தலைமையில்
கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்து வந்தது: விவசாயிகளுக்காக குரல்
போராடியது. இந்த செஞ்சேனையை ஷேக் கடுமையாக ஒடுக்கினார்.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானுடன் சமரசம் செய்துகொண்ட
ஷேக், செம்படையை இல்லாதொழிக்க முயன்றார். 1934 அக்டோபர்
16ந்தேதி, செம்படையின் தலைமையகமான கியாங்சி மாநிலத்தை
சுற்றி வளைக்க ஆரம்பித்த போது, செம்படையினர் 1 லட்சம் பேர்
அங்கிருந்து கால்நடையாகவே நடக்கத் தொடங்கினர். காடுகளையும்
மலைகளையும், கடந்து, பயணத்தைப் மேற்கொண்டனர். வழிகளில் பலர்
கொடிய மிருகங்களிடம், சிக்கி உயிர் இழந்தனர்: ஆற்றில்; அடித்துச்
செல்லப்பட்னர்: மலைச்சரிவுகளில் செத்துமடிந்தனர். நோயிலும்
பட்டினியிலும் மடிந்தனர். ஆனாலும்கூட வழியில் எதிர்ப்பாளர்களுடன்
போரிட்டபடியே, 12500 கிலோமீட்டர் தூரத்தை, 368 நாட்களில்
கடந்து, 1935 அக்டோபா; 20ந்தேதி ஷென்சி நகரை 6000பேர் அடைந்தனர்.
இதுதான் வரலாற்றில் மிக நீண்ட நெடிய நடைப்பயணம். இந்த
யாத்திரைதான் சீனாவில் கம்யூனிசம் பரவ வழிவகுத்தது.
முடிவில் வெற்றியில் முடிந்தது.
இரண்டாவதாக, காந்தியின் தண்டி யாத்திரை'
உப்புக்கு ஆங்கிலேய
அரசு அநியாய வரி விதித்ததை எதிர்த்து காந்தி உப்பு சத்தியாகிரகத்தை
நடத்தினார். சபரிமதி ஆஸ்ரமத்தில் இருந்து, மார்ச் 12, 1930
அன்று அதிகாலை 78 தொண்டர்களுடன் 61வயதான காந்தி, சூரத் நகர்
அருகில் உள்ள தண்டி என்ற இடத்தை (கடற்கரையை) நோக்கி நடந்தார்.
24 நாட்களில் 241 மைல்கள் நடந்தார். ஏப்ரல் 6ந்தேதி உப்பளத்தில்
குவித்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தை மீறனினார். முன்னர்
கைதுசெய்யாத பிரிட்டிஷ் அரசு, தரிசானா உப்பளத்தை
முற்றுகையிடப்போகிறேன் என்றவுடன், மே மாதம் 5ந்தேதி கைது
செய்து புனே எரிவாடா சிறையில் அடைத்தது. விடுதலைக்கான இந்த
இலட்சிய யாத்திரை சுதந்திர வேட்கையை எல்லோர் மனதிலும்
விதைத்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் எருசலேம் திருபவனி
(யாத்திரை) விவிலிய முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய இயேசுவின்
எருசலேம் யாத்திரைதான் அவருடைய கல்வாரிப் பாதையின் முதல்
நிலை எனலாம். இயேசுவின் இந்த எருசலேம் யாத்திரை தீர்க்கமானது:
நெடுநாள் காத்திருப்புக்கும், கடின உழைப்பிற்கும் பிறகு
மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட யாத்திரை. இது ஒர் இலட்சியப்
பயணம். இந்த இலட்சியப் பயணம் கல்வாரியில்தான் முடியும் என்பதை
கழுதையில் மேலிருந்தவர் அறிவார். இன்று கழுதையால் சுமக்கப்படுபவர்
நாளை சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பதை அறிவார். ஆகையால்
இது ஒரு இலட்சியப் பயணம்! வரலாற்றுப் புரட்சி!
எருசலேமே இலட்சியமாய்...... மரணமே குறிக்கோளாய்..... ஆண்டவருடைய
வாழ்வில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் எருசலேமை
நோக்கித்தான் அமைந்திருந்தது என்றால் அது மிகையன்று. அவருடைய
பேச்சிலும் மூச்சிலும் அதற்கு தனியிடம் இருந்தது. பன்னிரு
வயதில் எருசலேம் ஆலயத்தில் காணாமல் போன போதுகூட தன் தாயை
நோக்கி, '
ஏன் என்னைத் தேடினீh;கள்? நான் என் தந்தையின் அலுவல்களில்
ஈடுபட்டிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?'
என்றவர்தானே
இயேசு. ஒரு யூதனாக அல்ல: மாறாக ஓர் இறைவாக்கினராக, தந்தையின்
திருவுளம் நிறைவேற்றும் இறைமகனாக அவர் எருசலேமை மிகவும் அன்புச்
செய்தார். தன் நண்பனின் மரணத்திற்காக (லாசருக்காக) கண்ணீர்
வடித்தவர் எருசலேம் நகரத்தின் அழிவிற்காக அழுவது அதன் மேல்
கொண்டிருந்த அன்பிற்கு சான்றாகும்.
இந்த எருசலேமில்தான் தன்னைக்குறித்து இறைவாக்கினர் எழுதியதெல்லாம்
நிறைவேறும் என்று நம்பினார் (லூக்18'
31). அங்குதான் இறையரசு
வெளிப்படும் என்று எடுத்துரைத்தார்( லூக்19'
11). அங்கேதான்
தான் ஒர் இறைவாக்கினர் என்ற முறையில் இரத்தம் சிந்த
வேண்டும் என்று அறிந்து (லூக்13'
33) உருமாற்றத்தின் போது
எருசலேமில் தனக்கு நிறைவேறவுள்ள சாவை மோசேவுடனும் எலியாவுடனும்
விவாதித்தார் (லூக்9'
31): எருசலேமை நோக்கி அவர் முனைந்து
நிற்கிறார் (லூக்9'
51). தன் சாவை தம் சீடர்களுக்கு மூன்று
முறை அறிவித்தார் (லூக் 18'
31-34). இப்படி எருசலேமே இலட்சியமாய்,
தன் மரணமே குறிக்கோளாய் கொண்டிருந்தார். ஆகையால் தான் தன்
மரணத்தின் விளம்பில்கூட கண்ணீர் சிந்தி அழுத எருசலேம் நகரப்
பெண்களைப்பார்த்து '
நீங்கள் எனக்காக அழவேண்டாம்: மாறாக உங்களுக்காகவும்
உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்'
என்று எருசலேமின் மீது
கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தமுடிந்தது. இந்த இலட்சியப்
பயணம் கல்வாரியில் சிலுவையில் தன் மரணத்தில் முடிவடையும்
என்பதை அவர் அறிந்திருந்தார். மேலுடை விரித்து மேற்கொள்ளச்
செய்யும் இப்பயணம், தன் மேலாடையை களைந்து தன்னை
நிர்வாணியாக்குவதில் முடிவடையும் என்பதையும் உணர்ந்திருந்தார்.
இலக்கை அவர் அறிவார். ஆகையால் நாம் கரங்களில் ஏந்தியிருக்கிற
இந்த குருத்தோலைகள்கூட முடிவில் சிலுவைகளாக நம் இல்லங்களில்
இடம் பெறுகிறது. ஓலை ஏந்திய இந்த பயணம் சிலுவையில்தான்
முடியும் என்பதற்கான அடையாளமே இதுவாகும்.
இழப்பவர்களால் மட்டுமே பயணிக்க முடியும்! பயணத்தில் பங்குப்பெற
வேண்டுமானால் எதையாவது இழந்தேயாக வேண்டும். இழக்காதவர்களுக்கு
இங்கே இடமில்லை. சீடர்கள் இது ஆண்டவருக்குத் தேவை என்று ஓட்டிவரப்பட்ட
கழுதையின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு இயேசுவை அமரச்
செய்கின்றனர், கூடியிருந்த மக்களோ, தங்கள் மேலுடைகளை
வழியில் விரித்து கொண்டே சென்றனர். அங்கே சீடர்களும் மக்கட்கூட்டத்தாரும்
களைந்தது மேலுடைகளை மட்டுமன்று: தங்களுடைய ஆணவம் பதவி
வெறி, அலட்சிய மனப்பான்மை அனைத்தையும் தான். இயல்பை மறைத்த
அனைத்தையும் களைந்தெறிகின்றனார் சீடர்கள் வலப்புறமா? இடப்புறமா?
யார் பெரியவன்?.. என அத்தனை ஆணவத்தையும் வேரறுக்கிறார்கள்.
மக்களோ கடினமனம், வணங்கா கழுத்து, என அனைத்தையும் கொன்று
ஆர்ப்பாpக்கின்றனர். ஆகையால் தான் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள
முடிந்தது. ஓசான்னா பாட முடிந்தது.
அவர்கள் பாடிய '
ஓசான்னா'
கீதம் வெற்றியின் கீதம்:
முழுமையான சரணாகதியின் சரணமும் கூட. ஓசான்னா என்ற இந்த
சொல்லாடல் திருப்பாடல் 118'
25லிருந்து வருகிறது -ஆண்டவரே
மீட்டருளும்! ஆண்டவரே வெற்றி தாரும்!; . யூதர்கள் ஒவ்வொருமுறையும்
விழாக்களைக் கொண்டாடும் தருணங்களில் கரங்களில் ஒலிவக் கிளைகளை
ஏந்தி, '
ஆண்டவரே மீட்டருளும்'
என்று உரக்க முழக்கமிட்டனா;.
விழாவின் இறுதிநாள்கூட ஒசான்னா நாள் என்றே (The Great
Hosanna) குறிப்பிட்டனர்(118'
27). சுருக்கமாக சொல்ல
வேண்டுமானால் ஓசான்னா என்றால் '
காப்பாற்றும்'
என்று பொருள்
(காண்க 2சாமு14'
4: 2அரச6'
26). ஓசான்னா என்றால் '
வாழ்க!
போற்றி'
என்று பொருள். இப்படி ஓசான்னா வெற்றியின் கீதம்:
அதே சமயம் மீட்பை எதிர்பார்க்கும் உதவியின் கீதமும் கூட.
ஓசான்னா இப்போது வாழ்க என்று பொருள்படும்! ஆனால் கல்வாரியில்
'
எங்களைக் காப்பாற்றும்'
என்று பொருள்படும்.
இயேசுவிலேதான் (மரணத்தின் மீதான) வெற்றி அடங்கியிருக்கிறது:
இயேசுவால் மட்டுமே நம்மனைவரையும் மீட்கமுடியும் என்ற நம்பிக்கையின்;
அடிப்படையில்தான் இவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த
இலட்சியப் பயணத்திலே இத்தகைய அமைந்த உள்ளம் நம் அனைவருக்கும்
தேவை. என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து
என் சிலுவையைச் சுமந்துக்கொண்டு பின்சொல்லட்டும் என்ற இயேசுவின்
எச்சரிக்கையோடு எதையாவது இழந்து இயேசுவைப் பின் செல்வோமா?
இந்த வாரம் புனித வாரம் என்று கொண்டாடப்படுகிறது. வாரம்
புனிதம் ஆக வேண்டுமானால் நாம் எதையாவது இழந்துதான் ஆக
வேண்டும். உரிமையாளன் கழுதையை இழந்தான்: மேலுடை அணிந்திருந்தவன்
ஆடை இழந்தான். ஒலிவ மரம் தன் கிளையை இழந்தது. இயேசு தன்னையே
இழந்தார் (கேனோசிஸ்- இரண்டாம் வாசகம்) துன்புற்றார் (முதல்
வாசகம்) நம்மை மீட்டார்.
இந்த கழுதைப்பயணம் அஹிம்சையின் பயணம்! பொதுவாக, போருக்கு
செல்பவர்கள் விரைந்து செல்லும் குதிரையில் பயணிப்பார்கள்:
இங்கே இயேசு வெற்றியின் வீரராக.. சமாதானத்தின் தூதுவராக அஹிம்சைவாதியாக,
ஆரவாரமில்லாமல் போரில் வெற்றிப்பெற்றபிறகு அன்ன நடைபோடும்
கழுதையில் அமர்ந்து நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும்
நிறைந்தவர் எண்பித்து உரோமைப்படைவீரர்கள் வாயடைக்க எருசலேமை
நோக்கிப் பயணிக்கிறார். போடாமலே வென்று, செயல் முடிவுக்கு
வருவதற்கு முன்பே கொண்டாடி மகிழ்ந்து,. உண்மையில் இது மனுமகனின்
வெற்றித்திருப்பயணம்தான்.
இலட்சியப் பயணிகளாக.. ஆனால் இங்கே இலட்சிய பயணிகளின் எண்ணிக்கை
குறைவே. கல்வாரியில் முடிவடைந்த இப்பயணத்தில் கடைசிவரை
நிலைத்திருந்தவர் சிலரே! '
ஒசான்னா! தாவீதின் மகனுக்கு ஒசான்னா'
என்று வெற்றி முழக்கமிட்ட இதே மக்களினம் '
ஒழிக! ஒழிக! இவன்
ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலைச் செய்யும்'
என்று திசை
மாறியது. '
ஆண்டவர் பெயரால் வருபவர் வாழி'
என்ற இக்கூட்டம்
'
அவனைச் சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்'
என்று
இலட்சியம் தடுமாறியது. மீட்பில் பங்கேற்கவில்லை!
இந்த எருசலேம் நோக்கிய பயணம் கல்வாரியில் முடியும் என்பதால்
துணிவு நமக்கு வேண்டும்! திருச்சபையை மூவகையாகப் பகுத்துப்பார்க்கலாம்.
முதல்வகைத் திருச்சபை பயணிக்கும் திருச்சபை-இரண்டவாது
துன்புறும் திருச்சபை -மூன்றாவது வெற்றித்திருச்சபை! பயணிக்கும்
திருச்சபை இவ்வுலகத் திருச்சபை! துன்புறும் திருச்சபை உத்தரிக்கிற
திருச்சபை! வெற்றித்திருச்சபை விண்ணகத் திருச்சபை! இம்மூன்றும்
ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. இவ்வுலகில் பயணிக்கும்
திருச்சபை விண்ணகத் திருச்சபையை (எருசலேமை) வெற்றித்திருச்சபையை
நோக்கி பயணிக்கிறது. இது ஒரு இலட்சியப் பயணம்! ஆகையால்தான்
இலட்சிய பயணிகளாக வேண்டும். நாம் விண்ணகம் நோக்கி பயணிப்பவர்கள்
என்பதைத்தான் இந்த பவனி அடையாளப்படுத்துகிறது.
ஆகையால் புனித வாரத்தில் நாம் மேற்கொள்ளும் இந்த பயணம் நம்மைப்
புனிதப்படுத்தி வெற்றியின் கீதங்களை நாவினில் இசைத்து,
கிளைகளை கைகளில் ஏந்தி, விண்ணக எருசலேமில் இடம் பெற செய்திடட்டும்.
இயேசுவை மீட்பராக, தலைவராக கொண்டவர்களால் மட்டுமே ஓசான்னா
பாடமுடியும்! தன்னை தன் மேலுடையை இழந்து அவருக்கு அரசருக்கு
மகிமையளிக்க முடிந்தவர்களால் மட்டுமே எருசலேமை அடைமுடியும்!
பரிசேயத்தனம் பதவிவெறி கொண்டவர்கள் தடுமாறி வீழ்ந்து
விடுவார்கள்! ஆனால் ஆனால்.. கல்வாரி வரை கடைசிவரை இலட்சியத்தை
அடைந்தவர்கள் ஒரு சிலரே! அவரை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தவர்களும்,
முத்தமிட்டு கறைபடுத்தியவர்களும், ஆளைவிட்டால் போதும் என்று
ஆடையின்று இருளில் மறைந்தவர்களும், ஏராளம்: தாராளம்.
தடுமாறிவருக்கு தோள் கொடுத்த சீமோன்: காயம்பட்டு, களைப்புற்று
அல்லாடியவருக்கு முகம் துடைத்து ஆறுதலளித்த வெரோணிக்கா:
பேச வார்த்தையில்லாமல் இடையில் சந்தித்து தன் ஆதரவை ஈந்த
அன்னைமரியாள், அன்பால் தன் உடனிருப்பை உணர்த்திய அருளப்பர்,
தியாகத்தால் தன் சரணாகதியை எண்பித்த அரிமத்தியா சூசை, இறந்த
பிறகும்கூட ஆவலாய் பணிவிடை புரிய தன்னையே அர்ப்பணித்த மக்தலேன்
மரியாள் என்று இலட்சியவாதிகளை-இலட்சியப் பயணிகளை-விரல்
விட்டு எண்ணிவிடமுடியும்! கூட்டத்தில் ஒருவராய் மறைவதைவிட
தன் பணியால் வாழ்வால், சாட்சியத்தால் தொpவது மேலானது. இலட்சியப்
பயணிகளாக இயேசுவை இறுதிவரை பின்செல்ல விண்ணகம் எருசலேமை
நோக்கிப் பயணிக்கலாமா?
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி
மாணிக்கம் , திருச்சி
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே