Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு வாசகம்

    ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா     Year C  
==============================================================
முதல் வாசகம் 
==============================================================
நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4

கடவுளாகிய ஆண்டவர் கூறுவது:

" இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்" என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார். அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார். அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 24: 7. 8. 9. 10 (பல்லவி: 10b)
==============================================================

பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.
7
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். - பல்லவி

8
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். - பல்லவி

9
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். - பல்லவி

10
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். - பல்லவி

இரண்டாம் வாசகம்
எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆனார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18

சகோதரர் சகோதரிகளே,

ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப் போல் கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டு இருந்தவர்களை விடுவித்தார். ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை.

மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு. ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆகவேண்டியதாயிற்று. இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

======================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
==========================================================
லூக் 2: 32

அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.

=========================================================
நற்செய்தி வாசகம்
==========================================================
உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், " ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். " ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, " ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.

சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, " இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.

குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அல்லது குறுகிய வாசகம்

உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-32

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், " ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். " ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, " ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

==============================================================

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!