ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 பொதுக்காலம் 5 ஆம் - ஞாயிறு  

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
நம்பிக்கையை வளர்க்க ஆசி வேண்டி வந்திருக்கும் அன்பு உள்ளங்களே!

மீன் வலை ஒன்று இன்றைய திருப்பலியில் நமது நம்பிக்கை நிலையை எண்ணிப் பார்க்கச் சொல்லி அழைக்கிறது! மலையளவு சோதனை என்றாலும் நிலைகுலையாத நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வழிகாட்டி வலைகிழிய அகப்பட்ட மீன்கள் துள்ளுகின்றன!

இரவெல்லாம் இமைவிழித்து வலைவிரித்து சோர்ந்த போதும்கூட இயேசுவின் சொல்லைக் கேட்டு வலையை வீசிய போது அகப்பட்ட மீன்பாட்டைக் கண்டு ஆழமான நம்பிக்கைக்குள் அகப்பட்டு பேசிக் கொண்டார்கள். கூடவே ஆன்மாவைப் பிடிக்கும் அதிசயத் துண்டிலாக மாறிப்போனார்கள். அலையோடு போராடி வலை வீசிய நிகழ்வில் சிதறிய சிந்தனை பரிசீலிக்கப்பட்டது. மனிதரை பிடிக்கும் திறமை பரிசளிக்கப்பட்டது.

உழைப்பில் களைப்பும், விடாமுயற்சியில் சோர்வும் தாக்கினாலும் நம்பிக்கை நெம்புகோலை வெற்றியின் திசையில் நகர்த்தினால், கடலின் அலைகூட வெற்றிப்படிக்கட்டாகும் கலையைக் கற்றுக்கொடுக்கும்.

உழைப்பு உயர்வுக்கு வித்து...
விடா முயற்சி வளர்ச்சிக்கு பயிற்சி....
நம்பிக்கை வெற்றிக்கு நெம்புகோல்....
ஆம் ஆன்மாவைப் பிடிக்கும் அதிசயத் தூண்டிலாக மாற நம்பிக்கையுடன் உழைக்க முன் வருவோம். நமக்கும் மனிதரை பிடிக்கும் திறமை பரிசாக அளிக்கப்படும் அப்போது விரும்பும் வரங்கள் பெற்று அதிசயத்தூண்டிலாக வலம் வருவோம்..
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உமது வார்த்தையில் நம்பிக்கை வைத்த சீமோனை ஆன்மாவைப் பிடிக்கும் அதிசய தூண்டிலாக்கிய இயேசுவே! திருச்சபைத் தலைவர்கள் இறை மக்களை பிடிக்கும் அற்புத மனிதர்களாக வலம் வர அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆழத்திற்கு தள்ளிக் கொண்டு போய் மீன்களைப் பிடிக்க வலைகளைப் போடுங்கள் என்று சொன்ன இயேசுவே!
நாட்டு மக்களை உயர்த்த வேண்டும் என்ற ஆழமான சிந்தனை வலைகளை மக்களுக்காக விரிக்கும் மன நிலையை நாடுகளின் தலைவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3 'அஞ்சாதே மனிதரை பிடிப்பவரக மாற்றுவேன்' என்று சொன்ன இயேசுவே!
எங்கள் ஆன்மீக வழிகாட்டிகள் உமது சொல்லை நம்பி வீசும் வலைக்குள் ஏராளமான இறைமக்கள் அகப்பட்டு பயன்பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கை உணர்வினை விதைக்க மீன்பிடிப்போரை அழைத்த இறைவா!
இங்கே கூடியிருக்கும் இறைமக்கள் உள்ளங்களில் குடியிருக்கும் துன்ப துயரங்கள், நம்பிக்கை குறைவான செயல்பாடுகள், அச்சம் அனைத்தையும் அகற்றிவலுவான நம்பிக்கையை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்


ரிக்ஸியா 13 வயது சிறுமி. அவள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டாள். அதிகமான அளவிற்கு மருந்து எடுத்து உடல் சோர்வுற்றாள் கூடவே உடல் நிலை தேறாது என மனமும் சோர்வுற்றாள். அவளிடமிருந்த எதிர்மறை எண்ணத்தை மாற்றி நம்பிக்கைக் கொடுக்க விரும்பினார் அவளது தந்தை. அதற்கான வழியை யோசித்துக் கொண்டே சென்ற போது ஒருவன் நடந்து செல்லும் பாதையில் ஓடுவது தெரிந்தது. அவன் காலில் அணிந்திருந்த காலணி வேறுபட்டிருப்பதைக் கண்ட அவள் தந்தை காரை பின் நோக்கி ஓட்டி வந்து அவனிடம் விசாரித்தார். நிச் என்ற பெயருடைய அவன் காலில்லாத நிலையில் மாறுபட்ட காலணிகளோடு பயிற்சி பெற்று ஓடுவதாகச் சொன்னான். அன்றே உறுதியுடன் தானும் ஓடிப் பயிற்சி பெறவிரும்பினார். அவNhடு அவளது மகளும் ஓடிப் பயிற்சி பெற முன் வந்தாள். அந்தமப் பெண் பள்ளி இறுதி வகுப்பு முடிக்கும் போது நானூறு மைல் ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெற்று பரிசும் பெற்றாள். அதன் பிறகு நோயைப் பற்றி பிரச்சனையே இல்லை. காலில்லாமல் ஓடியது நம்பிக்கையை உருவாக்கியது, நோயுற்ற அந்த சிறுமியும் புது நம்பிக்கையோடு வாழ்வுபெற வழிகாட்டியது.

நாம் அதிக கவனமும் உழைப்பும் முயற்சியும் எடுத்துக் கொண்டால் தான் நல்லவற்றை பயிரிடமுடியும்.
முயற்சி முழுமையாக இருக்குமானால் விதி என்று சொல்லப்படுபவற்றைக்கூட மாற்றி அமைக்க முடியும்.
வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது கூட்டைவிட்டு பறக்கின்ற பறவைகள்கூட நம்பிக்கையோடு பறக்கின்றன. இன்று நாள் முழுவதம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன. பறவைகளின் நம்பிக்கையைவிட நமது நம்பிக்கை சிறகு பொதாக இருக்க வேண்டுமே!
கையில் இருப்பதைக் கொண்டு சாதனை படைக்க இயேசு கற்றுத் தருகிறார். அதனால் தான் ஆழத்திற்கு தள்ளிக் கொண்டு போய் வலைகளை வீசுங்கள் என்கிறார்.
இரவு முழுவதும் வலை வீசி சோர்ந்தவர்களை மீண்டும் முயற்சிக்க அழைக்கிறார். அதோடு சொல்லை நம்பியவர்களுக்கு புதுமையை அள்ளிப் பொழிந்து அற்புதம் நிகழ்த்துகிறார்.
நம் கையில் உள்ளவற்றை ஆண்டவரிடம் அர்பணிப்போம். பழைய தோல்விகளை சோர்வுகளை அகற்றிவிட்டு ஆண்டவரின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்து ஆழ்கடலில் வலையை வீசினால் கடவுள் நம் வலைகளையும் கிழியுமளவுக்கு ஏராளமான மீன்களால் நிரப்புவார். நாம் விரிக்க வேண்டியது நம்பிக்கை வலைகளையே!

 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.O.S.M.
பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

I. எசாயா 6:1-2அ, 3-8
II. 1 கொரிந்தியர் 15:1-11
III லூக்கா 5:1-11

எல்லோர்க்கும் எல்லாமாய்........

எல்லோர்க்கும் எல்லாமாய் எல்லோராலும் இருக்க முடியாது. இறைவன் ஒருவரைத் தவிர. இன்றைய நற்செய்தியில் இறைவன் நம்மை அவர் போல எல்லோர்க்கும் எல்லாமாய் இருக்க முயற்சி செய்ய அழைக்கின்றார். சீமோன் பேதுருவை அழைக்கும் பகுதி இன்று நமக்கு நற்செய்தி வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. படிப்பறிவே இல்லாத சீமோன் பேதுரு இறைமகன் இயேசுவால் அழைக்கப்பட்டு, அவர் பணி செய்து பின் திருச்சபையை ஆண்டு வழிநடத்தும் அளவுக்கு பொறுப்பேற்கிறார். இயேசு சொன்னது போல மீன்களைப் பிடித்துக் கொண்டு இருந்தவர் மனிதர்களைப் பிடிப்பவரைப் போலாகிறார். உள்ளதை உள்ளபடி பேசும் குணமும், குடும்பப்பற்றும் பொறுப்பும் கொண்டிருந்த அவரை அப்படியே தன்பால் திருப்பி இறைப்பணி செய்ய அழைக்கிறார். தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தந்தையாக தமையனாக மகனாக என்று எல்லாமாய் இருந்தவர் , அந்த குறுகிய வட்டத்தை விடுத்து மூத்த அப்போஸ்தலர், திருச்சபையின் முதல் தலைவர் என்ற பெரிய வட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இயேசுவால் அழைக்கப்பட்ட சீமோன் பேதுரு எல்லோர்க்கும் எல்லாமாய் மாறிவிடுகிறார். அவரது அழைப்பின் மேன்மையை வாசிக்க கேட்டு மகிழ்ந்த நாமும் அவர் போல வாழ முயற்சி எடுப்போம்.
இயேசு இன்றைய நற்செய்தியில் தன்னைப் பின்பற்றி வந்த மக்களுக்கும்,சீமோன் பேதுருவிற்கும், உடனிருந்த அவரின் உடன்பிறப்புக்களுக்கும் எவ்விதமாக செயல்பட்டார், எப்படி, "எல்லாமாய்" இருந்தார் என்பதை அறிந்து அவர் போல் வாழ விழைவோம்.
1. திரளான மக்களுக்கு வார்த்தையாய்.....
2. சீமோனின் உடன் பிறப்புக்களுக்கு வளமையாய்.....
3. சீமோன் பேதுருவிற்கு வாழ்வாய்.....

வார்த்தையாய்.......
வார்த்தை வடிவமாய் மனு உருவானவர் மீண்டும் அதே வார்த்தையின் வடிவில் தன்னையும் தன் பணியையும் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் ... ஆனால் இயேசுவின் வார்த்தைகள் நம் பலவீனத்தைக் கொன்று, நம் பலத்தை வெல்லும். ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தவர், திரளான மக்கள் தனது வார்த்தையைக் கேட்க விரைந்து வருவதை கண்டு கொள்கிறார். எந்நிலையிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இறைவார்த்தையைக் கேட்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைக் கண்டறிகிறார். நீர் நிலைகளின் அருகில் எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் . நீரலைகளின் சத்தம், அங்கு மீன் பிடிக்கும்- விற்கும் மீனவர்களின் சத்தம், அதனை பேரம் பேசி வாங்க காத்திருக்கும் மக்களின் சத்தம் என பல சத்தங்களின் கலவையாக அந்த இடம் இருந்திருக்கும். இருப்பினும் அந்த சத்தத்தை எல்லாம் விடுத்து, இறைவார்த்தையைக் கேட்க ஆவலாயிருப்பவர்களுக்கு இறைவார்த்தை மட்டுமே காதில் விழ வேண்டும் என்று எண்ணியவராய், படகில் அமர்ந்து அவர்களின் கவனத்தை ஒன்றிணைக்கிறார். அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அவர்களை இறைவார்த்தையால் நிறைவு செய்கின்றார். நமது எதிர்பார்ப்பு என்ன நமது இறைவனிடத்தில் என்று யோசிப்போம். இறைவார்த்தைக்கு செவி கொடுக்க நாம் எடுக்கும் முயற்சிகள் எவை என்பதை கண்டுணர்ந்து வாழ்வோம். வார்த்தையான இறைவன் நம்மையும் ஆட்கொள்ள அனுமதிப்போம்.

வளமையாய்.....
மனிதன் வாழ அவசியமானது நலமான உடலும் வளமான வாழ்வும் தான் . இது இரண்டில் ஒன்று குறைவுபட்டாலும் பிரச்சனை தான். இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்து கரை திரும்பி, மீன்களுக்கு பதிலாக வலையில் மாட்டிய கழிவுகளை கழுவிக் கொண்டிருந்தனர் சீமோன் பேதுருவின் பங்காளிகள் உடன்பிறப்புகள். மீனுக்கு பதில் கழிவுகளா? இன்று நம் பிள்ளைகள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்ற கவலைகளோடு வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு வளமையாய் வருகின்றார் இயேசு. யாராருக்கு என்னென்ன தேவையோ அதைக் கொடுப்பவர் இயேசு. எனவே அன்றாட பசிதீர்க்கும் கவலை கொண்ட அவர்களுக்கு ஏராளமான மீன்கள் என்னும் வளமையைக் கொடுத்து மகிழ்வடையச்செய்கின்றார். தங்களது குடும்பத்தின் சுமையை தீர்த்த இறைவனுக்கு தங்களையேக் கையளித்து இயேசுவைப் பின்தொடர்கின்றனர். நமக்கு இன்று அப்பிரச்சனை இல்லை நாம் நலமோடும் வளமோடும் வாழ்கிறோம். நம்மை மகிழ்வோடும் நிறைவோடும் காக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் என்ன என்று சிந்திப்போம்.

வாழ்க்கையாய்......
சீமோன் பேதுரு எளிய மனம் கொண்டவர், நினைத்ததைப் பேசும் குணம் கொண்டவர். மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்தும் உள்ளம் கொண்டவர். இப்படிப்பட்டவரை இயேசு அழைக்கின்றார். இவரது எதிர்பார்ப்பு எல்லாமே நல்லதொரு அமைதியான நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது மட்டுமே. அது கிடைக்காமல் போகவே மிகுந்த வேதனையோடு கரையில் அமர்ந்திருக்கிறார். அவரது எண்ண ஓட்டத்தை உணர்ந்தவராய் இயேசு அவரது படகினைத்தெரிவு செய்கின்றார். அவரது வெளிப்புற தோற்றத்தையும் சூழலையும் வைத்து அவரது எண்ணத்தை தெரிந்து கொண்ட இயேசு அருகில் சென்று அவரிடம் பேச்சு கொடுக்கின்றார். ஆழத்திற்கு சென்று வலைகளைப் போடுங்கள் என்கிறார். உமது வார்த்தைக்கேற்ப செய்கிறேன் என்று பேதுரு கூறிய மறுமொழியால் கவரப்பட்டவர், அவரது எதிர்பார்ப்பிற்கும் மேலாக அதனைப் பூர்த்தி செய்கிறார். ஏனெனில் அவரது வாழ்க்கை மீன்பாட்டைப் பொருத்தே அமைந்திருந்தது. எனவே அந்த மீன் வழியாக அவரது ஏக்கத்தை நிறைவு செய்கின்றார். இறைமகனின் வல்லமை செயலைக் கண்டு மனதுருகி தனது குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்கின்றார். தனது வாழ்வாதாரமாய் இருந்த படகையும் வலையையும் விட்டு விட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார். நாம் நமது வாழ்வின் ஆதாரமாய் எவற்றைக் கருதுகிறோம். அவற்றை இயேசுவிற்காய் விட்டு விட தயாராய் இருக்கின்றோமா? சிந்திப்போம்.

ஆக யார் யார் என்ன என்ன எதிர்பார்ப்போடு இயேசுவை அணுகினார்களோ அதனைப் பெற்றுக்கொண்டனர். நாமும் திருப்பலியிலும் மற்ற பிற அருட்சாதனங்களிலும் அன்றாடம் இயேசுவை எதிர்கொள்கின்றோம். நாம் என்ன எதிர்பார்ப்போடு அவரை எதிர்கொள்கிறோம் என சிந்திப்போம். நமக்கு வார்த்தையாக வளமையாக வாழ்வாக என எல்லாமாக இருக்க இறைவன் விரும்புகிறார். அவரைப் பின்பற்றும் நாமும் எல்லோர்க்கும் எல்லாமாக இருக்க முயல்வோம் இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm


பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன்(ள்)

இன்று எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தகுதி, திறமை பார்த்து தேர்ந்தெடுக்கிறது. ஆனால் கடவுளின் அழைப்பைப் பொறுத்த வரையில் இது முற்றிலும் நேர் எதிராக இருக்கிறது. இந்த உலகம் 'மடமை' அல்லது 'தகுதியற்றவர்கள் வலுவற்றவர்கள் 'என யாரையெல்லாம் கருதியதோ அவர்களை தம் பணிக்கென தேர்ந்தெடுக்கிறார். பொதுக்காலம் ஐந்தாம் வாரத்தில் இருக்கும் நமக்கு, இயேசு முதல் சீடரை அழைத்தல் என்ற நற்செய்தி பகுதி வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

கெனசரேத்து ஏரிக்கரையில் எத்தனையோ மீனவர்கள் தன் பிழைப்பின் ஆதாரமான மீன்பிடித் தொழிலை செய்து கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் இயேசு சீமோன் பேதுருவின் படகை தேடிச் சென்று அமர்ந்து, இறைவார்த்தையை கற்பிக்கின்றார். சீடர்கள் தான் குருவைத் தேடிச் சென்று கற்றுக்கொள்வதும், பயிற்சி பெற்றுக்கொள்வதும் வழக்கமான ஒன்று. ஆனால் இயேசு என்னும் குரு, தானாகவே முன்சென்று தான் விரும்பியவர்களை தன் சீடர்களாக தேர்ந்தெடுக்கிறார். அவர்களில் யாரும் பணக்காரரும் அல்ல , பணம் படைத்தவரும் அல்ல. மாறாக அவர்களின் எளிய உள்ளத்தையும் , எதார்த்த குணத்தையும் கண்டு அவர்களை தன் சீடர்களாகத் தேந்தெடுக்கிறார். சாதாரண மீன் பிடிப்பவர்களை தம் சீடர்களாக அழைத்து , அவர்களுக்கு மிகப்பெரிய பயிற்சியை அளிக்கிறார். பயிற்சியென்றால் போர் பயிற்சியும், வில் வித்தையும் அல்ல. மாறாக தம் வாழ்க்கையாளும், சொல்லாலும், செயலாலும் அவர்களுக்கு வாழ்க்கைப் பாடங்களை பயிற்சியாகக் கொடுக்கிறார். இந்நற்செய்தி வழியாக இயேசு இரண்டு செய்திகளை நம்முன் வைக்கிறார்.

1.ஆழத்திற்குச் சென்று வலைப்போடுங்கள்.
2.மனிதரைப் பிடியுங்கள்.
ஆழத்திற்குச் சென்று வலைபோடுங்கள்.

சீமோன் பேதுருவும், அவருடைய சகோதரரும் இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் மீன்பாடு ஒன்றும் கிடைக்கவில்லை. இயேசு பேதுருவை நோக்கி "ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். ஆனாலும் சீமோன் பேதுரு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பணிந்த மனதோடும், அமைந்த உள்ளத்தோடும் ஏற்றுக்கொண்டு , ஆழ்த்திற்குச் சென்று வலை விசுகிறார். இயேசுவின் ஒற்றவார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால் ஏராளமான மீன்களை பிடிக்கிறார்கள்.

ஆழம் தெரியாமல் காலைவிடாதே என்பார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இங்கே இயேசு ஆழத்திற்குச் சென்று வலைபோடுங்கள் என்கிறார். மனிதர்களை நம்பி ஆழ்த்திற்குச் சென்றால் ஆபத்து. இறைவனை நம்பி ஆழத்திற்குச் சென்றால், அங்கே மகிழ்ச்சியையும் , பொக்கிஷத்தையும் கவர்ந்து வரலாம். ஆழம் என்பதை கடலின் ஆழத்தை மட்டும் கூறவில்லை . மாறாக நம் வாழ்க்கைப் பயணத்திலும் ஆழமான அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று எடுத்துரைக்கிறார். கரையோரத்தில் நின்று காத்துக்கொண்டிருந்தோமென்றால் நல்ல காற்றுக் கிடைக்கும், கடலின் அழகைக் கண்டு இரசிக்கலாம். ஆனால் கையில் ஒன்றும் கிடைக்காது. அதே சமயம் கடலின் ஆழ்த்திற்குச் சென்றால் , நம் பசியைப் போக்கும் மீன்களையும், விலைமதிப்பற்ற முத்துக்களையும் , வளம்புரி சங்குகளையும் அத்தோடு கூட மகிழ்ச்சியையும் கொண்டுவரலாம். உழைப்பு இருந்தால் ஊதியம் நிச்சயம் இருக்கும்.

கடவுள் நமக்கு வாழ்க்கை என்னும் கொடையை கொடுத்திருக்கி றார். அந்த வாழ்க்கையை மேலோட்டமாக வாழாமல் ,உயிரோட்டமுள்ள ஆழமான , அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார். கடலின் ஆழத்திற்குள் எப்படி விலையுயர்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கின்றதோ, அதே போல , நாமும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழும் போது, நமக்குள்ளும் நல்ல மாற்றங்கள் வெளிப்படுவதை உணரலாம். நாம் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். அதனால் இறைவன் விரும்பும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முயற்சிசெய்வோம்

நீ மனிதனைப் பிடிப்பவன் ஆவாய்.

இயேசு சீமோன் பேதுருவைப் பார்த்து, இனி நீ மனிதரைப்பிடிப்பவன் ஆவாய் என்றார். பேதுரு ஆண்டவரே என்னால் மீன்களையே பிடிக்கமுடிய வில்லை , நான் எப்படி மனிதர்களைப் பிடிக்கப்போகிறேன்.... என்று எண்ணியபடி இயேசுவின் காலில் விழுந்து , ஆண்டவரே நான பாவி ,என்னைவிட்டுப் போயிவிடும், என்றார். ஆனாலும் இயேசுவின் பார்வையும் ,அவரின் தெய்வீகத் தன்மையும் சீமோனை ஈர்த்ததால் ,படகுகளையும், வலைகளையும் ,தங்கள் உடைமைகளையும் விட்டுவிட்டு இயேசுவை பின்தொடர்ந்தார்கள். மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்த பேதுருவைத் தான் அப்போஸ்தலர்களின் தலைவராக இயேசு தேர்ந்து கொள்கிறார். இயேசுவின் உயிர்ப்பிற்குப் பிறகு பேதுரு பல இடங்களுக்குச் சென்று, நற்செய்தி அறிவித்து, பல துன்பங்களையும் , துயரங்களயும் அனுபவித்து பல ஆயிரம் மக்களை இயேசுவின் பாதத்தில் கொண்டுவந்து சேர்த்தார். இறைவன் தாம் முன் குறித்தோரை அழைத்திருக்கிறார். தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையோராக்கியிருக்கிறார். தகுதியற்றவர்களை அழைத்து தமக்கு தகுதியுடையவர் ஆக்கிக்கொண்டார். இயேசு சொன்னதை பேதுரு வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார். நாம் என்ன செய்கின்றோம்..? சிந்தனைக்கு...

பல்வேறு குணங்களை கொண்ட மனிதர்களுடன் நாம் வாழ்கின்றோம். பல நேரங்களில் சில மனிதர்களைப் பார்த்தாலே பயம், சிலரிடம் பேசினாலே பயம். சண்டை , சச்சரவுகள் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எப்படிப்பட்ட மனிதர்களுடன் வாழ்ந்தாலும் ,நமது வாழ்க்கையை நாம் தான் அர்த்தமுள்ள வகையில் வாழவேண்டும். அதனால் சில கசப்புகளை கடந்து தான் செல்ல வேண்டும். இயேசு பேதுருவுக்குப் பணித்ததுபோல், நமக்கும் பணித்துள்ளார். இயேசு என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் கண்டுணர்ந்து அதற்கான பாதையில் நமது பயணம் தொடர முடபடுவோம்.

இறுதியாக...... இறைவனால் நாம் ஒவ்வொருவரும் மனிதனாக இம்மண்ணில் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அழைக்கப்பட்ட ஒவ்வொருவருமே, ஒவ்வொரு விதத்தில் பணிசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நாம் எந்தப் பணிசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோமோ, அப்பணியில் வேரூன்றி அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவே இறைவன் விரும்புகின்றார். அழைக்கப்பட்டவர்கள் என்ன பலர், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் இறைவனைத் தேடுவதையே நோக்கமாக கொண்டுவாழ்வோம். இறைவனின் அன்பும் ,ஆசிரும் என்றும் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்.

சகோ. செல்வராணி OSM
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.


 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
அழைப்பு, அறிவிப்பு, நிலைத்திருப்பு

சீனாவின் அன்னை தெரசா:

சீனாவின் "அன்னை தெரசா" என அழைக்கப்படுகின்றவர் கிளாடிஸ் எல்வர்ட் (Gladys Aylward 1902-1970) சீனாவில் உள்ள மக்களுக்கும், தொடர்ந்து ஹாங்காங்கில் உள்ள மக்களுக்கும் நற்செய்திப் பணியோடு, சமூகப் பணியையும் செய்த இவரது வாழ்க்கையை நாம் படித்துப் பார்க்கின்றபோது, கடவுள் எப்படிச் சாதாரண மனிதர்களைத் தனது பணிக்கென அழைத்து, அவர்களை உயர்த்துகின்றார் என்பது நமக்குப் புரியும்.

இங்கிலாந்தில் உள்ள லிவர்போல் என்ற ஊரில் பிறந்த கிளாடிஸ் எல்வர்ட், தனது பதின்வயதில் ஒரு மாத இதழை வாசிக்க நேர்ந்தபோது, "சீனாவில் நற்செய்தி அறிவிக்கத் தயாரா?" என்றோர் அறிவிப்பைக் கண்டார். உடனே இவர், இயேசுவைப் பற்றி அறியாத மக்களுக்கு அவரது நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.

சீனாவில் நற்செய்தி அறிவிக்க, அந்த மொழியைக் கற்றாக வேண்டும் அல்லவா! ஆகையால், சீன மொழியில் கடவுளின் வார்த்தையை எப்படி அறிவிக்க வேண்டும் என்பது பற்றிக் கற்றுத் தந்துகொண்டிருந்த பயிற்சிப் பாசறைக்குச் சென்றார் இவர். அங்கிருந்தவர்களோ இவருக்குச் சீன மொழி சரியாக வரவில்லை என்று, இவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். இதனால் இவர் மிகுந்த வருத்தத்தோடு வீட்டிற்குத் திரும்பி வந்தார்.

இந்நிலையில் சீனாவில் நற்செய்தியை அறிவித்துக்கொண்டே அனாதைக் குழந்தைகளையும் கவனித்து வந்த 72 வயது நிரம்பிய ஜென்னி லாசன் என்ற பெண்மணி தனது பணியைத் தொடர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று செய்தித்தாளில் அறிவிப்புக் கொடுத்தார். கிளாடிஸ் எல்வர்ட் அதற்கு விண்ணப்பிக்கவே, ஒருமனதாகத் தேர்ந்துகொள்ளப்பட்டார். இதையடுத்து, 1932 ஆம் ஆண்டு கிளாடிஸ் எல்வர்ட் சீனாவிற்குப் புறப்பட்டுச் சென்று, ஜென்னி லாசனின் பணியைத் தொடர்ந்தார். சீனா மொழி வரவே வராது என்று புறக்கணிக்கப்பட்ட இவர் சீனாவிற்குச் சென்றதும், மிக எளிதாகச் சீனமொழியைக் கற்றுக்கொண்டு அங்குள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். இவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டுப் பலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள். கூடவே இவர் அங்கிருந்த அனாதைக் குழந்தைகளையும் கவனித்து வந்தார். 1938 ஆம் ஆண்டு சீனாவில் போர் மூண்டபோது இவர் அனாதைக் குழந்தைகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு ஹாங்காங்கிற்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு நற்செய்தியைப் பணியையும் சமூகப் பணியையும் செய்து, பலரையும் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.

ஆம், சீன மொழி பேச வராது என்று புறக்கணிக்கப்பட்ட கிளாடிஸ் எல்வர்ட், சீன மொழியை மிக எளிதாகக் கற்றுக்கொண்டு, சீனாவில் உள்ள மக்களுக்கும், இன்னும் பலருக்கும் மிகுந்த வல்லமையோடு நற்செய்தி அறிவித்து, அவர்களை இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்தது, கடவுள் தகுதியானவர்களை அழைப்பதில்லை; அழைப்பவர்களைத் தகுதியானவர்களாக மாற்றுகின்றார் என்கிற செய்தியை நமக்கு உணர்த்துகின்றது. பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத்தான் கூறுகின்றது. நாம் அது குறித்துச் சிந்திப்போம்.

எல்லாரையும் அழைக்கும் இறைவன்:

"இறைப்பணியை "இவர்கள்"தான் செய்யவேண்டும். "அவர்கள்" எல்லாம் செய்யக்கூடாது" என்று இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலேயே மனிதர்களைப் பிரித்து வைக்கும் ஓர் அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், ஆண்டவராகிய கடவுள் இதற்கு முற்றிலும் மாறாக, எல்லாரும் தன்னுடைய பணியைச் செய்யலாம் என்று பாவிகள், தன்னைத் துன்புறுத்தியவர் என்று யாவரையும் தனது பணிக்கென அழைக்கின்றார்.

முதல் வாசகத்தில் தூய்மையற்ற உதடுகளைக்கொண்ட எசாயாவைக் கடவுள் தனது பணிக்கென அழைப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். எசாயா தூய்மையற்ற உதடுகளைக் கொண்டிருந்தார் எனில், அவர் தூய்மையற்ற இதயத்தைக் கொண்டிருந்தார் என்பதுதான் பொருள். ஏனெனில், உள்ளத்தின் நிறைவே வாய் பேசும். அப்படிப் பார்க்கையில், தூய்மையற்ற அல்லது கறைபடிந்த வாழ்க்கை வாழ்ந்த எசாயாவைத் தூய்மையான தனது பணிக்குக் கடவுள் அழைக்கின்றார் என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும்.

இரண்டாம் வாசகத்தில், திருஅவையை மிகவும் துன்புறுத்தியவரும், காலம் தப்பிப் பிறந்த குழந்தையுமான பவுலின் அழைப்பினையும், அவரது பணிவாழ்வையும் குறித்து வாசிக்கின்றோம். தன்னைத் துன்புறுத்தியவரையே தனக்காகவும், நற்செய்திக்காகவும் துன்புறச் செய்வது எல்லாம், யாரும் நினைத்துப் பார்க்க முடியாதது; அத்தகையதொரு செயலைக் கடவுள் பவுல் வழியாகச் செய்கின்றார். நற்செய்தியில் பேதுரு மற்றும் அவரோடு இருந்தவர்களுடைய அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் படிப்பறிவில்லாதவர்கள். மீன்பிடிக்கும் தொழிலைச் செய்தவர்கள். அப்படிப்பட்டவர்களை இயேசு தனது பணிக்கென அழைத்து, கடவுளின் அழைப்பு எல்லாருக்கும் உண்டு. அதைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதை உரக்கச் சொல்கிறார்.

கடவுளின் வார்த்தையை வல்லமையோடு அறிவித்தல்:

கடவுள் பாவிகள், படிப்பறிவில்லாதவர்கள்; ஏன், தன்னைத் துன்புறுத்தியவர்கள் எனத் தகுதியில்லாதவர்களையும் தனது பணிக்கென அழைத்திருந்தாலும், அவர்களை அவர் அப்படியே வைத்திருக்கவில்லை; மாறாக, அவர் அவர்களைத் தகுதியுள்ளவர் ஆக்குகின்றார் அல்லது தமக்கு ஏற்புடையவர் ஆக்குகின்றார் (உரோ 8:30). தூய்மையற்ற உதடுகளைக் கொண்டிருந்த எசாயாவை நெருப்புப் பொறியின் மூலம் குற்றப் பழியை நீக்கித் தூய்மையாக்கியதன்மூலம், எசாயாவைக் கடவுள் எப்படித் தமக்கு ஏற்புடையவர் ஆக்கிக் கொண்டாரோ, அப்படிப் பேதுரு மற்றும் பவுலின் பாவங்களைக் கடவுள் மன்னித்து அவர்களைத் தமக்கு ஏற்புடையவர் ஆக்கிக்கொண்டார்.

கடவுள் இம்மூவரையும் தகுதியுள்ளவர்கள் ஆக்கிக் கொண்டபிறகு, அவர்கள் செய்த பணி மிகவும் அற்புதமானது. ஆண்டவருடைய அழைப்பைப் பெற்ற எசாயா யூதா நாட்டினர் நடுவில் மிகச் சிறப்பாகப் பணிசெய்கின்றார். ஒரு காலத்தில் திருஅவையை, அதன்மூலம் கிறிஸ்துவைத் துன்புறுத்திக்கொண்டிருந்த பவுலை இயேசு தனது பணிக்கெனத் தேர்ந்துகொண்ட பிறகு, அவர் பிற இனத்தாருக்கு மிகந்த வல்லமையோடு நற்செய்தி அறிவித்து, இயேசுவுக்குத் தன் உயிரையும் தருகின்றார். பேதுரு திருஅவையின் தலைவராக இருந்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவருக்காகத் தன் உயிரையும் தருகின்றார். இவ்வாறு கடவுள் தகுதியற்றவர்களை அழைத்திருந்தாலும், தமது ஆற்றலால் அவர்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கி, தமது பணியைத் திறம்படச் செய்ய வைக்கின்றார்.

கடவுளில் நிலைத்திருத்தல்:

கடவுள் தகுதியற்றவர்களை அழைத்து, அவர்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கி, அவர்கள் வழியாகத் தமது பணியைத் திறம்படச் செய்திருக்கின்றார் எனில், அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்ட நற்செய்தியைக் கேட்டு, அதன்படி வாழ்ந்து, அதில் உறுதியாக நிலைத்திருக்க ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், "நான் அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் மீட்பு அடைவீர்கள்" என்கிறார். ஆகவே, தனது அடியார்கள் வழியாகத் தமது வார்த்தையை மக்களுக்கு அறிவிக்கும் கடவுள், அவ்வார்த்தையைக் கேட்டு, மக்கள் அதில் உறுதியாக நிலைத்திருக்கவேண்டும் விரும்புகின்றார். அவ்வாறு மக்கள் நிலைத்திருந்தால், அவர்களுக்கு மீட்பு உண்டு என்றும் கடவுள் வாக்களிக்கின்றார்.

இன்றைக்கு ஒருசிலர் கடவுளின் அடியார்கள் அறிவிக்கும் இறைவார்த்தையைக் கேட்பதுமில்லை; கேட்டாலும் அதில் நிலைத்திருப்பதுமில்லை. இறைவார்த்தையைக் கேட்டால்தான் நம்பிக்கை ஏற்படும் (உரோ 10:17). எனவே, மக்கள் யாவரும் இறைவார்த்தையைக் கேட்டு, அதில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீட்பினைப் பெற முடியும்.

சிந்தனைக்கு:

"ஒவ்வொரு கிறிஸ்தவருமே ஒரு மறைப்பணியாளர்" என்பார் சார்லஸ் ஸ்பெர்ஜியோன். எனவே, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் கடவுளின் வார்த்தையை அறிவிக்கக் கடமைப் பட்டவர்கள் என்பதை உணர்ந்து, கடவுளின் வார்த்தையை அறிவிப்போம். அதன்படி வாழ்ந்து, அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறையுரைச் சிந்தனை: அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை
 
 ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போ

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளை மறைமாவட்டம்.

நிகழ்வு
கான்சாஸ் நகரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அற்புதமாக கேலிச் சித்திரங்களை வரையக்கூடியவன்.

ஒருநாள் அவன் தான் வரைந்து வைத்திருந்த கேலிச் சித்திரங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கேட்டுப்போனான். அந்த நிறுவனத்தில் இருந்தவர்களோ இளைஞன் கொண்டுவந்திருந்த கேலிச் சித்திரங்களைப் பார்த்துவிட்டு, இந்த மாதிரிக் கேலிச் சித்திரங்களை எல்லாம் மக்கள் இரசித்துப் பார்க்கமாட்டார்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டனர். இளைஞன் அதை நினைத்து வருத்தமடையாமல், மறுநாள் வேறு ஒரு நிறுவனத்திற்குச் சென்றான். அங்கேயும் அவன் வேறொரு ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே அனுப்பி வைக்கப்பட்டான். இப்படி அவன் பல நிறுவனங்களின் வாசலை ஏறியபோதும், அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதற்காக அவன் சிறிதும் மனதளராமல், ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கினான்.

ஒருநாள் அவன் ஓர் அருட்தந்தையைச் சந்தித்து, வேலை கேட்டு நின்றான். அருட்தந்தையோ, உனக்கு வேலை கொடுக்கிற அளவுக்கு இங்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை... வேண்டுமானால், இங்கேயே தங்கிக்கொண்டு ஆலயத்திற்கு விளம்பரப் பலகைகளைத் தயாரித்துக்கொடு என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அருட்தந்தை கொடுத்த ஒரு சிறிய அறையில் தங்கிக்கொண்டு, ஆலயத்திற்கு வேண்டிய விளம்பரப் பலகைகளைத் தயாரித்துக் கொடுத்துக் கொண்டும் தன்னுடைய திறமைகளையும் வளர்த்துக் கொண்டும் வந்தான்.

அந்த இளைஞன் தங்கியிருந்த அறை கொஞ்சம் பாழடைந்திருந்தது. அதனால் அவ்வப்போது அந்த அறைக்குள் எலிகள் வந்துபோயின. நாளடைவில் எலிகளுக்கும் அவனுக்கும் இணக்கம் ஏற்பட, அவன் எலிகளை சற்று வித்தியாசமாக வரைந்து, மக்களுடைய பார்வைக்கு வைத்தான். ஒருகட்டத்தில் அவன் வரைந்த எலிகளைப் பற்றிய கேலிச் சித்திரங்கள் பிரபலமடையவே, அவன் பெரும் பணக்காரன் ஆனான். ஆம்- அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்டினி, அவன் வரைந்த கேலிச்சித்திரத்தின் பெயர் மிக்கி மவுஸ். இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையங்களாக இருக்கக்கூடிய டிஸ்டினி லாண்டும் டிஸ்டினி வோல்ட்டும் இவருக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத் தக்கது.

தான் வரைந்த கேலிச் சித்திரங்கள் தொடக்கத்தில் பலராலும் புறக்கணிக்கப்பட்டபோது அதை நினைத்து மனந்தளராமல், தன்னுடைய திறமையின்மீது நம்பிக்கை வைத்து விடாமுயற்சியோடு போராடி, வாழ்க்கையில் வெற்றிகண்டார் வால்ட் டிஸ்டினி. நம்முடைய வாழ்க்கையில் வரும் சிறு சிறு தோல்விகளைக் கண்டு மனந்தளராமால், விடாமுயற்சியோடு, அதே நேரத்தில் நாம் எடுத்த காரியத்தில் மேம்போக்காக இல்லாமல், ஆழமாக சென்றால், வெற்றிகள் கைகூடுவது உறுதி.

பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நாம், இன்றைய இன்றைய நாளில் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போ என்ற தலைப்பில் சிந்திக்க இருக்கின்றோம். எனவே, அதைக் குறித்து இப்போது பார்ப்போம்.


தோல்வியைச் சந்தித்த சீமோன்

நற்செய்தியில், இயேசு கெனசரேத்து ஏரிக்கரைக்கு வந்தபோது, அங்கு முந்தின நாள் இரவு, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று, மீன்பாடு கிடைக்காமல் கரைக்குத் திரும்பி வந்து, வலைகளை அலசிக்கொண்டிருந்த சீமோனையும் அவருடைய கூட்டாளிகளையும் கண்டார். சீமோன் ஒரு மீனவர், அவருக்கு மீன்பிடிப்பதில் உள்ள நெளிவு சுழிவுகள் எல்லாம் தெரியும். அப்படியிருந்தும் அவருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் இரவு முழுவதும் பாடுபட்டும் மீன் ஒன்றும் கிடைக்காமல் இருப்பது வியப்பாக இருக்கின்றது.

சில சமயங்களில், நமக்கு எல்லாம் அத்துப்பிடி என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற துறைகளில்கூட தோல்விகள் ஏற்படலாம். அத்தகைய தருணங்களில் நாம் மனமுடைந்து போகாமல், அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் நல்லது. முந்தின நாள் இரவு மீன்பிடிக்கச் சென்ற சீமோன், மீன் ஒன்றும் கிடைக்காததற்காக மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, மாறாக, அவர் வலைகளை அலசிக்கொண்டிருக்கின்றார். வலைகளை அலசுதல் என்பது, மீண்டுமாக மீன்பிடிக்கச் செல்வதற்கு தன்னையே தயார்செய்வதாக இருக்கின்றது.


ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய் வலைவீசிய சீமோன்

படகில் அமர்ந்தவாறே மக்களுக்குப் போதித்த இயேசு பின்னர் சீமோனிடம், ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் என்கிறார்.

இவ்வாறு சொன்ன இயேசுவிடம் பேதுரு விசனப்பட்டிருக்கலாம், இவர் தச்சரின் மகன்தானே, இவருக்கு எப்படி மீன்பிடிப்புப் பகுதி தெரியும், அதுவும் இந்தப் பகல்வேளையில் இப்படி ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கச் வலைகளைப் போடச் சொல்கிறாரே என்று. ஆனால் அவர் அப்படியெல்லாம் விசனப்படாமல், ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் என்று படகை ஆழத்திற்கு இழுத்துக் கொண்டுபோய் வலைகளை வீசுகிறார். அதனால் வலையே கிழிந்து போகின்ற அளவுக்கு பெருவாரியான மீன்கள் கிடைக்கின்றன.

இங்கு பேதுரு, இயேசுவின் வார்த்தைகளின்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையையும் இயேசுவின் வார்த்தைகளுக்கு அவர் கீழ்ப்படிந்து நடந்ததையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். வேறு யாராக இருந்தாலும் ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போகச் சொன்ன இயேசுவிடம், எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்றுதான் சொல்லியிருப்பார்கள். ஆனால், பேதுருவோ அப்படிச் சொல்லாமல், இயேசுவின் வார்த்தைகளை நம்பி, அதன்படி நடக்கின்றார். அதனால் அதிசயத்தைக் கண்டுகொள்கிறார்.


மனிதர்களைப் பிடிப்பவராக மாறிய சீமோன்

சீமோன் (பேதுரு), இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு நடந்ததனால், நடந்த அதிசயத்தைக் கண்டு திகைத்துப் போய், ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்கின்றார். ஆனால் இயேசுவோ அவரிடம், அஞ்சாதே! இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவர் ஆவாய் என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள், என் வாய் திக்கும் (விப 4:10), நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்டவன் (எசா 6:5) , நான் சிறுபிள்ளைதானே (எரே 1:6) என்று சொன்ன, மோசே, இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா போன்றோரிடம் ஆண்டவர் சொன்ன திடப்படுத்தும் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கின்றன.

மீன்பிடித் தொழிலைச் செய்து இயல்பாகவே பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான மன உறுதியையும் பொறுமையையும் இணைந்து உழைப்பதற்கான ஆற்றலையும் பெற்றிருந்த சீமோனால், திரு அவைக்குத் தலைமை தாங்கி வழிநடத்த முடியும் என்பதை அறிந்த இயேசு, அவரை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குகின்றார். பேதுருவும் ஆண்டவரிடத்தில் தன்னை முழுவதும் ஒப்படைத்துவிட்டு அவர் பணி செய்யப் புறப்படுகின்றார்.

சிந்தனை

ஒரு சாதாரண மீனவராக இருந்த சீமோன் பேதுரு, மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறி, பின்னர் திரு அவைக்கே தலைவராக மாறினார் என்றால், அது அவர் இயேசுவை முழுமையாக நம்பி, அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்ததனாலேயே சாத்தியமானது. நம்முடைய வாழ்விலும் அது போன்ற அதிசயங்கள் நடக்கவேண்டும் என்றால், நாம் இறைவனை முழுமையாக நம்பி, அவருடைய வார்த்தைகளுக்குப் கீழ்படிந்து நடக்கவேண்டும்.

ஆகவே, நாம் இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 
 இறைவாக்கு ஞாயிறு அருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நிரூபிக்க மூன்று நிகழ்ச்சிகளை இன்றைய வார்த்தை வழிபாடு நமக்குத் தருகிறது.

இறைவாக்கு உரைக்க இறைவன் எசாயாவை அழைத்தபோது, நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் என்றார் எசாயா. ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைவனுக்கு எசாயாவின் உதடுகளைச் சுத்தப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்? இறைவன் எசாயாவின் உதடுகளைத் தொட, பரிசுத்தமாக்கப்பட்ட எசாயா, இதோ நானிருக்கிறேன். என்னை அனுப்பும் என்றார் . இரண்டாவது, புனித பவுல் உயிர்த்த இயேசுவைப் பற்றி எடுத்துரைக்கிறார். எந்த சக்தியாலும் இயேசுவின் உயிர்ப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை என்று உரைத்தார் துணிவோடு.

மூன்றாவது, பேதுரு, செபதேயுவின் மக்கள் யாக்கோபு, யோவான் இரவு முழுவதும் கடலிலே ஒன்றும் அகப்படாமல் சோகத்தில் இருந்தபோது, இயேசு அவர்களைச் சந்திக்கிறார். மீன் ஒன்றும் அகப்படவில்லை என்று கலங்கிய கண்களோடு பேதுரு இயேசுவை நோக்கிக் கூற , ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார் இயேசு. அவ்வாறே பேதுருவும் யாக்கோபும், யோவானும் நம்பி வலைகளை ஆழத்தில் வீச, ஏராளமான மீன்களை வளைத்துப் பிடித்தனர். ஆம்! இயேசுவால் ஆகாதது ஒன்றுமில்லை.

விமான ஓட்டி ஒருவர் நள்ளிரவில் பயணிகளைப் பார்த்து, நாம் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். கடவுள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றார் ஆங்கில மொழியில். ஆங்கிலம் தெரியாத ஒருவர் தன் பக்கத்திலிருந்தவரைப் பார்த்து, விமானஓட்டி என்ன சொல்கிறார் என்று கேட்டார். கேட்டவருக்குக் கிடைத்த பதில், நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார் என்பது.

நாம் இவ்வுலகில் வாழ்வதே நம்பிக்கையில்தான். நாம் நம்பவில்லை என்றால் உலகில் ஒரு நொடிப்பொழுதும் வாழவே முடியாது. ஆகவே நம்பிக்கையை ஆடையாக அணிந்து, இறைவனால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தவர்களாக வாழ்வோம். அப்போது அவர் நம்மீது கருணை மழை பொழிந்திடுவார்.

ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 நம்புகின்றவர்கள் வெற்றிபெறுவார்கள்

நம்பிக்கை என்றால் என்ன என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு குட்டிக்கதை! பேரரசன் ஒருவன் ஓர் ஊரில் ஓர் அழகான கோயிலைக் கட்ட விரும்பினான். கோயில் கட்டும் வேலை துவங்கியது. கோயில் கட்டப்பட்ட இடத்திற்குப் பக்கத்தில் குடிசை ஒன்று ! அந்தக் குடிசைக்குள்ளே சிறுவன் ஒருவன். அவன் தினம் தினம் கோயில் கட்டும் இடத்திற்குச் சென்று கோயில் கட்டப்படுவதை வேடிக்கைப் பார்ப்பான். கோயில் கட்டப்படும் வேலை ஏறக்குறைய முடிந்துவிட்டது. கோபுரத்தின் உச்சிப்பகுதி கட்டப்பட்டது.

அந்தக் கோபுரத்தின் மீது ஏற வேண்டும். ஏறி அங்கிருந்து ஊரைப் பார்க்கவேண்டும். சிறுவனது கனவு நனவாகும் நாள் வந்தது.

கோபுரத்தின் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்த கொத்தனாரின் தலைப்பாகை கீழே விழுந்துவிட்டது. நல்ல வெயில்! கொத்தனார் குனிந்து பார்த்தார். அங்கே அந்தச் சிறுவன் நின்றுகொண்டிருந்தான். கொத்தனார் அவனைப் பார்த்து, தம்பி, என் தலைப்பாகை கீழே விழுந்துவிட்டது ; அதை எடுத்துத்தர முடியுமா? என்று கேட்டார்.
நிச்சயமாக, இதற்காகத்தானே இத்தனை நாள்கள் , இத்தனை மாதங்கள் காத்திருந்தேன் எனச் சொல்லி, சிறுவன் துண்டை எடுத்துக்கொண்டு ஏணியில் ஏறினான். பாதி தூரம் சென்றிருப்பான். என்ன நினைத்தானோ தெரியவில்லை, கீழே குனிந்து பார்த்தான்.
அதள பாதாளம்! கைகளும், கால்களும் நடுங்கத் தொடங்கின. கொத்தனாரைப் பார்த்து, ஐயா எனக்கு மயக்கம் வருகின்றது என்றான். அதற்குக் கொத்தனார், தயவு செய்து கீழே பார்க்காதே, மேலே பார், என்னைப் பார் என்றார். அந்தச் சிறுவனும் அப்படியே மேலே பார்த்தபடியே ஏணியில் ஏறினான்.

உச்சியை அடைந்தான். அவன் கனவு நனவாகியது; எல்லையில்லா பெருமகிழ்ச்சி அடைந்தான்.

இந்நிகழ்ச்சியில் வந்த சிறுவன் கொண்டிருந்த மனநிலைக்குப் பெயர்தான் நம்பிக்கை.
கொத்தனார் நம்மைவிடப் பெரியவர். அவர் சொல்வதில் உண்மையிருக்கும் என அந்தச் சிறுவன் நம்பினான்.

கதையில் வந்த கொத்தனாரைப் போன்றவர்தான் கடவுள் ! கடவுள் நம்மைவிடப் பெரியவர், அவர் சொல்லும் சொல்லில் உண்மையைத் தவிர வேறொன்றும் இருக்காது என்று சொல்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

இதோ, பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் இரண்டு உதாரணங்கள். தானியேல் நூல் இயல் 6. அங்கே நாம் தானியேல் இறைவாக்கினரைச் சந்திக்கின்றோம். அவர் அரசனின் தவறான ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் சிங்கங்களின் குகைக்குள் எறியப்பட்டார். ஆனால் அவரோ தம் கடவுள் இறந்தவர்களின் கடவுள் அல்ல, உயிருள்ளவரின் கடவுள் என்று நம்பி, தமது நம்பிக்கை நிறைந்த கண்களைக் கடவுள் பக்கம் திருப்பினார். சிங்கங்களின் வாய்கள் கட்டப்பட்டன ! அவர் காப்பாற்றப்பட்டார்.
இன்றைய நற்செய்தி புனித பேதுருவின் வாழ்க்கையில் நடந்த ஓர் அருமையான நிகழ்வை நமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றது.

அது காலை நேரம். கிழக்கு வெளுத்தது, கீழ்வானம் சிவந்தது. பறவைகள் எல்லாம் கூட்டைவிட்டு வானில் பறந்து கானம் பாடின. தெவிட்டாத தீந்தென்றல் இயற்கையை அழகாகத் தாலாட்டியது.

கடல் சிரித்தது ! கரை சிரித்தது !

ஆனால் அந்த மீனவர்களின் முகங்களில் சிரிப்பு இல்லை. காரணம் இரவு முழுவதும் பாடுபட்டும் எந்த மீனும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அங்கே இயேசு தோன்றுகின்றார்.

கவலையா? அங்கே இயேசு தோன்றுவார்.
கண்ணீரா? அங்கே இயேசு தோன்றுவார்.
மயக்கமா? அங்கே இயேசு தோன்றுவார்.
தயக்கமா? அங்கே இயேசு தோன்றுவார்.

அந்த மீனவர்கள் மனத்தினிலே கவலை! நடந்ததை அறிந்துகொண்டு இயேசு ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் (லூக் 5:4) என்றார். இரவு முழுவதும் முயன்றும் எங்களுக்கு மீன் கிடைக்கவில்லை. ஆனால் உமது வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து வலையை வீசுகின்றோம் என்று சொல்லி அந்த மீனவர்கள் வலையை வீசினார்கள். ஏராளமான மீன்கள் கிடைத்தன.

இன்று நாம் சிங்கக் குகைக்குள் எறியப்படாமலிருக்கலாம். ஆனால் சில சமயங்களில் வறுமை என்னும் குகைக்குள் எறியப்படுகின்றோம். நோய் என்னும் குகைக்குள் எறியப்படுகின்றோம்.

மரணம் என்னும் குகைக்குள் எறியப்படுகின்றோம்.

பல சமயங்களில்
முத்துக்குள் சிப்பி இருப்பதில்லை!
மண்ணுக்குள் மாணிக்கம் இருப்பதில்லை!
தண்ணீருக்குள் தாமரை இருப்பதில்லை!
எத்தனை முறை முயன்றாலும், எவ்வளவு முயன்றாலும் படிக்கும் பாடத்தில் வெற்றி கிடைப்பதில்லை!
இல்லறத்திலும் சுகம் இல்லை , துறவறத்திலும் சுகம் இல்லை !
எடுக்கும் முயற்சியில் சிகரம் கிடைப்பதில்லை ! இல்லறத்திலும் துன்பம், துறவறத்திலும் துன்பம்!

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லாரும் என்னிடம் வாருங்கள் (மத் 11:28) என்ற இயேசுவின் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து நமது நம்பிக்கையுள்ள கண்களை நற்கருணை ஆண்டவர் பக்கம் திருப்பி, வளமோடும் நலமோடும் வாழ்வோம். எசாயாவின் நம்பிக்கையை (முதல் வாசகம்), புனித பவுலடிகளாரின் நம்பிக்கையை (இரண்டாம் வாசகம்) நமது நம்பிக்கையாக்கிக் கொள்வோம்.

மேலும் அறிவோம் :

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற (குறள் : 661).

பொருள் : செயல்திறம் என்று அறிஞர் பெருமக்கள் போற்றிப் புகழ்வது ஒருவருடைய மன உறுதியே ஆகும். ஏனைய உறுதிகள் அனைத்தும் செயல் உறுதி என்று கூறப்படா!

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
மனநோய் மருத்துவமனை ஒன்றில் ஒருநாள் காலையில் ஒரு மனநோயாளி தனது கட்டிலுக்கு அருகிலிருந்த சுவற்றில் தனது காதை வைத்து அச் சுவற்றிலிருந்து ஏதோ கேட்பதைப் போன்று காட்டிக் கொண்டார். அவரைப் பார்த்த மற்ற மனநோயாளிகளும் சுவற்றில் காதை வைத்துக் கேட்டனர், காலை 10.00 மணிக்கு மனநோயாளிகள் பிரிவுக்கு வந்த மருத்துவரும் தனது காதை சுவற்றில் வைத்துக் கேட்க, அவர் காதில் ஒன்றும் கேட்கவில்லை . எனவே அவர் மனநோயாளிகளிடம், "சுவற்றில் என்ன கேட்கின்றீர்கள்? என் காதில் ஒன்றும் கேட்கவில்லை " என்றார். ஒரு மனநோயாளி மருத்துவரிடம், "நீங்கள் சுத்தப் பைத்தியம், நாங்கள் காலையிலிருந்தே காதை வைத்துக் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். இன்னும் ஒன்றையும் எங்களால் கேட்க முடியல்லை; அப்படியிருக்க உங்களுக்கு மட்டும் வந்தவுடனே கேட்குமா?" என்றார்.

ஆழத்திற்குப் படகைத் தள்ளி வலையை வீசும்படி பேதுருவை இயேசு கேட்டபோது பேதுரு அவரிடம், "நீங்கள் கடலைப் பற்றிய விபரம் தெரியாத ஆள் போல் இருக்குது; கடலைப் பற்றி நன்கு அறிந்த நாங்களே இரவு முழுவதும் மீன்பிடித்தும் ஒரு மீன் கூட அகப்படவில்லை. உங்க பேச்சைக் கேட்டு வலையை வீசினால் மீன் ஆகப்படுமா?" என்று அந்த மனநோயாளி மருத்துவரைக் கேட்டதுபோல கேட்டிருக்கலாம். ஆனால், பேதுரு அவ்வாறு செய்யாது இயேசுவிடம், "உமது சொல்லை நம்பி வலையைப் போடுகிறேன்" என்றார், வலைகள் கிழிந்து போகும் அளவுக்கு ஏராளமாக மீன்கள் அகப்பட்டன.

கடவுளை உண்மையாகவே நம்புகிறவர்களுக்கு எல்லாம் கை கூடும், "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை " (லூக் 1:37). கடுகளவு நம்பிக்கை மலையையும் பெயர்க்கும் சக்தி வாய்ந்தது (மத் 17:20). கடவுளிடம் நம்பிக்கை கொண்டோர் இறப்பினும் உயிர் வாழ்வர் (யோவா. 11:25).

காதலர்கள் இருவர் ஓர் ஆழமான கிணற்றில் பேசிக் கொண்டிருந்தனர், "நீங்கள் ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்" என்று கேட்டதற்கு அவர்கள், "எங்கள் காதல் ஆழமானது" என்றார்களாம், கடவுள் மேல் நமக்குள்ள நம்பிக்கையும் ஆழமானதாக இருக்க வேண்டும். "ஆழத்திற்குப் படகைத் தள்ளிக் கொண்டு போங்கள்" என்று கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.

நமது நம்பிக்கை மேலோட்டமாக அமையாமல் வேரோட்டமாக இருக்க வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகலாகாது. தோல்வி நம்மைத் துரத்திக் கொண்டு வந்தால் வெற்றி நம்மை நெருங்கி வருகிறது என்று நினைக்கவேண்டும், "நம்பிக்கை வேண்டும் நம் வாழ்வில்; இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒருநாளில்" "நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத்தீர்ப்பு".

கடவுள் ஒரு சிலரைத் தமது இறையரசின் முழு நேரப் பணியாளர்களாகும்படி அழைக்கிறார். அவ்வாறு கடவுளால் அழைக்கப்பட்ட எசாயா, பவுல், பேதுரு ஆகிய மூவருமே தங்களது தகுதி இன்மையை உணர்கின்றனர்.

முதல் வாசகத்தில் எசாயா, "தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்" என்கிறார் (எசா 6:5). இரண்டாம் வாசகத்தில் பவுல், "திருத்தூதர் என அழைக்கப் பெற தாம் தகுதியற்றவர்" என்கிறார் (1 கொரி 15:9). நற்செய்தியில் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நான் பாவி. நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்கிறார் (லூக் 5:8).

ஆனால், மேற்கூறப்பட்ட மூவரையுமே கடவுள் தமது ஊழியத்துக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார். நெருப்புப் பொறியால் எசாயாவின் உதடுகளைத் தொட்டு, அவரிடமிருந்த குற்றப் பழியையும் பாவங்களையும் அகற்றுகிறார் (எசா 6:6-7), திருத்தூதர் பவுல், "நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை " என்கிறார் (1 கொரி 15:10). இயேசு பேதுருவிடம், "அஞ்சாதே, இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்கிறார் (லூக் 5:10).

கடவுள் தகுதியுள்ளவர்களை அழைக்கிறார் என்பதைவிட, தகுதியற்றவர்களை அழைத்து அவர்களைத் தமது பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார் என்பதே உண்மை . இன்றும் கடவுள் தமது பணிக்கு இளைஞர்களையும் இளம் பெண்களையும் அழைக்கின்றார். அவர்கள் தங்களது சொந்தப் பலத்தை நம்பாமல். கடவுளின் அருளை நம்பி, எசாயா கூறியது போன்று. "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்று பதிலளித்துக் கடவுளின் அழைத்தலை ஏற்க முன்வரவேண்டும்.

துறவற வாழ்வு மட்டுமல்ல, இல்லற வாழ்வும் இறைவனுடைய அழைத்தலே என்பதை அனைவரும் உணரவேண்டும். கடவுள் எல்லார்க்கும் ஒரே விதமான அழைத்தலைக் கொடுப்பதில்லை. "அருள்கொடைகள் பலவகை; ஆனால் ஆவியார் ஒருவரே" (1 கொரி 12:4).

திருப்பணியாளர்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் பொதுநிலையினர் சென்று நற்செய்தியை அறிவிக்க வேண்டும். குருக்கள் அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் வசீகரம் செய்கின்றனர். ஆனால், பொதுநிலையினரோ உலகையே இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றனர் என்று 2ஆம் வத்திக்கான் சங்கம் பணிந்து கூறுகிறது (தி. எண். 34), குடும்பம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் போன்ற உலக அமைப்பைப் பொதுநிலையினர் நற்செய்தி உணர்வால் ஊடுருவி உலகில் இறையரசைக் கட்டி எழுப்புகின்றனர்.

ஒரு பேருந்தில் ஒரு பிச்சைக்காரர் கை நீட்டிப் பயணிகளிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார், அவரிடம் பேருந்து நடத்துனர், "டேய் பிச்சைக்காரா! கீழே இறங்கு. நீயும் கை நீட்டிக் காசு வாங்குற: நானும் கை நீட்டிக் காசு வாங்குறேன். நம்ம இரண்டு பேரிலே யார் நடத்துனர், யார் பிச்சைக்காரன் என்று மக்களுக்குத் தெரியாமல் போயிடும்" என்றார்.

இன்று திருச்சபையில் யார் திருப்பணியாளர், யார் பொதுநிலையினர் என்ற வேறுபாடு தெரியாமல் ஒரு குழப்பச் சூழ்நிலை உருவாகி வருகிறது. திருப்பணியாளர்களின் பணிகளைப் பொதுநிலையினரும், பொதுநிலையினரின் பணிகளைத் திருப்பணியாளரும் செய்து வருகின்றனர். இந்த அவல நிலையைப் பார்த்து மறைந்த திருத்தந்தை 2ஆம் ஜான்பால் பின்வருமாறு கூறினார்: "சாமியார்களின் சம்சாரித்தனமும் சம்சாரிகளின் சாமியார்த்தனமும் கண்டிக்கப்பட வேண்டும்".

திருப்பணியாளர்கள் இதுவரை செய்து வந்த ஒரு சில பணிகளைப் பொதுநிலையினர் தற்போது செய்து வருவதால் அவர்கள் திருப்பணியாளர்கள் ஆவதில்லை. உலகைச் சார்ந்து இருப்பது பொதுநிலையினரின் தனிப்பண்பாகும். உலகின் நடுவில் புளிப்புமாவு போல் செயல்பட்டு உலகக் காரியங்களில் நற்செய்தியைப் புகுத்துவது பொதுநிலையினருக்குரிய தனிப்பட்ட அழைத்தலாகும்.

எனவே, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் தத்தம் அழைத்தலுக்கு ஏற்பத் திருத்தூதுப்பணி ஆற்றுவதே காலத்தின் கட்டாயமாகும், உலகின் நடுவில் வாழ்ந்து பொதுநிலையினர் நற்செய்திப் பணிபுரியட்டும். அதே பணியை உலகிலிருந்து பிரிந்து குருக்களும் துறவறத்தாரும் ஆற்றட்டும். அரங்கை மாற்றாமல் அனைவரும் ஆண்டவருக்கு ஊழியம் புரிய ஆண்டவர் அருள்வாராக!
தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
தகுதியின்மையே தகுதி!

திருத்தந்தை பிரான்சிஸ் அகில உலகத் திருஅவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் நடந்த முதல் நேர்காணல் அது. நிருபர்கள் கேட்ட முதல் கேள்வி: "நீங்கள் யார்?" திருத்தந்தை கிஞ்சித்தும் எதிர்பார்க்காத கேள்வி அது! சிறிது அதிர்ந்தபின் அவர் சொன்னார்‌: "நான் ஒரு பாவி" நிருபர்கள் எதிர்பாராத பதில் அது! திருத்தந்தை தொடர்ந்தார்‌: "நான் ஒரு பாவி. ஆனால் பாவியான என்னைக் கடவுள் தனது இரக்கப் பெருக்கினால் தனது திருப்பணிக்கு அழைத்திருக்கிறார். நான் இருப்பது இயங்குவது எல்லாமே இறைவன் போட்ட பிச்சை".

வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவங்கள் நம்மை மாற்றுகின்றன. வாழ்வில் திருப்புமுனைகளாகின்றன.

குஜராத் மாநிலத்தில் பிறந்த அண்ணல் காந்தி தன் தாயின் அனுமதி பெற்று மதிப்புமிக்க பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் நகர் சென்றார். தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தென் ஆப்பிரிக்கா சென்று தனது வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். அந்த நாட்டு இரயிலில் பயணம் செய்த அனைவரும் வெள்ளையர்கள். காந்தி மட்டுமே கருப்பராக இருநதார். இனவெறி கொண்ட வெள்ளையர் ஒருவர் அண்ணல் காந்தி முதல் வகுப்பில் பயணம் செய்வதைக் கண்டு பொங்கி எழுந்தார். விரைந்து வந்து காந்தியின் சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்து ஓடும் இரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டு, "முதல் வகுப்பில் பயணம் செய்யக் கருப்பர்களுக்கு உரிமையில்லை' என்று உரக்கக் கத்தினார். மனித நேய உணர்வின்றி காட்டு மிராண்டித்தனமாக. நடந்து கொண்ட வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியே தீர வேண்டும் என்று அன்று முடிவெடுத்தார் காந்தி.

1946 ஆகஸ்டு 16இல் கொல்கத்தா நகர் சமயக் கலவரத்தால் இரத்தக்காடானது.தன் பராமரிப்பில் உள்ள 300 குழந்தைகளுக்கு உணவு தேடிக் கலவர வீதியில் நடந்த அன்னை தெரசாவை; சிதைந்து சிதறிக் கிடந்த மனித உடல்கள், கவனிப்பாரற்று மனித மாண்பிழந்து நின்ற மனித உருவங்கள் தொட்டன. அடுத்த செப்டம்பர் 10இல் அன்னையின் வாழ்வில் திருப்பம் ஏற்படுத்தியது இந்த மரண ஒல அதிர்ச்சிதான்.

அனுபவங்கள் வாழ்வின் திருப்புமுனைகளாவதை இன்றைய வழிபாட்டு வாசகங்கள் மூன்றும் நமக்கு உணர்த்துகின்றன. இறைவாக்கினர் எசாயா பெற்ற அழைப்பு. பவுலான சவுல் பெற்ற அழைப்பு. மீனவர் பேதுரு பெற்ற அழைப்பு. மூன்றுக்கும் உள்ள பொது அம்சங்கள் 1. தங்கள் பாவநிலை, இயலாமை பற்றிய தன்னுணர்வு பெற்றார்கள் என்பது. 2. அந்த இயலாமையில் இறைவனின் தூய்மையை, ஆற்றலைக் கண்டு கொண்டார்கள் என்பது. 3. இறைவனுடைய அழைப்பை, பணியை உவந்து ஏற்றார்கள் என்பது.

இறைவனின் அழைப்பை எசாயா கேட்டதும் "தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான் (எசா. 6:5) அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கு உரைக்க முடியும்?" என்று திகைத்து நின்ற வேளையில் ஆண்டவர் அவர் உதடுகளைத் தூய்மைப்படுத்தி "துணிந்து செல். தயக்கம் வேண்டாம். நான் என்றும் உன்னோடு" என்று ஆறுதல் தருகிறார். எங்கோ எதையோ சாதிக்கத் துடிதுடித்த சவுலை இறைவன் திசைதிருப்பித் திருத்தூதர் பவுலாக்குகிறார். "நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன்." (1 கொரி. 15:9) எனத் தன் இயலாமையையும் இறைவனின் எல்லையற்ற ஆற்றலையும். ஏற்றுக் கொள்கிறார் பவுல்.

பேதுருவின் வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு இன்றைய நற்செய்தி. "ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்." (லூக். 5:4) என்ற இயேசுவின் வார்த்தைக்குப் பணிந்து பெரும் திரளான மீன்களைப் பிடிக்கிறார் பேதுரு. அவருக்கு இது ஆழமானதோர் அனுபவம். அவர் கடலின் ஆழத்திற்கு மட்டுமா சென்றார்? தனது மனதின் ஆழத்திற்குச் சென்று தன் நிலையை முற்றிலும் உணர்ந்து "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்." (லூக். 5:8) என்றார். இயேசுவின் உடனிருப்பால் இயேசு யார் என்பதையும் தான் யார் என்பதையும் உணர்ந்து கொள்கிறார். -அந்த நேரத்தில்தான் அவர் புதியதோர் பணிக்கான அழைப்பைப் பெறுகிறார். "அஞ்சாதே, இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்." (லூக். 5:10).

வாழ்க்கைப் படகை ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போக பணிக்கிறார் இயேசு. நிறைவாழ்வைக் காண விரும்புபவர்கள் ஆழத்திற்குப் போகத் தயங்கலாகாது. அதற்கான துணிவு இயேசுவின் சீடனுக்கு மிக இன்றியமையாதது. நுனிம்புல் மேய்வதல்ல கிறிஸ்தவ வாழ்வு. ஆழமான அனுபவங்களுக்கு அழைப்பு வீடுப்பது கீற்ஸ்தவம். மேலோட்டமாக வாழ்வது அல்ல, வேறோட்டமாக வாழ்வது கிறீஸ்தவம். அப்போது நம்மிடம் உள்ள தகுதியின்மைகள், நம்மை அழைக்கும் இறைவனுக்கு என்றும் தடைகளாய் தோன்றுவதில்லை.இந்த உண்மையை உணர்ந்து அவரது வார்த்தையை - அழைப்பை ஏற்போமாயின் நாம் இறைவனின் மகத்தான திட்டங்களுக்கு கருவிகளாய் அமைந்துவிடுவோம் என்பது நிச்சயம். . நாம்நல்லவர்களாக கருக்கிறோம் என்பதற்காக அழைப்பதில்லை. மாறாக நம்மை நல்லவர்களாக்குவதற்காகவே கடவுள் நம்மை அழைக்கிறார்.

தகுதியைப் பார்த்து வேலைக்கு ஆள் எடுப்பது உலக நியதி. தகுதியற்றவருக்குத் தகுதி தந்து பணி செய்ய வைப்பது இறைவனின் நியதி. திருத்தூதர் பவுலுக்கு இயேசு கூறியது: "என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" (2 கொரி. 12:9). இதை உணர்ந்து பவுல் எழுதுவார்‌: "என் வலுவின் மையிலும் இகழ்ச்சியிலும், இடரிலும் " இன்னவிலும், நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாய் இருக்கிறேன் " (2 கொரி. 12:10). ஆகவே இறைவனின் இதயத்தில் இடம் ரிடிக்க தகுதியற்றவர்களாகிய நாம் தகுதியுடையவர்களே!

சிறுவன் தாவீதை இஸ்ரயேல் மக்களின் அரசனாக அருள்பொழிவு செய்யும் நிகழ்வு உள்ளத்தைத் தொடும் ஒன்று. தாவீ து திருப்பொழிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால் தோற்றத்தையும் உயரத்தையும் பார்த்தா? "மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பது இல்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கிறார்.

திருப்பணியாளர்கள் கடவுளின் ஈடு இணையற்ற, செல்வத்தைக் கொண்டுள்ள மண்பாண்டங்கள். அவர்கள் தகுதி அவர்களிடமிருந்து வரவில்லை. கடவுளிடமிருந்தே வருகிறது (2 கொரி. 4:7). கடவுள் தகுதி உள்ளவர்களை அழைப்பதில்லை. மாறாகத் தான் அழைத்தவர்களை தகுதி உள்ளவர்களாக மாற்றுகிறார்‌.

தகுதியின்மையில் கூடத் தகுதியைப் பார்ப்பவர் இறைவன். உலகப்புகழ் பெற்ற சிற்பி இத்தாலி நாட்டு மைக்கிள் ஆஞ்சலோ, ஒரு சிற்பியாகச் சிகரம் ஏற, வாழ்க்கை இரகசியம் என்ன என்று கேட்டபோது, அவர் சொன்னார். "கரடுமுரடாக இருந்தாலும் ஒவ்வொரு கல்லுக்குள்ளும் அழகான சிற்பம் ஒளிந்திருக்கிறது. உளி எடுத்துத் தேவையற்ற வெளிப்பகுதிகளைச் செதுக்கி அகற்றினால், உள்ளே இருக்கும் எழிலான சிற்பம் தன் முகத்தைக் காட்டிவிடும்". ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒர் அற்புதமான சிற்பம் இருப்பதைக் கடவுள் அறிவார். தனது சாயலில் அவர் உருவாக்கிய படைப்புத்தானே மனிதன்! (தொ.நூ. 1:27). கடவுளாகிய தனக்குச் சற்றே சிறியவராகத் தானே மனிதனைப் படைத்தார்! (தி.பா. 8:5).

தெய்வ பயம் ஞானத்தின் தொடக்கம். ஆம், அது வெறும் தொடக்கமே! அதன் முடிவு, அது காணும் முழுமை, நிறைவு - தெய்வ அன்பு. பயம் முதலில் அன்பு முடிவில்! "உங்கள் மீட்பை அச்சத்திலும் நடுக்கத்திலும் உழைத்துப் பெறுங்கள்" என்கிறார் பவுல்‌.

தெய்வ பயத்தில் தொடங்கி தெய்வ அன்பில் நிறைவு பெறுவதே ஞானம். ஆண்டவருக்கு அஞ்சுவோர் பேறு பெற்றோர். "கடவுளுக்கு நான் அஞ்சுகிறேன். கடவுளுக்கு அடுத்தபடி கடவுளைக் கண்டு அஞ்சாதவனுக்கு அஞ்சுகிறேன்" என்பது யாரோ சொன்னது.
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 மறையுரை முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
 
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌ பெங்களூர்
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

 
சிந்தனைப் பயணம்.திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி

நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைத்தலைப் பற்றி தியானிக்க...

இன்று திருஅவை - "நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைத்தலைப் பற்றி தியானிக்க" - அழைக்கின்றது.

வந்தோரை வாழவைக்கும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழ் சமூகத்தின் நடுவில் அழைப்பு என்ற வார்த்தையின் விலை என்ன என்பது நமக்கு நன்குதெரியும். . குறிப்பாக ஒரு நல்ல காரியம் ஒரு வீட்டில் நிகழும் போது அதைச் சுற்றி சில வார்த்தைகள் தொடரும் - இதோ என்னையும் அழைத்தார்கள் என்றும் , என்னை ஏன் அழைக்கவில்லை? என்றும் இதோ அழைப்பை ஏற்று நானும் சென்றிருந்தேன். மற்றும் என்னை அழைத்தார்கள் நான் போகவில்லை என்ற சொற்தொடர்கள் சுற்றிச் சுற்றி வரும். ஆக மனித சமூகத்தில் ஏற்படும் அழைப்புகள் நேர்மறை, எதிர்மறை வினைகளை ஏற்று நடை பயில்கின்றன. ஆனால் இறைவன் கொடுக்கும் அழைப்பு எந்தச் சூழலிலும் நேர்மறையான நன்மைகளைமட்டுமே விதைகின்றது ,அறுவடை செய்கின்றது. என்பதை இன்றையவாசகங்கள் அறிவுறுத்துகின்றன.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சீமோனை அழைப்பதைக் கேட்டோம் . இந்த சீமோன் கடின உழைப்பாளி , ஒரு மீனவர். இரவு முழுவதும் வலை வீசி முயற்சித்தும் மீன்கள் எதுவும் கிடைக்காமல் சோர்ந்து இருந்த நிலையில் , இயேசு அவருடைய படகில் ஏறி அமர்ந்து மக்கள் கூட்டத்திற்கு கற்பிப்பதை இவரும் கேட்கின்றார். இயேசு பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார்.


இதில் ஆச்சரியம் என்னவென்றால் இயேசுவை சீமோனோ அல்லது சீமோனை இயேசுவோ இதற்கு முன் சந்தித்து கொண்டதாக விவிலியத்தில் சான்றுகள் இல்லை .
இயேசு கற்பித்த வார்த்தைகளை, சில மணித்துளிகள் கேட்டுக் கொண்டிருந்த சீமோன், தன்னுள் இருந்த தனது குலத்தொழிலான மீன்பிடித்தலில் தான் பெற்ற அறிவு, அனுபவம், ஆற்றல்,கடின உடல் உழைப்பு என அனைத்தையும் நம்பாமல்;இயேசுவின் வார்த்தைகளுக்கு முழுமையான முக்கியத்துவம் கொடுத்து நம்பத் தொடங்கினார் - செயல்பட்டார்.
சீமோன்-இயேசுவின் வார்த்தைகளுக்கு முன்பு தன்னை வெறுமைஆக்கினார். இயேசுவின் வார்த்தைகள் வல்லமையோடு சீமோன் உள்ளும் சீமான் மீதும் முழுமையாக செயல்பட அந்த வெறுமை வாய்ப்பை உண்டாக்கியது.

சில மணிநேரங்கள் கேட்ட இறைவனின் வார்த்தைகள், முடிவாக அவருடைய வாழ்வை முற்றிலும் மாற்றியதை - சீமோன் பேதுருவாக, பாறையாக மாறிப்போனதை, நாம் இன்று நமது வாழ்வின் மூலமாக அறிவிக்கின்றோம்.

முதல் வாசகத்தில் ஆண்டவருடைய முழு பிரசன்னத்தில் மூழ்கிப்போன எசாயா, அந்த பயமிக்க மகிழ்ச்சியிலும் அவருள் குடிகொண்டிருந்த தாழ்வு மனப்பான்மையின் காரணமாக "ஐயோ, நான் அழிந்னே;. ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே" என்று அறிக்கையிட்டார். அறிக்கையக் கேட்ட இறைவன் , அவரை குறையற்ற மனிதராக மாற்றி அதேவேளை, தனது எண்ணங்களை - யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார்போவார்?" என வெளிப்படுத்த, அந்த இறை வார்த்தையை கேட்ட எசாயா ; "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்று முனைப்புடன் முன் வருகின்றார்.

ஒருவர் எதிர்பாராமல் அளவற்ற நன்மைகளை பெறும்போது, அதை கொடுத்தவர்மேல் பெற்றுக்கொண்டவர் மனதில் ஒரு உண்மையான நன்றி உணர்வு உண்டாகும். இது சாதாரண மனிதனின் இயல்பு - அதுவும் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு அந்த உணர்வு மிக அதிகமாக உண்டாகும். இறை அழைத்தலை எசாயா ஏற்க முன் வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகக்கூட இருக்கலாம். ஆம், தாழ்வு மனப்பான்மையும் இறைவன் முன் ஆதாயமானதே.

இறை அழைத்தலின் முழுப்பயனை பெறுவதற்கு தாழ்வு மனப்பான்மை கொண்ட எசாயா ஆகவோ, குலத் தொழிலில் முழு ஆற்றல் பெற்ற சீமோனாகவோ இருக்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல . மாறாக அழைப்பு கேட்கப்பட்டபோது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப தங்களுடைய தாழ்வு மனப்பான்மையையும், குலத்தொழில் ஆளுமையையும் அறிக்கையிட்டு, விட்டொழித்து அவர்கள்- தங்களை வெறுமையாக்கி முழுமையாக இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டது மட்டுமே மூலக் காரணங்களாக அமைந்தன .

இரண்டாம் வாசகத்தில்-
பவுல் அடிகளார் தன் பணி வாழ்வால் நிலைவாழ்விற்கான அழைத்தலைப் பெற்றுக்கொண்ட கொரிந்து வாழ் திருஅவை மக்கள் அதில் நிலைத்திருந்து - அதை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவார்கள்; இல்லையேல் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே என எச்சரிப்பதைக் காண்கிறோம்.
மேலும் பவுல் அடிகளாரோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும்
"மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மேலும் மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார் என்பதை மட்டுமே பறைசாற்றியதையும் நினைவு கூறுகின்றார், எதற்காக? இவர்கள் அறிவித்த நற்செய்தி என்பது
கிறிஸ்து, கிறிஸ்துவின் வாழ்வியல், கிறிஸ்துவின் மரணம், கிறிஸ்துவின் உயிர்ப்பு ஆகியவற்றை மட்டுமே மையமாக கொண்டுள்ள நற்செய்தி என்பதற்காகத்தான்..
திருஅவை மக்களாகிய நாம் எனவேதான் , இன்று திருப்பலியில்:-
கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார் , கிறிஸ்து மீண்டும் வருவார் என நமது நம்பிக்கையை அறிக்கை இடுகின்றோம்
இந்த தெய்வீக நம்பிக்கை உயிரோட்டமாக என்றும் அறிக்கையிடப் படவேண்டும் என்பது இறைத் திட்டம் - இறைப் பணி.
நமது பணிக்காக யார்போவார்?" என்ற இறை அழைத்தலுக்கு (ஏசா: 6-8)
- பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழ்கின்ற இறைமக்கள் நாங்கள் (எபே- 4:1) என திருத்தூதர்கள் போல் இறைபணியில் உறுதியுடன் உயிரோட்டமுள்ள இறைமக்களாக நாங்கள் இருக்கிறோம் என இறைவன் முன் பறைசாற்ற வேண்டாமா?. பாருங்கள் குழந்தை பருவத்தில் திருஅவை நமக்குத் தந்த ஞாயிறு மற்றும் கடன் திருநாட்களை மறவாமல் அனுசரிப்பாயாக என்ற அழைத்தலையே இன்றுவரை உயிரோட்டம் உள்ளதாக மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் செயல்படுத்தி வருகின்றோம் இப்படி இருக்க, நிலை வாழ்வை தேடுவோருக்கு இறைவன் தந்த அழைத்தல்-பணியான 1. "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. 2.உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்ற இறைஅழைத்தல் -பணியை மறக்காமல் செயல் படுத்த வேண்டும் அல்லவா?. கவனியுங்கள், இதில் ஒன்றையேனும் செய்பவர் சாதாரண மக்கள். இரண்டையும் கடைபிடித்து வாழ்பவர்கள் இறைமக்கள். நாம் பிறரால் இறைமக்கள்(கிறிஸ்துவர்கள்) என்று அழைக்கப்படும் போது பெருமை அடைகின்றோம் எனவே, இரண்டையும் சிறப்பாக செயல்படுத்தி நிலைவாழ்வை நமதாக்குவோம்.

இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக

சிந்தனைப் பயணம்.
திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ