ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பொதுக்காலம் 28ஆம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
ஆண்டின் பொதுக்காலம் 28 ஆம் ஞாயிறு திருப்பலி
முன்னுரை - 3ம் ஆண்டு
திபா 98: 1. 2-3a. 3b-4 (பல்லவி: 2 காண்க)
பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காணவெளிப்படுத்தினார்.

நன்றி சொல்ல வந்திருக்கும் நல் உள்ளங்களே!
அரும் பெரும் செயலாற்றும் கடவுளுக்கு, நன்றி சொல்லும் நல்ல உள்ளமே நாளெல்லாம் உயர்வு பெறும் என்ற உணர்வை வழங்க வரவேற்கிறது இந்த ஞாயிறு.

தொழுநோயால் வாழ்வைத் தொலைத்த நோயாளிகள் பத்துபேர் இயேசுவைத் தேடி சுகம் கேட்கிறார்கள். தொல்லை தந்த தொழுநோய் தொலையட்டும் என இயேசுவும் ஆசீர்வதிக்க, தொழுநோயாளிகள் பத்துப்பேரும் சுகமாகிவிட்டனர்.

நன்றி சொல்ல ஒருவர் மட்டுமே ஓடிவந்தார். " சுகம் பெற்ற மற்ற ஒன்பது பேர் எங்கே" ? எனத் தேடுகிறார் இயேசு. நன்றி மறப்பது ஒரு நச்சுப் பண்பு. பெற்றுக் கொண்ட நலன்கள் அனைத்திற்கும் நன்றி சொல்வதோ நற்பண்பு. நன்றி சொல்லும் போது நன்றி சொல்பவருக்கு ஒரு நற்பண்பையும் அதைக் கேட்பவருக்கு ஒரு உற்சாகத்தையும் இருவர் இடையே ஒரு நல்லுறவையும் ஏற்படுத்துகிறது.

நன்றி சொல்கின்ற மனம் ஆன்மீக வாழ்வுக்கும், அன்றாட உலக வாழ்வுக்கும் அடிப்படைத் தேவையானது. நன்றி சொல்வது மனமகிழ்ச்சிக்கு வழியாகும். துன்புறுத்தும் மனசோர்வுக்கு மருந்தாகும்.

நன்றி சொல்லச் சொல்ல நலன்கள் மேலும் மேலும் கூடுதலாகும். நன்றி சொல்லும் நற்பண்பை வாரி வழங்கும் திருப்பலி இது. நன்றி சொல்லும் நற்பண்பால் எமை நிரப்பும் நலன் யாவும் பெற்று வளமாய் வாழச்செய்யும் இறைவா என திருப்பலியில் மன்றாடுவோம்.
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. நன்றியின் மேன்மையை எமக்கு உணர்த்தும் இறைவா!
நீர் எமக்குத்தந்த திருச்சபைக்காக நன்றி நவில்கின்றோம். திருப்பீடப்
பணியாளர்கள் ஆற்றும் திருப்பணி உம்மைக் கண்டு கொள்ளவும்,
உமக்கு நன்றி செலுத்தும் போது உமது எல்லையற்ற அன்பையும்,
அருளையும் பெற்றுக் கொண்டு, மீட்பின் பாதையில் எங்களை
அழைத்துச் செல்ல உதவும் என்ற நன்றியின் உணர்வைத் தூண்டவும்,
அருள் பொழிய இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

2. நன்றி உள்ளவர்களாய் வாழ எமை அழைக்கும் இறைவா!
நாடுகளின் தலைவர்கள் நன்மைகள் பல மக்களுக்குச் செய்த, படைத்த
இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்ந்து மேன்மையான
புண்ணியங்களை தடையின்றி பெற்றுக் கொள்ள அருள் பொழிய
இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

3. ஆன்ம நோயையும் குணமாக்கி மீட்பளிக்க வந்த இறைவா!
ஆன்மீகத் தொழுநோயை விரட்ட எமக்களித்த எம் பங்குத்தந்தைக்காக
நன்றி சொல்கிறோம். உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட
இறைமக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக நோய் நீங்கி மன
ஆறுதல் பெற்று நன்றி நிறை மனம் கொண்டவர்களாய் வாழ
வழிகாட்டும் பணியைச் சிறப்பாக செய்ய அருள் பொழிய இறைவா
உம்மை இறைஞ்சுகிறோம்.

4. நன்றியுள்ளவர்களாய் வாழ்ந்து காட்டுவோரை ஆசீர்வதிக்கும் இறைவா!
உடலிலும் உள்ளத்திலும் பல்வேறு பாவப் பழக்கத்தால் பீடிக்கப்பட்ட
நாங்கள் அவைகளில் இருந்து விடுதலை பெறவும், உம் வழியாக
நாங்கள் பெற்றுக் கொண்ட நலன்கள் அனைத்திற்கும் நன்றி சொல்லி
வாழவும் அருள் பொழிய இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்

என்ன நேர்ந்தாலும்... நன்றி சொல்லி மகிழ்வோம்.....

சென் துறவிகளில் மிகச் சிலர் பெண்களாகவும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ரெங்கட்சு.
ஒரு நாள், அவர் பயணம் சென்று கொண்டிருந்தபோது ஒரு கிராமத்தில் இரவு தங்கியிருந்து மறுநாள் அதிகாலையில் பயணம் தொடர நினைத்தார் அவர்.

அந்த ஊர்க்காரர்களுக்கு சென் என்றாலே பிடிக்காது. சென் வழியில் வாழ்பவர்கள், கலகக்காரர்கள், புரட்சியாளர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். சென் தியான முறையை ஆதரிப்பதால் தங்களின் பழமையான சிந்தனைகளுக்குப் பங்கம் வரும். வாழ்க்கை முறையே மாறிவிடும் என்று பயந்தார்கள். அதனால் சென் கொள்கை முறையை வெறுத்தார்கள்.

அந்த அம்மையார் சென் குரு எனத் தெரிந்ததும் தங்கள் கதவுகளை மூடிக்கொண்டார்கள். தங்க இடம் கொடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் கிராமத்திற்கு வெளியே வெட்டவெளியில் தங்க நேர்ந்துவிட்டது அவருக்கு.

ஒரு செர்ரி மரத்துக்கடியில் அவர் தங்கிக் கொண்டார். கடுங்குளிர், இரவு நேரம் தூரத்தில் காட்டு விலங்குகளின் ஓலமும், ஊளைச்சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தன. நீண்ட தூரம் நடந்த களைப்பால் கண்ணயர்ந்து அவர் தூங்கிவிட்டார். திடீரெனக் கண்விழித்துப் பார்க்கும் போது வானில் முழுநிலவு ஒளி வீசிக்கொண்டிருந்தது. செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கி சிரித்துப் பூ மழையாக உதிர்ந்து கொண்டிருந்தன. அந்த மனோரம்மியமான காட்சியின் அழகில் மயங்கிப் போனார். அந்த அம்மையார்.

அந்த கிராமத்து மக்கள் விரட்டாமல் இருந்திருந்தால், தன்னை வெறுக்காமல் இருந்திருந்தால் இந்த வாய்ப்புக் கிடைத்திருக்குமா? என நினைத்துக் கொண்டார். நன்றிப் பெருக்கோடு கிராமத்தைப் பார்த்தார். அவர் இதயத்தில் இனிய பாடல் ஒன்று பிறந்தது.

"தங்க இடமில்லை என விரட்டியதால் தங்க நிலாவைக் கண்டேன். பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களைக் கண்டு மகிழ்ந்தேன்0 இந்த கிராம மக்களுக்கு இனிய நன்றிகள். இவர்களின் வெறுப்புக்கு இன்னும் கோடி நன்றிகள்" எனப் பாடினார்.

விரட்டியடித்தோருக்கும் வெறுத்து ஒதுக்கியோருக்கும் நன்றிகளாம்!
எந்த நிலையிலும் நன்றி சொல்லும் போது வாழ்க்கையில் நம்மால் ஒரு அர்த்தம் காண முடியும். வாழ்க்கை உற்சாகமாக இருக்கும் மனச்சோர்வு நீங்கும். தன்னலம் தோன்றாது.

பேராபத்தில் இருந்து காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி என்று சொல்லி மகிழ்பவர் முதல் வகையினர்.

சின்னச் சின்ன கொடைகளுக்கும் நன்றி சொல்பவர்கள் இரண்டாம் வகையினர்.

இன்பம் துன்பம் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்பவர் மூன்றாம் வகையினர்.

நாம் எந்த வகை? என சிந்திப்போம்....

நலன் யாவும் பெற்றுக் கொண்டு நன்றி என்ற வார்த்தைக்குப் பொருள் தராத உள்ளம் இன்று மிகுதியாகி விட்டது.

சின்னக் குழந்தைகட்கு நன்றி சொல்ல கற்றுத்தருகிறோம். பெரியவர்கள் ஆனதும் நன்றி என்ற சொல் நம் வாழ்க்கையிலிருந்து நழுவிவிடுகிறது. என்ன காரணத்தினாலோ அதைக் கவனிக்கத் தவறுகிறோம்.

ஏழை மனிதர் ஒருவர் தன் பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். எப்படியோ சிறிது பணம் தயார் செய்து 12 வயது மூத்த மகன் பெனோவை நகரத்தில் வேலை செய்து பிழைக்க அனுப்பி வைத்தார். பெனோ வேலைக்கு சேர்ந்தபோது கார் வாடகைக்கு விடும் ஒரு முதலாளியிடம் வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் கடையில் கார் துடைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. பின் ப்யூன் வேலை தரப்பட்டது. வேலையில் மிகுந்த கவனத்துடன் வேலை செய்த பெனோவுக்கு, மூன்றே மாதத்தில் வாடகைப் பணம் வசூலிக்கும் வேலை கிடைத்தது.

முதலாளிக்கு சொந்தமாக 10 கார் இருந்தது. அந்த காரை வாடகைக்கு எடுத்துச் சென்றவர்கள் முகவரியும், ஒரு சைக்கிளும், மதிய உணவும் தரப்படும். காலை முதல் மாலை வரை வேலை இருக்கும். யாரெல்லாம் கார் வாடகைக்கு எடுத்தார்களோ, அவர்களது முகவரியை தேடிக் கண்டுபிடித்து வாடகைப் பணத்தை வசூலித்து வருவார். மதிய வேளையில் உணவை அருகில் இருக்கும் இடத்தில் மரத்தின் நிழலில் அமர்ந்து உண்ணுவார். மாலையானதும் வசூலித்தப் பணத்தைக் கொண்டு வந்து முதலாளியிடம் தருவார். பெனோவின் அயராத அவரது உழைப்புக் கண்டு ஓட்டுனர் பயிற்சி பெறும்படி அறிவுரை கூறினார் முதலாளி. அவரது பணிவு நிறைந்த உழைப்புக் கண்டு வியந்தார் முதலாளி. முதலாளி தன்னிடம் இருந்த பழைய கார் ஒன்றை அவருக்குப் பரிசாக வழங்கினார். அந்த காரை வைத்து பிழைப்பு நடத்திய பெனோவுக்கு இன்று 300 கார்கள் உள்ளன.

தனது குடும்பத்தில் எந்த ஒரு விழா என்றாலும், தனது முதலாளியை அழைத்து அவரது கால்களில் விழுந்து நன்றி தெரிவிப்பதை, தனது கடமையாக நினைத்து செய்கின்றார். அவர் மட்டுமல்ல அவரது பிள்ளைகள், மனைவி எல்லோருமே தங்களது குடும்ப முன்னேற்றத்திற்கு வேலை கொடுத்து உதவிய தருணங்களை நன்றி உணர்வுடன் எண்ணிப் பார்த்து நெகிழ்ந்து போகிறார்கள். அவரது முதலாளியோ அவர் காட்டும் இந்த நன்றி உணர்வால் அவர் இன்னும் மேலும் மேலும் ஆசீர்வாதமாக நிறைவாக வாழ்வார் என வாழ்த்துகிறார். முதலாளி மட்டுமல்ல, அவர் வீட்டு மங்கல வைபவங்களில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் எல்லோருமே அவரது நன்றி உணர்வை வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.

நன்றி உணர்வு நம்மை மேலும் மேலும் ஆசீர்வாதங்களால் நிரப்பும்.
நன்றி உணர்வு நம்மை மகிழ்ச்சியால் பொங்கி எழச்செய்யும். தன்னலம் மறக்கச் செய்யும். நற்பண்புகள் அத்தனையின் விளைவிடம் நன்றியை வெளிப்படுத்துவதே!!

நமது குடும்பங்களில் சின்னச் சின்ன செயல்களுக்கும் நன்றி சொல்வதை வழக்கமாக்குவோம். நன்றி சொல்லாவிட்டால், நன்றியை மறந்தால் தன்னலம் தலைதூக்க ஆரம்பிக்கும் பாவப் பழக்கவழக்கங்கள் வளர ஆரம்பித்துவிடும்.

பூக்கள் பூத்துக் குலுங்க பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவது போல நல்ல பழக்க வழக்கங்கள் மனதில் வளர்வதற்கு நன்றி என்ற உணர்வை மனதுக்குள் ஊற்றெடுக்கச் செய்ய வேண்டும்.

துகிலி முருகானந்தம் என்பவர் குவைத்தில் ஒரு வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரத்தில் ஒரு நாள் இரவு 12 மணிக்கு அந்த வீட்டின் முதலாளி, துகிலி முருகனை தொலைபேசியில் வீட்டுக்குள் வருமாறு அழைத்தார். வீட்டுக்குள் சென்றால் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட மேசையில் கேக் இருந்தது. குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் ஒன்று கூடி நின்று கொண்டு இருந்தார்கள். துகிலி முருகனை கேக் வெட்டும்படி சொன்னார்கள். துகிலி முருகனுக்கோ இன்ப அதிர்ச்சி. இன்றுடன் நீ எங்கள் வீட்டிற்கு வந்து 12 ஆன்டுகள் நிறைவு பெறுகின்றது. எங்கள் வீட்டுக்கு வந்த நாள் முதல் எங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் எங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து சிறப்பாக செய்தாய். எங்கள் நன்றியை உனக்கு தெரிவிக்க இந்த ஏற்பாடு என்று சொல்லி அன்பளிப்பாக கைபேசி ஒன்றையும் வழங்கி மகிழ்ந்தார்கள்.

நாம் வேலை செய்யச் சொல்லி கட்டளை இடுகிறோம். அந்த வேலையை மிகச் சிறப்பாக செய்ய வேண்டும் என ஆர்வத்தோடு செய்து முடிக்கும் நமது நண்பர்களுக்கு எத்தனை முறை பாராட்டு தெரிவிக்கிறோம்.

நன்றி மனப்பான்மையை வளர்க்க... நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.

நம் பிள்ளைகளுக்கு பிறந்த நாளுக்காக, அல்லது வேறு ஏதேனும் நல்ல நிகழ்வுக்காக யாரேனும் அன்பளிப்பு வழங்கும் போது, அவர்கள் பிள்ளைகள் மீது கொண்ட பிரியத்தை, அன்பளிப்பு வழங்குவதற்காக கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க எடுத்துக் கொண்ட சிரமத்தை, எடுத்துச் சொல்லி நம் வீட்டில் குழந்தைகளுக்கு நன்றி மனப்பான்மை வளர உதவலாம்.

பிறருக்கு நன்றி ஏன் சொல்லவேண்டும், அவர்கள் கடமை அது செய்துதான் ஆகவேண்டும் என நினைக்கும் போது, ஏன் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற உணர்வு பணியாளர்களுக்கு தோன்றும். இருவருக்கும் இடையே தூரம் அதிகரிக்கும். பணியில் தொய்வு ஏற்படும். உண்மையான உறவும் நட்பும் அங்கே இராது.

இப்போதெல்லாம் வேலையை வாங்கிவிட்டு, நன்றி சொல்லவும் உரிய கூலியை கொடுக்கவும், விரும்பாத உள்ளங்கள் எங்கு பார்த்தாலும் பெருகிக் கிடக்கின்றன. இப்படியான சூழலில் தான் போட்டி, பொறாமை, தன்னலம், ஆங்காரம் தலை தூக்கி கலவரமான நிலவரங்களை ஏற்படுத்துகின்றன.

என்னால் வேலைக்கு வந்தார். இன்று நன்றி இல்லாமல் திரும்பி பார்க்காமல் செல்கின்றார் எனப் புலம்புவதை பார்த்திருக்கிறோம்.

"சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தேவைப்படும் போது, கொஞ்சிப் பேசி வேலை வாங்கி விட்டு வேலை முடிந்ததும் நல்லவார்த்தை சொல்ல மறந்து, அவதூறாகப் பேசி மனதை நோகச் செய்து விடுவார் எங்கள் மேனேஜர்" என்கிறார் ராபர்ட்

"எனக்கு அவர் செய்த உதவியை ஒரு போதும் மறக்கவே முடியாது . மிக அற்புதமாக அவர் பாராட்டிப் பேசுகின்ற வார்த்தை என்னை உற்சாகப்படுத்தும். புதிய புதிய வேலையைச் செய்யத்தூண்டும்". என தன் முதலாளியைப் பற்றி பெருமைபாராட்டுகின்றார் ஆன்ட்ரூஸ்.

நமது நன்றி மனநிலையை எண்ணிப் பார்ப்போம்.
கடவுள் தந்த நலன்கள் ஏராளம் அவைகளுக்கு நன்றி சொல்வோம். நம் நண்பர்கள் வழியாக பெற்றுக் கொண்ட நலன்கள் ஏராளம் அவைகளுக்கு நன்றி சொல்வோம்.

நல்லவீடு, நல்லகுடும்பம், நல்லகணவன், நல்லபிள்ளைககள் போதுமான செல்வங்கள், வேலைவவாய்ப்பு இருப்பினும் ஏதோ ஒன்று குறையும் போது, மனதுக்குள் குறைவை நினைத்து புலம்பும் போது, நன்றி சொல்ல மறந்த அந்த ஒன்பது பேரோடு நாமும் இணைந்து விடுகிறோம்.

நமது வாழ்வில் அநேக வேளைகளில் பெற்றுக் கொண்ட நலன்கள் பலவற்றை மறந்து, கிடைக்காத ஒன்றை நினைத்து நன்றி சொல்ல மறந்து, கிடைத்த ஆசியை இழந்து விடுகிறோம்.

எப்பொழுதும் மகிழ்ந்திருப்போம் இடைவிடாமல் செபிபோம், என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லுவோம்.

உலகைப் படைத்த உன்னத தேவனுக்கு நன்றி சொல்வோம்.

இயற்கையை படைத்த இறைவனுக்கு இதயம் நிறைந்த நன்றி சொல்வோம்

நாம் பயணிக்கும் சமூகத்தில் நமக்காய் உழைக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்வோம்.

உலகை அழகுபடுத்தும் கலைஞர்களுக்கு நன்றி சொல்வோம்.

புதியன கண்டுபிடித்து வாழ்க்கையின் வசதிகளை லேசாக்கிய கண்டுபிடிப்பாளர்களுக்கு நன்றி சொல்வோம்.

பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு நன்றி சொல்வோம்...

நீதியை, தருமத்தை கடை பிடிப்பவர்களுக்கு நன்றி சொல்வோம்.

மனித நேயத்தை கடை பிடிப்பவர்களுக்கு நன்றி சொல்வோம்.

ஆதரவற்ற சிறுவர் காப்பகங்கள் முதியோர் காப்பகங்கள் வைத்து பிறர் நலம் பேணுவோருக்கு நன்றி சொல்வோம்.

பெற்றோருக்கு, பெரியோருக்கு ஆசிரியர்களுக்கு, நல் உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, நம்மை வெறுப்பவர்களுக்கு, நமது முன்னேற்றத்துக்கு தடைச் சுவர் அமைப்பவர்களுக்கு, இறைவனுக்கு என பட்டியலிட்டு இவர்கள் வழியாக நாம் பெற்ற நலன்களுக்கு நன்றி சொல்வோம்.

நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என நாம் தெரிந்து கொண்டால், ஆண்டவனுக்கு நன்றி சொல்லமட்டுமே நாம் ஆலயத்திற்கு செல்வோம்.

கிடைத்த வாழ்க்கைக்கு நன்றி சொல்லி மகிழ்வோம்.அந்த வாழ்க்கை அழகான வாழ்க்கையாகட்டும்.

என்ன நேர்ந்தாலும்... நன்றி சொல்லி மகிழ்வோம்.....

 
திருப்பலி முன்னுரை : Gnaoli
 
பொதுக்காலம் 28 ஆம் ஞாயிறு

 2 அரசர்கள் 5: 14-17
 2 திமொத்தேயு 2: 8-13
 லூக்கா 17: 11-19


கடவுளிடமிருந்து பெற்ற நன்மைகளை நன்றியோடு நினைத்துப் பார்த்து பொதுக் காலத்தின் இருபத்தெட்டாம் ஞாயிறு வழிபாட்டிற்கு அன்புடன் அவரைப் போற்றிப் புகழ வருகை தந்துள்ள அன்பு இறை மக்களே உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

நாம் இறைவனிடமிருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்று வளமுடன் வாழவும், அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லவும், இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது.

நல்ல நோக்கத்தோடு நற்செயல் புரிபவர்கள் பிரதிபலனை எதிர்பார்க்க மாட்டார்கள், கொடுப்பதில் வல்லவர்கள் கடவுளிடமிருந்து வாழ்வை வரமாகப் பெறுகிறார்கள், செய்நன்றி மறவாத மனிதருக்கு இறையாசீர் அபரிமிதமாகக் கிடைக்கிறது என்ற கருத்துக்களை இன்றைய வார்த்தை வழிபாடு வலுவாக விரிவாக எடுத்துரைக்கிறது.

நமது பிறப்பு ஒரு கொடை, நமது வாழ்வும் ஒரு கொடை, மீட்பு ஒரு மாபெரும் அருங்கொடை என்பதை உணர்ந்து நன்றி மனம் கொண்டவர்களாய், இறைவனிடமிருந்து பெற்ற அருளை மற்றவரின் நல்வாழ்விற்காய் பயன்படுத்தும் இறைமக்களாய் வாழ இத்திருப்பலியில் இறையருளை வேண்டுவோம்.


முதல் வாசக முன்னுரை:
தன்னை பீடித்திருந்த தொழு நோயிலிருந்து இறைவாக்கினர் எலிசாவால் குணமான சிரிய நாட்டின் படைத்தலைவன் நாமான், இறைவனை முழுமனதோடு ஏற்றுக்கொண்டது பற்றி இன்றைய முதல் வாசகம் பேசுகிறது. கீழ்ப்படிதலும், நன்றியும் வாழ்வின் இரண்டு கண்கள் என்பதை வலியுறுத்தும் இவ்வாசகத்திற்கு உள்ளம் திறந்து
செவிமடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை:
பணிவாழ்வில் எதிர்படும் இடர்பாடுகளை, துன்ப துயரங்களைக் கண்டு துவண்டு தாமல் தொடர்ந்து பணிபுரிய திமோத்தேயுவுக்கு புனித பவுலடியார் கூறும் வரைகள் இன்றைய இரண்டாம் வாசகமாக அருளப்பட்டுள்ளது. இயேசு மதுவுக்காக எதையும் எதிர்கொள்ளும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
 
மன்றாட்டுக்கள்
  
அருளும் தூய்மையும் நிறைந்த தந்தையே இறைவா, நற்செய்திப் பணிக்காய் நம்மையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள் அனைவருக்கும், உறுதியான நம்பிக்கையையும், எத்தகைய  இடர்பாடுகளையும் எதிர்கொள்ளும் மன வலிமையையும் தாரும். காலத்திற்கேற்ப பிறையாட்சிப் பணிகளை புதுப்பித்துக்கொண்டு, புது உத்வேகத்துடன் பணிபுரிய அருள் பரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தலைவர்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவரான எம் இறைவா, எங்கள் நாட்டின் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அனைவரையும் உம் திருப்பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் உம்மைப்போல் நேர்மையோடும், நடு நிலையோடும், நீதியோடும், மக்கள் நலனையும், நாட்டு வளத்தை மட்டுமே கருத்தில்கொண்டு பணியாற்றிட அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உயிருக்கும் அன்புக்கும் ஊற்றான இறைவா, நலம் பெறுதல் மீட்புக்கு அடையாளமல்ல, நன்றி கூறலே மீட்பின் அடையாளம் என்பதை நாங்கள் முழுமையாக உணர்ந்து, நாமானைப்போல், சமாரியனைப்போல் நன்றி உள்ளவர்களாய் வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்களைக் காத்து வழிநடத்துகின்ற தந்தையே இறைவா, நாங்கள் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் உம்மால்தான் என்பதை நன்றியோடு நினைவு கூர்கிறோம். எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் வார்த்தையால் மட்டுமல்ல, செயலாலும் உமது திருவுளத்தை நிறைவேற்றி வாழவும், சிறப்பாக, ஏழைகள் மீது அக்கறை கொண்டு, அவர்களது நல்வாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
 
மறையுரைச்சிந்தனை: மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.
பொதுக்காலம் 28ஆம் வாரம் - ஞாயிறு 12 10 2025

திருப்பலி முன்னுரை

பிரியமானவர்களே, இன்று பொதுக்காலம் 28ம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.

கடவுள் வாழும் இல்லங்கள் இரண்டு, ஒன்று விண்ணகம், மற்றொன்று பணிவும், நன்றியும் நிறைந்த உள்ளம் என ஐசக் வால்டன் என்ற அறிஞர் ஒருவர் கூறுகின்றார். ஆம். நாம் நன்றி நிறைந்த மனதுடன் வாழ வேண்டும் என்பதையே இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் நமக்கு சிந்தனையாகத் தருகின்றது. நன்றியை இறைவன் எதிர்பார்க்கின்றாரா என்பதல்ல நம் கேள்வி. நம்மிடம் அந்த உயரிய பண்பு நிறைந்திருக்க வேண்டுமென்பதையே விரும்புகிறார் என்பதுவே அவர் உணர்த்தும் பாடமாகும்.

மனிதர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
நன்றியுணர்வுடன் வாழ்பவர்கள்,
நன்றி மறந்தவர்கள்.

இன்றைய நற்செய்தியின்படி, பத்து தொழுநோயாளர்களுள் ஒன்பது பேர் அப்படியே செல்ல, ஒருவர் மட்டுமே வருகின்றார். அதேபோல, நம்மில் நன்றியுணர்வு ஒன்று வரும்போது, அதை அழுத்தி, புதைத்துவிட ஒன்பது பிற எண்ணங்கள் நம்மிலே எழுந்து வரும். இதனால் நாம் நன்றி சொல்லும் நேரங்களை விட நம் கோபதாபங்களையும், கவலைகளையும் சொல்லும் நேரம்தான் அதிகம்.
உலகில் மிக முக்கியமான, அவசியமான செபம் இரண்டே வார்த்தைகளில் அடங்கும், அது நன்றி என்ற வார்த்தையே என அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். இன்றைய முதல் வாசகத்தில், நாமான் என்ற புற இனத்து மனிதனை நன்றியுள்ள மனிதராய் இறைவன் வெளிப்படுத்துகின்றார். அதேபோல், நற்செய்தியிலும் யூதர்களால் ஒதுக்கப்பட்ட சமாரியரையே நன்றியுள்ள மனிதராக வெளிப்படுத்துகின்றார்.

இறைவனின் கரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, உரிமையுள்ள மக்களாகிய நாம், அவர் நம் வாழ்வில் அள்ளி அள்ளிக் கொடுத்த நன்மைகளை, பெற்றுக் கொண்ட ஆசீர்வாதத் தருணங்களை மறந்தவர்களாக, நன்றி சொல்ல நாவற்றவர்களாக நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இறைவனை அறியாத புறஇனத்து மக்கள் அவர் செய்த நன்மைகளுக்கு தங்கள் நன்றியை மனதளவில் நிறைவாக, சாட்சியாக வெளிப்படுத்துகின்றனர். அவர்களிடம் மேலோங்கியுள்ள அந்த நற்பண்பை நாமும் பெற்று, இறையன்பிற்கு சாட்சிகளாக, அதேபோல, நம் வாழ்வில் பிறர் நமக்குச் செய்த தீமையை மறந்தவர்களாக, அவர்கள் செய்த நமக்குச் செய்த நன்மைக்கு, உதவிக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக வாழ்ந்திட வரம் வேண்டி, இக்கல்வாரிப் பலியில் நம்மை அர்ப்பணிப்போம்.

மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. கடவுளை நம்புவோர்க்கு இழப்பு என்பது இல்லை என்ற இறைவா,
எங்கள் வாழ்வில் வரும் துன்பங்கள், வேதனைகள், எதிர்ப்புக்கள், நெருக்கடிகள், அவமானங்கள் போன்ற தருணங்களில், எங்களது விசுவாச வாழ்விலே தளர்ந்து, சோர்ந்து போய்விடுகின்றோம். உம்மைப் பழித்துரைக்கின்றோம். நம்பிக்கையில் தளர்ந்து விடுகின்றோம். உண்மை இறைவனாகிய உம்மை விட்டுவிலகி நிற்கின்றோம். இத்ததைய மனநிலையை மாற்றி, உம்மை நம்பும் எவருக்கும் எந்த நன்மையும் குறைபடாது, இழப்பு என்பதிருக்காது, என்பதை வாழ்வில் உறுதியாய் உணர்ந்து, உம்மையே நாடுகின்ற, தேடுகின்ற மக்களாக வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

2. மேன்மை அடைய தாழ்மையே வழி என்ற இறைவா,
தன்னையே தாழ்த்தி, இவ்வுலகில் மனிதனாக வாழந்து, தாழ்ச்சிக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினீரே, ஆனால், நாங்கள், எங்கள் குடும்பத்தில், பணித்தளங்களில் அந்தத் தாழ்ச்சியைப் பின்பற்றாது, பல நேரங்களில் நான் என்ற ஆணவத்துடன், யாரையும் மதிக்காது, மேட்டிமையான மனநிலையுடன், உயர்வு மனப்பான்மையுடன் பிறரை தாழ்வாகக் கருதி, ஏளனத்துடன் நடத்தி, மட்டம் தட்டி, செருக்குடன் பரிசேய மனநிலையில் வாழ்ந்து வருகிறோம். இந்த இழிவான மனநிலையைக் களைந்து, எங்கள் ஆணவப் போக்கினை மாற்றி, தாழ்ச்சியுடன் நடந்து, உம் வழியினை உறுதியுடன் பின்பற்றிட, வலிமையான மனதினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

3. பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்திராதே: கொடுக்கும் நேரத்தில் உன் கைகளை மூடிக் கொள்ளாதே என்ற இறைவா,
ஏழ்மை, வறுமை நிலையில் துயருறும் மாந்தர்களைக் கண்டும் காணாதது போல செல்லாமல், எங்கள் வாழ்வின் வளமையை மட்டுமே முன்னிருத்தி, எங்கள் தலைமுறைக்கே சொத்து சேர்த்து வைக்கும் தன்னல மனநிலை அகற்றி, தன்னிடமுள்ள இரண்டு மீன்களை கொடுத்து உதவிய அந்தச் சிறுவனின் பரந்த, பிறர்நல மனதினைப் பெற்று, எங்களிடமுள்ளதை பிறருக்கு கொடுத்து, பகிர்ந்து வாழ்ந்திடவும், கொடுப்பதை முகமலர்ச்சியுடன் கொடுத்திடவும் கூடிய தாராள மனதினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

4. நோயாளிகளைச் சந்திக்கத் தயங்காதே என்ற இறைவா,
பல்வேறு நோய்களினால், துன்புறும் நோயாளிகளை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். நோயினால் துயருறுவதை விட, தன்னை கவனிக்க ஆளிலில்லாமல், அன்புடன், கனிவுடன், ஆறுதல் வார்த்தைகள் சொல்ல யாருமில்லாமல், மனதளவில் பாதிக்கப்பட்டு வருந்துவோரே அதிகம் என்பதை உணர்ந்து, எங்கள் வாழ்வில் கிடைக்கும் சில ஓய்வு நேரங்களை, வீண்வெட்டி பேச்சிலும், தொலைக்காட்சியிலும் எங்கள் வாழ்வை தொலைத்துவிடாது, இத்தகைய மாந்தர்களை தேடிச் சென்று, அவர்களுக்கு உதவிடவும், எங்கள் உடனிருப்பின் வழியாக அவர்கள் தங்கள் உள்ளத்தில் மகிழ்வினைப் பெற்றுக் கொள்ளவும், எங்கள் செபங்கள் வழியாக அவர்கள் விரைவில் குணம் அடையவும், நீர் உம் இரக்கத்தைப் பொழிந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

5. கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக, அவர் வாழ்வோரின் கடவுள் என்ற இறைவா,
எங்கள் குடும்பங்களில், உறவினர்களில், பங்குத்தளத்தில் மரித்த அனைத்து ஆன்மாக்களையும், மற்றும் யாரும் நினையாத அனைத்து ஆன்மாக்களையும் நீரே உம் விண்ணகத் திருச்சமூகத்தில் ஏற்றுக் கொள்ளும். அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் செய்த பாவங்களை, குற்றங்களை உமது பேரன்பினால், இரக்கத்தினால் மன்னித்து, அவர்களை வான்வீட்டில் சேர்த்து, உம் தூதர்களோடு உம்மை துதித்து, புகழ்ந்து பாடிடும், அந்த உன்னத பேற்றினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் அன்பாய் இருக்கிறார்! 1 யோவா 04: 16
மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

 
திருப்பலி முன்னுரை   - ✝️ அருள்சகோதரி. பிரின்சி

பொதுக்காலம் 28 ஆம் வாரம் - ஞாயிறு


அன்பிற்கினியவர்களே!

இன்றைய திருவழிபாடு நன்றியுள்ளவர்களாக வாழ அழைக்கிறது.
ஒரு காலத்தில் பிச்சைக்காரர்களுக்குக் காசு தந்தால் அவர்கள் கைகூப்பி மகராசனாயிரு மகராசியாயிரு என்ற வார்த்தைகளை சொல்லி வாழ்த்துவதை சரளமாகக் கேட்க முடியும். இன்று இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்பது மிகவும் கடினம். ஏனென்றால் இக்காலத்தில் எல்லா இடங்களிலும் நன்றி என்ற உணர்வு மிக மலிந்ததுவிட்டது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இரண்டு வகையான மனிதர்களை இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.

1. செய்நன்றி மறவா ஒரு சமாரியர்

2. செய்நன்றி மறந்த மற்ற ஒன்பது பேர்

நன்றி என்ற உணர்வு உயர்ந்த உள்ளங்களில் மட்டுமே இருக்கும்.
பெறுகின்ற உதவியின் அருமை தெரிந்தவன் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பான். நன்றியுணர்வு இல்லாதவன் எதையும் பெற தகுதியில்லாதவன்.

இயேசு சுட்டிக்காட்டும் இருவகை மனிதர்களில் நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்? சிந்திப்போம். இன்றைய கல்வாரி பீடம் வந்துள்ள நாம் ஆண்டவர் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து நன்றி கூறுவோம். நன்றி கூற மறந்த நேரங்களுக்காக மனம் வருந்துவோம். இறைவனுக்கும், அயலாருக்கும், அருகில் உள்ளோருடனும் , செய்த நன்றி மறவாமல் நன்றியுணர்வோடு வாழும் வரம் கேட்டு இத்திருப்பலியில் இணைவோம்.



முதல் வாசக முன்னுரை: 2 அரசர்கள் 5:14-17

தொழுநோயிலிருந்து குணம் பெற்ற நாமான், கடவுளின் அடியவரான எலிசாவிடம், நம்பிக்கை அறிக்கை செய்வதை எடுத்துரைக்கின்றது இன்றைய முதல் வாசகம். இஸ்ரயேலின் கடவுளே உண்மை கடவுள் என்று வாயார அறிக்கையிட்டு மனதார ஏற்றுக் கொண்ட நாமானின் நம்பிக்கையை நாமும் பெற முயற்சி செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 2 திமொத்தேயு 2:8-13


நாம் மனித பலவீனத்தின் பொருட்டு நம்பத்தகாதவர் எனினும் கடவுள் நம்பத் தகுந்தவர். கடவுள் வாக்கு மாறாதவர். இறந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவையும் அவரின் வார்த்தையையும் நம்பி மீட்படைய வேண்டும் என்று புனித பவுலடியார் நமக்கு விடுக்கும் நற்செய்தியின் குரலை இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்போம்.



நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்:


1. இறையழைத்தல் என்னும் வரம் பெற்ற இறைப்பணியாளர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட வரத்திற்கேற்ப வாழ்ந்து அழைத்த உமக்கு நன்றி உள்ளவர்களாக நாளும் வளர கிருபை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


2. நோயினால் துன்புறும் அனைவரும் உமது வல்லமையால் தனது உடல் சுகத்தை திரும்ப அடைந்து நம்பிக்கை வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளும் வரம் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதோர் அனைவரும் உண்மை கடவுளை கண்டுணர்ந்து ஆண்டவராகிய உம் அற்புத தொடுதலை அனுபவித்து கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தன் வாழ்வாக்கும் வரம் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. இன்றைய திருப்பலியில் பங்கெடுக்கும் நாங்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்ற முறையில் பெற்றுக்கொண்ட எல்லாம் அருள்வரத்திற்கும், ஆண்டவராகிய உம் அளவில்லா ஆசீர்வாதங்களுக்கும், வாழும் வரை நன்றியுள்ள மனிதர்களாக வாழ வரம் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி

திரும்பி வருதல்
அவள் பெயர் அன்னா. அவளுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அவளுடைய ஓரகத்தி அவளைக் கேலி செய்கின்றாள். அவளுடைய கணவன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றான். அவள் ஆண்டவருடைய சந்நிதிக்கு ஓடுகின்றாள். மண்டியிட்டுச் செபிக்கின்றாள். சந்நிதியில் இருந்த குருவும் இவளைச் சாடுகின்றார். இறுதியில் நம்பிக்கை வார்த்தைகள் கூறுகின்றார். அன்னா வீடு திரும்புகிறாள். ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையின் பால்குடி காலம் முடிந்ததும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆண்டவரின் இல்லம் ஓடுகிறாள். கடவுளிடம் சென்றவள் அவரிடமே திரும்பிச் செல்கின்றாள்.

அவர் பெயர் அலங்காரம். அவருடைய மகளுக்குத் திருமணம் . திருமண நாள் நெருங்கி வர அவர் சேமித்து வைத்திருந்த நிதி நிறுவனம் தலைமறைவாகிவிட்டது. திருமண நாளை மாற்றவும் விருப்பமில்லை. திருமணத்திற்குப் பணமும் கைவசம் இல்லை. கையறுநிலையில் இருக்கின்ற அவரிடம் வருகின்ற அவருடைய நண்பர் அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து, 'திருமணத்தை நன்றாக நடத்து. அப்புறம் பார்க்கலாம்!' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றார். திருமணம் நன்றாக முடிந்தது. அலங்காரம் தன் மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு முதல் வேலையாக அந்த நண்பரின் இல்லம் நோக்கிச் செல்கின்றார். 'உன் உதவியால் திருமணம் நடந்தது' என்கிறார் அலங்காரம். 'உன்னுடைய நட்பால் திருமணம் நடந்தது' என்று வழியனுப்புகிறார் நண்பர். நண்பரிடம் சென்றவர் அவரிடமே திரும்பிச் செல்கின்றார்.

மேற்காணும் அனுபவங்கள் நமக்கும் நடந்திருக்கலாம். வேளாங்கண்ணி அல்லது பூண்டி திருத்தலத்தில் நாம் செய்த நேர்ச்சை நிறைவேறி, நாம் நன்றிக்கடன் செலுத்த அத்திருத்தலங்களுக்குத் 'திரும்பச் செல்கின்றோம்.' அல்லது நமக்குத் தேவையில் உதவியவர்களிடம் திரும்பச் சென்று அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

இவ்வாறு திரும்பி வருதலின் இனிமையை நமக்கு எடுத்துரைக்கின்றது இன்றைய திருவழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். 2 அர 5:14-17) கதாநாயகன் நாமான். இவர் சிரிய நாட்டுப்படைத்தலைவர். 'வலிமைமிக்க வீரர். மதிப்பிற்குரிய தலைவர். ஆனால், தொழுநோயாளர்.' மற்ற நோய் என்றால் கூட மூடி மறைத்துவிடலாம். தோல் தொடர்பான நோய் என்பதால் எளிதாக மற்றவர்களுக்குத் தெரியக்கூடிய, அதனால் மற்றவர்கள் விலகி ஓடக்கூடிய ஒரு நோய். இவருடைய வீட்டில் அடிமைச் சிறுமியாக இஸ்ரயேல் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் நாமானின் மனைவியிடம், 'என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றால் அவர் இவரது நோயைக் குணமாக்குவார்' என்கிறார். இங்கே சிறுமியின் வார்த்தைகள் நமக்கு ஆச்சர்யமாக இருக்கின்றன. ஒருவன் தன்னை அடிமையாகக் கடத்தி வந்திருக்கிறான் என்ற கோபம் அந்தச் சிறுமிக்கு இல்லை. தன்மேல் விழும் கடப்பாரையைத் தாங்கும் நிலம் போல தன் தலைவனைத் தாங்குகிறாள் அவள். தலைவனின் நலத்தை நாடுகிறாள். நாமான் இதை உடனடியாகச் செயல்படுத்துகிறார். ஆனாலும், அவரிடம் மூன்று தயக்கம் இருந்திருக்க வேண்டும்: ஒன்று, சிறுமியின் பேச்சைக் கேட்பதா? என்பது. இரண்டு, வேற்று நாட்டுக்குச் செல்வதா? அப்படி என்றால், என் ஊர் மருத்துவத்தை நான் கேலி செய்வது போல் ஆகாதா? மூன்று, ஒருவேளை அங்கு சென்று சரியாகாவிட்டால் இந்த ஊர் இன்னும் அதிகம் கேலி பேசுமே? தயக்கங்களை ஒதுக்கிவிட்டு உடனே செல்கின்றார் என்றால் அவருடைய அவசியம் நமக்குப் புரிகிறது. சிரியா மன்னரும் பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்புகின்றார். நாமான் ஏறக்குறைய 400 கிலோ வெள்ளிக்காசு, 6000 பொற்காசுகள், 10 பட்டாடைகள் என எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். இறைவாக்கினருக்கு இவர் வழங்க நினைத்த பரிசாக இருக்கலாம் இது. இஸ்ரயேல் அரசன் பரிந்துரைக் கடிதம் பெற்றவுடன், ஆடைகளைக் கிழித்துக் கொண்டு சிரியா அரசன் தன்னை வம்புக்கு இழுப்பதாக நினைக்கிறார்: 'நானென்ன கடவுளா?' என்று கேட்கின்றார். அக்காலத்தில் தொழுநோய் குணமாக்க முடியாத நோயாக இருந்தது. கடவுள் மட்டுமே குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் இருந்தது. அரசன் தன்னுடைய ஆடைகளைக் கிழித்ததை எலிசா அறிகின்றார். கடவுளின் மனிதர் எப்படி தொடர்பில் இருக்கிறார் என்று பாருங்கள்! நாம் கடவுளோடு தொடர்பில் இருக்கும்போது மற்ற எல்லாத் தொடர்புகளும் மிகவும் பொருத்தமாகவும், ஒருங்கமைந்தும் இருக்கின்றன. ஆளனுப்பி, 'நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்' என்கிறார் எலிசா. 'இறைவாக்கினர் ஒருவர் உள்ளார்' என்றால், 'இறைவன் ஒருவர் உள்ளார்' என்று பொருள். ஆக, இப்போது சிரியாவின் கடவுளுக்கும் இஸ்ரயேலின் கடவுளுக்குமான போட்டியாக மாறுகிறது நிகழ்வு.

நாமான் படை பரிவாரங்களுடன் எலிசாவின் வீட்டு வாசலில்முன் வந்து நிற்கிறார். எலிசா பதற்றமில்லாம் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறார். படை பரிவாரங்களைக் கண்டு பயப்படவோ, அவனுடன் வந்திருக்கும் பரிசுகளைக் கண்டு கையேந்தவோ இல்லை. அவருடைய தன்மதிப்பைக் காட்டுகிறது இது. அல்லது கடவுளே போதும் என்றிருப்பவருக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்பதும், கடவுளுக்கு பணிகிற ஒருவர் வேறு எவருக்கும் பணியத் தேவையில்லை என்பதும் தெரிகிறது. தன்னுடைய வேலைக்காரர் ஒருவரை அனுப்பி, 'நீ போய் யோர்தானில் ஏழு முறை மூழ்கினால் உன் உடல் நலம் பெறும்' என்று சொல்லி விடுகின்றார். கூடவும் பேசவில்லை, குறைவாகவும் பேசவில்லை. நாமானுக்கு கோபம், சினம்! தன்னை இறைவாக்கினர் அவமானப்படுத்திவிட்டார் என்றும், என் படைவீரர்கள்முன் அவமானப்படுத்திவிட்டார் என்றும் கோபம்! மேலும், 'எங்க ஊர் ஆறுகளைவிடவா யோர்தான் சிறந்தது?' என்கிறார். யோர்தான் வெறும் ஓடைதான்! அப்பொழுது, அவருடைய வேலைக்காரருள் ஒருவர், 'எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குச் சொன்னால் செய்திருப்பீர் அல்லவா! குளிக்கிறதுதானே! குளித்துவிடுங்கள்!' என்கிறார். அங்கே சிறுமி! இங்கே வேலைக்காரர்! கடவுள் சின்னஞ்சிறியவர்கள் வழியாக அவரைத் தொடுகின்றார். நாமானின் குழந்தையுள்ளத்தை இங்கே பார்க்கிறோம். 'நீ யாருடா எனக்கு புத்தி சொல்ல!' என்று வேலைக்காரரைப் பார்த்துக் கோபிக்காமல், உடனே போய் யோர்தானில் மூழ்கி எழுகின்றார் ஏழுமுறை! அதிசயம்! அற்புதம்! அவருடைய தோல் சிறுபிள்ளையின் உடல் போல் மாறினது. சிறுமியின் வார்த்தையைக் கேட்ட வந்த பெரியவர் ஒருவரின் உடல் சிறுபிள்ளையின் உடல் போல மாறுகிறது - மிகப்பெரிய அற்புதம்! அந்த நேரம் அவர் தன்னுடைய அவமானம் எல்லாம் அழிந்ததாக உணர்ந்திருப்பார்! ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்! எல்லாரையும் கட்டிப்பிடித்துக் கதறியிருப்பார்! அங்கேயே மண்ணில் புரண்டு கொண்டாடியிருப்பார்! 'அவர் கடவுளின் அடியவரிடம் திரும்பினார்' என்று சொல்கிறார் ஆசிரியர். 'இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லை என உறுதியாக அறிந்துகொண்டேன்' என்கிறார். எவ்வளவு பெரிய வார்த்தைகள் இவை! தொழுநோயைக் கடவுள்தான் குணமாக்க முடியும். நான் எங்கெங்கோ சென்று குணமாகவில்லை. இங்கே குணமாகியிருக்கிறது. ஆக, இங்கே மட்டுமே இறைவன் இருக்கிறார். திரும்பி வந்தவர் அன்பளிப்புக்கள் கொடுக்கிறார் எலிசாவுக்கு. ஆனால், 'நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்!' என்கிறார் எலிசா. வற்புறுத்தியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது நாமான் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். 'இங்கிருந்து இரண்டு பொதி மண் எடுத்துச் செல்ல அனுமதியும்!' அந்த மண்ணில் இறைவன் குடியிருக்கிறார் எனவும், அந்த இறைவனைத் தான் வணங்க விரும்புவதாகவும் சொல்கின்றார். இறைவாக்கினரும் அனுமதிக்கின்றார்.

நாமான் நம்பிக்கையால் கடவுளின் அடியவரிடம் திரும்பி வருகின்றார். அவருக்கு நிகழ்ந்த அற்புதம் அவருடைய நம்பிக்கையை உறுதி செய்கிறது. அவர் உடல் அளவில் தொழுநோய் நீங்குகிறார். உள்ளத்தளவில் உண்மையான கடவுளைக் கண்டு கொள்கிறார். இவ்வாறாக, முதல் வருகை அவருடைய உடல் நோயையும், திரும்பி வருதல் அவருடைய உள்ளத்து நோயையும் குணமாக்குகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 2:8-13), நம்பிக்கையில் தான் பெற்றெடுத்த பிள்ளை திமொத்தேயுவிடம், 'நீ ஒரு நல்ல படைவீரனாய், விளையாட்டு வீரனாய், நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளராய் இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்துகின்ற பவுல், தான் சிறைப்பட்டிருப்பதையும் சொல்கின்றார். தொடர்ந்து, அக்காலத்தில் பரவலாக மொழியப்பட்ட இறையியல் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டுகின்றார்: 'நாம் அவரோடு இறந்தால் அவரோடு வாழ்வோம். அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார்' - இரண்டு நிபந்தனை வாக்கியங்கள் இவை. 'இதைச் செய்தால் அது நடக்கும்' என்று சொல்லிவிட்டு, 'நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது' என்று கடவுளின் நம்பகத்தன்மையை அடிக்கோடிடுகின்றார். இங்கே, 'அவரோடு இறத்தல்' என்பதை 'அவரிடம் திரும்பி வருதல்' என்று நாம் பொருள்கொள்ளலாம். நம்பிக்கை கொண்டால்தான் ஒருவர் அவரிடம் திரும்பி வர முடியும்.
திமொத்தேயு தன்னுடைய நம்பிக்கையால் கடவுளிடம் திரும்பி வர வேண்டும் என்று சொல்வதோடு, இதையே அவர் தன்னுடைய சபையிலும் கற்பிக்க வேண்டும் என்றும் சொல்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 17:11-19) முதல் வாசகத்தின் நீட்சியாக இருக்கிறது. இயேசு தொழுநோயாளர் ஒருவரைக் குணமாக்குவதை (காண். மத் 8:1-4) அல்லது தொழுநோயாளர்களைக் குணமாக்கும் அதிகாரத்தை திருத்தூதர்களுக்கு வழங்குவதை (காண். மத் 10:8) மத்தேயு நற்செய்தியில் பார்க்கிறோம். ஆனால், இயேசு பத்து தொழுநோயாளர்களைக் குணமாக்கும் நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இயேசு நயீன் நகர நுழைவாயிலில் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர்தந்த நிகழ்வின் இறுதியில், 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்' என்று மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இஸ்ரயேலில் பெரிய இறைவாக்கினர்கள் என்று மக்களால் எண்ணப்பட்டவர்கள் எலியாவும், எலிசாவும். இந்த இரண்டு இறைவாக்கினர்கள் செய்ததை இயேசுவும் செய்ததாக எழுதுவதன் வழியாக, இயேசுவை பெரிய இறைவாக்கினர் என்று அறிமுகம் செய்கிறார் லூக்கா. எலியா சாரிபாத்துக் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் தருகிறார் (காண். 1 அர 17:17-24). அதே போல இயேசு நயீன் நகரப் பெண்ணின் மகனுக்கு உயிர் தருகின்றார். எலிசா தொழுநோயாளர் நாமானுக்கு நலம் தருகிறார் (காண். முதல் வாசகம்). அது போல இயேசு பத்துத் தொழுநோயாளர்கள் நோயை நீக்குகின்றார். நாமான் சிரிய நாட்டினர் - புறவினத்தவர். இங்கே, திரும்பி வருகின்ற ஒருவர் சமாரியர் - புறவினத்தவர். அங்கே நாமான் யோர்தான் ஆற்றில் ஏழு முறை மூழ்கி ஏழுகின்றார். இங்கே இவர்கள் குருக்களை நோக்கிச் செல்கின்றனர். அங்கே நாமான் திரும்பி வந்து இஸ்ரயேலின் கடவுளே உண்மையான கடவுள் என அறிக்கையிடுகின்றார். இங்கே இவர் இயேசுவின் காலில் முகங்குப்புற விழுகின்றார் - கடவுளைத் தொழுதலின் அடையாளம். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார் லூக்கா. தொழுநோய் நீக்கிய அந்த நொடியில் அவரை எலிசா போன்ற இறைவாக்கினர் எனவும், தொழுநோய் நீங்கியவர் காலில் விழுவதால் யாவே கடவுள் போல இயேசுவே ஆண்டவர் என்றும் சொல்கின்றார்.

திரும்பி வந்த அந்த நபரை மட்டும் எடுத்துக்கொள்வோம். 'மற்ற ஒன்பது பேர் எங்கே?' மற்ற ஒன்பது பேர் இங்கே இல்லை. அவ்வளவுதான் விடை. மற்றவர்கள், 'இன்னும் நாங்கள் நலமாகவில்லை' என்றோ, அல்லது 'அவர் சொன்னபடி குருக்களிடம் செல்வோம்' என்றோ, அல்லது 'நலம் பெற்றாயிற்று. நாம் வீட்டிற்குச் செல்வோம்' என்றோ நினைத்திருக்கலாம். யாரையும் இயேசு திரும்பிவரச் சொல்லவில்லையே. அப்புறம் ஏன் இந்த ஒரு நபர் திரும்பி வந்தார்? இவர் சமாரியர் என்பதால் குரு இவரைச் சோதிக்கமாட்டார் என எண்ணி இயேசுவிடம் இவர் திரும்பினாரோ? ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவர் மற்றவர்களைப் போல இருக்கவில்லை. வித்தியாசமாக இருந்தார். அவர்கள் குருவைத் தேடிச் சென்றனர். இவரோ கடவுளைத் தேடி வந்தார். இதுதான் அந்த வித்தியாசம். முதலில், 'இயேசுவே நலம் தந்தார்' என நம்புகிறார். இரண்டாவது, 'நான் திரும்பிப் போவேன்' என முடிவெடுக்கின்றார். மூன்றாவது, 'நான் திரும்பிப் போனால் இவர் என்ன நினைப்பார் அவர் என்ன நினைப்பார்' என்று தன் கூட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் துணிவுடன் இயேசுவிடம் வருகின்றார். நான்காவது, 'நலம் பெற்ற பிறகு ஏன் தொழுநோயாளரின் குழு? உடனே புது வழியைத் தேடுவேன்' என தேடுகிறார் இயேசுவை. ஆக, இந்தச் சமாரியர் நமக்கு நன்றிக்கான பாடம் அல்ல. அதைவிட, நம்பிக்கைக்கான பாடம். மேற்காணும் நான்கு வழிகளும்தான் நம்பிக்கைக்கான வழிகள்.

ஆக, முதலில் இயேசுவிடம் வந்தபோது உடல்நலம் பெற்றவர், திரும்பி வந்தபோது உள்ள நலம் பெறுகின்றார்.

இன்று நாம் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் கடவுளிடம் வருகின்றோம். ஆனால், என்றாவது ஒருநாள் திரும்பி வந்திருக்கிறோமா? திரும்பி வருதலுக்கான அற்புதம் நம் வாழ்வில் நடந்ததா? நாம் கடவுளிடம் தினமும்கூட வரலாம். ஆனால், அவரிடம் திரும்பி வரும் அந்த ஒரு நாளே நம் வாழ்வைப் புரட்டிப் போடும். சில நேரங்களில் அற்புதங்கள் பெற்ற நமக்கு மற்ற வேலைகள் வந்துவிட்டதால் அல்லது மற்ற கவனச் சிதறல்கள் வந்துவிட்டதால் அவரிடம் திரும்பி வருவதற்கு நாம் தாமதம் செய்யலாம். அல்லது அவரிடம் திரும்பி வந்தார் இன்னும் அவர் நம்மைக் குணமாக்கிவிடுவார் என்ற பயத்தில், 'அரைகுறை குணமே போதும்' என்று ஓய்ந்திருந்து, நாமே நம் நோய்க்கு மருந்திட்டுக் கொள்ளும் மடமையில் இருக்கலாம்.

இன்று அவரிடம் திரும்பி வர நாம் என்ன செய்ய வேண்டும்?
அ. அவரால்தான் எல்லாம் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும் - இந்த நம்பிக்கை நாமானுக்கும், பவுலுக்கும், திமொத்தேயுவுக்கும், சமாரியருக்கும் இருந்தது. தொழுநோய் என்பது தோலை மூடும் அல்லது சிதைக்கும் ஒரு திரை. நம்பிக்கையின்மைகூட தொழுநோய்தான். கடவுளை அது நம் வாழ்விலிருந்து மூடிவிடுகிறது அல்லது கடவுளின் முகத்தை அடையாளம் தெரியாதவாறு சிதைத்துவிடுகிறது. இதிலிருந்து வெளிவர நாம் சில நேரங்களில் கொஞ்சம் நடந்தால் போதும். இன்னும் சில நேரங்களில் நாம் ஏழு முறை மூழ்கி எழ வேண்டிய நிலையும் வரும். ஆனால், அற்புதம் நடந்தவுடன் அங்கே அவரின் கைவன்மையைக் காண வேண்டும். 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' (திபா 118:23) என்று ஆச்சர்யப்பட வேண்டும்.

ஆ. அவரோடு இணைய வேண்டும் - முதலில் 'அவரால்தான்' என்று அறிகின்றோம். பின், 'அவரோடு' என இணைந்துகொள்ள வேண்டும். இரண்டு பொதி மண் எடுத்துக் கொண்டு தன் நாட்டிற்குச் செல்வதன் வழியாக எப்படியாவது இஸ்ரயேலின் கடவுளோடு தன்னை இணைத்துக்கொள்கிறார் நாமான். இயேசுவின் காலடிகளில் விழுந்து நன்றி செலுத்துவதன் வழியாக அவரோடு தன்னை இணைத்துக்கொள்கிறார் சமாரியர். இன்று நான் இயேசுவோடு என்னை இணைத்துக்கொள்கின்றேனா? எந்த அளவிற்கு?

இ. அவரே என்று நம் வழி புறப்பட வேண்டும் - குணம் பெற்ற நாமான் எலிசாவிடமும், சமாரியர் இயேசுவிடமும் தங்கிவிடவில்லை. தங்கள் வழி திரும்புகின்றனர். மீண்டும் தங்கள் வாழ்வை வாழப் புறப்படுகின்றனர். 'நானே' என்று வாழ்ந்தவர்கள் 'அவரே' என்று வாழப் புறப்படுகின்றனர்.

இவ்வாறாக, 'அவரால்,' 'அவரோடு,' 'அவரே' என்ற இறைமையமே நம்மை திரும்பி வரச் செய்கிறது. நலமுடன் திரும்பி வருக! ஏனெனில், திரும்பி வருதலே நலம்!
 
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
பொதுக்காலம் 28ம் ஞாயிறு - 09.10.2022

I 2 அரசர்கள் 5: 14-17
II 2 திமொத்தேயு 2: 8-13
III லூக்கா 17: 11-19


நன்றியுணர்வும் நலமான வாழ்வும்
எத்தனை பேர் நன்றி சொன்னார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு மிக்சிகன் ஏரியில் சென்றுகொண்டிருந்த " லேடி எல்கின்" என்ற படகானது எதிர்பாராத விதமாக உடைந்து, ஏரிக்குள் மூழ்கத் தொடங்கியது. அந்தப் படகில் பயணம் செய்த பயணிகள் யாவரும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, அதே படகில் பயணம் செய்த ஸ்பென்சர் என்ற இளைஞன் பதினேழு பேர்களைக் காப்பாற்றிக் கரையில் கொண்டு போய்ச் சேர்ந்தான். இதனால் அவனுடைய உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்குப் பிறகு ஸ்பென்சர் என்ற அந்த இளைஞனுக்கு அறிமுகமான பெரியவர் ஒருவர் அவனிடம் வந்து, ",ஏரியில் நடந்த விபத்தில் நீ உன் உயிரைப் பணயம் வைத்துப் பதினேழு பேர்களைக் காப்பாற்றியதாகக் கேள்விப்பட்டேன். அவர்களில் எத்தனை பேர் உனக்கு நன்றி சொல்ல வந்தார்கள்?", என்று கேட்டார். இளைஞன் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். பின்னர் அவன் அவரிடம், ",யாவருமே வரவில்லை", என்பதுபோல் கையை அசைத்தான். அதைப் பார்த்துவிட்டுப் பெரியவர் அதிர்ந்துபோனார்.

கடவுளிடமிருந்தும் சகமனிதர்களிடமிருந்தும் ஏராளமான நன்மைகளைப் பெறுகின்றவர்கள் அதற்கு நன்றி சொல்கின்றார்களா? என்றால், இல்லை என்றே பதில் வரும். பொதுக் காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நன்றியுணர்வோடு இருப்பவர்கள் நலமான வாழ்வினைப் பெறுகிறார்கள் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

பிறவினத்தாரின் நன்றியுணர்வு:
",நன்றியுணர்வே நற்பண்புகளின் தாய்", என்று பேரறிஞர் சிசரோ சொல்வார். அது முற்றிலும் உண்மை. ஏனெனில், நன்றியுணர்விலிருந்தே ஆண்டவரைப் புகழ்தல், மனநிறைவு, மகிழ்ச்சி போன்ற நற்பண்புகள் பிறப்பெடுக்கின்றன. ஒருசிலர், ",கடவுள் எங்களுக்குப் பெரிதாக என்ன செய்துவிட்டார்? நான் அவருக்கு நன்றி சொல்ல?", என்று கேட்பதுண்டு கடவுள் நமக்கு எவ்வளவு நன்மைகளைச் செய்திருக்கின்றார் என்பது முக்கியமல்ல. மாறாகப் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம் என்பது முக்கியம்.

ஆண்டவரின் அடியாரான எலிசாவின் வாக்கிற்கிணங்க, தொழுநோயால் பாதிக்கப்பட்ட சிரியா நாட்டுப் படைத்தலைவனான நாமான் யோர்தான் ஆற்றில் ஏழு முறை மூழ்கி எழுகின்றான். அவன் மூழ்கி எழுந்ததும், தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவனுடைய உடல் சிறுபிள்ளையின் உடல் போன்று ஆகின்றது. இதைத் தொடர்ந்து அவன் தனது நன்றியுணர்வின் அடையாளமாக, தன் பரிவாரங்களுடன் அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு எலிசா இறைவாக்கினரிடம் வருகின்றான். அவரோ, " புகழ் அனைத்தும் ஆண்டவர் ஒருவருக்கே" என்று அவன் கொடுத்த அன்பளிப்புகளை வாங்க மறுத்துவிடுகின்றார்.

நற்செய்தியில் இயேசு பத்துப் பேர்களிடமிருந்து தொழுநோயை நீக்கியிருக்க, அவர்களில் ஒருவர் மட்டுமே, அதுவும் அன்னியராகிய சமாரியர் மட்டுமே இயேசுவுக்கு நன்றி செலுத்த வருகின்றார். இவ்வாறு முதல் வாசகத்தில் வரும் நாமானும், நற்செய்தியில் வரும் சமாரியரும் பிறவினத்தாராக இருந்தாலும், தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்குக் கடவுளுக்கு நன்றியுடையவர்களாக இருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.

கடவுளுக்கு நன்றி செலுத்துவதால் அவரது மாட்சியை ஏற்றம் பெறுமா? என்ற கேள்வி எழலாம். கடவுளுக்கு நன்றி செலுத்துவதால் அவரது மாட்சி ஏற்றம் பெறாது. மாறாக. அது நாம் மீட்படைய அது பயன்படுகின்றது. அதனால் நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்வோம்.

யூதர்களின் நன்றியின்மை:
சிரியா நாட்டுப் படைத்தளபதியான நாமான் தன்னுடைய நன்றியுணர்வினால் மட்டுமல்ல, ",ஆண்டவரைத் தவிர வேறு தெய்வங்களுக்கு எரிபலியோ, வேறு பலியோ செலுத்த மாட்டேன்", என்று சொன்னதாலும் உயர்ந்து நிற்கின்றான். இந்தப் பின்னணில் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்கள், அவருக்கு நன்றியோடும் உண்மையோடும் இருந்தார்களா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆண்டவராகிய கடவுள் மோசேயிடம், ",நானே உன் கடவுளாகிய ஆண்டவர். அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது", (விப 20:1-3) என்று சொல்லியிருந்தார். ஆனால், இஸ்ரயேல் மக்களோ, தங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை வழங்கிய கடவுளை மறந்து, பாகால் தெய்வத்தை வழிபட்டார்கள்; அவருக்கு உண்மையில்லாமல் இருந்தார்கள் (1 அர 18:21).

நற்செய்தியில் இயேசுவிடமிருந்து நலம்பெற்றவர்களில் சமாரியர் ஒருவரைத் தவிர்த்து மற்ற ஒன்பது பேர்களும் யூதர்கள். தொழுநோய் என்பது அந்தக் காலகட்டத்தில் உடல் நோயாக மட்டுமல்லாமல், கடவுளின் சாபமாகவும் பார்க்கப்பட்டது. அதனால் அவர்கள் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டார்கள் (லேவி 13:46, எண் 5:23). இப்படி உடலளவிலும் மனத்தளவிலும் பாதிக்கப்பட்டு, தீண்டத் தகாதவர்களைப் போன்று கருதப்பட்ட ஒன்பது யூதர்களுக்கு இயேசு நலமாளித்தார் எனில், அவர்கள் அவருக்கு எந்தளவுக்கு நன்றியுள்ளவர்களாக இருந்திருக்கவேண்டும்! ஆனால், அவர்கள் அவ்வாறு இல்லாமல் போனதே மிகவும் வேதனை கலந்த உண்மை. இதனால் அந்த ஒன்பது யூதர்களும் சமாரியரைப் போன்று முழுமையாக அல்லது உடல் உள்ள நலம் பெறாமல் போகின்றார்கள். இதன்மூலம் நன்றியுணர்விற்கும் நலமான வாழ்விற்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆண்டவரில் நிலைத்திருப்போம்.
" பலர் ஆண்டவரிடமிருந்து நன்மைகளைப் பெற்றும், அவருக்கு நன்றி செலுத்தாமல் இருக்கின்றார்களே! அது ஏன்?" என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கான பதிலைப் பவுல் இன்றைய இரண்டாம் வாசத்தில் கூறுகின்றார்.

",ஆண்டவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செலுத்துவோம்", என்று சொல்லும் பவுல், மறைமுகமாக ஆண்டவரோடு நிலைத்திராத ஒருவரே ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதில்லை என்கின்றார். இயேசு கிறிஸ்து இறந்து உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியை மக்களுக்கு அறிவித்ததற்காகப் பவுல் சிறைத் தண்டனை உட்பட பலவிதமான துன்பங்களையும் அனுபவித்தார். அவர் ஆண்டவரில் நிலைத்திருந்தாலேயே அவரால், ",எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்", (1 தெச 5:18) என்று சொல்ல முடிந்தது. நாமும் பவுலைப் போன்று ஆண்டவரில் நிலைத்திருந்தால், அவரைப் போன்று எல்லாச் சூழ்நிலையிலும் அவருக்கு கூறமுடியும். ஏனெனில், நன்றியுணர்வே நலமான வாழ்விற்கு அடிப்படை!

சிந்தனைக்கு:
" நான் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம், நான் நன்றியுணர்வுடன் இருப்பதால்தான்! நான் எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன். ஏனெனில், அதுவே என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றது" என்பர் வில் அர்னட் என்ற அறிஞர். எனவே, நாம் நம்முடைய வாழ்வில் ஏரளாமான நன்மைகளைச் செய்திருக்கும். ஆண்டவருக்கும், அடுத்திருப்பவருக்கும் நன்றியுணர்வோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 

இறைவனுக்கு நன்றி கூறுவோமா?

சூஃபி ஞானி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் பக்கத்து ஊரில் போதித்துவிட்டு, இரவில் நெடுநேரம் கழித்து, தான் இருந்த இல்லத்திற்குத் திரும்பினார். அன்று அவர்க்கு கடுமையாகப் பசியெடுத்தது. அதனால் அவர் உணவுக்குப் பொறுப்பாக இருந்த சீடரை எழுப்பி, ",சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா?", என்று கேட்டார். அதற்குச் சீடர், ",குருவே! என்னை மன்னிக்கவேண்டும். வீட்டில் இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன... உணவுப் பொருள்களை வாங்குவதற்கும் இப்பொழுது காசு இல்லை", என்றார்.

ஞானி அவரிடம் எதுவும் பேசாமல், தரையில் முழந்தாள் படியிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்கினார். சீடர்க்கு வியப்பாக இருந்தது. 'இவர்தான் ஒன்றுமே சாப்பிடவில்லையே! அப்புறம் எதற்கு சாப்பிட்டு முடித்துவிட்டு வழக்கமாகச் சொல்லும் மன்றாட்டைச் சொல்கிறார்' என்று அவரையே பார்த்தார். ஞானி இறைவனுக்கு நன்றிகூறி முடித்ததும், சீடர் அவரிடம், ",நீங்கள்தான் எதுவும் சாப்பிடவில்லையே! பிறகு எதற்கு சாப்பிட்டு முடித்ததும் வழக்கமாகச் சொல்லும் நன்றி மன்றாட்டைச் சொன்னீர்கள்?", என்றார். உடனே ஞானி அவரிடம், ",இப்பொழுது எனக்கு சாப்பிடுவதற்கு உணவுதான் இல்லையே ஒழிய, சாப்பிடும் விரும்பம் (Appetite) நிறைய இருக்கின்றது. எத்தனையோ மனிதர்கட்கு சாப்பிடுவதற்கு உணவு இருந்தும், சாப்பிடும் விருப்பம் இருப்பதில்லையே! அப்படிப்பட்ட மனிதர்கட்கு நடுவில், இறைவன் எனக்குச் சாப்பிடும் விருப்பத்தைக் கொடுத்திருக்கின்றாரே, அதற்குத்தான் நான் அவர்க்கு நன்றிகூறினேன்", என்றார். இதைக் கேட்டு சீடர் குருவின் உள்ளத்தில் பொங்கி வழிந்த நன்றிப் பெருக்கை எண்ணி வியந்து நின்றார்.

இறைவன் நமக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கின்றார், அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, இறைவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் உதவியை நாடுதல்
இயேசு கலிலேயா மற்றும் சமாரியா வழியாக எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், ஓர் ஊருக்குள் நுழைந்ததும், பத்துத் தொழுநோயாளர் அவரை எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, ",ஐயா! இயேசுவே, எங்கட்கு இரங்கும்", என்று வேண்டுகிறார்கள். இவ்வாறு வேண்டி நின்ற அந்தப் பத்துத் தொழுநோயாளர்களிடம் இயேசு என்ன கூறினார் என்று சிந்தித்துப் பார்க்கும் முன்னம், இஸ்ரயேல் சமூகத்தில் தொழுநோயாளர்களின் நிலை எப்படி இருந்தது எனத் தெரிந்துகொள்வது நல்லது.

தொழுநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்றால், அவர் தீட்டானவராகக் கருதப்படுவார். அதனால் அவர் ஊருக்கு வெளியில், கிழிந்த உடை அணிந்துகொண்டு, தலை வாராமல், மேலுதட்டை மறைத்துக்கொண்டு, ",தீட்டு, தீட்டு", என்று குரலெழுப்ப வேண்டும் (லேவி 13: 45). அவ்வாறு அவர் குரலெழுப்புவதற்கு முக்கியமான காரணம், யாரும் அவரை நெருங்கிவிடக்கூடாது என்பதால்தான். இப்படியொரு மோசமான நிலையில் வாழ்ந்துவந்த தொழுநோயாளர் வெறுமனே உடல் வேதனையை மட்டும் அனுப்பவிக்க வில்லை; மக்களால் புறக்கணிக்கப்பட்டு, மனவேதனையையும் அனுபவிக்கும் நிலைக்கு ஆளானார். நற்செய்தியில் வருகின்ற பத்துத் தொழுநோயாளர்களும் இதே போன்றுதான் உடலளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் கொடுமைகளை அனுபவித்திருக்கவேண்டும். அதனால்தான் அவர்கள் 'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்", என்ற வார்த்தைகளைச் சொல்லி உரக்க வேண்டுகிறார்கள்.

பத்துத் தொழுநோயாளர்களும் இயேசுவைப் பார்த்து, 'ஐயா' என்று சொல்லி வேண்டுவது லூக்கா நற்செய்தியில் சீமோன் பேதுரு 'ஐயா' (லூக் 5:5) என்று சொல்வதை ஒத்திருக்கின்றது. 'ஐயா' என்ற சொல், இயேசு இயற்கையின்மீதும் சாவின்மீதும் நோயின்மீதும் அதிகாரம் கொண்டிருப்பவர் என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது. இயேசுவால் தங்களுடைய நோயைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவர்கட்கு இருந்தது. அந்த ந்மபிக்கையில்தான் அவர்கள் இயேசுவிடம் வருகின்றார்கள்.

இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால் நலம்
மக்கள்மீது அதிலும் குறிப்பாக தொழுநோயாளர்கள் உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்மீது பரிவுகொள்ளும் இயேசு (மாற் 1: 41; 6:24) இன்றைய நற்செய்தியிலும் தன்னிடம் வரக்கூடிய தொழுநோயாளர்கள்மீதும் பரிவு கொள்கின்றார். அவர்கள்மீது இயேசுவின் பரிவு எப்படி வெளிப்பட்டது என்பதை, அவர் அவர்களைப் பார்த்(து)தார் என்ற வார்த்தைகளில் நாம் அறிந்துகொள்ளலாம். வழக்கமாகத் தொழுநோயாளர்களைக் கண்டாலே மக்கள் தங்களது முகத்தை மறைத்துகொள்வர். ஆனால், இயேசு மற்ற மக்களைப் போன்று இல்லாது, தொழுநோயாளர்களைப் பார்த்து, ",நீங்கள் போய் உங்களைக் குருவிடம் காண்பியுங்கள்", என்கின்றார். அவர்களும் இயேசுவின் வார்த்தைகட்குக் கீழ்ப்படிந்து தங்களைக் குருவிடம் காண்பிக்கச் செல்கின்றார்கள். அவர்கள் போகிற வழியிலேயே அவர்களுடைய நோய் நீங்குகிறது. இவ்வாறு அவர்கள் இயேசுவின் வார்த்தைகட்குக் கீழ்படிந்ததால் தொழுநோய் நீங்கப் பெறுகின்றார். இதுவரைக்கும் அந்தப் பத்துத் தொழுநோயாளர்களும் ஒன்றுபோலவே இயேசுவிடம் வருகின்றார்கள்; ஒன்று போலவே குருவிடம் காண்பிக்கச் செல்கின்றார்கள். எப்பொழுது அவர்களிடமிருந்து தொழுநோய் நீங்கியதை அவர்கள் உணர்ந்தார்களோ அவர்களுடைய செயலில் மாற்றம் ஏற்படுகின்றது. அவர்களுடைய செயலில் ஏற்பட்ட மாற்றம் என்ன...? அதனால் அவர்கட்கு விளைந்தது என்ன என்பதைத் தொடர்ந்து சிந்தித்து பார்ப்போம்.

இயேசுவிற்கு நன்றி செலுத்தியதால் பாவம் நீங்கப் பெற்ற சமாரியர்
இயேசுவின் கட்டளைப்படி அந்தப் பத்துத் தொழுநோயாளர்களும் தங்களைக் குருவிடம் காட்டுவதற்குச் செல்கின்றபோது, அவர்களுடைய தொழுநோய் நீங்குகின்றது. அப்பொழுது சமாரியரைத் தவித்து மற்ற ஒன்பது பேர், 'தாங்கள் விரும்பியது நிறைவேறிவிட்டது' என்று தங்கட்கு நலம் தந்த இயேசுவை மறந்துவிட்டு தங்களுடைய வழியில் போய்விடுகின்றார்கள். ஆனால், அவர்களில் இருந்த இந்த ஒரு சமாரியர், 'இயேசுவால்தான் தனக்கு நலம் கிடைத்தது' என்று நன்றிப் பெருக்கோடு அவரிடம் வந்து, அவருடைய காலில் விழுந்து தன்னுடைய நன்றியைச் செலுத்துகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், ",எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது", என்கின்றார். இங்கு இயேசு அந்த சமாரியரிடம் சொல்கின்ற வார்த்தைகள், இயேசு தன்னுடைய காலடிகளைக் கழுவிய 'பாவிப் பெண்ணிடம் சொன்ன 'உமது நம்பிக்கை உம்மை மீட்டது' (லூக் 7: 50) என்ற வார்த்தைகளை ஒத்திருக்கின்றது. ஆம், இயேசு எப்படி பாவிப்பெண்ணின் பாவங்களை மன்னித்து, அவர்க்கு மீட்பினை அளித்தரோ, அதுபோன்று நன்றிப் பெருக்கோடு இருந்த சமாரியர்க்கு பாவத்திலிருந்து விடுதலை அளித்து, மீட்பினை வழங்குகின்றார். அப்படியானால், நாம் இயேசுவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தோமெனில், நமக்கு நலமான வாழ்வு அமைவதோடு மட்டுமல்லாமல், அவர் நமக்கு வழங்கும் மீட்பும் கிடைக்கும் என்பது உறுதி. இன்றைக்குப் பலர் இயேசுவிடமிருந்து நலம் பெற்று, அவர்க்கு நன்றி செலுத்த வராத ஒன்பது பேரைப் போன்று நன்றியுணர்வு இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள். எந்த உள்ளத்தில் நன்றியுணர்வு இல்லையோ, அந்த உள்ளத்தில் சாத்தான் மிக எளிதாகக் குடிபுகுந்துவிடும் என்பார்கள் பெரியோர். ஆகையால், இறைவன் நமக்குச் செய்த ஏராளமான நன்மைகள் நினைத்து, திருப்பாடல் ஆசிரியரைப் போன்று (திபா 107:8), சமாரியரைப் போன்று நன்றி செலுத்துவோம்; மனநிறைவு நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வோம்.

சிந்தனை
'மனிதனிடமுள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி மற்றும் வேறு எந்தத் தீமையை விடவும், நன்றி மறத்தல் மிகவும் மோசமானது. ஏனென்றால், அது அவனுடைய வாழ்வையே அழித்துவிடும்' என்பார் ஷேக்பியர். எனவே, நன்றி மறந்தவர்களாய் அழிந்து போகாமல், நன்றி உள்ளவர்களாய் இருந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
விண்ணரசின் மதிப்பை உணராமல் வாழும் மானிடர்கள்!

நிகழ்வு
ஜூலியன் என்றொரு பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவருக்கு ஒரு பண்ணை வீடு இருந்தது. அந்தப் பண்ணை வீட்டில்தான் இவர் தன்னுடைய பெரும்பாலான நேரங்களைச் செலவழித்தார். இவருடைய பண்ணை வீட்டின் ஒருபுறம் அருமையானதொரு தோட்டம் இருந்தது. அதில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. பண்ணை வீட்டின் இன்னொரு பக்கம், மீன்குளம் ஒன்று இருந்தது. அதில் அரியவகை மீன்களெல்லாம் இருந்தன.

இப்படிப்பட்ட ஓர் அருமையான பண்ணைவீட்டில் எப்பொழுதும் இருந்து பழகியதால், ஜூலியனுக்கு அந்தப் பண்ணைவீடு பிடிக்காமல் போனது. அதை எப்படியாவது விற்றுவிட்டு, வேறோர் இடத்தில் நிலம் வாங்கிப் பண்ணை டு கட்டி அதில் வாழலாம் என்று முடிவுசெய்தார் ஜூலியன். இதைத் தொடர்ந்து இவர், நிலங்களை வாங்கி விற்கும் ஓர் இடத் தரகரிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் இவரிடம் ",அப்படியே செய்துவிடுவோம்", என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

மறுநாள் செய்தித்தாளில் இப்படியொரு விளம்பரம் வந்திருந்தது: ",பண்ணை வீடு ஒன்று விற்பனைக்கு வருகின்றது. அதன் ஒருபுறம் அருமையான தோட்டமும், இன்னொரு புறம் மீன் குளமும் உள்ளது. சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் இந்தப் பண்ணை வீட்டின் விலை மிகவும் குறைவுதான். இதை வாங்க விருப்பமுள்ளோர் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை அழைக்கவும்.",

செய்தித்தாளில் வந்த இந்த விளம்பரத்தைப் பார்த்ததும், ஜூலியன் மிகவும் உற்சாகமடைந்து, " எப்படியாவது அந்தப் பண்ணை வீட்டை வாங்கிவிடவேண்டும்" என்று நினைத்துக்கொண்டு, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசினார். கடைசியில்தான் தெரிந்தது, அது தன்னுடைய பண்ணை வீடுதான் என்று. இப்படிப்பட்ட பண்ணை வீட்டையா நாம் விற்கத் துணிந்தோம் என்று நினைத்து, ஜூலியன் தன்னுடைய பண்ணை வீட்டை விற்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ஜூலியன், எப்படித் தன்னுடைய பண்ணை வீட்டின் அருமையையும் மகத்துவத்தையும் உணராமல் இருந்தாரோ, அப்படித்தான் இன்றைக்குக் பல கிறிஸ்தவர்கள் விண்ணரசின் மகத்துவத்தை உணராமல் வாழ்த்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எல்லாருக்கும் உரிய விண்ணரசின் மகத்துவத்தை நாம் உணரவும், அந்த விண்ணரசில் நாம் பங்குபெற என்ன செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கொடுக்கப்பட்ட அழைப்பைப் புறக்கணிக்கும் மக்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, விண்ணரசைப் பெரிய விருந்துக்கு ஒப்பிடுகின்றார். இந்த உவமையில் வருகின்ற மன்னர் தன்னுடைய மகனுக்கு நடத்திய திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்கு, ஏற்கெனவே அழைப்புப் பெற்றிருந்தவர்களிடம். " விருந்து ஏற்பாடாகிவிட்டது" என்ற செய்தியைச் சொல்ல தன் பணியாளர்களை அனுப்பி வைக்கின்றார். ஆனால், அழைப்புப் பெற்றவர்களோ மன்னர் அனுப்பி வைத்த பணியாளர்களிடம் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி திருமண விருந்துக்குக் வராமல் போகின்றார்கள். இன்னும் ஒருசிலர் அனுப்பப்பட்டவர்களைப் பிடித்துக் கொலைசெய்கின்றார்கள்.

இங்கு மன்னர் ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்து என்பது விண்ணரசைக் குறிக்கின்றது; அழைப்புப் பெற்றவர்கள் யூதர்களைக் குறிக்கின்றார்கள். யூதர்கள் கடவுளால் சிறப்பாக அழைப்புப் பெற்றிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர்களைப் பிடித்துக் கொன்றொழிக்கின்றார்கள். இதனாலேயே அவர்களுக்கு கிபி. 70 ஆம் ஆண்டு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. அன்று யூதர்கள் கடவுளின் அழைப்பைப் புறக்கணித்ததுபோல், இன்று நாம் விண்ணரசில், ஆண்டவருடைய திருவிருந்தில் கலந்துகொள்ளாமல், ஏதோவொரு சாக்குப் போக்கைச் சொல்லிப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலையை நாம் மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது.

விண்ணரசில் எல்லாருக்கும் இடமுண்டு
திருமண விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்கள் அதாவது யூதர்கள் கடவுளின் அழைப்பு உதறித் தள்ளியதால், அந்த அழைப்பானது எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது. இதன்மூலம் விண்ணரசு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அது எல்லா மக்களுக்கும் உரியது என்ற செய்தியானது சொல்லப்படுகின்றது. இந்த உண்மையை, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இன்னும் அழகாக, ஆழமாக எடுத்துக்கூறுகின்றது.

",படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்", என்று இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற வரிகள், விண்ணரசு மக்கனினங்கள் அனைவருக்கும் உரியது என்ற செய்தியை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றது. மேலும் இந்த விருந்தில் கலந்துகொள்வோருடைய முகத்தை மூடியுள்ள முக்காட்டையும், துன்ப துகிலையும் அகற்றி, கண்ணீரைத் துடைத்துவிடுவார் என்கின்றார் ஆண்டவர்.

இப்படி எல்லாருக்கும் உரிய... நம்முடைய துன்ப துயரங்கள் எல்லாம் நீங்கும்... திருவிருந்தில் அல்லது விண்ணரசில் பங்குபெறுவதற்கு நமக்கு ஒரு முக்கியமான தகுதி அல்லது நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அது என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

விண்ணரசில் பங்குபெற தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டும்
மன்னர் கொடுத்த விருந்தை, அழைப்புப் பெற்றவர்கள் புறக்கணித்ததால், மன்னர் தன் பணியாளரிடம், ",நீங்கள் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் அழைத்து வாருங்கள்", என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். மன்னர் செய்த இத்தகையதொரு செயல், விண்ணரசு எல்லாருக்குமானது என்ற செய்தியை உணர்த்துகின்றது என்று மேலே பார்த்தோம். இவ்வாறு சாலையோரங்களில் இருந்து அழைக்கப்பட்டவர்களுள் ஒருவர், திருமண ஆடையின்றி இருப்பதைக் கண்டு, அவரை இருளில் தள்ளுமாறு தன்னுடைய பணியாளர்களுக்குக் கட்டளையிடுகின்றார் மன்னர்.

மன்னரின் இச்செய்தி, விண்ணரசு எல்லாருக்கும் உரியது என்றாலும், அதில் கலந்துகொள்வதற்கு தகுதி வேண்டும் என்ற செய்தியை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. இங்கு திருமண ஆடை அல்லது விண்ணரசுக்குள் நுழைவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய தகுதி " நேர்மை" என்று திருவிவிலிய அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இறைவாக்கினர் எசாயா நூல் 61: 10 இல் வருகின்ற, ",நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்", என்ற வரிகளோடு இணைத்துப் பார்ப்பது நல்லது. திருமண விருந்தில் பங்கு பெறுவதற்குத் திருமண ஆடை எப்படித் தேவையானதாக இருக்கின்றதோ, அப்படி நாம் விண்ணரசுக்குள் நுழைய நேர்மை என்ற பண்பானது தேவையானதாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மை இல்லாமலும், உண்மை இல்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையை நாம் நம்மிடமிருந்து தவிர்த்து, நேர்மையோடு வாழ்ந்து கடவுள் தருகின்ற விண்ணரசை உரிதாக்கிக் கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை
" கடவுள் படைப்பில் நேர்மையான மனிதனே, தலைசிறந்தவன்" என்பார் போப் என்ற அறிஞர். ஆகையால், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மையோடு நடந்து, இறைவன் தருகின்ற விண்ணரசை உரித்தாக்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை

கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு திடீரென ஒரு அச்சம் தோன்றியது: கடலில் விழுந்து விட்டால் தான் எப்படி உயிர் பிழைப்பது என்ற எண்ணம் அவனை வாட்டியது. கப்பல் தலைவனிடம் சென்று தன் அச்சத்தை விளக்கினான். கவலைப்படாதே , உனக்குத்தான் நன்கு நீந்தத் தெரியுமே என்றான் கப்பல் தலைவன். உடனே அவன், இல்லை ! நேற்று கூட நன்கு நீந்தத் தெரிந்த ஒருவன் கடலில் விழுந்து மூழ்கி இறந்து போனானே என்றதற்கு கப்பல் தலைவன் அம்மனிதன் கடலில் வீழ்ந்தபோது தன்னுடைய பொருட்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை தன் இரு கைகளிலும் பிடித்திருந்தான். அப்பெட்டிகளின் எடை அவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவேதான் எங்களால் கூட அம்மனிதனைக் காப்பாற்ற இயலவில்லை என்று சொன்னான். இக்கதை தரும் பாடத்தை நமக்கு அளிப்பதே இன்றைய வாசகங்கள். மனிதன் படைக்கப்பட்ட போது கள்ளங்கபடம் இல்லாமல் (Innocence) இருந்தான். அவன் வளர வளர அவனுக்குள் பல மூட்டைகள் ஏறிக் கொண்டன. நல்லவைகள் பஞ்சு மூட்டையைப் போல இலேசாக இருந்தன. தீயவையே பாறாங்கற்களைப்போல கடினமாயின. இதுபோன்ற மூட்டைகள் அவனுக்குள் இருக்கும் வரை குழப்பம்தான்.

கட்டளைகளை யெல்லாம் கடைப்பிடித்த இளைஞன் ஒருவனுக்குத் தனக்கு நிலைவாழ்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆண்டவர் இயேசுவிடம் சென்று வினவினான். பாதி கிணற்றைத் தாண்டும் சக்தி கொண்ட அவுனுக்கு மீதிப் பாதி கிணற்றைத் தாண்ட ஆண்டவர் வழிவகைச் சொன்னார். உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற்.10:21) என்றார். ஆண்டவர் காட்டிய வழி அவனுக்கு உகந்ததாக இல்லை. நீ கட்டளைகளையெல்லாம் கடைப்பிடிப்பதால் மீட்பு அடைந்துவிட்டாய் என்று இயேசு சொல்வார் என்று எண்ணி வந்த இளைஞனுக்கு, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தையும் இழக்கச் சொல்கிறாரே என்று முகம் வாடி வருத்தத்தோடு சென்றான்.

நாமும் மீட்படைய வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை மீட்க வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். அவ்விருப்பத்தை நிறைவேற்ற இயேசு தன்னுயிரைத் தந்தார். இன்னும் குறைவாக இருப்பது என்ன? நம் ஒத்துழையாமை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் சேகரித்தவற்றை, நாம் அடைந்தவற்றைக் காப்பாற்றுவதற்காக நாம் நடத்துகின்ற போராட்டம் பெரிது. நாம் சேர்த்தவைகள்: பணம், பதவி, படிப்பு, பட்டம், பகைமை, சொத்து, சொந்தம்... போன்ற சுமைகளே நம்மை மூழ்கடிக்கும். இவற்றையெல்லாம் விடுத்துக் கள்ளம் கபடற்ற முதல் நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அறிவு நம்மை அனைத்தையும் துறக்க வைக்கும். வளர்ந்தாலும், பெரியவரானாலும் ஞானம் என்கிற கொடை நம்மைக் குழந்தைகளாக்கும். இது தனி மனித முயற்சியால் இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் (மாற் 10:27). பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற் 10:21) என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம்.
 


அமெரிக்கா ஜனாதிபதியாக ஆகுமுன் ஆப்ரகாம் லிங்கன் ஒரு தடவை உணவருந்த ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தார். உணவு அருந்தியபின், உணவுக்கு உரிய பணத்தை சர்வரிடம் கொடுத்து, உன் அன்பான சேவைக்கு நன்றி' என்று சொன்னார். அந்தப் பணியாளர் உள்ளத்தில் பெருமகிழ்ச்சியோடு, 'ஐயா! நான் இந்த உணவு விடுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். இங்கு வரும் ஒவ்வொருவரையும் அன்போடு உபசரித்துள்ளேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் அன்பாகப் பேசி, எனக்கு நன்றி சொன்னீர்கள். உங்களை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்' என்றான். மறு ஆண்டே ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நன்றியுள்ளவர்கள் அனைவராலும் போற்றப் படுவார்கள்! எல்லா பண்புகளுக்கும் தாயாக இருப்பது நன்றிதான் என சீசர் கூறுகிறார். எத்தகைய குற்றங்களுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் செய் நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிறார் திருவள்ளுவர்.

இறைவாக்கினர் எலிசா சீரியா நாட்டு நாமான் என்பவனைக் குணமாக்குகிறார். நாமான் திரும்பி வந்து நன்றி கூறி, அன்பளிப்பு வழங்குகிறார். ஆனால் எலிசா அன்பளிப்பை வாங்க மறுத்தபோது, இஸ்ரயேலின் கடவுள் ஒருவரே உண்மையான கடவுள், (2 அர. 5:15) என்று அறிக்கையிடுகிறார் நாமான். இவர் ஒரு யூதரல்லாத பிறவினத்தைச் சேர்ந்தவர் (முதல் வாசகம்).

இன்று வாசித்த நற்செய்தியிலே, இயேசு பத்து தொழு நோயாளிகளைக் குணமாக்குகிறார். குணம் பெற்றவர்களில் யூதரல்லாத சமாரியன் மட்டும் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி சொல்லுகிறான். "ஆனால் பத்து பேர் குணமாகவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? (லூக். 17:17-18) கடவுளைப் போற்றிப் புகழ, இந்த அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பி வரக்காணோமே", என்கிறார் இயேசு (மூன்றாம் வாசகம்). இன்று கூட கிறிஸ்தவ திருத்தலங்களுக்குப், பிற சமயத்தவர்தான் நன்றி உணர்வோடு அதிகமாகக் காணிக்கை செலுத்த வருகிறார்கள்.

நாம் கடவுளுக்குப் புகழுரையும், நன்றியும் செலுத்த வேண்டும் என்பதற்கு நம் ஆண்டவர் இயேசுவும், அன்னை மரியாவும் நமக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர். இலாசரை உயிர்பிக்கும் முன்பாகக் கடவுளுக்கு நன்றி கூறுகிறார் இயேசு (யோவா. 11:41). இறுதி உணவின்போது அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி கூறித்தான் தன் உடலாக, இரத்தமாக மாற்றுகிறார் (லூக். 22:19).

எடுத்துக் கடவுளுக்கும் ஆண்டவரைப் போற்றிப் பெருமைப் படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து என் மனம் பேருவகை கொள்ளுகிறது", (லூக். 1:46-47) என்று அன்னை மரியா புகழ்ச்சிப் பாடல் இசைக்கிறார். திருப்பாடல் ஆசிரியர் பாடிய 150 பாடல்களில், பாதிக்கு மேல் நன்றியும், புகழ்ச்சியும் கலந்த கீதங்கள் அல்லவா.

அன்பார்ந்தவர்களே, கடவுளைப் போற்றுவது இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் நாம் கடவுளைப் புகழக் கற்றுக்கொள்ள வேண்டும். துன்பம் வந்தால் கடவுள் தான் காரணம் என்று திட்டுகிறோம். நல்லது நடந்தால் கடவுள் காணாமற்போய் விடுகிறார்! ஒரு தாய் தன் பச்சிளங் குழந்தையோடு தூங்கிக் கொண்டிருந்தபோது கருந்தேள் ஒன்று அந்தத் தாயைக் கொட்ட வேதனையால் துடி துடித்தாள். ஆனால் இந்த வேதனையிலும், என் குழந்தையைக் கொட்டாமல், என்னைக் கொட்டியதற்காக, இறைவா! உமக்கு நன்றி என்றாள். இந்த மனநிலைதான் இன்று நமக்குத் தேவை என்பதை உணருவோம்.
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
எப்படி பணத்தைப் பயன்படுத்துவது?


அந்தப் பள்ளிக்கூடத்தில் அந்த வகுப்பில் அவன்தான் கணக்கில் முதல் மாணவன். அவன் 99 மதிப்பெண் பெற்று முன்னிலையிலிருந்தான். ஆனால் அவனுடைய கணித ஆசிரியர் அவனைக் கடுமையாகக் கண்டித்தார். கண்டிக்கப்பட்டவன் கண்டிப்புக்குக் காரணம் கேட்டான். ஆசிரியரோ ஒரு வெள்ளைத்தாளில் ஒரு கரும்புள்ளியை வைத்துவிட்டு, மாணவனைப் பார்த்து, நீ பெற்றிருக்கின்ற மதிப்பெண் இந்த வெள்ளைத் தாளிலுள்ள கருப்புப் புள்ளி போல் இருக்கின்றது. நீ முழுவதும் வெள்ளையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என்றார். இயேசு இன்றைய நற்செய்தியிலே அவரைச் சந்திக்க வந்த மனிதரிடம் ஒரு கறுப்புப் புள்ளி இருப்பதை, ஒரு குறை இருப்பதைக் கண்டார். நிலை வாழ்வை, இறைவனுடைய நிறை ஆசியை உரிமையாக்கிக்கொள்ள விரும்பிய அந்தச் செல்வர் மோசே கொடுத்திருந்த கட்டளைகளை அப்பழுக்கில்லாமல் பின்பற்றியவர். இருப்பினும் இயேசுவின் சீடத்துவத்துக்கு ஒவ்வாத ஒன்று அவரிடமிருந்தது. அது என்ன? அவருக்கு அடிமையாக இருக்க வேண்டிய சொத்து அவரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

ஞானம் நிறைந்த (முதல் வாசகம்), உயிருள்ள, ஆற்றல் மிக்க (இரண்டாம் வாசகம்) இயேசுவின் வார்த்தைகள் அந்தப் பணக்காரரின் மனத்துக்குள் புகாதவாறு அவருடைய பண ஆசை அவரைத் தடுத்து நிறுத்திவிட்டது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பணம் ஒன்றுதான். இயேசுவின் அறிவுரை, விண்ணகம், விண்ணக வாழ்வு போன்ற மதிப்பீடுகளெல்லாம் அவருடைய அகராதிக்கு அப்பாற்பட்டவை. அவர் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே என்று பாடித்திரிந்தவர். இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புகின்றவர்கள் நூற்றுக்கு நூறு அவருடைய வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பற்றற்றவர்களாகத் திகழ்கின்றோமோ அந்த அளவுக்கு அம்மையும், அப்பனுமாகிய கடவுள் நம்மைத் தாங்கிப்பிடித்து வாழவைப்பார். பணத்தைச் சோற்றுக்கு ஊறுகாய் போலப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் அறிவோம் :

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (குறள் : 341).

பொருள் : ஒருவன் எத்தகைய பொருள்களில் இருந்து வேண்டாம் என்று விட்டு விலகுகிறானோ, அந்தப் பொருள்களால் அவனுக்குத் துன்பம் எதுவும் நேராது!
 
சிலருக்கு ஆடுவது பிடிக்கும்!
சிலருக்குப் பாடுவது பிடிக்கும்!
சிலருக்கு உண்பது பிடிக்கும்!
சிலருக்கு உடுத்துவது பிடிக்கும்!
சிலருக்கு உறங்குவது பிடிக்கும்!
சிலருக்கு முத்தமிழ் பிடிக்கும்!
சிலருக்கு முக்கனி பிடிக்கும்!

இயேசுவுக்கு என்ன பிடிக்கும்? என்பதை இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது. இயேசுவுக்கு நன்றி பிடிக்கும் (லூக் 17:16), புகழ்ச்சி பிடிக்கும் (லூக் 17:18). இவ்வாறு இயேசு நன்றியையும், புகழ்ச்சியையும் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பதற்குக் காரணம் உண்டு! நன்றி சொல்பவர்களையும், தன்னைப் புகழ்கின்றவர்களையும் கடவுள் வரலாற்றிலே வாழ்வாங்கு வாழவைத்திருக்கின்றார். நாம் இறைவனிடமிருந்து எழில்மிகு வரங்களைப் பெற்று, வளமுடன் வாழ, இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ, இறைவனைப் புகழ்ந்து வாழ இயேசு நம்மை அழைக்கின்றார்.

பழைய ஏற்பாட்டில் செங்கடலைக் கடந்த பிறகு மோசேயும், அவருடைய மக்களும் கடவுளுக்கு நன்றி சொல்லி, அவரைப் புகழ்ந்து பாடினர் (விப 15:1-21). அவ்வாறு நன்றி சொன்ன, புகழ்ந்த மோசேயைக் கடவுள் வரலாற்றிலே உயர்த்தி வளமுடன் வாழவைத்தார். புதிய ஏற்பாட்டிலே திருச்சபையின் ஆரம்பகாலத்திலே வாழ்ந்த கிறிஸ்தவர்கள் நடுவிலே இல்லை என்ற சொல்லே இல்லாமல் இறைவன் பார்த்துக்கொண்டார். காரணம் அவர்கள் ஒவ்வொரு நாளும் அப்பத்தைப் பிட்டு, கடவுளைப் போற்றி வந்தார்கள் (திப 2:46-47).

இறைவனிடமிருந்து நாம் பெற்ற நன்மைகளை நினைத்துப்பார்த்தால் அங்கே நன்றி மன்றாட்டுப் பிறக்கும். இறைவனுடைய இணையில்லா அன்பையும், ஆற்றலையும் நினைத்துப் பார்த்தால் அங்கே புகழ்ச்சி மன்றாட்டு பிறக்கும். இந்த இருவகையான மன்றாட்டுக்களுக்கும் தாயாக விளங்குவது நம்பிக்கை. இறைவன் ஒருவர் இருக்கின்றார். அவர் அன்பே உருவானவர். அவர் ஆற்றல் மிக்கவர். அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளாத எதுவும் என்னிடமில்லை என்று சொல்லி, சொல்வதை வாழ்ந்து காட்ட விரும்புகின்றவர்கள் மட்டுமே இறைவனுக்கு நன்றி சொல்வர். இறைவனைப் புகழ்வர்.

நன்றி சொல்பவர்களும், புகழ்கின்றவர்களும் கடவுளை நம்பி வாழ்வதால், அவரை நம்புகின்றவர்களை இறைவன் கைவிடுவதில்லை. இதனால் தான் புனித பவுலடிகளார், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் (எபே 5:20) என்றும், எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் (1 தெச 5:18) என்றும் கூறுகின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம், எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக (எபி 13:15அ) எனக் கூறுகின்றது.

ஒரு சின்ன சந்தேகம்! நமக்கு ஏற்படும் இழப்புகளுக்காகக் கூட கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? இந்தக் கேள்விக்கு ஒரு வாக்கியக் கதை ஒன்று பதில் சொல்லும். இதோ அந்தக் கதை : தவமிருந்து பெற்ற தன் முதல் குழந்தை இறந்தாலும் அந்தப் பெண் தனக்குத் தாய்மையை அளித்த கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

நம்மை ஒருபோதும் மறுதலிக்க விரும்பாத (2 திமொ 2:13) இறைவனுக்கு இன்ப நேரத்தில், நலம் பெற்ற நாமானைப் போலவும், துன்பநேரத்தில் கதையில் வந்த பெண்ணைப் போலவும் நன்றி கலந்த புகழ்ச்சி மன்றாட்டை சமர்ப்பித்து அவரின் நிறையாசிகளைப் பெற்று நாளும் வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் : 104).

பொருள் : நன்றி பாராட்டும் பண்புடையவர், பிறர் தமக்குச் சிறிதளவே உதவினாலும் அதனைப் பெருமை பொருந்திய பனையளவாகக் கருதிப் போற்றுவர்.
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்

கடவுள் இரண்டு வானதூதர்களை வையகத்துக்கு அனுப்பினார். ஒரு வானதூதரை மக்களின் விண்ணப்பத்தையும், மற்றொரு வானதூதரை மக்களின் நன்றியறிதலையும் பெற்று வரும்படி கேட்டார். மக்களின் விண்ணப்பங்களையெல்லாம் சேகரித்த வானதூதர் அவற்றைப் பெரிய சாக்கு ஒன்றில் போட்டுச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வந்தார். ஆனால் மக்களின் நன்றியறிதலைச் சேகரித்த வானதூதரோ அவற்றை ஒரு சிறிய பையில் போட்டுக் கொண்டுவந்தார். இக்கதை கூறும் செய்தி: கடவுளிடம் வரங்கள் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பலர்; பெற்ற வரங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துவோர் ஒரு சிலரே!

மனிதர் செய்யும் எத்தகைய பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு; ஆனால் செய்நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிறார் வள்ளுவர். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு (குறள் 10)

இன்றைய முதல் வாசகத்தில், எலிசா என்ற இறைவாக்கினர் சீரிய நாட்டுத் தொழுநோயாளி நாமான் என்பவரைக் குணப்படுத்துகிறார். நாமான் எலிசாவுக்கு நன்றி செலுத்தும் வண்ணம் அவருக்கு அன்பளிப்பு வழங்குகின்றார். ஆனால் எலிசா அந்த அன்பளிப்பை வாங்க மறுத்தபோது, இஸ்ரயேலின் கடவுள் ஒருவரே உண்மையான கடவுள் என்று அறிக்கையிடுகிறார் நாமான். அவர் பிற இனத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து பத்துத் தொழுநோயாளிகளைக் குணப்படுத்துகிறார். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறார். அவர் பிற இனத்தவர். கிறிஸ்து மிகவும் மனம் வருந்திக் கூறுகிறார்: "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா! மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப்புகழ அன்னியராகிய உம்மைத்தவிர வேறு எவரும் திரும்பி வரக் காணோமே?", (லூக் 17: 17-18),

இன்றும்கூட கிறிஸ்தவத் திருத்தலங்களுக்கு வரும் பிற சமயத்தவர் தான் அதிகமாகக் காணிக்கை செலுத்துகின்றனர். கடவுளுக்கும் மாதாவுக்கும் நன்றியுள்ளவர்களாகத் திகழ்கின்றனர். ஓர் இந்து மனிதர் சகாய அன்னையிடம் விண்ணப்பித்து அவருக்கு வேலை கிடைத்தது; அவர் தனது முதல் மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயையும் அப்படியே மாதாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார். அவரிடம் இருந்த நன்றி உணர்வு எத்தனைக் கிறிஸ்தவர்களிடம் இருக்கின்றது?

நமது புகழுரையும் நன்றியறிதலும் கடவுளுக்குத் தேவையில்லை. மாறாக, அவை நாம் மீட்படைய பயன்படுகின்றது. என்று திருச்சபை தனது திருவழிபாட்டில் எடுத்துரைக்கின்றது.

நாம் கடவுளுக்குப் புகழுரையும் நன்றியும் செலுத்த வேண்டும் என்பதற்குக் கிறிஸ்து சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். விண்ணரசின் மறைபொருளை ஞானிகளுக்கு வெளிப்படுத்தாமல் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காகக் கடவுளைப் போற்றுகிறார் (லூக் 10:21). ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் முன் கடவுளைப் போற்றுகிறார் (மாற் 6:41). அவ்வாறே ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளிக்கு முன் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (மாற் 8:6). இலாசரை உயிர்த்தெழச் செய்யுமுன் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (யோவா 11:41). இறுதி இரவு உணவின் போது அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (லூக் 22:19). உயிர்த்தபின் எம்மாவு சீடர்களுடன் பந்தியில் அமர்ந்து அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றுகின்றார் (லூக் 24:30), எனவே கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் கடவுளைப் போற்றி அவருக்கு நன்றி செலுத்துவது தகுதியும் நீதியுமாகும்.

இன்பத்தில் கடவுளைப் போற்றவும் அவருக்கு நன்றி செலுத்தவும் இயலும். ஆனால், துன்பத்தில் துவளும்போது, சோதனை வாட்டி வதைக்கும் போது கடவுளை எவ்வாறு புகழ்வது? திருத்தூதர் பவுல் கூறுகிறார்: ",எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்" (1 தெச 5:18). இது சாத்தியமாகுமா? சாத்தியம் என்பதற்குத் திருத்தூதர் பவுலே நமக்கு ஓர் எடுத்துக்காட்டு. பிலிப்பு நகரில் பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்; கையிலும் காலிலும் விலங்குகள்; அந்நிலையிலும் "நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்பாடி இறைவனிடம் வேண்டினர்" (திப 16:24-25),
ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரைக் கருந்தேள் ஒன்று கொட்டி விட்டது. வலியால் துடித்த அவர் : "கடவுளே! இத்தேள் என் குழந்தையைக் கொட்டாமல், என்னைக் கொட்டியதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்" என்றார்.

எத்தீமையிலும் ஒரு நன்மை உண்டு. உண்மையில் கடவுளின்மேல் அன்பு செலுத்துபவர்களுக்கு அனைத்தும் நன்மையாக மாறும். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவுக்காகப் பல துன்பங்களை ஏற்ற பவுல் கூறுகிறார்: "நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; ஆட்சி செய்வோம்" (2 திமொ 8:13). ஒவ்வொரு சாவிலும் ஓர் உயிர்ப்பு உண்டு.

கடவுளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நமது நன்றியுணர்வைக் காட்ட வேண்டும், குறிப்பாக நமது பெற்றோர்களுக்கு நன்றி காட்ட வேண்டும். ஏழை விதவை ஒருவர் தன் வீட்டின் முன் தென்னம்பிள்ளை வைத்து, தன் மகனைப் படிக்க வைத்தார். மகன் படித்து அமெரிக்காவில் வேலை பார்த்தான். அம்மா அடக்கத்திற்கு அவன் வரவில்லை . அம்மா இறக்குமுன் மகனுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதி வைத்தார்: "மகனே. நீ பிறந்தபோதுதான் நம் வீட்டின் முன் தென்னம்பிள்ளை நட்டேன்; நீயும் வளர்ந்தாய், தென்னம்பிள்ளையும் வளர்ந்தது; அது கொடுத்த தேங்காய்களை விற்று உன்னைப் படிக்க வைத்தேன். இன்று அமெரிக்காவில் இருந்து கொண்டு என் அடக்கத்திற்குக் கூட வர உன்னால் முடியவில்லை. ஆனால் நான் வளர்த்த தென்னம்பிள்ளையின் பாளை என்னோடு கல்லறைக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்துகிறது." இது கதையல்ல நிஜம். தென்னையைப் பெத்தா இளநீர்; பிள்ளையைப் பெத்தா கண்ணீர்!
'நற்கருணை' என்ற சொல்லுக்கு 'நன்றியறிதல்' என்பது பொருள். ஒவ்வொரு திருப்பலியிலும் கடவுளைப் போற்றி நன்றி கூறுகிறோம். அப்ப, இரசத்தை எடுத்து. ",ஆண்டவரே! அனைத்துலகின் இறைவா! உம்மைப் போற்றுகிறோம்", என்கிறார் குரு. ",இவர் வழியாக இவரோடு, இவரில்" என்ற இறுதிப் புகழுரை நன்றிப் புகழுரை. கடவுளுக்கு உதட்டால் மட்டுமல்ல, உள்ளத்தால் நன்றி செலுத்துவோம். நமது வாழ்வே ஓர் இறைபுகழாக, நன்றியுரையாக அமையட்டும்.

 
கிரேக்க நாட்டுத் தத்துவமேதை ஒருவர் தம் வீட்டிற்கு முன்புறம், "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று ஒரு விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார், இந்த நூதனமான விளம்பரத்தைப் படித்த ஒரு பணக்காரர் தமது வேலைக்காரரிடம் பணம் கொடுத்து, ஞானம் வாங்கி வரும்படி அவரை அம்மேதையிடம் அனுப்பினார். அம்மேதை அப்பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு காகிதத் துண்டில், "நீ எதைச் செய்தாலும் தன் இறுதி முடிவை நினைத்துக்கொள்", என்று எழுதிக் கொடுத்தார், அப்பணக்காரர் அவவாக்கியத்தைப் பொன் எழுத்துக்களால் பொறித்து, சட்டம் கட்டி, தம் வீட்டின் மையப் பகுதியில் தொங்கவிட்டு, நாள்தோறும் படித்து, வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, தம் செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவி, உண்மையில் ஞானியாக வாழ்ந்து நல்ல மரணமடைந்தார்.

நாம் எதைச் செய்தாலும் நம் வாழ்வின் இறுதி முடிவை நம் கண்முன் நிறுத்த வேண்டும். ",இருப்பது பொய், போவதுமெய்." இதுதான் வாழ்வு. "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள் ளை, கடைசிவரை யாரோ?" திலையற்ற வாழ்வை எண்ணிப்பார்த்ததால்தான் பலர் ஞாளிகளாக மாறினர். இன்றைய பதிலுரைப் பாடலும், "எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்போது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திபா 30:12) எனக் கூறுகிறது.

இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. ஞானத்திற்கு ஈடு இணையானது இவ்வுலகில் வேறெதுவுமில்லை. ஞானத்திற்கு முன் வெள்ளி வெறும் களிமண்; தங்கம் வெறும் தவிடு; செல்வம் வெறும் குப்பை: அழகு வெறும் மாயை; புகழ் வெறும் புகை.

அறிவு ஞானமாகக் கனிய வேண்டும். அறிவைப் புத்தகம் வாயிலாகவும் பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் பெற முடியும். நவீனக்கலையைக் கலைக்கணிப் பொறிவாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும், இவ்வுலகம் முழுவதையும் இணையதளம் மூலமாக இணைக்க முடியும். சின்னத் திரைகளும் பெரிய திரைகளும் நமக்குக் கேளிக்கைகளை வழங்க முடியும். ஆனால் ஞானமானது கடவுள் நமக்கு அளிக்கும் மேலான கொடை; தூய ஆவியார் நம் மீது பொழியும் ஒப்புயர்வற்ற வரம் சாலமோன் அரசர் கடவுளிடமிருந்து செல்வத்தையோ புகழையோ ஆயுளையோ கேட்காமல் ஞானத்தைக் கொடையாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவு இறைஞானமாகக் கனிய வேண்டும். மெய்யறிவு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் சங்கமிக்கும்: கடவுளிடம் சரண் அடையும். பழங்காலத்தில் அறுவது வயது நிறைவடைந்த கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து வனவாசம் மேற்கொள்ளக் காட்டுக்குச் சென்றனர். முன்னே சென்ற கணவர் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளைக் காலால் மணலைக் கொண்டு மறைத்தார். அதைக் கவனித்த மனைவி அவரிடம், "எதைக் காலால் மூடி மறைக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, கணவர், "தரையில் மாணிக்கக் கல் ஒன்று கிடக்கிறது. அதை உன் கண்களில் படாதபடி மூடி மறைத்தேன்" என்றார், அதற்கு மனைவி, ", என்னங்க, துறவறம் மேற்கொண்ட பிறகும், உங்களுக்கு மண்ணுக்கும் மாணிக்கத்திற்கும் வேறுபாடு தெரிகிறதா?" என்று கேட்டார். ஞானத்தில் தம் கணவரையே விஞ்சி விட்டார் அந்த மனைவி!

கடவுளை யார் தேடுவர் ? மண்ணையும் மாணிக்கத்தையும் சமமாகப் பார்ப்பவர்கள். ஒட்டையும் செல்வத்தையும் ஒன்றாகக் காண்பவர்கள் தான் கடவுளை நாடுவர் என்கிறார் தாயுமானவர்.

"ஓடும் இருநிதியம் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பராபரமே".

இன்றைய நற்செய்தியில், கடவுளுடைய ஞானம் எனப்படும் கிறிஸ்துவை (1கொரி 1:24) பணக்கார வாலிபர் ஒருவர் மேலோட்டமாகப் பின்பற்ற விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ தம்மை வேரோட்டமாக, நெருக்கமாகப் பின்பற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார், அவருடைய உடமைகளை எல்லாம் விற்று, அவற்றை ஏழைகளுக்கு வாரி வழங்கிவிட்டு, வெறுங்கையுடன் தம்மைப் பின்பற்ற அழைத்தார், ஆனால் அப்பணக்கார வாலிபர் தமது உடமைகளைத் துறக்க மனமின்றி முகவாட்டத்துடன் போய் விட்டார், அவருக்கு மண்ணக அறிவு இருந்தது. ஆனால் விண்ணக ஞானமில்லை . கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் புரிய அவர் விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ, "எவரும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது" (மத் 6:24) என்பதை அவருக்குத் திட்டவட்டமாக உணர்த்தினார்.

கிறிஸ்து இவ்வுலகச் செல்வத்தின் அவசியத்தை மறுக்க வில்லை. பொருட்பால் இல்லை என்றால், காமத்துப் பாலும் வாங்க முடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்க முடியாது என்பது கிறிஸ்துவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கிறிஸ்துவோடு ஒப்பிடும் போது, இவ்வுலகச் செல்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரண்டாம் நிலையை அடைகின்றன, கிறிஸ்து எல்லாவற்றையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். இவ்வுண்மையைத் திருத்தூதர் பவுல் தன்குனர்ந்திருந்தார், எனவே தான் அவர், ",கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையாகக் கருதுகிறேன்", (பிலி 3:8) என்றார். இவ்வுலக செல்வங்களுக்கு அடிமை ஆகிறவர்கள் கடவுளுக்கு அடிமை ஆகமுடியாது.

அரிது, அரிது, பணக்காரர் விண்ணரசில் நுழைவது அரிது என்று ஆணித்தரமாக அறிக்கையிடும் கிறிஸ்து, பணக்காரர்களும் இறையருளால் விண்ணகம் செல்ல முடியும் என்பதையும் எடுத்துக்கூறத் தயங்கவில்லை , பணக்கார சக்கேயு ஓர் ஊழல் பெருச்சாளி: இறையருளால், அதாவது கிறிஸ்துவின் பிரசன்னத்தால் மனமாற்றம் அடைந்தார். அதன் விளைவாகத் தாம் இழைத்த அநீதிகளுக்கு நான்கு மடங்கு ஈடு செய்யவும், தமது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கவும் முன் வந்தார்; மீட்படைந்தார் (லூக் 19:8-10).

எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் செல்வப் பெருக்கால் வாழ்வு வந்துவிடாது. (லூக் 12:15). நிலையற்ற செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து அதன்மூலம் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (லூக் 18:9), உலகச் செல்வத்தைப் பயன்படுத்தும் போது அவற்றில் மூழ்கி ஆன்மாவை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கைக் கலையாகும் (1 கொரி 7:31).

கணவர் ஒருவர் தம் மனைவிக்குக் குடைபிடித்துக் கொண்டு போனார், ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் தந்த பதில்: "போகும் வழியில் துணிக்கடை, நகைக்கடைகள் உள் ளன், அக்கடைகளை என் மனைவி பார்க்காதப்டி கு கடை யை இருபக்கங்களிலும் வளைத்துப்பிடித்து மிகவும் தந்திரமாக அவளை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போய் விடுவேன்."

இவ்வுலக மாயை நமது கண்களில் பட்டு நம்மைத் திசை திருப்பாமல் செய்ய நமக்கொரு குடை தேவைப்படுகிறது. அதுதான் கடவுளுடைய வார்த்தை : உயிருள்ள, ஆற்றல்மிக்க, இருபக்கமும் வெட்டக்கூடிய கூர்மையான வாளான, உள்ளத்தை சாடுருவுகிற கடவுளுடைய வார்த்தையால் மெய்யறிவும் ஞானமும் பெற்று ஞானிகளாக வாழக் கற்றுக் கொள்வோம். பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களால் நாம் நசுக்கப்பட்டு, பிழியப்பட்டு பெறுகின்ற பட்டறிவினால் நாம் ஞானிகளாக மாறவேண்டும், வாழ்க்கை அனுபவம்தான் நமது சிறந்த ஆசான். கெட்ட பின்னாவது ஞானியாக வேண்டாமா?

தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, சுட்டபின் நெருப்பு, கெட்டபின் ஞானி! "நீ எதைச் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்"
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

",அது சரி, ஆனால்...", விளையாட்டு

இரண்டு சந்தர்ப்பங்களில்‌ இறைவன்‌ சிரிக்கிறாராம்‌!

மருத்துவர்‌ ஒரு நோயாளியிடம்‌ ",கவலைப்படாதீர்கள்‌. கண்டிப்பாக உங்கள்‌ உயிரைக்‌ காப்பாற்றி விடுவேன்‌", என்று கூறித்‌ தேற்றும்போது இறைவன்‌ சிரிக்கிறார்‌. காரணம்‌? உயிரை எடுப்பதும்‌ கொடுப்பதும்‌ மருத்துவர்‌ கையிலோ இருக்கின்றது? அடுத்தது இரு சகோதரர்கள்‌ தங்கள்‌ நிலத்தைப்‌ பிரித்துக்‌ கொள்கின்றபோது இது என்னுடையது' என்கிறான்‌ ஒருவன்‌. ",இல்லை தன்னுடையது", என்கிறான்‌ மற்றவன்‌. சிரித்துக்‌ கொண்டே கடவுள்‌ தனக்குள்‌ சொல்கிறார்‌: ",இந்த உலகம்‌ அனைத்தும்‌ என்னுடையது. ஆனால்‌ இவர்களோ இது என்னது அது உன்னது எனச்‌ சொல்லிச்‌ சண்டையிட்டுக்‌ கொள்கின்றனர்‌.

அன்று பேதுருவும்‌ யோவானும்‌ ஆலய முற்றத்தில்‌ முடவனைச்‌ சந்திக்கின்றனர்‌. பிச்சை கேட்ட அவனிடம்‌ பேதுரு ",பொன்னும்‌ வெள்ளியும்‌ என்னிடம்‌ இல்லை. என்னிடம்‌ உள்ளதை நான்‌ தருகிறேன்‌. இயேசுவின்‌ பெயரால்‌ உனக்குச்‌ சொல்கிறேன்‌. எழுந்து நட", (தி.ப. 3:6) என்றார்‌. அவனும்‌ எழுந்து நடக்கிறான்‌.

திருத்தந்தை 13ம்‌ சிங்கராயர்‌ ஒரு மனிதரைப்‌ பேதுரு பேராலயத்துக்கும்‌ தனது மாளிகைக்கும்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அங்குள்ள ஆடம்பரப்‌ பொருள்களையெல்லாம்‌ காட்டி, '",பேதுருவோடு சேர்ந்து வெள்ளியும்‌ பொன்னும்‌ என்னிடமில்லை என்று இனி எங்களால்‌ கூற முடியாது", என்றாராம்‌. உடனே அந்த மனிதர்‌ திருத்தந்தையைப்‌ பார்த்து, ",ஆகவேதான்‌ உங்களால்‌ எழுந்து நட என்றும்‌ சொல்ல இயலவில்லை", என்று பதில்‌ கூறினாராம்‌.

பணத்துக்கோ பணக்காரர்களுக்கோ எதிரானவரல்ல இயேசு. நிக்கதேம்‌, சக்கேயு போன்ற செல்வந்தர்களின்‌ நெருங்கிய 'நண்பர்‌ அன்றோ! பணத்தால்‌ வரும்‌ தீமைகள்‌, ஆபத்துக்கள்‌ குறித்து எச்சரிக்கிறார்‌.

பணம்‌ என்ற தேவதைக்குப்‌ பலியாகாதது எது? கற்பு பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ விபச்சாரம்‌. உண்மை பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ பொய்ச்சாட்சி, நீதி பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ அநீதத்‌ தீர்ப்பு. அன்பு பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ வஞ்சனை. நேர்மை பலியாக்கப்படுகிறது, அதுதான்‌ ஊழல்‌. நியாயம்‌ பலியாக்கப்படுகிறது, அதுதான்‌ சுரண்டல்‌. இப்படிப்‌ பணத்துக்காக பலியாக்கப்படுபவை பல. அவை ஒவ்வொன்றிலும்‌ கிறிஸ்துவின்‌ சீடன்‌ . என்ற நிலையும்‌ பலியாக்கப்படுகிறது. ",எவரும்‌ இரு தலைவர்களுக்குப்‌ பணிவிடை செய்ய முடியாது", (மத்‌. 6:24).

பணத்தை மட்டும்‌ நம்பி இருப்பவர்கள்‌ கடவுளின்‌ அரசில்‌ நுழைவது எவ்வளவு அரிது! (மார்க்‌ 10:23). ஆலமரம்‌ எதை நம்பி வாழ வேண்டும்‌? வேரையா, விழுதையா? ஐயமில்லாமல்‌ வேரைத்தான்‌. அதற்காக விழுதுகளை விட்டுவிட வேண்டும்‌ என்றில்லை. ஆனால்‌ விழுதான செல்வத்தை மட்டுமே நம்பிக்கொண்டு ஆணி வேரான ஆண்டவனை மறக்கும்போது முன்னுரிமை கொடுப்பதில்‌ முறைகேடு அல்லவா ஏற்பட்டுவிடுகிறது! பணநிலை அல்ல, மனிதனின்‌ மனநிலையே நம்பிக்கையின்‌ உரைகல்‌.

ஒருவன்‌ யாரை நம்பி வாழ்கிறான்‌ என்று கண்டறிய இறைவன்‌ சோதனைகளை நடத்தி இருக்கிறான்‌. 2 எடுத்துக்காட்டுகள்‌.

1. ஆபிரகாமிடம்‌ மகனைப்‌ பலிகொடுக்கக்‌ கேட்டது. ஆபிரகாம்‌ நம்பி இருந்தது வேரான கடவுளையா, விழுதான மகனையா?சோதனையில்‌ வென்றார்‌. மனநிறைவோடு திரும்பினார்‌.

2. இயேசு சந்தித்த பணக்கார இளைஞனை அழைத்தது. அவன்‌ நம்ப வேண்டியது வேரான இறைவனையா, விழுதான சொத்து சுகத்தையா? சோதனையில்‌ தோற்றான்‌ மனம்‌ வாடித்‌ திரும்பினான்‌.

கிறிஸ்தவ வாழ்க்கை கட்டளைகளுக்கு அப்பால்‌. பத்துக்‌ கட்டளைகள்‌ மனிதன்‌ மனிதனாக வாழத்தானே தவிர மனிதன்‌ கிறிஸ்தவனாக வாழ அல்ல. திருஅவைக்‌ கட்டளைகள்‌ கடமை மறந்த கிறிஸ்தவனுக்கு ஒரு குறைந்த நிலை -வடிவமைப்பே தவிர இலட்சிய வாழ்க்கைக்கான வழியல்ல.

வானக வாழ்வு ஒரு மாளிகை என்றால்‌, அம்மாளிகையைக்‌ கட்டி எழுப்பக்‌ கடவுள்‌ அமைத்துத்‌ தந்த சாரம்தான்‌ இவ்வுலகம்‌. உலகம்‌ தரும்‌ செல்வம்‌. செல்வத்தால்‌ வரும்‌ இன்பம்‌. வீடு எதற்காகக்‌ கட்டுகிறோம்‌, இருக்கவும்‌, அமரவும்‌, படுக்கவும்‌ நடமாடவும்தானே, சாரத்திலும்‌ ஒரளவு அவற்றைச்‌ செய்யலாமே என்றெண்ணி வீட்டைக்‌ கட்டுவதை விடுத்து, சாரத்திலேயே குடியிருக்க நினைப்பவனை என்னவென்பது?

இன்று நாம்‌ யாரை நம்பி வாழ்கிறோம்‌ என்றறிய இறைவன்‌ நம்மைச்‌ சோதித்தால்‌ ... சோதனையில்‌ வெற்றி பெறத்‌ தேவையான ஞானத்தை நாடுவோம்‌. ஒழுங்காக ஒரு புள்ளிவிவரம்‌ எடுத்தால்‌, உலகத்தில்‌ அருள்‌ இல்லாமல்‌ அல்லது பொருள்‌ இல்லாமல்‌ துன்புறுபபர்களை விட அறிவில்லாமல்‌ ஞானமில்லாமல்‌ அல்லல்படுபவர்கள்‌ தாம்‌ அதிகம்‌ என்பது தெரியவரும்‌. ஞானத்தின்‌ ஆவியோடு ஒப்பிடும்போது செல்வம்‌ ஒன்றுமே இல்லை. (சா.ஞா. 7:7-11)

கருத்தரங்கு ஒன்றில்‌ பெண்‌ அடிமைத்தனம்‌, வரதட்சணை போன்ற சமூகத்‌ தீமைகள்‌ பற்றி அலசப்பட்டது. வரதட்சணை ஒழிக்கப்பட வேண்டும்‌ என்று தீர்க்கமாக முடிவு எடுக்கப்பட்டது. சில நாள்களுக்குப்‌ பின்‌ அதில்‌ கலந்து கொண்ட இளைஞனுக்கு திருமணம்‌, வரதட்சனை ஐந்து லட்சமாம்‌!

இன்று நம்மிடையே நல்ல கருத்துக்கள்‌, தீர்மானங்கள்‌ இல்லாமல்‌ இல்லை. ஆனால்‌ செயல்பாடுதான்‌ கேள்விக்குறி. இத்தகைய நடைமுறையை எரிக்‌ புரோம்‌ என்ற உளவியல்‌ நிபுணர்‌ ",அது சரி, ஆனால்‌", (",yes, but", game) என்ற உளவியல்‌ விளையாட்டு என்கிறார்‌. நல்ல நல்ல கருத்துக்களை மகிழ்ச்சியுடன்‌ ஏற்றுக்‌ கொண்டு 'ஆம்‌' என்பது. தொடர்ந்து 'ஆனால்‌' என்று சொல்லி மறுத்துவிடுவது. இன்று சமுதாயத்திலும்‌ அரசியலிலும்‌, திருஅவையிலும்‌ உள்ள பெரிய நோய்‌ இதுதான்‌!

பணக்கார இளைஞன்‌ வருகிறான்‌. வருத்தத்தோடு. திரும்புகிறான்‌. நிகழ்ச்சியின்‌ தொடக்கத்தில்‌ நம்பிக்கையும்‌ உற்சாகமும்‌. இறுதியில்‌ வருத்தமும்‌ விரக்தியும்‌. நல்ல மனம்‌ மட்டும்‌ போதாது. அது வெறும்‌ கற்பனையே. உழைப்பும்‌ உற்சாகமான முயற்சியும்‌ எந்தத்‌ தடையையும்‌ மேற்கொள்ளும்‌ துணிவும்‌ தேவை.

இயேசுவா? செல்வமா? செல்வத்தை இழக்க மனமில்லாத இளைஞன்‌ இயேசுவை இழக்கத்‌ துணிந்துவிட்டான்‌. பணத்திற்கு முதலிடம்‌ தரும்‌ யாரும்‌ இறைவனை, இறையரசை உரிமையாக்கிக்‌ கொள்ள முடியாது. செல்வத்தை இழக்கத்‌ துணியும்‌ மனம்‌ மகிழ்ச்சியை இழப்பதில்லை. இயேசுவை இழக்கத்‌ துணியும்‌ மனம்‌ மகிழ்ச்சியை இழக்கிறது. காரணம்‌ செல்வம்‌ நிலையற்றது. இயேசு நிலையானவர்‌, நிரந்தரமானவர்‌.

வாழ்வதற்குப்‌ பொருள்‌ வேண்டும்‌.
வாழ்வதிலும்‌ பொருள்‌ வேண்டும்‌.
ஒர்‌ இளைஞன்‌ ஒரு துறவியிடம்‌ ",நான்‌ இதுவரை பொய்‌ சொன்னதில்லை. திருடியதில்லை. யாருக்கும்‌ தீங்கு நினைத்ததில்லை. எனக்கு விண்ணகப்‌ பேறு கிடைக்குமா?'' என்று கேட்டான்‌. துறவியோ ",மரமும்‌ மண்ணும்‌ மட்டையும்‌ முக்தி பெறுமாயின்‌ உனக்கும்‌ முக்தி உண்டு: என்றார்‌. அதாவது மரமும்‌ மண்ணும்‌ பொய்‌ சொல்வதில்லை. திருடுவதில்லை. எவருக்கும்‌ தீங்கு இழைப்பதில்லை. நீ மோட்சம்‌ செல்ல வேண்டுமானால்‌ அதை நிர்ணயிப்பது நீதான்‌ எனவே நீ நல்லவனாக, குறிப்பாக உன்னிடம்‌ உள்ளதைப்‌ பிறரோடு பகிர்ந்து கொள்பவனாக வாழும்‌ போது நிலை வாழ்வு என்பது நிச்சயம்‌.

ஒவ்வொரு மனிதனுக்கும்‌ இரண்டு இலக்குகள்‌ உண்டு.
1. இந்நேரத்து இலக்கு (Immediate goal)

2. இறுதி இலக்கு (ultimate goal)

அனைவருக்கும்‌ இறுதி இலக்கு நிலை வாழ்வை உரிமையாக்கிக்‌ கொள்வதாகும்‌. இன்றைய இலக்கு அன்றாடம்‌ உண்மையிலும்‌ நீதியிலும்‌ தூய்மையிலும்‌ புனிதத்திலும்‌, பாசத்திலும்‌ பகிர்விலும்‌ வாழ்வதாகும்‌.

 
பத்தில் ஒன்றுதானா?

வாழ்க்கையில் உற்சாகம் தரும், ஊக்கமூட்டும் அழகான, இதமான வார்த்தைகள் மூன்று. 1. தயைகூர்ந்து, 2. மன்னிக்கவும், 3. மிக்க நன்றி.

வீடு வீடாகப் பொருள்களை வழங்கிவரும் அந்தச் சிறுவனுக்கு மிகுந்த பசி. உணவு வாங்கக் கையில் காசில்லை. அருகில் இருந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள். அவனுக்கோ பசிக்கிறது என்று சொல்லக் கூச்சம். சிறுவனின் கண்களில் தெரிந்த பசியைக் கவனித்த அவள் உள்ளே சென்று ஒரு கிண்ணம் பால் கொண்டுவந்து கொடுத்தாள்.

பாலைப் பருகிப் பசியாறிய சிறுவன் கேட்டான்: ",நான் உங்களுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கேன்?!" "கடனா? அப்படி ஒன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலையில்லையென என் அம்மா சொல்லியிருக்கிறார்..." அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள். சிறுவனோ "ரொம்ப ரொம்ப நன்றி" என்று புன்னகையுடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. அந்தச் சிறுவன் மேல்படிப்பு முடித்து நகரிலேயே மிகப்பெரிய மருத்துவர் ஆனான். அந்தப் பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய். அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அப்பெண்மணியும் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ அறிக்கையில் அந்தப் பெண்ணின் ஊரைப்படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைந்து அறைக்குப்போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். பால் கொடுத்துப் பசிதீர்த்த அதே நல்ல உள்ளம். அன்று முதல் நேரடியாகத் தானே முன்நின்று சிறப்புச் சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவளும் முழுமையாக நலமடைந்தார். பல இலட்சங்கள் செலவு. பெரிய தொகைக்கான சீட்டை அனுப்பியது மருத்துவமனை. எப்படிப் பணம் கட்டப் போகிறோமோ என்ற பதற்றத்துடன் சீட்டைப் பிரித்தபோது அவள் திகைத்துப் போனாள்.

அந்தச் சீட்டின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது. ",ஒரு கிண்ணம் பாலில் உங்கள் கடன் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்",. அவளுடைய கண்கள் கசிந்தன.

நன்றி சொல்பவராகட்டும், நன்றிக்கு உரியவராகட்டும் இரண்டு பேருக்குமே எவ்வளவு மகிழ்ச்சி, மனநிறைவு!

நன்றி கூறுபவர்கள் இரண்டு வகையினர்:
1. பெற்ற நன்மைக்கு நன்றி கூறுபவர்கள் - மனிதனின் எதார்த்தப் பார்வையோடு - நாமான் போல், நற்செய்தியில் வரும் சமாரியர் போல. நன்றி கூறும் நல்ல பழக்கம் கடவுளை மாட்சிப்படுத்துவதற்கு ஒப்பாகும் (லூக். 17:18).
படைக்கும்போதே கடவுள் நமக்கு ஏராளமான கொடைகளை ஆசீராக அளித்திருக்கிறார். நமது மூச்சக்காற்று, நமது களைப்பைப் போக்கும், கழுவித் தூய்மைப்படுத்தும் நீர், உணவுக்கான காய்கள் கனிகள், கண்ணுக்கும் மனதுக்கும் களிப்பூட்டும் இயற்கையின் படைப்புக்கள் என்று எத்தனை எத்தனையோ!
கடவுளுக்கு நன்றி சொல்லக் காரணங்களுக்கா பஞ்சம்?
விவிலியத்தைப் புரட்டுங்கள். நீண்ட பட்டியலிடலாம். தி.பா. 35:18-19, 96:2, 52:8-9, 118:21, ரோமை 1:8, 7:25, தி.ப. 28:15 இன்னும் ...

2. என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுபவர்கள் (1 தெச. 5:17)
- கிறிஸ்துவின் விவிலியப் பார்வையோடு.
ஆங்கிலக் கவிதையின் அருமையான வரிகள் இவை:
- என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி. அவைதான் அவற்றை நோக்கி என்னைப் பயணிக்க ஊக்குவிக்கின்றன.
- என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி. அதுதான் என்னைக் கற்றுக் கொள்ளத் தூண்டுகிறது.
எனது குறைகளுக்காய் நன்றி. அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.
எனது பிழைகளுக்காய் நன்றி. அவைதான் எனக்கு அனுபவப் பாடங்களை அள்ளிக் கொடுக்கின்றன.
எனது சோர்வுகளுக்காய் நன்றி. அவைதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகின்றன.
எனது சோதனைகளுக்காய் நன்றி. அவைதான். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றும் திறனை அளிக்கின்றன.

மலரில் முள்ளைப் பார்க்காமல் முள்ளில் மலரைப்பார்க்கின்ற மனநிலை அது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற உணர்வு நிலை அது.

அரசன் தன் அமைச்சரோடு வேட்டையாடக் காட்டுக்குள் நுழைகிறான். வழியில் புலி தாக்க ஒரு விரலை இழக்கிறான். வேதனையில் அரசன் துடிக்க அமைச்சர் 'எல்லாம் நன்மைக்கே' என்கிறான். அதனைக் கேட்ட அரசனுக்கு ஆத்திரம். வறண்ட பாழும் கிணற்றில் அமைச்சனைத் தள்ளிவிடுகிறான். அந்த நேரத்திலும் 'எல்லாம் நன்மைக்கே' என்கிறான். பிறகு காட்டுக்குள் புகுந்த அர- சனைக் காட்டுவாசிகள் பிடித்துத் தங்கள் தெய்வத்துக்குப் பலியிட முயல, ஒரு விரல் இல்லாத உடல் குறையினால் அவனை விடுவித்து விடுகின்றனர். திரும்பும் வழியில் அமைச்சரைக் கிணற்றிலிருந்து வெளியே தூக்கி எடுத்து ",உன்னை நான் கிணற்றில் தள்ளியபோது 'எல்லாம் நன்மைக்கே' என்றாயே ஏன்?", என்று கேட்க அமைச்சர் சொன்னார்: ",நீங்கள் ஒரு விரலை இழந்திருந்ததால் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டீர். அந்நிலையில் நான் அங்கே இருந்திருந்தால் என்னைப் பலிகொடுத்திருப்பார்கள்",. என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்ற உணர்வு நம்பிக்கையின் வெளிப்பாடன்றோ!
இயேசு சமாரியரைப் பார்த்து, ",உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது", (லூக். 17:19) என்றார். நம்பிக்கையின் அளவுகோலான நன்றியுணர்வு நலமளித்தது மட்டுமல்ல. மீட்பளித்தது (பழைய மொழிப்பெயர்ப்பு) "எந்நாளும் எவ்விடத்திலும் நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். மீட்புக்குரிய செயலுமாகும்" என்பது திருப்பலிச் செபம். யோர்தானில்‌ மூழ்கி நலமடைந்த நாமான்‌, நம்பிக்கை அறிக்கையாகத்‌ தானே தன்‌ நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்‌! ",இஸ்ரயேலைத்‌ தவிர வேறு எந்த நாட்டிலும்‌ கடவுள்‌ இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன்‌" (2. அர. 5:15). நாமானின்‌ இந்தச்‌ செயல்‌ இயேசுவாலும்‌ பாராட்டப்படுகிறது (ஜாக்‌. 4:27).

அதனால்தான்‌ திருப்பாடல்‌ ஆசிரியர்‌ தெம்போடு பாடுகிறார்‌. ",ஆண்டவர்‌ எனக்குச்‌ செய்த எல்லா நன்மைகளுக்காகவும்‌ நான்‌ அவருக்கு என்ன கைமாறு செய்வேன்‌? மீட்பின்‌ கிண்ணத்தைக்‌ கையில்‌ எடுத்து ஆண்டவரது பெயரைத்‌ தொழுவேன்‌" (தி.பா. 116:12-13).

ஒரு கல்லுரி. புதிதாகப்‌ பணியில்‌ சேர்ந்த பேராசிரியை தன்‌ மாணவர்களிடம்‌ தலைக்கு மூன்று சிறிய பட்டு நாடாக்களைக்‌ (06) கொடுத்து ",உங்கள்‌ வாழ்க்கையில்‌ ஏதோ ஒரு நன்மை செய்த மூன்று பேரின்‌ கைகளில்‌ கட்டுங்கள்‌. அப்படிக்‌ கட்டும்போது அவர்கள்‌ ஒவ்வொருவரிடமும்‌ கூடுதலாக மூன்று நாடாக்களைக்‌ கொடுத்து உங்களைப்‌ போலவே அவர்களையும்‌ செய்யச்‌ சொல்லுங்கள்‌", என்று அனுப்பினார்‌.

ஏழைமாணவன்‌ ஒருவன்‌ தனது. படிப்புக்குப்‌ பழைய புத்தகங்களைக் கொடுத்து உதவிய மூத்த மாணவன்‌ கையில்‌ கட்டினான்‌. பிறகு அவனிடமும்மூன்று ரிப்பன்களைக்‌ கொடுத்துத் தான் செய்தது போலச்‌ செய்யச்‌ சொன்னான்‌.

ரிப்பன்கள்‌ கைமாறின. ஒரு வாரத்திற்குள்‌ கல்லூரி தொடங்கி ஊர்‌ முழுவதும்‌ பரவியது. அனைவர்‌ கைகளிலும்‌ நன்றியின்‌ சின்னமாக வண்ணமயப்‌ பட்டுநாடாக்கள்‌!

அது வியக்கத் தக்க நிகழ்வானது. ஏதேதோ வேறுபாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் தாங்கள்‌ அனைவருமே ஏதோ ஒரு வகையில்‌ ஒருவருக்கொருவர்‌ கடன்பட்டவர்கள்‌. ஒருவர்‌ ஒருவரைச்‌ சார்ந்திருப்பவர்கள்‌ என்பதைப்‌ புரிந்து கொண்டனர்‌. நன்றி உணர்வு என்பது ஒரு மந்திரச்‌ சொல்‌. அதனால்‌ உறவுகள்‌ மலரும்‌. புது உலகம்‌ பிறக்கும்‌. Court Your blessing நினைத்துப்பார்‌. நன்றி சொல்‌.
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
பிணிகள் பிணைக்கும்.

பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும் நிகழ்வு இன்றைய நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நற்செய்தி மூன்று பாடங்களை நமக்கு முன் வைக்கிறது.
முதல் பாடம் - தொழுநோயாளர்களுக்கு நாம் தரவேண்டிய மதிப்பு
2வது பாடம் சமுதாய வேறுபாடுகளைப் போக்கும் சிறந்த மருந்து துன்பம்
3வது பாடம் - வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றி உணர்வு

இயேசு தொழுநோயாளர்களைக் குணமாக்கும் நிகழ்வுகள் லூக்கா நற்செய்தியில் இருமுறை பதிவாகியுள்ளன (லூக்கா 5: 12-14; 17: 11-19). தன் பணிவாழ்வின் துவக்கத்திலும், இறுதியிலும் இயேசு ஆற்றிய புதுமைகள் இவை. இவ்விரு நற்செய்திப் பகுதிகளிலும், தொழுநோயாளர்கள் அவர், இவர் என்று மரியாதையுடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவன், இவன் என்றல்ல. முன்பு நாம் பயன்படுத்திய விவிலிய மொழிபெயர்ப்பில் அவன், இவன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொழுநோயாளரை ஒரு மனிதராக எண்ணி, அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது. இது நாம் அண்மையில் பின்பற்றும் ஓர் அழகான பழக்கம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்தே பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

இயேசு ஆற்றிய இப்புதுமையைப்பற்றி சிந்திப்பதற்கு முன்னால், தொழுநோயாளர் என்ற வார்த்தையைப்பற்றி சிறிது சிந்திப்போம். தொழுநோய் உள்ளவர்களை, பழையத்தமிழில், 'குஷ்டரோகி' என்று சொல்வோம். ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்லவேளையாக, தற்போது, தமிழிலும், ஆங்கிலத்திலும் தொழுநோயாளர், leprosy patient என்ற சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொன்னபோது, மனிதர்கள் என்ற நிலையை இழந்து, ஏதோ அந்த நோயாகவே அவர்கள் மாறிவிட்டனர் என்ற கண்ணோட்டம் மனதில் பதிந்தது. இந்த நோய் உடையவர்கள் மனிதப் பிறவியிலிருந்து பல படிகள் தாழ்ந்த நிலையில் உள்ள ஒரு பிறவியாக நினைத்தோம், அவர்களை அப்படியே நடத்தினோம். சாதிய மடமையில் வாழும் சமுதாயங்களில், ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களை, ஏதோ பிறவியிலேயே அவர்கள் குறையுடன் பிறந்தவர்கள் போலவும், எனவே, அவர்களைப் பார்க்கும்விதம், அவர்களோடு பழகும்விதம் இவைகளில் வேறுபாடுகள் காட்டுவது, அச்சமுதாயங்கள் வளர்த்துக்கொண்ட சாபக்கேடு.

குஷ்டரோகி என்பதற்கும், தொழுநோயாளர் என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. 'வேலைக்காரி' அல்லது 'வேலைக்காரன்' என்ற வார்த்தைகளுக்கும், 'பணியாளர்' என்ற வார்த்தைக்கும் வேறுபாடுகள் உள்ளன. 'முடவன்' என்ற வார்த்தைக்கும் 'மாற்றுத் திறனாளி' என்ற வார்த்தைக்கும் வேறுபாடுகள் உள்ளன. வார்த்தைகளில் மதிப்பு ஒலிக்கும்போது, மனதிலும் மதிப்பு உருவாகும் என்று நம்புகிறோம். வார்த்தைகள் என்ன அவ்வளவு முக்கியமா என்று நம்மில் சிலர் நினைக்கலாம். ஆம், உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயைவிட அதிக சூடானது வார்த்தைகள் என்றும் நாம் சொல்லக் கேட்டிருக்கிறோம், உணர்ந்தும் இருக்கிறோம். நோயுற்றோரை, பணியாளரை, மாற்றுத் திறனாளிகளை மதிப்புடன் நடத்துவதற்கு, முதலில் நாம் அவர்களைக் குறிப்பிடும் வார்த்தைகளிலிருந்து பாடங்களைத் துவக்க வேண்டும். இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம் இது.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளில் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய 2வது பாடம் சொல்லப்பட்டுள்ளது. இதோ இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்: லூக்கா நற்செய்தி, 17:11-19
இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, ",ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்", என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

இயேசு 'கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்' என்ற கூற்றுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. யூதர்களும், சமாரியர்களும் வாழ்ந்தப் பகுதிகள் அவை. இன்றைய நமது கலாச்சாரப் பின்னணியில் இதைச் சிந்தித்தால், அக்ரகாரத்தின் வழியாகவும், சேரியின் வழியாகவும் இயேசு நடந்தார் என்று சிந்திக்கலாம். தேவையற்ற பாகுபாடுகளுடன் வாழும் யூதர்களையும், சமாரியர்களையும் ஒன்று சேர்க்கமாட்டோமா என்ற ஏக்கம் நிறைந்த சிந்தனைகளுடன் இயேசு அவ்வழியே சென்றிருக்கவேண்டும்.
அந்நேரம், பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிராக வந்தனர். அவர்கள் யூதரா? சமாரியரா? தெரியவில்லை. அவர்கள் அனைவரும் தொழுநோயாளர்கள். தொழுநோய் என்ற ஒரே காரணத்தால், யூத சமூகமும், சமாரிய சமூகமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்த புறக்கணிப்பு அவர்களை இணைத்தது. இதுவே ஒரு புதுமைதானே!

நோய், நொடி, துன்பம், பேரழிவு என்று வரும்போது மனித சமுதாயம் பலவகைகளில் இணைந்து விடுகிறது. 1977ம் ஆண்டு, திருச்சி தூய வளனார் கல்லூரியில் நான் பயின்றுகொண்டிருந்தபோது, பெருவெள்ளம் ஒன்று திருச்சியைச் சூழ்ந்தது. கல்லூரியும் பாதிக்கப்பட்டது. கல்லூரியைச் சுற்றியிருந்த வீடுகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டப் பகுதிகளில், சேரிகளும் உண்டு, அக்ரகாரங்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் கல்லூரிக் கட்டடத்தின் 2வது 3வது மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். சாதி, மதம், இனம், ஏழை, செல்வர் என்ற பாகுபாடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு, எல்லாரும் சேர்ந்து தங்கினர். அரசு சார்பில் அளிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர். அவர்கள் வீட்டுச் சுவர்கள் வெள்ளத்தில் இடிந்தபோது, காலம் காலமாய் அவர்கள் கட்டிவைத்த பிரிவுச்சுவர்களும் இடிந்தன. ஆனால், வெள்ளம் வடிந்து, அவர்கள் மீண்டும் அவரவர் வீட்டுச் சுவர்களை எழுப்பியபோது, இந்த பிரிவுச்சுவர்களும் கட்டப்பட்டுவிட்டன என்று நினைக்கிறேன்.
2001ம் ஆண்டு, சனவரி 26, இந்தியக் குடியரசு நாளன்று, குஜராத் மாநிலத்தில் Bhuj என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்து முஸ்லிம் என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி மனிதர்கள் ஒருவருக்கொருவர் இரத்ததானம் செய்தனர். ஆனால், அதே குஜராத்தில், அடுத்த ஆண்டு, 2002, பிப்ரவரியில் உருவான கலவரங்களில் ஒருவர் ஒருவரின் இரத்தத்தை அந்த மாநிலமெங்கும் சிந்தினர்.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, நியூயார்க்கில், இரு பெரும் வர்த்தகத் கோபுரங்கள் விமானங்கள் கொண்டு தாக்கப்பட்டதால், இடிந்து விழுந்த நிகழ்வு அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த அழிவு அனைவரையும் சமமாக்கியது. இதைப்பற்றி ஒருவர் மின்னஞ்சலில் எழுதியது, எனக்கு நினைவுக்கு வருகிறது.

As the soot and dirt and ash rained down,
We became one color.
As we carried each other down the stairs of the burning building,
We became one class.

இடிந்து விழுந்தன கோபுரங்கள், நிமிர்ந்து நின்றது மனித குலம். அந்த இடிபாடுகள் எழுப்பிய, புகையும், புழுதி மண்டலமும் சூழ இருந்த மக்கள் அனைவரையும் ஒரே நிறமாக்கியது. வெள்ளையர், கறுப்பர் என்ற பாகுபாடுகள் இல்லாமல் போயின.

பல நூறு ஆண்டுகள் அமெரிக்க மக்கள் கண்டு வரும் சமத்துவம் என்ற கனவு அந்த அழிவு நேரத்தில், நனவாகியது. ஆனால், பாவம், அந்த அழிவிலிருந்து மீண்டதும், பழைய பாகுபாடுகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன.

தொழுநோய் என்ற துன்பம், பாகுபாடுகளை மறந்து, இந்த பத்து நோயாளிகளை சேர்த்து வைத்தது. ஆனால், தொழுநோய் நீங்கியதும் என்ன நடந்திருக்கும் என்பதை இப்படி நினைத்துப் பார்க்கிறேன். "அவர்கள் புறப்பட்டு போகும்போது, அவர்கள் நோய் நீங்கிற்று" என்று நற்செய்தி கூறுகிறது. நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர் உரத்தக் குரலில் கடவுளைப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர். "மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று இயேசு தேடுகிறார். இந்தக் கேள்வியில் ஒலிக்கும் இயேசுவின் ஏக்கம் புரிகிறது. அவர்கள் அனைவரும் தன்னிடம் திரும்பிவந்து நன்றி சொல்லவேண்டும் என்ற ஏக்கம் அல்ல. நோயுற்றிருந்தபோது அவர்களிடம் அவர் கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்பதை இயேசு அதிகம் தேடியிருப்பார். அந்த ஒற்றுமை எங்கே போனது? போகும் வழியில் அது போய்விட்டது.

நோயாளி என்ற ஒரே குலத்தில் இருந்த அவர்கள், நோய் நீங்கியதும் யூதர் என்றும், சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். அந்தச் சமாரியரை மேலும், கீழும் பார்த்தனர். "நீங்கள் போய், உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்று இயேசு சொன்னதை நினைத்துப் பார்த்தனர். குருக்களிடம் தாங்கள் போகும்போது, இந்தச் சமாரியனோடு போனால், மீண்டும் பிரச்சனைகள் வருமே. இது நாள் வரை அவர்களை விலக்கிவைத்த தொழுநோய் என்ற தீட்டோடு, ஒரு சமாரியனோடு அவர்கள் சேர்ந்திருந்தது மற்றொரு தீட்டாக மாறுமே.

தொழுநோயுற்றபோது தன்னுடன் துன்பத்தில் இணைந்தவர்கள் மனதில் இப்போது வேற்றுமை எண்ணங்கள் வளர்ந்திருந்ததை அவர்களின் வெப்பப் பார்வையிலேயே அந்த சமாரியர் உணர்ந்திருக்கவேண்டும். அவராகவே அவர்களை விட்டு விலகுகிறார். அனால், அவருக்குள் ஒரு சின்ன கலக்கம். தன்னை இவ்வளவு அன்போடு குணமாக்கியவர், "குருக்களிடம் காட்டுங்கள்." என்று கட்டளையிட்டாரே. என்ன செய்யலாம்? என்ற கலக்கம் அது. அவரது மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது. தன்னை குணமாக்கியவரே ஒரு பெரும் குரு. தெய்வம். அவரிடமே சரண் அடைவோம். இந்தத் தெளிவோடு அந்தச் சமாரியர் இயேசுவிடம் திரும்ப வருகிறார்.

திரும்பி வந்த சமாரியரைப் பார்த்து, இயேசுவுக்கு ஒருபுறம் மகிழ்வு. மறுபுறம் வேதனை. நன்றிக்கடன் செலுத்தவந்த சமாரியரைப் பார்த்து மகிழ்வு. ஆனால், அவர் மீண்டும் தனிமைபடுத்தப்பட்டது, ஒதுக்கப்பட்டது குறித்து இயேசுவுக்கு வேதனை. "மற்ற ஒன்பது பேரும் எங்கே?" என்று மனம்விட்டு, வாய்விட்டு கேட்டே விடுகிறார். இயேசுவின் இந்த ஏக்கம் நிறைந்த கேள்விக்கு நாம் இன்றும் பதில் சொல்லமுடியாமல் தடுமாறுகிறோம். நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போதும், கலவரங்கள், போர்கள் என்று மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளின்போதும் ஒருங்கிணையும் நாம், இத்துன்பங்கள் விலகியதும் மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோமே இது ஏன்? இன்றைய நற்செய்தி இக்கேள்வியை 2வது பாடமாக நமக்கு முன் வைக்கிறது. நமது பதில் என்ன?

இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் 3வது பாடம் - வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றி உணர்வைப் பற்றிய பாடம். உலகில் உள்ள மக்களை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். நன்றியுள்ளவர்கள், நன்றி மறந்தவர்கள். இவ்விரு குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருப்பார்கள்? இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டது போல, ஒன்றுக்கு ஒன்பது என்பதுதான் அந்த கணக்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நம்முடைய சொந்த வாழ்வையும் ஆய்வுசெய்தால், அங்கும் இதே கணக்கு நிலவுகிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்கலாம். நம்மில் பலருக்கு, என்னையும் சேர்த்து சொல்கிறேன்.. நன்றி உணர்வு ஒன்று எழுந்தால், அதை அழுத்தி, புதைத்துவிட ஒன்பது பிற எண்ணங்கள் எழுந்து வரும். இதனால், நாம் நன்றி சொல்லும் நேரங்களைவிட, கவலைகளையும், கோபதாபங்களையும் சொல்லும் நேரங்கள்தாம் அதிகம். நமது செபங்களைச் சிறிது ஆய்வு செய்தால், அவற்றில், பத்தில் ஒன்பது பகுதி குறைகளை வெளியிடும் விண்ணப்பச் செபங்களாகவும், பத்தில் ஒரு பகுதி மட்டுமே நிறைகளைக் கூறும் நன்றி செபங்களாகவும் இருக்கலாம்.

இறைவனுக்கும், பிறருக்கும் நன்றி சொல்லும்போது, அதுவும் உதட்டளவில் இல்லாமல், உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்லும்போது, அழகியதொரு நிறைவை நாம் கட்டாயம் உணர்ந்திருப்போம், இல்லையா?

நன்றியைப் பற்றிய இரு அழகான எண்ணங்கள் நமக்கு உதவியாக இருக்கும் ",The most important prayer in the world is just two words long: Thank you", Meister Eckhart உலகத்திலேயே மிக முக்கியமான, அவசியமான செபம் இரண்டே வார்த்தைகளில் அடங்கும்: உமக்கு நன்றி.

இன்னொமொரு அழகான கூற்று: ",God has two homes - one in heaven and the other in a humble, thankful heart", - Izaak Walton. கடவுள் வாழும் இல்லங்கள் இரண்டு. ஒன்று விண்ணகம். மற்றொன்று நன்றி நிறைந்த உள்ளம். கடவுள் விரும்பித்தங்கும் இல்லமாக நம் உள்ளங்கள் இருக்கவேண்டும் என்பது, இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் 3வது பாடம்.

மனிதர்கள் எந்நிலையில் இருந்தாலும், அவர்களை மதிக்கும் மனதை நாம் அனைவரும் பெறவும், நம்மிடையே வளர்ந்துள்ள பிரிவுகள் மறையவும், வாழ்வில் நாம் என்றும் நன்றியுள்ளம் கொண்டு வாழவும் அன்னையின் பரிந்துரையை வேண்டுவோம்.
 
மறையுரைச்சிந்தனை  -- Fr. M. Arul

நன்றி

அமெரிக்கா ஜனாதிபதியாக ஆகுமுன் ஆப்ரகாம் லிங்கன் ஒரு தடவை உணவருந்த ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தார். உணவு அருந்தியபின், உணவுக்கு உரிய பணத்தை சர்வரிடம் கொடுத்து, உன் அன்பான சேவைக்கு நன்றி' என்று சொன்னார். அந்தப் பணியாளர் உள்ளத்தில் பெருமகிழ்ச்சியோடு, 'ஐயா! நான் இந்த உணவு விடுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். இங்கு வரும் ஒவ்வொருவரையும் அன்போடு உபசரித்துள்ளேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் அன்பாகப் பேசி, எனக்கு நன்றி சொன்னீர்கள். உங்களை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்' என்றான். மறு ஆண்டே ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நன்றியுள்ளவர்கள் அனைவராலும் போற்றப் படுவார்கள்! எல்லா பண்புகளுக்கும் தாயாக இருப்பது நன்றிதான் என சீசர் கூறுகிறார். எத்தகைய குற்றங்களுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் செய் நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிறார் திருவள்ளுவர்.

இறைவாக்கினர் எலிசா சீரியா நாட்டு நாமான் என்பவனைக் குணமாக்குகிறார். நாமான் திரும்பி வந்து நன்றி கூறி , அன்பளிப்பு வழங்குகிறார். ஆனால் எலிசா அன்பளிப்பை வாங்க மறுத்தபோது, இஸ்ரயேலின் கடவுள் ஒருவரே உண்மையான கடவுள், (2 அர. 5:15) என்று அறிக்கையிடுகிறார் நாமான். இவர் ஒரு யூதரல்லாத பிறவினத்தைச் சேர்ந்தவர் (முதல் வாசகம்).

இன்று வாசித்த நற்செய்தியிலே, இயேசு பத்து தொழு நோயாளிகளைக் குணமாக்குகிறார். குணம் பெற்றவர்களில் யூதரல்லாத சமாரியன் மட்டும் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி சொல்லுகிறான். "ஆனால் பத்து பேர் குணமாகவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே ? (லூக். 17:17-18) கடவுளைப் போற்றிப் புகழ, இந்த அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பி வரக் காணோமே" என்கிறார் இயேசு (மூன்றாம் வாசகம் ). இன்று கூட கிறிஸ்தவ திருத்தலங்களுக்குப், பிற சமயத்தவர்தான் நன்றி உணர்வோடு அதிகமாகக் காணிக்கை செலுத்த வருகிறார்கள்.

நாம் கடவுளுக்குப் புகழுரையும், நன்றியும் செலுத்த வேண்டும் என்பதற்கு நம் ஆண்டவர் இயேசுவும், அன்னை மரியாவும் நமக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர். இலாசரை உயிர்பிக்கும் முன்பாகக் கடவுளுக்கு நன்றி கூறுகிறார் இயேசு (யோவா. 11:41). இறுதி உணவின் போது அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி கூறித்தான் தன் உடலாக , இரத்தமாக மாற்றுகிறார் (லூக். 22:19).

"இதோ என் உள்ளம் ஆண்டவரைப் போற்றிப் பெருமைப் படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து என் மனம் பேருவகை கொள்ளுகிறது", (லூக். 1:46-47) என்று அன்னை மரியா புகழ்ச்சிப் பாடல் இசைக்கிறார். திருப்பாடல் ஆசிரியர் பாடிய 150 பாடல்களில், பாதிக்குமேல் நன்றியும், புகழ்ச்சியும் கலந்த கீதங்கள் அல்லவா.

அன்பார்ந்தவர்களே, கடவுளைப் போற்றுவது இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் நாம் கடவுளைப் புகழக் கற்றுக்கொள்ள வேண்டும். துன்பம் வந்தால் கடவுள் தான் காரணம் என்று திட்டுகிறோம். நல்லது நடந்தால் கடவுள் காணாமற்போய் விடுகிறார்! ஒரு தாய் தன் பச்சிளங் குழந்தையோடு தூங்கிக் கொண்டிருந்தபோது கருந்தேள் ஒன்று அந்தத் தாயைக் கொட்ட வேதனையால் துடி துடித்தாள். ஆனால் இந்த வேதனையிலும், என் குழந்தையைக் கொட்டாமல், என்னைக் கொட்டியதற்காக, இறைவா! உமக்கு நன்றி என்றாள். இந்த மனநிலைதான் இன்று நமக்குத் தேவை என்பதை உணருவோம்.
 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (2அர. 5:14-17)

அக்காலத்தில் சீரியா நாட்டு மன்னனின் படைத்தலைவனான நாமான் ஒரு வலிமை மிக்க வீரனாய் இருந்தான். ஆனால் அவனுக்குத் தொழுநோய் பிடித்திருந்தது. இஸ்ராயேலைச் சார்ந்த சிறுமியின் மூலம் இறைவாக்கினர் எலிசாவைப் பற்றி அறிந்து அங்கே செல்கிறான். எலிசா நாமானை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் தனது ஆள்மூலம் நாமானை யோர்தானில் 7 முறை குளிக்கச் சொல்லுகிறார். ஆனால் நாமான் எதிர்பார்த்ததோ வேறு, எலிசா தன்னைத்தொட்டு குணமாக்குவார் என்றெண்ணினான். இருப்பினும், நாமான் கடவுளின் அடியாரது வாக்கிற்கிணங்கி யோர்தானில் மூழ்கி எழ நோய் நீங்கியது. உண்மையான இறைவனுக்கு ஆராதனை செய்கிறான். இஸ்ராயேலின் கடவுளைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்று சான்று பகிர்கிறான்.

இரண்டாம் வாசகப் பின்னணி (2திமோ 2:8-13)

இறைப்பணி புரிய மனஉறுதி வேண்டும் என்று தூய பவுல் திமொத்தேயுவுக்கு இரண்டாம் திருமுகம் வரைகிறார். ஏனெனில் உயிர்த்தெழுதலைப் பற்றிய மாறுபாடான போதனைகளும், உலக இச்சைகளுக்குட்பட்ட போதனைகளும் துவக்க திருச்சபையிலிருந்த புதிய உறுப்பினர்களுக்கு ஒரு நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது. எனவே மக்களுக்கு நம்பிக்கை ஊட்டத் திமொத்தேயு வழியாக மற்றவர்களைத் திடப்படுத்துகிறார். உலகப் போக்கிலான போதனைகள் சதை அழுகும் நோய்களும் ஒப்பாகும் என்று சாடுகிறார். எனவே உறுதியுடன் நற்செய்தி சொல்லத் தன் மகனாக நினைத்துக் கடிதம் எழுதுகிறார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 17:11-19)

தந்தையின் திட்டம் நிறைவேற வேண்டிய நாட்கள் நெருங்கி வருவதைக் கண்ட இயேசு எருசலேமுக்குப் போகின்ற வழியிலே கலிலேயா, சமாரியா பகுதிகள் வழியாகச் செல்கிறார். இந்த ஊர்களுக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில்தான் தொழுநோய்ப் பிடித்தவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துதான் இயேசு அவ்வழியே செல்லுகிறார். ஏனென்றால் தொழுநோய்ப் பிடிக்கப்பட்டவர்கள் சமுகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட- வர்கள், வெறுக்கப்பட்டவர்கள். தாங்கள் இருப்பதை மற்றவர்- களுக்குத் தெரிவித்து தங்களிடம் உள்ள மணியை அடித்து ஒலியெழுப்பி எச்சரிக்கைச் செய்வர். அந்த அளவுக்குத் தொழு- நோயாளிகள் வேதனை அடைகின்றவர்கள். குணமளிக்கும் இயேசு வருவதைக் கண்டதால் 10 தொழுநோயாளிகளும் தங்களைக் குணமாக்க மனமிரங்கும்படி வேண்டுகின்றனர். ஆனால் ஒரு சமாரியர் மட்டுமே நன்றிச் சொல்லத் திரும்பி வந்தார்.

மறையுரை

"நன்றி மறப்பது நன்றன்று", "செய்நன்றி மறந்தாருக்கு உய்வில்லை", "பிறர் உனக்குத் தினையளவு நன்மை செய்தால், அதைப் பனை அளவாகக் கருதி பாராட்ட வேண்டும்", என்ற நீதி நூல்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். இத்தகைய நன்றியுணர்வை ஆறறிவுள்ள மனிதர்கள் பயன்படுத்து கின்றார்களோ இல்லையோ ஐந்தறிவுள்ள நாய் தனது எசமானுக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்கும். தன்வாலை ஆட்டித் தன் நன்றியைத் தெரிவிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மனிதர்களாகிய நாம் நன்றியுள்ளவர்களா? அப்படியானால் நாம் யாருக்கு நன்றி- யுள்ளவர்களாக இருக்க வேண்டும்? இன்றைய வாசகங்கள் நமக்கு நன்றியின் மேன்மையை எடுத்துரைக்கின்றன.

எந்த ஒரு மனிதனும் பிறரின் துணை இல்லாமல், உதவி- இல்லாமல் வாழ்தல் என்பது கடினமான ஒன்று. ஆதலால் இவ்வுலகில் ஒருவரைச் சார்ந்து தான் வாழ முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. பிறரிடமிருந்து உதவி பெறுபவனின் குறைந்த அளவு கைம்மாறு எது என்றால் 'நன்றி' என்ற வார்த்தைதான். இந்த வார்த்தைச் செயலோடு இணையும்பொழுது புண்ணியமாகும். இப்படி நன்றி என்ற புண்ணியத்தில் வளருகின்ற மனிதன் தன்னைப் படைத்தவரைக் கண்டு கொண்டு நன்றியுள்ளவனாக வாழும் பொழுது மேண்மையான புண்ணியங்களைத் தடையின்றி பெற்றுக்- கொள்கிறான். பெற்றோர்கள் எல்லாருமே தன்பிள்ளைக்கு எதிர்- பார்ப்பு இல்லாமல் செயல்படுபவர்கள். எந்தப் பெற்றோர்களாவது தன் பிள்ளைகளிடம் நன்றி எதிர்பார்ப்பார்களா? கண்டிப்பாகக் கிடையாது. ஆனால் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தன் எந்த ஒரு மனிதனும் பிறரின் துணை இல்லாமல், உதவி- இல்லாமல் வாழ்தல் என்பது கடினமான ஒன்று. ஆதலால் இவ்வுலகில் ஒருவரைச் சார்ந்து தான் வாழ முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. பிறரிடமிருந்து உதவி பெறுபவனின் குறைந்த அளவு கைம்மாறு எது என்றால் 'நன்றி' என்ற வார்த்தைதான். இந்த வார்த்தைச் செயலோடு இணையும்பொழுது புண்ணியமாகும். இப்படி நன்றி என்ற புண்ணியத்தில் வளருகின்ற மனிதன் தன்னைப் படைத்தவரைக் கண்டு கொண்டு நன்றியுள்ளவனாக வாழும் பொழுது மேண்மையான புண்ணியங்களைத் தடையின்றி பெற்றுக்- கொள்கிறான். பெற்றோர்கள் எல்லாருமே தன்பிள்ளைக்கு எதிர்- பார்ப்பு இல்லாமல் செயல்படுபவர்கள். எந்தப் பெற்றோர்களாவது தன் பிள்ளைகளிடம் நன்றி எதிர்பார்ப்பார்களா? கண்டிப்பாகக் கிடையாது. ஆனால் பிள்ளைகள் ஒவ்வொருவரும் தன் பெற்றோருக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வது தான் கடமையும், கைமாறுமாகும். இவ்வாறு இருக்க நம்மைப் படைத்தவருக்கு நாம் நன்றிச் சொல்லுவதாலோ, இறைவனைப் புகழ்வதாலோ இறை- வனுக்கு நன்றிச் சொல்லுவதாலோ இறைவனுடைய மாட்சிமை கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. மாறாக நம்முடைய புகழுரையும் நன்றியுரையும் நாம் மீட்பு பெற உதவுகிறது என்பது தான் உண்மை. பெற்ற நன்மைகளுக்கு நன்றி செலுத்துகிறவன் மேலும் மேலும் இறைவனிடமிருந்து நன்மைகள் பெறத் தன்னை தகுதியுடையவன் ஆக்குகிறான். நம்பிக்கையில் வளர்கிறான். கடவுளின் மனிதரான எலிசா, தன்னைத் தொட்டு நோயைக் குணமாக்குவார் என்று எண்ணி வந்தப் படைத்தலைவன், ஆள்மூலம் சொல்லியனுப்பியதைக் கண்டு சினமடையலாம். இருப்பினும் வலிமைமிக்க வீரனான நாமான் இறைவாக்கினார் எலிசாவின் வாக்கை நம்பி யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழத் தன்னைப் பிடித்திருந்தத் தொழுநோய் நீங்கியதைக் கண்டு ",இஸ்ரேயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்துக் கொண்டேன்" என்று கூறி எலிசாவுக்கு நன்றியாக அன்பளிப்பு கொடுக்கிறான். ஆனால் இறைவாக்கினர் வாங்க மறுத்து விடுகிறார். மாறாக, எலிசா வழியாக அருளைப் பெற்றுக் கொண்டு வேறு எந்தத் தெய்வங்களுக்கும் பலி செலுத்தமாட்டேன் என்று உறுதியாக முடிவு எடுத்து உண்மை இறைவனுக்கு ஏற்றவாறு வாழ்ந்தான் என்பதை இன்று முதல் வாசகத்திலே கேட்டோம். இறைவனைக் கண்டு கொண்டு அவருக்கு நன்றி செலுத்தும்பொழுது அவருடைய எல்லையற்ற அன்பும் அருளும் நம்மை மீட்பின் பாதைக்கு அழைத்துச் செல்லும். இன்றைய நற்செய்தி வாசகத்திலே, இறைமகன் இயேசு 10 தொழுநோயாளிகளைக் குணமாக்கிட ஒருவன் மட்டும் திரும்பி வந்து அவருக்கு நன்றி செலுத்துகிறான். குணமளிக்கும் இயேசு வருவதைக் கண்டு உரக்கக் கத்தி "ஐயா! இயேசுவே எங்களுக்கு இரங்கும்" என்று 10 பேரும் வேண்டினார்கள். குணமளிக்கும் ஆண்டவர் அவர்கள்மேல் பரிவு கொண்டு அவர்களைக் குருவிடம் சென்று காட்டச்சொல்லுகிறார்.

பார்வையற்றவர்களைக் குணமாக்கியவர், ஊனமுற்றவர்களை குணமாக்கியவர், ஊமையானவரைப் பேசவைத்தவர், இறந்தவரை யெல்லாம் உயிர்த்தெழச் செய்த ஆண்டவர் இயேசு இந்தத் தொழுநோயாளர்களைத் தொடவில்லை. மாறாகக் 'குருவிடம் சென்று உங்களைக் காட்டுங்கள்' என்று சொல்லுகிறார். தன் முன் முழந்தாள் படியிட்டு மன்றாடிய தொழுநோயாளியைக் கைகளால் தொட்டு குணமாக்கிய ஆண்டவர் (மத்தேயு 8:1-4; மாற்கு 1:40-45) இவர்களைத் தன் உள்ளத்தால் மட்டும் தொட்டு குணமாக்க விரும்புகிறார். இவர்களது நம்பிக்கையை அறிய விரும்புபவராக இயேசு இங்கே தோன்றுகிறார். அதுமட்டும் அல்லாமல் யூதச் சமுதாயத்தில் யாராவது தொழுநோய்ப் பிடிக்கப்பட்டு இருந்தால், அவனைக் குருதான் நோய் குணமாகி விட்டதா, இல்லையா என்று பார்த்துச் சொல்ல வேண்டும் என்பதையும் குணம் பெற்றதற்- கான காணிக்கைச் செலுத்த வேண்டும் என்றும் இயேசு நன்கு அறிந்திருந்தார். எனவே தான் அந்த 10 தொழுநோயாளிகளையும் ஆண்டவர் குருவிடம் காட்டச் சொல்லுகிறார். ஆரோன் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த மோயிசன் சட்டத்தைக் கடைபிடிக்க ஆண்டவர் அவர்களைக் குருக்களிடம் அனுப்புகின்றார். அவர்கள் அவ்வாறு செல்லும்பொழுது வழியிலேயேக் குணமடைந்து விட்டதை உணர்ந்த சமாரியன் திரும்பி வந்து ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறான். இவருடைய நன்றி உணர்வைக் கண்ட இறைமகன் இயேசு இவனுக்கு ஆசீர் அளித்து அனுப்புகிறார். புற இனத்தானான சமாரியனை மெச்சுகிறார். ஆனால் யூதர்களின் நன்றியின்மையைக் கண்டு ஆண்டவர் திகைக்கிறார். ஆனால் இப்படிப் பட்டவர்களையும் புறம்பே தள்ளாதவர் நம் ஆண்டவர் என்பதை உணர்ந்து நாம் அவரை அணுக வேண்டும். யூதன் அல்லாத சமாரியன் குணமானதைக் கண்டாவது குருக்கள் இயேசுவின் மீது நம்பிக்கைக் கொள்ள வழிசெய்கிறார்.

உடல்நோய்களை மட்டும் குணமாக்க வந்தவரல்ல நம் ஆண்டவர். மாறாக நமது ஆன்ம நோயையும் குணமாக்கி மீட்பு வழங்க வந்தவர். குணமளித்தல்தான் இயேசுவின் மீட்பாக இருந்தது. ஏனென்றால் பாவத்தால் உடல் மட்டுமல்ல, ஆன்மாவும் நோய்வாய- பட்டுள்ளது என்பது அவருக்குத் தெரியும். உடல் இச்சைகளின் வழி ஆன்மாவும் தொழுநோய் பிடித்த ஆன்மாவாக மாறிவிடும். ஒருவனுடைய ஆன்ம நோய் குணமாகும்பொழுது அவனது உடல் நோயும் குணமாகிறது என்பதை இன்று நமக்கு உணர்த்தவே நம்மைப் பிடித்துள்ள ஆன்மாவின் தொழுநோயைக் குருவிடம் காட்டச் சொல்லுகிறார். எந்த மனிதனையும் அவர் உடல் வேறு ஆன்மா வேறு என்று பிரிக்கவில்லை. ஆதலால் நம்மையும் ஒப்புரவு என்னும் திருவருட்சாதனத்தின் வழியாகக் குருக்களிடம் சென்று பாவ- மன்னிப்பு பெற்று ஆன்ம நோயினின்று விடுதலை பெறச் சொல்லு- கிறார். மெல்கிசதேக்கின் முறைப்படி ஆண்டவர் இயேசுவே நமக்கு என்றும் பெரியக் குருவாக இருக்கிறார். அதனால் தான் தன் அதிகாரத்தைக் குருக்களுக்குக் கொடுத்து இன்று அவர்கள் வழியாகப் பாவமன்னிப்பு பெற வழி செய்துள்ளார். ஆகவே நாம் குருவிடம் செல்லும்பொழுது மனிதர்களிடம் செல்லுவதில்லை. மாறாக நம் பெரியக் குருவாகிய ஆண்டவர் இயேசுவிடமே செல்லு- கிறோம் என்று எண்ணி பாவமன்னிப்பு திருவருட்சாதனத்தில் பங்கேற்க வேண்டும். நம் நோய்களையும் பாவங்களையும் சுமந்து கொண்டவர் அவர். அவரிடம் 'ஆண்டவரே எங்கள்மேல் இரக்கமாயிரும்' என்று கேட்கும்பொழுது நம்மை அரவணைத்து குணமாக்குவார். அவர்மீது கொண்ட நம்பிக்கையில், பாவமன்னிப்பின் வழி குணம் பெறுகின்றபொழுது, நன்றி மறந்த 9 தொழுநோயாளர்- களைப் போல் இல்லாமல் நன்றி சொல்ல வந்த சமாரியனைப் போல எப்பொழுதும் நன்றியுள்ளவர்களாய் வாழ்ந்து காட்டுவோம். அதனால் இறையாசீர் பெற்று வளமுடன் வாழ்வோம்.

எத்தகைய நோயையும் குணமாக்குகின்ற, எந்தப் பாவத்தில் இருந்தும் சாபத்திலிருந்தும் விடுதலை கொடுக்கின்ற ஆண்டவர் இயேசுவிடம் தொடரும் திருப்பலியிலே நம்மை முழுமையாக அர்ப்பணித்து நன்றியுள்ளம் கொண்டவர்களாய் நற்கருணை மூலம் வருகின்றவரைத் தாழ்ச்சியான உள்ளத்தோடு வரவேற்போம். நம்பிக் கையினால் நலம் பெற்று நற்கருணையினால் அழியா வாழ்வைப் பெறுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்றச் செல்வமாக அன்னை மரியின் பரிந்துரைவழி ஆண்டவர் இயேசுவிடம் செல்லுவோம். மீட்பு பெறுவோம். அவருடைய செயல்களுக்காய் நன்றி கீதம் பாடுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்

குணமளிப்பவர் நம் ஆண்டவர் இயேசு ஒருவரே.
பாவம் நீங்கினால் நோய் நீங்கும்.
மனித நேயமே இறை நேயம்.
நம்பினோர் கெடுவதில்லை.
நன்றி சொல்ல மறவாதே. நன்மைகள் பெறாமல் இராதே.
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌

பொதுக் காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு
1. பின்னணி

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் பல விடயங்களில் ஒன்றிணைகின்றன. இரண்டிலும் தொழு நோயாளர் குணமாதல் பேசப்படுகிறது. இருவரும் யூதரல்லா பிற இனத்தார், இருவரும் (நாமானும், சமாரியரும்) நன்றியுடையவர்களாக இருக்கின்றனர், திரும்ப வந்து நன்றி செலுத்துகின்றனர். இயேசுவின் வாழ்விலும் லூக்கா இந்த இடத்தில் இதை விவரிப்பதற்கும் பல காரணங்களும் பொருளும் உள்ளன. அவற்றை விவரிக்கும் முன் இந்நிகழ்வுக்கான சில பின்னணித் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

1.1. யூதத்தில் தொழுநோயாளர்

யூத சமயத்திலும் சமூகத்திலும் தொழுநோயாளர்களை நடத்தும் விதம்குறித்துக் கட்டளைகள் இருந்தன. எண் 5:2-3ன் படி அவர்கள் மக்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டுத் தனியாக, ஒதுக்குப் புறத்தில் வாழ வேண்டும். லேவி 13:45-46ன் படி மேலுதட்டை மறைத்துக்கொண்டு, மற்றவர்கள் தங்களை அணுகிவராவண்ணம் 'தீட்டு, தீட்டு' எனக்குரலெழுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் சமூகத்திற்கு புறம்பாக்கப்பட்டவர்களாக இருப்பர். அவரைத் தீட்டுள்ளவர் எனக்கண்டு அவரைச் சமூகத்திற்குப் புறம்பாக்கும் வேலையையும் (லேவி 13:3, 10-11), அவர் தீட்டற்றவர் (லேவி 13:13) எனக் கணித்து அவரைச் சமூகத்தில் இணைத்துக் கொள்ளும் பணியையும் சமூகத்தின் பிரதிநிதியாய் குரு செய்வார்.

1.2. லூக்கா நற்செய்தியின் பின்னணி

லூக்கா நற்செய்தியின் பதினேழாம் அதிகாரத்தின் தொடக்கத் தில் சீடத்துவத்தின் எதிர்பார்ப்புகள், தேவைகள், சவால்கள் ஆகியவற்றைக் குறித்து பேசியபின் இயேசுவின் வரலாறு, நிகழ்வுகள் மீண்டும் தொடர்கின்றன. இயேசு ஓர் இறைவாக்கினராக எருசலேம் நோக்கிப் பயணம் செய்கின்றபோது கலிலேய, சமாரியப் பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்றதாக அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பகுதிக்கும், இதற்கு முந்தைய பகுதிக்கும் இடையேயும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. முந்தைய பகுதியில் 'கடுகளவு நம்பிக்கை'யைப் (வச. 6) பற்றி இயேசு பேசுகின்றார். இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு நலம் பெற்ற சமாரியரிடம் ",உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது", (வச 19) என்று கூறி அனுப்புகின்றார். எனவே நம்பிக்கை எனும் கருத்து இவையிரண்டையும் இணைக்கின்றது. அதேபோல முந்தைய பகுதி "நன்றி கூறுவதைப் பற்றி",ப் (வச. 9) பேசுகின்றது. இந்த பகுதியிலும் நன்றி கூறுவது மையப் புள்ளியாக அமைந்துள்ளது. எனவே இப்பகுதி சீடர்களுக்கு நன்றியைப் பற்றி உணர்த்தும் பகுதியாகக்கூட கொள்ளலாம். அதாவது சீடர்கள் தாங்கள் செய்த பணிக்கு நன்றியை எதிர்பார்க்கக் கூடாது (காண். வச. 7-10) மாறாக செய்ய வேண்டிய கடமையைத் தாங்கள் செய்ததாக எண்ணிக் கொள்ள வேண்டும். ஆனால் தாங்கள் பெற்ற நன்மைக்கு சமாரியரைப் போல நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனும் கருத்தை இந்தப் பகுதி சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் கொள்ளலாம். இனி இன்றைய நற்செய்திப் பகுதி தரும் பிற செய்திகளை இவண் காண்போம்.

2. கிறிஸ்தியல்

இந்த நற்செய்திப் பகுதி நமதாண்டவரைப் பற்றிய இரு செய்திகளை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. முதலாவது, இயேசுவுக்கு இருக்கும் குணப்படுத்தும் ஆற்றல், குறிப்பாகக் கொடியது எனப்படும் தொழுநோயையும் குணப்படுத்தும் ஆற்றல். லூக் 5:12-16-ல் இயேசு தொழுநோயாளர் ஒருவரைத் தொட்டுக் குணமாக்குகின்றார். இங்குப் பத்துப் பேரைத் தொடாமலே தூரத்திலிருந்தே குணமாக்குகின்றார். அடுத்து இயேசுவை எருசலேம் நோக்கிப் போய்க் கொண்டிருப் பவராகக் காட்டுவது அவரை ஓர் இறைவாக்கினராக படம்பிடித்து காட்டுகின்றது. இந்தப் பயணத்தில் அவரை ஏற்றுக் கொண்டு அவருக்குச்சார்பாயிருந்தவர்களையும், அவரை எதிர்த்து அவருக்கு எதிராய் இருந்தவர்களையும் லூக்கா அவ்வப்போது பதிவு செய்கின்றார். அந்த வகையில் இறைவாக்கினருக்கான ஏற்பும் எதிர்ப்பும் என்னும் கண்ணோட்டத்திலும் இப்பகுதியைக் காணலாம். அதோடு கூட ஓர் இறைவாக்கினர் ஒரு நல்ல செயலைச் செய்தபிறகு அதற்கு நல்ல நேர்மறையான பதிலிருப்பை, உதவி பெற்றவரிடமிருந்து நன்றியை எதிர்பார்க்கும் ஏக்கத்தை, "பத்து பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே" (வச. 17-18) எனும் இயேசுவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

ஐந்தாம் அதிகாரத்தில் ஒரு தொழுநோயாளரை குணப்படுத்திய போதும், இங்கும் இயேசு அவர்களை மறவாமல் குருவிடம் காட்டச் சொல்கின்றார். இவ்வாறு இயேசு மோசேயின் சட்டத்தைக் கடைப்பிடிப்பவராகக் காட்டப்படுவதோடல்லாமல், தொழுநோயாளர்களின் உடல் நோய் நீங்குவது மட்டுமல்லாமல் அவர்கள் மீண்டும் சமூகத்தோடு இணைக்கப்பட்டு சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துவதாக இதைக் கொள்ள வேண்டும்.
3. குணமடைந்தவர்

இதே நிகழ்ச்சிப் பகுதியைக் குணமடைந்தவர் எனும் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அவர்கள் இயேசுவை எதிர்கொண்டு வருகின்றனர். தங்களைத் தாங்களே 'தீட்டு' 'தீட்டு' எனக் கத்துவதற்குப் பதிலாக 'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்' என்று குரலெடுத்து கூவுகின்றனர். தங்களின் செபத்தை ஏறெடுக்கின்றனர்.அடுத்து 'நீங்கள் போய் உங்களைக்குருக்களிடம் காண்பியுங்கள்' (வச.14)எனும்வார்த்தையைநம்பி, இயேசுவைநம்பி குருக்களிடம் செல்லும் வழியிலேயே தங்களின் நம்பிக்கையால் நலமடைகின்றனர். அதனால்தான் இயேசுவும், 'உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது' என்கிறார் (வச. 19). இறுதியாக, திரும்பி வந்த சமாரியர் 'கடவுளைப்போற்றி புகழ்கின்றார் (வச. 15), இயேசுவின் காலில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்துகிறார் (வச. 16). எனவே இந்தக் குணமடைந்தவரைப் போல நாமும் நம் வாழ்வில் முதலில் இறைவார்த்தையின் மீது, இயேசுவின்மீது நம்பிக்கையுடையவர்களாக இருப்போம்.அடுத்து இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றியுடையவர் களாய், இறைவனை புகழ்கின்றவர்களாக இருக்க முயல்வோம்.
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

பொதுக்காலம் - இருபத்தெட்டாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் : 2 அர. 5 : 14-17

சிரியா அரசனின் படைத்தலைவனான நாமான் தன் தொழுநோயிலிருந்து இஸ்ரயேல் இறைவாக்கினர் எலிசாவால் குணமாக்கப்பட்டது பற்றிக் கூறுகிறது இன்றைய வாசகம். சிரியாவையும் இஸ்ரயேலையும் தம் விருப்பத்திற்கும் திட்டத்திற்கும் ஏற்ப நடத்திச் செல்பவர் ஆண்டவர் ஒருவரே என்று எடுத்துக்காட்டுவதோடு, நாமான் நலம் பெற்று இஸ்ரயேலரின் கடவுளை ஏற்றுக்கொண்டதைப் பற்றியும் இன்றைய வாசகம் வழியாக அறிகிறோம்.

நாமானின் கீழ்ப்படிதல்

"நீ போய் யோர்தான் நதியில் ஏழு முறை குளித்தால் உன் உடல் நலம் பெறும்; நீயும் தூய்மையடைவாய்" (5 : 10) என்ற எலிசாவின் சொற்கள் நாமானைக் கோபமடையச் செய்தனவெனினும், எலிசா தன்னைத் தொட்டுக் குணப்படுத்தவில்லையே என்று நாமான் வருத்தமுற்றாலும், நல்ல தண்ணீரையுடைய அபானா, பர்பார் என்ற தன் நாட்டு ஆறுகளை விட்டுவிட்டு, யோர்தான் ஆற்றில் குளிக்கச் சொல்கிறாரே என்று முணுமுணுத்தாலும், இறுதியிலே நாமான் எலிசாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறான் (5: 11 - 13). "அவனது உடல் நலம் பெற்றுச் சிறு குழந்தையின் உடலைப் போல் மாறிற்று; அவனும் முழுவதும் தூய்மை யடைந்தான்" (5: 14). இறைவாக்குக்குச் செவிமடுக்கும்போது இறைவனுக்கே செவிமடுக்கிறோம். ''உயிரைக் கொடுக்கவும் உயிரை எடுக்கவும் வல்ல கடவுள்" (5:7) இன்னும் அவருடைய வார்த்தைகள் வழியாக, வேதாகமம் வழியாக நம்மிடம் பேசுகிறார்; நமக்குக் குணமளிக்க விரும்புகிறார். அவருடைய வார்த்தைகளுக்குச் செவிமடுப்போமா? "எழுந்து நட" (லூக். 5: 21 - 25) என்று அன்று சொன்ன இயேசு இன்றும் "நோயிலிருந்து எழுந்து நட", "பாவத்திலிருந்து எழுந்து நட' ",சுயநலத்திலிருந்து, பேராசையிலிருந்து, அநீதியிலிருந்து எழுந்து நட" என்று நம்மிடம் கூறுவதைக் கேட்டுக் கீழ்ப்படிவோமா?

நாமானின் நன்றி

"பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!", (லூக். 17: 11- 19) என்றார் இயேசு. நாமானின் நன்றிச் சொற்களைக் கேட்ட கடவுள் நிச்சயம் மகிழ்வுற்றிருப்பார். "இஸ்ரயேலின் கடவுளைத் தவிர வேறு கடவுள் அனைத்துலகிலும் இல்லை" (5:15) என்ற அவனுடைய நன்றிச் சொற்களும், அச்சொற்களை உறுதிப்படுத்திய அவனது காணிக்கைகளும் (5 : 15) நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. நன்றி செலுத்துவது ஒரு கடப்பாடாகும். இறைவனுடைய அளவற்ற அன்றாடக் கொடைகளுக்காக மட்டுமன்று, நம்மைச் சூழவிருப்போரின் நற்சொற்கள், செயல்களுக்கு ",நன்றி", யென்று வாய்திறந்து கூறுகிறோமா? ",இடரைக் களைந்த எந்தாய் போற்றி",, "நனவிலும் நாயேற்கருளினை போற்றி",, ",அடைந்தவர்க்கருளிய அப்பா போற்றி",, ",இருள்கெட அருளிய இறைவா போற்றி", (திருவாசகம் போற்றித் திருவகவல்). "போற்றி, போற்றி" யென்று இறைவனுக்கும் ஏனையோருக்கும் நன்றிக்கீதம் பாடுவதற்குப் பழகிக்கொள்வோமா?

நாமானின் வாக்குறுதி

அந்நிய தேவர்களை விட்டுவிட்டு, "ஆண்டவருக்கு மட்டுமே பலியிடுவேன்" (5:17) என்பான் நாமான். அவன் மறந்தும் பிறதெய்வங்களை வழிபடவோ, பிற தெய்வ வழிபாடுகளில் ஈடுபடவோ மாட்டான் என்பதும் அவனுடைய சொற்களிலிருந்து (5 : 18) புலனாகின்றது. இயேசுவையே முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்ட நாம் எத்தனை ",குட்டித் தெய்வங்களுக்கு" நமது உள்ளத்திலே பீடம் கட்டித் தூபம் காட்டுகிறோம்? பெண், மண், பொன் இவையனைத்தும் தன்னிகரில்லாத் தலைவனாகிய இறைவனுடைய இடத்தை ஆக்கிரமிக்கும்போது, உண்மையாகவே இயேசுவைத் தவிர, "யாமார்க்கும் குடியல்லோம்", (திருவாசகம், திருச்சதகம்) என்று நாம் வாய்விட்டுக் கூறமுடியுமா?

ஆண்டவரைத் தவிர வேறு கடவுள் அனைத்துலகிலும் இல்லை.
இரண்டாம் வாசகம் : 2 திமொ. 2:8-13

தன் ",அன்பு மகன் திமொத்தேயு", தன்னுடைய மறைப்பணியிலே பற்பல துன்பங்கள் எதிர்ப்படும்போது தளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பவுல் சில அறிவுரைகள் கூறுகிறார். இவ்வறிவுரைகளின் கருப்பொருளும் பவுலின் வாழ்வுச் சாட்சியமும் இன்றைய வாசகம் வழி வெளிப்படுகின்றன.

பவுல் சாட்சியம் பகரும் நற்செய்தி

தெய்வத்தன்மையை விடுத்த, பலவீன மனிதனாக மட்டும் இயேசுவை இன்று சிலர் போதிக்கின்றனர்! மாறாக, மனிதக் குறைபாடுகளே இல்லாத வேற்றுலகப் பிறவியான தெய்வீக இயேசுவை மட்டுமே போதிப்பவரும் உண்டு. இரு சாராருமே ",இயேசு நிகழ்ச்சியை", முழுவதும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. "மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் ஆக வேண்டியதாயிற்று" (எபி. 2 : 10 -18) என்று கூறிய அதே ஆசிரியர், ",மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே", (எபி. 5 : 5 - 6), ",கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப்பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்" (எபி. 1: 1 - 4) என்றும் இயேசு கிறிஸ்துவின் மனிதத் தன்மையையும் இறைத்தன்மையையும் இணைத்தே கூறுவது காணற்பாலது. ஆம், இயேசு உண்மையான மனிதன், உண்மையான கடவுள். இவ்விரண்டு உண்மைகளும் சேர்ந்தே ",நற்செய்தி" ஆகிறது. பவுல் இவ்வுண்மையை ஒழிவு மறைவின்றி ஏற்று இயேசுவைத் தாவீதின் வழிவந்த மனிதன் என்றும் அதே வேளையிலே இறந்தோரிடமிருந்து உயிர்த்த கடவுள் என்றும் போதிக்கிறார் (2 திமொ.2:8; உரோ. 1:3-4; திப. 13:22-23). கடவுள் என்ற முறையில் நம்மனைவருக்கும் மேம்பட்ட ",முதலும் முடிவும்" இயேசு; மனிதர் என்ற முறையில், நம் நோய் நோக்காட்டில், நமது பலவீனங்களில், நமது சாவில் நம்மோடு இணைந்த ",நம் சகோதரர்", இயேசு. இம்முழு நற்செய்திக்குச் சான்று பகர்தல் நம் கடன்.

பவுலின் நற்செய்திப் பணி

"நற்செய்திக்காகக் குரல்கொடுக்கவே நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என இவர்கள் அறிவார்கள்", (பிலி. 1: 16). அந்நற்செய்திக்காக, ",பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறி பட்டேன்; மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில் ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன். இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும்பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது", (2 கொரி. 11: 23 29) என்று கூறும் பவுல் நம் எல்லோரையும் வெட்கித் தலை குனிய வைக்கிறார். என்னென்ன காரியங்களுக்கெல்லாம் நம்முடைய நேரத்தைக் கொடுத்து, நம்முடைய திறமைகளைக் கொடுத்து, நம்முடைய பணத்தைக் கொடுத்து, நம்முடைய உடலையே, உயிரையே கொடுக்குமளவுக்கு உழைத்து ஓய்ந்திருக்கிறோம். அவற்றில் நூற்றில் ஒரு பங்கு நற்செய்திப் பணிக்காகக் செலவளித்திருக் கிறோமா?
நற்செய்தி காட்டும் வாழ்வு

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" (யோ. 12 : 24) என்ற ஆண்டவரின் சொற்களே நற்செய்தியின் சுருக்கம் எனலாம். துன்பமின்றி இன்பமோ, வருத்தமின்றி வாழ்வோ, இறப்பின்றி உயிர்ப்போ கிடையாது. எனவே மறுவுலக வாழ்வு பெற மட்டுமன்று, இவ்வுலக வாழ்வை வளப்படுத்தவும் ",இயேசுவோடு நாமும் இறக்க வேண்டும்" (2:11).

அவரோடு இறந்தோமானால் அவரோடு வாழ்வோம்.
நற்செய்தி: லூக். 17:11-19

நமதாண்டவர் பாவம் தவிர ஏனைய அனைத்திலும் நம்மையொத்தவர். அவர் திருமணத்திற்குச் சென்றதும், துக்கம் விசாரிக்கச் சென்றதும், குழந்தைகளைக் கொஞ்சியதும், தாகத்தால் தவித்தபொழுது சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டதும் (யோ. 4:7), கெத்சமனித் தோட்டத்தில் மரணபயம் அனுபவித்ததும் அவர் நம்மையொத்த முழுமனிதன் என்பதற்குச் சான்றுகள். இன்று அவரது மனித உள்ளம், நன்றி நவின்றதற்காக மகிழ்ந்து, நன்றி கொன்றவர்களுக்காக வேதனைப்படுவதைக் காணலாம்.

எளியோரின் குரல் கேட்போமா?

இப்பத்து தொழுநோயளிகளும் ஊருக்குப் புறம்பே ஒதுக்குப் புறத்தில் வாழ்ந்தனர் (லேவி. 13: 45-46; எண். 5: 2). கையில் மணியுடன் நடந்து சென்றனர். மற்றவர்கள் அவர்கள் மணிச் சத்தம் கேட்டு, கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இப்படி சமுதாயத்தில் நிராகரிக்கப்பட்டவர்களையே இயேசு அன்புடன் நோக்கினார். அவர்களுடன் பேசினார். தூரத்தில் நின்றுகொண்டே அவர்கள் ",இயேசுவே எங்கள்பேரில் இரக்கமாயிரும்" என்று உரக்கக் கூவினார். இயேசுவை முன்பின் காணாதவர்கள்; அவரது போதனையைக் கேட்டிராதவர்கள்; எனினும் அவர்களது அழைப்பிலே அவரைத் தம் குருவாக, இரக்கத்தின் இருப்பிடமாகக் காண்கின்றனர். வெந்து போன உடல் : நொந்து போன உள்ளம்; அங்கிருந்து எழுந்த குமுறலே அவர்களது செபம். இன்று தெருவிலே சரியான ஆடையின்றி, அழிந்துகொண்டிருக்கும் உடலைக் கொண்ட இத்தகையவரைக் காண்கின்றோம். இவர்களது குரல் நமது செவிக்கு எட்டுகிறதா? அவர்களைத் தேடிச் சென்ற இயேசுவின் இரக்க உள்ளம் என்னிடம் உண்டா?

"மன்னுயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் வேண்டும்." (பாரதி)

இறைச்சக்தியில் நம்பிக்கை வைப்போமா?

தன்னிடம் குணம் வேண்டி வந்தவர்களின் விசுவாசத்தை மேலும் சோதிக்கிறார் இயேசு. நீங்கள் போய்க் குருக்களிடம் உங்களைக் காட்டுங்கள் என்றார் (17:14). இறைவாக்கினர் தன்மீது கரங்களை வைத்து, செபித்துக் குணமாக்குவார் என்று ஆவலுடன் வந்து, ஏமாற்றமுற்று, கோபமடைந்த நாமான் போலின்றி (2 அர. 5) இவர்கள், உடனே திரும்பிச் சென்றனர். இயேசுவின் வார்த்தையிலே அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. இறைச்சக்தி ஆற்றலுள்ளது; தூரத்திலிருந்தே தொடாது குணமாக்கும் அற்புத சக்தி வாய்ந்தது அது. அவர்கள் நம்பிக்கை வீணாகவில்லை. அவர்கள் செல்லும்போது குணமடைந்தனர். நமது செபமும் பலனளிப்பது விசுவாசத்தின் அளவைப் பொருத்தது.

பெற்ற நன்மைக்கு நன்றி பகர்வோமா?

குணமடைந்த சமாரியன் உரத்த குரலில் கடவுளை மகிமைப்படுத்திக் கொண்டு திரும்பி வந்தான். குணமளிக்கும் இம்மருத்துவரிடம் வந்து அவரது பாதத்தில் முகம் குப்புற விழுந்து நன்றி செலுத்தினான். நற்செய்தி ஏடுகளில் சில இடங்களில் இயேசுவின் இதயம் பொங்கி எழுவதையும், வேதனைச் சொற்களாக அது வெடிப்பதையும் கேட்கிறோம். சீடனே நம்பிக்கைத் துரோகம் செய்ததால் "யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?" என்றார் (லூக். 22: 48). அநியாயமாகத் தன்னை அறைந்ததற்காய் வேதனைப் படுகிறார் (யோ. 18:23). "பத்துப் பேர் குணமானார்களே! மற்ற ஒன்பது பேர் எங்கே",? என்கிறார். அவர் நமக்குச் செவிசாய்த்ததற்காக நாம் நன்றி நவில்கின்றோமா?

நாம் இறைவனிடம் எண்ணரிய நன்மைகளைப் பெற்றுள்ளோம். நமது பிறப்பு ஒரு கொடை; நமது வாழ்வு இறைவனின் அன்றாடப் புதுப்படைப்பு. மீட்பு, மாபெரும் மறையுண்மை. இவை அனைத்திற்கும் நன்றி கூறுவோம். நன்றியைச் செய்கையில் காட்டுவோம்.

பத்துப் பேர் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
 
''பத்து தொழுநோயாளர்கள்...'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்'' (லூக்கா 17:13)

இயேசு தம் பணிக்காலத்தின்போது பல மக்களுக்கு நலமளித்தார். அவ்வாறு நலமடைந்தவர்களுள் தொழுநோயாளரும் இருந்தார்கள். இன்று நாம் தொழுநோய் என அறிவியல் முறையில் கருதுவது மட்டுமல்லாமல், எந்த விதமான தோல் நோயும் அக்காலத்தில் தொழுநோய் எனவே அழைக்கப்பட்டது. இயேசு மக்களுக்குக் குணமளிக்கிறார் என்னும் செய்தியைக் கேட்ட பத்துத் தொழுநோயாளர்கள் அவரை அணுகி அவர் தங்களைக் குணமளிக்க வேண்டும் என்று கேட்க விரும்புகிறார்கள்; ஆனால் யூத சட்டப்படி அவர்கள் தங்கள் நோய் பிறருக்குப் பரவிவிடாமல் இருக்க தூரத்தில்தான் நிற்க வேண்டும். அவர்கள் பிற மக்களோடு தொடர்புகொள்ளக் கூடாது என்னும் சட்டம் இருந்ததால் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்டுத்தான் வாழ வேண்டியிருந்தது. இவ்வாறு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளர் இயேசுவிடம் வேண்டுகிறார்கள். இயேசு நினைத்தால் தங்களுக்குக் குணமளிக்க முடியும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவர்களுக்குக் குணமளிக்கிறார்.

பத்துப் பேர் நோய்நீங்கப் பெற்ற பிறகும் ஒரே ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறார். இவ்வாறு வந்தவர் அக்காலத்தில் தாழ்ந்த இனத்தவராகக் கருதப்பட்ட சமாரியர் என்பது வியப்புக்குரியதே. ஆனால் இயேசு இந்தத் தாழ்த்தப்பட்ட மனிதரின் நம்பிக்கையைப் போற்றி உரைக்கிறார். ''உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்று பாராட்டிப் பேசுகிறார் (காண்க: லூக்கா 17:19). இங்கே ''நலம்'' என வருகின்ற சொல்லுக்கு உடல் நலம் தவிர, உள நலம், ஆன்ம நலம், மீட்பு என்னும் ஆழ்ந்த பொருள் உண்டு. இயேசுவின் அருளால் உடல்நலம் பெற்ற சமாரியர் கடவுளோடு நல்லுறவு அடைந்தார். நன்றியோடு கலந்த மகிழ்ச்சியை அச்சமாரியர் அடைந்தார். கடவுளின் அன்பினை அவர் தம் உள்ளத்தில் அனுபவித்தார். இயேசுவின் சீடராகிய நாமும் நம்பிக்கையோடு அவரை அணுகிச் சென்றால் நம் பிணிகள் யாவும் நீங்கிப் போக, நாம் ''முழு நலன்'' அடைவோம். இந்த அனுபவத்தைப் பெறுவோர் உண்மையில் பேறுபெற்றவர்களே'

செபம்: இறைவா, நீரே எங்கள் பிணிகளைப் போக்கி நலமளிக்கின்றீர் என நாங்கள் உணரச் செய்தருளும்.
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ