ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 கிறிஸ்மஸ் பெருவிழா

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)

 கிறிஸ்மஸ் பெருவிழா
 திருப்பலி முன்னுரை -
1ம் ஆண்டு


குடிலில் பிறந்த பாலன் இயேசுவின் ஆசி பெற வந்திருக்கும் நெஞ்சங்களே!
மானிடர் மனங்களில்
மாபெரும் நற்செய்தியை
மாட்டித் தொங்கவிட
மாட்டுக் கொட்டிலுக்குள்
மாமரி மைந்தனாய்
மாபரன் யேசு
உதித்த நாளிலே
மகிழ்ச்சியூட்டும் கிறிஸ்மஸ் பெருவிழா வாழ்த்துகள்!

இன்று யேசு பிறப்புப் பெருவிழா. நம் மனமோ மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்திலே நம் கடவுள் நம்மைத் தேடி நம் அருகில் வருகின்றார்.

ஏழையரும் எட்டிப் பார்க்க உகந்த மாட்டுக் கொட்டிலுக்குள் படுத்துக் கொண்டு, நம்மை ஆசீர்வதிக்க இருகரம் நீட்டி இந்த திருப்பலிக்கு அழைக்கிறார்.

அடர்ந்த பனியில், அமைதியான இரவில் தங்கள் கிடையை காவல் காத்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு, அஞ்சாதீர்கள் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கிறேன், உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார் என்று அறிவித்த வானதூதர், இதோ, அடர் பனியில, இரவு வேளையில் நோயினால் வாடும் தன் பிள்ளையை இரவு முழுவதும் காவல் காத்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, வேலை வாய்ப்பின்றி அந்நிய நாட்டில் தவித்துக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு, துன்பத் துயரங்கள், கஸ்ர நஸ்ரங்கள் தீர வேண்டும் என துடிப்பவர்களுக்கு, கடன் தொல்லை, வரன் தடை, பிள்ளைகளின் உயர்கல்வி என பல்வேறு பிரச்சனைகளை சுமந்து கொண்டிருக்கும் நெஞ்சங்களுக்கு, அஞ்சாதீர்கள் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி, உங்களுக்காக நம் ஊரிலே பாலன் யேசு பிறந்திருக்கிறார் என்று சொல்கிறார். இடையர்களுக்கு வழிகாட்டிய விண்மீனோ நமக்கும் வழிகாட்ட தயாராக நிற்கின்றது. மாட்டுக் கொட்டில் கூட ஒதுக்கப்பட்ட ஓரு சின்ன இடம். நான் தான் சின்ன இயேசு பிறக்கும் வண்ணத் தொட்டிலானேன். ஒதுக்கப்பட்ட ஏழை எளியோரைத் தேடிச் செல்லுங்கள், அப்போது உங்கள் உள்ளமும் இயேசு பிறக்கும் இல்லமாகும் என்று நமக்குச் சொல்லுகிறது.

தொட்டிலில் உள்ள இயேசுவை தொட்டுக் கும்பிட விரும்பும் நாம், நம் அருகில் இருக்கும் ஏழை எளியோரை அதிகம் அதிகமாய் நேசிப்போம். ஏழை எளியோரை நேசிக்கும் இதயமாய் நம் உள்ளத்தை மாற்றும்போது, மாட்டுக் கொட்டிலில் பிறந்த யேசு, தான் பிறக்கும் இடமாக நம் இதயத்தை தேர்ந்தெடுப்பார்.

சின்னக் குழந்தை யேசுவிடம் என்ன கேட்கப்போகிறோம். வானதூதர்கள் நமக்கு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவித்து விட்டார்கள். விண்மீன் வழிகாட்டிவிட்டது. இயேசு பிறக்கும் தொட்டிலாய் நம் இதயத்தை மாற்ற, ஏழையரை நேசிக்க, ஓரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களைத் தேடிச் சென்று நம்மிடம் இருக்கும் பரிசுகளைத் தந்து மகிழ்வோம். நமது உள்ளங்களையும், இல்லங்களையும் திறந்து வைத்து, வாரும் யேசுவே! எங்கள் உள்ளக் குடிலில் வந்து தங்கும் யேசுவே!! என இந்தக் கிறிஸ்மஸ் திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. மாட்டுக் கொட்டிலில் பிறந்த மாபரனே!
மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை இன்றும் அறிவித்துக் கொண்டிருக்கின்ற எங்கள் திருச்சபையையும் அதனை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் பொதுநிலையினர் அனைவரையும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியில் எந்நாளும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்று தேவபாலனே, உம்மை மன்றாடுகிறோம்.

பதில்:-தேவ பாலனே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்!

2. உலகை மீட்க மனுவுரு எடுத்த மன்னவனே!
உலகை ஆளும் தலைவர்கள் மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை நிலை நாட்ட, அமைதியை ஆளச் செய்ய, அதற்கு எதிராக எழுகின்ற போராட்டங்களை தகர்த்து நாடுகளுக்கிடையே நல்லுறவை வளப்படுத்த ஆற்றலோடு செயல்பட அருள் தர வேண்டுமென்று தேவபாலனே, உம்மை மன்றாடுகிறோம்.

பதில்:-தேவ பாலனே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்!

3. மண்ணில் கால் பதிந்து மனிதம் இழக்கவந்த யேசு தெய்வமே!
கைவிடப்பட்ட சிறார்கள், அனாதையாக சஞ்சரிக்கும் சிறார்கள், சிதைந்து சின்னாபின்னமாக்கப்படும் குறை சிசுக்கள். இவர்கள் எல்Nhரும் சிந்தனை வித்துக்கள், ஆம், சரித்திரத்தின் சொத்துக்கள் என்பதை உணர்ந்து, மனித மாண்போடு மண்ணில் வளர்ந்திட, நாங்கள் உதவிக்கரம் நீட்டி வாழ்விக்க அருள்புரிய வேண்டுமென்று யேசுபாலனே உம்மை மன்றாடுகிறோம்.

பதில்:-தேவ பாலனே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்!

4.மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்க வந்த பாலகனே!
இரவெல்லாம் கண்விழித்து துன்புறும் நோயாளிகள், பல்வேறு பிரச்சனையால் மனம் உடைந்து, உறவுகளை உடமைகளை இழந்து உறங்காமல் கவலைப்படுவோர், இந்தக் கண்ணீர், வறுமை, கடன், துன்பம், துயரம், வருத்தம் எப்போது தீரும் என படுக்கையில் புரண்டு கிடக்கும் எல்லா இதயங்களையும் தேடிச் சென்று, அங்கே உமது மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை தங்கச் செய்ய தெய்வீக பாலகனே, உம்மை மன்றாடுகிறோம்.

பதில்:-தேவ பாலனே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்!

5.ஏழை எளியோரை நேசிக்க மாட்டுக் கொட்டிலைத் தேடி வந்த மன்னவனே! உண்ண உணவின்றி, படுக்க இடமின்றி தனிமையில் தவிப்போர், ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு என்னை சந்திப்போர் யாருமில்லையே எனத் தடுமாறுவோர், போரினால் பாதிக்கப்பட்டோர், இந்த திருப்பலியில் கலந்து கொள்ள இயலாது வருந்துவோர் எல்லோரையும், உமது பிஞ்சு கரத்தால் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி அவர்களது இதயத்திலும் நீர் தங்கி அவர்களையும் அரவணைக்க வேண்டுமென்று தேவபாலனே, உம்மை மன்றாடுகிறோம்.

பதில்:- தேவ பாலனே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்!

வழிகாட்டும் விண்மீனாய் பிறந்த எம் பாலகனே!
இடையர்களுக்கு தேவகுழந்தையை தரிசிக்க வழிகாட்டிய விண்மீனைப்போல உம்மை தரிசிக்க அலையும் உள்ளங்களுக்காக உழைக்கும் எம் பங்குத்தந்தைக்கு உடல் உள்ள சுகம் தர வேண்டுமென்று தேவபாலனே, உம்மை மன்றாடுகிறோம்.

பதில்:- தேவ பாலனே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்!
 
மறையுரை சிந்தனைகள்

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
 
 
  
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm
  
  
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
இதுவே உங்களுக்கு அடையாளம்
இன்றைய ஜிபிஎஸ் கட்டுப்படுத்தும் உலகில் நாம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல ஒரு ஓலா அல்லது ஊபர் டாக்ஸி பதிவு செய்தாலோ, அல்லது ஸ்விக்கி, ஸ்ஸேமாட்டோ போன்ற உணவு கொணரும் செயலிகளில் உணவு பதிவு செய்தாலோ, அவர்கள் கேட்கும் சில கேள்விகளுள் ஒன்று: 'உங்கள் இருப்பிடத்திற்கான அடையாளம் (லேன்ட்மார்க்) என்ன?' அடையாளங்கள் அல்லது லேன்ட்மார்க்குகள் பெரும்பாலும் பெரியனவையாகவே இருக்கின்றன - பலரும் வந்து போகும் வங்கி, குழந்தைகள் படிக்கும் பள்ளி, ரவுண்டானா வலது புறம், ஆஞ்சநேயர் கோவில், மருத்துவனை பின்புறம் என நாம் நம் அடையாளங்களை வரையறுத்துக்கொள்கின்றோம். அல்லது இந்த அடையாளங்களே நம்மை வரையறை செய்ய நாம் அனுமதித்துவிடுகின்றோம். அடையாளங்கள் இல்லாமல் நம்மால் வாழ முடிவதில்லை. ஃபோனில் 'லோ பேட்டரி' என்ற எச்சரிக்கை வந்தால், அது ஃபோன் அணைந்து போவதற்கான அடையாளம். வாட்ஸ்ஆப்பில் 'ஆன்லைன்' என வந்தால், அடுத்த நபர் இணைப்பில் இருக்கிறார் என்று அடையாளம். நம் தகவலுக்கு மேலே 'டைபிங்' என்று வந்தால், அவர் உரையாடலைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றார் என்று அடையாளம். கதவில் பூட்டு தொங்கினால் 'வீட்டில் யாரும் இல்லை' என்று அடையாளம். 'கறுப்பு' சோகத்திற்கான அடையாளம். 'வெள்ளை' அமைதிக்கான அடையாளம். 'பச்சை' பசுமைக்கான அடையாளம். இப்படி அடையாளங்களை நாம் அடுக்கிக்கொண்N;ட போகலாம்.

ஆனால், இந்த அடையாளங்கள் அடையாளங்களே தவிர அவை தாங்கள் குறித்துக்காட்டுவதைச் செய்ய முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, சாலையில் சிகப்பு விளக்கு என்பது 'நில்' என்பதற்கான அடையாளம். 'நில்' என்பதற்கான அடையாளமாக அது இருக்கிறதே தவிர, அது ஒருபோதும் நம் வாகனத்தின் முன்னால் வந்து நின்று, 'போகாதே' என்று சொல்வதில்லை. 'தண்ணீர்' தூய்மையின் அடையாளம். ஆனால், அத்தண்ணீரை நாம் பயன்படுத்தினால்தான் தூய்மை ஆவோமே தவிர, வெறும் தண்ணீரை வைத்திருப்பதால் நமக்குத் தூய்மை வந்துவிடாது. 'பேட்டரி லோ' என்று நம் மொபைல் காட்டுமே தவிர, அதுவே சார்ஜரில் ஏறி உட்கார்ந்து தன்னைச் சார்ஜ் செய்து கொள்ளாது. நாம்தான் சார்ஜரில் போட வேண்டும். இவ்வாறாக, அடையாளங்கள் தங்களிலேயே வலுவற்றவை.

கிறிஸ்து பிறப்பு செய்தியை இடையர்களுக்கு அறிவிக்கும் வானதூதர், 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்' (லூக் 1:11-12) என்கிறார். இதற்கு மேலும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை வானதூதர்.

பிறந்திருப்பவர் யார்? ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்.
எங்கே? தாவீதின் ஊரில் (பெத்லகேம்)
என்ன அடையாளம்? 'குழந்தை' 'துணிகளில் சுற்றி' 'தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கும்'

ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக்கொண்டே எருசலேம் வந்து சேர்ந்த ஞானியர்களின் அறிவு ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு இருந்திருக்குமா? 'மெசியா' பற்றி புரிதல் இருந்திருக்குமா? 'தாவீதின் ஊர்' என்றால் 'பெத்லகேம்' என்று தெரிந்திருக்குமா? அந்த இரவில் எத்தனை குழந்தைகளை அவர்கள் தேட முடியும்? பெரியவர்கள் சிறியவர்கள் வீட்டின் கதவுகளை எளிதாகத் தட்ட முடியும். இவர்களோ சமூகத்தில் சிறியவர்கள். இவர்களால் எத்தனை பேர் வீட்டுக் கதவுகளைத் தட்ட முடியும்?

மரியாவுக்கு வானதூதர் கபிரியேல் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தபோது, 'அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' (லூக் 1:31-32) என்று சொல்கிறார். ஆனால், அங்கே சொன்ன ஒரு வார்த்தைகூட இடையர்களுக்குச் சொல்லப்படவில்லை. வானதூதர்களுக்குள் கம்யூனிகேஷன் இடைவெளி இருந்ததா? ஒருவேளை இவ்வார்த்தைகள் எல்லாம் இடையர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள்.

- 'இயேசு' என்று அங்கே பெயர் 'ஆண்டவர், மெசியா, மீட்பர்' என இங்கே தரப்படுகிறது.
- 'பெரியவராயிருப்பார்' என்று அங்கே சொல்லப்பட்டது, 'குழந்தை' என்று இங்கே சொல்லப்பட்டுள்ளது.
- 'தாவீதின் அரியணை' என்று அங்கே இருப்பது, 'தாவீதின் ஊர்' என்று இங்கே இருக்கிறது.
- 'கடவுளின் மகன்' என்று அங்கே சொல்லப்பட்டது, பாவத்தின் விளைவால் வந்த 'துணிகளால் சுற்றப்பட்டு' என்று இங்கே உள்ளது.
- 'அவர் ஆட்சி செய்வார்' என்று அங்கே இருப்பது, 'தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பார்கள்' என்று இருக்கிறது.

வானதூதர் அங்கே மரியாவுக்கு முன்மொழிந்ததற்கும், இங்கே இடையர்களுக்கு முன்மொழிந்ததற்கும் ஏன் முரண்பாடு?

மேலோட்டாகப் பார்த்தால்தான் இவை முரண்பாடுகள். ஆனால், கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இங்கே அடையாளங்களாகச் சொல்லப்படுபவை அங்கே நேருக்கு நேராகச் சொல்லப்படுகின்றன. ஆக, மற்ற அடையாளங்களுக்கும் இயேசு என்ற அடையாளத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இந்த அடையாளம் தான் சுட்டிக்காட்டுவதை அப்படியே வாழும்.

எப்படி?
- 'இயேசு' என்றால் 'மீட்பர்' - 'பாவங்களிலிருந்து இவர் மீட்பார்;'
- 'குழந்தை' தன் வலுவின்மையில் 'பெரியவராகும்'
- 'தாவீதின் ஊரில்' இவர் சிலுவை என்னும் 'அரியணை ஏறுவார்'
- 'துணிகளால் சுற்றப்பட்ட' மனுக்குலத்தை தன் நிர்வாணத்தினால் மீட்டு 'கடவுளின் மகன்' என்ற நிலைக்கு உயர்த்துவார்.
- 'தீவனத் தொட்டியில்' பிறந்ததால் என்னவோ, தன் உணவு நிகழ்வுகள் வழியாக (உணவுப் பகிர்வு, உணவுப் பலுகச் செய்தல், விருந்துக் கொண்டாட்டங்கள், நற்கருணை) என உறவாடி, தன்னையே பிறருக்கான உணவாக வழங்குவார்.

இவைகள் இடையர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் கிறிஸ்து பிறப்பு கொண்டாடப்பட்ட அன்றைய நாளில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், வானதூதர்களின் வார்த்தைகளுக்குள் முரண்கள் இல்லை.

இன்றைய முதல் வாசகத்தை (எசாயா 9:2-7) எடுத்துக்கொள்வோம். எபிரேய இலக்கியத்தில், குறிப்பாக செய்யுளில், அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு இலக்கியப் பண்பின் பெயர் 'இருசொல் இயைபணி' அல்லது 'இணைவாக்கியம்.' அதாவது, முதல் வாக்கியத்தில் சொல்லப்படும் கருத்தே இரண்டாம் வாக்கியத்திலும் வேறு வார்த்தைகளில் சொல்லப்படுவது. இன்றைய முதல் வாசகத்தில் நான்கு இடங்களில் இது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

- காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல்சூழ் நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. (இந்த இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றே)
- அவர்கள் பலுகிப் பெருகச் செய்தீர். அவர்கள் மகிழ்ச்சியை பெருகச் செய்தீர்.
- நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். தடியைத் தகர்த்துப் போட்டீர். கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
- ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளது. ஓர் ஆண்மகவு நமக்கு தரப்பட்டுள்ளது.

மெசியாவின் வருகை தரும் மகிழ்ச்சிக்கு இங்கே இரண்டு அடையாளங்கள் தரப்படுகின்றன: (அ) அறுவடை நாள், (ஆ) கொள்ளைப் பொருளைப் பங்கிடும் நாள். (அ) அறுவடை நாளில் எதற்கு நிறைவு கிடைக்கிறது? அன்ற, உண்பதற்கான உணவு கிடைத்துவிடுகிறது. (ஆ) போரின் வெற்றி நாளில் கிடைப்பது என்ன? பாதுகாப்பு. அன்று, எதிரிகள் அழிகிறார்கள். 'அறுவடை நாளில் மகிழ்வது போல' 'கொள்ளைப் பொருளைப் பங்கிடுவது போல' என மகிழ்ச்சிக்கு இரண்டு உருவகங்களைத் தருகின்றார் எசாயா. 'கொள்ளைப் பொருள்' என்பது இங்கே திருடிய பொருள் அல்ல. மாறாக, எதிரி நாட்டை வெற்றி கொண்டு, அந்நாட்டில் உள்ளவர்களின் உரிமைப் பொருள்களை நம் உரிமைப்பொருள்கள் ஆக்குதல். நம் உழைப்பு இல்லாத பொருளைக் குறிப்பிடவில்லை எசாயா. மேலும், சார்புநிலையும், அடிமைத்தனமும் ஒழிகிறது. பழையன அனைத்தும் நெருப்பில் இடப்படுகின்றன.

அதே வேளையில், 'குழந்தை பிறந்துள்ளது' என்று சொல்லப்படுகிறது. இந்தக் குழந்தைக்கு நான்கு பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, அரசர்கள் தலைப்புகள் இட்டு அழைக்கப்படுவது மரபு - இராஜாதி ராஜ, இராஜ குலோத்துங்க, இராஜ குலதிலக என்பதுபோல. மேலும், 'எதிரிகளை நீ புறமுதுகிட்டு ஓடச் செய்ததால் இன்றுமுதல் நீ ...' என்று அரசனுக்கு பட்டங்கள் கொடுப்பதும் வழக்கம். இங்கே குழந்தைக்கு நான்கு பட்டங்கள் சூட்டி மகிழ்கின்றார் எசாயா:

- வியத்தகு ஆலோசகர். அதாவது, எங்கே போக வேண்டும் என்ற வழியைக் காட்டுபவர்.
- வலிமைமிகு இறைவன். இங்கே இறைவன் என்பதற்கு 'எலோகிம்' அல்லது 'யாவே' பயன்படுத்தப்படவில்லை. 'ஏல்' என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ஏல்' என்றால் 'பெருமான்' அல்லது 'பெருமகனார்' என மொழிபெயர்க்கலாம். இங்கே இந்த குழந்தையை எசாயா கடவுளாக்கவில்லை. மிக நேர்த்தியாக வார்த்தையை கையாளுகின்றார்.
- என்றுமுள தந்தை. ஒரு குழந்தை எப்படி தந்தையாகும்? இது ஒரு வித்தியாசமான தலைப்பு. ஒரு குடும்பத்தின் தந்தை தன் குடும்பத்திற்கு தரும் உணவையும், பாதுகாப்பையும் இது குறிக்கிறது.
- அமைதியின் அரசர். அடிமைத்தனம் மற்றும் போர் நீக்கி அமைதி தருகிறார்.

இந்த இறைவாக்கு மெசியா இறைவாக்காக இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கிறது.

ஆக, மெசியா என்பதற்கு குழந்தை ஒரு அடையாளமாகத் தரப்படுகிறது. அந்தக் குழந்தையின் பிறப்பின் பின்புலத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கிறது. இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி' என்றும் 'உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி' என்றும் வானதூதர்கள் அக்களிக்கிறார்கள்.

மெசியா, தான் எதை அடையாளப்படுத்துகிறாரோ, அதை அப்படியே தரவும் செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (தீத்து 2:11-14), 'வெளிப்படுத்துதல்' என்ற முக்கியமான வார்த்தையைக் கொண்டிருக்கிறது. இவ்வுலகம் சார்ந்தவற்றை - புவிஈர்ப்பு விசை, அமெரிக்கா, செல்ஃபோன், எலெக்ட்ரிசிட்டி - இவ்வுலகில் இருப்பவர்களே கண்டுபிடிக்க முடியும். ஆனால், இவ்வுலகம் சாராதவை வெளிப்படுத்தப்பட்டால் ஒழிய அவைகள் பற்றி நமக்குத் தெரியாது. ஆக, கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது, இவ்வுலகம் சாராத 'கடவுளின் அருளையும், மாட்சியையும்' வெளிப்படுத்தவே என்கிறார் புனித பவுல். இதையே நாம் கிறிஸ்து பிறப்பு திருப்பலியின் தொடக்கவுரையில், 'வாக்கு மனிதர் ஆனார் என்னும் மறைநிகழ்வின் வாயிலாக உமது மாட்சியின் ஒளி எங்கள் மனக் கண்களுக்குப் புதிதாய் ஒளி வீசியது. இதனால் கண் காணாத கடவுளை நாங்கள் காண்கின்றோம். கண் காணாதவை மீதுள்ள பற்று எங்களை ஆட்கொள்கிறது' எனப் பாடுகிறோம். கடவுளின் வெளிப்படுத்துதல் இயேசுவில் இரண்டுமுறை நிகழ்கிறது: (அ) அவரது பிறப்பில். (ஆ) அவரது உயிர்ப்பில். (அ) பிறப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் இம்மை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், இறைப்பற்றுடனும் வாழ இவ்வருள் பயிற்சி அளிக்கிறது. (ஆ) உயிர்ப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் மறுமை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருக்க அது கற்றுத்தருகிறது. இவ்வாறாக, தான் எதை அடையாளப்படுத்தினாரோ அதையே வாழ்ந்து காட்டுகிறார் இயேசு.

'இதுவே உங்களுக்கு அடையாளம்' என்று வானதூதர் இடையர்களுக்கு மூன்று அடையாளங்களைக் கொடுக்கின்றனர். (அ) குழந்தை - வலுவின்மையின், சார்புநிலையின், பாதுகாப்பின்மையின் அடையாளம். (ஆ) துணிகள் - மனித வரலாற்றுக்குள் பாவம் நுழைந்ததன் அடையாளம் (காண். தொநூ 2:25, 3:21). (இ) தீவனத் தொட்டி - வெறுமையான தீவனத்தொட்டி வறுமையின் அடையாளம். நிறைவான தீவனத்தொட்டி மகிழ்வின் அடையாளம். இங்கே குழந்தை தீவனத்தொட்டியின் வெறுமையை நிறைக்கிறது. இவை குழந்தையை அடையாளம் காண காட்டப்பட்ட அடையாளங்கள் மட்டுமல்ல. இந்த அடையாளங்களே இயேசுவின் வாழ்க்கையாக மாறுகின்றன. தானே வலுவின்மையில், சார்புநிலையில், பாதுகாப்பின்மையை உணர்ந்ததால் அந்த உணர்வோடு இருக்கிறவர்களோடு நெருக்கமாகிறார். பாவத்தால் வந்த ஆடையை சிலுவையில் தன் நிர்வாணத்தால் களைகிறார். தன் வாழ்வு முழுவதும் தன்னிடம் வந்தவருக்கு நிறைவு தந்து, இன்றும் நற்கருணையில் நமக்க ஆன்மீக விருந்தளிக்கிறார். அவரின் அடையாளங்கள் அவரின் வாழ்க்கை நிலைகள்.

இன்று, நாம் குடில், நட்சத்திரம், கேரல், கேக், கிஃப்ட், புத்தாடை என கிறிஸ்து பிறப்பு விழா அடையாளங்களைப் பார்க்கிறோம். ஆனால், இந்த அடையாளங்கள் தாங்கள் சுட்டிக்காட்டுவதை ஒருபோதும் நமக்குத் தருவதில்லை. கிறிஸ்துவைப் பற்றிய அடையாளத்தை நாம் கிறிஸ்து பிறப்பில் கண்டுகொண்டால் மட்டுமே நாம் மகிழ்ச்சியும், நிறைவும் பெறுவோம். இரண்டாவதாக, கிறிஸ்து பிறப்பின் அடையாளம் நாம் பெறுவதற்கு நாம் அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டியதில்லை. ஒரு சிறிய இடையராய், நம் ஆடுகளுக்குக் காவல் காத்துக்கொண்டு, நம் அன்றாட வேலைகளைப் பொறுப்புணர்வோடு செய்துகொண்டு, விழித்துக்கொண்டிருந்தாலே போதும். மூன்றாவதாக, இன்று நான் எதன் அடையாளமாக இருக்கிறேன்? என்னைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் சொன்னால் என்ன அடையாளத்தைக் கொண்டு என்னைச் சொல்வார்?

'இதுவே உங்களுக்கு அடையாளம்' - கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களும், செபங்களும்.

 
  
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்ட
முதலாம் வாசகம்: எசாயா 52:7-10
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 1: 1-6
நற்செய்தி வாசகம்: யோவான் 1: 1-18

மறையுரைச் சிந்தனை 1
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்.
முன்பொரு காலத்தில் பெர்சியா நாட்டை ஆண்ட ஷா என்ற மன்னர் மக்கள்மீது அதிகமான அக்கறையும், அன்பும் கொண்டவராக இருந்தார். எந்தளவுக்கு என்றால் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் நகர்வலம் சென்று, மக்களோடு பேசுவார். அப்போது அவர்கள் சொல்லக்கூடிய குறை, நிறைகளை எல்லாம் கருத்தில் எடுத்துகொண்டு, மக்களுக்கு எது தேவையோ அதை செய்துவந்தார். இதனால் மக்கள் அனைவரும் அவரது ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

ஒருநாள் அரசர் ஊரில் இருக்கக்கூடிய "பொதுக்குளியல் அறைகள்' பகுதிக்குச் சென்றார். அங்கே மக்கள் குளிப்பதற்காக தண்ணீர் வெதுவெதுப்பான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பக்கூடியவர்கள் அதில் மகிழ்ச்சியாகக் குளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவார்கள். இப்படி மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகக் குளிக்க, தண்ணீரை சூடாக்குகின்ற பணியை யார் செய்கிறார்? என்று பார்ப்பதற்காக மன்னர் "பொதுக்குளியல் அறைகள்' இருக்கக்கூடிய பகுதியின் உட்புறத்திற்குச் சென்றார்.

அங்கே ஒரு தாழ்வான அறை இருந்தது. அதில் ஒரு பெரியவர் நாள் முழுவதும் வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய அளவில் தண்ணீரைச் சூடாக்கிக் கொண்டிருந்தார். சாதாரண மனிதர் உருவில் இருந்த அரசர், அம்மனிதரிடம் பேச்சுக்கொடுத்தார். அதற்கு அம்மனிதர், "நாள் முழுவதும் இந்த இருட்டு அறைக்குள் சூட்டையும், வெக்கையையும் தாங்கிக்கொண்டு வேலைபார்த்தாலும் மக்கள் மகிழ்ச்சியாக குளிக்கிறார்ளே என்று நினைக்கும்போது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். அதோடு நின்றுவிடாமல், அவர் தன்னிடம் இருந்த கொஞ்சம் உணவையும் சாதாரண உடையில் இருந்த அரசரோடு பகிர்ந்து உண்டார்.

இவற்றையெல்லாம் பார்த்து அரசருக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. சிறிதுநேரம் அவர் அவரிடம் பேசிவிட்டு, இன்னொரு நாள் வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
ஒருசில நாட்களுக்குப் பிறகு அரசர் மீண்டுமாக அந்த மனிதர் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவரிடம் பேசினார். அன்றைக்கு அரசர் அவரிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், நான் தருகிறேன்" என்று சொல்லிவிட்டு, தான் யார் என்பதை அவருக்கு வெளிப்படுத்தினார்.

அரசர்தான் தன்னைப் பார்க்க இங்கே மாறுவேடத்தில் வந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு அந்த மனிதர், "அரசே! எனக்கு எதுவும் வேண்டாம். யாருமே வராத இந்தப் பகுதிக்கு வந்து, என்னைப் பார்த்துப் பேசினீர்களே, அந்த அன்பு ஒன்றே போதும்" என்றார். தான் அரசனாக இருந்தாலும், தன்னுடைய நிலையிலிருந்து இறங்கிவந்து, சாதாரண மனிதரைப் பார்க்கவந்த அந்த ஷா என்ற அரசரைப் போன்றுதான் இயேசுவும் விண்ணிலிருந்து இறங்கிவந்து, மண்ணில் மனிதனாக வாழவருகின்றார்.

இன்று நாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் மகிழ்வோடு கொண்டாடுகின்றோம். கடவுளோடு, கடவுளாக இருந்த வார்த்தையாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு சாதாரண குழந்தையாகத் தோன்றுகின்றார். இப்படி ஒரு குழந்தையாகப் பிறந்திருக்கும் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள் "உஷ்ணம் (வெப்பம்) அதிகரித்தால் பெருமழை வரும்' என்று. அதே போன்றுதான் மக்களின் வாழ்வில் துன்பமும், வேதனையும் அதிகரிக்கின்றபோது இறைவன் தாமாகவே இறங்கிவந்து, அவர்களின் துன்பத்தை இன்பமாக மாற்றுவார். இது உண்மை.

இஸ்ரயேல் மக்கள் தங்களை ஆண்ட உரோமையரின் ஆட்சிக்காலத்தில் சந்தித்த துன்பங்கள், வேதனைகள் ஏராளம். அவற்றையெல்லாம் வார்த்தையால் விளக்கிச் சொல்லமுடியாது. அந்தளவுக்கு அவர்கள் கொடுமைகளைச் சந்தித்தார்கள். இதைக் கண்ணுற்றதாலோ என்னவோ, கடவுள் தன்னுடைய ஒரே மகனை உலகிற்கு அனுப்பி, அவர்களுக்கு வாழ்வுகொடுக்க முன்வருகிறார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், "பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் முன்னோர்களிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தன் மகன் வழியாகப் பேசியுள்ளார்" என்று. ஆக, கடவுளே தன் மக்கள்மீது இரக்கம்கொண்டு, தன்னுடைய ஒரே மகனையும் இந்த உலகிற்கு அனுப்பி வாழ்வளிக்கின்றார் என்று சொன்னால் அது மிகையாது.

அடுத்ததாக, கடவுள் தன்னுடைய மகன் வழியாக இந்த உலகிற்கு அளிக்கும் கொடை எத்தகையதாக இருக்கும் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கின்றோம். விண்ணத்திலிருந்து இறங்கி வரும் மெசியாவாகிய இயேசு நற்செய்தியையும், நல்வாழ்வையும், ஆறுதலையும், மீட்பையும் தருவார் என்று எசாயா இறைவாக்கினர் அங்கே சுட்டிக்காட்டுகின்றார். ஆகவே, இயேசுவின் பிறப்பினால் நமக்கு எல்லாவிதமான ஆசிரும், அருளும், மீட்பும் கிடைக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிக்கு மகப்பேறு அறுவைச்சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் கணவர் வெளியே நின்றுகொண்டு, தன்னுடைய மனைவிக்கு என்ன ஆகுமோ? என்று பரபரப்பாக இருந்தார்.

நீண்டநேர இடைவெளிக்கு பின்னர் வெளியே வந்த மருத்துவர் அப்பெண்ணின் கணவரைத் தனியாக அழைத்து, "தயவு செய்து எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள், நாங்கள் எவ்வளவோ போராடியும் உங்களுக்குப் பிறந்த குழந்தையை, இரண்டு மணிநேரத்திற்கும்மேல் உயிர்பிழைக்கச் வைக்கமுடியவில்லை, மிகவும் பலவீனமாகப் பிறந்த அந்தக்குழந்தை இப்போது இறந்துவிட்டது" என்றார். இதைக் கேட்டு அவர் வீரிட்டு அழுதார்.

அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மனதைத் தேற்றிக்கொண்டு அந்த மருத்துவரிடம், "இன்று காலையில் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். அதாவது பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ஒருவருக்கு இதய அறுவைச் சிகிச்சையும், இன்னொருவருக்கு கண் சிகிச்சையும் நடைபெறுகிறது. இறந்துபோன என்னுடைய குழந்தையின் இரண்டு கண்களையும், இதயத்தையும் தேவையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் பொறுத்தி வாழ்வளிக்கலாமே" என்றார். இதைப் கேட்ட அந்த மருத்துவர் மிகவும் சந்தோசப்பட்டார்.

உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வேலைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஒருமணிநேரத்திற்குள்ளாகவே இறந்த அந்த குழந்தையின் கண்கள் ஓர் ஏழைக்குப் பொறுத்தப்பட்டது. அதன் இதயமோ கணவனை இழந்து தவித்த ஒரு விதவைக்குப் பொறுத்தப்பட்டது. இப்படியாக அந்த குழந்தையால் இரண்டுபேர் வாழ்வு பெற்றார்கள். இந்த குழந்தையைப் போன்றுதான் இயேசுவின் வருகையால் நாம் வாழ்வு பெற்றுக்கொண்டோம்.

யோவான் நற்செய்தி 10:10, "ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்" என்று இதைதான் ஆண்டவர் இயேசு கூறுவார். ஆகவே, இயேசுவின் மானிடப் பிறப்பால், நாம் அனைவரும் வாழ்வினைப் பெற்றுக்கொண்டோம், அவரது அருளால் இன்றும் வாழ்கின்றோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

எனவே வாழ்வினை நிறைவாகத் தரவந்த ஆண்டவர் இயேசுவுக்கு கைமாறாக நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

யோவான் எழுதிய இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம், "அவரிடம் (இயேசுவிடம்) நம்பிக்கை கொண்டு, அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்" என்று. அதாவது கடவுளின் திருமகனாகிய ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும் அல்லது ஏற்றுக்கொண்டு வாழவேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டு, நம்பிக்கைவைத்து வாழும்போது இறைவன் நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்வார் என்பதே இங்கே குறித்துக்காட்டப்படும் செய்தியாக இருக்கின்றது. எனவே, நம்மைத் தேடிவரும் இயேசுவை நாம் ஏற்றுக்கொள்வதுதான் மீட்பிற்கான, வாழ்விற்கான வழியாக இருக்கின்றது.

ஆனால் நடைமுறையில் அவரை ஏற்றுக்கொள்ளாததும், அவர்மீது நம்பிக்கை வைக்காமல் வாழ்வதும்தான் வேதனையான உணமையாக இருகின்றது. "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எவ்வளவு வேதனை நிறைந்த வார்த்தைகளாக இருக்கின்றது.

ஒரு போர்த்துக்கீசிய நாவலில் வரக்கூடிய நிகழ்வு இது. ஜான் என்ற இளைஞன் கப்பலுக்கு வேலைக்குச் சென்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்செல்வம் திரட்டிக்கொண்டு, தன்னுடைய சொந்த ஊரான லிஸ்பனில் வந்து இறங்கினான்.

அப்போது அவனுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது. இப்படியே உறவினர்களது வீட்டிற்குச் செல்லாமல், கிழிந்த, அழுக்கான உடையில் செல்வோம். அப்போது அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, அதன்பிறகு அவர்களது வீட்டிற்குச் செல்வோம் என்று நினைத்துகொண்டு, ஒரு கிழிந்த அழுக்கான சட்டையும், ட்ரவுசரையும் போட்டுக்கொண்டு தன்னுடைய நெருங்கிய உறவினரான பட்ரோவின் வீட்டிற்குச் சென்றான்.

அங்கே அவரிடம், "கப்பலில் விபத்து ஏற்புட்டு, என்னிடம் இருந்த பணமெல்லாம் போய்விட்டது, இப்போது இந்தநிலைக்கு ஆளாகிவிட்டேன். அதனால் ஒரு நல்ல வேலை கிடைக்கும்வரைக்கும் இங்கே தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டான். அதற்கு அவருடைய உறவினரோ, "என்னுடைய வீட்டில் போதுமான இடமில்லை, அதனால் தயவுசெய்து வேறொரு இடத்தில் போய் தங்கிக்கொள்" என்று சொல்லி விரட்டிவிட்டார்.
அவனும் சரி என்று சொல்லிவிட்டு, தன்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லாரிடமும் கேட்டுப்பார்த்தான். ஆனால் எல்லாருமே ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லி, அவனுக்கு இடம்தராமல் விரட்டிவிட்டார்கள். இறுதியாக அவன், இனிமேலும் இவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை என்று தான்வைத்திருந்த பெரும் செல்வத்தை வைத்து ஒரு மிகப்பெரிய மாடமாளிகை கட்டினான், அவனுக்கென்று பணியாளர்களை வைத்துக்கொண்டான். இதனால் சில நாட்களிலேயே அவனுடைய செல்வச் செழிப்பைப் பற்றிய பேச்சு லிஸ்பன் நகர் முழுவதும் பரவியது.

இதைக் கேள்விப்பட்ட ஜானின் உறவினர்கள், நண்பர்கள் இவையெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கு வீட்டில் இடம் கொடுத்திருக்கலாமே என்று வருத்தப்பட்டார்கள்.

மக்கள் நம்மிடம் பணம் இருந்தால் ஒருவிதமாக நடந்துகொள்வதும், பணம் இல்லையென்றால் வேறொரு விதமாக நடந்துகொள்வதும் வேதனையாக இருக்கின்றது. இயேசு சாதாரண ஒரு மனிதராகப் பிறந்ததனால்தான் என்னவோ, அவரை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு செல்வந்தராக இருந்தும், நமக்காக ஏழையானார். எல்லாம் நம்மீது வைத்த அன்புதான்.

ஆகவே, இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் நம்மைத் தேடி வரும் இறைவனின் மேலான அன்பைப் புரிந்துகொள்வோம், அவரை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். இறைவனிடமிருந்து பெற்ற அன்பை ஒருவர் மற்றவருக்குக் காட்டுவோம். எல்லாரையும் இறைவனின் மக்களாக ஏற்றுகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


 

 
   மறையுரைச்சிந்தனை  - அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
அமெரிக்க நாட்டிலே 8 வயது சிறுவன் ஒருவன் தன் நண்பனின் பிறந்த நாள் விழாவிற்காகப் போக விரும்பினான். ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளது நண்பனின் வீடு. பயங்கரமான பனிக்கட்டி படர்ந்திருந்தது. பயணம் செய்வதே கடினம். தந்தை தடுத்தாலும், சிறுவன் போக வேண்டும் என அடம்பிடித்தான். இறுதியாக நடந்து செல்ல தந்தை அனுமதி கொடுத்தார். சிறுவன் மெதுவாகக் கஷ்டப்பட்டு நண்பனின் வீடு சென்றான். திரும்பிப் பார்த்தான். தன் தந்தையும் தொடர்ந்து வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, "ஏன் அப்பா! இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டான் சிறுவன். "மகனே! நீ பத்திரமாகப் போய்ச் சேர வேண்டும்; உன் பாதம் பனிக்கட்டியிலே பதிந்து துன்பப்படக் கூடாது என்று பார்க்கத்தான் உன்னைப் பின் தொடர்ந்தேன்" என்றார் சிறுவனின் தந்தை. ஆம்! இதுதான் நம் வானகத் தந்தை நம் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடு. இதை வெளிப்படுத்துவதுதான் இந்த கிறிஸ்மஸ் பெருவிழா. நம்மீது கொண்ட அன்பினால் தன் மகனையே இவ்வுலகிற்கு அனுப்பும் அளவுக்கு அன்பு செய்தார் (யோவா.3:16) நம் வானகத் தந்தை.

இந்த உலகிலே ஒரு சிலர் பிறப்பால் வாழ்வு கிடைக்கிறது. ஆனால் ஒரு சிலர் பிறப்பால், அழிவும், இழப்பும், வீழ்ச்சியும் தான் வந்துள்ளது. அன்று பாரவோனால், ஏரோதால், ஹிட்லரால் எத்தனையோ இழப்புகள், வீழ்ச்சிகள். ஆனால் தாவீது, ஆப்ரகாம் லிங்கன் போன்றவர்களால் வாழ்வுக்கு வரலாறு படைக்கப்பட்டது. ஆனால் உலக வரலாற்றிலே தலைசிறந்த பிறப்பாக அமைந்தது தான் நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு. ஏனெனில் இது சமூக, சமய, அரசியல், பொருளாதார மாற்றங்களை மட்டுமல்ல, அதையும் தாண்டி அருள்வாழ்வுக்கு, நிறை வாழ்வுக்கு வித்திட்டது. எனவே தான் உலக வரலாற்றிலே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது பிறப்பை மையப்படுத்திதான், இயேசுவுக்கு முன் உள்ள காலத்தை கி.மு., என்றும், இயேசுவுக்குப் பின் உள்ள காலத்தை கி.பி., என்றும் கணக்கிடப்படுகிறது. இந்த ஒப்பற்ற உலக வரலாற்றைப் படைத்த வரலாற்று நாயகன் பிறப்பைப் பார்க்க தேடிச் சென்றவர் வலிமையான, வசதி படைத்த, அறிஞர்கள் அல்ல. எளியவரான இடையர் கூட்டம் தான். வரலாற்று நாயகன் பிறந்ததும் மாட மாளிகையில் அல்ல. மாட்டுத் தொழுவமே. தலை சாய்க்க தீவனத் தொட்டியே கிடைத்தது. மடமை என்று உலகம் கருதுவதை கடவுள் தேர்ந்து கொண்டார் (1கொரி.1:27-28).

இறை தந்தையின் அன்பின் வடிவாக வந்த இயேசுவின் பிறப்பு, வரலாற்றில் எங்கோ, எப்போதோ நடந்து முடிந்த ஓர் நிகழ்வல்ல. அவர் ஒவ்வொரு நாளும் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்.

பசித்தவருக்குப் பகிர்ந்து கொடுக்கும் மனிதராக,
வழி தவறியவருக்கு வழிகாட்டும் மனிதராக,
ஏழை எளியவர் மீது மனமிரங்கும் மனிதராக,
இன்னல் இருள் நீக்கி, ஒளி ஏற்றும் மனிதராக,
அனைவரையும் அரவணைக்கும் மனிதராக,
அவனியில் அமைதி ஏற்படுத்தும் மனிதராகப் பிறக்கிறார்.

இத்தகைய பிறப்புக்களை இனம் கண்டு நம்மையே இணைத்துக் கொள்வோம். குடில்களில் அல்ல, மனித உள்ளங்களில், இல்லங்களில் பிறக்கிறார் இயேசு என்பதை உணருவோம்.
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 இன்றைய வாசகங்கள்:-
எசா 52:7- 10 : எபி 1:1--6 ; யோவா 1:1-18
நான் ஏன் பிறந்தேன் ?

இதோ இயேசு இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கின்றார். கடவுளாகிய நான் பிறக்காமலேயே மனிதர்களுக்கு நற்செய்தியை அறிவித்திருக்கலாமே! நான் ஏன் ஒரு மனிதனாகப் பிறக்க வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழலாம். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல கதையொன்று சொல்கின்றேன்.

அது ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பஞ்சம். உண்ண உணவு இல்லை. குடிக்க நீரில்லை. அந்தக் கிராமத்தில் பல சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. அவையனைத்தும் உணவோ, நீரோயின்றி மயங்கின. தான் படைத்த அந்தச் சின்னஞ்சிறு சிட்டுக்களைப் பார்த்தார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் மனம் படைத்த கடவுள். அவர் அந்தப் பறவைகளுக்கு உணவூட்ட விரும்பினார். ஒரு வானதூதரை அழைத்து. அதோ அந்தக் கிராமத்துப் பறவைகளைக் காப்பாற்றும் பணியை உம்மிடம் ஒப்படைக்கின்றேன் என்று சொல்லி அந்தச் சிட்டுக் குருவிகள் வாழ்ந்த கிராமத்திற்கு அத்தூதரை அனுப்பி வைத்தார்.

உணவும் நீரும் நிறைந்ததோர் இடத்திற்கு அந்தப் பறவைகளை அழைத்துச் செல்லும் எண்ணத்தோடு அந்தப் பறவைகள் முன்னால் வானதூதர் நின்றார். அந்த வானதூதரைப் பார்த்ததும் அந்தச் சிறிய பறவைகள் பயந்து நடுங்கின! அவற்றில் சில பறக்கப் பார்த்தன; சில நகரப் பார்த்தன. வானதூதர், "உங்களைக் காப்பாற்ற வந்திருக்கின்றேன்" என்றார். ஆனால் அவர் கூறியதைக் கேட்கும் மனநிலையில் அந்தப் பறவைகள் இல்லை. அவற்றின் உள்ளத்திலே ஏதோ ஓர் அச்சம். பாவம் அந்த வானதூதர்! ஏமாந்து கடவுளிடம் திரும்பிச் சென்று, அந்தப் பறவைகள் என்னைப் பார்த்து அஞ்சுகின்றன. நான் சொல்வதைக் கேட்க. என்னோடு பேசத் தயங்குகின்றன என்றார்.

கடவுளோ. சற்று சிந்தித்துப்பார்! என்ன செய்தால், அந்தப் பறவைகள் உனது நற்செய்தியை ஏற்றுக் கொள்ளும். உன்னோடு பேசும் என்பது உனக்குப் புரியும் என்றார். வானதூதர் சிந்தித்தார். பறவையின் உருவம் எடுத்தார். சிட்டுக்குருவியாக மாறினார்; அந்தச் சிட்டுக்குருவிகளின் நடுவில் அமர்ந்து. அவைகளின் மொழியைப் பேசினார். அப்பறவைகள் அவரை ஏற்றுக்கொண்டன. அவர் பேசியது பறவைகளுக்குப் புரிந்தது ; அந்தப் பறவைகள் பேசியது அவருக்குப் புரிந்தது. உணவும் நீரும் நிறைந்த இடத்திற்கு அந்தப் பறவைகளை அழைத்துச் சென்று அவற்றைக் காப்பாற்றி, வெற்றிப் புன்னகையோடு இறைவனிடம் திரும்பினார் வானதூதர்.

கடவுளாகிய நான் ஏன் மனிதனாகப் பிறந்தேன் என்பதற்கு ஓரளவு பதில் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என நான் நினைக்கின்றேன். என் தந்தையின் உள்ளத்திலே தீரா ஆசைகள். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா கூறுவது போல். நலம் தரும் செய்தியை உரைக்கவும். விடுதலையைப் பறைசாற்றவும் அவர் விரும்பினார். அவர் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள, இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவது போல, அவருடைய மகனாகிய என்னை இந்த உலகத்திற்கு அனுப்பத் திருவுளமானார்.

இன்றைய நற்செய்திக்கு ஏற்ப, நான் ஒளிர்விக்கும் ஒளியாகப் பிறக்க வேண்டும்; என் வழியாக எல்லாரும் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையைப் பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திட்டம். இத்திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என நான் சிந்தித்தேன். இறுதியாக நான் ஒரு முடிவு எடுத்தேன். என் அடியார் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் 2-ஆம் இயலில் 7-ஆம் இறைவாக்கியத்தில் கூறுவதுபோல. மனிதருக்கு ஒப்பாக விரும்பினேன். எபிரேயருக்கு எழுதப்பட்டிருக்கும் திருமுகத்தில் 4-வது இயலில் 15-வது இறைவாக்கியத்தில் கூறப்பட்டிருப்பதுபோல பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதருக்கு ஒப்பானேன். ஆம். இன்றைய நற்செய்தியில் யோவான் உரைப்பது போல மனிதர் ஆனேன் ; மனிதர்களிடையே குடிகொண்டேன்.

நான் மனிதரானது. மனிதர்களின் மொழியைப் பேசுவதற்காக! மனிதர்களின் மொழியைப் பேசினால்தான் அவர்களுக்கு நான் சொல்வது புரியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் என்னைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களைப்போல வாழ்ந்தேன். அவர்களது மொழியைப் பேசினேன். மற்ற மனிதர்களைப்போலவே நான் பசியாயிருந்தேன். யோவான் நற்செய்தியில் இயல் 4:27-34 முடிய உள்ள இறைவாக்கியங்களையும், லூக்கா நற்செய்தி இயல் 24:41-யும் படித்துப் பாருங்கள். அவை இந்த உண்மைக்குச் சான்று பகரும். மற்றவர்களைப்போலவே நானும் தாகமாயிருந்தேன். அதனால்தான் சமாரியப் பெண்ணிடம் குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும் (யோவா 4:8) என்றேன். மீண்டும். சிலுவையில் தொங்கியபோது தாகமாய் இருக்கின்றது (யோவா 19:28) என்றேன்.

சாதாரண மனிதர்களைப்போலவே நானும் அழுதேன். என் நண்பன் இலாசர் இறந்தபோது அழுதேன் (யோவா 11:35); எருசலேம் நகரைப் பார்த்து அழுதேன் (லூக் 19:41). எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி. கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார் என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள் (எபி 5:7). அது என்னைக் குறித்துதான். ஆம். பாவம் தவிர (யோவா 8:46) மற்ற அனைத்திலும் நான் மனிதரானேன்; மற்ற மனிதர்களைப் போல வாழ்ந்தேன். ஆகவே மக்கள் என்னை எளிதாக ஏற்றுக்கொண்டு நான் சொல்வதைக் கேட்க முன்வந்தார்கள். பெருந்திரளான மக்கள் என்னைப் பின்தொடர்ந்தார்கள் (மத் 4:25): அவர்கள் குறைகளையெல்லாம் என்னிடம் எடுத்துச் சொன்னார்கள். நானும் அவர்களுக்கு வழிகாட்டினேன். இப்பொழுது புரிகிறதா நான் ஏன் மனிதனாகப் பிறந்தேன் என்று!

உங்களைப் போலப் பேசவே, வாழவே நான் உங்கள் நடுவே இன்று பிறந்திருக்கின்றேன். என் பிறப்பின் நோக்கமெல்லாம் உங்கள் குறைகளைக் கேட்டு, உங்களுக்கு உதவி செய்து, உங்களை வாழவைக்க வேண்டுமென்பதே! உங்களுக்காக நான் விண்ணகத்தைத் துறந்திருக்கின்றேன் : மண்ணகத்தில் மனிதனாகப் பிறந்திருக்கின்றேன். நான் இப்போது கடவுள் மட்டுமல்ல, மனிதனும் கூட. ஆகவே நீங்கள் பேசுகின்ற மொழி எனக்குத் தெ ஆகவே பேசுங்கள்!

உங்கள் உணர்வுகள் பேசட்டும்.
உங்கள் எண்ணங்கள் பேசட்டும்.
உங்கள் மனங்கள் பேசட்டும்.

இதுவரை இறைவனாகிய என்னோடு நீங்கள் பேச நினைத்ததையெல்லாம் இன்று என்னோடு பேசுங்கள்! உங்களுள் எத்தனையோ ஆசைகள். சோர்ந்துபோன உங்கள் உள்ளங்களுக்கு சொர்க்கம் பார்க்க ஆசை. சுமை சுமந்த உங்கள் தோள்களுக்கு சுகம் காண ஆசை. வறண்டு போன உங்கள் கண்களுக்கு சிரிக்க கொஞ்சம் ஆசை. அலைமோதும் உங்கள் ஆன்மாவிற்கு அமைதி காண ஆசை.

உங்கள் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள என்னோடு பேசுங்கள். என்னால் ஆகாதது ஒன்றுமில்லை என்று நம்புங்கள். அப்போது உங்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் பிறக்கும்.

அந்த வசந்தத்தில், உங்களுக்கு உண்ண உணவு கிடைக்கும் : உடுக்க உடை கிடைக்கும் ; இருக்க இடம் கிடைக்கும்; அருளுக்கு மேல் அருள் கிடைக்கும்; வாழ்வுக்கு மேல் வாழ்வு கிடைக்கும்; ஆசிருக்கு மேல் ஆசிர் கிடைக்கும்.

மேலும் அறிவோம் :

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும் (குறள் : 370).

பொருள் :
ஆசை அளவின்றிப் பெருகும் இயல்புடையது. அந்த ஆசையை அகற்றி வாழும் நிலை, நீங்கா இன்பம் ஆகிய பேரின்பத்தை இயல்பாகவே கொண்டு வந்து சேர்க்கும்.
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
ஒரு பள்ளியின் மாடிப்படியின் மேல்படியில் நான் நின்று கொண்டிருந்தேன், கீழ்ப்படியில் இருந்த கவிதா என்ற சிறுமியைப் பார்த்து, "கவிதா மேலே ஏறிவா" என்று அழைத்தேன். அவளால் ஏறி வர முடியவில்லை. அவள் என்னைப் பார்த்து, "நீங்க கீழே இறங்கி வாங்க" என்றாள். நானும் கீழே இறங்கி வந்து அவளை மேலே தூக்கிச் சென்றேன்.

மனிதன் கடவுளுடைய நிலையை எட்டிப் பிடிக்க முயன்றான். அந்நிலையில் கடவுளே மனிதனுடைய நிலைக்குத் தாழ்ந்து வந்து அவனைக் கடவுளுடைய நிலைக்கு உயர்த்தினார். மனிதனைத் தெய்வமாக்க தெய்வம் மனிதரானது. மனிதர் இறைத்தன்மையில் பங்குபெற்றுள்ளனர் (1 பேது. 1:4).

கிறிஸ்து பிறப்பு விழா உணர்த்தும் உண்மைகள்: கடவுள் மனிதரானார்; கடவுள் குழந்தையானார்; கடவுள் ஏழையானார்,

முதலாவதாக "வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்" (1 யோவா 1:14). நாம் கடவுளைக் கண்ணால் கண்டோம்; அவரைக் கைாயல் தொட்டோம்; அவரது வாக்கைக் காதால் கேட்டோம் (1 யோவா 1:1). இனி கடவுள் நமக்கு அந்நியர் அல்ல; மாறாக, நம்மிலே ஒருவர்; நமது இரத்தத்தின் இரத்தம்; நமது தசையின் தசை.

கடவுள் மனிதரானது நமக்காகவும் நமது மீட்புக்காகவும். "இன்று மீட்பர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் " (லூக் 2:10). "குழந்தை நமக்காகப் பிறந்துள்ளார்; ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார் " (எசா 9:6). மானிடராகிய நமக்காகவும் நமது மீட்புக்காகவும் வானகமிருந்து வையகம் வந்தார். தமது ஒரே மகனை கையளிக்கும் அளவுக்கு கடவுள் நம்மீது அன்பு கூர்ந்துள்ளார் (யோவா 3:16). இன்று ஆண்டவர் பிறந்த நன்னாள், எனவே அகமகிழ்வோம்: அக்களிப்போம்.

கடவுள் மனிதராகப் பிறந்தார் என்னும் இறையியல் உண்மையைத் திருத்தூதர் பவுல், "நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டது" (தீத் 3:4) என்று கூறுகிறார். கிறிஸ்துவில் கடவுளுடைய இரக்கமும் மனித நேயமும் ஊன் உடல் எடுத்தன. ஊன் உடல் எடுத்த கிறிஸ்து நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் (எசா 53:4). கிறிஸ்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10:38).

நம்மிடத்தில் மனித நேயம் மலர்ந்துள்ளதா? மாட்டுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? "மாட்டுக் கழுத்தில் தொங்குவது "பெல்" மனிதர் கழுத்தில் தொங்குவது "செல்"; என்று சொல்லப்படுகிறது. "ஒரு மாடு அடுத்த மாட்டைப் பற்றி அக்கறை கொள்ளாது. ஒரு மனிதர் அடுத்த மனிதரைப் பற்றி அக்கறை கொள்வார். அடுத்தவனைப் பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி" (சாக்ரட்டீஸ்). இன்றைய அறிவியல் பலவற்றைப் புதிதாகக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் மனித நேயத்தைத் தொலைத்து விட்டது. இந்நிலையில் கிறிஸ்துவின் மனித நேயம் நம்மை ஆட்கொள்வதாக. அதன் விளைவாக அழுவாரோடு அழுது. மகிழ்வாரோடு மகிழ்வோம் (உரோ 12:15).

இரண்டாவதாக, கடவுள் குழந்தையானார். கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்த வானதூதர், "குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள், இதுவே லடங்களுக்கு அடையாளம் என்றார்" (லூக் 2:12)

குழந்தை வலுவற்றது. தனக்குத்தானே எந்த உதவியையும் அதனால் செய்துகொள்ள முடியாது: தனது தேவைகள் அனைத்துக்கும் மற்றவர்களையே சார்ந்துள்ளது. உலகை மீட்க வந்தவர் ஒரு குழந்தையாக அதாவது, வலுவற்றவராகப் பிறந்தார். "மனித வலிமையைவிட கடவுளுடைய வலுவின்மை வலிமை மிக்கது" (1 கொரி 1:25) என்பதை உணர்ந்த வலிமை மிக்க கடவுள் வலுவற்றவராகப் பிறந்தார், மடமை எனக் கருதப்பட்ட சிலுவையால் உலகை மீட்டார்.

மதம் பிடித்த யானை வீதியின் நடுவே அமர்ந்திருந்த ஒரு குழந்தையைத் தன் தும்பிக்கையால் தொட்டு, அக்குழந்தை அருகே படுத்துக் கொண்டது. ஒரு குழந்தையின் முன்பு யானையின் வெறிகூட மாயமாக மறைந்துவிட்டது, குழந்தையைப் பற்றிப் பாரதி. "முல்லைச் சிரிப்பால் என் மூர்க்கம் தவிர்த்திடுவாய்" என்று பாடியுள்ளார். குழந்தையின் சிரிப்பு நமது மூர்க்கக் குணத்தை நிர்மூலமாக்கி விடுகிறது. ஆணவத்தினால் பிரிந்து வாழும் குடும்பங்களும் தனி நபர்களும் குழந்தை இயேசுவின் முன்னால் மீண்டும் ஒன்று சேர வேண்டும். பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் செல்லத் தலை குனிய வேண்டும், தம்மைத் தாழ்த்தாத எவரும் கடவுளை அணுக முடியாது. குழந்தை இயேசுவிடமிருந்து "கனிவையும், மனத்தாழ்மையையும்" (மத் 11:29) கற்றுக்கொள்வோம். நாம் குழந்தைகளாக மாறாவிட்டால் விண்ண ரசில் நுழைய முடியாது (மத் 18:3).

மூன்றாவதாக, கடவுள் ஏழையானார். விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் (லூக் 2:7). செல்வந்தராக இருந்தும் நமக்காக ஏழையானார் (2 கொரி 8:3). மண்ணிலே அவருக்குத் தலைசாய்க்கக்கூட இடமில்லை (லூக் 9:8). ஏழைகளுக்கு அவர் நற்செய்தி அறிவித்தார் (லூக் 4:18). ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்று அறிக்கையிட்டார் (லுக்: 6:20).

ஏழையாகப் பிறந்த கடவுள் ஏழைகளின் கடவுள். திக்கற்ற ஏழையின் குரலுக்குச் செவிமடுக்கும் கடவுள் (திப 34:6),

நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கி, அங்காடியின் சிலைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளது இன்றைய உலகம். திருச்சபை இதற்கு விதிவிலக்கல்ல. நோவாவின் பேழையைக் கட்ட வேண்டிய திருச்சபை 'டைட்டானிக்' கப்பலைக் கட்டிக்கொண்டிருக்கிறது. டைட்டானிக் கப்பலைத் திருச்சபை கட்டினால் நுகர்வுக் கலாச்சாரம் என்னும் பனிப்பாறையில் மோதி மூழ்கிவிடும். மாறாக, நோவாவின் பேழையைக் கட்டினால் தன்னையும் உலகையும் காப்பாற்றும். இன்றைய உலகை அச்சுறுத்தும் நுகர்வுக் கலாச்சாரமாகிய கோலியாத் என்னும் அரக்கனைத் தாவீதின் எளிமை என்னும் கவணால் மட்டுமே வீழ்த்த முடியும். குழந்தை இயேசு நமக்கு விடுக்கும் செய்தி, "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24).

கிறிஸ்து பிறப்பு விழாவில் ஏழை எளியவர்களைத் தேடிச் செல்வோம். குறிப்பாக, ஏழை மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு உணவும் உடையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்போம், ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவி இயேசுவுக்கே செய்யும் உதவி என்பதை நினைவுகூர்வோம் (மத் 25:40).

முடிவாக, கடவுள் மனிதரானார்; நாம் மனிதராவது எப்போது? கடவுள் குழந்தையானார்; நாம் குழந்தையாவது எப்போது? கடவுள் ஏழையானார்; நாம் ஏழையாவது எப்போது?

விண்ணகத்தில் கடவுளுக்கு மகிமையும் மண்ணகத்தில் மாந்தர்க்கு அமைதியும் உரித்தாகுக! கிறிஸ்து பிறப்பு இனிய நல்வாழ்த்துக்கள்!

 
 
மறையுரைச்சிந்தனை  -திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ் -
கடவுள் நம்மோடு! நாம் யாரோடு?

சிறில் ஈகன் என்பவர் அமெரிக்கக் கவிஞர். 1963ல் அமெரிக்கா என்ற இதழில் "ஒருவகைச் செபம் - a kind of prayer" என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

போகிற இடமெல்லாம் ஒருவர் எதையோ தேடிக் கொண்டே போகிறார். தேடுதல், தேடுதல், தேடுதலே அவரது வேலையாக, வேட்கையாக இருக்கிறது. ஒருநாள் அவரைச் சந்தித்த - எதிரில் வந்த வழிப்போக்கர் "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்கிறார். "கடவுளைத் தேடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, அடுத்தவரைப் பேச விடாமல் தொடர்கிறார்: "உனது உள்ளத்திலேயே கடவுளைக் காணலாமே என்று சொல்லாதீர்கள் (ஒரு வகையில் அது உண்மையே என்றாலும் கூட) உன் அயலானில் கடவுளைக் காணலாமே என்று சொல்லாதீர்கள் (ஒரு) வகையில் அதுவும் உண்மையே தான்) மனிதனின் ஐம்புலன்களையும் ஊடுருவக் கூடிய கடவுளையே, ஐம்புலன்களுக்குள் அடங்கும் பருப்பொருளான பரம் பொருளையே நான் தேடிக் கொண்டிருக்கிறேன்". அதாவது பார்த்துத் தொட்டு அறியக் கூடிய கடவுளை அவர் தேடிக் கொண்டிருக்கிறாராம்.

இத்தகைய கடவுளைத் தாம் கண்டதாகத் தூய யோவான் எப்படியெல்லாம் பெருமிதம் கொள்கிறார்! "தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம். கண்ணால் கண்டோம். உற்று நோக்கினோம். கையால் தொட்டுணர்ந்தோம்". (1 யோ.1:1) என்பது தானே யோவானின் சாட்சியம்! இயேசுவின் நெஞ்சில் சாய்ந்து அதன் இதயத் துடிப்பிலே தன்னை இழந்த அனுபவம் இது. அப்படியானால் அன்னை மரியா தன் வயிற்றில் தன் சதையின் சதையாகக் கருவாகச் சுமந்த அனுபவம் எப்படி இருந்திருக்கும்? தோமாவைக் கூட 'இதோ என் விலா... உன் விரலை இடு' என்று அழைத்தார் என்றால் சந்தேகம் தீர மட்டுமா? தெய்வீகத்தைத் தொடும் மெய்சிலிர்க்கும் அனுபவத்தைக் கொடுக்கவும் அன்றோ!

உரோமை சிஸ்டர்சியன் ஆலய உள்முகட்டில் - உச்சி முகட்டில் கடவுள் படைப்புப் பற்றிய மைக்கிள் ஆஞ்சலோவின் வியக்க வைக்கும் அற்புத ஓவியங்கள். ஜெர்மானியக் கலைஞர் ஒருவர் மேவே நிமிர்ந்து மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருந்தார். பைத்தியமான, வெறியான இரசனை. பசி நோக்காத, உடல் வருத்தம் பாராத, கண் சோர்வு காணாத, கழுத்து நோவு உணராத இரசனை. இதனைக் கண்ட ஒரு சுற்றுலாப் பயணி பரிவோடு அருகில் சென்று ஒரு மேசையை இழுத்துப் போட்டு அதன்மீது ஒரு கண்ணாடியைச் சரிவாகச் சாய்த்து வைத்து அதில் பிரதிபலித்த ஓவியத்தைக் குனிந்து பார்த்து மகிழுமாறு சொன்னார்.

தொலைவில் இருந்த காட்சி இப்போது மிக அருகில். சிரமப்பட்டு பார்த்த காட்சி இப்போது மிக எளிதில். இதுகூட நிழலே. ஆனால் இறைவனைப் பொருத்தவரை எவ்வளவு உண்மை!

மறையுரை மேதை புல்டன் ஷீன் ஆண்டகை பழைய ஏற்பாட்டை வானொலியோடும் புதிய ஏற்பாட்டைத் தொலைக் காட்சியோடும் ஒப்பிட்டுச் சிந்திப்பார். பழைய ஏற்பாட்டில் கடவுளின் வார்த்தையைக் கேட்க முடியும் - கேட்க மட்டுமே முடியும். புதிய ஏற்பாட்டிலோ அந்த வார்த்தை மனித உடல் எடுத்ததை வண்ண வண்ண நிறத்தில் பார்க்க முடியும். இது மனிதனை நோக்கிய கடவுளின் அகரத்தாவல், "என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்" (யோ.14:9) என்றார் இயேசு. இயேசுவே நிறைவான இறைவெளிப்பாடு. அறியவும் நம்பவும் வேறென்ன வேண்டும் நமக்கு?

கடவுள் நம்மோடு என்பதை மட்டுமல்ல. கடவுள் நம்முள் என்பதை வெளிப்படுத்துவதே உண்மையான கிறிஸ்மஸ் பெருவிழா. மனிதமும் புனிதமும் இயேசு பாலனில் உருக்கொண்டது, ஒன்றிணைந்தது. புனிதம் மனிதமானது என்பது இறைவனின் முயற்சி. மனிதம் புனிதமாவது என்பது மனிதனின் முயற்சி. மனிதர்களாகிய நாம் புனிதமான வாழ்வு வாழ குழந்தை இயேசுவின் அருளோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். பாதை கடினமானதுதான் ஆனால் பயணம் புனிதமானது!

மனிதனைக் கடவுளாக்கக் கடவுள் மனிதனானார் என்பார் தூய அகுஸ்தீனார்

பனிக்கட்டியையும் தண்ணீரையும் ஒன்று சேர்க்க வேண்டுமானால் பனிக்கட்டி தண்ணீராக மாற வேண்டும் அல்லது தண்ணீர் பனிக்கட்டியாக மாற வேண்டும்! அருவமாகிய ஆண்டவனை நாம் அடைய வேண்டுமென்றால் அவர் உருவமாக மாற வேண்டும் அல்லது நாம் அருவமாக மாற வேண்டும்! நாம் அருவமாவது அவ்வளவு எளிதான செயல் அன்று. ஆகவே ஆண்டவன் நம்மீது இரங்கி உருவமாகி அருள்தருகிறார்!!

"உலகில் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் கடவுள் இந்த உலகைத் தொடர்ந்து அன்பு செய்ய மறக்கவில்லை என்பதைத் தெரிவிக்கின்றது" என்றார் தாகூர். சாதாரணக் குழந்தைகளின் பிறப்பே கடவுளின் அன்பைப் பறைசாற்றுகிறது என்றால், இயேசுவின் பிறப்பு, கடவுளின் அன்பு எவ்வளவு உயர்ந்தது, ஒப்பிட முடியாதது என்பதை எப்படியெல்லாம் எடுத்துக்காட்டும்!".

இயேசு பிறப்பு விழாவால் நமக்கு எத்தனை பெருமைகள்! இது நம்மில் ஒருவராகி நம்மிடையே குடிகொள்ளும் இம்மானுவேலின் விழா! அன்றாட வாழ்வின் சலிப்பினிடையே புதுத்தெம்பூட்டி நம்மை மகிழ வைக்கும் விடுதலை விழா! படைப்பின் இறுதிக் கட்டமாகிய புதிய வானம் புதிய பூமியின் அரங்கேற்ற விழா! இறைவனுக்கு மகிமையும் நல்மனத்தோருக்கு அமைதியும் தரும் ஆனந்த விழா!

தேடிவரும் தெய்வம் இயேசு பிறந்த இனிய நாளில்
அன்பு ஆளட்டும்! அமைதி வாழட்டும்!
புதுமை தவழட்டும்! புனிதம் கமழட்டும்!
இன்பம் பொழியட்டும்! இதயம் குளிரட்டும்!
வார்த்தை பிறக்கட்டும்! வாழ்வு மலரட்டும்!


 
சிந்தனைப் பயணம்: அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
 கிறிஸ்து பிறப்பு பெருவிழா

பல ஆண்டுகளுக்கு முன், சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த ஒரு கோவிலில் டிசம்பர் 24 இரவு கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலியை நிகழ்த்தச் சென்றிருந்தேன். அந்தத் திருப்பலியின் நினைவு, ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்மஸ் நாளன்று மனதில் எழும். நள்ளிரவுத் திருப்பலிக்கு வந்திருந்தவர்கள் கூட்டம் கோவிலை முற்றிலும் நிறைத்திருந்தது. கோவிலுக்கு வெளியிலும் மக்கள் கூட்டம். அனைவரும், திருவிழாவுக்கு ஏற்றவகையில் புத்தாடை உடுத்தியிருந்தனர். மறையுரை வழங்கும் நேரம் நெருங்கியது. பீடத்திலிருந்த வண்ணம் மக்களை நிமிர்ந்து பார்த்தேன். கோவிலின் நுழைவாசலையும் பார்த்தேன். அப்போது, திடீரென எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது. அந்த எண்ணத்தை ஒரு கேள்வியாக்கி, மறையுரையைத் துவக்கினேன்:

"அன்பார்ந்தவர்களே, நாம் இங்கே திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தக் கோவிலுக்குள் மரியாவும், யோசேப்பும் நுழைந்தால் எப்படி இருக்கும்?" என்று கேட்டேன். கோவிலில் சலசலப்பு ஏற்பட்டது. பலர் முகத்தில் புன்னகை படர்ந்தது. ஒரு பெண்மணி சப்தமாகப் பதில் சொன்னார்: "ஓ, அது பெரிய பாக்கியமாக இருக்கும். அதைப்போல ஒரு சந்தோசம் இருக்கவே முடியாது." என்று சொன்னார். அவர் சொன்னதை ஆமோதிப்பதுபோல் பலர் தலை அசைத்தனர். ஒரு சிலர் இலேசாகக் கரவொலியும் எழுப்பினர்.

"அவ்வளவு அவசரமாக, ஆர்வமாகப் பதில் சொல்லிவிடாதீர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்" என்று அவர்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்துவிட்டு, நான் தொடர்ந்தேன்: "நம்மிடையே வந்திருப்பது அன்னை மரியா, புனித யோசேப்பு என்று நிச்சயமாகத் தெரிந்தால், ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் மகிழலாம். ஆனால், கோவிலுக்குள் வந்திருக்கும் இருவரும் நமக்கு அறிமுகமில்லாதவர்கள். அவர்கள் ஊருக்குப் புதியவர்கள். பார்க்க பரிதாபமாக இருக்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் பகலும் இரவும் கடினமான பயணம் செய்து வந்திருக்கிறார்கள். சரியாக உண்ணாமல், உறங்காமல் வந்திருக்கும் அவர்களது உடையெல்லாம் அழுக்கும் புழுதியுமாய் இருக்கிறது. அவர்கள் குளித்து நாட்கள் ஆகிவிட்டன."

பல மைல் தூரம் நடைபயணத்தை மேற்கொண்ட மரியாவையும், யோசேப்புவையும் நினைக்கும்போது, நம் எண்ணங்கள் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தை நினைத்துப் பார்க்கின்றன. கோவிட் பெருந்தொற்றை தடுக்கும் ஒரு முயற்சியாக இந்தியாவில் விதிக்கப்பட்ட முழு அடைப்பு நாள்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. முழு அடைப்பு காலத்தில், வறுமைப்பட்ட தொழிலாளிகள், தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பல மைல் தூரம் நடந்தே சென்ற காட்சிகள் நம் உள்ளங்களில் இன்னும் பதிந்துள்ளன. அத்தகைய வறியோர் குழுவைச் சேர்ந்த ஓர் இளம் தம்பதியர், இரண்டு மூன்று நாள்கள் நடந்து நம் கோவிலிக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம்.

நள்ளிரவுத் திருப்பலியில் நான் தொடர்நது விவரங்களைத் தந்தேன்: "இவை எல்லாவற்றையும் விட அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணி வேறு. எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் எனற நிலை. ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு பேறுகால வேதனை ஆரம்பித்திருக்கலாம். எனவேதான் யோசேப்பு அருகில் கோவிலைக் கண்டதும், அந்தப் பெண்ணுடன் அங்கு நுழைந்துவிட்டார்" என்று நான் அந்தக் காட்சியை விவரிக்க, விவரிக்க அவர்களிடையே ஆரம்பத்தில் உருவான சலசலப்பு, சிரிப்பு எல்லாம் அடங்கிவிட்டன. கொஞ்சம் இறுக்கமான அமைதி அங்கு நிலவியது. தொடர்ந்து நான் மறையுரையில், முதல் கிறிஸ்மஸ் நிகழ்ந்தபோது மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு ஆகிய மூவரும் சந்தித்த பிரச்சனைகளை அவர்களுடன் பகிர்ந்தேன்.

ஒவ்வொரு முறையும் கிறிஸ்மஸ் விழா நெருங்கும்போது, அந்தத் திருப்பலி என் நினைவுக்கு வரும். அந்த மக்களிடம் கேட்ட அந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டு, விடை தேட முயன்றிருக்கிறேன். நான் கிறிஸ்மஸ் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, மரியாவும் யோசேப்பும் கோவிலுக்குள் வந்தால் நான் என்ன செய்திருப்பேன்? திருப்பலியை நிறுத்திவிட்டு அவர்களுக்கு உதவிகள் செய்யப் போயிருப்பேனா? நிச்சயமாக... அவர்கள் மரியா, யோசேப்பு என்று தெரிந்தால், கட்டாயம் அவர்களுக்கு உதவிகள் செய்யப் போயிருப்பேன். குழந்தை இயேசு பிறந்ததும், அக்குழந்தையுடன் மீண்டும் கோவிலுக்கு வந்து திருப்பலியைத் தொடர்ந்திருப்பேன்.

இப்படி நான் உறுதியாகச் சொல்வதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அவர்கள் மரியா, யோசேப்பு என்றும், பிறக்கப் போவது இயேசு என்றும் முன்கூட்டியே தெரிந்திருந்தால் இவற்றையெல்லாம் நான் நிச்சயம் செய்திருப்பேன். ஆனால், வந்திருக்கும் இவர்கள் இருவரும் என் கண்ணுக்கு சாதாரண, எளிய, வேற்றூர் மக்கள் என்பது மட்டும் தானே தெரிகிறது. இந்தச் சூழலில் என்ன செய்திருப்பேன்?

கோவில் பணியாளரை, பங்குப் பேரவையில் இருப்பவர்களை பீடத்திற்கு அழைத்து, ஓர் அவசர ஆலோசனை நடத்தி, அவர்கள் இருவருக்கும் வேறு ஏதாவது வகையில் உதவிகள் கிடைக்க வழி செய்துவிட்டு, என் திருப்பலியை நான் தொடர்ந்திருப்பேன்.

அவர்கள் இருவரும் மரியா, யோசேப்பு என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தால், ஒரு வகை செயல்பாடுகள். அவர்கள் யார் என்று தெரியாத சூழலில், வேறொரு வகை செயல்பாடுகள். இதுதான் முதல் கிறிஸ்மஸ் அன்று பெத்லகேம் ஊரில் நடந்தது. இதைத் தான் இன்று நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம். மரியாவும், யோசேப்பும் பெத்லகேம் ஊரை அடைந்து இடம் தேடுகிறார்கள். அவர்களுக்கு இடம் இல்லை. "அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்." (லூக்கா 2: 6-7)

"விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை' என்ற சொற்கள், ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் விழாவன்று, நமக்கு பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்து, நம்மையே மீண்டும், மீண்டும் ஆன்ம ஆய்வுசெய்வதற்கு அழைப்பு விடுக்கின்றன. புனித பெனடிக்ட் துறவு சபையின் ஆழ்நிலை தியானப் பிரிவாக விளங்கும் Trappist சபையின் துறவியும், சிறந்த ஆன்மீக எழுத்தாளருமான Thomas Merton என்பவர், "விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை' என்ற நற்செய்தி சொற்களுக்கு அழகியதொரு விளக்கம் அளித்துள்ளார்: "மதியிழந்த வண்ணம் செயல்பட்டுவரும் இந்த உலகம் என்ற விடுதியில் கிறிஸ்துவுக்கு இடம் இல்லை. அவர் இவ்வுலகிற்கு அழையாத விருந்தினராக வந்துள்ளார். தனக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது தெரிந்தும், அவர் இவ்வுலகிற்கு வந்தார். தன்னைப்போலவே இவ்வுலகில் இடமின்றி இருக்கும் மக்கள் நடுவில் தன் இடத்தை அவர் தெரிவு செய்துகொண்டார். சக்திவாய்ந்தவர்களால் புறம்தள்ளப் பட்டவர்கள் நடுவில், மனிதர்கள் என்ற மாண்பு மறுக்கப்பட்டவர்கள் நடுவில், வன்முறைகளால் வதைக்கப்பட்டு, தாக்கப்பட்டு, அனைத்தையும் இழந்தவர்கள் நடுவில், கிறிஸ்து தன் இடத்தைத் தெரிவு செய்துள்ளார். அனைத்து வழிகளிலும் இவ்வுலகில் இடமில்லை என்று ஒதுக்கிவைக்கப் பட்டவர்கள் நடுவே கிறிஸ்து இவ்வுலகில் பிரசன்னமாகியிருக்கிறார்."

"விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை' என்ற சொற்களை நற்செய்தியில் வாசிக்கும்போதெல்லாம், நம்மில் பலர், பெத்லகேம் மக்கள்மீது, முக்கியமாக அந்த விடுதி காப்பாளர்மீது கோபப்பட்டிருக்கிறோம். நமது கோபம் நியாயமா? அவர்களும் நம்மைப் போல்தானே. தங்களிடம் இடம் கேட்டு வந்திருப்பது மரியா, யோசேப்பு என்றும், பிறக்கப் போகும் குழந்தைதான் இஸ்ரயேல் மக்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் காத்திருக்கும் மீட்பர் என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அந்த விடுதி மட்டுமல்ல, பெத்லகேம் நகரம் முழுவதும் அங்கு திரண்டு வநது, அந்தப் பரிதாபமான வழிப்போக்கர்களை வரவேற்றிருப்பார்களே!

பரிதாபமான வழிப்போக்கர்களின் வழியாக இறைவன் வருவதை அவர்கள் உணர வில்லை... ஈராயிரம் ஆண்டுகள் கழித்து, சென்னைப் புறநகர் பகுதி கோவிலுக்கு அந்த வழிப்போக்கர்கள் மீண்டும் வந்திருந்தால், அவர்களை நானோ, அங்கு கூடியிருந்த மக்களோ, உணர்ந்திருப்போமா என்பதும் சந்தேகம்தான்.

"இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அணி எக்காளம் ஒலித்து பெத்லகேமில் அறிவித்திருந்தால், மீட்பின் வரலாறு வித்தியாசமாக இருந்திருக்கும். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், விளம்பரமும் இல்லாமல், இறைவன் நம்மில் ஒருவராக, எம்மானுவேலாக வந்து, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுதான் கிறிஸ்து பிறப்பின் அழகு.

முதல் கிறிஸ்மஸ் அன்று இயேசு தந்தது இந்த ஆச்சரியம் மட்டுமல்ல. "இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அறிவித்திருக்கலாமே என்று எண்ணுகிறோமே அந்த எண்ணமும் நிறைவேறியது. "இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அறிவித்தனர். ஆனால், நாம் எதிர்ப்பார்த்ததுபோல் ஊருக்கு நடுவே எக்காளம் ஒலித்து இந்தச் செய்தி சொல்லப்படவில்லை. மாறாக, ஊருக்கு வெளியே, மந்தைகளோடு, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த இடையர்களுக்கு, வானதூதர், இந்தச் செய்தியைச் சொன்னார். இதுவும் கிறிஸ்மஸ் தரும் ஓர் ஆச்சரியம்தான்.

இந்த இடையர்களைப் பற்றியும், அவர்களுக்கு வழங்கப்பட்ட நற்செய்தியைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போம். ஊருக்குள் மக்கள் கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்தது. அவரவர் தங்கள் பூர்வீக ஊரை, உறவைத் தேடிச்சென்று பெயர்களைப் பதிவு செய்யவேண்டும். எனவேதான் "தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்." (லூக்கா 2:5) என்று நற்செய்தியில் இன்று வாசிக்கிறோம். இப்படி ஊர் விட்டு ஊர் சென்று தங்கள் பெயர்களை மக்கள் பதிவு செய்துகொண்டிருந்தபோது, இடையர்கள் ஏன் எங்கும் செல்லவில்லை? மக்கள் கணக்கெடுப்பு என்கிறோம். அப்படியானால், இவர்கள் மக்கள் கணக்கில் சேர்க்கப்படாதவர்களா?

இவர்கள், மனித சமுதாயத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்று அன்றைய சமுதாயம் ஒதுக்கிவைத்துவிட்டதால், இவர்கள், ஆடுகளோடு தங்களை ஒருங்கிணைத்து, சமுதாயத்தின் விளிம்பில் கிடந்தனர். அவர்களைத் தேடி, வானதூதர் வந்து, உலகிற்கெல்லாம் மகிழ்வைத் தரக்கூடிய நற்செய்தியை முதல் முறையாகப் பகிர்ந்து கொள்கிறார். மனிதர்கள் என்ற தகுதி கூட இல்லாமல், சமுதாயத்தின் கடைசி இடத்தில், விளிம்பில் வாழ்ந்தவர்களுக்கு கடவுள் முதலிடம் கொடுத்து ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார்.

அவர்களுக்கு வானதூதர் சொல்லும் வார்த்தைகளும் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" (லூக்கா 2: 10-11). இந்தச் செய்தியில், வானதூதர், "எல்லா மக்கள்' என்று ஓரிடத்திலும், இடையர்களுக்குச் சிறப்பிடம் அளித்து "உங்களுக்கு, உங்களுக்காக' என்று ஒருசில இடங்களிலும் பேசுகிறார்.

வானதூதர் சொன்ன வார்த்தைகளை நாம் இவ்விதம் பொருள் கொள்ளலாம். "அன்பு இடையர்களே, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இந்த செய்தி எல்லா மக்களுக்கும் உரியதுதான். ஆனால், இதைக் கேட்கும் நிலையில் மக்கள் இல்லை. அவர்கள் தங்கள் உறவினர்களை வரவேற்பதில், விருந்துண்பதில் எல்லா கவனத்தையும் செலுத்திவிட்டார்கள். இந்தச் செய்தியைப் பெறுவதற்கு அவர்கள் மனதில் இடம் இல்லை. எனவேதான் இந்தச் செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த மீட்பர் உங்களுக்காகப் பிறந்துள்ளார். அவரை அடையாளம் கண்டுகொள்வதும் உங்களுக்கு எளிது. ஏனெனில் அவரும் உங்களைப்போல் சமுதாயத்தின் விளிம்பில் பிறந்துள்ளார். தீவனத்தொட்டியில் துணிகளில் பொதிந்து கிடக்கும் அந்தக் குழந்தையில் இறைவனை உங்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். உங்கள் மீட்பரைச் சந்திக்கச் செல்லுங்கள்" வானதூதர் சொன்னச் செய்தியில், இந்த அர்த்தங்கள் பொதிந்திருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

தங்களை மீட்பவர் வருவார் வருவார் என்று பல்லாயிரம் ஆண்டுகள் காத்திருந்த இஸ்ரயேல் மக்கள், அவர் வந்தபோது, அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போனது. நாமும் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடும்போது, கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல், அவரை இழந்துவிட வாய்ப்புண்டு. இதோ ஒரு கற்பனைக் காட்சி...

ஐந்தாண்டுகள் கழித்து, அயல்நாட்டிலிருந்து அப்பா கிறிஸ்மஸுக்கு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அனைவருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. எல்லாருக்கும் பல்வேறு பரிசுப்பொருட்கள் வாங்கி வந்துள்ளார் அப்பா. கிறிஸ்மஸ் அலங்காரங்களும் விதவிதமாக வாங்கி வந்துள்ளார். கிறிஸ்மஸ் குடில் ஒன்று செய்து, பல்வேறு அழகான பொம்மைகள், பூக்கள் என்று அப்பா வாங்கி வந்திருந்த அலங்காரப் பொருட்களால் அந்தக் குடில் முழுவதையும் நிறைத்தனர் அவரது குழந்தைகள். இறுதியில் அந்தக் குடிலில் குழந்தை இயேசுவை வைக்கவேண்டும் அவ்வளவுதான். குழந்தை இயேசுவை அங்கு கொண்டுவந்தபோதுதான் அவர்களுக்குத் தெரிந்தது, அவரை வைக்க அங்கு இடமில்லை என்று... அவ்வளவு தூரம் அவர்கள் அந்தக் குடிலை பல்வேறு அலங்காரப் பொருட்களால் நிறைத்திருந்தனர்.

சமுதாயத்தின் நடுவில் சகல மரியாதைகளுடன், பெரும் ஆரவாரத்துடன் நம் இறைவன் பிறக்காமல், சமுதாயத்தின் விளிம்பில் பிறக்கத் தீர்மானித்தார். அவர் பிறப்பதற்கு விடுதியில் இடமில்லை என்பதை விட, விடுதியில் இடம் வேண்டாம் என்று தீர்மானித்து, சமுதாயத்தின் விளிம்பில் பிறந்தார். தான் பிறந்த செய்தியையும் சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்த இடையர்களுடன் முதன் முதலாகப் பகிர்ந்து கொண்டார்.

இந்தக் கிறிஸ்மஸ் விழாவில் குழந்தை இயேசுவை வழக்கமான நம் ஆலய வழிபாடுகள் மத்தியிலும், கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மத்தியிலும் மட்டும் அடையாளம் கண்டுகொள்ளாமல், சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோர் நடுவிலும் அடையாளம் கண்டுகொள்ள தேவையான அருளை வேண்டுவோம். தீவனத் தொட்டியில் துணிகளில் பொதிந்து கிடப்பதுதான் உலக மீட்பர். இதை இன்றும் நம்ப முயல்வோம்.

 
மறையுரைச்சிந்தனை  -அருட்திரு ஜோசப் லியோன்
 
மறையுரைச்சிந்தனை  -அருள்பணி மாணிக்கம் , திருச்சி
 

  
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே