Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  ஆறுதலின் பாதை

வழிகாட்டிகளுக்கு

                                 ஆறுதலின் பாதை    (வழிகாட்டிகளுக்கு)
             சிலுவைப் பாதையை விட்டு கீழே இறங்கி வரும் வழியில் ஆறுதலின் கெபியானது அமைக்கப்பட்டுள்ளது. குழந்தையை அடக்கம் செய்ய வாய்ப்பில்லாமல், ஏன் அதற்கு பெயர் கூட வைக்க முடியாமல், பிறப்பதற்கு முன்பே குழந்தையை இழந்த பெற்றோர்களுக்காகவே இக்கெபியானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

தங்கள் குழந்தைக்கு செய்ய முடியாமல் போன காரியங்களை அவர்களுக்காகப் பெற்றோர்கள் இவ்விடத்தில் நிறைவேற்றலாம். சாவின் ஆதிக்கத்தால் வன்மையாகப் பாதிக்கப்படும் இவ்வுலகில் ஆறுதல் மற்றும் நம்பிக்கைத் தரும் இடங்களை கடவுள் எழுப்புவார் என்பதை இக்கெபி மூலம் அவர் நமக்கு நினைவுட்டுகிறார். வாழ்வானது அது தொடங்கும் இடமான தாயின் கருவறையிலேயே அச்சுறுத்தப்பட்டாலும், வாழ்வோரின் கடவுள் வாழ்வினை வெற்றி கொள்ள சாவினை ஒருபோதும் விடுவதில்லை.

இங்கு நடைபெறும் வழிபாடுகளில் பங்கு பெற்று செபிப்பதற்கும், மகதலா மரியாவின் கண்ணீரிலிருந்து அன்னை மரியாவின் நம்பிக்கைக்கு கடந்து செல்வதற்கும் இக்குகைக்கு ஒருவர் நேரிடையாகவே செல்லலாம். 'என் ஆன்மா" என்னும் மரியாவின் பாடலில் (
Magnificat) பாடலில் பொதிந்துள்ள அவரது நம்பிக்கை நம் உள்ளங்களில் ஒலிக்க, பெற்றோர்களின் பயணம் நம் இதயத்தை தொடுகிறது.

முதல் நிலை: முடி சூடிய கன்னி மரியாவின் சுரூபத்தருகில்
'ஆண்டவர் எனக்கு அரும் பெரும் செயல்கள் பல செய்துள்ளார்" என்ற 2017 ஆம் ஆண்டிற்கான பொதுக் கருத்தானது மரியன்னையின் பாடலுக்கு திரும்புமாறு நம்மை அழைக்கின்றது. இது ஆண்டவரின் ஏழையின் பாடல், தன்னையே தாழ்த்தி, அமைதியாக ஒரு பெண்ணின் வயிற்றில் சிறிய கருவாக உருவான, தந்தையின் நிலையான வார்த்தையானவராகிய இறைமகனின் பாடல். பின்னர் அவரே அன்பே உருவாகி சிலுவை மரத்தில் அமைதியாக தொங்குகிறார்.

ஒரு சில தாய்மார்கள் தங்கள் வயிற்றில் கருவான குழந்தையை இழந்ததால் உண்டான வலியை வாழ்ந்திருக்கிறார்கள். அவ்விழப்பு அவர்கள் விருப்பம் இல்லாமலும் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அவர்களுக்குத் தெரிந்தே நடந்திருக்கலாம். எப்படி இருப்பினும், நாம் நேசிக்கும் ஒருவரை இழக்கும்போது, அதனால் ஏற்படும் வலியின் தாக்கத்தை நாம் அனைவரும் அறிவோம். சந்திக்கும் ஒரு மனிதரை வெறுப்பாகப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், நாம் ஒவ்வொருவருமே சாவுக்குரிய செய்கைகளில் உடன் பங்காளிகளாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. இதோ நாம் செல்லவிருக்கும் பாதை ஆறுதலின் பாதையாகவும், ஏன் புதிய வாழ்வினை ஈன்றெடுக்கும் பாதையாகவும் அமையும் என்று நம்புகிறோம்.

இங்கே இரண்டு மரியாக்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள். ஒருவர், பெரும் பாவியாக இருந்து இயேசுவால் மன்னிக்கப்பட்ட மகதலா மரியா. மற்றொருவர், நமக்குத் தாயாக இயேசுவால் தரப்பட்ட அமல உற்பவியான அன்னை மரியா. புதுப் பிறப்பினைத் தரும் இப்பாதையில் பயணித்து பயன்பெற நமது வழிகாட்டிகள் நம்மோடு வழி நடக்கவும் அவர்கள் நம்மை வழிநடத்தவும் நம்மையே நாம் தயாராக்குவோம்.

வாழ்வின் பாதை
இவ்வழியாகச் செல்வோரே, உங்கள் செவிகளைச் சற்றுத் திறந்து வையுங்கள். உங்கள் இதயத்திற்குள்ளாகச் செல்லுங்கள். ஒருவேளை உங்களுக்கு நெருக்கமானவர்களில், உங்கள் குடும்பத்தில், அல்லது உங்கள் சொந்த வாழ்வில் பிறப்பதற்கு முன்பே கடவுளிடம் திரும்பிச் சென்ற குழந்தை இருக்கலாம். இதோ அக்குழந்தை உங்களுக்காகக் காத்திருக்கிறது.

'உம் வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே" (லூக் 1:42)
(செபம்: 'அருள் நிறைந்த மரியே வாழ்க...")
(அமைதியாக குகையின் முன் பகுதியை நோக்கி நடக்க ஆரம்பிக்கவும்)

2ஆம் நிலை: குகையின் முன் பகுதியில்
"அம்மா, ஏன் அழுகிறீர்? யாரைத் தேடுகிறீர்?" (யோவா 20:15)
இவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை நீங்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். மற்றவர்களைப் பொருத்தவரையில் உங்கள் குழந்தை உயிரோடு இல்லை. அவ்வளவுதான். ஆனால் உங்களைப் பொருத்தவரையில், அக்குழந்தையை நீங்கள் அறிவீர்கள். அதனை மறக்க முடியாமல் இன்னும் அழுது கொண்டு இருக்கிறீர்கள்.
"ஆண்டவர் தன் அன்பை நினைவு கூர்கிறார்" (மரியாவின் பாடல்)

இதோ, அன்னை மரியா நம்மை ஒன்றிணைக்கிறார்..... ஒரு சிறு குழந்தையின் இதயத்தை, ஒரு விசுவாசியின் இதயத்தை நம்மில் உருவாக்குவதற்காக நம் வாழ்வின் நொறுங்குண்ட தருணங்களில் காத்திருக்கிறார். லூர்து நகரில் இளமையாகவும், அவரைப் போலவே எளிமையாகவும் இருந்த பெர்னதெத் என்னும் சிறுமியைக் கண்டறிகிறார். அவர் நம்மையும் தேடுகிறார். நமக்குள்ளே மறைந்திருக்கும் சிறு குழந்தையை அவர் கண்டறிவாரா?

அன்னை மரியா எப்பொழுதும் ஈன்றெடுக்கும் தாயாகவே இருக்கிறார். அவருக்கென உருவாக்கப்பட்ட கொடையான இறைமகனின் வாழ்வை தனது விசுவாசத்தினால் பெறுகிறார், அதனை இயேசுவின் சீடர்களுக்கும் கொடுக்கிறார் (யோவா 19:25-27, 30).

இங்கே லூர்து நகரில் பெர்னதெத் தோண்டிய சேற்றிலிருந்து வாழ்வின் நீரோடை ஊற்றெடுக்கிறது. நாம் அஞ்ச வேண்டாம். தயாராக இருப்போம். கடவுள் அவரையே நமக்குத் தருவதை எதுவும், ஏன் மரணம் கூட தடுக்க முடியாது.
சகதியும் சேரும் பாவிகளான நம் ஆன்மாவை அழுக்காக்கினாலும் கூட, அன்னை மரியாவோடும் பெர்னதெத்தோடும் இணைந்து வாழ்வோரின் இறைவனில் நமது நம்பிக்கையை வைக்க கற்றுக் கொள்வோம்.

'உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது. திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன்" (எரே 31:20)
கெபியை நோக்கி நடந்து செல்லுங்கள். அங்கே கடவுளின் அன்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்களால் முடிந்த அளவு உங்களின் இதயத்தின் ஆழத்திற்குள் இறங்கிச் செல்லுங்கள். அங்கேதான் நெடுங்காலமாக உங்களது சிறு குழந்தை மறைக்கப்பட்டுள்ளது. அங்கேதான் உங்களோடும் கடவுளோடும் உங்கள் குழந்தை வாழ ஆசைப்படுகிறது.
'என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகைக் கொள்கின்றது"
(மரியாவின் பாடல் - லூக் 1:47)
(அமைதியாக ஆறுதலின் கெபியை நோக்கிச் செல்வோம்)

மூன்றாம் நிலை: ஆறுதலின் கெபியில்
ஆறுதலின் கெபியானது: குழந்தையை அடக்கம் செய்ய வாய்ப்பில்லாமல், ஏன் அதற்கு பெயர் கூட வைக்க முடியாமல், பிறப்பதற்கு முன்பே குழந்தையை இழந்த பெற்றோர்களுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் குழந்தைக்கு செய்ய முடியாமல் போன அக்காரியங்களை அவர்களுக்காகப் பெற்றோர்கள் இவ்விடத்தில் நிறைவேற்றலாம். சாவின் ஆதிக்கத்தால் வன்மையாகப் பாதிக்கப்படும் இவ்வுலகில் ஆறுதல் மற்றும் நம்பிக்கை தரும் இடங்களை கடவுள் எழுப்பவார் என்பதை இக்கெபியின் மூலம் அவர் நமக்கு நினைவுட்டுகிறார். வாழ்வானது அது தொடங்கும் இடமான தாயின் கருவறையிலேயே அச்சுறுத்தப்பட்டாலும், வாழ்வோரின் கடவுள் வாழ்வினை வெற்றி கொள்ள சாவினை ஒருபோதும் விடுவதில்லை.

பெர்னதெத் காற்றின் இரைச்சலைப் போன்ற சத்தத்தைக் கேட்டு சிலுவை அடையாளம் வரைந்தார். சிலுவை என்பது வாழ்வின் அடையாளம்.

அது சாவின் அடையாளம் அல்ல. அது நமக்குக் கொடையாகவும் கைமாறாகவும் தரப்பட்ட அன்பின் அடையாளம்.

இன்னும் சொல்ல வேண்டுமெனில், அது சாவினும் வலிமையான அன்பின் அடையாளம்.

காட்சிகளின் தொடக்கத்தில் பெர்னதெத் செய்ததைப் போலவே, அழகிய சிலுவை அடையாளத்தை வரைவோம்.

துன்புறுத்துவதற்கும் கொல்வதற்கும் கருவியாக பயன்படுத்தப்பட்ட சிலுவை, அன்பின் ஆற்றலால் வன்முறையை வெற்றி கொள்ளும் வாழ்வின் அடையாளமாக மாறியுள்ளது.


தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்!

'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள் உங்களுக்கு நான் இறைப்பாறுதல் தருவேன்" (மத் 11:28-30).

'இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்" (மத் 18:14)

இச்சிறியவர்கள் எங்கோ வாழ்வதாக நீங்கள் நம்புகிறீர்கள். அவர்கள் கடவுளின் இதயத்தில் வாழ்கிறார்கள். கடவுளில் அவர்கள் காத்திருக்கிறார்கள், உங்களை அழைக்கிறார்கள், உங்களுக்காகச் செபிக்கிறார்கள்.

"இருளிலும் இறப்பின் படியிலும் இருப்போர்க்கு ஒளி தர..." (சக்கரியாவின் பாடல் - லூக் 1:78)

'வாழ்வின் நற்செய்தி" (எண் 99) என்னும் கடிதத்தில் புனித இரண்டாம் யோன் பால் இவ்வாறு எழுதுகிறார்: 'கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களுக்கு நான் இப்பொழுது சிறப்பாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பல்வேறு காரணிகள் நீங்கள் அவ்வாறு முடிவெடுப்பதற்கு உங்களைத் தூண்டியிருக்கலாம் என்பதை திருச்சபை நன்கறியும். பல தருணங்களில் அம்முடிவு மிகுந்த மனவேதனையோடும் வலியோடும் எடுக்கப்பட்டது என்பதையும் திருச்சபை மறுப்பதற்கில்லை. அதனால் உங்கள் இதயங்களில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகாமல் இருக்கலாம். நீங்கள் செய்தது அன்று மட்டுமல்ல, இன்றும் மிகப் பெரிய தவறாகவே இருக்கிறது. ஆனால் விரக்தி கொள்ளாதீர்கள். நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். மாறாக என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளவும் அதனை நேர்மையோடு எதிர்கொள்ளவும் முயற்சி செய்யுங்கள். இதுவரை அவ்வாறு நீங்கள் முயற்சி செய்யாமலிருந்தால், தாழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் மனமாற்றத்திற்கு உங்களைக் கையளியுங்கள். ஒப்புரவு அருள்சாதனத்தின் வழியாக இரக்கத்தின் தந்தை உங்களுக்கு மன்னிப்பையும் அமைதியையும் தரத் தயாராக இருக்கிறார். அவரது இரக்கத்தில் உறுதியான நம்பிக்கை வைத்து அதே தந்தையிடத்திலும் உங்கள் குழந்தையை ஒப்படைக்கலாம்."

                 நம்பிக்கையில் நுழைய அழைக்கும் பாடல்:

பல்லவி: மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள்!
                  வாழ்வை மாற்றுங்கள்! உங்களை நேசிக்கும் கடவுளை நம்புங்கள்!

நான் உலகைத் தீர்ப்பிட வரவில்லை. அதனை மீட்கவே வந்துள்ளேன் - பல்லவி

நோயற்றவர்களுக்காகவும் நேர்மையாளர்களுக்காகவும் வரவில்லை.
  நோயுற்றவர்களுக்காகவும் பாவிகளுக்காகவுமே வந்துள்ளேன் - பல்லவி

நானே நல்ல ஆயன் என்கிறார் ஆண்டவர். தொலைந்து போன ஆட்டைத்
   தேடுகிறேன்.

முதல் கெபியில் மகதலா மரியாவோடு
எருசலேம் வீதிகளில் தொடங்கி கல்வாரி மலைவரை இயேசுவோடு சென்ற பெண்களில் மகதலா மரியாவும் ஒருவர். யூத மறைநூல் அறிஞரின் வீட்டில் இயேசு உணவருந்திய போது அவரது பாதங்களில் தன்னை சரணாகதியாக்கியவர். நம்பிக்கையின் பாதையில் செல்ல அவர் நம்மை பயிற்றுவிக்கிறார்.

நற்செய்தி வாசகம் (லூக் 7:36-50)

பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுது கொண்டே நின்றார். அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, 'இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

இயேசு அவரைப் பார்த்து, 'சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்ல வேண்டும்" என்றார். அதற்கு அவர், 'போதகரே, சொல்லும்" என்றார். அப்பொழுது அவர், 'கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?" என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, 'அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்" என்றார். இயேசு அவரிடம், 'நீர் சொன்னது சரியே" என்றார்.

பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், 'இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை. இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார். பின்பு அப்பெண்ணைப் பார்த்து, 'உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார். 'பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, 'உமது நம்பிக்கை உம்மை மீட்டது. அமைதியுடன் செல்க" என்றார்.

'நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார்" (லூக் 7:47)

                                           அன்பு உங்களில் வளர்வதாக!
                                   சாவையும் கடந்த வாழ்வைத் தருகிறார்

ஓ மரியே, துன்பப்படுவோரின் ஆறுதலே, எங்களுக்காக மன்றாடும்.
ஆறுதல் கொடுப்பவர்களாக (தேற்றுகிறவர்களாக) எங்களை உருவாக்கும்.
மீட்பரின் கரங்களில் நம்மை நம்பிக்கையோடு கையளித்து, மீண்டும் அருளினுள் மூழ்குகிறோம். நம்முடைய துன்ப துயரங்களிலிருந்தும் பாவச் சேற்றிலிருந்தும் நம்மை விடுவிக்கிறார். மன்னிப்பின் ஊற்றில் நம்மைக் கழுவ விரும்புகிறார். இத்தண்ணீர் அதன் அடையாளமாகத் திகழ்கிறது.

புதுப் பிறப்பளிக்கும் அருளினுள் பெர்னதெத்தோடு இணைந்து நம்மை மூழ்கச் செய்யும் தண்ணீரைப் பயன்படுத்தி ஒரு செயலை செய்ய நாம் இப்பொழுது அழைக்கப்படவிருக்கிறோம். இறதிவரை நிலைத்து நிற்கும் அன்பின் அடையாளமான சிலுவை அடையாளத்தை வரைவோம்.
 
எல்லாம் வல்ல ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் நீர் எங்களை கிறிஸ்துவினால் ஆசீர்வதித்துள்ளீர். எங்கள் மீட்பின் உயிருள்ள தண்ணீராம் அவர் வழியாக எங்களைப் புதுப்படைப்பாக்கியுள்ளீர். தூய ஆவியாரின் வழியாக நாங்கள் மீண்டும் இளமைத் துடிப்பை கண்டறிவோமாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக புது வாழ்விற்கு முன்னேறிச் செல்வோமாக. ஆமென்.

(நீரினால் நாம் செய்யவிருக்கும் அடையாளச் செயலின் போது, பெர்னதெத் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்வோம். விரும்பினால், பங்கெடுக்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப  அல்லேலூயாவை வசனங்களுக்கு இடையே பாடலாம்)

மரியாவின் குடும்பத்தில் நுழைவதற்கும், கடவுளின் குழந்தைகளாகவும் இயேசுவின் சகோதரர்களாகவும் மாறுவதற்கும் பெர்னதெத்தின் செபத்தோடு நம்மை ஒன்றிப்போம். நெவரில் உள்ள புனித கில்டார்டு கன்னியர் மடத்தின் பொதிந்துள்ள அன்றாட வாழ்வின் எளிமையான விசுவாசம் நம்மை முற்றிலும் ஆட்கொள்ளுமாறு நம்மைக் கையளிப்போம்.

 பெர்னதெத் எழுதிய கையேட்டில் (புத்தகத்தில்;) காணப்படும் முதல் வரிகளை வாசிப்போம்:
என்னை பார்க்கிறவர் இனி ஒருபோதும் என்னைக் காண்பதில்லை. இந்நொடிப் பொழுதிலிருந்து நான் எனக்குரியவள் அல்ல, கடவுளுக்கு, கடவுளுக்கு மட்டுமே உரியவள்.
(அமைதி அல்லது அல்லேலூயா)

அன்பு செய்யாமல் கடந்து போகும் ஒரு நொடிப்பொழுதில் கூட நான் உயிர் வாழ மாட்டேன். அன்பு செய்கிறவர் எவ்வித வலியும்; இல்லாமல் அனைத்தையும் செய்கிறார், இன்னும் சொல்ல வேண்டுமெனில், அவர் துன்பத்தை நேசிக்கிறார்.
(அமைதி அல்லது அல்லேலூயா)

ஓ என் இயேசுவே, நான் உம்மைப் பின்பற்றவும் கண்டுபாவிக்கவும் விரும்புகிறேன். உம்மைப் பிரிந்து இவ்வுலகில் உள்ள அழகிய பொருட்களில் மகிழ்ச்சி காண்பதைவிட, உம்மோடு சிலுவையில் நான் அறையப்படுவேனாக.
(அமைதி அல்லது அல்லேலூயா)

நான் ஒன்றுமில்லாதவள். இந்த ஒன்றுமில்லாமையிலிருந்துதான் கிறிஸ்து மிகப் பெரியதொரு காரியத்தைச் செய்துள்ளார். ஆம், நற்கருணையின் வாயிலாக நான் கடவுளின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறேன். இயேசு எனக்கு அவரது இதயத்தைத் தருகிறார். எனவே இயேசுவின் இதயத்தோடு இதயமாகவும். அவரின் மணவாட்டியாகவும், அவரின் நண்பனாகவும் மாறியுள்ளேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நான் மற்றொரு கிறிஸ்துவாக உள்ளேன். அப்படியானால் நான் இயேசுவில், இயேசுவால் வாழ வேண்டும், இறுதியில் இயேசுவாகவே வாழ வேண்டும். நமது இலட்சியம் மிகவும் மேன்மையானது (மேலானது)!
(அமைதி அல்லது அல்லேலூயா)

பின்னர் நான் என் கண்களை உயர்த்தினேன். இயேசுவை மட்டுமே பார்த்தேன்!
இயேசுவை மட்டுமே என் குறிக்கோளாக,
இயேசுவை மட்டுமே என் தலைவராக,
இயேசுவை மட்டுமே என் மாதிரியாக, (எடுத்துக்காட்டாக,)
இயேசுவை மட்டுமே என் வழிகாட்டியாக,
இயேசுவை மட்டுமே என் மகிழ்ச்சியாக,
இயேசுவை மட்டுமே என் செல்வமாக,
இயேசுவை மட்டுமே என் நண்பராகப் பார்த்தேன்!
(அமைதி அல்லது அல்லேலூயா)

இரண்டாவது கெபியில்: இயேசுவின் தாயான மரியாவோடு
பாவியாக இருந்து மன்னிக்கப்பட்ட மகதலா மரியா, முன்னர் குழந்தை இயேசுவைத் தூக்கிச் சுமந்தவரும், இப்பொழுது இறந்த இயேசுவின் உடலைப் பெற்றுக் கொண்டு சிலுவையடியில் நின்று கொண்டிருக்கும் அன்னை மரியாவிடம் நம்மை நடத்திச் செல்கிறார். இது தலை கீழான உலகம். உலகில் மீண்டும் இருள் பரவியிருக்கிறது. சாவு வெற்றிப் பெற்றதைப் போன்று தோன்றுகிறது. ஆனால் மரியா வாழ்வைப் பெற்றுக் கொண்டவராக, அதைத் தாங்கியவராக நிற்கிறார். சிலுவையடியிலும்கூட அவரே பிறப்பிக்கச் செய்கிறார். முகவரியற்ற சீடரிடத்தில் இயேசு தம் தாயை ஒப்படைக்கிறார். அச்சீடர் தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்த நிலையில் இயேசுவின் குடும்பமாகத் திகழும் திருச்சபைக்குள்ளும் இருக்கிறார்.

"அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்.
  அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை"(திபா 34:5).

இயேசுவே, மீட்பரே, உமது அன்பின் ஆற்றலாலும் சிலுவைத் தியாகத்தாலும் என்னைக் கண்ணோக்கும், என்னை உயர்த்தும், என்னை மன்னியும்.

"...நம்முடைய கால்களை அமைதியின் வழியில் நடக்கச் செய்யவும்...."
       (சக்கரியாவின் பாடல் - லூக் 1:78-79)

நற்செய்தி வாசகம் (யோவா 19:26-27)
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், 'இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

2017 ஆம் ஆண்டிற்கான கருத்துப் (கொள்கைப்) பாடல்
பல்லவி: ஆண்டவர் எனக்கு அரும் பெரும் செயல்கள் பல செய்துள்ளார். அவரது
                  நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. ஆண்டவர் எனக்கு அரும் பெரும் செயல்கள்
                   பல செய்துள்ளார்.
1. ஓ மரியே, இயேசுவின் தாயே, எம்மை வரவேற்கும் முகமே
     ஓ மரியே, இயேசுவின் தாயே, கடவுளின் புன்னகையே
     ஓ மரியே, இயேசுவின் தாயே, வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே
     இயேசுவின் தாயே, ஏழைகளின் பொக்கிஷமே,
     உம்மோடு (சேர்ந்து) நாங்கள் பாடுகிறோம் - பல்லவி

2. ஓ மரியே, இயேசுவின் தாயே, பாவிகளின் அடைக்கலமே
    ஓ மரியே, இயேசுவின் தாயே, நொறுங்கிய நெஞ்சங்களின் தேற்றரவே
    ஓ மரியே, துன்புறுவோரின் ஆறுதலே
     இயேசுவின் தாயே, எங்கள் மகிழ்ச்சியின் காரணமே
     உம்மோடு (சேர்ந்து) நாங்கள் பாடுகிறோம்.

இதோ இங்கிருக்கும் நாம் களைப்பின் வெறுமையிலும், ஏழ்மை, அவநம்பிக்கையின் மத்தியிலும், அருளாலும், புதுப்பணியாலும், ஆறுதலாலும் நிறைக்கப்பட்டு இருக்கிறோம். இவ்வருளின் நிறைவை உலகினரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மரியாவின் மீதும் தொடக்கத் திருச்சபையின் மீதும் நிழலிட்ட வாழ்வின் ஆவியானர் நம்மையும் ஆட்கொண்டுள்ளார்.

இறைவார்த்தை: 2கொரி 1:3-7
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று, அவரைப் போற்றுவோம். கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது. கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார். அதுபோல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம். ஆகவே நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தாராளமனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது. நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்கு பெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.

சாவாம் இரவின் இறுதியில் உயிர்ப்பின் மாட்சிமை ஒளி வீசுகிறது. இயேசுவின் சாவு அன்பின் சாவு என்பதையும், அன்பு சாவினை வென்றுவிட்டது என்பதையும் இயேசுவின் தந்தையான கடவுள் நமக்கு உறுதி செய்ய வருகிறார். இதோ உயிர்ப்பின் விடியல், புதிய நாளின் உதயம். இப்புதிய நாளுக்கு முடிவு என்பதே இல்லை.

உயிர்த்த ஆண்டவரின் உருவத்திற்கு அருகில் நாம் மெழுகு வர்த்திகள் ஏற்றி வைக்கிறோம். இவ்வாறு மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் பெர்னதெத்தோடு நம்மை மீட்டுள்ள ஒளியை ஏந்திச் செல்பவர்களாகவும், அவ்வொளிக்கு சாட்சிகளாகவும் மாறுகிறோம்.

ஒளியாம் கிறிஸ்துவுக்குப் பாடல்

பல்லவி: கிறிஸ்துவின் ஒளி, அல்லேலூயா, ஆமென்!
1. நானே உலகின் ஒளி. என்னைப் பின்செல்பவன் மீட்கப்படுவான்
2. கிறிஸ்துவின் நீங்கள் ஒளியாய் மாறியுள்ளீர்கள் ஒளியின் மக்களாக நடங்கள்
3. நம் இதய ஒளியான இயேசுவின் வார்த்தைகளால்  கிறிஸ்துவில் நமது
    நம்பிக்கையை நிலைநிறுத்துவோம்.

நீரும் ஒளியும் லூர்து நகரின் இரு அழகிய அடையாளங்கள் ஆகும்;. இவைகளை அன்னை மரியா கெபியின் பாறைக்குள்ளே நமக்குத் தருகிறார். கிறிஸ்துவே பாறை. இப்பாறையின் மீது நமது சிற்றாலயத்தை, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இரக்கத்தின் களஞ்சியான குட்டித் திருச்சபையை நம்பிக்கையோடு கட்டியெழுப்புவோம்.

இப்புனித தலத்தில் பெர்னதெத்துக்கு காற்றின் இரச்சலைப் போன்ற ஒலி அன்னை மரியாவின் காட்சிகளை அறிவித்தது. அக்காற்றின் ஒலியால் வழி நடத்தப்பட்டு இவ்வடையாளங்களை மீண்டும் உருவாக்குவோம். நாம் ஒப்புரவு அருட்சாதனத்தை அணுகி, நமக்கு வாழ்விற்கான வழியைத் திறந்து வைக்கும் மன்னிப்பைப் பெறுவதற்கு இரக்கத்தின் தூதுவரான குருவானவரைக் கண்டறிவோம்.

'பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். இதோ என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன" (எசா 49:15-16).

நீங்கள் ஒரு குழந்தையை இழந்திருந்தால், எப்பொழுது உங்கள் இதயம் தயாராக இருக்கிறதோ, அப்பொழுது அக்குழந்தையின் பெயரை நீங்கள் வாழ்வின் புத்தகத்தில் எழுதலாம்.

'குழந்தாய், நீ உன்னதக் கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்" (சக்கரியாவின் பாடல் (லூக் 1:76-77)

அன்னை மரியாவின் நன்றிக் கீதத்தை, நம்பிக்கையின் கீதத்தைப் பாடுவோம்

பல்லவி: என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது.
1. என் ஆன்மா கடவுளின் பெருமையை அறிக்கையிடுகின்றது. என் உள்ளம் என் 
     மீட்பராம் கடவுளில் பேருவகை கொள்கின்றது - பல்லவி

2. அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் 
     தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர் - பல்லவி

3. வல்லவராம் கடவுள் எனக்கு அரும் பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர்
    என்பதே அவரது பெயர் - பல்லவி

4. அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம்
    காட்டி வருகிறார் - பல்லவி


 
 
 

வழியிழந்து வருந்துவோரைத் தேற்றும் அன்னையே !
வாழ்க்கைப் பயணம் போகும்போது துணையாய் நின்றவளே!