Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருக்குடும்ப மன்றாட்டு

  திருக்குடும்பத்தை நோக்கிச் செபம்  
                                  
இயேசுவின் திருஇருதயமே!
அமலோற்பவ கன்னிமாதாவின் திருஇருதயமே!
ஓ! மிகுந்த மகிமைப் பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே!
உங்கள் அடைக்கலமாக ஓடி வந்து உங்கள் உபகார சகாயங்களை இறந்து மன்றாடிக் கேட்ட எவனும் அந்த மன்றாட்டுக்களை அடையாமற் போனதில்லையென்று நினைத்தருளுங்கள். இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு என் பாவச்சுமையோடே உங்கள் பாத சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்திக்கிறேன்.

இரக்கமுள்ள இயேசுவின் திருஇருதயமே!
அமலோற்பவ கன்னி மாதாவின் திருஇருதயமே!
ஓ! மகிமைப்பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே!
அடியேனுடைய மன்றாட்டுக்களை புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளுங்கள், ஆமென்!
======================================================================================
திருக்குடும்ப மன்றாட்டு மாலை:

ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய்க் கேட்டருளும்

விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா, - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

உலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

தூய ஆவியாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

அவதரித்த தேவ வார்த்தையின் திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மண்ணுலகில் அதி புனித திருத்துவத்தின் பாவனையாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரம தேவபிதா அத்தியந்த பிரியத்துடனே நேசித்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அனைத்து அருளாலும் நிறைந்து அலங்கரிக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எல்லாப் புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான திருக்குடும்பமே, எல்லா இருதயங்களின் நேசத்துக்கும் பாத்திரமான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விண்ணுலகிற்குத் தேர்ந்தெக்கப்பட்டவரின் ஞானக் கருவூலமாகிய திருக்குடும்பமே, விண்ணுலகின் பேரின்பமாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அனைத்து வானதூதர்களாலும் வணங்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனிதர்களால் நிந்திகரிக்கப்பட்டிருந்தாலும் தேவ சமூகத்தில் உன்னத மாட்சிமை பொருந்திய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பெத்லகேம் ஊரார்களால் புரக்கணிக்கப்பட்டு ஒரு மாட்டுக் கொட்டிலில் ஒடுங்கிப்போக அவசரப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய இரட்சகர் பிறந்த சமயத்தில் இடையர்களால் சந்திக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிறந்த திவ்விய குழுந்தைக்குத் தோத்திரமாக வானதூதர்கள் இசைத்த கீதங்களைக் கேட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மூன்று அறிஞர்களால் வணங்கிப் பாதகாணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆலயத்தில் திவ்விய பாலனை ஏந்தின சிமியோன் அவரைக் குறித்துச் சொல்லிய துதிகளையும் இறைவாக்குகளையும் கேட்டு மகிழ்ச்சியும் துயரமும் கொண்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எண்ணிறந்த ஆபத்துக்குள்ளே எகிப்து தேசத்துக்கு ஓடிப்போக கட்டளையிட்ட வானதூதரின் வாக்குக்கு தாமதமின்றி கீழ்ப்படிந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஏரோது அரசனின் கொடுமைக்குத் தப்பித்துக் கொள்ள அத்தேசத்துக்கு கட்டாயப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அந்நிய தேசத்தில் பரதேசியான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மண்ணுலகம் அறிந்து கொள்ளாமல் மறைந்த தன்மையாய் வாழ்ந்து வந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஏழ்மையும் உழைப்பும் தவமுமுள்ள சீவியமாய் சீவித்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நெற்றி வியர்வை நிலத்தில் விழ, அன்றாட உணவைத் தேடிகொண்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மண்ணுலக வறுமையும் விண்ணுலக நன்மையும் மிகுதியும் கொண்டிருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிறர்சிநேகத்துக்கும் சமாதான ஒற்றுமைக்கும் மாதிரிகையான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நினைவிலும் மனப்பற்றுதலினாலும் முழுவதும் விண்ணுலகில் சஞ்சரித்திருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது ஆயுள் முழுமையும் இடைவிடாது செபமும் ஞானயோகமுமாயிருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலும் உம்மை மன்றாடுகிறவர்களின் நம்பிக்கையும் எல்லாக் கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்குச் சுகிர்த மாதிரிகையுமாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். இயேசுவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.

செபிப்போமாக:
இறைவா, திருக்குடும்பத்தின் சிறப்புமிக்க முன்மாதிரியை எங்களுக்கு அளித்தீரே, எம்மீது இரங்கி, இல்லறத்தின் புண்ணியங்களிலும் அன்பின் உறவுகளிலும் அக்குடும்பத்தை நாங்கள் பின்பற்றி, உமது முடிவற்ற சம்பாவனையைப் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்!

 
திருக்குடும்ப விழ

திருப்பலி முன்னுரை

'இல்லங்கள் இறைவனால் கட்டியெழுப்பப்பட்ட ஆலயங்கள்' என்று குடும்ப உறவை உயர்வுபடுத்த இன்றைய ஞாயிறு திருப்பலி அழைக்கிறது. 'ஆண்டவரே! உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்'. நமது இல்லங்கள் ஆண்டவரின் இல்லமாகவும் நமது குடும்பங்கள் இயேசு வாழ்ந்த திருக்குடும்பமாகவும் அமைய இறைவன் விரும்புகிறார்.

'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்றான் ஒரு கவிஞன். பல்கலைக்கழகம் அறிவின் வாயில். இல்லங்கள் அன்பின் வாயில். ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் கற்றுக்கொள்வது போல குடும்பத்தில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒன்றைக் கற்றுக் கொள்ள முடியும்.

'மனிதன் தனிமையாயிருப்பது நல்லதன்று' என்று ஆதாமுக்குத் துணையைத் தந்தார். இப்பூமியில் இருமனங்கள் திருமணம் என்னும் திருவருட்சாதனத்தால் இணைக்கப்பட்டு திருக்குடும்பங்களாக உருவாக்கப்படுகின்றது.

குடும்பத்தில் இன்பத்திலும் துன்பத்திலும் உறுதுணையாய் இருப்பேன் என்று கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் வாக்கு கொடுக்கும்போது தான் குடும்பம் திருக்குடும்பமாகிறது.

உள்ளார்ந்த அன்பு, புரிந்து கொள்ளுதல், நம்பிக்கை இம்மூன்றும் குடும்பத்தை கட்டி எழுப்பினால் குன்றின் மேலிட்ட விளக்காக பிறர் அறிய குடும்பம் பிரகாசிக்கும்.

'அன்பு சிறுத்தால் தவறுகள் பெரியனவாகத் தோன்றும்.
தவறு செய்யாத மனிதன் இல்லை; திருத்த இயலாத தவறுகளும் இல்லை'

குடும்பத்தில் எழும் சிறு தவறுகளை மன்னித்து மன்னித்ததையும் மறந்து வாழும் போது குடும்பங்களில் மகிழ்ச்சி மேலோங்கியிருக்கும்.

இன்றைய நற்செய்தி நம்மை நல்ல பெற்றோராக செயல்பட அழைக்கிறது. உலக நாட்டங்களில் தொலைத்து கொண்டிருக்கும் நம் பிள்ளைகளை இறைவனிடம் அழைத்து வர வேண்டிய கடமை பெற்றோருக்கே உண்டு. இல்லம் ஒரு குட்டித் திருச்சபை என்றே இயேசு பாவிக்கிறார். இல்லங்கள் இறைவனில் வளர்ந்தால்தான் திருச்சபையை வளர்க்க முடியும் என்பதை மனதிற் கொள்வோம். இச்சிந்தனைகளோடு இப்பலியில் நம் குடும்பங்களை இறைவனிடத்தில் ஒப்புக்கொடுத்து இறைவனிடம் வேண்டுவோம்.

மன்றாட்டுகள்

1. திருச்சபையின் தலைவரே!

எம் தாயாம் திருச்சபை எனும் திருக்குடும்பத்தை வழிநடத்தி வரும் திருச்சபைத் தலைவர்கள், பணியாளர்கள் ஒரே குடும்ப உறுப்பினர்களாய் அன்பில் இணைந்து, இறைப்பணியே இனிதே செய்திட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

2. தந்தையின் திருவுளத்திற்கு தம்மை அர்ப்பணித்தவரே!

எம் தாய் நாட்டை ஆளும் தலைவர்கள், நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு, இயற்கையோடு இணைந்து, இயற்கை வளங்களை சிதைக்காது, வளமான பாதையில் மக்களை வழிநடத்த வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

3. பாலனாய் பிறந்து திருக்குடும்பத்தை ஏற்படுத்தியவரே!

எம் குடும்பங்களை ஆசீர்வதியும், குடும்பங்களில் அன்பு, சமாதானம், சந்தோசம் பெருகவும், நம்பிக்கையின்மையால் பிரிந்து கிடக்கும் குடும்பங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து உம் கருணையால் ஒரே குடும்பமாய், திருக்குடும்பமாய் வாழும் வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

4. பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியுங்கள் என்று அறிவுறுத்துபவரே எம் இறைவா!

எம் பிள்ளைகள் பெற்றோரை மதித்து, அவர்கள் சொற்படி கேட்பவர்களாகவும் ஆசிரியர்களையும் மூத்தோரையும் மதிப்பவர்களாகவும் குடும்பங்களில் அன்பைப் பகிர்ந்து, பெற்றோரை முதிர்வயது வரை பேணிக் காக்கும் உள்ளத்தை தர வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
 

                            
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்