துன்பத்தில், துயரத்தில், நோயில், இக்கட்டான சூழலில்
கடவுளிடம் கண்ணீர் வடித்து இறைவனிடம் கேட்கும்போது எமக்கு கேட்டது
கிடைக்காவிட்டால், நாம் "கடவுளுக்கு கண்ணில்லை, இருப்பவர்களுக்குத்தான்
கொடுப்பார்" என்றெல்லாம் திட்டித் தீர்க்கின்றோம்.
ஆனால் இறைவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை கீழே வாசியுங்கள்!
இறைவனை முழுமனதுடன் நம்புவீர்கள்!!
எல்லாம் இறைவன் செயல் என்பதை உணருவீர்கள்!!!
பல முறை சோதனைகளை சந்தித்த பக்தன் ஒருவர், கடவுளைத் தேடி ஆலயம்
வந்தார். ஒவ்வொரு நாளும் தானதருமங்கள் செய்வதிலும், பிறருக்கு
நன்மையானதை செய்வதிலும் சலிப்படைய மாட்டார். அறநெறி தவறாத அவரது
வாழ்க்கைப் பாதையில் பல சிரமங்களைச் சந்தித்தார். பொய்க்குற்றங்கள்
சுமத்தப்பட்டார். உடமைகளை இழந்தார். உறவுகளால் பழிக்கப்பட்டார்.
இருப்பினும் இறை விசுவாசத்தை கொஞ்சமும் விடவில்லை. தான் அனுபவித்த
வேதனையை மனதில் அசை போட்டுக்கொண்டே ஆலயவாசலில் படுத்தார்.
மிகுந்த களைப்பினால் தூங்கிவிட்டார். அப்போது கனவில் கடவுளை
காண்கிறார். தன் மனதில் தேக்கி வைத்திருந்த எண்ணங்களை எல்லாம்
கேள்விக் கணையாக்கி, கடவுளிடம் உரையாடு கின்றார். கடவுளும் தன்
பக்தனின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டே இருந்தார்.
"ஆண்டவரே ஏன் இப்படி? என்னை
பலவீனப்படுத்தி விட்டீர்?"
"நீ என் பலத்தைச் சார்ந்து வாழப் பழகிக் கொள்வதற்காக"
"எனக்கு ஆதரவானவர்களை ஏன் அப்புறப்படுத்தினீர்?"
" நிலையற்ற மனிதர்களை சார்ந்து வாழ்வது சரியல்ல
என்பதால்"
" குழப்பமான சூழ்நிலைகளை ஏன் எனக்கு அனுமதித்தீர்?"
"தெளிவான முடிவுகளை எடுக்கும் பயிற்சியை நீ
பெறுவதற்காக"
" நான் கேட்டதையெல்லாம் நீர் ஏன் தரவில்லை?"
" உனக்கு எது தேவையோ அதை மட்டுமே நான் தர
விரும்புவதால்"
" அநீதியாளர்களை ஏன் எனக்கு எதிராக ஜெயிக்கவிட்டீர்?"
" நீதியினிமித்தம் துன்பப்படுவது அவசியம் என்பதால்"
"விசுவசித்துக் கேட்டவைகளை நீர் அருளவில்லையே -ஏன்?"
"சரியானவைகளை நீ விசுவசித்துப் பழகுவதற்காக"
" மற்றவர்களை மாற்றாமல் என்னையே நீர் மாறச்சொல்கிறீரே?"
"என்னை நேசிக்கிறவர்களைத்தான் நான் மாற்ற
விரும்புகிறேன்"
"அவசியமான சில நன்மைகளை நீர் எனக்குத் தரவில்லையே?"
"மிகத் தேவையானது இல்லாமலும் நீ வாழப் பழகிக் கொள்ள வேண்டும்
என்பதால்"
" எனது நல்லத் திட்டங்களை நீர் தோல்வியடையச் செய்தீரே -
ஏன்?"
"அதைவிட நல்ல திட்டங்களை உனக்காக நான் வைத்திருப்பதால்"
"வேறு சிலருக்கு நீர் அளித்த உயர்வை எனக்கு நீர் தரவில்லையே?"
"அவர்களின் அழைப்பு வேறு, உன் அழைப்பு வேறு என்பதால்"
"நீண்ட காலம் என்னை காக்க வைத்து விட்டீரே?"
"நான் தரும் நன்மைகள் உன்னில் நிலைத்திருக்க அந்த காத்திருப்பு
அவசியம் என்பதால்"
" நான் மட்டும் சிறு தவறு செய்தாலும் தண்டித்து
விடுகிறீரே?"
" என் பிள்ளையிடம் சிறு தவறும் இல்லாத பரிசுத்த வாழ்வை
விரும்புவதால்"
"என்னுடைய பல கேள்விகளுக்கு நீர் பதில் தருவதேயில்லையே?"
" நீ விளக்கங்களைச் சார்ந்தல்ல, விசுவாசத்தைச்
சார்ந்து வாழ்வதற்காக"
"விசுவாசத்தோடு கேட்டதை எல்லாம் தரவில்லையே?"
"உன் விசுவாசத்தைப் பெரிதாக்குவதற்காக"
ஆம், நமது விசுவாசத்தை பெரிதாக்குவதற்காக,
நமக்கு ஏற்படுகின்ற இன்னல் இடையுறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சிறு உதவி எனக்குப் போதும் என்ற எண்ணத்தை
மனதில் எப்போதும் கொண்டிருக்க வேண்டும்.
|
|