Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 புனித வியாளன்.

 
    ஆண்டவருடைய இரவு விருந்து
 
 
புனித வியாளன் - முன்னுரை

தீமையின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, நித்தியத்திற்கும் நிலையான வாழ்வைப் பற்றிக் கொள்வதைக் குறிக்கும் பாஸ்கா விழாவில் பங்கெடுக்க வருகை தந்துள்ள அன்பு இறை குலமே, எம்மை நெறிப்படுத்தி வழி நடத்தும் குருகுலமே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இன்று, பழைய ஏற்பாட்டை புதுப்பித்து புனரமைத்து, புதிய ஏற்பாட்டை உருவாக்குகிறார் இயேசு. அவர் தன்னையே உடைத்து, தனது உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகவும், பானமாகவும் தருவதன் வழியாக, தன் அன்பின் கொடையாக நற்கருணை என்ற திருவருட் சாதனத்தை ஏற்படுத்துகிறார். அதன் வழியாக அவரைப் போல் அடுத்தவரை அன்பு செய்ய அழைக்கிறார்.

தனது மேய்ப்புப் பணியை தொடர்ந்து நிறைவேற்ற, மக்களை பசும்புல் மேய்ச்சலுக்கும், தெளிந்த நீரோடைக்கும் அழைத்துச் செல்ல, அவர்களை மாசற்ற செம்மறிகளாய் மீட்டுருவாக்கம் செய்ய, மீட்புப் பணி தொடர இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தி, குருத்துவத்தில் நம்மைப்போல் சாதாரண மக்களும் பங்கெடுக்க வழி செய்கிறார்.

இயேசுவின் கல்வாரி பாடுகள், நமது வாழ்வுக்கு அடித்தளமாய் அமைய, இன்றைய புனித நிகழ்வு களில் பங்கெடுத்து நமது வாழ்வை புதுப்பிக்க,. இயேசுவின் அன்புச் சட்டத்தை ஆடையாக அணிந்து வாழ இன்றைய திரு நிகழ்வுகளிலும், திருப்பலியிலும் பக்தியுடன் பங்கெடுப்போம்.

ஞானஸ்நானம் ஓர் இறை அழைத்தல், ஞானஸ்நானம் இறைவனின் கொடை, ஞானஸ்நானம் ஓர் அர்ப்பணம். ஞானஸ்நானம் ஓர் ஆன்மீக தியாக வாழ்வு என்பதை உணர்ந்து, நம் திருத்தந்தை ஆயர்கள், நம் பங்குத் தந்தையர் மற்றும் அருட்பணியாளர் அனைவரையும் வாழ்த்தி வணங்குவோம். அவர்களது தியாக வாழ்வை எண்ணி அவர்களைப் போற்றி புகழ்வோம். அவர்களது பணி சிறக்க, நல்ல உடல் நலத்தையும் ஆன்ம பலத்தையும் பெற இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



மன்றாட்டுகள்
உங்கள் பதில் : திவ்ய நற்கருணை நாதரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பணிவிடை பெற அல்ல, பணிவிடை புரியவே வந்தேன் என்று வாழ்ந்துகாட்டிய அன்பு இறைவா, உமது வழியைப் பின்பற்றி, உமது அழைப்பை ஏற்று, பணி விடை புரிய குருத்துவத்தை தேர்ந்தெடுத்த, எம் திருத் தந்தை,ஆயர்கள் மற்றும் அருட்பணியாளர்கள் அனைவரையும், அவர்களை அருட்பணிக்கு அர்ப்பணித்த அவர்தம் பெற்றோரையும் நிறைவாக ஆசீர்வதியும். உம் வார்த்தையின் வழியே பயணித்து, இறைமக்களை அன்பின் வழியிலும், ஆன்மீக ஒளியிலும் வழி நடத்த அவர்களுக்கு வேண்டிய ஆற்றலையும், ஆன்ம பலத்தையும், உள்ள உறுதியையும், நல்ல உடல் நலத்தையும் தந்தருள வேண்டுமென்று நற்கருணைநாதரே உம்மை மன்றாடுகிறோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த இறைவா, எம்மை வழி நடத்தும் எம் தேசத்தலைவர்களை நிறைவாக ஆசீர்வதியும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதிலும் முழுகவனம் செலுத்தி கடமையாற்றவும், தாழ்ச்சி, எளிமை, ஒழுக்கம் ஆகிய நற்பண்புகளை கொண்டவர்களாய், லஞ்ச லாவண்யங்களை தவிர்த்து, மக்கட் பணியாற்ற அவர்களுக்கு வேண்டிய ஆற்றலையும், பொறுப்புணர்வையும் தந்தருள வேண்டுமென்று நற்கருணை நாதரே உம்மை மன்றாடுகிறோம்.

தன் அன்பின் கொடையாக, தன்னையே நற்கருணை வடிவில் வழங்கிய இறைவா, பல கோதுமை மணிகள் அப்பமாகி உணவாக வருவது போல, நாங்கள் பலராயினும் ஒரே உடலாய் உமக்குள் வாழ்கிறோம் என்ற உயர்ந்த எண்ணத்தோடு, நாங்கள் அனைவரும் ஒரு குலம், ஓரினம் என்ற சிந்தனையுடன் வாழ, அருள் தர வேண்டுமென்று நற்கருணை நாதரே உம்மை மன்றாடுகிறோம்.

பழைய ஏற்பாட்டை புதுப்பித்து புனரமைத்து, புதிய ஏற்பாட்டை எமக்காக உருவாக்கிய இறைவா, கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற குடும்ப உறவில் அப்பழுக்கற்ற அன்பை வெளிப்படுத்தவும், அதன் நீட்சியாக அயலாரோடு அன்பைப் பகிர்ந்து, அனுசரித்து வாழ்ந்து, எங்கள் சமுதாயக் கடமைகளை சிறப்புற ஆற்றி, நீர் வகுத்த மீட்பின் பாதையில் உம்மோடு சேர்ந்து பயணிக்க அருள் தர வேண்டுமென்று நற்கருணைநாதரே உம்மைமன்றாடுகிறோம்.



பாதம் கழுவும் சடங்கு முன்னுரை


கருணையும் - கடமையும், பணிவும் - பொறுமையும், எளிமையும் - தாழ்ச்சியும் இருந்தால் தரணியில் தலை சிறந்த தலைவர்களாக உருவாக முடியும் என்பதை இயேசு தனது செயலால் வாழ்ந்து காட்டுகிறார். உயர்ந்தவன் தாழ்ந்தவன், இருப்பவன் இல்லாதவன், படித்தவன் பாமரன் என்ற வேற்றுமைகளைக் களைந்து அனைவரையும் அன்பின் சாயலாக, ஆண்டவரின் வடிவாக ஏற்று வாழ இப்பாதம் கழுவும் திருச்சடங்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது. பணிவிடை பெற அல்ல, பணிவிடை புரியவே வந்தேன் என்பதை இயேசு செயலில் காட்டிய அந்த பணிவான நிகழ்வு வெறும் அடையாளச் சடங்கு அல்ல, மாறாக நம் வாழ்வில் தாழ்ச்சியையும், எளிமையையும் போதிக்கும் பாடம் என்பதை மனதில் நிறுத்தி, இத்திருநிகழ்வில் பங்கெடுப்போம்.





நற்கருணை பவனி முன்னுரை


இயேசு தான் சென்றவிடமெல்லாம் அன்பை விதைத்துக்கொண்டே சென்றார். எண்ணற்ற பல புதுமைகளை புரிந்துகொண்டே சென்றார். மக்களுக்கு பல நன்மைகளை செய்து கொண்டே சென்றார்.

அவர் என்னை தொட மாட்டாரா? அவரது கடைக்கண்பார்வை என்மேல் விழாதா? அவரது ஆடையின் விளிம்பையேனும் தொட மாட்டோமா? என்று அன்று பலர் ஏங்கினர். இன்று இப்போது அதே இயேசு, விண்ணகம் நோக்கிய பயணத்தில், வழிப் பயணக் கொடையான, ஆரோக்கியத் தையும், ஆற்றலையும் வழங்கவல்ல ஆன்ம உணவான அப்ப வடிவில் நம்மைத் தேடி, நம் மத்தியில் பவனியாக வருகிறார்.

வாருங்கள் இறை மக்களே, தன் அன்பின் கொடையாக தன்னையே நற்கருணை வடிவில் வழங்கிய இறைவனை வரவேற்க தயாராவோம். நம்மை நோக்கி வருகின்ற அவரை, அனைவரும் முழந்தாள் பணிந்து, வணங்கி வரவேற்போம். கெத்ஸ்மணி தோட்டத்தில் தனிமையில் தனது துன்ப நிலைiயை எண்ணி துயரப்படும் நம் இயேசுவோடுநாமும் விழித்திருந்து செபிப்பேம்.

பா. சேவியர்
பட்டாயிரம் சென்னை

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்