Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

அன்பியம்

                                                                 உங்கள் சிந்தனைக்கு..............

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அன்பியம் ஒரு உறவு வாழ்வு! எப்படி?
ஏழையோடு ஏழையாக!
அனைவரோடும் அன்பு வார்தையாக!
பணிவு வாழ்வாக!
பகிர்வு வாழ்வாக!
துன்பத்தில் பொறுமையாக!
தூய்மை அன்பாக!
உயிர்ப்பில் மகிழ்ச்சியாக!

அன்பியம் என்றால்
பசியோடு இருப்போர்க்கு உணவாக!
அனாதையாக இருப்போர்க்கு உறவாக!
நோயுடன் இருப்போர்க்கு நல்ல மருந்தாக!
மன வேதனயோடு இருப்போர்க்கு ஆறுதல் தரும் விவிலிய 
    வார்த்தையாக!
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்போர்க்கு உதவும்
   கரங்களாக!
உறவோடு இருப்போர்க்கு தூய்மை நிறைந்த இதயங்களாக!
பாவத்தில் வாழ்வோர்க்கு மீட்புக்கு வழியாக!
பிரிந்து பிற சபைகளுக்கு செல்வோர்க்கு ஆன்மிக ஒளியாக!
தூற்றுவோர்க்கு மன்னிக்கும் செபங்களாக!
   தொடர்வது தான் அன்பியம்.

அன்பியங்கள் வழியாகவே உயிரோட்டமுள்ள திருஅவையை நாம் உருவாக்கிட முடியும். விசுவாசிகள் சிறிய குழுமங்களிலே தங்கள் ஆழமான விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளவும், ஆண்டவரின் வாழ்வளிக்கும் வார்த்தைகளை சிந்தித்து செபமாக்கி செயல்படுத்திடவும், அன்பியங்கள் அற்புதமான வாய்ப்பளிக்கின்றன. தொடக்கத் திருச்சபையில் இயேசுவில் நம்பிக்கை கொண்ட மக்கள் தம்மிடையே வேற்றுமைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் அகற்றி நட்புறவை நாளும் வளர்த்துக் கொண்டு இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்துகொண்டு ஒரு சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடப் பாடுபட்டதுபோல், இன்றைய கிறிஸ்தவர்களும் வாழ்ந்திட வேண்டுமென்பதே அன்பியங்களின் அடிப்படை நோக்கம்.

அன்பியங்கள் திருஅவையின் வாழ்வில் இன்றியமையாத அமைப்பாகும். ஆதித் திருச்சபையில் நாம் காணும் ஒன்றிப்பும், சகோதரத்துவமும், பகிர்வும், இன்று நமது காலத் திருச்சபையிலும் வளர வேண்டும் என்னும் உயரிய எண்ணத்தோடு உருவாக்கப்பட்டவை தான் அன்பியங்கள். பொதுநிலையினரிடையே விசுவாச வாழ்வில் புது உத்வேகத்தைக் கொணரவும், நாம் வாழும் சமுதாயத்திற்கு உண்மையான கிறிஸ்தவ சாட்சிகளாக வாழ்வதற்கும் அன்பியங்களே சிறந்த வழி. அன்பியம் சக்தி வாய்ந்த இறை இயக்கம். அன்பியம் சிறந்த வேளாண்மை விளை நிலம். அன்பியத்தினால் கடவுளைச் சந்திக்கவும், உண்மையான அன்புறவில் வளரவும், சமத்துவம் - சகோதரத்துவத்திலும் மலரவும், அறிதலும், புரிதலும், மன்னிப்பும், பகிர்வும் செயல் வடிவம் பெறுகிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் இறைமக்கள் ஒன்றுகூடி உறவில் இணைந்து இறைவேண்டலில் ஈடுபட்டு ஒருவரோடு ஒருவர் தோழமையில் பகிர்ந்து வாழும் அடித்தள உறவு வாழ்வுதான் அன்பியத்தின் சிறப்பு. அன்பியத்தின் வழியாக ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, அப்படியே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்ற வேண்டும். ஒரு பங்கு சமுகத்தின் உயிர்நாடியே அன்பியம் ஆகும். அன்பியம் ஒரு பங்கிற்கு அடிதளம். அந்த அடிதளம் உறுதியாக இல்லை என்றால் பங்கு என்ற கட்டிடம் நிலையானதாக இருக்க முடியாது.

அன்பியத்திலுள்ள அனைத்து குடும்பங்களையும் ஒருங்கிணைத்து ஒர் உயிரோட்டமுள்ள இறைச் சமூகமாக உருவாக்குபவர் தூய ஆவியார். திருமுழுக்கினால் தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசுவின் சீடர்களாம் கிறிஸ்தவர்களே ஒரு சிறு குழுவாக இணைந்து இறை உறவிலும், சகோதர உறவிலும், மனிதநேயத்திலும் நாளும் வளர்ச்சி பெறுகிறார்கள். பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஒன்று கூடும்போது அவர்களிடையே ஆழமான இறை ஒன்றிப்பையும் சகோதர உறவையும் ஏற்படுத்துகிறது இறைவேண்டல். ஆதலால் தான் தொடக்கத் திருஅவையில் இறைபுகழ் கூறுவதும் இணைந்து செபிப்பதும் மைய இடம் பெற்றிருந்தன: "அவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்" (திப 2:42).
இறைவனைப் போற்றிப் புகழ்ந்து ஆராதிப்பதும், அவர் செய்த வல்ல செயல்களுக்காக நன்றிப்பண் இசைப்பதும் ஒரு தொன்மையான யூத மரபு. "ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்... அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!" (தி.பா 105:1-2).

உறவு- உலகத்தின் நீர்த்துப்போகாத பொக்கிஷம்!
உலகத்தின் எந்த காவியங்களும், மனித உறவு மேன்மைகளை சொல்லாமல் சென்றிருக்க வாய்ப்பு ஏதும் இல்லை.
ஒரு படி தாண்டி, கத்தோலிக்கம் "அன்பியம்" என்பதில் இதை அடைக்கலம் செய்தது.

அன்பியம்- உறவின் நிறைவு வாழ்வின், விழிப்புணர்வில், விளக்கங்களில், வழிபாடுகளில், வார்த்தைகளில் இறை அனுபவங்களோடு விரல் கோர்த்து அழைத்துச் செல்கிறது.

அன்பியங்கள் வழியாகத்தான் நமது இறைமக்களைப் பாதுகாக்க முடியும். இதில் நம் தாயாம் திருச்சபை அசதியாய் இருக்கக்கூடாது.

இலக்கு இல்லாமல் இலக்கியம் இல்லை!
அன்பு இல்லாமல் அன்பியம் இல்லை!
குறிப்பிட்ட இலக்கு நோக்கி கிறிஸ்தவ இல்லம் நோக்கி அன்புடன் எய்யப்பட்ட அன்பியம் என்ற அம்பு, பாய்ந்த இடத்தில் காயத்தை உண்டாக்காமல் பயத்தைப் போக்கி, சமதானமான மனநிலையை இறைமக்களிடையே ஏற்படுத்தும்.

தொன்றுதொட்டு ஊறிப்போய்க் கிடக்கும், விசுவாச அகல் திரிகளை உசுப்பிவிடும்
சுடராய் - தீப்பொறி - துளியாய் நம்மை உயிர்ப்பிக்கட்டும் அன்பியங்கள்!!

இறைவன் இந்த உலகத்தை அன்பினால் கட்டியெழுப்பினார். அந்த அன்பினால் தான் இன்னும் இந்த உலகம் உயிர்ப்பெற்று இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முழுக்க முழுக்க அன்பையே மையமாகக் கொண்டுள்ளன. அன்பு வடிவமான இறைவனை மனிதன் அடைய ஆசிக்கிறார். சக மனிதர்கள் மீது அன்பு காட்ட முடியாத ஒருவனால் எப்படி அந்த அன்பு வடிவமான இறைவனை அடைய முடியும்? அகவேதான், நமது கத்தோலிக்கத் தாய்த் திருச்சபை "அன்பியம்" என்பதை நிறுவி நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் அன்பு செய்ய கற்றுக் கொடுக்கிறது. அன்பே உருவான இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும் உறவுக் கொள்ளவும் திருச்சபையை கட்டிக் காக்கவும் அன்பியங்களில்  தவறாமல் பங்கு கொள்வோம்! அன்பர் வழியில் வாழ்வோம்.

இயேசு கிறிஸ்துவை அறிவிப்பது மட்டுமே நம்முடைய தரிசனமாக இருக்கக்கூடாது. மாறாக, இயேசு கிறிஸ்துவை அனைவரும் வாழ்க்கையின் வழியாக பிரதிபலிக்கும் கடமையும் உண்டு. இயேசு கிறிஸ்துவை நாம் வாழ்கின்ற விதத்தினால் வாழ்ந்து வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கடமையும் நமக்குண்டு. அதுதான் அன்பின் வாழ்வு. அதுவே "அன்பியம் ஒர் உறவு வாழ்வு" உண்மையான, நிலையான, பழமையான, நமது கத்தோலிக்கத்தாய் திருச்சபையின் பெருமைகளின் புனிதமான அடையாளங்கள் பலருக்கு தெரியாமலே மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. போலி தோற்றங்கள் பெருகிப் போயுள்ள இந்த நாட்களில், உண்மையான நமது கத்தோலிக்கத் தாய் திருச்சபையின் அழகினை, நாம் நமது அன்பியத்தின் வழியாக பிரதிபலித்துக் காட்ட வேண்டிய மிகப்பெரிய தேவை இன்று எழுந்துள்ளது. அதற்கு நமது கத்தோலிக்கத் தாய் திருச்சபை அன்பியங்களுடன் இணைந்து விழிப்புணர்வை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 
அன்பியப்பாடல்

ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும்
ஆவியின் கொடைகள் அனைத்தும் அகிலத்தை நிரப்பவேண்டும்
மானுடநேயங்கள் மண்ணில் மலரவேண்டும் - இந்த
மண்ணில் மலரவேண்டும்

விசுவாசம் அன்பு நம்பிக்கை என்னும் கடவூளின் கொடைகளில் - அதில்
அன்பொன்று மட்டும் இறைவனின் வழியில் அகிலத்தை ஆளுமே (2)
விண்ணவரின் அன்பின் அரசு மண்ணவரில் நிலைக்கவேண்டும் (2)
புனித பூபாளம் இசைத்திட இணைவோம்
வாழ்க அன்பியம் நிறைவாழ்வின் கேடயம்

பகைமைகள் மறைந்து பேதங்கள் ஒழிந்து நம்பிக்கையில் நிலைத்திட பிறர்
குறைகளை மறந்து குற்றங்களை மன்னித்து சமத்துவம் காணுவோம்
விண்ணவரின் அன்பின் அரசு மண்ணவரில் நிலைக்கவேண்டும் (2)
புனித பூபாளம் இசைத்திட இணைவோம்
வாழ்க அன்பியம் நிறைவாழ்வின் கேடயம்